Mathavaraj's Blog, page 9
February 8, 2022
அல்லாஹூ அக்பர்

”அல்லாஹூ அக்பர்”அந்த மாணவி எழுப்பிய குரலுக்கு என்ன அர்த்தம்?அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை பயமுறுத்தும்போதும் நான் பயப்பட மாட்டேன் என்று அர்த்தம்.அவர்கள் பள்ளிக்கு வெளியே நிறுத்தப் பார்த்தாலும் நான் பள்ளிக்குள் செல்வேன் என்று அர்த்தம்.அவர்கள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும் போதுநான் கடவுளின் பெயரால் நியாயம் கேட்பேன் என்று அர்த்தம்.அவர்களே பயங்கரவாதிகள், தீவீரவாதிகள்நான் அல்ல என்று அர்த்தம்.அவர்கள் வெறுப்பை உமிழும்போது நான் அன்பை வேண்டுகிறேன் என அர்த்தம். அவர்கள் நிராதரவாக என்னை நிறுத்தும்போதுநான் என்னை ஆதரிக்கும் மனிதர்களை அழைக்கிறேன் என்று அர்த்தம்.அவர்கள் என்னை வீழ்த்திட மூர்க்கத்தனம் கொண்டபோதுவாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி, யுத்தம் செய்வேன் என அர்த்தம். “அல்லாஹூ அக்பர்.”அவள் தனியே இல்லை; நாமெல்லாம் அவளோடு இருக்கிறோம் என்று அர்த்தம்
February 7, 2022
இரண்டாம் இதயம்

“கடந்த காலம் எனக்குள் இரண்டாவது இதயம் போல் துடித்துக்கொண்டு இருக்கிறது” என்பார் ஐரிஷ். எழுத்தாளர் ஜான் பால்வில்லே.
தீராத பக்கங்களில் பகிர்ந்திருந்த கடந்தகால அனுபவங்களை சரி செய்து, மேலும் சில அனுபவங்களோடு ‘இரண்டாம் இதயம்’ என்னும் புத்தகம் எழுதி இருந்தேன். அண்மையில் பாரதி புத்தகத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
அன்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், இந்த மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது ‘இரண்டாம் இதயம்’ குறித்து அழகாய் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு எனது நன்றி.
வாசகர் இதயத் துடிப்பிலும் ஒலிப்பதாய்....
எஸ் வி வேணுகோபாலன்
—
எண்பதுகளில் செம்மலர் இதழில் கிடைத்தார் எனக்கு ஜா மாதவராஜ். அவரது 'மண் குடம்' சிறுகதை என்னைப் புரட்டிப் போட்டது. முகவரி கேட்டுப் பெற்று அவருக்கு என் உணர்வுகளைக் கடத்திய பிறகே ஆசுவாசம் கொள்ள முடிந்தது. அப்போது தெரிந்திருக்கவில்லை, பத்தாண்டுக் காலத்திற்குள், உற்ற தோழராக நெருக்கத்தில் பழகக் கிடைப்பார் என.
இப்போது, அவரது எழுத்துகள் வழியே அவரது இளமைக் காலம், கல்லூரிப் பொழுதுகள், அவரது கிராம வங்கிப்பணி, தொழிற்சங்கத்தில் மூழ்கிப் போன இலக்கிய முகம்..... எல்லாம் வாசிக்க வாசிக்க என் வாழ்க்கையின் சில கட்டங்களை அப்படியே திரும்பிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனைக்கத்தனை அப்படியே என்று சொல்லி விட முடியாது தான், ஆனால், ஒப்பிட்டுக் கொள்ள எத்தனையோ...
வைப்பாற்றங்கரை அவருக்கு, பாலாற்றங்கரை எனக்கு. அவருக்கு, ஆச்சி வந்து படைக்கிறாள் கதை உலகம், எனக்கு என் பாட்டி.
பள்ளி நாடகத்தில், ஷேக்ஸ்பியரது புகழ் பெற்ற ஒதெல்லோ நாடகத்தின் டெஸ்டிமோனா வேடத்தில் ஸ்த்ரீ பார்ட் போட்டிருக்கிறார் மாதவராஜ்! அந்த அழகில் மயங்கி, காதலன் வேடம் போட்ட பையன் இவர் உதடுகளில் முத்தம் இட்டுவிடுகிறான், வெட்கம் பிடுங்கித் தின்ற கதையை இப்போது ரசித்து எழுதுகிறார் மாதவராஜ். எனக்கு என் ஸ்த்ரீ பார்ட் நினைவுக்கு வந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் நடு நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நாடகத்தில், ராணியின் தோழி ரஞ்சிதம் ஆக நான்! என்ன, சிரட்டைகள் பொருத்திக் கொண்டு பருவ மங்கை ஆகிப் போனார் அவர், என் கதை வேறு, மேக்கப் மேன் முதல் நாளே சொல்லி இருந்தும் கொட்டாங்கச்சிகள் இல்லாமல் போய் நின்று, அவரை தாஜா செய்து சமாளித்து நடித்து முடித்து வீடு திரும்புகையில் வழியில் பெட்டி கடைக்காரர் அளித்த வாழைப் பழங்கள் பரிசோடு வீடு திரும்பினேன்.
அம்புலி மாமாவின் விக்கிரமாதித்தன் வேதாளம், வாராந்தரி ராணி, தமிழ்வாணனின் சங்கர்லால், மாது, வாரம் தவறாமல், ஒரு பத்திரிகை விடாமல் சுஜாதா தொடர் கதைகள்.... அப்படியே என் இளம் பிராய வாசிப்பு உலகமாக விரிந்தது எனக்கு. தொழிற்சங்க வாழ்க்கை உள்பட பின்னரும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே வருகிறது, அவரது காலக் கண்ணாடியில் அப்படியே பிரதிபலிக்கும் என் சமகாலப் பயணமும்.
இரண்டாம் இதயம், மாதவராஜ் தம் வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களைத் திரும்பிப் பார்த்த நினைவுகளின் தொகுப்பு போலத் தெரியலாம், ஆனால், சுற்றிலும் உள்ள உலகை நேசிக்கும் ஓர் எளிய தோழனது உணர்ச்சிச் சிதறல்களின் ஒலிப் பேழை போல் ஒலிக்கிறது அவரது எழுத்து. ஆம், உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் உள்ள எழுத்து வாசகரோடு பேசிக் கொண்டே நடக்கத் தானே செய்யும்!
என்னென்ன மாதிரியான மனிதர்களது கோட்டுச் சித்திரங்கள் விரிகின்றன இரண்டாம் இதயத்தில்........
தங்கள் சிற்றிதழ் பிரதிகளை அந்நாளைய டிரேடில் பதிப்புக்காக அச்சுக் கோத்த ஏசுவடியானை அவர் பிறிதோர் காலத்தில் தேநீர் கொண்டு வந்து வைக்கிற இடத்தில் பார்க்கவும், தன்னை மறந்த இவரிடம் தன்னை அவர் நினைவுபடுத்திக் கொண்டு, 'உங்கள் பத்திரிகையின் பழைய இதழ் பூராவும் பத்திரமா வச்சிருக்கேன் சார்' என்று நெகிழ வைக்கும் அவரது மொழி என்னைக் குமுற வைத்தது.
ஆர்க்குட் நண்பன், கதற வைக்கும் சோக அனுபவம். பாலு சார், நெகிழ வைத்து விட்ட துயரப் பெருங்கோப்பை. வரதராஜ பெருமாள் ஏற்கெனவே கேள்விப்பட்ட தோழரின் வாழ்க்கை என்றாலும் கலங்க வைத்தது. மேல் அடுக்குகளில் எத்தனை கோடிக்குப் பொறுப்பானவர்கள் பெரிய குற்றங்கள் இழைத்தாலும் தப்பிக்கிற வங்கி நிர்வாக அமைப்பில், கீழ் நிலையில் ஒரு தவறுக்காக வெளியேற நேர்ந்து, பல ஆண்டுகள் கழித்துக் கண்ணில் படுகையில், ' என்னத் தண்டிச்சு ஒழுக்கத்தைக் காப்பாத்திக்கட்டுமப்பா ' என்று சொல்லும் மெய்யப்பனின் உலர்ந்த மொழி இதயத்தை அறுப்பது.
தனுஷ்கோடி ராமசாமி அவர்களைப் பற்றிய அத்தியாயம் ஓர் அபார ஆவணப் படம். தம்மை மாப்பிள்ளையாகத் தடுத்தாட் கொண்ட மாமனார் ஜெயகாந்தன் அவர்களோடான தருணங்கள் ஈர நெஞ்சத்தின் அழியாக் கோடுகள்.
கவுகாத்தி ரயில் பயணத்தில் மூடிய கதவுக்கு வெளியே சூட் கேஸ் பற்றியபடி தொத்திப் போனது ஒரு திகில் நாடகம் எனில், நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை' தான், மாதவ் உள்ள மணல் பரப்பில் தொட்டு எழுதிய புதிய முற்போக்கு இலக்கிய பரிச்சயத்தின் ஆனா ஆவன்னா...
தன்னைப் பாடு என்ற கேட்ட மகனிடம்,'உங்கப்பா இப்படி ஒரு நாளும் கேட்டதில்ல' என்று அழும் அவரது தாயின் மனச் சுமை நூற்றாண்டுகளின் அழுத்தம் மிகுந்து வலிப்பது. தனது இளமைக் கால அலைக்கழிப்புகளை மோப்பம் பிடித்து விடும் தங்கை, அணில் அடித்து உரித்துப் பக்குவம் செய்து ஊட்டியதும், பிறகொரு பொழுதில் ஓட ஓட விரட்டி அடித்ததுமான அண்ணன், சென்னையில் தோற்றுத் திரும்பிய தந்தை, சித்தப்பா .... என்று விரியும் உறவுகளும், ஊரும், திரைப் படங்களும், பாடல்களும் என விரிகிறது நினைவின் மடிப்பு.
கொரோனா தனிமைப் படுத்தலில், ஒரே மூச்சில் வாசித்த இரண்டாம் இதயம், கடந்த காலம் பற்றிய அவரது துடிப்பாக அல்ல, இணையாக வாசகர் இதயமாகவும் துடிக்கத் தொடங்குவதை உணர முடிகிறது.
இரண்டாம் இதயம்
ஜா மாதவராஜ்
பாரதி புத்தகாலயம்
160 பக்கங்கள்.
விலை. ரூ 150/-
February 5, 2022
க்ளிக் -10 (தொடர்கதை)

காய்ச்சல் அடித்து உடம்பே வெலவெலத்துப் போனது போலிருந்தான் நரேன். அவமானமும் பதற்றமும் தின்று கொண்டிருந்தது. பளீரென்று வெளிச்சம் பரவிக்கிடந்த யாருமற்ற அந்த வெளி வராண்டாவில் பூங்குழலி தனியாய் நடந்து படிகளில் இறங்கியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவசரத்தில் பெண்களின் கழிப்பறைக்குள் நுழைந்து விட்டான். இவனைக் கேலி செய்து சிரித்தார்கள். யாரையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் போனான். அப்படித்தான் இன்று பூங்குழலி முன்பு கூனிக்குறுகி இதே இடத்தில் நின்றிருந்தான். அவளிடம் இரண்டு வார்த்தைகள் சரியாய்ப் பேச முடியவில்லை. தொண்டை வறண்டு விட்டது. எப்படியாவது பூங்குழலியை சமாதானப்படுத்த வேண்டும் என்று துடித்தான். அவளது இயல்பும், அறிவும் நெருங்கக் கூடியதாய் இல்லை. ஒன்றும் ஓடாமல் படபடப்பாய் வந்தது.
தன்னோடு காலமெல்லாம் வாழப் போகிறவளின் கையைப் பிடித்துத்தானே முத்தம் கொடுத்தோம். அதிலென்ன தவறு? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். நிதானமாக முடியவில்லை. தவித்தான். தான் செய்தது அருவருப்பாக உறுத்திக் கொண்டிருந்தது. தாண்டிச் செல்ல முடியவில்லை.
ஊரில் நாட்டில் நடக்காத எதையும் செய்யவில்லை. இது ஒரு மிகச் சாதாரண விஷயம் என்று நியாயம் கற்பித்து பார்த்தான். தவறு செய்து விட்டோம் என்ற உணர்வுதான் மேலோங்கியிருந்தது.
தனக்குரிய பெண்ணிடம் ஆசையை வெளிப்படுத்தினோம். அவள் மறுத்து விட்டாள். நாம் விலகி விட்டோம். அவ்வளவுதானே. என நினைக்க மட்டும்தான் முடிந்தது விடுபடாமலேயே இருந்தான். தியேட்டரின் இருட்டு திரும்பத் திரும்ப வந்து மோதியது.
பூங்குழலிக்கும் இவனுக்கும் இடையே நடந்தது அந்தரங்கமான ஒரு சின்ன விஷயம். இதனை பூங்குழலி யாரிடம் சொல்வாள்? நெருங்கிய தோழிகளிடம் சொல்லலாம். அவர்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவளது அம்மாவிடமோ, பாட்டியிடமோ சொன்னால், ‘அட அசடே. அதற்கு என்ன?’ என்று கேட்பார்கள். இவனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ சொல்ல மாட்டாள். சொன்னாலும் தன் மகன் உரிமையோடு கொஞ்சம் வரம்பு மீறியிருக்கிறான் என்றே எடுத்துக் கொள்வார்கள். யாரும் குற்றவாளிக் கூண்டிலேற்றி விசாரிக்கப் போவதில்லை. தண்டிக்கப் போவதில்லை. இருந்தாலும் எதோ ஒன்று அவனை விசாரித்து தண்டித்துக் கொண்டிருந்தது.
கடற்கரையில் செல்பி எடுத்தவுடன் சந்தோஷமாக அவள் கையைப் பிடித்து அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து ‘தாங்க்ஸ்’ சொல்லியிருந்தால் நிச்சயம் அவள் இப்படி பேசி இருக்க மாட்டாள். போயிருக்கவும் மாட்டாள். சிறு அதிர்ச்ச்சியடைந்து பின்னர் சிரித்தும் கூட இருப்பாள்.
சினிமாவுக்கென புக் செய்து வைத்திருந்தது, அதற்கென அவசரப்பட்டது, இருட்டில் அருகே உட்கார்ந்ததும் சகஜமிழந்தது, திட்டமிட்டு அவளது கை பற்றியது, முத்தம் கொடுத்தது எல்லாவற்றிலும் ஒரு கள்ளத்தனம் இருந்தது. அவள் கையை இழுத்துக் கொள்ள முயற்சிக்கும்போது கூட விட்டுவிடத் தோன்றவில்லை. ஒரு மூர்க்கம் வந்தது. இவனுக்குள் ஓளிந்திருந்தவனை இருட்டில் அவள் பார்த்துவிட்டாள். அவள் பார்த்ததை இவனும் பார்த்துவிட்டான். அதுதான் வதைக்கிறது.
வாட்ஸப் சத்தம். பார்த்தான். கடற்கரையில் பூங்குழலியோடு எடுத்த செல்பிக்கு. கண்களில் அன்பு பொங்கும் எமோஜியோடு “ஸோ நைஸ் டா” என்றிருந்தாள் பவித்ரா. அந்த செல்பியை சந்திராவுக்கு, மூர்த்திக்கு, பவித்ராவுக்கு, தனது டீம் மேட் ஆஷாவுக்கு, தங்கியிருக்கும் வீட்டின் நண்பர்கள் கிஷோருக்கும் பிரசாந்த்துக்கும் உற்சாகமாய் அனுப்பி வைத்து இருந்தான். சந்திரா தியேட்டருக்குள் நுழையும்போதே மகனுக்கு போன் செய்து ’நல்லாயிருக்கு” என கொண்டாடி இருந்தார்.
சந்திராவும் பவித்ராவும் அடைந்திருக்கும் சந்தோஷத்திற்கு இப்போது அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கிறது போலவா இவனும் பூங்குழலியும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் இப்போதும் பூரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை எல்லாம் ஏமாற்றுவது தானே இது. பவித்ரா இவனை ஒரு குழந்தை என்று சொல்லிக் கொண்டு இருப்பதும் அப்படித்தான் போல.
பள்ளிக்கே போக மாட்டேன் என வீட்டில் அன்றைக்கு அடம் பிடித்துக் கிடந்தவனின் கைபிடித்து எதிர்த்த வீட்டில் இருந்த பவித்ராதான் அழைத்துச் சென்றாள். அவளும் அதே பள்ளியில் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இவனைக் கிண்டல் செய்தவர்களை அடக்கினாள். அடிக்கடி இவனது வகுப்பு வந்து பார்த்துக் கொண்டாள். தொடர்ந்து சில நாட்கள் அவள் கூடவே இருந்தான். “பவித்ராக்கா” வாய் நிறைய அழைத்துக் கொண்டு நரேன் எதிர்த்த வீட்டிற்கு போவது அதன் பிறகு வழக்கமானது.
பவித்ரா பெரியவளானது, கல்லூரிக்குப் போனது, வேலைக்குச் சேர்ந்தது, திருமணம் ஆனது, விவாகரத்தில் முடிந்தது வரையிலான பதினைந்து ஆண்டுகளாக நரேன் பார்த்துப் பழகிய நெருக்கமான பெண் பவித்ரா. இவன் மீது தனிப் பிரியமும், உரிமையும் வைத்திருந்தாள். சந்திரா எதாவது குறை சொன்னால் கூட, “விடுங்க ஆண்ட்டி… நம்ம நரேன் எவ்வளவு நல்ல பையன் தெரிமா” என்று சொல்லி தோளில் கை போட்டு “என்னடா..” என்று குனிந்து இவன் முகத்தை உற்றுப் பார்ப்பாள்.
பூங்குழலியோடு நிச்சயம் செய்த அன்றைக்கு பவித்ராவால் சென்னையிலிருந்து வர முடியவில்லை. சந்திரா வாட்ஸப்பில் அனுப்பியிருந்த போட்டோக்களைப் பார்த்து இவனுக்கு போன் செய்தாள். பூங்குழலி அழகாய் இருப்பதாகவும், இருவருக்கும் நல்ல பொருத்தம் என்றும் வாழ்த்தினாள். பவித்ராவைப் போலவே பூங்குழலியின் பேச்சும் பார்வையும் இருப்பதாக இவன் சொன்னான்.
“அப்ப பைத்தியமாக்கிடாதே” சிரித்தாள்.
“போங்கக்கா…” என்று எதோ சொல்ல வந்தவன் பேச முடியாமல் உடைந்து அழுது விட்டான். விளையாட்டுத்தானே என்று சொல்லி இவனைத் தேற்றுவதற்குள் போதுமென்றாகி விட்டது. கொஞ்ச நேரம் கழித்து, “ஸ்டில் யு ஆர் எ சைல்ட்” என வாட்ஸப்பில் சிரித்திருந்தாள்.
அந்தக் குழந்தைக்குள் இருந்துதான் ஒருவன் எட்டிப் பார்த்திருந்தான். இருட்டில் அவ்வளவு பக்கத்தில் பூங்குழலி இருக்கிறாள் என்னும் உணர்வு இவனது மூச்சுக்காற்றை தகிக்க வைத்தது. எதிர்பார்த்து காத்திருந்த தருணம் சாத்தியமாகிவிட்டது, அதனை தவற விடக்கூடாது என வேகம் கொண்டான். அப்படியே வாரி எடுத்துக் கொள்ள ஒரு வேட்கை உந்தியது.
அதற்கு முன்பு அவளை ஈர்ப்பதற்கு குழந்தை போல எடுத்துக் கொண்ட இவனது முயற்சிகள் ஒன்றுமில்லாமல் போயிருந்தன. கல்யாணப் பேச்சு நடந்து பூங்குழலியின் போட்டோ கிடைத்து முதன்முறை மொபைலில் பார்த்ததிலிருந்து செய்த கற்பனைகள் எவ்வளவு? பட்ட பாடெல்லாம் இவனுக்கு மட்டும்தான் தெரியும்.
ஃபேஸ்புக்கில் அவளைத் தேடி அறிந்தான். போட்டோக்களில் அவளது பார்வையை, சிரிப்பை பார்த்துப் பார்த்து இவனாகவே பழகிக்கொண்டு இருந்தான். முதன்முதலாய் திருவேற்காடு கோவிலில் அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்றவுடன் தனக்குள் நிறைய திட்டமிட்டிருந்தான். முதல் சந்திப்பு முக்கியமானது, வாழ்க்கை முழுவதும் வரக் கூடியது என்று கிஷோர் சொன்னான். அது இவனுக்கும் தெரிந்ததுதான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு போய் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டான். டிரஸ், செண்ட், எல்லாம் புதிதாக வாங்கியிருந்தான். எப்படி பேச வேண்டும், சிரிக்க வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்து வைத்திருந்தான். பூங்குழலியைப் பார்த்ததும் சுத்தமாய் வாயும் வராமல் கையும் வராமல் போனது. அவள் ரொம்ப சாதாரணமாக வந்திருந்தாள் எல்லோரோடும் இயல்பாக பேசினாள். அவளோடு தனியாகப் போய் சம்பந்தமில்லாமல் எதோ உளறினான். அப்போதும் அவள் மார்பின் மீது இவனின் பார்வை போனது. அவள் அதை கவனித்து விட்டாள் என்பது சங்கடமாய் இருந்தது. சொதப்பி விட்டோம் என்பது அடுத்த சில நாட்கள் அலைக்கழித்தது.
நிச்சயதார்த்தம் அன்றைக்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யோசித்திருந்தான். அங்கு தனியே இருக்கும் சூழலே இல்லை. எல்லோர் முன்னிலையில் பூங்குழலியோடு மேடையில் நின்றிருந்தான். யாராவது வந்து போட்டோ எடுத்துக்கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளது கம்பெனி, வேலை பற்றி மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். அதில் வந்த தைரியத்தில் இரண்டு நாள் கழித்து இரவில் போன் செய்தான். ஒன்றும் பேசத் தோன்றாமல் அசடுதான் வழிய வேண்டியிருந்தது.
அதற்கு அடுத்தநாள் ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்” என பூங்குழலி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தாள். இவனது நண்பர்கள் சுட்டிக்காட்டி “என்னாச்சு” என கேட்டார்கள். எரிச்சலையும் கோபத்தையும் சந்திராவிடம் கொட்டியிருந்தான். ”அது ஒன்றும் பிரச்சினையில்ல. நரேன் என்னிடம் கேட்டிருக்கலாமே. நான் நரேனிடம் பேசிக் கொள்கிறேன்.” என பூங்குழலி சந்திராவிடம் சொல்லியதை தெரிந்து கொண்ட பிறகு நிம்மதியானான். உரிமையோடு பேசியிருக்கலாமே என்னும் அந்த தொனி பிடித்திருந்தது.
“நீயும் பூங்குழலியும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு போய்ட்டு வாங்க. அவங்கம்மா பூங்குழலிக்கிட்ட சொல்லியிருக்காங்க” இரண்டு நாட்களுக்கு முன் சந்திரா போனில் சொன்னதும் மீண்டும் பறக்க ஆரம்பித்தான். தங்கியிருந்த அறையில் கிஷோரும் பிரசாந்த்தும் இரண்டு பீர் அடித்து மூன்று தடவை மூத்திரம் போய் பேசியதெல்லாம் அபத்தமாயிருந்தது. திரும்பத் திரும்ப பெண்களை கரெக்ட் பண்றது ஒரு வித்தை, டக் அவுட் ஆகி விடாதே என சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். கல்லூரி ஹாஸ்டல் ரூம்களை விட்டு இன்னும் வெளியே வராமல் இருந்தார்கள்.
