Jeyamohan's Blog, page 1707

November 25, 2016

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38

[ 4 ]


பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு  கனல் கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியின் குகைச் சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல் துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து முகம் குனித்து ஆழ இழுத்தார் பிச்சாண்டவர். நெஞ்சு நிறைத்த புகையை உடலெங்கும் பரவவிட்டு மேலும் மேலுமென உடல் குறுக்கி ஒடுங்கினார். சடைப்புரிகள் சரிந்துவிழுந்து நிழலுடன் ஆடி முகம் மறைக்க அமர்ந்த பிச்சாடனரின் இருபக்கமும் அமர்ந்து அந்தணரும் சூதனும் கதையாடினர்.


பிரசாந்தர் “சொல்க சூதரே, நீங்கள் அந்த மலைச்சிற்றூருக்குள்  கண்ட விருத்திரன் யார்? எவ்வண்ணம் அவர்களின் குலத்தலைவன் ஆனான்? அவனை ஈன்றவர் யார்? இந்திரன் அவனை வென்ற கதை எது?” என்றார். பிரசண்டன் “அவர்கள் சொன்ன கதையை நான் இன்று சொல்லமுடியாது. அக்கதையை அன்று என்னுள் இருந்த ஒரு கதைசொல்லி உள்வாங்கினான். அந்தணரே, சூதனுள்   கதைகள் விதைகளெனச் சென்று விழுகின்றன. அக்கதையை நான் நூறு சந்தைகளில் பாடியிருப்பேன். அது ஒரு கவிஞர் நாவில் விழுந்து என்னிடமே மீண்டு வந்தது. விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை நான் சந்தை ஒன்றில் சூக்தன் என்னும் சூதன் பாடக்கேட்டேன்” என்றான்.


“கதை நின்றுகொண்டிருப்பதில்லை. அது நீரோடை, பேராறு, அலைகடல். கதைக்குள் கதைமாந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்கள் ஒவ்வொன்றும் உரசிக்கொண்டிருக்கின்றன” என்றான் பிரசண்டன். பிரசாந்தர்  ”கதையில் எது வளர்கிறதோ அதுவே உண்மை என்று எனது ஆசிரியர் சொன்னதுண்டு. சூதர் சொல்லில் மெய்யே வளரும் என்று எண்ணுகின்றேன்” என்றார்  ”வளர்வதேதும் மெய்யே என்று கொள்வதன்றி மானுடருக்கு வேறுவழியில்லை” என்றான் பிரசண்டன்.


அந்தணரே, நான் கண்ட அந்த மலைக்குகைக்குள் வளைந்து எழுந்த மென்பாறைச்  சுவர்ப்பரப்பில்  கூரிய கற்களால் அடித்து கீறி வடுவாக்கி வரையப்பட்ட ஈராளுயர ஓவியமாக நின்றிருந்தான் விருத்திரன். நீர்ப்பாசி படிந்த அச்சுவரில் அவ்வோவியத்தை காண்பதற்கு விழி பழகவேண்டும். பள்ளக்கோடுகளென செல்லும் அவ்வோவியத்தின் மீது விழிகள் பரவி துழாவி வடிவொன்றை அள்ள முயல்கின்றன. நழுவி மேலும் விழைவு கொண்டு தவிக்கும் ஒரு கணத்தில் மின்னென அம்முகம் தெரிகிறது. அதன் பின் அம்முகமன்றி பிறிதொன்று தெரிவதில்லை.


தொல்முகம் அது.  நாமறிந்த மரங்கள் முளைத்திருக்கவில்லை. நாம் காணும் நகரங்களும் விதைகளுக்குள் இருந்தன. யாரறிவார்? அன்று  மலைகள்கூட சிறியவையாக இருந்திருக்கும். நதிகள் இவ்வண்ணம் திரண்டிருக்காது. யார்முகம் அது? இங்கு எழுந்த அனைத்தையும் கண்டு திகைத்து நின்றிருக்கும் மூதாதை முகம். இல்லை, இங்கெல்லாம் நிறைந்துபெருகியிருக்கும் தன் முகம் கண்டு புன்னகைத்து நிற்கும் தந்தைமுகம். விரிந்த தோள்களில் மலர்கள். சடைத்திரிகள் தொங்கிய பிடரி. ஒருகையில் வாள். பிறிதொன்றில் அமுதகலம். விரிந்த அருள்விழிகள். இதழ்களின் இருபுறமும் எழுந்த வளைதேற்றைகள்.


இந்நாள் வரை இங்கு நிறுவப்பட்ட எந்தப்பேராலயத்திலும் நாம் அம்முகத்தை கண்டதில்லை. என் மைந்தரென சுற்றும்பெருகியிருக்கும் இன்முகம். என் மூதாதையர் என தெற்கில் பெருகியிருக்கும் கிராத முகம். நான் என் கனவால் அதை கண்டுகொண்டேன். அதிலிருந்தேன். விருத்திரன் என்ற சொல்லை என் சித்தம் தொட்டெடுத்ததே  பின்னர்தான். பந்தம் கொளுத்தி வைத்து பச்சையூன் படைத்து மூதாதையை வழிபட்டனர் அவர்கள். மைந்தர்களை அவர் காலடியில் கிடத்தி வணங்கி எடுத்துக் கொண்டனர்.


பின்னர் ஒவ்வொரு பந்தத்தையாக அணைத்து இருளுக்குள் அவரை அமைத்துவிட்டு  வணங்கி புறம்காட்டாமல் வெளியேறினர். “தந்தையே மூத்தவரே, விருத்திரனே  மீண்டும் எங்கள் இளமைந்தருடன் வருகிறோம். எங்கள் குலம் பெருகட்டும். எங்கள் உணவு செழிக்கட்டும். எங்கள் சொற்களில் கனிவு நிறைந்திருக்கட்டும். எங்கள் அம்புகளில் கூர் திகழட்டும். அருள்க!”  என்றார் முதுபூசகர் கபாலர். அப்போதுதான் அச்சொல் என்னுள் உறைத்தது. விருத்திரனா? தொல்கதைகள் சொல்லும் அசுரர்தலைவனா?


திரும்பும்போது கேட்டேன் “என்ன சொன்னீர், விருத்திரனா?” கபாலர் “ஆம், எங்கள் குலம் அவரால்தான் விருத்திர குலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார். என்னுள் அலையென வந்தடித்து பலநூறு கதைகளிலிருந்து நான் விடுபட நெடுநேரமாகியது. வழுக்கும் பாறைகளினூடாக கொடி பற்றி இறங்கி மீண்டும் குகை இல்லங்களுக்கு வந்து குளிர்ந்த பாறையொன்றில் அமர்ந்து நீரருந்தினோம். என்னருகே கபாலர் படுத்துக்கொண்டார்.


விருத்திரன் வாழ்ந்த கதையை அப்பூசகரிடம் நான் கேட்டேன். அவர்களின் தொல்கதையை அவர் சொன்னார். “இப்புவி உளிஓயா பெருந்தச்சன் ஒருவனால் கற்பாறையில் செதுக்கப்பட்டது, பாடகரே. அவனே மலைகளையும் தாழ்வரைகளையும் ஆறுகளையும் நிலவிரிவுகளையும் உருவாக்கியவன். அலைக்கும் கடல்களை அமைத்தவன். அவனை தச்சன் என்று வழிபட்டனர் என் முன்னோர். அந்த முதற்சிற்பி தன் வடிவில் படைத்தவனே பெருந்தச்சனாகிய விஸ்வகன். அவனே இங்கு எழுந்துவரும் ஒவ்வொன்றையும் படைப்பவன். தன்கூட்டை தன்னைச்சுற்றி கட்டிக்கொள்ளும் புழுவென இவையனைத்துக்கும் அடியில் அவன் குடியிருக்கிறான். அவன் மைந்தன் கர்மகன். அவனிடமிருந்தே எங்கள் குடி எழுந்தது.”


பிரசாந்தர் சற்று உளஎழுச்சி கொண்டு கையூன்றி “விஸ்வகர்மன்! அவர்கள் வழிபடுவது விஸ்வகர்மனை” என்றார். “விஸ்வகர்மனை அசுரன் என்றும் அவர் பெற்ற நான்கு மைந்தர்களை மகாருத்ரர்கள் என்றும் பராசரரின் புராணமாலிகை சொல்கிறது.” பிரசண்டன் “கதைகளை கதைகளைக்கொண்டே அறியமுடியும், அந்தணரே. கதைகள் கதைகளுக்கு மட்டுமே பொருள்சேர்க்கின்றன” என்று புன்னகையுடன் சொன்னான்.


கற்பாறையின் தண்மைமேல் முதுகமைத்து மல்லாந்து படுத்து வானை நோக்கியபடி கபாலர் சொன்னார்  “மண்ணுக்குள் புதைந்த சிறுவிதைகளிலிருந்து எழுந்தவை. ஒவ்வொரு கணமும் மண் பிளந்து எழுந்துகொண்டே இருக்கின்றன கோடானுகோடி மரங்களும் செடிகளும். பல்லாயிரம் கோடி துளைகளிலிருந்து விதை கொண்டு வெளிவருகின்றன சிற்றுயிர்கள். இருண்ட வளைகளிலிருந்து மின்னும் கண்களுடன் சுருண்டெழுந்து வருகின்றன நாகங்கள். நாம் நின்றிருக்கும் இம்மண்ணுக்கு அடியில் அனைத்தையும் முளைத்தெழச்செய்யும் பெரும்பரப்பு ஒன்றுள்ளது.”


முதலில் உள்ளது சமூலம். அதை விதைகளினாலான உலகம் என்றனர் என் முன்னோர். அவ்வுலகுக்கு அடியில் சிற்றுயிர் முட்டைகள் செழித்த ஆழுலகொன்று உள்ளது. அதை தாதம் என்றனர். அதற்கும் அடியில் உள்ள பெருநாகங்கள் பின்னி மேலும் பிறிதொரு உலகு. அதை ஜாதம் என்றனர்.  பாடகனே, அதற்கும் அடியில் உள்ளது இப்பெரும்பாறைகளுக்கும் மலைகளுக்கும் ஆணிவேரென்றான ஓர் உலகம். அதன் பெயர் பீஜம். அவ்வுலகுக்கும் அடியில் உள்ள ரேதம் என்னும் உலகில் வாழ்கிறார்கள் மண்மறைந்த நம் மூதாதையர்.


அவர்கள் சென்றடைவது முதுதாதை ஒருவனின் மடியை. அனலுருவ உடல்கொண்ட அவனை விஸ்வகன் என்கின்றனர். அவ்வுலகு ரேதம். அவன் மண்விரிவின் ஆழத்தை முழுக்கநிரப்பும் பேருடலன். அவன் அருகே அவனுடன் நிகரென உடல் பின்னிப் படுத்திருக்கிறாள் மூதன்னையாகிய ஜலை. நீரே உடலென்றானவள். அவர்களுக்கு அடியிலிருப்பது அனலம். தீயும் நீரும் ஒன்றென அலையடிக்கும் முடிவிலி அது. அதன் மேற்பரப்பே அன்னையும் தாதையும் கொண்ட மஞ்சம்.


முதலன்னையும் முதுதந்தையும் பிரிக்கமுடியாத உடலிணைவில் என்றுமுள்ளனர். அவர்கள் பிரியாமலிருப்பதனால் அடியிலுள்ள அனல் வேலியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தழுவலில் ஒருகணம் நெகிழ்வு விழுந்தால் அனல் பொங்கி எழுந்து உலகைமூடும். அன்னை தன் விரிந்த அல்குலால் தந்தையின் எழுந்த குறியை தழுவிஇணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாக சாறு என அவள் வயிற்றுக்குள் சென்று குருதியில் கலந்துகொண்டே இருக்கிறது. அவள் உடலின் வியர்வைத்துளைகள் அனைத்தும் கருவாய்களென திறக்க அவற்றிலிருந்து தெய்வங்களும் தந்தையரும் அன்னையரும் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.


பாடகனே, அறிக! ஒவ்வொரு கணமும் ஓராயிரம் கோடி தெய்வங்கள் அவளிடமிருந்து மண்ணுக்கு எழுந்து வருகின்றன. அவற்றின் வடிவங்களும் முடிவற்றவை. ஈயென எறும்பென கொசுவென குளவியென பாம்பென பல்லியென மான்என குரங்கென களிறென சிம்மமென தெய்வங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அன்னை வாயிலிருந்து பிறந்த பெரும் குமிழி ஒன்று மேலெழுந்து வந்தது. மண்ணில் காலூன்றி தோள்பெருத்த தந்தை என எழுந்ததும் அவன் குனிந்து ஆழத்தை நோக்கி தன் அன்னையிடம் கேட்டான் “அன்னையே, நான் செய்யவேண்டியதென்ன?”


“நீ தச்சன். உன் கைகளில் இருந்து பிறிதொரு உலகு முளைப்பதாக!” என்று அன்னை சொன்னாள். அவனுக்கு கர்மகன் என்று பெயரிட்டான் தந்தை. கர்மகன் நிலத்தை வயல்களென்றாக்கினான். ஆறுகளை ஏரிகளாக்கினான். குகைகளை இல்லங்களாக மாற்றினான். கால்தடங்களை சாலைகளாக்கினான். எரியை அடுப்பிலும் நீரை கலத்திலும் நிற்கும்படி செய்தான். கல்லை தெய்வமாக்கினான்.


அவன் கைகள் பெருகிக்கொண்டிருந்தன. துயிலிலும் அவன் கைகள் பணியாற்றிக்கொண்டிருந்தன. நான்குபக்கமும் பதினெட்டு கைகள் எழுந்ததும் அவனால் படுத்துறங்க முடியாமலாகியது. தன்கைகளை பகிர்ந்தளிக்கும்பொருட்டு அவன் மைந்தர்களைப் பெற எண்ணினான். தனக்குரிய துணைவியைத்தேடி அவன்  காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் யா என்னும் காட்டுமகளைக் கண்டான். அவள் உடலில் நூறு பேற்றுவாய்கள் விரிந்திருந்தன. இவளே என்று முடிவுசெய்து அவளை அணுகி “நீ மைந்தரால் நிறைவாய்” என்றான்.


முதல்தச்சனுக்கு யா என்னும் அன்னையில் ஆயிரத்தெட்டு மைந்தர் பிறந்தனர். அவர்களில் முதல்வர் நால்வர். முதல்மைந்தன் நான்கு கைகளில் உளியும் கூடமும் முழக்கோலும் சரடும் கொண்டு பிறந்தான். “தந்தையே, நான் யார்?” என்றான். “அஜைகபாத் என்று நீ அறியப்படுவாய். நீ கற்சிற்பி. பாறைகள் உன் கைக்கு நெகிழும்” என்றான் தந்தை. நான்குகைகளுடன் உளியும் கூடமும் துருத்தியும் அனலூதியும் கொண்டு எழுந்தான் இரண்டாமவன். “தந்தையே, நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். “நீ கொல்லன். உன்னை அஹிர்புத்தன்யன் என்பர். நீ படைக்கலங்களை இயற்றுக!” என்றான் தந்தை.


மூன்றாமவன் வணங்கி நின்றான். அவன் கைகளில் துலாவும் ஊதுகுழாயும் கிடுக்கியும் சிற்றுளியும் இருந்தன. “நீ த்வஷ்டா. உன் கனவுகளை பொன்னில் எழுப்புக!” என்றார் தந்தை. இறுதியாக நான்கு கைகளும் அனலென உருகிப்பறக்க வந்த மைந்தனிடம் “நீ ருத்ரன். அனலே உன் ஊடகம். வேள்விக்குளங்களை அமைத்து கணமொரு சிற்பமென சமைப்பாயாக!” என்றான் கர்மகன்.


பாடகனே, நான்கு தச்சர்களால் உருவானவை மண்ணில் எழுந்ததே மானுடம் கொண்ட செல்வங்கள் அனைத்தும். அவர்கள் கோட்டை சூழ் நகரங்களை செய்தார்கள். கொடியென சாலைகள் நெளிந்தன அங்கு. கூரை கவிழ்ந்த மாடங்கள் அமைந்தன. பொற்சூடிய அரண்மனைகள் எழுந்தன . முட்களும் உகிர்களும் அலகுகளும் படைக்கலங்களாக மாறின. நான்கு திசைகளையும் நால்வர் ஆண்டனர். கிழக்கே பொற்தச்சன் த்வஷ்டா நின்றான். மேற்கே இரும்புத்தச்சன் அஹிர்புத்ன்யன் இருந்தான். வடக்கை ஆண்டவன் கல்தச்சனாகிய அஜைகபாத். மூதாதையர் எரிந்தணையும் தெற்கில் வாழ்ந்தான் ருத்ரன்.


[ 5 ]


“பிரதீகம் என்னும் சிற்றூரில் ஒரு சந்தையில் நான்  நின்றிருக்கையில் அங்கு இளம்சூதன் ஒருவன் பாடிய பாடலைக் கேட்டு வியந்து அருகணைந்தேன்” என்றான் பிரசண்டன்.  “அவன் என் சொற்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். சென்று நின்று செவிகொடுத்தபோது கேட்டேன், அவை என் சொற்களல்ல. என் சொற்கள் ஒன்றுநூறென முளைத்து காவியமாகிவிட்டிருந்தன.”


“குப்த சந்திரசூடர் என்னும் கவிஞர் யாத்த விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை அன்றுதான் நான் முதல்முறையாகக் கேட்டேன். பன்னிரண்டு பாதங்களிலாக நூற்றிருபது பாடல்கள் கொண்டது அது. விருத்திராசுரனின் மும்மூதாதையரின் கதையிலிருந்து தொடங்கி அவன் விண்மேவியது வரை பாடியது. அதை விழிமின்ன கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தொல்குடி அசுரர் என்று கண்டேன். அவர்கள் அதற்கு தங்கள் மடிச்சீலையில் எஞ்சும் நாணயங்களைக்கூட கொடுப்பார்கள். எனவே அக்கதை ஒருபோதும் அழியாதென்று தெளிந்தேன்.”


“அன்றுபாடிக்கொண்டிருந்தவன் பெயர் குணதன். அவனை அன்றிரவு அந்தியில் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையிலிருந்த விடுதியில் சந்தித்தேன். அக்காவியத்தை எனக்காக முழுமையாகப்பாடும்படிச் சொல்லி நினைவில் நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுநிலவு. ஆற்றுநீர் மின்னிக்கொண்டிருந்தது. தென்றலை ஒளியலைகளாக பார்த்துக்கொண்டிருந்தேன். “முழுநிலவின் ஒளியில் தன் மைந்தரின் படைப்புலகை நோக்கி உவகைமயக்கில் இருந்த கர்மகனின் தோற்றத்தை அவன் பாடினான்” என்றான் பிரசண்டன்.


“நான் நான் என மானுடன் தருக்கி எழும்  தருணங்கள் இரண்டு. தன் கலைகண்டு நெஞ்சு எழுகையில். தன் மைந்தர் செயல்கண்டு வயிறு மலர்கையில். இரண்டும் நிகழ்ந்தன கர்மகனுக்கு அப்போது. நான்கு கைகளையும் விரித்து நான்கு மைந்தரையும் நெஞ்சோடணைத்து விழிநனைந்தான். விம்மி விம்மி எழும் உள்ளத்தால் நிலைகொள்ளாது தவித்தான். உச்சகணங்களை நிற்க இடமில்லாது ஊசிக்கூர்களாகப் படைத்த தெய்வங்கள் மானுடனுடன் விளையாடுகின்றன” என்று குணதன் பாடினான்.


ஒளியலைகளாக தன்னைச்சூழ்ந்த தெய்வங்களை நோக்கி கர்மகன் கேட்டான் “தெய்வங்களே சொல்க, இப்புவியில் நிகரற்றவன் யார்?” தெய்வங்கள் அமைதிகொண்டிருந்தன. “சொல்க, யார்?” என்று அவன் கூவினான். தெய்வங்களின் ஒலியெழாதிருக்கவே “காண்பீர்கள். மாற்றுச்சொல் இல்லாது நீங்களே ஏற்பீர்கள்” என்றான்.


பெருந்தச்சனாகிய கர்மகன் தன் மைந்தரிடம் “உங்களில் முதல்வர் எவர் என்றறிய விழைகிறேன், மைந்தர்களே. உங்களால் இயன்ற உச்சங்களை சமைத்து அளியுங்கள்” என்றான். “ஆணை” என்று நான்கு மைந்தரும் அவனைப் பணிந்தனர். “அறிக, அவை தெய்வங்கள் அஞ்சும் முழுமை கொண்டிருக்கவேண்டும். அம்முழுமைக்குமேல் ஒன்று எண்ணற்கும் அரிதாக இருக்கவேண்டும்.” மைந்தர் “அவ்வாறே” என்றனர். “படிப்படியாக வெல்வது மானுடர் வழக்கம். தன்னை எரித்து பெருகியெழுவதே ஆசுரம். அவ்வழியே உங்களுக்கு” என்றான் கர்மகன்.


மைந்தர் ஆணைபெற்றுக்கிளம்பினர்.  கற்தச்சனாகிய அஜைகபாத் ஒரு யானை வடிவம் கொண்டு துதிக்கைதூக்கிப் பிளிறியபடி காட்டுக்குள் புகுந்தான். அவனுடைய பிளிறல் கேட்டு பதினெட்டாயிரம் காட்டுயானைகள் துதிசுழற்றி சின்னம் விளித்து அவனைப் பணிந்தன. அந்த யானைகளை அழைத்துவந்து மலைப்பாறைகளைல் உருட்டி அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். இரையைச் சுற்றி இறுக்கிய மலைப்பாம்பு போல மகாவீர்யம் என்னும் மலையை ஏழுமுறை சுற்றியிருந்தது அந்தக்கோட்டை.


இரும்புக்கொல்லனாகிய அஹிர்புத்தன்யன் ஒரு செங்கழுகாக மாறி பறவைக்குலங்களை அறைகூவினான். வேழாம்பலின் அலகுகள் வாள்களாயின. பருந்துகளின் அலகுகள் வேல்களாயின. கழுகுகளின் உகிர்கள் அம்புகளாயின. அந்தப்பெருங்கோட்டை வெல்லமுடியாத படைக்கலங்களால் நிறைந்தது.


அனைத்து உலோகங்களும் முனைகொண்டமையால் அது முள்செறிந்த மலையுச்சி மரம்போலவும் சினந்த முள்ளம்பன்றிபோலவும் சீறிநின்றது. தெய்வங்களும் அதை அணுக அஞ்சி வளைந்து பறந்தன. அதற்குள் புகுந்த காற்று பல்லாயிரம் சீறல்களாக கிழிபட்டது. அங்கு நீட்டிநின்றிருந்த கூர்களில் ஒளி நீர்த்துளியெனச் சொட்டி நின்றது. அவற்றின் நிழல்களால் நிலம் நாளும் மும்முறை சீவித்தூய்மையாக்கப்பட்டது. அக்கோட்டைக்குள் பறவைகள் நுழையவில்லை. பூச்சிகளும் அங்குசெல்ல அஞ்சின.


த்வஷ்டா ஒரு மாபெரும் தவளை வடிவை எடுத்தான். கங்கை ஆறு காலையிளவெயிலில் பொன்னிறமாக ஓடும் கணத்தில் நீருக்குள் குதித்து மூழ்கி வாயைக்குவித்து ஊதி நுரையெழுப்பலானான். அந்நுரைக்குமிழிகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து பெருமாளிகையென்றாயின. தன்னைத்தானே பெருக்கிக்கொண்டமையால் அம்மாளிகை முழுமுதல்தெய்வத்தின் உள்ளத்தில் வாழ்ந்த அந்த முதல்மாளிகையைப்போலவே தானும் அமைந்தது.


படைப்பின் குறை என்பது படைப்பாளியின் எல்லை. தன்னைத்தான் உருவாக்கும் படைப்பு படைப்பவனிடமிருந்து விடுதலைகொண்டுவிடுகிறது. சூதரே, அனைத்து வடிவங்களும் தங்கள் முழுமையை சென்றடையும் உள்விருப்பாலேயே செயலூக்கம் கொள்கின்றன. முழுமைமுழுமை எனத்துடிக்கும் வடிவங்களையே நாம் கலை எனக்கொள்கிறோம்.


அணிமாளிகை விண்முட்ட குவிந்து உயர்ந்து பதினெட்டாயிரம் முகடுகளுடன் இருபத்தெட்டாயிரம் உப்பரிகைகளுடன் முப்பத்தெட்டாயிரம் பலகணிகளுடன் நின்றது. அதன் அழகைக்காண தெய்வங்கள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்து நெரித்தனர். தெற்கே கடல்சூழ்ந்த நிலங்களில் இருந்தும் வடக்கே பனிசூழ்ந்த உச்சிகளில் இருந்தும் மேற்கே பெரும்பாலைகளில் இருந்தும் கிழக்கே எழுந்த பசுங்காட்டுவெளிகளில் இருந்தும் பன்னிரண்டாயிரத்து எட்டு பழங்குலங்களைச் சேர்ந்தவர்களும் தேடிவந்தனர். அவர்களின் பாணர்கள் அதை பாடல்களாகப் பாடினர்.


பாட்டில் அந்த மாளிகை நெய்யுண்ட எரியென மேலும் வளர்ந்தது. அதைப்பாடியவர்களெல்லாம் அதில் ஒரு மாடத்தைக் கட்டினர். அதைக் கேட்டவர்களெல்லாம் ஒர் உப்பரிகையை இணைத்தனர். நினைவுகூர்ந்தவர்களெல்லாம் ஒரு பலகணியை திறந்தனர். பெருகிப்பெருகிச்சென்ற மாளிகை விண்முகில்கள் நடுவே பொன்னிற ஒளியுடன் எழுந்து நின்றது. மழைமுகில்கள் அதில் முதுகுரசிக்கொண்டன. அவை அதன் தண்மையால் எடைபெற்று அங்கேயே நின்றமையால் தேங்கிக் குளிர்ந்து சுனையென்றாயின. சுனையின் அடிப்படலம் கிழிய மழையெனப்பொழிந்தன. அதன் பொன்மாடங்கள் மேல் எப்போதும் மழைபொழிந்துகொண்டிருந்தது. அதன் கூரைமடிப்புகளிலிருந்து அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன.


