Jeyamohan's Blog, page 1719

October 23, 2016

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

[ 8 ]


அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார்.


“வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி எழுந்து எருக்கமலர் தொடுத்துச்சூட்டி கள்ளும் ஊனும் படைத்து கிராததேவனை வழிபட்டு வெண்சாம்பல் பூசி புதிய கப்பரை ஏந்தி வடக்கே உயர்ந்தெழுந்த பனிமலைகளை நோக்கிச் செல்வது அறுவருக்கும் தொல்மரபாக அறியப்பட்டுள்ளது.”


“நான் அங்கிருந்து மலையிறங்கி கங்கைப்பெருக்கினூடாக வந்தேன். அறுவகை சமயங்களுடனும் சொற்போரிட்டேன். பன்னிரு நாடுகளில் பிச்சையெடுத்து உண்டேன். என் துணையோருடன் காசிப்பெருநகர் அடைந்தேன். அங்கு இரு பெரும் சுடலைத்துறைகளில் இரவும் பகலும் எரிதாழாது சிதைகள் எரிகின்றன. அத்தழல்களுக்கு நடுவே கையில் முப்புரிவேலும் உடுக்கையும் கொண்டு வெற்றுடல் கோலமாக காலபைரவன் நின்றிருக்கும் ஆலயம் உள்ளது. அவன் கையிலிருந்து உதிர்ந்த கப்பரை குருதி உலராத பலிபீடமாக ஆலய முகப்பில் அமைந்துள்ளது. நாளும் பல்லாயிரவர் பலியும் படையலும் கொண்டு அங்கே வருகின்றனர். அவ்வாலயத்தின் முகப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவுமணி ஓய்ந்து ஒலியடங்கும் கணமே இல்லை.”


“ஆலயத்திற்கு தென்மேற்கே படித்துறையருகில் பார்ப்புக்கொலைப் பேய் தொழுத கையுடன் மூதாட்டி வடிவில் அமர்ந்திருக்கிறாள். கங்கையில் நீராடுவதற்கு முன் அவள் முன்னிலையில் பழைய ஆடைகளை நீக்குவது மரபு. கொண்ட நோய்களையும் பீடைகளையும் அங்கு ஒழித்து புதிதாகப் பிறந்தெழுந்து காலவடிவனை வணங்குகின்றனர். இறந்தோர் ஆடைகளும் அங்கு குவிக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அக்கரி படிந்த அவள் முகம் சென்றது எதையோ எண்ணியதுபோல தன்னுள் தொலைந்து தோளுக்குள் புதைந்திருக்கும்.”


“காசியிலிருந்து கிளம்பி நான் தென்றிசை செல்கிறேன். தென்னகத்தில் ஆதிசிவமென அமைந்த மலை என மாகேந்திரம் சொல்லப்படுகிறது. நஞ்சு சூடிய மாநாகர்களால் ஆளப்படுவது அது. அவர்களால் ஏற்கப்படுபவர்கள் மட்டுமே அதில் ஏறி அம்மலையின் உச்சியில் குவைக்கல் வடிவில் குடிகொள்ளும் சிவத்தை தொட்டுவணங்கமுடியும். அடுத்த சொல் கேட்பதற்கு முன்னர் சென்று அதை வணங்கி மீளும்படி என் ஆசிரியரின் ஆணை. அதைத் தலைக்கொண்டு நான் கிளம்பினேன்” என்றார்.


வைசம்பாயனன் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை நகங்கள் மண்செறிந்து விரல்கள் காய்ப்பேறி எலும்புக்கணுக்கொண்டு பாலைநிலத்து முள்மரங்களின் வேர்த்தூர் போலிருந்தன. அவை செல்லும் தொலைவை அவன் எண்ணிநோக்கினான். உடல் சரியும் கணம் வரை அவை சென்றுகொண்டுதான் இருக்கும்போலும். உடல்சரிந்த பின்னரும் உள்ளம் தான் கொண்ட விசை தீராது மேலும் செல்லும். அங்கே காத்திருப்பது எது?


அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல அவர் உரக்க நகைத்து “எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” என்றார். அவன் உள்ளம் நடுங்கத் தொடங்கியது. கைகளை மார்புடன் நன்கு கட்டி இறுக்கிக்கொண்டான்.


“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


மலைப்பாறையில் கால்களை நீட்டிக்கொண்டு அவர் படுத்தார். உடலை ஒவ்வொரு உறுப்பாக எளிதாக்கி பரப்பிக்கொண்டார். விண்மீன்கள் செறிந்த வானை நோக்கி “சிவம்யாம்” என்றார். “ஆம், சிவமேயாம்” என்று மீண்டும் சொன்னார். அவருடைய விழிகள் மூடிக்கொள்வதை அவன் கண்டான். அருகே அவர் கால்களைப் பற்றி அமுக்கியபடி அமர்ந்திருந்தான். அவர் உறுப்புகள் துயிலில் விடுபட்டுச் சரிவதை காணமுடிந்தது.


“ஆசிரியரே…” என அவன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றார் அவர். “சொல்லுங்கள், நான் செல்லும் இடம் என்ன?” அவர் விழிமூடியபடியே புன்னகைத்தார். “நீ வேதம் கற்றுக் கடந்து காவியத்திற்குள் நுழைந்துள்ளாய். காவியம் கடந்து எதில் நுழைவாய்?” என்றார். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “அக்காவியத்தில் நீ தேடுவது என்ன? பொய்யெனும் இனிப்பையா மெய்யெனும் கசப்பையா?” அவன் சீற்றத்துடன் “உண்மையை. அதை மட்டுமே. பிறிதெதையும் இல்லை” என்றான். அவர் உடல் குலுங்க நகைத்தார். “அதைத் தேடிச்சென்ற உன் மூதாதையொருவன் சொன்னான், இல்லை இது இல்லை என. பலமரம் கண்ட தச்சன் அவன். ஒருமரமும் கொள்ளாமல் மீண்டான். நேதி! நேதி! நேதி!”


அடக்கமுடியாத சினம் எழுந்து அவன் உடலை பதறச்செய்தது. அவன் கைகள் வழியாகவே அதை உணர்ந்தவர்போல அவர் மேலும் நகைத்து “எவர் மேல் சினம்? நீ செய்யப்போவது என்ன? யோகியென இங்கிருப்போர் விலக்கி விலக்கி அறிவதை நீ தொகுத்துத் தொகுத்து அறியப்போகிறாய். வேறென்ன?” என்றார். அவர் மீண்டும் நகைத்து “ஒரே இருளை அறிய ஓராயிரம் வழிகள். சிவநடனம். சிவமாயை. சிவப்பேதைமை. அறிவென்றும் அறியாமை என்றும் ஆகி நின்றாடல். அனலொரு கையில் புனலொரு கையிலென பொன்றாப் பேராடல். சிவமேயாம்! சிவமேயாம்!” என்றார். அவன் சினத்துடன் “நான் அறியப்போவது இருளை மட்டும் அல்ல. இவ்வாழ்க்கையை. இதிலுள்ள அனைத்தையும்” என்றான். “அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்? மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி அமர்ந்திருக்கும் இருள்.”


அவர் துயில்வதுவரை அவன் நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து விண்மீன்களை நோக்கினான். அவை இருண்ட சதுப்புக்குள் திகைத்துத்துடித்து புதைந்துகொண்டிருந்தன. திசைதேர் கலையை நன்றாகப் பயின்றிருந்தும்கூட அவனால் விண்மீன்களை கணிக்க முடியவில்லை. அறியாமொழியின் எழுத்துக்கள் என அவை வானில் சிதறிக்கிடந்தன. மீண்டும் மீண்டும் அந்த அலகின்மையை அள்ளமுயன்று தோற்றுச் சலித்தபின் கால்தூக்கி வைத்து திரும்பி காட்டுக்குள் புகுந்தான்.


சீவிடுகளின் ஒலியால் தொகுக்கப்பட்ட இருள்குவைகளும் நிழலுருக்களும் காற்றசைவுகளும் சருகொலிகளும் காலடியோசையும் எதிரொலியுமாக சூழ்ந்திருந்தது தண்டகப்பெருங்காடு. வடபுலக்காடுகள் போல இரவில் அது குளிர்ந்து விரைத்திருக்கவில்லை. அடுமனைக்கூடம் போல மூச்சடைக்கவைக்கும் நீராவி நிறைந்திருந்தது காற்றில். ஆனால் உடல்தொட்ட இலைப்பரப்புகள் குளிர்ந்த ஈரம் கொண்டிருந்தன. எங்கோ ஏதோ உயிர்கள் ஒலிகளென உருமாறி அடர்ந்திருந்தன. இருளே குழைந்து அடிமரங்களாக கிளைகளாக இலைகளாக மாறி உருவென்றும் அருவென்றுமாகி சூழ்ந்திருந்தது. அவன் நடந்தபோது அசைவில் கலைந்து எழுந்தன கொசுப்படைகள். சற்றுநேரத்தில் அவனை மென்துகில்படலமெனச் சூழ்ந்து அவை ரீங்கரித்தன. சேற்றில் பதிந்த காலடியில் இருந்து சிறு தவளைகள் எழுந்து பறந்தன.


அவ்விருளில் நெடுந்தொலைவு செல்லமுடியாதென்று தோன்றியது. எங்காவது மரக்கிளையிலோ பாறையிலோ அமர்ந்து துயில்வதொன்றே வழி. ஆனால் அவன் மிகக்குறைந்த தொலைவே விலகி வந்திருந்தான். விழித்தெழுந்ததும் அவர் இயல்பாக அவனை கண்டடைந்துவிடமுடியும். சேற்றில் அவன் காலடித்தடம் பதிந்திருக்கும். அதைக் கண்டு அவன் விலகிச்செல்ல விழைகிறான் என அவர் புரிந்துகொள்ளக்கூடும். இல்லை, வேறெதன்பொருட்டோ சென்றிருக்கிறான் என எண்ணினால் தொடர்ந்து வருவார். மீண்டும் அவர் முகத்தை நோக்க அவனால் இயலாது.


ஆனால் அவர் எதற்கும் தயங்குபவர் அல்ல. தன் மூவேலால் அவன் தலையை அறைந்து பிளக்கலாம். அதன் கூர்முனையை அவன் நெஞ்சில் வைத்து வா என்னுடன் என ஆணையிடலாம். அல்லது அறியாதவர் போல கடந்தும் செல்லலாம். ஆனால் மீண்டும் அவர் அவன் வாழ்க்கையில் வரவேண்டியதில்லை. அவன் வாழ்ந்த உலகம் வேறு. அவன் அங்கு மீண்டு செல்லவிரும்பினான். பொருள் கொண்ட சொற்களின் உலகம். பொருள்கோடலுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் முன்னரே தன்னுடன் வைத்துக்கொண்ட சொற்களின் உலகம்.


சொற்களின் உலகம்போல உகந்தது எது? சொற்களென வந்தவை அனைத்தும் பல்லாயிரம் முறை முன்னோரால் கையாளப்பட்டவை. அவர்களின் கைவிழுக்கும் மணமும் படிந்தவை. அங்கு புதியதென ஏதுமில்லை. புதியவை என்பவை பழையவற்றின் உடைமாற்றம் மட்டுமே. ஆனால் இக்காடு நேற்று முளைத்தெழுந்தது. இதோ என்னைச் சூழ்ந்திருக்கும் இலைகள் இதுவரை மானுடனைப் பாராதவை. இக்கொசுக்கள் முதல்முறையாக அருந்துகின்றன மானுடக்குருதி. மறுகணம் இவை எவையென்று நான் அறியவே முடியாது.


சொல்கோத்து சொல்கோட்டி சொல்சிதைத்து சொல்மறைத்து மானுடன் உருவாக்கிக்கொள்வதுதான் என்ன? அறியமுடியாமையின் பெருவெளிக்குள் அறியப்படும் ஒரு சிற்றுலகைத்தானா? அறியப்படாத நூல்கள் உண்டா? இருந்தாலும் அவை அறியத்தக்கவையே என்னும் வாய்ப்பை கொண்டுள்ளவை. எங்கோ எவராலும் ஒருமுறையேனும் வாசிக்கப்படாத நூல் ஒன்று இருக்கலாகுமா? அப்போதும் அது வாசிப்பதற்கென்றே எழுதப்பட்டதாகையால் வாசிக்கத் தக்கதே.


எல்லா சொல்லும் பிறசொல் குறித்ததே. எல்லா சொல்லும் பொருள் குறிப்பது அவ்வாறே. சொல் என்பது ஓர் ஓடை. சொற்றொடர்களின் ஓடை. நூல்களின் ஓடை. அறிதலின் ஓடை. ஒன்று பிறிதை ஆக்கி ஒன்று பிறிதில் ஊறி ஒன்றென்று ஓடும் பெருக்கு. இங்குள்ளவை ஒவ்வொன்றும் தனித்தவை. இந்த இலை அதை அறியாது. இக்கொசு பிறிதை எண்ணாது. இவற்றைக் கோத்திருக்கும் அறியமுடியாமை என்னும் பெருக்கு இருண்டு மேலும் இருண்டு குளிர்ந்து மேலும் குளிர்ந்து அடங்கி மேலும் அடங்கி தன்னுள் தானை முடிவிலாது சுருட்டிக்கொண்டு சூழ்ந்திருக்கையில் இவை என்ன செய்தாலும் எஞ்சுவது பொருளின்மையே.


அவன் நாகத்தின் ஒலியைக் கேட்டான். அதைக் கேட்பதற்கு ஒரு கணம் முன்னரே அவன் உட்புலன் அதை அறிந்து உடல் மயிர்ப்பு கொண்டது. சிலகணங்கள் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. பின்பு கைகால்கள் அனைத்துத் திசைகளிலும் உதறிக்கொள்ள நின்ற இடத்திலேயே உடல் ததும்பினான். அதன் பின்னரே அது யானை என்றறிந்தான். அவன் முன் பிறைநிலவின் நீர்ப்பாவை என ஒரு வெண்வளைவாக ஒற்றைத் தந்தம் மட்டும் தெரிந்தது. மறுகணம் இருளில் மின்னும் நீர்த்துளி என கண்கள். விழிகளால் அன்றி அச்சத்தால் அதன் நீண்டு தரைதொட்டுத் துழாவிய துதிக்கையையும் கண்டுவிட்டான்.


ஆழுள்ளத்தில் கரந்த எண்ணமொன்று அசைவதுபோல அவன் மிகமெல்ல தன் வலக்காலைத் தூக்கி பின்னால் வைத்தான். அடுத்த காலை எடுக்கையில் தன் உடலால் அசைக்கப்பட்ட காற்றின் ஒலியையே அவன் கேட்பதுபோல் உணர்ந்தான். நிறுத்தி நெஞ்சில் செறிக்கப்பட்ட மூச்சு எடைகொண்டு குளிர்நீரென கற்பாறையென ஆயிற்று. மீண்டுமொரு கால் எடுத்துவைத்தபோது விலகிவிடமுடியுமென நம்பிக்கை எழுந்தது. மீண்டுமொரு காலில் விலகிவிட்டோமென்றே எண்ணம் பிறந்தது. மீண்டுமொரு கால் வைத்தபோது விழிகள் கூர்மைகொண்டன. யானையின் செவிகள் இருளை துழாவிக்கொண்டிருந்தன. செவிகளிலும் மத்தகத்திலும் செம்பூக்கள் இல்லை. முற்றுக்கரியுருவம். அதன் உடல் இருள்வெளி கனிந்து திரண்ட சொட்டு என நின்று ததும்பியது.


மீண்டும் இரு அடிகள் எடுத்துவைத்து அப்படியே பின்னால் பாய்ந்து ஓடத்தொடங்கலாமா என அவன் எண்ணினான். யானை துரத்திவருமென்றால் புதர்களில் ஓடுவது அறிவுடைமை அல்ல. பெருமரத்தில் தொற்றி ஏறவேண்டும். அல்லது உருள்பாறை ஒன்றில். அல்லது செங்குத்துப்பள்ளத்தில். அல்லது அதன் முகக்கை எட்டாத மேட்டில். ஒரு கணத்திற்குள் அவன் உள்ளம் அக்காட்டில் அவன் கண்ட அனைத்தையும் தொட்டு தேடிச்சென்று பெரும்பலா மரம் ஒன்றை கண்டுகொண்டது. அதன் கீழ்க்கணு அவன் கையெட்டும் உயரத்தில்தான் இருந்தது. முதற்கிளை யானைமத்தகத்திற்கும் மேலே. இரண்டாம் கிளை அதன் கைமூக்கின் நுனிக்கும் மேலே. அதுதான்.


உடல் ஓடத்தொடங்கி கால்கிளம்புவதற்கு முந்தைய கணத்தில் அவன் அடுத்த சீறலை கேட்டான். விழிதிருப்பி தனக்குப் பின்னால் நின்றிருந்த கரிய யானையை கண்டான். மறுகணமே வலப்பக்கமும் இடப்பக்கமும் யானைகளை கண்டுவிட்டான். மேலுமிரண்டு. மேலுமிரண்டு. எட்டு. எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள். ஓசையின்றி பெருகி அவை சூழ்ந்தபின்னரே அவன் முதல் யானையை கண்டிருக்கிறான். எண்பெருங்கரியின் நடுநுண்புள்ளி. தன் கால்கள் திகிரியென ஆகி உடல்சுழல்கின்றதா? சூழ்ந்த இருள் சுழல்கின்றதா? எட்டுத்திசையும் ஒற்றைப்பெருவட்டமென்றாகின்றனவா?


அவன் விழித்துக்கொண்டபோது விழிகளுக்குள் காலையொளி புகுந்து கூசவைத்தது. நிழலாட்டத்தை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த பின்னர்தான் யானைகளை நினைவுகூர்ந்தான். அவன் மேல் குனிந்தபடி பிச்சாண்டவர் நின்றிருந்தார். “உயிருடன் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “தொலைவில் உன்னை பார்த்தபோதே தெரிந்துகொண்டேன்.” அவிழ்ந்த தழையாடை அப்பால் கிடந்தது. அவன் உருண்டு அதை கைநீட்டி எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். திகைப்புடன் “யானைகள்!” என்றான்.


“என்ன?” என்றார் அவர். “எட்டு யானைகள்! அவை என்னை சூழ்ந்துகொண்டன.” அவர் புன்னகையுடன் “வா” என்று அழைத்துச்சென்றார். அவன் இரவில் செறிந்த காடென நினைத்த இடம் சேறுமண்டிய புதர்ப்பரப்பாக இருந்தது. “இதோ நீ நின்றிருந்த இடம்” என அவர் காட்டிய இடத்தில் அவன் காலடித்தடம் இருந்தது. அவர் முன்னால் சென்று “இங்கு களிறு ஒன்று நின்றிருக்கிறது. பிண்டம் கிடக்கிறது. காலடிகள் உள்ளன. தழை ஒடித்து தின்றிருக்கிறது” என்றார். அவன் ஓடிச்சென்று அந்தத் தடங்களை பார்த்தான். “நான் எட்டு யானைகளை பார்த்தேன்… என் விழிகளால் பார்த்தேன்.” அவர் புன்னகையுடன் “ஆம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றார்.


“நான் பார்த்தேன்… உண்மையாகவே பார்த்தேன்” என்று கூவியபடி அவன் பாய்ந்து புதர்களுக்குள் ஓடினான். அவன் விழுந்து கிடந்த இடத்தை புதர்கள் வழியாக சுற்றிவந்தான். யானைக்காலடிகளை காணாமல் மீண்டும் மீண்டும் விழிதுழாவி சலித்தான். திரும்பி வந்து மூச்சிரைக்க நின்று “நான் பார்த்தேன்!” என்றான். அவர் “பார்த்திருக்கக்கூடும் என்றுதானே நானும் சொன்னேன்” என்றபின் கனிவுடன் புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார்.



