Jeyamohan's Blog, page 1722
October 12, 2016
இலக்கிய வாசிப்பும் பண்படுதலும்
ஜெ,
சமீபத்தில் ஒரு நண்பரிடம் உரையாடும்போது இலக்கிய வாசிப்பு புதிய பார்வைகளையும், சிந்தனைகளையும் அளித்து பண்படுதல் என்கிற நிலைநோக்கி நகர்த்துவதாகக் குறிப்பிட்டேன். ஆனால் அவர் இலக்கியத்தைப் பண்படுதலுக்கான கருவியாகக் கொள்ள முடியாதென்றும் அது ஒரு கலை மட்டுமே என்றும் குறிப்பிட்டார். பண்படுதலுக்காக இலக்கியம் என்றால் இலக்கியவாதிகளே பண்படவில்லையே எனக் கேட்கிறார். ஒரு எழுத்தாளர் காமம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு செல்கிறார். ஆனால் அவரிடமிருந்து ஒரு நல்ல இலக்கியம் கிடைக்கிறது. இப்பொழுது அவரது எழுத்தை நாம் எப்படி அணுகவேண்டும்? எழுதுபவரின் ஆளுமையை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாதா? ஒரு எழுத்தாளனே கொலைகாரனாய் இருந்துவிட்டு, இலக்கியம் படித்தால் மக்கள் உருப்படுவார்கள் என்று அறைகூவல் விடுத்தால் அதை எப்படிப் பார்ப்பது?
ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பு சமகால எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே பேசப்படும் அவர்மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் மறைந்துவிடும் எனும்போது எழுத்தாளரின் ஆளுமை தேவைப்படாமல் போய்விடுமா? எழுத்தாளனையே பண்படுத்தாத எழுத்து எப்படி சராசரி மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும். ஒருவேளை நண்பர் சொல்கிறபடிக்கு அது வெறுமனே மகிழ்ந்திருப்பதற்கான, துக்கப்படுவதற்கான ஒரு கலை மட்டும்தானா ?அது பண்படுதலை எல்லாம் நிகழ்த்தாதா? ஒரு இலக்கிய வாசிப்பின் தேவைதான் என்ன?
அன்புடன்,
அகில் குமார்.
***
அன்புள்ள அகில்
எப்போதுமிருக்கும் கேள்விதான் இது. கம்பனைப்பற்றியும் காளிதாசனைப்பற்றியும் புழங்கும் கதைகள் எவையும் கௌரவமானவை அல்ல. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் ஆழ்ந்த விழுமியங்களை நிறுவிவிட்டுச்செல்ல கம்பனால் முடிந்தது அல்லவா? இன்றும் கம்பன் சொல்வழியாகத்தானே அவ்விழுமியங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்?
அப்படியென்றால் ‘அதெப்படி கெட்டவன் நல்ல விழுமியங்களைப் பரப்பமுடியும்?” என்ற கேள்விக்கு பொருளே இல்லை. பரப்பி நிலைநாட்டியிருக்கிறான். அது கண்ணெதிரே மலைபோல நின்றிருக்கிறது. எப்படி நிலைநாட்டினான் என்றுதான் ஆராயவேண்டும்.
உங்கள் கேள்வியில் உள்ள பிழை இலக்கியவாதியை அறநெறி சொல்லும் உபதேசகனாக நினைத்துக்கொள்வதுதான். அதாவது கம்பன் காமத்திலாடலாம். வள்ளுவர் அப்படி இருக்கமுடியாது. இதுதான் வேறுபாடு. இலக்கியப்படைப்பு நெறிகளை அறிவுறுத்துவது அல்ல. அது வாழ்க்கையைச் சித்தரிப்பது. வாசகனை நிகர்வாழ்க்கை ஒன்றை வாழச்செய்வது
அவ்வாழ்க்கை அனுபவத்தை அடையும் வாசகன் தான் நெறிகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறான். எப்படி ஓர் உண்மை வாழ்வனுபவத்தில் இருந்து நெறிகளைப் பெற்றுக்கொள்கிறானோ அப்படி. அவ்வாறு உணர்வுச்செறிவுடன் வாழ்க்கையை அளிக்கும் எழுத்தாளன் பிறரை விட மேலதிக மென்மையுடன் மேலதிக நுண்மையுடன் மட்டுமே இருக்கமுடியும். சுந்தர ராமசாமியை மேற்கோளாக்கிச் சொன்னால் ஜன்னல் கம்பிகளுக்கும் வீணைத்தந்திகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு சாமானிய மக்களுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே உள்ளது
இந்த மென்மை, நுண்மை காரணமாகவே எழுத்தாளன் அல்லலுறுகிறான். வாழ்க்கையை வாழ அவனால் முடியவில்லை, வாழ்க்கையின் பொருளைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஆகவே எல்லாரையும்போல ’நிம்மதி’யாக வாழமுடிவதில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் அமைதி இழக்கிறான். சாதாரண வாழ்க்கையைத் தாங்கமுடியாமல் அதை விசைகொள்ளச்செய்யும்பொருட்டு குடிக்கிறான். மிதமிஞ்சிய சினம் கொள்கிறான். கட்டற்று காமம் கொள்கிறான். அதீதமான மரணபயத்தில் உழல்கிறான். சாமானியரிடமில்லாத அறச்சீற்றம் கொள்கிறான். மிகப்பெரிய நம்பிக்கையையும் கனவையும் சென்றடைகிறான். சமயங்களில் விரக்தி மீதூறச் சரிகிறான். கட்டுமீறி களியாட்டமிடுகிறான். வறுமையில் உழல்கிறான். பூசலிடுகிறான். ஆணவம் கொள்கிறான். தனிமையில் இருக்கிறான்.
நீங்கள் ஓர் உதாரணபுருஷன் இலக்கியம் படைக்கவேண்டும் என விரும்பினால் அது எப்படி எளியவர்களின், வீழ்ச்சி அடைந்தவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின், தீயவர்களின் வாழ்க்கையாக ஆகும்? அது சான்றோர் மட்டுமே அறியும் ஓர் இலக்கியமாக அல்லவா இருக்கும்? அதற்கு என்ன உண்மையின் மதிப்பு இருக்கமுடியும்?
இலக்கியவாதி சமூகத்தின் வெவ்வேறு உறுப்பினர்களாக தான் மாறி நடிப்பவன். அதனூடாக தன் உள்ளத்தைக்கொண்டு அவ்வாழ்க்கையின் உள்ளாழத்தை அறிந்து எழுதுபவன். அத்தனை கீழ்மைகள் தீமைகளையும் அவன் தன்னுள் இருந்தே எடுக்கிறான். ஆகவே அத்தனை துயர்களையும் சரிவுகளையும் அவன் அடைகிறான். அத்துடன் அத்தனை மேன்மைகளையும் எழுச்சிகளையும் அவன் அடைகிறான்
எழுத்தாளன் நல்லுபதேசம் செய்யும் ஞானி அல்ல. அவன் வாழ்க்கையின் கீழ்மைகளில் தொடங்கி ஞானி அமர்ந்த உச்சம் வரைச் செல்பவன். ஆகவேதான் அவன் முழுவாழ்க்கையையும் எழுதமுடிகிறது. தல்ஸ்தோயை எப்படிச் சொல்வது? ஞானி அல்லவா? ஆம். மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல் கொண்டவர் அல்லவா? ஆம். மாபெரும் அறச்சீற்றம் கொண்ட தத்துவவாதி அல்லவா? ஆம். காமத்தில் திளைத்தவர் அல்லவா? ஆம்
உங்கள் விவாதத்தின் சிக்கல் என்ன தெரியுமா? நீங்கள் விவாதித்தது இலக்கியவாசிப்பு அற்றவரிடம். இலக்கியவாசிப்பற்றவர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்னெறிகளின் தொகுதி என நினைப்பார்கள். இலக்கியவாசகன் அது ஒரு உயிருள்ள வாழ்க்கை என அறிவான். வாசிக்காதவர்கள் இலக்கியவாதியை ஒரு சான்றோன் என்பார்கள். வாசிப்பவர்கள் அவன் ஓர் உடலின் பல வாழ்க்கை வாழ்பவன் என நினைப்பார்கள்
ஜெ
அகில்குமார் இணையதளம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 11, 2016
ருத்ரை
ஆந்திரம் எனக்கு என்றுமே ஒரு வியப்பை அளிக்கும் நிலம். அதை ஒரு மாநிலம் என்று சொல்வதைவிட தனி நாடு என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட பிரான்சுக்கு சமம் என்று நினைக்கிறேன். முற்றிலும் வேறுபட்ட பல நிலப்பகுதிகள் கொண்டது. தெற்கே ராயலசீமாவும் சரி, அதற்குமேல் கோதாவரியும் சரி, வடக்கே தெலுங்கானா பகுதிகளும் சரி, ஒன்றுக்கொன்று முற்றிலும் சம்பந்தமற்றவை. பண்பாட்டிலும் நிலக்காட்சியிலும்.
கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில் சாதவகனப்பேரரசின் காலம் தொடங்கி ராஷ்டிரகூடப்பேரரசு, ஹொய்சாளப்பேரரசு, சாளுக்கியப்பேரரசு, நாயக்கர் பேரரசு என தொடர்ச்சியான வெவ்வேறு அரசகாலகட்டங்கள் அங்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு பேரரசும் அவர்களுக்குரிய கலை மரபையும் பண்பாட்டையும் தனித்தன்மைகளையும் உருவாக்கி நிலைநிறுத்தின.
முதல் முதலாக நான் ஆந்திரத்திற்குள் நுழைந்த போது எனக்கு 23 வயது. அதற்கு முன்பு பலமுறை அவ்வழியாக கடந்து சென்றிருந்த போதும் கூட ஆந்திரத்தில் இறங்கி அந்நிலப்பகுதியை அலைந்து சுற்றிப்பார்த்தது அப்போதுதான். அன்று தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அனேகமாக வருடந்தோறும் ஆந்திரத்திற்குள் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் அப்பண்பாட்டுவெளியில் பத்தில் ஒன்றைக்கூட நான் பார்த்திருக்கவில்லை என்ற சோர்வு எனக்கு உண்டு.
உண்மையில் அதற்கு பொருளே இல்லை. எந்த ஒரு பண்பாட்டையும் எவரும் முழுக்க அறிந்துவிட முடியாது. ஒரு பண்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தன் ஆய்வை அமைத்துக் கொண்டு முழு வாழ்வையும் செலவிட்ட அறிஞர்கள் கூட அதன் பல பகுதிகள் தங்களுக்குப் புரியவில்லை. பல பகுதிகள் தங்களுக்குப் பிடிபடவில்லை என்று சொல்வதை நாம் பார்க்கலாம்.
நான் முதன்முதலாக வரங்கலுக்கு சென்றிறங்கினேன். எதிர்படும் நபரிடம் “வாரங்கல் கோட்டை அருகில் தான் இருக்கிறதா?” என்று கேட்டேன். எட்டாவது பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான் ’வாரங்கல்’ கோட்டையைக் கைப்பற்றினார் என்று படித்த நினைவில் அவரிடம் வாரங்கல் என்று கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்து ’வரங்கல்’ என்று என்னைத் திருத்தினார். நான் ’வாராங்கள்’ என்று சொல்வது போன்று உச்சரித்தேன்.’ஒரங்கல்’ அதாவது ’ஒற்றைக்கல்’ என்பதன் மரூஉ தான் வரங்கல்.
அது காகதீயப்பேரரசின் தலைநகரம். ராணி ருத்ரம்மா இருந்து ஆண்டது அப்பகுதி. இந்திய வரலாற்றின் மாபெரும் அரசிகளில் ஒருவர். தன் நாட்டை எழுபத்திரண்டு பாளையப்பட்டுக்களாக பிரித்து முறையான நீர் நிர்வாகமும், நீதி நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அமைத்தார். அந்த முன்னுதாரணத்தைத்தான் பின்னர் நாயக்க மன்னர்கள் தொடர்ந்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது இங்கும் அந்த பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
ருத்ரம்மா என்றால் கருங்காளி. ருத்ரனின் துணைவி. ஆனால்ராணி ருத்ரம்மா பெரும்போர்களில் ஈடுபட்டவரல்ல. மாபெரும் வெற்றிக்கதைகள் அவர் வரலாற்றில் இல்லை. அவர்கள் ஒரு அன்னை. குடிமக்களை தன் மைந்தர்களாக எண்ணினார். ருத்ரம்மாவின் சாதனை என்பது வறண்ட வரங்கல் பகுதி முழுக்க அவர்கள் அமைத்த மாபெரும் ஏரிகள் தன் மொத்த ராணுவத்தையும் எப்போதும் ஏரிவெட்டும் பணியிலேயே ஈடுபடுத்தியிருந்தார் என்று அவர்களைப்பற்றி வரலாறு சொல்கிறது. வரங்கல் அருகே உள்ள ராமப்பா கோயில் போகும் வழியில் உள்ள ’ருத்ரமகாசாகரம்’ என்னும் மாபெரும் ஏரி இன்றும் அன்னையின் நினைவுச்சின்னமாக நீடிக்கிறது.
