Jeyamohan's Blog, page 711
September 22, 2022
மொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்
சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]அன்புள்ள ஜெ,
கோவை மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டது மிக நிறைவான அனுபவமாக இருந்தது. உங்களையும் அருண்மொழி அம்மாவையும் சந்தித்து ஆசி பெற்றதும், உங்கள் மாணவர் நிரையில் ஒருத்தியாக அந்தத் ததும்பலில் இருந்ததும், என் வாழ்நாளுக்கென சேமித்து வைத்துக் கொள்ளப்போகும் அனுபவம். உங்கள் பணிகளை பற்றி நீங்கள் கூறும்போதெல்லாம் உங்கள் ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்கிறீர்கள். ஓர் ஆற்றொழுக்கு போல. நானும் அந்த ஆறு தான் என்று உணர்ந்து கொள்ளும்படியான தருணமாக அது அமைந்தது.
ஆகவே இப்போது நாங்கள் தொடங்கியிருக்கும் இந்தப்பணியையும் அநாதியான ஓர் ஆணையின் இயல்பான வெளிப்பாடாகவே எண்ணிக்கொள்கிறேன். இப்படி ஓர் அமைப்புக்கான தேவை பலகாலமாக உணர்ந்த ஒன்று. சில நாட்களுக்கு முன்னால் ஒரு காலை நேர மன எழுச்சியில் மொழி என்ற பெயரை முதலில் அடைந்தேன். பிறகு அந்த மொத்தக் கனவும். தொடங்கிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ப்ரியம்வதாவிடம் சொன்னேன், உற்சாகமாக இணைந்துகொண்டார். இது அவருடைய கனவும் கூட.
இந்திய அளவிலேயே இந்திய இலக்கியம் என்று சொன்னால் அது ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியம் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு பிரம்மாண்டமான செவ்விலக்கிய பின்னணி உள்ளது. நவீன இலக்கியத்தில் தனித்துவமான ஆக்கங்களும் அதை இயற்றிய மனிதர்களும் இருக்கிறார்கள். நமக்கேயான தனித்துவமான கருத்துகள் தோன்றியிருக்கிறது. ஆனால் அவை இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் இயற்றப்பட்டுளது என்பதாலும், அவற்றுக்கிடையிலான உரையாடல்கள் நிகழ்ந்தாலும் ஆங்கிலம் வழியாக நிகழவில்லை என்பதாலும், அவை உரிய கவனம் பெறாமல் இருக்கின்றன.
இது இந்தியாவின் நவீன அறிவுத்தள அமைப்பில் ஒரு மிகப்பெரிய பிழை. ஆபத்தான இடைவெளி. இன்று தமிழகத்திலிருந்து ஆங்கிலத்தில் சோழர் வரலாற்றைப் பற்றி எழுதுகிறவர்கள் குடவாயில் பாலசுப்ரமணியத்தை அறிந்திருக்காததை சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். இது வரலாறு; மேலும் புறவயமானது. வரலாற்றுக்கே இந்த நிலைமை இருக்க இலக்கியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அப்படிப்பட்ட எண்ணற்ற குருட்டுப்புள்ளிகளை சீர்படுத்த வேண்டிய கடமை நம் முன் உள்ளது.
தமிழ் விக்கிக்கான ஆங்கில பக்கங்களை உருவாக்கும் வேலை இந்தக் குருட்டுப்புள்ளியை சீர்செய்யும் பணியில் முதல் படி. அது பண்பாட்டுக் களத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பும். ஒவ்வொரு மொழியிலும் இப்படி உருவாக்கப்பட்டால் பெரிய நன்மை பயக்கம்.
புனைவிலக்கியத்தை பொறுத்தமட்டில் அந்தத்தளம் மேலும் நுண்மையானது. ஏனென்றால் அது ரசனை சார்ந்தது. விரிவான வாசிப்பையும் தொடர்ச்சியான எழுத்தையும் உரையாடலையும் கோருவது. அதிலும், இந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் அதனதன் இலக்கியங்களை தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிமாற்றி அறிமுகம் செய்து, அதைப் பற்றி பேச, எழுத தகுதியானவர்களை கண்டுபிடித்து, அதற்கான வாசகர்களையும் அடைந்து தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதென்பது நினைத்தாலே மலைக்க வைக்கும் செயலாக உள்ளது.
இச்செயலை நாங்கள் தொடங்கியுள்ளோம். ‘மொழி‘ (Mozhi) என்று அந்த அமைப்புக்கு பெயர் வைத்துள்ளோம். இந்திய அளவிலான அமைப்பு என்றாலும் தமிழ் பெயர் தான் வைத்துள்ளோம். எப்படி ‘சம்வாத’ போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளை பெயர்களாக போடுகிறார்களோ, அதுபோல் தமிழிலிருந்து ஒரு வார்த்தை. மொழி. இந்திய மொழிகளுக்கு இடையே ஒரு வெளியாக இது அமையும். வெவ்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட, எழுதப்படுகின்ற இலக்கியங்களின் மொழியாக்கங்களை, அவற்றைப் பற்றிய மதிப்புரைகளை, விமர்சனங்களை பிரசுரித்து, அவற்றைப் பற்றி ரசனை அடிப்படையில் விவாதங்களை முன்னெடுப்பது இந்த அமைப்பின் முதல் குறிக்கோள். ரசனை அடிப்படையில் இந்தியாவெங்கும் இலக்கியத்தை அணுகக்கூடிய இளைய தலைமுறையினர் சிலரை ஒன்று திரட்டுவது இரண்டாம் குறிக்கோள். இலக்கியத்தைப் பற்றி தொடர்ச்சியாக, கலாபூர்வமாக எழுதக்கூடிய வாசகர்களை, விமர்சகர்களை, இலக்கிய ரசனையாளர்களை வளர்த்தெடுப்பது மூன்றாம் குறிக்கோள்.
