Jeyamohan's Blog, page 669
December 4, 2022
கறுப்பு மண்- வெங்கி
கறுப்பு மணி பாலகும்மி பத்மராஜு- இணைய நூலகம்
பாலகும்மி பத்மராஜு – தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
சமீபத்தில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட பாலகும்மி பத்மராஜுவின் “கறுப்பு மண்” வாசித்தேன் (தமிழ் மொழிபெயர்ப்பு பா. பாலசுப்பிரமணியன்).
நான் எதிர்பார்க்கவேயில்லை, நாவல் இப்படி ஒரு ரோலர் கோஸ்டர் ஆக்ஸன் திரில்லராய் இருக்குமென்று. முதல் பாதி வரையிலும் நதிபோல் இயல்பான ஓட்டத்தில் சென்றுகொண்டிருந்த நாவல் அதன்பின் காட்டாற்று வெள்ளம் போல் வேகமெடுத்து பாய்ந்தது. விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நூலை கீழே வைக்கவே விடவில்லை. அந்த களிமண் பூமியும், அதன் மண் மணமும், நிலப்பரப்பும், அதன் கதாபாத்திரங்களும், மனவோட்டமும், அவர்களின் பண்பாட்டு அசைவுகளும் சிறப்பான வாசிப்பனுபவம் தந்தன.
தமிழில் முதல் பதிப்பு எழுபதுகளில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தையும் தெலுங்கு இலக்கியத்தையும் ஒப்பிட்டு தெலுங்கில் நுற்றாண்டு கால நாவல் வளர்ச்சியையும் எழுத்தாளர்களையும் தொடக்க காலத்திலிருந்து குறிப்பிட்டு என்.ஆர். சந்தூர் அருமையான முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார்.
எளிமையான கதைதான். ஆந்திர கிராமம் ஒன்று. கறுப்பு மண் கொண்ட விவசாய பூமி. டிராக்டர் போன்ற எந்திரங்கள் விவசாயத்திற்குள் நுழையும் காலம். ஊரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய “மல்லம்மா” எனும் பெண் தெய்வத்தின் அம்மன் கோயில் ஒன்று ஊரில் இருக்கிறது
(அப்போதைய சமூக அடுக்கில் கடைக்குடியில் பிறந்த, துர்கையின் அவதாரமாய் ஜொலிக்கும் பதினாறு வயது இளம்பெண் மல்லம்மா தெய்வமான கதை நாவலில் உள்ளது). வருடா வருடம் முளைப்பாரியும், நாடகமும், கூத்தும், நடனமுமாய் கோயில் திருவிழா மிக விஷேஷமாக நடக்கும்.
ஊரில் இரண்டு பெருந்தலைகள். இருவரும் பண்ணையார்கள். சுப்பையா மற்றும் முன்சீப் ராமையா. சுப்பையாவின் மனைவி ஷேஷம்மா. சுப்பையாவிற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் புன்னையா (மனைவி சுந்தரம்மாள்). இரண்டாவது மகன் ராஜு. சுப்பையா பன்ணையாரின் மனைவி ஷேஷம்மாவின் தூரத்துச் சொந்தக்காரர்களான கங்கப்பாவும் மல்லியும், அண்ணன் தங்கை. இருவரும் சிறுவயதிலிருந்தே சுப்பையா பண்ணையாரின் வீட்டில் வளர்ந்தவர்கள். மல்லிக்கு ராஜு அத்தான் மேல் மிகப் பிரியம். சுப்பையா பண்ணையாரிடம் வேலை செய்யும் பதாலு, பதாலுவின் மனைவி புல்லி, பதாலுவின் நான்கு வயது மகன் புடத்தடு, பதாலுவின் தங்கை ராமி (கங்கப்பாவிற்கு ராமி என்றால் மிகுந்த இஷ்டம்). ராமையாவின் மனைவி சூராலு. ராமையாவிற்கு ஒரு மகனும் மகளும். மகன் வெங்கன்னாவிற்கு திருமணமாகிவிட்டது (மனைவி இந்திரா). மகள் லட்சுமி என்ற லச்சம்மாவிற்கு சுப்பையாவின் மகன் ராஜுவின் மேல் காதல். ராஜுவும் அவளை விரும்புகிறான். சூராலுவின் தங்கை நாகம்மாவின் பையன் ரங்கன் சூராலுவின் வீட்டில்தான் வளர்கிறான். ரங்கன் ராமையாவிற்கு செல்லம். கொஞ்சம் அடாவடி இளைஞன். ரங்கனுக்கு ராமியின்மேல் ஒரு கண். கணக்கர் தர்மராஜு, அவர் மகன் லிங்கராஜு என்கிற லிங்கையா, இருவரும் மோகிக்கும், எண்ணெய்ச் செக்கு வைத்திருக்கும் மங்கி என்கிற தெலுக்குல மங்கம்மா.
ஊரில் அனைவரும் அந்நியோன்யமாக அன்பாக கலந்து வாழ்கிறார்கள். கிராமத்திலேயே முதன்முறையாக ராஜு புதிதாக டிராக்டர் வாங்கி ஊருக்கு கொண்டுவருகிறான். அவனுக்கும் லச்சுமிக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் கோவிலில் தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். அம்மன் திருவிழா வருகிறது.
உற்சவத்தின் போது ரங்கனாலும், கணக்கர் தர்மராஜுவாலும் பிரச்சினை உருவாகிறது. பெரிதாகி கலவரமாக மாறுகிறது. ஊர் இரண்டாகப் பிரிந்து (சுப்பையா கோஷ்டி, ராமையா கோஷ்டி) அடித்துக்கொள்கிறது. திருவிழா தடைப்படுகிறது. தீ கனன்று ஊரில் பதட்டம் நிலவுகிறது. குடிசைகள் எரிகின்றன. காவல் போடப்படுகிறது. ராஜு லச்சுமி கல்யாணம் நின்றுபோகிறது.
நாவலில் மல்லியின் பாத்திரப் படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மல்லி ஒரு தூய ஆத்மா. மல்லிக்கு ராஜு அத்தான்தான் உலகமே. அவன் எது சொன்னாலும் அவளுக்கு அது வேத வாக்கு. ராஜு அத்தான் லச்சுவை திருமணம் செய்யப் போவது அவளுக்குத் தெரியும். இருந்தும் அது அவளின் ராஜு அத்தான் மீதான பிரேமத்தை எள்ளளவும் குறைக்கவில்லை. ராஜு அத்தான் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளச் சொன்னான் என்று ஓய்வு நேரத்தில் அம்மன் கோயிலில் உட்கார்ந்து படிக்கவும், எழுதவும் பயில்கிறாள். ராஜு அத்தானிடம் பேச வேண்டியதையெல்லாம் குட்டி குட்டி வரிக் கடிதங்களாக எழுதி அவனிடம் கொடுக்காமல் தானே வைத்துக் கொள்வது அவள் வழக்கம்.
“அத்தான், நேத்து ராத்ரி எறாக் கறி எப்படி இருந்தது? நான்தான் பண்ணினேன்“
“கெங்கன் கொடுத்த கீச்சு செருப்பு நல்லா இருக்குது. ஏன் போடமாட்டேங்கிறே?”
“குரங்குப்புட்ட மாமரம் செமயாப் பூத்துருக்குது. தலெக் காய்ப்பு பிஞ்சுங்க எவ்வளவு நல்லாஇருக்குது தெரியுமா?”
“கல்யாணத்துக்கப்புறம் நீயும், லச்சுமி அக்காவும் குடித்தனம் நடத்த நீ கட்டிட்டிருக்கற புது வீட்டுல தெற்குப் பக்கம் ரோஜாப் பதியம் போட்டேன். வீடு முடியறதுக்குள்ள பூக்கணும்“
“முந்தாநாள் லச்சுமி அக்கா, கஞ்சீவரம் பட்டுப்புடவையாம், கட்டிக்கிட்டு வந்தா, கோவிலுக்கு. எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா, லச்சுமி தேவி மாதிரி?#
அக்கிராமத்தின் அம்மன் பெயரும் அவள் பெயர்தான் “மல்லம்மா”…
இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டதா ஜெ?. சினிமாவாக உருமாறக் கூடிய அத்தனை காரணிகளும் நாவல் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது.
வெங்கி
*
“கறுப்பு மண்” நாவல்
தெலுங்கு மூலம்: “Nalla Regadi” – பாலகும்மி பத்மராஜூ
தமிழில்: பா. பாலசுப்பிரமணியன்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
*
December 3, 2022
பனிநிலங்களில்-4
ஒருநாள் முழுக்க ஸ்டாக்ஹோம் நகரில் செலவிட்டோம். இந்தியாவின் மாலை ஆறுமணிக்கு இருக்கும் வெளிச்சம் நடுப்பகலிலும் இருந்தது. விமானத்தில் வரும்போது பார்த்தேன், மேலே முகில்களால் ஆன மிகச்செறிவான கூரை. இறங்கி நடக்கமுடியும் என்று தோன்றும். அதற்குமேல் சூரியனின் ஒளி கண்கூச சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அந்தக்கூரைக்கு கீழேதான் இத்தனை இருளும் குளிரும்
அன்றைய வெப்பநிலை நான்கு பாகையில் இருந்து ஒரு பாகை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஸ்டாக்ஹோம் நகரின் தெருக்கள் கிறிஸ்துமஸுக்கான ஒளியமைப்புகளை தொடங்கிவிட்டிருந்தன. ஐரோப்பிய நாகரீகத்திற்கே உரிய வாங்கு வாங்கு என அமைதியாக ஆணையிடும் கடைகள். மின்னும் கண்ணாடிச் சன்னல்களுக்கு அப்பால் உடைகள், உணவுகள், நகைகள்.ஒரே ஒரு நாடகசாலை. திரையரங்கு என எதையும் நான் பார்க்கவில்லை.
ஐரோப்பாவின் இன்றைய நகர்கள் அனைத்திலும் பெருகிக்கிடக்கும் அகதிகள், வீடிலிகளான இரவலர்கள் இல்லை. நான் பார்த்தவர்கள் தன் முன் தொப்பியை வைத்துக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்த ஒரு சிரிய அகதியும், தங்கள் குழந்தைகளின் படங்களை வைத்துக்கொண்டு பாடியபடி இருந்த ஒரு மத்திய ஆசிய அகதித் தம்பதிகளும்தான். தெருக்களில் பாடும் இசைக்கலைஞர்கள், ஓவியங்களை பார்வைக்கு வைத்திருப்பவர்கள் பாரீஸில் மிகுதி. இங்கே இல்லை. குளிர்காலமானதனாலும் இருக்கலாம்.
ஸ்வீடன் நாடு அங்கே வரும் அகதிகளை பெரும்பாலும் இல்லங்களில் குடியமர்த்தி உழைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிடுகிறது. போதையடிமைகளை தெருக்களில் விடுவதுமில்லை. அந்தக் குளிரில் வீடிலிகள் செத்துவிட வாய்ப்புண்டு. எங்கும் மக்கள். ஆனால் கூச்சல்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் நாய்களுடன் நடந்துகொண்டிருந்தார்கள்.
ஸ்வீடன் மன்னரின் அரண்மனையை, அவர் மக்களைச் சந்திக்கும் சதுக்கமேடையை பார்த்தேன். அவை பழுதுநீக்கப் பணிகளுக்காக போர்வை போர்த்தி மறைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாமே ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு நீளும் மாபெரும் கட்டிடங்கள். பலநூறு சாளரங்கள் கொண்டவை. ஆனால் எவையும் எப்போதும் திறக்கப்படுவதே இல்லை என தோன்றும். இறுக்கமாக வாய்மூடிய, நட்பற்ற கண்கள் கொண்ட கனவானைப் போன்றவை
சதுக்கத்தில் மின்விளக்குச் சரடுகளாலான ரெயிண்டீர் சிலைகள். மின்விளக்குத் தோரணங்கள். மக்கள் நீரில் மிதப்பவர்கள் போல மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தனர். அமெரிக்கா போல மிகையான உடலசைவுகளும் முகவெளிப்பாடுகளும் இங்கில்லை. முணுமுணுத்துக்கொண்டும் புன்னகைத்துக்கொண்டும் சென்றனர்.
ஒரு நகரம் தன்னை அணிகொள்ளச் செய்வதென்பது ஓர் அழகிய காட்சி. அதன் உள்ளுறையும் கொண்டாட்டம் வெளிவருகிறது. இந்திய நகரங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றனவே ஒழிய நகரம் அணிகொள்வதே இல்லை. மதுரை சித்திரைத் திருவிழாவில்கூட நகரம் வழக்கம்போலவே இருக்கும்
ஸ்டாக்ஹோம் நூலகம்ஸ்டாக்ஹோம் குடிக்கொண்டாட்டத்தின் நகரும்கூட. விதவிதமான குடிநிலையங்கள். ஒளிரும் புட்டிகளில் பொற்திரவங்கள். இங்கே குடி இல்லாமல் உணவகம் நடத்தவே முடியாது. பீருடன், ஒயினுடன் இட்லி சாப்பிடுகிறார்கள். ஆனால் பொதுவாக நான் ஐரோப்பிய நாடுகளில் பொதுவெளியில் குடித்துவிட்டு சலம்புபவர்கள், கலாட்டா செய்பவர்களை பார்த்ததில்லை. நம்மூர் வெயில்தான் அப்படிச் செய்யவைக்கிறதா?
ஐந்து பாகை வெப்பம். கைகள் உளைச்சல் எடுத்தன. மூச்சில் குளிர் நுரையீரலை கருங்கல் என உணரச் செய்தது. ஏற்ற இறக்கமான சாலைகளில், கற்கள் பதிக்கப்பட்டு முதலைமுதுகு போல தோன்றிய பரப்பின்மேல் நடந்தபடி சுற்றிலும் உறைந்தவை போல் நின்றிருந்த நூற்றாண்டுத் தொன்மை கொண்ட கட்டிடங்களைப் பார்த்துச் சென்றோம். சுண்ணக்கற்களாலும், திறந்த செங்கற்களாலும் ஆனவை. திறந்த செங்கல் கட்டிடங்கள் மொரோக்கோ தோலால் ஆனவை என்னும் விழிமயக்கு உருவாகியது.
