Jeyamohan's Blog, page 700
October 15, 2022
தமிழ் விக்கி பங்களிப்பு, கடிதம்
ஹலோ சார்,
வணக்கம்.
உங்கள் வலைத்தளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம் மற்றும் அறிவார்ந்த பணி தொடர்பான எதையும் கற்றுக்கொள்வதற்கான ஒரு பொக்கிஷம். இவை இலவசமாகக் கிடைக்கின்றன! எனவே, ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற உணர்வில் நான் எப்பொழுதும் இருந்து வந்தேன். கடந்த மார்ச் ஈரோடு நிகழ்வின்போது உங்களுடன் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, உங்கள் தொலைநோக்கு பணிகளுக்கு சிறிது பங்களிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் பின்னணியைப் பார்த்து, விக்கியின் ஆங்கிலப் பதிப்பை நான் ஆதரிக்க முடியும் என்று சொன்னீர்கள். நான் உடனடியாக இந்த குழுவில் இணைந்து கொண்டேன்.
நான் இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 100 கட்டுரைகளைக் கடந்த ஒரு மைல்கல்லை எட்டியுள்ளேன் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த எண்ணிக்கை விக்கிப் பெருங்கடலில் ஒரு துளி என்றாலும், தொடர்ந்து பங்களிப்பதற்கான நம்பிக்கையை இது எனக்கு அளிக்கிறது. இப்பயணம் எனக்கு மிகுந்த திறப்பை அளித்திருக்கிறது.
எல்லோறும் ஏற்று கொண்டதுபோல் தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித் துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் விக்கி இப்போது ஒரு தளமாகத் திகழ்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
அன்புள்ள
ஆனந்த் கிருஷ்ணன்
*
அன்புள்ள ஆனந்த கிருஷ்ணன்
தமிழ்விக்கி மொழியாக்கத்தில் நீங்கள் முதலிடம் என்னும் தகவலை மதுசூதனன் அனுப்பியபோதே அழைத்து பாராட்டவேண்டும் என எண்ணினேன். என் வாழ்த்துக்கள். நாம் செய்துகொண்டிருப்பது வரலாற்று உருவாக்கம். அந்நிறைவை நாம் அகத்தே உணர்ந்தால் இச்செயல்பாடு அளிக்கும் மனநிறைவு மகத்தானது.
ஜெ
கல்பொருசிறுநுரை
கல்பொரு சிறுநுரை வாங்க
அன்புள்ள ஜெ,கல்பொருசிறுநுரை, முதலாவிண் இரண்டு செம்பதிப்புக்களும் உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!தபால் உறையைப் பிரிக்கும்போது ஒரு நூல் என்றே நினைத்தேன். ஆனால், யசோதையின் அருகில் நிற்கும் சிறுவன் கண்ணனைப் போல, கல்பொருசிறுநுரை அருகில் மயில்பீலி அட்டை வண்ணப்படத்துடன் முதலாவிண் நாவலும் ஒட்டிக்கொண்டு வந்தது.கல்பொருசிறுநுரையின் அட்டையில் திரண்ட தோள்களுடன் இறுகி அமர்ந்திருக்கும் கண்ணனின் வண்ணப்படம். நாம் பொதுவாகக் காணும் மென்மையும் நளினமும் கொண்ட ஆயர்பாடிக் காதலன் அல்ல. பொருகரியின் கொம்பொசித்த, மல்லர்களைப் பொருது வருகின்ற பெருவீரனின் படம்.யாதவர்களின் குடியழிவையும் கிருஷ்ணரின் மறைவையும் சொல்லும் கல்பொருசிறுநுரையை வாசிப்பது மனதில் துயரையும் வெறுமையையும் நிறைக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் முதலாவிண் ஒரு மீட்பாக அமைந்து, கண்ணன் பிள்ளைத்தமிழோடு நிறைகிறது.முதலாவிண் வெண்முரசுக்கு தமிழ் மண்ணோடு ஒரு இணைப்பைக் கொடுக்கிறது. முதலாவிண்ணை நினைக்கும்போதெல்லாம் தவறாமல் என் நினைவில் எழுவது, கொந்தளிக்கும் கடலில் பாண்டியன் செல்லும் காட்சி://நீரின் ஓலம் செவிகளை நிறைத்திருந்தது. அவர்களின் நோக்கும் நீரால் நிறைந்திருந்தது. உள்ளெழுந்த அச்சமும் நீரின் வடிவிலேயே அமைந்திருந்தது. அரசனை அங்கே கொண்டுவந்திருக்கலாகாதோ என்ற எண்ணத்தை அமைச்சர் அடைந்தார். ஆனால் பாண்டியன் தன் படகின் அமரமுனையில் நின்று கடலை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். படகு ஊசலாடியபோது அவன் கயிற்றில் கட்டி சுழற்றப்பட்டவனாக வானில் பறந்தலைந்தான். ஆனால் அவன் கால்கள் நிலைதடுமாறவில்லை. அவன் உடலின் நிகர்நிலை பெயரவுமில்லை.அவன் தொன்மையான பரதவக் குடியினன் என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார். கடலை அவன் கால்கள் அறிந்திருக்கும். அவனுக்குள் நிறைந்துள்ள குருதி கடலின் நீருடன் ஒத்திசையக் கற்றிருக்கும். அவன் முன்னோர்களில் ஒருவன் கடலை அம்பெறிந்து வென்றான். அச்சினம் பொறாது கடல் எழுந்து பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து குமரிக்கோட்டையும் மாமதுரை நகரையும் உண்டது. அவன் கடலின் மைந்தன், கடலுடன் போரிட்டு எழுந்தவன்.