Jeyamohan's Blog, page 665
December 10, 2022
அயோத்திதாசர்
அயோத்திதாசர் பற்றிய விவாதம் இந்த தளத்தில் பதினைந்தாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அயோத்திதாசர் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைக்கின்றன ஒட்டுமொத்தமாக கிடைக்கும் தரவுகளை திரட்டி எழுதப்பட்ட ஏறத்தாழ முழுமையான கட்டுரை. அயோத்திதாசரின் சிந்தனைகளையும் ஒரு வாசகன் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி அமைந்துள்ளது
அயோத்திதாசர்கலைத்தலின் நுட்பங்கள்- சி.பழனிவேல் ராஜா
சில மாதங்களுக்கு முன்பு இந்திய தலைநகரின் மையப்பகுதியில் சுமார் 100 அடி உயரமுள்ள இரட்டைக் கட்டிடங்கள் “waterfall implosion” என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டன. அது சாதாரணமான இடித்து நொறுக்கி எடுத்த பணி அல்ல. அந்த கட்டிடத்தைக் கட்டுவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை விட மேலான, பல பொறியியல் நிபுணர்களால் திட்டமிட்டு, மிக நுட்பமான கணக்கீடுகளுக்குப் பின் செயல்படுத்தப்பட்ட அறிவியல் அற்புதம். விளைவாக எது உடைய வேண்டுமோ அது மட்டும் உடைந்தது. எப்படி உடையவேண்டுமோ அப்படியே உடைந்தது.
நகரின் மையத்தில் இருந்த மிகப்பெரிய கட்டுமானமாக இருந்தாலும் அதன் உடைப்பினால் அருகில் இருக்கும் சிறிய கட்டிடங்களுக்கோ மனிதர்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக ஒரு சிறிய மண் சுவரை உடைப்பதற்கு இத்தகைய திட்டமிடல் தேவையில்லை.பெரிய தொழில் நுட்பமோ, அறிவியல் கணக்கீடுகளுக்கோ அவசியம் இல்லை யாரும் செய்யக்கூடிய ஒன்றுதான் அது.
சமூகத்தில் குறிப்பாக இந்தியா போன்ற கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தில், அனைவருக்கும் பொதுவான கலாச்சார, பண்பாட்டுக் கட்டுமானங்கள் மிக மெதுவாக ஏற்படுகின்றன. பனி நிலத்தின் குளிரில் கொஞ்சம் கொஞ்சமாக உறையும் பனிக்கட்டி பாறைக்கடினம் கொள்வதுபோல அங்கு நிகழும் கலாச்சார கட்டுமானங்கள் மிக இறுக்கமாக, உடைப்பதற்கு இயலாததாக, கட்டிப்பட்டே உருவாகி அமைகின்றன. அப்படி உருவாகிவரும் கடினமான கட்டுமானம் அந்த நாட்டின் பொதுப் பண்பாடாக எதையும் தாங்கி நிலைபெறும் அமைப்பாக அமைகிறது.
இத்தகைய கடினமான அமைப்புகள் அது உருவாகிவரும் பண்பாட்டுக்கு செய்யும் நன்மையின் காரணமாகவே நீண்டகாலம் நின்று நிலைபெற்று இறுகி அமைகிறது. ஓடும் நீர் கங்கையைப் போன்றே புனிதமானதாக இருந்தாலும் அதுவே தேங்கும் போது கெட்டுவிடுவது போல மாற்றமில்லாத பண்பாட்டு இறுக்கங்கள் காலத்தின் நீட்சியில் கேடாக திரிபு கொள்ள ஆரம்பிக்கின்றன. எனவே காலஓட்டத்தில் தொடர் மாற்றங்கள் அவசியமாகின்றன.
அன்றெழுந்து மறையும் சிறிய பண்பாடுகள்போல அல்லாமல் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டின் பண்பாட்டில் அமையும் மாற்றங்களுக்கு மேலே சொன்ன பெரிய கட்டிடங்களை உடைக்கும் நுண்மை போல தேர்ந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எடுத்தோம் மாற்றினோம் என்ற செயல்பாடுகள் மிக தீமையை உருவாக்குவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்குத்தான் சாரு போன்ற எழுத்தாளுமைகள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தை கட்டியெழுப்பும் எழுத்தாளுமைகள் போலவோ அல்லது அதைவிட மேலாகவோ முக்கியமானவர்கள்.
****
இந்திய சமூகத்தில் புரையோடியிருக்கும் தீமைகளில் மிக முக்கியமானது சாதி. இன்று நாம் பார்க்கும் சாதி எதிர்ப்பாளர்கள் சிலர் பொதுவெளியில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தாலும் தன்னளவிலும் தன் குடும்ப அளவிலும் சாதியை விட்டு வெளிவர முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். என்னுடன் பணிபுரிந்த, பொதுவுடைமை பேசும் நண்பர் ஒருவர், அவர் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மேல் சாதி இல்லை என்று தெரிந்துகொண்டுதான் மேற்கொண்டு “நெருங்க” ஆரம்பிப்பார். ஆனால் அவர் வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்த போது மனைவியின் “சொந்த விருப்பம் அது அவரது சுதந்திரம்” என்று சொல்லி மிக ஆச்சாரமாக நடத்தினார். இவர்கள்தான் சாதியை ஒழிப்பவர்கள் என்று மேடை தோறும் பேசித் திரிகிறார்கள்.
“”இந்தியப் பொதுவுடமை இயக்கத்திலும் உயர்சாதியினரின் ஆதிக்கம்தான் இருந்துவருகிறது. இவர்களால் பறையரின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை – இவர்கள் மொண்ணையாக சாதி இல்லை என்கிறார்கள். ஓர் உயர்சாதியைச் சேர்ந்தவன் தன் சாதியை மறந்து விட முடியும் – சாதி கிடையாது என்று சொல்ல முடியும். ஒரு பறையனால் அது முடியவே முடியாது. பல படித்த பறையர்கள் தம் சாதி குறித்த தாழ்வு மனப்பான்மையினால் பிராமணராகி விடுகிறார்கள். இதுதான் கூடாது என்கிறார் ராஜன். நான் பறையன் என்று சொல் – தலை நிமிர்ந்து சொல் – இச்சமூகத்தின் அடிச் சக்தியாக இருந்து இயக்குவது எமது உழைப்புதான் என்று சொல். இப்படித்தான் நான் பறையனானேன். இது அனைவருக்கும் ஒரு சமூகக் கடமை. “”
“”நீங்களும் உங்கள் நண்பர்களும் சாப்பாடு வரவழைத்த போது மாடசாமி தனது சாப்பாட்டு டப்பாவைத் திறக்க முனைந்ததும் ஏதோ மாடசாமி ஒரு தகாத செயலைச் செய்து விட்டதுபோல் மிக அவசரத்துடன் அவரைத் தடுத்தது மட்டும் அல்லாமல் அதற்குப் பிறகும் அவரை மிக மோசமாக நடத்தியிருக்கிறீர்கள்.
இது மனதில் இருக்கும் நுண்ணிய சாதிய ஏற்றத் தாழ்வு மனப்பான்மையை சுட்டிக்காட்டுகிறது. மாற்றம் தனிமனிதனில் இருந்து அவர்களின் அன்றாட பிறப்பு வளர்புச் சூழலில் இருந்து தொடங்கவேண்டும் என்கிறது. இங்குதான் எழுத்தாளரின் நுண்மை செயல்புரிகிறது. இதை வாசிக்கும் வாசகனுக்கு உள்ளூர அந்த மாற்றம் நிகழ்கிறது. அவனுக்கு அந்த வேற்றுமையை உடனடியாக புரிந்துகொள்ள முடியும். இதுவே எழுத்தாளரின் சாதனை.
****
நாவல் இப்படி ஆரம்பிக்கிறது.
“”பொதுவிடங்களில் மூக்கு நோண்டவோ காது குடையவோ கூடாது, கண்களில் பீழையுடன் இருக்கக் கூடாது”” என்று பலவிதமான நல்ல பழக்கங்களை சொல்லி லலிதமாக இருக்க கற்றுக் கொள்ளுமாறு ஆரம்பிக்கும் நாவல் அதன் அடுத்த பக்கத்திலேயே “ஊர்த் தொம்பர்களில் ஒருவனான குருசாமியிடம் லலிதத்தை எதிர்பார்க்க முடியாது” என்கிறது. இது அதன் எதிர் உண்மை. ஒரு பிரச்சாரம் இலக்கிய உண்மையாக மாற்றம் பெரும் தருணம் இது.
இவையெல்லாம் நல்ல விஷயங்கள் இவை அல்லாதவை கெட்டவை என்று சொல்வது பிரச்சாரம். அதுவே ஊர்த் தோம்பர் குருசாமியிடம் அந்த பழக்கத்தை எதிர்பார்க்காதே என்று காரணம் சொல்லும்போது பிரச்சாரத்தை தாண்டி இலக்கியவாதிகள் காணும் எதிர் உண்மையை நாவல் தொட்டுவிடுகிறது.
மற்றொரு தருணத்தில் “நீரஜா” என்ற எழுத்தாளர் எழுதிய “தேடல்” என்ற நாவலின் கதாநாயகன் “மனித வாழ்வு கலாபூர்வமானதாக இருக்கவேண்டும் இதற்கு மனம்பூராவும் இசையாக வேண்டும். அது அவனுடைய எல்லாச் செயல்களிலும் வெளிப்படும். பலபேர் தங்கள் நகத்தில் ஊர் அழுக்கைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எவன் நகத்தை சுத்தமாக வைத்திருக்கிறானோ அவனே உண்மையான கலைஞன்“ என்றதும் அதை எதிர்த்து சீற்றம் கொள்கிறார், இம்மாதிரி எழுதுபவர்கள் சமூக விரோதிகள் என்கிறார்.
ஆனால் அதே பெண் எழுத்தாளர் சிகரெட் பெட்டியைப் பார்த்து “எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்ட போது நிச்சயமாக என்று பெட்டியுடன் கொடுக்கிறார். மேலும் சிகரெட்டை பற்ற வைக்க உதவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதாவது அவருக்கு அப்படி எழுதும் தகுதி இருக்கிறது என்று அந்த கணத்தில் நீரஜாவை மிகவும் நேசிக்கிறார்.
****
சிறிய வயது சூர்யாவின் பாலியல் அனுபவங்களை உள்ளபடியே வெளிப்படையாக சொல்வதன் வழியாக சமூகத்தில் இறுகி இருக்கும் பாலியல் சார்ந்த நடைமுறைகளை உடைத்து எறிகிறார் (இரண்டாவது நாவல் “ஜீரோ டிகிரி”யை விட பாலியல் வெளிப்பாடுகள் இதில் குறைவுதான்). நாவலின் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் சொல்லப்படும் உறவுகளை பற்றிய பார்வைதான் அதன் உச்சம்.
