Jeyamohan's Blog, page 1717
October 28, 2016
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
[ 9 ]
இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.
செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும் உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை செய்து தனிமையில் வாழ்வதாகவும் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வழிப்போக்கனாக சந்தித்த சூதன் சொன்னான்.
சப்தஃபலத்தின் வாயிலில் அவரைத் தடுத்த காவலர்தலைவன் சதமன் “எவரும் தன்னை சந்திக்க வேண்டியதில்லை என்று இளைய யாதவரின் ஆணை, முனிவரே” என்றான். காலவர் தன்னை அவ்வாறு ஒரு காவலன் தடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய முதல்மாணவன் சலஃபன் முன்னால் சென்று “கௌசிககுலத்து காலவ முனிவரை அறிந்துகொள்க! யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக!”
“நான் சந்திப்பதற்கு பிறிதொருவரும் இல்லை. அதன்பொருட்டே வந்தேன், சந்தித்த பின்பே மீள்வேன்” என்றார் காலவர். சதமன் “எனக்களிக்கப்பட்ட ஆணைகளை நான் மீறலாகாது, முனிவரே. என்மீது நீங்கள் முனிந்தாலும் நன்றே” என்றான். “சிறிதோ பெரிதோ தவமே என் வழி” என புன்னகையுடன் சொன்ன காலவர் அக்காவல் நிலைக்கு வெளியே முற்றத்தில் தன் மாணவர்களுடன் அமர்ந்தார். “இதனால் பயனில்லை, முனிவரே” என்றான் சதமன். “தவத்திற்கு கொடுந்தெய்வங்களும் இரங்கியாகவேண்டும்” என்றார் காலவர்.
முதிய காவலரான கலிகர் வந்து பணிந்து “புரிந்து கொள்ளுங்கள், முனிவரே. தமையனுடன் கொண்ட உளப்பிரிவால் நிலையழிந்திருக்கிறார் அரசர். இங்கு முழுத் தனிமையில் புற்றுசூழ்ந்த தவநெறியர்போல் அமர்ந்திருக்கிறார். அமைச்சரோ சுற்றமோ அவரை அணுகுவதில்லை. தேவியருக்கும் அவரைப் பார்க்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இங்கிருப்பவர் காலமுகம் கொண்ட கடுஞ்சைவரைப்போல இங்குள அனைத்திற்கும் புறம் காட்டியவர்” என்றார்.
“எவ்வுருக்கொண்டாலும் இப்புவியில் எனக்கென இருப்பவன் அவன் ஒருவனே” என்றார் காலவர். கண்களை மூடி மடியில் கைவைத்து அமர்ந்தார். நீரும் உணவுமின்றி மூன்று நாட்கள் அக்காவல் முற்றத்தில் அவரும் மாணவர்களும் காத்திருந்தனர். அஞ்சியும் பதறியும் சப்தஃபலத்தின் யாதவர் அவர்களை வந்து பார்த்துச்சென்றனர். “அரசரிடம் சென்று சொல்வதா?” என்றான் சதமன். “அவருக்கு இன்று செவிகளே இல்லை” என்றார் கலிகர். “தவத்தோர் முனிந்து சொல்லேவினால் இச்சிற்றூர் அழியும். அவர் எரிசினத்துக்குப் புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் சொல்மைந்தர்” என்றான் சதமன். “அவர் தன் தவத்தால் அரசரை அவர் வாழும் இருளுக்குள் இருந்து எழுப்பினால் அது நன்றே” என்றார் கலிகர்.
மூன்றாவது நாள் காலையிருளுக்குள் இலைகள் சூடிய பனித்துளிகள் உதிரும் ஒலி மட்டும் எழுந்துகொண்டிருந்த வேளையில் நுண்அழைப்பு ஒன்றால் இழுத்துவரப்பட்டவர் போல திறந்து கிடந்த கோட்டைக்கதவு வழியாக நகருக்குள் இருந்து கரிய உடலுடன் தளர்ந்த நடையுடன் இளைய யாதவர் வெளியே வந்தார். முன்னரே கண்டிராதபோதும் தொலைவிலேயே அவர் யாரென உணர்ந்து காலவர் எழுந்து கைகூப்பினார். அதன்பின்னரே அவரைக் கண்ட காவலர் காலைத்துயில் கலைந்து எழுந்து நின்று தலைவணங்கினர்.
எலும்புகள் புடைத்து கரியும் அழுக்கும் படிந்த தோலுக்குள் அசைந்தன. தேம்பிய தோள்களில் பரவிய குழலில் சருகுப்பொடியும் புழுதியும் படிந்திருந்தன. ஒட்டடைபோன்ற தாடி முகத்தை மூடியிருந்தது. தளர்ந்து நனைந்த இமைகளுக்குள் கண்கள் நிலம் நோக்கி சரிந்திருந்தன. அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காலவர் “யாதவர்க்கரசே, நீ எவரென உணர்ந்தபின்னரே வந்தேன்” என்றார்.
“இங்கு நான் அரசு துறந்து அமைகிறேன். யாதவ மன்னனாக தங்களுக்கு நான் அளிக்கும் எதுவும் இல்லை. துவாரகையை ஆள்பவள் யாதவப் பேரரசி சத்யபாமை” என்றார் இளைய யாதவர். அவர் திரும்பிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பினார். காலவர் “நான் பார்க்க விழைந்தது யாதவனை அல்ல” என்றார். இருவரும் ஒருகணம் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அவர் நெஞ்சு திடுக்கிட்டது. “நான் காண விழைந்தது பெருங்காலத் தோற்றம் கொண்டெழும் விராடனையே” என்று அவர் சொன்னார். “உம்” என இளைய யாதவர் உறுமினார்.
பந்த ஒளியில் அவர் நிழல் நீண்டு விழுந்து கிடப்பதை அப்போதுதான் காலவர் கண்டார். அவர் விழிகள் விரிந்தன. திரும்பி அவர் முகத்தை நோக்கி கைகூப்பி “எனக்கு அருள்க, இருளே! என் பழி நீக்குக, பேராற்றலே!” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க!” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ!” என்றான்.
காலவர் “என் மூதாதையின் பெயர் கொண்ட இழிவை நீ அறிந்திருப்பாய். ஷத்ரியக்குருதி என்று இன்றும் வேதச்சொல்லவைகளில் நாங்கள் இரண்டாம் நிரையில் அமரவைக்கப்படுகிறோம். அச்சொல்லை வளர்க்கும் செயலொன்று நிகழ்ந்தது. அப்பழியை தீர்க்க வேண்டுமென்று கோருகிறேன்” என்றார். அவர் “உம்” என முனகினார். நிகழ்ந்ததை காலவர் சொன்னார். “அவன் செய்தது ஏனென்று நானறியேன். என் குலக்குறையின் பொருட்டே நான் இழிவு படுத்தப்பட்டேன் என்று உணர்கிறேன்.”
கருகிய இதழ்கள் பல்காட்டி விரிய இளைய யாதவர் புன்னகைத்தார். “நான் அறிவேன்” என்றார். காலவர் “எப்படி?” என்றார். “நான் அதை நிகழ்த்தினேன்” என்று அவர் சொன்னார். அவர் உதடு அசையவில்லை என்று அவர் விழிமயங்கியது. அவர் பின்னமர்ந்து பிறிதொருவர் பேசியதுபோலத் தோன்றியது. “என் இரு கைகளையும் விரித்து சூரியனுக்கு நான் அளித்த நீர்மேல் காறி உமிழ்ந்தான் அவன். அவனைக் கொன்று எரித்து அச்சாம்பலைச் சூடாது இனி நான் தவம் இயற்றுவதில்லை என்று உறுதி கொண்டேன்.”
“இளையோனே, முனிவரின் தவம் பேணுதல் அரசரின் கடமை என்று நீ அறிந்திருப்பாய். என் தவக்காவலனாக உன்னைத் தெரிவு செய்தேன்” என்றார் காலவர். “ஆம்” என்று அவர் நீள்மூச்சுடன் சொன்னார். அவர் விழிகளை நோக்குவதையே தவிர்த்தார். உடலெங்கும் பிறிதொன்று நின்று தவிப்பதுபோல் ஒரு அசைவு ஓட எழுந்துகொண்டார். “உன் சொல் தேடுகிறேன், யாதவனே” என்றார் காலவர். “அவனை எரித்தழிப்பேன். உங்களுக்கு நீறளிப்பேன்” என்று அவருக்குப் பின்னாலென ஒரு குரலெழுந்தது.
இளைய யாதவர் திகைத்தவர் போல காலவரை நோக்கி “என்ன?” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்?” என்றார். வியப்புடன் ஒருகணம் எண்ணி பின் எழுந்து காலவர் “சித்ரசேனன் என்று பெயர் கொண்ட கந்தர்வன். விண்முகிலில் வாழ்பவன். அங்கு தன் இரு தேவியருடன் குலாவி அமைந்து விழித்தெழுந்தபோது என் மேல் எச்சில் உமிழ்ந்தான்” என்று புதியவனிடம் என மீண்டும் சொன்னார்.
“நன்று” என்றார் இளைய யாதவர். அவர் விழிகள் நிலையற்று உருண்டு கொண்டிருந்தன. விரல்கள் அறியாத எதையோ தொட்டுத்தொட்டு மீட்டுவன போல் அசைந்து கொண்டிருந்தன. “தங்கள் ஆணையை சென்னி சூடுகிறேன். அவனைக் கொன்று அனலூட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது என் வஞ்சினம்” என்றார். காலவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டுமென்னும் உணர்வையே அடைந்தார். “உன் சொற்களை நிலம் சான்றாக்கி ஏற்கிறேன்” என்றார்.
அவர் திரும்பிச்செல்லும்போது காலவர் ஓர் அடி முன்னால் வைத்து “இன்று பதினேழாவது நாள். நாற்பத்தொரு நாள் முடிவில் அவனை எரித்த சாம்பலை என் உடல் அணியவேண்டும். இல்லையேல் நான் எரிபுகுந்து மறைவேன்” என்றார். இளைய யாதவர் திரும்பாமல் ”அது என் வஞ்சினமும் கூட” என்றார். தலைவணங்கி “என் குரு மரபும் சொல் மரபும் உனக்குத் துணை நிற்கும், யாதவனே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் காலவர்.
தலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்காது, திரும்பி ஒரு சொல்லும் பேசாது அவர் திரும்பிச் சென்றார். அருகே நின்றிருந்த முதல் மாணவன் சலஃபன் “அவரால் வெல்ல முடியுமா?” என்றான். “அவனால் மட்டுமே வெல்ல முடியும்” என்றார் காலவர். “ஆசிரியரே, தாங்கள் சொன்னதை அவர் சரியாகக் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். தன்னுள் உழலும் ஒன்றுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தவர் தாங்கள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சொல்லளித்து எழுந்துவிட்டார்” என்று சலஃபன் தயங்கியபடி சொன்னான்.
“ஆம், தான் அளித்த வாக்கு என்ன என்று இன்னும் அவன் அறிந்திருக்கவில்லை. வாக்களித்தது அவனல்ல” என்றார் காலவர். “சித்ரசேனன் எவர் என்று அறிந்த பின்னரே அவன் முழுதுணர்வான். ஆனால் அவன் சொல் நின்றிருக்கும்.” புன்னகையுடன் சலஃபனின் தோளில் கை வைத்து “ஒருவேளை அதுவும் நன்றென்றே ஆகலாம். இன்று அவன் இருக்கும் செயலற்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இப்போர் ஒரு வழியாக ஆகக் கூடும். யாரறிவார்? இவையனைத்தும் அதன் பொருட்டே என்றிருக்கவும்கூடும். செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்” என்றார்.
அன்றே தன் மாணவர்களுடன் சித்ரகூடத்திற்கு திரும்பிச்சென்றார் காலவர். தன் முன் அனலவனை எழுப்பி “இங்கு திகழ்க, எரியே! என் வஞ்சினம் நிறைவேற்றும் மானுடனை கண்டுகொண்டேன். துவாரகையின் இளையோன் சொல்பெற்று மீண்டுள்ளேன். என் குடிமேல் விழுந்த எச்சிலின் பொருட்டு விண்ணாளும் கந்தர்வனை எரித்தேன். அச்சாம்பலைச் சூடி எழுந்தேன். இனி வேள்விக்களங்களில் எல்லாம் இந்நிகழ்வுக்கு நீயே சான்று” என்றார்.
“ஒருவேளை என் சொல் திகழவில்லை என்றால் வெஞ்சாம்பலாக ஆகி மறைபவன் நான். என் ஊனுடலை உனக்கு அவியாக்குவேன். எரிந்தெழுந்து என் மூதாதையர் வாழும் உலகுக்கு என்னை கொண்டுசெல்க!” என்றபின் புலித்தோலை விரித்து அதன்மேல் மலரமர்வில் உடல் நிறுத்தி அமர்ந்து விழிமூடினார்.
[ 10 ]
மாலைக்கதிர் கடலில் பெய்து அணைந்ததும் தன் மென்முகில் சேக்கையில் சித்ரசேனன் துயிலெழுந்தான். முன்னரே எழுந்த அவன் தேவி சந்தியை பூத்த காட்டில் பரவி மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து அவனுக்குச் சுற்றும் பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்பியிருந்தாள். புன்னகையுடன் எழுந்து அமர்ந்து கைதூக்கி சோம்பல்முறித்தபடி தோன்றி ஒளி கொள்ளத் தொடங்கியிருந்த முழுநிலவைப் பார்த்தான்.
சந்தியை கந்தர்வநாளின் புலரிவேள்விக்கென அனைத்தும் அமைத்து காத்திருந்தாள். பனித்துளி எடுத்து நீராடி, நிலவொளி தொட்ட வெண்முகில் கீற்றொன்றை ஆடையாய் புனைந்து வேள்விக் குளத்தருகே வந்தமர்ந்தான். தன் அச்சங்களையும் ஐயங்களையும் வஞ்சங்களையும் விறகென எரிகுளத்தில் அடுக்கி விழைவை அதில் நெய்யாக்கினான். இரு கைகளின் சுட்டுவிரல் தொட்டு மின்கதிர் எழுப்பி வேள்விக்குளத்தில் அனலூட்ட முயன்றான்.
பன்னிருமுறை முயன்றும் அனலெழாமை கண்டு குழப்பத்துடன் தன் தேவியை நோக்கினான். அவளுக்கும் நிகழ்வதென்னவென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றதும் அனலோன் தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்துகொண்டான். தன் நெஞ்சில் கைவைத்து “என்னிலூறும் இசையின் முதல் துளியை சான்றாக்கி ஆணையிடுகிறேன். எழுக, அனலவனே!” என்றான்.
அனல் மூலையிலிருந்து எரியின் குரல் எழுந்தது. “என்னை பொறுத்தருள்க, கந்தர்வனே! இன்று உன் வேள்விக்குளத்தில் நான் தோன்ற மாட்டேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களுக்குள் உன்னை எரித்தழிக்கும் ஆணையை பெறப்போகிறேன். இதுநாள்வரை உன் வேள்விக்குளத்தில் தோன்றி நீ அளித்த அவியும் வேதச்சொல்லும் பெற்று விண்ணவருக்கும் திசை தெய்வங்களுக்கும் அளித்தவன் நான். அந்த நன்றிக்கடன் இதை உன்னிடம் சொல்லச் செய்கிறது. இனி உன்னிடம் இருந்து அவி பெறுவது முறையல்ல.”
“யார்? நீயா என்னை எரித்தழிப்பது? ஏன்?” என்றான் சித்ரசேனன். “நானல்ல. அணைகட்ட முடியாத ஆற்றல் கொண்ட ஒருவன் உன்னை எரித்தழிப்பதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றான் கனலோன். “யார் அவர்? புடவியாளும் மூவரா? தேவருக்குத் தலைவரா? திசை நால்வரா?” என்றான் கந்தர்வன். “இல்லை, இவன் மண்ணில் வாழும் ஓர் அரசன். துவாரகையின் யாதவன்” என்றான் அனலோன்.
திகைப்புடன் “அவனுக்கேது அவ்வாற்றல்?” என்றான் கந்தர்வன். “மண்ணில் வாழ்பவருக்கு ஆற்றல் அளிப்பது வேதம். நான்கு வேதங்களும் கொண்ட மெய்ப்பொருளை ஒற்றைச் சொல்லென ஆக்கி தன் நாவில் சூடியவன் அவன். அவன் உன்னிடம் போருக்கெழுந்தால் நீ அரைக்கணமும் எதிர் நிற்க முடியாது என்றறிக!”
“நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியேன். என்ன பிழை செய்தேன்?” என்றான் சித்ரசேனன். “நீ காமமயக்கில் உமிழ்ந்த எச்சில் காலைத்தவம் செய்யக் கைநீட்டிய காலவரின் உள்ளங்கை குழியில் விழுந்தது. அது தன் குலத்தின் மீதான எள்ளலே என்று அவர் எண்ணிக்கொண்டார். அவருடைய ஆறாச்சினமே இளைய யாதவனின் வஞ்சினமாக மாறியது” என்றான் அக்னி. “அது நான் அறியாது செய்த பிழை. அன்று என்னுள் கூடியதென்ன என்று நான் இன்றும் அறியேன். தெரியாப்பேய் ஒன்று என் சேக்கையை வென்றது என்றே உணர்கிறேன்” என்று சித்ரசேனன் சொன்னான்.
“பேய்கள் எழுவது உள்ளமெனும் இருளுக்குள் இருந்தே” என்று அனலோன் சொன்னான். “நான் செய்யவேண்டியது என்ன?” என்று சித்ரசேனன் கேட்டான். “இனி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உரைத்த வஞ்சினங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த ஒருவனின் சொல் இது. அது உரைக்கப்பட்டபோதே அச்செயல் முடிந்துவிட்டதென்று நான் கொண்டேன்” என்றான் எரியன்.
“நான் காலவரை அணுகி அவர் கால்களில் பணிந்து பொறுத்தருளும்படி கோருவேன். அவர் ஆணையிடும் அனைத்தையும் செய்து முடிப்பேன். ஆயிரமாண்டுகாலம் அவர் வேள்விக்கு காவலனாக நின்றிருப்பேன்” என்றான் சித்ரசேனன். “இவை அனைத்தும் அவர் அவ்வஞ்சினத்தை இளைய யாதவனிடமிருந்து பெறுவதற்கு முன் செய்திருக்க வேண்டியவை. இன்று நீ செய்வதற்கொன்றே உள்ளது. நிகர் வல்லமை கொண்ட பிறிதொருவரிடம் சரண் அடைக! அவன் படைக்கலத்தால் காக்கப்படுவாய்.”
“ஆம், நான் மூன்று தெய்வங்களிடம் செல்வேன். தேவர் கோமகனிடம் செல்வேன்” என்றான் சித்ரசேனன். “அவர்கள் எவரும் அவ்விளைய யாதவனிடம் நின்று போரிட முடியாது. வேதச்சொல்லை வல்லமை என்று கொண்ட மானுடன் அவன். வேதக்காட்டை விதையென்றாக்கும் ஊழ்நெறி கொண்டு வந்தவன்” என்று எரியன் சொன்னான். “தன் எதிர்நிற்பவனிடம் அவனே கருணை கொண்டால் மட்டுமே அவனை தடுக்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒருதுளி அருளையும் அவன் எவனுக்கு அளிப்பானோ அவன் மட்டுமே இளைய யாதவன் முன் நிற்க முடியும்.”
“யாரவன்? அவன் மூத்தோனா? நான் பலராமனிடம் சென்று அடிபணிவேன்” என்றான் கந்தர்வன். “இல்லை சுபத்திரையா? வசுதேவனா? அவன் மைந்தர்களா? எவராயினும் இதோ செல்கிறேன்.” அனலோன் புன்னகைத்து “இல்லை. குருதியென்பது உறவல்ல என்பதை இளைய யாதவனே உணர்ந்துகொண்டிருக்கும் தருணமிது. அது கடமை மட்டுமே என்று அறிந்ததன் சுமையால் அவன் சித்தம் இருண்டுள்ளது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கணத்தில் உணரும் அக்கசந்த உண்மையே பேயுருக் கொண்டு அவனை ஆள்கிறது இன்று” என்றான்.
“பின்பு யார் அவனுடன் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவன்?” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக! அவனிடமிருந்து அடைக்கலம் பெறுக!” என்றான் அக்னி.
“ஆம், இக்கணமே” என்று எழுந்தான் கந்தர்வன். அக்னி “அதற்கு நீ செல்வதைவிட உன் துணைவி மட்டும் செல்வதே உகந்தது” என்று அறிவுறுத்தினான். “பார்த்தன் இன்றிருப்பது யக்ஷவனத்தில். அவன் தமையன் அளித்துச்சென்ற அறத்தின் கோல்சூடி அமர்ந்திருக்கிறான். அவனை வெல்ல அறமெனும் சொல்லே வழியாகும். உன் துணைவி திருமிகுக் கோலத்தில் செல்லட்டும்.”
[ 11 ]
யுதிஷ்டிரர் கந்தமாதன மலையேறிச் சென்றபின்னர் யக்ஷவனத்தின் தனித்த தவக்குடிலில் பாண்டவர் நால்வரும் காத்திருந்தனர். அர்ஜுனன் பகலும் இரவும் அங்கிருந்த கூம்புமரக்காட்டுக்குள் வில்லம்புடன் உலவினான். உள்ளைக் குவிக்க வெளிக்குறி ஒன்றை தேர்வதே அவன் வழியென்றாகியிருந்தது. விடுபட்ட அம்புடன் எழுந்து பறந்து இலக்கைத் தொட்டதும் அவன் உள்ளம் ஒரு வட்டத்தை முழுமை செய்தது. முற்றிலும் தனித்தவனாக அலைவதற்கு காடே உரியதென்று அறிந்த விடுதலை அவன் உடலில் திகழ்ந்தது.
மாலை சிவந்து விண்முகில்கள் எரிசூடத் தொடங்கிய பொழுதில் விண்ணில் சுழன்று சென்ற இறகுப் பிசிர் ஒன்றை தன் அம்பில் கோத்து குறி நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் பெண்குரல் அழுகை ஒலி கேட்டு வில் தாழ்த்தி திரும்பிப் பார்த்தான். அங்கே மலர் உதிர்த்து மேடையிட்டு அதன்மேல் நின்றிருந்த மரம் ஒன்றின் அடியில் பொன்னிற உடல்கொண்ட அழகியொருத்தியை கண்டான். மங்கலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது அவள் தலைக்குமேல் எழுந்த கிளையில் அமர்ந்த பறவை. அவள் தனித்து வந்திருப்பதை உணர்ந்தபின் அருகே வந்து “யார் நீ?” என்று அவன் கேட்டான்.
இளமுலைகள் மேல் விழிநீர் வழிய அவள் அவன் முன் வந்து நின்றாள். “வீரரே, எடுத்த வீரர் எவராயினும் தங்கள் அம்பின் எல்லைக்குள் அவர் அரசரே என்கின்றன நூல்கள். செல்வதறியாது அழுதுகொண்டு இக்காட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் நாணொலி கேட்டு அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறேன். என் துயருக்கு நீங்களே காப்பு” என்றாள்.
“சொல்க!” என்றான் அர்ஜுனன். “விண்வாழும் கந்தர்வனாகிய சித்ரசேனனின் துணைவி நான். இசையன்றி படைக்கலம் ஏதுமில்லாதவன் என் கொழுநன். கருதாப்பிழை ஒன்றுக்காக எம் கணவனை எரித்து அழிப்பதாக அரசனொருவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவன் எரிந்தழிவான் என்றால் அச்சிதையிலேயே நானும் அழிவேன். என் மங்கலநாணுக்கு நீங்களே காவல். என் கற்பின் மீது ஆணை” என்றாள்.
“என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “காதலின் மயக்கில் அவன் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்தான். அது மண்ணில் நின்றிருந்த முனிவர் ஒருவர் மேல் விழுந்தது. தன் குலம் மீதான இழிவென அவர் அதைக் கொண்டார்” என்றாள் அவள். அர்ஜுனன் “அவன் காதலாடுகையில் உடனிருந்த துணைவி யார்?” என்றான். “நானே. மங்கலம் அன்றி பிறிதெதையும் சூடாதவள் நான்” என்று அவள் சொன்னாள்.
அவளை ஒருகணம் நோக்கியபின் “தேவி, உடனிருந்தவர் தாங்கள் என்றால் அவர் அறிந்தொரு அமங்கலம் செய்திருக்க வாய்ப்பில்லை. அக்கருதாப்பிழைக்காக உங்கள் கொழுநனை எவரும் கொன்று அழிக்க நான் ஒப்பேன்” என்றான். “இளவரசே, புவிதொட்டு அவ்வாணையை எனக்கு அளியுங்கள்” என்றாள் சந்தியை. குனிந்து மண் தொட்டு “ஆணை” என்றான் அர்ஜுனன்.
அவள் கைகூப்பி “உங்கள் வில்லை நம்பி மீள்கிறேன்” என்றாள். புன்னகையுடன் விழிநீர் ஒப்பியபடி திரும்பியவளிடம் “வஞ்சினம் உரைத்த அரசன் யார்?” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா? ஏன்?” என்றான் அர்ஜுனன். சந்தியை “சூதுச்சொல் வழியாக அம்முனிவரால் அவரது வஞ்சினம் பெறப்பட்டது” என்றாள்.
அர்ஜுனன் “அவ்வண்ணமெனில் அஞ்ச வேண்டியதில்லை. இப்புவியில் என் சொல்லே இறுதியென எண்ணுபவர் அவர். அவரிடம் உண்மை என்ன என்று நானே உரைக்கிறேன். உங்கள் கணவரை அவ்வஞ்சினத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43
October 27, 2016
காற்றுசெல்லும் பாதை.
காற்றுசெல்லும் பாதை.
[ 1 ]
சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.
மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.
அன்று முதல் இன்றுவரை நவீன் எனக்கு மானசீகமாக மிக அணுக்கமானவர். அவருடைய பல இயல்புகளுடன் நான் என் இளமைப்பருவத்தை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்று அடிதடி. நவீன் அன்றும் ஓர் அடிதடிச்சிக்கலில் இருந்தார். பத்தாண்டுகளுக்குப்பின்னரும் அதே குணாதிசயம் நீடிக்கிறது. நான் அடிதடிப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு சமனமடைந்தது நாற்பது வயதுக்குமேலேதான்.
இன்னொன்று, இலக்கியம் என்னும் அறிவுத்துறை, இலக்கியமென்னும் கலை மீது கொண்டிருக்கும் சமரசமற்ற பற்று. அந்த அர்ப்பணம் எனக்கு எப்போதுமே இருந்தது. பிறிதொரு தெய்வத்திற்கு நான் தலைகொடுத்ததில்லை. எனக்கென ஓர் ஞானாசிரியனை நான் நித்யாவில் கண்டடைந்ததுகூட அவர் இலக்கியம் தேர்ந்தவர் என்பதனால்தான். நானறிந்தவரை இலக்கியம் மீது தணியாப்பற்றுகொண்ட அடுத்த தலைமுறை இளைஞர்களில் நவீன் முதன்மையானவர், அவரது வெற்றிகளும் உவகைகளும் இழப்புகளும் கசப்புகளும் அதிலிருந்து மட்டுமே
அப்போது நவீன் ‘காதல்’ என்று ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அதில் இலக்கியத்தை அறிமுகம்செய்ய முயன்றுகொண்டிருந்தார் என்று சொல்லலாம். அவரைச்சூழ்ந்து ஒரு சிறிய எழுத்தாளர்வட்டம் உருவாகி வந்திருந்தது. வழக்கம்போல அவர்களுக்குள் இன்று மணப்பினக்கும் விலக்கமும் மீண்டும் நட்பும் என போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை நவீன் பறை என ஒரு சிற்றிதழை நடத்தினார். அவரது வாழ்க்கைப்போக்கின் மாற்றத்தைக் காட்டுவது இது என படுகிறது
உண்மையில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என தமிழ்பேசப்படும் தமிழகத்தின் அயல்பகுதிகளில் நவீன இலக்கியம் அதன் சரியான தீவிரத்துடன் அறிமுகமாகவே இல்லை. நவீன இலக்கியம் என்பதை பொதுவாக மரபிலக்கியத்திற்குப் பின் வந்ததும், உரைநடையில் எழுதப்பட்டதும் என வரையறைசெய்யலாம். ஆனால் குறிப்பாக அது ‘நவீனத்துவ’ இலக்கியம்தான். தமிழில் புதுமைப்பித்தனில் இருந்தே அது தொடங்குகிறது. புதுமைப்பித்தனின் மரபையே நவீன இலக்கியம் என இங்கே குறிப்பிடுகிறேன்.
இலங்கையைப் பொறுத்தவரை நவீன இலக்கியம் இருபோக்குகளாகவே அறிமுகமாகியிருந்தது. ஒன்று தமிழ் வணிகஎழுத்தை முன்மாதிரியாகக் கொண்ட எழுத்து. செங்கை ஆழியான் வகை. இன்னொன்று, முற்போக்கு எழுத்து. கைலாசபதி ,சிவத்தம்பி ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டது
நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை இலங்கையில் பேச ஆரம்பித்தவர் மு.தளையசிங்கம். ஆனால் அவரே முற்போக்கு முகாமிலிருந்து வந்தவர் என்பதனால் சமூகச்செய்தி என்னும் மனச்சிக்கலில் இருந்து விடுபடமுடியவில்லை. அத்துடன் அவர் செயல்பட்ட காலம் குறைவு, வட்டமும் சிறிது. அதன்பின்னர் அத்தகைய ஒரு மையம் அங்கு அமையவுமில்லை.
ஆகவே சரியான அர்த்தத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தமிழகத்தில் உருவான நவீன இலக்கியத்தின் அலை இலங்கையில் எழவே இல்லை. இன்று அங்கு எழுதுபவர்களில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றவர்கள் அச்சூழலுக்குச் சம்பந்தமே இல்லாமல் எழுந்துவந்தவர்கள்.
சிங்கப்பூர் இலக்கியத்தைப் பொறுத்தவரை அங்கு நவீன இலக்கியத்திற்கான மனநிலையை உருவாக்குவதில் குறைந்தகாலம் அங்கிருந்த சுப்ரமணியம் ரமேஷ் தொடக்கப்பங்காற்றியிருக்கிறார். எழுத்தாளராக நா.கோவிந்தசாமி ஒரு தொடக்கம். மற்றபடி அங்கிருந்தது மு.வரதராசனாரிலிருந்து தொடர்ச்சி கொண்ட ஓர் ஒழுக்கவாத இலக்கியம் , திராவிட இயக்கத்திலிருந்து வளர்ந்த அடையாள உருவாக்க இலக்கியம் ஆகியவை மட்டுமே.
மலேசிய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதல்பெரும்போக்காகத் தென்படுவது ஆர்..சண்முகம், அ. ரெங்கசாமி போன்ற முன்னோடிகளின் முற்போக்கு இலக்கியம். ரெ.கார்த்திகேசு போன்றவர்களின் ஒழுக்க இலக்கியம். நவீன இலக்கியத்திற்கான இடம் அங்கு உருவாவது சண்முக சிவா அவர்களின் முயற்சியினால்தான். மெல்லமெல்ல அவருக்கான ஓர் இளைஞர்குழு உருவாகியது. அதிலிருந்து கிளைத்தவர் நவீன்.
நவீன இலக்கியத்திற்கான அடிப்படைகள் என பலவற்றை வரையறைசெய்யலாம். ஆசிரியன் ஒரு வழிகாட்டியாக, அறுவுறுத்துவோனாக அதில் செயல்படுவதில்லை. அவன் அச்சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக தன்னை முன்வைக்கிறான். தன்னை தன் படைப்பில் அறுத்து ஆராய்கிறான். இந்த அகவயத்தன்மையே முன்னர் குறிப்பிட்ட இலக்கியப்போக்குகளில் இருந்து நவீன இலக்கியத்தை பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இரண்டாவதாக, அவன் சமூகத்தின் தரப்பில் நிற்காமல் அதைத்திரும்பி நோக்கி விமர்சனம் செய்யும் கோணத்தில் நின்றிருக்கிறான். கூரிய விமர்சனம் என்பது நவீன இலக்கியத்தின் முக்கியமான அடிப்படை.