சிறந்தவை தங்கள் இருப்பாலேயே அறைகூவலென்றாகின்றன.  விண்ணுலாவியாகிய நாரதர் ஒருநாள் முகில்களினூடாகச் செல்லும்போது கூட்டம்கூட்டமாக அசுரதெய்வங்கள் செல்வதைக் கண்டார். “எங்குசெல்கிறீர்கள், தெய்வங்களே? உங்களை ஆளும் பெருந்தெய்வமொன்று மீண்டும் எழுந்துள்ளதா?” என்றார். “ஆம், அத்தெய்வத்தின் மாளிகை எழுந்துள்ளது அங்கே” என்றார்கள் அவர்கள்.


அவர் மேலும் செல்லும்போது கந்தர்வர்கள் ஒளிரும் மணிமுடிகளும் வெண்சிறகுகளுமாக வண்ணத்துப்பூச்சிகளின் பெருக்கென சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். “எங்குசெல்கிறீர்கள், கந்தர்வர்களே?” என்றார். “பேரழகு எங்களை ஈர்க்கிறது. பிறிதெங்கும் நிலைக்கமுடியவில்லை” என்றனர்.


மேலும் செல்லும்போது கின்னரர்கள் செல்வதைக் கண்டார். “அழகிய பொருட்களில் இசைநிறைந்துள்ளது, நாரதரே” என்றனர். மேலும் சென்றபோது வித்யாதரர்களைக் கண்டார். “மெய்மை என்பது முழுமை. முழுமையே அழகென விழிகளால் அறியப்படுகிறது” என்றனர்.


இறுதியாக அவர் தேவர்களைக் கண்டார். அவர்கள் பித்தெழுந்த விழிகளுடன் விண்ணில் ஒளிக்கீற்றுகளாக வழிந்துசென்றுகொண்டிருந்தனர். “எங்குசெல்கிறீர்கள், தேவர்களே?” என்றார். “நாங்கள் வெற்றியை நாடுபவர்கள். உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல்கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்டவெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது. அதை ஒருவன் அடைந்துள்ளான். அவனைக் காணச்செல்கிறோம்” என்றனர்.


நாரதர் அமராவதிக்குச் சென்று அங்கே வைஜயந்தத்தில் இந்திராணியுடன் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்தார். அவனைச்சூழ்ந்திருந்தன முழுமைகொண்டவை அனைத்தும். நீர்மலர்களில் தாமரை. கிளைமலர்களில் பாரிஜாதம். கொடிமலர்களில் முல்லை. பறப்பனவற்றில் செங்கழுகு. தவழ்வனவற்றில் அன்னம். பாடுவனவற்றில் குயில். பேசுவனவற்றில் பசுங்கிளி. ஆடுவனவற்றில் மயில். தாவுவனவற்றில் புள்ளிமான். தயங்குவனவற்றில் வரிப்புலி. முக்கனிகள் காய்த்த மரங்கள். முலைகனிந்த காமதேனு. நிழல் விரித்த கல்பமரம். துதிக்கை அசைத்தபடி ஐராவதம்.


வணங்கி அருகமர்ந்த நாரதர் “முழுமையைத் தோற்கடிப்பது தெய்வங்களின் ஆடல்போலும்” என்று பெருமூச்சுடன் சொன்னார். இந்திரன் வினாவெழுந்த புருவங்களுடன் நோக்க “தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை. மேலுமொரு முழுமையை அவை படைக்கின்றன. முந்தைய முழுமையை குறையென ஆக்கி விளையாடுகின்றன” என்றார்.


அவரை நன்குணர்ந்திருந்த அவன் அவர் சொல்லவருவதை உய்த்தறிந்தான். “சொல்க, இங்கு நீங்கள் கண்ட குறை என்ன?” என்றான் இந்திரன். “நான் காணவில்லை. இங்குள்ள தேவர்கள் காண்கிறார்கள்போலும். மண்ணில் அசுரசிற்பியின் மைந்தர் நால்வர் அமைத்த மகாவீர்யம் என்னும் பெருநகர் அனைத்திலும் முழுமைகொண்டிருக்கிறதென்கிறார்கள். பெருஞ்சிற்பியின் நான்கு மைந்தர்களான ருத்ரர்களில் த்வஷ்டா அமைத்த மணிமாளிகை  விண்முகில்களையே ஆடையென அணிந்து நின்றிருக்கிறது.”


“அங்கு சென்று சூழ்ந்திருக்கின்றன அவர்களின் தெய்வங்கள். உடன் நம் தேவர்களும் நெருக்கியடிக்கிறார்கள். இங்கு வரும்போது பார்த்தேன், இலையுதிர்காலத்து பொன்னிறச்சருகுகள் என தேவர்கள் அமராவதியிலிருந்து உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். இப்பெருநகரின் அனைத்து வீதிகளும் ஒழிந்துகிடக்கின்றன. அமுதமுண்ணவும் இங்கு தேவரில்லாமலாகும் நிலைவருமோ என எண்ணிக்கொண்டேன்” என்றார் இசைமுனிவர்.


வினைமுடித்து நாரதர் கிளம்பும்போது இந்திரன் முகம் சுருங்கி இதழ்கள் இறுகி கைவிரல்களால் வெளியை சுழித்துக்கொண்டிருந்தான். அவர் சென்றபின் வியோமயானம் மீதேறி விண்வழி ஊர்ந்தான். கீழே மண்மகளின் மணிமுடி என எழுந்து நின்ற மாளிகையைக் கண்டான். அவன் உடல் பதறத்தொடங்கியது. யானைமேலிருந்து வழுக்கி விழுபவன்போல தடுமாறினான்.


உடல் எரிய திரும்பி அமராவதிக்கு வந்தான். அவனுக்கு காய்ச்சல் கண்டிருக்கிறதென எண்ணி அவன் தேவி அவனை ஆறுதல்படுத்த வந்தபோது சினந்து கையோங்கி அவளை அடிக்கப்போனான். கொந்தளிப்பு தாளமுடியாமல் சுற்றிச்சுற்றிவந்தான். அருகே வந்து உசாவிய வசிட்டரிடம் நிகழ்ந்ததை சொன்னான். “முதல்வனாக அன்றி நான் இருக்கவியலாதென்பதே என் நெறி. முதன்மை என்பது கணம்தோறும் நூறு குரல்களால் அறைகூவப்படுவது” என்றான். “வெற்றிகளால் ஆனதே என் காலம். இவ்வரியணை முந்தைய கணம் வரை நான் வெல்லப்படவில்லை என்பதன் சான்றுமட்டுமே” என்று உறுமினான். “நான் வென்றாகவேண்டும். எவ்வகையிலாயினும் வென்றாகவேண்டும்” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2016 10:30

November 24, 2016

சிறுகதைகள் என் மதிப்பீடு -5

8

பார் லகர்க்விஸ்ட்


 


 


எழுதும் பயிற்சியின் தொடக்க காலத்தில்  கதைக்கருக்களை கையாளும்போது எப்போதும் வரும் இடர் ஒன்று உண்டு. அந்தக் கதை யார் பார்வையில் சொல்லப்பட வேண்டும்? எல்லாக் கதைகளிலுமே ஆசிரியனின் கண்கள் சென்று அமரும் ஒருமுகம் உண்டு. நாவல்களில் அது ஒன்றுக்கு மேற்பட்ட முகமாக இருக்கலாம். மிகத் தெளிவாக வாசகனுக்குத் தெரிவதாக இருக்கலாம். அல்லது ஆசிரியனால் மிக நுணுக்கமாக அது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அக்கதைக்குள் ஆசிரியன் இருந்தாக வேண்டும்.


 


முற்றிலும் ஆசிரியனிடம் இருந்து விலகி கதை நிகழ முடியுமா? ,முடியும்,அது வேறு ஒரு கலைப்போக்கு. அத்தகைய கதைகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். பூமணி எழுதியிருக்கிறார். இரண்டு வகையான அழகியல் கொண்டவை அவை.


 


அசோகமித்திரன் கதை யதார்த்தபாணி கதை என்றும் பூமணி எழுதுவது இயல்புவாதக் கதை என்றும் சொல்லலாம். கறாரான யதார்த்தவாதம் என்பது எது நிகழ்கிறது, அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை மட்டுமே சொல்லி கதையை நிறுவிச்செல்லும். அசோகமித்திரனின் தூய யதார்த்தவாதக் கதைகளில் ஆசிரியன் கூடுமானவரை கதைக்கு வெளியே முற்றிலும் பங்களிப்பற்றவனாக ,பற்றற்றவனாக இருப்பான்.


 


ஆனால் யதார்த்தவாதக் கதைகளில்  மிக அரிதாகவே வெற்றி பெறும் உத்தி இது. ஏனென்றால் யதார்த்தவாதக்கதை புறவய யதார்த்தத்துடன் நின்றுவிடுவதல்ல. அக யதார்த்தத்தையும் சொல்வது. நிகழ்வுகள் மட்டும் அல்ல எதிர்வினைகளும் அதில் முக்கியமானது. தகவல்கள் மட்டும் அல்ல உணர்வுகளும் முதன்மையானவை


 


அசோகமித்திரனின் கணிசமான கதைகளில் ’நான்’ என்று அசோகமித்திரன் குறிப்பிடும் கதாபாத்திரம் கதைக்குள் வருவதைப்பார்க்கலாம் உதாரணமாக  புலிக்கலைஞன். அந்த ’நானை’ கூடுமானவரை நிறங்கள் அற்றவராக உணர்ச்சிகள் அற்றவராக அமைத்து யதார்த்தவாதத்தின் பற்றற்ற அமைதியை அசோகமித்திரன் உருவாக்குகிறார்.


 


பூமணி புறவயமான தகவல்களை மட்டுமே சொல்லி உருவாக்கும் கதையில் ஆசிரியனுடைய இருப்பை  மிக எளிதாக வெளியே கொண்டு சென்று விடுகிறார். ஆசிரியன் அங்கு ஒரு புகைப்படக்கருவியின் பணியை மட்டுமே ஆற்றுகிறான். அக்கதைக்கு உரிய களத்தை தெரிவு செய்வது கதை மாந்தரை விவரிப்பது நிகழ்வுகளை வரிசைப்படுத்துவது ஆகிய மூன்றில் மட்டுமே ஆசிரியரின் இருப்பு அக்கறை கொள்கிறது. மற்றபடி கதைக்குள் ஆசிரியரின் குரலோ எண்ணமோ உணர்வோ வெளிப்படுவதில்லை.


 


இத்தகைய இருவகைக் கதைகளுமே பொதுவாக சிறுகதை என்ற வடிவில் ஒரு பகுதியை மட்டுமே சார்ந்தவை. ஏனெனில் சிறுகதை என்ற வடிவமே தன்னளவில் விமர்சனத்தன்மை கொண்டது. விமர்சனத்தின் பொருட்டு உருவானது என்று கூடச் சொல்லலாம். வாழ்க்கையின் முரண்பாடுகளை, அன்றாட கணங்களில் எழும் பேருணர்வுகளை, எளிய நிகழ்வுகளின் உள்ளுறைந்த புதிரை என அது தொட்டுக்காட்ட விரும்பும் ஒரு மையம் உண்டு அந்த மையத்தை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது.


 


ஆசிரியன் முற்றிலும் கதைக்கு வெளியே நின்று விடும்போது பல சமயம் அந்த மையம் கதைக்குள் தெளிவடையாமலேயே போய்விடக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆகவே யதார்த்தவாதக் கதையாயினும் கூட கதைக்குள் ஆசிரியனின் பார்வையைக் கொண்டு ஒரு கதாபாத்திரம் இருப்பதே உகந்தது. அப்பார்வையை, அக்கதைகட்டமைப்பை ஒருங்கிணைப்பதில் அந்த மையம் இன்றியமையாதது என்று சொல்லலாம்.


 


தத்துவ தரிசனங்களையோ அசாதாரணமான உணர்ச்சிகளையோ வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் கொண்ட படைப்புகளில் அந்தப்பார்வைக்கோணம் இன்னும் துலக்கமாகவே கதைக்குள் இருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் புறவயமான தத்துவம் என ஒன்றில்லை. எவருடைய பார்வையில் அத்தத்துவநோக்கு திரள்கிறது என்பது அத்தத்துவநோக்கை மதிப்பிடுவதற்கே முக்கியமானது


 


காரணம் இலக்கியத்தில் கதைக்கு வெளியே செல்லுபடியாகும் புறவயமான தத்துவம் ஒன்று திரண்டு வர முடியாது. ஒரு சிறுகதையின் வரி எத்தனை கூரியதாயினும் மேற்கோள் ஆக முடியாது, ஏனென்றல் அதைச் சொல்வது ஆசிரியன் அல்ல, கதாபாத்திரம். ஆகவே இலக்கியம் உருவாக்கும் தத்துவத்திற்கு தத்துவ மதிப்பேதும் கிடையாது. எந்தக்கதையில் எவர் வாயிலாக வெளிப்படுகிறது என்பதை ஒட்டி மட்டுமே அத்தத்துவத்திற்கு மதிப்புண்டு.


 


மர்க்சிம் கார்க்கியின் தாய் நாவலில் பாவல் சொல்லும் ஒரு  வரிக்கு பாவலின் குணச்சித்திரம் சார்ந்துதான் மதிப்பு. இவான் துர்கனேவின் தந்தையும்தனயர்களும் நாவலில் மருத்துவனாகிய பஸரோவ் சொல்லும் ஒரு வரி அந்நாவல் உருவாக்கும் விவாதம், அதில்      பஸரோவின் குணச்சித்திரம் ஆகியவற்றைச்ச் சார்ந்தே முக்கியத்துவம் பெறுகிறது.முறையே புரட்சிகர சிந்தனையென்றோ ,முழுமறுப்புச் சிந்தனை என்றோ அதை வரையறுத்துவிட முடியாது.


 


ஆகவே தத்துவார்த்தமான கதைகளை எழுதும்போது சூழல் மற்றும் கதாபாத்திரம் இரண்டையும் ஒட்டி அது தத்துவம் வெளிப்படுவது மிக அவசியமானது.  அது எவருடைய நோக்கு என்பது கதைக்குள் மிகத்தெளிவாகவே வெளிப்பட்டாகவேண்டும்.


kazantzakis_nikos

நிகாஸ் கஸன்ஸகிஸ்


 


மோனிகா மாறன் எழுதியிருக்கும் தச்சன் என்னும் கதை மேரி மக்தலீனின் பார்வையில் யேசுவைச் சொல்ல முற்படுகிறது இக்கதையின் மிக முக்கியமான குறை என்னவென்றால் எங்கோ ஒரு இடத்தில் அது மயங்கி யேசுவின் பார்வையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது என்பதுதான். மக்தலீனின் நோக்கு கதையின் கோணமாக இல்லை.


 


யேசு அவருடைய மாணவர்களுக்கு எப்படி பொருள்படுகிறாரோ, அவரிடம் அருள் பெற வந்தவர்களுக்கும் நோய் குணமாக வந்தவர்களுக்கும் எப்படி பொருள் படுகிறாரோ ,அதற்கு அப்பால் மிக அந்தரங்கமான ஒரு பொருளை மக்தலீனாவுக்கு அளிக்கிறார் என்பதுதான் இந்தக் கதையாக இருக்க முடியும் அப்படி இருக்கையில்  மக்தலீனாவின் எண்ண அலைகள், உணர்வுகள், நோக்கு வழியாக மட்டுமே அவர் வெளிப்பட முடியும்.


 


அதற்கு முதலில் மக்தலீனாவை கதை சரியாக வரையறை செய்யவேண்டும். அவளுடைய சூழல் ,அவளுடைய தோற்றம் ,அவளுடைய எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவை இக்கதைக்குள் விரிவாகவே விளக்கப்பட்டிருக்கவேண்டும். அவளுடைய பார்வை வழியாக வரும் யேசு அவளையும் யேசுவையும் ஒருங்கே காட்டும் கதாபாத்திரமாக   கதைக்குள் வந்தாக வேண்டும். யேசு என்ன எண்ணுகிறார் என்பது இக்கதைக்கு உரியதல்ல.


 


இதன் நடை ஒரு கதைச்சித்தரிப்புக்கு உரியதாக இல்லாமல் வசனகவிதையின் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே நேரடியாக உணர்வுகளைச் சொல்லும் பாணி இதற்கு அமைந்துள்ளது.  இந்த வகையான நேரடிக்கூற்று உண்மையில் அகவயமான சில சொற்றொடர்களை உருவாக்குமே ஒழிய அந்த உணர்வுகள் உருவான விளைநிலத்தை, ஆழ்மனதை கதைக்குள் கொண்டுவர முடியாது.


 


ஆழ்மனம் வெளிப்படுவதே கலை. ஆழ்மனம் நேரடியாக வெளிப்படமுடியாதென்பதே கலையின் சவால். ஆகவேதான் அது குறிப்புணர்த்துகிறது. மறைமுகமாகச் சொல்கிறது. படிமங்களையும் அணிகளையும் பயன்படுத்துகிறது.


 


மக்தலீனா எங்கே இருந்தாள்? அவளுடைய அன்றாட வாழ்க்கை எப்படிப்பட்டது? தன்னைப்பற்றி, விபச்சாரியான தன் உடலைப்பற்றி அவள் என்ன நினைத்தாள்? பைபிள் அவள் யேசுவின் கால்களை நறுமணத்தைலத்தால் கழுவித் தன் கூந்தலில் துடைத்தாள் என்று சொல்கிறது. அந்த ஒரு செயலில் தன் உடலைப்பற்றி அவளுக்கு இருந்த இழிவுணர்ச்சி வெளிப்படுகிறது.


 


தண்ணீர்  பிடிப்பதற்காக ஊற்றுக்கு போகும்போது யேசுவைக்காணும் இடத்தில் அவளுடைய உணர்வு என்ன என்பது மிக முக்கியமானது. அது ஓர் ஒற்றைப்படையான உளக்கொந்தளிப்பா? அத்தகைய தருணங்களில் உள்ளம் முன்னும்பின்னும் அல்லவா ஆடும்? தயக்கமும் ஆர்வமும் இழிவுணர்வும் உள எழுச்சியும் மாறி மாறி அல்லவா வெளிப்படும்? இந்த சிறுகதையில் அவ்வுணர்வு மிக சம்பிரதாயமான முறையில் வெளிப்படுகிறது.


 


மக்தலீனா யேசுவைக்கண்டு உருகினாள் .பாதங்களில் விழுந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினாள். அவர் சொற்களால் பாவமன்னிப்பு பெற்றாள் – இது பைபிள் வாசித்த அனைவரும் அறிந்ததே. அதை மீண்டும் ஒரு சொற்சித்திரமாக ஆக்குவதற்கு நவீனச் சிறுகதை ஆசிரியர் தேவையில்லை


 


இக்கதைக்குள் மோனிகா மாறன் தன்னை எங்கு பொருத்திக் கொள்கிறார். மக்தலீனாவின் கண்ணில் முகத்தில் மோனிகாவின் கண் பதிந்திருக்க வேண்டும் மக்தலீனாவாக மோனிகா மாறன் மாறியிருக்க வேண்டும்


 


மக்தலீனா தொன்மத்திலிருந்து நமக்கு வரும் ஒரு கதாபாத்திரம். அவளுடைய தனித்தன்மைகள் அனைத்துமே மூலப்பிரதியால் வரையறுக்கப்பட்டுள்ளன. பலநூற்றாண்டுகளாக மதத்தால் அது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு உணர்வு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் ஒரு ஆசிரியை அதே உணர்வுகளுடன் அதே சித்திரத்துடன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?


 


தொன்மத்தை மறு ஆக்கம் செய்யும் ஒரு எழுத்தாளனிடம் வாசகன் எதிர்பார்ப்பது தான் என்ன? நவீன இலக்கியம்  என்பது மரபிலக்கியத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல எதிர்போக்கும் கூட. மரபிலக்கியம் என்று நாம் சொல்வது பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட ஒரு பெரும் இலக்கியப் பெருக்கு. நவீன இலக்கியம் ஏதோ ஒரு புள்ளியில் மானுடம் நின்று திரும்பி அதை ஒட்டு மொத்தமாக விமர்சனத்துடன் பார்க்கும்போது ஆரம்பித்தது. அதுவரைக்குமான மரபை மறுபரிசீலனை செய்வது, மறுவரையரை செய்வது, மறு ஆக்கம் செய்வது என்பது நவின இலக்கியத்தின் பண்புகளில் ஒன்று.


 


இலக்கியம் எப்போதும் மறுஆக்கத்தில் ஈடுபட்டுள்ளது. கம்பராமாயணத்திலிருந்து பின்னோக்கிச் சென்று வால்மீகி ராமாயணத்தை பார்க்கும் போது கம்பன் வால்மீகியை மறுக்கவில்லை, மறுபரிசீலனை செய்யவும் இல்லை , விரிவாக்கம் மட்டுமே செய்தான் என்பது தெரிகிறது. ஆனால் பாஞ்சாலி சபதத்தை பார்க்கும்போது வில்லிப்புத்தூராரில் இருந்து பாரதி நேரெதிர் திசைக்குத் திரும்பிச் செல்வதை பார்க்க முடியும். புதுமைப்பித்தனின் தொன்ம மறுஉருவாக்க கதைகளான சாபவிமோசனம் அகலிகை போன்றவை இன்னும் தீவிரமாக மரபை மறுபரிசீலனை செய்கின்றன.


emili

எமிலி ஸோலா


 


நவீன இலக்கியத்திலுள்ள இந்த மீறல் அல்லது துடுக்குத்தனம் அதன் அடிப்படைகளில் ஒன்று. எப்போதுமே மரபார்ந்த பார்வை கொண்டவர்கள் நவீன இலக்கியத்தால் சீண்டப்படுகிறார்கள்.  ‘இவர் யார் இதை சொல்வதற்கு? இவர் எப்படி இதை மறுஆக்கம் செய்யலாம்?’ என்று சினந்தபடியே தான் இருப்பார்கள். புதுமைப்பித்தனைப்பற்றி ராஜாஜி அப்படிக் கேட்டதாக சொல்வார்கள்.


 


மிக எளிய நிலையில் அந்த எதிர்ப்பு வரும், ராஜாஜியைப்போல தேர்ந்த அறிவார்ந்த தளத்திலிருந்தும் அது வரும். அப்படி வருவதே அப்படைப்பு நவீன இலக்கியமென்பதற்கான சான்று என்றே கொள்ளலாம். இந்த மறுப்பும் மறுஆக்கமும் இன்றி புனைவிலக்கியம் தொன்மத்தைக் கையாளும்போது நவீனஇலக்கியத்தின் இயல்பை இழந்து அது ஒரு உபன்யாசமாக சுருங்கிவிடுகிறது.


 


மறுஆக்கம் எப்படி நிகழும்? இரு தளங்களில் அதைப்பார்க்கலாம். ஒன்று மதங்கள் உருவான வரலாறு ,சென்ற ஈராயிரம் வருடங்களாக மக்தலினா பற்றிச் சொல்லப்பட்ட வரலாறு, இன்று நவீன சமூகவியல் –பொருளியல்- அழகியல் சூழலில் மக்தலினாவை நாம் மீண்டும் நோக்கும் விதம் ஆகியவற்றை கருத்தைக் கொண்டு அக்கதாபாத்திரத்தை மறுஆக்கம் செய்யலாம். அது ஆசிரியன் வரலாற்ராய்வாளனாக, ஒட்டுமொத்த நோக்குள்ளவனாக தன்னை நிறுத்திச் செய்யும் பயணம்


 


இன்னும் கூரிய, நேரடியான வழி என்பது மக்தலீனாவாக நாம் மாறுவது. மோனிகா மாறன் வாழ்வது இந்தக் காலகட்டத்தில், இன்றைய உறவுச் சிக்கல்களுக்குள், இன்றைய உணர்வுநிலைகளுக்குள், இன்றைய அறவியலுக்குள். இங்கு நின்றபடி அவர் தன்னை மக்தலீனாவாக வைத்துக் கொண்டு யேசுவைப் பார்க்க ஆரம்பித்திருந்தால் இந்தக் கதையிலிருப்பது போல மக்தலீனாவின் சம்பிரதாயமான  உணர்வுகள் மட்டும் வெளிப்படக்கூடிய கதையாக இருந்திருக்காது. அது மோனிகாவின் உணர்வாகவும் இருந்திருக்கும். அது மாற்றில்லாத ஒரு தனித்தன்மையாக வெளிப்பட்டிருக்கும்


 


மக்தலீனா யேசுவை எப்படிப் பார்த்தாள்? மீட்பராகவா? ஓர் ஆண்மகனாகவா? மீட்பர் ஏன் ஆண்மகனாக இருக்கவேண்டும்? அவருடைய கருணைக்கு அவள் ஏங்குவது ஒரு காதலனின் பார்வைக்காக ஏங்குவது போலத்தானா? அது அவளுக்குக் கிடைத்ததா? பக்திவழியாகவும் கல்வி வழியாகவும் அவன் மாணவர்கள் சென்று தொடமுடியாத இடத்தை காதல்வழியாக அவள் சென்று தொட்டாளா?


 


த்விதீயன் –இரண்டாமன் – என்று சொல்லப்பட்ட யூதாஸ் அவனை நிராகரித்தான் .தாமஸ் சந்தேகப்பட்டான். பிறர் மறுதலித்தனர் . ஆனால் அவள் அவன் சடலத்தை தன் கைகளில் ஏற்றுவாங்கினாள். அந்த முழுமையான அர்ப்பணம் அவள் கொண்ட காதலால் அமைந்ததா? பல வினாக்கள் . அவ்வினாக்களெல்லாம்தான் நவீன இலக்கியத்தை அமைப்பவை.


 


பல எழுத்துக்களை உதாரண்மாகச் சுட்டலாம். பேர்லாகர்க்விஸ்டின் பரபாஸ் [ தமிழில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது]  எமிலி ஜோலாவின் பரபாஸ், நிகாஸ் கசந்ஸகீஸின் The last temptation of Christ போன்றவை முக்கியமான உதாரணங்கள்.