[ 9 ]


சௌகந்திகத்திற்கு வந்த கிராதன் அங்கிருந்து சென்றபின்னரும் அவன் சூர் அங்கே எஞ்சியிருந்தது. தேவதாரு மரங்களின் காற்று சுழன்று வீசும் ஒரு கணத்தில் அதை மூக்கு உணர்ந்தது. வேள்விப்புகையின் இன்மணத்தின் உள்ளே அது மறைந்திருந்தது. முனிவர்கள் காமத்தின் ஆழ்தருணத்தில் தங்கள் மனைவியரின் உடலில் அதை உணர்ந்தனர். அதை அறிந்ததுமே அனைத்தும் மறைந்து அவன் நினைவு மட்டும் எழுந்து கண்முன் நின்றது. மெய்ப்பு கொண்டு எழுந்து திசைகளை நோக்கி பதைத்தனர். “இங்குள்ள அனைத்திலும் அவன் எப்படி ஊடுருவ முடியும்?” என்றார் கனகர். “அத்தனை வேள்விகளும் மகாருத்ரம் ஆனது எப்படி? அனைத்து வேதச்சொற்களும் ருத்ரமாக ஒலிப்பது எப்படி?”


“நாம் காட்டாளர்கள் அல்ல” என்று சூத்ரகர் சொன்னார். “காட்டின் வேர்களை உண்கின்றன பன்றிகள். தண்டை உண்கின்றன யானைகள். இலைகளை மான்கள். கனிகளை குரங்குகள். நாம் மலரில் ஊறிய தேனை உண்பவர்கள். ஆம், காட்டின் உப்பும் சூரும் கொண்டதே அதுவும். அதுவே காட்டின் சாரம். தோழரே, வண்ணத்துப்பூச்சிகளே காட்டை அறிந்தவை. அவற்றின் சிறகிலேறிப் பறக்கிறது காடு. நாம் வேதநுண்சொல்லை மட்டுமே அறியவேண்டியவர்கள். இந்தக் கொடுஞ்சூரால் அதை நாம் இழக்கிறோம்.” குருநிலையின் எட்டு முதன்மை முனிவர்கள் தங்களுக்குள் ஒன்றாகி அதைப்பற்றி பேசிக்கொண்டனர். பேசப்பேச சினமும் துயரும் கொண்டு ஒன்றுதிரண்டனர்.


அவர்கள் அதை அத்ரியிடம் சொன்னார்கள். அவர் விழிசொக்கும் பெரும்போதையிலென இருந்தார். “ஆம், நானும் அறிகிறேன் அந்த மணத்தை. கருக்குழந்தையின் குருதி போல, புதிய கிழங்கில் மண் போல, மழைநீரில் முகில்போல அது மணக்கிறது. அதன் ஊர்திகளே இவையனைத்தும்” என்றார். அவர்கள் சோர்ந்த முகத்துடன் எழுந்தனர். “இவரிடம் சொல்லிப்பயனில்லை. தன்னை இழந்துவிட்டார்” என்றார் கருணர். “அவர் அறிந்த ஒன்றை நாம் அறியவில்லை என்று பொருளா இதற்கு?” என்றார் கனகர். “தன்னை இழந்தபின் அறிந்தாலென்ன அறியாவிட்டாலென்ன?” என்றார் கர்த்தமர்.


“வந்தவன் யார்?” என்றார் கனகர். “நாம் அவனை நேரில் கண்டோம். இரந்துண்ணும் காட்டாளன். அவனிடம் காடுகள் தங்கள் இருளுக்குள் தேக்கிவைத்துள்ள மாயம் ஒன்றிருந்தது. சற்றுநேரம் நம் கண்களைக் கட்ட அவனால் முடிந்தது. பிறிதென்ன?” சூத்ரகர் “தன் காட்டுத்தெய்வத்தை நம் ஆசிரியரின் நெஞ்சில் நிறுத்திவிட்டுச் சென்றான். இதோ நம் குருநிலை வாயிலில் கல்லுருவாக நின்று பூசெய்கை கொள்கிறது அது” என்றார். “அவன் நம் மீது ஏவப்பட்டவன், ஐயமே இல்லை” என்றார் அஸ்வகர்.


“சூழ்ந்திருக்கிறது காடு. நோயும் கொலையும் குடிகொள்ளும் வன்னிலம் அது. அதை விலக்கியே இவ்வேலியை நம் குருநிலைக்குச் சுற்றிலும் அமைத்தனர் முன்னோர். அந்த வேலியை நாமே திறந்தோம். அவனை உள்ளே விட்டதே பெரும்பிழை” என்றார் கனகர். “அவன் இரவலன்” என்றார் சூத்ரகர். “ஆம், ஆனால் காட்டாளர் நம் எதிரிகள். இரவலராகவும் இங்கொரு வேதமறிந்த அந்தணன் மட்டுமே உட்புக முடியும் என்று நெறியிருந்தது அல்லவா? அதை எப்போது மீறினோம்?” அவர்கள் அமைதியடைந்தனர். “என்றோ ஒரு இடத்தில் நாம் நம்மை நம் முன்னோரைவிடப் பெரியவர்களாக எண்ணிக்கொண்டோமா? அதன் விளைவைத்தான் சுமக்கிறோமா?”


“ஆயிரம் ஆண்டுகாலம் வேதச்சொல் கேட்டு தூயமணம் கொண்டு நின்றிருந்த தேவதாருக்களில் மலநாற்றம் கலந்துவிட்டிருக்கிறது. வேதச்சொல் கொண்டு கூவிய பசுக்களின் அகிடுகளில் குருதிச்சுவை கலந்த பால் சுரக்கிறது” என்றார் கனகர். “நாம் நம்மை இழந்துவிட்டோம். இந்தக் காட்டாளரின் கல்தெய்வத்திற்குப் பூசைசெய்யவா தேவதாருக்கள் மணம் கொள்கின்றன? இதன் மேல் ஊற்றவா நம் பசுக்கள் அமுதூறுகின்றன? இதை வழுத்தவா வேதச்சொல் எடுக்கிறோம்?”


நாளுக்குநாள் அவர்களின் அச்சமும் விலக்கமும் கூடிவந்தன. முதலில் மாறிமாறி அதைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்தேய்ந்து அமைதியடைந்தார்கள். சொல்லப்படாதபோது அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அது பேருருக்கொண்டு வளர்ந்தது. அதை எதிர்கொண்டு நோக்கவே அவர்கள் அஞ்சினர். எனவே அதன்மேல் எண்ணங்களையும் செயல்களையும் அள்ளிப்போட்டு மூடி அழுத்தினர். உள்ளூறி வளர்ந்து அவர்களின் குருதியில் கலந்தது. அவர்களின் விரல்நுனிகளில் துடித்தது. அவர்களின் காலடிச்சுவடுகளில் பதிந்துகிடந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் பிறர் காலடிகளை உடனே அடையாளம் கண்டுகொண்டனர்.


ஒருநாள் தாருகக்காட்டுக்கு கூன்விழுந்து ஒடுங்கிய சிற்றுடலும் வெண்ணிற விழிகளும் உடைந்து பரவிய கரிய பற்களும் கொண்ட வைதிகர் ஒருவர் தன் இரு மாணவர்களுடன் வந்தார். தொலைவில் வரும்போதே நடையின் அசைவால் அவரை வேறுபடுத்தி நோக்கி நின்று கூர்ந்தனர். அருகணைந்ததும் அவருடைய முதன்மை மாணவனாகிய கரிய நெடிய இளைஞன் “எங்கள் ஆசிரியர் அதர்வத்தைக் கைப்பற்றிய பெருவைதிகர். இவ்வழி செல்லும்போது இக்குருநிலையைப்பற்றி அறிந்தோம். ஓய்வுகொண்டு செல்ல விழைகிறோம். அவரை அடிபணிந்து அருள்பெறும் நல்வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம்” என்றான்.


KIRATHAM_EPI_05


அவர்கள் திகைப்புகொண்டாலும் அச்சொல்லில் இருந்த முனைப்பே அதை ஏற்கச்செய்தது. கனகர் “எங்கள் குருநிலைக்கு வருக, அதர்வ வைதிகரே!” என்றார். வெளிறிய குறிய உடல்கொண்டிருந்த இரண்டாவது மாணவன் “இக்குருநிலையின் தலைவரே வாயிலில் வந்து எங்கள் ஆசிரியரை வரவேற்கவேண்டுமென்பது மரபு” என்றான். “அவ்வண்ணமே” என்று அஸ்வகர் திரும்பி உள்ளே ஓடினார். அத்ரிமுனிவர் தன் இரு மாணவர்களுடன் வந்து வாயிலில் நின்று வரவேற்று அதர்வ வைதிகரை உள்ளே அழைத்துச்சென்றார்.


மகாகாளர் என்று பெயர்கொண்டிருந்த அவர் வந்த முதல்நாள் முதலே அங்குள்ள அனைவராலும் வெறுக்கப்பட்டார். வெறுக்கப்படுவதற்கென்றே ஒவ்வொன்றையும் செய்பவர் போலிருந்தார். எப்போதும் மூக்கையும் காதையும் குடைந்து முகர்ந்து நோக்கினார். அக்குள்களை சொறிந்தார். அனைத்துப் பெண்களையும் அவர்களின் முலைகளிலும் இடைக்கீழும் நேர்நோக்கில் உற்றுநோக்கினார். அவர்கள் திகைத்து அவர் விழிகளை நோக்கினால் கண்கள் சுருங்க இளித்தார். உணவை இடக்கையால் அள்ளி வாயிலிட்டு நாய்போல் ஓசையெழ தின்றார். அவ்விரல்களை ஒவ்வொன்றாக நக்கியபின் இலையையும் வழித்து நக்கினார்.


உணவுண்ணும் இடத்திலேயே காலைத்தூக்கி வயிற்றுவளி வெளியிட்டார். அவ்வோசைக்கு அவரே மகிழ்ந்து மாணவர்களை நோக்கி சிரித்தார். அடிக்கடி ஏப்பம் விட்டு வயிற்றைத்தடவி முகம்சுளித்து மாணவர்களை கீழ்ச்சொற்களால் வசைபாடினார். அவர் இருக்குமிடத்திற்கே எவரும் செல்லாமலானார்கள். அவர் அங்கிருப்பதையே எண்ணவும் தவிர்த்தனர். குருநிலையின் வேள்விக்கூடத்திற்கும் சொல்கூடும் அவைக்கும் அவர் வந்தமரும்போது அவர் அமரக்கூடும் இடத்தை முன்னரே உய்த்தறிந்து அங்கிருந்தோர் விரல்தொடுமிடத்தில் சுனைமீன்கூட்டம் போல விலகிக்கொண்டனர்.


ஒருநாள் சுகந்தவாகினியில் நீராடி எழுந்த கனகர் மரவுரியை உதறும்போது எழுந்த எண்ணம் ஒன்றால் திகைத்து அசையாமல் நின்றார். உள்ளத்தின் படபடப்பு ஓய்ந்ததும் தன் தோழர்களிடம் திரும்பி “ஒருவேளை இவர்தான் நமக்காக வந்தவரோ?” என்றார். “யார்?” என்றார் அஸ்வகர். “இந்த அதர்வர். இவர் அபிசாரவேள்வி செய்யக்கற்றவர். நாம் எண்ணியது ஈடேற இவரை அனுப்பியதோ ஊழ்?” அவர் சொல்லிச்செல்வதற்குள்ளாகவே அவர்கள் அங்கு சென்றுவிட்டிருந்தனர். ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களே தங்களுக்குள் மறுத்துக்கொண்டார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.


கருணர் “ஆனால் இவர் இழிகுணத்தவர். இவரிடம் என்ன ஆற்றல் இருக்கக்கூடும்?” என்றார். அதன் மறுமொழியை அவரே அறிந்திருந்தார். கனகர் அந்த எதிர்ப்பால் ஆற்றல்கொண்டு “நமக்குத் தேவை இழிவின் ஆற்றல்தான். அந்த கல்லாக் காட்டாளன் முன் நம் சிறப்புகள் செயலற்றதைத்தான் கண்டோமே! அவனை வெல்ல இவரால்தான் இயலும்” என்றார். “இவர் கற்றது நாமறிந்த நால்வேதம் அல்ல. கிருஷ்ணசாகையுடன் அதர்வம் நம் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது கீழ்மையின் உச்சம் என்கிறார்கள். அதன் சொற்கள் எழுந்தால் பாதாளநாகங்கள் விழியொளியும் மூச்சொலியுமாக எழுந்து வந்து நெளியும். ஆழுலக இருள்மூர்த்திகள் சிறகுகொண்டு வந்து சூழ்வார்கள். இவர் அவர்களின் உலகில் வாழ்கிறார்.”


“ஆம், இவரே” என்றார் சூத்ரகர். “இவரைக் கண்டதுமே நான் அதைத்தான் நினைத்தேன்.” கர்த்தமர் “இல்லையேல் இவரே நம்மைத்தேடி வரவேண்டியதில்லை” என்றார். மிகவிரைவிலேயே அவர்கள் கருத்தொருமித்தனர். “ஆம், இவரிடமே பேசுவோம். இவர் விழைவதை நாம் அளிப்போம்” என்றார் அஸ்வகர். “நாம் என்ன விழைகிறோம்?” என்றார் சூத்ரகர். அதை அவர்கள் அதுவரை எண்ணவில்லை என்பதனால் சற்று தயங்கினர். “நாம் விழைவது வெற்றியை” என்றார் கனகர். “அந்தக் காட்டாளனை முழுதும் வென்றடக்கவேண்டும். அவன் இங்கு அடைந்துசென்ற வெற்றியின் கெடுமணமே நம்மைச் சூழ்ந்துள்ளது. தோற்று அவன் ஆணவம் மடங்குகையில் இந்த நாற்றமும் அகலும்.”


“அவனை வேதமே வெல்லவேண்டும்” என்று அஸ்வகர் கூவியபடி கனகரின் அருகே வந்தார். “வேதமென்பது மலர்மட்டுமல்ல, சேற்றை உண்ணும் வேரும்கூடத்தான் என அந்தக் கிராதன் அறியட்டும்.” கனகர் “ஆம், அதர்வம் காட்டாளர்களின் சொல்லில் இருந்து அள்ளப்பட்டது. ஆயிரம் மடங்கு ஆற்றல் ஏற்றப்பட்டது. காட்டுக்கீழ்மையால் உறைகுத்தப்பட்ட பாற்கடல் அது என்கின்றது பிரஃபவசூத்ரம். அந்த நஞ்சை அவன் எதிர்கொள்ளட்டும்” என்றார்.


அத்தனை விசையுடன் சொல்லப்பட்டதும் அவர்கள் அதன் வீச்சை உள்ளத்தால் உணர்ந்து அமைதிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்காமல் முற்றிலும் தனித்து நின்றிருந்தார்கள். கனகர் தன் மரவுரியை மீண்டும் உதறிவிட்டு “உங்களுக்கு ஒப்புதலென்றால் நானே அவரிடம் சென்று பேசுகிறேன்” என்றார். “ஆம், தாங்களே பேசுங்கள்” என்றார் சூத்ரகர். பிறர் தலையாட்டினர்.


வெண்முரசு விவாதங்கள்


நிகழ்காவியம்



தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7
’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 29

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2016 11:30

October 22, 2016

இலக்கியத்தின் தரமும் தேடலும்

editorial-cartoon-art-literature


அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். அண்மையில் எழுந்த சர்ச்சைகள் குறித்து எனக்கு சில கேள்விகள்.


இலக்கியம் என்பதன் வரையறை எது? எது சரியான இலக்கியம் என்று புதிய வாசகர்கள் எப்படி அறிவது?


இன்றைய இணைய காலகட்டத்தில் வாசிப்பவர்களுக்கு இணையாக எழுதுபவர்களும் உள்ளனர். கறாரான இலக்கிய இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் போன்று இன்றைய வாசகன் சரியான எழுத்தைக் கண்டறிவது சிரமமாகத்தான் உள்ளது. ஏனெனில் இங்கு கொட்டிக் கிடப்பவை கற்பனைக்கப்பாற்பட்டவை. அதிகம் வாசிக்கும் பழக்கமுடைய என்னால், எனக்கு வரும் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், இலக்கிய இதழ்கள் என்று இணைப்பில் வந்து குவியும் எல்லா எழுத்துகளையும் முழுமையாக வாசித்து முடிக்க முடியவில்லை. சில நேரங்களில் வணிக கேளிக்கை எழுத்துகளைப் பிரித்தறியவே நேரம் கழிகிறதோ என்று தோன்றுகிறது. இன்றைய இணையத்தில் சரியான எழுத்தினை எப்படி பிரித்தறிவது? எழுதப்படும் அனைத்துமே கவிதைகளா? அதிகம் வாசிக்கப்படும் எல்லாமே சிறந்த இலக்கியமா என்றே வினா எழுகிறது.


தமிழ் இலக்கியத்தில் மாறும் காலகட்டங்கள் முன்பிருந்தவற்றை மீறி எழுந்தவையே. எனில் தமிழில் சமகாலத்தில் இனிவரும் காலங்களில் எத்தகைய படைப்புகள் உருவாகும்? எந்த வகையான எழுத்து முன்னிலை பெறும். ஒரு ஆர்வமிக்க இலக்கிய வாசகியாக சரியான எழுத்துகளை எப்படி கண்டறிவது? இதை உண்மையான ஆதங்கத்துடனேயே கேட்கிறேன். ஏனெனில் வாசிக்கத் தொடங்கி அது வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே என்று ஒதுக்குவது உண்மையான வாசிப்பு ஆர்வங்கொண்டவர்களுக்கு எரிச்சலையே தரும் என்பது தாங்கள் அறிந்ததே.


ஜேகே எழுதுவார் “என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்காக ‘நன்னா இல்லன்‘னு வச்சுட முடியறதா? நன்னா இல்ல நன்னா இல்லேன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னாயிருக்காதாங்கற நப்பாசை தான். சான்சே குடுக்க மாட்டான் போல இருக்கு! பக்கம் பக்கமாத் தள்ளிண்டே இருக்கேன்‘ என்று சில நேரங்களில் நாவலில். இப்படித்தான் எனக்கும் பல வேளைகளில் நடக்கிறது.


எப்படி வடிகட்டி வாசிப்பது என்று நேரமிருக்கையில் பதில் கூறுங்கள்.


நன்றி


மோனிகா மாறன்.


*


அன்புள்ள மோனிகா,


இங்கே நீங்கள் செய்யும் ஒரு பிழையை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். இலக்கியம் என்பது அச்சிலும் இணையத்திலும் கண்கூடாகத் தெரிவதனால் புத்தகமாகத் தொட்டுப்பார்க்க முடிவதனால் ஒரு புறவயமான இயக்கம் என நினைக்கிறீர்கள். அப்படி அல்ல. இலக்கியத்தின் ஒரு பதிவு வடிவம் மட்டும்தான் அவை. இலக்கியம் எவ்வகையிலும் புறவயமானது அல்ல. அது முழுக்க முழுக்க அந்தரங்கமானது, தனிப்பட்டது, அகவயமானது. அதை புறவயமாக, அனைவருக்குமாக, எப்போதைக்குமாக வரையறை செய்யமுடியாது.