பொருத்தமான நபர்களை கண்டடைந்து அவர்களிடம் கட்டுரைகள், மொழியாக்கங்கள் வாங்கி பிரசுரித்து அவற்றின் மேல் விவாதம் உருவாக்க எண்ணியுள்ளோம். மாதம் ஒரு முறை ஒரு பிராந்திய மொழி எழுத்தாளருடன் சூம் வழியாக இணைய விவாதம் ஒன்றை ஒருங்கிணைக்க எண்ணியுள்ளோம். வெவ்வேறு மொழிப் பின்னணிகளிலிருந்து வாசகர்கள் பங்கெடுக்கும் நிகழ்வாக அதை கனவுக் காண்கிறோம்.
இதை ஒரு நண்பர் குழுவாகவே உத்தேசிக்கிறோம். எங்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளே ஒரு விதத்தில் முன்மாதிரி. சென்ற சில ஆண்டுகளாக நாம் அறிமுகம் செய்துகொண்ட வேற்று மொழி எழுத்தாளர்கள் போல மேலும் சிலரை, மாதம் ஒருவர், இருவர் என்று இணையம் வழியே அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் நூல்கள் குறித்து விவாதங்கள நிகழ்த்தி பதிவுசெய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நீங்கள் 1990-களிலிருந்து தமிழ்-மலையாளக் கவிஞர்களுக்கிடையே சந்திப்புகளை ஒருங்கிணைத்ததை பற்றி எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். இன்று யோசிக்கையில் அப்படியான தொடர்ச்சியான, தீவிரமான சந்திப்புகள் நடந்தது என்பது சற்று திகைப்பூட்டுகிறது – ஒரு கணக்கில் அவை எளிமையான இயல்பான விஷயம், கவிஞர்களுக்குப் பேசிக்கொள்ள மொழி ஒரு தடையா? – ஆனால் எவ்வளவு அரிதாக நடக்கிறது! அவ்வளவு தீவிரமான இயங்கல் எங்களுக்கு சாத்தியப்படாமல் போனாலும் ஒத்த மனதுடைய ஒரு குழுவை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதை மொழிகளுக்கு இடையிலான ஒரு வெளியாகவே உத்தேசிக்கிறோம். இந்திய மொழிகளுக்கிடையே ஆங்கிலம் இன்று இயல்பான ஒரு இணைப்பு மொழியாக அமைந்துள்ளது; மேலும் ஆங்கிலத்தில் ஒரு விஷயம் பதிவாகுகையில், நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவிலையோ, அதன் மேல் கவனமும் வெளிச்சமும் கூடுகிறது. ஆகவே இப்படியான செயல்பாடு எப்படியோ ஆங்கிலத்தை பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் அதே சமயம் இந்த வெளியில் எல்லா மொழிகளும் சமமானவை என்ற கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். ஆகவே இணைய விவாதங்களில் அவரவர் அவரவர் தாய்மொழியிலேயே பேசுவதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். ஆங்கிலத்துக்கோ மற்ற மொழிக்கோ மொழிமாற்றம் செய்யும் நண்பர்களை நம்பி களம் இறங்குகிறோம். உண்மையில் பெரும்பாலான இந்திய மொழிகளை சற்று கூர்ந்து கவனித்தால் 20-30% எப்படியும் புரியும். தொடர்ந்து கவனம் கொண்டு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடு உரையாடுகையில் நம்முடைய மொழிபிரக்ஞையும் விரிவதற்கான வாய்ப்பு உண்டு இல்லையா?
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நமது நண்பர் மணவாளன் அவர்கள் ஒரு வருடத்தில் மலையாளம் மொழி கற்று பி.கெ.பாலகிருஷ்ணனின் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அது எனக்கு பெரிய உத்வேகமாக இருந்தது. ஒரு வகையில் ‘மொழி’ உருவானது அந்த இடத்திலிருந்து தான். ஒரு வருடத்தில் ஒரு பிராந்திய மொழியை இலக்கிய விமர்சனக் கட்டுரை மொழியாக்கம் செய்யும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இவர்கள் இருக்கிறார்கள் என்றால் ‘மொழி’ போல் ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். (ஒரு சவாலுக்காக நான் மலையாள லிபியை ஒரு நாளில் மனப்பாடம் செய்தேன். ஆறு நாள் தொடர்ந்து அக்ஷரம் கூட்டிப் படித்தேன். ஏழாம் நாள் ஒரு பக்க கதையை வாசித்து மொழிபெயர்த்தேன். 70% சரி).
மொழி அமைப்பின் முதல் நிகழ்வாக ஒரு தமிழ்-ஆங்கிலம் சிறுகதை மொழிபெயர்ப்புப் போட்டியை ஒருங்கிணைப்பதாக உள்ளோம். நம்மிடம் போதிய அளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. இளைய தலைமுறையினர் இன்னும் பலர் வர வேண்டும். ஆகவே நல்ல பரிசுத்தொகையுடன் கூடிய ஒரு போட்டி. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் விஷ்ணுபுரம் பதிப்பகமும் பரிசுகளுக்காக தொகையை ஏற்றுக்கொள்ள பெருந்தன்மையுடன் முன்வந்துள்ளனர். நடுவர்கள் அ.முத்துலிங்கம், என்.கல்யாண் ராமன், கன்னட-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி. போட்டியை பற்றிய மேலும் தகவல்களை இன்னும் சில நாட்களில் பகிர்ந்துகொள்கிறேன்.
உங்கள் மணிவிழாவை ஒட்டி இந்தச் செயல்பாட்டைத் தொடங்குவது மிகுந்த உத்வேகத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது. உங்களுக்காக நித்யா வைத்திருந்த திட்டத்தை பற்றிச் சொன்னீர்கள். உங்கள் வழியாக அந்தத் திட்டம் மேலும் விரிவுகொண்டுள்ளதாக நினைக்கிறேன்.
உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் கோருகிறோம்.
அன்புடன்,
சுசித்ரா
*
அன்புள்ள சுசித்ரா,
வாழ்த்துக்கள்.
இத்தகைய எந்த முயற்சியும் இந்திய அளவில் கவனிக்கப்படுவது அது மேற்குலகில் கவனிக்கப்படுகிறதா என்பதைக்கொண்டே. மேற்கத்திய விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் இதில் ஈடுபடவேண்டும். அவர்களின் பங்களிப்பையும் கருத்துக்களையும் பெற முயலவேண்டும். அதுவே முதன்மையானது.
நீண்டகாலத் தொடர்செயல்பாடுதான் எதையும் கண்கூடான வெற்றியாக ஆக்குகிறது.
வாழ்த்துக்கள்.
ஜெ
புதுவை வெண்முரசுக் கூடுகை,52
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 52 வது கூடுகை 24.09.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாடுவார். நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .
பகுதி 8 : நச்சு முள் 1 முதல் 6 வரை பகுதி 9 : பெருவாயில்புரம் 1 முதல் 5 வரை பகுதி 10 : சொற்களம் 1 முதல் 6 வரை இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com
ச.வே.சுப்ரமணியம், தமிழூர்
சென்ற தலைமுறை தமிழறிஞர்களிடம் இருந்த தீவிரமான தமிழ்ப்பற்று வியப்புக்குரியது. இன்று அவ்வுணர்வு பெரும்பாலும் இல்லை. இன்று தமிழ் என்பது அரசியல் அதிகாரம் அல்லது கல்வித்துறை அதிகாரத்துக்கான ஒரு வழி. அதிகார வழிபாடு செய்பவர்கள் மேலேறுந்தோறும் மெய்யான தமிழறிஞர்கள் மதிப்பிழந்து மறக்கவும் படுகிறார்கள்.
பேரா.ச.வே.சுப்ரமணியம் தன் முழுச்சேமிப்பையும் ஓய்வுபெற்றபின் தமிழுக்காகச் செலவிட்டார். பாளையங்கோட்டை அருகே நிலம் வாங்கி தமிழூர் என்னும் சிற்றூரை உருவாக்கினார். ஆய்வுநூலகம் உருவாக்கி, வந்து தங்கும் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகையும் அளித்தார். அவருக்குப்பின் அம்முயற்சி என்னவாயிற்று என்று தெரியவில்லை
ச.வே.சுப்ரமணியம்
ச.வே.சுப்ரமணியன் – தமிழ் விக்கி
கல்வெட்டுகள், ஒரு தரவுத்தளம்
Udhayam.in இணையதளத்தில் தற்போது
கல்வெட்டு தரவுதளம் (Inscription Database)
http://udhayam.in/tnarch-db.php
(Tnarch menu அருகே உள்ளே down Arrow கிளிக் செய்யவும்)
தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தி உள்ளேன். (Inscription Database)
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஊர், வட்டம், மாவட்டம் போன்றவைகள் அதன் வட்டம், மாவட்டம் மாறி உள்ளதால் அதன் இடங்களை சமகாலத்தில் உள்ளது போல மாற்றி உள்ளேன்.
(உம். வடஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களை தற்சமயம் மாறி இருக்கும் மாவட்டங்களாக)
இந்த கல்வெட்டு தரவுதளத்தில் இதில் உள்ள தகவல்கள் கல்வெட்டுகளை தேடும் வசதியும், மாவட்டம், வட்டம், ஊர், மொழி, மன்னர்களை அகர வரிசைப்படுத்தி பார்க்கவும், Details என்ற பட்டன் கிளிக் செய்தால் அதில் கல்வெட்டுகளில் பொது தகவல்கள் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும், ARE Reference, Pre published detail மற்றும் அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களுக்கு நேரடியாக செல்லும் வசதியும் உள்ளன.
புதிய கல்வெட்டுகள் என அறியும் முன்னர் இந்த தளத்தில் கல்வெட்டு முன்னரே பதியப்பட்டதா எனவும் அறிய முடியும்.
(இந்திய, உலக அளவில் கல்வெட்டுகள், பத்திரிக்கைகளில் வரும் புதிய கல்வெட்டுகளை தொகுக்கும் பணியும் செய்து வருகிறேன்.)
http://udhayam.in/tnarch-chart.php
(Tnarch menu அருகே உள்ளே down Arrow கிளிக் செய்யவும்)
தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆண்டு, ஆட்சி, மொழிகளுக்கு விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது
Statistics, Chart போன்று எளிதில் அறிய உதவும்
கல்வெட்டு அகராதி & சொற்களஞ்சியம்
http://udhayam.in/agaramuthali.php
கல்வெட்டுகளுக்கான அகராதி மற்றும் சொற்களஞ்சியம் தொகுத்துள்ளேன்.
இதில் கல்வெட்டுகளுக்கான அகராதி மற்றும் எந்த கல்வெட்டுகளில் உள்ளன அதன் புத்தகம் மற்றும் அதன் பக்கங்களுக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் அந்த பக்கத்திற்க்கே சென்று அதன் தரவுகளை பார்க்கலாம்.
மேலும் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ள ஊர்கள், பாடல்கள், இலக்கியம் அனைத்தும் அடங்கி இருக்கும்.
கல்வெட்டு காலவரிசை (Inscription Timeline)
http://udhayam.in/timeline.php
கல்வெட்டுகளில் உள்ள காலங்களை காலவரிசையாக (Timeline) வரிசைப்படுத்தி உள்ளேன். இதில் குறிப்பிட்ட ஆண்டில் அந்த ஆட்சி, மன்னர், இடம், மொழி மற்றும் புத்தகங்கள் அதன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன.