மனித உறவுகளின் இடியாப்பச் சிக்கல்கள். அபத்தங்கள். வெறும் காமத்திற்காக, பணத்திற்காக உறவுகளையும் சுற்றத்தையும் சீரழிக்கும் அற்பங்கள். மனிதமே இல்லை என சொல்ல வைக்கும் அவ நம்பிக்கைகள். அந்த பகுதிகளை வாசித்து முடித்த போது இறுதியில் கிடைத்த எண்ணம், “என்ன உறவுகள், இவை, இவற்றின் அர்த்தம் என்ன, இவை எதற்கு, இங்கு எதற்காக இவை இருக்கின்றன என்று தோன்றியது. இதுதானோ இந்த நாவலின் நோக்கம். அப்படியென்றால் உறவின் உன்னதம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதற்கான பதிலாக நான் காண்பது, எக்ஸிஸென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் இரண்டாம் பாகம் என்று சொல்லத்தக்க “ஜீரோ டிகிரி”யின் 34 வது அத்தியாயம்.
ஜெனஸில் என்ற மகளுக்கான கடிதங்கள். முழுமையான சுத்தமான அன்பை மட்டும் வெளிப்படுத்துபவை. ஒரு புலம்பலாக, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவையாக, பிதற்றலாக, கடவுளின் தோற்றமாக, பீத்தோவனின் சிம்பொனியாக தோன்றுபவை. உண்மையான அன்பின் வெளிப்பாடுகள் இப்படித்தான் இருக்கவேண்டுமோ ?. இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டுமா?.
***
சாருவை வாசிக்கும்போது மனதிற்குள் ஒரு விலக்கம் வருவதை வாசகனால் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அது உள்ளத்தில் மறைந்திருக்கும் ஒன்றை சுட்டிக்காட்டிவிட்டு நகர்கிறது. அது அந்த வாசகன் தனிமையில் தடவிப்பார்த்து இன்பம் கொள்ள அவன் உருவாக்கி வைத்திருக்கும் மாளிகை. தன் மனம் ஒளியால் மட்டுமே நிறைந்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் சாதாரண வாசகனின் இருள். அதில் இருப்பதே தெரியாமல் அவன் அவ்வப்போது அங்கு அமர்ந்திருந்தான். வாசிப்பின் வழியாக அதன் இருள் மூலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அதற்குமேல் அவன் அதை அங்கு வைத்திருக்க முடியாது.
இருளை கண்டு சொல்லியவர் என்ற காரணத்தினால் அவர்மீது இயல்பாக விலக்கம் எழுகிறது. ஆனால், பத்தாம் வகுப்பு ஆசிரியர் பிரம்பு நொறுங்க அடித்த அடி இனிமையாகும் தருணம் ஒன்று இருக்கிறது. அதற்கு அவனது பெண்ணோ பிள்ளையோ கைப்பிடித்து வளரும் பருவம் வரும் வரை காத்திருக்கும் நீண்ட காலம் பிடிக்கிறது. அப்போது அவர்மீது எழுந்த விலக்கம் மரியாதையாக மாற்றம் பெறுகிறது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
பி.கிருஷ்ணன் அரங்கு உரைகள்
மலேசியாவில் கூலிம் நகரில் ஜார்ஜ்டவுன் லிட் ஃபெஸ்ட் ஆதரவில் வல்லினம் நடத்திய இலக்கிய விழாவில் பி.கிருஷ்ணைன் ஷேக்ஸ்பியர் நாடக மொழியாக்க நூல்கள் வெளியிடப்பட்டதை ஒட்டி நிகழ்த்தப்பட்ட உரைகள்.
மமங் தய் – அருணாச்சல் கதைகள் 3
பின்யார் எனும் கைம்பெண்
அந்தக் கைம்பெண் பின்யார் நானும் மோனாவும் அவளைக் காணச் சென்றபோது நெருப்புக்கு அருகே துணிகளை காயவைத்துக்கொண்டிருந்தாள். வழக்கம்போல முணுமுணுத்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் ஈரத்துணிகளை கோப விசையுடன் உதறினாள். சடார்! சடார்! இருபத்தைந்தை எட்டும் முன் அவள் விதவையானாள், அதுவும் திருமணமாகி மூன்றாம் மாதத்தில். ஒரு நல்ல மனதுடையவனை திருமணம் செய்து புதுவாழ்க்கை ஒன்றை எதிர்நோக்கியிருந்தாள்,
அதற்கு முன்பு அவள் வேறொருவனுக்கு ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றிருந்தாள், அவனுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அவன் பெயர் ஓர்க்கா. சிரியம் குன்றுகளைத் தாண்டி நாட்டின் வட எல்லைக்கப்பாலிருந்து அவன் வந்திருந்தான். அழகான வளர்ந்த மனிதன், சிரிக்கும் கண்கள், இளம் பின்யாரை அவன் வீழ்த்திவிட்டான். அவளது குடும்பம் எதிர்த்தது, ஓர்காவின் குலம் நல்லதல்ல என்று வெளிப்படையாகச் சொன்னது. பின்யாரை எதுவும் அசைக்கவில்லை, ஒரு நாள் அவள் கருவுற்றிருப்பதை தெரிவித்தாள்.
அவள் குடும்பம் பெரியவர்களை அழைத்து சமரசம் பேசி திருமணத்தை நடத்தச் சொன்னது. தான்தான் தந்தை என்று ஏற்றுக்கொண்டாலும் ஓர்க்கா திருமண விஷயத்தை சமாளிக்கப் பார்த்தான். குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் இரக்கமின்றி அவளை விட்டு விலகத் திட்டமிட்டான்.
அவர்கள் தங்கள் குழந்தைக்கு கமுர் எனப் பெயரிட்டனர். அவன் தன் கிராமத்துக்குக் கிளம்பியபோது அவன் கமுரையும் அவனுடன் எடுத்துச் சென்றான், ஏனென்றால் அது ஆண் குழந்தை. திரும்ப வருவேன் என்று அவன் சொல்லியிருந்தாலும் அவன் திரும்பவில்லை. பின்யார் அவமானத்தால் தலைகுனிந்தாள். அவளது குலத்தின் அனைத்து சட்டங்களின்படியும் அவள்தான் அந்நிலைக்குக் காரணம், வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது.
சில வருடங்களுக்குப்பின் லெக்கனின் மனைவியாகிய பிறகு வாழ்க்கை முழுமையடந்ததாயிருந்தது. அவள் குடும்பம் இந்த உறவைப் பேணவும், தன்மையுடன் நடக்கவும் அவளை அறிவுறுத்தினர் ஆனால் லெக்கனை மணம் முடித்த சில நாட்களிலேயே அவன் ஒரு வேட்டை விபத்தில் இறந்துபோனான்.
அது நடந்து இருபது வருடங்களாகிறது. இப்போது பின்யார் தனியாக வாழ்ந்தாள், நாள் முழுக்க கழனிகளில் வேலைபார்த்தாள். எங்கள் கிராமத்தில் ‘கழனி’ என்பது வீடுகளை விட்டுத் தள்ளி மரங்கள் நிறைந்த குன்றுகளுக்கு நடுவே ஆங்காங்கே தென்படும் சிறிய விளை நிலங்கள். ஒவ்வொரு குடும்பமும் காய்கறிகள், செடிகள் வளர்க்க இடம் இருந்தது. இவற்றில்தான் நிலத்தின் சொந்தக்காரர்கள் அதிகாலைதோறும் சென்று களையெடுத்து, ஒதுக்கி, செடி நடுவதை வழக்காமாக்கியிருந்தனர். மதிய உணவை எடுத்துச் சென்று சூரியன் உச்சியில் இருக்கையில் அங்க்கிருந்த நிழற்குடிசையில் அமர்ந்து உண்டுவிட்டு தணலின் அருகே தேனீர் அருந்தி இளைப்பாறுவர். மலைப்பகுதியின் இந்தத் திறந்த வெளிகளின் அமைதிக்கு அடிமையாகிப் போய் சிலர் இரவிலும் தனிக்குடிலில் தங்குவதுண்டு. வீடு திரும்புபவர்கள் அந்நாளின் அறுவடையை , பச்சை மிளகாய், பூசணி, கிழங்கு, இஞ்சி என பெட்டிகளில் கட்டி ஊர் நோக்கிய நீண்ட பயணத்தைத் துவக்குவர்.
அப்படிப்பட்ட ஒரு மாலையில்தான் பின்யார், வெகுநடையாக கைகளை வீசியபடி வீடுதிரும்புகையில், ஒரு இளைஞன் அவளை நோக்கி தலைதெறிக்க ஓடி வருவதைக் கண்டாள். அவன் ஏதோ சத்தம் போட்டுக்கொண்டு வந்தான். எதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டு அவள் அவனை நோக்கி ஓடினாள். அப்போது அவள் அந்த வார்த்தையைக் கேட்டாள் ‘தீ’. ஐயோ! அவளது வீடு எரிந்தழிந்திருந்தது.
கூரைவழியே வந்த புகையிலிருந்து ஆரம்பித்தது என்றான் அவன், பின்னர் மூங்கில்கள் பீரங்கிக் குண்டுகளைப்போல வெடித்துச் சிதறின, ஊரையே பற்றி எரித்துவிடுவதைப்போல தீ பறந்தது. ஊரார் சிலர் உதவி செய்ய முயன்றனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை. அவளது, ‘ஏழைக் கைம்பெண் வீடு’ அழிந்துபோனது.
ஒரு வீடு தீ பிடித்தால் அதன் அதிர்ஷ்டமற்ற உரிமையாளர் ஊரைவிட்டு தள்ளிவைக்கப்படுவார். பின்யார் காட்டின் எல்லையில் ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள். நான் மோனாவுடன் அவளைச் சந்தித்தபோது அவள் தண்டனை நாட்களைத் தாண்டியிருந்தாள். தண்டைனை நாட்களில் அவளுடன் சேர்ந்து உணவருந்தக் கூடாது, அப்படிச் செய்தால் தீயை உருவாக்கும் ‘புலி பூதம்’ தூண்டப்பட்டு அவர்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும் அபாயம் இருந்தது. ‘கெட்ட பசியோடு அந்த நெருப்பு எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது’ அவள் எங்களிடம் சொன்னாள் ‘என் விதி சபிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.’
எங்களுடன் அமர்ந்து எப்படி அவள் புதுவாழ்வின் துவக்கத்தில் இருந்தபோது அவள் கணவன் வேட்டை விபத்தில் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதை மீண்டும் பகிர்ந்துகொண்டாள். ஆனால் இதெல்லாம் நடக்கும் என்றும் வருடத்தில் குறைந்தது மூன்று ஆண்கள் அங்கே வேட்டை விபத்துக்களில் இறக்கிறார்கள் என்றும் சொன்னாள்.
‘இவை எல்லாம் விபத்துக்கள்தானா?’ மோனா என்னிடம் கேட்கச் சொன்னாள்.
‘இந்த இறப்புக்களைக் குறித்த எந்த சந்தேகமும் இல்லை’ என்றாள் பின்யார். தன் கைகளைக் குனிந்து பார்த்துவிட்டுச் சொன்னாள் ‘ தெரியுமா. நான் அரிசிக் கள்ளுக்கான மாவை தயாரிப்பதுண்டு ஆனால் இப்போது இல்லை’.
