Jeyamohan's Blog, page 1718
October 25, 2016
ஒரு வக்கீல் நோட்டீஸ்
ஐயா,
தாங்கள் தங்கள் வலைதளத்தில் “வல்லவன் ஒருவன்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எனது புகைப்படத்தை போட்டுள்ளீர்கள். அழகில்லாமலும் மிகவும் மோசமாகவும் காட்சியளிக்கக்கூடிய அந்த புகைப்படத்தை கண்ட மக்கள் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். குறிப்பாக பெண்கள். அழகும் ஆண்மையும் நிறைந்த ஒருவனை இப்படி ஒரு மோசமான புகைப்படத்தை போட்டு அதன் மூலம் அவன் புகழை சீர்குலைக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளீர்கள். இந்த புகைப்படத்தை பார்த்தபின் பெண்கள் கடிதம் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு எனக்கு ஏதேனும் உடல்நிலை சரி இல்லையா என்ன ஆயிற்று உங்களுக்கு என்று நலம் விசாரிக்கிறார்கள்.
அகில இந்திய பயணத்தை முடித்துவிட்டு மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்த சமயத்தில் சிவா என்ற ஒரு மோசமான புகைப்பட நிபுணர் மூலம் மிகவும் மோசமாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று விளக்கம் அளித்தாலும் பெண்களின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இதனால் நான் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். இந்த கடிதம் கிடைத்தவுடன் எனது ஒரு அழகான புகைப்படத்தை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டு இழந்த என் புகழை மீட்டுத் தர வேண்டும்.
இல்லையெனில்; மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் புகழையும் செல்வாக்கையும் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு, ஒரு மோசமான புகைப்படத்தை பதிவிட்டு அதன்மூலம் என் புகழுக்கு களங்கம் விளைவித்த தங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்.
இப்படிக்கு
செந்தில் குமார்
சென்னை
*
அன்புள்ள செந்தில்குமார்
நீங்கள் வழக்கறிஞர்தானா என ஐயப்படுகிறேன். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அறிவிக்கை சட்டத்தின் மொழியில் இல்லை
சட்டத்தின் மொழியில் வழக்கறிஞர் அறிவிக்கையை எழுதுவது எப்படி என்பதை கீழ்க்கண்ட அறிவிக்கையை நாலைந்து முறை படித்துப் புரிந்துகொள்ளவும்
வழக்கறிஞர் விஜயனின் வக்கீல் நோட்டீஸ்
அதை ஒரு முன்னுதாரணமாக சென்னை வழக்கறிஞர் மன்றத்தில் பயில்வதற்கு ஆவன செய்யவும்
பிக்கு
தங்கள் கோரிக்கையை ஏற்று அழகிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை வண்ணதாசன் அவர்களுக்கு ”விஷ்ணுபுரம்” விருது வழங்கப்படுவதை அறிந்து அவருடைய வாசகர்கள் அவரைக் கொண்டாடி எழுதும் கடிதங்களை தங்கள் தளத்தில் வெளியிட்டுவருவதை தினமும் படித்து மகிழ்ச்சி அடைகிறேன். நானும் அவரின் சில சிறு கதைகளை (தனுமை, நிலை, சமவெளி, போய்க்கொண்டிருப்பவள்…) வலைத்தளத்தில் சமீபத்தில்தான் படித்து ரசித்தேன்.எனக்கு மற்ற வாசகர்கள் போல் நுணுக்கமாக விமர்சித்து எழுத தெரியவில்லை. இருந்தாலும் இவரைப் போன்றவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றுதான் படித்த பிறகு தோன்றுகிறது.
இப்போது எனது கேள்வி வண்ணதாசனின் படைப்புகள் பற்றி அல்ல, அவரின் வாசகர்கள் பற்றி. இவரின் சில வாசகர்கள் தங்கள் எழுத்துக்கள், நிலைப்பாடுகள் அவர்களுக்கு சற்றும் ஏற்புடையது அல்ல என்றாலும் வண்ணதாசனை விருதுக்கு தேர்ந்து எடுத்ததற்காக (மட்டும்தான்) தங்களையும் பாராட்டி இருக்கிறார்கள். இது எனக்கு சற்று விளங்காத புதிராக தெரிகிறது. இவ்வளவு மூர்க்கமாக தங்கள் எழுத்துக்களை இவரின் சில வாசகர்கள் நிராகரிப்பது ஏன் ?
அன்புடன்,
அ .சேஷகிரி.
*
அன்புள்ள சேஷகிரி
இலக்கியப்படைப்புகளில் இருவகையான ‘உள்ளடக்கங்கள்’ உண்டு. ஒன்று கருத்தியல் சார்ந்து வெளிப்படையாக நிற்பவை. இன்னொன்று, வடிவம் மற்றும் மொழியில் கரைந்திருக்கும் பார்வைக்கோணம். அதனடிப்படையில் சில எழுத்தாளர்களை அணுகுபவர்கள் வேறு சில எழுத்தாளர்களிடம் விலக்கமும் கொள்ளக்கூடும்.
வண்ணதாசனின் எழுத்தில் இருந்து இவ்வாசகர்கள் பெறும் ஏதோ ஒரு அம்சம் என் எழுத்துக்கு மாறானது என்று மட்டுமே பொருள். அப்படி எப்போதும் உலக இலக்கியத்தில் நிகழ்துகொண்டுதான் இருக்கிறது
ஜெயமோகன்
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுர விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வந்துகொண்டே இருக்கும் கடிதங்களைப்பார்க்கிறேன். அவருக்கு இவ்வளவு அர்ப்பணவாசகர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதையெல்லாம் எழுத ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவேண்டியிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம் வண்ணதாசனுக்கே இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்
ஜெயராஜ்
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய வாசகர்கள் எழுதும் கடிதங்களில் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். அவர்கள் நீங்கள் சொல்லிய அவருடைய எதிர்மறையான கோணத்தை கவனிக்கவே இல்லை. அவர்கள் அவரை வாழ்க்கையின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்திய, நெகிழ்ச்சியூட்டிய எழுத்தாளாராக மட்டுமே வாசிக்கிறார்கள்
இந்த வெகுஜன வாசிப்பை எவராலும் மாற்றமுடியாது. அல்லது மக்கள் அவரை முழுக்க மறந்தபின்னர் மீண்டும் விமர்சகர்கள் புதிய வாசிப்பை உருவாக்கி எடுக்கவேண்டும். ஜெயகாந்தனை அக்னிப்பிரவேசம் வைத்துத்தான் வாசிப்பார்கள். எங்கோ யாரோ யாருக்காகவோ போன்ற அற்புதமான கதைகளை எவரும் வாசிக்கமாட்டார்கள். மறுபிறப்பு புதுமைப்பித்தனுக்கு நிகழ்ந்தது
சாரங்கன்
==========================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
பகுதி இரண்டு
: திசைசூழ் செலவு
[ 1 ]
உஜ்ஜயினி நகரின் தெற்குபுறக்கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால் தடங்கள் அழிக்கப்பட்டு அன்று புதிதெனப்பிறந்திருந்தது. இருமருங்கும் அரண் அமைத்திருந்த பெருமரங்கள் காலைக்காற்றில் இருளுக்குள் சலசலத்தன. அன்னசாலைக்குள் எரிந்த விளக்கொளி அதன் அழிச்சாளரங்கள் வழியாக செந்நிறப்பட்டு விரிப்பு போல முற்றத்தில் நீள்சதுரவடிவில் விழுந்து கிடந்தது.
அன்னசாலையின் சரிந்த மரப்பட்டைக்கூரையின் இடுக்குகள் வழியாக எழுந்த விளக்கொளியில் அடுமனைப்புகை அசைந்தது. அங்கு அமர்ந்து உண்பவர்களுக்கு புலரிக்குபின்னரே உணவளிக்கப்பட்டது. முதற்காலையிலேயே கோட்டையிலிருந்து வெளியேறிச்செல்பவர்களுக்குரிய உலர்உணவுதான் அப்போது அளிக்கப்பட்டது. கோட்டையின் விளிம்பை ஒட்டிச்சென்று அகழியில் பொழிந்த இரு நீரோடைகளில் நீராடிய வணிகர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டபடி அன்னசாலை நோக்கிச் சென்று கூடினர்.
முகப்பிலிருந்த பெருமுற்றத்தில் கோட்டை மூடியபின்னர் வந்து சேரும் வணிகர்களின் ஏவலரும் விலங்குகளும் தங்குவதற்கான அகன்ற வெளி இருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான வண்டிகளும் குதிரைகளும் அத்திரிகளும் காளைகளும் அவிழ்க்கப்பட்டு வண்டிச்சக்கரங்களிலும் தறிகளிலும் கட்டப்பட்டிருந்தன. காலைச்சந்தடியில் விழித்துக்கொண்டு எழுந்த விலங்குகள் வால்சுழற்றி சாணியிட்டு நீர்பெய்தபின் இரவில் மென்று மிச்சமிருந்த வைக்கோலை கடிக்கத் தொடங்கின. கழுத்துமணியோசைகள் களமெங்கும் ஒலித்தன. பழைய மரவுரிகளால் உடலை முற்றிலும் மூடி மூட்டைகள் போல ஒடுங்கித் துயின்றுகொண்டிருந்த பணியாட்கள் அவ்வொலிக்கு மேலும் உடலை குறுக்கிக் கொண்டார்கள்.
முற்றத்தின் இருபக்கங்களிலும் நண்டுக்கொடுக்குபோல நீண்ட கொட்டகைநிரையில் வரிசையாக இடப்பட்ட நார்க்கட்டில்களில் தலையருகே பணப்பொதிகளுடன் அயல்வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களின் உடைமைகளைக் காக்கும் காவலர் கைகளில் உருவிய வாள்களுடன் தலைமாட்டில் உறங்காமல் அமர்ந்திருந்தனர். காலையில் கிளம்பிச்செல்லும் வணிகர்கள் சிலர் கோட்டைக்குள் இருந்து திட்டிவாயிலினூடாக தங்கள் பொதிகளுடன் வெளிவந்துகொண்டிருந்தனர்.
அன்னசாலையின் மையப்பெருங்கூடத்தில் பலவண்ண உடையணிந்த வணிகர்கள் ஈரக்குழலின் நீர் ஆடைகளில் சொட்ட, இளங்குளிருக்கு உடல்குறுக்கி நடுங்கியபடி நின்றிருந்தார்கள். கண் தெளியத்தொடங்காத காலையில் வெண்குதிரைகளும் வெளிர்நிற ஆடைகளும் மட்டுமே துலக்கமாகத் தெரிந்தன. உலோகப்பரப்புகள் மட்டும் விண்ணிலிருந்து ஒளியை அள்ளித்தேக்கியிருந்தன. உணவின் மணம் எங்கும் நிறைந்திருந்தது. ஊடாக வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த உருளைப்பிள்ளையாருக்கு முன் காலையில் நடந்து முடிந்திருந்த வேள்விக்கொடையின் எரிநெய் மணமும் எண்ணைக்காரலும் கலந்து வீசியது.
