Mathavaraj's Blog, page 3
January 27, 2025
சார்ஜ் ஷீட் 42/2021- 4ம் அத்தியாயம்

”நான்எங்க போகப் போகிறேன். உங்களோடுதான் இருப்பேன். வருவேன் தோழர்” அறிவுடைநம்பியிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
“நீங்க விட்டாலும் மேனேஜ்மெண்ட் உங்கள விடாது போல…”என்று சொல்லி அவரும் சிரித்தார்.
சன்னல்வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் அறைக்குள் கசிந்திருந்தது. முதன்முதலாய் சாத்தூரில்வேலைக்குச் சேர்ந்து மணி சங்கர் லாட்ஜில் தங்கியிருந்தபோது இப்படியொரு தெரு விளக்கின் வெளிச்சம் அந்த அறைக்குள்ளும் இருந்தது.தூங்கும் வரை கூடவே ஒரு துணை போல இருக்கும். தூங்கி கண் விழித்த மாதிரிதான் இருக்கிறது.முப்பத்தேழு வருடங்கள் ஓடி சேலத்தில் இருந்தேன். எவ்வளவு எவ்வளவோ நடந்து முடிந்து விட்டிருந்தன.
தொழிற்சங்கம்,அதன் லட்சியங்கள், நடவடிக்கைகள் எல்லாம் பிடித்திருந்தாலும்,மிக நெருக்கமாய் உணர்ந்தது இலக்கியம்தான். புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும் அவை குறித்து நண்பர்களோடு உரையாடுவதிலும் கிடைக்கும்அனுபவமும் சுகமும் தனி. சில கவிதைகளும், கதைகளும் எழுதி அந்த ருசியில் லயித்திருந்தேன்.மணிசங்கர் லாட்ஜில் ஒருநாள் வந்து தங்கிய தோழர் சோமசுந்தரம் நான் எழுதி வைத்திருந்தகவிதைகளைப் படித்து பேசியதிலிருந்துதான் அவரோடு பழக்கமானேன். கிருஷ்ணகுமாரின் பேச்சிலும்எழுத்திலும் தென்பட்ட இலக்கியம்தான் என்னை வசீகரித்து அவரிடம் பழக வைத்தது. சங்கத்திற்கு’அக்கினிக்குஞ்சு’ என்று பத்திரிகை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியராய் கிருஷ்ணகுமார்என்னை முன்மொழிந்ததற்கு முக்கிய காரணம் என்னிடம்தென்பட்ட இலக்கிய ஈடுபாடாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி ஆரம்பித்த உறவுகளோடு தொழிற்சங்கப்பணிகள் காலப்போக்கிலும், சூழல்களாலும் ஒட்டிக்கொண்டன.
1986ல்தோழர் கிருஷ்ணகுமார் தனக்கு உடல்நலம் இல்லையென்று, காரைக்குடிப் பக்கம் டிரான்ஸ்பர்கேட்டு தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அனுபவம் வாய்ந்த சோமசுந்தரம்பரமசிவம், கணேசன், போன்ற தோழர்களும் பொறுப்பில் இல்லை. நெருக்கடியான சூழலில் பெரும்பாலும்புதிய தோழர்கள் அடங்கிய ஒரு செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பொதுச் செயலாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டவிஜயகுமார் என்பவர் சில மாதங்களிலேயே காணாமல் போய் விட்டார். தோழர் சோலைமாணிக்கம்,சங்கரலிங்கம் போன்றவர்கள் உதவிப் பொதுச்செயலாளர்களாய் இருந்தனர். நானும் காமராஜும் முதன்முதலாய் செயற்குழு உறுப்பினராயிருந்தோம். பெஃபி ( BEFI ) சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோதண்டராமன்வழிகாட்டினார். திருச்செந்தூர் அருகில் உள்ள பூச்சிக்காட்டு கிளைக்கும் சாத்தூருக்குமாய்பயணங்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள், எழுதி அனுப்பும் சர்க்குலர்கள், உறுப்பினர்கள் சந்திப்புகள் என சதா நேரமும் தொழிற்சங்கப்பணிகளால் நிறைந்தன. நிர்வாகத்துக்கு எதிராய் ஊழியர்களைத் திரட்டி 1987 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டிய ஆண்டுக்கணக்கையே முடிக்காமல்நிறுத்தி வைத்ததெல்லாம் நடந்தது. (1987 வரை டிசம்பர் மாதத்தில்தான் ஆண்டுக்கணக்கு முடிக்கும்வழக்கம் இருந்தது.)
1988ல்கிருஷ்ணகுமார் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். 1990ல் மீண்டும் தன் குடும்பச் சூழல்கள் காரணமாகபொதுச்செயலாளர் பொறுப்பில் தொடர முடியாது என்றார். ஒருநாள் விடிகாலையில் அவரும் தோழர்செல்வகுமார் திலகராஜும் காரில் பூச்சிக்காடு வந்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்குபோட்டியிடும் வேட்பு மனுவில் என்னைக் கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டார். அனுபவம்குறைந்த நான் தயங்கினேன். அப்போதுதான் திருமணமாயிருந்தது.அம்மா வருத்தப்பட்டார்கள். நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி சாத்தூருக்கு வந்தேன்.
இரண்டுவருடங்களில் மீண்டும் கிருஷ்ணகுமார் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.பிறகு சில வருடங்களில் திரைப்படத்துறை மீது அவரின் கவனம் சென்றது. இயக்குனர் பாரதிராஜாவோடுநெருக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரதிராஜாவின்இணை இயக்குனரானார். சங்கப் பணியில் தோழர்கள் முழுமையாக ஈடுபட வேண்டியிருந்தது. 2001ல் தோழர்சோலை மாணிக்கம் பொதுச்செயலாளரானார். நான் சங்கத்தின் செயற்குழுவில் துணைத்தலைவராக இருந்துகொண்டு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் சென்றேன். . 1993க்குப் பிறகு மீண்டும் எழுதஆரம்பித்தேன். ஆறு புத்தகங்கள் வெளிவந்தன. இரண்டு முக்கிய ஆவணப்படங்கள் எடுத்தேன். தீராதபக்கங்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கி தொடர்ந்து எழுதி வந்தேன். தோழர் சோலைமாணிக்கத்தால்அவை சாத்தியமாயின என்று நினைத்துக் கொள்வேன்.
2013ல்தோழர் சோலைமாணிக்கம் பணி ஓய்வு பெற்றார். நான் மீண்டும் சங்கத்தின் பொதுச்செயலாளரானேன்.அதற்கு முன்னர் நான் பொறுப்புக்கு வந்த சூழலுக்கும் அப்போது இருந்த சூழலுக்கும் இருந்தவித்தியாசம் முக்கியமானது. முன்னர் அனுபவம் பெற்ற சக தோழர்களின் கூட்டுத்தலைமையில்சங்கம் செயல்பட்டது. 2013ல் பெரும்பாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்.முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வேகமாக பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.
அந்தநேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான். பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள்சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான்அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில் எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள்சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன், சோமசுந்தரம்ஆகியோர்.
2021ல்பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் முழுசாகச் செல்லலாம் என்றிருந்தேன்.நிர்வாகம் அதை விரும்பவில்லை போல. விடாது கருப்பு என சார்ஜ் ஷீட் கொடுத்து பிடித்துவைத்திருந்தது.
காலையில் தோழர்கள் அண்டோ கால்பர்ட், சங்கர், காமராஜ், தங்க மாரியப்பன், லஷ்மிநாராயணன் ஆகியோருடன்புறப்பட்டு சேலத்திலிருந்து சாத்தூர் வரை நினைவுகளோடுதான்பயணம் செய்து வந்தேன். அம்மு சிரித்துக் கொண்டேவாசலில் ஆரத்தியோடு தயாராய் இருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு தோழர்கள் விடைபெற்றுஅவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.
வீடுஅமைதி கொண்டிருந்தது. ”அப்புறம்..” என அம்மு சிரித்துக் கொண்டே என் தோளைத் தட்டியபடிஅருகில் உட்கார்ந்தாள். ஆசுவாசமாய் இருந்தது.
*
1.5.2021மற்றும் 2.5.2021 இரண்டு நாட்களும் சனி ஞாயிறு. தோழர்களிடமும் அட்வகேட் கீதா அவர்களிடமும்நான் அடுத்து கொடுக்க வேண்டிய கடிதம் குறித்து கலந்தாலோசித்தோம்.
30.4.2021அன்று 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயிலில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை.
முதலாவது,4.30 மணிக்கு மேலாளர் என்னிடம் செஷேஷன் குறித்து தகவல் (intimation) சொன்னதாக மட்டும்கூறப்பட்டு இருந்தது. அந்தத் தகவல் எழுத்துபூர்வமானதா,வாய்மொழியானதா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வாய்மொழித் தகவல்கள் சட்டப்படி செல்லாது.
இரண்டாவது,செஷேஷன் ஆர்டரில் ஓய்வு கால சலுகைகள் என்கொயரிமுடிந்த பிறகு கொடுக்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. செஷேஷன் கொடுப்பதாய்இருந்ததால், பென்ஷன் விதிகளின்படி என்கொயரி நடைபெறும் காலத்தில் தற்காலிக ஓய்வூதியம்(provisional Pension ) வழங்கப்படும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.
நிர்வாகத்தின்ஒவ்வொரு அசைவும், சொல்லும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொள்வதறாகத்தான்இதனைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, செஷேஷனே செல்லாது என்பதே நமது நிலைபாடாய் இருக்கிறபோது, அனைத்து ஓய்வுகாலச் சலுகைகளையும் கேட்க வேண்டுமேதவிர, ஏன் தற்காலிக ஊதியம் தருவதாய் சொல்லவில்லை என கேட்பது சரியாய் இருக்காது. அதன்அடிப்படையில் நிர்வாகத்துக்கு கீழ்கண்டவாறு கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
30.4.2021அன்று 5 மணி வரை நிர்வாகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, மின்னம்பள்ளி கிளைமேலாளரிடம் எனது பணி ஓய்வுக்கான கடிதத்தைக் கொடுத்தேன். அவரும் அதனை பெற்றுக்கொண்டதைஉறுதி செய்து கடிதம் கொடுத்தார்.
பின்னர்நிர்வாகத்திலிருந்து அனுப்பப்பட்ட மெயில் கிடைத்தது. அதில் கிளையின் மேலாளர் என்னிடம் செஷேஷன் (cessation) குறித்து தெரிவித்ததாகச் சொல்லப்பட்டு இருந்தது. அத்தோடு செஷேஷனுக்கான கடிதம்இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி எந்த தகவலையும் மேலாளர் எழுத்துபூர்வமாகஎன்னிடம் தெரிவிக்கவில்லை.
மேலும்30.4.2021 அன்று 5 மணியோடு நிர்வாகத்துக்கும் எனக்குமான முதலாளி – தொழிலாளி உறவு முடிந்துவிட்டது. அதன் பின்னர் நிர்வாகம் எனக்கு அனுப்பிய செஷேஷன்னுக்கான கடிதம் சட்டப்படிசெல்லாது.
எனவேஎனக்கு ஓய்வுகாலச் சலுகைகளான கிராஜுவிட்டி, லீவு சரண்டர், பென்ஷன், கம்யூட்டேஷன் அனைத்தையும்உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3.5.2021அன்று கடிதத்தை மெயிலிலும், பதிவுத் தபாலிலும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்குஅனுப்பினேன்.
சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்தின் இயல்பை கடந்த கால அனுபவம் தெளிவாய் காட்டியிருந்தது.
தோழர்அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்த போது அதனை எதிர்த்து சங்கம் ஹைகோர்ட்டில் தடையுத்தரவு பெற்றது. அதை சேர்மன் செல்வராஜ்மதிக்கவில்லை. பின்னர் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ( contempt petition) தொடுத்தோம். ”முதலில் கோர்ட் உத்தரவை மதித்து அண்டோகால்பர்ட்டை உள்ளே எடு” என்று சொன்ன பிறகேஅவரை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியது.
செல்வராஜ்சட்டத்தை முடிந்தவரை மதிக்க மாட்டார். நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை அமல்படுத்தாமல்இழுத்தடிப்பார். நிச்சயமாய் நிர்வாகம் நான் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஓய்வுகாலச்சலுகைகளைத் தந்துவிடும் என்று நம்பிக்கையெல்லாம் இல்லை.
நினைத்ததுபோலவே அடுத்த நாள் நிர்வாகத்தின் முடிவு தெரிந்தது, 4.5.2021 அன்று வங்கியின் இண்ட்ராநெட்டில் எனக்கு செஷேஷன் வழங்கப்பட்டு உள்ளது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எப்படிசெஷேஷன் செல்லும் என்பதற்கும் ஏன் ஓய்வுகால சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதற்கும்ஒரு காரணம் சொல்ல வேண்டுமே. அது என்னவாயிருக்கும் என்பது நிர்வாகத்திடமிருந்து கடிதம்வந்த பிறகுதான் தெரியும்.
(தொடரும்)

