Jeyamohan's Blog, page 714
September 17, 2022
சாரு கடிதங்கள்
Subhan Peer Mohammedஅன்பின் ஜெ!
இன்று சாரு தன் வலைதளத்தில் விஷ்ணுபுர விருது பற்றிய கடிதங்கள் “குகை வாழ்க்கை” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அதில்
’ எனக்கு எப்போதுமே உற்சாகம்தான். டிசம்பர் 18 அன்று ஒரு பெண், “உங்களுக்கு என் ஆயுளில் பாதியைத் தருகிறேன்” என்றாள். இப்போது சமீபத்தில் ஒரு பெண் “பகவதி அம்மனிடம் வேண்டுதல் செய்தேன்” என்கிறார். இதை விட வேறென்ன வேண்டும்?
என்றொரு வரி வருகிறது. டிசம்பர் 18 அன்று விழா என்பதாக பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கமாக கடைசி வாரம் தானே நம் விருது விழா நிகழ்ச்சி இருக்கும். அதுவும் அதிகாரப்பூர்வமாக தாங்கள் விழா தேதி குறித்து எதுவும் அறிவிக்கவில்லையே. ஒருவேளை சாருவிடம் தாங்கள் உத்தேசமாக கூறியதைத்தான் அவருடைய வாசகர் இந்த டிசம்பர் 18 என்று கூருகிறாரா என்பது தெரியவில்லை.
எதற்கும் இருக்கட்டுமே என்று 17-18 & 24-25 டிசம்பர் கோவையில் இருக்கும்படி என் ரயில் பயணத்தை போட்டுக் கொள்கிறேன். ஆனால் எல்லோருக்கும் இந்த luxury வாய்க்காது. சிலர் விமானத்திலும், சிலர் ரயிலின் மிக நீண்ட பயணத்திலும் வரக் கூடியவர்கள், அவர்கள் அனைவரும் உரிய ஏற்பாட்டை செய்துகொள்ள விழா தேதிகள் முடிவாவது அவசியம்.
இதெல்லாம் தங்களுக்கும் முன்கூட்டியே அனுமானிக்க முடியுமென்றாலும் விஷ்ணுபுரம் என்பதில் என் சொந்த உணர்வு என்ற எண்ணம் உருவாகிறது. அதனால் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.
கொள்ளு நதீம்
அன்புள்ள கொள்ளு நதீம்,
விழாத்தேதி இன்னும் முடிவாகவில்லை. தெரியுமே, நாங்கள் சிக்கனமாகவே விழாவை நடத்துவோம் – ஆனால் முடிந்தவரை கிராண்ட் ஆகவும் நடத்துவோம். அதற்கு உகக்கவே இடம் பதிவுசெய்யப்படும்.
இம்முறை முன்னரே விழாத்தேதிகள் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது இலக்கியத்தின் எல்லைகளைக் காட்டுவது என நினைக்கிறேன். இலக்கியத்திலே எல்லாமே உண்டு. இலக்கியம் இலக்கியமல்ல என்பதுக்கான அளவுகோல் ஒன்றே. தீவிரமாக, தனக்குத்தானே தோன்றியபடி எழுதப்படுவது இலக்கியம். ஒரு பயிற்சியினால், வாசகனின் ரசனைக்காக எழுதப்படுவது. சாரு அவருடைய ஓர் உலகை அப்படி ஒரு தீவிரத்துடன் முன்வைத்துவரும் எழுத்தாளர். அவர் இங்கே உள்ள எல்லாவற்றுக்கும் வெளியே ஒரு உலகைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அந்த உலகைச் சொல்ல அவரை விட்டால் இங்கே ஆளில்லை.
வே.சுந்தர்
தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா
நவம்பர் 25 கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெறும் தமிழ் விக்கி அறிமுக நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக் கிழமை மாலையில் தமிழ் விக்கி (மலேசியா)அறிமுக விழாவில் மலேசிய கல்வியாளர்கள் கலந்துகொள்வார்கள். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பார்வையாளர்களாக அமர்வார்கள். கல்வி பண்பாட்டு ஆய்வுகளில் தகவல்களும் ஆவணங்களும் பெறும் முக்கியத்துவம் பற்றியும் அவற்றை பெறுவதில் உள்ள சவால்கள் பற்றியும் கருத்தரங்கு ஒன்று கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பெறும்.
