Mathavaraj's Blog, page 6

December 29, 2024

அம்மா!


1995ம் வருடத்தில்ஒருநாள்.  

ஆறுமுகநேரியிலிருந்துஅம்மா ரெயிலில் திருநெல்வேலிக்கு வருவதாய்ச் சொல்லி இருந்தார்கள். திருநெல்வேலி ரெயில்வேஸ்டேஷனில் இருந்து அம்மாவை சாத்தூருக்கு அழைத்து வரச் சென்றிருந்தேன். அம்மாவுக்குஅப்போது அறுபது வயது போலிருக்கும்.  ரெயில்பெட்டிகளில் தேடி, அம்மாவைப் பார்த்து, அருகில் சென்று, இறங்க ஆதரவாக கையை நீட்டினேன்.இரண்டு பைகளை என் கையில் கொடுத்துவிட்டு அம்மா தானாகவே கம்பியைப் பிடித்துக்கொண்டுஇறங்கினார்கள். 

“கையப் பிடிச்சுத்தான்எறங்கினா என்ன?” என்றேன்.

“எனக்கு எறங்கமுடியுதுல்ல” என்றார்கள்.

சட்டென்று சிரிப்பும்,சந்தோஷமும் வந்தது. இதுதான் அம்மா.

ஊர், உறவினர்கள்நலம் விசாரித்துக்கொண்டே  கூடவே நடந்து வந்தேன்.

கடைசி பிளாட்பாரத்திலிருந்துவெளியே செல்வதற்கு படிகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. நான் முன் செல்ல, அம்மா பின்னால்வந்து கொண்டு இருந்தார்கள். எதோ யோசனையில் ஆழ்ந்து சில அடிகள் வைத்த என்னை, “மாதவா” என்னும் அம்மாவின் குரல் பரிதாபத்துடன் அழைத்தது. பதற்றத்துடன் திரும்பினேன்.

அம்மா படிகளில்கவிழ்ந்து விழுந்திருந்தார்கள்.  சட்டென்று  ஊன்றி எழும்ப முடியாமல், கைகள் இரண்டும்பரப்பிக் கிடந்தன. தலை  தூக்கி இருந்தது. கண்கள் மருண்டு என்னைப் பார்த்தன. அடிபட்டபறவை போலிருந்தார்கள். அந்தக் கணமும், காட்சியும் வாழ்வு முழுவதும் மறக்காது.

ஓடிச்சென்றுஅம்மாவைத் தூக்கினேன். உட்கார வைத்தேன். அம்மாவின் உதட்டிலிருந்து லேசாய் இரத்தம் வழிந்தது. கைக்குட்டையை எடுத்துத் துடைத்தேன். அம்மா எதுவும் பேசாமல் பெரிதாய் இழைத்துக்கொண்டுஎன்னைப் பார்த்தார்கள்.

“பாத்து வரக்கூடாது?”,  “அடி ஒண்ணும் பலமா இல்லய?”, “சார், நீங்க அவங்க பையனா? கையப் பிடிச்சுட்டுகூட்டி வரக்கூடாதா?” என சுற்றி கூடிய சிறுகூட்டம் பேச ஆரம்பித்தது. ஒருவர் அம்மாவுக்குத்தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

துயரமும், அவமானமும்அலைக்கழித்தன. அம்மாவைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டுமௌனமாக வந்தார்கள். மெல்ல அந்தக் கை என்னை இறுக்கமாகப் பற்றியதை உணர்ந்தேன். அம்மாவைப்பார்த்தேன். கன்னங்களில் நீர்க்கோடுகள் வழிந்தபடி இருந்தன.

எத்தனையோ வருடங்களுக்குமுன்பு, கடுமையான காய்ச்சலில் படுத்திருந்த என் நெஞ்சை அம்மாவின் கைகள் தடவிவிட்டுக்கொண்டுஇருந்தன. அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில் அப்போதும் பார்த்திருக்கிறேன். அம்மாவின்கன்னங்களில் இதுபோல நீர்க்கோடுகள்.

அம்மா! 

( இன்று அம்மாவின்17வது நினைவு நாள்! ) 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2024 06:50

December 27, 2024

கா...கா



“கா…கா..” 
இருள் முழுதும் விலகாத அதிகாலையில்
உயரத்திலிருந்து கேட்கும்முதல் ஒலியாகவும்
ஒரு பூவின் மலர்தலைஅறிவதாகவும்
அன்றைய நாளை துவக்கி வைப்பதாகவும்
உலகின் அழகைச் சொல்வதாகவும்
வீட்டு வாசலை திறப்பதாகவும்
மங்கிய சமையலறையின் பாத்திரச்சத்தங்களோடு
அம்மாவின் நினைவாகவும்
கேட்கிறது.

 

உச்சி வெயிலில்
நடந்து செல்லும் பாதையில்
பெருங் கூட்டத்தின் இடையிருந்து வரும்அழைப்பாகவும்
என்ன செய்யப் போகிறாய் எனகேட்பதாகவும்
தூரத்தைச் சொல்லும் அறிவிப்பாகவும்
சுடு நெருப்பின் துளியாகவும்
கரகரத்த ஆணின் இருமலாகவும்
கேட்கிறது.

 

வெளிச்சம் மங்கிய மாலையில்
சிதறிய வண்ணங்களின் கவிதையாகவும்
இலைகளின் அசைவாகவும்
வெறுமையடர்ந்தவெளியின் ராகமாகவும்
மனதுக்குப் பிடித்த பெண்ணின் பாடலாகவும்
துரத்தில் லயிக்கும் மனதின் குரலாகவும்
கேட்கிறது.

 

எல்லாம் அடங்கிய இரவில்
தனிமையின் பெரும் தவிப்பாகவும்
ஆண் பெண் ரகசியங்களாகவும்
ஆதி மனித வேட்கையின்குறியீடுகளாகவும்
நிழல்களின் வேதனையாகவும்
தாயைத் தேடும் குழந்தையின்அழுகையாகவும்
கனவின் மொழியாகவும்
கேட்கிறது.

 

பறவை தன் இருப்பை
ஒருபோதும் சொல்வதில்லை
காலத்தைச் சொல்கிறது
நிறம் மாறும்
நம்மை நமக்குச் சொல்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 23:14

December 25, 2024

ரைன் நதியாக பெருக்கெடுக்கும் காதல்


முப்பத்தெட்டுஆண்டுகளுக்கு முன்பு ’ஆஸ்யா’ பரவசத்தோடு தவிப்பையும், இழப்பின் வலியையும் சேர்த்தேதந்திருந்தது. இப்போது கதையை படித்து முடித்தபோது அந்த வலி இல்லை. மாறாக சுகமாக இருந்தது.ஒரு புன்னகையையும் கூட தருவித்தது. இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை தந்திருக்கும் அனுபவங்களும்,புரிதல்களும், வயதும் இந்த மாற்றங்களுக்கு காரணமாய் இருக்கலாம்.

இளம்வயதில் திரையில் பார்த்து பரவசமடைந்த காதலை அந்த சினிமாக்கள் பெரும்பாலும் இப்போது  திரும்பத்  தருவதில்லை. பல படங்கள் சிறுபிள்ளைத்தனமாகவும், அசட்டுத்தனமாகவும்கூட தோன்றியிருக்கின்றன. அச்சரியம் என்னவென்றால்’ஆஸ்யா’வில் அந்த பரவசம்  குறையவே இல்லை. சொல்லப்போனால் அதிகரித்துதான் இருந்தது. இத்தனைக்கும் கதையின் போக்கு இப்படித்தான் என அறிந்ததுதான்.ஆனாலும் காலத்தைக் கடந்த - அல்லது கடத்தும் - துர்கனேவின் எழுத்துக்கள் ‘ஆஸ்யா’வில்அந்த ரைன் நதியாக இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தனக்குதுரோகம் செய்த பேரழகியான இளம் விதவையின் நினவுகளால்  குதூகலமான இளைஞன் என்.என் அலைக்கழிக்கப்பட்டுக்கிடந்த தருணம் அது. அப்படியொரு நாளில் ரைன் ஆற்றைக் கடந்து சென்று கலந்து கொண்ட, கொண்டாட்டம்மிக்க நிகழ்ச்சியில் காகினிடமும், அவனது தங்கை ஆஸ்யாவிடமும் அறிமுகம் ஆகிறான்.