January 25, 2025
”அவ்வளவுதான்!”

’முடிவெட்டணும்” என்று இரண்டு மூன்று நாட்களாய் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்றுஅழைத்துச் சென்றேன். 91 வயது நடந்து கொண்டிருக்கும் அப்பாவின் கைகளைப் பிடித்து கடைக்குள்ளேசெல்லும்போது சிலிர்ப்பாய் இருந்தது.
ஐந்தோஆறோ வயது இருக்கும் போது என்னை கைப்பிடித்து சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு சலூனுக்குஅப்பா அழைத்துச் சென்றது மங்கலாய்த் தெரிந்தது. மெஷின் போட்டு பின் மண்டையில் இழுக்கவும்கதறி அழுதேன். அப்பா என்னருகில் இருந்து சமாதானப்படுத்தியது அவ்வளவு ஆதரவாக இருந்தது.
இருவரின்உள்ளங்கைகளுக்குள் காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. முதன்முதலாய் அப்பாவின் கைப்பிடித்துஉலகம் அறிந்த தருணங்கள் எல்லாம் மிதக்க ஆரம்பித்தன.
”வாங்கபுதுக்குளத்துக்கு குளிக்கப் போவோம்“ அப்பா ஒருநாள் காலையில் எங்களை அழைத்துப் போனார்கள்.வியாபாரம் எல்லாம் நொடித்துப் போக சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தோம்.அப்போது எனக்கு பத்து வயது போலிருக்கும். அந்த நாளை மறக்கவே முடியாது. “அப்பாவக் கெட்டியாப்பிடிச்சுக்குங்கப்பா” அம்மா அனுப்பி வைத்தார்கள்.
வீடுகள்,தெருவைத் தாண்டி மண் பாதை வந்தது. பிறகு வயல் வழியாக நடந்தோம். புற்கள் வளர்ந்த அந்தச்சின்ன வரப்பில் தனித்தனியாகத்தான் நடக்க முடியும். ஸ்கூலில் டிரில் பிரியடில் நடப்பதைப்போல வரிசையானோம். ”பாத்து, பாத்து” என அப்பா குரல் கொடுத்துக்கொண்டே முன்னால் சென்றார்கள்.அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டார்கள். அது ஒரு சாகசம் போலிருந்தது.ஜாலியாகவும் இருந்தது.
வரப்புகளுக்குநடுவில் ஓடிய தண்ணீரில் சின்னச் சின்ன மீன்கள் வளைந்து வளைந்து சென்றன. உட்கார்ந்துகுனிந்து பார்த்தோம். நத்தைகள் மெல்ல அசைந்தன. “என்ன உக்காந்துட்டீங்க..” அப்பா திரும்பிப்பார்த்து கூப்பிட்டார்கள். “நேரமாகுது. ஸ்கூலுக்கு போணும்லா. வாங்க”.
“மீன்போகுதுப்பா” ஆச்சரியமாய் சத்தம் போட்டோம். ”இன்னொரு நா வந்து நிதானமா பாப்போம்” அவசரப்படுத்தினார்கள்.“இன்னும் எவ்வளவு தூரம்ப்பா” என கேட்டோம். ”இதோ வந்துட்டு” என்றார்கள். ஆனால் வரவில்லை.
’இதுதான்நெல்லா, இதத்தான் நாம சாப்பிடுறோமா?’ கேள்விகளும், சட்டெனப் பறந்த வெள்ளைக் கொக்குகளைப்பார்த்த லயிப்புகளுமாய் அப்பாவைத் தொடர்ந்தோம்.
சிறிதுநேரத்தில் வரப்புப் பாதை முடிந்து எதிரே கொஞ்சம் மேடாய்த் தெரிந்தது. அதில் சில பேர்அந்தப் பக்கம் பார்த்தபடி நின்றிருந்தார்கள். சிலர் தலைகளைத் துவட்டிக் கொண்டிருந்தனர்.அருகில் சென்று நாங்களும் மேட்டில் ஏறினோம்.
பார்த்தால்,விரிந்து பரந்து எங்கும் தண்ணீராய் இருந்தது. இதுதான் புதுக்குளமா! அதற்கு முன்னால்மெரீனா பீச்சுக்கு அப்பாவோடும் அம்மாவோடும் சில தடவை சென்றிருந்தோம். ஒரு பெரிய கப்பல்எதோ புயலில் மாட்டி கரையொதுங்கி நின்றிருந்ததை பார்த்திருந்தோம். அலைகளில் காலை நனைத்திருந்தோம்.அப்பாவும் அம்மாவும் ஜாக்கிரதையாய் எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டே இருந்தார்கள்.அங்கே தண்ணீரில் யாரும் உள்ளே சென்று குளிப்பதைப் பார்த்ததில்லை.
இங்கேயோநிறைய பேர் தண்ணீருக்குள் இருந்தார்கள். கை கால்களை அடித்து மிதந்தார்கள். கரையேறிஒருவன் தண்ணீருக்குள் குதித்தான். உற்சாகமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. குளித்துக்கரையேறும் தாழ்வான பகுதியின் வழியாக அப்பா தண்ணீருக்குள் நடந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய்அப்பாவின் உடல் தண்ணீருக்குள் மறைந்து கொண்டே போனது. தலை மட்டும் தெரிந்தது. பின்னர்தலையையும் தண்ணீருக்குள் முழுசாய் விட்டுக் கொண்டர்கள். அப்பாவின் தலை எப்போது வெளியேதெரியும் என துடிப்பாய் இருந்து. இரண்டு மூன்று தடவை அப்படி முங்கி எழுந்தார்கள். தலையைசிலுப்பிக் கொண்டு எங்களைப் பார்த்தார்கள்.
நாங்களும்மெல்ல இறங்கி தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டிருந்தோம். அப்பா எங்கள் அருகே வந்து“வாங்க, என்னை பிடிச்சுக்குங்க” தங்கையை தூக்கிக் கொண்டார்கள். அவள் நடுங்கிக் கத்தினாள்.இரண்டு கைகளிலும் தாங்கியவாறு தண்ணீருக்குள் கொஞ்ச தூரம் கொண்டு சென்று, “பயப்படாத,இங்க ஆழம் கிடையாது” என்று நிற்க வைத்தார்கள். நின்றாள். கால் தரையில் பட்டதும் முகம்நிம்மதியானது. நடுங்கிக் கொண்டே சிரித்தாள். எனக்கு உள்ளே செல்ல தைரியம் கூடவில்லை.“பயப்படாத மாதண்ணா, அப்பா பிடிச்சுக்குவாங்க, வாண்ணா” அழைத்தாள். ஆசையாக இருந்தது.பயமாகவும் இருந்து. மெல்ல மெல்ல தரையில் காலை நகர்த்தி நகர்த்தி சோதித்துப் பார்த்தவாறேஉள்ளே சென்றேன். நெஞ்சுக்கும் கீழேதான் தண்ணீர் இருந்தது. குளிர்ந்து உடல் உஸ்ஸென்றுஆடியது.
மூத்தஅண்ணன் “ஏங்கையப் பிடிச்சக்க அப்பு” என்று பெரிய மனிதனாய் கூப்பிட்டான். அருகில் சென்றதும்ஒரே தாவாய் அப்பாவை கெட்டியாய் பிடித்துக் கொண்டேன். அப்பாவின் வாசனை இதமாகவும் பாதுகாப்பாகவும்இருந்தது.
‘அவ்வளவுதான்’என்றார்கள் அப்பா. “ஓ, நாம் சரியாய் செய்து விட்டோம் போலிருக்கு. இனி கரைக்கு போயிரவேண்டியதுதான்” கரையைப் பார்த்து தவிக்க ஆரம்பித்தேன். “ம்.. அப்பாவைச் சுத்தி நில்லுங்க.ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுக்குங்க. இத மாரிச் செய்யணும்.” மூக்கைப் பிடித்துக்கொண்டு நிதானமாய் குனிந்து தண்ணீருக்குள் தலையை முழுவதுமாய் நுழைத்துக் கொண்டார்கள்.பார்த்ததும் தண்ணீருக்குள்ளேயே எனக்குச் சில்லிட்டது. கொஞ்ச நேரத்தில் தலையைத் தூக்கி‘ம் .. முங்கி எந்திரிங்க” என்றார்கள். நாங்கள் பயந்து பயந்து மூக்கைப் பொத்தி தண்ணீர்அருகே குனிந்து, தலையை நனைக்காமலே குதித்துக் கொண்டு இருந்தோம். அப்பா, “அவ்வளவுதான்,அவ்வளவுதான்” என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு நேரத்தில் தலையை தண்ணீருக்குள் விட்டுசட்டெனத் தூக்கினோம். ‘அவ்வளவுதான்’ என அப்பாவின் குரல் கேட்டது. உற்சாகமானோம். வீட்டுக்குவந்ததும் ஒவொருவரும் தண்ணீரில் முங்கி எழுந்ததை சாகசமாய் பேசிக்கொண்டோம். அம்மா எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டே, “சரி சரி, பாத்து” என்றார்கள். இப்படியாக முதல் நாள் புதுக்குளத்துக்குளியல் சிலிர்ப்போடும், நடுக்கத்தோடும் முடிந்தது.
தொடர்ந்துஅப்பா புதுக்குளத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்ச நாட்களில், யார் முதலில் நனைவதுஎன்று தண்ணீரைப் பார்த்ததும் பாய ஆரம்பித்தோம். நீச்சல் அடிக்க ஆரம்பித்தோம். அப்பாஇல்லாமலேயே புதுக்குளம் குளிக்கச் சென்றோம். வரப்புகளில் நடக்கும்போது மீன்களையும்,நத்தைகளையும் மட்டுமல்ல, பாம்புகளையும் பார்த்தோம். இரண்டாவது அண்ணன் அவைகளைக் கையில்பிடித்து ஓங்கி தரையில் அடிப்பதை ஒரு விளையாட்டாகவே வைத்திருந்தான். லீவு நாட்களில்நான்கைந்து மணி நேரம் விளையாடிக் களைத்து உள்ளங்கை தோலெல்லாம் சுருங்கி வெளிறிப் போகும்.அம்மா சத்தம் போடுவார்கள்.
ரைஸ்மில்,வயல்காடு என்று அலைந்து அப்பா வாரத்தில் சில நாட்கள்தான் வீட்டுக்கு இரவில் வருவார்கள்.படுக்கையில் அப்பாவின் மீது காலைப் போட்டுக்கொண்டு, கைகளை போட்டுக்கொண்டு அண்ணன் தம்பிகள்சுற்றி படுத்துக் கிடப்போம். அப்பாவின் வாசனை அப்படியே மாறாமல் இருந்தது.
ஆறுமுகநேரியில்இருந்த பதினோரு வருடங்களும் பெரும்பாலும் புதுக்குளத்தில்தான். பிறகு ஒவ்வொருவரும்புதுப் புது ஊர்களுக்குச் சென்று விட்டோம். முப்பத்தோரு வருடங்களாக நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம். முதல் நாள் புதுக்குளத்துக்கு சென்ற நினைவு மட்டும் கனவு போல அவ்வப்போதுமலர்ந்து கொண்டே இருக்கிறது. அம்மாவின் குரல் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.“அப்பாவை கெட்டியாப் பிடிச்சுக்குங்கப்பா”
லேசாய்தடுமாறிய அப்பாவின் கைகளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்து ”அவ்வளவுதான்” என்றேன்.
“அப்பாவுக்குஉங்களை விட முடி நிறைய இருக்கு.” முடி வெட்டுகிறவர் சிரித்தார். நான் சிரித்தேன். அப்பாவும்சிரித்தார்கள்.
குழந்தை போலிருந்தார்கள்.
(சென்ற வருடம் எழுதியது. தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன்.)

