Mathavaraj's Blog, page 8

March 9, 2022

க்ளிக் - 19 (தொடர்கதை)


தனக்குத்தான் அலாரம் அடிக்கிறது என்ற பிரக்ஞையோடு எரிச்சலும் சேர்ந்தே வந்தது. கண் விழித்தாள் பூங்குழலி. குட்நைட் ப்ளக்கிலிருந்து பழக்கமான சின்ன வெளிச்சம்  தெரிந்தது. கட்டிலையொட்டி இருந்த ஜன்னல் ஓரத்தில் தடவி மொபைலை எடுத்துப் பார்த்தாள். சரியாக ஐந்துதான். எழுந்து விளக்கைப் போட்டாள்.

 

பக்கத்துக் கட்டிலில்  ஸ்ரீஜா ஒருக்களித்து கால்களைச் சுருக்கி சின்னக் குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தாள். ஃபேன்  காற்றில் நெற்றியை ஒட்டி சன்னமாய் அசைந்து கொண்டிருந்த தலைமுடிகளில் அவளிடம் ததும்பிக் கொண்டிருக்கும் அமைதி தெரிந்தது. எப்போது அவளது படுக்கைக்குச் சென்றாள் எனத் தெரியவில்லை. குறும்பு பொங்கும் பார்வையோடும், சிறு புன்னகையோடும் ரசித்தாள் பூங்குழலி.

 

ஸ்ரீஜாவுக்கு ஒன்பது மணிக்கு கிளம்பினால் போதும். அவள் தூங்கட்டும் என்று அறையின் விளைக்கை அணைத்துவிட்டு பாத்ரூம்  விளக்கைப்  போட்டாள். அங்கிருந்து கசியும் வெளிச்சத்தில் அறைக்குள் நடமாடப் பழகியிருந்தாள். கம்பெனிக்கு செல்ல கால் டாக்ஸி புக் செய்தாள். பேஸ்ட், பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

 

ஆறரை மணிக்கு சிஸ்டம் முன்னால் உட்கார வேண்டும் என்றாலும், கடந்த சில நாட்களாய், ஏழு, ஏழரைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறாள். நேற்றெல்லாம் கிட்டத்தட்ட எட்டு மணியாகி விட்டது. ஸ்ரீஜா மடியில் அப்படியே படுத்திருக்க வேண்டும் போலிருந்தது. லீவு போட்டு விடலாமா என்று கூட நினைத்தாள். ஸ்ரீஜாதான் சமாதானப்படுத்தி, “நானும் ஆபிஸ் போகணும். வா, இரவு பேசிக்கொள்ளலாம்” என அனுப்பி வைத்தாள்.

 

ஃபாஸ்டஸ் லியோ கடுப்பாகியிருக்க வேண்டும். முகத்தில் இறுக்கம் தெரிந்தது. மதுரைக்கு அண்ணன் வீட்டுக்குச் சென்றதாகவும், காலையில் பஸ் வர நேரமாகிவிட்டதாகவும் சொல்லி சமாளித்தாள். “இதையே வழக்கமாக்கிடாத. பாத்துக்க.” சிரிக்காமல் சொன்னான்.  மிரட்டல் போலிருந்தது. இனி சரியான நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று அப்போதே உறுதி செய்திருந்தாள். பேசிப் பேசியும் ஒருவரை ஒருவர் அறிந்தும் ஒரு வழியாக தூங்கும்போது இரவு இரண்டு மணி போலாகி விட்டது.  

 

குழந்தை போல் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். எப்படி மனித மனங்களை ஊடுருவிப் பார்த்து விடுகிறாள் என்று ஆச்சரியமாய் இருந்தது. படுத்துக் கிடந்து எல்லாவற்றையும்  இவள் சொல்லி முடித்த பிறகு “நா ஒன்னு கேப்பேன். மறைக்காம பதில் சொல்லணும்” கேட்டாள் ஸ்ரீஜா. சரியென்று தலையாட்டினாள் பூங்குழலி.

 

“தியேட்டரில் அந்த இருட்டில் நரேன் உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது உன்னைத் தொடுவான் என்று எதிர்பார்க்கவே இல்லையா?” மிக அருகில் படுத்து நெருக்கமாக பூங்குழலியின் கண்களைப் பார்த்து கேட்டாள்.

 

“அப்படில்லாம் நான் யோசிக்கல” மெல்ல இழுத்துச் சொன்னாள்.

 

“பொய் சொல்ற. அது போல ஒன்றை எதிர்பாத்திருக்கணும். அவன் செட்டாகலன்னு சொல்ல ஒரு காரணம் தேடிட்டு இருந்திருக்கே. அதான் முதல்ல சினிமாவுக்கு வேண்டாம்னு சொன்னாலும், பிறகு போகலாம்னு சொல்லியிருக்கே.” என்றாள் ஸ்ரீஜா.

 

“ம்.. சொல்லு” கவிழ்ந்து படுத்து தலையை நிமிர்த்தி மேவாயில் கை வைத்துக் கொண்டாள் பூங்குழலி.

 

“உங்க வீட்டுலயும், நரேனோட வீட்டுலயும் சேந்து மொத மொதல்ல திருவேற்காடு கோயில்ல சந்திச்சதப் பத்தி ஏங்கிட்டச் சொன்னது ஞாபகமிருக்கா? அவனால உன் கண்களைப் பாக்க முடியல. செஸ்டைப் பாத்தான்னு சொல்லிச் சிரிச்சே. ஒ.கேவா? இப்ப அஷ்டலட்சுமி கோயிலுக்கு போய்ட்டு கடற்கரைல வச்சு சினிமாவுக்குப் போகணும்னு சொன்னப்ப, அவன் பிளான் பண்ணி டிக்கெட் புக் பண்ணியது உனக்கு உறுத்தியிருக்கணும். ஒ.கேவா? தியேட்டர்ல முதல்ல சீட்டுல நீ கை வைக்காமத்தான் இருந்திருக்கே. அவன் சம்பந்தமில்லாம சிரிச்சுக்கிட்டு, அன்ஈஸியா இருந்தான்னு இப்போ சிரிச்சுக்கிட்டு சொன்ன. ஸோ, அதுக்கப்புறம்தான் வேணும்னே என்ன நடக்குதுன்னு பாப்போம்னு கை வச்சிருக்கே. ஒ.கேவா? எலி வந்து மாட்டிக்கிட்டு… ஹா..ஹ்..ஹ்ஹா”  சிரித்தாள் ஸ்ரீஜா. “சரியாச் சொல்லணும்னா. நீ அவன ரீட் பண்ணிட்ட. அவனாலத்தான் உன்ன ரீட் பண்ணத் தெரில.” திரும்பவும் சிரித்தாள்.

 

அந்தந்த நேரங்களில் தனக்குள் ஒடியதை எல்லாம் அப்படியே சொல்கிறாளே என்றிருந்தது. இல்லையென்று மறுக்க வேண்டும் போலவுமிருந்தது. பேசாமல் ஸ்ரீஜாவை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

 

“உங்கண்ணன் கேட்டது சரிதான். உனக்கு கல்யாணமே பிடிக்கல. ஒரு தயக்கம் உனக்குள்ள ஒடிக்கிட்டே இருக்கு.”

 

“எப்படி சொல்ற?”

 

“இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பமானதும் ஒருநாள் சொன்னே. இப்ப கல்யாணம் பண்ணவே பிடிக்கல…. வீட்டுல அம்மாவும் பாட்டியும் ரொம்ப அனத்துறாங்கன்னே. அப்புறம் ரெண்டு வீட்டுலயும் பாத்துப் பேசுற அன்னிக்கு, ஜஸ்ட் போய்ட்டு வேண்டாம்னுட்டு வந்துருவேன்னே. ஆனா சரின்னு சொன்னே. கேட்டா அம்மாவுக்காகன்னே. பிறகு ஒரு நாள் இத மாரி பேசிக்கிட்டு இருக்கும் போது, இப்போ கல்யாணம், கல்யாணம்னு அனத்துறவங்க, பிறகு குழந்த, குழந்தன்னு அனத்துவாங்களேன்னு பயப்பட்டே. வேலைல இருக்குற நிலைமைல உடனே குழந்தப் பெத்துக்க முடியாதுன்னு புலம்பின. ரெண்டு நாள்ள குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்ன்னு ஃபேஸ்புக்குல வம்புக்குன்னே எழுதுன. நரேனுக்கு கம்யூனிகேட் ஆகட்டும்னே எழுதுன. உங்கம்மா போன்ல வருத்தப்பட்டதும் வேண்டா வெறுப்பா ஸாரி கேட்டே. நரேனோட அஷ்டலஷ்மி கோயிலுக்குப் போன. செல்ஃபில்லாம் எடுத்துக்கிட்ட. அதுல ஒன்ன கவனிச்சியா? நரேன் தனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அந்த போட்டோவ அனுப்பினான். நீ யாருக்கும் அனுப்பல. பிறகுதான் சினிமாவுக்குப் போறீங்க. எல்லாத்தையும் ஒன்னொன்னா கோத்துப்பாரு. கல்யாணம் பண்ணிக்குவோம்னு ஒரு நினைக்குற. அடுத்த கொஞ்ச நேரத்துல வேண்டாம்னும் நினைக்குற. இதான் பிரச்சினை.”

 

ஸ்ரீஜா சொன்னதையெல்லாம் ஒப்புக் கொள்வதாய் அவள் கை பிடித்துக் கொண்ட பூங்குழலி, “வெல். இதுல ஓரளவுதான் உண்மை. நா இரண்டு மனமா இல்ல. நா நம்பி கொஞ்ச தூரம் போறேன். எதாவது பிடிக்காம நடக்குது. திரும்பிரலாமான்னு நிக்கிறேன். பிறகு தைரியமா ரெண்டு எட்டு எடுத்து வைக்கிறேன். எதாவது நடக்குது. நா என்ன செய்ய? நிச்சயதார்த்தம் வரைக்கும் பிரச்சினை இல்ல. அதுக்கப்புறம் நரேன் ஒரு நா போன் பண்ணான். உண்மையில எதாவது பேசுவான்னு எதிர்பாத்தேன். பேசக் காணோம். அவனுக்கு இருந்த தயக்கத்த அப்போ கூட ரசிக்கத்தான் செஞ்சேன். அவனுக்கும் சேத்து அவங்கம்மா பேச ஆரம்பிச்சாங்க. அதுதான் எரிச்சலாய்ட்டு. டெய்லி காலைலயும், ராத்திரியும் குட்மார்னிங், குட்நைட்னு மெஸேஜ் போடவும் அப்பப்ப போன் பண்ணி என்ன சாப்பிட்ட, என்ன டிரெஸ் போட்ட, எங்க போனேன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நா எங்கம்மா, பாட்டிக்கிட்ட   கூட இதெல்லாம் பேசுறது இல்ல. எங்கம்மா நரேன்ட்ட அத மாரி பேசுறாங்களா?  கேக்குறாங்களா? நிச்சயம் ஆனவுடன் ஒரு பொண்ணு மேல மட்டும் மாப்பிள்ளை வீட்டுல இந்த அக்கறையும் உரிமையும் எதுக்கு? அதான் குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்னு போட்டேன். அவனுக்குப் புரியட்டும்னு நினைச்சா, அதையே தூக்கிட்டு அவங்கம்மாக்கிட்ட போயி பிரச்சினையாக்கிட்டான். எங்கம்மா வருத்தப்பட்டதும் ஸாரின்னு சொன்னேன். அப்பமாவது யோசிப்பான்னு நினைச்சேன். இல்ல. அஷ்டலஷ்மி கோயிலுக்கு நாங்க புறப்பட்டதுலயிருந்து அவங்கம்மாட்ட பேசிட்டே வந்தான். நா புடவை கட்டிட்டு வரலேன்னு கூட பிட்ட போட்டான். அப்பக்கூட பொறுத்துக் கிட்டேன். சினிமாக்கு போறது பிளான்லயே இல்ல. பரவாயில்லையே\, சுயமாவும் ரகசியமாவும் ஒரு முடிவெடுத்திருக்கானேன்னு சம்மதிச்சேன். தியேட்டருக்குள்ள போறதுக்குள்ள என்ன படம் வரைக்கும் டீடெய்லா அவங்கம்மாட்ட சொல்லிட்டான். திரும்பவும் எரிச்சல் வந்தது. எங்க பாட்டி ஒருதடவை எங்கம்மாக் கிட்டச் சொல்லிட்டு இருந்தாங்க…. அந்த கல்யாணிய சின்ன வயசுல எங்கப்பா தொட்டு இருப்பாரு… அதுனாலத்தான் இப்பமும் அப்பா மேல பைத்தியமா அலயறான்னு சொன்னாங்க. அப்ப என்னை இவன் தொட்டுட்டானா நானும் அவம்மேல பைத்தியமா அலைவேன்னுதான எதிர்பாப்பாங்க.  அதான் பிரேக்கிங் பாயிண்ட். அதுக்குப் பிறகு சுத்தமா நம்பிக்கை போச்சு. இனும செட்டாகாதுன்னு தோனிச்சு.”

 

“நீ சொல்றது உணமையாவே புரியல பேபி. கல்யாணம், கணவன், குடும்ப வாழ்க்கை பத்தில்லாம் நீ என்ன நினைக்குற?  இல்ல என்ன நம்புற?  அதுக்கு மாறா இப்ப என்ன நடந்துட்டுன்னு கொஞ்சம் சொல்லேன்.”

 

பதில் சொல்லாமல் அமைதியானாள்.. யோசிக்கட்டும் என ஸ்ரீஜாவும் அமைதியாய் இருந்தாள். கவிழ்ந்து படுத்திருந்த பூங்குழலி திரும்பி படுத்தாள். பக்கவாட்டில் திரும்பி, “சரியில்லன்னு தோனுது. ஆனா சொல்லத் தெரில.” என்றாள்.

 

ஸ்ரீஜா சிரித்தாள்.

 

“ஸ்ரீ, கல்யாணம் பத்தி நீ என்ன நினைக்குற. மகேஷைக் கல்யாணம் பண்ணிப்பியா? சந்தோஷமா இருப்பியா?”

 

“ஏங்கதை வேற. கல்யாணம் பத்தி அம்மாவும் கவலைப்படப் போறதில்ல. அப்பாவும் கவலைப்படப் போறதில்ல. சொந்தம் அது இதுன்னு எந்த நெருக்கமுமில்ல. பாட்டி மட்டும் உயிரைக் கைல பிடிச்சுக்கிட்டு ஊர்ல இருக்காங்க. நா வாழுறதுதான் வாழ்க்க. ஒ.கேவா? நா மகேஷக் கல்யாணம் பண்ணிக்குவேன். ஒரு நல்ல பார்ட்னரா இருப்பான்னு நம்புறேன். நாலு வருஷமா பழக்கம். சின்சியரானவன். கவிதை, ரசனைக்கான ஆள் இல்லதான். பட் கேரிங்கா இருப்பான். அவங்கிட்டயும் கேரிங்கா இருக்கணும்னு நினைப்பான். ஏமாத்தத் தெரியாது. இது போதும்னு  நினைக்கிறேன். பிடிக்கலயா? ஒத்து வரலியா? ரெண்டு பேரும் பை சொல்லிற வேண்டியதுதான். பிரச்சினையில்ல. தட்ஸ் ஆல்.”

 

“மகேஷ் வீட்டுல..?”

 

“மகேஷ் சொல்லிட்டான். ம்… ஒன்னு தெரிமா. மகேஷ்க்கு ஸ்லைட்டா ஆட்டிசம் உண்டு. அவன நல்லா கவனிச்சா தெரியும். லேசுல மத்தவங்கக் கூட கலந்து பழக மாட்டான். பிடிச்சவங்கக் கூட நல்லா பழகுவான். தனக்குள்ளயேச் சொல்லி சிரிச்சுக்குவான். அவங்கம்மாவும் அப்பாவும் என்னை நம்புறாங்க. வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. போகணும். ஒருவேளப் பிடிக்கலன்னாலும் பரவாயில்ல. அவனுக்காக உருகவோ, மருகவோ கிடையாது.”

 

ஸ்ரீஜாவின் கைகளை எடுத்து தன் மீது வைத்துக் கொண்டாள் பூங்குழலி.  “எல்லாத்தையும் நீ ஈஸியா பாக்குற. எடுத்துக்குற. சந்தோஷமா இருக்க.”

 

“ஈஸின்னு கூட சொல்ல முடியாது. எதுலயும் ஃபிக்ஸ் ஆகக் கூடாதுன்னு நினைப்பேன். அதுதான் நம் நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தயும் பிடுங்கிரும். குடும்பம், குழந்தை, அவங்க எதிர்காலம் அப்படி பெருசா எந்தக் கனவும் இப்போ இல்ல. கிடைச்ச வாழ்க்கைய சுயமரியாதையோட, முடிஞ்ச வரைக்கும் சந்தோஷத்த கெடுத்துக்காம வாழனும்.”

 

பூங்குழலி கண்களை மூடியிருந்தாள்.

 

“பேபி… தூங்கிட்டியா?”

 

“இல்ல… யோசிச்சுட்டு இருக்கேன்.

 

பூங்குழலியின் முடியைக் கோதி விட்டவாறு, “யெஸ். யோசி. வர்றது வரட்டும், கல்யாணம் செஞ்சுக்கன்னும் சொல்ல மாட்டேன். கல்யாணம் செய்ய வேண்டாம்னும் சொல்ல மாட்டேன். ஏன்னு எனக்கேத் தெரிலன்னு மட்டும் சொல்லாத. அது டேஞ்சர். ஒகேவா? தெளிவா முடிவெடு. அதை போல்டா  ஃபேஸ் பண்ணு.”

 

இரவில் ஸ்ரீஜாவோடு பேசியது இப்போது தெளிவையும் நிதானத்தையும் தந்திருந்தது. இன்னும் சில நாட்கள்  யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. அதற்குள் ஒரு முடிவெடுத்து அண்ணனிடமும், அம்மாவிடமும் சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டாள்.

 

டிரெஸ் செய்து கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டும். எப்படியும் உள்பக்கம் பூட்டிக்கொள்ள ஸ்ரீஜாவை எழுப்பி சொல்லத்தான் வேண்டும். அறையின் விளக்கைப் போட்டாள்.

 

ஸ்ரீஜா அசையாமல் படுத்திருந்தாள். இரவில் அவள் சொன்ன அந்த வண்ணத்துப் பூச்சிகள் நினைவில் பறக்க ஆரம்பித்தன. நேற்று காலை பூங்குழலி புறப்பட்டுச் சென்ற பிறகு கொஞ்சம் நேரம் ஓய்வாக இருந்துவிட்டு, ஸ்ரீஜா ஆபிஸ் செல்ல புறப்பட்டு வெளியே வந்திருக்கிறாள். வராண்டாவை ஒட்டிய அசோகா மரங்களைச் சுற்றிச் சுற்றி இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் பறந்திருக்கின்றன. ஒரு கணத்தில் இரண்டும் ஒன்றாகி, ஒரே வண்ணத்துப் பூச்சி போலாகி ஸ்லோ மோஷனில் பறந்திருக்கின்றன. “காத்திலேயே பறந்துட்டு லவ் செய்யுதுங்க. ஐய்யோ!” சொல்லிய அவள் முகத்தில் அப்படியொரு குதூகலத்தையும்,  பரவசத்தையும், பூரிப்பையும் பார்க்க முடிந்தது. கொஞ்ச நேரத்தில் அப்படியே போய் தரையில் விழுந்து அசையாமல் கிடந்திருக்கின்றன. படிகளில் கீழிறங்கிப் போய் பார்த்திருக்கிறாள். ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சியாகத்தான் தெரிந்திருக்கிறது. அருகில் செல்லவும் சட்டென சிறகசைத்து ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து எங்கோ சென்றிருக்கிறது. ஒரு வண்ணத்துப் பூச்சி தரையிலேயே அப்படியே கிடந்திருக்கிறது.

 

“ஹேய், மை டியர் பட்டர்ஃப்ளை!” ஸ்ரீஜாவை எழுப்பினாள். கண் விழித்ததும் இவளைப் பார்த்து சிரித்தாள். கையிரண்டையும் நீட்டி அழைத்தாள்.

 

“அடி படுவே. நா கிளம்புறேன். கதவை உள்ள லாக் பண்ணிக்க. கால் டாக்ஸி வெயிட் பண்ணுது. வர்றேன். ஈவ்னிங்  மீட் பண்ணுவோம்” சொல்லி கிளம்பினாள்.

 

காரில் ஜன்னல்கள் திறந்தே இருந்தன. “மேடம், ஏசி போடணுமா” டிரைவர் கேட்டார்.

 

இல்லையென்று சொல்லிவிட்டு மொபைலை பார்த்தாள். மணி ஐந்தே முக்கால். மூன்றரை மணி நேரம்தான் தூங்கியிருந்தாலும் களைப்பே இல்லை. வெளியே பார்த்தாள். காலைக் காற்று அவ்வளவு இதமாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது. குருநானக் சாலையில் பிளாட்பாரத்தில் ஷூக்கள் போட்டுக்கொண்டு அங்கங்கு நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் மனிதர்கள் இருந்தார்கள். அதைத் தாண்டி வேளச்சேரி மெயின் ரோட்டிற்கு வந்ததும் வாகனங்களும், மனிதர்களும், டீக்கடைகளும் தென்பட்டாலும் போக்குவரத்து பெரும்பாலும் குறைவாகவே இருந்தது.

 

அங்கங்கு தொடரி, நாயகி, ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மதுரையில் அண்ணனோடு படம் பார்க்க வேண்டும்  என்று நினைத்து மறந்து போனோமே என்றிருந்தது. ஸ்ரீஜாவோடு ஒருநாள். போய் பார்க்க வேண்டும். ட்ரிம் செய்த தாடியோடு சிறு புன்னகையோடு இருந்த விஜய்சேதுபதியிடம்  அலையரசனின் சாயல் தெரிந்தது. அலையரசன் ஒழுங்காக தலை வார மாட்டான்,  பர்ஃப்யூம் போட மாட்டான். மடிப்புக் கலையாமல் ஷர்ட் போட மாட்டான்

 

நேற்று லஞ்ச் நேரத்தில்  பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது அப்படித்தான் இருந்தான். “என்னாச்சு… சனிக்கிழமை ஒங்கம்மா போன் பண்ணவுடன பதறிட்டேன்” என்றான்.

 

சோபியாவும் இவளைப் பார்த்தாள். “ரூம்ல கூட இருந்த ஸ்ரீஜாவும் ஊருக்குப் போய்ட்டா. தனியே இருக்க போர் அடிச்சுது. அதான் திடீர்னு அண்ணனைப் பாக்க மதுரைக்கு கிளம்பி போய்ட்டேன். போனும் சார்ஜ் இல்லாம ஆஃபாய்ட்டு. அம்மா பயந்துட்டாங்க” என்று சாதாரணமாகச் சொல்லி முடித்துக் கொண்டாள். அவர்களிடம் விளக்கமாக எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு முடிவெடுத்துவிட்டு சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

 

“ஸாரி சோபியா. அதான் சனிக்கிழமை உன் வீட்டுக்கு வர முடியாமப் போய்ட்டு. சரி. விக்னேஷ் எப்படியிருக்கான்?” கேட்டாள்.

 

“பெட்டரா ஃபீல் பண்ணேன். சனி ஞாயிறு ரெண்டு நாள் நானும் வீட்டுல இருந்தேன். கொஞ்சம் இயல்பா இருந்தான். தண்ணி கூட அடிக்கல. குழந்தைகளோட விளையாடிக்கிட்டு இருந்தான். ம் பாப்போம்.”

 

”குட்..” என்ற பூங்குழலி அப்போதுதான் அந்த கேள்வியை சட்டென்று அலையரசனிடம் கேட்டாள். இப்போதும் ஏன் அப்படி கேட்டோம் என்றுதான் இருந்தது.   

 

“உங்க வீட்டுல இருந்து ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னால என்னை பெண் கேட்டு வீட்டுக்குப் போனாங்களாமே,  தெரியுமா?”  

 

 எதிர்பார்க்காத அலையரசன், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திகைத்தான். “அப்படியா!” என ஆச்சரியப்பட்ட சோபியா சிரித்தாள்.

 

“எனக்குத் தெரியும்னு உனக்கும் தெரியும். உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அதப் பத்தி பேசாம இருக்குறதே நல்லதுன்னு நினைச்சேன். எங்க வீட்டுல ஓங்கிட்டத்தான் மொதல்ல கேக்கச் சொன்னாங்க. மாட்டேன்னுட்டேன். நீ எனக்கு நல்ல ஃபிரண்டு. அதஃ ஸ்பாயில் பண்ண விரும்பல. அப்புறம்தான் வீட்டுல போய் கேட்டிருக்காங்க.” என்று நிதானமாகச் சொன்னான்.

 

பூங்குழலி இடது கையால் அவனைத் தொட்டு சினேகமாய் புன்னகைத்தாள். இப்போது நினைக்கும் போதும் புன்னகையே வந்தது.

 

கால்  டாக்சியிலிருந்து இறங்கி கம்பெனிக்குள் நுழைந்தாள். லிஃப்டுக்காக காத்திருந்தாள்.  கீழே வந்து கதவு திறக்கவும், “வாங்க பூங்குழலிம்மா. இன்னிக்கு கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்க” மகாலிங்கம் சிரித்தார்.

 

“எப்படியிருக்கீங்க. சனி ஞாயிறு லீவு எப்படிப் போச்சு.”

 

” எங்க போக? வீட்டுலத்தான். அன்னிக்கு ஒரு நா தானே வீட்டோட , குழந்தைங்களோட இருக்க முடியுது. நேத்து ஆண்டவன் கட்டளை படம் பாத்தேன்.. சூப்பரா இருந்துச்சு.” சிரித்தார்.

 

இந்த ஆண்டவன் கட்டளை விடாமல் துரத்துகிறதே என நினைத்தாள். லிஃப்ட் நின்றது. “வர்றேன் மகாலிங்கம்” என வெளியேறினாள்.

 

உள்ளே நுழைந்தவளுக்கு அக்னேஷ் பிரின்சியா, சாந்தி, சந்தானம் எல்லாம் புன்னகையோடு குட்மார்னிங் சொல்லிவிட்டு தங்கள் சிஸ்டத்துக்குள் நுழைந்து கொண்டார்கள். பாஸ்டஸ் லியோ தூரத்தில் இருந்து பார்த்தே தம்ஸ் அப் காட்டி “குட்” என்றான்.

 

சிஸ்டம் ஆன் செய்து  மெயிலைப் பார்க்க ஆரம்பித்தாள். அலையரசனிடம் இருந்து போன் வந்தது.  “அய்யோ” என வாய்விட்டு கதறி விட்டாள். எல்லோரும் திரும்பிப் பார்க்க பூங்குழலி எழுந்து லியோவிடம் சென்று, சோபியாவின் கணவன் விக்னேஷ் தூக்க மருந்து சாப்பிட்டு விட்டதையும்,  ஆஸ்பத்திரியில் கிரிட்டிக்கலா இருப்பதையும் தனக்கு ஒருநாள் லீவு வேண்டுமென்பதையும்  பதறியபடி சொன்னாள்.

 

 “லுக். இன்னிக்கு மதியம் ரெவ்யூ மீட்டிங் இருக்கு. எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும். அதற்கான டேட்டாவையும் டீட்டெய்ல்ஸையும் மட்டும் பிரிப்பேர் செஞ்சு அக்னேஷ்ட்ட கொடுத்துட்டு போ. நாளைக்குக் கூட லீவு எடுத்துக்க.”

 

வேறு வழியில்லாமல் திரும்பவும் சீட்டில் வந்து உட்கார்ந்தாள். என்னவென்று கேட்ட சந்தானத்திடமும், அக்னேஷ் பிரின்சியாவிடமும் விஷயத்தைச் சொன்னாள். அவர்களும் களையிழந்து போனார்கள்.

 

அலையரசனுக்கு போன் செய்து மூன்று மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தாள். சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து கைகள் நடுங்க வேலை பார்க்க ஆரம்பித்தாள். “ஐயோ, சோபியா இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்?” என உள்ளுக்குள் அரற்றியபடி இருந்தாள். 

 

(நண்பர்களே! க்ளிக் தொடர்கதை இன்னும் நான்கைந்து அத்தியாயங்களில் நிறைவு பெற்று விடும். இதனை நாவலாக வெளியிட பாரதி புத்தாகாலயம் பேசியிருக்கிறது. மீதமுள்ள அத்தியாயங்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.  நண்பர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்ள வேண்டும். விரைவில் ‘க்ளிக்’ ஒரு முழு நாவலாக வெளிவரும். இதுவரை வாசித்து, கருத்து தெரிவித்து, உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – மாதவராஜ் ) 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2022 05:12

March 5, 2022

க்ளிக் - 18 (தொடர்கதை)


காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்புவதற்குத்தான் நேரமிருந்தது. முகம் பார்த்து பேச முடிந்த  சொற்ப நேரங்களிலும்  நரேனின் கல்யாணம், பூங்குழலி குறித்த பேச்சே அறையில் வரவில்லை. அடுத்த ஐந்து நாட்களும் வராது. வியாழக்கிழமை வரைக்கும் செத்துப் போய் வந்து உயிர் பெற்றுச் செல்ல வேண்டும். எதுவாயிருந்தாலும் கொஞ்ச நாள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று நிம்மதி கொண்டான் நரேன்.

 

சனியும், ஞாயிறும் பவித்ராவோடு இருக்கும் வரை அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தது. நேற்று இருட்டிய பிறகுதான் இங்கு திரும்பினான். கிஷோரும், பிரசாந்த்தும் அப்போதுதான் எழுந்து குளித்து வெளியே செல்வதற்கு தயாராய் இருந்தார்கள். இவனைப் பார்த்ததும் “வா ப்ரோ, சரியான நேரத்துக்குத்தான் வந்த” என உற்சாகமானார்கள். பீர் அடிப்பதற்கு அழைத்தார்கள்.

 

“இல்ல, துணி துவைக்க வேண்டியிருக்கு, நீங்க போய்ட்டு வாங்க” என்றான்.

 

“அந்த செல்பிக்கே பார்ட்டி வைக்கணும் ப்ரோ” கெஞ்சினார்கள். ஐநூறு ருபாய் கொடுத்து ஒருவழியாய் அனுப்பி வைத்து பிக்கல் பிடுங்கல்களிலிருந்து  தப்பித்தான். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து திரும்பியவர்கள் அவர்களுக்குள் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தனர். கிஷோர் அவனது மேனேஜரை கோபமாய்  திட்டிக்கொண்டே இருந்தான்.  பிரசாந்த்திற்கு அவனது அம்மாவின் மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அது குறித்த முயற்சிகளில் சோகமாய் இருந்தான் அடுத்த அறையில் போய்  படுத்து இவன் தூங்கி விட்டிருந்தான்.  

