Jeyamohan's Blog, page 1706

December 15, 2016

கன்யாகுமரி கடிதங்கள்

index


 


இனிய ஜெயம்,


கன்யாகுமரி குறித்து, தோழி சுசித்ராவின் கடித வரிசை பிரசுரம் ஆகத் துவங்கி இருக்கிறது. முழுதும் வாசித்து விட்டு வருகிறேன். இருப்பின்ம் அதில் சொல்ல ஒன்றுண்டு.


கதை நேரடியாக ரவி எங்கே உளத் திரிபடைகிறானோ அங்கே துவங்குகிறது. உண்மையில் இன்றைய யதார்த்தத்தில் புது மணத் தம்பதிகளில் எத்தனை மாப்பிள்ளை ”பரிசுத்தமாக” தனது மனைவியை சேர்கிறான்?


ரவியின் படைப்பாற்றலின் உரசலாக விளங்கும் கன்னிமையை ரவியும் கடை பிடிக்கிறான். விமலாவுக்கு முன் பெண் தொடர்புகள் ஏதும் அற்றவன். விமலாவுக்கு தன்னை தூய்மயானவனாகத்தான் தருகிறான்.  முதல் தொடர்பில் பழக்கமின்மையால் முத்தங்கள் கூட தவறுகிறது. பெண்ணுடல் அளிக்கும் பரவசம், சங்கமம் நிகழும் முன்பே அவனை ஆற்றல் இழக்க வைக்கிறது. விமலா மெல்ல நகைத்தபடி ”பரவா இல்ல” என்கிறாள். அங்குதான் ரவியின் முதல் திரிபு நிகழ்கிறது.


தூய்மையாக அவனை அணுகும் ரவியின் பரிசுத்தம் விமலாவுக்கான பரிசல்லவா? அந்தப் ”பரவா இல்லை” ரவிக்குள் ஏளனமாக விழும் என விமலா அறிய வில்லை.அவளும் சிறு பெண் தானே.


பரவா இல்லை என்பதற்கு பதில் , இதைப் புரிந்து கொள்கிறேன். உன் பரிசை ஏற்றுக் கொள்கிறேன் என அவள் அவனுக்கு உணர்த்தி இருந்தால் ரவி அடையும் அந்த இறுதி இழப்பு அவனுக்கு நேர்ந்திருக்காது.


யோசித்துப் பார்த்தால் உலகில் நிகழும் அத்தனை வன் புணர்வு குற்றவாளிகளையும் இந்த ”முதல் சரிவு” உளவியலுக்குள் கொண்டு வந்து விட முடியும். ஆம் இங்கே பெண்ணுக்கும் புரிதல் வேண்டும்.


கடலூர் சீனு


*


அன்புள்ள ஜெ


கன்யாகுமரி நாவலைப்பற்றி சுசித்ராவின் வாசிப்பு அற்புதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து அந்நாவலுக்கு இப்படி ஒரு விரிவான வாசிப்பு நிகழுமென நீங்களே கூட எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள். 1998ல் வெளிவந்த நாவல் அது. விஷ்ணுபுரத்திற்குப்பின் ‘இளைப்பப்றுவதற்காக’ நீங்கள் எழுதிய நாவல் அது என்று சொன்னிர்கள். அதுவே அந்நாவலைக்கொஞ்சம் கீழே கொண்டுவந்துவிட்டது வாசகர்களின் பார்வையில் என நினைக்கிறேன். ஆனால் அன்றே நான் உங்களுக்கு அந்நாவல் முக்கியமான படைப்பு என்று கடிதம் எழுதியிருந்தேன். அது காமம் ஆணவம் இரண்டுக்கும் இடையே உள்ள ஊடாட்டத்தைப்பற்றிப்பேசும் முக்கியமான நூல். காமகுரோதமோகம் என்றுதான் நம் மரபு சொல்கிறது. மூன்று அழுக்குகளும் ஒன்றாகக் குடியிருக்கும் ஒரு உள்ளத்தின் சித்திரம். மூன்றும் சேர்ந்து எப்படி மனிதமனங்களை நெசவுசெய்திருக்கின்றன என்று காட்டுவது அந்நாவல்


சண்முகம்


***


அன்புள்ள ஜெ


வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நாளில் உங்கள் மற்ற ஆக்கங்கள் எல்லாமே கிட்டத்தட்ட மறைந்துபோய்விட்டன. நான் ஒருமுறை ஒரு சந்திப்பிலே சொன்னேன். ஜெமோ கன்யாகுமரி மட்டுமே எழுதியிருந்தால் அவரை அதைவைத்தே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சொல்லியிருப்பார்கள். இன்றுகூட கன்யாகுமரிக்குச் சமானமான  உளவியல் ஓட்டம் கொண்ட ஒரு படைப்பை ஓர் இளம்படைப்பாளி எழுதியிருந்தால் அவரை கொண்டாடியிருப்பார்கள் என்று. அத்தனை வாசிப்பு நுண்மைகள் கொண்டது அது.


சுசித்ரா அதை கொற்றவை உட்பட உங்கள் அனைத்துப்படைப்புகளையும் எடுத்துக்கொண்டு பேசியிருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது


சரவணன்

தொடர்புடைய பதிவுகள்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
கடிதங்கள்
கன்யாகுமரி
கன்யாகுமரி- கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2016 10:32

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2

HS_Shivaprakash


 


இத்தருணங்கள் அழியாமல்


இருக்க வேண்டும் ….


 


அழியாமல் இருக்க வேண்டும்


இத்தருணங்கள்


குன்றின் உச்சியில்


மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும்


சிலைபோல இருக்கும் பாறைகள்


நீலம் பச்சை நடுவில்


ஜோடி வானவில்கள்


ஜோடிக் குருவிகளே


வானைத் துளைத்து பாடிப்பறங்கள்


பறவை மொழியைக் கற்ற சாலமன்


இப்போது சக்ரவர்த்தி


அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள்


தாளமற்ற ஆட்டம்


மேளமற்ற பாட்டு


துடிக்கும் இதயம் சொல்கிறது


குன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள்


மேகத்துக்கு மின்னல் கத்தி


ஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல்


வாட்டமறியாத வளத்தவறே


ஜோடிக்குருவிக் கூட்டங்களே


வானம் நோக்கித் தாவுங்கள்


தரையில் எங்கும் பரவுங்கள்


காற்றைப் போல


காலம் நிறம் கண்கள் இறகு


பொதிந்த காற்றைப் போல


அழியாமல் இருக்க வேண்டும்


தாளமற்ற ஆட்டம்


மேளமற்ற பாட்டு


ஒவ்வொரு நொடியும்


 


interview_shivaprakash


நீ இல்லையென்றால்



எனக்குத் தெரியும்

இத்தோட்டத்துப் பூக்கள் மலர்வது


நீ இல்லையென்று நிற்பதில்லை


 


ஒன்றன்பின் ஒன்றாக வண்ணத்துப் பூச்சிகள்


கணநேரம் பூக்களில் அமர்ந்து பறப்பதும்


நிற்பதில்லை


நீ இல்லையென்று


 


எனக்குத் தெரியும்


சந்தைக்குப் போகும் இத்தோட்டத்துப்பூக்கள்


நீ உள்ளாய் என மறுப்பதும் இல்லை


அல்லது


சாவென்னும் பூனை


வண்ணத்துப் பூச்சிகளை


தின்னவருவதும் தடைபடுவதில்லை


நீ உள்ளாய் என.


 


இதற்கு பின்னும்


காற்றுக்கு நறுமனம் கொடுக்கும் பூக்கள்


என் உயிராவதில்லை


வெளிச்சத்தில் சிதறிய பூவின் வர்ணம்


என் விழிகளை கவர்வதுமில்லை


சந்தைக்கே கிட்டாத ஒரு பூ


இவ்வுலகத்தில் எஞ்சுவதுமில்லை


 


இவை எல்லாவற்றிற்கும்


நீ இல்லையென்றால் அர்த்தமே இல்லை.


 

 index





நினைவு

முதலிரவுக்கு முன்பு ஐந்து ரோஜாக்களைப்


பறித்துச் சூடியது நினைவிலுள்ளதா


முதல் தழுவலில் உருகிய இன்பம்


கூந்தல் கருமைபோல் கரைந்தது


இப்பொழுது தலையை நிரைக்கும் நரை


கணவன் இறந்த தினம்


அழிந்தது குங்குமச் சந்திரன்


அதற்கப்புறம் பற்பல முறைகள்


வானத்தில் சந்திரன் வந்ததும் போனதும்


உலர்ந்த நெற்றிக்கோ குங்குமத்தின் நினைவில்லை


இறங்கி சரிந்த நரைமுடி போல


சிற்சில சமயங்களில் அதிகாலைப் பனி


அதிகாலைப் பனிபோல தெளிவற்ற நினைவு


மறதியோ காலக் கொம்பு.


****


தமிழில் : பாவண்ணன்


மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவப்பிரகாஷ்


எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2016 10:32

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58

[ 21 ]


மாதலியே தன்னை இந்திரமாளிகைக்கு அழைத்துப்போக வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னபோது அர்ஜுனன் திகைப்புடன் எழுந்துவிட்டான். “அவர் காத்துநின்றிருக்கிறாரா?” என்று கேட்டபடி அவன் அறையைவிட்டு வெளியே செல்ல உடன் வந்த கந்தர்வ சமையப்பெண்கள் “இளையவரே, இன்னும் அணிகள் முடியவில்லை” என்றனர். “போதும்” என்று அவன் சொன்னான். “இந்த மணிகள் மட்டும்” என்றாள் ஒருத்தி. “கால்நகங்களில் ஒன்றில் ஒளி குறைந்துள்ளது, சற்றுநேரம்…” என்றாள் இன்னொருத்தி. “போதும்” என அவர்களை விலக்கியபின் அவன் வெளியே நடந்தான்.


படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தபோது அங்கே உச்சிக்கதிரொளிபட்ட சுனைபோல இந்திரனின் ஒளிபரவும் தேர் வந்து நின்றிருப்பதை கண்டான். கூப்பிய கைகளுடன் அதை நோக்கி சென்றான். மாதலி தேர்த்தட்டிலிருந்து இறங்கி “வருக மைந்தா, உனக்காக அரசர் காத்திருக்கிறார்” என்றான். “தாங்களே வரவேண்டுமா, எந்தையே?” என்றான் அர்ஜுனன். “நானே வரவேண்டுமென்பது அரசரின் ஆணை. அவருக்கு இருக்கும் இடம் உனக்கும் அளிக்கப்பட்டாகவேண்டுமென்று சொன்னார்” என்றபின் மாதலி ஏறிக்கொண்டான். அர்ஜுனன் தேர்த்தட்டில் ஏறி அமராமல் நின்றுகொண்டான்.


தேர் அமராவதியின் தெருக்களினூடாகச் சென்றது. அர்ஜுனன் அதன் விரைவின் வழியாக படிப்படியாக இயல்பானான். “என்னிடம் ஏதேனும் சொல்லச் சொன்னாரா அரசர்?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் அதை சொல்லப்போவதில்லை” என்றான் மாதலி. “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “நான் உணர்வதை சொல்லவேண்டும், எனக்கு ஆணையிடப்பட்டதை அல்ல. அதற்கான தருணம் அமையட்டும்” என்றான் மாதலி சிரித்தபடி. அர்ஜுனனும் பணிவுடன் சிரித்து “சொல்லுங்கள், காத்திருக்கிறேன்” என்றான்.


தேர் இந்திரனின் அரண்மனையின் தேர்முற்றத்தில் சென்று நின்றது. கந்தர்வ ஏவலர் ஓடிவந்து புரவிகளை பற்றிக்கொண்டனர். அர்ஜுனன் இறங்கியதும் மாதலி அருகே வந்து அவன் தோளில் கைவைத்து “வருக மைந்தா” என்றபின் முன்னால் நடந்தான். படிகளில் ஏறி பெருந்தூண்கள் நிரைவகுத்த இடைநாழியினூடாக நடக்கையில் அர்ஜுனன் அது அரசவைக்கூடத்திற்குச் செல்லும் வழிபோல இல்லை என எண்ணிக்கொண்டான். அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல அவன் “நாம் அரசரின் மஞ்சத்தறைக்கு செல்கிறோம்” என்றான் மாதலி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அவர் உன்னிடம் பேசவிழைகிறார். இருவரும் இணைந்து அவைநுழையவேண்டுமென எண்ணுகிறார்.”


அர்ஜுனன் அணிச்சொற்களுக்காக நெஞ்சைத் துழாவி அவை அமையாமல் நேரடியாக “அவர் என்னிடம் ஏதேனும் வாக்குறுதியை பெறவிழைகிறாரா என்ன?” என்றான். மாதலி புன்னகைத்தான். “அவர் எனக்கு ஆணையிடலாம். ஆனால் என்னைக் கடந்தவற்றை ஆணையிட இயலாது” என்றான் அர்ஜுனன். மாதலி அதற்கும் புன்னகை புரிந்தான். படிகளில் ஏறி இடைநாழியினூடாகச் சென்று சிற்றவைக்கூடத்திற்குள் நுழைந்தனர். “இந்திரமைந்தனின் வரவை அறிவி” என்று அங்கிருந்த கந்தர்வனிடம் மாதலி ஆணையிட்டான். அவன் சென்று அறிவித்து மீண்டுவந்து கதவை மெல்லத்திறந்து “அவர் அறைநுழையலாம்” என்றான்.


அர்ஜுனன் கைகூப்பியபடி திறந்த கதவினூடாக உள்ளே சென்றான். ஒளிகொண்ட வெண்முகில்கள்போல பளிங்குச்சுவர்கள் மின்னிக்கொண்டிருந்த அறையில் இடப்பட்ட நான்கு பீடங்களில் ஒன்றில் இந்திரனும் அருகே பாலியும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே இந்திராணி நின்றிருந்தாள். அர்ஜுனன் அருகணைந்து இந்திராணியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவள் “வெற்றியும் புகழும் திகழ்க! மெய்மை கைவருக!” என வாழ்த்தினாள். “நீ நகர்சுற்றி வருவதை இருமுறை கண்டேன். உன் விழிகள் இளமைந்தர் விழிகள் போலிருந்தமை கண்டு நகைத்தேன்” என்றாள். அர்ஜுனன் “இங்கு இளமை மட்டுமே உள்ளது, அன்னையே” என்றான்.


இந்திரன் தலைகுனிந்து அவனை நோக்காமல் அமர்ந்திருந்தான். அவன் அருகே சென்று கால்தொட்டு வணங்க அவன் தலையை மட்டும் தொட்டான். அவன் பாலியை வணங்கியபோது அவன் வாழ்த்தென ஏதோ சில சொற்களை முனகியபடி அவனை தலைதொட்டு வாழ்த்தினான். அவன் கைகட்டி அருகே நின்றுகொண்டான். “அமர்க!” என்றான் இந்திரன். “இல்லை” என்று அர்ஜுனன் சொல்லப்போக “இது அவை. இங்கு அமரலாம்” என்றான் பாலி. அர்ஜுனன் அமர்ந்தான்.


அவர்கள் எதற்காகவோ காத்திருந்தனர். காற்றிலாது அசைவிழந்த சுடர்கள் போல இருவரும் தோன்றினர். அர்ஜுனன் அவர்கள் சொல்கொள்வதற்காக காத்திருந்தான். பாலியின் உடலில் மெல்லிய அசைவு தோன்றியதும் ஆடிப்பாவையென இந்திரனும் அசைவுகொண்டான். பாலி “தந்தை உன்னிடம் நேரடியாகவே பேசவிழைகிறார், இளையோனே” என்றான்.


“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். இந்திரன் விழிதூக்கி அர்ஜுனனை சிலகணங்கள் நோக்கியபின் “நீ என் மைந்தன் என்பதனால் இச்சொற்கள். நான் எவரிடமும் எதையும் வேண்டுவதில்லை” என்றான். “நீங்கள் ஆணையிடலாம், தந்தையே” என்றான் அர்ஜுனன். “நீ உன் தோழனை கைவிட்டாகவேண்டும். அதுவே என் ஆணை” என்றான் இந்திரன். சிலகணங்கள் அர்ஜுனன் சித்தமும் செயலற்றிருந்தது. பின்னர் கைகூப்பியபடி “அது என்னால் இயலாது, தந்தைப்பழிகொண்டவனின் நரகத்தில் முடிவிலாக்காலம் வரை உழன்றாலும்” என்றான்.


“நீ என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா, மூடா?” என்று கூவியபடி பாலி எழுந்தான். “மைந்தா, அமர்க! அவர் சொல்லவேண்டியதை சொல்லட்டும். நாம் பேசுவதற்காகவே இங்கே அவனை அழைத்தோம்” என்றாள் இந்திராணி. பாலி அச்சொல்லுக்கு அடங்கி அமர்ந்தான். “மைந்தா, அவன் அங்கிருப்பது ஓர் எளிய யாதவனாக அல்ல. முடிவில்லாத ஒரு மணிமாலையின் ஒரு அருமணி அவன். அவன் மண்ணில் வாழும் அனைவரையும் தன் காய்களாகக் கொண்டு பெரும் பன்னிருகளம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கிறான். அதை உன்னிடம் சொல்லவே முனிவர்களை அனுப்பினேன்” என்றான் இந்திரன். “ஆம், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான்.


“அதன்பின்னருமா இதை சொல்கிறாய்? நீ அறிவாயா மகாவஜ்ரமென்றால் என்னவென்று? போர்கொண்டெழுந்த இந்திரனின் வேதம். இந்திரன் எவருடன் கொண்ட போர் அது என அறிவாயா?” என்று பாலி கூவினான். தசைகள் நெளிய பெரிய கைகளை உரசியபடி “எதிர்நின்று அறைகூவுவது யார் தெரியுமா? அவர் பக்கம் நின்று நீ பேசுகிறாய். சொல், உன் தந்தையின் நெஞ்சுக்குநேராகவா எழப்போகிறது உன் வாளி?” இந்திராணி “மைந்தா, நீ அமர்க! உன் தந்தை அவர் சொற்களை சொல்லட்டும்” என்றாள். பாலி மீண்டும் அமர்ந்தான். இந்திரன் “அவன் சொல்வதைத்தான் நானும் சொல்லவிழைகிறேன், இளையவனே” என்றான். “நான் என் மின்படைக்கலத்தை ஏந்தியபடி போருக்கெழுந்து நின்றிருக்கும் தருணம் இது. எதிர்நிற்பவன் உன் தோழன்.”


பலமுறை கேட்டிருந்தபோதிலும் அவர் வாயால் அதை கேட்க அர்ஜுனன் உடல் சற்று சிலிர்த்தது “மண்ணில் மாகேந்திரம் தோற்கடிக்கப்பட்டது. எஞ்சி அங்கு தங்கும்பொருட்டு மகாவஜ்ரம் போராடிக்கொண்டிருக்கிறது. நீ அறியமாட்டாய், அங்கு எவ்வேள்வியிலும் இன்று எனக்கு முதல் அவி இல்லை. முதன்மை இடமும் இல்லை. அங்கிருந்து பெய்யும் அவியே இங்கு அமுதமென மழைக்கிறது என்று அறிந்திருப்பாய். இந்நகரம் சிறுத்துக்கொண்டிருக்கிறது. என் குடிகள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஒளிமங்குகின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான் இந்திரன். சினம் அனல்கொள்ளச்செய்த முகத்துடன் “ஆனால் போராடிக்கொண்டே இருப்பவனுக்குரியது இந்திரநிலை. இதையும் போராடி வெல்வேன் என்பதில் ஐயமில்லை” என்றான்.