பின்னர்ஒவ்வொரு முறையும் ரைன் ஆற்றை படகில் கடந்துதான் ஆஸ்யா தங்கியிருக்கும் இடத்திற்கு என்.என்செல்கிறான். நாமும்தான்.  அப்படியேக் கடந்துதான்ஒவ்வொருமுறையும் அங்கிருந்து தனது தங்குமிடத்திற்கு அவன் திரும்பவும் செய்கிறான். நாமும்தான்.அவளைப் பற்றிய நினைவுகள் ரைன் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அவன் அதில் மிதக்கிறான்.

ஒருமுறைசந்தித்தது போல் ஆஸ்யா மறுமுறை அவனுக்குத் தோன்ற மாட்டேன்கிறாள். மகிழ்ச்சி, கொந்தளிப்பு,போலியான சிரிப்பு, வெறுமை, தனிமை, குதூகலம், அமைதி என மாறும் உணர்வுகளுக்குள் பிடிபடாதசித்திரமாக ஆஸ்யா அவனுக்கு போக்கு காட்டுகிறாள்.

அவனுடன்நட்புடன் பழகும் ஆஸ்யாவின் சகோதரன் காகின் ஓவியனாக விருப்பமுள்ளவன். காகின் வரையும்சித்திரங்கள் முழுமையாக இருக்கவில்லை.  ஆஸ்யாபற்றிய சித்திரத்தை கடந்த காலத்திருந்து எடுத்து வந்து என்.என்னுக்கு அவன்தான் காட்டுகிறான்.அவமானமும், துயரமும் நிறைந்த அவளது வாழ்வை அறிய முடிகிறது.  அன்று ஆஸ்யா தன்னோடு  நடனமாட என்.என்னை அழைக்கிறாள். அவர்களுக்கு இறக்கைகள்முளைக்கின்றன. நாள் முழுவதும் திளைக்கிறான். தன்னை ஏமாற்றிய இளம் விதவை அவன் நினைவில்வராமல் போன நாளாகவும் அமைகிறது. ரைன் நதியின் போக்கில் படகை விடும்படி பரிசல்காரனைக்கேட்கிறான். வானம், விண்மீன்கள் பார்த்து கிளர்ச்சியுறுகிறான். கண்களில் நீர்ப் பெருக்கெடுக்கிறது.  

அந்தஒருநாள்தான் அப்படி இருந்தது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் அவன் ரைன் ஆற்றைக் கடந்துசென்று அவளைப் பார்க்கும்போது ஆஸ்யா வேறு வேறாய் தென்படுகிறாள். காகின் அவனை சந்தித்து,ஆஸ்யா என்.என்னை காதலிப்பதாய்ச் சொல்கிறான். அதைச் சொன்னதோடு மட்டும் நிறுத்தவில்லைஅவன். தடுமாறுகிறான் ஆணாகிய என்.என்.  

தன்னைவந்து சந்திக்குமாறு ஆஸ்யா என்.என்னை அழைக்கிறாள். அவள் எதிர்பார்க்கும் ஒரே ஒரு வார்த்தைஅவனிடமிருந்து கிடைக்கவில்லை.  அந்த ஊரை விட்டு,நாட்டை விட்டு கண் காணாத இடத்திற்கு தனது அண்ணன் காகின்னோடு சென்று மறைந்து விடுகிறாள்ஆஸ்யா. பித்துப் பிடித்தவனாய் அலைந்து திரிகிறான் என்.என். தன்னையே திட்டித் தீர்க்கிறான்.ரைன் ஆற்றின் கரையிலிருந்து அவனும்  அவளைத்தேடி புறப்படுகிறான். பிறகு அவன் காலம் முழுவதுமே அவளை அவனால் பார்க்கவே முடியவில்லை.

முப்பத்தெட்டுஆண்டுகளுக்கு முன்னர் படித்தபோது ”ஆஸ்யா’வின் கதை இந்த  இடத்தோடு முடிந்து போயிருந்தது. இப்போது படிக்கும்போதோகதை முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ரைன் ஆற்றை விட்டு ஆஸ்யாவும் என்.என்னும் எங்கோபோய் விட்டாலும் ரைன் ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதைப் போல.

ஆஸ்யாவிரும்பிய அந்த ஒரு வார்த்தையை என்.என் சொல்லியிருந்தாலும், அவர்கள் இருவரும் அப்போதுஇணைந்திருந்தாலும் அந்த பிணைப்பு தொடர்ந்திருக்குமா என்ற சந்தேகம் என்.என்னுக்கு பிற்காலத்தில்வருகிறது. நமக்கும்தான். பிரிந்தது நல்லதெனவும் கூடத் தோன்றுகிறது அவனுக்கு. ஆனாலும்ஆஸ்யாவைப் பற்றிய நினைவுகள் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

என்.என்னின்நினைவுகள், உணர்வுகள், சிந்தனைகள் வழியாக ஆஸ்யாவின் கதை வாசகனுக்கு சொல்லப்படுகிறது.ஆஸ்யாவின் தரப்பிலிருந்து சொல்லப்படவில்லை. அறிய முடியாமல் போகும்போதுதான் மனித மனம்ஏங்கவும் தவிக்கவும் செய்கிறது.

ஆண்பெண் உறவுகளில் பொதிந்திருக்கும் ரகசியமான ஒன்றை – பிரிவிலிருந்து சுரக்கும் அழியாதசுகத்தை - மனித மனம் சுமப்பதில் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே காண்கிறது. அதில்பரவசம் அடைகிறது. அற்பப் புல்லின் மீது இருக்கும் பனித்துளியின் காலத்தை விட மனிதனுடையமகிழ்ச்சியின்,  துக்கத்தின் காலம் குறைவானதாய்இருந்தாலும் – மனிதன் தனக்குள் பத்திரப்படுத்திக் கொள்ள முடிவதாய் ‘காதலை’ காட்டுகிறார் துர்கனேவ். ரைன் நதியைப் போல ஜீவநதியாய்காதலைப் பெருக்கெடுக்க வைக்கிறார்.

*

1858ம் ஆண்டில் ருஷ்ய எழுத்தாளர் எழுதிய ‘;ஆஸ்யா நாவலைத் தமிழில் கொண்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அந்த நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2024 18:57

December 23, 2024

ஆனாலும் விடுதலை-2 முக்கியமான சினிமா!


திரைக்குவரும் ஒரு சினிமா இந்த சமூகத்தில் என்ன தாக்கங்களை, விளைவுகளை ஏற்படுத்தும் என கவனிப்பதும்,கவலைப்படுவதும் அல்லது உற்சாகம் கொள்வதுமே இப்போதெல்லாம் முக்கியமானதாய்ப் படுகிறது.

விடுதலை-2படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்பு ‘தினரத்ரங்கள்’ என்னும் மலையாளப் படத்தை நினைவுபடுத்திக்கொள்ளத் தோன்றுகிறது. 40 வருடங்களுக்கு முன் 1983ல் வந்த படம். மம்முட்டி, சுமலதா நடித்திருந்தார்கள்.ஜோஷி இயக்கியிருந்தார்.