ஆஷாதான் நிதானமாக சில விஷயங்களைச் சொல்லியிருந்தாள். “முதலில் கேஷுவலா ஃபீல் பண்ணு. உன்னை ஹீரோ மாதிரி காட்டிக் கொள்ளத் துடிக்காதே. அவளுக்குப் பிடிக்காததை இப்போ பேசாத. பிடிச்சா பிடிக்கட்டும், பிடிக்கலன்னா போகட்டும் என நினை. ரொம்ப முக்கியமா அசடு வழியாத.” என்றிருந்தாள்.
பவித்ராவுக்குப் பிறகு இவனிடம் நெருங்கிப் பழகும் பெண் ஆஷாதான். திருமணமாகி குழந்தை இருக்கிறது. வேலை பார்த்த கம்பெனியில் இருந்து அமெரிக்காவில் செல்ல வாய்ப்பு கிடைத்து சென்றிருந்தான் அவளது கணவன். கணிசமான சம்பளம். ஐந்து வருடங்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பினால் போதும் என திட்டமிட்டிருந்தான். வீடு, கார், ஷேரில் முதலீடு என பிரச்சினையில்லாமல் பின்னர் வாழலாம் என்றும் ஆஷா வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமெரிக்காவுக்கு அழைத்திருக்கிறான். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கிடைத்த வேலையை விடுவதற்கு தயங்கினாள். இப்போது கணவனோடு பேச்சுவார்த்தை இல்லை. குழந்தையோடு சென்னையில் இருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் அவளோடு இருக்கிறார்கள். அவளாக இவனிடம் சொன்னது கொஞ்சம்தான். ஆபிஸ்தான் நிறைய சொல்லியிருந்தது.
வேலைக்குச் சேர்ந்தபோது அவளது டீமில் இருந்தான். ஆஷாதான் டிரெய்னிங் கொடுத்தாள். அப்போதும் நிறைய மெனக்கெட்டான். அவளுக்காகவே ஆபிஸ் போவது போலிருக்கும். அருகில் உட்கார்ந்திருக்க ஆசைப்படுவான். உட்கார்ந்தவுடன் நடுக்கம் வந்து விடும். அவள் பேசுவதில் கவனம் இல்லாமல் போய், வேலை தெரியாமல் தடுமாற எல்லாம் செய்தான்.
“வாட்ஸ் ராங் வித் யூ” என ஒருநாள் எரிச்சலடைந்து இவனை தனியே அழைத்துப் பேசினாள் ஆஷா. குடும்பம், படிப்பு, ரசனைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டாள். சந்திராவின் போன் நம்பர் கேட்டு வாங்கினாள். பிறகு இவனைப் பார்க்கும் போதெல்லாம் முகம் மலர்ந்து ’ஹாய் பட்டி “ என ரொம்பத் தெரிந்தவள் போல நடந்து கொண்டாள். கொஞ்ச நாள் கழித்து அருகில் உட்கார்ந்து எதோ பேசிக்கொண்டு இருக்கும்போது “கேர்ள்ஸப் பாத்தா உனக்கென்ன செய்யுது மேன்” என இவன் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
“இல்ல. நார்மலாத்தான் இருக்கேன்.” என்றான்.
“குட். யாரையாவது லவ் பண்ணு. அவக் கிட்ட பேசு. சரியாயிரும்” சிரித்தாள். அந்த கம்பெனியில் பணிபுரியும் பெண்களை அவ்வப்போது இவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். டைனிங் ஹாலில் மற்ற பெண்களோடு உட்கார்ந்து சப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இவனை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வாள்.
தன்னைப் பற்றி தெரிந்து கொண்டவளாக ஆஷாவை உணர்ந்தான். பிறகெல்லாம் அவள் யாரோவாக இவனுக்குத் தெரியவில்லை. அவளது உடலை, அசைவுகளை ரகசியமாக பார்த்து வந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் இவனை விட்டுப் போயிருந்தது. இயல்பாக பேசவும், தன்னைப் பற்றி வெளிப்படையாய் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது. இந்த ஆறு வருட சென்னை வாழ்க்கையில் இவனது கை பிடித்து நடக்க வைத்தது ஆஷாதான் என்று சொல்ல வேண்டும்.
தியேட்டரில் அங்கேயே நின்று கொண்டிருப்பது ஒரு மாதிரியாய் இருந்தது. யாரோ ஒருவன் இரண்டு மூன்று தடவை இவனை எட்டிப் பார்த்து விட்டுப் போயிருந்தான். உள்ளே போக முடியாது. பூங்குழலி பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீட் இப்போது வெறுமனே இருக்கும். தொந்தரவு செய்யும். படத்திலும் கவனம் இருக்காது.
தியேட்டரை விட்டு வெளியே எங்கு செல்ல? தங்கியிருக்கும் இடத்திற்கு செல்லலாம். படத்திற்கு புக் செய்ததை கிஷோரிடமும், பிரசாந்த்திடமும் சொல்லியிருக்கவில்லை. கடற்கரையில் எடுத்த செல்பியை ஏற்கனவே அனுப்பி இருந்தான். பூங்குழலியோடு கோவிலுக்குப் போய்விட்டு கடற்கரையிலிருந்து விட்டு வந்ததாகச் சொல்லலாம். முகம் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். அவர்களிடம் போய் எதைச் சொல்ல ?
படம் பார்க்க போகலாமா என இவன் கேட்டது வரைக்கும் நன்றாகத்தான் இருந்தது. பூங்குழலி ஒருவேளை அமைதியாய் இருந்தால் என்னவாகி இருக்கும்? மேலும் தைரியமும், வேட்கையும் கொண்டு மேலும் நகர்ந்திருப்பான். அப்போது இதைவிடவும் மோசமாக பூங்குழலி கோபப்பட்டிருக்கலாம். இன்னும் அவமானமாகக் கூட இருந்திருக்கலாம்.
ஒரு வேளை பூங்குழலி இணங்கி இருந்தால்..? தியேட்டரை விட்டு வேறெங்காவது அழைத்துச் செல்ல தோன்றியிருக்கும். ‘என்ன பேச்சு பேசினாள், இவ்வளவுதானா இவள்’ என உள்ளுக்குள் ஆணின் திமிர் வந்திருக்கும்.
மெல்லிய குரலில் அவளோடு பேசிக்கொண்டு, ரசித்ததை பகிர்ந்து கொண்டு, சிரித்துக் கொண்டு படம் பார்த்திருந்தால் இந்த நாள் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. அவ்வப்போது எதிர்பாராமல் அவள் கை, உடல் பட்டு கிடைத்திருக்கும் உணர்வுகள் நினைவுகளில் வாடாமல் தங்கியிருக்கும். சின்ன சின்ன ஸ்பரிசங்கள், புரிதல்களிலிருந்து இருவரிடமும் பிறக்கும் கள்ளம் எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும். எல்லாவற்றையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது போலிருந்தது. வெறுமையிலும் சோர்விலும் புதைந்து போனவனாய் தியேட்டரிலிருந்து வெளியேறினான்.
சாலைகளில் வரிசை வரிசையாய் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய கட்டிடங்களின் உச்சியில் காட்சிகள் சட்சட்டென்று மாற டிஜிட்டல் எழுத்துக்கள் ஒடிக்கொண்டு இருந்தன. நகரத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாய் வாகனங்களின் ஓட்டமும், இரைச்சலும் தெறித்தன. பட்டுப்புடவைகளுக்கு, நகைகளுக்கு, ஜீன்ஸிற்கு, கார்களுக்கு, ஃபேஷன் ஸ்டோர்களுக்கு, டாய்லெட்டிற்கு என பெரிய பெரிய விளம்பர பேனர்களில் பெண்கள் இருந்தார்கள்.
வேகமெடுத்துக் கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு நேரத்துச் சென்னை. சனி ஞாயிறு விடுமுறை என்பதால் இந்த இரவு கொண்டாட்டங்களுக்கானது. ஒரே மாதிரியான ஐந்து நாட்களிலிருந்து ‘அப்பாடா’ என விடுதலை பெற்றிருக்கும் நேரம். ரெஸ்டாரண்ட்கள், பார்கள், பப்புகளில் களை கட்டும். டாஸ்மார்க் பார்களில் கடலின் இரைச்சலைப் போல மனிதக்குரல்கள் சேர்ந்து ஒலிக்கும். கிஷோரும், பிரசாந்த்தும் மற்ற நண்பர்களோடு அந்த ஜோதியில் ஐக்கியமாகி இருப்பார்கள்.
இந்தப் பெரிய நகரத்தில் தனியாய் அலைந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தான். தூத்துக்குடியில் வாழ்ந்த தெருவில் இவன் வயதொத்த நண்பர்கள் இருந்ததில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போது சில தெருக்கள் தாண்டி ஹைஸ்கூல் படிக்கும் சிலரோடு கிரிக்கெட் விளையாடப் போனான். ஒருநாள் மாலையில் இருட்டிய பிறகு வீடு திரும்பியவன் சந்திராவிடம் “இனும நா அவங்களோட விளையாடப் போக மாட்டேன். அவங்க கெட்டவங்கம்மா. போன்ல கெட்ட கெட்ட படமா காட்டுறாங்க” என அழுதான். அதிலிருந்து பெரும்பாலும் வெளியே போவதில்லை. பவித்ராவும் காலேஜில் படிக்க வெளியூர் போனதால் அவனே தனியாய் எதாவது விளையாடிக்கொண்டு, படித்துக் கொண்டு, படம் வரைந்து கொண்டிருப்பான். மூர்த்திக்கு வீட்டில் அப்படி அடைந்து கிடப்பது பிடிக்காது. வெளியே போய் விளையாடச் சொல்லுவார். சந்திரா “சும்மா இருங்க. உலகம் கெட்டுக் கிடக்கு” என்பார்.
தாகமெடுத்தது. ஒரு ரெஸ்டரண்ட் முன்பு இருந்த ஜூஸ் கடை அருகே பைக்கை நிறுத்தி, ஆரஞ்சு ஜூஸ் சொன்னான். வாட்ஸ் அப்பில் பூங்குழலியைப் பார்த்தான். இவன் அனுப்பியிருந்த படம் மட்டுமே இருந்தது. “என்னைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. மன்னித்துக் கொள்” என்று அனுப்பி விட்டு பார்த்தான். சிங்கிள் டிக்தான் இருந்தது. பார்க்கட்டும் என மொபபைலை பையில் வைத்தான்.
சரியாக அந்த நேரம் ப்ரிஸ்ஸோ கார் இவனைத் தாண்டி நின்றது. டிரைவர் சீட்டிலிருந்து அவனது கம்பெனி மேனேஜர் இறங்கினான். அருகில் போய் பேசலாமா என நினைப்பதற்குள் முன்பக்கமிருந்து ஆஷா இறங்கினாள். இவன் தயங்கி நின்றான். மேனேஜரிடம் எதோ சொல்லி சிரித்தவள் யதேச்சையாக திரும்பும் போது இவனைப் பார்த்தாள். ஒரு கணம் நிலைத்த பார்வையை திருப்பிக் கொண்டு ரெஸ்டாரண்டுக்குள் சென்றாள். பக்கத்தில் மேனேஜர் மிக இயல்பாய் அவள் தோளில் கை போட்டிருந்தான்.
நரேனுக்கு தாள முடியவில்லை. ஆர்டர் செய்த ஜூஸை வாங்கி வேக வேகமாய் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். ஆபிஸில் யாரோ அரசல் புரசலாக இதுபற்றி சில நாட்களுக்கு முன்பு பேசிய போது எரிச்சலடைந்து இருந்தான். எவ்வளவு சாதாரணமாக ஆஷாவால் இப்படி இருக்க முடிகிறது என்பது பயத்தைத் தந்தது. தான் மட்டும் ஏன் ஒரு சின்ன மீறலுக்கு இப்படி கிடந்து துடித்துக் கொண்டு இருக்கிறோம் எனத் தோன்றியது.
அறை வெளிப்பக்கம் பூட்டி இருந்தது. சாவி இருந்தாலும் உள்ளே செல்ல மனம் வராமல் மேலே மொட்டை மாடிக்குச் சென்றான். யாருமில்லை. கட்டம் கட்டமாய் சுற்றிலும் வீடுகள் நிறைந்திருந்தன. ஏன் அந்த நேரம் ஜூஸ் குடிக்க அங்கு நின்றோம்? இவ்வளவு பெரிய நகரத்தில் சரியாக அங்கே எதற்கு ஆஷா அப்படி வந்து இறங்க வேண்டும்? அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அண்ணாந்து கண்ணை மூடி நின்றான்.
வாட்ஸப் சத்தம். பார்த்தான். பூங்குழலிதான். இவன் மெஸேஜ் பார்த்து விட்டு பதில் அனுப்பி இருந்தாள்.
“நரேன். நமக்குள்ளே செட் ஆகாது. என்ன செய்யலாம்?”
(தொடரும்)
‘க்ளிக்’ தொடரின் மற்ற அத்தியாயங்களைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்!
February 2, 2022
க்ளிக் - 9 (தொடர்கதை)

தங்கள் பெயரை எழுத்துக்களில் மனிதர்கள் பார்த்ததும் அது அவர்களுக்கு உயிர்ப்போடு புலப்படுகின்றன. அந்த எழுத்துக்களில் தாங்களே இருப்பதாகத் தோன்றும். பூங்குழலிக்கு அப்படியிருக்கவில்லை. அது தான்தானா என்று தோன்றியது. அழைப்பிதழில் ’பூங்குழலி’ எழுத்துக்களுக்கு உரிய வண்ணமும், ஓளியும் இல்லாமல் போயிருந்தது. மங்கலாக சோபையிழந்து காட்சியளித்தது. இன்னொரு கட்டத்திற்குள் நரேன் பெயர் இருந்தது. குயின் பக்கத்தில் கிங்காக இப்போதே வந்து உட்கார்ந்திருந்தான். நிஜமாகவே தனக்கு திருமணம் ஆகப் போகிறது, அதுவும் ஒரு மாதத்தில் என்பது உறைத்தது.
“நல்லாயிருக்கா?” நரேன் கேட்டான். முகம் பூராவும் பரவசமும், பெருமிதமும் இருந்தது.
“ம்” லேசாய் புன்னகைத்தாள். அது அவனுக்கு போதவில்லை போல.
“செமயா இருக்குல்ல” கேட்டு, இவளிடமிருந்து வாங்கி இன்னொருமுறை ஆசையாய் பார்த்துக்கொண்டான்.
“போகும்போது தர்றேன்” என பைக் கவரில் வைத்தான். மணலில் இருவரும் மெல்ல நடந்து கடலை நோக்கிச் சென்றார்கள்.
“நமக்கு வீடு பாத்துட்டிருக்கேன்” என்றான்.
“ஓ…” அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடலின் திசையில் தூரத்தில் தன் பார்வையை செலுத்தினாள். காற்றில் பறந்த முடியைச் சரி செய்தாள்.
“பூங்குழலி….” அழைத்தான். அக்கறையோடும் நெருக்கமாகவும் அவன் குரல் கேட்டது. திரும்பினாள்.
“எனி ப்ராப்ளம்?” முதல் தடவையாக இவள் கண்களை உற்றுப் பார்த்தான் நரேன்.
“இல்ல…” நெற்றி சுருங்க தலையசைத்தாள்.
“ஆபிஸ்ல ஒர்க் எப்படி போய்ட்டு இருக்கு”
“ம்…. நல்லாத்தான் போய்ட்டு இருக்கு.” கைகளை கட்டிக்கொண்டு அருகே மெல்ல நடந்து கொண்டிருந்தாள் பூங்குழலி.
“எங்க ஆபிஸ்ல போன வருசம் வரைக்கும் டீம் லீடரா இருந்தவன், வெளியேப் போய் சின்னதா ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிச்சான். இப்ப எங்களோட கிளையண்ட் அவன். கொலையா கொல்றான். தாங்க முடில.”
“என்னோட ரூம்மேட் ஸ்ரீஜாவும் இது போல ஒரு அனுபவத்தைச் சொல்லியிருக்கா”
தனக்கும் தெரியும் என்றது போல் இருந்தது இவளது தொனி. பேச்சைத் தொடராமல் நரேனும் அமைதியானான். மணற்பரப்பில் கால்கள் அழுந்தியதால் மெல்ல அடியெடுத்து நடந்தார்கள். அங்கங்கு மக்கள் உட்கார்ந்தும் நடந்துகொண்டும் இருந்தார்கள். ததும்பி, தவித்து, இரைந்து அலைகள் அடித்த கரையிலிருந்து போகப் போக அடர் நீலமாய் எல்லையற்று அசைந்த கடலின் முன்னே எல்லோரும் பொடிப்பொடியாய் இருந்தார்கள். குழந்தைகளின் குரல்களே காற்றின் இரைச்சலையும் மீறி கேட்டது. கடற்கரை என்றாலே குழந்தைகள் குதூகலமாகி விடுகிறார்கள். குதூகலமாவதற்கு குழந்தைகளாக வேண்டும் போலிருக்கிறது.
தன்னிடம் குழந்தைத்தனம் இல்லையோ என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் பூங்குழலி. சின்ன வயதில் எப்போதும் ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தவள்தான். சொந்தத்தில், அக்கம் பக்கத்தில் எல்லோரையும் ரசித்து கொஞ்ச வைத்த இவளது விளையாட்டுத்தனங்கள் எங்கேயோ மாயமாகி விட்டிருந்தன. ரவிச்சந்திரன் இறந்த பிறகுதான் அடங்கி, அமைதியாகி விட்டதாக பத்மாவதி பாட்டி ஒருமுறை சொன்னார். கல்லூரிக்கு போனதிலிருந்து சித்ராவும் இவளை குழந்தையாகப் பாவிக்காமல், ஒரு மரியாதையோடு பார்த்தார். ஸ்ரீஜா மட்டுந்தான் குதூகலமான சமயங்களில் “பேபி” என்று இவளை அழைக்கிறாள்.
அடுத்த கணம் குறித்து குழந்தைகள் யோசித்துப் பார்ப்பதில்லை. பசித்தால் அழுகின்றன. பசிக்குமே என்று அழுவதில்லை. எதிர்காலம் குறித்து யோசிக்கத் தோன்றியதும் மனிதர்கள் குழந்தைத்தனத்திலிருந்து மெல்ல வெளியேற ஆரம்பிக்கிறார்கள். எதாவது ஒன்றில் ஆழ்ந்து சிந்திக்கும்போது மனிதர்கள் குழந்தைத்தனத்தை இழந்து போகிறார்கள். இன்னும் சிலர் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக குழந்தைத்தனத்தை வேண்டுமென்றே மறைத்துக் கொள்கிறார்கள். டீம் லீடர் பாஸ்டஸ் லியோ மாதிரி. எது எப்படியிருந்தாலும் குழந்தைத்தனத்தை இழப்பது மனிதர்களை பீடீத்த சாபம்தான்.
அந்த மனிதர்கள் இயல்பாக எல்லோரோடும் கலந்து பழகுவதில்லை. உறவுகளிலும் தொடர்புகளிலும் ஒரு எல்லையை வரையறுத்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களும் போக மாட்டார்கள். மற்றவர்களையும் தாண்டி வர அனுமதிக்க மாட்டார்கள். நரேனையும் அப்படித்தான் அனுமதிக்காமல் இருக்கிறோமோ என்று தோன்றியது..
நரேனிடம் இருந்த குழந்தைத்தனத்தையும், கொண்டாட்ட மனநிலையையும் இவள் சிதைத்துக் கொண்டு இருப்பதாக வருத்தம் கொண்டாள். மனிதர்களுக்கு அவர்கள் இழந்துபோன குழந்தைத்தனங்களை மீட்டித் தந்துவிடும் கடல் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. ஏன் தனக்கு அப்படியெல்லாம் நிகழவில்லை என்று தவித்தாள்.
யாருமில்லாமல் இருந்த இடம் காண்பித்து “அங்க உக்காருவமா?” என்றான் நரேன். சரியென்று தலையாட்டினாள் பூங்குழலி.
உட்கார்ந்து இருவரும் கடலையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களைத் தாண்டி ஒடிய இரண்டு குழந்தைகளின் கால்கள் அவர்கள் மீது மணலை வாரி இறைத்தன. தட்டிக்கொண்டார்கள். நரேனின் பார்வை தன் மீது குறுகுறுவென அலைவதை உணர்ந்தாள்.
“வந்ததிலிருந்து பாக்குறேன் பூங்குழலி, மூடியாவே இருக்க. என்னாச்சு?”
“ஒன்னும் இல்ல நரேன்.” குனிந்திருந்தவள் நிமிர்ந்தாள். அவன் முகத்தில் ஏக்கம், ஆதங்கம் எல்லாம் அப்பியிருந்தது.
“உங்கம்மாக் கிட்ட கோபப்பட்டே. எங்கம்மாவைக் கிண்டல் பண்ணே. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. சரி, எதும் ஆபிஸ்ல ப்ராப்ளம்னு நினைச்சேன். கேட்டேன். ஏங்கிட்ட ஃப்ரீயா பேச மாட்டேங்குற. நிச்சயம் செய்த பிறகு மொத தடவையா நம்ம ரெண்டு பேரும் மட்டும் சந்திச்சிருக்கோம். வெளியே வந்துருக்கோம்.” என்று மேலும் எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டான்.
அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். “ம்.. இன்னும் எதோ சொல்ல வந்தீங்க…” என்றாள்.
“யார் மேல உனக்கு கோபம்?” எல்லாவற்றையும் கொட்டி விட்டது போலிருந்தது அவனுக்கு.
“யார் மீதும் கோபம் இல்ல நரேன். என் மீதுதான் கோபம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கல்யாணம், நீங்க, உங்க அம்மா, அப்பா எல்லோரும் திடீரென்று வந்த மாதிரி இருக்கு. ம்… எப்படி சொல்றது… ஆங்… நீங்க சட்டென்று லெஃப்ட் க்ளிக் பண்ணி எண்டர் ஆகிட்டீங்க. நா ரைட் க்ளிக் பண்ணியிருக்கேன். என்ன காட்டுதுன்னு பாத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான். நீங்க இதை புரிஞ்சுக்கிடணும்”
தான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டது போலிருந்தது. நரேன் இதனை எதிர்பார்க்கவில்லை. அவன் முகத்தில் குழப்பத்தைக் காண முடிந்தது. சரியாக புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. யோசிக்கட்டும் என்று அமைதியாய் கடலைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“சரி. இன்னும் ஒரு மாசத்தில் லெஃப்ட் க்ளிக் பண்ணிருவியா? ” சிரித்துக் கொண்டே கேட்டான்.
“தெரில..” சிரித்தாள்.
“அடுத்த மாசம் கல்யாணம்!”
“நாம ரெண்டு பேரும் மொத தடவ பார்க்கும்போதே உங்கக் கிட்ட சொல்லியிருக்கேன். நமக்குள்ள ஃபார்மாலிட்டிஸ் தேவையில்ல. அட்டேச்மெண்ட் வரணும். இப்பவும் அதத்தான் மீன் பண்றேன். இந்த மோதிரம், கல்யாணம் எல்லாம் ஃபார்மாலிட்டிதான?”
“அப்ப கல்யாணம் வேண்டாமா?” கொஞ்சம் பதற்றத்தோடுதான் கேட்டான். அவனைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.
“அடடா, உங்களுக்கும் எனக்கும் இடையேதான் ஃபார்மாலிட்டிஸ் தேவையில்லன்னு சொல்றேன். எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும் அது தேவையாய் இருக்கே?”