ஆகவே இலக்கியவாசிப்பு என்பது ஆசிரியனும் வாசகனும் அந்தரங்கமாக உரையாடிக்கொள்ளும் ஓர் இடத்தில் மட்டுமே நிகழ்கிறது. அதற்கு புறவயமான விதிகளை, இலக்கணங்களை, கொள்கைகளை நிரந்தரமாக உருவாக்கிக் கொள்ளமுடியாது. எனவே நல்ல இலக்கியம் என்பது இப்படி இருக்கும் என எவருமே வரையறை செய்யமுடியாது.


இலக்கியத்திற்கான எல்லா வரையறையும் அகவயமானதாகவே இருக்கும். ஒரு வாசகனிடம் மட்டுமே அவை அர்த்தம் கொள்ளும். உதாரணமாக, ஒரு நல்ல படைப்பில் சொல்மிகாத கூர்மை இருக்கும் என்று ஒரு வரையறையைச் சொல்வோம். சொல்மிகாத கூர்மை என்றால் என்ன என்பதை வாசகன் அல்லவா தீர்மானிக்கமுடியும்? ஒருவனுக்குச் சொல் மிகுந்துள்ளது என தோன்றும் படைப்பு இன்னொருவருக்கு கச்சிதமானதாகத் தோன்றும் அல்லவா? ஆகவே இலக்கியம் பற்றிய எந்தக்கூற்றும் வாசகனின் தன்னிலை சார்ந்த அர்த்தம் மட்டுமே அளிப்பதுதான்


ஆகவே இலக்கிய மதிப்பீடு, இலக்கியவகைப்பாடு என்பவை ஒருபோதும் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்கமுடியாது. அவற்றை எவ்வகையிலும் நிரூபிக்கமுடியாது. இந்தப் படைப்பு உயர்ந்தது என ஒரு விமர்சகன் சொல்கிறான் என்று கொள்வோம். அதை அவன் அந்தப்படைப்பை வாசித்து அதன் நுட்பங்களை தன்னைப் போலவே அறியும் ஒருவாசகனிடம் மட்டுமே சொல்ல முடியும். அவனிடம் மட்டுமே அவன் அப்படிச் சொல்வதற்கான தர்க்கங்களை முன்வைக்க முடியும்.


அந்தவாசகன் அப்படைப்பை வாசித்து அக்கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டான் என்றால் அந்த விமர்சகனின் கருத்தை ஏற்கவோ மறுக்கவோ முடியும். அந்நூலை வாசித்து உணரமுடியாத ஒருவாசகனிடம் அந்த விமர்சகன் உரையாடவே முடியாது. என்ன சொன்னாலும் புரியவைக்கமுடியாது.


ஆகவே எந்த இலக்கிய வாசகனும் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கமுடியுமா என பொதுவெளியில் கேட்கமாட்டான். இலக்கியத்தின் இயல்புகளாகச் சொல்லப்படும் அழகு, ஆழம், நுணுக்கம், தரம் எதையுமே பொதுமேடையில் வரையறை செய்ய முடியாது. அவற்றை சமானமான ரசனை கொண்ட ஒருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். அவை விளக்குதலாக நிகழ முடியாது, சுட்டிக்காட்டலாகவே நிகழமுடியும்.



*



இலக்கியத்தின் இந்த அந்தரங்கத்தன்மை மிகமிக அடிப்படையான விஷயம். ஆரம்பப்பாடம் இது. இதை ஏதோ புதுக்கண்டுபிடிப்பு போல புரிந்துகொண்டு ‘பயில்முறை’ இலக்கியவாதிகள் இலக்கியத்தில் தரம் என்ற ஒன்று இல்லை என்றும் ஒருவருக்கு தரமான எழுத்து என்பது இன்னொருவருக்கு தரமற்றதாகத் தெரியும் என்றும் ‘உண்மை’களை எடுத்துவிட ஆரம்பிக்கிறார்கள். அப்படியே பாய்ந்துபோய் இலக்கியம் என்றே ஒன்று இல்லை என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். தொலைபேசி பெயர்ப்பட்டியல் கூட ஒருவருக்கு இலக்கியமாகத் தெரியலாமே என ஒரு மேதை ஒருமுறை சொன்னார்


இந்த அசட்டுத்தனத்திற்கு இருநூறாண்டுக் காலமாக இலக்கியவிமர்சகர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின்னரும் இந்தக் குரல் வந்துகொண்டே இருக்கும். இலக்கியத்தை பாமரர் தரப்பில் இருந்து எதிர்கொள்ளும் முதல் குரல் இது என நினைக்கிறேன்.


சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே தெரியும், எந்த ஒரு அறிவுத்துறையிலும் அப்படி எல்லாமே சமம்தான், எல்லாமே முக்கியம்தான் என ஒரு நிலை இருக்கமுடியுமா என்ன? தான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்ததை நோக்கி, மிகநுண்மையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மானுட இயல்பு. மேலும் மேலும் என்றே அது தாவுகிறது. மானுடர் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் அந்த மேன்மையாக்கமும் நுண்மையாக்கமும் நிகழ்ந்தாகவேண்டும்.


இலக்கியம் உட்பட அனைத்திலும் நாம் பேசிக்கொண்டிருப்பது அதைப்பற்றித்தான். எப்படியோ ஒட்டுமொத்த மானுடக்குலமும் இணைந்து அந்த முன்னகர்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இன்று, செய்தித்தொடர்புகள் மூலம் உலகம் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இன்று அது கண்கூடாகத்தெரிகிறது. ஆனால் வரலாற்றுக்காலம் முழுக்க இப்படித்தான் மானுடக்குலம் ஒற்றைப் பெருந்திரளாக முன்னகர்ந்திருக்கிறது. கலை, அறிவியல், தத்துவம் அனைத்திலும். அதை பெருநூல்களை வாசித்தாலே அறியலாம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பரவலாக ஆனதை நோக்கினாலே புரிந்துகொள்ளலாம்


ஆகவே தரம் என்பது என்ன என்றால் அந்த ஒட்டுமொத்த முன்னகர்வில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்னும் அளவீடுதான். அந்த ஒட்டுமொத்த உரையாடலில் உங்கள் குரலின் இடம் என்ன என்னும் கேள்விதான். அது என்றுமுள்ளது.


அது முதல்தளத்தில் தனிப்பட்ட ரசனை சார்ந்தது, அகவயமானது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி அல்ல. அதற்கு கண்கூடான ஒரு புறவயத்தன்மை உண்டு. ஒருவருக்கு புகழேந்திப்புலவர் கம்பனை விட பிடித்தமானவராக இருக்கலாம். ஆனால் புகழேந்திப்புலவர் கம்பனுக்கு சமானமானவர் அல்ல என்று ‘நிரூபிக்க’வேண்டியதே இல்லை.


இது எப்படி நிகழ்கிறது? இலக்கியத்தின் ரசனை தனிப்பட்ட தளத்தில் நிகழ்ந்தாலும் ஒரு பொதுவான சமூக மதிப்பீடு திரண்டு வந்தபடியே இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுத் தளத்தில் நிகழும் தொடர்ச்சியான உரையாடல் வழியாக நிகழ்கிறது. திருவள்ளுவரும் கம்பரும் மேலே வர ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் கீழே செல்கிறார்கள். இதுதான் இலக்கிய மதிப்பீட்டின் உருவாக்கம். இது நிகழாத காலகட்டமே இலக்கியத்தில் இருக்கமுடியாது. இது நின்றுவிட்டால் இலக்கியமே அழிந்துவிடும்.


மணிக்கொடி காலகட்டத்தில் எத்தனைபேர் எழுதியிருப்பார்கள். ஆனால் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி மட்டும்தான் அக்காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளிகள். அந்தத் தெரிவு எப்படி நிகழ்ந்தது? அதை ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்ற விமர்சகர்கள் முன்வைத்தனர். விவாதம் மூலம் அது நிறுவப்பட்டது. க.நா.சுப்ரமணியத்தால் உறுதிசெய்யப்பட்டது.


அப்போதும் அரைவேக்காடுகள் ‘இவர்கள் எப்படி இதையெல்லாம் சொல்லலாம்?’ என்றும் “இலக்கியம் என்றால் இது என எப்படிச் சொல்லமுடியும்? அவரவர்க்கு ஒன்று பிடித்திருக்கிறது’ என்றும் ‘இலக்கியம் என்றால் என்ன என்று புறவயமான வரையறை எங்கே?’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


மானுடம் தழுவிய அளவில் நிகழும் அந்த உரையாடல்-விவாதம்-மதிப்பீடுதான் ஷேக்ஸ்பியரை மானுடத்திற்குப் பொதுவான கவிஞராக கொண்டுவந்து நிறுத்துகிறது. தல்ஸ்தோயை கொண்டுவந்து நிறுத்துகிறது. இலக்கிய விவாதக்களத்தைப் பார்த்தோம் என்றால் இப்போது துஃபு போன்ற சீனக்கவிஞர்கள் அந்த இடம் நோக்கி வருவதைக் காணலாம்.


இலக்கியத்தில் மட்டும் அல்ல பெரும்பாலும் அனைத்து அறிவுத்துறைகளிலும் வெகுஜனப் பங்களிப்பாலோ அல்லது பிற அளவீடுகளாலோ மதிப்பீடுகள் உருவாக்கப்படுவதில்லை. அத்துறையின் முக்கியமான, மையப்போக்கில் செயல்படக்கூடியவர்களாலேயே அவை உருவாக்கப்படுகின்றன. அவை தீர்ப்பாகச் சொல்லப்படுவதில்லை. விவாதக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றன. விவாத முடிவில் வகுக்கப்படுகின்றன. peer review என அதைச் சொல்கிறார்கள்.


இந்த மதிப்பீட்டுப்போக்கை இலக்கியத்தை உண்மையிலேயே வாசிக்கும் எவரும், இலக்கிய விமர்சனத்துடன் உரையாடும் எவரும் மிகமிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். வாசிக்காதவர், ரசனையற்றவர் என்னதான் சொன்னாலும் புரிந்துகொள்ளமுடியாது.


அன்பு, காதல், இலட்சியவாதம், தியாகம், அறம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றவற்றை நீங்கள் எப்படி அறிகிறிர்கள்? அவற்றை எவரேனும் புறவயமாக வகுத்துச் சொல்லிவிடமுடியுமா? அவை வகுத்துரைக்கப்படவில்லை என்பதனால் அவை இல்லை என ஆகிவிடுமா? அவை ஆளுக்கொரு வகையில் வெளிப்படுகின்றன, புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதனால் எல்லாமே அன்புதான் என்று ஆகிவிடுமா? அவை எந்த அளவுக்கு அந்தரங்கமானவையோ அந்த அளவுக்கு மானுடப் பொதுவானவையாகவும் உள்ளன அல்லவா?



*


இலக்கிய மதிப்பீடுகளை எப்படி அடைவது? ஒன்று வாசிப்பது, இன்னொன்று மதிப்பீடுகளை அறிந்துகொண்டு அவற்றை பரிசீலிப்பது. இரண்டுமே சேர்ந்து நிகழும்போது இலக்கியமதிப்பீடு எளிதில் உருவாகிவிடும். புதுமைப்பித்தனை வாசியுங்கள். அவரைப்பற்றி ஆதரித்து க.நா.சுவும், சுந்தர ராமசாமியும், நானும் எதிர் விமரிசனம் செய்து கைலாசபதியும், தி.க.சிவசங்கரனும், அ.மார்க்ஸும் எழுதியிருப்பதை வாசியுங்கள். உங்கள் கருத்தை அந்த விமர்சனகளத்தில் மானசீகமாக வையுங்கள். உங்கள் மதிப்பீடுகள் உருவாகிவிடும்


இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநிறுத்துபவை செவ்விலக்கியமும் பேரிலக்கியமும்தான். ஒரு மொழியில். ஒரு பண்பாட்டுச்சூழலில் அதற்குரிய செவ்விலக்கியமும் பேரிலக்கியமும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைபவை செவ்விலக்கியங்கள். அம்மொழியின் உச்சப்படைப்புகளாக அறியப்படுபவை பேரிலக்கியங்கள். பொதுவாக கிளாஸிக் என்கிறோம்


அவை மேலே சொன்ன கூட்டுவாசிப்பு, கூட்டுவிவாதம் மூலம் உருவாகி வந்த மதிப்பீடுகளின் விளைவாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன.. ஐம்பெருங்காப்பியங்கள் என்பவை அன்றிருந்த பலநூறு காப்பியங்களில் இருந்து அறிஞர்களின் கூட்டுவிவாதம் மூலம் காலப்போக்கில் முன்னிறுத்தப்பட்டவை. வள்ளுவன்போல் கம்பனைப்போல் இளங்கோவைப்போல் என்று ஒருவன் சொல்கிறானே அதுதான் இலக்கிய மதிப்பீடு. பேரிலக்கியங்கள்  தங்கள் இருப்பாலேயே இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநாட்டுகின்றன. அவற்றை வாசிப்பதே நம் உள்ளத்தில் அளவுகோல்களை உருவாக்கிவிடும்


நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றின் பேரிலக்கியங்கள் உலகமொழிகள் அனைத்திலும் உள்ளவை, உலகளாவியவை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் என பேரிலக்கியவாதிகளின் ஒரு நீண்ட வரிசை உள்ளது. அவர்களை வாசிப்பவர்கள் தங்கள் ரசனையாலேயே இலக்கிய அளவீடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.



*


கடைசியாக, வந்து குவியும் இலக்கிய நூல்களில் இருந்து தேர்ந்து வாசிப்பதெப்படி என்னும் வினா. யோசித்துப்பாருங்கள், இது எந்தப்பொருளுக்குத்தான் இன்று இல்லை? எல்லா பொருளையும் நாம் இப்படி பல்லாயிரத்தில் ஒன்று என்றுதானே தெரிவு செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? பிற நுகர்வோர் கருத்தைக் கேட்கிறோம். பொதுவான மதிப்பீடுகளை அறிந்துகொள்கிறொம். ‘சாம்பிள்’ பார்க்கிறோம். அப்படியும் கொஞ்சம் ஏமாந்துபோகிறோம்


அதேதான் இலக்கியத்திற்கும் வழி. முதலில் உங்கள் ரசனைக்குரிய நூல்கள் எவை என நீங்களே ஓரளவு புரிந்துகொள்ளுங்கள். சூழலில் நம்பகமான கருத்துக்களைச் சொல்லும் விமர்சகர்களை கவனியுங்கள். ஒரு புனைவைக்குறித்து உருவாகி வரும் மதிப்பீடுகளை கவனியுங்கள். அதன்பின் வாசித்துப் பாருங்கள். எந்த நூலுக்கும் அதன் ஐந்தில் ஒருபங்கு சலுகை அளிக்கலாம். அதற்குள் அது உங்களைக் கவரும் அம்சங்கள் எதையேனும் காட்டியிருக்கும். இல்லை என்றால் அது உங்கள் நூல் அல்ல. அல்லது நீங்கள் அந்நூலுக்குத் தயாராகவில்லை.


அறிவுத்தேடலிலும் சுவைதேடலிலும் அந்தத் தேடல் என்பது மிக முக்கியமானது. அதுவே உண்மையில் சுவாரசியமானது. அதில் கண்டிப்பாக ஏமாற்றங்கள் உண்டு. அவையும் அறிதலே. குறைந்தபட்சம் அவை நமக்கு ஏன் பிடிக்கவில்லை என்றாவது யோசிக்கலாமே


ஜெ



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2016 11:35

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

b1


 


உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு


வணக்கம். விஷ்ணுபுரம் விருது குறித்து அறிந்தேன்.


கல்யாண்ஜியோ, வண்ணதாசனோ, அவரின் இலக்கியம் மிக மென்மையானது. வெற்றிலையை மெத்தென்ற தொடையில் வைத்து நீவி நீவி அடியையும் நுனியையும் வலிக்காமல் கிள்ளி, களிப்பாக்கை அதோடு சேர்த்து, சுண்ணாம்பை சரியான அளவில் கட்டைவிரல் நகத்தால் நோண்டி எடுத்து வெற்றிலையில் தடவி புகையிலையை அதன் ஓரமாக வைத்து, மடித்து, மடித்து குறட்டுக்குள் அடைத்து கொள்ளும் இலாவகம். காரியமே கண்ணாக இயங்கும் புலன்களின் ஒருங்கிணைப்பு. கடைவாயில் களிப்பாக்கை சத்தமின்றி கடித்து சாறெடுத்து வெற்றிலை கூட்டணிக்கு வலு சேர்க்கும் ஒருங்கமைவு. இவை போல அத்தனை நேர்த்தியாக அழகியலை யதார்த்தத்தில் பின்னி பின்னி உலகம் முழுவதையும் அன்பின் பெருக்கத்தில் அணுகும் அவரின் கதை(மனப்)போக்கு அபாரமானது. அவருக்கு விருதளிப்பது மிக பொருத்தம்.


விருது என்றால் ஒருநாள் கூடி கலைந்து, நோக்கம் மறந்து, சுயதம்பட்டங்களுக்குள் வீழ்ந்து போவதல்ல. ஏன் விருது, எதற்காக விருது, என்றும் அவரின் இலக்கிய பணிகள் குறித்து விவாதித்தும், ஆவணப்படத்திலும் நேரிலும் அவரை கொண்டாடி, கொண்டாடி அளிக்கும் விருது விஷ்ணுபுரம் விருது.


இயல் விருது, விஷ்ணுபுரம் விருது, இவைகளெல்லாம் சாகித்ய அகாடமி விருதை போல முக்கியத்துவம் வாய்ந்தவை.


தங்களுக்கும் விருது பெற்ற எழுத்தாள கவிக்கும் வாழ்த்துகள்.


அன்புடன்


கலைச்செல்வி.


***


அன்புள்ள ஜெ


வண்ணதாசனுக்கு விருது அளிக்கும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அவரை நான் எழுத்தாளர்களுக்குள் ஒரு பாடகன் என்றுதான் நினைக்கிறேன். அவருடைய கதைகள் எல்லாம் எனக்குப் பாடல்களாகவே தெரிகின்றன. பாடல்களுக்கு இருக்கும் மென்மையும் உருக்கமும் நஸ்டால்ஜியாவும் அவருடைய கதைகளிலும் இருக்கின்றன.


அவர் சொல்லும் உலகம் கடந்துபோன ஒன்று என்று சிலர் சொல்வார்கள். அப்படித்தான் எல்லாம் கடந்து போகிறது. அதையெல்லாம் மொழியிலே அழியாமல் வைப்பதற்காகத்தானே இலக்கியத்தை எழுதுவது


சபரிகிரிநாதன்


***


அன்புள்ள ஜெயமோகன்


வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மனம் நிறைய மகிழ்ச்சியை அளித்தது. தாமிரவருணியின் குளிரும் பொதிகைத்தென்றலின் மணமும் கொண்ட எழுத்து அவருடையது. நொய்மையான மனம் கொண்டவர்கள் அவருடைய கதாபாத்திரங்கள். ஆகவே அவர்கள் நுட்பமான விஷயங்களை அறியமுடிகிறது. அவரும் அப்படித்தான். எங்கும் எவரிடமும் போய் அவரெல்லாம் நிற்க முடியாது. விருதும் பட்டமும் அவரைத்தான் தேடிவந்தாகவேண்டும். நீங்கள் செய்திருப்பது மிகச்சிறந்த எழுத்தாளருக்கு மிகச்சிறந்த கௌரவம் வாழ்த்துக்கள்


சுப்ரமணியம்


***


அன்புள்ள ஜெ


வண்ணதாசன் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமான எழுத்தாளர். அவருடைய சின்னுமுதல்சின்னு வரை நான் பலமுறை வாசித்த நாவல். மிக ஆரம்பத்தில் எதற்கு இத்தனை செய்திகளைச் சொல்கிறார் என்று தோன்றியது. கடைசியில் மெதுவாக அவர் சொல்வது அந்தச் சின்னச்சின்ன விஷயங்களைத்தான் என்று புரிந்தது. அதுதான் கதை என்று தெரிந்ததுமே வாழ்க்கையையும் அப்படிப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்


மகேஷ்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2016 11:31

காந்தி -கடிதங்கள்

nan


வணக்கம்.