அர்ஜுனன் இந்திரன் சொல்லிமுடிப்பதற்காக காத்திருந்தான். “வேதப்பாற்கடல் கடைந்து அமுதெடுக்கப்போகிறான் அவன் என்கின்றனர் அவனைப்போற்றும் முனிவர். நஞ்செழாது அமுதில்லை என்றும் அவர்கள் அறிந்திருப்பார்கள். மைந்தா, அங்கு நிகழவிருப்பது பெரும் குருதிக்கொந்தளிப்பு. அங்குதிகழும் சொல்லை வெல்ல தன் மெய்யறிதலே போதும் என அவன் அறிந்திருப்பான். களம் நின்று வெல்ல உன் கைவில் வேண்டும் என்று உணர்ந்திருப்பதனால்தான் உன்னை தன் நண்பன் என கொண்டிருக்கிறான். நீ அவனுடனிருக்கையில் அவனே வெல்வான். அவன் சொல் அங்கு நிற்கும். அது மகாநாராயண வேதமென்று அங்கே வாழும்.”


“அவன் செல்வது வேதத்திற்கும் அப்பால் உள்ள மெய்மையை.” என்றான் இந்திரன். அர்ஜுனன் அவன் விழிகளை நோக்காமல் “ஆம், வேண்டுவனவற்றை கெஞ்சியும் அடம்கொண்டும் தந்தையிடம் பெறுபவர் மைந்தர். அவர் சித்தம் முதிர்ந்து தந்தையை அறியமுயல்வதும் இயல்பே என்று என்னிடம் சொன்னார்” என்றான். இந்திரன் உரத்தகுரலில் “மூடா, ஒவ்வொரு கூழாங்கல்லிலும் உள்ளது முடிவின்மையே. முடிவிலியின் பாதையை திறப்பவனுக்கு இன்பங்களென்று ஏதுமில்லை. அவனுக்கு வாழ்வே இல்லை” என்றார். “ஆம், முடிவிலியை அறிந்தவன் தானே முடிவிலியென்றாகிறான்” என்றான் அர்ஜுனன்.


இந்திரன் தளர்ந்து கைகளை விரித்தான். பின்னர் நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்து “இளையவனே, வெயிலொளியை பளிங்குருளையால் குவிப்பதுபோல அவன் வேதவிரிவை ஒற்றைமெய்மையென்றாக்குகிறான். அது சுடர். எரித்தழிப்பதும் கூட. அவன் வென்றால் பாரதவர்ஷத்தில் ஊழிக்காலம் வரை அம்மெய்மையே நின்றிருக்கும். மைந்தா, அது கூர்வாள் என என் புகழை வெட்டிச்செல்லும்” என்றான் இந்திரன். “ஏனென்றால் மாகேந்திரம் விழைவுகொண்டோரின் வேதம். மகாவஜ்ரம் வென்று எழுபவன் வேதம். அவன் சென்றடையும் வேதமெய்ப்பொருளோ அடைவதற்கும் இழப்பதற்கும் நடுவே, வெல்வதற்கும் வீழ்வதற்கும் அப்பால் விழித்திருக்கும் ஒரு நோக்கு மட்டுமே.”


“அவன் சிப்பியில் முத்தெடுப்பதுபோல அவ்வேதமெய்ப்பொருளை எடுக்கிறான்” என்றான் பாலி. “ஆண்டாண்டுகாலம் வேதத்தின் உள்நின்று உறுத்தியது. வேத உயிர்சூடி ஒளிகொண்டது. இளையோனே, அதை எடுத்தபின் வேதம் வெறுங்கலமே.” அர்ஜுனன் “கதிர்முதிர்ந்தபின்னரும் நிலம் வளத்துடன் எஞ்சுவதே வழக்கம், மூத்தவரே” என்றான். பாலி உரக்க “வீண் சொல் வேண்டாம்!” என்று கூவினான். அர்ஜுனன் முகத்தருகே தன் முகம் வர அணுகி சினத்தால் சுளித்த முகம் அருகே அசைய, இரைக்கும் மூச்சு அவன் மேல் வெம்மையுடன் படர “திசைத்தேவர்களின் வேதமே மகாவஜ்ரம். நீ திசைத்தேவர்களை அணுகி படைக்கலம் கொண்டாய். அவர்கள் உன்னை எந்தையின் இளையமைந்தன் என்றெண்ணியே அருள்புரிந்தனர். இன்று அப்படைக்கலங்களுடன் நீ எந்தைக்கு எதிராக கிளம்புகிறாய்” என்றான்.


அவனை அடங்கும்படி கையசைத்து விலக்கியபின் இந்திரன் சொன்னான் “மைந்தா, சூரியன் எங்கள் தோழன். மகாநாராயணம் மண்நிகழத் தொடங்கியதுமே விண்ணகத்தேவர்கள் ஒருங்கிணைந்துவிட்டோம். என்குலத்தான் இவன். சூரியனின் மைந்தன் இவன் இளையோன் சுக்ரீவன். அந்த யுகத்தில் இவர்கள் பிரிந்து போரிட்டு அழிந்தனர், அவன் வென்றான். இந்த யுகத்திலும் அது நிகழலாகாது. இன்று மண்ணில் உன்னுடன் இருக்கும் அவன் மைந்தன் உன் உடன்பிறந்தான். அவனையே உன் முதல்வன் எனக் கொள்க! அவனும் நீயும் இணைந்தால் உன் தோழன் என வந்தவன் வெல்ல முடியாது. அவன் எண்ணும் வேதமுடிவும் மண்நிலைக்க முடியாது.”


இந்திரன் குரல் தழைந்தது. “மைந்தன் என்பதனால் உன்னிடம் நான் மன்றாடுவதும் பிழையல்ல. இத்தருணத்தில் இது ஒன்றே நான் உன்னிடம் கோருவது. இதை நீ ஏற்றால் மண்ணில் ஒரு பெரும்போர் தவிர்க்கப்படும். போரில் உனக்கு களமெதிர்நிற்கப் போகிறவர்கள் உன் உடன்பிறந்தார். உன் முதுதந்தையர், உன் ஆசிரியர்கள். நேற்றுவரை உன் சுற்றமென்றிருந்தவர். உன் கொடிசூடி உனக்குப்பின் படைநிரையென வந்தவர். அவர்களின் குருதிமேல் நடந்துசென்றே நீ வெல்ல முடியும்.” அர்ஜுனன் திகைத்து அமர்ந்திருந்தான். பாலி “பல்லாயிரம் கைம்பெண்கள், பல்லாயிரம் ஏதிலிமைந்தர், பல்லாண்டுகாலம் ஓயா விழிநீர். இளையவனே, அவை மட்டுமே எஞ்சும் உனக்கு” என்றான்.


அர்ஜுனன் தலைகுனிந்தான். அவன் உடல் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தது. “அழிவது அவர்கள் மட்டும் அல்ல. உன்குடியும்தான். இதோ சொல்கிறேன், உன் மைந்தர் களத்தில் நெஞ்சுபிளந்து விழுந்து துடித்து இறப்பார்கள். உன் நகரம் எரிஎழுந்து கரிமூடும்” என்று பாலி முழங்கும் குரலில் சொன்னான். “அனைத்துக்கும் அப்பால் உள்ளது ஒன்று. இளையோனே, போர்கொண்டு செல்லும் அரசனை தோல்விக்குப்பின் மூத்தவள் கையில் ஏந்திக்கொள்கிறாள். வென்றால் அவன் நெஞ்சில் இளையோள் குடிவருகிறாள். ஆனால் அவ்விளையோள் அறியாது உருமாறி மூத்தவளாக ஆவாள். நுனிக்கால் ஊன்றி நிற்க நிலமில்லாதாகும், வெறுமையே எஞ்சும்.”


கைசுட்டி பாலி சொன்னான் “உலராத உதிராத விழிநீருடன் நீ அந்நிலமெங்கும் அலைந்து திரிவாய். ஒவ்வொரு சொல்லும் பொருளழிந்து வெறும்கூடாகும். ஒவ்வொரு நம்பிக்கையும் பொய்யென்றாகும். ஒவ்வொரு உறவும் நடிப்பெனத் தெரியும். இளையவனே, அவ்வெறுமையில் இறந்தகாலம் எழுந்து வந்து நிறையும். இழப்புகள் பெருகும். துயர்கள் மேலும் இருளும். கணங்கள் எடைகொண்டபடியே செல்லும். மண்ணில் மானுடருக்கு அளிக்கப்படும் பெருநரகுகளில் அதுவே முதன்மையானது. உனக்கென அங்கே காத்திருப்பது அது.”


அர்ஜுனன் மீண்டும் உடல் விதிர்த்தான். பாலி இருகைகளையும் தட்டியபடி உரக்க “சொல், மூடா! விலகினேன் என்று சொல்! உன் கடன் மகாவஜ்ரத்துடன் மட்டுமே என்று சொல்!” என்றான். அர்ஜுனன் அசையா விழியிமைகளுடன் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தான். “நோக்கு… விழிகொண்டே நோக்கு. இதோ!” என்று பாலி கூவினான். “மைந்தா, இது நெறியல்ல” என்று சொல்லி இந்திரன் எழுந்தான். அதற்குள் விழிதூக்கிய அர்ஜுனன் தன்முன் பெரும்போர்க்களம் ஒன்றை கண்டான்.


வெட்டுண்டு சிதறிக்கிடந்த உடல்களை உதறி உதறிப் பிரிந்து மேலெழுந்த உயிர்களை அவன் கண்டான். ஊனுடல்கள் பொருள்வயின் பிரியும் தந்தையரை அள்ளிப்பற்றிக் கதறும் இளம்பைதல்கள் என அவ்வொளித்தோற்றங்களை நோக்கி எம்பியும் தாவியும் துள்ளின. உதறப்பட்டதுமே பொருளிழந்து குருதிநனைந்த மண்ணில் விழுந்து தவித்து மெல்ல அமைந்தன. அவற்றுக்குமேல் துயர்நிறைந்த விழிகளுடன் நின்ற உயிர்வடிவங்கள் கைகள் தவிக்க கால்கள் பதற அவ்வுடல்களையே சுற்றிவந்தன. குனிந்து அவற்றுக்குள் மீண்டும் நுழைய முயன்றன சில. அவ்வுடல்கள் மெல்லிய உதைபட்டதுபோலவோ உள்நாண் ஒன்று அறுபட்டதுபோலவோ விலுக்கிட்டன.


அவை இனி தங்களை உள்நுழையவிடாத வெறும் தசைக்கூடுகள் என உணர்ந்த உயிர்கள் தவித்தபடி மேலே எழுந்தன. கைகளால் அவ்வுடல்களை தழுவித்தழுவி ஏங்கின. எழுந்து பிறிதொரு உடலருகே சென்று அங்கு அவ்வுடலைத் தழுவி அமர்ந்திருந்த இன்னொரு உயிர்வடிவை தழுவிக்கொண்டது அதன் தந்தை என்று அர்ஜுனன் உணர்ந்தான். மைந்தரைத்தேடிப் பதைத்து அலைந்தன உயிர்கள். இன்னும் இறக்காது துடித்துக்கொண்டிருந்த உடல்களுக்குள் மைந்தரைக் கண்டு அவர்களைப் பற்றி வெளியே இழுத்தன. தோழர்கள் இறந்துகொண்டிருக்க அருகே அமர்ந்து காத்திருந்தன சில உயிர்கள்.


காற்றை உதைத்து உதைத்து தளர்ந்த கால்கள் அசைவிழக்க உடல்களில் இருந்து விடுபட்டெழுந்த புரவிகள் கால்களை உதறி உதறி புதிய வெளியை புரிந்துகொண்டபின் சுழற்றப்படும் ஆடியின் ஒளியென ஓசையற்று சுழன்று விரைந்தன. களிறுகள் நீள்மூக்கின் நுனியைத் துழாவி மணம்பற்ற விழைந்தன. அவை அறிந்த புது மணத்தால் திகைத்து துதிக்கை சுருட்டி மத்தகம்மேல் அறைந்து ஓசையின்றிப் பிளிறின. ஓடி அமைந்த புரவிகள் இறகுக்கீற்றுகளாக காற்றில் மிதந்து உருப்பிரிந்தன. பெரிய துளிகளாக திரண்டு அசைவற்று நின்றன யானைகள்.


அந்தி அணைந்துகொண்டிருந்தது. பல்லாயிரம் பாடிவீடுகளில் வெட்டுண்டும் குத்துண்டும் புண்பட்டிருந்த வீரர்களை அள்ளி நிரையாக மண்ணில் கிடத்தியிருந்தனர். மாணவர்கள் மருந்துப்பேழைகளுடன் உடன் வர அவர்களைநோக்கிச் சென்ற மருத்துவர்களை நோக்கி கைகூப்பி கதறி மன்றாடினர். அவர்கள் சுண்ணக்குறியிட்ட வீரர்களை மட்டும் தூக்கி துணிமஞ்சலில் ஏற்றி ஆதுரசாலைகளுக்குள் கொண்டுசென்றனர் வீரர். எஞ்சியவர்கள் கதறினர். கண்ணீருடன் மன்றாடினர். இளமருத்துவர்கள் அவர்களின் புண்வாய்களைத் திறந்து நச்சுருளைகளை வைத்து மூடிக்கொண்டனர். நஞ்சு உடலில் பரவ அவர்களின் உடல் ஒளியிழந்தது. விழிகள் பிதுங்கித்தெறிக்க துடித்து அசைவழிந்தன.


இதழ்களில் எஞ்சிய சொற்களுடன் சிலைத்துக்கிடந்த அவர்களை இழுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த வண்டிகளில் முன்னரே அடுக்கப்பட்டிருந்த பிணங்களுடன் ஏற்றினர். எடைகொண்டு உடலழுந்த அப்போதும் இறக்காதிருந்த ஒருவன் முனகி அழுதான். பிணவண்டியில் ஏற்றப்படும்போது ஒருவன் ஏற்றும் வீரனொருவனின் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கிய உடலுடன் இறுதிச்சொல்லை ஊழ்கநுண்சொல் என மீண்டும் மீண்டும் வெறிகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.


பிணங்கள் செறிந்த வண்டிகள் ஓடிய களமெங்கும் உடல்கள் விரிந்துகிடந்தன. நீண்ட ஈட்டிகளுடன் களம்புகுந்த வீரர்கள் சாவுப்புண்கொண்டு துடித்துக்கொண்டிருந்தவர்களை நெஞ்சில் குத்திக் கொன்றனர். அவர்களிடமிருந்து எழுந்த உயிருடல்கள் குத்துபவர்களைச் சூழ்ந்துகொண்டு சினந்து கைநீட்டி துள்ளின. அவர்களை அறைந்தும் கடித்தும் தாக்கின. அந்தக்குளிரை உணர்ந்து அவர்கள் உடல் சிலிர்த்தனர். தங்கள் ஆடை பற்றி இழுப்பது காற்று என எண்ணி கைகளால் இழுத்து உடலுடன் செருகிக்கொண்டனர்.


அவன் துரோணரைக் கண்டான். வெட்டி அகற்றப்பட தலைகொண்ட வெற்றுடலுடன் தேருக்குக் கீழே கிடந்தார். அவர் மூச்சுக்குழாய் நீண்ட செந்நிறக்கொடி என கழுத்திலிருந்து நீண்டு மண்ணில் கிடந்தது. உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க வான்நோக்கிக் கிடந்த பீஷ்மரைக் கண்டான். புயல்கடந்த நிலத்தில் இளமரங்கள் என செத்துக்குவிந்திருந்த இளைய கௌரவர்களின் உடல்களைக் கண்டான். கௌரவ நூற்றுவரையும் கண்டுவிட்டான். நெஞ்சு பிளந்துகிடந்த துச்சாதனன் எழுந்து தன் உடலை நோக்கியபடி நின்றிருந்தான். தொடைசிதைந்துகிடந்த உடலைச்சுற்றி வந்து பெருஞ்சினத்துடன் கைகளை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான் துரியோதனன்.


அவன் கர்ணனைக் கண்டான். தேர்த்தட்டின் அடியில் புதைந்த சக்கரத்தில் சாய்ந்து இறந்து அமர்ந்திருந்த அவனுக்கு மேல் ஒளிகொண்ட உயிருடல் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றது. அவனை திரும்பி நோக்கியபோது அதன் விழிகள் ஒளிகொண்டன. புன்னகையுடன் கைநீட்டி “இளையோனே” என்று அவன் அழைத்தான். “மூத்தவரே, நீங்கள் அறிவீர்களா? என்னை அறிந்திருந்தீர்களா?” என அவன் நெஞ்சுடையும் ஒலியுடன் கேட்டான். “ஆம், நன்கறிந்திருந்தேன். நீ என் உளம் கனியச்செய்யும் இளையோன். உன்னைக் கொல்லாதொழிந்த என் வாளியை எண்ணி எண்ணி எத்தனை முறை மகிழ்ந்தேன்.” அர்ஜுனன் “மூத்தவரே” என்று தேம்பினான். கர்ணன் கனிவுடன் நோக்கி “வருந்தாதே. இது வெறும் கனவு” என்றான்.


ஏதோ சொல்ல வாயெடுத்தவன் ஓர் உறுத்தலுணர்வை அடைந்து அது எண்ணமென்றானதும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். இருகைகளையும் விரித்துக்கொண்டு ஓடி வீழ்ந்துகிடந்த அபிமன்யூவை நோக்கினான். தலை ஒரு குருதிக்குமிழியாக வெடித்துச் சிதறியிருக்க இருகைகளையும் விரித்து மல்லாந்துகிடந்தான். அவன் இளங்கால்கள் இருபக்கமும் விரிந்திருந்தன. கவசம் அகன்ற மார்பில் சரிந்துகிடந்தது மணியாரம். கங்கணங்களில் ஒன்று உதிர்ந்திருந்தது. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான்.


அவனருகே குளிரென ஓர் இருப்பை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கினான். அபிமன்யூவின் மூச்சுடல். “அங்கே இளையவர்களும் மூத்தவர்களும் எரிந்துகொண்டிருக்கிறார்கள், தந்தையே.” அர்ஜுனன் இல்லை என்பதுபோல் தலையசைத்தான். “அழுதபடி அன்னையும் அரண்மனை மகளிரும் வந்துகொண்டிருக்கிறார்கள்…” அர்ஜுனன் “வேண்டாம்… நான் நோக்கமாட்டேன். நான் விழிதூக்கமாட்டேன்” என்றான். “முற்றழிவு… எஞ்சுவது அதுமட்டுமே” என்றான் அபிமன்யூ. “அரண்மனையில் உத்தரையின் கருவுக்குள்ளும் புகுந்துவிட்டது நஞ்சு. என் மைந்தன் துடித்தணைவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “வேண்டாம், பார்க்கமாட்டேன்” என்று கூவினான்.


