Mathavaraj's Blog, page 5
January 13, 2025
ஸ்கூப் - வெப் சிரீஸ்

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையின் பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே. ’மிட் டே’ பத்திரிகையின் ஆசிரியர். மும்பையின் பயங்கரவாத நிழல் உலக தாதாக்களுக்கும், அரசின் காவல்துறைக்கும் இடையேயான உறவுகளை அம்பலப்படுத்தியவர் அவர். தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளியான சோட்டா ராஜனுக்கும் இடையேயான ஆரம்பகால உறவுகள், இருவரும் பிரிந்த பின்னர் ஏற்பட்ட மோதல்கள், அதன் ஊடே தங்கள் அரசியல் காய்களை நகர்த்திக் கொள்ளும் அரசு என்னும் பின்னணி கொண்டது பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே-வின் கொலை.இந்தக் கொலை குறித்த விசாரணையில் ஜிக்னா வோரா என்னும் பெண் பத்திரிகையாளர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2011 நவம்பரில் கைது செய்யப்பட்டவர் 2018ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். எந்தக் குற்றமும் செய்யாமல் ஏழு ஆண்டுகளாக கைதியாக இருந்த ஜிக்னா வோராவுக்கு ஏன் தன்னை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தினார்கள், தன்னைச் சுற்றி என்ன நடந்தது என அறிய முடியவில்லை.ஜிக்னா வோரா தனது அனுபவங்களை ‘Behind The Bars In Byculla: My Days in Prison ‘ என்னும் புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் வெப் சீரீஸ்தான் Scoop. சுய சரிதத்தின் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. ஜிக்னா வோரா இங்கு ஜக்ருதி பதக் என்றாகி இருக்கிறார்.நடக்கும் யாவுக்கும் பின்னணி அரசியலை அழுத்தமாகவும், நுட்பமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஹர்ஷன் மேத்தா. அதிகார மையங்களின் சிந்தனைகளையும், நகர்வுகளையும் வினைகளிலிருந்து அறியச் செய்யாமல் விளைவுகளிலிருந்து அறிய வைக்கிறது படம். காட்சிகளும், வசனங்களும் அதற்கேற்ப கச்சிதமாக இருக்கின்றன. பயங்கரவாதத்தின் பின்னால் கிரிமினல்கள் மட்டுமல்ல, அரசும் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறது. அதிகார பீடங்கள் ஒருபோதும் மக்களுக்காக கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு மக்கள் ஒரு பொருட்டே அல்ல. எப்படியாவது தங்களை காத்துக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும்தான் அவர்களின் துடிப்பும் வெறியுமாக இருக்கிறது. அதற்காக மக்களில் யாரையும் அவர்கள் பலி கொடுக்கத் தயங்குவதில்லை. அதிகாரத்தின் இடத்துக்கு வருவதற்கு அல்லது நெருக்கமாய் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தனி மனிதர்கள் அறம் தவறுகிறார்கள். சமூகம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதையெல்லாம் கடந்து இழப்பினை சந்தித்தாலும் உண்மையின் பக்கம் நிற்கவும் சிலர் துணிகிறார்கள். அதில் ஒருவர் ஜக்ருதியின் சீனியராக இருக்கும் பத்திரிகையின் ஆசிரியர் இம்ரான். பத்திரிகையின் முதல் பக்கச் செய்திக்கு கிடந்து தவிக்கும் ரிப்போர்ட்டர்கள், அதன் மூலம் அவர்கள் அறியப்படுவது, கிரிமினல்களின், அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பார்வையில் படுவது, பழக்கம் கொள்வது, அவர்கள் மூலம் தகவல்கள் பெறுவது, சலுகைகள் கிடப்பது எல்லாம் என்ன என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. பிரமாதமாக ஆடுகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அவர்கள்.கைது செய்யப்படுவதற்கு முன் ஜக்ருதி எப்படி இருந்தார், சிறையை விட்டு வெளியே வரும்போது எப்படி இருந்தார் என்பது முக்கியமானது. சிறையில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறார். பின்னர் ஒரு இந்து பெண் சாமியார் சிறைக்கு வருகிறார். அவருக்கு சிறையில் பெரும் மரியாதை தரப்படுகிறது. அவரது அருளால் ஜக்ருதிக்கு சிரமங்கள் குறைகின்றன. ஆரம்பத்தில் அதை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளும் ஜக்ருதி பின்னர் நிராகரிக்கிறார். “அதிகார மையங்களின் நெருக்கம் நம்மையும் அதிகாரம் படைத்தவர்களாக உணர வைக்கிறது. நானும் அப்படித்தான் வெளியே இருந்தேன். எதையும் செய்ய முடியும் என கருத வைத்தது. ஆனால் உண்மை அது இல்லை.” என அவர் சொல்வதில் எல்லா அர்த்தங்களும் இருக்கின்றன. “நான் அந்த ஜர்னலிஸ்டை கொல்லவில்லை, ஆனால் ஜர்னலிசத்தை கொன்றதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது” என ஜக்ருதி பதக் சொல்லும் வார்த்தைகள்தாம் இந்த வெப் சீரிஸின் ஒற்றை வரிக் கதை.
நெட் ஃபிலிக்ஸில் இருக்கிறது.
January 11, 2025
பறவை, மனிதன் மற்றும் விலங்கு

கார் ஷெட்டிற்குமேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள்.
சின்னச் சின்னத்துரும்புகளைக் கொண்டு வருவதும், விர்ரென பறப்பதுமாய் இருந்தது. குருவிச்சத்தம் விடாமல்கேட்டுக்கொண்டே இருந்தது.
கிளையொன்றின்கக்கத்தை தோதான இடமாகப் பார்த்து கூட்டை கட்டிய பிறகு அதன் வருகையும், இருப்பும், பறத்தலும்சத்தமில்லாமல் இருந்தன.
நாட்கள் சிலகழித்து வீட்டு மனிதர்களின் நடமாட்டங்களைப் பார்த்து வால் துடிக்க அந்தக் கிளையில்அங்குமிங்கும் சடசடத்து குருவி கத்த ஆரம்பித்தது.
வீட்டின் பாடலாகியதுகுருவியின் சத்தம்.
ஒருநாள் காலையில்வீட்டில் இருந்து மனிதன் வெளியே வரவும் கார் ஷெட் மேலிருந்து சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருந்தகுருவிக்குஞ்சு அருகே விழுந்தது. காம்பவுண்டுச் சுவரிலிருந்து தாய்க்குருவி மனிதனைப்பார்த்து துடித்து சத்தமிட்டது.
பூப்போல எடுத்துகார் ஷெட்டின் மீது விட்டு விடலாம் என சின்னச் சிறகை அசைத்துக் கொண்டிருந்த அந்த உயிரைநோக்கி மனிதன் குனிந்தான்.
காருக்கு அடியிலிருந்தசாம்பல் நிறப் பூனை ஒன்று சட்டென பாய்ந்து அந்த குருவிக் குஞ்சை கவ்வி, வெளி கேட்டைத்தாவித் தாண்டி கண் இமைப்பதற்குள் மறைந்தது.
செய்வதறியாமல்திகைத்து நின்றான் மனிதன். குனிந்து எடுக்கப் போன கைகள் நடுங்கின.
குருவி அங்குமிங்கும்மாய்ந்து மாய்ந்து கதறியது.
வீட்டின் ஓலமாகிமனிதனை அறுத்தது குருவியின் சத்தம்.
அறிவிப்பு : மொபைல் செயலியாகவும் ’தீராத பக்கங்கள்’ !

அனைவருக்கும் வணக்கம்.
இன்று முதல் ‘தீராத பக்கங்கள்’ வலைத்தளத்தளத்தை ஒரு செயலி ( App ) ஆகவும் தங்கள் மொபைலில்படிக்க முடியும். அதில் தங்கள் கருத்துக்களைபகிர முடியும்.
இந்த நாளில் இருந்து கடந்த காலத்தை திரும்பிப்பார்க்கிறேன்.
2003க்குப் பிறகு தமிழில் Blog என்னும் சமூகஊடகம் அறிமுகமாகியது. அச்சு ஊடகங்களில் தங்கள் எழுத்துக்கள் வர காத்திருக்காமல், தங்களுக்கெனவலைப்பக்கத்தை ஆரம்பித்து நிறைய இளைஞர்களும், பெண்களும் எழுதத் தொடங்கினார்கள்.
2008ல்தான் ’தீராத பக்கங்களை’ ஆரம்பித்து எழுதஆரம்பித்தேன். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கிறது. ஏராளமான நட்புகளும்,எழுத்து உறவுகளும் மலர்ந்த காலம் அது. எவ்வளவோ உரையாடல்களாலும் விவாதங்களாலும் பதிவுலகம்ததும்பிக் கொண்டிருந்த காலம் அது. அதுவரை அறியப்படாத பலருக்கு கதவைத் திறந்து வைத்துவரவேற்ற காலமும்தான்.
எழுத மட்டுமில்லாமல், நிறைய வாசிக்கவும் முடிந்தது.அதுதான் Blog என்னும் சமூக ஊடகத்தின் சிறப்பே. தங்களுக்குப் பிடித்தமான பதிவர்கள் எழுதியதைஉடனுக்குடன் நமது பிளாக்கிலேயே தெரியும்படி அந்த வடிவமைப்பு இருந்தது. மேலும் அதற்கெனதமிழ்மணம், தமிழீஸ் போன்ற திரட்டிகள் எல்லோரின் எழுத்துக்களை ஓரிடத்தில் வரிசைப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தன.
தமிழ் இலக்கிய உலகத்திற்கு வலைப்பக்கங்கள் பெரும்பங்காற்றின என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான, காத்திரமான, நுட்பமான எழுத்துக்களைக்காண முடிந்தது. அமிர்தவர்ஷிணி அம்மாள், பா.ராஜாராம், மண்குதிரை, தீபலட்சுமி, சுரேஷ்கண்ணன், ராகவன், போகன், நேசமித்ரன், அய்யனார், ரிஷான் ஷெரிப், நிலாரசிகன், தமிழ்நதி,அனுஜன்யா, அ.மு.செய்யது, கார்த்திகைப் பாண்டியன், ஆ.முத்துராமலிங்கம், சந்தனமுல்லை,க.பாலாசி, அமுதா, கே.ஜே.அசோக்குமார், ஹேமா, என்று சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களின் பார்வைகளும்,புலம்பெயர்ந்தவர்களின் உணர்வுகளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
2013க்குப் பிறகு இந்த Blog காலம் மெல்ல மங்கவும்,மறையவும் தொடங்கியது. மிக முக்கியமான காரணம் Facebook, Whatsapp போன்ற சமூக ஊடகங்கள்என்றேத் தோன்றுகிறது. இந்த சமூக ஊடகங்கள் எல்லாம் மொபைலில் செயலிகளாய் (App) வந்திருந்தன. மக்கள் தங்கள் வாசிப்பையும்,எழுத்தையும் கம்ப்யூட்டரிலிருந்து மொபைலுக்கு மாற்றிக்கொண்டனர். 2017க்குப் பிறகு Blogஎன்னும் சமூக ஊடகம் வறண்டு போக ஆரம்பித்தது. அதற்கென இருந்த வாசகர்கள் அங்கு இல்லை. திரட்டிகளும் பின்னர் தங்கள் கதவுகளைமூடிக்கொண்டன.
