Mathavaraj's Blog, page 12

November 11, 2021

பொய் மனிதனின் கதை - 3ம் அத்தியாயம்




“உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால்,
அந்த அமைதியும் பொய்யே!”
– யெவ்டுஷெங்கோ

    ”வதோராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர்  என்னை தனது மனைவியாக குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறார்.” என்று பா.ஜ.கவின் பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடியின் மனைவியாகிய யசோதாபென் பத்திரிகையாளர்களிடையே 2014ம் ஆண்டு மே 24ம் தேதி சந்தோஷப்பட்டார். 

    வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயராக யசோதாபென்   என்று குறிப்பிட்டதைத் தவிர, நரேந்திர மோடி என்னும் ஆண் மகன் தன் திருமணம் குறித்தோ, தன் மனைவி குறித்தோ வேறு ஒரு வார்த்தையும் வேறு எங்கும்  எப்போதும் உதிர்த்ததில்லை. 

    யசோதாபென் என்னும் பெயரை நரேந்திர மோடியின் பேனா எழுதிய அந்த ஒரே ஒரு கணத்திற்கு பின்னணியாக சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த  அதிகார வேட்கை இருந்தது. இந்திய நாட்டின் அரசியல் இருந்தது.  ராஜாவின் வெற்றிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே பலி கொடுக்கப்பட்ட ஒரு பகடைக்காயின் கதை அது. பொய்யாய்ப் போன ஒரு பெண்ணின் கதை அது. 

    மோடிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்துத்தான்  மோடி திருமணமானவர் என்னும் தகவலே வெளியில் வந்தது. அள்ள அள்ளக் குறையாத மர்மங்களின் மனிதர் அவர். 

    பத்திரிகையாளர்  வகீல் என்பவர் 1993ல் யசோதாபென்னை நேரில்  சந்தித்து குஜராத்தின் அரசியல் பத்திரிகையான அபியானில் எழுதி இருந்தார். அப்போது குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்ற கேசுபாய் பட்டேலுக்கு பக்கபலமாக மோடி இருந்தார். கட்சி மட்டத்தில் அறியப்பட்டவராய் இருந்தும், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வெளிச்சம் பெறாதவர். எனவே அந்த செய்தி, முக்கியமற்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயமாய் கரைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதே ஆர்.எஸ்,எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தனக்கு கண்டனங்கள் தெரிவித்ததாக வகீல் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மோடியின் திருமணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது என்கிறார் அவர். 

    2000ம் ஆண்டில் குஜராத் புஜ்ஜில் ஏற்பட்ட பூகம்பத்தையொட்டி, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேலின் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து, வெறுப்பை சம்பாதித்தது, 2001ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிந்துரையின் பேரில் அப்போது நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்த வாஜ்பாயால்  குஜராத் அரசியலில் ஒரு புதிய முகமாக நரேந்திரமோடி களம் இறக்கப்பட்டார். அரசியல் எதிரிகளான கேசுபாய் பட்டேல் சங்கர்சிங் வகேலா இருவருக்கும் மோடி பொது எதிரியாகிறார். 

    மோடிக்கு மாநில அளவில் கட்சியில் பெரிய ஆதரவு அப்போது இருக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே முதலமைச்சரான மோடி ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் நின்று ஜெயிப்பதே பெரும் சிரமமாய் இருந்தது. இந்த நேரத்தில்தான், அயோத்திப் பிரச்சினையின் பின்னணியோடு கோத்ரா ரயில் சம்பவம் உருவானது.  அதையொட்டி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேறின. நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தேசமே பதறியது. உலக நாடுகள் அதிர்ந்து கண்டனக்குரல்கள் எழுப்பின. வெறிபிடித்த இந்துத்துவா சக்திகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.கவில் மோடியின் அரசியல் எதிரிகள் அனைவரின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. மோடியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்த இடம் அதுதான். ஒன்றிலிருந்து ஒன்றாய் ஏற்படும் விளைவுகளிலிருந்து வரலாற்றில் தனிநபர் பாத்திரங்களை அறிய முடிகிறது. 

    குஜராத் கலவரங்களுக்குப் பிறகு 2003லிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில்தான் மோடியின் மனைவி வசிப்பதாக, முணுமுணுத்தாலும், மூர்க்கத்தனமான அதிகாரத்தின் மீதான பயம்  உரக்க பேச விடாமல் செய்திருக்க வேண்டும். 2002 மற்றும் 2007 சட்டசபை தேர்தல்களிலும் அவர் வேட்பு மனுவில், திருமணம் பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் இருந்தார். 

    வகீலுக்குப் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் வந்தார். உண்மையைப் போட்டு சத்தமாய் உடைத்தார். 

    ”மிகச் சாதாரணமான புடவை, பொருத்தமற்ற ரவிக்கை அணிந்து இருந்தார். லேசாக குனிந்த முகம் சுருக்கம் கொண்டிருந்தது. வாழ்வின் கஷ்டமான நேரங்களைப் பார்த்திருந்தன கைகள். முடியை இறுக்கமாக பின்னுக்கு இழுத்து கட்டியிருந்ததால் ஒரு கடுமையான தோற்றம் ஏற்பட்டிருந்தது.. செருப்பு அணிந்த கால்களில் வெடிப்புகள் நிறைந்து அழுக்காயிருந்தது.  குஜராத்தில் ரஜோசனா கிராமத்தின் ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.” 

    இப்படித்தான் விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஹைமா தேஷ்பாண்டே. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ரஜோசனா கிராமத்துப் பள்ளிக்குச் சென்று அங்கு ஒன்றாம் வகுப்பு டீச்சராய் இருந்த யசோதாபென்னை, அவரது 57வது வயதில் நேரில் சந்தித்திருக்கிறார் ஹைமா.  அப்போது குஜராத்தின் முதலமைச்சராய் இருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கும் யசோதாபென்னுக்கும் இந்து மதச் சடங்கின்படி திருமணம் நடந்து நாற்பத்தோரு வருடங்கள் ஆகி இருந்தது. 

    ஹைமா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஒரு குழந்தையைப் போல உற்சாகமாகியிருக்கிறார் யசோதாபென். முகமெல்லாம் அப்படி சிரித்திருக்கிறது. தன்னைப் பற்றிச் சொல்லவும் விரும்பி இருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரவீன்குமார் வியாஸ் குறுக்கிட்டு, அவர் பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டு இருப்பதை நினைவுபடுத்தி இருக்கிறார். ”பள்ளி முடிந்ததும் பேசலாம். இப்போது வகுப்பறைக்குச் செல்லுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார். 

    “இடைவெளி நேரத்தில் பேசுகிறேனே… கொஞ்ச நேரம்தான்” என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் யசோதாபென். தலைமையாசிரியர் அசையவில்லை. வேறு வழியின்றி பணிவுடன் அந்த இடத்தை விட்டு சென்றவர் சட்டென திரும்பி வந்து, “நான் என் கணவருக்கு எதிராக எதையும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் என் வாழ்க்கை. பயமாய் இருக்கிறது “ என்று சொல்லி அகன்றிருக்கிறார். 

    உடனடியாக தலைமையாசிரியர் யாரிடமோ செல்போனில் பேசி இருக்கிறார். அடுத்து யசோதா பென்னின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் யசோதாபென் முற்றிலும் வேறொருவராக தென்பட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் போயிருக்கிறது. பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். திரும்ப ஹைமா சென்று அவரை சந்திக்க முயற்சித்தபோது பேசுவதை புறக்கணித்து, என்னை தனியாக இருக்க விடுங்கள் என சத்தம் போட்டிருக்கிறார். 

    தொடர்ந்து சில ஆண்கள் அங்கு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் நேரடியாக சென்றிருக்கிறார்கள்.  சிறிது நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஓடிச்சென்று ஏறி முகத்தை கைகளால் பொத்தியவாறு 20 கி.மீ தள்ளி இருக்கும் தன் சகோதரர் வீட்டிற்கு அன்றைக்கு போயிருக்கிறார் யசோதாபென். சில நிமிடங்களில் அரசு பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் வந்து உடனடியாக இங்கிருந்து சென்று விடுங்கள் என ஹைமா தேஷ்பாண்டேவிடம் சொல்லி இருக்கிறான். அவரும், அவரது குழுவினரும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி இருக்கிறது.  

    அந்த கிராமத்து மக்களிடம் ஹைமா விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே ஊரில் நூறு சதுர அடிக்கும் குறைவான, தகர கொட்டாய் வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் யசோதா பென் வாழ்ந்து வந்திருக்கிறார். கழிப்பிடம் கூட கிடையாது. ஒத்தாசைக்குக் கூட யாரும் கிடையாது. அவரால் வேறொரு இடத்தில் இதை விட சௌகரியமாகக் கூட வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் ஏன் அந்த சிறிய ஊரில் அவதிப்பட வேண்டும் என்பது பிடிபடவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மனைவி என அங்கு பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தது. 

    ஹைமா தேஷ்பாண்டே மூலம் பத்திரிகைகளில் இந்த தகவல்கள் வந்த பின்னரும் கூட 2012ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில்  மோடி வேட்பு மனுவில் அவரது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை. “நான் தனி ஆள்.  எனக்கு குடும்பம் இல்லை.  நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?  என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!'' என தொடர்ந்து கூட்டங்களில் இரண்டு கைகளையும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார். 

    People Representation Actஐ மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 2013ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.. இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது நீதிமன்றம். தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை எல்லாம் ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் வேட்பு மனுவில் எதையும் நிரப்பாமல் விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் தர வேண்டும்” என்று பொதுவான ஒரு விதியை எல்லோருக்குமாக அறிவித்து தன் நியாயத்தை முடித்துக் கொண்டது. 

    இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.   

    நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சத்திய சோதனை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 1968ம் ஆண்டு நடந்த திருமணத்தை 46 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் உலகத்தின் முன்னே ஒப்புக் கொண்டார். 

    பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுந்தன. “BJP 'bachelor' Modi admits marriage” என பிபிசி மானபங்கம் படுத்தியது. 