ஓர் இடத்தில் காஷ்மீரி கவா போன்ற சுவை கொண்ட ஒரு பானத்தை குடித்தேன். டீயுடன் அல்மாண்ட் கொட்டைகளின் சீவல்களும் ரோஜாமலரிதழ்களும் தேனும் கலந்தது. கூடவே கொஞ்சம் ஒயின். ஆனால் வெறும் வாசனைதான் அது. வெப்பத்தால் ஒயின் ஊற்றியதுமே ஆவியாகிவிடுகிறது
ஸ்டாக்ஹோம் ஏரிகளின் நகரம். அல்லது ஒற்றை நீர்ப்பரப்பின் மேல் எழுந்த சிறுசிறு தீவுகளின் தொகுப்பு. மாலரென் ஏரி ( Lake Mälaren ) நகரின் மையத்தில் இருந்து பால்டிக் கடலுக்குள் செல்கிறது. அதன் கரையில் நடந்தோம். விமானமிறங்கும்போது நீர்க்குட்டைகளும் நடுவே பசுந்திட்டுகளுமாக விந்தையான ஓர் அள்ளித்தெளிப்பாக தெரிந்தது நகரம்.
நகரின் உயர்ந்த மேட்டில் நின்று கீழே நோக்கினால் ஏரிகளில் பெரிய படகுகள் மெல்ல ஒழுகிச் சென்றன. குறைந்த வானொளியில் நீர்ப்பரப்பு மங்கலாக மின்னிக்கொண்டிருந்தது. இந்நகரின் ஏரிகளையும் தீவுகளையும் கணக்கிட்டு எழுதவேண்டுமென்றால் பலகாலம் அங்கே வாழவேண்டும். சுந்தர ராமசாமி ஒருமுறை பேச்சில் நீர்நிலைகளே நிலத்தின் அழகு என்றது நினைவுக்கு வருகிறது. நீர்நிலைகளை நிலமகளின் அணிகலன்களாகவே பெரும்பாலான கவிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்டாக்ஹோம் என்பது நோபல் பரிசினால் நினைவுகூரப்படுவது. (ஸ்வீடன் என்பது நமக்கு போஃபர்ஸ் பீரங்கியால் நினைவுகூரப்படும் நாடு. ஆனால் போஃபர்ஸ் இன்றும் உலகின் தலைசிறந்த பீரங்கியாக கருதப்படுகிறது ) நோபல் அருங்காட்சியகம் சென்றோம். அங்கே வெவ்வேறு ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்களி படங்கள், விவரங்கள் உள்ளன. நோபல் பரிசு மெடல்களின் போலிவடிவங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அங்கே நான் கவனிக்க ஆரம்பித்தபின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் எவரெவர் என்று பார்த்தேன். நான் விரும்பும் படைப்பாளிகளின் முகங்கள் அளித்த பரவசம் அந்த அருங்காட்சியகத்தின் நல்ல அனுபவங்களில் ஒன்று. அது ஓர் உலக இலக்கிய நினைவுத்தொகுப்பு போலிருந்தது.
இர்விங் வாலஸ் எழுதிய The Prize நோபல் பரிசின் பின்னணி பற்றி எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல். இலக்கியவாதிகள் பலரும் அதை விரும்பி வாசித்திருப்பார்கள். நோபல் பரிசிலுள்ள ஊழல்கள், தேர்வு முறைகள், அதன் மாண்பு ஆகிய எல்லாமே அதில் பேசப்பட்டுள்ளன. அறிவியலுக்கான விருதுகளில் ஒரு புறவயத்தன்மை உண்டு. இலக்கியத்தில் புறவயத்தன்மை உருவாக நீண்டகாலமாகும்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளில் பிழைகள் என கருதப்படும் பல உண்டு. நான் பிரெஞ்சு நாவலாசிரியர் குளோட் ஸீமோன், பிரிட்டிஷ் நாவலாசிரியர் வில்லியம் கோல்டிங், அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசன் போன்றவர்களை வாசித்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.
ஓர் எழுத்தாளர் நோபல் பரிசு வரை கொண்டுசென்று சேர்க்கப்படுவதற்கு அமைப்புசார்ந்த பணி தேவை. அரசுகள் அல்லது கல்வியமைப்புகள் முன்னெடுக்கவேண்டும். சிறந்த மொழியாக்கங்கள், ஆய்வரங்குகள், விமர்சனக் கட்டுரைகள் அவருக்கு அமையவேண்டும். அதற்கு அப்பால் இலக்கியத் தகுதியும் ஓர் அளவுகோல். அப்பால்தான்.
இந்தியாவில் இருந்து எப்போதும் மகாஸ்வேதா தேவி அல்லது அருந்ததி ராய் போல முதிரா முற்போக்கு எழுத்துக்களை உருவாக்குபவர்களே நோபல் வரை கொண்டுசெல்லப் படுகிறார்கள். சரிதான், சல்மான் ருஷ்திக்கு அவர்கள் பலமடங்கு மேல் என ஆறுதல்கொள்ளவேண்டியதுதான். நம்மை அவமானப்படுத்தும்படி ஒருவர் நோபல் வாங்காமலிருப்பதே நல்லது – நோபல் நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் சரி.
ஸ்வீடனின் தேசியநூலகம் சென்றோம்.Stockholm Public Library எந்த வாசகனையும் பெருமிதம் கொள்ளச்செய்யும் ஓர் அற்புதம். கடலூர் சீனுவுக்கு ஒரு புகைப்படம் அனுப்பினேன். ‘ஐயய்யோ, சொற்கம் இப்டித்தான் சார் இருக்கும்’ என்று பரவசப்பட்டிருந்தார். போர்ஹெஸ் சொற்கம் என்பது ஒரு நூலகம் என்று சொல்லியிருக்கிறார்.
இந்நூலகம் 31 மார்ச் 1928ல் இளவரசர் யூஜினின் ( Prince Eugen) முன்னிலையில் திறக்கப்பட்டது . ஸ்வீடன் கட்டிடக்கலை நிபுணர் கன்னர் ஆஸ்பிளண்ட் (Gunnar Asplund) வடிவமைத்த இக்கட்டிடம் வட்டவடிவமானது. 7 அடுக்குகள் கொண்டது. ஒரே பார்வையில் ஏறத்தாழ இருபது லட்சம் நூல்களை பார்க்கலாம் என்பது இதன் சிறப்பு.
ஸ்வீடனின் மூளைக்குள் நாம் நுழைந்துவிட்டதுபோல உணர்வோம். பெரும்பாலும் ஸ்வீடிஷ் மொழி நூல்கள். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் ரோமன் லிபி என்பதனால் தலைப்புகளை படிக்கமுடியும், உள்ளடக்கமும் தோராயமாக புரியும். ஆங்கிலத்தில் கிடைக்கும் எல்லாமே ஸ்வீடிஷ் மொழியிலும் கிடைக்கின்றன. ஆங்கிலம் ஸ்வீடிஷ் நடுவே தானியங்கி மொழியாக்கமும் இன்று தொண்ணூற்றொன்பது சதவீதம் சரியாக அமைந்து விட்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆங்கில நூல்களும் உள்ளன.
நான் செல்மா லாகர் லெவ் (Selma Lagerlöf ) எழுதிய நூல்களின் அடுக்கை தேடிப்பிடித்து அதிலுள்ள படைப்புகளை பொதுவாகப் பார்த்தேன். ( செல்மா போன்ற ஒரு கதாபாத்திரத்தை இர்விங் வாலஸின் பிரைஸ் நாவலில் காணலாம். ஸ்வீடிஷ் எழுத்தாளர் ஆனதனாலேயே தகுதியில்லாமல் நோபல் வென்று, அந்தச் சங்கடத்தில் உழல்பவராகச் சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆனால் செல்மா ஒரு நல்ல எழுத்தாளர், எளிமையின் அழகு கொண்டது அவர் எழுத்து) க.நா.சு அவருடைய கெஸ்டா பெர்லிங் என்னும் நாவலை மதகுரு என்ற பேரில் மொழியாக்கம் செய்துள்ளார். அடிமைப்பெண் போன்ற வேறு கதைகளும் தமிழில் உள்ளன.
அடுத்து பார்லாகர் க்விஸ்ட் ( Pär Lagerkvist ) க.நா.சு அவருடைய பரபாஸ் என்னும் நாவலை அன்புவழி என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். தமிழிலக்கியத்தில் தீவிரச் செல்வாக்கு செலுத்திய நாவல் அது. ஸ்டிரின்ட்பெர்க் (August Strindberg) பற்றி க.நா.சு எழுத்து இதழிலேயே எழுதியிருக்கிறார். க.நா.சு தமிழுக்கு அளித்த கொடை என்ன என்பது அப்படி ஓர் அன்னிய மண்ணில் நின்றிருக்கையில்தான் தெரிகிறது. அங்கே ஒரு ஸ்வீடிஷ் இலக்கிய வாசகனிடம் பேச நமக்கு ஒரு பொதுத்தளம் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் குளிர்நாடு என்பதனாலேயே பேய்க்கதைகளும் திரில்லர்களும் அங்கே அதிகமாக வாசிக்கப்படுகிறன. லிண்ட்க்விஸ்ட் ( Lindqvist ) அதில் ஒரு மாஸ்டர். அவர்தான் ரேவன் பறவையை கண்டாலே அஞ்சும்படி என்னை ஆக்கியவர். ஆனால் என்னால் இன்று அவரை வாசிக்கமுடியுமா என்று தெரியவில்லை.
பிரமிப்பூட்டும் அனுபவம். நூல்கள் வழியாகவே நடந்துகொண்டிருத்தல். நூல்கள் வழியாக காலத்தை உணர்தல். நூறாண்டுகள் தொன்மையான நூல்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அவையெல்லாம்கூட மிக நன்றாக பேணப்பட்டிருந்தன. இந்த வட்டவடிவ நூலகத்தை இந்தியாவில் அமைக்கமுடியாது. இதன் வடிவக் குறைபாடென்பது தூசி வந்து படியும் என்பது. ஆனால் ஸ்வீடன் நூலகம் காற்று பதப்படுத்தப்பட்ட கூடம் என்பதனாலும், தொடர்ச்சியான பராமரிப்பாலும் மிகத்தூய்மையாக உள்ளது.
அண்மையில் திருவனந்தபுரம் அரசு மையநூலகம் சென்றிருந்தேன். எனக்கு மிகப்பிடித்தமான இடம் அது. தொன்மையான கட்டிடம். பல அடுக்குகளாக மலையாள, ஆங்கில நூல்கள். திருவனந்தபுரத்தில் ஒரு காலத்தில் மூன்று பெரும்நூலகங்கள் இருந்தன. அவற்றில் பிரிட்டிஷ் நூலகம், ருஷ்ய நூலகம் இரண்டுமே மூடப்பட்டு நூல்கள் திருவனந்தபுரம் மையநூலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை தனித்தனி பகுதிகளாக அமைத்துப் பராமரிக்கிறார்கள்.
திருவனந்தபுரம், பிரிட்டிஷ் நூலகப் பகுதிப் பொறுப்பாளர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் வாசகர். அப்பகுதியில் ஒரு நாளுக்கு ஒருவர் உள்ளே நுழைந்தால் அதிகம் என்றார். இவ்வளவுக்கும் நூல்கள் நிறைய வாசிக்கப்படும் நூலகங்களில் ஒன்று அது. முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக படிப்பவர்களே அங்கே வருகிறார்கள். அவர் என்னையும் சைதன்யாவையும் அந்நூலகத்தின் மேல் தட்டுக்கு சுழல்படிகள் வழியாக செல்ல அனுமதித்தார். மேலிருந்து பார்த்தபோது உறைந்து செயலற்ற மூளை ஒன்றை கண்டேன்.
ஸ்டாக்ஹோம் நூலகம் ஒரு கடிகாரத்தின் உட்பகுதி என்று தோன்றியது. அது பல பற்சக்கரங்களுடன் சுழன்றுகொண்டே இருந்தது. நூல்களை திரும்பக்கொண்டுவந்து அடுக்குவதற்கு தன்னார்வல ஊழியர்களும் மாணவ ஊழியர்களும் பலர் இருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றிக்கொண்டே இருந்தனர். தூசு துடைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. வாரநாள் பகல் என்றபோதிலும்கூட இருநூறுபேர் வரை அங்கே வாசித்தபடி, நூல்களை எடுத்தபடி இருந்தனர்.
மிக விரைவிலேயே இருட்டி விடுகிறது. மூன்று மணிக்கெல்லாம் மாலை. நான்குமணிக்கு அந்தி. ஐந்து மணிக்கு ஆழ்ந்த இருள். நான் எட்டு மணிக்கெல்லாம் படுக்க்கைக்குச் சென்றுவிடுவேன். காலையில் சாளரம் வழியாகப்பார்த்தால் ஏழுமணிக்கும் இருள் விலகியிருக்காது. இருள் இருந்தாலே தூங்கு என மூளைக்கு உள்ளம் ஆணையிடுகிறது. ஒன்பது மணிக்குத்தான் வெளிச்சம், அதுவும் இந்தியாவில் வரும் அதிகாலை ஒளி. அந்த ஒளியே பகல்.
ஒருநாளைக்கு சராசரியாக பன்னிரண்டு மணிநேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். பொதுவாக ஊட்டியிலும் நான் அப்படி துயில்வதுண்டு. குளிர், இருள் ஆகியவை காரணம். நாம் திறந்த உடலுடன், உடல்மேல் காற்றுபட தூங்கும்போது ஆழ்ந்த துயில் அமைவதில்லை. உடல்பரப்பு ஒரு கூர்புலன். அதில் படும் எந்த ஒன்றும் மூளைக்குச் செய்தியாகிறது. அது நம் துயிலை கலைத்து அரைத்துயிலை அளிக்கிறது. குளிரில், மெத்தையையே போர்த்திக்கொண்டு, நம் உடல்வெம்மையில் நாமே தூங்கும்போது கருப்பைக்குள் சுருண்டமைந்த குழந்தை ஆகிறோம். ஆழ்துயில் அமைகிறது
.நீண்டநேரத் துயில் ஆதலால் கனவுகள். ஆனால் புற ஓசைகளால் உருவாக்கப்படும் கனவுகள் அல்ல அவை. நம் ஆழத்தில் இருந்து எழுபவை. ஆகவே இனிய பழைய நினைவுகள் வந்துகொண்டிருந்தன. என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன். மறைந்துபோன பள்ளிநாட்கள். ரப்பரின் வருகைக்கு பின் இன்று இல்லாமலேயே ஆகிவிட்ட குமரிமாவட்டத்தின் பழைய நிலங்கள். நான் சென்ற இமையமலைப்பகுதிகள். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்த ஒரு வாழ்க்கைப்பரப்பு.
