Jeyamohan's Blog, page 666

December 9, 2022

நான்தான் ஔரங்கசீப் – ஒரு பின்நவீனத்துவ காவியம் போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

இந்தத் தலைப்பு ஒரு முரண்.

காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை தரிசனத்தோடு வருகிறவை. பின் நவீனத்துவம் அறிவியல், பண்பாடு, கலை, பொருளாதாரம், மானிடவியல், தத்துவம் என்று எல்லாவற்றிலும் ஒற்றையாய் வைக்கப்படும் எல்லா தரிசனங்களையும் மறுப்பது. மார்க்சியத்தையும், நவீன உளவியலையும், நவீன மருத்துவத்தை நம் உடல் மீதான அறிவின் ஒரே விளக்கமாகவும் ஏற்றுக்கொள்ள மறுப்பது. சரித்திரம் ஒரு நீளமான படிப்படியாய் நிலை நிலையாய்த் தாவி வரும் ஒற்றைக்கோடு என்பதை மறுப்பது.

சாரு நிவேதிதா தமிழில் பின் நவீனத்துவம் என்ற இந்த பலகுரல் போக்கின் எல்லா அமசங்களையும் பிரதிபலிக்கும் ஒரே எழுத்தாளர். அவருடன் பின் நவீனத்துவ எழுத்தாளராக அறியப்பட்ட பலரும் பின்னர் ஏதோ ஒரு அரசியல் பெரும்போக்கின் முகவர்களாக மாறிவிட்ட நிலையில் சாரு மட்டுமே இன்றுவரை அதன் ஒரே குரலாக எஞ்சுகிறார்.

நான் மேற்கண்ட இரண்டு பத்திகளிலேயே பல முரண்களைச் சேர்த்துக் கட்டியிருக்கிறேன். பின் நவீனத்துவம் மரபை மறுப்பது. meta narratives எனப்படும் பெருங்கதையாடல்களை மறுப்பது. அதை ஒரு மரபாய் வகுப்பது ஒரு வகையில் அதனை ரத்து செய்வது. ஆனால் பின் நவீனத்துவத்தில் இந்த முரண் எப்போதும் உண்டு. சாருவின் படைப்புகளிலும் அது உண்டு. அதீதத் தன்னிலை கொண்ட மனிதர்களை சாருவின் படைப்புலகில் தொடர்ந்து காணலாம். இவர்கள் தங்கள் காலத்தில் சாலையில் செல்லும் எந்தப் பேரணியிலும் கலந்துகொள்ளாத உதிரிகள். ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து உற்று நோக்கும் நுட்ப உணர்வு உடையவர்கள். இவர்கள் கும்பலின் ஆவேசத்தை அதன் பாசிசத்தன்மையைப் பார்த்திருப்பவர்கள். புதியதொரு கும்பல் புதியதொரு கூட்டுப் படுகொலையைத்தான் செய்யப்போகிறது என்பதை உணர்ந்தவர்கள். பெரும்பாலான மக்களின் வரலாற்று மறதி கொண்டவர்கள் அல்ல. ஆகவே தொடர்ந்து அவர்களால் லும்பன்கள் என்று வசை பாடப் படுகிறவர்கள். மதங்களை பதிலீடு செய்து வந்த மார்க்சியம், பிராய்டியம், டார்வினிசம், வர்க்க அரசியல், சாதி அரசியல், நிற அரசியல், தேசிய அரசியல், மொழி அரசியல், பெண்ணியம் போன்ற கதையாடல்களும் பெருங்கதையாடல்களாக மாறி தனி மனிதர்களின் மானுடத்தின் கழுத்தை நெறிப்பவையாக மாறிவிடும் அசுர சக்தி கொண்டவை என்பதை உணர்ந்தவர்கள். பழைய பூசாரிகள் மீது மட்டுமல்ல இவர்கள் இந்த புதிய கோடாங்கிகள் மீதும் விலக்கமும் கேலியும் கொண்டவர்கள். விடுதலை என்கிற முத்திரையிட்டு வரும் இந்தப் புதிய சங்கிலிகள் எதிலும் மாட்டிக்கொள்ள மறுப்பவர்கள். இதனாலேயே புதிய பொன்னுலகங்களை உருக்கியடித்துப் பிரதிமை செய்து தரும் தட்டான்களால் ஆழமாய் வெறுக்கப்படுகிறவர்கள். பின் முதலாளித்துவத்தின் கள்ளப்பிள்ளைகள் என்று அடையாளமிடப்படுகிறவர்கள் (ஃப்ரெட்ரிக் ஜேம்சன்)

மதங்களும் இசங்களும் தெய்வங்களும் புரட்சிக்காரர்களும் மகாத்மாக்களும் களிமண் கால்களொடிந்து வீழ்ந்தபோது சமகால மனிதனுக்கு தற்கொலை செய்துகொள்வது அல்லது தன் கையில் ஒரு லாட்டரி போல் கிடைத்திருக்கும் உடலைக் கொண்டாடுவது என்ற இரண்டு பாதைகளே உள்ளன என்று உணர்ந்தவர்கள்.

சாருவை அவரது படைப்புலகை இந்தப் பாதையற்ற பாதையில் செல்லாமல் பொருத்திப் பார்க்காமல் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எந்தவொரு லட்சியவாதமும் மயக்காத ஆளுமை அவருடையது. அதனால்தான் தனிப்பட்ட தன்னைக் குறித்த எழுத்துகளில் தொடர்ந்து ஒரு அதிபோகவாதியாக சொல்லிக்கொள்கிற அதே நேரத்தில் துறவியாகவும் அவர் முன்வைக்கிறார். மூளைச் சோர்வு கொண்டோர்க்கு இந்த இசங்கள் தருகிற ஆசுவாசங்கள் தேவைப்படக்கூடும். தனக்குத் தேவை இல்லை என்று அவர் தொடர்ந்து தனது எழுத்துகள் மூலம் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார்.

சாருவைப் புரிந்துகொள்கிற சாவிகள் அவரது படைப்புகளிலேயே தரப்பட்டுள்ளன. அவரது முதல் நாவலான எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் நூலிலேயே அதன் பின்பு அவர் வாழப்போகும் வாழ்க்கைக்கான எழுதப்போகும் நூற்றுக்கும் அதிகமான நூல்களுக்கான விரிவான விளக்கங்கள் உள்ளன. இந்த தீர்க்கதரிசனம் என்று நாம் தேய்ழக்காக்கி வைத்திருக்கும் முன்கூறும் தன்மை இன்று அதைத் திரும்ப வாசிக்கையில் வியக்கத்தக்கது. பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் பின்னால் நிகழ்ந்த பல கலாச்சார மாற்றங்களை அவர் முன் உணர்ந்து சொல்லியிருக்கிறார். அவர் சமகால எழுத்தாளர் அல்ல. காலத்தில் முன் நகர்ந்து செல்லும் எழுத்தாளர். அறிவியல் புனைகதையாசிரியர்களில் மட்டுமே நாம் இதுபோன்ற மாதிரிகளைக் காணலாம். அதுவும் தமிழில் அல்ல.

விதம் விதமாக தலைமயிரை வெட்டிக்கொண்டு பேன்சி பனியனைப் போட்டுக்கொண்டு திரிகிற dandyist ஆக சாரு முதல் நாவலிலேயே தன்னை வெளிக்காட்டிக்கொண்டி விடுகிறார். ஜிப்பாவும் கதரும் முரட்டுப் பருத்தியாடைகளும் வேண்டுமென்றே ஆலைத் தொழிலாளிகள் போல உடுத்திக்கொண்டு காட்டிக்கொண்டு திரிந்த இந்திய அறிவுஜீவி வர்க்கத்தின் இரட்டை வேடத்தின் மீதான விமர்சனமாகவும் தன்னை தன்னுடலை வியந்து மகிழ்ந்துகொள்ளும் ஒரு செயலாகவும் அது இருக்கிறது. இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஸ்டாலினியக் கொடுமைகளுக்குப் பிறகு உலகு மிகப்பெரிய ஆன்மீக வறுமைக்குள் வீழ்ந்தது. சாருவின் முதல் நாவல் எழுதப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே சோவியத் யூனியன் உடைந்து சிதறியது என்பதை நினைவில் கொண்டால் சாருவின் படைப்புமனதின் பின்புலம் பற்றிய ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கும். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த சுராவின் ஜேஜே சில குறிப்புகள் நாவல் ஏன் ஒரு போலி நாவல் என்று சாருவால் கடுமையாகத் தாக்கப்பட்டது என்பதும் விளங்கும். சுந்தரராமசாமியின் நாவல் ஸ்டாலினிய கொடுமைகள், கம்யூனிசத்தின் முற்றதிகார இச்சை போன்றவற்றை விமர்சித்தாலும் சுதந்திர மானுடவாதம் என்கிற பெயரில் உண்மையை நேரிடாமல் கொழகொழத்துப் போய்விடுகிறது என்று சாரு நினைத்ததற்கான அடையாளங்கள் அவரது முதல் நாவலிலேயே தெரிகிறது. சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த அகரீதியாக தட்டையான தகழியின் தோட்டியின் மகனுக்கு எதிராக எதிராக சாரு தன் படைப்புகளில் நிறைய தோட்டியின்(தொம்பர்) மகன்களை நிறுத்தினார். ஒருவகையில் பார்த்தால் இந்த இடதுசாரிகளும் லிபரல் ஹூயுமனிஸ்டுகளும்தான் சோஷலிசம், மானுடவாதம் போன்ற பேன்சி பனியன்களைப் போட்டுக்கொண்டு திரிகிறவர்கள் என்பது போன்ற விமர்சனம் சாருவின் படைப்புகளில் உட்கிடையாய் உண்டு. இங்கு பேன்சி பனியன் என்பது அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் லட்சியவாதப் போக்குகளைக் குறிக்கிறது. ஓஷோ காந்தியை எதிர்கொண்ட அதே பாணியில் தான் சாரு சுந்தரராமசாமியையும் அவர் வழிவந்த ஜெயமோகன் உட்பட பிற எழுத்தாளர்களையும் நேரிட்டார். இது ஒரு கருத்துப் போர்முனை. நாம் இதில் ஏதோ ஒரு தரப்புடன் இணக்கம்கொண்டு ஏதோ ஒரு தரப்புடன் மாறுபடலாம். ஆனால் நாம் இவற்றை தனி மனிதப் பூசல்களாக மட்டும் புரிந்துகொண்டால் பல விஷயங்களை இழந்துவிடுவோம்.

மலமள்ளுகிறவனின் பாலியல் விருப்பங்கள் என்னவாயிருக்கும்? என்பது நமக்குத் தேவை இல்லையா? என்பது ஒரு சங்கடமான கேள்வி. நாம் அவனை நமது தர்மகர்த்தா மன நிலையின் ஒரு பகுதியாக பயனாளியாக மட்டும் பார்க்கிறோமோ?

எனக்கு தனிப்பட்ட அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர். அந்த அனுபவங்களை அவர் கவிதைகளாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டு அது நல்ல வரவேற்பைப் பெற்றது. இடதுசாரிகள் அதைக்க் கொண்டாடினர். ஆனால் அவர் அதன்பிறகு அவரது இரண்டாவது புத்தகத்தை எழுதவே இல்லை. நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அது பற்றிக் கேட்பதுண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். ‘நான் என் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலாக எழுதிவிட்டேன். ஆனால் அதை வெளியிட முடியாது. அதில் என் பாலியல் விவகாரங்களும் காதல் விவகாரங்களும் வருகின்றன. இவர்கள் என் துயரங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்’

இது இன்னொருவிதமான அகமழிப்பு, அடையாளமழிப்பு என்பதை சாரு தன் படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்.

சாருவின் படைப்புலகை முதல் முதலாக நேரிடுகிறவர்க்கு ஏற்படுகிற உணர்ச்சி பெரும்பாலும் ஒரு disorientation. திசையழிந்த திகைப்பு. மரபான கதைகளை, கதை சொல்லும் முறைகளைக் கேட்டு வாசித்து வளர்ந்தவர்க்கு ஒரு ஒவ்வாமை. ஏதோ ஏமாற்றப்பட்டாற் போன்ற உணர்வு. எனக்கும் முதலில் அதுவே ஏற்பட்டது. நான் அப்போது மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். போகிற வழியில் கார்முகில் பதிப்பகம் மற்றும் வாடகை நூலகம் என்கிற ஒன்று இருந்தது. அதன் காட்சிப் பெட்டகத்தில் எக்ஸிச்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் நூலைப் பார்த்தேன். அதன் வழக்கத்துக்கு மாறான தலைப்பும் மனித எலும்புக்கூடு ஒன்று இளிக்கும் அட்டைப்படமும் என்னை ஈர்த்து அதைப் பெற்றுப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு முதலில் ஏற்பட்ட உணர்வு இந்த திசையழிந்த உணர்வு. கொஞ்சம் அருவருப்பு. கொஞ்சம் கிளர்ச்சி. பிறகு விவரிக்க முடியாத ஒரு விடுதலை உணர்வு. நான் அதுவரை படித்துக்கொண்டிருந்தவை ஒருபக்கம் இடதுசாரி இலக்கியப் பிரதிகள் எனில் இன்னொருபக்கம் கணையாழி போன்ற ஆச்சாரம் மிக்க பத்திரிகைள். அங்கே சுஜாதாதான் மிகப்பெரிய மீறல்களை நிகழ்த்திக்கொண்டிருந்த எழுத்தாளர். சுஜாதா சாருவின் எழுத்தை ‘நதியில் மிதந்து செல்வது’ என்று வரையறுத்தார்.

அந்த நூலில் பேசப்ப்பட்டவை எல்லாம் எனக்கு அப்போது புரிந்துவிட்டிருந்தது என்று சொன்னால் அது ஒரு பொய்யாக இருக்கும். ஆனால் அந்தப் பிரதி பல விஷயங்களிலிருந்து அதற்கு முன்பு நான் படித்த பல பிரதிகளிலிருந்து என்னை விடுவித்தது என்று நிச்சயமாக சொல்ல முடியும். சாரு தமிழ் இலக்கியத்துக்கு செய்த பணிகளுள் முக்கியமானது இது. பல்வேறு விஷயங்களில் அது செய்துகொண்டிருந்த பாசாங்கை நீக்கியது. இதை சாருவுக்கு முன்பு கரிச்சான் குஞ்சு, தி ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ஜி நாகராஜன் போன்றவர்கள் செய்திருக்கிறார்கள் என்றாலும் சாரு அளவுக்கு வன்மையாக காவியப்பூச்சு இல்லாமல் செய்ததில்லை. ஜி நாகராஜன் வேசிகளைக் காப்பாற்றும் அறத்துக்குள் சிக்கிக்கொள்கிறார் எனில் தி ஜா அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாளுக்கு எல்லா சுதந்திரங்களையும் அனுமதித்துவிட்டு இறுதியில் அவள் பாவங்களை எல்லாம் எரித்து நீறாக்கிப் புடம்போட காசிக்கு அனுப்பிவிடுகிறார். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்தைப் படிக்கிற ஒருவருக்கு ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் நினைவு ஒரு கணமாவது வராமல் இருக்காது. பாவத்தின் சம்பளம் மரணம், காமத்தின் சம்பளம் நோய் என்கிற மரபார்ந்த மனமே இவர்களிடமும் செயல்படுகிறது. ஒப்பிட தஞ்சை பிரகாஷ் மட்டுமே காமத்தைப் பற்றிய பெரிய குற்ற உணர்வு எதுவும் இல்லாதவர்.

நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.

இந்த விடுதலை என்ற சொல்லை இன்னும் சற்றுக் கூர்ந்து பார்க்கலாம். எல்லா மதங்களும் இசங்களும் இந்த விடுதலை என்கிற சொல்லைப் பாவிக்கின்றன. ஒவ்வொன்றும் இந்த விடுதலை என்கிற பதத்துக்கு வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. கிறித்துவம் நமது உடலெனும் பாவச்சிறையிலிருந்து விடுதலையை வாக்களித்து கடவுளின் வலது பாரிசத்தில் ஒரு இடத்தை நீட்டுகிறது எனில் இந்திய மதங்கள் பிறவிச் சுழற்சியிலிருந்து வெளியேற்றத்தை விடுதலையாக முன்வைக்கின்றன. இறந்தபின் உலகங்களை மறுக்கும் மார்க்சியம் போன்ற மதங்கள் வர்க்க விடுதலையை ஒரு மானுட லட்சிய மாதிரியாக முன்வைக்கின்றன. இவை எல்லாமே இந்த விடுதலைக்குப் பகரமாக நமது சுதந்திரத்தைக் கேட்கின்றன என்பது வேடிக்கையானது! பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சமாக முதலில் இந்த மரபார்ந்த விடுதலை குறித்த கோட்பாடுகளிடமிருந்து நம்மை விடுவிப்பது என்பதை நாம் காணலாம். இதைப் புரிந்துகொண்டாலொழிய சாருவினைப் புரிந்துகொள்வது கடினம்.