ஒருபண்ணையாரை அவரது குடும்பத்தினர் கண்ணெதிரே தீவைத்து கொளுத்திக் கொன்று விடுவார் மம்முட்டி.செங்கொடி ( அரிவாள் சுத்தியல் சின்னத்தோடு காட்டப்படும் ) இயக்கத்தைச் சேர்ந்த அவரைத்தேடி சுட்டுப் பிடிப்பார்கள் போலீஸார். கொல்லப்பட்ட பண்ணையாரின் மகளான சுமலதாவே மம்முட்டிக்குஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டராய் இருப்பார். கோபத்திலும், வெறுப்பிலும் அவர் மறுப்பார்.‘இப்போது அவர் உனக்கு நோயாளி’ மட்டும்தான் என உயரதிகாரிகள் போதித்து, ஆபரேஷன் செய்யவைப்பார்கள். குணமடைந்த பிறகு மம்முட்டியை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது அரசு மற்றும் அதிகாரி வர்க்கத்தின் நோக்கமாய் இருக்கும். ஆஸ்பத்திரிக்குவெளியே திரண்டிருக்கும் மக்கள், மம்முட்டியைக் காண வரும் அவரது தாய் மற்றும் உறவினர்கள்,ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்ஸ் ஆகியோர் மூலம் சுமலதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மம்முட்டியைப்புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். உண்மைகள் தெரிய வரும். கூலி விவசாயிகளுக்கு தனது தந்தைஇழைத்த கொடுமைகள் எல்லாம் அவருக்கு அநியாயமாகத் தோன்றும்.  மம்முட்டி அதைப் பற்றியெல்லாம் எங்கும் பேசியிருக்கமாட்டார். உடல்நலம் பெற்றதும் எங்காவது தப்பிச் சென்று விடட்டும் என மம்முட்டியைக்காப்பாற்ற முயற்சிப்பார் சுமலதா. இதுதான் படம்.

சபையர்தியேட்டரில் ’நைட் ஷோ’ பார்த்துவிட்டு நானும் பாரதி கிருஷ்ணகுமாரும் மவுண்ட் ரோட்டில்எதுவும் பேசத் தோன்றாமல் பித்து பிடித்த மாதிரி நடந்து கொண்டிருந்தோம். தொண்டை அடைத்துகண்கள் பொங்கியபடி இருந்தன. காட்சிகளும், கதை சொன்ன விதமும் அதிலிருந்த தெளிவும் படத்தோடுஅப்படியே நம்மை இணைத்துக் கொள்ள முடிந்தது. மொழி ஒரு தடையாய் இருக்கவே இல்லை. அந்தஇளம் வயதில் இடதுசாரி இயக்கத்தின் மீது பிடிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்திய படம்அது.

இனிவிடுதலை-2க்கு வருவோம்.

விடுதலை-2படத்தை எனது மகனோடு பார்த்தேன். விடுதலை-1ஐயும் அவனோடுதான் பார்த்திருந்தேன். நாற்பதுவருடங்களுக்கு முன் ‘தினரத்ரங்கள்’ படம் பார்க்கும் போது நான் அவன் வயதுடையவனாய் இருந்தேன்.

விடுதலை-1ல்’வாத்தியார்’ என்று அழைக்கப்பட்ட பெருமாள், விடுதலை-2 முழுக்க ‘தோழர்’ என அழைக்கப்படுகிறார்.விடுதலை-1ல் போட்டோவில் கூட பிடிக்க முடியாதவராய் சொல்லப்படும் பெருமாள் விடுதலை-2ல்பிடிபட்டவராய் படம் முழுக்க வருகிறார்.

அறிந்துகொள்ள முடியாத வரைக்கும் புனைவாகவும் புதிராகவும், உயரத்திலும் இருப்பது, அறிந்து கொள்ளும்போதுஉண்மையாகி தரையிறங்கி நெருக்கம் கொண்டு இயல்பானதாகி விடும். பார்வையாளர்களுக்கு அதுநடந்ததா இல்லையா என்பதில் விடுதலை-2 படத்தின்  அர்த்தம் இருக்கிறது.

உண்மையைத்திறந்து காட்டும்போது, அது ஏற்கனவே அறிந்த உண்மைகளோடு பொருந்திப் போக வேண்டும். அறியாதஉண்மைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கதையோடு தங்களைபார்வையாளர்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

படம்முடிந்த பிறகும் அறிந்தும் அறியாமலும் இருப்பதுதான் விடுதலை-2ன் பிரச்சினை எனத் தோன்றுகிறது.பிடிபட்ட பெருமாளின் கதையை யார் சொல்வது, எப்படிச் சொல்வது என்பதிலிருந்து அந்தப் பிரச்சினைஆரம்பிக்கிறது.

இரவில்காட்டுக்குள் பெருமாளை சில போலீஸார் அழைத்துச் செல்வதாகவும் வழி தெரியாமல் திணறும்போலீஸாருக்கு பேச்சுத்துணையாய் பெருமாள் நடந்த கதையைச் சொல்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.தன் கதையைத் தானேச் சொல்ல நேர்வது ஒரு அவலம்தான். அப்படிச் சொல்லப்படுவது உண்மையாவதில்சிக்கல் உண்டாகும். அதன்  மேல் பார்வையாளர்கள்நம்பிக்கை பிறக்காமல் தயக்கம் கொள்வார்கள்.

அடுத்தது,கதை சொல்லும் மொழி. வாத்தியார் பெருமாள் எப்படி தோழர் பெருமாள் ஆனார், தோழர் பெருமாள்எப்படி அழித்தொழிப்பு பெருமாளானார்,  அழித்தொழிப்புபெருமாள் எப்படி மீண்டும் தோழர் பெருமாள் ஆகிறார் என்பதெல்லாம் ஒருவித நாடகத்தன்மையோடுஇருக்கிறது. குறிப்பாக செங்கொடி இயக்கம் குறித்த சொல்லாடல்கள் மக்களின் பேச்சு மொழியில்இல்லை. பல காட்சிகளோடு ஒட்ட முடியவில்லை. இளையராஜாவின் இசைதான் பெரும்பாலான காட்சிகளில்அந்த இடைவெளியை குறைக்கிறது. குறைக்க முயற்சிக்கிறது.

அதிகாரவர்க்கத்தின் மொழியும், அரச பயங்கரவாதத்தின் மொழியும் காட்சிகள் மூலம் எளிதாக கடத்தப்படுகின்றன.பார்வையாளர்கள் அதனோடு எளிதாக இணைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது.  மக்களின் எதிரிகள் வெல்லப்பட முடியாதவர்களாய் ஒருசித்திரம் அரூபமாய் பார்வையாளர்களைக் கவ்வும் ஆபத்து அதில் இருக்கிறது.

தர்க்கங்களும் பல இடங்களில் இடறுகின்றன. “நீங்கள் காரை ஒட்டிக்கொண்டுபோகிறீர்கள். பிரேக் இல்லாமல் போகிறது. எதிரே ஐந்து பேர் வருகிறார்கள். அவர்களை இடித்துவிடக் கூடாது என்று இடது பக்கம் திருப்புகிறீர்கள். அங்கும் ஒருவர் எதிரே இருக்கிறார்.நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று போலீஸாரிடம் கேட்க ஆரம்பித்து ஒவ்வொன்றாக பேசி கடைசியில்”ஒரு இடத்தில் இருந்து ஒருவனை வெளியேற்ற வேண்டுமென்றால் உங்கள் உத்தரவு முக்கியமானதுஇல்லை. வெளியேறுகிறவரின் சம்மதம் முக்கியம் ” என முடிக்கிறார். இப்படி சரியான செய்திகளும் அங்கங்கு குழப்பமாகவேச் சொல்லப்படுகின்றன.பாலத்தில் குண்டு வைப்பது குறித்த பெருமாளின் விளக்கமெல்லாம் பெரும் அபத்தம்.

இவையெல்லாவற்றையும்தாண்டி விடுதலை-2 முக்கியமானப் படமாகவே இருக்கிறது.

படத்தில்வரும் பெருமாளை விடவும் சித்தாந்தத் தெளிவும், தீர்க்கமும், உறுதியும், போர்க்குணமும்நிறைந்த பல தோழர்களை அறிய முடிந்திருக்கிறது. செங்கொடி இயக்கத்தின் தியாக வரலாறு அத்தகையது.தூக்கு மேடையிலும் ‘கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க’ என ஆர்ப்பரித்த தோழர் பாலு, சின்னியம்பாளையம்தியாகிகள், ’காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போன்று ஜொலித்து நின்ற’ மணவாளன்,பாரியிலிருந்து எத்தனை எத்தனையோ தோழர்கள் நிறைந்த பெருங்கதை அது. அவர்களைப் பற்றியசினிமாக்கள் வரவில்லை என்றாலும், அவர்களைப் போன்ற ஒருவரை சினிமாவில் காட்டி இருக்கிறார்கள்என்ற உத்வேகத்தை இந்த படம் தருகிறது.