September 16, 2022
உருவரு
அன்புக்குரிய எழுத்தாளருக்கு,
வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.
செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும்.
மறுபுறமாக இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும் அருவமான இறைவனை பேசுகின்றது.
நான் உங்களிடம் கேட்பது இந்த முரண்பாடு பொதுவெளியில் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது?இது பற்றிய உங்கள் மேலதிக விளக்கங்கள் என்ன?
ந.சிவேந்திரன்
ஞாபகப்படுத்தலுக்கான பின் குறிப்பு:நான் இலங்கைத் தீவுத் தமிழன்.
அன்புள்ள சிவேந்திரன்,
மிக நன்றாக நினைவிருக்கிறது. உங்களுடைய கோபமும் வேகமும்.
நீங்கள் கேட்டது சமீபத்தில் நான் எதிர்கொண்ட அற்புதமான கேள்விகளில் ஒன்று. மிக நுட்பமானது. நன்றி.
இப்படி ஒரு வினா இந்தியச்சூழலில் இருந்து சாதாரணமாக வருவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமாக எனக்குப்படுவது ஒன்றுதான். இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை. மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.
முற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள் மதம்சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள், சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில் அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.
மதம் சார்ந்த கல்வியை அளிப்பதற்கான பொதுவான ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும் நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே அழிந்துவிட்டன.
இச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான். ஒன்று பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி. இரண்டு, ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.
சராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு. ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து நிமிடம் சொல்லக்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில் மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்
ஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மதநம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது மட்டுமே.
இதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம். பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும் முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களிடம் மதம் மற்றும் மரபு சார்ந்த ஓர் அடிப்படைப்புரிதல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்குள்ள கல்விமுறையில் மதக்கல்வி உட்படுத்தப்பட்டிருப்பதே. குறிப்பாக சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதனால் மதத்தின் தத்துவார்த்தமான சாரத்தை தொடுவதற்கான பயிற்சியும் மனநிலையும் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.
உங்கள் வினாவிலேயே தெளிவாக விடையும் உள்ளது. செமிட்டிக் மதங்கள் இறைவனின் உருவத்தை திட்டவட்டமாக வகுத்துவிட்டிருக்கின்றன. ‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’ என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.
இஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் கடவுள் என்பவர் ஓர் ஆளுமை [Personality]. அவர் எப்போதும் ஆண்பாலாகவே குறிப்பிடப்படுகிறார். யூதர்களுக்கு கடவுள் என்பவர் ஒரு முழுமுதல் தந்தை. எல்லாவற்றையும் படைத்து காத்து நிர்வகிப்பவர். கோபம் கொண்ட கண்டிப்பான அதிகாரி.அந்த உருவகத்தின் நீட்சியும் வளர்ச்சியுமே மற்ற செமிட்டிக் மதங்களில் உள்ளது
இம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். செயலாற்றுபவராகவும் எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். கடவுளை நேரில் காண்பதும் அவர் குரலைக் கேட்பதும் எல்லாம் சாத்தியமானதாக இருக்கிறது. இவையெல்லாம் உருவகங்களாகச் சொல்லப்படவில்லை, நேரடியாக வரையறுத்துச் சொல்லப்படுகின்றன.அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.
அப்படியென்றால் அவர்கள் ஏன் உருவ வழிபாட்டை நிராகரிக்கிறார்கள்? அவர்களின் மதங்களின் சாரமாக உள்ளது அவர்களின் மதநிறுவனர் முன்வைக்கும் இறையுருவகம். அதுவே உண்மை பிறிதெல்லாம் பொய் என்ற இறுக்கமே அவர்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே இப்பூமியில் விதவிதமாக இறையனுபவத்தை அடைந்து, அதை பற்பல வடிவிலும் பற்பல கோணங்களிலும் உருவகம் செய்துள்ள அனைத்தையும் அவர்கள் நிராகரிக்கவேண்டியிருக்கிறது.
அந்த நிராகரிப்புக்காகவே அவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய உருவகத்தைத் தவிர உள்ள பிற உருவகங்களை எல்லாம் நிராகரிக்கும் அணுகுமுறைதான் அது.