புரிந்தும் புரியாமலும் இருந்தது. கூடவே ஒரு நிம்மதி வந்தது போலிருந்தது நரேனுக்கு. ”நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” சட்டென்று கேட்டான்.
இதெல்லாம் அவன் ரொம்ப திட்டமிட்டு வைத்திருந்த சமாச்சாரம் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். “ஷ்யூர்… கம் ஆன்” என்று அவன் அருகில் நகர்ந்து உட்கார்ந்தாள். அவனும் நெருக்கமாக உட்கார்ந்தான். வலது கையில் செல்போனை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவன் ஒருகணம் திரும்பி இவளைப் பார்த்தான். இடதுகையை எடுத்து இவள் தோளில் போட்டுக் கொண்டான். தோள்களை குலுக்கியவாறு புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். ’க்ளிக்’ செய்தான். “தேங்க் யூ” என்றான்.
“எதுக்கு தேங்ஸ்” கேட்டாள்.
“ம்….. செல்பி எடுக்க உடனே ஒத்துக்கிட்டதுக்கு.”
“ஹா..ஹ்…ஹா…ஹா..” என சத்தம் போட்டு சிரித்தாள் பூங்குழலி.
அவன் ஆச்சரியமாய் இவளைப் பார்த்திருந்தான். ”இத மாரி சிரிச்சுக்கிட்டே ரைட் க்ளிக் பண்ணிப் பாக்கலாமே.” என்றான்.
திரும்பவும் வாய்விட்டு சிரித்தாள். சட்டென்று அதையும் க்ளிக் செய்தான். பின் குனிந்து போனில் எடுத்த படத்தை பார்க்க ஆரம்பித்தான்.
தன்னை மீறி அப்படி சிரித்தது இவளுக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீஜாவோடு ரெண்டு வருசத்துக்கு முன்னால் மெரீனாவுக்குச் சென்றிருந்த போது இருவரும் சிரித்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. அன்றைக்கு அலையோடு விளையாடி, நனைந்து குழந்தைகளாகிப் போயிருந்தார்கள். பிறகு உட்கார்ந்து இவளது கைகளைப் பிடித்துக்கொண்டு பேசாமல் கடலையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீஜா. அமைதியாய் உட்கார்ந்திருந்தாலும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்ததை கைகள் சொல்லின. மங்கலான வெளிச்சத்தில் முகத்தை உற்றுப் பார்த்தபோது கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவள் தோளை அசைத்து “ஸ்ரீ, என்னாச்சு” என பூங்குழலி கேட்டாள். அவள் எந்தப் பதிலும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். இருட்டியிருந்தது. இருவரும் எழுந்து கடலை விட்டு சாலை ,வாகனங்கள், கட்டிடங்கள் நோக்கி நடந்தார்கள். வெளியே வந்ததும் ஸ்ரீஜா தூரத்துக் கடலை திரும்பிப் பார்த்தாள். இருட்டில் இரைச்சல் கேட்டுக்கொண்டு இருந்தது. “கடவுளிடம் பேசுவதை விட கடலிடம் பேசலாம்” முணுமுணுத்தாள்.
அன்றைக்குத்தான் இவளை முதல் முறையாக பப்புக்கு அழைத்துச் சென்றாள். காலியாயிருந்த மேஜையில் உட்கார்ந்து ஆர்டர் செய்தாள். தங்கள் கம்பெனியிலும் ஃப்ரைடே பார்ட்டிகள் குறித்து பூங்குழலி அறிந்திருந்தாள். ஒன்றிரண்டு முறை கலந்து கொண்டாலும் டிரிங்ஸ் எடுத்துக் கொண்டதில்லை. அன்று என்னதான் அதில் இருக்கிறது என ஒரு பெக் ருசி பார்த்தாள்.
ஸ்ரீஜா நிறைய பேசினாள். அப்பா இன்னொரு பெண்ணுடனும் வாழ்ந்தது, எப்போதும் குடித்துவிட்டு சண்டை போட்டது, அம்மாவும் ஒரு டிரைவரோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தது, அம்மாவைப் பெற்ற பாட்டி அம்மாவிடம் சண்டை போட்டு கைக்குழந்தையாயிருந்த ஸ்ரீஜாவை துக்கிக்கொண்டு வந்து வளர்த்தது என நீண்ட கதை. அவளது குரலில் துயரமும் வலியும் இருந்தது. ‘கடலிடம் பேசியதை பூங்குழலியிடம் பேசிவிட்டேன்..” என சிரித்தாள். எல்லாம் பேசி முடிக்கும்போது மூன்று சிகரெட் அடித்திருந்தாள்.
”வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பியிருக்கேன்.” என்றான் நரேன்.
“பார்க்கிறேன்” என்று மொபைலில் கோடுகள் போட்டாள். வாட்ஸப் போய் பார்த்தாள். படங்கள் நன்றாக இருந்தன. அளவான புன்னகையோடு இரண்டு பேரின் கண்களிலும் எதையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. இவள் மட்டும் தனியே அண்ணாந்து சிரித்தபடி இருந்த, அடுத்த போட்டோ ரொம்ப அழகு. வரிசையாக பற்களும், கன்னங்குழியும் தெரிய அவ்வளவு இயல்பாக இருந்தது. “தாங்ஸ்” என்றாள்.
“இந்த மூடோடு எதாவது சினிமாவுக்குப் போலாமா?” மெல்ல கேட்டான்.
“வேண்டாம், இங்கயே நல்லா இருக்கு” கடலைப் பார்த்தாள்.
அவன் தலையாட்டிக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் போனில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். பூங்குழலி அவன் முகத்தைப் பார்த்தாள். “சரி, போகலாம். எந்த படத்துக்கு?” கேட்டாள்.
சட்டென்று முகமெல்லாம் பிரகாசமாக “ ஆண்டவன் கட்டளை. விஜய் சேதுபதி. இன்னிக்குத்தான் ரிலீஸ்..” படபடத்தான்.
“இன்னிக்கு ரிலீஸா. எப்படி டிக்கெட் கிடைக்கும்?”
“ம்… ஒருவேள போனாலும் போக வேண்டி இருக்கும்னு டிக்கெட் ஏற்கனவே புக் பண்ணி வச்சிருந்தேன்” இழுத்தான்.
பூங்குழலி திரும்பவும் சிரித்தாள். இவன் ஒரு ஆள்தான் என நினைத்துக் கொண்டு எழுந்தாள். படம் போகிற அவசரத்தில் இவளை விட்டு முன்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
இருட்ட ஆரம்பித்திருந்தது. சோடியம் விளக்குகள் எரிந்தன. சாலையில் நெரிசலும், இரைச்சலும் அதிகமாயிருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்துதான் போக வேண்டியிருந்தது. சிக்னலில் முட்டி நின்று, வாட்சைப் பார்த்து எரிச்சலடைந்தான்.
கடற்கரையில் எடுத்த தனது போட்டோவை மொபைலில் திரும்ப ஒருமுறை பார்த்துக் கொண்டாள். நரேன் அவனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி இருப்பான் என்பது அப்போதே தெரிந்திருந்தது. ஏன் நமது அம்மாவுக்கு அனுப்பவில்லை என்றும் அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம் என்றுதானே இந்த கல்யாணத்துக்கே ஒப்புக்கொண்டோம் என்றும் நினைத்துக் கொண்டாள். அப்பா இறந்த பிறகு எல்லாவற்றுக்கும் தாத்தாவையும், பாட்டியையும், மாமாவையும் எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு இந்த சின்ன சந்தோஷத்தை கொடுப்பதில் என்ன யோசனை எனத் தோன்றியது. பெண்கள் எப்போதும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளால் முடிவெடுக்க மட்டுமல்ல, சந்தோஷப்படவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் போலும்!
தியேட்டர் வளாகத்தில் இவர்கள் நுழையும்போது மணி கிட்டத்தட்ட ஆறே முக்கால் ஆகியிருந்தது. ரித்திகாசிங் பைக் ஓட்டியபடியும் பின்னால் திரும்பிப் பார்த்தவாறு பெரிய தலையோடு விஜய்சேதுபதியும் போஸ்டரில் இருந்தனர்.
அவசரமாய் படிகள் ஏறி, டிக்கெட் காண்பிக்கவும் நரேனின் போன் அடித்தது. எடுத்து, ”ஆமாம்மா” என்றான். “தாங்ஸ்மா” என்றான். திரும்பவும் “ ஆமாம்மா”. “படம் பாக்க வந்திருக்கோம்”. “ஆண்டவன் கட்டளை”. “தாங்ஸ்மா.” முடித்துக் கொண்டான். இவள் அருகில் காத்துக்கொண்டு இருந்தாள்.
மூடியிருந்த கதவைத் திறந்தார்கள். சில்லென்று இருந்தது. இருட்டுக்குள் சின்னதாய் இருந்த வெளிச்சத்தில் தங்கள் இருக்கைகளைப் பார்த்து உட்கார்ந்தார்கள். படம் அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
விஜய் சேதுபதி சென்னையில் வீடு தேடும் படலத்தில் நரேன் நிறைய சிரித்தான். செயற்கையாகவும் அதிகமாகவும் தெரிந்தது. இருக்கையில் இவள் கை வைக்க வசதியாக, தனது கையை அதில் வைக்காமல் இருந்தான். ஏற்கனவே கைகளை கட்டியபடி இருந்தவள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அசையாதிருந்தாள். திரையிலிருந்து சிதறும் வெளிச்சத்தில் இவளது முகத்தை, கழுத்தை, மார்பை, தொடையை அவன் அவ்வப்போது பார்த்துக் கொண்டது தெரிந்தது. அவனது மூச்சுச் சத்தம் தனியாக கேட்ட மாதிரியும் இருந்தது.
இவள் இருக்கைகளில் கைகளை வைத்தாள். சிறிது நேரத்தில் இவளது கைகளை தொட்டபடி இருக்கையில் அவன் தனது கையை வைத்தான். இவள் அப்படியே இருந்தாள். மெல்ல இவளது கையைப் பற்றிக் கொண்டான். சூடாயிருந்தான். லேசாய் சிரிப்பு வர அவனைப் பார்த்தான். திரையை சலனமற்று பார்த்தபடி இவளது உள்ளங்கையை விரல்களால் தடவிக்கொண்டு இருந்தான். அவனது கை என்னவோ போலிருந்தது. கையை மெல்ல இழுத்துக் கொள்ள முற்பட்டாள். அவன் இறுகப் பற்றியிருந்தான். இழுத்து அவன் முகம் அருகே கொண்டு சென்று, மேவாயால் கையில் உரசினான். ஒரு முத்தம் கொடுத்தான். அப்படியே வைத்திருந்தான். இன்னொரு முத்தம் கொடுத்தான். திரும்பி அவனது முகத்தைத் தெளிவாய் பார்த்தாள். அவன் தலை நிமிரவே இல்லை. இவளது உள்ளங்கைக்குள் முகத்தை வைத்திருந்தான். சத்தமாய் மூச்சு விட்டான். இவளும் கிளர்ச்சியடைந்தாள்.
அந்த இருட்டுக்குள் அவனது அம்மாவும், இவளது அம்மாவும் பாட்டியும் இருவரையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. கோவிலுக்குப் போக வேண்டும் என இன்றைக்கு இருவரையும் சந்திக்க வைத்ததும் அவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதும் இதற்குத்தான் என தோன்றியது. ஆண் தொட்டுவிட்டால் பெண் காலத்துக்கும் மாறமாட்டாள் என்பது அவர்கள் நினைப்பாய் வந்து உறுத்தியது. சினிமா பார்க்க என்று நரேன் ரிசர்வ் செய்திருந்தது, அவசரம் அவசரமாக படிகளில் ஏறியது எல்லாம் ஒருமாதிரி அருவருப்பாய்த் தெரிந்தது. கேவலமாய் உணர்ந்தாள்.
கைகளை இழுத்துக் கொள்ள முயன்றாள். அவன் விடவில்லை. முத்தமாய் கொடுத்துக் கொண்டு இருந்தான். “இது ரைட் க்ளிக்கா, லெஃப்ட் க்ளிக்கா?” அமைதியாக கேட்டாள். அவனது இயக்கங்கள் நின்றன. இவளது கைகள் அவனிடம்தான் இருந்தன. “இதையும் உங்க அம்மாவக் கேட்டுத்தான் செய்றீங்களா?” என்றாள். கையை விட்டு விட்டான். அப்படியே உட்கார்ந்திருந்தான். எழுந்து வெளியே சென்றான்.
பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் அரசியல்வாதியை வெளுத்துக் கொண்டிருந்தாள் ரித்திகாசிங். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்தாள். பிறகு இவளும் எழுந்து வெளியே சென்றாள். நரேன் தனியாக ஒரு தூண் அருகே நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு இருந்தான். அருகில் சென்று, “நா கிளம்புறேன்” என்றாள்.
இவளது கண்களைப் பார்க்க முடியவில்லை. மொபைலை எடுத்து பார்த்தபடி, “படம் முடிஞ்ச பிறகு போலாமே” என்றான்.
“இல்ல. வர்றேன்”
எதோ சொல்ல வந்தவன் வார்த்தைகள் சரியாக வராமல் திணறினான்.
“பை” கையசைத்தாள்.
“நா கொண்டு வந்து ஹாஸ்டல்ல விடுறேன்”
“நோ பிராப்ளம். நீங்க படம் பாருங்க. நா ஆட்டோ பிடிச்சுப் போயிருவேன்” நடக்க ஆரம்பித்தாள். வெளியே வந்த போது நிம்மதியாய் இருந்தது. தியேட்டர் வளாகத்தில் காற்று சுகமாய் வீசியது. இருட்டை மறைத்துக் கொண்டு மின்சாரத்தின் வெளிச்சங்களில் நகரம் மின்னிக்கொண்டிருந்தது. ஆட்டோ ஒன்றை நிறுத்தி போக வேண்டிய இடம் சொல்லி ஏறிக் கொண்டாள்.
பரந்து கிடந்த கடற்கரையில் நரேனிடம் தன்னைப் பற்றி தெளிவாக சொன்னதும், அவன் ஓரளவு புரிந்து கொண்டதும் நிம்மதி தந்திருந்தது. தியேட்டரின் இருட்டில் அவன் ஆளே வேறாகி இருந்தான். கொஞ்சம் இயல்பாய் நரேனிடம் பழகவும், சிரிக்கவும் ஆரம்பித்தவுடன் அவன் எதை நோக்கி நகர்ந்தான் என்பதை பார்த்துவிட்டாள். ஏன் இன்னும் கொஞ்ச காலம் சிரித்துப் பேச, பழக எல்லாம் நிதானம் இருக்காதா?
ஆட்டோவை நிறுத்தி லாட்ஜில் நுழைந்தாள். அவ்வளவாக நடமாட்டங்கள் இல்லாமலிருந்தது. அறை உள்ளுக்குள் பூட்டி இருந்தது. தட்டி காத்திருந்தாள். ஸ்ரீஜா கதவைத் திறந்து இவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவள் எங்கோ கிளம்பிக்கொண்டு இருப்பது தெரிந்தது. பவுடரும், செண்ட்டும் ரூம் முழுக்க மணத்தது.
பூங்குழலி ஹேண்ட் பேக்கை படுக்கையில் வைத்து, தலையணையை உயர்த்தி வைத்து, கண்ணை மூடி சாய்ந்தாள்.
“பூங்ஸ், ஊருக்குக் கிளம்பறேன். ஒன்பது மணிக்கு பஸ். இந்த சனி ஞாயிறு நா இல்லாம மேனேஜ் பண்ணிக்க”
இவள் புன்னகைத்துக் கொண்டே, எழுந்து உட்கார்ந்து மொபைலை எடுத்துப் பார்த்தாள். கடற்கரையில் எடுத்த படங்கள். இவள் சிரித்துக் கொண்டு இருந்ததை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. திரும்பவும் சாய்ந்து கொண்டாள்.
“என்ன பூங்ஸ், என்னாச்சு..?”
“நரேனுக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோணல” மொபைலை வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
“ஹேய்… வாட் ஹாப்பண்ட்.” அருகில் வந்து உட்கார்ந்தாள் ஸ்ரீஜா.
“ஸ்ரீ, நானும் உங்கூட ஊருக்கு வரட்டுமா?”
(தொடரும்)
January 29, 2022
க்ளிக் - 8 (தொடர்கதை)

பிரகாஷிற்கு வாட்ஸப்பில் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. பிறகு பார்த்துக் கொள்வோம் என அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள் பூங்குழலி.
“சர்வீஸ் பேஸ்ல இருக்குற கம்பெனியை விட, ப்ராட்க்ட் பேஸ்ல இருக்குற கம்பெனி பெட்டர்னு சொல்றாங்க. இவ்வளவு டென்ஷன் இருக்காது. ஜாப் செக்யூரிட்டியும் இருக்கும்.” என்றான் அலையரசன்.
“என்ன வந்ததுலயிருந்து வேலையப் பத்தியே பேசிக்கிட்டு இருக்குற மாரி இருக்கு…” என்றாள் பூங்குழலி.
“ஆமா இரண்டு மூனு நாளா. ரெஸ்டே இல்லை. முதுகு வலி, தலை வலி. சரியாத் தூங்கல.” என்றான்.
நிச்சயதார்த்தம் அன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும்போது நரேனும் இதையேச் சொல்லியிருந்தான். அவனுக்கு ப்ராட்க்ட் பேஸ்ல இருக்குற கம்பெனிதானாம். இவளையும் வேற கம்பெனி யோசிக்கச் சொல்லியிருந்தான்.
“அசோக் பத்தி எதாவது தெரியுமா.” பூங்குழலி கேட்டாள்.
“இல்ல“ என்று நிறுத்திய சோஃபியா எதோ சொல்ல வந்தது போலிருந்தது. தண்ணீர் குடித்தாள். எங்கோ பார்த்தாள்.
“என்ன சோஃபி…”
பூங்குழலியை உற்றுப் பார்த்துவிட்டு குனிந்து சாப்பிட்டுக் கொண்டே, “ஒரு மாசமா விக்னேஷும் பெஞ்ச்சிலதான் இருக்கான். நைட்ல ஓவராத் தண்ணியடிக்கான். நாலு நாளைக்கு முன்னால விடிஞ்சு பாக்கும்போது சோபாவுல அப்படியேக் கிடந்தான். க்ளாஸ்ல ஊத்தி வச்ச டிரிங்க்ஸ் பாதி அப்படியே டிபாய்ல இருந்துச்சு. பசங்க ரெண்டு பேரும் பாக்க வேண்டாம்னு எல்லாத்தயும் அவசரமா சுத்தம் செஞ்சேன். என்ன பேசினாலும் கோபப்படுறான்.” சொல்லும்போதே குரல் கம்மி அழப் போனாள்.
சோஃபியாவின் கைகளை இறுகப் பற்றினாள் பூங்குழலி.
“விடு. விடு. யாராச்சும் பாத்தா நல்லாயிருக்காது.” சட்டென்று எழுந்து கை கழுவப் போனாள்.
அலையரசனும், பூங்குழலியும் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சில கணங்கள் முன்பு வரைக்கும் சகஜமாகவும் சிரித்துக்கொண்டும் இருந்தவள் சட்டென்று உடைந்து போய் விட்டாளே என்று இருந்தது. எந்த சமயத்திலும் உருகவும், உறைந்து போகவுமான பிரத்யேகமான இடங்களை ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்க்கை வடிவமைத்து விடுகிறது. அந்த இடங்களை மறைத்துக்கொண்டுதான் எல்லோரும் வெளியே நடமாடிக்கொண்டு இருப்பது போலத் தோன்றியது.
கை கழுவி விட்டு வந்த சோஃபியா, “நாளைக்கு சாயங்காலம் முடிஞ்சா ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்றீங்களா?” என்றாள். அவள் அழுதது கண்களில் தெரிந்தது. முகம் கசங்கி இருந்தது. கைக்குட்டையால் முகத்தை திரும்பத் திரும்ப துடைத்துக் கொண்டாள்.
“வர்றோம்” என்றான் அலையரசன்.
“ஒ.கே . பை. நாளைக்கு பாப்போம்.” சென்றவள் திரும்பி வந்து, “நரேனை நாங்கள் கேட்டதாச் சொல்லு. ஹெவ் அ நைஸ் டைம்.” என முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசினாள். பாவமாய் இருந்தது.
சாப்பிட்டு முடித்து, அலையரசனிடம் விடைபெற்று, டீமின் டிஸ்கஸனில் உட்காரும் வரும் சோஃபியாவின் நினைவாகவே இருந்தது. நான்கு மணிக்குள்ளாகவே எல்லாம் முடிந்தது. லியோ பூங்குழலியின் பங்களிப்பை பாராட்டினான்.
எல்லோரிடமும் விடைபெறவும் நரேன் மொபைலில் அழைக்கவும் சரியாக இருந்தது. “இதோ வந்துட்டேயிருக்கேன்” கிளம்பினாள்.
லிஃப்டில் மகாலிங்கம், “வாங்க பூங்குழலிம்மா?.” வரவேற்றார். தரைத் தளத்துக்கு பட்டனை அழுத்தி விட்டு, “என்ன உங்களுக்கு கல்யாணமாம்மா?” என்றார்.
பூங்குழலிக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சியே வந்தது. இங்கு அலையரசனுக்கும், சோஃபியாவுக்கும் மட்டும்தான் தெரியும். மகாலிங்கத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்கள் இரண்டு பேரும் லிஃப்டில் இது பற்றி பேசியிருக்க வேண்டும் என புரிந்து கொண்டாள். ‘சரியான லூஸுங்க” என நினைத்துக் கொண்டாள்.
“ஆமாம் மகாலிங்கம்.” சிரித்தாள்.
“நல்லதும்மா. சந்தோஷம்..” என்றார். லிஃப்ட் நிற்கவும் பூங்குழலி வெளிவந்தாள்.
நரேன் பைக்கில் வந்திருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மேக் அப் செய்துகொண்டவனாக, சட்டை பேண்ட் கசங்காமல், தலைமுடி கலையாமல், கூலிங்கிளாஸ் போட்டு தெளிவாய் தோற்றம் கொண்டிருந்தான். லீவு போட்டிருக்க வேண்டும். அருகில் சென்றதும் புன்னகைத்தான். பூங்குழலியும் புன்னகைத்தாள். இவளது விரலில் அவன் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தின் மீது அவன் பார்வை சென்று திரும்பியதைப் பார்த்தாள்.
“போவமா” என்றான். தலையாட்டிவிட்டு, ஜீன்ஸ் போட்டிருந்ததால் இரண்டு பக்கமும் கால் போட்டு பின்னால் உட்கார்ந்தாள். நரேனிடமிருந்து அடர்த்தியாய் பாடி ஸ்ப்ரே வீசிக் கொண்டிருந்தது. ஹெல்மட் அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். பஸ்ஸில், ஆட்டோவில் செல்வதை விட, பைக்கில் செல்வது வேறாக இருந்தது. காற்றோடும், வெளியோடும் கலந்து முடியெல்லாம் படபடக்க பயணிப்பது சுகம்தான். இரைச்சல்களும், புகையும் இல்லாவிட்டால் முழுசாக அனுபவிக்கலாம்.