January 24, 2025
சார்ஜ் ஷீட் 42/2021 – 3ம் அத்தியாயம்

”அஞ்சுமணிக்குள்ள கொடுக்காம இப்ப அனுப்புறாங்க?”
“நாலுமுப்பதுக்கே மேனேஜர் மூலமா செஷேசன்னு தகவல் கொடுத்ததா கூசாமச் சொல்றாங்க. எங்க கொடுத்தாங்க.நாம எல்லாரும் அங்கத்தானே இருந்தோம்”
“அப்பஅஞ்சு மணி வரைக்கும் நிர்வாகத்துட்டயிருந்து எந்தக் கடிதமும் வரலன்னு நாமக் கொடுத்தகடிதத்தை வாங்கி எதுக்கு மேனேஜர் அஞ்சு பத்துக்கு அக்னாலட்ஜ் பண்ணாரு?”
“அடேங்கப்பாஎன்னா உருட்டு உருட்டுறாங்க?’
கோபமாய்,கிண்டலாய் தோழர்கள் பேசிக்கொண்டாலும், நிர்வாகம் பிரச்சினையை முடிக்காமல் தொடர முயற்சிக்கிறதுஎன்பது எல்லோருக்கும் புரிந்தது.
நிர்வாகத்திடமிருந்துஎந்தக் கடிதமும் வரவில்லை என்றதும், சங்கத்திலிருந்து தலைமையலுவலகத்தில் சேர்மனிடம்பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களிடம்1.3.2021 அன்று தர்ணாவின்போது தலைமையலுவலகத்தில் அத்து மீறி நடந்து கொண்டதற்கு மாதவராஜை வருத்தம் தெரிவித்து எழுதித் தரச் சொல்லுங்கள்,சில இன்கிரிமெண்ட்களை குறைத்து ஆர்டர் கொடுக்கிறோம், பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம்எனச் சொல்வதற்கு தயாராய் இருந்திருக்க வேண்டும். எனது பணி ஓய்வை நானே அறிவித்து கடிதம் கொடுத்துவிட்டுசென்று விடுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படிஒரு முடிவு எடுத்து வைத்திருந்தது அங்கிருந்த சில தோழர்களைத் தவிர வேறு யாருக்கும்தெரிந்திருக்கவில்லை. கடிதம் கொடுத்ததை மேலாளரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிர்வாகத்திடம்கேட்டுவிட்டு கையெழுத்திடலாம் என்ற யோசனையும்கூட அவருக்கு அந்த நேரத்தில் வந்த மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை மறுத்திருந்தால்என்ன செய்வது என்பது வரைக்கும் திட்டமிட்டிருந்தோம்.
திட்டமிடுவதும்,அதை நிர்வாகத்துக்கு தெரியாமல் வைத்திருப்பதும் ஒரு அமைப்புக்கு மிக முக்கியம். சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளநிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில்முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும்,சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும் தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத்தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக்கொடுக்காமல் இருப்பது முக்கியமானது. எனவேதான் தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கு வருகிறவர்கள்நம்பகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது முதன்மையான தகுதியாகிறது.
ஆக,நிர்வாகம் தகவல் கிடைக்காமல் இந்தச் சுற்றில் நிலைதடுமாறிப் போயிருப்பதை, அந்த மெயில்உணர்த்தியது. தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபாலன், அட்வகேட் கீதா ஆகியோருக்குத் தெரிவித்தோம்.
மாறிமாறி தோழர்களிடமிருந்து போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. சாத்தூரிலிருந்து தோழர்காமராஜ் பஸ்ஸில் பயணம் செய்து களைப்போடு வந்து சேர்ந்தார். முந்தினநாள் தங்கமாரியப்பன்,லஷ்மிநாராயனன், சங்கரோடு வருவதாக இருந்தவர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருந்தார்.அன்றிரவே சாத்தூருக்குக் கிளம்பாமல், அடுத்த நாள் விடிகாலையில் கிளம்பிச் செல்வதாகமுடிவு செய்தோம்.
வீட்டில்அம்முவுக்குப் போன் செய்து எல்லாவற்றையும் சொன்னேன். ”இருக்கட்டும் வாங்க. பாத்துக்கலாம்”அவளுக்கே உரிய சிரிப்போடு சாதரணமாகச் சொல்லிவிட்டு ”காலைலயா வர்றீங்க. பாத்து நல்லபடியாய்வாங்க” என முடித்துக் கொண்டாள். எப்பேர்ப்பட்டபெண் அவள்! முழு விவரங்கள் தெரியா விட்டாலும், பணி ஓய்வு பெறப்போகும் நேரத்தில் என்னைப்பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே நிர்வாகம் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறது என்று தெரிந்திருந்தாள்.“நீங்களும் உங்க சங்கமும் அவங்கள விடவாப் போறீங்க” என்பதுதான் அவளிடமிருந்து முதலில்வந்த வார்த்தைகள். இந்த தொழிற்சங்கத்தின் மீது அவளுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை.
இரவில்எல்லோரும் சங்க அலுவலகத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சேலத்திலிருந்தபத்தொன்பது மாதங்களில் ஆறு மாதங்கள் போலத்தான் இயல்பான வாழ்வு காலம். மீதி பதிமூன்றுமாதங்களும் கொரோனாக் காலம்தான்.
நிர்வாகம்அதுதான் சமயம் என்று தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. நோய் குறித்த அச்சமும், போக்குவரத்துஅற்ற சூழலும் அப்பியிருந்த நாட்களில் கூட நிர்வாகம் ஊழியர்கள் பக்கம் நின்று யோசிக்கவில்லை.”லீவுக்கு ஊருக்கு வந்தோம், இப்போது லாக் டவுன் அறிவித்து விட்டார்கள். நாங்கள் எப்படிகிளைக்குச் செல்வது” என பெண் ஊழியர்கள் பதறினார்கள். தினமும் இருநூறு கி.மீக்கும் மேலேபல ஆண் ஊழியர்கள் பைக்கில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ”பேங்க்கில் வேல செய்றீங்க,கொரோனாவை கூட்டிட்டு வந்துராதீங்க” என்று வேலை பார்த்த இடங்களில் வாடகைக்கு இருந்தஊழியர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொன்னார்கள். ஊழியர்களின் போன் அழைப்புகளில்வலியும் வேதனையுமே இருந்தது. நிர்வாகத்திடமிருந்து எந்த அசைவும் ஆதரவும் தென்படவில்லை.அப்போது நான் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராய் இருந்தேன். சங்கத்திலிருந்து பெரும்பாலும்ஹெச்.ஆர்.எம்முக்கோ, ஜி.எம்முக்கோதான் பேசுவோம். ரொம்ப அவசியமாக இருந்தால் மட்டும்சேர்மனுக்கு போன் செய்வோம். ஒரு பெண் ஊழியர் ஸ்கூட்டியில் வங்கிக்கு வரும்போது, அந்தப்பகுதியை ’கண்டெய்ன்மெண்ட் ஜோன்’ என அறிவிக்கப்பட்டதாகக் கூறி அவரை போலீஸார் திருப்பிஅனுப்பி் இருக்கிறார்கள். அந்த பெண் ஊழியர் சம்பந்தப்பட்ட மண்டல மேலாளருக்குத் தெரிவித்திருக்கிறார்.மண்டல மேலாளரோ ”அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் பிராஞ்ச்சுக்கு போயாக வேண்டும்”என சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் ஊழியர் அழுதுகொண்டே எனக்கு போன் செய்தார். மிஸ்டர் செல்வராஜ்தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மனாக வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் முறையாக போன்செய்து பேசினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரச்சினையைச் சொன்னேன். ”அதுக்குஉடனே எங்கிட்ட பேசணுமா சார்? நா என்ன சும்மாவாஇருக்கேன்?” என எடுத்தவுடன் எரிச்சல் பட்டார். நான் நிதானமாக “இந்த மூன்று மாதங்களில்ஒருதடவை கூட உங்களிடம் நான் போனில் பேசியதில்லை. இப்போது அவசரம் என்பதால் பேசுகிறேன்” என்றுசொன்னேன். ”சரி, பார்க்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாய்ச் சொல்லி போனை வைத்துவிட்டார்.
சேர்மன்செல்வராஜின் குரலும், தொனியும் வித்தியாசமாய்ப் பட்டது. முதன்முறையாக பேசும் ஒருவரிடம்எதற்கு இத்தனை வெறுப்பும் அலட்சியமும்? எனது தொழிற்சங்க வாழ்வில் நான் பார்க்கும் பதினேழாவதுசேர்மன் அவர். யாரிடமும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை.
அதுபற்றியெல்லாம்பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு தோழர், “நம் சங்கத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும்முன்கூட்டியே நிறைய ஏத்திவிட்டுத்தான் செல்வராஜை இந்தியன் பேங்க்லயிருந்து இங்கு சேர்மனாகஅனுப்பியிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க. முந்தைய சேர்மன் தன்ராஜ் நம்ம சங்கத்துக்குரொம்ப இடம் கொடுத்துட்டாராம். இந்த பேங்க்ல நம்ம ரெண்டு சங்கமும் வச்சதுதான் சட்டமாயிருக்காம்.நம்ம சொல்றதத்தான் மெம்பர்கள் கேக்காங்களாம். ரீஜினல் மேனேஜர்லாம் நம்மைப் பாத்து பயப்படுறாங்களாம்.பழைய அதியமான் பேங்க் கேங் ஒன்னு லாபி பண்ணிட்டு இருக்காங்க. அந்த லாபில வந்தவர்தான்இப்போ ஹெச்.ஆர். எம்மா இருக்கும் ஜெயக்குமார். அவருக்கு நம்ம யூனியன்னாலே ஆகாது.” என்றுஅவருக்கு கிடைத்த தகவல்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
கொரொனாக்காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அவர் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தன.கூட்டமாய்ச் சேருவதும், இயக்கம் நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நிர்வாகத்தின்நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டவையாகவேத் தெரிந்தன.
அண்டோகால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்ததில் நிர்வாகத்தின் தாக்குதல் படலம் ஆரம்பித்தது. கோவிட்தொற்று காலத்தில் ஊழியர்களின் நலனில் நிர்வாகத்தின் அலட்சியத்தை சங்கம் அம்பலப்படுத்தியது.தோழர் ஸ்ரீனிவாசனின் மரணம் வங்கியையே உலுக்கியது. வங்கிக்கு வருவதும் செல்வதுமே பெரும் நெருக்கடியாகஇருந்த அந்த நேரத்தில் காலை 10 மணிக்கு சரியாக கம்ப்யூட்டரில் வருகையைப் பதிவு செய்யும்முறையை நிர்வாகம் அமல்படுத்தியது. சங்கம் விமர்சனம் செய்தது. சேர்மன் செல்வராஜ்க்குபொத்துக்கொண்டு வந்துவிட்டது. சங்கத்தோடு பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார். 21.7.2020அன்று சங்கத்திலிருந்து ஜி.எம்மை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாகவேஇருந்தது. அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த தோழர்கள் அண்டோ கால்பர்ட், சந்தான செல்வம்போன்றவர்கள் கைகளை தூக்கியபடி ஒரு செல்பி எடுத்து சங்கத்தின் பிரத்யேக வாட்ஸ் அப் குரூப்பில்பதிவிட்டிருந்தனர். அதை எடுத்து வைத்துக் கொண்டு தோழர் அண்டோ கால்பர்ட் தலைமையலுவலகத்திற்குள்ஆரப்பாட்டம் செய்ததாகவும், வங்கியின் ஒழுக்க நெறிகளை மீறி விட்டதாகவும் சஸ்பெண்ட் செய்ததுநிர்வாகம். கோவிட் நேரத்திலும்நம் சங்கங்கள் தலைமையலுவலகத்தின் முன்பும், மண்டல அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள்நடத்தின. சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அண்டோவின் சஸ்பென்ஷனை எதிர்த்து தடையுத்தரவுபெற்றது. மூக்குடைபட்ட நிர்வாகம் அண்டோவை தூத்துக்குடியிலிருந்து கடலூர் அருகில் டிரான்ஸ்பர்போட்டு தன் ஆத்திரத்தை விடாமல் காட்டியது.
யோசித்துப்பார்க்கும்போது தலைமையலுவலகத்தில் சங்கத்தின் தலைவர்கள் நடமாடுவதே நிர்வாகத்துக்கு பொறுக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்போது எங்கள் ஆறு பேருக்கு கொடுத்த சார்ஜ் ஷீட்டிலும் தலைமையலகத்தில் நுழைந்து வன்முறையாகநடந்து கொண்டதாகத்தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது ஒரு நிர்வாகம் ஒரு சங்கத்தின்மீது வன்மமும், வெறுப்பும் கொண்டிருக்கிறதோ, அப்போது இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும். தன்பயத்தில் இருந்து உருவாகும் நடவடிக்கைகளாகவும் இருக்கும்.
1984ம்ஆண்டு பாண்டியன் கிராம வங்கியில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சோமசுந்தரம் போன்றதோழர்கள் தலைமையில் போராட்டக்குணம் கொண்ட சங்கம் உருவெடுத்தபோதும் இதே நிலைமை இருந்தது. தலைமையலுவலகத்தில் சங்கத்தலைவர்கள் காலடி எடுத்து வைத்தாலே சூழல்கள் இறுக்கமாகும். சேர்மனின் அறைக்குள் ரெட் லைட் எரிந்து விடும். தோழர் கிருஷ்ணகுமாரோடு மெம்பர்கள் தலைமையலுவலகத்தில்வைத்து பேசவே பயந்தார்கள். தலைமையலுவலகச் சுவரில்சங்கம் ஒட்டிய போஸ்டரை ஒரு சூப்பிரண்டட்டே( டிபார்ட்மெண்ட் ஹெட்) வெளியே வந்து கிழித்தார். அதையெல்லாம் மீறித்தான் சங்கம்வளர்ந்தது.
அந்தக்கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் மலைகள் நிழல் உருவங்களாய் நின்றிருந்தன.மெல்லிய காற்று வீசியது. தேய்பிறை ஆரம்பித்து மூன்று நாட்களே ஆகியிருந்தன. முழு நிலவின்மேலே கொஞ்சம் காணாமல் போயிருந்தது. அடுத்து வளர்பிறை வரத்தானே செய்யும்.
எல்லோரும்கீழே வந்து படுக்க ஆரம்பித்தோம். இந்த கொரோனாக் காலத்திலும் குறைந்தது பத்து முறைக்கும் மேலாக இந்த சங்க அலுவலகத்தில்இருபது இருபத்தைந்து பேர் வந்து தங்கி இப்படியெல்லாம் பேசியிருந்தோம். முக்கிய காரியங்களில்ஈடுபட்டிருந்தோம்., நடு இரவில் எழுந்து பார்த்தால் அறைகளெங்கும் இளம் தோழர்கள் அசையாமல்மூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்தசங்கத்தின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை தந்த நாட்கள் அவை. நிர்வாகத்தின்அடிமடியில் வெடி வைத்த நாட்களும்தான். கொஞ்சகாலம் எடுக்கலாம். ஒவ்வொன்றாக நிச்சயம் வெடிக்க ஆரம்பிக்கும்.
அருகில்படுத்திருந்த தோழர் அறிவுடைநம்பி, “அடுத்து நீங்க லெட்டர் கொடுக்கணும்ல” என்று கேட்டார்.
“ஆமாதோழர். ஞாயித்துக்கிழமைக்குள்ள நாம் முடிவு பண்ணிருவோம். திங்கக் கிழமை கொடுத்துருவோம்”என்றேன்.
“ம்…இனும எப்போ வருவீங்க தோழர்?” என்றார். அந்தக் குரலில் அன்பும், பிரிவும் அடர்ந்திருந்தது.
(தொடரும்)