இதை மிக எளிதில் புரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்டால் போதும். இவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள் என்றால் முற்றிலும் உருவ வழிபாட்டை ஏற்காத ஒரு அத்வைதியை அல்லது தேரவாத பௌத்தரை இவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள். அத்வைதிக்கும் தேரவாதிக்கும் இந்த மதத்தவர் கூறும் இறையுருவகமே ஏற்புடையதல்ல. இறையாற்றலுக்கு இவர்கள் அளிக்கும் வரையறைகளை அறியாமை என்றே அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இந்த மதத்தவர்களால் அவர்கள் மதநிந்தனையாளர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்படுவார்கள். ஆக பிரச்சினை என்பது உருவவழிபாடல்ல. இவர்கள் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட உருவத்தையும் உருவகத்தையும் மற்றவர் ஏற்றுக்கொள்வது மட்டுமே
இந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம் முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம் என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ, வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச் சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.
பிரம்மம் ‘அது’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality] அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல. அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.
வேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை விவரிக்க முயல்கின்றன. பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு. [ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு [அஹம் பிரம்மாஸ்மி]
இந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள் மகாதர்மம் என்கிறார்கள்.
இவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக் காணலாம் என வகுத்தது. உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.
இந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும். இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால் பிரபஞ்ச வழிபாடு எனலாம்
இந்த முரணியக்கம் பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன். எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும். அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.
அதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்
ஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.
ஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.
May 28, 2012 முதற்பிரசுரம்
முந்தைய கட்டுரைகள்
இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்
கடவுள்நம்பிக்கை உண்டா?
உலகெலாம்
ஞானியாரடிகள்
மேலைநாட்டு சிந்தனை மரபில் நாம் கற்றுக்கொண்டேயாகவேண்டிய ஒரு முதன்மைப் பண்பு அங்கே சிந்தனைகளின் அடிப்படைகளை உருவாக்கிய அறிஞர்கள் மேலும் மேலும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது. அவர்களின் தொடர்ச்சியாகவே புதிய சிந்தனைகள் உருவாகும். அது மேலைச்சிந்தனை மரபை ஓர் அறுபடாப் பெருஞ்சரடாக நிலைநிறுத்துகிறது.
நேர்மாறாக தமிழ்ச்சூழலில் எல்லா முன்னோடிகளும் மிக விரைவாக மறக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றி மேலோட்டமான பதிவுகளே உள்ளன. நான்கு வெவ்வேறு நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு ஞானியாரடிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கைப்பதிவு அவ்வகையில் நாம் செய்யவேண்டிய ஒன்றின் தொடக்கம்.
ஞானியார் சுவாமிகள் நாம் இன்று காணும் சைவமரபு இவ்வண்ணம் இந்நூற்றாண்டில் உருவாகிவரக் காரணமானவர்
ஞானியாரடிகள்
ஞானியார் அடிகள் – தமிழ் விக்கி
அஷேரா- மறக்க நினைப்பவை
எதை மறந்து வாழலாமென்று நினைக்கிறோமோ, எது நடந்தது என்று தெரிந்தும் நடக்கவில்லை என்று மறுக்க நினைக்கிறோமோ, அதையே கதையின் களங்கள் மீண்டும் கண்முன் கொண்டுவரும்போது புத்தகத்தை தூக்கி எறியலாம் போலிருந்தது
சயந்தனின் அஷேரா நாவல்சில முகங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
வெந்து தணிந்தது காடு படத்துக்கு வாழ்த்துக்கள். மேலும் அதிக திரையரங்குகள் கூட்டப்பட்டு மாபெரும் வெற்றி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிகளில் ஒன்று. தெற்கே மிகச்சிறிய ஊர்களிலெல்லாம் படம் இன்றுமுதல் தொடங்கப்பட்டிருக்கிறது. சிம்புவுக்கு தெற்கத்திச்சீமையில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது இந்தப்படம். சிம்புவுக்கு இவ்வளவு பெரிய டபுள் டிஜிட் தாண்டிய ஓப்ப்பனிங் இருக்கும் என்று படம் நிரூபித்துள்ளது. தமிழகத்துக்கு வெளியேயும் பெரிய வெற்றி. இது நீடிக்கவேண்டும்.