அது எங்குள்ளது? அது அக்கனவில் அப்போது ஒன்றாகக் கலக்கப்பட்டது. கனவுகளை சமைப்பது நம் அறிவோ உணர்வோ அல்ல. நம்மைக் கடந்த ஒன்று. நம்முள் நாமறியாத மேதமையாகக் குடிகொள்வது. அது வரை ஒரு சாத்தியக்கூறு என்னும் வடிவில் இப்பிரபஞ்சத்தில் எஞ்சியிருப்பது. சூனியம் என்பதை வேதாந்தம் சாத்தியக்கூறுகளின் வெளி என வரையறை செய்கிறது. அது பிரபஞ்சத்தைவிட பிரம்மாண்டமானது. பிரபஞ்சங்களை தன்னுள் அடக்கியது.
(மேலும்)எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன் தமிழில் ஒரு சொல்கூட பேசமுடியாதவர். ஆனால் நவீனத் தமிழிலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக திராவிட இயக்கங்களுடன் அணுக்கமாக இருந்தார். எம்.என்.ராய் மார்க்ஸிய கட்சிக்கு வெளியே இருந்த சோஷலிச, திராவிட இயக்கங்களை இணைத்து உருவாக்க முயன்ற ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தார். தமிழில் சுந்தர ராமசாமியை கோவிந்தனின் நேரடியான சீடர் என்றே சொல்லமுடியும். கன்னடத்தில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி கோவிந்தனுக்கு அணுக்கமானவர்.
நான் எம்.கோவிந்தனின் அணுக்க மாணவர்களான எம்.கங்காதரன், ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன் ஆகியோரின் மாணவன். எம்.கோவிந்தனை நாலைந்துமுறை சந்தித்திருக்கிறேன். அவரைப்பற்றி ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்
எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன் – தமிழ் விக்கி
சாருநிவேதிதா: எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி
சாருநிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது பால்யத்தை வேறு வேறு விதமாக எழுதிப் பார்ப்பதில் இச்சை கொள்கிறான். ஆனால் ஒரு transgressive எழுத்தாளன் தனது பால்யத்தை அதன் மரபார்ந்த முறையில் எழுதமுடியாது. ஏனென்றால் பால்யத்தின் மீதான ரொமாண்டிஸத்தை, தான் இதுகாறும் வந்தடைந்திருக்கும் வாழ்வின் வெளிச்சத்தில் வைத்து அவன் பார்க்கவேண்டியிருக்கிறது. மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது. கண்களை கூசச் செய்யும் அதன் வெண்மையில் தெரிவதெல்லாம் அப்பட்டமாக இருக்கின்றன. முழு நிர்வாணமாக அவை ஒளிர்கின்றன. அதை எதிர்கொள்வது வாசிப்பவனுக்கும் அத்தனை எளிதானது அல்ல.
ஏனெனில், அவனது கையில் இருக்கும் பிரதி, அந்த வாசிப்பின் வழியாக படிப்பவனின் அந்தரங்கத்தை நோக்கி, அதன் தத்தளிப்புகளை நோக்கி, அங்கிருந்து குமிழியிட்டுக்கொண்டே இருக்கும் வன்முறையின் ஊற்றை நோக்கி அவனது பிரக்ஞையைத் திருப்புகிறது. அப்படி ஒரு வாசிப்புச் செயல்பாட்டை அது கட்டாயமாக்குகிறது. இந்த அழுத்தம்தான் ஒரு transgressive எழுத்தாளன் செய்கிற கலகம். அதுநாள் வரை வாசிப்பு என்று இருந்ததை, பிரதியின் மீதான புனிதத்தை, அதன் மீது ஏடாகப் படிந்திருந்த கலாச்சார வரையறைகளை, அதன் கட்டுப்பாடுகளை அவன் கலைத்துப் போட்டுவிடுகிறான். கலகம் எனும் சொல்கூட எதார்த்தத்தில் தனது அர்த்தத்தை இங்கு மறுவரையறை செய்துகொள்கிறது.
எந்த இலக்கியப் பிரதியும் தன்னளவில் ஒரு கலக அடிப்படையைக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை ஒரு ஒழுங்கில், நேர்க்கோட்டில் செய்ய முற்படுகிறபோது அது எதைக் கலைக்க முற்படுகிறதோ அதற்கு இணையாக இன்னொரு வன்முறை அலகை மறு உற்பத்தி செய்துவிடுகிறது. இந்த மறு உற்பத்தியை பிரஞ்ஞைப் பூர்வமாக இல்லாதாக்க முயலும் ஒரு எழுத்தாளன், அதுநாள் வரை எழுத்துச் செயல்பாடு வரித்துக்கொண்டிருந்த சொகுசுகளை இழக்க வேண்டியிருக்கிறது. (எந்த ஒன்றையும் ஒரு வித ரொமாண்டிஸத்துடன் அணுகுகிற, அதன் மீது மீளா காமத்தை உருவாக்கி நிறுத்துகிற, இதற்கு முன்பு அது நன்றாக இருந்தது என்று கற்பனையில் திளைக்க வைக்கிற, மாய ஊற்று ஒன்றை உருவகித்து அதன் வழியாக பெருகும் கானல் இன்பத்தைக் கனவு காணச்செய்கிற, இவற்றின் வழியாக வாசகனை பிரதிக்குள் எளிதாக மூழ்கடிக்கமுடிகிற…) இந்த சொகுசானது பிரதி வழங்கும் இன்பத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. அதனால் எழுதுபவன் அந்த சொகுசைக் கைவிடுகிறபோது அது படிப்பவனிடமும் பிரதியை நோக்கிய மாறுபட்ட எதிர்கொள்ளலைக் கோருகிறது.
ஆக, வாசகன் தனது சாய்விருக்கையிலிருந்து எழ வேண்டியிருக்கிறது. அவற்றின் ஆச்சர்யங்கள் அல்லாது அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவரை நடந்தவற்றிலிருந்து விலகி நடக்கவேண்டியிருக்கிறது. இறுதியாக புதிய சுவை ஒன்றிற்குள் அவன் நுழைய வேண்டியிருக்கிறது. இந்த நுழைதல் என்பது இங்கு செங்குத்தாக குதிப்பதாக இருக்கிறது. ஆமாம். ஒரு non lenear – trangressive பிரதியில் pleasure of text செயல்படும் தன்மையே வேறு. அது படிப்பவனின் ஆன்மாவை ரத்தம் கசியச் செய்கிறது. அது பெருகச் செய்யும் மானுட அன்பின் சாரமே வேறு. அது அப்பட்டமானது. அங்கு முகத்தில் மோதும் அதன் கவுச்சி வாடை பிரதியால் உருவாக்கப்படுவது அல்ல. மாறாக அங்கு இருக்கும் ஒன்றை, அதுவரை அவ்வாறு காணப்படாத ஒன்றை காணச் செய்வதன் மூலம் கலாபூர்வமாக அது நிகழ்ந்தேறுகிறது. எந்த பூடகமும், அழகியல் பூச்சுமில்லாமல் கலை தன்னை நிகழ்த்திக்கொள்ள அனுமதித்து ஒரு transgressive எழுத்தாளன் தன்னைத் திறந்துவைக்கிறான். இந்த செயல் படைப்பாளி தன்னை வைத்து ஆடும் வெறும் பகடையாட்டம் மாத்திரம் அல்ல. தன்னை இழப்பதன் வழியாக, பிரபஞ்ச உருமாற்றத்தின் கூறாக தன்னை நிலைக்கச் செய்யும் தற்கொலை முயற்சி. இறுகிப் போயிருக்கும் முடிச்சுகளை நெகிழ்த்தி காற்றில் பரவவிடும் செயல். நமது சூழலில் சாருநிவேதிதா அதைச் செய்துகொண்டே இருக்கிறார் என்பதுதான் ஒரு பகுதி வாசகர்களால் அவர் கொண்டாடப்படுவதற்கான அடிப்படை.
தமிழிலக்கியப் பரப்பில் சாருநிவேதிதாவின் இடம் அதுதான். இலக்கியத்தை விளையாட்டைப்போல உன்மத்தமாக்கியது. இங்கு விளையாட்டு என்பதை அசட்டையான சோம்பேறிகளின் செயலாகப் புரிந்துகொள்ளலாகாது. நம்மையே பணயம் வைத்து ஆடுவது என்கிற தீவிரத்துடன் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுதுபவனும் படிப்பவனும் ஒன்றாகக் கலக்கும் புள்ளிகளை உருவாக்குவது non linear எழுத்துமுறையில் ஒரு சவால். ஒரு தேர்ந்த பியானோ கலைஞனின் விரல்களைப் போல, நெஞ்சைத் திறந்து இதயத்தின் ஒரு நரம்பை வெட்டி சரி செய்யும் மருத்துவனைப் போன அதுவொரு நேர்த்தியைக் கோருகிறது. ஆனால் அந்த நேர்த்தி அழுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலம், கட்டாயத்தின் மூலம் கொணரப்படுவதல்ல. கொண்டாட்டத்தின் வழியே அத்தகைய காரியத்தை செய்யமுயல்வது. சாருவின் எழுத்து செய்வது அதைத்தான். நாம் சுகிக்கும் வெளியைப் போல மறுக்கும் வெளியையும் அது திறந்துவைத்துவிட்டே போகிறது. அதனாலேயே எந்த வரையறைக்குள்ளும் அடைபடாமல், திட்டமான இருப்பாகத் தகையாமல் பிரதியின் மீதான உரையாடல்கள் நம்மீது மிதந்த வண்ணம் அலைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எக்காலத்திலும் அவர் குறித்த, அவரது பிரதிகள் குறித்த உரையாடல்கள் நம் சூழலில் இருந்துகொண்டே இருக்கும்.
அவர் கைகொள்ளும் இந்த இலக்கிய வழிமுறை ‘எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’ என்கிற அவரது முதல் நாவலிலேயே தொடங்கிவிடுகிறது. 1989-இல் முதல் பதிப்பைக் கண்டிருக்கிறது அந்த நாவல். இன்றிலிருந்து சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். சாரு தனது முப்பதுகளின் இறுதியில் இருக்கும்போது எழுதப்பட்ட நாவல். Non linear குறித்தும் transgressive தன்மை குறித்தும் நான் மேலே கூறியிருப்பவை அந்த நாவலில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை சில உதாரணங்களின் வழியாகப் பார்க்கலாம். அது வெறும் லௌகீக வாழ்வின் சிக்கல்கள் மட்டுமாக இல்லை, நாம் கலாச்சாரம் என்று குறிப்பிடப்படும் ஒன்றின் மீதான அப்பட்டமான எதிர்வினையாக அமைகிறது. மட்டுமல்லாது அதன் உள்ளுறையாக இருக்கும் வாழ்வின் அபத்தத்தை வெளிக்கொணர்கிறது.
இந்த நாவலை மீண்டும் படித்தபோது நான் அசோகமித்திரனை, ப. சிங்காரத்தை, தி. ஜானகிராமனை அடிக்கடி நினைத்துக்கொண்டேன். இதன் பொருள், நேரடியான அர்த்தத்தில் அவர்களை இவருடன் பொருத்திப் பார்க்கிறேன் என்பதல்ல. சாருநிவேதிதா ‘அபத்தம்’ என்பதை இலக்கியத்தில் எவ்வாறு கையாள்கிறார் என்பதைப் புரிந்து கொள்கையில் நான் கொள்ளும் பிரமிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். மேலும் ‘கையறு நிலை’ எனும் சூழல் நான் மேலே சொன்ன மூன்று பேர்களது படைப்பிலும் எவ்வாறு வெளிப்படுகிறது, அதைச் சாருநிவேதிதா எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வது ஒரு தலைமுறையின் வாழ்வியல் இடைவெளியைப் புரிந்துகொள்வது மாத்திரம் அல்லாது ஒரு பின் நவீனத்துவ படைப்பாளி ‘சிதறுண்ட தனி மனிதர்களின் அகவெளியை’ எவ்வாறு படைப்பாக்குகிறான் என்கிற அளவிலும் அர்த்தப்பூர்வமானது.
நாவலின் ஒரு இடத்தில், இரண்டு தங்கைகளைக் கொண்ட சூர்யா குமாஸ்தா வேலை கிடைத்து டெல்லிக்குப் போகிறான். வாங்கும் சொற்ப சம்பளத்தில் புலன்களை அடக்கிக்கொண்டு அதில் மிச்சம் பிடித்து வீட்டிற்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறான். தங்கைக்கு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு தங்கத்தில் காப்பு செய்து போடவேண்டும், அதற்கு பணம் வேண்டும், அனுப்பிவைக்க முடியுமா, என்று அவனது அப்பா கடிதம் எழுகிறார். இந்த இடத்தில், இதை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆகியோர் சேர்ந்து கொஞ்சம் படைப்பாளி அவதாரம் எடுக்கலாம். அதோடு, இதை நான் மேலே சொல்லியிருக்கும் மூன்று எழுத்தாளர்களும் எவ்வாறு தங்களது படைப்பில் இதை எதிர்கொண்டிருப்பார்கள் என்றும் கற்பனை செய்யலாம். மேலும் நமது தமிழ் இலக்கிய உலகம் இந்த ‘கதைச் சூழலை’ எவ்வாறு கையாண்டு வருகிறது என்றும் யோசிக்கலாம். இதை ஒரு விளையாட்டு போல செய்துபார்க்கலாம் என்றே நான் பரிந்துரைக்கிறேன் சரியா? இதை நாவலில் சாருநிவேதிதா எப்படிக் கையாள்கிறார் என்று பாருங்கள்.