    பதில் சொல்ல வேண்டிய மோடியோ கூட்டத்தினிடையே மேடையேறி அங்கும் இங்கும் நகர்ந்து டஸ்டரை வைத்து எதையோ அழிப்பது போல கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார். 

    மோடியின் ஒவ்வொரு பொய்யையும் சமாளிப்பதும், மடை மாற்றுவதும்  பாஜக என்னும் ’தூய்மையான’ கட்சி’யின் முக்கிய அலுவல் பணியாகிப் போனது.

     “மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்” 

    “மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.” 

    “மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்” 

    இதில் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் உச்சம். “மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?” 

    மோடியின்  திருமணம் நடந்தது 1968ம் ஆண்டு. அவரது பிறந்த ஆண்டு 1950 என்று வைத்துக் கொண்டாலும் அவரது 18வது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. யசோதாபென்னுக்கு 16 வயது. 1929ம் ஆண்டு சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 14 எனவும், ஆணுக்கு 18 எனவும் இருந்தது. எனவே அதனை குழந்தைத் திருமணம் என்று வகைப்படுத்த முடியாது. 

    திருமணம் நடந்து மூன்றாண்டுகள் மோடி குடும்பத்தாருடன் இருந்தாலும், மோடியுடன் கூட வாழ்ந்தது மூன்று  மாதங்கள் போலத்தான் என்றும் அதன் பிறகு அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை என்றான பிறகு அவரது குடும்பத்திலிருந்து விலகி வந்து தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக யசோதாபென் கூறுகிறார். மீண்டும் படிக்கத் துவங்கியதாகவும், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்ததாகவும் தனிமை நிறைந்த தன் வாழ்வின் போக்கை தொடர்கிறார். 

    மோடியின் சகோதரர் சோமபாய் மோடிவின் கூற்று வேறாக இருக்கிறது. மோடிக்கு அவ்வளவு சிறுவயதில் திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றும், குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்ததாகவும், எனவே திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்னர் குடும்பத்தாருடன் வந்து மோடி தங்கவே இல்லை  என்றும் அவர் சொல்கிறார். 

    திருமணம் பிடிக்கவில்லை என்றால், திருமணத்துக்கு முன்பே மோடி வீட்டை விட்டு சென்றிருக்கலாமே என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்னும் ஆராய்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும், ஊகங்களுக்கும் சென்றாலும்  யசோதாபென்னுக்கு யாரும் நியாயம் வழங்கிட முடியாது. 

    அதிகார பீடத்தின் உச்சியில் இருக்கும் சக்தி வாய்ந்த மனிதரின் மனைவியாகிய அந்த மிகச் சாதாரண பெண்மணி தனது சிந்தனைகள் எல்லாவற்றையும் அப்படியே இனி எப்போதும் வெளிப்படுத்திட முடியாது. 

    ஆனால் இந்தியா டுடே பத்திரிகைக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி யசோதாபென் அளித்த பேட்டியில் சில உண்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டு இருக்கின்றன. 

இந்தியா டுடே: ”இத்தனை நாளும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்காமல் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா?” 

யசோதாபென்: ”இல்லை. நான் மோசமாக உணரவில்லை. விதியாலும் கெட்ட நேரத்தாலும்தான் அவ்வாறு செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் அவ்வாறு பேசுகிறார், பொய்யும் சொல்கிறார்.  என் நிலைமை ஒன்றும் மோசமாகவில்லை. ஒருவகையில் அதிர்ஷ்டம் என்னை மேம்படுத்தியே இருக்கிறது.” 

இந்தியா டுடே: ”ஏன் நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை?” 

யசோதாபென்: ”இந்த அனுபவத்திற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றவில்லை. என் மனம் அதில் இல்லை.” 

    சில வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையையே தரிசிக்கும்படி ஆகிவிடும். அப்படி ஒரு உரையாடல் இது.

    யசோதாபென் உண்மையாகவும், மோடி பொய்யாகவும் காலத்தின் முன் நிற்கிறார்கள்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2021 04:04

November 8, 2021

பொய் மனிதனின் கதை - 2ம் அத்தியாயம்


“சாத்தான் ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்கிறவனாக இருக்கிறான்”
– ஜோசப் வெர்த்லின்

 

“பிரதமருக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறதா என்பதை அறிய நாடு விரும்பவில்லை. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் என்ன, அவர் தனது இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற விபரம், அவருடன் படித்த மணவர்களில் குறைந்த பட்சம் 10 பேர் யார் என்னும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறது” என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சக்திசிங் கோஹில் 2016 ஏப்ரல் மாதத்தில் கேட்டார்.

 

கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும்  நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக சந்தித்து இருந்தது.  உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

 

பிரதமர் மோடியின் வலைத்தளத்தில் அவரது கடந்த காலத்திற்கான தகவல்கள்  சொற்பமாகவே இருந்தன.   குஜராத்தில் மிகச் சிறிய நகரம் ஒன்றில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்ததாகவும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தால் கடின உழைப்பு குறித்து அவர் அறிந்திருந்ததாகவும், தேசபக்தி இயக்கமான ஆர்.எஸ்.எஸில் சிறுவயதிலேயே இணைந்து பணியாற்றியதாகவும் குஜராத்தில் எம்.ஏ (Political science)  பட்டம்  பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

அப்புறம் சின்ன வயதில் இந்த டீ விற்றது, முதலையைப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தது எல்லாம் கூட்டங்களில் அவரே பேசி இருந்தார்.  பள்ளியில் கபடி மேட்சில் ஜெயித்தது, தீண்டாமைக் கொடுமையை விளக்கும் நாடகம் எழுதி அரங்கேற்றியது எல்லாம் யார் சொல்லி பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. அவ்வப்போது மோடியின் சின்ன வயதுக் கதைகள் இப்படி ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

 

அவைகளையும் பொருட்படுத்தி மெனக்கெட்டு ஆராய்ந்து பார்த்ததில், மோடி எட்டு வயதில், அதாவது, 1958ம் வருடத்தில், டீ விற்ற வடநகரில் ரெயில்வே ஸ்டேஷன் திறக்கப்பட்டதே 1973ம் வருடமாக இருந்தது. மோடி பற்றிய மற்ற கதைகள் குறித்தும் அதையொட்டியே ஒரு அபிப்பிராயத்துக்கு வர ,வேண்டி இருந்தது.

 

அவரது பிறந்த தேதி, படிப்பு குறித்த கதைகளை அப்படி எளிதாக எடுத்து விட முடியாது. வரலாறு என்பது கற்பனைகளாலோ, கட்டுக் கதைகளாலோ, ஊகங்களாலோ இருந்து விடக் கூடாது. நாட்டின் பிரதம மந்திரியின் வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல்கள் மொத்த இந்தியாவுக்கானது. உலகத்திற்கானது. எதிர்காலத்திற்குமானது. எனவே அதையும் சமூக ஆர்வலர்கள் ஆராயத் துவங்க, கிணறு வெட்ட பூதங்கள் கிளம்ப ஆரம்பித்தன.

 

குஜராத்தில், வடநகரில், பி.என்.உயர்நிலைப்பள்ளியில் படித்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட்டில் அவரது பிறந்த தேதி 1949ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறகு எப்படி அவரது பிறந்த தேதி 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது முதலில் வந்த பூதம்.

 

சர்ச்சைகளும், விவாதங்களும் கேள்விகளும் எழ ஆரம்பித்தன. வழக்கம்போல் நேரடியாக முகம் காட்டி பதில் சொல்லாமல் இருந்தார் பிரதமர் மோடி. அவரது மூத்த அண்ணன் சோமபாய் மோடிதான் வாயைத் திறந்து பேசினார். 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்ததாகவும்,. பிறந்தவுடன் எழுதப்பட்ட ஜாதகத்தில் அந்த தேதி குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், மோடியை பள்ளியில் சேர்க்கும்போது தவறான பிறந்த தேதியை மோடியின் பெற்றோர்கள் கொடுத்துவிட்டதாகவும், அதை மோடி பின்னாளில் சரி செய்து விட்டதாகவும், பெற்றோர்கள் செய்த தவறுக்கு மோடி எப்படி பொறுப்பாக முடியும் என்று தனக்கு விதிக்கப்பட்ட கடமையை முடித்துக் கொண்டார்.

 

பள்ளியில் பிறந்த நாளை தவறாகக் கொடுத்து  சேர்ப்பது சென்ற தலைமுறை வரைக்கும் சாமானிய மக்களுக்கு நேர்கிற கதி என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரியோ, தவறோ பள்ளியின் சர்டிபிகேட்தான் செல்லுபடியாகும். ஆதாரமானதாகும். அதிகாரபூர்வமானதாகும். ஜாதகப்படி என்பதெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாது. அப்படியென்றால் நரேந்திர மோடி பள்ளியில் தனது பிறந்தநாள் தவறாக கொடுக்கப்பட்டு இருப்பதை எப்போது அறிந்தார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அதை செப்டம்பர் 17, 1950 என மாற்றினார் என்பதெல்லாம் இன்று வரை அவரது தரப்பில் தெரிவிக்கப்படாமலேயே இருக்கின்றன.

 

இதையொட்டி அடுத்த பூதமாக மோடியின் கல்வித் தகுதி கேள்விக்குள்ளானது. நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருந்தார். அதாவது, 1950ம் வருடம் பிறந்ததாக சொல்லப்படும் மோடி, அவரது 28 வது வயதில் பி.ஏ முடித்து, 33 வது வயதில் எம்.ஏ முடித்திருந்தார்.

 

குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த ரோஷன் ஷா என்னும் அரசியல் செயற்பாட்டாளர், மோடியின் எம்.ஏ கல்வித்தகுதி குறித்து 2013ம் ஆண்டு RTI மூலம் கேள்விகள் எழுப்பி இருந்தார். அப்போது குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தார். குஜராத் யுனிவர்சிட்டியில் இருந்து பதில் வரவில்லை. திரும்பவும் 2014ம் ஆண்டு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு கேள்விகள் அனுப்பினார். அப்போது மோடி பிரதம மந்திரியாய் இருந்தார். அதுகுறித்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துவிட்டது. 

