நான்களின் நடுவே…

ஜெயமோகன்


 


 


அன்புள்ள ஜெ


 


நான்கள் கட்டுரையை வாசித்தேன்(http://www.jeyamohan.in/11693#.WAoKTY996M8) .உங்களருடைய  மிக முக்கியமான கட்டுரைகளில்  ஒன்றாக இக்கட்டுரையை  கருதுகிறேன் .


 


பல அறிவு ஜீவிகளும் அவர்கள் நம்பும் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்காக அறத்தை பலி இடுகின்றனர் .ஒரு கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகளின் தோல்வியை உணர்ந்த பின்பும் அவற்றை பொது வெளியில் பாதுகாக்கின்றனர் .ஒரு வகையில் சொல்லப்போனால் நம்பிக்கை இழந்த பிறகு தான் அக்கொள்கைகளை பற்றிய அவர்களது கூப்பாடு அதிகமாகிறது .புதிய படைப்பாளிகளுக்கும் இந்த சிக்கல் இருப்பதாக தோன்றுகிறது .நண்பர் ஒருவர்  Gothic ரக புதினம் ஒன்றினை  எழுதிக்கொண்டு இருந்தார் .தப்பி தவறி அதனை குறித்து ஒரு இலக்கியவாதியிடம் கூறி விட்டார் .தொலைந்தது கதை .Gothic வடிவம் பழையது என்றும் அது அரசியல் சரிநிலைகள் அற்றது என்றும் கூறி மண்ணை அள்ளி போட்டு விட்டார் .


 


 


இது போலவே புதிதாக வந்திருக்கும் பெண் எழுத்தாளர்களின் நாவல்களும் பெண்ணிய நாவல்களாக மாற்றப்படுவதாக கேள்வி பட்டிருக்கிறேன் .பல சிந்தனையாளர்களும் நாடகம் முடிந்த பிறகும் வேடத்தை கலைக்க முடியாத ,சபிக்க பட்ட நடிகர்கள் தான் என்று தோன்றுகிறது .ஒரு வகையில் விக்ரமாதியன் கொடுத்து வைத்தவர் .எந்த சபையிலும் எதனையும் பேசலாம் .எவருக்கும் பயப்பட வேண்டாம் .நம் சொற்களை திரித்து விடுவார்களோ ,போராட்டம் வருமோ ,வழக்கு வருமோ என சிந்திக்க வேண்டாம் .அவர் இந்த நிலையை எப்படி அடைந்தாரோ தெரியாது ,அனால் அது தான் உண்மையான கருத்து சுதந்திரம் என தோன்றுகிறது .!!!


 


 


வேறொரு விஷயமும் இருக்கிறது .பொதுவாக உங்கள் முன்னாள் வாசகர்களும் ,எதிர்ப்பாளர்களும் (அவர்கள் பெரும்பாலும் முன்னாள் வாசகர்கள் தானோ ?!!!) உங்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது .ஜெயமோகன் அன்று அப்படி பேசினார் /எழுதினர்.இன்று அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது தான் அது.(எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை .எனக்கு ஏற்புடையதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வேன் !!!).இந்த குற்றச்சாட்டிற்கும் இந்த கட்டுரை பதிலளிப்பதாக எண்ணுகிறேன்


 


 


நன்றி


 


அனீஷ் க்ருஷ்ணன்


 


 


அன்புள்ள அனீஷ் கிருஷ்ணன்,


 


எழுத்தாளன் சீராக வெளிப்படவேண்டுமென்பதில்லை. நுணுக்கமாகப் பார்த்தால் அவனுக்கும் அவன் புனைவுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் இருக்கும். அவை அவனுக்கும் அவன் இலட்சியங்களுக்கும் இடையேயான மோதலாக இருக்கக்கூடும். அவன் நம்பிக்கைகளுக்கும் அவனறிந்த யதார்த்ததிற்கும் இடையேயான வேறுபாடாக இருக்கக்கூடும். அந்த மோதலை தன்னுள் உணர்வதனால்தான் அவன் எழுதுகிறான். அதுவே அவன் கொந்தளிப்பும் தத்தளிப்பும்.


 


அவனுடைய படைப்புகளுக்கு இடையேகூட முரண்பாடுகள் இருக்கும். ஒரு படைப்புக்குள்ளேயே கூட முரண்பாடுகள் இருக்கும். அதையே பலகுரல்தன்மை என இலக்கியவிமர்சனத்தில் குறிப்பிடுகிறார்கள். பேரிலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்துமே அப்படிப்பட்டவையே. தல்ஸ்தோய் காமத்தை ஒறுக்கிறாரா கொண்டாடுகிறாரா என்று மட்டும் பார்த்தால்போதும், இது புரியும்.


 


ஒருபோதும் நான் ஒன்றாக இருந்ததில்லை. நான் செய்ய நினைப்பதெல்லாம் புனைவுக்குள் புனைவொருமையைக் கொண்டுவருவது மட்டுமே. அதாவது வடிவரீதியாக மட்டும். அதற்குள் உள்ள பார்வையில் மாற்றமில்லா ஒருமையை நான் இலக்காக்குவதில்லை. அது ஒருவகை வாக்குமூலமாக, கட்டற்றதாக, இருந்தால்மட்டும் போதும் என்பதே என் எண்ணம்.


