Jeyamohan's Blog, page 667

December 7, 2022

பனிநிலங்களில் -8

ஸ்வீடனில் எங்கள் கடைசிநாட்களில் பனிபெய்தது. அது வழக்கத்துக்கு மாறான விஷயம். டிசம்பர் மத்தியில்தான் பனிப்பொழிவு இருக்கும். ( இவ்வாண்டு கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது). ஸ்வீடன் ரவி அனுப்பிய புகைப்படங்களில் பனி மலையெனக் குவிந்திருக்கிறது. நியூயார்க்கிலும் பனிக்கொப்பளிப்புதான்.

ஃபின்லாந்தில் இருந்து மீண்ட அன்று நான் ரவியின் இல்லத்தில் அறைக்குள் இருந்தேன். குளிர் ஏறி ஏறி வந்தது. வெப்பக்கருவி கொண்டுவந்து வைத்தும் குளிர் விரல்களை கவ்வி தட்டச்சு செய்ய முடியாமலாக்கியது. அரை இருட்டு அறைக்குள். மாலை மணி இரண்டுதான். கீழிருந்து அருண்மொழி கூப்பிட்டு “ஜெயன் வெளியே பாரு, பனி!” என்றாள்.

நான் வெளியே எட்டிப்பார்த்தேன். பனித்துருவல்கள் வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன. இலவம்பஞ்சு வெடிக்கும் பருவத்தில் மரத்தடியில் அப்படி பஞ்சுப்பிசிறுகள் பறந்து இறங்கிக்கொண்டிருக்கும். மிகமெல்ல பெய்யும் வெண்மழை.

நான் ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே சென்றேன். கையை விரித்துப் பிடித்தால் சோப்புநுரை போல பனிப்பொருக்குகள் நிறைந்தன. கார்கள் எல்லாம் பனிக்குல்லாய் போட்டிருந்தன. அத்தனை பரப்புகள்மேலும் பனிக்குவைகள். அள்ளினால் நுரையை அள்ளும் அதே உணர்வு. ஊதினால் பறக்கும். கைவிரல்களால் அள்ளிப்பற்றி இறுக்கினால் கெட்டியாகி விடும்.

ஒரு மணிநேரம் பனியில் உலவிக்கொண்டிருந்தேன். பனியை உதைத்தேன். பனியை காலால் துழாவினேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னக்குழந்தைகள் மெத்தை தலையணையை வைத்து விளையாடுவதுபோல. அர்த்தமற்ற உற்சாகம்.ஆனால் மெய்யான மகிழ்ச்சிகள் எல்லாமே கொஞ்சம் அர்த்தமற்றவைதான்

அஜியும் சைதன்யாவும் வைக்கிங் அருங்காட்சியகம் சென்று திரும்பும்போது பனிப்பொழிவை பார்த்தார்கள். முதல் பனிப்பொழிவில் ஸ்வீடன் மக்கள் தெருக்களில் நடனமாடியதை அஜிதன் படம்பிடித்து வைத்திருந்தான்.

கண்கூசவைக்கும் வெள்ளை உலகம். ரவியின் இல்லத்துக்குப் பின்னாலிருந்த வயல்வெளி பனியால் மூடி அலையலையாகத் தெரிந்தது. மரங்கள் பனிச்செண்டுகள். பனிக்கு ஓர் வடிவம் இருந்தது. அது நீர் படிகமாகும்போது உருவாகும் அடிப்படை வடிவம். ஒரு சிறுவெண்மலர். ஒரு நுண்ணிய கண்ணாடிச் சிற்பம். அது விண்ணில் மலர்ந்து மண்ணை அடைகிறது.

எல்லா படிகங்களுக்கும் அப்படி ஒரு அடிப்படை பொறியியல் கட்டுமானம் உண்டு. சி.ஜி.யுங் அதைத்தான் ஆர்க்கிடைப் என்பதற்கான உதாரணமாகச் சொல்கிறார். அவற்றின் ஆதாரமான திடவடிவம் அது. அதுவே பலநூறு என பெருகி பனிவெளியாகிறது.  கண்ணாடிச்சில்லுகளில் ஒற்றை பனிப்பொருக்கு ஒட்டியிருக்கையில் வெளியே இருக்கும் ஒளியில் அவ்வடிவை தெளிவாகவே காணமுடியும்.

பனியில் ரவியின் இல்லத்தை திரும்ப கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் சுற்றினேன். பின்னர் கண்டுபிடித்தபோது என்னையே பாராட்டிக் கொண்டேன். இத்தனைக்கும் ஐம்பது வீடுகள் கொண்ட தொகுப்புதான் அது. ஒவ்வொரு வீடாக கதவை தட்டி ”உங்கள் வீட்டில் ஒரு தமிழ் எழுத்தாளர் தொலைந்துபோயிருக்கிறாரா?” என்று கேட்டால் எப்படி இருக்கும்?

இரவு இலங்கைத் தமிழ் நண்பர்கள் சிலர் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் என்னை ஸ்வீடன் (தனியார்) ரேடியோவில் ஒரு பேட்டி எடுத்தனர். ரவியின் இல்லத்திற்கு மேலேயே ஒலிப்பதிவு நடைபெற்றது. இணையம் வழியாக ஒலிபரப்பான பேட்டியை ‘லைவ்’ ஆக அறுநூறுபேர் கேட்டதாகச் சொன்னார்கள்.

அதில் ஒரு கேள்வி, நீங்கள் வலதுசாரியா இடதுசாரியா? நான் அடிக்கடி பதில்சொல்லும் கேள்வி அது. நான் சொன்னேன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் அத்தனை படைப்பாளிகளும் வலதுசாரிகளால் இடதுசாரி என்றும் இடதுசாரிகளால் வலதுசாரி என்றும் வசைபாடப்பட்டுள்ளனர். எழுத்தாளன் எந்த சாரியும் இல்லை, அவனே ஒரு சாரி. ஆகவே அவன் எல்லா சாரிகளுக்கு எதிர்ச்சாரி.

அதன்பின் நானும் ரவியும் பிரகாஷும் கிளம்பி ஸ்டாக்ஹோம் தமிழ்ச்சங்கத்தை நடத்திவரும் நண்பர்களை சந்திக்கச் சென்றோம். அவர்களெல்லாம் அங்கே டிசிஎஸ் நிறுவனம் நடத்தும் கணிப்பொறி நிறுவனத்தின் ஊழியர்கள். பெரும்பாலும் அனைவருமே அருகருகே அடுக்குமாடி இல்லங்களில் குடியிருக்கிறார்கள்.

சென்றமுறை பவா செல்லத்துரை வந்தபோது ஸ்டாக்ஹோமில் ஒரு தமிழ்நூலகம் இருந்தாகவேண்டும் என்று சொன்னதை ஒட்டி ஊருக்கு வந்து நூல்களை வாங்கி வந்து ஒரு சிறுநூலகம் அமைத்துள்ளனர். அதை நான் நாடா வெட்டி திறந்து வைத்தேன். ஒரு சிறு தொடக்கம். அங்கே இருக்கும் பொழுதுகளை அவர்கள் வாசிப்பதற்குச் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன். அதன்பின் உணவு. அங்கேயே செய்த அதிரசம் தஞ்சையின் சுவை கொண்டிருந்தது. குறிப்பாக என் மாமியார் சரோஜா டீச்சரின் கைப்பக்குவம்.

பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் உருவானது. ஒரு பெண்மணி ஸ்வீடனில் குழந்தைகளைக் கண்டித்து வளர்க்கமுடியவில்லை, கண்டித்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று குறைப்பட்டார்.

நான் சொன்னேன். “நீங்கள் ஏன் கண்டிக்கவேண்டும்? உண்மையில் உங்கள் குழந்தைகள் அளவுக்கு நீங்கள் முறையான பண்பாட்டுக் கல்வியோ நடத்தைப் பயிற்சியோ கொண்டவர்களா? ஒரு நவீன நாட்டின், முதன்மையான கல்விமுறையின் வழியாக பயிற்சி பெறுபவர்கள் அவர்கள். நீங்கள் அப்படி அல்ல. மிகப்பிந்தியிருக்கும் ஒரு கல்விமுறையில் பயின்றவர்கள். நம் குடும்பங்களில் பண்பாட்டுப் பயிற்சி என்பதே இல்லை. நமக்கு பொதுநடத்தை பயிற்சியும் இல்லை. அவற்றை நம் குழந்தைகளிடம்தான் கற்கவேண்டியிருக்கிறது. தந்தை கிழித்துபோட்ட குப்பையை கிண்டர்காட்டன் குழந்தை எடுத்து குப்பைக்கூடையில் போடுவதை நான் அமெரிக்காவில் கண்டிருக்கிறேன். நீங்கள் கண்டித்தால் அக்குழந்தைகளை உங்கள் பண்பாட்டுத்தரநிலையை நோக்கி வன்முறையாக இழுப்பீர்கள். அதை ஏன் செய்யவேண்டும்? அவர்களை இந்த நாகரீகத்துக்கு அளியுங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளட்டும். நீங்கள் செய்யவேண்டியது அவர்களுடன் உரையாடலில் இருப்பதையும் அவர்களை அறிந்துகொண்டிருப்பதையும் மட்டும்தான்”

அதை புரியவைக்க என்னால் எளிதில் இயலவில்லை. குழந்தைகள் தங்கள் பொறுப்பிலிருக்கும் ‘செப்பனிடவேண்டிய கச்சாப்பொருட்கள்’ என்னும் பிரமையில் இருந்து பெற்றோர் விடுபட முடியாது. (நானும்தான்) “உங்கள் குழந்தைக்கு உடல்நிலை மோசமானால் அவர்களுக்கு நீங்கள் மருந்து தரமாட்டீர்கள். நிபுணர் வேண்டுமென எண்ணுவீர்கள் அல்லவா? அதைப்போலத்தான் கல்விக்கும்” என்றேன்

அங்கேயே உணவுண்டுவிட்டு திரும்பும்போது பல்கலைக் கழகம் சென்று சைதன்யாவை அழைத்துக்கொண்டோம். அவளும் தோழியும் பொழிபனியில் விளையாடியதாகவும் பனிமனிதன் செய்ததாகவும் சொன்னாள்.

இரவு அருண்மொழி பெட்டிகளை கட்ட ஆரம்பித்தாள். நான் அதற்குள் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்ததும் கிளம்பி இன்னொரு முறை பனியுலா சென்றோம். வயல்வெளி வழியாக அருகிருக்கும் காடுகள் வரைச் சென்றோம்.

பனியில் மான்கள் உடல் ஒடுங்க நடந்து செல்வதைக் கண்டோம். அவை பனியை மூக்கால் விலக்கி உள்ளே உறங்கிய உறைந்த புல்லை மேய்துகொண்டிருந்தன. அந்தக் குளிரில் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு அவற்றுக்கு உடலில் மயிர்ப்போர்வையும் இல்லை. உறைநிலைக்குக் கீழே ஐந்து பாகை இருந்தது குளிர்.

