Jeyamohan's Blog, page 668

December 5, 2022

ரத்தசாட்சி டிரெயிலர்

என்னுடைய கைதிகள் கதையை ஆதாரமாக்கி ரஃபீக் இஸ்மாயில் திரைக்கதை- வசனம் எழுதி இயக்கும் ரத்தசாட்சி படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:36

பனிநிலங்களில்-6

சைபீரிய இல்லம்

ரோவநேமி சாண்டாகிளாஸ் கிராமம் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது. ரோவநேமி நகரம் ஃபின்லாந்தின் லாப்லாந்து மாவட்டத்தின் தலைநகர். உலகமெங்குமிருந்து பனிக்காலத்துக் கேளிக்கைகளுக்காக அங்கே பயணிகள் வருகிறார்கள். அதன்பின் வசந்தகாலக் கேளிக்கைகளுக்காக வருகிறார்கள். முழுக்கமுழுக்க சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இடம் என்றாலும் பெரும்பாலும் சிறுவர்களை உளம்கொண்டே வடிவமைத்துள்ளனர். சூதாட்டமெல்லாம் இல்லை.

ஃபின்லாந்தின் பனிநில மக்களான ஸாமி இனத்தவரின் இல்லங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஸாமி இன மக்கள் எஸ்கிமோக்கள் அல்ல. (எஸ்கிமோ என்னும் சொல் இப்போது அரசியல்சரி அல்லாத சொல்லாகிவிட்டது. அதை பயன்படுத்தலாகாது. அது பிறரால் ஏளனமாகச் சொல்லப்பட்டதாம்) ஸ்காண்டிநேவிய நிலப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சைபீரிய வட்டத்தில் குடியேறியவர்கள்.  ஸாமி மக்களின் உணவு, உடை, உறைவிடம் மூன்றுமே ரெயிண்டீரைச் சார்ந்தது. அதுவே ஒரு நல்ல நாவலுக்கான கருப்பொருள். ஒரு சமூகம், ஒரு விலங்கு. தமிழர்களின் பெரும்பாலான பெயர்கள் சாமி என முடிவதனால் அவர்களை தென்னாப்ரிக்காவில் சாமி என்றே அழைத்தனர் என்று காந்தியின் சுயசரிதையில் சொல்லப்படுகிறது.

ஸாமிகளின் இல்லங்கள் சிவப்பிந்தியர்களின் இல்லங்கள் போன்றவை. செங்குத்தான  வட்டக்கூம்புக் கூடாரங்கள். பெரிய மரத்தடிகளை முன்று கால்களாக நாட்டி சேர்த்து மையத்தில் கட்டி, தோல்போர்த்து அமைக்கப்பட்டவை. மேலே வட்டத்திறப்பு. அதற்குமேல் ஒரு சிறு கூடை. திறப்புக்கு நேர்கீழே அனல்குளம். அதைச்சுற்றி அமர்வதற்கும் படுப்பதற்குமான ரெயிண்டீர்தோல் இருக்கைமெத்தைகள். அவ்வளவுதான் இல்லமே. (பார்க்க) அந்த அனலில் சுட்டு சாப்பிட்டு அப்படியே படுத்துவிடவேண்டியதுதான். முழுக் குளிர்காலமும் அந்தச் சிறிய வட்டத்திற்குள்தான் வாழ்க்கை.

அந்த வாழ்க்கையின் நினைப்புக்கெட்டாத சலிப்பு அவர்களின் ஆழுள்ளம் வெளிப்படும் பல கனவுநிலைகளை உருவாக்குகிறது. போதைப்பொருள் இல்லாமலேயே போதை. வாரக்கணக்கில் நீளும் அரைத்துயில்நிலை. இன்று எண்ணும்போது வியப்பூட்டும் ஒன்றுண்டு, உலகிலுள்ள எல்லா பழங்குடிகளும் மிகப்பெரிய தொன்மக்கிடங்கை வைத்திருக்கிறார்கள். படிமங்களின் பெருவெளியே பழங்குடிப் பண்பாடு என்பது. மானுட இனம் உண்மையில் வாழ்வதே கனவுகளில்தானோ?

இன்றும் ஆர்ட்டிக் பகுதிக்கு வருபவர்கள் மது அருந்தி, அல்லது போதை நுகர்ந்து, நாட்கணக்கில் தூங்கிக் கழிப்பதையே இன்பமாகக் கொண்டிருக்கிறார்கள். மேட்ரிக்ஸ் படத்தில் வெளிவருவதுபோல எல்லா கொண்டாட்டமும் கனவிலேயே நிகழ்கிறது. அதுவும் ஒரு பேரின்பநிலைதானோ?

ரோவநேமியில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் கடை உலகின் வடக்கு எல்லையிலுள்ள மெக்டி என தன்னை விளம்பரம் செய்துகொள்கிறது. ஆர்ட்டிக் வட்டத்தில் இருக்கிறோம் என்பதே ஒருவகை பதற்றமான கிளர்ச்சியை உருவாக்குவது. சென்ற நூற்றாண்டில் நம் நாட்டில் இருந்து ஒருவர் ஆர்ட்டிக் வட்டத்திற்குள் நுழைவதென்பது எத்தனை அடிதான ஒன்றாக இருந்திருக்கும்

சாண்டா கிளாஸ் ஊரில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறார். அவரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஐம்பது யூரோ கட்டணம். ஏறத்தாழ ஐந்தாயிரம் ரூபாய். அதற்கு மிகப்பெரிய வரிசை. நாங்கள் செல்லவில்லை. ஃபின்லாந்து, ஐஸ்லாந்து பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அங்கேதான் பிறந்தார் என அறைகூவுகின்றன. அவர் புனைவுக்கதாபாத்திரம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

சாண்டாகிளாஸ் கிராமத்தில் உள்ள கேளிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ரெயிண்டீர் இழுக்கும் வண்டியில் அரைகிலோமீட்டர் சுற்றிவரலாம். ஹஸ்கி என்னும் நாய் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டியில் அரைகிலோமீட்டர் சுற்றி வரலாம். அருண்மொழியும் அஜியும் சைதன்யாவும் ரவியின் மகள் கிளாராவும் ரெயிண்டீர் இழுக்கும் வண்டியில் ஏறி சுற்றிவந்தனர். இழுப்பது ரெயிண்டீர் என்னும் உணர்வு அளிக்கும் கிளர்ச்சிக்கு அப்பால் அதில் சிறப்பாக என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் நாம் ஒரு ஸாமி ஆகி ஆர்ட்டிக் பனிவெளியில் செல்வதாகக் கற்பனைசெய்துகொள்ளலாம். பெரும்பாலான சுற்றுலா அனுபவங்கள் கற்பனையும் இணைந்தால்தான் சுவாரசியமானவை.

மைனஸ் 10 பாகை குளிரின் ஒளி சன்னலில்

நான் ரவியின் மனைவி அர்ச்சனாவுடன் ரெயின்டீர் பண்ணைக்குள் சென்று அவற்றை பார்த்தேன். அவற்றின் பெரிய கொம்புகள் அச்சமூட்டுபவை. கொம்பிலோ முகத்திலோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. பிற இடங்களில் தொடலாம், கொஞ்சலாம். கருகிப்போன பனிப்பாசி போன்ற எதையோ கையில் தந்தனர். அதை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஆர்வமாக வந்து பிடுங்கி தின்றன. கோடையில் அவற்றை காட்டில் திறந்துவிடுவார்களாம். குளிர்காலத்தில் மூத்த ரெயிண்டீர் மற்றவற்றை திரட்டிக்கொண்டு அதுவே முகாமுக்கு வந்து சேரும். இங்கே குளிர்ப்பாதுகாப்பும், உணவும் உண்டு என்பது அவற்றுக்கு தெரியும்.

ஓர் ஆல்ஃபா ஆண் அப்பால் செருக்குடன் படுத்திருந்தது. அதை நெருங்க முடியாது. அங்கிருந்து ஆட்டுக்கடாவில் எழும் கெச்சைநாற்றம் அடித்தது. பாதிக்குமேல் குட்டி ரெயிண்டீர்கள். இரண்டு ரெயிண்டீர்கள் பனிவெள்ளை நிறம். அந்நிறம் மிக அரிதானது. மற்றவை நாய்ச்செம்மை அல்லது வைக்கோல்செம்மை அல்லது சாம்பல்நிறம் கொண்டவை. அவற்றின் முடி மென்மையானது அல்ல. தொட்டுப்பார்த்தால் சாக்குபோல சொரசொரப்பானது. நாக்கால் பசுபோல நம்மை நக்குகின்றன. மூக்கைச் சுளித்து ஓர் ஓசையையும் எழுப்பின.

ஹஸ்கி மேல் பயணம் செய்ய அஜிக்கு மனமில்லை. “நாயெல்லாம் பாவம்” என்று சொல்லிவிட்டான். ஆகவே ஒருமுறை அக்கிராமத்தைச் சுற்றிவந்தோம். எல்லாரும் காபி சாப்பிட்டனர். நான் ஒரு ரெயிண்டீர் சூப் சாப்பிட்டேன். அந்த மண்ணுடன் ஓர் உறவு உருவாகவேண்டுமே. அங்கிருக்கும் பரிசுப்பொருள் கடையும், அருகே உள்ள வடதுருவத்தின் தபால்நிலையமும் புகழ்பெற்றவை. அங்கிருந்து ஊருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். இப்போது முகநூல் பதிவு போடுவதுபோல ஒரு பழக்கமாக அக்காலத்தில் இருந்திருக்கிறது.

அதன்பின் ஒருமணி நேரத் தொலைவில் இருக்கும் ஒரு விலங்குக் காட்சியகத்திற்குச் சென்றோம். குளிர் ஏறி ஏறிவந்தது. அங்கே செல்ல மணி மூன்று கடந்துவிட்டது. நான்கரைக்கு மூடிவிடுவார்கள். ஒன்றரை மணிநேரம் அந்த விலங்குநிலையத்தைச் சுற்றிவந்தோம். மரத்தாலான பாதை அமைத்து அதைச் சுற்றிவர ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

அங்கே முதன்மையாக பார்க்கவேண்டியது சைபீரியப் பனிக்கரடி. ஆனால் அது மாலைக்குள் தன் குகைக்குள் புகுந்துவிட்டது. அதன் ஆழ்துயில் பருவம் தொடங்கிவிட்டது. தூங்கும் நேரம் கூடிக்கூடி வரும். ஒரு கட்டத்தில் முழுமையாகவே தூங்க ஆரம்பித்துவிடும். அதைப் பார்க்க முடியவில்லை. நான் ஏற்கனவே அட்லாண்டாவிலும் சிங்கப்பூரிலும் பனிக்கரடியை பார்த்திருக்கிறேன். அதன் அளவு திகைக்க வைக்கும். ஒரு மாருதி காரைவிட பெரியது. அட்லாண்டாவின் விலங்ககத்தில் செயற்கையாக உறைபனிச்சூழலை உருவாக்கியிருந்தனர். அந்த வெப்ப (?)நிலை இங்கே இயற்கையாக இருந்தது.

எல்க், ரெயிண்டீர், மாபெரும் சைபீரியப் பன்றிகள் ,மான்கள் , பலவகையான சைபீரிய ஆந்தைகள், சைபீரிய பருந்துகள் ஆகியவற்றைப் பார்த்தோம். எல்லாமே பெரிய உருவம் கொண்டவை. பனிக்குள் ஊடுருவும் பார்வையும் உண்டு. ஆந்தைதான் சைபீரியாவின் முக்கியமான பறவை என நினைக்கிறேன். வெண்ணிற உடலுடன் பனியோடு பனியாக அமர்ந்திருந்தது. அவை எவற்றை உண்ணும் என்று யோசித்தால் அருகிலேயே விடை. சிறிய எலிகள் காட்சிக்கு இருந்தன. ஆண்டுதோறும் குட்டிபோட்டு பெருகிக்கொண்டே இருப்பவை.

பனிபொழிந்து மூடிய மரங்களின்மேல், எண்ணைக்காகிதம் போல மெல்லொளி கொண்ட வானில் ரேவன்கள் என்னும் பெரிய காகங்கள் சுற்றிவந்தன. அங்குள்ள நம்பிக்கைப் படியேகூட அவை எதிர்மறையான உணர்வுநிலைகளை உருவாக்குபவை. நமக்கு காகம் என்பது உற்சாகமான பறவை. ஆனால் திரைப்படங்கள் வழியாக ரேவன்கள் பற்றிய அச்சமும் விலக்கமும் நம்முள் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிப்படையானவை ஸ்வீடிஷ் ஃபின்னிஷ் திகில்நாவல்கள். அவற்றுக்கு அடிப்படையானவை அந்நிலத்தின் தொன்மங்கள். அந்தச் சாம்பல் நிற வானில் அவை ஓசையே இல்லாமல் பறப்பது டிராக்குலா உலகில் நுழைந்துவிட்ட அனுபவத்தை அளித்தது

நாங்கள் திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. விளக்கொளியை அடையாளம் வைத்து திரும்பி வரவேண்டியிருந்தது. நான்கரைதான் பொழுது. மீண்டும் தங்குமிடத்திற்கு வந்தபோது ஆறரை மணி. ஆனால் நள்ளிரவின் இருட்டு.  அன்று இரவு படுத்ததுமே கடுந்தூக்கம். அவ்வளவு உடற்களைப்பு. குளிர்நிலங்களில் குளிருடன் போராடவே உடலாற்றல் செலவழிகிறது. மாமிசம் உண்பது அங்கே ஏன் அவ்வளவு தேவையாக இருக்கிறது என்று தெரிந்தது. மதுவும்.

