அயலி இல்லை ”அயலி”


நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சார்ந்த வாழ்க்கையை வைத்தே, புற உலகு குறித்த சிந்தனைகளையும் பிம்பங்களைம் இந்த நவீன காலத்தில் பலரும் கொண்டிருக்கிறார்கள். அங்கு நிலவும் பிற்போக்குத்தனங்களைச் சாடி, தேவையான மாற்றங்களை உரக்கப் பேசுவதைக் காண முடிகிறது.  

முழுக்க முழுக்க ஆணாதிக்கம், பழமை வாதம், ஜாதீயம், மதவாதத்தில் ஊறிக்கிடக்கும் பிரதேசங்கள்தாம் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பு. அவர்கள் இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகள் ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள். நகரங்களிலும், பொதுவெளியிலும் இன்று நாம் பேசக்கூடிய முற்போக்குத்தனங்களை, மாற்றங்களை எல்லாம் அங்கு போய் இவ்வளவு எளிதாகவும், சுதந்திரமாகவும் பேசிவிட முடியாது. அப்படியொரு இறுக்கமும், உக்கிரமும் அங்கு நிலவும்.  

அப்படியொரு நிலப்பரப்பில் நிகழும்  ‘பெண் கல்வி’க்கான மாற்றத்தை சினிமாவாக்கி இருக்கிறார்கள். அதையும் சிறு சிறு அசைவுகளிலிருந்து துவங்கி மாற்றம் என்பது ஒரு process என்பதை உணர்ந்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அயலி படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம். 

கதையைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதற்கான கதாபாத்திரங்கள், ஓளிப்பதிவு, சுவாரசியமாக கதை சொல்லும் நேர்த்தி, பேச்சு வழக்கு, நடிப்பு எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன. அதிலும்  கதைக்கு சம்பந்தமில்லாமல் -  வழக்கமான சினிமா நாயகித் தோற்றமாக இல்லாமல் - நாம் பார்த்த, பழகிய பெண்ணாக இருக்கிறார் தமிழ்ச்செல்வி. அவர் அயலி இல்லை. 

சொல்ல வேண்டியதை அழுத்தமாக, ஒப்புக்கொள்ளும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். வரவேற்போம். இப்படிப்பட்ட முயற்சிகள் இன்னும் அதிகமாக வேண்டும். 

படத்தின் ஆக்கத்தில் குறைகள் இருக்கவேச் செய்கின்றன. அதைச் சொல்வதால் இருக்கும் நிறைகளுக்கு குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் சொல்ல மனம் வரவில்லை. 

அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டும்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 01:01
No comments have been added yet.