நல்லாருக்கீங்களா?  சிங்கப்பூர் படைப்புகளின் விமர்சனங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன்.  முன்பு சென்னையில் இருந்தபோது பனுவலுக்கு நீங்கள் வந்தபோது, என் தேவையில்லாத சிந்தையால் உங்கள் பேச்சைக் கேட்பதைத் தவறவிட்டுவிட்டேன்.  இப்போதும் வாய்ப்பின்மையால் தவறவிட்டுவிட்டேன்.  ஸ்ருதி டி.வி மற்றும் youtube-ன் புண்ணியத்தில் காந்தி தோற்கும் இடங்கள் உரையைக் கேட்டேன்.


உங்களின் எழுத்தும் பேச்சும் அடர்த்தியானதாகவே இருக்கின்றது.  அதை கிரகித்துக் கொள்ள எனக்கு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் எடுத்துக் கொள்கிறது.  கேட்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், வேறு ஏதோ சம்பந்தமில்லா ஒரு வேலையில் இருக்கும் போது, உங்கள் உரையின் வரிகளில் ஒன்று ஞாபக அடுக்கிலிருந்து மேலெழுந்து வரும்.  அப்போது அந்த வரியின் அர்த்தம் முழுமையாகப் புரியும்.  ஒன்று மட்டும் நிச்சயம், அவை என்னில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியதில்லை அல்லது ஏன் அவர் சொல்வதற்கு வேறானதாய் இருக்கக் கூடாது? என்றாவது தோன்றியிருக்கிறது.

இன்று நான் பார்த்த ‘காந்தி தோற்கும் இடங்கள்’ உரையில், ‘இவர்கள் – அவர்கள்’, ‘நம்மவர் – அயலவர்’ என்று நீங்கள் சொன்னது மட்டும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது.  என் அகங்காரத்தை நோக்கி, மென்னகை புரியும் கிழவனை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  சில நேரங்களில் கிழவன், ஜீன்ஸ் அணிந்து மீசையில்லாத ஜெயமோகன் போல உருவெளித்தோற்றமாகவும் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறேன்.  காரணம் உண்டு.  கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன்.  என் சிந்தனையின் அத்தனை பக்கங்களிலும் அது தன் நல்ல விழுமியங்களால் நிறைந்துவிட்டிருக்கிறது.  எல்லா மருந்திலும் பக்கவிளைவுகள் உண்டல்லவே, காந்தியைப் பற்றிய என் சித்திரம் பெரும் எதிர்மறையாகக் கட்டமைக்கப்படாவிட்டாலும், ‘அவரால பிரையோஜனமில்ல’ என்கிற அளவில் இருந்தது.  அது உடைபட்டது, உங்களின் கட்டுரைகளில்.


உங்களின் கட்டுரை ஒன்றில், அந்த பொக்கைவாய்ச் சிரிப்பைச் சொல்லியிருப்பீர்கள்.  அதுதான் முதன்முதலில், கிழவனைப் பற்றிக் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வைத்தது.  ஏன் என்றெல்லாம் தெரியவில்லை.  சத்திய சோதனையை வாசிக்காமல் தள்ளிப் போட்டு வருகிறேன்.  சட்டையைக் கழற்ற அஞ்சும், உள்ளிருக்கும் பாம்பாக இருக்கலாம்.  இன்றையா காந்தியா சத்திய சோதனையா எது முதலில் என்று யோசித்ததில், சத்திய சோதனையை முதலில் வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.


இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்.  நீங்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர்.  முன்பொருமுறை ஆர்வக்கோளாறில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.  அதில் இதைச் சொல்லியிருந்தேன்.  எழுத்தில் கண்டிப்பான ஆசிரியராகவும், பேச்சில் கனிவான ஆசிரியராகவும் இருக்கிறீர்கள் என்று.  இப்போது இரண்டிலும் கனிவானவராக எனக்குத் தோற்றம் தருகிறீர்கள்.


என்னைப் போல எவ்வளவு பேரைப் பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், அதனால் மீண்டும் ஒரு முதிராக் கடிதம்.  ஏதேனும் தவறாக இருப்பின் மன்னிப்பு கோருகிறேன்.


நன்றி,

ஜே. இன்பென்ட் அலோசியஸ்


 


அன்புள்ள இன்ஃபெண்ட்,


 


காந்தியைப்பற்றிப் பேசுவதென்பது ஒருவகையில் நம் எல்லைகளைக் கண்டடைவதுதான். அன்றைய என் பேச்சே கூட எவ்வகையில் நாம் காந்தியிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் சொன்னது. தனிப்பட்ட முறையில் என் கோபத்தை, மூர்க்கத்தை வெல்வதேகூட எனக்குப் பெரும் சவால். அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்


 


ஜெ


 


ஜெ அவர்களுக்கு,


 


என் கல்லூரி நாட்களில் காந்தியின் சுயசரிதம் படித்து அதனால் அவர் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டவன்  நான்.


 


காந்தி உலகுக்கு எடுத்துக் காட்டிய அகிம்ஸை முறை பற்றி எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.


 


ஒரு அகிம்சாவாதி எப்படி இந்த உலகிற்குத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கேள்வி. இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.


 


1) தன்னை அகிம்சாவாதி என்று பகிரங்கமாகப் பிரகணப்படுத்திக் கொள்ளுதல். மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இதற்குச் சிறந்த உதாரணம். தங்கள் அகிம்சை முறையினால் மக்களிடம் கிடைக்கும் தார்மீக ஆதரவே அவர்களுக்குப் பலம்.


 


2) இன்னொரு வழிமுறை, அகிம்சாவாதியாக வெளிப்படையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாதது. இந்த நபருக்கு உள்ளுக்குள்  எதிராளிக்குத் தீங்கு செய்யும் நோக்கம் சிறிதும் இருக்காது. ஆனால் வெளியே  நீ என்னிடம் வைத்துக்  கொண்டால் உன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்ற ரீதியில் பயத்தை உண்டாக்குவார். எதிராளியின் அச்சத்தைப் பயன்படுத்தி அவனை பலவீனப்படுத்துவார்.


 


இந்த இரண்டாம் வழிமுறையே நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமானது என்பது எனது அபிப்பிராயம்.


 


இதற்கு உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்  ரீகனைச்   சொல்லலாம். அவர் சோவியத்தை அணு  ஆயுதத் தாக்குதல் செய்து கூட கம்யூனிசத்தை அழிப்பேன் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து தான் ஜனாதிபதி ஆனார்.


 


ஜனாதிபதி ஆனப்  பிறகு அமெரிக்காவின் ஆயத பலத்தைப் பன் மடங்கு பெருக்கி சோவியத்தை கிலி கொள்ளச் செய்தார். இதன் மூலம் சோவியத்துக்குப் பெரிய பொருளாதார நெருக்கடியை உண்டாக்கினார். அதன் பிறகு சோவியத்திடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பிலும் அணு ஆயுதங்கள் பெரிதளவு குறைக்க வழி செய்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஒரு முறை கூட நேரடியாக அமெரிக்க ராணுவத்தை சோவியத்தைத் தாக்கப் பயன்படுத்தவில்லை.  ஆஃப்கானிஸ்தானில் கூட மறைமுகமாகத்  தான் சோவியத்துக்கு எதிராக தாலிபனுக்கு ஆதரவு அளித்தார்.


 


எனக்கு ரொனால்ட் ரேகனும் அகிம்சாவாதியாகத் தான் தெரிகிறார். சாணக்கியத்தன்மை கலந்த அகிம்சாவாதியாக. காந்தியின் அகிம்சைமுறையை விட இது நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதா?


 


இது பற்றி தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


 


நன்றி


சத்திஷ்


 


 


அன்புள்ள சதீஷ்,


 


ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரி. பரமஹம்சர் சொன்னதுபோல கொத்தவேண்டாம், சீறலாமே என்னும் கதைபோலத்தான்


 


ஆனால் உண்மையில் வன்முறையை தவிர்த்தல் என்பது எதிர்வன்முறை அல்லது சமானமான ஆற்றல் மூலம் உருவாகும் செயலின்மை அல்ல\


 


உள்ளப்பூர்வமான அகிம்சை என்பது வன்முறையை நம்பாமலிருத்தலே. அது மிகமிகக் கடினம். நான் அதை நம்புகிறேன். என்னால் இயல்வதில்லை


 


ஜெ


 


ப்ரிய ஜெ


 


வணக்கம்.


 


இந்த வருட  விடுமுறையின் போது தங்களை சந்திக்க நினைத்தேன்.ஆனால் தங்கள் சிங்கப்பூர் பயணத்தால் அது நிறைவேறவில்லை.


 


காடு வாசித்து முடித்தேன். அது பற்றி தனியே தங்களுக்கு எழுத வேண்டும்.


 


என் நட்பு  குழுமத்தில் முன்னரே குறுந்தொகை, கபிலர் படித்து வந்தேன்.


 


காடு-அய்யர் வழியே அறிந்த கபிலன் இன்னும் ப்ரியமானவன் ஆனான். அதற்கு என் நன்றிகள்.


 


ஈரோடு புத்தக விழாவில் குறுந்தொகை -திரு ராகவ ஐயங்கார் உரை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன்.


 


 


Convey My kind regards to Family.


 


Regards,


Chandru


Doha


 


அன்புள்ள சந்துரு


 


நீண்டநாட்களாயிற்று கடிதம் கண்டு. இப்போது பதில்


 


இன்றைய காந்தி இப்போதும் அச்சில் உள்ளது என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்து நீண்டநாட்களாகின்றன.


 


குறுந்தொகை நூல் எதுவானாலும் உரையைக்கொண்டு கவிதையை மறைக்காததாக இருக்கவேண்டும்


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4

[ 7 ]


அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான உணவு சமைக்க அடுமனையில் அனலெழுப்பிக்கொண்டிருந்தனர். தொழுவத்தில் பால்கறந்தனர் முதிய பெண்கள். சிலர் கலங்களில் மத்தோட்டினர். அருகே வெண்ணைக்காக அமர்ந்திருந்தனர் இளமைந்தர். முற்றத்தில் ஆடினர் சிறுவர். மலர்கொய்து வந்தனர் சிறுமியர். இளையோர் சிலர் விறகு பிளந்தனர். சிலர் ஓலைகளில் நூல்களைப் பொறித்தனர்.


தூயது சௌகந்திகத்தின் காலை. தூய்மையில் விளைவதே மெய்மை என்று அத்ரி முனிவர் அவர்களுக்கு கற்பித்தார். விலக்குவதன் வழியாக விளைவதே  தூய்மை. மூவேளை நீராடி உடலழுக்கு களைதல். அனலோம்பி மூச்சை நெறிப்படுத்தல். வேதமோதி அகத்தை ஒளிகொள்ளச்செய்தல். சௌகந்திகம் சூழ்ந்திருந்த பெருங்காட்டை முற்றாக விலக்கி வேலியிட்டு தன்னைக் காத்தது. வேதச்சொல் கொண்டு தன்னைச் செதுக்கி கூர்மையாக்குக என்றார் அத்ரி. வாழைப்பூ என தன்னை உரித்து உரித்து தேன்மலர் கொள்க என்றார்.


இனிய புலரியை அதிரச்செய்த கங்காள ஒலியைக் கேட்டு அவர்கள் திகைப்புகொண்டனர்.  முதலில் அது உக்கில்பறவையின் உப்பலோசை என்று தோன்றியது. சீரான தாளத்தால் அது மரங்கொத்தியோ என ஐயுற்றனர் மாணவர். தொலைதேரும் கருங்குரங்கின் எச்சரிக்கையோசை என்றனர் சில மாணவர். இளையோன் ஒருவன் “அது கங்காளத்தின் ஓசை” என்றான்.


அவர்கள் அதை முன்பு கேட்டிருக்கவில்லை. அவனைச் சூழ்ந்துகொண்டு “அது என்ன?” என்றனர். “மலைவேடர் கையிலிருக்கும் சிறுதோல்கருவி அது. விரல்போன்ற சிறுகழியால் அதை இழும் இழுமென மீட்டி ஒலியெழுப்புவர். கங்காளம் என்பது அதன் பெயர். அவர்களின் கையிலமைந்த நாவு அது என்பார்கள் என் குலத்தவர். கதைகளையே அவர்களால் அவ்வொலியால் சொல்லிக்கொள்ள முடியும்” என்று அவன் சொன்னான். “அது விம்மும். ஏங்கும். அறுவுறுத்தும். அறைகூவும்.”


“எங்கள் மலையடிவாரத்து ஊரில் கங்காளத்தின் திரளொலி எழுந்தால் அனைவரும் அஞ்சி ஓடிச்சென்று ஒளிந்துகொள்வர். கரிய திண்ணுடலுடன் மலையிறங்கிவரும் வேட்டுவர்கள் ஊர்புகுந்து சாவடியில் நிலைகொண்டால் ஊர்ப்பெரியோர் கூடி அரிசியும் பொன்பணமும் பிறபொருட்களுமாகச் சென்று பணிந்து மலைக்கப்பம் கொடுத்து வணங்குவார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு ஊரை வாழ்த்தி வெளியேறுகையில் ஊர்முகப்பில் நின்றிருக்கும் மரத்தின் பட்டையில் தங்கள் குலக்குறியை பொறித்துச்செல்வார்கள்.”


“தனிவேட்டுவர் மலையிறங்கும் ஒலி ஆறுதலளிப்பது. அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச்சென்று எங்கள் கன்றுகளை காட்டுவோம். அவற்றின் வாய்கட்டி வைத்திருக்கும் மலைத்தெய்வங்களை விடுவித்து மீண்டும் புல்கடிக்கச் செய்ய அவர்களால் முடியும். அணங்குகொண்டு அமர்ந்திருக்கும் கன்னியரை புன்னகை மீளச்செய்யவும் நோய் கொண்டு நொய்ந்த குழவியரை பால்குடிக்க உதடுகுவியச் செய்யவும் அவர்களால் முடியும்.”


அங்கு அதுவரை கங்காளர் எவரும் வந்ததில்லை. “இது வைதிகர் குருகுலம். இங்கு எவருக்கும் கொடையளிப்பதில்லை. இத்திசையில் எங்கும் வேட்டுவர் இல்லங்களும் இல்லை” என்றார் கனகர்.  ”வேதம்நாடி வரும் படிவரும் வைதிகருமன்றி பிறர் இதனுள் புக ஒப்புதலுமில்லை.” பிரபவர்  ”அவன் எதன்பொருட்டு வருகின்றான் என நாம் எப்படி அறிவோம்?” என்றார். தசமர் “அயலது எதுவும் தீங்கே” என்றார்.


“அவனுடன் நாய் ஒன்றும் வருகிறது” என்றான் ஓர் இளையோன்.  “எப்படி நீ அறிவாய்?” என்றனர் அவனைச் சூழ்ந்து நின்ற பெண்கள். “புள்ளொலி தேரும் கலையறிந்தவன் நான்” என்று அவன் சொன்னான். “அவனுடன் இன்னொருவரும் வருகிறார். அது பெண் என்கின்றது புள்” என்றான். “காட்டை ஒலியால் அறிந்துகொண்டிருக்கிறாய். நோயும் கொலையும் வாழும் இக்காடு அவ்வொலியால் உன்னையும் வந்தடைகிறது. காடுவாழும் உள்ளத்தில் வேதம் நிற்பதில்லை” என்றார் அவன் ஆசிரியரான கனகர்.


அவர்கள் குடில்தொகையின் வாயிலென அமைந்த மூங்கில்தூண்களின் அருகே காத்து நின்றனர். இளையோர் இருவர் முன்சென்று அவனை எதிர்கொள்ள விழைந்தனர். மூத்தோர் அவர்களை தடுத்தனர். “கொல்வேல் வேட்டுவன் அவன் என்றால் எதிரிகளென உங்களை நினைக்கலாம். அந்தணரையும் அறவோரையும் அறியும் திறனற்றவனாகவே அவன் இருப்பான்” என்றார் சூத்ரகர். அச்சமும் ஆவலும் கொண்டு ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி அங்கே காத்து நின்றிருந்தனர்.


கங்காளத்தின் ஓசை வலுத்து வந்தணைந்தது. மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் எழுந்து கலைந்து பறந்தன. கொல்லையில் நின்றிருந்த பசுக்கள் குரலெழுப்பலாயின. அவன் மரக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றியதும் இளையோர் அஞ்சிக் கூச்சலிட்டபடி பின்னடைந்தனர். கரிய நெடிய உடலில் ஆடையின்றி வெண்சாம்பல்பொடி பூசி அவன் வந்தான். அவன் இடைக்குக் கீழே ஆண்குறி சிறுதுளை வாய்கொண்ட செந்நிறத் தலைபுடைத்து விரைத்து நின்றது. அதில் வேர்நரம்புப் பின்னல்கள் எழுந்திருந்தன. சினம் கொண்ட சுட்டு விரல் போல. சீறிச் சொடுக்கிய நாகம் போல. யானைகுட்டியின்  துதிமுனை போல. நிலம் கீறி எழுந்த வாழைக்கன்றின் குருத்துபோல.


சடைத்திரிகள் தோள்நிறைத்து தொங்கின. வேர்புடைத்த அடிமரம்போன்ற கால்கள் மண்ணில் தொட்டுத் தாவுவதுபோல் நடந்தன. வலத்தோளில் தோல்வாரில் மாட்டப்பட்ட முப்புரிவேல் தலைக்குமேல் எழுந்து  நின்றிருந்தது. இடக்கையில் மண்டைக்கப்பரை வெண்பல் சிரிப்புடன் இருக்க இடைதொட்டுத் தொங்கிய கங்காளத்தை வலக்கையின் சிறுகழியால் மீட்டியபடி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் நிலம் முகர்ந்தும், காற்றுநோக்கி மூக்கு நீட்டியும், விழிசிவந்த கரியநாய் வால் விடைக்க தொடர்ந்து வந்தது. அப்பால் வெண்ணிற ஆடையில் உடல் ஒடுக்கி நீண்ட கூந்தல் தோளில் விரிந்திருக்க நிலம்நோக்கி தலைதாழ்த்தி நோயுற்ற முதியவள் சிற்றடி எடுத்துவைத்து வந்தாள்.


பதறி ஓடி உள்ளே வந்து அவன் உள்ளே புகாதபடி மூங்கில்படலை இழுத்துமூடினர் இளையோர். அவன் மூடிய வாயிலருகே செஞ்சடைவழிந்த தலை ஓங்கித்தெரிய வந்து நின்று “பிச்சாண்டி வந்துள்ளேன். நிறையா கப்பரையும் அணையா வயிறும் கொண்டுள்ளேன்” என்றான். கங்காளம் குரலானது போலிருந்தது அவ்வோசை. “இரவலனுக்கு முன் மூடலாகாது நம் வாயில். திறவுங்கள்!” என்றார் முதியவராகிய சாம்பர். “அவன் காட்டாளன். இது வைதிகர் வாழும் வேதநிலை” என்றார் கனகர். “அவன் கொலைவலன் என்றால் என்ன செய்வது?” என்றார் சூத்ரகர். “எவராயினும் இரவலன் என்றபின் வாயில் திறந்தாகவேண்டும் என்பதே முறை” என்றார் சாம்பர். தயங்கிச்சென்ற இளையோன் ஒருவன் வாயில் திறக்க அவன் நீள்காலடி எடுத்துவைத்து உள்ளே புகுந்தான்.