அன்று இரவுதான் நான் ஃபின்லாந்து என்னும் நிலத்தில் இருக்கும் உணர்வையே முழுமையாக அடைந்தேன். தமிழ்விக்கியில் ஃபின்லாந்து பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.

பின்லாந்தின் தேசியக் காவியம் கலேவலா. வைக்கிங்குகளுக்கும் ஃபின்லாந்து மக்களின் தொன்மங்கள் பற்றிய வாய்மொழிக்காவியம் அது. 1835-ல் மொழியியலாளரும், நாட்டாரியலாளருமான எலியாஸ் ரொன்ரோத் (Elias Lönnrot) அதை மீட்டு எடுத்து அச்சேற்றினார். அக்காவியம் தமிழில் உதயணன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஃபின்னிஷ் அறிஞர் அஸ்கோ பர்ப்போலா எழுதியிருக்கும் நீண்ட முன்னுரை ஃபின்லாந்தின் பண்பாட்டை அறிந்துகொள்ள மிக உதவியானது.

ஃபின்லாந்து தமிழகத்துக்கு அணுக்கமானது என்று சொன்னால் சிலர் ஆச்சரியப்படலாம். பின்லாந்தின்ஹெல்சிங்கி பல்கலையில் தமிழுக்கான ஆய்விருக்கை இருந்தது. உதயணன் அங்குதான் வேலைபார்த்தார். அஸ்கோ பர்ப்போலா தமிழறிஞர். இந்தியவியல் அறிஞர். 2010 ஆம் ஆண்டில்  செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது அவர் அதில் தலைமை ஏற்றிருந்தார்.

மறுநாள் காலையிலேயே கிளம்பவேண்டும். செல்வதற்குள் அந்த உறைந்த ஆற்றை மீண்டும் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பனி மேலும் மேலும் விழுந்து கனமான படலமாக தரையை மூடியிருந்தது. உலகிலுள்ள வண்ணங்களை எல்லாம் எவரோ வழித்து எடுத்துவிட்டதுபோல. வரைந்தவனுக்குச் சலிப்பு வந்துவிட்டது போல. இந்த வெண்மைமேல்தான் அத்தனை வண்ணங்களும் பூசப்பட்டிருந்தனவா?

அறு வெண்பனிப்பரப்பாக தெரிந்தது. அதன்மேல் சில கோடுகள் புதிதாக விழுந்திருந்தன. நான் வீசிய கற்கள் அப்படியே பனியில் பாதி புதைந்து அமர்ந்திருந்தன. நான் வீசிய ஒரு குச்சி பனியாலானதாக மாறி ஆற்றுப்பரப்பில் படிந்திருந்தது. இனி பிப்ரவரி முடிவதுவரை அவை அங்கேயே இருக்கும். அசைவின்மையின் நாட்கள்.

ரோவநேமிக்கு எதற்காக வந்தோமோ அது நடைபெறவில்லை. அரோரா தென்படவில்லை. அரோரா தேடுவதென்பது உண்மையில் ஒரு வேட்டை. அதை ரேடியோவில் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டில் சில நாட்களில், குளிர்காலத்திற்கு முன்னர்தான் அது தென்படுகிறது. நாங்கள் கிளம்பிய மறுநாள் அங்கிருந்து நூறு கிலோமீட்டருக்கு அப்பால் தென்பட்டது. நாங்கள் அறிவிப்பை எதிர்பார்த்து இரவெல்லாம் காத்திருந்த பின் தூங்கிவிட்டோம்

ஏன் அரோரா தென்படவில்லை என அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது. ஆர்ட்டிக் நாடுகளில் இம்முறை மிக முன்னரே குளிர்காலம் தொடங்கிவிட்டது. கடுமையான பனிப்பொழிவு நவம்பர் இறுதியிலேயே வந்துவிட்டது.

(மேலும்) கலேவலா ஃபின்னிஷ் காப்பியம் அஸ்கோ பர்ப்போலா உதயணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:35

சிங்காரவேலர்

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சிங்காரவேலர். அவருடைய வாழ்க்கை பல படிகள் கொண்டது. காங்கிரஸில் தொடங்கி பொதுவுடைமை கட்சி வழியாக சுயமரியாதை இயக்கம். ஏறத்தாழ முழுமையான தரவுகளுடன் மிக விரிவான பதிவு இது

சிங்காரவேலர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:34

பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் தளத்தில் நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவிற்கு வருவதாக வெளியானவுடன், கண்டிப்பாக இந்த தடவை தயக்கங்களை மீறி எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் இங்கு கணிப்பொறி துறையில் (ஆப்பிள் நிறுவனத்தில்) பணி புரிகிறேன். உங்கள் எழுத்துக்களையும், தளத்தையும் கடந்த பதினைந்து  வருடங்களுக்கும் மேலாக நாள் விடாமல் படித்து வருகிறேன். என்னுடைய புத்தக சேகரிப்பில் பாதிக்கு மேல் நீங்கள் எழுதிய புத்தகங்களே உள்ளன. அல்லது நீங்கள் எங்காவது குறிப்பிட்ட வேறு புத்தகமாவே இருக்கும். உங்கள் புத்தகங்கள் இல்லாமல் என் வேலையையோ, வாழ்க்கையையோ இப்போது இருக்கும் ஒரு தெளிவுடன் எதிர் கொண்டிருக்க முடியாது. நன்றி சார்.

தங்களை இன்று நேரில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என் பையன், பெண், மனைவியையும் தங்களைப் பார்க்க கூட்டி வந்திருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் உங்களை நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி. குறிப்பாக நீங்கள் பேசி முடிந்தவுடன், எல்லோருக்கும் பொறுமையாக மகிழ்வுடன் கையெழுத்திட்டத்தையும்,  அரை மணி நேரத்திற்கும் மேலாக எல்லோரையும் புகைப்படம் எடுக்க அனுமதித்ததையும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நீங்கள் எல்லோரிடமும் அவர்கள் சொல்வதை கவனித்து, அவர்களுக்கு ஏற்றவாறு  கையெழுத்துப் போட்டுக்கொண்டே எளிமையாக நகைச்சுவையுடன் பேசினீர்கள்.

உங்களுடனான முப்பது நிமிட நிகழ்ச்சி மிக கச்சிதமாக ஒரு கார்பொரேட் மீட்டிங் போல நடந்து முடிந்தது என நினைத்தேன். உங்களிடம்  பிரியம்வதா அவர்களும் மிக முக்கியமான கேள்விகளையே கேட்டார். முதல் கேள்வியில் நீங்கள் அறம் கதைகளை ஏன் எழுதினீர்கள் எனச் சொல்லி, பின் super  truth – என்றைக்குமான உண்மைகளைக் கூறும் கதைகள் இவை என்று  சொல்லி அழகாக முடித்தீர்கள்.

பின்னர் ஏன் தன்னிலையிலேயே எழுதினீர்கள் என்ற கேள்விக்கு நூறு நாற்காலிகளை உதாரணம் காட்டி, ஒரு தலித் பட்ட அவமானங்களை நீங்கள் அதை தன்னிலையில் எழுதும்போது மட்டுமே உணர்ந்ததாக கூறினீர்கள். இங்குதான் நிறைய பேர் கை தட்டினார்கள் என நினைத்தேன்.

இரண்டு மூன்று  முறை ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்புகளை பிரியம்வதாவிடம் கேட்டிர்கள். முதலில் நூறு நாற்காலிகள், ஒரு முறை மயில் கழுத்து பற்றி சொல்லும்போது, கடைசியில் கோட்டிக்காக. இது மிக இயல்பாய் அமைந்தது என நினைத்தேன். உங்கள் பதில்கள் முழுதும் extempore -ஆக இருந்ததிற்கு இதுவும் ஒரு உதாரணம். பின் இலக்கியத்தில் சமநிலை பற்றி பேசினீர்கள். அறத்தில் உள்ள கதைகளில் நாடகத் தருணங்கள் இல்லை, சமநிலை உள்ளது எண்டு சொன்னீர்கள். கேள்வி முடிவில், மிகை நாடக தருணங்கள் உள்ளவை பிரச்சாரங்கள் என்று கூறீனீர்கள். கை தட்டு எழுந்தது.

இலக்கியம் என்பதன் அடிப்படை  மொழி, இட வேறுபாடு இல்லாமல் உணர்வுகளைக் கடத்துவதே என்பதை எஸ்கிமோவின் உணர்வுகளை ருஷ்ய ஆங்கில மொழி பெயர்ப்புகள் வழி அடைந்தேன் என்றீர்கள்.

கடைசியில் தமிழ் விக்கியைச் சொல்லி இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பக்கங்கள் என்று மற்றுமொரு முறை மேடையில் சொன்னீர்கள்.

முடிவில் ஆங்கிலத்திற்காக அசோகமித்திரனைச் சொல்லி, ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்று மன்னிப்பு கேட்டீர்கள். ஆனால் கடைசி பதினைந்து நிமிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பிளந்து கொண்டிந்தருந்தீர்கள் என்றே நினைத்தேன். முதலில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு யோசித்தீர்கள். ஆனால் கடைசியில் அடித்து ஆடினீர்கள் என்றே நினைத்தேன். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாட்டில் ‘காட்டு முள்ளு வீட்டுக்குள்ள மாட்டிக் கொள்வதா’ என்று ஒரு வரி வரும். இதையே நினைத்து கொண்டேன்.

தங்களைச்  சந்தித்தது மிக மகிழ்ச்சி சார், முக்கியமான நாள் . இன்னும் இலக்கிய விழாக்களில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறேன்.

உங்களுக்கு இதுவே எனது முதல் கடிதம். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,

முத்து

*

அன்புள்ள முத்து,

மொழி என்பது நாவுக்கும் மூளைக்குமான ஒரு தன்னியல்பான தொடர்பு. யோசிக்காமலேயே நாவில் நிகழ்வது அது. பயிற்சியினால் கைகூடுவது. எல்லா உடலசைவுகளையும்போல.

நான் ஆங்கில மொழியை பயிற்சி செய்யவில்லை. நானே வாசிப்பினால் அடைந்த ஆங்கிலப்பயிற்சிதான். 1992 ல் பிரிட்டிஷ் கௌன்ஸிலில் நடந்த ஒரு சந்திப்பில் நான் ஆங்கிலத்தில் பேசினேன். அசோகமித்திரன் என்னை அங்கே சேர்த்துவிட்டவர். அவரும் அன்று பேசினார்.

என் பேச்சுக்குப்பின் அசோகமித்திரன் என்னிடம் சொன்னார். “நீ நன்றாகவே பேசினாய். உன்னிடம் நிறையச் சொற்கள் இருக்கின்றன. உச்சரிப்பு, இலக்கணம் ஆகியவற்றை கொஞ்சம் செம்மை செய்து கொண்டால் சிறப்பான பேச்சாளர் ஆகிவிடலாம். இந்திய அளவில் கருத்தரங்குகளில் சுற்றலாம். ஆனால் அதைச் செய்யக்கூடாது என்றுதான் சொல்வேன்”

நான் ”ஏன்?” என்று கேட்டேன். அன்று என் பேச்சை தலைமை வகித்த வெள்ளை தூதரக அதிகாரி மேற்கோள் காட்டியதன் போதையில் இருந்தேன்.

அசோகமித்திரன் சொன்னார். ”இலக்கியம் என்பது அடிப்படையில் மொழிநடைதான். மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம். உன்னுடைய ஸ்டைல் இப்போதே சிறப்பாக இருக்கிறது. வெவ்வேறு சாதிகளுக்குரிய மொழிவேறுபாடுகளைக் கூட எழுதுகிறாய். நாட்டுப்புறப்பாடலில் இருந்து ஒரு நடையை உருவாக்குகிறாய். இன்னொரு கதை புராணம் சார்ந்ததாக உள்ளது. உன் மொழிநடையில் உள்ள நுண்ணிய அம்சங்கள் எல்லாமே நீ ஒரேமொழியில் மூழ்கிக்கிடப்பதனால் உருவாவது. நீ ஆங்கிலம் பேசினால் அதை இழந்துவிடுவாய்.”

“ஆங்கிலத்தில் வாசிக்கலாமா?” என்று நான் கேட்டேன்

“வாசிக்கலாம். ஆனால் பேசும்போதுதான் நம் மனம் அந்த மொழியில் சிந்திக்க ஆரம்பிக்கிறது” அசோகமித்திரன் சொன்னார்.

அசோகமித்திரன் நன்றாக ஆங்கிலம் எழுதுபவர். நேரடியாக ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் இருந்து பிறருடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அதெல்லாமே பிழைப்புக்காகச் செய்தவை என்று சொன்னார். அவர் கூடுமானவரை ஆங்கிலத்தில் பேசமாட்டார். அத்தனைபேரும் ஆங்கிலம்பேசும் இடத்தில் அவர்கள் தமிழர் என்றால் அவர் தமிழிலேயே பேசுவதை கேட்டிருக்கிறேன். பின்னாளில் தன் படைப்புகளையே அவர் பிறரை மொழியாக்கம் செய்ய வைத்தார். தன் நூல்களின் மொழியாக்கத்தை ஆசிரியன் படித்துப் பார்க்கலாகாது என்றுகூட ஒருமுறை சொன்னார்.

