Jeyamohan's Blog, page 1705
December 2, 2016
இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்
கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.
இன்றைய காந்தி நூலுக்கான சுருக்கமான மதிப்புரைகளில் ஒன்று
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
காந்தியைப்பற்றி…
இரு கடிதங்கள்
காந்தியின் இன்றைய முக்கியத்துவம்
சுயசிந்தனை
காந்தி ஒரு கட்டுரைப்போட்டி
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
கடிதங்கள்
கோவை
இன்றைய காந்தி-கடிதம்
இன்றைய காந்தி ஒரு விமர்சனம்
இன்றைய காந்தி -கடிதம்
”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி
இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்
ஈரோட்டில்…
இன்று ஈரோடு நூல்வெளியீட்டுவிழா.
ஈரோடு நூல் வெளியீடு
ஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
[ 18 ]
அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன் கைவிரித்து “எப்படி இவர்கள் இவ்வண்ணம் ஆனார்கள்! அசுரர்களும் இக்கீழ்நிலையை அடைவதில்லையே?” என்றான்.
“அரசர் வழியையே குடிகளும் கொள்கின்றன” என்றாள் இந்திராணி. “நீங்கள் முடிசூடிய நாள்முதலே இதைத்தான் நான் சொல்லிவருகிறேன்.” விருத்திரன் “இவர்கள் தேவர்கள் அல்லவா?” என்றான். “ஆம், அசுரர்களில் தேவர்கள் ஒளிந்திருப்பதில்லையா என்ன?” என்று அவள் சொன்னாள்.
விருத்திரன் பெருமூச்சுவிட்டான். “அரசே, அசுரர்கள் என்றும் கள்ளிலும் காமத்திலும் திளைப்பவர்கள். தேவர்கள் அவற்றை கடந்து அமைந்தவர்கள். கடக்கப்பட்டவை அனைத்தும் எங்கோ கரந்துறைகின்றன. கரந்துறைபவற்றின் ஆற்றல் நிகரற்றது. ஏழு ஆழுலகங்களின் அனைத்து தெய்வங்களும் அவற்றில் வந்து குடியேறுகின்றன. இங்குள்ள தேவர்கள் இன்று உள்ளங்களில் சூடியிருப்பவை இருள்உலகத்து தெய்வ வல்லமைகளே” என்றாள் இந்திராணி.
“பாருங்கள், தேவர்கள் நிழலற்றவர்கள். இங்கோ ஒவ்வொரு தேவர்க்கும் மூன்று நிழல்கள் விழுந்துள்ளன. இதோ, மலர்சூடி இளித்தபடி செல்பவனை நான்கு கைகளுடன் நிழலெனத் தொடர்வது காளன் என்னும் காமத்தின் தெய்வம். அங்கே சினம்கொண்டு வெறித்துக் கனைப்பது கராளன் என்னும் குரோதத்தின் தெய்வம். நூறு கைகளுடன் எழுந்த நிழல்சூடி நின்றிருக்கும் அவனை நோக்குக! அவனில் கூடியிருப்பது கிராதம் என்னும் மோகத்தின் முதன்மைத்தெய்வம். கோடிகோடியெனப் பெருகி இந்நகரை அவர்கள் சூழ்ந்துள்ளார்கள்.”
“முன்னகர திசையின்றி நின்றுவிட்ட தேர் இந்நகர். கடையாணி துருவேறிவிட்டது. சக்கரம் மண்ணில் புதைந்துவிட்டது” என்றாள் இந்திராணி. “இதன் அழிவு உங்களால்தான். அரசு என்பது அரசனின் விராடவடிவம் கொண்ட உடலே. உங்கள் நோயனைத்தையும் உங்கள் விழிகளால் நீங்கள் பார்க்கும் வாய்ப்பு ஒரு நகருலாவில் அமைகிறது. அரசே, இது இங்கு நுழைந்தபின் நீங்கள் செல்லும் முதல் நகருலா.”
விருத்திரன் அவற்றை நோக்க அஞ்சி விழிமூடிக்கொண்டான். களைத்து கால்தளர்ந்து இந்திராணியின் அணைப்பில் மயங்கியவன்போல நடந்தான். அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.
“ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.
நீள்மூச்சுடன் இந்திராணி சொன்னாள் “ஒன்றும் செய்வதற்கில்லை, படைத்தலைவரே. ஊழ் இதுவென்றால் தலைவணங்கி காத்திருப்பதே நம் கடன்.” அவள் செல்வதை கௌமாரன் நோக்கிநின்றான். அவள் உடலசைவுகள் அனைத்திலும் துயரும் சினமும் நிறைந்திருந்தன. அவள் செல்லும்போது எதிர்த்திசையில் அவள் நிழலொன்று வருவதுபோல் தோன்றியது. அவன் விழியிமைத்து அம்மயக்கை அகற்றினான்.
அங்கிருந்து ஆவதொன்றுமில்லை. அவன் தானும் செல்லவே நினைத்தான். ஆனால் கால்கள் அசையவில்லை. விருத்திரனையே நோக்கிக்கொண்டிருந்தான். இளமையில் அவன் நோக்கி வியந்த உடல். அவன் கனவுகண்ட முகம். துயர்மிக்க இறப்பென்பது இது, வழிகாட்டியின் வீழ்ச்சி.
விருத்திரன் உடலில் அத்தனை தசைகளும் மெல்ல மெல்ல முறுக்கவிழ்வதை காணமுடிந்தது. முற்றணைந்து தாடை தளர்ந்து வாய் விரிய, கைவிரல்கள் ஒன்றொன்றாக நரம்பு தளர்ந்த யாழின் புரிகளென விடுபட, விழிகள் நனைந்த குருவியிறகுகள்போல் சரிந்து ஒட்டிக்கொள்ள துயில் அவன் உடலில் கால்கட்டை விரலில் இருந்து எழுந்து எங்கும் பரவி நெற்றிப்பொட்டை நிறைத்தது.
அவன்மேல் எழுந்த நித்ராதேவி உரத்த குரலில் தன் மொழியில் பேசலானாள். திகைப்புடனும் துயருடனும் அதை நோக்கிநின்றான் கௌமாரன். அச்சொல் மெல்ல திருந்தியது. “அகல்க. அகல்க.” கௌமாரன் அக்குரலை கூர்ந்து கேட்டான். செவிமயலா அது? “அமைக அமைக அமைக” அது அவள் குரலேதான். அவனும் அதை கேட்டிருக்கிறான்.
“அன்னையே, இவருக்கு கடமைகள் உள்ளன” என்றான். வெண்ணிற ஆடையணிந்து வலக்கையில் சாமரமும் இடக்கையில் அமுதமுமாக அவள் அவன் முன் தோன்றினாள். அவன் கைகூப்பி வணங்கி நின்றான். “அவர் இங்கிருந்து செல்ல விரும்புகிறார்.” நித்ராதேவி அவனிடம் சொன்னாள் “நான் நாடிவரவேண்டும் என்பதே நெறி. என்னை நாடுபவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இங்குள்ள அனைத்தையும் விட்டுவிட்டவர்கள். அவர்களை உடலும் உறவும் சுற்றமும் பற்றிக்கொள்ளலாம். அவர்கள் நெடுநாள் முன்னரே நழுவத் தொடங்கிவிட்டவர்கள். அவர்கள் மீளமுடியாது. அடித்தளத்தின் ஆழத்தில் விரிசல் விழுந்துவிட்டது.”
“தேவி, இவர் எங்கள் குலத்தின் முதல்வர். இவரில்லையேல் நாங்கள் முற்றழிவோம்” என்று கௌமாரன் சொன்னான். “மைந்தா, மாமனிதருக்குள் வாழ்வது எளிதில் சலிப்பு கொள்கிறது. உங்களுள் விசைகொண்டு மேலெழுந்தவன் இவனே. தன் முழுமையைத் திரட்டி இங்கு வந்தடைந்தான். இனி அவன் கொள்ள ஒன்றுமில்லை என அவனுள் வாழ்வது அறிந்துவிட்டது. இந்திரனையோ வருணனையோ எஞ்சும் கயிலையையோ வைகுண்டத்தையோ வென்றாலும் அது அடைவது ஒன்றில்லை.”
கௌமாரன் “தேவி, என் குலங்கள் இங்கே இன்னும் வேர்நிலைக்கவில்லை. இன்றுதான் நாங்கள் முளைகொண்டு எழுகிறோம்” என்றான். “ஆம், ஆனால் அது உங்கள் வாழ்க்கை” என்றாள் தேவி. “மாமனிதர்கள் எக்குலத்திற்கும் உரியவர்கள் அல்ல. குடிவிட்டெழுகிறார்கள். குலம்விட்டு எழுகிறார்கள். மானுடம்விட்டு உயர்கிறார்கள். பின்னர் தங்களையே கடந்துசெல்கிறார்கள். உதிர்த்து உதிர்த்து அவர்கள் அடைந்தவையே அனைத்தும்.” துயில்பவன் தலையை வருடி நித்ராதேவி சொன்னாள் “இனி அவர் உதிர்க்க விழைவது விருத்திரன் என்னும் வடிவை.”
செய்வதறியாது சுற்றிலும் விழியோட்டிய கௌமாரன் சினத்துடன் மதுக்கோப்பையை நோக்கி “அந்நஞ்சு அவரை கொல்கிறது” என்றான். நித்ராதேவி “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்றாள். “எவருக்காயினும் மது என் புரவி. என்னைத் தொடர்ந்து வருகிறார்கள் என் மூத்தவளாகிய வியாதியும் எங்கள் மூதன்னையாகிய மிருத்யூவும்.”
கௌமாரன் நெஞ்சுபொறாது மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான். நித்ராதேவி அனல்பட்டவள்போல் செந்நிறம்கொள்வதை கண்டான். அவள் சாமரம் சவுக்காகியது. அமுதகலம் அனல்குடுவையாகியது. “துயர்! துயர்! துயர்!” என்றாள் வியாதிதேவி. சுண்டும் தைலமென மெல்ல கருகி நீலநிறம் கொண்டாள். மிருத்யூதேவி செந்நிற உதடுகளும் நீண்டுபறக்கும் செந்தழல்குழலும் கொண்டிருந்தாள். வலக்கையில் மின்படையும் இடக்கையில் துலாக்கோலும் கொண்டிருந்தாள். “இனிது! இனிது! இனிது!” என்று அவள் சொன்னாள்.
கௌமாரன் பதைப்புடனும் துயருடனும் அங்கிருந்து மீண்டான். அமராவதியிலிருந்து இறங்கிச்சென்று முகில்கணம் மேல் நின்று கீழே நோக்கினான். கோலால் அடிபட்ட நாகங்கள்போல சீறி நுரைநாக்குகள் சிதற படம்எடுத்து ஓங்கி அறைந்து நகரை கொத்தி மீண்டன அலைகள். அவன் நோக்கியிருக்கவே இறுதிக் கோட்டை கரைந்து சரிந்தது. நெஞ்சு அறைய கண்ணீருடன் அவன் விழி அசைக்காது நின்றான். இறுதி அலை ஒன்று எழுந்து எஞ்சிய புற்றுக் கோட்டையை மூடி நாற்புறமும் வெண்மலரென விரிந்து அகன்றது. நடுவே ஒரு சிறுகுமிழியென கோட்டையின் மண்குவை தெரிந்தது. பின்னர் நீல அலைகள் மட்டுமே அங்கு எஞ்சின.
நீள்மூச்சுடன் கௌமாரன் எண்ணிக்கொண்டான், சென்று மறைந்த பெருநகரங்களின் நிரையில் பிறிதொன்று. இனி சொல்லில் மட்டுமே அது வாழும். சொல், அதனால் பொருள் என்ன? என்றோ ஒருநாள் அது வாழ்வென்று ஆகும் என்னும் நம்பிக்கையைத் தவிர? அவன் விரிந்துகிடந்த மண்ணை நோக்கி ஏங்கினான். மூதாதையரே, தெய்வவடிவங்களே, இனி என்று வந்தணையும் இச்சொல்லில் எழும் உலகு? சொல் ஒன்றே மிச்சமென்றால் இவ்வாழ்வை எதற்கு எங்களுக்கு காட்டினீர்கள்?
நெஞ்சுருகி அழுதான். நெடுநேரம் கழித்து மீண்டு நீல அலைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது சொல்லேனும் எஞ்சியிருக்கிறதே என்று எண்ணினான். அப்போது உருவான நிறைவை எண்ணி அவனே வியந்தான். “எஞ்சுக எஞ்சுக எஞ்சுக” எனும் சொல்லாக அவன் உள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.
[ 19 ]
பிரம்மகபாலம் என்னும் ஊரின் மலைக்குகையில் அணைந்து கொண்டிருந்த அனலுக்கு இப்பால் இருந்த பிரசண்டன் அப்பால் உடல் சரித்து கைகளை தலைக்கு வைத்து மேற்கூரையைப் பார்த்து படுத்திருந்த பிரசாந்தரிடம் சொன்னான் “விருத்திரகுடியின் மூத்த பூசகர் கபாலர் என்னிடம் சொன்னது இது. இதை பின்னர் நூறுமுறை அசுரர்களும் நாகர்களும் நிஷாதர்களும் சொல்லி கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு வடிவம் கொண்டு என்னுள் நின்றிருக்கும் ஒற்றைக் கதை இது.”
“கதை என்பது சிதல்புற்றென மூத்த அசுரர் என்னிடம் சொன்னார். பல்லாயிரம் கோடி சிதல்களால் சொல் சொல் என இயற்றி கோத்துருவாக்கப்பட்டு எழும் பெருமலை அது” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் புன்னகையுடன் “ஆம், ஆனால் நிலைமாறா ஆழத்திலிருந்து எழுந்துவரும் அலைகள் என்றும் அதை சொல்லலாம்” என்றார். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றான் பிரசண்டன்.
“புற்றுகளிலிருந்து எறும்புநிரைகள் ஊறிப் பெருகுவதுபோல மலைகளின் ஆழங்களிலிருந்து அசுரகுடிகள் எழுந்து நிலம் நோக்கி விரிந்த காலம் அது என்று என்னிடம் கபாலர் சொன்னார். ஊன் வேட்டும், தேன் எடுத்தும், மலைப்பொருள் சேர்த்தும் காடுகளுக்குள் வாழ்ந்த குலங்கள் அவை. முன்பு எப்போதோ நிலம் திருத்தி மண் விளைவித்த நினைவு அவர்களின் மொழியில் இருந்தது. மேற்கே கடலோரமாக தங்களுக்கென ஒரு நகர் அமைந்ததை அறிந்ததும் அவர்கள் தங்களிடம் நாடி வந்த அச்சொல் வழியாகவே வழியறிந்து கிளம்பிச் செல்லலாயினர்.”
புற்றிகபுரியில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரவர் தங்கள் குழந்தைகளுடனும் முதியோருடனும் படைக்கருவிகளுடனும் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு உணவும் இல்லமும் அளிக்க அசுரப்படைகள் பன்னிரு பிரிவுகளாகப் பிரிந்து இரவும் பகலும் பணியாற்றின. விருத்திரேந்திரனின் ஆணையின்படி அவை கூடி புற்றுக்குலத்தின் பதினெட்டு தலைவர்களிடம் மூன்று கிளையென பிரிந்து பரவிய அணைநீரை திருப்பி சூழ்ந்திருந்த வறுநிலத்தில் பரப்பும்படி ஆணையிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நீர்ப்பெருக்கும் நூறு கால்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு காலும் புற்று என எழுந்த சுவரால் தடுக்கப்பட்டு சுனையாக்கப்பட்டது.
சுனைநீர் சிற்றோடைகளில் பெருகி செந்நிலத்தை குளிர்வித்தது. அங்கு பொன் என அன்னம் பெருகலாயிற்று. ஒன்று நூறு ஆயிரம் என நீர்ப்பெருக்குக்கு குறுக்காக புற்றுச் சுவர்கள் பெருக பன்னிரண்டாயிரம் சுனைகள் அங்கெழுந்தன. விண்ணில் எழுந்துசென்ற கந்தர்வர்கள் மூன்று கொடிகளில் மூவாயிரம் கிளைகள் எழுந்து முப்பதாயிரம் தளிர்நுனிகளில் பன்னிரண்டாயிரம் நீலக்கனிகள் விளைந்திருப்பதைக் கண்டனர். தேன்தட்டென ஆயிற்று அந்நிலம். தேனீக்களென வந்து சுனைகளில் நீரள்ளிச் சென்றன அத்திரிகள் இழுத்த கரியநிற வண்டிகள்.
நீர்வெளிமேல் சிறகுவிரித்த பெருங்கலங்களில் வந்த வாருணீகர்களான வணிகர்கள் தங்களுக்கு நீர் கொண்டுவந்த நதிகள் நின்றுவிட்டதைக் கண்டனர். கடலாழத்திலிருந்து எழுந்து நதிமுகப்புக்கு உணவு தேடி வந்த படகுபோன்ற மீன்கள் துயரத்துடன் திரும்பிச் சென்றன. மீன்கன்னியரும் நீர்நாகங்களும் புதுமழைநீர் இல்லாமல் வருந்தினர். இருண்ட ஆழத்தில் விழியொளி மட்டுமே கொண்டு அமர்ந்திருந்த முதற்தாதையிடம் சென்று குமிழிகளென வெடித்த சொற்களால் அவை முறையிட்டன. ஒவ்வொருநாளும் ஒரு முறையீடு வருணனை வந்தடைந்துகொண்டிருந்தது.
கடலுக்குள் அமைந்த வருணனின் உள்ளங்கையாகிய ஜலஹஸ்தம் என்னும் தீவில் பன்னிரண்டாயிரம் நாவாய்கள் ஒருங்கு கூடின. நதிகள் நின்றுவிட்டால் தங்கள் குலம் அழியும் என்றும், குலம் காக்க மூதாதையாகிய வருணன் எழவேண்டும் என்றும் கோரின. முதற்றாதையாகிய வருணனை அன்னமும் பலியுமிட்டு பூசை செய்தன. ஆழத்து நீருள் அனல் வெடித்தெழுந்ததுபோல பேரலைகளென வருணன் படைகள் வந்து புற்றிகபுரியை தாக்கின. முட்டைகளை உண்ணும் பசிகொண்ட நாகங்களென புற்றுகளை விழுங்கி அழித்தன.
