Jeyamohan's Blog, page 712
September 21, 2022
வெந்து தணிந்தது காடு – முகங்கள்
வெந்து தணிந்தது காட்டில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அவர்கள் ‘வில்லன்கள்’ அல்ல. அவர்களை கதாபாத்திரங்களாக காட்ட விரும்பினோம். ஆகவே புதிய முகங்கள். விமர்சகர் பலர் ஆவேசமான வில்லன் நடிகர்களை எதிர்பார்த்திருந்தாலும் ரசிகர்கள் அந்த புதுமுகங்களை ஏற்றுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது.
அவர்களில் ரிச்சர்ட் ரயிலில் கௌதமுக்கு அறிமுகமானவர். சரவணன் புதியமுகம். பத்மன் சினிமாவுக்கு புதியவரல்ல. ஆனால் அவருக்கு இதுதான் உண்மையில் முதல்படம். அவர்கள் உண்மையான மனிதர்களாக, அதே வட்டார உச்சரிப்புடன் இருப்பதனால்தான் படம் அந்த யதார்த்தத்தை அடைந்தது.
நான் படம் பார்க்கையில் ரிச்சர்ட், பத்மன், சரவணன் ஆகியோரை அந்தந்த கதாபாத்திரங்களாகவே பார்த்தேன். இன்றைய சினிமாவுக்குத் தேவை ‘நடிப்பு’ அல்ல. அந்த கதாபாத்திரங்களாக ஆகும் மனிதர்கள்தான்.
படத்தில் திரைக்கதையில் சின்னக் கதைமாந்தர் திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தமையால் நீளம் குறைப்பதற்கான எந்த விவாதத்திலும் சின்ன கதைமாந்தர்மேல் கையை வைக்கத் தோன்றவே இல்லை.
படத்தின் வெற்றிக்கு அவர்கள் உதவினர். அவர்கள் அனைவருக்கும் படமும் பெரும் உதவி செய்திருப்பதை அறிகையில் நிறைவாக உணர்கிறேன்
சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம், சென்னை
வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் விமர்சனம். அமைப்பு நற்றுணை இலக்கிய அமைப்பு
நிகழ்ச்சித் தொகுப்பு விக்னேஷ் ஹரிஹரன்.
பங்கேற்பு :மோகனரங்கன், சாம்ராஜ், அருண்மொழி நங்கை, ஜா.ராஜகோபாலன் மற்றும் வசந்த் சாய்
இடம் : கவிக்கோ மன்றம் சென்னை
நாள் : 24 செப்டெம்பர் 2022
September 20, 2022
நன்றிகளும் வணக்கங்களும்
சாய் வில்லா உரையாடல்சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
கோவையில் நிகழ்ந்த மணிவிழா உண்மையில் எனது விருப்பம் சார்ந்ததாக இருக்கவில்லை. ஆகவேதான் இத்தனை பிந்தியது. நண்பர் நடராஜன் மற்றும் கோவை நட்புச் சூழலில் இருந்து அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. ஒருவகையில் அவர்கள் அதை ஒரு குறையாக நினைக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆகவே ஒப்புக்கொண்டேன்.
விழா முழுநாள் கருத்தரங்கமாக நிகழும் என்றெல்லாம் முதலில் கூறினார்கள். ஆனால் ஏற்கனவே சியமந்தகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் கட்டுரைகள் எழுதிவிட்டதனால் மீண்டும் ஒரு கருத்தரங்கம் தேவையில்லை என்று நான் கூறினேன். ஆகவே ஒரு அந்தி நேர விழாவாக ஒருங்கிணைக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு எவரையும் தனிப்பட்ட முறையில் நான் அழைக்கவில்லை. நான் ஒருங்கிணைக்கும் விழா அல்ல என்பது முதன்மைக் காரணம். இன்னொன்று உணர்வுரீதியான கட்டாயத்தை எவருக்கும் அளிக்கவேண்டாம் என்று எண்ணினேன்.
என்னுடைய திரைப்பட வேலைகளில் தலைகால் புரியாமல் சுற்றிக்கொண்டிருந்ததனால் விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அதைப்பற்றிய பிரக்ஞையை அடைந்தேன். அருண்மொழிதான் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.
கோவைக்கு சனிக்கிழமை காலை வந்து சேர்ந்தது முதல் நண்பர்கள் வந்து சந்தித்துக்கொண்டே இருந்தார்கள். வழக்கம் போல அரட்டை சிரிப்பு. எல்லா விழாக்களும் பின்னர் நினைவுகூரப்படுவது இந்தச் சந்திப்புகள் வழியாகத்தான். ஞாயிறு முழுக்க சாய் வில்லாவில் நண்பர்களுடன் உரையாடினேன். அறைச்சந்திப்பிலேயே இருநூறுபேர் வரை இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். அபிஷேகம் முடிந்ததும் பட்டிப்பெருமானை தரிசனம் செய்தோம். அங்கே அவர் சன்னிதியில் எவரோ ஒரு பெண்மணி திருமுறைகளை இனிய குரலில் பாடிக்கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை அருண்மொழியை மணந்தது உற்சாகமான நிகழ்வு.