Blog மூலம் அறியப்பட்ட சிலரின் எழுத்துக்களையும்,அவர்களின் படைப்புகளையும் இப்போது காணும் போதெல்லாம் எதோ ஒரு மகிழ்ச்சி ஒரு ஓரத்தில்வந்து ஒட்டிக் கொள்ளும். அதே நேரம் பலரின் எழுத்துக்கள் காணாமல் போய்விட்டன என அறியும்போதுவெறுமை சூழும். எப்போதாவது Blog பக்கம் சென்று பிடித்தமான பதிவர்களின் எழுத்துக்களையும்கமெண்ட்களையும் படித்து காலத்தின் நிழல்களை பிடிக்க முயற்சி செய்வேன். ஆளரவற்ற வெளியில்தன்னந்தனியாய் உலவிக்கொண்டு இருப்பதைப் போன்ற மனநிலை வந்து தவிக்கச் செய்யும். அறிவும்,உணர்வுகளும் நிறைந்த ஒரு பெரும் வெளி அங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த பிரக்ஞைகளிலிருந்து தோன்றியதுதான்Mathavaraj App. வலைத்தளங்களை இப்படி Appகளாக்கி, நம் மக்களின் கைகளில் மொபைலில் கையடக்கமாகஉலவ விட்டுப் பார்க்கத் துணிந்தது. எதோ ஒரு முயற்சி செய்வோம் என இறங்க வைத்தது.
தொழில்நுட்பம் ஒன்றும் எனக்குத் தெரியாது. நானாகவலைப்பக்கங்களில் மேய்ந்து, மேய்ந்து தெரியாததை கொஞ்சம் தெரிந்ததாக்கி இந்த காரியத்தைச்செய்திருக்கிறேன். குறைகள் இருக்கும், சரிசெய்து கொள்வோம்.
கீழ்க்காணும் படத்தை கிளிக் செய்து Play Storeல் Mathavaraj Appஐ செய்து download செய்து தங்கள் மொபைலில் install செய்து கொள்ளுங்கள்.தீராத பக்கங்களை வாசியுங்கள். உரையாடுங்கள்.

படித்து விட்டு கீழ்கண்ட படத்தை க்ளிக் செய்து அல்லது தொட்டு Google Play Storeல் App குறித்து உங்கள் மதிப்பீட்டை ( Rating and Review) பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஆதரவையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் எதிர்நோக்கி…
’தீராத பக்கங்கள்’ ஒரு செயலியாக உங்கள் கைகளில்!

அனைவருக்கும் வணக்கம்.
இன்று முதல் ‘தீராத பக்கங்கள்’ வலைத்தளத்தளத்தை ஒரு செயலி ( App ) ஆகவும் தங்கள் மொபைலில்படிக்க முடியும். அதில் தங்கள் கருத்துக்களைபகிர முடியும்.
இந்த நாளில் இருந்து கடந்த காலத்தை திரும்பிப்பார்க்கிறேன்.
2003க்குப் பிறகு தமிழில் Blog என்னும் சமூகஊடகம் அறிமுகமாகியது. அச்சு ஊடகங்களில் தங்கள் எழுத்துக்கள் வர காத்திருக்காமல், தங்களுக்கெனவலைப்பக்கத்தை ஆரம்பித்து நிறைய இளைஞர்களும், பெண்களும் எழுதத் தொடங்கினார்கள்.
2008ல்தான் ’தீராத பக்கங்களை’ ஆரம்பித்து எழுதஆரம்பித்தேன். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கிறது. ஏராளமான நட்புகளும்,எழுத்து உறவுகளும் மலர்ந்த காலம் அது. எவ்வளவோ உரையாடல்களாலும் விவாதங்களாலும் பதிவுலகம்ததும்பிக் கொண்டிருந்த காலம் அது. அதுவரை அறியப்படாத பலருக்கு கதவைத் திறந்து வைத்துவரவேற்ற காலமும்தான்.
எழுத மட்டுமில்லாமல், நிறைய வாசிக்கவும் முடிந்தது.அதுதான் Blog என்னும் சமூக ஊடகத்தின் சிறப்பே. தங்களுக்குப் பிடித்தமான பதிவர்கள் எழுதியதைஉடனுக்குடன் நமது பிளாக்கிலேயே தெரியும்படி அந்த வடிவமைப்பு இருந்தது. மேலும் அதற்கெனதமிழ்மணம், தமிழீஸ் போன்ற திரட்டிகள் எல்லோரின் எழுத்துக்களை ஓரிடத்தில் வரிசைப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தன.
தமிழ் இலக்கிய உலகத்திற்கு வலைப்பக்கங்கள் பெரும்பங்காற்றின என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான, காத்திரமான, நுட்பமான எழுத்துக்களைக்காண முடிந்தது. அமிர்தவர்ஷிணி அம்மாள், பா.ராஜாராம், மண்குதிரை, தீபலட்சுமி, சுரேஷ்கண்ணன், ராகவன், போகன், நேசமித்ரன், அய்யனார், ரிஷான் ஷெரிப், நிலாரசிகன், தமிழ்நதி,அனுஜன்யா, அ.மு.செய்யது, கார்த்திகைப் பாண்டியன், ஆ.முத்துராமலிங்கம், சந்தனமுல்லை,க.பாலாசி, அமுதா, கே.ஜே.அசோக்குமார், ஹேமா, என்று சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களின் பார்வைகளும்,புலம்பெயர்ந்தவர்களின் உணர்வுகளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
2013க்குப் பிறகு இந்த Blog காலம் மெல்ல மங்கவும்,மறையவும் தொடங்கியது. மிக முக்கியமான காரணம் Facebook, Whatsapp போன்ற சமூக ஊடகங்கள்என்றேத் தோன்றுகிறது. இந்த சமூக ஊடகங்கள் எல்லாம் மொபைலில் செயலிகளாய் (App) வந்திருந்தன. மக்கள் தங்கள் வாசிப்பையும்,எழுத்தையும் கம்ப்யூட்டரிலிருந்து மொபைலுக்கு மாற்றிக்கொண்டனர். 2017க்குப் பிறகு Blogஎன்னும் சமூக ஊடகம் வறண்டு போக ஆரம்பித்தது. அதற்கென இருந்த வாசகர்கள் அங்கு இல்லை. திரட்டிகளும் பின்னர் தங்கள் கதவுகளைமூடிக்கொண்டன.
Blog மூலம் அறியப்பட்ட சிலரின் எழுத்துக்களையும்,அவர்களின் படைப்புகளையும் இப்போது காணும் போதெல்லாம் எதோ ஒரு மகிழ்ச்சி ஒரு ஓரத்தில்வந்து ஒட்டிக் கொள்ளும். அதே நேரம் பலரின் எழுத்துக்கள் காணாமல் போய்விட்டன என அறியும்போதுவெறுமை சூழும். எப்போதாவது Blog பக்கம் சென்று பிடித்தமான பதிவர்களின் எழுத்துக்களையும்கமெண்ட்களையும் படித்து காலத்தின் நிழல்களை பிடிக்க முயற்சி செய்வேன். ஆளரவற்ற வெளியில்தன்னந்தனியாய் உலவிக்கொண்டு இருப்பதைப் போன்ற மனநிலை வந்து தவிக்கச் செய்யும். அறிவும்,உணர்வுகளும் நிறைந்த ஒரு பெரும் வெளி அங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த பிரக்ஞைகளிலிருந்து தோன்றியதுதான்Mathavaraj App. வலைத்தளங்களை இப்படி Appகளாக்கி, நம் மக்களின் கைகளில் மொபைலில் கையடக்கமாகஉலவ விட்டுப் பார்க்கத் துணிந்தது. எதோ ஒரு முயற்சி செய்வோம் என இறங்க வைத்தது.
தொழில்நுட்பம் ஒன்றும் எனக்குத் தெரியாது. நானாகவலைப்பக்கங்களில் மேய்ந்து, மேய்ந்து தெரியாததை கொஞ்சம் தெரிந்ததாக்கி இந்த காரியத்தைச்செய்திருக்கிறேன். குறைகள் இருக்கும், சரிசெய்து கொள்வோம்.
கீழ்க்காணும் படத்தை கிளிக் செய்து Play Storeல் Mathavaraj Appஐ செய்து download செய்து தங்கள் மொபைலில் install செய்து கொள்ளுங்கள்.தீராத பக்கங்களை வாசியுங்கள். உரையாடுங்கள்.

உங்கள் ஆதரவையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும்எதிர்நோக்கி…
January 9, 2025
குழந்தையுமானவர்

வாகனங்கள் அங்குமிங்குமாய் முக்கிய சாலையில் சீறிக்கொண்டிருந்தன.
பைக் ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தையின் கையிலிருந்த பலூன் பறந்தது. வாகனத்தை ஓட்டிய தந்தையால் அதைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த தாயும் அதைப் பார்ப்பதற்குள் எங்கோ சென்று விட்டிருந்தார்கள் மூவரும்.
பலூன் தனியாக சாலையில் மிதந்து மிதந்து அலைந்து கொண்டிருந்தது. காரோ, பைக்கோ எதுவும் எந்த நேரத்திலும் மோதி வெடித்துவிடக் கூடும். பார்ப்பதற்கு ஒரு பதற்றம் தந்தது. சாலையோரம் நின்றிருந்த வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் பலூனை நோக்கி போக ஆரம்பித்தார். வாகனங்கள் எதுவும் நிற்பதாயில்லை. சர்சர்ரென்று கடக்க, நிதானமாகவும், கவனமாகவும் பலூன் செல்லும் திசையில் நெருங்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு ஏன் வேண்டாத வேலை என மனிதர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு எதற்கு பலூன் எனவும் தோன்றியது.
வாகனங்கள் அற்ற ஒரு சிறு கணத்தில் ஓடிச்சென்று பலூனை எடுத்து கைக்குழந்தையைப் போல பதமாய் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சாலையைக் கடந்தார்.
சாலையோரம் இன்னொரு தாய் தந்தையோடு ஒரு குழந்தை அவரை பார்த்துக் கொண்டு இருந்தது. பலூனை அந்தக் குழந்தையிடம் கொடுத்தார்.
அப்படியொரு சிரிப்போடு கைகளை விரித்து பலூனை வாங்கி, அதைத் தடவி சிரித்தது குழந்தை.
அந்த மனிதர் கூட்டத்திற்குள் நுழைந்து கரைந்து போனார்.