நீர் உண்டு பெருத்து விதை வாங்கிச் செழித்து பொன் உமிழ்ந்த வயல்கள் அனைத்தும் உப்பு நீரால் மூடின. புற்றிகபுரியும் அதைச் சூழ்ந்த வயல் பெருவெளிகளும் கடல் கொண்டன. கதறி அழுதபடி தங்கள் குலங்களை திரட்டிக்கொண்டு மீண்டும் வடக்கு நோக்கி ஓடி காடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர் அசுரகுடிகள். தடையுடைத்துப் பெருகி கடல் கண்டன மூன்று பெருநதிகளும்.
குளவிக்கூட்டுக்குள் குளவிக்குஞ்சுகள் மட்டுமே உகந்து அமையமுடியும். அன்னையின் நெஞ்சு அவற்றுக்கு இன்னுணவு. அங்கு செல்லும் பிற உயிர்கள் அக்கணமே உயிர் கரையத்தொடங்கிவிடுகின்றன. அமராவதிக்குள் நுழைந்ததுமே விருத்திரன் உயிரழியலானான். அங்கிருந்த அனைத்தும் அழகும் இனிமையும் கொண்டிருந்தன. அழகும் இனிமையும் மயக்கம் அளிப்பவை. மயக்கென்பது உயிர் தன் விழிப்பை மறந்து தேங்குவது.
விண்ணுலகில் காலமில்லை. காலமில்லாத இடத்தில் கணங்கள் மட்டுமே உள்ளன. முன்னும் பின்னும் எழும் இரு பெருங்காலங்களால் மட்டுமே கணங்கள் பொருளேற்றம் செய்யப்படுகின்றன. பொருளற்ற காலத்தில் எஞ்சுவது துய்த்தல் மட்டுமே. துய்த்தல் என்பது தன்னை ஒப்புக்கொடுத்தல். ஒப்புக்கொடுத்தல் என்பது இழத்தல். இழத்தல் என்பது துளித்துளியாக அழிதலன்றி வேறல்ல.
விண்ணுலக மதுவிலும் மாதரிலும் மூழ்கிக் கிடந்தான் விருத்திரன். மது எழுப்பிய மெய்யிலி உலகங்களில் உவந்தலைந்தான். காமமோ துய்க்கும்தோறும் பெருகுவது. இன்பங்களெல்லாம் அடையும்தோறும் விடாய்கொள்ள வைப்பவை. இன்பத்திலாடியவன் வென்றவை என ஏதுமில்லை, உள்ளும் புறமும். துயரென்பது தன் எல்லையை கடத்தல். கடத்தலே வெல்லல். துயரிலாடி மீள்பவன் தன்னை கடந்திருப்பான். சூதரே, துயரினூடாகவே மானுடர் வளர்கிறார்கள்.
ஒவ்வொருநாளும் விழித்தெழுந்து எங்கிருக்கிறேன் என்று உணர்கையில் கொல்லும் பழி உணர்ச்சி எழ தன் தலையில் அறைந்துகொண்டு விருத்திரன் அழுதான். ஒரு தருணம் கரைந்தழிந்த தன் நகரங்களை எண்ணி சினந்து உடல் கொதித்தான். அத்துயரும் சினமும் தாளமுடியாமல் மீண்டும் மது அருந்தினான். மதுவிலமைந்து துயின்று எழுகையில் மதுக்கோப்பைகளை அள்ளி வீசி உடைத்தான். “என்னைக் கொல்ல வந்துள்ளது. இது என்னை அழைத்துச்செல்லவே வந்துள்ளது” என்றான்.
“ஒருகணம்தான். உங்களுக்குள் வாழும் மதுவிழைவை பிறிதொரு தலையை எனக் கிள்ளி விலக்குக! விடுபடுக!” என்றாள் இந்திராணி. “ஆம், அதுவே” என்றான். ஆனால் மீண்டும் மது அவனை வந்து சூழ்ந்துகொண்டது. “என்ன செய்கிறீர்கள்?” என்று இந்திராணி சினந்து விழிநீர் உகுத்தாள். “தன்னைத்தானே அழிக்கும் சுவை ஆண்களுக்கு தெரியும், பெண்கள் அதை உணரமுடியாது” என்றான் விருத்திரன். கசப்புடன் நகைத்து “அன்னையென்றில்லாது நீங்கள் இருப்பதில்லை. சூதுக்களத்திலல்லாது நாங்களும் வாழ்வதில்லை” என்றான்.
மறத்தல் ஒன்றே வழியென்று அவனிடம் சொன்னது மது. அடைதலும் மயங்குதலும் ஒன்றே என்று அது காட்டியது. மதுவிலிருந்து விழிக்கும்போது வரும் வெறுமையை வெல்ல மேலும் மதுவே ஒரே வழி என்று அவன் கண்டான். மதுவென வந்து அவனில் நிறையும் தெய்வங்கள் அவனிலிருந்து உந்தி வெளியே தள்ளிய இருள் அனைத்தும் மது ஓய்ந்ததும் மீண்டும் வந்து அவனை சூழ்ந்துகொண்டன. விழிப்பிற்கும் மயக்கிற்கும் இடையே ஓயா ஊசலென நாட்கள் சென்றமைந்தன.
அப்போது ஒருநாள் நெடுந்தொலைவிலென மெல்லிய அதிர்வொன்றை அவன் கேட்டான். அருகிருந்த ரம்பையிடம் “அது என்ன ஓசை?” என்றான். “இது அந்தி. முல்லை மொட்டுகள் மொக்கவிழ்கின்ற ஓசை போலும்” என்று அவள் சொன்னாள். மறுநாள் மீண்டும் அவ்வோசையை அவன் கேட்டான். அது மேலும் வலுத்திருந்தது. “இம்மலர்வனத்தில் இளமான்கள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி போலும் அது” என்றாள் மேனகை. பின்னொருநாள் அவ்வொலியைக் கேட்டபோது “களிறுகள் தங்கள் கூடுகளை முட்டுகின்றன” என்றாள் திலோத்தமை.
அன்றிரவு கனவில் தொலைவானின் சரிவில் மெல்லிய வெண்கீற்றொன்றை அவன் கண்டான். விழித்தெழுந்து அது என்னவென்று நிமித்திகரிடம் கேட்டான். “அரசே, அது ஒரு வெண்ணிறகு. விண்கடந்து சென்ற பறவை ஒன்று உதிர்த்தது” என்றான் நிமித்திகன். “என்ன சொல்கிறது அப்பறவை?” என்றான் விருத்திரன். “அலைகள் என்றுமுள்ளவை என்று” என்றான் நிமித்திகன்.
ஒவ்வொரு நாளும் அவ்வொலி வலுத்துவருவதை கேட்டான். தொலைவில் களிறுகளின் காலடிபோல அது ஒலிக்கத் தொடங்கியபோது “அது அணுகி வருகிறது. நான் அறிவேன்” என்று அவன் இந்திராணியிடம் சொன்னான். “உண்மையில் என் முதிராஇளமையிலிருந்தே அதை கேட்டுவருகிறேன். என்று என் எழுச்சியின் முரசை கேட்டேனோ அன்றே அதுவும் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.”
மறுநாள் அவன் அறிந்தான், அது அணுகிவரும் போர்முரசின் ஒலியென்று. “போர்முரசு” என்று அவன் தன் அமைச்சரிடம் சொன்னான். “ஆம், அரசே. கிழக்கிலிருந்து இந்திரன் படைகொண்டு வருகிறான்” என்றார் அமைச்சர். “இந்திரனா? அவனிடம் ஏது படைகள்?” என்றான் விருத்திரன். “வருணனின் அசுரப்படை அவனிடம் உள்ளது” என்று அமைச்சர் சொன்னார். “எழுக நம் படைகள்! இப்போதே களம் புகுகிறேன்” என்றான். “ஆம், இதோ படை எழ ஆணையிடுகிறேன்” என்று அமைச்சர் சொன்னார். திரும்பி வெளியே ஓடினார்.
போர்முரசுகள் ஒலிக்கலாயின. அமராவதி நகரெங்கும் பெண்களுடன் மஞ்சங்களில் மதுக்களிப்பில் மயங்கிக்கிடந்த தேவர்கள் அரைவிழிப்பில் கையூன்றி எழுந்து “அது என்ன ஓசை?” என்று கேட்டனர். “போர்முரசு” என்றனர் மகளிர். “அது ஏன் இங்கு ஒலிக்க வேண்டும்? இந்நகருக்கு எதிரிகளே இல்லையே?” என்றனர். “எதிரியே அரசனான பிறகு எதிரியென யார் இருக்க முடியும்?” என்று ஒரு தேவன் நகைத்தான். “ஆம், எதிரிக்கு குடிகளாகி அமைவதைவிட இனிய வெற்றி பிறிதொன்றில்லை” என்றான் இன்னொருவன்.
மகளிர் அவர்களை எழுப்பி உந்தி கிளப்பினர். “போர் அல்ல என எண்ணுகிறேன். இது களிப்போராகவே இருக்கவேண்டும்” என்றான் ஒருவன். “ஆம், பயிற்சிப்போர். அல்லது போர்முரசின்மேல் ஏதேனும் விழுந்திருக்கும்.” அவர்கள் படைக்கலங்களுடன் தள்ளாடியபடி தெருக்களுக்கு வந்தனர். கவசங்களை சீராக அணியாமையால் கழன்று விழுந்தன. சிலர் காலணிகளை அணிந்திருக்கவில்லை. “எப்போது முடியும் இந்தப் போர்? இருட்டிவிடுமா?” என்று ஒருவன் கேட்டான். “விரைவிலேயே முடியும். அந்தியானால் அரசர் மதுவின்றி அமையமாட்டார்” என்று ஒருவன் நகைத்தான்.
போர்முரசின் ஒலி கேட்டு கவசங்களை அணிந்துகொண்டு அமர்ந்த விருத்திரன் மது கொண்டுவர ஆணையிட்டான். மேலும் மேலும் என அருந்தி கவசங்களுடன் படுத்துத் துயின்றான். அவன் வீரர்களும் படைக்கலங்களுடன் தெருக்களில் துயின்று சரிந்தனர். சிலர் சிரித்தபடியே “இத்தனை விரைவாகவா போர் முடிந்துவிட்டது?” என்றனர். “மது இருந்தால் போரே வேண்டியதில்லை” என்றான் ஒருவன்.
மறுநாள் விழித்தெழுகையில் உடலில் கவசங்கள் இருக்கக் கண்டு நடந்ததை உணர்ந்து பாய்ந்து சென்று விரைந்து அமைச்சரை அழைத்து என்ன நிகழ்ந்தது என்றான் விருத்திரன். “அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார் அமைச்சர். “இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை” என்று கூவினார். “ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான். “நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக!”
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
December 1, 2016
வசைகளின் நடுவே…
ஜெ
உங்கள் தளத்தில் வரும் சிறுகதைப் பயிற்சியை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரிடம் காட்டினேன். அவன் இவன் என உங்களை வாயில் தோன்றியபடி வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த வகையாக விமர்சனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது என நினைக்கிறேன்.
ஒரு சின்ன விஷயம் என்றாலும் கூட உச்சகட்ட கொதிப்பு அடைந்து உங்களை வசைபாடித் தள்ளுவதைப் பார்க்கிறேன். எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் கீழிறங்குகிறார்கள். கொலை கொள்ளை கற்பழிப்பு செய்தவர்கள் கூட கொஞ்சம் மரியாதையாகப் பேசப்பட்டார்கள். உங்களைப் பற்றி பேசுவதைக் கேட்க மனம் புண்படுகிறது.
அருண் குமாரசாமி
*
அன்புள்ள அருண்,
இது எப்போதும் நிகழ்கிறது. ஓர் அரசியல்கருத்தில் முரண்படுகிறார், ஒரு கதையை வேறாக மதிப்பிடுகிறார் என்பதுபோன்ற காரணத்துக்காக ஒருவன் எழுத்தாளர் ஒருவரை மரியாதையில்லா சொற்களில் வசைபாடுகிறான், பொதுவெளியில் அவமதிக்கிறான் என்றால் பிரச்சினை கருத்துக்களில் இல்லை.
தமிழகத்தில் மிகக்கணிசமானவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் ஆழமான அவமதிப்பே உள்ளூர உள்ளது. அது அவர்களின் பண்பாட்டுச் சூழலில் இருந்து வருவது. அது ஒருவகை அறிவு எதிர்ப்பு. கிராமத்தில் பார்க்கலாம், கொஞ்சம் அறிவாகப் பேசுபவனை, செய்தித்தாள் வாசிப்பவனை எதிரியாகவே பார்ப்பார்கள். அகராதி புடிச்சவன் என்னும் சொல்லாட்சியே உண்டு
உள்ளூர உறைந்து கிடக்கும் இந்தக் கல்வி எதிர்ப்பு மனநிலை ஏதேனும் காரணம் கிடைத்தால் வெளிப்படுகிறது. சொல்லப்படும் காரணம் எல்லாம் சும்மாதான். இங்கே எவரும் எந்த அரசியலுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்து அதிதீவிரமாக எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வசைபாட ஒரு காரணம் தேடுகிறார்கள், அவ்வளவுதான்
இந்தக் கும்பல் நடுவேதான் புதுமைப்பித்தன் முதல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறோம். வேறுவழி இல்லை. வாசகன் இந்த முடைநாற்றத்தினூடாகத்தான் தேடி வந்தாகவேண்டும்
ஜெ
ஜெ,
இணையத்தில் உங்களை திடீர் திடீர் என வசைபாடும் கும்பல் எழுவதுண்டு. எப்போதுமே இடதுசாரிகள், தமிழ்த்தேசியர்கள் உண்டு. இஸ்லாமியர் என்றால் கேட்கவே வேண்டாம். எந்தத் தரப்பிலிருந்தாலும் அவர்களுக்கு ஒரே குரல்தான்.
சோட்டா எழுத்தாளர்களின் கரிப்பு எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். அது நீங்கள் எழுதும் இலக்கிய விமர்சனங்களால்.
இப்போது சமீபமாக இந்துத்துவர்கள் வசையும் நக்கலுமாக எழுதுகிறார்கள். நீங்கள் பிராமண விரோதி என்றெல்லாம் கூட எழுதியதைப் பார்த்தேன்
என்னதான் நடக்கிறது?
ராஜ்
*
அன்புள்ள ராஜ்,
மற்றவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெளிவு உருவாகிவிடுகிறது. இந்துத்துவர்கள், பிராமணர்கள் ஒரு சிக்கலில் இருக்கிறார்கள்
நான் இந்திய தேசியத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவன். அது அரசியல் நம்பிக்கை அல்ல. இந்த தேசத்தில் நேரடியாகப் பயணம் செய்து இவ்வாழ்க்கையை அறிந்தமையால் அடைந்த தெளிவு.
இந்து ஞானமரபில் நம்பிக்கை கொண்டவன். அது என் தேடலும் என் ஆசிரியர்களும் அளித்த ஞானம்
ஆகவே என்னை இந்துத்துவர் என்று சிலர் சொல்கிறார்கள். ஒருவனின் கருத்துக்கள் என்பவை அவன் அரசியல் நிலைப்பாடு மட்டுமே, ஏதோ லாபத்துக்காக அதைச் சொல்கிறான் என்றுமட்டுமே புரிந்து கொள்ளும் பேதைகள் அவர்கள். ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்
என் கருத்துக்களை எதிர்கொள்ளும் எளியவழி என்பது அப்படி முத்திரை குத்தி விவாதிப்பது. அப்படித்தான் அவர்களால் பேசமுடியும். அவர்களிடமிருப்பது அந்தச் சண்டைக்கான ஆயுதம் மட்டுமே.
நான் ஒரு இனத்தை, சாதியை வசைபாடுவதை ஏற்காதவன். ஆகவே தமிழகத்தில் உள்ள பிராமண எதிர்ப்பை ஒரு மனநோயாகவே பார்க்கிறேன். அது சாதிவெறியின், ஆதிக்கத்தின் பழியில் இருந்து தான் தப்பிப்பதற்காக போடப்படும் ஒரு நுணுக்கமான நாடகம். கடந்தகால ஒடுக்குமுறைகளுக்காக பிராமணரை மட்டும் பழி சுமத்தினால் சாதிவெறியனாகவும் புரட்சியாளனாகவும் ஒரேசமயம் திகழமுடியும்.
ஒரு சாதி என்ற அளவிலேயே கூட பிராமணர்கள் இந்துமரபுக்கு பெரும்பங்களிப்பாற்றியவர்கள். ஸ்மார்த்தர் என்று சொல்லப்படும் அமைப்பே இந்துமரபை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. அதற்காக அவர்கள் இழந்த நலன்களும் அனுபவித்த துயரங்களும் மிக அதிகம் என்பதே வரலாறு
இந்த மரபின் அறிவார்ந்த மையத்தை தொடர்ச்சியாக நிலைநிறுத்தியதில், கடும் எதிர்மறைச் சூழலில் இதன் அமைப்புக்களை காப்பாற்றியதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. இந்து என தன்னை உணரும் ஒருவன் அவர்க்ளுக்குக் கடன்பட்டிருக்கிறான்.
இன்றும் ஒரு சமூகம் என்னும் அளவில் சமரசத்தை உருவாக்குவது, மரபைப்பேணுவது, கல்வியை கொண்டு செல்வது என்னும் அளவில் அவர்களின் இடம் முக்கியமானது. அவர்கள் இந்தியாவுக்குச் செய்யவேண்டிய பணிகளும் அதிகம்.
இந்துமதத்திலுள்ள மூடநம்பிக்கைகள், மேலாதிக்கம் போன்றவற்றுக்கு அதிலுள்ள அனைவருக்கும் இணையான பங்குண்டு, அதே பங்குதான் பிராமணர்களுக்கும். ஆனால் அவர்களுடைய ஆக்கபூர்வமான பங்களிப்பு அவர்களின் தனிக்கொடை – இது என் நம்பிக்கை.
