Jeyamohan's Blog, page 710
September 24, 2022
சேலை, கடிதம்
அன்புள்ள ஜெ
சேலை சகதேவ முதலியார் பதிவு பார்த்தேன். சேலை ஒன்றும் திருடு போய்விடவில்லை. பதட்டப்பட வேண்டாம்:) சேலை என்ற ஊர் பெயர் இன்றும் மாறாமல் அவ்வாறே உள்ளது. கணிசமான அளவில் முதலியார்கள் அங்கே உள்ளார்கள். அப்புறம் தமிழ் விக்கி பதிவில் ஈக்காட்டில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு சகதேவ முதலியார் தமிழ் கற்பித்திருக்கிறார் என உள்ளது. சேலை என்றவுடன் சேலைக்கட்டி கொண்ட ஆள் ஞாபகம் வந்தது போல, பாதிரியார்கள் ஈ காக்கா ஓட்டி கொண்டிருந்ததால் ஈக்காடு என பெயர் வந்ததா? இல்லை ஒரு. ஈ கூட இல்லாத பொட்டல் என்பதால் அப்பெயரா? என்ற மாதிரி விபரீத சிந்தனைகளில் மூழ்கி ரத்த கொதிப்படைய வேண்டாம்:) மாறாக ஒரு எட்டு போய் பார்த்துவிடுங்கள். ஊரு பேரு எல்லாம் பத்திரமாக இருக்கிறது. ஐயம் தேவையில்லை. இந்நேரத்திற்கு என்ன இந்த பயலுக்கு இன்னிக்கு துடி ஜாஸ்தியா இருக்கே… மரை கழண்டு போச்சோ என்றவாறு சிந்தனை தேனீக்கள் மண்டைக்குள் ரீங்காரமிட்டு கொண்டிருக்கலாம். கவலை வேண்டாம், இன்று கொஞ்சம் டோஸ் கூடிவிட்டது அவ்வளவு தான்.
சிரித்தது போதும் கொஞ்சம் சீரியஸ் ஆவோம். மேற்படி சேலை என்ற ஊர் என் அத்தை வீட்டு உறவுக்காரர்கள் நிறைந்த ஒன்று. அதான் எல்லாம் ஒரே முதலியார் ஜாதியே. அவ்வப்போது வீட்டில் ஊர் வம்புகள் ஓடும்போதோ, பெண் பார்க்கும் படலங்களின் கதைகள் கிளுகிளுக்கும் போதோ காதில் அடிபட்டு கொண்டிருக்கும் ஊர் பெயர் சேலை. அதே போல இந்த ஈக்காட்டில் முதலியார்கள் முட்டை போட்டு கோட்டை கட்டியுள்ளனர் என்பது காலையில் வீட்டில் விசாரித்ததில் கிடைத்த துண்டு செய்தி.
ஆனால் கொடுமை என்னவென்றால் வழக்கம் போல இந்த ஊர்களில் இப்படிப்பட்ட ஒரு அறிஞர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த தடையமும் இருக்காது. ஆர்வமிருந்தால் தேடி சென்று பார்க்கலாம். கிடைத்தவரை லாபம்.
இப்போது நான் வசிக்கும் திருமணம் என்ற இந்த ஊரில் செல்வகேசவராய முதலியார் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயரே திருமணம் செல்வகேசவராய முதலியார் என்று தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர் குறித்து இங்கு ஒரு அடையாளம் கிடையாது. அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் மூலம் தான் செல்வகேசவர் அறிமுகம். நானறிந்த எங்கள் குலக்கதை மரபில் அவர் இல்லை என்பது உறுதி. இதே ஊரில் எங்கள் வம்சத்திற்கு மாற்றாக இன்னொரு சைவ முதலியார் வம்சத்தாரும் உள்ளனர். அவர்களின் குலவழி கதைகளில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டும். சொல்லப்போனால் மூன்று தலைமுறைக்கு முன்வரைக்கும் அவர்கள் தான் இந்த ஊர் நாட்டாமைகளாக இருந்திருக்கின்றனர். இவர்கள், அதாவது என் பாட்டானார் வழி வலிமை குன்றிய குடும்பமாக இருந்துள்ளனர். பிற்பாடு நிலம் இல்லாவிட்டாலும் என் பாட்டானார்கள் தோள் பெருத்த தடியன்களாக உருமாறியதால் அந்த கோஷ்டி இந்த கோஷ்டி வேலைக்கு வைத்து கொண்டதுடன் கையும் கோர்த்து கொண்டது.
இப்போது பிரச்சினை என்னவென்றால், செல்வகேசவரை பற்றி அவர்களிடம் விசாரிக்க ஆசை தான். ஆனால் அதற்கு நானே தனியாக செல்ல வேண்டும். அது சாத்தியமில்லை. என்னை போன்ற இன்னொரு ஜீவனை இதுவரை இவ்வூரில் கண்ட பாடில்லை. இருந்திருந்தால் எனக்கு பதில் அவனை அனுப்பியிருக்கலாம்.
கடைசியாக நீங்கள் சரிபார்த்து கொள்வதற்காக இரண்டு ஊர் கூகுள் மேப் படங்களையும் இணைத்துள்ளேன். பார்த்து கொள்ளுங்கள்.
Selai
https://maps.app.goo.gl/stgqRR4HjXJkZrM9A
Ikkadu
https://maps.app.goo.gl/74dS5qfe3f86W1g67
அன்புடன்
சக்திவேல்
சியமந்தகம், கடிதம்
அன்பின் ஜெ,
வணக்கம்.உங்கள் மணிவிழா கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.அத்தனை பேரின் அன்பும் உள்ளத்தை தொடுகின்றன.நானெல்லாம் எதை எண்ணுவது? என் சிந்தனை முழுக்க உங்கள் எழுத்துக்கள்தான் நிறைந்துள்ளன.
வாசிப்பதையே தொழிலாகக் கொண்ட எனக்கு விஷ்ணுபுரம் ” கையில் கிடைத்தபோது தான் புது உலகு திறந்தது.அப்புனைவின் அத்தனை வழிகளிலும் நுழைந்து வாழ்ந்து திளைத்திருந்தேன். கிறித்தவ பிண்ணனியில் வளர்ந்த எனக்கு அதுவரை நானறிந்திராத வாழ்வின் பக்கங்களை சொல்லியது உங்கள் படைப்புகள் தான்.ஜெயமோகன் ஜெயமோகன் என்று தேடித்தேடி வாசித்தேன்.இன்றைய காந்தி,இந்து ஞான மரபில், கொற்றவை, அறம், காடு , ஊமைச்செந்நாய்,கிளிசொன்ன கதைகள் என்று உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கி இருந்தேன்.
அதுவரையில் வார இதழ்களிலும் நானறிந்த நூலகங்களிலும் வாசித்தறிந்த எல்லாமே சிறு துளி மட்டுமே என உணர்ந்தேன். இலக்கியம் என்பதன் முழுமையை அறிய உங்கள் எழுத்துக்கள் தான் எனக்கு அடிப்படை.
இந்நிலத்தின் பல்லாயிரம் ஆண்டுகளின் ஞானம்,உளத் தேடல்கள், ஆலயங்களின் தொன்மை, அவற்றின் மையமாக வளர்ந்த கலைகள், ஆன்மீகம் என்று அத்தனை அடுக்குகளையும் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.வாசிப்பது என்பதையே உள்ளத்தில் ஒரு குற்ற உணர்வுடனே அதுவரையில் செய்து கொண்டிருந்தேன்.எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் குடும்பங்கள் என்று எல்லாருமே என்னை அதற்காக எப்பொழுதும் கண்டித்துக் கொண்டே இருந்ததும் அதற்கு காரணம்.என்னால் வாசிக்காமல் சில மணிகள் கூட இருக்க முடியாது என்பதாலேயே சிறு பிள்ளையிலிருந்தே ஒளித்து மறைத்தாகிலும் படித்துக்கொண்டே தான் இருப்பேன்.
ஆனால் இலக்கிய வாசிப்பு என்பதே ஒரு பேருவகை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், விதி சமைப்பவர்கள் என்றெல்லாம் உங்கள் கட்டுரைகள் வாசித்த பிறகே எனக்கு என் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் அத்தனை பெருமிதம் வந்தது.இலக்கியம் என்பதன் உயர்வினை அறிந்துகொண்டேன்.
சங்கப்பாடல்கள் கம்பன் கபிலன் என்றெல்லாம் அதன்பிறகே முழுமையாக வாசித்தேன்.என் வாழ்க்கை, என் பேச்சு எல்லாமே மாறியது.
யாதெனின் யாதெனின் ” என்ற குறளை புல்வெளி தேசம் நூலில் மேற்கோள் காண்பித்திருப்பீர்கள்.அதை வாசித்த கணம் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அதிகம் செலவழிக்காவிட்டாலும் அதுவரை நான் பார்த்ததும் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி விடுவேன்.ஆனால் உங்கள் எழுத்தே என் இயல்பை மாற்றியது.யாதெனின் என்பதன் பொருளை உண்மையாக உணர்ந்தேன்.என் வாழ்க்கை முறையே மாறியது.அது மனதிற்கு மிகப்பெரிய விடுதலையாக அமைந்தது.