சடங்குகளுடன் எப்போதும் எனக்கு ஒட்டுதலும் விலக்கமும் உண்டு. பிறருக்கு நான் சடங்குகளை எப்போதும் பரிந்துரைப்பேன்.ஆனால் சடங்குகளுடன் எனக்கு ஒரு அறிவார்ந்த விலக்கமும் இருக்கும். அதே சமயம் சடங்குகள் நிகழும்போது அவற்றின் குறியீட்டுத்தன்மையும் அவற்றின் தொன்மையும் என் உள்ளத்தில் ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குவதை கண்டிருக்கிறேன். இந்நாளும் அத்தகைய ஒன்று. இதன் திரளில் ஒரு விலக்கமும், இதன் களியாட்டில் ஓர் ஈடுபாடுமாக இருந்தேன்.
இந்நிகழ்வின் தனிச்சிறப்பென்று நான் நினைப்பது வெவ்வேறு ஊர்களிலிருந்து என்னை வாழ்த்துவதற்காகவும் சந்திப்பதற்காகவும் தேடிவந்திருந்த நண்பர்கள் மற்றும் பெரியவர்கள். வண்ணதாசன் இதன்பொருட்டே உடல்நிலைச்சிக்கல் கொண்ட நிலையிலும் திருநெல்வேலியிலிருந்து ரயிலில் கிளம்பி வந்திருந்தார். விழா அரங்கில் அவரைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.
விழா முடிந்து திங்கள் கிழமை கிளம்பும்போது நான் வந்த அதே ரயிலில் தான் நெல்லைக்கு சென்றார். அவர் இருந்த பெட்டியில் சென்று அவரைச் சந்தித்து கைகளைப் பற்றிக்கொண்டேன்.
எனக்கு வண்ணதாசனுடனான உறவென்பது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது. 1985ல் அவருடைய ’தோட்டத்திற்கு வெளியிலும் சிலபூக்கள்’ என்னும் கதை வழியாகத் தொடங்கியது. மிக இளம் வயதில் அந்தக்கதையைப் படித்து அடைந்த பரவசமும் பதற்றமும் நினைவிலிருக்கிறது.
எனக்கு வண்ணதாசன் எவ்வகையில் முக்கியமென்பது பல்வேறு வழிகளில் திரும்பத்திரும்ப எழுதியிருக்கிறேன். என் இளமை முதலே நெடுங்காலக்கனவுகள், பெரிய தத்துவ வினாக்கள் ,பெரிய வரலாற்று புரளல்களில் ஆர்வம் கொண்டவன். பெரிய ஆளுமைகளைத் தேடித் தேடி சந்தித்து வந்திருந்தவன். ஆனால் ஒரு சிறுமலர் ஒரு காட்டுக்கு எவ்வளவு முக்கியமென்பதை எனக்குக் காட்டியவர் வண்ணதாசன்.
ஒவ்வொரு சின்ன விஷயமும் எந்தவகையில் இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வாகவும் திகழ்கிறது என்பதை அவரது படைப்புகளின் வழியாகவே உணர்ந்தேன். அது அறிதல் அல்ல ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் அக்கதைகளில் உணர்ந்துகொண்டிருப்பது. ஒவ்வொரு பெரிய தத்துவ நூலுக்குப் பிறகும் இப்போதும் ஒரு வண்ணதாசன் கதையை எடுத்துப்படிப்பது என்னுடைய வழக்கமாக இருக்கிறது.
ஒருமுறை ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். ஒரு நிகழ்வில் சரோட் கலைஞர் அம்ஜத் அலி கான் நான்கரை மணிநேரக் கச்சேரி முடிந்தபிறகு அந்தக் கருவியை முடுக்கும்போது அவருடைய சுட்டுவிரல் பட்டு ஒரு மெல்லிய நாதத்தை அது எழுப்பியது. அந்தக்கச்சேரிக்கு நிகரான பெரும் திகைப்பையும் நெகிழ்வையும் அந்த ஒலி எழுப்பியது.
பெரிதும் சிறிதுமென இப்புவி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவற்றை பெரிதும் சிறிதுமென நம் பிரக்ஞையே வடிவமைக்கிறது. அதற்கப்பால் பிறிதொன்று இவை அனைத்தின்மேல் மௌனப்பெருவெளியென கவிழ்ந்திருக்கிறது. பெரிதென்றும் சிறிதென்றும் எதையும் காணாத விரிவு. அதன் ஒரு தருணத்தை ஒரு சின்னஞ்சிறு மலரில் காண முடிவது என்பது ஒரு தரிசனம்.
வண்ணதாசன் வருகை எனக்கு சென்ற பல ஆண்டுகளில் அவர் கதைகளினூடாக நான் கடந்து வந்த பல நினைவுகளைப் பெருக்கியது. இந்த உணர்வை வேறு எவராவது அடைந்திருக்கிறீர்களா என தெரியாது. எனக்கு இதுவரை வந்த தொலைவை உதறிவிட்டு திரும்பச் சென்று வண்ணதாசன் கதைகளை, மகாராஜபுரம் சந்தானம் பாட்டை நான் முதன்முதலாக அடைந்த கணங்களை மீண்டும் வாழவேண்டும் என்னும் ஏக்கம் அவ்வப்போது எழும்.
எனது நெடுங்கால நண்பர்கள் வந்திருந்தனர். இடப்பெயர்வால் வாழ்க்கை நகர்வால் சில ஆண்டுகளாக நான் சந்திப்பது நின்றுவிட்டிருந்த நண்பர்கள் கூட இந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் உடல்நிலை சரியில்லாதவர்கள் சிலர் வந்திருந்தமை வருத்தத்தையும் நெகிழ்வையும் அளித்தது.