குட்டிக்கரா பவுடர், சிகரெட், வேர்வை கலந்த வாசம் பிடித்து அப்பாவுடன் பைக்கில் செல்ல அவ்வளவு பிடிக்கும். அன்பையெல்லாம் காட்டுவதற்கான நேரம் போல இருக்கும். முதுகோடு கட்டிப்பிடித்துக் கொள்வாள். முருகேசன் மாமாவோடு பைக்கில் சென்றிருக்கிறாள். எந்த வாசமும் அவரிடம் இருக்காது. உரிமையோடு தோளில் கை வைத்துக்கொள்வாள். அலையரசனோடு ஒன்றிரண்டு சமயம் சென்றிருக்கிறாள். பிரேக் போடும் போது, வேகமாய் போகும்போது ஒரு கையை அவன் தோளில் வைத்துவிட்டு எடுத்துக் கொள்வாள். நரேனின் தோளில் கைவைத்துக் கொள்ள யோசனையாய் இருந்தது. பின்னால் கம்பியைப் பிடித்துக் கொண்டாள். இவனோடுதான் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது, இவனோடுதான் வாழ்க்கை முழுவதும் பயணிக்கப் போகிறோம் என்பது இன்னும் உணர்வாகவில்லை. செய்தியாகவே இருக்கிறது.
பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்களில், ஷாப்பிங் போகும் போது கடைகளில் “வாங்க மேடம்” என பொறுமையோடு கவனித்தவர்களில், நடந்து செல்லும்போது எதிரே வந்தவர்களில், ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்திருந்தவர்களில், ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்தவர்களில் என எத்தனையோ ஆண்களின் பார்வையில் சிலிர்த்திருக்கிறாள். சில வார்த்தைகள் பேசியதிலோ, அமைதியாக உடனிருந்ததிலோ பரவசம் கொண்டிருக்கிறாள். அந்த கணங்கள் அப்படியே முடிவில்லாமல் நீண்டு செல்லாதா என ஏக்கம் வந்ததுண்டு. அழகான பூக்களை ரசித்துவிட்டு, அவைகளை பறிக்க முடியாமல் அங்கேயே விட்டுச் செல்கிற அந்த நேரத்து சிறு வலி அது. கல்லூரி முடிக்கும் வரை அந்த வலி சமயங்களில் பெரும் துக்கமாக வதைத்தும் இருக்கிறது. துடித்துக்கொண்டு அலைபாய வைத்திருக்கிறது. திரும்பவும் அந்தப் பூவை ரசிக்க மெனக்கெட்டிருக்கிறாள். அப்படியெல்லாம் இப்போது இல்லை. நிதானம் வந்திருக்கிறது. செடியிலேயே பூ இருக்கட்டும் என கடக்க முடிகிறது. அந்த முகத்துக்கு மேல் முகமாக பூத்து பூத்து ஒவ்வொன்றாய் மறைந்து விடுகின்றன. பள்ளி வரை கூட படித்த பிரகாஷ், கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்க வந்த சாலமன், கல்கத்தாவுக்கு ஆபிஸ் விஷயமாக ஒரு வாரம் டிரெயினிங் சென்றபோது அதில் கலந்துகொண்ட பெங்காலி இளைஞன் ரதிந்திரா என ஒன்றிரண்டு பேர்கள்தான் வாடிப்போகாமல் இருக்கிறார்கள்.
நரேனுக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் இந்த நேரத்திலும் எந்த வித ஈர்ப்பும் ஏற்படவில்லை. கால்மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்களின் இரைச்சலோடு பெரிய மாராத்தானில் எல்லோரும் ஒன்று போல் சென்று கொண்டு இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. என்ன பேசுவது என யோசிப்பதும், அப்போது நிலவும் மௌனமும் ஒரு அவஸ்தை. சிக்னலில் நின்றபோது, லேசாய் தொண்டையை கனைத்துக்கொண்டு, “அப்புறம் பூங்குழலி.....” என்றான்.
“ம்....சொல்லுங்க.” என்றாள். `ங்க’ எதோ போலிருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும்போது, நரேனைப் பற்றி குறிப்பிட்டு அவன், இவன் என்று பூங்குழலி பேசினாள். பத்மாவதி சத்தம் போட்டார். ‘வாங்க’, ‘போங்க’ன்னுதான் சொல்ல வேண்டும் என பாடம் நடத்தியிருந்தார்.
“உன்னோடு பைக்ல போறது எதோ றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு” என்றான்.
தமிழ்ச் சினிமாவின் வசனமாய்ப் பேசுகிறானே என நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது. திரும்பிப் பார்த்து உற்சாகமடைந்து, “ஹவ் டூ யூ ஃபில் இட்?” கேட்டான்.
இது வேறா என்று லேசாய் அலுத்துக் கொண்டாள். பைக்கில் செல்வது குறித்து நிறைய யோசித்து திட்டமிட்டு இருப்பான் போலிருந்தது. எதாவது சொல்லி வருத்தப்படப் போகிறான் என தவிர்த்து, “பவித்ராங்கிறது யாரு?” கேட்டாள்.
“எஙக எதுத்த வீட்டு அக்கா. ரொம்ப பாசமா இருப்பாங்க.”
“ஃபேஸ்புக்ல ரிக்வஸ்ட் கொடுத்திருந்தாங்க. ரிலேஷன்ஷிப்ல நீங்க பிரதர்னு காட்டிச்சு அதாங் கேட்டேன்.
“அப்படியா. என்னோட ரூம் மேட்ஸ், பிரண்ட்ஸ் கூட ரிக்வஸ்ட் கொடுத்திருப்பாங்களே!” சிரித்தான்.
“கவனிக்கல.”
“இன்னிக்கு ஃபிரண்ட்ஸ்ங்க சில பேர் வர்றதாச் சொல்லியிருந்தாங்க. உன்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க.”
“ஏன்… கூட்டிட்டு வந்திருக்கலாமே”
“அம்மாக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இன்னொரு நா சாயங்காலம் எதாவது ஒரு ஒட்டல்ல மீட் பண்ணுவோம்”
“ம்....பவித்ரா சென்னையிலத்தான் இருக்காங்களா, கல்யாணமாய்ட்டா?”
“சென்னையிலத்தான் இருக்கா. கல்யாணமாகி டைவர்ஸூம் முடிஞ்சுது.” குரலில் எரிச்சல் தெரிந்தது. அமைதியானார்கள்.
“நம்மப் பத்தி பேசுவோமே” என்றான். சிக்னல் விழுந்ததும் வாகனங்கள் உறுமிக்கொண்டு புறப்பட்டன. இவர்களும் தொடந்தார்கள்.
“வண்டியில ஜோடி ஜோடியா போறதப் பார்க்கும்போது நானும் ஒரு நா இப்படில்லாம் போவேன்னு நினைப்பேன்.” இரைச்சலில் கொஞ்சம் கத்திப் பேசினான். “ஆமா, எப்படி ஃபீல் பண்றேன்னு கேட்டேனே, பதிலே சொல்லல?” முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டான்.
“ம்..ம்.. கொஞ்சம் எக்ஸைட்டடாத்தான் இருக்கு.” சொல்லி வைத்தாள்.
“கொஞ்சம்தானா?” சிரித்தான். “ஒன்னு தெரியுமா. இந்த பைக் வாங்கி மூனு வருஷமாச்சு. இதுல உக்காந்த மொதப் பொண்ணு நீதான்.” என்றான். தன்னை சந்தோஷப்படுத்தும் என அவன் பேசியது புரிந்தது. அமைதியாக இருந்தாள்.
“ஏங்கூட ஆபிஸ்ல வேல பாக்குற சுதா ஒரு தடவை தாம்பரத்துல இறக்கி விடுறியான்னு கேட்டா. ரிசர்வ்டுனு சொல்லிட்டேன்.”
“இதுல என்ன இருக்கு. கூட்டிட்டுப் போயிருக்கலாமே..”
“என்ன அப்பிடிச் சொல்லிட்ட. இதுலத்தான் எல்லாம் இருக்கு. வொய்ஃப்ன்னா ஒரு ஸ்பெஷல் இல்லியா?”
“அப்ப, என்னைத் தவிர வேற யாரையும் இந்த பைக்ல கூட்டிட்டு போக மாட்டீங்களா?”
“அவசியமிருந்தா போகலாம்தான். ஆனா மொதல்ல உக்காந்தது வொய்ஃப்தான?” சிரித்தான்.
“ம்” என்று ஆட்டோக்களிலும், கார்களிலும், பைக்குகளிலும் கூடவே வந்து கொண்டு இருப்பவர்களை பார்க்க ஆரம்பித்தாள் பூங்குழலி. நெரிசலில் எதாவது ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதில் நுழைந்து எப்படியாவது முன்னால் சென்று விடுவதிலேயே எல்லோரும் முனைப்பாயிருந்தனர். பக்கத்தில் வந்த ஒரு பைக்கில் ஆண் மேல் விழுந்து கட்டிப்பிடித்தபடி பெண் இருந்தாள். முதுகில் முகம் புதைத்து இருந்தாள். தூங்குகிறாளா, பயத்தில் இருக்கிறாளா, இல்லை மயக்கத்தில் இருக்கிறாளா என்று தெரியவில்லை.
கல்கத்தாவில், மெட்ரோ ரெயிலில் போகும்போது பார்த்த அந்த ஜோடி அபூர்வமானவர்கள். கடுமையான நெரிசலில் இரண்டு கம்பார்ட்மெண்டுக்கும் இடையே இருந்த குறுகலான இடத்தில் அவனும் அவளும் நின்றிருந்தார்கள். மூச்சு படும் நெருக்கத்தில், இயர் போனின் இரு முனைகளில் ஒன்றை அவளும், மற்றொன்றை அவனும் காதில் சொருகியிருந்தனர். இருவரும் கண்கள் மூடி மெய்மறந்திருந்தனர். ஒரு சமயம் அவன் கண் திறந்து, தலையசைத்து, பின் கண்சொருகிப் போனான். மெல்ல அவள் கண் திறந்து ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும், உருக்கத்தையும் வெளிப்படுத்தி மூடினாள். தூக்கத்தில் புன்னகைக்கும் குழந்தையின் மாயக்கணம் அவளிடம் தோன்றி மறையாமல் இருந்தது. இருவரும் ஒன்று போல் கண் திறந்து ஒருவரையொருவர் அசையாமல் பார்த்திருந்தனர். அந்தப் பார்வையில் இருந்து மிதந்த இசையை பூங்குழலியால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. அவளுக்கும் கிறக்கமாய் இருந்தது. இசையின் பெருவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் சின்னப் புள்ளியாகக் கூட தெரியாமல் கரைந்து மறைந்து கொண்டிருந்தனர். ஸ்டேஷன் வந்ததும் கிடைக்காத ஒன்றை விட்டுச் செல்லும் வருத்தத்துடன் இறங்கினாள். அவர்கள் இருவரையும் எங்கே கொண்டு செல்கிறது அந்த ரெயில் என்பது போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அப்படியொரு இசையனுபவம் கிடைக்கவேயில்லை. எப்போதாவது அவளையறியாமல் உறக்கத்தில் வந்து வருடுகிறது. அப்போது அவளது மாயப்புன்னகையை அவளே பார்க்க முடிந்தது.
நரேன் எதோ சொல்லியது போலிருந்தது. “என்ன?” கேட்டாள்.
“போன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. உன்னுடைய போன்தான்னு நினைக்கிறேன்.”
பார்த்துவிட்டு, “அம்மா கூப்பிட்டிருக்காங்க” என்றாள்.
“வண்டியை ஓரமா நிறுத்தட்டுமா, பேசுறியா?”
“வேண்டாம். ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயாச்சான்னு கேப்பாங்க. கோயிலுக்கு போய்ட்டு பேசுறேன்”
அடுத்த சிக்னலில் வண்டிகள் முன்னால் நின்றிருந்தன. உஸ்ஸென்று நரேன் அலுத்தான். பக்கத்தில் வந்து நின்ற காரின் பின்சீட்டில் ஒருவர் லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தது கண்ணாடி வழியாகத் தெரிந்தது. இந்தப் பக்கத்தில் ஆட்டோவில் இரண்டு பெண்கள் சில பைகளோடு எதோ கவலையில் தெரிந்தார்கள். இடையில் உறுமிக்கொண்டு பைக்கை ஒருவன் கொண்டுவந்து நிறுத்தி நரேனையும், பூங்குழலியையும் ஒருமுறை பார்த்துவிட்டு காலை ஊன்றி, கைகளை கட்டிக்கொண்டு சிக்னலை பார்த்தவாறு பொறுமை காத்தான். ஆலுக்காஸில் நகை வாங்கும்படி நடிகர் விஜய் வரிசையாய் நடுவே கம்பங்களில் தொங்கிக் கொண்டு இருக்க, அதற்கும் உயரத்தில் திரிஷா பட்டுப்புடவையில் ஒய்யாராமாய் நிற்க, கவனியாமல் இரு பக்கமும் பிளாட்பாரங்களில் மக்கள் எதிரும்புதிருமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
“ஜவுளி வாங்கவும், நகை வாங்கவும் அடுத்த வாரம் சென்னைக்கு வர்றதா அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. ஒங்க தாத்தா , பாட்டி, அம்மாவும் வருவாங்கன்னும் சொன்னாங்க” என்றான் நரேன்.
“ம். சொன்னாங்க.”
பச்சைக்கலர் விளக்கு எரிய, முன்னால் நகர்ந்தார்கள். இராட்சச் சக்கரம் சழல ஆரம்பித்தது போலிருந்தது. பிழைப்புக்காக மனிதர்கள் வந்து மேலும் மேலும் தொற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நகரம் கொதித்துக் கிடந்தது.
தரையின் சகல இரைச்சல்களையும் தின்றுவிட்டு கிடுகிடுக்க வைக்கும் அதிர்வோடு பிரளயத்தின் சத்தம் மேலே கேட்டது. அண்ணாந்து பார்த்தபோது அடிவயிற்றில் நெருப்புத்துண்டுகளாய் விளக்குகள் எரிய, விமானம் ஒன்று அப்போதுதான் தரையிலிருந்து எழும்பி பெரிய உலோகப் பறவையாய் அசையாத இறக்கைகளோடு போய்க்கொண்டு இருந்தது. அதற்கும் மேலே காற்று மண்டலத்தில் சாதுவாய் சில பஞ்சு மேகங்களை பூங்குழலி பார்த்தாள். சம்பந்தமில்லாமல் அவை தோன்றின. ஊரில், பள்ளிக் கூடத்தில் பார்க்குபோது பஞ்சு மேகங்கள் ஆசையாகவும், சொந்தமாகவும் தெரியும்.
போன் சத்தம் கேட்டது. பார்த்தாள். அம்மாதான் அழைத்துக் கொண்டு இருந்தாள். நரேன் வண்டியின் வேகம் குறைத்து ஒரு ஓரமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.
“சொல்லும்மா”
“கோயிலுக்குப் போயாச்சா..?”
“போய்க்கிட்டு இருக்கோம்.”
“சரிம்மா, சரி. எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.”
“என்னது நல்லபடி நடக்கணும்”
“மொத மொதல்ல கோயிலுக்கு சேர்ந்து போறீங்களே... அதான்..”
“ம்.... வேறென்ன?”
“அப்புறம்... ஒனக்கு பீரியட்ஸ்லாம் இல்லியே?” சித்ரா மெல்லிய குரலில் கேட்டாள்.
“என்னம்மா கேள்வி. கடுப்பை கிளப்பாத”
“இல்லம்மா, பாட்டிதான் கேக்க சொன்னாங்க.”
“அவங்களுக்கு அப்படி எதாவது உண்டான்னு நாங் கேட்டதா நீ கேளு” போனை எரிச்சலில் துண்டித்தாள்.
நரேன் வண்டியின் வேகத்தை கொஞ்சம் அதிகமாக்கிக் கொண்டு, “எதுக்கு கோபப்படுற. அப்படி என்ன சொல்லிட்டாங்க.” கேட்டான்.
“ஸாரி. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்” என்றாள் பூங்குழலி சட்டென்று. முகம் பார்க்க முடியாவிட்டாலும், நரேன் தாங்கிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவான் என்பது புரிந்தது. அவனை நெருக்கமாய் உணர்ந்திருந்தால் இதையே ஒரு ஜோக்காக சொல்லி சிரித்திருக்கவும் முடியும். இப்போதே அவன் அதிகமாய் உரிமை எடுத்துக் கொள்வது, எல்லாவற்றையும் அறிந்துகொள்ள கேள்வி கேட்பது பிடிக்கவில்லை. கொஞ்சம் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் என அமைதியாய் இருந்தாள். அவனும் பேசவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியாமல், இருவரும் அவரவர் தனிமைகளுக்குள் நுழைந்து கொண்டனர்.
ஒரு வளைவில் திரும்பியதும் எதிரே கடல் தெரிந்தது. கடற்கரையை ஒட்டிச் சென்று சிறிது நேரத்தில் கோவில் முன்பு நரேன் நிறுத்தினான். இவள் இறங்கிக் கொண்டதும் கொஞ்சம் தள்ளி சென்று பைக்கை நிறுத்தி விட்டு வந்தான். பூங்குழலி கோவிலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். செருப்புகளை கழற்றிக் கொடுக்கும் இடம் நோக்கி சென்றான். இவளும் பின்னால் சென்றாள். டோக்கன் வாங்கியதும், போனை எடுத்து தொடு திரையில் கைகளால் கோடு போட்டான். காதில் வைத்துக் கொண்டான்.
“ஆமாம்மா, கோயிலுக்கு வந்துட்டேன்.” என்றான். தொடர்ந்து நான்கைந்து “சரிம்மா” க்கள் சொன்னான். ஒரே ஒரு “இல்லை” சொன்னான். இவளிடம் “அம்மா பேசணும்னு சொன்னாங்க” என்று போனை நீட்டினான்.
“சொல்லுங்க ஆன்ட்டி”
“நரேன்ட்ட எல்லாம் சொல்லியிருக்கேன். ரெண்டாவது அடுக்குல இருக்குற மகாலஷ்மிய முதல்ல கும்பிட்டுட்டு, அப்புறம் மத்த ஏழு லஷ்மியையும் கும்பிடுங்க. கடற்கரைக்கும் போய்ட்டு வாங்க.”
“ஓ.கே ஆன்ட்டி...”
“சரி, நீ என்ன புடவை கட்டிட்டு வரலியா”
“இல்ல. சிசிடிசி கேமிராவில தெரியுதா?’ என்றாள்.
அந்த பக்கம் கொஞ்சம் அமைதி. ”சரிம்மா. போனைக் கொடும்மா” என்றார் சந்திரா.
நரேனிடம் போனைக் கொடுத்தாள். இருவரும் அமைதியாக உள்ளே சென்றனர். விசாரித்து மகாலஷ்மியை முதலில் கும்பிட்டனர். அய்யர் தந்த குங்குமத்தை கைகளில் வாங்கி, நெற்றியில் வைக்கப் போனாள். “இரு” என்று அவனே வைத்து விட்டான். இதிலெல்லாம் தெளிவாய் இருக்கிறானே என்று நினைத்தவளுக்கு அனேகமாய் இதையும் அவனது அம்மாவே சொல்லியிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டாள். உர்ரென்று இருந்த அவன் முகத்தில் சந்தோஷம் கண்டாள். கோவிலுக்குள் அவ்வளவாய் கூட்டம் இல்லை. எண்ணெய், குங்குமம், சந்தனம், பூக்களின் கலவையாய் ஒரு வாசம் அடித்தது. பிரகாரம் சுற்றியபோது தன்னைவிட நரேன் கொஞ்சம்தான் உயரமாக இருப்பதை பார்த்தாள்.
வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு, “பைக்கை எடுத்து வர்றேன்” என சென்றான். காத்திருந்தாள். கடமையை ஆற்றிய பெருமூச்சு வந்தது. நரேன் வந்ததும் ஏறிக்கொண்டாள். மெல்ல ஊர்ந்து கொண்டே அங்குமிங்குமாய் பார்த்து ஒரு இடத்தில் நிறுத்தினான். இறங்கியதும் கடலைப் பார்க்க ஆரம்பித்தாள். பைக்கின் கவரிலிருந்து, கல்யாணப் பத்திரிகையை எடுத்து, “பூங்குழலி..” என அழைத்தான். திரும்பிப் பார்த்தவளிடம் முகமெல்லாம் பூரித்து நீட்டினான். தங்கக் கலரில் மின்னியது. பிரித்துப் பார்த்தாள்.
இவளது பெயரும், நரேன் பெயரும் நடுவே கட்டங்களில் பெரிதாக இருந்தன.
(தொடரும்)
January 27, 2022
லாவண்யா மரணம்: ஆபத்தின் அசைவுகள்

மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கான பின்னணி என்னவென்று இப்போது வெளிவந்திருக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் ‘மதமாற்ற நிர்ப்பந்தம்’ காரணமல்ல என்பது அம்பலமாகி இருக்கிறது. உண்மையை வெளிக்கொண்டு வருவதிலும், பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடிப்பதிலும் துவக்கத்தில் இருந்தே முயற்சிகளை மேற்கொண்ட அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுவோம், நன்றி தெரிவிப்போம். எனக்குத் தெரிய பத்திரிகையாளர் அருள் எழிலனுக்கு இருந்த தெளிவும், உறுதியும் முக்கியமானது. இந்த விஷயத்தில் அவரது பதிவுகளையும்,வீடியோக்களை தொடர்ந்து பின்பற்றி வந்தேன்.
கடந்த சில தினங்களில் நம் சமூகத்திற்குள் படபடத்துக்கொண்டிருந்த ஆபத்துக்களின் அசைவுகளை மெல்லிதாக உணர முடிந்தது. எப்போதும் அமைதியாகவும், நெருக்கமாகவும், சினேகமாகவும் ஏன் தனிப்பட்ட முறையில் பிரியமாகவும் இருக்கும் நண்பர்கள் சிலரை வேறு முகங்களோடும் குரல்களோடும் பார்க்க முடிந்தது. ”எல்லாவற்றையும் கோபம் கொண்டு பற்றி பேசுவீர்களே, லாவண்யாவுக்காக பேச மாட்டீர்களா?”, “லாவண்யாவை அந்த பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதுதானே அவளது உயிரைப் பறித்திருக்கிறது. அதை பற்றி எழுத மாட்டீர்களா?”, “உங்கள் மனிதாபிமானம், அநீதிக்கு எதிரான குரல் எல்லாம் இவ்வளவுதானா?’ என கோபம் கொண்டார்கள். 'அனிதாவுக்காக எவ்வளவு வேகமாய் பேசினாய். அஸிஃபாவுக்காக எவ்வளவு கோபம் கொண்டாய் ஏன் லாவண்யாவுக்காக பேச மறுக்கிறாய்?’ என்பதுதான் அவர்களிடம் தென்பட்டது. அவர்களிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை. கடும் அதிர்ச்சியாய் இருந்தது.
இந்து மதமாக அறியப்படாதவர்கள் மீதான வெறுப்பும் துவேஷமும் இந்துமதமாக அறியப்பட்டவர்களிடம் அதிகமாக விதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அப்படிப்பட்ட காரியம் அமைதியாகவும், அரூபமாகவும் நடந்திருக்கிறது. ’நாம்’, ‘மற்றவர்கள்’ (Others) என்னும் பேதத்தின் விஷம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அது அங்கங்கு உள்ளுக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறது.
சாதாரண காலங்களில் அவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். எல்லோரோடும் இணக்கமாக இருக்கிறார்கள். தங்களுக்கான நேரம் வந்தவுடன் கோர முகத்தோடு வெளிப்படுகிறார்கள். அதுதான் ஆபத்தானது.
லாவண்யாவின் மரணத்தில் அவர்கள் வேகமாக வெளிப்பட்டு, இப்போதைக்கு அடங்கி இருக்கலாம். அவர்கள் ஒரு சமூகப் பதற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வோம்.
உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் அவைகளைப் பேசுவதும் மட்டும் நம் பொறுப்பு அல்ல. பொய்களை வீழ்த்தி அழிப்பதும் மிக முக்கிய பொறுப்பு. தவறான வதந்திகள் பரப்பி, சமூகப் பதற்றம் ஏற்படுத்த துணிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதில் உறுதியோடு செயல்பட வேண்டும்.
January 26, 2022
க்ளிக் - 7 (தொடர்கதை)

ஃபாஸ்டஸ் லியோ அருகில் வந்து நின்றான். டீம் ஹெட் அவன். பூங்குழலி டைப் அடித்துக் கொண்டிருந்தாள். “மதியம் லஞ்ச்சுக்குப் பிறகு நம்ம டீமோட டிஸ்கஷன். நாலு மணிக்கு முடிஞ்சிரும். நீ கிளம்பலாம். ஒ.கேவா?” என்றான்.
“ஓ.கே சார்” நிமிர்ந்து பார்த்தாள்.
“எதும் பிராப்ளமா?”
“நத்திங்” என்றாள் அவசரமாக.
“உன் பட்டி எதும் சொன்னாளா?”
பட்டி என்று அவன் ஆங்கிலத்தில் குறிப்பிட்டது சோபியாவை. இந்தக் கம்பெனி முழுக்க சோபியாவுக்கு நானும், எனக்கு சோபியாவும் பட்டி. ஹாஸ்டலில் ஸ்ரீஜாவுக்கு நானும், எனக்கு ஸ்ரீஜாவும் பட்டி. இப்படி எவ்வளவு வார்த்தைகள். ப்ரோ, ட்யூட், கைஸ், கேள்ஸ், வான்னா, கோன்னா எல்லாவற்றையும் இங்கு வந்துதான் தெரிந்து கொண்டாள். அப்படியெல்லாம் பழக பூங்குழலிக்கு இன்னும் கூச்சம் இருந்தது. லியோ சொன்னது புரியாதது போல் இவள் முகம் இருந்தது.
“ம்… நார்மலா இல்ல நீ” என்றான்.
அமைதியாக கம்ப்யூட்டர் திரையை பார்த்து வேலையைத் தொடர்ந்தாள். கீ போர்டில் விரல்கள் இயங்கின.
அவளது கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே லியோ பேசினான். “ஒரு வேலையை எடுத்துக் கிட்டம்னா நாம அதுக்கு ஹண்ட்ரண்ட் பர்சண்ட் எஃபர்ட் கொடுக்கணும். நேச்சுரலாவே நீ ரொம்ப ஸ்மார்ட். டேலண்டட். மெச்சூர்ட். ஈஸியா புரிஞ்சுக்கிற. கவனம் மட்டும் சிதறாம இருந்துச்சுன்னா உன்னை அடிச்சுக்க இங்க ஆளே இல்ல.”
எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனைப் பார்த்து புன்னகைத்து தலையாட்டிவிட்டு மீண்டும் டைப் அடித்தாள்.
அவள் முகம் பார்த்து “முன்னமே சொல்லியிருக்கேன். இங்க ஒவ்வொரு நாளும் புதுசு. லேர்ன் பண்ண பண்ண ஒவ்வொண்ணுமே புதுசு. நீயும் புதுசு. ஜாய்ன் பண்றப்ப உன்னோட ரெஸ்யூம்ல விண்டோஸ் டிரபுள்ஷூட்டிங்ல எக்ஸ்பர்ட், அப்புறம் இன்னும் எதோ சொல்லியிருந்தே. இந்த நாலு வருஷத்துல எவ்வளவு லேர்ன் பண்ணியிருக்கே. புரோகிராமிங்ல, டேட்டா அனலிசஸ்ல, டாகுமெண்டேஷன்ல, டெலிவரிலன்னு சொல்லிக்கிட்டே போகலாம். அசோக் என்ன லேர்ன் பண்ணான்? இன்னொரு கம்பெனிக்கு என்ன ரெஸ்யூம் கொடுப்பான்? உன்னோட சர்வீஸுக்கு கஸ்டமர்க்கிட்டயிருந்து ஃபோர் ப்ளஸ் ரெவ்யூ கிடைச்சிருக்கு. அவனுக்கு என்ன தெரிமா? அவன மாதிரி வெளியே நிறைய பேர் இருக்காங்க. கோடிக்கணக்குல காத்துக்கிட்டு இருக்காங்க. உள்ளே உன்னைப் போல நிறைய பேர் இல்ல.” என்று பேசிக்கொண்டிருந்தான்.
பூங்குழலி டைப் அடிப்பதை நிறுத்திவிட்டு லியோவை அமைதியாகப் பார்த்தாள்.
‘ம்’மென்று யோசித்து “டோண்ட் ஸ்பாயில் யுவர் மூட். டோண்ட் லெட் யு டவுண். கீழே விழுந்தா தூக்கி விட இங்க யாரும் இல்ல. எல்லோரும் ஒடிட்டே இருக்காங்க. திரும்பிக் கூட பாக்க நேரம் கிடையாது. நாமதான் எந்திரிக்கணும். ஒடணும். சொல்லணும்னு தோணிச்சு. ஒ.கே. யூ கேரி ஆன்” அந்த இடத்தைவிட்டு சென்றான்.
லியோவைப் பற்றி பல கதைகள் உண்டு. யாவும் லியோவுக்குப் பின்னால் பேசப்படுபவை. கல்யாணமான இரண்டு நாளில் அவனது மனைவி வேறு யாருடோ போய்விட்டாள், லியோ இப்போது இன்னொரு பெண்ணுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகிறான். இது ஒரு கதை. லியோவுக்கு பெண்களை விட பையன்கள் என்றால் ஆசை. பெண்களிடம் நெருங்கிப் பேச மாட்டான். இப்படி ஒரு கதை. இரவில் நிறைய குடிப்பான், போர்னோ பார்ப்பான் என்று ஒரு கதை. பலரையும் பற்றி கதைகள் இருக்கவேச் செய்தன.
பூங்குழலிக்கு லியோவிடம் மரியாதை உண்டு. லேசில் புன்னகைக்க மாட்டான். தேவையில்லாமல் பேச மாட்டான். கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மூன்றாவது வருடம் அவளுக்கு கணிசமாக சம்பளம் கூடியிருந்தது. பதினாறாயிரம் ருபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவளுக்கு முப்பத்தைந்து ஆயிரம் எட்டியிருந்தது. அன்றைக்கு அவளை அழைத்து, “உனக்கு இங்க நல்ல கேரியர் இருக்கு. இன்னும் அஞ்சாறு வருசம் நிச்சயம் இருப்ப. மாசம் எழுபத்தைந்திலிருந்து எம்பதாயிரம் வரைக்கும் சம்பாதிப்ப. டீம் லீடரானா ஒன் லேக்கைத் தாண்டுவ. பிளான் பண்ணிக்க. அனாவசியமா செலவு செய்யாத. உன்னோட சம்பளத்தைப் போல குறைஞ்ச பட்சம் பத்து மடங்கு உன்னோட பேங் பேலன்ஸ் எப்பவும் இருக்கணும். ஒவ்வொரு செலவையும் யோசி. சிம்ப்ளாவே இரு. இங்க எதுவும் நிலையானது இல்ல. ஒ.கே. லவ் யுவர் ஜாப். கங்கிராட்ஸ்” என்று வாழ்த்தினான். ஒவ்வொரு வார்த்தையும் அக்கறையோடு இருந்தன. இன்றைக்கு லியோ வந்ததும் பேசியதும் கூட ‘பயப்படாதே’ என்று தட்டிக்கொடுப்பதற்காக என்று அவள் புரிந்து கொண்டாள்.
வாட்ஸ் அப் தட்டியது. கலைச்செல்வன் போட்டோ அனுப்பியிருந்தான். அப்பாவின் உடல் புதைத்த இடம் இதுதான் என்னும் நினைவே கலங்கடித்தது. யாருமற்ற எத்தனை இரவுகளையும், பகல்களையும் அப்பாவின் உடல் இங்கே கழித்திருக்கிறது “பூம்மா..” வென அழைக்கும் அந்தக் குரல் உயிரைத் தொடும். தன்னம்பிக்கையை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தந்தவர்.
வேலையில் இருக்கும்போது இது போன்ற நினைப்புகள் வந்து தொந்தரவு செய்வது சரியில்லை என மொபைலை சுவிட்ச் ஆப் செய்தாள். நினைவுகளை சுவிட்ச் ஆப் செய்வது எப்படி? ‘கீழே விழுந்தால் நம்மை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்’ என்று லியோ சொன்னது ஒலித்தது.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழாவில் பங்கரா டான்ஸ் ஆடுவதற்கு சேர்ந்திருந்தாள். சதா நேரமும் அந்தப் பாட்டோடு இருந்தாள். அதற்கான டிரெஸ் வாங்க ரவிச்சந்திரனை நச்சரித்தாள். ரவிச்சந்திரனும் சித்ராவும் இவளை வீட்டில் ஆடிக்காட்டச் சொன்னார்கள். பிளேயரில் பாட்டு போடச் சொல்லிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றாள்.
“எங்க போற? யார் ஆடுவாங்க?” சிரித்தான் ரவிச்சந்திரன்.
“பாட்டைப் போடுங்கப்பா..” கத்தினாள். மியூசிக் ஆரம்பித்ததும் அடுத்த அறையிலிருந்து ஓடி வந்து உயரே எம்பி குதித்து ஆட ஆரம்பித்தாள். ஆசையாய் பார்த்தார்கள். முடித்ததும், கைதட்டி இவளைத் தூக்கிக் கொஞ்சினான் ரவிச்சந்திரன்.
அப்பாவும், அம்மாவும் ஆண்டுவிழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என அழைத்திருந்தாள். சென்று இவள் எப்போது ஆடுவாள் என காத்திருந்தார்கள். பேர் சொல்லி அறிமுகம் செய்ததும் கூட்டத்தில் தலை எட்டிப் பார்த்தார்கள். பாடலுக்கான இசை ஆரம்பித்தது. திரைக்குப் பின்னால் இருந்து ஓடி வந்து குதித்தவள், மேடையில் விரித்திருந்த தார்ப்பாய் சுருங்கியிருக்க, தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். ரவிச்சந்திரன் கலங்கிப் போனான். “ஐயோ எம்புள்ளா” என்றாள் சித்ரா. முன்னால் இருந்து சத்தமும், சிரிப்பும் எழுந்தது. பூங்குழலி சுதாரித்து சட்டென எழுந்து ஆட ஆரம்பித்தாள். வீட்டில் இருந்த உற்சாகத் துள்ளல் இல்லையென்பது தெரிந்தது. பாட்டும் நடனமும் முடிந்ததும் சிலர் கைதட்டினார்கள். ரவிச்சந்திரன் வேகமாக முன்னால் சென்றான். மேடையில் இருந்து இறங்கியவள் முன் சென்று நின்றான். அவரைப் பார்த்ததும், “அப்பா நா விழுந்திட்டேம்ப்பா...” என அவமானத்தால் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“விழுந்தாலும் அப்படியே இருந்து விடாமல், சட்டுனு எந்திரிச்சு ஆடினியே…. அதுதாம்மா சூப்பர்!” என எல்லோருக்கும் கேட்கும்படி சத்தம் போட்டுச் சொல்லி, இவளை முத்தம் கொடுத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டான். முதுகில் தட்டிக் கொடுத்தான். மெல்ல தலையை தூக்கிப் பார்க்கத் தொடங்கினாள். அன்று தூங்கும் வரை ரவிச்சந்திரனின் கைகளை பூங்குழலி விடவேயில்லை.
எழுந்தால் கொண்டாடவும் விழுந்தால் ஆதரவாய் தூக்கிக் கொள்ளவும் யாரும் இல்லாத ஒரு இடத்தில் நாம் விடப்பட்டிருக்கிறோம் என்னும் தனிமை அப்பா இறந்ததிலிருந்து இவளோடு கூடவே வந்து கொண்டிருக்கிறது. அப்பாவை நினைக்கும் போதெல்லாம் எதையோ இழந்த வெறுமை சூழ்ந்து விடுகிறது. அப்பா மீது பத்மாவதி காட்டும் வெறுப்பு இவளுக்கு எரிச்சலாய் இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு தன்னைக் கொஞ்சுவதை சகிக்க முடியாது. யாருடனும் பேச விருப்பமில்லாமல் ஒடுங்கி விடுவாள். “என்னம்மா, ஒரு மாதிரி இருக்கே”, “உடம்பு சரியில்லையா” என அம்மாவோ பாட்டியோ கேட்டால் பற்றிக்கொண்டுதான் வரும்
.
ரவிச்சந்திரன் இறந்த முதல் வருஷம் பூங்குழலியும் கல்லறைக்குப் போயிருந்தாள். ‘என் மன்னன் இங்கே, என் மன்னன் இங்கே’ என எழுதியிருந்தது. கண்ணீர்த்துளிகள் வரையப்பட்டிருந்தன. கல்யாணிதான் என்று சொன்னார்கள். சபாபதி தாத்தாவின் வீட்டில் வேலை செய்யும் அமாவாசை, “சில நாள் ராத்திரி இங்க வந்து படுத்துக்கிறா..” என்று சொன்னார். நம்ப முடியவில்லை. அப்பாவுக்கும் கல்யாணிக்கும் அப்படி என்ன பழக்கம் என்று யாரும் சொல்லவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இல்லை. அப்பாவுக்கு கல்யாணியைப் பிடித்ததா, பிடிக்கவில்லையா?, பிடிக்கவில்லையென்றால் கல்யாணிக்கு தன்னை புரிய வைக்க அப்பா என்ன செய்தார்?, பிடித்திருந்தால், அப்பா ஏன் கல்யாணியை ஏற்றுக் கொள்ளவில்லை? என எவ்வளவோ புதிர்கள் கடந்த காலத்திற்குள் நிறைந்திருந்தன. அவை தெரியாமலே போகலாம். கல்யாணியைப் பார்த்தால் மரியாதை வருகிறது. நிச்சயதார்த்தத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாய் இருந்தாலும், மேடைக்கு வந்து வாழ்த்தட்டும் என்றுதான் தோன்றியது. என்றாவது ஒருநாள் கல்யாணியிடம் உட்கார்ந்து பேச வேண்டும் போலவும் இருந்தது.
கம்ப்யூட்டர் திரையில் அவள் டைப் அடித்துக் கொண்டிருக்க, நினைவுகளோ மாறி மாறி வந்து போய்க்கொண்டு இருந்தன. இந்த வேலை சரளமாகி விட்டது போலும். ஒரு காரியம் நன்றாக பழக்கமாகி விட்டால் கைகள் தனியாகவும், மூளை தனியாகவும் இயங்க ஆரம்பித்து விடுகிறது.
சித்ராவுக்கு பதிலாக கல்யாணியை ரவிச்சந்திரன் திருமணம் செய்திருந்தால் வாழ்வின் போக்கே மாறியிருக்கும். சாத்தியங்கள் வேறாகவும் இருந்திருக்கும். முதலில் பூங்குழலியே பிறந்திருக்க மாட்டாள். ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருக்கலாம். கல்யாணியோடு தனியாக ஒரு வாழ்க்கையை ரவிச்சந்திரன் வைத்திருந்தால் பெரும் கொதிப்புகள் ஏற்பட்டிருக்கும். சித்ராவும் பத்மாவதியோடு சேர்ந்து சதா நேரமும் அப்பாவைப் பழித்துக் கொண்டிருப்பாள். கலைச்செல்வனும் இவளும் கூட அதே அப்பாவை வெறுத்திருக்கலாம். ஒருவரை முழுமையாக அறிந்து கொள்ளாமல், அந்த ஒருவரோடு அவரவர்க்கான பார்வைகளிலும் உறவுகளிலும் இருந்தே மனிதர்கள் மேலோட்டமாக புரிந்து கொள்கிறார்கள். விருப்பு வெறுப்பு கொள்கிறார்கள். அதிலிருந்தே தங்கள் நியாயம் பேசுகிறார்கள்.
குயின் படம் குறித்து இவள் ஃபேஸ்புக்கில் எழுதியதை நரேனும், நரேன் வீட்டிலும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீஜாவுக்கும் இவளுக்கும் நடந்த உரையாடல் அவர்களுக்குத் தெரியாது. படம் பூங்குழலிக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீஜா அவ்வளவாக ரசிக்கவில்லை.
“ஒ.கே.நிச்சயம் பண்ண கல்யாணம் நின்னு போனாலும் ஹனிமூன் டிக்கெட்டை கேன்சல் பண்ணாம தனியா அவ மட்டும் பாரிசுக்குப் போறது ஆலிஸின் அற்புத உலகம் போல ஒரு ஃபேண்டஸியாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து கிடைக்கிற அனுபவங்களையும், அவளுக்குள்ள விரிகிற உலகத்தையும் சொல்றதுதான் கதை. ஒ.கேவா? அவளுக்கு நடந்தவை எல்லாம் நல்லதாகவே நடந்தன. ஒருவேளை மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால்…? ஒரு இந்திய ஆண் ஒரு இந்தியப் பெண்ணிடம் சினேகமாகவும் துணையாகவும் இல்லாமல் இருக்கிறான், ஒரு வெளிநாட்டு ஆண் அதே இந்தியப் பெண்ணிடம் சினேகமாக இருக்கிறான். இல்லையா? அவளை வேண்டாம் என்ற இந்திய ஆணும் ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் சினேகமாகவும், அவளுக்கு உதவி செய்கிறவனாகவும் இருந்திருக்கலாம் இல்லையா” என்று நக்கலாக கேட்டாள் ஸ்ரீஜா.
“யெஸ். சினேகமா இருக்கும் போது அவளுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்குது. ஒருவேள அவளே ஆசைப்பட்ட மாதிரி அவனைக் கல்யாணம் பண்ணி அவங்கூட வொய்ஃபா போயிருந்தா ரொம்ப மோசமான அனுபவங்கள சந்திச்சிருப்பா. அதைத்தான் சொல்லாம சொல்லுது. அதுதான் இப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குறதுக்கு நீதான் காரணம். தாங்ஸ்னு கடைசில அவங்கிட்ட அவளே சொல்றா.” என்றாள் பூங்குழலி.
“அப்ப கடைசியில தனக்கு நிச்சயம் செய்தவனை எதுக்கு வேண்டாம்னு சொல்றா? இந்தப் பரந்த உலகத்துல ஒரு பறவை போல இருக்கிறத விட்டுட்டு அவனைக் கல்யாணம் பண்ணிட்டு ஒரு அடிமை போல இருக்க விரும்பலைன்னு சொல்றாளா”
“ஃப்ரண்ட்லியா இருக்குற வரைக்கும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவு சரியா இருக்கு. சமமா இருக்கு. உண்மையிலயே ஒரு குயினா பெண் இருக்கா. குயின் பக்கத்தில் ஒரு கிங்கா ஆண்
வந்து நிக்கும்போதுதான் தப்பாகுது”
“ஸோ, கல்யாணமே அடிமைத்தனம். அது வேண்டாம்னு சொல்றியா?” தனது முக்கியமான கேள்வியை வைத்தாள் ஸ்ரீஜா.
“இங்க ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் வேற. கிங்கிற்கும் குயினுக்குமான வித்தியாசம் வேற. கிங்னா அதிகாரம். குயின்னா அன்பு. கிங் பக்கத்தில போய் நின்னதும் குயின் உலகந் தெரியாதவளாகி பின்னர் அவளுக்கு அவளேத் தெரியாதவளா நிக்கிறா. அப்புறம் அவ குயின் இல்ல. கிரீடம் தரிச்ச ஸ்லேவ். அவ்ளோதான். இங்க குயின்ங்கிற கான்செப்ட் சரி. கிங்குங்கிற கான்செப்ட் தப்பாயிருக்கு. கிங்கா இல்லாத ஆணுக்காக குயினா இருக்குற ஒரு பெண் காத்திருக்கா. கல்யாணம் வேண்டாம்னு படத்துல சொல்லல. எப்படி இருக்கணும்னு ஒரு நல்ல கனவு படத்துல இருக்கு” என்றாள் பூங்குழலி.
பக்கத்தில் வந்து இவளை அப்படியே ஸ்ரீஜா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ரசித்தாள். அதைத்தான் ஃபேஸ்புக்கில், `குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்’ என்று இவள் குறிப்பிட்டு இருந்தாள். நரேன் ஒரு கிங்காக இருந்திருக்கிறான். தப்பா புரிந்து கொண்டான்.
இன்று சாயங்காலம் நேரில் சந்திக்கும்போது, நரேனிடம் இதுபற்றி பேச வேண்டி இருக்குமோ என நினைப்பு வந்தது. பூங்குழலிக்கு அலுப்பாக இருந்தது. ‘ஏன் தனக்கு சுவாரசியமானவனாக நரேன் இல்லை?’ இரண்டு மூன்று நாட்களாய் இந்தக் கேள்வியை இவளுக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருக்கிறாள். வெறுப்பென்று சொல்ல முடியவில்லை. அவன் பேரைக் கேட்டதும் மனம் துள்ளிக் குதிக்கவில்லை. எந்த சிலிர்ப்பும் இல்லை. யாரோவாகவே இருக்கிறான். அதுதான் பிரச்சினை. அதுதான் நிச்சயதார்த்த போட்டோக்களை அவனது அம்மா சந்திரா அனுப்பியதும் பதில் சொல்லாமல் இருந்தாள். சம்பிரதாயமாகச் சொல்லவும் பிடிக்கவில்லை.
லஞ்ச்சுக்கு சந்தானம் எழுந்தான். மீட்டிங்கில் பேச வேண்டிய குறிப்புகளை இவளும் கிட்டத்தட்ட முடித்திருந்தாள். சிஸ்டத்தில் இருந்து லாக் அவுட் செய்து வெளியே வந்தாள். கதவின் ஓரமாய் நின்றிருந்த சாந்தி போனில் பேசி முடித்து இவளைப் பார்த்தாள். “என்னாச்சு, சாந்தி! ஸ்கூல்லயிருந்து குழந்தைங்கள கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணிட்டியா” கேட்டாள்.
“என்னோட சித்தப்பா பையன் படிச்சு முடிச்சுட்டு சும்மாத்தான் இருக்கான். அவன ஏற்பாடு செஞ்சிருக்கு. சாயங்காலம் ஆபிஸ் விட்டு நானோ அவரோ போற வரைக்கும் குழந்தைங்கள பாக்கச் சொல்லியிருக்கோம்.” பெருமுச்சு விட்டு, “டென்ஷனாய்ட்டு கொஞ்ச நேரம்.” புன்னகைத்தாள்.
“உன்னோட அம்மா அப்பாவோ, உன் ஹஸ்பெண்டோட அம்மா அப்பாவோ யாராவது கூட இருந்தா ஒத்தாசையா இருக்குமே...”
“அவரோட அம்மா வந்து இருந்தாங்க. கொஞ்சம் பிடிக்காமப் போச்சு.” இழுத்தாள். “இப்பிடி பிரச்சின வரும் போதெல்லாம் பகீர்னு இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்திருந்தா இப்பிடி கஷ்டப்பட வேண்டியதில்லன்னு குத்திக் காட்டுவார். என்ன செய்ய..”