கணினி வழியாக இணையதளத்தை பார்க்கும் போது இடப்பக்கம் கல்வெட்டுகளின் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளன அதை கிளிக் செய்தால் அதன் சரியான ஆண்டில் நடந்த நிகழ்வு / கல்வெட்டுகளை காணலாம்.
(கண்டு பிடிக்க முடியாத ஆண்டுகள் பொது எண்களாக கொடுத்துள்ளேன்)
1. தமிழகத்தின் காலவரிசை நிகழ்வுகளை தொகுக்கும் முயற்சியில் இது ஒரு முன்னோட்டம்
2. இதில் மன்னர், பிறப்பு, இறப்பு, கட்டிடக்கலை, படைப்புகள் என தகவல்கள் விரைவில் இடம்பெறும்.
3. தற்சமயம் ஆண்டுகளை மட்டும் வைத்து பிரித்துள்ளேன், இதே கால வரிசையில் இடம், ஆட்சி, மன்னர், மொழிகளை தனிதனியாக பார்க்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
4. இன்னும் இதில் மேம்பட்ட வசதிகளுடன் அடுத்த வெளியீட்டில் வெளிவரும்.
Contact : 9940232560
உதய்
கோவை விழா, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக இருந்தது. அரங்கம் நிறைந்த விழா நீங்கள் எங்களுக்கு யார் என்பதை உலகிற்கு சந்தேகமின்றி காட்டியது.
மதியமும் இரவும் உங்களது ‘ஜமா’வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு தளங்களில் தன்னியல்பாக சென்ற பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது குறிப்பாக – மாபெரும் சோவியத் யூனியனின் பரப்பியக்க முயற்சிகளை முறியடித்த மூவர் என மொழிபெயர்ப்பாளர்கள் மூவரை சொன்னது தான் உச்சம். வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்.
எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப், சுசித்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. ஏற்கனவே முகநூல் வழியாக அறிமுகமாகியிருந்த ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இரவு வெகுநேரம் வரையிலும் காலையிலும் பேசிக்கொண்டிருந்தேன்.
உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றது எனது நல்லூழ். வாழ்வின் ஒவ்வொரு கணமும் – இடரிலும் மகிழ்விலும் – எனக்கு கற்பித்து வழிகாட்டும் ஆசிரியரிடம் முழுதாக பணிந்து ஆசி பெற்றது நம்பிக்கையையும் மனவலிமையையும் தந்தது. நான் செய்யக் கூடுவது ஒரு லட்சிய மாணவனுக்கு தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வது மட்டுமே.
நன்றி
சங்கரன்
அன்பின் ஜெ,
ஆம். சியமந்தக கல்போல் தான் நீங்கள் எங்கள் அறிய பொக்கிஷம்தான். உங்களுக்கு குரு நித்யாவை போல நீங்கள் எங்களுக்கு.
ஒரு எழுத்தாளருக்காக அரங்குநிறைந்த வாசகர்கள் கூடியதை முதல் முறையாக பார்த்தோம்.இவ்வளவு வாசகர்களின் அன்பின் உயரத்தில் ஞானபீடமும் நோபலும் எம்மாத்திரம்?
சமூக விழுமியங்களை, பண்பாடு கலாச்சாரங்களை எங்களுக்கு கையளித்து, எங்களை கரம்பிடித்து நடைபழக்கி,உங்களை வாசிக்கும் தோறும் சிரித்தும்,பல இடங்களில் அழுதும், அழுதுகொண்டே அண்ணாந்து பார்த்து முகம் துடைத்து பெருமூச்சு விட்டு படித்ததையே மீண்டும் படித்து புல்லரித்துப்போய் நண்பனுக்கு போன் செய்து இந்த இடத்தில் (உதாரணமாக பாரதிபாஸ்கர் குறிப்பிட்ட பண்ணிரு படைக்கலம் 87வது அத்தியாயம்) எப்படி எழுதியிருக்கிறார் பார்த்தாயா? என்று பேசிப்பேசி மீண்டும் மீண்டும் புலகாங்கிதம் அடைவதும் எங்களுக்கு அன்றாட நிகழ்வு.
ஜெ 60. முடிந்து அதிகாலை வீடு வீடு வந்து சேரும் வரை நிகழ்வுகளை அசைபோட்டவாறு வந்ததில் யுவன் சொன்னது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உங்களுக்கு நிகரொப்ப யாருமில்லை என்பது உண்மை.ஆகவே வையத்தலைமை கொண்டு எங்களை வழிநடத்துங்கள்.
விசாலாட்சி அம்மாவும் உங்கள் ஆசிரியர்ளும் உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பார்கள்.உங்கள் ஆசிர்வாதம் வேண்டி முழுதுடல் தரைபட வணங்குகிறோம்.
உங்கள் வெண்முரசு வரிகளில் முடிக்கிறேன்…
அளிக்கும் கை சலிக்கும்
அடையும் கை சலிப்பதில்லை.
நன்றி.
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.
September 21, 2022
சோழர்கள் பற்றி…
சோழர்கள் தெலுங்கர்கள் என்று நான் சொல்லிவிட்டேன், சோழர்களை இழிவுசெய்கிறேன் என்று ஒரு கும்பல் மின்னஞ்சல்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எங்கே எதை புரிந்துகொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. எப்படி இவர்களிடம் வரலாறு பற்றி பேசமுடியும்? ஏன் இங்கே மாபெரும் வரலாற்றாசிரியர்கள் எல்லாம் பொதுவெளியில் ஒன்றுமே சொல்லாமல் வாய்மூடி இருக்கிறார்கள், ஏன் சாதிமதஇன வெறியர்கள், உதிரிகள் மட்டுமே கூச்சலிடுகிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.