அணில்கள் மரக்கிளைகளில் விளையாடிக்கொண்டிருந்தன. கறுப்பு அணில்கள். (அ.முத்துலிங்கம் கறுப்பு அணில் என ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். நானும் நண்பர்களும் நடத்திய சொல் புதிது இதழில் வெளிவந்த கதை அது) அணில் கரிய புள்ளி போல வெண்பனிப்பரப்பில் துள்ளி துள்ளிச் சென்றது. மரங்களில் ரேவன்கள் பனிப்பொருக்குகளை உதிர்த்தபடி அமர்ந்து எழுந்தன. ஆனால் நம்மூர் காகங்கள் போல அவை ஒலியெழுப்புவதில்லை.

பனியை பார்த்துப் பார்த்து சலிப்பதில்லை. நான் பனியை அள்ளி சைதன்யா மேல் பொழிந்தேன். அவள் என்னை துரத்தித் துரத்தி பனியால் அடித்தாள். ஓர் இளம்பெண் பனியை பெரிய உருளையாக உருட்டித் திரட்டிக்கொண்டிருந்தாள். பனிமனிதன் செய்யப்போகிறாள் என்று தெரிந்தது. ஸ்வீடன் மக்கள் எல்லாருமே பனியை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

ரவியின் இல்லத்தின் அருகிலேயே ஒரு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. வானிலிருந்து பார்த்தால் ஒரு கண்போலத் தெரியும்படி அமைக்கப்பட்டிருக்கும்  அது ஓர் இயற்கை ஊற்று.பனியில் உறையாமல் நீலநிற நீர் ஓடையாகச் சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் பனிக்காலத்துக்காக கிளைவெட்டப்பட்ட மரங்கள் குச்சிகளக நின்றிருந்தன. (அந்தக்காலத்தில் பள்ளி விடுமுறையில் எங்களுக்கு சம்மர்கட் என்னும் மொட்டையை அடித்துவிடுவார்கள்)

அது கன்ஹில்ட் என்ற பெண்ணின் தொன்மத்துடன் தொடர்புடையது. ஜோன் ஆஃப் ஆர்க் போல அவள் ஒரு ஸ்வீடிஷ் வீராங்கனை. மந்திரசக்திகள் கொண்டவள் என்றும் பேரன்னை என்றும் அவளை வழிபடுகிறார்கள். வைக்கிங்குகளின் குலக்குழுக்கள் இடையே பூசல் நிகழந்தபோது அவள் சமாதானம் செய்து வைத்தாள். பெண்ணுக்கு அந்த அதிகாரம் உண்டா என மூத்தகுடித்தலைவர்கள் சிலர் சொல்ல அவள் தன் வாளை உருவி அந்த மண்ணில் நட்டாள். அங்கிருந்து ஊற்று கிளம்பி வழியத் தொடங்கியது.

பனியில் இரண்டுமணிநேரம் நடந்திருப்போம். அதற்குள் மூச்சுவாங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கண்களை சூடாக்கி மூக்கில் நுழைந்து மூக்குவழியாக வந்து வாயில் பட்டு உப்புக்கரித்தது. ஆச்சரியம்தான். உடலையே மூடிவைக்கிறோம். கண் உறைநிலைக்குக் கீழே திறந்திருக்கிறது. ஏனென்றால் கண் ஓர் ஊற்று. அது உறைவதில்லை.

எங்களுக்கு மதியம் விமானம். ரவியும் அர்ச்சனாவும் விமானநிலையத்திற்கு வந்து ஏற்றிவிட்டனர். நான் சந்தித்த அரிய பெண்மணிகளில் ஒருவர் அர்ச்சனா. உற்சாகமான சிரிப்புடன் ஸ்வீடன் வாழ்க்கையைப் பற்றிப் பேசினார், எதைப்பற்றியும் குறை சொல்லவில்லை. பெங்களூரைச் சேர்ந்தவர். ரவியை காதலித்து மணந்தவர்.

விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கே விமானநிலைய ஊழியர் நாங்கள் சுவிதா என்ற படிவம் நிரப்பாமல் விமானமேறமுடியாது என்று சொல்லிவிட்டார். அது எங்களுக்கு தெரியாது. நல்லவேளையாக எங்கள் தடுப்புமருந்துச் சான்றிதழ்கள் செல்பேசியில் இருந்தன. அவற்றை அரங்கா வழியாக பயணமுகவருக்கு அனுப்பி இந்தியாவிலேயே சுவிதா சான்றிதழ் பெற்று விமானம் ஏறினோம். ஓர் அரைமணிநேரப் பதற்றம்.

விமானத்தில் நான் மீண்டும் வைக்கிங்குகள் பற்றிய ஒரு படம் பார்த்தேன். (The Northern Man ) அவர்களை கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகள் போலத்தான் ஹாலிவுட் காட்டுகிறது. கிறிஸ்தவ மரபு அவர்களை பண்படாதோர் (Heathen) என்று சொல்லிவந்த மனநிலை அப்படியே நீடிக்கிறது. ஆனால் அருங்காட்சியகத்தில் கண்ட வைக்கிங்குகளின் பண்பாட்டுச் சின்னங்கள் மிகமிக நுண்ணியவை, அழகியவை, ஆடம்பரமானவை.

வைக்கிங் அருங்காட்சியகம் அவர்களைப் பற்றிய இன்னொரு சித்திரத்தை அளிக்கிறது என்று அஜி சொன்னான். ஆர்ட்டிக் வட்டம் வரை வைக்கிங்குகளின் ஆட்சிநிலம். அவர்கள் கிறிஸ்தவம் உருவான பின்னரும் இணையாக பலநூற்றாண்டுக் காலம் ஆண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வணிகமும் நடைபெற்றுள்ளது.

அனைத்தையும்விட முக்கியமானது வைக்கிங்குகளின் பண்பாடு. அது இந்துப் பண்பாட்டுக்கு நிகரான ஒரு இயற்கை மதம் கொண்டது. அவர்களுக்கு இந்தியாவுடன் தொடர்பு இருந்தது. வைக்கிங்குகள் ஆட்சிசெய்த தெற்கு ஆர்டிக் பகுதியில் புத்தர்சிலைகள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. அவர்களின் சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை, உலோகத்தொழில்நுட்பம் ஆகியவை மிகமிக முன்னேறியவை.

கத்தாரில் கால்பந்து காணவந்த கூட்டம் விமானநிலையம் முழுக்க. கால்பந்து மைதானங்கள் அமைக்க அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் ஊர்திரும்பும் கூட்டம் இன்னொரு பக்கம். இன்னொரு ஆழ்துயில் வழியாக சென்னை வந்து சேர்ந்தேன். மீண்டும் சென்னையின் போக்குவரத்து நெரிசலின் உயிர்ப்பு.

(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 10:33

ரசிகன்

சிலர் வரலாற்றில் இருந்து முழுமையாகவே மறைந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் நா.ரகுநாதன். ரசிகன் என்ற பெயரில் எழுதியவர். அவருடைய ஒரு புகைப்படம்கூட இல்லை. ஆனால் இலக்கிய ஆசிரியனுக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எதையாவது எழுதியிருந்தால் எப்படியோ மீண்டு வந்து நிலைகொள்வார்கள். ரசிகனும் மீண்டு வந்தார். தமிழினி அவர் கதைகளை வெளியிட்டுள்ளது.

ரசிகன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 10:32

மலைகள் நகர்வதுமில்லை உறைவதுமில்லை- ராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

தமிழில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட படைப்பாளிகளில் முதன்மையானவர் சாரு நிவேதிதா. சாருவின் புனைவுகள் முதல் வாசிப்பின்போது எளிய விவரணைகள் மற்றும் செய்திக்குறிப்புகளால் ஆனது எனத் தோற்றம் கொள்பவை. கவித்துவங்களோ, உக்கிரமான நாடகீயத் தருணங்களோ அவரின் பெரும்பாலான படைப்புகளில் இருப்பதில்லை. அவற்றை அவர் திட்டமிட்டு, வலுக்குறைந்த சித்திரங்களாகத் தீட்டிச் செல்கிறார். வாழ்நாள் முழுக்க ரணங்களாக அமையக்கூடிய சம்பவங்கள் கூட தினசரி செய்தித் தாள்களின் தொனியில் வாசகனிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

சாருவின் அத்தனை நாவல்களையும் வாசித்து முடித்து மீள் நினைவு கொள்கிற போது சம்பவங்களின் உதிரிகளே நினைவரிப்பில் சிக்குகின்றன. நாவல்களின் விரிந்த வளர்சிதை மாற்றச் சித்திரங்களை தொடர் ஓட்டமாக வாசகனால் நினைவு கொள்ள முடியாமல் போகிறது. நீரோடையென நலுங்கிச் செல்லும் படைப்புமொழியும், உள்ளுறை உவமையற்ற அப்பட்டமும் சாருவின் படைப்புலகை எளிமையான ஒன்றாகக் கருதத் துாண்டுகின்றன. உண்மையில் சாரு நிவேதிதாவை முழுவதும் அனுபவம் கொள்ள, நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.

“வாசிப்பு என்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல, வனத்தில் சென்று தானே வேட்டையாடி, வேட்டையாடிய விலங்கைத் தோலுரித்து எடுத்து சமைத்து உண்பதைப் போன்றது வாசிப்பு. நீண்ட பயணத்தையும், சாகசங்களையும் சமயங்களில் இழப்பையும் வேண்டி நிற்பது அது” என்கிறார் சாரு நிவேதிதா. அவரின் படைப்புக்களை வாசிப்பது சார்ந்தும் இவ்வரையறையை நாம் பொருத்திப் பார்க்கலாம். மேலும் அவரே தன் ஆளுமையின் ஆதாரங்களென “இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் என்ற மூன்று சமயங்களோடு கூட தொம்பர் சமூகத்தின் tribal character-உம் என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தன” என்று சொல்கிறார். பின் நவீனத்துவத்தின் இலக்கிய அழகியல் என மையத்தை அழித்தல், எழுத்தை ஜனநாயகப்படுத்துதல், கலகத்தன்மை, மனப்பிறழ்வின் அரசியல் என்பனவற்றையும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. கூடுதலாக “ஆணின் காமம் அவனது தேகத்தின் மையமான ஆண்குறியில் ஆரம்பித்து ஸ்கலிதமாகி முடிவடையக் கூடியது. மாறாக பெண்ணின் காமம் spiral தன்மைகொண்டது. மையமற்றது. பாதம் முதல் தலைமுடி வரை காமத்தின் விகசிப்பு கூடியது. ஆரம்பமோ முடிவோ இல்லாதது” என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சாருவின் முதல் நாவல் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும். அவரின் நாவல்களில் நான் கடைசியாக வாசித்த நாவல். கட்புலனாகும் திரண்ட கதையாடல் நிரம்பக் கிடைக்கும் அவரின் ஒரே நாவல் அதுதான். மலைகளைப் போன்ற திட்டவட்டமான வடிவமற்ற ஒரு கச்சிதம் கொண்ட நாவல். அந்நாவலின் தொடர்ச்சிகளாக ஜீரோ டிகிரி நாவலையும், புதிய எக்ஸைல் நாவலையும் சேர்த்து வாசிக்கலாம். முதல் நாவலின் சத்தான பகுதிகள் புதிய எக்ஸைல் நாவலில் மீண்டும் ஒருமுறை அறியக்கிடைக்கிறது.