படத்துறையில் இருப்பவன் என்பதனால் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். படத்தில் சிம்பு சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அதேஅளவுக்கு சிறப்பாக பலர் நடித்துள்ளனர். இரண்டுபேரை குறிப்பாகச் சொல்லவேண்டும். இசக்கியாக நடித்தவர், மாசாணமாக நடித்த பத்மன்.
இரு கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. அவர்களின் பெயர்கள் வெளியே வரவேண்டும். அவர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து முகங்கள் பரிட்சயமாகவேண்டும். அதுதான் மலையாளத்தில் நடக்கிறது. ஹீரோவை மட்டுமே வைத்து படங்களைப் பார்க்ககூடாது.
ராவுத்தராக நடித்த ஜாஃபர், சரவணனாக நடித்த அப்புக்குட்டி இருவருமே ஏற்கனவே பெயர்பெற்றவர்கள். அவர்களையும் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. படத்தை ஒரு கணமும் சலிப்பில்லாமல் கொண்டுசெல்ல உதவியவர்கள் இந்த சிறிய கதைபாத்திரங்கள். விமர்சகர்கள் இவர்களைச் சுட்டிக்காட்டுவதில்லை. படத்தின் வெற்றிக்கு இவர்கள் முக்கியமான காரணம். அதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதினேன்.
சரவணப்பெருமாள்
சாரு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இன்றைக்கு இதை பொதுவெளியில் சொல்லமுடியாத நிலை. இங்கே நம் இலக்கியச் சூழலில் எல்லாமே பொலிட்டிக்கலில் கரெக்ட் ஆகவே இருந்தாகவேண்டும். இல்லை என்றால் வசைதான். அப்படி எல்லாருமே பொலிடிக்கலி கரெக்ட் ஆக வாழும் ஒரு உலகம் எங்கே உள்ளது என்று கேட்டால் பதில் கிடையாது. நான் மாற்றுத்திறனாளி. இங்கே இலக்கியச் சூழலில் மாற்றுத்திறனாளி பற்றி எவராவது ஏதாவது சொன்னால் அடிக்கப்பாய்கிறார்கள். எல்லாருமே மனிதாபிமானிகள். ஆனால் நேர்வாழ்க்கையில் அந்த மனிதாபிமானத்தை எங்கேயுமே பார்க்கமுடியாது.
சாருவிடம் நான் பார்த்ததே சுதந்திரம்தான். சாரு என்றாலே சுதந்திரம்தான். அயோக்கியனாகவோ அற்பனாகவோ எப்படிவேண்டுமென்றாலும் இருப்பேன், என் இஷ்டம் அதுன்னு ஒருவன் சொல்லிவிட்டால் அதன்பிறகு சுதந்திரம்தான். எனக்கு அவருடைய நாவல்களில் அந்தச் சுதந்திரம்தான் பிடித்திருந்தது. சீரோ டிகிரியை விட எக்ஸைல் சிறப்பான நாவல். எக்ஸைல் நாவலில் நாம் அத்தனைபேரும் எத்தனை அபத்தமான அற்பத்தனமான வாழ்க்கையிலே நீடிக்கிறோம் என்று சொல்லியிருப்பார். அதில் ஒரு பொம்புளை ஆபீசர் வருவார். சான்ஸே இல்லை.
சூர்யா
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாருவின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்ன என்று பார்த்தால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சின்ன மிடில்கிளாஸ் உலகம் மிடில்கிளாஸ் சென்சிபிலிட்டி மிடில்கிளாஸ் அரசியலுக்கு வெளியே எவ்ளவு பெரிய கிரியேட்டிவான உலகம் இருக்கிறது என்று காட்டியதுதான். இலக்கியம் என்றால் நல்ல விஷயங்களைச் சொல்லணும், நல்ல மனுஷன் என்றால் ஒழுக்கமான பக்திமான் என்றெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்த சூழலில் சாரு எல்லாவற்றையும் உடைத்து இன்னொரு உலகை காட்டியிருக்கிறார். எனக்கெல்லாம் அவர் காட்டியதுதான் நவீன உலகம்.
