Jeyamohan's Blog, page 1715

November 2, 2016

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15

[ 20 ]


வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது. அர்ஜுனன் சாய்ந்து அமர்ந்திருந்த சுண்ணக்கல் பீடத்திற்கு நேர்முன்னால் குத்தி உருவி எடுத்த கத்தி நுனியிலிருந்து சொட்டும் கொழுங்குருதி போல நீர் உதிர்வதை அவன் பல்லாயிரம் வருடங்களாக நோக்கிக் கொண்டிருந்தான்.


நகரங்கள் எழுந்து பொலிந்து போரிட்டு புழுதியாகி மறைந்தன. மக்கள்திரள்கள் பிறந்து குடிதிரட்டி முறைமையாகி வழக்கமாகி சொல்லாகி நூலாகி நூல்நிறை சொல்லை மட்டுமே எஞ்சவிட்டு நினைவாகி அழிந்தன. துளி ஒவ்வொன்றும் ஒரு புவி. ஒவ்வொன்றும் ஒரு கணம். கணங்களைக் கோத்து உருவாக்கப்பட்ட விழிமணிமாலை.  கோக்கும் சரடென்பது அவை ஒன்றை ஒன்று ஈர்த்திருக்கும் விசை. சென்று கொண்டிருந்தது விழிகளின் காலம். அறிவிழிகள். அறியாமின்கள். நுண்சொற்கள். அமைதிச்செறிவுகள். விண்மீன்களின் நீள்சரடு என ஆகிய வானம். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு சென்றுகொண்டிருந்த பொருளின்மை. ஒன்று மற்றொன்றிடம் கொள்ளும் பொருள்.


ஒளி கொண்டு நுண்மின் கொண்டு நலுங்கிய நீள்குவை நுனித்துளி உதிராது நடுங்குவதை அவன் கண்டான்.  அவ்வொளி மேலும் சுடர்கொண்டு சுண்ணக்குவை நீட்சியை மென்மையாக மின்ன வைத்தது. நோக்கி இருக்கையிலேயே குகையின் சுண்ண நெகிழ்வுகள் அனைத்தும் மிளிரலாயின. குகைக்குள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்த சிறிய ஓடை ஒன்று நீரொளி கொண்டது. காற்று ஒளியால் நனைந்தது. அதற்கு எதிர்வினையென அவன் உள்ளம் மலர்வடைந்தது.


புன்னகைக்கும் முகத்துடன் திரும்பி குகைவாயிலை நோக்கியபோது அங்கு நின்றிருந்த நெடிய உருவை அவன் கண்டான். உவகையுடன் முகமனுரைத்து எழ முயன்றாலும் நெடுங்காலத்துக்கு முன்னரே முற்றிலும் மறந்துவிட்டிருந்த மொழி நாவை வந்தடைவதற்காக அவனுள் எங்கோ நின்று தவித்தது. விழிகளில் மட்டும் உணர்வுகள் கூர் கொண்டெழ அவன் உடல் அசையாமல் அமர்ந்திருந்தது.


நீண்ட கால்களை சுண்ணப்பரப்பின்மீது எடுத்து வைத்து அவர் அவனருகே வந்து நின்றார். அவருடன் தொற்றிக்கொண்டதென வெளியிலிருந்து உள்ளே வந்த வெண்ணிற ஒளி குகையறையை நிறைத்து ஒவ்வொரு நீர்த்துளியையும் வெண்சுடராக்கியது. “அருகன் அடி வாழ்க!” என்று இனிய மென்குரலில் அவர் சொன்னார். “அருகர் சொல் வாழ்க!”


எண்ணியிராத கணத்தில் தடையுடைத்து நாவிலிருந்து தெறித்தது அவன் மொழி. “தூயவரே! தாங்களா…? தங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று அவன் சொன்னான். நேமிநாதர் புன்னகையுடன் “நீ இங்கிருப்பதை அறிந்தேன். நாம் மீண்டும் சந்திக்கவேண்டிய இடம் இது” என்று சொன்னார்.


அவன் “எத்தனை காலமாக இங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. இங்கு வந்தது எதற்கென்பதை இப்போது மறந்துவிட்டேன். இங்கிருக்கும் இக்கணத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது அவ்வாறுதான். ஊழ்கமென்பது பல்லாயிரம் மடங்கு களிஎழும் மயக்கு” என்று அவர் சிரித்தபோது வெண்பற்கள் பளீரிட்டன.


மயிர் அகற்றப்பட்ட வெண்ணிறத்தலை ஒளிபட்டு நீலநரம்புகளுடன் மண்டையோட்டு வளைவுகளுடன் வெண்பளிங்கு உருள்கல் போல தெரிந்தது. வடித்து நீட்டப்பட்ட காது. தோள் தொட்டு தழைந்தது. கூர்கொண்ட நீள்மூக்கு. செவ்விதழ் குமிண் உதடு. இறுகிய பெருந்தோள்கள். தாள்தொட நீண்டிறங்கிய கைகள்.  குறுகிய இடை அகன்று நீண்டு நிலம் தொட்டு நின்றிருந்த நெடுங்கால்கள். அருகர்களுக்குரிய உடல். அவ்வுடலிலேயே அவர்கள் நிகழமுடியும்.


“தங்களை ரைவத மலையில் பார்த்து மீண்டபோது இருந்த அதே தோற்றத்தில் இருக்கிறீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “இது நான் வீடுபேறடைந்தபோது இருந்த தோற்றம். விழையும்போது இத்தோற்றத்துக்குள் நான் புகுந்துகொள்ள முடியும்” என்றார் நேமிநாதர். “தாங்கள் எங்கிருக்கிறீர்கள் இப்போது?” என்று அர்ஜுனன் கேட்டான். “கால இடத்தில் இருந்த எல்லை உதிர்த்து இப்புடவி முழுக்க பரவி எங்குமிலாதிருக்கிறேன். எங்குமிருக்கும் ஒன்றாகவும் இருக்கிறேன். இது என் வானத்தோற்றம். என்னில் எழுந்தது துளி வானம்” என்று அவர் சொன்னார்.


அர்ஜுனன் கைகூப்பினான். அவர் அர்ஜுனனின் அருகில் அமர்ந்தார். “இங்கு நீ வந்திருப்பது படைக்கலம் பெறுவதற்காக. இளைய பாண்டவனே, இந்திரகீலம் என்னும் இம்மலையைப்பற்றி நீ அறிந்திருக்கிறாயா? மண்ணில் இருந்து நெடுந்தொலைவில் இரண்டின்மை பெருகிப்பரந்த விண்ணுக்கருகே அமைந்துள்ளது இம்மலைமுடி. இதை அத்வைதகம் என்பார்கள். இங்கு ஒரு கை ஓசை மட்டுமே எழும். எவ்வொலிக்கும் எதிரொலி இல்லா உச்சம் இது.”


அப்போதுதான் அதை அர்ஜுனன் உணர்ந்தான். “ஆம், இங்கு வந்தது முதல் அவ்வேறுபாட்டை நான் உணர்ந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் தெளிந்தேன்” என்றான். “ஊடும் பாவுமென பின்னி கீழே புடவிப்பெருக்கை நெய்துள்ளன விசையிருமைகள். இருளும் ஒளியும், கருணையும் கொலையும், நன்றும் தீதும், அறமும் மறமும், இருத்தலும் இன்மையுமென இருபால் திரிபால் ஆனது அப்புவி. இங்கு அவற்றில் ஒன்று மட்டுமே உள்ளது. ஒளி, கருணை, நன்று, அறம், அன்பு ஆதல். இங்கு நீ எதையும் வெல்வதற்கும் கொள்வதற்கும் இல்லை. இங்கு உனக்கு எதிர்நிலையே இல்லை.”


“இம்முழுமையை வந்தடைந்தபின் திரும்பிப்பார்த்தால் அங்குள்ள வாழ்க்கை வீண் கனவென்று தெரியும். வருக!” என்றார். அர்ஜுனன் “நான் எந்தையைப்பார்க்கும் பொருட்டு இங்கு வந்தேன்” என்றான். “ஆம் இது இந்திரனின் நிலம். ஆனால் இங்கு எழுந்தருளும் இந்திரன் விழைவின் தெய்வம். இங்கு இவ்வாறு அமைவதனால்தான் அங்கு அவ்வாறு அமைகிறான்” என்றார் நேமிநாதர் “என்னுடன் வருக! கீழே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் உனக்குக் காட்டுகிறேன்” என்றார். அர்ஜுனன் தயங்க அவர் தன்  கைகளை நீட்டி அவனைப்பற்றினார். “எழுக!” என்றார். அவன் எழுந்துகொண்டான்.


“நீ இங்கு வந்தது நன்று. ஏழு பிறவிகளில் எய்திய நிலைகளின் உச்சம் இது. நீ இங்கு வருவது முன்பு ரைவத மலைக்கு வந்தபோதே முன்குறிக்கப்பட்டுவிட்டது. பாண்டவனே, விற்தொழில் கற்று கடந்து அதன் எல்லையை அன்றே நீ அறிந்திருந்தாய். தன் படைக்கலம் பொருளற்றதாக ஆவதை ஒரு கணத்தில் உணர்ந்த பின்னரே பெருவீரன் பிறக்கிறான்.”


அர்ஜுனன் “ஆம், அன்று அறிந்தேன். கொல்லாமை என்பதே கொலைத்தொழிலின் உச்சம் என்று. அன்று தொடங்கியது இப்பயணம்” என்றான். “முதற்காலடி ரைவதத்திலிருந்து எடுத்து வைத்தாய். இறுதிக்காலடியை இங்கு வைத்திருக்கிறாய். வருக, அங்கு உனக்காக காத்திருக்கிறார்கள்.” “எவர்?” என்று அவன் நடுங்கும் குரலில் கேட்டான். “வருக!” என்றபின் மீண்டும் புன்னகைத்தார்.


அவரது கைப்பிடிக்குள் அடங்கியது அவன் கை. அவன் எழுந்து நடந்தான். நீர் ஓடி தசைப்பரப்பென வெம்மையும் வழுவழுப்பும் கொண்டிருந்த சுண்ணப்பாறைகளினூடாக அவன் நடந்தான். நீராவி நிறைந்திருந்த  குகைக்குள்ளிருந்து வெளியே சென்று நீராவி குளிர்ந்து புகையென்றாகிச் சூழ்ந்த ஊற்று விளிம்பைக் கடந்ததும் இந்திரகீலத்தின் மீது வளைந்து நின்றிருந்த ஏழுவண்ண விண்வில்லை பார்த்தான்.


“எந்தையின் வில்” என்று சொல்லி இரு கைகளையும் விரித்தான் அர்ஜுனன். உவகையில் விழிநீர் துளிர்த்தது. “எந்தையின் பேருருவம்” என்றான். “வருக!” என்று அவனைத் தொட்டு அழைத்தார் நேமிநாதர். பன்னிரு முறை காலெடுத்து வைத்ததும் அவ்வானவில் மலையடுக்குக்குக் கீழே மாபெரும் வட்டமாக மாறிவிட்டிருப்பதை கண்டான். திகைத்து சொல்மறந்து நின்றான். கைகள் சோர்ந்து விழுந்தன.


“இந்திரனின் முற்றுருவம் இது. முடிவிலா ஆழிச்சுழற்சி. தன் விழைவுத் தோற்றத்தை துறவுத்தோற்றத்தால் முழுமை செய்து கொண்டிருக்கிறான்” என்றார் நேமிநாதர். அவர்களுக்கு இருபுறமும் ஒளிகொண்டு நின்றிருந்த வெண்முகில்திரைகளுக்கு அப்பாலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.


உவகையும் பதற்றமும் நிலைகொள்ளாமையுமாக அவன் அம்முகங்களை மாறிமாறி நோக்கினான். “இங்கிருக்கிறார்களா இவர்கள் அனைவரும்…?” என்றான். அவர் புன்னகைத்து “எங்குமிருக்க அவர்களால் இயலும். இங்கிருப்பதும் அவ்வாறே” என்றார். ஒளிமிக்க முகங்கள். கருணை மலர்ந்த விழிகள். கைகூப்பி “எந்தையரே” என்றான். “நீ வந்திருக்கும் இடம் இனியது. உன்னுள் எஞ்சியிருக்கும் அனைத்து படைக்கலங்களையும் கைவிடு. அந்த ஒளிரும் ஆழியை ஏந்தி முழுமை கொள்” என்று நேமிநாதர் சொன்னார்.


அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த முகங்களை மாறிமாறி நோக்கியபடி பலமுறை சொல்லெடுக்க முயன்றான். “துறந்து தணிந்து மறைந்து அருகர்கள் அடைவதை அடைந்து வென்று நின்று நீ எய்தினாய். கடந்தவனையே மாவீரன் என்கின்றனர்” என்றார் நேமிநாதர். “இங்கு அமைவது மண் எழுந்து மலைமுடியாவதுபோல.”


அவன் உள்ளத்தில் நால்வரும் கடந்துசென்றனர். அதை அறிந்தவர்போல “இங்கு வருக! இங்கிருந்து மூன்றடி தொலைவு அந்த பொன்னிறவரிக்கு. முதலடியில் உன் படைக்கலங்களை கைவிடுக! இரண்டாவது அடியில் அப்படைக்கலங்களை தக்கவைத்திருக்கும் அச்சத்தை கைவிடுக! மூன்றாவது காலடியில் அவ்வச்சமென தன்னை காட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை கைவிடுக! அங்கு கீழே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று உனக்குக் காட்டுகிறேன்” என்று அவன் தோளில் அவர் கையை வைத்தார். “திரும்புக, நோக்குக!”


அறியாது தலைதிருப்பி அதற்கு முந்தைய கணமே திரும்பிக்கொண்டு “இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “நான் அங்கு நோக்கவிழையவில்லை.” அவர் “நீ வாழ்ந்த உலகு அது. அங்கிருந்து எழுந்துள்ளாய்” என்றார். “நான் அங்கு மீளவே விழைகிறேன். அது பொருளிழப்பதை விரும்பவில்லை.” நேமிநாதர் “இனியவனே, இங்கிருந்து மீண்டு அங்கு செல்வதென்பது மடமை” என்றார்.


அர்ஜுனன் “ஆம், இங்கிருந்து திரும்புவது பெரும் வீழ்ச்சி. ஆனால் சிலதருணங்களில் நாம் சிறியவற்றையே தெரிவுசெய்கிறோம்” என்றான். நேமிநாதர் “அங்கு உன்னை கவர்வதென்ன? இவையனைத்தையும் துறந்து அங்கு நீ சென்று மகிழப்போவதுதான் எது?” என்றார்.


“அங்கு என் தோழர் இருக்கிறார்” என்று அவன் சொன்னான். நேமிநாதர் புன்னகையில் அவன் நன்கு அறிந்த ஓர் ஒளி கடந்துசென்றது. “இப்பெருநிலையையும் நான் அவருக்காக உதறவே விரும்புகிறேன்.” அவர் “அவன் உழலும் ஆழிச்சுழற்சியை நீ அறியமாட்டாய். அங்கு எய்துவதென்பது ஏதுமில்லை. இழத்தல் என்பதே அவன் ஊழென்று முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது” என்றார்.


“நான் அவருடன் இருக்கவும் இழக்கவுமே விழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். கனிந்த கண்களுடன் விண்ணிலிருந்து என நேமிநாதர் அவன் மேல் குனிந்து கேட்டார் “நீ இழக்கவிருப்பது என்னவென்றறிவாயா?” அர்ஜுனன் “ஆம், இழப்பு என்பது ஒரு தொடக்கமே. ஓர் இழப்பு பிறிதொன்றை கொண்டு வருகிறது, நீர் நீருக்கு வழியமைப்பதுபோல. நான் அனைத்தையும் இழப்பேன் என்று அறிகிறேன்.”


அவர் கண்கள் மேலும் கனிந்தன. “ஆம், அவன் முற்றிலும் இழப்பான். அவன் இழப்புக்கு இணையானதே உனக்கும் நிகழும்.” அர்ஜுனன் “அவருக்கு இணையாக எனக்கும்  நிகழவேண்டுமென்பதே என் விழைவு” என்று சொன்னான். அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார். “அருள்க, அருகரே!” என்றான் அர்ஜுனன். “நான்  இங்கு வந்ததே அவருக்கு நிகரானவனாக ஆகும்பொருட்டுதான்.”


“இங்கு நீ கொள்ள வந்த படைக்கலம் எது?” என்று அவர் கேட்டார். “எப்படைக்கலம் அவனுக்கு இணையாக என்னை நிறுத்துமோ அது. ஒருகணமேனும் அவர் முன் என்னை தணியச் செய்யாத ஆற்றலுள்ளது” என்றான். அவர் புன்னகைத்து “அது உனக்கு அமைவதாக!” என்றார். அர்ஜுனன் கைகூப்ப ஒளிரும் விழிகளுடன் அவர்கள் அவனை வாழ்த்தினர்.


“விடைகொடுங்கள்! நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்று குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் தலைமேல் கைவைத்து “நன்று! படைக்கலங்களில் முதன்மையானது இன்று உன்னால் அடையப்பட்டது. அது படைக்கலங்களில் இறுதியாகவே எடுக்கப்படவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆணை” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி வெம்மை கொண்டு நின்ற சுண்ணப்பாறைகள் மேல் கால்வைத்து தாவி நடந்து முகில் திரைக்குள் மறைந்தார்.  முகிலொளிக்குள் அவர்கள் ஒவ்வொருவராக கரைந்தழிந்தனர்.


அவர் காலடி பட்ட பாறைகளில் பதிந்த ஈரம் விழிமுன் உலர்ந்து மறைவதை அவன் கண்டான். அது முன்னரே கண்ட பாதத்தடமென எண்ணி அவன் உள்ளம் துணுக்குற்றது. பின்பு வழுக்கும் பாறைகளில் கால் வைத்து தடுமாறி ஓரிரு முறை முழங்கால் அடிபட விழுந்து எழுந்து மீண்டும் அக்குகைக்குள்ளேயே சென்றான். கருவறைக்குள் மீளப்புகுந்தது போல் அவன் உள்ளம் இளைப்பாறல் கொண்டது. விழி சொக்கும் துயில் வந்து மேலே படிந்தது. உடலின் அனைத்து தசைகளும் விசையழிந்தன.


கைகளை ஊன்றியபடி விலங்குபோல் நடந்து தன் பீடத்தை அடைந்தான். அமர்ந்தமர்ந்து அவன் உடல்வடிவில் பள்ளம் கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்றதும் அவ்வின்மையை தன்னில் வைத்திருந்தது. அதை அவன் உடல் நிறைத்ததும் வெண்பஞ்சுச் சேக்கையென குழைந்து அவனை வாங்கிக்கொண்டது. கால்களை நீட்டி கைகளை மடியில் வைத்து உடலை மெல்லத்தளர்த்தியபோது இமைகள் தளர்ந்து மூடிக் கொண்டன.


மெல்ல துயில் வந்து மேலே மென்மையான எடையுடன்  விழுந்துகொண்டே இருந்தது. அவன் அருகே கந்தர்வனின் குரல் கேட்டது. “இங்கு அவரே இந்திரனென வருகிறார்.” அவன் விழி திறந்தான். “யார்?” என்றான். பிரபாஹாசன் “அவர் சற்றுமுன் தன்னை அவ்வாறு காட்டி மீண்டார்” என்றான்.


அவன் கந்தர்வனின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். “நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம், இளைய பாண்டவரே. உங்கள் படைக்கலங்கள் நான்கு திசைகளிலும் கனிந்துள்ளன. சென்று அவற்றை கொள்க! நிலத்தமைவதையெல்லாம் வெல்க!” என்றான் கந்தர்வன்.


[ 21 ]


கந்தர்வனாகிய பிரபாஹாசனால் நாரை வடிவில் வழிகாட்டப்பட்டு இந்திரகீல மலையிலிருந்து அர்ஜுனன் கீழிறங்கி வந்தான். இறகென உதிர்வதுபோலவும் நீர்த்துளியென மண் நோக்கி தொடுக்கப்பட்டிருப்பதாகவும் உணர்ந்தான். அவன் தன்னை அறிந்தபோது நீலாக்ரத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். வாழ்த்துரைக்கும் ஒற்றைச்சொல்லுடன் வானில் அவனைக்கடந்து சென்றான் நாரை வடிவ கந்தர்வன்.


உச்சித் தலையை குளிர் ஒன்று முட்டி விதிர்க்கவைக்க தான் இருக்கும் இடத்தை உணர்ந்து எதிரே எழுந்து முன்பக்கமிருந்த இந்திரகீலத்தை பார்த்தான். அங்கு நிகழ்ந்தவை அனைத்தும் கனவுக் காட்சிகள் என ஒன்றன்மேல் ஒன்றென படிந்து நீர்ப்பாவைகள் போல் குழைந்து சுழியாகி புள்ளியாகி ஒளிந்தணைந்தன. ஆம் என்றது சித்தச்சொல். ஆம் ஆம் ஆம் என்றது அதன் அடியிலிருந்த ஆழம்.


மலைகளிலிருந்து  இறங்கி மண்ணுக்கு வந்தான். நிலம் தொட்டபோது அவன் ஏறிய ஆறு மலைகளும் வெறும் உளமயக்கோ என பின்னால் அலை எழுந்து வான் வருடி நின்றன. இடையில் கைவைத்து அந்த மலைகளை நோக்கினான்.  நீலமலைகள். காற்றில் அலைபாயும் திரைகள். புயல்பட்டால் சுருண்டெழுந்து பறந்துவிடக்கூடியவை. மாபெரும் நீலமலர் ஒன்றின் இதழ்கள்.


மலைகளை ஏறி உச்சி செல்லும்படி தன்னை உந்தியது எது என்று வினவிக்கொண்டான். தொலைவில் எங்கிருந்தோ விழவு ஒன்றின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. முழவோசையும் அணியும் கலந்த இசை மேல் துடித்தன  குரல்கள். வாழ்வின் ஓசை. அதிலிருந்து தப்பிச்சென்றிருக்கிறேன். இங்குளவற்றின் மெய்மை அங்குள்ளது என்று எவர் சொன்னது? இங்கு அது கலந்து பின்னி சிக்கி அறியவொண்ணாமை கொண்டுள்ளது. எனவே அங்கு அது தூயதென இருக்கவேண்டும் என எண்ணுகிறது போலும் மானுடம். இங்கு பெருநதியாவது அங்கே சிறு ஊற்றாக இருப்பது போல. வானில் கிளைவிரிவாவது மண்ணுக்குள் விதைத்துளியாவதுபோல.


ஒவ்வொரு அடியையும் வாழ்வைத் துறந்து துறந்து வைத்து மண்ணை அறியாத அவ்வுச்சிக்கு சென்று நின்றேன். அங்கிருந்த தேவனிடம் மண்ணைத் துறக்கமாட்டேன் என்று வஞ்சினம் உரைத்து மீண்டிருக்கிறேன். எண்ணியிராத கணத்தில் அவன் வெடித்து நகைக்கத் தொடங்கினான். அந்நகைப்பொலி சூழ்ந்திருந்த பாறைகளில் பட்டு எதிரொலித்து அவனைச் சூழ்ந்தபோது மேலும் மேலும் நகைப்பு பொங்கி எழுந்தது.