இங்கே வரலாற்றில் எவருக்கும் ஆர்வமில்லை. விதவிதமான காழ்ப்புகள் மட்டுமே உள்ளன. அதை பொதுவெளியில் கக்க சினிமா ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அவ்வளவுதான். சினிமாவுக்குச் செய்யப்படும் மாபெரும் விளம்பரத்தில் ஒரு சிறுபகுதியை தங்களை நோக்கி ஈர்க்க முயல்கிறார்கள்.
சோழர்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பவன் நான். இன்றல்ல, சென்ற இருபதாண்டுகளாக. அதன்பொருட்டு ஒருபக்கம் என்னை பிராமண அடிவருடி என வசைபாடுகிறார்கள். சோழர்கள் காலத்தில்தான் பிராமணியம் வளர்ந்தது என்றும், சோழர்காலம் இருண்டகாலம் என்றும் ,நான் அதை ஆதரிக்கிறேன் என்பதனால் நான் சாதிவெறியன் என்றும் சொல்கிறார்கள்.
மறுபக்கம் சோழர்களை நான் இழிவுசெய்கிறேன் என்றும், சோழர்கள் தமிழர்களின் பொற்கால ஆட்சியாளர்கள் என்பதை நான் மறுக்கிறேன் என்றும் இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.
இரண்டு குரல்களும் ஒரே சமயம் எழுகின்றன. ஆச்சரியமென்னவென்றால் மேலே சொன்ன இரு சாராருக்கும் இடையே சண்டையே இல்லை. இவர்களின் சண்டை முழுக்க சினிமாக்காரர்களுடன் மட்டும்தான்.
சோழர்கள் தெலுங்கர் என்று நான் சொல்லவில்லை. சொல்லுமளவு வரலாறு அறியாதவனும் அல்ல. முற்காலச் சோழர் ஆட்சி களப்பிரர் காலத்துடன் முடிவுக்கு வந்தபின் சோழர்களின் வம்சாவளியினர் பழையாறையைக் கைவிட்டுவிட்டு முந்நூறாண்டுக்காலம் இன்றைய தெலுங்கு நாட்டில் ஏழு சிற்றரசர்களாக இருந்தனர், அவர்கள் தெலுங்குச் சோழர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்கள் பின்னர் தங்கள் மூதாதையர் நிலத்தைக் கைப்பற்றினர் என்று மட்டுமே சொன்னேன். அது அத்தனை வரலாற்றுநூலிலும் உள்ள செய்தி. நான் கண்டடைந்தது அல்ல.
அந்த தெலுங்குச் சோழர்கள் பிற தெலுங்கு நாட்டுச் சிற்றரசர்களுடன் உறவுகொண்டே ஆட்சி செய்தனர், அவ்வாறுதான் ஆட்சி செய்திருக்க முடியும். பின்னரும்கூட அவர்கள் மண உறவு கொண்டது வெங்கி முதலிய இன்றைய தெலுங்கு நாட்டுடன். மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை அவர்களின் அரசியர் பலர் வெங்கிநாட்டவர் என்பது வரலாறு. ஆகவே அவர்களுக்கு இன்றைய தெலுங்குநாட்டுக் குருதிக்கலப்பு மிகுதி. இதுவும் நான் சொல்வது அல்ல. கே.ஏ.நீலகண்டசாஸ்திரி முதல் அத்தனை வரலாற்றாசிரியர்களும் சொல்லும் நேரடியான தகவல் உண்மை. ராஜராஜனின் மகளை மணந்தவனே வெங்கிநாட்டரசன்தான்.
நான் எங்கும் சோழர்கள் தெலுங்கர்கள் என்றோ, தெலுங்கு மரபினர் என்றோ சொல்லவில்லை. அன்றைய காலகட்டத்தில் அப்படி மொழிவாரியாகச் சொல்லவும் முடியாது. மிகத்தெளிவாகவே களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சோழர்களில் ‘ஒரு சாரார்’ இன்றைய தெலுங்குநாட்டில் ஆட்சி செய்தனர் என்று மட்டுமே சொல்கிறேன். எதைப்பார்த்துவிட்டு இந்தக்கூச்சல்? எங்கே எவரேனும் ஏதேனும் சொன்னால் அதை வைத்துக்கொண்டு நரம்பு புடைக்கப் பேச ஆரம்பிக்கிறார்கள். காரணம் ஒன்றே, பொன்னியின்செல்வன் வெளியாகும் நேரம். அதைப்பயன்படுத்திக்கொண்டு கொஞ்சம் கவன ஈர்ப்பு அடைவது.
பிற்காலச் சோழர்கள் முந்தைய சோழர்களின் வம்சத்தொடர்ச்சியாகவே இருக்கவே வாய்ப்பு. எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நேரடியான ரத்தத் தொடர்ச்சி இல்லையேல் சிற்றரசர்களும் குடிச்சமூகங்களும் ஒரு வம்சத்தவர்களை சோழமன்னர்களாக ஏற்றிருக்க மாட்டார்கள். ஆகவே கரிகால்சோழனின் ரத்தம்தான் விஜயாலயசோழனும் ராஜராஜசோழனும் என்றுதான் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.நானும் அதையே வழிமொழிவேன். அந்த வம்சத்தொடர்ச்சி பாண்டியர்களால் அறுக்கப்பட்டபின் வேறெவரும் சோழர்களாக ஏற்கப்பட்டதுமில்லை.