“இதுதான் நிகழவிருப்பது” என்றான் இந்திரன் ஆழ்ந்த குரலில். கண்ணீருடன் கூப்பி நெஞ்சில்பதித்த கைகள் நடுங்கிக்கொண்டிருக்க நின்றிருந்த அர்ஜுனன் கால் தளர்ந்து பீடத்தில் விழுந்து அமர்ந்தான். “இதற்காகத்தான்…” என்றான் இந்திரன். அர்ஜுனன் அறியாது விம்மிவிட்டான். “மைந்தா, இதை நீ தவிர்க்கமுடியும்” என்று இந்திரன் சொன்னான். “இக்கணம் நீ எடுக்கும் முடிவு இக்குருதியை தடுக்கும், அதற்கு நான் உறுதியளிக்கிறேன்,” அர்ஜுனன் “இவை எங்கு நிகழ்கின்றன?” என்றான். “எதிர்காலத்தில். அது ஒவ்வொரு கணமும் அணுகிவருகிறது” என்றான் பாலி. “மூத்தவரே, அவர் இதை அறிவாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். இந்திரன் “நன்கறிவான். அவன் மைந்தரும் குலமும் நகரும் இதைப்போலவே அழியும் என்பதையும் அறிவான்” என்றான். வலிகொண்டவன் போல அர்ஜுனன் மெல்ல முனகினான்.


“அவன் அனைத்தையும் கண்முன்னிலென பார்த்துக்கொண்டிருக்கிறான். அதன் இருளால் சூழப்பட்டிருக்கிறான்” என்றான் இந்திரன். “இங்கிருந்து மாயம் நிகழ்த்தும் கந்தர்வர்களையும் வருவதுரைக்கும் முனிவர்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் அச்சித்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். அவ்விருளை அவன் கடக்கலாகாதென்று விழைகிறோம். கடப்பான் என்றும் அதன்பொருட்டே எழுந்தருளியவன் அவன் என்றும் நன்கறிந்துமிருக்கிறோம்.”


அர்ஜுனன் அசைவில்லாது அமர்ந்திருந்தான். அவர்களும் அவன்மேலிருந்து விழிகளை விலக்கி தங்கள் அமைதிக்கு மீண்டனர். நெடுநேரத்திற்குப்பின் பாலி விழிதூக்கி அர்ஜுனனை நோக்கினான். அந்நோக்கை உணர்ந்து அவன் உடல் மெல்ல அசைந்ததும் இந்திரன் கலைந்தெழுந்தான். “மைந்தா, உன்னிடம் நான் கோருவது ஒன்றே. அவனிடம் செல், ஒற்றைச்சொற்றொடரில் சொல். உன் தந்தைக்கு நீ கொண்ட கடனுக்கு கட்டுப்பட்டவன் என்றுரை. அனைத்தும் அக்கணமே முடிவுக்கு வந்துவிடும்.”


பாலி “உன் தமையனாகிய கர்ணன் அஸ்தினபுரியை ஆள்வான். அவன் வலப்பக்கம் இளையவனாகிய துரியோதனன் வாளுடன் காவல் நிற்பான். வலப்பக்கம் இளவல் யுதிஷ்டிரன் துணைநிற்பான். நூற்றைந்து தம்பியர் கொண்ட பேரரசன் பாரதமண்ணை முழுதாள்வான். அவன் பேரறத்தான். அவன் கோல்கொண்டிருக்கையில் கதிர்முறை மாறாது. நாளவன் அருளிருந்தால் எட்டுத்திசையர்களின் அருளுமிருக்கும். வளமும் செல்வமும் குன்றாது. புகழும் நிறைவும் தேடிவரும்” என்றான். அர்ஜுனன் சொல்லில்லாது அமர்ந்திருந்தான். “சொல், உன் உறுதியை தந்தைக்கு அளி” என்றான் பாலி.


அர்ஜுனன் மெல்ல அசைந்தான். அவன் உதடுகள் வெறுமனே பிரிந்தமைந்தன. பாலி “உன் சொல் ஒன்றுபோதும், தந்தை இதுகாறும் கொண்ட அத்தனை துயர்களையும் நீக்க. சென்றயுகத்தில் நான் கொல்லப்பட்ட வஞ்சம் அவரை எரிக்கிறது, இளையோனே. ஒரு சொல்லால் அதை நீ அணைக்கமுடியும்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு விழிகளை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டான். “சொல்க!” என்றான் பாலி சற்றே தளர்வடைந்த குரலில். அர்ஜுனன் மெல்ல கனைத்தான். பின்னர் எழுந்து கைகூப்பி வணங்கினான்.


“என்னை நீங்கள் தீச்சொல்லிட்டு இழிநரகுக்குள் தள்ளினால் அதையும் என் நல்லூழ் என்றே எண்ணுவேன், தந்தையே. ஆனால் எதன்பொருட்டும் நான் என் தோழரிடமிருந்து விலகமுடியாது. அவருக்காக என்னையும் என் குடியையும் சுற்றத்தையும் அழிக்கவேண்டுமென்பதே அவர் ஆணை என்றால் அதையும் இனிதே தலைக்கொள்வேன். பெரும்பழிகளே எஞ்சுமென்றால் அதையும் என் கடன் என்றே சென்னிசூடுவேன். நான் அவரன்றி பிறிதல்ல” என்றான். பாலி சினத்துடன் கைநீட்டி எழமுயல அவன் தொடைமேல் கைவைத்து அமரச்செய்தான் இந்திரன். அர்ஜுனன் மீண்டும் மூவரையும் தொழுதபின் வெளியே சென்றான்.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2016 10:30

December 14, 2016

இன்குலாபின் புரட்சி

600


ஜெ


பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக் கட்டுரையை நீங்கள் எழுதுவதுண்டு. பல அறியப்படாத எழுத்தாளர்களை உங்கள் அஞ்சலிக் கட்டுரைகள் வழியாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் இடதுசாரிக் கவிஞரான இன்குலாப் பற்றி ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. ஏன் என அறிய விரும்புகிறேன்


முருகேசன்


*


அன்புள்ள முருகேசன்


இன்குலாப் அவர்களை நான் இருமுறை சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவரை நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் என்றும் நம்பி அதை எழுதியுமிருக்கிறேன் – சுபமங்களாவிலென நினைக்கிறேன்


ஆனால் அவரைப்பற்றி இன்று என் எண்ணம் வேறு. நல்லமனிதர். மென்மையானவர். கொஞ்சம் அப்பாவி என்றும் தோன்றியது நேரில் சந்திக்கையில். கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுபதுகளில் மோஸ்தராக இருந்த பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர். புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெருந்தரப்பாக அது ஒருவகையில் முக்கியமானதே. அது இங்குள்ள உறைந்துபோன சனாதனத்தின் மீது ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. கருத்தியலின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்குண்டு. அந்தத் தரப்பை உருவாக்கிய முன்னோடிகளுக்கு சிந்தனையாளர்கள் என்னும் இடமும் உண்டு. வெறுமே அதை பின்பற்றியவர்கள் கருத்துலகத் தொண்டர்கள் மட்டுமே, இன்குலாபும் அப்படித்தான்.


அத்துடன், பிறரது மதத்தை, பிறரது நம்பிக்கைகளை, பிறர் தனக்கெனக் கொண்ட பண்பாட்டை கிண்டல்செய்து வசைபாடி தன்னை புரட்சிக்காரன் என காட்டிக்கொள்வது இங்கே மிக எளிது. உண்மையான புரட்சிக்காரன் தன் மரபுமூலம் தனக்கு அளிக்கப்பட்டதும் தான் அன்றாட வாழ்க்கையில் சார்ந்திருப்பதுமான மதத்தையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் நிராகரிப்பதிலும் விமர்சிப்பதிலும்தான் தொடங்குவான். இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்.. கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம். புரட்சிகள் தன்னிலிருந்தே ஆரம்பிக்கும். அந்தக் கலகம் அளிக்கும் இழப்புகளைக் கடந்து வந்திருந்தால்தான் அவர் தியாகி என்று அர்த்தம்.


தியாகமில்லாமல் புரட்சி இல்லை. சௌகரியமான விஷயங்களைச் சொல்வது வெறும் பிழைப்பரசியல். இன்குலாப் மிகமிக நுட்பமான சமநிலையை அதில் வகித்தார். நான் அவரிடம் பேசிய ஒரு தருணத்தில் அதை அவரிடம் சொன்னேன். “சார் நீங்க ராமனையும் கிருஷ்ணனையும் கிழிச்சுத் தோரணம் கட்டுங்க. அதை என் மதம் அனுமதிக்குது. விமர்சனம் இல்லாம இந்துமதம் இல்ல. ஆனா நான் நபியை போற்ற மட்டும்தான் செய்வேன். ஏன்னா அவர் எனக்கு ஒரு இறைத்தூதர்தான். அவரிலே இருந்து வர்ர மெய்ஞானம் மட்டும்தான் எனக்கு முக்கியம்” என்றேன். அவர் கோபம் கொள்பவரல்ல. ”என் கருத்துக்களாலே புண்பட்டிருக்கீங்க” என்றார். “கண்டிப்பாக இல்லை. நீங்கள் அப்படிச் சொல்வதற்கு எதிராக எந்தக்குரல் எழுந்தாலும் நான் அதைக் கண்டிப்பேன்” என்றேன்.


கருத்தியல் போகட்டும். அவர் எழுதியவை நல்ல கவிதைகள் என்றால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் கவிஞன் சான்றோன் ஆக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள். கவிதையின் அழகியல் உருவானதே நேரடியாகக் கூற உணர்த்த முடியாதனவற்றை கூறும் பொருட்டு. மொழியால் அறிய வைக்க முடியாதவற்றை மொழி கடந்த மொழி ஒன்றால் உணர்த்தும் பொருட்டு. ஒரு சாதாரண முற்போக்குத் துண்டுப் பிரசுரத்திற்கும் இன்குலாப் கவிதைக்கும் வேறுபாட்டை இன்குலாபாலேயே கண்டுபிடிக்கமுடியாது.


நல்லமனிதர். அடிப்படையில் பிரியமானவர். அவருக்கு அஞ்சலி.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2016 10:35

மதுரைக்காண்டம் -கடிதம்

 


HSShivaprakash


இனிய ஜெயம்,


எச். எஸ். சிவப்பிரகாஷ்  எழுதிய மதுரைக்காண்டம்


மற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் குரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ். மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள்? நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள்? பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி விடும். மொத்த புலம் பெயர் பாரதத்தினருக்கும் தமிழ்நாடுதான் முன்னம்பு. எனில் இது தமிழ் நாடு மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட, மலையாள, நாடும் கூடத்தான். இங்கே தமிழ்ப் பெரும்பான்மை நோக்கி எழும், அதிகாரக் கூச்சல் எல்லாம், நம்மில் ஒற்றுமை நீக்கி, அனைவருக்கும் சாவு கொண்டு வரும் நஞ்சே. இந்தகைய சூழலில் இத் தகு மூடப்பிரிவினைகளுக்கு எதிராக செயல்படும் எந்த இலக்கியப் பிரதியும், அதன் ஆசிரியர் மீது எனது மாளாத பிரியத்தை வெல்கிறது.


கொற்றவை நாவலின் சிலம்புடைப்பு நிகழ்வு, அதன் வழி அரசன் கொள்ளும் தரிசனம் முற்றிலும் தனித்துவமான ஒன்று. வெளியே மதுரையே பஞ்சத்தில் அழிகிறது. அரசன் அந்தப்புரத்தில் கிடக்கிறான். அவனது பட்டத்து அரசியின் சிலம்பு அவனுக்கு வெறும் சிலம்பல்ல, அவனது, வெற்றியின், குடிப் பெருமையின் அடையாளம் அது. கண்ணகியின் சிலம்பு உடையும் கணமே அவன் அறிகிறான், அங்கும் இங்குமென இருந்தது ஒரே சாரத்தின் இரு முகங்களே. அந்த தரிசனத்தில் இருந்து அரசன் என தனது அத்தனை பிழைகளையும் அறிகிறான். உயிர் துறக்கிறான்.


பாம்பும் கீரியும் கதையின் நாயக்கிக்கு கீறி இறந்த கணம் முதல் இட முலை நிற்காமல் பாலை உகிக்கிறது, அவள் கணவன் இறந்த பின்னோ, அது குருதி பெருக்குகிறது.


ஹளபேடு சிவம், இடக்கையின் மூவிரலால் உமையின் இடமுலை பாரம் ஏந்தி, அவளது முலைச் சுட்டை தொட்டு உறைந்திருக்கிறது சிவத்தின் இடக்கை சுட்டு விரல்.


இனி எந்நாளும் அன்னையாகி மகவுக்கு முலையளிக்க மாட்டேன். உண்ணாமுலையம்மை இடது முலை திருகி எறிந்து மதுரையை அழிக்கிறாள்.


கண்ணகி மறுத்து ஒதுக்கும் தாய்மையை அவள் முன் நிறுத்தி அவளை வினவுகிறது இக் கதை.


கோவலன் பேசும் முதல் உரையாடலே அவன் கவுந்தி வசம் கேட்கும் ஆசியுடன்தான் துவங்குகிறது. நிச்சயமின்மையின் வாசலில் நின்று அனு தினமும் அல்லாடும் தனக்கு நிலைத்த புத்தி அருளுமாறு வேண்டுகிறான். தவ வாழ்வை தேர்ந்த கவுந்தியோ கோவலன் கண்ணகி வசம் பற்றில் விழுந்து விடுவோமோ எனும் நிலையின்மையில் இருக்கிறாள். கோவலனுக்கு முன்பு இரண்டு பாதை ஒன்று மதுரைக்கு, ஒன்று இன்னும் அவன் எடுத்துக் கொஞ்சாத மணிமேகலை தவழும் மாதவியின் இல்லத்துக்கு. நிலைத்த புத்தி கொண்ட கண்ணகி இந்த இருமை இக்கட்டை ஒரு போதும் சந்தித்தவள் அல்ல? அப்படி ஒரு இருமை அவள் முன் நின்றிருந்தால்?


அவள் முன் நிற்கும் அவள் மகனும் பாண்டிய ராஜன்தான், கள்வன்தான். அவன் களவில் அவள் கொழுனனுடன் உண்டு உயிர்த்திருக்கிறாள். திருட்டு தவறெனில், அங்கே வசதிக்கு திருட்டு, இங்கே வயிற்றுக்கு திருட்டு, என்ன செய்யப் போகிறாள்?


இவ புத்திசாலியா இருக்கா, பாக்க நல்லா இல்ல, பொண்டாட்டி பாக்க அழகா இருக்கா புத்தியே இல்ல என்ன செய்யலாம்? புலம்பும் பொற்கொல்லன் கூட இருமை முன் தான் நிற்கிறான்.


கல்லின் இதயத்தை உடைத்து, உள்ளிருக்கும் மனத்தை பார்ப்பவர்கள் நாங்கள். கல் உடைப்பவர்கள் நாங்கள். நாடகத்தில் வரும் எல்லா பாடல்களுமே அழகு. முதற் கனல் நாவலில் அம்பைக்கு அல்லல்பட்டு அழியும் தட்சனின் மகள் கதை சொல்லப்படுவது போல, இங்கே கண்ணகிக்கு மும்முலை கொண்டு, நெருப்பிலிருந்து ஜனிக்கும் மீனாக்ஷி கதை சொல்லப் படும்போது, கண்ணகிக்கு கோவலனின் படுகொலை செய்தி வருகிறது.


மிக நல்ல நாடகம். முடிவை நோக்கி ஆசிரியர் விரைந்து ஓடுகிறார், தடுமாற்றங்களில் இன்னும் ஆழமாக நின்று நிலைத்திருக்கலாம்.


எல்லாக் குழந்தையும் மை பாதர் இஸ் தி ஒன்லி பெஸ்ட் என்றே மனதுக்குள் கூவும். எனக்கு ஜெயமோகனும் அதேதான். கோவலனின் வெட்டுண்ட தலையுடன் அரண்மனைக்குள் நுழையும் கண்ணகி எனும் படிமம் கொண்டு அந்த ஒரு நாடகீய எல்லையில் ஷிவப்ரகாஷ் அவர்கள் ஜெயமோகனை மிஞ்சுவதை சற்றே பொறாமையுடன் ஏற்றுக் கொண்டேன்.


சொல்புதிது சீனு


மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவப்பிரகாஷ்


எச் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்
நாடகங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2016 10:33

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57

[ 19 ]


மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக்குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சு கிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக விழிகள் தொட்டுச்சென்றபோது முன்பே அறிந்திருந்த அது முகம் தெளிந்தது. எங்கு எங்கு என நெஞ்சு தவித்து அடையாளம் கண்டுகொண்டு அவன் அகம் துள்ளியெழுந்தது. அவனறிந்தவை அனைத்தும் முழுக்க மலர்ந்திருந்தன அங்கு. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அங்கு தன்னில் ஒரு அணுவைத்தான் சொட்டிவைத்துள்ளன என்று ஒருமுறையும் அங்குள்ளவை எல்லாம்  இங்குள்ளவையென பெருகும் வாய்ப்புள்ளவை அல்லவா என்று மறுமுறையும் தோன்றிக்கொண்டிருந்தது.


அத்தனை மாளிகைகளும் அவனை அறிந்திருந்தன. புன்னகையுடன் இதழ் விரித்தவை, சொல்லெடுக்க சற்றே வாய் திறந்தவை, மகிழ்ந்து அழைக்கும்பொருட்டு வாய்குவிந்தவை, தன்னுள் ஆழ்ந்து கண்மயங்கியவை, கனவில் விழிமூடி புன்னகை கொண்டவை. பால்நுரையென வெண்மாளிகைகள், மலரிதழென இளஞ்சிவப்பு மாளிகைகள், மீன்கொத்தியின் இறகுப்பிசிறு என நீலமாளிகைகள், முகில்கீற்றென கருமை கொண்டவை, இளந்தளிரென பச்சை ஒளி கொண்டவை, காலைப்பனி என பொன்னிறம் கொண்டவை. அனைத்துவண்ணங்களும் ஒளியே என்று அங்கு உணர்ந்தான்.


மண்ணில் அவன் அறிந்த அனைத்து மாளிகைகளும் எடையென்றே தங்கள் இருப்பை காட்டியவை. அமராவதியின் மாளிகைகள் அனைத்தும் அறியமுடியாத கையொன்றால் தாங்கப்பட்டவை என மிதந்து நின்றன. மூச்சுக்காற்றில் அவை மெல்ல அலைவுறுமென்றும் கைநீட்டி தொடச்சென்றால் புகைக்காட்சியென உருவழியுமென்றும் மயல் காட்டின.


நகரில் அனைத்து முகங்களும் பேருவகையொன்றின் உச்சியில் திளைத்து நிறைந்தமைந்த பாவனை கொண்டிருந்தன. நாவே உடலாகித் திளைக்கும் இன்சுவை, நெஞ்சுகவிந்தெழும் இசைத்தருணம், சித்தம் திகைக்கும் கவிப்பொருளவிழ்வு, தான் கரைந்து ஊழ்கவெளியில் அமைதல். இவர்களை இம்முனையில் நிறுத்துவதேது? இருப்பே தவமென்றான நிலையில் எய்துவதுதான் என்ன?