பட்டீஸ்வரம்என் நெகிழ்வை வெளிக்காட்டலாகாது என என்னை இறுக்கிக் கொண்டிருந்தேன். உற்சாகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன். நடுநடுவே வந்துகொண்டிருந்த வெந்து தணிந்தது காடு வெற்றி குறித்த செய்திக்ள் வேறொருவகை உற்சாகத்தை அளித்துக் கொண்டிருந்தன.
விழாவில் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பேசினர். இயல்பான உணர்ச்சிநிலைகளுடன் அமைந்த உரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு அணுக்கமானவை. அரங்கில் அமர்ந்து அவையை நோக்கியபோது ஆயிரத்தி இருநூறுபேர் அமரும் அந்த அரங்கின் மறுஎல்லை வரை நிறைந்திருந்ததை, வெளியேயும் ஓரத்திலும் பலர் நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன்.
என் நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளிகள். ஒவ்வொரு முகமும் எனக்கு அணுக்கமானது. அவை அனைத்தும் திரண்டு ஒற்றைமுகமென்றாயின. தமிழ்ச்சமூகம் அளிக்கும் ஏற்பு அது. அதற்கு நான் என்னை தகுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
கோவையில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி, பெருந்தொழிலதிபர்களும் தொழில்நுட்பத்துறையில் சாதனைகள் புரிந்தவர்களும், புகழ்பெற்ற ஆளுமைகளும் எல்லாம் இதைப்போல ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு வந்து அவையில் பார்வையாளர்களாக அமர்ந்து முழுமையாகக் கவனிப்பது. வேறெங்கும் எழுத்தாளன் இன்று இந்த கௌரவத்தைப் பெறமுடியுமென தோன்றவில்லை.
ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி பலருடைய உழைப்பும் ஒத்திசைவும் இல்லாமல் அமைந்திருக்க முடியாது. இருப்பினும் முதன்மையாக இருவர். டைனமிக் நடராஜன் முன்முயற்சி எடுத்து இதைச் செய்து முடித்தார். சியமந்தகம் என்னும் இணையதளம் வழியாக கட்டுரைகளை தொகுத்து சியமந்தகம் என்னும் நூல்வடிவமாக்கியவர் சுனில் கிருஷ்ணன். இருவருக்கும் அன்பு.
கல்பற்றா நாராயணன் சொன்னார். சென்ற நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் கவிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு ஒருங்கிணைத்த சில நிகழ்வுகளே இத்தகைய பெருவிழவுகளாக அமைந்திருந்தன என்று. இன்று இந்திய அளவில்கூட இன்னொரு படைப்பாளிக்கு இத்தனை ஏற்பு அமைந்ததில்லை என்று.
டைனமிக் நடராஜனுடன்மெய்தான். இது அரசர்களுக்கு நிகரானவர்களும், இவ்விழாவுக்கென நெல்லையில் இருந்தும் சென்னையில் இருந்தும் கைப்பணம் செலவிட்டு வந்த கல்லூரி மாணவர்களும் அடங்கிய பெருந்திரள் உண்மையில் ஓர் அரசுதான்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கமும் நன்றியும். இந்த ஏற்பு நான் எதன் பிரதிநிதியாக என்னை உணர்கிறேனோ, எதன் குரலென நின்று பேசுகிறேனோ அந்த மரபுக்கு உரியதென்றே கொள்கிறேன்.
மண்டிகர்
தமிழகத்தில் கலையையே தொழிலெனக் கொண்டு வாழும் இனக்குழுக்களில் மண்டிகர் முக்கியமானது. இன்னொரு சூழலில் என்றால் அற்புதமான மாயப்புனைகதைகள் நவீன இலக்கியத்தில் அவர்களைச் சார்ந்து உருவாகியிருக்கும். திரைப்படங்கள் உருவாகியிருக்கும். ‘வாழ்வின் அவலங்களை பதிவுசெய்யும் நாவல்’ என்னும் ‘டெம்ப்ளேட்’ நம்மை கலைக்கு எதிராக செய்தியாளர்களாக நிலைகொள்ளச் செய்கிறது. அந்தவாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புராணப் புனைவுக் கதைமாந்தர் நிகழ்கிறார்கள். அவர்கள் பாவைகள் . அப்பாவைகள் ஒளிபட்டு உயிர்கொள்கிறார்கள். நிழலாட்டம் ஒரு நிஜமென்றாகிறது. எத்தனை சாத்தியக்கூறுகள்!
மண்டிகர்
மண்டிகர் – தமிழ் விக்கி
கனவுகள் குவியும் களம்
Pauline Fanமலேசியாவில் ஓர் அனைத்துலக விழாவில் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் வெளி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இந்த விழாவுக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடமிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவே தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் வாய்ப்புகள் கிடைக்க பாதை வகுக்கும்.
கனவுகள் குவியும் களம்சாரு, கடிதங்கள்
வணக்கம் அண்ணா.
மணிவிழா நிகழ்வை புகைப்படங்களோடு சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். நிறைவாய் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சென்றடைய வேண்டிய உங்கள் இலக்குகள் குறித்து எழுதி இருந்ததை வாசித்த போது உற்சாகம் பற்றிக் கொண்டது. வாழ்த்துகள்.