ராமப்பா கோயில் இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷங்களில் ஒன்று. வரங்கல் அமைந்துள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்துமே கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை. தார் உருக்கி வடித்தது போன்றிருக்கும் சிற்பங்கள். ஒளியில் மின்னும் கருமுத்து போன்ற பெண்கள். கரிய உலோகத்தில் செதுக்கி எடுத்தது போன்ற ஆலயங்கள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமான ஆபரணங்கள் என்று தான் சொல்ல முடியும்.
வரங்கல் பகுதியின் ஒரு ஆலயத்தின் சிற்பங்களை உண்மையாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு மாதமோ அதற்கு மேலோ கூட ஆகும். ஒவ்வொரு கணுவிலும் சிற்பங்களும் செதுக்கு வேலைகளும் நிறைந்த கனவுவெளிகள் அவை. முதன்முறை நான் சென்றபோது இணையம் போன்ற வசதிகள் இல்லாததனால் ராமப்பா கோயிலைப்பற்றியோ அங்குள்ள பிற ஆலயங்களைப்பற்றியோ எனக்குப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆந்திர மாநிலம் தொல்பொருள்துறை வெளியிட்ட சாணித்தாள் வழிகாட்டி ஒன்றே என்னிடம் இருந்தது. அதில் ராமப்ப கோயிலைப்பற்றி வெறும் நான்கு வரிகள் மட்டும்தான் இருந்தது. அதைச் சுற்றியுள்ள பிற ஆலயங்களைப்பற்றி அந்த அளவுக்குக் கூட தகவல்கள் இல்லை.
அங்கு சென்றபின் அந்த ஆலயத்தில் நுழைந்தபோது கால் தவறி குளிர்ந்த ஏரிக்குள் விழுந்தது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தபடியே இருந்தது. உண்மையில் நான் பார்ப்பது ஒரு கனவோ, பிரமையோ அல்ல என்று நெடுநேரம் நம்பமுடியவில்லை. அதன் பிறகு 2008-ல் நண்பர்களுடன் மீண்டும் ஒரு முறை ராமப்பா கோயிலுக்குச் சென்று பார்த்தேன். முதல் முறை அடைந்த அதே பிரமிப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்தது. ராமப்பா கோயில் கரிய சிலைகள் இன்றும் கனவுகளில் எழுந்து வருகின்றன.
நமது தென்னிந்திய மனம் கருமையின் அழகை காணப்பழகியது. செதுக்கி எடுக்கப்பட்ட அழகிய கரிய முகம் நமக்கு மானுட முகமல்ல, நம்மை ஆளும் அன்னை முகம். ருத்ரமாதேவி எப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரிய ஓங்கிய உடல் கொண்ட ஒர் அன்னையாக நான் அவர்களை உருவகித்திருந்தேன். சமீபத்தில் ருத்ரமாதேவி என்று ஒரு படம் வந்தபோது அதில் வெண்ணிறமான அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். நூற்றுக்கணக்கான முறை அந்த விளம்பரங்களை பார்த்தும் கூட அது ருத்ரமாதேவி என்று எனக்குத் தோன்றவே இல்லை.
ராமப்பா கோயில் தூண்களில் கரிய அழகிகளின் சிலைகளைப் பார்த்துக் கொண்டு வண்டுபோலச் சுற்றிவந்தேன். செவிகளும் தோலும் மூக்கும் நாவும் செயலிழந்துவிட விழிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை அது. சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மை பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும், அதன் பிறகு சிற்பங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு சிற்பமும் ஓர் உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றின் உதடுகளில் ஒரு சொல் உறைந்திருக்கும். அவர்களின் விழிகளில் உயிரின் ஒளி வந்து நிற்கும்
அழகிகள்! திரண்ட தொடைகள், இறுகி ஒல்கிய சிற்றிடைகள், வனமுலைகள், பணைத்தோள்கள், நீண்ட பெருங்கைகள். மலரிதழ்கள் போல் நெளிந்து முத்திரை காட்டும் விரல்கள், குமிண் உதடுகள், ஒளி பரவிய கன்னங்கள், குழையணிந்த காதுகள், சரிந்த பெருங்கொண்டைகள். பெண்ணுடலின் அழகு குழைவுகளில் நதி போல. ஒவ்வொரு வளைவும் அணைத்துக் கொள்ள விரும்பும் அழைப்பு. காமம் என்றும் அன்னையின் கனிவு என்றும் ஒரே சமயம் தம்மைக்காட்டும் கற்பெண்கள்.
மானுடப்பெண்ணின் உடலில் அவ்வழகு இருக்கக்கூடும். ஆனால் எப்போதும் அல்ல. அவள் உண்பதும் உறங்குவதும் சலிப்பதும் துயர் கொள்வதும் இருக்கலாம். அவள் அழகு அவ்வுடலில் உச்சம் கொள்ளும் ஒரு கணத்தை அழியாது நிலைக்க வைத்தவை இச்சிற்பங்கள். கோபுரத்தின் கலசம் மட்டும் என. மானுடப் பெண்ணை நாம் இப்படி தூய அழகு வடிவில் பார்க்க முடிவதில்லை. கலை அவளிடம் இருந்த மானுடத்தன்மை அகற்றி அவ்வழகை மட்டும் எடுத்து கல்லில் அமைத்த பின்னர் அவள் பெண்ணல்ல, தெய்வம்.
ராமப்பா கோயிலிலிருந்து நான் திரும்ப வரங்கலுக்கு வருவதற்காக வந்து சாலையோரமாக நின்றேன். அங்கு அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. இன்று கூட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது ஆந்திரப்பகுதிகளில் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்வதென்பது நம்மை பெரிய இக்கட்டுகளில் மாட்டி விடக்கூடியது. சற்று நேரம் நின்றபிறகு தெரிந்தது, பேருந்துகள் வராது என்று. அங்கே தனியார் வண்டிகளை கைகாட்டி நிறுத்து ஏறிக்கொள்ள முடியும்.
ஒருலோடு ஆட்டோ குலுங்கி ஒலியெழுப்பியபடி வந்தது. நான் கைகாட்டியதும் நிறுத்தி, “எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார். “பஸ் உண்டா?” என்று நான் கேட்டேன். “பஸ் இந்நேரத்தில் இருக்காது. வேன்கள் வரும் நீங்கள் ஏறிக்கொள்ளலாம். அதுவரைக்கும் போவதற்கு ஆறு ரூபாய் “என்று அவர் சொன்னார்.
நான் லோடு ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டேன். நான் மட்டுமே இருந்தேன். மிகப்பழைய வண்டி ஒரு ரங்கராட்டினத்தில் செல்வது போல அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருப்பது போல உடற்பயிற்சி செய்யவைத்தது என்னை. சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தி புளியமரத்தடியில் காத்து நின்றிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார்.
அவள் பாய்ந்து ஏறி என் முன்னால் அமர்ந்த போதுதான் சரியாக அவளைப்பார்த்தேன். ஒரு கணம் திகைத்துவிட்டேன். ராமப்பா கோயிலில் நான் பார்த்த அதே கற்சிலை. கன்னங்கரிய பளபளப்புடன் கன்னங்கள். கனவு நிறைந்த விரிந்த கண்கள். கனத்த குழற்சுருள். இறுகிய நீண்ட கழுத்து. உருண்ட கைகள். சிற்றிடை. பெருத்த பின்னழகு . செதுக்கி வைத்தது போன்ற முலைகள் ஒரு பிசிறு கூட இல்லாமல் சிற்ப முழுமையுடன் ஒரு மனித உடல் அமைவதை அப்போதுதான் பார்த்தேன்.
பின்னர் என் கதைகளில் அவளை பல்வேறு கதாபாத்திரங்களாக மாற்றி திரும்பத் திரும்ப வர்ணித்திருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணை கூர்ந்து பார்ப்பது தவறு என்று நான் உணர்ந்து விழிகளைத் திருப்புவதற்கே அரைமணி நேரத்திற்கு மேலாயிற்று. அவள் என் பார்வையை பொருட்படுத்தவில்லை. இயல்பாக என்னைப்பார்த்து சீராக அமைந்த வெண்ணிற பற்கள் காட்டி சிரித்து தனக்குள் ஏதோ பாடியபடி கைவிரல்களால் வண்டியின் இரும்பு விளிம்பில் தாளமிட்டபடி உடலை மெல்ல அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நான் மீண்டும் அவளைப்பார்த்தவுடன், இயல்பாகச் சிரித்து “எந்த ஊர்?” என்று தெலுங்கில் கேட்டாள். “தெலுங்கு தெரியாது” என்றேன். “தமிழா?” என்று மறுபடியும் கேட்டாள். ”ஆம்” என்றதும் தெலுங்கு கலந்த தமிழில் என்னிடம் பேசத் தொடங்கினாள்.
”உனக்கு எப்படித்தமிழ் தெரியும்?” என்று கேட்டேன். ”சினிமாவில் நடிப்பதற்காக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே நான்கு வருடம் இருந்தேன்.” என்றாள்.”எப்போது?” என்று நான் திகைப்புடன் கேட்டேன். “நான் சென்னைக்குச் செல்லும் போது எனக்குப்பதினைந்து வயது.” என்றாள் . எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.”சினிமாவில் நடித்தாயா?” என்றேன். ”நிறைய படங்களில் பின்னணியில் நடனமாடியிருக்கிறேன்” என்றாள்.
”அதன்பின் ஏன் இங்கு வந்தாய்?” என்றேன். ”அதன் பின் என் தாய்மாமன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இங்கு அழைத்து வந்தார்” என்றாள். “இங்குதான் இப்போதும் இருக்கிறாயா?” என்றேன். “ஆமாம் இங்கே என் அக்காவுடன் இருக்கிறேன்” என்றாள். அதன்பிறகு ”அவளே என் அக்காவையும் என் தாய்மாமன் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றாள்.
எனக்கு அவள் மேலும் என்னிடம் பேசுவது பிடித்திருந்தது. பேச்சைக் கேட்கும்பொருட்டு அவளை நான் பார்க்கமுடியுமே.. ”இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். ”மெட்ராசில் செய்து கொண்டிருந்ததைத்தான்” என்றாள். எனக்குப்புரியவில்லை. ”மெட்ராசில் நட்னம்தானே ஆடினாய்?” என்றேன். ”நடனம் எங்கே ஆடினேன்? அது எப்போதாவது தான் பெரும்பாலும் என் அத்தை என்னை அழைத்துக் கொண்டு செல்வாள்.”
திகைப்புடன் ”எங்கே?” என்று கேட்டேன். ”மகாபலிபுரத்திற்கு கழுகுமலைக்கு அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள் அவர்களுடன் இருப்பேன்” என்றாள். ஒருகணம் கழித்துத்தான் அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப்புரிந்தது. எனக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அப்போதும் நம்பிக்கையிழக்காமல் ”வாடிக்கையாளர்கள் என்றால்…?” என்றேன்.
”எங்கள் குடும்பத்தில் எல்லாரும் இதே தொழில் தான் செய்கிறார்கள். இப்போதும் அதே தொழில் தான் செய்கிறோம். இப்போதுகூட இங்கு ஒரு பண்ணையாரின் வீட்டுக்குப்போய்விட்டுத் திரும்பிப் போகிறேன்” என்றாள். ”என்ன செய்வாய்?” என்றேன். ”நடனமாடுவேன். அவருடன் இரவில் இருப்பேன். நேற்று இரண்டு பேர் இருந்தார்கள்.”
”என்ன நடனம்?” என்றேன். ”இவர்களுக்கெல்லாம் ஆடையில்லாமல் ஆடினால் தான் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள். என்னுடைய படபடப்பை பார்த்து ”பயப்படாதீர்கள். சும்மா தான் சொன்னேன்” என்றாள். ”சும்மா என்றால் என்ன?” என்றேன். ”நீங்கள் எப்படி படபடப்படைகிறீர்கள் என்று பார்ப்பதற்காகத்தான்” என்றாள்.
பிறகு என்னைப்பற்றிக் கேட்டாள். நான் காசர்கோட்டில் தொலைபேசித்துறையில் பணியாற்றுகிறேன். ஆந்திராவில் கோவில்கள் பார்ப்பதற்காக அங்கு வந்தேன் என்றேன். அவள் அங்குள்ள ஆலயங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். நான் அதுவரை பார்க்காத பல நூறு அற்புதமான ஆலயங்கள் அங்கிருப்பதை அவள் சொன்னாள்
”இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்?” என்று கேட்டேன். ”எனக்கும் கோயில்களில் சிற்பங்களைப்பார்ப்பதில் ஆர்வமுண்டு. கையில் கொஞ்சம் பணம் இருந்தால் உடனே கிளம்பி கோயில்களைப் பார்ப்பேன்” என்றாள். அதன் பிறகு இளவயதில் முதன் முதலாக அவள் ராமப்பா கோயில் வந்ததை பற்றிச் சொன்னாள்.
அவளுடைய குடும்பம் நல்கொண்டா மாவட்டத்தைச் சார்ந்தது. பரம்பரையாக துணி துவைக்கும் வேலையை செய்து வந்தார்கள். ஆண்டைகளுக்கு பாலியல் அடிமைகளாகவும் அவர்கள் இருந்தாகவேண்டும். அதன்பிறகு பாலியல் தொழில் செய்பவர்களாக அவர்கள் மாறினார்கள். நிறைய பேர் சினிமாவில் நடிக்கப்போய் திரும்பி வந்திருக்கிறார்கள். சிலர் சென்னையிலேயே பணக்காரர்களாக மாறித் தங்கிவிட்டார்கள்.