தேவர் முகங்களை கூர்ந்து நோக்கியபடி சென்றான். அவையனைத்தும் அவன் முன்பறிந்த முகங்கள். இதோ இவர் முகம்! காமரூபத்தின் கடைத்தெரு ஒன்றில் உடலெங்கும் சொறியுடன் தன் கடைமுன் வந்து நின்று வாலாட்டிய நாய்க்கு குனிந்து ஒரு அப்பத்தைப் போட்டு புன்னகைத்த சுமைவணிகன். அக்கணத்தில் சூடியிருந்த முகம் இது. காசியில் வேள்விச்சாலைவிட்டு வெளிவந்து கையிலிருந்த அவிப்பொருளை அங்கு நின்றிருந்த கரிய உடலும் புழுதி படிந்த கூந்தலும் கொண்டிருந்த பிச்சிக்கு தாமரை இலைபரப்பி நீர்தெளித்து வலக்கையால் அள்ளிவைத்து அன்னம் ஸ்வாகா என உரைத்து கைகூப்பி அளிக்கையில் முதிய அந்தணர் கொண்டிருந்த முகம் அது.


இந்த முகத்தை எங்கோ ஓர் இசைநிகழ்வின் திரளில் பார்த்திருக்கிறேன். அந்த முகம் மிக அப்பால் ஒலித்த ஆலயமணி ஓசையைக் கேட்டு அசைவிழந்து நின்று கைகூப்பியவர் மேல் கனிந்திருந்தது. அது இல்லத்திலிருந்து நடை திருந்தா சிறுமகன் இரு கைகளை விரித்து ஓடிவரக்கண்டு குனிந்து கைவிரித்து கண்பனிக்க அணுகிய தந்தைக்குரியது. முலையூட்டி உடல் சிலிர்த்து இமை சரிந்து முற்றிலும் உளம் உருகிச் சொட்ட அமர்ந்திருந்த அன்னையல்லவா அது! இது நோயுற்றுக் கிடந்த இரவலன் அருகே துயிலாது விழித்திருந்து பணிவிடைசெய்த பிறிதொரு இரவலனின் முகம். மாளவத்துப் பெருஞ்சாலையில் அவன் முகம் சோர்ந்திருந்தது. இங்கு அவ்விழிகளின் அளிமட்டும் விரிந்து எழுந்திருக்கிறது.


அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.


குளிர்ச்சுனைகளில் நோக்கிய அவன் முகம் எப்போதோ  ஊசிமுனையென கூர் கொண்டிருந்த இலக்கொன்றை தன் அம்பு சென்று அடைந்தபோது அவன் சூடியிருந்தது. அலை எழுந்த ஏரியில் அவனுடன் வந்த அவன் உருவம்  இளைய யாதவரின் கை தன் தோள் மேல் அமர்ந்திருக்கையில் அவன் கொண்டிருந்தது. மாளிகைப்பரப்பொன்றில் அவன் கண்ட முகம் அபிமன்யூவை கையிலெடுத்தபோது அவனில் பூத்தது.  அந்த முகம் எது? அவன் நின்று அதை நோக்கினான். கைகள் ஏதுமில்லை என விரிந்திருக்க அவன் ஒரு மலைப்பாதையில் விழுந்து இறந்துகொண்டிருந்தான். அருகே எவருமில்லை. அவன் விழிகளில் வானம் நிறைந்துகொண்டிருந்தது. புன்னகையில்லாத மலர்வுகொண்டிருந்தது அம்முகம்.


தளிர்களும் மலர்களும் மட்டுமேயான சோலைகள். வண்ணம் மட்டுமே கொண்ட மலர்களுக்கு பருவுடலென ஒன்று உண்டா என்றே ஐயுற்றான். நிழல்களும் மெல்லிய ஒளி கொண்டிருந்தன. இசை சூடிச்சுழன்று பறந்த கந்தர்வ வண்டுகள் பொன்னென வெள்ளியென அனலென நீர்த்துளியென தங்களை ஒளி மாற்றிக்கொண்டன. இவ்வுலகு ஒவ்வொன்றிலிருந்தும் எடுத்த உச்சங்களால் ஆனது. வேதம் ஒன்றே மொழியென்றானது. புன்னகை ஒன்றே முகங்கள் என்றானது. புன்னகையே கண்ணீராகவும் இங்கு சொட்டமுடியும்.


தனிமை எப்போதும் அத்தனை முழுமை கொண்டிருந்ததில்லை என்றுணர்ந்தான். தான் என்னும் உணர்தல் ஒருபோதும் அத்தனை நிறைவளித்ததில்லை. சென்று சேர இலக்கின்றி வந்த வழியின் நினைவின்றி ஒருபோதும் கணங்களில் அப்படி பொருந்தியதில்லை. ஏனெனில் இப்பேருலகு உணரும் அக்கணத்தால் மட்டுமே ஆனது. கணமொன்று மட்டுமே காலம் வெளிப்படும் வெளி. இதற்கு நீளமில்லை, அகலம் மட்டுமே என்று அவன் எண்ணிக் கொண்டான். உறைவிடமும் உணவும் உணவுக்கலமும் அன்னைமடியும் ஒன்றென்றே ஆன எளிய தேன்புழு. உலகென்று தேனன்றி பிறிதொன்றை உணராதது.


அலைகளில் தானும் உலைந்தாடும் நீர்ப்பாசியின் பொடி போல அப்பேருலகின் நிகழ்வுகளில் அவனுமிருந்தான். ஆனால் அவன் நீர் அல்லாதுமிருந்தான். நீர் சூழ்ந்த வெளியில் அணுவெனச் சிறுத்து, எவரும் நோக்காதிருந்தும் தானெனும் உணர்வுகொண்டு தனித்திருக்கும் உயிர்த்துளி.


அங்கு மிதந்தலைந்த முகங்கள் அவனை நோக்கி புன்னைகைத்தன. விழிகள் அவன் விழிதொட்டு அன்பு காட்டி கடந்து சென்றன. இதழ்கள் குவிந்து விரிந்து இன்சொல் உரைத்தன. உள்ளங்கள் அவன் உள்ளத்தைத் தழுவி அகன்றன. ஆயினும் அவனுள் இருந்து கூர்கொண்டிருந்த முள்ளின் முனை ஒன்று தினவு கொண்டிருந்தது. முள்முனை அளவிற்கே அணுவளவுத் தினவு. சிறியதென்பதனாலேயே முழுச்சித்தத்தையும் அறைகூவுவது. இன்பம் மட்டுமே பெருகி நிறைந்திருக்கும் இப்பெருவெளியில் அது துழாவிக்கொண்டே இருக்கிறது. கூர்முனையின் கூர்மையென ஒரு துளி.


எங்கேனும் தொட்டு குருதி உண்ணத் தவிக்கிறது போலும் அந்தமுள். ஏதேனும் விரல் வந்து தன்மேல் அமர விழைந்தது. வந்தமர்வது ஓர் அணுவென்றாலும். முள் அறியும் முள்முனை. முள் என்றுமிருந்தது. எப்பெருக்கிலும் தான் கரையாதிருந்தது. இங்கு அப்படியொன்று தன்னுள் இருப்பதை உணர்ந்த எவரேனும் இருக்கக்கூடுமா?. இப்பேருலகம் முற்றிலும் அதற்கு அப்பாற்பட்டது. ஒவ்வொன்றும் மலரும் இங்கு முள்ளென்று ஒன்று மலர்த்தண்டில்கூட இருக்க வழியில்லை. முள்ளை உணர்வதில் விழிகளுக்கு தனித்திறனுள்ளது. ஏனென்றால் நோக்கு என்பது ஒரு முள்.


முள்ளை உணர்ந்த ஒருவிழியும் அங்கு தென்படவில்லை. விழி பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன் சித்தம் சென்று தொட்டது. நின்று  ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. அவள் அம்முள்ளை முதல் நோக்கிலேயே தொட்டறிந்திருந்தாள் அவன் அவளை எண்ணியதுமே மெல்லிய சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்கையில் கடந்து சென்ற யானை ஒன்றின் மேல் முழுதணிக் கோலத்தில் ஊர்வசி அமர்ந்திருந்தாள் அவளைச் சூழ்ந்து வெண் புரவிகளில் அப்சர கன்னிகைகள் அணிகுலுங்க ஆடைநலுங்க அசைந்து சென்றனர்.


[ 20 ]


புரவிகளை பின்னிருந்து காலவெளி உந்தி உந்தி முன்னோனாக்கி தத்திச்செல்லச் செய்தது. யானையை அது கையிலெடுத்து பக்கவாட்டில் ஊசலாட்டியது. புரவி ஒரு சொட்டுதல். யானை ஒரு ததும்புதல். அவன் நின்று அவர்களை நோக்கினான். முன்னால் வந்த களிறு அவனைக்கண்டதும் துதி நீட்டி மணம் கொண்டது. தன் உடலுக்குள் தானே அசைவொன்று உருண்டு அமைய கால்மாற்றி நின்று மூச்சு சீறியது. நின்றுகூர்ந்த செவிகள் மீண்டும் அசையத் தொடங்கின. சிறியவிழிகளை கம்பிமயிர்கொண்ட இமைகள் மூடித்திறந்தன.


மேலிருந்து குனிந்து “இளையபாண்டவரே, நகர் நோக்குகிறீர்கள் போலும்” என்றாள் ஊர்வசி. “ஆம்” என்று அவன் சொன்னான். வளையல்கள் அணிந்த கையை நீட்டி “வருக! யானை மேலிருந்து நோக்கலாமே?” என்று சொன்ன அவள் விழிகளில் இருந்த சிரிப்பை அவன் சந்தித்தான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “யானை மேலிருந்து நோக்கும் உலகம் பிறிதொன்று” என்று அவள் சொன்னாள்   ”கரியை காலாக்கியவன் என்று இந்திரனை ஏன் சொல்கிறார்கள் என்று அறிவீர்களா?’’


அவன் அருகே சென்று யானையின் கால்களைத் தொட்டபடி தலை தூக்கி நோக்கி “நீயே சொல்!” என்றான். “பதறாத கால்கள் கொண்டது யானை. ஏனென்றால் அது தன் கால்களை நோக்கமுடியாது. கரியூர்ந்தவன் பிறகொரு ஊர்தியிலும் தன்னை பெரிதென்று உணரமாட்டான்.” அர்ஜுனன் சிரித்தான். அவள் கைநீட்டி “ஏறிக்கொள்க! கரிகாலனின் யானை இது, அவர் மைந்தனை அது நன்கறியும்” என்றாள். “நன்று” என்றபடி அவன் யானையின் முன்கால் மடிப்பில் மெல்லத்தட்ட அது காலைத் தூக்கி படியென்றாக்கியது. அதில்மிதித்து கால் தூக்கிச் சுழற்றி ஏறி அவளுக்குப்பின் அமர்ந்துகொண்டான்.


“செல்க!” அவள் யானையின் மத்தகத்தை மெல்ல தட்டினாள். அது துதிநுனி நீட்டி மண்ணை முகர்ந்து அவ்வழியே காலெடுத்து வைத்து சென்றது. அலைபாயும் படகிலென அவளுடன் அவன் அமர்ந்திருந்தான். அவள் குழல்புரி ஒன்று பறந்து அவன் முகத்தின் மேல் பட்டது. அதை புன்னகையுடன் பற்றி காதருகே செருகிக்கொண்டாள். அது மீண்டும் பறந்து அவனை வருடியது. அவன் அதைப்பிடித்து சுட்டுவிரலில் சுழற்றி சுருளாக்கி கொண்டைக்குள் செருகினான். கழுத்தை நொடித்துத் திரும்பி நோக்கி அவள் புன்னகைசெய்தாள்.


சாலையின் இருபுறமும் மாளிகைகள் மிதந்தமிழ்ந்து அலைகொண்டு கடந்து சென்றன. “அமராவதியை நோக்கி நிறைந்தவர் எவரும் இல்லை” என்றாள் ஊர்வசி. “ஏனென்றால் நோக்குபவரின் கற்பனை இது. கற்பனை என்பது ஆணவம். தான் எவரென்று தான் கண்டு முடித்தவர் எவர்?” அர்ஜுனன் “நோக்குகிறேன் என்றுணர்ந்து நோக்கும் எவரும் நிறைவடைவதில்லை” என்றான். “இங்கிருப்பவர் எவரும் இதை நோக்குவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் இதற்குள் இருக்கிறார்கள்.”


“இதற்குள் அமைய உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள் அவள் கொண்டை அவன் மார்பைத் தொட்டு அசைந்தது. அவன்  ”ஒரு முள்” என்றான். “எங்குள்ளது?” என்று அவள் கேட்டாள். “நீ அதை அறிந்ததில்லையா?” என்று அவன் கேட்டான். அவள் சிரித்து “ஆம் அறிவேன்” என்றாள். “முதல் நோக்கிலேயே அதைத்தான் கண்டேன்.” பின்னர் மீண்டும் சிரித்து  ”முள்ளை முள்ளால்தான் அகற்ற முடியும். அறிவீரல்லவா?” என்றாள்.


“எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலைதூக்கி அவனை நோக்கி “காமத்தை காமத்தால் வெல்வதுபோல” என்றாள், அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நோக்குணர்ந்ததும் மொட்டு விரிவதுபோல மிக மெல்லிய ஓசையுடன் அவள் இதழ்கள் பிரிந்தன. வெண்பற்களின் ஈரம் படிந்த ஒளிநிரை தெரிந்தது. மென் கழுத்து மலர்வரிகளுடன் விழிக்கு அண்மையில் இருந்தது. அப்பால் தோள்களின் தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள். பொற்சங்கிலி ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல. கச்சின் வலுக்குள் இறுகிய இளமுலைகள் நடுவே மென்மையென்றும் இளமையென்றும் துடித்தது நெஞ்சு.


அவள் இடையை தன்கைகள் வளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அதை பின்னிழுக்க விழைந்தான். ஆனால் உடனே அதைச்செய்தால் அவள் அவ்வச்சத்தை உணர்ந்துவிடக்கூடும் என எண்ணி தயங்கினான். அந்தத் தயக்கத்தை அவள் உணர்ந்துகொண்டு அவன் கைமேல் தன் கையை வைத்துக்கொண்டாள்.  விழிகளை திருப்பிக்கொண்டு  ”ஆம்” என்று அவன் சொன்னான்.  அவன் கையை அழுத்தியபடி  “இருக்கிறேன் என்று. பின் நான் என்று. நானே என்னும்போது ஒரு துளியேனும் குருதியின்றி அது அமைய முடியாது” என்று அவள் சொன்னாள்.


“நன்கு அறிந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் மெல்லிய கசப்புடன் சொன்னான். “ஆண்களின் பொருட்டே உருவாகி வந்தவள் நான். என் உடல் ஆண்களின் காமத்தால் வடிவமைக்கப்பட்டது. என் உள்ளம் அவர்களின் ஆணவத்தால் சமைக்கப்பட்டது” என்றாள் ஊர்வசி. இடக்கு தெரியாத இயல்பான குரலில் “ஆணுக்கு முற்றிலும் இசைவதன் மூலம் அவனை மூடனாக்குவீர்கள். மூடனுடன் முற்றிலும் இசைய உங்களால் இயலும்” என்றான் அர்ஜுனன்.


அவள் அதைப்புரிந்துகொண்டு சிரித்து  ”ஆண்களிடம் குன்றா பெருவிழைவை உருவாக்கும் பெண் அவர்களுக்கு முற்றிலும் அடிபணியும் இயல்பு கொண்டவளல்ல. தன் அச்சை வாங்கி உருக்கொண்டு எதிர்நிற்கும் பெண்ணிடம் ஆண் முழுமையாக பொருந்தக்கூடும். ஆனால் அவளை அக்கணமே மறந்தும் விடுவான். அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள் அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்” என்றாள்.


மறுகணமே விழிகளில் ஏளனம் வெளிப்பட முகவாய் தூக்கி உடல் குலுங்க நகைத்து “ஆனால் கொழுந்தாடுபவை விரைந்தணைய வேண்டுமென்பதே நெறி” என்றாள். “அனல் ஈரத்தை முற்றும் உண்டபின் விலகி வானில் எழுகிறது. பின்பு ஒருபோதும் எரிந்த கரியை அது திரும்பிப்பார்ப்பதில்லை.” அவளுடைய நேரடியான பேச்சால் சீண்டப்பட்ட அர்ஜுனனை அநத விளையாட்டுச்சிரிப்பு எளிதாக்கியது. அவள் இடையை அழுத்தி தன்னுடன் அவளை சேர்த்துக்கொண்டு  “நீ எரியென படர்பவளா?” என்றான். அவன் விழிகளை சிறுகுழந்தையின்  தெளிந்த நோக்குடன் ஏறிட்டு “ஆம், நான் அதற்கென்றே படைக்கப்பட்டவள்” என்றாள்.


அவன் நோக்கை விலக்காமல் “அதன் பொருட்டே என்னையும் அணுகுகிறாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “இங்கு நீங்கள் எழுந்தருளியபோது உங்கள் ஆழத்தில் கூர்ந்திருந்த அந்த முள்ளை உணர்ந்தவள் நான். முள்முனை உணரும் முள்முனை ஒன்றுண்டு.” அர்ஜுனன் முகத்திலிருந்த நகைப்பு அணைய “ஆம் உண்மை” என்றான். “இங்கு இப்பெருநகரின் வீதியில் மகிழ்ந்து திளைத்து நீங்கள் அலைந்து கொண்டிருப்பதாகவே இங்குள்ள பிறர் எண்ணக்கூடும். ஒவ்வொரு கணமும் அந்த முள் முனையில் நஞ்சு செறிவதை நான் உணர்கிறேன்” என்றாள்.


“நானும் அதை இப்போதுதான் உணர்ந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்நஞ்சு ஏன் என்றே என் உள்ளம் வியந்து கொள்கிறது.” அவள் “இவை அமுதென்பதனால் அது நஞ்சு, அவ்வளவுதான்” என்றாள். “இருக்கிறேன் என்றுணர்கையில் அது துளி, நானென்று எழுகையில் அது கூர்மை. எவர் என்று தேடுகையில் அது நஞ்சு. இளைய பாண்டவரென நீங்கள் இருக்கையில் ஆம் நீங்கள் இளையபாண்டவரென சூழ்ந்திருக்கும் அனைத்தும் திருப்பிச் சொல்லியாக வேண்டும்.” அவள் அவன் கையைப்பற்றி “அவ்வண்ணம் திருப்பிச் சொல்ல இங்கிருப்பவள் நானொருத்தியே” என்றாள்.


“அந்நஞ்சு உன்னை அச்சுறுத்தவில்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆண்களின் அந்நச்சு முனையே பெண்களைக் கவர்கிறது” என்று அவள் விழிகளில் சிரிப்புடன் சொன்னாள். “நச்சுப்பல் கொண்ட நாகங்களையே நல்ல பாம்பாட்டிகள் விரும்புவார்கள்.” அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்காதவன் போல தன்னுள் ஆழ்ந்திருந்தான். “பெண்ணுக்குள் உள்ள முள்முனையால் அம்முள்முனையை தொட்டறிவதைப்போல காதலை நுண்மையாக்கும் பிறிதொன்றில்லை” என்று அவள் மீண்டும் சொன்னாள்.