சூர்யா சொல்கிறான்; “இங்கு காலமெல்லாம் கையடித்துச் சாவதே ஆண்களுக்கு வாய்த்தது. இதில் தங்கத்தில் காப்பு, என்று நினைத்துக்கொண்டு அப்பாவுக்கு பதில் எழுதாமல் விட்டுவிட்டேன்.” இதுதான் ஒரு சிதறுண்ட மனதின் பிரதிபலிப்பு. சரி, இங்கு சிதறுதல் என்பது என்ன? ஏதோ ஒன்றை உதறுவது. தனது தோளில் இருக்கும் ஒன்றை விசிறியடிப்பது. அந்த ஏதோ ஒன்று எது என்று தொடர்ந்து போனால், நமது கலாச்சாரம் என்ற பெயரில் நாம் எவ்வாறு ஒரு வன்முறை வளையத்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும். “தங்கைக்கு இதைச் செய்யமுடியவில்லையே,” என்று பச்சாதாபத்தில் உருகுவது அல்ல இது. இதுநாள் வரை புனிதக்கடமையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றை எட்டி உதைப்பதன் வழியாக அதுவொரு விடுதலையைக் கோருகிறது. அதன் வழியாக மற்றொரு தரப்பின் விடுதலையை சாத்தியப்படுத்துகிறது. ஏனெனில் நாம் பொறுப்பு என்று சொல்லும் ஒன்றின் பின்னால், ஆதிக்கம் எனும் நிபந்தனை இருக்கிறது. எனது தங்கையின், அக்காவின் கல்யாணத்துக்காக நான் உழைக்கிறேன் என்கிற தியாகத்தின் பின்னால், நான் கைகாட்டும் ஒருவனைத்தான் அவள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் எனும் நிபந்தனை இருக்கிறது.
எந்த கலாசாரத்தின் பொருட்டு இந்த நுகத்தடியை ஒரு ஆண் சுமக்க நேர்கிறதோ அதே நுகத்தடிதான் காலம் காலமாக பெண்ணை அதிலிருந்து விடுதலை செய்துவிடாமல் இருத்தி வைக்கிறது. ஆக, இங்கு பண்பாடு என்பதும் கலாச்சாரம் என்பது அதன் நேரடியான அர்த்தத்தில் எதற்குப் பங்களிக்கிறது? அடிமைத்தனத்துக்கா அல்லது மானுட விடுதலைக்கா? இங்கு எழுதப்பட வேண்டிய, எழுதப்பட்ட பிரதிகளின் முன் உள்ள சவால்கள் என்ன? இவையெல்லாம் இந்த நாவலின் வழியாக நான் உருவாக்கி விடைதேட முயன்றவை. ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘ஆண்பால் பெண்பால் அன்பால்’ தொடரின் ஒரு கட்டுரைக்கான உந்துதலை நான் இதிலிருந்து பெற்றேன். இதுதான் ஒரு எழுத்தாளன் சமூகத்துக்கு ஆற்றும் பங்கு என நான் கருதுகிறேன்.
மேலும், அந்த நாவலில் முதல் முறை ஒரு காதலனுடன் ஓடிப்போய் திரும்ப அழைத்து வரப்படுகிறாள் சூர்யாவின் இரண்டாவது தங்கை. சூர்யாவிடம், “அவளுக்கு எப்போது திருமணம் செய்துவைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் தெருவினர். அந்த அளவுக்கு விடலைத்தனமான காதல் பித்தை வெளிப்படுத்துபவளாக அவள் இருக்கிறாள். (தமிழில் எழுதப்பட்ட பெண் பாத்திரங்களில் குறிப்பிடத்தகுந்தவள். எந்த முக்கியத்துவமும் இல்லாதவள். அதனாலேயே அவள் முக்கியமானவள்!) அவளைக் கொண்டுபோய் இன்னொரு உறவினரின் வீட்டில் தங்கவைக்கிறார்கள். அவள் அந்த வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்தும் ஓடிப்போகிறாள். உண்மையில் பணம் இல்லாததால் மட்டுமே அவளுக்கு சரியான காலத்தில் திருமணம் செய்து வைக்கமுடியவில்லை அவளது தகப்பனால். எந்த தகப்பனால்? முதல் மகளின் குழந்தைக்கு தங்கத்தில் காப்பு போடமுடியாமல் தவிக்கும் அந்தத் தகப்பனால். இதுதான் அப்பட்டமான இந்திய வாழ்வியலின் அபத்தம். இதே போன்ற அபத்தங்களை தனது ஒவ்வொரு பிரதியிலும் சொல்ல முயலும் எழுத்தாளன், மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், தூய்மைவாதத்தின் பெயரால் திரளும் வன்முறையின் புழுதியை அதே மூர்க்கத்துடன் எதிர்கொள்ள முயலும் ஒரு trangressive எழுத்தாளன் எங்ஙனம் தளுக்காக எழுத முடியும்? எப்படி அவனால் ஒரு பகட்டான மொழியைக் கையாள முடியும்? எதற்காக அவன் போலியாக இருக்கவேண்டும்? அவனுக்கு என்ன சொகுசு இருக்கிறது?
இந்த அபத்தத்தை அவன் அப்பட்டமாக எழுதுகிறான். இதுவரை நிறுவப்பட்ட பிரதிகளை படித்துப் பழகியவர்களுக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, மர்ம உறுப்பு என்கிற வார்த்தைகள் தேவையாக இருக்கின்றன. ஆனால் அவன் புண்டை, சுன்னி என்றே எழுத விரும்புகிறான். ஏனெனில் தனக்கான பாலுறுப்புகளைக் கண்டடைவதே இந்த தேசத்தின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதைக் கையாள்வதும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் இங்கு மதம் என்று அறியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களுக்குள்ளான சமாதான உரையாடல்களை ஏற்றெடுப்பதுதான் இங்கு அரசுகளின் முக்கியப் பொறுப்பாக இருக்கிறது. எவ்வளவு மறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு லாவகமாக அதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துபவையே அறம் போற்றும் பிரதிகளாக நிறுவப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக ஒரு அதிகாரப் படிநிலையையும் அவை சாத்தியப்படுத்தியிருக்கின்றன. ஆனால், இவற்றை அப்பட்டமான மொழியில் எழுத முற்படுகிறபோது, இப்படியான சூழல் ஏன் இங்கு இருக்கிறது என்பதை பரிசீலனை செய்யாமல் எழுத்தாளனை நிந்திப்பது சமூகத்தின் எதிர்வினையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இங்கு இருக்கும் படைப்பாளிகளும் இந்த மவுடீக சமூகத்தை விட பல படிகள் கீழிறங்கிப்போகிறார்கள். தமது அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை புனித முகமூடியுடன் பொருத்திக்கொண்டு இத்தகைய எழுத்தை விமர்சிக்கிறார்கள். அப்படியான நேரங்களில் மிகுந்த அன்புடன் நான் சாருநிவேதிதாவை தழுவிக்கொள்ளவே விழைகிறேன்.
மேலும், ஒரு கருத்துநிலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டால் அதிலிருந்து இம்மியும் பிசகாமல் மரிக்கும் வரை அதிலேயே ஊன்றி நிற்கவேண்டும் என்கிற பதட்டம் நமது எழுத்தாளர்களை அழுத்துகிறது. இது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் எழுத்தாளன் அதன் கூறுகளால் பாதிப்புகளை அடைபவனாக இருக்கிறான். இங்கு பாதிப்பு என்பதை நான் லௌகீகத் தளத்தில் வைத்து சொல்லவில்லை. ‘எழுத்தாளனின் சுய இருப்பு’ என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஆக, குறிப்பிட்ட ஒரு கருத்துநிலையுடன் தன்னை பிணைத்துக்கொண்டுவிடுகிற ஒரு எழுத்தாளன் எங்ஙனம் பேருண்மையை நோக்கி நகர்பவனாக, பிரபஞ்சத்தின் ஆன்மாவை பிரதிநிதுத்துவப்படுத்துபவனாக இருக்க முடியும். அது ஒரு தளையாக அவனது சிறகுகளை அழுத்தாதா என்கிற கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருக்கிறது.
தான் எழுதிய ஒன்றை தனது காலத்தில் மறுத்து முன்னேறாத, எதையும் பிரகடனமாக அறிவிக்கும் திராணியற்ற ஒருவன் இதுவரை நிறுவப்பட்ட ஒன்றின் மீது கேள்வி எழுப்புபவனாக எவ்வாறு இருக்கமுடியும்? எல்லைகளற்ற தேடல்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும் ஒருவன் ஏதாவது ஒன்றுக்கு எங்ஙனம் தன்னை ஒப்புக்கொடுத்துவிட இயலும்? எனது நாடு, எனது இசை, எனது மொழி, எனது கலாச்சாரம், எனது தனித்துவம் என்று பேசப்படுவதன் அபத்தத்தை தூக்கிச் சுமக்கும் ஒருவன் அவன் எழுத்தில் மின்னிக்கொண்டிருக்கும் வன்முறையின் துகள்களை எங்ஙனம் அப்புறப்படுத்த இயலும்? இந்த கேள்விகளுக்கு பதில்களைத் தேடும்போதுதான் சாருநிவேதிதாவின் அபுனைவு உலகத்திற்குள் நாம் பிரவேசிக்க முடியும். அதன் பிரம்மாண்டங்களை ரசிக்க முடியும்.
தனிமனித சுதந்திரத்தை முன் நிபந்தனையாகக் கொண்ட, மானுட விடுதலையை நோக்கி அடியெடுத்து வைக்கிற எத்தகைய குரலையும் தனதாக வரித்துக்கொள்வதில் அவர் காட்டும் மூர்க்கமே அவரது பொதுவான அரசியல் பார்வையாகத் திரள்கிறது. அதுதான் அவரது கலை ரசனையாக விரிவடைகிறது. அவரால் கொண்டாடப்படுகிற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் எல்லாரிடத்திலும் நான் காணும் பொதுப்பண்பு அவர்கள் இந்த பிரபஞ்சத்தை நோக்கி வெறியுடன் கூச்சலிடுகிறார்கள். இரண்டு கைகளையும் அகலவிரித்துக்கொண்டு ஆடுகிறார்கள். அவர்கள் சுழலும் வேகத்தில் தங்களது தளைகளை அறுத்தெறிகிறார்கள். அந்த குரல் எல்லா குரல்களையும் போல மென்மையானதாக இல்லை. அது குழைவதில்லை. ஆனால் கெஞ்சுகிறது. அதே சமயம் அதில் ஒரு மிடுக்கு இருக்கிறது. அந்த கெஞ்சலின் தொனியில் பணிவில்லை. அது எத்தகைய அடிமைத்தனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அது விடுதலையைக் கோருகிறது. அதை மட்டுமே பிரகடனப்படுத்துகிறது
அந்த கேவலின் தொனி மூலம் அது சொல்வது, “நான் இறைஞ்சுவது எந்த விடுதலைக்காகவும் அல்ல; நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பதை உரத்துச்சொல்வது மட்டுமே,” என்பதுதான். அதை உணர்ந்துகொள்ளும்போது நாம் உணர்வது கலையின் ஸ்தூல இருப்பை அல்ல, இறகைப் போல மிருதுவாகும் நமது இருப்பையே. இந்த எதார்த்தத்தையே அவர் தனது எல்லா படைப்புகளின் வழியாக நம்முன் வைக்கிறார். அவரது கலையின் ஆன்மீக தரிசனம் இந்த புள்ளியில் இருந்தே துவங்குகிறது. புனைவில் மட்டுமே சாத்தியமாகும் ஒன்றை அபுனைவிலும் சாத்தியப்படுத்துவதில் சாருநிவேதிதா நிகரற்றவர் என்றே நான் நினைக்கிறேன். எந்திரன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம், கலை குறித்த அவரது பிரகடனம். அவரைப்பற்றி நான் மேலே வந்தடைந்திருக்கும் கருத்து நிலைகள் துலக்கமடைய அந்தக் கட்டுரைக்கு முக்கியமான பங்கிருக்கிறது. மேலும் மனித வாழ்வு குறித்த அவரது புறப்பார்வையை நாம் அறிந்துகொள்ள ‘அங்காடித் தெரு’ திரைப்படத்திற்கு அவர் எழுதிய விமர்சனத்தைப் படித்தால் மட்டும் போதும். கலையின் வெளிச்சம் என்பது எங்ஙனம் வாழ்வின் வெளிச்சமாக மாறுகிறது என்பதை எளிய வார்த்தைகளில் சொல்லிச் செல்லும் கட்டுரை அது.
இந்த இடத்தில் ‘எளிய வார்த்தைகள்’ என்கிற பதத்தை பயன்படுத்துகிறபோது சாருநிவேதிதா தமிழ் உரைநடைக்கு செய்துகொண்டிருக்கும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழை அதன் அழகு மிளிர மிளிர நவீன இலக்கியத்துக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகளில் அவர் முக்கியமான ஆளுமை. ஒரு வாக்கியத்தை அமைப்பதில் கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்து புதிதாக எழுத வருபவன் கற்றுக்கொள்ள அவரிடம் அவ்வளவு உண்டு. நான் பயன்படுத்தும் மொழியின் நேரடித்தன்மைக்கு சாருவின் மொழி ஒரு காரணம். தொடர்ந்து சாருநிவேதிதாவை வாசிப்பவனாக அவரது ஆதிக்கத்தை அனுமதிக்கும்போது அது நிகழ்த்தும் ரசவாசம் ஆச்சர்யமானது. தமிழின் ஒரு வாசகனோ, எழுத்தாளனோ எதன் பொருட்டும் சாருநிவேதிதாவின் வின் மொழியை கவனிக்காமல் கடக்கலாகாது.