பருப்புடன்சேர்த்து வறுத்துப்பொடித்து நெய்யுடன் உருட்டிய கோதுமை உருளைகளும் வேகவைத்து உலரவைக்கப்பட்ட கிழங்குகளும் வெல்லத்துடன் பொடித்து உருட்டப்பட்ட கொள்ளும் அவலும் வணிகர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை கரியிலைகளில் நன்றாகச் சுற்றிக்கட்டி மேலே பாளைப்பொதியால் மூடி நீர்புகாத பொதிகளாக அளித்தனர். பெற்றுக்கொண்ட வணிகர்கள் அங்கிருந்த வெண்கலக்குடங்களில் தங்கள் நாணயங்களை போட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.
இசைச்சூதரும் வழிப்போக்கரும் தனிநிரையில் நின்றிருந்தனர். அவர்களுக்குரிய உணவில் உலரச்செய்யப்பட்ட ஊனும் மீனும் வறுத்து இடித்துச் சேர்க்கப்பட்டிருந்தது. அவற்றை நீரும் காற்றும் புகாவண்ணம் கட்டி அளித்தனர். பொதிசூத்திரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பிறிதொரு இடத்தில் அதே உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் கோருமளவுக்கு உணவளிக்கவேண்டுமென்று நெறியிருந்தது. அடுத்த அன்னசாலையைக் கணக்கிட்டு அவர்கள் உணவு பெற்றுக்கொண்டார்கள்.
அந்தணருக்கும் முனிவர்களுக்குமுரிய நிரைகளில் அவ்வேளையில் அயல்பயணம் செல்லும் அந்தணர் ஓரிருவரே நின்றிருந்தனர். முனிவர்களென எவருமில்லை. அவர்களுக்கு நெறிநின்று அந்தணர் சமைக்கும் எளிய நோன்புணவு அளிக்கப்பட்டது. வெல்லமோ உப்போ சேர்த்து வறுத்து உருட்டப்பட்ட கோதுமையும் அரிசியும். நெல்லிக்காயும் உப்பும் கலந்த பொடி. அவற்றை வாங்கி அளிப்பவனையும் அரசனையும் வாழ்த்தி அவர்கள் முற்றத்தை அடைந்தனர். திரும்பி நகர்நோக்கித் திரும்பி அந்த மக்களை மும்முறை வாழ்த்திவிட்டு தங்கள் வழிதேர்ந்தனர்.
கையில் வாங்கிய நான்கு பொதிகளையும் கொடிபின்னி அமைத்த தொங்குகூடைக்குள் போட்டு தோளில் இட்டபின் பைலன் திரும்பி நகரை நோக்கினான். அந்நகருக்குள் நுழைந்தோமா என்றே அவனுக்கு ஐயமாக இருந்தது. பன்னிரு நாட்களுக்கு முன்னர்தான் அவன் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தான். அந்நகரின் வேதநிலைகள் நான்கில் தங்கியிருந்தான். மூன்றுவேள்விகளில் கலந்துகொண்டான். நான்கு வேதச்சொல்லவைகளில் அமர்ந்தான். பன்னிருநாளும் சொற்களங்களில் ஈடுபட்டிருந்தான். ஆனால் அங்குள்ள எந்தப்பொருளையும் எம்மனிதரையும் தொடாமல் விலகி வெளிச்செல்வதாகத் தோன்றியது.
“அருள், பொருள், புகழ் மூன்றும் திகழ்க! என்றும் நூலோர் நாவில் விளைக! நீடுசெல்கொடிவழிகள் நினைப்பில் பொலிக! ஆம் அவ்வாறே ஆகுக!” என அவன் அந்நகரை வாழ்த்தினான். பின்னர் திரும்பி தெற்குநோக்கிய சாலையில் நடக்கத்தொடங்கினான். சாலையெங்கும் வணிகர்களின் தலைப்பாகைகளின் வண்ணங்களும் வண்டிச் சகடங்களின் இரும்புப்பட்டைகளும் உலோகக்குமிழ்களும் ஒளிகொண்டு அசைந்தன. மணியோசைகளும் ஆழியரவங்களும் குளம்படிகளும் காலடிகளும் அச்சுரசல்களும் அணிகுலுக்கங்களும் ஆடைச்சரசரப்பும் கலந்து சாலையிருளை நிறைத்துப் பெருகிச் சென்றுகொண்டிருந்தன.
இரவில் அவன் நன்கு துயின்றிருக்கவில்லை. எனவே தலை சுழன்று மெல்லிய குமட்டல் இருந்தது. கால்களும் உறுதியுடன் மண்ணில் படியவில்லை. அந்நகரிலிருந்து கிளம்பும் முடிவையே பின்னிரவில்தான் எடுத்தான். அம்முடிவை நோக்கி அவன் வந்துகொண்டிருப்பதை அவன் அறியவில்லை. எண்ணி உழன்று சலித்து மீண்டும் எழும் எண்ணத்துளி கண்டு அதைச்சென்று தொட்டு அது வளர்ந்து நீண்டு உலகைவளைக்கத் துழாவி ஓய்ந்து சுருள்கையில் மீண்டும் சலித்து புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்த ஒருகணம் ஏன் இன்னமும் இங்கிருக்கிறேன் என்ற எண்ணம் எழுந்தது.
ஆம், அங்கு ஏன் இருக்கவேண்டும்? அங்கு என்ன எஞ்சியிருக்கிறது. ஒழிந்த கலம். அல்லது பறவைகள் எழுந்து சென்ற மரம். மிச்சில்கள், எச்சங்கள். வெறும் வாசனைகள். அவன் அக்கணமே எழுந்து தன் ஆடைப்பொதியை எடுத்துக்கொண்டு நுனிக்காலில் நடந்து குடிலின் கதவுப்படலைத் திறந்து வெளியே தேங்கியிருந்த இருட்டுக்குள் இறங்கி அதன் குளிரை உடலெங்கும் ஏற்று நடக்கலானான். எங்கு செல்வதென்று அவன் எண்ணியிருக்கவில்லை, அவன் வந்தது வடக்கிலிருந்து என்பதனால் செல்வது தெற்காகவே இருக்கமுடியுமென கால்கள் முடிவெடுத்தன.
வேதச்சொல்லவையில் அவன் ஆசிரியராக பீடத்தில் அமர்ந்திருந்த பெருவைதிகரான பார்க்கவரிடம் கேட்டான் “வேதங்கள் விழைவை நிறைவுசெய்கின்றன என்கிறீர்கள், ஆசிரியரே. விழைவை அறிய அவை உதவுகின்றனவா?” அவர் அவனை புருவம் சுளிக்கக் கூர்ந்து நோக்கி “நீ கேட்பது என்னவென்று உணர்கிறாயா?” என்றார். “விடாய்க்கு நீரே நிறைவளிக்கும். விழைவுக்கு விழைபொருளே விடையாகும். தத்துவம் அல்ல.” அவருடைய மாணவர்கள் சிலர் சிரித்தனர்.
“வடக்கே கிருஹ்யபாதம் என்னும் ஓர் ஊரில் வைக்கோர்போர்களும் கூரைகளும் விளைநிலங்களும் தீப்பற்றி எரிந்துகொண்டே இருந்தன, ஆசிரியரே. அங்குள்ளவர்கள் நீரும் மண்ணும் இட்டு அதை அணைத்தனர். அதை அணைப்பதற்கென ஓர் இளைஞர் படையையே உருவாக்கினர். அங்கு சண்டகர் என்னும் முனிவர் சென்றார். மூடர்களே, எதனால் நெருப்பெழுகிறதென்று உணராமல் அதை எத்தனைகாலம்தான் அணைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று கேட்டார். மறுமுறை எரிகோள் நிகழ்கையில் அது எப்படி எங்கிருந்து வருகிறது என நோக்கும்படி ஆணையிட்டார்.”
“அதன்பின் அவர்கள் கண்டடைந்தனர், அவ்வூரின் அருகே காட்டின் விளிம்பில் இருக்கும் கரும்பாறை ஒன்றன் குழியில் அனல் ஊறி அது கொதித்துக் கொண்டிருந்தது. அதன்மேல் விழும் சருகுகள் அனலாயின. அவை பறந்து விழுந்து ஊர் எரிந்தது. அந்த அனல்குழிக்குச் சுற்றும் பாறைகளால் வேலியமைத்துக் காத்தனர். அனலிடர் இல்லாமலாயிற்று” என்று பைலன் சொன்னான். “விழைவின் ஊற்றை அறியாமல் விழைவை வெல்ல முடியாது.”
“ஏன் வெல்லவேண்டும்?” என்று பார்க்கவர் கேட்டார். “பசியும் விடாயும் காமமும் போல விழைவும் மானுடனின் முதலியல்பு. அவனை ஆக்கிய விசைகள் அதில் தொழிற்படுகின்றன. அதை அடைவதே இன்பம். இன்பம் மானுடருக்கு தெய்வங்களின் கொடை. அவ்வின்பமே மானுடவாழ்க்கையின் பொருள்.”
“விழைவு நிறைவேறுமென்று உறுதியிருக்கும் என்றால் மட்டுமே நீங்கள் சொல்வது மெய். விழைவுகள் அனலென தொட்டவற்றை எல்லாம் உண்டு பெருகுபவை. மாமன்னர்களுக்குக் கூட அவற்றில் சிறுதுளியேனும் நிறைவுறுவதில்லை. நிறைவுறாத விழைவே துயரம். அத்துயரத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் மானுடர். எங்கும் நான் காண்பது அத்துயர் நின்று ததும்பும் முகங்களை மட்டுமே. அத்துயரை வெல்லாமல் மானுடனுக்கு மீட்பில்லை” என்றான் பைலன்.
பார்க்கவர் “வேதவேள்வி அனைத்து விழைவுகளையும் நிறைவுசெய்யும் என்கின்றன முன்னோர் சொற்கள்” என்றார். பைலன் “விழைவுகளை நிறைவுசெய்ய எவற்றாலும் இயலாது, ஆசிரியரே. அவை மூன்றுதெய்வங்களுக்கும் மேலே எழுந்து நிற்கும் ஆணவத்தை பீடமாகக் கொண்டவை” என்றான். “இது வேதமறுப்பு. இவ்வேதநிலையில் இத்தகைய சொல்லெழ இடமில்லை” என்று பார்க்கவர் சினத்துடன் சொன்னார்.
பைலன் “அறிந்துக் கடக்காமல் துயரை வெல்ல முடியாது, ஆசிரியரே. மானுடம் துயர்சுமந்து கூன்கொண்டிருக்கிறது. அதற்கு மீட்பென வருவது மெய்யறிவாகவே இருக்க முடியும். அனல்மேல் நெய்பெய்து அணைக்கவியலாது” என்றான். “உன் வயதென்ன?” என்றார் பார்க்கவர். “ஒன்பது” என்றான். “ரிக்வேதத்தை முழுதறிந்த மாவைதிகரான வசு என் தந்தை. அவரிடம் நான் வேதங்களைக் கற்றேன்.” பார்க்கவர் இகழ்ச்சியுடன் “ஆனால் வாழ்க்கையைக் கற்றுத்தேர்ந்ததுபோலப் பேசுகிறாய்” என்றார்.
