Jeyamohan's Blog, page 1679
February 11, 2017
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
12. நீர்ச்சொல்
கரிச்சான் குரலெழுப்பிய முதற்புலரியிலேயே பீமன் எழுந்து கோமதிக்குச் சென்று நீராடி அங்கேயே புதிய மான்தோல் இடையாடையை அணிந்துகொண்டான். கோமதி இருளுக்குள் வானொளிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் தாழ்ந்து நின்றிருந்தன. கரைமரங்கள் இளங்காற்றில் உலைய அவற்றின் நிழல்கள் அலைகளில் அசைவதை காணமுடிந்தது. அவனுடன் வந்த குரங்குகள் கரைமரங்களில் அசையாமல் அமர்ந்திருந்தன. படித்துறையாக அமைந்த ஆலமரத்தின் வேர்வளைவில் இரு பெருங்குரங்குகள் அவனை நோக்கிய விழிகள் மின்ன குவிந்தமைந்திருந்தன.
பீமன் ஈரக்குழல்திரிகளை விரல்களால் நீவி தோளில் பரப்பியபடி படியேறி இடைவழியில் நடந்தான். குரங்குகள் அவனுக்கு முன்னும் பின்னும் வால்வளைந்திருக்க கைகால்களை ஊன்றி நடந்து வந்தன. குடிலை அடைந்ததும் ஒரு குரங்கு பாய்ந்து அடுப்பொளி தெரிந்த அடுமனை நோக்கி சென்று வெளியே அமர்ந்து ’ரீச்’ என்று குரலெழுப்பியது. அடுமனைக்குள் இருந்த திரௌபதி வெளியே வந்து நூலேணியில் பீமன் ஏறி வருவதை பார்த்தாள். அவள் முகத்தின் வலப்பக்கத்தில் நெருப்பின் ஒளி செம்மையென பூசப்பட்டிருந்தது.
பீமன் மேலேறி வந்து “கதிரெழுவதற்குள் நான் கிளம்பவேண்டும், தேவி” என்றான். அவள் உதடுகள் விரியாமல் புன்னகைத்தாள். அவன் திரும்பியதும் “நான் வெற்றுப்பேச்சென ஏதோ சொல்லிவிட்டேன் என இப்போது உணர்கிறேன், பாண்டவரே” என மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “பின்னிரவின் உணர்வுகள் அனைத்துமே பொய்யானவை” என்றாள். அவன் “நான் எப்போதும் ஒரே உள்ளம் கொண்டவன்” என்றான். அவள் அவன் கைகளைப்பற்றி விழிகளில் ஈரம் பரவ “செல்லவேண்டியதில்லை. நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள்” என்றாள். “அவர்களும் சென்றுவந்தனர், தேவி” என்றான் அவன். “அவர்கள் தமக்காகச் சென்றனர்” என்றாள். “நான் எதையும் எனக்காகச் செய்ததில்லை” என்றபின் “எனக்கும் செல்லவேண்டியிருக்கிறது…” என அவள் தோளைத் தட்டினான்.
அவன் தன் அறைக்குள் சென்றபோது முண்டன் மான்தோலை விரித்து அதற்குள் மாற்றாடையையும் பிற பொருட்களையும் எடுத்து வைத்து நான்கு கால்களாக விரிந்திருந்த முனைகளை எடுத்து சேர்த்து கட்டிக்கொண்டிருந்ததை கண்டான். அருகே இடுப்பில் கைவைத்தபடி நின்ற சகதேவன் பீமனிடம் “தங்களுக்குரிய பொருட்களெவையும் இதில் இல்லை, மூத்தவரே” என்றான். “மாற்றாடை உள்ளதல்லவா?” என்றான் பீமன். “ஆம், ஆனால்…” என்றான் சகதேவன். “அதற்கப்பால் எனக்கு தேவையொன்றுமில்லை” என்று பீமன் சொன்னான். முண்டன் “உண்மையில் எனக்கு மாற்றாடைகூடத் தேவையில்லை. அரச துணையாக செல்கிறேன் என்பதற்காகவே ஆடையையே அணிந்திருக்கிறேன்” என்றான்.
சகதேவன் கண்களில் சினத்துடன் “எப்போது நகையாட்டு சொல்வதென்று ஒரு கணிப்பு உன்னிடம் இருக்க வேண்டும்” என்றான். “உரிய தருணம் நோக்கிதானே சொல்கிறேன்?” என்றான் முண்டன். “அரசர்கள் குழம்பியிருக்கையில் மேலும் குழப்புவதற்காக சொல்லப்படுவதுதானே நகையாட்டு என்பது?” சகதேவன் சினத்துடன் “வெளியே போ!” என்று கையை காட்ட முண்டன் “நன்று, அடுமனைவரை சென்றுவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான்.
எரிச்சலுடன் “இவனை எதற்கு கூட்டிச்செல்கிறீர்கள்?” என்று சகதேவன் கேட்டான். சிரித்தபடி “வழித்துணை” என்றான் பீமன். “இவனா? மூடன்!” என்றான் சகதேவன். “நான் பேசுபவன் அல்ல. ஆகவே பேசிக் கேட்க ஒருவன் உடன் இருப்பது நன்று” என்றான் பீமன். “இவன் பேசினால் அதைக் கேட்டு பொறுத்துக்கொள்ள முடியாதே…!” என்றான் சகதேவன். “அவன் பேசுவது முன்பு நான் பேசியதுபோலவே இருக்கிறது. நன்கு கனிந்த கசப்பின் சொட்டுகள்” என்றான் பீமன்.
திரௌபதி வாயிலில் வந்து நின்று “உணவு ஒருங்கிவிட்டது” என்றாள். “நான் மூத்தவரிடம் ஒரு சொல் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றான் பீமன். முள் என நோக்கு கூர்ந்திருக்க “அவர் இன்னும் துயில் விழிக்கவில்லை. தாங்கள் உணவுண்டுவிட்டே அவரை பார்க்கலாம்” என்று திரௌபதி சொன்னாள். பீமன் விழிதவிர்த்து “நன்று!” என்றபின் தலைகுனிந்து நடந்து அடுமனைக்குச் சென்று நிலத்திலிட்ட பாயில் அமர்ந்தான். தரையில் விரித்த தைத்த இலைப்பரப்பில் திரௌபதி இரு கலங்களை தூக்கிச் சரித்து குவித்த புல்லரிசிச் சோற்றை புளிப்பழம் கலந்து அட்ட பருப்புக்கறியை ஊற்றி கொதிக்கக் கொதிக்க உருட்டி உண்ணலானான்.
அவனருகே வந்து மூங்கில் பீடத்தில் அமர்ந்த சகதேவன் “தாங்கள் செல்வது எதற்காக என்று மூத்தவர் அறிவாரா?” என்றான். தலைநிமிராது “எனக்கே நன்கு தெரியாது” என்று சொன்னபடியே பீமன் உண்டான். “விளையாடாதீர், மூத்தவரே! தாங்கள் படைக்கலம் தேடிச் செல்பவரல்ல என்று நான் அறிவேன்” என்றான். பீமன் தலையைத் தூக்கி “ஏன் இளையவன் திசைவென்று சிவன்படை கொண்டுவந்திருக்கிறான். எனக்கென்றொரு படைக்கலம் தேடலாகாதா?” என்றான்.
“யாருடைய படைக்கலம்? எத்தெய்வத்தின் அருள்?’’ என்றான் சகதேவன். பீமன் “எந்தை…” என்றான். இருவர் விழிகளும் சந்தித்தன. பீமன் “பண்டு அனுமன் வீசிய கதாயுதமொன்று கிஷ்கிந்தையின் புற எல்லையில் கிடப்பதாக சொன்னார்கள். அதைத் தேடி எடுத்துவரலாமென்று எண்ணுகிறேன்” என்றான். சகதேவன் எரிச்சலுடன் “அதை விடுங்கள், மூத்தவரே. இந்தத் தொல்கதைகளையெல்லாம் நம்புபவர் அல்ல தாங்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “உண்மையிலேயே அப்படி ஒரு படைக்கலம் இருக்குமா என்று பார்க்கத்தான் செல்கிறேன்” என்று பீமன் சொன்னான். சகதேவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் பேசாமல் இருந்தான்.
நகுலன் வந்து வாயிலில் நின்று பீமன் உண்ணுவதை பார்த்தான். “மூத்தவர் எழுந்துவிட்டார். முகம் கைகால் கழுவிக்கொண்டிருக்கிறார்” என்றான். “இதோ வருகிறேன்” என்றான் பீமன். “தாங்கள் எங்கு செல்கிறீர், மூத்தவரே?” என்றான் நகுலன். “ராகவராமனின் அணுக்கர் அனுமன் முன்பு விட்டுச்சென்ற கதாயுதம் ஒன்று கிஷ்கிந்தையில் கிடக்கிறது. அதை எடுத்துவரச் செல்கிறார்” என்று ஏளனம் கலந்த குரலில் சகதேவன் சொன்னான். புரியாமல் “கிஷ்கிந்தையா? அது எங்குள்ளது?” என்றான் நகுலன். “அது தெரிந்தால் நேராகச் சென்று எடுத்துவரமாட்டேனா? தொல்கதைகளில் வழி இருந்தால் எங்கோ அது தொடரும். கதைகளிலிருந்து மண்ணில் இறங்குவதற்கு ஒரு பயணம் உள்ளது. அதைத்தான் செய்யப்போகிறேன்” என்று பீமன் சொன்னான்.
“தாங்கள் எதையோ ஒளிக்கிறீர்கள்” என்றான் நகுலன். “உங்களிடமா?” என்றான் பீமன். “ஆம், வெறும் கைகளே மிகையென்றெண்ணும் வீரர் நீங்கள். ஒரு படைக்கலம் தேடி நீங்கள் செல்லப்போவதில்லை.” பீமன் ஒன்றும் சொல்லாமல் உண்டு முடித்து இலையைச் சுருட்டி எடுத்தபடி எழுந்தான். அதை வெளியே கொண்டுசென்று போட்டுவிட்டு கைகழுவி மீண்டு வந்தான். திரௌபதி மரக்குடுவை நிறைய எடுத்துவந்த பாலை வாங்கி அண்ணாந்து குடித்தான். அவர்கள் அவன் அருந்தும் ஓசையைக் கேட்டபடி நோக்கி நின்றனர். “வருக!” என்றபடி பீமன் நடக்க அவர்கள் தொடர்ந்து சென்றனர்.
“சொல்லுங்கள் மூத்தவரே, தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் நகுலன்.
“இதை எதற்கு தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” என்று பீமன் கேட்டான். “தாங்கள் எங்கள் மேல் சினத்துடன் செல்லவில்லை என்று உறுதிபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். “சினமா, உங்கள் மீதா?” என்ற பீமன் அவன் தோளை அறைந்து “மூடா, பல்லாண்டுகாலம் வெளியுலகு சென்றுவிட்டு மீண்டு வந்திருக்கிறான் இளையோன். அதன் பொருட்டே” என்றான். இருவரும் அவன் சொல்வதை புரிந்து கொண்டனர். “ஆகவே…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த நகுலன் “அவ்வாறெனில் அது உகந்ததே” என்றான். “அதையே மூத்தவருக்கும் சொல்ல நினைக்கிறேன். சொல்ல முடியாதென்பதால் இப்படைக்கலத்தின் கதையை சொல்கிறேன். இக்கதையே இங்கு நிலவட்டும்” என்றபடி பீமன் கூடத்திற்குள் சென்றான்.
கூடத்தில் தருமனின் அறையருகே அர்ஜுனன் நின்றிருந்தான். பீமன் “நான் கருக்கிருட்டில் கிளம்புகிறேன். முண்டனும் என்னுடன் வருகிறான்” என்றான். “சொன்னார்கள்” என்றான் அர்ஜுனன். உள்ளறைக்குள் தருமன் மெல்ல செருமினார். அதைக் கேட்டதும் பீமன் உள்ளே சென்று தருமனின் காலடி தொட்டு சென்னி சூடினான். தருமன் அவன் தலைமேல் கைவைத்து “வெற்றி சூழ்க!” என்றார். பீமன் எழுந்து “சென்று வருகிறேன்” என்று சொல்லி அவர் மேற்கொண்டு ஏதேனும் கேட்பாரா என்று எண்ணியவன்போல் காத்து நின்றான். தருமன் ஒருகணம் நோக்கிவிட்டு சுவடியை கையில் எடுத்து புரட்டத்தொடங்கினார். பீமன் வெளியே வந்து “சென்று வருகிறேன்” என்று மீண்டுமொரு முறை அர்ஜுனனிடம் சொன்னான்.
இயல்பாக திரும்பிப் பார்க்கையில் கூடத்தின் மறுஎல்லையில் கைகளை மார்பில் கட்டியபடி திரௌபதி நிற்பதைக் கண்டு அருகே சென்றான். அவள் கண்களை குனிந்து நோக்கி “சென்று வருகிறேன், தேவி” என்றான். விழிகளில் ஈரம் மின்ன அவள் தலையசைத்தாள். காதருகே குழல்சுருளின் அலைவு. கன்னங்களில் எழுந்திருந்த சிறிய பரு. அவளை அவன் அப்போது தொட்டுத் தழுவ விரும்பினான். புன்னகையுடன் “மலருடன்” என மிக மெல்ல சொன்னான். அவள் கன்னமும் கழுத்தும் மயிர்ப்புகொள்வது தெரிந்தது. இதழ்கள் மெல்ல விரியும் ஓசை கேட்பதாகத் தோன்றியது. உதடுகளை அழுத்தியபடி இமைசரித்தாள்.
பீமன் கயிற்றுப் படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். அவனுடன் நகுலனும் சகதேவனும் இறங்கிச்சென்றனர். திரௌபதி ஓடிவந்து குடில் விளிம்பில் நின்று அவர்கள் செல்வதை நோக்கினாள். பெருங்குரங்குகள் அவர்களுடன் கையூன்றி நடந்து சென்றன. பீமன் திரும்பி நோக்கவில்லை. வாயிலை மூடிய துலாவை விடுவித்து மேலே தூக்கி குனிந்து நிலம்தொட்டு சென்னிசூடியபின் வெளியே நடந்தான்.
முண்டன் மூட்டையை ஒரு குச்சியில் கட்டி தோளில் வைத்தபடி அவர்களுடன் ஓடினான். நகுலன் “உன் உடல் நிகழ்காலத்திலேயே இருக்கட்டும். முன்னும் பின்னும் புரள வேண்டியதில்லை” என்றான். முண்டன் “நான் அதை புரட்டுவதில்லை, காற்றை சருகு எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்றான். “இந்த அணிப்பேச்சு தேவையில்லை. எப்போதும் மூத்தவருடன் இரு” என்று சகதேவன் சினத்துடன் சொன்னான். “இவர் எப்போதும் என்னிடம் சினத்துடன் பேசுகிறார். எனக்கு மேலும் சினம் வரும்” என்றான் முண்டன். “சரி விடு” என்று அவன் தலையைத் தடவி “சென்று வருக!” என்றான் நகுலன்.
பீமன் வெளியே கருக்கிருட்டில் மெல்லிய தடமாகத் தெரிந்த சாலையை கடந்தான். முண்டன் அவனுடன் நடந்தபடி “இருட்டுக்கு கண் பழகிய பிறகு எல்லாமே தெரிகிறது. என்னால் மேலே மரக்கிளைகளுக்குள் இருக்கும் கூகைகளைக்கூட பார்க்க முடிகிறது” என்றான். பீமன் அண்ணாந்து நோக்கியபின் “உமது காலடியில் ஒரு நாகம் உம்மை நோக்குகிறது, அது தெரிகிறதா?” என்றான். முண்டன் தாவிக்குதித்து “எங்கே?” என்றான். பீமன் சிரித்தபடி நடக்க “விளையாடாதீர்கள். நான் நாகத்தால் சாகலாமென நிமித்தவுரை உள்ளது” என்றான். “நாகத்தாலா?” என்றான் பீமன். “ஆம், அல்லது இடிமின்னலால். அல்லது வாளால். அல்லது அம்பால். அல்லது கதையால். இவை ஏதுமில்லை என்றால் நோயால். ஆனால் போதிய மூப்புக்கு பின்னர்தான்.”
குரங்குகள் மரக்கிளைகளில் தாவியபடி அவர்களின் தலைக்குமேல் வந்தன. இரு குரங்குகள் மட்டும் தாவித்தாவி முன்னால் சென்று அவர்கள் வந்தடைவதற்காக பொறுமையற்றவைபோல வேறெங்கோ நோக்கியபடி காத்துநின்றன. அவர்கள் கோமதியின் கரையை அடைந்து நாணல் பரப்பைக் கடந்து சாலையில் ஏறியபோது அவை தங்கள் எல்லையை அடைந்து தயங்கி நின்றன. பீமன் திரும்பி அவர்களைப் பார்த்து கைகளை மேலே தூக்கி விடைகொடுத்தான். அனைத்துக் குரங்குகளும் கிளைகளில் எழுந்து நின்று கைகளைத் தூக்கியபடி ஒற்றைக் குரலென ஓசையிட்டன.
பீமன் மும்முறை குரலெழுப்பியபின் திரும்பி நடக்க முண்டன் தொடர்ந்து வந்து “அவர்கள் மொழியில் காவியங்கள் உண்டா?” என்றான். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. “விடைகொடுத்தலுக்கு அவர்கள் எழுப்பிய ஒலி பாடல்போலவே இருந்தது. பாடல்களை இணைத்தால் காவியம் வரும்” என்றான். பீமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “காவியம் இருந்தாக வேண்டும். இல்லையேல் எப்படி கதைத்தலைவர்களை உருவாக்க முடியும்! கதைத்தலைவர்கள் இருந்தால்தானே மாவீரர்கள் இருக்க முடியும். மாவீரர்கள் இல்லையேல் குலஒழுங்கு இருக்காதல்லவா?”
பீமன் திரும்பி “ஏன்?” என்றான். முண்டன் “மாவீரர்கள்தானே அழகிய பெண்களை புணரவேண்டும்? மற்றவர்கள் அதையெல்லாம் பாடவோ நடிக்கவோ எழுதவோ செய்யலாம்” என்றான். பீமன் அறியாது புன்னகைத்து “நன்று!” என்றபின் திரும்பி நடந்தான். முண்டன் அவனுடன் நடந்தபடி “நான் என் வித்தைகளில் பலவற்றை இன்னும் காட்டவே இல்லை. உண்மையில் என்னால் காலத்தை மட்டுமல்ல, நினைவுகளையும் புரட்ட முடியும். ஒவ்வொருவரையும் பிறிதொருவராக ஆக்க முடியும். இப்போது நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்களை உங்கள் தந்தையாக மாற்றிக் காட்டுவேன்” என்றான். “யாராக?” என்று பீமன் குரலை மாற்றி கேட்டான். முண்டன் குரலைத் தாழ்த்தி “உண்மையில் ஒருவரை தந்தையாக மாற்றிய பிறகுதான் அவர் தந்தை யாரென்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றான்.
பீமன் வாய்விட்டு சிரித்துவிட்டான். “நான் அந்த மலரை மட்டுமே அறிய விழைகிறேன்” என்றான். “ஆம், தந்தையராக ஆவது நன்றல்ல, நம்மை நன்கறிய வாய்ப்பாகும்” என்றான் முண்டன். பீமன் “நன்றாக பேசத்தெரிந்திருக்கிறீர். நிமித்திகர்கள் போல” என்றான். “நான் நிமித்தநூலும் கற்றவன். வயிறுகாய்ந்தால் அந்தத்தொழிலையும் செய்வதுண்டு” என்றான் முண்டன். பீமன் “நான் எண்ணிச்சூழ்வதில்லை, என் உள்ளொலிக்கும் குரலையே நம்புகிறேன். அந்த மலர் எங்கோ உள்ளது. அதை நான் அடைந்தாகவேண்டும்” என்றான். “ஆ! பெருங்காதலின் மாமலர்!” என்றான் முண்டன். அக்குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்தாலும் பீமன் மறுமொழிசொல்லவில்லை.
“அதைக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? பெண்களுக்கு அதனால் என்ன பயன்? குழல்சூடி பிற பெண்டிரிடம் காட்டி பெருமைகொள்ளலாம். அதுவும் ஒருநாள் பகல்பொழுதுக்கு.” பீமன் “அது வாடாமலர் என்கிறார்கள்” என்றான். “அதையே மறுநாளும் சூடினால் அவர்களுக்கு சலிப்பே எஞ்சும்” என்றான் முண்டன். “நன்று, உம் கசப்பு என்னுடன் இருக்கவேண்டுமென விரும்பினேன். அது எதிர்நிலையாக ஒலித்தால் மட்டுமே நான் அதை கடந்துசெல்லமுடியும்” என்றான் பீமன்.
தன் கையிலிருந்த சிறிய சலங்கையின் ஒருபாதியை ஒற்றைக்காலில் கட்டி இன்னொரு பாதியை கையில் கட்டியபடி முண்டன் சிறு தாவல்களாக பாய்ந்து சென்றான். சலங்கைகளின் தாளம் எழுந்தெழுந்தமைய ஒரு கணம் சிறுவனும் மறுகணம் கன்றுமென அவன் உருமாறிக்கொண்டிருந்தான். “நல்ல தாளம்” என்றான் பீமன். “உங்கள் உளம் கொண்ட வினாக்களுக்கான விடைதேடிச்செல்லும் இப்பயணத்தில் உடன் நான் எதற்கு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன். துயரப்பாடலுக்கு துள்ளல்தாளம் பொருந்துமா என்று பார்க்கிறேன்.”
சிறு எரிச்சலுடன் “நான் தேடிச்செல்வது அந்த மலரை மட்டுமே” என்றான் பீமன். “அவ்வினாக்களைக் கடந்து சென்றாலொழிய அந்த மலரை அணுகமுடியாது. அதை நீங்களே உணர்வீர்கள்” என்றான் முண்டன். பீமன் “எந்த வினாக்கள்?” என்றான். “நான் பிறர் உளம்புகும் கலையறிந்தவன், பாண்டவரே” என்றான் முண்டன். உடனே குரல் மாற்றி “ஆனால் அதை என் உள்ளத்துடன் குழப்பிக்கொள்வதனால் என்னால் எதையுமே சொல்லமுடியவில்லை” என்றான். “சரி, இத்திசையை எப்படி தேர்ந்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்!”
“நான் கிளம்புவதற்கு முன் ஒரு கனவு கண்டேன்” என்றான் பீமன். “ஒருநாழிகைப்பொழுது துயின்றிருப்பேன். மலர்தேடிக் கொண்டுவருவதாக தேவியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் எங்கென்றும் எப்படி என்றும் அறியாதிருந்தேன். குழப்பத்துடன் புரண்டுபடுத்துத் துயின்றபோது அந்த மலர்மணத்தை கனவில் உணர்ந்தேன். அது என் கையில் இருந்தது. என்னைச் சூழ்ந்து ஐந்து தேவியர் நின்றிருந்தனர்.” முண்டன் நின்று, ஆவலுடன் “ஐவரா?” என்றான். “ஆம், ஐவருமே திரௌபதிதான் என என் உள்ளம் அறிந்திருந்தது. ஆனால் முகங்கள் தெளிவுறத் தெரியவில்லை” என்றான் பீமன்.
முண்டன் “நன்று” என்றபடி கண்சிமிட்டினான். அவன் எதையாவது எண்ணும்போது அந்தச் சிமிட்டல் எழுவதை பீமன் கண்டிருந்தான். குட்டிக்குரங்கிலிருந்து கற்றுக்கொண்டது அந்த விழியசைவென்று எண்ணினான். “நான் நின்றிருந்த இடம் ஒரு மலர்ச்சோலை. கொடிகளும் செடிகளும் தழைத்த பச்சை இருளுக்குள் மிக அண்மையில் ஒரு சிறு ஆலயம் இருந்தது. அச்சோலையில் தென்மேற்கு மூலையில் நின்றிருந்த மரத்தில் பல்லாயிரம் மலர்கள் செறிந்திருந்தன. ஆனால் தரையில் ஒரு மலர்கூட உதிர்ந்திருக்கவில்லை. என் கையிலிருந்த மலர் அப்போதுதான் அலர்ந்ததுபோலிருந்தது.”
“வெண்ணிற மலர்” என்றான் பீமன். “வெண்பட்டு, பால்நுரை, அன்னக்குஞ்சு. விழித்தபின் நான் அதற்கு ஒப்புமை கொண்டவை இச்சொற்கள். அப்போது இயல்பாக என் கையில் இருந்தது அது. அந்த தேவியரிடம் சென்றுவருகிறேன் என்றேன். அவர்கள் நன்று என்றார்கள். நான் திரும்பி நடக்கையில்தான் திசையறிந்தேன். தென்கிழக்காக வந்திருந்தேன், ஆகவே வடமேற்காக மீண்டு செல்லத் தொடங்கி விழித்துக்கொண்டேன்.” முண்டன் “அதனால்தான் தென்கிழக்கு” என்றான். பீமன் “ஆம், நான் கொண்ட ஒரே திறப்பு அதுமட்டுமே” என்றான்.
முண்டன் “மாமல்லரே, நீங்கள் அந்த மலரை அவர்களில் எவருக்கும் அளிக்கவில்லையா?” என்றான். “இல்லை, அவர்கள் அதை கோரவுமில்லை” என்றான் பீமன். “அவர்கள் முன்னரே அதைச் சூடியிருந்தனரா?” என்றான் முண்டன். “இல்லை, அவ்வண்ணம் தெரியவில்லை” என்று பீமன் சொன்னான். “நான் விழித்துக்கொண்டதுமே அடுமனைக்குச் சென்று அங்கு நின்றிருந்த தேவியிடம் உடனே மலர்தேடிக் கிளம்பவிருப்பதாக சொன்னேன். திகைத்து அவள் எங்கே என்றாள். தென்கிழக்கே என்றேன். அவள் புருவம் சுருக்கி நோக்க நான் சிரித்தபடி கன்னிமூலை என்றேன்.”
“அவளை சற்று முன் கனவில் பார்த்தபோது இருந்த அதே உடலருகமைவுணர்வை அடைந்தேன். அப்போது அவளை ஐந்தெனக் கண்டதை மறந்துவிட்டிருந்தேன். எனக்கிருப்பது ஒரு திசை மட்டுமே என்றேன். அப்போதுதான் அந்த மலரை நான் கண்டதும் நினைவுக்கு வந்தது. தேவி, அந்த மலர் அல்லிபோன்ற வடிவம் கொண்டது, வெண்ணிற இதழ்கள் நடுவே வெண்புல்லி குவிந்தது என்றேன். அல்லியா என்றாள். இல்லை, அது மரத்தில் மலர்ந்திருந்தது. அதன் இலைகள் மானின் காதுகள்போல பெரியவை என்றேன். என்னை திகைப்புடன் நோக்கி என்ன சொல்கிறீர்கள் என்றாள். ஒரு கனவு கண்டேன். அதுபோதும் என்றேன்.”
“தென்கிழக்கு சரியான திசையா என்று அறியேன். ஆனால் என் கனவை அணுகிக்கொண்டிருக்கிறேன் என்று உள்ளம் சொல்கிறது. அடுத்த திறப்பும் எனக்குள் இருந்தே நிகழுமென நம்புகிறேன்” என்றான் பீமன். “ஆம், அந்த மலரையும் நீங்கள் அங்கேயே கண்டடையலாம்” என்று முண்டன் சொன்னான். “இல்லை, அந்த மலர் மண்ணில் மலர்ந்துள்ளது. எங்கோ, அதன் நறுமணத்தை நானறிந்தது மண்ணில் என் புலன்கள் படர்ந்திருக்கையில்தான்” என்றான் பீமன்.
முண்டன் நின்று “பாண்டவரே, அரசிக்கு எதற்காக அந்த மலர்?” என்றான். அவன் “ஏன்?” என்றான். “தலையில் சூடிக்கொள்வாரா என்ன?” என்று முண்டன் மீண்டும் கேட்டான். அவன் சொல்வதை உணராமல் பீமன் “ஏன், மலர்சூடிக்கொண்டால் என்ன?” என்றான். “அவர் குழலை பசித்த வேங்கையின் நாக்குபோல் குருதிவிடாய் கொண்டு காத்திருப்பது என்கின்றனர் கவிஞர்” என்றான் முண்டன். பீமன் திடுக்கிட்டவன்போல நின்றுவிட்டான். சில கணங்கள் கடந்தே அவனால் நிலைமீள முடிந்தது. பின்னர் “அவள் அவ்வஞ்சங்களைக் கடந்து நெடுந்தொலைவு வந்துவிட்டாள்” என்றான்.
“ஆம், துகில்தொட்டுரிந்தவனின் நெஞ்சுபிளக்க வஞ்சமுரைத்தவர் கைபற்றி இழுத்துத் தேரிலேற்றியவனை பொறுத்தருளினார்” என்றான் முண்டன். “ஆனால் அங்கு அஸ்தினபுரியில் விரிகுழல் முடியாது விழிநீர் ஒழியாது அணையாத வஞ்சத்துடன் காத்திருக்கிறாள் அவர் நிழல்.” பீமன் உடல்சிலிர்த்தான். “நிழல்களிலிருந்து எவருக்கும் மீட்பில்லை, பாண்டவரே” என்று முண்டன் சொன்னான். “உங்கள் நிழல் உங்களுக்கு முன்னரே பிறந்துவிட்டிருந்தது. உங்களுக்காகக் காத்திருந்தது.” பீமன் தோள்தளர்ந்தான். கைகள் தொடைகளை உரசியபடி விழுந்தன.
“அதுவும் அங்குதான் இருக்கிறது, அஸ்தினபுரியில். அவர் நிழல் நீங்கள். நிழலுருவை இரும்பில் சமைத்து கைமுன் நிறுத்தி நாளெல்லாம் போர் பழகிக்கொண்டிருக்கிறது அது” என்றான் முண்டன். “அவர் தோள்கள் திரண்டு புடைத்தெழுகின்றன. அவர் நெஞ்சு விரிகிறது. விழிகள் கசப்புகூர்கின்றன. நிழலைப்போல் ஆவது எளிதல்ல, கணம்தோறும் வளர்ந்தாகவேண்டும் என்று அவர் உணர்கிறார். நிழலை வெல்வதும் எளிதல்ல என்று ஒவ்வொருநாளும் அறிகிறார். நாம் அடைந்தவை அனைத்தையும் நிழலும் அடைகிறது.”
“அங்கு அந்த நிழல் நின்றெரிவதுவரை இங்கு உங்களிலும் அனல்வெம்மையே கூடும்” என்றான் முண்டன். “மென்மலரைக் கொண்டுசென்று எரியழல்மேல் வைக்கலாகுமா, பாண்டவரே?” பீமன் இடையில் கைவைத்தபடி நின்று அவனை நோக்கினான். “சொல்லுங்கள், குருதிபடிந்த கையால் எடுத்து முகரக்கூடுமா அதை?” என்றான் முண்டன். பெருமூச்சுடன் பீமன் தலைதிருப்பி விடியல்சிவப்பெழுந்த வானை நோக்கினான். “நாம் மீள்வதே முறை” என்றான் முண்டன். “அறிக, உங்களுக்குரியதல்ல அந்தத் தண்மலர். அதற்கென்று பிறிதனைத்தையும் உதறுபவர்களுக்கு மட்டுமே உரியது அது.”
மன்றாடுவதுபோல “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் பீமன். மேலும் தாழ்ந்த குரலில் “எதைச் செய்யவும் சித்தமாக உள்ளேன்” என்றான். “இந்த மலர் அரசிக்குரியதல்ல, அவர் குழலில் அமைந்த கணமே இது வாடும்” என்றான் முண்டன். “இது எனக்காக” என்று பீமன் சொன்னான். “அந்த மணத்தை அறிந்தபின் நான் அதை கைக்கொள்ளாமலிருக்க இயலாது.” “உங்களுக்கு அது எதற்கு, மாவலரே? நீங்கள் காட்டில் கரையத் தெரிந்தவர். இங்குள்ளன உங்கள் இன்பங்கள் அனைத்தும்.”
பீமன் தலையை அசைத்தான். “பறக்கக் கற்கும் குஞ்சுகளில் சில விழுந்து இறப்பதுண்டு. அன்னை பறந்தெழுந்து வருக என அழைக்கையில் சிறகை விரித்து கால்களின் பிடியை முற்றிலும் விட்டுவிடுபவையே வானை அறிகின்றன. அஞ்சி உகிர்பற்றை விடாதவை சிறகு குலைந்து நிலம் பதிகின்றன” என்று முண்டன் சொன்னான். “மிக மிக எளிது. முற்றிலும் இயல்பானது. விட்டுவிடுங்கள். அதுவன்றி நீங்கள் செய்வதற்கு உகந்ததாக ஏதுமில்லை.”
பீமன் பெருமூச்சுவிட்டான். “இல்லை, என்னால் அது இயலாது” என்றான். “நீ சொன்னதைப்போல நான் இங்கு முற்றிலும் கரையவில்லை.” திரும்பி காலையொளி புகுந்து உயிர்கொண்ட காட்டை நோக்கினான். “இங்கு வந்தபோது நான் இக்காடென்றாகக் கூடியவன் என்றே உணர்ந்தேன். பெருங்காதலுடன் இதில் திளைத்தேன். ஆனால் நான் இதை அணுகுந்தோறும் என்னுள் ஓர் ஆழம் அகன்று அகன்று செல்வதை உணர்ந்தேன். என்னுள் நான் அறிந்த அந்த விலக்கமே என்னை மேலும் பித்துகொள்ளச் செய்தது. ஒரு கணமும் வெளியே இருக்க ஒண்ணாதவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். ஆனால்…”
குரல் தழைய சில கணங்கள் மொழியிலாதவன் ஆனான். பின்னர் “எந்த விலங்கும் சிந்துநாட்டரசனிடம் நான் நடந்துகொண்டதை ஆற்றாது” என்றான். முண்டன் நிமிர்ந்து நோக்கினான். துயர்கொண்ட நெஞ்சுடன் பீமன் சொன்னான் “நான் அதைச் செய்ததனால் என்னை விரும்புகிறாள். ஏனென்றால் அது விலங்கியல்பென்று எண்ணுகிறாள். அன்று அக்குரங்குகள் அஞ்சிப் பின்னடைந்து அமர்ந்திருப்பதை அவள் காணவில்லை. அவை கொலைக்கூத்தாடும். கிழித்து உண்டு களிக்கும். வஞ்சம் சுமப்பதில்லை.” முண்டன் “ஆம்” என்றான்.
“இச்சிலநாட்களில் காட்டுப்பசுமைக்குள் புதைந்துகிடந்து என்னை ஆராய்ந்தேன். விலங்கல்ல நான் என்றால் யார்? மானுடன் என்றால் என் பொருள் என்ன? மெய்மையென எதையோ இவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சொல்சூழ்கிறார்கள். வில் கொள்கிறார்கள். எதையும் நான் அறியேன். நானறிந்த மானுடத்தருணங்கள் எல்லாம் எளிய உணர்வுகளால் ஆனவை. அன்னையின் அருகமைவு. உடன்பிறந்தார் தோள்தழுவல். மைந்தர் மடிகொள்ளல்.”
அவன் சொல்வதற்காக முண்டன் காத்து நின்றிருந்தான். “அவையனைத்துக்கும் நிகரென என்னை ஆழ்ந்து திளைக்கச்செய்வது அவள்மேல் கொண்ட அணுக்கம். அதை காமம் என்றால், காதல் என்றால் அச்சொல் என்னை கூசவைக்கிறது. அவள் அண்மையைவிட கூர்ந்தது அவளை எண்ணிக்கொள்ளல். எண்ணி மகிழ்வதைவிட நுண்ணியது கனவில் அவள் எழல். அனைத்தையும்விட ஆழ்ந்தது அறியாக்கணமொன்றில் அவளென நான் என்னை உணர்வது.”
“பெருந்துயருடன் அன்று குடில்மீண்டேன். அவளுடன் இருக்கையில் பெருநீர் நதியொன்றில் நீந்துபவனாகவே உணர்வேன். அன்று அவள் சென்று விழுந்த அருவிப்பேராழத்தில் நானும் பொழிந்தேன். மீண்டு வந்தபோது எழுந்த வெறுமை. அதை குளிர்ந்த எடையெனச் சுமந்தபடி அவள் அருகே சென்றமர்ந்தேன். இறுதியில் இவ்வளவுதான் என காமம் தன்னைக் காட்டுகிறது. அனைத்தையும் இறுதியில் உடலென ஆக்கியாக வேண்டியிருக்கிறது. வெறும் உடலென. பிறிதொன்றும் இல்லை என. எஞ்சுவது இதுவொன்றே எனில் எதன்பொருட்டு எல்லாம் என.”
“அப்போதுதான் அந்த மணத்தை உணர்ந்தேன். அதுவே நான் அடைந்த உச்சநிலை. அதை அறிந்தால்தான் நான் எவரென நான் உணரமுடியும். அதை எண்ணியபின் எனக்கு இனி பின்னடிவைப்பில்லை” என்றான் பீமன். முண்டன் தலைகுனிந்து சற்றுநேரம் நடந்தான். பீமன் அவனை நோக்கியபடியே தொடர்ந்தான். பின் அவன் நின்று நிமிர்ந்து பீமனை நோக்கி “பாண்டவரே, முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் அதுவரை வந்த தொலைவனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறோம் என உணர்ந்திருக்கிறீர் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “நான் உளம்புகு கலை அறிந்தவன். காலம் கடக்கக் கற்றவன். நான் உங்களை அங்கே இட்டுச்செல்கிறேன்” என்றான் முண்டன். “அதன்பொருட்டு என்றும் உம்மைப் பணிவேன். இனி நீர் என் அணுக்கனல்ல, ஆசிரியன்” என்றான் பீமன்.
“ஆனால் நேற்றுவரை நீங்கள் கொண்டிருந்த அனைத்தையும் உதறியாகவேண்டும். ஒவ்வொரு அடியிலும் அவற்றிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டிருக்கவேண்டும். முற்றிலும் விலகியபின் அடைவதே அம்மலர்” என்றான் முண்டன். “ஆம், விலகுகிறேன்” என்று பீமன் சொன்னான். “வருக!” என முண்டன் அவன் கைபற்றி பக்கவாட்டில் நடந்து நாணல்சரிவில் இறங்கி சுழித்தோடிய கோமதியின் கரையை அடைந்தான். சேற்றில் புடைத்திருந்த வேர்களில் கால்வைத்து அவர்கள் ஆற்றுவிளிம்பருகே சென்றனர்.
முண்டன் “வருக!” என்றபடி நீரில் இறங்கி நின்றான். அருகே சென்று நின்ற பீமனிடம் “முடிமலைகளில் உறைபவர்கள் மூதாதையர். தொல்நதியில் எழுபவர்கள் மூதன்னையர். இங்கு மூதன்னையர் தங்கள் கனிந்த விழிகளுடன் வருக. தங்கள் இனிய புன்னகைகளுடன் சூழ்க!” என்றான். குனிந்து கைப்பிடி நீரை அள்ளி பீமனிடம் அளித்து “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன் என்க!” என்றான். பீமன் “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன்” என்றான். பிறிதொரு கைப்பிடி நீரை அள்ளி “என் வஞ்சங்கள் அனைத்தும் அகல்க!” என்றான். பீமன் அவ்வண்ணமே சொன்னான். துயர்களை, ஐயங்களை, விழைவுகளை, பற்றுகளை, கடன்களை விட்டுவிடுவதாக அவன் நீருறுதி எடுத்தான்.
“ஏழு உறுதிக்கும் ஏழு முறை என நீரில் மூழ்கி நினைப்பொழிந்து அணிந்த ஆடையை நீரில் விட்டு அன்னையரை எண்ணி கரையேறுக!” என்றான் முண்டன். பீமன் நீரில் ஏழு முறை மூழ்கி இடையணிந்த ஆடையை நீரில் களைந்து வெற்றுடலுடன் கரையேறினான். முண்டன் புதிய ஆடையை பொதியிலிருந்து எடுத்து அளித்து “இன்று மீண்டும் பிறந்தீர்” என்றான். “ஆம் ஆம் ஆம்!” என பீமன் கைகூப்பியபடி சொன்னான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
February 10, 2017
நமது கட்டிடங்கள்
நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது
உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
நம்முடைய கோயில்கள்கூட நம்முடைய சொந்தக் கட்டிடக்கலையைக் காட்டுவன. ஆனால் அவையும் நம்மிடம் இருந்து மட்டும் சுயம்புவாக உருவானவை அல்ல. அவற்றில் புராதன பௌத்த விகாரங்களின் கட்டிடக்கலையின் செல்வாக்கு மிக அதிகம். நம் கட்டிடக்கலை உருவாவதை ஒரு நடைமுறை விளக்கம் போலவே அஜந்தா-எல்லோராவில் காணலாம். ஆரம்பகால குகைகள் சாலமோன் குகைகள் போல எளியவை. மெல்லமெல்லத் தூண்களும் சிற்பங்களும் உருவாகிவந்தன. கடைசியில் எல்லோராவில் நம் கோயில் வடிவமே உருவாகி வந்துள்ளது. அந்த வளர்ச்சிப்போக்கில் காந்தார-எகிப்திய குடைவரைக்கோயில்களின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிகிறது. சுவரோடு ஒட்டிய பெரிய தூண்கள், புடைப்புச்சிற்பங்கள் உதாரணம்.
எகிப்திய கட்டிடக்கலை முகப்பு

அஜந்தா -முகப்பு

தூண்கள்- எகிப்து
அஜந்தா தூண்கள்
ஆனால் எந்த அன்னிய கலைப்பாணியும் ‘அப்படியே’ இங்கே கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள மரபும், வரும் மரபும் படைப்பூக்கத்துடனும் நடைமுறைஞானத்துடனும் கலக்கப்பட்டுத்தான் புதிய கலைவடிவம் உருவாக்கப்படுகிறது. நம் கோயில்களில் மத்திய ஆசிய குகைக்கட்டிட அமைப்புகளில் இருந்து உருவாகி வந்த பௌத்தக் கல்கட்டிடங்களின் அழகியல் எந்த அளவுக்கு உள்ளதோ அதை விடப் பலமடங்கு அதிகமாக இங்கே ஏற்கனவே இருந்த மரக்கட்டிடங்களின் அழகியல் உள்ளது. மரக்கட்டிடங்கள் கல்கட்டிடங்களாக ஆனபோது கல்லின் அழகையும் சாத்தியங்களையும் காட்டும் புதிய வழிகளைக் கலந்துகொண்டார்கள் அவ்வளவுதான். அவ்வாறுதான் நாம் நம்முடையதெனக் கொண்டாடும் தென்னகக் கோயில் கட்டிடக்கலை உருவாகியது.
கோயில்களைச் சென்று பார்த்தாலே இது தெரியும். கல்லில் மரத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள். சீரான உத்தர நுனிகள், கூரை விளிம்புகள், பட்டைத்தூண்கள் எனத் தமிழகக் கற்கோயில்களின் அழகியல்,அவற்றின் மரத்தாலான முன்னோடிகளில் இருந்து உருவாகி வந்தது – அந்த மரக்கட்டிடங்கள் ஏதும் இப்போது இல்லை, அவ்ற்றின் அழகு மட்டும் கல்லில் படிந்து இன்று கிடைக்கிறது.

கல்லில் எழுந்த மரக்கட்டிடம், ஹொய்ச்சால மரபு
பின்னர் முகலாயக் கட்டிடக்கலை வந்தது. அது செங்கல்லின் கலை. வளைவுகளை அதிகம் நம்பியது. திருவாரூர் போன்ற கோயில்களில் நாம் முகலாயக் கட்டிடக்கலையின் பாதிப்பைக் காணலாம். முகலாயர்களின் வளைவு அழகியலை இக்கோயில்கள் தாமரை வடிவங்களாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள அழகியலொருமைக்குள் அந்தப் புதிய கூறு திறம்படக் கலக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வந்தது,பிரிட்டிஷ் கட்டிட அமைப்பின் செல்வாக்கு. செங்கல்லையும் சுதையையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உருண்ட பெரிய தூண்கள், உயர்ந்த சாளரங்கள் போன்றவை அதன் முக அடையாளம். ஆனால் அவையும் பெரும்பாலும் இங்கே இருந்த பழைய மரக்கட்டிடங்களின் அழகியலை உள்வாங்கித்தான் அமைக்கப்பட்டன.அவை அன்றாடப்புழக்கத்துக்கான இடங்களாதலால் கோயில்களின் அழகியலை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நம் பாரம்பரிய வீடுகளின் பல அம்சங்கள் அவற்றில் உண்டு. பெரிய சுற்று வராண்டாக்கள். வாசல்- சன்னல்களுக்கு மேலே அழகிய வளைவுகள். அங்கணங்கள். அவற்றை பிரிட்டிஷ் கட்டிடக்கலை என்று சொல்வதில்லை. இந்தோ-பிரிட்டிஷ் கட்டிடக்கலை என்றுதான் சொல்கிறார்கள்.
மேலும் அவை ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் அன்னிய அம்சம் மேலோங்கி இருப்பதும் இயல்பே. தங்கள் தனியடையாளத்தை இந்தியாமேல் நிறுத்த வேண்டும் என்ற நோக்குடன் அமைக்கப்பட்டவை. அவை நம் வரலாறு. ஆகவே அவை நம் பண்பாட்டின் அம்சங்களே. நாம் அவற்றை நிராகரிக்கமுடியாது.
அதேபோலக்கேரளக்கட்டிடக்கலை.நெடுங்காலமாகவே கேரளத்திற்கும் சீனாவுக்கும் தொடர்புண்டு. சீன மரக்கலை கேரளத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இன்றும் அகலமான உளிக்குச் சீன உளி என்று சொல்கிறார்கள். சீனாவின் கூரை அமைப்பு, கேரளத்தைப் பாதித்தது. அத்துடன் அது கேரள மழைச்சூழலுக்கு உதவியாகவும் இருந்தது.
கேரளத்தில் ஏற்கனவே தென்னை ஓலைக்கூரை இருந்தது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சரிவு வேண்டும். ஆகவே பெரிய வீடுகள் பல அடுக்குகளாகக் கூரைகளை அமைத்திருந்தன. அந்த அழகியலைச் சீனபாணி கூரைக்குக் கொண்டு வந்து அடுக்கடுக்கான கூரைகளையே கோபுரங்களாக ஆக்கும் முறை உருவானது. ஓலைக்கூரைகள் கூம்புக்கோபுர வடிவில் இருந்தன. கூம்பும் சீனபாணி விளிம்பும் கலந்து மெல்ல கேரளத்திற்கே உரிய தனித்துவமான கட்டிடக்கலை உருவாகி வந்தது.
பழைய கோயில்களில் ஒரே ஒரு சிகரத்தால் ஆன கோபுரம் இருந்திருக்கிறது. பின்பு அது பல சிறிய சிறிய சிகரங்களின் தொகுப்பாக ஒரு பெரிய சிகரத்தை அமைக்கும் முறையாக வளர்ந்தது. ஹம்பியில் ஒரே இடத்தில் எல்லா வகை கோபுரங்களையும் காணலாம். அதேபோல கஜூராகோவில் கோபுரவடிவங்கள் படிப்படியாகப் பரிணாமம் பெறுவதைக் காணலாம்.

சீன பகோடா

வடக்குநாதர் ஆலயம் திரிச்சூர்
இந்தியக் கட்டிடக்கலை என்பதே கொண்டும் கொடுத்தும் வளர்ந்தது. எல்லாப் பாணிகளும் எல்லா இடங்களுக்கும் சென்றன. ஆனால் செல்லும் இடத்தில் ஏற்கனவே இருந்த அழகியலை ஏற்றுப் புதிய வடிவங்களை உருவாக்கிக்கொண்டன. கஜூராகோ கோயிலின் வடிவம்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் தெரிகிறது. ஆனால் இங்கே வரும்போது ஏற்கனவே இங்கே இருந்த கோபுரங்களின் அழகியலை உள்வாங்கி அது புதிய ஒன்றாக ஆகியது.
இதையே நாம் எதிர்பார்க்கிறோம். புதுமை வரக்கூடாதென்றல்ல. வரும் புதுமை இங்கே இருக்கும் பழமையின் சிறந்த அழகியல் அம்சங்களை, நடைமுறை வசதிகளை உள்வாங்கிக்கொண்டு நம்முடைய சொந்த கட்டிடக்கலை ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று. அதன் மூலமே நம் அழகியல்வளர்கிறது.
காந்தரிய மகாதேவர் ஆலயம் கஜுராகோ
தஞ்சை பெரியகோயில்
அதற்கு ஆழமான படைப்புத்திறன் தேவை. புதிய அழகியலின் சாரத்தை உணர்ந்து தேவையை மட்டும் எடுத்துக்கொள்ள, பழைய அழகியலில் இருந்து ஆதாரமான விஷயங்களைத் தக்கவைத்துக்கொள்ள, அவற்றின் கலவையாக முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்க விரிவான ஞானமும் துடிப்பான கற்பனையும் தேவை.
ஆனால் இங்கே நிகழ்வது வெறும் பிரதியெடுப்பு. அதற்குப் படைப்பூக்கமே தேவை இல்லை. கொத்தனாரே போதும். இங்கே கட்டிட வரைபடவியலில் படைப்புத்திறன் கொண்ட எவருமே இல்லை என்றே நினைக்கிறேன். இங்குள்ள எல்லாக் கட்டிடங்களும் வெறும் நகல்கள். சென்னையில் என்னைக் கொஞ்சமேனும் கவர்ந்த புதிய கட்டிடம் ஒன்றுகூட இல்லை.
காரணம் நம் கட்டிட வரைவாளர்களுக்கு மரபு கொஞ்சம்கூடத் தெரியாது. இந்திய மரபையே மதிக்காத உயர்நடுத்தர குடும்பத்தின் பிள்ளைகள் அவர்கள். பெரும்பாலும் பிளஸ்டூவின் மனப்பாட மதிப்பெண் அல்லாமல் எந்தத் தகுதியும் இல்லாதவர்கள். கல்லூரிகளில் அவர்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்படுவதெல்லாம் மேலைநாட்டுக் கட்டிடக்கலை. ஆகவே புதுமை என்ற பேரில் ஏற்கனவே அவர்கள் கண்ட சில புதிய கட்டிடங்களை இஷ்டத்துக்குக் கலந்து எதையாவது கட்டி வைக்கிறார்கள். கட்டிடங்களை உண்டு கட்டிடக்கலவையாக வாந்தி எடுத்தது போல. சென்னையின் பல நட்சத்திர விடுதிகளை அருவருப்பானவை என்றே சொல்லவேண்டும்.
எவ்வளவோ சொல்லலாம். கான்கிரீட்டில் முடியும் என்பதற்காகவே நீட்டல்களை அமைத்துக் கண்ணில் குத்தும் விதமாக அமைக்கிறார்கள். பின்னணியில் பளீரிடும் வானம் உள்ள ஒரு நாட்டின் கட்டிடங்களுக்கு அவற்றுக்கே உரிய வண்ணமும் வடிவமும் தேவை என்பதையே மறந்துவிடுகிறார்கள். பளீரிடும் நிறங்கள் அபத்தமாக உறுத்துகின்றன.
இங்கே கண்ணாடிகளைப் புறத்தே பயன்படுத்தும் விதம் பற்றி எனக்கு எப்போதுமே மனக்கசப்பு உண்டு. அக்கட்டிடங்களைக் கண்களாலேயே பார்க்கமுடிவதில்லை. கண்ணில் தீயாக அறைகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் கண்ணாடிக் கட்டிடங்களைப் பார்க்கையில் அப்படித் தோன்றவில்லை. அங்குள்ள மங்கிய வெளிச்சம் கொண்ட சூழலுக்கு, இருண்ட வான் பின்னணிக்கு அவை மிகமிக இதமாக இருந்தன. கண்ணாடிப்பரப்பே அழகிய தடாகநீர்ப்பரப்பு போல் இருந்தது. அவை அந்தச் சூழலுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. எந்தக் கற்பனையும் இல்லாமல் அவற்றை அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள்.
கட்டிடம் என்பது வேடிக்கை பார்ப்பதற்கான அமைப்பு அல்ல. அது ஒரு குறியீடு. அந்தக்குறியீடு எதைச் சொல்கிறதென்பதே முக்கியம். நம் கோயில்களின் குறியீட்டு ஆழம் மிக விரிவானது. ஒட்டுமொத்தமாக அவை பல்வேறு வழிபாட்டுமுறைகளையும் ஞானவழிகளையும் ஒன்றாக இணைக்கும் தொகுப்புத்தன்மையைக் காட்டுகின்றன. பிரிட்டிஷ் கட்டிடங்கள், அவர்களின் கிரேக்க-ரோம பாரம்பரியத்தை வலியுறுத்த விரும்புகின்றன.
நாம் பொதுக்கட்டிடங்களை அமைக்கும்போது நம்முடைய பண்பாட்டு அடையாளமாகவே அவற்றை அமைக்கவேண்டும். அவை என்ன சொல்கின்றன என்பது முக்கியம். நீண்ட பாரம்பரியம் உள்ள நம் நாட்டின் அழகியலுக்கும் நவீனகாலகட்டத்திற்கும் உள்ள ஒரு உரையாடலாக அவை அமைந்திருக்கவேண்டும். எப்படியோ அவை நம்மைச்சுற்றி உள்ள மலைகளுடனும் மரங்களுடனும் பிற தொன்மையான கட்டிடங்களுடனும் ஒரு இயல்பான அழகியல் ஒருமையைக் கொண்டிருக்கவேண்டும்.
அதற்கு முதலில் நாம் யார் என நாம் அறிந்திருக்கவேண்டும்.
ஜெ
மறுபிரசுரம்
முதற்பிரசுரம் \May 30, 2011
சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
தொடர்புடைய பதிவுகள்
கெட்டவார்த்தைகள்
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
தமிழில் சிறுபான்மை இலக்கியம்
நமக்குள் இருக்கும் பேய்
சந்தைமொழி
மூதாதையர் குரல்
யாருடைய ரத்தம்?
பொம்மையும் சிலையும்
வரலாற்றின் பரிணாமவிதிகள்
விலக்கப்பட்டவர்கள்
சராசரி
விதிசமைப்பவர்கள்
சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…
ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?
மொழி-1,மொழி எதற்காக?
பீர்புட்டிகள்-கடிதம்
அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?
அனந்தபத்மநாபனின் களஞ்சியம்
வசைகள்
சித்ராபதி
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கோவையில்வேலை பார்க்கிறேன். பெயர் முத்துவேல் ராமன். சொந்த ஊர் – திருநெல்வேலி.
நான் சுஜாதா எழுதிய உரை எழுதிய சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் நூலை வாசித்தேன்.
இப்போது ரா.முருகவேள் எழுதிய “மிளிர்கல்” வசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு ஒரு விசயத்துக்காக இணையத்தில் தேடிய போது உங்கள் பக்கத்திற்கு வர நேர்ந்தது.
“பளிங்கறை பிம்பங்கள்” என்னும் கட்டுரையில் மாதவியின் தாயாக சித்ராபதி என்னும் பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் சிலப்பதிகாரத்தில் மாதவி “நற்றாய்” என்றே கூறுகிறாள். பெயர் கூறவில்லை. சிலப்பதிகாரத்தில் சித்ராபதி என்ற வார்த்தையே நான் வாசித்த வரையில் வரவில்லை.
மற்ற இணைய தளங்களில் பார்த்தாலும் அவர்களும் சித்ராபதி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இளங்கோ கூறாமல் நாம் எப்படி ஒரு கதாபாத்திரத்தை கூற முடியும்? இல்லை நான் ஒழுங்காக வாசிக்கவில்லையா?
தெளிவு படுத்த வேண்டும். பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
நன்றி
முத்துவேல்
அன்புள்ள முத்துவேல்,
கணிப்பொறித்துறையில் வேலைபார்க்கும் ஓர் இளைஞர் சிலப்பதிகாரம் வாசிக்கிறார் என்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் பயிலும் மாணவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வாசித்ததில்லை என்பதை கவனித்திருக்கிறேன். இது ஒருவகையில் சுஜாதாவின் வெற்றி.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள். சிலம்பின் கதையையே சீத்தலை சாத்தனார்தான் இளங்கோவடிகளிடம் சொல்கிறார். ”சூழ் வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று சொல்லி இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார்
சீத்தலை சாத்தனார் மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை விரித்து மணிமேகலையை எழுதினார். அதில் மாதவியின் கதை முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. கோவலன் இறந்தபின் மாதவி பௌத்தத் துறவியாக ஆனாள். அவள் மகள்தான் மணிமேகலை. அவளும் பௌத்தத்துறவி ஆனாள். மாதவியின் அன்னை சித்ராபதி பற்றியும் மணிமேகலை விரிவாகச் சொல்கிறது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஆட்டம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றை என் நண்பருக்கு அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுதியிருந்தது எல்லாத்தையும் விட்டுவிட்டு அதை நான் ஏன் உங்களுக்கு அனுப்பினேன் என்று கேட்டான். எதையாவது தீவிரமாக யோசிப்பது என்பதே உங்களிடமோ, மாலதியிடமோ, நண்பர் ஆனந்தனிடமோ நேரிலோ, மானசீகமாக விவாதிப்பதாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை சொல்லி புரியவைக்கும் துணிச்சல் அன்று இல்லை.
இன்று சிற்பம் பற்றிய உங்கள் மறுப்பதிப்பை பார்த்தவுடன் ஒரு முக்கிய காரணம் தோன்றியது. சிற்பங்களை பார்க்க கற்றுத்தந்தவர் என்ற முறையில் உங்களிடம் அதை பேசுவதே முறை. ஒரு வரியிலிருந்து, ஒரு ஓவியத்திலிருந்து, ஒரு கணத்திலிருந்து தனக்கான ஒரு பேரனுபத்தை படைத்துக்கொள்பவனை நம்பியே நூல்களும் சிற்பங்களும் ஓவியங்களும் காத்திருக்கின்றன என்பதை நான் கற்றுக்கொண்டதே உங்களால்தான். பின் என் பரவசத்தை வேறு எங்கு அனுப்புவது?
அன்புடன்,
கௌதமன்
***
ஆட்டத்திற்கு வெளியே !!
——————————————–
அன்புள்ள ஜெயமோகன்,
“டேய் இங்க வாடா. எங்க போன? இப்பதான் இதை மாலதிக்கு காட்டினேன்” என்றுஅவருக்கே உரிய அலட்சியத்துடன் ஆனந்தன் (என் குரு, நண்பர், உங்களின் வாசகர்) என்னை அழைத்து போனார். எல்லோராவின் கைலாசநாதன் குகையினுள் (cave 16) உயரே சுவற்றில் மன்மதன்-ரதி சிலையாய் கரும்பு சோவையை வைத்து அடையாளம் கண்ட திமிர் குறையாமல் நானும் போனேன். கோவிலை சுற்றி கல் மண்டபம் வழியாக அதிகாலை இருட்டில் வழிநெடுகிலும் இருக்கும் சிலைகளை சட்டை செய்யாமல் அவர் போன போதே என் ஆர்வம் பெருகிவிட்டிருந்தது.
அவர் நின்று கைகாட்ட அதற்குள் இருட்டிருக்கு பழகியிருந்த கண்களில் ஒரு அற்புத சிற்பம் தெரிந்தது. விஷ்னுவும் (சிவனோ?) தேவியும் பகடை ஆடும் காட்சி. தேவனின் வலது கரங்களில் ஒன்று பகடையாய் உருட்ட தயாராய். இன்னொரு கை விரல்களை மடக்கி , கட்டை விரலை மடக்கிய விரல்கள் மீது வைத்து ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை” என்று காண்பிக்கும் விதமாய் சுட்டுவிரலை உயர்த்திய வண்ணம்.
இடது கரத்தில் ஒன்று கீழே ஊன்றப்பட்டு உடலின் எடையை தாங்கி இருக்க இன்னொரு கரமோ தேவியின் இடது கரத்தை பற்றி உயர்த்தி, பக்கவாட்டில் ஆடுகளத்திலிருந்து விலக்கி பிடித்திருந்தது.
ஆனந்தன் மெல்ல விளக்க அந்த சிற்பம் ஒரு நிகழ்வாய், ஒரு கவிதையாய், ஒரு முழு வாழ்வாய் என்முன் விரிந்தது.
ஆடிய விளையாட்டில் தேவி எதோ ஏமாற்றி இருப்பாள் போல. பகடையின்எண்களை கூட்டியோ குறைத்தோ இருக்கலாம். காய்களை வேறிடம் மாற்றியிருக்கலாம். வெட்டுப்படாத ஒன்றை வெட்டியதாய் வெளியே எடுத்து மறைத்திருக்கலாம். கண்டுகொண்ட தேவன் அவள் கைகளை கையும் களவுமாக பிடித்துவிட்டான்.
பகடையை உருட்ட வந்த தேவனின் கை நின்றுவிட்டது. ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை! என்னிடம் இது இனி நடக்காது” என்று சுட்டு விரலை உயர்த்தி, இடம் வளமாய் ஆட்டி காண்பிக்கிறான். பாதி மூடிய விழிகள் மற்றும் சற்றே மேல்நோக்கிய தாடை வழி அவன் தலை இடம் வளமாய் ஆடுவதை என்னால் பார்க்க முடிகிறது. களவை கண்டுகொண்ட பெருமிதம் அவன் உதடுகளில். “இது தான் கடைசி தடவை, என்ன?” என்ற சொற்கள் நிமிர்த்திய நெஞ்சில்.
“இது எல்லாம் ஒரு விஷயமா?” எனும் விதமாக தேவியின் முகத்தில் ஒரு புன்னகை. இந்த ஒருமுறைதானே என் ஏமாற்றை பிடித்திருக்கிறாய், ஊழி தொடங்கிய பொழுதிலுருந்து என் ஆட்டத்தை, என் களவை பற்றி என்ன கண்டாய் நீ என்பதாய் அவள் கண்கள். இது ஒன்றும் கடைசி ஏமாற்றலும் இல்லை என்று சொல்லும் சற்றே பின் வளைந்த தோள்கள். “இல்லையே நான் ஒன்னும் பண்ணலியே” என்பது போல விரிந்த விரல்களுடன் பிடிக்கப்பட்ட கை. மடக்கி உயர்த்திய காலும், தரையில் ஊன்றி இருக்கும் இன்னொரு கையும், “ரொம்ப பேசாதே, ஆட்டத்த கலைச்சிடுவேன்” என்று சொல்ல நானொரு காவியத்தை கண்ட பூரிப்பில் நின்றிருந்தேன்.
“தேவனே நீ வெல்வதுகூட என் பெருங்கருணையால்தான்” என்று அவள் நினைத்திருக்க கூடும். “பிடித்துவிட்டானாமா!” என்று நினைத்திருக்க கூடும். வெற்றியின் மீதான பற்று அவளிடம் இருப்பதாய் தெரியவில்லை. அவனின் பகடையில் வரும் என் பற்றி ஓன்றும் கவலை இல்லை.
“ஆடுவது மட்டுமே அங்கு அவளில் நிகழ்கிறது. ஆனால் ஆட்டத்தின் பாதிப்பு எதுவும் அவளில் இல்லை” என்றார் ஆனந்தன்.
அன்புடன்,
கௌதமன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11
11. தொலைமலர்
“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும் களம் எல்லைகொண்டுவிடுகிறது. அவ்வெல்லைதான் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்விரிவை அளிக்கிறது. எல்லை குறுகும்தோறும் சொற்கள் எடைமிகுந்து தெய்வச்சிலைகள்போல் அலகிலாத ஆழம்கொண்டு அச்சுறுத்தத் தொடங்கிவிடுகின்றன. சொற்களைக் கொண்டு ஒரு நுண்ணிய களமாடலைத்தான் அரசவைகளில் நிகழ்த்துகிறோம்.” பீமன் “எல்லா இடமும் எங்குமிருக்கும் அரசனின் அவைதான் என்பர் முனிவர்” என்று நகைத்தான். அவளும் உடன் நகைத்தாள்.
அதன்பின் அவள் சொற்கள் மேலும் இயல்பாக ஒலிக்கலாயின. “காம்பில்யத்தில் வாழ்கையில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக அல்லாது வேறெவ்வகையிலும் நான் என்னை உணரவில்லை. அதற்கென்று ஒவ்வொரு நாளும் திட்டமிட்டேன். நான் கற்றதெல்லாம் அதற்காகவே. நிகரற்ற பெருநகரமொன்றை எனக்கென உருவகித்தேன். அதை சூத்ராகிகளுடன் பல ஆண்டுகாலம் சூழ்ந்து வரைபடத்தில் எழுப்பினேன். அக்கனவை கையில் வைத்தபடி என் எண்ணங்களுக்கு ஊர்தியாகும் கணவனைக் குறித்து மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு இணையாக பாரதவர்ஷத்தின் அரியணை அமர்பவன். பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை என்று நானே நம்பியிருந்தேன். அவ்வாறல்ல என்று நானறிந்த ஒரு தருணம் வந்தது.”
பீமன் “ஆம், புரிகிறது.” என்றான். அவள் அதை சொல்லவேண்டாமே என அவன் எண்ணியது உடலில் ஒரு மிகமெல்லிய அசைவென வெளிப்பட்டது. ஆனால் அவள் தடையின்றி சொல்லூறும் உளம்கொண்டிருந்தாள். “பெண்ணென்று மட்டும் நின்றிருக்கும் ஒரு தருணம். அதனுடன் இந்த மணம் இணைந்துகொண்டுள்ளது என இப்போது உணர்கிறேன். இதை அப்போது நினைவுகூர்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் இணைந்துவிட்டிருப்பது பின்னர் ஒருநாள் தெரிந்தது. உள்ளே ஒரு சிலந்தி ஒவ்வொன்றையும் தாவித்தாவி மெல்லிய நூலால் இணைத்துக்கொண்டே இருக்கிறது” என்றாள். மீண்டும் வெளியே விழிநோக்க “இத்தனை நாட்களுக்குப்பின் மீண்டும் அந்த மணம் இங்கு வந்துள்ளது. இப்போது அந்த மணத்தை என் மூக்கு உண்மையிலேயே உணர்கிறது. இங்கெங்கோ விழுந்து கிடக்கிறது அந்த மலர்” என்றாள்.
“இங்கா?” என்றான் பீமன். “ஆம், அந்த மணத்தை தேடித்தான் இங்கு வந்தேன். இங்கு அமர்ந்தபிறகு மிகத்தெளிவாகவே உணர்கிறேன். இங்குதான் விழுந்துகிடக்கிறது அந்த நறுமணம்.” பீமன் சுற்றிலும் நோக்கியபடி “கல்யாண சௌகந்திகமா?” என குரலில் ஏளனம் எழ கேட்டான். அவள் தலையசைத்தாள். அவன் எழுந்து “சரி, இங்குள்ள அனைத்து உதிர்ந்த மலர்களையும் சேர்த்து தருகிறேன். அந்த மலரை எடுத்து எனக்குக் காட்டு” என்றான். “இச்சோலையில் இப்போது பல்லாயிரம் மலர்கள் விரிந்து உதிர்ந்துள்ளன. அத்தனை உதிர்ந்த மலர்கள் நடுவே அந்த மலரை என்னால் பிரித்தறிய முடியாது” என்றாள் அவள். “ஏன்?” என்றான். “தெரியவில்லை, எந்த மலரை முகர்ந்தாலும் அந்த மலரின் மணமே இப்போது தெரியும்.” அவன் “பிறகெப்படி அதை கண்டடைவது?” என்றான்.
அவள் இதழ்கள் நடுவே பல்வரிசையின் கீழ்நுனி தெரிய புன்னகைத்து “என் மூக்கு அறியும் நறுமணத்தை நீங்களும் உணர்ந்தால் போதும்” என்றாள். அதே புன்னகையுடன் அவன் “அதற்கு உன் கனவுக்குள் நான் வரவேண்டும்” என்றான். “அதை உங்களுக்குள் எழுப்ப முடியுமென்று எண்ணித்தான் இத்தனை சொற்கள். இத்தகைய நேரடி உணர்வுகளைச் சொல்வதில் அணிகளும் உவமைகளும் எத்தனை பொருளற்றவை என தோன்றுகிறது. இதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் இந்த நறுமணத்தை, அல்லது இதைப்போன்ற எதையோ ஒன்றை, எங்கெல்லாம் அறிந்தேன் என்று மட்டும் சொல்கிறேன்.” பீமன் மீண்டும் அமர்ந்து “சொல்!” என்றான். என்ன விளையாட்டு இது என ஒரு கணம் சலிப்புற்றான். எழுந்து காட்டுக்குள் சென்றுவிடவேண்டுமென அகம் விழைய அதை கடந்தான். அவள் சொல்லப்போவதை தான் விரும்பமுடியாதென்று முன்னரே உள்ளம் அறிந்தது எப்படி?
“நீங்கள் விழையாததை சொல்லாமலிருக்கலாமென எண்ணினேன். ஆனால் அதைச் சொல்லவே என் நெஞ்சு தாவுகிறது” என்றாள். பீமன் “ம்” என்றான். “எந்தப் பெண்ணும் கணவனுக்கு அதன் ஒரு சிறுநுனியை காட்டியிருப்பாள், இல்லையா?” என்றாள் அவள். அறியாது அவள் விழிகளில் விழிதொட்டு “என்ன?” என்றான் பீமன். உடனே புரிந்துகொண்டு அப்பால் நோக்கினான். ஆனால் அவன் உடல் விழியாயிற்று. “அது அவள் அவனைக் கடந்து செல்லும் ஒரு தருணம். தன்னில் ஒன்று எப்போதும் மிஞ்சியிருக்கிறது என்று சொல்லவே பெண் விழைவாள்” என்று அவள் சொன்னாள். அவன் இவள் தன்னிடம் எதிர்பார்ப்பதென்ன என்று எண்ணினான். அதை தான் அளிக்கலாகாது. ஆனால் அனைத்தையும் அறிந்தும் ஆட உளம்குவியாதவன் தான் என மறுகணம் உணர்ந்தான்.
“என் மணத்தன்னேற்புக்கு முந்தைய நாள் ஐங்குழல் அன்னையரின் ஆலயத்தில் தொழச்சென்றபோது ஒருவரை சந்தித்தேன். நாராயணியின் ஆலயத்தில்.” பீமன் அவள் சொல்வதற்காக விழி செலுத்தி அமர்ந்திருந்தான். “கரிய ஒளிகொண்ட நெடிய உடல். மார்பில் கட்டப்பட்ட கைகள். இளநகைப்பின் ஒளிகொண்ட கண்கள். அருகே பேருடலரான தோழர்” என அவள் தொடர்ந்தாள். அவன் புரிந்துகொண்டானா என அவள் ஐயுறுகிறாளா என எண்ணிய பீமன் “ஆம்” என்றான். அவள் அக்குரலை கேட்டதாகவே தெரியவில்லை. “பின்னர் ஒருவனை வாளுருவி வெட்டும் பொருட்டு சென்றேன். அன்றுமின்றும் அவனுக்கிணையாக நான் எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் எந்நிலையிலும் அவனை என்னால் கொல்ல முடியாதென்று அறிந்து உடைந்து அமர்ந்து அழுதேன். இறுதி விம்மலுடன் அவ்வழுகை முடிந்தபோது உள்ளம் மலர்ந்து அந்த மணத்தை உணர்ந்தேன்.”
பீமன் தலையசைத்தான். “அவன் என் களித்தோழன், இரண்டாமவரே” என்றாள். “அவன் மைந்தன் அவ்வடிவில் பிறந்து என்னுடன் ஆடத்தொடங்கியதும் அவன் மேலும் இனியவனாக ஆனான்.” நிலையற்று ஒன்றோடொன்று பின்னி உரசிக்கொண்டிருந்த அவள் விரல்கள் நடக்கும் தேளின் கால்களும் கொடுக்குகளும் போல அசைவதாக அவன் நினைத்தான். அந்த எண்ணத்தை உணர்ந்ததும் புன்னகை எழுந்தது. கவிஞர்களைப்போல நல்ல ஒப்பணிகள் தனக்கு தோன்றவே போவதில்லை போலும். அவன் முகத்தில் விரியவில்லை என்றாலும் அப்புன்னகையை உணர்ந்து அவள் திரும்பி நோக்கினாள். பின்னர் இயல்பாக அவ்வுணர்ச்சிகளுக்குள் இழுக்கப்பட்டு பேசலானாள்.
“பின்னர் ஒருமுறை மூத்தோரும் கற்றோரும் அரசரும் குலத்தோரும் கூடிய அவைமன்றில் நான் நின்றேன். நான் சூடிய ஆணவங்கள் அனைத்தும் களையப்பட்டு சிறுத்து வெறுமைகொண்டேன். பாண்டவரே, அன்று என் உள்ளம் வேறெதையும் எண்ணவில்லை. என் உடல் என் உடல் என்றே பதறியது. இங்கு பெண் என்பவள் வெறும் உடல் மட்டுமே என்று அன்று உணர்ந்தேன். புடவியில் எந்த ஆணும் அவளுக்கு காப்பல்ல என்று அப்போது அறிந்தேன்.” அவள் குரல் அத்தனை இயல்பாக ஒலித்தமையால் அவன் திரும்பி அவளை நோக்கினான். அவள் கன்னவளைவுகளில் கழுத்தின் நெகிழ்கோட்டில் வானொளி விளிம்பு தெரிந்தது. ஒரு சொல்விளையாட்டினூடாக அவள் வெளிப்பட இடமளித்துவிட்டோம் என அவன் அறிந்தான்.
“அவ்வுடைவு எளிதல்ல. எப்பெண்ணுக்கும் அது முழு இறப்பே” என்றாள். “எப்படியோ பிறந்த கணம் முதல் ஆணின் அன்புக்கும் கொஞ்சலுக்கும் உரியவளாக, ஆணின் கைகளால் வேலிகட்டி காக்கப்படுபவளாக, ஆணை கொழுகொம்பென பற்றி ஏறுபவளாகத்தான் பெண் இங்கு வளர்கிறாள். பாண்டவரே, அது ஐவரும் இறந்த நாள். திருஷ்டத்யும்னன் இறந்த நாள். துருபதன் இறந்த நாள். ஐந்து மைந்தர்கள் பொருளிழந்த நாள். நெஞ்சில் நிறைந்த ஆழிவண்ணன் மறைந்த நாள். அதிலிருந்து மீள எனக்கு நெடுநாட்களாயிற்று. ஆனால் அவ்வாறு மீண்டபின்னரே நான் என எஞ்சினேன். நான் என நிறைவுடன் உணரலானேன்.”
“இக்காட்டுக்குள் வருவதுவரை என்னுள் நானே ஒடுங்கி புற உலகை முற்றிலும் தவிர்த்து உள்ளோடும் எண்ணங்களை மட்டுமே ஓயாது அளைந்து கொண்டிருந்தேன். சிடுக்கவிழ்க்க முனைந்து சலித்து விரல்கள் மேலும் மேலுமென முடிச்சுகளைப் போடுவதை உணர்ந்து அதை முற்றிலுமாக கைவிட்டேன். எஞ்சியது சமைப்பதும், தூய்மை செய்வதும் மட்டுமே. ஆடைகளைந்து காட்டுச்சுனைகளிலும் ஆறுகளிலும் நீராடுகையில் மட்டுமே புரியாத விடுதலையொன்றை உணர்ந்தேன். எளிய செயல்களில் மூழ்க முடிந்தமை எனக்கு மூதன்னையர் அளித்த அளி. சமையல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றே. தூய்மை செய்வது அதனிலும் எளிது. ஆனால் இச்செயல்களினூடாக என்னை நான் மாற்றிக்கொண்டுவிட்டதை மெல்ல அறிந்தேன்.”
“வெறும் அடுமனைப்பெண், பிறிதொன்றுமல்லாது இருத்தல். அவ்விடுதலையை கொண்டாடத் தொடங்கினேன். விழித்தெழுகையில் அன்று எதை சமைப்பது என்பதைப் பற்றியன்றி பிறிதொன்றையும் எண்ணவேண்டாம் என்றிருக்கும் நிலை. இதுவே நிறைவு. இது என்னை கனியச்செய்யும் என எண்ணியிருந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் இக்கனவு என்னை மீண்டும் வந்து தொட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. அனைத்தும் குலைந்துவிட்டன. மீண்டும் ஒரு தொடக்கம் போல.” அவள் குனிந்து நோக்கி “அந்த மலர்… இங்கெங்கோ அது விழுந்து கிடக்கிறது. விண்ணிலிருந்து விழுந்திருக்கிறது” என்றாள்.
“இதுவும் ஒரு உளமயக்குதான், தேவி” என்றான் பீமன். “எளிய அடுமனைப்பெண் என உன்னை ஆக்கிக்கொண்டு நீ அடையும் விடுதலைக்கு ஓர் எல்லை உள்ளது. அவ்வெல்லையை அடைந்தபின் உன் ஆழத்துறையும் ஆணவத்தில் விரல் படுகிறது, அது விழித்துக்கொள்கிறது. இல்லை, நான் வேறு என்கிறது. எல்லைக்கப்பால் பிறிதொன்று என உள்ளம் தேடுகிறது. எளிய மானுடராக இப்புவியில் பிறப்பவர்கள் மட்டுமே எளியராக வாழமுடியும். பிறிதொன்றெனப் பிறந்த எவரும் தங்களை உதிர்க்க முடியாது.”
“மிகச் சிலரால் முடியலாம், அதைத்தான் தவம் என்று சொல்கிறார்கள் போலும். துறந்திறங்குபவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அமர முடிகிறது. அமர்ந்தவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அங்கு நிலைக்க முடிகிறது” என்று பீமன் தொடர்ந்தான். “பார்த்தாயல்லவா…? மூத்தவரும் இளையவனும் தேடிச்சென்று அடைந்தபின் திரும்பிவந்து அமைந்துள்ளார்கள். வென்றதெல்லாம் இப்புவிக்குரியவை என்றால் சென்றதன் பொருள்தான் என்ன?”
அவள் அவன் சொற்களைக் கேட்காமல் தன் உளஒழுக்கை தொடர்ந்து சென்றாள். “அந்த மணம் நான் உங்களுடன் இருக்கும்போது மட்டும் ஏன் வந்தது? அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்கள் கைகளின் எடை என் மேல் இருப்பதை எப்போதும் விரும்புவேன். இன்று விழித்துக்கொண்ட பின்னும் உங்கள் துயிலோசையுடன் இணைந்தே அந்த மணம் எனக்குத் தெரிந்தது. உங்கள் கையிலிருந்து நழுவி நான் எழுந்தபோது ஒருகணம் அது உங்கள் மணம் என்றுணர்ந்தேன். படிகளில் இறங்கி வரும்போது அந்த மணத்தை நான் முன்பு அறிந்திருக்கிறேன் என்று தோன்றியது. முன்பு எப்போதோ உங்கள் மணமாக அதை அறிந்திருக்கிறேன்.”
“எப்போது என நான் மீளமீள கேட்டுக்கொண்டேன். முன்பு என்னை நீங்கள் காம்பில்யநகரின் தெருக்களினூடாக தேரில் வைத்து இழுத்துச் சென்றபோது? உங்கள் தோளிலேறி நான் கங்கையில் நீந்திக் களித்தபோது…? தெரியவில்லை. அதையெல்லாம் இணைத்துக்கொள்ள விழைகிறேனா? உள்ளத்தை பின்தொடர்வது புகையைப் பற்ற முயல்வதுபோல…” பீமன் “இங்கிருந்து அவற்றை எண்ணிக்கொண்டாயா?” என்றான். “ஆம், ஒவ்வொரு கணமாக எண்ணி கோத்துக்கொண்டேன். ஆனால் என் அறிவுக்குத் தெரிகிறது என் உள்ளாழத்தின் நுண்நெகிழ்வு ஒருபோதும் உங்களுக்கென இருந்ததில்லை. அனைத்தையும் களைந்திட்டு மீறிவந்து களியாடுகையில் ஒரு துணைமட்டுமே நீங்கள்.”
“இன்று உங்களுக்காகவே நிறைந்திருக்கிறேன், பாண்டவரே. நான் அதை எப்படி உங்களுக்கு சொல்வது? எத்தனை சொன்னபிறகும் சொல்லப்படாமல் அங்கேயே இருக்கிறதே?” என்றாள். சட்டென்று அவள் உதடுகளை அழுத்திக்கொண்டு விம்மலை அடக்கினாள். மெல்லிய ஓசை எழ பீமன் அவள் கைகளை தொட்டான். “நான் என்ன செய்வது, தேவி? நான் அளிப்பதற்கு என்ன உள்ளது? உயிர் எனில் இக்கணம் பிறிதொரு எண்ணமில்லாமல் அதை அளிப்பேன்” என்றான்.
அவள் தன் இருகைகளாலும் அவன் கைகளைப்பற்றி பொத்தி வைத்துக்கொண்டாள். “ஆம், நான் அதை அறிவேன். அன்று சிந்து மன்னனை இழுத்து வந்தபோது பிறர் விழிகள் எதிலும் இல்லாத ஒன்று உங்கள் விழிகளில் இருந்தது. அது பெரும்சினம். பிறிதொன்றுக்குமன்றி எனக்கென மட்டுமே எழுந்த சினம். பாண்டவரே, அக்கணம் நீங்கள் எனக்குரியவரானீர். இனி எனக்கு பிறிதெவரும் கணவர் அல்ல.”
தன் உள்ளம் ஏன் பொங்கியெழவில்லை என அவன் வியந்தான். அத்தனை நேருச்சங்களிலும் அலையடங்கிவிடுகின்றன எண்ணங்கள். அப்பாலென விலகிநின்று நோக்குகின்றது தன்னிலை. “அன்று அவன் பொருட்டு என் உளம் இரங்கியது. ஆனால் இரவு துயில்கையில் உங்கள் விழிகள் மட்டுமே நெஞ்சில் எஞ்சியிருந்தது. அதிலிருந்த அனலை பேருவகையுடன் மீள மீள என் விழிக்குள் தீட்டிக்கொண்டேன். நாட்கணக்கில் ஒருகணம்கூட விடாமல் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் ஒருவேளை நம்ப மாட்டீர்கள்.”
நீள்மூச்சுடன் “நெடுங்காலம் ஆயிற்று பாண்டவரே, அப்படி பிறிதொன்றை எண்ணியும் விலக்க முடியாமல் முற்றிலும் இழந்து எண்ணிக்கொண்டிருக்கும் நிலை வாய்த்து” என அவள் சொன்னாள். “ஒருகணத்தில் அத்துன்பத்தை எண்ணிச் சலித்து சினம் கொண்டேன். என்ன இது? மீண்டும் ஒரு துயரை… பெண்போல என்று கசந்து என்னையே கடிந்துகொண்டேன். பின்னர் தோன்றியது, பெண்ணென்றும் பேதையென்றும் இருக்கும் நிலை வாய்த்தது நல்லூழல்லவா என்று. எண்ணி கரையவும் நினைந்து விழிநீர் மல்கவும் ஒன்று எஞ்சியிருப்பது மூதன்னையர் கொடைபோலும்.”
பீமன் ஏதோ சொல்ல நாவெடுத்து சொற்களில்லாமல் தலையை மட்டும் அசைத்து “நாம்…” என்றான். அவள் பெருமூச்சுவிட்ட ஓசையில் அவன் சொல் கரைந்தது. மீண்டும் உதடசைய அவள் “போதும், நாம் இதையெல்லாம் பேசவேண்டாம். பேசும்தோறும் எளியவையாகின்றன. இவ்வுலகைச் சார்ந்தவையாகின்றன. இவை இப்படியே மானுடர்க்கரிய பிறிதொரு வெளியில் கிடக்கட்டும். எந்த அறிவாலும் எடுத்து கோக்கப்படாமல் அப்படியே சிதறி பரந்திருக்கட்டும்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். அப்பேச்சை முடித்துவிட விரும்பினான்.
அவள் மீண்டும் சுற்றிப்பார்த்து “இப்போது நன்றாக உணர்கிறேன் அந்த மணத்தை” என்றாள். “எத்திசையிலிருந்து…?” என்று அவன் கேட்டான். “அதை சொல்லத் தெரியவில்லை. என்னைச் சூழ்ந்து காற்று வீசும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருகிறது. கூர்கையில் அகன்றும் அகல்கையில் கூர்ந்தும் விளையாடுகிறது. உள்ளத்தை குளிர் என சூழ்கிறது. நறுமணம் எத்தனை இனிய நினைவுகளை எழுப்புகிறது என்று எண்ணி வியந்தேன். எங்கெங்கோ நிகழ்ந்து எவ்வண்ணமோ உருமாறிக் கிடக்கும் அத்தனை இனிமைகளையும் ஒரு சரடென கோத்து தனி மாலையாக ஆக்கமுடியுமென்றால் அது நறுமணம் மட்டுமே.” அவள் புன்னகைத்து “நீங்கள் சொன்ன கதையின்படி, இது என் கன்னிமையின் மணம்” என்றாள்.
“நாம் இதை மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றான் பீமன். “ஆம், நாம் உள்ளே செல்வோம். குளிர் மிகுந்து வருகிறது” என்றபடி திரௌபதி எழுந்தாள். குழலை பின்னுக்கு தூக்கிவிட்டு குனிந்து ஆடையை சீரமைத்தாள். அவ்வசைவுகளில் மீண்டும் அவள் அறிந்த பெண்ணென்றாவதை அவன் உணர்ந்தான். அவன் நோக்கை உணர்ந்து நிமிர்ந்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். எடை விலக காற்றில் மெல்ல மிதந்தெழும் பட்டு ஆடைபோல அவள் தோன்றினாள். நெடுநேரம் பேசிமுடித்த பெண்களுக்குரிய உளவிடுதலை உடலில் எழுகிறது என அவன் எண்ணிக்கொண்டான். ஆடிநோக்கி அணிபுனைவதுபோல. சிறுமியர் முதுமகளென்றும் பாடினி என்றும் பேய்மகள் என்றும் ஆடைகொண்டு மாற்றுரு பூண்டு மகிழ்வதுபோல.
அவள் திரும்பி “என்ன?” என்றபோது எதிர்காற்றில் குழல் எழுந்து பறந்தது. கழுத்தைத் திருப்பி அதை அள்ளிச்சுழற்றினாள். அவ்வசைவில் உளம் அதிர்ந்தபோது அவன் அந்த நறுமணத்தை உணர்ந்தான். “ஆம், ஒரு நறுமணம்” என்றான். அவள் “என்ன?” என்றாள். “நீ சொன்ன மணம். நான் இதுவரை அறியாத ஒரு மணம்” என்றபடி அவன் எழுந்தான். “நீ சொன்னது உண்மை. இங்கு ஏதோ மலர் விழுந்திருக்கிறது. காற்றில் வந்து விழுந்திருக்கலாம். அல்லது இக்குரங்குகள் கொண்டு வந்திருக்கலாம்” என்றான்.
அவள் ஐயம்கொண்டு “பாரிஜாதமாக இருக்குமோ?” என்றாள். “இல்லை, ஒருகணம் பாரிஜாதம் என்றே தோன்றியது. ஆனால் அதற்கு இத்தனை எரிமணம் இல்லை. செண்பகம் என்று எண்ணினால் அதுவே தோன்றுகிறது… ஆனால் இது நான் அறிந்திராத மணம்” என்றான் பீமன். “எங்கிருந்து?” என்று அவள் ஐயம் விலகாத குரலில் கேட்டாள். “அனைத்து திசைகளிலிருந்தும்தான். ஒரு மலரா? ஒரு மலர் எப்படி அனைத்து திசைகளிலிருந்தும் மணமெழுப்ப முடியும்?” அவன் பரபரப்புடன் சுற்றிலும் குனிந்து தேடினான். “என் விழிகளுக்கேதும் தென்படவில்லை… இப்போது அந்த மணம் மறைந்துவிட்டது.” நிமிர்ந்து மூக்கைத்தூக்கி காற்றை ஏற்றான். “என் உளமயக்கு என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் நான் மிகத்தெளிவாகவே அந்த மணத்தை அறிந்தேன்” என்றான்.
அவள் அவன் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள். “அந்த மணம்தான்… கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவள் கழுத்தில் ஒரு நரம்பு எழுந்து சிறிய முடிச்சுடன் அசைந்தது. மூச்சுக்குழி பதைத்தது. அவன் நகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் மணத்தை ஆண்கள் அறியமுடியாது என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்றான். “முடியும், மெய்க்காதல் கொண்ட ஆண் அறிய முடியும். ஆகவேதான் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.” என்றாள். உருகியதுபோன்ற குரலில் “என் நெஞ்சின் நறுமணத்தை இப்புவியில் தாங்கள் மட்டுமே அறியமுடியும்” என்றாள்.
அவன் அவள் கண்களைப் பார்த்து “ஆம்” என்றான். “பிறிதெவரும் அறியமுடியாது” என அவள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னாள். “தாங்கள் அறியவில்லை என்பது அவ்வளவு பெரிய தவிப்பை என்னுள் ஏற்படுத்தியது. அறிந்துவிட்டீர்கள் எனும்போது பிறகெப்படி என்று என் உள்ளம் துள்ளியது. தாங்கள் அறியாத ஏதும் என்னுள் இல்லை” என்றாள். பட்டு நலுங்குவதுபோன்ற குரல். தளிர்க்கொத்து அசைவதுபோன்ற குரல். வீணைக்கம்பிமேல் தலைமயிர் இழுபட்டதுபோன்ற குரல். “ஐவரில் நான் மிகக்குறைவாகப் பேசியவர் நீங்கள். மிக அணுக்கமாக என்னுள் நுழைந்தவர் நீங்கள் மட்டுமே. மாமல்லரே, எனக்கு அந்த நறுமலரை கொண்டு வாருங்கள்” என்றாள்.
“எந்த நறுமலரை?” என்று பீமன் கேட்டான். அதன்பின்னரே அந்த வினாவிலிருந்த பேதைமையை உணர்ந்தான். அவள் அவன் கையை அழுத்தி புன்னகையுடன் “இப்போது நீங்கள் மணம் அறிந்த அந்த நறுமலரை. கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “இது ஒரு உளமயக்காக இருக்கலாம். உன் சொற்களால் நானும் உள்ளே வந்திருக்கலாம்.” அவள் “இல்லை, உளமயக்கு இல்லை. உளமயக்கு இத்தனை விழிப்பு நிலையில் எழ வாய்ப்பில்லை. இங்கு ஒரு மலர் மணக்கிறது. எங்கோ அது நின்றுள்ளது. ஏதேனும் பறவை அதை கொண்டுவந்திருக்கலாம். மாருதர்களில் எவரேனும் கொண்டு வந்திருக்கலாம்… அதில் ஒரு மலரை எனக்கு கொண்டு வாருங்கள்” என்றாள்.
எந்த எண்ணமும் இன்றி பீமன் “சரி” என்றான். அவள் அவன் தோளில் மெல்ல தலைசாய்த்து “கொண்டு வாருங்கள், இரண்டாமவரே. அதை என் விடாய் தீர முகர்கிறேன். அதன் பின் உயிர்வாழ வேண்டுமா என்று அப்போது முடிவெடுக்கிறேன்” என்றாள். அவள் முகத்தைப்பற்றி “என்ன இது?” என்றான் அவன் பதற்றத்துடன். அவன் கையைப்பற்றி தன் உடலில் அழுத்திக்கொண்டு புடைத்த புயங்களில் முகம் அமர்த்தி அவள் மெல்ல விம்மினாள். கண்ணின் நீர் அவனைத் தொட்டது. “எனக்கு அந்த மலர் வேண்டும், பாண்டவரே. அந்த மலர் வேண்டும் எனக்கு” என்று சிறுமியைப்போல் தலையை அசைத்து சொன்னாள்.
“நன்று, அப்படி ஒரு மலர் உண்டென்றால் அதை நான் கொண்டுவருகிறேன்” என்று பீமன் சொன்னான். “உண்டு, அது எங்கோ உள்ளது. எனக்கு ஐயமே இல்லை.” பீமன் “அதைக் கொண்டுவந்து உன் குழலில் சூட்டுகிறேன்” என்றான். அவள் அவன் நெஞ்சில் மெல்ல தலையால் முட்டி “விளையாட்டல்ல, உண்மையாகவே எனக்கு அது வேண்டும்” என்றாள். “விளையாடவில்லை, தேவி. நான் அதை கொண்டுவருகிறேன். இது ஆணை!” என்றான். அவள் விழிப்பீலிகளில் கண்ணீருடன் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
February 9, 2017
மன்னர்களின் சாதி
அன்புள்ள ஜெ ,
பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ‘ ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ‘ என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் . சில வருடம் முன்பு வரை அதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தங்களை ‘ மன்னர் பரம்பரை ‘ என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சோழர்களையே இவர்கள் குறி வைக்கிறார்கள் . விக்கிபீடியாவில் பிராமணர் நீங்கலாக ஒவ்வெரு சாதியையும் தங்களை ‘ சோழரின் ‘ வம்சமாகக் கூறிக்கொண்டு தங்களின் சாதி உணர்வைத் தங்கள் சாதி மக்களிடும் எரியூட்டுகின்றனர் .’ உலகமே சுருங்கிய காலத்தில் பெற்றோர் புகழே தனி மனிதனுக்கு உதவாதபோது இப்படிப் பண்டைய மன்னர்களின் பரம்பரை என்று பேசுவது வீண்வம்புக்கு மட்டுமே வழிவக்குக்கும் .
நான் இங்கே உங்களிடம் கேட்க காரணம் உண்டு . சிலவருடம் முன்பு எங்கள் வீட்டில் புதுமைப்பித்தன் பற்றி ஒரு பழைய விமர்சனப்புத்தகம் குப்பைகளுக்கு நடுவே கண்டெடுக்கப்பட்டது . 1955 இல் அச்சிடப்பட்டது என்று நினைக்கிறேன் . எழுதியவர் ஒரு காந்தியவாதி ,பெயர் ஞாபகம் இல்லை . அவர் சிறுபிள்ளை போல் காந்தியையும் புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு புதுமைப்பித்தனைக் கேவலமாக எழுதியிருந்தார் . அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட பல கருத்துக்கள் இன்று ‘ புதுமைப்பித்தனை ‘ வசைபாடுவோரின் கருத்துகளாக இருக்கிறது . இது போல் இன்னும் இருபது வருடங்களில் பண்டைய மன்னர்களின் வாரிசு என்று பல சாதிகளை மக்கள் நம்பினாலும் நம்பலாம் …
கிடைத்த சில விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஊகிக்கலாம் ‘ உண்மையான முழுமையான வரலாற்றை ‘ தீட்ட இயலாது .வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த சாதி ‘சார்பு ‘ பற்றிக்கொண்டால் உண்மையான வரலாறு வரும் காலங்களில் மறைக்கப்படும் . பல வரலாறுகள் ரத்ததாலும் துரோகத்தாலும் எழுதப்பட்டது .பண்டைய மன்னர்களின் குலங்கள் அழிந்தே போயிருக்கலாம் . யாருக்கும் தெரியாது ஆனால் அதைவைத்துக்கொண்டு சாதி அரசியல் , சாதி உணர்வை தூண்டுவது எந்த விதத்திலும் சரியான போக்கு இல்லை .
யு எம் துளி
அன்புள்ள துளி,
இந்தியா எங்கும் பொதுவாகக் காணப்படும் ஒரு சமூகப்பரிணாமத்தின் சில கூறுகளை சுட்டிக்காட்டியபடி இதைப்பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.
நம் அரசுகள் உருவான வரலாறு
* பலகாலமாக ஐரோப்பிய ஆய்வாளர்களால் நமக்குச் சொல்லப்பட்டபடி இந்தியச்சாதியமைப்பு என்பது இந்துமதத்தாலோ அதைப்போன்ற வேறெந்த கருத்துநிலைகளாலோ மேலே இருந்து வடிவமைக்கப்பட்டு கீழே வரை அமல்படுத்தப்பட்டதல்ல. அப்படி இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களை உள்ளிட்டு, ஆயிரக்கணக்கான சாதிகளையும் உபசாதிகளையும் தொகுத்து அமல்படுத்துவது நடைமுறைச்சாத்தியமும் அல்ல
சாதியமைப்பு மதத்தால் உருவாக்கப்படுவது என்ற கூற்று என்பது ஐரோப்பியர் இந்திய சாதியமைப்பின் நுட்பங்களை உணராமல் மேம்போக்காக ஆராய்ந்து சொன்னது மட்டுமே. அதை மதமாற்ற நோக்குடன் இந்து பௌத்த சமண மதங்களை அவதூறு செய்வதற்காகப் பின்னர் பயன்படுத்திக்கொண்டார்கள். அதை இங்குள்ள அரசியல்வாதிகள் திருப்பித்திருப்பிச் சொல்கிறார்கள். வலுவாகச் சொல்லக்கூடியவர்களுக்கு இன்றும் மதமாற்ற சக்திகளின் நிதி ஆதரவு உள்ளது
* இந்தியச் சாதியமைப்பு என்பது இங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடி இனக்குழுக்கள் நிலப்பிரபுத்துவ அதிகார அமைப்புக்குள் மேல்கீழாகத் தொகுக்கப்பட்டதன் விளைவாக உருவான ஒருமுறை. அதற்கு நிலப்பிரபுத்துவ அமைப்பில் முக்கியமான பொருளியல் பங்களிப்பு உண்டு. ஆகவே அதை அன்றைய அரசுகள் பேணின. ஒவ்வொரு சாதியும் தன் கீழே உள்ள சாதியைக் கட்டுப்படுத்தியதன் வழியாக சாதியமைப்பைப் பேணியது. ஒவ்வொரு சாதியும் அதனால் பயன்பெற்றது.அதற்கு மதமும் ஆசாரங்களும் எல்லாமே கருவியாகப் பயன்பட்டன. அது உலகமெங்கும் நிகழ்ந்ததுதான். நிலப்பிரபுத்துவ அதிகார அடுக்கத்தின் கருவியாக பயன்படாத மதம் என எதுவுமே உலகில் இன்றில்லை
* இந்தியச்சாதியமைப்பு என்பது அதிகார உருவாக்கத்தின் முறைமை. அதிகாரம் ஒருபோதும் நிலையானதல்ல. ஆகவே இந்தியச் சாதியமைப்பு மாறிக்கொண்டுதான் இருந்தது. ஐரோப்பியர் சொன்னதைப்போல எப்போதைக்குமாக உறைந்துபோன ஒன்றல்ல.
இங்குள்ள ஒவ்வொருசாதியும் நிலத்துக்காக, அதிகாரத்துக்காகப் போராடியபடியேதான் இருந்திருக்கிறது. நிலத்தையும் அதிகாரத்தையும் அடையும்போது சாதிப்படிநிலையில் மேலே செல்கிறது இழக்கும்போது கீழே வருகிறது. இந்தியாவிலுள்ள ஆளும்சாதிகளில் பல கீழிருந்து மேலே வந்தவை. அடித்தளச்சாதிகளில் பல வீழ்த்தப்பட்டவை. நிலம் பெரும்பாலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளது.
* .இந்தியாவில் உள்ள பல அரச வம்சங்கள் அடித்தள வாழ்க்கையில் இருந்த சமூகங்களோ பழங்குடிகளோ எழுச்சி கொண்டு உருவாக்கிக் கொண்டவை. இந்திய வரலாற்றைக் கூர்ந்து பார்க்கும்போது ஆரம்பத்தில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்து மெல்லமெல்ல நிலஉடைமையாளர்களாக ஆன சாதிகள் உபரியைத் திரட்டிக்கொண்டு அதன்வழியாக வலுவான சமூகக்கூட்டுக்களை அமைத்து அரச அதிகாரத்தைக் கைப்பற்றியதைக் காணலாம்.
தொல்தமிழ் வரலாற்றில் வேளிர்கள் என்னும் மருதநில குறுநில மன்னர்கள் ஏராளமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. மருதநிலம் அதிகமாக செல்வத்தை உருவாக்கக்கூடியது. ஆகவே பெரிய குலத்தலைவர்கள் சிறிய மன்னர்களாக ஆனார்கள். அவர்கள் கூட்டாகச்சேர்ந்து தமிழகத்தை ஆண்டார்கள். சங்ககாலத்திலேயே இவர்களின் அதிகாரம் பெருமளவு ஒடுக்கப்பட்டாலும் கூட பிற்கால சோழர்க்ளின் அரசில் கூட வேளிர்குல குறுமன்னர்கள் பெரும் அதிகாரத்துடன், மன்னர்களை கட்டுப்படுத்துபவர்களாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. மன்னர் அவர்களின் சபைத்தலைவர் என்றமுறையிலேயே ஆட்சி செய்தார். மன்னர்களுக்குப் பெண்கொடுப்பதும் இவர்களே.
இந்தமுறையே இந்தியா முழுக்க இருந்திருக்கிறது. ஆரம்பகால இந்திய மன்னர்கள் விவசாயத்துக்குள் வந்த இனக்குழுக்களில் இருந்து உருவானவர்க்ள். இதை விரிவாக விவாதிக்கும் டி டி கோசாம்பி குறியீட்டுரீதியாகக் கூட இதை விளக்கமுடியும் என்கிறார். கங்கைச் சமவெளியில் வலுவான மன்னர்கள் உருவான காலகட்டம் இப்படிப்பட்டதே.அதாவது மகாபாரதம்போன்ற நூல்கள் எழுதப்பட்ட காலகட்டம்.
* இந்திய வரலாற்றின் அடுத்த கட்டத்தைக் கவனித்தால் மேய்ச்சல்சாதிகள் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் காணலாம். மேய்ச்சல்சாதிகள் வலுவான ஒருங்கிணைப்பு கொண்டவர்களாகவும் நெடுந்தூரப்பயணம் செய்யக்கூடியவர்களாகவும் கடும்சூழல்களை சந்திக்கக்கூடியவர்களாகவும் இருந்தமையால் நிலவுடைமைச்சமூகங்களைவிட அவர்கள் அதிக வலிமைகொண்டார்கள். இந்தியாவின் அடுத்தகட்ட பேரரசுகள் மேய்ச்சல் சமூகங்களால் அமைக்கப்பட்டவை. மௌரிய பேரரசு மூரா பழங்குடிகளால் அமைக்கப்பட்டது. அதன்பின் யாதவப்பேரரசுகள். அதன்பின் நாயக்கர் பேரரசு. அதன்பின் மராட்டியப்பேரரசு. இவர்கள் அனைவருமே மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள்தான்
* இந்த வரலாற்றுப்பின்னணியில் நவீன இந்தியாவில் ஒரு பொதுப்போக்கு காணப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த பொருளியல் வாய்ப்புகளைப்பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையும் ஒவ்வொரு சாதியும் தன்னை சாதிப்படிநிலையிலும் மேலே கொண்டுசெல்ல முயல்கிறது. அதற்கு அது இரண்டு அடையாளங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று ஒரு புராண அடையாளம். இன்னொன்று ஆட்சியதிகாரம் சார்ந்த அடையாளம்.
புராண அடையாளம் என்பது இந்தியாவின் புராணமரபில் ஒரு இடத்தை, ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்வதாகும். இந்திரன், விஸ்வகர்மா போன்ற தேவர்கள் அல்லது காஸ்யபர் போன்ற ரிஷிகளின் மரபில் வந்தவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இதன்மூலம் இந்தியாவின் பிரம்மாண்டமான இறந்தகாலத்துடன் அவர்களால் தங்களை பிணைக்கமுடிகிறது. அந்த அடையாளம் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது.
அடுத்தபடியே ஆண்ட வம்சம் என்னும் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுதல். ஒருகாலத்தில் ஆட்சிசெய்த வம்சமாக இருந்தோம் என்பது பெருமிதத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்தியாவில் உள்ள மிகச்சில சாதிகளைத் தவிர அனைத்துச்சாதியினரும் எங்கோ ,எப்போதோ சிறிய அளவிலேனும் ஆட்சியாளர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் அந்த அடையாளத்தைப் பெரிதாக ஆக்கிக்கொள்ளமுடியும்
இதன் விளைவாகவே இன்று ‘ஆண்ட பரம்பரை’ என்ற சுயவரலாற்று உருவாக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இது சாதிய அரசியலின் ஒரு பகுதியே ஒழிய இதற்கு வரலாற்று அடிப்படை என ஏதும் இல்லை. இன்று அதிகமும் பொருளியல் முன்னேற்றமும் ஆட்சியதிகாரமும் பெற்று வருபவர்கள் இடைநிலைச்சாதிகள். அவர்களுக்கு இந்த இரு அடையாளங்களும் பெரிதும் தேவைப்படுகின்றன.
தமிழக மன்னர்களின் சாதி
தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்? மிகவிரிவான ஆராய்ச்சிக்குரிய தலைப்பு இது.சுருக்கமாக இப்படி ஒரு விவரணையை அளிக்கலாம்
*.சங்க காலகட்டத்தில் எல்லா சாதிகளும் அந்தந்த பிராந்தியங்களில் ஆட்சியமைத்திருந்ததைக் காணமுடிகிறது. மீனவர்கள் கடற்சேர்ப்பர்கள் என்ற ஆட்சியாளர்களாக இருந்தனர். மருதநிலத்தில் வேளிர் மன்னர்கள் இருந்தார்கள். மலைகளில் குறவ மன்னர்கள் இருந்தார்கள். ஆய் அண்டிரன் போன்ற ஆய் குல மன்னர்கள் மேய்ச்சல் சாதியைச்சேர்ந்தவர்கள் .நாஞ்சில் குறவன் போன்ற குறவமன்னர்கள் பெரும் வல்லமையுடன் இருந்திருக்கிறார்கள். குறவ அரசியான குறத்தியறையார் சிதறால்மலையில் இருந்த சமணப்பள்ளிக்கு பெரும் நன்கொடை அளித்ததாக அங்கே உள்ள கல்வெட்டு சொல்கிறது.மறவ மன்னர்கள் இருந்திருப்பதை சங்க காலத்தில் இருந்தே காண்கிறோம்.
* அனைத்துச்சாதியில் இருந்தும் உருவாகி வந்த மன்னர்களை சிறுகுடிமன்னர்கள் என்று சொன்னார்கள். இவர்களில் இருந்து உருவாகி வந்தவர்களே சேரர்,சோழர், பாண்டியர் என்னும் மூன்று பெருங்குடி மன்னர்கள். இவர்களின் வேர் என்ன, இவர்கள் எப்படி உருவானார்கள் என்பதெல்லாம் இன்றும் எந்தவகையான உறுதியான முடிவையும் சொல்லக்கூடிய அளவில் ஆராயப்படவில்லை
* பாண்டியர்குலமே இவர்களில் பழைமையானது. பண்டையோன் என்பதில் இருந்து பாண்டியன் என்னும் சொல் வந்திருக்கலாம். பல கல்வெட்டுகளில் பழையர் என்றும் பரதர் என்றும் இவர்கள் குறிக்கப்படுவதில் இருந்து தொன்மையான பரதவ மன்னர்களின் மரபினர் என ஊகிக்கலாம்.
* சேரர்கள் தொன்மையான குறவர்குலத்தில் இருந்து வந்திருக்கலாம். அதற்கான சான்றுகள் ஐங்குறுநூறு போன்ற சேரர்குலவரிசையைச் சொல்லும் பாடல்களில் உள்ளன
* முற்காலச் சோழர்கள்கூட வெளியே இருந்து வந்தவர்கள் என ஊகிப்பதற்கான எல்லா சாத்தியங்களும் சங்கப்பாடல்களில் உள்ளன. காவேரி வழியாக வணிகம்செய்தவர்கள் மன்னர்களானார்கள். கோழிக்கொடி அடையாளமே பின்னர் குல அடையாளமாக ஆகியது.
* முற்கால மூவேந்தர்களின் அடையாளம் எந்த சாதியுடனும் முழுக்கப்பொருந்துவதில்லை. அவர்களைப்பற்றிய ஊகங்கள் மிகமிக தோராயமானவை. ஆனால் அவர்கள் இங்குள்ள சிறுகுடி மன்னர்களிடம் போரிட்டு அவர்களை அடக்கி ஒடுக்கினர்.சங்க காலம் மூவேந்தர்கள் சிறுகுடிமன்னர்களை அழிக்கும் சித்திரத்தைக் காட்டுகிறது. தமிழக வரலாற்றின் இந்த நாற்றங்கால் பகுதி இன்றுவரை முறையாக எழுதப்படாமலேயே உள்ளது.
* சிறுகுடிமன்னர்களும் பழைமையான குலங்களும் மூவேந்தர்களுக்குப் பெண்கொடுக்க மறுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அது ஒரு சடங்குபோலவே புறநாநூற்றில் குறிப்பிடப்படுகிறது. மகட்கொடைமறுத்தல் என்ற பேரில் பின்னாளில் ஒரு துறையாக வகுக்கவும் பட்டது. இது மூவேந்தரும் தமிழின் எந்தத் தொல்குடியையும் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் அன்னியர்களாக இருக்கலாமென்பதற்கான ஆதாரமாகக்கொள்ளப்படலாம்
* களப்பிரர் காலம் உருவாக்கிய முந்நூறு ஆண்டு இடைவேளைக்குப்பின்னர் வந்த சேர சோழ பாண்டிய குலமரபுகள் பெரும்பாலும் நடுவே முந்நூறாண்டுக்காலம் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டவை.பழைய மன்னர்குலங்கள் சிதறிப்பரந்துவிட்டிருந்தன. அவர்களில் ஏதேனும் ஒரு வம்ச அடையாளம் கொண்டிருந்தவர்கள் படைதிரட்டிக் களப்பிரரை வென்று தங்களை சோழர் பாண்டியர் என்று அறிவித்துக்கொண்டார்கள். களப்பிரர் காலமும் அவர்களை வென்று பிறகால பாண்டியர் சேரர் சோழர் உருவான காலமும் தெளிவாக இன்றும் எழுதப்படவில்லை
* பிற்காலச் சோழர்கள் தமிழர்களே அல்ல என்று பல ஆய்வாளர்கள் வலுவாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் ஆந்திரநிலத்திற்குச் சென்று அங்கே குடியேறி மணம் செய்து வாழ்ந்தவர்கள். கோதாவரிநிலமே வெங்கிநாடு. சோழர்கள் வெங்கிநாட்டிலிருந்து களப்பிரரை வெல்ல படைகொண்டுவந்தார்கள். அவர்களின் மண உறவுகள் எல்லாமே வெங்கிநாட்டைத்தான் சார்ந்திருந்தன
* பிற்காலப்பாண்டியர்களைப்பற்றி இன்று வரை முறையான எந்த ஆய்வும் இல்லை. அவர்களின் குலங்கள் சிதறிப்பரந்து கிடந்திருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒன்று அந்த பழைய அடையாளத்தை முன்வைத்து மதுரையைக் கைப்பற்றியிருக்கலாம் என்று மட்டுமே ஊகிக்கமுடிகிறது
* பிற்காலச்சேரர்கள் பற்றி இந்த அளவுக்குக் கூட ஏதும் வரலாற்றில் இல்லை. ஆய்வாளர் இளங்குளம் குஞ்சன்பிள்ளை ஓர் ஊகமாகச் சொல்லியவற்றையே அப்படியே இன்றும் சொல்லிவருகிறார்கள். அதாவது பழங்கால சேரர் ஆட்சி களப்பிரரால் அழிந்தது. அதன்பின்னர் சேரர்குலங்கள் சிதறி வாழ்ந்தன. களப்பிரர் காலத்திற்குப்பின்னர் பதினெட்டு சேரர்கள் கேரளமண்ணை ஆண்டார்கள். அவர்களை ராஜராஜசோழன் வென்று சோழ ஆட்சியை நிலைநாட்டினான்.
சோழர் ஆட்சி வீழ்ச்சியடைந்தபின்னர் சேரர்குலத்தின் நேரடிவாரிசுகள் பெருமாள்கள் என்றபேரில் வஞ்சி என்னும் கொடுங்கல்லூரை ஆண்டனர். அவர்களில் கடைசிப்பெருமாள் குலசேகரப்பெருமாள். அவர் தன் உடைவாள் மற்றும் மணிமுடியுடன் தெற்கே வந்தார். இங்கே இருந்த தலக்குளம் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற சிற்றரசி குடும்பத்திற்கு அவற்றை அளித்தார். ஆகவே அவர்கள் சேர வாரிசுகள் ஆனார்கள். அவர்களிடமிருந்தே திருவிதாங்கூர் அரசவம்சம் உருவாகியது.
* ஆக தமிழகத்தின் மூவேந்தர்கள் உண்மையில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று இன்று சொல்லமுடியாது. அவர்கள் இன்றுள்ள எந்த பெரும்சாதியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் தனிக்குலங்களாகவே நூற்றாண்டுகளாக நீடித்தார்கள் என்றும் மட்டுமே சொல்லமுடியும்.
* சோழர்குலம் பாண்டியர்களால் முழுமையாக அழிக்கப்பட்டது. பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்பட்டது. அவர்கள் தென்காசி, கயத்தாறு பகுதிகளில் வாழ்ந்து பின்னர் அரியநாதமுதலியாரால் அழிக்கப்பட்டார்கள். தென்காசிப்பாண்டியர்களின் கடைசிப் பெண்வாரிசு கொல்லம் மன்னரால் மணக்கப்பட்டபின்னர் அந்த பரம்பரை அழிந்தது. சேரர்களின் கடைசிக் கண்ணி குலசேகரப்பெருமாள். அவருக்குப்பின் ஆண்ட மன்னர்கள் எல்லாருமே பல்வேறு வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சிறிய குலமுறை ஆட்சியாளர்களே.
அதாவது மூவேந்தர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. அவர்கள் எந்தச்சாதியிலும் இருக்கவில்லை. அவர்கள் தனித்தனி குலவரிசையினர். அக்குலவரிசை அழிக்கப்பட்டபோது அவர்கள் முழுமையாகவே அழிந்தனர்
* மூந்தர்கள் அவர்களுக்குக் கீழே இருந்த எல்லா சிறுகுடிமன்னர்களிடமும் பெண் எடுக்கும் உறவை கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்கள் வேளிர் மன்னர்களிடமும் மறவ மன்னர்களிடமும் பெண் எடுத்ததைக் காணமுடிகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தேவதாசிக்குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்துப் பட்டத்தரசியாக்கினான். ஆகவே பெண்கொடுத்த வகையில் எந்த சாதியும் மூவேந்தர்களை உரிமைகொண்டாட முடியாது.
* இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாதிகளுக்கு ஏதேனும் ஒரு ஆட்சியதிகாரம் இருந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டமுடியும். சேரநிலப்பகுதியில் புலையர்களின் இரு சிற்றரசுகள் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. புலையனார்கோட்டை என அதற்கு பெயர். அனந்தபத்மநாபன் ஆலயம் இருந்த பகுதி புலையனார்காடு என்றே சொல்லப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில்கூட மீனவ அரசன் இருந்திருக்கிறான் என்பதை அவனைப்பற்றி ஒரு வேளாளக் கவிஞரால் பாடப்பட்ட செண்பகராமன் பள்ளு காட்டுகிறது. வெண்கலராஜன் கதை நாடார்களின் அரசனைப்பற்றிச் சொல்கிறது. ஆகவே ஒருவகையில் எல்லா சாதிகளும் ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் மூவேந்தர்கள் தாங்களே என்பது எவர் சொன்னாலும் வெறும் சாதிப்பெருமை மட்டுமே
தமிழக வரலாறு இன்னும்கூட முழுமையாக எழுதப்படவில்லை.அதன்பெரும்பகுதி சொல்லப்படாமலேயே உள்ளது. அதை புறவயமான சார்பற்ற தரவுகளின் அடிப்படையில் எழுதும் முயற்சியே இன்றைய தேவை. சாதியமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் அரைகுறைத்தகவல்களைக்கொண்டு உருவாக்கும் ஒட்டுவேலை வரலாற்றை முழுமையாகப் புறக்கணிப்பதே சரியான வழி.சமநிலையுள்ள ஆய்வாளர்களின் வழி.
ஜெ
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 28, 2013
தொடர்புடைய பதிவுகள்
சாதியும் அடையாளமும்
விலக்கப்பட்டவர்கள்
சாதி-வர்ணம்-முக்குணங்கள்
சாதியாதல்
இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்
சாதி,சமூகம்-கடிதம்
சாதியும் ஜனநாயகமும்
விலாங்கு
தறி-ஒருகடிதம்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2
வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம்
சாதி, இருகேள்விகள்
சாதியும் கதைகளும்
கல்வாழை, கடிதங்கள்
சாதி கடிதங்கள்
கணியான் ஒரு கடிதம்
பெரியார்-அறிவழகன் கடிதம்
சாதிபற்றி மீண்டும்…
எந்த அடையாளம்?
முற்போக்கு எனும் மதம்
மாமங்கலை – கடிதங்கள்
வணக்கம்
”மாமங்கலையின் மலை” தொடரை தாமதமாக வாசிக்கத்தொடங்கினேன் இருந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதி முடித்த பின்னர் உங்களுக்கு எழுதலாமென்றிருந்த்தேன் ஆனால் இப்போதேயெழுதுகிறேன். எழுத்தாளனை பிறர் கையில் கொடுத்துவிடும் முதுமையில் தொடங்கி பல இடஙகளின் வரலாறை அழகாக சொல்கிறீர்கள். 3 பதிவுகள் வாசித்ததும் எனக்கு தோன்றியது என்னவென்றால், -கொஞ்சமும் உயிரே இல்லாத வரலாற்றுப்பாடங்களை தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் மனனம் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களைப்போல வரலாற்றை இப்படி சிறப்பாக இல்லாவிடினும் இதில் 100இல் ஒரு பங்கு எழுதினாலே மாணவர்கள் வரலாற்றையும் அறிந்து கொள்வார்கள் அதில் விருப்பமும் உண்டாகும் மதிப்பெண்களும் எடுக்க முடியும்- என்றே!
தலக்காடு, கேரளா, திபெத், மூகாம்பிகை,சபரி மலைப்பயணம்,சீரங்கப்பட்டினம் என்று விரிந்து கொண்டெ போகும் தகவல்கள் கொஞ்சமும் அலுப்புத்தட்டாமல் அத்தனை ஆர்வமாய் இருக்கிறது.
,//நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. // //
அனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்லுதல்////
உட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் // /
/ பிறவியே ஒரு நோய்தானே/
/ இதெல்லாம் எத்தனை ஆழமான அற்புதமான வரிகள்?
இப்படி சில வரிகள் வரலாற்றுப்பாடபுத்தகத்தில் 40 அலல்து 50 பக்கங்களுக்கு நடுவில் ஒன்றிரண்டு வந்தால் கூட மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்களே? சரண் தருண் கஷ்டப்பட்டு படிக்கும் வரலாற்றுப்பாட புத்தகங்களில் உயிரே இல்லாமல் வரண்டல்லவா இருக்கிறது?
புகைப்படங்களும் அருமையாக இருக்கிறதுசார். மணலில் செருப்புகளையும் பயனப்பைகளையும் காவலிருக்கும் சின்னக்சிறு குழந்தைகள், அந்தியின் ஒளியில் ஒரு நாய், பப்பி நாய்க்குட்டியுடன் நீங்கள்,பரிசல் பயணம், என்று!
இன்றைய பதிவில் காருக்குள் அமர்ந்து பயணிப்பதைப்பற்றி சொல்லி இருந்தீர்கள். அப்படி நெருங்கி வருவதாலேயே சில குடும்பங்களில் கசப்பு உருவாகலாமென்றும் சொல்லி இருந்தீர்கள். ஆமென்றே நினைக்கிறேன். என் உறவினரின் கணவர் வீட்டில் அவளை வசைபாட த்தொடங்கினால் அவள் சமையலறைக்கோ வேறு அறைக்கோ போய் தாளிட்டுக்கொள்வாள் . அவரோ காரில் நெடும்பயணம் செய்கையில் கோவையத்தாண்டியதும் வசைபாட தொடங்கிவிடுகிறார் இப்போதெல்லாம். அவளால் இறங்கி ஓடமுடியாது வேறெங்கும் போய் தப்பிக்க முடியாது அல்லவா?
பல நினைவுகளை கிளறிவிடும், பற்பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் கலவையான அருமையான பயணக்கட்டுரையாக இருக்கிறது சார் இந்த தொடர்
நன்றிகளுடன்
லோகமாதேவி
Dear Jeyamohan
The journey to “Kudajadri” and your narration is awesome. I could imagine the mountain ranges submerged under the green foliage, the water falls like the giant tears from the rocks and the clouds gently caress the mountains as if to console it. Our tradition of the naming convention to natural phenomenon that focus on divinity, resonating the age old culture is a good point.
The setting sun’s rays that magically turns everything into glowing crimson red reminded me the omnipresence of “Mamangalai”. The best part is that you wanted to string all that radiant sunset you have seen around the World into a “Mala” for “Mamangalai”. What a great offering to Mother! Beautiful.
The observation on the reverence shown to the Karnataka writers, humor with your friends, the description of the region, people, and above all the nature in beautiful Tamil creates an interest to visit the Ma’s abode.
Safe journey. Thank you.
Warm regards,
Sobana
அன்புள்ள ஜெ
நெடுங்காலம் கழித்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரை. சென்ற பல பயணங்களை நீங்கள் எழுதவில்லை. ஸ்புடிவேலி , அதன்பி ஐரோப்பியப் பயணம், அதன்பின் சிங்கப்பூர், அதன்பின் கேதார்நாத் கடைசியாக தெலுங்கானா பயணம் ஆகியவற்றைப்பற்றி அறிவிப்புகள் மட்டும்தான் வந்தன. இந்தப்பயணக்கட்டுரையை வாசிக்கும்போது ஏக்கமாக இருந்தது. நானெல்லாம் பயணம்செய்ய வாய்ப்பு குறைவான பெண். எனக்கு இந்தப்பயணங்களில் உங்களுடன் வருவதுபோன்ற அனுபவம்தான் முக்கியமான விடுதலை. இந்தக்கட்டுரைகள் தொடரவேண்டும் என நினைக்கிறேன்
சித்ரா
அன்பின் ஜெ,
வணக்கம், மாமங்கலையின் மலை பிரமாதம். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் இப்படியொரு பயணம் சென்று வர வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு முழுக் கட்டுரை படித்தேன். மூகாம்பிகையும் சாரதையும் எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்து கொண்டே இருக்கிறேன்.
திருக்குறள் அரசி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10
10. வான்மணம்
பின்னிரவில் தன்னை எழுப்பியது சேக்கையில் தன் இடக்கை உணர்ந்த வெறுமையே என விழித்து சில கணங்களுக்குப்பின்னரே பீமன் அறிந்தான். ஆழ்துயிலிலும் அவன் வலக்கை இயல்பாக நீண்டு சென்று அவளைத் தொட்டு அறிந்து கனவுக்குள் வந்து சொல்லிக் கொண்டிருந்தது. அங்கே அவள் காட்டுப்பெண்ணாக இருந்தாள். அவள் அரசி என்று மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியது கை. அவள் கிடந்த இடத்தின் மரவுரிக்குழியை துழாவி திகைத்து கை கொண்ட அசைவே புற உலகென அவனுள் வந்து உலைந்தது. எழுந்தவன் அரையிருளில் அச்சிற்றறையைச் சுற்றி நோக்கியபோதுகூட வலக்கை அவ்விடத்தை தொட்டுக்கொண்டிருந்தது.
எழுந்து ஆடையை எடுத்து சுற்றிக்கொண்டு வாயிலை பார்த்தான். மூங்கில்படல் சற்றே திறந்திருக்க, வாழைத்தண்டென வெளிறிய வானம் நின்றிருந்தது. பறவைக்குரல் ஒன்று குழறிக்கொண்டிருக்க காற்று குளிர்ந்த பெருக்கென அறைக்குள் வந்து சுழன்றது. அவள் ஆடை அப்பால் சிறுமேடையில் மெல்ல அசைந்துகொண்டிருந்தது. என்ன என்றறியாது எழுந்த பதற்றத்தை அவனே சற்று விலகி நின்று வியந்தபடி கதவை திறந்தான்.
மஞ்சத்தறையின் வெளிவிளிம்பிலோ அடுமனைக்குச் செல்லும் பாலத்திலோ அடுமனை குடில்விளிம்புகளிலோ அவள் இல்லையென்பதை சில கணங்களில் உணர்ந்தான். தன் உடல் முழுக்க பரவிய அச்சத்தை மூச்சை இழுத்து விட்டு அமைதிகொள்ளச்செய்ய முயன்றான். எடைமிக்க காலடிகளுடன் உட்கூடத்திற்கு வந்தபோது அப்பதற்றம் உடலிலிருந்து விலகி உள்ளிறங்கி உள்ளம் முழுக்க நிறைந்திருந்தது. உதடுகளை இறுக்கி அவற்றை சிறை கட்டினான். எவரையும் எழுப்பலாகாது என்ற எண்ணத்துடன் மெல்ல காலடி வைத்து குடில் முகப்புக்கு வந்து கீழே பார்த்தான்.
முதல் விழியோட்டலிலேயே தோட்டத்தில் மலர்ச்செடிகளுக்கு நடுவில் அவள் இருப்பதை பார்த்துவிட்டான். அனைத்துச் சுருள்விற்களும் இறுக்கமிழந்து நெகிழ உடல் எளிதாகியது. நீள்மூச்சுகளாக விட்டபடி தூண் சாய்ந்து அவளை நோக்கி நின்றான். கவிழ்த்திட்ட கூடையொன்றில் அமர்ந்து முழங்கால்மேல் கைவைத்து கைகளில் தாடையைத் தாங்கியபடி தொடுவானைப் பார்த்து அமர்ந்திருந்த திரௌபதியின் முகம் வானின் மெல்லிய ஒளியில் எண்ணெய்ப் பூச்சு பெற்ற கருங்கற்சிலையென தெரிந்தது. நீள்குழல் முன்னெடுத்து மடியில் போடப்பட்டிருந்தது. அவளுக்கு சற்று அப்பால் வேலித் தடிமீது நான்கு பெருங்குரங்குகள் அவளைப்பார்த்தபடி காவலென அமர்ந்திருந்தன. மரக்கிளைகளுக்கு மேல் மேலும் பல குரங்குகள் அவளை நோக்கி வால் தொங்க துயில்பவைபோல தொய்ந்தும் அவ்வப்போது சிறுசெவி அசைத்தும் அமர்ந்திருந்தன.
அவை இருப்பதை அறியாதவண்ணம் அவள் தனக்குள் மூழ்கியிருந்தது தெரிந்தது. அருகே செல்வதா மீண்டும் மஞ்சத்திற்கே திரும்பிவிடலாமா என்று எண்ணினான். எம்முடிவும் எடுக்காமல் உடலை அசைத்தபோது அதுவே படிகளை நாடிச்சென்றது. தான் இறங்கும் ஒலி கேட்டு அவள் திரும்பிப்பார்ப்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் முற்றத்தில் இறங்கி பாத்திகளுக்கு நடுவே இடப்பட்ட சிறுபாதை வழியாக நடந்தபோதுகூட அவள் அவனை அறிந்ததாகத் தெரியவில்லை.
அத்தனை குரங்குகளும் முதலிலேயே அவனைப் பார்த்து செவிகோட்டி காட்டிவிட்டிருந்தன. அவன் அணுகுவதை உணர்ந்ததும் முதற்பெருங்குரங்கின் வால் சற்று வளைந்து அசைந்தது. தன் தலையை அசைத்து அதற்கு அவன் செய்கை காட்டினான். மெல்ல முனகியபடி அது மீண்டும் மரக்கிளையில் உடல் குவித்து அமைந்தது. அடிவயிற்றிலிருந்து சிறு உண்ணியைப் பிடுங்கி பிறைநிலவொளியில் கூர்ந்து நோக்கியது. அதன் மென்முடிப்பரப்பு குளிரில் சிலிர்த்து இரவின் மெல்லிய ஒளியில் ஊறித்தெரிந்தது.
பீமன் மிக அருகே சென்று நின்ற பிறகுதான் திரௌபதி அவனை உணர்ந்தாள். இலை விழுந்த சிறு சுனையென உடல் முழுக்க மெல்லிய விதிர்ப்பு எழ நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “ஏன் இங்கிருக்கிறாய்?” என்றான். “துயில் கலைந்தது” என்று அவள் சொன்னாள். “உன்னைத் தேடினேன்” என்று அவன் சொன்னான் “நீயில்லாத உணர்வை கை அடைந்தபோது விழித்துக்கொண்டேன்” என்றான். அவள் புன்னகைத்தபோது இருளில் பல்நிரைகளின் ஒளி தெரிந்தது. “அஞ்சிவிட்டீர்களா?” என்றாள். “பதற்றம் கொண்டேன்” என்றபடி அவன் அமர்வதற்காக சுற்றும் முற்றும் நோக்கினான். அப்பால் கிடந்த பிறிதொரு மூங்கில்கூடையை எடுத்து வந்து அவளருகே போட்டு அதில் அமர்ந்து முழங்கால்கள் மேல் கைமுட்டுகளை ஊன்றிக்கொண்டான்.
கைநகங்களை நிரத்தி அவற்றை நோக்கியபடி இயல்பான குரலில் “மீண்டும் எவரேனும் தூக்கிச் சென்றிருப்பார்கள் என்று எண்ணினீர்களா?” என்றாள். அப்போதுதான் தான் அடைந்த எண்ணங்களை அவன் திரும்பிப்பார்த்தான். விந்தை உணர்வுடன் தலையசைத்து “இல்லை. அவ்வெண்ணம் ஒருகணம்கூட எழவில்லை” என்றான். “பிறகு…?” என்று அவள் கேட்டாள். அவன் சற்றுநேரம் சொல்தவித்தபின் “கதவைத் திறந்து நீ வெளியேறுவதை ஒருகணம் என் உள்ளம் உருவெளித் தோற்றமாக கண்டுவிட்டது” என்றான்.
“வெளியேறுவது என்றால்…” என்று அவள் கேட்டாள். “வெளியேறுவதுதான்… இவை அனைத்திலிருந்தும்” என்றான் பீமன். அவள் நிமிர்ந்து அவனை நோக்கியபோது விழிகளின் நீர்மை வானின் மெல்லொளியில் துலக்கமாகத் தெரிந்தது. மீண்டும் கைகள் மேல் தாடையை வைத்தபோது வளையல்கள் மெல்லிய ஒலியுடன் ஒருங்குகூடின. அவள் ஆடை சரிந்து மண்ணில் நுனி விழுந்தது. “வெளியேறி எங்கு செல்வது?” என்றாள்.
“வெளியேறும்போது அதை நாம் பெரிதாக எண்ணுவதில்லை. எம்முடிவும் எடுக்காமல் வெளியேறுகிறோம். அல்லது அப்போதைக்கென ஓர் இலக்கை கற்பனை செய்து கொள்கிறோம்” என்றான் பீமன். அவள் புன்னகைத்து “வெளியேறுவது எவ்வளவு பெரிய கனவு, இல்லையா? வெளியேறிவிட முடியும் என்ற நம்பிக்கை, வெளியேறுவதைப்பற்றிய பல வகையான கற்பனைகள், அவற்றினூடாகத்தான் அனைத்தையும் கடந்து வருகிறார்கள் மானுடர்கள்” என்றாள். “ஆம்” என்றபின் அவன் நகைத்து, “துணிந்து வெளியேறியவர்கள் அவ்விரு இன்பங்களையும் இழந்துவிடுகிறார்கள். மீண்டும் ஒருமுறை வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை” என்றான்.
இருகன்னங்களிலும் நீள்குழிகள் விழ இதழ்கள் நீள “உங்கள் வழக்கமான கசப்பு” என்றபின் அவள் தலை திருப்பி சூழ மலர்ந்திருந்த மலர்களை நோக்கினாள். அவன் வானை பார்த்தான். விடிய நெடுநேரமிருப்பது தெரிந்தது. விண்மீன்களின் பொருளற்ற பெருக்கு. பெருங்கூட்டமென்றாலும் ஒவ்வொன்றும் தன்னந்தனிமையில் மின்னிக்கொண்டிருந்தன. “புலரி மலர்கள் விரிய இன்னும் பொழுதிருக்கிறது” என்றான். அவள் அதைக் கேட்டதாக தெரியவில்லை. “கருக்கிருட்டு எழும் பொழுது. தென்குளிர் காற்றிலேறவிருக்கிறது.” அவள் “ம்” என்றாள். “அதனூடாகத்தான் மலர்களை விரியச்செய்யும் கந்தர்வர்கள் மண்ணிறங்குகிறார்கள் என்று கதைகள் சொல்கின்றன.”
அவள் கீழிருந்து ஒரு இலையை கையிலெடுத்தாள். அதை விரல்களால் நெருடியும் சுழற்றியும் நோக்கியிருந்தபின் தலைதிருப்பி “நான் ஒரு மலரின் நறுமணத்தை துயிலுக்குள் அறிந்தேன்” என்றாள். “என்ன மலர்?” என்று அவன் கேட்டான். “தெரியவில்லை. கனவுக்குள் அது செண்பகம் போலவோ பாரிஜாதம் போலவோ தோன்றியது. அல்லது அறியாத வேறு ஏதோ மலர் போல. கனவுக்குள்ளே பாரிஜாதம் என்று முதலில் எண்ணியதும், செண்பகமா என்று வியந்ததும் நினைவிலிருக்கிறது” என்று அவள் சொன்னாள்.
“கனவிலிருந்து ஒரு நறுமணத்தை மீட்டெடுப்பது எளிதல்ல” என்றான் பீமன். “எண்ணங்களைக்கூட தொகுத்துக்கொள்ளலாம்.” திரௌபதி “ஆனால் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தபோதும் ஆடை தேடி அணிந்துகொண்டபோதும்கூட அந்த நறுமணத்தை நுகர்ந்து கொண்டிருந்தேன்” என்றாள். “விழித்தபிறகும் கனவு நீடிப்பதுண்டு” என்றான் பீமன். “அவ்வாறல்ல… அது வெறும் கனவல்ல. நான் துயின்றுகொண்டிருந்தபோது மிக அருகே அந்த மணம் வந்திருக்கிறது… உண்மையிலேயே” என்றாள்.
பீமன் நகைத்து “கல்யாண சௌகந்திகம் என்றொரு மலரைப்பற்றி சூதர்கள் பாடுவதுண்டு. கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். மூன்றாம் விண்ணில் கந்தர்வர்களின் உலகின் கன்னிமூலையில் அம்மலர் பூத்த மரம் நின்றிருக்கிறது. அதன் மலர்களில் ஒன்று பின்னிரவுப்பொழுதில் கந்தர்வர் மண்ணிலிறங்கும்போது அரிதாக தானும் நழுவி மண்ணில் உதிர்கிறது. அதைச் சிலர் எரிவிண்மீன் என காணக்கூடும். எரிவிண்மீன் சிவந்த நிறம்கொண்டது. கல்யாணசௌகந்திகம் வெண்ணிறமானது.”
“இளமையில் என் செவிலி அதை சொல்லியிருக்கிறாள்” என்றாள் திரௌபதி. “அந்த நறுமணம் அது விழும் இடத்தில் இருக்கும் கன்னியரின் கனவுக்குள் எழும். அவர்களை அது காதலில் அகம் ஒளிரச்செய்யும். விழித்தபின் பிச்சிகளாக்கும். சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வெறுக்க வைக்கும். உடலுருகி விழிகுழிந்து வாய் உலர்ந்து நோய்கொள்வார்கள். அறியாத ஒன்றை மட்டுமே எண்ணி எண்ணி தவமிருப்பார்கள். கல்யாண சௌகந்திகத்தின் மணம் பெற்ற பெண்கள் மானுட ஆண்களை விரும்புவதில்லை. அவள் உடலுருகி அழகிழந்துகொண்டே இருப்பாள். ஆனால் பின்னிரவின் ஒளியில் பேரழகியாவாள். அப்போது அவ்வழி செல்லும் கந்தர்வர்கள் அவளை ஒரு மலரென மணம் பெற்று அருகணைகிறார்கள். அழகனாகிய கந்தர்வன் ஒருவன் வந்து அவள் கைபற்றி அழைத்துச் செல்வான்” என்றான் பீமன்.
“அரிய கதை” என்றாள் திரௌபதி. பீமன் மெல்ல நகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் மணத்தை முதல் முறையாக அன்னையொருத்தி பெற்றிருக்கிறாள்” என்றான். சிலகணங்கள் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய நகைப்பு அவளுக்கு சென்று சேரவில்லை என்பதுபோல் நீர்த்துளியென அசைவிலாது ததும்பும் முகத்துடன் குனிந்து மலர்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “என்ன…?” என்றான் பீமன். “தெரியவில்லை. என்னை நான் அன்னையென்று உணர்கிறேனா, இல்லை கன்னியென்றா, சிறுமியென்றா? ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு வகை என்றே சொல்லமுடிகிறது. இன்ன தருணத்தில் இவ்வாறு என்று முன்பொருபோதும் சொல்லிவிடவும் கூடுவதில்லை” என்றாள்.
“நான் சொல்லவா?” என்றான் பீமன். “நேற்றிரவு உன்னை அன்னை என்று என்னிடம் சொன்னாய். மூதன்னை என எண்ணிக்கொண்டு துயின்றாய். உன்னுள் வாழும் கன்னி அதனால் சீண்டப்பட்டாள். கல்யாண சௌகந்திகத்தை கனவில் வரவழைத்தாள்.” திரௌபதி சிறுசீற்றத்துடன் தலைதிருப்பி “ஏன்? அன்னை என்பதில் என்ன குறை?” என்றாள். “அது முதுமையும்கூட அல்லவா” என்றான் பீமன். “அழகியர் அஞ்சுவது முதுமையை மட்டும்தான்.” அவள் தரையிலிருந்த ஒரு சுள்ளியை எடுத்து பூழி மண்ணில் எதையோ வரைந்தபடி தன் எண்ணங்களைத் தொடர்ந்தவளாக அமர்ந்திருந்தாள். பீமன் மீண்டும் அவள் தன்முன் இருந்து மறைந்துவிட்டதைப்போல உணர்ந்தான். அவளைத் தக்கவைக்கவே அவன் பேசிக்கொண்டிருந்தான். மீண்டும் ஒரு பேச்சைத் தொடங்க எண்ணி ஆனால் எதைப்பற்றி என தெளிவிலாமல் எண்ணம் அலைய அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.
புது எண்ணம் எழுந்ததுபோல் முகம் தூக்கி, முகத்தில் நிழலுடன் சரிந்து ஆடிய குழல்கற்றையை விரல்களால் எடுத்து செவிக்குப்பின் செருகியபடி, விரிந்த விழிகளில் ஒளி தெரிய திரௌபதி அவனை ஏறிட்டாள். “உண்மையிலேயே அப்படி ஒரு மலர் எங்கேனும் இருக்கக்கூடுமா என்ன?” என்றாள். அவள் அத்தனை நேரம் அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறாளா என எண்ணி உள்ளூர புன்னகைத்தபடி பீமன் “இருந்தால் அதை உனக்கு நான் கொண்டுவருவேன்” என்றான். “விளையாட்டல்ல, அப்படி ஒரு மலரில்லாமல் புராணங்களில் அது எவ்வாறு சொல்லப்பட்டிருக்கும்?” என்றாள். “புராணங்கள் அப்படி பல்லாயிரம் கதைகளை சொல்கின்றன, அரசி” என்று அவன் சொன்னான்.
அவள் இல்லையென்பதுபோல் தலையசைத்தாள். “ஆழியும் சங்கும் கதையும் மலருமேந்தி விண்ணில் ஒருவன் நின்றிருக்கிறான் என்றால் அது தொல்கதை மட்டும்தான். ஆனால் தொல்கதையால் அப்படி உருவமளிக்கப்பட்ட ஒன்று அவர்களால் உணரப்பட்டிருக்கிறது என்பதே அதன் மெய்” என்றாள். அவளில் எழுந்த அகவிசை அவனை குழப்பம்கொள்ளச்செய்தது. “என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டான். “கல்யாண சௌகந்திகம் என்றுணரப்பட்டது எது?” என்றாள். பீமன் “கனவு” என்றான். முடிந்தவரை குரலை தட்டையாக ஒலிக்கவைத்து “இளமையில் இவையனைத்திற்கும் அப்பால் என்றுதான் உள்ளம் எழுகிறது. அவ்வெழுச்சி வெளியுலகை முட்டித் திரும்பி வருகையில் உள் நிறைகிறது. கனவுக்குள் செல்லத்தான் முடிவற்ற தொலைவு இருக்கிறதே! ஆண்கள் அவர்கள் வெல்லவிருக்கும் உலகை கனவு காண்கிறார்கள். பெரும்புகழை எண்ணி ஏங்குகிறார்கள். பெண்கள் கொள்ளும் கனவும் ஏக்கமும் இப்படி ஒரு மலராக உள்மலர்ந்திருக்கலாம்” என்றான்.
“அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்” என்றாள் அவள். “அது எது?” பீமன் குரலை எளிமையாகவே ஒலிக்கவிட்டபடி “அதை நான் எப்படி சொல்ல முடியும். நான் பெண்ணல்ல” என்றான். அவள் சிலகணங்கள் குனிந்து தரையை கீறிக்கொண்டிருந்தபின் மெல்லிய குரலில் “இரண்டாமவரே, நான் என் அறியா இளமையை இப்போது எண்ணிக் கொண்டேன்” என்றாள். பீமன் “தன் சிற்றிளமையை எண்ணி விடியலில் விழித்துக்கொள்ளாத பெண் எவளும் புவியில் இல்லை என்று நினைக்கிறேன்” என்றான். “ஆம், பெண் வாழ்க்கை என்பது சிறுமியென்றிருக்கையில் அவள் பூண்ட வண்ணங்களும் சிறகுகளும் ஒவ்வொன்றாக உதிர்வது மட்டும்தான் என்று விறலியர் பாடலொன்று சொல்கிறது” என்றாள்.
அவளுள் எழுந்த எண்ணங்கள் அவள் உடலை மெல்ல அதிரவைப்பதை அரையிருளிலேயே அவன் கண்டான். “நீ அரண்மனை மகளிர் கோட்டத்திற்குள் வாழ்ந்த இளவரசி. சிறகுகள் அந்தக் கட்டடங்களுக்குள்ளேயே எல்லை வகுக்கப்பட்டவை” என்றான். “ஆம். ஆனால் என் தந்தையை நான் மிக அணுக்கமாக உணர்ந்த நாட்கள் அவை. அன்றெல்லாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவரை தொட்டுக்கொண்டிருக்க விழைவேன். இளங்குழந்தையாக அவர் கால்களைப் பற்றுவதற்காக தவழ்ந்து சென்றதை நினைவுகூர்கிறேன். அரண்மனைக்குள் அவர் அணிந்திருக்கும் பொன்னூல் பின்னிய பாதக்குறடுகளையும் முழங்கால்வரை வந்திருக்கும் அரசப்பட்டாடையின் பொன்வண்ண மடிப்புகளையும் என்னால் மிக அணுக்கமென இப்போது பார்க்க முடிகிறது. கால் பற்றி எழுந்து நிற்கையில் அவர் முழங்கால் அளவுக்கே நான் இருந்தேன் என்பதே இப்போது தெரிகிறது.”
கனவை கண்முன் பார்த்தபடி சொல்வதுபோல அவள் பேசினாள். “என் இடையின் இருபக்கமும் பதியும் அவரது காய்த்துப்போன பெரிய விரல்களின் தொடுகையை எத்தனையோ முறை கனவுகளில் மீட்டுக் கொண்டிருக்கிறேன். உரக்க நகைத்தபடி என்னைத் தூக்கி காற்றில் வீசிப்பிடித்து கூச்சலிடுவார். ‘உலகின் அரசி! உலகின் அரசி!’ என்பார். என்னை எப்போதும் பேரரசி என்றே அவர் சொல்லியிருக்கிறார். பின்னர் அனைவருமே அதை சொல்லத் தொடங்கினர். பிறிதொன்றிலாது அவ்வாறு நான் என்னை உணர்ந்தது அதனூடாகவே.”
“சிறுமகவென அவர் கைகளில் கால்களும் கைகளும் வீசி பறந்துகொண்டிருப்பேன். குனிந்து அவரது ஒளிரும் விழிகளையும் கலைந்து காற்றில் அலையும் குழல்களையும் முறுக்கி மேல்நோக்கிய மீசையையும் மின்னும் பற்களையும் பார்த்து எம்பிக் குதிப்பேன். அவரது தோள்களில் அமர்ந்துகொள்ள தலைமயிரைப்பற்றி உலுக்கி விரைந்து செல் விரைந்து செல் புரவியே என்று கூச்சலிடுவேன். சிற்றாடை அணியும் வயது வரும்வரை அவர் தோள்களில் நான் அமர்ந்திருப்பதுண்டு. புலரியில் செவிலியின் அருகிலிருந்து எழுந்து பீடத்தை இழுத்திட்டு தாழ்திறந்து வெளியேறி இடைநாழிகளில் நடந்து தந்தையின் மஞ்சத்தறையை அடைவேன். காவலன் என்னை தடுப்பதில்லை. கதவைத்திறந்து உள்ளே சென்று அவரது போர்வைக்குள் படுத்துக்கொள்வேன். மார்பிலும் வயிற்றிலும் இருந்த மென்மயிர்களுக்குள் முகம் புதைப்பேன் தோள்களிலிருந்து இறங்கி கைகளுக்கு வரும் பெருநரம்பில் சுட்டுவிரலோட்டுவேன். மணிக்கட்டில் அந்நரம்புகளை அழுத்தி யாழ் மீட்டுவேன். அந்த இளவெம்மைக்குள் துயின்றதுபோல் பிறகெப்போதும் இன்துயிலை நான் அறிந்ததில்லை.”
அவன் அவளுக்குள் அணங்கு ஒன்று புகுந்துகொண்டதா என எண்ணி புன்னகைத்தான். ஆனால் பிறிதொருத்தியாக மாறி பேசத்தொடங்குவது பெண்களின் இயல்பு என்று தோன்றியது. பகடைக்காய்களென புரளவிழைகிறார்கள். அதனூடாக ஆர்வத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். “இன்று எண்ணும்போது எந்தையன்றி பிற ஆண் எவரும் என் நெஞ்சைத் தொட்டுள்ளாரா என்றே ஐயுற்றேன்” என்றாள் திரௌபதி. பீமன் தன் பேருடலை சற்று அசைத்து “நன்று, இதைச் சொல்லாத பெண்கள் அரிதாகவே இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இதைச் சொல்ல வாய்ப்பில்லாத வாழ்வமைந்த பெண்கள் பேரளிக்குரியவர்கள். பின் என்ன?” என்றபடி எழுந்து கொண்டான்.
அவள் அமர்ந்தபடியே நிமிர்ந்து நோக்கி “நான் சொல்வதை தாங்கள் முழுமையாக கேட்கவில்லை, இரண்டாமவரே” என்றாள். “சொல்!” என்றபின் பீமன் வேறுபக்கம் திரும்பினான். தன் உடல் முழுக்க எழுந்த பொறுமையின்மையின் அசைவை அவனே விரும்பவில்லை. அதை அடக்கும்பொருட்டு உடலை இறுக்கிக்கொண்டபோது அது சினமென தெரிய மீண்டும் தளர வைத்தான். யானையென அவன் உடலில் அசைவு ததும்பிக்கொண்டிருந்தது. கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். “இம்மலரின் நறுமணத்தை நான் முதலில் அறிந்தது எந்தையின் அணைப்புக்குள் துயிலும் அந்த வயதிலேயேதானா என்று இன்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.
“சிறுமியருக்கு இம்மலரின் மணம் தெரியாது என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்றான் பீமன். அவள் “அன்றே உள்ளத்தில் நான் கன்னியாக இருந்திருக்கலாம்” என்று அவள் சொன்னாள். “நான் சிறுமியென இருந்த நாட்களே குறைவு. சிறுமியர் எவருடனும் என்னால் இணைய முடியவில்லை. தந்தையுடன் இருக்கும்பொருட்டு எப்போதும் அரசவையிலேயே இருந்தேன். அங்கிருப்பதை நிறுவும்பொருட்டு அரசு சூழ்தலை கற்றேன். அறிந்தவளென என்னை வெளிப்படுத்திக்கொண்டேன். நான் பாஞ்சாலத்திற்குரியவளல்ல என்றும் உறையிலிருந்து உருவப்படவிருக்கும் வாள் மட்டுமே என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். மெல்லுணர்வுகள் எவையும் என்னில் எழுந்ததாக நினைவுகொள்ளவில்லை.”
“ஆனால் எப்போதோ அந்த நறுமணத்தை நான் அறிந்திருக்கிறேன். விழித்தெழுந்து எண்ணி ஏங்கி அழுதிருக்கிறேன். என் தலையைக் கோதியபடி எந்தை மீண்டும் மீண்டும் ஏன் அழுகிறாய் என்று வினவியதை நினைவுகூர்கிறேன். அப்போது அவரது தொடுகையை வெறுத்து கையைத் தூக்கி விலக்கிவிட்டு உடல் சுருக்கி விசும்பி அழுதேன். மீண்டும் என்னைத் தொடாமல் என்னிடம் குனிந்து அவர் மன்றாடினார். ‘என் அரசியல்லவா? என் குலதெய்வமல்லவா? எனையாளும் விண்ணரசியல்லவா? சொல் தேவி, உனக்கு என்ன வேண்டும்? உன் காலடியில் என் தலையை வைக்கிறேன். உன் காலடியில் இந்நாடு பணியும். என்ன வேண்டும் சொல்? என் அன்னை அல்லவா?’ என்று மன்றாடினார். என்னால் ஏதும் சொல்லக் கூடவில்லை”
“இன்று சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பேன்? நீங்கள் சிறிதாகிவிட்டீர்கள் தந்தையே என்றா? நீங்கள் அளித்ததன் பேருருவம் எனக்குத்தேவை என்றா? அதுவும் ஓர் எளிமைப்படுத்தல்தான்” என்றாள் திரௌபதி. “இந்த நறுமணத்தை நான் அறிந்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் முன்னரே பலமுறை அறிந்துளேன் என்னும் எண்ணத்தை அகற்றமுடியவில்லை.” அவள் கைகளைக் கோத்து அதன் மேல் முகத்தை வைத்துக்கொண்டாள். “நான் விழைவதென்ன? எங்கு செல்லவிருக்கிறேன்? எதன்பொருட்டு உளம்கரைந்து கண்ணீர்விடுகிறேன். இரண்டாமவரே, என்னை நன்கறிந்த எவரேனும் சொல்லக்கூடும் என்றால் முதன்மையாக தாங்களே.”
மெல்லிய படபடப்பை அடைந்தவனாக பீமன் சொன்னான் “நாம் இதைப்பற்றி மேலும் பேச வேண்டியதில்லை, அரசி.” அவள் “ஏன்?” என்று கேட்டாள். “இத்தனை ஆழ்ந்து கணவனும் மனைவியும் உளம் பரிமாறிக்கொள்ளலாகாது.” அவள் “ஏன்?” என்று புருவம் சுருக்கி மீண்டும் கேட்டாள். “உறவென்பது ஒரு நுண்ணிய நடிப்பு. முன்னோர் முன், குலத்தின் முன், உலகின் முன்… அதற்கப்பால் நாம் யார்?” அவள் “ஏன் ஆணும் பெண்ணுமென இருக்கமுடியாதா?” என்றாள். “முடியும்” என்றான் பீமன். “நீ அரசியன்றி ஒரு காட்டுப்பெண்ணாக இருந்தால். நான் பாண்டவனாக அல்லாமல் இருந்தால்.”
அவள் நீள்மூச்சுடன் “உண்மைதான்” என்றாள். “இப்போது இவற்றையெல்லாம் சொல்லும்போதே ஒவ்வொன்றையும் அறியாது நான் நிறம் மாற்றிக்கொண்டதை உணர்கிறேன். இங்கு சொல்லப்படுபவை அனைத்துமே உங்களுக்காகவே சொல்பூண்கின்றன. ஆகவே இவை மெய்யல்ல. மெய்போலும்மே,மெய்போலும்மே…” பின்னர் சிறிய சொல்லின்மை வழியாக தன்னுள் சொல்சேர்த்துக்கொண்டு “மடை வழியாக வெளிவருகையில் நீர் மடை வடிவம் கொள்கிறது என்று விறலியர் பாடல் உண்டு. ஆனால் இவ்வண்ணமேனும் இதைச் சொல்லவில்லை என்றால் என் நெஞ்சு சற்றேனும் அதை கடக்கமுடியாது, பாண்டவரே” என்றாள்.
பீமன் உளம் நெகிழ்ந்து காற்றில் எழுந்து பறந்த குழலை கைகளால் அள்ளி தோளுக்குமேல் போட்டபடி எழுந்து மீண்டும் மூங்கில் கூடையில் அமர்ந்தான். “இது முறை. நாம் இருவரும் கொள்ளும் அணிகளையும் ஆடைகளையும் மாற்றுமுகங்களையும் கலைக்காமல் அமர்ந்து அவ்வெல்லைக்குள் பேசிக்கொள்வோம்” என்றான். அவள் முகம் மலர்ந்தது அரையிருளிலும் தெரிந்தது. உடல் முறுக்கவிழ கால்களை எளிதாக நீட்டிக்கொண்டு “ஆம்” என்றாள். “இதை ஓர் இனிய ஆடலென்றே கொள்வோம். நாளை புலரிக்குப்பின் பொருளேதும் கொள்ளாத சொற்கள். இவ்விரவைக் கடப்பதற்குரிய உளநடிப்புகள்.” பீமன் “ஆம்” என்று புன்னகைத்தான்
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
February 8, 2017
அசைவைக் கைப்பற்றுதல்
புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது ‘ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்’ என்ற கதையில் ஒரு சின்னப்பெண் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கும். நான்கு கைகள் கொண்ட சாமிச் சிலையைப்பார்த்து ”சாமிக்குப்பின்னால் ஆரு நிக்கிறாங்க?”என்று ஐயப்படும். அது பெரும்பாலான குட்டிகள் கேட்கும் கேள்விதான்.
அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ‘புரட்சிக்’ கவிஞர் இன்குலாப் அக்கதையை நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஒரு குழந்தை அபாரமாக பகுத்தறிவுக்கேள்விகளை எழுப்புவதை எண்ணி எண்ணி புளகாங்கிதம் அடைந்திருந்தார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் நாம் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட உசாவி அறிய முயல்வதில்லை?
சின்னப்பிள்ளையாக இருந்தபோது சைதன்யா என் நாவலான விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பில் வந்த ஆயிரம் கைகள் கொண்ட மைத்ரேய புத்தரின் படத்தைக் கண்டு ஐயம் கொண்டு கண்களை மேலே செருகி ஆழமாகச் சிந்தனை செய்தபின் கேட்டாள் ”எதுக்கு இவ்ளோ கை?” சாமி எப்படி படுக்கும் எப்படி குளிக்கும் போன்ற நூறாயிரம் ஐயங்கள் குட்டி மண்டைக்குள் முண்டியடித்தன.
நான் உடனே டியூப் லைட்டை அணைத்தேன். மீண்டும் போட்டேன். அது பக் பக் என்று துடிதுடித்து எரிய ஆரம்பிக்க நான் வேகமாக கைகளை ஆட்டினேன். ”பாப்பா இங்கபார்…அப்பாவுக்கு எவ்ளோ கை!” சைதன்யா பிரமித்துப் போய்விட்டாள். ”ஆமா…” என்றவள் தன் கையை பார்த்து ”பாப்பாவோட கையி?” என்றாள். ”நீயும் ஆட்டு”என்றேன். தனக்கு ஆயிரம் கை வந்த அற்புதத்தில் இரவெல்லாம் திளைத்தாள். அதன் பின் அந்த படத்தைப்பார்த்தால் ”சாமி வேகேமா கைய ஆட்டுது” என்பாள்.
நம்முடைய சிற்பங்களில் உள்ள ஏராளமான கைகள் என்ற அம்சம் இப்படித்தான் உருவாகி வந்திருக்கிறது. பலநூறு கைகள் என்ற கருத்து பௌத்த மரபில் இருந்து வந்தது. புத்தர் மகாதர்ம காய வடிவில் வழிபடப்படும்போது அவருக்கு பல்லாயிரம் கைகள் — சஹஸ்ர ஹஸ்த — என்று சொல்லப்படுகிறது. பௌத்த மரபின்படி எதுவுமே நிலை வடிவில் இல்லை. நெருப்பின் சுடருக்கும் மலைக்கும் வேறுபாடு இல்லை, மலை கொஞ்சம் மெல்ல நிகழ்கிறது அவ்வளவுதான்
ஆகவே புத்தரை ஒரு நிலைத்த வடிவமாக அவர்கள் காணவில்லை. ஒரு நிகழ்வாக, நிகழ்வின் ஒரு கணமாக, கண்டார்கள். பிரபஞ்சத்தை நிகழ்த்தும் பிரபஞ்ச ரூபனாகிய தர்மகாய புத்தரைப் பார்த்தால் எப்படி இருப்பார்? மின்னலின் கணத்தில் அவரைக் கண்டது போலிருக்கும். மின்னல் ஒளியில் அதிவேகமாக அசையும் ஒன்றைக் கண்டால் எப்படி இருக்கும்? அதுவே சஹஸ்ர ஹஸ்த புத்தரின் சிற்பம். அங்கிருந்துதான் நம் சிற்பக்கலையில் பல கைகள் என்ற கருத்து வேரூன்றியது.
நடராஜர் சிலை இன்னொரு உதாரணம். உக்கிரமான ஓரு சலனத்தின் ஒரு கணத்தோற்றம்தான் அச்சிலை. சடைமுடிகள் பறக்கின்றன. ஆடை பறக்கிறது. கால் தூக்கிச் சுழலும் சுழற்சியின் ஒரு கணம் அது. அந்நிலையில் நான்கு கைகளும் அந்த அதிவேக அசைவாலேயே பொருள்படுத்தப்படுகின்றன.
பின்னர் பல கைகள் பலவகைச் செயல்பாட்டின் குறியீடுகள் ஆக மாறின. பல வகையான ஆயுதங்கள் ஏந்திய கரங்கள். பல திசைகளுக்கும் பரவிய கரங்கள். ஆனால் எப்படி நான்கு கைகள் என்று காட்சி சார்ந்து கேட்டோமென்றால் அது ஒரு கணத்தின் அசைவுத்தோற்றம் என்பதே பதில்.
நம் சிற்ப மரபு அசைவை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி அபாரமானது. பத்மநாபபுரம் ராமஸாமி கோயிலின் உத்தரங்களில் ராமாயணக்கதை முழுக்க வரிசையாந சிறு சிற்பங்களாக படக்கதை போலச் செதுக்கப்பட்டிருக்கிறது. தாடகையை ராமன் அம்பெய்து கொல்கிறான். அம்புபட்ட தாடகை பின்னால் சரிந்து விழுகிறாள். தாடகையின் இடுப்புக்கு கீழே கால்கள் ஊன்றி நிற்கின்றன. இடுப்புக்குமேலே உள்ள பகுதி வரிசையாக விசிறி போல ஐந்து முறை செதுக்கப்பட்டு தாடகை சரிந்து கீழே விழும் காட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையான சிலையை நாம் கோயில் சிற்பங்களில் பல இடங்களில் காணலாம்.
அதேபோல ஒருவர் வேகமாக திரும்புவதை முதுகு ஒட்டிய இருபக்கமும் முகம் கொண்ட சிலைகளாகச் செதுக்கியிருக்கிறார்கள். மேலே உள்ள சிலை தாராசுரம் கோயிலின் சுவரில் உள்ளது.இருபக்கமும் இருவர் ஆடுகிறார்கள். நடுவே நடனமாது கைகளை ஊன்றி நிற்கிறாள். அவள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. ஆனால் அவள் உடல் மூன்று திசைகளிலும் உள்ளது. ஏதோ விசித்திரப்பிராணி என்று பார்த்துச் செல்கிறார்கள்
உண்மை என்னவென்றால் அந்தப்பெண் ஒரே கணத்தில் கைகளை ஊன்றி தன் உடலை வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக சுழற்றிவிடுகிறாள். நடனத்தின் ஒரு கண நேரம் அது. அந்தக்கணத்தில் நிகழ்ந்ததைச் செதுக்க முயன்றிருக்கிறான் சிற்பி
பல நூற்றாண்டுகள் கழித்துத்தான் ஐரோப்பிய நவீன ஓவியம் அந்தச்சவாலை ஏற்றுக்கொண்டது. குறிப்பாக பாப்லோ பிக்காஸோ அசைவுகளை ஓவியமாக ஆக்க முயன்றார். அசைவின் ஒரு கணத்தை, அசைவு வழியாக காலம் கடந்துசெல்வதை, மாறுதல் நிகழும் முறையை மீண்டும் மிண்டும் வரைந்தார் அவர். அவரது படி இறங்கும் பெண் என்ற புகழ்பெற்ற கோட்டோவியத்தில் ஒரு பெண் படிகளில் இறங்கும் கணத்தை ஒன்றுடன் ஒன்று கலந்து படிந்த பல பெண் வடிவங்கள் வழியாக அவர் வரைந்து காட்டினார். நம் சிற்பிகள் செய்த அதே முறைதான்.
நம் சிற்பங்கள் பெரும்பாலும் நம்மிடம் பேசுபவை போல தெரிகின்றன. விரல் சுட்டி, விழித்து, உதடுகளில் அந்தச் சொற்களுட்ன் அவை நிற்கின்றன. அவை நம்மிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. சென்று மறைந்த கலையின் பொற்காலத்தைப் பற்றி அவை சொல்கின்றன. நாம் காதுகொடுப்பதே இல்லை. அவற்றை நம் போக்கில் ஏதோ புரிந்துகொண்டபடி அவற்றின் முன் நின்று மேலே சென்றுவிடுகிறோம்
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 10, 2009
தொடர்புடைய பதிவுகள்
நமக்குள் இருக்கும் பேய்
வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.
ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
கண்ணீரும் கதைகளும்
அவதூறுகள் ஏன்?
அறிவியல் மனம்,அமெரிக்கா:கடிதங்கள்
திரிச்சூர் நாடகவிழா- 3
திரிச்சூர் நாடகவிழா 2
ஒரு விழா
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி
லிபி ஆரண்யா பேசுகிறார்
நிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக அமைந்துள்ளன.
அந்நிழற்தாங்கல்கள் பழைய சமணத் தர்மசாலைகளுக்குச் சமானமானவை. பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிப்பவை அவை. சமணர்களின் அறங்களில் ஒன்றுதான் நிழற்தாங்கல். அதை பிறர் பின்னர் எடுத்துக்கொண்டனர். பழைய கிராமங்களில் அது ஒரு முதன்மையான அறக்கொடையாக அமைந்திருந்தது
சரவணன் சந்திரன்
அய்யா வைகுண்டர் அவற்றை ஏற்படுத்தியமைக்கு காரணம் உண்டு. வழிநடை வசதி என்பது அன்று மக்களைக் கட்டுப்படுத்திய ஒரு முக்கியமான அம்சம். உயர்சாதிகளுக்கு மட்டுமே ஊர் விட்டு ஊர் செல்ல வசதி அன்றிருந்தது. அவர்கள் பிறர் இல்லங்களில் தங்கலாம், சத்திரங்களும் இருந்தன. பிற சாtதியினருக்கு உணவு, தங்குமிட வசதி இல்லாததனால் அவர்கள் வாழுமிடத்திலேயே கட்டுண்டுகிடக்க நேர்ந்தது. அவர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகள் இல்லாமலாகியது. நிழற்தாங்கல்கள் அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவித்தன. அது முக்கியமான ஒரு பாய்ச்சல்.
லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் ‘படிகம்’ ரோஸ் ஆன்றோ உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பு இலக்கியத்திற்கானது. வீட்டுக்கு வெளியே எங்காவது சிலநாட்கள் அமைதியாகத் தங்கியிருந்து எழுதவேண்டும் என விரும்பும் எழுத்தாளர்கள் மற்றும் ஒதுங்கி இருந்து வாசிக்கவேண்டுமென விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கான ஒரு இல்லம் இது. அதேசமயம் இந்நோக்கத்திற்காக மட்டுமே வருபவர்களுக்கு உரியது. ஆகவே இதை நகரில் வைக்காமல் நாகர்கோயில் அருகே உள்ள பறக்கை என்னும் சிற்றூரில் அமைத்துள்ளார்.
கோணங்கி
பறவைக்கரசனூர் என அழைக்கப்படும் [வடமொழியில் பக்ஷிராஜபுரம்] பறக்கை தொன்மையான மதுசூதனப்பெருமாள் ஆலயம் அமைந்த அழகிய சிற்றூர். ஆனால் தமிழகத்தின் பிறசிற்றூர்களைப்போல வறுமையும் குப்பையும் கொண்டது அல்ல. குமரிமாவட்டச் சிற்றூர்கள் மிக வசதியான மக்கள் வாழ்பவை, தூய்மையானவை.. கோயில், குளம், ஏரி ,பழையாறு என ஒரு சிறந்த சூழல் கொண்டது. நாகர்கோயிலில் இருந்து அரைமணிநேரப் பயணத்தொலைவு. புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் லக்ஷ்மி மணிவண்ணனும் ரோஸ் ஆன்றோவும்.
நிழற்தாங்கலின் திறப்புவிழா சென்ற 5 ஆம்தேதி காலை பறக்கையில் நடந்தது. நிழற்தாங்கலை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. G . தர்மராஜன் I .P .S . திறந்துவைத்தார்.குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.முளைப்பாரிக்கு நீர் வார்த்து, அடுப்பில் பால் காய்ச்சியவர் திருமதி எம். பாலின் சகாய ரோஜா
நாஞ்சில்
பின்னர் நிகழ்ந்த இலக்கிய விழாவில் தி இந்து தமிழ் நிருபர் சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். படிகம் நவீன கவிதை வரிசையின் நான்காவது நூலாக விக்ரமாதித்யனின்“சாயல் எனப்படுவது யாதெனின்…” கவிதை நூலை நான் வெளியிட்டு உரையாற்றினேன். எழுத்தாளர் சரவணன் சந்திரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து பாலா கருப்பசாமி விமர்சித்தார்.
படிகம் தொகை நூல் வரிசையின் முதல் நூலாகிய ஈனில் [தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா ] பதினொரு கவிஞர்களின் எழுபத்திநான்கு கவிதைகள் கொண்டது. அதை எழுத்தாளர் கோணங்கி வெளியிட்டார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து லிபி ஆரண்யா விமர்சித்தார்.
நாஞ்சில்நாடன், குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோஸ் ஆன்றா ஏற்புரை வழங்க க.அம்சப்பிரியா நன்றியுரை அளித்தார்.
அருட்பணி சி எம் ராஜன்
நெடுநாட்களுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தது நிறைவளித்தது. அதே சிரிப்புடன் அப்படியே இருக்கிறார். லிபி ஆரண்யா மதுரை நன்மாறனை நினைவுறுத்தும் மொழியுடன் அழகாகப் பேசினார். சரவணன் சந்திரன் கோயில்பட்டிக்காரர் என்று அறிந்தது ஓர் இனிய மகிழ்ச்சி. கோயில்பட்டி மரபு தொடர்வது ஆச்சரியமானதுதான்.
பால பிரஜாபதி அடிகளார்
நிழற்தாங்கலை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் லக்ஷ்மி மணிவண்ணன் [ slatepublications@gmail.com ] ரோஸ் ஆன்றோ [ padigampublications@gmail.com ] ஆகியோரை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