அசோகமித்திரனுக்கு கருத்தரங்குகள், இலக்கிய விழாக்கள் ஆகியவற்றின்மேல் உள்ள ஒவ்வாமை ரகசியமல்ல. அவர் கதைகளில் அவருடைய கண்டனமும், நையாண்டியும் வந்துகொண்டே இருக்கும். ஒற்றன் நாவலில் ஓரிடத்தில் அவர் சொல்கிறார். “மகத்தான எழுத்தாளர்கள் ஒரே மொழியில் மூழ்கியிருப்பார்கள்” இன்னொருவர் கேட்கிறார். “அப்படியென்றால் பெக்கட்?” அசோகமித்திரன் சொல்கிறார் “நான் பெக்கட்டை சிறந்த எழுத்தாளராக நினைக்கவில்லை”

நான் அதை ஒருவகையில் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். கூடுமான வரை ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அதைவிட என் தாய்மொழியான மலையாளத்திலும் கூடுமானவரை பேசுவதில்லை. மலையாள மேடையுரைகள், மலையாள எழுத்துக்கள் ஆகியவற்றையே முடிந்தவரை தவிர்ப்பேன். தமிழிலேயே என் மூளை செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆகவே மலையாளத்தில் பேசினால்கூட தமிழில் யோசித்து உடனடியாக மொழியாக்கம் செய்தே பேசுகிறேன். ஆங்கிலத்தில் பேசும்போதும் அப்படியே. இது ஒரு தடுமாற்றத்தை அளிக்கும். முக்கியமாக இலக்கணத்தில். தமிழின் இலக்கணக்கட்டமைப்பே வேறு. ஆங்கில உச்சரிப்புக்கு பயிற்சி எடுத்தாலே தமிழ் விலகிச்செல்லத் தொடங்கும். நான் ‘நல்லதமிழுக்கே’ பயிற்சி எடுக்கக்கூடாதென்னும் கொள்கை கொண்டவன். குமரிமாவட்ட வட்டாரநெடி என் அடையாளம். அது போகக்கூடாதென நினைக்கிறேன்.

ஆயினும் அண்மையில் நிறையவே ஆங்கிலத்தில் பேசவேண்டியிருக்கிறது. இலக்கியவிழாக்கள், சந்திப்புகள். ஓரளவு சமாளிக்கிறேன் என நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் நிகழும் இலக்கிய உரையாடல்களைப் பார்க்கிறேன். அவை இரண்டு வகை. ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் மிகச்சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதெல்லாமே தேய்வழக்குகள். திரும்பத்திரும்பப் பேசும் சொற்றொடர்கள். அவற்றை தவிர ஒரு புது கருத்தை சொல்லமுற்பட்டால் திக்குவார்கள். புதியதாக ஒன்றைச் சொல்லும் எழுத்தாளர்கள் தயங்கியும் யோசித்தும்தான் பேசுகிறார்கள். இந்தியாவின் இலக்கிய அரங்குகளில் பொதுவாகப் பேசப்படும் ஆங்கிலத்திற்கு என்னுடையது மேல்.

ஆனால் பேசிமுடித்தால் ஒரு பயிற்சியை முடித்த களைப்புதான் வருகிறது. தமிழில் பேசுவதன் திளைப்பு இல்லை. ஆனால் இன்னொரு ஆச்சரியமென்னவென்றால் தமிழில் பேசுவதை தவிர்த்தால் ஆங்கிலத்தில் பேசுவதே எளிதாக இருக்கிறது. மலையாளம் இன்னும் கஷ்டம். கலைச்சொற்களுக்கு ஆங்கிலத்தில் துழாவவேண்டியிருக்கிறது.

பெங்களூர் இலக்கிய விழாவில் என் காதில் விழுந்த பேச்சுக்கள் பெரும்பாலும் இலக்கிய தேய்வழக்குகள்தான். ஆகவே நான் புதியதாக, சரியான கலைச்சொற்களுடன் பேசுவது ஒரு படி மேலானதாக ஒலிக்கிறது. பலர் நிகழ்வுக்குப்பின் மிகநல்ல உரையாடல் என பாராட்டினர். கீதா ராமசாமி அவர் கேட்ட மிகச்சிறந்த உரையாடல் என சொன்னார். மகிழ்வதா என்று தெரியாமல் தலையாட்டி வைத்தேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:33

சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன்.

தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), கேத்தி ஆக்கர் (Kathy Acker), ரொனால்ட் சுக்கேனிக் (Ronald Sukenik), ஜார்ஜ் பத்தாய் (George Bataille), ஜார்ஜ் பெரக்(Georges Perec), ஆலன் ராப் க்ரியே (Alain Robbe- Grillet), சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி (கவிதைகள் மட்டும்) போன்றவர்களைப் படித்தால்தான் என் எழுத்தைப் புரிந்து கொள்ள முடியும்” என்று சொல்கிறார்.

ஒரு தமிழ் எழுத்தாளரை வாசிப்பதற்கு இத்தனை மெனக்கெட வேண்டுமா?  சாரு மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் அனைவருமே வாசிப்பதற்குத் தோதான ஆட்கள் அல்ல. பர்ரோஸின் நேக்கட் லஞ்சையெல்லாம் படிப்பதற்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

அவர் ஒரு கட்டுரையில் தான் மொழிபெயர்த்த ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை (Histoire de l’oeil) என்ற நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தக் கதையை ஜார்ஜ் பத்தாய் தன் சொந்தப் பெயரில் எழுதாமல் பயந்துகொண்டு புனைப்பெயரில் எழுதினார். (Lord Auch என்ற பெயரில். இதற்கு ரகளையான அர்த்தம் உண்டு. Aux chiottes என்பதன் பேச்சு வழக்கே auch. அதன் அர்த்தம் கழிவறைக்குச் செல்).   நம்மூரில் சரோஜாதேவி கதைகள் என்று அறியப்படுகிற மொழியில் எழுதப்பட்ட கதை அது. கொஞ்ச நாளிலேயே ரொலாந் பார்த்தும் (Roland Barthes) சூசன் சொண்டாகும் (Susan Sontag) அந்த நாவலுக்கு நாவலை விடப் பெரிதாக முன்னுரை எழுதினார்கள் (இங்கே ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளருக்கு அந்தக் கொடுப்பினை கிடையாது). அப்புறம்தான் தன் ‘நிலவறை’யிலிருந்து வெளியே வந்த பத்தாய் அந்த நாவலைத் தன் பெயரில் வெளியிட்டார், இருவரின் முன்னுரையோடு.

ரொலாந் பார்த் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதி.  பார்த் மட்டும் அல்ல, ஜார்ஜ் பத்தாயுமே ஃப்ரான்ஸ் வெகுவாக மதித்த தத்துவவாதிதான்.  பத்தாய்க்கே இப்படி ஒரு நிலை  என்றால் சாரு எம்மாத்திரம்?  கடைசியில் சாரு மொழிபெயர்த்த பிரதி வெளிவரவில்லை.  நீண்ட காலம் அவரிடம் இருந்த பிரதியும் தொலைந்து போய் விட்டதாகச் சொன்னார்.  Story of the Eye என்ற அந்த நாவலை இன்று நீங்கள் இணையத்திலேயே இலவசமாக வாசிக்கலாம்.  ஆனால் எடுத்த எடுப்பில் புரியாது. முதல்முறை பத்தாயை படிக்கும்போது வேர்த்துவிட்டது. ஏன் இத்தனை ஆபாசமாக எழுதியிருக்கிறார் என்று தோன்றியது.  அதைப் புரிந்து கொள்ள நாம் சூசன் சொன்டாக் எழுதிய முன்னுரையைப் படிக்க வேண்டும்.

சாரு Story of the Eye மொழிபெயர்ப்பை அவர் மேஜையின் மீது வைத்திருக்கிறார்.  அப்போது சாருவைப் பார்க்க வந்த ஒரு நண்பர் – சக எழுத்தாளர் – பத்திரிகை ஆசிரியர் – அதன் முதல் பக்கத்தைப் படித்து விட்டு, வேர்க்க விறுவிறுக்க பிறகு வருகிறேன் சாரு என்று ஓடி விட்டாராம்.

என்னது, ஓடி விட்டாரா?

ஆமாம், நிஜமாகவே ஓடி விட்டார் என்றார் சாரு.

ஆனால் ஜார்ஜ் பத்தாயின் Histoire de l’oeil கதையைப் படித்தவள் என்ற முறையில் சொல்கிறேன், பத்தாயின் அளவில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட சாருவின் எழுத்தில் பாலியல் இல்லை.

சரி, அந்த ஐந்து சதவிகிதம் கூட ஏன் எழுதுகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டதற்கு:

“இவ்வுலகில் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை செக்ஸாக இருக்கிறது.   நான் பாலியலைத் தொட்டதன் காரணம் அதுதான்.  அப்படியும், ஒரு ஐநூறு பக்க நாவலில் ஐம்பது பக்கம்தான் பாலியல் இருக்கும்.”

சாருவின் எழுத்து பற்றி சில நண்பர்களின் வாதம் இது: “நாங்கள் ஒன்றும் பாலியலை எழுதக் கூடாது என்று சொல்லவில்லை. தி.ஜானகிராமனும், லா.ச.ரா.வும், கு.ப.ரா.வும் பாலியலை எழுதியிருக்கிறார்கள்.  அவர்கள் எழுதியது கலை.  சாரு எழுதுவது குப்பை.”

மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் கத்தி மேல் நடப்பது போல் நடந்தார்கள்.  ஆனால் சாருவோ கத்தியையே உடைத்தார்.  தஞ்சை ப்ரகாஷ் கொஞ்சமாக உடைத்தாரென்றால் சாரு அடியோடு.  காரணம், சாரு ஒரு குழந்தை அல்லது ஞானியைப் போல.  குழந்தைகளும் ஞானிகளும்தான் நிர்வாணமாக நிற்க முடியும். அவர்களுக்குத்தான் எது ஒன்றைப் பற்றியும் கூச்சம் இருக்காது.  அப்படியானால், ஒருவர் சாருவின் புனைவு எழுத்தை  அணுக வேண்டும் என்றால், அவரும் சாருவின் மனோதர்மத்தை ஏற்றாக வேண்டும்.  குறைந்த பட்சம், அவருடைய எழுத்தை வாசிக்கும் நேரத்திலாவது.

அதற்கு செய்ய வேண்டிய காரியம், இதுவரை படித்ததையெல்லாம் கொஞ்ச நேரம் வெளியே எடுத்து வைக்க வேண்டும். This is transgressive writing. You have to learn to unlearn.  அதாவது, இலக்கியம் என்றால் என்ன என்ற நமது நம்பிக்கைகளையும் அனுபவத்தையும் சாருவைப் படிக்கும் சமயத்தில் எடுத்து தூர வைத்து விட வேண்டும்.  பிறகு அவருடைய ராஸ லீலா, அடுத்தது எக்ஸைல், அதை அடுத்து ஸீரோ டிகிரி என்று போக வேண்டும்.  முக்கியமாக அவருடைய நேநோ என்ற சிறுகதைத் தொகுப்பையும் படிக்க வேண்டும்.  அதில் உள்ள உன்னத சங்கீதம் என்ற கதையைப் படிக்கும்போது அதிர்ச்சி அடையாமல் ஷேக்ஸ்பியரின் ஜூலியட்டின் வயது பதின்மூன்றுதான் என்றும், நொபகோவின் லொலிதாவின் வயதும் பதின்மூன்றுதான் என்றும் அதன் தொடர்ச்சியாகவே சாரு உன்னத சங்கீதத்தை அமைத்திருக்கிறார் என்றும் ஞாபகம் கொள்ள வேண்டும்.

ரொலாந் பார்த்தின் A Lover’s Discourse என்ற நூலையும் எடுத்துக் கொள்வோம்.  புனைவு, அ-புனைவு ஆகிய இரண்டு பிரிவிற்குள்ளும் வர முடியாத அந்த நூலைப் போன்றதுதான் சாருவின் பெரும்பாலான அ-புனைவு நூல்களும்.  லவர்ஸ் டிஸ்கோர்ஸில் இப்படி ஒரு இடம் வருகிறது:

I take a seat, alone, in a cafe; people come over and speak to me; I feel that I am sought after, surrounded, flattered. But the other is absent; I invoke the other inwardly to keep me on the brink of this mundane complacency, a temptation. I appeal to the other’s “truth” (the truth of which the other gives me the sensation) against the hysteria of seduction into which I feel myself slipping. I make the other’s absence responsible for my worldliness: I invoke the other’s protection, the other’s return: let the other appear, take me away, like a mother who comes looking for her child, from this worldly brilliance, from this social infatuation, let the other restore to me ” the religious intimacy, the gravity” of the lover’s world. (X once told me that love had protected him against worldliness: coteries, ambitions, advancements, interferences, alliances, secessions, roles, powers: love had made him into a social catastrophe, to his delight.)

இதை நாம் புனைவில் சேர்ப்பதா, அ-புனைவில் சேர்ப்பதா?  ரொலாந் பார்த் தன் ‘சொல்லாடலை’ புனைவு மற்றும் அ-புனைவு என்ற இரண்டுக்கும் இடையில் உருவாக்குகிறார்.  இதுவரையிலான எழுத்து வரலாற்றில் யாரும் கண்டிராத ஒரு புதுவகை எழுத்து ரொலாந் பார்த்துடையது.  ஆனால் இதைச் செய்தது பார்த் மட்டுமே அல்ல.  அது ஒரு கலாச்சார சூழலில், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சிறிய குழுவினால் நிகழ்ந்த ஒரு செயல்பாடு.  இதில் பங்கேற்றவர்கள் என ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், ஆலன் ராப் க்ரியே போன்ற எழுத்தாளர்களையும் ஆலன் ரெனே (Alain Resnais) போன்ற இயக்குனர்களையும் குறிப்பிடலாம்.  ஆலன் ரெனேயின் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் ஆலன் ராப் க்ரியே.