“ஆம், வாழ்க்கையையும் கற்றேன். வாழ்க்கையின் அடர்சுருக்கமே காவியங்கள். நான் இரண்டாண்டுகாலம் காவியங்களில் ஆழ்ந்திருந்தேன்.” என்றான். பார்க்கவர் “அக்காவியங்களின் மையப்பொருள் வேதமே என்றறியாமல் நீ கற்றதுதான் என்ன?” என்றார். பைலன் சலிப்புடன் தலையை அசைத்து “நான் வேதத்தை மறுக்கவில்லை. வேதத்தால் பயன்கொள்வதெப்படி என்றே வினவுகிறேன். வழிபட்டு இறையெழுப்பி அருள்கொள்ளவேண்டிய தெய்வச்சிலைகளை நீங்கள் வயல்கொல்லையில் காவல்பாவைகளாக நிறுத்திக்கொள்கிறீர்களோ என்று ஐயம் கொள்கிறேன்” என்றான்.
சொல்மீறிவிட்டதை அக்கணமே அவன் உணர்ந்தான். பார்க்கவரின் விழிகள் சுருங்கின. “நீ இங்கிருந்து செல்லலாம்” என்று அவர் இறுகிய குரலில் சொன்னார். “ஆயிரம் தலைமுறைகளாக வேதம் நாவிலிருந்து நாவுக்கென பற்றிப்படர்ந்து எரிந்து ஒளியாகி இங்கு நம் வரை வந்து சேர்ந்துள்ளது. மருந்தை அருந்துபவன் அதை முற்றறிந்துவிட்டு உட்கொள்வதில்லை. மருந்து உள்ளே என்ன செய்கிறதென்பதை மருத்துவனும் சொல்லிவிடமுடியாது. வேதமே சொல்லில் எழுந்த மருந்து. பிறவிப் பெருந்துயர் அழிக்கும் அமுது. அதைப் பேணுவதும் கொள்வதுமே நம் கடன். ஆராய்வதற்கு நாம் வேதம் வந்தமைந்த முனிவர்கள் அல்ல, எளிய மானுடர்.”
அதே சலிப்புடன் பைலன் அமர்ந்துகொண்டான். “இன்று ஓர் அலையென எழுந்துள்ளது இவ்வாணவம். வேதப்பொருள்கொள்ள தங்கள் சிறுமதியை புன்வாழ்வை கீழ்விழைவை மட்டுமே அளவீடாகக் கொள்கிறார்கள். சொல்விளக்கம் அளிக்கிறார்கள். பொருள்நீட்டிச் செல்கிறார்கள். அவர்கள் அடைவது வேதத்தை அல்ல, வேதமென மாயைகாட்டி வரும் தங்கள் ஆணவத்தை மட்டுமே. நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறுகொப்பரையில் அதை அள்ளிவருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே. அதை அவன் ஆறென காட்டத்தொடங்குகையில் வேதமறுப்பெனும் பெரும்பழி சூழ்கிறது அவனை.”
அவன் பெருமூச்சுடன் உடல்தளர்த்திக்கொண்டான். கண்களை மூடி அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “அளந்தமைந்த ஒலியே வேதம். அது கவணில் அமைந்த கல். அதன் இழுவிசையில் எடையில் வளைவில் முன்னரே அமைந்துவிட்டது இலக்கு. அதை அடைவதற்குரிய பயிற்சியே வேள்வி எனக்கொள்க!” அவை முடிந்ததும் அவன் பெருமூச்சுடன் எழுந்து தனியாக நடந்தான். அவனைச்சூழ்ந்துவந்த வேதமாணவர்கள் சிறுசொற்களில் எள்ளலும் இளிவரலுமாக பேசிக்கொண்டனர்.
அவன் இருளில் படுத்துக்கொண்டு தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டான். ஆணவமே தானா? ஆனால் இப்புவியை இவ்வானை இவ்வூழை அறிவேன் என எழும் ஆணவமில்லாது அறிவென்பது ஏது? அவ்வாணவத்தை தெய்வங்கள் விரும்பாதா என்ன? கொள்ளவும் வெல்லவும் அல்ல, அறிந்து அளித்துச் செல்ல எழும் விசை அல்லவா இது? இதை இழந்தபின் நான் என்னவாக ஆவேன்? இந்த வேதமாணவர்களைப்போல தர்ப்பை ஏந்தி காணிக்கை கோரி அலையும் எளிய உயிராக. அதைவிடத் தூயதல்லவா இந்த ஆணவம்.
காலையில் கருக்கிருட்டில் இறங்கியபோது அறியாமணம் கேட்டு அன்னையிடமிருந்து கிளம்பும் நாய்க்குட்டி என தன்னை உணர்ந்தான். குளிரில் இருண்டுகிடந்த நகர்ச்சாலைகளில் கொழுப்பெரியும் பெருவிளக்குகளின் ஒளி சிந்திக்கிடந்த வட்டங்களில் எரிந்தெழுந்தும் இருளில் அணைந்தமைந்தும் நடந்துகொண்டிருந்தான். திட்டிவாயில் வழியாக வெளியே சென்றபோது “மீண்டுமொரு கூடு. உதிர்ப்பவை என்னில் எஞ்சாமலாகுக! வருபவற்றுக்கு நான் திறந்திருப்பேனாக!” என்று சொல்லிக்கொண்டான்.
[ 2 ]
பின்னுச்சிப் பொழுதில் வெயிலாறத் தொடங்குவதுவரை பைலன் நடந்துகொண்டிருந்தான். வழியில் ஒரு சிற்றோடைக்கரையை அடைந்ததும் அமர்ந்து தன் கூடையை இறக்கி பொதியைப் பிரித்து உணவுருளைகளில் ஒன்றை எடுத்து விரியிலை ஒன்றில் வைத்து ஓடைநீரை அதில் ஊற்றி ஊறவைத்தான். அது நீரை வாங்கி பெருக்கத் தொடங்கி பின் விண்டு விழுந்ததும் இலைத்தொன்னையில் குடிக்க நீர் மொண்டு அருகே வைத்தபின் உண்ணலானான்.
தனிமையில் தலைக்குமேல் எழுந்த பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டே அவ்வாறு உண்ணும்போது உளநிறைவொன்றை உணர்ந்தான். குருநிலைகளில் வேதசாலைகளில் எப்போதுமிருக்கும் அமைதியின்மையை அக்காட்டில் உணரமுடியவில்லை. பறவைக்குரல்களும் பசுமையும் சூழ அமர்ந்திருக்கையில் தன்னிடமிருந்து சிறகடித்தெழுந்து வானில் அலையும் அனைத்தும் மீளவந்து கூடணைந்து அமைதிகொள்வதாகத் தோன்றியது. நகரங்களல்ல, காடே தன் இடம் என்னும் எண்ணம் எழுந்தது.
அவன் கைகழுவச் செல்கையில் எதிர்ப்புறம் நீரொழுக்கின் மேல் பகுதியில் சூதன் ஒருவன் புதர்களுக்குள் இருந்து எழுந்து வந்து கைகழுவும்பொருட்டு குனிந்தான். அவனைக்கண்டதும் நிமிர்ந்து நின்று “நீங்கள் கைகழுவிக்கொள்ளுங்கள் உத்தமரே, நான் ஊன் தின்ற கையன்” என்றான். அவனை வெறுமனே நோக்கிவிட்டு பைலன் கைகழுவக்குனிந்தபோது “ஆனால் எனக்குப்பின்னால் விழிக்குத்தெரியாத பலநூறு சூதர்கள் அட்டவூன் படிந்த கைகளை கழுவுகிறார்கள். அதற்குமப்பால் பலநூறு வேடர்கள் பச்சையூன் படிந்த கைகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
பைலன் திகைப்புடன் எழுந்துகொண்டான். வெடித்துச்சிரித்தபடி சூதன் “அறிவிலாப்பெருக்கு. தேர்விலாதது. அளிப்பவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றுக்கு தூய்மையென ஏதுள்ளது?” என்றான். அவன் கண்களை நோக்கி ஒருகணம் நின்றபின் பைலன் குனிந்து தன் கைகளை கழுவத்தொடங்கினான். அவனும் கைகளைக் கழுவியபடி “அந்தணருக்குரிய வேதமெய்மையைத் தேடிக் கிளம்பியவர் நீங்கள் என எண்ணுகிறேன், உத்தமரே” என்றான்.
எரிந்தெழுந்த சினத்துடன் பைலன் அவனை ஏறிட்டு நோக்கினான். “தாங்கள் மெய்யுசாவிய அந்தச் சொல்லவைக்கு வெளியே நான் அமர்ந்திருந்தேன்” என்றான் சூதன். “என்பெயர் சண்டன்.” பைலன் “அங்கு ஏன் வந்தீர்?” என்றான். “வேதநிலைக்கு ஏன் வருவார்கள் சூதர்கள்? உணவுக்காகத்தான்” என்றபின் “இங்கே தங்களைப் பார்ப்பேன் என எண்ணவில்லை. ஆனால் பார்த்தபின் தாங்கள் கிளம்பியது இயல்பே என்று தோன்றியது.”
“ஏன்?” என்று பைலன் கேட்டான். அவனுடைய இயல்பான புன்னகை அவன் தயக்கத்தை அகற்றியது. “தலைமைவைதிகர் தங்களை கிளம்பும்படிதானே ஆணையிட்டார்?” என்றான் சண்டன். பைலன் சிரித்துவிட்டான். கைகளை உதறியபடி “அவர் எளிய வேதியர்” என்றான். “வேதியர்களே எளியவர்கள் அல்லவா?” என்றான் சண்டன். “ஏன்?” என்றான் பைலன் புன்னகையுடன். “செயல்கள் அனைத்துக்கும் இங்கேயே நிகரான விளைவுண்டு என நம்புபவர்கள் எளியவர்களன்றி எவர்?”
“ஏன் செயலுக்கு எதிர்விளைவு இல்லையா என்ன?” என்றான் பைலன். “உண்டு, ஆனால் இங்கு என எவர் சொன்னது? பாதாளத்தில் விளைவெழக்கூடாதா? தேவருலகில் எழலாகாதா? ஊழ் பணம் கொடுத்தால் தராசைத்தூக்கும் வணிகனா என்ன? அது கள்ளுண்ட குரங்கு அல்லவா?” என்று சண்டன் சொன்னான். “நல்லவேளையாக நீங்கள் தப்பினீர்கள். நீங்கள் செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.”