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சமூகவலைத் தளங்களில் கொட்டித் தீர்க்கப்பட்ட வசைகளும், மூர்க்கமான எதிர் வினைகளும் ஆற்று நீராய் விரவி மெல்ல, மெல்ல வற்றிப் போய் விட்டது. விரவிய போதும், வற்றிய போதும் நீங்கள் எந்த எதிர்வினைகளையும் நிகழ்த்தாமல் அவைகளை இடக்கையால் புறந்தள்ளி நின்றீர்கள். ஒருவேளை, அப்படி இல்லாது போயிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மையத்தில் இருந்து விலகி உங்கள் கருத்துகளோடு இன்னும் மூர்க்கமாக சமர் செய்வதில் வேகமெடுத்திருப்பார்கள் என்பதே என் எண்ணம். தான் அறிந்தவைகளை அல்லது தன்னிடமிருக்கும் அளவுகோள்களை மட்டும் வைத்துக் கொண்டு சாருவை சகட்டு மேனிக்கு வசைபாடியவர்களுக்கும், பாடிக் கொண்டிருப்பவர்களும் இந்த விருது அறிவிப்பு தந்த கோபமாக அவைகள் இருந்தன என்பதே எதார்த்தம்.
பிறழ்வெழுத்துகளில் தமிழுக்குரியவராக சாருவை சுட்டியும், அந்த வகை எழுத்துகள் குறித்தும் நீங்கள் காட்டிய அறிமுகம் என் போன்ற வாசகர்களுக்கு அவ்வகை எழுத்து பற்றிய ஒரு அறிமுகத்தை தந்தது. கூடுதல் அறிதலுக்கான நகர்வு சாருவின் படைப்புகளை நெருங்கச் செய்தது. குழு மனப்பான்மையோடு இயங்கி வரும் இன்றைய இலக்கிய பரப்பில் எந்த ஒரு படைப்பாளியையும் இளம் தலைமுறைக்கு முன்னேராய் நகரும் நாங்கள் (விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்) பார்ப்பதில்லை என்பதையும், கசப்புணர்வு மனப்பான்மை என்ற தனிப்பட்ட காரணங்களுக்கான முரன்களை தூர வைத்து அப்படி முரன்பட்டு நிற்கும் மனிதரின் – படைப்பாளியின் – படைப்பாக்கத்தை பார்ப்பதே விஷ்னுபுரம் விருதின் நோக்கம் என்பதையும் சாருவுக்கான இந்த விருது அறிவிப்பு சொல்லாமல் சொல்கிறது.
சிநேகமாய்
மு. கோபி சரபோஜி
அன்புள்ள ஜெ
நலம்தானே?
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். பலர் பலவகையாக விமர்சனம் செய்தாலும் எனக்கு சாரு தனிப்பட்ட முறையில் முக்கியமான எழுத்தாளராகவே இருந்து வந்திருக்கிறார். அவருடைய கதைகளில் ஔரங்கசீப் முக்கியமானது என்பது என் எண்ணம். அதில் வரலாற்றை இன்னொரு கோணத்தில் திரும்ப எழுதியிருக்கிறார். ஆனால் அதுவே உண்மையான வரலாறு என்றும் சொல்லவில்லை. எல்லாமே வரலாறும் எல்லாமே புனைவும்தான் என்றுதான் சொல்கிறார். ஔரங்கசீப் பற்றி இன்னும் கூட நல்ல வாசிப்புகள் வரவில்லை. சாருவே உருவாக்கும் சர்ச்சைகள், மற்றவர்களின் வசைகள் வழியாக அல்லாமல் சாருவின் படைப்புகள் வழியாகச் சாருவைப் பற்றி ஒரு நல்ல வாசிப்பு உருவாக இந்த விருது வழிவகுக்குமென்றால் சிறப்பு
சந்திரசேகர்
வெந்து தணிந்தது காடு, வெற்றிவிழா
கோவையில் என் மணிவிழா நிகழ்ச்சி நடந்த அதே 18-09-2022 அன்று சென்னையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அதில் நான் கலந்துகொள்ளாவிட்டாலும் அந்தச் செய்திகள் வந்தடைந்துகொண்டே இருந்தன. என்னைச்சுற்றி என் பழைய நண்பர்கள், புத்தம்புதிய நண்பர்கள். நடுவே அச்செய்தி வேறொரு உலகில் இருந்து வந்துகொண்டே இருந்தது.
வெந்து தணிந்தது காடு தொடர்பான பலவகையான விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. வெளியே சமூக ஊடகங்களில் எழுதுபவர்களின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக முக்கியமானவை. அவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரைத்துறையினர் தொகுத்து பொதுவாக என்ன சொல்லப்பட்டது என்று பார்ப்பார்கள். மற்றபடி தனித்தனியாக எவரும் வாசிப்பதில்லை.
ஏனென்றால், பலருக்குத் தெரியாத ஒன்று உண்டு. ஒரு சினிமாவின் முதல்காட்சி முடிந்து இருபது நிமிடங்களுக்குள் அது எந்த அளவு வெற்றி, தோராயமாக எவ்வளவு வசூல்செய்யும் என சினிமாத் துறையினர் தெரிந்துகொள்வார்கள். அத்துடன் அந்தக் கணம் வரை இந்த பதற்றம் மறைந்து உற்சாகம் உருவாகிவிடும். இயல்பாக திரைப்படத்தின் முதற்காட்சி முடிந்தபின் எழும் கருத்துக்கள் மட்டுமே முக்கியம். எண்ணி, கருதி பின்னர் சொல்லப்படும் கருத்துக்கள் பெரிதாக வசூலை பாதிப்பதில்லை.
