Jeyamohan's Blog, page 1683
January 30, 2017
வெண்முரசின் கார்வை
அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதையே அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் பார்வையை உட்புறமாக செலுத்தி நான் என்ன நினக்கிறேன், ஏன் இப்படி நினைக்கிறேன் எப்படி என் சிந்தனை நிகழ்கிறது என காண்பது அரிது. தான் உள்ளூர கொண்டிருக்கும் ஆன்மீகக் கருத்தில் வந்துதாக்கும் தத்துவக் கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும்.
வெளி தத்துவங்கள் உள்ளே நுழைய விடாமல் மனதை இறுக மூடிக்கொள்ளுதலையே பெரும்பாலும் செய்கிறோம். அது எளிதானது. அதனால் பலரும் தெரிந்தோ தெரியாமலோ தாம் முதலில் கொண்டிருந்த கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை. அது அவர்களே அறியாமல் நடந்தால் தான் உண்டு. ஆனால் ஒரு வயதுக்கு மேல் அதுவும் நடப்பதில்லை. அதனால் நிறைய பேர் தான் கொண்ட கருத்து, நம்பும் தத்துவத்தை மாற்றிக்கொள்வதில்லை. விவாதங்களில் பேசுகிறார்களே தவிர மற்றவர்கள் சொல்வதை கேட்பதில்லை. பிறர் பேசும்போது அது எப்படி தவறானது என சொல்வதற்கான சொற்களையே அப்போது தேடிக்கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விடுத்து தன் மனதை திறந்து வைத்து வெளிக்கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி ஆய்தலும், அதன் விளைவாக தன் கருத்துக்களை விரித்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்தல் என்பது அபூர்வமாக நடைபெறுகிறது.
அரிகிருஷ்ணன் இப்படி தன் சிந்தையில் வெளிக்கருத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளுதலை கவனித்து அழகாக எழுதியிருக்கிறார். அதுவும் அவருடைய வைணவ மனதை வெண்முரசின் கண்ணன் எப்படி தாக்கியிருப்பான் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
தண்டபாணி துரைவேல்
அன்புள்ள துரைவேல்
எல்லா நல்ல வாசிப்புகளும் ஒருவகை நிலைகுலைதல்தான். இடித்துச்சரித்தல் நிகழாத வாசிப்பு ஆழமானது அல்ல. மீண்டும் கட்டி எழுப்புவது அவரவர் விழைவு. வெண்முரசின் நாவல்கள் நம் மரபான மதமனநிலையை இடித்து புரட்டுபவை. அதை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்பவர்களாகவே பெரும்பாலான வாசகர்கள் இருக்கிறார்கள். விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் பின்னர் கண்டடைவார்கள் என நம்பவேண்டியதுதான்
ஜெ
அன்புள்ள ஜெ
கிராதத்தில் இருந்து விடுபட்டு மாமலருக்குள் நுழைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கிராதம் என்னை அலைக்கழித்துவிட்டது. உக்கிரமான சைவத்தை நான் அறிந்திருந்தபோதிலும்கூட அதன்நேர்க்காட்சி நிலைகுலையைச் செய்வது. வேதங்களின் மோதலை விட என்னை பதற்றமடையச்செய்தது அந்த சைவமரபினை காணும் வாய்ப்புதான்
சத்யமூர்த்தி
அன்புள்ள சத்யமூர்த்தி
நான் இன்னும் கிராதத்தில் இருந்து விடுபடவில்லை. இதுவரை மாமலர் எழுதவில்லை. நாளைக்குள் எழுதியாகவேண்டும். எழுதுவேன் என நினைக்கிறேன். இன்றுதான் கொல்லூர் மூகாம்பிகையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவந்தேன். சொற்கள் அமையவேண்டும். அதற்குமுன் உள்ளம் அமைதிகொள்ளவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஊழிற்பெருவலி
இனிய ஜெயம்,
வண்ணக்கடல் நாவலில், ஏகலைவன் நோக்கில் அவமானத்தில் தகித்தபடி அவனை கடந்து செல்லும் கர்ணனைக் குறித்த வர்ணனை வரும். மிக அருகே கடந்து செல்லும் அந்த வெம்மையை உள்ளே கிளர்த்தியது அந்த வர்ணனைகள். எழுத்து மொழியாகி , மொழி உள்ளே கற்பனையைத் தூண்டி, கண்டு, தொட்டு, நுகர்ந்து, உணர்ந்து அனுபவிக்கும் அனைத்தையும் பதிலீடு செய்கிறது. இந்த வரிசையில் பெரு வலி தனித்துவமானது. மொழி வழியே நாம் வலியை உணர, பெரு வலியை உணரச் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது அக் கதை.