சாரு படைப்புலகின் ஆதார மையங்கள் மூன்று. ஒன்று கதைசொல்லியின் சொந்த உலகம். நாகூர், தொம்பர்களின் வாழ்நிலம், இஸ்லாமிய கலாச்சார பின்னணி, சூர்யா, கண்ணாயிரம் பெருமாள், முனியாண்டி, டெல்லி வாலாக்கள், குமாஸ்தாக்களின் மனநிலை என விரிந்து அலையடிக்கும் பகைப்புலம். அவ்வுலகில்தான் அவந்திகா, அஸ்வினி, நளினி என முடிவிலா பெண்களின் நிரை வருகிறது. இரண்டாவது எழுத்தாளரான கதைசொல்லி, சக எழுத்தாளர்களோடு கொள்ளும் உறவு. தொடர் பயணங்களில் பெற்றவை மூன்றாவது. வாசித்த புத்தகங்கள், பார்த்த உலக சினிமாக்கள், கேட்டு ரசித்த இசை, சமகால அரசியல் பண்பாட்டு விமர்சனங்கள் போன்றவை. பேய்களின் உலகத்தைப் போல ஞானிகளின் உலகமும் அத்தனை நாவல்களிலும் பரவிக்கிடக்கின்றன என்பது அவருக்கே உரிய தனிச்சிறப்பு.

ஒரு நுாற்றாண்டு கடந்து விட்டது தமிழில் நாவல்கள் அறிமுகமாகி. தமிழின் முதல் நாவல் வாய்மொழி கதை மரபின் தொகையாக எழுந்துள்ளது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் ஏற்பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கங்களின் பாதிப்பும், சுதந்திர தாகத்தின் விழுமியங்களும் இந்திய நாவல்களை பெரிதும் பாதித்தன. பெண் சமத்துவமும், அரசியல் தனித்துவமும் பெரும் மாற்றங்களை தமிழ்ப் புனைவுகளில் நிகழ்த்தின. பாரதியில் செயல்பட்ட மரபார்ந்த விழுமியங்கள் நவீனத்துவ மூலவரான புதுமைப்பித்தனின் வரவால் இடைவெளி கண்டது. நாவல் வடிவம் இந்தியாவின் பிற மொழிகளில் அறிமுகமாகி அதுவரையிலான இந்திய மரபினை எதிர்கொண்டது. அதன்விளைவாக அசலான நாவல்கள் பிறந்தன. தமிழில் புதுமைப்பித்தனால் நிலை நிறுத்தப்பட்ட நவீனத்துவம் முன் தோன்றி, நவீனத்துவ நாவல்களை உண்டாக்கிற்று என்கிறார் ஜெயமோகன். யதார்த்தவாதம் காலாவதியானது என்ற மதிப்பீடு தொண்ணூறுகளில் பரவலாக கருதப்பட்டது. மேற்குலகின் பின் நவீனத்துவ பிரக்ஞை தமிழில் உரத்து பேசப்பட்டது. அதிகார மையைங்களை கலைத்தல், விளிம்புநிலை மக்களை முன்னிலைப்படுத்துதல், சாதியக்கட்டுமானத்தை அண்டக்கொடுக்கும் இந்துத்துவ பிரதிகளை நிராகரித்தல், மாற்று மெய்ம்மையை உண்டாக்கி மனிதர்கள் அத்தனைப்பேருக்கும் மீட்சியை அளித்தல் என பின்நவீனத்துவ அலை வரவேற்பிற்கு உள்ளானது. நவீனத்துவத்தின் போதாமைகளை நிரப்பும் புத்தம் புதிய வரவாக பின் நவீனத்துவ அழகியல் வரவேற்கப்பட்டது. அதன் பாதிப்பு தொண்ணூறுகளில் களமாடிய அத்தனைப் படைப்பாளிகளையும் தீண்டிச்சென்றது.

பின்நவீனத்துவ அழகியலைச் சார்ந்தவர்கள் என்று ஒரு பட்டியலை நம்மால் அடையாளம் காண முடியும். அ. மார்க்ஸ், தமிழவன், எம்..  டி. முத்துக்குமாரசாமி, பிரேம் ரமேஷ், சாரு நிவேதிதா, எம். ஜி. சுரேஷ், நாகார்ஜூனன் என அப்போது ஆரம்பித்த படைப்பாளிகள் வரிசையில் தொடர்ந்து செயல்பட்டவர்கள் சிலரே. தமிழவனின் புனைவுலகு கலையம்சக் குறைபாட்டால் பரவலான வாசக ஏற்பிற்கு உட்படவில்லை. எம். ஜி. சுரேஷின் படைப்புகள் வீர்யமற்ற படைப்புமொழியின் காரணமாக முக்கியத்துவம் இழந்தன. உன்மத்தம் நிறைந்த மொழியில் பெரும் பாய்ச்சலைக் காட்டியவர்கள் பிரேம் ரமேஷ். அவர்களிடம் பின்நவீனத்துவம் சார்ந்த பிரக்ஞை வலுவாக தொழிற்பட்டது. மாற்று அரசியல் சித்தாந்தங்களைக் குறை வற கற்றுத்தேர்ந்த படைப்புமனம் அவர்களுடையது. தமிழின் முதன்மையான படைப்பாளிகளாக வந்திருக்க வேண்டியவர்கள் தமிழின் தீயுழாக பிரிய நேரிட்டது. ஆக தமிழின் ஆகச் சிறந்த பின் நவீனத்துவ பிரதிநிதியாக நம்மிடையே சாரு நிவேதிதாவே இருக்கிறார். அவருடைய இடையறாத செயல்பாடுகளும், பிறழ்வெழுத்து என்ற வகைமைக்குள் தொடர் இயக்கம் கண்ட படைப்பூக்க மனநிலையும் சாருவை தமிழின் தவிர்க்க இயலாத பின்நவீனத்துவ படைப்பாளியாக முன்னிலைப்படுத்துகிறது.

சாரு நிவேதிதாவோடு ஒப்பிடத்தகுந்த பிறிதொரு படைப்பாளி யுவன் சந்திரசேகர். இருவரின் புனைவு வெளிப்பாட்டு முறைகளுக்கும் பின் நவீனத்துவ பிரக்ஞை வலுவான உந்துதலாக இருக்கிறது. தன்னை நிராகரித்தல், மையத்தை திட்டமிட்டே கலைத்தல், தரிசனங்களற்ற வெறுமையையே தங்கள் படைப்புகளின் தரிசனம் என முன்வைத்தல் என இருவரின் நாவல்களுக்கும் ஒப்புமை கொள்ள நிறைய இருக்கிறது. யுவன் அடிப்படையில் கவிஞர். மாற்று மெய்ம்மையின் மீதான நம்பிக்கையில் உயிர்த்திருப்பவர். அரசியல் நீக்கம் அவரின் இயல்பாக அமைந்துள்ளது. மாறாக கவித்துவமும், சமத்காரமான புனைவுத்திறனும், துல்லியம் கூடிய பேச்சுமொழித்திறனும் யுவனின் தனித்த அடையாளங்கள். சாருவிடம் உரையாடல்கள் அனைத்தும் பொதுவான மொழியைக் கொண்டிருப்பதை நாம் சட்டென்று அடையாளம் காணலாம்.

சாருவின் நாவல்களுக்கு ஒரு பொதுவான கதைத்தன்மை உண்டு. ஏகதேசமாக அதை அவரின் சொற்களான அலைந்து திரிபவனின் அழகியல் என்று துல்லியப்படுத்தலாம். நாகை மாவட்டத்தில் பிறந்து பதின்பருவத்தின் ருசிகள் திடப்பட்ட கதைசொல்லி, இருத்தலியல் நெருக்கடிகள் தாளாமல், படித்து அரசுத் தேர்வெழுதி டெல்லிவாசியாக தன்னை மேன்மைப்படுத்திக் கொள்கிறான். குடும்பத்தின் கடமைகள் அவனை இயக்குகின்றன. குமாஸ்தா மனநிலையின் தடுமாற்றங்களோடு அவன் தன் இலக்கிய வேட்கையினால் வாழ்நாட்களை பகுத்துக்கொள்கிறான். அங்கே அவனுக்கு உலக இலக்கியமும் உலக சினிமாக்களும் அறிமுகம் ஆகின்றன. நாடகங்களை தொடர்ந்து காண வாய்க்கிறது. குறிப்பாக பிரெஞ்சு சிந்தனை உலகத்தின் பிதாமகர்களை அவன் கற்றுத் தேரும் வாய்ப்பாக அமைகிறது. அவனுக்கு தமிழ் கூறும் நல்லுகத்தோடு தொடர்பேதும் அமையாமல் போகிறது. அதற்கு அவன் கூறும் காரணம். இங்கே உள்ள சாதியக் கொடுமைகளை தமிழ்ப்படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் எதிர்கொள்ள வில்லை. இந்துத்துவ பிரதிகளை இலக்கியம் என்று தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உலக இலக்கியம் என்பதே தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் தஸ்த்தவ்ஸ்கி, தல்ஸ்தோய், ஆல்பெர்ட் காம்யு, காஃப்காவோடு நின்றுவிடுகிறார்கள் என்று கருதுகிறான்.

டெல்லியில் உணவுப்பொருள் வழங்கல் துறையில் குமாஸ்தா பணி. டெல்லியில் வாழ நேரிட்ட பத்தாண்டுகள் கதைசொல்லியின் வாழ்வின் முக்கியமான திரும்புமுனை. திரிலோக்புரி போன்ற கதைகளை பின்னாட்களில் எழுதும் அனுபவங்களும் அவற்றில் இருக்கின்றன. அங்கே அவனுக்குத் திருமணமாகி, குழந்தையும் பிறக்கிறது. பணி நெருக்கடி மிக வேலையை விட்டுவிட்டு, தமிழகம் திரும்பும் கதைசொல்லிக்கு தபால் இலாகாவில் ஸ்டெனோவாக வேலை கிடைக்கிறது. இடையே ஒரு திருமண முறிவு. தபால் துறை நெருக்கடிகள் அவனை திக்குமுக்காட வைக்கின்றன. சுதந்திரமாக எழுத முடியாமல் போகிறது. உலகப் பயணம் மேற்கொள்ளும் அவனின் முயற்சிக்கு பணிச் சூழல் அளித்த சிவப்பு நாடாத்தடைகளால் மனம் புண்பட்டு அந்த வேலையையும் ராஜினாமா செய்கிறான். இடையில் அவந்திகாவை சந்தித்து முதல் திருமணம் ரத்தாகும் முன்பே இரண்டாவது திருமணமும் செய்துகொள்கிறான். அவந்திகாவின் வருகைக்கு பிறகு முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து வருகிறான். அவனின் அன்றாடங்கள் எழுதுவதற்கான கச்சாப்பொருட்களாக அமைகின்றன. மையத்தை நிராகரிக்கும் சாருவின் நாவல்களில் இருந்து சேகரிக்க முடிகிற ஒரு கோட்டுச்சித்திரம் இது.