January 23, 2025
Girls will be Girls - ஆங்கிலப் படம்

இமயமலை அடிவாரத்தில் உள்ள கட்டுப்பாடு மிக்கஒரு பள்ளி. ”பழமையான இந்திய கலாச்சாரத்தை மதிப்பதாக” மீரா சொல்ல மற்ற மாணவர்களும் அதையே பின்சொல்ல, உறுதிமொழி எடுக்கும்காட்சியோடு படம் ஆரம்பிக்கிறது.
நன்றாக படிக்கிற, கீழ்ப்படிதல் மிக்க பெண்ணாய்மீரா அறிமுகம் ஆகிறாள். பதின்ம வயதின் உடல் மாற்றங்களை அறியவும், ரசிக்கவும், ஆராயவும்செய்கிறாள். நேர்மையான, வெளிப்படையான பெண்ணானஅவள் அந்தத் தருணங்களை எதிர்கொள்ளும் விதமும், அதில் பெறுகிற அனுபவமும்தான் கதை.
ஸ்ரீ என்னும் புது மாணவன் மீது அவளுக்கு ஈர்ப்புஏற்படுகிறது. ஒருவரையொருவர் உடல் ரீதியாகவும் அறிந்து கொள்ள முனைகிறார்கள். ’நட்பைத்தாண்டி விடக் கூடாது’ என்னும் மீராவின் தாய் அனிலா அந்த இருவரின் உறவுக்கு இடையே தன்னை நுழைத்துக் கொள்கிறாள். அம்மாவின் நடவடிக்கைகள்மீராவுக்கு எரிச்சலாக மட்டுமல்ல, பொறாமையாகவும் இருக்கிறது. அவர்கள் மூவரும் ஆடும்நடனமும் அசைவுகளும்தான் பார்வையாளர்களுக்கு எவ்வளவு சொல்கின்றன!
உடல் ரீதியாகவும், உணர்வின் கிளர்ச்சியாகவும்செக்ஸை அணுகாமல், அதனை அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ளும் நிதானத்தை படம் முன்மொழிகிறது.அந்த உலகத்திற்குள் தன்னை மறந்து மௌனத்தோடு நுழையாமல் மீரா அந்த சமயங்களில் பிரக்ஞையோடும், உரையாடுபவளுமாய் இருக்கிறாள்.
அவளுக்கும் ஸ்ரீக்கும் இருக்கும் உறவை வைத்து பள்ளியில்மற்ற ஆண் பையன்கள் மீராவை அவமானம் செய்யும் ஒரு நாள் வருகிறது. யாருமற்றவளாய் மீராநிற்க நேர்கிறது. அம்மா வந்து அவளை அரவணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.
அம்மாவைப் பற்றிய பிரக்ஞை மீராவுக்கு தட்டுப்படஆரம்பிக்கிறது. எப்போதாவது வரும் அவளுடைய கணவன் - தனது தந்தை -இல்லாத அந்த வீட்டில்எப்போதும் சமையல் செய்து கொண்டும், வீட்டு வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் அம்மாவின்உலகத்தை எட்டிப் பார்க்கிறாள்.
மிக மெல்லிய சத்தங்கள், பேசவும் யோசிக்கவும்வைக்கிற காமிரா கோணங்கள், கதாபாத்திரங்களின் உடல் அசைவுகள், மிக முக்கியமாய் கண்கள்,இந்தப் படத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க வைக்கின்றன. ஒரு கவிதையின் வரிகளைப் போலகாட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மீராவாக பிரீத்தியும், அனிலாவாக கனியும் அற்புதமாகநடித்திருக்கிறார்கள். நம் நினைவில் நடமாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.படத்தின் இயக்குனர் ஒரு பெண். சுசி தலாதி. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தவர்.
அம்மாவுக்குத் தலையில் எண்ணெய் வைத்து, அந்தமுடிகளுக்குள் அளைந்து, அப்படியே அதில் தன் முகத்தை மீரா வைக்கும் காட்சியில் நாம்விம்மிப் போகிறோம்.
‘பழமையான இந்தியக் கலாச்சாரத்தை’ மதிக்கும் எந்ததலைமுறைக்கும் இந்தப் படம் அருவருப்பாகவே இருக்கும்.
ஆண் பெண் உறவு குறித்து சில முக்கிய உரையாடல்களைஇந்தத் தலைமுறைக்கு கவனப்படுத்தும் சினிமா இது என வரவேற்கலாம். என்ன, நமக்கு சம்பந்தமில்லாத இடத்தில் எங்கோ இந்தக்கதை நிகழ்வதாய் தோன்றுவதைத்தான் தவிர்க்க முடியவில்லை.
அமேசன் பிரைமில் Girls will be Girls இருக்கிறது.