வலியின் கணம் எப்படி இருக்கும்? இக் கதையை உள்வாங்க அவரவர்க்கு அவரவர் அடைந்த வலியே வழிகாட்டி. துடிக்கும் இளமையில் எனக்கு பிடித்த பல விளையாட்டுகளில் ஒன்று. இறங்கி வலதுபுறம் நடந்தால் கட்டக் கடைசியாக நிற்கும் [கருமகாரியங்கள் நடக்கும்] தனித்த மண்டபத்தின் உச்சியில் ஏறி, அந்த மண்டபத்தை மோதி சுழித்து செல்லும் [சுழிக்கும் இடத்தில் நல்ல ஆழம் இருக்கும்] தாமிரபரணியில் குதிப்பது. நீச்சல் தெரியாது பலமுறை துவைக்கும் ஆச்சிகள் வீசிப்போடும் சேலை பற்றி கரை சேர்ந்திருக்கிறேன். அப்படி குதித்த ஒரு முறையில், அடிக் கணக்கு தவறி, சுழிப்புக்கு பதிலாக, அது வந்து தொடும் இறுதிப் படியில் சென்று விழுந்தேன். இடது கை மணிக்கட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூன்று இணைப்புகளும் மூன்று திசைகளில் திருக்கிக் கொண்டன.
விழித்த முதல் கணம் அறிந்தது ஒரு பெரிய வலிக்குமிழ் உள்ளே நான் சிக்கி இருப்பதை. நேரத்தின் ஒவ்வொரு வினாடியும் நீண்டு நீண்டு வலியாக என் மேல் கவிவதை. நாட்டு வைத்தயர் வந்து, [அறுக்கப்போகும் உயிர்க் கோழியை பிடிப்பது போல என் அத்தை என்னை பிடித்துக் கொண்டார்] எதோ எண்ணெய் தடவி அழுத்தி நீவி , காரில் கியர் மாற்றுவது போல என் இடது கையை எதோ வாகில் சுழற்றினார். சில கணம் பொற்கணம் . ஆசுவாச கணம். காலாதீத கணம், வலிக்குமிழில் இருந்து வெளியில் நின்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டேன். பின் மெல்ல மெல்ல மற்றொரு வலி. இரவுகளில் அந்த வலி, உள்ளிருந்து வீங்கும் குமிழாகி என்னை கிழிக்கப் பார்க்கும்.
வலியின் போது முதன் முதலாக [பின்னர் எனது கோரஷ்டை தியான பொழுதுகளிலும் கண்டது] கண்டது. ஒவ்வொரு கணம் துடிக்கும் வலியை . அந்த வலிக்கு வெளியே விலகி நின்று பார்க்கும் ”தான்” எனும் நிலையை. இதன் அடுத்த கட்டம்தான் பீதி அளிப்பது .. இந்த வலியையும் ,அதை விலகி நின்று பார்க்கும் தானையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒன்று. பித்து நிலை, மரண பீதி, காய்ச்சலில் ஏதேதோ புலம்பிக்கொண்டு இருந்தேன்.
அந்த பொழுதுகளும், கடந்துவந்த கிராதமும், இன்று மீண்டும் வாசிக்கையில் பெரு வலி கதைக்கு, வேறு ஒரு ஆழத்தை அளிக்கிறது. கணம் கணமாக வலி கொண்டு கொல்லும் முதுகுத்தண்டு கேன்சருடன் , கைலாயம் கண்டு மீளும் ஆளுமை, அந்த அனுபவத்தை எழுத்தாளர் ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறார் [எழுத்தாளர் மட்டுமே உணரமுடிந்த ஒன்று பொதிந்த அனுபவம்]
சிறு வயதில், அப்பா முதன் முதலாக என்னை எங்கள் குலதெய்வம் இருக்கும் [திருச்செந்தூர் அருகே சிறிய கிராமம்] தாய்விளை கிராமத்துக்கு அழைத்து சென்றார். வெம்மை நீராவியாக உளமயக்கு அளித்து அலையும் மெல்லிய செந்தூர வண்ண நிலவிரிவு. தூரத்தில் புழுதி வண்ண ஓட்டு ,கூரை வீடுகள், புழுதி வண்ண சர்ச், புழுதி வண்ண வெறுமை, ஒன்றுடன் ஒன்று ஒட்டாத விசித்திர மணல் துளிகள், அருகே மிக அருகே தனித்து நின்று ,வெயிலில் தகித்து முனகும் பனை ,வெறுமை வெறுமை கண்குளிரும் வெம்மையின் வெறுமை. அழுதேன். ”என்னாலே பொடி சுடுதோ ” என்றபடி அப்பா என்னை தூக்கிக் கொண்டார்.