நம்மில் பெரும்பகுதி இந்த மரபார்ந்த சிந்தனை மரபுகள் தரும் விடுதலை குறித்த விளக்கங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறோம். சிலர் வாழ்நாள் முழுவதும் இருக்கிறோம். அதிலிருந்து சிலர் விடுபடுவதே இல்லை. நானும் அப்படி சில பேன்சி விடுதலைத் திட்டங்களுக்கு வாடிக்கையாளராகவே இருந்தேன். ஆகவே சாருவை எனது அக உலகத்துக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையே அனுமதித்திருந்தேன். ஆனால் எனது இயல்பான மறுபுறம் என்ன நடக்கிறது? என்று அறிகிற ஆர்வம் காரணமாக அவரைப் படித்துக்கொண்டிருந்தேன். அவரது படைப்புகளில் தெரியும் பாலியல் உறவுகள் குறித்த அதிகக் கவனமும் ஒரு காரணம். இது ஒருவகையில் உலகத் திரைப்பட விழாக்களில் வெளியிடப்படும் சிறந்தப்படங்களை அவற்றின் நிர்வாணக் காட்சிகளுக்காக மட்டுமே பார்க்கும் விடலை மன நிலைதான். ஆனால் அவை மிகச்சிறந்த படங்களும் கூட என்று எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. அதீதம் என்றும் ஆபாசம் என்றும் நான் நினைத்தவை வாழ்க்கையின் ஒருபகுதி என்றும் அந்த ஒருபகுதி மானுட வாழ்வின் மிக முக்கியமான பகுதி என்றும் நான் மெல்லப் புரிந்துகொண்டேன். மதங்களின், கோட்பாடுகளின், சித்தாந்தங்களின் முக்கியமான வேலை இந்த உண்மையை மனிதத்திரளிடமிருந்து மறைப்பது என்ற புரிதலுக்கு வந்தேன். நம்முடைய மதம், அரசியல், பண்பாடு எல்லாமே துன்பத்தின் பின் செல்பவவை. துன்பமும் துன்ப நீக்கமுமே இவற்றின் குவிமையங்கள். துன்பத்தில் எண்ணம் குவியக்குவிய அது பெருகிக்கொண்டே செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அது சமூகத் துன்பமாய் இருந்தாலும் சரி தனி மனிதத் துன்பமாய் இருந்தாலும் சரி. இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. தீவிர இலக்கியம் இன்னும் இன்னும் என்று தீவிரமாய் துயரத்தைத் தேடிச் செல்கிறது. தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெருநாய்களைப் போல் நாமாகிவிட்டோம், இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்கிறோம். சாருவின் படைப்புகள் இந்த துன்பமைய நோக்கிலிருந்து நம்மை விடுவித்துச் செல்பவை. தனித்துவமானவை. இதை உணர்ந்த பொழுதில்தான் நான் எனக்கு போகன் என்கிற புனைப்பெயரை சூடிக்கொண்டேன். இந்த பார்வை மாற்றத்துக்கு தமிழில் தி ஜானகிராமன், லா ச ரா மற்றும் சாருவுக்கு பங்குண்டு. ஹெடோனிஸ்ட் என்ற பதத்துக்கு தமிழில் இம்மூவரையே நாம் மாதிரியாகக் காட்டமுடியும். முதலிருவரிடமும் கவித்துவம் ஓங்கி நிற்கும். அவர்களிடமிருந்தது காவிய அழகியலின் தொடர்ச்சிதான். சாருவே நவீன மனதுக்கு நெருக்கமான ஒரு உடல் கொண்டாடி.

ஆனால் வாழ்வில் துன்ப நோக்கை நீக்கி இன்பத்தை மட்டுமே இலக்காய்க் கொள்வது எளிதல்ல என்று எனக்குப் பிறகு தெரிந்தது. அது கடும் மனப்பயிற்சியையும் பழைய பழக்கங்களின் அழிப்பையும் வேண்டுவது.

இதே போன்ற ஒரு நகை முரண்தான் நக்சல்பாரிக் கிளர்ச்சியின் நாயகர்களில் ஒருவரான சாரு மஜூம்தாரின் பெயரின் ஒருபகுதியையும் பிரம்மச்சாரி ஸ்வாமி விவேகானந்தரின் பிரதான சிஷ்யையான நிவேதிதாவின் பெயரை அறிவழகன் என்கிற எழுத்தாளர் சூடிக்கொண்டது. என்னைவிட அவருக்கே இந்தப் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்.

மனித உடல் ஒரு அடிப்படையான அரசியல், சமூக அலகு. இதைக் கைப்பற்ற தேவர்கள், அசுரர்கள், அரசியல்வாதிகள், அரசர்கள், மத குருக்கள் எல்லோரும் முயல்கிறார்கள். குறிப்பாக இந்த அலகுகளின் பாலியல் தேர்வுகள், விருப்பங்கள் இவர்கள் கைப்பற்ற விழையும் விசைகளாக உள்ளன. இவற்றின் மேல்தான் மற்ற மேல் கட்டுமானங்களான குடும்பம், அரசு, மதம், சாதி, இனம், வர்க்கம் எல்லாமே கட்டப்பட்டுள்ளன. எனவே இந்த அடிப்படைத் தேவைகளின் மீது சுமத்தப்படும் விலங்குகளைத் தகர்க்காமல் விடுதலையை அதன் முழு அர்த்தத்தில் அடையமுடியாது என்பது சாரு திரும்பத் திரும்பத் தன் படைப்புகளிலும் பேச்சிலும் முன்வைக்கிற ஒரு கருத்தாகும்.

சாருவுக்கான முன் மாதிரிகள் தமிழ் இலக்கியத்தில் இல்லவே இல்லை என்றே சொல்லிவிடலாம். அவருக்கு முன் மாதிரிகளை தேட நாம் ஐரோப்பிய இலக்கியத்துக்கு குறிப்பாக பிரஞ்சு இலக்கியத்துக்குத்தான் செல்லவேண்டும். அவர் தமிழில் எழுதும் ஒரு பிரஞ்சு எழுத்தாளர் என்றால் தவறல்ல. இது ஒரு குறையாகப் பலரால் சொல்லப்படுகிறது. அவர் ஒரு டவுன்லோடு எழுத்தாளர் என்றெல்லாம் இகழப்பட்டிருக்கிறார்.

உண்மையில் நவீன இலக்கியமே ஒட்டுமொத்தமாக ஒரு மேற்கத்திய இறக்குமதிதான். நவீன இலக்கியம் மட்டுமில்லாமல் நவீன சிந்தனையே ஒரு மேற்கத்திய இறக்குமதிதான். உலகமயமாக்கலுக்குப் பிறகு நம் வாழ்வு மேலும் மேலும் மேற்கத்திய சாயல் கொண்டதாக மாறிவருகிறது. இன்னும் மாறும். சாருவின் எழுத்துகளைப் படிக்கிறவர்களில் பலர் இளம் தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருப்பதன் காரணம் இதுவே. அவரது எழுத்து இனிவரும் காலங்களில்தான் அதன் முழுமையான வாசகப் பரப்பைச் சென்று அடையும்.

நாம் நம்முடைய காவிய மரபின் மீது அளவுக்கதிகான மதிப்பும் விருப்பமும் கொண்டிருக்கிறோம். மேற்குலகம் அதன் கிரேக்கக் காவியங்கள் மீது கொண்டிருந்தது போல. ஆனால் மரபான காவியங்களின் காலம் முடிந்துவிட்டது என்று 17ம் நூற்றாண்டிலேயே அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இனி நாம் அதைத் தொடர விரும்பினால் mock epic எனப்படும் பகடிக் காவியங்களாகவே செய்யமுடியும் என்பதை செர்வாண்டிஸ் தனது don quixote நாவல் மூலம் உரக்கச் சொன்னார். நவீன நாவல் என்பது இந்த பகடிக் காவியங்களின் தொடர்ச்சிதான்.

நமக்கு எந்தச் செய்தியுமே மிகத் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காவியத்தின் மரணம் பற்றிய செய்தி போலவே. ரோலாண்ட் பார்தஸ் இதை இன்னும் முன் நகர்த்தி நாவலின் மரணம் என்று சொன்னார். அவர் சொன்ன ஆசிரியனின் மரணம் மட்டுமே இங்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது.

சாருவின் நாவல்களில் காணப்படும் மையமின்மைக்கு இது ஒரு முக்கிய காரணம். நாவலின் காவிய மரபு ஹேங் ஓவரிலிருந்து மேற்கத்திய நாவல்கள் எப்போதோ தங்களை விடுவித்துக்கொண்டு விட்டன. அது நவீன வாழ்வைப் பிரதிபலிக்கப் போதுமானதாக இல்லை என்று உணர்ந்துகொண்டுவிட்டன. சாருவின் புகழ்பெற்ற நாவலான சீரோ டிகிரி என்கிற தலைப்பு ரோலாண்ட் பார்த்ஸ் எழுதிய writing zero degree என்ற இலக்கிய விமர்சன நூலின் கருத்துகளோடு தனக்குள்ள ஒத்திசைவை வெளிப்படுத்துகிறது.

இந்த நூலில் அவர் மரபான ‘பள்ளிக்குழந்தைகள் போல அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளும் புரட்சியாளர்களின் நாவல்மொழியைப்’ பற்றிக் கேலி செய்கிறார். புதிய விஷயங்களை புதிய வடிவில் புதிய நடையில் புதிய மொழியில்தான் சொல்ல முடியும். அவை நிச்சயமாக மரபாக வார்த்தைகளுக்கும் மொழிக்கும் பெரும்பான்மையினர் கொடுத்திருக்கும் அர்த்தங்களைக் குலைப்பதாகதான் இருக்கும். நிலைகுலைவை ஏற்படுத்தத்தான் செய்யும். பூக்கோ இதை அங்கீகரிக்கப்பட்ட சரித்திரங்கள், விலக்கப்பட்ட சரித்திரங்கள் என்கிறார். விலக்கப்பட்டவர்களின் சரித்திரங்கள், பொது சமூகத்தால் திருடர்கள், தோட்டிகள், வேசைகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி விலக்கிவைக்கப்பட்டவர்களின் சரித்திரங்கள்.

இவ்வகையில் சாருவை முதல்முதலாகப் படிப்பவர் நீண்டகாலமாக சமதளத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென்று ஒரு ராட்சத ராட்டினத்தில் ஏற்றப்பட்டு சுற்றப்படுகிறவர் போல் உணர்வார். அவரது காட்சிக் கோணங்களும் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர் எதைப்பற்றிக்கொள்வது என்று திணறுவார்.

இதை பின் நவீனத்துவ பரிபாஷையில் unreliable narrator என்று சொல்வார்கள். நம்ப முடியாத கதை சொல்லி. காவிய மரபில் நம்ப முடியாத கதைகளை நம்பக்கூடிய விதத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள் எனில் இங்கு நம்பக்கூடிய கதை நம்ப முடியாத விதங்களில் கோணங்களில் சொல்ல்ப்படும். சாரு சமீபத்தில் எழுதியிருக்கும் ‘நான் தான் ஒளரங்கசீப்’நாவல் ஒரு சிறந்த உதாரணம்.

இதில் ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கான எல்லா கூறுகளும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு அகோரியின் உடல் மூலமாக அவுரங்கசீப்பின் ஆவி எழுத்தாளருடன் பேசுகிறது. நடு நடுவே சமகாலப் பிரச்சினைகள், எழுத்தாளரின் சொந்தப் பிரச்சினைகள், அவரது முந்தைய நூல்கள், இலக்கியக் கோட்பாடுகள், சக எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட மோதல்கள், சினிமாக்கள், கிசுகிசுக்கள், தனது மொழிபெயர்ப்பாளரின் பால் கூட சாப்பிடாத கடும் சைவ உணவுப்பழக்கம் எல்லாவற்றையும் இருவரையும் பேசித் தீர்க்கிறார்கள். நடு நடுவே எழுத்தாளரை விலக்கிவிட்டு ஒளரங்கசீப்பும் ஒளரங்கசீப்பை விலக்கிவிட்டு எழுத்தாளரும் நேரடியாக நம்மிடம் பேசவும் செய்கிறார்கள். இது பின் நவீனத்துவத்தில் breaking the fourth wall என்றழைக்கப்படுகிற ஒரு உத்தியாகும். நவீன நாடகங்களில் ப்ரெக்ட் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இலக்கியத்துக்குள்ளும் வரித்துக்கொள்ளப்பட்டது. இந்த நாவலில் இது நம் கவனத்தை சிதறடிப்பதற்குப் பதிலாக கூர்மைப்படுத்தும் வினோதம் நிகழ்ந்திருக்கிறது.

கலை மற்றும் கருத்தியல் பார்வையில் சாரு சார்தருக்கும் ரோலாண்ட் பார்த்துக்கும் இடைப்பட்ட ஒரு பள்ளியில் பயணிக்கிறார். சார்தர் இவ்வுலகை அபத்தங்களின் குவிமுனை என்று எடுத்துக்கொண்டாலும் எழுத்தாளன் ஏதோ ஒன்றிற்கு கடப்பட்டவனாக (committed)ஆக இருக்கவேண்டும் என்று சொல்கிறார். ரோலண்ட் பார்த் இந்த சுமைகளை எழுத்தாளன் தன் மீது போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை. அவர் எழுத்தாளன் எழுதியதும் பிரதியோடு அவன் தொடர்பு முடிந்துவிடுகிறது என்பவர். சாருவின் படைப்புலகு இந்த இரண்டு முனைகளுக்கும் ஊசலாடுவது. சாருவின் படைப்புகளில் தொடர்ச்சியாக பாசிசத்திற்கு எதிரான கருத்துகளும் மறுபுறம் அதீதத் தனி நபர் வாதமும் மாறி மாறி வருவதைக் காணலாம். லட்சியவாதத்துக்கு எதிரான அவரது இருத்தலியல் நிலைப்பாடும் மரபான வாசகர்களை அவரோடு ஒன்றவிடாமல் செய்வது. எழுத்தாளன் என்பவன் ஆசிரியனாகவோ களச்செயல்பாட்டாளனாகவோ இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவர்களுக்கு உள்ளது. இதை ஒரு எழுத்தாளர் சந்திக்கத் தவறும்போது இவர்கள் எரிச்சலடைகிறார்கள். இது ஒரு பழமையான எதிர்பார்ப்பாகும். இந்த விஷயங்களைப் பற்றியும் சாரு அவரது நூல்களுக்குள்ளேயே பேசியிருக்கிறார். பல நேரங்களில் அவரது அதீதத் தன்னைச் சுட்டி நிற்கும் தன்மை வாசகர்களின் அகங்காரத்தைச் சீண்டி விலக்குகிறது. ஆனால் பின் நவீனத்துவத்தின் அடையாளமே இதுதான்.

சாருவின் இந்த நாவலுக்கு உலக அளவில் இணையாக நாம் உம்பெர்டோ ஈகோவின் Name of the rose, Foucalt’s pendulum போன்ற நாவல்களைச் சொல்லமுடியும். தமிழில் தமிழவன் எழுதிய இரு நாவல்களை ஓரளவு சொல்லலாம். ஆனால் இதிலிருக்கும் சரளமான தன்மையும் வாசிப்பின்பமும் அவற்றில் இல்லை. சாருவின் நடையும் மொழியும் தமிழுக்கு அவரது இன்னொரு முக்கியமான பங்களிப்பு. தீவிர இலக்கியம் என்பது தலை முதல் கால் வரை பல்வேறு வேதனைகளை உருவாக்கக்கூடியது என்ற அவப்பெயரை உடைத்ததில் சாருவின் பங்களிப்பு முக்கியமானது.

சாருவின் இந்த நாவலில் அவர் சில சாத்தியமற்றவைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரது முந்திய நாவல்களில் காணப்படும் சிதறல் தன்மை இதில் இல்லாமல் இல்லை. பலருக்கு உட்புகத் தடையாக இருந்த ஒரு விஷயம் அது. இதில் அது குறைவு என்று தோன்றும்படி செய்திருக்கிறார். இந்த நாவலில் அவர் தரும் தகவல்களே மிகுந்த திகைப்பூட்டுகிறவை. அவற்றை அவர் கோத்திருக்கும் விதம் ஒரு மேதைக்குரியது. ஒரு பின் நவீனத்துவ மேதை. பின் நவீனத்தில் எழுத்தாளர்களும் மேதைகளும் இல்லை பிரதிகள் மட்டுமே எஞ்சுகிறவை என்றாலும்.
அந்த வகையில் இந்த நாவலை தமிழின் முதல் பின் நவீனத்துவ காவியம் என்று துணிந்து சொல்லலாம்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2022 10:33

மொழி – மொழியாக்க போட்டி முடிவுகள்

மொழி‘ இணையதளம் நடத்திய தமிழ்-ஆங்கில சிறுகதை மொழியாக்கப் போட்டியின் முடிவுகள் இன்று (Dec 10) ஒரு இணையவழி நிகழ்வு மூலமாக அறிவிக்கப்படவுள்ளன.

போட்டி நடுவர்களான என். கல்யாண் ராமன் மற்றும் தீபா பஸ்தி, மற்றும் பரிசுகளை வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் / விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் சார்பாக ‘குவிஸ்’ செந்தில் மற்றும் மீனாம்பிகை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

நண்பர்கள் அனைவரும் வருக.

நேரம்: Dec 10, 2022 மாலை, 06.30pm IST

Zoom இணைப்பு:

https://us02web.zoom.us/j/85066520230?pwd=SGdwZEVXRjRINXQzRWN2eTdvRHhQUT09

Meeting ID: 850 6652 0230

Passcode: 992179

*

எழுத்தாளர் அ. முத்துலிங்கம், மொழிபெயர்ப்பாளர்கள் என். கல்யாண் ராமன் மற்றும் தீபா பஸ்தி (கன்னட-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) ஆகியோர் இந்த போட்டிக்கு நடுவர்களாக நின்றார்கள். அவர்கள் தேர்வில் தயாரிக்கப்பட்ட குறும்பட்டியல்:

Story

Author

Translator

Clarinet (காகளம்)

Senthil Jagannathan

Darun S

Beast (விலங்கு)

B. Jeyamohan

Megana Kumar

Resurrection (புத்துயிர்ப்பு)

Su. Venugopal

Vignesh Hariharan

Maadan Moksham (மாடன் மோட்சம்)

B. Jeyamohan

Sherwin Rodriguez

Cotton Fever (மழைக்கண்)

Senthil Jaganathan

Anjana Shekar

A Brief Strain Of Music (ஒரு சிறு இசை)

Vannadhasan

Mayuravarshini.M

Filfilee (வெறும் முள்)

B. Jeyamohan

Amruth Varshan

A House Without Cats (பூனைகள் இல்லாத வீடு)

Chandra

Padmaja Anant

Ammaiyappam (அம்மையப்பம்)

B. Jeyamohan

V. Iswarya

நன்றி,

சுசித்ரா

பிரியம்வதா

மொழி இணையதளம்

http://www.mozhi.co.in

http://twitter.com/mozhispaces

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2022 10:18

December 8, 2022

ரத்தசாட்சி இன்று முதல்

நண்பர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கி வெளிவரும் ரத்தசாட்சி திரைப்படம் இன்றுமுதல்  ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவான கட்டணம் கொண்ட  ஓடிடி தளம் இது. ஒருநாளுக்கு ஒரு ரூபாய் என்னும் அளவில். தெலுங்கு,தமிழ் திரைப்பட ரசிகர்கள் பார்க்க ஏராளமான சினிமாக்கள் அதிலுள்ளன என்கிறார்கள். தெலுங்கின் தமிழ் வடிவங்களும்

Aaha Tamil OTT  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:36

மலேசியா வாரம்-1

பூஜாங் பள்ளத்தாக்கு

வீ.நடராஜன்

சோழன் வென்ற கடாரம்

ஸ்வீடனில் இருந்து திரும்பி நாலைந்து மணிநேரம்தான் நண்பர் சென்னை ஷண்முகம் வீட்டில் இருந்தோம். அன்று மாலையே கிளம்பி விமானநிலையம் சென்றோம். நள்ளிரவில் மலேசியாவுக்கு கிளம்பினோம். நான் பகலில் தூங்கவே இல்லை. பயணக்குறிப்புகளை எழுதினேன். மின்னஞ்சல்களை அனுப்பினேன். ஆகவே  விமானம் கிளம்பியதுமே தூங்கிவிட்டேன்.