January 22, 2025
சார்ஜ் ஷீட் 42/2021 – 2ம் அத்தியாயம்

நிர்வாகத் தரப்பில் இருந்து எழுத்துபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை.
ஒருவேளை நிர்வாகம் பணி ஓய்வு குறித்து எந்தத் தகவலையும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு இருந்தோம். அட்வகேட் கீதா, பெஃபி (BEFI) மாநிலத் தலைவர்களில் முக்கியத் தோழர் சி.பி.கிருஷ்ணனையும் கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தோம்.
”எனது வங்கிப்பணி இன்று 5 மணியோடு நிறைவடைகிறது. பணியிலிருந்து விடையனுப்புவது குறித்து எந்தத் தகவலும் நிர்வாகத்திடமிருந்து 5 மணி வரைக்கும் வரவில்லை. எனவே, நான் வங்கிப்பணியிலிருந்து 5 மணிக்கு நான் விடுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது” என ஆங்கிலத்தில் டைப் செய்து தயாராக வைத்திருந்த கடிதத்தின் இரண்டு நகல்களை கிளையின் மேலாளர் கதிர்வேலுவிடம் கொடுத்தேன்.
தோழர்கள் அண்டோ, அறிவுடைநம்பி, அஸ்வத், சங்கர் போன்ற தோழர்கள் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். மற்றவர்கள் கவுண்டருக்கு அந்தப் பக்கம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். கனத்த அமைதி.
மேலாளர் படித்துவிட்டு இரண்டு நகல்கள் எதற்கு என்பது போல என்னைப் பார்த்தார்.
“ஒரு காப்பி உங்களுக்கு. இன்னொரு காப்பில நீங்க எனக்கு (acknowledge) அக்னால்ட்ஜ் செஞ்சு தரணும்” என்றேன்.
திரும்பவும் கடிதத்தை ஒருமுறை படித்தார். வங்கியின் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லாமல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக எழுதி, கையெழுத்திட்டு கீழே 5.10 என்று நேரத்தையும் குறிப்பிட்டுத் தந்தார்.
என் கையில் அவர் தந்த கடிதம் எவ்வளவு மதிப்பு மிக்கது. அந்த காகிதம் பேசும் வார்த்தைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளவே முடியாது. அதையெல்லாம் கதிர்வேலு அறிந்திருந்தாரா என்று தெரியாது. நேர்மையாக பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டார் என்பது தெரிந்தது.
எனக்காகவோ அல்லது நிர்வாகத்துக்காகவோ அவர் செயல்படவில்லை. எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது. உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
”மிக்க நன்றி” அவரது கைகளைப் பற்றிச் சொன்னேன். மேலாளரும், கிளர்க்கும், அங்கிருந்த அப்ரைசர், தற்காலிக ஊழியரும் சேர்ந்து ஒரு நினைவுப்பரிசை வழங்கினர். தோழர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.
விடைபெறும்போது, “சார் உங்களோடு இந்த பிராஞ்ச்சில் வேல பாத்தத மறக்க மாட்டேன். நீங்களும் நினைவில் வச்சுக்கங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
”எப்படி உங்கள மறப்பேன்” என்று ஆரத் தழுவிக் கொண்டேன்.
சேலத்தில் இருக்கும் சங்க அலுவலகத்திற்குத் திரும்பினோம். பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு 2019 அக்டோபரில் இருந்து இந்த கிளையில் பணியாற்றி வந்தேன். இதே சாலையில் தினமும் பைக்கில் வந்து போய் இருந்தேன். சங்கக் கூட்டங்கள் இல்லாத சனி ஞாயிறு கிழமைகளில் சாத்தூருக்கு ரெயிலில் போய் வந்தேன். 2020 மார்ச்சில் கொரோனா பரவிய பிறகு, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் போயின. நிர்வாகத்திடம் சாத்தூர் அருகில் பணியாற்ற சங்கத்தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்படியொரு ஏற்பாட்டை அந்த நெருக்கடியான தருணத்தில் செய்து கொடுக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
சேர்மன் செல்வராஜ் மறுத்துவிட்டதாக ஹெச்.ஆர்.எம் ஜெயக்குமார் சொன்னார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு சாத்தூரில் இருந்து தனியாகக் காரில் கிளம்பி 320 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி கிளைக்கு சரியாக 10 மணிக்கு வருவேன். கோயம்புத்தூரிலிருந்து ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி சேலம் வருவார். நாங்கள் சமைக்க ஆரம்பித்தோம். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். எவ்வளவோ பேசியிருந்தோம். பெரும்பாலும் சமூகம், அரசியல், தொழிற்சங்கம்தான். பத்தொன்பது மாதங்கள் நினைவுகளாகி ஓடிக்கொண்டு இருந்தன.
இடப்பக்கம் மலைக்குன்றுகளும், அதற்கு ஊடே ஓடிய பாதைகளும் மங்கிய சாயங்கால வெயிலில் ’அப்பாடா’ எனத் தெரிந்தன. அடிவாரத்தில் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கொய்யா, ஏழலைக் கிழங்கு விற்கும் வயதான அம்மா அப்போதும் அந்த மரத்தடியில் தனியாக உட்கார்ந்திருந்தார். ஒவ்வொரு இடமும் பழக்கமானவை. எல்லாம் பின்னால் போய்க்கொண்டு இருந்தன.
“அண்ணே, மேலாளர் கையெழுத்து போட்டுட்டாரே. இன்னேரம் மேனேஜ்மெண்ட் அவரப் படுத்தி எடுத்திருப்பாங்களே” என்றான் அண்டோ. ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் செயல் தலைவராய் இருந்தான் அண்டோ. ’அண்ணே” என்று அழைத்து நெருக்கமாக பழகுகிறவர்களை தம்பி என்று அழைக்கத் தொடங்கி அது நாளடைவில் ’அவன்’ , ‘இவன்’ என்று தன்னிச்சையாக அழைக்கும்படி ஆகிறது. தோழர் என அழைக்கப்படும்போது ‘அவன்’, ‘இவன்’ என்று பெரும்பாலும் வருவதில்லை.
”மேனேஜர் சாயங்காலம் நாலு மணியிலயிருந்து யார்ட்டயோ மாறி மாறி போன் செஞ்சுக்கிட்டு இருந்தார். நாமக்கல் ரீஜினல் மேனேஜர்ட்ட பேசியிருக்கணும். இல்ல, ஹெச்.ஆர்.ல ஜெயக்குமார்ட்ட பேசியிருக்கணும். அவங்க சேர்மன்ட்ட கேட்டிருப்பாங்க. எல்லாம் அவர்தான. என்ன சொன்னாரோ?” என்றான் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவித் தலைவராயிருந்த சங்கர்.
”ரெண்டு நாளைக்கு முன்னால ஏப்ரல் 28ம் தேதி யூனியனுக்கு மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்க விடாம செக் ஆப் வசதியை நிறுத்துறாங்க. நம்ம சங்கத்து மேல மேனேஜ்மெண்ட வச்சிருக்கிற வன்மம் அப்பட்டமாத் தெரியுது. அதனால நாங் கூட நெனைச்சேன். இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு ரிடையர்மெண்ட் கொடுக்காம நிறுத்தி செஷேஷன் (cessation) ஆர்டர் கொடுத்துவாங்கன்னு. ஆனா எதுவும் கொடுக்கல?” அண்டோ கேட்டுக்கொண்டே யோசித்தது தெரிந்தது.
அவன் கேட்டது சரிதான். சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகம் கடுமையான வன்மத்தோடு மூர்க்கத்தனமாக கடந்த இரண்டு மாத காலமாக தாக்குதல்கள் நடத்தி கொண்டு இருந்தது. ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுத்தது. ரிடையர் ஆன தோழர்கள் சோலைமாணிக்கம், கிருஷ்ணனுக்கு பென்ஷனை நிறுத்தப் போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பியது. சேர்மன் செல்வராஜே தரம் இறங்கி சங்க நடவடிக்கைகளை சிறுமை படுத்தி, ”இவர்களிடம் எந்த மொழியில் பேசுவது என்று தெரியும்.” என 20.4.2021 அன்று இண்ட்ராநெட் சர்க்குலரில் ஊழியர்களிடம் தொடைதட்டி கொக்கரித்திருந்தார். அந்த சர்க்குலர் முழுவதும் பொய்யும், அவதூறுகளும்தான். எந்த வங்கியின் உயரதிகாரியும் அப்படி ஒரு தொனியை பயன்படுத்தி இருக்க மாட்டர்கள். அந்த சர்க்குலர் வெளியிட்ட சில நாட்களில் சங்கத்தின் செக்-ஆப் நிறுத்தப்பட்டது.