பின் நவீனத்துவம் ஆண்மைய அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. சாருவின் நாவல்களில் வரும் பெண்கள் மரபான கதைசொல்லல் வரையறைக்குள் உட்படுவதில்லை. தமிழ்க் கலாச்சாரம் என்பதன் பாவனைப்பூச்சுக்கள் அவர்களிடம் வெளிப்பட்டதில்லை. தங்களின் உடல்களைக் கொண்டாடும் உல்லாசிகளாக அவர்கள் வந்து போகிறார்கள். சாருவின் உலகில் பெண்ணுடல் பெரும் கொண்டாட்டத்திற்கான வெளி. அதே நேரத்தில் பெண்கள் உலகின் கையறுநிலைகளை மிக அதிகமாக எழுதியவரும் சாருவே.

அவந்திகா கதாப்பாத்திரம் அதற்கு ஒரு உதாரணம். அவந்திகாவின் பால்யமும், திருமண வாழ்வும் நம்ப முடியாத இருளால் ஆனது. உயர்குடிப்பிறப்பும், பேரழகும் அவந்திகாவை கைவிடத்தான் செய்கின்றன. குடும்ப அமைப்பின் வன்முறை அவந்திகாவை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்குகிறது. ஜோதிடத்தின் வழிகாட்டுதலால் அவளது தந்தை அவளை வதைக்கிறார். உடன் பிறந்தவள் வன்கொடுமை செய்கிறாள். திருமண வாழ்வு பெரும் துயரத்தில் முடிகிறது. சாவின் இறுதி வரை அவளை வாழ்வு துரத்துகிறது. இது அவந்திகா என்கிற கதாபாத்திரத்தின் முன்கதைச் சுருக்கம். அவந்திகாவின் இரண்டாவது மண வாழ்வில் அவள் கொள்ளும் விஸ்வரூபம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. அத்தனை நெருக்கடிகளும், வன்முறைகளும் அவளைச் சூழ்ந்திருந்தாலும் அவற்றை மீறி அவள் பிற உயிர்களனைத்தின் மீது கருணையும் தீரா அன்பும் கொண்டவளாக தன்னை மாற்றிக்கொள்கிறாள். மனச்சிதைவிற்கு ஆளாக வேண்டிய ஒரு பெண் பேரன்னையாக தன்னை உருமாற்றிக்கொள்கிறாள். இந்த உருமாற்றம் தமிழ்ப்புனைவு வெளியில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களின் வீழ்ச்சியையே பெரும்பாலும் எழுதிய தமிழ்க் கதைவெளிக்கு அவந்திகா கதாப்பாத்திரம் ஒரு முன்மாதிரி.

பாரதிக்கு இருந்த காணிநிலம் ஆசையைப் போல நடுத்தற வயது பெண்களின் கனவுலகை சாரு தனது முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலில் சுகந்தி என்கிற கதாப்பாத்திரத்தின் வாயிலாக இப்படி எழுதுகிறார்.

“சுகந்தி பட்டினியிலேயே வளர்ந்தாலும் தான் அழகாயிருப்பது குறித்து அவளுக்குப் பெருமையாகவும் வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இளவரசனை ஒத்த ஒருவன் காரில் வந்து தன்னைத் துாக்கிப்போவான் என்று நிச்சயமாயிருந்தாள் அவள். அது பசியோ பட்டினியோ இல்லாத உலகமாயிருக்கும். வீட்டில் இருக்கும் அத்தனைபேரும் குளிப்பதற்காக அடுத்த தெருவிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்து வரத் தேவையில்லாத உலகமாயிருக்கும். அண்ணன்மார்களின் ஒரு மூட்டைத் துணிகளைத் துவைக்க அவசியமில்லாத உலகமாயிருக்கும். விலக்காகி இருக்கும் போது தொடைகளை அறுக்கும் பழந்துணிகளைக் கட்டிக்கொள்ளும் அவலமில்லாத உலகமாயிருக்கும். குப்புறப் படுத்தால் எவனை நினைத்துப் படுத்துக்கிடக்கிறாய் என்றோ மல்லாந்து படுத்தால் இன்னும் உனக்கு அதற்கு வயது வரவில்லை என்றோ அம்மாவிடமிருந்து வசவுகள் கிடைக்காத உலகமாயிருக்கும். கக்கூசுக்குப் போனால் ஓலைத்தட்டிகளின் இடுக்கு வழியாகவோ அல்லது பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்தோ பொறுக்கிகள் பார்த்து அழுதுகொண்டே மேற்கூரையில்லாத கக்கூஸிலிருந்து ஓடிவர வேண்டிய அவசியமில்லாத உலகமாயிருக்கும். குடித்துவிட்டு வரும் அண்ணன் வீடு முழுவதும் எடுத்து வைத்த வாந்தியை குடலைப் பிடுங்கும் நாற்றத்தைச் சகித்துக்கொண்டு கழுவி விடும் கடமைகளில்லாத உலகமாயிருக்கும். அண்ணன் மீதுள்ள கோபத்தை தன் மீது காட்டி தலைமுடியை இழுத்துப்போட்டு உதைக்கும் அம்மா இல்லாத உலகமாயிருக்கும். எந்த நேரத்தில் அன்டிராயரை அவிழ்த்தானோ அப்பன் என்று அம்மாவிடம் தன் பிறப்பு குறித்து நொந்து கொண்டு சண்டைபோடும் அண்ணன்மார்கள் இல்லாத உலகமாயிருக்கும். நடுஇரவில் அந்த அண்ணனோடு புரண்டு அம்மா எழுப்பும் மிருக சப்தங்களில்லாத உலகமாயிருக்கும். தெரு முழுக்க நரகல் செய்யும் குழந்தைகளைப் பார்த்து குமட்டலை அடக்கிக்கொண்டே போக வேண்டிய பள்ளிக்கூடங்களில்லாத உலகமாயிருக்கும். அந்த உலகத்தில் குளியலறையின் குழாயைத் திறந்தால் பூ மழைகொட்டும்”

அறம் என்றும் ஒழுக்கம் என்றும் பொதுமனம் கருதும் விழுமியங்களை சிதைக்கும் நோக்கம் சாருவின் எழுத்திற்கு இருக்கிறது. பொதுவிடங்களில் மூக்கு நோண்டவோ காது குடையவோ கூடாது என்று தான் நாவலின் முதல் வரி ஆரம்பிக்கிறது. இது பண்பாட்டின் ஒரு அறைகூவல். ஆனால் பழக்க வழக்கங்களில் லலிதமாக இருக்க நிர்ப்பந்திப்பதும் கருத்தியல் வன்முறை என்பதாக முடிகிறது குருசாமி என்கிற தொம்பர் குல மனிதனின் தொழில் முறையை கதைசொல்லியின் வழியாக நெருங்கி அறியும்போது. மலம் அள்ளும் அவனிடம் சென்று லலிதமான பழக்க வழக்கங்களை எதிர்பார்ப்பது ஒரு நோய்க்கூறாக அமைகிறது. சுத்தம் என்பது இங்கே வன்முறையின் கருதுகோளாக உருமாறி தவிர்க்க வேண்டியதாகிறது. இதன் தொடர்ச்சியாகவே டெல்லி கனாட் பிளேஸிலுள்ள நடைபாதையில் துயிலும் வாசிகளின் மீதான இரக்கம் என்கிற அறச்சிந்தனை கேள்விக்குள்ளாக்கப்படுவதும்.

எழுபதுகளின் கிராமங்களின் தனித்தன்மைகளில் ஒன்றான பேய்களின் உலகம் பின் நவீனத்துப் பிரதியான சாருவின் நாவலில் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாக எழுதிச் செல்லப்படுகிறது. சூர்யாவின் வாழ்வில் புதையலைக்காட்டும் ஆவிக்கான தவிப்புகள் இருக்கின்றன. சூர்யாவின் தங்கையான ஆர்த்திக்கு பேய் பிடித்துவிடுகிறது. பொன்னுச்சாமி வாத்தியார் எலுமிச்சைப் பழத்தை அவளிடம் அளித்து பேயோட்டும் சித்திரம் மிக விரிவாக நாவலில் எழுதப்பட்டுள்ளது. நவீன மனம் நம்ப மறுக்கும் விரிவான சித்தரிப்பு இது. கடவுள் செத்துவிட்டான் என்று சொன்ன நீட்ஷேயின் இருத்தலியல் சிக்கல்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியது பேய்களின் உலகமா? மனோதத்துவம் இதை நரம்புகளின் கோளாறாக கருதினாலும் இந்நாவலில் ஆர்த்தி மரபான பேயோட்டியால் மீட்கப்படுகிறாள். பேயோட்டியாக வரும் வாத்தியாருக்கும் சில வரம்புகள் இருக்கின்றன. அவருக்கு தட்சிணை எப்போதும் எளிய தொகையாகவே இருக்கிறது. பேய்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே இந்நாவலில் சாமியாடிகளின் உலகமும் விவரிக்கப்படுகிறது. ராபர்ட் மேல் மாரியாத்தாள் இறங்குவதும், குறி சொல்வதும் நவீனத்துவ மனம் ஏற்க மறுக்கும் காரியங்களே.

இதைப்போன்றே மற்றொன்றும் இந்நாவலின் முதல் பதிவென கருதத் தகுந்தது. நாவல் வெளியிடப்பட்ட ஆண்டு 1989. நான் வாசித்தவரையில் ஆண்களில் தனித்த உலகமாக ஆதியில் இருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் சுய மைதுனம் குறித்து பால்ய ஆண்மனம் கொள்ளும் தடுமாற்றங்களை எழுத்தில் பதிவு செய்த அக்கறை இந்நாவலுக்கு உண்டு. சாருவின் புனைவுலக மாந்தர்களிடம் சுயமைதுனம் அன்றாடச் செயல்களைப் போல அவ்வளவு இயல்பாக வெளிப்படுகிறது. அது குறித்த குற்றவுணர்வோ தீர்ப்பிடலோ எழுதப்படுவதில்லை. எதைக்குறித்தும் தீர்ப்பிடாத இயல்பு சாரு புனைவுலகின் தனித்தன்மைகளில் ஒன்று.