காலையில் கொலாலம்பூர். அங்கே உள்ளூர் விமானத்திற்கு மாற்றம். நுழைவு அனுமதி பரிசீலனை. பொதுவாக ஐரோப்பாவில் இத்தகைய இடங்களில் இருப்பவர்களின் மென்மையான இனிய நடத்தையை பார்த்தவர்களுக்கு இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் மலேசியாவிலுமெல்லாம் இருக்கும் அதிகாரிகளின் முறைப்பு, சைகையாலேயே ஆணையிடும் அவமதிப்பான தோரணை ஆகியவை ஒருவகை திகைப்பையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.

பிரம்மவித்யாரண்யம் முகப்பில்

வெள்ளையர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வெள்ளையர்களிடமும் அதே நடத்தைதான் என்பதை கவனித்துள்ளேன். கீழைநாட்டினரே இப்படித்தான் என்னும் முன்முடிவு அவர்களுக்கு இருப்பதனால் கடந்துசெல்கிறார்கள் போல.

பினாங்கு விமானநிலையத்தில் பேரா.குமாரசாமியும் சுவாமி பிரம்மானந்தரும் எங்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர். அவர்களின் காரில் கூலிம் ஆசிரமம் சென்றோம். ஜார்ஜ் டவுன் லிட் ஃபெஸ்ட் பினாங்கு நகர் நடுவே ஜார்ஜ் டவுன் என்னும் பழைய பிரிட்டிஷ் பகுதியில் நிகழவிருந்தது. அங்கே பிரஸ்டீஜ் என்னும் விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக கூலிம் ஆசிரமத்திற்கே செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.

புண்ணியவானும் சுவாமியும் அரசியல் பரபரப்பில்…

பழைய கூலிம் பிரம்மவித்யாரண்யம் பிரம்மானந்தரின் சொந்த இடத்தில் நகருக்குள் உள்ளது. முதலில் அங்கே சென்றோம். எழுத்தாளர் கோ.புண்ணியவான் அங்கே வந்தார். அவருடைய கையறு நாவல் தஞ்சை தமிழ்ப்பல்கலையின் விருது பெற்றுள்ளது. விருதுபெற தஞ்சாவூருக்கு இரண்டு நாட்களில் கிளம்புவதாகச் சொன்னார். அவரும் சுவாமியும் மலேசிய அரசியல் பற்றி பதற்றமாகப் பேசிக்கொண்டனர்.

மதியக் குமாரசாமியின் இல்லத்திற்குச் சென்று சாப்பிட்டோம். எங்களுக்காகச் சமைக்கப்பட்ட அபாரமான அசைவ உணவு. குறிப்பாக நெத்திலிப் பொரியல். மலேசியாவில் பொதுவாக பிரம்மவித்யாரண்யம் தவிர எங்கும் சைவம் என்னும் பேச்சே இல்லை. அதன்பின் மலைக்குமேல் இருந்த பிரம்ம வித்யாரண்யம் சென்றோம்.

கூலிம் பிரம்மவித்யாரண்யம் எனக்கு மிக அணுக்கமான ஓர் இடமாக ஆகிவிட்டிருக்கிறது. பலமுறை பல உரைகளை அங்கே ஆற்றியிருக்கிறேன்.  பிரம்மாண்டமான மையக்கட்டிடம் அதையொட்டிய வெவ்வேறு தங்குமிடங்கள். பச்சை பொலியும் சூழல். பூச்செடிகள். பினாங்கில் பல மாதங்களாக மழை பொழிந்தபடியே இருக்கிறது என்றார்கள்.

நாங்கள் சென்றபோது மலேசிய அரசியலில் நிலையின்மை நீடித்து கொண்டிருந்தது. மகாதீர் முகம்மது தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டிருந்தார். அன்வர் இப்ராகீம் மிகுதியான இடங்களைப் பெற்றாலும் போதிய பெரும்பான்மை இல்லை. மொகிதீன் யாசீன் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டணி எவரும் எதிர்பாராதபடி இளம் வாக்காளர்களிடையே ஏராளமாக ஓட்டு பெற்று வலுவான நிலைமையில் இருந்தது.

எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலை. மலேசியா நான்கு சுல்தான்களால் ஆளப்படும் நாடு. நம்மூர் ஜனாதிபதிகளின் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நால்வரில் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு பேரரசர் ஆக இருப்பார். அவர்தான் ஆட்சியாளர்களை தெரிவுசெய்யவேண்டும். பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அன்வர் பேரரசரால் தேர்வுசெய்யப்பட்டார். பெரும்பான்மை ஆதரவும் அமைந்தது.

அங்குள்ள எல்லா தமிழர்களும் சீனர்களும் அன்வர் வரவேண்டும் என விரும்பினர். எங்கும் பதற்றமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் சென்ற இரண்டாம்நாள் அன்வர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிறுபான்மையினர் நிறைவடைந்ததைக் காணமுடிந்தது. மலேசியாவில் மலேசிய இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான பாஸ் செல்வாக்கு பெற்று வருவது அனைத்து ஜனநாயக சக்திகளிடமும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மலேசியாவில் மதவாதமும் இனவாதமும் ஒன்றிணைந்துள்ளன. அன்வர் அதை தடுக்கும் ஜனநாயக சக்தியாக பார்க்கப்படுகிறார்.

வந்த முதல் நாள் ஓய்வெடுத்துக் கொண்டோம். மறுநாள் காலையில் கிளம்பி கெடா மாநிலத்தில் இருக்கும் புஜாங் பள்ளத்தாக்குக்குச் சென்றோம். ஏற்கனவே நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். அருண்மொழிக்குத்தான் முதல் வருகை. இம்முறை மழை கொட்டிக்கொண்டிருந்தது. பூஜாங் ஆறு பெருக்கெடுத்து அருவிகளின் வரிசையாக கொட்டி முழங்கிச் சென்றுகொண்டிருந்தது.

பூஜோங் பள்ளத்தாக்குதான் மலாயாவில் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளை நிறுவும் தொல்சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் டாக்டர் நடராஜன் விரிவான ஆய்வுநூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழிலும் அந்நூல் ரெ.கார்த்திகேசுவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. (சோழன் வென்ற கடாரம்)  வெவ்வேறு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் அந்த இடத்தைப் பற்றி ஆய்வுசெய்துள்ளனர்.

பூஜோங் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் அடித்தளங்கள் சிவன் கோயில்கள் கொற்றவை (துர்க்கை) மற்றும் புத்தர் கோயில்களுக்குரியவை. சிவலிங்கங்களின் ஆவுடைகள் பல காணக்கிடைக்கின்றன. சண்டி என இந்த அடித்தளங்கள் அழைக்கப்படுகின்றன. சண்டி என்பது கொற்றவையின் பெயர்களில் ஒன்று.

கெடா மாநிலத்தின் தலைநகரான Alor Setar என்னும் ஊரில் அமைந்துள்ள அரிசி அருங்காட்சியகம் ( Muzium Padi) பார்க்கச் சென்றோம். கெடா மாநிலம்தான் மலேசியாவின் அரிசிப்பண்ணை. மலாய் மக்களே பெரும்பாலும் வேளாண்மை செய்கிறார்கள். மிக விரிந்த வயல்கள். நெல்லுக்குரிய நீரும் வெயிலும் குன்றாமல் உள்ளன.

குகை

வேளாண்மக்கள் வசதியாகவே இருக்கிறார்கள் என அவர்களின் இல்லங்கள் காட்டின. அவர்களுக்கு ஏராளமான சலுகைகள். வேளாண்மை பெரும்பாலும் டிராக்டர்கள், சிறு கருவிகள் உட்பட மனித உழைப்பு குறைவாகவே நிகழ்கிறது.

படி மியூசியம்  ஓர் அருங்காட்சியகம் என்றுதான் எண்ணியிருந்தேன். அங்குள்ள முக்கியமான விந்தை மூன்றாம் மாடியிலுள்ள சுவரோவியம். உண்மையில் சுற்றிலும் மாபெரும் திறந்தவெளி தெரிவதாகவே கண்கள் மயங்கும். அது ஓவியம் என்று நம்ப மூளைக்கு நாம் ஆணையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

திரைப்படங்களுக்கான செட் அமைப்பதில் கடைப்பிடிக்கப்படும் அதே வழிமுறைதான். நம் கண்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைத்தான் முப்பரிமாணத்தை காணமுடியும். இரு கண்களுக்கிடையே உள்ள இடைவெளியால் இரு கண்களும் அளிக்கும் காட்சிகள் சற்று வேறுபடுகின்றன. அவற்றை மூளை ஒன்றாக இணைக்கையும் முப்பரிமாணம் உருவாகிறது. தொலைதூரக் காட்சியில் இரு கண்களுக்கிடையேயான காட்சிகளில் பெரிய வேறுபாடு இருப்பதில்லை.

இங்கே முப்பரிணாமமாக செல்லும் மரங்களும் செடிகளும் ஓவியத்தில் இணைகின்றன. சுற்றிலும் விரிந்த ஓவியம் உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து பார்த்தால் கிடைக்கும் அதே நிலக்காட்சிதான். அதில் மலேசியாவின் வயல்சார்ந்த வாழ்க்கையின் சித்திரம் உள்ளது.

செல்வம்

அருங்காட்சியகத்தில் மலேசியாவில் முன்பு பயன்படுத்தப்பட்ட் வேளாண்கருவிகளும் இயந்திரங்களும் உள்ளன. மாவிடிக்கும் இயந்திரம் ஒன்று விந்தையானது. நெம்புகோல் முறைப்படி கனமான ஓர் உலக்கை எழுந்து எழுந்து உரலில் விழும். மறு எல்லையில் அதை காலால் மிதித்து ஒருவர் இயக்குவார். பெரும்பாலான கருவிகள் இந்தியாவில் நாம் அறியாதவை.

உண்மையில் நீண்ட வேளாண்மரபு நமக்கிருந்தாலும் நாம் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவே இல்லை. முழுமையாகவே மனித ஆற்றலால்தான் வேளாண்மை செய்து வந்தோம். ஏன் நாம் கருவிகளை உருவாக்கிக்கொள்ளவில்லை? மஞ்சள் இனத்தவர் பொதுவாக கருவிகளை உருவாக்கவும் கையாளவும் திறன் கொண்டவர்கள். இக்கருவிகள் பெரும்பாலும் தாய்லாந்தில் இருந்து வந்தவை. தாய்லாந்து அங்கிருந்து மிக அண்மையில்தான்.

பேரா அங்கப்பன் குடும்பம்

அருங்காட்சியகம் அருகிலேயே சுவாமி பிரம்மானந்தரின் மாணவரான பேரா.செல்வம் குடியிருக்கிறார். அவருடைய இல்லத்துக்குச் சென்றோம். மாலையுணவுக்கு அருகே உள்ள அங்கப்பன் என்னும் பேராசிரியரின் இல்லத்திற்குச் சென்றோம். இரவு செல்வத்தின் இல்லத்திலேயே தங்கினோம். ஆன்மிக ஈடுபாடு உள்ள செல்வம் அங்கே தத்துவ வகுப்புகள் நடத்தி வருகிறார்.

மறுநாள் மலேசியாவின் சிறிய அரசான  பேராக் மாநிலத்தில் உள்ள கோபெங் நகருக்கு அருகே அமைந்துள்ள குவா டெம்புருங் என்னும் குகையைப் பார்க்கச் சென்றோம். குகையின் மலேய உச்சரிப்புதான் குவா. மலையாறு ஒன்றால் துளைக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் மலையில் உருவானது இந்த குகை. (தமிழில் குகை என்றால் மலைக்குமேல் உள்ளது. மண்ணுக்கு அடியிலுள்ளது பிலம். இது பிலம்தான்)

பேரா குமாரசாமி குடும்பம், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் மற்றும் கிருபாவுடன்

எளிதாக உள்ளே செல்லும்படியாக மரப்பலகையாலான உறுதியான பாதைகள் அமைத்திருந்தார்கள். பாதைக்கு கீழே காட்டாறு புதிய மழையால் சீறிச்சுழன்று சென்றது. குகைக்குள் செவிநிறைக்கும் அதன் ஓலம். குறைவான ஒளி. ஸ்டால்கமைட் எனப்படும் சுண்ணாம்புப் பாறைக் கூம்புகள் பன்றியின் முலைகள் போல தொங்கிக் கிடந்தன. குளிர்ந்த நீர்ச்சொட்டுகள் மேலே உதிர்ந்தன.

அங்கே மேலிருந்து சுண்ணநீர் சொட்டிச் சொட்டி உறைந்து உருவான சுண்ணப்பாறையாலான படிக்கட்டு போன்ற அமைப்பு இருந்தது. நம்மூரில் என்றால் மேலே சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கும். குகேஸ்வரன் என்பது சிவனுக்கான பெயர். கன்னட வீரசைவ வசனப்பாடல்களில் குகேஸ்வரனை நோக்கியே பலபாடல்கள் எழுதப்பட்டுள்ளன. மனக்குகையில் உறைபவன். இருளிலெழுந்த இருள்துளி. பல குகைகளில் கண்ட கரிய சிவலிங்கங்கள் நினைவிலெழுந்தன. குறிப்பாக கஷ்மீரில் ஒரு குகையில் சிவலிங்கங்கள் சிதைந்த நிலையில் கிடந்தன.

குகை வாயிலில்

மறுபக்கம் சுண்ணப்பாறையாலான மலை செங்குத்தாக எழுந்து சூழ்ந்த காடு. மரங்கள் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இருந்தன. தலைக்குமேலே இலைப்பரப்பின் வலைக்கூரை. கொடிகளே மரங்களின் அளவுக்கு தடிமனாக இருந்தன. அக்கொடியை மலாய், சீன மக்கள் மருந்தாகவும் மாந்திரீகத்திற்கும் பயன்படுத்துவதாக குமாரசாமி சொன்னார்.

மாலை மீண்டும் குருகுலம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நேராக பினாங்கு நகரில் ஜார்ஜ் டவுன் பகுதியிலமைந்த பிரஸ்டீஜ் ஓட்டலுக்கு. பிரஸ்டீஜ் ஓர் உயர்தர ஐந்துநட்சத்திர விடுதி. நவீனக் கட்டிடம், ஆனால் பழைய பிரிட்டிஷ் கட்டிடங்களின் அதே பாணியில் முகப்பு கட்டப்பட்டுள்ளது. அதன் தூண்கள் செறிந்த வராந்தா அந்த தெருவில் பாதி நீளத்திற்கு இருந்தது. அந்த விடுதி ஜார்ஜ் டவுன் இலக்கியவிழாவின் புரவலர்களில் ஒன்று.

அறை வசதியானது. நான் கணிப்பொறியை எடுத்து வைத்து மின்னஞ்சல்களைப் பார்த்தபோது ஸ்வீடன் புகைப்படங்கள் எழுந்து வந்தன. மிகச்சில நாட்களுக்கு முன்புதான் பனியின் ஒளி பரவிய ஆர்ட்டிக் பகுதியில் இருந்தேன் என்பதை என்னாலேயே நம்பமுடியாமலிருந்தது.

மாலையில் அ.பாண்டியன், கோ.புண்ணியவான் ஆகியோருடன் ஜிடிஎல்எஃப் நடத்திய  விருந்துக்குச் சென்றேன். அங்கே சிங்கப்பூர் கவிஞர் எழுத்தாளர் கனக லதா மற்றும் சிங்கப்பூர் கலையிலக்கிய கழக ஆலோசகர் அருண் மகிழ்நன் வந்திருந்தார்கள். நான் வழக்கம்போல பழங்கள் சாப்பிட்டேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாலின் மற்றும் சீன பதிப்பாளர் ஒருவர் , வங்க நாடகாசிரியர் ருஸ்தம் பரூச்சா என பலரைச் சந்தித்தேன்.

சீன மொழியில் பெயர்களை எழுதுவது பற்றிய பேச்சு வந்தது. சீனமொழியில் ஒலிக்கு எழுத்துக்கள் இல்லை, பொருளைக் குறிக்கும் சித்திரங்களே எழுத்துக்கள். ஆகவே சொற்களை முதலில் பொருள் துண்டுகளாக பிரிக்கவேண்டும். அவற்றுக்கு சித்திர எழுத்துக்களை உருவாக்கவேண்டும். அவை பொருள் வழியாகவே வாசிக்கப்படும். ஒலியாக அல்ல.

உதாரணமாக என் பெயர் ஜெயமோகன். அதை வெற்றி, விருப்பம் என பிரிக்கவேண்டும். அதற்குச் சமானமான சீன பொருள்கள் தேடி அவற்றுக்குரிய எழுத்துக்களால் எழுதி எனக்கு காட்டினார். விந்தையாக இருந்தது. ஆனால் உற்சாகமும் வந்தது. நல்லதனமாகத்தான் எழுதியிருந்தார்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:35

மமங் தாய், அருணாச்சல் கதைகள்

மமங் தாய் – தமிழ் விக்கி

வானத்திலிருந்து விழுந்த பையன்.

ஹோக்சோ முதன்முதலில் இந்த உலகை நோக்கி  தன் கண்களைத் திறந்தபோது பச்சை நிறத்தைக் கண்டான். சுவர்போன்று எழுந்த பச்சை மரங்களும், மூங்கில்களும். அவன் கன்னத்தில் திவலைகளைத் தெறித்து, அவனை நோக்கி கையசைப்பதாய்த் தோன்றும் ஒரு பெரும் பெரணி செடியை கழுவியபடி விழும் ஒரு பசும் நீர்வீழ்ச்சி.

அவர்கள் விரைந்துகொண்டிருந்தனர். அவன் பின்னாளில் தந்தை என அழைத்த ஒருவனின் தோளில் சுமந்துசெல்லப்பட்டான். அவனுக்கு அக்கணத்தில் தெரிந்தது தான் வியர்வை நாற்றமடிக்கும் கடினமான பெட்டி ஒன்றில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது மட்டுமே. சத்தமின்றி, தெரியாத நிலமொன்றின் வழியே சென்றுகொண்டிருந்தபோது அம்மனிதனின் உடலுரத்தை அவனால் உணர முடிந்தது; பரந்த முதுகில் தன் தலையை சாய்த்து பெரிய இதயத்தின் துடிப்பைக் கேட்டான்.