“இது மேலும் தனிமையையே அளிக்கிறது” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் நகைத்து “அத்தனிமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என்றாள். அர்ஜுனன் “வேட்டையாடி காமம் கொண்டாடிய நாட்களிலிருந்து நான் நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டேன்” என்றபின் “உன்னுடன் நான் காமம் கொண்டால் அது என் ஆடிப்பாவையைப் புணர்வது போல பொருளற்றது. நீ கொண்டுள்ள இத்தோற்றம் இந்நகைப்பு இந்தச் சீண்டல் அனைத்துமே என் விழைவுகளிலிருந்து எழுந்து வெளியே திரண்டு நிற்பவை என்று நானறிவேன். எதிரொலியுடன் உரையாடுவது போல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான்.


“ஆணவத்தின் உச்சத்தில் நிற்பவர்கள் காமம் கொள்வது தன்னுடன் மட்டுமேதான்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “எனது ஆணவம் அத்தனை முதிரவில்லை போலும்” என்று சொல்லி புன்னகைத்தான். இயல்பாகவே அவர்களுக்குள் சொல்லாடல் அடங்கியது. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் நடுவே அவர்களின் களிறு முகில் பொதியென சென்று கொண்டிருந்தது.


ஏன் உரையாடல் நிலைத்தது என அவன் எண்ணிக்கொண்டான். ஆணுக்கும்பெண்ணுக்கும் நடுவே உரையாடல் தேய்ந்திறுவது எதனால்? சொல்லித்தீர்வதல்ல காமம். காமத்தை முகமாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வகுத்துக்கொள்கிறார்கள். அவ்வரையறைமேல் ஐயம்கொண்டு அதன் எல்லைகளை சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் உள்ளிருக்கும் உண்மையைச் சென்று தொட்டுவிடுகிறார்கள். அது இருவரும் சேர்ந்து தொடும் உண்மை. ஆகவே இருவரும் சொல்லிழந்துவிடுகிறார்கள்.


அவள் “தங்களை இன்று அவையில் அரசர் சந்திக்கக்கூடும்” என்றாள். அவ்வாறு முற்றிலும் புதிய இடத்தில் அவள் தொடங்கியது அவன் எண்ணியது உண்மை என உணரச்செய்தது. “ஆம், எனக்கு செய்தி வந்தது” என்று அர்ஜுனன் சொன்னான். “அதற்குள் உங்களிடம் அவர் உரைக்கவேண்டிய அனைத்தையும் அவர்பொருட்டு பிறர் உரைத்திருப்பார்கள்” என்றாள் ஊர்வசி. இயல்பாக சந்தித்த நான்கு மைந்தர்களும் கணாதரும் பேசியவை அவன் நினைவில் எழுந்தன. அவை ஒரு திட்டத்துடன் சொல்லப்பட்டவை என்பதை அப்போதுதான் உணர்ந்து “ஆம்” என்றான்.


“உங்களை சந்திப்பதற்கு முன் நீங்கள் சிலவற்றை உணர்ந்திருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார்” என்றாள் ஊர்வசி. “நீயும் அதற்கென அனுப்பப்பட்டாயா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆமென்றே கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “சொல்” என்று அர்ஜுனன் சற்று எரிச்சலுடன் சொன்னான். “உங்களை நேற்று தோளணைத்து அழைத்துச் சென்ற மூத்தவர் பிறந்ததெப்படி என்றொரு கதை உண்டு, அறிந்திருக்கிறீர்களா?” என்றாள் ஊர்வசி. அவ்வினாவின் பொருளென்ன என்று உணரமுடியாமல் விழிசுருக்கி அவன் நோக்கினான்.


“விண்ணவர்க்கரசர் ஒருமுறை கிழக்கே இந்திரகீலமலைமேல் தன் தேவமகளிருடன் சோலையாடச் சென்றிருந்தார். அவ்வழியாகச் சென்ற சூரியனின் மாற்றுருவான தேர்ப்பாகன் அருணன் அக்களியாடலைக் கண்டான். அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்பொருட்டு தன் மாயத்தால் பெண்ணுருவம்கொண்டு அருணி என்னும் பெயருடன் அம்மலையில் இறங்கினான்  கன்னியருடன் ஆடிய முதல்தேவர் அவர்களில் அருணியே அழகு நிறைந்தவள் என்று கண்டார். அவள் உளம்கவர்ந்தார். மின்படையோனின் மாயத்தால் காதல்நிறைந்தவளாக மாரிய அருணியும் அவருடன் காமத்திலாடினாள். அவ்வுறவில் பிறந்தவரே கிஷ்கிந்தையின் அரசனென வந்த பாலி” என்று ஊர்வசி சொன்னாள்.


“தொல்கவியின் காவியத்தில் அச்செய்தி உள்ளது” என்றான் அர்ஜுனன். “அக்கதை சுட்டும் செய்தி என்ன என்று பாருங்கள்” என்று ஊர்வசி சொன்னாள். “மாகேந்திரவேதம் திகழ்ந்த நாளில் கிழக்கின் தலைவனெனத் திகழ்ந்தவர் சூரியன். மகாவஜ்ரவேதம் எழுந்தபோது அவிகொள்ளும் உரிமைகளை பகிர்ந்தளித்த பிரம்மன் திசைகளை தேவர்களுக்குரியதாக்கினார். தெற்கு எமனுக்கும் வடக்கு குபேரனுக்கும் மேற்கு வருணனுக்கும் வடகிழக்கு ஈசானருக்கும் தென்கிழக்கு அனலவனுக்கும் வடமேற்கு வளிதேவனுக்கும் தென்மேற்கு நிருதிக்கும் அளிக்கப்பட்டது. கிழக்குத்திசை இந்திரனுக்குரியதாகியது.”


“கிழக்கின் தேவனாகிய சூரியனை அது சினம்கொள்ளச் செய்தது. இந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூசல் எழுந்தது. திசை தேவன் எவன் என்பதில் தேவர்களும் முனிவர்களும் குழம்பினர். இந்திரனுக்கு அளிக்கும் அவி தனக்குரியது என்று சூரியன் எண்ணினார். சூரியனுக்கு அவியளிக்கலாகாதென்று இந்திரன் ஆணையிட்டார். ஆயிரமாண்டுகாலம் அப்பூசல் நிகழ்ந்தது” என்றாள் ஊர்வசி.


“மகாநாராயண வேதம் எழுந்தபோது எட்டுத்திசைகளும் அதன் மையமும் விஷ்ணுவுக்குரியதே என்று அது கூறியது. அவியனைத்தும் முதலில் விஷ்ணுவுக்குச் சென்று அவர் அளிக்கும் முறைமையிலேயே பிறருக்கு அளிக்கவேண்டுமென அவ்வேதவேள்வியில் வகுக்கப்பட்டது. அது இந்திரனையும் சூரியனையும் சினம்கொள்ளச் செய்தது. அச்சினம் அவர்கள் இருவரையும் ஒன்றென இணைத்தது” என்றாள் ஊர்வசி. “அவ்விணைப்பின் விளைவாக இந்திரகுலத்திற்கும் சூரியகுலத்திற்கும் இடையே உருவான உறவே பாலியை உருவாக்கியது.”


அவள் சொல்லவருவதென்ன என அவன் எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். “இளையபாண்டவரே, இந்திரன் மைந்தர் நீங்கள். உங்கள் மூத்தவராகிய கர்ணன் சூரியனின் மைந்தர். நீங்கள் இருவரும் ஒன்றாகவேண்டும் என்று உங்கள் தந்தை விழைகிறார். அதுவே அவர் உங்களுக்கிடும் ஆணை என்றும் சொல்வேன்” என்றாள். அர்ஜுனன் பேசாமல் கூர்ந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “உங்கள் பொது எதிரி மகாநாராயணவேதமே. அதன் விழுப்பொருளாகத் திரண்டு வரும் மெய்மையையே இளைய யாதவர் முன்னிறுத்துகிறார்.”


அர்ஜுனன் மெல்லிய பொறுமையின்மையை உடலசைவில் காட்டினான். அவன் கைமேல் கையை வைத்து “ஆம், உங்களுக்கு அவருடன் இருக்கும் உறவை நான் அறிவேன். உங்கள் தந்தை மேலும் அறிவார்” என்றாள். “ஆனால் மைந்தருக்கு தந்தையுடனான கடன் என்பது ஊழால் வகுக்கப்பட்டது. பிரம்மத்தின் விழைவையே ஊழென்கிறோம். அக்கடனிலிருந்து நீங்கள் விலகமுடியாது.”


அர்ஜுனன் “களிறு நிற்கட்டும்” என்றான். “பொறுங்கள், நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் களிறின் பிடரியில் தட்ட அது நின்று முன்வலக்காலைத் தூக்கியது. “அங்கு நிகழ்வது வேதங்களின் போர். நீங்கள் நின்றிருக்கவேண்டிய இடம் உங்கள் தந்தையின் தரப்பே” என்று அவள் சொன்னாள். அவன் யானையின் கால்களினூடாக இறங்கி திரும்பி நோக்காமல் நடந்தான்.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2016 10:30

December 13, 2016

‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா

[வண்ணதாசன் புனைவுலகில் பெண்களின் சித்திரங்கள் : எம் ஏ சுசீலா]


1 IMG_3184


வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மகிழும் பாரதியைப்போல இவரது கதை வெளியிலும் கூடத் தாக்கத்தைச் செலுத்துவது கல்யாண்ஜி என்கிற கவிஞனின் மனமே . எதிர்ப்படும் சின்னச்சின்னப்பொருளும் மனிதர்களின் மிக இயல்பான தோற்றங்களும் பாவனைகளும் கூடப் படைப்பாளியைப் பெரும்பாலான தருணங்களில் அதீதமான பரவசக்கிளர்ச்சிக்கு உள்ளாக்கி விடுவதைக் காண முடிவது அது பற்றியே.. கலைத் தன்மையோடு கூடிய நுட்பமான சமூகவிமரிசனங்கள் அவரது எழுத்துக்களின் இடையே அரிதாகக் காணக்கிடைத்தாலும் மேற்குறித்த பொதுப் போக்கே அவரது படைப்புக்களின் தனித்துவமாக இருப்பதால் பெண்கள் சார்ந்த வண்ணதாசனின் பார்வையையும் அந்தச் சட்டகத்துக்குள் உட்படுத்திக் காண்பதே பொருத்தமாக அமையக்கூடும்.


வண்ணதாசனின் சிறுகதைகளைக் குறுக்கு வெட்டாகப்பார்த்து மதிப்பிடும்போது பெண்ணை அணுகும் அவரது பார்வையில் அழகுணர்வு சார்ந்ததும், பித்தாக்குவதுமான பரவச நிலையே மேலோங்கி இருப்பதையும், ’தனுமை’ போன்ற ஒரு சில ஆக்கங்கள் தவிர்த்த பெரும்பாலான தருணங்களில் காமஉணர்வோடு கலவாததாக அது இருப்பதையும் பார்க்க முடிகிறது.’’ஒரு புதிய பெண்ணை பெயர் தெரியாத அடையாளம் தெரியாத நிலையில் அவள் பெண்ணாயிருக்கிற ஒன்றுக்காகவே பார்த்தேன்’’என்று ‘புளிப்புக்கனிகள்’ சிறுகதையின் ஆண்பாத்திரம் கூறுவதைப் பெண்சார்ந்த படைப்பாளியின் பொது நோக்காகவே கொள்ளமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அவரது பல கதைகளும் அமைந்திருக்கின்றன..


‘’தூக்கத்தில் உப்பி மேலும் அழகானகண்களுடன்’’…’’விடிகாலை மாதிரி அடங்கின வெளிச்சத்துடன்..’’ இருக்கும் பெண்குழந்தை [’காற்றின் அனுமதி’], முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இரண்டு மகன்களுக்குத் தாயான சிநேகிதி அலமேலுநரசய்யாவின் ‘’அலட்டலில்லாத சிட்டுக்குருவி மாதிரி முகம்’’ [சிநேகிதியும் சிநேகிதர்களும்], தன் கைக்குழந்தையைக் கொஞ்சுவதற்காகப் போட்டி போட்டபடி ‘சின்னக்குட்டீ’ என்று ஓடி வரும் பெரிய சிறிய கொழுந்தியாள்களின் முக பாவனைகள் [தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்] , ஊரே ’ஒரு மாதிரி’ பேசும் அம்புஜத்தம்மாளின் ‘பவுன் மாதிரி நிறம்..அவளைச் சுற்றி இருக்கும் அழகான மர்மம்’’ [சொன்ன விதமும் கேட்டவிதமும்], எல்லோரும் தவறாகப் பேசும் பெண்ணின் ‘’மயிரிழையில் பாசி கோர்த்தாற்போலொரு நீர்முத்து..மஞ்சள் மினுமினுக்கிற உடல்…ஈரச்சேலை மோதுகிற நேர்த்தியான பாதங்கள்’’[புளிப்புக்கனிகள்], மணலிலிருந்து ஒற்றைக்கொலுசை எடுத்து..அதன் இரு முனைகளையும் பிடித்து ஆரமாக்கி சூரியனுக்குச் சூடி ..பரவசத்தால் அமிழ்ந்து கிறங்கும் கண்களுடன், புடவையை விலக்கிப் பாதத்தின் மேல் கொலுசைப்படியவிடும் ஜோதியைக் குறித்து ’’வானமெங்கும் பரிதியின் ஜோதி’’யெனக் கற்பனையில் விரியும் சித்திரம்[அந்தப் பையனும் ஜோதியும் நானும்], குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த அழகும் இல்லையென்றாலும் ’’அக்கறையற்ற இயல்புக்கு என்று ஒரு சிறு அழகு உண்டே’’அதைக் கொண்டிருக்கும் ராஜியின் ‘’குகைக்குள் விளக்கேற்றியது மாதிரி…மாயம் நிறைந்த வெளிச்சம்’’ [அப்பால் ஆன] என…இந்த எல்லாவற்றிலும் கிளர்ச்சியான மனநிலையோடு பெண்ணின் அழகை ரசிக்கிற ஆண் பாத்திரங்களையே முன் வைக்கிறார் படைப்பாளி.


குச்சிபோல் மெலிந்திருக்கும் மனைவியும், தாட்டியான மதமதப்புக்கொண்ட டெய்சி வாத்திச்சியும் அவர்களோடு ஊடாடும் ஆண்களுக்கு உகப்பானவர்களாக இருப்பதில்லை. ’’ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புக்களை மீறி….. பாரமான உடலும் பெருந்தொடையும் பிதுங்கச் செல்லும்’’ பெண் [தனுமை] ஆணின் அளவுகோலுக்கேற்ற அழகு வாய்க்கப்பெறாதவளாக அவனை அருவருப்படையச் செய்பவளாகவே காட்டப்படுகிறாள்.


வண்ணதாசனின் சிறுகதைகள் வீட்டு வாழ்வையே பெரிதும் மையப்படுத்துவதால் சாணி மெழுகிக் கோலமிட்டு…,அடுப்படியின் கரிப்புகையில் இருந்தபடி தோசை வார்த்துக் காப்பி போட்டு, துணி துவைத்து மடித்து, கீரை ஆய்ந்து குடும்ப வேலைகளுக்குள் தங்களை ஆழ்த்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையில் இருக்கும் பெண்களே அவரது ஆக்கங்களில் மிகுதியாகக் காணக் கிடைப்பவர்கள். அவர்கள் அன்பு செலுத்துவதற்கும் அன்பு செலுத்தப்படுவதற்கும் உரியவர்களாக மட்டுமே இருப்பவர்கள், அவ்வாறே சித்தரிக்கப்படுபவர்கள்.


m.a.susila1-300x225


’’விரித்துப்படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் கைலியையோ போர்த்திக்கொண்டு கணவன் தூங்குவதைப்பார்த்து மனம் கசிந்து எப்படியாவது இந்த மாதமாவது ஒரு போர்வை வாங்கி விட வேண்டும் என்று துடித்தபடி,கொசுக்களும் குளிரும் தொட முடியாத அவனது தூக்கத்துக்கான கற்பனையில் இருக்கும் மனைவி [போர்வை], மனைவியின் தலைவலிக்கு மருந்து வாங்கப்போய் விட்டு அதை முற்றாக மறந்து போய் நண்பனின் மகனுக்கு மருந்து வாங்கிக்கொடுத்து விட்டு வரும் கணவனிடம் தன் வலி குறித்தோ மருந்து குறித்தோ ஏதும் கேட்காமல் அவனை அன்போடு உணவுக்கு அழைக்கும் மனைவி [‘அன்பின் வழியது’], வீட்டின் வறுமையைக் குறை சொல்லாமல் பலசரக்குக்கடன் வசூலிக்கவரும் நபரிடம் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசும் மனைவி [‘அந்தந்த தினங்கள்’] என இவ்வாறான வகைமாதிரிகளே வண்ணதாசனின் புனைவுலகில் மிகுதியும் தென்படுபவர்கள்.


நகைக்கடையில் மகளோடு பேசி மனைவியை அலட்சியம் செய்யும் ஒரு கணவனை ‘’’கணவனும் ஆண்பிள்ளைதானே, சரிதான் எல்லாம் தெரியும் என்பது போல அவளை அலட்சியம் செய்கிறான்’’என்று வரும் குறிப்பும்[‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’],’’இந்தச்செல்லமான பிரியமானசிரிப்பு குழந்தை பிறந்த பிறகு அவளுக்கு நிறையவே வருகிறது, கிட்டத்தட்ட இதே பிரியமும் சந்தோஷமுமான முகம் அவளுக்கு அம்மாவீடு போகும்போதெல்லாம் வரும்’’என்று கணவன் நினைப்பதாக இடம் பெறும் வரிகளும்[’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’] ஆணின் மரபார்ந்த பார்வையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வண்ணதாசன் முற்பட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுபவை. ஆணிலிருந்து தாழ்ந்தவள் பெண் என்ற மரபு ரீதியான போக்கை முன் வைப்பதைப் படைப்பாளி தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் வழி புரிந்தாலும் …‘’அவனுக்குத் தான் இல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’’ என்றும் [போர்வை], முன்னாளில் கணவன் நேசித்த பெண்ணோடு அவனுக்குத் திருமணம் ஆகாமல் போனதே என்றும் [விசாலம்] சிந்திக்கிற எல்லைவரை கணவன் மீதான அன்பை அதீதமான முறையில் அவர்கள் வெளிப்படுத்தும்போது –யதார்த்தச்சித்தரிப்பு என்ற நிலையையும் மீறி அவ்வாறான மரபார்ந்த தொனி அந்தக்கதைகளுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது..


‘’அம்மாவைப்பற்றி நினைக்கும்போது முருகேசனுக்கு அப்பாவை நினைக்காமல் தீராது. அப்பாவின் அழகுக்கு அம்மா பொருத்தமே இல்லை, அழகுக்கு மாத்திரமில்லை, சுபாவத்துக்கும்..’படிப்புக்கும் கூட;;என்று எண்ணும் மகனின் பார்வையும் கூட [’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] பெண் சார்ந்த பாலின வேறுபாட்டுச் சிந்தனையாகவே அமைந்து போகிறது..