பேசிக்கொண்டே கேண்டின் வந்தார்கள். எதிரே கேண்டினை ஒட்டி சின்னதாய் அந்த பிளாஸ்டிக் மரம் இலைகளோடு நின்றிருந்தது. மூன்று வருஷத்துக்கும் மேலாச்சு. தினமும் பார்க்கிறாள். அப்படியே இருக்கிறது. வெயில், மழை எதுவும் அதற்கு கிடையாது. காற்று அடித்தாலும் மரம் அசையாது.
வழக்கமான மேஜையில் அமர்ந்து அலையரசனும், சோபியாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். ”மைக்ரேஷன் ரொம்ப தலைவலி. சர்வர கான்ஃபிகர் பண்றதுக்குள்ள மூளை உருகி மூக்கு வழியா வந்துரும்” தனது வேலை பற்றி சொல்லிக் கொண்டு இருந்த அலையரசன் இவளைப் பார்த்ததும் “ஹாய்” என்றான். இவளும் “ஹாய்” சொல்லிக்கொண்டே அருகில் உட்கார்ந்தாள்.
“மீல்ஸ்தான. உனக்கும் சேத்துச் சொல்லிட்டோம்” என்றாள் சோபியா.
“குட்” என்றவாறே பூங்குழலி தன் மொபைலை ஆன் செய்தாள். ஃபேஸ்புக்கில் பிரகாஷ், ‘மை ஜர்னி ஸ்டார்ட்ஸ்” என்று கைகளை விரித்து நின்றிருந்தான். உற்சாகமானாள். என்ன ஜர்னி என்று கவனித்த போது பெங்களூரில் ஒரு எம்.என்.சியில் அவன் சென்ற வாரம் ஜாய்ன் பண்ணியிருப்பதை ஃபேஸ் புக் காட்டியது. புன்னகைத்துக் கொண்டே, “கங்கிராட்ஸ். சொல்லவேயில்ல…” என்று வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பினாள்.
அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சோபியா, என்ன என்பதாய் கண்களால் கேட்டாள். சிரித்துக் கொண்டே, “யூ ஆர் மை பட்டி..” என்று சிரித்தாள்.
“ஹேய்… கிரேஸி. என்ன ஆச்சு உனக்கு?” என்றாள் சோபியா.
“ஓன்னுமில்ல. இன்னிக்கு லியோ பக்கத்துல வந்து உன் பட்டி எதும் சொன்னாளா என்று கேட்டார்.”
“ஓ.. அசோக்கைப் பத்தி சொன்னேன்னா…?”
ஆமாம் என்பதாய் தலையாட்டவும் மொபைல் அழைத்தது. எடுத்து “சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள்.
“அப்பமேயிருந்து போன் பண்ணிட்டிருந்தேன். என்னம்மா, சாப்பிட்டாச்சா?”
“இல்ல ஆன்ட்டி. இப்பத்தான் சாப்பிட கேண்டீன் வந்திருக்கேன்.”
“அப்பிடியாம்மா, நா எங்க ஊருக்கு பத்திரிகை கொடுக்க வந்திருக்கேன். நரேனுக்கு பத்திரிகை அனுப்பியிருயிருக்கோம். காட்டுவான். நரேன் அவங்க பிரண்ட்ஸுக்கு கொடுக்க தனியா பத்திரிகை அடிக்கணும்னு சொல்லிட்டிருந்தான். நீயும் தனியா அடிக்கிறியாம்மா”
“அது பத்தி இன்னும் யோசிக்கல.”
“என்னம்மா, ஒரு மாசந்தான் இன்னும் இருக்கு.”
“ஒன்னும் பிரச்சினையில்ல. நா பாத்துக்குறேன் ஆன்ட்டி.”
“அப்புறம் லீவு எப்பயிருந்து எடுக்கப் போற? எத்தன நாள் எடுக்கப் போற?”
“அது பத்தி இன்னும் ப்ளான் பண்ணல. கேக்கணும்.”
“எல்லாத்தயும் சாதாரணமாச் சொல்ற. கடைசி நேரத்துல டென்ஷனாயிரப்போது…”
“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க எல்லாத்தையும் ரொம்ப சீரியஸாவே எடுத்துக்குறீங்க..” சிரித்தாள் இவள்.
“சரிம்மா, பாத்துக்க. நரேன் எப்ப வர்றேன்னு சொன்னான்.”
“நாலு மணிக்கு..”
“பாத்துப் போய்ட்டு வாங்க. அப்புறமா பேசுறேன்.”
சந்திரா போனை வைத்ததும் அப்பாடா என்றிருந்தது. சோபியாவும் அலையரசனும் பேசுவதை நிறுத்திவிட்டு, இவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“கொசுத்தொல்லையா.” என்றாள் சோபியா.
“பல்ல உடைச்சிருவேன். மரியாதையாப் பேசணும். மாமியாராக்கும்” என்றாள்.
மூவரும் சிரித்தார்கள்.
வாட்ஸ் அப் சத்தம். எடுத்துப் பார்த்தாள். பிரகாஷ் அனுப்பி இருந்தான்.
“உனக்கு கல்யாணமாமே? சொல்லவேயில்ல.”
(தொடரும்)
January 24, 2022
பொய் மனிதனின் கதை - 9

“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை.
வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும்.
தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் மேலும் பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்”
- கேத்தி பர்ன்ஹாம் மார்ட்டின்
“நாம் காரை ஒட்டிச் செல்கிறோம். அல்லது வேறொருவர் கார் ஒட்ட, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அப்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து சக்கரத்தில் மாட்டிக் கொள்ள நேரிட்டால் நமக்கு வேதனையாய் இருக்குமா இருக்காதா? நானும் மனிதன்தான். எங்காவது கெட்டது நடக்கும்போது கவலை வரத்தான் செய்யும்”
குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட மோடி, 2013ம் ஆண்டு சிறப்பு புலனாய்க் குழுவால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்பு வெளியிட்ட கருத்து. “கலவரங்களுக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?” என்று அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில். மோடி கவலைதான் பட்டிருந்தார். வருத்தப்படும் தொனி கூட அவரது வார்த்தைகளில் இல்லை.
அப்படி கார்ச்சக்கரத்தில் மாட்டிக் கொள்லாமல் தப்பிப் பிழைத்த இரண்டு ‘நாய்க் குட்டிகளை’ 17 வருடங்கள் கழித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் போய் சந்தித்தது.
குஜராத்தில் அகமதாபாத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே வசித்து வந்த முகமது ரஃபிக்கும், சேரிப்பகுதியில் வசித்து வந்த பூஜா ஜாதவும்தான் அவர்கள். இருவருமே 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் தப்பிப் பிழைத்த போது, ஒரு வயதுக் குழந்தைகள்.
2019ல் அவர்களுக்கு பதினெட்டு வயதாகி முதன் முறையாக ஓட்டுப் போட தகுதியான பிறகு, ராய்ட்டர்ஸ் நிறுவனம் இருவரையும் அருகருகே நிறுத்தி பேச வைத்தது.
“காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தோ, சுவாரசியமான கற்பனைக் கதைகளைக் கேட்டோ குழந்தைகள் வளருவார்கள். நாங்களோ இந்து முஸ்லீம் கலவரங்களைப்பற்றி கேட்டுத்தான் வளர்ந்தோம்” முகமது ரஃபீக் தனது செல்போனை நோண்டியபடி பேசினான். இழப்புகளும், வலியும் அவனது வார்த்தைகளில் தோய்ந்திருந்தன.
ஒரு மாத காலம் நீடித்த கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் மட்டும் 800 முஸ்லீம்களும் 255 இந்துக்களும் கொல்லப்பட்டிருந்தனர். அங்குள்ள சேரிப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தார் ரஃபீக்கின் தந்தை. மதவெறிக் கும்பல் அந்த கடைக்குத் தீ வைத்தது. தப்பி ஓடும்போது ரஃபிக்கின் தந்தை காலில் போலீஸின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உயிருக்குப் பயந்து நிவாரண முகாம்களில் தந்தையும் மகனும் தஞ்சமடைந்தனர். பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கொட்டும் இட த்திற்கு அருகில் வசித்து வந்தனர். “பிஜேபியின் மீது இருக்கும் ஆத்திரம் என் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது” என்றான் ரஃபீக்.
2002ல் ரஃபீக் குடும்பம் கொடூரமாக விரட்டப்பட்ட இடத்திற்கு அடுத்த சந்திலிருந்து அப்போது தப்பித்த இன்னொரு ஒரு வயது குழந்தைதான் பூஜா ஜாதவ். அவளது பார்வை முற்றிலும் வேறாக இருந்தது.
கலவரம் முடிந்த பிறகு, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டிற்கே திரும்ப வந்து வாழத் தொடங்கியது அவளது குடும்பம். பக்கத்து வீடுகளில் ஏற்கனவே வசித்து வந்த முஸ்லீம்களுக்கு பதிலாக வேறு முஸ்லீம்கள் இருந்தார்கள். ”எங்களுக்கு வேறு வழியில்லாமல் அங்கு மாட்டிக் கொண்டோம்.” என்றாள் பூஜா.
“மோடியின் வெற்றி என் அம்மாவுக்கு சந்தோஷமளித்தது. அம்மாவின் சந்தோஷம் எனக்கு சந்தோஷம் தந்தது. எனக்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் மோடி பிடிக்கும்.” என்றாள்.
“பிஜேபி ஆட்சி செய்யும் போது, பக்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களால் எங்களுக்கு தொந்தரவு வராது” என்று தொடர்ந்தாள். “முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடைவெளியும், எல்லையும் இருக்க வேண்டும்” என்பதே அவளது முடிவான கருத்தாக இருந்தது.
”மோடி முஸ்லீம்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் நாங்கள் எப்படி நாத்தம் பிடித்த குப்பையில் கிடந்து வாழ்கிறோம் என்பதை வந்து பார்த்திருப்பார். முஸ்லீம்களை அவமதிக்கும் அவரது செயலே எனது அரசியல் முடிவை தீர்மானித்தது” என்றான் ரஃபீக்.
முகமது ரஃபீக்கும், பூஜா ஜாதவ்வும் குஜராத் கலவரங்களிலிருந்து உருவானவர்கள். இருவரின் வாழ்க்கை நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு குடும்பங்களும் அடுத்த வேளை உணவுக்கு அல்லல் பட்டன. இருவருமே படிக்கவில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உழைத்தார்கள். ஒரு நிரந்தரமான வேலை, நல்ல காற்றோட்டமான சூழலில் வசிப்பிடம் வேண்டும் என்னும் கனவுகளைச் சமந்திருந்தார்கள்.
இருவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக ஒட்டு போட இருந்தார்கள். அவர்களின் ஒட்டு யாருக்கு என்பதை அறிவதுதான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நோக்கம். பதினேழு வருடங்களும் அவர்களுக்குள் எப்படி உறைந்து போயிருந்தன என்பதை அழுத்தமாக உணர முடிந்தது.
தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், அவைகளுக்கான தீர்வுகள், அதையொட்டிய அரசியல் என்று அவர்களது சிந்தனைகள் விரியாமல், காயடிக்கப்பட்டிருந்தது. உள்ளுக்குள் அச்சம், வன்மம், பாதுகாப்பற்ற உணர்வு எல்லாம் நிறைந்திருந்தது. அவர்களை தனித்தனியாய் இரண்டு கூறுகளாக்கி, இடையே காலம் கோடு கிழித்து வைத்திருந்தது. இதுதான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கதை.
ஷாஜஹான் பனோவும் அப்படி தப்பிப் பிழைத்த இன்னொரு நாய்க்குட்டிதான். அவனும் கடும் வெறுப்பில்தான் இருந்தான்.
2002ம் ஆண்டு சிறுவனான அவன் தன் அம்மாவோடு அகமதாபாத்தின் முக்கிய சந்தையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த நாளில் கலவரம் வெடித்தது. பயத்தோடு அன்று இரவு முழுவதும் அந்த சந்தையிலேயே ஓளிந்திருந்தனர். அடுத்த நாள் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அங்கே தங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என பதற்றத்துடன் பல மூஸ்லீம்கள் காத்துக் கிடந்தனர்.
ஒரு மாதம் கழித்தே அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சிட்டிசன் நகரில் ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்து. முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று கட்டித் தந்த குடியிருப்புகள் அவை. இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒல்லியாய் காணப்படும் ஷாஜஹானுக்கு இப்போது 23 வயது.
“இப்படி வசிக்க ஒரு இடமாவது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் நாங்கள் தினம் தினம் இந்தப் புகை, நாற்றம், குப்பைகளுக்குள் கிடந்து சாகிறோம். எந்த வசதியும் இல்லை. ஆனால் நாங்கள் வேறு எங்கே போக முடியும்?” வெறுத்துப் போய் பேசினான் ஷாஜஹான்.
2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம். ஆனால் கடுமையாய் அடிபட்டு காயங்களோடும், கொடூரமான நினைவுகளோடும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
தாங்கள் கால காலமாய் வாழ்ந்த இடங்களை விட்டு இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் அகற்றப்பட்டிருந்தார்கள். வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போடப்பட்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாய் இருந்தார்கள்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு பெரிதாய் ஒன்றும் செய்யவே இல்லை.” என்றார் வழக்கறிஞர் ஷம்ஷத் பதான். முஸ்லீம் மக்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுத் தர போராடிக்கொண்டு இருந்தவர் அவர். “இன்றைக்கு இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் அடுத்தடுத்த கட்டிட குடியிருப்புகளில் வசிக்கும் காட்சியை பார்க்க முடியாது. பிரிக்கப்பட்ட நகரமாகி விட்டது. முஸ்லீம்கள் ’கெட்டோ’க்களில் வாழத் தள்ளப்பட்டு விட்டார்கள்” என்று மேலும் சொன்னார். (கெட்டோ என்பது சிறுபான்மையினர் மட்டுமே வசிக்கும் மோசமான பகுதி. ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான பாசிஸ்ட் அரசு நடத்திய இனப்படுகொலை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெட்டோக்களில் யூதர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தார்கள்.)
பதற்றம் நிறைந்த இடங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் இடங்களை விற்பதை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, ‘The Distrubed Areas Act’ 1991ல் மதக்கலவரங்களை தடுக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்து திருத்தம் செய்திருந்தார் மோடி. “அது அரசே முன்னின்று நடத்திய பிரிவினை” என்றார் பதான்.
“அதன் விளைவு, முஸ்லிம்கள் எல்லாம் இழிவான பகுதிகளில் மொத்தம் மொத்தமாய் ஒதுக்கப்பட்டனர். வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் எல்லாம் மாநிலத்தில் வேறு யாருக்காவது இருக்கலாம். நிச்சயமாக முஸ்லீம்களுக்கு இல்லை” என்று சொன்னார். 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தொடர்கதை அவ்வளவு கொடுமையாய் இருந்தது.
அகமதாபாத்தில் இருக்கும் ஜுஹாபுரா பகுதியில் நான்கு லட்சம் முஸ்லீம்கள் வசித்து வந்தார்கள்.. ஏற்கனவே இருந்த முஸ்லீம்களோடு, கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் சேர்ந்திருந்தனர். அகமதாபாத்தில் இருக்கும் இந்துக்கள் ஜூஹாபுராவை ‘குட்டி பாகிஸ்தான்’ என்றே அழைக்கிறார்கள். அந்த இரண்டே இரண்டு வார்த்தைகள் மொத்த அவலத்தையும், ஆபத்தையும் சொன்னது.
இந்துத்துவ அரசியலின் – மோடி ஆட்சியின் – நோக்கமும் பாதையும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. இந்திய பாசிசத்தின் அடையாளமும், தடயமும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. மக்களை பிளவு படுத்தி, சிறுபான்மை மக்களை ஓரிடத்தில் ஒதுக்கி, பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராக காலமெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரத்தை கேள்வி கேட்பாரில்லாமல் நிறுவும் அராஜகத்தை குஜராத்தில் மோடி நிகழ்த்தி இருந்தார். மக்களை அவர்களின் நிஜமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல், உணர்வுகளின் வலைகளில் வீழ்த்தி விட்டு, அவர்கள் மீது தங்கள் மிருகத்தனமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாசிச சாம்ராஜ்யத்தின் வேர் குஜராத்தில் ஆழமாக இறங்கி இருந்தது. பாவம் பூஜா ஜாதவ் என்ன செய்வாள்?
குஜராத்தில் 2002ற்கு பிறகும் மதக் கலவரங்களும், பதற்றங்களும் நீடித்துக் கொண்டேதான் இருந்தன. வன்மத்தையும், பழிவாங்கும் இயல்புகளையும் விதைத்த நிலத்தில் வேறென்ன விளையும்?
தேசத்தில் நடந்த மதக் கலவரங்களின் சராசரியைக் காட்டிலும், குஜராத்தில் அதிகமாக நடந்து வந்தன என்றே புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்தே மதக் கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.
அதிலும் 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பெரும் பதற்றத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 56 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயம் பட்டனர்.
ஆனால் மோடி குஜராத்தில் 2002ற்கு பிறகு கலவரங்களே நடக்கவில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும், வளர்ச்சி மட்டுமே ஒரே நோக்கமாகவும் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது சாம்ராஜ்ஜியத்தை குஜராத்திலிருந்து இந்தியாவுக்கு விரிவுபடுத்த ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தார்.
2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி டெல்லி ரமலான் மைதானத்தில் கூடியிருந்த முஸ்லீம் மக்களிடையே பேசினார். சிறுபான்மை மக்களிடையே திட்டமிட்டு முதன்முறையாக அவர் பேசிய கூட்டம் அது.
“கிரிக்கெட் மேட்சில், பட்டம் விடுவதில், இருசக்கர வாகனம் மோதியதில் உருவாகிய அற்ப காரணங்களுக்காக எல்லாம் மதக்கலவரங்கள் வெடித்த காலம் ஒன்று குஜராத்தில் இருந்தது. என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் அப்படி கலவரங்கள் நடக்க விடவில்லை. எனது மாநிலம் இப்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதங்களைத் தாண்டி அனைவரும் சமமானவர்களாகவும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.”
இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பயங்கரமானவை என்பது உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆதாரங்கள்:
* Polarised Politics: How two teenagers will vote after surviving 2002 Gujarat riots - by Rupan Jain, Reuters, April 23, 2019
* Muslims still consigned to Gujarat’s slums 15 years after 2002 Riots - by Rina Chandran, Wire, July 25, 2017
* Gujarat not riot–free since 2002 : Here’s the Proof - First Post, April 07, 2014
* Meenakshi Lekhi’s Claim About ‘No Riots in Guj Post 2002’ is False - The quint, Mar 17, 2020
* 2008 Ahmedabad Bombings - Wikipedia
* No Guilty feeling about Gujrat riots, says Modi - The Hindu, June 13, 2013
* No riot in Gujarat during 10 year rule, Modi says in delhi - The Times of India, Dec 1, 2013
January 22, 2022
க்ளிக் - 6 (தொடர்கதை)

நண்பர்களே!வணக்கம்.தொடர்பு எல்லைக்கு வெளியே – என்று எழுதி வந்த இந்த தொடர்கதை இனி ‘க்ளிக்’ என்னும் தலைப்பில் வரும். இந்தக் கதைக்கு அந்த தலைப்பு பொருத்தமாயிருக்கும் எனத் தோன்றியதால் மாற்றப்பட்டு இருக்கிறது.தங்களின் தொடர்ந்த வாசிப்பும், ஆதரவும் வேண்டி…-மாதவராஜ்--------
அசோக்கை நேற்று சாயங்காலம் வேலையிலிருந்து அனுப்பி விட்டதாக காலையில் சோபியா போன் செய்து சொன்னாள். முந்தின நாள் வேலையிலிருந்து கிளம்பி கீழே செல்வதற்கு லிஃப்டுக்கு காத்திருந்தபோது, அசோக் மேலே செல்வதற்கு நின்றிருந்தது நினைவுக்கு வந்தது. பார்த்ததும் சிரித்துக் கொண்டு “எங்க பிராஜக்டுக்கு எப்போ வர்றீங்க?” என்று கேட்டாள். சிரித்துக்கொண்டே “க்ளிக் ஆகணும். பார்ப்போம். ஹெச்.ஆர்ல வரச் சொல்லி இருக்காங்க.” என்றான். குரலில் மெலிதாய் ஒரு விரக்தி தெரிந்தது.
கடந்த ஒரு மாதமாகவே பெஞ்ச்சில்தான் இருந்தான் அசோக். பெஞ்ச் என்றால் பிராஜக்ட் கிடைக்காமல், அதனால் வேலையில்லாமல் இருக்கும் ஐ,டி ஊழியரின் நிலை. அந்த நேரத்தில் தங்கள் திறனையும், பயிற்சியையும் வளர்த்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அடுத்த சில மாதங்களுக்குள் புதிதாக பிராஜக்ட் கிடைக்கவில்லையென்றால் ஒருநாள் சத்தமில்லாமல் கம்பெனி குட்பை சொல்லி வெளியே அனுப்பி விடும். பெரும்பாலும் பெஞ்ச்சில் இருக்கும் போதே அடுத்த கம்பெனியில் வேலை தேட ஆரம்பித்து விடுவார்கள்.
பூங்குழலியின் பேட்ச்தான் அசோக். ஆரம்பத்தில் சோபியா இருக்கும் பிராஜக்டில்தான் வேலை செய்து கொண்டிருந்தான். அந்த லீடருக்கு அவன் மீது நல்ல கருத்து இல்லை. குறித்த நேரத்தில் வேலையை முடிக்காமல் இழுத்தடிக்கிறான் என குறைபட்டுக் கொண்டான். விஷயம் என்னவென்றால் எல்லாவற்றிலும் அசோக் தனக்கென்று கருத்தையோ, சந்தேகத்தையோ வைத்திருந்தான். கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். அந்த பிராஜக்ட் முடிந்து அடுத்த பிராஜக்ட் வந்தபோது, அதற்கு அவ்வளவு ஆட்கள் தேவையில்லை என பெஞ்ச்சில் அமர்த்தப்பட்டன். கடந்த வாரம் பூங்குழலி வேலை பார்த்த பிராஜக்டில் மேலும் ஒருவர் தேவைப்பட்டது. அசோக்கின் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.
இப்படி நடக்கும் என பூங்குழலி எதிர்பார்க்கவில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவளுக்குத் தெரிந்த ஒருவர் வெளியேற்றப்படுவதை இப்போதுதான் பார்க்கிறாள். இப்படியா இன்று விடியவேண்டும் என்று வருத்தப்பட்டாள். போனில் நேரம் பார்த்தவள் மேலும் பதறினாள். ஸ்ரீஜாவை விலக்கி எழுந்து, அவசரம் அவசரமாக புறப்பட்டாள். பிரட் டோஸ்ட்டும், டீயும் சாப்பிட்டு ஹாஸ்டலை விட்டு அரக்க பரக்க வெளியேறினாள்.
ஐ.டி கார்டு காண்பித்து கம்பெனிக்குள் நுழையும்போது லேட்டாகி இருந்தது. லிஃப்ட் ஆபரேட்டர் மகாலிங்கம் “வாங்கம்மா..” என புன்னகைத்ததும் கொஞ்சம் நிதானம் வந்தது. மகாலிங்கத்திற்கு நாற்பத்தைந்து வயது போலிருக்கும். வேலை நாட்களில் லிப்டில் பயணம் செய்யக் கிடைக்கும் சில வினாடிகள்தான் பேசிப் பேசி பழக்கம். அவரது குடும்பம் குறித்து இவளுக்கும், இவளைப் பற்றி அவருக்கும் பரிச்சயம் உண்டு. கம்பெனியின் உயர் மட்ட விஷயங்கள் கூட அவருக்குத் தெரிந்திருக்கும். பலரின் குடும்ப விஷயங்களையும் அறிவார். அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் வார்த்தைகளை இறைத்தபடி மனிதர்கள் மேலேயும், கீழேயும் சென்று கொண்டிருந்தார்கள். அமைதியாய் ஒன்றுமறியாதவராய் அந்த சின்னப் பெட்டிக்குள் அடைந்து கிடப்பார்.