//இந்த நூல்களுடன், வெண்முரசு நூல்களின் செம்பதிப்பு வரிசை நிறைவுறுகிறது. இவற்றை வாசிப்பதனுடாகவே என்றும் உங்களை நன்றியுடனும் மகிழ்வுடனும் நினைத்துக்கொள்வேன். பெரியாழ்வாரின் வரிகளில் “நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினிலார் பெறுவார்” என்று மகிழ்கிறேன். உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!அன்புடன்,S பாலகிருஷ்ணன், சென்னை*அன்புள்ள பாலகிருஷ்ணன்எனக்கும் அவ்விரு நூல்களையும் பார்க்கையில் ஒரு மெல்லிய திகைப்பு எழுகிறது. கடந்துவந்துவிட்ட ஒரு காலகட்டம் என தோன்றுகிறது.ஜெ
October 14, 2022
தற்கல்வியும் தத்துவமும்-1
குர்ஜீஃப்தமிழகத்தில் இன்று தத்துவக் கல்வி பற்றிப் பேசியதுமே ‘தத்துவப் பயிற்சியில் ஈடுபாடு உண்டு’ என்று சொல்பவர்கள் பலர் முன்வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தத்துவ ஆசிரியர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் மற்றும் இறைஞானம் கொண்டவர்கள் என அறியப்படும் ஆளுமைகளின் புகழ்பெற்ற நூல்களை வாசித்தவர்கள். பலர் மிகத்தீவிரமாகவே அவற்றை வாசித்திருக்கிறார்கள்.
இவ்வாறு வாசிப்பவர்களின் இயல்புகள் சில உள்ளன. வாழ்க்கையின் ஒரு தருணத்தில் நிலைக்கோளுக்காக தேடித் தவிக்கையில் இத்தகைய நூல்களை கண்டடைபவர்கள் உண்டு. அந்த வாசிப்பினூடாக அறிமுகமாகும் அடிப்படையான தத்துவநோக்கே அவர்களை விடுவித்துவிடும். பிரச்சினைகளை எளிய உணர்ச்சிகள், அன்றாட அரசியல்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று நோக்கும் ஒரு நிலைப்பேறை அவர்கள் அடைவார்கள்.
இந்நூல்களின் முதற்பெரும் பயன் என்பது இதுவே. ஆகவே இவை மிக உதவியானவை என்பதே என் எண்ணமாகும். எதிர்மனநிலைக்கு தள்ளி செயற்கையான பதற்றத்திற்கும், விளைவான உளச்சோர்வுக்கும், நீண்டகாலக் கசப்புக்கும் ஆளாக்கும் கட்சியரசியல் நூல்களை வாசிப்பவர்களைவிட இந்நூல்கள் மிகமிக மேலானவை. அவற்றை வாசிப்பவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகவும், அடைந்தவற்றில் அகநிறைவு கொள்ளவும் வழியமைக்கின்றன இந்நூல்கள்.
ஆன்மிகதத்துவ நூல்களை வாசிப்பவர்களில் சிலர், அவர்கள் தேடுவதென்ன என்று அறியாமலேயே வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு ஞானியிலிருந்து இன்னொருவருக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குச் செல்லும்போது முந்தையவரை கடந்து சென்றுவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ஓஷோ கொஞ்சநாள் வாசிச்சிட்டிருந்தேன். இப்ப ஜே.கிருஷ்ணமூர்த்தி கிட்ட வந்ததும் அவரை கடந்தாச்சு’ என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன்
உண்மையில் அவர்கள் கடந்து செல்லவில்லை. ஒரு ஞானியை மெய்யாகவே கடப்பதென்பது அவர் இருந்த நிலையை அடைந்து கடந்தால் மட்டுமே இயல்வது. ஓஷோவை ஓஷோவை விட பெரியவர்களே கடக்க முடியும். ஒஷோவைக் கடந்துவிட்டதாக எண்ணுபவர் ஓஷோவின் வழிமுறையில், உரையாடலில் இவர் தேடும் ஒன்று இல்லை என்று கண்டடைந்திருக்கிறார், அவ்வளவுதான்.
அவர் தேடுவதென்ன என அவருக்கே தெளிவில்லை என்பதனால் அவர் முன்னகர்கிறாரா , சுற்றிச்சுற்றி வருகிறாரா என அவருக்கே தெரியாது. சிலசமயம் அவர் சிக்கிக்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் அவர் எப்படி எதை வாசித்தாலும், அந்த தொடர் வாசிப்பாலேயே அவர் தன்னுள் வளர்ந்துகொண்டும் இருப்பார். பிற எந்தச் செயலைவிடவும் இந்த வாசிப்பு அவரை ஒருங்கமையச் செய்யும். ஒருவரின் கவனத்தை குவியச்செய்யும் எதுவும் ஏதோ ஒருவகையில் அவரை விடுவித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தவகையான வாசிப்புகள் எந்நிலையிலும் பயனுள்ளவையே. அவை அறிஞர்களின் சிந்தனைகள், ஞானியரின் சொற்கள் என்பதனாலேயே அவை பெரும் ஆசிகள். ஆகவே அவை அரியவை.