அப்படி இருக்கும்போது ஏன் இன்று எனக்கு செஷேஷன் ஆர்டர் கொடுக்கவில்லை? நிர்வாகத்தின் முன்பு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருந்தன. அதை சங்கமே தெளிவாகவே முன்வைத்திருந்தது.
மொத்தம் ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதும் சங்கத்திலிருந்து அட்வகேட் கீதா, பெஃபி சங்கத் தலைவர்களோடு விவாதித்தோம். சார்ஜ் ஷீட்டிற்கு சென்னை ஹைகோர்ட்டில் தடையுத்தரவு வாங்குவது என யோசனை வந்தது.
அப்போது நான் என் கருத்தை முன்வைத்தேன். மற்ற ஐந்து தோழர்களும் இளம் தோழர்கள். அவர்களுக்கு பணிக்காலம் நிறைய இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அது எவ்வளவு காலம் இழுத்தடித்தாலும் பிரச்சினை இலை. ஆனால் எனக்கு ஒரு மாத காலமே பணிக்காலம் இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்கு வருடக் கணக்கில் நடந்தால், அதுவரைக்கும் ஓய்வுகாலச் சலுகைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். எனவே நான் மட்டும் சார்ஜ் ஷீட்டிற்கு பதில் கொடுக்கிறேன். ஹைகோர்ட்டில் எனக்காக வழக்கு தொடர வேண்டாம். அப்போது நிர்வாகத்துக்கு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருக்கும். ஒன்று என் சார்ஜ் ஷீட் பதிலை ஏற்றுக்கொண்டோ அல்லது ஏற்றுக்கொள்ளாமலோ ஒரு தண்டனை கொடுத்து பணி ஓய்வுக் கடிதம் கொடுக்கும். அந்த தண்டனை ஏற்புடையதாக இல்லையென்றால் அப்போது நாம் கோர்ட்டுக்குச் செல்லலாம். இரண்டாவது ஆப்ஷன், நிர்வாகம் என் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் என்கொயரி நடத்தலாம். அப்படி நடத்தினால் அதை எதிர்கொண்டு நிர்வாகத்தை அம்பலப்படுத்தலாம். அத்தனையும் பொய்கள். அதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் கிடையாது. நிர்வாகம் அதனை நிரூபிக்க முடியாது.” என்றேன்.
அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என அன்புக்குரிய தோழர்கள் தயங்கினார்கள். அட்வகேட் கீதா அவர்களும், தோழர் சி.பி.கிருஷ்ணனும் அப்படியேச் செய்யலாம் என்றார்கள். அதன் அடிப்படையில் மற்ற தோழர்களுக்கு ஹைகோர்ட் சென்று சார்ஜ் ஷீட்டிற்கு அட்வகேட் கீதா தடையுத்தரவைப் பெற்றார்கள்.
நான் சார்ஜ் ஷீட்டிற்கு12.4.2021 அன்றே பதில் அளித்துவிட்டேன். அதன் மேல் முடிவெடுக்க நிர்வாகத்துக்கு பதினெட்டு நாட்கள் அவகாசமிருந்தது. ஒன்று எதாவது தண்டனை அளித்து என் ஃபைலை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என்கொயரி நடத்தப் போவதாகக் கூறி செஷேஷன் ஆர்டர் தந்திருக்க வேண்டும்.
ஆனால் நிர்வாகம் இரண்டையுமே செய்யவில்லை. அதைத்தான் தோழர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
சங்க அலுவலகம் வந்ததும் இறங்கினோம். அருகில் உள்ள கிளைகளில் இருந்து சங்க உறுப்பினர்கள் வந்திருந்தனர். பணி ஓய்வுக்கு வாழ்த்தினாலும் உள்ளுக்குள் அவர்களிடம் எதோ வாட்டம் இருப்பதை உணர்ந்தேன். தோழர்கள் அறிவுடைநம்பி, அண்டோ, அஸ்வத், பரிதிராஜா எல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பேசினர்.
“எனக்கு பணி ஓய்வு நிர்வாகம் கொடுத்திருக்க வேண்டும். தரவில்லை. நாமே பணி ஓய்வுக்கான கடிதம் கொடுத்து நாமே அறிவித்துக் கொண்டோம். அதுபோல நாமே பணி ஓய்வு சலுகைகளையும் எடுத்துக் கொள்ளும் நாள் வரும். எல்லாவற்றையும் நமது சங்கம் எனக்கு பெற்றுத் தரும்” என அந்தக் கூட்டத்தில் பேசினேன். என் தைரியமும் தெம்பும் அவர்களுக்கு நம்பிக்கையளித்திருக்க வேண்டும்.
கேக் வெட்டியதும் அந்தச் சூழல் கலகலப்பானது.
உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வரவும் என் லேப்டாப்பில் மெயிலைப் பார்த்தேன். ஹெச்.ஆரிலிருந்து மெயில் வந்திருந்தது.
”இன்று மாலை 4.30 மணிக்கு உங்கள் கிளை மேலாளர் மூலம் உங்கள் பணி குறித்து செஷேஷன் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 30.4.2021 அன்றிருந்து உங்கள் பணி செஷேஷன் ஆகிறது. 30.4.2021 முதல் உங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. என்கொயரிக்கு பிறகு ஓய்வுகால சலுகைகள் எதேனும் இருந்தால் பின்னர் வழங்கப்படும்” என்று பொதுமேலாளர் மெயில் அனுப்பி இருந்தார்.
மெயில் அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன். 7.36 என்று காட்டியது.
(தொடரும்)
1ம் அத்தியாயம்

January 21, 2025
பணி (Pani) - மலையாள சினிமா

மிகச் சாதாரணமாகஆரம்பித்த படம் அடுத்தடுத்த காட்சிகளில் மிரட்ட ஆரம்பித்தது. அவ்வளவு சந்தடி மிக்க பஜாரில் சத்தமில்லாமல் நடக்கும் கொலை பதற வைக்கிறது.எதோ விளையாட்டுப் பையன்கள் போலிருந்தவர்கள்தான் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாய்உருவெடுத்து நின்றார்கள். அந்த முதல் அரை மணி நேரம் இருந்த பிடிமானம் எல்லாம் போகப் போக இழந்து, தர்க்கங்கள் வடிந்து போய், கடைசியில் வழக்கமான சினிமாவாகி முடிகிறது.
மொத்த ஊரையும்ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம்,அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது.எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள்.ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளைவடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.
லும்பன்களாய்இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் வசதிகளாலும் அவர்கள் ரசனை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.தெருவில் பசியோடு அலையும் லும்பனிடம் என்ன ரசனை இருக்கும்? இந்த முரண்பாட்டை பெண்ணோடுஉறவு கொள்வதில்தான் காட்சிப்படுத்த வேண்டுமா?
பகைமையையும்,பழிவாங்கும் வேகத்தையும் வேறு புள்ளியிலிருந்து தொடர்ந்திருந்தால் பார்வையாளர்கள் இந்தசினிமாவை சரியான கோணத்தில் பார்த்திருக்கக் கூடும்.
அந்த இரண்டுஇளைஞர்களின் கொட்டங்களை ஊர் உள்ளுக்குள் ரசிக்கிறது. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இல்லை. ஆனால் பார்வையாளர்களால் அந்த இளைஞர்களைரசிக்க முடியவில்லை. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும் அவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்படுவதை நியாயம்என உணர்கிறார்கள். இந்த சினிமா தோல்வி அடைந்த இடம் அதுதான்.
Pani மலையாளப்படம்.சோனி லைவில் இருக்கிறது.