அதன்பின் வசூலின் வரைபடத்தை கவனித்துக் கொண்டிருப்பார்கள். வசூலின் வரைபடம் சினிமாவுக்கு உள்ளே இருக்கும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஞாயிற்றுக்கிழமை உச்சம், திங்கள் காலை சிறுசரிவு, திங்கள் மாலை மீண்டும் எழுச்சி என அது எப்படி செயல்படும் என்பதெல்லாம் பெரும்பாலும் அனைவருமே வகுத்து வைத்திருக்கும் வரைபடம். எந்த ஏரியாவில் என்ன நிகழும், அதற்கு என்ன பொருள் என்பதெல்லாமே பெரும்பாலும் தெரிந்தவை. வெந்து தணிந்தது காடு அடுத்தவாரம் நோக்கி சற்றும் குறையா விசையுடன் சென்றுகொண்டிருக்கிறது. அது ஏற்கனவே பெருவெற்றி என்பது நிறுவப்பட்டுவிட்டது.
வசூல் டிராக்கர்கள் என ஒரு சாரார் இயங்குவதை, அவர்களை வைத்துக்கொண்டு பலர் ஆவேசச் சண்டைகள் போடுவதை இப்போதுதான் கண்டேன். எந்த தொழிலிலும் போல சினிமாவிலும் வசூல், அதன் பங்கு விகிதம் எதையும் அந்தக் குறிப்பிட்ட வணிகத்துக்கு வெளியே உள்ள எவரும் எவ்வகையிலும் கணித்துவிட முடியாது. அவரவர் தோதுப்படியே சொல்வார்கள். (அது ஏன் என்று தெரியாதவர்களுக்கு வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாது) ஆனால் அந்த விவாதங்களும் ஒருவகையில் நல்லதே. சினிமா பற்றிய பேச்சுக்கள் ஆவேசமாக நிகழ அது காரணமாகிறது.
எல்லாமே கணிக்கப்படக்கூடியவை என்றால் எதிர்பாராத தன்மைகள் உண்டா? அது எப்போதுமிருக்கும். ‘மல்லிப்பூ’ பாடல் சினிமாவின் முகம் என ஆகும் என எவரும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அதில் சிலம்பரசன் முதன்மையாக ஆடவில்லை. அப்படிச் சில ஆச்சரியங்கள் எல்லா சினிமாவிலும் உண்டு.
படம் முழுமையடைந்தபோது அதன் 3 மணிநேர நீளம் சினிமா பார்க்காத பலருக்கும் அச்சத்தை ஊட்டியது. தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடி இருந்தது, இருபத்தைந்து நிமிடம் வெட்டும்படிச் சொன்னார்கள். வெட்டவேண்டுமா என்று மாறிமாறிப் பேசிக்கொண்டோம். (அதைப்பற்றி நானும் கௌதமும் பேசிக்கொண்ட சிறு பகுதி பதிவாகி வெளியாகியுள்ளது)
நான் என் தரப்பைச் சொன்னேன். இதேபோலத்தான் கடல் படமும் இரண்டேமுக்கால் மணிநேரம் இருந்தது. கடைசிநேரத்தில் இருபத்தைந்து நிமிடம் குறைக்கப்பட்டதனால்தான் அந்தப்படம் பெருவாரியானவர்களுக்கு புரியாமல் போனது. நுண்ணிய திரைரசிகர்கள் அந்த விடுபட்ட பகுதியையும் புரிந்துகொண்டு இன்று அப்படத்தை கொண்டாடுகிறார்கள். அதேபோல ஆகிவிடக்கூடாது என்று சொன்னேன்.
பலகதைகள் கொண்ட சினிமாவுக்கு, ஒரே களத்தில் நிகழும் சினிமாவுக்கு நீளம் கூடாது. ஒரு வாழ்க்கைப்பயணத்தைச் சொல்லும் சினிமாவுக்கு நீளம் பலசமயம் பலம். ரசிகன் மானசீகமாக வெளியேறாமல் பார்க்கமுடிந்தால் போதும், ஒரு வாழ்க்கையை பார்த்து முடித்த நிறைவு உருவாகும். படம் போனதே தெரியவில்லை என ஒரு நீளமான படத்தைப் பற்றி ரசிகன் சொன்னாலே அது வெற்றிதான். வெந்து தணிந்தது காடு சீராக ஒழுகிச்செல்லும் கதையோட்டம் கொண்டது. அதிரடிகள் இல்லை. அதிரடிகள் இருந்தால்தான் அடுத்த அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே நீளம் பிரச்சினை இல்லை என்றேன்.
என் தரப்பினைச் சொல்லிவிட்டு வெட்டுவதென்றால் எவற்றையெல்லாம் வெட்டலாம் என பதினைந்து நிமிடக் காட்சிகளைப் பரிந்துரைத்தேன். ஆனால் அவை இல்லாமலானால் கதையில் பெரிய இடைவெளிகளை உருவாகின்றன என்று கௌதம் நினைத்தார். எப்பகுதியும் வெறுமே படத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இறுதியில் மூன்றுமணிநேரம் இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார். எதையும் வெட்டவில்லை. அம்முடிவை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம்.
இன்று திரையரங்கில் அந்த நீளமே பெரிய சாதக அம்சமாக இருக்கிறது. சிலம்பரசன் வழியாக ஒரு வாழ்க்கைமாற்றத்தையே திரையில் பார்க்க முடிவதற்கு அந்த நீளமே முதன்மைக் காரணம்.
நான் நண்பர்களிடம் வெளிவந்த விமர்சனங்களில் இந்தக் கதை உண்மையில் முத்து டான் ஆகும் கதை அல்ல, இது இரட்டைக்கதை, அதைப்புரிந்துகொண்டு எழுதப்பட்ட விமர்சனம் இருந்தால் மட்டும் அனுப்பும்படிச் சொன்னேன்.மற்ற விமர்சனங்கள் எல்லாம் இந்த வணிக ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதற்கு அப்பால் மதிப்பற்றவை.