“எங்கு?” என்றான் பைலன். “எங்கும். செல்லவேண்டும் என முடிவெடுப்பதே தேவை. செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.” அவன் தன் மரவுரி மூட்டையை தோளில் மாட்டிக்கொண்டான். மறுதோளில் முழவை அணிந்தான். கைத்தடியை எடுத்துக்கொண்டு “நான் செல்லலாமென எண்ணுகிறேன்” என்றான். “நானும் வருகிறேன். எனக்கு வழிநடைச்சொல் கேட்கவேண்டுமெனத் தோன்றுகிறது.”
“சூதர்பணியே வழிநடைமொழிவுதான்” என்று சண்டன் சொன்னான். “வழிகளில் மட்டுமே அவை பொருள்படுகின்றன போலும். இல்லங்களில் எங்களுக்கு சொல்வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை.” பைலன் தன் பொதிக்கூடையை எடுத்து அணிந்துகொண்டு கிளம்பினான். “வழிகளில் செல்பவர் மூவர். அந்தணர், சூதர், வணிகர். அந்தணர் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். சூதர் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறார்கள். வணிகர் வழிகளிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சண்டன்.
“நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று பைலன் கேட்டான். “அவந்தியிலிருந்து நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலைக்குத்தான் வந்தேன். அங்கே வேதநிறைவுக்கொள்கையின் மேல் அமர்ந்து சௌரஃப்யர் தன் மாணவர்களுடன் சொல்லாடி மகிழ்ந்திருக்கிறார். அவர் அவையில் அமர்ந்திருந்தேன். சாந்தீபனி குருநிலையில் முளைத்து இளைய யாதவன் சொல்லாக எழுந்த வேதநிறைவு மெய்மையின் சொல் சொல்லென எடுத்து வைத்து ஆராய்ந்தார். வேதங்களை அவர் செம்மறியாடுகள் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உணவூட்டிப் பேணி வளர்த்து ஆண்டுதோறும் மயிர்வெட்டி கம்பளியாக்கி போர்த்திக்கொள்கிறார்.”
வாசலுக்கு இப்பால் நின்று நான் உரக்கக்கூவிச் சொன்னேன், “முனிவரே, நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதை வேதநிறைவு என்கிறீர்கள், நான் அதை வேதத்தின் மயிர் என்றே சொல்வேன்.” அவர் என்னை “வெளியே போ இழிமகனே” என்றார். “நன்று, இதை நீங்கள் எனக்கு உணவிட்டபின் சொல்வதே முறை” என்றேன். அவர் “நீ தத்துவங்களைக் களியாடும் தகுதிகொண்டவனா? மூடா!” என்றார். “நான் களியாடவில்லை முனிவரே, மயிர்கள் செம்மறியின் உயிரிலிருந்து முளைப்பவை அல்லவா? தன்னை பெருக்கிக்கொள்ளவும் போர்த்திக்கொள்ளவும்தானே அது மயிர்கொள்கிறது?” என்றேன்.
சொல்லச்சொல்ல எனக்கு அந்த ஒப்புமையின் கூர்மை வியப்பளித்தது. “நோக்குக, செம்மறியின் உயிரும் உள்ளமும் மயிரில்தான் வெளிப்படுகிறது. அது சினக்கையிலும் மகிழ்கையிலும் மயிர்நிரை சிலிர்க்கிறது. இளம் ஆடுகளை அது தன் மயிரழகால் அல்லவா கவர்கிறது?” என்றேன். தன்னை அறியாமல் சற்றே செவிகொடுத்த சௌரஃப்யர் எழுந்து “அவனை வெளியே துரத்துங்கள்!” என்று கூச்சலிட்டார். “நானே என்னை வெளியே துரத்திக்கொள்கிறேன். அதற்கான ஊதியத்தையும் எனக்கே அளியுங்கள்” என்றேன்.
அவர்கள் அளித்த உணவுக்குப்பின்னர்தான் உங்கள் குருநிலைக்கு வந்தேன். இவர்கள் தூயஅளவைவாதிகள். இவர்களுக்கு வேதநிறைவு பேசுபவர்மேல் வெறுப்பு. அவர்களைக் களியாடி சில செய்யுட்களைப்பாடி இவர்களிடம் பொருள்கொள்ளலாம் என்று எண்ணினேன். நீங்கள் சொல்லாடி எழுந்துசென்றபின் பார்க்கவர் துயருடன் சென்று தன் குடிலில் அமர்ந்தபோது சென்று இந்த செம்மறியாட்டின் கதையைப் பாடினேன். சிரித்துவிட்டார்.
“இவர்களை என்ன சொன்னீர்?” என்று சிரித்தபடி பைலன் கேட்டான். “இவர்கள் எனக்குப் பரிசு அளித்தபின்னர்தான் வாழ்த்தினேன். ஏனென்றால் வாழ்த்துவது என் தொழில். வைதிகர்களே, அடுமனையில் எரிவதும் அனலே என்றுணர்வது மெய்மை. அடுமனையிலேயே அனலெரியவேண்டும் என எண்ணுவது உலகியல் உண்மை. அனலென்பது அடுமனையே என்பது நடைமுறை அறிவு. பிரம்மத்தில் இருந்து தெய்வங்கள் எழுவது போல மெய்மை உலகியலுண்மை ஆகிறது. தெய்வங்களிலிருந்து வைதிகர் தோன்றுவதுபோல உலகியலுண்மை நடைமுறை அறிவாக ஆகிறது. அது வாழ்க என்றேன்.”
“அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று பைலன் சிரிப்பை அடக்கியபடி கேட்டான். “அவர்கள் அதற்கும் எனக்குப் பரிசளித்தார்கள். நுண்மையான சொல்லறிவு கொண்டவர்கள். அதைப்பெற்றுக்கொண்டு நான் உடனே கிளம்பிவிட்டேன்.” பைலன் “ஏன்?” என்றான். “நான் சொன்னதை அங்கே மூங்கில்மேல் ஒரு கிளி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அது சற்றுக்கழித்து நான் சொன்னதில் ஏதேனும் தீய உட்பொருளைக் கண்டடைந்து அவர்களுக்கு சொல்லிவிடக்க்கூடும்.”
பைலன் சிரிக்கத் தொடங்கினான். “அந்தக்கிளி அவர்களின் வேதநிலைக்கு வெளியேதான் பெரும்பாலும் அமர்ந்திருக்கிறது. அதற்கு அவர்கள் உணவளிக்கிறார்கள். அவர்கள் ஓதும் வேதச்சொல்லைக் கேட்டு அது திருப்பிச் சொல்கிறது. ஆனால் அதன் அலகுகளால் சொல்லப்படும்போது வேதச்சொற்கள் திரிந்து வசைச்சொற்களாக ஆகிவிடுகின்றன. முதலில் நான் அதைக்கேட்டு திகைத்தேன். அதன்பின்னர்தான் அவை வேதச்சொற்கள் என்று புரிந்துகொண்டேன். வெளியே வருவது எதுவாக இருந்தாலும் உள்ளே செல்வது வேதம் அல்லவா?”
பைலன் சிரித்துக்கொண்டே இருந்தான். “முன்பொருமுறை நான் காட்டுமரத்தின்மேல் அமர்ந்து தூங்கிவிட்டேன். விழித்துக்கொண்டு சப்புக்கொட்டியபடி எச்சில்துப்பினேன். கீழே அவ்வேளையில் இரு அந்தணர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள் என யார் கண்டது? அவர்கள் தங்கள் மூட்டையைப் பிரித்துவைத்து பலநாள் பசியுடன் விரைந்து வேதச்சொல்லுரைத்து அள்ளி உண்பதற்காக கையெடுத்த வேளை. தீச்சொல்லிட்டுவிடுவார்கள் என்று திகில்கொண்டதும் நான் கிளிபோல ஓசையிட்டுக்கொண்டு மேலே ஒடுங்கிக்கொண்டேன். மூத்த அந்தணன் ‘தாழ்வில்லை, அது கிளியின் எச்சமே’ என்றான். இளையவன் ‘இருந்தாலும் எச்சமல்லவா?’ என்றான். மூத்தவன் ‘அக்கிளி உண்ட உயர்வான கனிகளை எண்ணுக’ என்றான். இளையவனுக்கு உளநிறைவு.”
பைலன் சிரித்தபடி தலையை அசைத்து “நீர் அதை வேண்டுமென்றே கூட செய்திருப்பீர்” என்றான். “இல்லை என்று சொல்லமுடியாது. அவர்களும் என்னைப் பார்க்கவில்லை என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் தூய்மையிழக்கும் அந்தணன் மெய்மையடைகிறான் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்ற உண்மை தூய்மையிழக்கும் உணவைத் துறந்தால் அதைவிட கீழான உணவே அடுத்தவேளைக்குக் கிடைக்கும் என்பது” என்றான் சண்டன். “அவ்விருவரும் வேதநிறைவுக்கொள்கையை கற்றறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் அக்கிளி உண்ட கனியை விளைவித்த மரம் உண்ட சேற்றைத்தான் உண்டுகொண்டிருந்தார்கள்.”
பைலன் ஒருகணம் கழித்து வெடித்துச் சிரித்தபடி “எல்லைகடக்கிறீர் சூதரே…. இதற்காகவே இளைய யாதவரின் படையாழியால் தலைகொய்யத் தகுதியானவர் ஆகிறீர்” என்றான். “நான் சென்று பார்த்தனின் கால்களைப் பணிவேன். அவர் என்னை காப்பார்” என்றான் சூதன். “ஏன்?” என்று பைலன் கேட்டான். “நஞ்சுக்கு நஞ்சே மருந்து என்கிறது சனகநூல்” என்றான் சூதன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
October 24, 2016
இரண்டு வெங்கட் சாமிநாதன்கள்
அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் கமலாதேவி அரவிந்தனின் கதைகளை வானளாவப்பாராட்டி வெங்கட் சாமிநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். மிகக்கறாரான விமர்சகர் என்று பெயர் பெற்றவர் அவர். இங்குள்ள பல மூத்த எழுத்தாளர்களைக் காய்ச்சி எடுத்தவர். அசோகமித்திரனுக்கு இலக்கியமே தெரியாது என்று எழுதிக்கொண்டே இருந்தவர். கமலாதேவி அரவிந்தனின் கதைகள் அசட்டுத்தனமானவை என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். வாசகர்கள் எதைக்கொள்ளவேண்டும்?
சீனிவாசன்
*
அன்புள்ள சீனிவாசன்,
இரண்டையும் கொள்ளவேண்டாம். நான் சொல்வதையும் அவர் சொல்வதையும் அந்தத் தொகுதியின் கதைகளை வைத்து பரிசீலியுங்கள். வாசகன் செய்யவேண்டியது அதுதான். நாங்கள் சொல்லும் முடிவுகள் ‘தீர்ப்புகள்’ அல்ல. அவை பரிந்துரைகள், கருத்துக்கள் மட்டுமே. வாசகன் தன்னுள் நிகழும் இலக்கியவிவாதத்திற்கு இக்கருத்துக்களைத் துணைகொள்ளவேண்டும். தன் மதிப்பீட்டு உருவாக்கத்திற்கு இவற்றை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இலக்கியவிமர்சனம் அதற்காகவே.