இதை நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆகவே என்னை பார்ப்பன அடிவருடி என ஒரு கும்பல் சொல்லும். இயல்புதான். வசையே அவர்களின் கருத்தியல்.
என்னிடம் வருபவர்களில் கணிசமானவர்கள் இந்த வசைகள் வழியாக வருபவர்கள். இந்துத்துவர்களில் ஒருசாரார் நான் இந்துத்துவன் என நம்பி வருகிறார்கள். பிராமணர்களில் ஒருசாரார் நான் பிராமணர்களின் சாதியநோக்கை, பழமைவாதத்தை ஆதரிப்பவன் என எண்ணி வருகிறார்கள்
வந்தபின் மெல்லமெல்ல அப்படி அல்ல என உணர்கிறார்கள். நான் இந்திய தேசியத்தையும், இந்து மரபையும் ஆதரிப்பவன். ஆனால் இந்துத்துவ அரசியலின் வெறுப்பு நோக்கை, பிளவுப் பணிகளை, தெருமுனைப் பூசல்களை கடுமையாக எதிர்ப்பவன்.
பிராமணர்கள் மேல் மதிப்பு கொண்டவன். ஆனால் அவர்களின் சாதிமேட்டிமை நோக்கையோ, பழமையான ஆசாரவாதத்தையோ, மானுட எதிர்ப்புகொண்ட குறுக்கல் போக்கையோ ஏற்றுக்கொள்பவன் அல்ல. பிறப்பால் ஒருபடி மேலானவன் என எண்ணுவதும் சரி, கடந்தகாலத்தின் மானுட எதிர்ப்பு நோக்குகளை ஆசாரமெனத் தூக்கிப்பிடிப்பதும் சரி இழிவு என்றே நினைப்பவன்.
2000 முதல் இணையத்தில் பதிந்துள்ள என் எல்லா கட்டுரைகளிலும் இந்தக் கடுமையான கண்டனங்கள் இருக்கும். அவை எவரும் வாசிக்கத்தக்கவை
உள்ளே வரும் இந்துத்துவர்களும் மேட்டிமை நோக்குள்ள பிராமணர்களும் அதன் பின்னர்தான் முழுமையாக வாசிக்கிறார்கள். உண்மையில் நான் சொல்வதென்ன என்று புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அதற்குள் தனிப்பட்ட நண்பர்களாகிவிடுகிறார்கள். சிக்கிக்கொள்கிறார்கள்.
என் கருத்துக்கள் அவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கின்றன. ஆனாலும் நட்புச்சூழலை உதறமுடியாமல், என்மீதான பிரியத்தை கடக்கமுடியாமல் கொஞ்சநாள் அல்லாடுவார்கள். புழுங்குவார்கள். சின்னச் சின்னக் குறைகளாக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள், எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதைச் சொல்லமாட்டார்கள்.
வெளியே இருந்து அவர்களைப் போன்ற தீவிரர்களின் அழுத்தம் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் முன்பு புழங்கிய சூழல் அது. என்னை அவர்களிடம் நியாயப்படுத்த முடியாமல், என்னிடமும் விவாதிக்கமுடியாமல் குழம்பிக்கொண்டே இருப்பார்கள். இந்த ஊசலாட்டம் ஓரிரு ஆண்டுகள்கூட நீடிக்கும்.
மிகச்சிலரே என்னுடன் விவாதிப்பவர்கள். என்னுடன் இணைபவர்கள் அவர்கள். எஞ்சியவர்கள் வெறுமே ரகசியமாக மனம்கொந்தளிப்பார்கள். நட்புவட்டத்துக்குள்ளாகவே ஒரு சிறிய வட்டத்தை தாங்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அதற்குள் பேசிக்கொள்வார்கள்.
ஒரு புள்ளி வந்ததும் உடைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்கு உடனடியான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள். பகைமையின் முழுப்பொறுப்பையும் என் மேல் சுமத்திவிடலாம். நான் மாறிவிட்டேன் என்பார்கள். ஏமாற்றிவிட்டேன் என்பார்கள். அதைமுன்வைத்து வன்மத்தையும் கசப்பையும் உருவாக்கிக் கொண்டால் ஒரு பெரிய விடுதலை.
அதுவரை இருந்த ஒரு சுமை இறங்குகிறது. நேராக பழைய நண்பர்களுடன் சென்று சேர்ந்து கொள்கிறார்கள். மீண்டுவந்த மைந்தன்! பாவத்தைக் கழுவிக் கொள்ளும் பொருட்டு நாலைந்து கட்டுரைகள், முகநூல் நக்கல்கள். அவர்கள் அங்கே தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டுமே. நன்று, அதுவே அவர்களுக்கும் நிம்மதி.
எவராயினும் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து மாறுவது எளிதே அல்ல. அதற்கு கூரிய நேர்மை தேவையாகிறது. அடிப்படையான தேடலும் நிறைய கண்ணீரும் வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் எளிதாக தங்களை மறைத்துக்கொள்ள தமிழ்ச்சூழலின் பாவனைகள் உதவுகின்றன. பிராமணர்களுக்கு அந்த வசதி இல்லை. அவர்கள் எப்போதும் கூண்டில் நிற்கிறார்கள்
என் பார்வையில் பெரும்பாலும் வலுவான குரு ஒருவருக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அதன் வழியாகத் தன்னை அவர் உடைக்க அனுமதித்து, அந்தப்பாதையில் முன்செல்பவர்களால் மீள முடிகிறது. [ஆனால் நானறிந்த பிராமணர்களில் பலர் அந்தக்குருவும் ஒரு பிராமணனாக இருந்தாகவேண்டும் என நினைப்பவர்கள்] அது ஆன்மீகமான ஒரு சுத்திகரிப்புப் பயணம். அவர்கள் தங்கள் பிறப்பும் சூழலும் அளிக்கும் மனப்பயிற்சிகளில் இருந்து விடுபடுகிறார்கள். மேலானவற்றை அடைகிறார்கள்.
தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மிகம் இல்லை. மேட்டிமை நோக்கிலிருந்தும் வெற்றாசாரங்களில் இருந்தும் இன மொழி மதச் சாதிக் காழ்ப்புகளில் இருந்தும் வெளிவராதவனுக்கு எளிய கவிதையின் இன்பம் கூட இல்லை
அரசியலால் அந்த மீட்பு நிகழ்வதில்லை. அரசியலை நம்பி வருபவர்கள் மேல்த்தோலை மட்டும்தான் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சாதிமறுப்பு, ஆசாரமறுப்பு எல்லாமே நிலைபாடுகள்தான், சுயமாற்றங்கள் அல்ல. தொடர்ந்து எதிரிகளைக் கண்டடைந்து கசப்பைக் கொட்டியபடி மட்டுமே அந்நிலைபாட்டில் நீடிக்கவும் முடியும்.
இலக்கியம் ஓரளவே மாற்றத்தை உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் இலக்கியவாதிக்கு இங்கே பெரிய மதிப்பு இல்லை. அவனை ஆசிரியனாக எவரும் கொள்வதில்லை. அவன் இங்கே கேளிக்கையாளன் அல்லது பிரச்சாரகன் மட்டுமே.
இலக்கியப்படைப்பை சொந்த வாழ்க்கையைக் கொண்டு பரிசீலிப்பவர், ஆழ்மன உணர்வுகளை அதைக்கொண்டு மீட்டிக்கொள்பவர் இங்கு குறைவே. இலக்கியப்படைப்பு தன்னை உடைத்து மறுவார்ப்பு செய்ய பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தன் சுவைக்கும் கருத்திற்கும் ஏற்ப படைப்பு இருந்தாகவேண்டும் என விரும்புபவர்கள், வாதிடுபவர்கள், இல்லையேல் நிராகரிப்பவர்களே நம் வாசகர்கள்.
இலக்கியம் அவர்களுக்கு மெய்மையின் பாதை என இளமையிலேயே கற்பிக்கப்பட்டிருப்பதில்லை. அங்கே மதநூல்களே வைக்கப்பட்டுள்ளன. இலக்கியம் என்றால் ஏதோ ஒருவகையில் ஒரு கேளிக்கைதான். ‘கதைபடித்தல்’ என்பது ஒருவகை ‘கதையடித்தல்’ ஆகவே நம் குடும்பங்களில் கற்பிக்கப்படுகிறது. அம்மனநிலையே நம்மவருக்குள் நீடிக்கிறது.
ஆகவே நான் விரும்புவதைச் சொல், நான் மகிழும்படி எழுது என்றே இங்கே எழுத்தாளனிடம் கோருகிறார்கள். இல்லாவிட்டால் மொட்டை வசை. ஆகவே ஆழமான பாதிப்பை இலக்கியமும் இலக்கியவாதியும் உருவாக்க முடியாமலாகிறது.
வேறுவழியில்லை. வசைகள் நல்லதுதான். குறைந்தபட்சம் நமக்கு ஆன்மிகமான ஒரு பயிற்சி அது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிறுகதைகள் கடிதங்கள் 19
சிறுகதை விவாதம் முழுக்க திரும்பத் திரும்ப எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். படங்களை ஏன் அப்படி தேடித்தேடி வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. அதன் அவசியம் என்ன?
ராஜேஷ்
*
அன்புள்ள ராஜேஷ்
இன்றைய சூழலில் எழுத்தாளர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான் வாசகர்களுக்குச் சிரமமானது. புகைப்படமும் இருந்தால், அதை அடிக்கடிப்பார்த்தால் அது எளிது.
ஒருமுகம் நம்முடன் பேசுகிறது என்பது ஒரு எழுத்தாளனின் ஆளுமையை நம்முள் வகுத்துக்கொள்ள முக்கியமானது. முதன்மையான எல்லா எழுத்தாளர்களுக்கும் முகங்கள் மனதில் இருக்கும்.
அப்படி ஓர் எழுத்தாளனாக ஒருவரை உருவகித்தால்தான் கதைகள் நடுவே ஒரு தொடர்ச்சியை நீங்கள் உருவகிக்க முடியும்
ஜெயமோகன்
அன்புள்ள ஜெ
நீண்ட சிறுகதைவிவாதம் ஒன்று இங்கே நடந்தது. இதனால் எவராவது சிறுகதை எழுதக் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா? பயிற்சிகொடுத்து எழுதவைக்கமுடியுமா?\
ஜெயராமன்
*
அன்புள்ள ஜெயராமன்
கலைஞனை உருவாக்கமுடியாது. ஆனால் கதை என்னும் வடிவின் அடிப்படைகளைக் கற்பிக்கமுடியும். சிங்கப்பூரில் நான் ஒருவரிகூட எழுதாத 20 பேரை கதை எழுதப் பயிற்றுவித்தேன். அவர்களில் 10 பேர் நல்ல கதைகளை எழுதினார்கள்
ஜெ
அன்புள்ள ஜெ
சிறுகதை விமர்சனங்களை வாசித்தேன். இலக்கியத்திற்கு இப்படி கறாரான இலக்கணமெல்லாம் சொல்லலாமா? இது ஒரு சந்தேகம்தான்
செல்வா
*
அன்புள்ள செல்வா
இது ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. இவ்விலக்கணங்களை மீறிச்சென்று படைப்பூக்கம் தன்னை நிறுவினால் அது மேலான படைப்பே
இலக்கணமோ வடிவம் சம்பந்தமான நியதிகளோ படைப்பாளி மேலே செல்வதைத் தடுத்தால்தான் அது பிழை
ஜெ
***
ஜெ
இந்தச் சிறுகதை விவாதத்தில் அனோஜன், சுனீல் கிருஷ்ணன், கலைச்செல்வி ஆகியோர் கதையின் வடிவத்தை பயிற்சி செய்தால் மிகநல்ல கதைகளை எழுதமுடியுமென நினைக்கிறேன். இப்போது அவர்களின் கதைகள் நன்றாக உள்ளன. மேலும் நன்றாகச் செல்லலாம். அதாவது அனோஜனின் கதை அலைபாய்கிறது. கலைச்செல்வி கதையில் உரையாடல்கள் இயல்பாக இல்லை. சுனீல் கதை மையம்கொள்ளவில்லை
அவர்களுக்கு இந்தப்பயிற்சி பயன்படவேண்டும்
ஜெபா ராபின்சன்
=======================================================
==============================================================================
சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்
சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்
சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்
சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி
சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்
சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்
==============================
தொடர்புடைய பதிவுகள்
சிறுகதைகள் கடிதங்கள் 18
சிறுகதைகள் கடிதங்கள் 17
சிறுகதைகள் கடிதங்கள் 16
சிறுகதைகள் கடிதங்கள் -15
சிறுகதைகள் கடிதங்கள் -14
யானைடாக்டர், கடிதங்கள்
உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]
கடிதங்கள்
கடிதங்கள்
‘நூஸ்’
தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2
தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2
அலை அறிந்தது…
கடிதங்கள்
கடிதங்கள்
பழையமுகம் (சிறுகதை)
ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)
சிவமயம் (சிறுகதை)
ரதம் – சிறுகதை
கரடி [சிறுகதை]
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44
[ 16 ]
பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள் சிதல் நிரைகளைக் கடந்து அவ்வொரு கணத்துளியில் முன் நின்றன. ஏனெனில் அலையெழுந்து மோதிச் சிதறி கொந்தளித்து மீண்டும் எழுந்து கொண்டிருந்தபோதும் கடல்ஆழம் அதை அறியாது இருண்ட மோனத்தில் தன்னுள் தான் நிறைந்த ஊழ்கத்தில் இருந்தது. மறுபக்கம் நுரை பெருகுவதுபோல் எழுந்து கடலுக்கு நிகர்நின்ற போதிலும் புற்றுகளின் ஆழத்தில் உயிர்வெள்ளம் கொப்பளித்து அலைசுழித்துக் கொண்டிருந்தது.
அக்கணத்துளி பெருகி கனவறிந்து பின் கருத்தறிந்து இறுதியில் கண்ணறியும் வகையில் உருக்கொண்டது. அதைக் கண்டதுமே சிதல்கள் சீற்றம்கொண்டு மேலும் பெருகின. அலைகளோ மேலும் அமைதி கொண்டன. வெறிகொண்டவை எழுந்து பின் அமைகின்றன. அமைதிகொள்வன மெல்ல வளர்ந்து நிறைகின்றன. அலைமேல் அலையென கடல்கள் வளர்ந்தன. அலைகளென எழுந்த புற்றுகள் சினம்கொண்டு வீங்கின.
புற்றுச்சுவர்களின் முகப்புகள் கரைந்து இடிந்து கடலுக்குள் விழுவதை நாளும் கௌமாரன் பார்த்துக்கொண்டிருந்தான். அது ஒவ்வொருநாளும் நிகழ்வது. இழந்தது மீண்டும் பெருகி எழுவதையே அவன் அந்நாள்வரை அறிந்திருந்தான். ஆயினும் தொண்ணூற்றொன்பது கோட்டைகள் சூழ்ந்த பெருநகரில் அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்தபடி சொல்லென ஆகும்போது பொருளிழக்கும் அச்சத்துடன் அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.
அக்கோட்டைச்சுற்றை ஒரு விராடவடிவனின் பருவுடல் என்று கவிஞர் சொன்னார்கள். அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என அவை ஐந்து பெருஞ்சுற்றுகள். முதலில் இருந்த அன்னம் செவி, மூக்கு, விழி, நாக்கு, தோல் என ஐந்து. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என பிராணம் ஐந்து. மனம் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம், பூர்ணம் என ஐந்து. ஸ்தவிரம், ருஜு, ஆலயம் என விஞ்ஞானம் மூன்று. தத்பரம், பரம் என ஆனந்தம் இரண்டு. இருபது வட்டங்களுக்குப் பின்னர் எழுபத்திரண்டு நாடிகளின் வளையங்கள். பின்னர் காலம், நியதி, கலை, வித்யை, ராகம், புருஷன் என்னும் வளையங்களுக்குப் பின் மாயாவளையம். அதற்குள் இருந்தது ஏழு அடுக்குகள் கொண்ட விருத்திரனின் மாளிகை.
மூலம், சுவாதிட்டம், மணிபூரம், அநாகதம், விசுத்தி, என்னும் ஐந்து நிலைகளில் முறையே ஏவலர், சூதர், காவலர், கருவூலர், அமைச்சர் ஆகியோர் குடியிருந்தனர். ஆஞ்ஞை என்னும் ஆறாம் தளத்தில் விருத்திரனின் இருப்பிடம். ஏழாம் நிலையில் உச்சியில் இருந்த சகஸ்ரத்திலிருந்து அவன் விண்ணில் எழுந்தான். முகில்களைத் தொட்டு பறந்து இந்திரபுரியை அடைந்தான். உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.
புற்றுப்பெருங்கோட்டைகள் கரைந்திடிந்து அலைகளுக்குள் விழும் ஓசை அவன் அறையிலிருக்கையில் நாய் நீர்குடிக்கும் ஒலிபோல் கேட்டது. உப்பரிகையில் நின்று விழிகூர்ந்தால் முதலை இரைபற்றுவதுபோல ஆகியது. எழுந்துசென்று இருளில் நின்று நோக்கியபோது வளைந்து வளைந்து வந்த நாகங்களுக்கு முன் நிரைவகுத்து முடிவிலாது சென்று நின்றிருக்கும் தவளைக்குலம் எனத் தோன்றின புற்றுக்கோட்டைகள்.
துயில்கையிலும் அவ்வோசையை அவன் கேட்டான். அவன் கனவுக்குள் குருதி எழ கரிய உருவங்கள் மண்ணறைந்து விழுந்து புதைந்து ஆழத்தில் வேர்ப்பரப்பாகி கிடந்தன. தன் குலத்து மூதாதையரின் இமையாவிழிகளை நோக்கியபடி துயிலுக்குள் அவன் விழித்துக் கிடந்தான். எழுந்ததுமே ஓடிவந்து உப்பரிகையில் நின்று நோக்குகையில் புற்றுக்குவைகளில் ஓரிரண்டு குறைந்திருப்பதைக் கண்டு நெஞ்சு பதைத்தான். எண்ணித்தொலையாதவை புற்றுகள் என்று அறிந்திருந்தும் எண்ணாமலிருக்க முடியவில்லை உள்ளத்தால். எண்ணி எண்ணிச் சலிக்கையில் புற்றுகள் குறைந்துள்ளன என்றே தோன்றிக்கொண்டிருந்தது.