நீங்கள் ரொலாந் பார்த்தின் லவர்ஸ் டிஸ்கோர்ஸ் படித்திருக்கிறீர்களா என்று சாருவிடம் தயக்கத்துடன் கேட்டேன்.  பார்த்தின் தத்துவம் குறித்த நூல்களை மட்டுமே படித்திருப்பதாகவும் இதைப் படித்ததில்லை என்றும் கூறினார்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஃப்ரான்ஸிலும் எண்பதுகளில் தமிழிலும் நிகழ்ந்த ஓர் அற்புதமே இது என்று நான் நினைக்கிறேன். சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபிரஞ்ச் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழில் ஏன் இப்படி யாரும் எழுதுவதில்லை என்று நினைத்த சமயத்தில் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள  ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி ஷங்கர் எடுத்துக் கொடுத்த பொக்கிஷம் சாரு.

இதுவரையிலான கதை சொல்லல் முறை, இதுவரையிலான அறிதல் முறை ஆகிய இரண்டிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவை சாருவின் புனைவும் அ-புனைவும்.  உதாரணமாக, சாரு குமுதத்தில் எழுதிய சொல் தீண்டிப் பழகு, அவருடைய தளத்தில் எழுதிய பூச்சி என்ற இரண்டு தொடர்களையும் அ-புனைவிலும் சேர்க்க இயலாது புனைவிலும் சேர்க்க இயலாது.  இரண்டுக்கும் இடையிலான ஊடாடலே அவ்விரண்டும்.

அடுத்து, சாருவைப் படிக்கும் சக எழுத்தாளர்களும் பல வாசகர்களும் ஏன் கோபம் அடைகிறார்கள்?  ஏன் சாருவை வெறுக்கிறார்கள்? அவர் எழுத்து பற்றி நல்லதாக ஏதாவது எழுதலாம் என்று நினைப்பவர்கள் கூட பகடி செய்யாமல் எழுதுவதில்லை.

ஏனென்றால் சாரு செய்யும் காரியம் அப்படிப்பட்டது.  ஆங்கிலத்தில் decanonization என்பார்கள்.  புனிதத்தைக் குலைத்தல்.  இன்னும் சுலபமாகச் சொன்னால், anti-deification எனலாம்.  Deify என்பதன் பொருள் ஆராதனை.  அதற்கு எதிரான செயல்பாட்டைத் தன் எழுத்தின் மூலம் நிகழ்த்துகிறார் சாரு. (நேர் வாழ்விலும் அப்படித்தான். தன்னை ஆராதிப்பவர்களையும் வெகு சீக்கிரம் பகைத்துக் கொள்ளும் கலை அவருக்கு மட்டுமே உரித்தானது.)  இதைத்தான் ஒரு கட்டுரையில் அபிலாஷ் “நவீனத்துவ புனைவின் பவித்திரத்தை காலி செய்தல்” எனக் குறிப்பிடுகிறார்.

ஆக, சாருவின் புனைவு, அ-புனைவு எழுத்துகள் அனைத்தும் மனிதத்தின் சாராம்சம் (essence) என்பதைக் கட்டுடைத்தவை (deconstruct), சிதைத்தவை எனலாம்.  (சிதைவு என்ற பெயரில் சாரு ஒரு சிறு பத்திரிகை நடத்தியிருக்கிறார்.  அதில்தான் அவருடைய புகழ் பெற்ற சிறுகதையான நேநோ வெளிவந்தது.)

நம்முடைய இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கைகளையும், கனவுகளையும் சாரு தன்னுடைய எழுத்தின் மூலம் சிதைக்கிறார்.  அதனாலேதான் சாருவின் எழுத்து மீது ஒருவித ஒவ்வாமை உண்டாகி அவரை வெறுக்கத் தொடங்குகிறோம்.

சாரு அடிக்கடி மிஷல் ஃபூக்கோவைப் பற்றிக் குறிப்பிடுவதை அவர் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்கள் அறிந்திருக்கலாம்.  ஷங்கண்ணா என்ற பெயரில் சாருவின் சக எழுத்தாளர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு “ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டின் தெருக்களில் இழுத்துக் கொண்டு செல்பவர் சாரு” என்று எழுதியிருக்கிறார்.

சாரு ஏன் அப்படி ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டுத் தெருக்களில் இழுத்துக் கொண்டு செல்ல நேர்ந்தது?

காரணம், ஃபூக்கோதான் அதிகாரம் பற்றிப் பேசியவர்.  கல்வி, மதம், அரசியல், குடும்பம் என்ற எந்தத் துறையிலும் உள்ள எந்த ஒரு நிறுவனமும் அதிகார அமைப்பையே கட்டமைத்துத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.  ஆண் பெண் உறவிலேயே கூட அதிகாரம்தான் முதன்மையாக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  இங்கே சாரு ஒரு நூறு முறை தன்னை ஒரு பெண் என்று கூறுவதை கவனம் கொள்ள வேண்டும்.  ஸீரோ டிகிரியை அவர் ஒரு பெண்ணியப் பிரதி என்கிறார்.  அதாவது, ஆண் மைய வாதம் என்பது (Phallocentrism) முக்கோண வடிவானது என்று விளக்குகிறார் சாரு.  முக்கோணத்தின் உச்சியிலே இருப்பவர்தான் தந்தை, மதகுரு, மருத்துவர், அதிபர், அதிகாரி, குடும்பத் தலைவர், எழுத்தாளர் எல்லாம்.  தலைவர் தருகிறார், நாம் பெற்றுக் கொள்கிறோம்.  தலைவர் சிந்திக்கிறார்.  நாம் அவர் வழி நடக்கிறோம்.  இதுதான் ஆண் மைய வாதம்.  இங்கே உரையாடலுக்கு வழியில்லை.  எல்லாமே முடிந்து விட்டது.  எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.  பின்பற்ற வேண்டியது மட்டுமே நம் கடமை.

இதற்கு எதிரான ஒரு வஸ்துவை நம் முன்னே காண்பிக்கிறார் சாரு.  அது சுருள் சுருளான ஒரு வளையம் (Spiral).  சுருள் வளையத்துக்குத் தொடக்கம் இல்லை, முடிவு இல்லை.  நீட்டித்துக் கொண்டே போகலாம்.  அதைப் பெண் உடலோடும் பெண்ணின் காமத்தோடும் இணைக்கிறார்.  அதனால்தான் சாருவின் புனைவுகளில் ஆரம்பம் இல்லை.  முடிவு இல்லை.  எந்தப் பக்கத்திலிருந்தும் நீங்கள் ஆரம்பிக்கலாம்.

சாருவிற்கு படைப்பாற்றல் இல்லை என்று சொல்பவர்கள் அவருடைய ‘நட்சத்திரங்களிலிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ என்ற கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் வரும் பாத்திரமான Jacques Didier என்ற ஆராய்ச்சியாளரை, சென்னைப் பல்கலையில் படிக்கும்போது நானும் என்னுடன் படித்த இரு தோழிகளும்  நூலகத்திலும் இணையத்திலும் தேடிவிட்டு கிடைக்காமல் போகவே யார் என்று சாருவிடம் கேட்டோம். அது கற்பனைக் கதாபாத்திரம், அந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனை என்று சொன்னபோது ஸ்தம்பித்து விட்டோம்.

சாருவிடம் எழுத்தாளன் – லௌகீக மனிதன் என்ற இரு வேறு தன்மை இல்லை. அதனாலேயே அவருடன் பழகுவதும் கடினம். அப்படியே ‘சாருவிடம் படைப்பாற்றல் இல்லை, தன் வாழ்க்கையை நாட்குறிப்பு எழுதுவதுபோல் எழுதுகிறார்’ என்று சொல்லும் நம்மில் எவ்வளவு பேருக்கு தன் வாழ்க்கையை அப்படியே நிதர்சனமாக எழுத முடியும்? என்னால் எக்காலத்திலும் இயலாது. என் தனிப்பட்ட நாட்குறிப்பில் கூட எழுத முடியாது.

அதே சமயம், வாழ்க்கை அப்படி அப்படியே நிதர்சனமாக எழுதி விடுவதால் மட்டுமே ஒரு பிரதி இலக்கியமாகி விட முடியாது.  வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையே ஒருவித ’மாயாஜாலம்’ நிகழ வேண்டும்.  அப்படி நிகழ்ந்தால் அதை நாம் ஆட்டோஃபிக்‌ஷன் என்று அழைக்கலாம்.  எனக்குத் தெரிந்து அதை நிகழ்த்தியவர்கள் ஃப்ரெஞ்சில் துப்ரோவ்ஸ்கியும் (Serge Doubrovsky) தமிழில் சாருவும் மட்டுமே.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ரொலாந் பார்த்தின் லவர்ஸ் டிஸ்கோர்ஸில் பார்த் ஒரு பௌத்த உதாரணத்தைக் கூறுகிறார்.  உண்மையைக் கண்டடைவது எப்படி?

ஒரு குரு தன் சீடனின் தலைமுடியைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்துகிறார். தண்ணீரின் மேல்மட்டத்தில் தோன்றும் நீர்க்குமிழிகள் கொஞ்ச நேரத்தில் குறைகின்றன.  ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சீடனுக்குக் காற்று இல்லாமல் உயிர் போய் விடும் என்ற நிலை வரும் தருணத்தில் அவனைத் தண்ணீருக்கு மேலே தூக்கிக் காற்றில் நிறுத்துகிறார் குரு.

தண்ணீருக்குள் காற்று இல்லாமல் தன் பிராணனுக்காகக் காற்றைத் தேடுபவனின் தீவிரத்தோடு நீங்கள் உண்மையைத் தேட வேண்டும் என்கிறார் ரொலாந் பார்த்.

அப்படித்தான் நான் சாரு என்ற காற்றைத் தேடி மலை ஏறினேன்.  மலை உச்சியை  சென்றடைந்தபோது  அங்கே காற்றே இல்லை.

உயிர்ப் பயத்தில் திரும்ப ஓடி வந்து சாருவிடம் சொன்னேன்.

சீலே வைனை அருந்தியபடி புன்முறுவல் செய்தார் சாரு.  அந்தப் புன்சிரிப்புக்கான அர்த்தத்தை மீண்டும் அவர் எழுத்துகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்…

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:32

மத்துறு தயிர்,கடிதம்

அறம் வாங்க 

அன்பு ஜெ,

ராஜமார்த்தாண்டனின் வாழ்க்கையை, அதிலிருக்கும் தேடலை ஒற்றைப் பாடலில் அடைக்க முடியும் ஒன்றைக் கண்டுகொண்ட தருணத்தில்  மத்துறு தயிர் சிறுகதையை ஆரம்பித்துவிட்டீர்களோ என்று தோன்றியது. அங்கிருந்து ராஜமார்த்தாண்டனின் விக்கி பக்கம், அதன் வழியாக அவரின் கவிதைகள், அண்ணாச்சி என்ற உங்களின் நினைவுக் குறிப்புகளின் வழியான பயணம் என ஓரிரு நாட்களாக ராஜமார்த்தாண்டனின் அகத்தில் பயணம் செய்திருந்தேன்.

தன் வாழ் நாளெல்லாம் மத்துறு தயிர் போல அலைக்கழிதலுக்கு உள்ளான ஒரு மனிதனைப் பற்றிய எண்ணமே அந்த நிலைக்கு என்னை ஒரு கணம் இட்டுச் சென்று பரிதவிக்க வைத்தது. முதன்முதலில் அறம் சிறுகதைத் தொகுப்பை கல்லூரி நாட்களில் வாசித்தேன். வாசித்தபோது இந்த மத்துறு தயிர் என் மனதிற்கு நெருக்கமாகவில்லை. நூறு நாற்காளிகள் சிறுகதை மட்டுமே எனக்கானது என்று எடுத்துக் கொண்டேன். புனைவுகளின் மீது ஈடுபாடற்ற ஒரு வகையான இறுக்கமான மன நிலை அப்போது இருந்தது. உண்மை மனிதர்களின் கதை என்று சொன்னதால் மட்டுமே அறம் தொகுப்பை அப்போது வாங்கியிருந்தேன். இன்று ராஜமார்த்தாண்டனின் அலைக்கழிதலையும் தவிப்பையும் உணரும் ஒரு முதிர்ச்சி நிலையை அடைந்திருக்கிறேன். என்னால் சற்று அந்த நிலையில் நின்று பார்த்து கண்ணீர் உகுக்கும் அளவுக்கான முதிர்ச்சி நிலையில் கம்பனின் இந்த வரிகளை கண் முன்னே விரித்து தரிசிக்க முடிகிறது.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?