அதே போல ” நான்கள்” என்று பிரித்து எழுதியிருப்பீர்கள்.இலக்கியத்தையும் வாசிப்பையும் எழுத்தையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளாமல் எப்படி சமன்செய்வது என்பதையெல்லாம் நான் அறிந்து கொண்டேன்.
நான் மலைப்பகுதியில் வளர்ந்திருந்தாலும் பழங்குடியினர் வாழ்வு , மரபுகள் பண்பாடுகள் பற்றியெல்லாம் தெளிவான புரிதல்கள் இருந்ததில்லை.உங்கள் எழுத்துக்களே எனக்கு அவற்றையெல்லாம் கற்றுத் தந்தன.இன்னும் இன்னும் ஒவ்வொரு நாளும் உங்கள் இணையப்பக்கத்தை வாசித்தே எல்லாவற்றையும் அறிகிறேன்.
என் வாழ்வில் தினமும் அதிகமுறை நான் சொல்லும் பெயர்கள் ஜெயமோகனும் ஜெயகாந்தனும் என்பது என் நண்பர்களுக்குத் தெரியும்.என்னவோ தமிழ் எழுத்தாளர்களெல்லாம் என் சக தோழர்கள் போலவும் தினமும் அவர்களிடம் நான் பேசுவது போலவுமே அவர்களின் மேற்கோள்கள் கதை மாந்தர்கள் என் வாயில வந்து கொண்டே இருப்பார்கள்.இவையெல்லாம் திட்டமிட்டவை அல்ல.என் இயல்பே அதுதான்.அவர்களிடம் பேசாவிட்டால் என்ன? ஒவ்வொருநாளும் அவர்களின் எழுத்துக்களே என்னை நடத்துகின்றன.அதைவிட வேறென்ன அணுக்கம் வேண்டும்?
ஜெ, முதலில் உங்கள் எழுத்து எனக்கு அறிமுகமானது சங்க சித்திரங்கள் தொடர் மூலமாகத்தான்.
வாசிப்பு என்பது என்னுடன் இணைந்தது.ஆனால் பெரிய இலக்கிய வட்டாரத் தொடர்புகளோ அறிமுகங்களோ எனக்கு இருந்ததில்லை.ஜெயகாந்தனை மட்டுமே முழுமையாக வாசித்திருந்தேன். அதன்பிறகு உங்கள் புத்தகங்களை தேடித்தேடி வாசித்தேன்.இப்பொழுது நினைக்கையில் அந்த வயதில் எவ்வளவு தீவிரமாக வாசித்திருக்கிறேன் என்பது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.பள்ளி படிப்பு வரை மிக நன்றாக படித்த நான் , தவறான வழிகாட்டுதல்களால், அன்றைய கல்வித்துறை குழப்பங்களால் எனக்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத ஒரு மருத்துவ பட்டயப்படிப்பில் சேர்க்கப்பட்டு என் வாழ்வு திசைமாறி மனதளவில் நான் முழுமையாக உடைந்திருந்த காலகட்டம் அது.
அப்போது தான் இணையம் அறிமுகமானது. .ஸ்மார்ட் போன் இல்லை. இபுக், பிடிஎப் என்று போனில் வாசிக்க முடியாது.புத்தகங்களைத் தேடி பைத்தியம் போல அலைவேன்.என்னிடம் இருக்கும் அத்தனை பணத்திற்கும் புத்தகங்களை வாங்குவேன்.வேலூரின் அத்தனை லெண்டிங் லைப்ரரிகளிலும் புத்தகங்களை வாரிக் கொண்டு வருவேன்.இலக்கிய புத்தகங்கள் கிடைப்பதே அரிதான காலம். என் படுக்கையின் கீழும் என்னைச் சுற்றிலும் புத்தகங்களாய் இருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் என்னை மீட்டது இலக்கியம் மட்டுந்தான்.உங்கள் புத்தகங்களை அப்படித்தான் வாசிக்கத்தொடங்கி இன்று வரை தொடர்கிறேன்.
உங்கள் பயணக் கட்டுரைகள் எனக்களித்த மன உணர்வுகளை சொல்ல முடியாது.எனக்கெல்லாம் வாழ்வு சில கிலோமீட்டர்களிலேயே சுற்றி வருவது தான்.வீடு பணிபுரியும் இடம், உறவினர் நண்பர்கள் எல்லாமே திருவண்ணாமலை வேலூரைச் சுற்றியே சுழல்வது தான்.இந்திய நிலத்தின் அத்தனை ஆறுகளையும் கோவில்களையும் சாலைகளையும் மலைகளையும் மக்களையும் நான் அறிந்து கொண்டதே உங்கள் எழுத்துகளில் தான்.இன்னும் எழுதிக்கொண்டே இருக்கலாம்.அத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள்.
உங்கள் மணிவிழா தினத்தில் மேலும் மேலும் நீங்கள் மேன்மையுற வேண்டுகிறேன்.
அன்புடன்
மோனிகா மாறன்.
கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி-கடிதம்
அன்புள்ள ஜெ
கௌதம் மேனன் மீட்சி பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். சினிமா ஒருபக்கம் இருக்கட்டும். நிஜவாழ்க்கையில் இதைப் பார்க்கலாம். நமக்கு ஒரு வீழ்ச்சி என்றால் அனுதாபம் காட்டுவார்கள். நம்மைப்பற்றி நல்லதாகப் பேசுவார்கள். ஆனால் நாம் மேலே மீண்டு வர ஆரம்பித்தால் ஒட்டுமொத்தச் சொந்தமும் நட்பும் சேர்ந்து நம்மை மிதித்து கீழேதள்ள முயல்வார்கள். இது என் அனுபவம். அதை மீறி மேலே வந்தால் நாம் மீளவே இல்லை, அது பாவலா என்பார்கள். அதுவும் கடந்தால் எல்லாம் லக் என்பார்கள்.
ஏன் என்று சிந்தனை செய்திருக்கிறேன். நாம் வீழ்ச்சி அடையும்போது மற்றவர்களின் ஈகோ திருப்தி அடைகிறது. ஆனால் நாம் மேலே வரும்போது மற்றவர்களுக்கு நம் ஆற்றல் தெரிகிறது. அந்த ஆற்றல் அவர்களிடமில்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் சீற்றம் அடைவது அதனால்தான்.
நான் கற்றுக்கொண்டது ஒன்று உண்டு. அவர்களை பொருட்படுத்தி வருத்தப்படக்கூடாது. அவர்களின் அடிகளை சவாலாக எடுத்துக்கொள்ளவும் கூடாது. ஏனென்றால் அவர்களை நாம் நினைத்தாலே நாம் கீழே போக ஆரம்பிப்போம். நாம் நம் வேலையில் ஒரு நுட்பத்தை கண்டுபிடித்து அதன்வழியாகத்தான் மீண்டு வருவோம். அந்த நுட்பத்தை அப்படியே வளர்க்க மட்டும்தான் முயலவேண்டும்.
அது ஒரு சினிமாக்கட்டுரை அல்ல. ஆழமான ஒரு வாழ்வியல் கட்டுரை.
அன்புள்ள
சிவா.
அன்புள்ள ஜெ,
நீங்கள் இங்குள்ள புரிந்துகொள்ளும் திறமையின்மை பற்றி அடிக்கடி எழுதி வருகிறீர்கள். நான் அதை கண்கூடாகவே பார்த்தேன். வெந்துதணிந்தது காடு வந்த நாட்களில் ஒருவர் ‘ஸ்குரூவுக்கு மிசின் என்ன செய்யுதுன்னு தெரியாதுங்கிறான். மிசினுக்கு மட்டும் அது என்ன செய்யுதுன்னு தெரியுமா?’ என்று இளித்தபடி கேட்டான்.
நான் அந்த வசனத்தை எடுத்துக் காட்டினேன். ‘நாம் இந்த மிஷினில் ஒரு ஸ்க்ரூ. ஸ்க்ரூவாலே மிஷின் என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுகிட முடியாது’ இதுதான் வசனம். இதில் ‘நாம் என்கிற ஸ்குரூவாலே நாம மாட்டியிருக்கிற இந்த ஒட்டுமொத்த மிஷினை தெரிஞ்சுகிட முடியாது’ என்பது அர்த்தம். ஸ்க்ரூவாகிய நாம் என்று சொல்லியிருந்தால் இவன்களுக்கு புரிந்திருக்கும் (அப்பவும் சந்தேகம்தான்) அந்த உவமைகூட புகழ்பெற்ற ஆங்கில பழமொழியை அடியொற்றியது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
கொஞ்சநாள் முன்னால் சாவார்க்கர் சிறையில் இருக்கையில் சிறைக்குள் வரும் புல்புல் பறவையில் ஏறி அந்தமானில் இருந்து இந்தியா வந்து செல்வார் என்று கர்நாடக பாடப்புத்தகத்தில் ஒரு வரி வந்தபோது இங்கே ஒரே கேலி கிண்டல். மகாபெரிய அறிவாளிகள் ’புல்புல் பறவைமேல் மனிதன் ஏறமுடியுமா?” என்று கட்டுரைகள் எல்லாம் எழுதினார்கள். புல்புல் சுட்டுவிரல் சைஸ் உள்ள குருவி. உலகிலுள்ள எந்தப் பறவைமேலும் மனிதர்கள் ஏறமுடியாது. 2.0 சிட்டி ஜூனியர் ஏறலாம்.