அவனே அதைக்கேட்டு துணுக்குற்றபோதிலும்கூட அவனால் அதை நிறுத்த முடியவில்லை. கைகளால் தொடையையும் அருகிருந்த மரத்தையும் அறைந்து வயிற்றை பற்றிக்கொண்டு குனிந்தும் நிமிர்ந்தும் உரக்க நகைத்தான். தளர்ந்து கையூன்றி நிலத்தில் அமர்ந்து வானை நோக்கியபடி சிரித்து உடல் அதிர்ந்தான். மூச்சு ஒழிந்தபோது நகைப்பை நிறுத்தி மெல்ல எழுந்து மீண்டும் நகைப்பெழ ஓசையின்றி உடல் குலுங்கினான்.


ஓய்ந்து தளர்ந்து அவ்வூர் நோக்கி செல்கையில் அவ்வப்போது எழுந்த சிரிப்பை தன்னுடலில் இருந்து எழுந்ததென அறியாதவன்போல் திகைப்புடன் அவனே பார்த்தான். சிரிப்பது எதற்காக? அவ்வாறு எண்ணியதுமே அவ்வெண்ணமே சிரிப்பாக வெளிப்படுவது எவ்வாறு?


ஊரிலிருந்து மலைகளை நோக்கி வந்த ஒற்றையடிப்பாதையில் அருகே காட்டுக்குள் கனிந்திருந்த பழங்களையும் மரக்கிளையில்  எருமையகிடெனத் தொங்கிய தேன் கூடொன்றையும் கொய்து உண்டபடி அவன் நடந்தான். எதிரே இள முனிவனொருவன் நடந்து வருவதைக் கண்டான். அவன் நடையிலிருந்த துடிப்பும் முகத்தில் தெரிந்த துறவின் இறுக்கமும் அவன் செல்வதெங்கு என்று காட்டியது. சற்று ஓய்ந்திருந்த சிரிப்பு வெளிப்படத்தொடங்கியது.


மீண்டும் மீண்டும் என சிரிப்பு அவன் உடலை உலுக்கியது. அவன் சிரிப்பொலியை தொலைவிலேயே கேட்ட இளமுனிவன் நடை தாழ்த்தாமல் விழிவிலக்கி அணுகி வந்தான். குரல் தொடும் தொலைவுக்கு அவன் வந்ததும் “உத்தமரே, தாங்கள் மலைகளுக்கா செல்கிறீர்கள்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவன் கடந்து செல்ல அவன் முதுகை நோக்கி “மலைகளில் மெய்மை கனிந்திருக்கிறது. குறவர்கள் அதை மலைத்தேன் என்கிறார்கள். கரடிகள் அதை இனிமை என்கின்றன. முனிவர்கள் அதன் கீழ் கால்மடித்து அமர்ந்து கைகுவித்து அது உதிர்க்காத தேனை அருந்துகிறார்கள்” என்றான்.


இளமுனிவன் நடை தளர்வதை அர்ஜுனன் கண்டான். “ஏழு மலைகள், உத்தமரே. ஏழாவது மலைமேல் உள்ளது மாற்றில்லாத மெய்மை. மாற்றில்லாத மெய்மையால் மெய்மையை அறியமுடியாதென்பதனால் அதுவே முழுமை என்றறிக!” முனிவனின் கால் சற்று தடுக்கியது போல் தெரிந்தது. வெடித்துச் சிரித்தபடி அர்ஜுனன் அங்கேயே நின்று கையாட்டி “வென்று வருக, முனிவரே! அங்கு பிரபாஹாசன் என்னும் கந்தர்வன் இருக்கிறான். இந்திரனின் தோழன். அங்கு உங்களுக்கு வேண்டிய ஒருவராக மாற்றுருக்கொண்டு இந்திரன் எழுகிறான். உங்கள் தந்தையாக இருக்கக்கூடும் அது. இறங்கி ஊருக்குச் சென்று மணம் செய்துகொண்டு மனைவாழ்வு நாடு மூடா என்று அவர் செல்வதே மெய்மை என்று உணர்க!”


முனிவன் ஒலிவட்டத்தைக் கடந்து அப்பால் சென்று மறைவது வரை குனிந்து அவன் சிரித்துக் கொண்டிருந்தான். பின்பு தள்ளாடும் நடையுடன் களைத்த உடலுடன்  மலையடிவாரத்தில் தேவதாருக்கள் சூழ அமைந்திருந்த ஹிமவாகம் என்னும் சிற்றூரை சென்றடைந்தான். அங்கு ஒரு திருமண விழா நடந்து கொண்டிருந்தது. எடைமிக்க மயிராடையையும் தோல்காலுறைகளையும் அணிந்த இளையோர்  முழவுகளையும் கொம்புகளையும் இசைத்தபடி ஊர்ச் சதுக்கத்தில் நடனமிட்டுக் கொண்டிருந்தனர்.


வட்டவடிவ முற்றம் அது. அதைச்சூழ்ந்திருந்தன வட்டக்கூம்பு வடிவிலான அவர்களின் குடில்கள். அவற்றின் மையத்து உச்சியில் செந்நிறமும் வெண்ணிறமும்கொண்ட கொடிகள் காற்றில் படபடத்தன. கால்கள் சீராக அமைய சுற்றிவந்து ஆடுபவர்களுக்கு நடுவே மரத்தாலான பீடத்தில் மணமகனும் மணமகளும் செம்மயிர்த் தோலாடையும் வெண்மயிர்த்தொப்பியும் பெரிய காலுறைகளும் அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் தலையணியில் பெரிய மலைப்பூக்கள் சூட்டப்பட்டிருந்தன.


அவ்வூரைச் சுற்றி தேவதாரு மரங்களை முட்கொடிகளால் இணைத்துக் கட்டப்பட்ட வேலி இருந்தது. அர்ஜுனன் அதன் மூங்கில் வாயில் படலைப்பற்றியபடி நின்று உள்ளே பார்த்தான். அப்பால் காட்டெருது ஒன்றை தோலுரித்து முக்காலியில் தலைகீழாகக் கட்டி எழாதெரிந்த அனலில் சுட்டுக்கொண்டிருந்தனர். எருதின் உடலை திருப்பித் திருப்பி காட்டி அனலில் ஊன் பொசுங்க வேகவைத்தனர். அருகே அமர்ந்திருந்த நாய்கள் அர்ஜுனனின் நாற்றம் அறிந்து குரைத்தபடி ஓடிவந்தன.


மரக்குடுவைகளில் நுரை புளித்து மேலெழுந்த கள்ளை கொண்டுவந்து பரப்பிக் கொண்டிருந்தவர்கள் அவனை நோக்கினர். ஓரமாக மென்மயிர்க் குவைகளென மயிராடை அணிந்து அமர்ந்திருந்த குழந்தைகளும் முதியவர்களும் எழுந்து நோக்கினர். கையில் ஊன்றிய நீண்ட கழிகளில் கட்டிய சலங்கைகளுடன் ஆடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “பிச்சாடனன்” என்று உரக்க கூவினான். “கிராதன்!” என்றான் இன்னொருவன்.


அர்ஜுனன் இரு கைகளையும் தூக்கி உரக்க “நான் காலபைரவன்! இந்திர கீலத்திலிருந்து இறங்கி வருகிறேன். உங்களுக்கொரு செய்தியுடன் வந்துள்ளேன்!” என்றான். நடனமாடியவர்கள் முகம் கூர்ந்து நின்றனர். முழவும் மணியும் கொம்பும் ஓய்ந்தன. “யார்?” என்று கேட்டபடி அவர்களின் குலத்தலைவன் அருகே வந்தான். மென்மயிர்த்தொப்பியில் மலைக்கழுகின் இறகுகளை அணிந்து தோள்களில் கரடித்தோல் போர்த்தியிருந்தான். கையிலிருந்த நீண்ட கழி மீது  அவன் கொன்ற புலியின் தலையோடு கோரைப்பற்களுடன் விழிகளென அமைந்த வெண்மணிகளுடன் சீறித்தெரிந்தது.


“யார் நீங்கள்?” என்றான் தலைவன். “செய்தி சொல்ல வந்த காலபைரவன்” என்றான் அர்ஜுனன். அர்ஜுனனின் தலையிலிருந்து சடைத்திரிகள் இடைவரைக்கும் தொங்கின. மண்ணும் சாம்பலும் கலந்த உடல் சிதையிலிருந்து எழுந்து வந்ததுபோல் இருந்தது. இடையில் அணிந்திருந்த புலித்தோல் கிழிந்து நைந்து திரிகளென தொங்கியது.


“உள்ளே வருக, காலபைரவரே” என்றான் ஊர்த்தலைவன். இருவர் ஓடி வந்து வாயிலைத் திறந்தனர். அவன் உள்ளே சென்றதும் ஊர்த்தலைவன் அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடி “இன்று எங்கள் குல மைந்தன் மணம் கொள்ளும் நாள். தங்கள் வாழ்த்து அவனுக்கு அமைய வேண்டும்” என்றான்.


ஊர்மன்று நடுவே வந்து நின்ற அர்ஜுனன் கையை நீட்டி “ஊன்…” என்றான். அவர்களில் ஒருவன் வெந்து கொண்டிருந்த எருதின் தொடையிலிருந்து தசைப்பகுதியை சிறு கோடரியால் வெட்டி எடுத்தபடி ஓடிவந்து அவனிடம் கொடுத்தான். மறுகையை நீட்டி “கள்” என்றான். மரக்குடுவைகளில் இருந்து மூங்கில் குவளைகளில் ஊற்றி அளிக்கப்பட்டது.


பசித்த வேங்கை என உறுமியபடி ஊனை உண்டு கள்ளை அருந்தியபின் கைகளை விரித்து பெருங்குரலில் “மண்ணவரே” என்று அவன் முழங்கினான். “மானுடரே, கேளுங்கள். உண்ணுங்கள், குடியுங்கள், புணருங்கள், கொல்லுங்கள், வென்று மேற்செல்லுங்கள். வாழ்வதற்கு அப்பால் வாழும் தெய்வமில்லை. இருப்பதற்கு அப்பால் இருப்பென்று ஒன்றுமில்லை. மகிழ்வதன்றி எய்துவது ஏதுமில்லை. இது தெய்வங்களின் ஆணை. இன்பம் ஒன்றே விழுப்பொருள். இதுவே நீலமலைகளின் செய்தி.”


கூடிநின்ற மலை மக்கள் தங்கள் குரலை உயர்த்தி “ஆம், அவ்வாறே” என்று கூச்சலிட்டனர். “முழவுகள் முழங்கட்டும்!” என்று கையை உயர்த்தி அவன் கூவினான். “கொம்புகள் பிளிறட்டும்…” துடித்தெழுந்த தாளத்துடன் இயல்பாக இணைந்துகொண்டு அவன் தாண்டவம் செய்யலானான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2016 11:30

November 1, 2016

இந்தியா குறித்த ஏளனம்…

10-new-delhi


 


அன்புள்ள ஜெமோ,


இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான்.  இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை.  பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.  நான் அமெரிக்க’வில் ஒரு காட்டில் படித்தவன், அங்கு இந்தியர்கள் அதிகம் இல்லாத்தினால், இவர்களுடன் பழகும் பழக்கம் பட்டவன்.


இது உண்மை தானா இல்லை ஏன் இப்படி என்று எங்களுக்கு சொல்ல முடியுமா ?


1) இந்தியா ஏழை நாடு.


2) இந்தியா சுகாதாரம் அற்ற நாடு. இந்தியர்கள் சுத்தமற்றவர்கள்.


3) இந்தியர்கள் நாற்றம் பிடித்தவர்கள், குளிப்பதில்லை. இதை அவர்கள் ஒரு வெறுப்பாக சொல்ல வில்லை. உண்மையிலேயே சொல்கிறார்கள்.  எனக்கு சீன ( நான் சைவம் ) உணவகத்துக்கு போனால் என் முகம் எப்படி மாறுமோ அப்படி இவர்கள் இந்தியர்களின் உணவு ( முக்கியமாக மசாலா ) வாசத்தை கண்டு முகம் சுழிகின்றனர். இந்தியா உணவை உண்டாலும், இவர்கள் அலுவலகத்தில்  body spray அடித்து, mint எடுத்து கொள்கிறார்கள். சில இந்தியர்கள் பக்கத்தில் வந்து பேசும் பொழுது Mint தருவார்கள்.  நீ நாற்றம் அடிக்கிறாய் என்பதை மறைமுகமாக சொல்லும் உத்தி அது ( என் கற்பனை அல்ல இந்த உத்தியை பற்றி ஒருவரின் மூலமாக கேட்டது ) . நம் இந்திய மக்களும் வெள்ளந்தியாக சிரித்து கொண்டு வாங்கி கொள்வார்கள்.


சீன , ஜப்பானிய மக்களுடன் எளிமையாக பழகுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியா விட்டாலும்.  இந்தியர்கள் என்றால் ஏளனம் தான். இந்தியர்கள் நிறைய மெனக்கிட வேண்டி உள்ளது. ஒரு Dance floor சென்றால் அங்கு பல இந்தியர்கள் வெட்டியாக யாரும் இல்லாமல் ஒரு கண்காட்சி பொருளாகவே உள்ளனர். என்னை சொல்ல வில்லை, நான் என்னை மாற்றி கொண்டேன். எனக்கு இந்த பிரச்சனை இல்லாவிடிலும், சக இந்தியர்களை ஏளனமாக பார்க்கும் போது கோவம் வருகிறது. இந்தியாவை பற்றி இப்படி சொல்லும் பொழுது , என்ன சொல்வது என்று தெரிவதில்லை.  உங்கள் பார்வை தளம் அதிகம் என்பதினால், உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா ?


நன்றி,


பிரகாஷ்




அன்புள்ள பிரகாஷ்,


நான் ஓரளவே வெளிநாட்டுப் பயணங்களைச் செய்திருக்கிறேன். ஓரளவே வெளிநாட்டினருடன் பழகியிருக்கிறேன். இந்த எல்லைக்குள் நின்று என் கவனிப்புகளைச் சொல்ல முயல்கிறேன்.


பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும். நமகு அமெரிக்கா பற்றி என்ன மனப்பதிவு இருக்கிறது? செல்வந்த நாடு. கருத்துச் சுதந்திரம் கொண்ட நாடு. கட்டற்ற பாலியல் வழக்கங்களின் நாடு. ஆனால் அமெரிக்காவை நாம் அறியும்போது இந்த நம்பிக்கைகள் பொய்யானவை என்று அறிகிறோம்.


அமெரிக்காவில் மதிய உணவுக்கு மட்டுமே பள்ளிக்கு வரும் பல லட்சம் பேர் உள்ளனர். அன்னதான சத்திரங்கள் உள்ளன. அவற்றை நானே சென்று பார்த்திருக்கிறேன் அங்கே கருத்துச் சுதந்திரம் மிக மிக வரையறுக்கப்பட்டது. அதை நான் அறிந்திருக்கிறேன்.அத்தேசத்தில் பாதிப்பேர் கட்டுப்பெட்டிகள்…


நமக்கு சீனர்களைப் பற்றி, பாகிஸ்தான் பற்றி என்ன மனப்பிம்பம் இருக்கிறதென்று பார்த்தாலும் இம்மாதிரியான தவறான சித்திரமே கிடைக்கும். அதேபோலத்தான் அவர்களும் நம்மைப்பற்றி நினைப்பார்கள் இல்லையா?  இது மிக இயல்பான ஒன்று.


இந்த மனப்பிம்பங்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்தால் வரலாற்றுப்பின்னணி ஒன்றை கண்டுகொள்ள முடியும். நான் ஆய்வுமுடிவாகச் சொல்லவில்லை, இலக்கியப்படைப்புகள் அளித்த செய்திதான். நமக்கு நம்மை அடக்கி ஆண்டவர்கள் என்பதனால் பிரிட்டிஷார்மீது ஒரு மயக்கம் உண்டு. அவர்களின் கறாரானதன்மை, மிகையின்மை, மரபார்ந்த தன்மை, கட்டுப்பெட்டித்தனம் போன்ற பல விக்டோரிய யுகத்துப் பண்புகளை இன்றும் அவர்கள் மீது ஏற்றிவைத்து பார்க்கிறோம்.


அமெரிக்கா நமக்கு பிரிட்டிஷாருக்கு நேர் எதிரான ஒன்றாகக் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே இன்றைய மனப்பிம்பம் உருவாகியிருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட காலம் முதலே நாம் அமெரிக்காவை பிரிட்டனுக்கு நேர் எதிரான நாடு என எண்ண ஆரம்பித்துவிட்டோம்.


மேலும் இன்று நமக்கு ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் இருக்கும் மனப்பிம்பம் என்பது இரண்டாம் உலகப்போரால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போதுதான் இந்தியாவின் நடுத்தர வற்கம் உலகநாடுகளைப் பற்றிக் கேள்விப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் செய்திகளால் நெருக்கமாக பின் தொடரப்பட்ட போர்.


அதனூடாக உருவான மனச்சித்திரம் பல்வேறு வகையில் ஊடகங்கள் மூலம், உரையாடல்கள் மூலம் இளமையிலேயே நமக்கு அளிக்கப்படுகிறது. ஜெர்மனி என்றால் கட்டுப்பாடான உறுதியான ராணுவத்தன்மை கொண்ட நாடு. பிரான்ஸ் ஷோக்கான நாடு. இத்தாலி கட்டுப்பாடற்ற நாடு…இப்படியெல்லாம். பிறகு வரும் சமகாலச் செய்திகள் மூலம் அது சற்றே திருத்தப்படுகிறது. சீனா, ஜப்பான், ருஷ்யா போன்ற நாடுகளைப்பற்றிய சித்திரம் நமக்கு கொஞ்சம் மாறியது அவ்வாறே.


இந்தப்பிம்பங்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை. பலசமயம் பொய்யானவை. அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்டவையும் உண்டு தற்செயலாக உருவானவையும் உண்டு. நீங்கள் ஏதாவது ஓர் ஆப்ரிக்க நாட்டுக்கு வேலைக்குச் செல்கிறீர்கள் என்று சொல்லிப்பாருங்கள். ”அய்யய்யோ” என்று பதறுவார்கள் சக இந்தியர்கள். எப்படி அந்த எதிர்மறைச் சித்திரம் உருவாகியது?


‘பிறன்’ என்று நாம் உருவகிக்கும் எவரையும் பற்றி எதிர்மறையாக எண்ணுவது பழங்குடிச் சமூக வாழ்க்கையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள ஒரு மனக்கூறு. பிறர் அனைவருமே நம்மை விட தாழ்ந்தவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள் என்னும் எண்ணம். ஒரு சமூகம் எந்த அளவுக்கு பழங்குடித்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த மனநிலையும் காணப்படுகிறது.


ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? குளிக்காத, சுத்தமற்ற மக்கள். பண்பாடற்று கூச்சலிடுபவர்கள். மொட்டையாக சாரமற்று அரட்டையடித்துக் கொண்டே இருப்பவர்கள்.. தமிழர்கள் மலையாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? சதிகார மனமுடைய தந்திரமான மக்கள். இங்கிதமில்லாதவர்கள், ஆணவம் மிக்கவர்கள், தனிநபர் ஒழுக்கம் இல்லாதவர்கள்.மலையாளப்பெண்கள் எல்லாம் ஜில்பான்ஸிகள்.


சரி , நம்முடைய சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மனப்பிம்பங்கள் உள்ளன? நம் அருகே வாழும் ஒரு பிற சாதியை நாம் எப்படி மதிப்பிட்டிருக்கிறோம்? சுத்தமற்றவர்கள், மோட்டாவானவர்கள், தந்திரமானவர்கள், பொறுப்பில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் இப்படி ஏதேனும் ஒரு எதிர்மறைச் சித்திரமே நம்மிடம் இருக்கும் இல்லையா?


நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நம் ஊரிலேயே உள்ள இன்னொரு சாதியினருடைய அன்றாட வாழ்க்கை, அவர்களின் சடங்குகள் ஆசாரங்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. சந்தேகமிருந்தால் நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள இன்னொரு சாதியைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று பாருங்கள்.


மேலைநாடுகள்  இந்தியா மற்றும் ஆப்ரிக்காவைப்பற்றி  கொண்டிருக்கும் மனச்சித்திரம் எப்படி உருவானது? அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. இந்நாடுகளை காலனியாக்கி ஆண்டவர்கள் அவர்கள். இந்நாடுகளை நிரந்தரமாக தங்கள் பிடியிலேயே வைத்திருக்க கிறித்தவ மதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்.


ஆகவே, இந்நாடுகளின்பண்பாடுகளை கீழானது என்றும் அவர்களை சீர்திருத்தி முன்னேற்றும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்றும் அந்த நல்லெண்ணத்துடன் தான் இவர்களை காலனிகளாக்கி வைத்திருக்கிறோம் என்றும் இவர்கள் வரலாறுகளை உருவாக்கினார்கள். இது ‘வெள்ளையனின் பொறுப்பு’ என்று சொல்லப்பட்டது [ White man’s burden ]


ஆரம்பகால மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்தியாவைப்பற்றி இப்படிப்பட்ட மட்டப்படுத்தும் சித்திரத்தையே உருவாக்கினார்கள். எழுத்தாளர்கள்கூட இத்தகைய நம்பிக்கைகளை எழுதினார்கள். வெள்ளையனின் பொறுப்பு என்ற சொல்லாட்சியே மாபெரும் எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் உருவாக்கியது.


அதேபோல கிறித்தவ மதப்பரப்புநர்கள் தொடர்ச்சியாக இந்தியாவின் மரபு, மதம், பண்பாடு குறித்து மிக எதிர்மறையான சித்திரத்தையே அங்கே அளித்தார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான அஞ்ஞானிகளுக்கு கிறித்தவ ஒளியை அளிக்கவேண்டியதன் தேவையைப்பற்றி பேசினார்கள். இந்தியாவிலும் இவர்கள் மதம் மாற்றிய சாதிகள் அனைத்துக்கும் இறந்தகாலமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.


‘கிறிஸ்துவின் சீடர்களான இவர்களுக்கு இந்துக்கள் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறித்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் பிசாசுக்கள் என்று நம்ப கற்றுக்கொடுக்கிறார்களே’ என்று மனம் வெதும்பினார் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்று.


‘பாரதேசம் முழுக்க எழுந்து நின்று இந்துமகாசமுத்திரத்திற்கு அடியில் உள்ள சேற்றை முழுக்க அள்ளியெடுத்து மேலைநாடுகள் மீது வீசினாலும்கூட நீங்கள் இன்று எங்கள்மேல் வீசும் சேற்றுக்கு பதில் செய்வதாக ஆகாது’ என்று விவேகானந்தர் சொல்கிறார்


இன்றும் அது தொடர்கிறது. ஒரு சராசரி வெள்ளையக் குழந்தை இந்தியாவைப்பற்றி இத்தகைய சித்திரத்தை பெற்றுக்கொண்டு தான் வளார்ந்து வருகிறது. அதில் இருந்து அது வெளிவருவது கடினம்.