முன்பெல்லாம் சங்கப்பாடல்களில் தலைவன், தலைவியின் பிரிவின் பாடல்களை வாசிக்கும்போது “இவங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டி இல்லயா” என்று நக்கலடித்திருக்கிறேன். இன்று அந்த “நான்” க்காகவும், அவ்வாறாக அன்பை, மனிதர்களை மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் மனிதர்களுக்காக பரிதாபமே கொள்கிறேன். இன்று தலைவனின் பிரிவை அணிலாடு முன்றில் எனும்போதும், காதலனைப் பிரிக்கும் யாமத்தின் முடிவை கூரிய வாள் எனும்போதும், பிரிவின் வலியில் மரணமே சிறந்ததென முடிவெடுக்கும் உச்ச நிலையையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

“பிரிவுக்கு இணையான வேதனை உண்டா? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேளா? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான். அவன் இன்னொருத்தர்கூட ஒட்டிக்கிட்டிருக்கான். கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டிக்கிட்டிருக்கது மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிகிட்டிருக்கான். பிரிவுங்கிறது அந்த பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சுப்போறதாக்கும். சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்னச் சாவாக்குமே…’”

உண்மையில் பிரிவையும் சாவையும் பிரிக்க முடியவில்லை என்னால். மரணம் உடலைக்கடந்தது என்ற சிந்தனைக்குப் பின் அது மேலும் பிடிபடுகிறது ஜெ. மரணத்திற்கிணையான வேதனையை பிரிவு அளிக்க வல்லது. கம்பராமாயணத்தில் அத்தகைய துயர் கொண்டு வாடுபவள் சீதை. தன் வாழ்நாளின் மிகப் பெரும் பகுதியை அத்தகைய தத்தளிப்பில் உழன்று தவித்தவள். ”வேண்டியவங்கள பிரிஞ்சுட்டான்னு சொன்னா அம்பிடு வேதனையும் ஒருத்தனுக்கே வந்திரும்” என்ற வரிகளின் வழி சீதையின் துக்கத்தைக் கண்ணுருகிறேன். துக்கத்தில் அதிக வேதனை தருவது பிரிவின் துக்கமே என பேராசிரியர் கூறுவதான விளக்கம் அருமை.

”மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை.” அத்தகைய துக்கத்தில் உழன்றவனுக்கு வாழ்க்கையில் உண்மையில் எந்தவித உயர்வும், தாழ்வும், புகழ்ச்சியும், இகழ்ச்சியும் ஒரு பொருட்டல்ல. ஒரு போதும் தனக்கு நடந்ததை அவன் பிறர்க்கு செய்வதுமில்லை. ”பொரிந்து வெந்திலா கா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம் எனுமளவான துக்கத்தை கைக்கொண்டு அலைக்கழிந்த ராஜமார்த்தாண்டனை இச்சிறுகதையின் வழி அணைத்துக் கொண்டேன் ஜெ. ”அர்த்தம்னா என்னது? துக்கத்துக்கு ஏது அர்த்தம்? துக்கத்தைப் புரிஞ்சவனுக்கு கவிதையிலே மேக்கொண்டு என்னத்தை புரிஞ்சுகிடதுக்கு இருக்கு?” இத்தகைய துக்கத்தை புரிந்தவனால், உணர்ந்தவனால் மட்டுமே இக்கம்பனின் வரிகளையும், ராஜமார்த்த்தாண்டத்தையும், இச்சிறுகதையும் முழுவதுமாக திறந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.

பல வகையான துக்கங்கள் வருகின்றன வாழ்க்கையில். பலரும் காலம் ஆற்றிவிடும் என்கிறார்கள். சில துக்கங்கள் காலத்தால் சுவடில்லாமல் அழிந்துவிடுகின்றன, சில் பொருளற்றுப் போகின்றன, சில தீற்றலாகின்றன, சில இனிய நினைவுகளாகின்றன, சில வடுக்கலாகின்றன, சிலவை மட்டும் ராஜபிளவையாகின்றன. துக்கத்தை நமக்கு அருளியவர்களுக்கே இது அத்தகைய ஒன்றா என்று ஐயப்படுமளவு எது ராஜபிளவையாக மனதில் நீடிக்கும் என்பது ஒவ்வொரு தனி மனிதரையும் பொருத்தது. தோல்விகள், பொருளிழப்புகளைத் தாண்டியும் அன்பைக் கொடுத்துவிட்டு திடீரென மறைந்து விடும் மனிதர்கள் தரும் வலி என்பது அவர்களுக்கே சொல்லி விளங்க வைக்கவியலா வலி.

‘காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்’ என்கிறார் பேராசிரியர். ராஜமார்த்தாண்டத்தை கடைசி மூச்சுவரை பற்றி அள்ளி அணைத்துச் சென்றது அந்த ராஜபிளவை தான். அத்தகைய துக்கம் ஒன்று எப்படித் தாக்குகிறது என்ற கேள்விக்கு ”எதை நம்பி வாழ்க்கைய வச்சுருக்கோமோ அது உடைஞ்சா அந்த துக்கம் வரும்னு குமாரபிள்ளை ஒரு தடவை சொன்னாரு…” என ஒரு ஊக பதிலை பேராசிரியர் உதிர்க்கிறார். ஒன்றைக் கொண்டு, ஒரு மனிதரைக் கொண்டு மிக நீண்ட காலத்தை வாழ்ந்து பார்த்துவிட்ட ஒன்றால் அது சட்டென குமிழியாக வெடித்துச் சிதறுவதை தாங்கிக் கொள்ளமுடியாதபோது பித்து வந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.

நான் அலுவலகம் செல்லும் வழியில் மனப்பிறழ்வு அடைந்த ஒரு மனிதரை நித்தமும் பார்க்கிறேன். முக்கு ரோட்டிலிருந்து இருமுனைப் பிரியும் சாலை வரை நடந்து கொண்டே இருப்பார். அது அரைக்கிலோமீட்டர் தொலைவிருக்கும், காலை செல்லும் போதும் நடந்து கொண்டிருப்பார். மாலை வரும் போதும் நடந்து கொண்டிருப்பார். கைகளை ஆட்டியபடி யாரோ ஒருவரை சமாதானம் செய்யும் தொனியில் பேசிக்கொண்டே விறுவிறுவென அந்த அரைக்கிலோமீட்டர் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருப்பார். ஒரு வருட காலமாக அவரைப் பார்க்கிறேன் ஜெ. என்றாவது ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும் போது அவர் நினைவு வரும். அந்நேரமும் நடந்து கொண்டிருப்பார் என்றே நினைப்பேன். கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும், குளிர்ந்த மார்கழியிலும் கூட அதே பாவனையில் நடந்து கொண்டிருப்பார். அவர் வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில், ஏதோவொரு மனிதருடன் ஏதோவோர் சொல்லாடலில் அந்தச் சாலையில் அவர் நின்றுவிட்டார் என்றே தோன்றியது. ஒருவேளை என்றாவது அவரை அலுவலகம் செல்லும்போது பார்க்க முடியவில்லையானால் அவர் இறந்துவிட்டார் என்று மட்டுமே ஊகித்துக் கொள்ள முடியும் என்னால். பிரிவினால் சித்தம் பிறழ்ந்துவிட்டவர்களையும், அதிலேயே உழன்று மத்துறு தயிராக அலைக்கழிந்து செயலில் திகழ்ந்த ராஜமார்த்தாண்டன்களையும், அவ்வலியோடு வாழ இயலாமல் வாழ்க்கையை மாய்த்துக் கொண்டவர்களையும் இக்கதையின் வழி நினைத்துக் கொள்கிறேன்.

பிரேமையுடன்

ரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 10:31

December 4, 2022

பனிநிலங்களில்- 5

ஹெல்சிங்கி விமானநிலையம்

இந்தப்பயணத்தில் ரவி முயற்சி எடுத்து ஒருங்கமைத்திருந்த பயணம் ஆர்ட்டிக் வட்டத்திற்குள் சென்று துருவஓளி (அரோராவை) பார்ப்பது. அது ஓர் அரிய அனுபவம் என பலர் பதிவுசெய்திருக்கின்றனர். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இரவில் உருவாகும் வானொளி அது. சூரியனின் ஒளி துருவம் வழியாக மறுபக்கத்தில் இருந்து கசிந்து வானில் பரவுவதனால் உருவாவது.

ஃபின்லாந்தில் ரோவநேமி (Rovaniemi) என்ற ஊரில் சாண்டா கிளாஸ் சிட்டி என்னும் சுற்றுலாநகர் உள்ளது. அங்கே சென்று ஒருநாள் தங்கி மீள்வதாகத் திட்டம். ஸ்டாக்ஹோமில் இருந்து விமானத்தில் ஹெல்சிங்கி சென்று அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ரோவநேமி சென்றோம்.  ஊர் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள கடினம், ராமநவமி என்று நினைத்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் நேமியை ஏந்திய பெருமாளின் ஊர் என்றும் திரித்துக்கொள்ளலாம். பனிமயப்பெருமாள் என ஏன் இருக்கக்கூடாது? பனி அந்தியில் பீதாம்பரமாக ஆகிவிடுகிறதே?

உறையத்தொடங்கிய ஆறு.

ஃபின்லாந்து மக்கள்தொகை குறைவான நாடு. நம் கண்களுக்கு பெரும்பகுதி நிலம் ஒழிந்துகிடப்பதாகத் தோன்றும். ஹெல்சிங்கிக்கு வெளியே உயிரசைவே  தென்படுவதில்லை. மக்கள் குடியிருப்பதே நகரங்களில்தான். சிற்றூர்களில் சில விவசாய இல்லங்கள். கண்ணுக்குப்படும் பெரும்பாலான இல்லங்கள் கோடைகால தங்குமிடங்கள். ஒவ்வொன்றிலும் பனிச்சறுக்கு வண்டிகள், மென்படகுகள், அவற்றை தூக்கிச் செல்லும் டிரக்குகள் நின்றன. அவை குளிரூழ்கத்தில் ஆழ்ந்திருந்தன

சில குடில்கள் குளிர்காலப் பனிச்சறுக்கு விளையாட்டுக்குரியவை. தொலைவில் மலைமடிப்புகளில் பனியால் பனிச்சறுக்குப் பாதைகளை அமைக்க தொடங்கிவிட்டிருந்தனர். வெள்ளை அங்கவஸ்திரம் போல அந்த பனிப்பாதைகள் மலைகள்மேல் தென்பட்டன.  அவற்றை உருவாக்கும் விதத்தை பின்னர் பார்த்தேன். நீரை இறைத்து வேகமாக சிதறவிடுகிறார்கள். விரிவடைதலே நீரை குளிரச்செய்யும். சூழலின் பாகை சுழியம் வெப்பநிலை அவற்றை பனிப்பொருக்குகளாக்கி படியச் செய்கிறது. 

வயல்கள் அறுவடைக்குப்பின் குளிர்காலத்துக்காக காத்து பனிப்புதர் மூடி காத்துக்கிடந்தன. வெயில் போலவே பனியும் புல்லை கருகச்செய்யும். மரங்கள் இலையுதிர்த்து வெறுமை கொண்டு நின்றன. வெண்பனி நெருப்பின் வேறொரு வடிவம் போலும். சாம்பல் நிறமான ஊமையொளி கொண்ட வானம். இலையுதிர்ந்த மரங்களின் கிளைச்சல்லிகள் வானில் நரம்புகள் போல மென்மையாக பரவியிருந்தன. வானம் ஒரு மென்சவ்வு போல அதிர்ந்துகொண்டிருந்தது என தோன்றியது. 

ஸ்டாக்ஹோமிலேயே குளிர்தான். ஆனால் ஃபின்லாந்தில்தான் கடுங்குளிரை அறிந்தோம். ஹெல்சிங்கியில் இறங்கியபோதே குளிரை உணர முடிந்தது. அதை விவரிப்பது கடினம். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. சட்டென்று ஒரு அகஅதிர்வு. லட்சரூபாயை கைமறதியாக தொலைத்துவிட்டு சட்டென்று நினைவுகூர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி.  மிகச்சிறிய விமானநிலையம். ஓரிரு விமானங்கள்தான்.வெளியே பகல்நேர வெப்பநிலையே பூஜ்யம் இருந்தது. காற்றும் வீசிக்கொண்டிருந்தமையால்  நடுக்கியெடுத்தது.

ரவி காரை எடுக்கச் சென்றார். நாங்கள் காருக்காகக் காத்திருந்தபோது வெளியே சென்றோம். கார்கள் எல்லாம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பழங்கள் போல உறைந்து மண்ணில் ஒட்டியிருந்தன. கண்ணில்பட்ட எல்லாமே மெல்லிய பனிப்பொருக்குப் படலத்தால் மூடப்பட்டிருந்தன. அவற்றில் நம் பெயர் எழுதாமல் அப்பால் நகர்வது கடினம். வெண்பரப்பு ஒரு தாள் என தோன்றுகிறது. வெண்பரப்பு வெறுமையாக இருப்பது நம்மை தொந்தரவு செய்கிறது.

புற்களில் பனி விழுந்து அவை பனியாலான புற்களாக மாறிவிட்டிருந்தன. கண்ணாடித்துருவல்களால் ஆன உலகம். வெண்ணிறத்தாளில் எண்ணையைத் தொட்டு வரைந்தவை போல கட்டிடங்கள். ஹெல்சிங்கியே ஒரு கரைந்து மறைந்த ஓவியம். கொஞ்சம் வண்ணம் தொட்டு தீற்றித் தீற்றி மீட்டெடுத்துவிடமுடியும்.

சட்டென்று எனக்கு நம்மூர் இனிப்புச்சேவு நினைவு வந்தது— மாவுச்சீனியில் முக்கிய சேவு. நாகர்கோயிலில் சவேரியார் கோயில் விழா வரப்போகிறது. அது இனிப்புச்சேவுக்கு பிரபலம். மொத்த நகரமே மாவுச்சீனியில் முக்கிய மாபெரும் பலகாரக்கடை அலமாரி போல தோன்றியது. குளிரில் நன்றாகவே பசிக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் பெருந்தீனிக்காரர்களாக இருப்பது இதனால்தான். குளிர்காலத் தீனியை கோடையிலும் தொடர்கிறார்கள்.