ஈவிரக்கமற்றஅதிகார பீடங்களையும், அரச பயங்கரவாதத்தின் கற்பனைக்கும் எட்டாத குரூரத்தையும் நம் ரத்தம்துடிக்க உணர்த்துகிறது. ஏற்றத்தாழ்வுகளை, ஜாதீய அடக்குமுறையை பேசுகிறது.  வர்க்க அரசியலை முன்வைக்கிறது. மக்களைத் திரட்டிபோராடுவதுதான் வழி என்று முடிகிறது.

போராடும்மக்களை பயங்கரவாதிகளாகவும் அரசின் ஏவலர்களான இராணுவ வீரர்களை புனிதர்களாகவும் உயர்த்திப்பிடிக்கும் அமரனும், ஜாதீயக் கட்டமைப்பை அழகான உறவுகளாகச் சித்தரிக்கும் ‘மெய்யழகனும்’,அறத்திலிருந்து வழுவி மனிதர்களை பலவீனர்களாக்கும் ‘லக்கி பாஸ்கரும்’ வந்து கொண்டிருக்கும்காலக் கட்டத்தில் விடுதலை-2 நிச்சயம் முக்கியமான படம்தான்.

நினைவைவிட்டு அகலாத காட்சிகளையும், தருணங்களையும் அங்கங்கு கொண்டிருக்கிறது படம். இரவின்காட்டை அடர்த்தியாக்குகிறது  ஒளிப்பதிவு. விஜய்சேதுபதி சில இடங்களில் தடுமாறினாலும், பல இடங்களில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

இந்தபடத்தின் உச்சம், துடிப்பு, ஆன்மா எல்லாம் இளையராஜாதான் என்று சொல்ல வேண்டும். அவரின்றிகாட்சிகள் உயிர் பெற்றிருக்காது. அப்படியொரு அனுபவத்தை பெற முடியும். கண்ட மேனிக்குஇசைக்கருவிகளை முழக்கி இரைச்சலாக பிண்ணனி இசை என்று அலப்பறை செய்பவர்கள் கொஞ்சம் இளையராஜாவின்இசையைக் கவனிக்க வேண்டும்.

அவரதுமுந்தையப் படங்களில் இருந்த செய் நேர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்றாலும் வெற்றிமாறன்தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

படம்முடிந்து வெளியே வந்த பிறகு மௌனம் அடர்ந்திருந்தது. “விஜய்சேதுபதியின் உடலை அந்தஜீப்பில் போட்டிருக்கும் காட்சி தாங்க முடியலப்பா...” என்ற மகன் ”அந்த முகம் கஷ்டப்படுத்துது”என்று முனகினான்.

நான்அவனிடம், ”இந்தப் படத்தில் கே.கே தோழர்னு ஒருத்தர் வர்றார்ல… உண்மையிலேயே அப்படி ஒருத்தர்இருந்தார். அவர் பேர் சீனிவாசராவ். அவர்தான் அந்த விவசாயிகளிடம் உங்கள அடிச்சா நீங்களும்திருப்பி அடிங்கன்னார்” என்றேன்.

கண்கள்விரிய ‘அப்படியாப்பா” என்றான். அவனிடம் மேலும் பேச வேண்டும்.

நாம்என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார் இயக்குனர் வெற்றி மாறன். இதுதான் இந்தப்படத்தின் மூலம் அவர் செய்திருப்பது. 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2024 23:51

October 24, 2023

க்ளிக் நாவலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது!



2022ம் ஆண்டின் சிறந்த நாவலாக ‘க்ளிக்’ நாவலை தேர்ந்தெடுத்து 28.9.2023 அன்று விருது வழங்கியது திருப்பூர் தமிழ் சங்கம்.
நாவல், கட்டுரை, சிறுகதை, கவிதை தொகுப்புகளில் தமிழ் சங்கம் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்:
நாவல்:---------க்ளிக் – மாதவராஜ் இராஜ ராஜ சோழனின் சபதம் – முகிலன்
கட்டுரை: -----------நீர் – ப.திருமலையானைகளின் வருகை – கா.சு.வேலாயுதன்
சிறுகதை: -------------அரண்மனை வனம் – இந்திரநீலன் சுரேஷ் ஊடு இழை – பல்லவி குமார் கவிதை: ----------கடவுளின் மரபணு கூடம் – சின்மய சுந்தரன் கவிப் பூங்காடு – கொ.மா.கோதண்டம்
படைப்பாளிகளுக்கு இது போன்ற அங்கீகாரமும் வெளிச்சமும் மிக முக்கியம். உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும் காரியம்.
படைப்புகளை தேர்ந்தெடுத்த நடுவர்களுடனான உரையாடல் சுவராசியமாக இருந்தது. மேலோட்டமாக இல்லாமல் உள்ளார்ந்த, ஈடுபாட்டுடனான நடுவர்களின் சிரத்தையை அறிந்த போது, தம் படைப்புகளின் மீது படைப்பாளிகளுக்கே நம்பிக்கை கூடியிருக்கும்.
மக்களைத் திரட்டி அவர்களின் முன்பு பெரிய ஏற்பாடுகளோடு விருது அளிக்கும் விழாவை நடத்துவது சாதாரணமானது அல்ல. 31 வருடங்களாக இந்த காரியத்தை தொடர்ந்து செய்து வரும் திருப்பூர் தமிழ் சங்கத்துக்கு பாராட்டுகளும், நன்றியும். விருது வழங்கிய நீதியரசர் மகாதேவன் அவர்களிடம் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இருந்த பிடிப்பு விருதுக்கு அர்த்தமளிப்பதாய் இருந்தது.
தமிழ்நாட்டின் முக்கிய இலக்கிய ஆளுமைகள் பலரும் திருப்பூர் தமிழ் சங்கத்தின் விருதைப் பெற்றவர்கள் என அறியும்போது, அந்த வரிசையில் ஒருவனாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
விருது குறித்த பத்திரிகை செய்தி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2023 07:36

March 12, 2023

அயோத்தி திரைப்படம் : மாதவராஜ் எழுத்துக்களை திருடிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

அயோத்தி படத்திற்காக அதன் இயக்குனர் மந்திரமூர்த்தியிடம்  2018ல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த  கதையை, - அந்தப் படத்திற்கு முதலில் திரைக்கதை எழுதிய சங்கரதாஸ் அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.  

அந்தக் கதைக்கு ஆதாரமான உண்மைச் சம்பவத்தை 2011ம் ஆண்டு நான்  (மாதவராஜ் ) தீராத பக்கங்களில் எழுதி இருந்தேன்.  

இரண்டின் நகல்களும் இங்கே தரப்பட்டு இருக்கின்றன. படித்து அறிந்து கொள்ளலாம்.  

உண்மைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

2011ல் மாதவராஜ் எழுதிய பதிவு : 

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். 

 

அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு  கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.

 

தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது.  இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும்,  மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல்.  ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்.

 

30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.

 

பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று,  “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா.  கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார்.  அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம்.  மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.  சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும். 

 

தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார்.

 

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர்.  “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.  “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட்.  பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

 

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். 

 

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.

 

சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு,  ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க,  எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.

 

வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும்,  அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.

 

இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

 

இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், 

 

மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார்.  வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?  நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு,  திருச்சியில்  இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.

 

 

2018ல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘திருநாள்’ என அயோத்தி படத்திற்கு கொடுத்த கதை இது: -

 

தீபாவளி அன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் அதிகாலை 4மணிக்கு கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் வந்து நிற்கிறது.அதிலிருந்து பாட்னாவை சேர்ந்த ஷியாம் பிரசாத் அவரது மனைவி பிரதிபா மகள் பாலிகா.வயது 16.மகன் ஆதவ் வயது 9 ஆகியோர் இறங்குகிறார்கள்.வாசல் வந்தவர்கள் ஒரு கார் புக் செய்கிறார்கள்.அப்பொழுது பாலிகா  பாத்ரூம் போக வேண்டும் என்று கேட்கிறாள்..சூரிய உதயத்தை காண விரைந்து செல்ல வேண்டுமென்று பிரசாத் அதை மறுக்கிறார். மனைவி பிரசாத்தை திட்டுகிறாள் எதையும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறுகிறார்.தீபாவளி என்பதால் அதிகாலையிலேயே மக்கள் இயக்கம் துவங்கியிருக்கிறது. கார் மதுரையை விட்டு கிளம்பி ராமநாதபுரம் சாலையில் செல்ல துவங்குகிறது.