 


இவை அனைத்துமே யேசுவைப்பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறதோ அதை திரும்பச் சொல்லும் படைப்புகள் அல்ல. பைபிளிலிருந்து அத்தொன்மத்தை எடுத்துக்கொண்டு நவீன காலகட்டத்திற்குரிய ஆன்மீகம் ஒன்றைக்கண்டடைவது  அவற்றின் இலக்கு. அது நிகழாததனாலேயே இத்தொன்ம மறுஆக்கம் நவீன இலக்கியத்தின் இன்றியமையாத இலக்கை தவறவிட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


 


ஒரு சமகால எழுத்தாளனாக இந்தக் கதைக்குள் இருக்கும்பல சாத்தியங்களை காண்கிறேன். தன்னை தூயவளல்ல என்று எண்ணிய மக்தலீனா ஏன் யேசுவின் கால்களை தூய்மைப்படுத்தினாள்? பின்னாளில் யேசுவின் சடலத்தை சிலுவையிலிருந்து இறக்கி அச்சடலத்தை தூய்மைப்படுத்தும்போது அவள் இருந்தாள். அதற்கான முன்னோட்டமாக தன்னறியாமல் அவள் அதைச் செய்தாளா என்ன?


 


மக்தலீனாவுக்கும் மேரிக்குமான உறவு என்ன? மேரியைப்பார்த்து ஸ்த்ரீயே உனக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்ட யேசு ஏன் மக்தலினாவிடம் கேட்கவில்லை? மேரி தன்னை உலகியலில் கட்டிவிடக்கூடும் என்று நினைத்தவர். மக்தலீனைப்பற்றி எண்ணவில்லை? அவள் கண்ணில் இருந்த காதல் அவருக்குத் தெரியவில்லையா?


 


இவ்வாறு அந்த தருணத்தின் மீது பல திறப்புகளை உருவாக்கிக் கொள்வதன் வழியாகத்தான் நவீன இலக்கியம் எழுதப்பட முடியுமே ஒழிய வழி வழியாக வந்த ஒரு தருணத்தை உணர்ச்சிகரமான திரும்ப சொல்வது வழியாக அல்ல.இந்தக் கதையில் எங்கும் ஆசிரியரின் தனித்தன்மை கொண்ட பார்வை வெளிப்படாததனால் இதை ஒரு நல்ல கதை என சொல்லத் தயங்குகிறேன்


ip

இந்திரா பார்த்தசாரதி


 


*


 


தருணாதித்தனின் பருவமழை இந்திராபார்த்தசாரதி, ஆதவன் ஆகியோர் டெல்லியை மையமாக்கி எழுதிய              அரசியல் அங்கதக்கதைகளை நினைவூட்டுகிறது. தமிழில் குறிப்பிடத்தகுந்த பல கதைகள் இந்த வகைமைக்குள் வந்துள்ளன. ஆனால் அறுபட்டு விட்ட மரபாக இது நிற்கிறது. தருணாதித்தன் அந்த தொடர்ச்சியில் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.


 


இக்கதையின் வலிமை என்னவென்றால் அங்கதக் கதைகளுக்கு அவசியமான அதிகம் விவரிக்காமல் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்லும் தன்மை அமைந்துள்ளதுதான். ஓர் அங்கதக் கதை யதார்த்தக் கதை அல்லது இயல்புவாதக் கதை போல விரிவான தகவலை அளிக்கும்போது அத்தகவல் அனைத்தும் சேர்ந்து அங்கதத்தை மறைத்துவிடுவதைப்பார்க்கலாம்.  மினிமலிசம் என்று சொல்லப்படுகிற குறைவான தகவல் தேவைப்படுகிற எழுத்தை இந்திரா பார்த்தசாரதியும் ஆதவனும்  தங்கள் அங்கதக்கதைகளில்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.


 


இக்கதை விரிவான சித்திரங்களை அளிக்காமல் குணச்சித்திரங்க்ள் மற்றும் அங்கத நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக் கொண்டு செல்கிறது. ராமச்சந்திராவின் கதாபாத்திரம் தயக்கமும் சம்பிரதாயத்தன்மையும் கொண்ட தென்னிந்திய அதிகாரியின் இயல்புடன் உள்ளது. உண்மையில் பெரும்பாலான தென்னிந்திய பிராமண உயரதிகாரிகள் இந்த குணச்சித்திரத்துக்குள் அடங்குவர். அவர்கள் அளவுக்கு அறிவோ திறமையோ இல்லாமல் இருந்தாலும் கூட இந்தி சரளமாக பேசுவது ,எங்கும் முண்டியடித்து நுழைவது என்னும் குணங்களினால் பஞ்சாபி மற்றும் வங்காளி அதிகாரிகள் டெல்லியில் அதிகார இருக்கைகளை மிக எளிதில் அடைவது ஓர் நடைமுறை உண்மை.


 


இந்தக் கதையின் மையம் அதுவல்ல என்றாலும் அந்த சமூக உண்மை  மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பிரதமர் அழைத்து பேசுகிறார் என்ற ஒரு தருணத்தை பயன்படுத்திக் கொண்டு சஞ்சீவ் மிக எளிதாக ராமச்சந்திராவை ஒரு தள்ளு தள்ளி முன்னால் சென்றுவிடுகிறார். அந்த இடம் எதார்த்தமாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது. பிரதமர் கோரும்போது வழக்கமான பொய்யான தகவல் ஒன்றை அளித்து முந்தி மேலே செல்லாமல் உண்மையைத் தொட்டுச்சொல்லமுயன்று, தோற்று சுருங்கி தன் சிற்றூருக்குப் பின்வாங்கும் ராமச்சந்திரா வேறொரு வகையில் விஸ்வரூபம் எடுப்பதும் மென்மையான அங்கதம் தான்.


 


உண்மையில் இதுவும் தென்னிந்திய பிராமணர்களுக்கு உள்ள ஒரு குணமே. அறிவியலில் இருந்து மிக எளிதாக மதத்திற்குள்ளோ, சோதிடத்திற்குள்ளோ அவர்களால் எளிதாக வர முடிகிறது. விண்வெளி அறிவியலில் நாற்பதாண்டுகள் இருந்துவிட்டு வேத அலைகளைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை நான் அறிவேன். அறிவியலில் அவர்கள் எப்படி கறாரான முறைமையை எப்படி நம்பினார்களோ அதே போன்று ஒரு முறைமையை இந்த நம்பிக்கைசார்ந்த விஷயங்களிலும் கடைப்பிடிப்பார்கள்


 


இக்கதையின் மிகநுணுக்கமான அங்கதமே ராமச்சந்திரா எவ்வளவு எளிதாகச் சோதிடராக ஆகிறார் என்பதுதான். இந்தக் கதையின் பகடிகள் வெளிப்படையாக அல்லாமல் பலவகையிலும் புதைந்துள்ளன. அறிவியலை நம்பிச் செயல்பட்டபோது ஒர் ஊகத்தை முன்வைப்பதற்குத் தயங்கிய ராமச்சந்திரா முழுக்க முழுக்க ஊகங்களால் ஆன சோதிடத்தைக் கையில் எடுக்கிறார். ஒரு நம்பிக்கையையோ ஊக்கத்தையோ கொடுப்பதற்குதய்ங்கியதனாலேயே பதவியை இழந்தவர் அதையே தொழிலாகக் கொண்டு சோதிடராக              வெற்றி பெறுகிறார்.


 


மறுபக்கம் அறிவியலாளனிடம் சோதிடத்தை எதிர்பார்த்த பிரதமர் சோதிடனிடம் ஒரு அறிவியல் பூர்வமான விடைக்காக வந்து நிற்கிறார். நமது இந்திய அரசியல் செய்ல்படும் முறையை ,அதில் அதிகார எந்திரம் கலந்து கொள்ளும் விதத்தை சிறந்த பகடி மூலம் சொல்லும் கதை இது. அங்கதக் கதைகளில் சமீபத்தில் தமிழில் நான் பார்த்த முக்கியமான ஆக்கம் இது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.


0

தி ஜானகிராமன்


 


 


இக்கதையின் எதிர்மறை அம்சங்கள் என்னவென்றால் ராமச்சந்திரா சிற்றூருக்குச் சென்று தன்னை சோதிடனாக மாற்றிக் கொள்ளும் நிகழுவ்களை சிறு குறிப்புகளாக தாவிச் சென்று சொல்லும்விதம்தான். அதில் இத்தகைய கதைகளில் வரும் தேய்வழக்குகளே அமைந்துள்ளன. அவற்றையும் மெல்லிய அங்கதத்துடன் நவீனச்சொல்லாட்சிகளுடன் சொல்லியிருந்தால் இது தமிழின் முக்கியமான கதையாக அமைந்திருக்கும்


 


தருணாதித்தனின் மனிதகுணம் என்னும் கதை இயல்பாக விரியும் ஒரு குணச்சித்திரத்தைக் காட்டுகிறது. தடையற்ற நடையில் வாசகன் இறுதி வரை வாசித்துச் செல்லும் கதையாக இக்கதை அமைந்துள்ளது. கதையின் மையக்கதாபாத்திரமாகிய பெரியவர் , அவர் ஒரு சத்திரமாக நடத்திக் கொண்டிருக்கும் இல்லம், அவருடைய வாழ்க்கை முறை ,அவருடைய பேச்சு முறை அனைத்துமே எளிதாக வாசகனின் கண்முன் வந்துவிடுகின்றன


 


இக்கதை ஒரு சுவாரசியமான வாசிப்புக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் நவீன இலக்கியத்தின் பார்வையில் இக்கதையில் போதாமைகள் சில உள்ளன. நடையும் கூறுமுறையும்  ஐம்பது வருடம் முந்தைய  கதை போன்றிருக்கிறது.. கதைக்குள் ஒருவர் கதை சொல்வதென்பது மிகவும் வழக்கொழிந்த வடிவம். கல்யாணவீட்டிலோ அல்லது வேறு ஏதேனும் அரட்டைக் கச்சேரியிலோ சுவாரசியமான கதை ஒன்றை அவிழ்த்துவிடுவது என்ற பாணியில் ஜானகிராமன் உட்பட பலரும் எழுதிவிட்டார்கள். நவீன கதை மீண்டும் அதை சொல்ல ஆரம்பிக்கும் போது இன்றைய வாசகனுக்கு ஒரு சலிப்பு ஏற்படுகிறது.


 


இரண்டாவதாக கதையின் தலைப்பும் சரி ,முடிவும் சரி, இன்னும் சம்பிரதாயமான ஒரு பார்வையை வெளிப்படுத்துகின்றன. ஒரு அசாதரணமான உறுதியை மேற்கொண்ட ஒருவர் உண்மையில் அதை கடைப்பிடிக்க முடிவதில்லை. ஏனெனில் மனித குணம் அப்படித்தான் என்று ஆசிரியர் சொல்வது போல் கதை அமைந்திருக்கிறது. அது உண்மையும் கூட. ஒரு லௌகீகமான பொதுப்புத்தியிலிருந்து அந்த நோக்கு வருகிறது. அதை இலக்கியத்தில் ஏன் வைக்கவெண்டும்? என்ன தேவை அதற்கு இன்று?


 


ஜானகிராமனின் பல கதைகளின் தொடர்ச்சி இக்கதையில் தெரிகிறது என எனக்குத் தோண்றுகிறது. மனித இயல்பில் உள்ள மீற முடியாத சிறுமையையோ தன்னியல்பான அற்பத்தனத்தையோ கதைகளில் சுட்டிக் காட்டிவிடுவதென்பது ஜானகிராமனின் பார்வையில் ஒன்று.  ஜானகிராமனின் காலத்தில் அந்த வகையான கதைகளுக்கு மதிப்பிருந்தது. ஏனென்றால் உயர் லட்சியங்களை அதிகமாக எழுதிய காலகட்டத்துக்கு பிறகு வந்தவர் அவர். அவற்றை தலைகீழாக ஆக்கி மனிதன் என்னும் அன்றாட வாழ்க்கை வாழும் எளிய பிறவியை கதைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.


 


ஆனால் இன்றைய  வாசகனுக்கு இத்தகைய கதைகளே பழகிவிட்டிருக்கின்றன. கதை முக்கால் பங்கு செல்லும்போதே இரண்டுவகையான ஊகங்களுக்கு அவன் வருவான். ஒன்று அந்தபெரியவர் பொய் சொல்கிறார். அல்லது அந்த பெரியவருக்கு ஏதோ நோய் இருக்கிறது.ஆகவே கதையின் முடிவைப்படிக்கும்போது சரிதான் என்ற எளிமையான ஒப்புக்கொள்ளலை மட்டுமே அவன் இச்சிறுகதைக்கு அளிக்கிறான்.


 


ஒரு நவீனச் சிறுகதை வாசகனை அதிர்வடையச்செய்யவேண்டும், சீண்டவேண்டும், அவனுடைய முன் முடிவுகளை கடக்க வைக்க வேண்டும். அந்தத் தருணம் இந்தக் கதையில் எங்கும் நிகழவில்லை. பலவகையிலும் இத்தகைய கதைகள் வார இதழ்களில் அதிகமாக வெளிவருகின்றன. இலக்கியத்திற்குள் ஒரு கதை நுழையும்போது இருந்தாக வேண்டிய புதுமை என்ற அம்சம் பார்வையில், வெளிப்பாட்டில் இந்தக் கதையில் இல்லை.


 


எழுதும் முறை இதுவரைக்கும் சொல்லப்படாத ஒன்றா என்று நவீன எழுத்தாளன் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய வகையில் ஒரு கதையை  வலிந்து சொல்ல வேண்டியதில்லை. புதியவைகளை சொல்வதற்கென்று கதையை உருவாக்க வேண்டியதும் இல்லை. அத்தகைய உத்திகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடமேதும் இல்லை.  ஆனால் ஒரு கதைக்கரு வரும்போது அதை புதிதாகச் சொல்ல முடியுமா என்று இயல்பாக ஒரு பார்வையை அவன் அடைய வேண்டும்.


 


எழுத்து இயல்பாக வெளிப்படும்போது தன்னிச்சையாகவே அது பழகிய வடிவங்களுக்குத் தான் செல்லும் .முன்னதாகவே அதற்கெதிரான ஒரு மனத்தடையை வளர்த்துக் கொண்டால் பழகிய வடிவங்கள் வராது. பழகிய வடிவங்களை தவிர்த்துவிடும்போது புதிய ஒரு வாய்ப்பை கண்டடைய வேண்டிய  கட்டாயம் ஆசிரியனுக்கு ஏற்படுகிறது. அது கண்டிப்பாக புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் செய்யும்.


aathavan10

ஆதவன்


 


இந்தக் கதையில் ஒரு  சிறுகதை ஆசிரியனாக எனக்கு  மேலதிக சாத்தியங்கள் பல தோன்றுகின்றன.இது ஓரு  விமர்சகனின் அத்துமீறல் என்றாலும் இது ஓர் இலக்கிய உரையாடல் என்பதனால் இதைச் சொல்கிறேன். ஒருவர் ஒரு சத்திரம் நடத்துகிறார் ,அங்கு மறுமுறை அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாத பலர் வந்து செல்கிறார்கள், அவர் அங்கே கதைகள் வழியாக தன்னைப்புனைந்துகொண்டே இருக்கிறார் என்பது மிகமிக கற்பனையைத் தூண்டும் ஒரு தருணம்.


 


கைலாசத்துக்குச் சென்றது, காசிக்குச் சென்றதென்று வித விதமான கதைகள் வழியாக தன்னுடைய ஆளுமையை ஒவ்வோருநாளும் கலைடாஸ்கோப்பை திருப்புவது போல விதவிதமாக புனைந்து காட்டுகிறார். இங்கு அத்தனைபேரும் அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மனிதன் என்பவன் அப்படி வெளிப்படுபவன் மட்டும்தானா? அல்லது வெளிப்படுத்தப்பட்ட இந்த முகங்கள் அனைத்திற்கும் சாரமாக அவருடைய முகம் ஒன்று எங்கோ இருக்கிறதா? இவ்வினாக்களை வாசகன் எழுப்பும் வாய்ப்பு இக்கதைக்கு இருந்திருந்தால் இது மேலும் மேலும் விரியும் புனைவாக இருந்திருக்கும்


 


மனிதர்கள் தங்களை முன் வைக்கிறார்களே ஒழிய தாங்களாக ஒரு போதும் இருப்பதில்லை என்பது ஒரு யதார்த்தம். குரூரமானவனாக, அன்பானவனாக ,கணக்குப்பார்ப்பவனாக, தாராளமானவனாக, ஒருமனிதனில் பல்வேறு ஆளுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் சித்திரத்தைக் காட்டமுடியும் இக்கதையில். விதவிதமான நிலக்காட்சிகளில் விதவிதமாக வெளிப்படும் ஒரு மனிதன் ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தன்னை புனைந்து கொள்வதில் உள்ள மர்மத்தை இக்கதை என்னுள் எழுப்பியது.


 


ஆனால்  மிக இயல்பாகச் சென்று அவர் ஒரு பொய்யைத்தான் சொல்லியிருக்கிறார், அவரால் அந்த விரதத்தைக் காத்துக் கொள்ள முடியவில்லை என்று முடியும்போது இக்கதை அது எழவேண்டிய உயரத்திலிருந்து மிகவும் கீழிறங்கிவிட்டதாக தோன்றுகிறது.


 


தருணாதித்தனின் இரு கதைகளுமே பயிற்சிகொண்ட நடையுடன் இயல்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. சிறுகதை எழுதும்போது ஒரு இலகுத் தன்மை உள்ளத்தில் இருப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். செயற்கையான இறுக்கங்களோ மிகையான உணர்ச்சிகளோ வராமல் அது தடுத்துவிடும். இயல்பாகக் கதை சொல்வதென்பது  ஜானகிராமன் ,அழகிரிசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி , அ.முத்துலிங்கம் போன்ற பலரிடம் நாம் காணும் ஒரு பண்பு


 


தருணாதித்தனின் தனித்திறனாக அது அமைந்திருப்பது மிக நல்ல விஷயம். அந்த இலகுத் தன்மையின் எதிர்மறை அம்சம் என்னவென்றால் மிகச் சாதாரணமான கதைக்கருக்களை எடுத்து கதையாக ஆக்கிவிடும் அபாயம். அதை தனக்குத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எதிர்காலத்தில் மேலும் வீச்சுள்ள புதிய கதைகளை உருவாக்கும் எழுத்தாளராக அவர் ஆக முடியும். வாழ்த்துக்கள்



==========================================================================


சிறுகதைகள் என் பார்வை -1


சிறுகதைகள் என் பார்வை 2


சிறுகதைகள் என் பார்வை 3


சிறுகதைகள் என் பார்வை 4


==============================================================================


சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி


சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்


சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்


சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி


சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்


சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்


==============================


சிறுகதை விமர்சனம் 1


சிறுக்தை விமர்சனம் 2


சிறுகதை விமர்சனம் 3


சிறுகதை விமர்சனம் 4


சிறுகதை விமர்சனம் 5


சிறுகதை விமர்சனம் 6


சிறுகதை விமர்சனம் 7


சிறுகதை விமர்சனம் 8


சிறுகதை விமர்சனம் 9


சிறுகதை விமர்சனம் 10


சிறுகதை விமர்சனம் 11



 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2016 10:34

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

SR


அன்புள்ள ஜெ.,


கி.ரா. அவர்களின் “கன்னிமை” கதையை முதல்முறை படித்தபோது அது என்னை அவ்வளவாக கவரவில்லை. கதையின் முதல் பகுதியில் கன்னிகாக்கும் நாச்சியாரின் அருளொளி அவள் அண்ணனின் கண்கள் மூலம் நம்மை வந்தடைகிறது. அது அழகின், அறத்தின் உச்சமாக அவனுக்கும் நமக்கும் வெளிப்படுகிறது. நாச்சியார் அவள் அண்ணன் கண்ணுக்கு ஒரு குறுந்தெய்வமாக தெரிகிறாள். ஆனால் அடுத்த பகுதியில் நாச்சியாரின் கணவன் ரங்கய்யா, அருள்வடிவ குமரியாக வீடு புகுந்த தன் மனைவி, சில வருடங்களில் பிள்ளைபேறுகள் கண்டு, இல்லறத்தில் மூழ்கி வேறொருவளாக மாறிவிட்டாளே என்று வருத்தப்படுகிறான். அவன் ஆராதித்த கன்னி எங்கே என்று அவன் ஏங்குகிறான். அவள் ஏன் மறைந்து போனாள் என்று அவனுக்குப் புரியவில்லை.


அண்ணன், கணவன் என்று அந்த கதை முழுக்க முழுக்க ஆண்பார்வையில் கட்டமைக்கப்பட்டதாக அப்போது எனக்கு தோன்றியது. எனக்கு மாமா முறையில் ஒரு உறவுக்காரர் இப்படி சொல்லிக் கேட்டுள்ளேன்: பெண்களுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அப்போது தான் அந்த வயதிற்க்கே உரிய எழிலும் இனிமையும் பூரிப்புமாக அவள் மணமேடையில் திகழ்வாள், அதை பார்ப்பதே ஒரு அனுபவம், என்று. அதெல்லாம் சரி, நீங்கள் பார்த்து மகிழத்தான் மற்றவர்கள் மணம் செய்துகொள்ளவேண்டுமா என்று கேட்க தோன்றியது.


அதே போல், இந்த கதையில், ஆணுக்கு பெண்ணின் கன்னிமை அளிக்கும் உவகையும் இன்பமும் சுட்டிக்காட்டப்படுகிறதே தவிர, நாச்சியாரின் உளவியலையோ, அவளது கன்னிப்பருவ உணர்வுநிலைகளையோ, அவள் கன்னிமை அழிந்து, தலைசொறிந்து கணக்குப்பார்க்கும் பெண்ணாகும் பேருருமாற்றத்தையோ, அப்படிப்பட்ட உருமாற்றைத்தை நம் மனிதர்கள் மீது திணித்து, அதை தவிர வேறெதுவும் அவர்களிடம் எதிர்பார்க்காத (ரங்கய்யாவும் பங்கு வகிக்கும்) நமது குரூரமான சமூக கட்டமைப்பையோ சுட்டவில்லை என தோன்றியது.


கிட்டத்தட்ட ஒரு அழகான காட்சிப்பொருளாக எழுதப்பட்ட நாச்சியாரின் கதாபாத்திரத்திடம் நித்தியகன்னிமையை எதிர்பார்க்கும் ரங்கைய்யாவை பார்க்க எரிச்சலாக இருந்தது. கதையில் அவளது கன்னிமையும் அதன் அருளும் கூட fetish செய்யப்பட்டதாக தோன்றியது.


அனால் அடுத்த முறை வாசிக்கையில், ஏனோ ரங்கய்யா மீது பரிதாபமே மீறியது. பாவம், அவனுக்கு என்ன தெரியும்? வெள்ளந்தி விவசாயி அவன். ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதென்று மட்டும் அவனுக்கு தெரிகிறது, ஆனால் அதற்கு மேல் அவனுக்கு புரியவில்லை. ஒரு படி மேலே சென்று யோசித்தால், அந்த மாற்றத்தை நாச்சியாராலும் விளக்க முடியுமா என்று நமக்கு தெரியாது. அதை விளக்க அவளுக்கு வார்த்தைகள் இல்லை, இருந்தாலும் அவை அவளுக்கு கற்றுத் தரப்படவில்லை. இது கதையில் நுணுக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஸ்ரீதேவி விலகி மூதேவி வசிக்கும் வீடாக மாறும் அந்தச் சூழலை உருவகித்த காரணிகளை வாசகரின் அனுபவம் சார்ந்த ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் ஆசிரியர். நான்கே கோடுகளில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வரும் மினிமலிஸ்ட் சித்திரம் போல இந்த கதையில் விடுபட்டவையே கதையை பூர்த்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. நம் வாழ்விலும் கூட இதே இடங்கள் தான் விடுபட்டு நூல்நூலாக பிரிந்து தொங்குவதாக தோன்றுகிறது.


நாச்சியார் இழந்தாளே, அது என்ன?


நாச்சியாரின் அண்ணனும், ரங்கய்யாவும் புரியாமல் விழித்து மகிழ்ந்து போற்றிய கன்னிமை ஒரு வெளித்தோற்றம் மட்டுமே. நான் வாழும் பகுதியில் இலையுதிர் காலத்தில் நிறம் மாறி பவளமும் பொன்னுமாக ஒளிரும் சருகுகளை போல, அது ஒரு பிரபஞ்ச ரகசியத்தின் வெளிகுறி மட்டுமே. பனிக்காலத்தில் ஏதோ பெரும் நோன்பு நோற்க தயாராகும் மரங்கள் தங்கள் அணிகளை கழற்றி தன்னில் அடங்கி அந்த ஆனந்தத்தில் திளைப்பவையாக எனக்கு தோன்றும். அதே போலத்தான் கன்னி வயது பெண்ணும். அவள் ஆனந்தத்தின் ஊற்றை அவளே அறிவாள். அந்த ஊற்றின் கரையில் அவள் தன்னில் திளைத்து தன்னளவில் முழுமை அடைகிறாள். அதன் சிறு சிதறலே கன்னிமையின் வெளித்தோற்றம். அது யார் பார்வைக்கும் நடத்தப்படும் நாடகம் அல்ல. பார்வையாளர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் அரங்கேறி இரவெல்லாம் ஆடும் நாடகம் அது. இலை உதிர்வது போல இயல்பான கால நியதி.


என் சிறுவயதில் என் அம்மா எனக்கு சொன்ன கதை ஒன்று. அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஒரு கன்னிகாஸ்திரீ சொன்ன கதை. கதை பெயர் “நடனமாடும் பன்னிரண்டு இளவரசிகள்”. ஒரு நாட்டின் அரசன், அவனுக்கு பன்னிரண்டு பெண் குழந்தைகள். எல்லோரும் பேரெழில் கன்னிகள். கன்னிகள் வலம்வந்த நாட்டில் ஆறுகள் பொங்கின, காடுகள் பூத்தன, பயிர்கள் கொழுத்தன. மக்கள் செல்வமும் செழிப்புமாக வாழ்ந்தனர். அரசனையும் குமாரிகளையும் போற்றினர். ஆனால் அரசனுக்கு ஒரு வினோதமான பிரச்சனை. ஒவ்வொரு நாள் காலையிலும் தன் மகள்கள் அனைவரும் அணிந்த செருப்புகள் தேய்ந்து நைந்து போயிருக்கும். கால்களை ஊன்றி ஊன்றி நடப்பார்கள். அவர் உடனே செருப்புத்தைப்பவரை அழைத்து புது செருப்புகள் செய்து கொடுப்பார். ஆனால் அடுத்த நாள் காலையிலும் அதே கதை. அந்தப்பெண்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாதென்று சாதித்தார்கள். இந்த நிலை பல மாதங்களாக தொடர்ந்தது. அந்த நாட்டின் செருப்புத்தொழிலாளிகள் செழித்தனர்; அரசன் கவலையில் மெலிந்தான்.