(Facebookல் 3.3.2022ல் எழுதியது. தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன்.)
January 6, 2025
மேகநாத மெய்கண்ட மாதவராஜ்!

”அண்ணி,அண்ணன் குறித்த உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர வேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டான்அண்டோ. எப்போதும் என்னை எழுத வேண்டும் என்று கேட்ட ஊக்கத்தில் என் எண்ணத் துளிகளை வெளிப்படுத்திஉள்ளேன்.
“அம்மா,இவர் வங்கியில் பணியாற்றுகிறவர். காலை 10 மணிக்கு போனால் 6 மணிக்கு வந்து விடுவார்”என்று இவருக்குள் ஒரு ‘அந்நியன்’ இருப்பது தெரியாமல் திருமணத்திற்கு முன்பு திமிராகப்பேசியவள் நான். அந்தப் பேதமையை நினைத்தால் இன்றும் வெட்கமாக இருக்கிறது. தீதும் நன்றும்பிறர் தர வாரா, இது என் வாழ்க்கை, எல்லாமே என் தேர்வு என்று நான் எண்ணினேன்.
சென்னையில்எங்கள் வீட்டு அருகாமையில் வேலை தேடும் 21 வயது இளைஞனாக இருந்த போது என் தம்பி அப்புஇவரைப் பற்றி பல தகவல்களை அவ்வப்போது வந்து ஆசையுடன் சொல்வான். இவர் சென்னையில் ஒருகம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த சிறிது நாளில் மேலதிகாரியை அடித்தோ, சண்டையிட்டோ கம்பெனியிலிருந்துவெளியேறினார் என்று அப்பு சொன்னான். பிறகு அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை இண்டர்வியூ மட்டும்அட்டெண்ட் செய்துவிட்டு வேலையில் சேரவில்லை என்றும் இவர் இருந்த வீட்டு உரிமையாளர்குறைபட்டுக் கொண்டார். அதைப் பற்றி பின்னால் விசாரிக்கும்போது, “அதையெல்லாம் மனுஷன்பார்ப்பானா?” என்றார். எனக்குப் புரியவில்லை. ஒருவழியாக வங்கிப்பணியில் (பாண்டியன்கிராம வங்கி) சேர்ந்தாகி விட்டது. அதைப்பற்றி அச்சப்படவோ அல்லது வேறு மாதிரி சிந்திக்கவோஎனக்குத்தான் அனுபவமோ அறிவோ இல்லை என்பேன்.
இவர்மாறுபாடான குணாதிசியங்களுடன்தான் எப்போதும் இருந்திருக்கிறார். என்னுடைய பார்வைதான்சிறிது சிறிதாக வளர்ந்து இந்த 32 ஆண்டுகள் கழித்து முழுமையாக மாறிய தொழிற்சங்கவாதியைதரிசித்தது என்பேன்.
1986ம்ஆண்டு நான் பி.ஏ கடைசி ஆண்டு படித்து முடிக்கும் சமயம் “அம்மு நீ ரஷ்யாவுக்கு சென்றுபடிக்கிறாயா?” என்று அப்பா கேட்டார். முடிவெடுக்கும் சூழலில் நான் இல்லை. மாதவராஜ்வீட்டில் திருமணப் பேச்சை தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் இவரிடம் அப்பா சொன்னதைதெரிவித்தேன். மிக நீண்ட கடிதம் பதிலாக வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. கவிதைநடையில் ரஷ்ய மண்ணின் சிறப்பினைச் சொல்லி, நீ ரஷ்யா சென்று படித்து வா, அந்த புண்ணியபூமியை தரிசித்து வா என்று ஐந்தாறு வரி இடைவெளியில் திரும்பத் திரும்ப எழுதி இருந்தார்.இந்த தருணத்தில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடத் தோன்றக் காரணம் ஒருவரையொருவர் ஆட்கொள்ளாதசுதந்திரக் காதலாக எங்களின் அன்பு எப்போதும் இருக்கிறது.
1989ம்ஆண்டு திருமணம் முடிந்து செங்குழியில் (பூச்சிக்காடு கிளை, திருச்செந்தூர் அருகில்ஒரு குக்கிராமம்) குடியேறியாகிவிட்டது. அத்தை, மாமாவிற்கு இவரின் சங்க வேலைகள் மற்றும்நடவடிக்கைகள் சிறிதும் திருப்தியளிக்கவில்லை. எப்போதும் கவலையோடும், இவரின் வளர்ச்சிகுறித்தும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். இவரை சங்கத்திலிருந்து விடுவிக்கும் முயற்சியிலேயேஇருந்தனர். ஒருமுறை என்னிடம், “நீ எப்படியாவது அவனைத் திருத்தி அவனை வெளியேக் கொண்டுவா” என்றனர். எனக்கு அதெல்லாம் ஒன்றுமே புரியவில்லை என்றுதான் சொல்வேன்.
அப்போதுசாத்தூரில் சங்க அலுவலகம் இருந்ததால், அடிக்கடி இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல்போய் தங்கி விடுவார். அந்தப் பிரிவுதான் எனக்கு கஷ்டமாக இருந்தது. அத்தையும் மாமாவும்இவரது பணிக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற கவலையில் எனது தந்தையிடம் இதுகுறித்துபேசினர். அப்பா, “இதில் எல்லாம் நான் எப்படி தலையிடுவது. இது அவரின் லட்சியம், நோக்கம்”என்றார்.
என்அம்மாவிடம் நான் குறைபட்டுக் கொண்ட போது, ”அவர் ஒரு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்,நீயும் உனக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதானே” என்று புதுமைப்பெண்ணாய் சொன்னார்.
ஆகஇது குறித்து கவலைப்பட்டு வாழ்க்கையை நாசம் செய்யக் கூடாது என உறுதியாக இருந்தேன்.ஒரு வருடம் கழித்து சாத்தூரில் தனிக்குடித்தனம். இவரின் நண்பர்கள் எல்லோரும் அம்முஎன்றும், தங்கச்சி என்றும் பாசமாக அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவார்கள். “ரொம்ப படுத்துறானா”என்பார்கள். அண்ணா, அத்தான், சம்பந்தி, தோழர் என்றெல்லாம் உறவு முறையில்தான் நண்பர்கள்கூட்டம் இருந்தது. இவரின் தீவீரமான சங்க வேலைகள் குறித்த புரிதல் எனக்கு இல்லை. நானும்சாத்தூரில் ஒரு தனியார் பணியில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
“என்னங்கநமக்கு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் அரசு விடுமுறை வருகிறது. எதாவது பிளான் பண்ணலாமா?”என்றால், தொடர்ந்து ஆறு மாத அரசு விடுமுறைகள் அனைத்தும் சங்கக் கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.கேட்டால், லீவு நாட்களில்தான் எல்லோரும் வர முடியும் என்பார். அப்போதெல்லாம் இவருக்குஅரசுப் பேருந்தில்தான் தொடர் பயணம். ஊர் ஊராகச் சென்று விட்டு சிவந்த கண்களோடும், சீரியஸானமுகத்தோடும், சீவப்படாத பரட்டைத் தலையோடும் ( முடி கொட்ட ஆரம்பித்த பிறகுதான் சீப்பெல்லாம்) வீடு வந்து சேர்வார்.
மேஜை,நாற்காலி என எதையும் தேடாமல் தரையில் அமர்ந்து பல மணி நேரமானாலும் சர்க்குலர், சங்கக்கடிதங்கள் எழுதி அதை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்று விடுவார். குறிப்பாக சனிக்கிழமைமுழுவதும் இந்த வேலைகள்தான் நடைபெறும்.
பிறகு2000த்திற்கு பிறகு கணிணி வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டிலிருக்கும் நேரம் கூடுதலானது.என்ன, சாப்பிடாத தின் பண்டங்களும், ஆடை படிந்த காப்பி, டீ டம்ளர்களும் எப்போதும் இவரைச்சுற்றி இருக்கும் கொடுமையான காட்சிகள் வீட்டில் அரங்கேறியதுதான் நாங்கள் கண்ட பலன்.எப்போது தூங்குவார், எப்போது எழுவார் என்று தெரியாமல் எதோ வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்.எங்களுக்குள் எதாவது பிரச்சினை வரும்போது, ‘நான் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு எங்காவதுபோய் விடுகிறேன்” என்பார். நான். “தாராளாமாகப் போங்கள். வீட்டிற்கு வரும் நாளாவது எங்களுக்காகவேஇருக்க வேண்டும்” என்பேன்.
பிறந்தநாட்கள், திருமண நாட்கள் எல்லாம் வரும். போகும். பாதி நாட்கள் இவருக்கு மறந்த நாட்கள்தான்.ஆரம்ப காலங்களில் இதனை ஞாபகப்படுத்திக்கொண்டு இருந்தேன். பிறகு எனக்கும் சலிக்கத் தொடங்கியது.காரணம், எந்த உற்சாகமும் காட்ட மாட்டார். மேலும் அன்று இவர் ஊரில் இருக்கப் போவதும்இல்லை என்று தெரிய வரும். வீட்டில் இருந்தாலும் நினைவு வரப் போவதில்லை. நானும் ஞாபகப்படுத்துவதைதவிர்த்தேன். ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்தில் இவருக்கு நினைவுக்கு வந்து விடும்.போன் தொடர்பு இல்லாத காலம் ஆதலால் ‘அம்மு’ என்று ஆரம்பித்து அழகு நடையில் கவிதைகள்தாங்கிய தாள்கள், நான் பள்ளியிலிருந்து வரும்போது என்னை வரவேற்கும். பிறகு இந்த ஆச்சரியமேஎனக்கு சுவையாக மாறி விட்டது.
சங்கப்பணிகள் குறைந்த காலத்தில் புத்தகம் வெளியிடுவது, குறும்படம் எடுப்பது என எதையாவது இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்து கொண்டே இருப்பார். ஒரு விஷயத்துக்கு மெனக்கெடுவது என்பதுஇவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஜஸ்ட் லைக் தட் என்று எதையும் செய்ததாக சரித்திரம்இல்லை. ஒரு வேலையை நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் செய்வதை இவரிடமிருந்து இன்றையஇளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
வீட்டிற்குநண்பர்கள், உறவினர்கள் என வருகை புரியும் தருணங்கள் உண்மையிலேயே இனிமையான கணங்கள்.நாங்கள் இருவரும் பல விஷயங்களை மனம் விட்டுப் பகிரும் நேரம் அதுவாகவே இருக்கும்.
பக்கத்துவீட்டில் இருந்து திரு.காமராஜ் அவர்கள் “பேரன்பு கொண்டவனே” என இவரை உரத்து அழைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். அண்ணி…., அம்மு அண்ணி…..,அக்கா,,,,, அம்மு….. என்று அழைக்கும் அத்தனை இளம் தோழர்கள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே!சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கும் நான் குடும்ப விழாவைப் போன்று கலந்து கொண்டதற்குமுக்கிய காரணம், அத்தனை தோழர்களும் என் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே.