நீண்ட காலமாக ராமேஸ்வரம் போக வேண்டும் என்ற ஆசையில் பிரதீபா தான் சேர்த்து வைத்த பணம் உள்ள உண்டியல் பெட்டியை மடியில் வைத்தபடியே உட்கார்ந்திருக்கிறாள்.சாலையோரம் ஒரு சிறுவன் வெடி போடுவதை பாலிகா பார்த்தபடியே வருகிறாள்.பிரசாத் காரை வேகமாக ஓட்ட சொல்லி  டிரைவரை திட்டுகிறார்.கார் வேகமாக செல்கிறது.

கார் எதிர்பாராத விதமாக பால் வேன் ஒன்றின் மீது  மோதி  விபத்துக்குள்ளாகிறது. கார் சாலையை விட்டு சரிந்து கீழே உருண்டு விழுகிறது. பிரதீபாவுக்கு  தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.பிள்ளைகள் காயத்துடன் தப்பியிருக்கிறார்கள்.ஷியாம் கையில் அடிபட்டு ரத்தம் வழிகிறது.சாலையில் நின்று உதவி கேட்கிறார் யாரும் உதவி செய்யவில்லை.அம்மாவை பார்த்து குழந்தைகள் அழுகிறார்கள்.குடும்பமே சாலை நடுவில் நின்று உதவி கேட்கிறது.

காலை 6 மணி.கதிர் வீட்டில் அரை தூக்கத்தில் படுத்துகிடக்கிறான்.பலகாரம் சுட்டபடியே அம்மா அவனை எழுந்திருக்க சொல்லி  சத்தம் போடுகிறாள்.அப்பொழுது கதிருக்கு சுஜாவிடமிருந்து போன் வருகிறது.அவள் புத்தாடை அணிந்துவிட்டதாகவும் அவனிடம்தான் முதலில் காண்பிக்கவேண்டுமென்றும் உடனே தன்னை பார்க்க வரும்படி  அழைக்கிறாள்.கதிர் பரபரப்பாக எழுந்து  குளிக்க செல்கிறான்.அம்மா ஆச்சர்யமாக பார்க்கிறாள்.

காட்டுராஜா தனது வீட்டில் தீபாவளி பலகாரங்களை உண்டபடி பேப்பரை புரட்டுகிறார்.நாளிதழில் அவரது ராசி பலனில் வீண் அலைச்சல் என்று எழுதியிருப்பதை பார்க்கிறார்.அவரது மனைவி கூடையை அவரிடம் நீட்டி இறைச்சி வாங்கி வரும்படி கூறுகிறாள்.அதான பார்த்தேன்  பேப்பர்ல வீண் அலைச்சல்னு போட்டருந்தான்  இந்தா வேலை சொல்ல வந்துட்டியா என்று அலுத்துக்கொண்டு அவளிடம் கூடையை வாங்கியபடி  வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.

கதிர் சுஜா வீட்டின் எதிரே போனில் பேசியபடி நிற்கிறான்.சுஜா மாடியில் நின்றபடி  கதிரிடம் பேசுகிறாள்.அவளது அப்பா வாசலில் பட்டாசு வெடிக்கிறார்..தீபாவளி மகிழ்ச்சி தெருவெங்கும் தெரிகிறது.அடுத்த தீபாவளி நமக்கு  தலை தீபாவளி என்கிறான்.அவள் சிரிக்கிறாள்.அப்பொழுது கதிருக்கு மாமா காட்டுராஜாவிடமிருந்து போன் வருகிறது. நமது வண்டி விபத்துக்குள்ளாயிருப்பதாகவும் நமக்கு தீபாவளி கொண்டாட்டம்தான் முக்கியம்.இப்போதைக்கு வாகனத்தை மட்டும்  பாதுகாப்பாக விட்டுவிட்டு நாளை பார்த்துக்கொள்ளலாம். என்று கூறுகிறார்.கதிர் மாமாவை தேடி கறி கடைக்கு செல்கிறான்.இருவரும் விபத்து நடந்த இடத்தை நோக்கி போகிறார்கள்.  

காட்டுராஜா கதிர் இருவரும் விபத்து நடந்த பகுதிக்கு வருகிறார்கள். அங்கே பிரதீபா பலத்த காயங்களுடன்  இறந்தநிலையில் கிடக்கிறாள்.அவளின் உடலை சுற்றி கணவன் மற்றும் குழந்தைகள் செய்வதறியாது கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.கதிர் காட்டுராஜா இருவரும் அவர்களது நிலையை எண்ணி வருந்துகிறார்கள்.பிரதீபாவின் கணவர்  இறந்த உடலை லக்னோ எடுத்து செல்ல உதவி செய்ய வேண்டுமென்று அழுதபடியே கேட்டுகொள்ளவே. கதிர் காட்டுராஜா இருவரும் உதவ முடிவு செய்கிறார்கள்.வேன் ஒன்றை ஏற்பாடு செய்து இறந்த உடலை பிரேத பரிசோதனை செய்ய ராமநாதபுரம் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புகிறார்கள்.காட்டுராஜா கதிரிடம் சில மணி நேரங்களில் வேலை முடிந்துவிடும் பின் தீபாவளியை கொண்டாடலாம் என்று கூறி வண்டியை பின் தொடர்கிறார்.

வேன் அரசு மருத்துவமனைக்குள் நுழைகிறது.தீபாவளி விடுப்பில் டாக்டர்கள் யாருமின்றி மருத்துவமனை காலியாக இருக்கிறது.அங்குள்ள கம்பவுண்டரிடம் தன் நிலையை கூறி ஷியாம் அழுகிறார்..கம்பவுண்டர் விடுமுறை தினம் முடிந்து டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை செய்ய இரண்டு தினங்கள் ஆகுமென்றும் அதுமட்டுமில்லாமல் .இறந்த உடலை வெட்டி சிதைக்காமல் கொண்டு சென்று நல்லடக்கம் செய்யுமாறு தனது யோசனையை  கூறுகிறான்.ஷியாம்  அழுகிறார்.அப்பொழுது அங்கு வந்த மருத்துவமனை யில் வேலை செய்யும் பெண்மணி பிரதீபாவின் இறந்த உடலை பார்த்து இப்படியா ரத்த கறையோடு வைத்திருப்பீர்கள். என்று கடிந்து  எந்த பிரதிபலனும் பாராமல் சுத்தம் செய்து தீபாவளி அன்று அவள் உடுத்த வைத்திருந்த  புதிய சேலையை கட்டிவிட்டு இப்பொழுது எடுத்து செல்லுங்கள் என்கிறார்கள்.ஷியாம் அவளை நெகிழ்ந்து  போய் பார்க்கிறார்.லக்னோ செல்ல முடிவெடுத்து இறந்த உடலை எடுத்துக்கொண்டு  மதுரை விமானநிலையம் செல்கிறார்கள்.

இதற்கிடையில்  காட்டுராஜாவிற்கு அவன் வீட்டில் இருந்து கறி வாங்கி வந்துவிட்டானா என்று போன் வந்தபடியே இருக்கிறது.அவன் கறி இன்னமும் கிடைக்கவில்லை என்று பொய் சொல்கிறான்.

.காட்டுராஜா  இறந்த உடலோடு அழுதபடியே வரும் பிள்ளைகளை ஆறுதல் படுத்துகிறான் .அம்மாவோடு வந்த நினைவுகள் பிள்ளைகளுக்கு பீறிடுகின்றன.பாலிகா அழுதபடியே வண்டியை வேகமாக போகச் சொல்லி விபத்தை உண்டாக்கி அம்மாவை  கொன்றுவிட்டதாக அப்பாவை கோபமுடன் திட்டிகொண்டே இருக்கிறாள். 