 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் சந்தேகங்கள் எழுப்ப ஆரம்பித்தார். 1978ல் நரேந்திர மோடி என்பவர் டெல்லியில் பி.ஏ படித்திருப்பதாகவும், அவர் இந்த நரேந்திர மோடி இல்லை என்றும் அவரது முழுப் பெயர் நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்றும், அவர் 1958ல் பிறந்தவர் என்றும் தகவல்களை வெளியிட்டார்.

 

ஒரு நாட்டின் பிரதமர் தங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால் அது அந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு பெருமை! அதனை தங்கள் வளாகங்களில் பொன்னெழுத்துகளால் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களே, அப்படி எதுவும் ஏன் நிகழவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடியுடன் படித்தவர்கள் இந்த நாட்டில் இருப்பார்களே, அவர்களில் ஒருவராவது மோடி என்னோடு படித்தவர் என எந்த அனுபவத்தையும் பகிரவில்லையே என சந்தேகப்பட்டனர்.

 

மோடி மௌனம் சாதித்ததாலும், டெல்லி யுனிவர்சிட்டியும், குஜராத் யுனிவர்சிட்டியும் காலதாமதம் செய்ததாலும்  மேலும் சந்தேகங்களை எழுப்பினார் கெஜ்ரிவால். ஊடகங்கள் அமைதியாய் இருந்தன. அப்போதைய டைம்ஸ் நவ் – இப்போதைய ரிபப்ளிக் டிவி -அர்னர்ப் கோஸ்வாமிக்கு அடி வயிற்றிலிருந்து கத்த வேறு பிரச்சினைகள் இருந்தன. தன்னைப் போன்று ஒரு மெழுகுச் சிலை வடிவமைப்பதற்காக மணிக்கணக்கில் போஸ் கொடுத்த மோடிக்கு இந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் போனது.  அவரது பரிவாரங்களும், பக்த கோடிகளும் “இதுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினையா?” என்று அலட்சியப்படுத்த முனைந்தனர். என்னமோ, நாட்டின் வறுமை, வேலையின்மை, தீண்டாமை, பெட்ரோல் விலையேற்றம், விவசாயிகளுக்கான நெருக்கடிகளை எல்லாம் தூக்கிப் பிடித்து தீர்க்கிறவர்கள் போல அலட்டிக் கொண்டனர்.

 

சமூக ஊடகங்களில் மோடி குறித்த கிண்டல்களும், கேலிகளும் குவிய ஆரம்பித்தன. வெக்கையும், புழுக்கமும் தாங்க முடியாமல், பிஜேபி கட்சித்தலைவர் அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட்டாக இரண்டு காகிதங்களைக் கையில் பிடித்தபடி தங்கள் கூடாரத்தை வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், “இதுதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடமும், நரேந்திர மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சென்றனர். அதுவரை வாயைப் பொத்திக்கொண்டு இருந்த ஊடகங்கள் அனைத்தும் இதனை ’பிரேக்கிங் நியுஸாக’ வெளியிட்டு கத்தித் தொலைத்தன. அந்த பரபரப்பு கொஞ்சம் கூட நீடிக்கவில்லை.

 

நாட்டின் அதிமுக்கிய மனிதர்கள் இரண்டு பேர் தங்கள் பிரதம மந்திரி குறித்து வெளியிட்ட அந்த கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்றும், போட்டோ ஷாப்பில் தயாரிக்கப்பட்டவை என்றும், சான்றிதழ்களில் காணப்படும் fontகள் 1991க்குப் பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்றும், தேதிகள், பெயர்களில் மாற்றம் இருக்கின்றன என்றும், மோடி வாங்கிய மார்க்குகளின் கூட்டல்களில் தவறு இருக்கிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மைதான். 23+23+67+23 = 136 தான் வரவேண்டும். மார்க்‌ஷீட்டில் 165 என்றிருந்தது.  திரும்பவும் ஊடகங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடிவாளங்களை மாட்டிக்கொண்டு வேறு பிரேக்கிங் நியுஸுக்காக ஓளிந்து கொண்டன.

 

நாட்டின் பிரதமரின் மானத்தையும், கல்வி அறிவையும் காப்பாற்ற வேண்டிய பாத்திரம் டெல்லி யுனிவர்சிட்டிக்கு இந்த நாடகத்தில் விதிக்கப்பட்டது. “பிஜேபி தலைவர்கள் காட்டிய ரெகார்டுகள் உண்மையானவை. பிரதமர் மோடி டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.” என்று பஞ்சாயத்தை முடிக்க முயற்சித்தார் யூனிவர்சிட்டி துணை வேந்தர்.

 

“மார்க்‌ஷீட்களில் இருக்கும் பெயர் வித்தியாசமானதாக இருக்கிறதே?” என்ற கேள்விக்கு அது ஒரு வழக்கமான தவறுதான். இது போன்று வேறு சில மாணவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டையடியாய் ஒரு பதிலைச் சொன்னார்.

 

“மோடி டிகிரி முடித்தது 1978ம் ஆண்டு. ஆனால் 1979ம் ஆண்டு என சர்டிபிகேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே?” என்ற கேள்விக்கு,  இது போன்ற சின்ன தவறுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று ஒரேயடியாய் சொல்லி தன் பாத்திரத்தை முடித்துக் கொண்டார்.

 

அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் ஒரு பொய் எவ்வளவு பேரை அலைக்கழிக்கிறது! ஒன்றை மறைக்க எத்தனை எத்தனை பொய்கள் அவதாரமெடுக்கின்றன.

 

“போட்டோ ஷாப்பால் வாழ்ந்தவன் போட்டோ ஷாப்பால் வீழ்வான்” என்னும் புது நீதிகள் டுவிட்டரில் தெறித்தன. “முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போல மோடிபாய் பி.ஏ, எம்.ஏ” என கிண்டல்கள் அள்ளின.

 

இன்னொருபுறம், “டெல்லி நிர்வாகத்தை கவனிக்காமல் கெஜ்ரி்வால் ஏன் மோடியையே மோப்பம் பிடிக்கறார்?”, “இதுபோல் தனிநபர் குறித்த ஆராய்ச்சிகளால் நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது“, “கெஜ்ரிவால் படித்தவர்தானே, அவர் செய்யக் கூடிய செயலா இது?”, “இதற்காக கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை”, “மோடியின் படிப்பைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?” என்னும் விமர்சனங்கள் வந்து மோதின.

 

மோடி படித்தவரா, படிக்காதவரா என்பது விவாதமே அல்ல. நாட்டு பிரதமரின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அது. அவர் எப்படி மக்களை மதிக்கிறார்  என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.

 

ரோஷன் ஷாவும் விடவில்லை. ”ஏன் அமித்ஷா டூப்ளிகேட் சர்டிபிகேட்களை காண்பிக்க வேண்டும். மோடியிடம் இருந்து ஒரிஜினல் சர்டிபிகேட்களை வாங்கி காண்பிக்கலாமே?” என்று  கேட்டார். ”பள்ளிக் கல்வி முடிந்ததும், வீட்டை விட்டு கிளம்பி விட்டதாகவும், இமாலயக் காடுகளில் எல்லாம் சுற்றித் திரிந்ததாகவும் மோடியே ஒரு பேட்டியில் சொல்கிறார். இமாலயத்தில் இருந்து கொண்டு அவர் டெல்லி யுனிவர்சிட்டியிலும், குஜராத் யுனிவர்சிட்டியிலும் எப்படி பட்டம் வாங்கினார். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியுமா?” என கேட்டார். யாரிடமும் பதில் இல்லை.

 

Rediff.comலிருந்து ரோஷன் ஷாவிடம் கேட்டார்கள். ”நீங்கள் ஏன் மோடியை நம்ப மறுக்கிறீர்கள்?”.

 

அதற்கு ரோஷன் ஷா, “மோடி தொடர்ந்து தவறுகள் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒரு தவறை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இல்லாத ஆதாரங்களை உருவாக்குவார் அல்லது இருக்கும் ஆதாரங்களை அழித்துவிடுவார். அது அவரது இயல்பு.” என்றார்.

 

நாட்டின் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருப்பவர்களுக்கு டெல்லி மற்றும் குஜராத் யுனிவர்சிட்டிகளில் கல்விச் சான்றிதழ்களை உருவாக்குவதோ அல்லது சான்றிதழ்கள் இருக்கின்றன எனச் சொல்ல வைப்பதோ மிகச் சாதாரண விஷயம்தான்.

 

ஆனால் நாட்டின் பிரதம மந்திரியின் கல்வித்தகுதிக்கான ஒரிஜினல் சான்றிதழ்கள் இதுவரை இல்லையென்பதும், இருந்தவையும் போலியானவை என்பதும் சாதாரண விஷயமல்ல.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 20:05

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளிலிருந்து...)





(சேகுவெராவைப் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளிலிருந்து எழுதப்பட்ட இந்த புத்தகம் 2004ம் ஆண்டு பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. இதுவரை 13 பதிப்புகள் கண்டிருக்கிறது. இப்போது அமேசானில் இ -புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

“இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் பறந்து உலகத் தலைவர்களோடு கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தவர் அவர். தன் குழந்தைகளை கொஞ்சி ஆரத்தழுவிக் கொண்டவர் அவர்.

 

எல்லாவற்றையும் ஒருநாள் விலக்கிவிட்டு மீண்டும் காடுகளை நோக்கி துப்பாக்கியோடு செல்கிறார். எல்லோருக்குமான ஒரு கனவு உலகத்தை படைக்க வேண்டும் என்னும் தணியாத பேராசையின் பயணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேட்டை. தவம் போலச் செய்கிறார். தன்னை முன்னிறுத்தி, தன்னையே பலியாக்கி வெளிச்சத்தைக் காட்டுகிற வேள்விதான் அது. கடைசி வரைக்கும் அவரது கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. மார்கோஸ் அதைப் பார்த்திருக்க வேண்டும்.

 

அந்தக் கண்களைப் பார்த்து அவர்களும் இப்போது வருகிறார்கள். சேவின் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருப்பது தெரிந்து எதிரிகள் பதறுகிறார்கள். அடுத்த சதியை அரங்கேற்றுகிறார்கள். கழுகின் நிழலாய் அது நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. ரச்சல் ராபர்ட் என்னும் கட்டுரையாளர் 2002 மார்ச் 15ம் தேதி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் எழுதிய வரிகளில் அப்படியொரு செய்தி இருக்கிறது.