அப்படி வந்தவை ஓரிரு விமர்சனங்கள்தான். மலையாள இயக்குநர் -கதாசிரியர் வினீத் சீனிவாசனின் குறிப்பு முக்கியமானது. தமிழில் எனக்கு பிடித்த விமர்சனம் கீழே.
ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை டீ குடிக்கப்போனபோது அங்கே சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் ”படம் நல்லாருக்கு. ரெண்டு கதை சார், துப்பாக்கிய கீழ போட்டவன் தப்பிச்சான்…” என்றார்
“அவன் எங்க போட்டான்…அதில்லா அவன் கைய உதறிட்டு கீழே விழுது?” என்றார் டீக்கடைக்காரர்.
அதுதான் மிகச்சரியான அலசல். ஆச்சரியமாக முன்முடிவில்லாமல், படங்களை விமர்சிக்கும் வழக்கமான டெம்ப்ளேட்டுகள் இல்லாமல், படத்தைப் பார்த்த சாமானிய ரசிகர்கள் ஏறத்தாழ எல்லாருமே அந்த இடங்களை தொட்டிருந்தார்கள். அவர்களே படத்தை வெற்றிப்படமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நனறி
ஒரு விமர்சனம் Gopalakrishnan Sankaranarayananவெந்து தணிந்தது காடு- எனக்குப் பிடித்திருந்தது. தமிழின் சிறந்த கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்று என்று கூறுவேன்.
ஜெயமோகன் கதையையும் அவரும் கெளதமும் இணைந்து திரைக்கதை வசனங்களும் எழுதியிருக்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு பரீட்சார்த்த முயற்சி. முதல் பாதி முழுக்க இடைவேளைக் காட்சியைத் தவிர Theatre/Mass Moment எதுவும் இல்லை. நெல்லை வட்டார கிராமத்திலிருந்து பிழைப்புத் தேடி ஒரு பரோட்டா கடையில் வேலை பார்க்க மும்பைக்குச் செல்லும் நாயகன் முத்துவீரன் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கும் தருணத்துக்கான பில்டப் தான் முதல் பாதி முழுவதும். இரண்டாம் பாதி நாயகனின் கேங்ஸ்டர் வாழ்க்கையை பதிவு செய்கிறது. அதிலும் சில சுவாரஸ்ய தருணங்கள் உண்டு என்றாலும் அவற்றை வழக்கமான தியேட்டர் மொமண்ட் என்று சொல்ல முடியாது. எது எப்படி என்றாலும் ஒரு படம் பார்வையாளரின் ஈடுபாட்டைத் தக்க வைக்க வேண்டும். எனக்கு இந்தப் படத்தின் 90 சதவீதம் ஈடுபாட்டுடன் பார்க்க முடிந்தது. இரண்டாம் பாதியில் மட்டும் என்ன செய்வதென்று தடுமாற்றத்தால் கொஞ்சம் காதல் காட்சிகளை அளவுகடந்து நீட்டித்ததாகத் தெரிகிறது. அதிலும் நாயகனும் நாயகியும் வாயசைத்துப் பாடுவதெல்லாம் பொருந்தவேயில்லை.
படத்தில் ஒரே ஒரு காட்சியில்கூட நமக்கு சிம்பு தெரியவில்லை. முத்துவீரன்தான் தெரிகிறார். ஒரு நடிகராக சிம்புவின் ஆகச் சிறந்த் பங்களிப்பு இந்தப் படத்தில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தின் இன்னொரு நாயகன் ஏ.ஆர்.ரகுமான். பாடல்களில் படத்தின் முக்கியத் தருணங்களில் அவர் குரலில் ஒலிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் மிகச் சிறப்பு. மல்லிப்பூ ரசிக்கவைத்தது. பின்னணி இசையோ வெகு சிறப்பு. ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் மிக அழுத்தமாக இருந்தன.ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்து இங்கே பரவலாக பகிர்ந்து troll செய்யப்பட்ட “ஸ்க்ரூ-மெஷின்”வசனம் உண்மையில் மிக நல்லவசனம். படத்தின் மையக் கதாபாத்திரங்கள் சிக்கியிருக்கும் சூழலை அதைவிட கச்சிதமாக ஒற்றை வசனத்தில் புரியவைத்திருக்க முடியாது. அதே நேரம் வேறு சில இடங்களில் ஜெயமோகனின் வசனங்கள் சினிமாவுக்கு பொருந்தாதவையாகவும் அவருடைய கதைகளைப் படித்தவர்களுக்கு சற்று அவருடைய டெம்ப்ளேட்டாகவும் ஒலிக்கின்றன.
படத்தின் காதல் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் அவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது,. இந்தப் படத்தின் நாயகிக்கு நாயகனைக் காதலிப்பதுதான் வேலை என்றாலும் அவள் சுயமரியாதை அற்றவளாக நாயகனுக்கு தன்னை முற்றிலும் அடிபணிகிறவளாக இருக்கவில்லை. பணத்தாசை பிடித்த தந்தையிடமிருந்து அவளை மீட்க நாயகன் தந்தைக்கு பணம் கொடுக்க முன்வர அதற்கு முன் அதில் தன் விருப்பத்தைக் கேட்காததை நாயகனிடம் கேள்வி எழுப்புகிறாள். வேலை போய்விடக் கூடாது என்பதற்காக முதலாளியின் அழைப்பை ஏற்று ஹோட்டல் ரூமுக்குச் செல்கையில் அவளைப் பார்க்கும் நாயகன் அந்த முதலாளியை அடித்து துவம்சம் செய்கிறானே தவிர நாயகியை ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசவில்லை. அவளை அந்த நிலைக்கு இட்டுச் சென்ற சூழலைப் புரிந்துகொள்கிறான்.