 

பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்யவும் சந்திரா போன் செய்தார். வெள்ளிக்கிழமை இரவு பேசிய பிறகு அம்மாவிடம் பேசவே இல்லை. சென்னைக்கு வந்து இப்படி இரண்டு நாட்கள் தொடர்ந்து பேசாமல் இருந்ததே இல்லை. பவித்ரா எல்லாவற்றையும் ஏற்கனவே பேசியிருந்ததால் அழைப்பை ஏற்று “சொல்லுங்கம்மா” என்றான்.

 

“நரேன்! ஆபிஸ்க்கு கிளம்பிட்டியாப்பா?”

 

“ஆமாம்மா..”

 

“சாப்பிட்டியா..”

 

“இனுமத்தான் போற வழில சாப்பிடணும்”

 

“நீ எதுக்கும் கவலப்படாதப்பா”

 

“சரிம்மா…. நீங்க சாப்பிட்டீங்களா?”

 

“இனுமத்தான். சாப்பிட இட்லிய தட்டுல எடுத்து வச்சேன். உன் ஞாபகம் வந்துச்சு.”

 

“அம்மா..”

 

“சொல்லு நரேன்..”

 

“நீங்களும் கவலப்படாதீங்கம்மா. அன்னிக்கு நா கோவமா பேசினதுக்கு மன்னிச்சிருங்கம்மா.” இளகிப் போயிருந்தான்.

 

 “உன்னப் போயி அவ தப்பா நெனச்சிட்டாளேன்னுதாங் கவல. கடவுள்தான் நல்ல புத்திய எல்லாருக்கும் குடுக்கணும். உடம்பப் பாத்துக்க.”

 

“சரிம்மா..”

 

“ரோட்ல பாத்துப் போப்பா. வச்சிர்றேன்”

 

அம்மாவின் பேச்ச்சில் இருந்த கனிவும், உருக்கமும் அலைக்கழித்தது. இந்தக் கல்யாணத்தின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தார்கள். அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு, கனவு கண்டு, பேசிக்கொண்டு இருந்தார்கள் ரோட்டில் போகும் வழியெல்லாம் அம்மாவையே நினைத்துக் கொண்டு போனான். போனில் கேட்ட அம்மாவின் குரலில் அந்த ஆசையெல்லாம் விட்டுப் போயிருந்தது. அவனது கம்பெனிக் கட்டிடத்திற்குள் நுழைந்து நான்காவது தளத்திற்குச் செல்ல லிஃப்டுக்காக காத்திருக்கும் வரை அந்த வருத்தம் அப்பியிருந்தது.

 

மேல் நோக்கி நகரும்போது நரேனுக்கு ஆஷாவின் நினைவு வந்தது. இரண்டு நாட்களாய் இல்லாமலிருந்தது. அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது என தவிக்க ஆரம்பித்தான். தயக்கத்துடன் ஆபிஸுக்குள் நுழைந்தான். அவள் இருந்த இடத்தை தவிர்த்து ஜேக்கப் அருகே இருந்த வழியில் சென்று தனது சேரில் அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில், “குட்மார்னிங் நரேன்” என பின்னால் ஆஷாவின் குரல் கேட்டது. தலையை மட்டும்  ஒரு கணம் திருப்பி, “குட்மார்னிங்” சொல்லி சட்டென சிஸ்டத்திற்குள் புகுந்து கொண்டான்.

 

இவனருகே குனிந்து, “வேணும்னே என்னை அவாய்ட் பண்ணித்தானே உள்ள வந்தே? இப்போ நான் அசிங்கமானவ அப்படித்தானே?” மெல்லிய குரலில் அழுத்தமாய்ச் சொன்னாள். 

 

கொஞ்சம் தள்ளி இருந்த இர்ஃபான் இவர்களை பார்ப்பதை ஆஷா கவனித்தாள்.  நிமிர்ந்து இவனது சேரை லேசாக சுழற்ற, அது திரும்பி அவளுக்கு நேராய் நின்றது. “என்னாச்சு, கண்ணு கூசுதா?” என்றாள்.

 

“இல்லய” அவள் முகத்தைப் பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

 

 “என்னாச்சு ஆஷா?” இர்ஃபான் சிரித்துக் கொண்டே கேட்டான்.

 

“என் மூஞ்சைப் பாக்க பிடிக்கலயாம். குட்மார்னிங் கூட இந்த ஃபெல்லோக்கு சொல்ல முடில.” சத்தமாய்ச் சொன்னாள்.

 

அவசரமாய் எழுந்து நின்று, “இப்ப என்ன? நேரமாய்ட்டுன்னு வேகமா வந்து உட்காந்தேன். குட்மார்னிங். சொல்லியாச்சு. போதுமா” என சொல்லி சேரைத் திருப்பி கம்ப்யூட்டரைப் பார்த்து உட்கார்ந்தான். மேலும் சிலர் நடக்கிற கலாட்டாவைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

“ஒரு வீக்கோட பிகினிங்கையே அப்செட் பண்ணிட்டான். அவனுக்குன்னு ஒரு கேர்ள் வந்தவுடனே நாம எல்லாம் கண்ணுக்குத் தெரியல. என்ன?” என அதட்டிக்கொண்டே சேரை மறுபடியும் சுழற்றி தன் பக்கம் இவனைத் திருப்பினாள்.

 

நரேனுக்கு எரிச்சலாய் இருந்தது. “விடு ஆஷா. வேல இருக்கு” திரும்பப் போனான்.

 

சேரை விடாமல் பிடித்துக்கொண்டு, “லுக் ஹியர். வந்த புதுசுல பயந்து பயந்து என்னை நீ சைட் அடிச்ச காலமும் உண்டு. அதையெல்லாம் மறந்துராத ஜெண்டில்மேன்”  என்றாள்.

 

சுற்றிலும் மொத்தமாய் சிரித்தார்கள். தாங்க முடியாமல், “டோண்ட்  யூ ஹெவ் எனி மேனர்ஸ்? எனி சென்ஸ்? ஸ்டுப்பிட் மாதிரி பிஹேவ் பண்ற?  நீ கிட்டிங் பண்ண நா ஆளு இல்ல. ஒகேவா?” சத்தமாய் கத்தினான்.

 

ஆஷா அதிர்ந்து போனாள். அந்த இடம் அப்படியே அமைதியானது. சட்டென சேரிலிருந்து கைகளை எடுத்துக் கொண்டாள். “ஸாரி… ஸாரி..” என அவன் முகத்தைப் பார்க்கக் கூட முடியாமல், கொஞ்ச தள்ளி இருந்த தன் இருக்கைக்கு வேகமாய்ச் சென்று உட்கார்ந்தாள். தன் சேரைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்தான் இவன். யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தார்கள். ஆஷா எழுந்து ரெஸ்ட் ரூம் போவதைப் பார்த்தார்கள்.

 

நரேனுக்கு தலை முழுவதும் ஜிவ்வென்று இருந்தது. அங்கு இங்கு முகம் திருப்பாமல் சிஸ்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். டெவலப் செய்யப்பட்டிருந்த சாப்ட்வேரின் செயல்பாடு, எளிதில் கையாளும் வகையில் வடிவமைப்பு, வேகம் என ஒவ்வொன்றாய் டெஸ்ட் செய்து குறைகளை டாகுமெண்ட்டேஷன் செய்ய வேண்டியிருந்தது. வேலைக்கு முழுவதுமாய் தன்னைக் கொடுக்க முடியாமல் திணறினான். தான்  நடந்து கொண்டதும் கத்தியதும்  வந்து வந்து உறுத்தியது. எல்லோரிடமும் இருந்த அமைதி அதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சேரை விட்டு எழாமல் வேலையிலேயே கவனமாய் இருப்பது போலிருந்தான்.  

 

பனிரெண்டு மணிக்கு ராஜேஷும், இர்ஃபானும் டீ சாப்பிட அழைத்தார்கள். “வேலையிருக்கு. நீங்க போய்ட்டு வாங்க…” இருந்து கொண்டான். வெளியே டீக்குடித்துக் கொண்டிருப்பவர்கள் இவனையும் ஆஷாவையும் பற்றித்தான் பேசுவார்கள். எவ்வளவு டீக் குடித்திருக்கிறான்? பேசட்டும் என இருந்தான்.

 

ஒரு தடவை ரெஸ்ட் ரூமுக்குப் போனது, அப்புறம் லஞ்ச்சுக்கு எழுந்ததோடு சரி. பொதுவாகவே அதிகம் தன் இருக்கையை விட்டு எழ மாட்டான். தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டான். இருந்த கொஞ்ச நஞ்ச சகஜத்தையும் இன்று இழந்து போனான். மதியத்திற்கு மேல் ஒரு தடவை ஆஷா இவனைத் தாண்டி சதீஷிடம் சென்று எதோ பேப்பர்களை வைத்துக்கொண்டு பேசிச் சென்றாள். அப்போது மட்டும் திரும்பி அவளைப் பார்த்தான். வழக்கமான சிரிப்பும், கிளர்ச்சியுமான முகமாய் இல்லை. வாடிப் போயிருந்தாள்.

 

அவளிடம் ‘ஸாரி” சொல்ல வேண்டும் போலிருந்தது. எதுவோ தடுத்தது. ஆரம்பத்தில் யாரிடமும் பழகாமல் கூச்சம் கொண்டு இந்த ஆபிஸில் தனித்து நின்றபோது,  வேலை தெரியாமல் தவித்தபோது அவள்தான் இவன் கை பிடித்து சரி செய்தவள். தன்னம்பிக்கை தந்தவள். எது வேண்டுமானாலும் பேசக் கூடிய மனுஷியாய் இருந்தாள். அவள் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அம்மா, அப்பா, குழந்தை எல்லோரும் தெரியும். சென்னையில் இவன் அதிகம் பேசிப் பழகியது அவளோடுதான். இதற்கு முன்பும் நிறைய கேலி கிண்டல் செய்திருக்கிறாள். அப்போதெல்லாம்  இயல்பாகவும், ஒரு சந்தோஷத்தோடும் எடுத்துக் கொண்டவன்தான். 

 

இன்றைக்கு  அப்படி வழக்கம் போல இருக்க முடியாமல் போய்விட்டது. கொதித்து விட்டான். வெளியே யாரிடமும் இதுவரை இப்படி நடந்து கொண்டதேயில்லை. இவனுக்கே அது விசித்திரமாயிருந்தது. அவளைப் போய் காயப்படுத்தி விட்டோமே  என குற்ற உணர்வு கொண்டான். இப்போதும் அவள் முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது.

 

சிஸ்டத்தில் நேரத்தைப் பார்த்தான் நரேன். மணி எட்டை நெருங்கியிருந்தது. காலை பத்து மணிக்கு வந்து உட்கார்ந்தவன் . ஓரளவுக்குத்தான் வேலை முடிந்திருந்தது. நாளைக்குள் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இன்றைக்கு அதற்கு மேல் முடியாது போல சோர்வு அழுத்தியது. டீமில் மற்றவர்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். ஜேக்கப், சுதா, ஆஷா இருந்தார்கள். ஆஷா போனதும் கிளம்பலாம் என காத்திருந்தான். அவள் முகம் பார்த்து “பை” சொல்ல தெம்பில்லை.

 

காலையில் இருந்து பூங்குழலியின் நினைவு வரவேயில்லை என்பது ஆச்சரியம் போலிருந்தது. பூங்குழலி கலைச்செல்வன் வீட்டிற்கு சென்றது, தன் அம்மா சித்ராவிடம் போனில் பேசியது, அவள் சரியாகும் வரை இன்விடேஷன் கொடுக்கப் போவதில்லை என தான் முடிவெடுத்திருப்பது வரை முருகேசன் எல்லாவற்றையும் மூர்த்தியிடம் சொல்லியிருந்தார். அவர் நேற்று பவித்ரா வீட்டில் இவன் இருக்கும்போது போன் செய்து ‘சில நாட்கள் அமைதியாய் இருப்போம், என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என பேசியிருந்தார்.

 

இன்று பூங்குழலியும் சென்னை வந்திருப்பாள். வேலைக்குச் சென்றிருப்பாள். இதுபோல் மறந்திருப்பாளா என நினைத்தான். இப்போது ஹாஸ்டலுக்கு திரும்பியிருக்கக் கூடும். ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. “நீ என்னை தப்பாப் புரிஞ்சிட்டே” என அவளிடம் சொல்ல வேண்டும்.  ஆஷாவும் அப்படித்தான் தன்னிடம்  காலையில் பேச  வந்திருக்க வேண்டும். அதற்குள் ஆத்திரத்தில் விரட்டி விட்டோமே என்றிருந்தது.

 

ஹீல்ஸ் சத்தம்  ஒலிக்க ஆஷா இவனைக் கடந்து சென்று அறையை விட்டு வெளியேறினாள். வேறு வழியாகவும் சென்றிருக்கலாம். “நான் போகிறேன்” என்பதை இவனிடம் சொல்லாமல் சொன்னாள். கதவைத் திறந்து வெளியேறும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன். சிறிது நேரத்திற்கு பின் சிஸ்டத்தை ஆஃப் செய்துவிட்டு ஜேக்கப்பிடமும், சுதாவிடமும் “பை” சொன்னான்.  “என்னாச்சு உனக்கு. ஆஷா ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா” என்ற ஜேக்கப்புக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் வெளியேறினான் நரேன்.

 

வராண்டாவில் நடந்த போது கண்ணாடி தடுப்புகளின் வழியே வெளியுலகம் தெரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளி இரவு தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து பார்த்ததைவிட நகரம் கீழே இருந்தது. இருட்டில் எங்கும் வெளிச்ச சிதறல்களாகவும், புள்ளிகளாகவும் விரிந்து பரந்து கிடந்தது. தினமும் பார்ப்பதுதான் என்றாலும் எதோ பெருஞ்சோகத்தோடு காணப்பட்டது இன்று. ரொம்ப கீழே வாகனங்கள் சின்னப் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தன.

 

லிஃப்டில் இறங்கி கட்டிடத்தை விட்டு  வெளியே வந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து கம்பெனியின் வாசலைத் தாண்டி ரோட்டுக்கு வந்தான். சோடியம் வெளிச்சம் நிறைந்திருந்த அந்த இடத்தில் வலது பக்கம் கொஞ்சம் தள்ளி ஆஷா ஒரு ஆட்டோவுக்கு கை காட்ட அது நிற்காமல் சென்றது. பைக்கைத் திருப்பி அவளருகே சென்றான். “ஸாரி ஆஷா” என்றான்.

 

அவள் இவனைக் கவனிக்காமல், வேறு ஆட்டோ எதாவது வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தாள். “உன் வண்டிக்கு என்னாச்சு?” என்றான். அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. பைக்கை விட்டு இறங்கினான். “மன்னிச்சிரு ஆஷா. இப்படி ஒருநாளும் யார்க்கிட்டயும் நடந்துக்கிட்டதேயில்ல. ஸாரி.. ஸாரி.” சொல்லிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இரண்டு மூன்று பேர் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவன் கை பிடித்து,“போதும் நிறுத்து. வண்டி எடு” சொல்லி, அவன் ஸ்டார்ட் செய்யவும் பின்னால் ஏறிக் கொண்டாள் ஆஷா.

 

“தாங்ஸ் ஆஷா” என்றவன் கிளம்பினான். “வண்டில வரல?” கேட்டான்.

 

“காலைல புறப்படும் போது ஸ்டார்ட் ஆகல. கால் டாக்ஸிலதான் வந்தேன். இப்பவும் புக் பண்ணேன். வர அரை மணி நேரம் ஆகும்னு காட்டிச்சு. சரி ஆட்டோல்ல போயிருவோம்னு பாத்தேன்.” என்றாள்.

 

அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருக்கும் இரண்டாவது பெண் ஆஷா. இதுவரை வேறு யாரையும் உட்கார அனுமதித்ததில்லை என்று பூங்குழலியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. இன்று காலை வரை அவளது முகம் பார்க்கவே சங்கடமாயிருந்தது. தானே இப்போது அழைத்து உட்கார வைத்துச் செல்கிறோம் என்பது மனித மனதின் விசித்திரமாகத் தெரிந்தது. உட்கார்ந்த ஒரு பெண் கோபம் கொண்டு போய்விட்டாள். கோபம் கொண்டு போன ஒரு பெண் இப்போது உட்கார்ந்திருக்கிறாள்.

 

“வீட்டுக்குத்தானே?” கேட்டான்.

 

“ம்” என்றவள் அவன் தோள் மீது கை வைத்துக் கொண்டாள். அன்றைக்கு பூங்குழலி  ஒருதடவை கூட தன் தோளில் கை வைக்கவில்லை என்பதை இப்போது உணர்ந்தான்.

 

“இன்விடேஷன் அடிக்கக் கொடுத்திருந்தியே. வாங்கிட்டியா?”

 

“இல்ல” என்றான்.

 

“என்னாச்சு நரேன் வெள்ளிக்கிழம” ஆஷா கேட்டாள்.

 

“புரியல…”

 

“பூங்குழலியோட செல்ஃபி எடுத்தத அனுப்பியிருந்தே. பிறகு என்னாச்சு?”

 

“ஒன்னுமில்ல. அவ ஹாஸ்டலுக்குப் போய்ட்டா. நா ரூமுக்குப் போய்ட்டேன். தட்ஸ் ஆல்.”

 

கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவன், “ஆஷா, எதாவது ஒரு ரெஸ்டாரண்ட்ல காஃபி சாப்பிடலாமா?” கேட்டான்.

 

”ம்.” என்றாள்.

 

ரோட்டிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி, அமைதியாக, தேவையான வெளிச்சத்தில் இருந்த ரெஸ்டாரண்ட்டில் நிறுத்தினான். இருவரும்  ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்தார்கள். வந்த சர்வரிடம், “இரண்டு காஃபி” சொன்னான் நரேன்.  ரோட்டையும், அதில் செல்கிற வாகனங்களையும் ஆஷா பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல அவள் கண்களில் ஈரம் படிவதைப் பார்த்தான்.

 

“இப்ப சொல்லு நரேன், எதுக்கு என்னைப் பாக்காம காலைல போனே?” முகத்தில் அழுகையும், கோபமும் சேர்ந்தே இருந்தது.

 

“விடு ஆஷா. உன் முகத்தப் பாக்க ஏனோ சங்கடமாயிருந்துச்சு.”

 

“நா தப்பானவன்னு நினைக்கிறியா?”

 

“ச்சே. அப்படில்லாம் இல்ல. மேனேஜரோட உன்னப் பாத்தத தாங்க முடில.  மனசால ஏத்துக்க முடில.”

 

“தாங்ஸ் நரேன். உண்மையச் சொன்னதுக்கு…”.

 

சர்வர் காபி வந்து கொடுத்தான். இருவரும் குடிக்க ஆரம்பித்தார்கள். அவள் இயல்பாகிக்கொண்டு இருந்தாள்.

 

“யெஸ். ஐ ஹட் செக்ஸ் வித் ஹிம். தப்பாத் தெரில நரேன்.”

 

நரேனால் அவள் முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது.

 

“என்னைக் கல்யாணம் பண்ணி குழந்தையைத் தந்தவன் ரெண்டு பேர் சம்பாத்தியத்தையும் ஒரே ஆளா சம்பாதிக்கிறதுக்கு  அமெரிக்கா போனான். இப்போ என்னை வேலையை விட்டுட்டு அமெரிக்கா வரச் சொல்றான். அப்படி ஒன்னு நடந்துச்சுன்னா நா காலம் பூரா அவன டிபண்ட் பண்ணித்தான் இருக்கணும். இங்கேயே ரெண்டு பேரும் சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னத கேக்கல. ரெண்டு வருஷமாச்சு. செக்ஸ் வச்சுக்காமயா அங்க இருப்பான்?”

 

அவள் காபி குடிக்காமல் பேசிக்கொண்டு இருந்தாள். கையைக் காட்டி குடிக்கச் சொன்னான் நரேன்.

 

அதைக் கவனிக்காமல் “மாஸ்டர்பேட் பண்ணலாம். ஹோமோ செக்ஸ் வச்சுக்கலாம். எதோ ஒரு பெண்ணோட இருக்கலாம். ஏன் செக்ஸ் டாய் யூஸ் பண்ணலாம். எதோ செக்ஸ் இல்லாம அவன் இருப்பானா?”

 

இப்படியெல்லாம் ஆஷா பேசுவாள் என இவன் எதிர்பார்க்கவில்லை. அவள் ரொம்ப தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

 

“அந்த மேனேஜருக்கு நானும், எனக்கு அவனும் செக்ஸ் டாய்னு நினைச்சுட்டுப் போயேன். அதுக்கு மேல எனக்கு அவனுக்கும் ஒன்னும் இல்ல. போதுமா? ஜஸ்ட் செக்ஸ். அதுக்கு ஏன் முகம் சுழிக்கிறீங்க?” முகமெல்லாம் கோபத்தில் பொங்கிக் கொண்டு இருந்தது.

 

நரேன் வாயடைத்துப் போயிருந்தான்.

 

“அதுக்காக நா ஒன்னும் அலையவும் இல்ல. மேனேஜருக்காக உருகவும் இல்ல. யாருக்கும் துரோகம் செய்றதாவும் நினைக்கல. என்னோட அம்மா,  அப்பா, குழந்தைய எல்லாம் நாந்தா பாத்துக்குறேன். அவந்தான் பணத்துக்காக பொண்டாட்டி, புள்ள, அம்மா, அப்பா எல்லாத்தயும் விட்டுட்டுப் போயிருக்கான்.”

 

படபடவென்று பேசியவள் காபியைக் குடித்தாள். ஆறிப் போயிருந்தது. “சூடா இன்னொரு காபி சொல்றியா?” கேட்டாள்.

 

நரேன்  சர்வரை அழைத்துச் சொன்னான்.

 

“ஆபிஸ்ல என்னைப் பத்தி என்ன பேசுறாங்கன்னும் தெரியும். அதப் பத்தி கவலப்படல. நீயும் அப்படி நினைச்சிராத ப்ளீஸ்.” அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

“இன்னிக்குக் காலைல குனிஞ்சு உன் காதுல நான் பேசுனத, இர்ஃபான் ஒரு மாதிரியாப் பாத்து சிரிச்சான். அதான் சத்தமா உன்னக் கிண்டல் பண்ணேன். நீ அதுக்குள்ள பொங்கிட்டே..” என லேசய் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

“ஸாரி ஆஷா.” பிடித்திருந்த அவளது கைகளை தட்டிக் கொடுத்தான் நரேன்.

 

“சரி, வெள்ளிக்கிழம என்னாச்சு. சொல்லிக் குடுத்த குரு கிட்டயே சரியா பதில் சொல்ல மாட்டேங்குறியே?” கண்ணடித்தாள்.

 

வந்த காபியை அவள் குடித்துக் கொண்டு இருக்க, நரேன் எல்லாவற்றையும் சொன்னான்.

 

“நினைச்சேன். எதோ சம்திங் ராங்னு தெரிஞ்சுது. இல்லன்னா நீ காலைல அவ்ளோ கோபப்பட்டிருக்க மாட்ட. அவ கூட சந்தோஷமா இருந்தத நினைச்சு உலகத்தையே மன்னிச்சிருப்பே” கடகடவென சிரித்தாள். எப்போதும் பார்க்கிற கலகல ஆஷாவாகி இருந்தாள்.

 

“பூங்குழலிக்கு வேற எதோ கோபமும், காரணமும் இருக்குன்னு நினைக்கேன்” என்றாள்.

 

“இதைத்தான் பவித்ராவும் சொன்னா..”

 

“பவித்ராவோ, நானோ பூங்குழலியப் பாத்து பேசலாம்னு தோனுது”

 

“ம்… நா சொல்றேனே..” என்று மொபைலில் நேரம் பார்த்து புறப்பட எழுந்தான்.

 

“இப்ப ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றேன்.” என்ற ஆஷா அவன் கை பிடித்து முத்தம் கொடுத்தாள்.

 

ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான் நரேன்.

 

“இதுல முழுசும் அன்பு மட்டுந்தான் இருக்கு. செக்ஸ் கிடையாது. பூங்குழலிக்கு அதப் பாக்கத் தெரில” எழுந்தாள்.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2022 06:17

March 2, 2022

க்ளிக் - 17 (தொடர்கதை)


காலை ஹாஸ்டலுக்கு பூங்குழலி வந்து சேர்ந்த போது மணி ஐந்து ஆகியிருந்தது. அங்கங்கு ரூம்களில் விளக்கு வெளிச்சங்களும், சின்னச் சின்னதாய் பேச்சுச் சத்தங்களும் இருந்தன. கரையத் துவங்கிய இருட்டோடு இளங்காற்று வராண்டாவில் நடமாடிக்கொண்டு இருந்தது.  ஒன்றிரண்டு பேர்கள் எதிரே தென்பட்டனர். இவளைப் பார்த்து ‘ஹாய்’ என்றனர். ரூம் வெளியே பூட்டியிருந்தது. ஸ்ரீஜா இன்னும் வரவில்லை. கதவைத் திறந்து நுழைந்தாள். வெக்கையாயிருந்தது. வெள்ளிக்கிழமை  இரவில் வாசமடித்த ஸ்ரீஜாவின் பர்ஃப்யூம் இன்னும் மீதமிருந்தது. லைட்டையும், ஃபேனையும் போட்டவள், பையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, கதவை சாத்திக் கொண்டு அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.

 

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்ரீஜா வந்துவிடுவாள். அவளிடம் என்ன பேச?. மதுரையில் இருந்த இரண்டு நாட்களில் அவளைப் பற்றி நினைவு பெரிதாக வரவில்லை. ஒரே அறையில்  தங்கி இருந்ததால் நெருக்கமாகப் பழக முடிந்தது. நாளை அவளோ அல்லது இவளோ வேறு ஒரு அறைக்கு இடம்பெயரக் கூடும். அப்போது வேறு யாரோ அருகிலிருப்பார்கள். கல்லூரியில் இதுபோல் ஒரே அறையில் தங்கியிருந்த சிந்து அவ்வளவு நெருக்கமாயிருந்தாள். அந்த நாட்களில் அவள்தான் உயிரெனத் தோன்றியது. ஸ்ரீஜா வந்த பிறகு அவள் காணாமல் போய் விட்டாள். இழுத்துப் பிடித்துத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது. எல்லா நாட்களும் யார் கூடவே வருகிறார்கள்? அப்பா இறந்த பிறகும் அவர் நினைவாக அலைந்து கொண்டிருக்கும் கல்யாணியின் பித்து மனநிலை அதற்கு வேண்டும் போல.

 

இன்று திங்கள்கிழமை என்று நினைக்கவே அலுப்பாயிருந்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தயாராக வேண்டும். இரவில் வந்து படுக்கையில் விழ, காலையில் எழுந்து புறப்பட மட்டுமே ஹாஸ்டலாகி விடும்.  மற்ற நேரமெல்லாம் சிஸ்டம், பிராஜக்ட், டீம், மீட்டிங், மெயில் என தலை தெறித்துப் போக வேண்டும். நெற்றி சுருங்க கம்ப்யூட்டர் திரையில் கண்கள் நிலைகுத்தியிருக்கும். சேரோடு முதுகுத் தண்டும், கழுத்தும் அசையாதிருக்கும். அணிச்சையாக கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கச் சொல்லும் உடல். பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரம் அப்படி வேலை பார்த்துவிட்டு தங்கியிருக்கும் வீடுகளுக்கும், ஹாஸ்டல்களுக்கும் சோர்வடைந்து திரும்ப வேண்டும்.

 

ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்கள் கொட்டிக் கொழிப்பதாக வெளியே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த தங்கள் தெருவைச் சேர்ந்தவரிடம் இவளை, “தங்கச்சி” என கலைச்செல்வன் அறிமுகப்படுத்தி ‘சென்னைல ஐ.டி கம்பெனில வேல பாக்குறா” என்று சொன்னான். விவஸ்தையே இல்லாமல், “அப்புறம் என்ன, மாசம் லட்சத்துக்கும் மேல இருக்குமே சம்பளம்” அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருந்தார். என்ன கம்பெனி, என்ன வேலை, என்ன சம்பளம் என்பதை அறியாமலேயே  ‘சொர்க்க லோகமாய்’  தங்களுக்குள் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கலைச்செல்வனிடம் பூங்குழலி சொல்லி சிரித்தாள்.

 

“அப்படித்தான் நினைக்குறாங்க. பேங்க் வேலன்னா அஞ்சு வருசத்துக்குன்னு பேச்சுவார்த்தை நடக்கும். என்ன சம்பளம் என முடிவு செய்வாங்க. அது எல்லாருக்கும் தெரியும். கவர்ன்மெண்ட்  எம்ப்ளாயிஸ்க்கு பே கமிஷன் அறிக்கை வரும். எல்லாருக்கும் தெரியும். ஆனா உங்க கம்பெனில உன் சம்பளம் பக்கத்து சீட்ல இருக்குறவங்களுக்குக் கூட தெரியாதே. உனக்கும் கம்பெனிக்காரனுக்கும் தெரியும். அதப் பத்தி நீயும், கம்பெனியும் மட்டுந்தான பேசி முடிவு செய்றீங்க. அது இன்டிவிஜுவல் பார்கெய்னிங். கலெக்டிவ் பார்கெய்னிங் கிடையாது. அதான் அவ்ளோ இருக்கும், இவ்ளோ இருக்கும்னு ஒவ்வொருத்தரும் கற்பனை செய்றாங்க” என்றான்.

 

“நாங்க படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும்”

 

“வெளியே தெரிற மாதிரியோ, உங்களுக்குள்ளேயேக் கூட நீங்க உங்க பிரச்சினைய பேச முடியாதே. பேசுனா வேலையில இருக்க முடியாது. அதனால் நீங்க படுற பாடு வெளியே தெரியாதுதான். மத்தவங்க பார்வையில  உங்களோட லைஃப் ஸ்டைல் சொகுசாத் தெரியுது.”

 

“உண்மைதான். டீம்ங்குறது செய்ற வேலைக்கு மட்டுந்தா. மத்தபடி சம்பளம், அலவன்சு, பிரமோஷன், வேலைல இருக்குறது, இல்லாமப் போறது எல்லாத்தயும்  அவங்க அவங்கதான் ஃபேஸ் பண்ணிக்கனும்.”

 

“ஆங்… அதுதான் பிரச்சினையே. ஒரு இன்செக்யூரிட்டி எல்லாருக்குள்ளயும் உக்காந்து மிரட்டிட்டே இருக்கும். எதுவும் நிலையானதா தெரியாது.”

 

“பேங்க் எக்ஸாம் நடந்தா சொல்லுண்ணா. நானும் எழுதிப் பாக்குறேன்.” என்றாள்.