இரவு வரை சீர்நிலையில் இருந்த அவர்களின் செருப்புக்கள் எப்படி காலையில் தேய்ந்து கிழிந்து நூல்நூலாக தொங்குகின்றன என்ற மர்மத்தை கண்டறிய பல மாந்திரீகர்களை வரவழைத்தான். ஒன்றும் தட்டுப்படவில்லை. இரவெல்லாம் விழித்து இளவரசிகளின் செருப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஒற்றர்கள் எப்படியோ தூங்கி, காலையில் அரசனின் சினத்துக்கு ஆளாகி கழுவேற்றப்பட்டனர். செருப்புகள் கிழிந்தபடியே இருந்தன. அப்போது ஒரு நாள் பழைய அரச பரம்பரையை சேர்ந்த பரதேசி ஏழை இளைஞன் ஒருவன், இந்த முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று தைரியமாக முன்வந்தான். அன்று இரவு உணவு அருந்த மறுத்த அவனை அந்த கன்னிகளில் மிகவும் இளையவள் அணுகி, எங்கள் நாட்டின் விருந்ததையும் உபசாரத்தையும் நிராகரித்துவிட்டீர்கள், இந்த பாலையாவது பருகங்கள் என்று மந்திரப்புன்னகையுடன் ஒரு கோப்பையை நீட்டினாள். அதற்கென்ன, என்று முறுவி இளவரசன் அதை பருகினான். ஆனால் அவன் எச்சரிக்கை மிக்கவன்: அதை விழுங்காமல், அவள் சென்றவுடன் துப்பிவிட்டான்.


அன்றிரவு தூங்குவது போல் நடித்தான். “அவன் தூங்கிவிட்டான்,” என்று இளையவள் அவன் அறையில் எட்டிப்பார்த்து தன் சகோதரிகளிடம் சொன்னதை அவன் கேட்டான். அவள் சென்றவுடன், அவன் குடும்பத் சொத்தாக அவனிடம் இருந்த, மற்றவர்களின் கண்களிலிருந்து தன்னை மறைக்கும்படி நெய்யப்பட்ட மாய அங்கியை அணிந்து இளவரசிகளை பின்தொடர்ந்தான். அவர்கள் அரண்மனையின் பழுதடைந்த அறையொன்றினுள் சென்று, தரையில் ஒரு கல்லை மேலிழுத்து, கீழே செல்லும் படிகளில் இறங்கினர். அந்த பாதையில் அவனும் பின்தொடர்ந்தான். வெகுதூரம் சென்று முழுநிலவின் வெள்ளியாலேயே வடிக்கப்பட்டிருந்தது போல் இருந்த ஓர் ஏரியின் கரைக்கு வந்தனர்.


அங்கு நின்ற படகுகளில் ஏறிக்கொண்டு துடுப்புகளால் வெள்ளிநீர்விலக்கி மறுகரையில் ஒரு மாயக்காட்டை வந்தடைந்தனர். அங்கு அவர்களைப் போலவே வந்திருந்த நூறு கன்னியரோடு இரவெல்லாம் நிலவொளியில் கூத்தாடினர். அந்த இளைஞன் அவன் அங்கியின் மறைவிலிருந்து அந்த கட்சியை கண்டு நின்றான். பொழுது விடிந்ததும் அரசனிடம் சென்று அவன் கண்டதை கூற, அரசன் அவன் அரசில் பாதியும் கொடுத்து, தன பெண்களை அந்த இளைஞனுக்கே திருமணமும் செய்து வைத்தான். பழைய அரசனும் புதிய அரசனும் சேர்ந்து அந்த ரகசிய பாதையை இடித்து மூடி, ஏரியை வடித்து, காடை அழித்து, இரவு கூத்துக்களை ஒழித்தனர். அதன் பிறகு இளவரசிகளின் செருப்புகள் கொஞ்சமும் தேயாமல் என்றும் புதியது போலவே இருந்தன.


இந்தக் கதையின் பெரும் வன்முறை சிறுவயதில் புரியவில்லை. என் மனதில் இன்றும் குழந்தையாக கண்ட அந்த வெள்ளிநிலவும், மரங்களின் கையசைவும், அந்த அக்காக்களின் களியும் கூத்தும், அவர்களின் தனிமையும் அப்படியே நிற்கின்றன. நான் கேட்ட கதைகளிலே வரும் இடங்களில் மிகவும் அழகான இடம் அது என்று அப்போது எனக்குத் தோன்றும். என்றாவது ஒரு நாள் நானும் அங்கு ஆட வேண்டும் என்று தோன்றும். அந்த கனவாட்டமே அந்த கன்னிகளின் அழகின் ஊற்று என்றும் தோன்றும்.


ஆனால் வளர வளர எனக்கும் புரிந்தது, அந்த ஆட்டமெல்லாம் சிலகாலத்துக்கு தான். ஒரு அழகான இளமகன் குதிரை ஏறி வந்து அவர்களை தூக்கிச்செல்வான். அவர்களும் மகிழ்ச்சியாக, அவனுக்காகவே காத்திருந்ததை போல அவனுடன் செல்வார்கள். அவன் அவர்களின் கனவுலகத்தை குரூரமாக அழிப்பான் அவனுக்கு அந்த உலகத்தில் இடமில்லை என்று அவன் அறிகிறான். அவர்களும் அதை பெரிதும் கண்டுகொள்ளாதவர்களை போல இருப்பார்கள். சமூகமும் கதைகளும் அதுவே இயல்பு, அதுவே உத்தமம் என்று நமக்கு போதிக்கின்றது. எவ்வளவு பெரிய வன்முறை, எவ்வளவு இயல்பாக கடந்து சென்று விடுகிறோம்!


நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆட்டங்களை மறந்து, தங்கள் ஊற்றுகள் வற்றி பாசி படிய விட்டு விடுகிறார்கள். அவளுக்கு வீடும் கணவனும் பேறும் இருந்தாலும் அவள் வற்றி வாடிவிடுகிறாள். அவள் வாழ்க்கை முழுவதும் இழந்த ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். நியாயமாக பார்த்தால் அவள் வாழ்க்கை முழுவதும் அந்த ஊற்றைப் பேண வேண்டும். அது தான் அவளுக்கே அவள் அளிக்கக்கூடிய அதிகபட்ச அன்பும் மரியாதையும். அந்த மனநிலையில் வாழும் பெண் ஆணோடு வாழ்ந்தாலும் ஆணை சார்ந்து வாழ மாட்டாள். எந்தவயதிலும் நடுநிசியில் நிலவொளியில் நடனமாடுவாள். தன்னில் நிறைவாள். அவள் நித்தியகன்னி. நாச்சியார் இழந்ததும் அதைத்தான்.





 666


கன்னிமையின் வெளித்தோற்றத்தை சிலாகித்து கோயிலெழுப்பி எழுதும் பெரும்பான்மையான கதாசிரியர்கள் அந்த ‘ஊற்றை’ நெருங்குவதே இல்லை. அதை நெருங்கும்போது அவள் பெண், கன்னி, மனிதி என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டிவிடுகிறாள் என்று கூட தோன்றுகிறது. ஒரு பெண் தன் ஊற்றை, அதாவது, தன் தேடலை, தன் படைப்பூக்கத்தை, தன் சுயத்தை, தன் முக்தியை, கண்டடையும் பயணத்தின் சித்திரம் நவீன இலக்கியத்தில் வேறெங்கும் அதிகம் பேசப்பட்டதாக எனது வாசிப்பனுபவத்தில் தெரியவில்லை. “கொற்றவை” அதைப் பேசுகிறது. பேசப்படாமல் பாசி படிந்து கிடக்கும் உணர்ச்சிகளுக்கு சொல்லமைத்து குரல் கொடுக்கிறது. என் பார்வையில் “கொற்றவை”யின் முதல் முக்கியத்துவம் இதுவே.


பில்லிஸ் வீட்லீ (Phyllis Wheatley) என்ற கறுப்பின கவிஞரை சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். 1700களில் ஆப்ரிக்காவிலிருந்து கப்பலில் அடிமையாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட பெண். அவளது முதலாளிகள் அவளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து அவள் இலக்கிய ஆர்வத்தை தூண்டுகிறார்கள். அவள் பல கவிதைகள் எழுதி பிரசுரிக்கிறாள்; புகழும் பெறுகிறாள். ஆனால் வாழ்நாளில் பெரும்பங்கு அடிமையாகவே வாழ்கிறாள். வறுமையில் பிள்ளைகள் இறக்க, தானும் இறக்கிறாள். அவளுக்கு சொந்தமாக பெயர் கூட கிடையாது – தான் அமெரிக்காவிற்கு வந்த கப்பலின் பெயரையே அவளுக்கு சூட்டுகிறார்கள்.


இப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், கறுப்பினப் பெண்ணாக, அடிமையாக, அரை மனிதியாக வாழ்ந்த பில்லிஸ் வீட்லீயின் கவிதைகளெல்லாம் பறக்கின்றன. ஒளியால் நிரம்புகின்றன. சுதந்திரமாக பூவலம் வருகின்றன. மனிதனை நேசிக்கின்றன. அவ்வளவு வியப்பு – அந்த ஒளியும் இலகுவும் இவளுக்கு எப்படி? ஆனால் அவள் எழுதுகிறாள். விர்ஜினியா வூல்ப் சொன்னது போல படைக்க தனியறை வேண்டும் தான், ஆனால் தனியறை உள்ளவர்களெல்லாம் படைப்பூக்கம் கொள்கிறார்களா? வருமானம், உரிமை, நேரம் எல்லாத்தையும் மீறி படைப்பூக்கத்திற்கு ஒரு சுயம் முக்கியம், அதை பேணி பாதுகாத்து ஆராதிப்பது அவசியம். மேலும் சிந்தித்தால் படைப்பு கூட தேவையில்லை, அது ஒரு விளைவு தான். அந்த ஊக்கமே, அந்த ஊற்றே போதும்.


நிலவில் ஆடும் இளவரசிகளின் கதையை “கொற்றவை”யில் நீலி சொல்லியிருக்கக்கூடும். நீலியின் கதைகள் எல்லாமே அந்த தனித்தன்மையை, சுய கண்டடைதலையே முன்னிறுத்துகின்றன. அது பல்வேறு வண்ணங்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு வண்ணத்திலும் ஆயிரம் வாய்வழிக்கதைகள் நாம் முன்னால் எங்கோ கேட்ட உணர்வு வாசிக்கையில் மேலோங்குகிறது.


நீலியை நாம் முதன் முதலில் கண்ணகியின் பிம்பத்திலேயே காண்கிறோம். அவளது மங்கள முகமும் பேய் முகமும் கண்ணகியின் மறுமுகங்களே என்று நாம் துணுக்குற புரிந்துகொள்கிறோம். அதுவரை கண்ணகி ஒரு நாடகத்தில் வேடம்கட்டியவளைப்போல, நாடகாசிரியர் சொல்லிக்கொடுத்த வசனத்தை பேசுகிறாள். கோவலன் நீங்கி அவள் ஆற்றியிருக்கும்போதும், அவன் திரும்பி வந்து மன்னிப்புக் கோரும்போதும், காலங்கள் தோறும் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் பிரபஞ்ச நாடகம் ஒன்றில் தன் பங்கை ஆற்றுபவளாக அவள் உணர்கிறாள். நீலியை கண்டடைகையில் அவள் ஊற்றை முதல் முறை காணுகிறாள். அந்த வெற்றுச் சுழற்சியை விட்டு முதல் முறை வெளிவருகிறாள். பயம் கடந்து அவள் தன்னை தானாக தன்னளவில் ஏற்றுக்கொள்கிறாள். நாடு காண்கிறாள், தன்னையும் காண்கிறாள். அவள் கேட்டுக் கடக்கும் கதைகளின் வழியே அவள் அவளை கண்டடைகிறாள்.


தேவந்தி அவளுக்குச் சொன்ன கதைகள், தன் ஆண்மகனை பிரிந்து, ஆற்றி, துயர்ப்படும் பெண்களின் கதைகள். ஆதிமந்தியும் நக்கண்ணையும் மாற்பித்தியும் இளவெயினியும் துயரமும் அலைக்கழிப்புமே வடிவானவர்கள். அதன் பொருட்டே இறைவியாக்கப் படுகின்றனர். அவர்களின் சந்நிதிகளில் கண்ணகி ஆத்மார்த்தமாக தொழுகிறாள், ஆனால் நீலியின் கதைகள் மூலம் அவர்களை கடக்கிறாள்.


நீலியின் கதையில் வரும் பெண்கள் பெரும்பாலும் தனித்தவர்கள், அவர்களின் தன்னிறைவே அவர்களை பிரித்துக்காட்டுகின்றது. சிலர் அநீதி இழைக்கப்பட்டவர்கள் – வெண்ணியூம் மருதியும் குமரியன்னையும் வள்ளியையும் போல, ஆனால் அவர்களின் கதைகள் சென்று முடியும் இடம் அவர்கள் வகுத்துக்கொண்டது. ஆதிமந்தி, மாற்பித்தி போன்ற பெண்களின் துக்கம் ஒரு வகை என்றால் மாஞ்சாடி விதைகளைக்கொண்டு சரம்சரமாக பவளமாலைகள் அணிந்த முத்தாரம்மன்களின் பெருந்துக்கம் வேறு வகை.


நப்பின்னையின் வேய்குழலிசையால் வேய்ந்த துக்கம் வேறு வகை. அனைத்து துக்கங்களை களைந்து நிமிர்வோடு நின்று, துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லையே என்று ஒரே சொல்லில் அனைத்தையும் கடந்துசெல்லும் மகதி இவர்களுக்கெல்லாம் உச்சம்.


கண்ணகிக்கு அவளுக்கு வகுக்கப்பட்ட நெறிகளை கேள்விகேட்க தூண்டுகிறாள் நீலி. நீரரமகளிர் நிலவு பூத்த இரவுகளில் கடலில் ஆடி முயங்குவதையும், அவர்கள் ரகசிய முத்துக்களை அவ்வூர் பெண்களுக்கு கண்டெடுத்துக்கொடுத்ததையும், நாகர்களின் தலைகீழ் வாழ்க்கைமுறைகளும் கண்ணகியை எது கற்பு, எது பரத்தைமை என்று கேள்வி கேட்க வைக்கிறது. இக்கேள்விகளை அவள் நடந்து சென்ற ஒட்டுமொத்த கதைப்பரப்பில் பொருத்தியே கண்ணகி தன் உண்மையை கண்டடைகிறாள்.


புகார் விட்டு இறங்கின கண்ணகியல்ல மதுரை வந்து சேர்ந்தவள். இதை கோவலனும் உணர்கிறான், நம்பமறுக்கிறான். அவளுக்கு அறவுணர்ச்சி என்று ஒன்று முன்னமே இருந்திருந்தாலும், அவள் பயணத்தில் அது தீட்டப்பட்டு, அச்சம், மடம் எல்லாம் விலகி, அறம் வீழுமிடத்தில் சிறிதும் சிந்திக்காமல் குரல்கொடுக்கிறாள். அதுவரை மனை அடங்கிய சதியாக வாழ்ந்த அவள் நீதிகோரியது கோவலனுக்காக மட்டும் அல்ல, அந்நாட்டு மக்களுக்காகவும். ஊருக்கு தீயிட்டு முலையறுத்து மேற்குமலை நோக்கி நடக்கிறாள். அதன் பிறகு அனைத்திற்கும் உச்சமாக விரதமிருந்து, நோன்பு நோற்று, தன்னையே வெல்கிறாள். அங்கு முழுமை அடைகிறாள்.


தனிப்பட்ட உறவுகள் சார்ந்து துக்கமடைந்த பெண்களையும், சமூகம் சார்ந்து துக்கம் கொண்ட பெண்களையும் கண்ணகி, மகதியை போல, கடந்துவிடுகிறாள். அவள் தன்னுள் ஆழ்ந்து, துக்கம், காழ்ப்பு, வெறுப்பு, பழிவாங்குதல் என்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்திலிருந்தும் விடுதலை ஆகிறாள். அந்நிலையிலேயே வாழ்ந்து நிறைவு காண்கிறாள். இதுவே “கொற்றவை” வைக்கும் பெண்மையின் சித்தரிப்பின் சாராம்சமாக எனக்குப் புரிந்தது.


இந்தச்சித்திரத்திற்கு கன்னியின் இனிமையும் தனிமையும் முழுமையும் உவமை. கலைமான் மீதமர்ந்து வரும் ஆதி கன்னியிடம் இருக்கும் கம்பீரம் கடல் சூழ தென்கோடியில் மென்னகையுடன் நிற்கும் குமரிக்கும் உள்ளது; கதை நம்மை அந்த புள்ளி நோக்கியே இழுக்கிறது. நம் மரபில் அகல்யா, தாரா, மண்டோதரி, குந்தி, திரௌபதி ஆகியோர் கன்னிகளென்றே அழைக்கபடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பொது அந்த கம்பீரம், அந்த தனிமை, அந்தக் கனிவு. நடைமுறை கற்பு காக்காதவர்கள் என்றாலும், அவர்களை நாம் கன்னிகள் என்கிறோம் எவ்வளவு அழகான உவமை! கண்ணகி இவர்களின் மரபில் வந்தவள், இந்த கன்னிமையை கண்டடைகிறாள். “கொற்றவை”, கன்னிமையின், அதை கண்டடைதலின் சித்திரம்.


இதற்கு நேர்மாறானவள் மாதவி – பரத்தை நெறியில் பிறந்திருந்தாலும் அவள் சாவித்திரியும் தமயந்தியையும் போல சதி. கோவலனை சார்ந்து வாழ்ந்தவள். அவன் இறந்தாலும், அவன் தகப்பனென்றும் தான் தாய் என்றும் வாழ்ந்தவள். ஆனால் அவர்களுக்குப் பிறந்த மணிமேகலை, சுவரோவியத்தில் தன் முகம் கண்டு வியந்த மணிமேகலை, அதை கன்னியின் முகமென்று கண்டுகொள்கிறாள். அவளுள் கன்னிமை விழித்திருப்பதாகவே தோன்றுகிறது.


“கொற்றவை” வாசிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த பகுதிகள் இரண்டுமே பயணங்கள்; முதலில், கண்ணகியின் பயணம், இரண்டாவது, இளங்கோ அடிகளின் தலைகீழ் பயணம். வரலாற்றை அவர் கண் முன்னால் கதைகள் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்; அக்கதைகள் மூலமாக அவர் தேடல் அவர்க்கு முழுமையாகிறது. அதன் உச்சம் கன்னியாகுமரியில், கடல் நடுவில் நிற்கும் கன்னிப்பாறையில். பலநூறாண்டுகள் பிறகு வந்த ஓர் இளைஞனை போல, ஒரு எழுச்சியில் கடலில் குதித்தது நீந்தி பாறையை அடைகிறார், மூன்று நாட்கள் ஊழ்கத்தில் மூழ்கி விழிக்கையில் ஆயிரம் சூரியன்களை காண்கிறார். அந்த இடத்தை வாசிக்கையில் – இப்போது எழுதுகையில் – என்னை உணர்வுப்பூர்வமாக பாதிக்கிறது. மனிதனுக்குள் மட்டும் எவ்வளவு உன்னதம் – அதை நமக்கு அருளிய கருணை எவ்வளவு மகத்தானது!


எல்லா விலங்கினங்களிலும், மற்ற விலங்குகளை அடக்கும் வல்லமை கொண்டு வெல்லும் விலங்கே தாட்டான் (ஆல்பா) ஆகிறது. அதை பயத்தால், குரூரத்தால், வன்மத்தால் சாதிக்கிறது. மனித இனத்தில் மட்டும், தன்னைதானே அடக்கி, தன் பயத்தை, வன்மத்தை களைந்து, தன்னையே வெல்லும் வல்லமை கொண்டவனே மனித சாத்தியங்களில் உச்சத்தை அடைகிறான். மனித இனத்தில், மற்றவனை வென்றவன் அரசனாகிறான். தன்னை வென்றவன்(ள்) தெய்வமாகிறான்(ள்).


 


சுசித்ரா ராமச்சந்திரன்


நமது பிரச்சினை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல


கொற்றவையின் தொன்மங்கள் சுசித்ரா ராமச்சந்திரன்


தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்


வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2016 10:32

நந்தன் ஸ்ரீதரனின் உடும்பு

q


இனிய ஜெயம்,


இந்த பதினைந்தாம் தேதி ஜன்னல் இதழில் கண்ணக்கரை தம்புராட்டிகள் கதை வாசித்தேன். இந்த தொடரில் வந்த கதைகளில் மிகுந்த அல்லலை அளித்த கதை. அடுத்ததடுத்து அவர்களை வந்து சாய்க்கும் துயரம். எந்த காரண காரியத்துக்குள்ளும் அடங்காத துயரப் பெருக்கு. ஊழ் என்று அதனை வகுப்பது எத்தனை பலவீனமான யத்தனம். அதனை வகுக்க இயலா மானுடம் எத்தனை பரிதாபமானது.


சருமத்தில் வெயில் படாமல் வாழும் சகோதரிகள் முதலில் பார்க்கும் வெளிக் காட்சியே கொடும் காடு. அதற்குள் ஊடுருவி அவர்கள் காண்பது, தங்கள் சகோதர சடலங்களை. செத்துக் அழுகிக் கிடக்கும் வளர்ப்பு ஜீவன்கள், மட்கிப் புதையும் இல்லம், துர்க்கனவுக்கு இணையான படிமங்கள்.


”கெட்டது எதுவும் அண்டாம இருக்கட்டும்” பதிட்டை செய்யப்பட்ட சகோதரிகள் வசம் வேண்டுதல். பிறரை அண்டும் அளவு கூட எஞ்சாமல், அத்தனை துயரங்களையும் சுமந்தவர்கள் வசம் வைக்கப் பட வேண்டிய சரியான வேண்டுதல்தான்.


அதே இதழில், நந்தன் ஸ்ரீதர் எழுதிய, என் அறையில் ஒரு உடும்பு இருக்கிறது கதை வாசித்தேன். சோறு மட்டும் போட்டு, போடாத சோற்றுக்கும், தராத சம்பளத்துக்கும் சேர்த்து வேலை வாங்கும் சீரியல் தயாரிப்பாளர்.


முன்பு அவரது அறையில் தங்கி எழுத்து வேலை பார்த்தவன். உருவெளித் தோற்ற மன நோய் முற்றி இறக்கிறான். [மன நோய் முற்றியவன் என்பது கூட சொரணையில் விழாமல் வேலை வாங்குபவர் அந்த சீரியல் தயாரிப்பாளர்] அந்த அறையும் வேலையும் கதை சொல்லிக்கு கிடைக்கிறது.


பால்யம் துவங்கி, இந்த நாள் வரை பசியை மட்டுமே அறிந்தவன். குறைந்த பக்ஷம் சோறு உத்திரவாதம் என்ற நிலையில் இந்த வேலைக்கு வருகிறான்.


முதலாளி முதல் மாரடைப்பு பார்த்தவர். எந்த ஊர்வனவும் அவருக்கு ஒவ்வாது. இவன் வேலைக்கு நுழையும் அன்று முதலாளி அறையில் இருந்து ஒரு பல்லி வேட்டையாடப் பட்டு பெருக்கி வெளியே தள்ளப் படுகிறது. ”ஐயையோ படபடன்னு வந்துருச்சி” என்றபடி வேர்த்து ஒழுகி நிற்கும் முதலாளிதான் அவனுள் விழும் முதல் சித்திரம்.


வேலைக்கு சேர்ந்த முதல் நாள் , அவனது அறைக்குள் ஐந்தடி நீள உடும்பு ஒன்றினை பார்க்கிறான். கீழே காவாலாளி வசம் சொல்கிறான். காவலாளி சிரித்தபடி ”அந்த அறையோட ராசி அது, இப்பவே நல்ல டாக்டரா பாருங்க” என்கிறான்.


நாட்கள் செல்ல ஒரு மாதிரி உடும்பும் அவனும் சகஜம் ஆகிறார்கள். சரியான நேரத்துக்கு அவன் அரை வழியே எங்கோ கடந்து செல்கிறது உடும்பு.


மாதக் கடைசியில் இவன் இடத்தை இடம் பெயர்க்க, இவனை விட ”மேலானவன்” வர இவன் வேலை போகிறது. வெளியே வருகிறான். வாசலில் வைத்து அறிகிறான். பக்கத்துக்கு முறைசாரா வைத்திய சாலையில் இருந்து மருந்துக்கென கொண்டுவந்திருந்த உடும்புதான் தப்பி ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது.


காவலாளி இப்போது பௌவ்யத்துடன் ”தம்பி நிஜமா நம்ப ரூம்ல உடும்பு பாத்தீங்களா?” வினவ,


அவனுக்கு பல்லிக்கே பதறும் முதலாளி முகம் நினைவில் எழுகிறது.


பசி குறித்த ஹான்டிங்க்கான வர்ணனைகள். இரக்கமே அற்ற அத்தை வசம் வளர அனுப்பப் படுகிறான். அத்தை சொத்து சொத்தென்று சாதம் போடுகிறாள்.


”ஏன்னா முழிக்கிற, இவ்ளோதான் சோறு, வேணும்ன்னா தின்னு, உனக்கு ஆக்கிப் போட்டே சொத்தெல்லாம் அழியுது,”


”சனியன் வெறுஞ்சோத்தயே என்னாவா திங்கிது பாரு, இருடா கொளம்பு ஊத்துறேன் பெனஞ்சு தின்னு”


பசித்த யானையைக் கொண்டு பிச்சை எடுப்பதைப் போல, இந்த வாழ்வு. பசி வந்தால் எது வேண்டுமானாலும் செய்வோம். பிச்சை கூட எடுப்போம் என்கிறான் கதை சொல்லி.