விருதுநகர்சங்கக் கட்டிட விழாவுக்கு சென்று இருக்கிறேன். சேலத்து சங்கக் கட்டிடத்தை பெருமையாககாட்டினார். ஆனால் ஆரம்பத்தில் சாத்தூரில் இருந்த அந்த சிறிய அலுவலகத்தை நான் பார்த்ததில்லைஎன்பது இன்றளவும் குறையாக உள்ளது.
பலலட்சிய கனவுகளுடன் இந்த சங்கம் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையும் ஒரு சேர வளர்ந்தது.ஒவ்வொரு படி நிலையிலும் கோரிக்கைகள் வெற்றி பெறும் போது, எங்கள் குடும்பத்திலும் அந்தமகிழ்ச்சி வெளிப்படும்.
அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த சங்கத்தை நம்பிக்கையும், நல்லெண்னமும் உடையவர்கள் கையில் ஒப்படைத்ததிருப்தியுடன் பொறுப்பிலிருந்து விடை பெறுகிறார் என்பது எனக்கும் பெருமையே.
இவரதுதாத்தா இவருக்கு இட்ட பெயர் ‘மேகநாத மெய்கண்ட மாதவராஜ்’ என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.இந்த மலரில் அந்த பெயர் இடம் பெற வேண்டும் என நினைக்கிறேன். மேக நாதமாக எல்லோர் மனதிலும்இடம் பிடித்து மெய்தனைத் தேடும் திரு.மேகநாத மெய்கண்ட மாதவராஜ்க்கு நானும் செவ்வணக்கத்தைதெரிவித்துக் கொள்கிறேன் இந்த தருணத்தில்.
இதுவல்லவோஆனந்தம்.
( 2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் என் இணையர் அம்மு என்னும் காதம்பரி எழுதிய பதிவு. பாவம் பிழைத்துப் போகிறான் என்று விட்டிருக்கிறாள் )
January 5, 2025
கூக்கி - அசாம் திரைப்படம்

அசாமில் நிகழும் கதை. பள்ளிக்குச் செல்லும்டீன் ஏஜ் பெண் கூக்கி. மழை மீது பிரியம் கொண்டவள். தனக்குப் பிடித்தவனிடம் பெறும் முதல்முத்தம் மழையில் நனைந்து கிடைக்க விரும்புகிறவள். பறவை போலிருக்கும் அவள் ஒரு இரவின்மழையில் சில வெறியர்களால் மிகக் கொடுமையாக கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகிறாள்.
போலீஸ், கோர்ட், நீதி, குற்றவாளிகளுக்குதண்டனை எல்லாம் இந்தப் படத்திலும் வருகின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து சுவாரசியம் கூட்டும் வழக்கமான சினிமா இல்லை.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதும்,’கூக்கிக்கு ஜஸ்டிஸ் கிடைத்து விட்டது’ என்று செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஊர் உலகம்எல்லாம் கொண்டாடுகிறது. கூக்கியோ சலனமில்லாமல் வெறித்து போய் இருக்கிறாள்.
’தனக்கு கிடைத்த ஜஸ்டிஸ்’ எத்தகையது எனசமூகத்திடம் தெரிவிக்க முன்வருகிறாள். வாழ்வெல்லாம் எத்தனை கொடிய தண்டனையை சுமந்துகொண்டிருக்கிறேன் என பேச ஆரம்பிக்கிறாள்.
நம்பிக்கைகள், கனவுகள், ரசனைகள் எல்லாவற்றையும்இழந்து நிற்கும் அந்த சின்னப் பெண்ணின் ஒவ்வொரு சொல்லும் நம்மை உலுக்கி விடுகின்றன.இனி மழை பெய்யும்போதெல்லாம் நான் என்னாவேன் என அவள் உடைந்து போகும் போது நம் மனசாட்சிகதறி அழுகிறது. பெண் உடல் குறித்து இந்த அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள்,கற்பிதங்கள் மீது பெரும் கோபம் கொள்ள வைக்கிறது. கூக்கி என்னவாகி இருக்கிறாள் என்பதைமொத்த சமூகமும் அதிர்ந்து போகும்படி உணர்த்தியிருக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் உடலை ஆண்கள் சிதைப்பதும்,அந்த ஆண்களுக்கு தண்டனை கிடைப்பதும் ஊருக்கும் உலகத்துக்கும் செய்தி மட்டுமே. அதைத் தாண்டி சமூகத்தின் சிந்தனைகள்பெரும்பாலும் செல்வதில்லை. கூக்கி அதைக் கொஞ்சம் உடைத்திருக்கிறாள்.
அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
January 2, 2025
அன்பெனும் பெருநதி

அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன் விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும் தோழமையும் கடந்த 40 ஆண்டுகளாக அன்றுபோல் இன்றும் புத்துணர்ச்சியுடன் தொடர்கிறது.
பாரதி கிருஷ்ணகுமார் என்கிற மாமனிதரின் அறிமுகத்துடன் தொடங்கிய நட்பு அது. சாத்தூரில் ஏ.வி. உயர்நிலைப்பள்ளி செல்லும் வழியில் ஒரு மாடியில் பாண்டியன் கிராமவங்கி ஊழியர் சங்க அலுவலகம் இயங்கியது. அந்த மாடியில்தான் மாதுவுடனான முதல் சந்திப்பு. அவர்கள் நடத்திய இதழில் வந்த கவிதைகள் பற்றிய கலந்துரையாடலுடன் நகர்ந்த அந்த இரவு, யார் யாரெல்லாம் அப்போது உடன் இருந்தார்கள் என்பது இப்போது புகைமூட்டம் போலத்தான் நினைவில் நிற்கிறது. மறதி நோயின் நுழைவாசலில் நிற்கும் இந்த வயது அந்த இரவுக்குள் முட்டி முட்டித் திரும்புகிறது.
மாது முன்னின்று நடத்திய கலை இரவில் நாங்கள் கோவில்பட்டியிலிருந்து வந்து நாடகம் போட்டோம். தரையில் அமர்ந்து கைதட்டி ரசித்த அன்றைய மாதுப்பையனின் உற்சாகம் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது.
அப்புறம் அவர் ‘மண்குடம்’ மாதவராஜ் என்று அறியப்படலானார். மண்குடம் என்கிற அவரது சிறுகதை செம்மலரில் வெளிவந்து அவருக்கு ஒரு அடையாளத்தைத் தந்தது. வேறு எதனாலும் அடையாளப்படாமல் தான் எழுதிய படைப்பு ஒன்றால் அறியப்படுவது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் பெரிய கௌரவமல்லவா? எம் முன்னோடி ஜெயகாந்தன் மகளைக் காதலித்து இவர் மணம் செய்துகொண்ட காதையெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு நெருங்கிப்பழக ஆரம்பித்தபோதுதான் அதெல்லாம் அறிந்துகொண்டேன்.
கோவில்பட்டியிலிருந்து நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு நான் குடிபோன பிறகு சந்திப்புகள் குறைந்தது. இலக்கியக்கூட்டங்கள், மாநாடுகளின் இரவு அரட்டைக் கச்சேரிகளில் சேர்ந்திருப்போம். எப்போதுமே மாநாடுகளில் பகல் பொழுதுகளின் முறைசார் அரங்குகளிலும் பார்க்க இரவுகளில் நடக்கும் முறைசாராக் கூட்டங்களில்தான் உயிர்த்துடிப்பு அதிகம் இருக்கும். மண்டபங்களில் சுற்றிலும் குறட்டைகள் சிதறிக்கிடக்க நடுவில் வட்டமாக உட்காரும் அந்த மாபெரும் சபைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சக பயணிகளாக நானும் மாதுவும் இன்னும் பலரும் இருந்தோம். அங்கே உருவாகும் இலக்கிய நெருக்கத்துக்கு ஈடாக வேறொன்றையும் சொல்லிவிட முடியாது.அந்த நெருக்கம் எனக்கும் மாதுவுக்கும் இடையில் இன்றளவும் இருந்துகொண்டுள்ளது.
அந்த அரட்டை அரங்குகளிலிருந்து கிளை பிரிந்து ’குடிவழி’ச் சென்ற சிலபல இனக்குழுக்களோடு பின்னர் தொடர்பே அற்றுப்போனது.பகலில் அவர்களைச் சந்திப்பதோடு சரி. இரவானால் அவ்வினக்குழுவினர் நம்மிடமிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிடுவார்கள். நான் தனித்தலையும் காலமும் வந்து சேர்ந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (அப்போது தமுஎச) கலை இலக்கியப்பணிகளில் மாது இரண்டறக் கலந்து நின்றார். விருதுநகர் மாவட்டத்தின் செயலாளராகவும் தலைவராகவும் மாநிலக்குழு உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் ’இருட்டிலிருந்து..’ நூலைப்போல ஒரு நூலாக எழுதும் அளவுக்கு விரிந்தது.
என்னுடைய கதைகளுக்கான இரண்டே விமர்சன அரங்குகள் மாது பொறுப்பிலிருந்தபோது விருதுநகரிலும் சாத்தூரிலும் நடந்ததுதான். விருதுநகர் கூட்டம் என்னுடைய வெயிலோடுபோய் நூலுக்காக மட்டும் நடந்தது. அன்றுதான் இன்று ஆலமரமாக விரிந்து நிற்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை சிறு பையனாக என் கதைகள் குறித்துக் கட்டுரை வாசிக்கும் பையனாக முதன் முதலாகச் சந்தித்தது. சாத்தூர் கூட்டம் என்னுடைய கதைகள் எல்லாவற்றையும் பற்றியதாக அமைந்தது.மிக நுட்பமான பார்வையுடன் மாது பேசிய நினைவு இருக்கிறது. மற்றதெல்லாம் மறந்து போனது.
எழுத்தாளர்கள் பேனாவிலிருந்து ‘மௌஸ்’க்கு மாறிக்கொண்டிருந்த காலம் அது. அதில் எங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக மாது இருந்தார். நான் அப்போது பத்தமடையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர் வாங்கிக்கொண்டு மாதுவைத்தான் அழைத்தேன். சாத்தூரிலிருந்து பஸ் ஏறிப் பத்தமடை வந்து ஒருநாள் தங்கி இருந்து எனக்குக் கணிணியைப் பயன்படுத்தவும், தமிழ் எழுத்துருவில் எப்படி டைப் செய்வது என்பதையும் கற்றுக்கொடுத்தார். குருதட்சிணையாக அவ்வப்போது பில்டர் காப்பியை மட்டும் வழங்கித் தப்புவோம்.