பிறகு அது ஏன் என்று சொன்னாள். முன்பொரு காலத்தில் மிட்டி-மிலி எனும் மாய மனிதர்கள் இருந்தனர். இந்தக் குள்ளமான, அமதியான மக்கள்தான் முதன் முதலில் விசித்திரமான சி-ஈ எனும் ஈஸ்ட்டை உருவாக்கினர், அதுதான் அரிசிக் கள்ளை நுரைக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது.மிட்டி-மிலி குலம் மறையும் முன்பு மாயக் காட்சிகளால் மதியிழந்து அவர்கள் சி-ஈ பொடியை மனிதர்களிடம் தந்து சென்றனர், சி-ஈ சிறப்பு சக்திகொண்டதென்றும், அதை மதிப்புடன் கையாள வேண்டும் என்றும் நம்பிக்கை வலுத்தது. பெண்கள் மட்டுமே அதைக் கையாள அனுமதிக்கப்பட்டனர். பின்யார், அவளே சிறந்த சி-ஈ கேக்குகளை செய்பவள். அவள் அரிசி, கிழங்கு- புளிப்புப் பழங்களை வெள்ளை மாவுடன் கலந்து சிறிய தட்டையான வடிவில் உருவாக்குவாள். ‘ஆனால், அவை வேட்டைக்கு முன்பு உண்ணத் தடைசெய்யப்பட்டவை ஆண்கள் அதை உண்ணும்போது மிட்டி-மிலி மக்களைப்போலவே பிற்ழ்காட்சிகளைக் காண்பார்கள். சில நேரங்களில் சில வீடுகளில் இந்தக் கட்டுப்பாட்டை மீறிவிடுவார்கள் அப்போது எங்கள் ஆண்கள் காடுகளில் இறப்பார்கள்.’
நான் வியந்தேன்.வேட்டையின்போது இன்னொருவனைச் சுட்டவனை யாரும் கொலைக் குற்றம் சாட்டுவதில்லை என்பதை அறிந்திருந்தேன். அவன் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு காட்டுக்குள் ஓடி விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அனுசரித்தால் நடந்தது விபத்து என்றே கருதப்படும். ஆனால் பின்யார் தந்த விளக்கத்தை நான் கேள்விப்பட்டதில்லை, ஹோக்சோகூடச் சொன்னதில்லை.
பின்யாரைக் கைம்பெண்ணாக்கியவர் இப்போது மிக வயதானவர். பின்யாருக்கு அவரைத் தெரியும், கிராமத்தில் தினம் பார்ப்பவர்தான், ஆனால் அவள் ஒருபோதும் அவரை தன் கெடுவாய்ப்புக்கு குற்றம் சுமத்தவில்லை. ‘சி-ஈ’க்குள் ஒரு கெட்ட ஆவி இருக்கிறது, அது ஆண்களை பைத்தியமாக்குகிறது, அதனால்தான் நாங்கள் துர்மரணம் அடைபவர்களின் கண்களில் அப்பொடியைத் தூவிவிடுகிறோம். எனவே அவர்கள் எதையும் தேடி திரும்பி வரமாட்டார்கள்.’
மோனாவும் நானும் அமைதியாயிருந்தோம். தனது கரிய சாய்வான கண்களைக்கொண்டு அவள் எங்களைப் பார்த்து புன்னகைத்தாள். நீண்ட கொடிய நாட்களைக் கடந்து வந்தாலும் அவள் துடிப்புடன் இருந்ததால், தலைமுடியை ஒரு ஆணைப்போல குட்டையாக வெட்டியிருந்தாள். ஆனாலும் பாரம்பரிய உருளைக் கம்மல்களை அணிந்திருந்தாள், அவளது காதுகளை அவை கீழ்நோக்கி இழுத்தன. இன்னும் தனது எல்லா முத்துக்களையும், வெள்ளிக்காசுக்களையும், தாயத்துக்களையும் அணிந்திருந்தாள். அவள் இளம் மணப்பெண்ணாக அணிந்திருந்தவை அவை.
பின்யாரின் சோக வாழ்க்கை என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியது. ஒரு பெண்ணின் மனது ஆணின் மனதைவிடப் பெரியது இல்லையா? அவளது குழந்தையை எப்படி இழந்தாள், கணவனையும், இறுதியாக அவள் வீட்டையும் இழந்தாள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இன்னொரு கதையை மக்கள் நினைக்கவோ மீட்டவோ விரும்பவில்லை.
ஒரு தூரக் கிராமத்தில், ஓர்க்கா பின்யாரின் மகன் கமுர் ஒரு இளைஞனாக வளர்ந்தான். கமுர் முன்னேறிவிட்டிருந்தான். அரசு அலுவலகம் ஒன்றில் சிப்பந்தியாக இருந்தான், இதனால் அவன் வேலைபார்த்துக்கொண்டிருந்த பிகோ நகரத்தில் ஒரு செங்கல் வீடு அவனுக்கு வாய்க்கப்பெற்றது. ஒரு நல்ல பெண்ணை மணம்புரிந்திருந்தான், எங்கள் ஊர் பெண், பெண் மழலைக்கும் இரு மகன்களுக்கும் தந்தை. ஒரு மதியம் அவன் இளம் மனைவி சமையலைறையில் இருந்தாள். அவளது நீண்ட கூந்தல் ஒரு நீண்ட தடிமனான கயிறைப்போல கட்டப்படாமல் அலைந்தது, தோளின் மேல் ஒரு துவாலியை விரித்திருந்தாள். பக்கத்து அறையில் மகள் ஒரு தாழ்ந்த கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள், அங்கிருந்தபடியே குழந்தையை அவள் பார்க்க முடிந்தது. ஒரு கணம்தான் அவள் திரும்பியிருப்பாள், அப்போது அவள் ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டள் ஒரு துல்லிய ‘நையெக்! அவள் திரும்பினாள், அவளது கணவன் கட்டில் அருகே நின்றுகொண்டிருந்தான், இரத்தம் வழியும் அரிவாளோடு.
சத்தமிடாமல் அவள் அடுக்களையின் கதவின் வழியே தாவி ஓடினாள். அவன் அவளைத் துரத்தினான்.
சிறிய தோட்டத்தின் வெளிக்கதவின் கொண்டி பூட்டப்படவில்லை. ஆனால் அதை அடைந்தபோது அவள் முதுகில் வெட்டுபட்டதை உணர்ந்தாள். கதறினாள், அக்கம்பக்கத்து மக்கள் ஓடி வந்தனர். அவள் கணவன் அரிவாளைக் கீழே எறிந்து தரையில் விழுந்து புலம்பினான், அழுதான் ‘என்ன ஆனது? என்ன ஆனது?’ அவன் கேட்டான் ‘என்ன காரியம் செய்துவிட்டேன்!’
அவன்தான் பேரதிர்ச்சி அடைந்திருந்தான். அவன் குழந்தையின் கொலை குறித்து எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. எப்படி அவன் பின்தொடர்ந்து சென்று பின்பக்கம் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த தன் மகனை வெட்டினான் என்பதுவும் நினைவில்லை. பெரிய பையன், பள்ளிக்குச் சென்றிருந்தவன், மட்டுமே தப்பித்தான்.
கமுர் மன்னிப்பை வேண்டினான். தரையில் வேதனித்துத் துடித்தான், அந்தக் கறுப்புக் கணங்களைக் குறித்து எந்த நினைவும் இல்லை என்றான். தான் ஒரு மந்திரக்கட்டில் இருந்திருக்கவேண்டும் என்பதே அவனது காரணமாயிருந்தது. ஒரு கெட்ட ஆவி அவனது உடலில் பாய்ந்துவிட்டது, அந்தக் கொடுங்கணத்தில். அவன் தன் பிள்ளைகளை, மனைவியை அந்தத் துருபிடித்த அரிவாளால் வேட்டையாடியபோது, மனைவியின் தளர்ந்த கூந்தல் அரிவாள் வெட்டை தடுத்திருந்தது, இல்லையென்றால் அவன் மனைவியும் இறந்திருப்பாள்.
நகரத்தில் அவளது கதையைக் கேட்ட அனைவரும் காறித் துப்பிவிட்டு அமைதியாக இருந்தனர். இது போன்றவற்றிற்கு அர்த்தம் என்ன?
December 9, 2022
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. விழா நிகழ்வு 18 டிசம்பர் 2022 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் (ஆர்.எஸ்.புரம்) நிகழும்.
17 டிசம்பர் காலை முதல் விஷ்ணுபுரம் இலக்கியவிழா தொடங்குகிறது. வாசகர் சந்திப்புகள் காலை 9 மணியில் இருந்து தொடங்கும்.
எழுத்தாளர்கள் கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தி, கமலதேவி, அகரமுதல்வன், அ.வெண்ணிலா ஆகியோரும் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப்பும் பதிப்பாளர் விஜயா வேலாயுதமும் வாசகர்களைச் சந்திக்கின்றனர்.
18 டிசம்பர் காலையில் அருணாச்சல பிரதேச எழுத்தாளரும் கவிஞருமான மமங் தாய் வாசகர்களைச் சந்திக்கிறார். சாரு நிவேதிதாவுடன் ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை 5 மணிக்கு அராத்து இயக்கிய சாரு நிவேதிதா பற்றிய ஆவணப்படம் திரையிடப்படும். தொடர்ந்து விருதுவிழா நிகழும்.அதில் மமங் தாய், போகன் சங்கர், ஜெயமோகன், காளிபிரசாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்
வாசகர்கள் அனைவரும் இருநாட்களிலும் பங்கெடுக்கவேண்டுமென கோருகிறோம்.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
செந்தில்குமார் 936225581
ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் இரண்டாவது சந்திப்பு
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள விஷ்ணுபுரம் அலுவலகத்தில் வரும் 11.12.22 ஞாயிறு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை கமலதேவியின் சில படைப்புகள் மீது கலந்துரையாடல் நடைபெறும். லண்டன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒரு ஓவியத்தை திறந்து வைக்கிறார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு வரவும்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
98659 16970.
கே.பி.வினோத்,ராஜன் சோமசுந்தரம், நான்கு பருவங்கள்
எங்கள் விஷ்ணுபுரம் கும்பலைச் சேர்ந்த கே.பி.வினோத்தை பலர் அறிந்திருக்கலாம். பயணங்களில் உடனிருப்பார். ஆகவே பல பயணநூல்களின் கதாபாத்திரமும் கூட. அவர் ஒரு முக்கியமான கணினி மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரி. அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இந்தியா திரும்பியது இங்கே ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன்.
அதற்கு காரணம் நான். ஒருநாள் இயல்பாக இணையத்தில் அலைந்தவர், தன் ஊரைப்பற்றி தேடினார். நான் குமரி உலா என்னும் கட்டுரையில் பத்மநாபபுரம் பற்றி சொல்லியிருந்தேன். வினோத்தின் ஊர் அது. அக்கட்டுரைக்கு வந்து சேர்ந்தவர் என் இணையதளத்தின் தொடர்வாசகர் ஆனார். அமெரிக்காவில் அவர் வெற்றிகரமான கணினிநிபுணர். ஆனால் அது தன் அடையாளம் அல்ல, தன் நிறைவுக்காக எதையாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.
இங்கே வந்தபின் இசை, இலக்கியம் என அலைந்தவர் சட்டென்று சினிமாவை தன் கலை என கண்டுகொண்டார். வீட்டில் ஒரு திரையை அமைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் சினிமா பார்த்தார். திரைப்பட நூல்களை பயின்றார்.