தன்னை முன்னிறுத்தல், விமர்சனப்போக்கு ஆகிய இரண்டு அம்சங்களால் நவீன இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒரு ‘துடுக்குத்தனம்’ உள்ளது. அது புதுமைப்பித்தனிலேயே ஆரம்பிக்கிறது. மரபான உள்ளம் கொண்டவர்களை அது சீண்டுகிறது. சினக்கவும் கூசவும் வைக்கிறது. இன்றுவரை நவீன இலக்கியவாதிகள் தமிழின் மைய ஓட்டத்திற்குச் செல்லாததற்குக் காரணம் இதுவே
நம் மரபு என்பது மேல்கீழ் அடுக்குகளால் ஆனது. அங்கே சான்றோர் வேறு சாமானியர் வேறுதான். அதற்குரிய பலநூறு இடக்கரடக்கல்கள், முகமன்கள் முறைமைகள் ஆகியவை கொண்டது. நவீன இலக்கியம் இந்த அடுக்குமுறைகளை பொருட்படுத்துவதில்லை. இடக்கரடக்கல்கள் முகமன்கள் முறைமைகள் அதற்கு சலிப்பூட்டுவன. ஆகவேதான் நவீன இலக்கியவாதி எப்போதும் மரபுசார்ந்தவர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறான்
புதுமைப்பித்தன் ஆனாலும் சரி ஜெயகாந்தன் ஆனாலும் சரி இன்றுள்ள எழுத்தாளர்கள் வரை இந்த எரிச்சலூட்டும் அம்சம் அவர்களிடம் உள்ளது. கவன ஈர்ப்புகாக வேண்டுமென்றே கலகம் செய்கிறான் என்றும், கோணலானவன் என்றும் நவீன இலக்கியவாதி மரபானவர்களால் குற்றம்சாட்டப்படுகிறான். அக்குற்றச்சாட்டு தல்ஸ்தோய் மேல் இருந்தது, அல்பேர் கம்யூ மேல் இருந்தது என்னும் போது அது ஒரு கௌரவம்தான்
அத்துடன் உண்மையிலேயே கவன ஈர்ப்பு இலக்கியவாதியின் நோக்கமும் கூட. சீண்டி நிலைகுலையச்செய்வதன் வழியாகவே அவனுடைய இலக்கியம் சமூகத்திடம் உரையாடுகிறது. அதன் உறைநிலையை கலைக்கிறது. சமன்குலைத்தல் என்பது நவீன இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று.
மலேசியாவில் ஒருவகையில் நவீன இலக்கியவாதிக்குரிய அந்த துடுக்கை, சமன்குலைவுப் பண்பை அறிமுகம் செய்தவர் என நவீனை நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கையில் என் தொலைதூர பிம்பம் போலிருக்கிறார். அவ்வகையில் எனக்கு மிக மிக அணுக்கமான ஒருவர் அவர்
[ 2 ]
இளவயதிலேயே நான் உதறிவிட்ட ஓர் அம்சம் நவீனிடம் உண்டு, அரசியல். நான் அரசியல்நோக்கு என்பது எழுத்தாளனின் ஆழ்மனம் நோக்கிய பயணத்தை வெளியே இருந்து கட்டுப்படுத்துவது என்றே எண்ணுகிறேன். ஆனால் நவீன் அவரது சூழலில் இருந்து ஓர் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அவ்வரசியல் சார்ந்து அவர் முன்னிலைப்படுத்தும் சிலர் என் நோக்கில் ஆழமற்ற கூச்சலாளர்கள் மட்டுமே
இலக்கியத்திற்கு அவசியமானது அந்தரங்கமான ரசனை என்பது என் எண்ணம். இலக்கியப்படைப்பை நோக்கி தன் ஆழ்மனதைத் திறந்துவைக்கும் வாசிப்பின் வழியாக உருவாகி வருவது அது. அரசியல் நோக்கு அதற்கு மிகப்பெரிய வடிகட்டியாக அமைந்துவிடுகிறது. வாழ்நாளெல்லாம் அரசியல்நோக்குடன் இலக்கியத்தை வாசித்தபலர் ஒரு கட்டத்தில் அவர்கள் இழந்ததென்ன என அறிந்து வருந்தியதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்
இளமையின் அரசியல்நோக்குக்குள் சென்று விடுவதென்பது பெரிய துரதிருஷ்டம்தான். மீண்டுவந்தால்தான் உண்டு. எவ்வகையிலோ இலக்கியமே நினைத்து கனிந்து நம்மை வந்து சூழ்ந்துகொள்ளவேண்டும். நவீன் குறித்து எனக்கிருந்த பதற்றத்தை தணிப்பதாக இருக்கிறது இந்நூல். இதில் அவர் தன் அரசியல்பலகணிகளை துறந்து வாசல்திறந்து வந்து படைப்புகளின் முன் நிற்பதைப் பார்க்கமுடிகிறது
பலகோணங்களில் இலக்கியரசனையை முன்வைக்கும் கட்டுரைகள் இவை. இலக்கிய ரசனையின் இரு வழிகள் இதிலுள்ளன. ஒன்று, இலக்கியப்படைப்பை தன்வயப்படுத்திக்கொள்வது. தன் சொந்த அனுபாவங்கள் மற்றும் உணர்வுகள் வழியாக இலக்கியப்படைப்புகளை நோக்கிச் செல்வது. இரண்டு, இலக்கியப்படைப்புகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் தொடர்புபடுத்தியும் ஓர் அந்தரங்கமான வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்வது
இரண்டுமே இலக்கியப்படைப்புகளை வளர்த்து விரிப்பவை. உதாரணமாக, அக்னிநதி குறித்த கட்டுரை அந்நாவலுடன் ஆத்மார்த்தமான ஓர் உறவை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது. தொன்மங்களின் மறுஆக்கம் குறித்த கட்டுரை இலக்கியப்படைப்புகளை ஒப்பிட்டு பின்னிச் செல்கிறது.
பலகட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி என தொடர்ந்துவரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளை கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும்பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும்பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது
உயிர்ப்புள்ள ஒரு இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் என கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றி தான் என உணரும் தானறியா தன்னிலை ஒன்றை புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்டபின் தான் கண்டவற்றை தன்மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது
இந்த ரசனை அவரை வாழ்நாளெல்லாம் வழிநடத்தட்டும்
ஜெயமோகன்
[ம.நவீன் எழுதி வெளிவரவிருக்கும் உலகத்தின் நாக்கு என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விஷ்ணுபுரம் விருது ஓர் அறிவிப்பு, ஒரு விண்ணப்பம்
அன்புள்ள நண்பர்களுக்கு,
இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.
பரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.
வருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்
ஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது
ஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.
இதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்
வங்கி விவரங்கள்
வங்கி ICICI BANK Ram Nagar Coimbatore
பெயர் VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZUTHALARGAL ARAKKATTALAI
கணக்குஎண் 615205041358
IFSC Code ICIC0006152
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9
[ 6 ]
முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது. அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
யாதவகுடிகள் விரிந்து கன்று பெருகிய காலம் அது. மேய்ச்சல்நிலங்களுக்கான பூசல்கள் தொடங்கிவிட்டிருந்தன. கோகிருதத்தின் குடியவை கூடி அவர்களுக்குரியதென அமைந்த காட்டில் எங்கு எவர் தங்கள் கன்றுகளை மேய்க்கவேண்டும் என்று நெறியமைத்தது. கன்றுகளின் காதில் அவற்றின் உரிமையாளர்கள் மணிகோத்து அடையாளம் பொறிக்கவும் முறைவைத்து காடுகளை மாற்றிக்கொண்டு எல்லைக்குள் மட்டுமே மேய்க்கவும் ஆணையிட்டது.
மதனர் வளர்த்த காராம்பசு ஒன்று கட்டவிழ்த்துக்கொண்டு அவர் உடன்பிறந்த மூத்தவரின் பசுக்களுக்காக வகுக்கப்பட்டிருந்த புல்வெளியில் புகுந்தது. அது அங்கு மேய்வதைக்கண்ட மூத்தவர் அதை பிடித்திழுத்துச்சென்று பெருமரம் ஒன்றில் கழுத்து இறுகக் கட்டினார். பகலெல்லாம் பசுவைக் காணாது அலைந்த மதனர் அந்தியில் அதை கண்டுகொண்டார். நீரும் புல்லுமின்றி குரலெழுப்ப இயலாது கழுத்திறுகித் தொங்கி நின்ற பசுவைக் கண்டதும் அழுதபடி ஓடிச்சென்று கட்டை அவிழ்த்து பசுவை விடுவித்தார். அதன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரின்தடம் அவர் நெஞ்சை கொந்தளிக்கச் செய்தது.
சினத்தால் நடுங்கும் உடலுடன் அவர் சென்று தன் தமையன் முன் நின்று “இது முறையா? குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை?” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்?” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக! பசுவின் பழிகொண்ட குலம் வாழ்வதில்லை” என்றார் மதனர்.
சினம் கொண்ட மூத்தவர் “விலகிச்செல் அறிவிலியே, நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்று கூவியபடி இளையவனை கையால் பிடித்துத் தள்ளினார். மல்லாந்து விழுந்த மதனர் சினம் தலைமீற அருகிருந்த கல்லை எடுத்து தமையன் தலைமேல் ஓங்கி அறைந்தார். அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று அறிந்து அழுதபடி தமையன் காலில் விழ முன்னால் சென்றார். அவரை உதைத்து உதறிவிட்டு “தந்தைப்பழி கொண்டவனே, நீ இனி இங்கிருக்கலாகாது” என்று தமையன் கூவினார்.
குருதி வழிய தமையன் ஓடிச்சென்று குலமூத்தார் கூடிய அவையில் நின்று கதறி முறையிட்டார். நிலம் வகுத்த எல்லையை மீறியதும் அதைத் தடுத்த தமையனை தாக்கியதும் பெரும்பிழை என அவை வகுத்தது. பங்குச்செல்வத்தைப் பெற்று குலம்விட்டு விலகிச்செல்லும்படி மதனருக்கு ஆணையிட்டது. அவருக்கு தந்தையின் செல்வமெனக் கிடைத்தது பதினேழு பசுக்கள். அவற்றில் பத்து பசுக்களை அடிபட்ட தமையனுக்கு பிழையீடாக அளித்துவிட்டு எஞ்சியவற்றுடன் இரவெழுவதற்குள் குடிநீங்கும்படி சொன்னார்கள் மூத்தார்.
பதினேழு நாட்கள் ஊர்கள் வழியாகவும் குறுங்காடுகள் வழியாகவும் தனக்கென நிலம் தேடி நடந்து களைத்த மதனர் ஒருநாள் மாலையில் ஓர் அத்திமரத்தின் அடியில் தங்கினார். இளமழை சொரிந்த குளிர்மிக்க அவ்விரவில் பாளைக்குடிலை தலைக்குமேல் அமைத்து மரவுரிகளைப் போர்த்தியபடி மனைவியை அணைத்துக்கொண்டு துயின்றார். அவரைச் சூழ்ந்து அவர் அழைத்துச்சென்ற பசுக்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்து எருதுகள் நின்றன. காட்டுவிலங்குகள் அணுகாதிருக்க தறியறைந்து மணிகோத்துக் கட்டிய சரடு அவர்களை சூழ்ந்திருந்தது.
காலையில் அவர் கண்விழித்தபோது அவரைச் சூழ்ந்து ஏழு கனிந்த அத்திப்பழங்கள் விழுந்துகிடக்கக் கண்டார். அவ்விடம் திருமகள் உறையும் நிலம் என அவர் உணர்ந்தார். அங்கேயே குடில் ஒன்று கட்டி குடியிருக்கலானார். ஏழு கனிகள் விழுந்த இடத்தில் கல் ஒன்று நாட்டி திருமகளை நிறுத்தி வணங்கினார். மங்கலமஞ்சளும் மலரும் கொண்டு அவளை வழிபட்டாள் அவர் குலமகள். “இது இளையவள் அருளிய இடம். இங்கு அமைவோம். இங்கு தழைக்கும் நம் குடி” என அவர் அவளிடம் சொன்னார்.
அந்நிலத்தில் திருமகள் பொலிந்தாள். கன்றுகள் பெற்றுப்பெருக குடி எழுந்துபரந்தது. சப்தஃபல கன்னிகை என்றே அத்திருமகள் அழைக்கப்படலானாள். அவ்வூரும் சப்தஃபலம் என்று பெயர்கொண்டது. நூற்றெட்டு தலைமுறைகளாக அங்கே ஆபுரந்து அறம்வளர்த்த அத்தொல்குடி மாதனிகர் என்று அழைக்கப்பட்டது. விருஷ்ணிகுலத்தின் அவைகளில் அத்திமரத்தின் இலையை தலைப்பாகையில் சூடியமர்ந்திருக்கும் உரிமை கொண்டிருந்தது.
சப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகையே அவ்வூரில் வாழ்ந்த மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான குடித்தெய்வம். அன்னைக்கு ஒவ்வொருநாளும் அன்றலர்ந்த புதுமலர்களால் பூசனை செய்யப்பட்டது. புத்தரிசிச்சோறும் மஞ்சள்குழம்பும் படைக்கப்பட்டது. கருவுற்றாலும் ஈன்றாலும் அங்குவந்து வழிபட்டனர். புதுப்பாலை அன்னைக்குப் படைத்தனர். அவர்களின் ஆநிரை காப்பவள் அவள் என்று தொழுதனர்.
முதற்புலரியில் ஊரெழுவதற்கு முன்னர் சப்தஃபலத்தின் இளையவள் எழுந்துவிடுவாள். குறுங்காட்டிலிருந்து நீராவி கலந்த குளிர்காற்றில் பசுந்தழை மணம் மொண்டு ஊர்மேல் நிறைப்பாள். இல்லங்களின் முற்றங்களில் இரவில் பூத்த மலர்களை உதிர்த்துப்பரப்புவாள். காற்று அலைபரவிய புதுப்புழுதித் தெருவில் அவள் காலடித்தடம் தெரியும். இல்லத்துப்பெண்கள் காலையெழுந்து கதவுதிறக்கும்போது மங்கல இளம்வெளிச்சமாக அவள் முற்றத்தை நிறைத்திருப்பாள். அவர்கள் பச்சரிசி மாவால் பசுஞ்சாணிப்பரப்பில் அவள் கால்தடங்களை கோலமாக வரைந்து வைப்பார்கள்.
அன்று இளையவள் தன் கோயிலில் இருந்து எழுந்து வெளிவந்தபோது எதிரே இருண்ட சாலையில் கலைந்த குழலும் தளர்ந்துலைந்த நடையுமாக இளையோன் ஒருவன் வருவதைக் கண்டாள். விடியொளி விழிதுலக்கத் தொடங்கியிருந்தபோதும் அவனைச் சுற்றியிருந்தது அடரிருள் ஒன்று. அவனைத் தொடர்ந்து எலிகள் வந்துகொண்டிருந்தன. தலைக்குமேல் வௌவால்கள் அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. அவன் வருவதற்குள்ளாகவே கெடுமணம் கொண்டு காற்று வந்தது.
அன்னை அவன் முன்னால் புன்னகையுடன் நின்று “மைந்தா” என்றாள். அவன் அவளை அலையும் விழிகளுடன் நோக்கி ஒருகணம் நின்று பின் தன் அழுக்கான கையை நீட்டி “விலகு” என ஒதுக்கிவிட்டு கடந்துசென்றான். அவள் “நான் யாரென்று அறிவாயா?” என்றபடி அவன் பின்னால் செல்ல அவன் இயல்பாக காறித்துப்பிய எச்சில் அவள் முகத்தில் விழுந்தது. திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட்டாள். அவன் திரும்பி நோக்காமல் நடந்து மறைந்தான்.
நின்றிருக்கவே அவள் உடல் கருமைகொண்டது. அவள் வலத்தோள்மேல் காகம் ஒன்று வந்தமர்ந்தது. அவள் இனிய புன்னகை மறைந்து கரிய கோரைப்பற்கள் எழுந்தன. கனைத்தபடி கழுதையொன்று அவளருகே வந்து நிற்க அவள் அதன் மேல் ஏறியமர்ந்தாள். கையில் அவள் கொண்டிருந்த வெண்தாமரை மலர் துடைப்பமாக மாறியது. அவள் உடலெங்கும் பரவியிருந்த ஒளி மெல்ல இருண்டு ஒட்டடைப்படர்வாகியது.
[ 7 ]
கசியபப் பிரஜாபதிக்கு அரிஷ்டையெனும் துணைவியில் பிறந்த பதினாறாயிரம் கந்தர்வர்களில் மூத்த நூற்றெண்மரில் ஒருவனாகிய சித்ரசேனன் தன் காதல் மனைவியாகிய சந்தியையுடன் விண்முகில் ஒன்றில் யாழுடன் அமர்ந்து காதலாடினான். அந்தியெழும் வேளையில் காற்றில் பனித்துளியென விண்ணில் பொன்னிறத்தில் திரண்டு வரும் பேரழகி அவள். அந்தி இருண்டு விண்ணின் விழிகள் திறக்கும்போது அவனை மொழியால் சூழ்ந்து, மேனியால் தழுவி, காமத்தால் புதைத்து அவள் மகிழ்விப்பாள். மழைக்கால மலைகளைப்போல அவனிலிருந்து குளிரருவிகள் ஒளியுடன் எழும். அத்திமரம் கனிகொண்டதுபோல அவன் வேரும் தடியும் கிளையும் இனிமைகொண்டு நிறைவான்.
