வாணிஸ்ரீயின் நிலம்

வாணிஸ்ரீக்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி, ஒருவர் கைது

போலிப்பத்திரம் ரத்து செய்யும் அரசாணை செய்தி

நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சினிமாத் துறையில் நாலைந்து மாதங்களுக்கு ஒருமுறை காதில் விழும் செய்தி நடிகை வாணிஸ்ரீக்குச் சொந்தமான பத்துகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எப்படி ‘ஆட்டையை போடப்பட்டது’ என்பது. ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்றுகூட ஒருமுறை ஒருவர் பேசினார்.

வாணிஸ்ரீக்கு சட்டப்படிச் சொந்தமான நிலம். அவர் பெயரில்தான் பட்டா உள்ளது. அதை வாடகைக்கு எடுத்தவரிடமிருந்து ஒரு கும்பல் வல்லடியாக அதைக் கைப்பற்றிக்கொண்டது. போலிப்பத்திரம் தயாரித்து அதை விற்றது. அந்தப் பத்திரம் முழுக்கமுழுக்க போலி என பத்திரப்பதிவுத் துறை சொல்லிவிட்டது. போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைதாயினர். உடனே ஜாமீனில் வந்து வழக்கை நடத்துகின்றனர்.

இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாணிஸ்ரீக்கு அந்நிலத்தை திரும்ப அளிக்கும் ஆணையை நீதிமன்றம்தான் போடமுடியும். தன் நிலம் போலிப்பத்திரம் வழியாக விற்கப்பட்டது, அதை கைவசம் வைத்திருப்பவர்களிடம் இருப்பது போலிப் பத்திரம், அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு இன்னொரு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நடைபெறுகிறது என வாணிஸ்ரீ சிவில் நீதிமன்றத்தில் திரும்ப ‘நிரூபித்து’ அங்கிருந்து நீதிமன்ற ஆணை பெறவேண்டும்.

எளியவிஷயம். ஆனால் நம் சிவில்நீதிமன்றத்துக்கு அது ஒரு சிவில் வழக்கு. எந்த சிவில் வழக்கையும்போல அதற்கும் ஆண்டுகள் மேலும் ஆண்டுகள் ஆகியது. சாதாரண ஆண்டுகள் அல்ல. இருபதாண்டுகளுக்கும் மேல். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே பற்பல ஆண்டுகள் வாய்தா வாங்கினார்கள் எனப்படுகிறது. இன்னமும்கூட அந்த வழக்கு முடிவடையவில்லை எனப்படுகிறது.

(சரி, நீதிமன்ற ஆணை வந்துவிட்டால்? அந்த ஆணையை காவல்துறைக்கு அளிக்கவேண்டும். காவல்துறை அதை நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றாவிட்டால்? மீண்டும் சிவில்நீதிமன்றத்தையே நாடவேண்டும்.)

ஓர் இதழியல் பேட்டியில் வாணிஸ்ரீ மேலும் மேலும் பணத்தைச் செலவுசெய்ய மனமில்லாமல், பற்பல ஆண்டுகள் நீடிக்கும் வழக்கின் அலைச்சலால் மனம் உடைந்ததைச் சொல்கிறார். அந்த மனச்சோர்வே தன் மகன் தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்கிறார். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் மிகமிகக்குறைந்த விலைக்கு அதை தங்களிடம் விற்றுவிடும்படி கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார். உண்மையிலேயே ஒரு திகைப்பூட்டும் திரைக்கதைக்கான பின்னணி.