 

“இப்போ பேங்க்கையும்  ஐ.டி மாதிரி மாத்துறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காங்க” சொல்லி சிரித்தான். தொடர்ந்து “இந்த இன்செக்யூரிட்டி கூட கல்யாணம் பத்தி உன்ன யோசிக்க வச்சிருக்குமோன்னு நினைக்கிறேன்” என்றான்.

 

“நா ஏற்கனவே சொன்னேன்ல. இன்செக்யூரிட்டி, டென்ஷன் இருக்கு. அதுக்கும் கல்யாணத்துக்கும்  சம்பந்தப்படுத்தி நா பாக்கல. நரேன், அவங்க அம்மா, அந்த தொண தொணப்புல்லாம் பிடிக்கல. போரிங்காவும், இரிட்டேட்டிங்காவும் இருக்கு. கல்யாணமான பெறகு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும், இருக்குற நிம்மதியும் தொலைஞ்சுரும்.” என்றாள்.

 

“ம்.. இருக்கலாம்.” என சிரித்துக்கொண்டு அமைதியாகி விட்டான் கலைச்செல்வன்.

 

தங்கையும், அண்ணனும் எவ்வளவோ பேசியிருந்தார்கள். ஒருவர் சொன்னதை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தபோதும் எரிச்சலோ, கோபமோ, வருத்தமோ யாரிடமும் தலையெட்டிப் பார்க்கவில்லை. இவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு உடனடியாக பதில் சொல்ல மாட்டான். அதுகுறித்து யோசிப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் அவன் பாவனைகளும் உடல்மொழியும் இருக்கும். சிறிது நேரம் கழித்து ஏற்கனவே இவள் பேசியதற்கு பதில் சொல்வதாக இல்லாமல் புதிதாக பேச ஆரம்பிப்பது போலிருக்கும். நிதானமாக பேசுவான். இவள் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால், “யோசிச்சுப் பாரேன். பிறகு பேசுவோம்” என சிரித்துக்கொண்டே அங்கிருந்து எழுந்து கொள்வான். இல்லையென்றால் யாழினியோடு ஒட்டிக்கொண்டு விடுவான். கொஞ்ச நேரம் கழித்து, “சொல்லு” என கேட்பான். கலைச்செல்வனிடம் பேசுவது சலிப்பூட்டுவதாக இல்லை. இந்த நிதானமும், பக்குவமும் அண்ணனுக்கு எப்படி வந்தது என்று இருந்தது.

 

அலையரசன் போன் செய்து, “அம்மா அழுறாங்க” எனச் சொன்னவுடன் அவள் வேகத்துடன் சித்ராவுக்கு போன் செய்து பேசியதில் கலைச்செல்வனுக்கு சம்மதமில்லை. கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டான். சரண்யாவும் “எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றாள்.

 

“அம்மாவப் போட்டு ஆச்சியும், முருகேச மாமாவும் இஷ்டத்துக்குப் பேசுவாங்க. எதுவும் பேச முடியாம பாவம் போல அவங்க இருப்பாங்க. ஒங் கல்யாணத்தோட நீ வீட்டை விட்டு போனதும் அம்மா அழுதுட்டேதான்  இருந்தாங்க. பாக்கும் போதெல்லாம் அப்பாவையும், உன்னையும் பாட்டி எதாவது சொல்லிட்டே இருப்பாங்க.  எனக்கும் அழுகையா வரும்.”

 

அந்த இடம் கொஞ்சம் இறுக்கமானது. சரண்யாவும் கலைச்செல்வனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மௌனம் காத்தார்கள்.

 

“ஐயோ அண்ணா, நா உங்கள குத்தம் சொல்லல” பரிதவித்தாள்.

 

“புரியுது. என்ன செய்ய? அப்பா இறந்த பிறகு அவங்கதான நம்மளப் பாத்துக்கிட்டாங்க.  உன்ன படிக்க வச்சாங்க”

 

“அதுக்காக அம்மாவும், நானும் அவங்களுக்கு அடிமையா இருக்கணுமா, அவங்க சொல்றதத்தான் கேக்கணுமா. அம்மா மட்டும் படிச்சிருந்தாங்கன்னா, எதாவது வேலையப் பாத்துட்டு சொந்தக்கால்ல நின்னுருப்பாங்கதான?”

 

“நானுங்கூட இத யோசிக்கல. எனக்கு வேலைக் கிடைச்சதும் உன்னயும், அம்மாவையும் கூட்டிட்டு இங்க வந்துருக்கணும்.” ஜன்னல் வழியாக தூரத்தில் அவன் பார்வை இருந்தது. மூவருமே கடந்த காலத்திற்குள் நுழைந்திருந்தார்கள். யாழினி வந்து அவர்களை கலைத்தாள். கலையரசன் மடியில் போய் உட்கார்ந்துகொண்டு இவளைப் பார்த்து “பூத்த..! “ சிரித்தாள். எல்லோரும் சிரித்தார்கள்.

 

“அவங்க சொல்றத நானும் கேக்கனுமான்னு சொல்றியே. அந்த கோவத்துலதான் நரேன் வேண்டாம்னு சொல்றியா” இவளை உற்றுப் பார்த்தான்.

 

“எங்க விட்டாலும் கடைசில கல்யாணத்துல வந்து நிக்குற.” என்றாள்.

 

“ஆமா பூவு. அதப் பத்தியே நினைச்சுட்டு இருக்கேன்.”

 

“என்ன நினைக்குற?”

 

யாழினி எதோ பேசிக்கொண்டு கலைச்செல்வனின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு இருந்தாள். சரண்யா எழுந்து யாழினியைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்.

 

“நரேன் பிடிக்கலன்னு நீ சொல்ற காரணத்த ஏத்துக்கிட முடியல. வேற காரணம் என்னன்னு யோசிக்கிறேன்.”

 

“உனக்கு ஏன் அப்படி தோனுது?’

 

“நரேனை ஒன்றிரண்டு தடவைதான் பாத்திருக்கேன். அதுக்குள்ள எப்படி அவனைப் பிடிக்கும்னு நீ கேக்குறது சரி. அப்போ, அதுக்குள்ள எப்படி பிடிக்காமப் போகும்னு கேக்குறதும் சரிதான?”

 

“அவன் பிஹேவ் பண்ணது அப்படி.?”

 

“பூவு, நா அதச் சரின்னு சொல்ல வரல்ல. ஒரு விஷயத்த புரிஞ்சுக்க. உனக்கும் அவனுக்கும் எங்கேஜ்மெண்ட்  ஆயாச்சு. அல்மோஸ்ட் கல்யாணம் நடந்த மாதிரி. கடற்கரையில எல்லோரும் பார்க்க  உன் தோள் மேலே கை போட்டு செல்பி எடுக்குறான். நீ கோபப்படல. ரொம்ப இயல்பா சிரிக்கிற. தியேட்டர்ல யாருக்கும் தெரியாம உன்னோட கை பிடிச்சு முத்தம் கொடுக்குறான். கோபம் வருது. உனக்கு சம்மதம் இல்லன்னு தெரிஞ்சதும் விலகிர்றான். அவமானப்படுறான். இதுல என்ன தப்பு. நீயே யோசிச்சுப் பாரு.”

 

“அவங்கம்மாவுக்கும், நம்ம பாட்டிக்கும் இதெல்லாம் தெரியாதுன்னு நினைக்குறியா? அது  அசிங்கமாயில்ல?”

 

“அப்படின்னா உன் கோபம் நரேனின் அம்மா மேலயும் நம்ம பாட்டி மேலயுந்தான இருக்கணும். ஏன் நரேன் மேல?”

 

“எனக்கும், நரேனுக்கும், நரேனோட அம்மாவுக்கும் போனில் ஒரு மனஸ்தாபம். ஒ.கேவா? அதை சரி செய்யணும்னு ஸாரி கேக்கச் சொல்றாங்க. எனக்குப் பிடிக்கல. சரி, அம்மாவுக்காக கேட்டேன். அதோட விடணும்தானே. என்ன செய்றாங்க. நானும் அவனும்  தனியா வெளியே போனா சரியாகும்னு திட்டம் போடுறாங்க. அவன் என்னத் தொட்டு முத்தம் கொடுக்குறான். அதுக்கு என்ன அர்த்தம். ஒரு ஆம்பளத் தொட்டுட்டா, பொம்பள காலாகாலத்துக்கும் அவனுக்கு அடிமை. அப்படித்தான? அதுக்கப்புறம் அவ வாயை மூடிட்டு இருப்பாங்குற நினைப்புதான? ஷிட். அசிங்கமாயில்ல. எவ்வளவு கேவலமா என்னப் பத்தி நினைச்சிருக்கணும். அதுதான் எனக்கு கோபமா இருக்கு.  அவங்களுக்கு சரியான டிரிட்மெண்ட் கொடுக்கணும்னு தோணுது. அவங்க அவமானப்படணும்னு தோனுது”

 

இவள் எவ்வளவு வளர்ந்திருக்கிறாள், சுயமரியாதை பற்றி எப்படி யோசிக்கிறாள் என சிறு புன்னகையோடு கலைச்செல்வன் பார்த்தான். ரசிக்க முடிந்தாலும், இவள் தரப்பில் நியாயமான காரணம் இல்லையென்றே அவனுக்குப் பட்டது.

 

“உன் கோபம் சரிதான். ஆனா இந்தக் காலத்துல ஒரு ஆண் தொட்டுட்டான்னா பெண் அதோட முடிஞ்சு போறாளா? காலத்துக்கும் அவனுக்குத்தான்னு நினைக்குறாங்களா? அதெல்லாம் எப்பமோ மாறியாச்சு. டேட்டிங் போய்ட்டு வந்து பிரேக் ஆயிடுறாங்க. கல்யாணம் பண்ண பிறகு டைவர்ஸ் செய்றாங்க. வேற லவ், வேற கல்யாணம். சாதாரணமா நடக்குது. இவ்வளவு யோசிக்கிற உனக்கு இது கண்ணுல படலியா?”

 

“நீ என்ன வேண்ணா சொல்லு. என்னால ஏத்துக்க முடிலண்ணா. இன்னும் நா என்ன ஃபீல் பண்றேங்கிறத சரியா உனக்கு சொல்ல முடிலன்னு நினைக்கிறேன்.”

 

“பரவாயில்ல. யோசி.” என்று கலைச்செல்வன் அதோடு முடித்துக் கொண்டான்.

 

நேற்று இரவில் பஸ் புறப்படும்போதும், ஜன்னல் அருகே வந்து, “யோசி. எதுன்னாலும் அண்ணங்கிட்ட பேசு. அண்ணன் உங்கூட இருப்பேன். சரியாம்மா. இப்படி அடிக்கடி வாம்மா” என  வழியனுப்பினான். கலைச்செல்வனோடு அவ்வப்போது பேசியது, சரண்யாவின் அன்பான உபசரிப்பு,  யாழினியோடு குழந்தையாகிப் போனது என இரண்டு நாட்களும் அமைதியைத் தந்திருந்தன. எப்போதும் வாகனங்களின் சத்தங்களுக்கும் வேகத்துக்கும் இடையே  பயணிக்கிறவளுக்கு, சாயங்கால நேரத்தில் பறவைகளின் கீச்சிடல்களோடு, அமைதியான வெளியில் காலாற நடந்து சென்றது போலிருந்தது.

 

மொபைலை எடுத்துப் பார்த்தாள். ஐந்தரை காட்டியது. கொஞ்சம் தூங்கலாம் என்றாலும்  ஏழு மணிக்கு எழுந்து புறப்பட வேண்டும் என்று மண்டைக்குள் அலாரம் ஓடியது. வாட்ஸப் போனாள். ‘உனக்கு கல்யாணமாமே, சொல்லவேயில்ல’  என்று வெள்ளிக்கிழமை மதியம் பிரகாஷ் அனுப்பிய மெஸேக்கு நேற்று “எனக்கே நீ சொல்லித்தான் தெரியுது” என்று பதில் அனுப்பி இருந்தாள். அதற்கு விழி பிதுங்கி நிற்கும் எமோஜி அனுப்பி இருந்தான். லேசாய் சிரித்துக் கொண்டே நகர்ந்தாள். “நேற்று நீயும் அலையும் வீட்டுக்கு வருவீர்கள் என நினைத்தேன். நீ மதுரையில் அண்ணன் வீட்டிற்கு திடீரென்று சென்று விட்டதாக அலை சொன்னான். எனி ப்ராப்ளம்?” என சோபியா கேட்டிருந்தாள்.

 

ஃபேஸ் புக்கில் மேய்ந்தாள். சுவாரசியம் இல்லாமல் தள்ளிக்கொண்டே வந்தவள் பிரகாஷ் என்று தெரிந்தவுடன் நிறுத்தினாள். “அழைக்கும் போதெல்லாம் குரலைக் கேட்கிறேன். நினைக்கும் போதெல்லாம் முகம் பார்க்கிறேன். ஒரு போதும் உன் கை தொட்ட ஸ்பரிசம் மட்டும் கிடைக்கவே இல்லை.” என கவிதை போல ஒன்றை எழுதி இருந்தான். நான்கு மணி நேரத்துக்கு முன்பு என காட்டியது. அப்போது இரவு ஒன்றரை மணி போல இருக்கும். அந்நேரத்துக்கு என்ன காதல் கவிதை? ஆறு பேர் லைக் செய்திருந்தார்கள். அதில் பெண்ணின் பெயர் இருக்கிறதா என பார்த்தாள். ஏன் அதையெல்லாம் ஆராயத்தோன்றுகிறது என்பதும் உறுத்தியது. சிரித்துக் கொண்டிருக்கும் அவனது ப்ரொஃபைல் படத்தையேப் பார்த்தாள். வேலை கிடைத்து  சென்னையை விட்டு பெங்களூர் சென்றதும் எழுதி இருக்கிறான். அந்தப் பெண் சென்னையில் இருக்கிறாளா? தான் இல்லை என்பது தெரிந்தது. இவள் அவனையே நினைத்துக் கொண்டிருக்கவில்லை. தன் வாழ்வில் அவனுக்கு இடமில்லை என்பதும் அறிந்தேயிருந்தாள். ஆனாலும் அவன் வேறு யாரையோ காதலிக்கிறான் என்பது கசப்பாய் இருந்தது.

 

மொபைலை தள்ளி வைத்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள். திடுமென எதுவும் சுவாரசியமில்லாமல் போயிருந்தது. முந்தாநாள் அம்மாவிடம் பேசிய பிறகு யாரிடமிருந்தும் இப்போது வரை ;போன் வரவில்லை. அவர்களும் யோசிக்கிறார்கள் போல. நல்லது என முணுமுணுத்துக் கொண்டாள். கண்கள் களைப்பாயிருந்தன.

 

அசந்து தூங்கியிருக்க வேண்டும். மொபைல் சத்தம் போட்டதும் பதறி எழுந்து பார்த்தாள். மணி ஆறரை. கலைச்செல்வன் அழைத்துக் கொண்டிருந்தான். “சொல்லுண்ணா” என்றாள்.

 

“எப்பம்மா சென்னைக்குப் போய்ச் சேந்தே?”

 

“அஞ்சு மணிக்குண்ணா” இவள் குரல் தளர்ந்திருந்தது.

 

“ம்… ஆபிஸ் கெளம்பணும் என்ன? சரிம்மா. அப்புறமா பேசுறேன்.”

 

“இல்லண்னா, எதோ சொல்ல வந்தே..”

 

“நேத்து உன்னை பஸ் ஏத்திட்டு வந்த பிறகு அம்மா போன்ல பேசினாங்க. ஆறர வருசத்துக்கப்புறம் அம்மாக் குரலைக் கேட்டேன்.” கலைச்செல்வன் குரல் தழுதழுத்தது.

 

பூங்குழலிக்கும் குரல் கம்மியது.

 

“உன்னப் பத்தித்தான் பேசினாங்க. உனக்கு புத்திமதி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருப்பான்னாங்க.”

 

பூங்குழலி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 

“அன்னிக்கு நீ அம்மாக்கிட்ட போன்ல பேசுனத வீட்டுல எல்லோரும் ஸ்பீக்கர்ல கேட்டாங்களாம். ஆடிப் போய்ட்டாங்களாம்.  இனும இந்தக் கல்யாணத்துல தலையிட மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். பத்திரிகை குடுக்கப் போறதில்லையாம். உன்னத்தான் நம்பியிருக்கேன். ஓம் பேச்சக் கேப்பா ஒந்தங்கச்சின்னு அழுதாங்க.”

 

“நீ என்னண்ணா சொன்ன?”

 

“நா உங்கிட்ட பேசியிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொல்லியிருக்கேன். நீயும் யோசி.”

 

“இல்லண்ணா. தெளிவா யோசிச்சிட்டேன். கல்யாணம் வேணாம். ஸாரி.”

 

“அண்ணன் உன்னக் கட்டாயப்படுத்தல. ஒன்னே ஒன்னு மட்டும் கேக்குறேன். இந்தக் கல்யாணத்த நிறுத்திருவோம். வேற ஒரு மாப்பிள்ள பாத்தா கல்யாணம் பண்ணுவியா? “

 

“இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாண்ணா. நாம் பாட்டுக்கு இருக்குறேன். வேலையில கான்சண்ட்ரேட் பண்ணனும்.”

 

“உனக்கு நரேன் பிடிக்கலையா? இல்ல, கல்யாணமே பிடிக்கலயா?”

 

“எனக்கு எதுவும் பிடிக்கலண்ணா.”  அவள் குரல் வேண்டா வெறுப்பாக இருந்தது.

 

“ஸாரி பூவும்மா.”

 

“ஊருக்குப் போய் அம்மாவக் கூட்டிட்டு வந்து இங்க ஒரு வீடு பாத்து நானும் அம்மாவும் இருந்துக்கலாம்னு தோணுது. அம்மாக்கிட்ட பேசணும்.”

 

கலைச்செல்வன் அமைதியாக இருந்தான்.

 

“நா அப்புறமா பேசுறேண்ணா”

 

“சரிம்மா” என்று போனை துண்டித்தான்.

 

அண்ணனும் கூட வெறுத்துப் போயிருப்பான். கவிழ்ந்து படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நரேனுடனான கல்யாணத்தில் ஏன் ஆர்வமும், ஆசையும் கொஞ்சம் கூட இல்லையென்று அவளுக்கேத் தெரியவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள் என்று அவர்களுக்காக செய்து கொள்ளும் காரியமாக மட்டுமே  தெரிந்தது. தன்னைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை போலவும், தனித்து விடப்பட்டது போலவும் உணர்ந்தாள்.

 

அறையின் கதவு தட்டப்பட்டது. முகத்தைத் துடைத்துக் கொண்டு போய் திறந்தாள்.

 

“ஹேய் பேபி..” என சந்தோஷத்தோடு  பாய்ந்து அப்படியே இவளைக் கட்டிப்பிடித்து அழுத்தமாய் முத்தம் கொடுத்தாள் ஸ்ரீஜா. அவளைத் தள்ளிவிட்டு கேவலோடு போய் படுக்கையில் விழுந்தாள் பூங்குழலி.


“என்னாச்சு… இன்னும் கோபம் தீரலியா” என்றவள் கதவை சாத்திவிட்டு வந்து, இவள் தலையைத் தூக்கி  மடியில் வைத்துக் கொண்டு  முகத்தையேப் பார்த்தாள்.

 

எழுந்திருக்க வேண்டும், அவளிடம் கோபம் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை. அவள் மடியில் இருக்க வேண்டும் போலிருந்தது. அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.

 

“ஸ்ரீ, நீ எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்குற. எப்பவும் உன்ன உற்சாகமா வச்சுக்க முடியுது. எனக்கு அதுல கொஞ்சம் தாயேன்” என்றாள்.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2022 06:24

February 25, 2022

க்ளிக் - 16 (தொடர்கதை)


அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்திற்கு லிஃப்டில் சென்று பி2 எழுத்துக்களைத் தேடி காலிங் பெல்லடித்து நின்றிருந்தான் நரேன். எல்லா வீட்டின் கதவுகளும் உள்ளுக்குள் பூட்டி இருந்தன.

 

நடந்தது ஒரு அந்தரங்கமான விஷயம். இப்போது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. விடாமல் அலைக்கழிக்கப்படுவதைத் தாள முடியவில்லை. இரவில் அம்மாவிடம் கோபப்பட்டு எரிந்து விழுந்திருந்தான். அதுவும் வதைத்தது. தணியவேத் தணியாமல் பூங்குழலிக்கு அப்படியொரு கோபம் ஏன் என்பது பிடிபடவில்லை. கிஷோரும், பிரசாந்த்தும் எப்போது வந்தார்களோ? இவன் எழுந்திருக்கும் போது தூங்கிக்கொண்டு இருந்தார்கள். கடற்கரையில் எடுத்த செல்பியை அவர்களுக்கும் அனுப்பி இருந்தான். மேற்கொண்டு  அவர்கள் கேட்டால் என்ன பேச? விழிக்கும் முன்னால் எங்காவது ஓடிவிட  வேண்டும் போலிருந்தது. போதாதற்கு காலையில் அப்பாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் துளைத்துக் கொண்டிருந்தன. அசிங்கமாக உணர்ந்தான். கண்ணாடியில் தன் முகம் பார்க்கவேப் பிடிக்கவில்லை. மேலும் அவமானங்களை சந்திக்காமல்  எலெக்டிரிக் ட்ரெய்னில் விழுந்தோ, எதாவது மருந்தை கிருந்தை விழுங்கியோ  ஒரேயடியாய் போய்விடலாம் என்று கூட தோன்ற ஆரம்பித்தது. பயம் வந்தது. கிளம்பி விட்டான்.

 

கதவு திறந்தது. பவித்ராதான். இவனைப் பார்த்ததும், “ஹேய், நரேன்!” என ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் முகமெல்லாம் காட்டி வரவேற்றாள். சமையலறையில் இருந்த பார்வதிக்கு, “அம்மா! யாரு வந்து இருக்கான்னு பாருங்க” குரல் கொடுத்தாள். இவனுக்கு நிம்மதியாகவும் இருந்தது. அவஸ்தையாகவும் இருந்தது. தன் மீது எவ்வளவு அன்பும், அக்கறையும் அவளுக்கு என்று உணர்ந்தான். அதுதான் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.

 

“என்ன அப்படியே நிக்குற.” பவித்ரா இவனது கைகளைப் பிடித்துக் கொண்டு ”உள்ளே வா” அழைத்துச் சென்றாள். மீண்டும் குழந்தையாகி அவள் பின்னால் சென்றான். பவித்ராவைப் போல பூங்குழலியும் இருக்கக் கூடாதா என்றிருந்தது. பவித்ராவுக்கு சின்ன வயதில் இருந்தே இவனைத் தெரியும். பூங்குழலிக்கு எத்தனை நாளாகத் தெரியும்? என்று நினைக்கவும் பூங்குழலியிடம் நடந்து கொண்டது போல் பவித்ராவிடம் நடந்து கொண்டதில்லை  என்பதும் உறைத்தது. சின்ன வயதிலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களில் இதுவரை அவளது உடல் குறித்த பிரக்ஞையும் கள்ளமும் புகுந்ததில்லை. ச்சே, எப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது என உடனே கேவலமாக உணர்ந்தான்.

 

“ம்… பூங்குழலியோட நேத்து பிரதர் செம்ம மூட்ல இருந்தாப்பல தெரிஞ்சுது” இவனைப் பார்த்தாள். சலனமில்லமல் இருந்தான். இருவரும் சோபாவில் உட்கார்ந்தார்கள். இவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து, “அந்த போட்டோவ பாத்ததும், நம்ம நரேன் வளந்துட்டான்னு தோணிச்சு.ஹேய், மேன்” கலகலவென இருந்தாள்.

 

பார்வதி சமையலறையிலிருந்து வெளியே வந்து, “வாப்பா நரேன். எப்படியிருக்கே?” என்றார். “நல்லாயிருக்கேன் ஆண்ட்டி. நீங்க எப்படியிருக்கீங்க.” எழுந்து நின்றான்.

 

“உக்காருப்பா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கா?” புன்னகைத்தார். ஒன்றும் சொல்லாமல் நெளிந்தான்.

 

“அம்மா, சனி ஞாயிறுக்கு வாயேன்னு எத்தனை வாரம் கேட்டிருப்பீங்க? நானும்தான் கூப்பிட்டேன். வந்தானா? இப்ப பாருங்க தன்னாலே வந்திருக்கான். குடும்பஸ்தன் ஆகப் போறான்ல. பொறுப்பு?” கலாய்த்தாள். சோபாவின் ஒரு ஓரமாய் நரேன் அமர்ந்தான்.

 

“நம்மளப் பாத்தாதான் சின்னப்பையன் மாதிரி கூச்சம். அமைதி எல்லாம். வரப் போறவக் கிட்ட ஆளு வேற லெவல்ல இருக்காரு.” சிரித்தாள். சிரிப்பது போல எதோ சம்பந்தமில்லாமல் செய்து கொண்டிருந்தான். இவன் ரசிக்கவில்லை என்பதை பவித்ரா கவனித்தாள்.

 

“சாப்பிடுறியா நரேன்” பார்வதி கேட்டார்.

 

“இல்ல, பரவாயில்ல ஆன்ட்டி”

 

“என்ன பரவாயில்ல. நாங்களும் இன்னும் டிபன் பண்ணல பிரதர். வா சேந்து சாப்பிடுவோம்.”  இவன் கன்னத்தில் செல்லமாய் தட்டினாள். சரி என்பதாய் தலையாட்டினான். பார்வதி உள்ளே சென்றார். அம்மாவுக்கு உதவி செய்ய பவித்ராவும் எழுந்தாள்.

 

“பவிக்கா..” அவள் கையைப் பிடித்தான்.  

 

ஆச்சரியமாக நரேனின் முகத்தைப் பார்த்து, “என்னடா?” கனிவாக கேட்டாள்.

 

“நீ உக்காரேன்.” என்றான். நரேனின் முகம் வெளிறி இருந்தது. சொல்ல முடியாத வேதனையை அடக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

 

“என்ன ஆச்சு நரேன்.” துடித்துப் போனாள். பக்கத்தில் அமர்ந்து ஆதரவாய் இவன் முதுகில் கை வைத்தாள்.

 

 “எனக்கே என்னைப் பாக்க அசிங்கமாயிருக்கு..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.

 

“நரேன்.” இவன் தோளைப்  பிடித்து அசைத்து மேலும் நெருக்கமாக உட்கார்ந்தாள். “என்னடா…”

 

நிமிர்ந்து முகத்தைப் பார்த்தவன் அழுகையை அடக்கிக் கொண்டு ஈனக்குரலில் நேற்று மாலை  பூங்குழலியை சந்தித்தலிருந்து இன்று காலை மூர்த்தி போன் செய்தது வரை எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தான் “செத்துரலாம் போலயிருக்குக்கா” வாய்விட்டு அழுதான்.

 

“அடச் சீ பைத்தியமே..” கோபத்தில் வெடித்தாள். இவனுக்கு தொண்டை காய்ந்து பேச முடியாமல் இருந்தது. தள்ளி மேஜையில் இருந்த பாட்டிலைப் போய் எடுத்து தண்ணீர் குடித்தான். திரும்ப வந்து உட்கார்ந்தான். தலையைக் குனிந்து கொண்டான்.

 

“இன்னும் நீ அந்த மூனாங் கிளாஸ் பையனாவே இருக்க  உன்னப் போய் பெரிய மனுஷனாய்ட்டேன்னு சொன்னேம் பாரு.” என்றாள்.  தலை நிமிராமல் இருந்தான்.

 

“இப்ப என்ன நடந்து போச்சு. இடிஞ்சு போன மாதிரி இருக்கே.” எழுந்து நின்று குனிந்து இவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.

 

“இல்லக்கா… யார் முகத்தயும் பாக்க முடியாம, எதுவும் பேச முடியாம… அவமானமா, அசிங்கமா இருக்கு..” கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

 

“நரேன்…”

 

“………….. “

 

“நரேன்! இங்க பாரு… பாருன்னு சொல்றேன்ல..”

 

நிமிர்ந்தான். முகத்தில் களையே இல்லை. வறண்டு போயிருந்தான்.

 

“எழுந்து நில்லு.”

 

திரும்பவும் குனிந்தான்.

 

“சொல்றேன்ல. எழுந்து நில்லு.”

 

எழுந்து நின்றான். புரியாமல் அவளைப் பார்த்து விட்டு குனிந்து கொண்டான்.

 

“வா… பவி அக்காவ ஹக் பண்ணு.” கையிரண்டையும் விரித்து நின்றாள்.

 

சித்தம் கலங்கியது போல் இருந்தது. எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றான். இவன் முகத்தை நிமிர்த்தினாள்  பவித்ரா. அவளது கண்கள் இவனை நேராக பார்த்தன. அவள் முகம் எல்லாம் மலர்ந்து புன்னகைத்து இருந்தது.

 

“கமான் மேன்.”

 

நரேன் பவித்ராவை நெருங்கி பட்டும் படாமல்  அணைத்துக் கொண்டு நின்றான்.

 

“உன்னை அன்பா நேசிக்கிற மனுஷங்கள நினைச்சுக்க. அம்மாவை, அப்பாவை, என்னை, உன்னை, உன் க்ளோஸ் ஃபிரண்ட்ஸை … யாரு வேண்ணா இருக்கட்டும்,. நினைச்சுக்க.” கண்களோடு பேசினாள். கண்ணீராய்க் கொட்டிக் கொண்டிருந்தது இவனுக்கு. ஒரு குழந்தையைப் போல இவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள். “எனக்குத் தெரியும் நரேன். நீ நல்லவன்.” என்றாள். தன் மீது இதமான காற்று படர்ந்தது போலிருந்தது.

 

“இன்னிக்கு இருக்கும் கஷ்டம் நாளைக்கு இருக்காது. நிச்சயம் ஒரு சந்தோஷம் வரும். அப்போ இந்த இருட்டு காணாமப் போயிரும். இல்ல அதுவே கூட சுகமாக இருக்கும். நீ இருந்தாத்தானே அதைப் பார்க்க முடியும். அனுபவிக்க முடியும். உன்னையும் வெறுக்காத. உலகத்தையும் வெறுக்காத. உனக்குப் பிடிச்சதுன்னு உலகத்துல இருக்கும். அதை பத்திரமா வச்சுக்க. உனக்குன்னு கொஞ்சம் பேர் எங்கயாவது இருப்பாங்க. அவங்கள நினைச்சுக்க.” அவள் பேசப் பேச கரைந்து கொண்டிருந்தான். இளகி அவள் காலடியில் கிடக்க வேண்டும் போலிருந்தது.