வேலைபார்த்துக்கொண்டே இயக்குநர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் சிறுமியாக நடித்தவர் வினோத்தின் மகள்) விடியற்காலையில் அலுவலகம் சென்று காலை எட்டு மணிக்குள் வேலையை முடித்துவிட்டு படப்பிடிப்புக்குச் சென்று நள்ளிரவில் வீடுதிரும்பி மீண்டும் மறுநாள் காலையில் அலுவலகம் செல்வார். படப்பிடிப்பு அரங்கில் இருந்தபடியே அலுவலகத்தை நிர்வாகம் செய்வார்.
வினோத் மிஷ்கினி பிசாசு, சவரக்கத்தி உட்பட படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் முதலில் எடுத்த படம் ஞானக்கூத்தன் பற்றியது வெறும் 16000 ரூ செலவில், அஜிதனின் காமிராவை வைத்துக்கொண்டு, தான் ஒருவர் மட்டுமே இயக்கம் ஒளிப்பதிவு எல்லாமே செய்து அவர் எடுத்தபடம் அது. ஞானக்கூத்தன் அந்தப்படத்தை மிக விரும்பி டெல்லி உட்பட பல இடங்களில் அதை வெளியிட ஏற்பாடு செய்தார். தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களில் தலையாயது என்று அசோகமித்திரன் எழுதினார்.
அதன்பின் வினோத் விஷ்ணுபுரம் விருது பெற்ற ராஜ்கௌதமன், அபி ஆகியோரைப்பற்றிய ஆவணப்படங்களை எடுத்திருக்கிறார். கே.பி. வினோத்தின் ஆவணப்படங்கள் மிகச்சுருக்கமான முதலீட்டில் எடுக்கப்பட்டவை (எந்தப்படமும் மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவை கடந்ததில்லை) தனக்கான காட்சி மொழி கொண்டவை. அந்த எழுத்தாளரின் இலக்கியப்படைப்புலகை புரிந்துகொண்டு, மிகநுட்பமாக அவற்றை விரிவாக்கம் செய்பவை.
உதாரணமாக அபி பற்றிய ஆவணப்படம். அபியின் புனைவுலகில் மாலை, மைதானம், நிழல் ஆகியவை எந்த இடம் வகிக்கின்றன என்று பார்த்தால் அந்த ஆவணப்படத்தின் அழகு புரியும். இலக்கிய ஆசிரியரின் உடல்மொழியை பதிவுசெய்வதில் தனிக்கவனம் செலுத்துவது வினோத்தின் வழி.
வினோத் பல திரைமுயற்சிகள் செய்தார். பலமுறை அவை கைகூடி, அணுகும்போது விலகிச்சென்றன . ஆனால் உளம்தளராமல் முயன்றபடியே இருந்தார். இப்போது அவர் எழுதி இயக்கும் மலையாளப்படம் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. ஃபோர் சீசன்ஸ். ஓர் இனிய இசைக்காதல்.
ராஜன் சோமசுந்தரம் அமெரிக்க விஷ்ணுபுரம் வட்டத்தின் தீவிர உறுப்பினர். இசையமைப்பாளரான அவர் ஏற்கனவே யாதும் ஊரே என்னும் புறநாநூறு பாடலுக்கு இசையமைத்து உலகத்தமிழ் மாநாடுகளில் அப்பாடல் ஒலித்துள்ளது. சங்கப்பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துள்ளார். கமல் ஹாசன், ஶ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி பாடிய நீலம் இசைக்கோவை (என்னைப் பற்றிய ஆவணப்படத்தின் பகுதி) அவர் இசையமைத்தது.
ராஜன் சோமசுந்தரம் இந்தப்படம் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படமே ஒரு இசைப்படம் ஆகையால் அவருக்கான இடம் நிறையவே உள்ளது.
படம் வெற்றிபெறவேண்டும், அவர்கள் இருவருக்கும் பெருந்தொடக்கமாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்.
மலேசியா வாரம்-2
தமிழ் விக்கி எழுத்தாளனுக்குக் கொடுப்பது என்ன?
இருபத்து ஐந்தாம் தேதி காலையில் எழுந்து எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டோம். எனக்கு எப்போதுமே பிடித்தமான வெந்நீர்க் குளியல். காலை மிக அற்புதமாக தொடங்குகிறது என்னும் உணர்வை அது உருவாக்குகிறது.
எங்களை அழைத்துச்செல்ல பிரம்மவித்யாரண்யத்தில் இருந்து கார் வந்திருந்தது. அங்கே ஏற்கனவே ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் அவர் மனைவி கிருபாலட்சுமியும் வந்திருந்தனர். நியூசிலாந்துக்கு இலக்கிய விழாவுக்காகச் சென்றிருந்த ம.நவீன் வந்திருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கிருபாவும் அங்கிருந்தார்கள்.
பிரம்மவித்யாரண்யம் முழுக்க ஆட்கள். ஈப்போ, கொலாலம்பூர், சுங்கைப் பட்டாணி, பினாங்கு என வெவ்வேறு ஊர்களிலிருந்து வண்டிகளிலும் பேருந்துகளிலும் வந்திருந்தார்கள். பிரம்மவித்யாரண்யம் இன்று மலேசியாவின் எல்லா தமிழ்ப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் மையம் என ஆகிவிட்டிருக்கிறது.
முதல்நாள் மதியத்திற்கு மேல் வல்லினம் ஒருங்கிணைத்த தமிழ்விக்கி சிறப்புவிழா. வல்லினம் மலேசிய அணி தமிழ்விக்கியில் இரண்டு மாதக் காலத்தில் 200 பதிவுகள் என இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டு செய்து முடித்தது. பதிவுகள் எல்லாமே மிக விரிவானவை, முழுமையானவை. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி நூல் என்றே சொல்லத்தக்கவை. தமிழில் அது ஒரு சாதனை.
தமிழ் விக்கி பரிசுபெற்றவர்களுடன்மலேசியாவில் இருந்து தமிழ் விக்கியில் முதன்மைப் பங்களிப்பாற்றியவர்களுக்கு பாராட்டும், தமிழ் விக்கி பற்றிய கல்வியாளர் கலந்துரையாடலும் நடைபெற்றது. ம.நவீனுடன் பதினொருவர் தமிழ்விக்கி பணியில் ஈடுபட்டனர். கோ.புண்ணியவான், சுப்புலட்சிமி ஆகியவர்கள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள்.
அரவின் குமார், பரிமித்தா, சாலினி, திலிப் ஆகிய நால்வரும் மிகவும் இளையவர்கள், வருங்காலத்தில் பரவலாக அறியப்படவிருப்பவர்கள். சல்மா தினேசுவரி ,குமாரசாமி, மீரா, அ.பாண்டியன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.
அர்வின் குமார்இவர்கள் எழுதிய கட்டுரைகளில் விரிவும் பரப்பும் ஆச்சரியமூட்டுவன. சரவாக், போர்னியோ பகுதி பழங்குடிகளைப் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகள் உள்ளன. மலேசியாவில் நிகழ்ந்த பண்பாட்டு போராட்டம் பற்றிய முழுமையான செய்திகள் உள்ளன. தமிழில் ஒரே இடத்தில் இத்தனை தரவுகள் இதற்குமுன் திரட்டப்பட்டதே இல்லை.
ஆர்வமுள்ளவர்கள் சயாம் மரணரயில்பாதை பற்றிய ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துப் பார்க்கலாம். அதிலிருந்து எத்தனை நூல்களுக்கு, எத்தனை ஆளுமைகளுக்கு தமிழ்விக்கி கொண்டுசெல்கிறது என்று கவனிக்கலாம். பூஜாங்க் சமவெளி அல்லது கோ.சாரங்கபாணி கட்டுரைகள் எல்லாமே பெரும் கட்டுரைக்கொத்துக்கள்.
ம.நவீன் தமிழ்விக்கி (மலேசியாவின்) இடம் மற்றும் பங்களிப்பு பற்றி ஒரு நல்ல கட்டுரையை வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். இந்தியாவுக்கு வெளியே தமிழ் விக்கிக்கு இப்படி ஒரு உத்வேகமும் ஒருங்கிணைப்புத் திறனும் கொண்ட குழு அமையவில்லை. குறிப்பாக இலங்கையில் இருந்து குறிப்பிடும்படியான பங்களிப்பே இல்லை. (தமிழ் விக்கி எழுத்தாளனுக்குக் கொடுப்பது என்ன?)
தமிழ் விக்கி எனக்கு அளிப்பது என்ன? எனக்கு அறுபது வயது. தமிழிலக்கியத்தில் நாற்பதாண்டுகாலமாக ஈடுபாடு. ஆனால் இன்றுவரை தமிழகம் பற்றி, தமிழ்ப்பண்பாடு பற்றி எனக்கிருந்த சித்திரம் இன்றுதான் முழுமையடைகிறது. ஒரு கலைக்களஞ்சியம் அளிக்கும் முழுமையான அறிதல் என்பது ஈடிணையற்றது. பண்பாட்டின் எல்லா தளங்களையும் தொட்டு ஒட்டுமொத்தமான சித்திரத்தை அது அளிக்கிறது. வாசித்து அதை அடையலாம், ஆனால் பங்களிப்பாற்றுவது என்றும் மறக்காமல் வாசிப்பதற்கு நிகரானது.
முத்து நெடுமாறன், அருண் மகிழ்நன்நவீனக் கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர்களுக்குக் கதைக்கருக்கள் மிகக்குறைவாக இருக்கின்றனவா என்னும் ஐயம் எழுகிறது. ஆகவேதான் கதைகள் நினைவில் நிற்பதே இல்லை. காரணம் வாழ்க்கையின் சிறிய வட்டம். அனுபவங்களின் எல்லைக்குட்பட்ட தன்மை.
எழுத்தாளன் தன் வாழ்க்கையை, தான் கண்டதையும் அறிந்ததையும் மட்டும் எழுதினால் சுருங்கிவிடுவான். அவன் எழுதவேண்டியது பண்பாட்டை. சொந்த அறிதல்களைக் கூட விரிந்த பண்பாட்டுப் புலத்தில் வைத்து பார்ப்பவனே உண்மையான எழுத்தாளன். அதற்கு எழுத்தாளனுக்கு பண்பாட்டுக் கல்வி, வரலாற்றுக் கல்வி நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும்.
கணேஷ் பாபுதன் வரலாறு, பண்பாடு பற்றிய தொடர்வாசிப்பு இல்லாத எழுத்தாளனுக்கு இந்தியாவில் நிகழும் மாபெரும் வீழ்ச்சி என்பது ஒன்றுதான். அவன் மேலைநாட்டு படைப்புகளை வாசித்து அறியாமலேயே நகலெடுக்க ஆரம்பிப்பான். அது ஓர் இலக்கியத் தற்கொலை.
எழுத்தாளனாக எனக்கு இன்னும் இருபதாண்டுகள் ஒவ்வொரு நாளும் எழுதினாலும் தீராத கதைக்கருக்களை தமிழ் விக்கி அளித்துள்ளது. அவை சங்க காலம் முதல் இன்றுவரை விரிந்து கிடக்கின்றன. பன்னிருபாட்டியலில் ஒரு நூலாகிய அவிநயத்தை உதிரிவரிகளில் இருந்து மீட்டெடுத்த மயிலை சீனி வேங்கடசாமியில் இருந்து ராமலிங்க வள்ளலாருடன் தொழுவூர் வேலாயுத முதலியாருக்கு உருவான முரண்பாடு வரை நான் எழுதுவதற்கு எண்ணும் கருக்களை எழுத எனக்கு இன்னும் நூறாண்டு தேவை.