 

"என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவாரா வாழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறார். நான் வழக்கமாக அவரைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரெயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடைகளில் நின்று அரட்டையடிக்கிறார். பெரும்பாலும் போஸ்ட் ஆபிஸில் அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றிருக்கிறேன். சிட்னியிலும், மெல்போர்னிலும் இருக்கிற நண்பர்களுக்கு அவர் போஸ்ட் கார்டுகள் அனுப்புவார்" இந்தக் கட்டுரையின் தலைப்பு 'நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவாரா வசிக்கிறார்". ரேச்சல் ராபர்ட் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்போது புரிந்திருக்கும். இளைஞர்கள் அணியும் டீ ஷர்ட்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் சேகுவாராவைத்தான் அவர் குறிப்பிடுகிறார். உலகத்து மக்களால் நேசிக்கப்பட்ட அந்த முகத்தைக் காட்டி லாபம் சம்பாதிக்கும் காரியத்தை முதலாளித்துவம் செய்கிறது. 'எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்' என்ற குரலை அந்த முகத்திலிருந்து விலக்கி வைக்கிற கபடம் இது. போராட்டங்களின், அடக்கப்பட்டவர்கள் எழுச்சியின் வடிவமாய் இருக்கும் அந்த மனிதனை, எதோ சாகசங்கள் நிறைந்த பொழுது போக்கு நாயகனாக, சில்வஸ்டர் ஸ்டாலோனாக சித்தரிக்க முயலுகிறர்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.

 

சென்ற வருடம் ஒரு பிரிட்டீஷ் கம்பெனி ஒரு புதிய பீருக்கு சேவின் படத்தைப் போட்டு வியாபாரம் செய்திருக்கிறது. அதன் விளம்பர வாசகம் "அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது" என்பது. ஆனால் அமெரிக்காவில்தான் அதிக விற்பனை ஆகியது. இறுதியில் கியூபாவால் தடை செய்யப்பட்டது. சேகுவாராவின் மனைவி அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் அந்த பீரிலிருந்து சேவின் படத்தையும், வாசகத்தையும் அகற்றினார்கள். சேகுவாராவின் பிம்பத்தையும், உணர்வையும் சிதைக்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக சேகுவாராவின் மகள் அலெய்டிடா சொல்கிறார்.

 

உலகச்சந்தையில் மிக வேகமாக விற்பனையாகும் பொருட்களில்  ஒன்றுதான் சேகுவாரா என்கிறார் ஒருவர் மிகச் சாதாரணமாக. சேவின் படத்தையோ, கையெழுத்தையோ போட்ட தொப்பிகள், டீ ஷர்ட்கள், கீ செயின்கள், ஷூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவருடைய அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான முட்டாள்தனங்கள் மற்றும் கொரில்லப்போரின் தோல்விகள் எல்லாவற்றையும் மீறி அவர் நினைக்கப்படுவதாக ஆச்சரியப்படுகிறார்கள். நிலவுகிற ஒருவகையான கலாச்சார செல்வாக்கினாலும், காவியத்தலைவர்  போன்ற பிம்பத்தினாலும் சேகுவார மீது ஒரு வகையான மோகம் இருப்பதாக அறிவிக்கிறார்கள். ஒளித்தட்டு அட்டைகளில் சே போல டிரஸ் போட்டுக்கொண்டு பாப் கவர்ச்சி ஆட்டக்காரி மடோனா சிரிக்கிறாள். மார்கோஸின் பேனாவிலிருந்து சேவின் இரத்தம் நிரம்பி வழிகிறது. இதுதானா சேகுவாரா. இவ்வளவுதானா அவரது வடிவம். இதற்குத்தானா அவரது வாழ்வும் மரணமும். சேவின் மரணத்தை திரும்ப ஒருமுறை உலகத்துக்கு உரக்க வாசிக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அவர் மீது படிய வைக்கப்பட்டு இருக்கும் அழுக்குகளையும், தூசிகளையும் துடைத்து தெளிவாக காண்பிக்கும்.

 

உணர்ச்சிக் கொந்தளிப்பும், அவசரமும் கொண்ட மனிதராக இல்லாமல் மிக நிதானமாக இருக்கிறார். ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லியவர் இல்லை. தனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருந்தது என்று மட்டுமே சொல்ல விரும்பியிருக்கிறார். ஒரு நூற்றாண்டின் நீண்ட முயற்சியில் தன் உயிரும்  ஒரு சில ஆண்டுகள் பங்கேற்றது என்பதே பெருமையாய் இருக்கிறது அவருக்கு. 'புரட்சி தானாக உருவாவதில்லை....நாம் உருவாக்க வேண்டும்" என்கிறார். "தீ பற்ற வை. மக்கள் நெருப்பென எழுவார்கள்' என்கிறார். பொலிவியா, அர்ஜெண்டினா, பெரு என தீ படர்ந்து படர்ந்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவி, ஏகாதிபத்தியம் என்னும் பயங்கர மிருகத்தின் ரோமம் கருகுகிற நாற்றத்தை தனது சுருட்டில் உணர்கிறார்.

 

ஏகாதிபத்தியம் தொடர்ந்து தோற்றுப்போன கதைதான் சேகுவாரா. கியூபா புரட்சியில் முதலில் காஸ்ட்ரோவிடமும் அவரிடமும் தோற்றுப்போனது. அடுத்து அவர் மீது அவதூறுகளை பரப்பியது. அவருக்கும், காஸ்ட்ரோவுக்கும் இடையில் முரண்பாடுகளை அதுவாக உருவாக்கி பார்க்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. பொலிவியாவில் அவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் போகச் செய்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. சே மண்ணிலிருந்து எழும்பி வருகிறார். இப்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர் பிம்பத்தை அதுவே கையிலெடுத்துச் சிதைக்கப் பார்க்கிறது. இதிலும் தோற்றுப் போகும். சே தோற்றுப் போகிறவர் அல்ல. ஏகாதிபத்தியம் தனக்கு அறைந்து கொள்ளும் சவப்பெட்டியின் முதல் ஆணியாக அவர் இருக்கப் போகிறார்.

 

அதற்குத்தான் அவர் திரும்பி வந்திருக்கிறார். கியூபாவிலிருந்து வெளியேறி மீண்டும் கியூபாவிற்கு அவர் வந்து சேர்கிற முப்பதாண்டுகள் நிறைய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. சே பற்றி அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ மாறி மாறி குறிப்புகளை தயார் செய்து கொண்டே இருக்கிறது. வெற்றி அல்லது வீரமரணம் என்று போர்க்களத்தில் நின்ற சேவின் பொலிவிய நாட்குறிப்புகளில் நம்பிக்கை...நம்பிக்கை..நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. சி.ஐ.ஏவின் குறிப்புகளில் வார்த்தைகளுக்குள் குவிந்து கிடக்கின்றன.

 

மார்கோஸின் எழுதப்படாத பக்கங்களில் சே இன்னும் உயிரோடு நிரம்பி இருக்கிறார். அவர் விளையாடுகிறார். இது ஒரு நீண்ட செஸ் விளையாட்டு. ஆயுதங்களோடு இருக்கும் யுத்த களம். புத்தியால் காய்களை நகர்த்துகிற விளையாட்டு. சே தன்னையே ஒரு சிப்பாயாக ஓரடி முன் நிறுத்துகிறார். வெட்டப்படுகிறார். ஆட்டம் நின்று போகவில்லை. அடுத்த அசைவினை சே யோசிக்கிறார். காலத்தின் கட்டங்களில் காய்களை நகர்த்தும் இந்த விளையாட்டில் முப்பத்தேழு ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமான நேரமே. உலகம் காத்திருக்கிறது...


அமேசானில் புத்தகம் பெற :  சேகுவேரா


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 07:05

October 22, 2021

புத்தரைப் பார்த்தேன்




குழந்தை மொழி

 

வன் அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தான்.  அக்கா பார்த்து விடுகிறாள்.

“ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்” சத்தம் போட்டாள்.

 இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 “பார்...இந்தச் செடி அழுகிறது”. பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.

 “செடி அழுகிறதா?”

 “ஆமாம். அதுதான் கண்ணீர்”

 அருகில் சென்றான். செடியின் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. அவனது பிஞ்சு விரல்கள் அதைத் தொட்டுப் பார்த்தன. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பார்த்தான். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.

 “அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்”

 “செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை.”

 “எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே”.

 அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான்.

 “அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்”

 “காற்று வீசினால் செடி சிரிக்கும்.”அக்கா சொன்னாள்.

 அவன் செடியை நோக்கி ஊதிவிட்டுக் கேட்டான்.  “அக்கா செடி சிரிக்கிறதா”.

 ****

ஒன்றுமில்லை அது

 

னியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும்  நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். 

 குழந்தைகளோ கண்கள் விரிய பார்க்கிறார்கள். மேகங்கள், பூக்கள், நீர்ச்சுழிவுகள் எல்லாம் அசையாமல் உள்ளே இருக்கின்றன. வண்ணச் சிதறல்கள் வெடித்து அழகழகாய் சிந்திக் கிடக்கின்றன. அவற்றைப் பிடித்துவிட குழந்தைகளின் விரல்கள் தடவுகின்றன. அப்படியே அதை  விழுங்கிவிட ஆசை கொள்கிறார்கள்.  உறைந்த நீர் போலிருக்கும் அதற்குள் புகுந்து  அதிசயங்களைக் காணத் துடிக்கிறார்கள்.  மீன்களாகவும், பறவைகளாகவும் உருமாறுகிறார்கள்.

 பெரும் ஆர்வத்தோடு உங்களிடம் கேட்கிறார்கள், “இது என்ன முட்டை” .

 பெரியவர்கள் நீங்கள் அலட்சியமாய் திருத்துகிறீர்கள், “ஒன்றுமில்லை அது. பேப்பர் வெயிட்” .