தன்னுடைய குடும்பம், அம்மா, அக்காக்கள், இப்போது அக்காவுக்கு இருக்கும் மூன்று குழந்தைகள், வீட்டில் வளரும் இரண்டு ஆடுகள், அவள் விரும்பி வாங்கி வளர்த்துக் கொண்டு வரும் இரண்டு வான்கோழிகள் என்று பேசிக் கொண்டே இருந்தாள். அவளே மகிழ்ந்து சிரித்தாள். சிரிக்கும்போது கைகளைத் தட்டிக்கொண்டு கால்களுக்கு நடுவே கைகளைப்புதைத்துக் கொண்டு நெளியும் வழக்கம் அவளுக்கு இருந்தது. சிறிய அழகிய நடனம் போல.
என்ன ஒரு கருமை என்றுதான் நான் வியந்து கொண்டிருந்தேன். ”உனக்கு குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டேன். ”எனக்குக் குழந்தைகள் பிறக்காது என்று டாக்டர் சொன்னார்?” என்றாள். ”என் அக்காவுக்கு மூன்று குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். எனக்குக் குடைக்கும் பணத்தை அவர்களுக்கு தான் கொடுக்கிறேன்” என்றாள். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு சாலை திருப்பத்தை சுட்டிக் காட்டி அங்கு சென்றால் இருக்கும் கோயில்களைப்பற்றிச் சொன்னாள்.
இறங்குமிடம் வந்தபோது நான் அவளிடம் ”நீ ஏன் இவ்வளவு தூரம் உன்னைப்பற்றி சொல்கிறாய்?” என்றேன். ”சும்மா எனக்குப்பிடித்திருக்கிறது. யாரிடமாவது இதையெல்லாம் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றியது”. நான் அவளை புண்படுத்த வேண்டுமென்று சிறிய குரூரம் கொண்டு ”நீ போகும் வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டியது தானே?” என்றேன்.
”அவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்கள் எதையாவது சொல்வார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களை நான் கொஞ்ச வேண்டும் அல்லது அழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்” என்றாள். அதன்பின் ”பெண்களிடம் சொல்ல முடியாது. என்னைப்போன்ற பெண்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். வேறு பெண்களிடம் நான் பேசுவதில்லை” என்றாள்.
அவளும் என்னுடன் இறங்கிக் கொண்டாள். ”நீ இங்கா இறங்க வேண்டும்?” என்றேன். ”இல்லை.நான் வேறு வண்டி பிடித்து போய் கொள்கிறேன். இங்கிருந்து இந்த இருளில் நீங்கள் வண்டி பிடித்து வரங்கல் செல்வது கஷ்டம் நான் ஏற்றிவிடுகிறேன்” என்றாள்.
நான் மறுத்தும் என்னுடன் நின்றுகொண்டள். இன்னொரு வண்டி வந்ததும் அவளே கைநீட்டி என்னை ஏற்றிவிட்டு வரங்கலில் இறக்கிவிடும்படி சொன்னாள். நான் அவளிடம் விடைபெற்றுக் கொண்டேன். ”உன்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். ”ஏன்?” என்றேன். ”தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டிருப்பது எனக்குப்பிடிக்கும்” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை.
நீண்ட நாட்களுக்குப்பிறகு நினைத்துக் கொண்டேன். மொத்த வாழ்நாளிலேயே வேறெந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவளிடம் பேசிய ஒருவனாக இருக்கலாம் வழிப்போக்கர்களைப்போல நமக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்களை நாம் மீண்டும் சந்திக்கவே போவதில்லை என்றால் அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள்.
என் உள்ளத்தில் அவளுக்கு ’ருத்ரமாதேவி’ என்று பெயரிட்டேன். கடைசி வரை அவள் பெயரை நான் கேட்டுத்தெரிந்து கொள்ளவே இல்லை.
முகங்களின் தேசம் குங்குமம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் வாசித்தேன். இரவு நாவலுக்கு நேர் எதிரான படைப்பு. பலவகையிலும் சிந்தனையை சுழலவைத்தது
ஒளி என்ற பெயர் கொண்ட பெண் விளக்குகளை அணைக்கச்சொல்லும் இடம் தான் கதையின் தொடக்கம். இருளுக்குள் அவள் சென்று காத்திருக்கிறார். காதலன் இரவிலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான்.
ஆனால் எவ்வளவு ஓடமுடியும்? எப்படியானாலும் இருட்டுதானே முழுமையானது? அங்கே சென்றுதானே ஆகவேண்டும்? மிச்ச எல்லாமே வெறும் பாவனைகள்தானே?
அதைத்தான் கதை முடிவில் சுட்டுகிறது. ஆச்சரியமென்னவென்றால் இரவு நாவலும் அதைத்தான் சொல்கிறது
மதி
***
அன்புள்ள ஜெ,
ஆனந்த விகடனில் வந்துள்ள இக்கதை உங்களின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. நீங்கள் வருங்காலத்தில் நடைபெறும் வகையில் எழுதிய கதைகள் குறைவே. சட்டென்று நினைவுக்கு வருவது நம்பிக்கையாளன். பொதுவாக இத்தகைய வருங்காலக் கதைகள் ஏதேனும் ஒரு அறிவியல் முன்னேற்றம், இயந்திரங்களுக்கு அடிமையாகும் மானுடம், மானுட அழிவிற்குப் பிறகு இணைந்து வாழும் ஒரு சிறு குழு, மானுட நன்மைக்கென இடப்பட்ட சட்டங்கள் மற்றும் அதை மீற விழையும் ஒரு சிறு குழு அதன் சாகசங்கள் என ஒரு சில குறிப்பிட்ட வகைமைகளிலேயே நிகழும். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, கிட்டத்தட்ட எதார்த்தத்தை நெருங்கிய ஒரு படைப்பைத் தந்திருக்கிறீர்கள்.
இதில் வெளிப்படும் சீனாவுடன் இணையும் ஜப்பான் பற்றிய அரசியல் பார்வையும், அணுவெடிப்பு விசை (Nuclear fission) விமானமும் அபாரம். கதை நடப்பதாகச் சொல்லப்படும் 2௦95 ம் வருடத்தில் இவை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். (என்னளவில் அணு இணைவு விசை (Nuclear Fusion) விமானங்களுக்கான சாத்தியம் இருப்பதாகவே படுகிறது)
ஆனால் இக்கதையின் முக்கியமான அம்சம் இவையெல்லாம் அல்ல. சூரியனைத் தொற்றிக் கொள்வதன் வாயிலாக தன் பகலை மீட்டு அதன் மூலம் உயிரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஒருவரின் போராட்டமே. அப்போராட்டத்தை நடத்துபவர் ஒரு ஜப்பானியர் என்பதே இக்கதையை மிக மிக முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. கதை நடக்கும் காலத்தில் ஜப்பான் என்றொரு அரசியல் தேசம் இல்லை. ஆனால் ஜப்பான் என்றொரு பண்பாட்டு தேசம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் வளைந்த பணிவான குரலும், அதன் பின்னால் இருக்கும் மேட்டிமைத் தனமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது முக்கியமான பார்வை.
ஜப்பான் தற்போது எதிர்கொண்டு கொண்டிருக்கும் சரிவுக்கு முக்கியமான ஒரு காரணமாக சமூகவியலாளர்கள் கருதுவது அவர்களின் மரபிலிருந்தான விலக்கமே. இது ஜப்பான் என்று மட்டுமல்ல பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆன்மாவை, ஆன்மீகத்தைத் தொலைத்து இயந்திரமாகி, தொழில்நுட்ப கருவிகளின் கைப்பாவையாகி, நேரத்தை ஆன்மா அற்ற உழைப்பிலேயே கொன்று, பொழுது போக கட்டற்ற நுகர்வைச் சாத்தியாமக்கி, அந்த நுகர்வையே ஒரு பொருளாதார இயக்கத்தின் அச்சாக மாற்றி வைத்துள்ள எந்த ஒரு சமூகமும் எதிர்கொண்டேயாக வேண்டிய ஒரு சரிவு. முக்கியமாக நமது கீழைத்தேசங்களில் இதைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.
இங்கே அந்த ஜப்பானியர் கொண்டிருக்கும் ‘ஒரே பகல்’ – மிக முக்கியமான குறியீடு. இது அவரின் மீட்சிக்கான கடைசி வாய்ப்பு. இதன் பிறகு வரும் இருள் மொத்தமாக அவரின் இருப்பை அழித்து விடும். இங்கே அவர் என்பதை மரபை நோக்கிச் சென்று, தன் இழந்த அடையாளங்களை மீட்டுக்கொண்டு, மீளுருவாகத் துடிக்கும் ஜப்பானிய சமூகம் என்று வாசித்தால் மிக உக்கிரமான ஒரு சித்திரம் நம் முன் விரியும். இக்கதையில் வரும் ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரம் அவரின் இளமைக் கால காதலி – அகேமி. அதன் பொருளும் சுடர் என்றே!!
ஜப்பான் – சூரியன் உதிக்கும் தேசம் என்று அழைக்கப்படுவது. அத்தேசம் தன் சூரியனை இழக்காமல் அவனைத் தொற்றிக் கொண்டாவது மீளத் துடிப்பதே இக்கதையின் அடிநாதம். இங்கிருந்து இவ்வாறு சரிவை நோக்கிச் செல்லும் நமது சமூகமும் நாளை தம்மை மீட்டுக் கொள்ள உலகத்திடம், யார் யாரென்றே தெரியாதவர்களிடம் மீள மீள மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தாக வேண்டும் என்பது நம் குழந்தைகளுக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு.
உண்மையில் அமெரிக்கா எறிந்த அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் விழவில்லை, ஜப்பான் என்ற பண்பாட்டின் ஆன்மாவில் விழுந்திருக்கிறது. இயந்திர கதியில் மீண்டு வரத் துடித்த ஒரு தேசம் அதற்கு விலையாகத் தன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வந்து, அந்த அழிவுகளையும், இழப்புகளையும் உணரவே இயலாத எல்லைக்குச் சென்று இருந்த ஒரே கடைசிச் சுடரையும் அணைத்து முடிவிலா இருளில் மூழ்குமிடம் உக்கிரம்.
நான்கு முறை கழுவப்பட்ட சுமி-இ ஓவியம் என்பது அபாரமான படிமம். சுமி-இ முறை என்பது தூரிகையில் தோய்க்கப்பட்ட வண்ணங்களின் அடர்வின் வேறுபாட்டால் ஓவியங்களைத் தீட்டுவது. நீரில் தோய்க்கப்பட்ட வண்ணங்கள் மேலும் மேலும் அடர்வு குறைந்து வெளிறிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தை நல்கும் இப்படிமம் மையக்கதைக்கு மட்டுமல்ல, மேலும் மேலும் பல தளங்களுக்குக் கொண்டு சென்று விரித்தெடுக்கக் கூடியது.
குறைந்த பட்சம் மீண்டு வர வேண்டும் என்ற உணர்வை அடைந்த ஓர் பண்பாடு அதை நோக்கிச் செல்லும் ஒரு ஒளிமயமான பாதையில் இக்கதை முடிகிறது. ஆம், பண்பாடுகள் ஆழ்மனத்தில் இருப்பவை. அழிய விரும்பாதவை. தன்னை அழித்தவரின் ஆழுள்ளத்தில் இருந்து ஓர் ஒளித் தெறிப்பாகவேனும் வெளிவந்து பரவத் துடிப்பவை. எவரேனும் ஒருவர் அதைப் பற்றிக் கொண்டு, தொற்றிக் கொண்டால் செவ்வாய்க்குச் சென்றாலும் இறவாமல் தொடர்பவை. அவற்றைத் தொடர்புறுத்தும் இலக்கியங்கள், குறியீடுகள், சடங்குகள் அனைத்தின் தேவையும் வேறு எக்காலத்தை விடவும் இப்போதே தேவை. இல்லாவிட்டால் தொற்றிக் கொண்டு பறப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
***
ஜெ
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் ஒரு கதை வடிவை கொண்டிருந்தாலும் அதன் கவித்துவம் மூலமே நிற்கிறது
இருட்டிலிருந்து தப்பி ஒளிக்காகத் தவித்துக்கொண்டே இருக்கும் ஆத்மா. அதை ஒரு குறியீடாகவே நினைக்கிறேன்
ஆனால் சாஸ்வதமான ஒளியை சூரியன் அளிக்கமுடியாது இல்லையா?
கணேசமூர்த்தி
8
அன்புள்ள நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
“காந்தி தோற்கும் இடங்கள்“ உரையை youtube கவனித்தேன். உரையை நீங்கம் ஆரம்பித்த விதமும் முடித்த முறையும் சிறப்பு. முக்கியமாக உரையை முடிக்குமிடம் மிகத் தாக்கமாகவிருந்தது. கிராம ராஜ்ஜியத்தைப் பற்றி இளமைக்காலத்திலேயே சிந்தித்திருந்த காந்தி, மைய அதிகாரத்தை உடைக்கும் சிந்தனைமுறையை பல ஆண்டுகளுக்கு முன்னேயே முன்வைத்திருக்கிறார். மையம் என்பது எங்கும் ஒரு இடத்தில் இல்லை. எல்லா இடங்களிலும் மையம் உண்டு என்று நீங்கள் விளக்கிய விதம் கவனத்திற்குரியது.