அவருடனான தனிப்பட்ட உரையாடல்களிலும் கூட கற்றுக்கொள்ள சிலாகிக்க, நிறைய விஷயங்கள் உண்டுதான். முக்கியமாக அவரது பகடி. கொஞ்சம்கூட சிரிக்காமல் அதைச் சொல்லும் பாங்கு அட்டகாசம். அவரது நாவலில் சில ஃபிரஞ்ச் வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதற்காக, “நீ என் தாய்மொழியான தமிழை அவமதித்துவிட்டாய்,” என்று கூறி ஒரு எழுத்தாளர் அவரது கன்னத்தில் அறைந்ததைக்கூட யாருக்கோ நடந்தது போல மிக எளிமையான குரலில் எந்த கோபமும் இல்லாமல் அவரால் சொல்லமுடியும். “அவரா உங்களை அறைந்தார், அவர் ரொம்ப சாதுவாச்சே!” என்று நாங்கள் அதிர்ச்சியடைந்த போது, “ஏன் சாது அறையமாட்டானா என்ன? நான்கூட சாதுதான்,” என்றார். சாருநிவேதிதா மற்றும் எனது நண்பர்கள் இருவருடன் மகாபலிபுரத்தை ஒட்டிய ஒரு தங்கும் விடுதிக்குப் போயிருந்தோம். எந்தத் திட்டங்களும் இல்லாமல் விட்டேத்தியாக இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம் என்பதுதான் நோக்கம். அங்கிருந்த நீச்சல் குளத்தையொட்டிய திண்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாதியில், எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லாத இன்னொரு வாசக நண்பரும் வந்து இணைந்துகொண்டார்.
நான் சாருவிடம் ‘ஸீரோ டிகிரி’ எனக்கு ஏன் அத்தனை பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த நண்பர் அப்போது எழுந்து நின்று, “யோவ், நீ காமரூபக் கதைகள் படிச்சிருக்கியா?” என்று கேட்டார். நான் அதுவரை அதைப் படித்திருக்கவில்லை. “இல்லை, இன்னும் படிக்கவில்லை,” என்று சொன்னேன். “அதைப் படிச்சிட்டு வந்து அப்புறமா பேசுய்யா,” என்றார். சாரு உடனே, “நீ உக்காரு தங்கம். அதுக்கு ஏன் கோவப்படுற?” என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னுடனான உரையாடலைத் தொடர்ந்தார். நாம் மீண்டும் ஸீரோ டிகிரி பற்றி அவரிடம் சொல்லத்தொடங்கினேன். சாருநிவேதிதா நிறையவும் நெகிழ்ந்துபோயிருந்தார். “இனி என்னுடைய எழுத்துக்களை யாரும் சரியாகப் படிப்பதில்லை என்று புலம்பமாட்டேன்,” என்று சொல்லியபடி எனது கன்னத்தில் முத்தமிட்டார்.
கணேசகுமாரனின் ‘மிஷன் காம்பவுண்ட்’ நூல் வெளியீட்டு விழாவில் சாருநிவேதிதாதான் நூலை வெளியிட்டுப் பேசினார். நானும் போயிருந்தேன். கவிஞர் ராஜசுந்தரராஜனைப் பார்த்து பேசவேண்டும் என்று எனக்கும் சரவணனுக்கும் திட்டமிருந்தது. விழா முடியும் வரைக் காத்திருந்து அவரிடம், “அண்ணே, கொஞ்ச நேரம் எங்கயாவது உக்காந்து பேசுவோமா?” என்று கேட்டோம். “போகலாமே, எங்க போகலாம்?” என்றார். தமிழ் இலக்கியவாதிகளுக்கே உரித்தான முறையில் பிரபா ஒயின்ஸுக்கு போய் குடித்துக்கொண்டே பேசத்தொடங்கினோம். அப்போது கவிஞர் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது. “சாரு பேசியதை ஊன்றி கவனித்தீர்களா? புதிதாக எழுத வருபவர்களுக்கு அதில் எவ்வளவு செய்தி இருந்தது பார்த்தீர்களா?”
ஆமாம், என்று நானும் சரவணனும் தலையாட்டினோம்!
விஷ்ணுபுரம் எஃபக்ட்- கடிதம்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களின் முந்தைய கட்டுரைகளில் “குற்றாலம் எபெக்ட்” – (மலையாள கவிஞர்கள் “குற்றாலம் கவிதை பட்டறையில்” பங்கேற்றத்தினால் மலையாள கவிதைகளில் தமிழ் கவிதைகளின் தாக்கம்) பற்றி சொல்லி இருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் விருது விழாக்களில் ஒவ்வொரு வருடமும் வேற்று மொழியை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் (வடகிழக்கு, கர்நாடகா, ஆந்திரா). விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகு அவர்களிடம் மாற்றம் உண்டா? அவர்களின் படைப்புகளில் “விஷ்ணுபுரம் எபெக்ட்” உண்டா?
உங்களின் கருத்தை அறிந்து கொள்ள ஆர்வம்.
நன்றி.
இப்படிக்கு,
சா.ராஜா
***
அன்புள்ள சா.ராஜா
குற்றாலம் எஃபக்ட் என்பது புனைவில் நிகழ்ந்த ஒரு செல்வாக்கு. விஷ்ணுபுரம் விருது ஓரு நிகழ்ச்சியமைப்பு. இதன் முதன்மைச் செல்வாக்கு தமிழில்தான்.
முன்பெல்லாம் விருதுவிழாக்களில் விருதுபெறுபவர் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டு விஐபிகள் முன்னால் அமர்வார்கள். விருது பெறுபவர்களை வரிசையாக மேடையேறச் செய்வதுண்டு. விருதுபெறுபவர் கையில் துண்டைக் கொடுத்து விருது வழங்குபவரின் தோளில் போட்டு கௌரவிக்கும் விருதுகளும் இங்கே இருந்தன. இன்று அது மாறியுள்ளது. விருது வழங்குதல் ஒரு படைப்பாளிக்கான கௌரவமாக எப்படி நடைபெறவேண்டும் என்பதை விஷ்ணுபுரம் விருது தமிழ்ச்சூழலுக்குக் காட்டியுள்ளது.
இவ்விருது விழாவுக்கு வந்துசென்றவர்கள் இதைப்பற்றி வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஜனிஸ் பரியத், முதல் வீரபத்ருடு வரை. அண்மையில்கூட இவ்விருது நிகழும் விதம் பற்றி மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கிணையான வாசகர் அமைப்புகளை உருவாக்க தங்கள் மொழிகளில் முயல்கிறார்கள் என பலர் எழுதியிருக்கிறார்கள். நிகழலாம்.
ஜெ
துப்பறிதல், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள் கதைகளை இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஔசேப்பச்சன் கதாபாத்திரம் அதற்குப்பிறகு மற்ற கதைகளில் வரவில்லை என்பது ஓர் இழப்புதான். நீங்கள் அதை தொடர்ச்சியாக எழுதவேண்டுமென விரும்புகிறேன்.
அந்தக்கதைகள் எல்லாமே துப்பறியும் கதை பாணியில் அமைந்தவை. ஆனால் எல்லா கதைகளுமே மனித மனதையும் வரலாற்றையும்தான் ஆழமாக ஆராய்கின்றன. எல்லாமே குற்றம் என்பதன் மனநிலைக்குள்ளும் வரலாற்றுக்குள்ளும் செல்கின்றன.
ஆனால் ஔசேப்பச்சன் அதைப் பற்றி அக்கறையே படாதவராக இருக்கிறார். அவர் போகிறபோக்கில் நையாண்டியும் நக்கலுமாக அதைச் சொல்கிறார். அந்த தீவிரமான கதையே ஒரு குடி அரட்டையில் சொல்லப்படுகிறது. இந்த விசித்திரமான கலவைதான் இந்தக்கதைகளின் அழகு என படுகிறது.
அன்புடன்
சந்திரகுமார்
***
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள் துப்பறியும் கதைகள் மிக நன்றாக இருந்தன. துப்பறிதலை விரிவாக, பல படிகளாகச் சொல்கின்றன. கூடவே துப்பறிவதிலுள்ள தியரியையும் சொல்கின்றன. சுவரசியமான கதைகள்.
பாண்டியராஜ்
December 2, 2022
பனிநிலங்களில் -3
ரவியின் விடுதிக்கு ஸ்வீடனின் தமிழ் வாசகர்கள் என்னைச் சந்திக்கும்பொருட்டு வந்திருந்தார்கள். ஒன்றாக உணவருந்தினோம். புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்களுடன் பொதுவான உரையாடலே அங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கியது.
அமெரிக்காவுடன் ஒப்பிட உடனடியாக இரண்டு வேறுபாடுகளைக் கண்டேன். ஒன்று, இங்குள்ளவர்கள் இந்த நாட்டின் சட்டம், மக்கள்நலப் போக்கு ஆகியவை பற்றிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். இங்கு இனவாதம் இல்லை, அரசிடம் பாரபட்சம் இல்லை என எண்ணுகிறார்கள். அந்நம்பிக்கை அமெரிக்க தமிழர்களிடமில்லை. அங்குள்ள அரசு மக்கள்நலம் நாடும் அரசல்ல என்றும், அங்குள்ள சமூகம் இனப்பாகுபாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால் அமெரிக்கா தங்களை வாழவைத்த நிலம் என்னும் எண்ணமிருப்பதனால் அதைச் சொல்ல தயங்குவார்கள். அதேசமயம் அந்த எண்ணம் பேச்சில் வெளிப்பட்டுக்கொண்டும் இருக்கும்.(ஆனால் அமெரிக்கப் பணியிடச் சூழல் பற்றிய பெருமதிப்பும் அவர்களிடம் இருக்கும்)
இரண்டாவதாக அமெரிக்கப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி இருக்கும் மிகையான பதற்றம் இங்கில்லை. முதன்மைக் காரணம், இங்கே இந்தியர்கள் குறைவு. அமெரிக்காவில் இந்தியச் சமூகம் தனியாக திரண்டுள்ளது. ஆகவே இந்தியர்களுக்கு அண்டைவீட்டு அழுத்தம் மிக அதிகம்.
அதோடு அமெரிக்காவில் கல்வி என்பது ஒரு கடும்போட்டிதான். ஆகவே அமெரிக்கப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பு ஒன்றே ஒரே பேசுபொருள். பிள்ளைகள் படித்து முடித்தபின் இவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
ஸ்வீடன் குழந்தைகள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் பேசுகின்றன. அமெரிக்கக் குழந்தைகளில் தமிழ்பேசும் குழந்தைகளைக் காண்பது அரிது. இங்குள்ள கல்விச்சுழல் நெகிழ்வானது, போட்டி அற்றது. சமூகச்சூழலும் நெடுக்கடிகள் அற்றது. ஆகவே குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்துவதும் குறைவு
மிகக்குறைவான அவதானிப்பிலேயே எனக்கு ஒன்று தோன்றியது, இந்தியாவை விட்டு வேறேதும் நாட்டுக்கு குடிபெயர்வதென்றால் ஸ்வீடனையே தெரிவுசெய்வேன். இங்குள்ள குளிரும், நீண்ட பனிக்காலமும் ஒரு பெரும் சவால்தான். என்னால் இந்திய மண்ணுக்கு வெளியே இயல்பாக உணரவும் முடியாது. ஆனாலும் இந்தியாவை விட்டு வெளியேறும் கனவொன்று அடிக்கடி வந்துசெல்கிறது.
இந்தியா என்னும் மாபெரும் வரலாற்றுப் பண்பாட்டுத் தொகை என் ஆழ்மனமாகவே மாறிவிட்ட ஒன்று. ஆனால் இந்தியா மேலும் மேலும் கட்டுப்பாடற்ற குப்பைமேடாக ஆகிக்கொண்டே இருக்கிறது என்று எனக்கு படுகிறது. என் அழகுணர்வு சீண்டப்படாமல் வெளியே இறங்கவே முடியாத நிலை. அழகுணர்வு என்னை ஐரோப்பிய அமெரிக்க நிலங்களை நோக்கி ஈர்க்கிறது. அண்மையில் மலேசியா சென்றபோதுகூட அந்நிலம் இந்தியாவை ஒப்பிட எத்தனை அழகியது, தூய்மையாக பேணப்படுவது என்னும் எண்ணமே எழுந்தது
ஸ்வீடனின் தமிழ்மக்கள் வழக்கம்போல கணிப்பொறி வல்லுநர்கள், மற்றும் ஆய்வுக்காக வந்து ஸ்வீடனில் நிலைகொண்டவர்கள். தமிழில் அவர்கள் வாசிப்பது இணையத்தால்தான். ஸ்வீடனின் நிதானமான சூழல் வாசிப்பதற்கான பொழுதையும் அளிக்கிறது. ஆனால் அவர்கள் மிகக் குறைவாகவே வாசிக்கிறார்கள். அதை குற்றவுணர்ச்சியுடன் என்னிடம் சொன்னார்கள்.
இந்தியர்களே பொதுவாக வாசிப்புப் பழக்கம் குறைவானவர்கள். வாசிப்பு தேவையில்லை என அவர்களிடம் சொல்லும் பல்லாயிரம் குரல்களால் சூழப்பட்டவர்கள். வாசிப்பில்லாமல் இருப்பதன் குற்றவுணர்ச்சியை அடையவே அமெரிக்காவுக்கோ ஸ்வீடனுக்கோ செல்லவேண்டியிருக்கிறது. இந்தியாவில் இருந்தால் ’நானெல்லாம் வாசிக்கிறதே இல்லை’ என்பதையே பெருமையாக முகநூலில் எழுதி மகிழலாம்.
வாசிப்பின்மைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, குடும்பச் சூழல். நாம் குடும்பத்தின் எளிய அன்றாடச் செயல்பாடுகளில் மூழ்கி அதையே வாழ்வெனச் செய்துகொண்டிருப்பவர்கள். அதைச்செய்யவே நம் குடும்பம் நமக்கு ஆணையிட்டுக்கொண்டு இருக்கிறது. இரண்டு, நமக்கு வாசிப்புப் பயிற்சி கல்விநிலையங்கள் அல்லது குடும்பச்சூழலில் இருந்து அளிக்கப்படுவதில்லை. பயிற்சி பெறாமல் வாசிக்க முடியாது.