அதை ஒரு கவித்துவமாக எழுதியிருக்கிறார்கள் என்றுகூட இவர்களுக்கு புரியவில்லை. புல்புல் மேலே மனுஷன் ஏறினானாம் ஹிஹி என்று ஒரு சிரிப்பு. உண்மையிலேயே ஆச்சரியம். இவ்வளவுதான் கற்பனை. இவ்வளவுதான் நகைச்சுவை உணர்ச்சி. நம் கல்விமுறையிலேயே இந்தச் சிக்கல் இருக்கிறது. எதையுமே கற்பனை செய்ய தெரியாது. இவர்களிடம் பேச நேர்வதுபோல மண்டையிடி வேறில்லை.
ஆர். சந்தானகோபாலன்
September 23, 2022
கவிதையின் பயில்களம்
Created by ImageGear, AccuSoft Corp.அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நலம். எனக்கு தெரிந்த வரையில் தமிழ் புனைவுலகு சூழலில் கவிதைகளை கவிஞர்களை அதிகம் கொண்டாடக்கூடியவர் நீங்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருதுகள் மூலம் கவிஞர்களை முன்னிறுத்தி வருகிறது. இவ்விருதுகள் மூலமும் தங்களது வலைதளத்தின் மூலமும் நான் சில கவிஞர்களை கண்டுகொள்ளமுடிந்தது. ஆனால் எனக்கொரு மனவருத்தம்.
என்னால் கவிதைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. எந்த அளவிற்கெனில் ஆனந்த குமாரின் ‘ராணி‘ என்றொரு கவிதை. அதன் உள்ளுறை புரியவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அதன் வெளிப்படையான பொருள் கூட புரியவில்லை. புரியவில்லை என்பதை விட அதை கண்டுகொள்ள முடியவில்லை. அது சதுரங்க ஆட்டத்தை படிமமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கவிதை. அச்சதுரங்க ஆட்ட சித்தரிப்பையே பிறிதொருவர் சொன்ன பிறகே நான் கண்டுகொண்டேன்.
இது எல்லா கவிதைகளிலும் எனக்கு நிகழ்கிறது. கவிதையை முழுக்க வாசித்த பிறகு அழகாக அடுக்கப்பட்ட சொற்றொடர்கள் என்ற அளவிலேயே என்னால் அதை எடுத்துக் கொள்ள முடிகிறது. ஒரு நாவலை வாசித்த பிறகு அதை நான் எனக்குள்ளேயே பல முறை பல வடிவங்களில் சொல்லிப் பார்த்துகொள்வேன். அது எனது வழக்கம். ஒவ்வொரு முறை நினைவிலிருந்து மீட்டு எடுக்கும் போதும் ஒரு புதிய விஷயம் அத்துடன் சேரும். ஆனால் ஒரு கவிதையில் என்ன இருக்கிறது என்பதை என்னால் ஒருமுறைகூட சொல்லிப்பார்க்க முடிந்ததில்லை. ஏனெனில் அதை என்னால் உணரவே முடியவில்லை. இதை மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை.
கடிதத்தை வாசித்துப்பார்க்கையில் மருத்துவரிடம் தன் நலமின்மையை சொல்வது போன்ற சாயல் தெரிகிறது, இருப்பினும் தங்களிடம் தக்க வழி இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன்,
சீரா
In the Poetry Writing Workshop’ and Other Poetry by William Ruleman
அன்புள்ள சீரா,
எந்த வகையான கலையை ரசிப்பதற்கும் இரண்டு அடிப்படைகள் தேவை. ஒன்று அதை ரசிப்பவருக்கு இயல்பாக அமைந்திருக்கும் ரசனைக்குணம். அவ்வியல்புன் ஊற்றுமுகங்கள் என்ன என்பது இன்றும் அறிஞர்களிடையே விவாதத்துக்கு உரியதாக உள்ளது. இயல்பிலேயே மூளையின் தகவமைப்பில் அவ்வாறான சில பண்புக்கூறுகள் உள்ளன என்று கூறுபவர்கள் உள்ளனர். வளர்ப்புச்சூழல் ஒருவரை அவ்வாறு வடிவமைக்கிறது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். நாம் சோம்ஸ்கி பியாஜெட் விவாதம் என 1975 இல் தொடங்கிய இந்த விவாதத்திற்கு இன்றும் அறுதியான தீர்வுகள் இல்லை. (சாம்ஸ்கி பியாஜெட் விவாதம்)
இயல்பிலேயே அமையும் திறன் என்பது ஒன்று கற்பனைத்திறன். இன்னொன்று மொழி சார்ந்த நுண்ணுணர்வு. கலை சார்ந்த நுண்ணுணர்வுகளே பொதுவாக மூன்று வகை. கலைரசனை அனைத்தையுமே கற்பனை என்று சொல்லலாம் என்றாலும் கூட, சிலருக்கு காட்சி சார்ந்த கற்பனைகளே எளிதில் விரியும். அவர்கள் ஓவியம் நோக்கி ஈர்க்கப்படுவார்கள். சிலருக்கு ஒலி சார்ந்து கற்பனைகள் விரியும். அவர்களே இசை ரசிகர்களாக அமைகிறார்கள். சிலருக்கு மொழி சார்ந்து கற்பனை விரியும். அவர்களே இலக்கிய வாசகர்கள்.
சொல் எனும் அடையாளத்திலிருந்து அர்த்தங்களையும், அதிலிருந்து உணர்வுகளையும் அவற்றைக்கடந்த ஆழ்உணர்வெழுச்சிகளையும் அடைபவர்கள் இலக்கியத்திற்கு வருகிறார்கள். சிறுவயதிலேயே அவர்களுக்கு மொழிசார்ந்த ஒரு கூடுதல் நுண்ணுணர்வு இருக்கும். சொற்களைக் கவனிப்பார்கள். புதிய சொல்லாட்சிகளைச் சொல்வார்கள். சொற்களை வைத்து பகடிகளை உருவாக்குவார்கள். சிறுகுழந்தைகளிலேயே இதைக் காணலாம். வெறும் சொற்களாகவே கதைகளைச் சொல்கையில் சில குழந்தைகள் கண்கள் விரிய, கனவுகளுக்குள் சென்றுவிடுகின்றன. அக்காட்சியை மனக்கண்ணில் காண ஆரம்பிக்கின்றன. அவையே இலக்கிய வாசகர்களாக எழுகின்றன.
ஆனால் எத்தனை திறனுடையவராக இருந்தாலும் அதன்பொருட்டு அவர் ஒரு முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை எனில் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. இயல்பிலேயே செவிசார் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்ட ஒருவர்கூட உடனடியாக செவ்வியல் இசைக்குள் நுழைய முடியாது. காட்சிசார் நுண்ணுணர்வுடையவர் உடனே சென்று ஒரு நவீன ஓவியத்தை பார்த்து ரசித்துவிட முடியாது. அதைப்போலத்தான் மொழிசார் நுண்ணுணர்வு கொண்டவர் அதைமட்டுமே கொண்டு இலக்கியத்துக்குள் நுழைந்துவிட முடியாது. இயல்பிலேயே கவிதையை, கலையை ரசிக்கும் திறன் ஒருவருக்கு அமையும் என்றாலும் மேலதிகமாக பயிற்சிகள் தேவை.
ஏனெனில் மொழி மேலதிகமாக ஓர் அறிவுத்தகுதியைக் கோருகிறது. அதை மொழிப்பயிற்சி என்று சொல்லலாம். மொழியில் ஒரு பண்பாடு பல்லாயிரம் அடையாளங்களாக, குறியீடுகளாக, படிமங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒருவர் அறிந்திருக்கிறாரா என்பது இலக்கியத்தை அவர் அறிந்துகொள்வதற்கான அடிப்படையான ஒரு கேள்வி. ஆகவே ஒரு மொழியில் பயிற்சி என்பது மொழிக்கு அடியில் மொழியெனத் தன்னை வெளிக்காட்டும் மாபெரும் பண்பாட்டு வெளியுடனான தொடர்பே ஆகும். அந்தப்பண்பாட்டு வெளிக்குள், அதன் ஒரு பகுதியாக உறைபவரே அந்த மொழி உருவாக்கும் இலக்கியத்தை முழுமையாக அடையமுடியும். ஆகவே மொழிப்பயிற்சி இன்றியமையாததாகிறது.
மொழிப்பயிற்சிக்கு மேலதிகமாக அந்தக் குறிப்பிட்ட இலக்கிய வடிவம் சார்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. நாவல், சிறுகதை, கவிதை மூன்றுக்குமே தனித்தனியான பயிற்சிகள் தேவை. ஒரு நாவல் அதனுடைய ஒட்டுமொத்த கட்டமைப்பால், அதனுடைய அடிப்படைக்கூறுகளுக்கிடையே இருக்கும் இடைவெளிகளை வாசகன் நிரப்பிக்கொள்ள வழிவகுப்பது வழியாக தன்னைத் தொடர்புறுத்துகிறது. ஒரு சிறுகதை அக்கதை முடிவிற்கு பிறகு விடும் இடைவெளியை வாசகன் நிரப்ப அறைகூவுகிறது. அதை நிரப்பும் வாசகனிடம் அது தன் விரிவான வடிவைக்காட்டுகிறது. கவிதை அதன் சொல்லிணைவுகள் உருவாக்கும் சாத்தியங்கள், சொல்லின் இடைவெளிகள் உருவாக்கும் சாத்தியங்கள் வழியாக கவிதை வாசகனுடன் தொடர்பு கொள்கிறான். அந்த நிரப்புதலுக்கான பயிற்சியை ஒரு வாசகன் அடைந்தாகவேண்டும்.