காந்தி தோற்கும் இடம் மட்டுமல்ல, உங்களுடைய அத்தனை எழுத்துகளையும் உரைகளையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.
தவிர, சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் சிறுகதையைப் படித்தபோது அதிர்ந்து விட்டேன். என்ன ஆச்சரியமென்றால், இதே உணர்வோடு எங்களுடைய மகன் மகிழ் இருக்கிறான். அவனுக்கு எப்போதும் வெளிச்சம் வேண்டும். இரவோ, பகலோ அவன் இருக்குமிடத்தில் ஒளி தேவை. இரவு படுக்கும்போதும் மின்குமிழ்களை எரியவிட்டிருப்பான். பகலில் அறையிலிருக்கும் அத்தனை யன்னல்களையும் திறந்து வைத்தபிறகும், பளிச்சென வெளிச்சம் இருக்கும் மதியப்பொழுதிலும் லைற் எரிய வேணும். வெளிச்சமில்லாமல், ஒளியில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பான்.
உங்களுடைய கதையைப் படித்தவுடன் அதை அவனிடம் படிக்கக் கொடுத்தேன். தன்னைப்பற்றி உங்களிடம் நான் சொல்லித்தான் இந்தக் கதையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னான். சிரிப்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல முடியும் நான்.
மெய்யான உணர்வுக்கு இடமோ காலமோ இல்லை.அது உள்ளுணர்வின் தடத்தில் கிளைப்பதல்லவா.
அருண்மொழி, சைதன்யா, அஜிதன் எல்லோருக்கும் எங்கள் அன்பு.
- கருணாகரன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 10, 2016
கசப்பெழுத்தின் நூற்றாண்டு
நான் சிறுவனாக வகைதொகையில்லாமல் வாசித்துத்தள்ளிய காலகட்டத்தில் விந்தனின் பசிகோவிந்தம் என்னும் நூலை தற்செயலாகக் கண்டடைந்தேன். அது ‘புடைநூல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே எனக்கு ஆச்சரியம் அளித்தது. ராஜாஜியின் பஜகோவிந்தத்தைச் சாடி எழுதப்பட்ட அந்நூல் அன்று என்னை மிகவும் கவர்ந்தது.
அதன்பின் ராணிமுத்து நாவல் வரிசையில் வெளிவந்த பாலும்பாவையும் நாவலை வாசிக்கும்போது என் ரசனை சற்று மிகுந்திருந்தது. அந்நாவல் முழுக்க ஓடிய எரிச்சல் மிக்க நையாண்டியை நான் விரும்பினாலும் அது சற்று மிகையானது, கலையமைதி கூடாதது என்றே தோன்றிக்கொண்டிருந்தது.
விந்தனின் சிறுகதைகளை நான் அதன்பின் வாசித்தேன். அவரது ஆளுமை என்னுள் மிகச்சிறியதாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் விந்தனைப்பற்றி அ.மா.சாமி எழுதிய ஒரு குறிப்பு பாலும் பாவையும் நூலின் முன்னுரையாக இருந்தது. அது எனக்கு எப்போதுமே நினைவில் நிற்கும் ஒரு பதிவு. விந்தனின் படைப்புகள் கலையொருமை அற்றவை.நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் அவருக்கு இடமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை ஒர் இலக்கியவாதியின் வாழ்க்கைக்குரிய அனைத்து மடத்தனங்களும் அபத்தங்களும் சரிவுகளும் பெருந்தன்மையும் இலட்சியவாதமும் கொண்டது
விந்தனின் நூற்றாண்டு இது. [1916 -2016] அவரது மகன் கோ.ஜனார்த்தனன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விந்தன் அறக்கட்டளை சார்பாக விந்தனின் நூல்கள் மறுபதிப்பாக வந்துகொண்டிருக்கின்றன. விந்தனின் கட்டுரைகள் கதைகளை விட இன்று வாசிப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. நேரடியான தாக்கும்தன்மையும் நையாண்டியும் உடையவை அவை.
விந்தனின் நண்பரான திரு செ.து.சஞ்சீவி அவர்கள் விந்தன் நினைவுகளை சுருக்கமாக எழுதிய விந்தன் நினைவாகச் சில பதிவுகள்ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்ட நூல். விந்தனின்முன்னுரை, மற்றும் கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகளும் அவர் எழுந்திய இரு சிறுகதைகளும் கொண்டது. இதிலுள்ள விந்தனின் வாழ்க்கைச்சித்திரம் மிகையற்றது. ஆகவே நம்பகத்தன்மை கொண்டது. ஒரு காலப்பதிவு என்றே சொல்லலாம்.
விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த விந்தன் விவசாயம் நலிந்தபோது சென்னைக்கு பிழைப்புதேடி வந்த பல்லயிரக்கணக்கான மக்களில் ஒருவர். இயற்பெயர் கோவிந்தன். அன்றைய சென்னையின் அடித்தளச் சமூகத்தில் அவர்களின் வாழ்க்கை அமைந்தது. ஓவியக்கலை கற்க விரும்பினார். அதற்கான வசதி அமையவில்லை. படிப்பைத் தொடர முடியவில்லை. ஆகவே அச்சகத்தில் அச்சுக்கோப்பவராக வேலைக்குச் சேர்ந்தார்.
அச்சுக்கலை விந்தனின் அழகுணர்வை நிறைவுசெய்தது. கடைசிவரை அச்சு என்னும் மாயமோகினியில் இருந்து அவர் தப்பவே முடியவில்லை. அச்சுவேலை முடிந்த ஓய்வுநேரத்தில் ரகசியமாக அச்சுக்கோத்து விடுதலைப்போர் குறித்த துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். சினிமாவுக்குச்சென்று சு கையில் வந்ததுமே அச்சகம்தான் ஆரம்பிக்கிறார். அச்சகத்தை மூடியபின்னரும் அச்சகவேலைக்கே செல்கிறார்.
அச்சுத்தொழிலாளியாகத்தான் கல்கி வார இதழுக்குள் நுழைந்தார் விந்தன். அவரது நண்பரும் அச்சுக்கோப்பாளருமான ராஜாபாதர் அவரை அங்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் மொழித்திறனைக் கண்ட கல்கி சிறுவர்களுக்கான கதைகள் எழுதும்படிச் சொன்னார். அதன்பின் அவரே கோவிந்தன் என்றபெயரை விந்தன் எனச் சுருக்கி கல்கியில் கதை எழுதும்படி ஆணையிட்டார்.
விந்தன் என்னும் எழுத்தாளர் கல்கியின் உருவாக்கம். தன்னை கல்கியின் மாணவராகவே விந்தன் எண்ணினார். மொழிநடையிலும் கல்கியையே பின்பற்றினார். கல்கிக்கு தன் முதல்நூலைச் சமர்ப்பணம் செய்தார். ஆனால் கல்கியில் வேலைசெய்த பிராமண எழுத்தாளர்கள் விந்தனை சாதி நோக்கில் நடத்தினர். தொடர்ந்து அவமதிப்புக்கு உள்ளான விந்தன் தன்னை ‘நான் ஒரு லோ கிளாஸ்’ என அறிவித்துக்கொண்டார். கடுமையான போக்குள்ளவராக மாறினார்.
விந்தனுக்கும் சு.சமுத்திரத்திற்கும் நெருக்கமான உளத்தொடர்புண்டு. தனக்குப்பிரியமான முன்னோடி எழுத்தாளர் விந்தன் தான் என சு.சமுத்திரம் சொல்லியிருக்கிறார். அவரது நடையும் நையாண்டியும் விந்தனை முன்மாதிரியாகக்கொண்டதே. வாழ்விலும் பல ஒற்றுமைகள். இருவருமே காங்கிரஸ்காரர்கள். சமுத்திரம் மத்திய அரசுப்பணியில் நுழைந்து பிராமணர்களிடமிருந்து சாதிய அவமதிப்புகளை அடைந்தபோது தன்னை மூர்க்கமான எதிர்ப்புணர்ச்சியும் நக்கலும் நிறைந்தவராக மாற்றிக்கொண்டு அதை எதிர்த்துக்கடந்தார். ஈ.வே.ரா மீது ஈடுபாடு கொண்டவராக ஆனார்.
விந்தனும் காங்கிரஸ்காரராக, கல்கி பக்தராகத் தொடங்கினாலும் கடைசியில் முழு திராவிடர் கழகக்காரராக ஆனார். சமுத்திரம் கடைசிவரை காங்கிரஸை விட்டுக்கொடுக்கத் தயங்கினார். அந்தத் தயக்கங்கள் விந்தனுக்கு இருக்கவில்லை. விந்தனின் பெரியார் அறிவுச்சுவடி திராவிடர் கழகத்தால் இன்றும் வெளியிடப்படும் முக்கியமான நூல்
ஆனால் விந்தனின் இறுதிக்காலகட்டத்தில் அவருக்கு கைகொடுத்தவர் பிராமணரான சாவி. விந்தனுக்கு இளையவர். கல்கியின் மாணாக்கர். விந்தன் சாவியுடன் மோதிக்கொண்டே இருந்தார். ஆனால் சாவி விந்தனை பேணி தன்னுடன் வைத்திருந்தார். இல்லையேல் விந்தன் வறுமையில் இறந்திருப்பார்.
விந்தன் எழுத்தை நம்பி வாழ்ந்தார். சினிமாக்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆகவே ஓரளவு பணமும் அவருக்கு வந்தது. ஆனால் அதையெல்லாம் அச்சகம் நடத்தியும் பத்திரிகை நடத்தியும் வீணாக்கினார். மனிதன் என்னும் அவரது பத்திரிகையை அடித்தள மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஓர் இடதுசாரிப் பத்திரிகையாகவே நடத்தினார். அதை வணிகரீதியாக வெற்றிகரமாக நிகழ்த்த அவரால் இயலவில்லை.
எம்.ஆர்.ராதாவை விந்தன் நீண்ட பேட்டி கண்டு நூலாக வெளியிட்டார். ராதா விந்தன் மீது பிரியம் கொண்டிருந்தார். விந்தனுக்காக ஒரு மணிவிழா நடத்தி நிதி திரட்டி அளிக்கும் திட்டம் ராதாவுக்கு இருந்தது. ஆனால் மணிவிழாவுக்கு சிலநாட்களுக்கு முன்னரே விந்தன் மாரடைப்பில் காலமானார்
விந்தனின் குணாதிசயங்கள் பற்றி சஞ்சீவி சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார். அவர் கையிலிருப்புப் பணத்தை அவ்வப்போதே செலவிடுபவர். நண்பர்கள்கூட அவர் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துச்செல்வதுண்டு. சேர்த்துவைக்கத் தெரியாதவர். சினிமாக்காசில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் கடன்களை முறையாகக் கட்டாமல் வட்டியில் வீடே முழுகிப்போகும் நிலை வந்தது
அவருடைய நூல்களுக்கு அன்று நல்ல சந்தைமதிப்பு இருந்தது. ஆகவே பதிப்பாளர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். அதை முறைப்படுத்தவும் விந்தனால் இயலவில்லை. ஆகவே அவ்வப்போது கடும் வறுமையும் நடுநடுவே செல்வச்செழிப்புமாக அவர் வாழ்ந்தார். பேரா. கல்கி இறந்த்போது கல்கி வார இதழுக்கு ஆசிரியராக விந்தன் அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட சிலரை நீக்கினால் மட்டுமே பணியாற்றமுடியும் என அவர் கடுமையாகச் சொன்னார். அவ்வாய்ப்பு பறிபோனது. அந்தப்பிடிவாதம் காரணமாகவே தினமணிகதிர் ஆசிரியராக ஆகும் வாய்ப்பும் இல்லாமலாயிற்று. சாவி உதவாவிட்டால் நடுத்தெருவில் நின்றிருப்பார்.
கல்கியில் ஆசிரியராக ஆகி தன் இன்றியமையாமையை நிறுவியபின் பிடிக்காதவர்களை மெல்லமெல்ல வெளியேற்றியிருக்கலாம். அதுதான் திட்டமிட்டுச் செயல்படுபவர்களின் இயல்பு. விந்தனிடம் அவ்வியல்பே இருக்கவில்லை. அவர் கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்டவராகவே கடைசிவரை இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கல்கி இதழுக்கு விந்தனால் தனி வாசகர் வட்டம் உருவானபோது கல்கியால் அதை ஏற்கமுடியவில்லை என்பதை விந்தன் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அன்றைய அச்சகச்சூழல், பதிப்புச்சூழல், இதழியல்சூழல் பற்றிய ஒரு எளிய கோட்டுச்சித்திரம் இந்நூலில் உள்ளது. அன்று எழுதுவது ஓரளவு பதிப்புரிமைப்பணம் அளிக்கும் தொழிலாகவே இருந்துள்ளது. இன்றுபோல வெற்று உழைப்பு அல்ல. இதில் ஜெயகாந்தன் பற்றி வரும் பகுதிகள் சுவாரசியமானவை. சஞ்சீவி ஜெயகாந்தனை நன்கு அறிந்தவர். ஜெயகாந்தன் காரியவாதியாகவும் நன்றி மறப்பவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை ஐயப்படவும் தோன்றவில்லை. அதுவும் எழுத்தாளனின் முகமே.