நானே சிக்காகோவில் ஒரு தேவாலயத்தில் இந்தியா பற்றி வைக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து சிறில் அலெக்ஸுக்குக் காட்டினேன். இந்தியாவில் குழந்தைகளை ஆலயங்களில் பலிகொடுக்கிறார்கள்,. முதியவர்களை ஆற்றங்கரைகளில் கைவிடுகிறார்கள் என்றெல்லாம் அது சொன்னது. அவர்களை ஒளிக்குக் கொண்டுவர நிதி கோரியது


நான் பார்த்தவரையுல் மேலைநாடுகளில் யார் மதத்தில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே பிற மனிதர்களை மதிக்கவும் சமானமாக எண்ணவும் முடிகிறது. மதநம்பிக்கை கொண்டவர்கள் பிறரை கீழானவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணி சேவை மட்டுமே செய்ய முடியும்.


சமீபத்தில் ரயிலில் மார்ட்டின் கெர்ஜோ·ப் என்ற டச்சுக்காரரைச் சந்தித்து நண்பரானேன். அவர்தான் இந்த விஷயத்தை மிக உறுதியாகச் சொன்னார். மதமனநிலையை வைத்துக்கொண்டிருக்கும் வரை இந்தியர்களையோ ஆப்ரிக்கர்களையோ பிறரையோ வெள்ளையர்களால் ‘தாங்கிக்கொள்ள’ முடியுமே ஒழிய இயல்பாக சமாமாக எண்ணவும் விரும்பவும் முடியாது என்றார் அவர்.


இவ்வளவுக்கும் பிறகு நம்முடைய சிக்கல்கள் உள்ளன. ‘இந்தியா ஏழை நாடு’ என்றால் அது உண்மைதானே? இன்றும் இந்தியாவின் பெரும்பகுதி அச்சமூட்டும் வறுமையில்தான் மூழ்கிக் கிடக்கிறது. எலிவளை போன்ற வீடுகளில் மெலிந்து கறுத்த மனிதர்கள் நடைபிணங்கள் போல வாழ்கிறார்கள். ஒரு வேளைச் சோறு கொடுக்கப்பட்டால் முண்டியடித்து நூற்றுக்கணக்கில் உயிரை விடுகிறார்கள்.


அந்த வறுமையைக் கண்டு நாம் வெட்க வேண்டும். வேதனை கொள்ளவேண்டும். அந்த வறுமை இல்லை என்று வாதிடுவதையோ அந்த வறுமைக்கு காரணங்கள் கண்டுபிடிப்பதையோ ஒருபோதும் செய்யக்கூடாது. குறைந்தது ஒரு வெள்ளையன் சொல்லும்போதாவது நமக்கு அது உறுத்தட்டுமே.


இந்தியா சுத்தமில்லாத நாடு என்றால் அது மேலும் உண்மை. நான் அறிந்த வரையில் சுகாதார உணர்வே இல்லாத மக்கள் என்றால் இந்தியர்களே. இந்தியாவில் குடியிருப்புகளைச் சுற்றி நான் பார்த்த குப்பைமலைகளை  உலகில் எங்குமே பார்த்ததில்லை. இதில் செல்வம் கல்வி என எதுவுமே விலக்களிப்பதில்லை. ஒரு சர்வதேச விமானநிலையக் கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தேசமக்களில் பாதிப்பேர் தெருக்களில் மலம் கழிக்கிறார்கள். எங்கும் துப்பி வைக்கிறார்கள். இந்திய நகரங்கள் மலைபோலக் குப்பைகள் சூழ்ந்தவை. தலைநகரான டெல்லி உட்பட.


ஆகவே நம் வணிகர்கள் அமெரிக்க ஐரோப்பிய குப்பைகளை இறக்குமதிசெய்து இங்கே நகரங்களில் ஏற்கனவே உள்ள குப்பைமலைகளுடன் சேர்த்துக்கொட்டி பணம் சம்பாதிக்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கீக்கொண்டு அனுமதி கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகள் பேசாமலிருக்கிறார்கள்


சிககோ நகரத்து கக்கூஸ் நாப்கின்கள் தூத்துக்குடிக்கு வந்து தாமிரவருணிக்கரைகளில் கொட்டப்படும்போது நாம் எப்படி சுத்தமான நாடாக இருக்க முடியும்? நம்மை அசுத்தமானவர்கள் என்று சொல்ல சிக்காகோ வாசிகளுக்கு என்ன தகுதி இருக்க முடியும்?


சென்ற வாரம் சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த மாபெரும் குப்பைமலையை அடையாளம் கண்டார்கள். ஆனால் இறக்குமதி செய்தாகிவிட்டது. திருப்பி அனுப்ப முடியாது. தூத்துக்குடி முதல் குமரிவரை கடலோரமாக அவற்றைக் கொட்டி வைப்பார்கள் [சி.பி.எம் ஆட்களிடன் கொடுத்தால் விரும்பி வாங்கி வீட்டுக்குள் கொட்டி வைப்பார்கள். ‘தி இந்து’வில் என் ராம் சீனா இந்தியாவுக்கு ஒரு மாபெரும்  செல்வத்தை அள்ளி தந்திருப்பதாக கட்டுரை வனைவார்]


இந்தநிலையில் உலகிலேயே சுகாதார உணர்வற்ற அசுத்தமான நாடுகளில் ஒன்றுதான் இந்தியா என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறைக்க முடியாது. ஒரு சுற்றுலாப்பயணி ஒருமுறை கன்யாகுமரிக்கு வந்தால் அதன் பின் அவன் சாப்பாட்டு நேரத்தில் இந்தியா என்றே நினைக்க விரும்ப மாட்டான்.


வருடத்துக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு கன்யாகுமரியில் கான்கிரீட் வேலைகள் செய்பவர்கள் மாதம் ஐம்பதாயிரம் செலவிட்டு குப்பையை அள்ளவோ, நான்கு வாட்ச்மேன்களைப் போட்டு மலம்கழிப்பவர்களை தடுக்கவோ முனைவதில்லை. சுற்றுலா அமைச்சரின் சொந்த தொகுதி இது. நமக்கு சுத்த உணர்வில்லை என்பதற்கு மேலதிக ஆதாரம் எதற்கு?


நம்முடைய உணவு வீச்சம் மிக்கது. பொதுவாக பூமத்திய ரேகைநாடுகளின் உணவே காரமும் வாசனையும் மிக்கது. கண்டிப்பாக அது பிறருக்கு கஷ்டமாக இருக்கும். நாம் அதற்காக நம்மை தயாரித்துக்கொள்ளத்தான் வேண்டும்.


ஆக, இந்த எதிர்மறை பிம்பங்களை இயல்பாக எடுத்துக்கொள்வதே நல்ல மன்நிலை. அது மானுட இயல்பு. கூடவே அவ்விமர்சனங்களில் ஏதேனும் உண்மை இருக்குமென்றால் அதை நாம் கருத்திகொண்டு நம்மை திரும்பிப்பாக்கவும்வேண்டும்.


*


ஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு கோணமும் உண்டு. வெறுப்பு அல்லது ஏளனத்தில் இருந்தே இந்த விஷயங்கள் பெரிதாகத் தெரிகின்றன. சென்ற கால்நூற்றாண்டுக்கு முன்னால்வரை சீனாவைப் பற்றி இதைவிட படு மோசமான மனச்சித்திரமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தது. இன்று சீனத்தவர்கள் உலகின் வல்லரசாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் குப்பைமலைகளை அனுப்பும் தகுதி பெற்றுவிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்று சீனாவைப் பற்றிய பிம்பம் மாறிவிட்டது. இன்று சீனன் நாறுவதில்லை.


நாமும் வெல்லும்போது நறுமணம் வீச ஆரம்பிக்கலாம். ஆப்ரிக்காவிற்கு குப்பைகளை அனுப்பி வைக்கலாம். சுத்தமற்ற ஆப்ரிக்கர்களை நோக்கி நமுட்டுப்புன்னகை செய்யலாம்.


ஜெ


 


மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Mar 9, 2010

தொடர்புடைய பதிவுகள்

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)
பெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்
கருணா
குப்பை- கடிதங்கள்
பொருளியல் – கடிதங்கள்
அண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
சாதியும் கதைகளும்
ஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்
குடியரசுதினம்-கடிதங்கள்
ரோடுரோலர் சிந்தனைகள்
பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?
தேசியம்:கடிதங்கள்
காந்தியும் சாதியும்
காந்தியும் இந்தியும்
தேர்தல்:கடிதங்கள்
தனியார் மயம், மேலும் கடிதங்கள்
ஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2016 11:35

வெள்ளையானையும் கொற்றவையும்

vellaiyaanai__93829_zoom


 


ஜூலையில் இந்தியா வந்த பொது “கொற்றவை” நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். “நீர்” பகுதி முடிப்பதற்குள் கிளம்ப நேர்ந்தது. விமானத்தில் வாசிக்கலாம் என்று என் மேசை மீது வைத்து விட்டு மற்றதை எல்லாம் மூட்டைக்கட்ட, அந்த புத்தகத்தை மட்டும் பையில் வைக்க விட்டுவிட்டேன். விமானம் ஏறியதும் தான் தெரிந்தது. அம்மாவை புத்தகத்தை தபாலில் அனுப்பச்சொல்லி, அது வருவதற்குள் வாசிப்போமே என்று இந்த முறை வாங்கிச்சென்ற “வெள்ளையானை”யை எடுத்தேன். “வெள்ளையானை”யை  பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் அதை வரலாற்று எழுத்தாக, புராண எழுத்தாக, “கொற்றவை”யுடன் இங்கு ஒப்பிட முடியும் என்று நினைக்கிறேன்.


 


ஒரு வகையில் “வெள்ளையானை”யும் புராணக்கதை. காத்தவராயன் – அயோத்திதாசர் – புராண கதாபாத்திரமாகவே, சற்று larger than life ஆக வருகிறார். ஏய்டன், கிரேக்க மரபில் சாபக்கேடுடன் அலையும் ஒரு ஆண்டி-ஹீரோ. மரியா, கொற்றவை ஸ்வரூபம். கதை நிகழும் காலம் அண்மையில் என்றாலும், அது உண்மை மனிதர்களைக்கொண்டு, உண்மைச்சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது என்றாலும், அக்கதையில் ஒரு புராணத்தன்மையை என்னால் பிரித்தெடுக்க முடியவில்லை. ஒரு இடத்தில் ஏய்டன் அவன் சந்திக்கும் தொழிலாளிகளின் கண்களை மீன் போல மூடாவிழிகளாக காண்கிறான். அந்த உவமை “கொற்றவை”யிலும் வருகிறது. அதை நான் வரலாற்றின் கண்களென புரிந்து கொண்டேன். காலமெல்லாம் கண் விழித்து வெறிக்கும் அந்த விழிகளின் தீவிரமும் ரௌத்திரமும் சத்தியத்தின், எந்நிலையிலும் இணங்கா உறுதியின் பார்வை. வரலாறை வென்றவர்களே எழுதலாம். ஆனால் எழுதப்படாத உண்மையெல்லாம் கண்விழித்துப் பார்ப்பதை எவராலும் தடுக்கமுடியாது. தொழிலாளிகளின் கண்களை பார்க்கும் அந்த கணத்தில் ஏய்டன் “கொற்றவை”யில் வருவது போல கடல் கொண்டு சென்ற உலகங்களில் நீந்தி வரும் மீன்களையே காண்கிறான். கண்ணையையும் மீன்விழியையும் ரேணுகையையும் மற்றும் நிலம் தோறும் பூத்த ஆயிரம் ஆயிரம் விழித்த கண்களையும் காண்கிறான். அவனால் வரலாற்றில் இருந்து தப்பிக்கவே முடியாது. நம்மாலும் கூட.


 


அயோத்தி தாசரை பற்றி மேலும் அறிந்து கொள்ள “வெள்ளையானை” தூண்டியது. உங்கள் தளம் மிகவும் உதவியாக இருந்தது. அவரை 19ஆம் நூற்றாண்டின் தலித் தலைவர் ஒருவர் என்றே அறிந்திருந்தேன். காந்தியை போல, அம்பேத்காரை போல, விவேகானந்தரை போல, ஒரு அறிஞராக, அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளியாக, மாபுருஷனாக இன்று உணர்கிறேன். அவரை வாசித்துக்கொண்டிருக்கிறேன். “இந்திர தேச சரித்திரம்” பற்றி “அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு” என்ற உங்கள் கட்டுரையின் மூலம் அறிந்துக்கொண்டேன். அக்கட்டுரையில் நீங்கள் விவரித்த இரவிபுத்தூர் தலைகீழ் தெய்வத்தின் கதை அளித்த வரலாற்றுச்சித்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. என் “கொற்றவை” வாசிப்பை இந்தக் கட்டுரை, இக்கதை, மெருகேற்றியது. சொற்களை திரித்துத்திரித்து அவை மூலம் கட்டமைத்த வரலாறாகவும் கொற்றவை விரிகிறது. “வான்” பகுதியின் வரலாறாக்கமும் புராணமாக்கலும் இந்தப்பார்வையின் நீட்சியே.


சுசித்ரா ராமச்சந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14

[ 18   ]


இரவுணவுக்குப் பின்னர் கொட்டகையில் வணிகர்களும் வைதிகர்களுமாக நாற்பத்தெட்டுபேர் கூடினர். மென்மழைச்சாரலிருந்தமையால் கதிரொளி முன்மாலையிலேயே மறைந்துவிட்டிருந்தது. ஆனால் நீர்ச்சரடுகள் வழியாக வானொளி மண்மேல் ஊறி இறங்கிக்கொண்டிருந்தது. தேங்கிய நீரின் படலங்கள் ஒளியுடன் கசங்கி அதிர்ந்து கொண்டிருந்தன. சாரல் கலந்த காற்றின் குளிருக்கு மரவுரிகளைப் போர்த்தியபடி கட்டில்கள் மேல் கால்மடித்து அமர்ந்துகொண்டு இயல்பாக எழுந்த நினைவுகளையும் வேடிக்கை நிகழ்வுகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.


சண்டன் தன் முழவை எடுத்து அதன் தோல்வட்டம் காய்ந்துவிட்டதா என மெல்ல தட்டிப்பார்த்ததும் அத்தனை தலைகளும் திரும்பின. “சூதரே, வருக! அமர்ந்து பாடுக! இன்றிரவு நீண்டது” என்றார் ஒரு பெருவணிகர். சண்டன் “என் முழவுத்தோல் இன்னமும் காயவில்லை” என்றான். “தாளமில்லாது பாடும்…” என்றார் ஒரு வயதான வைதிகர். “மழைத்துளித்தாளம் போதாதா?” என்று ஒரு வைதிக இளைஞன் சிரித்துக்கொண்டே கேட்டான்.


சண்டன் எழுந்து சென்று அவர்கள் நடுவே நின்று தன் குழல்புரிகளை அள்ளி பின்னாலிட்டு “நானும் பாடவே விழைகிறேன். நன்கு துயின்றுவிட்டேன். இனி விழியயர நெடுநேரமாகும்” என்றான். “பாடுக… இங்கு கள் கிடைக்காத துயரை அகற்றுக!” என்று ஒரு வணிகன் சொல்ல இளையோர் சிரித்தனர். “வணிகர்கள் சென்றகாலக் கதைகளைக் கேட்க விழைகிறார்கள். ஏனென்றால் அதில் அவர்களுக்கு இடமே இல்லை” என்றார் ஒரு வைதிகர். “ஆகவே இழப்பும் இல்லை. பதற்றமில்லாது கேட்கலாமே” என்றார் முதிய வணிகர்.


“இளைய பாண்டவர் குறித்து பாடும்” என்றான் சிறியதலைமேல் கொண்டையாக குழலைக் கட்டிவைத்திருந்த வணிக இளைஞன். முதிய வைதிகர் “பாண்டவரின் கானேகலைப்பற்றிய காவியங்கள்தான் எங்கும் பாடப்படுகின்றன. யுதிஷ்டிரனின் எரிபுகுந்தெழல் குறித்து கிருஷ்ணபாகம் நாகசேனர் என்னும் கவிஞர் பாடிய கந்தமாதனவிஜயம் என்னும் காவியத்தை நாங்கள் வரும் வழியில் ஒரு சூதர் பாடினார். எரிபுகுந்து அறச்செல்வர் எழும் காட்சியில் நான் அழுதுவிட்டேன்” என்றார். “எங்கோ கேட்டிருக்கிறேன், இருமுறை பிறந்தவன் சாவதில்லை.”


கொண்டைமுடிந்த இளையவன் “நான் அர்ஜுனரைப் பற்றித்தான் கேட்க விழைகிறேன்” என்றான். “அவர் வெல்வதுதான் உண்மையான வெற்றி” என்றான். “ஏன்?” என்றான் பிறிதொருவன். “நினைத்ததைச் செய்ய ஆற்றலுடையவனைப்பற்றி மட்டும் நாம் பேசினால் போதும்” என்றான் அவன். “ஆம்! உண்மை!” என்றன குரல்கள். ஒருவன் “விழைவில் உச்சம் கண்டவனே அதை வெல்லவும் முடியும்” என்றான்.


கைகளைத் தூக்கி குரல்களை அவித்து “வைதிகர்களே, வணிகர்களே, அயோத்திநாட்டுக் கவிஞர் கௌண்டின்ய பெருங்குலத்து சம்விரதர் யாத்த அர்ஜுனேந்திரம் என்னும் காவியத்தை நான் பாட முடியும்” என்று சண்டன் சொன்னான். “ஆம், பாடுக!” என்று குரல்கள் எழுந்தன. “அர்ஜுனவிஜயம் என்று ஒரு காவியம் உண்டு அல்லவா?” என்றது ஒரு குரல். “அது அர்ஜுனனின் திசைசூழ் செலவு குறித்த நூல். அவர் நான்கு துணைவியரை வென்றதைப்பற்றியது” என்றான் சண்டன். “இது அவர் மெய்மை தேடிச்சென்றதைப் பற்றிய நூல்.”


பைலனின் அருகே கட்டிலில் கால்களை மலரமைவாக அமைத்து ஜைமினி அமர்ந்திருந்தான். அவர்களுக்கு நேர்பின்னால் தூணின்மேல் ஏழு நெய்த்திரிகள் எரிந்த சிப்பிவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. சுடர்களுக்குப் பின்னாலிருந்த முத்துச்சிப்பிகள் ஒளியை அள்ளிப் பெருக்கி அறைக்குள் பரப்பின. ஜைமினி மிகவும் களைத்திருந்தமையால் அடிக்கடி விழிகள் மயங்கி சரிந்துகொண்டிருந்தன.


வெளியே இருந்து கைகளைக் கூப்பியபடி அருகநெறியர் எழுவர் உள்ளே வந்தனர். பிறர் எழமுயல அவர்களை கையமர்த்தியபின் தரையிலேயே கால்மடித்து அமர்ந்து சண்டனின் சொற்களை கேட்க செவிகூர்ந்தனர். “இது செல்வர் நிறைந்த அவை என்பது எனக்கு நிறைவளிக்கிறது. திருமகளின் அவையிலேயே சொல்லெடுக்கவேண்டும் என்பது நூல்நெறி. ஏனென்றால் அங்கே கலைமகள் இருக்கமாட்டாள். நம் சொல்லில் அவள் எழும்போது அவளை அஞ்சி பொன் நாணயங்களை எடுத்து அவள் மீது எறிந்து துரத்துவார்கள்” என்றான் சண்டன். வணிகர் சிலர் சிரித்தனர். கைகளிலேயே தாளமிட்டபடி அவன் காவியத்தின் வணக்கங்கள், புகழ்தொடக்கம், பெறுபயன் ஆகியவற்றை பாடினான். அர்ஜுனனின் புகழ்பாடும் பாடலை பாடி நிறுத்தினான்.


“கிளம்பிச் செல்வதென்பது எப்போதுமே அர்ஜுனனுக்கு இனிதானது. வீரர்கள் அனைவருக்கும் அது உவகை அளிப்பது. கிளம்பிச்செல்லும் வீரன் தன் முதல் காலடி முதல் வளரத்தொடங்குகிறான். முதல் மூச்சை இழுத்து நெஞ்சுள் நிறைக்கையில் அவன் அறியும் ஓர் உண்மை உண்டு, வீரன் என்பவன் கடந்துசெல்பவன். வீரன் கடந்துசெல்வது தன்னைத்தான். தன் கடந்தகாலம் மீது மிதித்து அவன் மேலேறுகிறான். அவனை அழைத்துச்செல்லும் இலக்கு எப்போதும் அடிவானில் ஒளியுடன் நின்றிருக்கிறது. அது அவனை வளர்க்கிறது. அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது.”


மெல்ல அவன் குரலில் இசைவு எழுந்து அது நீள்பாடலாக ஆகியது. “எரியுமிழும் கந்தமாதன மலைக்கு அப்பாலிருந்தன ஏழு மலைகள். குளிர்ந்துறைந்த சுஃப்ரமுகி, முகில்கள் அமையும் ஜ்வாலாசிரஸ், வானில் மறைந்திருக்கும் சூசிசிருங்கம், கந்தர்வர்கள் வந்திறங்கும் கனகசீர்ஷம், அதற்குமேல் எழுந்த பூர்வசிரஸ், அதற்கும் அப்பால் புகைவடிவெனத் தெரியும் நீலாக்ரம். அதற்குமப்பால் இருந்தது எப்போதும் ஏழுவண்ன மழைவில் சூடியமைந்திருக்கும் இந்திரகீலம். ஆறு மலைகளையும் ஏறிக்கடந்து ஏழாம் மலையை அடைபவன் மண்ணுடலுடன் விண்ணொளியை அடைந்தவனாவான் என்கின்றன நூல்கள்.”


தன்னந்தனிமையில் மலைகளை அடைந்த அர்ஜுனன் சுஃப்ரமுகியை ஒரு மாதத்தில் கடந்தான். ஜ்வாலாசிரஸை இரண்டு மாதங்களில் ஏறிச்சென்றான். சூசிசிருங்கத்தைக் கடக்க நான்கு மாதங்களாயின. கனகசீர்ஷத்தை எட்டு மாதங்களில் ஏறி முடிதொட்டு மறுபக்கம் சென்றான். பதினாறு மாதங்களில் பூர்வசிரஸை அடைந்து முன்சென்றான். முப்பத்திரண்டு மாதங்களில் நீலாக்ரத்தை அடைந்து, இந்திரகீல மாமலை அதுவரை வந்த தொலைவை கூட்டினாலும் ஏழுமடங்கு வரும் உயரத்துடன் எழுந்து வான் புகுந்து நிற்பதைக் கண்டான்.


அதன் மேல் முகில்கள் செறிந்திருந்தன. அவை மழையாகப் பெய்து அருவியென வழிந்து கீழே இறங்கி மறைந்தன. அந்நீர்ப்புகை மேலெழுந்து பாறைகளை கனிந்துருகி வழியச் செய்தது. அதன் அடிப்பகுதியில் தேவதாருக்கள் செறிந்திருந்தன. அதற்குமேல் பசும்புதர்கள். அதற்குமேல் மென்பச்சைப்பாசி எனத்தெரிந்த புல்வெளிகள். அதற்கும் மேல் கரிய உருளைக்கற்கள் நீர்வழிய தவமிருந்தன. அதற்கும் மேல் முகில்களுக்கும் அப்பால் எழுந்து ஒளிகொண்டிருந்தன பனிக்குவைகள்.