அப்படி ஒரு நிலத்தில், அப்படி ஒரு வெறுமையில், தன்னுள் கறந்த வெறுமையை அறிகையில் கோமல் கைலாய மலையை அட்டைப்படம் ஒன்றினில் காண்கிறார்..கைலாயம் சென்றுவந்த அனுபவத்தை எழுத்தாளருக்கு சொல்கிறார். வலி முதலில் ஒரு சேட்டை குழந்தையாக அவருடன் இருக்கிறது. வளர்த்து எடுக்கிறார். ”இப்போ அவ வளந்துட்டா” பெண் குழந்தை. அவள் அவரை அழைத்து செல்கிறாள் கைலாயத்துக்கு. இன்னும் சில கிலோ மீட்டர்களில் கைலாயத்தை கண்டு விடலாம். எனும் நிலையில் மனமும் உடலும் சோர்ந்து அமர்ந்து விடுகிறார் கோமல் . அவர்க்கு ஊக்கம் அளித்து உடன் நிற்கிறாள் ஒரு வடக்கத்தி அம்மாள் . மீண்டு எழுந்து நடந்து அந்த பொற்கிரீடத்தை சூடுகிறார் கோமல்.
கிராத அர்ஜுனன் நரகில் குதிப்பது போல , கோமலும் பயணத்தில் குதிக்கிறார், கிராத அர்ஜுனன் போலவே அவருக்கும் மீண்டு வருதல் குறித்த கவலை எதுவும் இல்லை. கிராதத்துக்குப் பிறகு கோமல் உடன் வரும் வடக்கத்தி அம்மாள், சிவனைக் காண அழைத்து செல்லும் மலை மகளாகவே தோற்றம் அளிக்கிறார். எழுத்தாளரே ரொம்பப் பின்னால் அட்டைப் படத்தில் கண்ட காட்டெருதுக் குட்டி. முகட்டில் அட்டைப்படத்தில் கண்ட அதே எருமைக் குட்டியை கோமல் பார்க்கிறார்.
இத்தனை வலியும் ஏன்? எழுத்தாளன் மட்டுமே அறியக் கூடும் அந்தக் காரணம் என்ன? அதைத்தான் கோமல் கைலாயத்தின் முன் அறிகிறார். கண் முன் கண்ட எத்தனையோ அறப்பிழை தருணங்களில் அதை சபிக்காமல் வாளாவிருந்த நிலைக்கு மாற்று இது.அவருக்கு உடல் வலிக்கு முன்னால் அறம்பிழைத்த தருணங்களில் அவரது கையறு நிலை அவருக்கு அளித்த வலிதான் பெரிது.ஊழிற்பெரு வலி அது. எழுத்தாளனின் சொல்லில் எழும் அறச்சீற்றம் எல்லாம், எங்கோ என்றோ அவன் முன் நிகழும் அறப்பிழை முன் அவன் மௌனமாக நின்றதன் பதிலீடுதானா? அத்தனை கீழ்மைகளையும் தானே ஏற்றுக் கொள்கிறார். [எழுத்தாளன் வேறு என்ன செய்ய இருக்கிறது] அத்தனை கீழ்மைகளையும் மன்னிக்கிறார் [எழுத்தாளன் இதை தவிர்த்து வேறு எதையும் செய்வானா என்ன?] இக் கணம் அந்த பொற்கிரீடம் தனக்கு வேண்டும் என விழைகிறார். கிடைக்கிறது. அக் கூட்டத்தில் அந்த கிரீடத்தை சிரத்தில் சூடும் தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. ஏன் எனில் எழுத்தாளன் மட்டுமே தாங்கிக் கடக்கத் துணியும் ஊழிற்பெறுவலியை தாங்கி கடந்தவர் அவர்.