விவாதிக்கப்பட வேண்டிய வினா என்னவென்றில் அவற்றை வாசிப்பது தத்துவக் கல்வி ஆகுமா என்பதே. அல்லது தத்துவத்தை அவற்றினூடாக கற்றுக்கொள்ள முடியுமா? தனக்குத்தானே ஒருவர் தத்துவத்தை கற்றுவிடுவது இயல்வதா? எந்த அளவுக்கு தத்துவத்தில் தற்கல்விக்கு இடமுண்டு?
முதல் பதில், தத்துவத்திற்குள் நுழைய அந்த ஆன்மிகதத்துவ நூல்களின் மீதான வாசிப்பு நல்ல வாசல் என்பதுதான். அத்தகைய நூல்கள்தான் நமக்கு உடனே அறிமுகமாகின்றன. ஆகவே இயல்பாக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவற்றுக்குள் நுழைகிறோம். அவை நமக்கு நம் வாழ்க்கையை முழுமையாக எடுத்து ஆராயவும், அடிப்படைகள் சார்ந்து பார்க்கவும், முதன்மை வினாக்களை எழுப்பிக்கொள்ளவும் உதவுகின்றன. அந்தப் பயிற்சி தத்துவத்தை நோக்கி நம்மை கொண்டுசெல்லக்கூடும்.
இலக்கிய வாசிப்பும், இலக்கிய எழுத்துப்பழக்கமும் கொண்ட ஒருவருக்கு ஆன்மிகதத்துவ நூல்களின் வாசிப்பு மிக உதவியானது. ஏனெனில் மிக அருவமான, மிக மிக அகவயமான, முற்றிலும் நுண்ணுணர்வு சார்ந்த ஒன்றை புறவயமான மொழியில் சொல்வதற்கான தொடர்முயற்சிகள் இத்தகைய நூல்களில் இருக்கும். இலக்கியம் என்பதும், கவிதை என்பதும் அதைத்தான் செய்யமுயல்கின்றன.
ஆகவே தத்துவ நூல்களில் இருக்கும் மொழிவெளிப்பாடு கவிதைக்கு நிகரானதாக இருக்கும். சுருக்கமும் செறிவும் கொண்டதாக இருக்கும். மொழியின் மிக உயரிய சாத்தியங்கள் அவற்றில் வெளிப்படும். அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்குச் சமானமான ஆங்கிலமொழியாட்சி இந்தியாவின் எந்த இலக்கிய எழுத்தாளரிடமும் இல்லை. அந்த மொழிநடை எழுத்தாளனின் மொழியை அவனை அறியாமலேயே கூர்மைப்படுத்தும்.
நான் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். இத்தகைய வாசிப்பு கொண்டவர்கள் எப்போதும் அவர்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டிருக்கும் அரிய வரிகளை குறிப்பிடுவார்கள். மொழி வெளிப்பாடுகளாகவே அவற்றை நினைவில் சேமித்திருப்பார்கள். பெரும்பாலான தத்துவவாதிகளை, மறைஞானிகளை அவருடைய முத்திரை பதிந்தவை என்று சொல்லத்தக்க சில வரிகளாகவே நினைவு வைத்திருக்கிறோம். அவ்வரிகளைக்கொண்டே அவரை வகுத்திருப்ப்போம். அது இலக்கியவாசகன் என்ற வகையில் சரியானதும் இயல்பானதும்தான்.
தத்துவமொழி மிகச் செறிவாக ஒன்றைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஒரு தத்துவக்கொள்கை அதன் செறிவை இழக்கும்போது அதன் தத்துவத்தன்மையே இல்லாமலாகிறது. இவ்வியல்பை தத்துவத்தை அறிந்தவர்கள் கூர்ந்து பார்த்திருக்கலாம். மிகச்செறிவாக ,குறைந்த சொற்களில், கூரிய மொழியில் சொல்லப்படும்போது ஒரு தத்துவக்கூற்று ஒரு தரிசனம் என நிலைகொள்கிறது. ஒரு வரையறையும் அறிவிப்பும் ஆகிறது. அதையே எளிய மொழியில் பலபக்கங்களுக்கு விரித்துரைத்தால் ஒரு குறிப்பிட்ட வகையான விவாத முறையாகவே அது தோற்றமளிக்கிறது.
இதை காந்தி தன்னுடைய ஓர் உரையாடலில் சொல்கிறார். பியாரிலாலுடன் மார்க்சியம் பற்றி உரையாடும்போது ‘இவர் சொல்வது ஒரு எளிமையான வாதம்தான். ஆனால் செறிவான மொழியில் சொல்வதனால் அது கொள்கையாகத் தோற்றமளிக்கிறது’ என்று காந்தி குறிப்பிடுகிறார்.
காந்தியைப்பொறுத்தவரை எப்படிச் சொன்னாலும் தன்னளவில் ஒரு தரிசனமாகவே நிலைகொள்ளும் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். அறிவார்ந்த விவாதங்கள் வழியாக மட்டுமே நிலைகொள்ளக்கூடிய ஒன்று உண்மையாக இருக்க முடியாது. அது நடைமுறைக்கு வரும்போது பலவகையில் அது நீர்த்துப்போகும். ஏனென்றால் நடைமுறை வாழ்வில் பலவகையில் பலமொழிகளில் மறுபடியும் மறுபடியும் சொல்லப்படும். அப்போது அது தன் மதிப்பை இழக்குமெனில் அது ஒரு அறிவுத்தள வெளிப்பாடன்றி மெய்த்தள வெளிப்பாடல்ல.