இலக்கியவிமர்சனம் இலக்கியவாசகனிடமே பேசுகிறது. இலக்கியத்தை வாசித்தாலும் ஒன்றும் புரியாதவனுக்கு இலக்கியவிமர்சனத்தால் ஒரு பயனும் இல்லை. வாசகனுக்குள் உருவாகும் அறிதலையும்உணர்தலையும் விரிவாக்கம் செய்ய, கூர்மைசெய்ய மட்டுமே இலக்கியவிமர்சனம் பயன்படும்.
இலக்கியவிமர்சனம் என்பது ஒரு சூழலில் இலக்கியம் சார்ந்த விவாதத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது. மாறுபட்ட கோணங்களில் வாசிப்பை உருவாக்குவது. இலக்கிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பது.
இலக்கியவிமர்சனம் வழியாக பல்வேறு கோணங்கள் ஒரு சூழலில் திறக்கப்பட்டு பலவகை மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமாகவே இலக்கியம் சார்ந்த பொதுவான மதிப்பீடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன
உதாரணமாக நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் எழுத்தாளர் மரபு பெரும்பாலும் க.நா.சுவின் பட்டியலை ஒட்டியது. ஆனால் அவர் முன்னிறுத்திய ஆர்.ஷண்முகசுந்தரம், ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் இன்றைய பொதுப்பட்டியலில் இல்லை. அவர் புறக்கணித்த ப.சிங்காரம் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.
இது ஏன் நிகழ்கிறது? எந்த விமர்சனத்திலும் முழுமையான மதிப்பீடு வெளிப்படமுடியாது. க.நா.சு கச்சிதமான வடிவம், கட்டுப்பாடான நடை, புறவயமான கூற்று ஆகியவற்றை முன்வைத்தவர். ப.சிங்காரத்தில் வடிவ ஒருமை இல்லை. கட்டற்ற நடை உள்ளது. அந்தரங்கமான மொழி பயில்கிறது. ஆகவே க.நா.சுவால் ப. சிங்காரத்தை ஏற்கமுடியவில்லை. ஆனால் எனக்கு க.நா.சுவின் அந்த அளவுகோல் முழுமையாக ஏற்புடையது அல்ல. ஆகவே நான் ப.சிங்காரத்தை வலுவாக முன்வைத்தேன்
அதேபோலத்தான் அசோகமித்திரனை வெங்கட் சாமிநாதன் நிராகரித்ததும். வெ.சாமிநாதன் கலையின் ‘பித்துநிலை’யின் உபாசகர். டிரான்ஸ் என அதைச் சொன்னார். ஆகவே அவருக்கு லா.ச.ரா ஆதர்சம். அசோகமித்திரனும் ஜெயகாந்தனும் உலகியலின் எழுத்தாளர்கள்.கீழானவர்கள்.
நான் வெங்கட் சாமிநாதனின் நண்பனாக இருந்தவன். என்னை அவர் எப்போதுமே பாராட்டிவந்தார். ஆயினும் நான் அவருடன் முரண்பட்டும் விவாதித்தேன். எனக்கு அசோகமித்திரன் முக்கியமான எழுத்தாளர். என்னைப்பார்க்கும்போதெல்லாம் வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பார்
இந்தப் பார்வைமாறுபாடு எப்போதுமே இலக்கியத்தில் உண்டு. இந்த விவாதச்சூழல் வழியாகவே இலக்கியவாசிப்பின் பலகோணங்கள் விரிகின்றன.இவை ஒரு சூழலில் முட்டிமோதித்தான் அழகியல்விவாதங்கள் நிகழ்கின்றன. பொதுமுடிவுகள் உருவாகின்றன
ஆனால் அதெல்லாம் கமலாதேவி போன்றவர்களின் கதைகளுக்குப் பொருந்துபவை அல்ல. ஒரு மிகமிக எளிய இலக்கியவாசகன் கூட அவை அசட்டு எழுத்துக்கள் என்று சொல்லிவிடமுடியும். அப்படி உணராதவனை நான் இலக்கியக்கேணையன் என்பதற்கு அப்பால் மதிக்கப்போவதில்லை.
அப்படியென்றால் என்ன ஆயிற்று வெங்கட் சாமிநாதனுக்கு? அவரது அந்த மதிப்புரையை முதுமையின் அசட்டுத்தனம் என்று மட்டும்தான் சொல்லமுடியும். வயதான காலத்தில் அவர் இதற்கும் கீழே இறங்கி மகா அசட்டுத்தனமான எழுத்துக்களை எல்லாம் கொண்டாடி எழுதிவைத்திருக்கிறார்.
வயதான விமர்சகனின் நரகம் ஒன்றுண்டு. அவன் எதன்பொருட்டு பேசினானோ அதெல்லாம் அவன் உருவாக்க்கிய விவாதங்களாலேயே ஏற்கப்பட்டு, இயல்பானகருத்துக்கலாக ஆகும்போது அவன் காலத்தில் பின்னகர்ந்துவிட்டிருப்பான். அவன் குரல் பொருளற்றதாக ஆகிவிட்டிருக்கும். வெங்கட் சாமிநாதன் வாழ்நாளெல்லாம் இடதுசாரி இலக்கியக்குறுக்கல்களுக்கு எதிராகப்போராடியவர். இடதுசாரி எழுத்துக்களின் கோணத்தை அவரால் மாற்றவும் முடிந்தது. ஆனால் அதன்பின் அவருக்கு இடமில்லாமல் ஆகியது
அந்தத் தனிமையில் அவர் தன்னை அணுகுபவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவராக ஆனார். அசோகமித்திரனை நிராகரித்த வெங்கட் சாமிநாதன் அல்ல, கமலாதேவிக்கு முன்னுரை எழுதிய வெங்கட் சாமிநாதன். இவர் தனிமையில் நொந்துபோய் வாசலைப்பார்த்து அமர்ந்திருக்கும் கிழவர். மதிப்பீடுகள் மழுங்கிப்போனவர்
அப்படி வெங்கட் சாமிநாதன் ஒரு கவிஞருக்கு எழுதிய வாழ்த்துக் கட்டுரையை வாசித்துவிட்டு அவருக்கு மிகக்கோபமாக எழுதினேன். ’graceful ஆக சாவது ஒரு கலை. அது உங்களுக்கு வாய்க்கவில்லை. பழைய வெங்கட் சாமிநாதன்மேல் சாணியை அடித்துவிட்டுதான் சாவீர்கள்’. அப்படிச் சொல்லும் உரிமை எனக்கிருந்தது. சாமிநாதன் அதற்கு வழக்கம்போல வேடிக்கையாகவும் நக்கலாகவும் ஒரு பதில் எழுதியிருந்தார்.
வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக்கொண்டே அவரைக்கொண்டாடும் ஒரு கும்பலும் உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு பழைய வெங்கட் சாமிநாதனைத் தெரியாது. இவற்றைக்கொண்டே அவரை அவர்கள் வரையறைசெய்து காலத்திற்கு அளிக்கிறார்கள்.
இந்தக் கடைசிக்கால வெங்கட் சாமிநாதனுக்கும் தமிழில இலக்கிய அழகியலின் கட்டுப்பாடற்ற தன்மையை, கலையின் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை, அறத்துக்கும் கலைக்குமான உறவை முன்வைத்து விவாதித்த எண்பதுகள் வரையிலான வெங்கட் சாமிநாதனுக்கும் சம்பந்தமே இல்லை.இன்று கமலாதேவியின் கதைகளை வாசித்துவிட்டு ஒருவன் அவற்றை வியந்துபாராட்டியவர் என வெங்கட் சாமிநாதனை மதிப்பிட்டான் என்றால் பழைய வெங்கட் சாமிநாதனை அவன் உச்சகட்டமாகக் கேவலப்படுத்துகிறான் என்றே பொருள்.
ஆகவே இரு வெங்கட் சாமிநாதன்களையும் வேறுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் கொள்ளவிரும்புவது அந்த ‘பாலையும் வாழையும்’ வெங்கட் சாமிநாதனை மட்டுமே. அடுத்த தலைமுறைக்குமுன் நிறுத்த விரும்புவதும் அவரைத்தான். அவர் நான் உட்பட ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொண்டு விமர்சித்து விவாதித்த ஒரு முதன்மையான தரப்பு.
ஜெ
***
வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி
வெங்கட் சாமிநாதனும் தமிழிலக்கிய மரபும்
வெங்கட் சாமிநாதன் கடிதங்கள்
சொல்புதிது வெசா சிறப்பிதழ்
வெ சா சில பக்கங்கள்
வெ சாமிநாதனின் நிகரமதிப்பு
வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4
வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல் 3
வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல் 2
வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்1
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நோபல் கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
உங்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தேன். சற்று பொறுத்து இருக்கலாம் என்று தோன்றியது. நீங்களே எழுதி விட்டீர்கள்.
பொதுவாக அமைதி பரிசு மட்டும் – ஒரு சமூகத்திற்கு செய்தியாக – சற்று அரசியல் கலந்து இருக்கும். மற்றபடி அறிவியல், பொருளாதாரம் மற்றும் இலக்கியத்தில் ஒரு தரம் இருக்குமோ என்றும், தரம் இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டுடன் ஒலிக்கும் (த்வனிக்கும் என்பதாக).
ஒருவேளை எல்லாவற்றிலும் சற்று அருகில் சென்றால், சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
பாப் டிலன் – இலக்கிய பரிசு – சற்று கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. சில வருடம் – இலக்கிய பரிசு இல்லமால் இருந்து இருக்கிறது. அது மரியாதையை காப்பாற்றி இருக்கும்.
சுமாராக பட்டியல் எடுத்தால் – 25 பேர் (நோபல் பரிசு பெற்றோர்) வாசித்து இருக்கிறேன். இலக்கிய விமரிசகன் அல்லன் . வாசகனாக என்னை ஊக்குவித்து இருக்கிறது.ஆனால் அவை சமீப கால எழுத்துக்கள் அல்ல.
2016 நோபல் பரிசு பற்றி பல கேலி விமரிசனங்கள் – என்னைக் கவர்ந்தது -
‘நோபல் கமிட்டிக்கு என் அனுதாபங்கள் – அவர்களின் முடிவு முற்றிலும் புரிகிறது. புத்தகங்களை படிப்பதுதான் எவ்வளவு சிரமம்!‘
ஒருபுறம் தொழில் நுட்பத்தின் விளிம்பில் – ஆழத்தில் – இதனை இன்னும் சிறப்பாக செய்யலாமே – மொழி கடந்து – மென்மையான – அனுபவங்களை மரியாதை செய்யலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.