விந்தனின் நூற்றாண்டு இது. அவரது நூல்கள் முறையாகத் தொகுக்கப்படவேண்டும். திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களின் பட்டியலிடுபவர்கள் விந்தனின் பெயரை விட்டுவிடுவது வழக்கம். விந்தன் கல்கியில் தொடங்கி ஈ.வே.ராவை வந்தடைந்தவர். அவ்வகையில் அவரை ஒரு திராவிட இயக்க எழுத்தாளர் எனச் சொல்லமுடியாவிட்டாலும் திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர் எனலாம். அவர்களில் அவரே முக்கியமானவர் என ஐயமின்றிச் சொல்லலாம்.
விந்தன் நினைவாகச் சில பதிவுகள்
செ து சஞ்சீவி
விந்தன் எண்டோவ்மெண்ட் டிரஸ்ட் 17 அருணாச்சலம் தெரு ஷெனாய் நகர் சென்னை 30
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்
மலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும்போக்கில் குற்றச்சாட்டுகள் இருக்கும். இங்கு, அவர்கள் ‘பேசுவதில்லை‘ எனும் சொல்லை ‘பாராட்டுவதில்லை‘ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர்.
சிங்கப்பூர் இலக்கியம் குறித்த சர்ச்சைகள் பற்றி நவீன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 9, 2016
இலக்கியத்தின் வெற்றி
சிங்கப்பூர்ச் சூழல் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும்போது வழக்கமாக எழுந்துவரும் பல எதிர்விளக்கங்கள் உண்டு. சிங்கப்பூரில் தமிழ் குறைவாகவே பேசப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் தமிழ் இல்லை. அவசரமான வாழ்க்கையில் இலக்கியம் படைப்பதற்கு நேரமில்லை. இலக்கிய வாசிப்பும் விவாதமும் குறைவாக இருக்கிறது. இப்படி பல.
சிங்கப்பூர் சூழல் உருவாக்கிய படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று சித்துராஜ் பொன்ராஜை ஐயமின்றி சொல்லலாம். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள மொழிச் சூழலில் பண்பாட்டுக் களத்தில் உருவாகி வந்தவர். சித்துராஜைப் போன்ற உண்மையான படைப்புத்திறன் கொண்ட ஒரு படைப்பாளி எழுந்து வரும்போது மேலே சொல்லப்பட்ட அத்தனை ‘சால்ஜாப்புகளும்’ பொருளிழப்பதைக் காணலாம்.
இவருடைய கதைகளைப் படிக்கும்போது அசோகமித்திரனின் படைப்புகளில் இருந்து தூண்டுதல் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தில் சாராம்சமான பகுதிகளுடன் அவருக்கு அறிமுகம் இருக்கிறது. குறிப்பாக நவீன அமெரிக்க எழுத்து அவருக்கு அணுக்கமானது. அசோகமித்திரனுக்கும் அவ்வெழுத்தே அணுக்கமானது என்பதனால் இயல்பாகவே அச்சாயல் அமைந்துள்ளதுஎன நினைக்கிறேன்.
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை கடந்து எழும் எழுச்சி கொண்ட நடை என்பது மிக அசலானதாகவும் தன்னிச்சையானதாகவும் இருந்தாக வேண்டும். இல்லையேல் அது செயற்கையான மொழிச்சிடுக்காகவே மாறும்
மாறிலிகள் தொகுப்பின் அநேகமாக எல்லாக் கதைகளையுமே குறிப்பிடத்தகுந்த இலக்கிய முயற்சிகள் என்று சொல்லலாம். பெரும்பாலும் எந்தக்கதையிலும் முந்தைய எழுத்தாளர்களின் எதிர்மறைப்பாதிப்பு ஏதுமில்லை. கதைகளை முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுடன் நான் ஒப்பிட்டுநோக்குவது வழக்கம். அது அக்கதைகளை இயல்புசார்ந்து வகைமைப்படுத்துவதற்கு மட்டுமே. சித்துராஜை நடை மற்றும் கதையமைப்பில் அசோகமித்திரனின் சாயல்கொண்டவர் என்றும் மனநிலையில் அ.முத்துலிங்கம் போன்றவர் என்றும் சொல்லலாம்
சித்துராஜிடம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை கூர்ந்து அவதானிக்கும் கலைஞனின் கண் இருக்கிறது. உதாரணமாக அவருக்கு தொடர்பே அற்றது எனத் தோன்றும் சூழல் தர்மரதம் என்னும் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.துணிகளை வாங்கி வெட்டி தைத்துக் கொடுக்கும் ஓரு தொழில் உலகம். துணிகளைப்பற்றிய செய்திகளின் ஊடாகவே கறாரான விதிகளின் படி ஒன்றையொன்று வென்றும் தின்றும் செயல்படும் ஒரு வணிக உலகத்தை காட்ட அவரால் முடிந்திருக்கிறது. அவ்வுலகின் இரும்பு விதிகளுக்கு ஊடே ஓடும் அடிப்படை அறத்தின் ஒரு மெல்லிய கீற்றை சுட்டி இக்கதை முடிகிறது.
[ அவரது சுயசரிதைத்தன்மை கொண்டது எனச் சொல்லத்தக்க பிறிதொரு கதையில் அவர்களின் அடுக்குமாடிக்கட்டிடத்திற்கு அருகே உள்ள துணிக்கிடங்குகள் குறிப்பிடப்படுகின்றன. அது ஓர் எட்டிப்பார்த்த அனுபவமாக இருக்கலாம். அதுவே எழுத்தாளனுக்குப் போதும். உண்மையில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் சிங்கப்பூர் சூழல் அப்படி பல்வேறு வாழ்க்கைகளினூடாக புகுந்துவர மிக உதவியான ஒன்று]
ஒருவேளை நவீனச்சிறுகதையில் பலமுறை எழுதப்பட்ட கதைக்கருதான் தர்மரதம். இதற்கு நிகரான பல கதைகளை வண்ணதாசன் புனைவுகளில் நாம் காண முடியும். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் அதைப்படிப்பது ஊக்கமூட்டும் ஓர் அனுபவம். அழுத்தாமல் அந்த முடிவைச் சொல்லி நகரும் கதை ‘ நம் அறவுணர்வுக்கு நிகராகவே அழகுணர்வையும் நிறைவுசெய்கிறது.
மனித இயல்புகளை வெளிப்படுத்துவதில் நவீன எழுத்தாளனுக்கு ஒர் இடர் உள்ளது. நவீன இலக்கியம் என்பது பொதுவாக உயர்ந்த இலட்சியங்களில் அவநம்பிக்கையும் வாழ்க்கைநோக்கில் எதிர்மறைப்பண்பும் கொண்டது. சென்ற நூற்றாண்டின் மிகையுணர்ச்சிகளை அது ஐயப்படுகிறது. ஆகவே பரிவு, இரக்கம், கருணை போன்ற உணர்வுகள் நேரடியாக புனைவில் வெளிப்படும்போது அதற்கெதிரான மனநிலைக்கு வாசகன் தள்ளப்படுகிறான்.
ஆனால் எப்படியோ இலக்கியத்தின் சாராம்சமான உணர்வுகளாக நிற்கக்கூடியவை அவைதான். ஆகவே எழுத்தாளன் முதல் பார்வைக்கு எளிய கிண்டல் போல தோன்றும் ஒரு பாவனையில் தன் கதாபாத்திரங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான். வாசகனும் எழுத்தாளனும் அறிந்திராத ஒரு தருணத்தில் அந்தக் கிண்டல் பரிவையும் கருணையையும் கனிவையும் நோக்கி செல்கிறது. அசோகமித்திரனின் பல கதைகளில் நிகழும் அந்த மந்திரம் நிகழ்ந்த கதை என கர்ணயட்சினியைச் சொல்லலாம்.
உடல் சார்ந்தும் உளம் சார்ந்தும் மிக மெல்லிய பாலியல் அடையாளத்திரிபு கொண்ட பிரமிளாவை இயல்பான கேலியுடன் அறிமுகப்படுத்தும் சித்துராஜ், கதை முடிவில் அவள் பக்கம் நின்று உலகைப் பார்க்க வைப்பதில் வெற்றி பெறுகிறார். அவளுடைய ஆளுமையைப் பற்றி ஆசிரியர்கூற்றாக எதுவுமே இன்றி அவளுடைய புழக்கங்கள் வழியாக மட்டுமே ஒரு சித்திரத்தை உருவாக்க முடிந்திருப்பது தேர்ந்த கலைஞனின் கைகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
.
இத்தொகுதியின் அழகிய கதைகளில் ஒன்று விடியல் தவம். சீனச் சமையல் நிபுணராக ஆக விரும்பும் சுகந்தனின் கதை இது. மிகச்சரியான வடிவம் கொண்ட சிறுகதை. எனவே சுகந்தன் சமைக்கத் தொடங்குவதிலிருந்து சமைத்து முடிப்பதற்குள் கதை முடிந்துவிடுகிறது. ஆசிரியர் வந்து எதையும் விளக்குவதில்லை. அந்நிகழ்வுகளின் ஊடாகச் செல்லும் வாசகனே அனைத்தையும் அறிந்து, உணர்ந்து தானும் அதில் வாழத்துவங்குகிறான்.
சீனச் சமையல் குருவின் முன் தன் திறனை வெளிப்படுத்தி வெல்லும் சுகந்தனின் வெற்றியின் கணம் தான் கதை. ஆனால் விரிந்த ஒரு தளத்தில் சிங்கப்பூரில் சீனப் பண்பாட்டு சூழலில் தன் அடையாளத்திற்காக தவித்து போராடி வெல்லும் ஒரு தமிழனின் கதை கூட. அடையாள உருவாக்கத்தை முன்வைத்த சிங்கப்பூர் தமிழ் கதைகளின் பாரம்பரியத்தில் இக்கதை முற்றிலும் புதிய பொருள் கொள்கிறது. இங்கே அடையாளத் துறப்பும் பிற அடையாளத்தில் கரைதலுமே வெற்றியின் வழியாக முன்னால் திறந்திருக்கிறது.
இன்னும் விரிந்த தளத்தில் முற்றிலும் அந்நிய பண்பாடு ஒன்றில் தன்னை தகவமைத்துக் கொண்டு ஊடுறுவி வெல்லும் ஒரு மனிதனின் கதை இது. எதைக் கழற்றிவிடுகிறான் ,எதைக் கழற்றமுடியவில்லை என்பது சுவாரசியமான கேள்வி.ஒவ்வொரு தளத்திலும் வேறு வேறு அர்த்தங்கள் நிகழும்படி நுண்மையான தகவல்களால் பின்னப்பட்டுள்ள ஓர் இலக்கிய வெற்றி இந்த ஆக்கம்.
சிறுகதையின் செவ்வியல் வடிவை இது அடைவது தன்னை முழுக்க உடைத்து உருமாற்றி சீனனாகவே ஆகி சீனச் சமையலுக்குள் சென்று வென்றபின் சுகந்தன் அந்தச் சீன சமையல் நிபுணரின் சட்டையைப்பிடித்துக் கொண்டு தமிழில் ”யாருய்யா நீ எனக்கு எல்லாத்தையும் கொடுத்திருக்கியே யார் நீ உனக்கு நான் என்ன பண்ணமுடியும் என்று கண்ணீருடன் கத்தும்போதுதான். சீனனாக மாறிய ஆளுமை ஒன்றிற்கு அடியில் எப்போதும் மாறாத தமிழ் ஆளுமை ஒன்றிருப்பதை காணும் கணம் தமிழ் சிறுகதையின் முக்கியமான தருணங்களில் ஒன்று.
சித்துராஜ் பொன்ராஜின் கதைகளைப்பற்றிய ஒர் உரையாடலில் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் அவர் பெண்களைப்பற்றி கூறும் இடத்தில் நேரடியான ஒரு காமநோக்கு இருப்பதாகவும் அது ஒரு ஆண் மையப்பார்வையை வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். ஒர் எழுத்தாளனின் படைப்பில் குறிப்பிட்ட தன்மை இருப்பதை அடையாளம் கண்டு கொள்வது வேறு. அதைத் தவிர்த்து அவர் எழுத வேண்டுமென்று விரும்புவவது முற்றிலும் வேறு.
அவ்வாறு தவிர்க்க ஆரம்பித்தால் அச்சமூகம் கொள்ள விரும்பும் விஷயங்களை மட்டுமே தக்கவைத்து , அது தள்ள விரும்பும் அனைத்து விஷயங்களையும் தவிர்த்து எழுத வேண்டியிருக்கும். அவ்வாறு சலவை செய்த எழுத்து நமது போலி முற்போக்குகளின் அரசியல்சரிகளின் பிலாக்கணம் போலிருக்கும்.நவீனச் சிங்கப்பூர்ச்சூழலின் வணிக – கேளிக்கைச்சூழலில் அந்தப்பார்வைதான் எழுந்து வருகிறது என்றால் அதன் சாட்சியமாக எழுத்து இருப்பதே உகந்தது.