கணிணிப்பயிற்சிக்கெனவே அவ்வப்போது பத்தமடை வருவார். இன்று நான் சில ஆயிரம் பக்கங்கள் புத்தகமாக எழுதியிருப்பதற்கு மாதுவின் பயிற்சிதான் அடித்தளம். என் பேனாவைப் பிடுங்கித் தூர எறிந்த கை மாதுவின் கை. கடந்த கால் நூற்றாண்டாக கணிணியில் மட்டுமே எழுதிக் (டைப்பிக்)கொண்டிருக்கிறேன். கையெழுத்துப் போட மட்டுமே பேனா. கணிணியால் அவர் வருகையும் எங்கள் சந்திப்பும் மீண்டும் துளிர்த்தது.
நன்றி மாது.
குடும்பத்துடன் பத்தமடைக்கு வருவேன் என்று வாக்களித்தார். அவரும் பொதுச்செயலாளர் ஆனார். நானும் தமு எகசவில் பொதுச்செயலாளர் ஆனேன். குடும்பத்துடன் பத்தமடை வர அவருக்கு வாய்க்கவில்லை. அலைந்து திரியும் காலத்தில் பொது வாழ்வே முக்கியமாகும்போது தனிப்பட்ட வாக்குறுதிகள் வாடி உலர்ந்து உதிர்ந்துதான் போகின்றன. நான் பத்தமடை வீட்டையும் விற்றுவிட்டு அவருக்குப் பக்கமாக சிவகாசிக்கே வந்துவிட்டேன். இப்போதும் அவரால் இருமுறை மட்டுமே எங்கள் வீட்டுக்கு வர முடிந்தது - பாப்பாவின் திருமணத்தை முன்னிட்டு. இனி வரலாமே மாது?
குயில் தோப்பில் மாது வீட்டில் உட்கார்ந்து நாங்கள் போட்ட திட்டங்கள் அநேகம்- அடுத்தாத்துக் காமராஜும் சேர்ந்துதான். இந்திய விடுதலையின் ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி ஒரு புத்தகம் கொண்டுவரும் திட்டமும் அதில் ஒன்று.மாது வீட்டில் கருக்கொண்டு தோழர் ஆதி கடை வாசலில் அது வளர்ச்சி கண்டு கோவில்பட்டியில் மாரீஸ் ஸ்டுடியோவில் (அது அன்றைக்கு எங்களுக்கெல்லாம் ஒரு குருகுலம் போல சந்திப்பு முனையமாக இயங்கியது) உருப்பெற்ற நூல் அது. மாரீஸ் ஸ்டூடியோவில் ஓரிரவு முழுக்க இந்திய சுதந்திரத்தின் கதையை நான் சொல்லச் சொல்ல மாது குறிப்புகள் தயாரித்தார்.அந்த நாட்களில் நான் சுதந்திரப்போராட்டக்கதையை பலநூறு கூட்டங்களில் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருந்தேன். ”வீர சுதந்திரம் வேண்டி ..” என்கிற அந்த நூலை பல்வேறு தரவுகளையும் சரிபார்த்து முழுக்க முழுக்க மாதுதான் எழுதினார்.ஆனால் புத்தகத்தில் நானும் அவரும் சேர்ந்து எழுதியதாகப் போட்டார். அதுதான் மாது. அந்நூல் இரண்டு மூன்று பதிப்புகள் கண்டது. நல்ல வரவேற்பைப்பெற்றது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, விக்கிரமாதித்தன், உதயசங்கர், காமராஜ், லட்சுமணபெருமாள் என்று பலரும் அதில் பங்களிப்புச் செய்தனர். அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் நூலில் போட்டிருந்தோம்.
அப்புறம் ஒருநாள் பத்தமடை வந்து எனக்கான வலைப்பூக்கணக்கையும் மாதுதான் தொடங்கி வைத்து எப்படிப் பதிவேற்றம் செய்வதென்று வழிகாட்டினார். ’தமிழ்வீதி’ என்கிற வலைப்பக்கமாக அது சிலகாலம் தீவிரமாக இயங்கியது.”பாரதி பிடித்த தேர்வடம் நடு வீதி கிடக்கிறது “ என்கிற பரிணாமன் வரிபோல அப்பக்கம் இப்போது அந்தரத்தில் நின்று விட்டது. முகநூல் வந்து சோம்பேறி ஆக்கிவிட்டதே நம்மை. ஆனாலும் மாது தொடர்ந்து வலைப்பக்கத்தில் எழுதிஉக்கொண்டிருந்தார். அவரது ’தீராத பக்கங்’களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டுவந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார்.
அவருடைய பதிவுகளில் முகநூல்தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும்.எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின் பல முக்கியமான அரசியல் தலைவர்களும் மாதுவின் கருத்துக்களை விடாமல் வாசிப்பதை நான் அறிவேன். நம்ம ஆளு என்பதற்காக அவர் யாரையும் விமர்சிக்காமல் (தேவையானபோது) விட்டதே இல்லை அந்த நேர்மை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.
எங்கள் மகன் சித்தார்த் திருமண நிகழ்வு பற்றிய அவரது வலைப்பக்கப்பதிவுதான் ஒரு முழுமையான பதிவாக இருந்தது. அதை ஒட்டி வாதப்பிரதிவாதங்களெல்லாம் அவரது வலைப்பக்கத்தில் நடந்தது. அவற்றுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொன்னது இன்றும் நெகிழ்வுடன் என் மனதில் நிற்கின்றன.
நாங்கள் காவல்கோட்டம்நாவல் தொடர்பாக மட்டுமே கருத்து ரீதியாக முரண்பட்டு நின்றிருக்கிறோம். மற்றபடி நானும் அவரும் அவரும் நானும் ஒன்றாகவே சிந்தித்தோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் திருநெல்வேலிக்கு ஒரு மகளிர் மாநாட்டுக்கு அழைத்திருந்தார்.போனால் ஆச்சர்யம் காத்திருந்தது. இவ்வளவு இளம் தோழர்களை எப்படி அய்யா திரட்டினீர்கள்? ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள் அது. தொழிற்சங்க இயக்கத்தில் இளம் தோழர்களைப் பார்த்தே பலகாலம் ஆன வறட்சி மனதில் வெடித்துக்கிடந்தது. நீர் வார்த்த கிராமப்புற வங்கி ஊழியர் சங்கத்தை மறக்கவே முடியாது. அதன் பிறகு தோழர்களுக்கு வகுப்பு எடுக்க என்று மாது எப்போது அழைத்தாலும் போய் வந்தேன். அவையெல்லாம் முக்கியமான நாட்கள்.
மாது-காதம்பரி யின் மகள் ஜோத்ஸ்னா திருமணத்தன்று அவர்களது குடும்பத்தில் 10க்கு மேற்பட்ட காதல் திருமணங்கள் என்று அறிய வியப்பும் மகிழ்சியும் கரை புரண்டது. மகளுக்கும் சாதி மறுப்புக் காதல் திருமணம்தான் செய்து வைத்தார்கள்.
மாதுவின் வலைப்பக்கத்தின் வழியாகத்தான் செல்லக்குறும்புகளுடன் எங்களோடு நட்பாக இருக்கும் எங்கள் மகள் போன்ற தீபலட்சுமியும் அறிமுகம் ஆனார்.
சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமையற்ற வாழ்வை மாதுவைப்போல நடத்த வேண்டும் என அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.
ஒரு கார் வாங்கிக்கொடுத்தான் எங்கள் மகன் எங்களுக்கு. 15 ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால் இன்று வரை எனக்கு ஓட்டத்தெரியாது. பயம்தான். ஆனால் மாது சமீபத்தில் கார் வாங்கி சர் சர் என்று அவரே ஓட்டி வந்து பொறாமைத்தீ வளர்க்கிறார்.
எப்போதும் இளைஞர்களோடு இருக்கும் இளம் மனம் அவருடையது. இளைஞர்களிடம் பொறுப்புக்களைப் பிரித்தளிக்கத் தயங்காத மனிதராக தோழராக அவர் எப்போது இருக்கிறார். இது தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியம். உரிய நேரத்தில் இளஞர்களைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதும் உரிய நேரத்தில் மூத்த தோழர்கள் விடைபெறுவதும் மிகவும் அவசியம்.
மாது விடைபெறுகிறார். விலகிச்செல்லவில்லை. விடைபெறுவதற்கான சரியான நேரத்தில் விடைபெறுகிறார். இனி அவர் வளர்த்த பிள்ளைகள் கொடியை உயர்த்திப் பிடித்து முன் செல்வார்கள்.
வாங்க மாது, நாம் பேச வேண்டிய வேறு கதைகளை பேசலாம். அதற்கான நேரம் இது.
( 2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய பதிவு. இத்தனைக்கும் நான் பொருத்தமானவனா என்று தெரியவில்லை. அன்பில் நனைய வைக்கிறது.)
January 1, 2025
'2025' புத்தாண்டு வாழ்த்துகள்!

சென்ற வருடம்முழுவதும் கிட்டத்தட்ட சட்டப் போராட்டத்திலும் அதுகுறித்த சிந்தனைகளோடும் செயல்பாடுகளோடும்தான்கடந்திருக்கிறது.
வருடத்தின்ஆரம்பத்தில் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தது.எனவே என் மீதான விசாரணையை ஆரம்பித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து அப்பீலுக்குச் சென்றபோதிலும், நிர்வாகத்தின் விசாரணையை எதிர்கொண்டேன்.
தலைமையலுவலகத்திற்குள்சென்று சேர்மனிடம் தகராறு செய்ததாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த விதஅடிப்படை ஆவணங்களும், முக்கியமான சாட்சிகளும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.வங்கியின் சிசிடிவி பதிவு கூட இல்லை. சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட நாளன்று எதோ சிசிடிவிரிப்பேர் என்று மிகச் சாதாரணமாக நிர்வாகம் விசாரணையில் தெரிவித்தது. தயார் செய்யப்பட்டுஆஜர் செய்யப்பட்ட சாட்சிகள் குறுக்கு விசாரணையில் தட்டுத் தடுமாறினார்கள்.
அதுதான் ஆகஸ்ட்மாதத்திலேயே விசாரணை முடிந்து, விசாரணை அதிகாரி அறிக்கையை சமர்ப்பித்தும் கூட என் மீதுநடவடிக்கை எடுக்காமல் இருந்தது நிர்வாகம். அக்டோபரில் சென்னை ஹைகோர்ட்டில் நான் தொடுத்திருந்தஅப்பீலில் சாதகமான தீர்ப்பு வந்தது. நிர்வாகம் அதனை ஏற்றுக்கொண்டு டிசம்பர் மாதத்தில்பணி ஓய்வு சலுகைகளை வட்டியோடு தந்தது.
பயணங்களும்,அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்பும் அங்கங்கே ‘மானே’, ‘தேனே’ என நாட்களாக இணைந்திருந்தன. இப்படியாக 2024 அமைந்திருந்தது.
‘க்ளிக்’ நாவலைத்தொடர்ந்து எழுத ஆரம்பித்து ‘காணாமல் போனவன்’ நாவல் முயற்சி அப்படியே நிற்கிறது.