கார் வந்தது. ரவி ஓட்டினார். நாங்கள் உள்ளேயே பனியாடைகளுடன் அமர்ந்துகொண்டோம். கார் சூடேறத் தொடங்கியபோது வலியுடன் உறைந்திருந்த விரல்கள் விடுபட்டுக்கொண்டன. மெல்லமெல்ல உடல் சூடேற ஆரம்பிக்கும்போது புழுக்கமாக இருக்கிறதா என்னும் பிரமை உருவாகிறது. ஆனால் உள்ளேயே வெப்பநிலை உறையும் அளவுதான்.

வெளியே பனியின் உலகம். இருள் தேங்கிய காடுகள், உறைபனி மூடிய வயல்கள். மரங்களில் இருந்து பனிவிழுதுகள் முளைக்கத் தொடங்கி தொங்கி நின்றன. கிளைகளில் இளங்குழந்தைகளின் பால்பற்கள் போல பனிமொட்டுகள்.

ரோவநேமியில் ஸாமி இன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். ரோவநேமி என்றால் மலைவிளிம்பி அனல் என்று பொருள். இரண்டாம் உலகப்போரில் ஜெனரல் லோதர் ரெட்லக் ( Lothar Rendulic ) ஆணைப்படி ரோவநேமி  முழுமையாகவே அழிக்கப்பட்டது. எஞ்சிய மரக்கட்டிடங்களை ஒரு தீ முற்றாக அழித்து நகரை சாம்பல்மேடாக்கியது. இன்றைய ரோவநேமி பின்லாந்தின் கட்டிடவியலாளர் ஆல்வார் ஆல்ட்டோ (Alvar Aalto) இந்நகரை மீண்டும் புதிதாக வரைந்து உருவாக்கினார். இந்நகர் ஒரு ரெயிண்டீரின் தலை போலவும், நகருக்குள் வரும் சாலைகள் ரெயிண்டீரின் கொம்பு போலவும் அமைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது.

ரோவனேமியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்திருந்தோம். அங்கே எல்லா தங்குமிடங்களும் அவ்வாறு சுற்றுலாவுக்கு அளிக்கப்படும் கட்டிடங்கள்தான். வசதியான வீடு. வெளியே குளிர் உறைநிலைக்கு இரண்டுபாகை கீழே. நாங்கள் சென்றுசேர்ந்தபோது மூன்று மணி. அஜிதனும் சைதன்யாவும் வெளியே சென்று கூகிள் எர்த் வழியாக அருகே இருக்கும் ஓர் ஆற்றை கண்டடைந்தனர். கெமிஜோகி ( Kemijoki ) ஆற்றின் துணையாறான உனாஸ்ஜோகி ( Ounasjoki ) ஆறு அது.  உறைந்துகொண்டிருந்த ஆற்றின்மேல் மிதக்கும் கண்ணாடிப்பாளங்கள் போல பனிப்படலங்கள். அவை உரசி ஒலிக்கும் உறுமல்களுடன் இணைந்து இசை கேட்டோம் என்றனர்.

அந்தக் குளிரில் அண்மையில் இருந்த ஊரில் இருந்து இரண்டு நண்பர்கள் என்னை பார்க்க வந்திருந்தனர். முந்நூறு கிலோமீட்டர் கார் ஓட்டி வந்ததாகச் சொன்னார்கள். ஃபின்லாந்தில் அதுதான் அண்மை என்பது. அந்தப்பாதையே அபாயகரமானது. பனிமூடியிருக்கும். காருக்குக் குறுக்காக ரெயிண்டீர்கள் பாயும். ஆனாலும் தேடிவந்திருந்தனர்.

வடதுருவத்தில் இரு வாசகர்கள் என்பது பரவசம் அளித்தது. ஆனால் அவர்கள் எப்படி திரும்பிச் செல்வார்கள் என்னும் எண்ணமே அவர்களிடம் பேசும்போது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. உற்சாகமாகப் பேசி அவர்கள் பனியில் சிக்கிவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். இரவு எட்டு மணிக்குத்தான் அவர்கள் சென்றனர். அவர்களுக்கு நான் கொண்டுவந்திருந்த நூல்களை கையெழுத்திட்டு அளித்தேன்.

அவர்களில் சரவணன் மன்னார்குடி அருகே கொரடாச்சேரி. அங்கே டிசம்பரில் தீவெயில் அடிக்கும். திருவிதாங்கூர் வரலாற்றை படிக்கையில் எங்கோ டென்மார்க்கில் குளிர்நிலத்தில் பிறந்த டிலென்னாய் தன் 21 வயதில் குளச்சலுக்கு வந்து, திருவிதாங்கூரின் படைத்தலைவர் ஆனது பெருவிந்தையாக தோன்றும். இன்று நம்மவர் அங்கே செல்கிறார்கள். அது நம் வெற்றிதான். நாம் ஆயுதங்களுடன் செல்லவில்லை, அறிவுடன் செல்கிறோம்.

இரவில் நான் எழுந்து பார்த்தபோது வெளியே புகை கீழ்நோக்கி இறங்குவதுபோல பனி பொழிந்துகொண்டிருந்தது. பகலில் இருந்ததை விட சற்று ஒளி கூடியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஒளி வெண்ணிறமான திரைபோல தெரிந்ததே ஒழிய எந்த காட்சியும் துலங்கவில்லை. ஜன்னல் கண்ணாடி பனிக்கட்டிபோல் இருந்தது. அதில் கையை ஊன்றியபோது மின்னதிர்ச்சி பட்டதுபோலவே இருந்தது. வெளியே விழிகூர்ந்து பார்த்தபோது முந்தையநாள் கண்ட மரங்கள் எல்லாமே வெண்படலத்தில் வெண்ணிறமான நிழலால் வரையப்பட்ட  ஓவியங்கள் போல் இருந்தன.  

ஆறு முழுமையாகவே உறைந்த பிறகு

தாகம் எடுத்தது. உடலுக்குள் அனல் இருப்பதுபோல. வெந்நீர் குடிக்கவேண்டும் என அருண்மொழி சொல்லியிருந்தாள். ஆனால் நான் குளிர்ந்த நீர் குடித்தேன். உள்ளே இருந்த அனலை அவித்து ஆறுதலளித்தது. இந்தப் பனிநிலத்தில் பெரும்பாலானவர்கள் பனிக்கட்டி போட்டு பானங்கள் அருந்துவதை அதன்பின் கண்டேன். காற்றிலுள்ள நீராவி முழுமையாகவே பனியாகிக் கீழே பொழிந்துவிடுவதனால் வரண்ட மூச்சுச்சூழல் உருவாகி உடலுக்குள் வெம்மையை நிறைக்கிறது. ஊட்டியின் குளிர்காலத்தில் ஜட்டி துவைத்துப்போட்டால் காய்வதற்கு ஒருவாரமாகும். இங்கே அரைநாளில் தக்கைபோல ஆகிவிடுகிறது.

குளிர் நமக்கு ஒரு விந்தை. ஒரு வகையான அதீத நிலை. அதில் நாம் திளைக்கையில் ஒரு களியாட்டை உணர்கிறோம். உண்மையில் அது என்ன? நமது பழக்கத்தின் பிசுக்கை அகற்றி இயற்கையை புதியதாகக் காண்கிறோம். வாழ்க்கையை புதியதாக வாழ்கிறோம். அதுதான் அந்த கிளர்ச்சியை அளிக்கிறது. அங்கும் பழகினால் பனி சலிப்பூட்டும். திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் பத்தாயத்தில் தங்கியிருக்கும் ஒரு ஃபின்லாந்து இளைஞர் உண்டு. அவருக்கு வெயிலே போதை. திருவண்ணாமலையின் வெயிலனலில் மேமாதம் சைக்கிளில் சீட்டி அடித்தபடி சுற்றிவருவார்.

வெண்மையை பார்த்துக்கொண்டே இருந்தேன். அது உள்ளத்தை செயலறச் செய்கிறது. எண்ணங்கள் மறைந்து விடுகின்றன. செயலூக்கமும் இல்லாமலாகிவிடுகிறது. நான் படுத்து மீண்டும் தூங்கி விழித்தபோது எட்டு மணி. ஆனால் அதேபோல அரைவெளிச்சமாகத்தான் இருந்தது. அஜியும் சைதன்யாவும் எழுந்துவிட்டனர். அஜி ‘ஆ, பனி!’ என்றான். “வெளியே போகலாமா?” அந்த ஆறு உறைந்துவிட்டதா என்று பார்க்க விரும்பினேன்.

அருண்மொழி “அய்யய்யோ, நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டாள். நானும் அஜிதனும் சைதன்யாவும் ஆடைகளை அணிந்துகொண்டோம். வெளியே இறங்கிய ஐந்து நிமிடநேரம் பெரிதாக ஏதும் தெரியவில்லை. அதன்பின் உடல் உலுக்கிக் கொள்ள தொடங்கியது. மூக்குநுனி எரிந்தது. மூச்சில் நுரையீரல் கல்லென ஆகியது. விரல்களின் எலும்புப்பொருத்துகள் உளைச்சலெடுத்தன. நடப்பது சந்திரமண்டலத்திலா என்று தோன்றியது.

வெண்ணிற வெளியில்.

சுற்றிலும் பனிபொழிந்து பூமியே நுரைத்துவிட்டதுபோலிருந்தது. மரங்கள், கூரைகள், கார்கள் எல்லாவற்றின்மீதும் வெண்பனி.  அறிந்த எல்லாவற்றைக் கொண்டும் வர்ணிக்கலாம். இலையுதிர்ந்த செடிகள் பூத்த பருத்திச்செடிகள் போலிருந்தன. வெண்மலர்கள் பூத்தவை போல மரக்கிளைகள். அபத்தமாக அரைத்த உளுந்தமாவை அனைத்தின்மீதும் கொட்டி வைத்ததுபோல என்னும் உவமையும் மனதில் எழுந்தது.

காலடியில் பனி நொறுங்கி முனகியது. பனிப்பொழிவுக்கு மலர்களை உவமையாக்குவதை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு பனியுதிர் துளிக்கும் ஒரு படிகவடிவம் உள்ளது. அது மலர்போன்றது. கண்ணாடிக்கு அப்பால் ஒரே ஒரு பனியுதிர்கை ஒட்டியிருக்கையில் வானத்தின் பகைப்புலத்தில் அதன் வடிவை காணமுடியும். விந்தையான வெண்மலரின் சிற்றிதழ்களோ என எண்ணச் செய்யும்.

எல்லா இல்லங்களும் பனிமூடியிருந்தன. சில சாளரங்களில் ஒளி. உள்ளே சிலர் நடமாடும் நிழலசைவு. செவ்வொளி இந்தப்பனியில் அனல் என தோன்றியது. அதைப் பார்ப்பதே வெம்மையை அளிப்பது என்று எண்ணச் செய்தது. தொல்மனிதன் நெருப்பு மேல் கொண்ட பெரும் பித்து ஏன் என்பதை உணர பனிவெளியில் உலவவேண்டும். நெருப்பு போல இனிதான ஒன்றும் இல்லை இங்கே. அழகானது. அள்ளி அள்ளி குடிக்கலாமென்றுகூட உள்ளம் தவித்தது.

சாளரத்திற்கு அப்பால் ஒரு சிறுவன் எங்களை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். எங்கள் பாதத்தடங்கள் வெண்மையான துணியில் தையல்வரிசை போல நீண்டன. ஆற்றை பார்த்துவிட்டேன். வெண்பனிப் படிக்கட்டுகளுக்கு அப்பால் அது வெண்ணிற மைதானம் போல உறைந்து கிடந்தது. அசைவற்று. திக்பிரமை பிடித்த நதி. மரங்களின் நிழல்கள் உறைந்த பரப்பில் விழுந்துகிடந்தன. வெண்பரப்பிலேயே பலவகையான நிறமாற்றங்கள். அலைவரி வடிவங்கள்.

பனிப்பரப்பு எவ்வளவு கடினமானது? மெல்லிய படலம்தானா? ஒரு கல்லை எடுத்து வீசினேன். சற்று கனமான கல். ஆனால் கடகடவென ஓசையிட்டுக்கொண்டு உருண்டது. அது சென்றபாதை தெரிந்து கண்ணெதிரில் மறைந்தது. கல் பனிப்பாளம் மேல் அசைவின்மை கொண்டது. இன்னொரு பெரிய கல்லை வீசினேன். அதுவும் மரப்பலகைமேல் விழுந்து ஓடும் ஓசையையே எழுப்பியது. மேலே நடக்கலாம். ஆனால் அபாயம். அந்த ஆற்றை நன்கறிந்தவர்களுக்கே அது அபாயமானது.

அரைமணிநேரம் அங்கே நின்றிருந்தோம். கரிய சுருள்முடி கொண்ட நாயுடன் ஒருவர் காலைநடை சென்றார்.அவர் உடல் பல அடுக்கு ஆடைக்குள் இருக்க நாய் நிர்வாணமாக இருந்தது. ஆனால் அவர் நடுங்கி உடலை குறுக்கிக்கொண்டு நடக்க நாய் வாலைச் சுழற்றிக்கொண்டு குதூகலமாக குதித்துச் சென்றது. தரையில் நாய்க்காலடிகள் விந்தையான ஒரு நீள்கோலமாக தெரிந்தன. இந்த நாய்களை சென்னையின் கொதிக்கும் வெயிலில் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

காலை பத்துமணிக்கு கிளம்பி சாண்டாகிளாஸ் கிராமத்துக்குச் சென்றோம். இருபக்கமும் சாலை வெண்குழம்பலாக, மரங்கள் பனிவழிந்த கிளைகளுடன் ஓடிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மான்களை பார்த்தோம். அவை பனிப்பரப்பில் கரிய நிழலுருக்கள். வால்களை வெடுக் வெடுக் என அசைத்தபடி மேய்ந்தன.பனியை விலக்கி, காய்ந்துபோன புற்களை தின்றுகொண்டிருந்தன. மரக்கிளைகளில் கரிய அணில்கள். நாய்களுக்காவது கம்பிளிபோன்ற மயிர்த்தோல். இந்த மான்கள் எப்படி குளிர்தாங்குகின்றன என்று தெரியவில்லை.