எழுத்து என்பது ஒரு படைப்பாளியின் குருதித் துளி போல. அவனுடைய நோய்க்கூறுகள், அவனுடைய திறன்கள், அவனுடைய வம்சாவளி அனைத்தும் அதில் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு சரியான பிரதிநிதித்துவம் உள்ளதோ அந்த அளவுக்குத் தான் அது சிறந்த எழுத்து. சித்துராஜ் பொன்ராஜின் கதைகளை நான் முக்கியமானதாகக் கருதுவதற்கு காரணம் அவை நான் அறிய விரும்பும் ஒரு நவீனச் சிங்கப்பூர் வாழ்க்கையின் கூறுகளை மிகத் துல்லியமாக காட்டுகின்றன என்பது தான். அதாவது சித்துராஜ் சொல்லாதவற்றையும் ஏன் உத்தேசிக்காதவற்றையும்கூட அக்கதைகளில் இருந்து காணமுடிகிறது. ஒருபிடி மண்ணை அள்ளி நிலத்தின் அனைத்து இயல்புகளையும் ஆய்வுச்சாலைகள் வழியாக கண்டெடுப்பது போல.,
உதாரணமாக முடியொழுக்கம், மூன்று சந்திப்புகள், மாறிலிகள் போன்ற கதைகள். இவை இன்றைய சிங்கப்பூர் வாழ்க்கையின் பெண்களின் நிலைகுறித்த வெவ்வேறு காட்சிகளைக் காட்டுகின்றன. இளங்கண்ணன், கண்ணபிரான், புதுமைதாசன் போன்ற சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்கள் எழுதிய ஒழுக்க, கலாசாரக் கவலைகளை கருத்தில் கொண்டு இக்கதைகளை படிப்பது மிகுந்த சுவாரசியமான அனுபவம். இக்கதைகளுக்கான முன்னோடிக் கதைகளை அவர்களின் படைப்புலகில் கண்டெடுக்க முடியும் – அதாவது நேர் எதிரான கோணம் கொண்டவை. எனக்கு கண்ணகி -மாதவி இருமை நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். எல்லா கதைகளிலும் கண்ணகியும் மாதவியும் கலந்துவிட்டிருக்கிறார்கள்.
மூன்றுசந்திப்புகள் நட்சத்திர விடுதியில் மது பரிமாறும் பணிசெய்யும் மகளுடன் தன் இளமைக்கால நண்பரை சந்திக்கும் தந்தை ஒரு இந்தியத் தமிழ்க் கதையில் சாதாரணமாக வரமுடியாத கதாபாத்திரம் .அந்தப்பெண் தந்தையின் நண்பரிடம் தான் மணந்து கொள்ளப்போகும் வட இந்தியருக்காக திருமண ஏற்பாடுகள் செய்யும்படி சொல்கிறாள். அவர் அவ்வாய்ப்பை ஆவலுடன் பற்றிக்கொள்கிறார்.
இந்தக்கதையின் கட்டமைப்பு கவனமற்றதுபோல செய்யப்பட்டிருக்கும் கவனமான கலைவடிவம். நவீன இளைஞர்களின் உலகில் போட்டியில் வெளியே தள்ளப்பட்டு தளர்ந்து வரும் தந்தையின் நண்பரின் கோணத்தில் அந்தப்பெண் காட்டப்படுகிறாள். அவளுக்குப் பணிசெய்வதன் மூலம் அவர் மீண்டும் தன்னை இளையோரின் விரைவுமிக்க உலகில் திணித்துக்கொள்கிறார். தன்னை உடைத்து உருமாற்றிக்கொண்டு. அதற்கான வலியையும் அவமதிப்பையும் விழுங்கியபடி.
இதிலிருக்கும் ஒரு விசித்திரமான சுதந்திரம் என்னைக் கவர்கிறது. அதைத்தான் முன்னோடிகள் அஞ்சினார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. வேறுவழியே இல்லை, அது வந்து நின்றிருக்கிறது. முடியொழுக்கம் இன்றைய வாழ்வின் நேரடியான பாலியல் விழைவைக் காட்டும் கதை. ஆணிடம் தனக்கு பாலுறவின்பம் மட்டும்தான் வேண்டும் என்று கேட்கும் ஒரு பெண்ணை இயல்பாக கதையில் சந்திக்கும்போது வாழ்வின் புதிய திறப்பு ஒன்றைக் கண்ட திகைப்பும் மெல்லிய பரவசமும் ஏற்படுகிறது. அவள் அந்த ஆணை அழைப்பதும் சரி, அவன் இயலாமை கண்டு துறப்பதும் சரி, ‘ ஆம், இது பிறிதொரு வாழ்க்கை’ என்று சொல்லிக் கொள்ள வைக்கிறது.
மறுபக்கம் மாறிலிகள் .அத்தலைப்பு சொல்வது போலவே இத்தனை சுதந்திரத்திற்கும் அடியில் இருக்கும் அப்பட்டமான பாலியல் சுரண்டலை சித்தரிக்கிறது. மாறிலிகளின் கதாநாயகி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளும் விதம் மிக இயல்பாகவும் நுணுக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தந்தையை இழந்த தனிமை ,உலகு அறியாத தந்தையிடமிருந்து புற வாழ்வைக் கற்றுக்கொண்டதன் போதாமை, இவை அனைத்திற்கும் மேல் வாழ்க்கையின் முதல் முடிவை சுயமாக எடுப்பதில் இருக்கும் பரிச்சயமின்மை.
இதை உண்மையிலேயே பல பெண்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். தன் வாக்கையின் மிக முக்கியமான முடிவை வேறு எதன்பொருட்டோ, எதையும் யோசிக்காமலோ அவர்கள் எடுக்கிறார்கள். பலசமயம் சிறிய உள அழுத்தம் ஒன்றில் இருந்து தப்பிப்பதற்காகவே அதைச் செய்கிறார்கள். அவள் அடையும் அவமதிப்புகளும் துயரங்களும் ஒரு நவீனச் சிங்கப்பூர் வாழ்க்கையின் பின்னணியில் அபத்தமாக தெரிகின்றன. ஆனால் ஒருவேளை நியூயார்க்கிலும் இதே வாழ்க்கை இருக்ககூடும் என்றும் எண்ணத்தோன்றுகிறது.
பிறிதொரு வாசிப்பில் மாறிலிகளின் கதை இருவேறு உலகங்களின் சந்திப்பு புள்ளி என்றுபட்டது. அவள் கணவன் இந்தியாவின் அடித்தளம் ஒன்றின் சிங்கப்பூர் பிரதிநிதியாக இருக்கிறான். மேல்தட்டில் வாழ்க்கை பலவகையான மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது கூட அங்குள்ள அடித்தட்டுத் தமிழ் வாழ்க்கை இன்னமும் நூறாண்டுகால பழமை தேங்கி நாற்றமடித்திருப்பதை கதை காட்டுகிறது. பெயர்களின் வழியாகவே இந்த வர்க்கவேறுபாட்டைச் சித்தரிக்க சித்துராஜால் முடிந்திருக்கிறது.
கலைஞனின் வருகையை அடையாளப்படுத்துவது ஒரு அம்சமே, நாம் வாழ்க்கையில் அறிந்து ஆனால் தெளிவாக உணரப்படாத ஒன்றை அவை துல்லியமாக சொல்லில் வடிக்கக்காண்பதுதான். இரு இடங்களை உதாரணம் காட்டுவேன். ஒன்று கர்ணயட்சிணி கதைகுறித்துச் சொன்னதுபோல வேடிக்கையாகச் சொல்லிச்சென்று உணர்வுநிலை மாற்றத்தை இயல்பாக நிகழ்த்தும் கதைத்தருணம். இரண்டு லௌகீக வாழ்க்கையின் நுட்பம் ஒன்றை, வேறு ஒரு உலகின் கூரிய முனை ஒன்றை எழுதிக்காட்டுவது. மாறிலிகளில் அந்தப்பெண் திருமணமுடிவை எடுக்கும் கணம் போல
இந்த இரு நுணுக்கமான கூறல்களை வைத்தே இன்றைய தமிழின் முதன்மையான இளைய தலைமுறை படைப்பாளிகளில் ஒருவர் என்று சித்துராஜ் பொன்ராஜை அழுத்தமாக சொல்லலாம்.
சித்துராஜின் இக்கதைகள் கலைடாஸ்கோப்பைத் திருப்பியது போன்ற விரைவுடன் முற்றிலும் சம்பந்தமில்லாத உலகங்களைக் காட்டி மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் எழுதப்படும் கதைகளில் பெண்களின் பணியிடச்சிக்கல்கள் மிகக்குறைவாகவே பதிவாகியுள்ளன. துளசிமாடம் பணியிடத்தில் வெல்வதற்காக இருபெண்களிடையே நடக்கும் சதியை அல்லது சதுரங்க விளையாட்டை மிக எளிதான சித்திரங்கள் வழியாக சொல்லிச் செல்கிறது. முதல்நோக்கில் அது பெண்களின் தொழில்போட்டி. ஆனால் நீண்ட ஒரு பார்வையில் அது காலகாலமாக பெண்களிடையே நிகழும் ஆண்களை வென்றெடுப்பதற்கான போட்டிதான்.
அதில் வெல்லும், தோற்கும் பெண்களின் இயல்புகளை எவ்வகையிலும் வகைமாதிரிக் கதாபாத்திரங்களாக ஆக்காமல் சித்துராஜ் சித்தரிக்கிறார். ஒருத்தி நுண்ணுணர்வு கொண்டவள். உணர்ச்சிகரமானவள். ஆனால் ஒரு நெருக்கடியில் வெடியோசை கேட்ட மான் போல ஸ்தம்பிப்பவள். இன்னொருத்தி நுண்ணுணர்வு அற்றவள். ஆனால் இக்கட்டுகளில் நிதானமாக இருப்பவள். ஆகவே எளிதாகச் சூழ்ச்சி செய்யமுடிகிறது. வென்று செல்லவும் முடிகிறது.
சிங்கப்பூர் படைப்பிலக்கியத்தைப்பற்றி நான் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியபோது எழுந்து வந்த மறுகுரல்களில் ஒன்று ஒரு தமிழக எழுத்தாளனுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் சிங்கப்பூர் எழுத்தாளனுக்கு இல்லை என்பதுதான். அவன் ஒரு வயல்வெளியைப் பார்த்ததில்லை. அவனுக்குக் கிராமிய வாழ்க்கை தெரியாது. தொன்மையின் நீட்சி அவனுக்கில்லை. ஆகவே வரலாறோ பண்பாடோ ஒரு பின்புலமாக நின்று கொண்டிருக்கவில்லை. அவன் எழுதக்கூடிய விஷயங்கள் திரும்பத் திரும்ப அடுக்கு மாடி வீடுகள் அலுவலகங்கள் என்னும் இரு எல்லைகளுக்குற்பட்டவை.
ஆனால் நான் புறச்சூழல் கலையைத் தீர்மானிக்காது என்ற கருத்து கொண்டவன். பெருங்கலைஞன் ஒருவனை நான்கு சுவர்கள் கொண்ட அறைக்குள் நாற்பதாண்டுகாலம் அடைத்துப் போட்டால் கூட அவனால் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க முடியும். அதற்குள் ஊர்ந்து வரும் எறும்புகளோ பறந்து வரும் ஈக்களோ கூட அவனுக்கு எழுதுவதற்கு போதுமான புறவாழ்க்கையைக் காட்ட முடியும்.
உண்மையில் புலம் பெயர்ந்த எழுத்து என்பது தமிழக எழுத்தாளனுக்கு இல்லாத எத்தனையோ புதிய வாய்ப்புகளை திறந்து தரக்கூடியது. தமிழின் மிகச்சிறந்த உதாரணம் அ.முத்துலிங்கம்தான். அவருடைய படைப்புகள் சென்று தொடும் களங்கள் நேற்றுவரை தமிழுக்கு அமையாதவை. முத்துலிங்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும் ஆசி.கந்தராசா பொ.கருணாகர மூர்த்தி போன்றவர்களும் புலம்பெயர்ந்த புதிய அனுபவ தளங்களைத் தமிழுக்கு திறந்து தந்திருக்கிறார்கள். அது மேலும் மேலும் சாத்தியங்களை அளிப்பது.
சிங்கை எழுத்தாளர்களின் பிரச்னை என்பது அவர்கள் அந்த புதிய வாழ்க்கைக்களம் நோக்கித் திறந்து கொள்ளவில்லை என்பது தான். அதிலும் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்கள் சலிப்பூட்டும் அளவுக்கு சின்ன வாழ்க்கைக்குள் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய எழுத்தும் சித்துராஜ் பொன்ராஜின் படைப்புகள் தான்.
முத்துலிங்கத்தைபோலவே முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களை நோக்கித் திறக்கும் பல கதைகள் இதில் உள்ளன. தொழில் -வேலைச் சூழலைச் சித்தரிக்கும் தேவேந்திரன் பண்ணிய டிராமா, துளசி மாடம் போன்ற கதைகளை ஒருபக்கம் சொல்லலாமென்றால் கலாச்சார சந்திப்புமுனைகளைத் தொடும் விடியல் தவம், தாளோர நாரைகள்,இரண்டாம் வாய்ப்பாடு போன்ற கதைகள் இன்னும் ஒருபடி மேலாகக் குறிப்பிடத்தகுந்தவை.
உண்மையில் சிங்கப்பூரில் நிகழ்வது இந்த கலாச்சாரஉரசல் தான் முற்றிலும் மாறுபட்ட நாடுகளை இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு நகரில் தொழிலுக்காக, கல்விக்காக ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் பண்பாடுகள் ஐயத்துடன் ஆர்வத்துடன் ஒன்றையொன்று தொட்டு விலகியும் முயங்கியும் தங்களைக் கண்டு கொள்கின்றன. முடிவிலாது விரியும் இத்தருணங்கள் அற்புதமான பல்லாயிரம் கதைகளுக்கான கதைக்களங்கள் அங்கு வாழ்ந்தும் அந்த ஒரு தருணத்தையும் சுட்டாத கதைகளை நோக்கித் தான் என்னுடைய ஒவ்வாமையை மிக வலுவாக பதிவு செய்தேன்.