விமானநிலையம் நோக்கி வேன் கிளம்பி போகிறது.கதிர் பைக்கில் பின் தொடர்கிறான்  வெடி சப்தம்  புத்தாடை சந்தோஷம் என்று ஊரே தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஷியாமிற்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருக்கிறது.அவரது மகளும் மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலை குத்திப்போய்  இருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப்பொட்டில் காயம் மகளுக்கு தலையில் காயம் அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.

விமானநிலையம் முன்பாக வேன் போய் நிற்கிறது. லக்னோவிற்கு விமான ம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பொராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும்  இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ்    விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர்.

டெல்லி விமானம் ஒன்று மதியம் போகிறது. அங்கிருந்து பாட்னா பக்கம் என்றுசொல்கிறார்கள்.அந்த விமானத்தில்.இறந்த உடலை ஏற்றி போக முடியாது என்று மறுக்கிறார்கள்.

கெஞ்சி கூத்தாடி அவர்கள் விமானத்தில் எற்ற அனுமதி வாங்குகிறான்.ஆனால் இறந்த உடலோடு ஒருவர் போவதற்கு மட்டும் டிக்கெட் இருப்பதாக சொல்கிறார்கள்.யார் இறந்த உடலோடு போவது என்று பிரச்சனை வருகிறது.

பாலிகாவை போகச் சொன்னால் அவள் மறுக்கிறான்.அப்பா கிளம்பி போய்விட்டால் பிள்ளைகள் தனியே போக முடியாது என்று அவர் சொல்கிறார்.வேறுவழியில்லாமல் பாலிகாவை  இறந்த உடலோடு அனுப்பிவிட  அப்பா முடிவு செய்கிறார்..   

காயம்பட்ட  அவர்கள் அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்..”மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது“என்று சொல்லி  மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள்  என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது..

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று  கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர்  தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான்.

 தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த  சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது.

தேவையான பரிசோதனைகள் செய்து  ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்கு திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிடுகிறது.டிக்கெட் புக் செய்ய முடியாது என்கிறார்கள்.தெரிந்த ஆளிடம் சொல்லி டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்வதாக உள்ளுர் கட்சிக்காரர் ஒருவரை தேடி அவர் வீட்டிற்கு போகிறான்.

ராமசாமி பாண்டியன் என்ற அந்த அரசியல் பிரமுகரை பார்த்து பேசி அவர் சொன்னபடியே  ஏஜென்டை  பிடித்து முடிவாக டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்கிறான் கதிர். 

விமான நிலையத்தில் சர்டிபிகேட்களை சரி பார்த்த பிறகு ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது.சென்னைக்கு செல்ல மட்டுமே  எறத்தாழ ரூபாய்6500. தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய்11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார்

இருக்கும் உண்டியலை உடைத்து பணம் எடுத்துவிடலாம் என்று காட்டுராஜா  முயற்சிக்க அதை மறுக்கிறார்  ஷியாம். ஆத்திரமான காட்டுராஜா மனுசன் உசிரே போயிருச்சி. சாமி காசு இதுக்கு உதவாம எதுக்கு என்று உடைத்து பணத்தை திரட்டுகிறான்.மொத்தம் நாற்பத்தைந்தாயிரம். தேவைப்படுகிறது.

அவ்வளவு  பணமில்லை  அந்த பெண் கழுத்தில் உள்ள நகையை கழட்டி அடமானம் வைக்க போகிறான் கதிர் .காட்டுராஜா தெரிந்தவர்களிடம் கேட்டு பணம் வசூல் செய்கிறான்.ஒரு வழியாக பணம் கிடைக்கிறது.

பணம் கொண்டுவருவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று விமான டிக்கெட்டை தர மறுக்கிறார்கள். குழந்தைகள் கதறி அழுகிறார்கள்.கதிர் கோவப்பட்டு சண்டை போடுகிறான்.

விமானநிலையம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க போவதாக  மிரட்டுகிறான் காட்டுராஜா. வேறு வழியில்லாமல் டிக்கெட் கிடைக்கிறது.ஆனால் அவர்கள் .இறந்த உடலை கொண்டு போக பெட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள்..இதற்காக  ஒரு பெட்டி வாங்க அலைகிறான் அழகர். பெட்டி கிடைக்கிறது.அது சரியான அளவு இல்லை.வேறு ஒரு பெட்டி கொண்டு வாருங்கள் என்று அலைக்கழிக்கிறது விமானநிலையம்.

மாற்றுப் பெட்டி தேடி கொண்டுவருகிறார்கள்  .விமானத்தில் இறந்த உடல் கொண்ட பெட்டியை ஏற்ற கடுமையான வாக்குவாதம் செய்கிறான் கதிர்.கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதற்குள் ஷியாமின் இரண்டாவது மகள் மயங்கி விழுகிறாள்.மகளை தூக்கி கொண்டு ஓடுகிறான் காட்டுராஜா.டிரிப்ஸ் ஏற்றும் மருத்தவர்கள் சாப்பிட ஏதாவது வாங்கி தரும்படியாக சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் டீக்களும் வடைகளும் கொண்டு வந்து முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்கிறான் காட்டுராஜா. அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை.தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.தாடை கட்டிக் கொள்கிறது.அப்பா அதைக் கண்டு அழுகிறார்.சிறுவன் பசியில் வேகவேகமாக சாப்பிடுவதை கண்டு அப்பா கதறி அழுகிறார்.

தாங்கள் ஊரில் இருந்து எப்படி வேண்டுதலுக்காக கிளம்பி வந்தோம் என்ற கதையை சொல்கிறார் ஷியாம்.ரயிலில் மற்றவர்களோடு பழக மறுப்பது.மனைவி நட்பாக பழகுவது. பிள்ளைகளின் கனவு அவர்களின் பயணம் பாடல் என்று அவர்களது கடந்த காலம் விவரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அழகருக்கும் காட்டுராஜாவிற்கும் போன் வந்தபடியே இருக்கிறது.அவர்கள் பொய்யாக சமாதானம் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு வழியாக விமாநிலையத்தில் மகளையும் இறந்த மனைவியின் உடலையும் ஏற்றிவிடுகிறார்கள்.மகள் அம்மாவின் இறந்த உடலுடன் செக்கிங் நோக்கி நடக்கிறாள்.விமானநிலையத்தினுள் சென்றவள் ஓடிவந்து கதிரின் கால்களில் விழுந்து அண்ணாவென்று வெடித்து அழுகிறாள்.கதிர் சமாதானபடுத்துகிறான்.நீங்கதான் என் அண்ணா .மொதல்ல ஒரு பையன் பொறந்திருந்தா உங்க அப்பாவ திட்டி திருத்திருப்பானு அம்மா எப்பவுமே சொல்லும்ணா.அவுங்க ஆத்மாதாண்ணா உங்கள கூப்பிட்ட்டு வந்திருக்கு என்று தேம்பி அழுகிறாள்..   அந்த துக்கத்தை தாங்கமுடியாமல்  ஷியாம் அழுகிறார்.கதிரின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிகிறது. விமானத்தில் உடல் எற்றப்பட்ட விபரத்தை சின்ஹாவிற்கு போன்செய்து சொல்கிறான் கதிர். ஷியாம் ஹார்ட்  பேஷண்ட் அவர் நலமடைவதற்காகவே இந்த பிரார்த்தனை செய்வதற்காக வந்தாகள்.அவரை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் சின்ஹா.

ஷியாம் பிள்ளைகளின் கையை பற்றிக் கொண்டு குழந்தை போல் உட்கார்ந்திருக்கிறார்.அவரது சட்டையில் ரத்தக்கறையாக உள்ளது  என்று மாற்று சட்டை ஒன்றினை வாங்கி வருவதாக போகிறான் அழகர்.இவன் வாங்கி வந்த சட்டையை  போட்டுக்கொள்ள மறுக்கிறார்.இப்படியே போனால் எப்படி என்று சமாதானபடுத்த பொண்டாட்டியே போய்விட்டால் இனி எப்படி இருந்தால் என்ன என்று அதை வாங்கி ஓரமாக போடுகிறார்.