ஸ்வீடன் கலாச்சாரச் செயல்பாடுகளின் நிலம். அங்கே தமிழர்கள் தங்களுக்கான கலாச்சார பரப்பை, அடையாளத்தை தேடிக்கொள்வார்கள் என்றால் அது அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் ஈட்டிவைத்துச் செல்லும் செல்வமாக அமையும்.
ஆனால் அதில் இரு சிக்கல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த கலாச்சாரச் செயல்பாடுகள் இரண்டே. ஒன்று, இங்குள்ள பொதுவான வணிகக்கேளிக்கைச் செயல்பாடுகள். இரண்டு, இங்குள்ள அரசியல் சார்த செயல்பாடு. இங்குள்ள அரசியல் செயல்பாடு என்பது எல்லா நிலையிலும் ஏதோ ஒருவகை அடிப்படைவாதம் சார்ந்தது. மதம், சாதி, இனம், மொழி. அவற்றை ஒட்டிய காழ்ப்புகள், கசப்புகள். இங்கிருந்து ஸ்வீடனுக்குச் சென்று அவற்றை வளர்ப்பது அறிவீனம்.
ஸ்வீடன் போன்ற நாடுகள் அந்த அடிப்படைவாத மனநிலைகளை கடந்தவை. அவற்றின் சாதனையும், உலகுக்கு அவற்றின் கொடையும் அவை உருவாக்கியிருக்கும் தாராளவாதம்தான். பொருளியல், சமூகவியல் தாராளவாதத்தை மட்டுமல்ல அதைவிட முக்கியமான பண்பாட்டுத் தாராளவாதத்தைச் சொல்லவேண்டும். அதை இப்படி வரையறுக்கலாம். தன்னை ஓர் உலகமனிதனாக, உலகப்பண்பாட்டுக்கு எல்லாம் வாரிசாக உருவகித்துக்கொள்ளுதல். பிறன் என ஒன்றை கற்பிதம் செய்யாமல் அனைத்துடனும் உறவுகொள்ளுதல்.
நல்லூழாக ஒரு வளர்ந்த நாட்டின் சூழலில் வாழும் வாய்ப்பு அங்குள்ளவர்களுக்கு அமைந்துள்ளது. உலகின் மகத்தான கல்விமுறை ஒன்றில் அவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் பிந்திய சமூகநிலையில், பண்பாட்டுநிலையில் இருக்கும் நம் தேசத்தின் சழக்குகளை கொண்டுசென்று அறிமுகப்படுத்துவதைப் போல அறிவீனம் வேறில்லை.
ஆனால் பலசமயம் அதுவே நிகழ்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பொதுச்செயல்பாட்டுக்கு வருபவர்களில் பலர் அரசியல்நோக்கம் கொண்டவர்கள். அந்த அரசியல் தமிழகத்தின் சழக்கரசியல். இணையம் அதற்கான ஊடகமாக உள்ளது இன்று. பொழுதுபோகாத தனிமையின் சோர்வில் இணையம் வழியாக இந்தியச் சழக்குகளுடன் உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்குள்ள எல்லா காழ்ப்புகளையும் அங்கே பெருக்கிக் கொள்கிறார்கள்.
இணையத்தின் மிகப்பெரிய தீங்குகளில் இது ஒன்று. இது இல்லாதபோது இன்னும் ஆரோக்கியமான உளநிலையுடன், சென்ற இடத்தின் பண்பாட்டுடன் இணைந்து வளர்ச்சியடைந்தார்களோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது.இப்போதுகூட முற்றிலும் தங்களை துண்டித்துக் கொண்டு தனித்தீவென ஆனால் அங்குள்ள வளர்ச்சியடைந்த பண்பாட்டின் உறவால் ஆரோக்கியமான உளநிலைகளை தமிழர்கள் அடையக்கூடும் என்று தோன்றுகிறது.
நோபல் அருங்காட்சியகம்ஐரோப்பா (அல்லது ஐரோப்பாவின் ஒரு பகுதி) சென்றடைந்துள்ள தாராளவாதம் என்பது ஓர் எளிய விஷயம் அல்ல. நம்மவரின் மனநிலை என்பது எளிதாக அதை புறந்தள்ளி தமிழ்ப்பெருமையோ இந்தியப்பெருமையோ பேசுவது. மாபெரும் தத்துவஞானிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் வழியாக அவர்கள் சென்றடைந்த இடம் அது. நாம் 14 ஆம் நூற்றாண்டுமுதல் தத்துவார்த்தமாக தேங்கிப்போனவர்கள். மக்களில் பெரும்பகுதியினர் பழங்குடி மனநிலையில் உழலும் சமூகம். நமக்கு ஐரோப்பா மாபெரும் முன்னுதாரணம். நம் மகத்தான சிந்தனையாளர்கள் அனைவருக்கும் அவ்வண்ணமே ஐரோப்பா முன்னோடி ஒளியாக இருந்துள்ளது.
கலாச்சாரச் செயல்பாடு என்னும் போது நான் உத்தேசிப்பது ஐரோப்பிய நிலத்தில் தமிழ் அல்லது இந்திய அடையாளத்துடன் சுருண்டுகொள்வதை அல்ல. தனித்தன்மை தேடுவதை அல்ல. நமது நேற்றின் ஒரு நீட்சியை அல்ல. நம் ஊரின் ஒரு நினைவை அங்கே நிலைநிறுத்திக்கொள்வதை அல்ல. அந்த பண்பாட்டின் முன்விசையுடன் நம்மை இணைத்துக்கொள்வதைப் பற்றி மட்டுமே.
ஸ்வீடன் போன்ற நாடுகளின் பொதுமனநிலை என்பது பண்பாட்டுத் தாராளவாதமே. அந்த மனநிலையுடன் உரையாடும் தமிழ், இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்டடைந்து அவற்றை வளர்த்துக்கொள்வதே இன்று அவசியமானது. அவ்வண்ணம் ஓர் உண்மையான பண்பாட்டு செயல்பாடு ஐரோப்பியத் தமிழர்களிடையே நிகழ்ந்து, அதன் விளைவான ஓர் அடையாளம் அங்கே அவர்களுக்கு உருவாகுமென்றால் அதுவே நாம் இன்று காணத்தக்க பெருங்கனவு.
(மேலும்)
தி.சா.ராஜு
ஒரு காலத்தில் நான் மஞ்சரி மாத இதழில் தி.சா.ராஜு எழுதுவதை விரும்பி வாசித்துவந்தேன். குறிப்பாக ஓமியோபதி மருத்துவம் பற்றி அவர் எழுதுபவை அரிய வாழ்க்கைச் சித்திரங்களாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு பல ஆண்டுகளாக காலில் புண் ஆறவில்லை. பலர் மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. அவளுக்கு மறதியும் அவ்வப்போது கொஞ்சம் வலிப்புச் சிக்கலும் இருந்தது. அதனால் திருமணமும் ஆகவில்லை.
ராஜு அவள் சூழலை விரிவாக ஆராய்ந்து அவள் அச்சக ஊழியர் என்பதை கண்டடைகிறார். அவளுடைய புண் வழியாக ஈயம் உள்ளே செல்கிறது. அதுதான் அவளுடைய உளச்சிக்கலுக்கும் வலிப்புக்கும் காரணம். அதை கண்டுபிடித்தபின் எளிதில் சிகிச்சைசெய்து அவளை மீட்கிறார். வாழ்க்கையில் இருந்தே நோய் உருவாகிறது. வாழ்க்கையை ஆராயாமல் நோயை கண்டுபிடிக்க முடியாது என்று அவர் அக்கட்டுரையில் சொல்லியிருந்தார்.
தி.சா.ராஜு
தி.சா.ராஜு – தமிழ் விக்கி
விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா
மொழி நடையைக் கொண்டும், அதன் பேசு பொருளைக் கொண்டும் மிக எளிதாக வாசித்து முடித்துவிடக்கூடியவை சாரு நிவேதிதாவின் நாவல்கள்.
எக்ஸிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்: சாருவின் படைப்புகளில் காமம் மையப் பேசுமொருளாக உள்ளது. காமம் இலக்கியத்தில் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தின் இயக்குவிசையே அதுவாகத்தான் உள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் அதுவல்லாத ஒன்றை கை கொண்டிருக்கவே முடியாது என்று தோன்றுமளவு சாருவின் நாவலில் வரும் பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள். சூர்யா சந்திக்கும் பெண்களைத்தாண்டி அவன் நண்பர்கள் வாழ்விலுள்ள பெண்கள், அவன் புனைவுகளிலுள்ள பெண்கள் என யாவரிடமும் காமமே பிரதானமாகத் தெரிகிறது அல்லது அதை மட்டுமே சூர்யா கண்டடைகிறான். நீரஜா தொடங்கி இந்தப் பட்டியல் நீள்கிறது. சூர்யாவுக்கு நீரஜாவிடம் முதலில் பிடிப்பது அவள் பாம்பேயிலிருந்து வந்தாலும் கையுள்ள ரவிக்கை அணிந்திருக்கிறாள் என்பது தான். சிகிரெட் கேட்டபின் தான் நீரஜாவை சூர்யாவால் அணுக்கமாக்கிக் கொள்ள முடிகிறது. மனிதர்களின் பாவனைகள், நல்லதன்மையாக காட்டிக் கொள்வதன் மேலான விலக்கத்தையும் சொல்கிறான். காமத்தை பற்றி பேசும்போது மட்டுமே சூர்யா தன்னை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிறான்.
“ஆடைகளற்று நிர்வாணமாயிருக்கும் போது மட்டும் இயல்பாக இருப்பது போலவும், வெளியே ஆடைகளுக்குள் உலவும்போது வேடம்கட்டி உணர்ந்தான் சூர்யா” என்ற வரிகளில் அதைக் காண முடிகிறது. ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் அந்தரங்கமான இடத்தில் வெளிப்படும் ஒருவனை எல்லோராலும் காண முடிவதில்லை. ஒரு ஆளுமையையே கூட குலைத்துப் போடும் வாய்ப்புள்ள இடம் அது. அதன் அப்பட்டத்தை காண்பிப்பதன் வழி அந்த புனிதத்தை கட்டுடைக்கிறது. பெண்களுடனான பெரும்பாலான உரையாடல்கள் காமத்திற்கு இட்டுச் செல்லும் ஃபோர்ப்ளேயாகவே இருக்கின்றன. சூர்யா காட்டும் பெரும்பான்மையான பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து “உனக்கு மனிதர்களைப் பார்த்து பயம் இல்லையா?” என்று கேட்பவனாகவே சூர்யா இருக்கிறான். அப்படி இருக்கும் தன்னுடைய தோழிகளை விபச்சாரிகளாக பிறர் கருதுவது குறித்தும் ஆத்திரப்படுகிறான். ”ஒரு மனிதனுக்குத் தேவையான செக்ஸ் கிடைக்கவில்லையானால் நிம்மதியாகத் தூங்க முடியாது” என்கிறான்.
ஆழமான ஓர் உறவை எந்த வாசகியுடனோ, தன் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எந்த மொழிபெயர்ப்பாளருடனோ, வேலையில், வழியில் காணும் எந்தப் பெண்ணுடனும் சூர்யா கைகொள்ளவில்லை. இத்தனை காமங்கள் என்பது ஒரு மேலோட்டமான காதலைத்தானே உணர்த்துகிறது என்ற சந்தேகம் வரும்போதெல்லாம் கிரணுக்கும் சூர்யாவுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. “வாழ்வின் பேருண்மைகளை உணர்த்திய பெண்ணே உனக்கு வந்தனம்” என்று யோனியில் முத்தமிட்ட சூர்யாவை கிரண் அணைத்துக் கொண்டு மருகவில்லை. ”நீ புரிந்து கொண்டாயா என்பது குறித்து எனக்கு சந்தேகமாக இருக்கிறது – விளக்கமாகச் சொல் – நீ ஒவ்வொன்றையும் அதன் மேற்பரப்பில் மட்டுமே பார்க்கிறாய்… அல்லது அதன் அடியோட்டங்களைப் பார்த்தாலும் பார்க்காதது போல பாசாங்கு செய்கிறாய்… முதலில் சொன்னது சரியாயிருந்தால் நீ ஒரு சராசரி எனவும் இரண்டாவது உண்மையாக இருந்தால் நீ ஒரு ஹிப்பாக்ரிட் என்று அர்த்தமாகும்” என்கிறாள். தன்னிடம் கோபித்துக் கொண்டு போனவன் பத்து நாட்கள் கழித்து திரும்பி வரும்போது மீண்டும் வேறு ஒருவனுடன் நிர்வாணமாக அவள் இருப்பதைக் காணும் சூர்யா கொள்ளும் சலிப்பின் நீட்சியே அடுத்தடுத்துவரும் பெண்களுடனான உறவுகளில் காணமுடிகிறது. நீரஜா தொடங்கி எக்ஸிஸ்டன்சியலிஸத்தில் வரும் பல பெண்களும் ஒரு ஃப்ளாஷ் போல தான் கடந்து செல்கிறார்கள்.
சுயம் மேலுள்ள காதலே பிரதானமாகத் தெரியும் எழுத்துகள் இவை. உடலும், மனமும் என ஒட்டுமொத்த மானுடத்தின் அழுக்கு வாய்ந்த, அருவருப்பான, ஒழுக்கவரையறைகளில் அகப்படாத, சராசரியான, கைவிடப்பட்டவர்களின் மேலான காதலும் கூட தன்னை அவர்களில் ஒருவராகக் காண்பதால் விளைந்தது தான். தொடர்ந்து பிறரை, பிறருடைய வாழ்வை புறம்பேசிக் கொண்டே இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் தோறும் தீர்க்கமாக நம்பும் ஒன்று “புனிதமின்மை”. புனைவு நெடுக இத்தகைய கிசுகிசுக்கள் அந்த சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. கோவிந்தராஜலு நாயுடுவின் எட்டு குழந்தைகளும், எப்படியெல்லாம் காமத்தால், காதலால் பிறழ்ந்தார்கள் என்ற நீண்ட பட்டியல் நாவலில் வருகிறது. அதன்பின் ராமசாமி, பாப்பாத்தி குடும்பம் அதன் பிறழ்வுகள் என நீள்கிறது. காமமே அனைத்திலும் முதன்மையாகிவிடும் ஒரு சலிப்பை இது தருகிறது என்றாலும் பெரும்பான்மைச் சமூகத்தையும் அதற்குள் அடக்கிவிடுமளவு உண்மையாகவும் உள்ளது.