பெரும் மரங்களுக்கிடையேயான பயணத்துக்கு முந்தைய நிகழ்வுகளை ஹோக்சோ மீட்டுக் கொண்டதில்லை. உலகைப் பற்றி பேசும்போது, மனிதர்களைப்பற்றி, காட்டைப்பற்றி பேசும்போது உப்பையும் நிணத்தையும் சுவைப்பதாக நினைத்தான், கீழே விழுந்துகொண்டிருப்பதன் அதிர்ச்சியையும் உணர்ந்தான். ஆனால் அது ஏன் என்று அவனுக்கு உறுதிப்படவில்லை. அவனது கனவுகளில் ஒரு எரிந்தொளிரும் சூரியன் பூமியை நோக்கி சுழன்றுவருவதையும் அது செந்தீயாக வெடிப்பதையும், சாம்பலையும் நிணத்தையும் கொண்டு அவன் கண்களைக் குருடாக்குவதையும் அவன் கண்டான். அதனால்தான் ஒருவேளை அவன் கண்கள் இறுக மூடப்பட்டுள்ளதோ என அவன் நினைத்தான், பயங்கரமான ஒளியைவிட இருளையே அவன் விரும்பியதைப்போல அது அமைந்திருந்தது.

பசுமை நிறம் அவனை எப்போதும் சாந்தப்படுத்தியது. அது விடுதலையின், தனிமையின் நிறமாகியிருந்தது. எதிலிருந்து அவன் விடுதலை பெற்றான் அல்லது எப்போது என்று அவனால் சொல்ல முடியவில்லை அதேபோல காட்டுக்குள் நடந்து சென்று தனியாயிருக்கும் தேவை அவனுக்கு ஏன் இருக்கிறது என்பதையும் அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

குன்றின் உச்சியில் இருந்த வீட்டை அவர்கள் அடைந்தபோது. ஒரு பெண் அவர்களை வரவேற்று ஓடிவந்தாள். அவள் இனிமையானவள், நல்லவள் என்று அக்கணமே அவன் அடையாளம் கண்டான். அவள் உயரமாகவும் இளமையாகவும் இருந்தாள், அவள் முகம் அன்பாலும் எதிர்பார்ப்பாலும் மலர்ந்திருந்தது.

“ஓ.கடவுளே!” அவள்  சொன்னாள் ’ஆண் குழந்தை!’

பெட்டியிலிருந்த அவனை உயர்த்தினாள். இன்றுவரை ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் அந்தத் தொடுகைக் கணத்தின் இனிமையை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் ஹோக்சோவின் நினைவில் இல்லை.

வீட்டில் வேறெந்த குழந்தையும் இல்லை என்பதை உடனே உணர்ந்தான் ஹோக்சோ. தனக்கு எத்தனை வயதாகிறது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. யாரும் எதுவும் சொல்வதில்லை மேலும் யாரும் அவனிடம் ஒருபோதும் உனக்கு அப்பாவைப் பிடிக்குமா அல்லது அம்மாவைப் பிடிக்குமா என்று பிற குழந்தைகளிடம் கேட்பதைப்போல கேட்பதுமில்லை. பள்ளியில் சேர்ந்தபோது குழந்தைகள் அவனை வெறித்துப் பார்த்தனர். யாரும் அவனை வரவேற்கவில்லை, எதிர்நோக்கும், ஆர்வமும் நிறைந்த தன்னுடைய நிச்சயமற்ற புன்னகை மட்டுமே அவனுக்கு நினைவிருந்தது. ராக்குட் அவனது முதல் தோழன். 

‘இந்தா, பிடி!’ ராக்குட் ஒரு கல்லை அவனுக்கு எறிந்தான், அது அவர்களுக்கிடையே ஒரு அரைவட்டத்தில் எழுந்து சென்றது. ஆற்றிலிருந்து தட்டையான ஒரு கல்லை அவர்கள் விளையாட ராக்குட் குறிப்பாகத் தேர்ந்தெடுத்திருந்தான். அவர்களிடையே ஆச்சரியமான விதத்தில் நட்பிருந்தது. ஹோக்சோவின் அம்மா சோற்றுக் கேக்குகளைச் சமைக்கும்போது அவனது நண்பர்களை அழைத்தால் ராக்குட்தான் முட்டாளைப்போல இளித்துக்கொண்டு முதலில் வந்து நிற்பான், ஹோக்சோவோ தன் பெற்றோர்களின் வள்ளல்தன்மையில் மகிழ்ச்சியும் பெருமிதமும்கொண்டு குறைவாகவே சாப்பிடுவான். ஒருமுறை அவன் தந்தை ஒரு சிவப்பு அணிலை வீட்டுக்கு கொண்டுவந்தபோது ஹோக்சோ ராக்குட்டின் வீடுவரைக்கும் உச்சக் குரலில் அதைப் பார்க்க வரும்படி அழைத்தபடியே ஓடினான். ஒவ்வொருநாளும் அவர்களுக்குப் புதிதாக ஏதேனும் கிடைத்தது. ஒவ்வொருநாளும் அவர்கள் ஊரிலிருந்து தூரம் தூரமாய் குன்றின் மேல் சென்றலைந்தார்கள். பலவருடங்களாக, ஒவ்வொருநாளும் தங்கள் விருப்பத்திற்குரிய மலையில் ஏறிவிட்டு மரங்களுடனும், மூங்கில் புதர்களுடனும் துல்லிய கோடை வெளிச்சத்துடனும் தங்கள் சிந்தனைகளைப் பேசிக்கொண்டே கீழ்நோக்கி தங்களை விடுவித்துக்கொள்வார்கள்.

ஒருநாள்  ஹோக்சோ ராக்குட்டின் வீடுவரை ஓடிச்சென்று வித்தியாசமான சத்தம் ஒன்றை கேட்கவரும்படி அவனை அழைத்தான். வீட்டைச் சுற்றி சத்தமின்றி நடந்து சென்று மூங்கில் இடுக்கில் எம்பி நின்று பார்த்தார்கள்.

‘உண்மதான். நான் சொல்றேன்ல’ ஹோக்சோவின் தந்தை பேசிக்கொண்டிருந்தார் ‘தண்ணி தெறிக்கிற சத்தம் கேட்டுச்சு. திரும்பி பாத்தா ஆத்தோட கர எழும்பிச்சு, அந்த பளபளப்பான மீனுக்குப் பின்னாடி தண்ணி  விழுந்துகிட்டிருந்துச்சு.. அல்லது பாம்பாக்கூட இருக்கலாம்… எதுனாலும்… உடனே அது போயிடுச்சு. ஆனா நான் அதப் பாத்தேன்.. சொல்றேன்ல!’

‘ஹா.. அதெப்டி!’

‘நான் சொல்றேன்.. பாத்தேண்ணு’

‘எப்டி இருந்துச்சு?’

‘அதுக்கு கொம்பு வச்ச தல இருந்துச்சுண்ணு நினைக்கிறேன்’

‘என்னது!’

அங்கே இருந்த அனைவருக்கும் பிரிபிக்கின் கதை தெரியும், நீர் சர்ப்பம். பல தலைமுறைகளாய் அதை முதலில் பார்த்தவரின் பெயரை யாருக்கும் நினைவில்லை ஆனாலும் அந்நிகழ்வு அவர்களின் கூட்டுநினைவில் நிலைத்திருந்தது. கனமழை இரவொன்றில் ஒரு மீனவன் ஆற்றில் தன் வலைகளை விரித்துவிட்டு தனித்திருந்தபோது அது நடந்தது. தண்ணீர் விலகிய நேரம் விரையும் சத்தம் ஒன்றை அவன் கேட்டான். திடீரென அவன் நின்றிருந்த மரத்தின் கிளைகளில் பற்றிச் சுருண்டு தன் பழங்காலக் கண்களைக்கொண்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்த சர்ப்பத்தை அவன் கண்டான். கொம்பு வைத்த அதன் தலைதான் அவனை அதிகம் அதிரச் செய்தது. உயிர்ப்பயத்தில் அம்மீனவன் ஓடினான், ஊரை நோக்கி, ஆனால் அந்தக் கொடுங்காட்சியின் விளைவிலிருந்து அவன் மீள முடியாது என எவராலும் யூகிக்க முடியும். ஒரு வருடத்தில் அவன் இறந்துபோனான், உடலுருக்கும் ஒரு நோயால்.

சகுனங்களை ஆராயும் எவருக்கும் மாயமான ஏதோ மீண்டும் நடக்கவிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது அதுவும் ஹோக்சோவின் தந்தை அதைப் பார்த்துவிட்டார். காட்டுக்கு நடுவே இருக்கும் இந்த சிறு வெளிகளில் மக்களுக்கு தீர்க்கதரிசனங்கள் கிடைத்தன. பெண்கள் கனவுகளைக் கண்டார்கள். இயல்புக்கு மாறாய் மான் குட்டிகளைப்போல அல்லது சிங்கக்குட்டிகளைப்போல வேகமாக வளரும் குழந்தைகள் பிறந்தார்கள். கிழவிகள் கொடிகளைப் பின்னலிட்டு நல்மரணத்திற்காக வேண்டினர். 

எனவே ஹோக்சோவின் தந்தை சிறிதுகாலத்திலேயே ஒரு வேட்டை விபத்தில் இறந்துபோனபோது யாரும் ஆச்சர்யமடையவில்லை. ஒரு சோக நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டதுதான். துப்பாக்கிகள் அந்தக் குன்றுகளுக்கு வந்த பின்னர் வேட்டை ஒரு வேட்கையாக மாறியிருந்தது. ஒரு நாளில் திடீரென ஒருவன் எழுந்து நிற்பான், சோம்பல் முறிப்பான், தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் நடப்பான். பல வேட்டைக்காரர்களும் பல நாட்களாய் காட்டுக்குள் காணாமல் போயினர், பரண் மீது படுத்துக்கொண்டு அல்லது ஒரு பரந்த கிளையில், விழிப்புடன், படுத்துக்கொண்டு நாட்களை கடத்தினார்கள். ஊரைவிட்டுத் தள்ளியிருந்த காட்டில், வேட்டைக்காரர்கள் பிரிந்து சென்று வேட்டையாடும்போது ஹோக்சோவின் தந்தை ஒரு இரை விலங்கென்று தவறாகக் கணிக்கப்பட்டார். மானா? கரடியா? அவரைச் சுட்ட மனிதனால் பெருந்துயரின் மத்தியில் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவன் ஒரு அசைவை மட்டும் நினைவில் வைத்திருந்தான், ஒரு கரிய வடிவம், அது நிச்சயமாக மனித உரு இல்லை என சத்தியம் செய்தான். ஊடுருவும் ஒரு அதிர்ச்சிக் கதறலையும் கோபக் கூக்குரலையும் கேட்டான் பின்னர் தலைதெறிக்க முள்ளடர்ந்த பகுதி நோக்கி ஓடினான், அங்கே தன் நண்பன் தாடைக்கும் கீழே குண்டடிபட்டுக் கிடப்பதைக் கண்டான். இரத்தம் கொப்பளித்தது அவன் கண்கள் விரிந்து நிலைத்திருந்தன. 

‘ஏ..நான் கொல்லப்பட்டுவிட்டேன்!’ தரை நோக்கிக் குனிந்திருந்தார் அவரது துப்பாக்கி தரை நோக்கித் தாழ்த்தப்பட்டிருந்தது. அது அவரது தோளில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தது ஏனென்றால் அவரது வலதுகையும் சுடப்பட்டிருந்தது. 

அவரது நண்பன் காட்டுக்குள் பைத்தியம் போல ஓடியபடியே சத்தமிட்டான், அழுதான். ‘உதவி! உதவி!’ அவன் கூக்குரல் ஊரில் ஒரு அதிர்ச்சியை பரப்பியது. எல்லோரும் வெளியே விரைந்தனர். ‘இவரது உடலை எடுத்துச் செல்ல உதவுங்கள்’.

இரவு முழுவதும் செயல்பட்டு, இறந்தவர் உடலை தூக்கி சுமந்து காட்டின்வழியாக, இழுத்தும், தள்ளியும், சாபமிட்டும், அழுதும், மலையிறக்கத்தில் ஈர இலைகளின் மீது சறுக்கியும், சேற்றில்  புரண்டும் சென்றனர். ஊரை அடையும் நேரத்தில் அவர்கள் கிழிபட்டு காயமடைந்து சேற்றின், இறந்தவர் இரத்தத்தின் கறைபடிந்து நின்றனர். அக்காட்சி பயமூட்டியது. ஹோக்சோவின் அம்மா கதறியபடியே வெளியே ஓடி வந்தாள். உறக்கம் கலைந்து எழுந்த இளம் ஹோக்சோ அவள் காற்றில் ஒரு வெப்ப ஒளிப்பிழம்பாய் ஒளிர்ந்து மறைந்ததாய் கண்டான். அவனுக்கு எல்லாம் புரிந்தது, அந்த ஒரு கணத்தில் அவள் அந்த அசைவற்ற உடலை அணைத்து தன் கன்னத்தை சிதைந்த தலையின் மீது வைத்தபோது காதலின் இரகசியம் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தியது. 

பின்பு அவள் சொன்னாள் ‘அவரை மூடுங்கள். எடுத்துச் செல்லுங்கள்.’ 

ஒரு மனிதனைக் கொன்றதற்குத் தண்டனை மரணம், உடனே ஒரு கூட்டம் கூட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர் சமரசத்துக்கு ஒப்புக்கொண்டால் விதிவிலக்குண்டு. அந்த இரக்கத்துகுரிய நண்பன் ஒரு மாதம் காட்டுக்குள் விலங்கைப்போல தலைமறைவாய் வாழும்படி தண்டிக்கப்பட்டான். நெருங்கிய உறவினர்கள் சமைக்கப்பட்ட உணவுகளைக் கொண்டுசெல்ல அனுமதி உண்டு, ஆனால் அவர் எப்படிப்பட்ட உணவை உண்ணவேண்டும் என்பதில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் அவர்களை அப்படியே விட்டுவிடுவது வழக்கம். எவரும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, குறிப்பாக ஒரு மனிதனை இரை விலங்காகக் கருதிவிட்ட விதி கொண்ட அம்மனிதன், எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

அப்போதும் அல்லது பின்னர் எப்போதும் யாராலும் விளக்க முடியாத ஒரு விஷயம்  இறந்தவனின் சட்டைப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய மீன்.  அது வழுவழுப்பான மீன், சிதைந்துபோயிருந்தது, அவன் சட்டை பிய்த்தெடுக்கப்பட்டு இரத்தம் துடைக்கப்பட்டபோதும் அதன் செதில்கள் அவர் தோலில் ஒட்டியிருந்தன. ஒருவேளை அங்கிருந்த சிறு ஓடை ஒன்றில் அவர் பிடித்த மீனாக இருக்கலாம். ஒருவேளை அவர் அதை ஹோக்சோவிற்காக எடுத்துவந்திருக்கலாம். அல்லது அது வேறொன்றின் பூத வெளிப்பாடாயிருக்கலாம். யாரால்தான் இவற்றையெல்லாம் சொல்ல முடியும்?

அப்படியே ஆனது, ஐடா குடியின் புகழ்பெற்ற தலைவன், வானத்திலிருந்து விழுந்த பையனின் தந்தை லுட்டரின் மரணம். தூரப்பரப்புகளிலும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹோக்சோவின் அன்னையும் ஊரில் இருக்கும் மேலும் ஒரு விதவையாகிப் போனாள், வேட்டை விபத்துக்களில் தன் கணவனை இழந்த பல இளம் பெண்களின் மத்தியில். 

கேலன் எனும் வேட்டைக்காரன் குறித்த வினோதம்.

பெருநகரத்துக்குச் சென்ற பயணம் ஒன்றில், பேச்சுவாக்கில் இந்தக் கிராமத்தைக் குறித்து என் தோழி மோனாவிடம் குறிப்பிட்டேன். அவள் ஒரு பத்திரிகை ஆசிரியர், எப்போதும் ஒரு சுவையான கதையை எதிர்நோக்கியிருப்பவள். அவள் உடனேயே என்னுடன் நான் வசிக்கும் இடமான குருடம் ஊருக்கு வர முடிவெடுத்தாள். அங்கிருந்து நாங்கள் விதவைகளின் கிராமத்துக்குச் செல்லலாம்  எனவும் பேசிக்கொண்டோம்.

மோனாவும் நானும் டுயாங்கை அடைந்தபோது கோடையின் துவக்க காலம், அது என் அம்மாவின் மூதாதையரின் கிராமம். நாங்கள் மலையேறி ஹோக்சோவையும் அவன் குடும்பத்தையும் சந்திக்கச் சென்றோம். ஹோக்சோவின் வீடு, என் நினைவில் இருந்த மட்டும், எப்போதும் ஆட்களால் நிறைந்திருந்தது. அவனது இரு மகன்களும் அவர்களின் மனைவியரும் இருந்தனர், இப்போது அவர்களின் ஐந்து குழந்தைகளும், கூடவே நண்பர்கள், சகோதர சகோதரிகள் உறவினர்கள் என்று எப்போதும் யாரேனும் வந்து போயினர், வெறுமனே பேசுவதற்கும், வம்பளப்பதற்கும், அல்லது திண்ணையிலிருந்து  கடுந்தேனீரும் அரிசிக் கள்ளும் குடிப்பதற்கு. அங்கு இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது, கனமான மூடிகளையுடைய பானைகளும் சட்டிகளும் எப்போதும் நிறைந்தோ அல்லது இன்னும் பத்துபேர் உண்ணும் அளவுக்கு மீதங்களைக் கொண்டோ இருந்தன. அழுக்கடைந்து பயணத்தின் கதைகளைச் சுமந்துகொண்டு, குழுவிழுந்த சாலைகள், படகுப் பயணங்கள், அழிந்துவரும் காடுகள் வழியே தீடீரென வரும் விருந்தினர்களும் உண்பதற்கு எப்போதும் உணவு இருக்கும். 