 ***

ரெயிலைக் காணோம்

 

றவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று  ரெயிலில் முன்பதிவு செய்து வைத்தான் அவன். “ரெயிலைப் பார்க்க வேண்டும், ரெயிலைப் பார்க்க வேண்டும்”  என ரொம்ப நாளாய்ச் சொல்லிக்கொண்டு இருந்தாள் அந்தக் குழந்தை.

 

“இன்னும் எத்தனை நாளிருக்கு” என  ஒவ்வொரு காலையிலும் ரெயிலைப் பார்க்கக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

போகும் நாளன்று சீக்கிரமே ரெயில் நிலையத்திற்கு சென்று விட்டிருந்தார்கள். 

 

தண்டவாளங்களைப் பார்த்தபடி, “இதிலா ரெயில் வரும்” என ஆச்சரியத்தோடு கேட்டாள். ரெயில் வரும் திசையைக் கேட்டு, அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சலோடு தூரத்தில் சின்னப் புள்ளியாய்  இருந்து  மெல்ல மெல்ல பெரிதாவது அதிசயம் போலிருந்திருக்க வேண்டும். அதை நோக்கிக் கையைக் கையை நீட்டியவளைத் தூக்கி  வைத்துக் கொண்டாள் அம்மா. 

 

‘தடக்’ ‘தடக்’கெனக்  கடந்து நின்ற அந்த நீண்ட  இயந்திரம் பார்த்து  ‘ரெயில் ’, ‘ரெயில்’ எனக் கத்தினாள்.

 

ரெயிலின் உள்ளே ஏறிக் கொண்டார்கள்.  உட்கார இடம் பார்ப்பதில், சாமான்களை  பத்திரமாக வைப்பதில் அவனும் அவளும் கவனமாக இருக்கும்போது குழந்தை எதேதோ பேசிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ரெயில் புறப்பட்டது.

 

“நாம இப்போ ரெயிலில் போறோம்” என்றான் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் மகளைப் பார்த்து.

 

“ரெயிலைக் காணோம்” என வெளியே கை நீட்டியபடி குழந்தை அழ ஆரம்பித்தாள்.

 ***

ஆண் -பெண்

            

டற்கரை மணலில் அவனும், அவளும் உட்கார்ந்திருந்தார்கள்.         

அவன் பேசும்போது, அவள் மணலில் எழுதிகொண்டு இருந்தாள்.              

அவள் பேசும்போது, அவன் அதை அழித்துக்கொண்டு இருந்தான்.

 ***

 சினிமாப் பித்தம்

 வெளியே சன் மியூசிக்கில் சிம்ரன் கைகளைத் தூக்கியபடி ஆடிக்கொண்டு இருந்தாள். அந்த வார குமுதத்தின் அட்டையில் ஸ்ரேயா கையில்லாச் சட்டையில் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

 உள்ளே முதலிரவில் அவன் மோசம் போயிருந்தான். ஐந்து வருடம் காதலித்தவளுக்கு அக்குளில் முடிபார்த்து, அப்படி இருக்கவே  முடியாதென்பதாய் அருவருப்படைந்தான்.

 நாலும் தெரிந்தவன் அவன். நாகரீகமானவன் அவன்.

 ***

பரவாயில்லை

 

பஸ் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஜன்னல் வழியே வந்த மார்கழி இரவின் காற்று கடுமையாக வாட்டியது. தன் ஜன்னல் பக்கம் இருந்த கண்ணாடியை இழுத்து விட்டுக்கொண்டான். குளிர் விடவில்லை. முன் சீட்டின் பக்கம் திறந்திருந்த ஜன்னல் வழியே காற்று சாடியது. அதையும் பின்னிருந்து இழுத்துத் தள்ளினான். அப்பாடாவென்றிருந்தது..

சட்டென்று முன் சீட்டில் இருந்த இளம் பெண் வேகமாக கண்ணாடியைப் பின்னுக்குத் தள்ளி தன் ஜன்னல் அருகே முகம் காட்டி மெய்மறந்தாள்.

 

“பாப்பா. ரொம்பக் குளிருது. ஜன்னலை சாத்தலாமா?” என்றான்.

 

“என் ஜன்னல். எனக்கு காத்து வேணும்” என்றாள் வெடுக்கென.

 

அவள் பேசிய விதமும், முகத்தில் தெரிந்த சிறு கோபமும் ரசிக்க வைத்தன. புன்னகைத்துக் கொண்டான். ஆனால் குளிர் தாங்க முடியாமலிருந்தது. ’இன்று தூக்கம் அரோகராதான்’ என அவஸ்தை கொண்டான்.

 

பத்து நிமிடம் கழித்திருக்கும். அவள் திரும்பி, “ ரொம்பக் குளிருதா” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.

 

“இல்லம்மா. பரவாயில்லம்மா” என்று திரும்பவும் புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள்.

 

கண்ணாடியை முன்னுக்குத் தள்ளி ஜன்னலை சாத்திக் கொண்டாள்.

 

“பரவாயில்லை. திறந்திருக்கட்டும்” என்றான் அவன்.

.

“பரவாயில்லை மூடியிருக்கட்டும் ” என்றாள் அவள்.

 ***

நாய் படுத்தும் பாடு

 

ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்.

 வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும். கிழே ;போடும். ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும். முகர்ந்து பார்க்கும். தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும். .பதுங்கும். பின்னங்காலால் மண்ணள்ளிப் போடும். உர்ரென்று துணி மீது பாயும்.. திரும்பவும் கவ்வி, எதோ குழறியபடியே தன்னையே சுற்றும். அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய் முயலும். எதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளவும், அரண்டு போய் வாள் வாள் என கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும். தலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.

 அசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.

 ***

 இதுபோல நான் எழுதிய சொற்சித்திரங்களையெல்லாம்  ‘புத்தரைப் பார்த்தேன்’ என்னும் தொகுப்பாய் Notion press மூலம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 கீழ்கண்ட தளங்களில் புத்தகம் கிடைக்கிறது.

 - Notion Press
 - Amazon
 - Flipkart

நன்றி.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2021 08:55

September 27, 2021

தமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்!

சட்டம், ஒழுங்கு, தார்மீக நெறிகள் அனைத்தையும் மீறி காட்டு தர்பார் நடத்திக் கொண்டு இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்.பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்படத் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.இன்னமும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை செய்து தர மறுக்கிறது. NEFT, RTGS மூலம் வாடிக்கையாளர் பணம் அனுப்பினால் பெரும்பாலும் காலதாமதம் ஆகிறது. சில சமயங்களில் வாரக்கணக்கிலும் போய்ச் சேருவதில்லை. வாடிக்கையாளர்கள் கிளையில் பணிபுரிகிற ஊழியர்கள் அலுவலர்களிடம் கோபம் கொள்கிறார்கள். அதுகுறித்து சங்கங்கள் பேசினல் நிர்வாகத்துக்கு பிடிக்காமல் போகிறது.Google Pay மூலம் பணம் செலுத்த தேடினால் தமிழ்நாடு கிராம வங்கியின் பெயரே இருக்காது. மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் மிகச் சிறிய கிராம வங்கிகளில் கூட இந்த வசதி இருக்கிறது. நிர்வாகத்திடம் பலமுறை சங்கங்கள் பேசிப் பார்த்தும் பிரயோஜனமில்லை.வங்கியின் வணிகத்தில் கணிசமான பகுதி என்.ஜீ.ஓக்கள் மூலம் நடத்துகிறது. அங்கங்கு என்.ஜீ.ஓக்கள் குழுக்களிடம் வசூல் செய்துவிட்டு, வங்கிக்கு பணம் கட்ஆவேசமாநகழ்வுகள் அதிகமாகி வருகின்றன. தொலைக்காட்சிகளில் கூட என்.ஜீ.ஓக்களுக்கு எதிராகவும், வங்கிக்கு எதிராகவும் மக்கள் கோபமாக போராடிய காட்சிகள் வெளியாகின. அந்த என்.ஜீ.ஓக்கள் மக்களை கட்டணம் என்ற பேரில் கொள்ளை அடிக்கின்றன. இது சரியல்ல என்று சங்கங்கள் பேசினால் நிர்வாகத்துக்கு கோபம் வருகிறது.கோவிட் பெருந்தொற்று தீவீரமாக இருந்த நேரங்களில் பொதுப் போக்குவரத்து இல்லாமல் கிராமங்களுக்கும், தொலைதூரங்களுக்கும் செல்ல முடியாமல் பெண் ஊழியர்கள் உட்பட பலரும் தவித்தபோது, நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இல்லாமல், பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது.இன்னும் தமிழ்நாடு கிராம வங்கிக்கு என்று ஒரு அடிப்படை ஆவணமான Book of instructions கிடையாது. ஏராளமான புதிய ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு வங்கியின் நடவடிக்கைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்த எழுத்து பூர்வமான வழிகாட்டி இல்லை. அவ்வப்போது உயரதிகாரிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே அவர்கள் செயல்பட வேண்டிய அவல நிலை தொடர்கிறது.வாடிக்கையாளர் நலன் கருதி, ஊழியர்கள் நலன் கருதி சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது Regional Labour commissioner (central) முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகம் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி மொழி அளித்தது. அதன் பேரில் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒன்பது மாதங்களாகியும் நிர்வாகம் அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை.வங்கிக்கு விரோதமான, ஊழியர்களுக்கு விரோதமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம் கொண்ட நிர்வாகம் சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்து கொடுக்கும் செக்-ஆப் வசதியை சட்ட விரோதமாக நிறுத்தியது. அதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வந்த பின்னரும், அதனை மதிக்காமல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது. முற்றிலும் இளம் தோழர்கள் தலைமையில் இயங்கத் துவங்கி இருக்கிற தொழிற்சங்கங்களை அழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அராஜகங்களை கட்டவிழித்து கொண்டிருக்கிறது.
அதனை எதிர்த்து இன்று- தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலர்களும், ஊழியர்களும் இணைந்து வேலை நிறுத்தம் நடத்துகின்றனர்.
எங்கே அடக்குமுறைகள் கட்டவிழித்து விடப்படுகிறதோ, அங்கு அதனை எதிர்த்த போராட்டங்களும் இடைவிடாமல் எழுந்தே தீரும்! 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2021 19:55

September 26, 2021

பொய் மனிதனின் கதை - 1



“நீ பொய்யன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு பொய் போதும். கடந்த காலத்தில் நீ செய்தவைகளை மக்கள் மறப்பதற்கும் எதிர்காலம் முழுவதையும் அந்த மக்கள் சந்தேகத்தோடு பார்ப்பதற்கும் பொய்கள் உதவுகின்றன.” – நிஷான் பன்வார்

எழுத்தாளர் சேட்டன் பகத் முதன்முறையாக ஏ.பி.பி செய்தி சேனலில், ‘7 RCR’ என்னும் அந்த தொடரை 2014ம் வருடம் ஜனவரி மாதம் முதல் நடத்தியதற்கு காரணங்களும், பின்னணியும் இருந்தது. இந்திய மத்திய வர்க்கத்தின் இளைய தலைமுறையால் நெருக்கமாக அறியப்பட்டவர் சேட்டன் பகத். 2010ம் ஆண்டு உலகின் மிக செல்வாக்கு பெற்ற நூறு பேரில் ஒருவராக அவரை டைம் பத்திரிகை அறிவித்திருந்தது.