ஆனால் முதற்சூரியக் கதிர் எழுவதற்குள் அவள் உடல்கரைந்து உருமாறத்தொடங்குவாள். அவள் உடலின் தோலில் சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாகும். முகமெங்கும் வரி படரும். உடல்கூன கண்கள் பஞ்சடைய கூந்தல் நரைத்துக்குறுக முதுமகளாக ஆவாள். அவளுக்கு அப்போது வலிகை என்று பெயர். இருவுருக்கொண்ட ஒருமகள் அவள் என்று சித்ரசேனன் அறிந்திருக்கவில்லை. இரவில் ஒருமுகமும் பகலில் மறுமுகமும் கொண்ட அவளுடைய எழில் முகத்தை மட்டுமே அவன் கண்டான்.
முன்பு அந்திப்பொழுதில் முகிலில் கனிந்த மழைத்துளி ஒன்று செவ்வொளிபட்டு பொன்னென்றாகியது. அவ்வழி விண்ணில் கடந்துசென்ற பிரம்மன் புன்னகைத்து அவளை ஒரு கன்னியென்றாக்கினான். கைகூப்பி நின்றிருந்த கன்னியிடம் “பிந்துமதி என்று எழுந்தவள் நீ. இசைகொண்டு உன்னை மீட்டும் கந்தர்வன் ஒருவனுக்கு காதலியாகுக!” என்று வாழ்த்தினான். விண்ணில் ஒளிவிட்டு நின்றிருந்த அவளை இரு தேவியர் அணுகி இருகைகளையும் பற்றிக்கொண்டனர். வலக்கையைப் பற்றியவள் திருமகள். “நான் இளையோள். உன்னில் எழிலையும் மங்கலத்தையும் நிறைப்பவள்” என்றாள். இடக்கையைப் பற்றியவள் இருள்மகள். “நான் தமக்கை. உன்னை நீ மட்டுமே அறியும் பேராற்றல் கொண்டவளாக ஆக்குவேன்” என்றாள்.
இருவரில் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது பிந்துமதி திகைத்தாள். இருவரும் இரு கைபற்றி இழுக்க அவள் இரண்டாகப் பிரிந்தாள். ஒருத்தி பேரழகுகொண்ட சந்தியை. பிறிதொருத்தி முதுமைகொண்டு சுருங்கிய வலிகை. அந்தியில் எழுந்தவள் சூரியனை அறியவே இல்லை. பகலில் உழன்றவள் விண்மீன்களை பார்த்ததே இல்லை. ஆனால் சந்தியையைக் கூடும் காமத்தின் ஆழத்தில் சித்ரசேனன் வலிகையைக் கண்டான். அழகைப் பிளந்தெழுந்த ஆற்றலை உணர்ந்தான்.
அன்றும் அவளுடன் காமத்தில் திளைக்கையில் ஆழத்து அலைகளில் ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்டெழுந்த வலிகையின் விழைவின் பேராற்றலை உணர்ந்து திகைத்துத் திணறிக் கொண்டாடி மூழ்கி எழுந்து மீண்டு வந்து மல்லாந்து படுத்து அன்று அவனுடன் உரையாட எழுந்த விண்மீனை நோக்கிக் கொண்டிருந்தான். அவனருகே புரண்டுபடுத்த சந்தியை “நீங்கள் என்னுடன் இருக்கையில் பிறிதொருவரிடம் செல்கிறது உங்கள் உள்ளம். என் கைகளுக்குச் சிக்கிய உடலுக்குள் உள்ளம் இல்லை என்பதை ஒருகணம் உணர்ந்தேன்” என்றாள்.
“ஆம், ஆழத்தில் நீ பிறிதொருத்தியாக ஆகிறாய். அந்த ஆற்றலை எதிர்கொள்கையிலேயே என்னுள்ளும் ஆற்றல் எழுகிறது” என்றான் சித்ரசேனன். “அது நானல்ல” என்று அவள் சீறினாள். “அதுவும் நீயே. நீயென்று நீ நிகழ்த்துவது மட்டும் அல்ல நீ” என்று அவன் நகைத்தான். அவள் சினத்துடன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் முகத்தின் உவகைக்குறி அவளை எரியச்செய்தது. பின்னர் குனிந்து அவன் செவிகளுக்குள் “நான் அவளென்று ஆனால் உங்களுக்கு பிடித்திருக்குமா?” என்றாள். அவள் வினாவை நன்குணராத சித்ரசேனன் “ஆம்” என்றான். அவள் மூச்சில் முலைகள் எழுந்தமைய அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
முதற்கரிச்சான் குரலெழுப்புவதற்குள் விழித்துக்கொண்டு அவன் இதழ்களை முத்தமிட்டு எழுப்பி விடைகொண்டு அகல்வது அவள் வழக்கம். அன்று அவள் வஞ்சமெழுந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கீழ்த்திசையில் முதல்புள் காலை என்றது. முகில்குவையின் நுனிகளில் செம்மை படரத் தொடங்கியது. அவள் புறங்கைகளில் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களுக்குக் கீழே தோல்வளையங்கள் கருகியிறங்கின. முகவாயில் ஆழ்ந்த வாய்வரிகள் விரிசல்போல் ஓடின. நெற்றியில் கோடுகள் படிந்தன.
அவனை முத்தமிட்டு “எழுக!” என அவள் சொன்னபோது அவள் வலிகையென்றாகிவிட்டிருந்தாள். அவன் விழித்து கையூன்றி எழுந்து அவளை நோக்கி “யார் நீ?” என்று கூவினான். “நான் மூத்தவளாகிய வலிகை. சந்தியையின் மறுமுகம்” என்றாள். “இல்லை, நீ எவரோ. நான் உன்னை அறியேன்” என்று அவன் கூவியபடி எழுந்தான். அவள் அவன் ஆடைபற்றி நிறுத்தி “நீ என்னை அறிவாய்” என்றாள். அவள் விழிகளில் எரிந்த விழைவைக் கண்டதுமே அவன் அறிந்துகொண்டான். “ஆம்” என்றான். அவனிலும் அவ்விழைவு பற்றிக்கொண்டது.
அவளுடன் அவன் காமத்திலாடினான். எரி எரியை ஏற்று எழுவதுபோன்ற காமம். கீழே சித்ரகூடமெனும் காடு புள்ளொலியும் சுனைகளிள் மணியொளியும் என நிழல்கரைந்து விடிந்துகொண்டிருந்தது. காதலில் கொண்டிருந்த எல்லா நுண்மைகளையும் அழகுகளையும் அவன் துறந்தான். இன்சொற்களும் நெகிழுணர்வுகளும் அகன்றன. வன்விழைவே இயல்பென்றான விலங்கென மாறினான். கூடி முயங்கி மூச்சிரைக்க திளைத்த பொழுதில் அவள் வாயிலிட்டு அளித்த வெற்றிலைச்சாற்றை தன் வாயில் வாங்கி மென்று திரும்பி நீட்டி நிலத்துமிழ்ந்தான்.
[ 8 ]
கௌசிக குலத்தில் பிறந்தவரும் விசுவாமித்திர மாமுனிவரின் கொடிவழி வந்தவருமாகிய காலவ முனிவர் கின்னரநாட்டின் மேல்விளிம்பில் அமைந்த சித்ரகூடம் என்னும் பசுங்காட்டின் நடுவே குடில் அமைத்து தன் பதினெட்டு மாணவர்களுடன் தவமியற்றி வந்தார். ஆறாக்கடுஞ்சினம் கொண்ட முதல்முனிவரின் அவ்வியல்பையே தானும் கொண்டவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.
ஆவணி மாதக் காலை ஒன்றில் காலவர் தன் முதல் மாணவர் மூவருடன் அக்காட்டின் நடுவே ஓடும் சித்ரவாகினி என்னும் ஆற்றின் கரைக்கு கதிர்வணக்கத்திற்காக சென்றார். நீராடி, சடைமுடிக் கற்றைகளை தோளில் பரப்பி, கிழக்கு நோக்கி இடைவரை நீரில் நின்று, எழுசுடர் கொண்டிருந்த செம்மையை தன் முகத்தில் வாங்கி, சூரியனை வழுத்தும் வேதச்சொல்லை ஓதி, நீரள்ளி கதிருக்கு நீட்டி கை மலர்ந்தபோது அதில் உமிழப்பட்ட வெற்றிலைச்சாறு வந்து விழுந்தது.
பறவை எச்சம் போலும் என்று எண்ணி அதை நோக்கிய காலவர் அறிந்து அருவருத்து கையை உதறி அதை நீரில் விட்டார். கைகளை மும்முறை கழுவியபடி தலை நிமிர்ந்து வானைப் பார்த்தபோது கடந்து சென்ற முகில் ஒன்றின் மேல் அரைமயக்கில் படுத்திருந்த கந்தர்வனின் கழலணிந்த காலை கண்டார். அப்பால் அக்காலுடன் பிணைந்ததென கந்தர்வப் பெண்ணொருத்தியின் கால் தெரிந்தது.
நிகழ்ந்ததென்ன என்று அக்கணமே உணர்ந்த காலவர் குனிந்து நீரில் ஒரு பிடி அள்ளி வான் நோக்கி நீட்டி “நீ எவராயினும் ஆகுக! என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றார். அவருடைய மூன்று மாணவரும் குனிந்து நிலம் தொட்டு “புவி சான்றாகுக! நிலை சான்றாகுக! வேர் சான்றாகுக!” என்றனர்.
சினம் எரிந்த உடலுடன் காலவர் சென்ற வழியெல்லாம் தளிரிலைகள் கருகின. புட்கூட்டம் அஞ்சிக் கூவி வானிலெழுந்தது. தன் குடில் மீண்ட காலவர் தனியறைக்குள் சென்று புலித்தோல் விரித்து அதன் மேல் அமர்ந்து விழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்தார். அவர் அறைக்கு வெளியே மாணவர்கள் கைகூப்பி காத்து நின்றனர். ஊழ்கத்தில் தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மூதாதையர் அளித்த முதற்சொல்லை மீட்டார். அதன் சரடு வழியாகச் சென்று அங்கு அடைந்து உச்சிநின்று கூவினார். “என் தவத்தை இழிவு செய்தவன் எவன்? தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள்!”
தன்னுள் எஞ்சிய இறுதி வேதச்சொல்லெடுத்து ஆணையிட்டார். “இங்கு எழுக என் கையின் அவிகொண்ட எரி!” அவர்முன் அகல் சுடரிலிருந்து எழுந்து திரைச்சீலையை பற்றிக்கொண்டு நின்றெழுந்த அனலவன் “முனிவரே, அவன் பெயர் சித்ரசேனன். விண்ணில் தன் துணைவியுடன் காதல்கொண்டிருக்கையில் நிலைமறந்தான்” என்றான். காலவர் சீற்றத்துடன் “எப்போதும் நிலைமாறாதவனே விண்ணூரும் தகுதிகொண்டவன். அவன் கால்கீழே வேதச்சொல் ஓதும் முனிவர் வாழ்வதை அவன் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.
அனலோன் “ஆம், ஆனால் காதலென்பது கட்டற்றது அல்லவா?” என்றான். “காலவரே, இக்காடு விண்ணில் அவன் கொண்ட காதலின் பொருட்டு மண்ணில் அவனால் உருவாக்கப்பட்டது. ஆயிரமாண்டுகாலம் தன் யாழை மீட்டி அதன் சுதியின் அலைகளிலிருந்து இப்பசுமரப் பெருவெளியை அவன் படைத்தான். இங்கு மரங்களை சமைத்து, சுனைகளையும் குளிர்ந்த பாறைகளையும் உருவாக்கினான். விழிமின்னும் மான்களும் தோகை விரிக்கும் மயில்களும் பாடும் குயில்களும் அவனால் உருவாக்கப்பட்டதே. இங்கு ஆண்டு முழுக்க வெண்குடையென நின்று கனிந்து மழை பெய்து கொண்டிருக்கும் முகில் அவன் இல்லம். தன் நூற்றியெட்டு தேவியருடன் அவன் இங்கு வசிக்கிறான். வெல்லற்கரியவன். விண் துளிகளுக்கு நிகரான அம்பு பெய்யும் ஆற்றல் கொண்டவன்.”
காலவர் சினம் மேலும் கொழுந்துவிட கூவினார் “என் சொல் மாறாது. இவன் செயலால் என் தவம் கொண்ட இழிவு இவன் அழியாமல் அணையாது. அவனை நான் வென்றாக வேண்டும்.” எரியன் “முனிவரே! அவனுடைய காட்டில் குடியேறியிருப்பது தாங்கள்தான். தன் இன்பத்தை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு குயிலுக்கு காகத்தையும் மயிலுக்குக் கோழியையும் மானுக்குப் புலியையும் குளிரோடைக்குக் காட்டெரியையும் அவனே உருவாக்கினான். தன் காமத்திற்கு மாற்றாக இங்கு உங்களை அவன் குடியேற்றினான். முற்றும் துறந்து தவம் செய்யும் பொருட்டு வெற்றுடலுடன் நீங்கள் இக்காட்டின் எல்லைக்கு வந்தபோது இவ்வழியே என்று கூவும் வழிகாட்டிப் பறவையாக உங்கள் முன் தோன்றி இங்கு அழைத்துவந்தவன் அவன்தான்” என்றான்.
“இக்காடல்ல நான் குடியிருக்கும் இடம். என் உள்ளத்தில் எழுந்த வேதச்சொல் விளையும் வெளியில் அமர்ந்திருக்கிறேன். பிறிதொன்றும் எனக்கொரு பொருட்டல்ல” என்று காலவர் சொன்னார். “பொறுத்தருள்க, முனிவரே! அவனை இங்கு அழைத்து வருகிறேன். உங்கள் வேள்விக்காவலன் என்று நின்றிருப்பான். உங்கள் தாள் பணிந்து பிழை பொறுக்குமாறு அவன் கோருவான்” என்றான் அனலோன். “இல்லை, நான் விழைவது அவன் எரிநீறு மட்டுமே” என்று காலவர் சொன்னார்.
“ஆம், அவன் அறியாமல் இப்பிழை ஆற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் உமிழ்ந்த மிச்சில் என் மீதல்ல, நான் கொண்ட தவம் மீது மட்டுமல்ல, எந்தையின் மீதும்கூட. என் முதுமூதாதை விசுவாமித்திரர் மீது விழுந்த வாய்நீர் அது. அனலோனே, மானுடர்க்கரிய அருந்தவம் இயற்றி படைப்பவனுக்கு நிகரென பேருரு கொண்டபோதும் அந்தணர் அல்ல என்பதனால் ஆயிரம் அவைகளில் இழிவுபட்டவர் என் மூதாதை விசுவாமித்திரர். இன்றும் அவ்விழிவின் ஒரு துளி சூடியே நானும் என் குலத்தோரும் இம்மண்ணில் வாழ்கிறோம்.”
“என் கையில் விழுந்த அவ்வெச்சில் இங்கு நாளை வேதியரால் இளிவரலாக விரியுமென்பதை நான் அறிவேன். அது சூதர் சொல்லில் எப்படி வளரும் என்றும் நானறிவேன். அவனைப் பொசுக்கிய சாம்பல் ஒன்றே அதற்குரிய மறுமொழியாகும். கௌசிககுலத்தின் தவத்திற்குச் சான்றென அது நின்றிருக்கட்டும் கதைகளில்” என்று காலவர் சொன்னார். “இனி சொல்லாடவேண்டியதில்லை. நீ செல்லலாம்” என்றார்.
அனலோன் “அவ்வண்ணமெனில் உங்கள் சொல்வல்லமையால் அவனுடன் போர்புரிக! முனிவரே, மண்ணில் எவரும் அவனை வெல்ல முடியாதென்று அறிவீர்” என்றான். காலவர் “விண்ணில் ஒருவன் அவனை வெல்ல முடியுமென்றால் மண்ணிலும் ஒருவன் அவனை வெல்ல முடியும். யாரெனக் காண்கிறேன்” என்று சூளுரைத்தார். “அவன் படைக்கருவி யாழில் அவன் இசைக்கும் இசை. வில் செல்லாத தொலைவுக்கு சொல் எட்டா சேய்மைக்கு செல்லும் ஆற்றல் கொண்டது இசை… அவனை வெல்லமுடியாது” என்றபடி அனலவன் அணைந்து கரியென எஞ்சினான்.