இந்திரகீல மலையை மானுடர் எவரும் ஏறி உச்சி கண்டதில்லை என்று அவன் அறிந்திருந்தான். ஏறலாகுமா என்று எண்ணிய கணமே இயலாது என்று அவன் அகம் ஆணையிட்டுக் கூவியது. அவன் உள்ளம் ஒவ்வொரு கணமும் நுரைக்குமிழிகள் உடைந்து மறைவதுபோலச் சுருங்கி இன்மையென்றாகியது. அவ்வெறுமையில் அணுவளவாகச் சுருங்கி அலைக்கழிந்தான். தன்னை உணர்ந்து நீள்மூச்செறிந்து அவன் எண்ணம் திரும்பியபோதும் உடல் திரும்பவில்லை.


“ஆனால் மானுடரில் ஒருவன் இதை ஏறியாகவேண்டும்” என்னும் எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்ததுமே உடல் பெருகி பேருருவம் கொண்டவனைப்போல் உணர்ந்தான். “ஏறுதல் என்னும் செயலை மானுட உடலுக்கு அமைத்தளித்த வல்லமைகளின் ஆணை அது. ஏறுக, மேலும் ஏறுக என்பதே அவர்களின் மொழி. அவர்கள் நிகழ்த்தட்டும் இதை. இவ்வுடல் அவர்களின் கருவி. இதில் ஊரும் ஆன்மா அவர்களின் பிறிதுவடிவம்.”


அவனுள் சொற்கள் பெருகிக்கொண்டிருந்தன. உள்ளத்தாலன்றி கால்களால் கைகளால் நெஞ்சால் தோள்களால் தலையால் அச்சொற்களை அவன் எண்ணுவதாகத் தோன்றியது. முதற்காலடியை எடுத்து வைத்ததும் மலைமடிப்புக்குக் கீழிருந்து பெருகி எழுந்துவந்த குளிர்காற்று அவனைச் சூழ்ந்து வீசியது. அவனை அதன் பெருஞ்சுழி அள்ளிக்கொண்டு சென்று திசைவெளியில் வீசிவிடும் என்பதுபோல. அதனுடன் இணைந்துகொண்டது பனிமழை. திசைகள் எட்டும் இடியென முழங்கின.


ஒரு கணமும் தயங்காமல் அறுபத்துநான்கு காலடிகளை வைத்து அவன் நின்றபோது வெண்பனி சூழ்ந்த இந்திரகீல மலையின் உச்சியில் இருந்தான். திகைப்புடன் திரும்பிப்பார்த்து அது எவ்விடம் என மீண்டும் மீண்டும் உறுதிசெய்துகொண்டான். கீழே மிக ஆழத்தில் பள்ளத்தாக்கின் எளிய மண்குவியல்களென பிற ஆறு மலைகளும் தெரிந்தன. அவற்றின் நடுவே ஓடிய ஆறுகள் வெள்ளிநூல் என மின்னி வளைந்தன. தேவதாருக்கூட்டங்களில் காற்று கடந்துசெல்வது புல்மேல் அலை எனத் தெரிந்தது.


அங்கே பனிப்பாளங்கள் மேலிருந்து விழுந்த பனியின் எடையால் அடித்தளம் நொறுங்கி உறுமலோசையுடன் மெல்ல சரிந்திறங்கிக்கொண்டிருந்தன. பிளந்து முழக்கமிட்டபடி சரிவுகளில் விழுந்து மேலும் மேலும் பனியடுக்குகளை நொறுக்கி சேர்த்துக்கொண்டு வெண்பேரருவி என இறங்கிச் சென்று வெண்புகையென மாறிப் பொழிந்து கீழே மறைந்தன. நீலாக்ரத்திற்கு வரும் வழியில் கொன்றுரித்த காட்டெருதின் தோல் போர்த்தியபடி அவன் அங்கே நின்றான். கடுங்குளிரில் அவன் உடல் உயிரிழந்ததென ஆயிற்று.


KIRATHAM_EPI_14 (1)


வலக்காதில் அவன் வெம்மையை உணர்ந்தான். அவ்வழியே செல்லச்செல்ல வெம்மை ஏறி ஏறிவந்தது. ஒரு பனிப்பாறைஅடுக்குக்கு அப்பாலிருந்து நீர் ஊறி கொப்பளித்து வருவதைக் கண்டான். அந்த நீரோடையில் வெம்மையின் ஆவி எழுந்தது. அதன் விளிம்புகளில் பனி உருகி பளிங்குக்கல் என உடைந்திருந்தது. அவன் அதிலிறங்கியதும் கால்கள் வழியாக உடலே வெம்மையை அள்ளி உண்டது. விழிப்பரப்பிலேயே வெம்மை பரவுவதை உணர்ந்தான்.


அடுமனைப் பெருங்கல் என வெந்நீர் கொப்பளித்துக்கொண்டிருந்த ஊற்று ஒன்றை அவன் சென்றடைந்தான். அவ்வூற்றின் அடிப்பாறைகள் வெம்மைகொண்டிருக்க சூழ்ந்திருந்த பனி அதில்பட்டு உருகி குமிழியிட்டு மிகைகொண்டு ஓடையாகி பாய்ந்துசென்றது. நீராவி எழுந்து மேலே சென்று பனிப்பாறைகளை உருகி உடைந்து அதன்மேல் விழச்செய்தது. அதற்கப்பால் சிறிய குகை ஒன்று விழியெனத் திறந்திருந்தது. அவன் அதற்குள் நுழைந்ததுமே இனிய வெம்மையை உணர்ந்தான். அங்குள்ள பாறைகளில் வெம்மை படர்ந்திருந்தது.


இருநாட்களுக்கொருமுறை விழிதிறந்து அந்த ஓடைநீர் தேங்கிய பன்னிரு சுனைகளில் திளைத்த சிறிய மீன்களைப் பிடித்து உண்டபடி அவன் அக்குகைக்குள் ஊழ்கத்தில் அமர்ந்தான். விழிமூடியதுமே கீழே விட்டுவந்த ஒவ்வொன்றும் மிதந்து வந்து அவனுடன் இணைந்துகொண்டது. அன்னையும் உடன்பிறந்தாரும் துணைவியரும் மைந்தரும் பகைவரும் குடிகளும் நகரும் காடுகளும் முழுதுருக் கொண்டன. அவை வெளியே இருப்பவை அல்ல என்று அவன் அறிந்தான். அவையனைத்தையும் அள்ளி அந்த உயரம்வரை கொண்டுவந்த தன் உள்ளம் எனும் மாயத்தை எண்ணி வியந்தான்.


வலையிழை சிக்கு நீக்கும் மீனவன்போல ஒவ்வொன்றாக தொட்டுப்பிரித்து அடுக்கி சீரமைத்தான். சீரமைந்ததுமே அவை அச்சம் அளிக்காதவை ஆயின. அச்சம் மறைந்ததுமே அவை ஆர்வமளிப்பதையும் தவிர்த்தன. எளிய பொருளற்ற நிகழ்வுகளும் காட்சிகளுமாக நின்றன. புகைப்படலம்போல அவற்றைத் தொட்டு கலையவைக்க முடிந்தது. ஒவ்வொன்றாக உதிர்ந்து மறைய அவன் முழுவெறுமைக்குள் அங்கு அமர்ந்திருந்தான். நீர்த்துளி சொட்டும் ஒலி ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு சொல்லாக இருந்தது. அச்சொல் அவன் விழைவை மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.


“ஊழ்கமென்பது தன் உண்மையான விழைவென்ன என்று ஒருவன் அறிந்துகொள்வது மட்டுமே. அதை உண்மையில் தான் யார் என அறிந்துகொள்வதென்று விளக்குகிறார்கள். அறிவர்களே, வைதிகர்களே, வணிகர்களே, தன்னை அறிந்துகொள்ள ஒருவன் தன்னை ஆக்கியவர்களை அறிந்துகொள்ளவேண்டும். அவர்களை அவன் அறியமுடியாதென்பதனால் அவர்களை முழுமையாக புறக்கணிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றான் சண்டன்.


[ 19 ]


எவரோ நடந்துவரும் ஒலியை அர்ஜுனன் கேட்டான். அது நீர்த்துளி சொட்டும் ஒலியென உருமாறியது. தொலைவில் பனிப்புயலின் ஓலம் எழுந்தும் அமைந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது. தாடியும் குழலும் நீண்டு சடைக்கற்றைகளாக மாறி தொங்க பித்து பழுத்த கண்களுடன் குகைக்குள் அவன் அமர்ந்திருந்தான். மெலிந்த உடலில் சுனைநீர்ப்பரப்புமேல் இளங்காற்று என மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.


அங்கு அமர்ந்த நூற்றெட்டாவது நாள் முதல் அவன் அதுவரை அறியாதவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முதலில் வந்தவன் ஒரு கந்தர்வன். அவன் தன்மேல் நோக்கை உணர்ந்து விழிதிறந்தபோது கந்தர்வனை பார்த்தான். பெரிய வெண்பனிப்புகைச் சிறகுகளுடன் மின்னும் நீலக்கண்களுடன் அவன் குனிந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தான். “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். “நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மகன். என் பெயர் அர்ஜுனன்.” கந்தர்வன் அவனருகே மேலும் குனிந்து “இங்கு ஏன் வந்தாய்?” என்றான். “இங்கு மானுடர் வரமுடியாது. நான் காணும் முதல் மானுடன் நீ. நான் இப்பனிக்குகையின் காவலனாகிய பிரபாஹாசன்.”


“நான் இந்த மலைமேல் குடிகொள்ளும் எந்தை இந்திரனைத் தேடிவந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், இது தேவர்க்கரசரின் மலையே. ஆனால் அவர் பன்னிரு நிலவுகளுக்கு ஒருமுறைதான் இங்கு வருகிறார். மானுடருக்கு அது பல்லாயிரமாண்டுகாலம். அவரை நீ இங்கு பார்க்கமுடியாது.” அர்ஜுனன் “நான் இங்கு திகழும் காலத்திலேயே இருக்கிறேன். நெடுந்தொலைவில் உள்ளன மானுடகாலங்கள்” என்றான்.


“நீ அவரை எதன்பொருட்டு பார்க்கவேண்டும்?” என்று கந்தர்வன் கேட்டான். “படைக்கலங்களுக்காக. மண்ணில் எவருக்கும் நிகரென நான் நின்றிருக்கவேண்டும்.” கந்தர்வன் புன்னகைத்து “படைக்கலங்களில் வல்லமைகொண்டது சொல். சொல்லிச்சொல்லி வல்லமை ஏற்றப்பட்ட சொல் கொலைக்கருவி. சொல்லாமலேயே திரட்டப்பட்ட சொல்லோ புவியைப் பிளக்கும் வல்லமைகொண்டது” என்றான். “ஆம், அனைத்து அம்புகளும் சொற்களால் ஆனவையே” என்றான் அர்ஜுனன்.


“நீ என் விருந்தினன். நானோ உன் தந்தை இந்திரனுக்கு உரியவன். நான் உனக்கு நீ விரும்பும் அம்புகளை அளிக்கிறேன்” என்றான் கந்தர்வன். “நீ அளிக்கும் அம்புகளை வாங்கிக்கொள்கிறேன். நான் விழைவது எந்தையின் அருளை மட்டுமே” என்றான் அர்ஜுனன். “யாழ்நரம்பென வில்நாணை மாற்றும் ஒரு நுண்சொல்லைச் சொல்கிறேன் உனக்கு. அது உன் அம்புகளை இசையதிர்வுகளென ஆக்கும். உன்னால் மலர்களின் புல்லிவட்டங்களைக்கூட இரண்டாகப்பிளக்க முடியும். எதிர்நிற்பவர்களின் நரம்புகளைத் தொட்டு அவர்களை பித்தர்களாக ஆக்கமுடியும்.”


அர்ஜுனன் “வணங்குகிறேன்” என்றான். அவன் கைவிரல்நுனிகளைத் தொட்டு கந்தர்வன் அச்சொல்லை அவனுக்களித்தான். “வண்டுகள் அறியும் ஒலி இது” என்றான். அர்ஜுனன் “வணங்குகிறேன், கந்தர்வரே” என்றான். “நீ இங்கே விழைவதென்ன?” என்றான். “அழகிய மாளிகையை இங்கே உனக்களிக்கிறேன். இளநங்கையரும் மதுவும் இசையும் களியாட்டுமென நீ இங்கிருக்கமுடியும்.” அர்ஜுனன் “இல்லை, நான் அவற்றைக் கடந்துவிட்டேன்” என்றான். “நீ விரும்புவதென்ன என்று உன்னுள் நுழைந்து காண்கிறேன். அதை உனக்களிக்கிறேன்” என்றான் கந்தர்வன்.


அர்ஜுனன் தன்னை உணர்ந்தபோது சதசிருங்கத்தில் இருந்தான். பாண்டுவின் கைகளைப் பற்றிக்கொண்டு மலைக்காற்று வீசும் பாதையில் ஏரியின் ஒளியை இலைகளுக்கு நடுவே பார்த்தபடி நடந்தான். “தந்தையே, ஒளியை எய்வது எந்த வில்?” பாண்டு விழிகள் நகைக்கக் குனிந்து “தொடுவான் வளைவு” என்றார். அவர் தோள்களில் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். “தந்தையே, விண்ணில் பறக்கும் பறவைகளை ஏவும் வில் எது?” பாண்டு “மரக்கிளைகள்” என்றார்.


பல்லாண்டுகளுக்குப் பின் அவன் விழிதிறந்தபோது அவனருகே கந்தர்வன் சிரித்துக்கொண்டு நின்றான். “நீங்கள் விழையும் பிறிதொரு உலகத்தை அளிக்கிறேன், இளவரசே” என்றான். அவன் பதைப்புடன் மறுசொல் எடுப்பதற்குள் பசுந்தழை செறிந்த சோலை ஒன்றில் இளைய யாதவருடன் இருந்தான். அன்று முழுநிலவு. அவர்கள் பகலெல்லாம் வழக்கம்போல அக்காட்டுக்குள் உலவிக்கொண்டிருந்தனர். இருவரின் காலடிகள் சொற்களென்றாகி உரையாடிக்கொண்டிருந்தன. இருவரின் உடல்களும் விழிகளென்றாகி நோக்கிக்கொண்டிருந்தன.


அர்ஜுனன் மீண்டும் மீண்டும் அம்புக்குறி தேர்ந்துகொண்டிருந்தான். நுண்மை நுண்மை என செல்லும்தோறும் வெளியிலக்கை கூர்ந்து கூர்ந்து செல்லும் தன் உள்ளத்தின் முடிவின்மையை உணர்ந்தான். செதுக்கும்தோறும் முனைகூரும் ஓர் அம்பு. அம்புகூரும்தோறும் தன்னைக்காட்டும் புதிய இலக்குகள். வென்று செல்லும் கணத்தில் தன் பெருமையை அறிந்து எழுந்தும் மறுகணமே இன்னொரு இலக்கைத் தேடும்போது தன் சிறுமையை உணர்ந்து விழுந்தும் முடிவிலா ஊசலில் ஆடிக்கொண்டிருந்தான்.


யாதவர் சொற்களில் அந்நுண்மையை தேடிக்கொண்டிருந்தார். சொல்லும் ஒலிகள் மறைக்கும் பொருள் கொள்வது எவ்வாறு? மறைத்தலே சொல்வதென ஆவது எவ்வாறு? சொல்லப்பட்டவற்றை உதறிக் கடந்துசெல்லும் மானுடம் மறைக்கப்பட்டவற்றை நோக்கி முடிவிலாது சென்றுகொண்டிருப்பதுதான் என்ன? சொல்லில் அமையாதது சொல்லப்படாததில் வந்தமையும் விந்தைதான் என்ன?


“அழியாச்சொல் என்று வேதத்தை நிலைநிறுத்தியவர் யார், பார்த்தா?” என்றார் இளைய யாதவர். அம்பு எடுத்து பறக்கும் இறகொன்றை கூர்ந்த அர்ஜுனன் வில் தாழ்த்தி அவரை வெறுமனே நோக்கினான். அப்போது அவன் தனுர்வேதத்தைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அதை அழியாச்சொல் என பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் படைப்பயிற்சிக் களங்களில் நிலைநிறுத்தியவர் யார் என்று.


“அதன் பொருளின்மை கண்டு அஞ்சியவர்கள்” என்ற இளைய யாதவர் தொடர்ந்து “இப்புவிநிகழ்வுகள் அனைத்தையும் போல, இருள்பெருகிய கடுவெளி போல அவையும் பொருளெனக் காட்டி மருளென எஞ்சி முடிவிலாது விரிபவை. மயலே வேதமென்க! மறைந்திருக்கையிலேயே அது முகம் காட்டலாகும்” என்றார்.


அர்ஜுனன் “ஆம், பிரசேதஸின் முதற்பெரும் தனுர்வேதநூலின் ஆயிரத்துநாநூறு நுண்சொற்கோவைகளில் நாநூறு மட்டுமே குருநிலைகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆயிரம் அறிந்தமையால் துரோணர் மாவில்லவர். அவரைவிட சில கூடுதலாக பீஷ்மருக்கு தெரிந்திருக்கலாம். பரசுராமர் மேலும் சில அறிந்திருக்கலாம். ராகவராமன் இன்னும் சற்று கடந்துசென்றிருக்கலாம் முற்றறிந்தோரில் மானுடர் எவருமில்லை என்கின்றன நூல்கள்” என்றான். “உள்ளேசெல்லும்தோறும் பொருள்செறிந்து பொருளின்மைகொண்டு இன்மையென்றே ஆகி வெறுமையில் நிறுத்தி மீளும் தொன்மையான சொற்சேர்க்கைகளால் ஆனது அது.”


“வேதத்தின் கலைவடிவங்களே உபவேதங்கள்” என்றார் இளைய யாதவர். “சொல்லியும் உணர்ந்தும் கடந்தும் துறந்தும் அமைந்தும் முனிவர் வேதமென அறிந்தவற்றை பன்னிருகளங்களில் கண்டனர் நிமித்தவேதியர். சூரியரின் காரண்யோபவேதம் அவ்வறிதலின் பெருந்தொகை. ஏழுசுரங்களில் அதை உணர்ந்தவர் நாரதர். அவருடைய ஸ்வரானுவாதம் அதன் மொழிவடிவம். முக்குணங்களில் அதை உசாவிய சனகரும் சனாதனரும் ஆயுர்வேதத்தை அமைத்தனர். ஐம்புலன்களில் அதை வகுத்தார் காமநூல் கண்ட குணாதர். அம்பிலும் வில்லிலும் உணர்ந்தனர் வில்வேதியர். பிரசேதஸின் பெருநூல் அதன் செறிவே.”


“உபவேதங்கள் வேதங்களின் ஆடிப்பாவைகள். முதலுருவம் கொண்ட முடிவின்மையை தாங்களும் சூடிக்கொண்டிருக்கின்றன அவை” என்று அவர் தொடர்ந்தார். “இவ்வழிகளில் எதைத் தொட்டுத்தொடர்ந்தாலும் வேதமெய்மையை சென்றடைந்துவிடலாம் என்பதே நூலோர் கூற்று.” அர்ஜுனன் “ஆம், நான் வில்தொட்டு எடுத்த முதல்நாளில் எனக்கு அதுதான் சொல்லப்பட்டது. வேதப்பசு ஈன்ற இளம்பசுக்கள் அனைத்தும் கறப்பது ஒரே அமுதைத்தான்” என்றான். இளைய யாதவர் சிரித்து “சொல்வேதாந்தம் பாதுகாப்பானது. செயலின்மை கொண்டால் அவைநடுவே நெடுமரம். வில்வேதாந்தம் அப்படி அல்ல. சிதையிலெரியவேண்டியிருக்கும்” என்றார். அர்ஜுனன் வாய்விட்டு சிரித்தான்.


மீண்டும் இளைய யாதவர் முகம் கனவுகொண்டது. “அறியமுடியாமையைக் கறந்து அறிபடும் ஒன்றை எடுப்பது எப்படி? பார்த்தா, வேதம் விளங்க இன்று எழுந்தாக வேண்டிய நூல் ஒன்று உண்டு. அது முற்றிலும் தெளிவானது. சொல்லெண்ணிப் பயிலவும் உகந்தது. கடலில் திசைமானி போலவும் பாலையில் நீர் போலவும் கொண்டுசெல்ல ஏற்றது.”


அவர் சுட்டுவிரலைத் தூக்கி தன் முன் எழுந்த பெருங்கூட்டத்திடமென சொன்னார் “முடிவிலி எழும் சில சொற்கள். இமயமலைத்தொடர்களின் திசைநிறைக்கும் அலகின்மையை உள்ளங்கையில் அமைந்த சிறு வைரக்கல் தன்னுள் சுருட்டி வைத்திருப்பது போன்றது. பெருமலையின் கல்லெடுத்து சிவக்குறியென ஆலயக்கருவறையில் நாட்டுவதுபோன்றது. ஆம், ஒருசிறு நூல்…”


அவர் தன் உளஎழுச்சியால் அர்ஜுனனின் கைகளை பற்றிக்கொண்டார். “அது ஒரு கூற்றாக அறிவுறுத்தலாக ஆற்றுப்படையாக இருக்கவியலாது. அது பாடல். ஆம், யாழும் குழலும் இயையும் மெய்மை அது.” அவர் கைகள் வெம்மைகொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். “சிலசமயம் அதை மிகத்தெளிவாக கேட்கிறேன். துயில்கையில் செவியருகே வந்து அன்னை சொல்லும் அன்புமொழி போல. உளம் எழுந்து உவகைகொண்டு அதை மேலும் கேட்கப்போனால் வாடைக்காற்றில் வந்த குயில்பாடல்போல.”


இளைய யாதவரின் உடல் ஒளிகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். தன் கைகளை தூக்கிப் பார்த்தான். அதுவும் இளநீல ஒளிகொண்டிருந்தது. இல்லை பச்சையா? வெறும் விழிமயக்குதானா? இல்லை, இது ஒளிரும்காடு. இக்காட்டிலிருந்துதான் இக்குருநிலைக்கே சாந்தீபனி என்று பெயர் வந்தது. இளைய யாதவர் தன் கைகளைத் தூக்கி நோக்கி “நிலவெழத்தொடங்கிவிட்டது. காடு ஒளிகொள்கிறது” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.


“வேதங்கள் ஏன் பொருளின்மையைச் சென்று தொடுகின்றன என்று நான் முன்பு என் ஆசிரியரிடம் கேட்டேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவை கொண்டிருக்கும் பொருளின்மை நம் அறியமுடியாமையினாலேயே என்று அவர் சொன்னார். அவை இன்றில் தொட்டிருக்கும் ஒரு புள்ளியையே நாம் காண்கிறோம். நாளையென்னும் முடிவிலியில் சென்று மறையும் கடுந்தொலைவை அறியமுடியாமல் திகைக்கிறது நம் சித்தம் என்றார். உண்மை எனறு நானும் உணர்கிறேன். நாளை நாளை என்று எழும் காலத்தில் பொருள்மேல் பொருளெனக் கொண்டபின்னரும் அவற்றில் பொருள்சுட்டாச் சொல் மிச்சமிருக்கக்கூடும்.”