மலேசிய தமிழ் விக்கியில் பங்களிப்பாற்றிய ஆகியோருக்கு பாராட்டுச்சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. அந்த குழுவினருடன் இணைந்து நின்றபோது ஒரு பெருநிறைவை அடைந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், மே மாதம் அமெரிக்காவில் தமிழ்விக்கி தொடங்கப்பட்டது. ஆகஸ்டில் தமிழ்விக்கி விழா ஈரோட்டில் நடைபெற்றது. இவ்வாண்டு நிகழும் மூன்றாவது விழா இது. தமிழ் விக்கி ஓர் இயக்கமாக ஆகிவிட்டிருப்பதை, என் கைகளில் இருந்தும் சென்றுவிட்டிருப்பதை எனக்குக் காட்டியது அந்நிகழ்வு.
தமிழ் விக்கியை பொறுத்தவரை அடுத்த ஐந்தாறாண்டுகளில் அது இவ்வாறு என்னைவிட்டு விலகி, முற்றிலும் இளையோர் கைகளுக்குச் செல்லுமென்றால் அதுவே என் வெற்றி எனக் கருதுவேன். அந்த வாய்ப்புகள் இந்த முகங்கள் வழியாகத் தெரிகின்றன என்பது அளிக்கும் நிறைவுணர்வை அடைந்தேன்.
இந்த விழாவில் பி.கிருஷ்ணன் அவர்களை கௌரவித்தது ஓர் நிறைவூட்டும் விஷயம் என்று தோன்றியது. தமிழில் தொடர்ச்சியாக எழுதிய மூத்த படைப்பாளி. முதுமையிலும் இலக்கியம் மீதான பெருநம்பிக்கையுடன் தன் பணியை தொடர்கிறார். அடுத்த ஆண்டு தனக்கு 91 அகவை நிறைவடைவதாகவும், அதற்குள் ஷேக்ஸ்பியரின் அடுத்த நாடகத்தின் மொழியாக்கத்தை முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.
ஆனால் இன்னொரு கோணமும் உண்டு. பி.கிருஷ்ணன் அவருக்கு வானொலி அளித்த வேலைக்காக பெரிதும் முயன்று அதை அடைந்தவர். அவ்வேலையை முழுமையாக தன்னை ஈடுபடுத்திச் செய்தவர். அதில் வெற்றியையும் அடைந்தவர். அதன்பொருட்டு அவர் தன் இலக்கியப் பணியை ஒத்திவைத்தார். ஓய்வுபெற்றபின்னரே இளமைக்கால கனவாகிய ஷேக்ஸ்பியர் நாடக மொழியாக்கங்களைத் தொடங்கினார்
பெரும்படைப்பாளிகள் பெருந்தியாகங்களில் இருந்தே உருவாகிறார்கள். அவர்கள் தங்கள் படைப்பியக்கத்தையே முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். அதன்பொருட்டு எதையும் துறப்பார்கள். அவர்கள் தங்கள் படைப்பை உருவாக்குவதில் இருந்து நோய், வறுமை, ஒடுக்குமுறை எதுவும் தடுத்ததில்லை.
இன்றும் நம் அனைவர் முன்னிலையிலும் ஒரு தெய்வம் வந்து நின்று உனக்கு உலகியல்வெற்றியா இலக்கியமா எது தேவை என கேட்கிறது. நம் பதிலே நாம் யார் என்பதைக் காட்டுகிறது. அவ்வகையில் நான் என்றும் அசோகமித்திரனின் தரப்பே. சமரசமே இல்லாமல் தன் படைப்புடன் நின்றவர், அதன்பொருட்டே வாழ்ந்தவர், பிற அனைத்தையும் அதன்பொருட்டு தியாகம் செய்தவர் அவர்
வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், இலங்கையிலும் இதேபோல விழாக்கள் ஒருங்கமைக்கப்படவேண்டும் என்றும், அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பின் பல்கலைக்கழகங்களில் தமிழ் விக்கியை கொண்டுசென்று சேர்க்கும் விழாக்கள் நடைபெறவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.
விழாவில் மலேசிய தமிழ் விக்கி பற்றிய ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. கல்வியாளர்களான ப.தமிழ்மாறன் , முனீஸ்வரன் குமார், கோ.சாமிநாதன், முனைவர் கிங்ஸ்டன் ஆகியோர் உரையாடினர். தமிழ்விக்கியின் சாத்தியக்கூறுகள், மேலதிகமாக தேவையானவை ஆகியவை விவாதிக்கப்பட்டன. அ.பாண்டியன் வழிநடத்தினார்.
அதன்பின் நான் ஒரு ஏற்புரை ஆற்றினே. தமிழ்விக்கி போன்ற கலைக்களஞ்சியங்கள் அளிக்கும் முழுமைப்பார்வையைப் பற்றியே சொன்னேன். அதிலும் இணையக் கலைக்களஞ்சியம் தொடுப்புகள் வழியாக முழுமையை நோக்கி உந்திக்கொண்டே இருக்கிறது. எஸ்.வையாபுரிப் பிள்ளை பற்றி படித்தால் உடனே தேவநேயப் பாவாணர் நோக்கிச் சென்றாகவேண்டும். அந்த முழுமையான பார்வையை அளிப்பதனால்தான் கலைக்களஞ்சியங்களுக்கு எப்போதுமே அரசியலாளர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகள் உருவாகின்றன.
சிங்கையின் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணன் தன் மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்தார். நீண்டகாலம் சிங்கை வானொலியில் பணியாற்றியவர். அவர் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வல்லினம் ஆதரவில், ஜார்ஜ் டவுன் இலக்கியவிழாவின் துணைப்பகுதியாக மறுநாள் வெளியிடப்பட்டன. அதற்காகவே அருண்மொழியும், ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் வந்திருந்தார்கள்.
பி.கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஹாம்லெட், ரோமியோ ஆண்ட் ஜூலியர், ஓதெல்லோ ஆகிய மூன்று நாடகங்களின் உச்சகட்டக் காட்சிகளை மட்டும் நாடகமாக ஆக்கி மைஸ்கில்ஸ் என்னும் அறவாரியத்தின் மாணவர்கள் நடித்தனர். செம்மொழியாலான வசனங்களை சற்று விட்டுவிட்டுச் சொன்னாலும் நாடகம் நன்றாகவே இருந்தது.
வழக்கறிஞர் பசுபதி நடத்தும் மைஸ்கில்ஸ் அறவாரியம் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். அது பெரும்பாலும் கல்வியை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கானது. பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் அவர்கள். மறுவாழ்வுக்கான தொழில் மற்றும் கல்விப் பயிற்சியை அங்கே அளிக்கிறார்கள்.
நடிகர்கள் இயக்குநருடன் கோ.புண்ணியவான்அந்த மாணவர்கள் எப்படி கலை வழியாகத் தங்களைக் கண்டுகொள்கிறார்கள், எப்படி அவர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறது என பசுபதியும் அந்நாடகத்தின் இயக்குநரும் பேசினார்கள்.
விழாவுக்கு முத்து நெடுமாறன் வந்திருந்தார். முரசு அஞ்சல் என்னும் எழுத்துருவை உருவாக்கிய கணிப்பொறியியலாளர். 2000 த்தில் நான் நண்பர்களின் உதவியுடன் மருதம் என்னும் இணைய இதழை தொடங்கியபோது அவருக்கு கடிதமெழுதி இலவசமாக எழுத்துரு அளித்து உதவும்படி கோரியிருந்தேன் (அன்று யூனிகோடு இல்லை) அவர் அதை அளித்தார். அதை நினைவுகூர்ந்து பேசினேன்.
அன்று பிரம்மவித்யாரண்யத்திலேயே தங்கினோம். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு பி.கிருஷ்ணன் அரங்கு. பி. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றி ஏற்கனவே அவருடைய மலரில் அருண்மொழி ஒரு கட்டுரை எழுதியிருந்தாள். அந்த மலர் அங்கே வெளியிடப்பட்டது. நான் பி.கிருஷ்ணனையும், எழுத்தாளர்கள் அத்தகைய பெருஞ்செயல்கள் செய்வதன் அவசியத்தையும் முன்வைத்து பேசினேன்
பி கிருஷ்ணன் பற்றி அருண் மகிழ்நன் பேசினார். அருண் மகிழ்நன் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய விரிவான கலைக்களஞ்சியங்களையும் ஆவணத்தொகுப்பையும் உருவாக்கியவர். சிங்கையின் கலாச்சாரச் செயல்பாடுகளின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவர்.
அருண்மொழி, பி.கிருஷ்ணன், கிருபா நவீன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றி அருண்மொழி நங்கை பேசினார். ஷேக்ஸ்பியரின் நாடகத்தன்மை, மொழியில் வெளிப்படும் உணர்ச்சிகரமான கவித்துவம் ஆகியவற்றைச் சொல்லி அவை எப்படி கிருஷ்ணனின் மொழியிலும் மறுவடிவம் பெற்றிருக்கின்றன என்றார். கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த மாக்பெத் நாடகத்தின் ஒரு காட்சியை கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் கிருஷ்ணன் எழுதிய துப்பறியும் நாவல்கள் பற்றி பேசினார். மலேசியாவில் கண்ட வெவ்வேறு நாட்டார் கலைவெளிப்பாடுகள் பற்றிபேசி அவற்றுடன் இணைத்து கிருஷ்ணனின் துப்பறியும் நாவல்களில் நகைச்சுவை ஓர் ஊடகமாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அழகுநிலா அவருடைய நகைச்சுவை நாடகங்கள் பற்றி பேசினார். கிருஷ்ணன் பெரும்பாலும் சிங்கை அரசின் கொள்கைகளை விளக்கி வானொலியில் எழுதவேண்டிய பொறுப்பில் இருந்தார். ஆகவே நகைச்சுவை நாடகங்களின் கருப்பொருட்கள் பெரும்பாலும் அரசால் அளிக்கப்பட்டவை. கம்பம் இல்லங்கள் எனப்படும் சிற்றில்லங்களில் இருந்து மக்களை அடுக்குமாடி வீடுகளுக்கு கொண்டுசெல்வதற்கான தூண்டுதலாகவே பல நாடகங்களை எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் கணேஷ்பாபு அவருடைய கதைகள் பற்றிப் பேசினார். கணேஷ்பாபுவின் மொழியும் உடலசைவுகளும் எஸ்.ராமகிருஷ்ணனை மிகவும் நினைவூட்டின. அவரும் எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிரமான வாசகர். அவருடைய எழுத்துக்கு ஊக்கமளித்தவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று பின்னர் உரையாடலில் சொன்னார்
அழகுநிலாசிங்கப்பூர் எழுத்தாளர் லதா கிருஷ்ணனின்ய இலக்கியப் பணிகள் பற்றி பேசினர். அ.பாண்டியன், அர்வின்குமார் இருவரும் பேசினர். அ.பாண்டியனும் அர்வின்குமாரும் இப்போது வல்லினம் அமைப்பின் தீவிரமான செயல்பாட்டாளர்கள். இளைஞரான அர்வின்குமாரின் மொழியில் இருந்த உறுதியும், சொற்களின் தெளிவும் வியப்படையச் செய்தது. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் முக்கியமான ஆளுமையாக இருப்பார்
கிருஷ்ணனுக்கு இவ்வாண்டு 90 அகவை நிறைவடைகிறது. உடல்தளர்வால் கிருஷ்ணனால் விரிவாகப் பேச முடியவில்லை. தன் இலக்கியப் பயணத்தை பற்றிச் சுருக்கமாகப் பேசினார். இளமையில் போரில் பெற்றோரை இழந்து 14 வயதில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கே கடையில் வேலைபார்த்து, தன்முயற்சியால் படித்து வானொலியில் வேலைக்குச் சேர்ந்தவர். புதுமைப்பித்தனை ஆதர்சமாகக் கொண்டவர்.