அத்தனை விழிகளும் அவனையே நோக்கி நிலைத்திருந்தன. அத்தனை சித்தங்களிலும் எழுந்த முதல் எண்ணம் ‘எத்தனை  அழுக்கானவன்! எவ்வளவு அழகற்றவன்!’ என்பதே. தோல்வாடையும் ஊன்வாடையும் மண்மணமும் இலைமணமும் கலந்து காட்டுக்கரடிபோல் அவன் மூக்குக்கு தெரிந்தான். கங்காளத்தின் ஓசை குடில்சுவர்களைத் தொட்டு எதிரொலித்து சௌகந்திகக்காட்டுக்குள் பரவியது. நோயுற்றவள் சுகந்தவாகினிக்கு அப்பால் தரையில் குனிந்தமர்ந்தாள். நாய் அவளருகே கால்மடித்து செவிகோட்டி மூக்குநீட்டி கூர்கொண்ட முகத்துடன் அமர்ந்தது.


அவன் உள்ளே நுழைந்தபோது தேவதாருக்காட்டுக்குள் நிறைந்திருந்த நறுமணத்தை ஊடுருவியது மதம்கொண்ட காட்டுவிலங்கின் நாற்றம். தொழுவத்துப் பசுக்கள் கன்றுகளைக் கண்டவைபோல குளம்புகள் கல்தரையில் மிதிபட, கொம்புகளால் தூண்களையும் அழிகளையும் தட்டி நிலையழிந்து, முலைகனத்து குரலெழுப்பின. கூரையேறிய சேவலொன்று தலைசொடுக்கி சிறகடித்துக்  கூவியது. வளர்ப்புக்கிளிகள் ‘அவனேதான்! அவனேதான்!’ என்று கூவிச்சிறகடித்து உட்கூரையில் சிறகுகள் உரச சுற்றிப்பறந்தன.


அவ்வோசைகள் சூழ அவன் நடந்து முதல் இல்லத்தின் முன் சென்றுநின்றான். கங்காளத்தின் தாளத்துடன் இயைய “பசித்துவந்த இரவலன், அன்னையே. உணவிட்டருள்க, இல்லத்தவளே!” என்று கூவினான்.


அவனை சாளர இடுக்குகளினூடாக பெண்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் குரல்கேட்டு பதுங்கியிருக்கும் விலங்கின் உடலென அக்குடில் அதிர்வுகொண்டது. அதன் மூடிய கதவுகளின் இடுக்குகள் விதும்பின. அவன் மும்முறை குரலெழுப்பியதும் கதவு மெல்லத்திறக்க மேலாடைகொண்டு மூடிய தோளை ஒடுக்கி கால்கள் நடுங்க முனிவர்மனைவி முறத்தில் அரிசியுடன் வெளியே வந்தாள். தலைகுனிந்து நிலம்நோக்கி சிற்றடி வைத்து வந்து படிகளில் நின்று முறத்தை நீட்டினாள். அவன் தன் கப்பரையை அவளை நோக்கி நீட்டி புன்னகையுடன் நின்றான்.


அவளுடைய குனிந்த பார்வை திடுக்கிட்டு நிமிர்ந்தது. அவன் விழிகளை சந்தித்ததும் அவள் கைகள் பதற முறம் சரிந்து அரிசி சிந்தலாயிற்று. தன் கப்பரையாலேயே அவ்வரிசியை முறத்துடன் அவன் தாங்கிக்கொண்டான். கப்பரை விளிம்பால் முறத்தை மெல்லச்சரித்து அரிசியை அதனுள் பெய்தபோது அவன் விழிகள் அவள் உடலிலேயே ஊன்றியிருந்தன. விழி தழைத்திருந்தாலும் முழுதுடலாலும் அவனை நோக்கிய அவள் மெய்ப்புகொண்டு அதிர்ந்தாள். சுண்டிச்சிவந்த முகத்தில் கண்கள்  கசிந்து வழிய, சிவந்து கனிந்த இதழ்கள் நீர்மையொளி கொள்ள, உயிர்ப்பின் அலைக்கழிப்பில் கழுத்துக்குழிகள் அழுந்தி எழ, முலைக்குவைகள் எழுந்து கூர்கொண்டு நிற்க எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போலிருந்தாள்.


“நலம் திகழ்க இல்லாளே! உன் குலம் பெருகுக! கன்றுடன் செல்வம் தழைக்க! சொல்கொண்டு பெருகுக உன் கொடிவழி!” என்று சொல்லி கங்காளன் திரும்பியபோது கனவிலென காலெடுத்து வைத்து அவளும் அவனைத் தொடர்ந்துசென்றாள். அவள் இல்லத்திலிருந்து கைநீட்டியபடி வெளியே வந்த இன்னொருத்தி “என்ன செய்கிறாய், வாமாக்‌ஷி? எங்கு செல்கிறாய்?” என்று கூவ அவன் திரும்பி நோக்கி மெல்ல நகைத்தான். வெறிகலந்த விழிகள். பித்தெழுந்த சிரிப்பு. அவள் மேலாடை நழுவ பெருமுலைகள் இறுகி மாந்தளிர்நிற காம்புகள் சுட்டுவிரல்களென எழுந்து நின்றன. விம்மி நெஞ்சோடு கைவைத்து அழுத்தி ஒருகணம் நிலைமறந்தபின் அவளும் உடனிறங்கி அவனுடன் சென்றாள்.


அவன் கங்காளத்தை மீட்டியபடி இல்லங்கள்தோறும் சென்றான். அவன் செல்வதற்குள்ளாகவே ஆடை நெகிழ்ந்துருவிச் சரிய, விழிகளில் காமப்பெருக்கு செம்மைகொள்ள, விம்மும் முலைகளை தோள்குறுக்கி ஒடுக்கியும், கைகொண்டு இறுக்கியும், தொடைசேர்த்து உடல் ஒல்கியும் முனித்துணைவியர் அன்னத்துடன் திண்ணைகளுக்கு வந்தனர். உறவுத்திளைப்பிலென குறுவியர்வை கொண்ட நெற்றிகள். பருக்கள் சிவந்து துடித்த கன்னங்கள். கனிவு கொண்டு சிவந்த இதழ்கள். மூச்சு அனல்கொள்ள விரிந்தமைந்த மூக்குத்துளைகள். சுருங்கி அதிர்ந்த இமைகளுக்குள் பால்மாறா பைதல்நோக்குபோல் ஒளியிழந்து தன்னுள் மயங்கிய  விழிகள்.


குடிலுக்குள் இருந்து அஸ்வக முனிவர் ஓடிவந்து “என்ன செய்கிறாய், மாயாவியே? நீ யார்?” என்று கூவினார். கிருபர் “தடுத்து நிறுத்துங்கள் அவனை! நம் குலக்கொடிகளை மயக்கி கொண்டுசெல்கிறான் அவன்” என்றார். அவன் கங்காளத்தின் தாளம் மாறுபட்டது. குடில்களில் இருந்து குழந்தைகள் கூவிச்சிரித்தும் துள்ளியார்த்தும் அவனுக்குப்பின் திரண்டுசென்றன. அவனை நோக்கி மலர்களைப் பறித்து வீசின. அவனுடன் செல்ல முண்டியடித்தன. கங்காளம் அழைக்க வேதம் பயின்ற இளையோர் தங்கள் கையிலேந்திய பணிக்கருவிகளை அங்கேயே உதறி அவனைத் தொடர்ந்தனர். சுவடிகளை உதறி கல்விநிலைகளில் இருந்து எழுந்து அவன் பின்னால் ஏகினர்.


வேள்விச்சாலைக்குள் பன்னிரு முனிவர் சூழ அமர்ந்து வேதமோதி அவியிட்டுக்கொண்டிருந்த அத்ரியின் முன் சென்று நின்ற கருணர் மூச்சிரைத்தபடி “முனிமுதல்வரே, எண்ணவும் இயலாதது நிகழ்கிறது. எங்கிருந்தோ வந்த கிராதன் இதோ நம் இல்லப்பெண்களையும் மாணாக்கர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறான். முடிவற்ற மாயம் கொண்டிருக்கிறான்… எழுந்து வருக! நம் குருநிலையை காப்பாற்றுக!” என்று கூவினார். “இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட தர்ப்பை ஒன்றைக் கையிலெடுத்த அத்ரி அது பொசுங்கி எரிந்து தழலாவதைக் கண்டார்.


சினத்தால்  உடல் அதிர எழுந்து அவர் வெளியே சென்று நோக்கியபோது கரிய திண்ணுடலில் தசைத்திரள் அதிர கங்காளம் மீட்டியபடி குடில்நிரை நடுவே கடந்துசென்ற காட்டாளனைக் கண்டார். “யாரவன்?” என்று கூவினார். “முன்பு இவன் இங்கு வந்துள்ளான். இவன் காலடிகளை நான் முன்பும் எங்கோ கண்டுள்ளேன். இவ்வோசையையும் நான் அறிவேன்.”  கர்த்தமர் “அடர்காட்டின் இருளில் இருந்து வந்தான். வெண்சாம்பல் அணிந்த காலன். அவன் நாயும் துணைவந்த நோயும் அங்கே அமர்ந்துள்ளன” என்றார்.


கையிலிருந்த வேள்விக் கரண்டியைத் தூக்கியபடி “நில்! நில்!” என்று கூவினார் அத்ரி. அவன் திரும்பி அரைக்கணம் நோக்கியபோது அவ்வெறிச்சிரிப்பின் துளியைக் கண்டு திகைத்து பின்னடைந்தார். சௌகந்திகக் காடே அவன் சூர்மணத்தை சூடிக்கொண்டிருந்தது. ஈரமண் மணம், பழைய வியர்வையின் மணம், புதிய விந்துவின் மணம். “யார் இவன்? யார் இவன்?” என்று கூவியபடி அவனைத் தொடர்ந்தோடினார். “நிறுத்துங்கள் அவனை… வாயிலை  மூடுங்கள்!” என்றபடி கீழே கிடந்த கழியொன்றை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார்.


கங்காளம் கதிமாற கட்டுப்பசுக்கள் வடங்களை அவிழ்த்துக்கொண்டு குளம்புகள் மண்மிதித்து ஒலிக்க, வால்சுழல, நாக்குநீட்டி கரிய மூக்கைத் துழாவியபடி கூவி அவனைத் தொடரலாயின. வேள்விச்சாலைக்குள் நால்வேதங்களாக உருவகித்து நிறுத்தப்பட்டிருந்த வெண்ணிறமும் செந்நிறமும் சாம்பல்நிறமும் கருநிறமும் கொண்ட பசுக்கள் நான்கும் கட்டறுத்துக் கூவியபடி நடையில் உலைந்த பெருமுலைகளின் நான்கு காம்புகளிலும் பால்துளிகள் ஊறிநின்று துளித்தாடி புழுதியில் சொட்ட, திரள்வயிறு அதிர, வால்சுழல அவனைத் தொடர்ந்தோடின.


அவனை முந்திச்சென்று மறித்த அத்ரி “நில் இழிமகனே, இக்கணமே நில்! என் வேதப்பேராற்றலால் உன்னையும் உன் குடியையும் பொசுக்கியழிப்பேன்…” என்று கூச்சலிட்டார். அவர் கையில் இருந்து நடுங்கியது விறகுக்கழி. “என் குடிப்பெண்களை இழுத்துச்செல்லும் நீ யார்? எதன்பொருட்டு இங்கு வந்தாய்?” அவன் புன்னகையுடன் “நான் இரவலன். பசிக்கு அன்னமும் என் குடிக்கு பொருளும் இரந்துபெற வந்தேன். எனக்களிக்கப்படும் அனைத்தையும் பெறும் உரிமை கொண்டவன். இவர்கள் எவரையும் நான் அழைக்கவில்லை. எதையும் கவரவுமில்லை. எனக்களிக்கப்பட்டவை இவை. என்னைத் தொடர்பவர் இவர்கள்” என்றான்.


“இது மாயை. இது கீழ்மையால் வல்லமை கொண்ட காட்டாளனின் நுண்சொல் வித்தை… இதை என் தூயவேதத்தால் வெல்வேன்” என்று அத்ரி தன் கையைத் தூக்கினார். அதர்வவேத மந்திரத்தைச் சொல்லி அவன் மேல் தீச்சொல்லிட்டார். அவன் புன்னகையுடன் அவரை நோக்கி “வேதங்கள் இதோ என் பின் வந்து நின்றிருக்கின்றன, முனிவரே” என நான்கு பசுக்களை சுட்டிக்காட்டினான். அவர் திகைத்து மெல்ல கை தழைத்தார்.


அவன் புன்னகையுடன் “தூயவை மட்டும் நிறைந்த உங்கள் வேதக்காட்டில் இப்போது எஞ்சியிருப்பது என்ன, முனிவரே?” என்றான். அவர் தழைந்து கண்ணீர் நனைந்த குரலில் “இது மாயம்… இது வெறும் மாயம்” என்றார். “சரி, மாயத்தை அவிழ்க்கிறேன்” என்று தன் கையறியாது மீட்டிக்கொண்டிருந்த கங்காள ஒலியை நிறுத்தினான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் நிலைமீண்டு அஞ்சியும் நாணியும் கூவியபடி ஆடைகளை அள்ளி தங்கள் உடல் மறைத்தனர். ஆடையற்றவர் தோள்குறுக்கி நிலத்தில் கூடி அமர்ந்தனர். இளையோர் விழிப்பு கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி வியக்க பசுக்கள் கன்றுகளை நோக்கி குரலெழுப்பின.


“இப்பெண்களில் காட்டாளனைப் புணராத ஒருவரேனும் உளரேல் அழைத்துச்செல்க!” என்றான் அவன். அத்ரி தனக்குப் பின்னால் வந்து கூடிய முனிவர்களை விழிநோக்கி தயங்கி நின்றார். “இவ்விளையோரில் காட்டாளனாக ஒருகணமேனும் ஆகாத ஒருவன் உளன் என்றால் கூட்டிக்கொள்க!” என்று அவன் புன்னகையுடன் சொன்னான். அத்ரியின் உதடுகள் சொற்களின்றி அசைந்தன. “காட்டை நினைத்து அசைபோடாத ஒரு பசுவையேனும் அழைத்துச்சென்றால் நீங்கள் அமுதுகொள்ளலாம்” என்று அவன் மேலும் சொன்னான்.


அத்ரி சினத்துடன் “நீ வேதமுனிவரை இழிவுசெய்கிறாய், கீழ்மகனே” என்று கூவினார். “காட்டாளத்தியாகி உங்கள் மனைவியர் அளித்த கொடையை காட்டாளனாக மாறி நுகராதவர்கள் உங்களில் எவர்? முனிவரே, உங்கள் கையில் இருக்கும் அவ்விறகுக் கட்டையை காட்டாளன் அல்லவா ஏந்தியிருக்கிறான்!” என்று அவன் வெண்பல்நிரை காட்டிச் சிரித்தான். அத்ரி தன் கையிலிருந்த கழியை அப்போதுதான் உணர்ந்தார். அதை கீழே வீசிவிட்டு “ஆம், மானுடராக நாங்கள் மாசுள்ளவர்களே. ஆனால் மாசற்றது எங்கள் சொல்லென நின்றிருக்கும் வேதம். அதுவே எங்கள் அரணும் அரசும் தெய்வமும் ஆகும்” என்றார்.


“காட்டாளன் அறியாத வேதம் இந்நான்கில் ஏதேனும் உள்ளதென்றால் அழைத்துச்செல்க!” என்று அவன் பசுக்களை சுட்டிக்காட்டினான். அத்ரி முன்னால் நின்ற அதர்வம் என்னும் கரிய பசுவை தொடையில் தட்டி அழைத்தார். அது சீறி மூக்கு விடைத்து விழியுருட்டி தன் கொம்புகளைச் சாய்த்தது. அவர் அஞ்சி பின்னடைந்து சாம்பல்நிறமான சாமம் என்னும் பசுவின் திமிலைத் தொட்டு “என் அன்னையல்லவா?” என்றார். அது கொம்புகளைச் சரித்து குளம்பெடுத்து முன்னால் வைத்தது. செந்நிறப்பசுவான யஜுர் அவரை நோக்கி விழிசரித்து காதுகளை அடித்துக்கொண்டது. வெண்பசுவான ரிக்கை நோக்கி கைகூப்பி “என் தெய்வமே, என்னுடன் வருக!” என்றார் அத்ரி. அது அவரை அறியவே இல்லை.


கண்ணீருடன் “தோற்றேன். இன்றுவரை வென்றேன் என நின்று தருக்கிய அனைத்தையும் முற்றிழந்தேன். இனி நான் உயிர்வாழ்வதற்குப் பொருளில்லை” என்று கூவியபடி அவர் தன் இடையாடையை அவிழ்த்து வடக்குநோக்கித் திரும்ப அவன் அவர் தோள்களில் கையை வைத்தான். “வெங்குருதியையும் விழிநீரையும் அறியாமல் எவரும் வேதத்தை அறிவதில்லை, முனிவரே” என்றான். “நீ யார்? நீ யார்?” என்று அவர் உடல் நடுங்க கூவினார். “காட்டுச்சுனையிலிருந்து காட்டை விலக்குவது எப்படி?” என்றான் அவன் மேலும். “நீ காட்டாளன் அல்ல… நீ காட்டாளன் அல்ல” என்று அவர் கூச்சலிட்டார்.


அவன் விலகிச்செல்ல அவர் அவனைப்பற்றி இழுத்து “சொல், நீ யார்? நீ யார்?” என்றார். “இங்கு ஒருவர் மட்டிலுமே என்னை உண்மையுருவில் கண்டவர். உங்கள் அறத்துணைவி. அவரிடம் கேளுங்கள்” என்றபின் அவன் திரும்பிச் சென்று சுகந்தவாகினியை கடந்தான். அவன் கால்பட்டு ஒரு உருளைக்கல் பெயர்ந்து உருண்டது. நாய் எழுந்து வால்குழைத்து முனகியது. அவன் நடந்துசெல்ல அவனைத் தொடர்ந்து நோயும் சென்றது. அவர்கள் கங்காள ஒலியுடன் நடந்து மரக்கூட்டங்களுக்கிடையே மறைந்தனர்.


அத்ரி திரும்பி தன் குடிலுக்குள் ஓடினார்.  அங்கே வெளியே நிகழ்ந்தவை எவற்றையும் அறியாமல் அடுமனையில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த அனசூயையிடம் “சொல், நீ கண்டது என்ன? சொல்!” என்று கூவினார். “என்ன கண்டேன்? எதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் அவள். “சற்றுமுன் நீ கொண்டுசென்று கொடுத்த பிச்சையை ஏற்ற இரவலன் யார்? சொல்!” என்றார் அவர். “நான் கண்டவன் ஒரு இளஞ்சிறுவன். காட்டுக்குலத்தவன். ஆடையற்ற சிற்றுடலில் சாம்பல் பூசியிருந்தான். இடக்கையில் கப்பரையும் வலக்கையில் கழியும் ஏந்தி இடையமைந்த கங்காளத்தை மீட்டிக்கொண்டிருந்தான். மாசற்ற வெண்பல் சிரிப்பு கொண்ட அவனைக் கண்டதும் என் முலைக்கண்களில் பாலூறியது. இக்கணம்வரை அவனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.”