“இளைய பாண்டவனே, வேதப்பெருக்கில்தான் அத்தனை முடிவின்மை அமையமுடியுமா என்ன? அது வேதத்தின் இயல்பென்றால் வேதச்சொல் ஒவ்வொன்றிலும் அம்முடிவின்மை எழவேண்டாமா? இல்லையேல் அது வேதத்தின் இயல்பல்ல, அந்தத் தொகைமுறையின் தன்மை என்றல்லவா பொருள்?” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லில் வந்தமைக முடிவிலி! ஒவ்வொரு சொல்லிலும் முடிவிலி வந்தமைக! முடிவிலியெனத் திறக்கும் சொற்களால் ஆன ஒரு வேதம். கையளவே ஆன கடல்…”


“அது எழுதப்பட்டுவிட்டது, மொழிவழிப்படவில்லை” என்று அவர் தனக்குள் என சொன்னார். மறுகணமே அவனை நோக்கி திரும்பி “ஆம், அதை நான் முழுமையாகவே காண்கிறேன். சொல்லென ஆகாத நூல் எத்தனை கூரியது!” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று அறியாமல் பார்த்தன் நோக்கி நின்றான். “இங்கிருந்து நீங்கள் நாளை கிளம்பவிருக்கிறீர்கள் என்றார் யுதிஷ்டிரர்” என இளைய யாதவர் உடனே மீண்டுவந்து நிலத்தமைந்தார். “ஆம்” என்றான் அர்ஜுனன்.


“எங்கு செல்லவிருக்கிறீர்கள்?” என்றார் இளைய யாதவர். “அறியேன். இங்கிருந்து கிளம்புவதைப்பற்றி மட்டுமே அவர் பேசினார். இப்பயணத்தில் கிளம்பிச்சென்ற பிறகே இலக்குகளை தெரிவுசெய்கிறோம்” என்றான் அர்ஜுனன். “நன்று. அனைத்தையும் பிணைக்கும் இடத்திலிருந்து அனைத்தையும் தொகுக்கும் இடத்திற்கு நீங்கள் செல்லக்கூடும்” என்றார் இளைய யாதவர். “இளைய பாண்டவனே, அது உன் மூத்தவரின் பயணம்தான். உன் வழிகள் வேறு.” அர்ஜுனன் “ஆம், அதை உணர்ந்தபடியே இருக்கிறேன்” என்றான்.


“உன் வழியை நீ தெரிவுசெய்துகொள்க!” என்றார் இளைய யாதவர். “என் வழி உங்களுடன் அமைவதே” என்றான் அர்ஜுனன். “இல்லை, நான் என் வழியை இன்னமும் முற்றும் தேரவில்லை. இங்கு வந்தபோதிருந்த உள்ள அலைக்கழிப்பு இப்போதில்லை. ஆனால் இங்கிருந்து நான் திரும்ப துவாரகைக்கு செல்லப்போவதில்லை.” அர்ஜுனன் “ஏன்?” என்றான். “என்னை அங்கு ஆயிரம் முகங்களாகப் பரப்பி வைத்திருக்கிறேன். அவையனைத்தையும் கடந்து முகமின்மை ஒன்றைச் சூடி நான் அடையவேண்டிய சொல் ஒன்று உள்ளது.”


அவன் விழிதிறந்தபோது எதிரே விதுரர் அவனை நோக்கிக் கொண்டிருந்தார். “அமைச்சரே, தாங்களா?” என்றபடி அர்ஜுனன் எழப்போனான். உடலுக்கும் உள்ளத்துக்கும் தொடர்பே இருக்கவில்லை. “மூடா, நீ உளமயக்கில் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “இக்குகைக்குள் முளைத்துச்செறிந்துள்ள காளான்கள் எழுப்பும் நச்சுப்புகையை உள்ளிழுக்கிறாய். இவையனைத்தும் உன் கலைந்த சித்தம் அளிக்கும் சித்திரங்கள் அன்றி வேறல்ல.”


“ஆம், இந்தப் பனிக்குகையும் நீர்சொட்டும் ஒலியும் அந்த வெண்புகையும்… அவை வெறும் சித்திரங்கள்” என்று அவன் சொன்னான். விதுரர் பல்லைக் கடித்தபடி வந்து அவன் தலையில் ஓங்கி அறைந்தார். “தந்தையே” என்று கூவியபடி அவன் பின்னால் சரிந்து விழுந்தான். “உன்னை நான் அஞ்சினேன். உன் விழிகளை நான் தவிர்த்தேன். அதுதான் நான் செய்த பிழை. தந்தையால் அஞ்சப்படும் மைந்தர் நிலையழிந்து சிதறுண்டு மறைகிறார்கள்.”


அவன் கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்து அவர் காலடிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் சினத்துடன் நடந்து வெளியே சென்று மறைந்தார். “வா வெளியே, கிளம்புவோம்” என்று அவரது குரல் கேட்டது. “இல்லை தந்தையே, நான் இங்கே மடிகிறேன்.” அவர் மீண்டும் குகைவாயிலில் தோன்றி “என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய், அறிவிலியே? அங்கே உன் அன்னை காத்திருக்கிறாள் உன்னை” என்றார். “ஆம், ஆனால் எந்தையின் அருளின்றி நான் எழப்போவதில்லை” என்றான்.


“இந்திரன் அல்ல உன் தந்தை. உன் குருதித்தந்தை வில்லேந்திய முனிவர் ஒருவர். அதை நீயே அறிவாய்.” அவன் “நான் இந்திரனின் மைந்தன்” என்றான். “மண்ணில் இந்திரன் கொண்டிருந்த ஆற்றலை எல்லாம் அவன் அழித்துவிட்டான். உன் தோழன்” என்றார் விதுரர். “ஆனால் அவள் இந்திரனைத்தான் உளம் மணந்துள்ளாள்” என்றான் அர்ஜுனன்.


சற்றுநேரம் நோக்கி நின்றபின் விதுரர் “உன் ஊழ் அதுவென்றால் அவ்வாறே” என்று திரும்பிச்சென்றார். அவன் அவரது காலடிகள் அகல்வதை பலநூறாண்டுகாலம் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான். “இல்லை இல்லை இல்லை” என்றன அவை. “இரு இரு இரு” என்றன பின்னர். “இனி இனி இனி” என உருமாறின. அவன் அவ்வொலிகளை சிவந்த தாமரைமலர்கள் என பார்த்தான். தித்திப்பான சிவப்பு. உடலை வாள்முனை என வருடிச்செல்லும் நறுமணம். அவன் சிரித்தான். குகையின் பல்லாயிரம் முகங்கள் அவனுடன் சேர்ந்து சிரித்தன.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2016 11:30

October 31, 2016

அழியா இளமைகள்

1


 


பயணங்களில் பெண் முகங்கள் எப்போதுமே நினைவில் நிற்கக்கூடியவை. நண்பர் தமிழினி வசந்தகுமார் முகங்களைத்தான் அதிகமும் எடுப்பார். எங்கே எப்போது என்றெல்லாம் அவர் குறித்துக்கொள்வதில்லை. ஒரு காலகட்டம் கடந்தபின்பு பார்த்தால் வெறும் முகம் மட்டும்தான் கையில் இருக்கும். அதன் பின்னணி எதுவும் நினைவிலிருந்து எழாது. ஆனால் அந்த முகமே பலவகையான கற்பனைகளையும் சிந்தனைகளையும் எழுப்பும்.


வசந்தகுமார் அவரது பதிப்பகம் வெளியிடும் நூல்களின் அட்டைகளில் அவர் எடுத்த முகங்களை வெளியிடுவதுண்டு. இன்னொரு நாட்டில் என்றால் இது பெரிய சட்டமீறல். இந்தியாவில் அந்த முகத்திற்குரியவர்கள் அவர்கள் புகைப்படமாக ஆனதையும் இலக்கியவரலாற்றில் பதிவானதையும் அறியவே போவதில்லை என்பதனால் சிக்கல்  இல்லை. அப்போதுகூட எனக்கு ஓரு கற்பனை ஏற்படும். வடக்கத்திக்காரர் ஒருவர் குடும்பத்துடன் கன்யாகுமரிக்கோ ராமேஸ்வரத்திற்கோ வந்து அங்கே தன் படம் புத்தகமாகத் தொங்குவதை கண்டால் என்னதான் நினைப்பார்.


நானும் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும் நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் மகாராஷ்டிரம் பக்கமாகச் சென்றோம். சிவாஜியின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையைப் பார்த்தோம். கோல்கும்பாஸ் என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்குள் மையத்தில் இருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப்பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பதைக் கண்டு வியந்தோம். பிஜப்பூர் மாபெரும் பீரங்கிகளின் ஊர். ஒவ்வொன்றும் ஒரு திமிங்கலம் என்று தோன்றியது. அனலுமிழ்ந்த அவை குளிர்ந்து செயலற்றுக்கிடந்தன.


அங்கிருந்து பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி  ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்


 


2


நாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.


”இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.


பெரியவர் நல்ல மங்கலமான தோற்றம் கொண்டிருந்தார். பெரிய வண்ணத் தலைப்பாகை. ஏராளமான பாசிமணிமாலைகளை அணிந்திருந்தார். வாயில் வெற்றிலை. சிவப்பு நிறம். முதுமையில் சுருங்கிய முகமானாலும் சிரிப்பும் கண்களில் குறும்பும் இருந்தன. ஆரோக்கியமானவர் என்பதை குரலே காட்டியது. நாஞ்சில் பேசிக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடனின் ’சூடிய பூ சூடற்க’ ஒன்று நூலின் அட்டையாக அமைந்தவர் அந்தப்பெரியவர்தான்


வசந்தகுமாரின் காமிரா எப்போதுமே முகங்களுக்காக காத்திருக்கும். அவர் பெரிய காமிராக்களைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் காருக்குள் அல்லது பேச்சு நடக்கும் களத்திற்கு வெளியேதான் இருப்பார். ஆகவே படம் எடுக்கப்படுவது எவருக்குமே தெரியாது. ஆனால் பெரும்பாலும் பெண்கள் பறவைகளைப்போல ஓரவிழிப்பார்வை கொண்டவர்கள். காமிரா அசைவை அவர்கள் முன்னரே உணர்ந்துவிடுவார்கள். அவர்கள் புகைப்படம் எடுப்பதை அனுமதித்தால் மட்டுமே எடுக்கமுடியும். பெரும்பாலான தருணங்களில் அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல இருப்பார்கள். குருவிகள் அப்படி நம்மை பார்த்தபின் பார்க்காத பாவனையில் இருப்பதைக் காணலாம். பெண்களை பறவை என்று கவிஞர்கள் சொல்வது இந்த அழகிய பாவனைகளால்தான்


வசந்தகுமாரும் நானும் நண்பர்களுடன் கோதாவரியில் படகில் செல்லும்போது அப்படி பல அழகிய படங்கள் கிடைத்தன. கரிய அழகிய பெண் ஒருத்தி மூங்கில் குடிசைக்குமுன்னால் அமர்ந்திருந்தாள். வசந்தகுமாரின் காமிராவை அவள் பார்த்துவிட்டாள். எழுந்து குடிசைக்குள் செல்வதற்கு முன் சிரித்தபடி திரும்பிப்பார்த்தாள். காமிரா அக்கணத்தை அள்ளிக்கொண்டது. அழகிய அட்டைப்படமாக அவள் நிலைபெற்றாள்


அன்றுதான் ஆற்றங்கரை ஓரமாக நின்றிருந்த ஒரு சிறுமியை வசந்தகுமார் படம் எடுத்தார். அவள் பார்த்துவிட்டாள். ஆனால் விழிகொடுக்காமல் மறுபக்கம் நோக்கி நின்றிருந்தாள். பதினாறுவயதே இருக்கும். ஆனால் கல்யாணமாகி குழந்தையும் இருந்தது. நகை அணிந்து ஒரு மூங்கில்கூடையுடன் படகுக்காகக் காத்திருந்தாள். ஒரு மௌனப்போர் நடந்தது. அவள் திரும்பவில்லை, வசந்தகுமார் காத்திருந்தார்.


படகு திரும்பியது. படகு புகைப்படமெடுக்காமலேயே சென்றுவிட்டதோ என அஞ்சியவள்போல அவள் அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தாள். காமிராவின் கண்களைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள். காமிரா அச்சிரிப்பை ஓவியமாக்கியது. ராஜ சுந்தரராஜனின் நாடோடித்தடம் நூலின் அட்டையில் அந்தப்பெண் இருக்கிறாள். அந்தப்பயணத்தில் சற்று நேரம் கழித்து எடுக்கப்பட்ட படம் சு வேணுகோபாலின் கூந்தப்பனை நூலின் அட்டை. அந்தப்பெண் எண்ணத்தில் ஆழ்ந்து காத்திருந்தாள். ஆனால் படம் எடுக்கப்படுவது அவளுக்குத் தெரிந்திருந்தது


100-00-0002-208-5_b


முகங்களில் என்ன இருக்கிறது? முகங்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்தபடியே இருக்கின்றன. துக்கம் மகிழ்ச்சி மலர்ச்சி சோர்வு என அவ்வாழ்க்கையையே முகம் காட்டுகிறது. உண்மையில் அந்தக் குணச்சித்திரமே முகத்தில் உள்ளது. நமக்குத்தெரிந்தவர்களின் முகங்கள்தான் நம்மை ஏமாற்றுகின்றன. தெரியாதவர்களின் முகங்களைக் காட்டும் புகைப்படங்கள் மிகத்துல்லியமாக அவர்களின் குணத்தைக் காட்டிவிடுகின்றன.


2008ல் இந்தியப்பயணத்தில் நல்கொண்டா மாவட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம். வரங்கல்லில் இருந்து மாலை கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயில் சென்றோம். வரங்கல்லில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. சின்னஞ்சிறு கிராமம். வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். ராணி ருத்ராம்பா உருவாக்கிய ராமப்பா ஏரி கடல்போல வரவேற்றது. வழியெங்கும் கூட்டம் கூட்டமாக எருமைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார்கள்.


ராமப்பா கோயில் எனப்படும் கோயில் ரேச்சால ருத்ரன் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் கணபதி தேவருக்கு கீழே இருந்தவன். அக்கோயிலில் உள்ள சிவன் பெயர் ராமலிங்க சுவாமி. ராமேஸ்வரத்து தெய்வம்தான். சிற்பங்களைப்பார்த்து முடிக்க அந்தி ஆகிவிட்டது. கலைப்பரவசத்தில் மதிய உணவைச் சாப்பிட மறந்துவிட்டோம். வெளியே வந்ததுமே உக்கிரமாகப் பசித்தது


வழியில் ஒரு புல்வேய்ந்த டீக்கடையில் கரீம்நகருக்கு வழிகேட்டோம். அவர்கள் கடைமூடும் நேரம். கடையை நடத்திய கடைக்காரரும் மகளும் எங்களை உற்சாகமாக வரவேற்று எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுத்தெரிந்துகொண்டனர். அவர்களுக்கெல்லாம் சென்னையும் கன்யாகுமரியும் தெரியும். வசந்தகுமார் வரைபடத்தை எடுத்து விரிக்க அந்தக் கடைக்காரரின் மகள் சிரித்தாள், “இதோ இருக்கும் கரீம் நகருக்குப் போவதற்கு மேப்பா?” என்று கேட்டாள்.



“பாப்பா, நாங்கள் கன்யாகுமரியில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இதெல்லாம் அன்னியதேசம்தான்…” என்றோம். அழகான பெண். குட்டையான தலைமுடியும் கூரிய முகமும் சிறிய கண்னாடியுமாக இருந்தாள். “கன்யாகுமரியில் இருந்து ஏன் இங்கே வந்தீர்கள்?” என்றாள். “ராணி ருத்ராம்பாவின் மண்ணைப்பார்க்கத்தான்” என்றேன். அழகிய பல்வரிசை தெரிய சிரித்தாள். வசந்தகுமாரின் காமிரா அதை தொட்டு எடுத்து சேர்த்துக்கொண்டதை நான் உணர்ந்தேன். பேச்சு சுவாரசியத்தில் அவள் கவனிக்கவில்லை. “இங்கே நிறைய கோயில்கள் உள்ளன. எல்லாவற்றிலும் பொம்மைகளுண்டு” என்றாள்


“வேறு எங்கே செல்லப்போகிறீர்கள்?” என்று கேட்டாள். நான் “வடக்கே காசிவரை” என்று சொன்னதும் கண்கள் பிரமிப்பில் திறந்துவிட்டன. “ஏன்?” என்று மேலும் தாழ்ந்த குரலில் கேட்டாள். “சும்மா பார்க்கத்தான்”. அவள் “ரொம்பதூரம் இல்லையா?” என்றாள். “ஆம்|”என்றேன். மானசீகமாக அங்கே சென்றுவந்துவிட்டாள் என்று தெரிந்தது.


“பாப்பா என்ன படிக்கிறாய்?” என்றார் செந்தில் அவள் “புகுமுக வகுப்பு” என்றாள். “என்ன சப்ஜெக்ட் ?” என்றேன். அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. வெடித்துச் சிரித்தபடி “படித்தது 8 வருடம் முன்பு” என்றாள். ஆறுவயதில் அவளுக்கு மகன் இருக்கிறான். கணவர் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். “நம்பமுடியவில்லை…பொய் சொல்கிறாய்” என்றோம். “உண்மை,சத்தியமாக” என்றாள்.


ஆச்சரியமாக இருந்தது. வயதே தெரியவில்லை. வயதை நாம் ஒவ்வொருமுறையும் உள்ளூர் அடையாளங்களைக்கொண்டே மதிப்பிடுகிறோம். மத்திய இந்தியப்பகுதியின் ஸித்தியன் இனப்பெண்கள் மிகச்சிறிய செங்கல்நிற உடலும் கூரிய முகமும் சிறிய விழிகளும் கொண்டவர்கள். அந்த சிறிய கட்டமைப்பே அவர்களின் வயதை மறைத்துவிடுகிறது


வசந்தகுமார் அட்டைப்படகாக ஆக்காத அந்தப் பெண்ணின் முகத்தை எடுத்துப்பார்த்தேன். அதிலிருந்த சிரிப்பு அப்படியே இருந்தது. எட்டாண்டுகளில் அந்தப்பெண் என்னென்னவோ ஆகியிருப்பாள். ஆனால் என்றும் இளமையாக எங்கள் நினைவில் நீடிப்பாள்.


குங்குமம் முகங்களின் தேசம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2016 11:35

கொற்றவையின் தொன்மங்கள்

 


korravai


அன்புள்ள ஜெ.,


 


கொற்றவை வாசித்துக்கொண்டிருக்கையில், எனக்கு வரலாற்று உணர்வு என்று ஒன்று  முதன்முதலில் உருவான தருணத்தை நினைத்து நினைத்து வியந்தேன். எனக்கு ஐந்து, ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் சென்னையில் வசித்து வந்தோம். விடுமுறை நாட்களில் பத்து நாள் மதுரைக்கு ரயிலேறி வருவது வழக்கம். என் தந்தைவழியில் சொந்த ஊர் மதுரை. அப்படி ஒரு முறை வைகை ரயிலில் வரும் போது அம்மா கண்ணகி கதை சொன்னாள். கணவனை தீர விசாரிக்காமல் அநியாயமாக கொன்ற நெடுஞ்செழியன் அவையில் சிலம்பெறிந்து நீதிகோரி தலைவிரித்து நிற்கும் கண்ணகி, தன் முலையறுத்துவீசி மதுரையை எரிக்கிறாள். என் ஐந்து வயது கண் முன்னால் உருவமற்ற மாடங்கள் எரிந்து சரிந்தன.


 


 


“அப்புறம் மதுரைக்கு என்ன ஆச்சு?” என்று அம்மாவிடம் நான் கேட்டேன்.”அப்புறம் என்ன? திருப்பி கட்டிருப்பா,” என்றாள் அம்மா. “எரிஞ்சு போன ஊரு மேலேவா?” என்றேன் நான். அம்மா ‘உம்’ என்றாள். “அப்போ மதுரைக்கு அடியில இன்னொரு மதுரை இருக்கா? அதுக்கு அடியில? அதுக்கும் அடியில? வந்துண்டே இருக்குமா?”


 


 


அம்மாவுக்கு அன்று நான் உணர்ந்த அளவில்லா வியப்பு புரியவில்லை. ஒரு நகரத்தை எரிக்க முடியும், அந்த எரித்த நகர் மீது மற்றொரு நகரை கட்ட முடியும் என்ற அந்த கருத்து எனக்கு வரலாற்றின் கதவுகளை வீசித்திருந்தது. காலமெல்லாம் ஊறிப்பெறுகி நம்மை அடையும் வரலாற்றின் குளிர்காற்றை அன்றே முதலில் உணர்ந்தேன். அதன் பிறகு நான் மதுரை மண்ணை, நாங்கள் வாழ்ந்த வீடு இருந்த பகுதியை, கோயிலை, அதை சுற்றிய ஆடி, சித்திரை, மாசி வீதிகளை காணும்போதெல்லாம் என் எண்ணங்கள் மண்ணிற்கு அடியிலேயே அடக்கி வைத்த விம்மலாக நிற்பதை உணர்ந்துள்ளேன். நிலத்தை ஒரு மிகப்பெரும் வாள் கொண்டு ஆழத்தின் அடிவரை சொருகி, குறுக்காக வெட்டி, பிளந்து எடுத்துப்பார்த்தால் எத்தனையெத்தனை  நிலங்கள் அடுக்கடுக்காக புதைந்து கிடைக்கும்! நாம் வாழும் இந்நிலம், இத்தருணம், எத்தனை மனிதர்களின் கனவுகள் மீது கட்டப்பட்டுள்ள சிம்மாசனம். கையை குறுக்காக கிழித்து சதையை நெம்பினால்  தோல், தசை, நரம்பு, குருதி, எலும்பு என்று அடுக்குகள் தெரிவது போல காலத்தையும் நிலத்தையும் கிழித்துக் காணவே என் உள்ளம் துடித்தது. பள்ளியில் வரலாற்றை நான் மிகவும் விரும்பிப் படித்தேன், ஆனால் அது போதவில்லை. வரலாறு என்ற சொல் என்னுள் உருவாக்கும் முதல் சித்திரம், என் காலடியில் புதைந்துள்ள கோவலனின் எலும்புகளும் எரியுண்ட அம்மதுரை நகரின் மாடங்களும் தான்.


 


 


பல வருடங்கள் பிந்தி, என் பதின் பருவத்தில் உயிரியல் மூலம் வரலாற்றை பற்றிய அடுத்த திறப்பு ஏற்பட்டது – நம் மரபணுக்களும் ஒரு வகையில் வரலாற்றுச்சுவடுகள் தான் என்று. மனித வரலாற்றின் தொடக்கத்துடன், ஏன், பூமியில் உயிர் உருவான முதல் தருணத்துடன் அச்சரடு என்னை இணைத்தது என்று புரிந்த போது குதூகலமாகவும் வியப்பாகவும் இருந்தது. மனிதனையும் சேர்த்து எல்லா உயிருள்ளவைகளும் வரலாறு தாங்கி வருபவை, வரலாற்றின் அசைவுகளால் உருவாக்கப்படுபவை, அந்த வரலாறு, எழுத்து பிறக்கும் முன்பே நம் மரபணுக்களில் எழுதப்பட்டவை என்று விளங்கியது. நம் முகங்களும் மூக்கின் நீளமும் காதின் அகலமும் முடியின் சுருளும் தோலின் நிறமும் வரலாற்றின் பதிவேற்றிய குரல். நாம் வாழ்ந்து வந்த சூழலையும் நிலத்தையும் நாம் உண்ட உணவையும் புணர்ந்த மனிதர்களையும் குறிப்பவை அவை. ஒவ்வொரு மனிதனும் அதுவரை நிகழ்ந்த ஒட்டுமொத்த வரலாற்றின் வடிகட்டல். இதை நான் நினைக்கும் கணம் தோறும் சொல்லிழுக்கும் வியப்பில் ஆழ்த்திவிடுகிறேன்.