செந்தில்குமார் ராஜ்
September 15, 2022
கி.ரா.விருது வழங்கும் விழா
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா விருது.
விருது பெறுபவர் அ.முத்துலிங்கம்
சூம் செயலியில் விருது வழங்கும் விழா.
நாள். 16- செப்டெம்பர் 2022 மாலை 6 மணி
சிறப்புரை நீதியரசர் ஆர்.மகாதேவன்
வாழ்த்துரைகள். பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் சௌந்தர், நாஞ்சில்நாடன், ஜெயமோகன்
ஏற்புரை: அ.முத்துலிங்கம்
கி.ரா.முழுத்தொகுதிகளும், முன்விலைத்திட்டம்
வணக்கம்.
கி. ரா நூற்றாண்டு விழா நாளில் அவரது எழுத்துக்களை ஒன்பது தொகுதிகளாக கொண்டு வர இருப்பதன் முன் பதிவு திட்டம் குறித்து வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இது “அன்னம் – அகரம்” பதிப்புகத்தின் முன்னெடுப்பு.
நன்றி.
அன்புடன்,
துரை. அறிவழகன்,
காரைக்குடி.
15-09-2022.
அலைபேசி : 7339279026
கி.ரா. நூற்றாண்டு விழாவும் ஒன்பது தொகுதிகளும்
நம் கால எழுத்து நாயகனான கி.ராவின் நூற்றாண்டு விழா நாளில் தமிழ் வாசகர்களுக்கும் கி.ராவுக்கும் நன்றியறிதலை வெளிப்படுத்தும் வகையில்
அன்னம் – அகரம் அவருடைய முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரையான அனைத்தையும் ஒன்பது தொகுதிகளாகக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
கி.ராவுடன் அன்னம் – அகரம் கொண்டிருக்கும் நீண்ட நெடிய உறவுக்கான நன்றியுணர்வின் அடையாளமாக இத்தொகுதிகளை அடக்க விலைக்குத்
தர உத்தேசித்திருக்கிறது.
கி.ராவின் முதல் நூலான ‘வேட்டி’ 1975ஆம் ஆண்டிலும் கடைசி நூலான
‘மிச்சக் கதைகள்’ 2021ஆம் ஆண்டிலும் அன்னம் வெளியீடாக வந்தன. இடைப்பட்ட 46 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட கி.ரா. நூல்களை
அன்னம் – அகரம் வெளியிட்டிருக்கிறது. இப்போது இவை அனைத்தும்
9 பிரிவுகளில் தொகுதிகளாகின்றன.. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சி.மோகன், மாரீஸ், துரை.அறிவழகன், கதிர் மீரா ஆகியோர் பதிப்புக் குழுவினராக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதிகள் விபரம்:
தொகுதி ஒன்று: நாவல்கள்
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் – முதல் பாகம்,
கோபல்லபுரத்து மக்கள் – இரண்டாம் பாகம், பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர், வேதபுரத்தார்க்கு ஆகிய ஆறு நாவல்கள் கொண்டது.
தொகுதி இரண்டு: சிறுகதைகள், குறுநாவல்கள்
தொகுதி மூன்று: கட்டுரைத் தொடர்கள்
இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எழுதிய தொடர்களான
கரிசல் காட்டுக் கடுதாசி, மக்கள் தமிழ் வாழ்க,
கி.ரா. பக்கங்கள், மனுசங்க…, பெண் கதை எனும் பெருங்கதை, கதை சொல்லி – பதிவுகள் ஆகியவை அடங்கியது.
தொகுதி நான்கு: தொகுப்புக் கட்டுரைகள்
அன்னப்பறவை, நண்பர்களோடு நான்,
சங்கீத நினைவலைகள், நேர்காணல்கள் ஆகிய
தொகுப்புக் கட்டுரைகள் கொண்டது.
தொகுதி ஐந்து: தனிக் கட்டுரைகள்
தொகுதி ஆறு: நாட்டுப்புறக் கதைகள் – I
தொகுதி ஏழு: நாட்டுப்புறக் கதைகள் – II
தொகுதி எட்டு: கடிதங்கள்
தொகுதி ஒன்பது: வழக்குச் சொல்லகராதி
இந்த ஒன்பது தொகுதிகளும் சேர்ந்து சுமார் 6500 பக்கங்கள் வரும்.