இவள் தனியாக செல்ல நேரும் போது, கேள்விப்பட்ட எதையாவது சொல்லி “அப்பிடியாம்மா” என கேட்பார். அன்பானவர். சில நாட்களில் ஆபிஸ் விட்டுச் செல்ல நேரமாகிவிட்டால் லிப்டில் இருக்க மாட்டார். வேறொருவர் ஷிப்டு மாறியிருப்பார். அடுத்த நாள் பார்க்கும்போது, “பூங்குழலிம்மா, நேத்து லேட்டாயிட்டா? நா கிளம்புற வரைக்கும் வரல்லியேன்னு பாத்தேன்” என கேட்பார். இன்று எதோ பேச அவர் முயலும்போது, லிஃப்ட் மூன்றாவது தளத்தை அடைந்து இருந்தது. அனேகமாக அசோக்கைப் பற்றித்தான் கேட்க வந்திருப்பார். “பார்ப்போம் மகாலிங்கம்..” என அவசரமாக பூங்குழலி வெளியேறினாள்.
தனது இருக்கைக்கு சென்று சிஸ்டத்தை ஆன் செய்தாள். அவள் பக்கத்தில் சலனமில்லாமல் கம்ப்யூட்டரில் ஆழ்ந்திருந்த சந்தானம், அதற்கடுத்த கேபினில் எதிரே நிலைகுத்தியிருந்த அக்னேஸ் பிரின்சியா ஆகியோரின் தலைகளும், பார்வைகளும் கம்ப்யூட்டர் திரைகளில் அப்பியிருந்தன. திரும்பி பார்க்காமலேயே ‘குட் மார்னிங்..” என்றனர். வந்திருந்த மெயில்களைப் பார்த்தாள். பார்க்க வேண்டிய வேலைகள், பிராஜக்ட் குறித்த விபரங்கள் என்றே பெரும்பாலும் இருக்கும். கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இன்று முதல் ஒரு நாளைக்கு இரண்டு டீக்கள்தான் கேண்டீனில் கொடுக்கப்படும் என்றும், லஞ்ச்சில் அப்பளமும் வடையும் கிடையாது என்றும் வந்திருந்த இமெயில் அவமானப்படுத்துவதாய் இருந்தது.
அருகருகே இருப்பதாய்த் தோன்றினாலும் ஒவ்வொருக்கொருவர் தொடர்பு எல்லைக்கு வெளியேத்தான் இருந்தார்கள். என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது. சிசிடிவி காமிராக்கள் ஒவ்வொருவரின் செயல்களை கண்காணித்துக் கொண்டிருந்தன. சூரிய வெளிச்சமும், காற்றும் நுழையாமல் அடைக்கப்பட்டிருந்த அறைகள் முழுவதும் நிறைந்திருக்கும் ஏசியின் பதமான குளிரும், சக்தி வாய்ந்த விளக்குகளின் வெளிச்சமும், முணுமுணுப்பது போல பேசும் முறையும் மனிதர்களின் தன்னியல்புகளை அகற்றியிருந்தன
எல்லாமே கண்ணுக்குத் தெரியாமல்தான். உலகின் ஒரு மூலையில் கிளையண்ட் இருப்பான். அவனது பிராடக்ட் குறித்த விபரங்களை உலகமெங்கும் வசிக்கிற கஸ்டமர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விரல்நுனியில் தேவைப்படும் விபரங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டைச் செய்கிற வேலையை கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பான். அதை பிராஜக்டுகளாக பிரித்து தனித்தனி டீம்களிடம் கொடுப்பார்கள். அவைகளுக்கான கம்ப்யூட்டர் மொழியில் உருவாக்கி வடிவமைக்க வேண்டும். “எங்க ஊர் தீப்பெட்டியாபீஸ் இது” என ஸ்ரீஜா வேடிக்கையாய்ச் சொல்வாள்.
“தீப்பெட்டி அட்டை ஒட்டுறது ஒரு பிராஸஸ். குச்சி அடுக்குறது ஒரு பிராஸஸ். அடுக்கிய குச்சிகளை தீமருந்துக்குள் முக்கி எடுக்குறது ஒரு பிராஸஸ். அந்த குச்சிகளை உலர்த்தி தீப்பெட்டிக்குள் அடுக்குறது ஒரு பிராஸஸ். தீப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து விலை நிர்ணயம் செய்றது குஜராத்திலயும், இராஜஸ்தானிலும் இருக்குற சேட்டுகள். அவங்களுக்கு தீப்பெட்டியாபிஸ் ஓனர்கள் பண்டல் பண்டலா தீப்பெட்டி செஞ்சு கொடுத்து, செலவு போக லாபம் பாப்பாங்க. சின்ன வயசுல எங்க ஊருக்கு விடிகாலைல தீப்பெட்டி ஆபிஸ்லயிருந்து வண்டி வரும். பத்து வயசுல இருந்து முப்பது வயசு வரை பொம்பளைங்கள ஏத்திக்கிட்டு போவும். ஆளுக்கேத்த மாதிரி வேலை கொடுப்பாங்க. சாயங்காலம் இருட்டுனதுக்கு அப்புறம்தான் அந்த வண்டி ஊருக்கு திரும்பக் கொண்டு வந்து விடும். போய்ட்டு வர்றவங்க கசங்கிப் போய் இருப்பாங்க. எங்க பாட்டி கூட அப்படி போனவங்கதான். அப்படித்தான் நீயும் நானும் இருக்கோம். வீ ஆர் ஆல் ஜஸ்ட் கோடிங் கூலிஸ். அவ்வளவுதான்”
வேலை முடித்து இரவில் ராட்சசக் கட்டிடத்திலிருந்து வெளியேறும்போது நெற்றி கிண்ணென்று இருக்கும். சோடியம் மஞ்சள் பூத்த சாலைகளில் அமைதியை கிழித்துக் கொண்டு மனிதர்கள் சுற்றிலும் தலை தெறிக்கச் செல்ல, எதையோ இழந்து தனித்து அலைவது போல துயரம் வாட்டும். போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு, பிடித்தமான பாட்டுகளைக் கேட்டுக்கொண்டு தப்பிக்கலாம். ஃபேஸ்புக்கில், வாட்ஸ்-அப்பில் போய் ஓளிந்து கொள்ளலாம். கூட பணிபுரிகிறவர்களோடு காபி ஷாப்பிலோ, ஓட்டலில் பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தோ உளைச்சல்களை ஆற்றலாம். எதுவும் முடியாது போனால் அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கிப் போகலாம்.
எதையும் காட்டிக் கொள்ளாமல், புன்சிரிப்பும் உற்சாகமுமாய் அடுத்த நாள் இதே அடுக்குமாடி கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து நுழைய வேண்டும். எவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்பது தெரியாது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எதாவது ஒரு தருணத்தில் விசில் அடித்து வெளியேற்றப்படலாம். அசோக்கிற்கான விசில் அடிக்கப்பட்டு விட்டது. நமக்கான விசில் சத்தம் கேட்டுவிடக் கூடாது எனும் பயத்தோடு வெறி கொண்டு ஓட வேண்டும். பூங்குழலியும் ஓடிக்கொண்டு இருந்தாள்.
அனுபவமுள்ளவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று கம்பெனி அவர்களை வெளியேற்றிவிட்டு புதியவர்களை குறைந்த சம்பளத்தில் அமர்த்திக் கொள்ள துடிக்கும். கிளையண்ட்டுகளுக்கு டீம் லீடரும், அனுபவமுள்ளவர்களும்தான் வேண்டும். கத்துக்குட்டிகளை வைத்து தங்கள் பிராஜக்டுகளை முடிக்க அவர்கள் தயங்குவார்கள். கம்பெனி இவ்விஷயத்தில் அடம் பிடிக்காது. பிராஜக்ட்களை இழக்க விரும்பாது.
பூங்குழலி இப்போது அசிஸ்டெண்ட் பிராஜக்ட் எஞ்சீனியராகி இருக்கிறாள். டீமின் டிஸ்கஷனில் இவளது வியூகங்களும், விவாதங்களும் முக்கியமானவையாக கருதப்பட்டன. பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். அடுத்து பிராஜக்ட் எஞ்சீனியராகி டீம் லீடராக வேண்டும்.
தன் அம்மாவுக்கும், பாட்டிக்கும், வீட்டுக்கும் இந்த நாட்களும் உலகமும் தெரியாது என்பது பூங்குழலிக்கு ஒருவகையில் நிம்மதி. சொன்னாலும் அவர்களுக்கு புரியாது, புரிந்தாலும் அவர்களால் என்ன செய்து விட முடியும்? தன் மகள் படித்தாள், படித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று சந்தோஷம் கொண்டிருக்கிறார்கள். அந்த சந்தோஷம் அப்படியே அவர்களுக்கு இருக்கட்டும் என்று ஆசைப்பட்டாள்.
கலைச்செல்வனுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இரண்டு நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்த போது அவளது வேலை, பிராஜக்ட் பற்றியெல்லாம் கேட்டிருந்தான். அப்பா இருந்திருந்தால் அவனும் இப்படி எதாவது கம்பெனியில் வந்து கோடிங் புலியாகி இருப்பான். வங்கிக் கிளையில் உட்கார்ந்து கஸ்டமர்களை தினமும் நேரடியாக முகம் பார்த்துப் பேசிடும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அப்பாவின் வேலை! ”பூம்மா, அப்பாவுக்கு அந்த பேங்க்ல எவ்ளோ மரியாத தெரியுமா…. நம்மத் தோழர் ரவிச்சந்திரன் பையன்னு பேங்க் ஸ்டாஃப் யார் வந்தாலும் அறிமுகப்படுத்துவாங்க.” சொல்லி கலங்கினான்.
பூங்குழலி நிர்த்திரையிட அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மாவதி பாட்டிக்குத்தான் அப்பாவைப் பிடிக்கவே பிடிக்காது. கோபமோ வருத்தமோ வந்தால் அம்மாவைப் பார்த்து, “எனக்கென்னன்னு போய்ட்டார். நாங்கதான படிக்க வச்சோம். ஒங்கப்பாக்கிட்ட தலையிலத் தலையில அடிச்சுக்கிட்டேன். வியாபாரம் பண்ணுற பையனாப் பாத்து கல்யாணம் செய்வோம்னு. கேட்டாங்களா. இன்னிக்கு பாரு. ஒத்த கடையோடிருந்த ஒந்தங்கச்சி விமலா புருஷனுக்கு திருப்பூர்ல வரிசையாக் கடை வச்சு நல்ல சம்பாத்தியம். அமுதா புருஷனோ மேடவாக்கத்துல ஹார்டுவேர் கடை வச்சு எத்தன பேருக்கு வேல கொடுத்து ராஜாவாட்டம் இருக்காங்க. ஒங்களுக்கு என்ன இருக்கு. வீடு இருக்கா, வாசல் இருக்கா. மேனேஜரா பிரமோஷன் வந்தப்ப கூட வேண்டாம்னுட்டு, யூனியன் யூனியன்னு அலைஞ்சு என்ன மிச்சம். கொடி பிடிச்சு கோஷம் போட்டா பொழுது விடிஞ்சிருமா?” என்று புலம்புவார்.
பாட்டியின் பேச்சு எப்போதுமே புங்குழலிக்கு பிடிக்காது இப்போது அம்மாவின் குரலும் நச்சரிப்பாய்த் தெரிந்தது. நரேனின் அம்மா சந்திராவும் அவர்களைப் போலவே இருந்தார். சாதாரணமாகவும், இயல்பாகவும் பேசும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இவளிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இவளுக்கு அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் “ஹூம்” போட்டுக் கொண்டு இருக்கவும் முடியவில்லை.
நரேனும் அப்படித்தான் தெரிந்தான். நிச்சயதார்த்தம் முடிந்து சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் இரவில் போன் செய்தான். ‘ஹாய்’ என்றான்.
இவளும் ‘ஹாய்’ என்றாள்.
அப்புறம் ஒரு அமைதி. இவளுக்கு சிரிப்பாய்த்தான் இருந்தது அந்த விளையாட்டு.
“சொல்லுங்க நரேன்’” என்று இவளே அமைதியை உடைத்தாள்.
“அப்புறம்…” என்றான்.
“என்ன அப்புறம்… சொல்லுங்க..” என்றாள் திரும்பவும்.
”பிஸியா “
“இல்ல வெட்டியாத்தான் இருக்கேன். சொல்லுங்க “
திரும்பவும் அமைதி.
“சொல்லுங்க நரேன்….”
“இல்ல சும்மாத்தான் போன் செய்தேன். அப்புறமா பேசுறேன்” என்று வைத்து விட்டான்.
பூங்குழலிக்கு சிரிப்பாய் வந்தது. அந்த பயம், தயக்கம் எல்லாவற்றையும் ரசிக்கவே செய்தாள். அதற்குப் பிறகு அவளிடம் பேசவேயில்லை. எல்லவற்றையும் அவன் அம்மாவிடம் ஒப்பிப்பதும், பேசுவதும்தான் எரிச்சலைத் தந்தது. அதிலும் அந்த ‘குயின்’ ஸ்டேடஸைத் தொடர்ந்து அவன் நடந்து கொண்டது சுத்தமாய் பிடிக்கவில்லை.
டேபிளில் டீ வைக்கப்பட்டதும், இன்றைய முதல் டீ என்று ஒரு ஸ்க்ரோல் அரூபமாய் ஓட ஆரம்பித்தது. சம்மதம் இல்லையென்றாலும் உடன்பட வேண்டி இருக்கிறது. பூங்குழலி. டீயை எடுத்துக்கொண்டு ஏசி அறையை விட்டு வெளியே வந்தாள்.
மூன்றாவது தளத்தின் வெளித் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கண்ணாடி வழியாக பார்க்கும்போது கீழே ஆழத்தில் பஸ்களும், கார்களும் ஸ்கூட்டர்களும் சின்னச் சின்னதாய் தெரிந்தன. சில அங்கங்கு நகர்ந்து கொண்டிருந்தன. பரந்து கிடந்த வெளிக்கு அப்பால் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில ஹிந்து பத்திரிகையின் விளம்பரப் பக்கங்களைப் போல விரிந்து கிடந்தது நகரம். எத்தனை குடும்பங்கள், கதைகளை இந்தப் பெருவெளி கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு வீட்டில்தான் நரேனுடன் வாழப் போகிறோம் என்று நின்றிருந்தாள். இந்த வெளியுலகம் எதுவும் புலப்படாத சுவர்களாலான கிச்சன், ஹால், பெட்ரூம், பாத்ரூம், பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, குக்கர், டிவி, லேப்டாப்களோடு உள்ளிருப்போம். அவன் பின்னால் பைக்கில் உட்கார்ந்துகொண்டு, எண்ணற்ற சிறு பூச்சிகளில் ஒன்றாய் சாலைகளில் பயணிப்போம்.
சாயங்காலம் நரேனுடன் முதன்முறையாக பைக்கில் செல்ல இருக்கிறாள். நான்கு மணிக்கு இந்தக் கட்டிடத்தின் கீழே வந்து காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறான்.
முந்தாநாள் மதியத்தில் இருந்து பூங்குழலி தனது அம்மா சித்ராவின் நம்பரை பிளாக் செய்து இருந்தாள். மயிர் என்று பாட்டி பேசியது பிடிக்கவேயில்லை. நேற்று சாயங்காலம்தான் பிளாக் லிஸ்ட்டில் இருந்த அம்மாவின் பெயரை எடுத்து விட்டாள். இரவில் அம்மாவின் அழைப்பு கெஞ்சியது. பேசினாள்.
“ம், சொல்லும்மா...”
“பூவு, கோபமா....?”.
“அத விடும்மா, என்ன விஷயம்?”
“கல்யாணப் பத்திரிக்கை அடிச்சு வந்தாச்சு. வர்ற வெள்ளிக்கிழம கோயில்ல வச்சுக் கும்பிட்டுட்டு கொடுக்கப் போறோம். அதே நாள் நீயும் மாப்பிள்ளையும் அடையாறுல அஷ்ட லஷ்மி கோயிலுக்கு போய்ட்டு வந்துருங்களேன்.”
“எதுக்கும்மா இதெல்லாம். வெள்ளிக்கிழம எனக்கு ஆபிஸ் முடியவே ஏழு மணிக்கிட்ட ஆகும். அதுக்கப்புறம் எப்படி போக முடியும்?”
“ஒரு நா கொஞ்சம் கீக்கிரம் போக முடியாதா? கேட்டுப் பாரேன். இல்லன்னா ஒரு நா லீவு போடேன்.”
“லீவுல்லாம் அடிக்கடி போட முடியாது. பெர்மிஷன் கேட்டுப் பார்க்கிறேன்.”
“ஏந்தங்கம். கண்டிப்பா போய்ட்டு வந்துரும்மா...”
“ம். வச்சிரவா?”
“யம்மா, பாட்டி ஒங்கூடப் பேசணுமாம்... கொஞ்சம் இரு.”
“ம்...”
“பூவு, ஏஞ்செல்லம், நல்லாயிருக்கியாம்மா?”
“இருக்கேன் பாட்டி.”
“யம்மா, பாட்டி மேல கோபம் இல்லியே...எதோ வயசானவ சொல்லிட்டான்னு மறந்துரும்மா.”
“அதுல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. ஒங்களப் பத்தி தெரியாதா?” சிரித்தாள்.
“என் ராசாத்தி! இப்பிடியே எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருக்கணும்.”
“ சரி பாட்டி, வச்சிரவா?”
“ரெண்டு வார்த்தை இப்பிடிப் பேசுனாப் போதும்மா எங்களுக்கு”
“சரி பாட்டி.”
“அப்புறம்........ மாப்பிள்ளப் பையன் மனம் கோணாம நடந்துக்கம்மா.”
சட்டென எரிச்சல் வந்தது. “வச்சிர்றேன் பாட்டி!”. அழைப்பை துண்டித்து பெருமுச்சு விட்டாள்.
சிறிது நேரத்தில் சந்திரா போன் செய்து, “வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள். தம்பியோட அஷ்டலஷ்மி கோவிலுக்கு போய்ட்டு வாம்மா, நரேனுக்கும் சொல்லிட்டேன்.” என்றார். சரியென்றாள் பூங்குழலி. ஆபிஸிலும் சொல்லி விட்டாள். இவளது பிராஸஸில் சின்ன வேலைகள் பாக்கியிருந்தன. சந்தானம் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தான்.
டீயை குடித்து விட்டு திரும்பி வரும்போது வலது பக்கம் டாய்லெட் அருகே இருக்கும் சின்ன வளைவில் பிராஜக்ட் எஞ்சீனியர் சாகிதராமன் சில வாரங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம் எதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். அவள் பாவம் போல் நின்றிருந்தாள். அந்த இடம் சிசிடிவி காமிராவின் பார்வைக்குள் விழாது. கதவைத் திறக்கவும் சில்லென்றிருந்தது. அனைவரும் அசைவற்று உட்கார்ந்திருந்தனர். கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் கண்களில் மின்னியது.
சாந்தியைக் கடக்கும்போது “ஆமாங்க, இப்பத்தான் அந்தம்மா வரமுடியலன்னு சொல்லுது. ஜென்னிக்கு பனிரெண்டரை மணிக்கு ஸ்கூல் முடிஞ்சிரும். என்ன பண்ணன்னு தெரியல.” அடங்கிய குரலில் பதறிக்கொண்டு இருந்தாள்.
சென்ற பிராஜக்டில் இருந்த தவறுகளை, அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை இன்றைய டீமில் டிஸ்கஸ் செய்ய வேண்டும். அதற்கான குறிப்புகளை யோசித்து ஒரு நோட் தயார் செய்து கொடுக்க வேண்டும். தன் இருக்கையில் அமர்ந்து, போனைத் தொட்டு விழிக்கச் செய்தாள். மிஸ்டு காலில் கலைச்செல்வன் என்றிருந்தது. அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.
எடுத்தவுடன் “பூம்மா...எப்படியிருக்கே?” அண்ணனின் குரலில் பாசம் இழைந்து வந்தது. “நல்லாயிருக்கேண்ணா. கூப்பிட்டிருந்தாயா?”
“ஆமா. ஊருக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அப்பா இறந்த நாள்ல்ல..”
“ஆமா, மறந்தே போய்ட்டேன். பக்கத்துல யார் சத்தம். யாழினி போல இருக்கு.”
“ஆமா யாழினிதான். உன் நிச்சயதார்த்தத்துக்கு வந்தப்ப சபாபதி தாத்தா என் நம்பரை வாங்கியிருந்தார். ரெண்டு நாளைக்கு முன்னால போன் செஞ்சு, நாளை மறு நா வெள்ளிக்கிழம அப்பாவோட நினைவு நாள். கல்லறைக்கு வர்றியான்னு கேட்டார். வர்றேன்னேன். குடும்பத்தோட வாய்யான்னார்” கலைச்செல்வன் ததழுத்தான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா....” சொல்லும்போது இவளுக்கும் தொண்டை அடைத்தது. அடக்கிக் கொண்டாள்.
“நேத்து நைட்லயே வந்துட்டோம். அண்ணிக்கு லீவு கிடைக்கல. வரல்ல. வேறு யார் முகமும் தெரியாதுனால யாழினி முழிக்கிறா. தூக்கி வச்சுக்கன்னு தொந்தரவு செய்றா. அப்பா கல்றைலதான் இப்ப நின்னிட்டுருக்கோம்”
“சரிண்ணா...” அதற்கு மேல் எதுவும் பேச இயலவில்லை. குரல் கம்மியது.
கலைச்செல்வன் புரிந்திருக்க வேண்டும். “பூம்மா...” ஆறுதலாய் அழைத்தான்.
“............”
“பூம்மா, என்னம்மா...”
“ஒன்னுமில்ல. அண்ணா, அப்பா கல்றைய போட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில அனுப்பி வைக்கிறியா?”
“அனுப்புறேன்,,”
“ம்... தாத்தாவக் கேட்டதாச் சொல்லுண்ணா, அடுத்த வருஷம் கண்டிப்பா நானும் வரணும்ணா. ஏங்கிட்ட முன் கூட்டியேச் சொல்லிரு”
“சரிம்மா, இங்கயும் கல்யாணி வந்திருக்காங்க. தாத்தா விரட்டிட்டாரு. தூரத்துல நிக்கிறாங்க. கல்றைல கீழ போட்டுருக்கிற சிமெண்ட் தளத்துல கரிய வச்சு, என் ராசா, உன் மகளுக்குக் கல்யாணம்னு எழுதியிருக்கு. அதையும் எடுத்து அனுப்பி வைக்கிறேன்.”
பூங்குழலிக்கு அழுகையாய் வந்தது.
(தொடரும்)
January 18, 2022
க்ளிக் - 5 (தொடர்கதை)

டவுணும் இல்லாத கிராமமும் இல்லாத அந்த ஊரின் பஜாரில் ’பத்மாவதி ஜவுளி ஸ்டோர்’ வைத்திருந்தார் பூசைப்பழம். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் கடையிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு போனார். அப்போது சொல்ல மறந்திருக்க வேண்டும். அடுத்துத் தான் சாப்பிடப் போகும் வழியில் முருகேசன் “பந்தலுக்குச் சொல்லியாச்சு. மேளத்துக்கும் சொல்லியாச்சு. மொத நா ராத்திரி, அடுத்த நா காலைல, மத்தியானம் எல்லாம் பந்திக்கு என்னென்ன வைக்கணும்னு யோசிச்சு வைங்க. சமையலுக்குச் சொல்லணும். அப்பா உங்கக் கிட்ட கேக்கச் சொன்னாங்க” சொல்லிவிட்டுப் போனார். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் குடித்தனம் இருக்கிறார்.