 


 


“கொற்றவை”யில் நான் கண்ட வரலாற்றுச்சித்திரம் இவ்விரண்டையும் அடக்கி, கடந்து விரியும் மூன்றாம் வகை. ஆழ்மனப்பதிவுகளையும் படிமங்களையும் சார்ந்தது. மனிதனின் ஆழ்மனம் ஒரு வரலாற்றுக்களஞ்சியமாக அறிமுகம் செய்கிறது. ஆழ்மனப்படிமங்கள் மூலமாக வரலாற்றை காணும்போது அது காலத்தையும் தூரத்தையும் ஒரு பொருட்டென்றே கருதாமல், இன்று, இப்போது, நமக்கு மட்டுமான, நாம் என்றும் அறிந்து என்றோ மறந்த  ஒரு வரலாறாக நம்மை வந்தடைகிறது. எல்லா காட்சிகளும் எங்கோ, எப்போது கண்டவை. நன்கு தெரிந்தவை. அணுக்கமானவை. அவை நான் வாழும் நிலப்பரப்பையும், நான் பருகும் நீரையும், நான் காணும் மரங்களையும் மலர்களையும் மாந்தரையும் சார்ந்தவை. என்னால் நிலத்தை திருப்பிப்போட்டு புதைந்த உலகங்களுக்குச் செல்ல முடியாது. என்னால் என் மரபணுவினுள் புகுந்து இடிபாடுகளை எச்சங்களை கொண்டு நான் உருவாகிவந்த கதையை மறுகட்டமைப்பு செய்து காண முடியாது. ஆனால் என் நிலத்தோடும், என் உடலோடும் உயிரோடும் மரபோடும் பிணைந்துள்ள என் ஆழ்மனம், அதில் நிழல்போல புகைபோல எழுந்து கலையும் சித்திரங்கள், அவை சொல்லும் கதை ஒன்றுண்டு, அந்தக் கதையை கேள், அந்நாடகம் விரிவதை காண் என்று “கொற்றவை” மறுபடியும் மறுபடியும் கூவுகிறது.


 


இப்படி ஒரு மாற்று வரலாற்றுச்சித்திரம் (புராணச்சித்திரம் என்று சொல்லலாமா?) சாத்தியம் என்று நிறுவி,தமிழ்மனத்தின் வரலாற்றை இம்முறைகொண்டு பெரும் காப்பியமாக உருவகித்து, வாசகர் மனத்தை அவர்கள் ஆழ்மனம், அவர்கள் சுயவரலாறு நோக்கி செலுத்தியதே “கொற்றவை”யின் பெரும்சாதனையாக எனக்குப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால், கோவலனின் எலும்பு புதைந்த கண்ணகி எரித்த மதுரை, நிலத்திலும் மரபிலும் மட்டும் புதைந்திருக்கவில்லை. என் ஆழ்மனத்திலும் அந்நகரின் வேர்கள் உள்ளன. “மதுரைக்கு என்ன ஆச்சு?” என்ற என் கேள்வி நிலமதுரையை பற்றி அல்ல, சீட்டுக்களால் அடுக்கப்பட்டதுபோல கட்டப்பட்ட ஒரு கற்பனையூரை பற்றி. சீட்டுக்கள் காலத்தின் போக்கில் கலைந்து கலைந்து விழுகின்றன, மீண்டும் கட்டப்படுகின்றன, அனால் இன்றே அச்சீட்டுகளில் என்ன வரையப்பட்டுள்ளது என்று காண அதை விரல்நடுங்க திருப்பிப்பார்க்க முடிந்தது.


 


 


அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு: நீள்ஜடை இடுப்பு வரை தொங்கும் யாரோ ஒரு பெண் ஏதோ அபூர்வமான நிறங்களைக் கொண்டு கோலமிடுகிறாள். அது ஒரு முகத்தின் சித்திரம். ஆனால் யார் முகம் என்று எட்டிப் பார்க்கும் முன் கோலம் கலைந்துவிடும், நான் முழித்துக்கொள்வேன். இது பலமுறை வந்துள்ளது, ஒரு முறை கூட அந்த முகத்தை கண்டதில்லை. ஆதலால், மணிமேகலை ஆபிரிக்க மலைக்குகையில் தன் முகம் கொண்ட பாவை சித்திரத்தை காணும் தருணம் வாசிக்கும் போது நான் ஒரு கணம் மூச்செடுக்க மறந்தேன்.


 


 


காப்பியத்தில் மணிமேகலை தெய்வத்தைக் மாதவி மகள் மணிமேகலை காண்பதை கவித்துவமாக, கற்பனைபூர்வமாக மறுஆக்கம் செய்த அவ்விடம் அழகு. ஆனால் அதையும் தாண்டி, “கொற்றவை”யின் வரலாற்றுச்சித்திரம் முழுவதற்கும் அந்த ஒரு காட்சி பதம். எங்கோ நீர் தாண்டி நிலம் தாண்டி மொழி தாண்டி இனம் தாண்டி தன் முகத்தையே தெய்வத்தின் முகமாக மணிமேகலை காணும் போது சிலிர்த்தேன். அதற்கடுத்த சில கணங்கள் என் நினைவில் இல்லை.


 


 


இப்போது சிந்திக்கையில், அவள் மணிமேகலை தெய்வம் மட்டும் அல்ல, தமிழ்த்தெய்வம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மானுடத்தின் ஆதி அவளே. அவள் தாங்குவது நம் முகம். அவளை தரிசிப்பது வரலாற்றின் கண்ணாடியில் பார்ப்பது. ஒன்றில் ஒன்று மோதி மோதி விரியும் நேரெதிற் கண்ணாடி பிம்பங்களே வரலாறு. ஆனால் இது பின்னால் நான் யோசித்து உருவாக்கி புரிந்துகொண்டது. வாசிக்கும்போது அந்த முகம் உப்பும் நுரையுமாக  என்னை அடித்துச்சென்ற ஒரு பேரலை, அவ்வளவுதான்.


 


 


“கொற்றவை” வாசிப்பு தோறும் சி.ஜி.யுங் நினைவுக்கு வந்தார். அவர் வகுத்த “ஆர்கிடைப்” கருதுகோளிற்கு ஏற்ப “கொற்றவை”யில் ஆழி, அன்னை, பாதம், நாகம், தீ, மலை போன்ற படிமங்களின் வழியே வரலாறு விரிவடைகிறது. நான் அடிப்படையில் நரம்பணுவியல் ஆராய்ச்சி செய்பவள். மனித மூளையில் இப்படிப்பட்ட படிமங்களின் உருவாக்கம் பற்றி ஆரம்பகட்ட நிலையிலேயே  ஆராய்ச்சி நடந்துள்ளது. இதுவரை நமக்குத் தெரிந்த சில அடிப்படைகள் –  (மனிதன் உட்பட) குரங்கினங்களின் மூளைகளில் தன் இனத்து முகங்கள் விசேஷமாக சித்தரிக்கப்படுகின்றன. குரங்கு மூளைகளில் பாம்புகளின் உருவங்களுக்கும் அப்படி விசேஷ சித்தரிப்பு உள்ளது. மற்ற காட்சிகளை விட பாம்பு உருவங்கள் குரங்கு மூளையால் விரிவாக கண்டடையப் படுகின்றன என்றும், அவ்வுருவங்களுக்கென குரங்கு மூளையில் தனி, விரைவுப்பாதை ஒன்று இயங்குவதாக சமீபத்தில் கண்டடையப்பட்டது. குரங்குகள் வாழும் காடுகளில் அவைகளுக்கு பாம்புகளால் பேராபத்து என்பதால் பரிணாம வளர்ச்சியில் குரங்கு மூளை பாம்பை விசேஷமாக சித்தரிக்க கற்றுக்கொண்டுள்ளது என்றும், பாம்புகளுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தின் அழுத்தத்தால் தான் மனித மூளை பெரிதாக, அதிநுட்பமாக உருவாகியது என்றும் கூட ஒரு தத்துவம் முன்னிறுத்தப்பட்டுள்ளது (Snake detection theory). ஆக, மனிதன், மனிதன் ஆவதற்கு முன்பே அவன் மூளையில் சுமந்தலைந்த படிமங்களும் குறியீடுகளும் அவன் வந்த பாதையை சித்தரிக்கலாம். அவன் கதைகளும் குறியீடுகளும் அந்த உயிரியல் நிதர்சனத்தின் நீட்சியாக, அதன் திரிப்பாக இருக்கலாம். பாம்பை வளைத்தும், பாம்பை கழுத்தில் சுற்றியும், பாம்பு மேல் எரியும் மனித மனம் அதை கடந்திருக்கலாம். எப்படி என்றாலும், இம்முறைகளை கறாரான வரலாற்றாய்விற்கான ஒரு கருவியாக இன்று நினைத்துப்பார்க்க முடியவில்லை. மூளையின் அமைப்பை புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் நரம்பணுவியல் அடிப்படையில் மனித வரலாறு ஒன்று உருவாகி வரலாம்.


 


சுசித்ரா ராமச்சந்திரன்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13

[ 16 ]


இளமழைச்சாரல் புதரிலைகளின் மீது ஓசையின்றி இறங்கிக்கொண்டிருந்த முன்னுச்சிவேளையில் முழவைத் தோளிலேந்தி சிறிய தாவல்களாக மலைச்சரிவுப்பாதையில் ஏறிச்சென்ற சண்டனுடன் நெஞ்சுக்கூடு உடையத்தெறிக்கும்படி மூச்சுவாங்கி நடந்து வந்த பைலன் தொலைவிலேயே காற்றில் படபடத்த அந்த செந்நிறக் கொடியை பார்த்தான். சண்டன் “அதுதான்…” என்றான்.  “அருகநெறியர்களின் அன்னசாலைகள் பொதுவாக வெற்றுப்பாறைகளின் மடிப்பிலுள்ள குகைகளிலேயே அமையும். அவர்கள் படைக்கலம் பயில்வதில்லை என்பதனால் ஊனுண்ணிகள் உலவும் காடுகளை ஒழிவது அவர்களின் மரபு. ஆயினும் இங்கு அவர்களின் அன்னசாலை அமைந்துள்ளது நமது நல்லூழ்.”


பைலன் முழங்கால்கள் மேல் கைகளை ஊன்றி கண்களுக்குள் ஒளி அலையடிக்க விழிமூடி நின்றான். உடலெங்கும் குருதி கொப்பளித்தது. காதுகளில் உள்ளனல் வெம்மைபூசியது. இழுமூச்சின் விசையால் தொண்டை வரண்டு உடல் தவித்தது. சண்டன் “அங்கு அணையாது எரியும் அடுமனை நெருப்பாலேயே ஊனுண்ணிகளை அவர்கள் விலக்குகிறார்கள்” என்றான். பைலன் நிமிர்ந்து மீண்டும் தசை இறுகி அசைவற்றதென ஆகிவிட்டிருந்த கால்களை தூக்கி வைத்து அவனைத் தொடர்ந்தான்.


அவர்கள் இருவரும் பசித்து விழியொளி மயங்கும் நிலையை காலையிலேயே அடைந்துவிட்டிருந்தனர்.  பைலனால் தொடர்ந்து பத்து காலடிகளைக்கூட வைக்க முடியவில்லை. “என்னால் முடியாது… என் உடல் முற்றிலும் அனலணைந்துவிட்டது” என்று அவன் பின்காலையிலேயே சொன்னான். “இன்னும் சற்று தொலைவுதான்… எனக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது” என்று சண்டன் அவனை அழைத்து வந்தான். முற்றாக உடல் தளர்ந்து நின்று, நின்றிருக்கமுடியாதென்பதை உணர்ந்து மீண்டும் எஞ்சிய துளி ஆற்றலை தேடித் திரட்டிக் குவித்து உடல்செலுத்தி முன் சென்றனர்.


துளித்தூறல் என்றாலும் ஒழியாது பெய்தமையால் பைலன் அணிந்திருந்த மரவுரி ஈரத்தில் ஊறி குருதியும் நிணமுமாக உரித்தெடுக்கப்பட்ட ஊன்படிந்த தோல்போல எடை கொண்டிருந்தது.  தோலுறைக்குள் வைக்கப்பட்டிருந்த சண்டனின் முழவின் தோற்பரப்பும் நைந்திருந்தது. மரத்தடி கிடைத்ததும் அவன் அதை எடுத்து தொட்டு வருடி “தளர்ந்துவிட்டது” என்றான். “தாளம் எழாதா?” என்றான் பைலன். “தளர்தாளம் எழும்” என்றான் சண்டன்.


“என்னால் முடியவில்லை… விழுந்துவிடுவேன்” என்றான் பைலன் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு குனிந்து நின்றபடி. “இன்னும் சற்று தொலைவுதான்” என்று சண்டன் சொன்னான். “அதோ தெரிகிறதே கொடி… இனி என்ன?” ஆனால் அவர்கள் நடக்க நடக்க அந்தக் கொடி மாறாது அங்கேயே இருந்து கொண்டிருந்தது.


புதர்களுக்குள் அது மறைந்து மீண்டும் தோன்றியபோது “அது நம்முடன் விளையாடுகிறது என்று தோன்றுகிறது. பிளவுப்பாறைக்கு அடியிலிருந்து கிளம்பியபோதிருந்து அதை நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்றான் பைலன் சலிப்புடன். “இன்னும் சற்று தொலைவுதான்” என்றான் சண்டன். “கடந்து வந்த தொலைவுடன் ஒப்பிட்டால் மிக அண்மை.” பைலன் மூச்சை ஊதி வெளியிட்டு “காடேகுதல் இத்தனை கடினம் என்று நான் எண்ணியிருக்கவில்லை. ஊரில் பாண்டவர்களின் காடேகுதல் கதைகளைக் கேட்டபோது என்றேனும் ஒருநாள் நானும் பிறவிநகர் துறந்து அறியாக் காடேகுவேன் என்று கனவு கண்டேன்” என்றான்.


KIRATHAM_EPI_13


“அந்தக் காடு இனியது. நான் அறிந்த அனைத்துக்கும் இனிய மாற்று. மகவென நானறிந்த அனைத்துடனும் அன்னையின் அங்கல்ல, அதுவல்ல, அதுவரை என்னும் சொற்கள் இணைந்திருந்தன. அச்சொல் இல்லாத சூழ்பெருக்கு என்று நான் காட்டை நினைத்திருந்தேன். ஆனால் இக்காடு நம்மைச் சூழும் இருள் எனத் தோன்றுகிறது. நாம் சரிவதை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பசித்த விலங்கு. நம் எல்லைகள் அனைத்தையும் முன்னரே அறிந்த ஆழுலகத் தெய்வம்” என்றான் பைலன்.


“காடு நம் உப்பை விரும்புகிறது” என்றான் சண்டன். “பழைய ஒன்றின் உப்பு புது முளைக்கும் தளிருக்கும் உரிய உணவு என்றே அது நினைக்கிறது. நாம் விழுந்தால் காடு நம்மை அள்ளிப்பற்றி வேர்கவ்வி உறிஞ்சி உண்ணத்தொடங்கிவிடும்.”  பைலனுக்கு அச்சொற்கள் உள்நடுக்கை உருவாக்கின. சூழ்ந்திருந்த காட்டின் ஒவ்வொரு இலையும் நாவென ஒவ்வொரு மலரும் விழியென மாறியது. “காட்டை நாம் உண்கிறோம். அது காட்டால் உண்ணப்பட்ட நம் முன்னோடிகளே”  என்றான் பாணன். “இங்கே விழுந்து மறைந்தால் நமது உப்பை உண்டு இவை தளிரும் மலருமாக பொலியும். தொலைவிலிருந்து நோக்கி கவிதை எழுதும் பாணர்கள் மகிழ்வார்கள். அவர்களின் சொல் வலையென நகர்கள்மேல் படியும். அங்கிருந்து மேலும் இளைஞர்கள் காடேக கிளம்பிவிடுவார்கள்.”


பைலன் அவ்வேளையில் அந்த இடக்கை விரும்பும் மனநிலையில் இல்லை. “இனி என்னால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது, சண்டரே. நீர் செல்க! மீண்டால் எனக்கு கைப்பிடி உணவுடன் திரும்பி வருக!” என்றான். “அண்மையில்தான்… இதோ கொடியின் முக்குடை முத்திரையே தெரியத்தொடங்கியிருக்கிறது” என்று அப்பால் நின்றபடி சண்டன் சொன்னான். “நெடுந்தூரம் கடந்துவிட்டோம். எஞ்சியிருப்பவை சில அடிகள் மட்டுமே.” அடிமரத்தில் உடல்சாய்த்து “என்னால் இயலும் என்று தோன்றவில்லை” என்றான் பைலன். “எப்போதும் எழும் மாயை இது, உத்தமரே.  இலக்கை நெருங்கும் இந்த இறுதித் தருணத்தின் குறுகியதொலைவின் எதிரழுத்தத்தை  நின்று நேர்கொள்ளும் வல்லமையை அடைந்தவரே வென்றவர். வீழ்பவர் அனைவரும் இலக்குக்கு சற்று முன்னால் உளம் தளர்பவர்கள்தான்.”


“இல்லை… சென்று வாருங்கள்” என்றபடி மெல்ல கைகளை ஊன்றி மண்ணில் கால்மடித்து பைலன் அமர்ந்தான். காற்று கடந்த சென்றபோது அவன் தலைக்கு மேல் நின்ற மரக்கிளை ஒசிந்து அவனுக்கென பெருநீர்த் துளிமழை ஒன்று பெய்தது. உடல் சிலிர்த்துக் குலுங்கி மெய் கூசியது. “என் எல்லை இதுதான்” என்றான். “உங்கள் எல்லை இதுதான். ஆனால் தன் எல்லை கடந்து ஓரடியேனும் வைக்காமல் அரியதென எதையும் எவரும் அடைவதில்லை” என்றான் சண்டன். “இன்சொற்கள்” என்று பைலன் தனக்குள் என சொன்னான். “இத்தருணத்தில் எத்தனையோ சொற்களை உளம் உருவாக்கிக்கொள்ளும். உடல்வரை அவற்றை கொண்டுசெல்ல முடியாது.”


“நன்று, முடிவெடுக்கவேண்டியவர் தாங்களே. அந்தணரே, இலக்கை விழிகளால் தொட்டுவிட்டீர். சித்தம் அறிந்த ஒன்றை செயல் சென்று தொடுவது அரிதல்ல. கடக்க வேண்டியது உங்களைக் குறித்த உங்கள் கணிப்புகளையும் ஐயங்களையும்தான்” என்றபின் சண்டன் திரும்பி நடந்தான். அவன் திரும்பிப்பார்ப்பான் என பைலன் எதிர்பார்த்தான். அவன் போய்மறைந்த காட்டுத்தழைப்பு சொல் முடிந்த வாய் என மூடிக்கொண்டதும் அவன் திரும்பிப்பாராததே இயல்பு என உணர்ந்து நீள்மூச்சுவிட்டான்.


சூழ்ந்திருந்த காட்டின் நோக்கை மீண்டும் உணரத் தொடங்கினான். பசுமை இருளாக ஆகியது. இருள் மத்தகம் கொண்டது. காதசைவு கொண்டது. உடலூசல் ஆகியது. பைலன் எண்ணியிரா ஒரு கணத்தில் உளம் கலங்கி அழத்தொடங்கினான். குளிர்மழை வழிவிற்குள் கண்ணீரின் வெம்மையை கன்னங்களில் உணர்ந்ததுமே அதுவரை உணர்ந்திராத நாணம் ஒன்றை அவன் அடைந்தான். முழு ஆற்றலையும் திரட்டி கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து முன்னால் விழுபவனைப்போல காலெடுத்து வைத்து விரைந்தான். எடை மிக்க மூச்சின் அழுத்தத்தால்  உடற்தசைகள் ஒன்றொன்றாக விடுபட்டு அவிழ்ந்து விழுந்தன. நெஞ்சு ஒலிக்க சண்டனைக் கடந்து சென்று அங்கே நின்றிருந்த சிறிய மரமொன்றைப் பிடித்தபடி நின்று குனிந்து வாயால் மூச்சுவிட்டான்.


அவன் தொங்கிய குழலில் இருந்து மழைத்துளிகள் மண்ணில் உதிர்ந்தன. அவன் அருகே வந்த சண்டன் ஒரு சொல்லும் சொல்லாமல் கடந்து சென்றான். மீண்டும் கைகளால் மரத்தை உந்தி மூச்சுவிட்டு திசையில் விழுந்து எழுந்து உடலெங்கும் குருதி நின்று துடிக்க சண்டனைக் கடந்து சென்றான். சண்டன் அவனை அறியாதவன்போல் கடந்து சென்றான். மீண்டும் ஒருமுறை சென்றபோது மிக அருகிலென எதிரில் அன்னசாலை தெரிந்தது. பைலன் அக்காட்சியைக் கண்டதுமே மீண்டும் உளம் கரைந்து அழத்தொடங்கினான்.


அவன் அருகே வந்த சண்டன் “திரும்பிப் பாருங்கள், உத்தமரே! நீங்கள் வந்த தொலைவு இவ்வளவுதான்” என்றான். பிடித்திருந்த மரக்கிளையை விட்டுவிட்டு வலி தெறித்த இடையில் கைவைத்து பைலன் உடல் திருப்பி அவன் வந்த தொலைவைப் பார்த்தான். பத்து எட்டுகளில் அங்கு சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. ஏறி வருகையில் வானிலிருந்து தொங்கும் திரையில் வரையப்பட்ட ஓவியப்பாதை எனத் தோன்றியது அப்போது மிகச்சீரான வளைவெனத் தெரிந்தது. “அது ஒரு தெய்வம். அவள் பெயர் விஷாதை” என்று சண்டன் சொன்னான். “மானுடரின் வெற்றிக் கணங்களுக்கு முன்பு அவள் அமர்ந்திருக்கிறாள். அவன் அணுகுவதைக் கண்டதும் வஞ்சப் புன்னகையுடன் தன் கைகளை விரித்து குறுக்கே நிற்கிறாள். உச்சிமலைப்பாறையைப் பற்றி ஏறுபவனின் நெஞ்சில் கைவைத்து ஓங்கி  தள்ளுகிறாள். நுனிவிளிம்பை தொற்றிக்கொள்பவனின் தலையில் மிதிக்கிறாள். அவளைக் கடந்துசென்ற பின் திரும்பிப்பார்த்தால் அவள் நம்மை வாழ்த்துவது தெரியும்.”