புற்றுறை குலத்தலைவரை மீண்டும் மீண்டும் அழைத்து “என்ன நிகழ்கிறது?” என்று கேட்டான். “எங்கள் ஆற்றல் நூறுமடங்கு பெருகியிருக்கிறது, அரசே” என்றார் முதற்தலைவர். “புற்றுகள் குறைகின்றனவா?” என்றான். “இல்லை, இருமடங்கு கூடியிருக்கின்றன” என்றார் இரண்டாம்தலைவர். “உங்கள் ஐயம் அது” என்றார் மூன்றாம்தலைவர். “தலைவர்களே, ஐயம் என ஒன்று ஏன் எழுகிறது? என் உள்ளிருந்து அந்த ஐயத்தை எழுப்புவது எது?” என்றான். “அது உங்கள் ஆற்றலின்மையே” என்றார் நான்காம்தலைவர். அப்போது முதிய தலைவர் ஒருவர் மெல்ல அசைந்து முனகினார். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் கௌமாரன்.
“எங்கள் குலம் நூறெனப் பெருகுகிறது. அது உண்மை, ஆனால் அலைகளின் விசையோ நூற்றியொருமுறை பெருகியிருக்கிறது” என்றார் அவர். புற்றிகர் அமைதியாயினர். ஒருவர் “நாளையே அவ்விடைவெளியை வெல்வோம்” என்றார். “இளையோரே, அவ்விடைவெளியை உருவாக்கியது எது? இத்தனை நிகர்நிலையாற்றல்களின் நடுவே அவ்விடைவெளி உருவாகிறதென்றால் அது எளிய மீறல் அல்ல. அணுதோறும் ஆயிரம் புவி சென்றமைந்த எடைகொண்டது அது. அதைக் கடப்பது எளிதல்ல” என்றார் முதியவர். “வெல்வோம், வெல்வோம்” என்று அவர்கள் கூவினர். “நாம் தொடக்கம் முதலே எழுவிசை கொண்டிருக்கிறோம். இத்தனை விசையெழுந்த பின்னரும் எப்படி அந்த சிறுமாத்திரை இடைவெளி விழுந்தது?” என்றார் முதியவர்.
“நீரே சொல்லும்” என்றனர் குலத்தோர். “நாம் கொண்டுள்ள எழுவிசையே சுமையா என்ன? நீர் அதன் ஆழத்தில் அசையா நிலைவிசைகொண்டுள்ளதா என்ன?” என்றார் முதியவர். “நோக்குக முதியவரே, நாங்கள் வெல்வோம்” என்றார் இளைய குலத்தலைவர் ஒருவர். “மைந்தா, அவ்விடைவெளி எங்கள் ஆற்றலின்மையாலோ அவர்களின் ஆற்றலாலோ உருவானதல்ல. மாற்றமுடியாத ஊழொன்றால் நடுவே செருகப்பட்டது” என்றார் முதியவர். அவர்கள் அமைதிகொண்டனர். அவையின் பின்நிரையில் அசைவெழுந்தது. விழியில்லாத முதுகுலத்தலைவர் மெல்ல செருமினார். அவரை அவர்கள் நோக்கினர். முதுமையால் புற்றுக்குள் செயலற்று அமைந்த அவரை நால்வர் சுமந்து அவைக்கு கொண்டுவருவது வழக்கம்.
“இன்றுவரை நான் இங்கேதும் சொன்னதில்லை. இன்று சொல்ல விழைகிறேன். அசுரரே, புவி தோன்றிய முதற்கணம் முதல் நாம் இங்கு இருக்கிறோம். அன்னத்தை உண்டு மண்ணில் உப்பாக ஆக்குகிறோம். மண்ணை மீண்டும் அன்னமாக்குகின்றன புற்கள். புல்லும் சிதலும் இணைந்துருவாக்கிய நெசவு இப்புவி என்பார் நூலோர். எங்கேனும் புல் அழிந்து சிதல் மேலேறிய காலமுண்டா? எப்போதேனும் சிதல் ஒருகணம் முன்சென்று முந்தியுள்ளதா?” என்றார். அவர்கள் நோக்காடிக்கொண்டனர்.
“நாம் அழிப்பவர்கள். ஆக்கத்திற்கு அரைக்கணம் பின்னரே நாம் செல்ல முடியும். அந்நெறியையே இவர்கள் ஊழென்று இங்குரைக்கிறார்கள்” என்றார் முதியவர். சற்று எரிச்சலுடன் “என்ன சொல்கிறீர்கள்? இக்கோட்டை அழியுமா?” என்று கௌமாரன் கேட்டான். “ஐயமே வேண்டியதில்லை. இப்புவியில் கோடானுகோடி ஆண்டுகளாக கட்டப்பட்ட அனைத்து சிதல்புற்றுகளும் அழிந்துள்ளன. அழிந்தாகவேண்டும். உயிரை நாங்கள் வெல்ல வேண்டுமென்றால் அந்த ஆணை விண்வெளியில் ஆதித்யர்களை அள்ளி விளையாடும் பிரம்மத்திடம் இருந்து வரவேண்டும்” என்றார் முதியவர்.
அவை சொல்லின்றி கலைந்தது. ஒவ்வொருவரும் அச்சொற்களின் எடையை உணர்ந்தனர். ஏனென்றால் அவர்கள் அதை முற்றாக முன்னர் அறிந்திருந்தனர். அவ்வுண்மைக்கு எதிராகவே அவர்கள் கிளர்ந்தெழுந்தனர். மாற்றவியலாத ஒன்றுக்கு எதிராகவே அத்தனை கொந்தளிப்பு எழமுடியுமென அவர்கள் உணர்ந்தனர். அவைநீங்கிய அக்கணமே அவர்களனைவரும் ஒன்றாக விடுதலை உணர்வை அடைந்தனர். இனி கணம்தோறும் முழு உயிராலும் கொப்பளிக்கவேண்டியதில்லை. இனி தன்னைப்பெருக்க தன் உயிர்த்துளி ஒவ்வொன்றையும் நுரைக்கவைக்க வேண்டியதில்லை.
ஆனால் அந்த விடுதலையுணர்வால் அவர்கள் தோல்வியை ஏற்க சித்தமானார்கள். அங்கிருந்து செல்லும்போதே தோற்றழிந்தபின் தங்கள் குலங்கள் எவ்வாறு மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் சிறுதுளையொன்றினூடாக கசிந்து வெளிவந்து மீண்டும் தழைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். தோல்வியை பலமுறை உள்ளூர அடைந்தபின் அது நிகழ்வதற்காக பொறுமையிழந்து காத்திருக்கலானார்கள்.
[ 17 ]
புற்றுக்குலங்களின் அவை முடிந்த அன்றே சகஸ்ரத்தில் ஏறி தன்னை நுண்ணுருவாக்கி பறந்து விண் ஏகி இந்திரபுரியை அடைந்தான் கௌமாரன். அமராவதியின் பெருவாயிலுக்குள் நுழைந்தபோது அங்கே இன்மதுவின் மணமே நிறைந்திருக்கக் கண்டான். அத்தனை பூக்களிலும் கள் வழிந்தது. அத்தனை வண்டுகளும் குழலும் யாழுமென இசைத்து தரையில் விழுந்து சிறகதிரச் சுழன்றன. மது மயக்கில் அமராவதியின் மாளிகைத்தூண்களும் சுவர்களும் நெளிவதாகத் தோன்றியது அவனுக்கு. களிவெறிகொண்டு சிரித்தும் கூச்சலிட்டும் அலைந்தனர் தேவர்கள். அவர்களுடன் காமத்திலாடி கண் சிவந்து கொந்தளித்துக் கொண்டிருந்தனர் அரம்பையர்.
அவனைக் கண்டதும் கள்மயக்கில் காலாடிக்கொண்டிருந்த தேவன் ஒருவன் அணுகி வந்தான். “நீர் அசுரரா?” என்றான். “ஆம்” என்றான் கௌமாரன். “இல்லை, நீர் தேவர். நான் அசுரன்” என்றான். குழறியபடி நகைத்து “தேவனாக முன்னால் இருந்தேன். கடமையைச் சுமந்தவன் தேவன். கட்டுக்குள் வாழ்பவன் அவன். கடமைகளற்றவன் அசுரன். கட்டற்றவன் அசுரன். எங்களை விடுதலை செய்தவர் அசுரேந்திரர் விருத்திரர்…” என்றான். மதுக்கிண்ணத்தை தூக்கிக் காட்டி “நான் உண்பது என் விழைவை. இதுநாள்வரை இதை என் மூலாதாரத்தில் ஒரு துளி நஞ்சென தேக்கி வைத்திருந்தேன். இதோ, அது விடுதலைகொண்டு வளர்கிறது” என்றான்.
முகவாயிலினூடாக இந்திரனின் அரண்மனைக்குள் சென்றான் கௌமாரன். அங்கு தன்னை எதிர்கொண்ட அமைச்சரிடம் “விருத்திரேந்திரரைக் காணவந்தேன். உடனே சொல்லளிக்க வேண்டும்” என்றான். “எவரும் தன்னைக் காணலாகாதென்ற ஆணையிட்டு களியாட்டுக்குச் சென்றிருக்கிறார் அரசர்” என்றார் அமைச்சர். “சென்று நெடுங்காலம் ஆகிறது.” பொறுமையை பேணியபடி கௌமாரன் “நான் இப்போதே கண்டாகவேண்டும்” என்றான். “அரசரின் உறுதியான ஆணை அது. மீற என்னால் இயலாது” என்று அமைச்சர் சொன்னார். ஒருகணம் எண்ணி நின்றபின் அவரை தள்ளி வீழ்த்திவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அதன் பன்னிரண்டாவது உப்பரிகையை அடைந்தான்.
அந்த உப்பரிகையே ஒரு மலர்வனமாக ஆக்கப்பட்டிருந்தது. அங்கு சிறு குளிர்ச்சுனைகள் மான்விழிகளென ஒளிகொண்டிருந்தன. பொன்வண்டுகளென்றான தேவர்கள் யாழிசை மீட்டினர். அனைத்து மலர்களும் ஒரு திசை நோக்கி திரும்பி இருக்கக்கண்டு அங்கு சென்றான். மூன்று சுனைகளால் சூழப்பட்ட சிறு மலர்ச்சோலை ஒன்றில் அல்லியிதழ்கள் சேர்த்து அமைத்த மஞ்சத்தில் ரம்பையும் ஊர்வசியும் திலோத்தமையும் அருகிருக்க கள் மயக்கில் காமத்திலாடிய களைப்பில் விழிமயங்கி இருந்த விருத்திரனை கண்டான்.
அவனைக் கண்டதும் எழுந்து ஆடை அள்ளி உடல் மறைத்து விலகிய தேவகன்னியர் சினமும் நாணமும் அச்சமும் கொண்ட விழிகளால் அவனை சரித்து நோக்கினார்கள். விருத்திரனின் கால்களைப்பற்றி உலுக்கி “அரசே, எழுக அரசே!” என்று கௌமாரன் அழைத்தான். ஏழுமுறை அழைத்தபின் மெல்ல விழிதிறந்து கைகளை ஊன்றி எழுந்து “யார்? என்ன நிகழ்கிறது?” என்று விருத்திரன் கேட்டான். “அரசே, நான் கௌமாரன். உங்கள் முதன்மை படைத்தலைவன்” என்றான் கௌமாரன். தலையை உலுக்கி தெளிந்த விருத்திரன் “ஆம், உன்னை நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றபின் நீர் கொண்டுவரச்சொல்லி அள்ளி அள்ளி தன் தலையை கழுவிக்கொண்டான். முகத்தில் நீரை அள்ளி அள்ளி அறைந்தான்.
சிற்றேப்பத்துடன் “என் குடி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்கிறதல்லவா? குலமூத்தோர் நிறைவுகொண்டுள்ளனர் அல்லவா? மூதன்னையர் குலம் பெருகுவது கண்டு மகிழ்கிறார்களல்லவா?” என்றான். ஒவ்வொருமுறையும் எழும் அந்த வழக்கமான வினாக்கள் கௌமாரனிடம் அப்போது பெருஞ்சினத்தையே எழுப்பின. “அரசே, கீழே தாங்கள் கட்டி எழுப்பிய முதற்பெருநகர் விழுந்துகொண்டிருக்கிறது. வருணனின் படைகளால் நமது கோட்டைகள் சரிகின்றன” என்றான். அதை விருத்திரனின் உள்ளம் உணரவில்லை. “நன்று” என்று இன்னொரு ஏப்பம் விட்டான்.
உரத்த குரலில் “அரசே, புற்றிகபுரி அழியப்போகிறது. வருணனின் படைகள் அதை அழிக்கின்றன” என்றான் கௌமாரன். “யார்?” என்றான் விருத்திரன். “வருணன். அவர் படைகளால் நம் நகர் அழிகிறது” என்றான் கௌமாரன். விருத்திரன் வாய் திறந்திருக்க, கண்கள் நீர்படிந்து சிவந்து பொருளற்ற வெறிப்பு கொண்டிருக்க “என்ன சொல்கிறாய்?” என்றான். மீண்டும் கௌமாரன் அச்செய்தியை கூவிச்சொன்னான்.
மெல்ல புரிந்துகொண்டதும் “என் நகரையா?” என்ற விருத்திரன் உடனே நகைத்து “கணம் வளரும் கோட்டை அது. சரிவது அதன் இயல்பு. மீண்டும் வளர்வதற்கென்றே சரிகிறது அது. இன்னமும் அதை நீ உணரவில்லையா?” என்றான். கௌமாரன் “அரசே, வருணனை நானும் எளியவர் என்றே எண்ணினேன். உங்கள் காலடிகளை பணியும்படி அறிவுறுத்தினேன். அவர் வல்லமையைக் கண்டு இன்று அஞ்சுகிறேன்” என்றான். “அச்சம் தவிர், படைத்தலைவனே! என்னை வெல்ல எவருக்கும் ஊழில்லை” என்றபின் சோம்பலுடன் உடலை நீட்டிப்படுத்து “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. இன்மது கொண்டுவருக!” என்றான். கௌமாரனின் அஞ்சிய முகத்தைகண்டு “படைத்தலைவருக்கும் மது வரட்டும்” என்றான். சீற்றத்துடன் “அரசே!” என்று அவன் கால்களைப்பற்றி உலுக்கினான் கௌமாரன். “வந்து பாருங்கள்! தங்கள் கோட்டை அங்கிருக்கிறதா என்றே ஐயம் கொள்கிறேன்.”
விருத்திரன் நகைத்து “எனது பகைவன் இந்திரன் மட்டுமே. அவனோ எங்கு என்றறியாது மறைந்துவிட்டான். இந்திரன் வெல்லமுடியாத என்னை இவ்வேழு உலகிலும் எவரும் வெல்ல முடியாதென்றறிக! மூடா, வருணன் என் குலத்தவர். அசுரர்களின் வெற்றி கண்டு உளம்நிறைபவர். நான் புற்றிகபுரியை அமைத்தபோது அவர் வாழும் ஆழ்கடலுக்குள் சென்று மூத்தவரே வாழ்த்துக என்னை என்று சொல்லி தலைவணங்கி அரிசியும் மலரும் நீரும் பெற்றே வந்தேன். இங்கே இந்திரனை வெல்லவரும்போதும் அவர் சொல் பெற்றேன். அவர் அருளுடனேயே இந்திரன் என்று ஆவேன்” என்றான்.
சொல்லிழந்து நின்ற கௌமாரனின் தோளில் தட்டி “நீ செல்க! உனது எளிய அச்சங்களுக்கு விடையளித்து வீணடிக்க என்னிடம் பொழுதில்லை” என்றபின் களிமயக்குடன் கண்மூடி “கள்ளுண்டவனுக்கும் காமம்கொண்டவனுக்கும் காலம் இமைக்க இமைக்க குறுகி வருவதை நீ அறியமாட்டாய்” என்றான் விருத்திரன். செய்வதறியாது அங்குமிங்கும் நோக்கியபின் கௌமாரன் எழுந்து விலகினான். அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.
“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.
“செல்க! இனியொரு சொல்லும் கேட்க எனக்கு விழைவில்லை” என்றபின் விருத்திரன் புரண்டு படுத்தான். இரு கைகளையும் விரித்து அருகே நின்ற மகளிரை அழைத்து “என்னை தழுவிக்கொள்ளுங்கள். இவ்வினிமை ஒருகணமும் விரிசலிடாமலிருக்கட்டும். அது உங்கள் திறன்” என்றான். இந்திராணி “அரசே, அனைத்தும் அழிந்துகொண்டிருக்கின்றது என்கிறார் படைத்தலைவர். விழித்தெழுக!” என்று கூவினாள். அவன் தோளைத்தொட்டு உலுக்கி “எழுக!” என்றாள். விருத்திரன் “நீ இனியவள்” என அவள் கன்னத்தை வருடினான்.
“இனிமேலும் தயங்கினால் உங்கள் அழிவே” என்று இந்திராணி சொன்னாள். “மீண்டும் மீண்டும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதோ, இறுதிக்கணமே இவர் வடிவில் வந்து நின்றிருக்கிறது. நான் சொல்வதை செவிகொள்ளுங்கள். எழுங்கள்!” என்றாள். அவள் கண்கள் கலங்கி குரல் உடைந்தது. அவன் “நீ நல்லமைச்சர். நல்ல சொற்களை சொல்கிறாய். அது உன் கடமை” என்றான். பின்னர் கௌமாரனிடம் “இந்திராணி என்றாலும் பெண். ஆண்களின் ஆற்றல் அவர்களுக்கு புரிவதே இல்லை” என்றான்.