 


எழுத்தாளன் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் தத்துவஞானியும் அல்ல. ஆகவே அவன் ஒற்றைப்படையாக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய குழப்பங்களும் தடுமாற்றங்களும் நிலைமாற்றங்களும் அவன் எவற்றை பிரதிநிதித்துவம் செய்கிறானோ அவற்றுக்குரியவை. அவற்றை ஆராய புனைவில் உள்ள அந்த ‘விரிசல்களை’ ஆராயவேண்டும் என்பதுதான் நவீன இலக்கிய விமர்சனம் என்பது


 


என் எழுத்துக்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில்தான் உள்ளன. பெரும்பாலான கட்டுரைகளுக்குக் கீழே பழைய கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் . அவற்றில் என் மாறுபாடும் வளர்ச்சியும் பதிவாகியிருக்கும். அவை பலசமயம் எனக்கே ஆச்சரியமானவைதான்.


 


நானறிந்த உண்மையை, என்னுள் எழும் உணர்வுகளை அவ்வப்போது அப்படியே தடையின்றி வெளிப்படுத்தவேண்டுமென்பதே என் இலக்கு. யோசித்துப் பேசக்கூடாதென்பதை ஒரு நெறியாகவே இதுவரை கொண்டிருக்கிறேன். உண்மையில் நான் எழுதவந்ததே அந்த கொள்கையை [சு.ராவுடன் முரண்பட்டு] அறிவித்தபடித்தான். இதுவரை வந்துவிட்டேன், இன்னும் கொஞ்சநாள்தானே?


 


இதுவரையில் என் மீது எழுந்துள்ள எல்லா விமர்சனங்களும்  நான் முன்வைக்கும் தன்னிச்சையான எதிர்வினைகள் சார்ந்து எழுபவை மட்டுமே. அவையும் இயல்பென்றே கொள்கிறேன். எழுத்தாளனின் பணி எழுத்தினூடாக சமகாலச் சிந்தனையில் ஓர் அலையை உருவாக்குவதே. ஒரு rupture என்று அதைச் சொல்வேன். ஆனால் அது என்னை உடைத்துவிடலாகாதென்றும் எண்ணுகிறேன்.


 


முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அயோக்கியன் என்றெல்லாம் ஒருவனை வசைபாடும் மனநிலை எளிமையான கட்சியரசியலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவது. நாளுக்கொரு நிறம்மாறும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளும் முறை அது. ஆனால் அவர்களை  அப்படியே ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கருத்துப்பரிணாமம்  மோசடியாகத் தெரிவது ஆச்சரியமானது, ஆனால் அப்படித்தானே அது நிகழமுடியும்?


 


என் கருத்துக்களை நானே கூர்ந்து கவனித்துவருகிறேன். இக்கருத்துக்களை முன்வைத்து நான் அடைவதற்கொன்றுமில்லை. எனவே இவற்றில் சமரசங்களுக்கு இடமில்லை. அவை நானறிந்த வாழ்க்கைநோக்கை முன்வைப்பவை. என் ஆசிரிய மரபிலிருந்து கொண்டவை. அவற்றில் வளர்ச்சி இருக்கலாம், குழப்பங்களும் இருக்கலாம். திரிபு அல்லது பொய்மை இருக்காது. அவற்றிலிருப்பது நான் கொண்ட தரிசனமே.


 


*


.


அரசியல்சரிகளுக்கு ஆட்படும் எழுத்தாளர்கள், வெளியே இருந்து கொள்கைகளை கோட்பாடுகளை பெற்றுக்கொள்ளும் படைப்பாளிகள், படைப்பாளிகள் அல்ல. அவர்கள் என்றும் இருந்துகொண்டுதான் இருந்தார்கள். நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதுக்கு மட்டுமே தன்னை ஒப்படைத்துக்கொண்டவன்.


 


படைப்பில் படைப்புக்குள் இருப்பதை வாசிக்கத்தெரியாத வாசகர்கள்தான் பெரும்பான்மையினர். அவர்கள் அது என்ன  ‘சொல்கிறது’ என்று மட்டுமே பார்க்கிறார்கள். அப்படிச் சொல்லப்படுவது தன் அரசியல், சாதி, மத நம்பிக்கைகளுக்கு உகந்ததா என்று அளவிட்டு நிலைபாடுகள் எடுக்கிறார்கள். இன்னொரு மாபெரும் பெரும்பான்மையினர் வாசிப்பதே இல்லை. அவர்களுக்கு எழுத்தாளனைப் பற்றிய பிம்பமே போதும், வெறுக்கவும், வசைபாடவும். உண்மையில் அது இலக்கியம் மீது, அறிவுச்செயல்பாடு மீது கொண்டுள்ள அச்சம்தான்.