ராமேஸ்வரத்துக்கு வர வேண்டும் என்ற மனைவியின் ஆசை நிறைவேறவேயில்லை என்று புலம்புகிறார் ஷியாம்.இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு போலீஸ் வந்து அவர்களை விசாரனை செய்கிறது. போலீஸாருக்கு விவரங்களை சொல்கிறார்கள்.விபத்து பற்றி செய்தி ஒளிபரப்பாகிறது. அதில் மோதிகிடந்த டாக்ஸி காட்டப்படுகிறது.விசாரணை முடியாமல் அவர்களை விமானத்தில் அனுப்ப முடியாது  என்று பிடிவாதம் செய்கிறான் இன்ஸ்பெக்டர்.அவனை காட்டுராஜா கோவப்பட்டு திட்டிவிடுகிறான்.முடிவில் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான். 

இரவு ஏழுமணிக்கு ஒரு விமானம் டெல்லி போகிறது.அங்கிருந்து மாறி போய்கொள்வது என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

டாக்சிக்காரனை அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து காசு கொடுக்கும் போது அவன் தனக்கு காசு வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு அவர்களை விமானத்தில் எற்றிவிட்டு தான் கிளம்புவதாக சொல்கிறான்.

ஷியாம் அவரது பிள்ளைகளுடன் விமானநிலைய செக்கிங் நோக்கி நடக்கிறார்.கதிரும் காட்டுராஜாவும் அவர்களை விடை கொடுத்து  அனுப்பி வைக்கிறார்கள்..ஷியாம் கதிரை கட்டிக்கொண்டு நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார்.எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும்.நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார் என்று கதறி அழுகிறார்.

ஏர்போர்ரடில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியை  பார்த்து உறைந்து போகிறார்கள்.

கதிர் இதுல என்ன இருக்கு சார் எங்களால் இதுதான் முடியும் உங்க துயரம் அவ்வளவு  பெரியது நாம எல்லாம் மனுஷங்கதானே  ஒரே ரத்தம தானே ஓடுது. என்று சொல்கிறான்.

விமானம் கிளம்புகிறது.வெளியே வெடி சப்தம் கேட்கிறது. வெளியே வந்த கதிரும் காட்டுராஜாவும் வண்டியில் செல்கிறார்கள் காட்டுராஜா காலைல பேப்பர் பாத்தேன் மாப்ள வீண் அலைச்சல்னு போட்டிருந்தது . ஆனா நாம வீணாவா அலைஞ்சோம் உருப்பிடியாதான அலைஞ்சோம். என்கிறார்..வண்டி ஊரை நோக்கி செல்கிறது.அவர்களின் தலைக்கு மேலே ஆகாயத்தில் ஒருவிமானம் பறந்து கொண்டிருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே காப்பி அடித்திருக்கும்  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:-

திரைப்படம் ஆக்குவதற்காக அங்கங்கு கதையை சேர்த்து வளர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையிலும் அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதும் என்றுதான் இருக்கிறது. கணவன், மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்றுதான் அந்தக் குடும்பத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதுபோல பல பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் பல இடங்கள் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவைகள் கீழே கொடுக்கப்படு இருக்கின்றன.

*****

லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பொராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர். (எஸ்.ரா எழுதியது)

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். (மாதவராஜ் எழுதியது)

*****

அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்..”மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது “என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (எஸ்.ரா எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (மாதவராஜ் எழுதியது )

*****

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான். (எஸ்.ரா எழுதியது )

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

*****

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா எழுதியது )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2023 07:34

February 14, 2023

திரைப்படத்தை விஞ்சும் காட்சிகளோடு நாவல்...


சமீபத்தில் தோழர் மாதவராஜ் அவர்களின் க்ளிக் நாவல் வாசித்தேன்.  

பூங்குழலிக்கும் நரேனுக்குமான நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரையிலான ஒரு மாத காலகட்டம் தான் நாவலின் மைய நீரோட்டம். திருமணம் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகள் கொண்ட எதிர் துருவங்கள் இணையும் போது என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை மிக எதார்த்தமாக அலசுகிறது.  

வெள்ளத்தில் சிக்கிய சிற்றெறும்புக்கு கிடைத்த துரும்பு போல பூங்குழலிக்கு ஸ்ரீஜாவும் நரேனுக்கு பவித்ராவும் பக்க பலமாக இருப்பது சிறப்பானது. உலகம் இணையதளத்தால் எவ்வளவு சுருங்கி கைக்குள் அடங்கினாலும் மனிதர்களுக்கு ஒரு போதும் அவை மன ஆறுதலைத் தர முடியாது. அதற்கு பக்குவப்பட்ட ஒரு மனிதனே தேவை என்பதை மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது.  

மனித மனம் எப்போதும் ஒரு பக்க சார்பாகவே சிந்திக்கும் தன்மை கொண்டது. நான் வாசித்த சில நாவல்களும் அப்படியாகவே இருந்தது. ஆனால் மிக முக்கியமான நமக்கு எதிர் தரப்பு நியாயங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதி இருப்பது மிக சிறப்பானது. பன்முகத்தன்மை வாய்ந்த மனித மனங்களை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணர வைத்ததில் நாவல் மிகுந்த மதிப்பு மிக்கதாக உள்ளது.  

கதையின் இன்னொரு முக்கியமான பேசு பொருளாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையின் உத்தரவாதமற்ற வேலை போக்கு தற்காலத்திற்கு தகுந்த அவசியமான பேசுபொருளாகும். நமக்கு எல்லாம் தெரியும் அதிக சம்பளத்திற்கு பின்னால் அவர்கள் தலையே அழுத்தும் சுமை நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. இந்த நாவல் வாசிப்புக்கு பிறகு அவர்களை பற்றிய எனது மனநிலையும் மாறியுள்ளது.  

பணத்திற்காக வெளிநாடு சென்று பல ஆண்டுகளாக திரும்பாத கணவனுக்காக தன் உடல் தேவையை நிராகரித்து புற உலகத்திற்காக வாழும் பல பெண்களுக்கு மத்தியில் தனது உடல் தேவைக்காக பிற ஆண்களுடன் உறவு கொள்வது தவறில்லை என்பதே எனது கருத்தும்.

நாவல் பேசும் பெண்ணியம் எதையும் வலிந்து திணிக்காமல் இயல்பாக கருத்தை பதிவு செய்கிறது.  

ஒரு இடத்தில் "பெண்கள் எல்லாவற்றையும் பேசினாலும் புதிரானவள் என்கிறார்கள். ஆண்கள் எதையும் பேசவில்லை என்றாலும் வெளிப்படையானவர்கள் என்கிறார்கள்." மிக முக்கியமான சமூக சிக்கலை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்.  

நரேனின் அம்மா சந்திராவும் பவித்ராவும் உரையாடும் ஒரு பகுதியில் தனது இணையரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் போதாமைகளை வெளிப்படுத்தும் பவித்ராவை சந்திரா அவர்கள் தனது வாழ்வோடு பொருத்தி பார்த்து உணர்வது மிக முக்கியமாக பகுதி. அந்த காலத்து பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் ( தற்போதும் அப்படி தான் உள்ளது) எவ்வளவு அடக்குமுறை செய்யப்பட்டார் தற்போது வெளியே சொல்லவாவது செய்கிறார்கள். என்னை மிகவும் பாதித்தது சந்திராவும் மூர்த்தியும் தாம்பத்தியம் அதிகபட்சம் "ம்" என்ற வார்த்தையில் முடிவது தான்.  

இப்பல்லாம் யாருங்க சாதி மதம் பாக்குறாங்க என்போருக்கு பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வனின் காதல் திருமணமே சாட்சி. மாற்று மதத்தில் திருமணம் செய்த காரணத்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர்பிழந்து கிடப்பது தற்காலத்திலும் தொடரும் சமுதாய சீர்கேடு.  