January 20, 2025
சார்ஜ் ஷீட் 42/2021 – 1ம் அத்தியாயம்

( தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதைஇது. தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை. ஒழுங்கு நடவடிக்கைஎன்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை. உண்மைக் கதை.எனது கதையும் இது.)
-----------
“5 மணி வரை இருப்பேன். அதன்பின் ஒருநிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.”
மேலாளர் கதிர்வேலுவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன்.கொரோனா முகக் கவசம் அணிந்திருந்த அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அப்போது நேரம்மாலை 4.25. நாள் 30.4.2021.
முப்பத்தேழு வருடங்களும், 5 மாதங்களும் பணிபுரிந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (2019 மார்ச் மாதம் வரைபாண்டியன் கிராம வங்கி) இருந்து ஓய்வு பெற மேலும் 35 நிமிடங்கள் இருந்தது.
சாத்தூர் தலைமையலுவலகம், பூச்சிக்காடு, சாத்தூர்கிளை, விருதுநகர், சங்கரலிங்கபுரம், திருத்தங்கல், சாத்தூர், சூலக்கரை மேடு கிளைகளில்பணிபுரிந்திருந்தேன். தொழிற்சங்கப் பணியின் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த600 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு சென்றிருந்தேன். கடைசியாகசேலத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளிஎன்னும் அந்த சிறிய ஊரின் கிளையில் அமர்ந்திருந்தேன்.
1983, டிசம்பர் 1ம் தேதி, எனது 22ம் வயதில் இந்தவங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். வாழ்வின் பெரும்பகுதி இந்த வங்கியோடுதான். கூட்டங்கள்,போராட்டங்கள், பயணங்கள் என காலமெல்லாம் தோழர்களோடும், வங்கியின் ஊழியர்களோடும் இருந்தநினைவுகள் அலைமோதிக் கொண்டு இருந்தன. தொழிற்சங்கப்பணிகளும் அதுகுறித்த சிந்தனைகளும், செயல்களுமாய் நிறைந்த அனுபவங்களால் நெஞ்சு விம்மிக்கிடந்தது.
அந்தக் கிளையில் தோழர்கள் அறிவுடைநம்பி, பத்மநாபன் அண்டோகால்பர்ட், அஸ்வத், பரிதிராஜா, சங்கர், லஷ்மி நாராயணன், தங்க மாரியப்பன், பத்மநாபன்,வினோத், ராஜராஜன் இன்னும் சில தோழர்கள் என்னோடு இருந்தார்கள். பா.கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், போன்ற தோழர்களோடுசாத்தூரில் ஆரம்பித்த பயணம் அது. விருதுநகர் வழியாக வந்து சேலத்தில் இளம் தோழர்களோடுதொடர்ந்திருந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து கொண்டிருந்தது.
மேலாளர் கதிர்வேல் கிளையில் இருந்த போனில் யாரிடமோபேசினார். பின்னர் மொபைலை எடுத்து வெளியே போய் பேசி வந்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
கிளையில் இறுக்கமும் தவிப்பும் அப்போது நிறைந்திருந்ததுஇவ்வளவு காலமும் சங்கத்துக்காக உழைத்த தங்கள் அன்புக்குரிய தோழர் மாதவராஜை நல்ல முறையில்வழியனுப்ப இயலாதோ என்னும் வருத்தமும், கோபமும் அவர்களிடம் தெரிந்தது. ’அமைதியா இருங்க. நிதானமா இருங்க’ காலையிலிருந்தே சொல்லியிருந்தேன்.
”ஒரு தடவை நிர்வாகத்துடன் பேசிப் பார்ப்போம்”என்று ஆண்டோ சொல்லிப் பார்த்தான். வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டேன். எந்தத் தவறும் செய்யாதபோது நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும்என்பதே என் கருத்தாக இருந்தது. தோழர் சோலைமாணிக்கம் என் மீது கொண்ட அக்கறையினாலும்அன்பினாலும் தனக்குத் தெரிந்த சில உயரதிகாரிகளோடு பேசியதாகச் சொன்னார்கள். எனக்கு அதில்விருப்பமும் இல்லை. சம்மதமும் இல்லை. ’எது நடந்தாலும் என்னிடம்தானே வந்து முடிய வேண்டும்.பார்த்துக் கொள்ளலாம்” என்பதில் உறுதியாக இருந்தேன்.
2021மார்ச் மாதம் 10ம் தேதி, எனக்கும் அறிவுடைநம்பி, அஸ்வத், தங்கமாரியப்பன்,லஷ்மி நாராயணன், சங்கர் ஆகிய ஆறு தோழர்களுக்கும், நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டுகடிதங்கள் (Explanation Letters) வந்தன. ஓய்வு பெற்ற தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், கிருஷ்ணனுக்கும் ஏன் உங்கள் பென்ஷனை நிறுத்தக்கூடாது எனவும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்போதே நிர்வாகத்தின் நோக்கத்தையும் தீவீரத்தையும் ஒரளவுக்கு ஊகித்திருந்தோம்.
2021 மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கிஓய்வு பெற்றவர்கள் சங்கம் (TNGBRS) நடத்தியதர்ணாவின் போது நாங்கள் ஆறு பேரும் தலைமையலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்ததாகவும்,சேர்மன் (அப்போதைய சேர்மன் மிஸ்டர் செல்வராஜ்) கேபினுக்குள் ஒழுக்கமில்லாமல் கதவைத்திறந்து கொண்டு சென்றதாகவும், பின் சேர்மனையும் தலைமையலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களையும்வழிமறித்ததாகவும் , சத்தம் போட்டு வன்முறையாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. சங்கத்திலிருந்து 1.3.2021 அன்றே நடந்த விஷயங்களை TNGBOAபொதுச்செயலாளர் தோழர் அறிவுடை நம்பியும், TNGWU பொதுச்செயலாளர் அஸ்வத்தும் வாட்ஸ்-அப்பில்அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.
நடந்ததே வேறு.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவ காப்பீட்டுதிட்டத்திற்கு நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த பிரிமியத் தொகை நிறுத்தப்பட்டதைகண்டித்தும், பணி ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டியபென்ஷன் காலதாமதம் ஆவதை சுட்டிக் காட்டியும் TNGBRS சங்கத்திலிருந்து 1.3.2021 அன்று சேலத்தில் தர்ணாநடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி, தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக TNGBOA-விலிருந்தும்TNGWU-விலிருந்தும் தோழர்கள் மாதவராஜ், அஸ்வத்,பரிதிராஜா,தங்க மாரியப்பன், சங்கர், லட்சுமி நாராயணன், அறிவுடை நம்பி, பத்மநாபன்,அண்டோ கால்பர்ட்ஆகியோர் சென்றிருந்தோம். கொரோனா நேரம் என்பதால் காவல்துறையிலிருந்து வந்த போலீஸார்மதியம் 1 மணிக்குள் தர்ணாவை முடிக்குமாறு வலியுறுத்தினார்கள். எனவே TNGBRS சங்கத்திலிருந்து சேர்மனைப் பார்த்து மனு கொடுப்பதற்காக தோழர்கள் சோலைமாணிக்கம்,புளுகாண்டி, கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோர் சென்றனர். மெமொரெண்டத்தை வாங்கிய சேர்மன் அதை மேஜையில் தூக்கிஎறிந்து விட்டு, அவரது அறையின் விளக்கை அணைத்தபடி வெளியே வந்திருக்கிறார். உள்ளே சென்றவர்கள்“ஏன் சார் இவ்வளவு அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறீர்கள்”என கேட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு வாதம் நடந்தது.கேள்விப்பட்ட நான் அதன் பிறகு உள்ளே சென்று சமாதானம் செய்து தோழர்களை வெளியே அழைத்துவந்தேன்.
சங்கத் தரப்பில் எங்கள் மீது ஒரு தவறும், குற்றமும்கிடையாது. முறையற்று நடந்து கொண்டது முழுக்க சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். நடந்ததையெல்லாம்மறைத்து விட்டு, சங்கத் தலைவர்கள் மீது விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது நிர்வாகம்.குற்றச்சாட்டை மறுத்து உரிய பதில்களை சம்பந்தப்பட்ட தோழர்கள் அனுப்பினர். அந்த பதில்களைமறுத்து நிர்வாகம் மார்ச் 30ம் தேதி சார்ஜ் ஷீட் கொடுத்தது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருந்தது.
ஆறு பேரில் என்னைத் தவிர எல்லோருமே இளம் தோழர்கள்.எனக்கு ஓய்வு பெற சரியாக ஒரு மாதமே இருந்தது. அதைக் குறி வைத்துத்தான் எனக்கு சார்ஜ் ஷீட் நம்பர்42/2021ஐக் கொடுத்திருந்தது. சார்ஜ் ஷீட் இருக்கும்போது 30.4.2021 அன்று எனக்கு நிர்வாகம்பணி ஓய்வை நிறுத்தி வைப்பதாக (cessation of service) கடிதம் கொடுத்தது என்றால், எனக்கு ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தப்படும்.எனவே தோழர் மாதவராஜ்க்காக சங்கம் தன்னிடம் இறங்கி வரும் என்பதுதான் சேர்மன் மிஸ்டர்செல்வராஜின் திட்டமும் நோக்கமும்.
அந்த 30.4.2021ல்தான் நாங்கள் அனைவரும் கிளையில்இருந்தோம்.
மணி சரியாக 5-ஐத் தொட்டது.