அது இயல்பாக வருவதல்ல. கவிதையெனும் அந்தக்கலைக்கு சற்றுப் பழகவேண்டும்.ஒரு நுண்ணுணர்வுள்ள வாசகர் மேலதிகமாக படிமம் என்றால் என்ன, உருவகம் என்றால் என்ன, கவிதையின் பிறிதுமொழிதல் உத்தி என்றால் என்ன, குறைத்துச்சொல்லல் என்றால் என்ன, கவிதை விடும் இடைவெளி என்பது என்ன என்பதை அறிந்துகொள்ளும்போதே சட்டென்று கவிதைக்குள் நுழைந்துவிடுவதை கண்டிருக்கிறேன்.
நீங்கள் நல்ல கவிதை வாசகர்களை அணுகி கேட்டுப்பார்த்தால் அவர்கள் அவ்வாறு ஒரு பயிற்சியை அடைந்திருப்பதை பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் அந்தப்பயிற்சி பெரும்பாலும் இலக்கிய நண்பர்களின் கூடுகைகளில் கவிதைகளை விவாதிப்பதன் வழியாக வருகிறது. மூத்த கவிஞர்களுடன் அமர்ந்து வெவ்வேறு கவிதைகளை ஏற்றும் மறுத்தும் பேசுவதனூடாக மெல்ல மெல்ல புலப்படுகிறது. தமிழ்ச் சூழலில் இன்றுவரைக்கும் இருக்கும் கவிதையைக் கற்பதற்கான வாய்ப்பு என்பது இதுதான்.
ஆனால் உலகெங்கும் முறையான பயிற்சியுடன் கவிதையை கற்பதற்கான அரங்குகள் உள்ளன. அந்த அரங்குகளில் ஒரு கவிதையின் படிமம் ,பண்பாட்டுக்கூறுகள், அதன் வடிவவேறுபாடுகள் ஆகியவற்றை வாசகனாகத் தொட்டெடுப்பது எப்படி என்ற பொதுப்பயிற்சியை அளிக்க முடியும். அப்பயிற்சியிலிருந்து நுண்ணுணர்வுடைய ஒருவர் மேலே செல்ல முடியும். கவிதை விவாதங்களை உலகெங்கும் பல்கலைக்கழகங்களும் இலக்கிய அமைப்புகளும் ஒருங்கிணைத்துக்கொண்டே இருப்பது இதற்காகத்தான்.
தமிழ்ச்சூழலில் பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாசிப்பையும் எழுத்தையும் ’மர்மப்படுத்த’ முயல்கிறார்கள். ஆகவே அவர்கள் பொதுவான, புகைமூட்டமான சொற்களைச் சொல்கிறார்கள். பலர் கவிதைகளை எழுதும், வாசிக்கும் பயிற்சியை பழக்கம் வழியாக அடைந்திருந்தாலும் அதைப்பற்றி புறவயமாக யோசித்திருப்பதில்லை, ஆகவே எதையும் அவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆகவே இங்கே பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை, பயிற்சி வகுப்புகளிலும் பயனற்ற தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகளோ, பொதுவான பேச்சுகளோ தான் நிகழ்கின்றன. கவிதையில் மட்டுமல்ல எக்கலையிலும் ஒரு முடிவில்லாத மர்மம், பகிரமுடியாத ஓர் அம்சம் உள்ளது. ஆனால் முடிந்தவரை வரையறை செய்து, கூடுமானவரை பகிர்ந்தபின் எஞ்சுவதாகவே அது இருக்கமுடியும்.
கவிதைப்பயிற்சியை ஒருவன் தன்னிச்சையாக அடையமுடியும். நல்ல நண்பர் குழு வழியாக அடையமுடியும். அல்லது தொடர்ச்சியாக ஒருவர் விடாப்பிடியாக பல ஆண்டுகள் கவிதைகளை படிக்கும்போது இயல்பாகவே அத்திறன் அவருக்கு அமையும். ஆனால் பல கோணங்களில் முயன்று முட்டி தோற்று வென்று அடையும் அவர் அடையும் அந்தப்பயிற்சியை ஓரிரு அமர்வுகளினூடாக முறையாக கற்பித்துவிட முடியும். ஒரு பயிலரங்குக்கு வரக்கூடிய அனைவருக்கும் அந்தக்கவிதை சென்றடைய முடியுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவ்வாறு கவிதைக்குள் செல்ல இயல்பாக வாய்ப்புள்ள ஒருவர் புறவயமான சில சிறு தடைகளால் தயங்கி நிற்பாரென்றால் அவரால் மிக இயல்பாக கவிதைக்குள் செல்ல முடியும். கவிதை வாசிப்பில் கற்பிக்கத்தக்க ஒரு தளம் உண்டு, அதைக் கற்பித்துவிட முடியும்.
ஊட்டியில் தொடர்ச்சியாக நாங்கள் கவிதை அரங்குகளை நிகழ்த்திவருகிறோம். கவிதை எழுதுவதற்கான பயிற்சி அல்ல அது. கவிதை வாசிப்பதற்கான பயிற்சி. அம்முகாம்களில் கவிதையுடன் எளிமையான அறிமுகம் கூட இல்லாத பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தின் தலைசிறந்த கவிதை வாசகர்களாக அவர்களே தேறுகிறார்கள். எங்கே எவர் கவிதை எழுதினாலும் அந்த வாசகர்களிடமிருந்து ஓர் அங்கீகாரத்தை கவிஞர்கள் எதிர்பார்ப்பதை இன்று பார்க்கிறேன்.
வாசகர்கள் என்பதே ஒரு தகுதி, குறிப்பாக கவிதையைப் பொறுத்தவரை. ஏனெனில் கவிஞன் என்பவன் இருக்குமிடத்திற்கு நிகரான ஒரு இடத்தில் கவிதை வாசகன் இருக்கிறான். கவிஞன் தொட்ட கற்பனையை அச்சொற்ளினூடாக தானும் சென்று தொடுபவன் கவிஞனுக்கு நிகரான கற்பனை கொண்டவனே.
அத்தகைய சிறந்த வாசகர்களை உருவாக்கும் பயிற்சி வகுப்புகள் மிகக்குறைவாகவே இங்கு நடக்கின்றன. அதற்குத் தடையாக அமைவது ஒன்று ஒரு பயிற்சி அரங்குக்கு தேவையான ஒழுங்கு பொறுப்பு இல்லாதது. அதற்கு கவிஞர்களே காரணமாக அமைகிறார்கள், பல போலிக்கவிஞர்கள் மிகப்பெரும் தடையாக அமைகிறார்கள். நல்ல கவிஞர்கள் கவிதை வாசகனுடன் உரையாடும் நிகழ்வு வாசகனை கவிதையைப்பற்றிய ஒரு தெளிவை அடைய வைக்கும் சிறந்த கவிதைகள் ஓர் அரங்கில் தொடர்ந்து படிக்கப்பட்டாலே போதும் கவிதையை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
ஓர் இரண்டு நாள் அரங்கில் ஆறேழு அமர்வுகளில் நூறு கவிதைகள் படிக்கப்படுமென்றால் அதன்பிறகு அந்த வாசகனுடைய தரம் பல மடங்கு மேம்பட்டிருக்கும். கவிதையினுடைய அடிப்படை என்பது அவனுக்கு எளிதில் கைவந்திருக்கும் அத்தகைய அமர்வுகள் தொடர்ந்து பல இடங்களில் நிகழவேண்டும். அதை வெறும் அரட்டையாக அன்றி பூசலாக அன்றி குடிக்கேளிக்கையாக அன்றி மெய்யாகவே கவிதை விவாதமாக நடக்குமெனில் அவற்றுடைய விளைவுகள் மிக வலுவானதாக இருக்கும்.
ஜெ
சி.வை.தாமோதரம் பிள்ளை- தமிழ்த்தலைமகன்
பதிப்பியக்கம் என வரும்போது உ.வே.சாமிநாதையர் அதன் முதன்மை ஆளுமையாக நம் நினைவிலெழுவார். அது நியாயமானதும்கூட. ஆனால் அவருக்கு சமானமான பெரும்பங்களிப்பை ஆற்றியவர்கள் பலருண்டு. சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியத்தை முழுமையாக உரையுடன் மீட்டெடுத்த முன்னோடி. அவருக்கு முன்னரே தொல்காப்பியம் அச்சேறியிருந்தாலும் அதற்கு முழுமையாக பொருள்கண்டவர், பிழைநீக்கிப் பதிப்பித்து அப்பிரதியை இறுதிசெய்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. ஒரு மொழியின் முதன்மையிலக்கணநூலை வகுத்தெழுதியவர் அம்மொழியின் தலைமகன் என சொல்லத்தக்கவர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை – தமிழ் விக்கி
தாமரை, சிறப்புக்குழந்தைகள் – கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான ரவி சுப்பிரமணியன் அவர்கள் இயக்கிய ‘தாமரை‘ குறும்பட வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய ஆத்மார்த்தமான உரையைக் கேட்டேன். நான்கைந்து நாட்களாக உடல்நிலை மிகவும் தொய்வுற்று எவ்விதச் சிந்தனைக்குள்ளும் அகம் ஆட்படாது சோர்வுற்றிருந்த பின்னிரவில் கேட்ட அந்த உரை, ஓர் மருந்தைப்போல என்னை மீட்டெடுத்தது.