இளம் வயதில் காதல் போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அண்ணனாக பாவித்துக் கடிதம் எழுதிக்கொண்ட ஒருவனைத் திருமணமாகிப் பல ஆண்டுகள் சென்று சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் உள்ளறையிலிருந்து கூட வெளிப்படாத மனத்தடையோடு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பெண் [’தற்காத்தல்’], தான் சம்பாதிக்கும் வருவாயில் மட்டுமே குடும்பம் நடந்தாலும், கை கால் இழுத்துக்கொண்ட கணவனின் நெஞ்சளவு புகைப்படத்தைக்கொடுத்து அவனை முழுமையாக வரையச்சொல்லி ‘’என் கூட அது நிக்க நிக்கதான் பலம்’’ என்று அவனைத் தன்னோடு இணைத்துப் படம் போட்டுத் தரச்சொல்லும் கரகாட்டப்பெண்ணின் சார்பு நிலை [’போட்டோ’], அரட்டையடித்துக்கொண்டிருக்கும் அக்கம்பக்கத்துப் பெண்கள் அலுவலகத்திலிருந்து திரும்பும் தன் கணவனின் சைக்கிளுக்கு வழி விட்டு ஒதுங்கி நகர்வதைத் தன் கணவனுக்குத் தரப்படும் மரியாதையாக ஏற்றுப்பெருமை கொள்ளும் மனைவி [’அவனுடையநதி அவளுடைய ஓடை’] ஆகிய இயல்பான இந்த வாழ்க்கைச் சித்திரங்களுக்குள் உறைந்திருக்கும் மரபுசார் மதிப்பீடுகளையும், கருத்தியல்களையும் வண்ணதாசன் வலிந்து முன்னிறுத்த முயல்வதாகக் கூற முடியாதென்றபோதும் கதைப் போக்கில் ஓர் ஆண் முன்னிறுத்த விரும்பும் பெண்ணின் பிம்பங்களாக மட்டுமே அவை வெளிப்பட்டு விடுவதை மறுப்பதற்கில்லை.


திருமணம் ஆகாமலோ…திருமணம் தட்டிப்போகும் நிலையிலோ இருக்கும் பெண்ணை ’’.அக்கா வயதுக்கு வந்து ஆறு வருஷத்துக்கு மேல் ஆச்சே,அவளால்…வீட்டுக்குள்ளேயே எப்படிப் பூத்துக்கொண்டு வர முடிகிறது இவ்வளவு அருமையானவளுக்கு ஏன் கலியாணத்துக்கு வேளை வரவில்லை’’’ என்று இரக்கத்துக்குரியவளாகக் காட்டுவதும், பெண் காத்திருப்பது திருமணத்துக்காக,, ஆண் காத்திருப்பது அவன் பெறவிருக்கும் வேலையின் பொருட்டு என்னும் வேறுபாட்டைப் பாத்திரங்களின் வழி முன்னிறுத்துவதும் வண்ணதாசன் கதைகளில் பெண்சார்ந்த பார்வைகளாக [’விசாலம்’, ’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] வெளிப்படும் மேலும் சில பழமைவாதக்கூறுகள்.


தனித்தன்மையும் தன்னியல்பும் கொண்டவர்களான ஒரு சில பெண்களும் வண்ணதாசனின் படைப்புக்களில் ஆங்காங்கே அரிதாக வெளிப்படத் தவறவில்லை.


பலநாள் இடைவெளிக்குப் பின் சந்திக்கும் நண்பனிடமோ, சிநேகிதியிடமோ,உறவினரிடமோ தன் வறுமை, துன்பம் ஆகியவற்றைப் புலம்பித் தள்ளிக் கழிவிரக்கம் தேடும் சராசரிப் பெண்களிலிருந்து மாறுபட்டுத் தம்மளவில் உறுதியாக அவற்றைப் பொறுத்துக்கொண்டோ , ஏற்கப்பழகிக்கொண்டோ அமைதியடைந்து விடும் பிடிவாத குணம் படைத்த பெண்களையும் அவரது கதை உலகில் எதிர்ப்பட முடிகிறது. ‘’அவளால் தன்னைப்பற்றிய நிர்ணயங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது…அத்துடன் ‘எதையும் கேட்காதே’என்று நிபந்தனையிடுகிற ஒரு முகம் சேர்ந்திருந்தது….ஒரு சந்தோஷத்தை உடனடியாகத் தரித்துக்கொண்டுவிட அவளுக்கு முடிந்தது…வெற்று விசாரிப்புக்கு உட்பட்டதல்ல இந்த வாழ்க்கை என்ற கடினம் அவள் அசைவுகளில் இருந்தது’ என்று ’அப்பாலான’ கதையில் விவரிக்கப்பெறும் ராஜி, தான் வரைந்த ஆதிவாசிப்பெண்ணின் அரை நிர்வாணப்படத்தை வீட்டில் மாட்ட விரும்பும் கணவனிடம் ’’நல்லாத்தான் இருக்கு ஆனா இதையெல்லாம் வீட்டிலே மாட்டக்கூடாது அசிங்கம்’’ என்று ஒற்றை வார்த்தையில் மறுதலித்து விட்டுப் பிறகு ’’தாக்கி விட்டு நடமாடுகிறவளின் காரியமாக’’ இல்லாமல் ‘’சுபாவப்படி நடமாடிக்கொண்டிருந்த’’ அவன் மனைவி [’சமவெளி’] என சில தன்னுறுதி கொண்ட மாறுதலான பாத்திரங்கள் பெண் இயல்பின் பிடிவாதத்தோடு கூடிய தனித்தன்மையை வெளிப்படுத்தக்கூடியவை.


பெண் சார்ந்த ஆணின் கவர்ச்சி அவளது உடலழகு சார்ந்ததாகவே இருந்தாலும் பெண்ணின் மனம் அவனது மன அண்மையை நாடுவதாகவே இருக்கிறது. புகைப்படநிபுணனான விருத்தாவை விரும்பி தேவநேசனை மணக்கும் நெருக்கடிக்கு ஆட்பட்டு அந்தப் பொருந்தா மணஉறவில் விருத்தாவுடனான உறவையும் ஒருபக்கம் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் தன் உடலழகை வெளிப்படுத்தும் புகைப்படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு அவன் பரிசு பெறும்போது அதைப்பொறுக்காமல் அவன் தன் உடம்பை மட்டும் நேசிப்பதான வருத்தத்துடன் ’’என்படத்தைப்போடணும்னு தோணினா இதையா போடணும்….பழகின பழக்கம்…… உசிரைப்பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப்பயலுக்காக நான் இருக்கிற இருப்பு இதெல்லாம் ஞாபகமில்லே. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்குபோல’’என்று [’போய்க்கொண்டிருப்பவள்.’] அன்னம் ஜூடிக்கு ஏற்படும் வருத்தம் இந்தப் பின்னணியிலானதே.


அன்னம் ஜூடியைப் போலவே கணநேர சபலத்துக்கு ஆட்பட்டுப் பொருந்தா மண உறவுக்கு ஆட்படும் புஜ்ஜியின் மன மாற்றத்தையும்,அந்த உறவிலிருந்தான அவளது வெளிநடப்பையும் பெண்ணுக்கே உரிய தனித்துவ உணர்வான அவளது தாய்மை உணர்வே சாத்தியமாக்குகிறது என்பதைப் பதிவுசெய்கிறது ‘ஜன்னல்’ சிறுகதை. கணவனின் பல குறைபாடுகளை சகித்தபடி அவனோடு வாழப்பழகி விட்டிருந்தபோதும் நிறைமாதக்கருவோடு இருக்கும் ஆடு ஒன்று வேலி தாண்டித் தழை மேய்வதற்காகச் செல்லும்போது மிகச்சரியாக அதன் வயிற்றில் குறிவைத்து அவன் தாக்கும் குரூரச்செயல் கர்ப்பிணியான அவளுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் ஊட்ட அந்த வாழ்விலிருந்து வெளிநடப்பு செய்ய முடிவெடுத்து விடுகிறாள் அவள்; தனித்துவத்தோடு கூடிய துணிச்சலோடு அவள் எடுக்கும் முடிவைப் பாராட்ட முடிந்தாலும் அவள் நாடிச்செல்வது அச்சுத் தொழிலில் உடன் பணி புரிந்த சங்கரய்யா என்னும் இன்னொரு நல்ல நண்பனின் துணையையும் சார்பையும் தேடியே என்று கதை முற்றுப்பெறுவது ஏமாற்றத்தையே ஊட்டுகிறது..


வீட்டை உலகமெனக்கொண்டு வாழும் பெண்களாலும் அந்த எல்லையைத் தாண்டித் தங்கள் அன்பை விஸ்தரிக்கவும் …அதற்கான உரிமையை எடுத்துக்கொள்ளவும் முடியும் என்பதைக் காட்டும் ’வெள்ளம்’, பெண்சித்தரிப்பு சார்ந்த வண்ணதாசன் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. ஆற்றில் கட்டற்று ஓடும் வெள்ளத்தை…, .ஊரே கூடி வேடிக்கை பார்த்து மகிழும் அந்தக்காட்சியை மகளோடு ரசிக்கிறான் ஒரு தந்தை அவளோ தன் தாயை அழைத்து வந்து அவன் அதைக்காட்டியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ‘சதா வீட்டு வேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும் பனியிலும் மலையடிவாரத்திலும் அருவிக்கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று அந்தக்கணவனும் எண்ணாமலில்லை. அலுவலக வேலைப்பணிகளின் இடையே அது முற்றிலும் மறந்து போக அவன் வீடு திரும்பும்போது வெள்ளத்தால் வீடிழந்த ஒரு குடும்பத்துக்கு அடைக்கலம் தந்தபடி அவர்களின் குழந்தை நிம்மதியாய் உறங்குவதைத் தன் மகளின் தலையை வருடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி.


‘’பெரியதெரு நடுத்தெரு வேம்படித்தெரு பூரா வெள்ளக்காடாம்…வீட்டுக்குள்ளே தண்ணியாம்..தெரிஞ்சவங்களோ தெரியாதவங்களோ நம்மளால வேற என்ன செய்யமுடியும், அந்தப்பச்சப்பிள்ளையாவது படுத்துக்கிடட்டும்னு கூட்டியாந்தேன்’’என்று அவள் சொல்ல…..’’வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்க வேண்டுமா’’ என்ற கணவனின் மன ஓட்டத்தோடு கதை முற்றுப்பெறுகிறது. வரையறையற்ற அன்பு கொண்டவளாக மட்டுமன்றித் தன்னால் முடிந்ததைச் செயலாக்கும் திட்பம் கொண்டவளாகவும் பெண்ணை முன்னிலைப்படுத்தும் காட்சிச் சித்திரம் இது.


எழுத்தின் வழியாகவும் நேரடியாகவும் வண்ணதாசனை அறிந்திருக்கும் எவராலுமே அவர் மரபுகளைத் தூக்கிப்பிடிப்பவரென்றோ அவற்றை நியாயப்படுத்துபவரென்றோ சொல்லிவிட முடியாது. அந்த நிலையிலும் கூட அவ்வாறான பார்வையே அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறதென்றால் அவர் எழுதத் தொடங்கிய ‘60களிலிருந்து இப்போது எழுதி வரும் இன்றைய காலகட்டம் வரை பெண் சார்ந்த ஆணின் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே அவர் அறிந்ததும், அவர் சார்ந்ததுமான ஆண் உலகின் அடிப்படையில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். அவை பதிவுகள் மட்டுமேயன்றி எந்த ஒன்றையும் நியாயப்படுத்தவோ விமரிசிக்கவோ அவர் முயற்சிக்கவில்லை. அவர் காணவும் எதிர்ப்படவும் நேர்ந்த வாழ்க்கைமுறையின் துணையோடு பெண்சார்ந்த ஆண்களின் கண்ணோட்டத்தை முன் வைக்க மட்டுமே அவர் முயன்றிருக்கிறார். உள்ளார்ந்த மனச்சாட்சியோடு அந்தப்படைப்புக்களை அணுகும்போது பெண் சார்ந்த ஆணின் நோக்கிலும் அவனுக்காகவே தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெண்ணின் மனப்போக்கிலும் இன்னும் மாற்றம் விளையவில்லை என்ற புரிதலுக்கும் அந்தநிலையிலிருந்து இரு பாலாரும் மேலெழுந்து செல்வதற்கும் அந்தக் கதைகள் உத்வேகமளிக்கக்கூடும். அதற்காகவே பெண்ணியச்சிந்தனையாளர்கள் வண்ணதாசனுக்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.


 


 

தொடர்புடைய பதிவுகள்

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?
அடுத்தகட்ட வாசிப்பு
வண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது
பளிங்கறை பிம்பங்கள்
மின் தமிழ் பேட்டி 2
சாரல் உரை -கடிதம்
அறம் – ஒரு விருது
ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா
தமிழில் வாசிப்பதற்கு…
சாரல் விருது
வண்ணதாசனின் சினேகிதிகள்
கலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
அசடனும் ஞானியும்- கடிதங்கள்
அசடனும் ஞானியும்
கடிதங்கள், இணைப்புகள்
இரண்டாம் மொழிபெயர்ப்பு
இரு நிகழ்ச்சிகள்
நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்
மொழியாக்கம்:கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2016 10:35

எந்திரன், நான், இந்தத்தளம்…

Cxs-kXQVQAA108H


பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,


வணக்கம்.


திரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நீங்களும் அதில் அடைந்த/அடையப்போகும் ‘பரவசத்தை’ பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி-“இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல“- என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும், உழைப்பும் ‘வெண்முரசு‘ போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது. எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் போன்ற எளிய வாசகர்கள்தான் என நினைக்கிறேன். அந்தவகையில் இது எங்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்!.


நன்றி.


அன்புடன்,


அ .சேஷகிரி.


*


அன்புள்ள சேஷகிரி


அந்தப்பதிவை என் பயணம் பற்றிய பொதுவான தகவலாகவே போட்டிருந்தேன். விரிவாக எழுதவில்லை.


எந்திரன் படம் ஒரு பெரும் வணிக முயற்சி. அதற்கு பெரும்பணத்தில் விளம்பரம் செய்வார்கள். தொடர் விவாதங்கள் உருவாகும். அதை நான் என் தளத்தில் செய்ய ஆரம்பித்தால் அதற்கு மட்டுமே நேரமும் இடமும் இருக்கும்


ஆகவே நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஒரு சில வரிகளை மட்டும் எழுதி, நிகழ்ச்சிப் பதிவாகவே நிறுத்திக்கொள்வது வழக்கம். முன்னரும் அப்படித்தான். விவாதம் உரையாடல் எதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இனிமேலும் அப்படித்தான்


ஜெ


***


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


வணக்கம்.


இன்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளி பரப்பிய திரு.சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 2.0 திரைப்படத்தின் ‘முதல் பார்வையை” பார்த்தேன்.போங்க சார்! இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது!!.படபடவென்று பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டீர்கள்.இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது.


அன்புடன்,


அ .சேஷகிரி.


*


அன்புள்ள சேஷகிரி


கூச்சம் இல்லை. அது ஒரு செயலின்மை. ஆங்கிலத்தினாலும் இல்லை. இதைவிட மோசமாக காவியத்தலைவன் விழாவில் என்னை நீங்கள் காணலாம்


பொதுவிழாவில் தன்னை முன்வைப்பது ஒரு பெரிய நடிப்பு. அதற்கு நிறையவே பழகவேண்டும். அது எனக்கு கைவருவதில்லை. பழகவேண்டாம் என்றிருக்கிறேன்


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2016 10:31

எந்திரன் ,நான் ,இந்தத்தளம்…

Cxs-kXQVQAA108H


 


பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,


வணக்கம்.


திரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.நீங்களும் அதில் அடைந்த / அடையப்போகும் ‘பரவசத்தை’பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி – “இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல” – என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும்,உழைப்பும் ‘வெண்முரசு‘போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது.எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் போன்ற எளிய வாசகர்கள்தான் என நினைக்கிறேன்.அந்தவகையில் இது எங்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்!.


நன்றி.


அன்புடன்,


*


அ .சேஷகிரி.


 


அன்புள்ள சேஷகிரி


அந்தப்பதிவை என் பயணம் பற்றிய பொதுவான தகவலாகவே போட்டிருந்தேன். விரிவாக எழுதவில்லை.


எந்திரன் படம் ஒரு பெரும் வணிக முயற்சி. அதற்கு பெரும்பணத்தில் விளம்பரம் செய்வார்கள். தொடர் விவாதங்கள் உருவாகும். அதை நான் என் தளத்தில் செய்ய ஆரம்பித்தால் அதற்குமட்டுமே நேரமும் இடமும் இருக்கும்


ஆகவே நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஒரு சில வரிகளை மட்டும் எழுதி, நிகழ்ச்சிப்பதிவாகவே நிறுத்திக்கொள்வது வழக்கம். முன்னரும் அப்படித்தான். விவாதம் உரையாடல் எதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இனிமேலும் அப்படித்தான்


ஜெ


***


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


வணக்கம்.


இன்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளி பரப்பிய திரு.சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 2.0 திரைப்படத்தின் ‘முதல் பார்வையை” பார்த்தேன்.போங்க சார்! இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது!!.படபடவென்று பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டீர்கள்.இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது.


அன்புடன்,


அ .சேஷகிரி.


*


அன்புள்ள சேஷகிரி


கூச்சம் இல்லை. அது ஒரு செயலின்மை. ஆங்கிலத்தினாலும் இல்லை. இதைவிட மோசமாக காவியத்தலைவன் விழாவில் என்னை நீங்கள் காணலாம்


பொதுவிழாவில் தன்னை முன்வைப்பது ஒரு பெரிய நடிப்பு. அதற்கு நிறையவே பழகவேண்டும். அது எனக்கு கைவருவதில்லை. பழகவேண்டாம் என்றிருக்கிறேன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2016 10:31

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56

[ 17 ]


“நெடுங்காலத்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர்மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா, பருப்பொருள் அனைத்துக்குமே புடவிநெசவின் மாறா மூன்றியல்புகள் உண்டு என அறிந்திருப்பாய். நிலையியல்பு, செயலியல்பு, நிகர்நிலையியல்பு என்பவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிரப்பி நிலைகொண்டு பின் கலைந்து இவையனைத்தையும் செயல்நிலைகொள்ளச்செய்பவை” என்றார் சனாதனர்.a


“பிரம்மத்தின் மூன்றுநிலைகள் இவை.  பிரம்மமே இவற்றினூடாகத்தான் இயக்கம் கொண்டு தன்னை தான் அறிகிறது. செயலென்னும் மாயையை நிகழ்த்துகிறது. அலைகளினூடாக ஆழம் தன்னை நிகழ்த்தி தானென்று அறிவதுபோல. எனவே அதை திரிகுணசமன்வயம் என்கின்றனர் சாங்கியர்”  என்று சனந்தனர் சொன்னார். சனத்குமாரர் “முதல்நிலையில் மண் முற்றிலும் நிலையியல்பு கொண்டிருந்தது. அதை வெல்ல புவிநிகழ்ந்தவர்கள் அசுரர். தேவர்கள் மலர்சூடிய கிளைகள் என்றால் அசுரர் மண்ணிலாழ்ந்த வேர்கள். அவர்கள் ஒருவரின்றி ஒருவர் நிலைகொள்ள முடியாதவர்கள் என்றுணர்க!” என்றார்.