KIRATHAM_EPI_04


அவர் திகைத்து நின்றிருக்க அவள் தொடர்ந்தாள் “அவன் தோள்களில் மானும் மழுவும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. நெற்றியில் அறிவிழி ஒன்று பொட்டெனத் திறந்திருந்தது. செஞ்சடைக்கற்றையில் பிறைநிலவென வெண்பல் ஒன்றைச் சூடியிருந்தான். அவனுக்கு இருபக்கமும் காலைச்சூரியனும் அணையாத சந்திரனும் நின்றிருக்கக் கண்டேன்.”


அம்பு விடுபட்ட வில் என நாண் அதிர நிலையழிந்து துவண்ட அத்ரி மீண்டெழுந்து  “எந்தையே!” என்று கூவியபடி வெளியே ஓடினார். நெஞ்சில் அறைந்தபடி “வந்தவன் அவன். ஆடல்வல்லான் ஆடிச்சென்ற களம் இது. முனிவரே, துணைவரே, நாமறியாத வேதப்பொருளுரைக்க எழுந்தருளியவன் பசுபதி. கபாலன். காரிமுகன், பைரவன், மாவிரதன். அவன் நின்ற மண் இது. அவன் சொல்கேட்ட செவி இது” என்று ஆர்ப்பரித்தார்.


அழுதபடியும் சிரித்தபடியும் ஓடிச்சென்று அவர் அந்த உருளைக்கல்லை எடுத்து அந்த இடத்திலேயே சிவக்குறியாக நிறுவினார். “இது கிராதசிவம்!” என்றார். நால்வேதப்பசுக்களை நான்கு திசையிலும் நிறுத்தி அவற்றின் பால்கறந்து அதில் ஊற்றி முழுக்காட்டினார். “சிவமாகுக! ஓம் சிவமாகுக!” எனக் கூவியபடி கைகூப்பினார்.


வெண்முரசு விவாதங்கள்


நிகழ்காவியம்


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2016 11:30

சின்ன வயசு பாத்தேளா?


மலையாளத்தில் மிமிக்ரி போல தமிழில் டப்மாஷ் ஒரு பெரிய கலையாக வளர்ந்து வந்திருக்கிறது. மலையாளத்தின் நடிகர்களில் பலர் மிமிக்ரியில் இருந்து வந்தவர்கள். ஜெயராம், ஷம்மி திலகன், சலீம்குமார், ஜெயசூரியா, திலீப், லால்… அதேபோல நடிகர்கள் இதிலிருந்தும் வரக்கூடும்.


 


ஆனால் பெரிய சிக்கல் இது சினிமாநடிப்பல்ல என உணர்வது. ‘டைமிங்’ என்பதை மட்டுமே இந்த நடிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். ‘செய்வது’ என்பதை முழுமையாகவே தவிர்த்துவிடவேண்டும். நவீன சினிமா நடிப்பு என்பது ’இருப்பது’ ‘புழங்குவது ‘ஆவது’ தான். ஒன்றை  செய்துகாட்ட ஆரம்பித்துவிட்டாலே இருநூறுமடங்கு பெரிய வெள்ளித்திரை அந்நடிகனின் உள்ளம் அதில் இல்லை என்பதை தெளிவாகக் காட்டிவிடும்.


 


நடிக்காமல் சும்மாநின்றால்கூட இன்றைய சினிமா மன்னிக்கும். செய்வதை தாங்கிக்கொள்ளவே முடியாது. தமிழ் சினிமா இயல்பாக புழங்கக் கற்ற நடிகர்களுக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. வருபவர்கள் எல்லாமே செய்துகாட்டுகிறார்கள். பல படங்களுக்காக நானே எப்படியும் நூறுபேரை நேரில் சந்தித்திருப்பேன். இந்த வேறுபாட்டை அவர்களுக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது.இந்தச் சின்ன எல்லையை இவரைப்போன்றவர்கள் கடந்தார்கள் என்றால் நல்லது.


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2016 07:53

October 21, 2016

சித்துராஜ் பொன்ராஜ், சிங்கப்பூரியம்

sithuraj-ponraj


ஜெ,


 


என் பெயர் வேண்டாம். இங்கே நான் பிழைக்க முடியாது. நான் இங்கே சில்லறைக்கூலிக்கு வேலைசெய்ய வந்தவன். புதுக்கோட்டை மாவட்டம்.


 


திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளைப்பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். நானறிந்து அடுத்த தலைமுறையில் நீங்கள் இத்தனை பாராட்டிய ஓர் எழுத்தாளர் வேறு யாரும் கிடையாது.


 


ஆனால் நீங்கள் அவர் ஃபேஸ்புக்கில் என்ன எழுதினார் என்று பார்த்தீர்களா? நீங்கள் அவருக்குத் தமிழ் முறையாகத் தெரிந்திருக்காது என்று எழுதியிருந்தீர்கள். அவர் ஒரு கடிதமும் உங்களுக்கு எழுதியிருந்தார். அதற்கு நீங்கள் அப்படி நீங்கள் ஏன் ஊகித்தீர்கள் என்றும் எழுதியிருந்தீர்கள்


 


அதாவது உங்களை வாசித்தவராகச் சொல்லும் அவர் உங்களை நேரில் சந்தித்தபோது தமிழிலே பேசவில்லை. நீங்கள் அறிமுகம் செய்துகொண்டபோதுகூட கெத்தாகப்பேசியிருக்கிறார். அவருக்குத் தமிழ் தெரிந்திருக்காதுபோல என நீங்கள் நினைத்துக்கொள்ளும் அளவுக்கு ‘பழகியிருக்கிறார்’


 


அவர் நீங்கள் எழுதியபிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப்பற்றி ஏகப்பட்ட நக்கல்களும் கிண்டல்களுமாக எழுதியிருந்தார்.  பொதுவாக சிங்கப்பூரியன்களின் மனநிலை என்பது ‘நீ பிழைக்கத்தானே வந்தாய். அந்த வேலையைப்பார். விமர்சனமெல்லாம் செய்யாதே. பொத்திக்கிட்டு போ’ என்பதுதான். அதே மனநிலையில் அதேபோன்ற வரிகளைத்தான் சித்துராஜ் எழுதியிருந்தார்


 


அதாவது  ’நீங்கள் சிங்கப்பூர் அரசின் ஊதியம் பெற்று வேலைக்கு வந்தவர். இங்கே வீட்டுவேலைக்கு வரும் தமிழர்களைப்போலத்தான் நீங்களும். சொன்னவேலையைச் செய்து பணத்துடன் திரும்பப்போகவேண்டியதுதானே, என்ன விமர்சனம் வேண்டிக்கிடக்கிறது?’ என்பதுதான் அவரது நக்கல்களின் சாராம்சம்


 


அதை இந்தியாவிலுள்ள உங்கள் எதிரிகளும் உண்மையிலேயே கூலிகொடுத்தால் பாராட்டுபவர்களும் மாய்ந்து மாய்ந்து லைக் போட்டு மகிழ்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் நீங்கள் எழுதுகிறீர்கள். அவர் பெரிய எழுத்தாளராக வருவார் என்கிறீர்கள்.


 


என் கேள்வி இதுதான். இலக்கியவாதிமேல் இலக்கியம் மேல் கொஞ்சம் கூட மதிப்பில்லாத ஒருவர், தாய்நாட்டுத் தமிழர்கள் மேல் இப்படி ஒரு இளக்காரமான எண்ணம் கொண்ட ஒருவர் எப்படி தமிழர்களுக்குரிய எழுத்தாளராக ஆகமுடியும்? எப்படி அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கமுடியும்? நல்லமனிதராக இல்லாதவர் எப்படி நல்ல எழுத்தை உண்டுபண்ண முடியும்?


 


கே.


 


அன்புள்ள கே,


 


நான் ஃபேஸ்புக் வாசிப்பதில்லை. அவர் அப்படி கிண்டலோ நக்கலோ செய்திருந்தால் அது ஃபேஸ்புக்கின் கொண்டாட்டங்களில் ஒன்று.அங்கே எல்லாமே நக்கல்தான் என்றார்கள்.அதற்குமேல் அச்சொல்களுக்கு முக்கியத்துவமேதும் இல்லை. ஃபேஸ்புக்கில் எவரோ என்னை வசைபாடாத, கிண்டல்செய்யாத ஒருநாள் கூட கடந்துசெல்வதில்லை என்றார்கள் நண்பர்கள். குறைந்தபட்சம் அதில்என்மேல் ஒரு கவனம் உள்ளது. அது நல்லதுதானே?


 


நான் என் கட்டுரைகளில் சொல்லும் விஷயம் ஒன்றுதான், உண்மைதான் இலக்கியத்தின் அழகு. அரசியல் சரிகள், ஒழுக்கநிலைகள் அல்ல. சிங்கப்பூரியர்களுக்கு தமிழர்கள் கூலிக்கு வருபவர்கள் என்னும் இளக்காரம் இருந்தால், அது சித்துராஜிடம் இயல்பாகவெளிப்பட்டால் அது மிகச்சரியான ஒரு பிரதிநிதித்துவம்தானே? அவர் அதை மறைத்தோ கட்டுப்படுத்தியோ எழுதினால்தான் தவறு.


 


ஏனென்றால் இலக்கியம் ஒரு வாக்குமூலம்தான். தன்னியல்பான வெளிப்பாடு என அதைத்தான் சொல்கிறோம். எழுத்தாளன் ஒரு சமூகத்தின் ’சாம்பிள்’ ஆக இருக்கும்போதே முக்கியத்துவம் பெறுகிறான். பொய்யான ஒழுக்கம் , அரசியல் சரிகளை வெளிப்படுத்தும்போது அல்ல.


 


அவர்கள் அப்படி உணர்கிறார்கள், அப்படி தங்கள் எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அது ஏன், எந்தெந்தப் பண்பாட்டுக்காரணிகளால் அவ்வாறு நிகழ்கிறது என்று ஆராய்வதே இலக்கியவாசகனின் மனநிலை. அதனால் புண்படுவதும் சரி ,அதன்பொருட்டு அவ்வெழுத்துக்களை விலக்குவதும் சரி, அவ்வாறெல்லாம் எழுதக்கூடாது என்று அவரிடம் சொல்வதும் சரி அவன் செய்யக்கூடாதவை. இலக்கியத்திற்கு எதிரானவை.


 


சித்துராஜ் பொன்ராஜின் எழுத்தில் சிங்கப்பூரியத் தனித்தன்மை ஒன்று தெரிந்தது. அது எப்படி வெளிப்பட்டாலும் தமிழில் உள்ளவரை தமிழிலக்கியத்திற்கு முக்கியமானதே. அந்த சிங்கப்புயுரிய அழகியலைத்தான் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். வாசிக்கவும் ஆராயவும் பாராட்டவும் வேண்டும். அவர்கள் தமிழகத்தை வெறுத்தாலோ, அல்லது நம்மை இளக்காரம் செய்தாலோ அது நம் மதிப்பீட்டில் மாறலாகாது.


 


எது அவர்களால் உண்மையில் உணரப்படுகிறதோ அதை அவர்கள் எழுதட்டும். தமிழகத்தைப் பார்த்து எழுதுவது, பொதுவான விஷயங்களை எழுதுவதுதான் பிழையானது. அவர்களின் உள்ளம் உண்மையாக வெளிப்படும்வரை அதை இலக்கியமென்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஏனென்றால் எனக்கு இலக்கியம் என்னும் இயக்கம்மீது ஆழமான நம்பிக்கை உண்டு.


 


நம்மை விட அவர்கள் முன்னேறிய தேசம். அது அளிக்கும் தன்னம்பிக்கையோ மேட்டிமைத்தன்மையோ அவர்களுக்கு இருக்கலாம். அது இயல்பு. அதைவிட பலமடங்கு மேட்டிமைத்தனம் அமெரிக்காவில் குடியேறிய நம்மூர்த்தமிழர்களிடம் உள்ளது.  “யூ இண்டியன்ஸ் இப்பவும் நீங்க மாறலையா?” என்று நம்மிடம் கேட்கிறார்கள். அதெல்லாம் வரலாற்றின் சில இயல்புகள் என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்


 


நாம் வேறுதேசம், வேறுசூழல். இங்கு நாம் வரிசைகளில் காத்திருந்து, பேருந்துகளில் முண்டியடித்து, வேலைச்சுமைகளுக்கு நடுவே எழுதி,  வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் பெற்று, நன்றிக்கடிதத்தையே ராயல்டியாக வாங்கி பூரித்து இலக்கியம்படைக்றோம். அவர்களுக்கு பலமடங்கு வாய்ப்புகள் உள்ளன. எழுத ,வாசிக்க ,விவாதிக்க . சர்வதேசக் கருத்தங்களுக்குச் செல்லலாம். உலகளாவிய பதிப்பகங்களில் இடம்பெறலாம்.


 


அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் அவர்கள் மொக்கையாக எழுதும்போது சீற்றம் வருகிறது. அதற்குக்காரணம் தமிழ்மேல் நமக்கிருக்கும் ஈடுபாடே. அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி சித்துராஜ் போன்றவர்கள் மேலே சென்றால் தமிழ்மேல் கொண்ட ஈடுபாட்டால் அதை தமிழின் வெற்றியென்றே கொள்ளவேண்டும்.அவர்கள் எழுதட்டும்


 


ஜெ


 


சித்துராஜ் பொன்ராஜ் கதைகளைப்பற்றி….


 


சித்துராஜ் பொன்ராஜ் கடிதம்


 


https://chajournal.wordpress.com/2016/08/29/addiction-sithuraj/

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2016 11:35

வசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு

 






இனிய ஜெயம்,

 


இன்று காலை செய்திகளில் இக் காணொளி கண்டேன்.   தலித் மாணவன் என கண்டிருந்தது.  தலித் பிரச்னைகள் என்றாலே அது ஒரு டெம்ப்ளட், அதில் பொங்கும் அறப்பொங்கல்கள் ஒரு பேஷன்.  கல்லறைப் பிணத்துக்கு ஒப்பான அறிவு மற்றும் உணர்வு சமநிலையுடன் இதை அணுகவேண்டும் என எனக்கே உரைத்துக் கொண்டு இக் காட்சியை மீண்டும் கண்டேன்.    ஒரு மனிதனை சக மனிதர்கள் அடிக்கிறார்கள். கொல்லப்பட வேண்டிய வெறி நாயை அடிப்பது போல அடிக்கிறார்கள்.  அதன் மேல் எந்த விஷயம் பேசப் பட்டால்தான் என்ன?   என் தம்பி. அடி வாங்கும் அதே தம்பி போலத்தான் இருப்பான். என் தம்பி என் தம்பி என்றே மனம் பதறியது.


 


 


என் தம்பிக்கு தொலைபேசினேன்,  உலகின் மாகா திமிர் பிடித்த ஜந்துக்களில் அவனும் ஒருவன்.  அடி குடுக்குற ஆளுங்க யாரும் உன் அண்ணன் தம்பி இல்லையா என நக்கலாக கேட்டான்.


 


வசுதைவ குடும்பகத்தை நினைத்துக் கொண்டேன். மானுடம் மொத்தமும் பாடையில் ஏறுவதற்குள் அங்கே சென்று சேர்ந்துவிடும் என எனக்கு நானே அறுதல் சொல்லிக் கொண்டேன்.


 


 


வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன்

நீ ஒரு அரசனாகவோ

அரக்கனாகவோ இரு

ஆட்சேபணையில்லை

நான் ஒரு எளிய மனிதனாக

இருந்துவிட்டு போகிறேன்


என்னை தலை வணங்கவும்

மண்டியிடவும் செய்வதுதான்

உன் நோக்கம் எனில்

அப்படியே செய்வதில்

எனக்கு புகார் ஒன்றுமில்லை

தலைகள் வணங்கவும்

முழங்கால்கள் மண்டியிடவுமே

படைக்கப்படுகின்றன


ஆனால் நீ மண்டியிடச் செய்கிற ஒருவனுக்கு

நீ கடைசியில் ஏதாவது தர வேண்டும்

என்பதுதா உலகத்தின் நியதி

அதுதான் மண்டியிடச் செய்வதற்கான

உன் அதிகாரத்தை நிலை நிறுத்தும்

ஆனால் எனக்கு தேவையான

எதுவும் உன்னிடம் இல்லை


உன்னிடம் ஏராளமான பரிசுகள் இருக்கின்றன

நீ எனக்கு எதையும் தர அனுமதிக்க மாட்டேன்

அதைவிட துயரம் உனக்கு வேறு எதுவும் இல்லை


நான் வெறுமனே உன்னிடம்

மண்டியிடுகிறேன்

ஒருவனை

வெறுமனே மண்டியிடச் செய்வதற்காக

இந்த உலகம் உன்னை இகழும்

என்றுதானே

மண்டியிடும் ஒருவனைக் கண்டு

இவ்வளவு பயப்படுகிறாய்



-மனுஷ்ய புத்திரன்


இன்று வாசித்த கவிதை.  எனது இன்றைய நாளுக்கான கவிதை.


 


கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2016 11:33

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

6885832


அன்புள்ள ஜெ


ஆரம்ப கட்டக் கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு வாசிப்பே போதுமானதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அதுவே ஒரு உரையாடல்தான். மீண்டும் கடிதம் எழுத இதுபோன்ற நிகழ்வு குறித்த அறிவிப்பு வேண்டியிருக்கிறது.


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்கிற அறிவிப்பிற்குப் பின்னர் வந்த கடிதங்களில் இருக்கும் ஒற்றுமையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். வாசகர்கள் அனைவரும் தங்களுக்கே விருது கிடைத்த பெருமிதத்தில் இருக்கிறார்கள். அல்லது தங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவருக்கு அளிக்கப்படவிருக்கும் கவுரவம் என்கிற வகையில் நோக்குகிறார்கள்.


2015 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வண்ணதாசன் அவர்களை முதல்முறையாக சந்தித்தேன். நண்பர் சாம்ராஜ் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய கவிதைத் தொகுப்புகள் பலவற்றை வாசித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவருடன் எதையுமே பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை. உடனிருந்த கணங்களில் எதைக் குறித்தும் பேசாமல் உடனிருந்தால் போதும் என்கிற மனநிலை.


இம்முறை விஷ்ணுபுரம் விருது விழா முன்னெப்போதையும் விட சிறப்பான ஒன்றாக அமையவிருக்கிறது. ஆண்டுதோறும் விருதிற்கான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கு வழிகாட்டி உங்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.


அன்புடன்


கோபி ராமமூர்த்தி


***


அன்புள்ள ஜெ


வண்ணதாசனுக்கு விருது எனக்கே அளிக்கபப்ட்ட விருது. நான் எத்தனையோ முறை அவருக்கு போதிய கௌரவம் கிடைக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். வண்ணதாசனைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருபவர் என் அலுவலகத்தில் முதலில் இருந்த கணேசய்யர். நான் அறியாப்பாலகனாக இங்கே வந்தபோது அவர்தான் என்னை சிரித்தபடி வரவேற்றார். சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு அனைவருமே எதிரிகளாகத்தான் தெரிந்தார்கள். கணேசய்யர் அத்தனைபேரும் மனிதர்களே என்று எனக்குச் சொன்னார். காட்டினார் என்று சொல்லவேண்டும். ஒரு நட்பான புன்னகையால் வெல்லப்பட வேண்டியதுதான் இந்த உலகம் என்று எனக்குக் காட்டினார்


அதேபோலத்தான் எனக்கு வண்ணதாசன். அவர் இல்லாவிட்டால் என் குடும்பச்சூழல் காரணமாக நான் கசப்பு நிறைந்தவனாக இருந்திருப்பேன். போனவாரம் ரயிலில் ஒரு சின்னப்பாப்பா கையில் சிவப்புக்கண்ணாடி வளையல் போட்டிருந்தது. அதை வாங்கி கொஞ்சவேண்டும் என்று தோன்றியது. கைநீட்டியதுமே வந்தது. அந்த வளையலை முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன்


அப்போதுதான் தோன்றியது அந்தப்பரவசம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. எனக்கு அது முக்கியம் என்று தோன்றுகிறது, அந்த அருமையான மனநிலை வாய்க்கிறது. அது மற்றவர்களிடமில்லை. அதை எனக்குக் கொடுத்தவர் வண்ணதாசன் அல்லவா?