குன்றின் மீது ஏறி வீட்டை அடைந்தபோது ஒரு பெண் எங்களை நோக்கி ஓடிவந்து வரவேற்றாள். அது லோசி. இறந்துபோன என் அம்மா ஹோக்சோவையும் அவளையும் குறித்த கதைகளைச் சொல்லியிருக்கிறார், அவர்கள் எப்படி சந்தித்தார்கள் பின்னர் எப்படி திருமணம் செய்துகொண்டார்கள்… வானத்திலிருந்து விழுந்த பையனும், ஆற்றுப் பெண்ணுக்குப் பிறந்த சிறுமியும். லோசி குறித்த அனைத்துமே அதாவது அவளது நடவடிக்கை, புன்னகை, கண்கள், அன்பையும் களங்கமின்மையையும் குறித்தன. பின்னர் ஹோக்சோவின் அம்மா நேரடியான சூரிய வெளிச்சத்தில் கண்களைச் சுருக்கிக்கொண்டு வந்தார். ஹோக்சோ முதலில் அவளைக் கண்டதைப்போலவும், என்னைப்போலவும் மோனா உடனடியாக அந்த அம்மாவின் மந்திரத்தில் வீழ்ந்தாள். அவளுக்கு இப்போது வயதாகியிருந்தது ஆனால் அவளது புத்தி கூர்மையானதாகவும் விழிப்புடனும் இருந்தது.  கிராமத்தின் கதைகளைக் குறித்து மோனாவுக்கு இருந்த ஆர்வத்தைச் சொன்னபோது ஹோக்சோவின் அம்மா அமைதியாக இருந்தாள். பின்னர் ஆமோதித்தபடியே அதுதான் நம் விருந்தினருக்கு விருப்பமென்றால் அவள் தன் பேரன் போடாக் சொல்லும் கதையைக் கேட்கலாம் என்றாள். இப்படியாகத்தான் நாங்கள் கேலன் குறித்த வினோத கதையைக் கேட்டோம்.

அது அண்மையில்தான் நடந்திருந்தது, இரகசியக் குரலில் மட்டுமே அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கேலன் மலேரியாவால் சில வாரங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். ஒவ்வொருமுறை காய்ச்சல் பீடித்தபோதும் அவன் கோபத்தில் சத்தம் போடுவான். இந்தக் காய்ச்சலை முறியடிக்க ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறேன் பார், காத்திருங்கள் என்று கத்துவான். பின்னர் படுக்கையில் சுருண்டு படுப்பான், உடல் அதிரும் வியர்த்து ஊற்றும். காய்ச்சல் நின்றபின்பு சாந்தமான கண்களைத் திறந்து நோட்டமிடுவான். ஒரு நாள் ஆண்கள் சிலர் வேட்டைக்குப் போக முடிவெடுத்தனர். கீழே விழுந்த காட்டுப் பழங்களைத் தின்ன மான்கள் வரும் ஒரு இடத்தை பல நாட்களாக நோட்டமிட்டு வைத்திருந்தர்கள். அது ஒரு மிதமான கோடையின் காலை கேலனும் தனக்கு உடற்பயிற்சியும் புதிய காற்றின் சுவாசமும் தேவை என்று சொல்லி அவர்களுடன் புறப்பட்டான். 

கிருக்(வேட்டை) விதிகளை பின்பற்றி அவர்கள் வேட்டையாடினர், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் ஒரு இடத்திலிருந்து விலங்குகளை துரத்தி அடிப்பார்கள்.  பிறர் காத்திருந்து தாக்குவார்கள், துப்பாக்கிகள் தயார் நிலையில் இருக்கும். மதிய நேரத்துக்கருகில் ஆற்றோரமாய் குரங்குகள் கிரீச்சிட்டு, பரபரத்துக்கொண்டு கிளைகளை ஆட்டுவதை அவர்கள் கண்டார்கள். வேட்டைப்பகுதியின் எல்லையை அது குறித்தது. அது வழக்கத்திற்கு மாறான காட்சி, குரங்குகள் ஆற்றின் எதிர்போக்கில் போனபடியே, மரத்துக்கு மரம் தாண்டிக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்து அவர்களை அழைப்பதுபோல இருந்தது. வேட்டைக்குழு பரந்து சென்று அவற்றைப் பின்தொடர முடிவு செய்தனர். செல்வதா நிற்பதா என்ற முடிவை யார் எடுத்தார்கள் என்பது தெளிவாயில்லை, ஆனால் போடாக் எல்லோரும் ஒரே நேரத்தில் வலப்பக்கக் கரையோரமாக எதிர்ப்போக்கில் நகரத்துவங்கினர் என்றார். எனவே திடீரென ஆற்றின் மறுகரையில் குரங்குகள் இருந்த பகுதியில் புதர்கள் நடுவிலிருந்து கேலன் தோன்றியது அவரை ஆச்சர்யப்படுத்தியது. 

போடாக் பின்வாங்க ஆரம்பித்தார் ஆனால் கேலன் அவரை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். கேலன் தனது பழைய உரோமத் தொப்பியை அணிந்திருந்தை போடாக் பார்த்தார், ஒருவேளை அவன் இப்போதுதான் காய்ச்சல், வலிப்பிலிருந்து மீண்டிருப்பதால் இருக்கும், அவனுக்கு ஒரு தனித்துவமான, சவால்விடுவதைப்போன்ற புன்னகை இருப்பதையும் போடாக் கவனித்தார் – என்னை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்வதைப்போல. அவன் குரங்கு மாமிசம் இரத்தத்துக்கு நல்லது மலேரியாவைக் குணமாக்க வல்லது எனும் நம்பிக்கையைக் குறித்து யோசித்துக்கொண்டிருப்பான் என்று போடாக் யூகித்தார். எனவே அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை, அவனை சீக்கிரம் ஆற்றைத் தாண்டி வர வேண்டுமென அவசரப்படுத்தினார். கேலன் அவரைச் செல்லுமாறும், தான் உடனே வருவதாகவும்  சைகை செய்தான். சிறிது நேரத்திற்குப் பின் மதிய ஒளி சட்டென மங்கியது. குரங்குக்கூட்டம் மறைந்துபோனது. காட்டில் புதைந்திருந்த வெம்மை ஆவியாய் மேலெழுவதை போடாக் உணர்ந்தார், ஒடுக்கும் அமைதி அதன்மேல் பரவியது.

பிறழ்விதி கொண்ட அக்கூட்டத்தின் வேட்டைக்காரர்கள் ஒவ்வொருவரும், இடி இடித்து அமைதியைக் குலைத்தபோது ஆச்சர்யமுற்றதாகப் பின்னர் கூறினர், மழை வீசி அறைந்தது. ஒரு கணத்துக்கு முன்புதான் வானம் தெளிவாயிருந்தது. மறைவிடங்களை நோக்கி ஓடுகையில் அவர்கள் ஒரு கூக்குரலைக் கேட்டார்கள், எதோ கெட்டது அவர்களுக்கு நேர்ந்துள்ளது என்பதை அவர்கள் அப்போதே உணர்ந்தார்கள். போடாக் சத்தம்போட்டு எல்லோரையும் கவனமாய் இருக்கும்படியும், தங்கள் இருப்பிடத்தைக் கூறும்படியும் கத்தியதை நினைவு கூர்ந்தார். எல்லோரும் அங்கே இருந்தனர், கேலனைத் தவிர. லோமா தான் அப்போதுதான் எதிர்கரையிலிருந்த  குரங்கைச் சுட்டதாகக் கூறினான். எதுவும் சொல்லாமல் போடாக் நதிப்போக்கில் ஓடினார், அவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். வெறித்தனமான வேகத்துடன் அவர்கள் சலசலத்த  நதியைக் கடந்து சென்றபோது அங்கே கேலன் ஒரு மரத்தில் சாய்ந்திருப்பதைக் கண்டார்கள். மழை வலுத்திருந்தது, இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. உடலின் உள்ளே சென்று வெடித்த ரவைகளால் அவனது உடல் சின்னாபின்னமாகியிருந்தது. அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள், செய்வதற்கு அதிகம் இருக்கவில்லை. ஓட்டக்காரன் ஊருக்கு செய்தி செல்ல ஓடிக்கொண்டிருக்கையில் மற்றவர்கள் கேலனைத் தூக்கி ஆற்றின் பாதையிலிருந்த மூங்கில் பாலத்துக்குக் கொண்டு வந்தார்கள், அதன் வழியே முடிந்தவரை சேதமில்லாமல் உடலை ஊருக்குக் கொண்டுவர முடியும். 

இறந்த ஒருவனின் உடல் எத்துணை அசைக்கமுடியாததாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியாது என்று போடாக் சொன்னார். உடல் வழுக்கிக்கொண்டேயிருந்தது. அவர்கள் விக்கித்து நடுங்கினார்கள், கிழிந்த உறுப்புக்கள் கையோடு வந்துவிடும்போல இருந்தது. அவர்கள் பாலத்தை அடைந்த பின்னர் போடாக்கும் லோமாவும் உடலைச் சுமந்தார்கள் மற்றவர்கள் பின்னால் துப்பாக்கியுடனும் கேலனின் தொப்பியுடனும் தொடர்ந்தார்கள். போடாக் பாலத்தைக் கடந்ததும் பாலத்தின் கட்டு அவிழ்ந்தது, நடுவில் தளர்ந்த பாலம் பின்வந்தவர்களை ஆற்றில் கவிழ்த்தது. அது ஒரு சபிக்கப்பட்ட மதியம். ஊரார் மூங்கில் பந்தங்களை ஏற்றி காத்திருந்தனர்.  வேட்டைக்குப் போனவர்கள் நலிந்தும் மயக்கத்திலும் தீய ஆவிகளின் பிரதேசத்திலிருந்து வருபவர்களைப்போல திரும்பி வந்தனர். 

கேலனின் மனைவி, ஓமும், இப்போது அவளது பெற்றோருடன் வசிக்கிறாள். அவளுக்கு இரு சிறு குழந்தைகள் இருந்தன, இருபதுகளின் மத்தியைக்கூட அவள் எட்டியிருக்கவில்லை. நாங்கள் சந்தித்தபோது அவள் இன்னும் கூந்தலை ஒரு ஜிம்னாஸ்ட்டைப்போல பின்பக்கமாக வண்ணப் பட்டைகளால் கட்டியிருந்தாள். தண்ணீர் எடுத்துவந்தாள், மாலைக்கான நெருப்பை ஏற்றினாள், பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் உணவிட்டாள், வருத்தங்களைச் சொல்லவோ கோபத்தில் முறையிடவோ நிறுத்திக்கொள்ளாமல் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தாள். 

அந்த கிராமமும் ஓமுமைப்போலவே இயல்பாகவே இருந்தது, ஆழ்மனதில் மீண்டெழும் சக்தி கொண்டதாக, அதற்காக பழக்கபடுத்தப்பட்ட ஒன்றைப்போல இருந்தது. காயங்கள் மரணங்களுக்கு மத்தியிலும் புதிய தம்பதிகள் வீட்டை விட்டு கோபமாக வெளியேறினர், குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு, ஒருவர் ஒருவர்மீது  வசை பொழிந்துகொண்டு, வாழ்வதும் உறவாடுவதும் தற்காலிகமான ஏற்பாடு என்பதைப்போல. ஒன்றோ இரண்டோ மாதங்கள் தாண்டி திரும்பி வந்தனர், தயக்கத்துடனும், கீழ்ப்படிதலுடனும், பின்னர் கனமான நிச்சயமற்ற குடும்ப வாழ்வில் சபித்தும் சிரித்தும் நிலைகொள்கின்றனர்.

ஆயினும் அங்கே சிலர் திரும்ப வராமலும் போயினர். அவர்களது கோபமும் குழப்பமும் அவர்களை நெடுந்தூரம் தூக்கிச் சென்றது, மலைகளைத் தாண்டி, ஆற்றின் போக்கில், அவர்களால்  விட்டுச் செல்லப்பட்டவர்கள் அவர்களின்றி வாழக் கற்றுக்கொண்டார்கள். சில நேரம் அவர்கள் பாடல்களிலும் கதைகளிலும் நினைவுகூரப்படுவார்கள், இறந்தவர்களைப்போல.

தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:34

ராஜம்மாள் தேவதாஸ்

உயர்கல்வி கற்றவர்கள் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வசதியான பதவிகளில் அமர்ந்து மேலும் மேலும் வெற்றிபெறும்போது அதுவே இயல்பானது என நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் இந்தியாவின் பின்தங்கியச் சூழலையும், வசதியின்மைகளையும் குறைகூறுவது இன்று ஒரு பெரிய மோஸ்தர். அண்மையில் இணையம் வந்தபின் அவர்கள் இந்தியாவுக்கு அரசியல், பொருளியல், சமூகவியல் ஆலோசனைகளையும் சொல்லுவது மிகுதி.

ஆனால் உயர்கல்வி பெற்ற ஒருவர் இந்தியாவில் மிகமிக எளிய வாழ்க்கை வாழ்ந்து, இங்குள்ளவர்களுக்காக உழைப்பதைக் கண்டால் நமக்கு ஒரு திகைப்பு உருவாகிறது. நாமும் இங்குதான் இருக்கிறோம். அவர்களின் சேவை நமக்கு உதவுகிறது. ஆனால் நம் கனவுகள் முதல்வகையினரை ஒட்டியவை. இவர்கள் நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். நம் பாதையை குழப்புகிறார்கள்.

ராஜம்மாள் தேவதாஸ் அத்தகையவர். அவரைப்போன்றவர்களை இயக்கிய இலட்சியவாதம் காந்தியுடையது.

ராஜம்மாள் தேவதாஸ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:33

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

1

தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருடன் சேர்ந்தே வரும் சொல் ’பிறழ்வெழுத்து.’ வாசகர்களும், விமர்சகர்களும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நாம் காணலாம். அதுவே அவ்வெழுத்தாளனை வாசிக்க அவனது புனைவை மேலும் அணுகி அறிய வழிவகுக்கும். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு ஒரு முகவாயிலாக அந்த அடையாளப்படுத்தல் அமையும். அதன் எதிர் எல்லையில் அப்படி ஒரு எழுத்தாளனை அடையாளப்படுத்தும் போது அவன் மூர்க்கமாக தன் புனைவின் மூலம் அந்த அடையாளத்தை தவிர்க்க விரும்புவான் அல்லது அந்த அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அதன் உச்சபட்ச சாத்தியங்களை தன் புனைவில் நிகழ்த்திக் காட்டுவான். ஒரு எழுத்தாளன் தன் வாசகர்களோடு முட்டி மோதி சென்றடையும் இரண்டு சாத்தியங்கள் இவை. சாரு நிவேதிதா இரண்டாவது பாதையை தேர்ந்தெடுத்தார் என்றே எனக்குப் படுகிறது.

சாருவின் எழுத்தை பிறழ்வெழுத்து எனச் சொன்னதுமே அவர் எழுத்திற்கு புதிய வாசகனாக உள்ளே செல்ல என் மனதிற்கு தடை ஏற்பட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். அது தான் அவர் புனைவை நான் வாசிக்காமல் இருந்ததற்கு முதல் தடையாக இருந்தது என இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. இது சாருவின் புனைவுடன் நான் வாசகனாக மனதளவில் முரண்பட்ட முதல் கட்டம் என்றால் அதற்கு அடுத்த காலகட்டம் அவரை நான் அணுக்கமாக உணர்ந்த கட்டம்.

அதுவே சாரு என்ற ஆளுமையை நான் அறிய தொடங்கிய முதல் படி. அதற்கு முன் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பிம்பத்தை நானும் தொற்றிக் கொண்டு அவரை வாசிக்காமலே நிராகரித்து வந்திருக்கிறேன்.

2020 ஆம் ஆண்டு அரூ மின்னிதழ் நிகழ்த்தும் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு சாரு நிவேதிதா நடுவராக இருந்தார். அதுவே அவர் எழுத்தில் நான் வாசித்த முதல் கட்டுரை. அக்கட்டுரையின் நேர்த்தியும், கறார் தன்மையும் என்னை வசீகரித்தது. அதற்குக் காரணம் சாரு நிவேதிதா என என் மனதில் ஏற்றி வைத்திருந்த பிம்பம் முழுவதும் உடைந்து நொறுங்கிய முதல் தருணம் அது என்பதால் இருக்கலாம்.

அக்கட்டுரையை தொடங்கும்போதே ஆர்த்தர் சி. கிளார்க் எழுதிய கடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள் கதையிலிருந்து தொடங்குகிறார். தொடர்ந்து சமகால தமிழிலக்கியத்தின் இளம் படைப்பாளிகள் படைப்பில் வெளிப்படும் இலக்கணப் பிழைகளை வாக்கியப் பிழைகளை விமர்சகனாக மறுக்கிறார். அரூ கதைகள் அதனை எப்படி மீறி வந்தது எனக் குறிப்பிடுகிறார்.

அவருக்கு வழங்கப்பட்ட பதினைந்து கதையில் ஆறு கதைகளை அதன் கட்டுரைத் தன்மைக்காக நிராகரித்துவிட்டேன் இன்னும் ஒரு கதை சேர்த்தால் பத்து கதை வந்துவிடும் ஆனால் அதன் கட்டுரை தன்மை என்னை வெளியேற்றும் காரணத்தால் அதனை நிராகரித்துவிட்டேன் என சாரு எழுதிய இடத்தில் தமிழிலக்கிய விமர்சகனாக தன் கறார் தன்மை மூலம் எனக்கு அறிமுகமாகினார். அவர் அக்கட்டுரையில் திரும்ப திரும்ப கதை சொல்ல வேண்டும், கதையில்லாத கட்டுரைகள் எனக்கு உவப்பில்லாதவை என நிராகரிக்கிறார். இரண்டு, இவ்வாண்டின் தொடக்கத்தில் எழுத்தாளர் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல் வெளியீட்டு விழாவில் சாரு பேசியது. அதிலும் மேற்கூறிய விமர்சகனின் கறார் தன்மை வெளிப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வும் சாருவை ஒரு கறாரான, நேர்த்தியான ஆளுமையாக என் மனதில் நிலைநிறுத்தியது.

இத்தகைய நேர்த்தியான, ஒழுங்கு தன்மை கொண்ட ஒருவர் எழுத்தில் பிறழ்வெழுத்து எப்படி உருவாக முடியும்? நேர்த்தி என்பது ஒழுங்கிலிருந்து வருவது, சாருவின் சொல்லிலும், செயலிலும் தோன்றிய நேர்த்தி அவரது புனைவு வெளிப்படும் தருணத்தின் நேர்எதிர்நிலையில் வெளிப்படுபவை என பட்டது. அது பிறழ்விற்கு நேர் எதிரான மனநிலை. அதற்காக புனைவாசிரியன் புனைவை போல் தன் அன்றாடத்தை தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென நான் சொல்ல வரவில்லை. ஒரு ஆளுமையின் அம்சத்தில் அதன் கூறுகள் இயல்பாக தென்படும், அவை எதுவும் நான் பார்த்த சாருவில் இல்லை என்பதே நான் கூற வருவது.