அருண் மகிழ்நன்மாலையில் மீண்டும் பினாங்கு திரும்பினோம். ஜார்ஜ் டவுனின் தெருக்களில் சுற்றிச் சுழன்று உணவகங்களைக் கண்டடைந்து சாப்பிட்டோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக் கட்டிடங்களை பெரும்பாலும் அழிக்காமல் பழுதுநோக்கி அப்படியே வைத்திருப்பதனால் சிங்கப்பூர், கொலாலம்பூர் என எந்த நகருக்கும் இல்லாத ஒரு பண்பாட்டுத்தனித்தன்மை பினாங்கு நகருக்கு உள்ளது.
பிரிட்டிஷ் பாணி கட்டிடங்களின் நிமிர்வு ஒரு செவ்வியல்தன்மை கொண்டது. செவ்வியல் என்பது தன் மரபை இழக்காதது, கூடவே எல்லாவகையான வெளிப்பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டிருப்பது. உண்மையில் பிரிட்டிஷ் கட்டிட பாணி என ஒன்று இல்லை. இந்தோ சாரசனிக், இந்தோ சாக்ஸன் என்றெல்லாம் கலவை அடையாளங்களே அதற்குள்ளன. பினாங்கின் கட்டிடங்கள் மலாய்த்தன்மையும் கலந்தவை.
அப்படி ஒரு நகர்கூட இந்தியாவில் இல்லை. கோவா, பாண்டிச்சேரி, ஜெய்ப்பூர், உதய்பூர் எல்லாம் அவ்வாறு பேணப்பட்டிருக்கவேண்டிய ஊர்கள். அவற்றின் காட்சியொருமையும் காலப்பழமையும் புதிய கட்டிடங்களால் மூர்க்கமாக அழிக்கப்பட்டுவிட்டன.
மலேசியாவின் தமிழுணவுகளின் கலப்புதான் கொஞ்சம் விந்தையானது. மலேசியாவில் பரவலாக உண்ணப்படுவது சோயாபீன்ஸால் உருவாக்கப்படும் ஒருவகை செயற்கை இறைச்சி. ஒருவகை பாலாடைக்கட்டி எனலாம். அதை போட்டு சாம்பார், பொரியல் எல்லாமே செய்துவிடுகிறார்கள். நான் பொதுவாக எதையும் உண்பவனாயினும் எனக்கு பனீர் பிடிக்காது. கூடவே இந்த சோயாவும்.
எழுபதுகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்தியாவில் சோயாவை அறிமுகம் செய்ய பெரும் முதலீட்டை செய்தார். சோயாவை புகழ்ந்து எழுதும் நாவல்களுக்கான ஒரு போட்டி ராணி வார இதழால் அறிவிக்கப்பட்டது – ’சக்தி சோயா’ நிறுவனத்தின் பரிசு அதற்கு. அன்று பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்த நான் ஒரு நாவல் எழுதி அனுப்பினேன். ஆறுதல்கடிதம் வந்தது. அப்போது சோயாவை நான் கண்ணால் பார்த்திருக்கவில்லை.
பின்னர் மகாலிங்கம் அவர்களை நேரில் பார்த்தபோது சொன்னார். அந்த திட்டம் தோல்வியடைந்தமைக்கு மக்களுக்கு அதன் சுவையோ மணமோ பிடிக்காமலிருந்தது மட்டும் காரணம் அல்ல. அன்றிருந்த சோட்டா நாட்டுமருத்துவர்கள் அது உடலுக்கு ஒவ்வாதது, சூடு என்று சொன்னதுதான் முதன்மைக் காரணம். ’கொஞ்சம் பணமிறக்கி சோயாவின் மருத்துவநன்மையை கற்பனையாகப் பிரச்சாரம் செய்திருக்கலாம்’ ஆனால் நேர்மையாகச் செல்வோம் என்று எண்ணினேன் என்றார் மகாலிங்கம் இன்று டிராகன் பழமும் டுரியனும் அமோகமாக விற்கின்றன. ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கிளப்பிவிட்டு காசுபார்க்கிறார்கள்.
(மேலும்)
மமங் தாய் – அருணாச்சல் கதைகள் 2
அடேலா மற்றும் கெப்பியின் அமைதி
லோசி எங்களுக்காக ஒரு கொண்டாட்ட விருந்தை சமைத்துக்கொண்டிருந்தாள். ஹோக்சோ, மோனாவுடன் அந்த மூங்கில் வராந்தாவில் உட்கார்ந்து, நெருக்கமாக அமைந்த வீடுகளிலிருந்து எழும் விறகுப் புகைகள் மூண்ட மாலையைக் காணும்போது, நான் வாசிக்க மட்டுமே முடிந்த உலகங்கள் எல்லாவற்றையும் இந்த புழுதி படிந்த, ஒற்றைச் சாலையுடைய கிராமத்தில் உருவாக்கிவிட முடியும் என்று எண்ணினேன். இங்குள்ள அன்பையும், பிறப்பையும், விபத்துக்களையும், அவை அனைத்தும் ஊரிலும் காட்டிலும் நடந்தாலும், அவற்றை வேறெங்கும் நடத்திக்காட்ட முடியும்தானே? எங்கும் மக்கள் மன அமைதியை பல வழிகளில் உருவாக்கிக்கொள்கிறார்கள், விதி வந்து வெட்டிச் சாய்க்கும்வரை அல்லது தூக்கி உயர்த்தும்வரை சமாளித்துக்கொள்கிறார்கள்.
ஹோக்சோவும் அவனது அம்மாவும் அரிசிக் கள்ளை எங்களுக்கென எடுத்து வந்து மோனாவுக்கு அருகே அமர்ந்தார்கள்.அவர்களுக்கிடையே ஏற்கனவே ஒரு விநோத உறவு உருவாகியிருந்தது. மோனா ஏதோ ஒன்றால் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ஹோக்சோவின் அம்மா என்னைப்பார்த்து ‘நமது விருந்தினரைப்பற்றிச் சொல், அவள் ஒரு தாயா?’ எனக் கேட்டபோது மோனா புரிந்துகொண்டாள். அவள் சொன்னாள் என் மகளுக்காக செபிக்கச் சொல்.’
மோனா ஒரு அரபிய-கிரேக்கக் கலவை அவளது கணவன் ஜூல்ஸ் பிரெஞ்சு நாட்டவன். அதிகார வர்க்கம், எந்த மதிப்பீட்டின்படியும் வெற்றிகரமான தம்பதிகள் – அவன் ஒரு புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர் அவள் ஒரு உயர்வகை பத்திரிகையின் முதலாளி, ‘உலகின் நாட்குறிப்பு’ (டைரி ஆஃப் தெ வோர்ல்ட்), வழக்கத்துக்கு மாறான உண்மைக்கதைகளை உள்ளடக்கியது அது. இருவரும் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள், நாடுகள் கண்டங்கள் கடந்து வாழ்பவர்கள். இப்போது தில்லியில் ஒரு சிறிய பணிக்காக வந்துள்ளார்கள்.
ஜூல்ஸ் மோனாவை விட அதிகம் பயணிப்பவன். அவன் நீண்ட சுற்றுப்பயணம் ஒன்றில் இருக்கையில் மோனா, வீட்டில் தனிமையில்,, திடீரென அவளின் மூன்று வயது மகளிடம் ஏதோ குறையுள்ளதை உணர்ந்தாள். அவர்கள் ஒரு பணிப்பெண்ணை நியமித்திருந்தனர், கர்வாலிலிருந்து ஒரு நடுத்தர வயது கைம்பெண், மாடியில் புகைபோக்கியை ஒட்டி கட்டப்பட்டிருந்த அறை ஒன்று அவளுக்கு தரப்பட்டிருந்தது. வலுவான பெண், வேலைகளில் குறையில்லை. மோனாவின் மகள் அடெல்லா அவளுடன் நெருக்கமாயிருந்தாள், அவர்கள் இருவரும் நெருக்கமாயிருந்ததால் மோனா அதிக நேரம் வெளியில் செல்ல ஆரம்பித்தாள், தாள்களை அலசவும், கணினியில் அலையவும். பின்னர் ஒரு நாள் அவள் மகள் பேச மறுத்துவிட்டாள்.
மோனா அவள் முன் மண்டியிட்டு அவளை ஒரு வார்த்தை பேச வைக்க முயன்றாள், அந்தச் சிறுமி அவளை ஒரு நீண்ட நிமிடத்திற்கு வெறித்துப் பார்த்தாள் பின்னர் அவளை முன்பு அறிந்திராததைப்போல திரும்பிக்கொண்டாள்.
அடுத்த சில நாட்கள் மோனா தன் குழந்தையுடன் போராடினாள்.
“என் குழந்தையே! சொல்! சொல் உனக்கு என்னவானது!” அழுதாள், எதிர்பார்ப்புடன் குழந்தையை உலுக்கினாள்.
மருத்துவர்களிடம் சென்றாள், உறவினர்களை நண்பர்களைக் கேட்டாள். அம்மாவை தொலைபேசியில் அழைத்து குடும்ப சரித்திரத்தை ஆராய முயன்றாள். இல்லை. அதுபோல் முன்னெப்போதும் இல்லை. எந்தப் பின்னணியும் இல்லை, குடும்பத்தில் ஆஸ்துமாவோ, ஆட்டிசத்துடன் தொடர்புடைய அணுசிதைவு நோயோ பரம்பரையில் எதுவுமில்லை, ஆனால் அடெல்லா இப்போது ஒரு விநோதமான ஆட்டிசக் கோளாறால் அவதியுறுகிறாள் என்றது மருத்துவ ஆய்வு.
ஜூல்ஸ் திரும்பினான் கசப்பான வாய்ச்சண்டைகளிட்டனர்.
‘இவள்தான் ஏதோ செய்திருக்க வெண்டும்!’ மோனா சீறினாள், முழங்காலில் நின்று அழுத பணிப்பெண்ணை நோக்கி.
‘இப்போது அதைச் சொல்லி என்ன பயன்!’ ஜூல்ஸ் அவளைக் கடிந்தான்.
அந்த வார்த்தைகள் மோனாவை முகத்தில் அறைந்தன. ஜூல்சின் நடவடிக்கைகளும் தொனியும் அவள்தான் குற்றம் செய்ததைப்போல் இருந்தன. கோபத்தில் அவனது முகத்தில் உமிழ்ந்துவிட்டு என்றென்றைக்குமாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட நினைத்தாள்.
‘அவன்தான் எப்போதும் உலகம் முழுவதும் பயணத்தில் இருந்தான். பல நேரங்களில் அவனால் ஒரு சந்திப்பை தவிர்க்க முடிந்திருக்கும் ஆனால் அவன் செய்யவில்லை.’ அந்த மோசமான நாட்களை நினைக்கும்போதெல்லாம் அவள் கோபம் பொங்கி அழும் நிலையில் இருப்பாள்.