அதே உணர்வு நிலையில் நின்று இத்தொகுதியில் உள்ள கதைகளை பெரும்பரவசத்துடன் தழுவிக் கொள்கிறேன். ஆயிரம் நாரைகளில் ஒரு நாரை தன் வேண்டுதலைக்கேட்குமென்னும் சீன நம்பிக்கையில் தொடங்கி அறியாத தேசமொன்றின் கடல் கொண்ட ந கிராமத்தில் இருந்து வந்த ஜப்பானிய பெண் மேல் கொள்ளும் காதலின் கதையைச்- சொல்லும் தாளோர நாரைகள் புத்தம்புதுக் கவித்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.
அந்தக்கதைக்கு நேர் மாறான திசையில் செல்கிறதுஇரண்டாம் வாய்ப்பாடு. ஜப்பானியப்பெண்ணுக்காக ஏங்கும் தமிழன் பிலிப்பைன் பெண்ணை ஏன் கீழாக நடத்துகிறான் என்பதற்கான பண்பாட்டு உட்குறிப்பில் உள்ளது சமகால இன அரசியலின் , பொருளியலின் நுண்தளங்கள். இன்றைய புலம்பெயர் எழுத்து எழுதவேண்டிய சவால்கள் அங்கேதான் உள்ளன
பாலியல் மாற்றமடைந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் உறவைச்சொல்லும் மோகவல்லி- சித்துராஜின் கதைகளுக்குப்பொருத்தமில்லாதபடி சற்றே மிகையான குரல் கொண்டிருக்கிறது. எனினும் தமிழில் பேசப்படாத ஒரு தளத்தை சென்று தொடுகிறது என்ற அளவில் குறிப்பிடத்தக்க கதையாக இருக்கிறது.
இத்தொகுதியில் சாதாரணமான கதை என்று சொல்லத்தக்கது களங்கம் மட்டுமே சிங்கப்பூரின் இலக்கிய அரசியலுக்குள் நுழைந்து செல்லும் ஒரு கூரிய அங்கதம் மட்டும்தான் இது. தமிழகத்தில் கூலிக்கு ஆள்வைத்து இலக்கியம் எழுதி சிங்கையில் புகழும் பட்டங்களும் பெற்று வாழும் ஒருவரின் சித்திரத்தைக் காட்டுகிறது அது. கதைத்திருட்டுக்கு சிக்கிக் கொள்கிறாள். அதிலிருந்து தப்பவேண்டுமென்றால் ஆள்வைத்து எழுதியதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரின் போலிஎழுத்தாளர்களுக்குள் நிகழும் உள்குத்துகளை சுட்டிச் செல்லும் இக்கதைக்கு சாதாரணமாக ஒரு முக்கியத்துவம் உண்டென்றாலும் இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே குறிப்பிடத்தகுந்த இலக்கியப்படைப்புகள் என்னும் போது இக்கதை மட்டும் சற்று பின் தங்கியிருப்பது போல் தோன்றுகிறது.
*
சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையிலே அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை வண்ணத்தாசனின் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள்.
சிங்கப்பூரின் அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட எழுத்து அதன் இயல்பான முதிர்ச்சியை இத்தொகுதியில் அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமென்றால் தமிழ் இலக்கியத்தின் ஒளி மிக்க ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் வளரும் என்று எண்ணுகிறேன்.
சிங்கப்பூரின் சூழலில் புனைவிலக்கியம் எழுதுவதில் சித்துராஜ் பொன்ராஜ் ஆர்வமிழக்க்க்கூடும் என்று எனக்குப்பட்டது. நான் முக்கியமான எழுத்தாளராக எண்ணும் உதுமான் கனி அவ்வாறு விலகிச்சென்றார். எழுத்தால் உடனடியான பொருளியல் லாபம் அல்லது உலகியல் நன்மைகளோ அவருக்கு விளையாது போகலாம். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கப்படும் சூழல் சிங்கப்பூர் தமிழிலக்கியக் களம். அது அவருக்குச் சலிப்பூட்டலாம்.
ஆனால் இலக்கியமென்பது மிக அந்தரங்கமாக ஒருவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் சேவை. தான் பிறந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் அளிக்கும் கொடை. சித்துராஜ் இப்போது இலக்கியத்திற்கு தன் நேரத்தையும் கனவையும் அளிப்பாரென்றால் பல ஆண்டுகளுக்கு பின்பு அதை நிறைவுடனேயே அவர் நினைத்துப்பார்ப்பார். உலகியல் சார்ந்த பிற எவற்றில் அவர் ஈடுபட்டாலும் என்றோ ஒருநாள் அவற்றுக்காக அவர் ஏமாற்றம் அடைவார். ஏனென்றால் உலகியலில் எதை ஈட்டினாலும் ஒருவர் இறுதியாக ஏமாற்றத்தை அடைந்தே ஆகவேண்டுமென்பது ஒரு மாறாவிதி.
[மாறிலிகள். சித்துராஜ் பொன்ராஜ், அகநாழிகை பதிப்பகம் ,சென்னை]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சித்துராஜ் பொன்ராஜ் -கடிதம்
அன்புள்ள எழுத்தாளர் திரு ஜெயமோகனுக்கு வணக்கம்
மாதங்கி அவர்களைப் பற்றிய உங்கள் பதிவில் எனக்குத் தமிழ் அதிகம் தெரியாதென்று நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன்.
தங்களது விஷ்ணுபுரம், வெள்ளை யானை, காடு நாவல்களை நிச்சயமாக இருமுறைக்கு மேலும் நாவல் கோட்பாடு என்ற நூலை நான்கு முறையாவது வாசித்தவன் என்ற முறையிலும் சின்ன வயதில் திவ்ய பிரபந்தம் சேவிக்கும் போது ‘என்று’ என்பதை ‘என்னு’ என்று உச்சரிக்காததால் அப்பாவிடம் அடி வாங்கியவன் என்ற உரிமையிலும் எழுதுகிறேன். எனக்குத் தமிழ் மிக நன்றாகவே தெரியும்!
அது மட்டுமல்ல என் அப்பா கன்னடம் என்றாலும் அம்மா பாலக்காட்டு மலையாளம் என்றாலும் இந்த இரு மொழிகளோடு சிறு வயதிலிருந்தே தமிழும் கற்றுத் தந்திருக்கிறார்கள். தமிழிலும் நிறைய வாசிக்கிறேன். உங்கள் நாவல்கள் தவிர எஸ் ராமகிருஷ்ணன் தொடங்கி ஷோபா சக்தி மற்றும் அசோகமித்திரன், பள்ளிகொண்டபுரம் எழுதிய நீல பத்மநாபன், கோணங்கி, நீங்கள் அதிகம் விரும்பாத மு.வ., அகிலன் (சித்திரப்பாவை!) ஆகியோரோடு கோட்டயம் புஷ்பநாத் வரையிலும் தமிழிலேயே பழக்கம் உண்டு. இப்போது Roberto Bolanoவில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் (இவரைத் தமிழில் யாராவது மொழி பெயர்த்தார்களா தெரியாது – அதனால் இவரை ஸ்பானிய மொழியில்)
தங்களுக்கு யாரேனும் தவறான தகவல் தந்திருக்கலாம். அதற்குத்தான் இங்கே ஆட்களுக்குப் பஞ்சமில்லையே. உங்கள் கருத்தைத் திருத்திக் கொண்டால் தன்யனாவேன். எனக்குத் தமிழே தெரியாது என்றால் என் குழந்தைகளுக்குத் தமிழில் வீட்டுப் பாடம் சொல்லித் தரும்போது அவர்களைத் திட்டக்கூட எனக்கு உரிமை இல்லாமல் போய் விடும் என்பதால்…
மிகுந்த பணிவன்புடன்
சித்துராஜ் பொன்ராஜ்
அன்புள்ள சித்துராஜ் பொன்ராஜ்
நாம் சென்ற ஆண்டு நேரில் சந்தித்திருக்கிறோம். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறோம். அப்போது நீங்கள் என்னை முன்னரே கேள்விப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கவில்லை. உங்கள் உச்சரிப்பில் இருந்து உங்களுக்குத் தமிழ் அதிக பரிச்சயமில்லை, ஆகவே என்னையும் அறிமுகமில்லை என நானே ஊகித்துக்கொண்டேன்.
அது தவறு, தமிழ் நன்றாகவே தெரியும், என்னையும் அறிவீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…
கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.
மலேசியாவில் நடத்திய சிறுகதைப்பட்டறை குறித்த பதிவு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 8, 2016
இன்னும் சில எட்டுகள்…
சிறுகதை தன்னளவிலேயே விசித்திரமான ஒரு இக்கட்டைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ புகைப்படம் கொண்டுள்ள இக்கட்டுக்கு நிகரானது அது. ஒரு கண நேர வெளிச்சத்தையே அது வீழ்த்த முடியும், வாழ்வின் ஒரு துளியையே அள்ள முடியும். இது அதன் அனைத்து வடிவ சாத்தியங்களையும் வரையறுத்துவிடுகிறது. வாழ்வுக்கணங்களைக் காட்டும் கலை என சிறுகதையை வரையறுக்கும்போது சட்டென்று ஒரு சலிப்பு வந்து சேருகிறது. அப்படி எத்தனை வாழ்க்கைக் கணங்களைப் பார்த்திருக்கிறோம், மீண்டும் மீண்டும் அதே சித்திரங்கள் தானா என்று.
அந்நிலையில் சிறுகதை தன் வடிவஎல்லைக்குள் நின்றபடி தன் இயல்பைக்கடந்து சென்று அச்சலிப்பை வெல்ல வேண்டியிருக்கிறது. சிறுகதை என்னும் வடிவம் உருவான உடனேயே கணநேர வாழ்க்கைச் சித்திரங்கள் வந்து குவியத்தொடங்கின. மறக்க முடியாத பல பெரும் படைப்புகள் வந்தன என்பதை மறுக்க முடியாது. ஒரு காட்சித்தீற்றலில் இருந்து முழு வாழ்க்கையை, ஒட்டுமொத்த வரலாற்றை, மாபெரும் தத்துவ தரிசனத்தையு முன்வைக்க முடியுமென்று சிறுகதை காட்டிவிடும்.
ஆனால் ஏதோ ஒரு எல்லையில் அது தன்னை தான் கடக்க முயல்கிறது. அதன்பொருட்டே அது தன்னைக் கவிதையை நோக்கி நகர்த்திக்கொண்டது. குறியீடுகளையும் படிமங்களைக் கையாளத்தொடங்கியது. குறிப்புணர்த்தல்களின் பல்வேறு சாத்தியங்களை நோக்கி அதன் மூலம் சிறுகதையால் நகர முடிந்தது. இன்றைய சிறுகதையை வாசிக்கும் வாசகன் அதில் ஒரு வாழ்க்கைச் சித்திரம் நிகழ்ந்திருந்ததென்றால் அது சிறுகதையாகிவிட்டது என்ற நிறைவை அடைவான். கூடவே மெல்லிய ஒரு சலிப்பும் அடைவான். கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென்ற விழைவு அவனில் ஏற்படும்.
காணும் ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் படிமங்களே எனும்போது ஒரு காட்சியை நிலைக்க காட்டும் புகைப்படமும் சரி ,சிறுகதையும் சரி, மிக எளிதில் படிமங்களை உருவாக்க முடியும். உலகின் மகத்தான கதாசிரியர்கள் அதை சாதித்திருக்கிறார்கள். நவீனச் சிறுகதையின் இன்றைய அறைகூவல் அதுவே.
லதாவின் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இத்தொகுப்பில் கணநேர வாழ்க்கைச் சித்திரம் என்னும் இலக்கணமே பொருந்தியுள்ளது. சிங்கப்பூர் வாழ்க்கையின் ஒருகீற்றை நுணுக்கமாக வெட்டி குருதியுடனும் கண்ணீருடனும் முன்வைப்பதில் பெரும்பாலும் எல்லா கதைகளும் வெற்றி பெறுகின்றன. வடிவம் சார்ந்து இக்கதைகள் பிழைபுரிவதில்லை. மிகச்சரியான வாழ்க்கைத் தருணத்தை தொட்டு எடுத்து முன்வைப்பதனால் வாசகன் மேலும் முன்சென்று முழுவாழ்க்கையின் அனுபவத்தையும் தான் அடையவும் வாய்ப்புள்ளது. ஆகவே இச்சிறுகதைத் தொகுதியின் அனைத்து கதைகளையுமே பொதுவாக நல்ல கதைகள் என்று சொல்லிவிடலாம்.
ஆனால் இன்றைய சிறுகதைவாசகனுக்கு இவை இலக்கிய அனுபவமாக ஆவதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. உதாரணமாக இத்தொகுதியில் முதல் கதையான அடையாளம். சிங்கப்பூரின் இந்தியாவிலோ இலங்கையிலோ வாழும் ஒரு சாதாரண குடும்பத்தலைவியின் வாழ்க்கையை வாழ்பவனின் கதையே அவளுக்கும் இருக்கிறது .சிங்கப்பூரியன் என்ற சட்டபூர்வ அடையாளம் அவளுக்கும் உண்டு. ஆனால் அதை அவளே ஒவ்வோரிடத்திலும் வலியுறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆன்மாவால் சென்ற காலத்திலும் உடலால் நிகழ் காலத்திலும் வாழும் திகைப்பு அவளுக்கு இருக்கிறது.