ஆன்மிகதத்துவ நூல்களை பயில்பவர்கள் தங்களை அறியாமலேயே விசைகொண்ட ஒரு மொழியுடன் கூடவே ஓடுபவர்களாக மாறுகிறார்கள். விளைவாக அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் மொழி நுண்ணுணர்வு மிகச்சிறப்பான பயிற்சியை அடைகிறது. அது அவர்களுக்கு அறிவுநிறைவை அளிக்கிறது. அந்த அறிவு நிறைவே தாங்கள் ஒரு மெய்யான விஷயத்தை கற்கிறோம் என்னும் எண்ணத்தை அளித்துவிடுகிறது.
நாம் ஒன்றை உழைத்து கற்றுக்கொண்டாலே அது உண்மையானது, மதிப்பு மிக்கது என்று எண்ணுகிறோம். மிகச் சிரமப்பட்டு ஒரு மரத்திலேறி பறிக்கும் கனி இனிப்பல்ல என்று எவராலும் சொல்லமுடியாது. எனில் அந்த முயற்சி வீண் என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அந்த முயற்சியின் மதிப்பு அக்கனி மேல் அறியாமலேயே ஏறிவிடுகிறது.
ஆனால் மொழி வழியாக அறியப்படும் தத்துவம் என்பது ஒரு மொழியனுபவமே ஒழிய தத்துவ அனுபவம் அல்ல. மொழிக்காக இந்நூல்களை வாசிப்பவர்கள் தத்துவத்தை பயிலவில்லை. அவர்கள் நல்ல வரிகளாக நினைவில் கொள்வனவும், மேலதிகமாக எண்ணி வளர்ப்பவனவும் அளிப்பது தத்துவப்புரிதல் அல்ல.
தத்துவம் என்பது உதிரிக் கருத்துக்களின் தொகுப்பு அல்ல. தத்துவம் என்பது ஒரு கட்டுமானமாகவே எப்போதும் திகழமுடியும். முதன்மையாக அது ஒரு தர்க்கக் கட்டுமானம். அந்த தர்க்கத்திற்கு அடிப்படையாக அது எடுத்துக்கொள்ளும் அறிதல்களின் (பிரமாணங்களின்) கட்டுமானம் அதற்கு அடியில் உள்ளது. அதற்கும் அடியில் உள்ளது ஒரு குறிப்பிட்டவகையான பார்வையின், குறிப்பிட்ட வகையான அனுபவமண்டலத்தின் அடித்தளம்.
தத்துவம் ஒற்றையமைப்பாக , முழுமையாகவே கற்கப்படவும் நினைவுகூரப்படவும் விவாதிக்கப்படவும் முடியும். அதன் ஒரு சிலகூறுகளை மட்டும் கொண்டு கற்பதும் நினைவுகூர்வதும் விவாதிப்பதும் பெரும்பாலும் தத்துவத்தை பிழையாக சென்றடைவதில் முடியும். சமயங்களில் நேர்த்தலைகீழாகச் சென்றடைவதில் முடியும்.
ஒரு குறிப்பிட்ட தத்துவம் அதன் முன்வடிவம் பின்வடிவத்துடன் இணைந்தே உள்ளது. அது எதனுடனெல்லாம் விவாதிக்கிறதோ அதெல்லாம் அதனுடன் இணைந்துள்ளன. அது எங்கிருந்தெல்லாம் எடுத்துக்கொள்கிறதோ அதெல்லாம் அத்தத்துவத்துடன் இணைந்துள்ளன. அத்துடன் ஒரு தத்துவம் அது உருவான ஒட்டுமொத்த தத்துவப் புலத்தில் அமைந்துள்ளது. அத்வைதத்தை ஆறுதரிசனங்களின் புலம் இன்றி புரிந்துகொள்ள முடியாது. பௌத்த, சமண மதங்களின் விவாதக்களம் இன்றி கற்கக்கூடாது.
ஆகவே சமகால ஆன்மிகதத்துவ நூல்களை தனிமனிதர் தன் உளக்குவிப்புக்காக, ஊக்கத்துக்காக, அகநிறைவுக்காக வாசிக்கலாம். இலக்கியவாசகனும் எழுத்தாளனும் மொழிக்காக வாசிக்கலாம். தத்துவத்தின் அறிமுகவாயிலாக அவற்றைக் கொள்ளலாம். ஆனால் அவை தத்துவமல்ல என்றும், தத்துவக் கல்வி முற்றிலும் வேறானது என்றும் நமக்கு தெளிவு தேவை
(மேலும்)
அசோகமித்திரன்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கியில் அசோகமித்திரன் பதிவு பார்த்தேன். விரிவான செய்திகளுடன் அமைந்திருந்தது. ஆனால் இன்னமும் கூட விரிவாக்கலாமென நினைக்கிறேன். அவர் கலந்துகொண்ட சர்வதேச கருத்தரங்குகள், அவரைப் பற்றிய ஆங்கில மதிப்பீடுகள் ஆகியவையும் தொகுக்கப்படவேண்டும். அப்பக்கத்தின் ஆங்கில வடிவம் உருவானபின் தமிழ் பதிவு மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகள் வழியாக அமைந்துள்ள பதிவு மிகத்துல்லியமானதாக உள்ளது
எஸ்.முரளி
அசோகமித்திரன் – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் நிதி, கடிதம்
விஷ்ணுபுரம் விருது விழாவிற்கான நன்கொடையில் என்னுடைய சிறு பங்களிப்பென 500 ரூபாய் அனுப்பியுள்ளேன். ஒவ்வொரு வருடமும் நான் பங்கெடுக்க விரும்பும் கனவு விழாக்களில் ஒன்றது.
முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது. அன்றிலிருந்து வரவேண்டும் என்ற விருப்பம் அணையாது உள்ளது. சென்ற ஆண்டு நடந்த விழாவுக்கு அழைத்து போங்கள் என்று அழுது அடம்பிடித்தெல்லாம் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை. இவ்வாண்டும் என் கனவு சாத்தியபடுமா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைக்கு சாத்தியம் இல்லை என்ற நிலையே உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சூழல் மாறினால் என் கனவு நிறைவேறும். முயற்சித்து பார்க்கிறேன். முடிந்தால் விழாவில் உங்கள் அருகமரும் வாய்ப்பமையும்.
அப்புறம் இந்த தொகை மிக சிறியது. இது ஒன்றும் பெரிது அல்ல. இத்தொகையை கூட அரசாங்கம் எனக்கு தரும் உதவித்தொகையில் இருந்து தான் எடுத்தேன். இன்னும் வீட்டில் வேறு சொல்லவில்லை:) சொன்னால் போகாத இடத்திற்கு பணம் அனுப்புகிறாயா ? என்பார்கள். அதனால் நானே முடிவு எடுத்து அனுப்பி விட்டேன். இப்போது மெதுவாக நேரம் பார்த்து அம்மாவிடம் சொல்ல வேண்டும்:) சுயமாக நானே பொருளீட்ட முடியுமெனில் முடிந்தளவு பெரிய தொகையை அனுப்புவதே என் விருப்பம். ஏனெனில் விஷ்ணுபுரம் விருது விழா நீங்கள் எங்களுக்களித்த மகத்தான விழாக்களில் ஒன்று. அது மேலும் பெருகவும் செழுமையுறவும் செய்வது இலக்கிய வாசகனாக தங்கள் மாணவனாக என் கடமை என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்
சக்திவேல்
*
அன்புள்ள சக்திவேல்,
உங்கள் கடிதம் நெகிழ்வை அளிக்கிறது. உங்களுடைய நன்கொடை என்பது ஓர் அடையாளம். அது உங்கள் பங்களிப்பு.
முன்பு பல ஆண்டுக்காலம் நாங்கள் சில நண்பர்களே விஷ்ணுபுரம் விருதுச் செலவை பகிர்ந்துகொண்டிருந்தோம். பெருந்தொகை என்னுடையதாக இருந்தது. நன்கொடை வாங்கவேண்டாமென எண்ணினோம். ஆனால் நன்கொடை வாங்க ஆரம்பித்தபோது பெருவாரியாக பலர் அதில் பங்களிப்பதைக் கண்டோம். அது ஒரு சிறந்த விஷயம் என தோன்றியது. தமிழ் எழுத்தாளன் ஒருவனை தமிழகமே கூடி கௌரவிப்பது போன்றது அது. ஆகவேதான் பெருந்தொகைகளாக கார்ப்பரேட் நிதியை பெறவேண்டியதில்லை என முடிவுசெய்தோம். இதிலுள்ள பரவலான பங்கேற்பே இதன் பெருமை.
உங்கள் பங்கேற்பு இதில் பெரியது. நன்றி
ஜெ
அறம்- கடிதங்கள்
வணக்கம் ஜெயமோகன் சார்,
என் பெயர் விக்னேஷ். ஐடி துறையில் பணி செய்கிறேன். நீங்கள் எழுதிய அறம் என்ற தொகுப்பில் நூறு நாற்காலிகள் படித்தேன். என் உணர்வு என்ன என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
ஆனால் அப்படி ஒரு தாய் கதாபாத்திரத்தை நான் கேட்ட படித்த பார்த்த மிக மிக சில கதைகளில் பார்த்ததே இல்லை. நீங்கள் அந்த தாயை பற்றி ஒவ்வொரு முறையும் மிக நுணுக்கமாக வர்ணித்து எழுதியிருந்தீர்கள். அவளை பார்க்க முடிந்தது. அவளை நுகர முடிந்தது.
அவளின் மிருகத்தனமான பாசம், நாயாடி மக்களின் நிலை என்ன என்று உணர முடிந்தது. அப்படி ஒரு சமூகம் பற்றி இதற்கு முன்னால் எனக்கு தெரியாது. அந்த கலெக்டரை போல நானும் சிக்கி தவித்தேன். இந்தத்தாயை அவன் வைத்துக்கொள்ள வேண்டுமா?! இல்லையா என்று. ஒவ்வொரு முறையும் அந்த தாயின் முகத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தால் எனோ எனக்கு குறத்தி மகன் திரைபடத்தில் வரும் கே.ஆர்.விஜயா நினைவுக்கு வருகிறார்கள். “தம்றானே, கஞ்சி தா தம்றானே” என்ற அவளது கடைசி வார்த்தை மிகவும் கனத்தது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் குறத்தி மகன் கே.ஆர்.விஜயா சொல்வது போல் கற்பனை செய்து பார்த்தேன்.