உங்களது முக்கியமான உரைகளிலெல்லாம் குரு நித்ய சைதன்ய யதியை நினைவுகூர்ந்து, அவர்பகிர்ந்த எத்தனையோ அனுபவங்களை எங்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இவ்வுரையிலும் சிறப்புக் குழந்தைகள்பற்றி யதி குறிப்பிடும், “ஒரு பிறவியில் ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு ஒரு குழந்தைக்கு அளிக்கப்படுகிறதென்றால், அது ஓர் நிறைவைச் சென்றடைகிறது. பாவம் செய்யாத ஓர் வாழ்க்கை! பிழையிழைக்காத வாழ்வு! அதற்கு உதவி செய்யவேண்டியது உனது கடமை” என்கிற வார்த்தைகளை கண்ணீரின்றி கடக்கவே இயலவில்லை. இறையுற்ற ஓர் மனம் எத்தகு எல்லைவரை தன் உள்ளொளியை நீட்டுவிக்கும் என்பதை யதி மீளமீள மெய்ப்பித்து உணர்த்துகிறார். அக்கணத்திலிருந்து மனம் சிறப்புக் குழந்தைகள் குறித்த எனது தனிப்பட்ட வாழ்வனுபவங்களுக்குள் சென்று ஆழ்ந்தது.
என் வாழ்வில் முதன்முறையாக கவிஞர் தேவதேவன் அவர்களைச் சந்தித்தபொழுது அவர், “ஒரு குழந்தை இரண்டு, மூன்று வயதில் நம்மிடம் பொம்மை கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே குழந்தை முப்பது வயதில் பொம்மை கேட்டால் அதன் தாய்தந்தையர்கள் என்ன செய்வார்கள்?” என்று கேட்டார். அக்கேள்வி சுமந்திருந்த ஆழம் எனக்கு அன்று அச்சமூட்டியது. எத்தனைப் பெற்றோர்கள் தங்கள் வாழ்வு முழுதும் ஈந்து அத்தகையக் குழந்தைகளை இயல்பான ஆயுள்வரை அழைத்துப் போகிறார்கள்! அதற்காக எவ்வளவு பாரங்களை அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள்! எண்ணும்போதே மனம் நெகிழ்கிறது.
திருவண்ணாமலையில் சிறப்புக் குழந்தைகள் காப்பகம் நடத்தும் தோழி ஒருவர் அந்தப் பிள்ளைகளோடு குக்கூ காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். அவரது எண்ணங்கள் பற்றி கேட்கையில் அவர், “இந்த உலகத்தின் கடைசித் தலைமுறை குழந்தைகள் எல்லோரும் இந்தக் குழந்தைகள் போலத்தான் பிறப்பார்கள்” என்றார். நாங்கள் ஒருநிமிடம் உணர்வுகலங்கி, “அய்யோ அக்கா, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” எனப் பதறினோம். அதற்கு அவர் நிதானமாக, “இந்தக் குழந்தைகள் கைகாட்டும் திசையைப் பாருங்கள். அங்கு செடியோ, மரமோ, ஏதாவதொரு உயிரோ இருக்கும். இயற்கை நோக்கித்தான் இவர்களது கண்கள் பார்க்கிறது; கைகள் நீள்கிறது. நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்யும் அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நம்மை நன்மையின் பாதையில் இயற்கைக்கு அருகாமையில் இவர்கள்தான் இறுதியில் அழைத்துப் போவார்கள். இவர்கள் பாவங்கள் அறியாதவர்கள்” என்றார். அக்குழந்தைகளோடு இணைந்து வாழும் மனிதர்கள் பகிர்கிற வார்த்தைகள் மிகுந்த உண்மைப்பூர்வமாக விளங்குகிறது.
திருமதி காமாட்சி சுவாமிநாதன் போன்ற கொள்கைப் பிடிப்புள்ளோர் நிகழ்த்தும் அவைதனில், முன்னோடி ஆசிரியர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்திட்ட கிருத்துவ மனிதர்களாக எம்லின், ஜெம்ஸ்லின்ச், பிரப் போன்றவர்களை நீங்கள் நினைவுகூர்ந்து வணங்கிப் பேசியது உண்மையிலேயே என்றும் போற்றத்தக்க ஒன்று. முள்ளும் கல்லுமாய் இருந்திட்ட வனத்தில் வழிப்பாதையை அமைத்திட அவர்கள் எத்தனைச் சிராய்ப்புகளையும் சறுக்கல்களையும் சந்தித்திருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது. அந்த ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் உங்கள் வழியாக நாங்களும் மனதார வணங்கிக்கொள்கிறோம்.
கைத்தறி நெசவினை சிறப்புக் குழந்தைகளிடம் எவ்வாறு கல்வியாக எடுத்துச்செல்வது என்பது குறித்து திருமதி காமாட்சி சுவாமிநாதன் அவர்கள் நூற்பு சிவகுருவிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார். நல்லோர்களின் ஆசியினால் அதுகுறித்த ஒரு செயற்திட்டமும் விரைவில் நிறைவேறக்கூடும். அதுமட்டுமன்றி, வெவ்வேறு துறைகளில் உள்ள களச்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆளுமைகளை ஒருங்கிணைத்து அக்குழந்தைகளுக்கு பயனளிக்கும் நிறைய முன்னெடுப்புகளை செய்துவருவதாக அறிந்தோம். ஆகவே, காமாட்சி அம்மாவையும் இக்கணம் பணிந்து வணங்குகிறோம்.
சிறப்புக் குழந்தைகள் பற்றிய புரிதலை உண்டாக்கும் உரையாடல் நீட்சியை இத்திரைப்படம் நிச்சயம் துவங்கிவைக்கும் என நம்புகிறோம். மேலும், இத்திரைப்படத்தில் தோழமைகள் அய்யலு குமரன், அங்கமுத்து, மணி ஆகியோர்கள் பங்கேற்று கலையாளுமை ரவி சுப்ரமணியன் அவர்களுடன் பணியாற்றியது மிகவும் நிறைவுதரக் கூடியதாக அமைந்தது.
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் “துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர்பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது.
கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டு கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்!” என்ற வரிகளை இக்கணம் உச்சரித்துக் கொள்கிறேன். இத்தகு குழந்தைகளின் வாழ்வுக்கு உதவும் எல்லா மனிதர்களுக்கும் அகபலம் குறையாது நிறைய இயற்கையை மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா
ஜெயமோகன் 60 பிறந்தநாள் அழைப்பிதழை வண்ணதாசன் அவர்களுக்கு புலனத்தில் அனுப்பிவிட்டு “நீங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா” என்று கேட்டிருந்தேன்.
“கால் எலும்பு முறிவுக்குப் பிறகு வெளியே எங்கும் கம்பு ஊன்றி கொண்டு தான் நடக்கிறேன். இரண்டு நாட்களில் சொல்லட்டுமா” என்று பதில் அனுப்பினார்.
“சொல்லுங்கள்.. வருவதாகவே சொல்லுங்கள்” என்றேன்.
மறுநாளே வருவதாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு தன் மகனிடம் சொல்லி ரயில் பயணச்சீட்டும் பதிவு செய்துவிட்டார்.
செப்டம்பர் 18ஆம் தேதி காலை அவரை வரவேற்க நண்பர் மணியனும் நானும் அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையம் சென்று விட்டோம். ரயிலும் இருபது நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டது
ரயிலிலிருந்து அவர் இறங்கிய போது கூட அவ்வளவு சிரமம் தெரியவில்லை.
ஆனால் காரில் ஏறி அமர்வதற்கு அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.
இருக்கையில் பக்கவாட்டில் அமர்ந்து பாதிக்கப்பட்ட காலை இரண்டு கைகளால் பிடித்து மெல்ல உள்ளே வைத்து அடுத்த காலையும் மெல்ல உள்ளே நகர்த்திக் கொண்டார்.
இது போன்ற உபாதையுடனா இவரை தனியே கிளம்பி வரச் சொன்னோம் என்கிற குற்ற உணர்வு கூட ஏற்பட்டது.
அவர் வழக்கமாக தங்கும் சென்ட்ரல் பார்க் அப்பார்ட்மெண்டில் அறை தயாராக இருந்தது.
முதல் நாள் வேறொரு விழாவுக்கு வந்திருந்த பேச்சாளர் புலவர் திருவாரூர் சண்முகவடிவேல் அவர்கள் வண்ணதாசன் வருவதை அறிந்து அவரைப் பார்த்துவிட்டு ஊருக்கு போகலாம் என்று காத்திருக்கும் செய்தியை சொன்னதும் மிகுந்த உற்சாகம் அடைந்தார் .