ஆடெலாவை ஒரு ஆட்டிசக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தனர். தங்கள் குழந்தை ஒரு எழுதுமேசையின் முன் உட்காரவைக்கப்பட்டு அவளுக்கு ஒரு தாளும் வண்ணமெழுகுக் குச்சியும் தரப்பட்டபோது அவர்கள் பயத்திலும் துக்கத்திலும் நடுங்கினர். மேற்பார்வையாளப்பெண் அவர்களைப் போல பலரும் உள்ளனர் என தைரியம் சொன்னாள்.
நான் முடித்தபோது மோனா சொன்னாள்-‘என் குழந்தை எனக்குத் திரும்பவும் வேண்டும்’. ஹோக்சோவையும் அவனுடைய அம்மாவையும் பார்த்தாள், அவர்கள் அவளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல. ‘நான் மீண்டும் ஒரு தாயாக விரும்புகிறேன்.’ அவள் எதையாவது கீழே போட்டுவிட்டாலோ, ஒரு மேசையை இடித்துக்கொண்டாலோ அல்லது அழுதாலோ அவள் குழந்தை சிரித்தது, எந்த உணர்வும் இன்றி.
ஹோக்சோ அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர் இப்போது சொன்னார் ‘சில விஷயங்கள் திரும்பப் பெறமுடியாதவை, அவை எப்போதும் நிகழ்கின்றன. நாம் தயாராய் இருப்பதே சிறந்தது.’
பிறகு கிட்டத்தட்ட சிறுமி அடெல்லா உலகத்திலிருந்து விலகிக்கொண்ட அந்த காலத்தை ஒட்டி கேரான் டோகும் குடும்பத்தைச் சூழ்ந்த சோகத்தைக் குறித்துச் சொன்னார்
பக்கத்து கிராமமான யப்கோவின் விளையாட்டு மைதானத்தில் அது நிகழ்ந்தது. டோகுமின் மகன் இரண்டு வயதை அப்போதுதான் கடந்திருந்தான். ஒருவித இருமல் அவனது மார்பை உலுக்கிக்கொண்டிருந்தது, அவனது அன்னை அவனை அவரது அப்பாவின் கம்பளியில் சுருட்டி அவர்களுக்கு உதவி செய்ய பணித்திருந்த இளம் பெண்ணின் முதுகில் போட்டிருந்தாள். பத்து பன்னிரண்டு வயதிருந்த அப்பெண்ணின் முதுகில் அவன் வசதியாக இருப்பதாகத் தோன்றியது. அந்தச் சிறுமி கொஞ்சும் சத்தங்களை எழுப்பியபடியே மைதானத்தில் நின்றுகொண்டிருந்த பிற குழந்தைகளுடன் நின்றுகொள்ளச் சென்றாள், அவர்களும் குழந்தைகளை முதுகில் கம்பளியில் கட்டியிருந்தார்கள். அவர்கள் துள்ளிக் குதித்தார்கள், குழந்தைகள் செய்ய வேண்டிய எல்லா சேட்டைகளையும் செய்தார்கள். பலா இலையில் சுழலும் காத்தாடியைச் செய்தனர், வீடுகளுக்கிடையே ஓடினர், மண்மீதும் கற்கள் மீது பந்தயம் வைத்தனர்.தன் ஒளிகுறைந்த வீட்டில் பருத்தி நூற்றபடியே இருக்கும் வயதான விதவை டாஜெர் மட்டும்தான் அவர்களது உற்சாகத்தால் எரிச்சலடைபவள்.
‘பார்த்து விழுந்துவிடாதே’ அவள் கோபத்தில் கத்தினாள்.
பின்னிரவில் குழந்தைக்கு காய்ச்சல் கொதித்தது. தாயும் மகனும் அந்த நிம்மதியற்ற இரவில் நெருப்பிற்கு அருகில் உறங்கினர் காலையில் அக்குழந்தை எவ்வளவு உறைந்திருந்தது என்பதை அவள் கவனித்தாள். அவள் நடைமுறை தெரிந்தவள் என்பதால் மருத்துவமனைக்கு ஓடவில்லை. குழந்தைகளுக்குப் பல நோய்கள் வரும், அவள் அதை அறிந்திருந்தாள், இரு பெண்களை வளர்த்தவள் அவள். ஆனால் அவள் கவலையுற்றாள். குழந்தையின் நிலைமை முன்னேற்றம் காணாமல் இருந்ததால் பெற்றோர் பிகோவிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனர். அதிகாலையிலேயே அவர்களது குன்றின் அடிவாரத்தில் வரும் ஒரே பேருந்தில் கிளம்பினர். ஊரை அடைய நண்பகல் ஆனது. வழக்கமான மருத்துவர் இல்லை, புதிய மருத்துவரைக் காண காத்திருந்தனர். அவர்களின் முறை வருவதற்குள் நேரம் ஆகியிருந்தது. ஆனால் மருத்துவர் கனிவுடையவர். மாத்திரைகளை எழுதினார் தாதியிடம் சிறுவன் கெப்பிக்கு ஒரு ஊசியையும் போட சொன்னார். ஒரு வாரத்திற்கு அவனை படுக்கையில் கதகதப்பாக வைத்திருந்து பின்னர் அழைத்துவரச் சொன்னார்.
கெப்பி அதற்குப் பின் முன்னேற்றமடைந்ததாகத் தோன்றியது. அவன் அம்மா அவனுக்கு மசித்த சோறும் சுடு நீரும் கொடுத்தாள் அவன் வாயைத் திறந்து அவள் தந்த அனைத்தையும் உண்டான். ஆனால் இரவில் அவன் உரக்க அழுதான் அது அவளை பயத்தில் உறையச் செய்தது. ஒரு காலை அவனது தந்தை டோகும் அவனது தோளுக்கருகே கையில் ஒரு கரிய வடுவைக் கண்டார். அது எப்போதும் அங்கே இருந்திருக்கலாம் குழந்தை பெட்டியில் கட்டப்படும்போது ஏற்பட்ட தடம் என்று கருதினார்கள், கூடவே அவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வதும் கவனித்துக்கொள்வதும் என அந்தக் வடுவை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. டேஜர் கிழவி பார்க்க வந்தபோது குழந்தைகள் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது அவர்கள் குழந்தையை கீழே போட்டிருக்கவும் வாய்ப்புண்டு என கோபத்துடன் சொன்னாள். பணிப்பெண்ணை அவர்கள் கேட்டபோது அவள் வழுக்கி விழுந்ததாகவும் ஆனால் குழந்தை வெளியே விழவில்லை எனவும் சொன்னாள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தட் என கீழே விழுந்ததாகவும் சொன்னாள். அவ்வளவுதான்.
டோகும் அவரது மனைவியிடம் அந்த நாள் முழுவதும், இரவிலும் பேசவேயில்லை, தன்னை அந்த சோகத்திற்கு பொறுப்பாக்குவது குறித்து அவள் கடிந்துகொண்டது வரை பேசவில்லை. மறு நாள் காலை அவள் கையின் மேல் தன் கையை வைத்தார், எதுவும் பேசவில்லை, அவள் அவருள் மறைந்திருந்த பயத்தைப் புரிந்துகொண்டாள், அவரை மன்னித்தாள்.
ஆரவாரமின்றி, மெதுவாக நாட்கள் நகர்ந்தன. ஒரு குடும்பத்தின் உயிரோட்டம் குழந்தைகள்தான், எல்லோரையும் பயம் பீடித்திருந்தது. குழந்தை வாயை அகலத் திறந்து சத்தமற்ற கூக்குரலை எழுப்பியதை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு ஆதரவாக கிராமத்தில் அனைவரும் செயல்பட்டனர். கெப்பியின் அம்மா அழுதாள், உணவு ஊட்டும்போது அவனது உதட்டின் தீண்டலில் பயந்தாள். டோகும் போதையூட்டப்பட்டவனைப்போல அலைந்துகொண்டிருந்தார், வருவோருக்கெல்லாம் தலையசைத்தபடியே. உறவினர்களின் அறிவுரையின்பேரில் பல சடங்குகள் செய்யப்பட்டன. டோகும் புகழ் வாய்ந்த மந்திரவாதிகளைத் தேடி நெடுந்தூரங்கள் அலைந்தார். ஒரு வருடம் கழிந்தது. குழந்தை நகரவில்லை, அழுதது, உண்டது, உறங்கியது, அதன் மேலுடல் முறுகி இறுகி அசைவின்றியிருந்தது. அவனை எங்கும் தூக்கியே சென்றார்கள். யாரோ சொன்னார்கள் ஒரு சிறப்பு சடங்கைச் செய்யவேண்டும் என, அது இப்போது வழக்கத்தில் இல்லை, ஆனால் ஒரு பாம்பின் ஆவி குழந்தையைச் சுற்றியிருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும்.
ஹோக்சோதான் அந்தச் சடங்கை நடத்த அழைக்கப்பட்டார். அவருக்கு அது இப்போது தெளிவாகத் தெரிந்தது என்று எங்களிடம் சொன்னார். காட்டுக்கு நடுவே வழக்கமாக மரம் வெட்டும் மரக்கிடங்கிற்கு ஒரு வெய்யில் காலை ஒன்றில் டோகும் சென்றார். மரத்தடிகள் இன்னும் குவித்துதான் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மேலே அடுக்கி வைக்க ஒரு யானை ஒரு நாள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. மரத்தடிக்கள் பின்னர் அளந்து அறுக்கப்படும். வேலையாட்கள் சத்தமாகப் பேசிக்கொண்டே மரக்குவியலை நோக்கி நகர்ந்தபோது யானை சட்டென உறைந்து நின்றது. கெஞ்சினாலும், தூண்டினாலும், மிரட்டினாலும் அது ஒரு அடிகூட முன்வைக்கவில்லை. எரிச்சலடைந்த வேலையாட்களுக்கு அப்போதுதான் மரக்குவியலில் ஒரு பாம்பு குடிபுகுந்திருக்கலாம் எனத் தோன்றியது. நினைத்தமாத்திரத்தில் அவர்கள் அனைவரையும் கொல்லும் பலம் கொண்ட ஒன்பது அடி உயர யானையை வேறு எது பயமுறுத்தும்?
டோகும் அது ஒரு ராஜ நாகமாக இருக்கலாம் என நினைத்தார். அவர்கள் எதையும் பார்க்க முடியவில்லை எனவே அவர்கள் மரங்களை தூக்க முயலவில்லை. நாகத்தின் வீரியம் அனைவரும் அறிந்ததே அது தூண்டப்படாமலே தாக்கும் என்பது தெரிந்ததே. பலமுறை அது சட்டென எழுந்து பாவப்பட்ட எவனோ ஒருவனை துரத்தியதுண்டு. அதன் விஷப்பற்கள் உள்ளிறங்கியதும் அது தாடைகளை அசைத்து இயன்ற அளவில் விஷத்தை உள்ளே ஏற்றிவிடும்.