அன்றாட அறச்செயல்களை நிறுத்தி, நீரன்றி உணவுகொள்ளாது அவ்வறைக்குள் அமர்ந்து தன்னுள் நிறைந்து புடவிப்பேரோவியத்தை விரித்து விரித்து பறந்து புள் என தேடி ஏழுநாட்கள் அமர்ந்திருந்த காலவர் இளைய யாதவரை கண்டடைந்தார். அவரை முழுவடிவில் கண்டதுமே வானிலிருந்து அறுந்து மண்ணறைந்து விழுந்தவர்போல் அதிர்ந்து அலறினார். விழிதிறந்து உவகையுடன் “ஆம்!” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே!” என்று கூச்சலிட்டார்.
அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “அவனே வெல்வான். அவனை வெல்லல் மூன்று இறைவருக்கும் அரிது” என்று காலவர் கொந்தளித்தார். “இப்புவியில் விண்ணின் துளியென வந்துதிர்ந்தவன். மண்ணையும் முழுதும் வெல்லும் பேராற்றல் கொண்டவன். அவனே அக்கந்தர்வனையும் வெல்ல முடியும்” என்றார். முதல் மாணவனாகிய சலஃபன் “அவர் யாதவ அரசரல்லவா?” என்றான். “அவன் யாரென நான் அறிவேன். அவனால் என்ன இயலுமென அவனும் அறிவான். கிளம்புங்கள்” என்று சொல்லி காலவர் அங்கிருந்து புறப்பட்டார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11
October 26, 2016
மொழியும் நிலமும்
மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார், மொழி என்று பெயர். கரு இதுதான். மலையாளத்திலும் ஸ்பானிஷிலும் மேஜைக்கு மேஜை என்றுதான் சொல். ஒரு மலையாளி மண்டையில் அடிபட்டு மேஜை என்னும் சொல்லைத்தவிர எல்லாவற்றையுமே மறந்து எல்லா அவசியத்திற்கும் மேஜை என்றே சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் அவர் மலையாளமும் ஸ்பானிஷும் தெரிந்தவர் ஆகிறார் அல்லவா?
வேடிக்கைதான். ஆனால் இதேபோன்ற ஒரு திகைப்பு எனக்கு ஒருமுறை ஏற்பட்டது. செவியும்நாவும் அற்ற ஒருவர் என் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.கையசைவால் ஊமைமொழி பேசுவார். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டிஎறிதல் போட்டியில் சர்வதேச அளவில் தேர்வுசெய்து இத்தாலியில் மாட்ரிட் நகருக்கு சென்று வந்தார். அதை அவர் என்னிடம் சொன்னபோது நான் அறியாமல் ‘மொழி அறியாமல் எப்படிச் சமாளித்தீர்கள்?’ என்று கேட்டுவிட்டேன். அதன்பின்னர்தான் அவர் சர்வதேசமொழி அறிந்தவர் என நினைவுக்கு வந்தது
என் மதுரை நண்பர் சண்முகம் ஒரு வாக்னார் கார் வாங்கியபோது அதை நெடுந்தொலைவு ஓட்டிச்செல்ல விரும்பினார். அதைப் பயன்படுத்திக் கொண்டு நானும் தமிழினி பதிப்பகம் நடத்தும் நண்பர் வசந்தகுமாரும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் 2005ல் மூன்று இந்தியப்பயணங்கள் மேற்கொண்டோம். சமணக்கோயில்களை பார்த்தபடி கர்நாடகம் வழியாக ஒரு சுற்று. பௌத்தத் தலங்களைப் பார்த்தபடி ஆந்திரம் வழியாக இன்னொரு சுற்று. சிவாஜியின் கோட்டைகளைப் பார்த்தபடி மகாராஷ்டிரா வழியாக ஒரு சுற்று
பௌத்தப் பயணத்தில் கோதாவரிக் கரைக்குச் சென்றிருந்தோம். கோதையின் கரைமுழுக்க நாயக்கர் அரசர்கள் ஏராளமான கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் பின்னாளில் விஜயநகர நாயக்கர்கள் தோற்கடிக்கப்பட்டு தக்காண நவாப்கள் அப்பகுதியைக் கைப்பற்றியபோது இடிக்கப்பட்டன. இடிபாடுகளாக எஞ்சிய ஆலயங்கள்தான் இப்போது வழிபாட்டில் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் கைவிடப்பட்டு புழுதியும் சேறும் மூடிக்கிடக்கின்றன
கிருஷ்ணதேவராயர் விஜயநகர நாயக்கர்களில் தலையாயவர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் மதுரை நாயக்கர்களின் கைக்கு வந்தது. அதற்கு முன்னர் பாண்டிய அரசனான சுந்தரபாண்டியனை அவன் தம்பி வீரபாண்டியன் உதவியுடன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார். மதுரையை வீரபாண்டியனுக்கு கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். கொடுக்கவில்லை, அவனையும் தோற்கடித்துகொன்று தன் தளபதியிடம் மதுரையை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
மாலிக் காபூர் ஸ்ரீரங்கம், மதுரை பேராலயங்களை இடித்து அழித்தார். மாலிக் காபூருக்குப் பயந்து ஸ்ரீரங்கம் பெருமாளை பட்டர்கள் தூக்கிக்கொண்டு கேரளத்துக்குச் சென்றனர். அங்கே ஸ்ரீவல்லப ஷேத்ரம் [இன்று திருவல்லா] போன்ற ஊர்களில் அரங்கன் இருநூறாண்டு காலம் காத்திருந்தார். அச்சுதப்ப நாயக்கர் இடிந்த ஸ்ரீரங்கத்தை திரும்ப கட்டியபிறகுதான் அரங்கன் திரும்ப முடிந்தது. இதை ஸ்ரீவேணுகோபாலன் ‘திருவரங்கன் உலா’ என்னும் நாவலாக எழுதியிருக்கிறார்
மதுரை ஆலயமும் மாலிக் காபூரால் இடிக்கப்பட்டது. அப்போதுதான் கல்யானை கரும்பு வாங்கிய புராணக்கதை நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். துங்கபத்ரா நதிக்கரையில் நாயக்கர்களின் அரசான விஜயநகரத்தை ஹரிஹரர் புக்கர் என்னும் சகோதரர்கள் உருவாக்கினர். ஹரிஹரரின் மகனாகிய குமார கம்பணனின் மனைவிபெயர் கங்கம்மா தேவி. அவள் கனவில் மதுரை மீனாட்சி வந்து தன் ஆலயம் இடிந்து கிடப்பதாகச் சொன்னாள். கங்கம்மா தேவியின் விருப்பப்படி குமாரகம்பணன் படைகொண்டு வந்து மதுரையை ஆண்ட மாலிக் காபூரின் படைத்தலைவனை வென்று மதுரையைக் கைப்பற்றி அதை மீண்டும் பாண்டியர்களின் வாரிசுகளிடமே கொடுத்துவிட்டுச் சென்றார்.
மதுரை ஆலயம் சீரமைக்கப்பட்டது. நாகர்கோயில் அருகே வள்ளியூரில் ஒரு சிற்றாலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சியின் சிலை திரும்பவும் மதுரைக்குக் கொண்டுவந்து நிறுவப்பட்டது. நாம் இன்றுகாணும் மதுரை மீனாட்சி ஆலயம் நாயக்க அரசர்களால் எடுத்துக் கட்டப்பட்டது. மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதை கங்கம்மா தேவி ‘மதுராவிஜயம்’ என்னும் தெலுங்கு நூலாக இயற்றினார். இவ்வரலாற்றை நாம் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலிலும் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய மதுராவிஜயம் என்னும் நாவலிலும் வாசிக்கலாம்.
நாயக்க மன்னர்கள் வைணவர்கள். ஆனால் அவர்கள் மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற மாபெரும் சைவ ஆலயங்களையும் அமைத்தனர். நாம் இன்று தமிழகத்தில் காணும் பேராலயங்களில் பெரும்பாலானவை நாயக்கர் காலத்தையவை என்பது நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அவை சோழ பாண்டியர்களால் கட்டப்பட்டவை என்றே நினைத்திருப்போம்.
நாயக்கர்களால் கட்டப்பட்ட மிகச்சிறந்த கட்டிடக்கலைப் படைப்பு என்பது ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாள் கோயில் கோபுரம்தான். இதுதான் தமிழக அரசின் அரசுமுத்திரையாக உள்ளது. [பலரும் நம்புவதுபோல ஆண்டாள்கோயில் கோபுரம் அல்ல] நாயக்கர்களுக்கு தமிழக பக்தி இயக்கம் மீது பெரும் பற்று இருந்தது. இங்கிருந்து வைணவ பக்திப்பாடல்களை அவர்கள் ஆந்திரம் முழுக்கக் கொண்டுசென்று பரப்பினார்கள்.
அதிலும் கிருஷ்ண தேவராயருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் மேல் தனி ஈடுபாடு. ஆண்டாளின் கதையை அவரே அமுக்த மால்யதா [சூடாத மாலை] என்றபேரில் தெலுங்கில் சிறிய காவியமாக எழுதியிருக்கிறார். இதை ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘நான் கிருஷ்ணதேவராயன்’ என்னும் நாவலில் வாசிக்கலாம்.
கிருஷ்ண தேவராயர் ஆண்டாள் பாசுரங்களையும் நம்மாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார் பாடல்களையும் ஆந்திராவில் அவர் கட்டிய ஆலயங்களில் எல்லாம் பாட ஏற்பாடு செய்தார். அதற்காக நம்மூர் ஓதுவார்களைப்போன்ற பாடகர்களை பரம்பரையாக வரும்படி நியமித்தார். அவர்கள் இன்றும் அதைப்பாடி வருகிறார்கள்
நாங்கள் தர்மஸ்தலா என்னும் ஊரில் கோதாவரியில் நீராடி மேலே வந்தபோது செந்தமிழ்ப்பாட்டைக் கேட்டோம். சண்முகம் பரவசத்துடன் அந்த திசை நோக்கி ஓடினார். இடிந்த பழைய கோயிலுக்குள் பக்தர் எவருமில்லை. பெருமாள் கரியதிருமேனி பளபளக்க இருண்ட கருவறைக்குள் அகல்விளக்கொளியில் நின்றிருந்தார். அவர் முன் நின்று ஓர் இளைஞர் பாடிக்கொண்டிருந்தார். பேயாழ்வார் பாசுரம். அதன்பின் ஆண்டாள்.
அவர் பாடிமுடித்ததும் சண்முகம் பாய்ந்து சென்று அவரிடம் கைகூப்பியபடி பரவச முகத்துடன் பேச ஆரம்பித்தார். ”தெலிய லேது’ என அவர் சொன்னபின்னரும் சண்முகம் நிலைமையை உணரவில்லை. யுவன் சந்திரசேகரும் அவரிடம் தமிழில் பேச அவர் பீதி அடைந்தார். பிறப்பால் தெலுங்கரான வசந்தகுமார் தலையிட்டு நிலைமையை புரியவைத்தார். வசந்தகுமாரின் தெலுங்கைக் கேட்டபின் அவர் தமிழைக்கேட்டதைவிட அதிக பீதி அடைந்தாலும் நிலைமை கட்டுக்குள் வந்தது.
பாடகருக்கு தமிழ்ப்பாசுரம்தான் தெரியும், தமிழ் ஒரு சொல்லும் தெரியாது. நாம் சம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்வதுபோல அவர் பாசுரங்களை பாடுகிறார். அது அவர் குடும்பத்தொழில். தலைமுறை தலைமுறையாக அதைச் செய்து வருகிறார்கள். அவர் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவை அப்பாசுரங்கள். அவர் பள்ளி ஆசிரியர். இப்போது அந்தச் சேவைக்கு ஊதியமெல்லாம் இல்லை. ஆனாலும் குலவழக்கம் போகக்கூடாதே என்று அவர் பாடிவருகிறார்.
எங்களை அறிமுகம் செய்துகொண்டோம் “டீ சாப்பிடுங்கள் சுவாமி’ என அவர் அழைத்துச்சென்றார். டீ சாப்பிட்டபடி அவர் பாடிய பாசுரங்கள் எவை என தெரியுமா என கேட்டேன். ‘லேது’ தான். அவருக்கு அவை பெருமாளுக்குரிய இனிய ஒலி அவ்வளவுதான். அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். மேலும் புரியவைக்க எனக்குத் தெலுங்கும் அவருக்குத் தமிழும் தெரியாது.
திரும்பி வரும்போது சண்முகம் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தார். “நாலு வார்த்தை தமிழ் பேசியிருக்கலாம் சார். வாய் நமநமங்குது” என புலம்பினார். “என்ன இப்ப? அவர் பாடறச்ச தமிழர்தான்….நாம ஒரு தெலுங்குப்பாட்டு பாடுவம். அப்ப தெலுங்காளு ஆயிடுவோம்ல?” என்றார் யுவன் சந்திரசேகர். “சரி பாடுடா” என்றேன். அவன் “பிபரே ராமரசம்” என்று பாடினான். நாலைந்துபேர் திரும்பிப்பார்த்துவிட்டுச் சென்றார்கள். தெலுங்கர்களாக கிருஷ்ணதேவராயரின் மண்ணில் நடந்தோம்.
“கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்ததா சரித்திரம் இல்லை. ஆனா ஆண்டாள் பாசுரம் வழியா அவர் தமிழரா ஆகியிருப்பார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மண்ணிலே நடந்திருப்பார்” என்றேன். யுவன் என்னை கட்டிக்கொண்டு “சரியா சொன்னேடா” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இருத்தல், சந்திப்பு -கடிதங்கள்
சார் வணக்கம்
லடாக் பயண அனுபவம் வாசித்தேன். லடாக் அடிக்கடி சென்று வரும் என் பல்கலை ஆசிரியரின் அனுபவங்களைக் கேட்டுக் கேட்டு அங்கிருக்கும் தாவரங்களுக்காக லடாக் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன் இதுவரை.
உங்கள் அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின் இந்த மெதுவான வாழ்க்கை?
காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).
காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு நீங்கள் விவரித்த “கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில் மலைச்சரிவுகளைப் பார்த்தபடி நாளெல்லாம் அமர்ந்திருக்கும் காலமற்ற அவர்களின் வாழ்க்கை” ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.
அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கோ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன். என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப் போடுவார்களா என்று இப்போதெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
பரபரப்பான அலைச்சல் மிகுந்த என் வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே இருக்கிற உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.
நான் நினைப்பதுண்டு சார், மின்மயானத்திற்கு என்னை கொண்டு செல்கையிலும் குக்கர் வைத்துவிட்டு 3 விசிலில் நிறுத்தச்சொல்லிவிட்டுதான் போவேனென்று!!!!
புன்னகையுடன் மடியில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும், அந்த மக்களும் அவர்களின் நீர்த்துளிக்கண்களும் நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க் கடந்து எள்ளுப்பேத்திகளை கையில் வைத்துக் கொஞ்சும் அவர்களின் பாக்கியமும், என்ன சார் சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது
comfort zone லிருந்து வெளியே வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு, நீங்கள் கையில் எடுத்துக்கொண்டிருக்கும், பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நிழற்படம் உங்கள் எழுத்துக்களின் மீதான மதிப்பையும் உங்கள் அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை சார்
நன்றியுடன்
லோகமாதேவி
*
அன்புள்ள லோகமாதேவி
எவரும் தனக்குள் இல்லாத ஓர் உலகை வெளியே உருவாக்கிக் கொள்ளமுடியாது. நித்யா சொல்வதுண்டு, எங்கும் செல்லாமலிருந்தாலும் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் என
நானும் மிகமிகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவன்தான். ஆனால் அவ்வப்போது என் அமைதியை நானே பார்க்கும் சில தருணங்களை உருவாக்கிக் கொள்கிறேன்
ஜெ
***
பேரன்பிற்குரிய ஜெயமோகன்,
வாழ்க்கை எப்போதும் சில அடுத்தவினாடி ஆச்சரியங்களை ஒளித்துவைத்து இருக்கிறது, உங்களை கடந்த ஞாயிறு அன்று நேரில் சந்தித்ததருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம், உங்களின் ஆக்கங்களை பல வருடமாக படித்து வருகிறேன், உங்களின் வலைத்தலைத்தையும் எட்டு வருடங்களாக படித்து வருகிறேன், இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல்கடிதம்.
நான் எனது இரண்டு நண்பர்கள் உடன்விழாவிற்கு வந்திருந்தேன், ஒருவர் உங்களை எனக்கு அறிமுகம் செய்தவர் இன்னொருவர் உங்களின் நான் கடவுள், கடல் திரைக்கதை வசனத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர், அவருக்கு அறம்தொகுப்பை பரிசளித்தேன்.