இந்த நாவலில் வரும் எக்ஸிஸ்டன்சியலிஸம்-கம்யூனிஸம்; எக்ஸிஸ்டன்சியலிஸம்-சராசரி விவாதங்கள் சூர்யாவின் சிந்தனைகளை பதிவு செய்கின்றன. கீழிருக்கும் அருவருப்புகளை உள்ளபடியே சொல்வதும், மேலிருக்கும் பகட்டின் அபத்தத்தை, மத்தியத்தர புத்தியை, பகடிசெய்வதும், டில்லி குமாஸ்தாக்களின் வாழ்வு பற்றிய சித்திரமும், எழுத்தாளனும் குமாஸ்தாவுமானவனின் கலை நுகர்வுக்கான உலகியல் தடைகளும், சமகால அரசியல், பொருளாதார, சமூக அமைப்பின் மீதான தன் பார்வையையும் புனைவுத்துணுக்குகள் வழியாக அறிய முடிகிறது. “நம்முடைய ஆளுமை நம் செயல்பாடுகளால் மட்டுமேதான் நிர்ணயிக்கப்பட வேண்டுமே ஒழிய புறத்தோற்றங்களால் அல்ல. அது மனோவியல் சார்ந்த விஷயம்” என தேவையற்ற பகட்டைப் பற்றிச் சொல்கிறார்.
மத்தியத்தர வாழ்க்கை வாழும் மனிதர்களை, அதன் மதிப்பீடுகளின் மீதான எள்ளல் இருக்கிறது. “என் குழந்தை முதல் மதிப்பெண் வாங்கி விட்டது என்று சொல்லும் பெற்றோர்களையெல்லாம் அம்மணமாகக் குப்புறப்படுக்கப்போட்டு சுத்தாமட்டையில் பிரம்பால் விளார வேண்டும்” என்கிறார். அலெக்ஸாவின் வழியாக பெற்றோர்களால் கொடுமைக்குள்ளாகும் பதின்பருவத்தை “அவள் செத்திருக்காவிட்டால் அவளுடைய பெற்றோர் அவளைப் பேசியே கொன்றிருப்பார்கள்” என்கிறார்.
குருவி என்பதை இனிமையாகவே சித்தரிக்கும் இலக்கியத்திற்கு மத்தியில் “பறவைகளைப் போல கொலைகார ஜென்மங்கள் இந்த பூமியில் வேறு எதுவுமில்லை” என்று சொன்னபோது ஆச்சர்யமாகவில்லை. ஒரு குருவியின் முட்டையை இன்னொரு குருவி கீழே தள்ளி உடைப்பதும், குஞ்சுக் குருவியை மேலிருந்து கீழே தள்ளி கொலை செய்வதையும் பார்த்த பிறகு இந்தச் சிந்தனையும் உண்மை என்றே தோன்றுகிறது.
அதிகாரத்திற்கு எதிரான ஒரு மனநிலை அல்லது அதை பூஜ்ஜியமாக்குவது, ஒழுக்கவியலை கேள்வி கேட்பவரின் மேலுள்ள வெறுப்பு, அறிவுஜீவி, தத்துவம் என்பதன் மேலுள்ள விலக்கம் ஆகியவை சாருவின் எழுத்துக்களில் காண முடிகிறது. “ஆண்டாண்டு காலமாக நம் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கும் மதிப்பீடுகளையே இவர்கள் வைக்கிறார்கள்” என்பதை அவர் எல்லாவற்றின் மீதும் வைக்கப்படும் விமர்சனமாகவே அணுகலாம். உலகத்தின் இனிமையான யாவற்றின் அடியாழத்தில் ஓடும் உள்ளார்ந்த வன்முறைகளை, இச்சைகளைச் சொல்கிறது இந்நாவல்.
*
ஜீரோ டிகிரி: ஜீரோ என்பதே ஒரு யோனியின் குறியீடு போல அமைந்து அதன் பேசு பொருளை உணர்த்தியது. “ஒரு” என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லை என்ற முன் அட்டைப் பிரகடனத்தை நாவல் ஏந்தியிருந்தது. கதை சொல்லல் என்பதே “ஒரு” என்று ஆரம்பிப்பது தான் என்ற பழைய மதிப்பீட்டிற்கு எதிரான மனநிலையாக இதைக் கொள்ளலாம். ”புத்தி, ஞானம், தெளிவான அறிவு, சகிப்புத்தன்மை, ஸத்யம், உணர்வுகளையும் மனத்தையும் கட்டுப்படுத்தல், சுகம், துக்கம், பரிணாமம், அழிவு, பயம், பயமின்மை, அஹிம்ஸை, சமத்துவம், திருப்தி, துறவு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி, உயிர்களின் இப்படியான குணங்களும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன” என்ற பகவத் கீதையின் வரிகளை ஏந்தி நாவல் தொடங்குகிறது. வாழ்வின் சாரத்தை, அதன் உணர்வுகளை, அழகை, கோரத்தை 360டிகிரி அலசி ஆராய்ந்து சென்றடையும் நிலையை எதுவுமே செய்யாமல் ஜீரோ டிகிரியில் அதன் எதிர்ப்பக்கம் நின்று கூட காண முடியும். ஜீரோ டிகிரியிலிருந்து மனித வாழ்வைப் பார்ப்பதென்பது 360 டிகிரிக்கு எதிர் திசையிலிருந்து பார்ப்பது என்ற பிரக்ஞையுடன் தான் இந்த நாவலை அணுக வேண்டியிருந்தது. நாவலின் நேர்கோடற்ற தன்மை, பிறழ்வுத்தன்மை, பேசுபொருள் ஆகியவை சமன்குலைவை அளிக்கிறது.
”நல்ல நாவல் என்பது என்ன?” என்பதற்கான மதிப்பீடுகளை புறந்தள்ளும் வடிவமின்மையையே கூறாக நாவல் கொண்டுள்ளது. எந்த விதமான குறியீடுகளோ தத்துவங்களோ நுண்மைகளோ மண்டை பிளக்குமளவு விவாதம் செய்யும் கருத்துக்களோ அற்ற நாவல். எளிய வாசிப்பைக் கோருவது. “நிர்வாண நிஜத்துடன்” என்ற வார்த்தையே ஒரு தேடல் விளக்காகக் கொண்டு ஜீரோ டிகிரி நாவலுக்குள் நுழையலாம். முப்பத்தி ஐந்து அத்தியாயங்கள், ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள். ”எழுத்து என்பது கனவில் ஷஷூப்தியிலிருந்து தோன்றி வருவது மட்டுமல்லவே. அது கக்கூஸிலும், டவுன்பஸ்ஸில் ஜர்தா பீடா போட்ட போலீஸ்காரன் வாயிலிருந்தும் வருவதென்பது” என்ற வரிகளின் வழியே அதன் பிறப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். அங்கிருந்து தோன்றிய எழுத்துக்களின் குவியலாகவே முப்பது அத்தியாயங்கள் இருந்தன.
தேய்ந்த துண்டுச் செய்திகளிலிருந்து ஆரம்பித்து, வரலாற்று கதையென ஒரு அத்தியாயம், “ஆம்/இல்லை” கேள்வி பதில் விளையாட்டுக்கள், எஸ்ரா பவுண்ட், போர்ஹேஸ், கொர்த்தஸார் என பெயர்களின் பட்டியல், முனியாண்டி என்ற எழுத்தாளனின் அறிமுகம், அவனுடைய எழுத்திற்கான செத்த மூளையின் விமர்சனம், உறவுகள், காமம், காம விளையாட்டுக்கள், திடீரென எழுத்தை பற்றிய கவிதைத்தன்மையுடன் கூடிய உரை நடை, முனியாண்டி ஏன் ஒரு எக்ஸிஸ்டண்ஷியலிஸ்ட் ஆக மாறினான் என்ற குறிப்போடு அவனைப் பற்றிய செய்தி, ஆர்ய அல்குல் என 108 முறை எழுதி வைத்திருப்பது, அருவருப்பான புணர்ச்சி தண்டனைகள், நமிஸிஷிருவின் ஒன்றுமில்லாத கடிதம், ஆப்பிரிக்கா நாடுகளில் நடக்கும் கொடுமைகள் பற்றிய செய்தித் துணுக்கு, கிய்யோ, ரிய்யோ, குறியைக் கொண்டு பஸ்களில் இடிக்கும் ஆண்களைச் சொல்லும் வாசகி கடிதங்கள், பெரூவின் நவீன வரலாறு புத்தகம் பற்றிய அறிமுகம், மேற்கத்திய இசை பற்றிய அறிமுகம், முனியாண்டியைப் பற்றிய கிசுகிசுக்கள், அவையும் பாதியிலேயே காணமல் போனதாக குறிப்பு, ”லால் சலாம்” என்ற தலைப்பில் அரசியல்-இலக்கிய பகடி, தன்பால் சேர்க்கை, தினசரி பற்றிய சுருக்கக் குறிப்புரை, சைக்கோத்தனமான காதல் காமம், வேசி வீடுகள், பெசண்ட் நகர் பீச், கொலை, சைக்கோத்தனம், செக்ஸ் ஜோக்ஸ், போன் செக்ஸ், செயல்முறை விளக்கங்கள், எழுத்தாளனிடம் தட்டையான அவன் ஆக்கங்கள் பற்றிய நேர்காணல் என இருபது அத்தியாயங்கள் கடந்த பிறகு எழுதுபவனுக்கே வாசகர் “கதை எங்கே” என்று கேட்டுவிட வாய்ப்புண்டு என்ற பிரக்ஞை எழுந்தாற்போல அடுத்த அத்தியாயத்தில் அதன் இயலாமை பற்றி, போதாமை பற்றிய விளக்கங்கள், சிருஷ்டி சூன்யம் பற்றி, ஒரு விமர்சன எதிர்வினைக்கான கடிதம். மூன்று அத்தியாயங்களில் நான்கு வரி கிறுக்கல்கள். நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் பற்றி, ஆர்த்தி, அம்மா, நளினி-சூர்யா எனப்பல அத்தியாயத்திற்குப் பிறகு அவந்திகாவின் கடிதம் வந்தது. அவை சூர்யாவின் அகத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. சூர்யாவை வாசகர்கள் அணுக்கமாக்கிக் கொள்ளும் பகுதியாக அமைந்தவை அவை. “பாதியாக்கப்பட்ட பாதிகள் தங்கள் பாதிகளைத் தேடி அலைந்து முழுமை கொள்கின்றன” என்றே உறவுகளைச் சித்தரிக்கிறார். புதிர் விளையாட்டு போல கலைத்து அடுக்கி என பொருள் கொள்ள முற்பட்டு தோற்றுப்போகும் வாசகிகளிடம் அவர் “வேறு வேலையிருந்தால் பார் வாசகி” என்கிறார்.
எழுதுவதன் மேலும், எழுத்தாளன் மேலும் கட்டப்படும் அத்தனை புனிதங்களையும் கலைத்துப் போடுகிறார். நாவல் என்பதற்கான வரையறைகளை கோட்பாடுகளை தன் எழுத்துக்களின் வழியாக சாரு பகடி செய்வதையே காண முடிகிறது. நாவல் என்று சொல்லப்பட்ட இந்த நாவலில் ஒருமையோ, சீரான எண்ணவோட்டமோ, சிந்தனையோ, நுட்பமோ, மொழி நடையோ இல்லை. பல இடங்களில் சம்மந்தமேயில்லாத ஆங்கில வரிகள், சில சம்மந்தமுள்ள ஆங்கில வரிகள், விளையாட்டுகள், படங்கள், கேள்வி பதில்கள் என பலவகைப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவைகளையெல்லாம் கோர்க்க முடியுமானால் அது “வடிவமின்மை”; “சாரமின்மை”; “பிறழ்வு” ஆகிய வார்த்தைகளால் மட்டுமே முடியும். அது உண்மையில் ஜீரோ டிகிரியிலிருந்து பார்க்கும் பார்வைக் கோணம் தான்.
*
ராஸலீலை: ராஸலீலை உணர்வெழுச்சிகள், உணர்வுப் பொங்கல்களுக்கு முன்னர் நின்று பரிகசிக்கும் தொனியுடையவை. வாழ்வில், புனைவில் இதுகாறும் நெகிழ்ந்த தருணங்கள், மனிதர்களை சற்றே பரிகசித்து சிரிக்கக்கூடியவை. நிதர்சனத்தில் உணர்வுகளுக்கு எந்தவித மதிப்புமளிக்காமல் காயப்படுத்திவிட்டுச் செல்லும் மனிதர்களை, தருணங்களை உணர்ந்து கொள்ளவும் இவை உதவுகின்றன.
”காமம்- ஜனனம்-காமம்-மரணம்” என பெருமாள் சொல்வது உள்ளீடற்ற பிறப்பின் தத்துவம். ஆனால் அது அப்பட்டமான உண்மையும் கூட. இங்கு காமத்தை உடலின் மேலான காமம், உணவின், செல்வத்தின், புகழின் மீதான காமம் என்றே கொள்ளலாம். ஆனால் பெருமாளின் தத்துவார்த்தப்படி இங்கு உடல் வேட்கையே பிரதானமாக உள்ளது. காதல் என்பதை ஆண்-பெண் சரீரக் கவர்ச்சி என்பதைத் தவிர அதை புனிதப்படுத்திக் கொள்ள ஏதுமில்லை என்ற சிந்தனையே பெருமாளின் எழுத்துக்களில் பிரதானமாக இருக்கிறது. விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பிருந்தாவைக் காப்பாற்றிய மாணிக்கத்திடம் நீண்ட நாள் கழித்து தொலைபேசியில் பேசும் போது “தேவடியாள் வீட்டுக்கு போனால் கூட நற்காரியங்கள் செய்ய முடியும்” என்ற சிந்தனையை மட்டுமே அவன் அடைகிறான்.