தேவருலகத்தின் தவச்சோலை ஒன்றில் என்றுமுள தொன்மை, எக்காலமும் அழிவின்மை, குன்றாஇனிமை, வளரா இளமை என்னும்  வேதத்தின் இயல்புகள் நான்கும் மைந்தர்களாக எழுந்த இளமுனிவர் அருகே கைகூப்பி அர்ஜுனன் அமர்ந்திருந்தான்.   அப்பால் கங்கை ஒளியுடனும் குளிருடனும் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. நான்கு முனிவர்களும் வாழ்ந்த சிறிய புற்குடில்களில் அணிகொண்ட குழலில் அகில்மணம் இருப்பதுபோல வேள்விப்புகை எஞ்சியிருந்தது. அங்கிருந்த மயில்கழுத்துகளின் வளைவில், மான்விழிகளின் மின்னில், கிளிகளின் சிறகுவண்ணங்களில் மரங்களின் தளிர்மென்மையில் வேதம் திகழ்ந்தது.  நால்வரும் கல்விச்சாலையிலிருந்து கரந்து ஓடி சோலையாடிக்கொண்டிருக்கும் இளமைந்தர் போலிருந்தனர். இளமைக்குரிய விழிச்சிரிப்பும் இளமையேயான உடற்துள்ளலும் கொண்டிருந்தனர். நால்வரும்  ஆடிப்பாவைகள் என தெரிந்தனர். ஒருவர் சொல்லை பிறரும் விழிகளால் சொல்வதுபோலிருந்தது.


சனாதனர் சொன்னார் “நிலையியல்பு கொண்டதாகவே இவ்விசும்பு  பல்லாயிரம் யுகங்கள் நீடித்தது. தன் நெறிகளின்படி அது தனக்குள் தான் நிறைந்து அமர்ந்திருந்தது. பின்னர் பிரம்மனின் உள்ளத்திலிருந்து மரீசி, அங்கிரஸ், அத்ரி, கிருது, புலஹர், புலஸ்தியர், கசியபர் என்னும் பிரஜாபதிகள் எழுந்தனர். அவர்களிடமிருந்து உருவாயின உலகுகள் அனைத்தையும் நிறைக்கும் விண்ணவரும் மண்ணவரும் ஆழுலகோருமான முடிவிலா இருப்புகள். மண்மேல் புழுக்களும் பூச்சிகளும் விலங்குகளும் பறவைகளும் உருவாயின. ஆயினும் மண்ணின் நிலையியல்பு மாறவில்லை. ஒரு கல்லை இடமாற்றுவதற்குக்கூட அவற்றால் இயலவில்லை. அதைக்கண்டு சீற்றம்கொண்ட கசியபரின் உள்ளத்தின் விசையிலிருந்து  அசுரர் உருவாயினர்.”


“வெறிகொண்ட செயலூக்கமே அவர்களின் அடிப்படை இயல்பு.  விடாய்மிக்கு நீர்தேடும் பாலைஓநாய் போல, பசிகொண்டு இரையைத் துரத்தும் சிம்மம் போல மதம்கொண்டு பாறையில் தலைமோதும் களிறுபோல எப்போதும் இருப்பது அவர்களின் வழக்கம். கரைப்பாறைமேல் அலையலையென வந்து மோதி தலையுடைந்துச் சிதறி அழியும் அலைகளைப்போல அவர்கள் அசைவிலியாக காலத்திலமைந்திருந்த முதலியற்கைமேல் முட்டினர். அர்ஜுனா, அங்கே ஒரு பாறை பிளக்கப்பட்டிருக்கிறது என்றால் அதன்பொருட்டு ஆயிரம் அசுரர் குருதிசிந்தியிருக்கிறார்கள் என்று பொருள். ஒரு குகைச்சித்திரம் செதுக்கப்பட்டிருக்கிறதென்றால் அதன்பொருட்டு நூறாண்டுகாலம் தவமியற்றப்பட்டிருக்கிறது என்று பொருள்” என்றார் சனாதனர்.


“விழைவே அசுரரின் முதலியல்பு. அவ்விழைவு மூன்று முகம் கொண்டது. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வென்று தன் உடைமையென்றாக்கிக்கொள்ளும் திருஷ்ணை. தன்னை முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் ஆஸக்தி. அறிந்துகொள்வதற்கான ஜிக்ஞாஸை. மூன்று முனைகளில் அவர்கள் அதை பெருக்கிக் கொண்டனர். வீரத்தால், பாலின்பத்தால், தவத்தால் அவர்களில் எழுந்தனர் மண்ணையும் விண்ணையும் முழுதாண்ட பேரரசர்கள். ஒன்றுநூறெனப் பெருகும் பெருந்தந்தையர். ஒற்றைச்சொல்லில் பிரம்மத்தை திறந்தெடுத்த முனிவர். அவர்கள் தங்களை கூர்படுத்தி கூர்படுத்திச் சென்று வேதத்தை தொட்டனர்” என்றார் சனந்தனர்.


“வேதமென்பது புவிவை தன் உள்ளங்கையில் ஏந்தி குனிந்து நின்றிருக்கும் நெடுவிசும்பின் எண்ணப்பெருக்கு. அண்ணாந்து நோக்கும் ஒரு சிறுபுழு தன் சித்தத்தை பெருக்கி நீட்டி கூர்ந்து குனிந்துநோக்கும் மானுடனின் விழியை சந்தித்து அவர்கள் புன்னகை பரிமாறிக்கொள்வது போன்றது அந்நிகழ்வு. அக்கணமே அது புழுவல்லாதாகிறது. வேதத்தை அறிந்த அசுரமுனிவர் உள்ளத்தில் மொழி உருவாகியது. மொழி உரையாடலாகியது. கல்லில் கனலென அவர்களுக்குள் இருந்த வேதம் உரசிப்பொறியாகி எரிவடிவுகொண்டு எழுந்தது” என்று சனத்குமாரர் சொன்னார்.


“மரம்கனிந்த மலர்த்தேன் போல மொழி கனிந்து இனிக்கும் நுனியே வேதம் என்கின்றன காவியங்கள்” என்றான் அர்ஜுனன். சனகர் புன்னகைத்து “ஆம், அதுவும் மெய்யே. ஆனால் அது அனைத்தையும் மொழியென்றே அறியும் கவிஞர் உணர்ந்தது. மொழி உருவானபின் அதில் மெய்மை அமைந்து வேதம் பிறப்பதில்லை. வேதமே விதை. அது உள்ளமென்றாகி பிற உள்ளத்தை நாடுகையில் மொழியை உருவாக்கிக் கொள்கிறது. முளையாகி தளிராகி எழுந்த விதை கொடிச்சுருளை நீட்டி நீட்டித் தவித்து பற்றிக்கொள்வதுபோல. வேதம் அனல்துளிபோல. அது பரவ விரும்புகிறது. பற்றிக்கொண்டு எழ முனைகிறது. அதன் தவிப்பே மொழி என்க!” என்றார். சனாதனர் “மொழி என்பது ஒற்றைச் சொல்லே. அச்சொல்லின் முடிவில் நிறைவின்மையை உணர்ந்து எழுகிறது அடுத்த சொல். அதிலிருந்து அடுத்த சொல் என பெருகிப்பெருகி அது சொல்வெளியென்றாகிறது” என்றார்.


“ஆகவேதான் ஒருசொல்லை விளக்குவதற்காக பிற அத்தனை சொற்களும் எழுந்து சூழ்கின்றன”  என்றார் சனந்தனர். “இளையபாண்டவனே, மொழி என்பதுதான் என்ன? உரைக்கவும் உணர்த்தவும் கொள்ளும் முடிவிலா தவிப்பு அல்லவா அது? ஒவ்வொரு கணமும் பொருள்வளர்வது சொல். ஒவ்வொரு முறையும் புதிதெனப்பிறப்பது. ஒருபோதும் சொல்லி நிறைவறியாதது. மொழிக்குள் அமைந்து ஒவ்வொரு சொல்லிலும் எழுந்து துள்ளி அலைத்து தவித்துக்கொண்டிருப்பது என்ன? தளிர்நுனிகளனைத்திலும் துடிப்பது வேர்முனைகள் அனைத்திலும் நெளிவது விதையினுள் எழுந்த விழைவே அல்லவா?” என்று சனத்குமாரர் கேட்டார்.


“மொழியென்றாகிய வேதம் கருவறை புகுந்த பார்த்திவப் பரமாணுபோல புவியில் விழுந்த உயிர்த்துளி. “நான் வளர்க! நான் பெருகுக! நானே ஆகுக!” என்றே அதுவும் தவம்செய்கிறது. அந்தத் துளி அசுரர்களை ஒற்றைப்பேருடலாக்கியது. பல்லாயிரம் கைகளும் கால்களும் கொண்ட விராடவடிவன் ஆயிரக்கணக்கான புரவிகளை ஒன்றாக்கி அவற்றின் மேலேறி போர்க்களம்செல்வதுபோல அவர்களின் குலங்கள் மேல் அது நின்றது. அசுரர் என்று ஒருதிரள் இல்லை, ஆசுரம் என்னும் எழுச்சியே உள்ளது” என்று சனந்தனர் சொன்னார். “அசுரவேதம் அசுரரின் நாவுகளில் அமைந்து அவர்களின் குருதியை ஒன்றாக்கியது. அவர்களின் நோக்கிலெழுந்து முகில்களையும் மலைமுடிகளையும் ஆறுகளையும் நிலவிரிவையும் கடல்களையும் நோக்கி அள்ளத்துடித்தது. அவர்களின் படைக்கலங்களில் தோன்றி குருதிகொள்ளத் துடித்தது. அடங்காது திமிறிய  புரவி அவர்களால் வென்று கடிவாளமிடப்பட்டது. நஞ்சும் அமுதுமெனக் கலந்து நின்றிருந்த அன்னம் அவர்களால்தான் சமைக்கப்பட்டது” என்றார் சனாதனர்.


“இளையபாண்டவனே, படைப்பில் இருவிசைகளை அறிந்துகொள். ஒன்று தன்வாலை தான்விழுங்கி தன்னுள் சுருண்டு சுழன்றுகொண்டிருக்கும் அன்னம். இன்னொன்று அதில் ஊடுருவி அதன் சுருள்களைந்து எழச்செய்யும் அறிவு. அன்னமும் அறிவும் சக்தியும் சிவமும் கொள்ளும் இரு தோற்றங்களே.  விண்ணிலும் மண்ணிலுமுள்ள இருப்புகள் அனைத்தும் முதன்மைப்பிரஜாபதியாகிய தட்சனில் இருந்து உருவானவை. மாநாக வடிவினனாகிய அவனே அன்னரூபன். அதிதி, திதி, தனு, அரிஷ்டிரை, சுரசை, கசை, சுரபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு, முனி என்னும் பதின்மூன்று நாகினியரில் இருந்தே அசுரரும் தேவரும் நாகரும் மானுடரும் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் பிறந்து விண்ணையும் மண்ணையும் நிறைத்தனர். அம்மகளிரை மணந்த முதல்பிரஜாபதியாகிய கசியபரின் உள்ளே எண்ணமென எண்ணும் வாய்ப்பென உறைந்தவையே அவர்களில் அன்னம்சூடி உயிருருக்கொண்டு எழுந்தன” என்றார் சனகர்.


“அதிதியில் இருந்து ஆதித்யர்கள் பிறந்தனர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களில் இருந்து ஆதித்யகுலம் தொடங்கியது. அதிதியிலிருந்து எழுந்த இரண்டாவது பெருங்குலத்தோர் வசுக்கள் எனப்பட்டனர். அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்னும் எட்டு வசுக்கள் விண்ணை ஆள்கின்றன. திதியில் இருந்து தைத்யர்கள் பிறந்தனர். ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் பிறந்தது தைத்யகுலத்திலேயே. தனுவிலிருந்து தானவர்கள் பிறந்தனர்.  அவர்கள் விருத்திரனை முதல்தந்தையாகக் கொண்டவர்கள். சுரபியிலிருந்து பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர். வினதை கருடனைப் பெற்றாள். கத்ரு பெற்றவை பெருநாகங்கள்” என்றார் சனத்குமாரர்.


“ஒன்று அறிக, ஆதித்யர்களும் தைத்யர்களும் தானவர்களும் உடன்பிறந்தோர். முன்பு ஆதித்யர்களும் அசுரர்கள் என்றே அறியப்பட்டனர். ஏனென்றால் ஆசுரம் என்னும் முதலியல்பே அவர்களை இயக்கிய வல்லமை. இந்திரனும் வருணனும் மித்ரனும் அசுரர்களே” என்று சனகர் தொடர்ந்தார். “அசுரர்களின் உள்ளத்தில் வேதம் எழுந்ததும் அது தன்னியல்பால் கனியலாயிற்று. மொழியை அது சமைத்தது. அதை ஊர்தியெனக்கொண்டு உள்ளங்கள் தோறும் விரிந்தது. வேதம் முனிவர்களை உருவாக்கியது. முனிவர்கள் வேதத்தைப் புரக்க வேள்விகளை இயற்றினர்” என்றார் சனந்தனர்.


“வேள்வியென மானுடர் இன்று இயற்றுபவை தன்னியல்பாக அன்று செய்யப்பட்ட நற்செயல்களின் சடங்குவடிவங்களே” என்றார் சனாதனர். “ஒருபோதும் தோற்காமலிருத்தலுக்குரிய விக்ரமம், அனைத்தையும் அடைவதற்குரிய திருஷ்ணம், பெருகிக்கொண்டே இருப்பதற்குரிய க்ராந்தம் என அசுர வேள்விகள் மூன்றே. அவற்றை இயற்றி அசுரர் வெற்றிகளையும் செல்வங்களயும் ஈட்டினர். குலம்பெருக்கினர்” என்றார் சனாதனர். சனத்குமாரர் “இன்று மண்ணில் அரசர்கள் இம்மூன்று மறவேள்விகளில் இருந்து எழுந்த வேள்விகள் பலவற்றை இயற்றுகிறார்கள். ராஜசூயமும் அஸ்வமேதமும் விக்ரமம் எனப்படுகின்றன. பொருள்நாடிச்செய்யும் பூதவேள்விகள் திருஷ்ணம் போன்றவை. புத்ரகாமேஷ்டி போன்றவை கிராந்தமரபைச் சேர்ந்தவை” என்றார்.


“வென்று வாழ்ந்து நிலைகொண்டபின்னரும் எஞ்சுவதென்ன என்று அவர்களின் முனிவர்கள் உளம்கூர்ந்தனர். அவர்கள் ஏழுவகை அறவேள்விகளை உருவாக்கினர். அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் ஃபாஜனம், அளித்தவற்றுக்கு நன்றி சொல்லுதல் பிரதிநந்தனம், எடுத்தவை மேலும் வளரவிடுதல்  அஃபிஜனனம், அளித்த விண்ணவர்க்கே திருப்பி அளித்தல் நிவேதனம், அறியாதவருக்கும் அன்னமளித்தல் அஃப்யாகதம், சிற்றுயிர்களையும் ஓம்புதல் உபகாரம், இங்கிருப்பவற்றின் ஒழுங்கு குலையாது நுகர்தல் ருதம். இந்த ஏழு தொல்வேள்விகளுக்கு அசுரர்களில் ஒருசாராரான ஆதித்யர்கள் கட்டுப்பட்டனர். ஆகவே அவர்கள் வேள்விக்குரியவர்களாயினர். தைத்யர்களும் தானவர்களும் அறவேள்வியை மீறிச்சென்றவர்கள். வேள்வியிலமர்ந்து அவிகொள்ளத் தொடங்கியதும் ஆதித்யர்கள் ஒளிகொண்டனர். அழிவின்மையை அடைந்தனர்.  விண்ணாளும் தேவர்களென்றானார்கள். தைத்யர்களும் தானவர்களும் தங்கள் ஆசுரத்தால் முழுக்கக் கட்டுண்டிருந்தனர். எனவே இருண்டு புவியை நிறைத்தனர்” சனகர் சொன்னார்.


“ஆதித்யர்களான அசுரர்களில் மூத்தவர் வருணன். தைத்யர்களும் தானவர்களுமான அசுரர்களில் முதல்வர் விருத்திரன். விருத்திரனை வென்றமையால் இந்திரன் தேவர்குடியில் மூத்தவனென்றானான்” என்றார் சனந்தனர். சனத்குமாரர் “ருதம் கொண்டமைந்த அசுரர்குடிமூத்தவராகிய வருணனே அசுரகுடியின் அறவேள்விகளில் முதல்வர். அவருக்கான வேதம் வாருணம் எனப்பட்டது. வேதமுதல்வனாக இந்திரன் எழுந்தபின் உருவான வேதமுறைமை மாகேந்திரம். குன்றாவிழைவும் வென்றுசெல்லும் வீரமும் அறம்நிற்கும் அமைதியும் கொண்டவனாகிய இந்திரனே அதன் முழுமுதல்தேவன் என அமைந்தான்” என்றார்.


“விருத்திரனின் அழிவுக்குப்பின் அசுரரும் தேவரும் கொண்ட பகைமை ஒவ்வொரு கணமும் என வளர்ந்தது. அசுரருக்கும் தேவருக்கும் உளம்பகுத்து அளித்தவர்களாகிய மானுடர் உருவாகி வந்தனர். மானுடரின் அறவேள்விகளால் தேவர் வளர்ந்தனர். தங்கள் அழியா விழைவின் ஆற்றலால் அசுரர் நிகர்நின்றனர். இன்றுவரை நீளும் அப்போர் இனி என்றும் இவ்வண்ணமே நீடிக்கும் என்பதே நெறி” என்றார் சனத்குமாரர்.


[ 18 ]


“மைந்தரை வளர்க்கும் அன்னை மைந்தர் வளரும்தோறும் தான் மாறுபடுவதுபோல வேதம் மாறிக்கொண்டிருக்கிறது” என்றார் லோமசர்.  இந்திரனின் மலர்க்காட்டின் கொடிமண்டபத்தில் அவருடன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். “இந்திரனை முதல்தெய்வமாகக் கொண்டவேதம் மாகேந்திரம் எனப்பட்டது. அதற்கு முன்னாலிருந்த வாருணத்திலிருந்து வேள்விச்சடங்குகளை தான் எடுத்துக்கொண்டது. மாகேந்திர வேள்விகள் அனைத்திலும் முதல் அவி இந்திரனுக்கே அளிக்கப்பட்டது. மானுடர் மண்ணில் செய்த வேள்விகளின் அவி பெருநதிகளாக வந்து சூழ்ந்தமையால் இந்திரபுரி அணையாத ஒளியுடன் திகழ்ந்தது அன்று. இந்திரனுக்கு அப்பால் தெய்வங்களென எவருமிருக்கவில்லை அன்று” என்று லோமசர் சொன்னார்.