இக்கதையின் குடும்ப சித்திரமும் சரி, இதில் குடும்பத்தலைவி அடையும் அந்நியமாதலும் சரி, தன் அடையாளத்தை வெகுதூரத்தில் இருந்து அவள் நோக்கும் தருணமும் சரி நாற்பதாண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரன் தன் கதைகளில் மேலும் வலுவாக எழுதிவிட்டவை. அசோகமித்திரனைக் கடந்து அன்றி இச்சித்திரத்தை ஒரு புத்திலக்கிய ஆக்கமாக முன்வைக்க முடியாது.
மழை-அப்பா என்னும் கதையும் பெருமளவு அசோகமித்திரனின் உலகத்திற்குள் செல்வது. அந்த அப்பாவின் கதாபாத்திரம் கூட எதோ ஒருவகையில் அசோகமித்திரனின் தந்தையைப்போலிருக்கிறார். புற உலகில் பிறரிடமிருந்து மிக விலகி அதனாலேயே அக உலகில் மிக அணுகி இருக்கும் ஒருவர். அந்த இணை கோடுகள் எங்கோ ஒரு இடத்தில் மெல்ல தொடும்போது மட்டுமே அந்த அணுக்கத்தின் தீவிரம் புலப்படுகிறது மொத்த வாழ்க்கையிலும் பத்துப் பதினைந்து இடங்களில் மட்டுமே அந்தத் தீண்டல் நிகழ்கிறது. அத்தருணங்களை திறமையுடன் கோர்த்து கதையை அமைத்திருக்கிறார் லதா.
ஆனால் இக்கதையில் அந்த நிலவுப்பயணம் ஒரு நிமித்தம் என்பதற்கு அப்பால் என்ன பொருள் கொள்கிறது என்றே வாசகன் உள்ளம் தேடி சலிக்கிறது. அது கதையின் அன்றாட உண்மையின் தளத்திலிருந்து மானுட உண்மைநோக்கிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பு. தட்டினால் அங்கு ஒரு சுரங்கம் இருப்பது தெரிகிறது. ஆசிரியையால் திறக்கப்படவே இல்லை.
லதாவின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ மிக்கச்சாதாரணமான கதை. எதிர்காலத்தில் தமிழ் அழிந்துபடக்கூடும் என்னும் ஊகம் மட்டுமே இக்கதையில் உள்ளது. தமிழ் பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும் ஒரு சூழலில் அதை கற்கவிழையும் ஏக்கம் மட்டுமே பதிவாக எளிமையான கதை. இத்தகைய ஊகங்கள் வெறும் பிரச்சாரமாக மட்டுமே எஞ்சுகின்றன. எதிர்காலத்தின் அதிபிரம்மாண்ட தகவல்சேமிப்பில் எதுவுமே அழிந்துபடாது என்னும் எளிய அறிவியலுண்மைகூட இந்த தமிழ்ப்பதற்றத்திற்குத் தடையாக இல்லை
லதாவின் இத்தொகுதியில் வெறும் புனைவு உத்தி மட்டுமேயான இதுவரை போன்ற கதைகளும் சில உள்ளன. அன்றாட வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கும் வீடு போன்ற கதைகள் இன்னொருவகையான போதாமையுணர்வை அளிக்கின்றன. இன்றைய கதை இத்தகைய கதைகளை வாசித்துச்சலித்த வாசகனுக்காக எழுதப்படுவது என்பதையே மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது.
இத்தொகுதியில் சொல்லப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்லும் கதைகள் இருவகைப்பட்டவை. ஒன்று ,நாளை ஒரு விடுதலை. அது பணிப்பெண்ணின் அவலத்தைச் சொல்லும் வழக்கமான கதையாகவே ஆரம்பிக்கிறது. ஆனால் முடிவில் வாசகனின் முன்கணிப்பை தாவிக் கடக்கிறது. பாலியல் சுரண்டலை விரும்பும் அப்பணிப்பெண்னின் உளவியலை அவன் ஒரு திகைப்புக்கணமாக உணர்கிறான். தன் அருகே எவருமே அமரத்தயங்குவதை அவள் உணர்ந்துகொண்டிருக்கிறாள். அந்த இல்லத்துப்பெண்மணியால் அவமதிக்கப்படுகிறாள். பாலியல்கவற்சியாகக்கூட எவருக்கும் தோற்றமளிக்க அவளால் முடியவில்லை. வழிநடையில்கூட ‘என்ன ரேட்?’ என்றுதான் சீண்டுகிறார்கள். அந்நிலையில் அந்த பாலியல் உறவு அவளுக்கு ஒரு விடுதலை. ஒரு தாண்டிச்செல்லல். ஒரு சுய உறுதி.
ஆனாலும் இத்தகைய கதைகள் முந்தைய ‘துளிச்சித்திரம்’ என்னும் கதைமுறைமைக்குள் நிற்பவையாகவே உள்ளன. அவற்றில் ஒரு புதிய வாழ்க்கைக்கூறை இணைப்பவற்றினூடாக அவை கடந்துசெல்கின்றன அவ்வளவுதான். ஆனால் பயணம், அறை, படுகளம் போன்ற கதைகள் நவீனக்கதைக்குரிய படிமத்தன்மையை நோக்கிச் செல்கின்றன. படுகளம் கூறுமுறையால் சற்று மிகையாகிவிட்டிருக்கிறது. படிமம் என்பது சொல்லப்படாத நிலையிலேயே பொருள் அளிப்பது. சொல்லப்படும்போது அது வெறும் அடையாளமாக ஆகிவிடுகிறது. செண்பகவள்ளியில் உக்கிரம் கொண்டு எழும் தொன்மையை இன்னதென்று சொல்லாமல் நிறுத்திவிட்டிருக்கலாம்.
அனைத்துவகையிலும் கச்சிதமான கதை பயணம். ஒரு டாக்ஸியில் தமிழ்ப்பெண்ணும் சீன ஓட்டுநரும் பயணிக்கிறார்கள். இருவேறு பண்பாடுகள். அவை உரையாடிக்கொள்கின்றன. சிங்கப்பூரில் சீனரும் தமிழரும் பெரும்பாலும் சந்தித்துக்கொள்ளும் இடம் டாக்ஸி மட்டுமே என்பதனால் மிக நம்பகமாக அமைந்த கதை இது. அந்த உரையாடல் பரஸ்பரம் அறிவதற்காக நிகழ்த்தப்படுகிறதா இல்லை ஒருவரை ஒருவர் தவிர்ப்பதற்காகவா என்னும் வினாவை எஞ்சவைத்தபடியே கதை முடிகிறது. கடைசியில் மிக இயல்பான ஒரு கூலிபேரம்பேசல் கதையின் அந்த ’பண்பாட்டுப்பரிமாற்ற’த்தை மண்ணுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
நட்பான உரையாடல் மூலம், எளிய பரஸ்பரப்புரிதல்கள் மூலம் எப்படி திறமையாக வேலியிட்டுக்கொள்ளமுடிகிறது என்று காட்டுவதனாலேயே முக்கியமான கதையாக அமைந்துள்ளது பயணம்.
லதாவின் கதைகள் சிற்றிதழ்களில் எழுதப்படும் பொதுவான ‘நல்ல சராசரி’ கதைகள். ஒரு வாசகன் அவரை நினைவுகூர்வது அவருடைய தனித்தன்மையால்தான் இருக்கும். அது இன்னும் உருவாகாமல் சற்று முன்னால் எங்கோதான் உள்ளது.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சேவை மோசடிகள்
அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் சந்திப்பு வரவேண்டும் என எண்ணியிருந்தேன், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போனது. நண்பர்கள் சிறப்பாக இருந்தது என மகிழ்ந்து சொன்னார்கள்.
இன்று ஒரு சிறிய சம்பவம்..
இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல கெ.பி.என் பேருந்தில் பதிவு செய்திருந்தேன். பெருங்களத்தூருக்கு 11.15 மணிக்கு வரவேண்டும் ஆனால் தாமதமாக 12 மணிக்குத்தான் வரும் என ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது, இருந்தாலும் பேருந்து 12.30 மணிவாக்கில் தான் வந்தது.
பதிவு செய்திருந்தது ஸ்லீப்பர், ஆனால் வந்தது ஒரு செமிஸ்லீப்பர். அவ்வளவு நேரம் காத்திருந்த மக்கள் கொதித்துவிட்டனர். அந்த டிரைவரும், பொறுப்பாளரும் மிக சாதாரணமாக பதிலளித்தனர். இதுவாவது கிடைத்ததே என சந்தோஷப்படுங்கள் என்ற தோராணையில்.
ஒரு இருபது நிமிடம் நடந்த வாக்குவாதம் முடிவில், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணம் திரும்ப வந்துவிடும் என அந்த பொறுப்பாளர் சொன்னார். முழுவதும் நம்ப முடியாவிட்டாலும், இந்த நடு இரவில் அந்த சமாதானம் போதுமானதாக எனக்கு இருந்தது.
மற்றவர்களும் வேறு வழி இல்லை என உணர்ந்து பஸ்ஸில் ஏறினர். ஆனால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கோபம் இருந்ததை கவனிக்க முடிந்தது.
என்ன திமிரா பேசுறாங்க, அந்த 40 பஸ் எரிச்சது சரிதான் என்றார் ஒருவர். கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் இதையே வெவ்வேறு வாக்கியங்களில் சொன்ன பின்னர் கொஞ்சம் எளிதானது மாதிரி தெரிந்தது.
உண்மையில் பெங்களூரில் 40 கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்டபோது மிக வருத்தமாக இருந்தது, என்ன தான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் அந்த இழப்பு மிக வருத்தமாகவே இருந்தது, அந்நிறுவனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தோன்றியது. தமிழர் என்ற அடையாளத்துகாகத் தாக்கப்பட்டதால் இன்னும் கொஞ்சம் வருத்தம்.
இப்போது, அதே நிறுவனம் நமக்கு ஒரு அநீதி இழைக்கும்போது, நிஜமாகவே கொஞ்சம் எளிதானது போல தோன்றுகிறது.
இனி அந்த அநீதிக்கு கவலைப்படத் தேவை இல்லை, இவனுகளுக்கு நல்லா வேணும். எவ்வளவு பெரிய நிம்மதி.
அன்புடன்
சுரேஷ் பாபு
***
அன்புள்ள சுரேஷ் பாபு
இந்தியாவில் மிக மோசமான நிலையில் உள்ளது சேவைத்துறைதான். எந்தத்தளத்திலும் சேவை என்பதில் நினைத்துப்பார்க்கமுடியாத மெத்தனம், பொறுப்பின்மை. அதைப்பற்றிய கண்டனமே நமக்கில்லை, ஏனென்றால் நுகர்வோர் உரிமை குறித்த உணர்வு நம்மிடம் இல்லை. ஆகவே சேவைநிறுவனங்கள் எதையுமே கண்டுகொள்வதில்லை.
சென்னையில் ஓலா முதலிய டாக்ஸிகளை தாம்பரத்திற்கு அருகே உள்ள என் மகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்காக அழைத்தால் டிரைவர்கள் இருமடங்கு பணம் கேட்கிறார்கள். ஓலாவில் புகார் செய்வேன் என்றால் செய்வதைச் செய்துகொள் என்பது பதில். ஓலா எந்நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதை அவர்கள் அறிவார்கள்.
மேக் மை டிரிப் போன்ற பயணச்சேவை நிறுவனங்களில் கணிசமான விடுதிகள் தங்கள் உண்மையான மதிப்பை மும்மடங்கு ஏற்றி பொய்யான புகைப்படங்களும் தகவல்களும் அளித்து ஏமாற்றுகின்றன. சமீபத்தில் திரிச்சூரில் உள்ள மெரிலின் இண்டர்நேஷனல் என்னும் ஓட்டலில் தங்கினேன். மேக் மை டிரிப் இணையதளத்தில் அவர்கள் தங்களை ஒரு ஸ்டார் ஓட்டல் என சொல்லிக்கொள்கிறார்கள். நேரில் சென்றால் தெருமுனை ஓட்டல் அது. அவர்களின் இணையதளத்தில் கருத்திடும் வசதி இல்லை – அதாவது கருத்துக்கள் அவர்களே போட்டுக்கொள்வது
ஏற்கனவே சென்னையில் பெல் என்னும் ஓட்டல் இதே மோசடியைச் செய்ததை நான் மேக் மை டிரிப்பில் புகார்செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. பென் ஓட்டல் அப்படியே நட்சத்திர ஓட்டலாகவே மேக் மை டிரிப் பட்டியலில் உள்ளது
என்ன காரணம் என்றால் வலுவான நுகர்வோர் அமைப்பு இல்லை. நுகர்வோர் நீதிமன்றங்கள் நம் வழக்கமான நீதிமன்றங்களைவிட தாமதமும் பணச்செலவும் உளச்சோர்வும் அளிப்பவை. ஆகவே எவரும் அப்பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை. பணம் பிடுங்கும் எந்நிறுவனமும் சேவையில் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம் என்னும் நிலையே நீடிக்கிறது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