என் ஆசானுக்கு வணக்கம். அவருக்கு விருது அளித்த உங்களுக்கும் வணக்கம்


கணேசமூர்த்தி


***


ஜெமோ


நான் உங்கள் வாசகன் அல்ல. சொல்லப்போனால் உங்களைப்பற்றி நிறையவே கசந்து எழுதியிருக்கிறேன். ஆணவமும் தோரணையும் எனக்குப் பிடித்தமானவை அல்ல. இருந்ததுபோல தெரியாமல் இருந்துவிட்டுச் செல்வதே நல்லது என்பதுதான் எனக்குப்பிடித்தமான கொள்கை


அதோடு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவமும் பெரியாரிய வெறுப்பும் எனக்கு மிகவும் கசப்பு அளிப்பவை. நான் உங்கள் எழுத்திலே ஒருவரி கூட படித்தது இல்லை. சில கட்டுரைகளும் சிலகுறிப்புகளும் உதிரிவரிகளும்தான் வாசித்திருக்கிறேன். நீங்கள் என் ஆள் அல்ல. பெரியாரை நிராகரிக்கும் எவரும் எனது எழுத்தாளர் இல்லை


ஆனால் என் அன்புக்குரிய வண்ணதாசனுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுக்காக உங்களை வாழ்த்துகிறேன். இதையெல்லாம் திராவிட இயக்கம் செய்திருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விருது அவருக்கு ஒரு பொருட்டு இல்லை. ஆனால் அவரது வாசகர்களாக எங்களுக்கு இது முக்கியம்


தமிழ்வேள் குமரன்


***


அன்புள்ள ஜெ,


வண்ணதாசனின் கவிதை ஒன்று


ஒரு முடிவு செய்தது போல்


எல்லா இலைகளையும்


உதிர்த்துவிட்டிருந்தது செடி.


ஒரு முடிவும் செய்ய


முடியாதது போல்


செடியடியில் அசையாதிருக்கிறது


சாம்பல் பூனை


இந்த வரி என்னை அடிக்கடி தொந்தரவு செய்தது. என்ன என்றே தெரியாமல் ஒரு அனுபவம். அதைத்தான் நான் வண்ணதாசன் கதைகளில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை எந்த விமர்சனமும் சொல்லிவிடமுடியாது


அர்த்தமில்லாத அனுபவத்தை அளிக்கும் எழுத்துக்கள் வண்ணதாசன் எழுதுபவை. அவருக்கு விஷ்ணுபுரம் அளிப்பதில் மனநிறைவு


வாழ்த்துக்கள்


செண்பகா


 


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2016 11:32

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3

[ 5 ]


இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம்விளக்குவதற்காக வைத்துக்கொண்டனர்.


அத்ரி மாமுனிவரின் கொடிவழியில் வந்த நூற்றெட்டாவது அத்ரி சௌகந்திகத்தில் குருநிலை அமைத்து மாணவர்களுடன் வேதச்சொல் ஓம்பினார். அவரது அறத்துணைவி அனசூயை அவரைப் பேணினாள். பசுங்கோபுரங்களென எழுந்த தேவதாருக்களால் குளிர்ந்த அக்காட்டில் அத்ரி விளைவித்த மெய்மையை நாடி முனிவர்கள் வந்து குடிலமைத்துக்கொண்டே இருந்தனர். நிகரற்ற அறிவர்களாகிய நூற்றெட்டு முனிவர்களால் அக்காடு பொலிந்தது.


அவர்களும் மாணவர்களும் ஓதும் வேதச்சொல் இரவும் பகலும் ஒருகணமும் ஒழியாதொலிக்கவே அங்கு தீயதென்று ஒன்று தங்காதாயிற்று. வேதம் கேட்டு வளர்ந்த தேவதாருக்கள் பிறிதெங்கும் இல்லாத நறுமணம் கொண்டிருந்தன. அங்கு முளைத்த பிறசெடிகளின் வேர்களும் தேவதாருக்களுடன் பின்னி சாறு உறிஞ்சி நல்மணம் கொண்டன. அவற்றின் கனியுண்ட கிளிகளின் சிறகுகளிலும் மணம் கமழ்ந்தது. அனைத்து ஒலிகளும் வேதமென்றே எழுந்த அக்காட்டை வேதவனம் என்றனர் முனிவர்.


வேதம் கனிந்த சித்தம் கொண்டிருந்த அத்ரி முனிவர் அரணிக்கட்டைகள் இன்றி தன் சொல்லினாலேயே அனலெழுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். அவர் சொற்கள் நுண்ணொலி நிறைந்த விண்கனிந்து நேராக எழுபவை என்றனர் அறிஞர். வேதச்சொல்லவை ஒன்றில் அவர் ஒப்புமை சொல்லும்போது பறக்கும் முதலைகளின் சிறகுகள் என்று ஒரு வரி வந்தது. அங்கிருந்த அவைமுனிவர் எழுவர் அக்கணமே எழுந்து “முதலை பறப்பதில்லை, அவற்றுக்கு சிறகுமில்லை” என்றனர். திகைத்த அத்ரி தான் சொன்னதென்ன என்று அருகமைந்த  மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் அதைச் சொன்னதும் திகைத்து அமர்ந்தார்.


தன்னுள் தானறியாது கரந்தமைந்த ஆணவமே சொல்லென நாநழுவி விழுந்தது என்று உணர்ந்தார் அத்ரி. ஆனால் அந்த அவையில் தலைதாழ்த்தி சொல்லெனும் முடிவிலிக்கு முன் சித்தம் கொண்டாகவேண்டிய அடக்கத்தைச் சொல்ல அவரால் இயலவில்லை. “நான் சொன்னது உண்மை, பறக்கும் முதலை இங்குள்ளது” என்றார். “எனில் அதைக் காட்டுக எங்களுக்கு. அதுவரை உங்கள் சொல்லில் எழுந்த மெய்மை அனைத்தும் ஐயத்தால் தடுத்துவைக்கப்படட்டும்” என்றனர் முனிவர். “அவ்வாறே ஆகுக!” என்று அத்ரி எழுந்துகொண்டார்.


நிலையழிந்து குடில்மீண்ட அவரிடம் “ஆணவமற்ற அறிவை தாங்கள் அடைவதற்கான தருணம் இதுவென்றே கொள்க!” என்று அனசூயை  சொன்னாள். “ஆணவம் கொள்பவர் புவியனைத்துக்கும் எதிராக எழுகிறார். தெய்வங்கள் அனைத்தையும்  அறைகூவுகிறார். மும்முதல்தெய்வங்களேயானாலும் ஆணவம் வென்றதே இல்லை.” அத்ரி அவளை தன் கையால் விலக்கி “நான் கற்றவை என் நாவில் எழவில்லை என்றால் அந்நாவை அறுத்தெறிவேன். நான் வெல்கையில் வென்றவை வேதங்கள். அவைமுன் நாணுகையில் நாணுபவையும் அவையே” என்றார்.


இரவெல்லாம் அவர் தன் குடிலுக்குள் தனக்குள் பேசியபடி உலவிக்கொண்டிருந்தார். உடலுள் எழுந்த புண் என வலித்தது உள்ளம். விடிகையில் முடிவுகொண்டிருந்தார். அன்றே வேள்விக்கூடத்தில் புகுந்து எரியெழுப்பினார். ஐவகை அவியும் நெய்யும் அளித்து வேதச்சொல்கொண்டு தென்றிசையில் வாழும்  மேதாதேவியை அழைத்தார். “வாலறிவையே, இங்கு எழுக! இந்த அவைமுன் வந்து என் சொல்லுக்கு பொருளென்றாகுக!” என்றார்.


பிரம்மனின் மைந்தர் தட்சப் பிரஜாபதிக்கு பிரசூதி என்னும் துணைவியில் பிறந்தவள் மேதை. அவள் தென்னிசை ஆளும் தர்மதேவனை மணந்தாள். சொல்லில் எழும் மெய்மைக்குக் காவலென அமர்ந்தவள். எட்டு கைகளில் மலரும் மின்கதிரும் அமுதும் விழிமணிமாலையும் ஏடும் எழுத்தாணியும்  அஞ்சலும் அருளலுமென அமர்ந்தவள். அவர் உள்விழிமுன் தோன்றி “முனிவரே, முடிவற்ற நெளிவுகொண்ட நாவே சொல்லுக்கு முதல் எதிரி என்றுணர்க! பொருள்கடந்து மொழிகடந்து முடிவிலா ஆழம்வரை செல்வது  நாவென அமைந்த நாகம். அதை பணிக! அவையொன்றில் தலைவணங்குவதனால் எவரும் பெருமையிழப்பதில்லை. பணிந்த அவைகள் வழியாகவே வென்று செல்கின்றது அறிவு” என்றாள்.


சினந்து சிவந்த அத்ரி தன் இடக்கையால் தர்ப்பையை எடுத்து வலக்கையை நீட்டி அவியெடுத்து தன் முன் எரிந்த வேள்வித்தீ நோக்கி நீட்டியபடி சொன்னார். “நானறிந்த வேதமெல்லாம் இங்கு திரள்க! என் சொல் பொய்யாகுமென்றால் வேதம் பிழைபடுக!” அனலில் அவியிட்டு அவர் ஆணையிட்டார். “மேதாதேவியே, என் அவியை உண்க! என் வேதச்சொல் கொள்க! நால்வேதம் அறிந்தவனாக இங்கமர்ந்து ஆணையிடுகிறேன். என் சொல்லுக்கு அரணாக எழுந்துவருக!”


அவர் முன் நின்று மேதாதேவி பதைத்தாள். “பிழைக்கு ஆணையென்று தெய்வம் வந்து நிற்கமுடியாது. அது பொய்மையை நிலைநிறுத்துவதென்றே ஆகும்.” அத்ரி  “வேதத்தின் ஆணைக்கு தெய்வங்கள் கட்டுப்பட்டாகவேண்டும். இயலாதென்றால் சொல்க! என் சொல்லனைத்தையும் உதறி இந்த அவைவிட்டு எழுந்து செல்கிறேன்” என்றார். “முனிவரே அறிக, கலைமகளைக் கூடி எந்தை பிரம்மன் படைத்த இப்புவியில் இல்லை உங்கள் சொல்லில் எழுந்த உயிர்” என்றாள் மேதை.


“அவ்வாறென்றால் என் சொல்லில் உறையும் மெய்மையாகிய உன்னைப்புணர்ந்து பிரம்மன் படைக்கட்டும் அதை” என்றார் அத்ரி. “என்ன சொல்கிறீர்கள் முனிவரே? அவர் என் தந்தைக்குத் தந்தை. நான் அவள் மகள்” என்று அவள் கூவினாள். “நான் எதையும் அறியவேண்டியதில்லை. பிழைத்த சொல் சூடி இந்த அவை விட்டு எழமாட்டேன்” என்று கூவினார் அத்ரி.


தன் முன் எழுந்த அனலில் நெய்யும் அவியும் சொரிந்து வேள்விசெய்தார். தன் மூலாதாரத்திலிருந்து வேதச்சொல்  எடுத்து அனலோம்பினார். நீலச்சுடர் எழுந்து நாவாடியது. சுவாதிஷ்டானத்திலிருந்து எழுந்த சொல் செஞ்சுடர் கொண்டது. மணிபூரகத்தின் சுடர் மஞ்சளாக பெருகி எழுந்தது. அனாகதத்தின் சுடர் பச்சையொளி கொண்டிருந்தது. விசுத்தியின் சுடர் பொன்னிறம் பெற்றிருந்தது. ஆக்ஞையின் சுடர் வெண்ணிறமாக அசைவற்று நின்றது. சகஸ்ரத்தின் சுடரை எழுப்ப அவர் தன் நெற்றிமேல் தர்ப்பையை வைத்தபோது அனலில் எழுந்த பிரம்மன் “ஆகுக!” என்று சொல்லளித்தார்.


ககனப்பெருவெளியில் மேதையைப் புணர்ந்து பிரம்மன் நிகருலகு ஒன்றைப் படைத்தார். அவருள் இருந்து ஆழ்கனவுகளை எழுப்பினாள் மேதை. அவை பருவுருக்கொண்ட உலகில் பல்லிகள் பேருருக்கொண்டு நிலமதிர நடந்தன. கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வௌவால்கள் கூவியபடி வானில் மிதந்தன. தந்தம் வளைந்த பேருருவ யானைகள் வெண்கரடித்தோல் கொண்டிருந்தன. கால்பெற்று நடந்தன நாகங்கள். ஆமைகள் இடியோசை எழுப்பி வேட்டையாடின. சிறகு கொண்டன முதலைகள். அவற்றிலொன்று மரக்கூட்டத்திலிருந்து சிறுகிளை வழியாக இறங்கி சௌகந்திகக் காட்டுக்குள் வந்து இளவெயில் காய்ந்து கண்சொக்கி அமர்ந்திருந்தது.


அதை முதலில் கண்டவன் அவரை எதிர்த்து எழுந்த முனிவர்களில் முதலாமவராகிய கருணரின் மாணவன். அவன் ஓடிச்சென்று தன் ஆசிரியரிடம் சொல்ல அவர் திகைத்தபடி ஓடி வெளியே வந்தார். அங்கே அதற்குள் முனிவர்களும் மாணவர்களும் கூடியிருந்தார்கள். கருணர் அருகே சென்று அந்த முதலையைப் பார்த்தார். நான்கடி நீள உடலும் நீண்ட செதில்வாலும் முட்புதர்ச்செடியின் வேரடிபோல மண்ணில் பதிந்த கால்களும் கொண்ட முதலை இளம்பனையின் ஓலைபோன்ற தோல்சிறகுகளை விரித்து வெயில் ஊடுருவவிட்டு பற்கள் நிரைவகுத்த வாயைத்திறந்து அசையாது அமர்ந்திருந்தது.


அது விழிமயக்கா ஏதேனும் சூழ்ச்சியா என்று கருணர் ஐயம் கொண்டார். ஆனால் அதை அணுகும் துணிவும் அவருக்கு எழவில்லை. செய்தியறிந்து அங்கே வந்த அத்ரி முதலையை நோக்கிச் சென்று அதன் தலையைத் தொட்டு “எழுந்து செல்க!” என்றார். அது செதில்கள் சிலிர்த்தெழ விழிப்புகொண்டு எழுந்து விழிகளை மூடிய தோலிமைகளை தாழ்த்தியது. முரசுத்தோலில் கோலிழுபட்டதுபோல பெருங்குரலில் கரைந்தபடி சிறகடுக்கை விரித்து அடித்து வாலை ஊன்றி காற்றில் எழுந்தது. அதன் சிறகடிப்போசை முறங்களை ஓங்கி வீசியதுபோல் ஒலித்தது. அக்காற்றேற்று சிறுவர்களின் முடியிழைகள் பறந்தன. காற்றில் ஏறி அருகிருந்த மரக்கூட்டங்களுக்குள் புகுந்து மறைந்தது.


கருணர் திரும்பி இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து “எந்தையே, ஆசிரியரே!” என்று கூவியபடி அத்ரியின் காலடிகளில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஐயம்கொண்ட அத்தனை முனிவர்களும் அவர் முன் விழுந்து கண்ணீருடன் மாப்பிரந்தனர். அவர்களின் தலைக்குமேல் தன் கைகளை வைத்து “வேதச்சொல் என்றும் மாற்றில்லாதது” என்றார் அத்ரி. பின்னர் தன் குடில்நோக்கி நடந்தார்.


குடிலில் அவருக்கு கால்கழுவ நீர்கொண்டுவந்த அனசூயையிடம் பெருமிதம் எழ “என் சொல்லில் இருந்து எழுந்து வந்தது அந்தப் பறக்கும் முதலை” என்றார். அவள் அவர் விழிகளை நேர்நோக்கி “பிழைபட்ட சொல்லுக்காக தன்னை பிழையாக்கிக்கொண்டிருக்கிறது புவி” என்றாள். சினத்துடன் அவளை ஏறிட்டு நோக்கிய அத்ரி ஏதோ சொல்ல நாவெடுத்தபின் அதை அடக்கி தலைகுனிந்து கடந்து சென்றார்.


[ 6 ]


கலைமகளைப் புணர்ந்து பிரம்மன் படைத்த புவியில் இல்லாத விந்தைகள் நிறைந்திருந்தன மேதையைப் புணர்ந்து அவன் படைத்த பிறபுவியின் படைப்புகளில். கட்டற்று எழுந்த அவன் கற்பனையால் உருவங்கள் ஒன்றுகலந்தன. குன்றுகளும் யானைகளும் ஒன்றாகி எழுந்தன பேருருவ விலங்குகள். மரங்களும் எருதுகளும் ஊடாடி கொம்புகள் கொண்டன.  சிறகுகொண்டன சிம்மங்கள். சிம்ம முகம் கொண்டன நாகங்கள். நாக உடல்கொண்டு நெளிந்தன புலிகள். நடந்தன மீன்கள்.


தன் படைப்புப்பெருக்கை நோக்க நோக்க பிரம்மன் பெருமிதம் கொண்டான்.  மேலும் மேலுமென படைப்பு வெறிபெருக பிற அனைத்தையும் மறந்து அதிலேயே மூழ்கிக்கிடந்தான். அவன் நாவில் சொல்லாகவும் கைவிரல்களில் உருவாகவும் நின்றிருந்தாள் மேதாதேவி. அவர்கள் படைத்த நிகருலகு விரிந்து சென்று விண்ணுலகையும் பாதாளத்தையும் தொட்டது. அங்கு இறப்பென்பதே இருக்கவில்லை. எனவே அதன் எடை ஏழுலகங்களையும் அழுத்தியது. அதன் விரிவு திசைகளை நெளியச் செய்தது.


இறப்பின்றிப் பெருகிய அவ்வுலகின் எடையால் தர்மதேவனின் துலாத்தட்டு நிகரிழந்தது. எருமை ஏறிய தேவன் விண்ணுலகுக்குச் சென்று கலைமகளைக் கண்டு வணங்கி சொன்னான் “அன்னையே, ஆக்கப்பட்டவற்றை அழித்து நிகர்நிலையை நிறுத்துவதே என் தொழில். அறம் வாழ்வது என் துலாக்கோலினால்தான் என்பது தெய்வங்களின் ஆணை. இன்று பெருகிச்செல்லும் அவ்வுலகை அழிக்கும் வழியறியாது திகைக்கிறேன். உருக்கொண்ட ஒவ்வொன்றையும் மொழிசென்று தொட்டாகவேண்டும். பெயர்கொண்ட ஒன்றையே என் பாசவடம் கொண்டு நான் பற்றமுடியும். அங்குள்ள எதையும் இன்னும் மொழியின் பெருவெளி அறியவில்லை. தாங்களே அருளல்வேண்டும்.”