சார்ஜ் ஷீட் 42/2021 – முதல் அத்தியாயம்

( தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதைஇது. தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை. ஒழுங்கு நடவடிக்கைஎன்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை. உண்மைக் கதை.எனது கதையும் இது.)
-----------
“5 மணி வரை இருப்பேன். அதன்பின் ஒருநிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.”
மேலாளர் கதிர்வேலுவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன்.கொரோனா முகக் கவசம் அணிந்திருந்த அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அப்போது நேரம்மாலை 4.25. நாள் 30.4.2021.
முப்பத்தேழு வருடங்களும், 5 மாதங்களும் பணிபுரிந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (2019 மார்ச் மாதம் வரைபாண்டியன் கிராம வங்கி) இருந்து ஓய்வு பெற மேலும் 35 நிமிடங்கள் இருந்தது.
சாத்தூர் தலைமையலுவலகம், பூச்சிக்காடு, சாத்தூர்கிளை, விருதுநகர், சங்கரலிங்கபுரம், திருத்தங்கல், சாத்தூர், சூலக்கரை மேடு கிளைகளில்பணிபுரிந்திருந்தேன். தொழிற்சங்கப் பணியின் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த600 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு சென்றிருந்தேன். கடைசியாகசேலத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளிஎன்னும் அந்த சிறிய ஊரின் கிளையில் அமர்ந்திருந்தேன்.
1983, டிசம்பர் 1ம் தேதி, எனது 22ம் வயதில் இந்தவங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். வாழ்வின் பெரும்பகுதி இந்த வங்கியோடுதான். கூட்டங்கள்,போராட்டங்கள், பயணங்கள் என காலமெல்லாம் தோழர்களோடும், வங்கியின் ஊழியர்களோடும் இருந்தநினைவுகள் அலைமோதிக் கொண்டு இருந்தன. தொழிற்சங்கப்பணிகளும் அதுகுறித்த சிந்தனைகளும், செயல்களுமாய் நிறைந்த அனுபவங்களால் நெஞ்சு விம்மிக்கிடந்தது.
அந்தக் கிளையில் தோழர்கள் அறிவுடைநம்பி, பத்மநாபன் அண்டோகால்பர்ட், அஸ்வத், பரிதிராஜா, சங்கர், லஷ்மி நாராயணன், தங்க மாரியப்பன், பத்மநாபன்,வினோத், ராஜராஜன் இன்னும் சில தோழர்கள் என்னோடு இருந்தார்கள். பா.கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், போன்ற தோழர்களோடுசாத்தூரில் ஆரம்பித்த பயணம் அது. விருதுநகர் வழியாக வந்து சேலத்தில் இளம் தோழர்களோடுதொடர்ந்திருந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து கொண்டிருந்தது.
மேலாளர் கதிர்வேல் கிளையில் இருந்த போனில் யாரிடமோபேசினார். பின்னர் மொபைலை எடுத்து வெளியே போய் பேசி வந்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
கிளையில் இறுக்கமும் தவிப்பும் அப்போது நிறைந்திருந்ததுஇவ்வளவு காலமும் சங்கத்துக்காக உழைத்த தங்கள் அன்புக்குரிய தோழர் மாதவராஜை நல்ல முறையில்வழியனுப்ப இயலாதோ என்னும் வருத்தமும், கோபமும் அவர்களிடம் தெரிந்தது. ’அமைதியா இருங்க. நிதானமா இருங்க’ காலையிலிருந்தே சொல்லியிருந்தேன்.
”ஒரு தடவை நிர்வாகத்துடன் பேசிப் பார்ப்போம்”என்று ஆண்டோ சொல்லிப் பார்த்தான். வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டேன். எந்தத் தவறும் செய்யாதபோது நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும்என்பதே என் கருத்தாக இருந்தது. தோழர் சோலைமாணிக்கம் என் மீது கொண்ட அக்கறையினாலும்அன்பினாலும் தனக்குத் தெரிந்த சில உயரதிகாரிகளோடு பேசியதாகச் சொன்னார்கள். எனக்கு அதில்விருப்பமும் இல்லை. சம்மதமும் இல்லை. ’எது நடந்தாலும் என்னிடம்தானே வந்து முடிய வேண்டும்.பார்த்துக் கொள்ளலாம்” என்பதில் உறுதியாக இருந்தேன்.
2021மார்ச் மாதம் 10ம் தேதி, எனக்கும் அறிவுடைநம்பி, அஸ்வத், தங்கமாரியப்பன்,லஷ்மி நாராயணன், சங்கர் ஆகிய ஆறு தோழர்களுக்கும், நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டுகடிதங்கள் (Explanation Letters) வந்தன. ஓய்வு பெற்ற தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், கிருஷ்ணனுக்கும் ஏன் உங்கள் பென்ஷனை நிறுத்தக்கூடாது எனவும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்போதே நிர்வாகத்தின் நோக்கத்தையும் தீவீரத்தையும் ஒரளவுக்கு ஊகித்திருந்தோம்.
2021 மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கிஓய்வு பெற்றவர்கள் சங்கம் (TNGBRS) நடத்தியதர்ணாவின் போது நாங்கள் ஆறு பேரும் தலைமையலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்ததாகவும்,சேர்மன் (அப்போதைய சேர்மன் மிஸ்டர் செல்வராஜ்) கேபினுக்குள் ஒழுக்கமில்லாமல் கதவைத்திறந்து கொண்டு சென்றதாகவும், பின் சேர்மனையும் தலைமையலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களையும்வழிமறித்ததாகவும் , சத்தம் போட்டு வன்முறையாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. சங்கத்திலிருந்து 1.3.2021 அன்றே நடந்த விஷயங்களை TNGBOAபொதுச்செயலாளர் தோழர் அறிவுடை நம்பியும், TNGWU பொதுச்செயலாளர் அஸ்வத்தும் வாட்ஸ்-அப்பில்அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.
நடந்ததே வேறு.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவ காப்பீட்டுதிட்டத்திற்கு நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த பிரிமியத் தொகை நிறுத்தப்பட்டதைகண்டித்தும், பணி ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டியபென்ஷன் காலதாமதம் ஆவதை சுட்டிக் காட்டியும் TNGBRS சங்கத்திலிருந்து 1.3.2021 அன்று சேலத்தில் தர்ணாநடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி, தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக TNGBOA-விலிருந்தும்TNGWU-விலிருந்தும் தோழர்கள் மாதவராஜ், அஸ்வத்,பரிதிராஜா,தங்க மாரியப்பன், சங்கர், லட்சுமி நாராயணன், அறிவுடை நம்பி, பத்மநாபன்,அண்டோ கால்பர்ட்ஆகியோர் சென்றிருந்தோம். கொரோனா நேரம் என்பதால் காவல்துறையிலிருந்து வந்த போலீஸார்மதியம் 1 மணிக்குள் தர்ணாவை முடிக்குமாறு வலியுறுத்தினார்கள். எனவே TNGBRS சங்கத்திலிருந்து சேர்மனைப் பார்த்து மனு கொடுப்பதற்காக தோழர்கள் சோலைமாணிக்கம்,புளுகாண்டி, கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோர் சென்றனர். மெமொரெண்டத்தை வாங்கிய சேர்மன் அதை மேஜையில் தூக்கிஎறிந்து விட்டு, அவரது அறையின் விளக்கை அணைத்தபடி வெளியே வந்திருக்கிறார். உள்ளே சென்றவர்கள்“ஏன் சார் இவ்வளவு அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறீர்கள்”என கேட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு வாதம் நடந்தது.கேள்விப்பட்ட நான் அதன் பிறகு உள்ளே சென்று சமாதானம் செய்து தோழர்களை வெளியே அழைத்துவந்தேன்.
சங்கத் தரப்பில் எங்கள் மீது ஒரு தவறும், குற்றமும்கிடையாது. முறையற்று நடந்து கொண்டது முழுக்க சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். நடந்ததையெல்லாம்மறைத்து விட்டு, சங்கத் தலைவர்கள் மீது விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது நிர்வாகம்.குற்றச்சாட்டை மறுத்து உரிய பதில்களை சம்பந்தப்பட்ட தோழர்கள் அனுப்பினர். அந்த பதில்களைமறுத்து நிர்வாகம் மார்ச் 30ம் தேதி சார்ஜ் ஷீட் கொடுத்தது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருந்தது.
ஆறு பேரில் என்னைத் தவிர எல்லோருமே இளம் தோழர்கள்.எனக்கு ஓய்வு பெற சரியாக ஒரு மாதமே இருந்தது. அதைக் குறி வைத்துத்தான் எனக்கு சார்ஜ் ஷீட் நம்பர்42/2021ஐக் கொடுத்திருந்தது. சார்ஜ் ஷீட் இருக்கும்போது 30.4.2021 அன்று எனக்கு நிர்வாகம்பணி ஓய்வை நிறுத்தி வைப்பதாக (cessation of service) கடிதம் கொடுத்தது என்றால், எனக்கு ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தப்படும்.எனவே தோழர் மாதவராஜ்க்காக சங்கம் தன்னிடம் இறங்கி வரும் என்பதுதான் சேர்மன் மிஸ்டர்செல்வராஜின் திட்டமும் நோக்கமும்.
அந்த 30.4.2021ல்தான் நாங்கள் அனைவரும் கிளையில்இருந்தோம்.
மணி சரியாக 5-ஐத் தொட்டது.
(தொடரும்)
January 19, 2025
நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 2

“நான் என்ன செய்கிறேன் தெரியுமா? ‘
“கருப்புப் பணத்தை
மீட்பதாகச் சொன்னீர்கள்
எல்லோர் கணக்கிலும் பதினைந்து லட்சம்
வரவு வைப்பதாய்ச் சொன்னீர்கள்
ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு கோடி பேருக்கு
வேலை தருவதாகச் சொன்னீர்கள்
பெட்ரோல் விலையை
குறைப்பதாகச் சொன்னீர்கள்
அமெரிக்க டாலருக்கு இணையாக
ருபாயின் மதிப்பை
உயர்த்துவதாகச் சொன்னீர்கள்
ஊழலை அடியோடு
ஒழிப்பதாகச் சொன்னீர்கள்
ஏழை மக்களுக்காக
ஆட்சி நடத்துவதாகச் சொன்னீர்கள்
கங்கை நதியை
சுத்தம் செய்வதாகச் சொன்னீர்கள்
ஜனநாயகத்தின் கோவிலென்று
பாராளுமன்றத்தைச் சொன்னீர்கள்!”
“போதும். நிறுத்து! நிறுத்து!!
செய்வதைக் கேட்டால்
சொன்னதையெல்லாம் சொல்கிறாய்!
துரோகியே!
இன்னுமா அதையெல்லாம்
நினைவில் வைத்திருக்கிறாய்”

நான் என்ன செய்கிறேன் என்று தெரியுமா? - 2

“நான் என்ன செய்கிறேன் என்றுஉனக்குத் தெரியுமா? ‘
“கருப்புப் பணத்தை
மீட்பதாகச் சொன்னீர்கள்
எல்லோர் கணக்கிலும் பதினைந்து லட்சம்
வரவு வைப்பதாய்ச் சொன்னீர்கள்
ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு கோடி பேருக்கு
வேலை தருவதாகச் சொன்னீர்கள்
பெட்ரோல் விலையை
குறைப்பதாகச் சொன்னீர்கள்
அமெரிக்க டாலருக்கு இணையாக
ருபாயின் மதிப்பை
உயர்த்துவதாகச் சொன்னீர்கள்
ஊழலை அடியோடு
ஒழிப்பதாகச் சொன்னீர்கள்
ஏழை மக்களுக்காக
ஆட்சி நடத்துவதாகச் சொன்னீர்கள்
கங்கை நதியை
சுத்தம் செய்வதாகச் சொன்னீர்கள்
ஜனநாயகத்தின் கோவிலென்று
பாராளுமன்றத்தைச் சொன்னீர்கள்!”
“போதும். நிறுத்து! நிறுத்து!!
செய்வதைக் கேட்டால்
சொன்னதையெல்லாம் சொல்கிறாய்!
துரோகியே!
இன்னுமா அதையெல்லாம்
நினைவில் வைத்திருக்கிறாய்”