உடைவாளை உருவி தன் கழுத்தில் வைத்து கௌமாரன் வீறிட்டான் “அரசே, உங்கள் மேல் ஆணை! ஒருகணம் எழுந்து வந்து என்னுடன் நின்று கீழே உங்கள் நகரை நோக்குக! அன்றேல் இக்கணமே சங்கறுத்து உங்கள் காலடியில் விழுவேன்.” சினத்துடன் அவனை சற்றுநேரம் பார்த்தபின் மெல்ல தளர்ந்து “பித்து நிறைந்துவிட்டது உன் உள்ளத்தில். மூடா, உன் மேல் நான் கொண்ட அன்பின்பொருட்டு எழுகிறேன். இவையனைத்தும் உன் வீண் அச்சமென அறிவேன். விருத்திரேந்திரனின் முதன்மைப் படைத்தலைவன் அச்சம்கொண்டான் என்று நான் அன்றி பிறர் அறியலாகாது. வா!” என்று எழுந்து ஆடை சுற்றி தலையணியைச் சூடி நடந்தான்.
“வருக, அரசே! ஒருமுறை கீழே நோக்குங்கள்” என்றபடி கௌமாரன் முன்னால் ஓடினான். “மூடன்” என்றான் விருத்திரன் தேவியிடம். “நம் படைத்தலைவர் அவர். நாம் காணாதவற்றை அவர் காணக்கூடும்” என்று இந்திராணி சொன்னாள். “பார்வையென்பது பார்ப்பவனின் இடத்தாலும் திசையாலும் ஆனது. ஆகவே எந்தப் பார்வையும் தன்னளவில் தனித்ததே. சென்று நோக்குக!” விருத்திரன் நகைத்து “நான் வெல்லற்கரியவன். அதை நான் அறிவேன். நீங்கள் என் வெற்றியில் ஐயம் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு” என்றான்.
அமராவதியிலிருந்து வெளிவந்து அங்கு தெற்கு மூலையிலிருந்த கோட்டைச்சுவர் மேல் ஏறி காவல்மாடத்தில் நின்று கீழே நோக்கினான் விருத்திரன். அக்கணமே எரிசினத்துடன் “என்ன நிகழ்கிறது அங்கே? நான் காண்பது விழிமயக்கா?” என்று கைநீட்டி கூவினான். புற்றுறைக் குலங்களால் சமைக்கப்பட்ட அவன் தொண்ணூற்றொன்பது பெருங்கோட்டைகளில் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. பிற அனைத்தும் விழுந்து கரைந்து மறைய அங்கு வெண்நுரை எழுந்து அலை கொப்பளித்துக்கொண்டிருந்தது.
கௌமாரன் சொன்னான் “இன்னும் நெடுநாள் இக்கோட்டை எஞ்சாது, அதை இப்போது உள்ளுணர்கிறேன், அரசே. தங்கள் முதல் நகர் விழுவதென்பது தோல்வியின் தொடக்கம். தங்களை வெல்லலாகும் என்று இந்திரன் தேவர்களுக்கு காட்டிவிட்டால் அதன் பின் உங்கள் முடி நிலைக்காது.” தன் நெஞ்சில் அறைந்து விருத்திரன் கூவினான் “இக்கணமே எழுகிறேன். வருணனை சிறைபற்றி இங்கு என் அரியணைக்காலில் கொண்டு கட்டுகிறேன். மூதாதை என நான் எண்ணியிருந்தவன். என் குலத்து மூத்தவன். வெற்றாணவத்தால் குடிகெடுக்கும் வஞ்சகனானான்.” சினத்தால் மதம்கொண்டு சுற்றிவந்து கூச்சலிட்டான் “அவனை என் காலடியில் வீழ்த்துவேன். அவன் தலையை மிதித்தாடுவேன். இது ஆணை! என் குலமூதாதையர் மேல் ஆணை!”
“பொறுங்கள், அரசே! நான் சினம் மீதூறிச் சொன்ன சொல்லே நம் நகரை அழிக்கிறது. இச்சினம் முதலில் அவருக்கு எப்படி வந்ததென்று பார்ப்போம். நம் குலத்தார் ஒருசொல் சென்று சொன்னால் நம்மில் கனிவு கொள்ளக்கூடும். நிகர் வல்லமை கொண்ட இரு அசுரர் குலத்து அரசர்கள் அவரும் நீங்களும். உங்களை பிரித்து வெல்வது இந்திரனின் சூழ்ச்சி” என்றான் கௌமாரன். “தலைவணங்குவதா? தேவருக்கு வணங்காத தலை பிறிதொரு அசுரன் முன் இறங்குவதா?” என்று விருத்திரன் கூவினான். “வீண்சொல்! போரன்றி வேறேதுமில்லை. எழுக நமது படைகள்!”
கௌமாரன் “அரசே, இங்குள்ளவை தேவர் படைகள். அவர்கள் கள்ளுண்டு செயலற்றிருக்கிறார்கள். அங்கு நம் அசுரகுடிகளும் பிறிதொரு நிலையில் இல்லை. படைகொண்டு சென்றாலும்கூட யாரிடம் போர் புரியப்போகிறோம்? அங்கு அலையுருக்கொண்டு எழுந்து வருவதும் நமது குடியல்லவா? நாம் இந்திரனின் கண்முன் போரிட்டு அழியப்போகிறோம். ஆம், நமது அழிவுபோல் அவனுக்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை” என்றான்.
“ஆம்” என்று விருத்திரன் சோர்ந்து அமைந்தான். “பகை, நஞ்சு, நெருப்பு மூன்றும் ஒரு துளியும் எஞ்சலாகாது என்று கற்றிருக்கிறேன். அவனை எஞ்சவிட்டது என் பிழை” என்றான். “இல்லை அரசே, அவனை சிறுதுளியென விட்டிருந்ததே உங்கள் பிழை” என்றான் கௌமாரன். “அவனை தேடிக் கண்டடைந்து பெருக்கியிருக்க வேண்டும். நிகர் எதிரியென உங்கள் முன் அவன் நின்றிருக்கவேண்டும். தேவர்களின் ஆற்றல் நேர்விசை. அசுரர்களோ எதிர்விசை மட்டுமே கொண்டவர்கள். பேருருவப் பகைவனொருவன் இன்றி அசுரர்கள் தன்னை திரட்டிக்கொள்ள முடியாது. சினமின்றி படைக்கலங்கள் ஏந்த முடியாதவர்கள் நாம்” என்றான்.
“அரசே, அசுரர் வெற்றியெல்லாம் அவர்கள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது மட்டும் அமைவதே. இந்திரன் இல்லாததனால் தேவர்குலம் வலுவிழந்தது. எதிரி இல்லாததனால் அசுரர்குலம் வலுவிழந்துள்ளது. தேவர்கள் எழமுடியும். விழைவே அவர்களின் இயல்பு. தேவர்கள் எழுந்து நம்மை வெல்ல வரும்போது மட்டுமே அசுரர் எழுவார்கள். எதிர்ப்பே நம் இயல்பு” என்றான் கௌமாரன். “ஆம்” என்று சோர்ந்து தோள்தாழ்த்தினான் விருத்திரன்.
“இன்னமும் பிந்திவிடவில்லை” என்றாள் இந்திராணி. “உங்கள் வெல்லமுடியாத ஆற்றல் அப்படியே எஞ்சியிருக்கிறது. எழுக! இந்திரனை வென்று மீண்டும் புற்றிகபுரியை அமைத்தால் உங்கள் ஆற்றல் மீண்டும் நிறுவப்படும்…” விருத்திரன் “ஆம்” என்றான். “வேறுவழியில்லை. போர்தான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான். “அரசே, வருணனுடன் நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவரை பகைத்தல் நன்றல்ல” என்றான் கௌமாரன். “நான் எண்ணுவதும் அதுவே” என்றாள் இந்திராணி. “பகைவரைப் பெருக்குவது அறிவுடைமை அல்ல.”
“அப்படியென்றால் நான் வெல்லமுடியாதென்று எண்ணுகிறீர்கள் அல்லவா?” என்றான் விருத்திரன். “நான் அழியக்கூடுமென ஐயுறுகிறீர்கள். அந்த ஐயம் எனக்கில்லை. நான் வெல்வேன். என் முதற்றாதையின் அழியாச்சொல்லே என் படைக்கலம்.” மீண்டும் குனிந்து அவன் நோக்கியபோது ஒரு புற்று எழுந்திருந்தது. “ஆம், அவர்களும் போர்புரிகிறார்கள். அசுரர்களாகிய நாம் ஒருபோதும் தோல்வியை ஏற்பதில்லை” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11
November 30, 2016
வழிப்போக்கர்கள்
எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் பழனியிலும் பின்பு திருவண்ணாமலையிலும் இருந்திருக்கிறேன். அந்த ஊரின் வெயிலும் வரண்டநிலமும் எனக்கு ஒவ்வாதாயின. அங்கு நான் இருந்த ஒரு சிறு காலகட்டத்தின் நினைவுகள் இனிதாயின.
திருவண்ணாமலைக்கு எண்பத்தொன்றில் என்னை மலையாளத்துச்சாமி என்று அழைத்த பாண்டிச்சாமி என்ற வயோதிகச் சாமியாரால் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து அவர் சிவசைலத்திற்கு கிளம்பிச் சென்றார். நான் திருவண்ணாமலையிலே சிலகாலம் இருந்தேன். பின் அங்கிருந்து துறவை உதறி வீடு திரும்பினேன்.
அங்கிருந்த நாட்களில் நான் எதையும் கவனிக்கவில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. ரமணர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதிகளில் அன்று நிறைய சைக்கிள் ரிக்ஷாக்கள் நின்றிருக்கும். கால்களும் கைகளும் குறைந்த தொழுநோயாளிகள் பலர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டினர். சொரசொரப்பான பருத்தி ஆடையும் உருத்திராக்கமும் அணிந்த மெலிந்த வெள்ளையர் பலர் கண்ணுக்குத் தட்டுப்படுவார்கள். மற்றபடி நான் அறிந்ததெல்லாம் ஆலயத்தின் முகப்பிலும் ரமணாசிரமத்திலும் சேஷாத்திரி சுவாமி ஆலயத்திலும் மலையைச்சுற்றிய பல சிற்றாலயங்களிலும் காவிகந்தலும் அணிந்து வரிசையாக அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பிச்சைக்காரர்களையும் தான்.
கிரிவலம் அன்று பிரபலமல்ல முள்ளும் புதரும் மண்டி துறவிகள் அன்றி பிறர் வலம் வர முடியாததாகவே அந்த மலைப்பாதை இருந்தது. அதன் ஓரங்களில் வெள்ளையர்கள் தற்காலிகமாக கட்டிய கூடாரங்களும் ஓலைக்குடில்களும் இருக்கும். அவர்கள் கைவிட்டுச் சென்றபிறகு சாமியார்கள் அங்கே குடியிருப்பார்கள். அன்றெல்லாம் நானே சாமியாராக இருந்தும் கூட சாமியார்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
விதவிதமான மனிதர்கள். கஞ்சாப் போதையில் கண்சொக்கி அமர்ந்திருப்பவர்கள். வரும் ஒவ்வொருவரையும் தொலைதூரத்திலேயே அளவிட்டு அழைத்து ஆசி வழங்கியும் அவசியமென்றால் சற்று மிரட்டியும் பணம் பெற்றுக் கொண்டு எண்ணி எண்ணி பைகளுக்குள் சேர்ப்பவர்கள். ஏதோ ஒரு கணத்தின் முடிவில் வீட்டை விட்டு வந்தவர்கள். லௌகீகத்தில் தோற்று ஓடி ஒளிந்தவர்கள். சாமியார் என்றொரு கதாபாத்திரமே கிடையாது. அது மனிதன் என்பது போல் ஒரு அடையாளம் மட்டுமே அதற்குள் முடிவற்ற வகைமாதிரிகள்.
எனது ஆச்சரியம் சாமியார்கள் மேல் சாமானிய மனிதர்களுக்கு வரும் அந்த பேரார்வம் எதனால் என்பதுதான். புதரடைந்த கிரிவலப்பாதையின் பாறைகளில் ,கல்மண்டபங்களில் ,அல்லது கூரை வேய்ந்த குடில்களில் அமர்ந்திருக்கும் சாமியார்களைத் தேடி எங்கிருந்தோ எல்லாம் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ கிடைக்கிறது என்று மட்டும் தோன்றும்.
ஒருமுறை நான் சட்டிச்சாமி என்ற சாமியாருடன் தங்கியிருந்தேன். அவர் உற்சாகமான சாமி .இரவும் பகலும் யாரோ ஒருவர் வந்து அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் மூட்டையைத் தலைக்கு வைத்து படுத்தபடி அதை அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவர்கள் சொல்லி முடித்ததும் உரத்த குரலில் “சம்போ சிவசம்போ!” என்று கூவியபடி விபூதிச்சாம்பலை அள்ளி அவர்கள் நெற்றியில் பூசி பிடரியில் ஓங்கித் தட்டி ”எடுத்தாச்சு! எல்லாத்தையும் எடுத்தாச்சு! போ! கெளம்பிப் போடா” என்று கூவுவார். எழுந்து செல்பவர்கள் முகங்களில் பரிதவிப்பும் கூடவே புரிந்து கொள்ள முடியாத ஒரு அமைதியும் இருப்பதை பார்க்கலாம்.
அப்போது யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலையில் ஒர் அலையும் துறவியாக இருந்தார். அந்நாளில் அவருக்குப் பெரிய அளவில் பக்தர்களோ தொண்டர்களோ இல்லை. ஆலயத்துக்கு அருகே இருக்கும் ஒரு திண்ணையில் இரவு தங்கிக் கொள்வார். பகலில் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று பிச்சை கொள்வார். எப்போதாவது திருவண்ணாமலை ஆலயத்தின் முகப்பில் கிரிவலப்பாதையில் இருக்கும் சில பாறைகளில் அமர்ந்திருப்பார்.
பலதருணங்களில் அவரை நோக்கி சிவநாமத்தை கூவியிருக்கிறேன். “My father Bless you” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு சகபிச்சைக்காரர் என அவரை நான் அக்காலத்தில் பார்த்தேன் பின்னாளில் ஒரு பெரிய அடையாளமாக அவர் எழுந்தபோது ஒருமுறை சென்று பார்த்துப் பேசியிருக்கிறேன். திருவண்ணாமலையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அவர் மாறியதை பிற்பாடு அறிந்தேன்.
அங்கு அவ்வப்போது பக்தர்கள் வந்து தங்கள் துயரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் விரித்த விழிகளுடன் சற்றே முகம் குனிந்து அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் விழிகளைக் கூர்ந்து பார்த்தால் அவரது ஒரு கண் சற்றுக் கலங்கி நீர் கோர்த்திருக்கும். அவ்வப்போது வெடித்துச் சிரிப்பார். கைகளால் தரையை அடிப்பார். திரும்ப எவருக்கும் எந்த பதிலும் அவர் சொல்வதில்லை. May my father wish you. My father bless you என்று வழக்கமான வார்த்தைகளை மட்டுமே அளிப்பார்.
திருவண்ணாமலை இன்று எனக்கு இனிதாவதற்குக் காரணம் எனது இனிய நண்பர் பவா செல்லத்துரை அங்கு இருப்பதுதான்.அங்கு ஒரு துண்டு நிலம் வேண்டும் என்பதற்காக ஒரு பண்ணை வீட்டை நண்பருகளுடன் சேர்ந்து இப்போது வாங்கியிருக்கிறேன். பவா செல்லத்துரையின் வீடு எனக்கு என்றும் இனிதானது. அவரது தந்தை காலத்திலிருந்து விருந்தினர் உபசரிக்கப்படுவதற்காகவே அமைந்த இல்லம் அது. அவரது அன்னை சமைத்த உணவை உண்டிருக்கிறேன். இன்று அவரது மனைவி சைலஜாவால் உபசரிக்கப்படுகிறேன்
பவா இப்போது இருக்கும் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த காலம். நான் தர்மபுரியிலிருந்து ஒரு பேருந்தில் திருவண்ணாமலைக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆளற்ற மதியப்பேருந்தில் கையில் பையுடன் ஒருவர் வந்து என் அருகே அமர்ந்தார். பையை முன்னால் எடுத்து வைத்து கம்பியில் முடிச்சிட்டுக் தொங்கவிட்டார். ரப்பர் செருப்பைக் கழற்றி வேட்டியைத் தளர்த்தியபடி சாய்ந்து அமர்ந்து என்னை நோக்கி புன்னகைத்தார். ஒடுங்கிய முகம், விரித்த கண்கள் தர்மபுரிக்கே உரித்தான நரைத்த அடர்தலை .அங்குள்ள ப்ளோரின் கலந்த நீரினால் கறை படிந்த பற்கள்.
”என்னா வெயிலு…,” என்று அவர் சொன்னார். அது தர்மபுரியின் வணக்கம் சொல்வதற்கு நிகரான வார்த்தை. நான் ”ஆமாம்” என்றேன். ”ஊத்தங்கரை வரைக்கும் போறனுங்க தம்பி” என்றார். ”அப்படியா?” என்று நான் கேட்டேன். அது என் பொதுவான வார்த்தை. ஊத்தங்கரையில்தான் அவருடைய மகளை திருமணம் செய்து கொண்ட குடும்பம் இருந்தது. அவர்களிடம் மீண்டும் ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என்று செல்வதாக அவர் சொன்னார். ஏழு பெண்கள் ஏழு பெண்ணை பெற்றவரின் எல்லா துக்கத்தையும் அவர் அனுபவித்திருக்கிறார். நான்காவது பெண்ணைத்தான் ஊத்தங்கரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
பெண்ணாகரம் பக்கம் அவருடைய கிராமம். அங்கிருந்த நிலத்தை விற்றுத்தான் மகளுக்குப் பத்து பவுன் நகை போட்டார். பட்டுபுடவையும் எடுத்து பெருமாள் கோவிலில் கௌரவமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார். சென்றதுமே பெண்ணின் நகைகளை வாங்கி விற்றுவிட்டார்கள். போய்க் கேட்டபோது காடு வாங்கி விவசாயம் செய்வதற்காகத்தான் என்று சொன்னார்கள். அது நல்லதற்குத்தானே? ஆனால் ஆறுமாதத்தில் பெண்ணுக்கு பைத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வந்து கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று ஆளனுப்பினார்கள்.