இந்த வருடத்தில்முக்கியமாக–
என் மீது நிர்வாகம்நடத்திய விசாரணையை ஆவணப்படுத்த வேண்டும்.
‘காணாமல் போனவனை’மீட்டெடுக்க வேண்டும்.
வாழ்வெல்லாம்போராட்டங்களும் சோதனைகளும் நிறைந்த ஒரு தோழர் தன் சுயசரிதையை எனக்கு மனம் திறந்து சொல்லிக்கொண்டுஇருக்கிறார். அதை கதையாகச் சொல்ல வேண்டும்.
அப்புறம்… எனதுவலைத்தளம் ‘தீராத பக்கங்களை’ மாதவராஜ் என்ற பெயரில் ஒரு செயலியாக (app) மாற்றும் பணியில்ஈடுபட்டிருக்கிறேன். அதற்கான சோதனை ஒட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் PlayStore / Google Playவில் Mathavaraj இருப்பான்.
பணிகள் முன்னேஇருப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.
பார்ப்போம்.
அனைவருக்கும்‘ 2025’ புத்தாண்டு வாழ்த்துகள்!
December 30, 2024
நேசம் மறக்காத நெஞ்சம்

சென்னைசெண்ட்ரல் ரயில் நிலையத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, தோழர் சுபொ அகத்தியலிங்கம் அவர்களை தற்செயலாகப்பார்த்தேன், அவரை சில மாதங்களாகத்தான் அறிவேன். ஏதோ ரயிலைப் பிடிக்க வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.
எண்பதுகளின்மையப்பகுதி அது. தொழிற்சங்க ஆர்வத்தோடு சென்னை மாநகருக்கு மாற்றலில் வந்திருந்தாலும்,இலக்கிய வேட்கை குறையாதிருந்தது. சு.பொ.அ அவர்கள் நடுவராக இருந்த பட்டிமன்றம் ஒன்றில்திருவொற்றியூரில் பேசச் சென்றிருந்தேன். அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளராகஇருந்தார். அவரது உரை ஈர்த்திருந்தது.
அன்றுசெண்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தவனை தோழர் அகத்தியலிங்கம் நிறுத்திவிட்டார். 'கையில் இரண்டு பயணச்சீட்டுகள்
இருக்கின்றன,இன்னொரு தோழர் வருவதாக இருந்தது, ஆனால், அவர் வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது, நீங்கள்என்னோடு வாருங்களேன்' என்று பதில் சொல்ல இடம் தராமல் ரயிலை நோக்கி அழைத்துச் செல்லஆரம்பித்து விட்டார்.
ரயில்புறப்பட்ட பிறகும் எந்த ஊர் போய்க்கொண்டிருக்கிறோம், என்ன வேலை என்று சொல்லவில்லை அவர்.'சும்மா போய்விட்டு வரலாம், வாங்க தோழர்' என்று சொல்லிவிட்டார். அது பெங்களூர் போய்க்கொண்டிருந்தரயில், வழியில் ஆண்டர்சன்பேட்டையில் இறங்கிவிட்டோம். கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தமிழ் உழைப்பாளிகள் குடியிருப்பில் மறுநாள் காலை இலக்கிய கூட்டம்ஏற்பாடு ஆகி இருந்தது. யார் யார் யாரெல்லாம் பேச இருக்கின்றனர் என்று கேட்க, 'நான்சும்மா அறிமுகம் செய்வேன், நீங்கள் தான் சிறப்புரை' என்று சிரித்தார் அகத்தியலிங்கம்.
மறுநாள்,'இன்றைய இலக்கிய போக்கு' என்ற தலைப்பில் பேசுவார் என்று என்னைத் தள்ளிவிட்டு விட்டார்.என் எதிரே மிக எளிய மக்கள் அமர்ந்திருந்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நல்ல வெயில் படர்ந்திருந்தகாலை 11 மணி நேரம் அது. திறந்த வெளியில் கூட்டம், அவரவர் வீடுகளில் இருந்தபடியும்,எதிரே நாற்காலிகள் சிலருமாக. எந்தப் பெரிய மேடை அனுபவமும் அற்ற ஓர் இளந்தோழன் அவர்கள்எதிரே நிற்கிறேன், ஆனால், ஐம்பது நிமிடங்களுக்கு மேல் பேசியதில், ஒரே ஒரு சிறுகதையைப்பற்றி மட்டும் அப்படி விவரித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என்னை அந்த நாட்களில் தலைகீழாகப் புரட்டிப்போட்டஒரு சிறுகதை அது.
குடிதண்ணீருக்குக் கதியற்ற மக்களது அவல வாழ்க்கையை ஒரு மண்குடம் வாசகர்களுக்கு சொல்லிச்செல்லும் கதை அது. தன்னை எடுத்துக் கொண்டு ஒயிலாக நடைபோட்டு ஆற்றுக்குச் சென்று நீர்மொண்டெடுத்துத் தன்னை அந்தப் பெண் ஏந்திக் கொள்ளும் இடுப்பு பற்றியெல்லாம் பேசிப் போகையில்,இப்போதெல்லாம் தான் வீட்டிலேயே முடங்கி இருப்பதும், எங்கும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டகொடுமையும், அதற்கு எதிராக போராட்டத்தில் அந்தப் பெண் தன்னையும் இடுப்பில் ஏந்தி வெளியேசெல்வதையும் சொல்லும் கதை.
ஒருகட்டத்தில், தண்ணீர் கேட்டு, காலிப் பானைகளை உடைக்கும் அந்த நிகழ்வு நடக்க இருப்பதைஅறிந்ததும், அந்த மண்குடம் மிகவும் பெருமிதம் கொள்வதை, வீட்டில் உள்ள உலோகக் குடங்களுக்குக்கிடைக்காத பாக்கியம்
தனக்குவாய்த்திருப்பதாக அது செம்மாந்து போவதை, 'தாயே, ஏ ஆத்தா என்னை உன் ஆவேசக் கரங்களால்தலைக்கு மேல் தூக்கிப் போட்டு உடை, உங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடைக்க நான் என்னையேஅர்ப்பணித்துக் கொள்ளத் தயாராகி விட்டேன், ஒரு வருத்தமும் இல்லை, எங்கோ யாரோ கைபட்டு, கால் பட்டு உடைந்து போவதை விட, ஒரு போராட்டத்தில்என் உயிர் தியாகம் நடப்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்....'.என்று மண்குடம் பேசுவதாகநிறைவை நோக்கி நகரும் அந்தக் கதையை செம்மலர் இதழில் தான் வாசித்திருந்தேன்.
அந்தக்கதையை எழுதியவரை நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால், எப்படியோ யாரையோ கேட்டு விசாரித்துமுகவரி வாங்கி அவருக்கு என் அன்பை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்த பரவசம் என் பேச்சில்ததும்பி வழிந்து கொண்டிருந்தது. ஜா.மாதவராஜ் என் மனத்தில் நிறைந்து விட்டிருக்கிறார்அன்றிலிருந்தே. . . . . .
மனத்திற்குப்பிடித்த சிறுகதையை எழுதியவர் ஒரு வங்கி ஊழியர் என்றறிந்ததும் கிறுகிறுப்பு மேலும் கூடிவிட்டது.மாதவ், மாது, மாதவராஜ் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம், ஆனால், அவரிடமிருந்துபெயரை வைத்து அழைப்பு வராது, தோழா....தோழர்.. இது தான் அந்த அன்பின் பிழிவு.... அதுஇன்னும் அதிகபட்சம் கனியும் போது, அந்தத் தோழா என்பது அடுக்குத்தொடர் போல, தோழா...தோழா...தோழா என்று உருகிக் கரையும், மனத்திற்கு மிகவும் பிடித்த இனிப்பின் ருசி வாய்த்ததுபோலிருக்கும்.
நேரில்பார்த்த முதல் சந்திப்பு அத்தனை துல்லியமாக நினைவில் இல்லை, ஆனால், அவரது உயரமும்,குதித்துக் குதித்துப் பேசும் அவரது உடல் மொழியும், புன்னகை பூத்திருக்கும் முகத்தில்மின்னல் தெறிப்பான அந்தத் தேடல் மிகுந்த கண்களும், வித்தியாசமான அந்தக் குரலும் உள்ளத்தில்விசையைத் தட்டினால் காஸெட் போலச் சுழலத் தொடங்கிவிடும். அதென்னவோ, பாண்டியன் கிராமவங்கி என்று சொல்லி அறிமுகம் கிடைத்துக் கொண்டிருந்த எல்லோருமே சராசரிக்கு அதிகமானஉயரம், நிர்வாகம் அப்படியொரு விதிமுறை வைத்துத்தான் ஊழியரைத் தேர்வு செய்திருக்குமோஎன்று கூடத் தோன்றியதுண்டு. பா கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், மாதவராஜ். 'அக்கினிகுஞ்சு' என்ற கையிட்டெழுதி சைக்ளோஸ்டைல் செய்து அனுப்பிய வைக்கும் பத்திரிகை வந்தால்அத்தனை
ஆர்ப்பாட்டமாகவாங்கி வாசிப்போம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தில்! மணி மணியான கையெழுத்தில்தீப்பொறி பறக்கும் அந்தத் தொழிற்சங்க இலக்கியம் ஒரு மகத்தான பரிச்சயமாக வாய்த்தது.பேசும்போது கூட தீப்பொறிகள், இலக்கியப் பொறிகள், கனிவான
தோழமைப்பொறிகள்! சீர்காழி கோவிந்தராஜன் பாடல் போல, நித்ய ஸ்ரீ சங்கீதம் அல்லது ஷங்கர் மகாதேவன்குரல் போல உரத்து ஒலிக்கும். ஒரு தொழிற்சங்க சுற்றறிக்கை, அதன் தலைமைப் பொறுப்பில்இருக்கும் தோழர்களது உரை எப்போதும் உச்ச ஸ்தாயியில் இருப்பது சிறப்பு கவன ஈர்ப்பாகஇருக்கும்.
அந்தநாட்களில் வேதியியல் வகுப்பில் ஒரு கேள்வி கேட்கப்படுவது உண்டு. ஒரு வேதியியல் வினைஏன் நிகழ்கிறது? அதற்கான பதில் மிகவும் நுட்பமான எளிமை மிக்கது. வினை புரியும் பொருள்கள்பரஸ்பரம் சந்தித்துக் கொண்டாலே நிலைப்புத் தன்மை இழந்து விடுகின்றன! ஆக்சிஜனும், ஹைட்ரஜனும்ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்தால், அவரவர் பத்திரமாக இருப்பர். அதாவது 'யாரும்இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே', ஆனால், பார்த்தே தீரவேண்டியநேரத்தில் வினை நிகழ்ந்தே விடுகிறது.