மறுபுறம் – ஒரு வருட ட்விட்டர் செய்தி கூட இலக்கிய அங்கீகாரம் பெறலாம் என்கிற சாத்தியத்தின் புதுமைக்கு நான் தயாராக இல்லையோ என்றும் தோன்றுகிறது.
ஒருவேளை புதிய நூற்றாண்டிற்கு நாம் தயாராக வேண்டும்.
அதில் வேவ்வேறுவிதமான முயற்சிகள் அங்கீகரிக்கப் படவேண்டும் – நமக்கு பழக்கமில்லாத புதிய கூறுகள் வரலாம். நாம் புறக்கணித்த சில அடிப்படை அறிவியல் சேர்க்கப் படவேண்டும். கணிதம் சேர்க்கப் படவேண்டிய ஒன்று என தோன்றும். (சமுதாயத்திற்க்கு நேரடியாக உதவாது – என்கிற நிலை மாறி – குறைந்த பட்சம் வருடங்கள் இருபத்திற்கு மேலாகிறது). தொழில் நுட்ப யுகத்தில் நோபல் குழு மெய்நிகராக (virtual) இருக்கலாம்.
புதுப்பித்தல் மூலம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறலாம். புதியன இணைதலாக, பழையன பெருகுதலாக..
திடீரென நம்பிக்கை துளிர்கிறது.
அன்புடன் முரளி
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நோபல் பரிசு பற்றி எழுதப்பட்ட குறிப்பு கண்டேன். நோபல் கமிட்டி மிக அசட்டுத்தனமான முடிவைத்தான் செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பாடலுக்கு அளிக்கவேண்டுமென்றால் பாடலுக்கான ஒரு நோபல் பரிசைத்தான் உருவாக்கவேண்டும். அதை கவிதையாகப் பார்ப்பதென்றால் அதன் கவிதை மதிப்பை மட்டும்தான் பார்க்கவேண்டும்
இல்லை, சம்பிரதாயமான முடிவுகளை மீறுகிறார்கள் என்றால் மொழியை எல்லா வகையிலும் பயன்படுத்துபவர்களை ஏன் கணக்கிலே கொள்ளவில்லை? மொழியை மிகத்திறமையாக உபயோகித்தவர்கள் ரோலான் பார்த், தெரிதா போன்றவர்கள். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேல் லக்கான். அற்புதமான மொழிவிளையாட்டுடன் எழுதியவர்
சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் மொழி இன்று பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் இலக்கியமாகக் கொள்ளலாம் என்றால் இலக்கிய அளவுகோல்தான் என்ன?
நோபல் பரிசு செய்யவேண்டிய வேலை உள்ளது/ அது உலகமெங்கும் உள்ள பண்பாடுகளிலிருந்து நல்ல எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்யவேண்டும். நஜீப் மஃபூஸ் பொல. அதையெல்லாம் செய்ய அவர்களுக்கு மனமும் இல்லை. ஆட்களும் இல்லை
ஆகவே இப்படி காமெடி செய்கிறார்கள். அதாவது அமெரிக்காவின் பாட்டெழுத்தாளருக்குக் கொடுத்தாலும் கொடுப்போமே ஒழிய ஒரு ஆசிய எழுத்தாளனுக்குக் கொடுக்கமாட்டோம் என்பது இதன் நீதி
முகமது ஷெரீஃப்
***
ஜெ
நோபல் பரிசு பெற்ற பாப் டைலனின் பல பாடல்கள் யூ டியூபில் உள்ளன. அவற்றில் எனக்குப்பிடித்த ஒன்று
ஆனால் வரிகளை மட்டும் பார்த்தால் என்ன கவித்துவம் என்றே புரியவில்லை. நம்மூர் கத்தரின் பாடல்களைப்போல இருக்கிறது
எண்பதுகளில் நான் கத்தரின் பாடல்நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கொந்தளிப்பாகவே இருக்கும். ஆனால் அவற்றை வரிகளாக வாசித்தால் ‘பொங்கி எழு புரட்சி செய்’ என்று மட்டும்தான் இருக்கும்.
நோபல் பரிசுக்குழு ‘காலத்துக்கு ஏற்ப’ மாற முடிவு செய்திருக்கிறது. ஆனால் அது தான் நம்பும் விழுமியங்களுக்கு ஏற்பத்தான் நின்றிருக்கவேண்டும்
ஆனால் அமெரிக்காவின் அடிப்படையான ஒரு அறிவுத்தளம் மழுங்கிவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். அமெரிக்கருக்கு நோபல் என்று அவர்கள் எம்பிக் குதிக்கவில்லை. கறாராகவே பார்க்கிறார்கள். நோபல் பரிசை கண்டித்து பலர் எழுதிவிட்டார்கள்
இன்றுவரை பாப் டைலன் நோபல் பரிசை பெற ஒப்புக்கொள்ளவில்லை. அந்தத் தயக்கமே அங்கிருக்கும் விமர்சனத்தைப் பயந்துதான். அந்த சமரசமில்லாத தன்மைதான் இன்றைக்கு அவசியத்தேவை
சொல்லவிட்டுப்போய்விட்டது. பாடகருக்கான எந்த விருதுக்கும் பாப் டைலன் தகுதியானவர்தான்
ஜெயராமன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10
அன்புள்ள சார்,
பல நாட்களுக்கு முன் சண்டை போட்டுவிட்டு வந்த வாடகைக்காரனின் குழந்தைகள், ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் பார்க்க வருகிறார்கள். சிறுவனும் சிறுமியும்.. அப்போது அவர் யோசிப்பார். தன் மனைவியும் கூட இருந்தால் எல்ஐசி விளம்பரம் போல நிற்கலாம் என. சண்டைக்காரனின் குழந்தைகளிடம் வேறு என்ன பேச முடியும்….
இன்னொரு கதை இமயமலையும் அரபிக்கடலும்.. தன் அம்மா, அப்பாவிடமும் அவரின் புது மனைவியிடமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பாள். அந்நேரத்திலும், அப்பா கச்சிதமாக அணிந்திருக்கும் துண்டையும், கொட்டாங்குச்சியில் நேர்த்தியாக சுண்டப்பட்ட சாம்பலுடன் பீடித்துண்டுகளும், கழுவப்பட்ட செருப்புமாய் இருக்கும் நேர்த்தியை கண்டு வியக்கிறாள் அந்தச் சிறுமி.
ஓவியர் போல கதை மாந்தர்களை தீட்டியளிக்கிறார் திரு.வண்ணதாசன் அவர்கள். சிறுகதையை படிக்கும் போதே அந்த சாலையில் உள்ள புளியமரத்தற்கு ஒரு எண்ணையும் என் மனதும் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறது.
முதுகில் தட்டி பேசியதால் ஒரு ஆட்டோக்காரர் இன்னும் நெருக்கமாகிறார். லோகு அண்ணாச்சி பக்கத்து வீட்டில் போர் போட்டு இறைக்கும் தண்ணீரை பெருமாள் கோயில் தீர்த்தமாய் அருந்துகிறார். நண்பனின் தங்கை புளியமரத்தில் காலாட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அதுவும் எப்படி?
இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும் ஒருவர். ஒரு சிறிய குறிப்பில் மொத்த அபிப்ராயத்தையும் மாற்றுகிற அல்லது இன்னும் நெகிழ வைக்கின்ற எழுத்தாளுமை. உயரப்பறத்தல் என்ற சிறுகதை தொகுதியின் பெயரைக் கண்டபோது ஒருநாள் தோன்றியது. சிறகடிப்பின்றி அமைதியாக உயரே பறக்கும் கருடன் கீழே சின்ன சின்ன அசைவுகளையும் நோட்டமிடுவது போல வண்ணதாசன்சாரும் உயரே நின்று பார்த்து எனக்கு எடுத்துரைக்கிறார் என்று.
அகம் புறம் தொடரில் ஒவ்வொரு கதைசொல்லிகளாக வந்து இறுதியில் பேருந்து நடத்துநர் குறித்து சொல்வார். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களையும் கண்முன் நிறுத்திவிடுவார் என்று.வண்ணதாசன் சாரும் அப்படித்தான். சங்கரியோ, கல்யாணி அக்காவோ, கோமதி அத்தையோ இவர் சிறுகதைகளில் வரும்போது ஒரு தொடர்கதையில் அல்லது நாவலில் ஆரம்ப அத்தியாம் தொட்டு படித்து வருபவர்கள் போன்றதொரு அருகாமையை அளிக்கிறார்கள்.
உயிர்மை விழாவில் அவரின் உரையைக் ஒருமுறை கேட்டேன். முறத்தில் அரிசியைப் புடைக்கும் போது எழுந்து வீழும் அரிசியைப்போல் நானும் எழுந்து வீழும் அல்லது வீழ்ந்து எழும் மனிதர்களின் கதையை அழகாக எழுதுகிறேன் என்று கூறினார். அந்த அழகாக என்ற வார்த்தை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பிறகொருநாள் கேணிக் கூட்டத்தில்.. அன்று நல்ல மழை. கேணியருகேயல்லாமல் கூடத்தில்தான் உரையாற்றினார். நான் மிகத் தாமதமாக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட கூட்டம் முடிந்திருந்தது.
இந்த விருது விழாவின்போது இருநாட்கள் அவரோடு உரையாடலாம் என்ற நினைப்பே மிகவும் உவகையளிக்கிறது.
விருது நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
***
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அவருடைய கதைகளையும் கவிதைகளையும் சென்ற நான்கு ஆண்டுகளாகத்தான் எனக்குத்தெரியும். சொல்லப்போனால் அவரை நான் வாசிப்பதே அவர் ஃபேஸ்புக் வந்தபிறகுதான். அவருடைய உலகத்தை நான் அறிமுகம் செய்துகொண்டாலும் உள்ளே போவது எளிதாக இருக்கவில்லை.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தஞ்சாவூர். இங்கே உள்ள மனநிலையே வேறு இங்கே எல்லாரும் நக்கல் கிண்டலுடன் பேசுவார்கள். ஜானகிராமன் எழுதியதைப்போல. வண்ணதாசனின் உலகிலே எல்லாரும் சென்ற காலத்தின் மீதி போல இருக்கிறார்கள். அல்லது வேறு எங்கோ வாழ்பவர்களின் நிழல்களைப்போல இருக்கிறார்கள். எவருமே சிரிப்பதில்லை. எவருமே கேலிகிண்டல் செய்வதில்லை
அதன்பிறகுதான் சுகாவின் எழுத்தை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போது மனநிறைவு ஏற்பட்டது. அவர்களும் சிரிக்கிறார்கள். அவர்களும் நக்கல் செய்துகொள்கிறார்கள். அப்படியென்றால் இது திருநெல்வேலி அல்ல. இதெல்லாம் வண்ணதாசனின் அகவுலகம் மட்டும்தான்
அந்தத்தெளிவு வந்தபின்னாடி வாசித்தபோதுதான் வண்ணதாசனை மிகவும் நெருக்கமாக்க முடிந்தது. அது அவரேதான் என்பதுதான் அவரை நாம் வாசிக்க அவசியமானது என நினைக்கிறேன்.
வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு பாராட்டுக்கள்.
மனோகரன்
***
சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது..
சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றிச்செண்டு, வண்ணதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். விருது அறிவித்த அன்றே அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன்.
அவரை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது’ போன்றது என்று நண்பர்களிடம் கூறுவேன். கடந்த 2015-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறிய விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்:
“யானையைக் கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.”
எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்!
இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்! ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனையும் இந்த மண்புழுக்களே. நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவைகள் இந்த யானைகள். அதைப் பற்றிய கவலை அவருக்கு இருந்திருக்கலாம். இப்படி வரிகளுக்கிடையே வாசித்து அதை நிரப்பிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. அப்படித்தான் உங்களுடைய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை நிரப்பி வைத்திருக்கிறேன். இப்போது “என்னைவிட சிறப்பாக ஒரு எழுத்தாளர் புனைகதையில் சொல்லிவிடக்கூடும்” என்று அந்த ஜப்பானியர் கூறும் எழுத்தாளர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அவரிடமே இறப்பைப் பற்றி பேச இருக்கிறேன்.
பற்றி யோசிக்கும் போது எனக்குள் தோன்றிய வரிகளை எழுதிவைத்திருக்கிறேன்.
நான் பலரிடம் அவரை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறிய “யானைகளுக்கிடையே நெளியும் மண்புழு” வரிகளையும், என்னுடைய வரிகளையும் சென்னை புத்தகக் காட்சியில் அவரை சந்தித்தபோது அவரிடமே கூறினேன். உரக்கச் சிரித்து அங்கீகரித்தார். புகைப்படங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்குக் கூட உயிர் கொடுக்க முயற்சிக்கும் அவருடைய பரிவும், மென்மையும், அவரால் கல்லைக் கூட எழுத்தின் மூலம் நடக்க வைக்க முடியும். புத்தகக் கண்காட்சியில் அவருடன் நான் நிற்கும் காட்சியைப் படம் பிடித்து வைத்திருக்கிறேன் என் வரிகளை அங்கீகரித்த அவரின் சிரிப்போடு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று நானும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரது புன்னகையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
அன்புடன்,
மாதவன் இளங்கோ
பெல்ஜியம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6
[ 10 ]
முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக்கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல்மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப்பார்த்தனர்.
அவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்?” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே?” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்விசெய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.
“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா?” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.
அவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்?” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.
“அபிசாரவேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா? இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.
அவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அதுசெய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.
“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்?” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி?” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”
கருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.
கனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே?” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”
அது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.
மூன்றுவேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.
எரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.
அனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக! இருளென எழுக! இருண்டெழுக!” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக! எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக! எரிவதே அணைவதே எழுக! திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக! சூழ்க! சூழ்க! சூழ்க!” என்றார்.
கீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.
[ 11 ]
“தாருகக் காட்டின் எட்டுமுனிவர்களால் எட்டுத்திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர் “அவை எட்டுத்திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”
“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன”.
“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன.பிளிறும்பேரிருருள்.கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”
பிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”
இளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச் சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.
நீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச்சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.
அவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.
முழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.
குடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக! தேடிச்செல்க!” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப்புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக! இருள்பழுத்து சாறு எழுக!”
நான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.
ஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க!” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச்சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்தபின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச்சென்றார்.
விந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.
அந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.
அக்கூட்டத்தில் ஒருவன் கரியவெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச்செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச்சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப்போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.
அப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.
சிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.
அவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச்சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.
“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”
“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்றுகூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகைசெய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த்தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”
“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப்பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக!” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.
இருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்குதொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இருபேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.
“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்!” என்றார். “ஒற்றைப்பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா?” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”
அவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.
அவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.
பறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத்துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத்தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.
வான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப்போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7
’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30
October 23, 2016
தெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் மதிப்பீடுகளின் படி சிறந்த சமகால எழுத்தாளர்கள் தெலுங்கு மொழியில் எவரேனும் இருந்தால் தெரியப்படுத்தவும். என் தெலுங்கு நண்பருக்கு வணிக எழுத்துகளே அறிமுகம். அவருக்கு நல்ல சமகால தெலுங்கு இலக்கியம் பற்றி தெரியவில்லை. என்னாலும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.
நன்றி
சண்முகநாதன்
*
அன்புள்ள சண்முகநாதன்,
நான் வாசித்தவரை தெலுங்கில் நவீன இலக்கியம் என ஏதும் இல்லை.
நமக்கு பிற இந்திய மொழிகளில் இருந்து வாசிக்கக் கிடைப்பவை சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் நூல்கள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலும் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் அடிப்படை இலக்கியத்தன்மை கொண்ட ஒரு தெலுங்குப் படைப்பைக்கூட வாசிக்க நேர்ந்ததில்லை. பள்ளிக்கூட குழந்தைகளுக்காக வாத்தியார்கள் எழுதிய நீதிக்கதைகள் போல இருக்கும்.
நான் வாசித்தவற்றிலேயே சிறந்தவை என்பவை இரண்டே. அற்பஜீவி [பண்டித விஸ்வநாத சாஸ்திரி] அவன் காட்டை வென்றான் [முனைவர் கேசவரெட்டி] இரண்டுமே நவீன இலக்கிய வாசிப்புள்ளவனுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றும் இலக்கிய முயற்சிகள். முப்பாள ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிய அசட்டு நாவல்களை வைத்துப்பார்த்தால் இவை பரவாயில்லை அவ்வளவுதான்
ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால் தமிழிலக்கியம் பற்றி கன்னடம் வங்கம் போன்ற மொழிகளின் இலக்கிய வாசகர்கள் இந்த எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாசித்தவை ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் சித்திரப்பாவை போன்ற நாவல்கள், நா.பார்த்தசாரதி, சிவசங்கரி எழுத்துக்கள். அவைதான் மொழியாக்கம் மூலம் அவர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.சமீபத்தில் மும்பை கேட்வே இலக்கியவிழாவில்கூட “நவீன இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருக்கும் தமிழ், கொங்கணி, தெலுங்கு போன்ற மொழிகள்…” என்று ஒருவர் பேசக்கேட்டேன்.
ஆகவே தரமான இலக்கியம் ஒருவேளை தெலுங்கில் கண்மறைவாக இருக்கக்கூடும். அங்குள்ள கல்வித்துறையாலும் ஊடகங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணிக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
உண்மையில் தெலுங்கில் கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எழுத்துக்கள் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதும் வணிகநாவல்கள்தான். துப்பறியும் கதைகள் அவை. ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். வடிவ உணர்வும் இருக்கும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி திரு. வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சி.
வண்ணதாசன் என்னும் சிறுகதையாசிரியர் உருவாக்கும் படைப்புலகம் தனிமனிதனின் கோபதாபங்களையும், ஆசாபாசங்களையும் அகழ்ந்து எடுக்க கூடியது. அதன் உளவியலை புறக்காட்சிகளின் மீது ஏற்றி அழகிய சித்திரம் போல் வரைந்து விட கூடியது. மனித மனம் அன்பு, குரோதம், நட்பு, துரோகம் என ஒன்றுக்கொன்று முரணான இயல்புகளை ஒரு படிமம் போல் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்துள்ளது, அதன் நுட்பங்களையும், உணர்வுகளையும் கலைத்து போட்டு மீண்டும் அடுக்கும் ஒழுங்கை ஒத்து இருக்கிறது அவர் கதைகள். ஒரு முட்டு சந்துக்குள் நம்மை கொண்டு சென்று நிறுத்தி விட்டு அங்கு ஒரு புதிய பாதையை திறக்கும் லாவகம் வண்ணதாசன் அவர்களுக்கு தெரியும்.
அவரின் எல்லா கதைகளும், கதை மாந்தர்களும் அவர்கள் கொண்டுள்ள உணர்வுகளின் முரண் வழியாக தனக்குள்ளும், தனக்கு வெளியே சமூகத்துடனும் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்கள். இந்த நுண்ணியல்பை அவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளனும் இயல்பாகவும், அழகியலுடனும் படைத்ததில்லை என்று சொல்லலாம். இலக்கியம் எதையும் எங்கும் விவரித்து சொல்லுவதில்லை, அனைத்தையும் பூடகமாக சொல்லிச் செல்கிறது.
ஆனால் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைகள் இந்த அடிப்படையில் இருந்து வேறுபட்டு அவர் சொல்ல விரும்புவதற்கு எதிரானவைகளை மட்டும் கதைகளில் விவரிக்கிறார். உதாரணமாக “கனியான பின்னும் நுனியில் பூ” என்னும் சிறுகதையில் தினகரிக்கும் அவள் அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் அனைத்தும் இறுதியில் திருடன் என்று சொல்லப்படும் ஒருவரை நோக்கி ” ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவுதாம்மா’. என்று நிறைவுறுகிறது.
இந்த கதை சொல்ல வருவது திருடன் என்று சொல்கிற அவருக்கும் அந்த குட்டி பெண்ணுக்கும் உள்ள உறவைதான் அனால் வண்ணதாசன் அந்த திறப்பை மேற்சொன்ன அந்த ஒற்றை வரியில் கொண்டு நிறுத்துகிறார். இதுதான் வண்ணதாசனின் படைப்புலகம், அது சொல்லாதவைகளின் மீதம். இருவரின் அந்தரங்கங்கள் கொண்டுள்ள ரகசியம் அதை அவர் திறப்பதேயில்லை. அந்த விஷயத்தை வாசகனிடம் விட்டு விடுகிறார் அவன் திறந்து பார்க்கும் ஆவலை தூண்ட செய்வது தான் அவரின் கதைகள்.
அவர் திருநெல்வேலி என்னும் நகரத்தின் தெருக்களில் எல்லா திருப்பங்கள் வழியாகவும் சென்று திரும்புகிறார். அவரின் கதைகள் திருநெல்வேலி டவுன் சந்துகளிலும், முடுக்குகளிலும் ஆரம்பித்து லாலா சத்திர, சந்தி பிள்ளையார், வாகையடி, தெப்பக்குளம், கோயில்வாசல் என முக்குகளில் திரும்பி ரத வீதியை வந்து அடைந்து விடுகிறது. டவுன் முழுவதுமே சில நேரங்களில் வண்ணதாசன் அவர்களின் கதை மாந்தர்கள் மட்டும் உலவும் இடமாக தெரியும் ஆச்சர்யம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவரால் இந்த சாமான்யர்களிடமிருந்து இதே மக்களிடமிருந்தது இன்னும் எத்தனையோ கதைகளை படைக்க முடியும்.