பெண்ணை அழைத்து வருவதற்காக அவர் சென்றால் “நான் வரமாட்டேன். இங்கிருந்து கிளம்பிச் சென்றால் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்” என்று அவள் கதறி அழுதாள். அவள் மாமியார் “கூட்டிச் சென்று விடுங்கள் இங்கேயே அவள் செத்துப்போனால் எங்களுக்குப்போலீஸ் வழக்கு வரும்” என்று . “நீ வந்து பத்து நாள் இருந்துவிட்டுப்போ தாயே. பெரியவர்களை வைத்துப்பேசிக் கொள்ளலாம்” என்று சொன்னதும் மகள் அங்கிருந்த ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “நான் வரமாட்டேன் என்னை இழுத்துச் சென்றாலும் நான் வரமாட்டேன்” என்று கூவி அழுதாள்.
“என்ன செய்றதுன்னு தெரியாம திரும்பி வந்திட்டேன் தம்பி. மறுபடியும் கூட்டிட்டுப்போங்கன்னு மாமியாக்காரி சொல்லி விட்டா. எப்டி கூட்டிட்டு வர்ரது? வரமாட்டா தம்பி. செத்திருவேன் செத்திருவேன்னு ஒரே அழுகை. மத்தபடி ஒரு பிரச்சினை இல்லை. சமைப்பா. எட்டூரு வேலையச் செய்வா. பாக்க அம்சமா இருப்பா தம்பி. இங்க இருக்கிறப்ப அவள எருமைக்கண்ணுக்குட்டீன்னுதான் எல்லாரும் சொல்லுறது…”
தன் மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் அவர் சென்றார். “வரமாட்டேன் இந்த வீட்டை விட்டு நான் வரமாட்டேன்” என்று மகள் கதறினாள். மெலிந்து கன்னமெல்லாம் ஒட்டி முடியெல்லாம் பஞ்சாகி நோயாளிபோலிருந்தாள். “கிறுக்குப்பெண்ணை எங்க தலையிலே கட்டிவைத்துவிட்டீர்களே” என்று மாமியார் சொன்னார். பெண் உடலெல்லாம் காயங்கள். “எல்லாம் அவளே செய்து கொள்வது. அடுப்புக் கொள்ளியை எடுத்து உடம்பெல்லாம் வைத்துக் கொள்கிறாள்” என்று மாமியார் கூறினார்.
எவ்வளவு அழைத்தும் அவள் வரவில்லை. அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று பயந்து கொல்லைப்பக்கத்துக்குச் சென்று விறகுப்புரைக்குள் புகுந்து கதவை மூடி அமர்ந்திருந்தாள். அவள் அருகே யார் சென்றாலும் அருகில் இருக்கும் தூணையோ கம்பியையோ கதவையோ இறுகப்பற்றிக் கொண்டாள். “எட்டுவாட்டி போய் பார்த்துட்டுவந்தேன். வரமாட்டேனுட்டா. கடைசியா ஒருநா கையைக் காலைக் கட்டி டெம்போ வெச்சு அவங்களே வீட்டுக்கு கொண்டு வந்து விட்ட்டுடாங்க. என்னையக் கொண்டுபோயி அங்க விட்டிருங்கன்னு அவ கதறி அழுதிட்டே இருந்தா”
கையில் கிடைத்த ஒன்றிரண்டு சேலைகளை எடுத்து சுருட்டிக் கொண்டு வீட்டைவிட்டு அவளே இறங்கி தெருவில் ஓடுவதும் பின்னால் சென்று முடியைப் பிடித்து பற்றி இழுத்து திரும்ப கொண்டு வருவதும் நடந்தது. அடிக்கடி ஓடிப்போக ஆரம்பித்ததும் கொல்லனிடம் சொல்லி சங்கிலி வாங்கி கட்டிப்போட்டார். “நமக்கும் காடு கரைன்னு சோலி இருக்கில்ல தம்பி? என்னத்த செய்றது?’ என்றார்.
ஒருவருஷத்துக்குள் அவள் செத்துபோனாள்.ஒவ்வொரு நாளும் “என்னை அங்கே கொண்டு விட்டுவிடுங்கள். என் புருஷன் கூடத்தான் வாழ்வேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவளை திரும்பக் கொண்டு விட்டவுடனே மாமியார்க்காரி மாப்பிள்ளைக்கு ஆறுமாதத்துக்குள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள். எட்டு மாதத்துக்குள் அந்தப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாள். அதன் பிறகு திருப்பத்தூர் பக்கம் எங்கெயோ சென்று மறுபடியும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அவள்தான் இப்போது வாழ்கிறாள். “அது ஒரு சீக்குக்காரி. அந்தப்பொம்புள அதையும் வாழவிடாது தம்பி” என்றார்
நான் பெருமூச்சுவிட்டேன். அந்த அம்மாளை என்னால் காணமுடிந்தது. தீங்கே உருவான சில பெண்கள் எங்குமுண்டு. “இப்ப கடைசிப் பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன். அந்த நகையைத் திருப்பிக் குடுங்கன்னு கேட்டுப்பார்த்தேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாதி நகையாவது திருப்பிக் கொடுங்க, இந்தப்பொண்ணை கரையேத்திடுவேன். இனி விக்கிறதுக்கு காடில்ல சாமீன்னு சொன்னேன். கிறுக்குப்பொண்ண கட்டிவச்சதுக்கு நீதான் காசுகுடுக்கணும்னு சொல்லிட்டுது அந்தம்மா”
“ஊர்ப்பஞ்சாயத்தில் போய் சொன்னேன். அஞ்சு பவுன திருப்பிக் குடுக்க அவங்க சொல்லிட்டாங்க. இந்தம்மா கால்ல விழுந்தாலும் குடுக்க மாட்டேங்கறாங்க. கல்யாணம் வெச்சாச்சுங்க. அந்த அஞ்சு பவுனையும் நம்பித்தான் வெச்சிருக்கேன். இன்னொரு வாட்டி கேக்கலாம்னு போறேன்” அவர் சொன்னார் “நகையை திருப்பி கொடுத்திடணும் இல்லீங்களா? நியாயம்னு ஒண்னு இருக்கு இல்லீங்களா ? சாமின்னு ஒண்ணு இருக்கு இல்ல்லீங்களா ?”
நான் “ஆம்” என்றேன். அவர் கண்கள் கலங்கின. என்னை நோக்கி கைகளை கூப்பியவாறு வைத்துக் கொண்டு “எல்லாம் நல்லபடியா முடியணும். இந்தப்பொண்னையும் கரையேத்திட்டன்னா கஞ்சியோ கூழோ குடிச்சுட்டு போய் சேந்துடுவேனுங்க தம்பி” என்றார். அவர் என்னிடம் பிரார்த்தனை செய்வது போலிருந்தது. அவர் கைகளைத் தொட்டு “எல்லாம் சரியாகும்” என்றேன். “ஆமங்க முடியணுங்க” என்றார்
எவனோ ஒரு வழிப்போக்கனிடம் தன் வாழ்க்கையை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்கிறார் .ஆனால், வழிப்போக்கனிடம் மட்டும் தானே இவற்றை சொல்ல முடியும்? வாழ்க்கைக்குள் வந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் சுயநலங்களும் கணக்குகளும் இருக்கின்றன. அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. அவர்களின் அறம் திரிந்துவிட்டிருக்கிறது அவர்களால் சக மனிதர்களின் கையைப்பற்றிக் கொண்டு உண்மையான அன்புடன் ஒரு சொல் சொல்லமுடிவதில்லை. வழிப்போக்கன் வெறும்மானுடன் அல்லவா?அப்போது நினைத்துக் கொண்டேன் சாமியார்கள் நிரந்தரமான வழிப்போக்கர்கள் தானே என்று.
குங்குமம்/ முகங்களின் தேசம்
தொடர்புடைய பதிவுகள்
தாயுமாதல்
முகங்களின் தேசம் கடிதங்கள்
முகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்
சிறுகதைகள் கடிதங்கள் 18
அன்புள்ள ஜெ,
என்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு அறிவியல் கதை என்பது ஒரு அறிவியல் கருத்தை அடிப்படையாகக் தான் அமைகிறது. Space Travel, Time Travel போன்ற அறிவியல் கருத்துக்கள் கொண்ட கதைகளில் மிகைக்கற்பனை சாத்தியமாகிறது. அக்கதைகளில் மிகைக்கற்பனை எளிதாக பொருந்தி வருகிறது.
ஆனால் Chaos Theoryபோன்ற அறிவியல் கோட்பாட்டைக் கொண்ட கதைகளில் மிகைக் கற்பனை சாத்தியமில்லாத ஒன்று.
நான் பிந்தைய அஞ்சலில் குறிப்பிட்டிருந்த என் கதைகளான கடவுள் யார், காலத்தை வென்றவன், தெய்வமகன், எந்திரநகரம் போன்ற கதைகளில் மிகைக் கற்பனை உள்ளன. ஏன் என்றால் எடுத்துக் கொண்ட அறிவியல் கருவுக்கு அது இயல்பாக பொருந்தி வருவதனால் தான்.
சதீஷ்குமார்
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் தளத்தில் நிகழ்ந்த விரிவான சிறுகதை உரையாடல் எக்கச்சக்கமான திறப்புக்களைத் தந்தது. மிகக் கூர்மையாகச் சமகாலத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் தொடர்பான விவாதமாக இதைப் பார்க்கிறேன். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
பொதுத்தளத்தில் வாசகர்களை உரையாட வைத்து, அவர்களின் தரப்புக்களை வெளிக்கொணர்ந்தமை.
சமகாலத்தில் எழுதுபவர்களின் / எழுத ஆரம்பிப்பவர்களின் கதைகளை மூத்த எழுத்தாளர் ஒருவர் வாசித்துத் தன் தரப்பை நுண்மையாகச் சொல்வது.
இந்த இரண்டு காரணங்களுக்காக இவ்விவாதம் மிகமுக்கியமானது. இவ்வுரையாடல் பல்பரிமாண வாசிப்பையும், ஒவ்வொருவரின் வாசிப்பு அனுபவ தரப்பையும் கச்சிதமாக சுதந்திரமாகப் பேசவிட்டிருக்கின்றது. இவ்வுரையாடலில் பலருக்குப் பல்வகையான மாற்று அபிப்பிராயங்கள், பார்வைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இவற்றை நிராகரிக்க முடியாது.
ஒரு சுவிங்கத்தை இழுத்து இழுத்து விரிவாக்குவது போல் ஒவ்வொரு கதைகளையும் அதன் தருணங்களையும் விரிவாக்கி அலசி தங்கள் தரப்பைச் சொன்ன அனைவரும் அன்புக்குரியவர்களாக ஆயிருக்கிறார்கள். சமகாலத்தில் தீவிரமாக எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் காலப் பகுதியிலும் புதிய வாசகர்கள்/ புதிய படைப்பாளிகளுக்குப் பிரயோசனப்படும் வகையில் பரந்துபட்ட விவாதமாக இதைச் செய்திருக்கின்றீர்கள். மெத்தப் பெரிய நன்றி.
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ
கதைகள் மீதான விவாதம் மிக முக்கியமானது. பலவிஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறீர்கள். அதில் முக்கியமானது புதியவடிவங்கள் இல்லையே என்ற உங்கள் கூற்று. வடிவம் புதியது என்பதனால் கதைகள் சிறப்பு கொள்வது இல்லை. ஆனால் வடிவம் வாசகனுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்து கதைக்குள் தீவிரமாக உள்ளே நுழையும்படிச் செய்கிறது
மகேஷ்
***
அன்பு ஜெ
சிறுகதைகளில் அனோஜனின் சிறுகதை நன்றாக இருந்தது என நினைக்கிறேன். அதில் இருந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு முக்கியமான ஒரு விஷயம். இதுவரை கதைகளை உணர்ச்சியே இல்லாமல் ரிப்போர்ட்டிங் ஆக இருப்பதே நல்லது என நினைத்திருந்தவர்கள் இக்கதையிலிருந்து மாறுதல் நிகழ்வதை உணரமுடியும்
போஸ்
***
அன்புள்ள ஜெ,
சிறுகதைகளில் கலைச்செல்வி, தருணாதித்தன் இருவரின் கதைகளும் நன்றாக இருந்தன. நாம் அறியாத ஒரு வாழ்க்கையைச் சொல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. அனோஜன் கதையில் உரையாடல் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம்.
பொதுவாக கதை என்பது ஒரு மாறுபட்ட சூழலைச் சொல்லக்கூடியதாக இருந்தால்மட்டுமே நமக்கு வாழ்க்கையின் ஒரு மாறுபட்ட பக்கத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது என நினைக்கிறேன்
எஸ்.சமத்துவம்
***
ஜெ
சிறுகதைகளில் வணிக எழுத்தின் நடை இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். காளிப்பிரசாத் கதையில் அப்படி இல்லை. அது அசோகமித்திரன் பாணிகதை என்றே தோன்றியது
அவர் அருகே இருக்கும் பையில் இன்னும் நிறைய கதைகள் இருக்கலாம். நீங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்
ராம்நாத்
தொடர்புடைய பதிவுகள்
சிறுகதைகள் கடிதங்கள் 17
சிறுகதைகள் கடிதங்கள் 16
சிறுகதைகள் கடிதங்கள் -15
சிறுகதைகள் கடிதங்கள் -14
யானைடாக்டர், கடிதங்கள்
உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]
கடிதங்கள்
கடிதங்கள்
‘நூஸ்’
தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2
தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2
அலை அறிந்தது…
கடிதங்கள்
கடிதங்கள்
பழையமுகம் (சிறுகதை)
ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)
சிவமயம் (சிறுகதை)
ரதம் – சிறுகதை
கரடி [சிறுகதை]
பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]
சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி
அன்புள்ள சார்,
மூன்று வருடங்கள் முன்பு குழந்தைகள் கதை என நினைத்து ஆயிரத்தோரு இரவு அரேபிய கதைகள் முழுத்தொகுப்பை வாங்கி ஹாலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அதை அலமாரி உச்சியில் வைத்து அவ்வப்போது படித்தேன். நான் சிறுவயதில் படித்த கதைகள் இவையில்லையே. அவை இவற்றில் ஒரு பகுதிதான். அவற்றில் பறக்கும் ஜமக்காளமும், ஆளைத்தூக்கிச் செல்லும் கழுகுகளும் மட்டும்தான் வந்தன. ஆனால் இந்த முழுத்தொகுதியானது சிறுவர்களுக்கானது இல்லை என்பது தாமதமாகவே புரிந்தது.
நான் என் மகளுக்கு கதை சொல்லியாக வேண்டும். ஓரளவு சுத்திகரித்து சொன்னாலும் குழந்தைகள் ஒரே கதையை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கவும் அவர்களுக்கு சலிக்கவில்லை ( டோலுவும் போலுவும் பாட்டுப்பாடி சூனியக்கார கிழவியிடமிருந்து தப்பிப்பதை நானே ஆறுமுறை கண்டிருக்கிறேன்). அதனால் பூதத்தின் இடுப்பில் இருக்கும் கன்னி (?) வைத்திருக்கும் 98 மணிகளுக்கான காரணத்தை சொல்லும்போது அதை குழந்தைக்காக மாற்றிச்சொல்லி, அதையே இன்னொருநாள் கேட்கும்போது வேறு வேறாக மாற்றிச்சொல்லி என, எனக்கு கதையே சொல்லட்ரித்தெரியல என்ற நற்பெயரை வாங்கிக்கொண்டேன். விக்ரமாதித்தன் கதைகளும் கார்ட்டூன் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. அதையும் குழந்தைகளுக்கு அப்படியே சொல்லமுடிவதில்லை. மாற்றி சொன்னால் எடுபடுவதில்லை. ( அது எப்படிப்பா.. டெய்லர் அங்க்கிள் கல்யாணம் பண்ணிப்பாரு? இந்த அங்க்கிள்தானே உயிர் கொடுத்தாரு? )
அதன்பின்னர் சித்திரக்கதைகளை விட்டு பனிமனிதன் கதை படித்தேன். அந்த கதை படிப்பதற்காக மட்டுமின்றி படித்து குழந்தைகளுக்கு சொல்வதற்காகவும் ஏதுவாகவே எழுதப்பட்டிருந்தது. கிம்மும், பாண்டியனும், டாக்டரும் பத்தாயிரம் அண்டா ஐஸைக் கொட்டி வைத்த மாதிரி இருந்த ஐஸ்மலையில் நடப்பது ஒரு உதாரணம். குழந்தைகளுக்கான கதைகள், எனக்கும் சுவாரசியமாக இருந்தால்தான் அதை விளக்கமாக சொல்ல முடிகிறது. அதனால்தான் பனிமனிதனை சுவாரசியமாக சொல்ல முடிந்தளவிற்கு அமர்சித்ரகதா கதைகளை சொல்லமுடியவில்லை. அவைகளை நான் படித்து ரசித்ததுபோல அவளும் தானாகவே படிப்பதுதான் சிறந்த முறை என்று தோன்றியதால் விட்டுவட்டேன்.
ஆறு மாதங்கள் முன்பு திரு.யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்ப்பில் ரஷ்யசிறார்சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ‘ அழகான அம்மா’ என்ற தொகுப்பை படிக்கத்துவங்கினேன். ஒருநாளைக்கு ஒன்று அல்லது வாரத்திற்கு இரண்டு கதைகள் என. மொத்தம் ஐம்பது சிறுகதைகள் கொண்டது. என்சிபிஎச் வெளியீடு.
சமீபத்தில் குழந்தைகளுக்கான கதைகள் என்று திரு.கேசவமணி மற்றும் திரு.ரத்தன் அவர்கள் எழுதியிருந்த கடிதங்களைக் கண்டதும் இதைப் பற்றி எழுத நினைத்தேன். ஆனால் அப்போது முக்கால்வாசி கதைகளை மட்டுமே படித்திருந்ததால் எழுதவில்லை. நம் சிறுவர் இலக்கியங்களில் இன்னும் நீதிக்கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால் கதைகளையே மீண்டும்மீண்டும் காண முடிகிறது. ஒரு மகாபாரத சிடியில் விதுரர் பாண்டவர்களாலும் கெளரவர்களாலும் மாமா என்று அழைக்கப்படுகிறார். ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்களா என தெரியவில்லை.