அன்னை தன் தவம் விட்டு எழுந்து சென்று நோக்கியபோது கட்டின்றிப்பெருகி பின்னி முயங்கி தானே தன்னை மேலும் பெருக்கிச் சென்றுகொண்டிருந்த அவ்வுலகின் கனவுக்கொந்தளிப்பைக் கண்டு திகைத்து நின்றாள். கைநீட்டி விலங்குகளைப் பற்றி சுழற்றித் தூக்கி உண்டன பெருமரங்கள். கண்கள் கொண்டிருந்தன மலைப்பாறைகள். யானைகளை தூக்கிச்சென்றன கருவண்டுகள். நண்டுக்கால்களுடன் நிலத்திலறைந்து ஓசையிட்டு நடந்தன பேருருவ எறும்புகள். வகைப்பாடும் தொகைப்பாடும் ஒப்புமையும் வேற்றுமையும் அழிந்தமையால் மொழியை சிதறடித்துவிட்டிருந்தன அவை.


கனவிலென களிவெறியிலென நடமிட்டுக்கொண்டிருந்த தன் கொழுநன் கைபற்றி “நிறுத்துங்கள்! என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அன்னை கூச்சலிட்டாள்.  போதையில் விழிமயங்கியிருந்த அவன் அவளை கேட்கவில்லை. அவனை உலுக்கி அவள் மேலும் கூவினாள். “விழித்தெழுங்கள்! கனவுமீளுங்கள்!”  விழிப்பு கொண்ட பிரம்மன் அவளை நோக்கி “யார் நீ?” என்றான். “உங்கள் சொல்லென அமைந்து உலகங்களை யாப்பவள். உங்கள் துணைவி” என்றாள் சுனைகளின் அரசி.


ஏளனத்துடன் சிரித்து “நீயா? உன் சொல் தவழும், நடக்கும் இடங்களில் பறப்பது இவள் கற்பனை. இனி இவளே என் துணைவி” என்று சொல்லி தன் கைகளை அசைத்துக்காட்டினான் பிரம்மன். அவனருகே களிவெறியில் சிவந்த விழிகளுடன் எங்கிருக்கிறோமென்றறியாது ஆடிக்கொண்டிருந்த மேதாதேவியை நோக்கி “நில்… இழிமகளே நில்!” என்று சொல்லன்னை கூவினாள். அவள் அக்குரலை கேட்கவேயில்லை. அவள் குழல்பற்றிச் சுழற்றி நிறுத்தி “கீழ்மகளே, இது நெறியல்ல என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் கலையரசி.


“நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லை” என்றாள் மேதை. “இவை எங்கள் ஆக்கங்கள். நிகரற்றவை, அழிவற்றவை.” அவள் தள்ளாடியபடி பிரம்மனை பற்றிக்கொண்டு “நாம் ஏன் வீண்சொல்லாடி பொழுதுகளைகிறோம். இது நம் ஆடல்… வருக!” என்றாள். “ஆம், இதுவே நாம் தெய்வமாகும் தருணம்” என்ற பிரம்மன் திரும்பி தன் துணைவியிடம் “அகல்க! தன் உச்சத்தைக் கண்ட எவரும் மீண்டு வருவதில்லை. பறக்கத் தொடங்கியபின் கால்கள் சிறுக்கின்றன பறவைகளுக்கு. விலகிச்செல்! இப்படைப்புக்களியாட்டத்திற்கு முன் பிறிதென்று ஏதுமில்லை” என்றான்.


“அறிந்துதான் பேசுகிறீர்களா? ஆக்கல் புரத்தல் அழித்தல் என்றாகி நின்ற மூன்று பெருநிலைகளில் தொடக்கம் மட்டுமே நீங்கள். மூன்று விசைகளால் முற்றிலும் நிகர்செய்யப்பட்டது இப்பிரபஞ்சம்” என்றாள் வெண்மலரில் அமர்ந்தவள். “இப்படைப்புகளை அழிக்க எவராலும் இயலாது. இவை தங்களைத் தாங்களே புரப்பவை. எனவே இங்கு முழுமுதலோன் நான் மட்டுமே. அவர்கள் அங்குள்ள எல்லைகொண்ட சிற்றுலகங்களை ஆள்க! நான் வாழ்வது கட்டற்ற இப்படைப்புப் பெருவெளியை” என்றான் பிரம்மன்.


துயருற்றவளாக அன்னை கயிலை முடியேறிச்சென்றாள். அவளை யமனும் தொடர்ந்தான். அங்கே வெள்ளிப்பனிமலை முடி என வடிவுகொண்டு ஊழ்கத்திலிருந்த முதற்பெரும்சிவத்தின் முன்சென்று நின்று கைகூப்பி விழிநீர் விட்டாள். “உலகு காக்க எழுக, இறைவா!” என்று முறையிட்டாள். “அழிப்பவனே, அறம்புரக்க விழிசூடுக!” என்றான் யமன். பனிப்பரப்பு உருகி உடைந்து பேரோசையுடன் சரிவுகளில் அலைசுருண்டு இறங்கிச்சென்றது. பலநூறு பனிச்சரிவுகளால் மலைமடிப்புகள் இடியென முழங்கின. பொன்னுருகும் ஒளியுடன் அவன் முகம் வானிலெழுந்தது.


அன்னையும் காலனும் நிகழ்ந்ததை சொன்னார்கள். “இக்கணமே பிரம்மனை இங்கு அழைத்துவருக!” என்று செந்தழல்வண்ணன் ஆணையிட்டான். அவ்வாணையை ஏற்று நந்திதேவர் சென்று பிரம்மனை அழைத்து வீணே மீண்டார். “இறையுருவே, யார் அச்சிவன் என்று கேட்கிறார் பிரம்மன். அவர் திளைக்கும் அவ்வுலகில் தெய்வம் பிறிதில்லை என்கிறார்” என்றார். சினம் கொண்டபோது அவன்  எரிசூடிய பெருமலையென்றானான். அனல் கொண்டு சிவந்த அவன் உடலில் இருந்து உருகிய பனிப்பாளங்கள் பேராறுகளாகச் சரிவிறங்கி பல்லாயிரம் அருவிகளென்றாகின. அவை சென்றடைந்தபோது ஏழ்கடல்களும் அலைகொண்டு கொந்தளித்தன.


எரிகொண்ட அவன் உடலில் இருந்து நீராவி பெருகிஎழுந்து முகில்களாகி வெண்குடையெனக் கவிந்தது. நெற்றிவிழி திறந்தது. அதிலிருந்து உருகிய செம்பாறைக்குழம்பெழுந்து பெருகியது. அவ்வனல்துளியிலிருந்து உருக்கொண்டு எழுந்தான் காலபைரவன். அனல் குளிர்ந்து கரியுடல் கொண்ட அவன் விழிகளிரண்டும் சுடரென எரிந்தன. அவனைத் தொடர்ந்து வந்தது கரிய நாய். அதன் விழிகள் எரிமீன்களென புகையின் இருளில் தெரிந்தன.


“ஆணையிடுக!” என்றது பைரவசிவம். “அழைத்துவருக படைப்போனை!” என்றது முதற்சிவம். இடியோசைகளும் மின்னல்களும் தொடர பைரவசிவம் பிரம்ம உலகுக்குச் சென்றது. அங்கு வெறிகொண்டாடி நின்றிருந்த பிரம்மனை நோக்கி “முழுமுதல் படைப்போன் விழியிலிருந்து எழுந்த அவன்வடிவோன் வந்துள்ளேன். நோக்குக!” என முழங்கியது. பிரம்மன் நோக்கிழந்து மயங்கிய விழியும் உதடுகளில் பெருகிய நகையுமாக மேதாதேவியுடன் நடமிட்டுக்கொண்டிருந்தான். அவன் தோளைப்பற்றி “நில், வா என்னுடன்! இது படைப்பிறைவனின் ஆணை!” என்ற பைரவனிடம் கால்தள்ளாட நின்று “யார் படைப்போன்? இங்கு நானன்றி பிறனில்லை” என்றான் பிரம்மன்.


KIRATHAM_EPI_3


இடியோசை என முகில்களில் முழங்கிய உறுமலுடன் பைரவசிவம் தன் வலக்கையின் சுட்டுவிரலை நீட்டியது. அங்கொரு அனல்பெருந்தூண் அடியிலி திறந்து  எழுந்து விண் கடந்து சென்றது. அதன் வெங்கனலில் அக்கணமே பிரம்மன் உருவாக்கிய பிறவுலகு எரிந்து சாம்பலாகியது. அடுத்த கணம்வீசிய பெரும்புயல்காற்றில் அச்சாம்பலும் பறந்தகல கனவென மறைந்தன அங்கிருந்தவை அனைத்தும். அவை அமைந்திருந்த காலமும் அலைநெளிந்து மறைந்தது.


திடுக்கிட்டு விழித்து அண்ணாந்து நோக்கிய பிரம்மன் மாபெரும் குடையென புகைசூடி நின்ற அனல்தூணைக் கண்டு அஞ்சி அலறியபடி உடலொடுக்கி அமர்ந்தான். “நெறியிலியே, நீ மீறியவை மீண்டும் மீறப்படக்கூடாதவை” என்று கூவியபடி பைரவசிவம் தன் சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் குவித்து நகமுனையால் மலர்கொய்வதுபோல பிரம்மனின் தலைகொய்து மீண்டது.


தன் கணவன் தலையுடன் மீண்ட பைரவசிவத்தைக் கண்டு அலறியபடி ஓடிவந்த கலைமகள் நெஞ்சிலறைந்து அழுதாள். “இறைவா, படைப்பென்று இல்லையேல் புவனம் அழியும். அருள்க!” என்றாள். “தேவி, படைக்கப்பட்டவை அனைத்தும் மொழியிலுள்ளன. அப்படைப்பிலுள்ளான் படைத்தவன். உன்னிலிருந்து அவனை மீட்டுக்கொள்க!” என்றது முதற்பெரும் சிவம். தேவி கண்மூடி தன்னுள் நிறைந்த கலையில் இருந்து வெண்ணிற ஒளியாக பிரம்மனை மீட்டெடுத்தாள்.


நான்முகமும் அறிவிழியும் அமுதும் மின்னலும் ஏடும் மலரும் கொண்டு தோன்றிய பிரம்மன் வணங்கி “என்ன நிகழ்ந்ததென்றே அறிகிலேன், அண்ணலே. என்னை மீறிச்சென்று பிறிதொன்றாகி நின்றேன்” என்றான். “ஆம், படைப்பென்பதே ஒரு பிழைபாடுதான். பிழைக்குள் பிழையென சில நிகழ்வதுண்டு. தன்னை தான் மீறாது படைப்பு உயிர்கொள்வதில்லை. நிகழ்ந்தவை நினைவாக நீடிக்கட்டும். அவை இனிவரும் படைப்புக்குள் நுண்வடிவில் குடிகொள்வதாக!” என்றது சிவம்.


நிழலுருவாகத் தொடர்ந்துவந்த மேதாதேவி கண்ணீருடன் கைகூப்பி நின்றாள். “நான் வேதச்சொல்லுக்கு கட்டுப்பட்டவள். வேதமே என் செயலுக்குப் பொறுப்பாகவேண்டும்” என்றாள். “ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும்பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம். கைகூப்பி வணங்கி அவள் தன் இடம் மீண்டாள்.


அனைவரும் சென்றபின் முதற்சிவத்தின் முன் பேருருக்கொண்டு நின்றது பைரவசிவம். அதன் நிழல் வெண்ணிறமாக நீண்டு மடிந்து கிடந்தது. வெருண்டு நாய் முரல பைரவசிவம் திரும்பி நோக்கியபோது துயர்மிக்க விழிகளுடன் பெண்ணுருவம் கொண்டு எழுந்து கைகூப்பி நின்றதைக் கண்டது. “நான் நீங்களியற்றிய கொலையின் பழி. விடாது தொடரும் நெறிகொண்டவள்” என்றாள் அவள். “உங்கள் கையில் இருக்கும் அந்த மண்டை உதிருமிடத்தில் நிலைகொள்வேன்.”


திகைப்புடன் தன் கையிலிருந்த பிரம்மகபாலத்தை நோக்கி அதை கீழே வீசமுயன்றது பைரவசிவம். அது விழாமல் கையுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டது. கையை உதறியும் வீசியும் முயன்று தோற்றபின் அண்ணாந்து “இறையே, இக்கபாலத்துடன் நான் என்ன செய்வேன்?” என்று கூவியது.


“நீ செய்ய மறந்தது ஒன்றுண்டு. பிரம்மனின் தலைகொய்யும்போது அவனிருந்த பெருநிலை என்னவென்று அறிந்திருக்கவேண்டும்” என்றது சிவம். “தெய்வங்களை, பிரம்மத்தின் ஆணையை விலக்கும்படி அவனைப் பித்தெடுக்க வைத்த அப்பெருங்களியாட்டுதான் என்ன என்று நீ உற்றிருக்கவேண்டும்.” திகைப்புடன் “ஆம், அவ்விழிகளைத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதிலிருந்த பேருவகையை எங்கும் நான் கண்டதில்லை” என்றது பைரவசிவம்.


“உண்ணும்போதும் புணரும்போதும் கொல்லலாகாதென்றனர். அவ்விரண்டைவிடவும் மேலானதொன்றில் இருந்தவனை நீ கொன்றாய்” என்றது சிவம். “அவ்விரண்டும் ஆகி அவற்றைக் கடந்தும் அமைந்த பெருநிலை அது. அதில் ஒருதுளியையேனும் அறியாது தீராது உன் பழி.” பைரவசிவம் துயர்கொண்டு தலைகுலுக்கி “ஆம், இன்றுணர்கிறேன். இறையே, நான் செய்த பிழையை அறிகிறேன். சொல்க, நான் மீளும் வழியென்ன?”


“பிரம்மனின் தலைகொய்கையில் இருவிரல் நகங்களை மட்டும் பயன்படுத்தினாய். அதிலிருந்தது உன் ஆணவம். தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே. அது அழியும் காலம் உன் கபாலம் கழன்றுதிரும்” என்றது சிவம். “அது உதிர்கையில் நீ அறிவாய், பிரம்மன் இருந்த பொங்குநிலையை. அதிலாடுகையில் நீ மீள்வாய்.” உடல்வீங்க விம்மி “எங்கு? நான் என்ன செய்யவேண்டும் அதற்கு?” என்றது பைரவசிவம். “மண்டை என்பது இரப்பதற்கே. இரந்துண்டு நிறையட்டும் உன் வயிறு. நீ நிறைவுகொள்ளும் இடத்தில் இது உதிர்வதாக!” என்றது தொல்சிவம்.


இரந்துண்டு பசிநிறைய இரவலன் உருவில் எழுந்தது பைரவசிவம். கரியநாய் தொடர்ந்துவர நோயில் ஒடுங்கிய உடலும் சூம்பிக்கூம்பிய கைகளும் ஒளிமங்கிய விழிகளுமாக பார்ப்புக்கொலைப் பேய் பெண்ணுருவில் உடன் வர உடும்புத்தோல் கங்காளத்தை மீட்டியபடி தேவர்வாழும் வீதிகளில் திரிந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் மானுடரும்  வாழும் ஏழுலகங்களிலும் இல்லம்தோறும் இரந்துண்டது. சுவைகோடி அறிந்து, உணவுக்குவை கோடி தீர்ந்தபின்னும் அழியாத பெரும்பசியுடன் அலைந்தது. அதன் கங்காளத்தின் ஓசை இடித்தொடர் என முகிலடுக்குகளில் பெருங்காலமாக முழங்கிக்கொண்டிருந்தது.


இருநீர் பெருநதி கங்கை வளைந்தொழுகிய காசித்துறைக்கு  அது வந்தது. வரணாவும் அஸியும் வந்தணைந்த பிறைவடிவப் படித்துறையில் மூதாதையரை நீரூற்றி வானேற்றும்பொருட்டு அன்னம் அளிக்க அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்று  இரந்தது. கரியபேருடலும் சூலமும் கப்பரையும் கொண்டு கங்காளம் மீட்டிவந்த காட்டுருவனை அருவருத்தும் அஞ்சியும் விலகினர் மானுடர். அவர்கள் இட்ட உணவை அக்கணமே உண்டு கடந்த அவன் அழல்கண்டு திகைத்தனர். அவன் உடல் அணுகியபோது கொதிக்கும் தணல் என காற்று வெம்மைகொண்டதை உணர்ந்தனர். அவன் சென்றவழியில் கல்லுருகி தடம் பதிவதைக் கண்டு மருண்டனர்.


“அவன் யார்? விண்ணுருவன் வடிவாக முடிமன்னர் இருந்தாளும் இந்நகரில் எப்படி வந்தான்?” என்றனர். அவனை நிழல் எனத் தொடர்ந்த நாயை, நோயுருக்கொண்ட பெண்ணைக் கண்டு முகம் சுளித்தனர்.  அங்கே நீர்க்கரைநோக்கி அமைந்திருந்த சிற்றாலயத்திற்குள் ஆழியும் வெண்சங்கும் ஏந்தி  அமர்ந்திருந்த விண்ணவன் அவன் வருகையைக் கண்டான். ஆலயமுகப்பில் வந்து நின்று கங்காளத்தை முழக்கிய பைரவசிவத்தைக் கண்டு சினந்தெழுந்த விஸ்வக்சேனன் தன் தண்டுப்படையை ஓங்கியபடி தாக்கவந்தான். அக்கணமே தன் இடக்கை முப்புரிவேலால் அவன் தலையறுத்து நிலத்திட்டது பைரவசிவம்.


படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்கள் கூவியபடி எழுந்தனர். தலையற்ற உடல்கிடந்து துடிக்க செங்குருதி வழிந்து படியிறங்கியது. அமர்ந்திருந்த பீடத்திலிருந்து புன்னகையுடன் எழுந்த விண்ணவன் தன் படையாழியை எடுத்து வீச அது பைரவசிவத்தின் கழுத்துப்பெருநரம்பை வெட்டியது. துளையூற்றென சீறிப்பெருகிய  குருதி அவன் ஏந்திய கப்பரையில் நிறைந்தது. செவ்விழிகளால் அதை ஒருகணம் நோக்கியபின் ஏந்தி இதழ்சேர்த்து அருந்தினான் இரவலன். அருந்தும்தோறும் விடாய் மேலிட்டு மீண்டும் மீண்டும் உறிஞ்சினான். சுவையறிந்து அவன் உடலே நாவாகித் திளைத்தது.


ஊறி உண்டு மேலும் ஊற மேலும் உண்டு அவன் மேனி ஒளிகொண்டது. கங்காளநாதத்திற்கு இசைய அவன் கால் வைத்து நடமிடலானான். களிவெறி எழுந்து அவன் இடம்நிலை மறந்தான். விழிகளும் கைகளும் கால்களும் தாளத்தில் இசைய அவன் ஆடுவதை அங்கிருந்தோர் அஞ்சி கூடிநின்று நோக்கினர்.  அவன் கையிலிருந்த கபாலம் நிலத்தில் உதிர்ந்தது. முழந்தாளிட்டு மடிந்தமர்ந்த பார்ப்புக்கொலைப்பேய் படிக்கட்டில் பழந்துணியெனப் படிந்தமைந்தது. அவன் கைக்குவிகைகளில் விரல்மலர்கைகளில் ஆக்கமும் அழிவும் புரத்தலும் புரிதலும் எழுந்தமைந்தன. அவன் அருகே கையில் சிறிய வெள்ளித்தட்டுடன் நின்றிருந்த அழகிய முனிவன் புன்னகையுடன் “ஆம்!” என்றான்.


வெண்முரசு விவாதங்கள்


நிகழ்காவியம்


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2016 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.