(நேர் மாறாக இஸ்லாமியர்களாலும் பின்னர் நாயக்க மன்னர்களாலும் வெல்லப்பட்டு சிதறடிக்கப்பட்டபின்னரும்கூட களக்காடு, கயத்தாறு, தென்காசியை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் பாண்டியர்கள் என்றே பதினைந்தாம் நூற்றாண்டுவரை அழைக்கப்பட்டனர்.ஏனென்றால் அவர்களுக்குப் பாண்டிய அரசமரபுடன் நேரடியான குருதித்தொடர்ச்சி இருந்தது.)
நாம் பேசிக்கொண்டிருப்பது பத்தாம்நூற்றாண்டுக்கு முந்தைய காலம் பற்றி. அன்று தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தொடக்க நிலையில் இருந்தன. அன்று மலையாளமே இல்லை. இன்றைய மொழயரசியலைக் கொண்டு அன்றைய அரசியல் எல்லைகளை புரிந்துகொள்ள முடியாது. அன்றைய மன்னர்களின் போர்களும் இன்றைய மொழி எல்லை சார்ந்து நிகழவில்லை. உறவுகளும் மொழிஎல்லையால் கட்டுப்படுத்தப்படவில்லை. அன்று தென்ஆந்திரம் அல்லது இன்றைய தெலுங்குநிலமும் சோழநிலமாகவே இருந்திருக்கும்.
சோழர்கள் இரணியசிங்கநல்லூரை (இரணியல்) ஆட்சிசெய்ஜ சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைக் கொன்று குமரிமாவட்டத்தை கைப்பற்றினர். மொத்தக் கேரளத்தையும் ஆட்சிசெய்தனர். அவர்களை ஆக்ரமிப்பாளர்கள் என்று இன்று ஒருவர் சொன்னால் அது வரலாற்றுப்புரிதல் அல்ல. சோழர்கள் கட்டிய ஆலயங்களே இங்கு இன்னமும் மிகுதி. அவர்கள் உருவாக்கிய ஏரிகளும் சாலைகளுமே இன்றைய கேரளத்தின் செல்வம்.
அதேபோலத்தான் நெல்லூர், குண்டூர் வரை சோழர்களின் பாசனப்பணிகள் உள்ளன. இன்றைய கர்நாடகத்தின் மூடுபதிரியில் சமணப்பள்ளிகளுக்கு சோழர்கள் அளித்த கொடைகள் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன.
இதை எல்லாம் இவர்களுக்கு எவர் புரியவைப்பது?
சோழர்காலத்தைய அரண்மனைகள் பெரும்பாலும் மரத்தாலானவை, ஆகவே அவை காலத்தில் எஞ்சவில்லை. அன்றைய அரசர்கள் மாபெரும் ஆலயங்களைக் கட்டியதுபோல தங்களுக்கான மாளிகைகளைக் கட்டிக்கொண்டவர்கள் அல்ல. அது தெய்வத்துக்கு எதிரான ஓர் அத்துமீறலாகவே அவர்களால் கருதப்பட்டது. ஆகவேதான் நமக்கு எந்த மாபெரும் அரண்மனை அடித்தளங்களும் கிடைக்கவில்லை. அன்றைய கோட்டைகள்கூட மண்கோட்டைகளாகவே இருந்திருக்கவேண்டும். ஆகவே அவற்றின் அடித்தளங்கள்கூட எஞ்சவில்லை. இதுவும் நான் சொல்வது அல்ல. வரலாற்றாசிரியர்கள் சொல்வது.
முப்பதாண்டுகளாக தமிழின் தலைசிறந்த படைப்புகளை எழுதுபவனை. நவீனத்தமிழிலக்கியத்தின் நடையையே தனித்தமிழ் நோக்கி கொண்டுவந்தவனை, தமிழறிஞர்கள் ஒவ்வொருவரையாக ஆய்வுசெய்து ஆவணப்படுத்துபவனை, என்றென்றும் தமிழ் நினைவுகூறும் பெரும் பணிகளை முழுவாழ்நாளையும் செலவிட்டு ஒவ்வொருநாளும் செய்துகொண்டிருப்பவனை அடிவயிற்று ஆவேசத்துடன் தமிழர்விரோதி என குற்றம்சாட்டிக் கூச்சலிடுகிறார்கள் ஒரு சாரார். வெறிநாய் சொறிநாய் என எழுதிக்குவிக்கிறார்கள். இங்குள்ள முற்போக்கினர் அங்கே சென்று புன்னகைக்கிறார்கள்.
இவர்கள் எதையாவது எப்போதாவது வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் தானா? எளிய சாதிவெறி, இனவெறிக்கு அப்பால் மெய்யாகவே இவர்களுக்கு தமிழ்மேல் ஏதாவது அக்கறை உண்டா?
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2
ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?
சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது
அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்
டேனியல் பூர், அடித்தளமென அமைந்த ஒருவர்
சில பெயர்களைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை எழுதவே முடியாது. வில்லியம் மில்லர் அவர்களில் ஒருவர். இன்னொருவர் டேனியல் பூர். ஆனால் அவர்களின் பெயர்கள் இல்லாமலேயே இதுவரை தமிழ்ப்பண்பாட்டு வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. டேனியல் பூரின் சிறந்த நினைவகம் இருப்பது மதுரை அமெரிக்கன் கல்லூரியில். ஆனால் அங்கே பயின்ற பெரும்பாலானவர்கள் அவரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள்.
டேனியல் பூர் – தமிழ் விக்கி
கோவை விழா, கடிதங்கள்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெ அவர்களுக்கு ,
18-9-2022 அன்று கோவையில் நடத்தப்பட்ட உங்களின் மணி விழாவில் கலந்து கொண்டேன் . ஒரு அருவியைப்பற்றி கேள்விப்பட்டு, அதன் காட்சிகளை ,ஒலியை தூரத்தில் இருந்து பார்த்து , கேட்டு வந்தவனுக்கு அதை நோக்கி அருகெ-அருகெ போக வேண்டும் என்ற ஒரு curiosity கலந்த ஆர்வம் , excitement , அதுதான் அறிவு அருவியான உங்களை நான் சந்திக்கும் வரையில் இருந்தது .