பிறழ்வெழுத்து என்பதே நாம் ஒழுக்கம், நெறி என வகுக்கும் எல்லா கட்டுக்களையும் கடந்து செல்வது தான். மானுடம் உருவாக்கி வைத்த உச்சநிலைகள், விழுமியங்கள், ஒழுக்கங்கள், அறம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்குகிறது பிறழ்வெழுத்து. அப்படி ஒரு விழுமியங்களும் மானுடனில் இல்லை எனப் புனைவின் மூலம் நிறுவ முயல்கிறது. இது ஒரு வகையில் இலக்கணத்தை உடைத்துச் செல்லும் ஒரு மனத்தின் வெளிப்பாடு தான். சாருவை நான் பார்த்த வரையில் அவரது கட்டுரைகள் மூலம் அறிந்த வரையில் அவர் அப்படிப்பட்டவராக வெளிப்படவில்லை. அப்போது அவரது புனைவின் அடி நாதமாக வரும் மானுட இலக்கணங்களுக்கு எதிராக நிறுத்தப்படும் எதிர் விழுமியங்களை புனைவாக்குவது யார்?

இந்த இரட்டை தன்மையையே சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் இத்தருணத்தில் நான் ஆராய முற்பட்டது. அதன் பொருட்டு அவரது புனைவுகளையும், அபுனைவுகளையும் வாசித்தேன். அதிலிருந்து முன்னர் என் மனதில் இருந்த சாரு நிவேதிதா என்ற ஆளுமையின் பிம்பத்தை மறுபரிசீலனை செய்ய முற்பட்டேன்.  அதனை தொகுத்து எனக்கான ஒரு பதிலைக் கண்டடைவதே இக்கட்டுரையின் முயற்சி.

ஒரு பிறழ்வெழுத்தின் மனம் சமூதாயம் நாகரீகம், ஒழுக்கம் எனக் கட்டமைக்கும் ஒன்றை மீறிச் செல்ல வேண்டும். ஒரு சமூகத்தில் ஓர் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை என்றால் அது அந்த தனிமனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்த தனிநபர் ஒழுங்கு எனச் சமூதாயம் உருவாக்கி வைத்திருக்கும் ஒன்று தனக்கு இல்லை என்றே சொல்கிறான். அந்த ஒழுக்க மீறலே பிறழ்வின் முதல் படியாக இருக்க முடியும்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வரும் மைய கதாப்பாத்திரமான சூர்யா பாலாவிடம் தான் பத்து நிமிடம் காலத் தாமதமாக வந்ததற்கு பத்து பக்கத்திற்கு கடிதம் எழுதுகிறான். அதன் மூலம் தன் ஒழுங்கை நிலைநிறுத்தவே விரும்புகிறான். சூர்யா அக்கடிதத்தின் ஆரம்பத்திலேயே, “பத்து நிமிட தாமதம் பற்றி அப்போது என் மனதில் குற்ற உணர்ச்சியே மிகுந்திருந்தது” எனத் தொடங்குகிறான்.

அதே சூர்யா நீரஜாவை பார்த்த போது, “அவள் பம்பாய் வாசியாக இருந்த போதும் கையுள்ள ரவிக்கையே அணிந்திருந்தாள்” எனக் குறிப்பிடுகிறான். அதே நீரஜாவை சூர்யா அணுக்கமாக உணரும் தருணம் அவள் சூர்யாவின் சிகரெட் பெட்டியைப் பார்த்து, “எடுத்துக் கொள்ளலாமா?” எனக் கேட்கும் இடம்.

நீரஜா தன் பாவனை மொழிகள் மறந்து சூர்யா முன் தன்னை காட்டும் போதே அவளை அணுக்கமாக உணர்கிறான். அதே வேளையில் சூர்யா பாலாவிற்கு தன் பக்க நியாயத்தை பத்து பக்கத்திற்கு கடிதமாக எழுதிகிறான். இந்த இரட்டை மனநிலையை இக்கதாப்பாத்திரம் சூட காரணம் என்ன?

ஒரு வேளை பிறழ்வெழுத்து என சாரு உத்தேசிப்பது காமமும் அது சார்ந்த பிறழ்வும் தானா? என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. நாவலில் பிறழ்வு காட்டும் கட்டற்ற தன்மை சூர்யாவிடம் வெளிப்படவே இல்லை. மாறாக அவன் சந்திக்கும் பெண்களிடமே வெளிப்படுகிறது.

சூர்யா தன் சின்ன நைனா வீட்டில் தங்கி படிக்கும் போது அவனிடம் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் வந்து வழி கேட்கிறாள். சூர்யாவும் அதே வழியில் செல்வதால் அவளை உடன் அழைத்துச் செல்கிறான். சூர்யா ஹிப்பிகளுடன் சேர்ந்து அலைகிறான் என சின்ன நைனா கடிதம் எழுதி ஊருக்கு அனுப்புகிறார். சூர்யாவின் அம்மா அவனை விசாரித்ததும் சென்னை பல்கலைகழகத்திலிருந்து தஞ்சை பல்கலைகழகத்திற்கு மாற்றலாகி வந்துவிடுகிறான்.

மாறாக சூர்யா காணும் பெண்களான நீரஷா, கிரண், நளினி ஆகியோரிடம் ஒரு மீறல் தென்படுகிறது. அந்த மீறலை அவர்களை சூர்யாவிற்கு அணுக்கமானவர்களாக மாற்றுகிறது. கிரண் சூர்யா தன்னிடம் காட்டும் அன்பால் அவனை தந்தை என்றே நினைக்கிறாள். ஒரு நாள் அவள் அறையிலிருக்கும் போது ’Fuck me dad’ என சூர்யாவுடன் புணர்கிறாள்.

இக்கதையைக் கொண்டு சாருவின் நாவல்களில் வரும் ஆண் ஒழுக்கமானவன், பெண்கள் மீறல்கள் கொண்டவர்கள் என நான் சொல்ல வரவில்லை. நிறைய ஆண் கதாப்பாத்திரங்களும் இதே பிறழ்வு தன்மையுடனே வருகிறது. தன் பாம்படத்தை தர மறுக்கும் மனைவியை அடித்து வீட்டை விட்டு வெளியேறி மறுநாளே தற்கொலை செய்து கொள்ளும் ராமசாமி கதாபாத்திரம். சூர்யாவின் தாத்தாவான கோவிந்தராஜுலு நாயுடுவின் எட்டு குழந்தைகளின் வீழ்ச்சி, கிரணின் அப்பா கபூர், மையகதாப்பாத்திரமான சூர்யா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே சாருவின் எழுத்தில் ஆண், பெண் என்ற இருண்மையை கண்டடையாமல் விழுமியம், பிறழ்வும் என்ற இருண்மையை நோக்கியே நாம் பேச முடியும். நான் மேற்சொன்ன சூர்யா கதாப்பாத்திரம் போலவே சாருவின் எல்லா நாவல்களிலும் ஒரு கதாபாத்திரம் வருவதைக் காணலாம். ராஸ லீலாவில் வரும் பெருமாள் அத்தகையவர். இப்படி ஒவ்வொரு நாவலிலிருந்தும் ஒரு கதாப்பாத்திரத்தை சுட்ட முடியும். அப்போது முற்றிலும் பிறழ்வெழுத்தில் இந்த முறைமை பேசும் அல்லது விழுமியத்தின் ஒரு கூற்றை முன்வைக்கும் இவர்கள் யார்? அவர்களும் தன்னை முற்றிலும் பிறழ்வெழுத்தாளன் என அறிவித்துக் கொண்ட சாருவின் புனைவிற்கு என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடனே ஸீரோ டிகிரி நாவலை அணுகினேன். அதற்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையிலேயே எனக்கான விடை கிடைத்தது,

“படைப்பாளியின் தத்துவார்த்தக் குழப்பம் (Philosophical dilema) புரிகிறது. நிஜ வாழ்க்கை வேறாக இருக்க, பண்பாட்டுப் போர்வையில் மதிப்பிட்டு பதிவிரதா தர்மம் காக்கும், தமிழ்ச் சமூகத்தின் இரட்டை வேஷத்தைக் கலைக்க, எதிர்க்கலாச்சாரத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்தத் தயங்கவில்லை என்றாலும், ஆதார நிலையில் அவர் ஒரு ‘Moralist’ தான் என்ற உண்மையினின்றும் அவரால் தப்ப முடியவில்லை. இவர் ஒரே சமயத்தில் டாக்டர் ஜெகிலாகவும், டாக்டர் ஹைடாகவும் இருக்க முயல்வது தான் இவருடைய Tragedy” என்கிறார்.

ஸீரோ டிகிரி படிக்கும் போது எனக்கு அந்த குழப்பங்கள் அகன்றது. சாருவின் புனைவில் ஒரு Moralist உண்டு, அது சாரு என்ற ஆளுமையின் பிரதிபலிப்பு. மற்றவை, சாரு புனைந்த பிறழ்வுகளின் வெளிப்பாடுகள். தி.ஜானகிராமனில் இந்த Moralist அம்சம் ஓங்கி இருப்பதை நாம் காணலாம். தி.ஜானகிராமனிலிருந்து பிறழ்வு வாழ்வை நோக்கி சாரு புனைவு சென்ற தூரத்தை நான் பார்க்கலாம். ஆனால் அவருள்ளும் ஒரு அம்சம் Moralist ஆக வெளிப்படுவது தெரிகிறது.

இந்த இரண்டு எல்லைகளுக்குமான ஊடாட்டமே சாருவை புனைவு எழுத தூண்டும் அம்சமாக நான் பார்க்கிறேன்.

2

சாருவை மேலும் புரிந்து கொள்ள அவர் மொழிபெயர்த்த உலக சிறுகதைகள் தொகுப்பான ‘ஊரின் மிக அழகான பெண்’ தொகுப்பை வாசித்தேன். மரீயா லூயிஸா போம்பல் (Maria Luisa Bompal) எழுதிய மரம் என்ற சிறுகதை அதில் எனக்கு முக்கியமான கதையாக பட்டது. மரீயா லூயிஸா போம்பலின் வாழ்வே பிறழ்வு தன்மைக்கு சான்று. போம்பல் திருமணத்திற்கு பின் அதீத மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். போம்பலின் கணவர் யுலோஹியோ சாஞ்செஸிற்கு போம்பலின் இலக்கிய வாழ்க்கை பிடிக்கவில்லை. அவரை வதைக்கிறார், துன்புறுத்துகிறார். அதன் காரணமாக போம்பல் தீவிர மன அழுத்தத்திலும், தற்கொலைக்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார். ஒரு முறை தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். அதில் சாஞ்செஸ் பிழைத்தார். பின் போம்பல் ஜோர்ஜ் லார்கோ (Jorge Larco) என்னும் ஒருபால் சேர்க்கையாளருடன் திருமணம் செய்துகொள்கிறார். அதன்பின் சீலேயிலிருந்து தப்பி அர்ஜெண்டினா செல்கிறார். போம்பல் அங்கிருந்து அமெரிக்கா அங்கே ரபேல் டி செயிண்ட் பால் என்பவரை மணந்துக் கொள்கிறார். இதற்கு இடைப்பட்ட காலங்களிலேயே முதல் கணவர் சாஞ்செஸை மறைந்திருந்து கையில் மூன்று முறை சுடுகிறார், சுட்டுவிட்டு, “என் வாழ்வை சீரழித்தது இவன் தான். இவன் தான் என் வாழ்வை அழித்தான்” எனப் புலம்புகிறார். பின் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா, சீலே என நாடுகள் மாறி தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார்.

போம்பல் எழுதி சாரு மொழிபெயர்த்த கதை மரம். அக்கதையை படித்தவுடன் போம்பல் அடிப்படையில் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றே படுகிறது. அதற்கான காரணங்களும் அவர் தனி வாழ்வில் இருக்கிறது. மரம் சிறுகதையில் பிரிகிடா என்ற இளம்பெண்ணின் துயர வாழ்வு மூன்று அடுக்கு கதையாகச் சொல்லப்படுகிறது. அதுவே அக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது. கதையில் இசை ஒரு பின்னிணைப்பாக வருகிறது. அதில் வரும் இசை, கலைஞர்களின் இசையோடு பிரிகிடாவின் குழந்தைப் பருவத்தின் உக்கிரங்கள், அதன் குதூகலங்களைக் குறிக்க வருகிறது. பீத்தோவனின் ரொமாண்டிக் இசை இளம் பிரிகிடாவின் நிறைவேறாத காதலைச் சொல்ல வருகிறது என சாரு தன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். பிரிகிடா ஆறு பெண் குழந்தைகளில் இளையவள். ஆறாவதாக பிறந்ததாலேயே மற்ற ஐவர் கொண்ட சகஜமான வாழ்வை பிரிகிடாவால் பெற முடியவில்லை. வீட்டிலிருக்கும் அவள் தந்தையே தன் மகளை மனம்பிறழ்ந்தவள் எனச் சொல்லி வளர்க்கிறார். அதன் காரணமாக லூயிஸ் என்ற மத்திய வயது கடந்தவனை திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்கு பின்பாக பிரிவிடா உண்மையில் எப்படி தன் நிறைவேறாத காதல் மூலம் மனம் பிறழ்கிறாள் என்பதே கதை. அதில் பிரிகிடாவை குறிக்க மரம் ஒரு குறியீடாகவே வந்து கொண்டிருக்கிறது.

போம்பல் பெண்ணை இயற்கையின் ஒரு வடிவாகவே காண்கிறார். பெண்களுக்கென்று இயற்கையிலிருந்து உணர்ச்சிகளும், உள்ளுணர்வுகளும் கிடைக்கின்றன. பெண்கள் தனித்துவமானவர்கள் என்பது போம்பலின் தத்துவம். ஆண்களை புத்தி கூர்மையுடைவர்களாகவும், பலசாலிகளாகவும் போம்பல் பார்க்கிறார். பலசாலி என்பதாலே போம்பலின் பார்வையில் உணர்ச்சியற்றவனாகவும் ஆண் இருக்கிறான். மரம் கதையில் உண்மையில் பிரிகிடாவின் நிலைக்கு முதலில் அவள் தந்தை காரணமாகிறார். இரண்டாவது லூயஸ் அவள் கணவன் காரணமாகிறான். இத்தகைய ஆண்களால் பிரிகிடா ஒரு வெட்டுண்ட ரப்பர் மரமாகவே மாறிப் போகிறாள்.

இந்த தொகுப்பில் அதிதீவிர பிறழ்வு தன்மையுடன் எழுதப்பட்ட கதை என நான் நினைப்பது தலைப்பு கதையான ‘ஊரின் மிக அழகான பெண்’. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஒரு அமெரிக்க எழுத்தாளர். லாஸ் ஏஜெல்ஸ் நகரில் அவர் வாழ்ந்த கண்ட மனிதர்களின் வாழ்வையே கதையாக்கியவர். அவர் கதைகள் அடித்தள மக்களின் உறவுகள், உறவு மீறல்கள், போதைகள், பிறழ்வுகளைப் பற்றி பேசுபவை.

இத்தொகுப்பில் உள்ள ‘ஊரின் மிக அழகான பெண்’ சிறுகதை காஸ் என்ற அழகிய பெண் வருகிறாள். அவள் தான் ஊரிலேயே மிகவும் அழகானவள், இளையவளும் கூட. அவள் பிறழ்வு காமத்தில் உள்ளது. மனிதர்கள் தன்னை காமத்தோடு அணுகும் போது தன்னை சுயவதை செய்து கொள்கிறாள். அந்த சுயவதையில் இன்பம் காண்கிறாள். கதை சொல்லியை காஸ் சந்திக்கிறாள். அவனிடம் வெளிப்படும் அன்பை விரும்புகிறாள். ஆனால் அவனோடு காஸால் இயந்து வாழ இயலவில்லை. தன்னை சுயவதை செய்தே அழிந்து போகிறாள்.

நான் மொழிபெயர்ப்பு கதைகளைப் பற்றி இங்கே அதிகம் பேச விரும்பவில்லை. மேலும் அடிப்படையில் எனக்கு இந்த வகை கதைகள் மீது எந்த ஈர்ப்பு ஏற்படவில்லை என்றாலும் இவ்வகை கதைகள் உலக முழுக்க எழுதப்படுவதன் பின்னணியை பற்றி அறிய முற்படுகிறேன். அதனைக் கொண்டு சாருவை என்னளவில் வரையறுக்கப் பார்க்கிறேன்.

இந்த இரு கதைகளும் பிறழ்விலக்கியத்தின் இரு எல்லைகள். போம்பல் தன் சுய வாழ்க்கையிலிருந்து இந்த வகைமையை தெரிவு செய்தார் என்றால் ப்யூகோவ்ஸ்கி தன்னை சூழ்ந்துள்ள சமூகத்திலிருந்து இதனை தெரிவு செய்கிறார். நான் இதிலிருந்து போம்பலையோ, ப்யூகோவ்ஸ்கியையோ அறிய முற்படவில்லை. இதனை தெரிவு செய்து தொகுத்த சாருவை அறிய விரும்புகிறேன். சாருவின் இத்தொகுப்பில் இருப்பது தான் எழுதிக் கொண்டிருக்கும் இலக்கிய வகைமையின் உலக இலக்கிய ஆதாரங்கள்.

அதனைக் கொண்டு தன் இலக்கியத்தை மேலும் ஆணித்தரமாக முன்னிறுத்துகிறார். சாருவின் சிறுகதைகளான முள், பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி ஆகிய கதைகள் மேலே சொன்ன போம்பல், ப்யூகோவ்ஸ்கி ஆகியோரின் கதை வரிசையில் சென்று நிற்பதை நாம் அறிய முடியும். முள் சிறுகதையில் கதை சொல்லியின் தொண்டையில் அவன் அத்தை வருமன்று ஒரு மீன் முள் மாட்டிக் கொள்கிறது. அது அவள் திரும்பும் வரை அவன் தொண்டையிலேயே இருக்கிறது. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி டில்லியில் இந்திரா காந்தி படுக்கொலைக்கு பின் நிகழ்ந்த சீக்கிய இனப்படுக்கொலையின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை.