அந்நாளில் அசுரர் கோமான் ஹிரண்யன் அசுரப்பெருவேதத்தின் பன்னிரண்டாயிரம் பாதங்களை முழுதுணர்ந்து தெளிந்தான். அந்தவேதம் அவனுக்கு வெற்றியும் குலவிரிவும் புகழுமாகியது. தன்னை இறைவனென அவன் உணர்ந்தான். எனவே அவனை இறைவன் என எண்ணினர் அசுரகுடிகள். வேதமெய்மை படர்ந்த அவன் உடல் பொன்னென்றே ஆகியது. அவன் தேர்ந்தமைத்த பொன்மயவேதம் ஹிரண்யம் என அழைக்கப்பட்டது. தந்தையிடமிருந்தே வேதம் கற்றுத்தெளிந்தான் அவன் மைந்தனாகிய பிரஹலாதன். அதை முழுதும் ஓதி உணர்ந்து தெளிந்தபோது அது குறையுடையது என்று உணர்ந்தான். அக்குறை என்னவென்று அவனால் அறியமுடியவில்லை. அசுரர்களின் ஆசிரியரான சுக்ரரும் அதை அறிந்திருக்கவில்லை. எனவே அதை அறிய நாரதரை தேடிச்சென்றான்.


நாரதர் சொன்னார் “அசுர இளவலே, உன் வேதம் சீறும், பாயும், போரிடும், வெல்லும். கண்மூடி வெறுமனே அமராது. எனவே அசுரர் வென்று அமைந்ததுமே அவர்களின் வேதம் அவர்களை கைவிடத் தொடங்குகிறது. செயலூக்கம் என்பது இயல்புநிலை அல்ல. செயலின்மை என்பதுபோல அதுவுமொரு குறைநிலையே. செய்தடங்குதலே நிறைநிலை. உன் தந்தை குன்றா விசைகொண்டு விண்ணை முட்டிக்கொண்டிருந்தார். அவருக்குரியதாக அமைந்தது அவ்வேதம். நிலைகொண்ட உள்ளத்துடன் உன்னை நோக்கி அமர்ந்த உனக்கு அது உதவாச் சொல்லென்று ஆகியது. செயல் ஒறுத்து நீ அமைதி கொள்கையிலும் தொடர்ந்துவரும் வேதமென்ன என்று உணர்க!”


அத்தகைய வேதம் என்ன என்று அறியும்பொருட்டு வேதமுணர்ந்த தன் தந்தையிடமும் தந்தையின் ஆசிரியரான சுக்ரரிடமும் சுக்ரரின் ஆசிரியரான பிரஹஸ்பதியிடமும் சென்றபின் மீண்டும் நாரதரிடமே வந்தான் பிரஹலாதன்.  “முனிவரே, உங்கள் வினாவுடன் நான் என் தந்தையிடம் சொன்னேன். ஆடாத தீ என்று ஒன்றில்லை என்றார். சுக்ரர் சுழல்கையிலேயே காற்று மூச்சென்றாகிறது என்றார்.  பிரஹஸ்பதி அசையாத நாக்கு சொல்லெடுப்பதில்லை என்றார். நீங்கள் சொன்ன வேதம் என ஒன்றில்லை என்றே அவர்கள் கூறினர். எனவே உங்களையே அடைக்கலம் புகுகிறேன். அமைதிநிலையில் திகழும் வேதம் என்பது என்ன?” என்றான்.


நாரதர் “இளவலே, கேள்! வீரமும், காமமும், கொடையும் செயலென்று மட்டுமே திகழ்பவை. ஆற்றாவிட்டால் இல்லையென்றாகுபவை. ஆனால் அளியும் அறமும் அருளும் உணர்வென்றும் இயல்பென்றும்கூட  உள்ளமைபவை. இயற்றாவிட்டாலும் இருப்பவை.  எந்தவேதம் அப்பண்புகளை மட்டும் தான் எனக் கொண்டுள்ளதோ அதுவே நிறைநிலைவேதம்” என்றார். “அவ்வேதம் எங்குள்ளது?” என்றான் பிரஹலாதன். “நீ கற்றறிந்த வேதத்திற்குள்ளேயே அதுவும் அமைந்துள்ளது. மெய்யறிவால் அதைத் தொட்டு மீட்டெடுக்கவேண்டும்” என்றார் நாரதர்.


“முனிவரே, அதைத் திரட்டி எடுக்கும் வழியென்ன என்று சொல்க!” என்றான் பிரஹலாதன். “விழைவென்றும் செயலென்றும் அலைக்கொந்தளிக்கும் வேதவெளிக்கு அடியில் இருப்பென்றும் இன்மையென்றும் இல்லாது நிறைந்திருக்கும் அமைதி ஒன்றுள்ளது. அனைத்துமாகியும் அனைத்திற்கும் அப்பாற்பட்டும் இருக்கும் ஒன்று. அதைக்குறிக்கும் சொல் ஒன்று. அச்சொல்லைப் பற்றுக! ராணித்தேனீயை எடுத்துச்சென்றால் தேனீக்கூடே உடன் வருவதுபோல மெய்வேதம் அதைத் தொடர்ந்து உன்னுடன் வரும்.”


தன் அருகே முழந்தாளிட்டு செவிகாட்டி அமர்ந்திருந்த பிரஹலாதனுக்கு கைகளால் இதழ்பொத்தி செவிகளில் அந்த முதற்சொல்லை நாரதர் சொன்னார் “நாராயணா”. மும்முறை அதைச் சொல்லி தன் ஆழத்தில் நிறைத்துக்கொண்டான் பிரஹலாதன். “அசைவற்றது, முழுமைகொண்டது, அனைத்துமானது, நீரென நிறைவது, நிலைகொண்டது, காப்பது, விரிவது என்னும் ஏழுபொருள்கொண்டது இச்சொல். ஊழ்கத்தில் ஏழாயிரம் கோடிப்பொருள் கொண்டு விரிவது. இது உன்னுடன் இருக்கட்டும்” என நாரதர் வாழ்த்தினார்.


நாராயணா என்னும் ஒற்றைச் சொல்லால் ஹிரண்யவேதத்திலிருந்து பிரஹலாதன் திரட்டிய வேதமே மஹாநாராயணம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வேதத்தை ஓதி உணர்ந்து அவன் ஒளிகொண்டான். தந்தையின் ஒளியைவிட மைந்தனின் ஒளி மிகுந்தபோது அசுரர் அவனை நாடிவந்தனர். அவர்களுக்கு மகாநாராயண வேதத்தை பிரஹலாதன் கற்பித்தான். ஹிரண்யவேதமன்றி பிறவேதம் ஒலிக்கலாலாது தன் நாட்டில் என ஆணையிட்டிருந்தான் ஹிரண்யன். ஒருநாள் வேட்டைக்குச் சென்றபின் புலர்காலையில் காட்டிலிருந்து நகர்திரும்புகையில் காட்டுவிலங்குகள் நிரைநிரையென செல்வதைக் கண்டு வியந்து தேரை நிறுத்தினான். அவை செல்லும் வழியெங்கே என்று நோக்கிவர ஒற்றனை அனுப்பினான்.


அவர்கள் திரும்பிவந்து நகருக்குவெளியே ஆற்றங்கரைக்குடிலில் அவன் மைந்தன் பிரஹலாதன் வேதமோதுவதாகவும் அதைக்கேட்கும்பொருட்டே விலங்குகள் செல்வதாகவும் சொன்னான். வேதம் அசுரருக்குரியது, விலங்குகள் எவ்வண்ணம் வேதத்தை அறியமுடியும் என அவன் வியந்தான். தேரைத்திருப்பி மைந்தன் இருந்த குடிலுக்குச் சென்றான். அங்கே மானும் முயலும் புலியும் நரியும் புட்களும் கூடி அவ்வேதத்தைக் கேட்டு நிற்பதைக் கண்டான். மைந்தனிடம் “இது எந்த வேதம்? ஹிரண்யவேதம் அசுரருக்குரியது. அதை பிற உயிர்கள் அறியமுடியாது” என்றான். “வேதம் ஒன்றே. காட்டில் கனிகொய்வதுபோல அதில் இனிய பகுதி ஒன்றை நான் தேர்ந்துகொண்டேன்” என்றான். “பொய்யாமையும் கொல்லாமையும் விலகாமையும் கொண்ட வேதம் இது. தான் மட்டுமே இருந்தாலும் முழுநிலையிலமைவது.”


சினத்தை அடக்கி  “அந்தவேதம் எது?” என்றான் ஹிரண்யன். “நாராயாணா என்னும் சொல்லுடன்  வந்திணையும் சொற்களாலான வேதம்” என்றான் பிரஹலாதன். தந்தை சினம் கட்டுமீற ஒற்றை அடியில் அக்குடிலை உடைத்து வீசினான். “இனி அந்த வேதம் இங்கு ஒலிக்கலாகாது” என்றான். “அவ்வேதமே என் நாவில் ஒலிக்கும். மெய்யென்று ஒன்றை அறிந்தபின் பிறிதொன்றைச் சூட ஒருபோதும் ஒப்பேன்” என்றான் பிரஹலாதன். தந்தை மைந்தனை தன் கதையால் அடிக்கப்போனான். “என்னை கொல்லுங்கள். உங்கள் வேதத்தை நீங்களே தோற்கடியுங்கள்” என்றான் பிரஹலாதன். “அவைகூடட்டும். நம் இருவேதங்களும் அவையிலெழட்டும். மெய்மையின் துலா எங்கு சாய்கிறதென்று நோக்குவோம்” என்றான் ஹிரண்யன்.


நூற்றெட்டு அசுரமுனிவர்களும் ஆயிரத்தெட்டு அசுரகுலத்தலைவர்களும் கூடிய பேரவையில் பன்னிருநாட்கள் அந்த மெய்யாடல் நிகழ்ந்தது. பெருங்கடல்களை துளித்துளியாக ஆராய்வதுபோல ஹிரண்யமும் மகாநாராயணமும் சொல்தோறும் உசாவப்பட்டன. இறுதியிலொரு சொல்லில் சென்று நின்றது அவ்வுரையாடல். அறிதலென அடைவன எல்லாம் அறிதல் மட்டுமே என்றது மகாநாராயணம்.  பெயரிட்டு பொருள்கொள்ளப்படும் பொருள் பெயரென பொருளென தன்னை நடிக்கிறது. “எப்படி அது நிகழலாகும்?” எனச் சீறி எழுந்தான் ஹிரண்யன். “சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் காலத்தில் இடத்தில்  மாறாமுடிவிலியாக நின்றிருப்பதே பொருள். சொல் அதன்மேல் விழும் ஒளி. இருளிலும் அது அங்குதான் இருக்கும்” என்றான்.


“இருளில் அங்கிருப்பது பொருளென எவர் அறிவார்? எங்கோ எவரோ கொள்ளும் விழியும் ஒளியும்தான் அதை பொருளென்றாக்குகிறது” என்றான் பிரஹலாதன். “இதோ நின்றுள்ளது கற்தூண். இதை சிம்மம் என நான் பெயரிட்டழைத்தால் இது உறுமி உகிரும் எயிறும் கொண்டு எழாது” என்றான்ர் ஹிரண்யன். “தூணென பொருள்கொண்டு சிம்மமென அழைத்தால் அவ்வாறே. உங்கள் முழுஉள்ளத்தாலும் அதை சிம்மமெனக் கொண்டால் அது சிம்மமேயாகும்” என்றான் பிரஹலாதன். “ஆம், இதோ இதை சிம்மமெனக் கொள்கிறேன். எழுக சிம்மமே!” என்று தன் அசுரவிசைகொண்ட உள்ளத்தால் கூவியபடி கதை சுழற்றி அதைநோக்கி சென்றான் ஹிரண்யன். கற்தூண் சிம்மமென்றாகி எழுந்து உறுமி உகிர்நீட்டி அவரைப் பற்றி குடல் கிழித்து மாலையாக்கிச் சூடியது.


அதன்பின்னர் மகாநாராயணமே வேதக்கூர் என்றாயிற்று. ஆயிரம் வேள்விகளை நிகழ்த்தி பொன்னுடல்கொண்ட பிரஹலாதன் இந்திரன் என உருக்கொண்டு விண்ணிலேறி அமராவதியை வந்தடைந்து அரியணையில் அமர்ந்தான். ஹிரண்யனால் வெல்லப்பட்டு முடியிழந்தபின் மீண்டும் அரியணையைப் பெற்று முடிசூடி  கோல்கொண்டு அமர்ந்திருந்த இந்திரன் விலகி ஓடினான். இலையுதிர்க்கும் நீர்த்துளியெனச் சொட்டி அறியாத ஆழங்களுக்குள் சென்று மறைந்தான். ஆயிரமாண்டுகாலம் இருளில் உதிர்ந்த கரியவைரம் என எவருமறியாமல் கிடந்தான். பின் துயர் செறிந்து எடைமிகுந்து அவ்வெடையால் தன்னை உணர்ந்து எழுந்து மெய்யாசிரியராகிய பிரஹஸ்பதியை  அணுகி தான் இழந்தது என்ன என்று கேட்டான். “நானறிந்திலேன். என் மாணவன் அசுரர்களின் ஆசிரியன். அவன் அறிந்திருக்கக்கூடும்” என்றார் பிரஹஸ்பதி.


சுக்ரரிடம் சென்று பணிந்து “அசுரர்களுக்கு ஆசிரியரே, அகத்திருளின் ஆராவிழைவால் நானும் அசுரனே. எனக்கு அருள்க! நான் வெல்வதெப்படி?” என்றான் இந்திரன். சுக்ரர் பிரஹலாதனின் வெற்றியால் சினம் கொண்டிருந்தார். எனவே நிகழ்ந்தது என்ன என அவர் இந்திரனுக்கு சொன்னார் “அசுரமைந்தனிடம் விளைந்திருக்கிறது, அரசே. உங்களை அரியணையில் அமர்த்திய வேதம் மாகேந்திரம் எனப்படுகிறது. வான் நிறைக்கும் இடியின் சந்தம் கொண்டது அது. வென்று எழுந்து மூடும் விழைவு  மட்டுமேயானது. தன்னை தான் பெருக்கிக் கொள்வது. உண்பது, பிறப்பது, வெல்வது, ஒருபோதும் ஓயாதது.”


“அரசே, ஆயிரம் யுகங்கள் வேள்விகளால் விண்நிறுத்தப்பட்டவர் என்றாலும் நீங்களும் ஆழத்தின் அடியிலியிருளில் ஓர் அசுரரே என உணர்ந்திருக்கிறீர். ஆம்,  உங்கள் வேதத்தில் ஆசுரம் ஒருபோதும் ஒழிவதில்லை. ஆசுரம் அமைந்த  மாகேந்திரத்தை வென்றெழுந்தது தூய ஆசுரமான ஹிரண்யம். அதை தன் பெருக்கிலொரு சிறுதுளியென்றாக்கி எழுந்தது மகாநாராயணம் என்னும் வேதம்” என்றார் சுக்ரர்.  ”பிரஹலாதனிடமிருந்து அதைப்பெறுக! அவ்வேதத்தை நீர் உமதென்றாக்குக! அதுவே வெல்லும் வழி.” இந்திரன் “ஆசிரியரே, நான் அவரை வெல்லமுடியாது. அதற்குரிய படைக்கலங்கள் என்னிடமில்லை” என்றான்.


புன்னகைத்து “உன் படைக்கலம் எப்படியென்றாலும் வெல்லவேண்டுமெனும் முனைப்பே. அதைக்கொள்க!” என்றார் சுக்ரர். “அவர் கொண்டுள்ள மகாநாராயண வேதம் அளி அறம் அருள் என்னும் முப்பண்புகளின் முழுநிலை. அதைக்கொண்டே அதை வெல்க!” இந்திரன் வணங்கி மீண்டான். ஒரு எளிய அந்தணச்சிறுவனாக மாறி பிரஹலாதன் தவம்செய்துகொண்டிருந்த சிறுகுடில் முன் சென்று நின்று வணங்கினான். “அறிவை கொடையளியுங்கள், ஆசிரியரே” என்றான். அந்தணச் சிறுவனின் எழில் கண்டு பிரஹலாதர் உளம் கனிந்தார். அவனை கூர்ந்தறியும்பொருட்டு “சொல்லுக்குப் பொருளென்றாவது எது?” என்று கேட்டார். “பிறிதொரு சொல்” என்றான் அந்தணச்சிறுவன். “மொழிக்குப் பொருளாவது எது?” என்றார் பிரஹலாதர். “அதன் முதற்சொல்” என்றான் அந்தணச்சிறுவன். “அருகணைக!” என அழைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “நன்று, நீ வெல்க!” என்றார் பிரஹலாதர்.


பன்னிரண்டு ஆண்டுகாலம் பிரஹலாதனின் மாணவனாக அமைந்து மகாநாராயண வேதத்தை இந்திரன் முழுதும் கற்றான். அதன் இறுதிச்சொல்லையும் அவனுக்களித்தபின்னரும் அவன் வணங்கி நிற்கக் கண்டு “சொல்க, மைந்தா!” என்றார் பிரஹலாதர். “நான் முழுமை கொள்ளவேண்டும்” என்றான் இந்திரன். “நீ விழைவதை கேள்!” என்றார் பிரஹலாதர். “இவ்வேதத்தைப் பயின்று  நீங்கள் அடைந்த நற்பேறையும் எனக்கே அருளவேண்டும்” என்றான் இந்திரன். அக்கணமே அது இந்திரன் என பிரஹலாதர் அறிந்தார். ஆனால் அவரமைந்த வேதமுழுமை “ஆம், அவ்வாறே ஆகுக!” என அளிக்கவே அவரைச் செலுத்தியது. அவர் உடலில் இருந்து பொன்னிற நிழல் ஒன்று எழுந்து இந்திரனை அடைந்தது. அவன் ஒளியுடன் எழுந்து “நானே இனி விண்முதல்வன்” என்று உரைத்து பேருருவம் கொண்டான்.


“அவ்வாறே ஆகுக!” என்று புன்னகையுடன் பிரஹலாதர் சொன்னார். “ஆனால் நீ எவ்வகையிலும் இவ்வேதத்தின் முதல்வனாக ஆகப்போவதில்லை. அளியும் அறமும் அருளும் நீ கொண்ட விழைவின் கறைகொண்டதாகவே உன்னில் திகழும். உன் உடல் பொன்னொளி கொண்டிருக்கும், உன் இடக்கால் கட்டைவிரல் கரியெனவே எஞ்சும்” என்றார். இந்திரன் “ஆகுக! நான் விண்ணவர்கோன் என்று மீண்டும் முடிகொள்வேன். எதன்பொருட்டும் என் கோலை கைவிடமாட்டேன். விண்ணாவனாகிய நாராயணன்பொருட்டும்கூட” என்றான். பின்னர் விண்ணுக்கு எழுந்து அமராவதியில் புகுந்து இந்திரனின் அரியணையில் மீண்டும் அமர்ந்தான்.


“மீண்டும் அரியணை அமர்ந்த இந்திரனுக்கு முதலெதிரி என நின்றது மகாநாராயண வேள்வியே. அதில் தனக்கு அவிமுதன்மை கிடைத்தாகவேண்டும் என்று அவன் விழைந்தான். அதன்பொருட்டு அவன் கிழக்கின் இறைவனாகிய சூரியனை தன்னுடன் இணைத்துக்கொண்டான். பிறதிசைத்தேவர்களும் அவனுடன் நின்றனர். எண்திசைத்தேவர்களும் தேவர்க்கிறைவனும் முதன்மைகொண்ட வேதமே மகாவஜ்ரம் என அழைக்கப்பட்டது. மின்னலின் மொழி அது” என்றார் லோமசர்.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2016 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.