”ஒரு ஆணுக்கு பெண்ணுடனான உறவைத் தீர்மானிப்பது அந்த அரை இன்ச் அளவுள்ள சதைத்துணுக்கு மட்டுமே. இப்படி பச்சையாகச் சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை” என்கிறான். “எல்லா அழகான பெண்களையும் ஒரு முறையாவது சுகித்துவிட வேண்டும்” என்று எண்ணும் சுந்தரேசன், எல்லா வகையிலும் காமத்திற்கு இட்டுச் செல்லும் பேச்சுக்களையே பேசும் ஆண்-பெண் கதைமாந்தர்கள் என பாலியல் உறவுகள் நிரம்பித்ததும்பும் புனைவுகளாக ராஸலீலா உள்ளது. முழுமையாக அதற்குள் திளைத்துவிடாமல் அந்த வாழ்க்கையை வாழும் மாந்தர்களின் சில தருணங்களை பிளாஷ்களாக காண்பித்துச் செல்கிறார்.
“I should have met you long time back my rainbow” போன்ற காதல் வரிகள், செக்ஸ்டிங் சேட்கள், தொலைபேசி உரையாடல்கள் உணர்வுப் பிரவாகங்களின் மீது நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது. காதல் என்ற ஒன்றே இல்லை என்று தோன்றுமளவு ஒரு நம்பிக்கையின்மையை அது அளிக்கிறது. காதலித்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு விடுதலையை அளிக்கிறது. ஏமாற்றியவர்களுக்கு குற்றவுணர்விலிருந்து விடுதலையை தருகிறது. எல்லாம் சதை துடிப்புடன் இருக்கும் வரை ஆடப்படும் விளையாட்டு என நிர்வாணமாக நிற்கிறது.
இச்சையால் தான் பிறக்கிறோம். இச்சையையே கை கொண்டு நிறைவின்றி இறந்து மறைகிறோம். எத்தனை வேடங்களைப் புனைந்து கொண்டாலும் இச்சையெனும் மாபெரும் கள்ளமிருகத்தை நம்மால் அடியாழத்திலிருந்து விரட்ட முடிவதேயில்லை. ஒவ்வொரு தருணத்திலும் கூரான தன் உணர்கொம்புகளைக் கொண்டு அவை திறக்கும் சிறுவாசலின் விளிம்புக்காக காத்திருக்கின்றன அம்மிருகங்கள்.
ஆண்-பெண் உறவைத்தாண்டி பிற உறவுகளில் பெரும்பாலும் வெளிப்படுவது மனித மனத்தின் கீழ்மைகள். அலுவலகம், நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசுகிகள், வாசகர்கள், உறவுகள் என எங்கும் எதிலும் தென்படும் அழுக்கு, துரோகம், காமம், சுயநலம் ஆகியவையே பிரதானமாக உள்ளன. நாவலின் பேசுபொருளாகத் தான் வாசித்தவைகளை, சிந்தனைகளை, கோட்பாடுகளை, மனிதர்களை, அந்த காலத்தை, இலக்கியச்சூழலை தன் பார்வையில் ஒரு கதைசொல்லி போல பெருமாள் சொல்லிக் கொண்டே வருகிறான். உணர்வுகளேதுமில்லாமல் உடலை, இன்பத்தை பிரதானமாகக் கொண்டு, எந்தவித வாழ்க்கையின் தத்துவார்த்தச் சிக்கலுக்கும் ஆளாகாமல் அவன் இருப்பதாலேயே சுற்றியிருக்கும் அனைவரையும் அவ்வாறு மதிப்பிடுகிறான் அல்லது அவனைச் சுற்றி அவ்வாறான மனிதர்களை மட்டுமே காண்கிறான்.
காதல், காமம், அன்பு, பாசம் என உறவுகளுக்குள் நிகழும் பாசப்பிணைப்புகளை, அதில் எழும் உறவுச்சிக்கலை பல வித தத்துவார்த்த கேள்விகளுக்குள்ளாக்கலாம். குற்றவுணர்வுகளை, உறவின் உச்ச தருணத்தில் ஏற்படும், விரிசல்களை, துரோகங்களை ஆராயலாம். ஆனால் இவற்றுடன் கண்ணாயிரம் பெருமாளின் பரிகாசத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் வெளியே நின்று பரிகசிக்கும் ஒரு குரலை அருகிலேயே வைத்துக் கொள்ளும்போது தான் வாழ்வின் பார்வை முழுமையடைகிறது.
எல்லா தவறுகளையும் செய்துவிட்டு குற்றவுணர்ச்சியில்லாமல் ஒரு மனிதனால் எப்படி இருக்கமுடியும் என்ற கேள்விக்கு அவர்கள் யாரும் இத்தனை சிக்கலாக யோசிப்பதில்லை அல்லது யோசிப்பதேயில்லை என்றே ராஸலீலாவின் புனைவுத்துணுக்குகள் உணர்த்துகின்றன. அவர்களுக்கு சரி என்றோ தவறென்றோ ஏதுமில்லை. உள்ளீடற்ற ஒரு மனம் மட்டுமே உள்ளது. உணர்வு ரீதியான விஷயங்களை அசிரத்தையாக அணுகுவது உணர்த்தும் உண்மை இவை.
உண்மையில் இந்த அப்பட்டங்களை உணர்ந்து கொண்டால் நினைவுப் பெட்டகங்கள் தேவையில்லை, கரைந்து அழத்தேவையில்லை, உறவுக்காக தற்கொலை செய்யத்தேவையில்லை, வாழ்க்கையில் எந்த குற்றவுணர்ச்சியும் அடைய வேண்டியதில்லை. அன்றைய கணத்தில் வாழ்வதற்கு, மகிழ்ந்து களிகூர்வதற்கு இந்தப்புரிதல் போதுமானது. இங்கு மென் தொடுகைகள், சிறு அணைப்புகள் தரும் ஆறுதல்கள் அர்த்தமிழந்து தலைகவிழ்கின்றன. யாவற்றையும் யாவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தூண்டும் ஒரு பார்வையை அளிக்கிறது. அறமும், நேர்த்தியும், ஒழுக்க வரையறைகளும் தரும் அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. எல்லோருடைய முகத்திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த கள்ள மிருகத்தை ஒரு கணம் நினைவூட்டுகிறது.
பெருமாள் மாதிரியான ஆட்களுக்கு நிறைவென்பது என்ன? உண்மையில் பெரும்பான்மை மனிதர்கள் அதை நோக்கிச் செல்வதில்லை. அவர்களுக்கு அந்தக் கேள்வியுமில்லை. மனிதர்கள் மேல் எந்தக் கருணையும் இல்லாமல், அனைத்துப் புனிதப்படுத்தல்களையும் கலைந்து விட்டு அப்பட்டமாக உணர்வுகளை அணுகுவதும், படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பயன்படுத்திக் கொள்வதற்காகவே என்ற சிந்தனையோடே அனைத்தையும் கொண்டாட்ட மனநிலையோடு அணுகுவதும் எவ்வகையிலும் மானுடத்தின் மேலான கனிவை அளிப்பதில்லை தான். ஆனால் காதலுக்காக, இந்த சமூகம் ஏற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்காக, ஒழுக்க வரையறைகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும், பிறழ்ந்து போகும் மனிதர்களுக்கான விடுதலையை இது அளிக்கிறது. ஆழத்தின் மீதும் நுண்மையின் மீதும் நம்பிக்கையற்றவன் ஏமாற்றும் தரப்பில் இருந்தாலும் அதை உணர்வதில்லை, குற்றவுணர்வு கொள்வதில்லை. காதல் என்றில்லை எதையுமே பொருட்படுத்தாத எக்கச்சக்கமான மோசமான மனிதர்களுடனும், பிரச்சனைகளுடனும், போகங்களுடனும், கொண்டாட்டங்களுடனும் வாழ்வை எதிர்கொள்ளும் ஒருவன் இவற்றை அதனில் ஒரு பகுதியாகவே கடந்து செல்கிறான். அவன் சிந்திப்பதேயில்லை. அங்கு அதற்கான தேவையுமில்லை. அந்த பெரும்பான்மை மானுடத்தின் காட்சித்துணுக்களாகவே இப்புனைவுகள் உள்ளன. இவை அளிப்பது எல்லா வகையான குற்றவுணர்விலிருந்து விடுதலையையும் அது தரும் கொண்டாட்டத்தையுமே. அங்ஙனம் விடுதலையடைந்தவர்களால் கொண்டாடப்படும் எழுத்து சாருவுடையது.
ஊற்றுமலையும் உ.வே.சாவும் – கடிதம்
அன்புள்ள ஜெ.,
ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத்தேவரைக் குறித்த தமிழ்விக்கி பதிவு படித்தேன். புலவர்களைப் புரக்கும் அவருடைய தமிழ்ப்பணி மிகவும் வித்தியாசமானதும் போற்றத்தகுந்ததும் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஆதரித்த புலவர்கள் வரிசையில் உ.வே.சாவின் பெயர் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. உ.வே.சா ‘என் சரித்திரத்’தில் ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பரைச் சந்தித்தது குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவருடைய சிந்தாமணிப்பதிப்பின் போதும், அவர் மகனின் உபநயனத்தின்போதும் அவர் பணஉதவி செய்ததைக் குறிப்பிடுகிறார். அவருக்கும் ஜமீன்தாருக்கும் தொடர்ந்த கடிதப்போக்குவரத்து இருந்திருக்கிறது. அதில் பழந்தமிழ் நூல்களிலிருந்து சந்தேகங்களைக் கேட்பாராம் மருதப்பர். ‘மற்றெதெல்லாம் மட்டும் புரிந்து விட்டதாமா?’ என்று ஐயருக்கு ஒரு சந்தேகம். தன் மகனுடைய உபநயனம் முடிந்தபிறகு 1891 ஜூலை மாதம் மருதப்பரைச் சந்திக்கும்பொருட்டு அவர் ஊற்றுமலைக்குப் பயணமாகிறார்.
ஊர் எல்லையில் தான் வருவது தெரிந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஜமீன்தார் துப்பாக்கி, வேட்டைநாய்கள் சகிதம் ராணுவ உடையில் வந்துநிற்கவும் சற்றே பயந்துவிடுகிறார் உ.வே.சா. ‘குளியல், சாப்பாடெல்லாம் முடித்து பொறுமையாகத் தயாராகுங்கள். ஒருவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சென்று விடுகிறார் மருதப்பர். அரண்மனையில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது திருவானைக்காப் புராணம் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் புலவர்களிடம் மருதப்பர் உரையாடிக்கொண்டிருப்பதிலேயே அவர் தமிழறிவு மீதிருந்த உ.வே.சா வின் சந்தேகங்களெல்லாம் தெளிந்துவிடுகின்றன. புலவர்களிடம் உரையாடி முடித்தபின் உ.வே.சா வைப்பார்த்து ‘உத்தரவாக வேணும்’ என்கிற அந்த அரசரின் பணிவை நெகிழ்கிறார் உ.வே.சா.
உ.வே.சாவின் தமிழ்ச்சுவையில் மருதப்பரும், மருதப்பரின் உபசரிப்பில் உ.வே.சாவும் திளைத்திருப்பதாக சில நாட்கள் கழிகின்றன. ‘ராஜஉபசாரம் என்றால் என்னவென்று கண்டேன். நான் ராஜன் அல்ல என்பதுதான் குறை’ என்கிறார் உ.வே.சா. கடைசியில் ‘எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு வரவேண்டும்’ என்ற உத்தரவோடு பிரியாவிடை தருகிறார் மருதப்பர். அதுமட்டுமல்லாமல் உ.வே.சா வின் சுவடிவேட்டைக்கு உறுதுணையாக மாட்டுவண்டி, சமையல்காரனோடு, பாத்திரங்கள் எல்லாம் அனுப்புகிறேன் என்று கூறிய மருதப்பரின் காலில் விழாத குறையாக இவற்றைப் பராமரிக்கும் தன் சக்தியின்மையைக் காரணங்காட்டி மறுத்துவிடுகிறார் உ.வே.சா. அந்நாளைய வழக்கப்படி மருதப்பர்மேல் பத்து வாழ்த்துப்பாடல்களைப் பாடி அளித்து, விடைபெற்றுக் கொள்கிறார்.
உ.வே.சா ‘காலப்போக்கு’ என்ற வார்த்தையால் அவருடைய நேர மேலாண்மையைப் பற்றி ஆச்சரியமாகக் குறிப்பிடுகிறார். காலை நடையிலேயே – சிறந்த சாலைகளை ஊர்நெடுக அமைத்திருக்கிறார் – மக்கள் குறை கேட்டல், மாடு, குதிரை, யானைகள் பராமரிப்பு என்று எல்லாவற்றையும் நேரடியாகச் செய்கிறார். காலை 8 முதல் 10 வரையும், மறுபடியும் மாலை 2 முதல் 4 வரையும் புலவர்களுடன் தமிழில் தோய்தல் என்று நேரத்தை வீணடிக்காத நிகழ்ச்சிநிரல். உ.வே.சா தன் ‘நான் கண்டதும் கேட்டதும்’ புத்தகத்தில் ஒரு கட்டுரையில் பெரிய கோயில்களுக்கு இணையாக ஊற்றுமலை நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் கொடுக்கப்படும் நைவேத்யங்களைப் பற்றிக் கூறுகிறார்.
“புத்துருக்கு நெய்யில் செய்யப்பட்ட வர்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலிய பஷியவகைகளும் ஒவ்வொரு நாளும் அங்கே நவநீத கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்யப்படுவதைக் காணலாம். அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி. ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். பெரிய சந்தனக் கல்லளவு தேன்குழல். உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
புலவர்களுக்குத் தகுந்த சன்மானங்கள் செய்ததோடு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பிரசாதங்களை தினந்தோறும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மருதப்பர். தமிழ்வளர்ப்பவர்களை வளர்ப்பது தமிழ்வளர்ப்பதும்தானே? இதுபோலப் புரவலர்களின் ஆதரவினால்தான் புதிய பதிப்பக முயற்சிகளில் உ.வே.சா வால் தொடர்ந்து ஈடுபட முடிந்தது. கலைகள் பொலிந்தது உபரியின் விளைவால்தான் என்று நீங்கள் கூறுவதற்கு நேரடி உதாரணம்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