புலவர் தங்கி இருந்த ஆர் வி ஹோட்டலில் எல்லோரும் காலை உணவுக்கு சந்தித்தோம்.
உணவரங்கத்தில் தொடங்கிய கலகலப்பான பேச்சு புலவரின் அறையிலும் நீடித்தது.
“மாலையில் நான்கரை மணிக்கு வெண்முரசு ஆவணப்பட திரையிடல் இருக்கிறது. அரை மணி நேர இடைவேளைக்குப் பிறகு விழா தொடங்கும் என்று நடராஜன் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு அவ்வளவு நேரம் வந்து அமர்ந்திருக்க முடியுமா அல்லது விழாவுக்கு மட்டும் வருகிறீர்களா” என்று நண்பர் மணியன் கேட்டார்.
”நாலரைக்கே போய்விடலாம்” என்றார் வண்ணதாசன்.
அவரை முறைப்படி வரவேற்பதற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இருந்து அரங்கா விஜய் சூரியன் திருமதி விஜய் சூரியன் ஆகியோருடன் சாம்ராஜூம் வந்திருந்தார்.
4:15 மணி அளவில் அரங்கம் சென்று சேர்ந்த போது ஜெயமோகன் வாசகர் திரளுக்கு நடுவே நூல்களில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்தார்.
நான் மெல்ல நெருங்கி “அப்படியே செக் புக்கிலும் ஒரு கையெழுத்து போட்டு குடுங்க” என்றேன்.
“செக்குல போடுறது வேற கையெழுத்து” என்றவரிடம் வண்ணதாசன் வந்திருக்கும் செய்தியை சொன்னேன்.
அதற்குள் வண்ணதாசன் நெருங்கி வந்துவிட “பயணத்தை ரொம்ப குறைச்சிக்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் இதுக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க ரொம்ப நன்றி” என்றார் ஜெயமோகன்.
விழா அரங்கில் சென்று அமர்ந்த போது பலரும் வண்ணதாசனை நெருங்கி வந்து மகிழ்ச்சியோடு பேசி படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் இரண்டு இளைஞர்கள் “நாங்க உங்க பின்னாலேயே இருக்கோம் என்ன வேணும்னாலும் கூப்பிடுங்க” என்றார்கள்.
சொன்னது போலவே திரையிடல் முடிந்ததும் அவரை கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பவும் கொண்டு வந்து அமர வைத்தார்கள்.
மறுநாள் உடுமலை அருகில் இருக்கும் ரேக் ரவீந்திரன் அவர்களுடைய பண்ணை வீட்டில் சென்று அரை நாள் செலவழித்த பிறகு வண்ணதாசனை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம்.
எதையும் திட்டமிட்டு முன்கூட்டியே செய்து விடக்கூடிய நண்பர் மணியன் ஓர் உணவகத்தில் முன்னதாகவே தொலைபேசியில் ஆர்டர் செய்திருந்தார். உணவு பொட்டலம் தயாராக இருந்தது.
நடைமேடையில் பி1 பெட்டியில் வண்ணதாசனை ஏற்றி விட எத்தனைத்தபோது பிஏ கிருஷ்ணன் போகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து கொண்டார்கள்.
பி ஏ கிருஷ்ணன் என்னிடம் ஜெயமோகன் எச் ஏ ஒன் பெட்டியில் இருக்கிறார் என்றார்.
வண்ணதாசனிடம் விடைபெற்று கொண்டு கீழே இறங்கிய பின் ஜெயமோகனை பார்க்கச் சென்றோம். என்னைப் பார்த்ததும் திகைத்து “இந்த ரயில்ல தான் வரிங்களா” என்றார்.
”இல்லை வண்ணதாசனை ஏற்றி விட வந்தோம்” என்றதும் சடாரென எழுந்து “நான் அவரைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றார்.
ரயில் பெட்டிகள் ஊடாக ஜெயமோகனும் மணியனும் வர நான் இறங்கி சென்று வண்ணதாசன் இருந்த பெட்டியை அடைந்தேன்.
“ஜெயமோகன் உங்களைப் பார்க்க வருகிறார்” என்றதுமே “அடடா நான் போய் அவரை பார்க்க மாட்டேனா” என்றபடியே வண்ணதாசன் எழுந்து கொள்ளவும் ஜெயமோகன் வந்து சேரவும் சரியாக இருந்தது.
“இவ்வளவு சிரமத்துக்கு நடுவுலயும் வந்துட்டீங்களே ரொம்ப நன்றி” என்றார் ஜெயமோகன். (வழக்கம்போல “நன்டி” என்று தான் உச்சரித்தார்)
“உங்களுக்கு வராம இருப்பேனாய்யா” என்று நெகிழ்ந்த குரலில் அவர் கேட்க பிணைந்திருந்த நான்கு கரங்களின் பிடி இறுகுவதும் நெகிழ்வதுமாக இருந்தது.
அந்த அற்புதமான வினாடிகளை மணியன் படம் எடுத்தார்.
எனக்கு பெரிய புராணத்தின் இரண்டு காட்சிகள் நினைவில் நிழலாடின.
திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் மடம் அமைத்துத் தங்கி இருந்த நேரம் தன் அடியவர்கள் சூழ பல்லக்கில் வருகிற திருஞானசம்பந்தர் “அப்பர் எங்குற்றார்” என்று வினவ “உம்மடியேன்! உம்மடிகள் தாங்குகின்ற பேறுபெற்று இங்குற்றேன்” என்று பல்லக்கின் கீழிருந்து குரல் கொடுத்தார் திருநாவுக்கரசர்.
இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பணிந்த காட்சி சேக்கிழாரின் உயிர்ச்சித்தரமாக பெரிய புராணத்தில் இருக்கிறது.
நன்கு முற்றுச் செழித்த நெற்கதிர்கள் வயல்வெளியில் வளைந்து நிற்கும் காட்சியைக் கண்டு சேக்கிழார்
“பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல்” என்றார்.
முந்தைய நாள் விழா சில மணி நேரங்களில் ஏற்படுத்திய நிகழ்வையும் பரவசத்தையும் மறுநாளில் அந்த சில நிமிடங்கள் ஏற்படுத்தவே செய்தன.
திரும்பும் போது மணியன் ஒரு தகவல் சொன்னார். “சார் ஜெயமோகன் இந்த நாலு பெட்டி தாண்டி வர்றதுக்குள்ள வெவ்வேறு பெட்டிகளில் இருந்த அவருடைய வாசகர்கள்ல சிலரோட பேர சொல்லி எங்க இருக்காங்க எங்க இருக்காங்கன்னு கேட்டார். என்ன விஷயம்னா அவங்க எல்லாம் திருநெல்வேலியில் இறங்கறவங்க. வண்ணதாசனை ஜாக்கிரதையா இறக்கி அழைத்துப் போவதற்கு அந்த சில நிமிடங்களிலேயே அவர் ஆட்களை ஏற்பாடு செய்து விட்டார்” என்றார்.
அன்பு செய்கிற வேலை சாமானியமானதா என்ன என்கிற தொனியில் ரசிகமணி டி கே சி அடிக்கடி கடிதங்கள் எழுதுவது அப்போது நினைவுக்கு வந்தது
மரபின் மைந்தன் முத்தையா
வியட்நாமின், சம்பா இந்து அரசு
மலைக்குன்றுகள் நிறைந்த பிரதேசத்தில் பல உடைந்த கோவில்களும் இடிந்த கட்டிடங்களும் இருந்தன . அமெரிக்கர்கள் விமானத்திலிருந்து குண்டு வீசி உடைந்த கட்டிடங்கள். அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய பள்ளங்கள் தெரிந்தன . அங்குள்ள கட்டிட அமைப்பு, இந்து தெய்வங்களின் சிலைகள் எல்லாம் ஒரு மகோன்னதமான கலைஞர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிக்காட்டிய இடம் என நினைக்கவைத்தது. அங்குள்ள மியூசியத்தில் வரைபடங்கள் வைக்கட்டுள்ளன. சிலைகள் நகரத்திலுள்ளன. அத்துடன் அப்சரா நடனம் மற்றும் சங்கீத கலை நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தற்பொழுது இந்திய அரசின் உதவியுடன் மீள் அகழ்வுகள் நடக்கின்றன.
இன்று சென்னையில் சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம்
வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் விமர்சனம். அமைப்பு நற்றுணை இலக்கிய அமைப்பு
நிகழ்ச்சித் தொகுப்பு விக்னேஷ் ஹரிஹரன்.
பங்கேற்பு: மோகனரங்கன், சாம்ராஜ், அருண்மொழி நங்கை, ஜா.ராஜகோபாலன் மற்றும் வசந்த் சாய்.
இடம் : கவிக்கோ மன்றம் சென்னை
நாள் : 24 செப்டெம்பர் 2022
September 22, 2022
கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி
[image error]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு நான் எழுதியிருந்த முகநூல் குறிப்பை தாங்கள் தங்கள் இணையதளத்தில் பகிரிந்திருந்திருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பெரிதும் வியந்து மதிக்கும் ஆளுமைகளில் ஒருவரான தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தை என் வாழ்வின் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.