மனித வாழ்வின் அர்த்தமின்மையை, அதன் காரண காரியமற்ற இருப்பை வலுவாக பதிவு செய்வதில் சாருவின் புனைவுலகம் கூடுதல் அக்கறை கொள்கிறது. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலில் பகுதி ஒன்று இரண்டில் சொல்லப்படும் குலக்கதை வரலாறு இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. தந்தை வழி தாத்தா கோவிந்தராஜூலு நாயுடுவில் இருந்து ஆரம்பிக்கும் வம்சாவழிக் கதையில் அத்தனைப்பேரும் இருளுக்குள் சென்று தேயும் சித்திரமே நீண்ட கதையாடலாக கட்டமைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கைக்கு மேலான லட்சியம் ஏதும் இல்லை. லட்சியவாதம் என்பதே ஒருவிதமான அதிகாரத்திற்கான முன்னேற்பாடு என்ற கருதுகோள் இங்கே சொல்லப்படுகிறது. உண்மையில் மனித வாழ்வின் கோலங்களும் அவ்விதந்தான் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க முடிகிறதே தவிர, வாழ்வின் சீரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகள் அடைபட்டு துார்ந்து போய் இருக்கின்றன. உறவுகளில் புனிதம் கற்பிக்கப்படுவதில்லை. இச்சைகள் துரத்தும் மனித மனங்களாக உறவுகள் இருக்கின்றன. மீறப்படாத எல்லைகளே இல்லை. லட்சியவாதம் அற்ற மனிதர்களாக அவர்களை மாற்றியது எது என்ற கேள்வி நம்மை வந்தடைகிறது. இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் அவர்கள் அடைவதுதான் என்ன என்பதும் நம்மை சிந்திக்க வைக்கிறது.

மரபான சிந்தனை வழிமுறைகளை கலைப்பது, பேசத்தயங்கிய செயல்களின் மீதான மனத்தடையை உடைப்பது. புனிதங்களை கேள்விக்கு உட்படுத்துவது, அதிகாரத்தின் நுண் வழிகளை மேலும் பகுத்தறிவது, விளிம்புநிலை வாழ்வை பிரதான கதையாடலாக முன்வைப்பது, பாலியல் மீதான இறுக்கங்களை கட்டுக்குலையச் செய்வது, அறம், ஒழுக்கம், பண்பாடு போன்ற அதிகாரக் குவிப்பு முறைகளை விலக்கி மனிதனை தளைகளில் இருந்து மீட்பது என சாரு நிவேதிதாவின் புனைவுலகு விரிந்து கிடக்கிறது. சாருவின் இடம் சாருவினால் மட்டுமே தாண்டிச் செல்லப்படக் கூடும். தமிழில் சாருவிற்கு முன்னோடிகள் என எவரும் இல்லை. முன் மாதிரியற்ற தனித்த ஒரு சிந்தனை முறையின் வெளிப்பாடாக சாரு நம்முன்னே வாழ்ந்து வருகிறார்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 10:31

அஞ்சலி மனோகர் தேவதாஸ்

கலைஞனின் வற்றாத தன்னம்பிக்கையின் சின்னம் மனோகர் தேவதாஸ். உடல், சூழல் எதுவும் மெய்யான கலையின் விசையை குறைப்பதில்லை. மாறாக பலசமயம் கலைஞன் எதிர்ச்சூழ்நிலைகளில் கலையை அள்ளிப்பற்றிக்கொண்டு பலமடங்கு விசையுடன் வெளிப்படுகிறான். விழியிழந்தபின் மனோகர் தேவதாஸ் வரைந்த, அவர் இளமையில் பார்த்த மதுரையின் கோட்டோவியங்கள் படைப்புநினைவு எங்கே உள்ளது என்று காட்டுபவை. கனவில். இங்குள்ள எல்லாமே கனவென மட்டுமே கலைஞனுக்குப் பொருள்படுகின்றன

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 01:48

December 6, 2022

பனிநிலங்களில்- 7

ரோவநேமியில் இருந்து மீண்டும் ஹெல்சிங்கி. அங்கிருந்து ஸ்டாக்ஹோம் திரும்பும்போது ஓர் உல்லாசக்கப்பலில் பயணம் செய்யலாமென திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையில் எங்களுடன் சில தமிழ்நண்பர்களும் வருவதாக இருந்தது. கப்பலிலேயே ஒரு இலக்கிய கூட்டம். ஆனால் எங்கள் விசா பிரச்சினையால் இரண்டு முறை டிக்கெட் மாற்றிப்போடப்பட்டமையால் அது இயலவில்லை.

காலையில் கிளம்பி கைகால்கள் விரைக்க காரில் ஹெல்சிங்கி விமானநிலையம் சென்றபோது வெளியே வெண்ணிற ஒளியே விதவிதமாகக் குழைந்து உருவான வானையும் காட்டையும் சாலையையும் ஆறுகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். ஃபின்லாந்து சட்டென்று ஒரு கனவு போல நிகழ்ந்து, நிகழ்ந்ததா என்றே தெரியாதபடி நினைவாக மாறிக்கொண்டிருந்தது.

ஹெல்சிங்கியில் கப்பல் ஏறுமிடத்திற்கே ஒரு தமிழர் குழு வந்திருந்தது. எங்களுக்குப்  பொழுதில்லை, மிகச்சில சொற்கள் உரையாடவே முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இருபதுபேருக்குமேல் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. குளிர் கடுமையாக இருந்தது. ஃபின்லாந்து தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு மலர்ச்செண்டு அளித்தனர். சிலர் பரிசுகள் அளித்தனர். கப்பலை ஒட்டிய கஃபேயில் அமர்ந்து ஒரு டீ சாப்பிட்டோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கப்பல் சில்ஜா செரெனேட் (MS Silja Serenade) என்ற பெயர் கொண்ட உல்லாச ஊர்தி. எஃபோவா என்ற ஃபின்லாந்து கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அக்கப்பலில் 2,852 பயணிகள் ஏறலாம். பொதுவான படுக்கைகளும், தனியறைகளும் உள்ளன.  986 தனியறைகள். மொத்தம் 2,841 படுக்கைகள். 11 அடுக்குகள் கொண்டது கப்பல். முதலில் அதை கப்பல் என நம்பவே கொஞ்சம் கற்பனை வேண்டும். கடலருகே நின்ற ஒரு மாளிகை என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

கப்பலின் 11 அடுக்குகளில் வெளிப்புறச் சாளரம் கொண்ட அறைகளும் உட்புறச்சாளரம் கொண்ட அறைகளும் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளன. அறைச்சுற்றுக்கு நடுவே, உட்புறச்சாளரம் கொண்ட அறைகளில் இருந்து கீழே பார்க்கும்படியாக ஒரு நீள்வட்ட மால் என்னும் அகக்கடைவீதி. சாதாரணமாக ஒரு சிறுநகரத்தில் உள்ள அளவுக்கு பெரியது. அங்கே வண்ண விளக்குகள், விளம்பரங்கள்.

சொற்கம் என்பது போர்ஹெஸுக்கு ஒரு நூலகம் என்று சொல்லியிருந்தேன். சராசரி ஐரோப்பியனுக்கும் அமெரிக்கனுக்கும் அது ஒரு கடைவீதிதான் என நினைக்கிறேன். இந்த இயற்கையின் இன்னொரு தோற்றம் அது. இயற்கையில் இருந்து எடுத்து , மனிதருசிக்கு உகந்தபடி மறு ஆக்கம் செய்யப்பட்ட பொருட்களால் ஆனது. மனிதன் கலாச்சாரம் என ஒன்றை தொடங்கியபோதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறான். அதன் உச்சமே இன்றைய நவீனக் கடைவீதி.

கடைவீதியில் எந்நேரமும் நெரிசல். வரிசையாக கடைகள். வழக்கமாக எல்லா உயர்நிலை கடைவீதிகளிலுமுள்ளவை போன்று ஆடம்பரப் பொருட்கள், வசதிப்பொருட்கள் விற்பவை. ஆனால் மூன்றிலொன்று உணவகங்களும் மதுக்கடைகளும்தான். பொருட்களுக்கு வரி கிடையாதென்பதனால் அள்ளிக்குவிக்கிறார்கள்.

இங்கே முதன்மையாக வாங்கப்படுவன மதுவகைகள்தான். மதுக்கடைகளில் இரண்டு லட்ச (இந்திய) ரூபாய் மதிப்புள்ள மதுப்புட்டிகளைக்கூட காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால், மதுவருந்தாதவருக்கு இந்தக் கப்பல் நாய் சந்தைக்குப் போனதுபோலத்தான். வேடிக்கை பார்த்து விட்டு வரலாம்.

குழந்தைகளுக்கான பொம்மைகள் நிறைந்து கிடந்தன கடைகளில். குழந்தைகளை அத்தகைய கடைகள் வழியாக பயிற்றுவித்து எடுக்கிறார்கள். நான் சின்னப்பையனாக இருந்தபோது எங்கள் வீட்டில் விளையாடுவதற்கு ஆண்குழந்தைகளுக்குப் பொம்மை என ஏதுமில்லை. பெண்குழந்தைகளுக்கு வாவுபலி பொருட்காட்சியில் வாங்கிய மரப்பொம்மைகள். அதில் அம்மி, ஆட்டுக்கல், அடுப்பு, சட்டி, பானை எல்லாம் இருக்கும். அரிதாக யானை, குதிரை.

இன்று இந்தியாவில் குழந்தைகள் உள்ள எந்த இல்லத்திற்குச் சென்றாலும் பொம்மைகள் இறைந்து கிடக்கின்றன. குழந்தைகள் பெரும்பாலான பொம்மைகளில் ஆர்வம் காட்டுவதுமில்லை. அவை மிகையான பொம்மைகளால் சலிப்புற்றிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகளுக்கு பலமடங்கு பொம்மைகள் இருக்கின்றன.

அறுபதுகளில் பிளாஸ்டிக் வந்த பின்னரே இந்த பொம்மைப்புரட்சி உருவானது என நினைக்கிறேன். இன்று பொம்மை என்பது ஒரு மாபெரும் நுகர்வுப்பரப்பு. குழந்தைகளுக்கான பொம்மைகள், காணொளிவிளையாட்டுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்தால் உலகளாவ அது எத்தனைகோடி பெறுமானமுள்ள தொழில்!

டால்ஸ்டாய் அன்னா கரீனினாவில் பெண்களின் ஆடம்பர – அழகுத் தோற்றத்திற்காக எத்தனை செல்வமும் உழைப்பும் வீணாகச் செலவிடப்படுகிறது என வருந்துகிறார். இன்று கன்னியரின் ஆடம்பரத்தை குழந்தைகளின் ஆடம்பரம் வென்றுவிட்டிருக்கிறது

ஆனால் குழந்தைகள் அவற்றை கோரவில்லை. அவற்றை நாம் இந்தப் பொம்மைகள் வழியாக நுகர்வோராகப் பழக்குகிறோம். கிடைத்தவற்றில் அதிருப்தியும் கிடைக்காதவற்றில் ஏக்கமும் கொண்டவர்களாக ஆக்குகிறோம்.

பொம்மைகளின் உலகைப் பார்க்கப் பார்க்க ஓர் எண்ணம் உருவாகியது. இந்தக் கடைவீதி இயற்கையின் ஒரு ‘சமைத்துப் பரிமாறப்பட்ட வடிவம்’ என்றால் இந்த பொம்மைக்கடை இந்தக் கடைவீதியின் ’மேலும் சமைத்துப் பரிமாறப்பட்ட’ வடிவம். உணவைத் தின்று குட்டியின் வாயில் கக்கும் ஓநாய்கள் நாம்.