 

“எல்லாத்தயும் கிடந்து உனக்குள்ளயேத் தேடாத. நீ ஒன்னும் சிஸ்டம் இல்ல. எல்லாம் உள்ளுக்குள்ள இன்பில்ட்டா இருக்காது. வெளிய பாரு. உன் கேள்விகளுக்கு அங்கதான் பதில் கிடைக்கும். கூசாமப் பாரு.  தைரியமாப் பாரு.” அவனை மெல்ல விலக்கி இயல்பாய் சிரித்தாள். அமைதி திரும்பியவனாய், சரி என ஒப்புக்கொண்டவனாய் சோபாவில் உட்கார்ந்தான்.

 

“எதையும் மனசில் போட்டுக் குழப்பிக்காத. அம்மாவுக்கு எதாவது ஹெல்ப் செய்யணுமான்னு பாக்குறேன். டிவி பாக்குறியா” கேட்டாள். மற்ற சத்தங்கள் எல்லாம் நீங்கி அவல் குரல் மட்டும் தனித்துக் கேட்டது. நிதானத்திற்கு வந்திருந்தான்.

 

“பவிக்கா.. “ என்று எதோ சொல்ல வந்து முடியாமல் மௌனம் காத்தான்.

 

“நத்திங் டு வொர்ரி. இரு வர்றேன்” என இவன் தோளைத் தட்டி உள்ளே சென்றாள்.  

 

“நானும் வர்றேன்” அவள் பின்னாலேயே சென்றான். தரையில் உட்கார்ந்து சப்பாத்திக்கு உருட்டிக் கொண்டிருந்தார் பார்வதி.

 

“அம்மா எழுந்திருங்க, நா செய்றேன்” என பவித்ரா போய் வாங்கிக் கொண்டாள். இவனும் போய் அவளுக்கு எதிரே கீழே உட்கார்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒரு தேவதை போல தன்னை ஆற்றுப்படுத்தியவளா அவள் என்று அதிசயமாக இருந்தது.

 

அவள் சிரித்தாள். “ஞாபகம் இருக்காம்மா. சின்ன வயசுல இதே மாதிரி நம்ம வீட்டு கிச்சன்ல வந்து உக்காந்திருப்பான்ல” கேட்டாள்.

 

பார்வதியும் சிரித்துக் கொண்டார். “அங்க மட்டுமா. காலையில நீ கோலம் போடும்போதும் வந்து முன்னால வந்து உக்காந்திருப்பான். சந்திராவும், அவங்க வீட்டுக்காரரும் கிடந்து கூப்பிட்டுத்தான் பாப்பாங்க. அசைய மாட்டான். நானும் கோலம் போடுறேன்னு இஷ்டத்துக்கு அங்க இங்க புள்ளி வச்சு என்னா பாடு படுத்துவான்.” என்றார்.

 

தரையின் குளிர்ச்சி சுகமாய் இருந்தது. அப்படி உட்கார்ந்திருப்பதும், தன்னைப் புரிந்து கொண்டவர்கள் அருகில் இருப்பதும்  ஆசுவாசப்படுத்தின. வேறு எங்கும் போகாமல் அவர்களோடு இருந்துவிடலாம் போலிருந்தது.

 

நரேனின் ரிங்டோன் சத்தம் ஹாலில் கேட்டது. “உன் மொபைலா?” கேட்டாள் பவித்ரா. மனமில்லாமல் எழுந்து சென்றான். கிஷோர் அழைத்துக் கொண்டிருந்தான். எடுத்தான்.

 

 “ப்ரோ, எங்க இருக்க?”

 

“பவித்ராக்கான்னு சொல்லியிருக்கேன்ல. அவங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.”

 

“எப்ப வருவே”

 

“தெரில. நீங்க ரெண்டு பேரும் எப்ப முழிச்சீங்க?”

 

“இப்பத்தான். ஹவுஸ் ஓனர் வந்து எழுப்பிட்டாரு. எதோ போட்டோ கேட்டியாமே. அதக் கொடுக்க வந்தாரு. நீ இல்லன்னதும் கொண்டுட்டுப் போய்ட்டாரு.”

 

“சரி. நா வந்து வாங்கிக்கிறேன். இன்னிக்கு என்ன புரோக்ராம்?”

 

“ஒன்னும் இல்ல. தூக்கந்தான். விடிகாலைல வரும்போது மூனு மூன்ற இருக்கும். நீ தூங்கிட்டு இருந்த. பீச்சில எடுத்த போட்டோ சூப்பரா இருந்துச்சு ப்ரோ. அப்புறம் எங்கல்லாம் போனீங்க. என்ன பண்னீங்க? ஜாலிதானா?”

 

“படுத்துத் தூங்கு” அழைப்பைத் துண்டித்தான். வாட்ஸப் பார்த்தான். இவன் அனுப்பிய செல்பிக்கு ஆஷா ஹார்ட்டின் விட்டிருந்தாள். நாளை மறுநாள் ஆபிஸில் அவள் எப்படித் தன்னைப் பார்ப்பாள். பேசுவாள் என யோசித்தவன் டிவி பக்கத்தில் பார்வதி ஆன்ட்டி, பவித்ரா, சுந்தரேசன் அங்கிள் மூவரும் இருந்த போட்டோவைப் பார்த்தான். ஊரில் பார்த்த போட்டோதான். பவித்ரா வெளியூரில் தங்கி காலேஜ்க்குப் போன நாட்களில், அவளைக் காண் முடியாமல் எதிர்த்த வீட்டிற்குப் போய் அந்த போட்டோவை ஏக்கத்தோடு பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்தக் கண்கள் அப்படியே இருந்தன. எத்தனை கொடுமைகளையும், கஷ்டங்களையும் கண்டிருக்கிறது அந்தக் கண்கள். கல்யாணமாகி, முடங்கி, பைத்தியக்காரி பட்டம் கட்டி அனுப்பப்பட்ட பிறகும் அதே ஓளியோடு கண்கள் இருக்கின்றன. ஊரில் அப்பாவையும், சென்னையில்  தன்னோடு அம்மாவையும் வைத்துக்கொண்டு வாழ்வோடு மல்லுக்கட்டி நிற்கிறாள். கண்கள் வாடிப் போகவில்லை. எதையும் ஒளித்து வைக்காத தெளிவும், அன்பும், அப்படியே நிறைந்து இருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இவனுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்தன.

 

“என்ன அப்படி வச்ச கண் வாங்காம பாத்துட்டிருக்க?” பின்னால் பவித்ராவின் குரல் கேட்டதும் திரும்பினான். அதே கண்களோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

“இந்த போட்டோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது எடுத்ததுதானே?”

 

“ஆமா, ஞாபகம் வச்சிருக்கியே.”

 

லேசாய் சிரித்துக் கொண்டான். “சப்பாத்தி  போட்டாச்சா..”

 

“உருட்டிக் கொடுத்துட்டேன். இனும அம்மா பாத்துக்கிடுவாங்க.”  என்றவள் குரல் கொஞ்சம் தாழ்த்தி, “தாங்ஸ் நரேன்” என்றாள்.

 

“என்னக்கா?”

 

“ஒரு கஷ்டம்னதும் என்னப் பாக்கனும்னு உனக்குத் தோனியிருக்கே. சந்தோஷமா இருக்கு” புன்னகைத்தாள்.

 

“இப்பவும் எனக்கு ஒன்னு உறுத்திக் கிட்டே இருக்கு. தியேட்டர்ல பூங்குழலிக் கிட்ட நா அப்படி நடந்துக்கிட்டது தப்புதானே?”

 

“தப்புன்னு சொல்ல முடியாது. நேச்சுரல்தான். அது ஒரு இண்டிமஸியான மொமண்ட். உனக்கு  அந்த அர்ஜ் இருந்திருக்க வேண்டாம். நீ அவள சரியா ரீட் பண்ணலன்னுத் தோனுது” நிறுத்தினாள்.  யோசித்தபடியே “உன்னோடு செல்பி எடுக்குறா. முதல்ல சினிமா வேண்டாங்கிறா. பிறகு வர்றா. இயல்பாத்தான் இருக்கு. ஆனா அவள எதோ ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது. உங்க ஆம்பளப் பையன்னு சொன்னது அடியாழத்துலயிருந்து வந்திருக்கு. அதுக்கு நிறைய அர்த்தம் இருக்கு” சொல்லிக்கொண்டே வந்தவள் திடுமென வாய் விட்டு அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

“என்னக்கா?’

 

“ஒருவேள உனக்கும் பூங்குழலிக்கும் கல்யாணமாயிருந்துச்சுன்னு வச்சுக்க. நீ அவள தொடக்கூட செய்யாம உங்கைய வச்சிட்டு சும்மா இருந்திருப்ப” சொல்லி திரும்பவும் சிரித்தாள். யோசித்துப் பார்க்கும்போது அதுவும் உண்மையாகத்தான் இருந்தது.

 

 “அம்மா, அப்பா முகத்துல நா எப்படி விழிப்பேன். இதுனால கல்யாணத்துல ஒரு  பிரச்சினைன்னா  எவ்வளவு அசிங்கம்?” பரிதாபமாக பார்த்தான்.

 

“லூஸாடா நீ. திரும்பத் திரும்ப அசிங்கம், அசிங்கம்னே சொல்லிட்டிருக்கே. என்ன அசிங்கம் பண்ணிட்டே. அம்மா அப்பாக் கிட்ட சொல்லு. ஆமா தியேட்டர்ல அவ கையப் பிடிச்சு முத்தம் கொடுக்கத் தோணிச்சு கொடுத்தேன்னு சொல்லு. அவளுக்குப் பிடிக்கல. விட்டுட்டேன்னு சொல்லு. ஒன்னு தெரிஞ்சுக்க. தப்புன்னா ஒத்துக்க. தப்பு இல்லன்னா ஒத்துக்காத. சிம்பிள். இப்படிக் கிடந்து அனத்தாத. அதுதான் அசிங்கமாயிருக்கு”

 

அவள் எரிச்சல் பட்டாலும்  மகிழ்ச்சியாகவே இருந்தது. தான் செய்யக் கூடாத தப்பைச் செய்து விடவில்லை என்று நிம்மதியடைந்தான்.

 

கண்ணை மூடி யோசித்தவள், “பூங்குழலி செட் ஆகலன்னு சொல்றதுக்கு தியேட்டர்ல நீ நடந்துக்கிட்டது காரணமில்லன்னு நினைக்கிறேன். அத ஒரு காரணமா சொல்றா. வேற எதோ இருக்கு. அதென்னன்னு தெரியணும்.”  என்றாள். பவித்ராவின் பக்கத்தில் சிறு குழந்தை போல உட்கார்ந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.

 

“ம்… இப்ப மூஞ்சு பரவாயில்ல. காலிங் பெல்லடிச்சு கதவத் திறந்ததும் பாத்த மூஞ்சி இருக்கே. சகிக்கல. எதோ பையன் சகஜமில்லாம இருக்கான்னு நினைச்சேன். செத்துப் போகணும்னு சொன்னப்போதான் ரொம்ப பயந்துட்டேன். லூஸூ. இனும எப்பவும் அப்படியொரு நினைப்பே வரக் கூடாது. ஒகேவா?” பவித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன.

 

 “பவி..” பார்வதி அழைத்தார். பவித்ரா சென்றாள். சிறிது நேரத்தில், “நரேன்! டைனிங் டேபிளுக்கு வர்றியா? டிபன் ரெடி” என்று குரல் கொடுத்தாள்.

 

சாப்பிடும்போது, “எய்யா,. தினமும் வெளியேத்தான சாப்பிடுவ. வீட்டுல சாப்பிடுற மாதிரியா இருக்கும்? இன்னிக்கும் நாளைக்கும் லீவுதான. இங்கேயே இரு” என்றார் பார்வதி.

 

“அதெல்லாம் இருப்பான்.” என்ற பவித்ரா, “நரேன், உள்ள இருக்கும்போது சந்திரா ஆன்ட்டி  போன் பண்ணாங்க. நீ இங்கதான் இருக்கேன்னு சொன்னதும் நிம்மதியாய்ட்டாங்க. அவனப் பாத்துக்குங்கன்னு சொன்னாங்க. பாவமா இருந்துச்சு. நீங்க பொண்ணு வீட்டுல யாருக்கும் போன் பண்ணாதீங்கன்னு சொன்னேன். அதுல கொஞ்சம் வருத்தந்தான் அவங்களுக்கு. ஒரு வாரம் போல இதப் பத்தி யாரும் எதுவும் பேசாம இருந்தா நல்லதுன்னு  சொல்லியிருக்கேன்” என்றாள்.

 

“அம்மா வேற எதுவும் கேட்டாங்களா?”

 

“வேறன்னா… ஓ!” என பார்வதியைப் பார்த்துவிட்டு, “கேட்டாங்க. சொன்னேன்.”

 

தொடர்ந்து சொல்வாள் என எதிர்பார்த்து சாப்பிடாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

”என்ன, சாப்பிடல?”

 

“அம்மா என்ன சொன்னாங்க?”

 

“இதுதானான்னாங்க.”

 

”ரொம்ப தாங்ஸ்க்கா” சாப்பிட ஆரம்பித்தான். அப்பாடா என்றிருந்தது. இனி சமாளித்துக் கொள்ளலாம் என தெம்பும் வந்தது.

 

தட்டில் இரண்டு சப்பாத்தியும், கொஞ்சம் தக்காளித் தொக்கும் வைத்துக்கொண்டு டிவியை ஆன் செய்து அதன் முன்னால் உட்கார்ந்தார் பார்வதி.

 

“அங்கிள் பாவம், ஊர்ல தனியா இருப்பாங்கள்ள?” கேட்டான்.

 

“ஆமா. வாலண்டரி ரிடையர்மெண்ட் எழுதிக் குடுத்துட்டு வாங்கன்னா, கேக்க மாட்டேங்குறாங்க.” கவலையோடு சொன்னார் பார்வதி. அவரையேக் கொஞ்ச நேரம் பார்த்திருந்த பவித்ரா  எதோ யோசனையில்  சாப்பிடாமல் இருந்தாள்.

 

“இவளுக்கும் வரனெல்லாம் வருது. கல்யாணம் வேண்டவே வேண்டாங்குறா” பார்வதி அடுத்த கவலையை வெளிப்படுத்தினார்.

 

“வேண்ணா சொல்லுங்க. யு.எஸ்க்கு போறதுக்கு கம்பெனில ஆஃபர் இருக்கு. நாளைக்கே அக்ரிமெண்ட் போட்டுட்டு போயிர்றேன். நீங்க அப்பாவோட ஊருல போய் இருக்கலாம்.” என்று கோபமாகச் சொன்னாள் பவித்ரா.

 

“ஏங்க்கா இப்படி பேசுறீங்க?”

 

“பிறகென்ன? நா யாருக்காக இருக்கேன். அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும்தான். அவங்களே போ, போன்னா. பேசாம அமெரிக்காவை கல்யாணம் பண்ணிட்டு போறேன்.”

 

“நிறுத்தும்மா, நா வாயேத் தெறக்கல” பார்வதி கோபத்தோடு எழுந்து உள்ளே போனார்.

 

நரேன் சிறு பதற்றத்தோடு பவித்ராவைப் பார்த்தான்.  அவளோ சிரித்துக் கொண்டே “தினமும் நடக்குறதுதான். எனக்கு அவங்கள விட்டா கதியில்ல. அவங்களுக்கு என்னை விட்டா கதியில்ல. கொஞ்ச நேரத்துல திரும்பவும் இதே பாட்ட பாடுவாங்க”

 

“பவிக்கா, நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”

 

”ப்ச் . கல்யாணம் பண்ணி… இன்னொருத்தன் வருவான். எதோ பெரிய தியாகம் செஞ்ச மாதிரி பாப்பான். கொடுமை. இல்லண்ணா என்னை மாதிரி டைவர்ஸான ஒருத்தனப் பாக்கணும். அவ எப்படியிருக்கானோ. எதுவும் இல்லாம பிடிச்ச ஒருத்தனோட எந்த கமிட்மெண்ட்டும் இல்லாம ரிலேஷன்ஷிப்ல இருக்குறது கூட பெட்டர்னு தோணுது.”

 

வருத்தத்தோடும், கொஞ்சம் அதிர்ச்சியோடும் அவளைப் பார்த்தான் நரேன். அந்தக்  கண்களில் எப்போதும் போல் அன்பும்  தெளிவும் அப்படியே இருந்தது. இவனைப் பார்த்து சிரித்தது போலவும் தெரிந்தது.

 

“பவிக்கா… நீ யாரையாவது லவ் பண்றியா?”

 

“ம்… எல்லாரையும் லவ் பண்ணிக்கிட்டுத்தானே இருக்கேன்.” சிரித்தாள்.

 

“ஜோக் அடிக்காத. உன்ன  எல்லோரும் லவ் பண்ணுவாங்க. நீ யாரையாவது லவ் பண்றியா?’

 

“என்னடா இது வரைக்கும் இப்படில்லாம் கேட்டதேயில்ல. திடீர்னு பெரிய மனுஷனாட்டம் ரொம்ப அக்கறையா கேக்குற?

 

“நீ எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுக்கிட்டு இருக்கணும். அவ்வளவுதான்.”

 

“அப்படின்னா லவ்வே பண்ணக் கூடாது” சத்தம் போட்டு சிரித்தாள்.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 19:41

February 23, 2022

க்ளிக் - 15 (தொடர்கதை)


முக்கியமான நேரத்தில் ஒருவரின் குரலை கேட்க முடியாவிட்டால் ஏமாற்றமும், இயலாமையும் சேர்ந்து பதற்றம் கொள்ளச் செய்கின்றன. வேறு வழிகள் குறித்து யோசிக்க முடியாமல் போகிறது. செல்போன்கள் இல்லாத காலத்தில் கூட இப்படி அவஸ்தைப்பட்டதாக சித்ராவுக்குத் நினைவில்லை. கலைச்செல்வன் உண்டாகியிருந்தபோது எதோ யூனியன் வேலையாகப் போன ரவிச்சந்திரன் இரண்டு மூன்று நாட்களாய் வரவில்லை. அதிகமாக வாந்தி எடுத்துக் கொண்டு தனியாய் வீட்டில் சுருண்டு கிடந்தார் சித்ரா. இந்த நிலைமையில் மனைவியை விட்டு விட்டு வந்திருக்கிறோமே, அவள் என்ன செய்வாள் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா என்று ரவிச்சந்திரன் மீது கோபம் இருந்தது.  தவித்துப் போகவில்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள். இப்போது பூங்குழலி மீது என்னவெல்லாமோ நினைப்பு வந்து பாடாய் படுத்துகிறது. நேற்றிரவிலிருந்து சுத்தமாய் நிம்மதி போயிருந்தது.

 

பஜாரில் கடையெல்லாம் அடைத்து பூசைப்பழம் வீட்டுக்கு வந்த பிறகு முருகேசன், உறங்கிக் கிடந்த தெருவில் டபடபவென்று புல்லட்டில் வந்தார். கதவைத் தட்டிய தொனியிலேயே எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

 

சாப்பிட்டு விக்ஸை மூக்கில் உறிஞ்சி படுக்கப் போன பூசைப்பழம் என்னமோ எதோ என்று பதறி ஹாலை ஒட்டியிருந்த படுக்கையறையில் இருந்து வந்து வெளிக்கதவைத் திறந்தார். அப்பாவிடம் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவர், காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து ஹாலில் உட்கார்ந்து மடித்துக் கொண்டிருந்த சித்ராவைப் பார்த்ததும் குரலை உயர்த்தி, “ரொம்ப நல்லா வளத்திருக்க ஓம் பிள்ளைய” கத்தினார்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“என்ன நடந்துச்சுன்னு இந்தக் கத்து கத்துற?’ பத்மாவதி வேகமாய் சமையலறையில் இருந்து வெளிப்பட்டார்.

 

தன்னிடம்  மூர்த்தி போனில் சொன்னதையெல்லாம் கொட்டினார் முருகேசன். “பொம்பளப் பிள்ள பேசுற பேச்சா இது. மாப்பிள்ளயோட அப்பா வருத்தப்படுறாரு. இதெல்லாம் நல்லாயில்லன்னு கோபமா சொல்றாரு” இரைந்தான்.

 

“மெல்லப் பேசுடா…” பத்மாவதி வெளிக்கதவை மூடி, ஜன்னல்களையும் சாத்திக்கொண்டே “சாயங்காலம் அஷ்டலஷ்மி கோயிலுக்குப் போய்ட்டு கடற்கரையில ரெண்டு பேரும்  சந்தோஷமா எடுத்த போட்டோவக் கூட சம்பந்தியம்மா அனுப்பி இருந்தாங்களே. அதுக்குள்ள என்ன நடந்துச்சு…” அதிர்ச்சியோடு இழுத்தார்.

 

“யாரு இப்போ அவங்க ரெண்டு பேரும் அஷ்டலஷ்மி கோயிலுக்கு போகல, கடற்கரைக்கு போகல, சினிமாவுக்குப் போகலன்னு அடிச்சிக்கிட்டாங்க. எல்லாம் நீங்க ரெண்டு பேரும் பண்ற வேல.”

 

“நாங்க என்னடா பண்ணோம்? எதோ ஒரு படத்தப் பாத்துட்டு இவ எதோ எழுதியிருக்கா. மாப்பிள்ள வருத்தப்பட்ருக்காரு. சரி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா பிரச்சினையில்லாம இருக்குமேன்னு நினைச்சோம்.”

 

“எதையாவது ஏங்கிட்டயோ, அப்பாக்கிட்டயோ சொன்னீங்களா? பொம்பளகளாப் பார்த்து பேசி தீத்து வைக்கிறீங்களாக்கும். கடைசில இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.”

 

சித்ராவின் பக்கம் திரும்பி, “ஏம்மா, பூங்குழலிக்கு போன் பண்ணும்மா.” என்றார் பத்மாவதி.

 

“ஆமா, போன் பண்ணவுடனே எடுத்து மறு பேச்சு பேசிட்டுத்தான் அடுத்த வேல பாப்பா ஒங்க பேத்தி. போங்கம்மா, விவரம் தெரியாம. நானும் அப்பமே போன் பண்ணிட்டுத்தான இங்க வந்திருக்கேன். சுவிட்ச் ஆப்ல இருக்கு.”

 

அமைதியானார்கள். பூசைப்பழம் வழக்கம் போல இடது கால் மேல் வலது கால் போட்டு தலையைக் குனிந்து  வலது உள்ளங்காலை தடவிக்கொண்டிருந்தார். சித்ரா துணிகளை மடிப்பதை நிறுத்திவிட்டு தரையில் திக்பிரமை பிடித்தவராய் உட்கார்ந்திருந்தார். “ஏம்மா,  பூங்குழலி இப்படி செஞ்சே..” என வாய் தானாக மெல்ல முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.

 

“சித்ராக்கா, இப்படியே உக்காந்திருந்தா என்ன செய்றது? அவளோட ஹாஸ்டல் நம்பர் இருக்கா. போன் போடு.” என்றார் முருகேசன்.

 

பத்மாவதி மணியைப் பார்த்தார். பத்தே முக்கால் ஆகியிருந்தது. “இந்த நேரத்துல எடுப்பாங்களாத் தெரிலய. சித்ரா போனப் போடும்மா?’ என்றார்.

 

அதற்குள் சித்ரா  போன் செய்திருந்தார்.

 

“ஹலோ..”

 

“சொல்லுங்க... “

 

“நா உங்க ஹாஸ்டல்ல தங்கியிருக்குற பூங்குழலியோட அம்மா பேசுறேன். ..”

 

“பூங்குழலியா… ரூம் நம்பர்? “

 

“14 வது ரூம்..”

 

“அவங்களா, ஊருக்குப் போறேன். மண்டேதான் வருவேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்களே “

 

“அப்படியா..”

 

“ஒங்கக் கிட்ட சொல்லலயா?”

 

“ஆமா, போன் சுவிட்ச் ஆப்னு வருது”  

 

“ஓ….”

 

“சரிங்க”

 

தன்னையே மூன்று பேரும் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு “ஊருக்குப் போறதா சொல்லிட்டு போய்ட்டாளாம். திங்கக்கிழமைதான் வருவாளாம்” என்றார் சித்ரா. அவள் குரல் அழுதது போல்,இருந்தது.

 

சட்டென முருகேசன் எழுந்து கொண்டார். பூசைப்பழத்தைப் பார்த்து  “யப்பா. பொய்யப் பாத்தீங்களா? ஒரு வேளை அவ அண்ணன் கலைச்செல்வனப் பாக்க போயிருப்பான்னு நினைக்கிறேன். காலைல நா சபாபதி மாமாக் கிட்டப் பேசி, அவர் மூலமா கலைச்செல்வன்கிட்ட பேசச் சொல்றேன். அங்கயும் போகலன்னு வச்சுக்கிடுங்க, அப்புறம் என்னய ஆள விட்ருங்க. நீங்களே பாத்துக்குங்க” கும்பிடு போட்டு  புறப்படப் போனார்.

 

“இருடா. எதுக்கு இப்ப குதிக்கிற. பூங்குழலி பேசுனதுல இருந்து பாத்தா அவளுக்கும்  மாப்பிள்ளைக்கும் எதோ பிரச்சின. அத என்னன்னு பாக்குறத விட்டுட்டு நீ பாட்டுக்கு பேசிட்டுப் போற. எனக்கென்னன்னு அப்படி போறதா சொந்தமும், பாசமும்? உக்காரு” நிதானமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் சொன்னார் பூசைப்பழம். முருகேசன் வேண்டா வெறுப்பா நின்றான்.

 

“யம்மா சித்ரா. நீ ஒன்னும் கவலப்படாத. இதெல்லாம் சின்ன விஷயந்தான். சரியாப் போகும். இந்தக் காலத்துப் பசங்களும் பொண்ணுகளும் எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைக்குறாங்க. அவங்களே முடிவெடுக்குறாங்க. சம்பந்தப்பட்ட மத்தவங்களப் பத்தி யோசிக்குறதே இல்ல. நாமதான் பொறுமையா நல்லது கெட்டத எடுத்துச் சொல்லணும்.” சொல்லி விட்டு முருகேசனைப் பார்த்து, “இதச் சொல்லவா இந்த நடு ராத்திரில வந்தே. இப்பவே முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது? போய்ப் படுங்க. காலைல பேசிக்கலாம்” சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

 

முருகேசன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார். புல்லட் சத்தம் அதிர்ந்து மெல்ல மெல்ல தேய்ந்தது.  

 

“இதுக்குத்தான் இவளுவள வைக்கிற இடத்துல வைக்கணும். படிச்சு கிழிச்சது போதும்னு சொல்லி நிறுத்தியிருக்கணும். வீட்டுலயிருந்தா இந்த ஆட்டம் போடுவாளா? செத்த நாய் போல சொன்னதக் கேட்டுட்டு தலைய ஒழுங்கா நீட்டுவா. நாலு எழுத்தப் படிச்சிட்டு, நாலு காச சம்பாதிச்சதும் திமிரப் பாரு. இந்தக் கல்யாணம் நடந்து முடிறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்காளோ.” புடவைத்தலைப்பால் முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டார் பத்மாவதி.

 

அம்மா இப்படி பேசுவார் எனத் தெரியும். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று சித்ரா ரொம்ப ஆசைப்பட்டார். பூசைப்பழம் கூட சம்மதித்தார். பத்மாவதிதான் வேண்டவே வேண்டாம் என தன் மூன்று பெண்குழந்தைகளையும் பிளஸ்டூவோடு நிறுத்திக் கொண்டார்.

 

“சும்மா சும்மா இப்படியே பேசாதீங்கம்மா. ஊருல நாட்டுல எல்லாப் பொண்ணுகளும்தான் வேலைக்குப் போறாங்க. கை நிறைய சம்பாதிக்காங்க. நல்லாதான் இருக்காங்க. போஸ்ட்மேன் பொண்ணு போன வருசம் கல்யாணமாச்சு, மெட்ராஸ்லதான் வேலை பாக்கா. ஜம்முனு இருக்கா. பூவு கூட படிச்ச சௌம்யா பெங்களூர்ல காரும் பங்களாவுமா வசதியாத்தான் இருக்கா. பொம்பளைங்க படிக்கக் கூடாது, வேலைக்கு போகக் கூடாதுன்னு  சொல்லாதீங்க.” சித்ரா எரிச்சல் பட்டார்.

 

“அவங்கள மாதிரி இல்லய ஒம்பொண்ணு. வானத்துலயிருந்து நேரே குதிச்ச மாதிரில்லா பவுசுல இருக்கா. செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து ஒம்புருஷன் சின்ன வயசுலயே கெடுத்துல்லா வச்சிருக்காரு.” கோபத்தை ரவிச்சந்திரன் மீது கொட்ட ஆரம்பித்தார் பத்மாவதி.

 

அங்கே இங்கே சுற்றி பத்மாவதி இந்த இடத்திற்குத்தான் வருவார். வாக்குவாதம் செய்ய இது நேரமில்லை என அமைதி காத்தார் சித்ரா.

 

“அப்பங்காரன்  காதலிச்சவள விட்டுட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான். மகங்காரன் யார் பேச்சையும் கேக்காம காதலிச்சவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். மகக்காரி கல்யாணம் பண்ண இருந்தவன விட்டுட்டு காதலிச்சவனோட போய்ட்டா. போலுக்கு. நல்ல குடும்பம் சாமீ”.

 

ஏற்கனவே அலையரசனோடு சென்னையில் பூங்குழலி பைக்கில் சுத்துவதாக ஊருக்குள் ஒரு பேச்சு எப்போதோ நுழைந்து, இருக்கும் இடம் தெரியாமலிருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தார் பத்மாவதி.

 

“அம்மா, நிறுத்துறீங்களா. இப்பிடிப் பேசினீங்களா செத்துப் போயிருவேன்” கத்தி கூப்பாடு போட்ட பிறகுதான் பத்மாவதி நிறுத்தினாள். சித்ரா எழுந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் முதல் படியில் உட்கார்ந்து கொண்டார். ஹாலின் வெளிச்சம் முழுமையாக அங்கு பரவியிருக்கவில்லை. மூச்சு வாங்கியது.