அதிகாரிமட்டத்தில் நிர்வாகத் தன்மையைக் கொஞ்சம் மேலதிகம் வெளிப்படுத்தும் யாரும் அதற்கான பதிலைச்சொல்லாமல் அத்தனை இலகுவாக அன்றைய பொழுதைக் கடக்க முடியாது. ஒரு கவித்துவ நியாயம் என்றுஇலக்கியங்களில் சொல்லப்படுவது உண்டு. விளைவுகளை சந்திக்காமல் போக முடியாது. இதை கிராமவங்கி ஊழியர் சங்கம் இயக்கவியல் விதிமுறையாகவே ஆகிவிட்டிருந்தது.
தொழிலாளிவர்க்கம் ஆதிக்க வர்க்கத்தையோ, அதிகார வர்க்கத்தையோ தண்டித்து விட முடியாது என்று நினைப்பவர்களுக்குவேறொரு சாளரம் இருப்பது தெரியாது. நமது நிம்மதியைக் கெடுப்பவர்களை, தாங்களும் நிம்மதியற்றுத்திண்டாட வைக்க, அடிமட்ட வர்க்கத்தால் முடியும். ஆனால், அதற்கான விலையைத் தொழிலாளி வர்க்கம்கொடுக்கத்தான் வேண்டும். அந்த வலியும் வேதனையும் உள்ளத்தை மேலும் திண்மை பெற வைக்கும்.உரமூட்டும். ஒற்றுமையை வளர்க்கும். அந்தோலன் ஜீவி என்று, மாண்பு மிகு பாரத பிரதமர்மோடி, அண்மையில் போராட்டக்காரர்களைப் பார்த்து நையாண்டி செய்தார். 'போராட்டம் இல்லையென்றால்வாழ்க்கையா, இதை ஏற்காதவன் யாரும் மனிதனா' என்றே ஒரு பாடல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்க மேடைகளில் அக்காலத்தில் பாடப்படுவதுண்டு. பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள், விழுப்புண்படாத நாள் எல்லாம் எடுத்து வருத்தத்தோடு எடுத்துப் பார்க்கும் உளப்பாங்கில்தான் தென்பட்டனர்.ஒரு மெமோ கூடக் கண்ணில் பார்க்காத நாளில் தேநீர் அருந்துவது இழுக்கு என்று கூட அவர்கள்வாழ்ந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
தொழில்ஆணையர் அலுவலகம், வழக்கறிஞர் அலுவலகம், நீதி மன்றம், வங்கி ஊழியர் சம்மேளன அலுவலகம்இவற்றில் எதில் அதிகம் கிராம வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளைப் பார்க்கலாம் என்று கேள்விஎழுப்பினால், எல்லாவற்றிலும் என்றுதான் விடைத்தாளில் டிக் அடிக்க வேண்டி இருக்கும்.'ஓடிக் கொண்டே இருக்கும் நதியின் நீர் தூய்மையாக இருக்கும்' என்ற வாக்கியத்தை 'முப்பதுநாளில் இந்தி' எனும் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் புத்தகத்தில் எப்போதோ எழுபதுகளில் வாசித்தநினைவு! போராட்டம் ஓர் இயக்கத்தை இயக்கமாக வைத்திருக்கிறது. அந்த பரபரப்பை, துடிப்பை,வேகத்தை ஆசை தீர அள்ளியள்ளிப் பருகி இருக்கிறேன், மாதவ் கண்களில்!
அவருடையஎழுத்து, கிறங்க வைக்கும் மெட்டில் ஒலிக்கும் ஓர் இசைப்பாடல் மாதிரி இருக்கும். சேகுவேரா,மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள், உடன் சென்று பயணம் செய்த உயிர்த்தோழன் எழுதிய எழுத்துகள்போல் சிறகடிக்கும். ஒரு காலம் வாய்த்தது, 2005 ஜூன் இதழ் முதல், பேங்க் ஒர்க்கர்ஸ்யூனிட்டி இதழ் அமைப்பாளராக இயங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு சில காலமுன்பே,தோழர் கே கிருஷ்ணன், இதழுக்கான அட்டைப்படம் தயாரித்து அனுப்பும் பொறுப்பை மாய்தவராஜ்செய்யக் கேட்டார். எண்ணங்களை அதற்கேற்ற வண்ணங்களில் குழைத்துத் தீட்டியதாய் வரத் தொடங்கியதும்பொலிவு கூடியது. அட்டைப்படம் என்றால் அதற்கான கருப்பொருள் சொன்னால் போதும், மாதவ் அதைஅவருக்கே உரிய பார்வையில் நறுக் என்ற கவிதை வரிகளோடு அனுப்பி விடுவார். மும்பை மாநகரில்அங்கே இங்கே என்று திடீர் திடீர் என்று வெடிகுண்டுகள் வெடித்த கோர நிகழ்வுகள் குறித்தபின்னட்டைப் பக்கமும், அதில் பொறித்திருந்த அவரது கவிதையும் வாசகரை
உறையவைத்தன. அதில் ஒன்று, வீட்டுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று கைப்பேசியில்மனைவியிடம் பேசிவிட்டு ரயிலேறியவர் பின் ஒருபோதும் வீடு திரும்பாத அதிர்ச்சி வரி!
'மெயிலில்அனுப்பி விட்டேன், அட்டைப்படம்' என்பார் மாதவராஜ். வந்திருக்கும், ஆனால், இணைப்பே இருக்காது.இருந்தால் திறக்காது. அதிர்ச்சியோடு அழைத்தால், தோழா... தோழா என்று புன்னகையோடு சொல்லித்தருவார், அந்த முனையில், மாதவ். "உங்கள் கம்ப்யூட்டரில் கோரல் டிரா இருக்கா, பாருங்கள்தோழர், இன்ஸ்டால் பண்ணிட்டு, அப்புறம் மெயிலில் இருந்து டவுன்லோட் செய்யுங்கள், அழகாஓப்பன் ஆகும் தோழா.." என்பார். கோரல் டிரா 12 என்பது ஒரு முறை அவர் 13 வெர்ஷனுக்குமாற்றி அனுப்பியதும் மீண்டும் தரை தட்டியது என் கப்பல். திரும்பவும், தோழா..தோழா..!கற்றுக் கொள்வேன் மறுபடியும் அவரிடமிருந்து. சிடியில் அதை நகல் எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணிகடை ஒன்றில் நேரே பிரிண்ட் அவுட் எடுத்துப் பார்க்கும்போது, க்டைக்காரர் அப்படி ரசித்துப்பார்த்துவிட்டுத்தான் கொடுப்பார் ஒவ்வொரு முறையும். பிரிண்ட்டுக்கு நேரே போய்விட முடியாது. அந்தத் தொழில் நுட்ப விஷயங்கள்ஒவ்வொன்றிலும் சந்தேகங்கள் எழும், அதிலிருந்து இன்னும் இன்னும் கற்றுக் கொண்டே இருந்தோம்.
எழுத்துவேறு, இதழ் ஆசிரியர் பணி முற்றிலும் வேறு. நிறைய கற்றுக் கொள்ள இடமிருந்து அந்த நாட்களில்,மாதவ் எத்தனை எத்தனை அருமையான விஷயங்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அட்டையில்மட்டுமல்ல, உள்ளே ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்ள, எத்தனைவண்ணங்களில் விரிந்தன அவரது படைப்புலகம். தனது தாயைப் பற்றிய அவரது எழுத்து, இரவு நேரத்தில்மனத்தை வருடும் ஒரு வயலின் இழைப்பு போல் ஒலிப்பது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில்தனது மனைவிக்கு நன்றாகப் பாட வரும் என்பது அறியாதிருக்கும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் தனதுபாடலை ரசிக்கும் மகனிடம் நெகிழ்ந்து போகும் தாய் பாத்திரம் எனக்கு மாதவ் எழுத்தையேநினைவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. தன்னோடு பணியாற்றிய எளிய தோழர்களைக் குறித்தஅவரது சொற்சித்திரங்கள், கண்ணீரைப் பெருக்குபவை.
அதன்அடுத்த கட்டம் தான், இருட்டிலிருந்து தொடர்! கிராம வங்கி ஊழியர் தொழிற்சங்க அனுபவத்தைஓர் இலக்கிய பிரதியாக அவர் வடிக்கத் தொடங்கினார். வின்ஸி (இரா குமரகுருபரண்) அதற்கானஅசத்தல் கோட்டுச் சித்திரங்கள் மாதா மாதம் வரைந்தளிப்பார். கெடு தேதி நெருங்க நெருங்கஆவலோடு காத்திருப்போம், இந்த அத்தியாயம் என்ன சொல்லப் போகிறது என.... பத்திரிகையின்வாசிப்பு தளத்தை கனப்படுத்தியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.
அவரதுஅடுத்த பரிமாணத்தை ஆவணப் படங்கள் வருவதற்குக் காத்திருந்தே அறிய முடிந்தது. 'இரவுகள்உடையும்' என்ற தலைப்பை அவர் எப்படி சென்றடைந்தார் என்பது தெரியாது. ஒரே கையெழுத்தில்எப்படி 1.76 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஜெயலலிதா அரசு வேலை நீக்கம் செய்ததோ,அதைப்போலவே, மற்றுமொரு கொடுமை. பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் தங்களது வேலையை சொடுக்குபோடும் நேரத்தில் அவரது ஒற்றைக் கையெழுத்தில் இழந்தனர். அந்தக் குடும்பங்கள் உடைந்துநொறுங்கின. வேலை இழந்தோர் சிலர் உயிர் துறக்க, கைம்பெண்கள் ஆன மனைவியர் வத்திக்குச்சிஅடுக்கி, பீடி சுருட்டி, கண்ணீரை மறைத்துக் கொண்டனர். உயிர் தரித்திருந்தவர்களில் சிலர்பித்துப் பிடித்தவர்கள் போல் கிடந்தனர். அதில் ஒருவர், திக்கு திசை குறிப்பறியாது வேகவேக நடைபோட்டு சாலையின் நீளத்தை அளந்துகொண்டே இருந்தார். அவரது தாய் மனமுடைந்து கதறிஅழுத காட்சி, கல்லைக் கரைத்துவிடும். தங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று என்றறியாத குழந்தைகள்சிலரை நேர்க்கொண்டு பார்க்க முடியாது. எழுத்தாளர் காமராஜ் கேட்கும் கேள்வியும், அந்தமழலையர் சொல்லும் பதில்களும் இதயத்தை நொறுக்கும். 'சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும்சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை ...' என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை மேற்கோள்காட்டித்தான், 'புத்தகம் பேசுது' இதழில் அந்த ஆவணப்படத்திற்கு ஓர் அறிமுகம் எழுதும்வாய்ப்பு கிடைத்தது. அத்தனை பெரிய பணி முடித்த செருக்கு சிறிதும் இன்றி, 'தோழா...இந்தக்கவிதை வரி முன்பே தொடர்பு படுத்தத் தெரியாம போச்சே, படத்தின் தொடக்கத்திலேயே வச்சிருப்போம்'என்று தான் மாதவ் அழைத்துப் பேசினார். அவரை எப்போது பாராட்டினாலும் 'நிஜமாவா...நிஜமாவாதோழா... நல்லா வந்துருக்கா...நீங்க எப்பவும் ரொம்ப பாராட்டுவிங்க… நிஜமா நல்லா இருந்துச்சாதோழா...' என்று தான் அவரது மறுமொழி இருக்கும். அந்தப் பணிவும், தன்னடக்கமும் அவரதுஉயரத்தை மேலும் வளர்த்திக் காட்டும் எனக்கு.