உங்கள் பக்கத்தில் வந்தவுடன் அருவியின் சாரலில் உடல் குளிர்ந்து முகத்தில் ஒரு பெருமூச்சுடன் விரியும் ஒரு புன்னகை போல் ஓர் புன்னகை மலர்ந்தது . ஆனால் சாரலை தாண்டி அருவியின் முழு தாக்கத்தை , பிரம்மாண்டத்தை ஏறிட்டு பார்ப்பவன் ரெண்டு அடி பின் வைத்து விலகி நின்று பார்ப்பது போல , நேற்று என்னை விட வயதில் மூத்தவர்கள் எல்லாம் உங்கள் கரங்களை பிடித்து கண்ணீர் மல்க ஒற்றி கொள்ளும் போது , காலில் விழுந்து வணங்கிக்கொளும் போது நான் கை குலுக்கி கை ஒப்பம் வாங்கிய கரங்களின் பாரத்தை ,ஆழத்தை முழுதாக உணர்தேன்.
ஜெயமோகன் எனும் ஆளுமையின் முழு பிரமாண்டம் , மகத்துவம் கண்டு , சற்று தள்ளி நின்றே ஓர் பேர் அருவியை வியந்து பார்பதற்ப்போல் , வியப்பும் மரியாதையுமாய் உங்களை பார்த்து கொண்டிருந்தேன். இப்பெரும் மன அருவியின் தாக்கத்தால் என்னால் உங்களிடம் சரியா பேச முடியமால் , போயிற்று , that’s why I’m writing this letter to you .
ஆனால் உண்மையை சொல்ல போனால் நான் இக்கடிதத்தை எழுதுவது நான் அனுபவித்த அப்பெரும் ஆளுமையின் நெருக்கத்தை , வியப்பை , அவ்வனுபவங்களை என்ன வென்று எனக்கு நானே பதியம் செய்து கொள்ள தான் இதை எழுதி இருக்கிறேன் என்று புரிகிறது . தமிழ் இலக்கியத்தில் நீங்கள் சொன்னது போலவே உங்கள் படைப்புகள் வெறும் அரசியல் , வெறும் அழகியல் என்று இல்லாமால் , அதற்கு நடுவே ஆன ஒரு இடத்தில அறம் என்ற தனி பாதையிட்டு சென்று கொண்டு இருக்கின்றன .அதுவே உங்களுக்கு பலதரப்பட்ட , பரவலான வாசகர்களை அளித்து இருக்கிறது.
எனக்கு உங்களின் அறம் சிறுகதைகள் மற்றும் காடு நாவல் மிக பிடித்தமானவை . வணங்கான் ,நூறு நாற்காலிகள் ; யானை டாக்டர் , சோற்று கணக்கு ; ஓலைச்சிலுவை ஆகியவை மிகப்பிடித்தமானவை. காடு நாவலில் பின்னிப் பின்னி காதலும் காமமும் அழகா தொட்டு தொட்டு எடுத்திருக்கிறீர்கள்.க்கீங்க ஒரு இளைஞனுக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்.
நேற்று உங்களை காண அரங்கு நிறைய வந்திருந்த நூற்று கணக்கான வாசகர்களை , போடப் பட்டிருந்த அத்தன நாற்காலிகளை , கண்ட போது , எனக்கு நூறு நாற்காலிகள் கதை தான் ஞாபகம் வந்தது , ” பல தலைமுறையாய் ஓடியாகி விட்டது , இனி அமர வேண்டும் ” என்று வரும் வரி எனக்கும் ,இன்னும் பல மக்களுக்கும் பெரிய ஊக்கம் , ஒரு நம்பிக்கை அளித்த ஒரு மகத்தான வரி ஆகும் , அவ்வரி க்கேற்ப நேத்து சென்னையில் இருந்து கிளம்பி வந்து, முன்வரிசைகளில் ஒன்றில் ஒரு நாற்காலியில் அமர்ந்து உங்களை பார்த்ததில் , உங்கள் ஏற்புரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி . ஆனால் எனக்குள் உங்கள் மேல் கூடி இருக்கும் மரியாதையும் , உங்கள் படைப்புகள் , எழுத்துக்கள் , மேல் கொண்டு இருக்கும் ஈர்ப்பும், வியப்பும் தணிய வேண்டும் என்றால் எனக்கு இன்னும் இதை போல் நூறு நிகழிச்சிகள் , நூறு நாற்காலிகள் வேண்டும் .
உங்களின் வாசகன் ,
பிரனேஷ் குமார் (பி.கெ.)
சென்னை.
அன்புள்ள பிரனேஷ்
வேறு எதிலும் இல்லாத மெய்யான இன்பமும் நிறைவும் அறிவுச்செயல்பாடுகளில் உண்டு. அதை எளிய பற்றுகளால், ஆணவத்தால் கசப்பாகவும் காழ்ப்பாகவும் ஆக்கிக்கொள்ளாவிட்டால் அது வாழ்க்கையை நிறைக்கும் இனிமையாக ஆகும்.
வாழ்த்துக்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களை ஜெ 60 விழாவில் சிந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்ததாய் இருந்தது. நாகர்கோயிலில் இருந்து கிளம்பி விழா அரங்கிற்கு 3:15 மணிக்கே வந்துவிட்டேன். பிறகு சரியான இடம் தேடி அங்கும் இங்கும் மாறி மாறி அமர்ந்தேன். கடைசியாக என் இருக்கைக்கு அருகே கேமராவை வைத்துவிட்டனர். தலையை நிமிர்த்தியும் திருப்பியும் உரைகளை கேட்டதும் புது அனுபவமாய் தான் இருந்தது.