கண்ணீரின் உள் உறையும் வெம்மை போல, வயிற்றின் உள்ளே உறையும் பசி. பசியின் ஏழாவது நாளில் அவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது.


பசி என்னவெல்லாம் செய்யும் என வளர்ந்து, அப்படிபட்ட பசி எந்த நிலையிலும் எதை செய்யாது என்ற புள்ளியில் நிறையும் கதை. இக் கதையின் எந்த அலகும் வாசகனின் கேளிக்கைக்காக உருவாக்கப் பட்டத்தல்ல. இந்தக் கதை அக்கருவுடன் ஆழத்தில் ஆசிரியர் கொண்டுள்ள உறவாலும், மொழியாலும் வடிவத்தாலும் இலக்கியமாகிறது. இதில் உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு உரிய உட்சிக்கல் இல்லை. மறை பிரதி ஏதுமற்ற நேரடியான கதை.


”எனக்குள்ளும் ஓயாமல் உறுமிக் கொண்டிருக்கும் புலி இருக்கிறது. ஆனால் இந்தப் புலி பசித்தாலும் மனிதர்களைக் கொல்லாது” என்ற இறுதி வரியில் எல்லாமே சொல்லப் பட்டு விடுகிறது. ஆனால் இதில் உள்ள உண்மையும் தீவிரமும் இக் கதையை குறிப்பிடத்தக்க கதையாக உயர்த்திப் பிடிக்கிறது.


ஒரு மனிதனை அவன் வாழ்வின் இறுதி நொடி வரை அவனது அகத்தில்காலப் பழமையின் கல்லறை வாசம் படியாமல் வைத்திருக்கும் தகுதி ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே உண்டு. அது இலக்கியம். தினம் தினம் புதிய வாழ்க்கை ஒன்றுக்குள் விழித்தெழும் ஆசீர்வாதம் கொண்ட மனிதன் இலக்கிய வாசகன் மட்டுமே. இன்றைய நாளையும் புதிதாக்கி விட்டார் நந்தன் ஸ்ரீதர்.


கடலூர் சீனு


*


அன்புள்ள சீனு


நான் நீங்கள் சுட்டியபின்னரே அக்கதையை வாசித்தேன். நல்ல சிறுகதை. சில கதைகள் வாசித்தவுடன் அவற்றின் உட்குறிப்புகளால், வாசக இடைவெளிகளால் வளர்வதில்லை. அவை நம்முள் உருவாக்கும் அனுபவப்பதிவுகளால், எழுப்பும் நினைவலைகளால் வளர்கின்றன. அத்தகைய கதைகளுக்கும் முக்கியமான இலக்கிய இடம் உண்டு. இது அத்தகையது. எல்லாமே சொல்லப்பட்டுவிட்ட கதை, ஆனாலும் உடன் வருகிறது


நேரடியாக உணர்ச்சிகளைச் சொல்வதில் பெரிய கலைச்சிதறல் வந்துவிடும். மிகையாகச் சொல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு மொழி இல்லை. மொழியை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது எளிதல்ல. மொழி திகையாதபோது மிகைநாடுகிறோம். எளிய குறிப்புணர்த்தல்கள் வழியாகச் சொல்லிவிடும்போது அரிய அனுபவங்கள் சல்லிசாகிவிடக்கூடும்


அந்த இடரை இக்கதையில் நந்தன் ஸ்ரீதரன் கடந்திருக்கிறார்


ஜெ


 


நந்தன் ஸ்ரீதரன் சிறுகதைகள்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2016 10:32

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37

[ 3 ]


பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார் சித்ரகேது. அவரை குடிகள் தந்தையென கொண்டாடினர். பற்றற்றவன் செய்யும் உலகியல்செயல்கள் தவமென்றாகின்றன. அவற்றின்மேல் ஊழின் துலாமுள் அசைவற்று நிற்கிறது. அவை வைரமுனைகொண்ட வாட்கள். அளியின்றி அளிப்பவை. சினமின்றிக் கொல்பவை.”


சித்ரகேது தன் ஆட்சிக்காலம் முழுக்க தன் பேச்சிலும் எண்ணத்திலும் இரு சொற்களை முற்றிலும் இழந்திருந்தார்.  ‘என்’ என்றோ ‘மகன்’ என்றோ அவர் நா உரைப்பதில்லை. அவர்முன் அச்சொற்களை சொல்லலாகாதென்று ஆணையிருந்தது. அமைச்சர்கள் நூறுமுறை பயிற்றுவித்த பின்னரே அவர் முன் அயலாரை அனுப்பினர். மைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைந்ததும் அவனுக்கு முடியளித்துவிட்டு மரவுரி அணிந்து காடேகி தவம் செய்யலானார். தன்னுள் உறைந்த சொற்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுத்து அருகிலோடிய ஆற்றுப்பெருக்கிலிட்டு சொல்லின்மையை சென்றடைந்தார்.


தவம் கனிந்து அவர் முற்றிலும் சொல்லிழந்தவராக ஆனார். ஓணான்கள் அவர் தலைமேல் தாவின. எலிகள் அவர் கால்மடிப்புகளில் ஒடுங்கிக்கொண்டன. அவர்மேல் சாரைப்பாம்பு சுழன்றேறி மேலே சென்றது. அதைத் தொடர்ந்து அரசநாகம்  ஏறிச்சென்று கவ்வி விழுங்கியது. மரங்கள்போல் பாறைபோல் அவர் ஆனார். அவ்வெறும்வெளியில் யாழிசையுடன் நாரதர் தோன்றி பிரம்மனுக்குரிய நுண்சொல்லை அவர் செவியில் உரைத்தார்.


அச்சொல்லை தவம்செய்து பெருக்கி மொழியென்றாக்கினார். அம்மொழியின் கனிவில் பிரம்மன் அவர் முன் தோன்றினார். “மைந்தா, நீ வேண்டுவதென்ன?” என்றார் பிரம்மன். “மானுடன் அறிவதன் உச்சமென ஒன்றுண்டு எனில் அது” என்றார் சித்ரகேது. “மைந்தா, நீ கோரியது அருளல்ல, உன் ஆணவநிறைவை மட்டுமே. அது உனக்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.


உடலே தான் என்னும் உணர்விலிருந்து சித்ரகேது விடுபட்டார். அக்கணமே விரும்பிய உடல்கொள்ளும் ஆற்றல்கொண்டவராக ஆனார். நீரென ஒழுகவும் நெருப்பென எழுந்தாடவும் காற்றென பரக்கவும் ஒளியென விரியவும் முகிலெனத் தவழவும் அவரால் இயன்றது.  ஊனுணர்வழிந்தவன் உள்ளிருப்பையும் துறக்கிறான். அவர் இருப்பும் இன்மையும் என இருநிலையும் கொண்டவராக ஆனார். விண்வாழும் கந்தர்வர்களைப்போல எங்குமிருந்தார். அவர் உடல் அங்கே கிடந்து மட்கி எலும்புக்கூடாக மாறி மறைந்தது.


அவ்வாறு விண்ணில் செல்கையில் ஒருமுறை காட்டில் ஒரு வேடனும் அவன் துணைவியும் ஒரு சுனைக்கரையில் காதலாடுவதைக் கண்டார். அவர்கள் சிவனும் உமையுமென தெரிந்ததும் விண்ணிலிருந்து இறங்கி அங்கு மலர்ந்திருந்த நீலம் ஒன்றில் விழிகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கினார். உமையை அள்ளி தன் மடியிலமர்த்திய ஈசன் “இவள் என்னவள்” என்று எண்ணி முகம் மலர்ந்த கணம் சித்ரகேது வெடித்துச் சிரித்தார்.


அச்சிரிப்பொலியைக் கேட்டு சினம்கொண்டு எழுந்து நோக்கிய உமை “யார் நீ? உருக்கொண்டு எழு! நீ எதனால் சிரித்தாய் என்று சொல்!” என்று சீறினாள். சித்ரகேது எழுந்து “உலகளந்து புரப்பவனுக்கும் எனது என்னும் எண்ணத்தை கடக்கமுடியவில்லை என்றால் மானுடர் எங்ஙனம் அதை வெல்வது?” என்றார். தேவி மூச்சில் முலைகளெழுந்தமைய கண்களில் ஈரம் மின்ன “இழிந்தோனே, தன் உடைமை என தெய்வங்கள் எண்ணுவதனால்தான் அவர்கள் மானுடருக்கென இறங்கிவருகிறார்கள். மானுடர் அவ்வாறு எண்ணும்போது தெய்வநிலையை இழக்கிறார்கள்” என்றாள்.


“நான் தெய்வநிலையை இழந்தேன். என் மைந்தனை நான் தீண்டியதுகூட இல்லை” என்றார் சித்ரகேது சினத்துடன். “ஆம், இதுவரை உன்னுள்ளத்தில் கரந்து எஞ்சிய நஞ்சு பெருகி உன்னை வென்றுவிட்டது. நஞ்சென நீ வளர்க!” என்றாள் உமை. நீரில் ஒரு குமிழியென ஆகி மறைந்த சித்ரகேது மீண்டும் தன் தவச்சாலைக்கு வந்தார். அங்கே வெள்ளெலும்புக்குவையெனக் கிடந்த தன் உடலை நோக்கி ஏங்கியபடி சுற்றிவந்தார். அப்பகுதியிலேயே காற்றென குளிரென கெடுநாற்றமென செவிமாயச்சொல் என நின்றிருந்தார்.


“என் மகன் என் மகன் என்று சித்ரகேது சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல்லே மொழியாக அதில் திளைத்தார். நீண்டநெடுங்காலம் அங்கே அவர் காத்திருந்தார்” என்றார் அந்தணர். “காத்திருக்கப்படுபவை எய்தப்படும் என்று சொல்கின்றன தொல்மொழிகள். தேயும் காத்திருப்புகளை காலம் உருமாற்றி வெற்று நினைவுகளும் ஏக்கங்களுமாக ஆக்குகிறது. வளரும் காத்திருப்புகள் காலத்தையே தங்கள் விழைவுக்கான படைக்கலமாகக் கொள்கின்றன.”


சித்ரகேது காத்திருந்த அந்தக் குடிலுக்கு ஒரு நாளிரவு சுசரிதன் என்னும் அந்தணன் ஒருவன் பசித்து மழையில் நனைந்து வந்துசேர்ந்தான். இடிந்த குடிலை தொலைவிலேயே கண்ட அவன் அதை அணுகி உள்ளே பார்த்தபோது வெள்ளெலும்புகளைக் கண்டான். ஆயினும் அந்த மழைக்குளிரில் வெளியே செல்ல அவனால் இயலவில்லை. ஆகவே உள்ளே நுழைந்து அமர்ந்து அங்கிருந்த கற்களை உரசி நெருப்பெழச்செய்து அந்தக் குடிலின் தூண்களையும் சட்டங்களையும் எரித்து அனலாக்கி அதில் தன் உடலை காயச்செய்தான். கையுடன் கொண்டுவந்திருந்த கிழங்குகளை அதில் சுட்டு உண்டான்.


அவனைக் கண்டதும் அக்குடிலுக்கு மேலே காஞ்சிரமரத்தில் கசந்துத் திரண்ட காய்களாக குடிகொண்டிருந்த சித்ரகேது ஒரு கரும்பூனையாக மாறி உள்ளே வந்தார். பூனையின் குரலைக் கேட்டதும் சுசரிதன் திரும்பிப்பார்த்தான். அதன் கண்களின் ஒளி அவனை அச்சுறுத்தியது. அவன் தன் உபவீதத்தைப் பற்றியபடி வேதச்சொல்லெடுத்து இந்திரனை வாழ்த்தலானான். அஞ்சிய பூனை அருகே வந்து அவனை நோக்கி விழிசுடர்ந்தபடி அமர்ந்தது.


“இந்திரனே, இது உன் படைக்கலம். இது உன் கையில் இருக்கிறது. இதுவே எனக்குக் காவல்” என்று கூவியபடி அந்தணன் ஒரு கழியை எடுத்து தன்னருகே வைத்துக்கொண்டான். பூனை சித்ரகேதுவின் குரலில் “அந்தணனே, அஞ்சாதே. நான் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. இந்திரன்சொல் உன்னிடமுள்ளது. ஆனால் அழியாப்பெருவிழைவுடன் நான் இங்கு காத்திருக்கிறேன். இங்கு எவரும் வருவதில்லை. இந்த வெள்ளெலும்புகள் என் முந்தைய பிறவிக்குரியவை. இவற்றை விட்டுவிட்டு நான் செல்லமுடியாது” என்றது.


“எது உன் துயர்?” என்றான் சுசரிதன். பூனை தன் கதையை சொன்னது. “ஆம், உன் துயர் எனக்குப் புரிகிறது. விழைவுகள் அனல்துளி. அவற்றின்மேலிட்டு மூடும் மூத்தோர்சொற்கள் உலர்சருகுகள். கற்றோர்சொற்கள் பச்சை இலைகள். அனல் அனைத்தையும் உண்ணும்” என்றான் சுசரிதன். “நான் உருக்கொண்டெழ விழைகிறேன். என்னில் எஞ்சிய அனைத்தும் நுரைத்தெழுந்து பேருருக்கொண்டு ஆடாமல் நான் மீளமுடியாது” என்றது பூனை. “ஆம், துளியென இருப்பது எதுவும் பெருகும் விழைவுகொண்டதே” என்றான் சுசரிதன்.


“அந்தணனே, அணுகுவோர் எவராயினும் துயர்சொல்லி வழிகோருபவர்களுக்கு அந்தணன் சொல்லளித்தாகவேண்டும். அச்சொல்லால் அவனும் அவன் குடியும் அழியுமென்றாலும் அது அவன் கடன் என்கின்றன நெறிநூல்கள். நூலறிந்து உபவீதமணிந்த அந்தணன் எந்நிலையிலும் மானுடருக்கு அமைச்சனே. இன்று உன்னை என் சொல்வலன் எனக்கொள்கிறேன். நான் செய்வதற்குரியதென்ன?” என்றது. சுசரிதன் “ஆம், அது உண்மை. உனக்கு உதவியாகவேண்டியது என் பொறுப்பே” என்றான். “இது ஒரு நிமித்தம் போலும். நான் சற்றுமுன் கேட்டுவந்த கதையே உனக்குரிய விடையென ஆகிறது. அதை சொல்கிறேன்.”


பிரம்மனின் சொல்கனிந்து உருவான மைந்தராகிய கசியப பிரஜாபதி உடலும் உள்ளமும் வளர்ந்து  இளமையின் ஒளிகொண்ட இளைஞராக ஆனபோது வான்கீழ் கைவிரித்து நின்று இறைஞ்சினார் “எந்தையே, நான் கொள்ளவேண்டிய துணைவி யார்? எங்குள்ளாள்?” விண்ணில் தோன்றிய பிரம்மன் சொன்னார் “மைந்தா, ஆண் பிறக்கும்போதே பெண் அவனுள் பிறந்துவிட்டிருக்கிறாள். அவன் கொள்ளும் விழைவும் கனவும்தான் திரண்டு பின்னர் ஊனுருக்கொண்டு கருவறையில் திகழ்கின்றன. விழையாத பெண்ணை எவரும் அடைவதில்லை. உள்விழைந்த பெண்ணை எவரும் அடையாதுபோனதுமில்லை. நீ விழையும் பெண் எவள்? அவளை முகமெனத் திரட்டு. அம்முகத்தை கண்டடை.”


கசியபர் தன்னுள் தேடி தவமிருந்தார். தன் சிற்றிளமையிலேயே காமம் ஊசிமுனையால் தொட்டு உட்செலுத்திய நஞ்சென குருதியில் நுழைந்து நுரைத்து ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்நுரையில் ஒளிக்குமிழியென எழுந்த முகமொன்றைக் கண்டார். கண்விழித்து “தந்தையே, ஒளிதவழ் முகம் கொண்டவள். இனியவள். அவளை இன்று கண்டேன்” என்றார். பிரம்மன் புன்னகைத்து “தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அவள் பெயர் அதிதி. அவளை கொள்க!” என்றார்.


அதிதியை மணந்து பன்னிரு ஆதித்யர்களுக்கு தந்தையானார் கசியபர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களும் விண்ணில் ஒளியுடன் திகழலாயினர். ஒளிகொண்ட மைந்தரை எண்ணி மகிழ்ந்து வாழ்ந்த கசியபர் அம்மகிழ்ச்சியில் பளிங்கில் மயிரிழைவிரிசல்போல மெல்லிய குறையொன்று ஓடுவதைக் கண்டு முதலில் வியந்தார். பின்னர் அதையே எண்ணிக்கொண்டிருந்தார். பின் அது என்னவென எண்ணப்புகுந்தார். பின்னர் அதை கண்டுகொண்டார்.


துயருடன் தனித்து நின்றிருந்த கசியபர் மேல் முகிலென எழுந்த பிரம்மன் கேட்டார் “சொல்க, உன் துயர் என்ன?” கசியபர் சொன்னார் “எந்தையே, என்னை எண்ணி நாணுகிறேன். ஒளியையும் இன்சுவையையும் நறுமணத்தையும் நுகர்ந்து என் உள்ளம் சலித்துவிட்டது. இருளையும்  எரிசுவையையும் கெடுமணத்தையும் நாடுகிறது. அவையே சுவையென்று எண்ணுகிறது.” பிரம்மன் புன்னகைத்து “நீ நாணவேண்டியதில்லை. உன்னுள் குருதியில் வாழும் மைந்தரின் விழைவு அது. அவர்கள் உன் உடல்திறந்து வெளிவரட்டும். உன் விழைவைத் தொடர்ந்து செல்க!”


தன் உள்ளோடிய இருள்குமிழிகளைத் தேடி காசியபர் கண்டடைந்த முகம் தட்சப்பிரஜாபதியின் இரண்டாவது மகள் திதி என்றார் பிரம்மன். அவளை மணந்த கசியபர் தைத்யர்களை பெற்றெடுத்தார். இருளின் பேராற்றலை திதியில் அறிந்த கசியபர் அவள் கைகளால் முற்றிலும் வளைக்கப்பட்டு பிறிதொன்றுமறியாது நெடுங்காலம் வாழ்ந்தார். கரிய பேருருவும் கட்டற்ற சினமும் சினமளிக்கும் பேராற்றலும் கொண்டிருந்தனர் அவரது மைந்தர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன், சிம்ஹிகை என்னும் மூவரிலிருந்து தைத்யர்களின் குலம் பெருகியது.


பின்னர் இருளின் தழுவலுக்குள் தன் தனிமையை உணர்ந்த கசியபர் தான் விழைவது வெல்லும் பெண்ணை அல்ல தான் வென்றாளும் பெண்ணையே என்று உணர்ந்தார். பிரம்மனிடம் அதை சொன்னார். “மைந்தா, அன்னையெனப் பெண்ணை விழைவதும் பின்னர் தோழியென பிறிதொருத்திமேல் மையல்கொள்வதும் ஆண்களின் இயல்பே. உன் உள்ளில் எழுந்த மகள் தட்சனின் மகள் தனு. அவளை கொள்க!” என்றார்.


தனுவை மணந்து மீண்டும் இளமைந்தனென்றாகி ஐவகை நிலங்களிலும் விளையாடி காதல்கொண்டாடினார் கசியபர். த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன், சங்கரன், ஏகசக்ரன், மகாபாகு, தாரகன், மகாபலன், ஸ்வர்பானு, ருஷபர்வா, புலோமன், விப்ரசித்தி  போன்ற தானவர் அவர்களுக்குப் பிறந்தனர். ஆதித்யர்களின் ஒளியையும் தைத்யர்களின் இருளையும் கலந்து அமைந்த அகம் கொண்டிருந்தனர் அவர்கள்.


மீண்டும் மீண்டும் தன்னுள்ளிருந்து பெண்களை கண்டெடுத்தார் கசியபர். அரிஷ்டை, சுரசை, கஸை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு என்னும் தட்சமகளிரை மணந்தார். பின்னர் முனி, புலோமை, காலகை, நதை, தனாயுஸ், சிம்ஹிகை, பிராதை, விஸ்வை, கபிலை என்னும் மகளிரையும் மணந்து பெருங்குலங்களைப் படைத்து முதற்றாதையாக அமர்ந்திருந்தார். அக்குலங்கள் வாழ்ந்த ஊர்மன்றுகளில் கல்லில் எழுந்து மலரும் நீரும் படையலும் கொண்டார். அவர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் விழியானார். அவர்களின் வேண்டுதல்களுக்கு செவியானார்.


தைத்யர்களான ஹிரண்யகசிபுவையும் ஹிரண்யாக்‌ஷனையும் விண்ணளந்தோன் வென்று அழித்த கதையை கசியபர் கேட்டார். தைத்யர் குலத்தை இந்திரன் அழித்துக்கொண்டிருக்கும் செய்திகள் நாளும் வந்தவண்ணமிருந்தன. வஞ்சம் எரிய அவர் சுக்ரமுனிவரை வரவழைத்து அவரிடம் கோரினார் “என் மைந்தர் தோற்பது எங்கே? அவர்களின் வஞ்சம் நிறைவேறும் வழி என்ன?” சுக்ரர் சொன்னார் “முனிவரே, தைத்யர்கள் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். அவர்களை தேவர்கள் வெல்வது எளிது.”


“ஆதித்யர்களை நான் ஏவுகிறேன். அவர்கள் வென்றுவரட்டும் தேவர்களை” என்றார் கசியபர். “அவர்கள் நெறிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். வேதச்சொல் அவர்களை வடமெனப் பிணைக்கும்” என்றார் சுக்ரர். “என்ன செய்வது?” என்றார் கசியபர். “ஒன்றே வழி. ஆதித்யர்களின் ஒளியும் தைத்யர்களின் இருளும் கொண்ட தானவர்களில் தெய்வங்களையும் தேவர்களையும் வெல்லும் மைந்தர்கள் எழுவதாக!”  மகிழ்ந்து “ஆம், அவ்வாறே” என்றார் கசியபர்.


கசியபர் பெருவஞ்சம் எரியும் உள்ளத்துடன் தன் துணைவியாகிய தனுவைப் புணர்ந்து பெற்ற மைந்தன் பலன் என்றழைக்கப்பட்டான். மைந்தன் பிறந்ததும்  அவன் நெற்றியில் கைவைத்து “உன் மூத்தவர்களின் குருதிக்கு நிகர் கேள், மைந்தா!” என்று வாழ்த்தளித்து மீண்டார் கசியபர். அவனுக்கு படைத்துணையாக விக்‌ஷரன், வீரன் என்னும் இரு மைந்தரையும் தனு பெற்றாள். தம்பியருடன் பலன் இளைஞனாக வளர்ந்தபோது அவன் பிறப்புநோக்கத்தை தனு சொன்னாள். வஞ்சினம் உரைத்து பலன் கிளம்பிச்சென்றான்.


விண்ணை வெல்லும்பொருட்டு தம்பியரை உடனழைத்துக்கொண்டு சென்ற பலன் வழியில் கடல்விளிம்பில் நின்று அந்திவணக்கம் செய்துகொண்டிருந்தான். அருகே அவன் தம்பியரும் அந்திவணக்கம் புரிந்தனர்.  பிறபொழுதுகளில் விக்‌ஷரன் நான்கு திசைகளையும் வீரன் விண்ணையும் நோக்கி மூத்தவனை காவல்புரிவது வழக்கம். அந்திவணக்கமென்பதனால் மூவரும் விழிமூடியிருந்தனர்.


விண்ணில் வெள்ளையானைமேல் எழுந்தருளிச் சென்றுகொண்டிருந்த இந்திரன் அவர்களைப் பார்த்தான். புலித்தோலாடை அணிந்து ஒளிவிடும் தண்டுப்படைக்கலத்துடன் நின்றிருந்த அந்தத் தானவர்கள் விண்புகும் ஆற்றல்கொண்டவர்கள் என அக்கணமே உணர்ந்தான். மறு எண்ணம் நிகழ வாய்ப்பளிக்காமல் தன் மின்கதிர் வாளெடுத்து பலனை இரு துண்டுகளாக வெட்டினான். திகைத்து விழிதிறந்த இளையோரின் தலைவெட்டி இட்டான். அவர்களின் குருதிகலந்து கடல் சிவந்தது.


மைந்தர் கொல்லப்பட்ட செய்தி கேட்டார் கசியபர். சினம்கொண்டு கொந்தளித்தபடி சுக்ரரை நாடிச்சென்றார். “என்ன நிகழ்ந்தது? குறி நோக்கிச் சொல்க! என் மைந்தர் எப்படி அழிந்தனர்?” என்றார். சுக்ரர் ஏழுவகை குறிநோக்கியபின் சொன்னார் “அவர்கள் அன்னையின் முலைப்பால் உண்டவர்கள். முலைப்பாலே குருதியென்றாகிறது. தேவர்கள் குருதியற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் பிறப்பதில்லை, ஒளிபோல எண்ணம்போல வெளியில் தோன்றி நிற்பவர்கள். அவ்வாறு தோன்றும் ஒருவனே இந்திரனுடன் எதிர்நிற்க முடியும்.” “அவ்வண்ண்ணம் ஒருவன் தோன்றுக! அவன் என்னிலிருந்தே தோன்றுக!” என்று கசியபர் கூவினார். “அது நிகழும். அதற்குரிய தருணம் வரும்” என்றார் சுக்ரர்.


“அரசே, கேள்! உன் வஞ்சம் பருவுடல்கொண்ட ஒருவனில் படர்ந்தெழவேண்டும். நீ கசியபரின் மைந்தனாகப் பிறக்கவேண்டும்” என்றான் சுசரிதன். “எவ்வண்ணம்?” என்று பூனை கேட்டது. “உன் எலும்புகளில் ஒன்றை நான் எடுத்துக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து என்னுடன் வருக! நான் கசியபரின் குருநிலைக்குச் சென்று அவரை வணங்கி அவருடைய வேள்விநெருப்பில் அதை இடுவேன். அங்கு நீ எழுக!” என்றான் சுசரிதன். “நன்று அந்தணனே, நான் உனக்கு பொருளேதும் அளிக்கமுடியாதவன். உடல்கொண்டெழுந்ததும் உன் குடித்தோன்றல்கள் எவரேனும் என்னைத் தேடி வரட்டும். உரிய பொருளை அவர்களுக்கு அளிப்பேன்” என்றார் சித்ரகேது.