பாப்பாப்பட்டிகீரிப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் தலித் வகுப்பினர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனாலேயே தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தேர்தல்கள்ஒரு சமயம் அறிவிக்கப்பட்டு, கீரிப்பட்டியில் எதிர்ப்பு இன்றி பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டுஊருக்குள் செல்கையில் அவர் எப்படி இழிவு படுத்தப்பட்டார் என்பதை அருகிருந்து பதிவுசெய்திருந்த 'இது வேறு இதிகாசம்' ஆவணப் படம் மிக முக்கியமானது. சாதீயத்தை பாதுகாக்கும்பெரும் பொறுப்பை சமூகம் பெண்கள் தலையில் சுமத்தி இருந்ததை மாதவ் மிக நுட்பமாகப் பதிவுசெய்திருந்தார். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறிய சாதி இந்துப் பெண்களில்சிலர், இந்த ஊரில் இன்னுஞ்சாமி எப்படி இருக்கு, அட சாமி, ஒங்கோயில்ல இடி விழ ... இந்தஊர் நாசமாய்ப் போக என்று மண்ணை வாரி வாரித் தூற்றினர். கேட்கக் கூசும் கொச்சை சொற்களில்தாழ்த்தப்பட்ட வகுப்பார் மீது நெருப்பை அள்ளிக்கொட்டியது அவர்கள் அல்ல, மரபணுக்களில் நூற்றாண்டுகளாக அழுத்தமாகப் பொதிந்திருக்கும்வன்மமிக்க போதனைகள் தான்.
'எந்தசமூக மக்களும் புண்படக் கூடாது, அதே நேரம் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்ஒரு சமூகக் கடமையாகவே படத்தொகுப்பில் கவனம் செலுத்தினோம்' என்று பின்னர் தமது வலைப்பூவில்எழுதி இருந்தார் மாதவ். எல்லைக்கோடுகளுக்குள் ஒரு சிக்கலான சமூக பிரச்சனையின் மீதானபடைப்பை அவர் வழங்கி இருந்தது அருமையான முயற்சி.
தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதுநகர் மாநாட்டை ஒட்டி, புத்தகம் பேசுது இதழுக்காக,மாதவராஜ் அவர்களை நேர்காணல் செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது காலத்தின் கொடைஎன்றே சொல்ல வேண்டும். 2011 ஆகஸ்ட் மாதம் அதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றது ஒருவித்தியாசமான அனுபவம். அவருடன் பேசியதை விடவும், அவருடைய தந்தையோடு கூடுதலாக உரையாடிஇருப்பேன். மாதவ் காதல் வாழ்க்கை இணையர், பள்ளி ஆசிரியை, காலை டிபன் பரிமாறிவிட்டு,பகல் உணவும் ஏற்பாடு செய்துவிட்டுப் பள்ளிக் கூடத்திற்குப் புறப்பட்டுப் போனார். நண்பகல்திரும்ப உணவு நேரத்தில் வந்து சாப்பாடு பரிமாறிவிட்டுத்தான் போனார். அதற்கு முன்பும்,பின்பும் மாதவ் தமது தொழிற்சங்கப் பணிகளுக்காக வெளியே போய்விட்டுத் தாமதமாகத் தான்திரும்ப முடிந்தது.
வாசல்பக்கம் இருந்த அடர்த்தியான மரங்களின் நிழலில் போய் அமர்ந்தோம். அவர் வானத்தை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தவர், என் மீதான அன்பின்நிமித்தம் அதை முழுவதும் புகைக்காமல் அணைத்துக் கீழே போட்டு நசுக்கினார். மேற்கொண்டும்சில சிகரெட்களுக்கு அதே கதி நேர்ந்தது, அன்றைய பொழுதின் வெவ்வேறு முன்னுரிமைகளுக்குஇடையே இந்த நேர்காணலில் தாம் பொருந்தாதது மாதிரி அவருக்குப் பட்டிருக்க வேண்டும்.
அன்றுஎன்னை ரயிலேற்றி அனுப்ப வந்திருந்த போது, அவருக்கு முழு சிகரெட்டும் தேவைப்பட்டது.பின்னர், குரல் தழுதழுக்க, "உங்களுக்கு நான் நியாயமே செய்யல தோழா.... ஏதும் கெடச்சுதாஉங்களுக்கு எழுத.... " என்று மன்னிப்பு கோரும் முகத்தோடு மாதவ் நேர்ப்பட நின்றதுஅவரது அளவு கடந்த
பணிவின்பிரதிபலிப்பு. "நீங்கள் பேசினீர்களா இல்லையா என்பதை இதழ் வந்ததும் பார்த்துத்தெரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு நான் விடைபெற்றுக் கொண்டேன்.
செப்டம்பர்மாத புத்தகம் பேசுது இதழ் வந்தபோது அவர் என்னை அழைக்குமுன் அவருக்கு நிறைய அழைப்புகள்வந்திருந்தன. "தோழா... தோழா... இவ்வளவா நான் அன்னிக்குச் சொன்னேன்... இத்தனை விஷயங்களாவிவாதித்தோம்" என்று கேட்டார். அளவு கருதி, முக்கால் பங்கு தான் போட்டிருக்கிறோம்,முழு நேர்காணல் என்றாவது புத்தகமாக வரும்போது வெளியிடலாம் என்றேன்.
தன்னைவெளிப்படுத்துவதை விடவும், பல்வேறு படைப்பாளிகள் பற்றியே அவரது குரல் அந்த நேர்காணலில்நிறைந்திருப்பதை வாசிக்க முடியும். தொழிற்சங்க ஊழியருக்கும் இலக்கியத்திற்கும் என்னதொடர்பு என்று கேட்பவர்களுக்கு, அந்த நேர்காணலில் இந்த பதில் இருக்கிறது: "ஒருசிறந்த இலக்கியவாதி நல்ல போராட்டக்காரராகவும் இருக்கிறார். ரசனை மிக்கவர்கள் உறவுகளைக்கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். புத்தகங்களைக் கொண்டாடுவோர் சிறந்த தொழிற்சங்கவாதியாகஇயங்க முடிகிறது" என அந்த நேர்காணல் வாசித்துவிட்டு, எழுத்தாளர் வண்ணதாசன் எனக்குஅனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.
அவரதுவலைப்பூவில் தொடங்கியதிலிருந்து அவர் பதிவு செய்து வந்திருந்தது அப்போதே 795 இடுகைகள்!அவற்றுக்கு வந்திருந்த சுவாரசியமான பின்னூட்டங்கள் தொகுத்தாலேயே புதிய இலக்கியமாக இருக்கும்.மறைந்த தோழர் காஸ்யபன் அத்தனை நேசிப்பார் மாதவ் எழுத்துகளை. ஒரு சமத்துவ சங்கப் பலகையாகவேவைத்திருந்தார், அந்தத் தீராத பக்கங்கள் வலைப்பூவை. தாம் இன்புறுவது பிறர் இன்புறக்கண்டு காமுறும் மாதவ் ரசனையில், எனது கட்டுரைகள், கவிதைகள் பலவும் தாமாகவே ஆசையோடுஅறிமுகம் செய்து பதிவிட்டு விடுவார். தர்ப்பண சுந்தரி எனும் என் சிறுகதைக்கு அந்தத்தளத்தில் இன்றும் காணக்கிடைக்கும் பின்னூட்டங்கள் அவரால் கிடைத்த அருமையான அனுபவம்.
வலைப்பூகவிதைகளை முதலில் தொகுப்பாகக் கொணர்ந்தவர் அவராகத் தான் இருக்கவேண்டும். முக நூலுக்குமுந்தைய உலகம் அது. 'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது'என்றார் வள்ளுவர். அடுத்தடுத்த தலைமுறை ஊழியர்கள் திறன் குறித்தும், தேடல் பற்றியும்,ஆர்வம் தொடர்பாகவும் நிறையவே நம்பிக்கை கொண்டிருக்கும் அரிய தொழிற்சங்கத் தலைவர்களுள்ஒருவர் மாதவ். அடுத்தவர் படைப்புகளைக் கொண்டாடி ரசிக்கும் இலக்கியவாதியான அவருக்கு,தொழிற்சங்கத்தில் சிறப்பாக இயங்கும் வேறு யாரையும் மதிக்கவும், கொண்டாடவும் எளிதில்சாத்தியமாயிற்று. தம்மை அவர் அதனால் இழந்து விடவில்லை.
அவரோடுநட்பு முரண் நிறைய உண்டு. அவ்வப்பொழுது பேசித் தீர்த்தவையும், விடுங்க தோழா என்ற நிறைவுச்சொல்லில் கடந்து போனவையும் உண்டு இந்த மூன்று பத்தாண்டுகளில்! நேயம் மறக்காத கண்கள்,அன்பை மறுக்காத மொழி அவருடையவை. காதல் கொண்டாடி அவர். தான் இணைந்து இயங்கிய பொழுதுகளை,எதிர்ப்பட்ட மனிதர்களை, இலக்கிய இதயங்களைக் காதலித்துக் கொண்டிருப்பவர். வங்கிப்பணிநிறைவு, அவருக்கான வாசல்கள் பலவும் திறந்து வைத்திருக்கும். இடது சாரி சிந்தனையோட்டம்,இலக்கிய தாகம், இயங்கிக் கொண்டிருக்கும் வேகம் அவருக்குப் பொருந்தும் ஒரு பக்கத்தைநோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொடுக்கும். மேலும் மேலும் வியக்க வைக்கும் விஷயங்களோடுநம்மை அசர வைக்க அப்போது தயாராக இருப்பார் மாதவ்.
திரும்பிப்பார்க்கையில், வியப்பு மேலிடத்தான் செய்கிறது... எண்பதுகளில், சென்னை செண்டிரல் ரயில்நிலையத்தில் எங்கே புறப்பட்டுப் போகிறோம் என்பதறியாமல் நான் போய்ச் சேர்ந்த இடம், மாதவராஜ்சிறுகதை ரசனைக் களமாக அமைந்தது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அந்த அருமையான படைப்பாளியின்அருகே சாத்தூர் ரயில் நிலையத்தில் அமர்ந்து புன்னகை பரிமாறிக் கொள்ளும் இடத்திற்குநகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. காலம்தான்என்னிடம் எத்தனை கனிவாக இருக்கிறது!
( 2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்டமலரில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் எழுதிய பதிவு. காலத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.)