2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள்.

ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.  

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு  மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும்.

‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7 RAC’ தொடர். சைரன் பொருத்திய காரொன்று வாசல் திறக்க ஒரு ஒரு மாளிகை நோக்கி பயணிக்கும் காட்சியுடன் துவங்கியது.

அறிந்திராத பல தகவல்களால் மோடி வடிவமைக்கப்பட்டிருந்தார். “டீ விற்றவர் பிரதம வேட்பாளராக..” என்ற பின்னணிக்குரலில் மனதை கவ்வும் ஈர்ப்பு இருந்தது. மோடி பிறந்த வட நகர், அவர் பிறந்த வீடு, படித்த பள்ளி என தொடர்ந்த காட்சிகள் ஆழ்ந்து போக வைத்தன. மோடிக்கு நெருக்கமானவர்கள், மோடியை அறிந்தவர்களின் உரையாடல்கள் அரூபமான இசைச் சேர்க்கையோடு பார்வையாளர்களை தன்னிலை இழக்க வைத்தன.

 

அப்படித்தான் மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா போகிற போக்கில் அந்த தகவலைச் சொன்னார். தனது  பதினான்காவது  வயதில் பள்ளியில் நடந்த லீடருக்கான தேர்தலில் கலந்து கொள்ள மோடி ஆசைப்பட்டாராம். அவருக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை என பள்ளியில் பலரும் எடுத்துரைத்தார்களாம். நண்பர்களேக் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையாம். மோடி உறுதியோடு தேர்தலில் நின்றாராம். வெற்றி பெற்றாராம். இதைச் சொல்லி, மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் என்றும், தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

 

இதை கேள்விப்பட்டவுடன் பிரதம வேட்பாளராக மோடி எப்படி ஆனார், கூட்டணிக் கட்சியில் மற்றவர்கள் எதிர்த்தபோதும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களே ஆதரிக்காத போதும் எப்படி மோடி தன்னை முன்னிறுத்திக் கொண்டார் என்பதெல்லாம் உள்ளுக்குள் ஓடலாம். இங்கு சொல்ல வருவது அவ்வளவு முக்கியமான விஷயங்கள் இல்லை. மிக மிக சாதாரணமான, அல்லது அல்பமான ஒன்றுதான்.

 

தேர்தல் முடிந்து, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்று ஒருவருடம் கழித்து நடந்த சம்பவம் இது. 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தில் ‘பிரதமர் தனது நாட்டின் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறார்’ என பெரும் விளம்பரங்களோடு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கருமமே கண்ணாய் அது குறித்து செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பையும், ஆர்வத்தையும் தூண்டின. தூர்தர்ஷனில் நேரடி ஓளிபரப்பு இருப்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளையும்  பார்க்க வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டன. மத்திய அரசின் மனித வளத்துறை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி இருந்தது.

 

டெல்லியில் மானெக்சா ஆடிட்டோரியத்தில், ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்ட பள்\ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் காலை 10 மணிமுதல் 11.15 வரை நடைபெற்றது. இந்தியப் பெருநகரங்களில் குறிப்பிட்ட மையங்களில் பெரிய திரைகளில் கவனிக்கவும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்கள் குழந்தைகள். எல்லாம் முன்கூட்டியே  திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன..

 

நாடாளுமன்றத்திலோ, வெளியே நிருபர்களிடமோ எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளாத, அவைகளுக்கு பதிலளிக்காத பிரதமர் மோடி நாட்டின் இளம் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கு அன்று பதில் அளித்தார்.

 

“அரசியல் மிகக் கஷ்டமானதா? நீங்கள் எப்படி அதன் மன அழுத்தத்தை சமாளிக்கிறீர்கள்?”  பள்ளி மாணவன் ஒருவனின் கேள்வி இது.

 

“அரசியல் ஒரு தொழில் அல்ல. சேவை என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமே வராது. தேசத்தின் மக்கள் அனைவரும் என் குடும்பம். அவர்களின் சந்தோஷம் என் சந்தோஷம். அவர்களின் வேதனை என் வேதனை.”  அப்பழுக்கற்ற எல்லோருக்குமான மனிதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் மோடி.

 

“ஒரு புத்திசாலி மாணவன். ஒரு சோம்பேறி மாணவன். ஒரு சராசரி மாணவன். ஒரு டீச்சராக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” இன்னொரு மாணவன் கேள்வியை முன்வைத்தான்.

 

“எல்லா மாணவர்களும் டீச்சருக்கு சொந்தம். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நான் ஒரு ஆசிரியராக இருந்தால் பாகுபாடு காட்ட மாட்டேன்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடித்தார் மோடி. ஒவ்வொரு கேள்விக்கும், மிக நிதானமாக, சாந்த சொருபியாய், ஒரு ஞானியைப் போல பேசினார். நாட்டின்  பிரதமராக இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்தோடு பேசுவதாகவும் அப்போது தெரிவித்தார்.

 

மேலும் கேட்கப்பட்ட ஒன்றாக “சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது.

 

லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும் போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி.

 

”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1ம் தேதி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “ என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது.

 

சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக் குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில் இருந்தது. ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச் சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. பொய் சொல்லவும் முடியாது. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார்.

 

ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள்”,  ‘மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

 

அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.

 

பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும் என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள்.  அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

 

மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்.

 

அந்த கேள்விக்கு ““நான் பிரதமராக நினைத்ததே இல்லை. ஆனால் பள்ளியில் லீடராகும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்று புன்னகைத்துக் கொண்டே உண்மை பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறார்.

 

பதவிக்கும், அதிகாரத்துக்கும் எப்போதும் ஆசைப்படாதவராய், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் தன்னைத் தேடி வந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவராய் காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நினைத்திருக்க வேண்டும்.

 

ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையானவராய், நேர்மையானவராய் செயல்படுவதன் மூலமே தன்னை அவ்வாறு நிலைநாட்ட ஒருவர் முயற்சிக்க வேண்டும். வெறும் வாய் வார்த்தைகளாலேயே தன் பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கம்தான் உண்மையில் அல்பத்தனமானது. உண்மைக்கு மாறாக தன்னை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பது அருவருப்பானது,.

 

அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தேசத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்து கொண்டு, அவரை அண்னாந்து பார்க்கும் குழந்தைகளிடமா அப்பட்டமாகப் பொய் சொல்வது?

 

”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக் கொன்றான். அதை அவன் பின்னால் இருந்து ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தது.’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருதடவை பகிர்ந்த ஜென் கவிதையை நினைக்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு உணர்வை மோடியின் இந்தப் பொய் தந்தது.

 

2014ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான சேட்டன் பகத், 2021 மே மாதத்தில் என்.டி.டிவியில் ”மோடியின் பிம்பத்திற்கு இப்போது ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று சொன்னார். மோடியின் தொடர்ந்த பொய்களும், புரட்டுகளும் தந்த அச்சம், அந்த எழுத்தாளரை அப்படி பேச வைத்திருக்க வேண்டும்.


( அம்பலப்படுத்துவது தொடரும் )

- பாரதி புத்தகாலயத்தின் இணையத்தில் எழுதி வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் முதல் அத்தியாயம் இது 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2021 09:09

October 11, 2020

வாழ்க பெண் குழந்தைகளே!



இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடுமென்று டாக்டர்கள் சொன்னதால், நான் சென்னையில் அம்முவின் வீட்டிலேயே லீவு போட்டு இருந்தேன். 1993 மார்ச் 4ம் தேதி காலையில் அம்முவுக்கு வலி வந்து அரற்றிய உடனே, அம்முவின் தந்தை எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு ஆட்டோவை வரவழைத்து அம்முவையும், என்னையும் மட்டும் அதில் அனுப்பி வைத்தார். அவருக்கு என் மீது இருந்த அன்பையும், நம்பிக்கையையும் அறிய முடிந்து நெகிழ்ந்த தருணங்களில் அது மிக முக்கியமானது.

ஆட்டோவில் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்தவாறு அந்த நேரத்திலும் அம்மு என் கண்களைப் பார்த்து சிரித்தாள். எப்பேர்ப்பட்ட பெண் அவள்! அந்த ஆஸ்பத்திரியின் முன் அலுவலகத்துக்குச் செல்ல சில படிகள் ஏற வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட அம்முவை நான் தூக்கிக்கொண்டுதான் சென்றேன். வேகமாக பலர் சூழ்ந்து அவளை அழைத்துச் சென்றார்கள். ஜே.கே ஆஸ்பத்திரிக்கு போன் செய்திருக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்.

இரண்டு மூன்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். வெளியே தனியே நின்றிருந்தேன். அருகில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று சிகரெட்டாய் பிடித்துக் கொண்டு இருந்தேன்.