ஆனால் இந்த தொகுப்பில் உள்ள ரஷ்ய கதைகள் மிகச்சிறப்பான தரத்தில் இருக்கின்றன. சூரியனை முதலை தின்று விட்டது என கொட்டாவி விட்ட முதலையை அடிக்கின்றன மற்ற மிருகங்கள்( சூரியனைத் திருடிய முதலை) அம்மாவைத் தேடும் ஆந்தைக்குஞ்சு அம்மா அழகா இருப்பா என்றே அடையாளம் சொல்கிறது ( அழகான அம்மா). தன்னை சுரண்டும் எலிக்கு பூனை படத்தை வரைந்து பயம் காட்டுகிறது பென்சில் ( வாவாவின் பென்சில்). இந்த கதைகளை படிக்கவும் எனக்கே ஆர்வமாக இருந்தது. இந்த கதைகளை அப்படியே குழந்தைகளுக்கு சொல்லவும் முடிந்தது.
அதை எழுதிவிட்டு, கேசவமணி அவர்களின் பதிவை தளத்தில் தேடினால் இந்த லிங்க் கிடைத்தது.
http://www.jeyamohan.in/72#.V_5zbhnhXqA
ரஷ்ய சிறார் கதைகளைப் பற்றி நீங்கள் பத்துவருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள்.
ஆனாலும் இந்த மெயிலை இத்தனை பத்தி டைப் அடித்துவிட்டதால் அனுப்பிவிடுகிறேன்.
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
வெள்ளிநிலம் தொடர்கதை அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேற்றுதான் வாங்கி வாசித்தேன். சாங்கா டென்சிங் அவர்களின் மம்மியோடு துவங்கியிருக்கிறது. பனிமனிதனின் தொடர்ச்சி என்று எழுதியிருந்தீர்கள். மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.
மூன்று வாரம் கடந்தபின்தான் கதைசொல்ல ஆரம்பிக்கவேண்டும். :-))
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
***
அன்புள்ள ஜெ
வெள்ளிநிலம் அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பனிமனிதன் நான் முதன்முதலாக வாசித்த ஒரு பெரியவர்களுக்கான கதை. நான் அதற்கு முன்னர் வாசித்ததெல்லாம் கபீஷ் மாதிரியான கதைகள். அவை குழந்தைகளாக பெரியவர்கள் மாறி எழுதியவை. அவற்றின் வாசகனாக இருந்த எனக்கு என்னை ஒருபெரியவனாக நினைத்து எழுதப்பட்ட கதையாகிய பனிமனிதன் பெரிய அளவில் கவர்ந்தது.
நான் அதை ஒருவாரம் வைத்துவைத்து வாசித்தேன் . அதில் சிறுவர்களுக்கான விஷயங்கள் நிறைய. சாகசம். அதைச்செய்யும் ஒரு சிறுவன். ஆனால் கூடவே உலகசிந்தனையின் ஒருபகுதியும் அதில் அறிமுகமாகியது. ஃப்ராய்டு கூட அதில் அறிமுகமானார். அதுதான் உண்மையான குழந்தையிலக்கியம் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது
மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறேன். சுட்டிவிகடன் வாங்கியிருக்கிறேன்
செல்வக்குமார்
***
அன்புள்ள ஜெ
வெள்ளிநிலம் அபாரமான தொடக்கம். க்யூ மொனாஸ்டிரியின் அந்த உண்மையான மம்மியை குறிப்பிட்டு அதையே கதைத்தொடக்கமாக ஆக்கியிருக்கிறீர்கள். கதை ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அதிவேகத்துடன் தொடங்கியிருக்கிறது
ஜெயராஜ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
[ 14 ]
சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே. எண்ணுக, புவி கொண்ட முதல் வல்லமைகள் எவை? காற்று, அனல், நீர்.” இந்திரன் சற்றே துடிப்புடன் முன்வந்து “அனலவன் எத்தரப்பும் எடுக்கமாட்டான். காற்று நம்மை துணைக்கலாகும்” என்றான். “ஆம், ஆனால் அது முடிவற்றதல்ல. குன்றாததும் அல்ல” என்றார் நாரதர்.
“அவ்வண்ணமெனில், நீர்?” என்றான் இந்திரன். “நீரின் நான்கு வடிவங்கள் புவியில் உள்ளன. மழை, ஊற்று, ஆறு, கடல்” என்றார் நாரதர். “கடலே காலத்தின் வடிவம். கடலை துணைக் கொள்வோம்” என்று அவர் சொன்னதும் இந்திரன் உளம் தளர்ந்தான். “முனிவரே, வருணன் அசுரர் குடிப்பிறந்தோன். அசுரகுடித் தலைவனாக அமர்ந்திருக்கும் ஒருவனை எதிர்க்க ஒருபோதும் அவன் ஒப்புக்கொள்ளப்போவதில்லை.” நாரதர் புன்னகைத்து “ஆம். ஆனால் ஒரு வினா அவனில் வளரும். புவியில் இன்றிருப்பதில் முதன்மையான அசுரன் யார்?” என்றார். இந்திரன் அதை புரிந்துகொண்டு புன்னகைத்தான்.
முதிய அந்தணன் உருவம் பூண்டு கைக்கழியும் தோள்முடிச்சும் முப்புரியும் அனல்கட்டையும் தர்ப்பையும் கொண்டு இந்திரன் மேற்கே அலைத்த கடலின் விளிம்புக்கு வந்தான். தன் கையில் இருந்த கழியால் கடல் அலைகளை அடித்துக் கிழிக்கத் தொடங்கினான். சலிக்காது சினத்துடனும் ஆற்றாமையுடனும் அவன் அதைச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அலைகள் என சுருண்டு கரைதொட்டு உருக்கொண்டு எழுந்து அவனருகே வந்த வருணன் கேட்டான் “அந்தணரே, இங்கு என்ன செய்கிறீர்?” “அலைகளை கிழிக்கிறேன்” என்றார் அந்தணர். “அடித்து கிழிக்கலாகுமா நீரை? அது இணையும் தன்மைகொண்டதல்லவா?” என்றான் வருணன். “அடிமேல் அடிவைத்தால் நீரையும் கிழிக்கலாகும்” என்றார் அந்தணர்.
நீள்தாடியும் குழலும் அலைபுரள நீலநிற ஆடையுடன் நின்ற வருணன் “ஏன் இதை செய்கிறீர்?” என்றான். “புவி அனைத்திற்கும் உரிய முதலரசனைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன். வழியில் இந்த நீர்ப்பெருக்கு என்னை தடுக்கிறது” என்றார் அந்தணர். “புவியனைத்திற்கும் அரசன் யார்?” என்று வருணன் கேட்டான். “விருத்திரன். அவனே இன்று விண்ணகத்தை ஆள்கிறான். அசுரப் பேருருவனின் ஆட்சியில் இப்படி ஒரு எளிய நீர்வெளி கட்டற்று கொந்தளிப்பதை அவன் எப்படி ஒப்புக்கொள்கிறான் என்றே புரியவில்லை” என்றார் அந்தணர்.
புருவம் சுளிக்க சினத்தை அடக்கி வருணன் கேட்டான் “இது ஆழி என்று அறிவீரா?” அந்தணர் “ஆம், அறிவேன். இது வருணனின் உடல். இன்று வருணனின் மேல் விருத்திரனின் கோல் நாட்டப்பட்டுவிட்டது. விண்ணேகி விருத்திரனைக் கண்டதுமே வருணனைக் குறித்து நான் துயர் சொல்லப்போகிறேன். என்னைப்போன்ற எளியோர் அவனை அடையும் வழிகள் அனைத்தையும் இந்த பொறுப்பற்ற நீலநீர்க் கொந்தளிப்பு சூழ்ந்துள்ளது. இதன் பொருளற்ற அலைகளுக்குமேல் தன் செங்கோலால் ஒரு கோடு கிழித்து ஒரு பாதையை அவன் அமைக்கவேண்டும். அன்றி அவன் தன் சொல்லைச் சரடாக்கி இந்த மாளாத் திமிறலை கட்டிப்போட வேண்டும்” என்றார்.
ஏளனத்துடன் இதழ்கோட நகைத்து “வருணனை வெல்ல விருத்திரனால் இயலுமென்று எவர் சொன்னது உங்களிடம்?” என்றான் கடலரசன். “வருணன் இந்திரனை தலைவனென ஏற்றுக்கொண்டான் என்பது நான் கற்ற அனைத்து நூல்களிலும் உள்ளது” என்றார் அந்தணர். “எந்நூலில் உள்ளது?” என்று சினத்துடன் உரத்த குரலில் வருணன் கேட்டான். “விருத்திரன் புகழ் பாடும் அனைத்து நூல்களிலும்” என்றார் அந்தணர். “இது என் சொல், இதை நம்புக! நூலில் பதிந்ததே காலத்தில் வாழ்வது.”
வருணன் சீற்றத்துடன் “அது பொய். இப்புவியில் எனக்கு நிகரென அசுரன் யாருமில்லை” என்றான். “அவ்வண்ணமெனில் விருத்திரனை இங்கு வரவழைத்து எனக்குக் காட்டு” என்று இந்திரன் சொன்னான். வருணன் புன்னகைத்து “இதோ” என்று கூறி அலைவடிவு கொண்டான். ஆயிரம் முறை தன் கைகளால் நிலத்தை அறைந்து “விருத்திரனே, இங்கு எழுக!” என்று கூவினான்.
அவ்வொலி இந்திர உலகில் இந்திராணியுடன் மலர்வனத்தில் காதலாடிக்கொண்டிருந்த விருத்திரனின் செவியில் விழவில்லை. மதுக்கிண்ணத்துடன் இருந்த அவன் மெல்லிய அலையோசை ஒன்றையே கேட்டான் “என்ன?” என்று இந்திராணி கேட்டபோது “அலையோசைபோல் ஒன்று” என்றான். “அது அலை ஓசை அல்ல. உங்களுக்கு சேடியர் வீசும் சாமரத்தின் ஒலி” என்றாள் இந்திராணி. “ஆம்” என்று விருத்திரன் புன்னகைத்தான். மதுக்குடுவைகளுடன் இரு சேடியர் அருகே வர அவர்களை நோக்கி கையசைத்தான்.
மீண்டும் உருக்கொண்டு எழுந்து வந்த வருணனின் முகம் சினம் கொண்டு சுருங்கியிருந்தது. தன் உருமீண்ட இந்திரன் “அசுரர் பேருருவே, நான் இந்திரன். உம் நிகரற்ற ஆற்றல் எவ்வண்ணம் ஏமாற்றப்பட்டுவிட்டது என்பதை சொல்லும்பொருட்டே இவ்வுருவில் வந்தேன்” என்றான். சினமும் ஆற்றாமையுமாக வருணன் பெருமூச்சுவிட்டான். “என் நகரை வென்று, என் துணைவியைக் கொண்டு, என் அரியணையில் அமர்ந்திருக்கிறான் அவன். அவனை வஞ்சம் தீர்க்கும்பொருட்டு இங்கு வந்தேன். அவனுக்கு நிகரான ஆற்றல் ஒன்று என்னுடன் இருக்கையிலேயே அவனை வெல்ல முடியும்” என்றான்.
வருணன் “நீர் விண்ணவர். விண்ணவர் என்றும் அசுரர்க்கு எதிரானவர். அசுரனாகிய எனது துணை ஒருபோதும் உமக்கில்லை” என்று திரும்பப்போனான். அவன் தோளைப்பற்றி “பொறுங்கள்! நான் விண்ணவன், ஆனால் விண்நகரை விட்டு வந்தபின் என்னை எப்படி விண்ணவன் என்று சொல்ல முடியும்? இதோ, இவ்வலைகளில் திகழும் காலப்பெருக்கை சான்றாக்கி உமக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஒருபோதும் விண்ணவர் உமக்கு எதிராக எழமாட்டார். எனக்கு நிகரான இடத்தில் விண்ணவனாக உம்மை அமைக்க நான் படைப்புத்தெய்வத்திடம் கோருவேன். நான் கிழக்கென்றால் நீர் மேற்கு. என்றும் உம் துணைவனாகவே திகழ்வேன்” என்றான்.
வருணன் முகம் சற்று கனிந்ததை உணர்ந்து அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “இதோ, மூன்று தெய்வங்களின்மேல் ஆணையாக சொல்கிறேன். இனி எந்த வேள்வியிலும் எனக்கு அளிக்கப்படும் அவியில் நேர்பாதி உமக்குரியது. ஆயிரம் ஆண்டு வேள்வியில் அவி கொண்டு இருந்தால் நீர் விண்ணவராக வானில் நிறுத்தப்படுவீர். உம்மை வேதங்கள் பாட்டுடைத்தலைவனாக்கும். வேதியர் உம்மை தெய்வமென வணங்குவர்” என்றான். வருணன் இறுதித் துளி தயக்கத்தில் நின்றிருப்பதை உணர்ந்து “வான் மழை அருளும் நீர்ப்பெருக்கு நீர். முகில்களின் காவலன் நான். நாம் இணைந்து இப்புவியை ஆளுவோம்” என்றான்.
வருணனை எண்ணவிடாமல் இந்திரன் சொல்லெடுத்தான் “நாம் பிரிந்தால் புவி வறண்டு அழியும். நீர் தேடி வான் நோக்கி அமர்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி உயிர்களின் குரலைக் கேட்பவன் நான் மட்டுமே. மழை பொழிகையில் அவை அளிக்கும் வாழ்த்துக்களை நானே பெற்றுளேன். அவ்வாழ்த்துக்களாலேயே நான் அரசனென மண்ணில் நிறுத்தப்படுகிறேன். இன்று வாக்களிக்கிறேன், என்னை வந்தடையும் வாழ்த்துக்களில் பாதியை உமக்கு அளிப்பேன். ஒவ்வொரு உயிரும் உமது பெருங்கருணையை உணரும்படி செய்வேன். உமது அலைகளின் பேருருவை முகில்களின் இடியென ஒலித்துக்காட்டுவேன். ஆணை! ஆணை! ஆணை!”
மறுத்தொரு சொல் எடுக்கமுடியாது வருணன் திகைத்து பின் மெல்ல அமைந்தான். “உமது சொல் எனக்கு வந்துவிட்டதென்றே கொள்கிறேன், நீர்களின் தலைவரே” என்றான் இந்திரன். வருணன் தலையசைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். அலைகடலை நோக்கி திரும்பி “அவ்வாறெனில் முடிவிலாதெழும் இப்பெரும்படை இனி எனக்குரியது அல்லவா?” என்றான் இந்திரன். “ஆம்” என்றான் வருணன். “இனி வேதமுதல்வர் நாம். இனி வேதம் இரு முகம் கொள்க! அதன் சொல் ஒவ்வொன்றும் இருவகையில் பொருள் பெறுக! உமது நெறியும் எனது இடியும் அதில் விளங்குக!” என்றான் இந்திரன்.
[ 15 ]
பிரதீகம் என்னும் சிற்றூரில் நிலவெனப்பெருகி ஓடிய ஆற்றங்கரையில் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் இளம்சூதனாகிய குணதன் சொன்னான் “வருணனின் ருதமும் இந்திரனின் வஜ்ரமும் அவ்வாறு வேதமெய்ப்பொருளாயின.” பிரசண்டன் “அக்கதையை சொல்க!” என்றான். குணதன் குப்தசந்திரசூடர் எழுதிய விருத்திரபிரஃபாவம் என்னும் காவியத்தின் இறுதியை சொன்னான்.
விருத்திரன்மேல் சினம் கொண்ட வருணன் தன்னை அவன் வந்து சந்திக்க வேண்டுமென்று ஆணையிட்டு நூற்றெட்டு அலைகளை புற்றிகபுரிக்கு தூதனுப்பினான். அவ்வலைகள் அனைத்தும் கரைமுட்டி வளைந்து பின் திரும்பி அவனையே வந்து சேர்ந்தன. பின்னர் நீர்மலை என எழுந்த பேரலை ஒன்றின்மேல் ஏறி வருணனே புற்றிகபுரியின் மண் கோட்டை வாயிலை வந்து அறைந்து மேலெழுந்தான். முதிய அரசன் சினம்கொண்டிருந்தான். அவன் சடைக்குழலும் திரிகளாக சரிந்த தாடியும் நனைந்திருந்தன. உதடுகள் துடித்தன. “எங்கே அவன்? இக்கணமே நான் பார்த்தாகவேண்டும் விருத்திரனை” என புற்றிகபுரியின் கோட்டைவாயிலில் நின்று அவன் கூவினான்.
அவனை எதிர்கொண்ட விருத்திரனின் படைத்தலைவன் கௌமாரன் பணிந்து “நீருக்கு அரசே, வருக… மூத்தவராகிய தங்களை புற்றிகபுரி பணிகிறது. விருத்திரர் இப்போது இந்நகரில் இல்லை. அவர் சொல்கொண்டு நானே இதை ஆள்கிறேன்” என்றான். அலைமுழக்கமென ஒலித்த குரலில் “நான் உயிர் வாழும் அசுரர்களின் முதற்தலைவன் வருணன். எனது ஆணையுடன் நூற்றெட்டு அலைத்தூதர்கள் இங்கு வந்தனர். அவர்களை மறுமொழியின்றி திருப்பி அனுப்பியிருக்கிறீர்” என்றான். “அரசே, விருத்திரர் மண்மீதுள்ள அசுரர்களின் முதற்தலைவர். அவரை வந்து சந்திக்க எளிய தூதர்களுக்கு நிலை இல்லை. அமைச்சரோ அரசரோதான் வந்திருக்கவேண்டும்” என்றான் கௌமாரன்.
“உங்கள் அரசன் இன்று அந்திக்குள் என்னை வந்து சந்திக்க வேண்டும். பெருங்கடல்களின் ஆழத்தில் எனது மாளிகை உள்ளது. அதன்முன் அவன் ஒரு காலத்தில் இரந்து கையேந்திய முற்றம் உள்ளது. அங்கே வாயிலில் கைகட்டி வாய்பொத்தி நின்று சந்திப்பு கோரவேண்டும். இல்லையேல் அவன் இறுதிக் குருதியும் எஞ்சுவதுவரை போரிடுவேன். இறுதிச் சாம்பலும் எஞ்சுவதுவரை வஞ்சம் கொண்டிருப்பேன். அவனை அறிவுறுத்துவதற்கே வந்தேன்” என்றான்.