அந்தணன் வணங்கி “அவ்வாறே ஆகுக, அரசே!” என்றான். “ஆனால் அன்று நான் உயிருடனிருக்கமாட்டேன். என் வாழ்நாள் இன்னமும் ஏழு மாதங்கள் மட்டுமே. இப்போது இச்சொல்லை உரைத்தமையால் இந்திரன் என்னிடம் முனிந்திருக்கிறான். அவன் மின்னிடி விழுந்து நான் கருகி இறப்பேன். அதை அறிந்தபின்னரே உங்களுக்கு செல்வழி சொன்னேன்” என்றான். “நம் இருவருக்கும் வேறு வழியில்லை. அந்தணனே, உங்கள் கொடிவழியினர் மார்ஜார ரகசியம் என்னும் குறிச்சொல்லைச் சொன்னால் அவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்” என்றார் சித்ரகேது.


சித்ரகேதுவின் எலும்புத்துண்டு ஒன்றுடன் சுசரிதன் அங்கிருந்து கிளம்பி கசியபரின் வேள்விச்சாலைக்கு சென்றான். உடன் கரிய பூனையும் சென்றது. கசியபரின் மாணவர்கள் அவனை  முகமனும் பூசனையும் செய்து அழைத்துச்சென்றனர். நீராடச் செய்து உணவளித்தனர். அவன் சென்று கசியபர் செய்துகொண்டிருந்த மகாஉத்தீபன வேள்வியில் ஹோதாவாக அமர்ந்தான். தன் விரல்களுக்கு நடுவே எலும்புத்துண்டை வைத்திருந்தான். கரிய பூனை வேள்விக்குடில்மேல் ஏறி கூரையில் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது.


கசியபர் சுபவேள்வியைத்தான் இயற்றிக்கொண்டிருந்தார். தன் உள்ளம் கொண்டிருந்த வஞ்சத்தை இனிய வேதச்சொற்களால் மூடிமறைத்திருந்தார். வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்தபோது அவியிடுவதாக கைநீட்டிய சுசரிதன் அந்த எலும்புத்துண்டை எரியிலிட்டான். எலும்பு எரியும் கெடுமணம் எழுந்ததும் ஹோதாக்கள் அஞ்சிக்கூவியபடி எழுந்தனர். அக்கணமொரு பூனையின் குரலையும் அவர்கள் கேட்டனர்.


கெடுமணம் முகர்ந்ததும் கசியபருக்குள் இருந்து  அவ்வஞ்சம் உளம்மீறி எழுந்தது. வேள்வியில் அவர் உரைத்துவந்த வேதச்சொல் மாறுபட்டது. இருண்ட தொல்வேதச் சொல்லை ஓதியபடி தன் இடப்பக்கச் சடைத்திரி ஒன்றைப் பற்றி அறுத்தெடுத்து எரியிலிட்டார். “எழுக, என் வஞ்சமே! எழுக இருளே! எழுக என் நஞ்சே!” என்று  கூவினார். அவிகொண்டு எழுந்த அனலில் இருந்து கரிய உடல் ஒளிர அசுரப்பேருரு ஒன்று எழுந்து வந்தது.


இடத்தோளில் வைத்த தண்டமும் வலக்கையில் ஒளிரும் வாளுமாகத் தோன்றிய காருருவன் இடியோசை எழுப்பி கேட்டான் “தந்தையே, என்னிடம் எதை விழைகிறீர்கள்? எதன்பொருட்டு நான் இப்புவியிலெழுந்தேன்?” கசியபர் அவன் கொடுந்தோற்றம் கண்டு அஞ்சி பின்னடைந்தார். அவன் கூர்வாட்கள் போன்ற வளையெயிறுகளும்  ஈட்டிமுனைபோன்ற உகிர்களும் கொண்டிருந்தான். “எந்தையே, ஆணையிடுங்கள். நான் உங்கள் மைந்தன்” என்றான் அவன்.


“நீ என்னுள் இருந்தாயா? இல்லை. இது என் விழிமாயை. இவ்விருளை நான் இத்தனைநாள் சூடியிருக்க இயலாது” என்றார் கசியபர். “மைந்தரைக் கண்டு இவ்வண்ணம் சொல்லாத தந்தை உண்டா?” என்றான் விருத்திரன். “நீ என் மைந்தன் என்பதற்கு சான்று ஒன்று சொல்க” என்றார் கசியபர். “உங்கள் துணைவியரில் ஒருத்தியை அழைத்து வினவுக! என்னை அவள் அறிவாளா என்று” என்றான் விருத்திரன்.


தன் ஒளிமிக்க தேவியாகிய அதிதியை அழைத்துவரும்படி ஆணையிட்டார் கசியபர். வேதநிலைக்குள் நுழைந்த அதிதி விருத்திரனின் இருளுருவைத்தான் முதலில் கண்டாள். “ஏன் இவ்வுருக் கொண்டீர்கள்? எங்கே செல்லவிருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். விருத்திரன் உரக்க நகைத்து “அன்னையே, நான் உங்கள் கொழுநனல்ல, அவர் உருக்கொண்ட மைந்தன்” என்றான்.


கசியபர் “எப்படி நீ இவனை நான் என எண்ணினாய்?” என்று கேட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “பெருஞ்சினம்கொள்கையில் உங்களை இத்தோற்றத்தில் பலமுறை கண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். உடல்தளர்ந்த கசியபர் “ஆம், நீ நானேதான்” என விருத்திரனிடம் சொன்னார். “என் பணியென்ன, தந்தையே?” என்றான் விருத்திரன்.


“மைந்தா, என் மைந்தர்களை வஞ்சத்தால் கொன்ற இந்திரனை நீ பழிதீர்க்கவேண்டும். அவனை வென்று இழுத்துவந்து இந்த வேள்விச்சாலை கம்பத்தில் கட்டவேண்டும். அவன் உளம் வருந்தி என் மைந்தருக்கு அன்னம் அளிக்கவேண்டும்” என்றார் கசியபர். “ஆணை!” என்று சொல்லி விருத்திரன் தலைவணங்கினான்.


பிரம்மகபாலம் என்னும் ஊரின் குகைக்குள் அனல்வெம்மைக்கு உடல்கூட்டி அமர்ந்திருந்த பிரசாந்தர் என்னும் அந்தணர் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் சொன்னார் “விருத்திராசுரன் உருக்கொண்ட கதை இது என்கின்றது விக்ரமேந்திரம் என்னும் தொல்காவியம். அந்தணர் ஏற்கும் நூல் இதுவேயாகும்.”


வெளியே மழை நிலைத்துப் பெய்துகொண்டிருந்தது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அடங்கி ஒளிதுடித்து அணைந்தன. இடி போர்த்தப்பட்டதென ஒலித்தது. கபாலர் இன்னொரு சிவமூலிச்சுருளை பற்றவைத்துக்கொண்டு உடலை ஒருக்களித்துக்கொண்டார். பிரசண்டன் “கதைகள் வாள்களையும் கதைகளையும் போல. மின்னும் இடியும் எழ அவை மோதிக்கொண்டே இருக்கின்றன இப்பாரதவர்ஷத்தில்” என்றான். “சொல்க, உமது கதையை!” என்றார் பிரசாந்தர்.


“அந்தணரே, ஏழாண்டுகளுக்கு முன்பு நான் கராளம் என்னும் மலைச்சிற்றூருக்குச் சென்றிருந்தேன். இரு பெருமலையடுக்குகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் அவ்வூர் சுழன்று ஏறி மீண்டும் அதேயளவு இறங்கும் ஒற்றையடிப்பாதை ஒன்றில் பன்னிருநாட்கள் நடந்தாலன்றி அணுகமுடியாதது. அவ்வூரிலிருந்து ஆண்டுக்கொருமுறை ஒரு வணிகர்குழு கிளம்பி காட்டுக்கு வெளியே இருக்கும் சதவிருட்சம் என்னும் ஊரின் சந்தைக்கு வந்து உப்பும் பிறபொருளும் வாங்கிக்கொண்டு மீளும். பிறர் வேற்றுநிலத்தை அறிவதே இல்லை.”


“அவ்வண்ணம் சென்ற வணிகர்குழு ஒன்றுடன் நானும் சென்றேன்” என்று பிரசண்டன் சொன்னான். “அவர்களுக்கு நான் பாடிய பாடல் பிடித்திருந்தது. ஏழு நாட்களில் அவர்களின் மொழியைக்கற்று அம்மொழியிலேயே பாடத்தொடங்கினேன். அவர்கள் என்னை தங்களுடன் வந்துவிடும்படி கோரினர். அவ்வூர் முற்றிலும் குகைகளால் ஆனது. நூற்றெட்டு பெருங்குகைகள். அவற்றின் முன் பட்டைக்கற்களை அடுக்கி உருவாக்கிய சிறுகுகைகளும் இருந்தன.”


“அங்கிருந்த மக்களுடன் நானும் உடன்கலந்தேன். இனிய இரு மாதரை மணந்தேன். ஊனும் தேனும் கிழங்கும் கனியும் உண்டேன். மலச்சுனை பெருகி விழுந்த அருவியில் நீராடினேன். கனவென அவ்வாழ்க்கையில் மகிழ்ந்திருந்தேன்” என்று பிரசண்டன் சொன்னான். “மூன்றாண்டுகள் அங்கு வாழ்ந்தேன். ஓராண்டு முடிந்தபின்னரே அவர்கள் வழிபடும் தெய்வத்தை மலையேறிச்சென்று கண்டேன். யானைவிலாவென எழுந்த கற்பாறையில் ஒட்டிக் கீழிறங்கிய கொடிகளைப் பற்றிக்கொண்டு விரிசல்களில் கால்வைத்து மேலேறிச் செல்லவேண்டும். திறன்மிக்க இளையோர் மட்டுமே அங்கு சென்றடையமுடியும்.”


“ஆண்டுக்கொருமுறை அவ்வாண்டு பிறந்த இளமைந்தரை தங்கள் தோள்களில் கட்டிக்கொண்டு மலையேறுவர். முதுபூசகரான கபாலர் இளையோரை மிஞ்சும் விரைவுடன் எழுந்து மேலே செல்வதைக் கண்டேன். விட்டில்களென ஏறிச்செல்லும் அவர்களை உயிரச்சத்துடன் நான் தொடர்ந்துசென்றேன். மேலே பாறைகள் மேலும் மேலுமென ஏறி வான் நோக்கி சென்றன. கரிய உடலில் திறந்த வாய் என அங்கு ஒரு குகை திறந்திருக்கக் கண்டேன்.”


“இதைப்போன்ற குகைவாயில் அது. உள்ளே ஏழு கிளைகளாக பிலவழி விரிந்து செல்கிறது. கைகூப்பியபடி இருளுக்குள் துயிலும் மூதாதையரை விழித்தெழக் கோரியபடி பூசகர் குகைக்குள் நுழைந்தார். பூசனைப்பொருட்களுடன் பிறர் தொடர்ந்துசென்றனர். பந்தங்களுடன் சென்றவர்களுக்குப் பின்னால் நானும் இருந்தேன். ஈரம் வழியும் தொல்குகைச்சுவர். அதில் கல்லோவியம் என அவர்களின் தொல்தெய்வம் நின்றிருக்கக் கண்டேன்.”


“ஒரு கையில் ஓங்கிய தண்டு. மறுகையில் வாள். வளைதேற்றை, கூருகிர், கொடுங்கண். சடைசரிந்த பெரும்பிடரி. அவர்கள் விருத்திரன் என்னும் மூதாதை என அத்தெய்வத்தை சொன்னார்கள்” என்றான் பிரசண்டன்.


தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2016 10:30

November 23, 2016

ஏன் பதறுகிறார்கள்?

Passengers gives 500 rupees for train ticket


 


ஜெ


 


இடதுசாரிகளின் அரசியல் பற்றி எழுதியிருந்தீர்கள். கேரளத்தின் கோ ஆபரேட்டிவ் வங்கிகள் பணம் பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்நோட்டுக்களை அளிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைசெய்திருக்கிறது. இதற்கு எதிராக அவர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். அதை மோடி ஏழைகளுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாக இங்கேகூட பிரச்சாரம் செய்கிறார்கள்


 


இந்தச்செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்



இந்த வங்கிகள் எப்போதுமே கள்ளப்பணத்தை வைப்புத்தொகையாக எடுத்துக்கொள்பவை. டிடிஎஸ் பிடித்தம் இல்லை. பேன் கார்டே கேட்பது இல்லை. வருமானவழி பற்றிய தகவலே இல்லை
ஆகவே இவை கேரளத்தின்ஸ்விஸ் வங்கி என அழைக்கப்படுகின்றன
2009 முதலே இந்த வங்கிகளைப்பற்றி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது
நோட்டு மாற்றம் பற்றிய செய்திவந்ததுமே பழையநோட்டுக்கள் கோடிக்கணக்கில் பின்தேதியிடப்பட்டு டெபாசிட்டுகளாக இந்த வங்கிகளில் பெறப்பட்டன.2500 கோடி ரூபாய் அளவுக்கு பெறப்பட்டிருக்கும் எனச்செய்தி. அதுவும் ஓரிருநாட்களில். அதன்பின்னர்தான் ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளைஅடையாளம் கண்டுகொண்டு இவர்கள் பழையநோட்டு மாற்றுவதைதடைசெய்தது. புதியநோட்டுகளை அனுப்புவதையும் நிறுத்தியது
அசாதாரணமாக இரண்டுநாளில் 2500 கோடியை வெள்ளையாக ஆக்கியவர்கள் யார்?
இவர்கள் இன்னமும் கணிப்பொறியை பயன்படுத்துவதில்லை. இவ்வளவுபெரியதொகைகள் இன்னும் கையால் எழுதப்படும் பேரேடுகளிலேயே எழுதி பெறப்படுகின்றன
இவர்களிடம் கள்ளநோட்டு அடையாளம் காணும் இயந்திரங்கள் இல்லை
இவர்களின் ஊழியர்கள் வங்கிப்பணிப்பயிற்சிபெற்றவர்கள் அல்ல
இந்த வங்கிகள் 90 சதவீதம் இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே இவை ஒரு சமாந்தர வங்கி இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கடன்கொடுக்கும் நிறுவனங்கள்தான் கூட்டுறவு வங்கிகள். ஆனால் கேரளத்தில் மட்டும் இவை பலகோடி ரூபாய்க்கு வைப்புநிதி வைத்துள்ளன

இதனால்தான் இந்த எதிர்ப்பு. அந்த மாநில முதல்வரே தெருவில் நின்றுபோராடுகிறார். டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரிடம் கோரிக்கைவைக்கிறார். ஏழைகளுக்கு எதிரான போர் என்கிறார்.இவர்கள் ஏன் கத்துகிறார்கள் என்று இன்னுமா புரியவில்லை?


 


 


மகாதேவன்


 


Kerala will bear the biggest brunt of demonetisation: Cooperative banks gasping for breath

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2016 19:58

இன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்

einstein1_7


 


அன்புள்ள ஜெ.


பி நாகராஜன் படங்கள் குறித்தும் புராணங்களை அதன் தத்துவ அம்சனங்களை களைந்து எளிய குடும்ப பிரச்சனை சார்ந்த கதைகளாக மாற்றும் படங்களை குறித்து சொல்லி இருக்கிறீர்கள்.


ஆனால் இதுபோன்ற படங்களால், சிந்தனைகளால் ஒரு வித பின்னடைவும் ஏற்பட்டுள்ளதோ என அஞ்சுகிறேன். தான் சமூகத்தின் ஒரு பகுதி, தனக்கென அடையாளம் இல்லை என வாழ்ந்த மக்கள் திரளிடையே மதம், நம்பிக்கைகள் என்பதெல்லாம் வேண்டாம்.. உன்னை நம்பு, நீ என்பது உன் சிந்தனைதான் என நாத்திகம் சொல்லிக்கொடுத்தது… பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் இது குறித்து நிறைய பேசி ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்கினார்கள்.. ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என அண்ணா அந்த சிந்தனையை அழகாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்.


ஆனால் அவருக்குப்பின் பகுத்தறிவு சிந்தனையில் மிகப்பெரிய தேக்கம் நிலவுகிறதோ என தோன்றுகிறது.


ஏபி நாகராஜன் வகை படங்களைப் பார்த்து விட்டு, அதையே ஆன்மிகம் என நினைத்துக்க்கொண்டு, அதற்கு பதில் சொல்வதுதான் “பகுத்தறிவு” என நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்களோ, அதனால்தான் நாத்திக சிந்தனை பரிணாம வளர்ச்சி காணவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது


உலகை காக்கும் கடவுள் குடும்பத்தில் ஏன் குழப்பங்கள்? சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் சில விபத்துக்குள்ளாவதை கடவுள் ஏன் தடுக்கவில்லை…? சரஸ்வதிதேவி சிலர் நாவில் வசிப்பதாக சொல்கிறார்கள். அவள் எங்கு டாய்லெட் போவாள் என்பது போன்ற வெகு எளிய கேள்விகளையே மிகப்பெரிய சிந்தனைகளாக இன்றும் சிலர் நினைப்பது வருத்தம் அளிக்கிறது.. அந்த காலத்தில் இப்படி கேட்ட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் அதே கேள்விகள் என்றால் என்ன செய்வது..


ஆனால் ஆன்மீகம் பேசுபவர்கள் வெகுவாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.. கடவுள் என தனியாக ஒருவர் இல்லை கடவுள் தன்மை என்றுதான் உண்டு என்றெல்லாம் பேசுகிறார்கள்


இதற்கு நிகராக எதிர் விசையாக வளர்ந்திருக்க வேண்டிய நாத்திக வாதம் வளராமைக்கு திருவிளையாடல் போன்ற படங்களின் செல்வாக்குதான் காரணமா.. அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா


அன்புடன்


பிச்சைக்காரன்


*


NORWAY DALAI LAMA


அன்புள்ள பிச்சைக்காரன்,


நாத்திகம் ஆத்திகம் இரண்டுக்கும் இரண்டுவகையான அறிவுத்தளங்கள் உள்ளன. அடிப்படையில் நாத்திகன் இப்பிரபஞ்ச இயக்கத்தை அதைச்சார்ந்த புறவயமான விதிகளாகத் தொகுத்துக்கொள்ள விழைகிறான். ஆத்திகன் பிரபஞ்சத்தை தன்னைவைத்து அகவயமான அறிதல்களாகத் தொகுத்துக் கொள்கிறான். அவன் சொல்லும் கடவுள் என்பது அவனுடைய அகவயமான ஓர் அறிதல் மட்டுமே. அவன் அறியும் பிரபஞ்சத்தின் காரணமும் மையமும் செயல்விசையும் ஆக அது இருக்கிறது.


ஆகவேதான் நாத்திகமும் ஆத்திகமும் எப்போதும் மோதிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவற்றுக்கு நடுவே உரையாடலும் நிகழமுடியாமலிருக்கிறது. அகவயமான தன் அறிதலை ஆத்திகன் சொல்லும்போது அதை புறவயமாக நிரூபித்துக்காட்டும்படி நாத்திகன் அறைகூவுகிறான். நாத்திகன் கூறும் புறவயத்தர்க்கத்தின் இடைவெளிகளை சுட்டிக்காட்டி அவன் அணுகுமுறையையே ஆத்திகன் நிராகரிக்கிறான்.


ஆத்திகம் அகவய அறிதல் என்பதனாலேயே அதற்கு படிமங்களே முக்கியமான ஊடகங்கள். பண்பாட்டின் தொடக்கம் முதலே மானுட உள்ளத்தை நிறைத்திருக்கும் ஆழ்படிமங்களை அவன் தன் அகவய அறிதல்களைச் சொல்ல பயன்படுத்துகிறான். அவற்றை சட்டகமாக கொண்டு மேலும் மேலும் படிமங்களை உருவாக்கியபடியே செல்கிறான்.


சூரியனோ சந்திரனோ கடலோ மின்னலோ அவ்வாறுதான் படிமங்களாகின்றன. ஆலமரமோ, நாகமோ அவ்வாறுதான் அந்த அகவய உலகுக்கு வெளிப்பாடு ஆகின்றன. படிமங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரு வலையாக ஆகின்றன. அதைத்தான் நாம் புராணங்கள் என்கிறோம். எல்லாப் பழங்குடிகளிடமும் அவர்களுக்கான மெய்யியல் புராணவடிவிலேதான் இருக்கும். பெரிய தொல்பண்பாடுகளில் அந்தப்புராணம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்திருக்கும்.


நாத்திகர்களில் அறிவார்ந்தவர்கள் ஆத்திகர்களின் இந்தப்புராணவெளியை குறியீடுகளின் ஊடுபாவாகவே காண்பார்கள். சமூகவியல், வரலாறு, உளவியலைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ள முயல்வார்கள். ஜோசஃப் கேம்பல் முதல் டி. டி. கோசாம்பி வரையிலான ஆய்வாளர்களின் வழி அது. அவர்கள் அகவய அறிதல் முறையை எள்ளி நகையாடி நிராகரிக்க மாட்டார்கள், புரிந்துகொள்ள முயல்வார்கள்.


எளிய நாத்திகர்கள், அதாவது அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ நுண்ணறிவோ அற்றவர்கள் ஆத்திகர்களின் அகவய அறிதல்களை, அவை வெளிப்படும் படிமவெளியை தங்கள் எளிய அன்றாடப் புத்தியைக்கொண்டு அணுகுவார்கள். அவற்றை வெறும் ‘மூடநம்பிக்கைகள்’ என வாதிடுவார்கள். நாம் இங்கே நாத்திகர்கள் என்று அறிபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்டவர்கள்.


ஒரு கணக்குப்பிள்ளை கவிதையை ஆராய்ச்சி செய்தால் என்ன ஆகும். அதேதான் நிகழ்கிறது. நீங்கள் சொன்னதுபோல சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எப்படிப் பிள்ளை பிறக்கமுடியும் போன்ற ‘அறிவியல்’ கேள்விகளை கேட்பவர்கள் இவர்கள்தான். கோசாம்பியோ கே.தாமோதரனோ அதைக் கேட்பதில்லை.


நம் துரதிருஷ்டம் நமக்கு வாய்த்தது திராவிடர் கழகம்தான். அவர்களுக்கு எளிய தரைதட்டி நாத்திகம் மட்டுமே தெரியும். அவர்களிடம் அறிவார்ந்த ஆய்வுமுறைமைகள் ஏதுமில்லை.


வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராயும் மாபெரும் அறிவுக்கருவியாகிய மார்க்ஸியத்தைக் கையில் வைத்திருக்கும் இடதுசாரிகள் இங்கு திராவிடர் கழகத்தைவிட கீழிறங்கி பேசுகிறார்கள். ஒருமுறை ச.தமிழ்ச்செல்வன் உரை கேட்டேன். அதற்கு திருச்சி செல்வேந்திரன் எவ்வளவோ மேல்.


எளிய ஆத்திகர்கள் எளிய நாத்திகர்களைப்போலவே உலகியலை, அன்றாடத்தை மட்டுமே அறிந்தவர்கள். கெட்டகாலம் வந்தால் சனீஸ்வரனுக்கு விளக்குபோடவேண்டும் என்ற அளவில் மட்டும் ஆத்திகத்தை அறிந்து வைத்திருப்பவர்கள். எளிய பக்தியாக மட்டுமே ஆன்மீகத்தை கொண்டிருப்பவர்கள்.


அவர்களுக்கும் நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் இப்புவி புறவய உலகை தர்க்கபூர்வமாக அணுகியவர்களால் உருவாக்கப்பட்டது. முதல் சக்கரத்தை வடிவமைத்தவன் முதல் கணிப்பொறியை அமைத்தவன் வரை புறவுலகை நோக்கியவர்கள்தான்.


அறிவியலாளர்களின் தனிப்பட்ட நம்பிக்கை எதுவாக இருப்பினும் அறிவியல் தன்னளவில் நாத்திகத்தைச் சார்ந்தது. அதில் அறிதல்கள் புறவயமான விதிகள் கொண்டவை. புறவயமாக அவை தொகுக்கப்பட்டு ஒற்றைப்பேருருவாக ஆக்கப்படுகின்றன. அதில் அறியப்படாதவை முடிவிலாதிருக்கலாம். அறியப்பட்டவையே அதன் வெற்றிக்குச் சான்றாகும்


ஆனால் எளிய ஆத்திகர்கள் ஒட்டுமொத்தமாக நாத்திகத்தைப் புறந்தள்ளுவார்கள். அறிவியலின் சாதனைகளைப் பயன்படுத்தியபடியே அறிவியலை குறைத்துப்பேசுவார்கள். அறிவியல் இன்னமும் அறியாதவற்றைச் சுட்டிக்காட்டி அறிவியலின் இயக்கத்தையே சிறுமைசெய்வார்கள். அறிவியல் தன்னை அனைத்தும் அறிந்தது என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அது அறியமுடியும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை மானுடனுக்கு அளிப்பது.


ஆத்திகத்தின் கேவலமான கீழெல்லை என்பது அறிவியலின் அடிப்படையே புறவயவிதிகள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அறிவியலை ஆத்திகத்துக்குச் சாட்சிசொல்ல அழைப்பதுதான். தன் அகவய அறிதலுக்கு ஒருவன் புறவய அறிவுத்துறையின் விதிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போதே தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான் என்பதை அவர்கள் அறிவதில்லை


நாத்திகமும் ஆத்திகமும் இணைய முடியாது, அவற்றின் அணுகுமுறைகளே வேறு வேறு என்பதனால் விவாதிக்கவும் முடியாது. நாத்திகம் ஆத்திகத்தையும் ஆத்திகம் நாத்திகத்தையும் மறுக்கும், அவற்றின் இயல்பு அது. ஆனால் அவை ஒன்றை ஒன்று பொய்யென்றும் பிழையென்றும் நிரூபிக்க முடியாது.


பல ஆண்டுகளுக்குமுன் ஃப்ரிஜோ காப்ராவின் டாவோ ஆஃப் பிஸிக்ஸ் என்னும் நூலை நிராகரித்து நித்ய சைதன்ய யதி எழுதிய கட்டுரையிலும் உரையிலும் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். அந்நூல் அறிவியலைக்கொண்டு ஆன்மிகத்தின் அகவய உருவகங்களை ‘நிரூபிக்க’ முயலும் முயற்சி என நித்யா சொன்னார்.