ஓர் ஆண்டு முன்பு நாகர்கோயிலில் நடந்த “விஜி வரையும் கோலங்கள்” நிகழ்ச்சியில் உங்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளேன். அப்போது நான் வெண்முரசு வாசிக்கவில்லை என்பதால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் உங்களை அணுகினேன். இப்போது பிரயாகை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த புத்தகத்தில் தான் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன்.
மற்ற எந்த விழாவிலும் இல்லாதவாறு இங்குதான் முதல் முறையாக “I deserve to be here” என்ற உணர்வை அடைந்தேன். வெண்முரசு ஆவணப்படம் மற்றும் விழாவில் ஆற்றிய உரைகளை கேட்டபோது என்னளவில் ஒரு பெருந்செயலையாவது செய்ய வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது. உங்களுடன் எடுத்த புகைப்படத்தை Frame செய்து அதை எப்பொழுதும் எனக்கு நானே நினைவுறுத்திக்கொள்வேன். விழா ஆரம்பிக்கும் முன் இருந்த மனக்குழப்பங்கள் மறைந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் நிறைந்த மனதுடன் வெளிவந்தேன்.
மிகுந்த அன்பு மற்றும் வணக்கத்துடன்,
கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோயில்
அன்புள்ள கார்த்திக்
நீங்கள் உணர்ந்தது, இது என் இடம் என நினைத்தது மிக முக்கியமானது. அது ஓர் ஆழ்ந்த உணர்வு. அதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
ஜெ
கோவை, சொல்முகம் வெண்முரசு கூடுகை 21
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 21 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
ஒளி உண்ணும் குருதிகுருதியும் காந்தளும்இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில், தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் ‘சாய்வு நாற்காலி’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 25-09-22, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
ஏ.வி.தனுஷ்கோடி, அஞ்சலி
அன்பின் ஜெ.
தாங்கள் எழுதும் கட்டுரைகள், பரிந்துரைகள் – இன்னும் சொல்லப்போனால் நினைவு அஞ்சலிக் குறிப்புகள் வழியாகவும் மறக்கப்பட்ட, அவ்வளவாக கவனிக்கப்படாத பல்வேறு இலக்கிய ஆளுமைகள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பலரைக் குறித்தும் தங்களின் வாசகர்கள் பலரைப் போலவே நானும் அறிந்து வந்திருக்கிறேன். ஃப்ரன்ஸ் காஃப்கா–வின் “விசாரணை” நாவலை – ஆங்கிலத்திலும் சரி, அதன் தமிழ் பதிப்பு என்கிற வகையிலும் சரி, மிக முக்கியமான ஆக்கம். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்த ஏ.வி.தனுஷ்கோடி கடந்த வாரம் இறந்து போயிருக்கிறார்.
இது ஏதோ இன்று / நேற்று வந்த மொழிபெயர்ப்புமல்ல. முப்பதாண்டுகளுக்கு முன்பு வந்து பெரிதும் பேசப்பட்ட படைப்பு. அதுவுமில்லாமல் நாடகம் என கலைத்துறையில் தீவிரமாக இயங்கியவ்ரும்கூட. முன்னேற்றப் பதிப்பகமும், ராதுகாவிலிருந்து பெருமளவு இறக்குமதியான ருஷ்ய செவ்விலக்கியத்தின் செல்வாக்கிற்கு ஈடான – குறிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு கொடையளித்தவர் ஏ.வி.தனுஷ்கோடி. சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனிலிருந்து இணைந்து செயல்பட்ட ஜி.கிருஷ்ணமூர்த்தியின் நண்பராக இருந்திருக்கிறார்.
பெரும் எழுத்தாளர்கள் யாருமே ஒரு வரி எழுதாத நிலையில், கௌதம சித்தார்த்தன் எழுதிய குறிப்புகளிலிருந்துதான் இவர் இறந்துபோனதை அறிய நேர்ந்தது. வண்ணநிலவன் போன்றவர்கள் இவருடைய நூல் குறித்து முன்பு எழுதியிருந்ததாக படித்த நினைவு. எல்லோருடனும் தங்களுக்கு முன் அறிமுகம் இருந்திருக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும், மொழிபெயர்ப்பு இலக்கியம் என் கர்மபூமி என்று நான் இன்று வந்து நிற்பதற்கு ஏதோ ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பு படித்த ஏ.வி.தனுஷ்கோடியும் ஒரு காரணம்.
எளிய வாசகனான எனக்கு அவர் முக்கியமானவராக தோன்றுகிறாரோ என்னமோ, ஆனால் அந்த 80களின் பிற்பாதி, 90களின் முற்பாதியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் பலரும் அவரை மறந்துவிட்டிருப்பது வேதனையாக இருந்தது. அது போக ஏ.வி.தனுஷ்கோடியின் முகநூலில் வெறுமனே சமஸ்–சும், வெங்கடேஷ் சக்ரவர்த்தி மட்டுமே நண்பர்களாக இருந்ததும் எனக்கு வியப்பை அளித்தது.
உண்மையிலேயே தங்களுக்கு இந்த இறப்புச் செய்தி கிடைக்கவில்லை என்றே மனம் இன்னமும் நம்புகிறது. முடிந்தால் பதில் எழுதவும்.
நன்றி
கொள்ளு நதீம்
அன்புள்ள கொள்ளுநதீம்,
எனக்குச் செய்தி தெரியவில்லை. விசாரணை அவருடைய மொழியாக்கத்தை பார்த்திருக்கிறேன்.
ஜெ ஏ.வி.தனுஷ்கோடி – கௌதமசித்தார்த்தன் கட்டுரை 1 ஏ.வி.தனுஷ்கோடி – கௌதமசித்தார்த்தன் கட்டுரை2
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