அச்சமின்றி நிமிர்ந்து வருணனின் விழிகளை நோக்கி கௌமாரன் சொன்னான் “வருணனே, நீர் உளம் திரிந்திருக்கிறீர். இப்புவிக்கு மட்டுமே நீர் பேருருவர். இன்று விண் எழுந்த ஏழு உலகங்களையும் வென்று இந்திரனென அமர்ந்திருக்கிறார் விருத்திரர். விதையென இருக்கையில் ஆலமரத்திற்கு நீர் நீரூற்றியிருக்கலாம். பன்னிரண்டாயிரம் விழுதுகள் எழுந்தபின் ஆலமரம் உமது முற்றத்து தொட்டியில் அடங்கவேண்டுமென நினைத்தீர் என்றால் உலகறியா பேதையெனப் பேசுகிறீர்.”
“கேளுங்கள், நீருக்கரசரே! இன்னும் சில ஆண்டுகளில் மூன்று பெருந்தெய்வங்களும் எழுந்துவந்து என் தலைவரை இந்திரனென ஏற்கப்போகின்றனர். புவியில் அந்தணர் அளிக்கும் அவியனைத்திற்கும் அவரே உரிமை கொள்ளப்போகிறார். அன்று அவருடைய சினத்திற்கு ஆளானீர்கள் என்றால் அவர் சுட்டுவிரலில் ஒரு துளி நீரென சுருங்குவீர். இருள் அழியா ஆழ் உலகங்களில் உம்மை சுண்டித் தெறிக்கவைக்க அவரால் முடியும். இடமறியாது ஆளறியாது உம்முள் எழுந்த சினம் நம்முடனே மறையட்டும். மீள்க! விருத்திரேந்திரனை வணங்கி உமது மாளிகையில் சென்று அமைக!” என்றான்.
வருணன் “நீ நிலைமீறிப் பேசிவிட்டாய். இதன் ஒவ்வொரு சொல்லும் உனக்கும் உன் குலத்திற்கும் நஞ்சு” என்றான். கௌமாரன் “வருணரே, நீர் அரசமுறை அறிந்தவர் என்றால் வரும் நீர்த்திருநாளில் சங்கும் முத்தும் பவளமும் மீன்மணியும் கொண்டுசென்று விருத்திரரின் காலடியில் வைத்து பணிக! அதுவே நன்று உமக்கு” என்றான். வருணனின் தோளைத்தொட்டு “முதுமையின் அறிவின்மை ஒன்றுண்டு, அது இளையோரை எப்போதும் இளையோரென்றே காணும். காட்டில் குலமாளும் முதுகளிறும் அவ்வண்ணமே. அது இளங்களிறின் கொம்புபட்டு குடல்சரிந்து சாகும்” என்றான்.
உளக்கொந்தளிப்பால் வருணனின் உடல் நடுங்கியது. மும்முறை சொல்லெடுக்க ஒலியெழாமல் கைகள் மட்டும் அசைந்தன. பின்பு பேசியபோது முதுமையும் இணைய அவன் குரல் நடுங்கியது. “அப்படியென்றால் இதோ, போர் குறித்திருக்கிறேன். போர் முடிவுக்குப் பின் நாம் மீண்டும் பார்ப்போம்” என்றபின் வருணன் திரும்பிச்சென்றான். அன்றே அலைகள் அடங்கின. கடல் குளம்போன்றிருப்பதாக சொன்னார்கள் தோணியோட்டி மீன்கொள்ளச் சென்ற அசுரர். மீன்களின் விழிகள் அனைத்தும் பொருளற்ற வெறிப்பு கொண்டிருந்தன. வலையிலிருந்து இழுத்து கரையிலிட்டபோதும் அவ்வெறிப்பு அவ்வண்ணமே நீடித்தது.
வருணன் வந்துசென்ற செய்தியை விருத்திரனிடம் சென்று சொல்ல கௌமாரன் எண்ணினாலும் பின்னர் அது ஒரு முதன்மைச் செய்தி அல்ல என்று தோன்றி வாளாவிருந்தான். ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறிய விண்ணில் நாரைகளென உருக்கொண்டு பறக்கும் அசுரர்களை அனுப்பினான். பலநாட்கள் கடல் அலை ஓய்ந்து கிடந்தது. ஆழம் மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. “அஞ்சிவிட்டார் என எண்ணுகிறேன், தலைவரே” என்றான் ஒற்றனாகிய தவளன். பிறிதொரு ஒற்றனாகிய சார்ங்கன் “எண்ணிநோக்கி தன்னிலையை உணர்ந்துவிட்டார் போலும்” என்றான்.
ஆனால் இந்திரன் வருணனை கிழக்குக் கடல் எல்லையில் அமைந்திருந்த இந்திரகீலம் என்னும் மலையில் சந்தித்தான். அங்கு அவனுடன் நாரதரும் இருந்தார். அவர்கள் அங்கே சந்தித்ததை அசுரகுலத்து ஒற்றர் எவரும் அறியவில்லை. இந்திரகீலம் ஒளிவிடும் வெண்முகில்களால் முற்றிலும் மறைக்கப்பட்ட மலை. இந்திரகீலம் அங்கிருப்பதை தேவர்களும் அறிந்திருக்கவில்லை. இந்திரகீலமெனப் பெயர்கொண்ட வேறு பதினெட்டு மலைகளை பாரதவர்ஷமெங்கும் அமைத்து மொழித்தடம் கொண்டு தேடிச்செல்பவர்களையும் இந்திரன் ஏமாற்றிவந்தான்.
விருத்திரனை வெல்வதெப்படி என்று நாரதர் இந்திரனுக்கும் வருணனுக்கும் சொன்னார். “உலோகங்களாலோ, கல்லாலோ, மரத்தாலோ, மானுடர் வனைந்த எப்பொருளாலோ, மின்னாலோ கொல்லப்பட இயலாதவன் விருத்திரன்.” வருணன் “ஆம், அந்த நற்சொல்லை என் முன் நின்றுதான் அவன் பெருந்தந்தையிடமிருந்து பெற்றான்” என்றான். அவர்கள் இந்திரனின் முகில்பளிங்கு மாளிகையின் முந்நூற்றிஎட்டாவது உப்பரிகையில் இருந்தனர். “இவையன்றி வேறேதுள்ளது படைக்கலமாக?” என்றான் இந்திரன். “அவனைக் கொன்றொழிப்பது ஒன்றே” என்ற நாரதர் சாளரம் வழியாக சுட்டிக்காட்டினார்.
அப்பால் எழுந்த குடாக்கரையில் வெள்ளிவாளென வளைந்து சென்றமைந்த அலைநுரையைச் சுட்டி நாரதர் சொன்னார் “அவ்வலைநுரையை வாளென ஏந்துக! அதுவே அவனை அழிக்கும் படைக்கலம்.” திரும்பி வருணனிடம் சொன்னார் “கணம்தோறும் பெருகும் உயிராற்றலால் தன் கோட்டையைப் படைத்து நிறுத்தியிருக்கிறான் விருத்திரன். கணங்களென்றே ஆன அலைகள்மட்டுமே அவனுடைய அக்கோட்டையை அழிக்க இயலும். காலமே அவன் கோட்டை. காலமே அதற்கு எதிரி என எழட்டும்.”
புன்னகைத்து “ஆம், அவன் கோட்டையை நான் வெல்வேன்” என்றான் வருணன். பின்பு வளைந்த கடற்கரையில் வெண்நுரை என எழுந்த மாபெரும் வாளை கைநீட்டி தொட்டெடுத்து இந்திரனிடம் அளித்தான். “இது உன் படைக்கலமாகட்டும். வெல்க!” நாரதர் “வருணனே, இந்திரனின் சொல் என்றும் திகழ்க! இனி அவன் கொள்ளும் அவி அனைத்திலும் பாதி உனக்காகும். அந்தணர்குலம் காக்கவும், வேதம்கொண்டு முடி சூடிய மன்னர்கொடி காக்கவும், நாற்குலம் காக்கவும் நீ தெய்வமென அமைந்து அருள்புரிக!” என்றார். “அவ்வண்ணமே” என்று உரைத்து வருணன் கிளம்பிச் சென்றான்.
அச்சந்திப்பை பலநாட்கள் கழித்தே கௌமாரன் அறிந்தான். அலைகளில் எழுந்த மீன்கன்னி ஒருத்தி செம்படவர்களிடம் “இன்னும் சிலநாட்களே. புற்றிகபுரி அழியும். இந்திரனிடம் எங்கள் தலைவர் சொல்லளித்துவிட்டார்” என்றாள். அச்செய்தியை கேட்டபின்னரே அவன் தூதர்களை அனுப்பினான். நீருக்குள் மூழ்கும் கரிய நீர்க்கோழிகளாக மாறிய அசுரர் அங்குள்ள மீன்களிடம் கேட்டு அச்சந்திப்பை உறுதிசெய்தனர். ஆனால் என்ன நிகழுமென அவனால் உய்த்தறிய இயலவில்லை.
ஒரு புலர்காலையில் பேரலைகள் எழுந்து புற்றிகபுரியை தாக்கின. நீரின் அறைபட்டு கோட்டைகள் அதிர்ந்தன. தன் மஞ்சத்தறையில் பொற்கலங்கள் குலுங்குவதைக் கேட்டு எழுந்து அமர்ந்த கௌமாரன் நீர்த்துமிகள் சாளரம் வழியாக வந்து அறைக்குள் பொழிவதைக் கண்டான். அவன் ஆடையும் போர்வையும் நீர்சிலிர்த்தன. சுவர்கள் கரைந்தவை என வழியலாயின. எழுந்து வந்து உப்பரிகையில் நின்று நோக்கியபோது வருணனின் படைகளான நீலநீரலைகள் நாகபடமென வளைந்து எழுந்து வருவதைக் கண்டான்.
ஆயிரம் ஆண்டுகளாக கணமொன்றென வந்து அலைத்து அந்நகரைத் தொட்டு நனைத்து மீண்டு கொண்டிருந்த அலைகளை அவன் அறிந்திருந்தான். கண் அறியாது வளரும் அப்பெருநகருக்கு அவை எவ்வகையிலும் ஊறல்ல என்று உணர்ந்தும் இருந்தான். ஆயினும் அலைகளின் சினம் அவனை அகத்தில் எங்கோ சற்று அச்சுறுத்தியது. இந்திர உலகுக்குச் சென்று விருத்திரனிடம் அச்செய்தியை சொல்லலாம் என்று எண்ணினான். அதற்கு முன் புற்றில்வாழ் சிதற்குலங்கள் பதினெட்டின் தலைவர்களை தன் அவைக்கு கூட்டினான். பொன்நிறக் கொம்புகளும் வெள்ளி உடல்களும் கொண்டிருந்த அவர்கள் அவை நிரந்து அமர்ந்தனர்.
“புற்றுறை குலத்தலைவர்களே, இக்கோட்டை உங்களால் எங்கள் அரசனுக்கு அமைத்து அளிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளாக இதைக் காப்பவர்களும் நீங்களே. எழுந்து வரும் இக்கடலலைகள் என்னை அச்சுறுத்துகின்றன” என்றான் கௌமாரன். ஏளனமாக நகைத்து முதற்குலத்தலைவர் சொன்னார் “அசுரர் தலைவரே, இக்கணமே பதினெட்டு குலங்களும் நூற்றெட்டு குலங்களாக மாறவும் மறுகணமே ஆயிரத்தெட்டு குலங்களாகப் பெருகவும் ஆற்றல் கொண்டவர்கள் நாங்கள். எழுபசியும் எரிவிழைவும் கொண்டவர்கள். எனவே நாங்கள் உண்பதற்கு மட்டும் மாளாது உணவளியுங்கள். வான் எனப்பெருகி இங்கு நிற்கிறோம். எங்கள் கோட்டை வாயிலில் சிற்றுருவென சிறுத்து வருணன் இருப்பதை காண்பீர்கள்.”
இன்னொரு குலத்தலைவர் சொன்னார் “அரசே, உள்ளனலால் அல்ல, உயிர் விசையாலும் அல்ல, உண்ணும் அன்னத்தால் மட்டுமே நாங்கள் எல்லைக்குள் நிறுத்தப்பட்டவர்கள். எங்களுக்கு அன்னம் முடிவின்றி கிடைக்கும் என்றால் இப்புவி அளவுக்கே நாங்களும் பெருகுவோம்.” கௌமாரன் தன் அமைச்சரை நோக்கி “முடிவற்று பெருகும் அன்னம் இப்புவியில் எது?” என்றான். “இங்குள்ள அன்னமெல்லாம் முடிவின்றி பெருகுவதே” என்றார் அமைச்சர். “ஆனால் அன்னம் அன்னத்தை உண்டே பெருக முடியும்.”
“அன்னத்தில் விரைந்து பெருகுவதென்ன?” என்று அவன் கேட்டான். “புல்” என்றார் அமைச்சர். “தடையின்றி வளரமுடிந்தால் ஆயிரம் ஆண்டுகளில் ஆயிரம் முறை இப்புவியைச் சுற்றி வளைக்கும் ஆற்றல் கொண்டது புல். ஆகவே அதை பிரஜாபதி என வாழ்த்துகின்றது வேதம்” என்றார். “அவ்வண்ணமெனில் இங்கு புல் வளர்க! புல்லை உண்டு சிதல்குலம் வளர்க! சிதல்குலம் எழுப்பும் கோட்டை தடையின்றி பெருகுக!” என்றான் கௌமாரன்.
அசுரகுலத்தோர் எட்டுத் திசைக்கும் சென்றனர். விரைந்து பரவும் புல் வகைகளைத் தேர்ந்து நகருக்கு கொண்டுவந்தனர். நாளுக்கு இருமடங்கென பெருகும் திரணம், நாளுக்கு மும்மடங்கென பெருகும் குசம், நாளுக்கு ஐந்து மடங்கென பெருகும் உதம், நாளுக்கு ஏழுமடங்கெனப் பெருகும் கேதம் என்னும் நால்வகைப் புற்கள் புற்றிகபுரியைச் சுற்றியிருந்த பெரும்பாலை நிலங்களில் விதைக்கப்பட்டன. புல் எழுந்தோறும் சிதல் புற்றெழுந்தது. வெளியில் எழுந்தெழுந்து வந்த வருணனின் படைகளை புற்றுமலைக்கோட்டைகள் தடுத்தன.
பன்னிரண்டு ஆண்டுகாலம் ஒவ்வொருகணமும் என அப்பெரும்போர் நிகழ்ந்தது. பெரும்பசிகொண்டு மண்ணை அள்ளி அள்ளி உண்டு வளர்ந்தது புல். அப்புல்லை உண்டு வளர்ந்தது சிதல். அசுரகுலக் கவிஞர் சிதலை உயிரின் வெண்ணுரை என்றனர். மண்ணிலெழும் பேரலை என்றனர் புற்றுகளை.
தொடர்புடைய பதிவுகள்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
November 29, 2016
விலக்கப்பட்டார்களா?
அன்புள்ள ஜெயமோகன்,
இன்னமும் சில நாட்களில் சென்னை இசை விழா நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். தமிழ் இசைப் பற்றாளர்களுக்கு சாமி வந்து விடும். அதில் புக விரும்பவில்லை. ஆனால் வெகு நாட்களாக கேட்க நினைத்த ஒரு விஷயம்.
கர்நாடக இசை உலகில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அதனை ஒடுக்க வேண்டும் என்றெல்லாம் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் பரப்புரை செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரை, இந்த கர்நாடக இசை உலகில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்பதை விட, பிராமணர்கள் அல்லாதோர் தாமாகவே விலகிக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
ஒரு காலத்தில் பிராமணர் அல்லாதோர், பிராமணர்களுக்கு இணையாகவோ, அல்லது அதற்கும் மேலேயே இருந்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக மதுரை சோமு (வாய்ப்பாட்டு), துவாரம் வெங்கடசுவாமி நாயுடு (வயலின்), நாகஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள், திருவீழிமலை சகோதரர்கள், தவில் வித்வான்கள் வலையப்பட்டி, ஹரித்வாரமங்கலம் ஆகியோர், புல்லாங்குழல் வித்வான் விச்வா ஆகியோர் கர்னாடக இசை உலகில் கொடி கட்டிப் பறந்திருக்கின்றனர். மதுரை சோமு, சித்தூர் சுப்ரமணியபிள்ளை ஆகியோர் சவர்மா பாடும்போது போடும் கணக்கு, வழக்குகள் பிரமிப்பானவை.
ஏன் இவர்கள் தங்களுக்கு அடுத்த தலை முறையினை உருவாக்கவில்லை? பிராமணர் அல்லாதோர் கர்நாடக இசை உலகினை விட்டு விலகியதற்கு, பிராமணர்கள் காரணமா? திராவிடக் கட்சிகள் காரணமா?
அடுத்து இதே கருத்தின் நீட்சியாக, ஒரு காலகட்டத்தில் பிராமணர்கள் இலக்கிய உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் தொடர் கதைகளும், சிறுகதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அசோகமித்திரன் தவிர வேறு யாரும் எழுத்துவதாகத் தெரியவில்லையே? ஏன்? பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளில் கூட ஒரு படைப்பும் வெளி வருவதில்லையே! கர்நாடக இசை உலகில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இவர்கள், இலக்கிய உலகை விட்டு வெளியேறிய காரணம் என்ன? கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?
அன்புள்ள
சிமுலேஷன் (எ) சுந்தரராமன்
http://simulationpadaippugal.blogspot.in/
அன்புள்ள சுந்தரராமன்
ஆம், மீண்டும் அதே விவாதங்கள். ஆனால் நான் மீண்டும் மீண்டும் எழுதிவிட்டேன்
உங்கள் இந்தக்கேள்விக்கான விடை இப்பதிவில் உள்ளது
பிற பதிவுகள் கீழே
3 இசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தாகள்?
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
தமிழிசையும் ராமும்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers


