Jeyamohan's Blog, page 1711

November 12, 2016

சிறுகதைகள் விமர்சனம் -5

1


 


அன்புள்ள ஆசானுக்கு,



மடத்து வீடு சிறுகதையை நான் படிக்கும் முன்பே சிலர் விமர்சனமிட்டிருந்தனர், தரமான விமர்சனங்களான அவைகளை விட சிறப்பாக நான் சொல்ல எதுவும் இல்லை,  அதனால் பிடித்த வரியினை மட்டும் குறிப்பிடுகிறேன் .
//வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.//
கதையின் இரண்டாம் முறை வாசிப்பில் மொத்த கதையும் இந்த வரியில் உச்சம் கொள்வதை உணர்ந்தேன், அந்த மொத்த வீட்டில் இருண்டு, உடையாமல், பாசியில்லாமல், கரி படியாமல் நிறத்தை தக்க வைத்திருப்பது பொம்மையின் ரவிக்கை என்பது முக்கியமான குறியீடு, அவ்வீட்டு பெண்கள் மானத்தோடு, கற்போடு வாழ்கிறார்கள் என்ற கதையின் முடிவை இவ்வரியில் உணரமுடியும் .
மிக எளிதாக புறந்தள்ள கூடிய, கதையே உணர நேரமெடுக்கும் வகையில் சிறுகதை உள்ளது தான் இக்கதையின் பலவீனம், கதையின் தளத்தில் அத்தகைய விமர்சனங்கள் காணப்பட்டது . கதை ஆசிரியர் படிமங்களை, வர்ணனைகளை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார்,  அதுவே இக்கதையின் தளத்தை உயர்த்தியிருக்கிறது .
நன்றி

சிவா



 


ருசி


 


ருசி மீதுள்ள மோகம் மனிதனைச் சுயநல வாதியாக மாற்றும். புலன் சார்ந்த வாழ்க்கை (ருசி குறியீடாக அமைகிறது) மனிதனைத் தன்னலம் மட்டுமே கருதும் ஒட்டுண்ணியாக்கக் கூடும்.


 


ஏமாற்றியவனைத் தேடிச் செல்கையில் ரயில் பயணத்தில் இதைக் கண்டடைகிறான். தேடல் அடங்கிவிடுகிறது. இதுதான் கதையின் மையம் என்று நினைக்கிறேன்.


 


ஆனால் ரயிலில் நிகழ்வது சாதாரணமான சம்பவம். It is too weak to carry the weight of this theme.அதனால் “slice of life” கதை போல நின்றுவிடிகிறது.


 


முடி


 


எழுத்து இயற்கையாக உள்ளது. நகைச்சுவையும் சுய ஏளனமும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் மிக வெளிப்படையான, எளிதில் ஊகிக்கக் கூடிய கதைக்கரு. நல்ல blog post எனலாம், சிறுகதையாக ஏற்க முடியவில்லை.


ப்ரியம்வதா


 


8


 


அன்புள்ள சார்,


 


செளந்தர் தன் யோகாசென்டரில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்திருந்தார். அதில் சில பாசுரங்களை தனித்தனியாக ஓதவேண்டும். அதில் எனக்கென வாய்ந்த ஒன்று அரியைத்தொழுது மனம்வருந்தி பின் சிவனடி பணிவது போல் பொருள் கொண்டது.( அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேன் ).

விஷ்ணுபுரத்துக்காரனை இப்படிப்பாட வைக்கலாமோ என நினைத்து உளம் கலங்கினேன். ஆனால் அதன்பின் கிராதம் வரை சிவதரிசனமாகவே இருக்கிறது.


(


முற்றோதலில், காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலியே.. என்பதை கபாலியே என வாசித்துமுடித்துவிட்டு நெருப்புடா என ஹம்செய்த அருணாசலம் பற்றி இப்போது சொல்ல ஏதுமில்லை )


 


பிறகு, ரேஷன்கார்டு விஷயமாக திருச்சி சென்ற போது உத்தமர் கோயில் என்னும் வைணவ திவ்யதலத்திற்கு சென்றிருந்தேன். அதிலும் கபாலத்தை ஏந்திய பிச்சாண்டவர். அந்தக்கோநிலுமே, பிச்சாண்டவர் கோயில் என்றும் பிரம்மா கோயில் என்றும்தான் அழைக்கப்படுகிறது. ஏகப்பட்ட சிவன் கோயில்களுக்கு சென்றிருந்தாலும், பிச்சாண்டவரை காண்பது இதுவே முதல் முறை.  கிராதம் படிக்கையில் பிச்சாண்டவர் நேரில் வறாரே என ஏவிஎம் ராஜன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட போது, “நவீன நாவலுக்கெல்லாம் இந்தளவு பொங்கக்கூடாது.. எதானாலும் ஒரு இனிய ஜெ. கடிதம் எழுதி நேரடியாக பொங்கிக்கொள்ள சுரேஷ்பாபு அறிவுறுத்தினார்..”  எழுதிப்பார்த்தபோது,   சரியாக வராததால்  நானும் நிறுத்திவிட்டேன்.


 


கவிஞர் குமரகுருபரன் பற்றி நீங்கள் சொன்னபோது, இளையவர்கள் இயற்கையாக மரணிக்கும்போது எழும் பதட்டம் பற்றி விளக்கினீர்கள்..நேற்று இரவு என் சித்தப்பா மரணச்செய்தியை கேட்டுத்தவித்த அப்பா பெரியப்பா வைக் கண்டபோது, அதை நேரடியாக அனுபவிக்கும் போதுதான் நன்றாக புரிந்துகொண்டேன்.


 


இந்தச் சிறுகதை முயற்சியும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஒரு சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதையை நான்  இப்போதுதான் உணர்கிறேன்.


 


நேற்று இரவு சித்தப்பா வீட்டில் இருக்கும் போது எனது விடிவு சிறுகதையை நீங்கள் தளத்தில் சுட்டி அளித்திருந்த்து கண்டு அந்தநேரத்திலும் மிக உணர்ச்சிகரமாகவும் சற்று பெருமையாகவும்  உணர்ந்தேன் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


 


 


ஒரு உரையாடலில் இதை கதையாக எழுதச்சொன்னவர் சுரேஷ்பாபு, கதை பிரசுரமாவதற்கு முன், நட்பாஸ், துரைவேல்சார் ஆகியோர் இது பற்றி பேசினார்கள். முதலில் கதை எழுதும் போது அது மனதுக்குள் கொண்ட வடிவத்தை எழுத்தில் கொண்டுவரவில்லை என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர். எழுதுபவனுக்கு தெரிவது வாசகனுக்குத் தெரியவாய்ப்பில்லை. எனவே சற்று விளக்க வேண்டும் என்பது போல..அதன் பிறகு அதைச் சரிசெய்த பிறகே சொல்வனத்தில் வெளியானது.


 


இந்தக்கதை சொல்வனத்தில் வந்தபோது நம் நண்பர்கள் இதுபற்றிப் பேசினார்கள்… அக்டோபர் இரண்டு அன்று வந்ததால்  எல்லோரும் உண்மையையே கூறினார்கள்..


 


ராகவ், இது பற்றி நான் உங்களுக்கு எழுதிய கடித்த்தையுமே நினைவு வைத்திருந்தான். கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் பேரு வைத்து கதாபாத்திரமாக்கியது அளித்த குழப்பத்தை ஜாஜா, தனா, கிருஷ்ணன் ஆகியோர்  தெரிவித்தார்கள்.


 


 


சுரேஷ் வெ, அருணாசலம், சுனில், ஷிமோகா ரவி, செந்தில், கவிதா ஆகியோர் என் மனம் புண்படக்கூடாது என கவனமாக இது நல்ல கதைதான், முதல்முயற்சி வீண்போகலை.. ம்ஹூம் அழப்பிடாது  என ஆற்றுப்படுத்தினர்..


 


டாக்டர் வேணு வெட்றாயன், survivor’s guilty என்பதையும் தாண்டி இதில் உள்ள முக்கியமான தருணங்களைக் கூறி இதையெல்லாம் நிரப்பியிருந்தால் பின் நவீனத்துவ பாணியாகியருக்கும் ஆனால் இப்போது இது நவீனத்துவ பாணிபோல் உள்ளது எனக் கூறினார். கவர்னர் ஸ்ரீநிவாசன் அவர்களும் இதையே கூறினார்.


 


கதை யதார்த்தத்திற்கு சற்று அருகில் இருப்பதாலேயே உண்மையாக இருக்கிறது. ஆகவே தொடர்ந்து எழுதவும் எனச்சொல்லி, சில குறைகள் உள்ளன அவற்றைத் தவிர்க்கவும் உறவுமுறையை கடலூர் சீனு கூறினார்.


 


கடைசிவரி ஓரளவு காப்பற்றியதாக அனைவரும் சொன்னார்கள்.


 


இவ்வாறு எனக்கு தனியாக போனில் அழைத்தும் கடிதமெழுதியும் அளித்த பின்னூட்டங்களால் சிறுகதை பற்றி எனக்குமே ஒரு தெளிவு இப்போதுதான் உண்டானது.(கெய்ஷா கதை அருணாசலத்தின் பரிமேலழகர் உரை இல்லாமலேயே ஓரளவு புரிந்த்து)


 


இது சார்ந்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.


 


இத்துணை பணிகளுக்கிடேயேயும் இதையும்  வாசித்து சுட்டி அளித்த உங்களைப் பணிவுடன் வணங்குகிறேன். பாதம் பணிகிறேன். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்.


 


எல்லா, போற்றுதல்களையும்  தூற்றுதல்களையும் சிவா கிருஷ்ணமூர்த்திக்கே அர்ப்பணிக்கிறேன்….


 


 


இதன் முதல் வடிவத்திற்கு, துரைவேல் அவர்களின் கடிதம்,


/


 


//அன்புள்ள காளி

கதையைப் படித்தேன். இதைப்போன்ற கதைகள் அடங்கிய தொடர் ஒன்றை சுஜாதா எழுதியிருந்தார். தூண்டில் கதைகள் என்றுவ் பெயரிடப்பட்டிருந்த தொடர். அது.  கதையின் முடிவு வாக்கியத்தில் கதையை முழுவதுமாக தலைகீழாக திருப்பிவிடும்.  அந்த முடிவு வாக்கியத்துக்ககாகவே முழு கதையும் எழுதப்பட்டிருக்கிறது என நம்மை உணரவைக்கும்.    அதைப்போன்ற கதை இது.


 


 


கதை ராஜாவின் இறப்பின் பின்னான  நிகழ்வுகளைசொல்லிச் செல்கிறது.  ஆனால் ராஜா விபத்தில் இறந்துவிட்டான் என்பது கதையின் இறுதிப்பகுதிக்கு சற்று  முன்தான் உறுதிப்படுத்தப்படுகிறது. இது கதையின் முற்பகுதியில் ஒரு மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்தத் தகவல் தெரியாமல் நாம் படிக்கையில் பலவேறுபட்ட  தகவல்கள் பொருத்தமற்ற வகையில் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் முதல் முறை படிக்கும்போது நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது. பின்னர் கதையை இரண்டாம் முறை படிக்கையில் அனைத்தும் சரியாக பொருந்திவருவதும் அனைத்து தகவல்கள், நிகழ்வுகளுக்கு அர்த்தமிருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் கேட்டால் நான் மூன்றாவது முறை படித்தபின்தான். அனைத்து வாக்கியங்களும் எவ்வளவு அவசியமானவை என உணரமுடிந்தது.  இந்த கதை கூறல் முறையே கதையின் பலமாக இருக்கிறது.

 


ஆனால் அதுவே கதையின் பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும் என நினக்கிறேன்.   ராஜாவின் அம்மா ரவியை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பது.  ஆனால் கதையின் போக்கு ஏதோ முதலில்  ஒரு பிரச்சினை, காவல் நிலையத்தோடு தொடர்புடையது, ரவி அலுவலகம் சம்மபந்தப்பட்டது, ரவியும் சம்பந்தப்பது,  ராஜா சம்பந்தப்பட்டது, எனச் சென்று இறுதியில் ராஜாவின் சாலை விபத்தில் மரணம் பற்றியது என கதையின் இறுதிப்பகுதியில் முந்தைய பகுதியில் சொல்லப்படுகிறது. அதுவரை வாசகன் என்ன நடக்கிறது என யூகித்துக்கொண்டே படிக்கவேண்டியிருக்கிறது.  அதனால் என்னால் முதல் முறை படிக்கையில் கதை பாத்திர உருவாக்கங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.  இன்னமும் என்னால் ராஜா ரவி இருவரும் ஒரே வண்டியில் சென்றார்களா? தனித்தனி வண்டியில் சென்றார்களா? என்ற குழப்பம் இருக்கிறது. அல்லது ராஜா தன் காதலியுடன் தனியாக சென்று வரும்போது விபத்து ஏற்பட்டு அதை ரவி மறைக்க முயல்கிறானா என்றுகூட ஒரு குழப்பம் ஏற்பட்டது.

 


ஆனால் இந்த சிறிய  கதையிலேயே ஒரு இளைஞன் ஒரு குடும்பத்துடன் கொள்ளும் நட்பு,  தனித்து வாழும் இளைஞனின் குடும்ப நினைவு, குடும்பத்தின் கண்காணிப்பில் வாழும் இளைஞன் அதை மீற நினைக்கும் உளவியல், குற்றவாளிக்கூண்டில் நிற்பவனின் தவிப்பு ஆகியவை நன்றாக கூறப்பட்டிருக்கிறது.  ரவி தன் நண்பன் ராஜாவின் மரணம் அவனுக்கு அளிக்கும் துயரத்தை ராஜாவின் அன்னை அவனுக்கு அளிக்கும் விடுவிப்புக்கு பின்னரே உணரவும் அனுபவிக்க முடிகிறது என்பது சிறப்பான உளவியல்.

முடிவாக கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ராஜாவின் மரணம் முன்னரே சொல்லப்பட்டிருந்தால் கதை ஒரே குறிக்கோளுடன் தெளிவாக பயணித்திருக்கும் என நினக்கிறேன். விமோசனம் என்பது பழைய தேய்வழக்கான சொல்.  வேறு தலைப்பு பற்றியும் காதாசிரியர் யோசித்துப்பார்க்கலாம்.

11 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:41 ///


அன்புடன்,


R.காளிப்ரஸாத்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2016 10:32

தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி

download


 


திரு ஜெயமோகன் அவர்களுக்கு


 


தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி  தங்களுடைய கருத்தினை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


 


சமகால நவீன இலக்கியத்தில் சிறந்தவற்றை நானும் தேடி வருகிறேன். என்னுடைய ரசனை சற்று மாறுபடக் கூடும். மகம்மது கதீர்பாபு ( Mohammed Khadeerbabu) “போலேரம்ம பண்ட கதலு”, “தர்கா மிட்ட கதலு” இவை இரண்டுமே முஸ்லிம் பின்னணியில் அவர் எழுதிய கதைகள். ஆர்.கே. நாராயணன் எழுதிய “மால்குடி டேஸ்” க்கு இணையாக இவற்றை சொல்ல முடியும். அதே சுவையுடன்  மொழி பெயர்க்ககூடியவர்கள்  இதனை தமிழில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.


 


போய ஜங்கய்யா ( Boya Jangayya) அவர்களின் “ஜாதர” என்ற படைப்பு, ஏறக்குறைய “மாதொருபாகன்” கதையின் கருத்தை மையமாக கொண்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி உள்ளது.


 


ரங்கநாயகம்மா அவர்களின் படைப்பில் ஜாதி வேற்றுமைகளை கருத்தாக கொண்ட நாவலான  “பலிபீடம்” ,  பெண் விடுதலை மையமாகக் கொண்ட “ஜானகி விமுக்தி” குறிப்பிடத்தக்கன. 1962-63ல் வெளிவந்த “பலிபீடம்”  1975ல் திரைப்படமாகவும் வந்து பாராட்டை பெற்றுள்ளது. அவருடைய சுமாரான படைப்பு “பேகமேடலு”. அதன் தமிழாக்கம் தான் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்கள். அவருடைய சமீபத்திய படைப்பான “கள்ளு தெரிசின சீதா” ஒரு பெண்மணியின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது


 


 தான் எழுதிய கதைகளையே, தனக்கு இப்போது உடன்பாடு இல்லாத விஷயங்களை  மாற்றி அமைத்து (அதற்கான விளக்கத்துடன்)     புதிதாக வரும் பதிப்புகளில் வெளியிட்டு வருகிறார் ரங்கநாயகம்மா.


 


கடந்த இருபது ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு இலக்கியத்தில்   (தெலுங்கிலிருந்து தமிழ் மற்றும் தமிழிலிருந்து தெலுங்கு) ஈடுபட்டு வருகிறேன்.


 


நான் முதல் முதலில் மொழிபெயர்த்தது எண்டமூரி அவர்களின் அந்தர்முகம் என்ற புதினம். அதே தலைப்பில் தமிழில் வெளியாகி உள்ளது. (அல்லயன்ஸ் பதிப்பகம்) இவர்   குடும்பம், விஞ்ஞானம், மாந்த்ரீகம் என  பல தரப்பட்ட தளங்களில் எழுதி உள்ளார். இவரது நாற்பது நாவல்களை நான் மொழிபெயர்த்துள்ளேன்.


 


“நாவல் ராணி” என்று போற்றப்படும் யத்தனபூடி சுலோசனா ராணி குடும்பப் பின்னணியில் எழுபது நாவல்கள் எழுதியுள்ளார். அதில் ‘செகரட்ரி’ என்னும் நாவலின்  தொன்னூறாவது பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இவர் நாவல்கள் 16 என் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளன.


 


பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் என்று முத்திரை இருந்தாலும் , சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதி வருபவர் ஒல்கா. “விமுக்தா” என்ற அவருடைய கதைத் தொகுப்பு, சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட ராமாயணக் கதைகள். வனவாசத்தின்போது  அரண்மனையில் யாரையும் சந்திக்காத ஊர்மிளை மற்றும்  அகலிகை, சூர்பனகை, ரேணுகா ஆகியோரை  சந்தித்து உரையாடியதால் ஏற்பட்ட அனுபவங்கள் பின் வரும் நாளில் சீதைக்கு  ஏற்படுத்திய புரிதலை விளக்கும் விதமாக கதைகள் அமைந்துள்ளன, “விமுக்தா” என்ற இந்த படைப்பிற்காக 2015 சாஹித்ய அகாதமி விருது அவருக்குக் கிடைத்துள்ளது.   இதன் தமிழாக்கமான “மீட்சி” அதே ஆண்டில் எனக்கு சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்றுத் தந்தது.


 


அவருடைய மற்ற படைப்புகளான சுஜாதா , தொடுவானம் தொட்டு விடும் தூரம், ஒரு பெண்ணின் கதை ஆகியவற்றையும்  பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறார்கள்.


 


கொண்டபல்லி கோடேஸ்வரம்மா ( PEOPLE’S WAR GROUP ஸ்தாபகர் சீதாராமய்யாவின் மனைவி) தனது தொன்னூறாவது வயதில் எழுதிய  தன்வரலாறு, “ஆளற்ற பாலம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


 


கவனசர்மா , P.சத்யவதி, விவின மூர்த்தி, முஹம்மது கதீர் பாபு, பெத்திண்டி அசோக் குமார், டி. காமேஸ்வரி, சிலகலூரி தேவபுத்திர, ஸ்ரீவல்லி ராதிகா போன்றவர்களின் சமீபத்திய   சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன்


 


வணக்கத்துடன்


கௌரி கிருபானந்தன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2016 10:32

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25

[ 37 ]


தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை.  “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார்.


குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து  தொடங்கி நுரை பெருகுவதுபோல் பெருகி  பேருருவம் கொண்டு நின்றிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தனர். வடதிசையில் அவன் பெருநகர் உள்ளது என்பதற்கப்பால் அவர் எவரும் அவனை கண்டதில்லை.  பசித்து துயில்பவனின் கனவில் உணவுக்குவையென, இளம் கன்னியின் கனவில் பொற்குவியலென, இல்லறத்தான் கனவில் ஏழடுக்கு மாளிகையென, அரசனின் கனவில் நிறைகருவூலம் என தன்னை உருமாற்றிக் காட்டிக்கொண்டே இருக்கும் மாயன் அவன் என்றனர்.


தேடி அலைந்து சலித்து வடதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிற்றோடைக்கரையில் தன் கையால் மூங்கில் வெட்டிக் கட்டிய சிறு குடிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த முதிய அந்தணரை அவன் கண்டான். அவன் களைத்திருந்தான். இரவு தங்குவதற்குரிய மரத்தடியை தேடிக்கொண்டிருந்தான். அக்குடில் அவனை முகம் மலரச்செய்தது. அருகணைந்து குடில்முன் அமர்ந்து மாலைவெயிலணைவதை நோக்கி நின்றிருந்த அவருக்கு வணக்கம் சொன்னான்.  “வருக!” என்று அவர் புன்னகையுடன் அழைத்தார்.


“களைத்துளேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த வழிப்போக்கன். போர்க்குலத்தான்” என்று அர்ஜுனன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “இன்று இரவுணவுக்கென அமுது சமைத்துள்ளேன். அதை இரண்டென பகுத்து நாம் உண்போம். விருந்தால் அது இனிமைகொள்ளவேண்டும் என இன்றைய நெறிவகுத்தோன் எனக்கு அருளியிருக்கிறான்” என்று சொல்லி அந்தணர் தன் இல்லத்திற்குள் சென்று உணவை கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அதைப்பகிர்ந்து இருவரும் உண்டனர்.


“என் பெயர் சௌம்யன். இக்குடிலில் தனிமையில் வேதம் ஓதி ஊழ்கம் பயின்று வாழ்கிறேன்” என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நிலவு எழும் நாள் இன்று. காடு கனவு கொள்ளத்தொடங்கும் பொழுது. சொல்லாடிக் களித்திருக்க ஓர் அயலவன் வந்திருப்பது நல்லூழே” என்றார் அந்தணர். “வராதிருந்தால்….?” என்று அர்ஜுனன் குறும்பாகக் கேட்டான்.  “தனிமை அதற்கிணையாகவே இனிது” என்றார் அந்தணர் நகைத்தபடி.


உணவுண்டபின் குடில் முற்றத்தில் ஈச்சை ஓலைப்பாயை விரித்து நிலவு நோக்கி இருவரும் படுத்திருந்தனர். “தாங்கள் இங்கு வேறு என்ன செய்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன்.  “ஒன்றும் செய்வதில்லை. உவகை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தேன். இவ்வோடைக்கரையில் இக்குறுங்காட்டைக் கண்டதும் இதுவே அவ்விடம் என்று தெளிந்து இங்கு குடில்கட்டி தங்கினேன். இங்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகின்றன. ஒருநாள் சேர்த்ததை மறுநாளுக்கு கொண்டு செல்வதில்லை. உணவும் நினைவும்” என்றார் சௌம்யர்.


KIRATHAM_EPI_25


“ஒவ்வொரு நாளும் அன்று புதிதெனப் பிறந்தெழுகிறேன். என்னுடன் சூரியனும் எழுகிறான். விலங்குகள் பறவைகள் புட்கள் பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னைப்போல் பிறவிகொள்கின்றன. எங்களுக்குரிய அனைத்தும் இக்காட்டில் நிறைந்துள்ளன. நாளில் கொண்ட எதுவும் நினைவில் எஞ்சாது இங்கு வந்து படுக்கிறேன். தலைக்கு மேல் விண்மீன்களென விரிந்துள்ளது பெருவெளி. என் கையில் எதுவும் இல்லை என்பதனால் அவ்விரிவு என்னுடையதாகிறது” என்றார்.


அர்ஜுனன் நீள்மூச்சுடன்  “ஆம், விடுபடுவதே பேரின்பம். அதை என்னால் உணரமுடிகிறது” என்றான். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று சௌம்யர் கேட்டார்.  “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு  ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா?” என்றான்.  சௌம்யர் இயல்பாக “அவனை முழு வடிவில் நான் கண்டுள்ளேன்” என்றார்.


அர்ஜுனன் திகைப்புடன் “தாங்களா…?” என்றான். “ஆம். அயோத்திநாட்டில்  அஸ்வினிபுரம் என்னும் நகரில் வாழ்ந்திருந்த பெருவைதிகனின் மைந்தனாக நான் பிறந்தேன். எந்தை வேள்விச்செயல் தேர்ந்தவர். அரசர்களுக்கு உலகியல்நலன் நாடும் பெருவேள்விகளை நிகழ்த்தி வைப்பவர். ஆநிரையும் பொற்கிழிகளும் கூலக்குவைகளுமாக இல்லம்திரும்பும் தந்தையையே நான் இளமைமுதல் கண்டு வளர்ந்தேன். நான் பிறந்தது செல்வத்தின் நடுவே. பொன்னளைந்து வளர்ந்தேன். பொன்னை அறிந்தவன் பொன்னை மட்டுமே அறிந்திருப்பான். பிற அனைத்தும் பொன்னாலேயே அவனுக்குப் பொருள்படும். நானும் அவ்வண்ணமே இருந்தேன்.”


வேதம் என்பது சொல்லுக்கு நூறு பொன்னின் எடை கொண்டது என்று எந்தை என்னிடம் சொன்னார். அதுவே எனை வேதம் கற்கத்தூண்டியது. கற்கக் கற்க வேதம் விரிந்தது. பொன்குவிகிறது என்றே என் உள்ளம் மகிழ்ந்தது. பொன்னென்பதனால் நான் ஒருதுளியையும் வீணாக்கவில்லை. பிறிதெதையும் பொருட்படுத்தவுமில்லை. இளமை முதிர்வதற்குள் நான் வேதம் முழுதறிந்து நால்வகைக்கூற்றும் தேர்ந்தவனாக ஆனேன்.


எந்தை மறைந்தபின் நானும் என் வைதிகர்குலத்தின் முதல் வைதிகனானேன். வேள்விச் சாலைகளிலிருந்து வேள்விச்சாலைகளுக்கு சென்றேன். ஈட்டிக் குவித்து என் இல்லத்தை பொன்னால் நிறைத்து வைத்திருந்தேன். பொன் அளையும் நாகொண்டவன் என ஆணவம் கொண்டிருந்தேன். என்னைக் காணவருபவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு, பொன்கறக்கும் பசுவே என் வேதம் என்று.


அன்றொரு நாள் பெருவேள்வி ஒன்றில் முதன்மை தலைவனாக அமர்ந்தேன். வேதச் சொல்லெடுத்து எரியோம்பிக்கொண்டிருக்கையில் அதில் ஒரு சொல் என் நாவில் எழவில்லை என்பதை அறிந்தேன். உடனோதியவர்கள் அச்சொல்லை ஓதி முன் சென்றுவிட்டிருந்தனர். நான் அச்சொல்லையே மீண்டும் அச்சத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அவ்வரி வந்தது, அச்சொல் என் நாவிலெழாது நழுவிச்சென்றது. என் உளவியளையாட்டா அது? நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா? நான் அதை கூர்வதனால் உள்ளம் என்னுடன் ஆடி மாயம் காட்டுகிறதா?


அவ்வரி வந்தது, அச்சொல்லுக்கு முந்தைய சொல் துல்லியமான ஓசையுடன் நிகழ்ந்தது. அச்சொல் இல்லையென நடித்து அதற்கு மறுசொல் என் நாவில் ஒலித்துச்சென்றது. அந்தவேள்வியில் நூறுமுறை அச்சொல் வந்தது, ஒருமுறைகூட என் நாவில் அது அமரவில்லை. வேள்விமுடிந்து எழுந்து சென்றபோது நான் பித்தனைப்போலிருந்தேன். பிறர் என் உள்ளம் கொண்ட குழப்பத்தை அறியவில்லை. நான் மட்டுமே அறிந்த ஒன்று அது என்பது முதலில் என்னை ஆறுதல்கொள்ளச் செய்தது. பின்னர் அதுவே என்னை பதற்றத்துக்குள்ளாக்கியது.


அச்சொல்லை மட்டுமே என் சித்தம் தொட்டு அளைந்துகொண்டிருந்தது. அச்சொல்லை என் உள்ளத்தால் பற்ற முடிந்தது. புரட்டிப்புரட்டி அதன் அத்தனை ஒலியமைவையும் பொருளமைவையும் காணமுடிந்தது. வேண்டுமென்றே அதை சொல்ல முயன்றேன். அச்சொல் மட்டும் நாவில் வந்தது. வேதவரியென சொல்கையில் மட்டும் அது நாவில் நிகழவில்லை.


மிகமிக அஞ்சிவிட்டேன். அது ஏதோ தேவனின் தீச்சொல். அல்லது உளநோயின் தொடக்கம். அதை எண்ணவேண்டாம், அதை விட்டு விலகிச்செல்வதே நன்று. ஆனால் விலகமுயலும்தோறும் அணுகினேன். அச்சொல்லை அன்றி வேறெதையும் எண்ணாதவனாக ஆனேன். அச்சொல் அறியாப்பேய்த்தெய்வம் போல அச்சமூட்டும் பேருருக்கொண்டு என்னைச்சூழ்ந்தது. இரவுகளில் துயிலிழந்தேன். பகலில் முற்றிலும் தனித்திருந்தேன்.


என் விழிகள் மாறுபட்டன. முகம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. என் மனையாட்டி என்னிடம் மீளமீளக் கேட்டாள் “என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எதையாவது அஞ்சுகிறீர்களா? எதையேனும் எண்ணி வருந்துகிறீர்களா?” ஓசையற்ற அசைவாக என் உதடுகளில் அச்சொல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனக்கு பீடைகூடிவிட்டது என்றனர் முதியவர். உள்ளச்சிதைவு என்றனர் தோழர்.  என் மனைவி கதறி அழுதபடி “என்ன ஆயிற்று உங்களுக்கு? மீண்டுவாருங்கள். நம் குழந்தைகளை என்ணுங்கள்” என்று என்னை உலுக்கினாள்.


என் செல்வம் துணைநின்றது. முதுவைதிகர் எழுவர் என்னை நடுவே இருத்தி வேள்விசெய்து  அவியும் பலியும் அளித்து என்னில் கூடிய தெய்வத்தை விரட்டமுயன்றனர். புறக்காட்டிலிருந்து பூசகனை வரவழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர். குறவப்பூசகன் வந்து தீயாட்டும் தெய்யாட்டும் நிகழ்த்தினான். மருத்துவர் பலர் வந்து  நெல்லிக்காய் தளமும் வில்வதளமும் வைத்து என் சித்தத்தை குளிர்விக்க முயன்றனர். ஒவ்வொன்றும் பிறிதெங்கோ நிகழ அச்சொல்லில் அமைந்திருந்தது என் சித்தம்.


நான் என்னை நோக்கிக்கொண்டிருந்தேன். கற்ற அனைத்தும் முழுமையாக நினைவிலிருந்தன. அவ்வொரு சொல் மட்டும்தான் நாவை அறியவில்லை. ஏன்? ஏன்? ஏன்? யார் விளையாடுவது என்னுடன்? அது ஓர் அறைகூவல். ஒரு இளிவரல்.  என் முன் அமர்ந்து முதிய நிமித்திகர் ஒருவர் சோழிபரப்பி வினாக்களம் அமைத்து உசாவிக்கொண்டிருந்தார். கையை ஓங்கி அறைந்தபடி நான் எழுந்தேன். “போதும்!” என்று கூவினேன். என்னைத்தடுத்த அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு என் ஊரிலிருந்து வெளியேறினேன்.


செல்லும்வழியிலேயே என் ஆடைகளை அணிகலன்களை அடையாளங்களை களைந்தேன். என் உள்ளக் கொந்தளிப்பு அமைய ஏழுநாட்களாயின. அப்போது கங்கைக்கரைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கிருந்து மேலும் வடக்காக கிளம்பிச்சென்றேன். எதைத் தேடி கிளம்பினேன் எங்கு செல்கிறேன் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சிலதருணங்களில் நம்மிடமிருந்து விலக நாம் நாமறிந்த அனைத்திலிருந்தும் தப்பி ஓடுகிறோம்.


வீரரே, உண்மையில் அது மிகச்சிறந்த ஒருவழி. நாம் என்பது நம்மைச்சூழ்ந்திருப்பவையே. ஊர், குலம், உறவு, மனை, செல்வம், ஆடைகள், அணிகள், பெயர்… அவற்றிலிருந்து நம்மை உருவி வெளியே எடுக்கும்போது நாம் அறிகிறோம் நாம் அவை அல்ல என்று. அந்த விடுதலையை அடைய துறந்தேகுவதைப்போல சிறந்த வழி பிறிதில்லை.


நூறுநாட்கள் வடதிசைநோக்கி சென்றேன். ஒரு அன்னசாலையில் ‘குபேரன்’ என்னும் சொல் காதில் விழுந்ததும் என் அகம் கொப்பளித்தெழுந்தது. என் உள்ளம் அனைத்தையும் உதறித்தெளிந்து அடுத்த அடியெடுத்துவைக்க உதவும் சொல்லுக்காக காத்திருந்தமையால் அச்சொல் அப்படி பொருள்கொண்டது. நான் உசாவவேண்டியது அவனிடம்தான். அவனைத்தான் அதுகாறும் நான் வழிபட்டிருந்தேன். வேதச்சொல்லை எனக்கு மீட்டளிக்கவேண்டியவன் அவன். வேதமாகி என்னுள் நிறைந்தவன்.


குபேரதீர்த்தம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார்கள் அவ்வழிப்போக்கர்கள். அப்படி ஒரு சுனை உண்மையில் உண்டா அது சூதர்களின் தொல்கதை மட்டும்தானா என்பதுதான் அவர்களின் சொல்லாடலாக இருந்தது. அது வடபுலத்தில் எங்கோ மலைமடிப்புக்குள் உள்ளது. அதில் பொன்னே நீரென ஊறும். அதைச்சூழ்ந்து பொன்மலைகள் அமைந்திருக்கும். பொன்னாலான கூழாங்கற்களும் சேறும் சூழ்ந்த அச்சுனைக்கு சுற்றிலும் செழித்திருப்பதும் பொன்நாணலும் பொற்செடிகளும்தான். பொற்பாறைகளில் படிந்திருப்பதும் பொற்பாசியே.


உரக்கநகைத்து ஒருவன் சொன்னான் “காசில்லாமல் பசித்திருந்த எவனோ ஒருவனின் கனவில் வந்த இடம் அது.” ஆனால் நான் அப்படி ஓர் இடமுள்ளது என உறுதிகொண்டேன். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொல்கதைகளில் இருந்து சொன்ன வழியடையாளங்களை உளம்கொண்டு மேலே நடக்கலானேன்.  முந்நூறுநாட்கள் ஒவ்வொரு வழிக்குறியாகத் தேடிக் கண்டடைந்து சென்றேன்.


குபேரதீர்த்தத்திற்கு தவமுனிவர் அன்றி பிறர் செல்லமுடியாதென்றே இறுதியாக எனக்கு வழி சொன்ன முனிவர் சொன்னார். “நான் செல்வதே ஒரு தவம். சென்றடையாது உயிர்வாழமாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். என் உடல் நலிந்தது. சடை அடர்ந்து கண்களில் பித்து நிறைந்தது. பிறிதொரு எண்ணமும் அற்றவனாக சென்றுகொண்டே இருந்தேன். இறுதியில் அந்த சுனையை சென்றடைந்தேன்.


பொன்மயமான அதன் கரையிலமர்ந்து தவம்செய்தேன். பதினெட்டுநாள் பிறிதொன்றிலாது என்னுள் மூழ்கினேன். என்னுள் இருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்த்தேன். அந்த ஒற்றைச் சொல் மட்டும் எஞ்சியிருக்க அதுவே நான் என்றாகி அமர்ந்திருந்தேன். அச்சொல் முதலில் ஒரு வினாவாக இருந்தது. அதன்மேல் மோதிமோதி என் சித்தம் அதை ஒரு விடையென ஆக்கிக்கொண்டது.


விழிக்குள் பொன்னொளி சூழக்கண்டு இமைதிறந்தேன். பொன்னுடல் ஒளிவிடத் தோன்றிய  குபேரனை முழுமையாகக் கண்டேன். பொன்னுடல் கொண்ட மானுடன் ஒருவனை அவன் ஊர்தியாக்கியிருந்தான். வீரரே, அந்த மானுடன் நான். என் இளமைத்தோற்றம் அது. குபேரனின்  ஊர்தி மானுடனே என அறிந்திருப்பீர். ஒவ்வொருவரும் தங்கள் வடிவில் காணும் மானுடன் அவன்.


குழந்தையின் கொழுத்த குற்றுடல். இடுங்கிய சிறுகண்கள். பொற்கதாயுதம். மறுகையில் பொன்னூறும் கலம். கீழ்க்கையில் தாமரை. “என்ன விழைகிறாய்?” என்று திருந்தாக்கிளவியில் கேட்டான். “எந்தையே, நான் வேதச்சொல் ஒன்றை மறந்தேன். அது என் நாவிலெழவேண்டும்” என்றேன். “என்னிடம் செல்வத்தையே கோருவார்கள். வேதச்சொல்லை எவரும் கேட்டதில்லை” என்று அவன் சொன்னான். தந்தைக்கு விடைசொல்லும் மைந்தன்போல தடுமாறினான்.


“எனக்கு வேதமே செல்வம். வேதம் அழிந்தால் நான் முற்றழிவேன்.  அந்த ஒற்றைவேதச்சொல் அழியும் என்றால் முழுவேதத்தையும் நான் இழக்கலாகும். அந்த வேதச்சொல்லை மட்டுமே வேண்டுகிறேன்” என்றேன். “நான் அச்சொல்லை மீட்டளிக்க இயலாது” என்று அவன் சொன்னான். சீற்றத்துடன் “பிறிதொன்றும் வேண்டேன். நீ எழுந்தருளியும் எனக்குக் கனிய  உனக்கு ஆற்றலில்லை என்றே கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.


அவன் “என்னிடம் உள்ளது அளவிலாச் செல்வம். ஆனால் செல்வம் மட்டுமே உள்ளது” என்றான். “அச்செல்வத்தில் இச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டு எனக்கு அளி” என்றேன். “அச்செல்வத்தைப்பெற்று அமைக!” என்றான். “செல்வத்தைப் பெரிதென எண்ணியிருந்தால் நான் கிளம்பியிருக்கவே மாட்டேன். உன் செல்வத்தைக்கொண்டு அச்சொல்லை மீட்டெடுத்த வாக்தேவியிடமிருந்து வாங்கி எனக்கு அளி” என்றேன்.


“ஆம், அதைச்செய்கிறேன்” என்று அவன் விழிமூடினான்.  அவனருகே அவனைப்போன்றே தோன்றிய மூன்று குபேரபுரியின் ஏவலர் தோன்றினர் “வாக்தேவியை அணுகி என் செல்வத்தில் அச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டுவருக!” என்றான். அதன்பின் என்னை நோக்கி புன்னகைத்து “என்னிடம் உள்ளது குன்றாப்பெருஞ்செல்வம். இப்புடவியையே நான் வாங்கமுடியும்” என்றான். குழந்தைமை பேதைமையாக ஆகும் சிரிப்பு அது என எனக்குப்பட்டது.


அவர்கள் வரக்காணாதபோது “எங்கு சென்றார்கள்?” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்?” என இரைச்சலிட்டான். அவர்கள் வரக்கண்டு “அதோ வருகிறார்கள்” என்றான். “வாங்கிவந்துவிட்டார்கள்” என்று சிரித்தான். அவர்கள் அருகணைந்து தலைவணங்கி “அரசே, சொல்லரசி அச்சொல்லை ஒரு துலாவின் தட்டில் வைத்தாள். மறுதட்டில் இணையான செல்வத்தை வைத்து எடுத்துச்செல்லுங்கள் என்றாள். நாங்கள் பொற்குவை ஒன்றை வைத்தோம். பொன்மலை ஒன்றை வைத்தோம். பொன்மலைகளை அள்ளி அள்ளி வைத்தோம்” என்றான் ஒருவன்.


“அரசே, நம் கருவூலத்தையே வைத்தோம். நம் நகரை நம் உலகையே வைத்தோம். அச்சொல் அசையவே இல்லை. வாக்தேவி நகைத்து மூடர்களே உங்கள் அரசனும் நீங்களும் அமர்ந்தாலும்கூட நிகராகாது என்றாள்” என்றான் இன்னொருவன். குபேரன் திகைத்து என்னை நோக்கி “நீ யார்? ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய்?” என்று சீறினான். “அரசே, வேதச்சொல்லுக்கு இணையாகும் ஏதும் நம்மிடம் இல்லை என்று அவ்வன்னை சொன்ன போது வானம் இடிசூழ்ந்து ஆம் ஆம் என்றது” என்றான் மூன்றாமவன்.  ”நான் அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என குபேரன் அழுதான்.


நான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடி “நான் அழுவேன்… நான் அழுவேன்… அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.


என்ன அதெல்லாம் என்று எனக்குப்புரியவில்லை.  குபேரதீர்த்தத்தில் இருந்து நான் திரும்பினேன். திரும்பும் வழியில் என் எண்ண அலைகள் ஓய்ந்திருப்பதை, நான் எடையற்றவனாக இருப்பதை உணர்ந்தேன். சிரிக்கத் தொடங்கினேன். சிரித்து சிரித்து மண்ணில் விழுந்து எழுந்து மீண்டும் சிரித்தேன். சிரிப்புடன் சிற்றூர்களை கடந்து சென்றேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவர்களை அறியாமல் சிரிக்கலாயினர்.


அச்சிரிப்பினூடாக என் நா மறந்த அச்சொல் மீண்டு வந்தது. அவ்வேதவரியை சொன்னேன். சொல் அமைந்திருந்தது. உண்மையா என நானே வியந்து மீண்டும் மீண்டும் சொன்னேன். அச்சொல் அங்குதான் இருந்தது. ஒன்றுமே நிகழாததுபோல. அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல. அதை மீண்டும் மீண்டும் சொன்னபடி நான் அழுதேன்.


“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது?” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றார் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”


[ 38 ]


அர்ஜுனன் நூறு  நாட்கள் நடந்து குபேரதீர்த்தத்தை சென்றடைந்தான். ஏழுமலைமுடிகள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை முதல் வழிக்குறி. சிம்மவாய் எனத் திறந்த குகை என்பது அடுத்தது. முதலைமுதுகுபோன்ற பாறைநிரை பிறகு. பூதங்களின் பாலம் தொடர்ந்து வந்தது. நெருப்பாக நீர் வழியும் பேரருவி பின்னர். சிரிக்கும் மலை அதற்கு அப்பால். வெண்பனி உருகி வழியும் முடி பின்னர். அதன்பின் அவன் குபேரதீர்த்தத்தை தொலைவிலேயே கண்டான்.


பனிமலை முடிகள் சூழ்ந்த சிறிய தாழ்வரை அது.  மஞ்சு உருகிய நீர் வந்து சேர்ந்து உருவான நீள்வட்ட வடிவான சுனை. நீலநிறத்தில் நீர் தேங்கி வான் தளும்பக் கிடந்தது. அதனருகே வெண்ணிறச் சேற்றுப்பரப்பில் ஒரே ஒரு காலடிமட்டும் சென்று திரும்பிய தடம் உலர்ந்து பளிங்குப்பாறையில் செதுக்கிய சிற்பம் போலாகி தெரிந்தது. அது சௌம்யரின் காலடி என அவன் உய்த்துக்கொண்டான்.


மண் உதிர்ந்த சரிவில் தொற்றி அந்தச் சுனையைநோக்கி இறங்கிச் சென்றான். இருமுறை பிடியுடன் மண் விரிசலிட்டு வர விழுந்து அடுத்த மண்மேட்டைப் பற்றிக்கொண்டு நின்றான். மூச்சிரைக்க இறங்கி அச்சுனை அருகே சென்று நின்றபோது அங்கே முன்னரே வந்திருப்பதாக ஓர் உணர்வுதான் ஏற்பட்டது.  அந்த மண் வெண்சுண்ணத்தாலானது. மெல்லிய கந்தகம் கலந்த நீர் எடைகொண்டதாக இருந்தது. அதில் மீன்களோ பிற சிற்றுயிர்களோ இருக்கவில்லை.


அருகே சென்று குனிந்து நோக்கியபோது அச்சுனையின் ஆழம் அச்சுறுத்தியது. அடியிலி என்றே அவன் விழி மயங்கியது. அது ஒரு பெரும் குகையின் வாய். அக்குகை எங்கு செல்லக்கூடும்? மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது? மலைஏறிச்சென்றால் அது அங்குள்ள பனிமுடிகளில் ஒன்றில் சென்று முடியலாம். அல்லது விண் நோக்கி வாய்திறந்திருக்கலாம். வெறும் வெளியை அள்ளி அள்ளி குடித்துக்கொண்டிருக்கலாம்.


அவன் அதனருகே ஒரு பாறையில் அமர்ந்தான். மடியில் கைகளை வைத்து கண்களைத் திறந்து  ஊழ்கத்தில் ஆழ்ந்தான். மேற்கே சரியத்தொடங்கிய சூரியக்கதிர் கசிந்து பரவி நீரொளி கொண்டிருந்தது வானம். முகில்கள் வெண்நுரைக் குவைகளாக அசைவற்று நின்றன. தொலைவில் மலைமுடிகள் சூடிய பனிப்பாளங்கள் மெல்ல அண்மை கொண்டு விழிகூசும்படி வந்து விரிந்தன.  மயங்கிய விழிகளுக்கு முகில்களும் பனிமுடிகளும் ஒன்றெனக் கலந்து காட்சியளித்தன.


அவன் உள்ளம் மெல்ல ஏமாற்றம் கொள்ளத் தொடங்கியது. இது வெறுமொரு சுனைதான். அவன் அதுவரை கண்டிருந்த பல்நூறு சுனைகளில் ஒன்று மட்டுமே. இமயமலைகளுக்குள் அப்படி பல்லாயிரம் பனிச்சுனைகள் உள்ளன. அங்கே செல்வது அரிதென்பதனாலேயே அவை அரிதாகத் தோன்றுகின்றன. அரியவற்றை மேலும் அரிதாக்க எழுகின்றன தொல்கதைகள். விண்ணளாவும் நம்பிக்கைகள். ஆம். எழவேண்டியதுதான். மீள்வதே முறை. ஆனால் அவன் உள்ளம் கொண்டிருருந்த இனிய சோர்வு அவனை அங்கேயே அமரச்செய்தது.


அவன் சற்று துயில்கொண்டிருக்கவேண்டும். விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.


அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால்  பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.


அவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை! இதுநாள் வரை எங்கிருந்தது இது?” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”


அவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2016 10:30

November 11, 2016

சில சிறுகதைகள்–6

download (1)

அன்புள்ள ஜெயமோகன்,
இன்று சிறுகதைகள் எழுதுபவர்களின் கதைகள் உங்கள் தளத்தில் விவாதிக்கப்படுவதையும் விரிவாக உரையாடப்படுவதையும் கண்டேன். என்னுடைய சிறுகதை ஒன்றின் சுட்டியை இணைத்திருக்கிறேன். இக்கதை எவ்வகையாக விவாதிக்கப்படுகின்றது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
http://eathuvarai.net/?p=5146

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்


 


 


 


அன்புள்ள ஜெ,

இத்துடன் என் அறிவியல் சிறுகதையின் சுட்டியை இணைத்துள்ளேன். தங்கள் மேன்மையான கருத்தை  தெரியப்படுத்துங்கள்.

நன்றி
சத்திஷ்

http://sathish-story.blogspot.in/

 


ஜெ


 


இன்னொரு கதை, உங்கள் பார்வைக்காக


 


கலைச்செல்வி | பதாகை



https://padhaakai.com/tag/கலைச்செல்வி/

கலைச்செல்வி

[இத்துடன் கதைகளுக்கான சுட்டிகொடுப்பது முற்றும்.  எவரும் மேலும்  அனுப்பவேண்டியதில்லை]

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2016 10:33

சிறுகதைகள் -கடிதங்கள்4

images


 


ஆசானே


 


எதுவாக இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம். கோபம்லாம் இருக்கும். அதுக்காக ஒரு லிமிட் தாண்டிப்போயிரப்பிடாது கேட்டேளா? இதுக்குமேலும் அமெச்சூர் கதை போட்டு சாவடிசீங்கன்னா… வேண்டாம் . சொல்லீட்டேன்


 


செல்வா


 


அன்புள்ள செல்வா


சரி நிப்பாட்டியாச்சு


ஆறுதல் அடையுங்கள்


ஜெ


 


அன்புள்ள ஜெ


 


இந்தத் தளத்தில் நீங்கள் சுட்டிகொடுக்கும் கதைகள் எப்படியோ உங்களுக்குப் பிடித்தமானவையாகவே இருக்கும். இப்போது வரும் கதைகள் அப்படித்தெரியவில்லை. ஓரிரு கதைகள் மட்டும்தான் படிக்கும்படி உள்ளன. பலகதைகள் ஒழுங்காகப் பத்திகூட பிரித்துப்பிரசுரிக்கப்படவில்லை. இவற்றை ஏன் பிரசுரிக்கிறீர்கள் என அறிய ஆவல்


 


ஜெயச்சந்திரன் ஆர்


 


 


அன்புள்ள ஜெயச்சந்திரன்


 


நான் படித்துப்பிரசுரிக்கவில்லை. இவை எனக்குச் சுட்டி அளிக்கப்பட்டவை. என் கருத்துக்களை மன்றாடி கேட்டுக்கொள்வார்கள். ஆனால் 90 சதவீதம் எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவற்றை நினைவில் வைத்திருந்து எங்கோ ஒருநாள் என்னிடம் கசப்பாக வெளிக்காட்டுவார்கள். என் நண்பர்களாக இருந்து வெளியே சென்று வசைபாடுபவர்கள் பலரிடம் இதைக் கண்டுகொண்டிருக்கிறேன் . ஆகவே சரி வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என இக்கதைகளை சுட்டி கொடுக்கிறேன். ஏற்கனவே பிரசுரமானவற்றுக்கு மட்டுமே சுட்டி. நானே எதையும் பிரசுரிக்கவில்லை.


 


சிறுகதைகளை எழுத ஆரம்பிக்கும்போது எல்லாருக்குமே ஒரு அமெச்சூர்த்தனம் இருக்கத்தான் செய்யும். நடை தெளிந்திருக்காது. கரு சாதாரணமாக இருக்கும். கதைக்கரு தேவையற்ற சித்தரிப்புகளுக்குள் சிக்கி இருக்கும். கதைக்கரு தெளிவாக முன்னெழும் அளவுக்கு சித்தரிப்பு இருக்காது. அவற்றை வாசகர்கள் சுட்டச்சுட்டத்தான் தெளிவு வரும். ஆனால் வாசக எதிர்வினைகளே இல்லாத சூழலில் அது சாத்தியமல்ல.


 


இதன்மூலம் அந்தத்தெளிவு கிடைத்தால் நல்லதுதானே? இந்த வரிசையில் கதை வெளிவந்த சுமார் 12 பேர் என்னுடைய எதிர்கால எதிரிகள் என தெரிந்தும் இதைச்செய்தது இந்நோக்கத்தால்தான்


 


ஜெ


 


 


இனிய ஜெயம்,



ருசி வாசித்தேன். நல்ல கதை.  கதை சொல்லியின்ன்  உணர்ச்சிகளுடன்  நம்மை  இயந்து பயணிக்க வைக்கும்  மொழியும் வடிவும்  நன்றாகவே கூடி வந்திருக்கிறது. இது நியாயமா  எனக் கேட்கக் கிளம்பும் ஒருவன், தனது அற்பத்தனத்தை ”கண்டு கொண்டு”  நியாயம் கேட்கும் தகுதியை இழக்கும் தருணத்தைக் கண்டு கொண்டு ஊர் திரும்ப முடிவு செய்யும் தருணம், நுட்பமாகவும் அழகாகவும் திரண்டு வந்திருக்கிறது.

முன்பு ஒரு பழைய சிவாஜி படம் பார்த்தேன். சிவாஜி மல்டி மில்லினியர்.  ஒரே மகள். அவளை காதலுக்கு தொலைத்தவர்.  ஒரு சின்ன மகளை பேத்தி போல வளர்க்கிறார்.  அவளுக்கு மூளையில் எதோ  பின்நவீனத்துவ கலாட்டா ஆகி சீரியஸாக கிடக்கிறாள். பார்த்து விட்டு வெளியே வரும் சிவாஜி ஒரு கோன்ஐஸுக்கு ஆர்டர்  தருவார்.

சமீபத்தில் நான் மிக மனம் சோர்ந்து அமர்ந்திருந்த தருணம் , நண்பர்  வா முதல்ல ஏதாவது சாப்பிடுவோம் , தெம்போட இருந்தாத்தான் சோகத்த சுமக்க முடியும்  என்று சொல்லி  அவர் ஆர்டர் செய்தது  குலோப் ஜாமூன்.

சிவாத்மா சொன்னார் என் தோழி ஒருத்தி இருக்கா  மூட் ட்ராப் ஆகிடிச்சுன்னா சட்டுன்னு ஏதாவது ஹோட்டல் போய் ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்ட ஆரம்பிச்சிடுவா. பாக்க பயமா கூட இருக்கும் அப்டி சாப்பிடுவா  என்றார்.

உண்மையில் இந்த மனச் சோர்வுக்கும், ருசிக்கும் ஏதேனும்  ஏதேனும் தொடர்பு உண்டா என அறியேன், ஆனால் அதை இக் கதையில் வாசிக்கையில்  இலக்கியம் பேசக் கூடிய உண்மை  அது  எனத் தோன்றியது.

நல்ல கதை. கொஞ்சமாக எதோ குறைகிறது. அது என்ன என சொல்லத் தெரியவில்லை.

 


கடலூர் சீனு


 


அன்புள்ள சீனு


 


ஏதோ குறைகிறது, என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பொதுவாச்சொன்னா போன்ற வரிகள் விமர்சனமே அல்ல. அதேபோல சினிமாத்தனமா இருக்கு, செண்டிமெண்டா இருக்கு, இன்னும் சரியா வரலை, இதேமாதிரி படிச்சிருக்கேன் , முடிவ ஊகிச்சேன் போன்ற வரிகளும் விமர்சனம் அல்ல.


 


இவை கமெண்டுகள். இலக்கியமனநிலைக்கு எதிரானவை. ஏன் இப்படி இருக்கிறது, என்ன செய்திருக்கலாம் என்பதை மட்டுமே வாசகன் ஆசிரியனிடம் சொல்லவேண்டும்


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2016 10:32

கெய்ஷா -கடிதங்கள்

17


அன்புள்ள ஜெமோ,


 


 


கெய்ஷா சிறுகதை சிறப்பு. சோழர்கள் காலத்திலும் இது போன்ற விஷயங்கள் உண்டென்று படித்த ஞாபகம். (அரசனுக்கு அணுக்கி , அரசிக்கு அணுக்கன்). ஸ்பீல்பெர்க் தயாரித்த  “the memoirs of geisha” எனும் திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் பார்த்ததால் , உங்களின் கெய்ஷா சிறுகதையை சிரமமின்றி படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது.


 


காமத்தின் அடித்தளத்தில் கட்டப்படும் காதல் மாளிகைகளின்  வாசல்கள், கோபுரங்கள் , சன்னல்கள், கதவுகள், சுவற்றில் வேலைப்பாடுகள் என்று நுணுக்கமாக ரசித்துவிட்டு , பிறகு அந்த மாளிகைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு காமத்தின் தரையில் நின்றுகொண்டு உரையாடினால் இந்த சிறுகதை போல் இருக்குமோ ?


 


ஒரு கட்டத்தில் யாருக்கு யார் கெய்ஷா என்பது போல் , ஒரு விறுவிறுப்பான விளையாட்டின் இறுதிசுற்றுக்கு அழைத்து சென்றுவிட்டு, வென்றது யார் என்று வாசகர்களிடம் விட்டு விட்டீர்கள். மிக அருமை.


 


முதலில் ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ , இரண்டாவதாக ‘கெய்ஷா’.  ஜப்பானின் கலாச்சாரம் சார்ந்த இன்னும் ஒரு பத்து சிறுகதைகளாவது நீங்கள் எழுத வேண்டும். ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும்..


 


நன்றி.


 


அன்புடன்,


ராஜா,


சென்னை.


 


 


Hi


Short stor


 


கெய்ஷா சிறுகதைy is the worst ever and that didn’t expect this from you Mr. Mohan.


All these days I  misunderstanding a madman as being an enlightened man.

You addressed that Japanese girl as a small boy and that  the Indian men are more inclined towards Gay relationship.

Indian men are really afraid of a real woman .

The idea of Physical immortality will appear more to woman than to men.


 


Regards,

Sheela


 


அன்புள்ள திரு ஜெயமோகன்,


நேற்று உங்களுடைய சிறுகதை கெய்ஷா படித்தேன். உண்மையில் அது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான கதையாய் இருக்கும். அல்லது செயற்கையான கதையாய் இருக்கும் என்கிற உணர்வில்தான் படித்தேன்.


ஆனால், கெய்ஷா மற்றும் கதைநாயகனின் உரையாடலில் என்னுடைய எண்ணத்தின் நிறம் மாறியது. ஒரு அற்புதமான கதையை படிக்கிறோம் என்கிற உணர்வு என்னுள் வளர்ந்தது.


இயற்கையான மென்மையான மேன்மையான உரையாடல் என்னை வியக்கச் செய்து கொண்டே இருந்தது.


இறுதியில் அந்தக் கதை எப்படி முடிய வேண்டுமோ அப்படித்தான் முடிந்திருக்கிறது. ஆனால், அதை யாரும் எதிர்பார்க்க முடியாது. அந்த முடிவு மிகவும் வியப்பளிப்பதாய், வீரியமானதாய் இருக்கிறது. அந்த முடிவு கதைக்குள் ஏராளமான மலர்களை பூத்துக் குலுங்கச் செய்கிறது.


கதையின் விஷயங்களை விவரித்துப் பேச தயக்கமாய் இருக்கிறது. சுருதி சேர்ந்திருக்கும் ஒரு இசையின் குறுக்கே நம் குரலை வெளியிடுவது அது புகழ்வதற்காகவே என்றாலும் அபஸ்வரமாக அல்லவா போய்விடும்?


உங்கள் உடலில் வளர்ந்திருக்கும் வண்ணச் சிறகுகள் என் கண்களுக்குத் தெரிகின்றன. நீங்கள் பறக்கப்போகிறீர்கள் என்பதை நான் கொண்டாட வேண்டும் போல இருக்கிறது.


நேற்று இரவு அலுவலகம் முடிந்து திரும்பும்போது இந்தக் கதையைப் படித்தேன். அதன்பின் அவ்வளவு நெருக்கமாக உங்களை உணர்கிறேன்.


அன்புடன்,


குமாரநந்தன்.


 


 


அன்புள்ள ஜெ


 


கெய்ஷா சிறுகதை வாசித்தேன். இத்தகைய கதை எப்படி முடியும் எதைச்சொல்லும் என்று ஒரு கணக்கு நம் வாசக அனுபவத்தில் இருந்து வந்துவிடுகிறது. அந்தப்பெண் ஏமாற்றுக்காரியா இல்லையா, இவன் அவளை ஏமாற்றுகிறானா இல்லையா என்பது ஒரு சரடு. இந்தக்கதை செக்ஸ் பற்றி எதையாவது சொல்லப்போகிறதா என்பது இன்னொன்று


 


கதை அப்பட்டமாகப்பேசிச் செல்கிறது. உண்மையில் செக்ஸின் அர்த்தம் என்ன, எதுவரை அதுபோகும் என்பதெல்லாம் பேசப்படுகிறது. செக்ஸைப்பற்றி பேசிப்பேசிச்சென்று மனிதனுக்குத்தேவை உண்மை அன்பு மட்டும்தான், பெண்ணிடமிருந்து மனிதன் எதிர்பார்ப்பது அதுதான் என்று முடிகிறது. சொல்லப்போனால் அன்புதான் செக்ஸை தீவிரமாக ஆக்குகிறது. அன்புதான் செக்ஸில் இருக்கும் ஒரே ஒரு டெக்னிக்


 


ஆனால் அதை கெய்ஷா வழங்கமுடியாது. அவள் அதை அவனுக்கு உணர்த்திவிட்டு நீ தேடி அடையவேண்டியது இதுதான் முட்டாளே என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவள் ஒரு தேவதை. வானத்திலிருந்து வந்தவள். அவள் இங்கே இவனுக்குத்துணைவியாக இருக்கமுடியது. அவள் இதேபோல அனைவருக்கும் அவருக்குத்தேவையான ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்


 


சபா குழந்தைச்சாமி


 


 


கெய்ஷா சிறுகதை


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2016 10:31

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24

[ 35 ]


பொன்னொளிர் குழந்தை வளர்ந்து ஆண்மகன் என்றாகியது. ஆயினும் அதன் உடல் நடைதிருந்தாக் குழவி போன்றே இருந்தது. அன்னை அதை பேருருவ மகவென்றே எண்ணினாள். நெஞ்சுகுழைந்து அமுதூட்டினாள். குழல் அள்ளிக்கட்டி மலர்சூட்டிக் கொஞ்சினாள். தூக்கி தோளில் வைத்து விண்ணகப் பாதைகளில் நடந்து ஆறுதிசை காட்டி மகிழ்வித்தாள். முகில் அள்ளிக் களித்தும் விண்மீன்களை வாரிச் சிதறடித்தும் விளையாடியது அது. தான் ஓர் இளைஞன் என்றே அது அறிந்திருக்கவில்லை.


ஒருநாள் விண் வழி ஒன்றில் அது ஆடிக்கொண்டிருக்கையில் அவ்வழியே காசியப முனிவர் சென்றார். அவர் அணிந்திருந்த சடைமகுடத்தைக் கண்டு நகைத்த குழந்தை விண்மீன்களை அள்ளி அவர்மேல் எறிந்தது. தன் மேல் வழிந்தொளிர்ந்து விழுந்த விண்மீன்களைக் கண்டு சினந்து திரும்பிய முனிவர் குழவியுடல் கொண்ட இளைஞனைக்கண்டு  “நீ யார்?” என்றார்.


“தேவவர்ணினியின் மைந்தன்.  விஸ்ரவஸுக்குப் பிறந்தவன். பிரம்மனின் கொடிவழிவந்த தேவன்” என்றான் குபேரன். “நன்று! பொன்னுடல் கொண்டிருக்கிறாய். அன்னையால் இன்னமும் குலவப்படுகிறாய் என்று எண்ணுகிறேன். என்று எழுந்து கைகால் கொண்டு ஆண்மகனாகப்போகிறாய்?” என்றார் காசியபர். “ஆண்மகனாவது எதற்கு?” என்றான் குபேரன்.


“இளைஞனே, குழவிப்பருவத்திற்கும் மானுடனுக்குமான வேறுபாடென்ன என்று அறிவாயா?” என்று முனிவர் கேட்டார். “அறியேன்” என்றான் குபேரன். “குழவி பிறிதொருவர் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கொஞ்சப்படினும் கொண்டாடப்படினும் அது அடிமையே.  மானுடன் பிறர் மேல் ஆட்சி செய்கிறான். எப்பருவத்திலாயினும் பிறர் ஆட்சிக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முழுவளர்ச்சி கிடையாது. எத்தகையவராய் இருப்பினும் அவர்கள் குழந்தைகளே” என்றபின் அவர் நடந்து சென்றார்.


அவ்எண்ணம் கணம்தோறும் எடைகொள்ள தன் அன்னையிடம் மீண்டு வந்த குபேரன் தனித்திருந்து நெஞ்சுலைந்தான். அன்னை அவன் உள்ளத்திலமைந்தது என்ன என்று நூறுமுறை கேட்டும் அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.  ஏழிருநாட்கள் தன்னுள் இருண்டு அமர்ந்திருந்தபின் எழுந்து வந்து அன்னையிடம் “அன்னையே, இன்னும் எத்தனை நாள் உங்களுக்கு குழந்தையாக இருப்பேன்? என்று கேட்டான்.


“வாடாத் தளிருடல் உனக்கு வேண்டுமென்று எண்ணினேன். அதன்பொருட்டே உன்னை குழவியெனப்பெற்றேன். என்றும் நீ எனக்குக் குழவிதான்” என்றாள் அன்னை. “ஆம். உங்கள் நோக்கில் மட்டும் என்றும் குழந்தையாக இருக்கிறேன். ஆனால் இப்புடவியை நான் ஆளவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.


அன்னை திகைத்தாள். “புடவியை ஆள்வதென்பது எளிதல்ல மைந்தா, ஆள்பவன் ஒவ்வொரு நாளும் இழந்துகொண்டிருப்பவன்” என்றாள் அன்னை. “அவ்வாறென்றால் இழப்பதுதான் ஆள்வதற்கான வழியா?” என்றான் மைந்தன். அவன் என்ன புரிந்துகொள்கிறான் என்றுணராமல் “ஆம், தன்னை முற்றிழப்பவன் முற்றதிகாரத்தைப் பெறுகிறான்” என்றாள் அன்னை. “அவ்வண்ணமே” என்று எழுந்து குபேரன் தென்திசைக் கடல் நோக்கி சென்றான்.


கடல் ஆழத்தில் மூழ்கி இறங்கி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். கடல்மேல் சென்ற கலங்கள் இருண்ட ஆழத்தில் ஒளிர்ந்த பொன்னைக் கண்டன. மீன்கள் அதை அணுகி பொன்னொளி பெற்று திரும்பி வந்தன. கடல் ஆழத்தில் குடிகொள்ளும் அந்தப்பொன் தப்தகாஞ்சனம் எனப்பட்டது. அதைப்பற்றிய கனவுகள் மண்ணில் பரவின.


தவம் முதிர்ந்து கனிந்தபோது குபேரன் பொன்னலையென உருகி பரவி கடலாழத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தவம் கண்டு மூதாதை பிரம்மன் இரங்கினார். அவன் முன் தோன்றி கைதொட்டு சுட்டுவிரலில் ஒரு பொன்னிறப்பொட்டு என மேலெடுத்தார். “என்ன வேண்டும்? கேள் இளமைந்தா!” என்றார். “இப்புடவியை நான் ஆளவேண்டும், எந்தையே” என்றான் குபேரன். “நீ பொன்னுக்கு இறைவன். புவி அனைத்தும் செல்வத்தால் ஆனது, செல்வமனைத்தையும் நீயே ஆள்க!” என்றார் பிரம்மன்.


“தனியொன்றை ஆள நான் விரும்பவில்லை. புடவியின் அனைத்தையும் ஆளும் ஆற்றலையே நான் கோருகிறேன். பிறிதொன்றும் எனக்குத்தேவை…” என்றான் குபேரன்.      ”சிறுமைந்தர் போல பேசாதே. இது வாழ்வறிந்தவனின் விழைவு அன்று” என்றார் பிரம்மன். “எனக்கு திசைநான்கும் வேண்டும். வானும் மண்ணும் வேண்டும்…” என்று குபேரன் கைகளை உதறி காலால் நிலத்தை உதைத்தான். “மைந்தா புரிந்துகொள், நீ செல்வத்தின் தெய்வம். புடவியின் அனைத்தையும் ஆள செல்வத்தை அமைப்பதென்பது பேரழிவை விளைப்பது” என்றார் பிரம்மன்.


“எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்” என்று குபேரன் சிணுங்கினான். “நான்கு இழைகளால் நெய்யப்பட்டது இப்புவிவாழ்க்கை. நான்கு திசைகளென அவை அமைந்துள்ளன. தென் திசையை இறப்பு ஆள்கிறது. வடதிசையை நீ ஆள்க! இறப்பும் செல்வமும் துலாவின் இரு தட்டையும் நிகர் செய்க!” என்றார் பிரம்மன்.


“இப்புவியை ஆளும் வல்லமை பெறும் வரை இக்கடல்விட்டு நான் வெளிவருவதில்லை” என்றான் குபேரன். “மைந்தா, ஒருபோதும் நிகழாததற்கு விழைவு கொள்கிறாய்” என்று பிரம்மன் திரும்பினார். “அவ்வண்ணமெனில் இன்னும் பல்லாயிரம்கோடி வருடங்கள் இன்பதுன்பம் இருத்தல் இன்மையென அனைத்தையும் துறந்து வாழ்கிறேன் நன்று” என்றபடி அவன் நீர் புகுந்தான்.


உளம் கேளாது எட்டி அவனைப்பற்றி இழுத்து நெஞ்சோடணைத்து பிரம்மன் சொன்னார் “உன்னை அவ்வண்ணம் விட உன் முதுதந்தையின் உள்ளம் ஒப்பவில்லை. ஒன்று சொல்கிறேன். புவியை ஆளும் தேவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் அனைவரையும்விட மேலாக நீயே வழிபடப்படுவாய். எளிய மாந்தர் உன்னையே அவர்கள் என காண்பார்கள். உன் பொன்னொளியை மீறிச்செல்லும் அகவிழி கொண்டவர் மட்டுமே பிறரை காண்பார்கள். இப்புவியில் பிறந்திறந்து மாயும் பலகோடி மாந்தரில் மிகச்சிலரே நீயன்றி பிறரைக்காண்பார். நீயே இப்புடவியை ஆள்வதற்கு நிகர் அது.”


முகம் மலர்ந்த குபேரன் “ஆம், அது போதும்” என்றான். “நீ வடதிசையில் அமர்க! உன் நகர் அங்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். வெற்றிக்களிப்புடன் குதித்துக் கும்மாளமிட்டபடி அன்னையிடம் ஓடிவந்தான் குபேரன். நானே அனைத்தையும் ஆள்வேன். நானே ஆள்வேன்” என்றுகூச்சலிட்டான். அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி நடனமாடினான்.


குபேரன் வடக்கு திசையில் அமைத்த நகரம் அளகாபுரி என்று அழைக்கப்பட்டது. இரும்பாலானது அதன் புறக்கோட்டைவட்டம். செம்பால் ஆனது உட்கோட்டை. வெள்ளியாலான நகர்க்கோட்டைக்குள்  சந்திரனின் வெண்குளிர் ஒளி எப்போதும் நிறைந்த வானம் கவிந்திருந்தது. .வெண்பட்டு என மெல்லிய தரை அங்கிருந்தது. நகரக்கட்டடங்கள் அனைத்தும் ஆடகப்பொன்னால் ஆனவை. பொற்சுவர்கள். பொற்கட்டிகளால் ஆன படிகள். பொற்தூண்கள். பொற்பாளக்க்கதவுகள். கிளிச்சிறைப்பொன்னால் ஆனவை இல்லங்களின் உட்பகுதிகள். மாடமுகடுகள் சாதரூபப் பொன்னுருக்கிச் செய்தவை. மணிகள் மணல் பெருக்கென இறைந்து கிடந்தன.


அங்கே மரங்களும் செடிகளும் பொன்னே. மலர்களும் தளிர்களும் பொன்னே. வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும் பொன்னால்  அமைக்கப்பட்டு மரங்களில் பதிக்கப்பட்டிருந்தன. குபேரபுரியின் காவலரும் ஏவலரும் தவிர அங்கு உயிரசைவென ஏதுமில்லை. பொன்னே ஒளியென்று நிறைந்திருந்தது. பொன்னே நறுமணமாக வீசியது. பொன்னே இன்னிசையாக சூழ்ந்திருந்தது. விழிகளுக்குள் புகுந்து சித்தமாக ஆனதும் பொன்னே.


குபேரனின் கருவூலங்கள் பதினாறாயிரத்தெட்டு. அவற்றில் அருமணி முதல் அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அள்ளப்படுவது அக்கணமே ஊறி நிறையும் தன்மைகொண்டிருந்தது அது. அங்கு உலவியவர்களின் நிழல்களும் பொன் நிறத்தில் விழுந்தன. அங்குள்ள இருட்டும் அடர்பொன்னிறமே.


பொன் விழைந்து இறந்தவர்கள் அங்கு வந்தனர். ஊழிக்காலம் அங்கு பொன்னை உண்டு பொன்னில் படுத்து பொன்னை உயிர்த்து பொன்னில் எண்ணம்கொண்டு பொற்கனவுகளில் ஆடினர். பொன் திகட்டி பொன்னைவெறுத்து அங்கு ஒருகணமும் வாழமுடியாமலாகி கால்வைக்கக்கூசி எண்ணஎண்ண துயர்கொண்டு கண்ணீர் உதிர்த்து அழுது மேலும் ஒரு ஊழிக்காலம் அங்கே தவம் செய்தபின்னர் மண்ணில் மீண்டும் பிறந்தார்கள். அவர்களுக்கு கலையோ கவிதையோ ஊழ்கமோ முதன்மையாக இருந்தது. பொன்னை பொன்னின் பொருட்டே அவர்கள் வெறுத்தார்கள்.


குபேரனுக்கு அளகதளம் என்னும் என்னும் மணியாலான சிம்மாசனம் இருந்தது. அவன் மணிமுடி சுவர்ணஜ்வாலா எனப்பட்டது. அவன் செங்கோல் காஞ்சனகீர்த்தி. அவன் கொடி சோனஜிஹ்வா. அவன் அரியணையை பொன்னிற ஆமைகள் தாங்கியமர்ந்திருந்தன. அவன் இலச்சினை வெள்ளி உடலும் பொன்னாலான கொம்புகளும் கொண்ட வெள்ளாடு. அவன்  அரண்மனை பொன்னில் எழுந்த நுரை என பன்னிரண்டாயிரம் பொற்கும்மட்டங்களும் பொற்கோபுரங்களும் கொண்டிருந்தது. அதனுள் பதினாறாயிரத்தெட்டு பொற்தூண்களால் ஆன ஆட்சிமண்டபத்தின் நடுவே அரியணையில் கையில் பொன் நிற கதாயுதத்துடன் அமர்ந்து அவன் இப்புவியாளும் பெருவிழைவுகளை அளந்தான்.


ஒவ்வொருவர் கனவிலும் வந்து பொன் காட்டி உயிர்ப்பை எழுப்பி மறைந்தான். பொன் பொன் என விழைந்த மானுடர் துழாவித்தவித்து  அலைக்கும் கைகளுக்கு அப்பால் எட்டி எட்டிச் சென்று நகைத்தான். தெய்வங்களுக்காக புவி மானுடர் வணங்கி அள்ளியிட்ட மலர்களில் பெரும்பகுதியை அவனே பெற்றுக்கொண்டான். அவர்களின் வாழ்த்துரைகள் ஓரிரு சொல்லன்றி பிற அனைத்தும் அவனையே சென்றடைந்தன. அவர்கள் முன் திசைத்தேவர்களாக மும்முதல்வர்களாக அன்னையராக தேவியராக உருக்கொண்டு அவனே தோன்றினான். வேள்விகளில் தேவர்கள் அனைவரின் உருவமும் தானே கொண்டு வந்து அவிபெற்று மீண்டவன் அவனே.


எனினும் அருள் புரியும் கனிவு அவனில் கூடவில்லை. பொன்மேல் அமர்ந்து பொன்னென ஆகிய அவன் உள்ளம் மலர் மென்மையை அறியவே இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையாக, அனைத்தையும் விழைபவனாக, பெற்றுக்கொள்ளமட்டுமே எண்ணுபவனாக அவன் இருந்தான்.  அள்ளக்குறையாது பொருள் நிறைந்திருந்தபோதும் ஒரு துளியை இழந்தால் அதையே எண்ணி அவன் ஏங்கினான். ஒற்றைப்பொன்னின் ஒலியையே அவன் செவி இசையென எண்ணியது.  செல்வமென்பது செல்லக்கூடியதென்றே அவனுக்கு பொருள் பட்டது. அளிப்பதென்பது இழப்பதென்றே அவன் உணர்ந்தான்.


அவனிடமிருந்து அருள் பெற்றவர்கள் அவனை வணங்கியவர்கள் அல்ல. அவனைக் கடந்து பிற தெய்வங்களை வணங்கி அவர்களிடமிருந்து அருள் பெற்று அவனிடம் வந்வர்களே. அத்தெய்வங்களின் ஆணையை மீறமுடியாமல் மட்டுமே தன் உறுதி இறங்கி அவன் தன் கருவூலத்தை திறந்தான். அள்ளி பொருள் கொடுக்கையில் ஒவ்வொரு மணிக்கும் நாணயத்திற்கும் தன்னுள் கணக்கு வைத்தான். அளித்தவற்றை எண்ணி எண்ணி சினந்து ஏங்கினான். அளித்த பொருள் உள்ளத்துள் பெருக  பெற்றவர்களால் தான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுவதாக எண்ணினான்.


[ 36 ]


ஜாதவேதனின் இல்லத்திலிருந்து கிளம்பிய அர்ஜுனன் உளம் தளர்ந்திருந்தான். வடக்கு நோக்கி செல்ல வேண்டும் என்னும் ஆணையை அவனறியாமலேயே சித்தத்திலிருந்து கால்கள் பெற்றுக்கொண்டன. வழியை அவன் விழிகள் நோக்கவில்லை. செவி அறியவில்லை. கான் வாழ்க்கையின் நெடும்பழக்கத்தால் ஊர்களுக்குள் செல்லும் வணிகப்பாதைகளைத் தவிர்த்து காட்டுக்குள் ஊடுருவிச்செல்லும் மேய்ச்சல்பாதையை அவன் தேர்ந்தான். அவனை ஊர்களும் ஆயர்மன்றுகளும் ஓசையின்றி நழுவவிட்டுக்கொண்டிருந்தன.


மூன்று நாட்கள் சென்றபின்னரே தான் செல்ல வேண்டிய இடம் என்னவென்று அவன் சித்தத்தில் வினா எழுந்தது. அதன் பின்னர் அவன் குபேரனைப்பற்றி என்ணலானான். அந்நிகழ்வுகளுக்கோர் ஒழுங்கும் இலக்கும் இருப்பதை அப்போது உணர்ந்தான். ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் “குபேரனுக்கான ஆலயம் எங்குள்ளது?” என்றான். “குபேரனுக்கு ஆலயம் கட்டுவதில்லை, வீரரே. அனைத்து ஆலயங்களும் குபேரனுக்குரியவையே” என்றார் அவர் நகைத்தபடி. “வேளாண்மூத்தோரிடம் குபேரனைப்பற்றி கேட்கலாமா? வணிகர்களிடம் கேளுங்கள்.”


ஊர்பாதை ஒன்றின் முனம்பில் தன் ஏவலர் எழுவருடனும் காவலர் மூவருடனும் பொதிவிலங்குகளை அவிழ்த்து நீர் அருந்த விட்டு, தோல் விரிப்பைப்பரப்பி பஞ்சுத் தலையணை இட்டு குடபண்டி எழுந்திருக்க கொழுவிய கன்னங்கள் தொங்க அரைத்துயிலில் என விழிகள் புதைந்து  படுத்திருந்த பெருவணிகன் ஒருவனை அர்ஜுனன் கண்டான். அவனை அணுகி வணங்கி “தங்கள் சொல்லிலிருந்து செல்வழிபெற வந்தவன். அயலூர் வழிப்போக்கன். என் பெயர் சரபன். வில்லறிந்த ஷத்ரியன்” என்றான். “சொல்க!” என்றான் வணிகன்.


“தாங்கள் இப்பெருநிதியை பெற்றது குபேரனின் அருளால் என்று எண்ணுகிறேன். குபேரனை காணும் வழி எது? எங்கேனும் எவ்வண்ணமேனும் தாங்கள் அவனை அறிந்துளீரா?” என்றான் அர்ஜுனன். கண்கள் சிரிப்பில் விரிய “அமர்க, வீரரே!” என்றான் பெருவணிகனாகிய மித்ரன்.  அர்ஜுனன் அமர்ந்ததும் இன்னீரும் உணவும் கொண்டுவர ஆணையிட்டான். தன்னைப்பற்றி சொன்னான்.


நான் உஜ்ஜயினியை சேர்ந்தவன், ஷத்ரியரே. இளமையில் நான் அறிந்தது வறுமையை மட்டுமே. ஒருவேளை உணவுக்காக, மழையில் கூரைக்காக, ஆண்டிற்கொருமுறை கிடைக்கும் ஆடைக்காக பிறிதொரு வணிகனின் கடையாளாக இருந்தேன். அவன் கைகளால் நாளும் அடிவாங்கினேன். அவன் உறவினர்களால் சிறுமை செய்யப்பட்டேன். நான் எனக்குரிய நற்பொழுது எழும் என்பதை நம்பினேன். ஒவ்வொரு நாளும் அதை கனவு கண்டுகொண்டிருந்தேன்.


ஒரு நாள் முன்புலரியில் ஆற்றில் இருட்டிலேயே நீராடி கடை திறப்பதற்கு முன்பே அங்கு செல்லும்பொருட்டு வந்துகொண்டிருந்தபோது தரையில் ஒரு வெள்ளி நாணயம் கிடப்பதை பார்த்தேன். இரவில் ஆற்றுநீரில் பரல்மீன் மின்னுவதுபோல அது சாலையில் கிடந்தது. அகம் படபடக்க அதை எடுத்து என் கண்ணில் வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதை என் ஆடையில் பதுக்கியபடி அவ்வணிகனின் கடை முன் சென்று நின்றேன்.


அதைக் கொண்டு மூவேளை உணவருந்தலாம். புதிய ஆடை ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இனிய கனவுகள் ஒவ்வொன்றாக என்னுள் எழுந்தன. அதை என் ஆடைக்குள் மேலும் மேலும் பொதிந்து ஒளித்து வைத்தபடி கடையருகே ஒரு சிறு பொந்துக்குள் உடலொதுக்கி படுத்துத் துயின்றேன். என் கனவில் நான் அந்த ஒரு நாணயத்தை முடிவில்லாமல் செலவழித்துக்கொண்டே இருந்தேன். உலகையே அதைக்கொண்டு வாங்கினேன். விழித்துக்கொண்டதும் தெரிந்தது, அந்நாணயம் என்னிடம் இருப்பதுவரை மட்டுமே அந்தக்கனவுகளுக்கு பொருளுண்டு என. எந்நிலையிலும் அதை இழக்கலாகாதென்று முடிவுசெய்தேன். அதை அதைவிடப்பெரிய நாணயத்தால் மட்டுமே ஈடுவைக்கவேண்டும் என உறுதிகொண்டேன்.


அந்த நாணயம் விழுந்தகிடந்த இடம் என் நினைவில் மீண்டும் எழுந்தது. மிதித்து பதிந்துசென்ற காலடி ஒன்றில் கிடந்தது அந்த நாணயம் என்று அப்போதுதான் தெளிந்தேன். அக்காலடிகளை மீண்டும் மீண்டும் என் நினைவில் ஓட்டிக்கொண்டிருந்தேன். கனவுகளில் மீளமீளக் கண்டேன். நெடுநாட்ளுக்குப்பின் ஒரு  புலரிக்கனவில் அதைத் தொடர்ந்து சென்றபோதுதான் பொன்னிறமான இரு கால்கள்  புழுதியை மிதித்துச் செல்வதை கண்டேன். வளர்ந்தும் குழந்தையென உடல் கொண்ட ஒருவன்.


வீரரே அவனை குபேரன் என்று நான் உணர்ந்தது மேலும் நெடுங்காலம் கழித்துதான். அன்று முதல்நாள் விழித்தெழுந்ததும் நான் செய்ய வேண்டியதென்ன என்று தெரிந்தது. அந்த வெள்ளி நாணயத்தைக் கொண்டு எளிய தின்பண்டங்களை வாங்கிக்கொண்டேன். படைவீரர்கள் இடங்கள்தோறும் சென்று அவற்றை விற்றேன். அன்று மாலை என் எளிய வயிற்றுப்பசிக்கு உணவை மட்டும் எடுத்துவிட்டு எஞ்சியதை சேர்த்தேன். என் நாணயம் அப்படியே கையில் இருப்பதை கண்டேன். செல்வம் என்பது தீ போல படர்ந்து பெருகுவது என உணர்ந்தேன்.


இங்குள்ள எளிய மக்கள் செல்வமென்றால் பொருட்குவை என்று எண்ணுகிறார்கள். கருவூலம் என்கிறார்கள் அரசர்கள். தெய்வத்திடம் அது உள்ளது என்று சொல்கிறார்கள் வைதிகர்கள். அல்ல, செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். அதை அறிந்ததே என் வெற்றி. நான் கண்ட குபேரன் அவனே.


“ஆனால் அது வணிகர்களின் குபேரன். அரசர்களின் குபேரன் அவன் அல்ல” என்றான் வழியில் அவன் சந்தித்த ஒரு சூதன். “வீரரே, சூத்திரரும் அந்தணரும் குபேரனை அறியாதவர்கள். வணிகர்களிடம் அவ்வண்ணம் தோன்றிய குபேரன் அரசர்களிடம் வேறுமுகம் காட்டியிருக்கக் கூடும் அல்லவா?” உணவுநிலையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தபடி கையிலிருந்த ஒழிந்த தொன்னையை வீசிவிட்டு எழுந்தான்.


“இங்கே கமலதலம் என்னும் சிற்றூரில் ஊர்த்தலைவன் ஒருவன் குபேரனை கண்டுவிட்டான் என்கிறார்கள். அவன் இன்று ஒரு சிற்றரசனாக வளர்ந்துவிட்டிருக்கிறான். அவன் வழித்தோன்றல்கள் அரசனும் ஆகக்கூடும்” என்றான் சூதன். அவனிடம் விடைபெற்று கிளம்பிய அர்ஜுனன் கமலதலம் என்னும் ஊர் நடுவே புதிதாக எழுந்துவந்த ஏழுநிலை மாளிகை ஒன்றில் இருந்த ஊர்த்தலைவனை அணுகினான். அவன் ஷத்ரியன் என்று அறிந்ததும்  உள்ளே செல்ல  ஒப்பு அளித்தனர்.


வெள்ளியாலான பெரிய பீடத்தில் அமர்ந்திருந்த வியாஹ்ரதந்தன் என்னும் அந்த ஊர்த்தலைவன் அவனை வரவேற்று அமரச்செய்தான். “என்னிடம் நீங்கள் காவல்பணியாற்ற விழைந்தால் மகிழ்வேன், வீரரே. நான் வில்லவர்களையே நாடுகிறேன். நீங்கள் பெருவில்லவர் என்பதற்கு உங்கள் கைகளே சான்று” என்றான். “நான் பயணமொன்றில் இருக்கிறேன். நீங்கள் குபேரனைப் பார்த்தவர் என்றறிகிறேன். அவனை நானும் காணவிழைகிறேன்” என்றான் அர்ஜுனன்.


“நான் குபேரனை முழுமையாக பார்த்ததில்லை, வீரரே” என்றான் வியாஹ்ரதந்தன். “இச்சிற்றூரில் பிறரைப் போலவே எளிய வாழ்வை வாழ்ந்தேன். ஏவலரை அனுப்பி ஒவ்வொரு நாளும் இம்மலையிலிருந்து மலைப்பொருட்களைத் திரட்டி காவலர் துணையுடன் அருகிருக்கும் சந்தைகளுக்குக் கொண்டுசென்று விற்பதே என் தொழில். ஒருமுறை என் கையில் இருந்த கொம்பரக்குடன் சந்தையில் அமர்ந்திருந்தேன். அதை விற்று பணம் கொண்டு வந்தால் ஒழிய அன்று என் சிற்றூரே பட்டினியாகிவிடும் என்னும் நிலை. பட்டும் ஆடையும் அணிந்து என்னை அணுகிய வணிகனொருவன் என் கொம்பரக்குக்கு மூன்று பணம் அளிப்பதாக சொன்னான். என் தேவையும் அதுதான். பொருளைத் தருவதாக தலையசைக்கப்போகும் கணம் அவன் தலைக்கு மேல் ஒரு பொன்னிறப் பறவை கூவியபடி பறந்து செல்வதை கண்டேன்.”


அதற்கென நான் விழி தூக்கியபோது அவ்வணிகனின் கண்களை கண்டேன். அவன் நெஞ்சில் எண்ணியது ஐந்து பணம், சொல்லென எடுத்தது நான்கு பணம், நாவில் ஒலித்தது மூன்று பணம் என்று உணர்ந்தேன். “பத்து பணத்திற்கு ஒரு நாணயம் குறையாது” என்றேன். திகைத்து அவன் புருவம் விலக்கினான். “இதற்கா? இது என்ன பொன்னா வெள்ளியா?” என்றான். “கொம்பரக்கு. என் பொருளுக்கான மதிப்பை நான் அறிவேன்” என்றேன். ஏளன நகைப்புடன் கடந்து சென்றான். பிறிதொருவன் என்னை அணுகி “பத்து பணத்திற்கு கொம்பரக்கு என்றால்  உனக்கு என்ன விலை சொல்வாய், மூடா?” என்றான். “இது பத்து பணம் மட்டுமே. என் மதிப்பை நான் அறிவேன்” என்றேன். என் விழிகளில் இருந்த உறுதியைக் கண்டு திகைத்து கடந்துசென்றான்.


நான் என்ன சொல்கிறேன் என என் ஏவலருக்கு புரியவில்லை. என் முன் இருந்த பொருளை கூர்ந்து நோக்கினேன். பத்து பணம் பத்து பணம் என்று அதை நோக்கி மீளமீள சொல்லிக் கொண்டேன். ஆம் இதன் மதிப்பு பத்து பணம். இதை நான் முடிவுசெய்கிறேன், நானே முடிவுசெய்வேன். பிறிதொருவன் கேட்டபோது என் குரலில் இருந்த உறுதியைக் கண்டு “ஏழு பணம், என்ன சொல்கிறாய்?” என்றான். “பத்து பணம். சற்றும் குறையாது” என்றேன்.


அந்திப்பொழுது வந்து கொண்டிருந்தது. என்னுடன் வந்த  அனைவரும் சோர்ந்துவிட்டனர். என் உறுதியை அவர்கள் தங்களுக்குள் வசைபாடினர். சில பெண்கள் அழவும் தொடங்கிவிட்டனர். இளமைந்தர் பசித்தழுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் நடுங்கும் கைகளுடன் குளிரில் உடல் குறுக்கி அங்கு அமர்ந்திருந்தேன்.


பிறிதொருவன்  அணுகி “எட்டு பணம். கொம்பரக்கை கொடுத்துவிடு. இவ்விலை இதுவரை இங்கு அளிக்கப்பட்டதில்லை” என்றான். “பத்து பணம் அன்றி விற்பதில்லை. பொருளுடன் திரும்ப என் ஊருக்குச் செல்லவும் தயக்கமில்லை” என்றேன். மூன்று பணம் என முதலில் விலை சொன்ன அவ்வணிகனே வந்தான். “ஒரு பணம் குறைத்து ஒன்பது” என்றான்.  அக்கணமே “இதோ, உனக்காக” என்று அவனிடம் அப்பொருளைக் கொடுத்து பணம் பெற்று திரும்பினேன்.


அன்றைய செலவுக்கான மூன்று பணத்தை எடுத்து வைத்த பின் எஞ்சிய ஆறு பணத்தை கையில் வைத்து நோக்கியபடி என் ஊர் வரை நடந்தேன். நான் அடைந்தது என்ன என்று என்னிடமே கேட்டுக் கொண்டேன். மானுடனின் விழைவை! பேருருக் கொண்டு இப்புவியை மூடியிருப்பது அதுதான். குபேரனின் பொன்னொளிர் தோற்றம் என்பது அதுவே. நான் வணிகம் செய்யவேண்டியது அவ்விழைவுடன்தான். என் கையில் இருப்பதென்ன? இது நான் எனக்களித்த விலை. என் விலையை பிறர் முடிவு செய்யலாகாது. ஆம் அதுவே குபேரனின் ஆணை. வீரரே, அந்த இரு அறிதல்களிலிருந்து எழுந்ததே இப்பெருஞ்செல்வம்.


“குபேரனை முழுமையாகக் கண்ட எவரேனும் உள்ளனரா என்று நானறியேன். செல்வத்தை அடைந்தவர் அனைவரும் குபேரனை தங்கள் சிற்றறிவுகொண்டு சற்றே கண்டறிந்தவர்களே” என்றான் வியாஹ்ரதந்தன். “வீரரே, உங்கள் மேல் பொன்மழை பெய்ய அந்தச் சிறுதோற்றமே போதும்.” அர்ஜுனன்   “நான் விழைவது செல்வத்தை அல்ல. செல்வத்தின் இறைவனை மட்டுமே” என்றபடி எழுந்துகொண்டான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2016 10:30

November 10, 2016

பன்னிரு படைக்களம் -செம்பதிப்பு முன்பதிவு

1


பன்னிரு படைக்களம் – வெண்முரசு நாவல் வரிசையில் பத்தாவது நாவல்.


992 பக்கங்கள் கொண்ட நாவல்.


இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின் ஆளுமைக்கும் சரி, பாண்டவர்களின் இயல்புகளுக்கும் சரி, கௌரவர்களின் பெருமைக்கும் சரி, பொருந்தாததாகவே அது உள்ளது. ஆனால் அது மிக முக்கியமான நாடகத்தருணம். எவ்வகையிலோ இந்தியாவின் ஆதாரமான உளவியல் சிக்கல் ஒன்றைக் காட்டுகிறது. பெண்மையின், தாய்மையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்ளமுடியாத ஆண்மையின் எல்லைகளைக் காட்டுகிறது. ஆகவே தவிர்க்கக்கூடியதும் அல்ல. இந்த இரட்டைத்தன்மைதான் இந்நாவலின் மையம். ஆகவே இது இரட்டைமை என்னும் சரடையே பின்னிப்பின்னிச் செல்கிறது.


இந்தியப்பண்பாட்டின் இரட்டைத்தன்மை அதன் வேதங்களில், அரசியலில், பண்பாட்டுநிகழ்வுகளில் அனைத்திலும் முகம் கொள்வதை இந்நாவல் காட்டுகிறது. வெண்முரசில் அதன் முதல்நாவல் முதல் உருவாகிவந்துள்ள அடிப்படையான மோதல் இந்நாவலில் முனைகொள்கிறது. அவ்வகையில் பன்னிரு படைக்களம் திகிரி சுழன்று திரும்பும் புள்ளி. வெண்முரசின் இதுவரையிலான நாவல்களை வாசித்து, பிரதிக்குள் பின்னிச்செல்லும் உட்பிரதியை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது இதன் கூறுமுறை.இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: நவம்பர் 30, 2016.


முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:


* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.


* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறதாவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.


* முன்பதிவு திட்டத்தில் ப்ரீ ஆர்டர், விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.


* டிசம்பர் முதல் வாரத்தில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.


* ஆசிரியர் கையெழுத்து வேண்டும் என்றால் ஆர்டர் செய்யும் போது (பெயரை)குறிப்பில் தெரியப்படுத்தவும்,


* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.


* எம் ஓ, டிடி, செக் மூலம் பண அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.


* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.


* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும்.


* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.


*


 


ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/Panniru_Padaikkalam_Classic_Edition.html


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2016 17:25

சில சிறுகதைகள் – 5

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.சில சிறுகதைகளை உங்கள் தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.அவைகளைவாசித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய சிறுகதை ஒன்றின் இணைப்பினை அனுப்புகிறேன்.வாசித்துப் பாருங்கள்.

நன்றி

மோனிகா மாறன்.


http://solvanam.com/?p=45857



v0_master




அன்புள்ள ஜெயமோகன்,
நலமா ?
மீண்டும் புதியவர்களை அறிமுகப் படுத்தும் உங்களுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். இத்துடன் சொல்வனத்தில் வெளியான என்னுடைய இரண்டு சிறுகதைகளை அனுப்புகிறேன். உங்களுக்கு சமயம் கிடைக்கும் போது படித்து, பிடித்தால் உங்களுடைய இணையதளத்தில் சுட்டிக் காட்டலாம்.
பருவமழை : http://solvanam.com/?p=32745
மனிதக்குணம் :  http://solvanam.com/?p=42789
நன்றி,

தருணாதித்தன்
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2016 10:35

சிறுகதைகள் – விமர்சனங்கள் 3

r


அன்புள்ள ஆசிரியருக்கு,


வணக்கம். தங்கள் தளத்தில் வெளியான சிறுகதைகள் குறித்து என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். மொத்தம் ஐந்து கதைகள் படித்தேன். அதில் நான்கு கதைகள் பற்றி எழுதியுள்ளேன்.