 

பத்மாவதி பாசம் கொட்டி திக்குமுக்காட வைப்பார். இல்லையென்றால் எண்ணெய்ச்சட்டியாக கொதித்து நெருங்க முடியாமல் விரட்டுவார்.  இவரிடம் மல்லுக்கட்டுவது உறவுகளில் சேதங்களையே ஏற்படுத்தும். அப்படியேதும் ஏற்படாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள அந்த வீட்டு மனிதர்கள் பக்குவம் பெற்றிருந்தார்கள். பத்மாவதி ஜாலியாக இருந்தால் அந்தக் குடும்பமே சந்தோஷமாக இருக்கவும், அவர் எரிச்சலில் புலம்ப ஆரம்பித்தால் அனைவரும் அமைதி காக்கவும் பழகிக் கொண்டார்கள். வீட்டிற்கு அதுவே விதியாகிப் போனது. பொண்டாட்டிக்கு அடங்கியவர் என நாலு பேர் பேசுவதினால் தனக்கு குறைந்து விடப் போவதில்லை எனும் தெளிவோடு இருந்தார் பூசைப்பழம். முருகேசன் முதற்கொண்டு மூன்று பெண் குழந்தைகளும் இவரது வார்த்தைக்கு மறு பேச்சு பேசுவதில்லை. நாளடைவில் தனக்குத்தான் அந்த வீட்டில் எல்லா நியாயங்களும் தெரியும் என தன்னையே பீடமாக்கிக் கொண்டார். மிகச் சாதாரணமாக அவரை கிண்டல் செய்தும், மறுத்தும் பேச ஆரம்பித்தது அந்த வீட்டுக்கு மூத்த மருமகனாக வந்த ரவிச்சந்திரன் 

 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கிண்டல் செய்வது போல ரவிச்சந்திரனை பத்மாவதி மட்டம் தட்டுவதும், அவனும் சிரித்துக் கொண்டே இவரது வாயடைப்பதுமாய் பனிப்போர் நடந்தது. இருவருக்கும் இடையில் “விடுங்க”, “விடுங்க” என்று சித்ரா பதறிப் போய் நிற்பார். தன் கணவன் மீது அம்மாவுக்கு இருக்கும் வெறுப்பு சித்ராவுக்குத் தெரியும். மகன் கலைச்செல்வனையும் சுத்தமாய் ஒதுக்கிவிட்டார்.  மகளோடும் அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என கவலைப்பட்டார். பூங்குழலி மட்டும்தான் வாழ்வின் ஒரே அர்த்தமாய் இருக்கிறாள்.

 

“எடும்மா, எடும்மா” என தனக்குள் வேண்டிக்கொண்டே போன் செய்து பார்த்தார். சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இனி அவளாக பேசினால்தான் உண்டு. அருகில் இருக்கும்போது கொஞ்சித்  திரிகிறவள், ஊட்டிவிடச் சொல்கிறவள், மடியில் வந்து படுத்துக் கொள்கிறவள் எப்படி தூரத்தில் போனதும் யாரோ போல நடந்து கொள்கிறாள். வீட்டுக்கு வந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அவள் நின்ற இடம், உட்கார்ந்த இடம், படுத்த இடம் பார்த்து பார்த்து நினைவுகளைச் சுமந்து அலையும் இவரது ஏக்கத்தை அறியாமல் இருக்கிறாள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து, இப்படிப் பிரிந்து இருக்கும்போதுதான் தெரியும்.

 

பத்மாவதி வந்து நின்றார். “எம்மேல கோவமா?” அருகில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்டார். மகளின் கைகளை பற்றிக்கொண்டார்.

 

“நாங் கோபப்பட்டு என்னாகப் போகுது?”  ஏறிட்டுப் பார்த்தார் சித்ரா. இழந்து போன குரல் உயிரற்று இருந்தது.

 

“தங்கமே, அப்படியெல்லாம் சொல்லாத. ஒரு சுகமும் இல்லாம, வாழ்க்கையெல்லாம் எம்புள்ள கஷ்டப்படுதேன்னு கோபத்துல பேசிட்டேன்.” பத்மாவதியின் கண்கள் கெஞ்சின.

 

அம்மாவிடமிருந்து விலகி  ஹாலில் வெறும் தரையில் படுத்துக் கொண்டார். பத்மாவதி எழுந்து சென்று இரண்டு தலையணைகளை எடுத்து வந்து ஒன்றை சித்ராவின் தலைப்பக்கம் வைத்து விட்டு  இன்னொன்றை தனக்கு வைத்துக் கொண்டு அருகில் படுத்துக் கொண்டார்.

 

வேதக்கோயிலில் இருந்து பதினோரு மணி அடித்தது. நினைவுக்குத் தெரிந்த நாளிலிருந்து இரவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்த சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தூக்கம் வராத எத்தனையோ இரவுகளில் அலைக்கழிக்கும் நினைவுகளை சமாதானம் செய்வதாக இந்த சத்தம் ஒலிக்கும். எப்படியும் விடிந்துவிடும் என நம்பிக்கையளிக்கும். பாதி ராத்திரியில் விழிக்கும்போது  ’இன்னும் விடியவில்லை தூங்கு’ என தட்டிக் கொடுப்பது போலிருக்கும். இன்று துயரத்தின் நரம்புகளை மீட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மணி அடிக்கும் வரைக்கும் நினைவுகளாய் இருந்தன.

 

ஐந்து தடவை மணிச்சத்தம் கேட்கவும் விழிப்பு வந்து எழுந்து உட்கார்ந்தார். பூங்குழலிக்கு போன் செய்தார். ரிங் சத்தம் போனது. அப்பாடா என மூச்சு விட்டு காத்திருந்தார். பாதியில் அழைப்பு நின்றது. மீண்டும் போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒன்றும் புரியவில்லை.

 

தனது அம்மாவோ, தம்பியோ நினைக்கிற மாதிரி பூங்குழலி மனம் போன போக்கில் முடிவெடுக்கிறவள் இல்லை என்பதில் உறுதியாக சித்ரா இருந்தார். கல்யாணத்திற்கு அவள் சம்மதித்தது, நிச்சயதார்த்தத்தில் சந்தோஷமாக வந்து நின்றது எல்லாமே உண்மை. அப்போது அவளுக்குள் வேறு எந்த முடிவும் இல்லை என்று நிச்சயமாய் நம்பினார். இருந்திருந்தால் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவள் அவள். மாப்பிள்ளையோடு கோயிலுக்குப் போய்ட்டு வா என்று சொன்னதற்கு மறுப்பு  சொல்லவில்லை, பிறகு என்ன ஆனது என்பதுதான் சித்ராவுக்கு பிடிபடவில்லை.

 

எழுந்து தலையை முடிந்து கொண்டதிலிருந்து பத்மாவதி எரிச்சலில் என்னென்னவோ பேச ஆரம்பித்தார். பூசைப்பழம் எதுவும் பேசாமல் நடமாடிக் கொண்டிருந்தார். சித்ராவுக்கு உள்ளுக்குள் பயம்  வர ஆரம்பித்திருந்தது. அந்த வீட்டு மனிதர்களின் முகங்களில் இருந்த  அருளையெல்லாம் சந்தேகங்கள் இழக்கச் செய்திருந்தன.

 

ஒன்பது மணிக்கு மேல் முருகேசன் வந்தார். சபாபதியிடம் பேசியதை சொன்னார். கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதை நிறுத்தி வைக்கப் போவதாக  நரேனோட அப்பா மூர்த்தி சொன்னதையும் சொன்னார்..

 

கலைச்செல்வன் வீட்டுக்கும் பூங்குழலி  போகவில்லை என்றதும் இருந்த ஒரே நம்பிக்கையும்  அறுந்து வெலவெலத்துப் போனார் சித்ரா. சுற்றிலும் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் போவது அச்சத்தையும், சந்தேகங்களையும் பெருக்கி விடுகின்றன. “கடவுளே! கடவுளே” என முணுமுணுத்தபடி பூங்குழலிக்கு போன் செய்து பார்த்தார்.  

 

“அப்பா, முத பத்திரிகை நாம சபாபதி மாமாவுக்குக் கொடுத்ததோட சரி. இன்னும் ஊருக்குள்ள கொடுக்க ஆரம்பிக்கல. நாமளும் நிறுத்தி வைக்கலாம்னு தோணுது” என்றார் முருகேசன்.

 

சித்ரா விசும்ப ஆரம்பித்தார்.

 

“அழு, நல்லா அழு. அழுறதுக்குப் பெறந்தவதான நீ. சுத்தி சுத்தி அவ எங்க வருவான்னு எனக்குத் தெரியாதா. இந்த எழவ நிச்சயதார்த்தத்துக்கு முந்தியே சொல்லியிருக்க வேண்டியதுதான” பத்மாவதி தலையிலடித்துக் கொண்டார்.

 

“படிச்சிருந்தா, சம்பாதிச்சா போதுமா, அறிவிருக்கா ஒம்பொண்ணுக்கு. எவ்வளவு அசிங்கம். ஊருல தலை காட்ட முடியுமா? அவளுக்கென்ன மெட்ராஸ்ல தலைய விரிச்சுப் போட்டுட்டு அவ பாட்டுக்கு அலைவா. இங்க இருந்து கேக்கிறவங்களுக்கு பதில் சொன்னாத்தான தெரியும்..” கத்தினார்  முருகேசன்

 

அதற்கு மேல் யோசிக்க முடியாமல் பத்மாவதி நடுவீட்டில் வைத்து அவர் மண்டைக்குள் இருந்ததை கொட்டி விட்டார். கோயிலிலோ, ரிஜிஸ்டர் ஆபிஸிலோ பூங்குழலி யாரையோ கல்யாணம் செய்து கொண்டு விட்டாள் என திட்டவட்டமாக சொன்னார்.

 

அப்படியெல்லாம் இருக்காது என சொல்லத் தோன்றினாலும், அடக்க மாட்டாமல் “கடவுளே..!”  என சத்தம் போட்டார் சித்ரா. யாருடைய முகத்திலும் விழிக்கப் பிடிக்காமல்  எழுந்து போய் தனது அறையில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆத்திரம் அடங்காமல் மூச்சு இறைத்தது. இந்த ஊர்க்காரன், கூட ஒரே ஆபிஸில் வேலை பார்க்கிறான் என்றதும் அலையரசன் நம்பரை கேட்டு வாங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. மொபைலில் தேடினார். இருந்தது. போன் செய்தார்.

 

“ஹலோ..”

 

“நா பூங்குழலியோட அம்மா பேசுறேன். அலையரசனா?’

 

“ஆமா, ஆண்ட்டி, நல்லாயிருக்கீங்களா?”

 

“இருக்கேம்ப்பா….” குரல் உடைய ஆரம்பித்தது. கட்டுப்படுத்தினார்.

 

“சொல்லுங்க ஆண்ட்டி…”

 

“தம்பி, பூங்குழலிக்கு போன் செஞ்சா நேத்துலயிருந்து எடுக்கவேயில்ல.. என்னன்னு தெரில…” இழுத்தார். யாரோடோ சித்ரா பேசும் குரல் கேட்கவும் பத்மாவதி அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தார்.

 

“நரேனோட கோயிலுக்கு போறேன்னு சாயங்காலம் சீக்கிரமே போய்ட்டா. அப்புறம் தெரிலய. நா விசாரிச்சுப் பாக்குறேன்.”

 

“தம்பி, வேற ஒன்னும் பிரச்சின இல்லய..”

 

“இல்லய… என்ன ஆண்ட்டி..”

 

“அவள நெனச்சு ரொம்ப கஷ்டமாயிருக்கு. உனக்கு போன் செஞ்சா ஏங்கிட்ட கொஞ்ச பேசச் சொல்லுய்யா..”

 

“சரி ஆண்ட்டி, கவலைப்படாதீங்க..”

 

அழைப்பைத் துண்டித்து விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

 

“யாரு போன்ல..” பத்மாவதி கேட்டார்.

 

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

 

“யாருக்கிட்ட சித்ரா பேசுனா?” முருகேசனும் அங்கு வந்தார்.

 

“தெரில. சொல்ல மாட்டேங்குறா?”

 

தன் மகளிடம் தெரிந்த இறுக்கமும் முகத்தில் தெறித்த கோபமும் பத்மாவதியால் நெருங்க முடியாததாய் இருந்தது. சித்ரா கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். எதோ நினைத்துக் கொண்டவராய் எழுந்து வேகமாக பூசைப்பழத்திடம் சென்று, “அப்பா, ஆள் ஆளுக்கு கண்டபடிக்கு எம் பொண்ணப் பத்தி பேசுறத நிறுத்தச் சொல்லுங்க. யார் கூடயோ போய்ட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு இன்னொரு தடவ யாராவது பேசுனா இந்த வீட்டுல இருக்க மாட்டேன் பாத்துக்குங்க. அப்படி யார் கூடயும் போறதா இருந்தா அதையும் எல்லார்ட்டயும் சொல்லிட்டுத்தான் போவா.” வெறி பிடித்த மாதிரி முகமும், பேச்சும் இருந்தது.

 

“சித்ரா! என்னடி பேசுற..” வேகமாக வந்த பத்மாவதியைப் பார்த்து பூசைப்பழம் “கையெடுத்துக் கும்பிடுறேன். நிப்பாட்டு தாயி. நிதானம் தவறி யாரும் பேசாதிங்க. அப்புறம் சரியே செய்ய முடியாமப் போயிரும். கல்யானத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள எவ்வளவோ யோசிக்கலாம். பேசலாம். சரி பண்ணலாம். விடுங்க” என கத்தினார்.

 

சித்ராவின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார். அழைப்பை அவசரமாக ஏற்று “யம்மா, பூவு..” என்று பெருங்குரலில் அழைத்தார். தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, போனை காதிலிருந்து எடுத்து ஸ்பீக்கரில் வைத்தார்.

 

”பூவு! என்னம்மா. போன் சுவிட்ச் ஆப்லயே இருக்கு.”

 

“அத விடுங்க. அழுதீங்களா? அலையரசன் சொன்னான்”

 

“நீ செய்ற காரியத்துக்கு நா வேறென்ன செய்ய..”

 

“நீங்களும் பாட்டியும், நரேனோட அம்மாவும் சேந்து செய்ற காரியத்துக்கு நா வேறென்ன செய்ய?”

 

“என்னம்மா இப்படில்லாம் பேசுற. எல்லாம்  உன் நல்லதுக்குத்தான?”

 

“ஆமா ரொம்ப நல்லதுக்கு. எரிச்சலா வருது. இப்ப என்ன? நரேனோட அம்மா புலம்பி இருப்பாங்க அதான  கேக்கப் போறீங்க?”

 

“ஏம்மா இப்படி கொதிக்குற மாதிரி பேசுற. அவங்க பெரியவங்க. அவங்கக் கிட்ட அப்படி பேசலாமா?”

 

“மொதல்ல என்ன நடந்துச்சுன்னு அவங்க பையங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கட்டும். பிறகு பேசுவோம்.”

 

“பூவு என்னம்மா சொல்ற?”

 

“மாப்பிள்ள மனம் கோணாம என்னால நடந்துக்க முடியலன்னு பாட்டிக் கிட்டச் சொல்லுங்க. புரியும் அவங்களுக்கு.”

 

“பூவு…”

 

“எனக்கு ஒன்னும் ஆகல. நல்லாத்தான் இருக்கேன். சீக்கிரம் ஊருக்கே வந்து பேசுறேன். சரியா? எல்லார்ட்டயும் சொல்லிருங்க.”

 

“பூவு… பூவு.. இப்ப எங்கம்மா இருக்க?”

 

“அண்ணன் வீட்டுக்கு வந்துருக்கேன்.”

 

“அங்க வரலன்னு சபாபதி மாமா சொன்னாங்களே?”

 

“நா வந்தத சொல்ல வேண்டாம்னு அண்ணங்கிட்ட நாந்தா சொன்னேன்.”

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2022 07:16

February 19, 2022

க்ளிக் - 14 (தொடர்கதை)


நரேனின் கல்யாண இன்விடேஷன் கொடுக்க சனிக்கிழமை ஊருக்குப் போகிறோம் என மூர்த்தி சொன்னதிலிருந்து அவரது அப்பா நடராஜன் அதே நினைப்பாகத்தான் இருந்தார். கண்ணுக்குள்ளேயே இருக்கும் மனிதர்களை, தெருக்களை, இடங்களை பார்க்கப் போகிறோம் என துடிப்பாய் இருந்தது. இன்று காலையில் வாக்கிங் போய் வந்தவுடன் ஷேவிங் செய்து, குளித்து விட்டிருந்தார். டிபன் சாப்பிட்டு விட்டு புறப்படுவோம் என்று மூர்த்தி சொல்லியிருந்தார்.

 

சந்திராவும் மூர்த்தியும் புறப்படுவதற்கான அறிகுறிகள் இல்லாதது போல் நடராஜனுக்குத் தெரிந்தது. காலையில் காபி தரும்போது சந்திராவின் முகமே சரியில்லாமல் இருந்தது. என்ன ஏதென்று புரியாமல் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். சந்திரா எதுவும் சொல்லாமல் சமையல் வேலைகளில் இருந்தார். வழக்கமாக இந்த நேரம் கேட்கும் இளையராஜா பாட்டுக்களும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது.

 

கடந்த இரண்டு மூன்று நாட்களாய் பள்ளியிலிருந்து வந்த பிறகு மூர்த்தியும் சந்திராவும் இங்கு தூத்துக்குடியில் தெரிந்தவர்கள் விடுகளுக்குச் சென்று கல்யாண அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தார்கள். நேற்று சாயங்காலம் மூர்த்தி கூட வேலை பார்க்கும் அல்போன்ஸ் வீட்டில் காபி குடித்து கல்யாணம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது  நரேன் அனுப்பியிருந்த செல்பியை சந்திரா பார்த்தார். அப்போதே மூர்த்தியிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பார்த்துக் கொண்டிருந்த அல்போன்ஸ் என்னவென்று கேட்கவும்,  “நரேனும் மருமகளும் பீச்சுக்குப் போயிருக்காங்க. படம் அனுப்பி இருக்காங்க” என மொபைலில்  காண்பித்தார். அவரும் ரசித்தார்.

 

அங்கிருந்து விடைபெற்று  இன்னொரு  வீட்டிற்கு செல்லும் வழியில், “அந்த செல்பியை ஊருக்கே காட்டணுமா. அதுவும் உடனேவா. ஏம்மா இப்படி இருக்கே?’ என மூர்த்தி லேசாய் கடிந்து கொண்டார். சந்திரா அவரது வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், நரேனுக்கு போன் செய்து பேச ஆரம்பித்தார். மூர்த்தி தனக்குள் சிரித்தாரா, எரிச்சல் கொண்டாரா தெரியவில்லை. அப்படியொரு முக பாவனையோடு, கொடுக்க வேண்டிய அழைப்பிதழை எடுத்து மேலே வைத்துக் கொண்டார். கார் டிரைவரிடம் “அடுத்த லெப்ட்ல திரும்பணும்” வழி சொன்னார்.

 

“நரேனும் பூங்குழலியும் ஆண்டவன் கட்டளை படம் பாக்க போறாங்களாம்.” மேலும் ஒரு தகவலைச் சொல்லி சந்திரா பொங்கிப் பூரித்தார். அதைக் கேட்ட மாதிரி  மூர்த்தி காட்டிக் கொள்ளவில்லை. “அந்த செல்பியை இனும எந்த வீட்டுலயும் காட்டிராத..” என்று மட்டும் சொல்லி வைத்தார்.

 

திட்டமிட்டிருந்தபடி ஒன்றிரண்டு வீடுகளுக்குக் கொடுக்க முடியவில்லை. எட்டரை மணிக்குள் வீடு திரும்பினார்கள். நடராஜனுக்கு ஒன்பது மணிக்குள் சப்பாத்தி ரெடி பண்ணிக் கொடுக்க வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்ததும், “ஆறு மணி ஷோ எத்தனை மணிக்கு முடியும்?” என்று சந்திரா கேட்டார். மூர்த்தி அதையும் கவனிக்காதது போல இருந்தார்.

 

படம் முடிய ஒன்பது மணிக்கு மேலாகும், அதன் பின்னர் பூங்குழலியை ஹாஸ்டலில் கொண்டு விட வேண்டும், எப்படியும் எதாவது ஒட்டலில் சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள், பத்து மணிக்கு மேலே போன் செய்வோம் என சந்திரா ஒரு கணக்கு போட்டுக் கொண்டார். சமையல் செய்து மூர்த்திக்கும், நடராஜனுக்கும் பரிமாறிவிட்டு வெளியே வராண்டாவில் போனோடு வந்து உட்கார்ந்திருந்தார்.

 

“என்ன ஆன்ட்டி, வெளியே தனியா உக்கார்ந்திருக்கீங்க?” கையில் இட்லி மாவு பாக்கெட்டுடன் போய்க்கொண்டு இருந்த ஈஸ்வரி நின்று கேட்டாள். இரண்டு வீடு தள்ளியிருக்கிற ராஜேஸ்வரியின் மருமகள்.

 

“இப்பத்தான் வேலை முடிஞ்சுது. சும்மா உக்காந்திருக்கேம்மா”

 

“நரேன் தம்பி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசந்தானே இருக்கு?” புன்னகைத்தாள்.

 

“ஆமாம்மா, பத்திரிகை அடிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சாச்சு”

 

“மருமகா எப்படி இருக்கா? பேசுவீங்களா?”

 

“நல்லா இருக்கா. இன்னிக்குக் கூட தம்பியும் அவளும் கோயிலுக்குப் போய்ட்டு, சினிமா போயிருக்காங்க”

 

“பரவாயில்லையே...” என்றவள் “தங்கம் போல வச்சுக்க மாட்டீங்க நீங்க?” சிரித்தாள். சந்திராவும் சிரித்துக் கொண்டார்.  

 

தங்கள் வீட்டைப் பார்த்துவிட்டு, “சரி, ஆன்ட்டி, வர்றேன்” நடக்க ஆரம்பித்தாள்.  பத்து மணியாக இன்னும் நேரம் இருந்தது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியுப் எல்லாம் ஒரு சுற்று வந்தார். பத்து மணியாகவில்லை. பொறுக்க முடியாமல் போன் செய்தார்.

 

நரேன் சுவாரசியம் காட்டிக் கொள்ளாமல் பேசியது ஏமாற்றமாயிருந்தது. ஃபிரண்டிடம் இருந்து போன் வந்ததால், பூங்குழலி படம் பார்க்காமல் சென்று விட்டாள் என்பது இடறியது. ‘முதல் முதலா சேர்ந்து போயிருக்காங்க, இப்படியா பிரிஞ்சு போறது?’, ‘இதைவிட அந்த ஃபிரண்டு என்ன முக்கியம்?’, என்றெல்லாம் யோசித்தார்.

 

“நீங்க உடனே பூங்குழலிக்கு போன் செய்து தொண தொணன்னு பேசாதீங்க. அவ எரிச்சல் படப் போறா” என்று  நரேன் எச்சரித்ததும் பிடிக்கவில்லை. இன்று ஒருநாள் பூங்குழலியோடு கொஞ்ச நேரம் பேசியிருக்கிறான், அதற்குள் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனக்கு மகன் புத்திமதி சொன்னதைத் தாங்க முடியவில்லை..  இத்தனைக்கும்  இரண்டு பேருக்கும் இடையில் கசப்பு முளைக்க ஆரம்பித்தது. அது மேலும் வளர்ந்து விடக் கூடாது என ஆசைப்பட்டது நாம், நம்மையே தள்ளி வைப்பது போல அல்லவா இருக்கிறது என புழுங்கிப் போனார். அதென்ன அவள் சின்னப் பெண் நம்மிடம் எரிச்சல் படுவது என பூங்குழலிக்குப் போன் செய்தார். அவள் எடுக்கவில்லை. அப்போதாவது சந்திரா நிதானித்து இருந்திருக்கலாம். திரும்பவும் போன் செய்ததுதான்  மொத்தத்தையும் தவறாக்கி விட்டது..

 

“பஃப்ல தண்ணியடிக்கேன்”,  “வேற எப்படிப் பேசணும்”, “ஒங்க ஆம்பளப் பையனிடம் கேளுங்க” எல்லாம் என்ன வார்த்தைகள்? பேசிய தொனியையும், அர்த்தங்களையும் நினைத்துப் பார்க்க பார்க்க நொறுங்கிப் போனார். துச்சமாக தன்னை மனதில் வைத்திருக்கிறாள். எதுவும் பேச முடியாமல் அப்படியே விக்கித்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து படுக்கையறைக்குள் போனார். ஹாலில் இருந்த மூர்த்தியும், நடராஜனும் சீரியலில் இருந்தார்கள்.

 

மாமியாரை விழ வைப்பதற்காக சமையலறையில் எண்ணெயைக் கொட்டி, மருமகளும் அவளது அம்மாவும் பக்கத்து அறையில் காத்திருந்தார்கள். மாமியார் நடந்து வர, இவர்கள் ஒருவரையொரு பார்த்து பயங்கரமாய் கண்களை உருட்ட, மாமியார் நடந்து வர, இவர்கள் கண்களை உருட்ட திகில் ஓசை அதிர பளார் பளாரென காட்சிகள் மாறி மாறி வெட்டி மாமியாரின் கால்களில் தொடரும் என நின்றது.

 

“இப்படியெல்லாம் எந்த வீட்டில் நடக்குது. அஞ்சு நிமிஷம் பாக்க முடியல. எப்படித்தாம் பாக்கீங்களோ” மூர்த்தி எரிச்சல் பட்டார். நடராஜன் சிரித்துக் கொண்டார். அவர் படுக்கச் செல்வதற்கு இன்னும் ஒரு சீரியல் பாக்கி இருந்தது. மூர்த்தி எழுந்து வெளியே கேட் பூட்டிவிட்டு, வெளிக்கதவையும்  சாத்தினார்.  “அப்பா காலையில் ஊருக்குப் போறோம்.” நினைவு படுத்தி விட்டு படுக்கையறைக்குப் போனார்.

 

சந்திரா போனில் ”சரி. தப்புத்தாண்டா… அதுக்கு இப்படியா..?” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் நிறுத்தினார்.  “நரேன்… நரேன்..” என கூப்பிட்டார். போனையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

 

“என்னம்மா, நரேன் என்ன சொல்றான்?” என சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே அருகில் போய் உட்கார்ந்தார். கண்ணெல்லாம் பொங்கியிருந்தது.

 

“சந்திரா… என்னாச்சு..”

 

“ஏங்க அந்தப் பொண்ணு என்னை புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறா… என்னல்லாம் பேசிட்டா தெரிமா?’ என எல்லாவற்றையும் சொன்னார். “என்னடா இப்படிப் பேசுறான்னு நரேனுக்கு போன் செஞ்சா, நீ எதுக்கு போன் பண்ணேன்னு கோபப்பட்டு போனை வச்சிட்டான்.” சந்திராவின் குரல் பலவீனமாக இருந்தது.

 

“ஒவ்வொன்னுலயும் நீ எதுக்கு தலையிடுற. உன் மரியாதையை நீயே கெடுத்துக்கிற”

 

“நம்மப் பிள்ளைன்னு உரிமைலதான பேசினேன். அத ஏன் புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறா?”

 

 “ஒண்ணு சொல்றேன் கேளு. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு கேள்வி கேக்குறது பிடிக்காது. அட்வைஸ் பண்றது பிடிக்காது. நாந்தான் ஸ்கூல்ல தினமும் பாக்கிறேனே. நா வாத்தியார், நீ ஸ்டூடண்ட், நாஞ் சொல்றத கேக்கணும்னு சொன்னா சரிப்பட்டு வராது. திமிரத்தான் செய்வாங்க. ஒம் பையன் எதோ ஒரு மரியாதைக்கு அப்பா அம்மான்னு அமைதியா இருக்கான். வர்ற மருமகளும் அப்பிடி இருக்கணும்னு நினைக்காத”

 

“ஊர்ல நாட்டுல நடக்குறத பாத்தா பயமா இருக்குல்ல. கல்யாணமாகி பத்து நாள், பதினைஞ்சு நாள்ள பிரிஞ்சிர்றாங்க. பிடிக்கலன்னு டைவர்ஸுக்குப் போறாங்க. முதல்லயே நம்மயும், நம்ம பையனையும் அவ புரிஞ்சிக்கிட்டா பின்னால பிரச்சினை எதும் வராதுன்னுதான் நினைச்சேன்”

 

“சரிதாம்மா. அதை ஏன் உடனே உடனே கேக்குற. கொஞ்சம் ஆற அமர யோசிச்சு பேசலாம். சரி பண்ணலாம்”

 

“அடிக்கடி பேசினா நெருக்கமா ஃபீல் பண்ணுவான்னு பாத்தேன்...” சந்திராவின் முகம் பாவம் போலிருந்தது.

 

சந்திராவின் கைகளைப் பிடித்து உள்ளங்கையை வருடிக்கொண்டே, “நீ குழந்தையாவே இருக்கே. ஆனா பூங்குழலி குழந்தை இல்ல” என்றான்.

 

“அதுக்காக என்ன வேண்ணாலும் பேசலாமா?  நாளை பின்ன ஒருத்தர் முகத்துல ஒருத்த விழிக்க வேண்டாமா?”

 

உண்மைதான். பூங்குழலியின் வார்த்தைகள் மோசமானவை என்பதை சந்திரா சொல்லும்போதே மூர்த்தி உணர்ந்திருந்தார். பேசப் பிடிக்கவில்லையென்றால் போனை எடுக்காமல் இருக்கலாம். இல்லை போனை எடுத்து எதுவும் பேசாமல் அமைதியா இருக்கலாம், அப்புறம் பேசுவதாய்க்கூட சொல்லி துண்டிக்கலாம். இது என்ன? மட்டு மரியாதை எதுவும்  இல்லாமல்…

 

“நா அன்பாத்தானே இருக்கேன். என்னை ஏங்க அந்த பொண்ணு இப்படி வெறுக்கிறா..”  வெடித்து   அழ ஆரம்பித்தார்.

 

“சந்திரா , அழாத.. என்னமோ எதோன்னு அப்பா வந்து கேக்கப் போறாங்க. வருத்தப்படுவாங்க.” சமாதானப்படுத்தினார்.

 

“இனும நீ யார்ட்டயும் பேசாத. நாம் பேசிக்கிறேன்.” என்று சொல்லி விட்டு முருகேசனுக்குப் போன் செய்தார். ஏற்கனவே ஒருமுறை மனத்தாங்கல் வந்தது, அப்போது சித்ராவிடம் சொன்னது, பிறகு பூங்குழலி ஸாரி என வேண்டா வெறுப்பாய்ச்  சொன்னது, இப்போது சந்திராவை மரியாதைக்குறைவாய் பேசியது எல்லாவற்றையும் சொன்னார். இதெல்லாம் நன்றாக இல்லை என முடித்துக் கொண்டார்.

 

“இந்த மாரி நிலைமையில எப்படிங்க சந்தோஷமா ஊருல போய் கல்யாணக் கார்டு கொடுக்க..” சந்திரா புலம்பினார்.

 

“விடு காலையில பாத்துக்குவோம்” சந்திராவிடம் சொல்லிப் படுத்துக் கொண்டாலும் தூங்க முடியாமல் இருவருமே அலைக்கழிந்தார்கள். சரியாக நரேனுக்கும் பூங்குழலிக்கும் நிச்சயம் செய்து இந்த சனிக்கிழமையோடு பதினைந்து நாட்களாகின்றன. பூங்குழலியோடு போனில் சந்திரா பேசியது மொத்தமே நான்கந்து தடவைதான் இருக்கும். நரேனும் பூங்குழலியும் ஒரே ஒரு தடவை நேற்று அஷ்டலஷ்மி கோயிலுக்கும் சினிமாவுக்கும் போயிருக்கிறார்கள். அதற்குள் எவ்வளவு மனக்கசப்புகள், கோபதாபங்கள், உளைச்சல்கள் என எல்லாம் விநோதமாய் இருந்தன. மிகச் சிறிய விஷயங்களிலும் புரிதல்கள்  இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுத்துப் போகாதா என்று வருத்தப்பட்டார்.

 

மூர்த்திக்கு உள்ளுக்குள் இன்னொரு உறுத்தலும் இருந்தது. பூங்குழலியின்  சில வார்த்தைகள் நெருடலாக இருந்தன. “ஒங்க ஆம்பளப் பையனக் கேளுங்க” என்னும் வார்த்தையில் வேறு அர்த்தங்கள் தெரிந்தன. வழக்கத்துக்கு மாறாக நரேன் தன் அம்மாவை விட்டுக் கொடுத்துப் பேசுவதும் விசித்திரமாயிருந்தது. நரேனிடம் காலையில் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

 

எழுந்து காபி எல்லாம் குடித்து கொஞ்சம் ஆசுவாசமானதும் வராண்டாவுக்கு சென்றார்.

 

“எய்யா மூர்த்தி, கார் டிரைவருக்கு போன் செஞ்சுட்டியா” தன்னைக் கடந்து சென்ற மூர்த்தியைப் பார்த்து நடராஜன் கேட்டார்.

 

“இல்லப்பா. பண்ணனும்.” சொல்லிக்கொண்டே வெளியே சென்று நரேனுக்கு போன் செய்தார். முழு ரிங் சத்தம் போனது. எடுக்கவில்லை. வெளியே அவ்வளவாக காற்று இல்லாமலிருந்தது. சமையலறையில் பாத்திரங்களின் சத்தங்கள் லேசாய் கேட்டபடி இருந்தன. திறந்திருந்த கதவின் வழியே வெளிச்சமான ஹாலில், சோபாவில் நடராஜன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. தன் மகன் கட்டிய சொந்த வீட்டில் இருக்கிறோம் என்னும் பெருமிதத்தை காணமுடிந்தது.

 

ஊரில் அப்பா இப்படித்தான் காலையிலேயே புறப்படுவார். தன் குழந்தைகள் தலையெடுக்கிற வரை நடராஜன் தினமும் சைக்கிள் மிதித்து பல ஊர்களுக்குச் சென்று துணிமணிகள் விற்று வந்தார். இரவிலும் நேரம் கழித்துத்தான் வருவார். அலைந்து திரிந்து  மனிதர்களோடு பழகிப் பழகிப் பெற்ற அறிவை அவருக்குள்ளேதான் வைத்துக் கொண்டார். வீட்டில் அவரோடு இருந்தது,  பேசியது என நினைவில் இல்லை. ஒரு தடவை நண்பர்களோடு தூரத்து ஊரில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு மூர்த்தி பஸ்ஸில் சென்றபோது, ஆள் அரவமற்ற நீண்ட சாலையில் தனியாய் எதிர் காற்றில் துணி மூடை பாரத்தை வைத்து உன்னி உன்னி சைக்கிள் அழுத்திய தன் அப்பாவை பார்க்க நேர்ந்தது. நெஞ்சடைத்துப் போனது. அன்றிரவு அப்பா வந்ததும், அவர் அருகில் போய் ஆசையாய் கையைப் பிடித்துக்கொண்டது அழியாமல் இருக்கிறது.

 

அவரிடம் எது குறித்தும் அதிகமாக ஏன் பேசத் தோன்றவில்லை என்னும் கேள்வி மூர்த்தியிடம் இருக்கிறது. அவருக்கு எதாவது உடம்பு சரியல்லா விட்டால் துடித்து அருகில் இருந்து பார்த்துக் கொள்ள முடிகிறது. சாதாரண நேரங்களில் அவரிடம் ஒரு இடைவெளியோடு இருப்பதையும் நினைத்துப் பார்த்திருக்கிறார். வேண்டும் என்று அப்படி இருப்பதில்லை என்பதும் இயல்பாகவே அப்படித்தான் இருக்கிறோம் என்பதும் பிடிபடுகிறது.  சந்திராவும் நடராஜனிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறார். அவராக எதாவது பழைய கதைகளை ஆர்வத்துடன் பேசினால் கூட ஒப்புக்குத்தான் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு சம்பிரதாய வார்த்தைகளோடு வீட்டுக்குள் நடமாடுகிறார்கள். அப்பாவோ தன்னுடனும் சந்திராவுடனும் பேசுவதற்கு ஏங்குகிறார் என்பது மூர்த்திக்குத் தெரியும். தனக்கு அப்பாவிடம் கடக்க முடியாத ஒரு மௌனம் இருப்பதாகவே தோன்றுகிறது. தனக்கும்  நரேனுக்கும் இடையேயும் அப்படித்தான் இருக்குமோ எனச் சங்கடமாய் இருந்தது.

 

நரேனும், நடராஜனும் அப்படி இல்லை. தோளில் கை போட்டுக்கொள்வார்கள். கதைகள் பேசிக்கொண்டு, கிண்டல் செய்து கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு  இருப்பார்கள். அவனிடம் மனம் விட்டுப் பேசுவார். அவன் வருகிறான் என்றால், நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருப்பார். போன தடவை வந்த போது, “தாத்தா, இனி நீங்க காலைல வாக்கிங் போகும்போது டீ ஷர்ட்டும், இந்த டிராக் ஷுட்டும் போடுங்க.” என சென்னையில் வாங்கி வந்திருந்த இரண்டு செட் டிரெஸ்ஸை கொடுத்தான்.  அவர் வெட்கப்பட்டார். “ஓல்டு மேன், நவ் யூ ஆர் அ மாடர்ன் மேன்” என அவரைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்.  நடராஜன் அதைத்தான் மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு காலையில் வாக்கிங் போகிறார். தெருவில் தெரிந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கும் போது, “எம் பேரன் வாங்கித் தந்தது” என பெருமை பொங்கச் சொல்கிறார்.

 

சந்திராவுடன் மணிக்கணக்காக நரேனால் பேச முடிகிறது. தினமும் காலையும், இரவிலும் கண்டிப்பாய் பேசி விடுவான். மூர்த்தியிடம் எப்போதாவது, “ஹாய் டாட்” என்பதோடு சரி. “ரிடையர் ஆன பிறகு இந்த வீட்டை வித்துட்டு சென்னையில ஒரு பிளாட் வாங்கிருவோம்” வெகு சாதாரணமாகச் சொல்கிறான் நரேன். அவனுக்கே என்று நினைவுகள் நிரம்பிய எதுவும் கிடையாதா என்று விசித்திரமாய் இருக்கிறது. பாதுகாத்து வைப்பதற்கு எதுவும் இல்லாத வாழ்வில் என்ன சுவராசியம் இருக்கும் எனத் தெரியவில்லை. எப்போதாவது ஊருக்கு அவனை அழைத்துச் சென்றாலும் கொஞ்சம் கூட யாருடனும் ஒட்ட மாட்டான். கம்ப்யூட்டர், மொபைல்களோடு கிடந்து மனிதர்களின் அருமை தெரியாமல் போய் விடும் போலிருக்கிறது. போராடிக்கிறது என்பான். எப்போது வீடு திரும்பலாம் என தவிப்பான். தன் காலத்துக்குப் பிறகு வழிவழியாய் வந்த சொந்தங்களும், அடையாளங்களும், உறவுகளும் அவனோடு எப்படி தொடர்பில் இருக்கும் என்பது புதிராக இருக்கிறது.


போன் அடித்தது. நரேன். எடுத்தார். “சொல்லுங்கப்பா” என்றான்.

 

“அம்மா ரொம்ப சங்கடப்படுறாங்கப்பா. ஏன் பூங்குழலி அப்படி பேசுனா? என்னடா நடந்துச்சு.”

 

“புரியுதுப்பா. அம்மாதான் மாறி மாறி போன் செஞ்சு எல்லாத்தயும் குழப்பியிருக்காங்க. அடிக்கடி போன் செய்யாதீங்கன்னு நா சொன்னேன். கேக்கல”

 

“சரி இருக்கட்டும். அதுக்கு இப்படியா பேசுறது..”

 

நரேன் அமைதியாக இருந்தான்.

 

“சொல்லு நரேன்.”

 

“ஷி இஸ் நாட் ஸச் எ கேர்ள். பப்புக்கு போக மாட்டா. வேணும்னு சொல்லியிருக்கா?”

 

“நா அதக் கேக்கல. அவ பப்புக்கு போகட்டும். தண்ணி அடிக்கட்டும். ஒங்க ஆம்பளப் பையனக் கேளுங்கன்னு எதுக்கு சொன்னா?”

 

“தெரிலப்பா.”

 

“அவ தியேட்டர் விட்டு போகும்போது சந்தோஷமாத்தான போனா?”

 

“ஐ திங் ஸோ..”

 

“நரேன், உனக்கு அவளப் பிடிச்சிருக்கா?”

 

“ஆமாம்ப்பா. ரொம்ப பிடிச்சிருக்கு”

 

“அவளுக்கு உன்னப் பிடிச்சிருக்கா?”

 

“தெரிலப்பா..”

 

“ஸம் திங் இஸ் ராங். அந்தப் பொண்ணு கிட்ட நான் நேர்ல வந்து பேசலாம்னு தோணுது”

 

“இல்லப்பா… நானே பேசி சரி பண்னிருவேன். இரண்டு மூனு நாள் டைம் கொடுங்க.”

 

“ ம்.. பாப்போம். நா அவங்க மாமா முருகேசன் கிட்ட பேசியிருக்கேன்”

 

“அப்பா, நீங்க கோபமாவும் வருத்தமாவும் இருக்கீங்க. வேண்டாம்ப்பா. நா பாத்துக்குறேன். அம்மாட்ட ஸாரி கேட்டேன்னு சொல்லுங்க..” நரேன் வைத்து விட்டான். அவன் குரல் தழுதழுத்த மாதிரி இருந்தது. பாசமும் இருந்தது. அடிபட்ட வலியும் தெரிந்தது. எதோ மறைக்கிறான் அல்லது சொல்லத் தயங்குகிறான் என்பதை புரிந்து கொண்டார். உள்ளே வந்தார்.

 

“என்னய்யா, கார் டிரைவருக்கு போன் பண்ணிட்டியா?” நடராஜன் திரும்பவும் கேட்டார்.

 

“இல்லப்பா. நாம அடுத்த வாரம் ஊருக்குப் போவோம்”

 

நடராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. முகம் முழுவதும் ஏமாற்றம் அப்பியிருந்தது.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2022 07:17

February 17, 2022

பொய்மனிதனின் கதை - புத்தகம்


ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக பார்த்தது. உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
“பொய் மனிதனின் கதை” புத்தகம் பாரதி புத்தகாலயத்தால் கொண்டு வரப்பட்டிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
கடை எண்: F4கீழ்க்காணும் அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகம் 136 பக்கங்களைக் கொண்டது. விலை ரூ.125/-
அத்தியாயங்கள்:
1. சேட்டன் பகத் ஏமாந்தார்2. மோடிபாய் பி.ஏ., எம்.ஏ3. “நரேந்திர மோடியின் மனைவியாகிய நான்... “4. “அந்த‘சதி’ இன்னும் நிரூபிக்கப்படவே இல்லை!5. பழைய மனிதரானார் அத்வானி6. அம்பானியின் தங்க விளக்காய் குஜராத்7. “புதியமனிதா, பூமிக்கு வா”- கார்ப்பரேட்களின் பாட்டு8. மோடிக்கென்று குடும்பம் இருந்தது!9. பாவம், பூஜா ஜாதவ் என்ன செய்வாள்?10. இந்தியாவின் ஒரு மூலையில் மூணாறு இல்லை!11. பக்கோடா விற்க படிப்பு எதற்கு?12. கங்கை அசுத்தமாகவே ஓடுகிறது13. “மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட்இருந்தது!”14. ராம்கிஷன் கிரேவாலை யார் கொன்றார்கள்?15. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்பியவர்கள் தானே!16. குழந்தைகளே இல்லாத ஒரு கிராமத்தின் கதை!17. அவர்கள் இருவருமே ‘மற்றவர்கள்’18. “ஏன் பிரதமரே, எங்களைக் கைவிட்டீர்கள்?”19. டெல்லியை உழுது விதைத்துச் சென்ற விவசாயிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2022 19:12

February 16, 2022

க்ளிக் - 13 (தொடர்கதை)


கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டாள். கைகளை அகல விரித்துக் கொண்டாள். “இங்கே பாருங்க..”  என்றாள்.

 

ஹாஸ்டல் வராண்டாவில் அங்கங்கு நின்றிருந்தவர்கள் இவளைத் திரும்பிப் பார்த்தார்கள். அறையின் வாசலில் நின்றிருந்தாள் ஸ்ரீஜா.

 

“இப்போ பாருங்க…” மேலும் சத்தமாய் சொன்னாள். திரும்பிப் பார்த்தாள். ஸ்ரீஜா அங்கு இல்லை.

 

மூச்சை முழுவதுமாய் உள்ளிழுத்தாள். கைகள் இரண்டும் மெல்ல நெளிந்து நெளிந்து நடனம் போல அசைந்தன. பின் உயர்ந்து தாழ்ந்து சிறகைப் போல வீசின.

 

பஞ்சைப் போல மிதக்க ஆரம்பித்தாள். அசோகா மரங்களைத் தொடுவது போல உரசிச் சென்றாள். மேலே மேலே எழும்பினாள் . கீழே நின்றிருந்தவர்கள் கைகளை உயர்த்தி ஆரவாரித்தார்கள். சின்ன உருவங்களானார்கள். மரங்கள், கட்டிடங்கள்  எல்லாம் அடியில்  சென்று கொண்டேயிருந்தன. ஜிவ்வென்று இருந்தது. ஒவ்வொரு அணுவும் புல்லரித்தது. காற்றும் இவளும் மட்டுமே. ஹோவென்று கத்தினாள். கத்திக்கொண்டே இருந்தாள். போதும் என விரித்த கைகளை கீழிறக்கினாள். அசைந்து நிதானமாக காற்றில் தரை நோக்கி நழுவ ஆரம்பித்தாள். ஹாஸ்டல் வராண்டவில் போய் இறங்க வேண்டுமே என்றிருந்தது. சம்பந்தமில்லாமல் வேறொரு இடம் நோக்கிச் செல்வதாய் உணர்ந்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. நேர்  கீழே எலக்டிரிக் கம்பிகள் போய்க்கொண்டு  இருப்பதைப் பார்த்தாள். விலகிட நினைத்தாள். கைகளையும் கால்களையும் அசைத்தாள். முடியவில்லை. ஐயோ என்று கண்களை மூடிக் கொண்டாள். ’பயப்படாதே… பயப்படாதே. ஒன்றும் ஆகாது” ஒரு குரல் ஆழத்திலிருந்து கேட்டது. பிரகாஷின் குரல் போலிருந்தது. இறங்கியபடி இருந்தாள். “அப்படித்தான் வா….வா..” பிரகாஷ் அழைத்தான். இலைகளில் உரசுவது போலிருந்தது. கண்களைத் திறக்க  முடியவில்லை.  தவித்தாள். பூக்களின் ஸ்பரிசம் உணர்ந்தாள். திணறித் திமிறி இமைகளைப் பிரித்தாள். அடைபட்டிருந்த மூச்சை விட்டுக் கொண்டாள்.

 

முகத்தின் அருகே கட்டிலில் தன் சிறுமுகம் சாய்த்து குறுகுறுவென்று குழந்தை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தாள். யாழினி! அவளது பிஞ்சுக் கரங்களால் இவள் முகத்தில் தட்டிக் கொண்டிருந்தாள். விடிவதற்கு முன்பே கலைச்செல்வன் வீட்டிற்கு வந்தது, படுத்தது எல்லாம் பூங்குழலிக்கு புலப்பட ஆரம்பித்தது. ஜன்னலுக்கு வெளியே  தென்னை மரமும், பளீரென்று வானமும் தெரிந்தது. எழுந்து யாழினியை வாரி எடுத்து, “ஹேய் டார்லிங்’ என  உச்சி முகர்ந்தாள். முத்தம் கொடுத்தாள். அவள்  “அம்மா”வென சிணுங்கிக் கொண்டு இவளை விட்டு இறங்குவதற்கு கால்களை நீட்டி துடித்தாள்.

 

இறக்கி விட்டாள். கொலுசுச் சத்தம் கேட்க பாய்ந்து ஓடினாள். வாசல் அருகே போனதும் நின்று இவளைத் திரும்பிப் பார்த்தாள். கன்னங்குழிகள்  எல்லாம் மலர்ந்து சின்ன உதடுகள் விரிய சிரித்தாள். “வாம்மா…” என கெஞ்சியவாறு இவள் கைகளை நீட்டினாள். உடலெல்லாம் குலுங்கச் சிரித்து வெளியே ஒடினாள்.

 

“வாலு வந்து உன்னை எழுப்பிட்டாளா?” கேட்டுக் கொண்டே கலைச்செல்வன் எட்டிப் பார்த்தான்.

 

“மணி என்னண்ணா?”

 

“ஒன்பது”

 

“நீ பேங்க்க்கு கிளம்பலயா?’

 

“இன்னிக்கு ஃபோர்த் சாட்டர்டே. லீவுதான். பிரஷ் பண்ணிட்டு வர்றியா?”

 

“இன்னும் கொஞ்சம் தூங்கிக்கிறேன்.” படுக்கையில் திரும்பவும் சுருண்டு கொண்டாள். அறைக்குள் திரும்பவும் யாழினியின் கொலுசு சத்தம். எழுந்து உட்கார்ந்தாள். இவளைப் பார்த்ததும்  சிரித்தபடி திரும்பி ஓடினாள்.  பின்னர் கதவு அருகில் நின்று பார்த்தாள். “ஏஞ் செல்லம்! இங்க வா” கைகளை நீட்டினாள். மாட்டேன் என்பதாய் தலையை ஆட்டினாள். கட்டிலில் இருந்து இறங்குவது போல பாவனை செய்தாள் இவள். சிரிப்பும், கொலுசும் சேர்ந்து சத்தமெழுப்ப ஓடினாள் யாழினி.

 

இவள் தனது பையை கீழிருந்து தூக்கி கட்டிலில் வைத்து பிரஷ்ஷை எடுத்தாள். யாழினி திரும்பவும் கதவருகில் வந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். திரும்பவும் கட்டிலை விட்டு இறங்கப் போனாள். குழந்தை சிரித்துக் கத்தி ஒடினாள். “யாழினி… மெல்ல..” என கலைச்செல்வன் குரல் ஹாலில் இருந்து கேட்டது. சிறிது நேரம் கழித்து திரும்பவும் கதவருகில் வந்து சத்தம் போடாமல் எட்டிப் பார்த்தாள் யாழினி. இவளுக்கு அந்த விளையாட்டு அலுப்பாய்த் தோன்றினாலும், குழந்தை ஏமாந்து விடக் கூடாதே என திரும்பவும் கட்டிலை விட்டு இறங்குவது போல பாசாங்கு செய்தாள். அவள் கலகலவென ஒடினாள்.

 

குழந்தைகள் திரும்ப திரும்பச் செய்து எதையும் விளையாட்டாக்கிக் கொள்கின்றன. சிரிப்பும், குதூகலமும் குறைவதே இல்லை. பெரியவர்கள்தான் அலுத்துப் போகிறோம், எரிந்து விழுகிறோம். நரேனின் அம்மாவிடம் அமைதியாகப் பேசி இருக்கலாம் என்று தோன்றினாலும், “எங்க இருக்க?” என்ற கேள்விக்கு அப்படி கொடுத்ததுதான் சரியென்று இருந்தது. அதில் ஒரு சந்தோஷமும் இருக்கவே செய்தது. கடற்கரையில் எடுத்த செல்பியை மகன் அனுப்பினான். சரி. பார்த்தோமா, ரசித்தோமா என்றில்லாமல் உடனே ஒரு போன்.  “எங்க இருக்கீங்க “ என விசாரிப்பு. தியேட்டரில் இருவரும் சேர்ந்து படம் பார்க்கிறார்கள் என்பதில் ஒரு சுவாரசியம். படம் முடிந்ததும் மகனுக்குத் திரும்பவும் போன். நடந்ததை மறைத்து ஃபிரண்டு போன் பண்ணியதால் பாதியில் சென்று விட்டாள் என அவன் உளறியிருக்க வேண்டும். எதோ ஏமாற்றம். உடனே இவளுக்கு போன். எல்லாவற்றிலும் இப்படி தலையிடுவது, என்ன நடந்தது என தெரிந்து கொள்ள அலைவது எல்லாம் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இவளுக்கு அருவருப்பாய் இருந்தது.

 

யாழினி திரும்பவும் கதவருகில் தோன்றினாள். இந்த தடவை உண்மையாகவே இவள் கட்டிலில் இருந்து இறங்கி அவளைப் பிடிக்கப் போனாள். சிரித்துக் கொண்டே சமையலறைக்கு ஓடி சரண்யாவின் கால்களோடு ஒட்டிக் கொண்டாள். நைட்டிக்குள் முகத்தை பொத்திக் கொண்டாள்.  “யாழினி” என செல்லமாய் அதட்டிக்கொண்டே தோசை சுட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா. இவள் புன்னகைத்துக் கொண்டே ‘அண்ணி குட்மார்னிங்’ சொல்லி சமையலறை தாண்டி பின்பக்கம் பாத்ரூம் போனாள்.

 

முகத்தை அம்மாவிடமிருந்து விலக்கிப் பார்த்து யாரையும் காணாமல் பூங்குழலி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தாள் யாழினி. இருந்த இன்னொரு படுக்கையறை சென்று பார்த்தாள். வெளியே ஹாலுக்குச் சென்று பார்த்தாள். கலைச்செல்வன்  டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தை ஒன்றும் புரியாமல் விழித்து முகம் வாடினாள். அப்போது விளம்பரத்தில் வந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும் டி.வி அருகில் போய் நின்று கொண்டாள். முகம் சட்டென்று மலர்ந்தது. அதை நோக்கி கைகளை நீட்டி சிரித்து குதித்தாள்.

 

முகம் கழுவி வந்த பூங்குழலி துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சோபாவில் கலைச்செல்வன் அருகில் உட்கார்ந்தாள். திரும்பிப் பார்த்து அவன் புன்னகைத்தான். ’ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து வரும்  முதலமைச்சர் ஜெயலலிதா  விரைவில் உடல்நலம் பெற தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்தினார்’ செய்தியில் கவனம் செலுத்தினார்கள். டிவியில் இருந்து விலகிய யாழினி கலைச்செல்வனிடம் வந்து ஒட்டிக் கொண்டு இவளைப் பார்த்து சிரித்தாள். பூங்குழலி கைநீட்டினாள். வரமாட்டேன் என்பதாய் தலையசைத்தாள். “ரொம்பத் தெரிஞ்சவ போல சிரிக்குறா, பழகுறாளே” ஆச்சரியப்பட்டாள் பூங்குழலி.

 

“நிச்சயதார்த்தத்துக்கு வந்தப்ப. மேடையில நீ நின்னத, உட்கார்ந்திருந்தத எல்லாம் சரண்யா போட்டோ எடுத்திருந்தா. போன்ல அதக் காட்டினா. யாருன்னு இவ உம்முகத்துல கைய வச்சு கேட்டா. பூவத்தைன்னு சொன்னா. அந்த பூவத்தையப் பிடிச்சுக் கிட்டா.  போனை எடுத்தா பூவத்தக் காட்டுன்னு கேப்பா. சரண்யா காட்டுவா. நேத்து ராத்திரி படுக்கப் போகும்போது பூவத்தை வர்றாங்கன்னு சொன்னா.  காலைல முழிச்சு வந்தவ நீ தூங்குறதப் பாத்தா. அதுலயிருந்து ஒரே ஒட்டமும் சாட்டமுமா இருக்கா. மூனு வயசாய்ட்டு.  எல்லாம் தெரியுது கழுதைக்கு” சிரித்தான்.

 

அவளருகே குனிந்து,  “நா யாரு?” என்றாள்.

 

“பூ..த்..த” என இழுத்துச் சொல்லி சிரித்தாள்.

 

“எஞ்செல்லம்..” இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.  அவள் திமிறி கலைச்செல்வனிடம் ஒட்டிக்கொண்டு இவளைப் பார்த்தாள்.

 

“போன தடவ வந்தப்போ நடந்துக்கிட்டு இருந்தா. இப்ப பாரேன். என்னா ஓட்டம்?”

 

“ஓடுறது என்ன? பறக்கவேச் செய்வா எந்தங்கம். என்னம்மா?” குழந்தையை வாரியணைத்து முத்தமிட்டன் கலைச்செல்வன்.

 

“அண்ணா, இன்னிக்குக் காலைல பறக்குற மாதிரி கனவு கண்டேன்!” இவளது ஆச்சரியத்தைப் பார்த்து கலைச்செல்வன் ரசித்தான். “ஆமாண்ணா, பறக்குற மாதிரி கனவு அடிக்கடி வரும். ரொம்ப ஈஸியா பறப்பேன்” மேலும் ஆச்சரியமாய் கண்களை விரித்துச் சொன்னாள்.

 

“எங்கயிருந்து பறந்த?”

 

“ஹாஸ்டல்லயிருந்து…”

 

“அதான் பறந்து வந்துட்டியே” சிரித்துக்கொண்டே அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.

 

ரொம்ப நாட்கள் கழித்து பறக்கும் கனவு வந்திருந்தது. சின்ன வயதிலிருந்து அடிக்கடி வருகிற கனவாகத் தெரிந்தது. முன்பு கண்ட பறக்கும் கனவுகள் எதுவும் நினைவில் இல்லை. அந்தரத்தில் பறக்கும்போது அடைந்த சிலிர்ப்பு பழக்கமானதாக இருந்தது. ஒரு தடவையும் சரியாய் இறங்க முடிந்ததே இல்லை. ஸ்ரீஜா என்று அதில் கண்ட பெண்ணின் முகம் இப்போது சரண்யா போலிருந்தது. கேட்டது பிரகாஷின் குரல்தான். அவன் எங்கேயோ இருந்து அழைக்கிறான். கனவுகளை முழுசாக அப்படியே திரும்ப நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அங்கங்கே கலைந்து கலைந்து முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் ஆகி விடுகிறது.

 

காபியைக் கொண்டு வந்து பூங்குழலியிடம் கொடுத்தாள் சரண்யா. “ஏங்க, சாப்டுறீங்களா.” கலைச்செல்வனிடம் கேட்டாள். சரியென்றவன், “பூவு டிபன் சாப்பிடலாமா?” என்றான்.

 

“இல்லண்ணா, கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ சாப்பிடு “ என்றவளுக்கு போன் ஞாபகம் வந்தது. போய் எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். சரண்யா பின்னால் யாழினியைத் தூக்கிக் கொண்டு கலைச்செல்வன் சென்றான்.

 

போனை ஆன் பண்ணி கோடுகள் இழுத்து அன்லாக் செய்தாள். செட்டிங்கில் போய் சித்ரா, சந்திரா, முருகேசன், நரேன் நம்பர்களை பிளாக் செய்தாள். கலைச்செல்வனுக்கு யாரும் போன் செய்ய மாட்டார்கள் என்று தெரியும். சொந்தத்தில் சபாபதி தாத்தாவைத் தவிர வேறு யாரும் அவனோடு பேசுவதில்லை. ரவிச்சந்திரனின் அண்ணன் உதயச்சந்திரன் கூட இன்னும் சரியாய் பேசுவதில்லை. “சாதி கெட்ட பய… போயும் போயும் குடும்பம் நடத்த எங்க போயிருக்காம் பாரு” என இவளது மாமா முருகேசனோடு சேர்ந்து அந்த நேரத்தில் குதி குதி என குதித்திருந்தார்.  கொஞ்சநாள் ஊர் முழுக்க அதுதான் பேச்சாய் இருந்தது. கலைச்செல்வனும் சரண்யாவும்  படித்து பேங்க்கில் வேலை பார்த்து சொந்தக்காலில் நிற்க முடிந்ததால் பிழைத்தார்கள்.

 

முன்பு இருந்த வேகம் இந்த அஞ்சு வருஷத்தில் குறைந்திருந்தாலும் கோபம் மட்டும் அணையாமல் இருந்தது. தான் பெத்த மகனைப் பார்க்க வேண்டும்,  அவன் பெத்த பேரனை கொஞ்ச வேண்டும் என சித்ராவுக்கு ஆசை இருந்தது. நிச்சயதார்த்தத்தின் போது கலைச்செல்வனோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருக்கும் சொந்த பந்தங்களையும் ஊரையும் தன் மகனுக்காக பகைத்துக் கொள்ள துணியவில்லை. அவர்களது கோபமும் வெறுப்பும் தனக்கும் இருப்பதாக  காட்டியாக வேண்டும். நிச்சயதார்த்தத்துக்கு கலைச்செல்வன் வரக் கூடாது என்றால் எங்கே பூங்குழலி தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என அனைவரும் அமைதியாய் இருந்தனர். பழகிய ஊரில், கூடவே வந்த சொந்தங்களில் சபாபதி தாத்தாவைத் தவிர ஒருவரும் அன்று கலைச்செல்வனோடு பேசவில்லை

 

இதோ, தன் கூடப் பிறந்த அண்ணனின் வீட்டில் உரிமையோடு இருக்கிறாள். யாழினி சிரித்து விளையாடுகிறாள்.  “பூ..த்..த..” என உயிர் உருக கூப்பிடுகிறாள். அண்ணியின் அன்பு கண்களில் தெரிகிறது. இந்த இடமே நிம்மதியாகவும், ஆதரவாகவும் இருக்கிறது. அன்றைக்கு இந்த மூன்று பேரும் சம்பந்தமில்லாமல் அந்த மொத்தக் கூட்டத்தில் தனியாய் நின்ற காட்சி வந்து வதைத்தது.. அண்ணனுக்கு அந்த அவமானமும் வலியும் எப்படி இருந்திருக்கும், எல்லாவற்றையும் தன் ஒருத்திக்காக பொறுத்துக் கொண்டு வந்தார்களே,  என்று நினைத்தாள். எழுந்து போய் சாப்பிட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு முத்தம் கொடுத்தாள். “பூவு… என்னம்மா” என அவன்  இவளை அருகில் இருந்த சேரில் உட்கார வைத்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் ததும்பி நின்றன.

 

“பூங்குழலி….” பிரியத்தோடு சரண்யா இவளருகில் வந்து தலையை கோதி விட்டாள். அவ்வளவுதான். பெரும் கேவலோடு எழுந்து அண்ணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வெடித்து அழுதாள். ”ஏய் என்னாச்சும்மா..” என அவளை தன்னில் சாய்த்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தாள்  சரண்யா. என்ன ஏதென்று தெரியாமல் யாழினியும் சேரில் ஏறி சரண்யாவின் மீது சாய்ந்து  கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

கலைச்செல்வன் சாப்பிடுவதை நிறுத்தி, “பூவு…. பூவும்மா” என அழைத்துக் கொண்டிருந்தான். உடல் லேசாய் வெட்டிக் கொண்டிருந்தது. அவன் சாப்பிட வரும்போது சாதாரணமாகத்தான் இருந்தாள். அதற்குள் என்ன ஆனது என்று அவனுக்குப் புரியவில்லை. எளிதில் கலங்குகிறவள் இல்லை.  எப்படி திடுமென உடைந்து அழுகிறாள் என ஆச்சரியமாகவும் இருந்தது. எழுந்து கை கழுவி யாழினியைத் தூக்கிக் கொண்டான். “பூம்மா” என்றான். இவள் மெல்ல அடங்கிக் கொண்டிருந்தாள்.

 

சரண்யா  அவனைத் திரும்பி பார்த்து, “பெரிய குழந்தை” என்று சிரித்தாள்.

 

வாசலில் யாரோ வருவது போலிருந்தது.  எட்டிப் பார்த்தான்.

 

“சரண்யா, உங்கம்மா வர்றாங்க.”

 

இரண்டு தெரு தள்ளி சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். தினமும் காலையில் கலைச்செல்வனும், சரண்யாவும்  வேலைக்குக் கிளம்பும் போது அவர்கள் வீட்டில் யாழினியை விட்டுச் செல்வார்கள்.

 

“பேத்திய இன்னிக்குப் பாக்கலியேன்னு வந்திருப்பாங்க.” என்றாள் சரண்யா.

 

பூங்குழலி சரண்யாவிடமிருந்து விலகி கண்களைத் துடைத்துக் கொண்டாள். உள்ளே வந்த சரண்யாவின் அம்மா இவளைப் பார்த்ததும், “வாங்கம்மா”  மரியாதையாக கும்பிட்டார். இவளும்  “வாங்க அத்தை” என்று கும்பிட்டு பாத்ரூம் சென்றாள்.

 

“என்ன, வாங்கம்மா போங்கம்மான்னு? சின்னப் பொண்ணு அவ. வா போன்னு சொல்லுங்க” சிரித்துக் கொண்டே சொல்லி “உக்காருங்க..” என்று சேரைக் காட்டினான் கலைச்செல்வன்.

 

“பாட்டி..” என்று அவரிடம் பாய்ந்தாள் யாழினி.

 

“அம்மா காபி போடவா” சரண்யா கேட்டாள்..

 

“இல்லம்மா. கடைக்கு போறேன். யாழினி ஆசைப்படுவாளே. கூட்டிட்டு போலாமேன்னு வந்தேன்.” சிரித்தார்.

 

“பாட்டி! போவோம்” என யாழினி பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழைத்தாள்.

 

“சரி, இருங்க வர்றோம்..” பாட்டியும், பேத்தியும் கிளம்பினார்கள்.

 

“யாழினி, பாட்டி கைய விடக் கூடாது. பாத்துப் போணும். அத்த! அவளுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுக்காதீங்க” வாசல் வரைக்கும் போனான் கலைச்செல்வன்.

 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பூங்குழலி சேரில் அமைதியாக உட்காந்தாள். துண்டால் முகத்தை துடைப்பது போல மூடியிருந்தாள். எதற்கு அப்படி அழுதோம் என்று தெரியவில்லை. அழுத்தங்கள் குறைந்து அண்ணனின் அருகாமையில்  உடலும் உள்ளமும் இலேசாகிப் போனது தெரிந்தது.

 

“பூங்குழலி , தோசை சுடவா?” கேட்டாள் சரண்யா,

 

சரியென்பதாய் தலையாட்டி, துண்டை எடுத்தாள். கலைச்செல்வன் உள்ளே வந்து அவள் அருகில் உட்கார்ந்தான். “என்னாச்சு பூவுக்கு” என்று இவள் முகம் பார்த்தான்.

 

டைனிங் டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு அண்ணனை நிதானமாகப் பார்த்து, “அண்ணா, எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல..” என்றாள்.

 

அவன் யோசித்துக் கொண்டு பெருமூச்சு விட்டபடி இவளைப் பார்த்தான்.

 

“ஆமா. எனக்குப் பிடிக்கல.”

 

“ஏம் பிடிக்கல?” குழந்தையிடம் கேட்பது போலிருந்தது.

 

“இப்ப வேண்டாம்னு தோணுது”

 

“அப்ப எப்போ வேணும்”

 

“நீ கிண்டல் பண்ற. நா சீரியஸா பேசுறேன்.”

 

“அதுதான் எதுக்குன்னு சொல்லு”

 

இவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். சரண்யா அடுப்பருகே நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“வேற யாரையாவது லவ் பண்றியா. சீரியஸா கேக்கேன்.”

 

“இல்ல” என தலையாட்டினாள்.

 

“பிறகென்ன?”

 

“அவனயும் பிடிக்கல.. அவங்க வீட்டுல உள்ளவங்களையும் பிடிக்கல”

 

சரண்யா தோசையை இவள் முன் கொண்டு வந்து வைத்தாள். கலைச்செல்வன் தன் தங்கையையேப் பார்த்துக் கொண்டிருந்தான். இவள் முகம் கடுமையாகவே இருந்தது. இதைச் சொல்லத்தான் வந்தாளா? பஸ்ஸிலிருந்து இறங்கும் போதெல்லாம் சந்தோஷமா இருந்தாளே. இப்போ அழுதது எதுக்கு? குழம்பிப் போயிருக்கிறாள் என்பது தெரிந்தது.

 

“பையனப் பாத்துப் பேசி சம்மதம் பேசியாச்சு. நிச்சயதார்த்தமும் முடிஞ்சுது . பூவும்மா இதோட சீரியஸ்னஸ்  உனக்குப் புரியுதா?”

 

”புரியுதுன்னா. இப்படியெல்லம் இருக்கும்னு தெரியல. எப்படியிருந்தாலும் போகப் போக ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குவோம். ஒரு ஹெல்த்தி ரெலேஷன்ஷிப்  வந்துரும்னுதான் நினைச்சேன். அவங்களுக்கு என்னை புரியவே இல்ல. எப்பப் பாத்தாலும் போனப் பண்ணி கழுத்த அறுக்குறாங்க. ஒரு இங்கீதமே இல்லண்ணா.”

 

“இதுதான் பிரச்சினையா?”

 

“ஆபிஸ் வேலை, அதுல இருக்குற டென்ஷன், இன்செக்யூரிட்டி எல்லாம்  மண்டையே வெடிக்குற மாதிரி இருக்கு. நம்மள புரிஞ்சுக்கிறவங்க கூட இருக்குறது ரொம்ப அவசியம். இவங்க அப்படியில்ல.”

 

“இதெல்லாம் பேசி சரி பண்ணிரலாம். அவங்க கூடவேவா இருக்கப் போறாங்க?”

 

“அப்படி எனக்கு தோணல.”

 

“நரேன்ட்ட நீ பேசலாமே. பேசுவியா?”

 

“அய்யோ, அவங்கிட்டயா? தலையிலதான் அடிச்சுக்கணும். எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லிட்டே இருப்பான்.”

 

கலைச்செல்வன் மேலே எதுவும் கேட்காமல் இருந்தான்.

 

“அவன் ஒரு வேஸ்ட்டுண்ணா. இண்ட்ரஸ்டிங்கனா பர்சன் இல்ல.”

 

சரண்யா அடுத்த தோசை ஒன்றைக் கொண்டு வந்து தட்டில் வைத்தாள். “போதும் அண்ணி.” என்றவள், “தியேட்டருக்கு படம் பாக்கப் போனோம். கையைப் புடிச்சு இழுத்து வச்சுக்கிட்டு முத்தங் கொடுக்குறான். இதயும் உங்கம்மாக் கிட்ட கேட்டுத்தான் செய்றீங்களான்னேன். கையை விட்டுட்டான்.” என்று எரிச்சலோடு சொல்லி தண்ணீர் குடித்தாள்.

 

அடக்க முடியாமல் , “ஹஹ்ஹா…ஹ்ஹா..” என சத்தம் போட்டு சிரித்தாள் சரண்யா. கஷ்டப்பட்டு அடக்க முயற்சித்தாள். பார்த்துக் கொண்டிருந்த கலைச்செல்வனுக்கும், பூங்குழலிக்கும் சிரிப்பு வந்தது. அதை மீறிய கோபத்தில், “பின்ன என்ன அண்ணி? ஒரு விவஸ்தை வேண்டாம்” என்றாள்.

 

“பூங்குழலி! கல்யாணத்துக்கு முன்னால உங்கண்ணனும் அதெல்லாம் பண்ணவர்தான்” என்று மீண்டும் சிரித்தாள் சரண்யா.

 

பொய்யான கோபத்தோடும் கொஞ்சம் வெட்கத்தோடும் கலைச்செல்வன், “சரண்யா, நிறுத்துறியா” என்றான்.

 

“மே பி. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிங்க. அண்னனுக்கு உங்களையும், உங்களுக்கு அண்ணனையும் தெரியும். என்னப் பத்தி அவனுக்கு என்ன தெரியும். நான் ஒரு பெண். அவன் ஒரு ஆண். அது மட்டுந்தானே அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.” என கடுமையாக குறுக்கிட்டாள் பூங்குழலி.

 

அந்த இடம் அமைதியானது. கலைச்செல்வனின் மொபைல் அடித்தது. ‘சபாபதி தாத்தா.” என்று ஆங்கிலத்தில் இருந்ததை பூங்குழலியிடம் காட்டிவிட்டு எடுத்தான்.

 

“சொல்லுங்க தாத்தா…”

 

“………………”

 

“ஆமா தாத்தா, நேத்து சாயங்காலம் இங்க வந்துட்டேன்.”

 

“………….”


“ஆமா, தாத்தா..”

 

“…………… “

 

“அப்படியா….. எனக்குத் தெரியாது”

 

“…………… “

 

“பூவா… இல்லைய தாத்தா. இங்க வரலயே. என்ன விஷயம் தாத்தா?”

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 05:25

February 12, 2022

க்ளிக் - 12 (தொடர்கதை)


படிக்கெட்டுகளில் கவனமாய் கால் வைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தரையில் கால் வைத்ததும்  நிமிர்ந்தாள் பூங்குழலி. எதிரே கலைச்செல்வன் வந்து நின்றிருந்தான். “பூம்மா..” என ஆசையோடு அவள்  கையில் இருந்த பையை வாங்கப் போனான். “இருக்கட்டும்ணா” என முதுகில் மாட்டிக் கொண்டாள்.

 

“தூங்கினியா” கேட்டுக்கொண்டே பூங்குழலியின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி இருந்த பைக்கை நோக்கி நடந்தான் கலைச்செல்வன்.  

 

“ம். விழுப்புரம்லாம் தாண்டின பிறகுதான் தூக்கம் வந்துச்சு. அப்புறம் மேலூர் வரும்போது நீ போன் பண்ணதும் முழிச்சேன். சரி, நீ தூங்கினியா.” சிரித்தாள். மொபைலை பார்த்தாள். மணி நாலே கால். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அதைத்தாண்டி சாலை, வரிசையாய் இருந்த கடைகள் எல்லாம் விளக்குகளின் வெளிச்சத்தில் பளீரென்றிருந்தது. அதற்கப்பால் வெளியும், வானமும் இருட்டாய் இருந்தது.  பெரிய தூணின் கீழே ஈரம் சொட்டும் பூக்களை பரப்பி வைத்திருந்த ஒரு அம்மா “வாம்மா..” என இவளது முகத்தைப் பார்த்தார்.

 

“பத்து மணிக்கு பஸ்னு சொன்னியா? அப்ப நாலு மணிக்குப் போல மதுரைக்கு வரும்னு மூன்றைக்கு அலாரம் வச்சேன்.”என்றான். கலைச்செல்வன்   பற்றியிருந்த  தன் கையை விடுவித்து அப்படியே அவனது வலது கையை தனது இடது கையால் கட்டிக்கொண்டாள். சிரித்தாள். அண்ணனைப் பார்த்ததும் குழந்தையாகி விட்டதைப் போல உணர்ந்தாள். குழந்தையாய் இருந்ததிலிருந்து பார்த்தவர்களிடம்  தானாகவே குழந்தையாகி விடுகிறோம். இப்போது யாழினியைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதைப் போல சின்ன வயதில் இவளைத் தூக்கிக் கொன்டு அலைந்தவன். “ஒங்கண்ணனுக்கு அப்ப ஆறு எழு வயசுதா இருக்கும். எப்பப்பாத்தாலும் பெரிய மனுஷங் கணக்குல உன்னத் தூக்கி வச்சிக்கிட்டு அலைவான். எங்களுக்கு பயமா இருக்கும்.” என்று சித்ரா இவளிடம் நிறைய தடவை சொல்லியிருந்தாள்.

 

கலைச்செல்வன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும் பின்னால் ஏறிக்கொண்டாள். அவன் தோளில் உரிமையோடு கை வைத்துக் கொண்டாள். ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நேற்று மாலை நரேனுடன் பைக்கில் சென்றது, அதன்பின் நடந்தது எல்லாம் திரும்பவும் நினைவுக்கு வந்தன.

 

ஹாஸ்டலுக்குள் நுழைந்ததும் ஸ்ரீஜா இருக்கிறாள் என்பது ஆதரவாய் இருந்தது. அவளோடு  இருக்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையிலிருந்து எங்காவது சென்று விட வேண்டும் போலவுமிருந்தது. ஸ்ரீஜா ஊருக்குப் போகிறேன் என்றதும், தானும் வருகிறேன் என்றாள் இவள்.

 

எத்தனையோ தடவை ஸ்ரீஜா ஆசையோடு இவளை ஊருக்கு அழைத்திருந்தாள்.  “இன்னொருநாள் வருகிறேன்” என்றே சொல்லியிருந்தாள். இன்று தானும் வருவதாய்ச் சொன்னவுடன், ஸ்ரீஜா சந்தோஷத்தில் அப்படியே இறுக்கக் கட்டிப் பிடித்து “மை பேபி..” என கொண்டாடித் தீர்ப்பாள் என்று எதிர்பார்த்தாள். அவளோ அமைதியானாள். என்னவோ போலிருந்தது.

 

“ஏன்  நரேன் செட்டாக மாட்டான்னு சொல்ற?” கேட்டாள் ஸ்ரீஜா. அவள் குரலில் அக்கறையோ அதிர்ச்சியோ தெரியவில்லை. இவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் எதோ மழுப்புவது போலிருந்தது.

 

“நிறைய பேசணும். அதான் ஊருக்கு வர்றேன்னு சொன்னேன்.” அவள் முகத்தைப் பார்த்தாள் பூங்குழலி.

 

“நா ஊருக்குப் போகல” அவள் அமைதியாய்ச் சொன்னாள்.

 

புரியாமல் கேள்விகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் இவள்.

 

“நானும் மகேஷும் டேட்டிங் போறோம்” சொல்லிக்கொண்டே இவள் தலையைக் கோதி விட்டாள்.

 

எழுந்து கண்ணாடியில் போய் தன் முகத்தைப் பார்த்தவாறே, “அத மொதல்லயே சொல்லி இருக்கலாமே? ஏங்கிட்ட ஏன் மறைக்கணும்?.” கேட்டாள்.

 

“உங்கிட்ட சொல்ல முடியல. ஒரு மாதிரி இருந்துச்சு”

 

பூங்குழலி ஒன்றும் சொல்லவில்லை. பாத்ரூம் போனாள். தலையை மட்டும் திருப்பி இவளை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள் ஸ்ரீஜா. துணிகளை அடுக்கி வைத்திருந்த பை தயாராக இருந்தது. குனிந்து தலையில் இரண்டு கைகளையும் வைத்து உலுப்பிக் கொண்டாள். கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

 

பாத்ரூமிலிருந்து வந்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டு மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். பூங்குழலி கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.

 

அவள் அருகில் போய் உட்கார்ந்து, “ஸில்லியா பிஹேவ் பண்ணிட்டேன். யூ ஆர் மை லைஃப் அப்படி இப்படின்னு உங்கிட்ட சந்தோஷத்துல எக்கச்சக்கமா உளறியிருக்கேன். மகேஷ் எனக்கு ஒரு ஃபன்   மாதிரின்னு கூட சொல்லியிருக்கேன். அவங்கூட டேட்டிங் போறத நீ எப்படி புரிஞ்சுப்பன்னு தெரில. இட்ஸ் மை மிஸ்டேக். ஒகே வா? ஸாரி.”

 

பூங்குழலி மொபைலில் விரல்களால் தீட்டிக்கொண்டிருந்தாள். 

 

“பேபி… ப்ளீஸ். என்னைப் பாரேன்.”

 

 “ம்  நாங்கூட ஒனக்கு ஒரு ஃபன்தான் இல்ல?” திரும்பிப் பார்க்காமலேயே சொன்னாள் பூங்குழலி.

 

எதோ தீர்மானம் செய்தவளாய் ஸ்ரீஜா எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு இவள் அருகில் வந்து, “உங்கூட இந்த நேரத்தில் இல்லாம இருக்குறதுக்கு ஃபீல் பண்றேன். இப்போ ஒன்னுதான் சொல்ல முடியும். செட் ஆகலன்னு அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். பேசிக்கலாம்.” என்றாள்.

 

பூங்குழலி எதோ சொல்வதற்கு அவளை நிமிர்ந்து  பார்த்தாள். சட்டென குனிந்து முத்தம் கொடுத்து விட்டு, “யெஸ். திஸ் இஸ் ஆல்ஸோ ஃபன். திங்கக்கிழம பாக்கலாம். பை” வேகமாக கிளம்பிச் சென்றாள் ஸ்ரீஜா.

 

கொஞ்ச நேரம் அப்படியேக் கிடந்தாள் இவள். மனிதர்கள்  விசித்திரமானவர்களாகவும், ஒரு நிலையில்லாமல் இருப்பதாகவும்  தோன்றியது. வெளியே இருந்த இவள் உள்ளே இருக்கிறாள். உள்ளே இருந்த அவள் வெளியே போய் விட்டாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வரவேற்றவள், போகும்போது எப்படிச் சென்றாள் என்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். இருந்த பத்து நிமிடங்களுக்குள் வார்த்தைகள், உணர்வுகளில்  இருவருமே காயம்பட்டிருந்தார்கள். மனநிலைகளை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று  ஸ்ரீஜா அங்கிருந்து சென்றுவிட்டாள். அடர்ந்த மௌனத்தையும், வெறுமையையும் அறைக்குள் விட்டுச் சென்றிருந்தாள்.

 

மற்றவர்கள் பார்க்காத, புரிந்து கொள்ளாத ஒருவர், ஒவ்வொருவரிலும் இருக்கிறார். அந்த ஒருவரை ரகசியமாகவே தங்களுக்கு மட்டுமே தெரிந்தவராக வைத்திருக்க ஒவ்வொருவரும் மெனக்கெடுகிறார்கள். இன்னொருவர் அந்த ஒருவரைப் பார்க்க விரும்புவதில்லை. அனுமதிப்பதுமில்லை. மீறியோ, தப்பித்தவறியோ இன்னொருவர் பார்த்து விட்டால் அந்த இன்னொருவரை பிடிக்காமல் போய் விடுகிறது. பார்த்தாலும் பார்க்காதது போல, புரிந்தாலும் புரியாதது போல் பாவிப்பதில்தான் மனித உறவுகள் தொடருகின்றன.  அப்படி பார்க்க விரும்பாத ஸ்ரீஜாவை இவள் பார்க்க நேர்ந்து விட்டது. ஒருகணம் அதில் கலைந்து போனாலும், நேர்மையாகவே அதனை அவள் எதிர்கொண்டாள்.

 

தன்னுடைய  ஸ்ரீஜா என எவ்வளவு நம்பியிருந்தாள் பூங்குழலி? ஜன்னலைத் திறந்து வெளியைப் பார்த்தாள். இந்த இடம் ஸ்ரீஜாவுக்கானது. பெரும்பாலும் இங்கே நின்று சிகரெட் குடிப்பாள். இந்த சேரில் உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். எப்போதும் ஒரு ஏகாந்தமான களை முகத்தில் இருக்கும். உற்சாகமாகி விட்டால் போதும் ஒடி வந்து முத்தம் கொடுப்பாள். இந்த மூன்று வருடத்தில்   அதிகமாகப் பேசியது, பழகியது, கூடவே இருந்தது ஸ்ரீஜாவுடன்தான். எதைத்தான் பேசவில்லை? இரவெல்லாம் பேசி, அறிந்து களைத்து விடிகாலையில் தூங்கியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் கைபிடித்து அலைந்து திரிந்திருக்கிறார்கள். முழுசாக அவளை அறிந்திருக்கிறோம் என நினைத்திருந்தாள்.  “அப்படியில்ல பேபி..” என்று கன்னத்தில் தட்டிச் சொல்லி விட்டாள் ஸ்ரீஜா. இதுவும் ஒரு பாடம்தான்.

 

அப்போதுதான் வாட்ஸப்பில் ‘என்னைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. மன்னித்துக் கொள்’ நரேனின் மெஸேஜைப் பார்த்தாள். யார் கேட்டார்கள் இவனிடம் மன்னிப்பை என்று மொத்த எரிச்சலும் அவன் மீது வந்தது.

 

இவளைப் பற்றி நரேனுக்கு என்ன  தெரியும்? பார்த்துப் பேசியதே ஒன்றிரண்டு நாட்கள்தான். அதற்குள்ளாகவே அவன் மீறினான். அந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? இத்தனைக்கும் அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான்,  ‘முதல்ல நமக்குள்ள அட்டேச்மெண்ட் வரணும்.’ என்று தெளிவாய்ச் சொல்லி இருந்தாள். புரிந்தது போல் காட்டிக் கொன்டானே? இருட்டில் கள்ளத்தனத்தோடு அப்படி தொடுவதுதான் அட்டேச்மெண்ட்டா? அதிர்ச்சியாய் இருந்தது. அவனோடு வாழ்க்கை முழுவதும் எப்படி பயணிப்பது? நாளெல்லாம் புழுக்கமும், ஏமாற்றங்களும்  அதிர்ச்சிகளுமாய் இருந்தால் அதை விட சித்திரவதை இல்லை.

 

அதே இருட்டில் முதலில் இவள்  அவனது கையை  எடுத்து வைத்துக் கொண்டு முத்தமிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  உள்ளுக்குள் இவளை எவ்வளவு அசிங்கமாக நினைத்திருப்பான். இதுபோல மன்னிப்பு கேட்டால் அமைதியாகி விடுவானா?

 

அம்மாவுக்காக மட்டும்தான் சம்மதித்தாள். அப்பாவை இழந்து, உறவுகளில்  தனிமைப்பட்டவளுக்கு கலைச்செல்வனும், பூங்குழலியும் மட்டுமே நம்பிக்கையாய் இருந்தனர். கலைச்செல்வனும் ஏமாற்றி விட்டதாய் வெறுத்துப் போன அம்மாவுக்கு  தன்னை விட்டால் வேறு கதியில்லை என்று உணர்ந்தாள். அம்மா வருத்தம் கொள்ளவோ, சொந்தங்கள் மத்தியில் அவமானப்படவோ கூடாது என்றுதான் நரேனைத் திருமணம் செய்து கொள்ள சரியென்றாள்.

 

போன்களில், புரிதல்களில் சின்னச் சின்னதாய் மனக்கசப்புகள், முரண்பாடுகள் வர ஆரம்பித்ததும் நரேனின் அம்மாவும், இவளது அம்மாவும் பாட்டியும் சேர்ந்து  திட்டமிட்ட அஷ்டலஷ்மிக் கோவில் சந்திப்பை நினைத்தாலே குமட்டியது. ஒரு ஆணாக நரேன் தொட்டு விட்டால் ஒரு பெண்ணாக இவள் காலம் காலமாக வாய்மூடி அடங்கி இருப்பாள் என்று அவர்கள் ரகசியமாக எதிர்பார்த்தார்கள்.  வாழ்க்கையெல்லாம் அவர்கள் பார்வையில் இது குடிகொண்டிருக்கும். அதைப் பார்க்கவே இயலாது.

 

மொபைலை எடுத்து நரேனுக்கு, “நரேன்.  நமக்குள்ளே செட் ஆகாது. என்ன செய்யலாம்?” என்று மெஸேஜ் அனுப்பி விட்டு  எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். வராண்டாவில் யாருமில்லை. இரண்டு நாள் லீவில் ஊருக்குப் போயிருப்பார்கள். போகாதவர்கள் வெளியே எங்காவது சென்று விட்டு வருவார்கள். வராண்டாவை ஒட்டி வரிசையாய் நின்ற அசோகா மரங்கள் அசையாமல் இருந்தன.

 

கடற்கரையில் தனியாகப் போய் இருக்க வேண்டும் போலிருந்தது. ஸ்ரீஜா கடவுளிடமும் சொல்லவில்லை, கடலிடமும்  சொல்லவில்லை, தன்னிடமும் சொல்லவில்லை என நினைத்துக் கொண்டாள். இதை ஒருநாள் அவளிடம் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தன்னை ஆதரவாய், அரவணைத்துக் கொள்ள  சென்னையில் யாருமில்லை என்று வாட்டியது.

 

 ஹாஸ்டலில் இரண்டு நாட்கள் தனியாக இருக்க முடியாது. அண்ணன் கலைச்செல்வன் நினைவு வந்தது. மணி ஒன்பதுதான். ரெட்பஸ்ஸில் பார்த்தாள். வரிசையாக மதுரைக்கு பஸ்கள் இருந்தன. கலைச்செல்வனுக்கு போன் செய்து வருவதாகச் சொன்னாள். ஒரே மகிழ்ச்சி அவனுக்கு. “இனும புறப்பட்டு வர முடியுமா? பஸ் ரிசர்வ் பண்ணிட்டியா?” அக்கறையோடு விசாரித்தான்.

 

“வந்துருவேண்ணா” சொல்லி புறப்பட்டு விட்டாள்.

 

கலைச்செல்வன் எதோ சொன்ன மாதிரி இருந்தது. சரியாய் கேட்கவில்லை. தோளைத் தொட்டு “என்னண்ணா?” என்றாள்.

 

“அடுத்த சனி ஞாயிறு மாப்பிள்ளை வீட்லயும், நம்ம வீட்டுலயும் சென்னைக்கு வீடு பாக்கவும், ஜவுளி எடுக்கவும் வர்றாங்களாமே? முருகேசன் மாமா சொன்னாங்கன்னு தாத்தா சொன்னாங்க?”

 

 “ம்..” சொல்லி நிறுத்திக் கொண்டாள். விடிந்ததும் பிரச்சினை இருக்கிறது. அம்மா போன் செய்வார்கள் என நினைத்துக் கொண்டாள்.

 

நேற்றிரவு பெருங்குளத்தூரில் பஸ்ஸுக்கு காத்திருந்தபோது நரேனின் ‘நமக்குள்ள செட் ஆகும்னு தோணுது. என்ன செய்யலாம்?’ செய்தியைப் பார்த்தாள். என்ன நெஞ்சழுத்தம் என்றிருந்தது. தியேட்டரில் முகம் பார்த்து பேச முடியாமல் இருந்தவன் என்ன தைரியத்தில் இப்படி அனுப்பி இருக்கிறான்? இன்னொரு தடவை அந்த முகத்தை எப்படி பார்ப்பது? வாழ்க்கை முழுவதும் பார்க்க வேண்டுமா? கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள்.  மொபைலை மூடி கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

 

பஸ்ஸில் ஏறி கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது, சந்திரா போன் செய்தார். எடுக்காமலிருந்தாள். ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. திரும்பவும் போன் வந்தது. எடுத்தாள். “சொல்லுங்க ஆண்ட்டி” மெல்லிய குரலில் பேசினாள்.

 

“எங்கம்மா இருக்க?”

 

“என்ன ஆண்ட்டி..?”

 

“எங்க இருக்கன்னு கேட்டேன். எதோ ஃபிரண்டுக் கிட்ட இருந்து போன் வந்துச்சுன்னு படம் பாக்காம பாதியிலேயே கிளம்பிட்டியாமே. அதாங் கேட்டேன்.”

 

“பப்ல உக்காந்து  ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸோட  டிரிங்க்ஸ் சாப்டுறேன்.”

 

“என்னம்மா இப்டில்லாம் பேசுற? “

 

“வேற எப்படிப் பேசணும்.”

 

“கோவிலுக்கு போனீங்க. கடற்கரையில போட்டோல்லாம் எடுத்துருக்கீங்க. பாத்தேன் சந்தோஷமாயிருந்துச்சு. அதான் போன் பண்ணி பேசலாமேன்னு பாத்தேன்.”

 

“பேசிப் பாத்துட்டீங்களா? வச்சிரவா?”

 

 “இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஒரு பொண்ணு மாதிரியா பேசுற?”

 

“இந்தக் கேள்வியை ஒங்க ஆம்பளைப் பையனிடம் கேளுங்க.” துண்டித்து விட்டாள்.

 

போனை ஆஃப் செய்துவிட்டு படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை. படபடவென இருந்தது. இந்த நேரத்தில் வீட்டுக்கும், நரேனுக்கும் மாறி மாறி போன்கள் அடித்துக் கொண்டிருக்கும். குய்யோ முறையோ என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். பேசட்டும். இவளுக்கு வீட்டில் இருந்து சித்ராவும் பத்மாவதியும் போன் அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஹாஸ்டலுக்குக் கூட போன் அடித்திருப்பார்கள். அடிக்கட்டும். அம்மா அழுவார். பாட்டி அம்மாவையும், அப்பாவையும் திட்டுவார். அதுதான் தாங்க முடியவில்லை. கண்ணை இறுக்க  மூடிக் கொண்டாள். எப்படியாவது அம்மாவை அழைத்துக் கொண்டு சென்னையில் ஒரு வீடு பார்த்து தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

விழுப்புரம் எல்லாம் தாண்டிய பிறகு தூக்கம் வரும் போலிருந்தது. மணியைப் பார்த்தாள். பனிரெண்டரையைத் தாண்டி இருந்தது. இனி போன் செய்ய மாட்டார்கள் என்று போனை ஆன் செய்தாள். காலையில் நிச்சயம் கலைச்செல்வன் போன் செய்வான் என்று தெரியும்.  ஒருவேளை அம்மா போன் செய்தால் திரும்பவும் ஆஃப் செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டாள்.

 

ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் போய்க்கொண்டிருக்கும் வழியிலும் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்தன. “அண்ணா, இன்னிக்கு ஆண்டவன் கட்டளை படம் போவோமா.?” கேட்டாள்.

 

“போவோம்.” உற்சாகமாகச் சொன்னான்.

 

“பூம்மா, பால் வாங்கிட்டுப் போயிருவமா?. போனவுடன ஒரு காப்பி போட்டுக் குடிக்கலாம்”

 

“எனக்கு காபி வேண்டாண்ணா. போய் அப்படியே கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கணும்”

 

“சரண்யா வாங்கிட்டு வரச் சொன்னாளே”

 

“சரி வாங்குவோம்.” சிரித்துக் கொண்டாள்.

 

ஆவின் முன்பு பைக்கை நிறுத்தினான். பால் வாங்கிக்கொண்டு வந்தவன், “ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து தாத்தா விட்டுல கருப்பட்டிக் காபி குடிச்சேன்.” என்றான்.

 

அப்போதுதான் கலைச்செல்வன் நேற்று அப்பாவின் நினைவு நாளுக்கு  ஊருக்குச் சென்றிருந்தது ஞாபகம் வந்தது. சாயங்காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளில் எல்லாவற்றையும் மறந்து விட்டோம் என்பது உறைத்தது.

 

“ஊர்லயிருந்து நீ எப்பண்ணா வந்த? அதக் கூட கேக்க மறந்துட்டேன் பாரு”

 

“மத்தியானம் சாப்பிட்டுட்டு கிளம்பினேன். சாயங்காலம் வந்தேன்.” என்றவன் இவளது முகத்தைப் பார்த்தான். “தாத்தா ரொம்ப பிரியமா இருந்தாங்க. அப்பாக்கு படையல் வச்ச சாப்பாட்ட எனக்கு எடுத்து வச்சு,  சாப்பிடுய்யான்னு எம்பக்கத்துல வந்து உக்காந்துட்டாங்க. ஆறு வருசமாச்சு நீ வந்து. உங்க அப்பாக்கு படையல் வைக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாயிருக்கும்ன்னாங்க..”  அண்ணனின் கண்கள்  கலங்கியதைப் பார்த்தாள்.

 

பைக்கில் ஏறி நகர்ந்தார்கள். தெருக்களுக்குள் நுழைந்தார்கள். வீடுகளுக்குள் மங்கலான வெளிச்சம் கசிந்து கொண்டிருக்க வாசல் தெளிக்க ஆரம்பித்திருந்தார்கள். சேவல்கள் எங்கேயோ இருந்து விட்டு விட்டு குரல் எழுப்பின.

 

“இதெல்லாம் ஊருல இருக்கும் போது பாத்ததுதான். சென்னையில படுக்குறது பனிரெண்டுக்கு மேலாயிரும். எந்திரிக்கிறது எழு எட்டுக்கு. அடிச்சுப் புரண்டு ஒடுறோம்.”

 

வீடு வந்திருந்தது. நிறுத்தினான். பைக் சத்தம் கேட்டு சரண்யா வெளியே வந்தாள். “வா பூங்குழலி” என முகமெல்லாம் சிரித்து அழைத்தாள்.

 

“அண்ணி ஒங்க தூக்கத்தையும் கெடுத்துட்டனா?’” கேட்டாள்.

 

“அய்யோ ..இதிலென்ன. நீ வந்தது சந்தோஷம்” சரண்யா சிரித்தாள். கலைச்செல்வன் கொடுத்த பால் பாக்கெட்டை வாங்கி உள்ளே சென்றாள்.

 

இவர்களும் பின்னால் சென்றார்கள். முன்னறையில்  ரவிச்சந்திரனின் படம் மாட்டியிருந்தது. மாலை வாடாமல் இருந்தது. அப்பாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சரியாய் அந்த நேரத்தில் போன் வந்தது. கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாள். அம்மாதான். அவசரமாக போனை அமைதியாக்கி ஆப் செய்தாள்.

 

“பூம்மா யாரு இந்த நேரத்துல?” கலைச்செல்வன் கேட்டான்.

 

“ஆபிஸ்லயிருந்துதான். எதாவது டவுட்டாயிருக்கும். அட்டெண்ட் பண்ண வேண்டியதில்ல. பாத்துக்கலாம்.”

 

(தொடரும்)

க்ளிக் - தொடர்கதையின் அத்தியாயங்களைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2022 07:50

February 9, 2022

க்ளிக் - 11 (தொடர்கதை)


கோபப்படுவாள். பேசாமல் இருப்பாள். அவள் சரியாவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இப்படித்தான் நினைத்திருந்தான். அவள் முகத்தை எப்படி பார்ப்பது என்பதுதான் நரேனுக்கு தவிப்பாக இருந்தது. இது போல ஒரு முடிவுக்கு பூங்குழலி வருவாள் என்று யோசித்திருக்கவே இல்லை.

 

அழுத்தமானவள் அவள் என்பதை இந்த பத்து இருபது நாட்களில் புரிந்து கொண்டிருந்தான். அதுதான் பயமாய் இருந்தது. அவளுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று துடித்தாலும் அடக்கிக் கொண்டான். இரண்டு நாட்கள் போகட்டும். உடனுக்குடன் பேசியும் எழுதியும் பிரச்சினை மேலும் அதிகமாகி விடக்கூடாது. நிதானமாயிருக்க வேண்டும்.  என்றெல்லாம் அமைதிப்படுத்தினாலும் சிந்தனை எல்லாம் பூங்குழலி எழுதியதிலேயே இருந்தது.

 

நமக்குள் செட் ஆகாது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாள். இவன் சரிப்படமாட்டான் என்று சொல்கிறாளா? அந்த இருட்டில் ஒரு வேகத்தில் நடந்து கொண்டதை வைத்து வாழ்க்கைக்கே ஒத்து வரமாட்டான் என்று எப்படி முடிவுக்கு வந்தாள்? நாம் என்ன அவ்வளவு தவறானவனா, இதுவரைக்கும் வேறு எந்தப் பெண்ணிடமாவது இப்படி நடந்து கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் நொறுங்கிப் போனான்.

 

வெளியே என்னவென்று சொல்வது? அம்மா அப்பாவிடம் எப்படி சொல்வது? இதற்காக ஒரு கல்யாணத்தையே நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் கொடுமையானது. அழைப்பிதழ்களை சொந்தக்காரர்களுக்கும், ஊரில் உள்ளவர்களுக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவனும் தனியே அழைப்பிதழ் அடிக்க ஏற்பாடு செய்திருந்தான். போனில், வாட்ஸப்பில் நேரில் என்று பலரிடமும் சொல்லிவிட்டான். அவர்களிடம் என்ன சொல்வது.

 

இவனும் பூங்குழலியும் இன்னேரம் ஆண்டவன் கட்டளை படம் பார்த்துக் கொண்டிருப்பதாய் சந்திரா ஆசையாய் இருப்பார். பத்து மணிக்குப் போல நிச்சயம் போன் செய்து விசாரிப்பார். பாதியிலேயே வந்ததைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.  சொன்னால், முதல் முதலாக இரண்டு பேரும் சேர்ந்து பார்க்கப் போன படமே பிடிக்கவில்லையா என்று கேள்வி வரும். எதாவது பொய் சொல்ல வேண்டும். இவனுக்கோ பூங்குழலிக்கோ தலை வலித்தது என்று சொல்லலாம். அது குறித்தும் கவலைப்படுவார்கள். கேள்வி வரும். அதற்கும் பொய் சொல்ல வேண்டும். பேசாமல் ஒரேயடியாய் படம் முழுவதும் பார்த்ததாய் சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவளை ஹாஸ்டலில் கொண்டு விட்டதாகவும் சொல்ல வேண்டும். எல்லாம் பொய்தான். வேறு வழி தெரியவில்லை.

 

ஒருவேளை தன்னிடம் பேசியது போல பூங்குழலியிடமும் போன் பேசி, அவள் பாதியிலேயே வந்துவிட்டோம் என்று சொல்லி விட்டால்..?  வேறு வினையே வேண்டியதில்லை. அடுத்த கேள்விகளுக்கு பூங்குழலி என்னவெல்லாம் சொல்வாள் என்று தெரியாது. “அம்மா அடிக்கடி பூங்குழலிக்கு போன் செய்து பேசாதீங்க. ஒரே விஷயத்த எல்லார்ட்டயும் மாறி மாறிப் பேசுறது எரிச்சலா ஃபீல் பண்றா” என்று அடுத்த பொய்யை தயார் செய்து கொண்டான். வருத்தம் தந்தாலும் அம்மா பேசாமல் இருப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் பூங்குழலியின் அம்மாவிடம் படம் பார்க்க போயிருப்பதைப் பற்றி பேசுவார்களே?  அவர்கள் பூங்குழலியிடம்  கேட்பார்களே?  பேசுவார்களே என்ன பேசுவார்களே. இன்னேரம் பேசியிருப்பார்கள். ஒரு செல்பியை எடுத்து அனுப்பி,  சேர்ந்து படம் பார்க்கப் போகும் சந்தோஷத்தை போனில்  தெரிவித்து எல்லாம் இப்போது ஏடாகூடமாகி இருக்கிறது.

 

ஒன்றிலிருந்து ஒன்று என பிரிந்து பிரிந்தும், சுற்றி சுற்றியும் சிக்கல்களாகி விடுகின்றன மனித உறவுகள். ஹெச்.டி.எம்.எல்,  சி.எஸ்.எஸ், ஜாவா போல இல்லை மனிதர்களின் மொழிகள். இந்த கோடிங் எழுதினால் இந்த ரிசல்ட் வரும் என்று தெரியும். எதிர்பார்க்கலாம். வரவில்லை என்றால் கோடிங்கை மாற்றி எழுதி, சரி செய்து தேவையான ரிசல்ட்டை வரவைக்க முடியும். மனிதர்களிடம் ஒரு வார்த்தை தவறாக பேசிவிட்டு அதை மாற்ற முடியாது. எழுதினால் எழுதியதுதான். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் சரியாகவே பேசினாலும், கேட்பவர்  தவறாக புரிந்து கொள்வதும் நடக்கும். கம்ப்யூட்டர் மொழிகளுக்கு தொனி கிடையாது. பரிமாணங்கள் கிடையாது. டொமைனில் புலி என பேரெடுத்த நரேன் ஒரு சின்ன விஷயத்தில் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் மண்டை காய்ந்து போனான். நடப்பது நடக்கட்டும், நாம் ஒன்றும் சொல்லாமல் இருப்போம், அவர்களாக தெரிந்து கொண்டால் பார்த்துக் கொள்வோம் என முடிவுக்கு வந்தான்.

 

கடுப்பாக இருந்தது. இப்போது கல்யாணம் வேண்டும் என்று யார் அவசரப்பட்டார்கள்? சந்திரா மீதுதான் எரிச்சல் வந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சம்பளம்  அறுபதாயிரத்தைத் தொட்டிருந்தது. நான்கு லட்சம் போல சேமிப்பில் இருந்தது. இரண்டு மூன்று வருடங்கள் கழித்து என்றால் பிரமோஷனும் கிடைத்து விடும், கணிசமான சம்பளம் வரும், சேமிப்பும் பத்து லட்சத்துக்கு மேலிருக்கும். தைரியமாக பெண், குழந்தை, குடும்பம் என அடியெடுத்து வைக்கலாம். திருமணப் பேச்சை ஆரம்பித்த நேரத்தில் சந்திராவிடம்  எவ்வளவோ சொல்லியிருந்தான்.

 

“எங்களுக்கு நீதான் ஒரே பையன். இந்த வீடு, அப்பா சம்பாதிச்சது எல்லாம் யாருக்கு? அவர் ரிடையர் ஆனப்புறம் சென்னையிலேயேக் கூட ஒரு வீடு வாங்கி நாம எல்லாம் ஒன்னாயிருக்கலாம்.” சந்திரா தீர்மானமாக மறுத்து விட்டார்.

 

இதோ எங்கும் வீடுகள். ஜன்னலில், வாசலில், பால்கனியில், மொட்டைமாடியில் என அங்கங்கு  வெளிச்சம் சிந்திய திட்டுகளாய் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு இறைந்து கிடந்தன. வெளிச்சம் படாத பகுதிகளில் வீடுகளின் நிழல் உருவங்கள் தங்களுக்கென்று ரகசியங்களை வைத்திருந்தன. இரவு ஒரு பெரிய கடல்போல் விரிந்து பரந்து சலனமில்லாமல் கிடந்தது. பார்க்கும் யாவும் அதில் மிதந்து கொண்டிருந்தன. பகலில் இதே வீடுகள், வெளிகள் எல்லாம் தரை தட்டி இரவின் சுவடுகளற்று வெயிலில் காய ஆரம்பிக்கும். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என மனிதர்கள் வீடுகளிருந்து வேகவேகமாய் வெளியேறுவார்கள். நடை, சைக்கிள், ஸ்கூட்டர், பைக், ஆட்டோ, கார், பஸ், என அவரவர்க்கான வேகங்களோடு விரைவார்கள். இப்படித்தானே  ஒரு  வீட்டில் நாமும் வாழப் போகிறோம் என்றிருந்தது. இன்று பூங்குழலியைப் பார்க்கிற வரைக்கும் அவளோடு சேர்ந்து வாழப் போகிற வீடு குறித்து கனவுகளும், யோசனைகளும்  இருந்தன. இப்போது அவையெல்லாம் வற்றிக் கொண்டிருந்தன.

 

இந்த நகரத்தில்தான் எங்கோ ஒரு வீட்டில் பூங்குழலி இருக்கிறாள். பூங்குழலியைப் பார்க்கப் போகும் வழியில் கந்தல் துணியால்  உடலையும் உயிரையும், குழந்தையையும் போர்த்திக் கொண்டு “சார்..” என கைநீட்டிய  வாடிப் போயிருந்த பெண்ணும் எங்கோ இருக்கிறாள். பவித்ரா இருக்கிறாள். எங்கோ உட்கார்ந்து கிஷோர் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான். ஆஷா அந்த மேனேஜரோடு சிரிக்கிறாள். அவளை எதிர்பார்த்து குழந்தையும், அம்மாவும், அப்பாவும் காத்து இருக்கிறார்கள். வீடுகளுக்குள்ளேயும் வெளியேயும் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்வின் நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டும், மீள்வதற்கு வழியைத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். இவன் முன்னே பூங்குழலியின் வாட்ஸப் செய்தி இருட்டாய் அடர்ந்திருந்தது.

 

“என்ன  தம்பி, இங்கதான் இருக்கீங்களா?” பின்னால் நாச்சியப்பன் குரல் கேட்டது. திரும்பினான். “நீங்க வரும்போது பாத்தேன்.  பேசலாம்னு மேல வந்தேன். ரூம் பூட்டிக்கிடந்தது. செருப்பு வெளியே இருந்துச்சு. சரி, இங்கதாம் இருப்பீங்கன்னு  நினைச்சேன்” சிரித்தார்.

 

“வாங்க சார்..”  என வலது கையை லேசாக நெஞ்சில் வைத்து மரியாதை காட்டி ஒதுங்கி நிற்பது போல அசைந்தான் நரேன். நாச்சியப்பன் இந்த வீட்டுக்காரர். கீழே அவரும் அவரது மனைவி விஜயாவும்  இருக்கிறார்கள். மேல் போர்ஷனில் இவன், கிஷோர் பிரசாந்த்.

 

“கல்யாணமாம்ல தம்பிக்கு!” என்று நரேன் முதுகில் லேசாய் தட்டினார்.

 

அதிர்ச்சியாயிருந்தது. அம்மாதான் சொல்லியிருக்க வேண்டும் என புரிந்தது. பதில் சொல்ல வராமல் விழித்தான்.  சிரிப்பே வராமல் சிரித்தான். 

 

மாசத்துக்கு இரண்டு மூன்று தடவை அவரோடும்  அவரது மனைவி விஜயாவோடும் பேசுவதை சந்திரா வழக்கமாக வைத்திருந்தார். தன் மகனை அவர்கள் இருவரும்தான் பார்த்துக் கொள்வது போல ஒரு நினைப்பு. யாராவது பெரியவர்கள் கண்காணிப்பில் தங்கள் குழந்தைகள் இருப்பது ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அளிக்கிறது போலும்.

 

“படம் பாக்கப் போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க. இப்பமே வந்துட்டீங்க”

 

“கொஞ்ச நேரம் படம் பாத்தோம். அவளோட ஃபிரண்டுக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அவசரமா கிளம்பணும்னு  புறப்பட்டா. எனக்கும் தனியா படம் பாக்க பிடிக்கல. வந்துட்டேன்.” என்றான். கொஞ்சமும் யோசிக்காமல் அப்படிச் சொல்ல முடிந்தது அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

 

நாச்சியப்பன் எதுவும் சொல்லாமல் தலையாட்டிக்கொண்டே அருகில் வந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

 

நாச்சியப்பன் பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ரிடையராகி இருந்தார். எப்போதாவது சில நேரங்களில் மொட்டை மாடிக்கு வருவார். பெரும்பாலும் கீழே வராண்டாவில் சேர் போட்டு தெருவைப் பார்த்து உட்கார்ந்திருப்பார். இல்லையென்றால் எதிரே வீட்டோடு சேர்ந்து சின்னதாய் மளிகைக்கடை வைத்திருக்கும் ரெங்கசாமியோடு உட்கார்ந்து சிகரெட் புகைத்தவாறு பேசிக்கொண்டு இருப்பார். இருட்டிவிட்டால் வெளியே பெரும்பாலும் தென்பட மாட்டார். மேலே படியேறும்போது அவர் வீட்டின் ஹாலிலிருந்து  டி.வி சத்தமாய் கேட்கும். இவர்களோடு அவசியமென்றால் மட்டும் பேசுவார். மூத்தவன் அமெரிக்காவில் இருக்கிறான். இங்கு தங்கியிருக்கும் மூன்று வருடங்களில் ஒருமுறைதான் அவனை நரேன் பார்த்திருந்தான். மனைவியோடும்  குழந்தைகளோடும்  வந்திருந்தான். இரண்டாவது ஒரு மகள் இருந்திருக்கிறாள். எலக்டிரிக் டிரெயினில் அடிபட்டு இறந்து விட்டதாய் விஜயா ஒருமுறை போனில் பேசும்போது சந்திராவிடம் சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று மேலே சொல்லவில்லையாம். “என்னத்தச் சொல்ல. விடுங்க அதை” என்று தழுதழுத்து நிறுத்திக் கொண்டாராம்.

 

தொண்டையை லேசாக செருமிக் கொண்டே “அம்மாவிடம் பொண்ணப்பத்தி பேசிட்டு இருந்தோம். அவளோட ஊர் பேர் கேள்விப்பட்டதா இருந்துச்சு. அந்த ஊரில் இருந்து ரவிச்சந்திரன்னு ஒரு ஃபிரண்டு எனக்குத் தெரியும்னு சொன்னேன். எப்படித் தெரியும்னு கேட்டாங்க. எனக்கு வேல கிடைச்ச புதுசுல நானும் அவனும் ராமநாதபுரத்துல ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தோம். அவன் பேங்ல வேலை பார்த்தான். நா டெலிபோன்ஸ்ல வேலை பாத்தேன். இரண்டு வருஷம்  கழிச்சு நான் மெட்ராஸ் வந்து செட்டிலாய்ட்டேன். அவனும் ஊர்ப்பக்கம்தான் டிரான்ஸ்பர்ல போனான்னு சொன்னேன். பொண்ணோட அப்பா பேரும் ரவிச்சந்திரன்தான், அவங்களும் பேங்லதான் வேலை பாத்தாங்க. இப்போ இறந்துட்டாங்கன்னு உங்க அம்மா சொன்னாங்க” என நிறுத்தினார். சிகரெட்டை ஆழமாக உள்ளிழுத்தார்.

 

நரேனுக்கு எல்லாம் விநோதமாக இருந்தது. ஜூஸ் கடையில் நின்றபோது ஆஷாவை சரியாக அதே இடத்தில் பார்க்க நேர்ந்ததே ஆச்சரியமாய் இருந்தது.. பூங்குழலியின் அப்பாவின் நண்பராக இந்த நாச்சியப்பன் இருந்திருக்கிறார். அவர் வீட்டில்தான் தங்கியிருக்கிறோம் என்பது தன்னைத் தொடர்ந்து வந்து எதோ உற்றுப் பார்ப்பது போலிருந்தது.

 

“என் கல்யாணத்துக்கு வந்தப்ப கடைசியா பார்த்தது. கொஞ்ச நாள் மாறி மாறி லெட்டர் போட்டது  நினைவில இருக்கு. பிறகு அவனோட தொடர்பு இல்ல. அவனுக்கு கல்யாணமாச்சா, எங்க இருக்கான்னு தெரியல. விசாரிக்கவும் இல்ல. இன்னிக்கு வரைக்கும் அவன் ஞாபகம் வந்த மாதிரியே இல்ல. ஒங்கம்மாக் கிட்ட பேசுன பிறகு அவனப் பத்தியே நினைச்சுட்டு இருக்கேன். எங் கல்யாணப் போட்டோக்களை எடுத்துப் பார்த்தேன். இருந்தான். முகமும் பிடிபட்டுச்சு. முப்பது வருஷத்துக்கும் மேல இருக்கும் இல்லியா?”

 

அவர் இன்னும் பேசுவதற்கு இருக்கிறார் என்று தெரிந்தது. நரேன் அமைதியாக கைகட்டிக் கொண்டான்.

 

“எல்லார்ட்டயும் நல்லா பழகுவான். அவன் இருக்குற இடமே கலகலப்பா இருக்கும். சினிமாவா பாத்து தள்ளுவோம். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், இளையராஜா, கமல், ரஜினி ஸ்ரீதேவி பத்தி நிறையப் பேசுவோம். வேற என்ன பொழுது போக்கு எங்களுக்கு? அவனுக்கு யூனியன்ல இண்ட்ரஸ்ட் உண்டு. அரசியல் கூட்டம் நடந்தா எங்கன்னாலும் போய்ப் பார்ப்பான். நாங்க இருக்குற ரூமுக்கு அவனப் பாக்க கம்யூனிஸ்டுக் கட்சிக்காரங்க ரெண்டு பேரு வருவாங்க.. யோசிக்க யோசிக்க ஒவ்வொண்ணா ஞாபகத்துக்கு வருது. சம்பளம் எல்லாம் ஆயிரத்து சொச்சம். அதுல மேன்ஷனுக்கு, மெஸ்ஸுக்கு, சினிமாத் தியேட்டருக்கு எல்லாம் கொடுத்தது போக வீட்டுக்கும் அனுப்புவோம்னா பாத்துக்குங்க…”

 

சிகரெட்டை அணைத்து விட்டு நரேனை ஒரு தரம் பார்த்தார். “இந்த சிகரெட்  அவங்கிட்ட இருந்து வந்தது. நா காலேஜ் முடிக்கிற வரைக்கும் சிகரெட் பிடிச்சது கிடையாது. ரவிச்சந்திரன் எப்பப் பாத்தாலும் சிகரெட்டுத்தான். ஒரே ரூமா… ஒட்டிவிட்டது.”

 

இருண்டு கிடந்த வெளியில் எதையோத் தேடுவது போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது இளமைக் காலத்திற்குள் நாச்சியப்பன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை நரேன் பார்த்துக் கொண்டிருந்தான். இவனது அப்பா மூர்த்தியும் இதுபோல பேசி கேட்டிருக்கிறான். அவரையுமறியாமல் ஒரு உற்சாகம் தெரியும். கூடவே விலை மதிப்பற்ற ஒன்றை இழந்த பெருமூச்சும் வெளிப்படும்.

 

 “ரவிச்சந்திரன் மனைவி பெயர் என்ன?” எதோ நினைவுக்கு வந்தவராய் கேட்டார்.

 

“ஆன்ட்டி பேரா? சித்ரா.” எதற்கு கேட்கிறார் என்று புரியவில்லை.

 

யோசித்தார். அவராகவே தலையாட்டிக் கொண்டார். “இப்போ சொல்றதுல ஒன்னும் தப்பில்ல.  என நிறுத்தி நரேனைப் பார்த்தார்.  திரும்பவும் தொண்டையை செருமிக் கொண்டு, “நா அங்கயிருந்து டிரான்ஸ்பர் ஆகுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால, அவன் ஊர்லயிருந்து ஒரு பொண்ணு ரவிச்சந்திரனைத் தேடி வந்தா. மாநிறம். லட்சணமா இருந்தா. பேரு கூட ….. பராசக்தி படத்து கதாநாயகி பேரு….. ஆங் கல்யாணி… வந்து ஒங்கூடத்தான் வாழ்வேன். என்னக் கல்யாணம் பண்ணிக்கன்னு ஒரே அனத்தல். ரவிச்சந்திரனுக்கு என்ன செய்யன்னு தெரில. அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி சமாதானம் செஞ்சு…. ஊருக்கு டிரங்க்கால் போட்டு பேசி… அவங்க அங்கயிருந்து காருல வந்து அடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. அன்னிக்கு பூரா மேன்ஷனே கலவரமா இருந்துச்சு. ரவிச்சந்திரன் யாருக்கிட்டயும் பேசாம ரெண்டு மூனு நாள் ஒரு மாரி இருந்தான்.”

 

நிச்சயம் செய்த அன்று திடீரென மேடைக்கு  தலைவிரி கோலமாய், பைத்தியம் போல இருந்த ஒரு வயசான பெண் ஏறியதும் , பூங்குழலி வீட்டில் அந்தப் பெண்ணை விரட்டியதும், அந்தப் பெண் கதறியதும்  நினைவுக்கு வந்தது. கல்யாணி என்றுதான் பூங்குழலி சொல்லியிருந்தாள்.

 

“ம்… காலம் வேகமா ஒடிப்போச்சு. வீடு கட்டி இங்க வந்து இருபத்தைஞ்சு வருசமாகுது. அப்ப குரோம்பேட்டையில இந்த இடம் டெவலப்பாய்ட்டிருந்த நேரம். மொத்தமே நாலைஞ்சு வீடுங்கதான் இருந்துச்சு. இப்போ பாருங்க. கால்  வைக்க இடம் இல்லாத மாரி இருக்கு” என்று சொல்லியவர், “எங்க கதைய சொல்லி ரொம்ப போரடிச்சிட்டேன் இல்ல..” என சிரித்தார்.

 

“அப்படில்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இவ்ளோ பேசுனதே பெரிய விஷயம். அதிகமா பேசவே மாட்டீங்க..” என்றான்.

 

“என்ன தம்பி செய்ய. யாராவது பேசக் கிடைச்சா இப்படித்தான் அறுத்து தள்றேன். மகனோ, மகளோ கூட இருந்து பேரப் பிள்ளைங்கக் கிட்ட பேசுறதுக்கும் கொஞ்சுறதுக்கும் நமக்கு கொடுப்பின இல்லயே. நானாவது அங்க இங்க வெளியே போய்ட்டு வர்ரேன். விஜயா என்ன செய்வா? நா அவ முகத்தையும், அவ என் முகத்தையும் ரெண்டு பேரும் டிவியையும் பாத்துட்டு இருக்கோம். இன்னிக்கு எங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.”

 

அவரது குரல் உடைந்து கொண்டிருந்தது. இவனால் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

 

“நாஞ் செஞ்ச காரியத்துக்கு இப்போ அனுபவிக்கிறேன். ஊரிலிருந்து எங்க அம்மாவையும், அப்பாவையும் விட்டு நான் நகரத்துக்கு வந்தேன். அவங்களால பழகுன இடங்களை விட்டு இங்க வர முடியலை. எங்க இருந்தாலும் தன் மகன் நல்லாயிருக்கட்டும்னு வயசான காலத்துல தனிமையில வாழ்ந்தாங்க. இப்போ என் மகன் இந்த நகரத்த விட்டு, நாட்டை விட்டு எங்கேயோ இருக்கான். நாங்க இங்க தனியா இருக்கோம். இதுதான் கதி போல.” வேட்டி முனை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார்.

 

“சார், ஒங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தாங்களா?’ என மெல்லக் கேட்டான்.

 

அதை  கவனிக்காதது போல “சொல்ல மறந்துட்டேன். அம்மாவும் வீடு பாக்கச் சொல்லியிருந்தாங்க. கொஞ்சம் அவுட்டர்ல ஒரு தனி வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. நாளைக்கு கூட போய்ப் பாத்துரலாம். அப்புறம் நாஞ் சொன்னத அந்தப் பொண்ணுக்கிட்டல்லாம் சொல்ல வேண்டாம். நா கிளம்புறேன். இன்னொரு நா பேசுவோம்..” என்றவர் நின்று, “ரவிச்சந்திரன் மகளிடம் என்னப் பத்திச் சொல்லுங்க. முடிஞ்சா ஒரு நா கூட்டிட்டு வாங்க.” என்றார்.

 

”சரி சார் பாத்துப் போங்க.” என்றான்.

 

“சரி தம்பி..” என படிகளிலிருந்து அவர்  குரல் கேட்டது.

 

இவ்வளவு நேரம்  அவர் பேசியது  நரேனுக்கும், பூங்குழலிக்கும் பின்னால் நீண்டிருந்த அவர்களின் கடந்த காலத்தை தொட்டுக் காட்டிச் சென்றது போலிருந்து.  பூங்குழலி என்றால் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் தனக்கு இணையான ஒரு பெண்ணின் தோற்றம், அவளோடு கடந்த சில நாட்களாக பேசியதால் அறிந்த இயல்புகள் தவிர வேறு என்ன அவளைப் பற்றி தெரியும் என நினைத்துப் பார்த்தான். அவளது அப்பா, அவரைக் காதலித்த ஒரு பெண், அவர் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், அவர்களுக்கு ஒரு குடும்பம், அவரது யூனியன் நடவடிக்கைகள், அவரது மரணம், அந்தக் குழந்தைகள் தவிப்பு, அவளது அம்மாவின் நிலைமை இதுகுறித்தெல்லம் யோசித்துப் பார்த்திருக்கிறானா என்றால் கிடையாது. அதுபோல அவளுக்கும் இவனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

இதைத்தான் பூங்குழலி  சுட்டிக்காட்டியிருந்தாள் என்பது புரிந்தது. அவளது தயக்கங்களைக் களைவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் என்பதை ‘ரைட் க்ளிக்’ செய்திருப்பதாக சொல்லவும் செய்திருந்தாள். அதற்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். அவளுக்கு  ஆதரவாக இருந்து தைரியத்தை அளித்திருக்க வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டோமே என்றிருந்தது நரேனுக்கு.

 

அதற்கு மேல் யோசிக்கவில்லை.  மொபைலை எடுத்து வாட்ஸ்ப்பில் “நமக்குள்ள செட் ஆகும்னு தோணுது. என்ன செய்யலாம்?” என  பூங்குழலிக்கு மெஸேஜ் அனுப்பினான். நாச்சியப்பன் சொன்ன ரவிச்சந்திரனின் போட்டோவைப்  பார்க்க வேண்டும் போலிருந்தது. மாடியிலிருந்து கீழே இறங்கினான் நரேன்.

 

(தொடரும்)


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2022 06:51