சரி, சரி என்ற பத்மாவதி அம்மாள் வேறு எதையும் பேசவில்லை. மாப்பிள்ளை வீட்டில் ரொக்கம் வேண்டாம், நகையும் நீங்கள் போடுவதுதான் எனச் சொல்லியதிலிருந்து தன் மகன் கல்யாண ஏற்பாடுகளில் கடும் வேகமாக இருப்பதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை விழுந்து விழுந்து உபசரித்தபோதே புரிந்து போனது. போதாக்குறைக்கு கல்யாணச் செலவுக்கு தங்கள் தரப்பில் மூன்று லட்சம் தருவதாக ரவிச்சந்திரனின் அண்ணன் அதாவது பூங்குழலியின் பெரியப்பா நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த போது சொல்லி இருந்தார்..
பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன் தன் இஷ்டத்திற்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து போய் விட்டதிலிருந்து தன் அக்கா சித்ராவின் குடும்பத்தோடு பட்டும் படாமல் இருந்தார் முருகேசன். நான்கு வருஷமாய் இருந்த முறைப்பு விறைப்பு எல்லாவற்றையும் இப்போது உதறிவிட்டிருந்தார். மாரியம்மன் அருளால் இந்த வரன் அமைந்ததாக பூசைப்பழத்திடம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் வாய்விட்டுச் சொன்னார். வரிசையாக மூன்று பெண் குழந்தைகளை வைத்திருக்கும் தன் மகன் முருகேசன் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு காசுக்கும் எப்படி கணக்கு பார்ப்பார் என்று பத்மாவதிக்குத் தெரியும். பேத்தி பூங்குழலியால் இப்போது ஆரம்பித்திருக்கும் பிரச்சினைகளைச் சொன்னால் அவ்வளவுதான். முருகேசனின் முகம் போகும் போக்கை பார்க்க முடியாது. எப்படி சரி செய்வது என பத்மாவதியும், சித்ராவும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.
திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது சம்பந்தமாய் கொஞ்ச நேரத்துக்கு முன்பு சந்திராவிடம் சித்ரா பேசியபோது தெரிந்தது. ஒரு சாதாரண விஷயமாகத்தான் சந்திராவும் சொன்னார். உள்ளுக்குள் வருத்தம் தெரிந்தது. பூங்குழலியை சின்ன வயதில் இருந்து பார்த்து வந்திருப்பதால் சித்ராவுக்கு லேசாய் பதற்றம் தொற்றியிருந்தது. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, எல்லோரும் பார்க்கப் போயிருந்த அந்த மேஜிக் ஷோ இப்போதும் ஒரு பயங்கர கனவு போல இவரை பயமுறுத்தும்.
அரங்கம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வெளிச்சம் வட்டமாய் குவிந்திருந்த மேடையின் அந்தரத்திலிருந்து மேஜிஷியன் இறங்கி வந்து ஷோவை நடத்த ஆரம்பித்தார். வெறும் கைக்குட்டையை காட்டி சுருக்கி விரித்த போது பூக்கள் கொட்டின. வீசிய தொப்பியிலிருந்து புறாக்கள் பறந்தன. கைகளும், காலும் கட்டப்பட்ட பெண்ணை சின்னப் பெட்டிக்குள் மடக்கி உட்காரவைத்து பூட்டிவிட்டு திறந்தால் கட்டுகள் இல்லாமல் எழுந்தாள். ஒவ்வொன்றும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தன. எல்லோரும் கை தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். “எப்பிடிப்பா..”, “எப்பிடிப்பா..” என்று ரவிச்சந்திரனைத் தொட்டு தொட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் பூங்குழலி. அருகே கலைச்செல்வனும், சித்ராவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
கில்லட்டின் போன்ற ஒன்றை மேடையில் வைத்து, அதன் வளையத்தில் பூசணிக்காயை வைத்து மேலிருந்த லிவரை இழுக்கவும், கத்தியாய் பளபளத்த பெரிய பிளேடு போல இருந்த ஒன்று சட்டென்று இறங்கி வெட்ட இரண்டு துண்டுகளாய் தரையில் உருண்டன.
“உங்களிடமிருந்து ஒருவரை இப்போது அழைக்கிறேன். ஒரு சின்னப் பையனோ, பெண்ணோ மேடைக்கு வாருங்கள். அவர்கள் தலையை இதற்குள் கொடுக்க வேண்டும். யார் வருகிறீர்கள்” கூட்டத்தைப் பார்த்து மேஜிஷியன் அழைத்தார். அனைவரும் உறைந்து போயினர்.
ரவிச்சந்திரன் பூங்குழலியைப் போகச் சொன்னார். அவள் கொஞ்சம் யோசித்து எழுந்தாள்.
“ஒங்களுக்கு என்ன பைத்தியமா? சும்மா இருங்க.” சித்ரா பயந்தார்.
“அவ கெடக்கா. ஒன்னும் ஆகாது. நீ போம்மா”
“ஐயோ, எம்புள்ள, நா போக விட மாட்டேன்.” கத்தவும் பக்கத்திலிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ரவிச்சந்திரன் அமைதியானார்.
யாரும் முன் வராமல் போகவே, ஷோவிலிருந்த ஒரு சின்னப் பெண்ணையே அழைத்து அந்த வளையத்திற்குள் தலையை விடச் செய்தார் மேஜிஷியன். கலைச்செல்வன் தன் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள பூங்குழலி சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மேஜிஷியன் மேலே லிவரை பிடித்து இழுக்கவும் அந்தப் பெண்ணின் கழுத்தில் பூமாலை விழுந்தது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு எல்லோரும் கை தட்டினார்கள்.
வீட்டுக்கு வந்த பிறகும் “கழுத்தை வெட்டாதுன்னு தெரியுதுதான். ஆனாலும் பயமா இருக்குல்ல. இப்ப நினைச்சாலும் உடம்பு நடுங்குது..” என்றார் சித்ரா. ரவிச்சந்திரன் சிரித்தார். “ஆமா, சிரிங்க… என்ன மனுஷன் நீங்க…. நம்ம புள்ளயப் போயி அனுப்பப் பாத்தீங்களே” என்று கோபப்பட்டார். ரவிச்சந்திரன் மேலும் பலமாக சிரித்தார்.
இரண்டு நாள் கழித்து பள்ளிக்கூடத்திலிருந்து மேஜிக் ஷோவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். பூங்குழலி அன்றைக்கு பூமாலையோடு வந்தாள். சித்ராவால் முதலில் நம்பவே இல்லை. உண்மைதான் என கலைச்செல்வன் சொன்னதும் வெலவெலத்துப் போனார். எப்படி தன் பெண் அத்தனை பேருக்கும் முன்னால், அந்த இருட்டில் நான் வருகிறேன் என எழுந்து மேடைக்குச் சென்று அந்த வளையத்திற்குள் தலையை கொடுத்தாள் என நினைத்து கதிகலங்கிப் போனார். எதுவும் நடக்காதது போல அன்று பூங்குழலி அமைதியாக உட்கார்ந்து பாடம் எழுதியது, சாப்பிட்டது, படுத்து உறங்கியது எல்லாமும் பயம் தந்தது. தூங்கும்போது தன் குழந்தையா இவள் என்பது போல் தொட்டுப் பார்த்தார். அவ்வளவு நெஞ்சழுத்தக்காரியா அவள் என அன்றைக்கு அதிர்ச்சியடைந்தார் சித்ரா.
இன்றைக்கு சந்திராவிடம் போனில் பேசியதும் ஏனோ தவிப்பாய் இருந்தது. பூங்குழலிக்கு உடனே போன் செய்தார். எடுக்கவில்லை. இரண்டு மூன்று தடவை தொடர்ந்து முயற்சி பார்த்தார்.
“ஊர்ல உலகத்துல இப்பலாம் கல்யாணம் நிச்சயம் ஆய்ட்டுன்னா பொண்ணும் மாப்பிளையும் நேரம் காலம் தெரியாம ஆசை ஆசையா போன்லயே பேசிக்கிடறாவ கண்டிருக்கு. ஒம்பொண்ணும் அந்தப் பையனும் அப்படி எதுவும் பேசுறது இல்லையா?” கேட்டுக்கொண்டே சித்ராவைத் தாண்டிச் சென்று வாசல் கதவைச் சாத்தி வந்தார் சந்திரா. “அப்படி எதாவது பேசினா இப்படியெல்லாம் ஒன்னு கெடக்க ஒன்னு பேச்செல்லாம் வராதேன்னு கேட்டேன்” என்று அவரே பதில் சொல்லியபடி சமையலறை சென்றார்.
வரப் போகும் மருமகள் மீது மாப்பிள்ளை வீட்டில் வைத்திருக்கும் ஆசை பத்மாவதிக்குப் புரிந்தது, பூங்குழலி நல்ல பெண்தான், ஆனால் பாசத்திற்கு உருகுகிறவள் இல்லை என்று புரிந்து வைத்திருந்தார். அவளுக்கு சடங்கு கழித்த இரண்டு மாதத்தில் ரவிச்சந்திரன் தனது நாற்பத்து நான்காவது வயதில் இறந்து போனார். பைக்கில் சென்றபோது விபத்தில் முகமும் உடலும் சிதைந்து போனவரை ஒரு உருவமாக வெள்ளைத்துணியால் போர்த்திக் கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்தார்கள். அப்பாவின் மீது விழுந்து பூங்குழலி கதறிக் கதறி அழுதாள். அதற்குப் பிறகு பூங்குழலியும், கலைச்செல்வனும் இந்த வீட்டில்தான் வளர்ந்தார்கள். ஒருநாளும் அவள் அழுது பார்த்ததில்லை. நெஞ்சழுத்தக்காரியாய் இருந்தாள். தன் போக்கில்தான் போவாள். லேசில் பிடி கொடுக்க மாட்டாள்.
வாசலிலும் ஜன்னலிலும் நின்று பெண்கள் எட்டிப் பார்த்த காலம் எல்லாம் போய்விட்டது. ஆணும் பெண்ணுமாய் ஒரே இடத்தில் படிக்கவும், வேலை பார்க்கவுமான பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று பயமாக இருந்தது. கண் காணாத தூரத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை நினைத்து, “நல்ல புத்தியையும், நல்ல சுகத்தையும் கொடு கடவுளே!” என நாளும் பத்மாவதி வேண்டிக்கொண்டிருந்தார். கலைச்செல்வனால் மொத்தக் குடும்பமும் உடைந்து போனது. வெளியே தலைகாட்ட முடியாமல் செய்துவிட்டானே என புலம்பித் தள்ளினார்.
அந்த பயத்தில்தான் பூங்குழலிக்கு வேலை கிடைத்தவுடன் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என துடித்தார். சித்ராவுக்கு அது சரியாகவேப் பட்டது. பத்மாவதியின் இரண்டாவது பெண் அமுதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள், கடைசிப் பெண் விமலாவுக்கு ஒரு ஆணும், பெண்ணும், மகன்காரன் முருகேசனுக்கு மூன்று பெண்குழந்தைகள் என வரிசையில் நிற்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு சுப காரியத்தை நடத்தி இழந்த கலகலப்பையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்து விடலாம் என தாயும் மகளும் நினைத்தார்கள். அந்த நினைப்பு இருந்தால் பூங்குழலி இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா என்றிருந்தது.
அமுதாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்பு சென்னை சென்று மேடவாக்கத்தில் ஒரு வாரம் போல இருந்த பத்மாவதி, திரும்பி வந்து சித்ராவிடம் நிறையவே குறைபட்டுக் கொண்டார். கல்லூரியில் படிக்கும் விமலாவின் மூத்த பெண் சுபாஷினி சதா நேரமும் போனும் கையுமாகத்தான் இருந்தாளாம். தூங்காமல் கொள்ளாமல் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்திருந்தாளாம். எப்படி ஒழுங்கா படித்து முடிக்கப் போகிறாளோ, என வருத்தப்பட்டார். அவளது தாயும் தகப்பனும் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது சரியாகப் படவில்லை. கல்லூரி படித்து முடிக்கும் வரை பூங்குழலிக்கு தாங்கள் போன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று அவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் காட்டியிருந்தார். இப்போது போன் வழியாகத்தான் பிரச்சினை என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதும் உள்ளுக்குள் ஒடிக்கொண்டு இருந்தது.
சித்ராவின் மொபைல் குரல் எழுப்பியது. பூங்குழலிதான் பேசினாள். “என்னம்மா, இந்த நேரம்? பிஸியா இருக்கேன். சொல்லும்மா..”
“யம்மா பூவு, உன் விளையாட்டல்லாம் நிறுத்திக்கம்மா. மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் வருத்தப்படுறாங்க. மாப்பிள்ளைக்கிட்ட போன் பண்ணி ஒரு ஸாரி சொல்லிட்டா என்ன.”
“உன் கிட்ட பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்களா? அவங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஐயய்யே.... என்ன இது?”
“பஞ்சாயத்துல்லாம் இல்ல. சும்மா பேசிக்கிட்டிருந்தோம். வருத்தப்பட்ட மாரி தெரிஞ்சுது…”
“ஆரம்பிச்சிட்டிங்களா… நிறுத்தும்மா. ஒரு சின்ன விஷயத்த எல்லோருமா சேர்ந்து பெரிசாக்குறீங்க.”
“மாப்பிள்ளைக்கிட்ட ஒரு ஸாரி கேட்டாதான் என்னம்மா?”
“நா ஒரு தப்பும் பண்ணல. கேக்க முடியாது. நரேன் கிட்ட பேசிக்கிறேன்..”
“இதப் பாரு... உன் நல்லதுக்குச் சொல்றேன்.....” சித்ரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பத்மாவதி அவளிடமிருந்து போனை வேகமாய் வாங்கி “ஏளா சின்ன நாயே! அப்புறம் என்ன மயித்துக்கு அப்படி எழுதினியாம்” ஆங்காரமாய் கத்தினார்.
பதில் இல்லை. காதில் கொஞ்ச நேரம் போனை வைத்திருந்து விட்டு, சித்ராவிடம் கொடுத்தார். “நாந்தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல. அதுக்குள்ள இப்படியாக் கத்துறது. வச்சிட்டா” என்று திரும்பவும் சித்ரா போன் செய்தாள். பூங்குழலி எடுக்கவில்லை. “கோபப்பட்டா காரியம் நடக்காது. அவ இன்னும் வீம்புதான் பண்ணுவா. அவளப் பத்தி எனக்குத் தெரியும்.”
“பிறகென்ன? அந்த சின்னக் கழுதக் கிட்ட கெஞ்சுறது. அவ பெரிய இவளோ. ஆனாலும் பொட்ட புள்ளைக்கு இவ்வளவு திமிரும் கொழுப்பும் ஆகாதுடி.” மேலும் கத்தினார் பத்மாவதி.
சித்ரா ஒன்றும் சொல்லாமல் சமையலறைக் கதவைத் திறந்து பின்பக்கம் வளவில் இருந்த நார்க்கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். செல்போனை இரண்டு கைகளுக்குள்ளும் பொத்தியபடி எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியே மகளைப் பார்த்த பத்மாவதிக்கு அந்த கோலம் சங்கடத்தைத் தந்தது. சித்ராவுக்குத் துணையாக நாம்தானே இருந்து வருகிறோம், தன்னுடைய காலத்துக்குப் பிறகு யார் கவனித்துக் கொள்வார்கள், தனக்கும் எழுபது கிட்டே ஆகிறது என்றெல்லாம் நினைத்து வேதனையடைந்தார். கலைச்செல்வனின் குடும்பத்தோடு உறவு இல்லாமல் இருக்கிறது. பூங்குழலியின் நிச்சயதார்த்தம் நடந்த போது பேத்தி யாழினியை சித்ரா தூக்கி வைத்துக் கொள்ளக் கூட இல்லை.
யோசிக்கும் போதெல்லாம் ரவிச்சந்திரன் மீதும் அவரது குடும்பத்து மனிதர்கள் மீதும் வெறுப்பும் ஆத்திரமும் பத்மாவதிக்கு வரும். அந்த பைத்தியக்காரி கல்யாணிக்குப் பயந்து தனது மகள் தலையில் கட்டி வைத்து வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள் என சபித்துக் கொள்வார். அவர்கள் ஊரில் ஒரே தெருவில் இருந்த கல்யாணிக்கும் ரவிச்சந்திரனுக்கும் சின்ன வயசில் இருந்தே பழக்கம் என்றும், வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் ரவிச்சந்திரனின் அப்பா சபாபதி மறுத்துவிட்டார் என்றும் அந்த ஊரைச் சேர்ந்த பழக்கடைக்காரர் ஒருவர் பூசைப்பழத்திடம் கதை கதையாய்ச் சொல்லியிருந்தார். ரவிச்சந்திரனின் பிறந்தநாளுக்கு கல்யாணி தன் வீட்டு வாசலில் கோலம் போடுவாராம். தெருவில் நின்று, “என் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே” என பாட்டுப் பாடுவாராம். ஒருதடவை அவன் வேலை பார்த்த ஊருக்கே போய் தங்கியிருந்த லாட்ஜின் அறையைத் தட்டி ரகளை ஆகிவிட்டதாம். இவையெல்லாம் காதில் விழுந்தும் ஆரம்பத்தில் பத்மாவதி அமைதியாய்த்தான் இருந்தார்.
கல்யாணமாகி நான்கைந்து வருஷங்களுக்குப் பிறகும் சித்ராவும், ரவிச்சந்திரனும் தங்கியிருந்த திருச்செந்தூருக்கேப் போய் அந்தக் கல்யாணி “அக்கா, ஒங்க வீட்டுல ஒரு வேலைக்காரியாவாது இருக்கிறேனே” என கெஞ்சி அழுதிருக்கிறார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை லீவில் ஊருக்கு வந்தபோது மகள் சொன்னதைக் கேட்டதும் பத்மாவதி கொதித்துப் போனார்.
“மொதல்லயே தெரிஞ்சிருஞ்சா நாங்க கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்க மாட்டோம்” என ரவிச்சந்திரனை வைத்துக்கொண்டே சொல்லிவிட்டார். அந்த வீட்டில் இனி காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அன்றைக்கு சித்ராவை அழைத்துக்கொண்டு ரவிச்சந்திரன் வெளியேறினார். பூசைப்பழம் வீடு தேடி வந்து மன்னிப்புக் கேட்டபிறகும் சமாதானமாகவில்லை. சித்ராவை மட்டும் அனுப்பி வைப்பார்.
“அவர் மீது தப்பு இல்லையாம், அந்தப் பொண்ணுதான் உயிரா இருந்துச்சாம். அவங்கம்மா சொன்னாங்க” என தன் அம்மாவிடம் இன்னொருநாள் சொன்னார் சித்ரா.
“ஒம்புருஷன் எதுவுமே செய்யாம அவ அப்படி மயங்கிட்டாளாக்கும். போடி, நீ ஒரு பைத்தியக்காரி!” ஏளனமாகச் சொன்னார் பத்மாவதி. அத்தோடு நிறுத்தியிருக்கலாம். அந்த ஊரில் இருந்த ரவிச்சந்திரனின் சொந்தக்காரர்களிடம் எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்.
அந்த பொங்கலுக்கு ரவிச்சந்திரனின் ஊருக்குச் சென்றிருந்த போது ரவிச்சந்திரனின் அம்மா, பேச்சோடு பேச்சாக சித்ராவிடம் “ஒங்கம்மா இப்படியெல்லாம் பேசினாளாமே. அவ யோக்கியம் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்காளா, ஒங்கப்பாவோட தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருந்த குடும்பந்தான ஒங்கம்மா குடும்பம். வயலு, வரப்பு, கடை, சொத்துன்னு கணக்குப் போட்டு பம்புசெட்டு ரூமுக்குள்ள ஒங்கப்பங்கூட போயிருக்கா. ஒங்கம்மாவுடைய அண்ணங்காரன் கதவ வெளிய மூடி பஞ்சாயத்தக் கூட்டிட்டான். இப்படித்தான ஒங்கப்பாவுக்கும், ஒங்கம்மாவுக்கும் கல்யாணமே நடந்துச்சு. எதோ கெரகம் ஒங்க வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்டோம்” என்று பொரிந்துவிட்டார். முகத்தைப் பொத்திக்கொண்டு “ஏ.. என் அம்மா, அம்மா” என சித்ரா சத்தம் போட்டு அழுதார்.
கேள்விப்பட்ட ரவிச்சந்திரன் தனது அம்மா என்றும் பாராமல் கடுமையாக பேசிவிட்டார். “அறிவிருக்கா, என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுனீங்களா. ஒங்க சங்காத்தமே வேண்டாம். வா.... சித்ரா” அழைத்துக்கொண்டு போய்விட்டார். அதற்குப் பிறகு அந்த வீட்டோடும் உறவு அற்றுப் போனது.
பூங்குழலி பிறந்த பிறகு ரவிச்சந்திரனின் அம்மா பார்க்க வந்தார். சித்ராவிடம் மன்னிப்பு கேட்டு, “ஊருக்கு வாம்மா. நம்ம கோவில்ல வச்சு பேத்திக்கு காது குத்தணும்.” அழைத்தார். உறவுகள் அறுந்து போகாமல் பேருக்கு ஒட்டிக்கொண்டு நின்றன. கடைசி வரை ரவிச்சந்திரன் சித்ராவின் வீட்டுக்குச் செல்லவே இல்லை. அதுபோல ரவிச்சந்திரனின் அம்மா இறந்ததுக்கு பத்மாவதியும் போகவுமில்லை. துஷ்டி கேட்கவுமில்லை.
போன் சத்தம் கேட்டது. எடுத்து சித்ரா பேசினார். பத்மாவதி அருகில் போய் நின்று கேட்டார்.
‘ம்’, ‘ம்’ சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தவர், “அவ ஏங்கிட்டயே எப்பமாவதுதான் பேசுவாப் பாத்துக்குங்க. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. நாங்க பேசுறோம்.” என்றார்.
என்ன என்று சத்தம் வராமல் பத்மாவதி, வாயசைத்துக் கேட்டார். பொறுங்கள் என்று சைகை காட்டிவிட்டு, “சரிங்க” , “சரிங்க” என்றார். “ஆமாமா, கொஞ்சம் அலட்சியமா இருப்பா. இனும அவ ஒங்க பொண்ணு. நீங்கதான் பாத்துக்கணும்” போனை அணைத்தார்.
“யாரு, மாப்பிள்ள வீட்லயா?” மகளின் அருகே உட்கார்ந்து கொண்டார்.
“ஆமா, மாப்பிளையோட அம்மாதான் பேசினாங்க. அவங்க, அவங்க வீட்டுக்காரரு. மாப்பிள்ளை மூனு பேருக்கும் ஒன்னு போல ஸாரின்னு ஒத்த வார்த்தைல பூவு மெஸேஜ் அனுப்பியிருக்காளாம். கோபத்துல வேண்டா வெறுப்பா பண்ண மாதிரி இருக்காம். வருத்தப்படுறாங்க…”
பெருமூச்சு விட்டார் பத்மாவதி.
(தொடரும்)