“நாம் செல்வோம்” என்று புன்னகையுடன் பைலன் சொன்னான். சண்டன் நடந்து அன்னசாலையின் அருகே சென்றான். அவன்பின் சென்ற பைலன் நின்று அன்னசாலையை அறிவிக்கும் முக்குடையும் பீலியும் பொறிக்கப்பட்ட குத்துக்கல்லை நோக்கினான்.  அங்கிருந்து அன்னசாலை வரை செல்வது ஒரு எண்ணம் அளவுக்கே எளிதாக இருந்தது. பறந்துசென்றுவிடமுடியும் என்பதுபோல. அவன் புன்னகையுடன் மிகமெல்ல கால்வைத்து நடந்தான். சேற்றில் அவன் காலடிகள் விழும் ஒலியையே அவனால் கேட்கமுடிந்தது.


காட்டுமரத்தால் தூண்நாட்டப்பட்டு மரப்பட்டைக் கூரையிடப்பட்ட அன்னசாலையின் வலப்பக்கம் சரிந்தெழுந்த கற்பாறையில் அருகர்களின் சிற்றாலயம் ஒன்று குடையப்பட்டிருந்தது. இருபக்கமும் சாமரங்கள் சூடி காவல் யட்சர்கள் நின்றிருந்தனர். உள்ளே முழுதுடல் நிமிர்த்தி விழிகள் ஊழ்கமயக்கில் பாதிமூடியிருக்க முதல்அருகர் ஐவர் நின்றிருந்தனர். அவர்களின் காலடியில் வைக்கப்பட்டிருந்த கல்லகலில் ஒளிமுத்துக்கள் அசையாது நின்றிருந்தன. பைலன் அருகே சென்று முழந்தாளிட்டு அருகர்களின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “வழித்துணையாக அமைக, மலர்மிசை ஏகியவர்களே! சொற்றுணையாக அமைக, வாலறிவர்களே! ஆசிரியர்களாகுக, அறிவிலமைந்தவர்களே!” என்று வேண்டிக்கொண்டான்.


அப்பால் தன் மூட்டையை தோள் மாற்றியபடி ஆலயத்தை பார்க்காததுபோல உடல் திருப்பி சண்டன் நின்றிருந்தான். பைலன் எழுந்து வந்து “தாங்கள் அருகர்களை வணங்குவதில்லையா?” என்றான். “நான் எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை.” “ஏன்?” என்று பைலன் கேட்டான். “ஏனெனில், நான் ஒரு தெய்வம். தெய்வம் ஒன்று தன்னை வணங்குவதை தெய்வங்கள் விரும்புவதில்லை” என்றான். “மேலும் நான் ஊனுண்ணித்தெய்வம். அவர்களோ விகாலஉணவுண்டு சுவைமறந்த கூடுதேய்ந்த தெய்வங்கள். என் மேல் அவர்களுக்கு பொறாமை இருக்கக்கூடும்.”


பைலன் சிரித்து “ஆணவத்திற்கு ஓர் அளவுண்டு” என்றான். “அடுத்த வேளை உணவுக்கும் அன்றிரவு துயிலுக்கும் வழியற்றவன் மட்டும் கொள்ளும் ஆணவம் ஒன்றுண்டு, உத்தமரே. அவ்வாணவத்தால் நான் தெய்வம்” என்றான் சண்டன். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்து வாய்மறைத்த அருகநெறியர் ஒருவர் கைகூப்பியபடி வெளிவந்து “அமுது கொண்டு இளைப்பாறுக, விருந்தினரே! அருகனருள் உங்கள்மேல் பொழிக!” என்றார். பைலன் அருகே சென்று அவர் காலடியைத் தொட்டு சென்னிசூடி “நற்பேறால் இங்குற்றோம், தூயவரே” என்றான்.


[ 17 ]


உணவுச்சாலையில் இருந்து வெளிவந்தபோது பைலனின் விழிகள் சொக்கத் தொடங்கின. உணவுக்கூடத்திற்கு வெளியே அப்போதுதான் வணிகர்களின் குழு ஒன்று வந்திறங்கியது. அவர்களின் உரத்த குரல்கள் அத்திரிகளும் கழுதைகளும் எழுப்பிய கனைப்பொலிகளுடன் கலந்து கேட்டன. அன்னசாலையின் அருகநெறியினர் இருவர் வெளியே சென்று கைகூப்பி முகமன் உரைத்து அவர்களை உணவுண்ணும்படி அழைத்தனர். அவர்கள் வணக்கமுரைத்து அடிதொழுது அருகே ஓடிய நீரோடைகளை நோக்கி சென்றனர். அடுமனைக்குமேல் நீலப்புகை இலைதழைத்த மரம்போல எழுந்து வான்பரவி நின்றது. இளஞ்சாரல் அதை கரைக்கவில்லை.


துயில்கொட்டகைகளை நோக்கி காலடிகள் எடுத்து வைப்பதே கடினம் என்று பைலனுக்குத் தோன்றியது. உண்ட உணவு பலமடங்கு எடை கொண்டுவிட்டது. அதன் சாறு ஊறி எண்ணங்கள் அனைத்திலும் படிந்து ஒவ்வொரு சொல்லையும் இரும்பாலானவை என ஆக்கி விட்டது. சண்டன் கொட்டகையை அடைந்ததுமே தோல் உறையைப் பிரித்து உள்ளிருந்து முழவை எடுத்து காற்றில் காயவைத்தான். “அதை ஏன் உடனே செய்யவேண்டும்?” என்றான் பைலன் களைப்புடன். “அது தளர்கையில் என் சொல்லும் தளர்கிறது” என்றபடி அவன் முழவின் தோலை துடைத்தான்.


அவன் அருகே சென்று நின்ற  பைலன் “தோலுறைக்குள் எப்படி நனைந்தது?” என்றான். “துளை விழுந்திருக்கும். துளை விழுந்த பகுதிதான் மேலே இருக்கும். ஏனெனில் அது மேலே இருப்பதனால் துளை விழுகிறது” என்றான் சண்டன். “சொல்லும் அனைத்தையும் தத்துவமென ஆக்கவேண்டியதில்லை, சூதரே” என்று சொன்னபடி பைலன் அங்கு இருந்த மூங்கில் அடுக்கிலிருந்து தூய்மைசெய்யப்பட்ட பாய் ஒன்றை எடுத்து உதறி கீழே விரித்து ஈரமான மரவுரியுடன் அப்படியே அதில் படுத்தான்.


“ஆடை மாற்றிக்கொள்ளுங்கள், உத்தமரே” என்றான் சண்டன். “மாற்றாடை என்னிடம் இல்லை. அதைக் கேட்டு வாங்கும் அளவுக்கு என்னுடலில் ஆற்றலும் இல்லை” என்றான் பைலன். சண்டன் எழுந்து தன் மூட்டையின் உள்ளிருந்து புலித்தோல் ஆடை ஒன்றை எடுத்து உதறி அவனிடம் “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்றான். பைலன் “இதையா?” என்றான். “ஆம், இதையணிந்தோர் கனவில் தலைமேல் வெண்பிறையும் குளிர்நதியும் எழக்காண்பார்கள்” என்றான் சூதன். “வேண்டாம்” என்றான் பைலன். “தாழ்வில்லை. நான் அளிப்பதனால் நீங்கள் இதை அணியலாம்” என்றான் சூதன். “ஏன்?” என்றான் பைலன். “சிவமேயாம்!” என்று அருட்கை காட்டி அவன் உரக்க நகைத்தான்.


பைலன் சிரித்துக்கொண்டு “நன்று. ஆனால் அதை அணியும் பொருட்டு பாயிலிருந்து எழுவதற்கு அலுப்பாக இருக்கிறது” என்றான். “இலக்கை அடைந்தபின் வரும் அலுப்பு அது. அங்கே இரண்டாவது தேவதை குடியிருக்கிறாள். எய்திவிட்டோம் என்று எண்ணியதுமே அவள் வந்து தழுவிக்கொள்கிறாள். பின்பு மெல்லிய புதைசேற்றிலென இழுத்து வைத்துக் கொள்கிறாள்” என்றான் சண்டன். “அழகியவள். தேன்கதுப்பு போன்றவள். நீ நீ நீ என நம்மிடம் பேசிக்கொண்டே இருப்பதனால் அவளுக்கு சுஃபாஷிணி என்று பெயர்.”


“இன்னும் ஒரு நாள் உம்முடன் இருந்தால் தத்துவம் பேசுபவர்களின் சங்கைக் கடித்து குருதியுண்ணத் தொடங்கிவிடுவேன்” என்றான் பைலன். கையூன்றி உடற்தசைகள் இழுபட்டு வலிக்க எலும்புகள் சொடக்குவிட்டு விலக எழுந்து தன் இடைமரவுரியைக் கழற்றி காயவைத்தபின் தோலாடையை அணிந்து பாயில் அமர்ந்தான். சண்டன் திரும்பிநோக்கி “சொல்லெல்லாம் பித்தென ஆகும். புலித்தோல் அணிந்துவிட்டீர்” என்றான். கண்கள் சரிய பைலன் படுத்துக் கொண்டான்.


சண்டன் தனது முழவில் தோல் பரப்பை தட்டிப்பார்த்தான். நீருக்குள் பெரிய மீன் ஒன்று வாலை அடிப்பது போன்ற ஓசை எழுந்தது. மென்மணலில் என அந்த தாழைப்பாயில் அவன் புதைந்து சென்றுகொண்டே இருந்தான். மிக ஆழத்தில் அவன் ஏதோ ஒன்று கிடப்பதைப்போல் உணர்ந்தான். வெள்ளியால் ஆன ஒரு நாணயம்போல் இருந்தது. மீண்டும் உடலை அழுத்தி அமிழச்செய்தான். அது பொன்னெனத் தெரிந்தது. பின்பு அது மணியென ஆயிற்று. பின்பு அடிப்பரப்பைத் துளைத்து அப்பால் இருக்கும் முடிவுலகுக்குள் செல்லும் துளையெனத் தோன்றியது.


அதை நோக்கி செல்லச் செல்ல அடியில் அழுத்தம் பைலனை மேலே தள்ளியது. இன்னும் ஒரு அடி இன்னும் ஒரு அடி என்று தன் உடலை உந்தி உந்திச் சென்றான். அத்துளையில் எழுந்த ஒளிக்கொப்புளம் ஒன்று அவனை அறைந்து மேலே தூக்கியது. மீண்டும் சரிந்து நீருக்குள் தன்னை அமிழ்த்தினான். அவன் உடல் கரையத்தொடங்கியது. கைகளும் கால்களும் மறைந்தன. நீரென்றே ஆனபோது அந்த அழுத்தம் மறைந்தது. அவன் புலித்தோலாடை மட்டும் கீழே சென்றுகொண்டே இருந்தது. அவிழ்ந்த ஆடையாக அல்ல. அவன் அணிந்த வடிவில். அவ்வடிவில் அவன் அதில் இருந்தான்.


அவன் விழித்துக்கொண்டபோது அந்தக் கொட்டகை முழுக்க மெல்லிய குரல்முழக்கமும் உடல்எழுப்பும் நீராவியும் பரவியிருந்தது. பெரும்பாலானவர்கள் ஈர ஆடைகளை காயவைத்து மாற்றுடை அணிந்து நாரிழுத்துக் கட்டப்பட்ட கட்டில்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பல மொழிகள் ஒரே சமயம் ஒன்று கலந்து ஒலித்த முழக்கம் கொட்டகையை நிரப்பியது.  அவன் அந்த ஓசையை முதலில் அலைகளாக கண்களால் பார்த்தான். பின்னர்தான் புலன்கள் திரண்டு அவனென்றாயின. அவன் எழுந்துகொண்டான். தன் உடல் முழுக்க தசைகள் வலி கொண்டிருப்பதை அறிந்தான். ஆனால் களைப்பு அகன்று உள்ளம் தெளிந்திருந்தது. விழிகள் ஒளி கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொருவரையும் அவன் உள்ளம் சென்று தழுவி மீண்டது.


பாயைச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே வந்து முற்றத்தைப் பார்த்தான். மழைத் திரைக்குள் பொழுது விரைவிலேயே இருண்டு கொண்டிருந்தது. வண்ணங்கள் தங்கள் ஒளியை இழந்து கருமையை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இலைப்பரப்புகள் முன்னரே ஈரமான இருளொளியாக ஆகிவிட்டிருந்தன.  மலர்களும் செம்மண் தரையும் மரப்பட்டைச் சுவர்களின் வண்ணங்களும் மட்டுமே வண்ணமென எஞ்சியிருந்தன.


உடல் முழுக்க தேங்கி நின்ற இனிய சோர்வில் அவன் திண்ணையில் அமர்ந்து அம்முற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.  நீரூறிய சதுப்பில் பல்லாயிரம் கால்தடங்கள். குளம்புத்தடங்கள். ஒவ்வொன்றிலும் வான்துளி. அடுமனையிலிருந்து வெண்ணிற ஆடையுடன்  வந்த அருகநெறியினர்  அவனை நோக்கி புன்னகைத்து “அடுமனைக்கு வருக, உத்தமரே!” என்றார். மறுமொழி சொல்ல எண்ணியும் அச்சொல் நாவில் எழாமல் அவன் புன்னகைத்தான்.


அவர் கொட்டகைக்குள் நுழைந்து உரக்க அருகர் வாழ்த்தைக் கூறியதும் ஓசைகள் அவிந்தன. வணிகர்கள் அனைவரும் உரையாடலை நிறுத்திவிட்டு அவரை திரும்பி நோக்கினர். “அருகனருள் சூடுபவர்களே, அருகமுறைப்படி அந்தி எழுந்தபின் இங்கு உணவளிக்கப்படுவதில்லை. ஆகவே சமைத்த உணவை உண்ண விரும்புவோர் இப்போதே அடுமனை புகுந்து உண்ணும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருளெழுந்த பின் வருபவர்களுக்கு அனலும் அரிசியும் கலமும் மட்டுமே அளிக்கப்படும் என்பது இங்குள்ள முறைமை” என்றார்.


“ஆம், உணவுண்பதே நல்லது! உண்கிறோம்! உண்போம்!”  என்று வெவ்வேறு குரல்கள் எழுந்தன. வணிகர்கள் சிறுகூட்டங்களாக ஆடைகள் ஒலிக்க அணிகள் குலுங்க அடுமனை நோக்கி சென்றனர். பைலன் எழுந்து உள்ளே சென்று வெறுந்தரையில் மல்லாந்து  வாய்திறந்து துயில்கொண்டிருந்த சண்டனின் தோளைத்தொட்டு “சண்டரே” என்று எழுப்பினான். அவன் கையூன்றி எழுந்து “விடிந்துவிட்டதா?” என்றான். “இருளப்போகிறது” என்றான் பைலன். “அடுமனையில் இன்னும் சற்று நேரத்தில் உணவு அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். இரவில் இங்கு உணவளிக்கப்படுவதில்லை” என்றான்.


“ஆம், நான் படுக்கும்போதே அதை எண்ணினேன்” என்றபடி சண்டன் எழுந்து ஆடையை சீரமைத்தபடி வெளியே சென்றான். பைலன் “முகம் கழுவிக்கொண்டாவது உணவுகொள்ளலாம்…” என்றபடி தொடர்ந்தான். அவர்கள் வெளியே சென்றபோது களைத்த காலடிகளுடன் ஒரு சிறுவன் முற்றத்தில் நுழைவதைக் கண்டனர். அவன் உடல்  மழைநீர் வழிந்து நடுங்கிக்கொண்டிருந்தது. “வழிநடையர். உங்களைப்போலவே சிறுவர், அந்தணர்” என்றான் சண்டன். “களைத்திருக்கிறார்… உணவுண்ண அழைக்கலாம்” என்றபின் பைலன் இளஞ்சாரலில் இறங்கி அவனருகே சென்றான்.


அவன் கைகூப்பி “வணங்குகிறேன், உத்தமரே. சாமவேத மரபின் ஜைமின்ய குருவழியைச் சேர்ந்த என்பெயர் சத்வன்” என்றான். “வணங்குகிறேன், உத்தமரே” என பைலன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். “களைத்து வந்திருக்கிறீர்கள். பெரும்பசி தெரிகிறது. இங்கு இன்னும் சற்று நேரத்தில் உணவளித்தலை நிறுத்திவிடுவார்கள்” என்றான் பைலன். அவனுக்கு தன்னைவிட ஓரிரு அகவை மூப்பிருக்கலாம் என்று தோன்றியது. அவனால் பேசமுடியவில்லை. பலமுறை உதடுகளை அசைத்தபின் நாவால் ஈரப்படுத்திக்கொண்டு “நான் பொழுதிணைவு வணக்கம் செய்யாமல் உணவருந்துவதில்லை” என்று மிக மெல்லிய குரலில் சொன்னான்.


“அதற்கு நேரமில்லை. அந்திக்குப்பின் இங்கே இவர்கள் சமைத்த உணவை அளிப்பதில்லை. இந்த மழையில் உணவை சமைப்பதும் எளிதல்ல” என்று பைலன் சொன்னான். “நான் என் முறைமைகளை எந்நிலையிலும் மீறுவதில்லை” என்றான் அவன். சண்டன் “அவர் தூய அளவைவாதி என நினைக்கிறேன். அவர்களுக்கு முறைமைதான் முக்கியம். முறைமை மீறுவதற்குரிய முறைமை ஏதேனும் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பார்கள்” என்றான். பைலன் அவனை திரும்பிநோக்கி சீற்றத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நான் உணவருந்தச் செல்கிறேன். நீங்கள் வருகிறீர்களா இல்லையா?” என்றான் சண்டன். “இல்லை, இவரை நான் தனியாக விடமுடியாது. நீர் செல்லலாம்” என்றான் பைலன்.


“நன்று” என்றபின் சண்டன் திரும்பி நடந்து அடுமனைக்குள் நுழைந்தான். அவன் செல்வதை நோக்கியபின் பைலன் “அவர் கட்டற்றவர்” என்றான். “ஆம், சூதர்கள் எரியிலெழும் பொறிகள். எரியின் வெம்மையால் அலைக்கழிக்கப்படுபவர்கள். எரியை அணுகவும் முடியாதவர்” என்றான் சத்வன். பைலன் புன்னகைத்தான். சத்வன் “நான் என் முறைமைகளை முடிக்க நெடுநேரமாகும். அதன்பின் உணவு சமைத்து உண்பதென்றால் இரவாகிவிடும்” என்றான். பைலன் “ஆகட்டும், நான் உங்களை தனியாக விடமுடியாது” என்றான். “வருக, நீராட்டுக்கு நானும் வருகிறேன்” என்றான்.


அவர்கள் செல்லும்போது “நீங்கள் பொழுதிணைவு வணக்கங்களை செய்துவிட்டீர்களா?” என்றான் சத்வன். “இல்லை, நான் முப்போதும் தவறாது செய்பவன் அல்ல.” சத்வன் புரியாமல் “எப்போது செய்வதில்லை?” என்றான். “என் உள்ளத்தில் கனவு நிறைந்திருக்கையில்” என்றான் பைலன். அவன் சொன்னதென்ன என்று சத்வனுக்கு புரியவில்லை. “நீங்கள் புலித்தோலாடை அணிந்திருக்கையிலேயே எண்ணினேன். ருத்ரமரபினர் போலும்” என்றான். பைலன் குனிந்து தன் ஆடையை நோக்கிவிட்டு ஒருகணம் தயங்கி “ஆம்” என்றான்.


“ருத்ரமரபினருக்கு வேதமுழுமை கைப்படுவதில்லை. அவர்கள் ஒளியிருக்க இருள்வழியே செல்ல விழைபவர்கள். நெறிகளை மீறுபவர்களுக்கு இலக்குகள் எய்தப்படுவதில்லை” என்றான் ஜைமினி. பைலன் “அளவை வைதிகருக்கு ருத்ரம் மீதிருக்கும் விலக்கை அறிவேன்” என்றான். ஜைமினி “ஆம், நான் முதல் ஜைமினி முனிவர் அமைத்த அளவைமரபின் வழிவந்தவன். சடங்குநெறிகளை ஒருபோதும் மீறலாகாது என்று எந்தையரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் கற்றவன். இதுவரை ஒருமுறையேனும் கடந்தவன் அல்ல” என்றான்.


“நான் நெறிகளை கனவுகளால் கடக்கிறேன்” என்றான் பைலன். “இளையவரே, நெறியில்லையேல் இங்கு எதுவுமில்லை. இந்த மரங்கள் தங்களுக்குள் நெறிகளை பேணுவதனாலேயே இவை காடாகி நின்றுள்ளன. நாம் பேசும் ஒலிகள் சந்தஸும் வியாகரணமுமாக நெறிசூழ்வதாலேயே மொழியென்றாகின்றன” என்றான் சத்வன். “ஜைமின்யரே, ஒலியமைவையும் பொருளமைவையும் கடக்கும்போதே சொல் அனல்கொள்கிறது. கனவு சுமக்கையில் கவிதையாகிறது. மெய்மையெனக் கனிந்து வேதமாகிறது” என்றான் பைலன். “பெருவழிச்செல்லும் சொற்களால் அரசமுறைமையையும் உலகியல் வழமைகளையும் மட்டுமே கையாளமுடியும். எழுந்துபறக்கும் உயிர்களுக்குரியது வானம்”


அவன் சொன்னதென்ன என்று புரியாத திகைப்பு தெரிந்த விழிகளுடன் “வேதமென்பது ஒலியாலும் பொருளாலும் கரை கட்டப்பட்ட பெருக்கு” என்றான் ஜைமினி. “முகிலென்றிருக்கையில் அது கரைகளற்றது. ஆனால் நதியாக அதை ஆக்குவது கரைகளே.” . பைலன் “ஆம், ஆனால் கரையைக்கொண்டு நாம் நதியை பொருள்கொள்ளலாகாது. முகிலைக்கொண்டே பொருள்கொள்ளவேண்டும்” என்றான். “நாம் இணையப்போவதில்லை” என்றான் ஜைமினி. “வருக, நீராடியபடியே பேசலாம்… நாம் பேச நிறைய இருக்கும் போலிருக்கிறது” என்று பைலன் சொன்னான்.



தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2016 11:30

October 30, 2016

வங்கி ஊழியர்கள் – கடிதம்

 


அன்புள்ள ஜெ,


மிகவும் வருத்தமாக இருக்கிறது அந்தப் பதிவுகள் குறித்து மேன்மேலும் வரும் கருத்துகள். வேறொன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் பார்வைக்கு http://indiatoday.intoday.in/story/world-fastest-cashier-woman-viral-video-truth-about-her/1/798849.html


 


நான் மிகச் சாதாரண வாசகன். பி.ஏ.கிருஷ்ணனுக்கு நீங்கள் கொடுக்கும் இடம் அவருக்கு மட்டுமே உரித்தானது. ஆனால் மற்ற வாசகர்கள், பலர் உங்கள் மீது பெரு மதிப்புக் கொண்டவர்கள், மிகவும் அதிர்ச்சியடைந்தது தான் உண்மை. முதல் பதிவு அதிர்ச்சியளித்தது என்றால் அதன் பின் வந்தப் பதிவுகள் கண்ணைக் கட்டும் ரகம்.


அன்புடன்,


அரவிந்தன் கண்ணையன்


 


அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,


 


அந்த கருத்தை நான் எழுதும்போது அந்தப்பெண்மணி நோயாளி என அறிந்திருக்கவில்லை. உண்மையில் அது நேற்றுத்தான் தெரிந்தது. நான் எழுதியது வங்கிச்சேவை குறித்துத்தான். அதை கடுமையான கோபத்துடன் எல்லை மீறி எழுதியதாகத் தெரிந்தமையால் மன்னிப்பு கோரினேன்.


