செய்குத்தம்பிப் பாவலர் – மேலும் ஆளுமைகள்

செய்குத்தம்பி பாவலர்  

அன்பின் ஜெ!

தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளவற்றுக்கு மறுப்பு, திருத்தம் எதையும் நான் முன்வைக்கவில்லை, அந்த நிரை வரிசையில் குறிப்புகள் சிலவற்றைத் தரலாம் என்று கருதியே இதை எழுதுகிறேன்.

நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த . வெற்றிச் செல்வன் (எ) பசுலு முகைதீன் எங்கள் ஊரிலுள்ள கல்லூரியில் (1990 வரை) தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.  மகாமதிப் பாவலர் என்றொரு நூலை உலகத் தமிழராய்ச்சிக் கழகத்துக்காக எழுதியவர். சதாவதினியை நேரில் பார்த்க்கும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதால் முதல்நிலைத்தரவுகளைக் கொண்ட நம்பகத்தன்மையுள்ள எழுத்து அவருடையது. (மகாமதிப் பாவலர் இணையநூலகம் )

”சென்ற நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய அறிஞர் சைவசித்தாந்த அரங்குகளில் பேருரைகள் ஆற்றினார் என்றும், சைவசித்தாந்த மரபைச் சேர்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் அவரை போற்றினர் என்பதும் இன்று அரிய செய்திகளாக இருக்கக்கூடும். இனி ஒருபோதும் அது நிகழ வாய்ப்பில்லை என்றுகூட தோன்றுகிறது.
தமிழில் அவ்வகையில் நாகர்கோயில் செய்குத்தம்பி பாவலர் (1874 – 1950) ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தீர்கள். (செய்குத்தம்பி பாவலர் என்னும் வியப்பு நிகழ்வு)

ராமாயண சாயபு என்று முதலில் அழைக்கப்பட்டவர் தாருல் இஸ்லாம் பத்திரிகையின் தாவூத்ஷா (1889 – 1961) இந்தியக் குடியரசுத் தலைவராக (பிற்காலங்களில் வந்த) டாக்டர் ராதாகிருஷ்ணன், உ.வே.சா. ஆகியோரின் மாணவர். கும்பகோணத்தில் கணிதமேதை என்று அழைக்கப்பட்ட ராமானுஜமும், தாவூத்ஷாவும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்த சகமாணவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது மாவட்ட துணை ஆட்சியராக இருந்தபோது குதிரை வண்டியில் பயணித்தவர் பிற்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நடந்தே திருவல்லிக்கேணி அச்சகத்துக்கு வந்து செல்வாராம். விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அரசுப் பணியிலிருந்து வெளியேறி இருக்கிறார். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் முதன்மையானவர். (இராமாயண சாகிபு தினகணி கட்டுரை)

அடுத்துவந்த மு. மு. இஸ்மாயில் (1921 – 2005)  நீதிபதி, நாகூர்காரர். இவர் இந்த ஊரில் பேசினார், அந்த பத்திரிகையில் எழுதினார் என்று (அனேகமாக 1990-களின் இறுதிவரை) நாளேடுகளில் வந்துக் கொண்டிருந்த செய்திகளை என் வளரிளம் பருவத்தில் படித்த நினைவு இன்னுமுள்ளது. ஒரு சில சொற்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. சென்னைக் கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் என்கிற செய்தி அப்பொழுது எனக்குத் தெரியாது. இவரும் “கம்பராமாயண சாயபு” என அன்போடு அழைக்கப்பட்டார்.

அதனுடன் கவி கா.மு.ஷரீப்பும் முக்கியமானவர். பழங்கதைகளுடன் புதிதாக நம் சமகாலத்தில் சென்னை பெருங்களத்தூரிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக “சன்மார்க்க நேசன்” என்கிற மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எம்.ஏ. ஹுஸைன் அவ்வாறு வகைப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்படக் வேண்டியவர். வள்ளலார் மீது அளப்பரிய அன்பைக் கொண்டிருக்கும் ஹுஸைன் அத்துறையில் இன்று உயிருடன் உள்ள அறிஞர்களில் முதன்மையானவர்.
தங்களுக்கு இருக்கும் வருத்தம் போலவே எனக்கும் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது இந்த பிளவு எண்ணங்கள் இன்னும் கூர்மையடையவே வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.இன்றைய சமூக, அரசியல் நிலவரங்கள் நாளொரு கவலையும், பொழுதொரு பிரச்சனையுமாக விடிகின்றன.

எங்கள் ஊர் நாகநாத சுவாமி ஆலய வளாகத்தில் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் போன்றோரின் ஆன்மிக சொற்பொழிவுகளை என் இளமைக் காலங்களில் கேட்டது நினைவுக்கு வருகிறது. இந்திய மெய்யியலை பேசிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் அமர்ந்தோ, நின்றுகொண்டோ கேட்க எந்தத் தடையும் அன்று இருந்தது இல்லை. ஆலயங்களை அறநிலையத் துறை நிர்வகித்தாலும், வளாகங்களில் குறிப்பிட்ட பெரும்பான்மை அரசியல், சமூக இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டன. அவை ஒருவரை எப்படியெல்லாம் மற்றமையாக்கி புறமொதுக்கலாம் என்றே செயல்படுகின்றன. ஆகவே இன்று நான் நினைத்தாலும் பழையபடி ஒரு சிவாலய வளாகத்தில், பிள்ளையார் கோவில் அரச மரத்தடியில் சாதாரணமாக அமர்ந்துவிடமுடியாது.

துருவமயமாக்கல் நிகழ்ந்துகொண்டிருக்கும் சபிக்கப்பட்ட இந்த காலத்தில் சதாவதானி பாவலர் போன்றவர்களின் இயல்பு வாழ்க்கை இனி என்றேனும் திரும்ப நிகழ வாய்க்குமா என ஏங்க வைக்கிறது. Optimistic-க்காக வாழ கொஞ்சமிருக்கும் நம்பிக்கையை பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு செல்வோம், வேறென்ன…
நன்றி!

கொள்ளு நதீம், ஆம்பூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.