இன்னும் பல உணர்வுகள் இந்த கதையை படிக்கும்போது இருந்தது. மிகவும் ரசித்து படித்தேன். அறம் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் வீட்டு பாடம் செய்வது போல் தினம் ஒரு கதை விதமாக ஒவ்வொரு மாலையும் படித்து கொண்டிருக்கிறேன். அறம் கதைகளை பற்றி உங்களிடம் என்றாவது ஒரு நாள் நேரில் பேச வேண்டும் என்ற பேராசை!!
இப்படிபட்ட அருமையான கதைகளை தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு,
விக்னேஷ்.
*
அன்புள்ள ஜெ
இத்தனை பேர் பேசிவிட்ட பிறகும் இப்போதுதான் நான் அறம் கதைகளை வாசித்தேன். இரண்டு தளம் கொண்ட கதைகள். மிக நேரடியாக, தீவிரமாக உணர்ச்சிநிலைகளை முன்வைக்கின்றன. ஆகவேதான் பலபேர் அவற்றை கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லா கதைகளிலும் மேலே உள்ள உணர்ச்சிகரமான கதைக்கு அடியில் ஆழத்தில் இன்னொரு கதை உள்ளது. நூறுநாற்காலிகள் கதையிலும் நான் வாசித்தது நாற்காலியின் பயனில்லாத தன்மையைத்தான். நூறுநாற்காலி என்று அவன் உணர்வது வேறொரு நாற்காலியை என்று தோன்றியது.
அறம் அழகிய வடிவமைப்புடன் புதிய கெட்டி அட்டைப்பதிப்பு சிறப்பு
அரசு அண்ணாமலை
*
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்கசிப்பியும் நீர்ப்பூச்சியும் – கடிதம்
அன்புள்ள ஜெ,
நண்பர்களோடு பேசும்போது அல்லது வாட்ஸாப் விவாதங்களின்போதும் இப்போது வாசிக்கும் அல்லது முன்பு வாசித்த சில புத்தகங்களின் ரெபெரென்ஸ் கொடுக்கும்போது நண்பர்களிடம் கிண்டல்கள் வருவதுண்டு. புத்தகம் படித்தால் நீங்கள் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போல. ஆனால் நமது சிந்தனையில் ஒரு சின்ன மாற்றமும் கொண்டுவராத புத்தகங்களை ஏன் நேரம் செல்வளித்து வாசிக்கவேண்டும் அவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யமடைவதுண்டு.
வருடம்தோரும் பெருமளவில் புத்தகம் வாசிக்கும் சில நண்பர்கள், பல வருடங்கள் ஒரே நிலைப்பாட்டில் அப்படியே இருப்பது மட்டுமல்லாமல் ஜோக் கூட பத்து வருடமாக ஒரே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியும். வாசிப்பு எனும் குளத்தில் மூழ்கினாலும் ஒரு துளி சிந்தனை கூட தன்மீது படமால் இருக்கும் கொக்கு போல என நினைப்பேன், ஆனால் நீங்கள் சொன்ன நீர்பூச்சி மிக பொருத்தமாக இருந்தது.
இந்தக் கட்டுரை படித்ததும் மிக பொருத்தமாகவும் உவப்பாகவும் இருந்தது.
நானும் நண்பர் ரவிகுமார்பாண்டியனும் நாங்கள் வாசிக்கும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் குறித்துப்பேசும்போது ஒரு கருத்தில் வந்தடைந்தோம்
பல புத்தகங்களைஒரு சிந்தனைச் தொடர்ச்சியாக வைக்கமுடியும். அவை தனித்தனி புத்தகங்களாக இருந்தாலும் ஒரே சிந்தனையில் தொடர்ச்சி அல்லது அதன் பல்வேறு பரிணாமங்கள் என. (ஒருTree போல) அப்படி தொகுத்துக்கொள்ளும்போது நம் புரிதல் ஆழமாவதோடு நிறைய படிக்கிறோம் என ஆயாசமும் வருவதில்லை.வாசிக்கத்தொடங்கும் எல்லாப் புத்தகங்களையும் முடிக்கவேண்டும் என்பது தேவையில்லை. வாசிப்பது எவ்வளவு முக்கியமாதோ, அதே அளவு முக்கியம் நமக்குத் தேவையில்லாத/நேரத்தை வீணடிக்கும் வாசிப்பை முடிந்த அளவு குறைப்பது.நீர்ப்பூச்சியும் சிப்பியும் என்ற படிமம் உடனடியாக மனத்துக்குள் சென்றுவிட்டது
இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. வாசகர்கள் அனைவரும் வைத்துக்கொள்ளவேண்டிய ரெபரென்ஸ் இது. நன்றி ஜெ
அன்புடன்
சுரேஷ் பாபு
Blog: வேழவனம்
Youtube: https://www.youtube.com/channel/UCFiYtSqF4NvmnSjRCSf5XbQ
October 13, 2022
சோழர், ஓர் உரை
அன்புள்ள ஜெ
என்னிடம் நாலைந்துபேர் நீங்கள் ராஜராஜ சோழனின் அரண்மனை நம் வீடுகளை விட சிறியது, அப்படித்தான் சினிமாவிலே காட்டப்போகிறீர்கள் என்று சொன்னதாகவும் தமிழர் வரலாற்றை இழிவுசெய்வதாகவும் சொல்லி கொதித்தார்கள். மலையாளி நாய் என்றெல்லாம் பயங்கரமான வசைகள். எங்கே சொன்னார் என்றால் யூடியூபிலே பார்த்தோம் என்றார்கள். லிங்க் கேட்டால் அப்படி வெவ்வேறு வாயர்கள் உளறியிருப்பதன் வீடியோக்களை அனுப்பினார்கள். ஜெயமோகன் சொன்ன வீடியோ எங்கே என்று கேட்டால் தெரியவில்லை. சோழர்களை இழிவு செய்கிறார் ஜெமோ என்று வசை.