அரை மணி நேரம் போலத்தான் இருக்கும். ஒரு நர்ஸ் வெளியே வந்து, “சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது’ என்று சொன்னார். எனக்கு ஏனோ கண்ணீராய் வந்தது. அங்கேயே உட்கார்ந்து இருந்தேன். முதலில் என் அம்மாவுக்கு சொல்ல வேண்டும் என்றிருந்தது. அப்போது எந்த வசதியும் இல்லை. அம்முவின் வீட்டிற்கு போன் செய்து, ஜே.கேவிடம் (அவரை மாமா என்று ஒரு போதும் அழைத்தது இல்லை. அழைக்க விரும்பியதும் இல்லை.) சொன்னேன். சந்தோஷம் என்றார். ‘அம்மு எப்படி இருக்குறா?’ என்றார். “நான் இன்னும் பாக்கல” என்றேன்.

கொஞ்ச நேரத்தில் ஜே.கே அங்கு வந்து விட்டார். நர்ஸ் குழந்தையை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார். அவரோ என்னைக் காண்பித்தார். தூக்குவதற்கு எதோ பயமாய் இருந்தது. பார்த்துக்கொண்டே இருந்தேன். “தூக்குங்க சார்” என்றார் நர்ஸ். “இல்ல பரவாயில்ல..” என்று அந்த பிஞ்சுக் குழந்தையின் விரல்களை மட்டும் தொட்டுப் பார்த்து சிலிர்ப்படைந்தேன். ஜே.கே வாய்விட்டு சிரித்தார்.

குழந்தைக்கு தனது அம்மாவின் பேரை வைக்கும் எண்ணம் அப்பாவுக்கு இருப்பதாய் அம்மு சில நாட்கள் கழித்துச் சொன்னாள். நானோ, என் அம்மாவின் பேரை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அம்மு அதை ஜே.கேவிடம் சொல்லி இருக்க வேண்டும். அவர் அதுகுறித்து பின் எதுவும் சொல்லவில்லை. ஜோதி என்ற அம்மாவின் பெயரும் வருவதாய் ‘ஜோதிஷ்னா’ என்று அம்முவே பெயரை சூட்டினாள். பெயர் அதுவாக இருந்தாலும், பிரீத்து என்றே அழைத்தோம். அடுத்த சில நாட்களில், தனது சபையில், தன்னை பிரீத்து ’தாத்தாவாக்கி விட்டதாய்’ சொல்லி சிரித்தார்.

ஜோதிஷ்னாவின் குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம் எல்லாவற்றிலும் அம்முதான் நிறைந்து இருந்தாள்.

நானும் அம்முவும் வேலைக்கு போக வேண்டிய வார இறுதி சனிக்கிழமைகளில் பிரீத்துவுக்கு பள்ளி விடுமுறையாக இருக்கும். பிரீத்துவுக்கு மதிய உணவை ஒரு டிபன் பாக்ஸில் வீட்டின் வாசலில் வைத்துவிட்டு அம்மு தைரியமாக வேலைக்குச் செல்வாள். எனக்குப் பதற்றமாக இருக்கும். ‘அவள் இருந்து கொள்வாள்’ என அம்மு சாதாரணமாகச் சொல்வாள். அதே போல தெருவில் மற்ற குழந்தைகளோடு விளையாடிவிட்டு, சாப்பிடும் நேரம் மட்டும் வீட்டுக்கு வந்து டிபன்பாக்ஸில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு திரும்பவும் தன் வயதொத்த குழந்தைகளோடு விளையாடச் சென்று விடுவாள்.

தொழிற்சங்க வேலையாக, சமூகப் பணிகளாக நேரம் காலம் இல்லாமல் அலைந்து கொண்டு இருந்த நான், அந்த பெண் குழந்தைக்கு எப்படி என் நேரத்தையும், சிந்தனைகளையும் கடத்தினேன் என்று யோசித்துப் பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை.

ஒரு தடவை டிவி பார்த்துக் கொண்டு இருக்கும்போது நான் ரஜினியைக் கிண்டல் செய்யவும், ‘உங்களுக்குப் பிடிக்கலன்னா எனக்கும் பிடிக்கக் கூடாதா?” என்று சட்டென்று சொன்னாள். நான் முதல் முறையாக அவளைத் தள்ளி வைத்துப் பார்த்தேன். “எதையும் திணிக்காதீங்கப்பா’ என்றாள். நான் அமைதியானேன்.

இன்றைக்கு அவளுக்கும் ரஜினி குறித்து தெளிவான புரிதல் வந்து இருக்கிறது. அரசியல் ரீதியாக அவர் ஒருஅபத்தம் என்ற தெளிவு இருக்கிறது. அதே வேளையில் சின்ன வயதில் தன்னை குதூகலமாக்கிய ரஜினியை அவள் மதிக்கவும் செய்கிறாள்.

இந்தத் தெளிவு என்னிடம் அதற்கு முன்பு இல்லை. நான் ஒரு காலத்தில் ரசித்து, விரும்பி, கொண்டாடியவர்களிடம் இப்போது பலவீனங்களையோ, குறைபாடுகளையோ கண்டால் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் மனோபாவம்தான் கொண்டு இருந்தேன். அப்படி இருக்கக் கூடாது, இரண்டுமே அந்தந்த தருணத்தின், காலத்தின் உண்மைகள் என்பதை அவளிடம் கற்றுக் கொண்டேன்.

என் அம்மாவின் பேரில் இருக்கும் ‘ஜோதிஷ்னாவிடம்’ இப்படி நிறைய நான் கற்று இருக்கிறேன். என்னிடம் இருந்து என் மகள் கற்று இருப்பாளா என்று யோசிப்பதுண்டு. வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அவள் தனக்கான வாழ்வை பழக்கிக் கொள்கிற விதத்தில், பிரச்சினைகளை எதிர்கொள்கிற விதத்தில் என்னிடம் இருந்து தெரிந்து கொண்டதை, என்னை விடவும் சிறப்பாகவும், அழகாகவும் வெளிப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பெண் குழந்தைகள் தினத்தில் அவளைப் பற்றிய நினைவுகள் இப்படியாக வந்து சென்று கொண்டு இருக்கின்றன.

வாழ்க பெண் குழந்தைகளே!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2020 08:33

September 29, 2020

"உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும்”





2004 தேர்தல் ஆரம்பித்த நேரத்தில் இருந்து, பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது வரையிலான கட்டுரைகளைத் தொகுத்து ‘உடைந்த முட்டையும், தலையெட்டிப் பார்த்த டைனசரும்’ என்ற புத்தகமாக அமேசானில் வெளியிட்டு இருக்கிறேன்.

 

இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும்  பிஜேபிக்கு எதிராக ஒருங்கிணைந்ததால்தான் வாஜ்பாய் தலைமையிலான பிஜேபியை ஆட்சியை அன்று அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தது.

 

தேர்தலில் தோற்ற பிஜேபி என்ன முடிவு எடுத்தது என்று புத்தகம் பேசுகிறது.

 

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்பதை பேசவே இல்லை.,

 

அன்றைக்கு பேசியது, பேசாமல் விட்டது எல்லாவற்றையும் இப்போது யோசிக்க வைக்கிறது.

 

முதல் அத்தியாயத்தை இங்கு பகிர்கிறேன்.

-------------

‘இந்தியா ஓளிர்கிறது’ – பிரச்சாரம்’

‘இந்தியா ஒளிர்கிறது’   

 

வறட்சியை, பசியால் அழும் குழந்தைகளை, பட்டினிச்சாவுகளை எதோ சில வினாடிகள்காண்பித்துவிட்டு 'லேக்மே ஃபேஷன் ஷோவை' முட்டி முட்டி வாரக்கணக்கில்  காண்பித்துக் கொண்டிருந்த இந்திய தொலைக்காட்சிகளுக்கு இந்தியாவில்ஒளிவெள்ளம் பாய்ச்ச வேண்டிய நேரம் 2004ம் ஆண்டின்  துவக்கத்தில் வந்திருந்தது.

 

"நமது கனவுகள் மிகவும் சிறியன. இப்போது எதுவும் சாத்தியம். இந்தியாமுழுவதும் சந்தோஷம்"  தொழிலதிபர்களின்பேட்டிகள். பங்குச்சந்தை குறியீடுகள். சந்தோஷமான மனிதர்கள். செல்போனில் பேசினார்கள்.  பொருட்கள்வாங்கினார்கள். செய்தித்தாள்கள் படித்தார்கள்.

 

விளம்பரங்களும் பிரச்சாரங்களும் எல்லோர் வீடுகளிலும் போய்விழுந்து கொண்டே இருந்தன. அவைகளைபொய்  என்றுசொல்லக்கூட வேண்டாம், நம்ப மறுத்தால்கூட தேசவிரோதிகளாகி, ரத்தம் ரத்தமாய் கக்கி செத்துப் போகக் கூடும். அப்படித்தான் வாஜ்பாயையும், அவரது ஆட்சியையும் முன் நிறுத்தினார்கள்.

 

அங்கங்கு தங்கள் ‘செட்-அப்’களை நுழைத்துஅவர்கள் மூலமாக தங்கள் சித்துவேலைகளைநம்ப வைத்தார்கள். காட்சிகள் அப்படித்தான் அரங்கேற்றப்பட்டன. சித்து சேர்ந்துவிட்டார். ஸ்ரீகாந்த்கலந்துவிட்டார். நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நடிகைபல்லவி இணைந்துவிட்டார்கள். நஜ்மா ஹெப்துல்லா வாஜ்பாயைதலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார். ஆலடி அருணா ஐக்கியமாகிவிட்டார். நாளொரு செய்தியாக பத்திரிக்கைகளில் வண்ணப்படங்கள் ஒளிர்ந்தன. தேசமே பா.ஜ.க  பின்னால்அலைஅலையாய் திரண்டு வருவதாய் பிரமாதப்படுத்தப்பட்டன.