விதவிதமான முகங்கள். கப்பலில் ஒரு மெல்லிய தள்ளாட்டம் இருந்தமையால் நாங்களுட்பட எல்லாருமே ஆடிக்கொண்டுதான் இருந்தோம். இந்த கேளிக்கைநிலையங்களில் வருபவர்கள் பலவகை. இதேவேலையாக உலகம் சுற்றுபவர்கள். நீண்டகாலத் திட்டத்துடன் பணம் சேர்த்து வருபவர்கள். சாமானியப் பயணிகளும் பலர் உண்டு. எல்லா முகங்களிலும் ஒருவகை எக்களிப்பு. வெறித்த விழிகள், பித்துச் சிரிப்புகள்.

பொதுவாக காஸினோக்களில்தான் இந்தவகை வெறிப்பும் சிரிப்பும் இருக்கும். மக்களுக்கு நாளை என ஒன்று இல்லை என்று ஆகிவிட்டதைப் போல. கொண்டாடு, நுகர், இனி இது இல்லை என அவை ஆணையிடுகின்றன. கார்லைல் அதை மாம்மன் வழிபாடு என்கிறார். பொருள் வழிபாடு, செல்வ வழிபாடு, நுகர்வு வழிபாடு. அதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை.

நான்கு கருப்பின இளைஞர்கள் பளிச்சிடும் உடைகளுடன் மெல்லிய நடன அசைவுகளுடன் ஜாஸ் இசை பாடினார்கள். அலெக்ஸின் இயல்புக்குள் இருந்து இசையும் நடனமும் வெளிவர அவன் அவர்கள் முன் நின்று ஆடினான். குழந்தைகளை கவரும் முதற்கலை நடனம்தான். கலைகளில் அதுவே கள்ளமற்றது என்று சொல்லப்படுவதுண்டு. அவர்கள் விட்ட இடைவெளியில் ஒருவர் பியானோ வாசித்தார்.

பன்னிரண்டாவது மாடி திறந்த மைதானம். மேலே விண்மீன்களற்ற வானம். கடுங்குளிருடன் காற்று வீசிக்கொண்டிருந்தது. கனத்த ஆடைகளுடன் கம்பிப் பிடி வரிசை அருகே நின்று கீழே கடலின் கரிய அலைகள் கொந்தளிப்பதைப் பார்த்தோம். கரையோரமாகவே கப்பல் சென்றது. மின்விளக்குச் செறிவுகள் மெல்லச் சுழன்று விலகிச்சென்றுகொண்டிருந்தன.

எங்களுக்கு அளிக்கப்பட்டது ஒரு சிறு அறை. அதில் நால்வர் தங்கலாம். கழிப்பறை, குளியலறை இணைக்கப்பட்டது. முதல்வகுப்பு ரயில்பெட்டி அளவுக்கு. ஆனால் அந்த சிறுபகுதிக்குள் அழகான ,சொகுசான உணர்வை உருவாக்கியிருந்தனர். உடனே படுத்து தூங்கிவிடவேண்டும் என்று தோன்றுமளவுக்கு.

அந்தக் கப்பலின் உட்பரப்பை கப்பல் என நம்புவது கடினம். சட்டென்று ஒரு ஸ்டார் விடுதியின் உள்ளே இருப்பதாகத் தோன்றும். 2009ல் ஆஸ்திரேலியப் பயணத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றேன். (கரையில் நிறுத்தப்பட்டிருந்தது) இரண்டாம் உலகப்போர்க் காலத்தைச் சேர்ந்தது. அதில் எங்குமே எவருமே நிமிர்ந்து நிற்க முடியாது. முதுகை நிமிர்த்தவேண்டுமென்றால் படுத்துக்கொள்ளவேண்டும். பத்து நிமிடத்தில் எனக்கு திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன்.

ஒரு மாபெரும் திமிங்கலத்தின் உட்பகுதி என்று கற்பனை செய்துகொண்டேன். நீர்மேல் மிதக்கும் ஒரு நகர்த்துண்டு. ஒரு கடைவீதியை இங்கே அமைத்து எதை அனுபவிக்கிறார்கள். நீர்மேல் இருக்கிறோம் என்னும் எண்ணத்திற்கு அப்பால் இதில் என்ன சேர்ந்துள்ளது?

இப்படித் தோன்றியது, இது ஒரு சிறப்பனுபவம். இது எந்த நிலத்துடனும் இணைந்திருக்கவில்லை. இது தேசங்களில் இருந்து விடுதலை அடைந்திருக்கிறது. இது நிலைகொள்ளவில்லை, ஒழுகிச்சென்றுகொண்டிருக்கிறது. அதுதான் இதிலுள்ள விந்தையனுபவம்.

அருண்மொழி,சைதன்யா, ரவி, கிளாரா ஆகியோர் ஆறாவது நிலையில் நடந்த இரவுநடனத்தைப் பார்க்கச் சென்றனர். நான் அறையில் அமர்ந்து சாளரம் வழியாக கீழே நடந்துகொண்டிருந்த களியாட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்த முதலாளித்துவநாட்டிலும் கேளிக்கையிடங்களில் சீனர்கள் அதிகமாகத் தென்படுகிறார்கள். இந்தியர்கள் மிக அரிது. இந்தியர்களால் தங்களை மறந்து கொண்டாடவும் இயலாது.

காலையில் ஏழுமணிக்கே எழுந்துகொண்டோம். இருள் விலகத் தொடங்கியிருந்தது. உடைகளை அணிந்துகொண்டு ஒரு நடமாடும் கூடாரமாக மேல்தட்டுக்குச் சென்றோம். அரையிருளில் சூழத்தெரிந்த காட்சி ஒரு கனவுபோலிருந்தது. பால்டிக் கடல் உலகக்கடல்களில் மிக இளையது என்கிறார்கள். சில ஆயிரம் தீவுகள் இங்குள்ளன. ஒரு ஏக்கர் அளவுள்ள தீவுகூட. ஒரு மரம்கூட இல்லாததை தீவு என்று சொல்லக்கூடாது, கடல்மேடு. தீவுகளை அள்ளி வானிலிருந்து தெளித்ததுபோலிருந்தது.

பச்சைத்தீவுகளில் எல்லாம் இல்லங்கள். விருந்தினர் மாளிகைகள் அவை. சிலவற்றிலேயே ஒளி இருந்தது. பெரும்பாலானவை வருகையாளர்களுக்காகக் காத்திருந்தன. சில தீவுகளில் நாலைந்து மரங்கள், ஒரு படகுத்துறை, ஒரே ஒரு கட்டிடம். அங்கே வாழ்வதைப்போல திகைக்கைவைக்கும் தனிமை வேறொன்றில்லை. இல்லங்கள் கடல்மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இல்லை. அங்கே நிலாவில் கடலோதம் ஏற்படாதா என்று தெரியவில்லை.

காலையுணவை அங்கே தன்னுபசரிப்பு முறையில் உண்டோம். நான் எந்த வெளிநாட்டுப் பயணத்திலும் ஆரஞ்சு பழச்சாற்றை உடல்நிறையுமளவுக்கு குடிப்பேன். பயணங்களில் உடல்நிலைச் சிக்கல் வராமலிருப்பது அதனால்தான். 2000 த்தில், முதல் வெளிநாட்டுப் பயணமாக கனடா சென்றபோது அ.முத்துலிங்கம் சொன்னது. “இனியொரு வெளிநாட்டுப் பயணம் இருக்குமா தெரியவில்லை சார்” என நான் எழுதினேன். “நீங்க இப்பதான் ஆரம்பிச்சிருக்கீங்க. போய்ட்டேதான் இருப்பீங்க” என்று அவர் அன்று சொன்னார். கலைஞனின் சொல்.

காலை 11 மணிக்கு ஸ்டாக்ஹோம் சென்று சேர்ந்தோம். அதுவரை கடலையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு தீவிலும் வாழ்ந்து வாழ்ந்து சென்றோம். அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் ஆளுக்கொரு தீவு வாங்கலாமென்றால் எதையெதை என பேசிக்கொண்டோம். ஒன்றை விட இன்னொன்று மேல் என்று தோன்றிக்கொண்டிருந்தது. ஆகவே வாங்கும் முடிவை ஒத்திப்போட்டோம்.

கடலோரமாகவே நிலம் வந்துகொண்டிருந்தது. பீரங்கித் தாக்குதலுக்கு நிலைகொள்ளும் அளவு பெரிய மதில்களுடன் ஒரு கோட்டை. அதில் வீரர்கள் பதுங்கியமரும் குழிகள். சாலையோரத்து தேவாலயங்கள். பதினொரு மணிக்குத்தான் மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

வாசாவின் கப்பலை இந்தக் கப்பலின் முன் வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர் முன் ஒரு கட்டிடம் எனத் தோன்றும். ஆனால் அங்கிருந்து கப்பல்கலை இங்கே வந்து சேர்ந்திருக்கிறது. அந்தக் கப்பலைப் பார்க்கும்போதும் சரி இதில் நுழையும்போதும் சரி, டைட்டானிக் நினைவு வராமல் தடுக்க முடியவில்லை. ஜாக் கீழே ஏதோ அடுக்கில் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறான் என தோன்றியது.

உண்மையிலேயே 12 ஆம் அடுக்கில் உயர்குடிகளுக்கான கேளிக்கைநிலை இருந்தது. அங்கே வெந்நீர் நிறைந்த நீச்சல்குளங்களைக் கண்டோம்.உப்புநீருக்குமேல் ஒரு நன்னீர் குளம், அதில் நீராடுதல். கடலுக்குமேல் மிதக்கும் குளம். அந்த விந்தைதான் அவர்களை மகிழ்விக்கிறது.

ஸடாக்ஹோம் சென்று நேரடியாக ரவியின் ஓட்டலுக்குள் நுழைந்தோம். ‘ஹோம் கமிங்’ என்று தோன்றியதும் சிரிப்பு வந்தது. அது இன்னும் ஒருநாள் இருக்கப்போகும் ஊர். ஆனால் சைபீரியவட்டத்தில் இருந்து பார்த்தால் அது சொந்த ஊர்தானே?

சைதன்யாவின் தோழி அன்பு ராணி ஸ்டாக்ஹோம் KTH பல்கலையில் இயற்பியல் ஆய்வுமாணவியாகச் சேர்ந்திருந்தாள். அவள் ஸ்டாக்ஹோம் வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. நடந்தே உணவகத்திற்கு வந்தாள். அவளுடன் சைதன்யாவும் அஜிதனும் செல்ல நான் ரவியின் இல்லத்திற்கு வந்தேன்.

அறையில் அமர்ந்திருக்கையில் ஒரு நாளில் எத்தனை நிலங்கள் என்னும் திகைப்பு அடைந்தது. கண்ணுக்கு செரிமானக் கோளாறு ஏதாவது உருவாகுமா என்ன என்று வியந்துகொண்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 10:35

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் மறைந்து ஏழாண்டுகள் கடந்தபின்னர் அவர் பற்றிய ஒரு ஆவணப்பதிவை உருவாக்கும்போது தெரியவருகிறது, அவர் தன்னைப்பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் கட்டுரைகள் எதிலும் அவருடைய பெற்றோரின் பெயரோ மூதாதையர் பெயரோ இல்லை. இத்தனைக்கும் மரபை முன்வைத்தவர் அவர். அவருடைய எழுத்துமுறைக்கும் இது உதாரணம். அவை பதிவுசெய்யப்பட்ட அக ஓட்டங்கள்.