சரி, ஜெயமோகன் சொன்னதைவிடக் கடுமையாக ஆ.ராசா சொன்னாரே என்று நான் கேட்டேன். அதற்கு ‘அது வேற விஷயம்’ என்றார்கள். அதன்மேல் ஒரு கண்டனமும் கிடையாது. ஆ.ராசா சொன்னால் அது தப்பு என்றுகூட சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ஆ.ராசா தமிழக ஆளும்கட்சி. ஆ.ராசாவிடம் ‘அப்படிப்பட்ட கேடுகெட்ட ராஜராஜ சோழனுக்குத்தானே உங்கள் தலைவர் கலைஞர் விழா எடுத்தார்’ என்று கேட்கலாமே. ராஜராஜசோழன் புகழ் பாடியவரே அவர்தானே. ராஜராஜசோழனுக்கு சிலைவைத்தார். அவரையே ராஜராஜசோழன் என்றும் அவர் மகனை ராஜேந்திர சோழன் என்றும் கட்டவுட் வைத்தார்கள். அவர்களை ஆ.ராசா கண்டிக்கிறாரா? மாட்டார். பிரச்சினை எல்லாம் நீங்கள் சொன்னதுபோல சினிமாவுடன்தான்.
உங்கள் வீடியோவை நானே கண்டெடுத்தேன். மிகமிக முக்கியமான உரை. வரலாற்றுவாதம் (Historicism ) தேவையில்லை, வரலாற்றுணர்வு (Historicity)தேவை என்று சொல்லி இரண்டையும் விளக்குகிறீர்கள். வரலாற்றுவாதம் வீண் வெறியை உருவாக்கும். வரலாற்றுணர்வு கலாச்சாரத்தை புரிந்துகொள்ள உதவும். வரலாற்றுவாதம்தான் வெறும் பற்றாக வெளிப்படுகிறது. வரலாற்றுணர்வு கொண்டவர்களுக்கு எதிலும் தவறும் சரியும் கண்டுசொல்லும் தெளிவு இருக்குமே ஒழிய மிகையான உணர்ச்சிகள் இருக்காது.
நீங்கள் அந்த உரையில் சொன்ன வரலாற்றுவாத வெறி என்றால் என்ன என்றுதான் அந்த வீடியோவைவைத்தே நம்மாட்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே அந்த வீடியோவை பார்க்கவில்லை. அந்த தலைப்பை மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வசையை கேட்டு அடுத்த கூட்டம் வசைபாடுகிறது. அப்படியே ஒரு சங்கிலித் தொடர். எவருக்கும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என அக்கறை இல்லை. நீங்கள் இன்னார் என அவர்களே ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாதிவெறியர்கள், ஆகவே உலகிலுள்ள அத்தனைபேரும் சாதிவெறியை கொண்டுதான் பேசுவார்கள் என நம்புகிறார்கள்.
அந்த வீடியோவில் பொன்னியின்செல்வனில் ராஜராஜசோழனின் அரண்மனையை பெரிதாகக் காட்டுவதாகச் சொல்கிறீர்கள். தமிழகத்தில் நாயக்கர் காலகட்டத்துக்கு முந்தைய எந்த அரண்மனையும் கிடைக்கவில்லை. கிடைத்த அடித்தளங்கள் சிறியவை. மன்னர்கள் ஆலயங்களை பெரிதாக கட்டினாலும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் கல்லால் பெரிதாக கட்டிக்கொள்ளவில்லை.
நீங்கள் சொல்வது ராஜராஜசோழன் அரண்மனை பற்றி அல்ல. கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைப் பற்றி. அங்கே ஆய்வுசெய்த அகழ்வாய்வுத்துறை துணை இயக்குனர் சிவானந்தம் விரிவாக எழுதியதுதான். தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அரண்மனைகள் இல்லை. சோழர்கால அரண்மனைகளுக்கு பெரிய அடித்தளங்கள் இல்லை என்றும் அகழாய்வில் கிடைத்த தகவல்களின்படி அரண்மனைகள் மரத்தாலானவையாகத்தான் இருக்க கூடும் என்றும் சொல்கிறார். அதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் அப்படி சினிமாவில் காட்டமுடியாது, பிரம்மாண்டமாகவே காட்டமுடியும் என்கிறீர்கள். ஆகவே சினிமா வரலாறு அல்ல, அது புனைவு, ஆனால் அந்த புனைவு வரலாற்றை உள்ளத்தில் நிறுத்த தேவையானது என்கிறீர்கள்.
அந்த உரையில் ராஜராஜன் காலகட்டத்தில் இருந்த நில அடிமை முறை, சாதிமுறை, குறுநிலமன்னர்கள் மீதான அடக்குமுறை அனைத்தையும் அக்கால வரலாற்றில் வைத்து பார்க்கவேண்டும் என்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் அன்றைய காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே மிகமிகப் பெருந்தன்மையான, சமயப்பொறைகொண்ட, நலம்நாடும் அரசு சோழர் அரசுதான் என்கிறீர்கள். சோழர்கள் உங்கள் நாடான சேரநாட்டுக்கு ஆக்ரமிப்பாளர்கள். ஆனால் அவர்கள்தான் அங்கே நிலவளம் பெருக காரணம் என்கிறீர்கள். தவறுகளையும் குறைபாடுகளையும் கருத்தில்கொண்டு கூட்டிக்கழித்துப் பார்த்தால் சோழர் காலம் பொற்காலம் என்கிறீர்கள். அதுவே வரலாற்றுணர்வு என்பது.