வெளியீடு பற்றிய சில குறிப்புகள்:
ஒன்பது தொகுதிகளுக்குமான தொகுப்பு மற்றும் வடிவமைப்புப் பணிகள்அக்டோபர் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு, நவம்பரில் புத்தகங்களின் அச்சுப் பணிகள் தொடங்கும்.புத்தகங்களின் அச்சுப் பணி தொடங்கும்போது, மொத்த விலை மற்றும் முன்வெளியீட்டுத் திட்ட விலை அறிவிக்கப்படும்.டிசம்பர் மாத இறுதிக்குள், சென்னையில் கி.ரா, எழுத்துகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டு, அந்நிகழ்வில் தொகுதிகள் வெளியிடப்படும்.உயர்தரத் தயாரிப்புடன் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அழகிய அட்டைப் பையில் அவை வழங்கப்படும்.ஆர்வமுள்ள வாசகர்கள் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளலாம். பிரதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க இது உதவும்.
நன்றி.
தொடர்புக்கு:
அன்னம் – அகரம்
மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007
கைபேசி: 75983 06030, 73392 79026
email
annamakaram@gmail.com
வெந்து தணிந்தது காடு, ‘பிரமோ’வும் படமும்
ஜெ,
திரைப்படம் சார்ந்த promotionகள் நேர்காணல்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளீர்கள்… இப்பொழுது, தொடர்ந்து திரைப்படம் சார்ந்த நேர்காணல்கள்… மேடை பேச்சுகள்.
பொன்னியின் செல்வனின் பட்ஜெட் அதை கட்டாயமாக்கலாம்… கூடவே அதன வரலாறு பற்றி பேச வேண்டிய இடம் உங்களுக்கு உள்ளது.
வெந்து தனிந்தது காடு… மீண்டும் அது ஒரு வணிக அம்சங்கள் குறைவான வாழ்வை சொல்லும் கதை எனும்பொழுது அதை எழுத்தாளன் சொல்வது தான் சரியாக இருக்கும்.
இந்த காரணிகளை புரிந்துக்கொள்கிறேன்… அனால்… இவற்றை தாண்டி… பொது மேடைகளில் தோன்றுவது… மக்களுக்கு பரிச்சயமான முகமாக மாறுவது குறித்த உங்கள் பார்வையில்… எண்ணங்களில் ஏதேனும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளதா என அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.
பிகு: இந்த promotion… promo என்பதற்கு ஒரு நல்ல தமிழ் வார்த்தை கூறுங்களேன்… நேரடியாக ஊக்குவித்தல் என்ற சொல் இருந்தாலும், பரப்புரை என்பதற்கு அருகே வரும் சொல் தானே சரியாக வரும்?
அன்புடன்
ரியாஸ்
அன்புள்ள ரியாஸ்,
நான் திரைப்படத்தை ஒரு தொழிலாகவே பார்க்கிறேன். அதில் என் பணியை மிக விரைவாக, மிகநிறைவாக செய்து அளிப்பவன் என இயக்குநர்களிடையே அறியப்படுகிறேன். ஆகவே பதினெட்டு ஆண்டுகளாக அந்தத் தொழில் சிறப்பாகச் செல்கிறது. அதற்கு மேல் எந்தப்படத்திலும் நான் ஈடுபாடு கொள்வதில்லை.
என் படங்களில் வெளியீட்டுவிழா, வெற்றிவிழாக்களில் நான் கலந்துகொண்டதில்லை. படங்களின் வெற்றி பற்றிய செய்திகளை பொதுவாக அதிகம் கருத்தில் கொண்டதுமில்லை. திட்டமிட்டே அந்த மனநிலையை கைக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இலக்கிய எழுத்தாளன். என் ஆர்வங்கள், தேடல்கள் வேறு. என் பணிக்களம் முற்றிலும் வேறொன்று.