(மேலும்) 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2022 10:35

ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணனின் மறைவு தமிழ்ச்சூழல் பற்றிய ஒரு திகைப்பூட்டும் புரிதலை அளிப்பது. உறவினர்களால் அவர் முழுமையாகவே ஏமாற்றப்பட்டார். அவருடைய செல்வத்தால் படித்தவர்கள், வளர்ந்தவர்கள் அவர்கள். அவரை கொண்டுசென்று ஒரு குடிசைப்பகுதியில் கைவிட்டுவிட்டுச் சென்றனர் எனப்படுகிறது. திலகவதி போன்ற சிலரின் உதவியால் அவருடைய இறுதிக்காலம் கௌரவமாக கழிந்தது.

அண்மையில் ஒரு வழக்கு. தன் தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு அவரை கைவிட்ட ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை நீதிமன்றம் கண்டித்து சொத்துக்களை திரும்ப அளிக்க ஆணையிட்டது. இது நடந்துகொண்டே இருக்கிறது

ராஜம் கிருஷ்ணன் தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2022 10:34

உள்ளும் புறமும் விளிம்பும்- காளிபிரசாத்

 

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

வேலை விஷயமாக ஸெகந்திராபாத்தில் தங்கியிருந்த நாட்களில் வரைகலைக் கலைஞர் ஒருவர் கவனத்தைக் கவர்ந்தார். சுவரில் மற்றும் பலகைகளில் எழுதுபவர். அங்கிருந்த காலியிடத்தில் லாரி ஒர்க்‌ஷாப்  ஒன்றிருந்தது. அந்த வரைகலைஞர் லாரிக்கு பின்னால் stop  என்றும் sound horn என்றும் எழுதுவதை நின்று பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதற்கு காரணம் அவர் அந்த எழுத்துக்களை  எழுத மாட்டார். கறுப்பு நிறம் பூசியிருக்கும் மட்கார்டில், வெள்ளை நிறத்தில்  நான்கு கோடுகளும் இரண்டு புள்ளிகளும் மட்டும்தான். ஆனால் பின்னால் உள்ள நிறத்தின் வழியாக கரிய எழுத்துக்கள் எழுந்து வந்து கண்ணை நிறைத்துவிடும்.   கதையில்லாக் கதைகளை வாசிக்கையில் அதைத்தான் நினைத்துக் கொள்வேன். ஒட்டுமொத்தமாக அது சொல்லவருவது என்ன என்பது பார்ப்பவருக்கு திரண்டு வரவேண்டும். ஆனால் அவற்றை எழுத்தாளர் எழுதுவது இல்லை.  அவர் செய்வது எல்லாம்  வேறு ஒன்றை தீட்டுவது தான்.  அவர் தீட்டுவது ஒன்று; இடைவெளியில் இருப்பது ஒன்று. இரண்டும் பிணைந்து தான் நாவலாக திரண்டு வருகிறது.

தனது கட்டுரைகளில் “தயிர்சாத சென்ஸிபிலிட்டி” என்கிற பதத்தை சாரு தொடர்ந்து பயன்படுத்தி வருவார். இதை ஒரு சோதனைக்கருவியாக அவர் சொல்லும் அனைத்திலும் இட்டுப் பார்க்கலாம். ராஸலீலாவில் வரும் தபாலாபீஸ் சம்பவங்கள் போல எக்ஸைலில் வரும் நுண்ணுணர்வு கொண்ட குடும்பஸ்தன் உதயா எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவன் எதிர்கொள்ளும் தயிர்சாத சென்ஸிபிலிட்டிக்கான எதிர்வினைகளின் ஊடாகத்தான் எழுந்து வரவே செய்கின்றன. அவ்வகையில் புதிய எக்ஸைல் நாவலின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தொடர்ச்சியாக ஒரு  ‘தயிர்சாத சென்ஸிபிலிட்டி’ கோடு இழுக்கலாம். அதில் இந்நாவலின் பெரும்பான்மையான உப பாத்திரங்களைச் சேர்த்து விடலாம்.

ஒரு மாநகர குடும்பஸ்தன், பெருமழைக் காலத்தில் எங்கிருந்தோ வீட்டுக்கருகில் வந்த நாய்க்குட்டியையோ பூனைக்குட்டியையோ கண்டால் பதற்றமாகிறான். அதை தன் வீட்டை விட்டு அப்புறப்படுத்தத் தன்னால் ஆனவற்றைச் செய்து பார்க்கிறான். அதை வீட்டிற்குள் சேர்க்க தடுப்பது எது? அவனது குடும்பமாக இருக்கலாம் அல்லது அவனது அபார்ட்மெண்டின் விதிமுறைகளாக  இருக்கலாம். பொது வாழ்க்கைக்கான அமைப்பில் இருந்து ஊறிய மனம் அதை தடுக்கிறது. அது அவ்வளவு நாட்களாக  அவனும் உள்ளே இருந்து வருகிற சித்தாந்தமும் வார்ப்பும் தானே. சற்று யோசிக்கத் தெரிந்த மனிதன் அங்கு திகைத்துப் போகிறான். வாழும் உரிமையை சக உயிருக்கு அளிக்கக்கூட தடுப்பது எது என தர்க்கமனம் ஆலோசிக்கிறது. இந்த சிக்கலை தமிழின் அத்தனை எழுத்தாளர்களும் தங்களது புனைவில் அல்லது அபுனைவில் வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்கள். நாம் இந்த வருட விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சம்பந்தப் பட்ட இருவரை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இவ்விரண்டிலும் ஒரு சராசரிக்கு மீறிய தன்மை இருக்கிறது.

ஒருவர், எழுத்தாளர் ஜெயமோகன், தனது  வீட்டில் கூடு கட்டிய பறவைகள் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் உள்ளன. அதில் தாயும் தந்தையும் கூடுகட்டுவது ஒரு பதிவு. குஞ்சு பொரிப்பது அடுத்த பதிவு. அவை பறந்து செல்வது மூன்றாவது பதிவு. அதன் இறுதிப் பகுதி இவ்வாறு முடிகிறது.

’அவ்வளவுதான், மிகச்சிறிய அழகிய ஒரு பிறவிநாடகம் முடிவுற்றது. இனி அவை வானுக்குரியவை. வானம் அவற்றை ஏந்திக்கொள்ளட்டும்.’

அது கிட்டத்தட்ட ஓரு தந்தை மனநிலை.

மற்றவர் சாருநிவேதிதா. உதயாவின்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் ஒரு பூனை தவறுதலாக விழுகிறது. அதைக் காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார்கள். அப்படியே அந்த அத்தியாயம் வளர்ந்து தாவித்தாவிப் போகிறது. அதற்கடுத்து உதயாவின் மனம், இத்தகைய உயிர்களை காப்பது எப்படி என்று ஆலோசிக்கிறது. உதயாவிற்கு அதனாலேயே அவைகுறித்தே தொடர்ச்சியாக தகவல்கள் கண்ணில் படுகின்றன. அத்தகைய பிராணிகள் குறித்து அச்சமுற்று அலைக்கழிந்தபடியே  இருக்கிறான். தன்னை நம்பி இருக்கும் உயிர்கள் என்று அதன்மீது உருவாகும் பற்று. அவற்றிற்கு சிறந்ததைத்தானே தான் அளிக்கவேண்டும் என்று உருவாகும் பதற்றம். அதனால் தனது சக்திக்கும் மீறி அவற்றிற்கு சிறந்த உணவை அளிக்க துவங்குகிறான். அங்கிருந்து அது மேன்மேலும் விரிந்து கொண்டே போவதைக் காணலாம். தெருநாயைக் கண்டு பதட்டமடைவதால், தான் இமயமலைப் பயணம் போகும் போது அதை யார் கவனிப்பார்கள் என அதற்கு ஒரு ஏற்பாடு செய்து வைப்பது. ஏதோ ஒரு ஊரில் வீடு காலி செய்து போனவர்கள் தங்கள் வளர்ப்பு நாயை பார்சலில் சென்னை ரயில்நிலையத்திற்கு அனுப்பிய செய்தியை  வாசித்து நிலைகுலைவது என தனது பதட்டத்தை பெருக்கிக் கொண்டே போவதைக் காணலாம். இதை ஒரு தாயின் மனநிலையாக சொல்லலாம்.

அந்த மனநிலையோடு துவங்கும் இந்நாவல் முரண்களில் இயங்குகிறது. முதல் காரணி அவனிடம் வெளிப்படும் அன்பு. அதாவது வரைமுறைக்கு உட்படாத அன்பு. பொதுச்சமூக கணக்குப் படி அவற்றை ‘முறையானது’ அல்லது ‘முறைமீறியது’ என்று வகைப்படுத்தினாலும் அதற்குள் அடைபடாமல் மீறிச் செல்கிறது அது. இரண்டாவது ஒவ்வாமை. சராசரிகளிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வாமை. அந்த சிக்கலை ஒரேமாதிரியாக எதிர்கொள்பவர்களாக உதயாவும் அஞ்சலியும் இருக்கிறார்கள். நாவலில் இன்னும் இருவரும் கூட அதை எதிர்கொள்கிறார்கள். ஒருவர் பெருந்தேவி மற்றவன் கொக்கரக்கோ. பெருந்தேவி அதனுடன் போராடுபவள். கொக்கரக்கோ அதனுடன் விளையாடுபவன்.

சமூக அமைப்பில் இருந்து மனதளவில் வெளியே இருப்பவர்கள் அல்லது விளிம்பில் நிற்பவர்கள் உதயாவும் அஞ்சலியும். சாரு துவக்கம் முதலே தன்னை முன்வைப்பதே அத்தகைய ஒருவராகத்தான். அவரது முந்தைய நாவல்களில் அவை மிகவும் காத்திரமாக வெளிப்படும். முந்தைய படைப்புகளில்  அடர்த்தியாக வெளிப்பட்டவை இங்கு அடர்த்தி குறைந்து போயிருக்கிறது. அவ்வாறு சொல்வதை விடவும்  தனது  முந்தைய  அழகியலையும் கலைத்துப் போடுகின்றது எனக் கூறலாம்.  ஸீரோடிகிரியில் ஒரு பக்கம் முழுக்க ஜெபமாக வரும் ஆரிய அல்குல் இங்கு ஒரு பக்கம் முழுவதும் அதன் சமகால வார்த்தையாக வருவதைப் போல நிகழ்கிறது. அதற்கு இது நிகழும் களம் ஒரு காரணம். அஞ்சலி மீதான குடும்பத்தாரின் வம்பு, உதயா எதிர்கொள்ளும் சமூக வலைதள வம்பு என இந்நாவலின் களம் முந்தைய நாவல்களின் காலத்தைவிடவும் அண்மையானது. அதாவது  வம்புகளின் நுகர்வு  கலாசாரம் அதிகமாகக் கொண்ட சமூகவலைதள உலகிற்கான நாவல் இது. எழுதப்பட்ட காலத்தை விட இந்தப் பத்தாண்டுகளில் இன்னும் அருகில் உள்ளது.  மறுபுறம் உதயா தன்னை எக்ஸைல் / மார்ஜினல் மேன் என்று அடையாளப் படுத்திக் கொள்வதன் முழு வெளிப்பாடும் இங்கு நிகழ்கிறது.

உதயாவின் எரிச்சல் என்பது அவனது நுண்ணுணர்வு சார்ந்து வெளியாகிறது. சகதெருவாசிகளின் சாமர்த்தியத்தைக் காண்பதால் உருவாகிறது.  உதயா ஒரு எழுத்தாளர் என்பதாலேயே அவரை உய்விக்க அவரிடம்  சம்ந்தமில்லாமல் தனக்கு தெரியாத ஒன்றை பேசும் பொதுஜன மனநிலையால், தனக்கு ஏதும் தெரியாது என நம்பும் குடும்பத்தினர் எதர்வினையால் என அந்த எரிச்சல் படர்ந்து கொண்டே போகிறது.

உதயாவின் சித்தாந்தம், அமைப்பின் மீதான எதிர்ப்பாக தன்னை பதிவு செய்துகொள்கிறது. சாருவின் நாவல்களின் பொதுவான அம்சம்தான் இது. குடும்பம் என்ற அமைப்பானலும் சரி அரசு, அலுவலகம், சமூகம் என எல்லா அமைப்பிற்கும் எதிர்க்குரலாகிறது. அந்த வரிசையில் இலக்கியமும் ஒரு அமைப்பாகிறது என்று அதையும் எதிர்க்கிறது. சாருவின் சிதறிய கதை சொல்லல் முறையிலிருந்து பொது சிறுகதை வரைவில் உட்படும் சுவாரஸியமான சிறுகதைகளை உருவாக்கிவிட இயலும். எக்ஸைல் நாவலில் ஒரு கொலைகாரனை உதயா சந்திக்கும் இடம் ஒரு குறுநாவலுக்கான களம்தான். ஆனால் அவரது கலக மனம் இயல்பாகவே அதை நிராகரிக்கிறது. முந்தைய கதை சொல்லலின் கட்டமைப்பையும் உள்ளடக்கத்தையும் கலைக்கிறது. வரம்பு மீறிய வார்த்தைகளை உபயோகிக்கிறது. உள்ளடக்கமும் மீறலை விதந்தோதி உன்னதப் படுத்துகிறது. இத்தகைய எழுத்துக்கள் வாசகருக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தாலும் பிறகு சில கேள்விகளை எழுப்பும். வாசகருக்குள் ஒரு  கலகத்தை உருவாக்க வேண்டும்.  அந்த அடிப்படையில் சாருவின் முந்தைய நாவல்களின் தொடர்ச்சியாக வைக்கும் கலக உணர்வு இங்கு சீண்டல் என்னும் அளவில் நிற்கிறது. அதைத் தவிர்த்து தனி நபர்கள் அல்லது சாமியார்கள் வழியாக உதயா அடைந்த ஏமாற்றத்திற்கான விளக்கம் என்று நகர்கிறது.