இரவு முழுவதும் டோகும் மரங்களையும் யானையையும் நினைத்தபடி விழித்துப் படுத்திருந்தார். அவர் மனைவி பெருமூச்சு விட்டபோது சலசலப்பொன்றை அவர் கேட்டார். முழு நிலவு எழுவதைக் கண்டார். தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவிக்கொண்டார். எல்லாவித விலங்குகளும் வாழும் காடு சூழ அவர்கள் வாழ்ந்துவந்தனர், ஆனால் அவரது பல நண்பர்களையும்போல வேட்டையாடும் அனுபவம் அவருக்கு இல்லை, கொல்வதையும் அவர் விரும்பவில்லை. உண்மையிலேயே தடிகள் நடுவே பாம்பு இருக்குமானால் அந்த இரவே அது விலகிச் செல்ல வெண்டும் என செபித்தார்.
மறுநாள் காலை அவரது பழைய தொப்பியை அணிந்துகொண்டு தன் குறுந்துப்பாக்கியை விருப்பமின்றி எடுத்துக்கொண்டார். அதைப் பயன்படுத்தும் தேவை வரக்கூடாது என நினைத்துக் கொண்டார். இரண்டு சுற்று ரவைகளை மட்டும் எடுத்துக்கொண்டார்.
யானையை மீண்டும் தூண்டினர் அது படிய மறுத்தது. டோகும் தயார் நிலையில் மரங்களுக்கு அருகில் முழங்காலிட்டார். எந்த அசைவுமில்லை. மற்றவர்களும் யானையும் விலகி நிழலில் நின்றனர், டோகமின் முதுகு எரிந்ததை அவர் உணர்ந்தார். திடீரென அவரது கண்கள் வண்ணம் மாறும் ஒளிக்கீற்றொன்றால் ஊடுருவப்பட்டன. தங்க நிறம், பச்சை, கரிய ஊதா, சொல்லமுடியா அழகுடன் அது மாறிக்கொண்டும் ஒளிர்ந்துகொண்டுமிருந்தது. ஒரு கணத்தில் சூரிய ஒளியில் பொதியப்பட்டு திடீரெனத் தன்னை வெளிப்படுத்திய அந்தக் காட்சியை நோக்கிச் சுட்டார். அவரது பார்வை மங்கியது. ஒரு மரம் சிதறியதில் மரத் துகள்கள் எல்லா திசைகளிலும் பறந்தன. வேலையாட்கள் ஓடி வந்தனர் ஆனால் அந்தக் ஒளிக்காட்சி மறைந்துவிட்டிருந்தது. அவர்கள் மீண்டும் காத்திருந்தனர். அசைவெதுவும் இல்லை, எல்லாம் அசைவற்று அமைதியாக முன்பைப்போல இருந்தன. இப்போது அவர்கள் பொறுமையிழந்து உணர்ச்சியின் விளிம்பிலிருந்தனர்.
‘கட்டைகளை நகர்த்துவோம் வாருங்கள்’ என்றான் ஒருவன், சபித்தபடி துப்பியபடி அவர்கள் மரத்தடிகளை தூக்க ஆரம்பித்தனர், டோகும் துப்பாக்கியை எடுத்து மீண்டும் குறிபார்த்தார். அவரது உடலின் ஒவ்வொரு நரம்பும் தசையும் இறுக்கமடைந்திருந்தன. எந்தச் சிந்தனையும் இன்றி, தயாராகக் காத்திருந்தார், தவறிவிடக் கூடாது என வேண்டிக்கொண்டார். அப்போது அவர் ஒரு பயங்கர காட்சியைக் கண்டார். மரங்கள் ஒவ்வொன்றாக அசையும்போதும் சுற்றியிருந்த மலைப்பாம்பு ஒன்று தன்னை சுருள் சுருளாக தீவிரமாக விடுவித்துக்கொண்டிருண்தது. டோகும் பின்னர் என்றைக்கும் நினைவில் வைத்திருந்த பயங்கரம் என்னவென்றால் அந்தப் பாம்பின் முழுமுற்றான அமைதி. அதன் உடல் துப்பாக்கிச் சூட்டால் நடுவில் கிழிந்திருந்தது, இன்னும் போராடிக்கொண்டிருந்தது, மதியத்தின் ஒளி அதன் செங்குத்தான மஞ்சள் விழித்திரையில் ஒளிர்ந்தது. டோகும் மூச்சைப் பிடித்து நின்றார். அவர் தலைமுடி குத்துவதை உணர்ந்தார், சுழன்றுகொண்டிருந்த தலை நோக்கி ஒரு வேகத்தில் சுட்டார். அவருக்கு அதிஷ்டம் இருந்தது. தலை சிதறிப்போனது. உடல் வளைந்துகொண்டிருந்தபோதும் அந்த வியத்தகு ஒளிவண்ணம் மங்கிப்போவதை டோக்கம் கண்டார், சூரியனும் பசும் காடும் மங்கி மறைவது போல இருந்தது.
‘இதனால்தான்’ ஹோக்சோ தொடர்ந்தார் ‘சர்ப்பச் சடங்கு செய்யப்படவேண்டியிருந்தது. ஆனால் சிலவற்றிற்கு காலம் தேவைப்படுகிறது.’ இரவு முழுவதும் அவர்கள் மந்திரமிசைத்தும் ஆவிகளுடன் சமரசம் செய்தும் அக்குழந்தையை குணமாக்க வேண்டிக்கொண்டார்கள், ஆனால் ஆவிகள் அழைக்க முடியாத இடத்துக்குச் சென்றுவிட்டன. ‘திரும்பி வராத ஆன்மாக்கள்தான் அதிக ஆபத்தானவை’ என்றார்
மோனாவும் நானும் கேட்டுக்கொண்டிருந்தோம். கதை பிற கிராமவாசிகளைப் போல எனக்கும் நன்கு தெரிந்ததுதான். ‘இவையெல்லாம் எப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன.’ ஹோக்சோ சொன்னார் ‘நமக்கு நடக்கும்போதுதான் நாம் அறிந்துகொள்கிறோம்’.
ஹோக்சோ இப்படியே பேசிக்கொண்டிருந்தார். அவர் காலமற்ற தூரப் பகுதி ஒன்றில் வாழ்வதைப்போலிருந்தது. வீட்டில் அவரது பச்சை காக்கி அரைக்கால்சட்டையில் இருந்தபடியே, மனிதர்களின், விலங்குகளின், தாவரங்களின் வாழ்க்கையில், பிரபஞ்சத்தின் துவக்கங்களில் தனக்கிருந்த ஆர்வத்தை பழக்கிக்கொண்டார், அல்லது எப்படி ஒரு சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் ஆவது என யோசித்தார். மனிதனின், விலங்கின் எந்த ஒரு நிலைமையை அல்லது செய்கையைக் கண்டும் அவர் ஆச்சர்யமடைவதில்லை. அடெல்லாவின் ஆட்டிசம் குறித்து நான் பேசியபோது அவர் கவனித்தார் புரிந்துகொண்டார் அவரது வருத்தங்களை மோனாவிடம் அமைதியாக தெரிவிக்கவும் அவரால் முடிந்தது. ஆனால் அவள் முதலில் சொன்னபோது நான் நூலகத்தில் தேடவேண்டியிருந்தது. அவளது சோகத்தைப் பகிர்வது கொந்தளிப்பானதாய் இருந்தது.
இரு குழந்தைகளுக்கும் ஒரு பொதுவான குணமிருந்தது: அவர்கள் இருவருமே இசையை விரும்பினர். பெருநகரத்தில் ஆட்டிசக் குழந்தைகளுக்கான மையத்தில், மோனாவும் ஜூல்சும் அசைவற்று நின்றிருந்தனர், குழந்தைகளின் குரல் எழுந்து ஒரு இசைவற்ற வினோத ஒலியாகத் தடுமாறி ஒலித்தது. அவர்கள் கண்களில் அது கண்ணீரை வரவழைத்தது. பின்னர் அவர்களது மகள் ஒரு சிறிய கொட்டை முழக்கினாள், சரிந்த சிரிப்பொன்றை உதிர்த்தாள், அவர்கள் நிறைவடைந்தார்கள். கிராமத்தில் டோகமின் சிறு பையன் நாள் முழுவதும் படுக்கையில் இருந்தபடி வீட்டின் மூலை முடுக்கெங்கும் எதிரொலித்த வானொலி கேட்டான். அவனது சகோதரிகளும் நண்பர்களும் அவ்வப்போது அவன் முன் நின்று கேலிமுகம் காட்டிச் சென்றனர், அவ்வப்போது அவனைச் செல்லமாய்த் தட்டினர். அவற்றை அவன் உணர்ந்தானா என அவர்களுக்குத் தெரியவில்லை.
அந்தக் குடும்பத்தை சந்திக்க நான் வரும் ஒவ்வொரு நேரமும் ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களை சந்திக்க மோனாவை அழைத்துச் சென்றேன், வானொலி ஒலித்துக்கொண்டிருந்தது, அந்தப் பையனின் அம்மா புன்னகையுடன் வரவேற்றாள். இளமையாகவும் வலுவாகவும் இருந்தாள். ஒல்லியாகவும் கறுப்பாகவும் இருந்த டோகும் மூலையிலிருந்து சிரித்தபடியே எழுந்து வந்து பணிப்பெண் சில நாட்கள் வீட்டுக்குச் சென்றிருப்பதால் அவர்தான் தாதி என்றார். கசப்பான தேனீரை அருந்தினோம். அவரது மனைவி அனைத்தையும் செய்தார், கெப்பியின் சகோதரிகள் வளர்ந்து ஒல்லிக்கால்களையுடைய பதின்மவயதுப் பெண்களாகியிருந்தனர், அவர்கள் அலைந்து மோதிக்கொண்டிருந்தனர், நாங்கள் இடைஞ்சலில்லாமல் பேசுவதற்காக அம்மா அவர்களை அதட்டி வெளியே போகச் சொன்னார்.
அவர்களது நாட்கள் எப்படி கடந்து சென்றன என்பதை நான் மீண்டும் கண்டேன். கணப்படுப்பில் ஒளிர்ந்தெரியும் நெருப்பு, தழலின் அருகே சுருண்டுகிடந்த நாய்கள், மூலையில் கட்டில் என வாழ்க்கை மிக இயல்பாக சென்றுகொண்டிருந்தது, உலகெங்கிலும் ஒளிமங்கிய பல மூலைகளிலும் இருப்பவர்களைப்போலவே அவர்களும் தங்கள் வலியை மறைத்துக்கொ ண்டார்கள், பருவங்கள் மாறிக்கொண்டேயிருந்தன.
தமிழில் சிறில் அலெக்ஸ்
வ.ரா
சிலர் வாழ்நாள் முழுக்க இலக்கியத்தில் செலவிட்டிருப்பார்கள். இலக்கிய ஆளுமையாக திகழ்ந்திருப்பார்கள். இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார்கள். ஆனால் தங்களுக்கென குறிப்பிடும்படியான இலக்கிய ஆக்கங்கள் இல்லாத நிலையில் காலத்தால் மறக்கப்பட்டுமிருப்பார்கள். மலையாளத்தில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை அப்படிப்பட்ட ஆளுமை. தமிழில் வ.ரா அவ்வகையானவர். இலக்கியவாதிகளை உருவாக்கிய இலக்கிய மையம் அவர். ஆனால் இன்று அவர் பாரதியாரின் வரலாற்றை எழுதியவர் என்று மட்டுமே அறியப்படுகிறார்
வ.ராமசாமி ஐயங்கார்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