கொல்கத்தாவில் எஸ்பிலேனடு சாலையில் காலையில் நான் நடந்து செல்லும்போது நடைபாதையின் முன்பு குந்தி அமர்ந்திருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும், சிறு வயதில் பள்ளி செல்லும் போது பாளையம்கோட்டை மார்க்கெட் சாலையில் வேலைக்காக காத்து கொண்டிருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும் அநேகமாக எந்த பெரிய வித்தியாசமும் இல்லை, அவர்கள் பணிக்காக வைத்திருந்த பொருட்களை தவிர. இருவரின் முகமும் ஒரே சிந்தனையில் தான் இருந்தன. இன்றைய நாள் கழிய கூலி கிடைக்குமா என்பது மட்டும்.
உலகம் முழுவதும் மனிதர்கள் வேறுபடலாம். அவர்களின் அகம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அந்த அகத்தை மட்டும் எழுதிக் கொண்டே இருக்கும் வண்ணதாசன் அவர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி.
என்றும் வாசிப்புடன்,
சரவணன்
அன்புள்ள ஜெ
வண்ணதாசன் கதைகளுக்கு விஷ்ணுபுரம்ன் விருது அளிக்கப்பட்டிருப்பதை ஒரு முரண்பாடான ஆச்சரியமாகவே பார்க்கிறேன். வண்ணதாசன் கதைகள் நேரடியான வாழ்க்கையைச் சொல்பவை. அப்பட்டமான வாழ்க்கை என்றுகூட சொல்வேன். ஆனால் விமர்சனம் இல்லாதவை. பூடகமானவை. ஆனால் ஆசிரியன் தெரியாதவை. தத்துவம் சிந்தனை என்பதெல்லாம் வண்ணதாசனுக்கு அப்பாற்பட்டவை. அதோடு அவர் காட்டும் உலகம் குறியீடுகள் அற்றது. அதனால்தான் அப்பட்டம் என்று சொன்னேன்
ஆனால் விஷ்ணுபுரம் நேர் எதிரானது. அது பூடகமான குறியீடுகளால் ஆனது. சிக்கலானது. யதார்த்தமே இல்லை அதிலே. அதில் வாழ்க்கைகூட இல்லை. உருவகங்கள் மட்டும்தான். ஆசிரியன் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கிறான். தத்துவமாகவே எல்லாம் உள்ளன. அதன் அழகியலே வேறு. எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத புத்தகம் என்றால் விஷ்ணுபுரம்தான்
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் அவார்ட் என்பது வண்ணதாசனின் வெற்றி என்றுதான் நினைக்கிறேன். சரியா? எனக்குப்பிடித்த எழுத்தாலர் என்றால் வண்ணதாசன்மட்டுமே. அசோகமித்திரனையும் பிடிக்காது சுந்தர ராமசாமியையும் பிடிக்காது. இலக்கியம் என்றால் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாமே என்றுதான் நான் நினைக்கிறேன்
மருத்துவர் ராஜசேகர்
அன்புள்ள அய்யா ஜெயமோகன் ,
நான் வண்ணதாசனை கண்டுகொள்ள ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த விருது அவருக்கு கிடைப்பது என்வாசக அனுபவத்துக்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது , வண்ணதாசனின் சில சிறுகதைகளை மட்டும்வாசித்து முடித்திருக்கிறேன்.
ஜெயமோகன் , புதுமை பித்தன் , எஸ்.ராமகிருஷ்ணன், கி. ரா , பிரியா தம்பி ஆகியோரின் சிறுகதைகள்வாசித்திருக்கிறேன் ஆனால் வண்ணதாசன் ஒரு தனி league என்று தான் கூற வேண்டும் (என்அனுபவத்தில்).
நீங்களும் எஸ்.ராமகிருஷ்ணனும் மிகை யதார்த்தவாதிகளாகவே எனக்குப் படுகிறீர்கள் . யதார்த்தத்தை மிகவும் நெருங்கி சொல்பவராக வண்ணதாசன் எனக்குத் தோன்றுகிறார் .
உங்கள் இருவரின் எழுத்தும் மிகக் கூர்மை வாய்ந்ததாக இருக்கின்றது. உண்மைகளை நேரடியாகச் சொல்லி, உண்மையின் நிதர்சனத்தைப் பட்டவர்த்தமாக வாசகனின் தலையில் விழும்படி எழுதுகிறீர்கள் (with brutal honesty).
வண்ணதாசன் ஒரு மெல்லிசை போல் ஒரு உண்மை நிலையைச் சொல்லி விட்டு , அதைப் பற்றிவாசகனின் இயலாமையை உணர்த்துகிறார். வண்ணதாசனுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானதாககருதுகிறேன், அதே வேளையில் நீங்களும் , எஸ்.ரா வும் இணைந்து அவருக்கு இந்த விருதை (மேடையில்)அளிக்க வேண்டும் என்பது என் ஆசை.
நன்றி
சுதாகரன் விஸ்வநாதன்
=====================================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
வணக்கம் முதலில் உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தன்னையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர். அந்த கண்ணீர் ஏன் வருகிறது? எதனால் வருகிறது?அதன் நோக்கம் என்ன?என்று புலப்படவில்லை. சற்று ஒரு கணம் யோசித்து ஓ!அது மண்டையோட்டின் முகப்பு கண்ணாடி திறந்ததால் கற்று வீசி வருகிறது என்று நினைத்தேன். மறுகணமே என் சிந்தனை மாறியது. அப்படியென்றால் நீண்ட நேரம் வராதே, காற்றில் கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருக்குமே! இந்த கண்ணீர் விசித்திரமானதாக இருக்கிறதே! கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் கடலில் ஓரத்தில் எழும் அலைபோல் அல்லாமல் கடல் நீர் நடுவிலுள்ளபோல் அமைதியாக வந்தது. பின்னர் அறிந்தேன் இது காற்றால் அல்ல. ஒரு வித வலியால், உணர்வு, இந்த சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் வந்தது என்று.
ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது. இது கண்களிலிருந்து வரவில்லை, உணர்வு, வெறுப்பு, வேகம் நிறைந்த என் கனத்த இதயத்திலிருந்து வருகிறது என்று. இத்தனை நாள் வரவில்லை. இன்று ஏன்? இன்றுதான் வெள்ளை யானை நாவலை படித்தேன். இந்நூலை படித்த பின்பு பெரிகார்டியம் பாதுகாப்பு இருந்தும் பெரிய அதிர்ச்சி உணர்வு என் இதயத்தை தாக்கியது. என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சமுதாயம் ஏன் இப்படிருக்கிறது? நாம் இப்போது மனிதனாக வாழ்கிறோமா, மதிக்கப்படுகிறோமா, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் புறவேசமா, புறநடிப்பா! இப்படி நடப்பதற்கு சாதி அமைப்பு, பொருளாதார நிலைமை காரணமா!
இல்லை அய்யங்கார் சொல்லுவதை போல் இந்த மக்களை இறைவன் கொடுமைப்படுத்தத்தான் படைத்தானோ! பல கேள்விகள் கேட்பது யாரிடம் தெரியாமல் என் மனச்சாட்சியை நானே கேட்டேன். ஆனால் பதில் இல்லை. இந்த நாவல் என்னை பல சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. நான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறேனா! வெளியுலகம் அறிவதில்லையோ! ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்புலம் அறிவதில்லையோ! அறிகிறேன், ஆழ்ந்து யோசிக்கவும் செய்கிறேன். பின்னர் ஏன் என்னுள் கேள்வி எழுகிறது. எழுகிறது என்று சொல்லுவதைவிட எழுப்பியது வெள்ளை யானை.
காத்தவராயன்” சாவு உண்மைதான் ஆனால் எங்கே வாழ்ந்தோம் நாங்கள் சாவதற்கு, இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று சொல்லுவதும், நூறு பேரில் தொண்ணூறு பேர்கள் இறந்து பத்து பேர்கள் மனிதனாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் சொல்லும் போது இதயத்தில் கனத்த வலியை உண்டாக்கியது. ஏன் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ போராட்டம். உலகில் மனிதனை தவிர மற்ற இனம் அதே இனத்தோடு வாழ போராடவில்லை. பின்பு ஏன் நமக்கு மட்டும் இந்த போராட்டம். வெள்ளை யானை என்னை “பிறர் தட்டிவிடும்போது என்னால் முட்டி எழ முடியும்” என்னுள் இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தியது. நன்றி ஐயா
தாமரை வீ
***
பெரு மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,
நாஞ்சில் நாட்டின் மீது இருந்த பற்றின் மூலமே நான் உங்களின் வாசகனானேன். உங்கள் மாடனிடம் பேசும் அப்பி என் நினைவில் தினமும் வருபவன். உங்களின் எழுத்துக்களின் மூலமே நீங்கள் சாதி மத எல்லைக்குள் நிற்பவர் அல்ல என புரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட நீங்கள் ஏன் நாஞ்சில் நாட்டில் இருந்த சமூக சீர்திருத்தவாதி [அய்யா வைகுண்டர் – முத்துக்குட்டி] பற்றி இன்னும் எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.
அவரின் சீர்திருத்தங்களில் சில…
ஒரு ஊரில் உள்ள அனைத்து சாதி மத வீடுகளிலும் பிச்சை எடுத்து அதை ஓரே பானையில் சமைத்து அதற்கு அன்னம் என்று பெயரிட்டு அதை அனைத்து சாதி மக்களும் ஒன்றாக இருந்து உணவருந்த செய்தார்.. இதை விட சமத்துவம் வேற யாரும் சொன்னதில்லை .
அனைத்து சாதி மக்களையும் தலையில் தலைப்பாகை [அது அரசனின் கிரீடம் போல] அணிவித்து அனைவருமே அரசனாக்கினார் சமமாக்கினார் .
தங்கத்தை தொட்டால் தீட்டு என்ற காலத்தில் அனைவருமே தங்கத்தில் தாலி கட்ட வைத்தார் [இன்று குமரி மாவட்டத்தில் சாதி மத வித்தியாசமின்றி அனைவருமே தங்கத்தில் தாலி காட்டுகின்றனர்]
அவர் அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியிருக்கிறார்.
ஆனால் பெரியார் போன்ற எவருமே பேசியிருக்கலாமே தவிர இப்படி செய்து காட்டியிருக்க முடியாது .
எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லி விட்டேன். நீங்கள் ஆராய்ந்து சரியென்று தோன்றினால் எழுதுங்களேன்.
பணிவன்புடன்,
பொன் ராஜா.
***
அன்புள்ள பொன் ராஜா
ஐயா வைகுண்டர் குறித்து எழுதியிருக்கிறேன். நாகர்கோயில் இதழ்களில். கட்டுரைகளை தேடி எடுக்கவேண்டும்.
என் மூத்தநண்பரான அ.கா.பெருமாள் அவர்கள் ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டை செம்பதிப்பாக பிழைதிருத்தி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி விரிவாக எழுதவேண்டும் என எண்ணினேன். குறிப்புகளுடன் நின்றுவிட்டது
எழுதவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