அதில் கவனிக்க வேண்டிய இரு காரணிகள் உள்ளன. ஒன்று நாவலுக்கு வெளியிலிருந்து  கவனிக்கத் தக்கது.  இலக்கியம் என்று வரும் போது வேறு ஒன்றாகவும் சமூக வலைதள சீண்டல் வேறு வகை என்றும் சொல்லப்படுவதை இது  உரசிப் பார்க்கிறது. பொதுவாகவே இலக்கியம் என்பது உன்னதம்; சமூக வலைதள பதிவு ஒரு விளையாட்டு சீண்டல் என்கிற இரட்டை நிலைப்பாடும் அதன் வழி இலக்கியத்தின் மீது  அதீத உன்னதப் படுத்தலும் எங்கும் பொதுவான நிகழ்வதுதான். சாருவின் எழுத்து அதை மீறுவதாலேயே அதிகம் விமர்சிக்கப்படும். ஆனால் அதிலும் ஒரு முரணாக, இன்று இலக்கியத்தில் சாருவை எதிர்த்து பதிவிடும் சிலருடைய சமூக வலைதளப் பதிவுகள் சாரு நாவல்களில் உள்ள சீண்டல் தன்மையையே தானும் கொண்டிருக்கின்றன என்பதையும் காணலாம். அந்தளவு அவரது பாணி ஊடுருவியிருக்கிறது என்பதையும் மறுக்கவியலாது.

நாவலின் உள்ளடக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது.  உதயா தன்னை முன்னிறுத்திக் கொள்வது போல் அவன் அமைப்பிற்கு முற்றிலும் எதிராக இருப்பவனோ அமைப்பை விட்டு துண்டித்துக் கொண்டு வெளியேறுபவனோ அல்ல. உதயா அமைப்பை எதிர்த்து நின்றாலும் குடும்பம், அலுவலகம், அதற்கும் வெளியே வாசகர் வட்டம் போன்று தனக்கான அமைப்புகளுக்குள் தான் இருக்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவன் பெரும்பான்மையை எதிர்த்து கலகம் செய்யும் ஒரு எதிர்த்தரப்பு. அது எப்பொழுதும் எதிர்த்தரப்பாக இருப்பதனால்தான் எந்த அரசியல் சூழலுக்குள்ளும் சிக்காமல் விமர்சிக்க முடிகிறது. அன்றைய சமகால அரசியலை பன்னீர்செல்வத்தின் ஆவியை  வைத்தும் விமர்சிக்க முடிகிறது. நம் சமூகத்தில் காந்தி ஒரு தரப்பு என்றால் பெரியார் மற்றொரு தரப்பு. அனைவரையும் அனுசரித்த,  அதேநேரம் மிகவும் கடுமையான ஒழுங்கு காந்திய அமைப்பினுடையது என்றால் அதற்கு  எதிரான இடத்தில் நாம் அனைத்தையும் கலைத்துப் போடும்  பெரியாரிய சிந்தனையை சொல்ல முடியும். இரண்டிற்குமான குறிக்கோளில் பெரிய வேறுபாடு இருக்கவியலாது ஆனால் அதன் அணுகுமுறையில் வேறுபாடுகளைத் தவிர வேறு எதுவும் காணவியலாது. அதை இன்றைய இலக்கியத்தில் பொருத்திப் பார்த்தால் கூட ஒரு அமைப்பாக இலக்கியத்தில் இயங்கும் தீவிரமும் அதற்கேற்ற ஒழுங்கும் கொண்டவராக ஜெயமோகனைக் கொண்டால் அவருக்கு எதிர்த்தரப்பாக  சாருநிவேதிதாவை வைக்க முடியும். இணையவழியில்  கடந்த பதினைந்து வருடங்களாக கவனித்தால் கூட தனது நாவல்களின், கட்டுரைகளின் வழியாக தொடர்ச்சியாக  ஜெ. வின் சிந்தனைப் போக்கிற்கு எதிர்வினையாற்றி வந்தவர் சாரு. எதிர் அமைப்பாக நின்று  அதற்கான மறுப்பை தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பார்.

உள்ளடக்கத்தில் வரம்பு மீறும் எழுத்துக்கள் தமிழுக்கு புதியவை அல்ல. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் கலாசார அதிர்ச்சி அளித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் மீதான தனிப்பட்ட எதிர்வினைகளையும் அவர் சந்தித்திருக்கிறார். அவருக்கு சற்று இளையவரானாலும் அவருக்கு சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க மற்றவர் தஞ்சை பிரகாஷ். தி.ஜா எழுத்துக்கள் காமத்தை புரிந்து கொள்ளப் பார்த்தால் தஞ்சை பிரகாஷ் எழுத்துக்கள் காமத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் தஞ்சை பிராகாஷ் பெயரை பலரும் முன்னோடிகள் வரிசையில் சொல்வதில்லை. தி.ஜாவின் நாவலை வைத்து விவாதிக்கும் / நிராகரிக்கும் பலரும் தஞ்சை பிரகாஷ் பெயரைக் கூட உச்சரிப்பதில்லை. அவருக்கு வாய்த்தது ஒருவித புறக்கணிப்பு என்று சொல்லலாம். ஒரு சமூக ஒழுங்கில் இருக்கும் மனம் அத்தகைய எழுத்துக்களை சபையில் வைத்து விவாதிக்க தயங்குகிறது. அதன் கேள்விகள் தனி ஒருவனின் அந்தரங்கத்துள் ஊடுருவது. பொதுவில் உரையாட கூச்சப்படும் அந்தரங்கத்திற்குள்ளும் செல்வது. சாரு நிவேதிதா துவக்கம் முதலே பொதுமரபிற்கு எதிராகத்தான் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அவர்  மீதும் புறக்கணிப்பு நிகழ்ந்தபடி இருக்கும். ஆனாலும் பிடிவாதமாக அதையும் பதிவு செய்த படி இருக்கிறார்.

நாவலில்,  தன்னை  கலகக்காரனாக முன்வைக்கும் உதயா தனது தரப்புக்காக முழுவதும் வாதிடுவது. அதற்கான அங்கீகாரத்தை எதிர்ப்பார்ப்பது. தமிழில் பிற எழுத்தாளர்கள் அடையும் அங்கீகாரத்தை தனது எழுத்துக்கள் அல்லது தான் பெறவில்லை என்கிற ஏக்கம் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது உதயாவின் மனவோட்டத்தை அண்மையாக்குபவை. அந்த இடத்தில் ஒரு போலித்தன்மை வருவதையே பொதுவாக இத்தகைய எதிர்த் தரப்புகளில் காணவியலும். எதையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் உதயா தனக்கான அங்கீகாரம் சார்ந்த தனது இத்தகைய புறக்கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைப்பது உதயாவை இன்னமும் நெருக்கமாக்கிவிடுகிறது.

எக்ஸைல் நாவலில் வரும் உதிரிக்கதைகள் ஒன்றையொன்று ஈடு செய்பவையாக உள்ளன. பெருந்தேவியும் உதயாவும் இருக்கும் வீட்டின் முன் இரு மரங்கள் இருக்கின்றன. காரோட்டிகள் அங்கு  வாகனத்தை நிறுத்துவது அதன் மறைவில் குடி உள்ளிட்ட போதை வஸ்துக்கள் உபயோகிப்பது கழிப்பறைபோல அசுத்தம் செய்து வைப்பது என அந்த இடத்தை நாசம் செய்வதைத் தாளாமல் அதை வெட்டி எறிகின்றான் உதயா. பொதுச்சமூகத்தின் அலட்சிய போக்கினை கண்டிக்க இயலாமை மரத்தை வெட்டுவதில் வந்து முடிகிறது. இஅங்கு நுண்ணுணர்வு கொண்ட எளிய மனிதனான உதயா சராசரியோடு மோதுகிறவன் கிடையாது. அவனுக்கு அவர்களோடு பொருந்த இயலாது. அவனால் மரங்களை வெட்டியெறியத்தான் முடியும்.

நாவலின் பிற்பகுதியில், உதயாவின் காதலியான அஞ்சலியின் வீட்டு வாசலில் இருந்த மரத்தை தனது கார் நிறுத்த இடையூறாக இருப்பதால் அவளது  எதிர் வீட்டுக்காரர் வெட்டி விடுகிறார். இப்பொழுது அஞ்சலிக்கு அந்த மரத்தை வெட்டியதால் மனம் குலைகிறது. அது, அதில் வாழ்ந்த பறவைகள் மற்றும் மரத்துடனான அவளது அந்தரங்க தோழமை துண்டிக்கப்பட்டதால் வந்த உணர்வு. முன்பு உதயா மரங்களை வெட்டுவதற்கு காரணமும் இங்கே எதிர் வீட்டு ஆள் மரத்தை வெட்டுவதற்கு காரணமும் வேறு. இரண்டாவதை சராசரி மனநிலை என்று சொன்னால், முதலாவதை அதற்கு எதிரான ஒரு கலகம் எனச் சொல்லலாம்.  அந்த வேறுபாட்டை தானாக எடுத்துக் கொள்ள வேண்டியது அதில் வாசகரின் பங்கு. ஆனால் இரண்டிலும் மரம் வெட்டப்படுகிறது இது சூழலியலுக்கு ஒரு கேடுதானே என்று ஒரு கேள்வியை பொதுவாக எழுப்பினால் நாவல்மரத்திற்கு மட்டுமல்ல நாவலுக்கும் வெளியேதான் வாசகர் நிற்கிறார்.

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவல் குருவாயூரின் கேசவனிடமிருந்து துவங்கும். அங்கிருந்து இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் நிகழ்ந்த  செய்திகள் இதில் வருகின்றன. அவற்றில் சாமானியர்களை  பலிவாங்கிய அதிகாரத்தின் கரங்கள் குறித்த செய்திகள் சில. முற்றிலும் உணர்ச்சியற்றுப் போன சமூகத்தின் கதைகள் சில. அவற்றைப் பற்றி அந்த நேரம் பொங்கிவிட்டு அதைப் பற்றி தனது கருத்தை சொல்வது கூட ஏதாவது வில்லங்கத்தை உருவாக்குமோ எனக் கருதி விலகி ஓடும் பொது மனத்தின் மீதான விமர்சனங்கள் சில.  அவை தவிர  உதயா அஞ்சலி ஆகியோரின் தனிப்பட்ட அனுபவங்களின் ஊடாகவும் சொல்லப்படும் கதைகள் சில.  இதோடு கூட இவ்வாறு சிதறிக் கிடக்கும் உதிரிக் கதைகளின் வழியாக நாவல் நிகழ்கிறது. அதனை முழுமையாக்குவது வாசகனின் உணர்வும், அதில் இணையும் போதுதான். அவன் தன்னை அங்கு பொருத்திக்கொள்ள வேண்டியதும் இந்தச் சிதறல்களை இணைப்பதும் முக்கியம். பள்ளி நாட்களில் சினிமா பார்த்துவிட்டு வரும் நண்பன் மதிய உணவு நேரத்தில் அதன் கதையை சொல்லத் துவங்குவான். செந்தூரப் பூவே கதையை ஆரம்பிப்பவன் நிரோஷா வரும் போது அவருக்கான அறிமுகத்தை தரவேண்டி எம் ஆர் ராதாவுக்கு தாவி அவரின் சாகஸத்தை சொல்ல வேண்டி எம்.ஜி.ஆரை சுட்ட கதைக்கு போய் அங்கிருந்து மாட்டுக்காரவேலனுக்கு வந்து  ஊரில் மாடுமேய்த்து வந்தவன் தனது வேலிக்குள் மாட்டை அவிழ்த்து விட்டதால் அதை அடித்த கதையை சொல்லிக் கொண்டிருப்பான். கூட இருந்த இன்னொரு நண்பனுக்கு தனது மாட்டை அடித்தவன் யார் என அப்போது தெரியவர ஒரு கைகலப்பு அங்கு நிகழ்ந்தது. இதற்கு காரணம் நிரோஷாதான் என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் விசாரணையை அங்கிருந்துதானே துவங்கியாக வேண்டி யிருக்கிறது…

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2022 10:34

உழல்தல் ஒரு பேரின்பம் 

எழுதப்பட்ட வரலாறுகளின் வழியாக மட்டுமல்ல, இலக்கியங்களின் வழியாக மட்டுமல்ல, பயணத்தில் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம் என்று இந்த நூல் விளக்கியிருந்தது. அதனை அவர்களுக்கு இரண்டு நிமிடங்களுக்குள்ளாக விளக்கினேன். அந்நூலைப் படிப்பதற்கு வழங்குமாறு கூறி சில பாகங்களை வாசித்தனர். ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் தான் அந்நூல்.ரசனை மிக்க ஒவ்வொரு பயணியும் வாசிக்க வேண்டிய நூல் இது

உழல்தல் ஒரு பேரின்பம் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.