எதையுமே புரிந்துகொள்ளாமல் வெறும் சாதிவெறியாலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வெறியைத்தான் அந்த உரையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இத்தனை வெறுப்பையும் அறியாமையையும் வெறியையும் எதிர்கொண்டு இதையெல்லாம் பேசமுடிவது பெருந்துணிவும் பொறுமையும் தேவையான ஒன்று
ஆர்.ராகவ்
பொன்னியின் செல்வன் நாவல் கல்கி சிவகாமியின் சபதம் மோகனாங்கிஅன்புள்ள ராகவ்
இந்த வம்புகளுக்குப் பதில் சொல்வதிலுள்ள பெரிய சிக்கல் இதுதான். இந்த வம்புகளைக் கிளப்புபவர்கள் இருக்கும் தளம் ஒன்று. அவர்களுக்கும் எழுத்து, வாசிப்புக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களைப்போன்ற அறிவுநிலை கொண்டவர்கள் போடும் யூடியூப் காணொளிகள், வாட்ஸப் வரிகளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். பிறவற்றை அந்த தலைப்பை மட்டுமே பார்ப்பார்கள். உள்ளே சென்று உரைகளை கேட்க பொறுமை இல்லை. கேட்டாலும் ஒன்றும் பிடிபடுவதில்லை. ஆகவே அவர்களுக்கு அவர்களைப் போன்றவர்கள் சொல்வதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் என்னதான் சொன்னாலும், மறுத்தாலும், விளக்கினாலும் அவர்களைச் சென்றடையாது. நாமிருக்கும் அறிவுத்தளம் வேறு. மிகமிகச் சலிப்பூட்டும் ஒரு சூழல் இது.
ஜெ
சோழர்கள் பற்றி… ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2 ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா? சோழர்கலை விராலூர் சோழர் கல்வெட்டு சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது சோழர்களும் மாமாங்கமும் பொன்னியின் செல்வன், சோழர்கள் சோழர்களும் பிராமணர்களும் அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும் பெருவழிகள் இராஜகேசரிப் பெருவழி கோடிவனமுடையாள் பெருவழிசி.சு.செல்லப்பா
தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் சி.சு.செல்லப்பா. நான் 1992 வாக்கில் சுபமங்களாவில் சி.சு.செல்லப்பா எழுதிக்கொண்டிருந்தபோது அவரை (கோமல் சுவாமிநாதன் சிபாரிசில்) சென்னையில் சந்தித்திருக்கிறேன். நான் அவரைச் சந்தித்தபோது அவர் அமர்ந்திருந்த அதே திண்ணையில் அப்படியே அவர் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் உள்ளது.
அன்று செல்லப்பாவைச் சந்தித்தது எனக்கு இனிய அனுபவமாக இருக்கவில்லை. அவர் க.நா.சுவை வசைபாடித் தள்ளினார். நான் இலக்கியம் எழுதக்கூடும் என்றே எண்ணவில்லை. நவீனத் தமிழிலக்கியம் முடிந்துவிட்டது என்ற உறுதியுடன் இருந்தார். எதையும் செவிகொள்ளவில்லை.
நவீன இலக்கியம் என்பது எவரையும் மீட்காது என நான் உணர்ந்த தருணம் அது. ஒருவகையில் என்னை நித்ய சைதன்ய யதி நோக்கி கொண்டுசென்றது அந்த நாள்தான்.
சி.சு.செல்லப்பாகுமுதம் பேட்டி
இப்போது கிடைக்கும் குமுதம் 12-10-2022 – 19-10-2022 இதழில் என் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது. பேட்டிகள் திரும்பத் திரும்ப எழுத்தாளனை நினைவில் நிறுத்துகின்றன. எங்கோ அரசுநூலகத்தில் ஓர் இளைஞன் படிப்பான் என்று கற்பனை செய்துகொள்கிறேன். மணா குமுதம் இதழில் பணியாற்றிய காலத்தில், முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெளியான பேட்டி ஒன்று எனக்கு பெருவாரியாக வாசகர்களைப் பெற்றுத்தந்ததை நினைவுகூர்கிறேன்.
இதழியலின் வழக்கமே கவனம்கோருவதுதான். ஆகவே அவர்கள் பேட்டிகளை விவாதங்கள் நோக்கி செலுத்துவார்கள். வழக்கம்போல ஒற்றைவரிகளில் இருந்து எவராவது விவாதங்களைக் கிளப்புவார்கள். அதை மட்டுமே கவனிக்கும் நூறுபேர் முகநூலில் சலம்புவார்கள். நூறுபேர் டிவிட்டரில் புலம்புவார்கள். வாசிப்பவர்களில் ஒரு ஆயிரம்பேர் என் எழுத்துக்களை கவனிப்பார்கள். அவர்களில் நூறுபேருக்கு என் எழுத்துக்களுக்குள் நுழைய வாசல் திறக்கும். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஓர் உரையாடல் எங்களுக்குள் தொடங்கும்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