சர்க்கார் மற்றும் 2.0 வெளியான நாட்களில் பயணங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் இருந்திருக்கிறேன். நெல்லை கட்டணக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு மிக அருகே சர்க்கார் படம் ஓடும் அரங்கு. அங்கே வாசலில் பெரும்கூட்டம், ரகளை. அப்போதுகூட நான் சர்க்கார் பார்த்திருக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை எல்லா படங்களும் இயக்குநரின் ஆக்கங்கள். வெற்றிதோல்வி அவர்களுக்குரியது. நான் பொறுப்பேற்க முடியாது. நான் இயக்குநர் கோருவதை அளிப்பவன் மட்டுமே. இயக்குநர் என்னிடமிருந்து பெறுவது எதுவோ அதுவே சினிமாவில் இருக்கும். அதில் நான் எவ்வகையிலும் தலையிடுவதில்லை. பல இயக்குநர்கள் நான் எழுதியவற்றில் இருந்து மிகமிகக்குறைவாகவே எடுத்துக்கொள்வார்கள், நான் மறுப்பு தெரிவித்ததே இல்லை. அது அவர்களின் படம், அவ்வளவுதான்.
நான் இதுவரை எழுதிய படங்களில் என் எழுத்துக்கு மிகஅணுக்கமாக அமைந்த படம் வெந்து தணிந்தது காடு. ஆகவே அதில் என் ஈடுபாடு சற்று மிகுதி. அதைவிட கௌதம் மேனன் வெல்லவேண்டும் என நான் விரும்பினேன். இனிய மனிதர், மிக அணுக்கமாக நான் உணரும் ஒருவர், முந்தைய படங்களின் சிக்கல்களால் பலவகை நெருக்கடியில் சிக்கி இருப்பவர். ஒரு வெற்றி அவரை மீட்டுவிடும் என நினைத்தேன்.
அவருடைய அந்த பதைப்பை அருகிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சினிமாக்களை பலர் பலவகையாக பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அது கேளிக்கை. சிலர் அதிலும் கசப்பையும் காழ்ப்பையும் கலந்து, படம் எடுக்கப்படும்போதே அது தோல்வி அடையவேண்டும் என எழுதுகிறார்கள். ஆனால் எனக்கு அது சிலருடைய வாழ்க்கை. அவர்களின் தவிப்பையும் வேண்டுதலையும் உணர்கிறேன். ஆகவே எந்தப்படமும் வெல்லவேண்டும் என்றே நான் வேண்டிக்கொள்வேன்.
அதிலும் கௌதம் இனிய நண்பர். எந்த எதிர்மறைக்கூறுகளும் இல்லாதவர். சினிமா என்னும் மீடியம் மீது அர்ப்பணிப்பு கொண்டவர். அதிலும் என் நண்பர் மணி ரத்னத்தை குருவாக நினைப்பவர். அத்தனைச் சிக்கல்களிலும் சினிமாவை பயின்றுகொண்டே இருப்பவர். இந்தப்படத்தில் அவருடைய திரைமொழியே மாறியிருப்பதை எவரும் காணலாம்.
ஆகவே இந்தப்படம் வென்றே ஆகவேண்டும் என முதல்முறையாக அத்தனை விரும்பினேன். வெற்றிச்செய்தி காலை எட்டரைக்கு பல்வேறு திரையரங்குகள், வினியோகஸ்தர்களிடமிருந்து வந்தபோது முதல் எண்ணமே “கௌதம், உங்கள் வெற்றி. உங்கள் விடுதலை” என்றுதான்.
அத்துடன் படத்தில் சிம்புவை பார்த்தேன். என் மகனின் வயதுதான். ஆனால் உடலை உருக்கி, உழைத்து, தன்னை நிறுவிக்கொண்டிருக்கும் அந்த அர்ப்பணிப்பு என்னை பிரமிக்கச் செய்தது. படம் முழுக்கக் கொண்டுவந்திருக்கும் சீரான உடல்மொழியும், அந்த உடல்மொழி முத்துவின் அகம் மாற மாற அதுவும் மாறிக்கொண்டிருப்பதும் என்னை பெரிதும் கவர்ந்தன. நீங்கள் படம் பாருங்கள், தொடக்கத்தில் வரும் அந்த முத்துதானா கடைசியில் வரும் அந்த முத்து என. அந்த அர்ப்பணிப்புக்கு ஏற்பு அமைந்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் வந்தது.