உங்களின் எழுத்துக்களை ஒருவருடமாக ஐந்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை சென்னை புத்தக கண்காட்சிக்குஅழைத்து சென்று அறம் மற்றும் ரப்பர் நாவலை வாங்க செய்தேன்.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிறு தயக்கத்துடனே உங்களை அணுகி புகைப்படம் எடுத்துகொண்டேன், அற்புதமான பேச்சு -காந்தி பற்றின எனது எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்தது.
சுகா அண்ணாச்சி உடன் புகைப்படம் எடுத்து கொண்டோம்.
விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் என்தாயாரும் மனைவியும் ஒன்று சேரகேட்டார்கள் “இன்னிக்கு ஜென்மசாபல்யம் கிடைச்சிருக்குமே”
ஆம் என்று உரக்க கூறினேன். இத்துடன் நான் உங்களை எடுத்த ஒருபுகைபடத்தை இணைத்து உள்ளேன்.
கடிதத்தில் எழுத்து பிழை இருந்தால் அடியேனை மன்னித்து அருளுமாறு கேட்டு கொள்கிறேன், முதல் தமிழ் கடிதம் அடித்து முடிக்கவே ஒன்றரைமணி ஆகியது.
என்றும் அன்புடன்,
அசோக் சேஷாத்திரி
*
அன்புள்ள அசோக்,
அந்நாள் நல்ல சந்திப்புகள் நிகழ்ந்தன. நீண்ட இடைவேளைக்குப்பின் ஊருக்கு வந்த மகிழ்ச்சி என்னிலும் இருந்தது. சுகா உட்பட அனைத்துப் நண்பர்களையும் ஒரே நாளில் சந்தித்தேன்
நாம் மீண்டும் சந்திப்போம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசன் கவிதைகளை ரவி சுப்ரமணியம் இசையுடன் அமைத்திருந்தது மிகச்சிறப்பாக இருந்தது. தாமிரவருணிக்கரையில் அமர்ந்து அந்தக்கவிதைகளைக் கேட்பதுபோல ஓர் அனுபவம்
ஊருக்குச் சென்றால் தாமிரவர்ணி அங்கே இல்லை என்பதுதான் என்னைப்போன்றவர்களின் சோகம். அங்கே இருப்பது ஒரு பெரிய சாக்கடை
ஆனால் இதேபோல மொழியிலும் இசையிலும் தாமிரவர்ணி இருந்துகொண்டே இருக்கிறாள் என நினைக்கையில் ஆறுதல்
சங்கரநாராயணன்
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசன் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு உங்களைப்பிடிக்காது என்று கடிதங்கள் வழியாகத்தெரிந்தபோது வேடிக்கையாக இருந்தது. இவர்கள் எல்லாரும் விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சிக்கு வருவார்களா? அடிதடி ஏதாவது நடக்குமா? காவல் ஏற்பாடு உண்டா?
சரி, நானும் ஏன் மறைக்கவேண்டும். எனக்கும் உங்களை சுத்தமாகப்பிடிக்காது. நான் சிவாஜி ரசிகன். நீங்கள் அவரைப்பற்றி எழுதியது ஆபாசம், அவதூறு என்றுதான் நினைக்கிறேன். அதுவரை நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். அதன்பின்னர் படிப்பதை நிருத்திவிட்டேன்\
ஆனால் வண்ணநிலவன், வண்ணதாசன் ரெண்டுபேரும் என் ஆதர்ச எழுத்தாளர்கள். ஜானகிராமன் அழகிரிசாமி பிடிக்கும். அவர்கள் எழுதிய அழகியலுடன் இன்று ஓரளவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் எழுதிக்கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லாம் மூளையை வைத்து எழுதுபவர்கள்
வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு வாழ்த்துக்கள். அவருடைய சமவெளி நான் முதலில் வாசித்த தொகுப்பு. அதன்பின் இன்றுவரை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்
நடராஜன்
வணக்கம்.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டது பற்றி ஆர்.வி. சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய பதிவை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டிருந்த விஷயம் (http://tamil.samayam.com/latest-news/technology-news/shock-wikipedia-mentioned-as-writer-vannadasan-died-in-1976/articleshow/55045441.cms) ஒரு நொடி கோபமும் சிரிப்பும் ஏற்படுத்தியது.
–
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட மறுநாள் தேவதேவனுடன் பேசினேன். அவரிடம் விஷயத்தைச் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தேன். அவர் எனக்குத் தெரியாதே என்றார். ஆச்சரியமாக இருந்தது.
வண்ணதாசன் தூத்துக்குடியில் சில காலம் இருந்தபோது இருவரும் பழகியதைச் சொன்னார். நீண்ட காலமாக தொடர்ந்து எழுதிவரும் அவருக்கு சாகித்திய அகாடமி விருதும் கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
பேச்சினிடையே, வண்ணதாசனுக்குத்தான் விருது அறிவித்திருக்கிறார்கள். கல்யாண்ஜிக்கு இல்லையா? என்றேன். ஆமா என்றபடி சிரித்தார்.
நன்றி.
இப்படிக்கு,
வே.ஸ்ரீநிவாச கோபாலன்
*
வணக்கம்
வண்ணதாசன் அவர்களுக்கு விருது எனும் செய்தியை படித்தவுடன் அவரின் கவிதகைளே எனக்கு நினைவில் வந்தது. நான் அவரின் கவிதைகளை பல ஆண்டுகளாகவே வாசித்தும் ரசித்தும் வந்திருக்கிறேன்., பறவைகளும் அவற்றின் பூஞ்சிறகுகளும் பூனைக்குட்டிகளும் மரங்களும் சிறுமிகளும், வெயிலும் மழையும யானைகளுமாய் பரந்து விரிந்ததோர் கவிதா உலகம் அவருடையது.
, நான் அவர் கதைகளை படித்ததே இல்லை விருது அறிவிப்புக்கு முன்னால். உங்களுக்கு பலர் எழுதும் கடிதங்களைப்பார்த்தபின்னர் அவரின் வலைத்தளம் சென்ரு ஒரு முதல் கதையை வாசித்தேன் .
”கனியான பின்னும் நுனியில்”உருண்டு திரண்ட மாதுளைகளும், சீராக அடுக்கப்பட்ட கொய்யாப்பழங்களும், அந்த சங்கிலித்திருடனாய் அறியப்பட்ட நீள மூக்குக்காரரும், தாவரவியல் வகுப்பும், வகுப்பில் பறந்த பறவையும், நீளமூக்குக்காரரின் மகளான அந்த பெரிய கண்களைக்கொண்ட அந்த காரணத்தினாலெயே பேரழகியாய்தெரிவதற்கு எந்த பெருமுயற்சியும் தேவைப்படாத சிறுமியும், அணில் நகக்காயம் பட்ட மாதுளையும், அந்த சிறுமியின் முன் நெற்றியில் அடிக்கடி வந்து விழும் முடிக்கற்றையுமாய் கதை விரிகிறது.
. கதையைப் படித்தபின்னரும் எனக்கு நான் இன்னும் அவரின் கதைகளைப்படிக்கவேயில்லை என்றும் ”கனியான பின்னும் நுனியில் பூ” மற்றுமோரு நீண்ட கவிதை என்றும் தோன்றியது
மழைக்காலத்தில் அவரின் கவிதைகள் வெளியாவது.விருப்பமென்கிறார் ஒரு பதிவில். விருது வழங்கப்படும் மாதத்தில் பருவம் தப்பிவிட்ட, ஐப்பசியில் பெய்திருக்க வேண்டிய, இன்னும் வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் மழை வரட்டும்.. அவருக்கு விருது வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி
விழாவில் அவரை சந்திக்கவும் கலந்துரையாடவும் மிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
“நேரடி வானத்தில்
தெரிவதை விடவும்
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்“
கல்யாண்ஜி
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன்,
இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட உள்ளது
உவகை தரும் செய்தி.ஒரு தரமான இலக்கிய ஆளுமையை கௌரவித்தமைக்கு
நன்றி.இந்த விருது வண்ணதாசன் பற்றியும் ஜெயமோகன் பற்றியும் நிறையவும்
நிறைவாகவும் சொல்கிறது
நான் வண்ணதாசனை வழக்கம் போல் தற்செயலாகவே வாசிக்க நேர்ந்தது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு போட்டியில்
எனக்கு “தனுமை” என்ற நூல் பரிசாகக் கிடைத்தது.சுஜாதா தேர்ந்தெடுத்த சிறு
கதைகளின் தொகுப்பு அது.அதில் வண்ணதாசனின் “தனுமை” மிகச் சிறந்த சிறு
கதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது.அப்போது தனுமை வாசிப்பு ஒரு புதுமை
மையான வினோதமான அனுபவத்தைத் தந்தது.ஒரு சிறுகதை இப்படியும்
இருக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது.கதையே இல்லாத ஒரு கதை.அல்லது
சாஸ்திரத்துக்கு கொஞ்சம் கதை.அதைக் கூட கதையாசிரியர் அடிக்கடி மறந்து போனது
போல் எங்கெங்கோ போய் விடுகிறார்.கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவற்றைப் பற்றியெல்
லாம் பேசுகிறார்.ஒன்றும் புரியாதது போல் இருக்கிறது.ஆனாலும் பிடித்திருக்கிறது.
இப்படி அறிமுகமான வண்ணதாசன் பின்னர் என்னைப் பாதிக்கக் கூடிய எழுத்தாளர்களில்
ஒருவரானார்.எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து ரசிக்கவும் வாழ்வின் சின்னச் சின்ன
அழகுகளையும் பரவசங்களையும் தரிசிக்கவும் எளிமையாகக் கூறி பயிற்றுவித்தார்.
வண்ணதாசனுக்கு விருது பற்றிய வாசகர் கடிதங்கள் சுவாரசியமாக உள்ளன.பெரும்பாலான
வாசகர்கள் தாங்களே விருது பெற்றது போல் குதூகலிக்கிறார்கள்.மகிழ்ச்சியாக உள்ளது.
சில வாசகர்கள் தமக்கு ஜெயமோகனைப் பிடிப்பதில்லை என்றுஎழுதி உள்ளனர். நீங்களும் அவற்றை
மகிழ்ச்சியோடு பிரசுரத்திருக்கிறீர்கள்.இது எம்.ஜி. ஆர்-சிவாஜி,கமல்-ரஜினி,விஜய்- அஜீத் சின்ரோம்.
ஒருத்தரைப் பிடித்தால் அடுத்தவரைப் பிடிக்காது.(எனக்கு முன்பு எல்லோரையும் பிடிக்கும்.இப்போது
இவர்களில் யாரையும் பிடிப்பதில்லை)
பிடிக்காதவர்கள் சிலர் ஜெயமோகனின் எழுத்துக்கள் எதையும் இதுவரை படித்ததே இல்லை என்றுவாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.இது எப்படி? படிக்காமலேயே எப்படி வெறுப்பு வர முடியும்?பெரும்பாலும் வெறுப்பு இப்படித்தானோ? இதை எல்லாம் புரிந்து கொள்வதும் சகித்துக் கொள்வதும் பாடங்களே.
அன்புடன்,
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி
======================================
==========================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
[ 3 ]
முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி பாலாழியைக் கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர். இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன.
பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் முலைகளும் இடையும் கொண்டிருந்தாள். பேரழகும் நுண்ணறிவும் தண்ணளியும் கொண்டு மலர்ந்திருந்தது ஒரு முகம். மறுபக்கம் எழுந்த முகம் கொடுமையும் மடமையும் கீழ்மறமும் என சுளித்திருந்தது.
சுழன்று சுழன்று ஒன்றுபிறிதெனக் காட்டி மேலெழுந்தாள் பிரக்ஞை. அவளை நோக்க பாலாழியின் பலகோடி மீன்கள் விழிகளாக எழுந்து சூழ்ந்தன. “இவள்! ஆம், இவள்!” என்று வியந்தன அவை. அவள் அசைவில் எழுந்த குமிழிகள் சொற்களென்றாகி ஒளிகொண்டன. பாலாழியின் மேல்விளிம்பை அடைவதற்கு முற்கணம் தேவர்கள் “எங்களுள் அழியாதிருப்பவளே, எழுக!” என்று கூவிய ஒலி கேட்டதும் தேவியின் கொடுமுகம் மறுமுகத்தை இடக்காலால் உதைத்து உந்தி விலக்கி தான் மேலெழுந்து வந்தது.
அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்த தேவர்கள் தங்கள் பிடியை நழுவவிட்டு அஞ்சிக் கூவியபடி பின்னகர்ந்தனர். இளித்த வாயும் வெறித்த விழிகளுமாக அவள் தேவர்களை நோக்கி பேருருக்கொண்டு விண்நிறைத்து மிதந்துசென்றாள். நாகவடம் நழுவ அதை இழுத்தோடியபடி கூவிக் களியாடிய அசுரர் “எங்களுள் விடாயென இருப்பவளே, எழுக!” என்று கூவியபோது தேவியின் இன்முகம் புன்னகையும் அருளுமாக எழுந்து, பொன்னொளி விரிய அவர்களை நோக்கி சென்றது. திகைத்து விழிகூட மேலே நோக்கி சொல்லவிந்தனர் அசுரர். அவர்கள் கைநழுவி நோக்கித் திகைத்த கணத்தில் தேவர்கள் தாங்கள் இழந்த நீளத்தை மீட்டெடுத்தனர்.
இரு அன்னையரும் எழுந்து விண்ணில் நின்றிருக்க இருண்டும் குளிர்ந்துமிருந்தது வானத்தில் பாதி. ஒளிர்ந்து வெம்மைகொண்டிருந்தது மறுபாதி. முனிவர்களின் மெய்மை அவரைவிதையென இரண்டாகியது. அவர்களில் ஒருபாதி கைகூப்பியபடி எழுந்து “விண்ணளந்தோனே, நீங்களே காக்க வேண்டும்! இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க!” என்று கூவியது.
விஷ்ணு பொன்னுருவ அன்னையைச் சுட்டி “இன்முகம் கொண்ட இவள் என் நெஞ்சமர்ந்தோளின் மாற்றுருவென்றிருக்கிறாள். இவள் என் துணைவியென்றமைக! எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக!” என்றார். மூன்று கைவல்லிகளில் தாமரை மலரும் வெண்சங்கும் சுடரும் ஏந்தி வலக்கை அருளி நின்றிருக்க அன்னப்பறவைக் கொடியுடன் வெண்யானை மேல் எழுந்த அன்னை அவர் வலக்கையின் செந்நிற வரியோடிய குழிவில் சென்று குடிகொண்டாள்.
மூன்று கைகளில் பாசமும் அங்குசமும் துடைப்பமும் ஏந்தி, அருட்குறி அமைந்த இடக்கையுடன், நாகமாலையை கழுத்தில் சூடி, காகக்கொடி பறக்க, கழுதைமேல் எழுந்து கோரைப்பல்காட்டி உறுமிய அன்னையை ஆதிசிவன் தன் மகளெனக் கொண்டார். அவள் சென்று அவர் காலடியில் பணிந்துநிற்க இடக்கால் தூக்கி அவள் மடியில் வைத்து அருளளித்தார். “துயர்கொண்ட உள்ளங்களில் நீ குடிகொள்க! இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக! உண்மையென்பது உன் வடிவும் ஆகுக!” என்று செம்மேனியன் அருள்புரிந்தார்.
சிவமகளை வருணன் மணந்தான். மூத்தவளும் இளையவளும் வடக்கிலும் தெற்கிலுமென குடிகொண்டனர். இரு அன்னையரில் ஒருவரை வழிபடுபவர் பிறிதொருவரின் சினத்திற்காளாவார்கள் என்றனர் முனிவர். நூல்நெறிப்படி அமைந்த ஆலயங்களில் முதுகொடு முதுகொட்டி இருபுறமும் நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவகை உலகத்தியல்பு அறிந்த முனிவர் இருவரையும் நிகரென வணங்கி அருள்பெற்றனர். அவர்கள் நெஞ்சில் மீண்டும் ஓருருக்கொண்டு இணைந்து அவள் பிரக்ஞாதேவி என்றானாள். அவளை அவர்கள் ஊழ்கத்தில் முகம் கண்டு புன்னகைத்தனர். அப்புன்னகை தெரிந்த மானுடரை முனிவர் என்றனர் கவிஞர்.