’வெ.த.கா’ படம் குறித்து தங்களுக்கு முன்பே எழுத நினைத்தேன். ஒரு வெகுஜன சினிமா ரசிகனாக கெளதம் மீது எனக்குக் கொஞ்சம் பிரியம் உண்டு. சொல்லப்போனால் அண்மைய ஆண்டுகளில் மிக அதிகமாக ட்ரால் செய்யப்பட்ட அவருடைய படங்களையும் எனக்குப் பிடித்தே இருந்தன. அதே நேரம் அவர் மீது முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களில் நியாயம் இருந்ததாகப் பட்டது. அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் தலையாயது அவர் போலிஸ் அல்லது காதல் கதை இரண்டில் ஒன்றை மட்டுமே மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது. எனவே அவர் உங்களுடன் இணைந்திருக்கிறார் அதுவும் உங்கள் கதையைப் படமாக்க இருக்கிறார் என்று தகவலை கேள்விப்பட்டதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்று போட்டுக்கொள்வதில் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஒரு பேருவகை உண்டு. கெளதமும் தன்னுடைய எல்லா படங்களிலும் அதையே செய்திருக்கிறார். அந்தச் சூழலில் அவர் உங்களுடன் இணைந்தது எனக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியம் இப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக மாறியிருக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக தாங்கள் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் கண்டேன் ,குறிப்பாக கலாட்டா இணையதளத்துக்கு நீங்கள் அளித்த பேட்டியில் இந்தப் படத்தை உள்வாங்குவதற்கான சரியான மனநிலையை உருவாக்கிவிட்டீர்கள் என்று சொல்லலாம். அதைக் கண்டிருக்கவில்லை என்றால் நான் படத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே. இந்தப் படத்தின் மீது நீங்கள் தனிப்பட்ட அக்கறை எடுத்து ரசிகர்களிடம் பேசியதுபோல் தோன்றியது. அதை நான் மிகவும் ரசித்தேன். நான் ஊகித்திருந்ததுபோலவே படம் வெளியாகி வெற்றிச் செய்தி வந்த மறுநாள் ‘கெளதம் நல்ல மனிதர். அவர் வெற்றிபெற வேண்டும் ’ என்று நீங்கள் விரும்பியதாக எழுதியிருந்தீர்கள். அவரும் எழுத்தாளராக உங்களுக்கு முழுமையான மதிப்பும் முன்னுரிமையும் அளித்து படத்தை உருவாக்கியிருந்தார். இது உண்மையாகவே ஜெயமோகன் – கெளதம் படமாக உருவாகியிருக்கிறது. படம் நெடுக வசனங்களைக் கடந்தும் உங்களின் இருப்பை உணர முடிந்தது. இதுவும் தமிழ் சினிமாவில் மிக அரிதானதே. ஆனால் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் இயக்குநர்கள் நல்ல கதைகளை வெளியிலிருந்து வாங்கிப் படம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்போர் யாரும் அது நிகழ்ந்திருக்கும்போது குறைந்தபட்சம் அது நிகழ்ந்திருப்பதையாவது அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
எப்படி இருந்தாலும் உங்கள் இருவரின் இணைப்பு ’வெ.த.கா 2’, ‘வேட்டையாடு விளையாடு 2’ எனத் தொடரப்போவதில் உங்கள் இருவர் மீதும் அபிமானம் கொண்ட எளியவனாக எனக்கு பெரும் மகிழ்ச்சி.
அடுத்து பொன்னியின் செல்வனைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ச.கோபாலகிருஷ்ணன்
அன்புள்ள கோபால கிருஷ்ணன்,
சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு தேவை என்று சொல்பவர்கள் எவரும் உண்மையில் உத்தேசிப்பது தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று மட்டுமே– அத்தனைபேரும் வந்து கதவை தட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆகவே இன்னொரு எழுத்தாளரின் பங்கை மதிக்க அவர்களால் இயலாது. மட்டம் தட்டியே ஆகவேண்டும். அது அவர்களின் உலகம்.
நம்மவர் பொதுவாக நல்லபடம் என்று சொல்வது நேரடியாக அவர்களுக்கு உகந்த ஓர் அரசியல் செய்தியைச் சொல்லும் படத்தை மட்டுமே. உண்மையில் அவர்கள் ரசிப்பது எளிமையான ஹீரோ- வில்லன் கதையைத்தான்.வெந்து தணிந்தது காடு உயர்மட்ட போட்டியைச் சொல்லவில்லை, அடிமட்ட பூசலையே பேசுகிறது, அதில் வருபவர்கள் ‘வில்லன்கள்’ அல்ல என்று படத்திலேயே சொல்லப்படுகிறது. முத்துவின் வாழ்க்கையும் கூடவே அதனுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு வாழ்க்கையும்தான் கதையே ஒழிய ஹீரோ பம்பாய் போய் தானும் வில்லன் ஆவது அல்ல. ஆகவே அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள் மட்டுமே படத்தில் உள்ளன. படத்தை நம் விமர்சகர்கள் பெரும்பாலும் உணரமுடியாது என எனக்கும் தெரியும். ஆகவேதான் முன்னரே அதைச் சொல்லிச் சொல்லி ரசிகர்களிடம் நிறுவினோம். அந்த உத்தி பயனளித்தமையால்தான் படம் வெற்றி அடைந்தது.
வெந்து தணிந்தது காடு படத்தில் ஓர் எழுத்தாளன் உருவாக்கக்கூடிய பல காட்சிகள் உள்ளன. தனித்து எடுத்தாலும் நுட்பமான சில உளச்சிக்கல்களை, குழப்பநிலைகளைச் சொல்லக்கூடியவை அவை. ‘கூஸ்பம்ப்’ தருணங்கள் அல்ல. விமர்சகர் பலர் தவறவிடலாம், அவற்றை ரசிகர்கள் சென்றடைந்துள்ளனர்.
படம் வெற்றி அடைந்து, தயாரிப்பாளரும் இயக்குநரும் நானும் அடுத்தபடத்துக்குச் சென்றுவிட்டோம். இனி இதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. முடிந்த கதை. வெற்றிக்கதைதான்.
நாம் இங்கே கவனிக்கவேண்டியது இங்குள்ள வன்மம் பற்றி. எழுத்தாளனாக என் மேல் காழ்ப்பை கக்கிக்கொண்டிருக்கும் பலர் உண்டு. அவர்கள் இச்சினிமா பற்றியும் கசப்பை கொட்டுகிறார்கள். அது என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு அவர்கள் பொருட்டும் அல்ல.
ஆனால் கௌதம் மேனன் பற்றிய கசப்பும் காழ்ப்பும், சிம்பு மீதான காழ்ப்பும் நேரடியாகவே அவர்களின் தொழிலை பாதிக்கிறது. வேண்டுமென்றே உருவாக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக மிகவும் தீங்கு செய்பவை. இந்தி சினிமா உலகம் அந்த வன்மப் போக்கினால் அடித்தளம் கலங்கி நின்றிருக்கிறது இன்று. அதை இங்கும் நாம் கொண்டுவந்துவிடக்கூடாது. தெலுங்கும் மலையாளமும் அவர்களின் ஒட்டுமொத்த நட்புணர்வால் மேலும் மேலும் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கின்றன. நம் முன்னுதாரணம் அவர்களாகவே இருக்கவேண்டும்.
ஒன்றை மட்டும் உதாரணமாகச் சொல்கிறேன். சில இதழாளர்கள் கௌதம் மேனன் வேண்டுமென்றே ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ என்னும் சரியில்லாத படத்தை எடுத்து ஒரு தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிறுத்தியவர் என்று சொன்னதைக் கண்டேன். ஆனால் உண்மை என்ன? அந்த சினிமாவின் உண்மையான தயாரிப்பாளரே கௌதம் மேனன்தான். இன்னொருவருடன் கூட்டு சேர்ந்து அவர் தயாரித்த படம் அது. அந்த இன்னொருவருக்கும் அப்படத்தின் கதைநாயகனுக்கும் அதற்கு முந்தைய படம் காரணமாக பணம் சார்ந்த சிக்கல் உருவாகி, உளச்சிக்கலாக ஆகி, மோதலாகி படம் நின்றுவிட்டது. படத்தின் முழுப்பொறுப்பும் கௌதம் மேனன் மேல் விழுந்தது. ஏனென்றால் அவர் பணம் முதலீடு செய்துவிட்டார். 60 சதவீதம் முடிக்கப்பட்ட அந்த படத்தின் எஞ்சிய பகுதிகளை வாய்ஸ் ஓவர் மூலம் இணைத்து அப்படம் வெளியிடப்பட்டது. வெளியிட்டே ஆகவேண்டும், செலவிட்ட பணத்தை இழக்கமுடியாதல்லவா?
அந்தப்படம் உருவாக்கிய சிக்கல்களால் கௌதம் மேனன் அந்த தயாரிப்பாளருடன் இணைந்து தயாரித்த துருவநட்சத்திரம் படமும் நின்றுவிட, கௌதம் மிகப்பெரிய நிதிச்சிக்கலில் மாட்டினார். ஐசரி கணேஷ் உதவியால்தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெளிவந்தது. இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் பொருளியல் வெற்றி வழியாகவே கௌதம் மீண்டிருக்கிறார். இப்போது துருவநட்சத்திரம் வெளிவரவிருக்கிறது.