 


ஆனால் அந்த வீடியோவைப் பார்த்ததுமே கோபம் வருவதற்குக் காரணம் அதே வேகத்தில், சொல்லப்போனால் அதை விட மிதவேகத்தில்தான் உண்மையிலேயே தேசியவங்கிகளில் பணியாற்றுகிறார்கள் என்பதுதான். இன்னமும்கூட இன்றுள்ள வணிகப் போட்டியை, பெருகி வந்துள்ள வாடிக்கையாளர்களை, அவர்களுக்கும் வேறுவேலைகள் இருக்கும் என்பதை, தாங்கள் சற்றேனும் நவீனத் தொழில்நுட்பத்துக்குப் பழகிக்கொள்ளவேண்டும் என்பதை நம் வங்கி ஊழியர்களில் பலர் புரிந்துகொள்ளவில்லை. அந்த வீடியோவுக்கு எழுந்த எதிர்வினை வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்குப் பொறுமையிழந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதை எவரும் உதாசீனம் செய்துவிடமுடியாது


 


இங்குள்ள நிலைமை இரண்டு. அரசு ஆதரவுள்ள வங்கிகளில் சேவை  என்பது அனேகமாக இல்லை. தாங்கள் அதிக ஊதியம்பெறுபவர்கள், ஆகவே சாமானியர்களை விட மேலான அதிகாரிகள்  என்னும் மாயையில் இருந்து நம் வங்கி ஊழியர்கள் வெளிவரவில்லை. என் அனுபவங்கள் மிகமிகக் கசப்பானவை.


 


அல்லது தனியார் வங்கிகளை நாடவேண்டும். அதில் அரசு அளிக்கும் சலுகைகள் ஏதும் கிடைக்காது.தனியார் வங்கிகள் மறைமுகக் கட்டணங்கள் வழியாகச் சுரண்டுகின்றன. ஆனால் அவை சுரண்டுவதை நன்றாகத் தெரிந்தும் கூட என்னைப்போன்றவர்கள் தனியார் வங்கிகளில்தான் நடைமுறைக் கணக்கை வைத்திருக்கிறோம். அதே வாடிக்கையாளர்கள்தானே இங்கும் வருகிறார்கள். அதே சமூகப்பின்புலம் கொண்ட ஊழியர்கள்தான் இங்கும். அதைவிடக்குறைவான ஊதியம் பெறுபவர்கள். ஆனால் பணிப்பொறுப்பு என ஒன்று இங்கே உணர்த்தப்பட்டிருக்கிறது. பணிகள் விரைவாக நடக்கின்றன. தனியார் வங்கிகளில் ஒருபோதும் சேவைக்குறைபாட்டை உணர்ந்ததில்லை.


 


என் அனுபவத்தைச் சொல்கிறேன். தனியார் வங்கி எதிலும் 10 நிமிடத்திற்குமேல் நான் காக்கவைக்கப்பட்டதில்லை. ஆனால் இரண்டு செயல்படாத கணக்குகள் இருக்கும் அரசு வங்கி எனக்கு நாள்தோறும் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது. ஆதார்கார்டின் நகலுடன் நேரில் வரும்படி. ஒருவழியாகக் கிளம்பிச்சென்றேன். 45 நிமிடம் காத்துநின்றேன். அதை வாங்கி ஒரு கிளிப்பில் போட்டுவிட்டு “ஓக்கே” என்றார்கள். ஆனால் மறுமாதம் மீண்டும் அழைப்பு. அது போதாது வேறு ஏதோ தேவை என்று.


 


ஒருமுறை செக் ஒன்றை நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் கவுண்டரில் நீட்டினேன். அதை வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் திருப்பித்தந்துவிட்டு அடுத்து நின்றவரின் செக்கை வாங்கினார். “என்ன?” என்றேன். நான்குமுறை கேட்டபின் “டேட்” என்றார். தேதி போடவில்லை. தேதிபோட்டு நீட்டினேன். மெதுவக எனக்குப்பின்னால் நின்ற நான்குபேரைப் பார்த்தபின் அதை வாங்கிப்பார்த்துவிட்டு மீண்டும் வெளியேபோட்டார். மீண்டும் “ஏன்?” என்றேன். “எழுத்தில் ஒரு திருத்தம் இருக்கிறது” என சொன்னார்


 


மீண்டும் பத்து நிமிடம். திருத்தம் அருகேகையெழுத்திட்டு மீண்டும் உள்ளே கொடுத்தேன். அதை அவர் மீண்டும் வெளியே போட்டதும் நான் பொறுமையிழந்து கத்த ஆரம்பித்தேன். வங்கி மானேஜர் என்னைத் தெரிந்தவர். அவர் ஓடிவந்து சமரசம் செய்துவைத்து செக்கை  ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் வாடிக்கையாளர்கள் இங்கே நடத்தப்படுகிறார்கள். ஒரு கிராமப்புற வங்கிக்குச் சென்று அரசுவங்கிகளின் ஊழியர்கள் நடந்துகொள்ளும் முறையை ஒருநாள் நின்று பாருங்கள், நான் சொல்வது புரியும். என் கோபம் ஏன் என்று தெரியும்.


 


அந்தக்குறிப்பை எழுதிய அன்று ஒரு சாதாரண விசாரணைக்காக அன்று அரசு வங்கிக்குச் சென்றிருந்தேன். வேறு ஊரில் உள்ள கணக்குக்கு வந்த செக்கை இங்கே போடமுடியுமா என்று கேட்க. 20 நிமிடம் வரிசை. ஒரு அம்மணி 10 கேள்விகள் கேட்டார். எழுந்துசென்று இன்னொருவரிடம் ஏதோ சொன்னார். அவர் என்னை அழைத்து அதே கேள்விகளை மீண்டும் கேட்டார். கடைசியில் அருகே இருக்கும் டப்பாவில் செக்கைப்போடும்படிச் சொன்னார்.


 


வாடிக்கையாளர்கள் வேறுவேலை இல்லாதவர்கள், தங்களுடைய  ‘சப்ஜெக்ட்ஸ்’  என்னும் அரசூழிய மனநிலையில் இருந்து வெளிவராதவர்கள் நம் அரசு  வங்கி ஊழியர்கள். அந்த எரிச்சலை அடையாத வங்கிவாடிக்கையாளர்  எவரும் இங்கே இருக்கமாட்டார்கள். என் உணர்ச்சி அதற்கு எதிராகவே ஒழிய அந்த குறிப்பிட்ட வங்கி ஊழியர் மீது அல்ல. அது என் முதல்குறிப்பிலேயே உள்ளது


 


மகாராஷ்டிர வங்கியின் அந்த ஊழியர் குறைபாடுள்ளவராக இருக்கலாம். அதைச் சுட்டிக்காட்டி மனிதாபிமானத்தின் உச்சியை நம்மவர்கள் தொட்டு மீள்வதில் எனக்கு மனநிறைவே. வங்கிச்சேவை குறித்து நான் சொன்னதை விட்டுவிட்டு   குறைபாடுள்ள ஊழியரை திட்டினேன் என அதைத் திரிப்பவர்களை நான் புரிந்துகொள்கிறேன்.அனால் அதை சாக்காக வைத்து நம் வங்கி ஊழியர்களின் சோகநிலைபற்றி அவர்கள் பேச ஆரம்பிப்பது மோசடி.


 


நான் அந்த ஊழியர் குறித்துச் சொன்னதற்காக வருந்துகிறேன். வங்கிச்சேவை குறித்த வன்மையான சொற்களை சொன்னமைக்காக வருந்துகிறேன். ஆனால் நம் அரசுவங்கிச்சேவையின் பொறுப்பின்மை  பற்றி நான் சொன்னதை  பின்னால் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் சொல்வது என் அனுபவம், நம்மில் பலரின் நேரடி அனுபவம். அவ்வளவுதான்.


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 19:40

நான்களின் நடுவே…

ஜெயமோகன்


 


 


அன்புள்ள ஜெ


 


நான்கள் கட்டுரையை வாசித்தேன்(http://www.jeyamohan.in/11693#.WAoKTY996M8) .உங்களருடைய  மிக முக்கியமான கட்டுரைகளில்  ஒன்றாக இக்கட்டுரையை  கருதுகிறேன் .


 


பல அறிவு ஜீவிகளும் அவர்கள் நம்பும் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்காக அறத்தை பலி இடுகின்றனர் .ஒரு கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகளின் தோல்வியை உணர்ந்த பின்பும் அவற்றை பொது வெளியில் பாதுகாக்கின்றனர் .ஒரு வகையில் சொல்லப்போனால் நம்பிக்கை இழந்த பிறகு தான் அக்கொள்கைகளை பற்றிய அவர்களது கூப்பாடு அதிகமாகிறது .புதிய படைப்பாளிகளுக்கும் இந்த சிக்கல் இருப்பதாக தோன்றுகிறது .நண்பர் ஒருவர்  Gothic ரக புதினம் ஒன்றினை  எழுதிக்கொண்டு இருந்தார் .தப்பி தவறி அதனை குறித்து ஒரு இலக்கியவாதியிடம் கூறி விட்டார் .தொலைந்தது கதை .Gothic வடிவம் பழையது என்றும் அது அரசியல் சரிநிலைகள் அற்றது என்றும் கூறி மண்ணை அள்ளி போட்டு விட்டார் .


 


 


இது போலவே புதிதாக வந்திருக்கும் பெண் எழுத்தாளர்களின் நாவல்களும் பெண்ணிய நாவல்களாக மாற்றப்படுவதாக கேள்வி பட்டிருக்கிறேன் .பல சிந்தனையாளர்களும் நாடகம் முடிந்த பிறகும் வேடத்தை கலைக்க முடியாத ,சபிக்க பட்ட நடிகர்கள் தான் என்று தோன்றுகிறது .ஒரு வகையில் விக்ரமாதியன் கொடுத்து வைத்தவர் .எந்த சபையிலும் எதனையும் பேசலாம் .எவருக்கும் பயப்பட வேண்டாம் .நம் சொற்களை திரித்து விடுவார்களோ ,போராட்டம் வருமோ ,வழக்கு வருமோ என சிந்திக்க வேண்டாம் .அவர் இந்த நிலையை எப்படி அடைந்தாரோ தெரியாது ,அனால் அது தான் உண்மையான கருத்து சுதந்திரம் என தோன்றுகிறது .!!!


 


 


வேறொரு விஷயமும் இருக்கிறது .பொதுவாக உங்கள் முன்னாள் வாசகர்களும் ,எதிர்ப்பாளர்களும் (அவர்கள் பெரும்பாலும் முன்னாள் வாசகர்கள் தானோ ?!!!) உங்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது .ஜெயமோகன் அன்று அப்படி பேசினார் /எழுதினர்.இன்று அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது தான் அது.(எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை .எனக்கு ஏற்புடையதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வேன் !!!).இந்த குற்றச்சாட்டிற்கும் இந்த கட்டுரை பதிலளிப்பதாக எண்ணுகிறேன்


 


 


நன்றி


 


அனீஷ் க்ருஷ்ணன்


 


 


அன்புள்ள அனீஷ் கிருஷ்ணன்,


 


எழுத்தாளன் சீராக வெளிப்படவேண்டுமென்பதில்லை. நுணுக்கமாகப் பார்த்தால் அவனுக்கும் அவன் புனைவுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் இருக்கும். அவை அவனுக்கும் அவன் இலட்சியங்களுக்கும் இடையேயான மோதலாக இருக்கக்கூடும். அவன் நம்பிக்கைகளுக்கும் அவனறிந்த யதார்த்ததிற்கும் இடையேயான வேறுபாடாக இருக்கக்கூடும். அந்த மோதலை தன்னுள் உணர்வதனால்தான் அவன் எழுதுகிறான். அதுவே அவன் கொந்தளிப்பும் தத்தளிப்பும்.


 


அவனுடைய படைப்புகளுக்கு இடையேகூட முரண்பாடுகள் இருக்கும். ஒரு படைப்புக்குள்ளேயே கூட முரண்பாடுகள் இருக்கும். அதையே பலகுரல்தன்மை என இலக்கியவிமர்சனத்தில் குறிப்பிடுகிறார்கள். பேரிலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்துமே அப்படிப்பட்டவையே. தல்ஸ்தோய் காமத்தை ஒறுக்கிறாரா கொண்டாடுகிறாரா என்று மட்டும் பார்த்தால்போதும், இது புரியும்.


 


ஒருபோதும் நான் ஒன்றாக இருந்ததில்லை. நான் செய்ய நினைப்பதெல்லாம் புனைவுக்குள் புனைவொருமையைக் கொண்டுவருவது மட்டுமே. அதாவது வடிவரீதியாக மட்டும். அதற்குள் உள்ள பார்வையில் மாற்றமில்லா ஒருமையை நான் இலக்காக்குவதில்லை. அது ஒருவகை வாக்குமூலமாக, கட்டற்றதாக, இருந்தால்மட்டும் போதும் என்பதே என் எண்ணம்.


 


எழுத்தாளன் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் தத்துவஞானியும் அல்ல. ஆகவே அவன் ஒற்றைப்படையாக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய குழப்பங்களும் தடுமாற்றங்களும் நிலைமாற்றங்களும் அவன் எவற்றை பிரதிநிதித்துவம் செய்கிறானோ அவற்றுக்குரியவை. அவற்றை ஆராய புனைவில் உள்ள அந்த ‘விரிசல்களை’ ஆராயவேண்டும் என்பதுதான் நவீன இலக்கிய விமர்சனம் என்பது


 


என் எழுத்துக்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில்தான் உள்ளன. பெரும்பாலான கட்டுரைகளுக்குக் கீழே பழைய கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் . அவற்றில் என் மாறுபாடும் வளர்ச்சியும் பதிவாகியிருக்கும். அவை பலசமயம் எனக்கே ஆச்சரியமானவைதான்.


 


நானறிந்த உண்மையை, என்னுள் எழும் உணர்வுகளை அவ்வப்போது அப்படியே தடையின்றி வெளிப்படுத்தவேண்டுமென்பதே என் இலக்கு. யோசித்துப் பேசக்கூடாதென்பதை ஒரு நெறியாகவே இதுவரை கொண்டிருக்கிறேன். உண்மையில் நான் எழுதவந்ததே அந்த கொள்கையை [சு.ராவுடன் முரண்பட்டு] அறிவித்தபடித்தான். இதுவரை வந்துவிட்டேன், இன்னும் கொஞ்சநாள்தானே?


 


இதுவரையில் என் மீது எழுந்துள்ள எல்லா விமர்சனங்களும்  நான் முன்வைக்கும் தன்னிச்சையான எதிர்வினைகள் சார்ந்து எழுபவை மட்டுமே. அவையும் இயல்பென்றே கொள்கிறேன். எழுத்தாளனின் பணி எழுத்தினூடாக சமகாலச் சிந்தனையில் ஓர் அலையை உருவாக்குவதே. ஒரு rupture என்று அதைச் சொல்வேன். ஆனால் அது என்னை உடைத்துவிடலாகாதென்றும் எண்ணுகிறேன்.


 


முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அயோக்கியன் என்றெல்லாம் ஒருவனை வசைபாடும் மனநிலை எளிமையான கட்சியரசியலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவது. நாளுக்கொரு நிறம்மாறும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளும் முறை அது. ஆனால் அவர்களை  அப்படியே ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கருத்துப்பரிணாமம்  மோசடியாகத் தெரிவது ஆச்சரியமானது, ஆனால் அப்படித்தானே அது நிகழமுடியும்?


 


என் கருத்துக்களை நானே கூர்ந்து கவனித்துவருகிறேன். இக்கருத்துக்களை முன்வைத்து நான் அடைவதற்கொன்றுமில்லை. எனவே இவற்றில் சமரசங்களுக்கு இடமில்லை. அவை நானறிந்த வாழ்க்கைநோக்கை முன்வைப்பவை. என் ஆசிரிய மரபிலிருந்து கொண்டவை. அவற்றில் வளர்ச்சி இருக்கலாம், குழப்பங்களும் இருக்கலாம். திரிபு அல்லது பொய்மை இருக்காது. அவற்றிலிருப்பது நான் கொண்ட தரிசனமே.


 


*


.


அரசியல்சரிகளுக்கு ஆட்படும் எழுத்தாளர்கள், வெளியே இருந்து கொள்கைகளை கோட்பாடுகளை பெற்றுக்கொள்ளும் படைப்பாளிகள், படைப்பாளிகள் அல்ல. அவர்கள் என்றும் இருந்துகொண்டுதான் இருந்தார்கள். நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதுக்கு மட்டுமே தன்னை ஒப்படைத்துக்கொண்டவன்.


 


படைப்பில் படைப்புக்குள் இருப்பதை வாசிக்கத்தெரியாத வாசகர்கள்தான் பெரும்பான்மையினர். அவர்கள் அது என்ன  ‘சொல்கிறது’ என்று மட்டுமே பார்க்கிறார்கள். அப்படிச் சொல்லப்படுவது தன் அரசியல், சாதி, மத நம்பிக்கைகளுக்கு உகந்ததா என்று அளவிட்டு நிலைபாடுகள் எடுக்கிறார்கள். இன்னொரு மாபெரும் பெரும்பான்மையினர் வாசிப்பதே இல்லை. அவர்களுக்கு எழுத்தாளனைப் பற்றிய பிம்பமே போதும், வெறுக்கவும், வசைபாடவும். உண்மையில் அது இலக்கியம் மீது, அறிவுச்செயல்பாடு மீது கொண்டுள்ள அச்சம்தான்.


 


படைப்பை வாழ்க்கையைக்கொண்டு வாசிப்பவர்களே அதன் நிகர்வாழ்க்கைச் சித்திரத்தில் இருந்து தனக்கான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களுக்காகவே புனைகதைகள் எழுதப்படுகின்றன. எழுத்தாளன் அவர்களை மட்டும் கருத்தில்கொண்டால்போதும் என்பதே என் எண்ணம். எப்போதுமே நான் கூறிவருவது அதையே, தவறு சரி நோக்கி எழுதவேண்டியதில்லை. ‘தோன்றியதை’ எழுதினால்போதும். அது ஒருபெரிய சிலுவைதான் , ஆனால் எழுத்தாளனின் பணி அதுவே.


 


*


வாசகர்கள் என வருபவர்கள் வெவ்வேறு வகையினர். அவர்கள் அவர்களுடைய சொந்தத் தேவைகள், எதிர்பார்ப்புகளுடன் , கேள்விகளுடன்தான் வருகிறார்கள். அவர்கள் வாசிக்கும் சிலவற்றிலிருந்து என்னைப்பற்றி, என் எழுத்தைப்பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை நானும் பேணவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.


 


வாசிப்பு என்பது வாசகனின் கூர்மையையும் தேவையையும் ஒட்டியே அமைகிறது. ஆகவே வாச்கன் என்னும் பொதுவான அடையாளம் என ஏதுமில்லை. அவரவருக்கு ஏற்றபடியே பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்டவை அவர்களையேதான் காட்டுகின்றன.


 


முன்பு நித்யானந்தா பற்றி நான் எதிர்மறையாக எழுதியபோது ஒரு கூட்டம் வாசகர்கள் புண்பட்டு பிரிந்துசென்றார்கள். அவர்களில் பலர் நாளொரு உபதேசமும், வசையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை சிலநாட்களுக்கு முன் சந்தித்தேன்.  ‘எனக்கு நீங்க பெரிய ஏமாற்றமா ஆயிட்டீங்க” என்றார். ‘ நான் உங்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கலையே’ என்றேன். “எப்டி நீங்க நித்யானந்தா பத்தி எழுதலாம், எழுத நீங்க யார்?’” என்று கொதித்தார். “அதுக்கு முன்னாடி நீங்க பாராட்டின பல கருத்துக்களைச் சொன்ன அதே ஆள்தான்”


 


இதேபோல பெருமாள்முருகன் விவகாரத்தில் கவுண்டர்கள் கொஞ்சம்பேர் எதிரிகளானார்கள்.இவ்வாறு வரும் வாசகர்களின் குறுகிய வாசிப்புக்கு ஏற்ப நான் என்னை குறுக்கிக் கொள்ள முடியுமா என்ன? என் வழி சொல்லின் போக்கால் ஆனது. அதில் எவரும் உடன்வரவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை. ஒரு வாசகரை, ஒரே ஒரு நண்பரைக்கூட நான் வேண்டுமென்றே தக்கவைக்க முயலமாட்டேன் என்பது நான் எழுதவந்தகாலம் முதல் கொண்டிருக்கும் கொள்கை. வாசகர்களுக்குத்தான் நான் முக்கியம், எனக்கு வாசகர்கள் முக்கியமே அல்ல. இன்று இருந்து நாளை மறையும் வாசகர்களுக்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. என்றுமிருக்கும் ஒரு பெருக்கு அது.


 


இப்படி தங்கள் குறுகலால்  ‘எதிரி’ ஆகிறவர்களுக்கு ஒரு சுயகசப்பு இருக்கிறது. நேற்று என்னை அவர்கள் பாராட்டியதும் ரசித்ததும் அவர்களுக்கு எரிச்சல் அளிக்கிறது. ஆகவே அந்தப்பழியையும் என்மேல் சுமத்துகிறார்கள். நான் அயோக்கியன் , முரண்படுகிறேன் என நிறுவப் பாடுபடுகிறார்கள். அவர்களே நம்பும் அளவுக்கு பேசிவிட்டால் நிறைவடைந்து அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இது முப்பதாண்டுக்காலமாக , இரண்டு தலைமுறையாக, நடந்துவரும் தொடர்நிகழ்வு.   என்னிடம் நிகழ்வதை உடன்வந்து தானும் அடைபவர்களே  உண்மையில் வாசகர்கள் என நான் கொள்கிறேன்.


 


எனக்கு எதிரிகள் என்று தங்களைச் சிலர் உருவகித்துக்கொள்ளலாம். அது அவர்களுக்கு ஓர் அடையாளத்தை, அவர்களின் குரலுக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கும், அவ்வளவுதான். புனைவெழுத்தாளனாகிய எனக்கு எதிரிகளாக இருக்கும் தகுதி கொண்ட எவரும் இன்றில்லை. உண்மையில் உள்ளூர இதை உணராத  ‘எதிரி’களும் இல்லை. முப்பதாண்டுக்காலத்தில் இப்படி சுயமாக நியமித்துக்கொண்ட எந்த  ‘எதிரி’யையும் ஒரு பொருட்டாக மதித்து ஒரு சொல்கூட நான் சொன்னதில்லை. இன்னும் ஒரு பத்தாண்டுக்காலம் அவ்வாறுதான். அதன்பின் என் எழுத்துமட்டும்தான் இங்கிருக்கும்.


 


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 11:34

ஈராக் போர் அனுபவங்கள்

11

வணக்கம்



          ஈராக் போர்முனை அனுபவங்கள் என ஈராக் அனுபவங்களை தொடராக எழுதிவருகிறேன் .பதினாறு அத்தியாங்கள் வெளிவந்து விட்டது .இன்னும் சில மட்டுமே மீதி உள்ளன .எனது ப்ளாக் ஐ பாருங்கள் .
  nanjilhameed.blogspot.com

ஷாகுல் ஹமீது
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.