[ 4 ]
காம்யக வனத்திற்குத் தெற்கே இருந்த காளிகம் என்னும் குறுங்காட்டுக்குள் முன்பு ரகுகுலத்து ராமனும் அவன் இளையோனும் வழிபட்ட பேராலயமொன்றிருந்தது. அங்கு குளிரும் இருளும் நிறையவே முனிவர் அவ்விடம் நீங்க அது கைவிடப்பட்டு காட்டுப்பெருக்கால் உண்ணப்பட்டது. வேர்களுக்குள் கிளைகளுக்கு அடியில் இரு கல்லுருவங்களாக மூத்தவளும் இளையவளும் மூழ்கிக்கிடந்தனர். அவர்களுக்குமேல் எழுந்து பச்சைகொண்ட மரங்களில் நறுந்தேன் சூடிய மலர்கள் விரிந்து வானொளிகொண்டு நின்றன.
சாந்தீபனி குருநிலையில் இருந்து தன் தோழனைத் தவிர்த்து தனியாகத் திரும்பிய இளைய யாதவர் தன் எண்ணச்சிதறலால் வழிதவறி கால் கொண்டுசென்ற போக்கில் அக்காட்டுக்குள் நுழைந்தார். உலகில் கொள்வனவற்றையும் சூழ்வனவற்றையும் எண்ணி எண்ணி அலமலந்த உள்ளம் கொண்டிருந்தமையால் வழியை அவர் அறியவில்லை. வழியறிந்தபோது விடாய் கொண்டு உடலெரிவதை உணர்ந்தார். மலர்பூத்த மரம் மீது பறவைகளின் ஒலி கேட்டு அங்கு வேர் அருகே நீரோடை இருப்பதை உய்த்தறிந்தார்.
தன் காலடிகள் தன்னை தொடர்ந்தொலிக்க அந்த மலர்மரத்தடியில் வந்து நீரோடையைக் கண்டு அள்ளி அருந்தியபின் இளைப்பாற வேர்ப்பற்றில் அமர்ந்தார். எண்ணம் எழுந்து சூழ உடல்தளர்ந்து விழிமூடி மயங்கியபோது அவர் பெண்குரல் விசும்பியழும் ஒலியை கேட்டார். தன்னுள் எழுந்ததோ அவ்விசும்பல் என்று திகைத்தார். பின் விழித்தெழுந்து நோக்கியபோது கருநிறமும் கெடுமுகமும் கொண்ட பெண் ஒருத்தி உடல்குவித்து அமர்ந்து அழுவதைக் கண்டார்.
அவளை அணுகி “பெண்ணே, நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்?” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்?” என்றார். அவள் தன் கையை நீட்டிக்காட்டினாள். அதில் இருந்து ஒளிவிட்ட அருமணியைக் கண்டு அவர் அருகணைந்தார். அவள் “என் விழிநீர்த்துளியால் உருவானது இது. இவ்வரிய மணியை நிகிலம் என்றழைக்கிறார்கள். இதை என்னிடமிருந்து பெற்றுச் சூடாமல் எவரும் மெய்மையை அறிவதில்லை” என்றாள்.
“இங்கு வாழ்ந்த ஒவ்வொரு முனிவருக்கும் இதை நான் நீட்டியிருக்கிறேன். எவரும் இதை பெற்றுக்கொண்டதில்லை. எவரும் ஏற்காத இந்த அருமணி என் கைகளை அனல் என எரிக்கிறது. அதன் துயர்தாளாது நான் அழுகிறேன்.” அவர் அதை நோக்கியபடி “இவ்வருமணியின் சிறப்பென்ன?” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”
அவள் கண்களை நோக்கியபடி அவர் திகைத்து நின்றார். “ஆம், இது எளியவர்களுக்கு உகந்தது அல்ல. அறிக, கோழைகளுக்குரியதல்ல மெய்மை! தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களுக்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க, நீ அவர்களில் ஒருவனா?”
அவர் மூச்சடைக்கும் அச்சத்துடன், விழிவிலக்கவொண்ணா பேரார்வத்துடன் அவளை நோக்கி நின்றார். “அறிதலென்பது நீ அறியத்தொடங்கிய நாளிலிருந்தே இனிதென்றே உன்னை வந்தடைந்திருக்கும். உண்ணும் புணரும் தழுவும் வெல்லும் கொள்ளும் இன்பங்களை சிறு திவலைகளென்றாக்கும் பேரின்பமே அறிதலென்பது.” அவள் விழிகள் நாகவிழிகளின் ஒளிரும் வெறிப்பு கொண்டிருந்தன. “ஆனால் அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”
அவள் நுண்சொல் ஓதும் பூசகிபோல காதருகே காற்றசைவென பேசினாள். “அவன் அறியும் வேதம் வேறு. அவன் அடையும் வேதநிறைவும் மற்றொன்று. இருமையென அறிந்து ஒருமையென்றாக்கி அறிவதே மெய்மை.” அவர் தோள்களில் அவள் தன் கைகளை வைத்தாள். அவள் வாயிலிருந்து மட்கிய ஊன்நாற்றம் வீசியது. பீளைபடிந்த பழுத்த விழிகள் நோக்கிழந்த இரு துளைகளென்று தோன்றின. “உலர்ந்த குருதியில் மட்கும் பிணங்களில் எரியும் மயிரில் எழும் சொற்களின் வேதம். சீழில் சளியில் மலத்தில் அழுகலில் எழும் வேதம். கண்ணீரில் கதறலில் வசைகளில் சாவில் எழும் வேதம். அதைக் கல்லாது நீ அறிவதுதான் என்ன?”
அவர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை” என்றார். “நானறிந்த வேதம் குறைபட்டதென்பதை ஒவ்வொரு சொல்லும் எனக்கு உணர்த்துகிறது. நான் கொண்ட பெருஞ்சோர்வு அதன்பொருட்டே.” “நீ அவ்விழிகளால் அதைப் பார்க்க முடியாது. அந்த மெய்மையை அறியும் ஒளிவிழி இதுவே” என அவள் அந்த அருமணியை அவர் கண்களுக்கு முன் காட்டினாள். “கொள்க! இனியவனே, இதைக் கொள்க! உனக்கென்றே இன்று என் கையில் பூத்துள்ளது இது.”
அவள் கறைப்பற்கள் நடுவே சிறியவெண்புழுக்கள் நெளிந்தன. கரியநாக்கு பெரிய புழுவென துழாவியது. காம்பு கூம்பித் தொங்கிய வறுமுலைகள் அவர் மார்பின் மேல் படிந்தன. எலும்பெழுந்த கைகள் அவர் தோளை வளைத்து அவர் முகத்தை தன் முகம் நோக்கி இறுக்கின. அவள் மூச்சில் புண்சலம் நாறியது. “நீ வீரன். வென்று செல்பவன். யுகங்களுக்கொருமுறை மண்ணில் எழும் மாமானுடன். மெய்மையை மணிமுடியெனச் சூடி காலத்தைக் கடந்து நின்றிருப்பது உன் முகம். வெற்று அச்சத்தால் நீ அதை இழந்துசெல்வாயா என்ன?”
அவர் உடல் உதறிக்கொண்டே இருந்தது. “அஞ்சுகிறாய், இளையோனே. எதை அஞ்சுகிறாய் என்று எண்ணிப் பார். ஏன் அஞ்சுகிறாய் என்று ஆராய்ந்து பார். அஞ்சுவது என்னையா? உன்னுள் இருந்து எழுந்து வந்து இங்கு நான் நின்றிருக்கிறேன். உன் மலக்குடலில், குதத்தில் வாழ்கிறேன். நீ உண்ணும் இன்னுணவெல்லாம் எனக்களிக்கும் படையல். உன் மூச்சில் நானும் கலந்துள்ளேன். உன் விந்துவில் ஊறி உன் தேவியர் வயிற்றில் முளைத்து உன் மைந்தரென முகம் கொண்டு நின்றிருக்கிறேன்.”
அவர் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என்னைத் தழுவுக! என்னைச் சூடுக! ஏழாண்டுகாலம் என்னை உடன்கொள்க!” அவள் தன் இதழ்களை அவர் வாயருகே கொண்டுவந்தாள். மட்கிய ஊன்போன்று கரியவை. அழுகிக்கிழிந்து தொங்கியவை. அவர் அறியாது அவளை சற்று உந்தி விலக்கினார். “மண்ணிலெழும் மாமனிதரில் கணமேனும் என் கையின் இந்த மணி கொள்ளாதோர் எவருமில்லை. விண்வேதம் கொய்தெடுத்த மாமுனிவர் ஒவ்வொருவர் மடியிலும் ஏழாண்டுகாலம் அமர்ந்தவள் நான். நீ அவர்களில் ஒருவனல்லவா? அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா?”
அவர் பெருமூச்சுவிட்டார். கண்களை இறுகமூடி “ஆம்” என்றார். “எதற்கு அஞ்சுகிறாய்? நீ அறிந்ததில்லையா என்னை? உன் மைந்தரின் மலத்தை அருவருத்தாயா? அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா? அவர்மேல் கொண்ட அக்காதலை எனக்கும் அளி. என்னைப் புல்கு. முதல் உறவுக்குப்பின் நான் இனியவள் என உணர்வாய். என்னை பேரழகி என்று உன் விழிகள் அறியும். என் அருகிருப்பதை மட்டுமே விழைவாய். ஏழரையாண்டுகாலம் என்னுடன் நீ இருந்து நிறையும்போது இவ்வருமணியை உனக்களித்து நான் மீள்வேன். இது முழுமை. இது சமன். இதுவே பிறிதொன்றிலாமை…”
அவர் மேலும் ஒருமுறை பெருமூச்சுவிட்டார். “நான் பைநாகப் படமணிந்தவனின் மகள். அவன் சூடிய சுடலைப்பொடி நாறும் உடல்கொண்டவள். நிணமொழுகும் தலைமாலை சூடிய காலபைரவனின் தமக்கை. உக்ரசண்டிகை என்றும் அகோரிகை என்றும் காளபயங்கரி என்றும் பவஹாரிணி என்றும் என்னை வழிபடுகிறார்கள் முனிவர்கள்.” அவர் “ஆம்” என்றார். “அழகனே, கொள்க இவ்வொளியை!” என்றாள். எப்பொருளும் இல்லாமல் “ஆம்” என்று அவர் சொன்னார்.
ஒருகணம் மெல்லப்புரள, முன்பெங்கோ முடிவான மறுகணத்தில் அவர் அவளை அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்து இறுக்கி இதழ்களில் முத்தமிட்டார். காமம் கொண்டு முனகியபடி அவள் அவர் உடலுடன் தன்னைப் பொருத்திப் புல்கி ஒன்றானாள். “நீ இனியவன். நீ எனக்குரியவன்” என்று விழிசொக்கப் புலம்பினாள். அவள் உடலில் ஊறிவழிந்த மதநீர் எரிமணம் கொண்டிருந்தது.
அக்காட்டின் பசிய இருளுக்குள் அவளை அவர் புணர்ந்தார். கிளறப்பட்ட சதுப்பென கெடுமணங்கள் குமிழியிட்டெழுந்தன அவளிலிருந்து. சிதையென அவரை ஏற்று எரித்தாள். சேறென அவரைச் சூழ்ந்து மட்கவைத்தாள். சிம்மமென அவரை நக்கி உண்டாள். அவர் விழித்தெழுந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவள் ஒரு கெடுமணமாக தன் உடலில் படர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தார்.
[ 5 ]
காளிகக் காட்டிலிருந்து வெளிவந்த இளைய யாதவரின் நடையும் நோக்கும் மாறிவிட்டிருந்தன. புல்தெறித்துச் செல்லும் வெட்டுக்கிளி என நடந்துகொண்டிருந்தவர் நிலம் அதிர ஆண் எருமையென கால் எடுத்து வைத்தார். சுவைதேர்ந்து இன்கனியும் மெல்லூனும் தேனும் நறுநீரும் உண்டவர் கிழங்கைப்பிடுங்கி மண்ணுடன் மென்றார். சேற்றுடன் உழன்ற பன்றியைக் கொன்று குருதி வேகாது தின்றார். கலங்கல் நீரை அள்ளி அருந்தி ஈரச்சேற்றிலும் இருண்ட குகையிலும் படுத்துறங்கினார்.
எட்டு நாட்களுக்குப்பின் அவர் சியாமளபதம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தபோது அவ்வூரார் அவரை காடுவிட்டெழுந்து வந்த காளாமுகன் என்று எண்ணினர். அவர் வருவதை அகலே எழுந்த நாய்க்குரைப்பிலேயே அறிந்த ஊர்மூத்தார் உணவும் நீரும் ஏந்தி ஊருக்கு வெளியே காத்து நின்று “கொள்க, கபாலரே! எங்கள் ஊர்செழிக்க வாழ்த்துக!” என்றனர். அவர் ஊருக்குள் நுழையாதபடி வேலிப்படல்களை முன்னரே மூடிவிட்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தழுவியபடி உள்ளறைக்குள் ஒடுங்க கன்றுகளை எண்ணி பசுக்கள் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன.
சப்தஃபலம் என்னும் யாதவச்சிற்றூரை அவர் சென்றடைந்தபோது அங்கிருந்த யாதவப்படைத்தலைவன் சதமன் அவரை அடையாளம் காணவில்லை. கபாலமும் சூலமும் உடுக்கும் இன்றி வந்த காளாமுகரை நோக்கி வியந்த அவன் அருகிருந்த முதிய யாதவவீரராகிய கலிகரை நோக்கி “யாரவர்? யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே?” என்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்?” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்?” என்றார். மேலும் உரக்க “இல்லை, இருக்கவியலாது” என்று கூவினார்.
மறுகணமே சதமன் கண்டுகொண்டான். “ஆ! அவரேதான்! அரசர்” என்றான். அக்கணத்திலேயே அத்தனை வீரர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். காவல்மேடையிலிருந்து மரப்படிகளில் உடல்முட்டி நெரிந்திறங்கி ஓடி அவர்களை அணுகிவந்த இளைய யாதவரை நெருங்கி “அரசே!” என்று கூவினர். அவர் உடலில் சேறும் ஊனும் மலமும் நாறியது. அவர் விழிகள் சிவமூலிக் களிகொண்டவனைப்போல அலைபாய்ந்தன.
“அரசே, தாங்களா? என்ன ஆயிற்று?” என்று கலிகர் கூவினார். சதமன் அப்படியே அவர் கால்களில் சரிந்து அழத்தொடங்கினான். “அரசே! அரசே!” என யாதவ வீரர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூவினர். அவர் மெல்லிய கூர்குரலில் “இந்நகரில் நான் சிலநாட்கள் இருப்பேன். இங்கு நான் எவரையும் காண விழையவில்லை” என்றார். “ஆம், ஆணை” என்றார் கலிகர்.
அவர்கள் எவரையும் நோக்காமல் நடந்து அச்சிற்றூரின் நடுவே அமைந்திருந்த அரசமாளிகையை அடைந்தார். அவருக்காக நீராட்டுப்பணியாளர்களும் சமையர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவர் அவர்களை ஏறிட்டும் நோக்கவில்லை. முகமன்கள் எவையும் அவரை சென்றடையவில்லை. செல்லும்வழியில் தூண்மடிப்பில் விழுந்துகிடந்த மாடப்புறாவின் எச்சத்தை அவர் கைதொட்டு எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து முகம் மலர்ந்ததைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.
அடுமனைக்குள் புகுந்து அதன் கொல்லைப்பக்கம் கரிபடிந்த மூலையில் குவித்திட்ட குப்பைக்குமேல் அமர்ந்துகொண்டு உணவு கொண்டுவரும்படி சொன்னார். அவர்கள் திகைத்து முகமும் முகமும் நோக்க முதிய அடுமனையாளன் “அரசாணை எனில் அவ்வாறே” என்று மெல்லிய குரலில் சொன்னார். அவர்கள் அளித்த உணவை இருகைகளாலும் அள்ளி உண்டார். உண்ணும்போதே சொறிந்துகொண்டார். உரத்த ஒலியுடன் ஏப்பம் விட்டார்.
அவர்கள் இல்லம் புகுந்த பேயை என அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்துசென்று கையைக் கழுவாது உதறிவிட்டு இருளுக்குள் நடந்தார். அவருக்கான நீராட்டும் மஞ்சத்தறையும் ஒருக்கியிருப்பதைச் சொல்ல பின்னால் சென்ற ஏவலர் அவர் அரண்மனைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த இலைமூடி தழைந்த வாகைமரத்தின் அடியில் புழுதியிலேயே உடல்சுருட்டிப் படுத்து துயிலத் தொடங்கியது கண்டு அஞ்சி அப்பால் நின்றனர். அவரை எழுப்புவதா என்று மெல்ல முதிய குடித்தலைவரிடம் ஏவலன் ஒருவன் கேட்டான். “அவரில் வாழும் தெய்வமேது என்று அறியோம். காத்திருப்போம்” என்று அவர் சொன்னார்.