(இன்னொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு களேபேரங்களுக்கு நடுவே இன்னொரு புது ஆள் மீண்டும் ஒரு போலி பத்திரம் தயாரித்து வாணிஸ்ரீயின் நிலத்தை விற்றுவிட்டார். பிடிபட்டார், ஜாமீனில் வந்துவிட்டார். இன்னொரு வழக்கு நடக்கிறது)

சில ஆண்டுகளுக்கு முன் என் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னார், அவருக்கு அப்படி பெரிய ஒரு கட்டிடம் விலைக்கு வந்தது. விற்றவர் தெளிவாகவே தன்னிடம் இருப்பது தானே தயாரித்த போலிப்பத்திரம் என்றாராம். ஆனால் அக்கட்டிடம் அந்த போலிப்பத்திர ஆளின் கைவச உரிமையாக உள்ளது. உரிமையாளர் அதை ‘மீட்க’ இருபது முப்பது ஆண்டுகளாகும். மாதவாடகை ஐந்து லட்சம் என்றாலும் பன்னிரண்டுகோடி வாடகையாகவே மிஞ்சும். இவர் ஐந்துகோடிக்கு அதை வாங்கினால் போதும்.

வழக்கை இழுக்க இழுக்க லாபம் என்றார் விற்பனையாளர். தயாரிப்பாளர் அனைத்து ரதகஜதுரகபதாதிகளும் உள்ளவர். ஆனால் மறவர். அவருக்கு ஓர் அரசகுலப் பாரம்பரியம் உண்டு. அதன் காரணமாக ஓர் அடிப்படை அறத்தயக்கம். ஆகவே அவர் அதில் மேலே செல்லவில்லை.

இதுதான் சூழல். இந்நிலையில் ஒரு புதுக் கிளைமாக்ஸ். தமிழக அரசு ஒரு புதுச் சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அதாவது பத்திரப்பதிவுத் துறையால் ஒரு பத்திரம் போலியானது என்று கண்டுகொள்ளப்பட்டால் உடனே அந்தப் பத்திரத்தை தானே ரத்துசெய்துவிடலாம். போலிப்பத்திரம் வைத்திருப்பவரின் ‘கைவச உரிமை’ தானாகவே ரத்தாகிவிடும். போலிப் பத்திரம் பதிவுச்செய்யப்பட்டிருந்தது என்றால், அதைப் பதிவுசெய்த பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மிகமிக எளிமையான ஒரு சட்டம். மிக அடிப்படையான சட்டம். ஆனால் இன்றுவரை இது இல்லாமல் இருந்தது. போலிப் பத்திரம் என பத்திரப்பதிவுத் துறை சொன்னாலும்கூட நீதிமன்றம்தான் அதை ரத்துசெய்ய முடியும். அதை நீதிமன்றம் ரத்துசெய்ய ஒரு தலைமுறைக்காலம் ஆகும். சாமர்த்தியம் இருந்தால் வழக்கை நாலைந்து தலைமுறைக்காலம்கூட இழுக்கலாம்.

இந்தச் சட்டம் உண்மையில் தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சியைக் கொண்டுவரவிருக்கிறது. பல ஆண்டுகளாக சட்டப்போர் நடத்திவரும் வாணிஸ்ரீக்கு அவர் நிலம் முதல்வரால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால் அரைமணிநேரத்தில் தீரவேண்டிய பிரச்சினைதான் இது. வாணிஸ்ரீயின் கால்நூற்றாண்டை நரகமாக்கியிருக்கிறது.

இவ்வளவு அடிப்படையான ஒரு திருத்தம் ஏன் சுதந்திரம் அடைந்த முக்கால்நூற்றாண்டில் செய்யப்படவில்லை? ஏன் இன்னமும் இந்தியாவில் வேறெங்கும் இல்லை? அதைப் பேசிப்பயனில்லை. இப்போதாவது நடக்கிறதே என ஆறுதல்கொள்ள வேண்டியதுதான். இந்த அரசில் உண்மையிலேயே அக்கறைகொண்ட அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்கள் சொல்வதைச் செவிசாய்க்க அரசில் ஆளிருக்கிறது.

தமிழக அரசின் இந்தச் சட்டம் பெரும் முன்னகர்வு. உடனடியாக கேரளம் போன்ற அரசுகளும் இதை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முன்முயற்சி எடுத்த அதிகாரிகள் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள்.

மாலைமலர் செய்தி

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.

இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், பிரிவு 77-எ ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்–அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.