’சார் உங்லி கேங்’ என புகழ்பெற்ற ஒரு கிரிமினல் கூட்டத்தின் கதை இது. ‘நான்குவிரல் கூட்டம்’. இரண்டாம்பகுதியின் கதை அதுதான். ஒவ்வொரு படுகொலைக்குப்பின்பும் நான்குவிரலால் ரத்தத்தை தொட்டு சுவரில் தீற்றிவிட்டுச் செல்வார்கள். இந்தப்படத்திலேயே கடைசியில் பார்க்கலாம். ஆனால் படத்தின் (ரஹ்மான் இசை இல்லாத) வடிவை கடைசியாகப் பார்க்கும்போது முத்துவை நினைத்து ஒரு பெருமூச்சுதான் வந்தது.
குறிப்பாக படத்தின் மௌனமான கிளைமாக்ஸை. (கடைசிச் சவரக்கடைக் காட்சி) ஓரிரு நிமிடம் கூட நீளாத அதுதான் உண்மையில் இந்த சினிமாவில் முதலில் எழுதப்பட்ட காட்சி. அதிலிருந்து பின்னகர்ந்து வந்துதான் முழுத் திரைக்கதையும் எழுதப்பட்டது. அந்தக் காட்சியில் முத்துவை எழுதும்போது அவன் ஒரு வீரன் என நினைத்து எழுதினேன். சிம்புவின் நடிப்பு உண்மையில் முத்து வென்றானா, அல்லது அது அவனுடைய நரகமா என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளத்தை அழுத்தியது.
எப்படியோ உள்ளே சென்றுவிட்டேன். படம் எடுக்கத் தொடங்கும்போது முழுக்கமுழுக்க யதார்த்தமான, மிகையே இல்லாத உலகமாக இருக்கவேண்டும் என நினைத்தோம். நடுவே மீண்டும் கோவிட். ஓராண்டு தாமதம். இந்த இடைவெளியில் நான்கு பெரும்படங்கள் வந்தன. ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப், புஷ்பா, விக்ரம். அவை கதைசொல்லலில் ஒரு பாணியை நிறுவின. மிகமிக வேகமாக மின்னிச்செல்லும் காட்சிகள். எங்கும் எதையும் நிறுவாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள், மிகப்பயங்கரமான சண்டைக்காட்சிகள்.
அதெல்லாம் இந்தப்படத்தில் இல்லை. அதை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையலாம். ஆகவே வேண்டுமென்றே இந்தப்படத்தை கொஞ்சம் மெதுவாகச் செல்லும் படம் என்றே சொல்லி நிறுவினோம். உண்மையில் இது வேகமாக செல்லும் திரைக்கதை கொண்ட படம். எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. ஆனால் விக்ரம் பாணி அல்ல. கண்மண் தெரியாத பரபரப்பு இருக்காது, சீரான ஒற்றை வேகம் இருக்கும். அதற்கும் நான் காணொளிகளில் வந்து சொல்லவேண்டியிருந்தது, ஏனென்றால் நான் அதை எழுதியவன்.
இன்று படத்தைப் பார்க்கையில் இது பெண்களுக்கான படம் என்றும் படுகிறது. சிம்பு மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இனி அதைப்பற்றிப் பேசவேண்டியதில்லை. ஆனால் இரண்டு காட்சிகளில் சித்தி இட்னானி மிகமிக நெருக்கமான பெண்ணாக வந்து நம்மருகே அமர்ந்திருக்கிறார். அத்தனை இயல்பான நடிப்பு.
இப்போது இந்தப்படம் ஒரு ‘பிளாக்பஸ்டர்’ என்று ஆகிவிட்டது. மிகப்பெரிய தொடக்கத்திறப்பு கொண்ட இந்தவகைப் படங்கள் நல்ல எதிர்வினைகளையும் பெற்றுவிட்டால் நேரடியாக நூறுகோடி கிளப் நோக்கித்தான் செல்லும். ஆகவே மானசீகமாக இதிலிருந்து விலகிக் கொள்கிறேன். இனி இது என்னுடையதல்ல. இது சிம்பு – கௌதம் படம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஜெ
பிகு: பரப்புரை சரியான சொல் அல்ல. இதில் உரை மட்டும் இல்லை. காணொளிகள் எல்லாமே உள்ளன.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