பூங்குழலியும் நரேனும் திரைப்படம் பார்க்கும் போது நரேன் செய்யும் செயல் திரையரங்கத்தில் நான் எனது காதலியுடன் இருந்த நாட்களை நினைவுபடுத்தியது. காமத்தை தனித்துக் கொள்ள என்னை போன்ற ஆண்கள் செய்யும் செயல்கள் மிக மோசமானவை என்பதை எனக்கு புரிய வைத்தது.  

க்ளிக் நாவல் குறித்த அதன் பெயர் காரணத்தில் எனக்கு பெரிய உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் அதில் அறிமுகமாகும் பெயர்கள் சுவையானவை.. உதாரணமாக பூங்குழலியின் தாத்தா பூசைப்பழம், ஞானப்பழம் மற்றும் நண்பர் அலையரசன். புழக்கத்தில் இல்லாத பெயர்களை வாசிக்கும் போது ஒரு வகையான சுவை கூடிய நிறைவை தந்தது.  

திருமணத்தில் பிடிப்பு இல்லாத பூங்குழலி திருமணத்தை எண்ணி கனவு காணும் நரேனின் கரம் பிடித்தாரா இல்லை பிரிந்தார்களா என்பதை மிக சுவாரசியமாக பதிவு செய்கிறது நாவல். திரைப்படத்தை விஞ்சும் காட்சி அமைப்புகள் இறுதி அத்தியாயங்கள் என மிக தரமான எழுத்தை கொண்டுள்ளது...  

நிச்சயமாக வாசகருக்கு புதிய வாசிப்பு அனுபவத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் பரிசளிக்கும்.  

- க்ளிக் நாவல் குறித்து செந்தில், முசிறி (வாசகர் பார்வை – 4 )


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 06:20

February 7, 2023

பக்கத்துக்கு பக்கம் மனித மனங்கள்


இப்படியா ஒரு பெண் இருப்பா எனத் தொடங்கி, உங்க ஆம்பள பையனைப் போய் கேளுங்க என புயலாக சீறி, ஒரு அழகான உறவாய் மலர்ந்து நிறைகிறது கிளிக்.

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் எனக் கேட்டால், இப்படி தான் எனக் கூறும் சமூகத்திடம், அவளுக்கு எப்படி விருப்பமோ அப்படி இருக்கலாம் என்கிறது கிளிக்.

விருப்பங்களை திணிக்கும் மனிதர்களை கொஞ்சம் விலகி நிற்க சொல்கிறது. சொல்வதை ஏற்றுக் கொள்ளாத போதும், கலைச்செல்வன் போல அமைதி காக்க சொல்கிறது. காதல் என்ன கல்யாணமே முறிந்து போனாலும் கூட, அன்பை பகிர்ந்து கொள்ள சொல்கிறது.

நாவல் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள் பெண்கள். ஒவ்வொருவரும் அவரவர்க்கு உரிய வாழ்வை வாழ்கிறார்கள். அதனாலேயே அத்தனை பெரும் பேரழகிகளாக காட்சி அளிக்கிறார்கள். பூங்குழலி, ஶ்ரீஜா, ஆஷா, பவித்ரா, சோபியா என ஒவ்வொருவரும் ரெக்கை கட்டி பறக்கிறார்கள். அவரவர்க்கு உரிய வானத்தில். அதற்கு மிக முக்கிய காரணம் They are Independent. பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் அற்றவர்கள்.

இதற்கு நேர் எதிரான குணங்களோடு சித்ரா, சந்திரா குறிப்பாக பத்மாவதி என வரும் பெண்கள், இந்த சமூகத்தின் இயல்பான முகத்தை பிரதிபலிக்கிறார்கள்.

பக்கத்துக்கு பக்கம் மனித மனங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒருமுறையேனும் வாசித்து விடுங்கள். மனிதர்களை புரிந்து கொள்வதில் தான் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு காபி, கொஞ்சம் இசை எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தீர்த்து வைக்க போதுமானதாக இருக்கிறது.

பூங்குழலி மிகவும் ரசித்த கவிதை எனக்கும் பிடித்தது.

 

"கைகளைப் பிடிப்பதென்பது

அன்பைத் தெரிவிப்பது

அனுமதி கேட்பது

ஏதுவாய் இருந்தாலும்

ஏற்றுக் கொள்வது

எல்லாவற்றுக்கும் மேலே

உன்னை மதிப்பது"

 

- க்ளிக் நாவல் குறித்து ஊடகவியலாளர் ஜான்பால்,  (வாசகர் பார்வை - 3)


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2023 19:06

February 5, 2023

அயலி இல்லை ”அயலி”


நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சார்ந்த வாழ்க்கையை வைத்தே, புற உலகு குறித்த சிந்தனைகளையும் பிம்பங்களைம் இந்த நவீன காலத்தில் பலரும் கொண்டிருக்கிறார்கள். அங்கு நிலவும் பிற்போக்குத்தனங்களைச் சாடி, தேவையான மாற்றங்களை உரக்கப் பேசுவதைக் காண முடிகிறது.  

முழுக்க முழுக்க ஆணாதிக்கம், பழமை வாதம், ஜாதீயம், மதவாதத்தில் ஊறிக்கிடக்கும் பிரதேசங்கள்தாம் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பு. அவர்கள் இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகள் ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள். நகரங்களிலும், பொதுவெளியிலும் இன்று நாம் பேசக்கூடிய முற்போக்குத்தனங்களை, மாற்றங்களை எல்லாம் அங்கு போய் இவ்வளவு எளிதாகவும், சுதந்திரமாகவும் பேசிவிட முடியாது. அப்படியொரு இறுக்கமும், உக்கிரமும் அங்கு நிலவும்.  

அப்படியொரு நிலப்பரப்பில் நிகழும்  ‘பெண் கல்வி’க்கான மாற்றத்தை சினிமாவாக்கி இருக்கிறார்கள். அதையும் சிறு சிறு அசைவுகளிலிருந்து துவங்கி மாற்றம் என்பது ஒரு process என்பதை உணர்ந்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அயலி படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம். 

கதையைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதற்கான கதாபாத்திரங்கள், ஓளிப்பதிவு, சுவாரசியமாக கதை சொல்லும் நேர்த்தி, பேச்சு வழக்கு, நடிப்பு எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன. அதிலும்  கதைக்கு சம்பந்தமில்லாமல் -  வழக்கமான சினிமா நாயகித் தோற்றமாக இல்லாமல் - நாம் பார்த்த, பழகிய பெண்ணாக இருக்கிறார் தமிழ்ச்செல்வி. அவர் அயலி இல்லை. 

சொல்ல வேண்டியதை அழுத்தமாக, ஒப்புக்கொள்ளும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். வரவேற்போம். இப்படிப்பட்ட முயற்சிகள் இன்னும் அதிகமாக வேண்டும். 

படத்தின் ஆக்கத்தில் குறைகள் இருக்கவேச் செய்கின்றன. அதைச் சொல்வதால் இருக்கும் நிறைகளுக்கு குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் சொல்ல மனம் வரவில்லை. 

அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டும்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 01:01

February 4, 2023

காற்று வெளியில் வாணி ஜெயராம்!


கல்லூரி காலத்தில் கேட்ட ”நானே நானா யாரோ தானா?” பாடல்தான் வாணி ஜெயராம் என்னும் மகத்தான கலைஞரை நெருக்கமாக கவனிக்க வைத்தது. அவர் குரலை வைத்து  காற்று வெளியில் அவரை கண்டு கொள்ள முடிந்தது. அதற்கு முன்னும் பின்னும் அவர் பாடிய  பாடல்களால் ஆன ஒரு வெளி எனக்கும் வாய்த்தது.
இப்போது காலத்தை தனது குரலால் மீட்டிக் கொண்டிருக்கிறார்.
மல்லிகை என் மன்னன் மயங்கும்  (தீர்க்க சுமங்கலி )ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் (அபூர்வ ராகங்கள் )ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது) நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) மேகமே மேகமே (பாலவனச் சோலை )ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் ( நீயா ) ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு )என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி )பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)யாரிது சொல்லாமல் (நெஞ்சமெல்லாம் நீயே ) 
எதோ ஒரு தனிமையையும், சுகமான ஒரு வலியையும் எப்போதும் போல் சுமந்தே கேட்கிறது. 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 06:56