வெங்கட் சாமிநாதன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 10:34

மதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர்

                             

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

(சாருவின் நான்தான் ஒளரங்கசீப் – நாவலை முன்வைத்து)

ஏழு வயது குழந்தையுடன் அதுவும் பையனுடன் அமர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுகளில், பெரியவர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல், மற்றும் பதட்டம் என்பது அவனுடைய ஒழுங்கின்மையும் ,கலைத்துப்போடும் தன்மையும் தான். அது விளையாட்டின் மொத்த சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடுவதுடன், எல்லாவற்றையும் சரியாக ‘அடுக்கி’ வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவருக்கு, இந்த ‘உடைப்பு’ எனும் செயல் எரிச்சலை தருகிறது.

சதுரமும், செவ்வகமுமாக, இருக்கும் பிளாஸ்டிக் வில்லைகளை அடுக்கி மிக அழகான வீடு அல்லது கோட்டையை அவர் கட்டுவார், அதை அவ்வளவு ஆர்வத்துடன் உடைத்து போட்டு, அவன் சிரிப்பான். அல்லது கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீட்டை, ஐம்பது அடி தூரத்திலிருந்து ஓடி வந்து குதித்து, மீண்டும் மணலாக்குவன், அதில் முகம் மலர்பவன் அவன்.

இந்த உடைப்பும் ஒழுக்கமின்மையும் ஒருபுறம் என்றால் அதற்கு இணையாகவே, எதிலும் அமைய முடியாத திருப்தியின்மையும், தொடர்ந்து எதையாவது நுகரத்துடிக்கும் இச்சையும், தான் ‘கட்டமைக்கப்பட்ட‘ பெரியவர்களை தொல்லை செய்கிறது.

சாருவின் புனைவுலகு இந்த சிறுவனின் நிலையிலிருந்து எழுதப்படும் ஒன்று, பெரியோருக்கு பதட்டத்தை உருவாக்குவது அதன் இயல்பு.

முகநூல் போன்ற ஊடகங்களில் உண்மையில் சந்தோசமாக இருப்பவர்கள் இரண்டே பிரிவினர்தான், முதலாமவர் பூனை படங்கள், பூக்கள், குழந்தையின் சிரிப்பு, வானவில் போன்ற படங்களை தினமும் பதிவிட்டு விட்டு வேலையை பார்க்க சென்று விடுபவர்கள். அடுத்தவர், எந்த கருத்திலும் மாட்டிக்கொள்ளாமல், ஒரு லைக் போட்டுவிட்டு உண்மையை தேடிக் கண்டுபிடித்து படிக்கக் கிளம்பி விடுபவர். மீதமுள்ளோர் ஒரு தரப்பை பிடித்துக்கொண்டு தொங்கும் பாவப்பட்ட பிரா(யா)ணிகள்.

சாருவை படிப்பதற்கோ, புரிந்து கொள்வதற்கோ எந்த தரப்புமற்ற ஒரு மந்தகாச நிலை தேவையாகிறது. ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடலாம், அல்லது அவருடன் சேர்ந்து, புனிதப்படுத்துதலை எள்ளி நகையாடிவிட்டு அதிலிருந்து ஆறாவது பக்கத்தில் “ஆன்மீக வாழ்வே ஒரு மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த பட்ச நிலை” என ஒரு துறவியை போல ஆயிரம் வார்த்தைகளில் வர்ணிக்கலாம். இதையெல்லாம் செய்ய முடிந்தால் சாரு உங்களுக்கு உகந்தவர்.

ஜீரோ டிகிரி படித்துவிட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன், அவ்வளவாக உவப்பாக இல்லை ஆனால், ஒருசில அத்யாயங்கள் பிடித்திருந்தது.என ‘நன்றி’ என பதில் அனுப்பி இருந்தார்.

சரி ஒரு நாவலாக படிக்கலாம் என எண்ணியபோது கிடைத்தது தான் ‘நான் தான் ஒளரங்கசீப்’ எழுத்தாளரும், ஆவி வடிவில் ஒளரங்கசீப்பும் உரையாடும் கற்பனையாக நீளும் நாவல் இது. முதல் இரண்டு அத்யாயத்திற்குள் ஒளரங்க சீப்பின் கதாபாத்திரம் தன்னைப் பற்றி சொல்லி விடுகிறது.

அதில் ”நாற்பத்தொன்பது ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஆலம் கீர் ( உலக நாயகன்) ஆகிய நான் அப்பழுக்கில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், மலர் மஞ்சத்தை துறந்தேன், ஆடம்பரங்களை துறந்தேன், உலகின் மிகப்பெரிய செல்வந்தனாகிய நான், வெறும் தரையில் படுத்தும், என் தொப்பியை நானே தைத்துக்கொண்டும், அல் -குரானை கைகளால் எழுதி விற்று சம்பாதித்து அதில் வாழ்ந்து கொண்டிருந்தேன்,” – என்று அறிமுகம் செய்தவுடனேயே சரி மேற்கொண்டு என்ன தான் சொல்றாரு பார்ப்போம் என நம்மை நாவல் உள்ளே இழுத்து விடுகிறது.

கதை பல்வேறு வரலாற்று ஆய்வு நூல்களையும், தரவுகளையும், சுயசரிதைகளையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ஆகவே நம்பவும் நம்பாமல் இருக்கவும் வாசகர்கள் அலைக்கழிவது நிச்சயம்.

நாவல் நெடுகிலும் வஞ்சம், வஞ்சம், வஞ்சம் என மொகலாயர்கள் ஆண்ட முன்னூறு வருடமும் ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் பெற்றுக்கொள்கிறார்கள். அதில் நான்கு அல்லது ஐந்து பேர் மிஞ்ச, அவர்களுக்குள் அதிகார போட்டி, ஆக தந்தையை தனயன் கொல்வது, தம்பியை அண்ணன் விஷம் வைத்து கொல்வது, அண்ணனை தம்பி எதிரிக்கு காட்டிக்கொடுத்து கொல்ல துணை புரிவது என. சாதாரணமாக ஒவ்வொருவரும் ஆவியாக வந்து வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

கிழக்கிந்திய கம்பெனியை உள்ளே விட்டதன் மூலம் தங்களுடைய வீழ்ச்சியை பேசும் அத்தியாயங்களும் ஒளரங்கசீப் வாக்குமூலமாக அமைகிறது. இவை அனைத்திற்கும் நூல்கள் மேற்கோள் காட்டப்படுகிறது.

சாரு இதற்காக எப்படியும் இருபது முப்பது புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறார், அவர் படித்தது அதை விட மேலும் பல மடங்குகள் இருக்கலாம், அது தீவிரத்தன்மை தான் இப்படி ஒரு நாவலுக்கு உதவியிருக்கும்.

எனினும் நாவல் ஆங்காங்கே கைதவறி உடைந்த பீங்கான் குவளை போல சிதறிக்கிடக்கிறது. அது தான் மேலே சொன்ன ஏழு வயது சிறுவனின் கைவண்ணம்.

உதாரணமாக கொக்கரக்கோ எனும் நண்பர் உள்ளே வருகிறார். வெறும் வேடிக்கை பார்க்க வருகிறார். எந்த பங்களிப்பும் இல்லை எனினும் சாருவுக்கு அவரில்லாமல் எழுத ‘கை நடுங்கும்’ என்பது போல கொக்கரக்கோ நாவலில் பிற்பகுதியில் திரிகிறார். ஆனாலும் நாம் எதுவும் சொல்ல முடியாது, ஏனெனில் ஏழு வயசு பையனுக்கு என்னத்த சொல்லி புரியவைக்க? என்கிற நிலை தான் மிஞ்சும். ஆகவே கடந்து போக வேண்டியது தான்.

இப்படி திடீரென ஒளரங்கசீப், கொக்கரக்கோ, சாரு மூவரும் சீலே நாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இப்போது சாரு எழுதிக்கொண்டிருக்கும் ‘அவ்ட்சைடர்’ எனும் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதி அது. இப்படியான உடைசல்களை தாண்டி இந்த நாவல் நம்மில் நிற்பதற்கு வலுவான காரணமாக சிலவற்றை சொல்லலாம்.

நாவல் முழுவதும் வந்து செல்லும் சூபி மரபின் ஞானியர் நிரை, அவர்களின் ஆன்மீக பலம் மற்றும் சாதனைகளை அதன் மூல வடிவிலிருந்து சிறிதும் மாற்றாமல், நமக்கு தந்திருப்பது.

அடுத்ததாக மொகலாயர்கள் அப்போதைய ராஜபுத்திர மற்றும் மராட்டிய மன்னர்களுடனான போரும் சமாதானமும் அதன் பின்னாலிருந்த அரசியலும் என ஒரு முக்கியமான பார்வை. அதில் முதன்மையானது பாபர், அக்பர், சிவாஜி, ஷாஜஹான், என நாம் நிறுவி வைத்திருக்கும் வரலாற்று நாயகர்களை அவர்களின் அரசியல் மற்றும் இருளான, நொய்மையான பக்கங்களை வரலாற்று தரவுகளுடன் கொடுத்திருப்பது.

இந்த வரலாற்று தரவுகளை பொய் என நாம் மறுத்தால், ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் தரவுகளின் உண்மை தன்மையையும் சோதிக்க வேண்டி வரலாம்.

அடுத்ததாக நாவல் முழுவதும் நிகழும் புராண மேற்கோள்கள். ஒளரங்கசீப் வாக்குமூலத்தில் பாதி மகாபாரத கதைகளின் மேற்கோள்களாலும், மீதி அல் குரானின் மேற்கோள்களாலும் மேன்மைகளாலும் நிறைந்து நிற்கிறது. ஒளரங்கசீப் தனக்கு தேவையானவாறு புராண கதாபாத்திரங்களை வளைத்துக்கொள்கிறார். என்று வைத்துக்கொண்டாலும், அதுவும் நாவலுக்கு நன்மையே செய்திருக்கிறது.

புராண எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர்களின் தரப்பை சொல்ல, பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. இங்கொன்றும் அன்கொன்றுமாக சிலவற்றை சொல்லலாம், அல்லது எதிர்மறை பாத்திரங்களை யுக புருஷர்களாக மாற்றி புனையப்பட்ட படைப்புகள் சிலவற்றை சொல்லலாம், ஆனால் ஒளரங்கசீப் போன்ற ஒரு வரலாற்று எதிர்மறை கதாபாத்திரத்திற்கு இப்படியும் ஒரு தரப்பு இருந்திருக்கும் என்கிற ஊகம் மற்றும் அதை ஒட்டிய நாவல் என்கிற வரிசையில் இதை மிக முக்கியமான படைப்பாக கொள்ளலாம்.