இதைத் தவிர படத்தின் நாயகன் இருக்கும் கேங்ஸ்டர் குழுவுக்கு எதிர் கேங்க்ஸ்டர் குழுவில் ஒரு மலையாள இளைஞன் இருக்கிறான். நாயகனும் அவனும் சந்தித்துக்கொள்ளும்போது கனிவாகப் பேசிக்கொள்கிறார்கள். நாயகன் அவனது குழுவில் துப்பாக்கியால் சுட்டு எதிரிகளை வீழ்த்துவதில் கைதேர்ந்துவிட எதிர் குழு இளைஞனோ அந்த கேங் லீடரின் பாலியல் அடிமையாக இருக்கிறான். அதைக் குறித்து அவன் நாயகனிடம் பகிர்ந்துகொள்ளும்போது நாயகன் அவனை இழிவுபடுத்தவில்லை, குறைசொல்லவில்லை, வேறு பிழைப்பைத் தேடிக்கொள்ளலாமே என்று அறிவுரை கூறவில்லை. இதற்கெல்லாம் மாறாக “நீ யாரையும் கொலை செஞ்சதில்லல்ல” என்று ‘நீ ஒன்றும் என்னைப் போன்ற பாவி அல்ல’ என்று அவனுக்கு உணர்த்த முயல்கிறான். உண்மையில் இது படத்தின் மிகச் சிறந்த தருணம், இறுதியில் அந்த நண்பன் ஒரு பெண்ணால் விரும்பப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்று நிம்மதியாக வாழ்கிறான். உண்மையில் நாயகனைவிட மேம்பட்ட வாழ்க்கை. ஆனால் நம் தொழில்முறை விமர்சகர்கள் யாரும் இதை கவனப்படுத்தியதாக நான் பார்க்கவில்லை.
கெளதமின் திரைப்படங்களிலேயே இது முற்றிலும் வித்தியாசமானது. அவருடைய திரைப்படங்கள் எதனுடைய சாயலும் இதில் இல்லை,. விமர்சகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து வேறொரு எழுத்தாளரின் கதையைப் பெற்று திரைக்கதை வசனத்தை அவருடன் இணைந்து பணியாற்றி அவருக்கு முதன்மைப் பெயரைக் கொடுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு கெளதம் படங்களிலும் ஜெயமோகன் தமிழில் பணியாற்றிய படங்களிலும். இதுவே அரசியல் சரித்தன்மைவாய்ந்த படம். இருவரும் இந்தக் காலகட்டத்தின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தோ வணிகக் காரணத்துக்காகவோகூட இதைச் செய்திருக்கலாம். ஆனாலும் இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றே கருதுகிறேன்.
September 19, 2022
கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
இந்த ஆண்டு எனக்கு அறுபது, சென்ற ஏப்ரலிலேயே அது முடிந்துவிட்டது. இந்த ஆண்டை ஒரு வகையில் நான் முன்னரே திட்டமிட்டுக்கொண்டேன். இன்னும் பெரிய அறைகூவல்களுடன். தமிழ் விக்கி அதில் முதன்மையானது. அப்பணி இன்று என் பொழுதில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது.
என் மணிவிழாவை கொண்டாடவேண்டும் என்று முதன்மை ஆர்வத்துடன் இருந்தவர் கோவை நண்பர் ‘டைனமிக்’ நடராஜன். கோவை நன்னெறிக் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார். அவருடன் மதிப்பிற்குரிய இயகாகோ சுப்ரமணியம், டி.பாலசுந்தரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் சௌந்தரராஜன் என பலர் இணைந்து இவ்விழாவை ஒருங்கிணைத்தார்கள்.
நான் சனிக்கிழமை காலையே கோவை வந்துவிட்டேன். சனி காலை முதல் திங்கள் மாலை கிளம்புவது வரை நண்பர்களுடன் இருந்தேன். தமிழகம் முழுக்க இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் தங்க கோவையில் குஜராத்தி பவன் மற்றும் சாய் வில்லா என்னும் இரண்டு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை பட்டீஸ்வரர் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்று வந்தோம். அங்கே நம் மரபுப்படி நானும் அருண்மொழியும் மாலைமாற்றிக்கொண்டோம். மீண்டும் ஒரு மாலை மாற்றல் கோவை மேடையில். நண்பர்கள் மதிப்புக்குரிய ஆசிரியர்கள் நிறைந்த அவை. கோவை கிக்கானி பள்ளி அரங்கில் ஆயிரத்தி இருநூறுபேர் நிறைந்தமர்ந்த பெரிய கூட்டம்.
விழாவில் என்னைப்பற்றி 105 எழுத்தாளர்களும் வாசகர்களும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய பெருநூல் சியமந்தகம் (தொகுப்பு சுனில் கிருஷ்ணன்) வெளியிடப்பட்டது. கோவை ஆட்சியர் சமீரன் வெளியிட்டார்.
ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் உணர்ச்சிகரமானது, அணுக்கமானது. எல்லா வகையிலும் முழுமைகூடிய நிகழ்வு.