நன்றி,


சங்கர்


1.மடத்து வீடு – ராம் செந்தில்


வாசகசாலை அமைப்பு சென்னையில் மாதம் இருமுறை சிறு பத்திரிக்கைகள், இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் வெளியாகும் சிறுகதைகள் குறித்து உரையாடல் நடத்துவார்கள். நான் இரு முறை கலந்துகொண்டேன். இரு முறையும் சிறுகதையின் வடிவம், வாசிக்கப் பெற்றவை சிறுகதையா இல்லையா என்றே விவாதம் சென்று முடியும். அப்படி ஒரு விவாதத்தில் தோழி ஒருவர் சொன்னது – “எனக்கு சிறுகதைன்னா படிச்சு முடிச்சவுடன புத்திசாலித்தனமான ஏமாற்றம் ஏற்படணும்”. பல நேரங்களில் சிறுகதைக்கான விளக்கங்களில் கதையின் முதல் வரியிலிருந்தே கதை தொடங்க வேண்டும், கதையின் முடிவிலிருந்து வாசகனை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் நாம் பேசுவோம். ஆக தொடர் வாசிப்பின் மூலம் நமக்கென்று ஒரு டெபனிசன் உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் படைப்பை மதிப்பிடுவோம். அதுவே எழுத அமரும்போது நமக்கு ஒரு டெம்ப்ளேட் உருவாக்கித் தரும். மடத்து வீடு சிறுகதை அத்தகைய டெம்ப்ளேட்டில் எழுதப்பட்டு அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டுவிட்டது என்று தோன்றுகிறது.


முதற் பாதியில் விவரணைகள் மேல் கவனம், பிற்பாடு தனியாக இருக்கும் பெண்களின் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை, கடைசியில் பெரியவரின் காமம் என கதை அமைந்துள்ளது. பல கிளைகளாக விரிவது நாவல். பல கிளைகளில் பயணித்து நம் கண்களுக்குத் தெரியாத ஆணி வேரை நோக்கிச் செல்வது சிறுகதை. இது என்னுடைய டெபனிசன். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் அவர்களைப் பார்ப்பதற்கு மூன்று பேர் போகிறார்கள் என்ற உடனேயே நமக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. கதையும் அதற்கேற்றாற்போல்தான் பயணிக்கிறது. கடைசியில் நாம் எதிர்ப்பார்க்காத ஒன்றை ஆசிரியர் வைத்தாக வேண்டும். எனவே அவர் ஒரு முடிவைத் தருகிறார். அதைத் தொடர்ந்து ஒரு சுபம் கார்டு – பெரியவரால் ஏற்படும் பிரச்சனைகளால் அப்பெண்கள் படும் வேதனையைப் பார்த்து மூன்று ஆண்களும் வழியும் கண்ணீரை ஒருவருக்கொருவர் தெரியாமல் துடைத்துக்கொள்கிறார்கள்.


சிறுகதைக்கான காலம் குறைவு. அதைக் கருத்தில் கொண்டே கதை முதல் வரியிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எனவே விவரணைகளைக் குறைத்து நேரடியாக வீட்டிற்குள் கதை சென்றிருக்கலாம்.


உத்தி தெரிந்திருக்கிறது. படைப்பு அதை மீறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மனதைத் தொடும். அது இக்கதையில் ஆசிரியருக்கு கை கூடவில்லை.



புத்தரின் கண்ணீர் – உதயன் சித்தாந்தன்

நல்ல கதை. எனக்கு இக்கதைப் பிடித்திருந்தது. போரை விரும்பாத தந்தை, போருக்குப் போகும் மகனை நினைத்துக் கவலைக்கொள்ளுதல், போரில் தன் மகன் வீரத்துடன் செயல்பட்டான் என்று கேள்விப்படும்போது மகிழ்தல், தன் மகனின் நலனுக்காக பிரார்த்தித்தல் பின் மீண்டும் தன் மகன் செய்த போர்க்குற்றங்களை நினைத்து வருந்துதல் என ஒரு சராசரி மனிதனின் உண்மையான உணர்வுகளை அழகாக படம்பிடித்துக்காட்டுகிறது. கதை எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. அம்மா, அப்பா, தங்கை என வாழும் சராசரி மனிதன் போருக்குச் சென்றவுடன் மிகக்கொடூரமான முறையில் குற்றங்கள் செய்கிறான். அவனை அவ்வாறு மாற்றுவது எது, போர்க்களத்தில் எது தர்மம்? எது அதர்மம்? அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நியாய தர்மங்கள் அங்கு செல்லுபடியாகுமா? எப்பொழுது சாவோம் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியும் கடக்கும் ஒருவனிடம் என்னென்ன நல்லொழுக்கங்களை எதிர்பார்க்கிறோம்? எதிர்ப்பார்க்கலாம்? போரே குற்றம் எனில் போர்க்குற்றங்கள் எனக் கூறி தண்டனைக் கூறுவது ஏமாற்று செயல் ஆகாதா? என இக்கதை விரிந்திருந்தால் பெரிய உயரத்தை எட்டியிருக்கும். அதற்கான எல்லா சாத்தியங்களும் இக்கதையில் உள்ளன. ஒரு வேளை ஒரு நெடுங்கதையாகவோ அல்லது குறு நாவலாகவோ எழுதப்பட்டிருந்தால் அது சாத்தியமாகியிருக்கும். சிறுகதையாக்க வேண்டும் என்பதால் சட்டென்று, சினிமாவில் க்ளைமேக்சில் ஒரே காட்சியில் மனம் திருந்தும் வில்லனைப் போல் மகன் மனமுடைவது கதையைக் கீழிறக்கிவிட்டது. இருந்தும் இது ஒரு நல்ல கதையே.





கதையின் முடிவில் கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது. குற்ற உணர்வுக்கு ஆளான ஒருவர் எதிர்பார்ப்பது ஒரிரு ஆறுதலான வார்த்தைகள்தான். அப்படியிருக்க பாதிக்கப்பட்டவர்களே கையைப் பிடித்துக்கொண்டு அழுவது மிகவும் நெகிழ வைக்கும் தருணம். அவ்வுணர்வு நம்மிடையே கடத்தப்படுவதில் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் விவரணைகளை ஆரம்பத்தில் குறைத்திருக்கலாம். ரவி குற்றவுணர்வுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாவதை இன்னும் முன்னரே காட்டத் தொடங்கியிருக்கலாம். இதுவும் ஒரு நல்ல கதை.



முடி– மாதவன் இளங்கோ

நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் இதைப் போல் பல கதைகள் படித்துவிட்டதால் பெரிய பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை. நேராக நடந்து ஒரு திருப்பத்தில் மறைந்து போகிறது. மனைவியின் நோயினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பாஸ் கதை சொல்லியையும் மற்றவர்களையும் திட்டிக்கொண்டே இருக்கிறார். கதை சொல்லிக்கு தலை முடி கொட்டுவது பிரச்சனை. இரண்டையும் இணைக்கும் இடமாக கடைசி வரியில் பாஸ்ஸின் மனைவிக்கு தலையில் முடி இல்லை என்று வருகிறது. சம்பந்தம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை பாஸ்ஸிற்கு தலையில் முடியில்லை அதனால் முடி இருப்பவர்களைப் பார்த்தால் திட்டுகிறார் என்று இருந்திருந்தால் எதாவது சம்பந்தம் இருந்திருக்கும். வேறேனும் கதையில் இருக்கிறதா என்று கூர்ந்து பார்க்க இயலவில்லை. கதை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. ஆரம்ப நிலைக் கதையாக பார்க்கலாம்.


சங்கர் விஸ்வநாதன்


***


அன்புள்ள ஜெ


நீங்கள் வெளியிட்ட கதைகளில் அனைத்தையும் வாசித்தேன். புத்தரின் கண்ணீர் கதையின் பிரச்சினை என்ன? ஒன்று கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் ஆசிரியராலேயே நேரடியாகச் சொல்லப்படுகின்றன. அவற்றில் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான டைப் கதாபாத்திரங்கள். முடிவும் டைப் முடிவு.


அந்தக்கதை எனக்கு ஆசி கந்தராஜாவின் ஒரு கதையை ஞாபகப்படுத்தியது. ஒருவர் செல்லமாக நாய் வள்ர்க்கிறார். தொழில் நிமித்தமாக அவர் கொரியா செல்கிறார். அங்கே நாய் இறைச்சி சாப்பிட நேர்கிறது. திரும்பி வந்தால் அவரது நாய்கள் அவரை பக்கமே விடவில்லை


இந்தக்கதை அந்த சிங்களச்சிப்பாய்க்கும் அவன் அம்மாவுக்கும் அல்லது தங்கைக்குமான உறவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அவன் அவர்களுடைய டார்லிங் பாய். ஆனால் போர்முனையில் ஒரு கற்பழிப்புக்கு துணை நிற்கிறான். இதில் வருவதுபோல அவன் அப்படிச்செய்யும் வீடியோவை அவர்கள் பார்க்கவில்லை. பார்த்தபின் அவர்கள் விலகிச்செல்வதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அவர்களுக்கு இவனுடைய முகத்தைப்பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அவனை கற்பழிப்பவனாகவே பார்க்கிறார்கள். பார்த்ததுமே நடுங்குகிறார்கள். அதைவிட அவனுக்கும் அவர்கள் வெறும் சதையாகவே தெரிகிறார்கள். இது ஒரு நல்ல கதையாக இருந்திருக்கும்


நல்லகதை தேவையான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மிச்சத்தை எல்லாம் வெட்டி வீசிவிடும். அது இதில் இல்லை. எல்லாமே அள்ளி வைக்கப்பட்டிருக்கிறது


மடத்துவீடு கதையின் பெரிய பிரச்சினை அந்தப்பையன்கள் ஆபாசமாகப்பேசுவதை அந்தப்பெண்கள் என்கரேஜ் செய்வதாக அதில் வருவதுதான். அப்படி அவர்கள் செய்வதாக இருந்தால் அவர்களின் பிரச்சினை, கட்டாயம் என்ன? அப்படிச்செய்தபின்னரும் அவர்களின் உள்மனசின் நோக்கம் என்ன? இதெல்லாம்தான் கதை


அந்தப்பெண்கள் இந்தப்பையன்கள் பேசுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு துணி தைத்துக்கொடுப்பது மாதிரியான வேலைகள் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் உள்ளூர அவர்கள் மனம் வெதும்புகிறார்கள் என்றாவது கதை இருந்திருக்கலாம்


விடிவு ஒரு ஆரம்பநிலைக் கதை. கதையில் ஃபோக்கல் பாய்ண்ட் இரண்டு. ஒன்று கிளைமாக்ஸ். இன்னொன்று கிளைமாக்ஸை மறைக்கும் ஒரு விஷயம். இதில் ரெண்டுமே இல்லை. கதையில் எல்லாருமே கதைசொல்லியை ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்பதற்கான முகாந்திரம் இல்லை. இதையும் நான் இப்படிச் சொல்லிப்பார்ப்பேன். உண்மையிலேயே கதைசொல்லி செய்யும் தவறுதான் அந்தப்பையன் சாகக் காரணம். அவன் குற்றவுணர்ச்சியால் குமுறிக்கொண்டிருந்தாலும் மறைக்கிறான். அது அந்த அம்மாவுக்குத் தெரிந்தாலும் மன்னிக்கிறாள். ஏனென்றால் தன் மகனின் தோழனாக அவள் அவனைப்பார்க்கிறாள்


அப்படி என்றாலும் அசோகமித்திரனின் அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம் அப்பாவின் தோழர் போன்ற பல கதைகளில் அசோகமித்திரன் இதை எழுதிவிட்டார்


ஆனந்த் சீனிவாசன்


images


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


புத்தரின் கண்ணீர், வடிவு பற்றி எனது குறிப்புகள்:


புத்தரின் கண்ணீர்


சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள் ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது. பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது. அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.


கவனத்தை ஈர்க்கும் தொடக்கம். பிரம்மாண்டமான, வரலாறு சார்ந்த புனைவை எதிர்பார்க்கச் செய்தது.


ஆனால் நான்காவது பத்தியிலேயே கதையின் முடிச்சு பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உச்சக்கட்டத்தை எதிர்நோக்கி நின்றிருக்க, கதை அப்படியே முடிந்து விடுகிறது. மலையேறச் சென்றவனுக்கு முடிவற்ற சமவெளியில் சிக்கிக்கொண்ட அனுபவத்தைத் தான் அளிக்கிறது புத்தரின் கண்ணீர்.


சந்தன சராசரி இளைஞனிலிருந்து புலிகளை அழிக்கத் துடிப்பவனாகவும் பின்னர் வன்மம் மிக்கவனாகவும் மாறுகிறான். இது சொல்லப்படுகிறதே தவிர ஆராயப்படவில்லை. எனவே கதையே வெறும் செய்தியாக தங்கிவிட்டது.


இருந்தாலும் மொழியும் அழகுணர்ச்சியும், சலிப்படையாமல் கதையின் கடைசி வரை செல்ல உதவியது. எழுதிப்பழகிய கை என்று நினைக்கிறேன்.


விடிவு


விடிவு கதையின் வடிவமே பெறவில்லை. நடந்ததும் நினைத்ததும் அப்படியே பதிவு செய்யப்பட்டது போல காட்சி அளிக்கின்றது. ரவியின் குற்ற உணர்வு, துயரத்திலும் சமநிலை இழக்காத தாயினூடாக அடையும் விடுவிப்பு – நல்ல சிறுகதை முளைக்க இந்த கதைக்கருவில் போதுமான வலிமை உள்ளதா என்ற ஐயம் எழுகிறது.


பல கதாப்பாத்திரங்களை நீக்கலாம் (கோதண்டராமன், சாரி, மோகன்…) எண்ண ஓட்டங்களை வடிகட்டி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்பு உள்ளது. கதையின் மையத்தை வெளிச்சத்தில் காட்ட உதவும்.


ப்ரியம்வதா

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2016 10:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.