ஒருவகையில் வெண்முரசு இதை மிக கச்சிதமாக கையாண்டிருக்கும் அதில் வரும் சகுனியோ, துரியோதனனோ, நம்மால் மறுக்கவே முடியாத தங்கள் அறத்தை முன் வைப்பார்கள். எதிர்மறை கதாபாத்திரம் என்கிற எண்ணம் நீங்கி அவனுக்கான நியாயத்தை அவன் சொல்லட்டும் அதுவும் இங்கே முக்கியம் என்கிற இடத்திற்கு வந்து சேர்வோம். அப்படித்தான் சாரு ஒளரங்கசீப்பை முன் வைக்கிறார்.

நமக்கு புராணத்திலிருந்து கிடைக்கும் ஒரு கருத்தாக்கம் ‘மதங்க கர்ப்பத்தில் பிறக்கும் அனைவரும் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தும் வல்லமை பெற்றோர்’ என்பது. உதாரணமாக இராவணன், கார்த்தவீரியன், துரியோதனன் இவர்கள் மூவரும் மதங்க கர்ப்பத்தில் பிறக்கிறார்கள், தங்களுக்கான சத்திரிய தகுதியை நிரூபித்து நல்லாட்சி என தான் கருதியதை கொடுத்து, பரிபாலனம் செய்தும், முறையே காம, குரோத, மோகத்தால் மிகப்பெரிய அழிவு சக்தியாக மாறியவர்கள். அப்படியான ஒருவராகத்தான் ஒளரங்கசீப்பின் வாக்கு மூலம் அமைகிறது.

ஒளரங்கசீபின் ஆவி அகோரியின் உடலிலிருந்து பேசுவதெல்லாம் தன் ஆட்சிமுறை, மக்களுக்கு செய்த நன்மைகள், தனது மார்க்கத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணித்தது, எங்கும் பயமறியாது வீரம், ஒழுக்கமே உருவான வாழ்க்கை, எளிமையான அன்றாட தேவைகள், என நீண்ட நேர்மறை பட்டியலை கொடுத்துவிட்டு, தான் செய்த கொலைகள், பாதக செயல்கள், மாற்று மதத்தினரை கொன்று குவித்தல், கொள்ளைகள், மற்றும் எண்பது மூன்று வயதிலும் போர்முனையில் நின்று அனைத்தையும் இழந்து சரிந்து கொண்டிருந்த அந்திம காலம் என மொத்த வாழ்க்கையையும் வாக்குமூலமாக சொல்கிறார். அதில் அக்பரும், பாபரும், சிவாஜியும், அசோகரும் கூட தங்களை நன்றாக விளம்பரம் செய்து கொண்டு வரலாற்று நாயகர்களாக நின்று விட்டனர். நானோ மார்க்கத்தை தவிர வேறு ஒன்றுக்கும், என்னை ஒப்புக்கொடுக்க வில்லை என்பதால் என் கல்லறை கூட எங்கே இருக்கிறது என்கிற தகவலை கூட சொல்லவில்லை. நான் தொப்பி தைத்து சேமித்த முன்னூறு ரூபாயும் என் வேலைக்காரனிடம் உள்ளது அதில் மசூதியில் இருக்கும் ஏழைகளுக்கு இனிப்பு வாங்கி கொடுக்கவும்.

துரியோதனனும், கார்த்த வீரியனும், இராவணனும் இப்படியான வாக்குமூலத்தை தான் தந்திருப்பார்கள். ஏனெனில் சாமானியர்களை விட ஆறுமாதம் அதிகமாகவே இருளறையை கண்டவர்கள் என்பதால், தாமசம் எனும் இருள் மேலும் மேலுமென பெருகுவதற்கு இணையாகவே அழித்துக்கொண்டே செல்லும் ஆற்றலும் கொண்டது.

ஒளரங்கசீப்பின் வாக்குமூலமும் அதையே சொல்கிறது. சூஃபி ஞானியரும், இந்திய யோகியாரும் நாவல் முழுவதும் ஆனந்த நடனத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க, வஞ்சம் மிக்க அரசர்களோ ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டும், விஷம் வைத்து கொன்றுகொண்டும், நிலம்… நிலம்… நிலம் என அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு வரலாற்று நாவலை கற்பனையும் தரவுகளையும் சரிவிகிதத்தில் கொடுத்து, முடிந்தால் புரிந்துகொள் என சவாலுடன் முடிக்கிறார். சாரு.

இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது பெறும் சாரு அவர்களுக்கு அன்பும் நன்றியும். வாழ்த்துக்களும்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 10:34

சியமந்தகம் கடிதங்கள்.

சியமந்தகம் தொகைநூல் வாங்க

அன்புள்ள ஜெ

சியமந்தகம் தொகுப்பை அண்மையில் ஒரு நண்பரிடமிருந்து வாங்கி வாசித்தேன். நான் அது ஒரு வழக்கமான மணிவிழா மலர் என்றுதான் நினைத்தேன். வழக்கமாக அதில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்தான் இருக்கும். ஆனால் சியமந்தகம் ஓர் அரிய இலக்கியத் தொகுப்பு. இலக்கியவாதிகளின் நினைவுகள், முக்கியமான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் ஆகியவை அடங்கியது.

குறிப்பாக இளம் எழுத்தாளர்களான சுரேஷ் பிரதீப் போன்றவர்களின் விமர்சன ஆய்வுகள் மிகக் காத்திரமானவையாக இருந்தன. எல்லா கோணங்களிலும் உங்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல் என்று சந்தேகமில்லாமல் சொல்லமுடியும்.

மாணிக்கவேல் ஆறுமுகம்

*

அன்புள்ள ஜெ.

சியமந்தகம் தொகுப்பில் அருண்மொழி நங்கை, அஜிதன் இருவரும் உங்களைப் பற்றி எழுதிய நெகிழ்வான நினைவுகளை வாசித்தேன். மிக அற்புதமானவை. ஒரு குடும்பத்தில் இருந்து அக்குடும்பத் தலைவர் பற்றி இப்படி ஒரு சித்திரம் உருவாவது என்பது மிக அரிதானது. அருண்மொழி கட்டுரை உணர்ச்சிபூர்வமானது. அஜிதன் கட்டுரை ஆழமான தத்துவ விவாதமும் கொண்டது.

ஜெ. பென்னி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 10:31

அம்மாவின் பேனா – கடிதம்

சதாரா மாலதி

அம்மாவின் பேனா

அன்புள்ள ஜெ

என் ஆயாவின் ஆயா தெய்வானை தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவரது மகள் எமரோஸ் அவர் கண் முன்னாலேயே தனது ஐம்பத்தேழாம் அகவையில் மறைந்து விட்டார். என் ஆயா தன் ஆயா தெய்வானையால் வளர்க்கப்பட்டதால் ஆயாவையும் அம்மா என்று அழைப்பதே வழக்கம். மேலும் தனது மாமாவையே மணந்து கொண்டதால் மருமகளும் கூட. தன் மகள் இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து இறக்கும் தறுவாயில் தெய்வானை, “அம்மா வந்துட்டாளா ?” என்று என் ஆயாவை பார்த்து வினவுகையில், ” மா, அதான் அம்மா செத்து ஆறு வருஷமாச்சே, இப்ப வந்து கேக்குறியே மா! ” என்று சொன்னதாக சொல்வார். அந்த தருணம் அவர் மனதில் வியப்பாக நின்றிருப்பதால் தன் ஆயாவின் இறப்பை நினைவுகூர்கையில் எல்லாம் இச்சம்பவத்தை சொல்வார்.

அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன், எத்தனை பெருந்துயர் அது. ஆறு ஆண்டுகள் கழித்தும் மரணத்தை ஏற்று கொள்ள முடியாதா என்று ? அம்மாவின் பேனா (https://www.jeyamohan.in/2277/) என்ற இந்த பதிவில் ஒரு அம்மாவுக்கு தன் மகள் எப்படி இறக்க முடியும் என்று முடிக்கையில் இந்நினைவுகள் இணைந்து கொண்டன. காலம் எல்லாவற்றையும் கரைக்கும் என்பது பொது வழக்கு. அந்த துயர் ஆறாது நிலைத்திருப்பதன் அர்த்தம் என்ன ? ஆறாத காயமெனில் எத்தனை ஆழமானது அத்துயர். அவரது ஆளுமையாக என் ஆயாவின் சொற்களில் இருந்து உருவகித்ததை சேர்க்கையில் அதன் வீரியம் மனதில் உறுத்தும். தெய்வானை ஆறடி அளவுக்கு உயரமும் வெண்ணிறமும் திடமான உடலும் கொண்டவர். அவரது மகள் இறந்த சமயங்களில் எல்லாம் நன்றாகவே இருந்திருக்கிறார். கடைசி ஆறு மாதத்தில் நடப்பதை விட்டு தவழ்ந்தப்படியே வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். சாவதற்கு ஒரு வாரம் முன்பு தான் படுக்கையில் விழுந்திருக்கிறார். இறுதி மூன்று நாளில் நினைவு மாறாட்டம். அதில் தான் அந்த சம்பவம். அந்த துயரம் ஆழத்தில் புதைந்த நஞ்சென்று அவரை தின்றிருக்கிறது ! மாலதிகள் மறைவதில்லை.

அன்புடன்

சக்திவேல்

*

அன்புள்ள சக்திவேல்

உங்கள் குறிப்புகள் வழியாக சென்று பார்த்தபோது ஒன்று தெரிந்தது திண்ணை இணையதளம் நம்பமுடியாத ஓர் அசட்டுத்தனத்தைச் செய்துள்ளது. அந்த இணைப்புகள் எவையும் செல்லுபடியாவதில்லை. தொடுப்பு மாற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான இணைப்புகள் பொருளிழந்துவிட்டன. அதை நடத்துபவர்கள் கணினி நிபுணர்கள். ஏன் அதைச் செய்தனர்? அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிகிறது, அறிவியக்கம் பற்றிய அறிதலே இல்லை.

இதேதான் ஆர்கைவ் இணையதளம், இணையநூலகம் போன்றவற்றிலும் நடக்கிறது. ஏதாவது ஒரு தொழில்நுட்ப நிபுணர்வருவார். ஒரு சின்ன வசதியை சேர்ப்பார், அல்லது ஒரு சிறு பிழையைச் சரிசெய்வார். பல்லாயிரம் பல்லாயிரம் இணைப்புகள் இல்லாமலாகிவிடும். சுட்டிகள் வழியாக அவற்றை அணுகவே முடியாது. அந்த தொடுப்புகள் மிகப்பெரிய செல்வம். ஆனால் தொழில்நுட்பர்களுக்கு அது புரியவே புரியாது.

அடிப்படை அறிவியக்கப்புரிதலை நாம் அடைய இன்னும் இருநூறு ஆண்டுகளாவது ஆகும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 10:30

December 5, 2022

சென்னையில் ஒரு சந்திப்பு

இலக்கிய விழாக்களில் இருந்து இலக்கிய விழாக்களுக்கு. வரும் டிசம்பர் 8 மாலை ஆறு மணிக்கு சென்னை கோதே இன்ஸ்டிடியூட் அரங்கில் ஒரு சந்திப்பு உரையாடல்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2022 21:15

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.