 

"மகாமகத்தில்தீர்த்தமாட வருகிறவர்கள் போல எங்கள் கட்சியில்வந்து இணைகிறார்கள்" என்று பரிவாரங்களுக்கே உரித்தானஅரசியல்  பார்வையோடுவெங்கையா நாயுடு தலையில் வைத்துகூத்தாடினார். மகாமகம்  வற்றாமல்ஓடிக்கொண்டிருக்கும் நதி ஒன்றும் அல்ல. ஒருகால்வாய்கூட அல்ல. பனிரெண்டு ஆண்டுக்குஒருமுறை பக்தர்கள் குளிப்பதற்கு செயற்கையாக நீர் தேக்கி வைக்கப்படுகிறஒரு குளம். விசேஷ ரெயில்கள், பேருந்துகளில் அடித்துப் பிடித்து கூட்டத்தில் கசங்கி வரும்  லட்சக்கணக்கான மனிதர்கள் நெரிசலோடு குளிக்க குளிக்க அவர்களின்வேர்வை அந்த தேக்கிவைக்கப்பட்டு இருக்கிறநீரில் மாறி மாறி,  கலந்து கலந்து  தெய்வீக தீர்த்தமாகும்.  நாமும்  குளிக்காவிட்டால்வாழ்க்கையே இல்லை என்று அப்பாவிமனிதர்கள் மகாமகத்தை நோக்கி  இழுக்கப்படுகிறார்கள். அந்த ஒருநாள் குளித்தாகிவிட்டது. பிறவிப்பயனைஅடைந்தாகிவிட்டது. பின்னர் மகாமகத்துக்கும், அந்தமக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.  மிகச்சரிதான்.  ஐந்தாண்டுக்குஒருமுறை வரும்  தேர்தல்நேரத்தில் பக்தர்களை அந்த 'புண்ணிய' தீர்த்தத்தில்நீராட இழுக்கிறது  மகாமககட்சி.  வெங்கையாநாயுடு சரியாகத்தான் சொல்லி இருந்தார்.

 

அடுத்த காட்சியில் காலமும் நேரமும் பிஜேபி பக்கம்இருப்பதாக சொல்ல வேண்டும்.  அவர்களே வெற்றிக்கு சொந்தக்காரர்கள்என்று மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

 

மக்கள் யார் பக்கம் என்றொருநிகழ்ச்சி டிவியில் நடத்தப்பட்டது. நாகர்கோவில் தொகுதி குறித்து அலசப்பட்டது. கிறித்துவர்கள்தான் தீர்மானிக்கும் சக்தி என்று அவர்களுக்கேஉரிய அரசியல் பார்வையை அள்ளித்தெளித்தார்கள். பா.ஜ.கவேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும், சி.பி.எம் வேட்பாளர்பெல்லார்மின்னிடமும் பேட்டிகள் எடுக்கப்பட்டன. பொன்.ராதாகிருஷ்ணன் பொட்டுவைத்து  இருந்தார். மிகச்சரியான கோணத்தில்  காமிராஅவரைத் சாந்தசொரூபியாக காண்பித்தது. பெல்லார்மின் எங்கோ அலைந்து களைத்துவந்தவராக இருந்தார். காமிரா ஒரு மாதிரியாகமேலிருந்து எடுக்க, பெல்லார்மின் தலைபெரிதாகவும், உடல் சிறியதாகவும் தெரிகிறது. மீடியாக்காரர்கள் கவனமாகவும், நுட்பமாகவும் தங்கள் வேட்பாளர்களை மக்கள்மனதில் வடிவமைக்க முயன்றார்கள்.

 

பேட்டியில் பெல்லார்மின் அந்தத் தொகுதியில் குறிப்பிடும்படியானதொழிற்சாலைகள் இல்லாமல் இருப்பதையும், தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் குறித்தும்பேசினார். மத்தியில் பா.ஜ.கஅரசே இருந்தும், அதன் அமைச்சர்களில் ஒருவராகஅவரே இருந்தும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யாததற்குஎந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்பொன்.ராதாகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே "மக்கள் இந்துக்களாக இருக்கலாம். கிறித்துவர்களாக இருக்கலாம். மூஸ்லீம்களாக இருக்கலாம். அதில் எனக்கு பாகுபாடுகிடையாது.  நான்கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டார். தனக்கு போட்டியாக இருப்பவர்களை  மக்களிடமிருந்து   அந்நியப்படுத்த பரிவாரங்கள் கையாளும் உத்தியில் பழுத்த பழமாக இருந்தார் அவர்.

 

சோனியா வெளிநாட்டுக்காரர் என்று பிரச்சாரம் செய்வதைப்போலத்தான் இதுவும். மக்களின் பிரச்சினைகளை முன் நிறுத்தாமல், தாங்கள்  பதவிக்கும், பொறுப்புக்கும் வருவதற்கு தகடு வைக்கிற வேலைஅது.  அந்த நிகழ்ச்சியின் இறுதியில்திட்டமிடப்பட்ட காட்சி வந்தது. ஒரு ஜோஸ்யக்காரரிடம்  யார்ஜெயிப்பார்கள் என்று கேட்டார்கள்.  மேடு, பள்ளம், ராசி, கிரகம் எல்லாம்பார்த்து அவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குநல்ல யோகம் இருப்பதாக அறிவித்தார். எதற்கு தேர்தல் கமிஷன். எதற்குஇத்தனை செலவுகள். எதற்கு இந்தியாவில்  கோடி கோடியாய் மக்கள் . பேசாமல் ஒரு ஜோஸ்யக்காரரிடம்போய் கிளி எடுத்துப்போடும் சீட்டுக்காகஇந்திய ஜனநாயகம் காத்திருக்கலாம்.

 

மூடுமந்திர ஜாலங்களில் அடிப்படை பிரச்சினைகளை ஒளித்து வைக்கப் பார்த்தார்கள். வாக்காளர்களை புத்திபேதலிக்கச் செய்யும் முறை அது. மோடிமஸ்தான்கள் கைகளில் இருக்கும் பொம்மையைப்போல ஜனநாயகம் தலையை ஆட்டிக் கொண்டுவிழித்தது. ஆட்ட விதிகள் எதுவுமேஇல்லாமல் பரிவாரங்கள் ஆடிய ஆட்டங்கள் எல்லாமேபயங்கரமானவை. அயோத்தியின் ராமரை கையிலெடுத்தார்கள். கார்கில்போரை முன்வைத்தார்கள். அந்த முறை முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் துருப்புச் சீட்டாய் வாஜ்பாய் இருந்தார்.

 

மாயாபஜாரில்"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும்பிரமாதம்' என்று தலையை உருட்டிப்பாடும் ரெங்காராவ் போல வாஜ்பாய் 'இந்தியாஒளிர்கிறது', "இந்தியா ஒளிர்கிறது" எனதிரும்பத் திரும்ப  சொல்லிக்கொண்டுஇருந்தார். லட்டுகளும், ஜிலேபிக்களும் அவரது வாயை நோக்கிப்போவதைப் போல அனிமேஷன் காட்சிகளை பரிவாரங்கள் வடிவமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

(தொடரும்) 

(இன்றும் நாளையும் புத்தகத்தை இலவசமாக அமேசானில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதற்கான லிங்க்: உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும்  )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 09:32

September 27, 2020

அவர்கள் அப்படித்தான்


பாராளுமன்றத்துக்குள் முதன் முதலாய் நுழையும்போது தரையில் விழுந்து வணங்கினான்.

 

சான்றோர் நிறைந்த சபையில் தன் பேச்சை துவக்கும்போது, தனது முதல் மரியாதை நாட்டின் விவசாயிகளுக்கு என்று சொல்லி வணங்கினான்.

 

எல்லையில் போய் இராணுவ வீரரக்ளை வணங்கி அவர்களுக்கு இனிப்பு வழங்கினான்.

 

தனது குறைந்த வருவாயில் சேமித்து கழிப்பிடம் கட்டிய கிராமத்து மூதாட்டியை மேடைக்கு அழைத்து எல்லோர் முன்னாலும் வணங்கினான்.


தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு வணக்கம் சொல்லி, அறிவுரை வழங்கினான்.

 

மக்களை எல்லாம் வணங்கி அவர்களின் மனதோடு பேசுவதாகச் சொன்னான்.

 

அன்றொரு நாள் இது போல ஒருவன் மகாத்மாவுக்கு முதலில் வணக்கம்தான் செலுத்தினான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2020 20:40

ஆறரை வருடங்கள் கழித்து....




வணக்கம்.

2008 செப்டம்பர் 25ம் தேதி  தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுதி இருந்தேன். ஐந்தரை வருடங்கள் தொடர்ந்து இந்த பக்கங்களிலேயே என் சிந்தனைகளை பகிர்ந்திருந்தேன். 2014 மே 1ம் தேதி எழுதியதற்கு பின் இங்கு வரவில்லை.

பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தது போல blog இல்லை. வெறிச்சோடித் தெரிகிறது. சமூக வலைத்தளங்கள் வெவ்வெறு வடிவங்களில், தன்மைகளில்  நிறைந்து இருக்கின்றன. உடனடியாக, சின்னச் சின்னச் சின்னதாய், சட் சட்டென்று உரையாடுவதாய், பகிர்வதாய் பெருகி விட்டன.

இருந்தாலும் பிளாக்கர் உலகம் போல் சுவாரசியமும், ஒரு நிறைவும், பரந்த வெளியும் கொண்டவைகளாய் மற்றவை இல்லை என்றே தோன்றுகிறது.

எவ்வளவோ நண்பர்கள், எவ்வளவோ அரட்டைகள், விவாதங்கள் என கடந்த காலம் ததும்பி கிடக்கிறது இங்கு.  மற்றவர்களை மட்டுமல்ல நம்மையும் அறியவும் பகிரவுமாய் இருந்த ஒரு வசந்த காலம் அது.

நிறைய நினைவுகளோடு அங்கங்கு உலவிப் பார்த்தேன். பக்கங்கள் எதுவும் பழையதாய் இல்லை. புதுசாகவே இருக்கின்றன.

முதன் முதலில் பிளாக் எழுத ஆரம்பித்த அதே செப்டம்பரில் அதே நாட்களில் - 12 வருடம் கழித்து  மீண்டும் இங்கு வரத் தோன்றியதும், வாய்த்ததும் எதோ ஒரு காரணத்துக்காக என்றுதான் நினைக்கிறேன்.

இன்னும் சரியாக ஏழு மாதங்களில் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இங்கு கொஞ்சம் ஆசுவாசமாக வர வாய்ப்பிருக்கிறது.

மீண்டும் இங்கு எழுத ஆரம்பிக்க வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2020 10:43