சாருவின் மனம் பிறழ்ந்து செல்லும் காமத்திலும், சமூதாயத்தின் மீது நம்பிக்கையற்ற மிருகத்தனமான படுகொலைகளின் பின்னணியையும் கதைக்கருவாக எடுப்பதைக் காணலாம். ராஸ லீலா, எக்ஸிஸ்டென்ஷியலியமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி என அவர் நாவல்கள் பெரும்பாலும் பிறழ்வு காமத்தை முன் வைக்கின்றன.

3

சாருவின் எழுத்தில் எந்த வித இலட்சியவாத நம்பிக்கையும், சமூக விழுமியங்களும் தென்படவில்லை. சாரு சார்த்தரின் இருத்தலியல் கோட்பாட்டையே தன் கதைகளில் முன் வைக்கிறார். அதற்கான உலக இலக்கிய ஆதாரங்கள் மூலம் தன் தரப்பை தீவிரமாக நிறுவவும் செய்கிறார்.

ஈரோடு இலக்கிய சந்திப்பின் போது ஈரோடு கிருஷ்ணன் சாருவின் 7th Seal கட்டுரையை முன்வைத்து ஒரு கருத்தை சொன்னார். இக்கட்டுரையில் சாரு இந்த படத்தில் எந்தெந்த காட்சிகளை முன்னிறுத்துகிறார் எனப் பார்த்தால் நமக்கு அவர் சொல்லும் பிறழ்விலக்கியம் புரியும். இந்த படத்தில் நடைமுறையிலிருந்து பிறழ்ந்து செல்லும் மனிதர்களே சாருவிற்கு முக்கியமாக படுகின்றனர். மாறாக படத்தில் வேறு சில இடங்களும் உள்ளன. அவை சாருவின் கட்டுரையில் இடம்பெறவில்லை. இக்கட்டுரைகளை அவரது புனைவை நோக்கி செல்லும் ஒரு பாதையாகவே நான் பார்க்கிறேன் என்றார்.

இப்படி தன் புனைவின் மூலம், கட்டுரைகளின் மூலம், மொழிபெயர்ப்பின் மூலம் சாரு முன்னிறுத்த நினைப்பது பிறழ்வெழுத்து இலக்கியத்தை மட்டுமே. இதில் வாசகனாக ஒருவனுக்கு அதில் ஏற்றுக்கொள்ள கூடிய அம்சங்கள் இல்லை என்றால் அதனை வாசகனே நிராகரிக்கும் பின் அமையியல்வாத பாணி கதைகளே சாருவினுடையவை.

“Author is Dead” வாசகனும் பிரதியும் மட்டுமே உள்ளது. வாசகன் அந்த பிரதியை தன் கற்பனை சாத்தியத்தின் மூலம் விரித்துக் கொள்ள வேண்டியது அவன் கடமை என்னும் பின் நவீனத்துவ கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை அவரது கதைகள்.

ஆனால் எனக்கு அக்கொள்கை உவப்பானதாக இல்லை. வாசகனாக நான் மீண்டும் ஆசிரியன், பிரதி இரண்டையும் கருத்தில் கொண்டே முன் செல்ல விழைகிறேன். அவர் பிரதி மூலம் சாரு ஏன் ஒரே தரப்பை, எழுத்து வகைமையை திரும்ப திரும்ப பேச விழைகிறார் எனப் பார்க்கிறேன்.

நான் மேலே உதாரணமாக சொன்ன கோம்பலை போலோ, ப்யூகோவ்ஸ்கி போலோ சாரு தன் சுயவதை மூலமோ, தன் வாழ்வியல் சார்ந்தோ பிறழ்வெழ்த்தினுள் சென்றவரோ, சமூதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் வாழ்வியலை சொல்ல இவ்வெழுத்து வகைமையை எடுத்துக் கொண்டவரோ அல்ல.

மேலே சொன்ன சீலே எழுத்தாளரோ, அமெரிக்க எழுத்தாளர்களோ சாருவின் முன்னோடியாகவும் கொள்ள முடியாது. அப்படி இங்கே இந்நிலத்தில் இல்லாத ஒன்றை அமெரிக்கா முன்னுதாரணமாக கொண்டு எழுதினால் என்னளவில் அது ஒரு Fake Literature தான். ஆனால் சாரு நிவேதிதா தமிழ் நிலத்தில் முன் வைக்கும் பிறழ்வெழுத்து எந்த வகையில் மேலே சொன்னவற்றோடு வேறுபடுகிறது, எந்த வகையில் இங்கிருந்து எழும் இலக்கியமாகிறது என யோசித்து பார்க்கிறேன்.

ஒன்று, சாரு நிவேதிதா தன் வாழ்வியல் களங்களான மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையே இலக்கியமாக்குகிறார். அவர்களில் பிறழ்ந்தவர்களே அவரது பேசு பெருளாக உள்ளது. அதில் நான் மேலே சொன்னது போல் நூற்றில் ஒருவர் Morality யோடு காணப்படுகிறார். அந்த ஒருவர் மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரின் வாழ்வையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு, முன்னர் சொன்னது போல் சாருவிற்கு உக்கிரமான தனி வாழ்க்கை கோரங்களோ, சமூக கோரங்களோ இல்லை. ஆனால் இந்த வகை எழுத்திற்கு நம் சமூகத்தில் எப்போதும் இடமிருந்து கொண்டே இருந்திருக்கிறது. அந்த மரபில் ஒருவராக சாரு நிற்கும் போதே இங்கிருந்து எழும் புனைவாகிறது.

சாரு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை பற்றிக் குறிப்பிடும் போது, ”ப்யூகோவ்ஸ்கியின் கதைகளில் தமிழ்ச் சூழலில் மொழி பெயர்க்கக்கூடிய அளவுக்கு என்னால் தேர்ந்தெடுக்க முடிந்த கதை இது ஒன்று தான். வேறு கதைகளை மொழிபெயர்த்தால் ஆபாச தடை சட்டம் என் மேல் பாயும்” எனக் குறிப்பிடுகிறார். எனக்கு அதில் முற்றிலும் மாற்று கருத்து உள்ளது.

நம் நிலம் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை விட முற்றிலும் பிறழ்வு காமத்தை, போகத்தை அனுமதிக்கும் நிலமாகவே இருந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1980 வரை கப்பல் பாட்டு என்னும் கரகாட்டத்தின் துணை ஆட்டம் நிகழ்ந்துள்ளது. இது ஊருக்கு ஒதுக்குபுறமாக பெண்கள் அதிகம் வராத இடமாக பார்த்து நிகழ்த்தப்படும்.

ஒரு கப்பலில் ஒரு முனையில் மருமகனும், மறுமுனையில் மாமியாரும் அமர்ந்திருப்பார். அவர்கள் இருவருக்கும் நேர் எதிர் முனையில் கோமாளி அமர்ந்திருப்பான். கோமாளி, மருமகனும், மாமியாருக்கும் உள்ள உறவை ஊரறிய பாடத் தொடங்குவான். மருமகன் மாமியாரை ஏசி அவள் நடத்தைகளைப் பற்றி பாடுவான். பதிலுக்கு மாமியார் பாடுவாள். இது ஒரு இரவு முழுவதும் நிகழ்ச்சியாக நிகழும். இதில் வார்த்தைகளும், செய்கைகளும் எல்லை மீறிச் செல்லும் தருணங்கள் அடிக்கடி நிகழும்.

இதே போல் ஒவ்வொரு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நிகழ்த்து கலை இருந்திருக்கிறது. அவை காலப்போக்கில் கரகாட்டத்தின் துணையாட்டமாக மாறி பின் செல்வாக்கு இழந்து அழிந்து போகின. இவற்றை ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலை களஞ்சியத்தில் தொகுத்திருக்கிறார்.

இலக்கியத்தில் உதாரணமென்றால் கம்பனின் அகலிகை கதையில் சுட்டப்படுவது பிறழ்வு காமமே. அகலிகை தூயவளாக இந்திரனோடு புணர்ந்தது அகலிகையின் மாயை, அகலிகை கவுதமர் என நினைத்தே கூடினாள் என்ற கதைகள் கடந்து ஐநூறு ஆண்டுகளில் உருவாகி வந்தவை. பத்மபுராணத்திற்கு பின்பு உருவாகி வந்த அகலிகை கதை.

கம்பனில் அகலிகையின் காமம் ஒரு தீற்றலாக வந்து செல்கிறது. ”அவேளாடும் காமப் புது மண மதுவின் தேறல் ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்” உணர்ந்தாள் என கண நேர அகலிகையின் காமத்தையும் சேர்த்தே கம்பன் உருவாக்குகிறான். அகலிகை கதையில் வாய்மொழி மரபின் செல்வாக்கு அதிகம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்திரன் பூனையாய் போவதும், சேவலாய் வருவதும் கம்பன் வாய்மொழி மரபிலிருந்து பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அகலிகையின் காமத்தை கண நேர தீற்றலாய் கம்பன் சொல்லிச் செல்வதையும் அங்கிருந்து பெற்றிருக்கலாம் என நான் ஊகிக்கிறேன்.

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் கம்ப ராமாயணத்திலும், கலிங்கத்துபரணியிலும் போர் சூழலில் அறமும் விழுமியங்களும் பேசப்பட்டதற்கு நிகராக பிறழ்வு நிகழ்வுகளும் வருகிறது எனக் குறிப்பிடுகிறார்.

மகாபாரத போரே அத்தகைய பிறழ்வு நிலையில் நிகழ்ந்தது தானே. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையின் கரு உபபாண்டவர்களிடம் இருந்தே இம்மண்ணில் தொடங்கி விட்டதே. மகாபாரதமோ, கம்ப ராமாயணமோ அப்பிறழ்வு நிலைகளை மட்டுமே தன் பேசு பொருளாக கொள்ளவில்லை என்பதே வேறுபாடு.

எனக்கு சாரு நிவேதிதா கப்பல் பாட்டும், பிற செவ்வியல் ஆக்கங்களும் கொண்டுள்ள பிறழ்வு நிலையின் நவீன தொடர்ச்சி என்றே பார்க்கிறேன். அவை அனைத்திலும் உள்ள பிறழ்வு தருணங்களை மட்டும் தன் கதையில் எடுத்துக் கொள்கிறார். இன்னும் சொல்லப் போனால் கப்பல் பாட்டு என்னும் ஒரு நிகழ்த்து கலை முன்வைத்த பிறழ்வை விட சாரு தன் எழுத்தில் முன்வைத்து கம்மி தான். ராமாயணமும், மகாபாரதமும் சென்று தொட்ட பிறழ்வில் ஒரு சதவீதம் கூட சாரு எழுத்து தொடவில்லை என்றே படுகிறது. ஒரு நவீன எழுத்தாளனாக சாரு முன்னே சொன்னவைகளின் தீற்றலையே தன் எழுத்தில் மறு உருவாக்கம் செய்கிறார்.

எனவே சாரு தன்னியல்பாக கப்பல் பாட்டு கலைஞனின் நவீன மரபாகிறார். தன் தரப்பை வலுசேர்க்க கோம்பலையும், ப்யூகோவ்ஸ்கியையும் தன்னுடன் எடுத்துக் கொள்கிறார். உலக சினிமாக்களில் தன் தரப்பை காண்கிறார்.

இதனை சொல்லும் போதே இதற்கான எல்லைகளையும் சுட்ட வேண்டியுள்ளது. நான் முன்னர் சொன்னது போல் செவ்வியலக்கியங்கள் பிறழ்வை மட்டுமே பேசுபொருளாக கொள்ளவில்லை. கப்பல் பாட்டு போன்ற நிகழ்த்து கலைகள் இங்கே வில்லுபாட்டு போல் பெரும்போக்காக நிகழ சாத்தியமற்றவை. அவை அங்கே ஊர் எல்லையில் எந்த எதிர்ப்பும் இன்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கும். சாருவின் எழுத்தும் தொடர்ந்து வரும் இந்த மரபின் ஒரு கண்ணி என்பதால் முக்கியமானது. அதே போல் அதற்கான எல்லைகளை வகுத்துக் கொண்டது.

பிறழ்வு காமம், வன்மம் அருவருப்பு மட்டும் தன் பேசுபொருளாக கொள்ளும் போது அது வெகுவாசிப்புக்கு எதிரான ஒன்றாக தன்னியல்பிலேயே அமைந்து விடுகிறது. ஆனால் அவை எழுப்பும் கேள்வி நாம் சென்று தொட நினைக்காத நம் அடி மன ஆழத்தின் பிறழ்வுகளை அதன் காமங்களை, வன்மங்களை, அருவருப்பை நம் முன் சுட்டிக் காட்டுவதனாலேயே நாம் அதனை சென்று தொட தயங்குகிறோம் என வாசகனாக உணர வேண்டும். எனவே இவ்வகை எழுத்து எல்லோருக்கும் உவப்பானதல்ல. ஆனால் இவை இங்கே இப்போது முளைத்தது அல்ல, என்றென்றும் என இங்கே இருந்துக் கொண்டிருப்பது. அதன் இன்றைய கண்ணியாக சாரு உள்ளார்.

இறுதியாக, அழகர்கோவிலின் கிழக்கு கோபுரத்தை முற்றாக கண்டவர்களுக்கு ஒன்று தெரியும். அதன் மையத்தில் விஷ்ணு பாற்கடலில் பள்ளிக் கொண்டு அமர்ந்திருப்பார், கண்ணன் காளிந்தி நடனம் ஆடிக் கொண்டிருப்பான். முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும், அசுரர்களும் அதில் இருப்பார்கள். மும்மூர்த்திகளும், அவர்களின் துணைவியரும், திசை தேவர்களும் அதில் உண்டு. அதன் தெற்கு மூலையில் ஒரு பெண் மூன்று, நான்கு ஆண்களுடன் புணரும் சிற்பமும், ஒரு ஆண் நான்கு பெண்களுடன் புணரும், குரங்கு, குதிரையுடன் புணரும் சிற்பம் அங்கே உண்டு. ஆண் குரங்குடன் புணரும் சிற்பம் கூட அங்கே உண்டு.

அங்குள்ள அனைத்து சிற்பத்தையும் பார்த்த பின் அந்த பீபத்ஸ ரசம் தருணம் சிற்பங்களை பார்த்து ரசிப்பதும், அருவருத்து விலகி செல்வதும் அவரவருக்கானது. பெரும்பாலும் அச்சிற்பங்களை மனித மனம் தவிர்த்து செல்லவே விரும்பும். ஆனால் அச்சிற்பம் அங்கே என்றும் இருக்கும், அதன் பின்னால் உள்ள சிற்பியும் அச்சிற்ப வடிவில் இருப்பான். அங்கிருந்து நம்முள் இருக்கும் பீபத்ஸத்தை நமக்கு சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பான். அதுவே மொத்த கோபுரத்தில் அவனது பணி. சாரு அந்த பீபத்ஸ சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் நவீன தொடர்ச்சி என்றே நான் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருது பெறும் சாரு நிவேதிதாவிற்கு வாழ்த்துக்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:33

போகனின் திகிரி

திகிரி வாங்க

போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி,  பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள்  என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது என்றேதோன்றுகிறது. இந்த எண்ணத்தாலேயே   பொதுவான பலதரப்பட்டகருக்களை கையாளும் தொகுப்புகளை விட இதுவேறுபடுகிறது. ஒரே கரு வெவ்வேறு சூழலில் படைப்பாளியால் எப்படி கையாளப்படுகிறது என்பது ஒரு நல்ல அனுபவம். எழுத்தாளர் ஒருகவிஞரும்என்பது இன்னும் சிறப்பு உவமைகள், படிமங்கள்மொழி அழகுடன் கதைகளை இன்னும்அனுக்கமாக்குகிறது.

இத்தொகுப்புக்கான  விமர்சனங்கள் சில இது வெறும் பெண்ணின் துயரமும்அதற்கு மூலகாரணம் ஆண் என்று மட்டுமேபேசுகின்றன. ஆனால் திகிரி தொகுப்பை அப்படிசுருக்கி விட முடியாது.

பெண்ணின் துயர்ப் பின்னணியாக இருந்தாலும் இந்தகதைகள் அதன் வேர்களை ஆராய்கிறது. ஆணுக்குபெண்ணின் உடல் என்பது எப்படி பொருள்படுகிறது, சில கதைகளை கவனித்தால்   ஆணின்உளச்சிக்கல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது  அதாவது அவன் பெண்உடல்மீது கொண்ட இச்சையும் உடைமையும் அதே சமயம்அந்த செயல்களால் அடையும் வெறுப்பும் என அவனை அழைக்கழிக்கிறது.  அதுவே அவனின் கூரூரத்திற்குகாரணமோ என எண்ணத் தோன்றுகிறது”திகிரி”என்னும் கதையில் இது ஆழமாகவிவரிக்கப்பட்டுள்ளது இந்த கதை ஒரு மிஸ்டிகல்அனுபவம் தரக்கூடியது. கதைசொல்லி ஏன்சமணகுன்றுக்கு சென்றான், இந்த படுகளத்தில் ஓயாதுநடக்கும் இந்த துயரங்கள் ஒரு சுழற்சி என்று கண்டுகொள்கிறான். இந்த கதைக்குள் சொல்லப்படும்ஒரு தொல்  கதையின் பெண் கதாபாத்திரம் கடந்தகால சம்பவங்களை நிகழ்கால சம்பவங்களுடன்இணைக்கிறது, அதாவது வெவ்வேறு காலங்களில்வெவ்வேறு காரணங்களால் நடைபெறும் ஒரேவகையான துயரம் . கதைசொல்லி ஒருஉண்மையையும் இங்கே ஒளி வடிவான திகம்பர பிம்பம்மூலம் கண்டடைகிறான் ” அறியாமையை வழிபடுகிறவர்இருளில் ஆழ்கிறார் அறிவை வழிபடுகிறவர் இன்னும்  ஆழ் இருளில் ஆழ்கிறார்” இந்த வாக்கியத்தை  சிந்தித்தால் ஒரு நடுக்கம் வராமலில்லை, எப்போதும்மாறாமல் தொடரும் நிகழ்வுகள் கடவுளின் பகடைக்  காய்கள்.