இந்நாள் என் வாழ்க்கையின் இனிய நினைவுகளில் ஒன்று
ஆதிவண் சடகோபன், ’தூக்கிட்டுப் போ!’
ஆதிவண் சடகோபன் என்ற பெயர் தமிழகத்தில் வைணவர்கள் அல்லாதவர்கள் பெரும்பாலும் எவருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் ஆழ்வார்திருநகரி முதல் திருப்பதி வரை தமிழ்நிலத்திலுள்ள ஏறத்தாழ எல்லா வைணவப்பேராலயங்களும் நாம் இன்று காணும் நிலையில் எழ அவரே காரணமானவர். அக்கோயில்களை ஒட்டியே தமிழகத்தின் பண்பாடு, பொருளியல் வளர்ச்சியில் பெரும்பகுதி பதிநான்காம் நூற்றாண்டுமுதல் நிகழ்ந்தது.
அவர் கதையில் ஓர் அழகிய தருணம், ஒரு துறவியின் கையில் குழந்தையாக துள்ளி ஏறிக்கொண்டார் பெருமாள். பெருமாள் அல்ல, நரசிம்மர். சிங்கக்குட்டி. தன்னை தமிழகமெங்கும் கொண்டுசெல் என ஆணையிட்டார். ஆமாம். அத்தனை கைக்குழந்தைகளும் கையை திசைவெளி நோக்கி நீட்டி கால்களை உதைத்து எம்பிஎம்பிச் சொல்லும் ‘தூக்கிட்டுபோ’ என்ற அந்த மாறாத ஆணைதான்.
ஆதிவண் சடகோபன்
ஆதிவண் சடகோபன் – தமிழ் விக்கி
சிபில் கார்த்திகேசு,அழகிரிசாமி -கடிதங்கள்
வணக்கம் திரு. ஜெயமோகன் ,
உங்கள் தளத்தை தினமும் படிக்கும் ஒரு சராசரி வாசகனின் கடிதம்.
ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதம்.
தமிழ் விக்கி குறித்து , ஒரு வினைக்கு எதிர்வினையாக நீங்கள் பகிர்ந்தது,எனக்கும் ஒரு பங்கு இருக்க முடியும் , என்று தோன்றியதால்
தமிழ் விக்கி இணைப்புகள் அனைத்தையும் சொடுக்கி சென்று படிப்பேன்.
சிபில் கார்த்திகேசு – இந்த பக்கத்தையும் அவ்வாறே படித்தேன்.
அவரின் செயல்பாடுகளுக்கு “மாபெரும் வாழ்க்கை” – என்பதே பொருத்தமான தலைப்பு.
ஒரு ஊருக்காக ஒரு குடும்பமே வெந்து தணிந்திற்கிறது.
சிபில் கார்த்திகேசு – அந்த உன்னத உயிர்களின் அன்னை உயிர் !
உண்மையில் சிலிர்த்து விட்டது !
சிங்கப்பூரில் வசிப்பதால் , மலேஷிய சீன நண்பர்களும் உண்டு !.
சிபில் குறித்த ஆங்கில இணைய பக்கங்களை அவர்களிடம் பகிர்ந்து ,
இந்த பெண்மணியை பற்றி அவர்களுக்கு ஏதேனும் தெரியுமா ? என்று கேட்க தொடங்கினேன்.
அவர்கள் யாரும் பாடப்புத்தகங்களில் படித்திருக்கவில்லை , விவரங்கள் தெரிந்திருக்கவில்லை.
1948-இல் தன் 49ஆம் வயதில் மரணித்த அவர் –
சந்தேகமில்லாமல் மலேசியா பல் இன சமூகத்தின் ஒற்றுமையின் முகம்.மறக்கப்பட்ட முகம் !
அறிமுகத்திற்கு நன்றி , இது போன்ற மனிதர்களும் , அவர்தம் வாழ்வளிக்கும் செய்திகளும்தான் இரைதேடும் உலகவாழ்க்கையில் சில அர்த்தங்களும் உள்ளன என்று புரிய வைக்கிறது !
நன்றி.
குணா .
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி கட்டுரைகளிலுள்ள exclusive தன்மை திகைப்பை உருவாக்குகிறது. போகிறபோக்கில் எழுதப்பட்ட கட்டுரை என ஏதுமில்லை. அத்தனை கட்டுரைகளிலுமுள்ள முழுமையான செய்திகள் மட்டுமல்ல தெளிவான பார்வையும் வியப்பூட்டுகின்றன. கட்டுரைகள் தெளிவாக பகுதிகளாக பிரிக்கப்பட்டு செய்திகள் அளிக்கப்பட்டுள்ளன. எல்லா செய்திகளும் அடங்கியிருக்கின்றன. அனைத்தையும் விட முக்கியமானது அந்த மனிதரின் வரலாற்றுப்பின்புலம், பங்களிப்பு ஆகியவை எந்த தொடக்கவாசகனுக்கும் தெளிவாகப் புரியும்படி அளிக்கப்பட்டுள்ளன.
கு.அழகிரிசாமி பற்றிய கட்டுரையை வாசித்து அதை முழுமையாக உள்வாங்கவே ஒருமணிநேரம் ஆகியது. அவ்வளவுசெய்திகள் ஒரு கட்டுரைக்குள் உள்ளன. கு.அழகிரிசாமியின் வாழ்க்கை, இசையார்வம், மரபிலக்கிய ஆர்வம் எல்லாவற்றுடன் அவர் மலேசிய இலக்கியத்தில் ஆற்றிய பணியும் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி
ரவிக்குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