ஆன்மிக தத்துவத்தின் கொள்கைகளும் உருவகங்களும் அறிவியலுக்குள் எந்த மதிப்பையும் பெறமுடியாது. அவற்றின் அகவயமதிப்பை முழுமையாக அழித்து தர்க்கப்படுத்தாமல் அவற்றை நாம் அறிவியல் கொள்கைகளாக ஆக்கமுடியாது. அது சுத்தியலாக சிற்பத்தைப் பயன்படுத்துவதுபோல. செய்யலாம், அதன் மதிப்பு அதுவல்ல.


ஆனால் ஆத்திகம் ஆத்திகத்தின் அணுகுமுறையைக் கொண்டே நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அறிவியலின் அறிதல்களை ஓர் ஆத்திகன் பயன்படுத்திக்கொண்டு அவற்றில் மேலேறிச்சென்று தன் அகவய அறிதல்களை கூர்மைப்படுத்திக்கொள்ள முடியும். நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் நிலவியலும் உளவியலும் பயின்ற அறிவியலாளர்களே. அவர்கள் ஆத்திகர்களும்கூட


அதேபோலவே நாத்திகம் தன் புறவயத்தருக்கத்தின் விதிகளைக்கொண்டே ஆத்திகம் செயல்படும் அகவயமான நுண்தளங்களை மதிப்பிடமுடியும். படிமங்களை, அதீத உளவியலை நுணுகி ஆராயமுடியும்.


தமிழ்நாட்டில் அடிப்படை நாத்திகம் ஆத்திகத்தின் மேல் தொடுத்தத் தாக்குதல் காரணமாக ஒரு சிறுபான்மையினர் ஆத்திகத்தின் அறிவார்ந்த தளம் நோக்கிச் சென்றனர். அவர்களுக்குரிய ஆசிரியர்களும் நூல்களும் உருவாகி வந்தன. ஆன்மீகத்தை தத்துவமாகவும் கலையாகவும் மீஉளவியலாகவும் பார்க்கும் பார்வைகள் எழுந்தன


ஆனால் மறுபக்கம் நம் நாத்திகம் அறிவியல்துறைகளை உள்ளடக்கி விரிவடையவே இல்லை. அது ஒருவகைத் தெருப்பூசலாகவே நின்றுவிட்டது. திராவிட இயக்கம் நிரூபணவாதத்தை, தொழில்நுட்பத்தை மட்டும் அறிவியலாகக் கருதும் பாமரப்பார்வை கொண்டது. தன் அதி உச்ச நிலையிலேயே கூட தொ. பரமசிவம் போன்ற எளிய காழ்ப்புகள் மட்டும் கொண்ட அப்பாவியைத்தான் அதனால் உருவாக்கமுடியும்


ஆனால் அறிவியலின் அனைத்துத்துறைகளையும் தழுவி விரியும் பார்வை கொண்டது மார்க்ஸியம். வரலாற்றையும் பண்பாட்டையும் புறவயமாக அதனால் வகுத்தறிய முடியும். நமக்கு மார்க்ஸியம் கற்ற நாத்திகர்கள் இருந்தனர், அவர்கள் முன்னிலைப்படவில்லை.


அறிவியல் அதன் முழுமையான வீச்சுடன் முன்வைக்கப்படுவதே உண்மையான நாத்திகம். அறிவியல் இங்கே கற்றுக் கொடுக்கப்படுவதே இல்லை. இங்கு பாடங்கள்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, அறிதல்முறை அல்ல. ஆகவேதான் நாத்திகம் இத்தனை சூம்பிப் போயிருக்கிறது.


பல ஆண்டுகளுக்குமுன் நான் இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் என்னும் நூலை எழுதினேன். அதற்கு நான் சொன்ன முதன்மைக்காரணமே இந்துமரபிலுள்ள நாத்திக தரிசனங்கள் மேலெழுந்து இணையாக வந்து நிற்கவேண்டும் என்பதுதான். இல்லையேல் ஆத்திகமும் சூம்பிப்போகும்


இன்று அறிவார்ந்த நாத்திகத்திற்கான தேவை உச்சத்தில் இருக்கிறது இங்கு. நாத்திகம் என இங்கே பேசப்படுவது எளிய சாதிக்காழ்ப்பும் மொழிவெறியும் இனப்பற்றும்தான். அறிவியல் நோக்கில் அவை மதப்பற்றைவிடக் கீழானவையாகவே கருதப்படும். மெய்யான அறிவியல் என்னைப் பொறுத்தவரை மெய்யான ஆன்மீகம் அளவுக்கே புனிதமானது


இளமையில் நான் ‘படு சீரியஸாக’ இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது நித்யா சொன்னார். “இறுகப்பிடித்தால் நழுவக்கூடிய ஒன்று இது. மெய்யியலில் சிரிக்காமல் சொல்லப்படும் அனைத்தும் பொய்யே”


ஜெ


 


இந்துமதமும் நாத்திகமும் 


நாத்திகமும் தத்துவமும் 


இங்கிருந்து தொடங்குவோம்


கடவுள் குழந்தைகள் ஒருவினா


மதங்களின் தொகுப்புத்தன்மை


கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 1


கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 2


கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 3

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2016 10:34

தற்பிரிந்து அருள்புரி தருமம்

DSC_2043


 


அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.


தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன் சொல்வளர்காடு குறித்து

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2016 10:32

கருப்புப்பணம் -எதிர்வினைகள்

1

 



 


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


  உங்கள் மோடி , கருப்புப்பண ஒழிப்பு , ஊடகங்கள் ”    பதிவுக்கான எனது எண்ணங்கள்.


 


# ”அது ஊடகங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு எடுக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் அதன் சேவகர்கள் மட்டுமே என்றும் உணர்கிறோம். அனைத்தையும் விட மேலாக அறிவுஜீவிகளை சல்லிவிலைக்கு அது வாங்கி அடியாட்களாக வைக்கும் என்றும் சமகாலம் நமக்குக் காட்டுகிறது.”


(உங்கள் கருத்தின்படி கீழ்கண்டவை நடைபெரும் என எதிர்பார்கலாம்)


*  இனிமேல் ஊடங்கள் அழிந்துவிடும் அல்லது தூய்மை அடைந்துவிடும். உண்மை செய்திகளை மட்டுமே அளிப்பார்கள்.


*  அறிவு ஜீவிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கருத்துகளை விலையில்லாமல் அளிப்பார்கள்.


 


#இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை.



நான் அறிந்த வரையில் அரசியல்கட்சித்தலைவர்கள், பொருளியலாளர்கள் கள்ளப்பணத்திற்கு (fake note) ஆதரவாக பேசவில்லை.
கருப்பு பணத்திற்க்கு ஆதரவகவும் பேச வில்லை அவர்க்ள் அரசு எடுத்த செயல் முறையை மட்டுமே விமர்ச்சித்து கொண்டு உள்ளார்கள்.

 


# அதிகம்போனால் ஆறுமாதம்



ஆரம்பித்தபொழுது இரண்டு நாட்கள் என்றார்கள் பிற்கு 50 நாட்களில் சரியாகும் என்றார்கள் இப்பொழுது 15 வருடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்கிறார்கள்.

 


# நான் இந்தக்கட்டுரையை அன்று மறுபிரசுரம் செய்வேன்



தாரளமாக செய்யலாம் அது உங்கள் உரிமை அதையும் நங்கள் படிக்கத்தான் போகிறோம் உங்களுக்கு எதற்க்கு இந்த சூழுரை.

 


# நம் வரிவிதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள். நம் பொருளியலில் வங்கிவழிப் பணப்பரிமாற்றம் மிகமிகக் குறைவு. பெரும்பாலும் காகிதப்பணப் பரிமாற்றம்.



இந்த முயற்சியினால் அனைத்து பரிமாற்றமும் வங்கிவழியாக நடைபெறுமா? இதற்கான் கட்டமைப்பு இன்று உள்ளதா? கட்டமைப்பை வ்லுப்படுத்தாமல் இது எப்படி சாத்தியம். ஒரு நல்ல நிர்வாகி ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்க்கு முன் அதன் செயல் முறை சிக்கல்களை களைந்துவிட்டு பிறகே செயல்ப்படுத்துவார். இன்று நடைமுறை என்ன? 85 % அதிக மதிப்புள்ள பணத்திற்க்கு 14% உள்ள குறைந்த மதிப்புள்ள பணத்தை வைத்து பரிவர்த்தனை செய்ய நினைத்து எவ்வளவு அறிவீனம்.

 


# சென்ற பத்தாண்டுகளாக கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்த லாபமே மறைமுக வட்டித்தொழிலாக


 



வட்டிதொழில் கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்தது என்பது உண்மையில் அறியாமையே. இதற்காக உங்களை நினைத்து வருந்துகிறேன். வட்டி தொழில் ஒவ்வொரு குக்கிராமத்திலும் நடைபெறும் முறைப்படுத்த படாத ஒரு வணிகம். இது நல்லதோ கெட்டதோ இங்கு இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் ஆன்மாவை அறிந்த அனைவரும் அறிவர். உங்களுக்கு இது தெரியாதது வருத்ததுக்குறியது.

 


# இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று என்பதை எவரும் உணரமுடியும். ஜன்தன் போன்ற திட்டங்கள் வழியாக  இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது.


 



கட்டாயமாக வங்கிக்கணக்கு என்பது முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம இது எரிவாயு மானியத்திற்க்காக உருவாக்கப்பட்ட்து. இதை அப்பொழுது எதிர்த்து அரசியல் செய்தவர்கள் தான் இவர்கள். இது தினசரி செய்திதாள் படிக்கும் அனைவரும் அறிவர். வ்ங்கி கணக்கு தொடங்கினால் போதுமா அதை பயன் படுத்த ஏடிஎம் வேண்டாமா? தமிழகத்தில். 3040 நபர்களுக்கு ஒரு ஏடிஎம் இதுவே பீகாரில் 13525 நபர்களுக்கு ஒரு ஏடிஎம். இது தான் இன்றைய இந்தியாவின் நிலை.

 


# ஜிஎஸ்டி அவர்களுக்கு மிகப்பெரிய கட்டாயத்தை அளிக்கிறது.



இதுவும் முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம் அப்பொழுது எதிர்த்தவர்க்ள் தான் இவர்க்ள். (என்னுடைய என்னப்படி இது அனைத்து பொருட்களுக்கும் இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை இது எப்படி கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும்)

 


# வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி


 



இந்த 20% க்காக 126 கோடி மக்களை துன்புறுத்துவீர்களா?

உண்மையில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களை சாதரன மக்களால் அறிந்து கொள்ள் முடிகின்ற பொழுது அரசால் முடியாதா


 


# எத்தனை கோடிரூபாய் நேரடியாகக் கணக்குக்குள் வந்துகொண்டிருக்கிறது


 



இந்த பணம் மாற்றுவதற்க்காக வ்ந்து கொண்டு இருக்கிறது வரி கட்டப்பட்ட பணம் தான் இப்பொழுது வந்து கொண்டு உள்ளது. இந்த பணம் வங்கியில் இருந்து விரைவில் எடுக்கப்பட்டு விடும் இதை செலுத்துபவர்கள் வைப்பு நிதியில் போடுவதில்லை சேமீப்பு கணக்கிலேயே வைக்கப்படுகிரது ஏடிம் வழக்கம்போல் இயக்கத்துக்கு வரும்போழுது இவை மீண்டும் வீடுகளுக்கே சென்றுவிடும்.

 


#  ‘அய்யோ பாவம், ஏடிஎம் வாசலில் நிற்கும் நிலை உனக்கு வந்துவிட்டதே’ என இவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்


 



இதை அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதை விட அங்கு போய் நிர்ப்பவர்களை கேளுங்கள். முத்ல் இரண்டு நாட்கள் இருந்த ஆதரவு பின்னர் இல்லாமல் போனது எதனால் இதனால் தான்.

 


# மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர்.


 



நான் இந்த மூன்று வகையிலும் சேராதவன்.கள்ள பணம் சேரவே வாய்ப்பு இல்லதவன். மோடியியை எதிர்க்க வேண்டிய அவசியம் அற்றவன். (தமிழக அரசியலில் மோடிக்கு இடம் இல்லை). என்னிடம் இருந்த சில செல்லாத பணம் என் தந்தையால் மாற்றி தரப்பட்டது. நான் இனைய பணபரிவர்த்தைனை செய்பவன். ஆனால் நான் அழுவலகம் வரும் பொழுதும் (வ்ங்கி வாசலில்) மாலை வீடு திரும்பொழுதும் (ஏடிஎம் வாசலில்) மக்கள் படும் துயறம் அறிந்தவன்.

இந்த நிலை தொடர்ந்தால் நானும் நேரடியான பாதிப்பை அடைவேன். சிறு மற்றும் குறு வியபாரிகள் தான் நம் நாட்டின் இயங்கு சக்தியாக பார்ப்பவன். நீங்கள் நம்பும் டாடாவை விட நான் இவர்களை தான் சாதரன மக்களின் தோழனாக பார்கிறேன். ஆனால் இன்றய சூழல் தொடர்ந்தால் நானும் இவர்களுக்கு விரோதமான் முடிவையே எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவேன். (உலவர் ச்ந்தை தெருமுனை கடைகளில் காய்கறி பழ்ம் வாங்குபவன். சில்லரை தட்டுப்பாட்டால் நானும் வங்கி அட்டை மூலம் வாணிபம் செய்பவர்க்ளை நோக்கி செல்ல வேண்டும் இதனால் எனக்கு சிரிய அளவில் பண்ம் நஸ்டம் ஆனால் அந்த வியபாரிக்கு வியபாரமே நஸ்டம் இதை யார் ஈடு செய்வார்கள்).


# ஐம்பதாண்டுகளாக வரிகட்டாமல் இயங்கிவரும் இந்தப்பெருச்சாளி உலகைக் கலைத்து அவர்களில் ஒருசாராரையாவது வரிகட்டக் கட்டாயப்படுத்தும் அரசு செய்வது தவறா?



இவர்களை உங்களால் வேறு முறையில் தடுக்க முடியாதது இந்த மக்கள் செய்த குற்றமா?

 


# ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்?


 


அரசு போதிய அளவு 100 அல்லது 500 புதிய நோட்டுகளை உருவக்கிவிட்டு செய்திருந்தால் என்ன ஆகிறுக்கும். கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் நாட்டை விட்டா ஓடி இருப்பார்கள்.


 


# மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.



இன்று வங்கிகளில் பணமே இல்லையே இதற்க்கு யார் பொருப்பு.

# தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒருகோடிபேராவது ஏடிஎம்மில் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால்கூட அது அரசுப்படுகொலை!



அரசுவின் வேலை மக்கள் அனைவரையும் காப்பது தான். அழிப்பது அல்லவே.

 


# ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே


 



இது போன்ற பார்வை பரதிய ஜனதா ஆதரவாளர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு கருத்து. எங்களின் பார்வையில் அப்படி தெறிவது இல்லை மேலும் இஸ்லாமியர்கள் மோடியை எதிர்ப்பது இயல்பானது. எப்படி பிராமனர்கள் திக வை ஆதரிப்பது இல்லையோ அது போன்றது தான் இதுவும்.

 


# ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம்பேரில் நாலுபேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன


 



* உங்களுக்கு 1000 பேருடைய கருத்தும் கிடைத்த்தாக நினைகின்றீர்களா அப்படி என்றால் அது தவறு. அத்தனை கருத்துக்கள் உங்களுக்கு கிடைத்து இருந்தால் ஏடிம் ல் கூட்டமே இல்லை என்று சொல்லி இருக்கமாட்டீர்கள்.

 


# அது பலன் தரலாம், தோல்விகூட அடையலாம்.


 



பலன் தராமல் போக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு திட்ட்த்தை செயல் படுத்துகிற அரசை எந்த அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிரீர்கள். மேலும்  மக்களை பாதிக்காத பல வழிமுறைக்ள் உள்ளதாக கருதபடுக்கின்ற திட்ட்த்தை 120 கோடி மக்களையும் பாதிக்கினற வகையில் இப்போழுதே அமுல்படுத்த வேண்டிய கட்டயம் மோடிக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏன்?

 


என்றும் அன்புடன்


ம.உமாசங்கர்.


 


அன்புள்ள ஜெ


நேற்று கட்டுரையில் மல்லையா தொடர்பான வாதங்களில் நிறைய விடுபடல்கள் இருப்பது  படிக்கும்பொழுதே உணர முடிந்தது…


நாம் ஒரு பொழுதும் அறிய முடிய கருப்பு பக்கங்கள் நிறைய உண்டு அவர்களிடம்.. நிச்சயம் மல்லையா ஏமாளியோ / பரிதாபப்பட வேண்டிய நபரோ அல்ல.. நமது வாதங்களையும் மீறி, அவர்களின் தில்லுமுல்லுகள் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்…


மல்லயாவிற்கும் / கார்ப்பரேட்டுகளுக்கும் வாதாடினால்,  அதையே சிறு வியாபாரிகளும் கேட்பார்கள்.. இந்த கட்டுரையின் அடிநாதமே கேள்விக்கு உள்ளாகலாம்…


நன்றி…


பிரசாத்..


அன்புள்ள ஜெ


தங்களின் மோடி,கருப்பு பண ஒழிப்பு, ஊடகங்கள் படித்தேன்.  ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கும் இடதுசாரித்தத்துவம் என்பதை ஐய்யகோ ஏழைகள் ஏடிஎம்மில் நிற்கிறார்களே என தொலைக்காட்சி விவாதங்களில் உணர்ச்சிவசப்பட்டு  ஷோ முடிந்த கையோடு இம்போர்ட்டட் காரில் ப்ராண்டட் ஷர்டோடு கேப்பிடலிசத்தை பின்பற்றும் இடதுசாரிகள் மற்றும் தாங்களே குறிப்பிட்ட தன் தலையில் தான் சுமையை ஏற்றுகிறார்கள் என்று புரியாத  உடன் சேர்ந்து சலிக்கும் மாத சம்பளக்காரர்கள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது.


நாங்கள் பதில் சொன்னால் பக்தாஸ் என முத்திரை குத்தப்படும். தங்களுக்கும் அந்த முத்திரை குத்தப்படப்போவது தெரிந்தும் தங்களை போன்ற ஒருவர் உண்மை நிலையை பேச முன்வருவது அளப்பரியா ஆனந்தம்.


இதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களுக்கு எப்போதுமே எதோ ஒருவகையில் அப்பாவி திராவிடரை நலிவுறுத்தி பார்ப்பதில் க்ரூர சந்தோஷம் என்று ஒரு பிரச்சாரமும் எப்போதும் போல தொடங்கியாகி விட்டது.

ட்ரம்பின் வெற்றியையே பார்ப்பன பிரச்சாரத்தின் வீரியம் என சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.


இது போல ஒரு வலுவான அறிவிப்பை பார்த்தறியாத எதிர்ப்பார்க்காத அரசியல்வாதிகளும் கருப்புப்பண முதலைகளும் எப்போதும் போலவே முதல் நாள் ஆதரித்து அறிக்கை விட்டு மக்களை ஆழம் பார்த்து எப்படி சொன்னால் எப்படி மக்களை ஏமாற்றலாம் என இலக்கணம் மாறாமல் செய்கிறார்கள். முதல் நாள் திகைத்து பிறகு அணி சேர்ந்து விஷம பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால் இன்னமும் அந்த மூன்றாவது சாராருக்கு தன் தலையில் தான் சுமை ஏற்றப்படுகிறது என்றே புரியாமல் ஊரார் விமர்சனத்தை கேட்டு கழுதை மேல் ஏறாமல் கழுதையை தலையில் சுமந்து வந்த தந்தையின் மகனுமாகவே இருப்பதும் அவர்களை அப்படியே வைத்திருக்கும் ஊடகங்களின் சாமர்த்தியமும்  தான் வியப்பாக இருக்கிறது.


ப்ரியமுடன்

ஸ்ரீப்ரியா




பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,


வணக்கம்.

மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் கட்டுரையை படித்தபிறகு ‘நிலைகொள்ளாமல் ‘அலைந்து கொண்டிருக்கிறேன்’,உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தையில்லை,அப்படியே பொங்கிவிட்டீர்கள்!.ஒரு உண்மையான எழுத்தாளனின் சமூகப்பங்களிப்பை மிகச் சரியான நேரத்தில் நமது தேசத்திற்காக நிலைநாட்டி விட்டீர்கள்!.கடந்த 12 நாட்களாக பெரும்பாலான காட்சி ஊடகத்திலும், செய்தித்தாள்களிலும் மோதி அவர்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையை கொஞ்சம்கூட நாக்கூசாமல் கள்ளத்தனமாக குறைகூறி அதை பார்த்து படித்து மனம் வெதும்பி வரும் நிலையில் உங்களின் கட்டுரை அருமருந்தாக உள்ளது.கீழ் கண்டவர்களின் ஆஷாடபூதித்தனத்தை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
 
முதலில் இடதுசாரிகள், மோதியை எதிர்ப்பதென்றால் எந்தவித கீழான நடவடிக்கைக்கும் செல்வார்கள் என்பது,இது ஒரு மிக அதிர்ச்சி அளிக்கும் அவலநிலை!அடுத்து செய்தியாளர்கள் சமஸ் போன்றவர்கள் மோதியின் தாயார் அவர்கள் வங்கிக்கு சென்று பணம் எடுத்ததைக்கூட மோதிக்கு எதிராக ‘கொச்சையாக’விமரிசித்து இருந்தார்கள்(எப்பேர்ப்பட்ட பத்திரிகையாளர்கள்!).அடுத்து ஹிந்து போன்ற “தேசிய நாளிதழ்!” தண்ணிக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு தவிப்பதுபோல் ATM க்காக மக்கள் தவிப்பது மாதிரி கருத்துக் படமும்,என்றும் இல்லாத விதத்தில் இது சம்பந்தமாக துணுக்கு தோரணங்களும் வெளியிட்டு தங்களின் ‘கோணப்பார்வைகளை பறைசாற்றினர்.அடுத்து முன்னாள் நிதியமைச்சர் தனது பதவிக்காலத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட வக்கிலாதவர் இதனால் ரூ.400 கோடி அளவுக்குத்தான் பலன் இருக்கும் என்று கூசாமல் புளுகினார்.இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நமது உச்சமன்ற தலைமைநீதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது இதனால் பொதுமக்களால் கலவரங்கள் கூட வெடிக்கலாம் என்று அருள்வாக்கு அருளினார்!(மறுநாள் எல்லாப் செய்தித்தாள்களிலும் இதுதான் தலைப்பு செய்தி.எப்பேர்ப்பட்ட தேச சேவை!) இது நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி “பெரிய அறவீழ்ச்சி” தான்.
 
இறுதியாக இக் கட்டுரையில் நீங்கள் மாய்ந்து மாய்ந்து ஒவ்வொருவரின் சுயரூபங்களை நேர்மையாகவும் சரியாகவும் தோலுரித்துக்காட்டினாலும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருமித்த குரலில் “விஜய்மல்லையாவை போன்றவர்களை” நீங்கள் தூக்கிப்பிடிப்பதாக நாளைக்கு உங்களுக்கு எதிராக கூறப்போகும் ‘வசைகள்’ இன்றே இப்போதே என் காதில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

அன்புடன்,
அ.சேஷகிரி.











அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நான் தங்களின் சமீபகால வாசகன்.  உங்கள் இணையப் பக்கத்தில் வாசித்து ரசித்து விட்டு மௌனமாக இருந்து விடுவது என் இயல்பு.  பொதுவாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.  ஆனால் உங்களது மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை பற்றிய கட்டுரையை படித்த பிறகு நான் உங்களுக்கு எழுதியாகவேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.  என் நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு நற்செயலை – கருப்புப்பண ஒழிப்பு நல்லது என்றும் மனம் அறிந்தும் கூட ஆதரித்து எழுத ஊடங்களுள் நேர்மையாளர் ஒருவர் கூட இல்லையே என்ற வேதனை ஒருசில நாட்களாக என்னை வதைத்துக் கொண்டிருந்தது.  ஊடகங்கள் மக்களின் சில அசௌரியங்களை மிகவும் மிகைப்படுத்தி நாடகங்கள் நடத்துவத்திலே குறியாக இருகின்றன  என்பதும் அவற்றில் சில நேரடி திருடர்கள், மற்றவர்கள் ஊழல்வாதிகளிடம் காசு வாங்கிக்கொண்டு செயல்படுவோர் என்பதும் புரிந்தே இருக்கிறது.  சில நூறு உறுப்பினர்களை கொண்ட மகஇக அமைப்பு பற்றி ஒரு நண்பன் வாயிலாக சற்று அறிந்திருந்தேன். அவன் அந்த அமைப்பில் உறுப்பினர் அல்ல – அவர்களது பேசுக்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் அறிந்து கொள்பவன்.  “அவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள்.  மற்றபடி இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்மையிலே கம்யூனிஸ்ட்களே அல்ல போலி கம்யூனிஸ்ட்கள்” என்பான்.  இப்போது அவனும் கூட மகஇக-வினரின் பரிதவிப்பு கண்டு அதிர்ந்து போயுள்ளான்.  “பரவாயில்லை…..நீ ஒன்றும் நஷ்டப்படவில்லை…அவர்கள் ஒன்றும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல….நீ ஒன்றும் களம் புகுந்து காயங்கள் படவில்லை.  வெறும் பேச்சு தானே” என்று அமைதிப்படுத்தினேன்.  இன்று ஒரிசா மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்டைந்தனர் என்பது செய்தி.  காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது என்றும் செய்தி.  எல்லாமே கருப்புப் பணம் – ஊழல் ஆகியவை கொண்டே நடைபெற்று வந்தன போலும்.  இதில் நகைப்புக்குரியது என்னவென்றால் “மக்களால் கியூவில் நிற்பதால்” மிகவும் கவலைப்படும் இவர்கள் மாபெரும் வர்க்கப்போர் புரிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு கொண்டுவர பாடுபடுவதாக காட்டிக்கொள்வதுதான்.  ஊருக்கு முன்னால் நடிப்பது சரி…தங்கள் மனசாட்சியின் முன்பும் நடிப்பார்களா? “தன் நெஞ்சறிவது பொய்யற்க” என்பது?  அதுசரி அவர்களைப் பொறுத்தவரை மனசாட்சி உயிர் ஆத்மா என்பதெல்லாம் கிடையாதே.  வெறும் வெற்று அகங்காரங்களான, நேர்மையாளர்கள் போல் நடித்துவரும் இவர்களை தமிழ்மக்கள் மதிக்காமல் இருப்பது முற்றிலும் சரி.  உங்களுக்கு மீண்டும் என் நன்றி.விக்ரம்,

கோவை


இனிய ஜெயம்,

கடலூரில் பிரபலமான வணிகக் கடை  அது.   நிறைய பெண்கள் வேலை செய்வார்கள்.  பக்கத்து பெரிய துணிக் கடைகள் ஏஜண்டுகள் வழியே பேரம் பேசி, வேறு கடை பெண்களை அக் கடை வேலையை உதற வைத்து இக் கடையில் சேர்த்துக் கொள்வார்கள்.  ஒருநாள் வணிகக் கடை முதலாளி  தனது கடையில் இருக்கும் இருபத்து இரண்டு பெண்களையும் ஒரு விடுமறை நாளன்று சினிமாவுக்கு அழைத்து சென்றார். பெண்களுக்கு நம்ப முதலாளியா இப்படி என ஒரே ஆச்சர்யம்.   அவர் அழைத்து சென்ற படம்,   அங்காடித் தெரு.

மறுநாள் காலை முதலாளி அப் பெண்கள் வசம் அக்கறையாக சொன்னார் ”பொண்ணுங்களா பாத்துக்கங்க அவன் சொன்னான் இவன் சொன்னான்னு  துணிக்கடைக்கு வேலைக்கு போய்டாதீங்க, பாத்தீங்க இல்ல அதுதான் உள்ள நிலவரம்” என்றார்.   அத்தகைய முதலாளி   இரண்டு நாள் முன்பு  ”கவர்மெண்ட்டு சரியானதும்தான் சம்பளம் தரமுடியும்” என்று  ஒரு இரவு கடை சாத்தும்போது அறிவித்து விட்டு  அத்தனை பெண்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

கடலூர் லான்ச்சடியில்  எப்போதுமே தலைமுறை தலைமுறையாக நடக்கும் வட்டித் தொழில். ஒருவர் வருவார் பைக் சைடு பாக்ஸில் லட்சங்கள் கிடக்கும்.  உள்ளூர்கூ டைக்கார பெண்கள் நூற்றுக்கணக்கில்  அவரிடம் ”ஒரு நாள் கடன்” வாங்குவார்கள். காலையில் வாங்கிய ஆயிரத்தை மாலை ஆயிரத்து நாற்பதாக தந்துவிட வேண்டும்.   லாஞ்சில் வந்து இறங்கும் லோடை அப்படியே ஒருவர் பேரம் பேசி அங்கேயே லாஞ்சுக்கு பணம் தந்து லோடை இறக்குவார். அவர் வசம் இந்த கூடைப் பெண்கள்  சில்லறைக்கு  மீன்  வியாபாரம் செய்ய  வாங்கிச் செல்வார்கள்.  கடந்த நான்கு நாட்களாக அங்கே எவரும் இல்லை.

அதிகாலை நான்கு முதல் ஆறு வரை  நடக்கும்  உழவர் சந்தை [இப்போது அது மொத்தமாக வேறு வணிகர்கள் கையில் கிடக்கிறது]  பூக்கடை வணிகங்கள் நான்கில் ஒன்றாக வந்து நிற்கிறது.  எதிர் கறிக்கடை பாய்,  ஆடுகள் கிடைக்காமல்  கடையை விடுமுறை விட்டு விட்டார்.   எங்கள் தெருவில் அடுத்தடுத்து மூன்று சாவு.  தெருமக்கள் கூடிப் பேசி  எங்கள் நகர் கோவில் உண்டியலை திறந்து, அந்த நாட்களை தாண்டினோம். கடலூரின் எந்த திரை அரங்கிலும் கட்டணம் நபருக்கு சாதாரண நாளில் நூறு ரூபாய்.  நட்சத்திரங்களின் நாளில்  பொதுமக்கள் வேட்கையை பொறுத்தது. கடந்து ஐந்து வருடங்களாக  எந்த அரங்கின் டிகட்டிலும் நகராட்சி முத்திரை காணக் கிடைக்காது. திரை அரங்க முதலாளிகளுடன் இணைந்து ஹோட்டல் முதலாளிகள் தாவங்கட்டையில் கை தாங்கி அமர்ந்திருக்கிறார்கள்.

தென்  மாவட்டங்களில்  தேங்காய் முதல்  மிளகாப்பத்தை வரை  விவசாயிகள்  விளைவிக்கும் எதற்கும் ஒற்றுமை என்றும் பலமாம்  எனும் கொள்கையில் ஒன்றிணைந்து அடிமாட்டு விலைக்கு அவற்றை வாங்கி, அதை பதுக்கி விற்றே பழகிய பிஸ்னஸ் மாக்னட்டுகள்  மண்டையை சொறிந்துக்கொண்டு நிற்கிறார்கள்.

நல்லதும் கெட்டதுமாக வெளிப்படப் போகிற  நாட்டுக்குத் தேவையான அதிரடி மாற்றம்தான்.  ஆனால் ஒவ்வொரு இடரிலும் காணாமல் போகும் ஒரு கூட்டம் உண்டு. கடலூரின் கைத்தறி விசை குடும்பங்கள் முன்னூறு. தானே புயலுக்குப் பின் ஒருவர் கூட மீள வில்லை.  வங்கிக் கட்டுப்பாட்டில் வராத அத்தனை வணிகமும்  அரசை கவிழ்க்கும் வணிகம் அல்ல.  திருட்டு டிவிடி விற்பவனும். எங்கள் கடல் கூடைக்கரப் பெண்ணும் ஒன்றல்ல.

இந்த மங்கள்யான் காலத்திலும் கடலூர் திரை அரங்கில், காக்காவ ககூஸ்ல போ என்று விளம்பரம் வழியே அரசு  போதிக்கிறது. எனில்  வங்கியின் பொருளாதார அலகுக்குள் வராத  ”பண்படாத சிவிலியன் ” வசம்  ஒரு மூன்று வருடமாவது  பிரச்சாரமாக  வங்கிப் பொருளாதாரம் குறித்து அரசு பேசி இருக்க வேண்டும்.     நமது பணி இடங்களின்  சுமட்டுத் தனங்களை  கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.   தமிழ்நாட்டைப் போல பரக்காவெட்டி மக்கள் உலகிலேயே வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். மைல் நீள யேடேஎம்  வரிசையில், கடைசியில் நிற்கும் பென்ஷன் முதியவர் பற்றி கவலையே இன்றி, முந்தி நுழைந்தவர்  நான்கு ஐந்து கார்டுகளை செருகி  மெஷினை காலி செய்தது வெளியேறுகிறான்.

என்தரப்பு என சொல்வதற்கு ஏதும் இல்லை. நாளைய பொன்னுலகம் அது நாளை மலரட்டும். ஆனால்   குடிக்கார கணவன், பள்ளி செல்லும் மகள்களுடன்  அதனை பேரையும் தாங்கும் ”பொருளாதாரப் பண்பாடற்ற” கூடைக்கரப் பெண், இந்த பாரத விரி நிலத்தில்  அதன் சாரத்தை கண்டடைய  அலையும், எதோ ஒரு  மண்ணில்  முடங்கிய ஏடிஎம்  முன் நிற்கும் ஒரு பயணி . நான் அவர்கள் பின்னே நிற்கிறேன்.  எல்லாம் கொஞ்ச நாளில் சீர்பெற்று விடும்  என அவர்களுக்கு மானசீகமாக சொல்கிறேன்.

கடலூர் சீனு




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. நீண்ட நாட்களுக்கு பின் இந்த கடிதம்..


தங்கள் மோடி, கருப்பு பண ஊழல் ஒழிப்பு, ஊடகங்கள் பதிவை படித்ததும் இக்கடிதத்தை எழுதுகிறேன். பொருளாதாரம் தங்கள் துறை இல்லை என்று முன்பு கூறியிருந்தாலும், மிக கறாராக, விவரமாக எழுதியுள்ளீர்கள். ( கட்டுரை ஆரம்பத்தில், நீங்கள் மோடியின் இந்த முடிவை எதிர்ப்பீர்களோ என வியந்தேன்..).. என் எண்ணங்கள் சிலவற்றை பகிற்கிறேன்..


இன்று ATM இல் பணம் எடுக்கும் போது நீங்கள் கூறியது போல் 15 நிமிடங்கள் தான் ஆகியது, என் வீடு அருகே உள்ள ATM மையங்கள் அனேகமாக, நான் பார்க்கும் போதெல்லாம், அதிகப்படியாக 15 பேர்தான் காத்திருக்கிறார்கள்..இன்னும் சில நாட்களில் அதுவும் இன்னும் குறையும் கண்டிப்பாக.


சிந்தித்து பார்த்தால், இப்போது உள்ள தட்டுப்பாடும், அனேக மக்களின் தேவையற்ற பயத்தினால் தானோ என தோன்றுகிறது. இன்று வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கும் எத்தனை பேருக்கு பணம் கட்டாயமாக அன்றாடம் தேவை பட வாய்ப்புள்ளது ?. தினம் 2000 என்பது அனேகம் மக்களுக்கு தேவை இருக்காது என்றே தோன்றுகிறது. அதுவும், இத்தகைய தருணத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவமான செயலை வெற்றி பெற செய்ய, நாம் நம் செலவுகளை மேலும் கறாராக பரிசீலித்து செலவை குறைத்தால் ATM இல் பணம், உண்மையிலேயே தேவை படுபவர்களுக்கு கிடைக்க பெறும்..


ஆம் கண்டிப்பாக, சிறு வணிக, வியாபாரிகள் சில்லறை பணம் இல்லாததால் கஷ்ட படுகிறார்கள். மொத்த வியாபாரிகளிடம் எப்போதும் வாங்கும் சில்லறை வியாபாரிகள், கணக்கில் வைத்து வாங்க முடியும். ஆனால், பல பொருட்கள், சில்லறை வியாபாரிகளிடமே வாங்க முடிகிறது என்றும் அச்சமையத்தில் கணக்கில் வாங்குவது சிரமம் என்றும் அறிந்தேன்.. ஆனால் யாரும் வெறுப்பை உதிர்க்கவில்லை. ‘ புதிய 500, 1000 நோட்டுக்கள் அடித்து கொண்டு வந்தால், தேவையான நோட்டுக்கள் கொண்டு வர இன்னும் 7, 8 மாதங்கள் ஆகும் என்பதால், அரசு புத்திசாலித்தனமாக 2000 நோட்டை வெளியிட்டுள்ளது ‘ என்று கூலித் தொழிளாளி ஒருவர் வரிசையில் நிற்கும் போது கூறுவது கேட்கும் போது, மோடியின் இந்த அதிரடிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


செய்தி வந்த சில நாட்களிலேயே, ‘அரசுக்கு நெருக்கமான பெரு முதலாளிகள், ஏற்கனவே விஷயம் தெரிந்து அவர்களின் ரூபாய் நோட்டுக்கள் யாவற்றையும் மாற்றி விட்டார்கள், அம்பானியின் ஜியோ திட்டம், இந்த பிரச்சினையில் இருந்து தப்பத்தான், என்று பல செய்திகள், வதந்திகள்..யோசிக்காமல், ஆராயாமல் பரப்பப்படும் வதந்திகள்…


மிக வருத்தமான நிகழ்வு, இதை பயன்படுத்தி உருவாகி உள்ள பணத்தரகர்கள்.. 10, 20 % கமிஷனுக்கு, கருப்பு பணத்தை ஏழை, வங்கி கணக்கு உள்ள அடித்தள மக்களை பயன் படுத்தி வங்கியில் போட்டு எடுத்து கொடுப்பது, ஊழியர்களுக்கு 3 மாதம் ஊதிய முன்பணம் அளிப்பது, வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு அடையாள ஆதாரங்களை வைத்து அனுமதிக்கபட்ட அளவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது என்று மீண்டும் system ஐ ஏமாற்ற கிளம்பி விட்டார்கள்.. ஒரு விதி அல்லது கட்டளை விதிக்கப்பட்டால், அதை மதிப்பதை விட அதை எப்படி எல்லாம் உடைக்கலாம் என்றுதான் மக்கள் முனைப்பு காட்டுகிறார்கள்..


திரு மோடியின் இந்த அதிரடியை உடைக்க நூறு வழிகளை ஏமாற்றுபவர்கள் கண்டு பிடித்தாலும், 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அடியோடு அழித்ததிலும், வருமான வரி கட்டாமல் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்ததிலும், பங்கு சந்தையை விட பல மடங்கு பெரிதான இந்தியாவின் unorganized பொருளாதார உலகை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிலும், இந்த அரசுக்கு பெரிய வெற்றியே…


தங்கள் சிங்கப்பூர் அனுபவத்தை பற்றியும் ( சிங்கை இலக்கியம் பற்றி நீங்கள் எழுதியது தவிர), நீங்கள் எடுத்து பங்களித்த கல்வித்திட்டத்தை பற்றிய தங்கள் அனுபவம், கருத்து பற்றி அறிய ஆவல்.. அதை பற்றிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளதா ?


அன்புடன்


வெண்ணி


 


 


அன்புள்ள ஜெ,


 


கருப்புப்பணம் குறித்த தங்கள் பதிவை பார்த்தேன். ஆழமான வருத்தம் ஒன்றே ஏற்பட்டது. ஏற்கனவே இந்த ஊடக வெள்ளத்திற்குப்பின் நான் மதிக்கும் சில நண்பர்கள் கூட மோடி எதிர்ப்பு டெம்ப்ளேட் மனநிலைக்கு சென்றடைந்ததால் அவர்களுடன் விவாதித்து சோர்ந்திருந்தேன். வேறென்ன சொல்ல, சாமானியனுக்காக கண்ணீர் விடும் புரட்சியாளர்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.


 


இந்த எதிர்மனநிலைக்கு ஊடகங்கள் மட்டும் காரணமாக நினைக்கவில்லை. பொதுவாக இந்தியாவில் வரி என்பதே கொடுங்கோலன் ஒருவன் தன் சுகபோகத்துக்காக மக்களிடம் (குறிப்பாக அன்றாடங் காய்ச்சிகளிடம்!) அடித்து பிடுங்கப்படும் ஒன்றாகவே  பெரும்பாலானவர்கள் நம்ப விரும்புகிறார்கள். இந்நிலையில் எவ்வித கண்காணிப்புமற்ற பொருளியலையும் ஊழலையும் தன் அன்றாட வாழ்முறையாக கொண்ட நம் மக்களுக்கு, இந்நடவடிக்கை ‘தன் ஊழலுக்கும்’ எதிராகத்தான் என்பதை அவர்களின் ஆழம் ஏதோ ஒரு புள்ளியில் உணர்கிறது. அதை மறைக்கவே ஊடகச் செய்திகளை பற்றுகோலாக கொள்கிறார்கள்.


 


இரண்டாயிரத்தை வாடகையாகக் கொடுத்துவிட்டு அதை எட்டாயிரமாக HRA வில் கணக்கு காட்டும் ஒருவன், ரசீதில்லாமல் கைபேசி வாங்குவதற்கு சில நூறுகளை லஞ்சமாக பெற்றுக் கொள்ளும் ஒருவன் பேஸ்புக்கில் அம்பானி குறித்து கேள்வி எழுப்பாவிடடால் தன் நேர்மையை வேறெப்படித்தான் நிறுவிக்கொள்வது?


 


இன்று கருப்புப்பணத்திற்காக குரல் கொடுக்கும் சாமானியர்கள் அனைவரும் இத்தனைநாள் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் வியாபாரிகளிடமும், தேர்தலின்போது அரசியல்வாதிகளிடமும் வாங்கிய லஞ்சப்ப பணத்திற்கு விசுவாசமாக குரல்கொடுக்கிறார்கள், அவ்வளவுதான். ஒருவேளை இந்நடவடிக்கையால் எதிர்காலத்திலும் தான் நியாயமாக ‘அனுபவிக்க வேண்டிய இச்சலுகைகள்’ பாதிக்கப்படுமா என்ற ஐயமே அவர்களை நிலையழிய செய்கிறது.


 


இது எவரிடமோ உள்ள கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக பலரும் நினைக்கவில்லை. ஓவ்வொருவரும் உள்ளூர தெளிவாகவே உணர்வார்கள் தன்னிடமுள்ள கருப்பு பணத்தைப் பற்றி. அளவில் சிறியதாக இருப்பதாலேயே எதுவும் செய்யாமலே அப்பணத்தை இந்நடவடிக்கையிலிருந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் பயப்படுவது வேறொன்றை குறித்து. தன் எதிர்கால பகற்கனவுகளில் அவர்கள் குவிக்க நினைக்கும் பெரும்பணத்தில் சிறுபகுதியை வரியாக கட்ட நேரிடலாம் என்பதே இவர்களுக்கு அச்சமாகவும்  சீண்டலாகவும் உள்ளது.


 


ஆனால் மோடிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்வதில் பெரும்வசதி உள்ளது. இதுவரை தான் அன்றாடம் ஈடுபட்டுவந்த ஊழல்குறித்த குற்றவுணர்வு கொள்வதோ அதற்கான பிழையீடு செய்வதோ தேவையில்லை. மாறாக அனைத்து பாரத்தையும் கடவுளிடம் இறக்கிவைப்பதை போல மொத்த பழியையும் மோடி, அம்பானி, அதானி வரிசைமேல் போட்டுவிட்டால் நிம்மதியாக உறங்கலாம். மேலும் டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து அல்லாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்காக குரல் கொடுக்கும் புரட்சியாள பிம்பமும் சுயதிருப்தியும் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்?


இப்படிக்கு,


தே.அ.பாரி


 









தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2016 10:31

சிறுகதை விமர்சனம் 13

6ஜெ


 


க.நா.சுவின் காலகட்டத்தில் எது சிறுகதை என்பதைப்பற்றி ஒரு தொடர்விவாதம் நடந்தது. அனைவருமே எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு இப்போதுதான் இந்த விரிந்த அளவில் சிறுகதையின் வடிவம் பற்றியும் சிறுகதை எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஒரு பொதுவிவாதம் நிகழ்கிறது என நினைக்கிறேன். மிகமிக முக்கியமான ஒரு இலக்கியநிகழ்வு இது


 


ஆனால் எத்தனைபேர் இதைக்கவனிக்கிறார்கள் என்று பார்த்தால் வருத்தம்தான். சிறுகதைகள் எழுதும் என் நண்பர்கள் பலர் உண்டு. எவருமே வாசிக்கவில்லை. ஆர்வமில்லை. நீளமாக இருக்கிறது என்கிறார்கள்:. ஃபேஸ்புக் போய் பார்த்தேன். ஒருவர் கூட இதைப்பற்றி எழுதவில்லை


 


முந்நூறு காப்பி அச்சிடும் இதழ்களில் எழுதியபோது க.நா.சுவுக்கு இன்னும் அதிகமான கவனிப்பு இருந்திருக்கும்போல


 


பாலசுப்ரமணியம். ஆ


 


அன்புள்ள ஜெ


 


வந்திருக்கும் சிறுகதைகளில் எவருடைய பாதிப்பெல்லாம் இருக்கிறது என்றுபார்த்தேன். தருணாதித்தன் கதைகளில் தி. ஜானகிராமன் பாதிப்பு இருக்கிறது. அதாவது மனிதகுணம் என்னும் கதை அப்படியே தி ஜா பாணி. மற்றபடி பெரும்பாலும் அசோகமித்திரனின் பாணி. மோனிகா மாறன் கதை பழைய உருவகக்கதைகளுக்குரிய மொழி. என் ஆர் தாசன் என்பவர் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். உரைவீச்சு என அதைப்பற்றி அவர் அன்றைக்குச் சொன்னார்.


 


கதைக்குரிய மொழி அல்ல அது. ஒரு வகையான வசனகவிதை. ஆனால் ரொம்பவே ரொமாண்டிக் ஆக உள்ளது. நேரடியான உணர்ச்சிகள் வெளிப்பட்டால் அப்படித்தான் இருக்கும். அவற்றை பிரைவேட் இமோஷன் ஆகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மக்தலீனை அவர் சித்தரித்துக்காட்டவே இல்லை


 


மனோகர்


 


download

சிவா கிருஷ்ணமூர்த்தி


 


 


 


ஜெ


 


வெண்முரசு என்னும் பெரிய படைப்பை நாள் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூடவே கருப்புப்பணம் பற்றிய சண்டையிலும் ஈடுபட்டு 20 பக்கத்துக்கு எழுதினீர்கள். [வாட்ஸப் வழியாக ஒருலட்சம் முறையாவது அது பரவியிருக்கும். என்னுடைய சாதாரணமான நண்பர்களும் உறவினர்களும் எல்லாருமே அதை வாசித்திருக்கிறார்கள்] நடுவே சிறுகதைகளை வாசித்து இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்


 


இந்த ஆறுதொகுதிகளில் உள்ள கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தருணாதித்தன் ஆகிய மூவரும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். சுவாரசியமாக எழுதுவதுதான் முதல் அடிப்படை. எதையும் சுவாரசியப்படுத்துவதும் சுவாரசியத்தை கண்டுகொள்வதும் எழுத்தாளனுக்கு அவசியம். பிற எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.


 


மேலே சொன்ன மூன்றுஎழுத்தாளர்களும் வாழ்க்கையிலுள்ள வேடிக்கையான அல்லது வேறுபட்ட அல்லது கவனம்தரவேண்டிய விசயங்களைத் தொட்டு எடுத்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இந்த அம்சம் இல்லாவிட்டால் அது வாசகனுக்கு முக்கியமில்லை என நினைக்கிறேன்


 


சுனீல் கிருஷ்ணனின் கதை நுட்பமாக எழுத முயர்சிசெய்யப்பட்டது. அதேபோல மோனிகா மாரனின் கதையும். ரெண்டுமே சுவாரசியமான ஒரு விஷயத்தையும் சொல்ல முயலவில்லை. ஆசிரியன் எதை எண்ணி நெகிழ்கிறானோ சிரிக்கிறானோ அதைமட்டும் எழுத முயன்றாலே போதும் என நினைக்கிறேன்


ஆர். கிருஷ்ணமூர்த்தி


 


DSC_3424

சுனில் [நாஞ்சில்நாடனுடன்]


அன்புள்ள ஜெ


 


சிறுகதைகளை வாசித்தேன். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையை உங்கள் குறிப்புக்குப்பின்னர்தான் வாசிக்கமுடிந்தது. முக்கியமான கதை என நினைக்கிறேன். அந்த முடிச்சு ஒரு வலுவான கலரில் இருப்பதனால் அதை மையமாகக்கொண்டு அந்தக்கதையை வாசித்து அது இனவாதம் பற்றிய கதை என்று எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அது அகதிகளின் அன்னியர்களின் அடாப்டேஷன் பிரச்சினைகளைப்பற்றிய கதை.


 


பிரிட்டிஷ்க் கலாச்சாரத்தில் இவர்கள் எதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்., எதை கவனிப்பதே இல்லை என்பதைப்பற்றிய கதை. அங்குள்ள முன்னேறும்வாய்ப்பான கல்வி அரசியல் எல்லாமெ தெரியும் கலாச்சாரம் அறிமுகமே இல்லை. அதைத்தான் இந்தக்கதை சொல்கிறதென நினைக்கிறேன்


 


முக்கியமான கதை. சிவா கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்துவாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்


 


செல்வா முருகேசன்


 


download (1)

அனோஜன் பாலகிருஷ்ணன்


 


அன்புள்ள ஜெ


 


கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளுக்கு ஒரு கதைவீதம். தருணாதித்தனின் கதைகள் நல்ல படைப்புகள். சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் நன்றாகவே உள்ளது.


 


இக்கதைகளின் பிரச்சினை எல்லாருமே சம்பிரதாயமாக எழுத முயற்சிசெய்திருக்கிறார்கள் என்பதுதான். கதைவடிவம் தமிழில் ஆனந்தவிகடன் பாணிக்கதைகளில் வரும் வழக்கமான ரூபத்திலேயே உள்ளது. எந்தப்பரிசோதனையும் செய்யப்படவில்லை. எந்தவகையிலும் கதைகள் மேம்படுத்தப்படவில்லை.


 


ஒருசிறுகதையைக் கொஞ்சநாள் வைத்திருந்து மேம்படுத்தவேண்டும். திரும்ப எழுதி கூர்மையாக ஆக்கவேண்டும். இன்றைய ஃபேஸ்புக் சூழலில் அதைச்செய்யாமல் அப்படியே வலையேற்றிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே ஒரு வகையான பிசிறுகள் இருக்கின்றன. சொல்லாட்சிகளும் நடையும் எல்லாமே பிசிறுகளுடன் மட்டுமே இருக்கின்றன.


 


நல்ல கதை நூறாண்டுக்காலம் நிற்பது. அதை போகிறபோக்கிலே எழுதிவிடக்கூடாது என இவர்கள் உணரவேண்டும். வாசகன் என்பவனை இவர்கள் இப்போதுதான் சந்திக்கிறார்கள். வாசகன் எப்படிக்குரூரமாக இருப்பான் என்பதைப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறே


 


சண்முகம்


 



==============================================================================


சிறுகதைகள் என் பார்வை -1


சிறுகதைகள் என் பார்வை 2


சிறுகதைகள் என் பார்வை 3


==============================================================================


சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி


சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்


சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்


சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி


சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்


சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்


==============================


சிறுகதை விமர்சனம் 1


சிறுக்தை விமர்சனம் 2


சிறுகதை விமர்சனம் 3


சிறுகதை விமர்சனம் 4


சிறுகதை விமர்சனம் 5


சிறுகதை விமர்சனம் 6


சிறுகதை விமர்சனம் 7


சிறுகதை விமர்சனம் 8


சிறுகதை விமர்சனம் 9


சிறுகதை விமர்சனம் 10


சிறுகதை விமர்சனம் 11



சிறுகதை விமர்சனம் 12


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2016 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.