முதல் கதையான  “தீட்டு” கோமதியின் உணர்வுகளைஇயல்பாக கடத்தி விடுகிறது. எல்லா பக்கமும் அவள்மறுக்கப் படும்போது இந்த உலகமே கல்ஆகிவிட்டதா என்றெண்ணும் அவள் அக உலகத்தில் நாமும்நுழைந்து விடுவோம். அவளின் உடல் சார்ந்தஅடையாளங்களால் இழிவு செய்யப்படுகிறாள், பால்யகாலத்தில் அவளுடைய  அடிமுட்டாளானநண்பனும் அவளை பெண் பார்க்க வந்து நிராகரிக்கிறான். அவளின் கடை முதலாளி அவளை இழிவு செய்யும் அதே சமயம் அவள் மேல் இச்சையும்கொள்கிறார். வேறு வழியில்லாமல் தன் வாழ்வின் ஒரேநம்பிக்கையான ஆச்சியைக் காப்பாற்ற அவனிடம்முன்பணம் கேட்கிறாள். அவன்   அவளை இருட்டின்ஒரு மூலையில் அணைத்து  இச்சையை தீர்க்கையில்”தீட்டாயிருச்சுன்னே” என்கிறாள்உடம்பெல்லாம்”தரித்திரம்” என்று அவர் கைஉதறிசென்றுவிடுகிறார். அங்கே தொங்கும் படத்தில்சிவனின் கழுத்திலுள்ள பாம்பு அதன் கண்கள் மினுங்கஅசைவது போன்ற காட்சி  முதலாளியின் இச்சைமற்றும்  சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் படிமமாக  உள்ளது.

முதல் கதையிலிருந்து அடுத்தடுத்த கதைகள் இந்தஉறவு சிக்கலையும் அதில் ஒரு சமநிலையைக்காணவும் செய்கிறது “ஜெயமோகனின் கள்ளகாதலி”. தலைப்பு விஷேஷத்திற்காகவே இது அதிகம்வாசிக்கபட்டிருக்க வாய்ப்புள்ள கதை  ,பெயருக்கேற்றாற்போல் மெல்லிய பகடிகளும் உள்ளதுஅது போகன் ஸ்பெஷல். இந்த கதை போதகர் ஜெயச்சந்திரனின்  பெண்மை காமம்  குறித்தானவெறுப்பின் மீது ஒரு மாற்று உண்மையைகாணச்செய்கிறது. கதைசொல்லி “லேடி சாட்டர்லிகாதலன்” என்னும் கதையின் மூலமாக பெண்ணைமுழுதாக விரும்புவதை  பெண்ணின் உடலை முழுதாகஏற்ற பின்னே அடுத்த நிலை தூய அன்பு சாத்தியம் எனவேறொரு கதை மூலமும் சொல்கிறான்.

தொகுப்பின் கடைசி கதையான “சிறுத்தை நடை” மலை பிரதேசத்தில் நடக்கிறது கார்மல் என்னும்வக்கிரகுணம் கொண்ட கணவன். அவன் மனைவிஸ்கார்லெட் அவனின் கொச்சை வார்த்தைகளால்புண்படுகிறாள்  ” நீ யாரோடாவது படுக்கவேணும்என்று தோன்றினால் என் மேல்அதிகாரியிடம் படு, அதுநமக்கு உபயோகப்படும்” என்னும் வரிகளிலேயே அவன்வெளிப்பட்டாலும் இவனை புரிந்து கொள்வது சற்றுகுழப்பம் தான்.இந்தக் கதையில் இரண்டு விதமானஅடக்குமுறை உள்ளது, ஒன்று சாக்கோ என்னும்சங்கரலிங்கம் மீது செலுத்தப்படும் வன்முறை அவன்கூறும்கதைகள் மூலம் அவன் பின்னணியைஊகிக்கலாம். மற்றொன்று அடக்குமுறை என்பதை  விட ஒரு பெண்ணின் சூழலைபயன்படுத்திக்கொள்ளும் ஆணின் இச்சை.ஸ்கார்லெட்டிடம் எல்லோரும் இது சமவெளி அல்லஇது காடு இதன் தெரியாத பக்கங்கள் மோசமானதுஎன சொல்கிறார்கள். அவள் நட்டு வைக்கும் நாட்டுரோஜா அங்கே பூஞ்சை பிடித்து வாடிவிடுகிறது,கதையின் இறுதியில் ஸ்கார்லெட் ஸ்தம்பிகும் விதமாகவேலைக்காரன் முனுசாமியின் சிறுத்தை முகம் வெளிப்படுகிறது.

இப்படி எல்லாக் கதைகளிலும் பெண்ணின்உணர்வுகளை நுட்பமாக புண்படுத்தும் காட்சிகள்உள்ளன. அதே சமயம் இத்தொகுப்பில் வழக்கங்களைஉதறி பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளும்சாத்தியமுள்ள கதைகளும் உள்ளது. “க்ளிஷே” என்னும் கதையில் தாய்க்கும் மகனுக்கும் நடக்கும்உரையாடல் வெளிப்படையாக ஒரு தாயின் அல்லதுகணவனைப் பிரிந்த பெண்ணின்  அக உணர்வுகளை வெளிப்படுத்துகிறது . மகனும்  “என் மழைக்காலஇரவுகள் எப்படிப்பட்டவை என உனக்கு புriயவேபோறதில்லை” என சொல்லும் தாயின் உணர்வுகளை    புரிந்துகொள்ளும்  ஒரு “நவீன”இளைஞன். முகம், ஆடை  கதைகள் ஆணின் ரொமான்டிக் பாவனைகளும் உண்மையான  இக்கட்டு சூழலில்அவனின் தப்பித்து செல்லும் மனோபாவத்தையும்சொல்கிறது. “கூண்டில் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவிபிரபஞ்சத்தில் ஒரு  பதற்றத்தை ஏற்படுத்துகிறது” என்னும் தமிழ் செல்வியின் கவிதை வரி  குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுப்பின் கதைகள் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கும்ஒருதேடல், அதன்வழி ஆணின் மனதையும். எத்தனை எழுதினாலும் இது நீளும்என்றே தோன்றுகிறது. கடவுளின் வக்கிரங்கள் ஆணுக்கும் கடவுளின் துயரங்கள் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது,இதில் சமநிலை காண்பதே  அல்லது காணமுயற்சிப்பதே வாழ்க்கை என்னும் உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு.

விஷ்ணுகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 10:31

December 7, 2022

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் – மமங் தாய்

திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாகவே அமைந்துவிட்டது. தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா ஒரு தனித்த வழியில் செல்பவர். அருணாச்சலப் பிரதேசமும் அப்படித்தான். மறைந்திருக்கும் நிலம் என அதை மமங் தாய் குறிப்பிடுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் இலக்கிய முகம் என அறியப்படும் ஆளுமை. இதழியல், சமூகப்பணி, நாட்டாரியல், கல்வி, இலக்கியம் என பல தளங்களில் சாதனைகள் நிகழ்த்தியவர். விஷ்ணுபுரம் 2022 விழாவின் சிறப்பு விருந்தினராக மமங் தாய் கலந்துகொள்கிறார்.

மமங் தாய் தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 10:36

மமங் தாய் கவிதைகள்

மமங் தாய் – தமிழ் விக்கி

மமங் தாய் 2022 விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அவர் எழுதிய கவிதைகள்

பிறப்பிடம்

 

அந்த மழைக்கும் மேகப்பெண்ணுக்கும்

பிறந்த பிள்ளைகள் நாங்கள்,

கற்களுக்கும் பாறைகளுக்கும் சகோதரர்கள்,

எங்கள் பெரிய வீடுகளில்

மூங்கில்களாலும், கொடிகளாலும் ஆன   தொட்டிலில்

நாங்கள் உறங்கினோம்,

காலைநேரம் வந்தபோது

புத்துணர்வுடன் எழுந்து கொண்டோம்.

 

அந்நியர்கள் என்று எங்கள்

பள்ளத்தாக்குகளில் யாரும் இல்லை.

சிறு சிறு குடிகளாக நாங்கள் பெருகியதால்

ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே உணர்ந்துகொள்வோம்

இலக்கு எங்களுக்கு  எளிதானதாக இருந்தது

திசை நோக்கி பயணிக்கும் சூரியன் சந்திரனைப் போல,

முளை விடும் பச்சைத்தளிர் போல.

 

தண்ணீரின் முதல் துளி

மனிதனை பிரசவித்தது.

செந்தண்டில் இருந்து

பச்சை தண்டில் இருந்து

எங்கும் பரவும் காற்றில் இருந்து

 

நாங்கள் வந்திறங்கினோம்

தனிமையில் இருந்தும் அதிசயங்களில் இருந்தும்.

 

 

தொலைந்துபோன தொடர்பு

 

அப்போது எனக்கு நினைவில் இருக்கும்

வளைந்த போது அந்த பெரும் நதி

ஆதி சூரியனின் நெருப்போடு வளைந்ததை.

சிவப்பு கம்பளக்காரர்களின் நிலத்திலிருந்தும் அந்த விஷச் சடங்கிலிருந்தும் வெளியேவந்த அந்த ஏழு சகோதரர்கள் தெற்கு நோக்கி தப்பியோடினர், இருவாய்ச்சிப் பறவைகளின் கோடைக்கால கூட்டின் அமைதியைக் குலைத்து விட்டு.

 

நினைவிருக்கிறது பறக்கும் தூசியும்,

ஒரு நெடிய பேரொலியாக வீசும் காற்றும்

ஆற்று வண்டின் பயணத்தை தடுத்துக் கொண்டும்,

ஆண்களும் பெண்களும் வாழ்ந்த குகைகளின் விஷச் சூழலில்

இரவை எதிர்கொண்டு மூடிய விஷத்தைக் காத்துக் கொண்டும்

 

எந்த ஆவணமும் இல்லை.

இந்த ஆறு தான் எங்களின் பச்சையும் வெள்ளையுமான நரம்பாக இருந்தது

புதிய நிலங்களை இணைக்க,

நிலத்தின் மீது கொண்ட மோகத்திற்காக சகோதரனும் சகோதரனும்

சூரிய உதயத்திற்கும் அதன் மறைவிற்கும் உரிமை கொண்டாடி

அது கற்களால் தீர்மானிக்கப்பட்டது

மறைந்து விட்ட  நிலத்தில் எங்கோ பதியப்பட்டிருக்கிறது.

 

அந்த செவிட்டுப்பெண்கள் ஒளியின் வேர்களை கட்டும்போது தேய்ந்து மறையும் குரல்கள் என்  நினைவிலிருக்கும்

பழங்குடி குழந்தைகளின் முதல் கதைகளில்

நதியின் குரல் நினைவிருக்கும் ;

வேறெங்கு நாங்கள் பிறந்திருக்க முடியும்

வேறு எந்த மக்களாக நாங்கள் இருக்க முடியும்

நினைவுகளில் இருந்து அல்லாமல்

அமைதியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரும் உடலுமாக

நீர் மற்றும் பனி, இரட்டை கடவுள்கள் நீர் மற்றும் பனி

அந்த பள்ளத்தாக்கில் இருக்கும் வனத்திலிருந்து

அந்த மேகப்பெண்  எப்போதும் அழைக்கிறாள்

 

நினைவிருக்கட்டும், எதுவும் முடிந்து விடவில்லை,

ஆனால் மாறிவிட்டது.

நினைவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் வடிவம்தான்

வெளிறிக் கொண்டிருக்கும் இந்த உடைமைகளின் காட்சியில்

பெருங்கடலுக்கு அப்பால் இருக்கும் நிலத்தில்

எல்லாம் மாறிவிட்டது, ஆனால் எதுவும் முடிந்து விடவில்லை;

 

அந்த கிராமங்களில் இன்னும் அந்த அமைதியான மலைவாசிகள் காத்திருக்கிறார்கள்

வாக்களிக்கப்பட்ட அந்த காகிதங்களுக்கும் அதில் இருக்கும் சொற்களுக்கான அர்த்தங்களுக்கும்

 

சிறிய நகரங்களும் அந்த நதியும்

 

சிறிய நகரங்கள் எனக்கு எப்போதுமே மரணத்தை நினைவுறுத்தும்

என் சொந்த ஊர் அந்த மரங்களினூடே அமைதியாக வீற்றிருக்கிறது

எப்போதுமே ஒரே மாதிரிதான் இருந்தது

கோடையில், அல்லது புழுதி பறந்து கொண்டிருக்கும் குளிரில்

அல்லது பள்ளத்தாக்குகளில் ஊளையிட்டு இறங்கும் காற்றில்.

 

அன்றுதான் யாரோ இறந்திருந்தார்.

அந்த மயான அமைதியில் நாங்கள் அழுதிருந்தோம்

துயர் சுமந்த  சம்பங்கிமலர்  வளையத்தைப் பார்த்து.

ஜனனமும் மரணமும்,  ஜனனமும் மரணமும்

சடங்குகள் மட்டுமே நிரந்தரமானவை

 

நதிக்கு ஆன்மா உண்டு.

கோடையில் அது பெருந்துயரின் வெள்ளமென

நிலத்தை ஊடறுத்துப் பாய்கிறது. சில நேரங்களில்,

சில நேரங்களில் அந்த நதி சற்றே நிதானித்து

மீன்களையும் நட்சத்திரங்களையும் இந்த நிலத்தில்

தேடுவதாக நான் எண்ணுவதுண்டு.

 

நதிக்கு ஆன்மா உண்டு-

நீண்டு நகரைத் தாண்டிச் செல்லும் அதற்கு தெரியும்,

வறண்ட நிலம் ஏங்கியிருக்கும்

மழையின் முதல் துளியில் இருந்து

மலையுச்சியின் பனிமூட்டம் வரை

நதி அறியும்

நீரின் சாகாவரம்.

 

உற்சாகமான சித்திரங்களால் ஆனதாக

பாலியகாலமாக நிரம்பியுள்ளது.

சிறு நகரங்கள் பதற்றத்துடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன

எதிர்கால தலைமுறைகளுக்காக …..

இறந்தவர்கள் மேற்கு நோக்கி வைக்கப்படுகிறார்கள்

அந்த ஆன்மா எழும்போது

பொன்னிற கிழக்கை நோக்கி நடக்கும்

பகலவனின் இல்லத்திற்குள் செல்லும்.

 

அந்த குளிர்ந்த மூங்கிலில்

வெய்யோனின் ஒளியில்

உயிருக்கு பொருள் உண்டு, இப்படி…..

 

ஆற்றங்கரையோரம் இருக்கும் சிறுநகரங்களில்

நாங்கள் எல்லோரும் அந்த தெய்வங்களுடன் இணைந்து நடந்திடவே  விரும்புகிறோம்…..

 

நினைவலைகள்

 

இதெல்லாம் சாதாரணம் என்று ஏன் எண்ணியிருந்தோம்

ஒவ்வொரு கோடையிலும்  மழை பெய்யுமென்றும்,

இரவுகள் உறக்கத்தால் நிறைந்திருக்குமென்றும்

சாலையின் ஓரங்களிலெல்லாம் முடிவற்று

அந்த பச்சைப் பெரணிச் செடிகள் நிறைந்திருக்கும்  என்று

 

உயிர்வாழ்வது எளிதானது என்று ஏன் எண்ணியிருந்தோம்

நதிகளும் நஞ்சைகளும் நிலைபெற்றிருக்கும் என்று எண்ணினோமே,

அந்நியர்களின் கனவுகளில் கூட இது அசைக்கமுடியாததாக இருந்ததே

சூரியன் எங்கு உறங்கும் என்று கூட அறிந்திருந்தோமே

அதோ அந்த மலை மடிப்புகளின் மெளனத்தில்தானே

 

காடு ஒரு பெருந்திண்ணி

அந்த பச்சைக் கம்பளத்திற்குள் அதிபயங்கரத்தை பதுக்கிவைத்திருந்தது.

சடங்குகளின்  தெய்வங்கள் பிழைத்திருக்கும் என்று ஏன் நம்பினோம்

நினைவில்கூட மரணமில்லா வாழ்வை கொண்டிருந்தனவே,

மரங்களில் கற்களில் மழலையின் உறக்கத்தில்

ஆனால் இப்போது

கண்களை மூடிக் கொள்கையில்

தெய்வங்களும் இறந்து போவதை நம்ப முடியவில்லை.

 

நீளும் நினைவின் எல்லை வரை

மனிதன் நெருப்பையும் நதியையுமே தானே பார்த்துக்கொண்டிருந்தான்.

நாங்கள் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

எங்களைப் பற்றி உலகம் என்ன தெரிந்துகொண்டிருக்கிறதென்று தெரியவில்லை

ஊழைத்தேடும் பயணிகள் நாங்கள்

எங்கள் வாழ்நாளின் எல்லா நாளும்

மலைகளின் எல்லைகளை வெறித்துப்பார்த்திருப்பவர்கள்

கண்களை உயர்த்தி அந்த எட்ட முடியாத ஆகாயத்தை நோக்கி.

 

நதி

 

நதியோரம் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.

அது கட்டுப்பாடில்லாத தெய்வம்.

நதி ஒரு யானை, சிங்கம்

சில நேரங்களில் குதிரை என்றும் அழைப்பார்கள்

ஒரு கோடையில் அதை மயில் என்றுகூட எண்ணினோம்

மஞ்சள் தூசியை கொண்டு வந்து

எங்கள் கண்களை பொன்னால் நிறைத்தது.

மேகங்களால் மூடப்பட்ட மலையளவு பனிமூட்டத்திற்குள்

கொடிகளுடனும் மகரந்தங்களுடனும் பாயும் நீருடன்

அல்லி மலர் குளத்தில் ஒரு பெண் மிதந்துகொண்டிருப்பதை கண்டேன்

 

நதி ஒரு பெண் என்று நினைத்திருந்தேன்

ஒரு தேசம், ஒரு பெயர்

வெள்ளை நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் இசையின் நாதமாக

ரகசிய வரைபடத்தை சுமந்துகொண்டிருக்கும் ஒரு காகிதத்தாளாக.

தொடுவானில் இருந்துதான் தொடங்குகிறது

இருளுக்கும் மலை உச்சிக்கும் இடையிலிருந்து

தாகத்தின் பிறப்பிடத்திலிருந்து.

 

நதியோரம் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்

அது ஒரு மூழ்கடிக்கும் ஆன்ம உரு

கொடுங்கோல் தெய்வம்

பருவநிலைக்கு ஏற்றவாரு முண்டியும் திரும்பியும்

ஓடும் நதி,

நின்ற நிலை

நதி கடல், நதி சமுத்திரம்

எங்கள் எல்லா கோடை காலத்தின் நதி

எங்கள் வாழ்வின் உப்பை சேகரித்துக்கொண்டிருக்கிறது.

தமிழில் ராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.