அன்றிரவு முழுக்க அவர்கள் இருளுக்குள் அவருக்காக காவல் நின்றனர். மறுநாள் விழித்தெழுந்த அவர் மீண்டும் வந்து அடுமனைக்குப்பின் அமர்ந்து உணவுகொண்டார். அரண்மனையை ஒட்டிய குறுங்காட்டுக்குள் சென்று அந்தி இறங்கிய பின்பு மீண்டார். நாட்கள் செல்லச் செல்ல அவர் விழிகள் அவ்விடத்தை அறியலாயின. அரண்மனையின் அறையில் துயிலவும் ஏவலர் விழிநோக்கவும் தொடங்கினார்.
ஆனால் அழுக்கும் இருளும் கெடுமணமும் அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் அசைவுகள் காற்றில் பிரியும் புகைபோல ஓய்ந்திருந்தன. சொற்கள் அவரைச் சென்றடைய நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது. வெறித்த விழிகளுடன் அவர் தன்னுடன் பேசுபவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். கண்முன் அகல்சுடர் சரிந்துவிழுந்து திரைச்சீலை பற்றி எரிந்து தன் ஆடையை தொடவரும்போதும் வேறெங்கோ இருந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார்.
தன் இருளாழத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் பெருஞ்சினம் கொண்டார். கொலைத்தெய்வம் போன்று வெறிகொண்டு சுளித்த முகத்துடன் கைநீட்டி அடிக்க வந்தார். “ஈன்ற பூனைபோலிருக்கிறார். அவரை அணுகாதொழியுங்கள்” என்று ஏவலர்தலைவன் இளையோரிடம் சொன்னான். தனிமையில் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். நீள்மூச்சு விட்டு அவர் அசைந்தமர்கையில் “அவர் எண்ணி ஏங்குவதுதான் எதை? இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு?” என்று அமைச்சர்கள் புலம்பினர். முதுபூசகர் “அவர் துயரில் மகிழ்ந்தாடுகிறார். அவரைச் சூடிய பேய் அதில் திளைக்கிறது” என்றார்.
அங்கு அவர் வந்துசேர்ந்த செய்தி துவாரகைக்கு அனுப்பப்பட்டது. அரசர் ஆட்சிச்செயல்கள் அனைத்திலும் இருந்து விலக விழைவதாக ஆணை சென்றபோது அக்ரூரர் திகைத்து என்ன நிகழ்ந்தது என்று வினவி செய்தியனுப்பினார். என்ன நிகழ்ந்தது அரசருக்கு என குடித்தலைவருக்கும் நிமித்திகருக்கும் புரியவில்லை. குடிமூத்தார் குடிப்பூசகர் மூவரைக் கூட்டி உசாவினார். அரசருக்கு அகோரசிவம் உளம்கூடிவிட்டிருக்கிறது என்றனர் அவர்கள். அச்செய்தியையே துவாரகைக்கு அனுப்பினர்.
அக்ரூரர் உடனே கிளம்பி சப்தஃபலத்திற்குச் செல்ல விழைந்தார். “என்ன நிகழ்ந்துள்ளதென்று உணரமுடிகிறது, அரசி. மூத்தவர் பிரிந்து சென்றதும், யாதவர் உளத்திரிபு கொண்டதும் அரசரின் உள்ளத்தை உலைத்துவிட்டிருந்தன. அவர் தன் தோழரை காணச்சென்றதே அதன்பொருட்டுதான். அவர் உள்ளம் நிலையழிந்துள்ளது” என்றார். “இத்தருணத்தில் அவருடன் நான் இருந்தாகவேண்டும்… அது என் கடன் என்றே உணர்கிறேன்.”
சத்யபாமை அதை தடுத்துவிட்டாள். “நாம் அறியாத பலர் நாளும் கடந்துசெல்லும் ஒரு வாயில் போன்றவர் அவர். நாம் அறிந்தவர்களைக்கொண்டு அதை மதிப்பிடலாகாது. அக்ரூரரே, நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும். அவர் எவரென்று அறிய நாம் காலத்தில் பறந்தகலவேண்டும். பிறிதொரு யுகத்தில் நாம் அவரை ஒன்றென நோக்கமுடியும். முடிவிலா முகங்களினூடாக தன்னை தான் நோக்கிக்கொண்ட அந்த முழுமுகத்தை. அதுவரை அவர் ஆணைகளை தலைக்கொள்வதே நாம் செய்யக்கூடுவது.” அக்ரூரர் பெருமூச்சுடன் “ஆம், தேவி” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64
October 25, 2016
ஆடற்களம்
இங்குள்ள அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று.
உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பலநூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் மாபெரும் அரசியலாடலின் தளத்தில் அது பொருந்தவுமில்லை. அனேகமாக மகாபாரதக்கதை நிகழ்த்துகலையாக ஆனபின் அதில் இந்நிகழ்வு உருவாகிவந்திருக்கலாம். பின்னர் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அது மகாபாரதம் என்னும் மேல்தட்டுக்கு கீழ்த்தளத்திலுள்ள எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து எழுந்து வந்து சேர்ந்தது. ஆகவே மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின் ஆளுமைக்கும் சரி, பாண்டவர்களின் இயல்புகளுக்கும் சரி, கௌரவர்களின் பெருமைக்கும் சரி, பொருந்தாததாகவே உள்ளது.
ஆனால் அது மிகமுக்கியமான நாடகத்தருணம். எவ்வகையிலோ இந்தியாவின் ஆதாரமான உளவியல் சிக்கல் ஒன்றை காட்டுகிறது. பெண்மையின், தாய்மையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்ளமுடியாத ஆண்மையின் எல்லைகளைக் காட்டுகிறது. ஆகவே தவிர்க்கக்கூடியதும் அல்ல.
இந்த இரட்டைத்தன்மைதான் இந்நாவலின் மையம். ஆகவே இது இரட்டைமை என்னும் சரடையே பின்னிப்பின்னிச் செல்கிறது. இந்தியப்பண்பாட்டின் இரட்டைத்தன்மை அதன் வேதங்களில் ,அரசியலில் , பண்பாட்டுநிகழ்வுகளில் அனைத்திலும் முகம் கொள்வதை இந்நாவல் காட்டுகிறது
அந்தப்பெருநிகழ்வு நிகழும் சூதுக்களத்தை பன்னிரு ராசிக்களமாகவும் பன்னிரு மாதங்களாகவும் உருவகித்திருக்கும் இந்நாவலின் ஒருதளம் சோதிடக்குறியீடுகளால் ஆனது. ஆர்வமுள்ளவர்கள் அதைக் கணித்துப்பார்க்கலாம்.
வெண்முரசில் அதன் முதல்நாவல் முதல் உருவாகிவந்துள்ள அடிப்படையான மோதல் இந்நாவலில் முனைகொள்கிறது. அவ்வகையில் பன்னிரு படைக்களம் திகிரி சுழன்று திரும்பும் புள்ளி. வெண்முரசின் இதுவரையிலான நாவல்களை வாசித்து பிரதிக்குள் பின்னிச்செல்லும் உட்பிரதியை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது இதன் கூறுமுறை
இந்நாவலை என் இளமைக்காலத்தில் பெரும் ஆதர்சமாக இருந்தவரான வெள்ளிமலை சுவாமி மதுரானந்தஜி மகராஜ் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெயமோகன்
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் பன்னிருபடைக்களம் நாவலின் முன்னுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
டின்னிடஸ் -கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ
டின்னிடஸ் பற்றிய கடிதம் பார்த்தேன். முதலில் மாதவன் இளங்கோவின் கடிதத்தை நான் பொதுவான ஏதோ கடிதம் என்றுதான் நினைத்தேன். அதன் கடைசியில்தான் டின்னிடஸ் என்னும் விபரீத நோய் பற்றி வருகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அந்த சிக்கல் இருந்தது.
உண்மையில் நான் ஒரு அரைகுறை யோக மையத்திற்குச் சென்றேன். அங்கேதான் அது வந்தது. அதற்கு முன் வியாபாரம் நொடித்து பெரிய மனச்சிக்கல் இருந்தது. தற்கொலை செய்வதற்காக மாடியில் இருந்து குதித்தேன். அதில் தப்பினாலும் தூக்கமில்லாமையும் மூக்கில் கெட்டநாற்றமும் இருந்தது. நிறைய டாக்டர்களிடம் போனேன், பயனே இல்லை. கடைசியில் இந்த யோகா மையம் போனேன். அங்கே காதில் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
அதன்பிறகு மூன்றுவருடங்கள். கடுமையான மனோவியல் பிரச்சினைகள். தூக்கம் கிடையாது. எந்த டாக்டரைப் பார்த்தாலும் ஒன்றுமே பிரச்சினை இல்லை என்பார்கள். டாக்டர்களுக்கே இதெல்லாம் தெரியாது. இங்கே டாக்டர்கள் காதுகொடுத்துக் கேட்பதும் இல்லை. என் மனைவி என்னுடன் உறுதியாக இல்லாவிட்டால் செத்திருப்பேன். கடைசியாக ஒரு நண்பருடன் சத்குரு ஜக்கி வாசுதேவின் யோகமையம் போனேன் ஏழுமாதத்தில் குணமாகியது. இப்போது பிரச்சினையே இல்லை.
எனக்கு இருந்தது ஒரு பிரமை என்றும் நான் அதை மூடத்தனமான பக்தியால் சரிசெய்துகொண்டேன் என்றும் நானே நம்பிக்கொண்டிருந்தேன். எப்படியானாலும் சரியாகியதே. குரு என்றும் தெய்வவடிவம் என்றும் நம்ப நமக்கு ஏதேனும் தேவையாகிறது அவ்வளவுதான். மாதவன் இளங்கோ கடிதத்தைப்பார்த்தபின்னர்தான் அது ஒரு பெரியநோய் என்று தெரிந்துகொண்டேன். மாதவன் இளங்கோவின் மன உறுதிக்குப்பாரட்டுக்கள். அந்த உறுதி இருந்தால்போதும்
சீனிவாசன் மணவாளன்
***
அன்பு ஜெயமோகன்,
நெகிழ்ச்சியுடனே இந்தக் கடித்தத்தை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எவரேனும் இந்த உலகம் எவ்வளவு மோசமானது என்பதற்கான பத்து காரணங்களைக் கூறும் பொழுதும், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதை நிரூபிப்பதற்கு நூறு காரணங்களாவது என்னிடம் இருக்கிறது. அத்தகையதொரு அழகான விஷயம்தான் புதன் கிழமையிலிருந்து எனக்கு வந்துகொண்டிருக்கும் முகமறியா மனிதர்களின் கடிதங்கள்.
டின்னிடஸ் பற்றிய என்னுடைய கடிதத்தை நீங்கள் பகிர்ந்ததிலிருந்து என் அஞ்சல் பெட்டியில் விடாமல் பொழிந்துகொண்டிருக்கிறது அன்பெனும் மாமழை. வாசகர்கள் அத்தனை பேருக்கும் நான் புதியவன். நீங்கள் பகிர்ந்திருந்த புகைப்படம் மூலம், கருப்பு-வெள்ளையாகக் கனவில் வரும் முகமாகத்தான் அவர்கள் என்னை அறிவார்கள். அவர்களும் எனக்குப் புதியவர்களே. ஆனால் பெயர்கள் மட்டும் பரிச்சயம். இதே பெயர்களில் சில நண்பர்களும், உறவுகளும் இருக்கிறார்கள். இந்தக் கடிதங்களை வாசிக்கும்போது அவர்களின் முகமே தெரிகிறது, அவர்களின் குரலே கேட்கிறது. அதைத் தவிர்க்கவே முயல்கிறேன், ஆனால் முடியவில்லை. ஒரு எளிய வாசகன் தனக்கு நன்கு அறிந்த கதாசிரியர் ஒருவனின் படைப்பை வாசிக்கும்போது அவருடனும், அவருடைய வாழ்க்கையோடும் தொடர்புபடுத்திக்கொள்வதை தவிர்க்க முடியாமல் அந்தப் படைப்பாளிக்கு துரோகம் செய்வானே, அதே போன்று, ஒரு எளிய மனிதனாக இந்த முகமறியா மனிதர்களுக்கு நான் துரோகத்தை செய்துகொண்டிருக்கிறேன்.
இவர்களின் அன்பும், அக்கறையும் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது. உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒரு உயிர் துன்புறுவதை அறியும் போது வேறோதோவோர் மூலையில் இருக்கும் நல்லிதயங்களில் அது ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. இந்தச் சலனம், இந்த அமைதியின்மை, அதுதான் மானுடம் இன்னும் வீழ்ச்சியடையவில்லை என்பதற்கான ஆதாரம். எனவேதான் இந்த உலகம் அழகானது. உலகம் என்பதை விட ‘உயிர்கள் அழகானது’ என்றே சொல்லவேண்டும். உதவிக்கரம் நீட்டுபவனுக்கே உதவிக்கரம் நீட்டும் அற்புதங்கள். கைநீட்டித் தூக்க வந்தவன் தூக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விந்தை. விந்தையல்ல, அன்பை விதைத்தால் அன்பே விளையும் என்கிற அடிப்படை உண்மை. ஒரு விதைக்குப் பல பழங்கள் கிடைக்கும் என்று எங்கள் வீட்டுத் தோட்டம் என் மகனுக்குச் சொல்லிக்கொடுக்கும் அதே உண்மை.
இந்தியா வரும்போது உங்களை சந்திக்க வருவேனோ இல்லையோ, உங்கள் வாசகர் ஷாகுல் ஹமீது என்னை நிச்சயம் நாகர்கோவிலுக்கு வரவழைத்துவிடுவார் போலிருக்கிறது. டின்னிடஸால் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட பித்துநிலையில் இருந்த போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் இங்கே பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய சகோதரர் ஷாகுல் ஹமீது. திருநெல்வேலிக்காரர்.
அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அன்று விடியற்காலை என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே எனக்குப் புரியாத குழப்ப மனநிலை. யாராவது எதையாவது செய்து என்னைத் தூங்கவைத்துவிட மாட்டார்களா என்று தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். காரில் இளையராஜா பாடலைப் போட்டு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஷாகுல். காரை நிறுத்தி விட்டு இறங்குகினோம். அந்தச் தெருவில் சற்று தொலைவில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவர் தெரிந்தார். அது சற்று மேடான தெரு. சக்கர நாற்காலி பள்ளத்தில் பின்புறம் சென்றுகொண்டிருப்பதை கவனித்தவுடன், நானும் ஷாகுலும் ஓடிச்சென்று வண்டியைப் பிடித்தோம். பேட்டரி வேலை செய்யவில்லை போலிருக்கிறது. பெரியவருக்கு சரியாகப் பேச்சு வரவில்லை. எதையோ சொல்ல முயல்கிறார் ஆனால் நாக்கு குளறுகிறது. எங்களுக்குப் ஒன்றும் புரியவில்லை. பிறகு அவர் கைகாட்டிய திசையில் வண்டியைத் தள்ளிக்கொண்டே சென்றோம். எனக்கோ தலைவலி. காதுக்குள் இரைச்சல் வேறு. ஆனால் அந்தப் பெரியவரை அந்த நிலைமையில் அங்கேயே விட்டுச் செல்ல எங்கள் இருவருக்குமே மனமில்லை.
“மேனேஜ் பண்ண முடியுமா மாதவன்?” என்று ஷாகுல் வருத்தத்துடன் கேட்டார். “பரவாயில்லை ஷாகுல். அவர் வீடு அருகில்தான் எங்கேயாவது இருக்கும். அவரை ஒழுங்காகச் சேர்த்துவிட்டுச் செல்லலாம்.” என்று கூறினேன். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்திருப்போம். இறுதியாக அவர் நிறுத்தச் சொன்ன இடம் ஒரு முதியோர் இல்லம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். அந்தப் பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே நன்றி தெரிவிப்பது போல் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். எனக்கு அவரைப் பார்த்து புன்னகைப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஷாகுலின் கண்கள் கலங்கிவிட்டது.
நான் ஷாகுலைப் பார்த்து, “இப்போதைக்கு கிட்டத்தட்ட அந்தப் பெரியவர் நிலைமையில்தான் நான் இருக்கிறேன் ஷாகுல்” என்று கூறினேன். என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இன்றைக்கு அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது இந்த ஷாகுலிடம் அந்த ஷாகுலின் கடிதங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு இருக்கும் வாசகப் பரப்பை அறிவேன். ஆனால் அது ஒரு குடும்பம் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
மனித மனங்களை இணைத்து வைத்ததற்கு நன்றி
மாதவன் இளங்கோ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