சினிமாவில் இதெல்லாம் அடிக்கடி நிகழ்வதுதான். எவரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட முடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். எவரும் தன்முடிவாக எதையும் செய்யமுடியாது. சினிமா என்பதே ‘ஒருங்கிணைப்பதன் கலை’தான். அந்த ஒருங்கிணைப்பு எங்கோ சிதறினால் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமே சரியக்கூடும். என்ன காரணம் என்றுகூட சிலசமயம் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய சரிவில் இருந்து எந்த மேதாவியும் எளிதில் தப்பமுடியாது. பல பெரிய தயாரிப்பாளர்களே சிக்கி விழுபிதுங்கிய இக்கட்டு அது. ஏதாவது ஒரு வணிகத்துடன் உங்களுக்கு தொடர்பிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியும். ஒரு சின்ன ஓட்டல், ஒரு சின்ன கூடைக்காய்கறி வியாபாரம் கூட இந்த சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு வணிகமும் நாம் அறிந்தும் அறியாததுமான ஒரு பெரிய மக்கள்த் திரளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
அப்படி வாழ்க்கையின் எழுச்சி வீழ்ச்சி பற்றி கொஞ்சம் புரிதல் உள்ள ஒருவர் பெருந்தன்மை கொண்டவராகவே இருப்பார்.இப்படி சரிவில் சிக்கி, தன் தளரா முயற்சியால் அதை சந்தித்து, இறுதியில் வெற்றிகொண்டு மீளும் ஒருவர் மேல் பெரும் கரிசனமே கொண்டிருப்பார். ஏனென்றால் எவருக்கும் அது நிகழலாம். நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது. ஆனாலும் நான் அத்தகைய சூழல்களில் இருப்பவர்கள் மேல் எப்போதும் பிரியமும் அவர்களின் முயற்சிமேல் மதிப்புமே கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுடன் இருப்பேன். நிபந்தனையே இல்லாமல் கூட நிற்பேன். ஒருபோதும் ஒருபோதும் அவர்களின் தோல்விகளையோ அதற்குக் காரணமான சிக்கல்களையோ கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடமாட்டேன். அதை வைத்து அவர்களை இழிவுசெய்வதோ, நக்கலடிப்பதோ எனக்கும் என் பரம்பரைக்கும் இழிவு சேர்க்கும் என்றே நினைப்பேன்.
நாம் இப்படி நினைக்கிறோம், ஆனால் சிலர் நேர்மாறாக அவர் அழியவேண்டும் என நினைக்கிறார்கள். வேறொன்றுக்குமாகவும் இல்லை. அவருடன் அவர்களுக்கு பகைஏதும் இல்லை. வெறுமே ஒரு குரூர திருப்திக்காக மட்டும். அதற்காக அத்தனை பொய்ச்செய்திகளை, அவதூறுகளை எழுதியிருக்கிறார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ வழியாக அவர் மீண்டு எழுந்து வந்துவிட்டதைக் கண்டு அவர்கள் அடைந்த ஏமாற்றமே சீற்றமாக மாறி அவரை சிறுமைசெய்ய அவர்களை தூண்டுகிறது. அந்தப்படம் தோல்வியடையவேண்டும் என முயன்றனர், வெற்றி என ஆனபின் அதை தோல்வி என பேசிப்பேசி காட்டிவிட முயல்கின்றனர். அவருக்கான வாய்ப்புகளை நிறுத்திவிடலாம் என்னும் நப்பாசைதான். ஆனால் சினிமாத்துறைக்கு வெற்றியும் தோல்வியும் உண்மையில் என்னென்ன என்று நன்றாகவே தெரியும்.
கௌதம் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வழியாக ஒரு தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தினார் என சொல்லும் இதழாளர் எவரும் உண்மைகளை அறியாமல் சொல்லவில்லை – ஏனென்றால் அந்த சினிமா சார்ந்த பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற வழக்குகள் எல்லாம் பலகாலம் நடந்தவை. இதழ்களிலேயே வெளிவந்தவை. அனைவருமே நன்றாக அறிந்தவை. சரி, தெரியவில்லை என்றே கொள்வோம். ஒரு படம் முழுமையாக வராவிட்டால் அதன் இயக்குநர் ஏன் கடன்சுமையில் சிக்கவேண்டும், தயாரிப்பாளர் அல்லவா சிக்கிக்கொள்வார்? அதை யோசிக்க பொதுப்புத்தியே போதுமே.
எல்லாம் அனைவரும் அறிந்ததே. இருந்தும் அதை ஏன் சொல்கிறார்கள்? ஏன் வேண்டுமென்றே திரிக்கிறார்கள்? இரண்டு காரணங்கள். ஒன்று, வெவ்வேறுவகையான காழ்ப்புகள். இரண்டு, அக்காழ்ப்புகளுடன் எதிர்மறையாகப் பேசினால் மட்டுமே இங்கே கூட்டம் கூடி அவர்களைக் கவனிக்கிறது. ஹிட் கூடும்போது யூடியூப் பணம், விளம்பரப் பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்திற்காக உண்மையில் அவர்கள் செய்வது ஒரு கொலை. அதற்குமுன் தங்கள் மனசாட்சியை கொலைசெய்துவிட்டிருக்கிறார்கள்.
சினிமா என்று அல்ல, எந்த துறையிலும் இந்த வகையான மனநிலைகள் ஒரு சமூகத்திற்கு எவ்வகையிலும் நல்லது அல்ல. அவற்றை வளர்ப்பது நீண்டகால அளவில் அவற்றை வளர்ப்பவர்களுக்கே பெருந்தீங்கை உருவாக்குவது. குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள் சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.
என் நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், எனக்கு இந்த சினிமாவில் என்ன தனி ஈடுபாடு என்று. முழுக்க சினிமாக்காரன் ஆகிவிட்டேனா என்று. இதுதான் என் மெய்யான ஈடுபாடு. ஏன் கமல்ஹாசன் மேடைக்கு வந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பிரமோ செய்கிறார், ஏன் சிலம்பரசன் தேதி அளித்தார், ஏன் வெற்றிமாறன் உடன் நிற்கிறார் என்றால் அடிப்படையான மனிதாபிமானம் மற்றும் அறவுணர்வால்தான்.சரிவுகளில் இருந்து எழுபவருடன் உடன்நிற்பதே அறம் என்பதனால்தான். இதே உணர்வுடன் நான் வசந்தபாலனின் அடுத்த படத்துக்காக காத்திருக்கிறேன். அண்மையில் என் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு பட்டீஸ்வரத்தில் வேண்டிக்கொண்டபோது வசந்தபாலனுக்காகவும் வேண்டிக்கொண்டேன். அந்த சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும். நண்பர்களே, மீட்சிகளை கொண்டாடுவோம், உடன் நிற்போம். மீட்சிகளில் வெளிப்படுவது மனிதனின் ஆற்றல். அந்த ஆற்றலை வாழ்த்தினால் அது நமக்குள்ளும் பெருகும். நமக்கும் வெற்றியே அமையும்.
வெந்து தணிந்தது காடு அடைந்துள்ள இந்த வெற்றி கௌதமுக்கு மிகமிக அவசியமானது. இக்கட்டுகளில் மூழ்கி இருக்கையிலும் அவர் ஒரு சொல்கூட ஒருவரைக்கூட பழித்துச் சொல்லவில்லை. பழியை எவர் மேலும் போடவில்லை. புலம்பவில்லை. “Ya,It happens…Nothing can be done.” அதிகபட்சம் அவர் சொல்லும் சலிப்புப்பேச்சு இதுதான். நான் மீண்டும் மீண்டும் கவனித்தது தனிமையில் பேசும்போதாவது அவர் எவரையாவது குறைசொல்கிறாரா என்றுதான். ஒரு சொல்கூட இல்லை. அனைவர் மேலும் மதிப்புடன், அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு கனிவுடனேயே பேசினார். அவர் எவரையும் ஏமாற்றவில்லை. எவரிடமும் ஏமாற்றவில்லை, கெஞ்சவில்லை. படங்களில் நடித்து வட்டி கட்டினார். சொந்தப்பணத்தில் சிறுகச்சிறுக துருவநட்சத்திரம் படத்தை முடித்தார்.
அந்த நிமிர்வுதான் அவர்மேல் பெருமதிப்பு கொள்ளச் செய்கிறது. தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது. வெற்றிமாறனை சென்ற 13 ஆம் தேதி கொடைக்கானலில் சந்தித்தபோது இதே எண்ணத்தையே அவரும் சொன்னார். “அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.
இன்று இந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் கௌதம் மிகவும் மலர்ந்திருக்கிறார். இப்போது மும்பையில் அமர்ந்து அடுத்த மிகப்பெரிய படம் பற்றிப் பேசும்போது அவருடைய உற்சாகத்தைப் பார்க்கிறேன். சினிமாவுக்கு அப்பால் நான் அடையும் மனநிறைவு இது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