 


படைப்பை வாழ்க்கையைக்கொண்டு வாசிப்பவர்களே அதன் நிகர்வாழ்க்கைச் சித்திரத்தில் இருந்து தனக்கான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களுக்காகவே புனைகதைகள் எழுதப்படுகின்றன. எழுத்தாளன் அவர்களை மட்டும் கருத்தில்கொண்டால்போதும் என்பதே என் எண்ணம். எப்போதுமே நான் கூறிவருவது அதையே, தவறு சரி நோக்கி எழுதவேண்டியதில்லை. ‘தோன்றியதை’ எழுதினால்போதும். அது ஒருபெரிய சிலுவைதான் , ஆனால் எழுத்தாளனின் பணி அதுவே.


 


*


வாசகர்கள் என வருபவர்கள் வெவ்வேறு வகையினர். அவர்கள் அவர்களுடைய சொந்தத் தேவைகள், எதிர்பார்ப்புகளுடன் , கேள்விகளுடன்தான் வருகிறார்கள். அவர்கள் வாசிக்கும் சிலவற்றிலிருந்து என்னைப்பற்றி, என் எழுத்தைப்பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை நானும் பேணவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.


 


வாசிப்பு என்பது வாசகனின் கூர்மையையும் தேவையையும் ஒட்டியே அமைகிறது. ஆகவே வாச்கன் என்னும் பொதுவான அடையாளம் என ஏதுமில்லை. அவரவருக்கு ஏற்றபடியே பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்டவை அவர்களையேதான் காட்டுகின்றன.


 


முன்பு நித்யானந்தா பற்றி நான் எதிர்மறையாக எழுதியபோது ஒரு கூட்டம் வாசகர்கள் புண்பட்டு பிரிந்துசென்றார்கள். அவர்களில் பலர் நாளொரு உபதேசமும், வசையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை சிலநாட்களுக்கு முன் சந்தித்தேன்.  ‘எனக்கு நீங்க பெரிய ஏமாற்றமா ஆயிட்டீங்க” என்றார். ‘ நான் உங்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கலையே’ என்றேன். “எப்டி நீங்க நித்யானந்தா பத்தி எழுதலாம், எழுத நீங்க யார்?’” என்று கொதித்தார். “அதுக்கு முன்னாடி நீங்க பாராட்டின பல கருத்துக்களைச் சொன்ன அதே ஆள்தான்”


 


இதேபோல பெருமாள்முருகன் விவகாரத்தில் கவுண்டர்கள் கொஞ்சம்பேர் எதிரிகளானார்கள்.இவ்வாறு வரும் வாசகர்களின் குறுகிய வாசிப்புக்கு ஏற்ப நான் என்னை குறுக்கிக் கொள்ள முடியுமா என்ன? என் வழி சொல்லின் போக்கால் ஆனது. அதில் எவரும் உடன்வரவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை. ஒரு வாசகரை, ஒரே ஒரு நண்பரைக்கூட நான் வேண்டுமென்றே தக்கவைக்க முயலமாட்டேன் என்பது நான் எழுதவந்தகாலம் முதல் கொண்டிருக்கும் கொள்கை. வாசகர்களுக்குத்தான் நான் முக்கியம், எனக்கு வாசகர்கள் முக்கியமே அல்ல. இன்று இருந்து நாளை மறையும் வாசகர்களுக்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. என்றுமிருக்கும் ஒரு பெருக்கு அது.


 


இப்படி தங்கள் குறுகலால்  ‘எதிரி’ ஆகிறவர்களுக்கு ஒரு சுயகசப்பு இருக்கிறது. நேற்று என்னை அவர்கள் பாராட்டியதும் ரசித்ததும் அவர்களுக்கு எரிச்சல் அளிக்கிறது. ஆகவே அந்தப்பழியையும் என்மேல் சுமத்துகிறார்கள். நான் அயோக்கியன் , முரண்படுகிறேன் என நிறுவப் பாடுபடுகிறார்கள். அவர்களே நம்பும் அளவுக்கு பேசிவிட்டால் நிறைவடைந்து அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இது முப்பதாண்டுக்காலமாக , இரண்டு தலைமுறையாக, நடந்துவரும் தொடர்நிகழ்வு.   என்னிடம் நிகழ்வதை உடன்வந்து தானும் அடைபவர்களே  உண்மையில் வாசகர்கள் என நான் கொள்கிறேன்.


 


எனக்கு எதிரிகள் என்று தங்களைச் சிலர் உருவகித்துக்கொள்ளலாம். அது அவர்களுக்கு ஓர் அடையாளத்தை, அவர்களின் குரலுக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கும், அவ்வளவுதான். புனைவெழுத்தாளனாகிய எனக்கு எதிரிகளாக இருக்கும் தகுதி கொண்ட எவரும் இன்றில்லை. உண்மையில் உள்ளூர இதை உணராத  ‘எதிரி’களும் இல்லை. முப்பதாண்டுக்காலத்தில் இப்படி சுயமாக நியமித்துக்கொண்ட எந்த  ‘எதிரி’யையும் ஒரு பொருட்டாக மதித்து ஒரு சொல்கூட நான் சொன்னதில்லை. இன்னும் ஒரு பத்தாண்டுக்காலம் அவ்வாறுதான். அதன்பின் என் எழுத்துமட்டும்தான் இங்கிருக்கும்.


 


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.