இவற்றுக்கு வெளியே, தனிமையில் என் கற்பனைக்குள் எப்போதும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவேன். கணம் கனமாக நின்று விண் விண் என தெறிக்கும் வலி என்பது என்ன? சிவம் தானே. சிவம் சிவம் சிவம். அங்கே வலி அற்ற அகாலத்தில் கோமல் உணர்ந்தது என்ன? சிவமே யாம் தானே? இந்தக் கதைக்குள் இதற்கான முகாந்திரம் இல்லாமல் இருக்கலாம். கிராதத்தையும் பெரு வலியையும் கலைத்துப் போட்டு விளையாடினால் இங்கே வந்து சேர முடியும். நீங்கள் அறிவீர்கள். நீங்களும் உள்ளே கதைகளை கலைத்துப்போட்டு விளையாடுபவர்தானே.
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 29, 2017
ஒரு செல்லசிணுங்கல்போல….
மிக எளிமையாகச் சொல்லப்போனால் கவிதையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான மொழிவெளிப்பாடு மட்டுமே. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் மொழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். பொருட்கள் நிகழ்வுகள் உணர்வுகள். இந்த நிகழ்வையே உளம் என்கிறோம். உள்ளும் புறமும் என ஓடும் பிரக்ஞையினூடாக இவற்றை இணைத்து முடைந்து பேருரு ஒன்றை உருவாக்குகிறோம். அதுவே நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியென்னும் இப்பெருவெளி. அது நாம் பிறந்து திளைத்து வாழும் கடல். பல கோடிபேரால் பலகோடி முறை பேசப்படுவதனாலேயே அது முடிவிலாத நுட்பங்களைக் கொண்டுள்ளது. புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே மாறாத வடிவங்களையும் மறுகணம் அடைந்துகொண்டுள்ளது.
கவிதை இவ்விரு எல்லைகளுக்கு நடுவே முன்பிலாத ஒரு புதிய இணைப்பை உருவாக்கும் முயற்சி எனலாம். மொழியின் மாறாத தன்மையை அது மீற முயல்கிறது. பழைமையே தன் வடிவெனக்கொண்ட மொழியிலிருந்தே புதியவற்றை எடுத்து முன்வைப்பதே அதன் வழியாகும். மாபெரும் கவிதைகள் பலவும் சற்றே மாறுபட்ட பிறிதொரு மொழியில் சொல்லப்பட்டுவிட்டவை என்பதனாலேயே அழியாத்தன்மை கொண்டவை. ”அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் கவிதை அதன் உள்ளடக்கத்தினால் அல்ல, மிக இயல்பாக ஒரு துயரத்தை சொல்லிவிட்டதனால், அச்சொல்லல் முறை வழக்கத்திற்கு சற்றே மாறுபட்டதாக எப்போதுமே ஒலித்துக் கொண்டிருப்பதனால்தான் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து இங்கு வந்திருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இக்கூறுமுறையை சற்றே மாற்றுவதற்கு கவிஞர்கள் முயல்கிறார்கள். அதை எப்படி அடைகிறார்கள் என்பது விந்தையானதுதான். மிகத்தீவிரமான் கவிதைகளை எழுதும் தேவதேவன்
”கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?
ஒரு காபி சாப்பிடலாம் வா”
என்று எழுதும்போது வேறொரு உளநிலையில் நின்று மொழியின் பெரும்போக்குக்கு சிறிய ஒரு மாற்றை அமைக்கிறார். அந்த புள்ளியிலிருந்து நீண்டு வளர்ந்தவை என்று இசை, வெயில், லிபி ஆரண்யா போன்றவர்களின் கவிதைகளைச் சொல்ல முடியும். அவற்றில் உள்ள இயல்பான ஒழுக்கும் மொழியை சற்றே இடம்மாற்றி வைக்கும் நுட்பமும் தான் அவற்றை கவிதையாக்குகிறது.
ஆரம்பகட்டக் கவிதைகளில் இசை படிமங்களையும் சித்தரிப்புகளையும் அதிகமாக பயன்படுத்தியிருந்தார். கூடவே அவருடைய தனித்தன்மை கொண்ட மொழி அதாவது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றை சற்றே வேறொரு கோணத்தில் சொல்லும் விலக்கக்கோணம் அமைந்திருந்தது. இவருடைய முந்தைய தொகுதிகள் இன்னும் அதிகமான வாசக ஈர்ப்பை அடைந்ததற்கு காரணம் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த கவிதை முறைகளில் எழுதப்பட்ட சில கவிதைகள் அதில் இருந்தன என்பதுதான்.
”ஆட்டுதி அமுதே” இசையின் புதிய தொகுதி. முழுக்க முழுக்க மொழியின் கோணமாற்றம் உருவாக்கும் அழகியல் சாத்தியங்களை நம்பி மட்டுமே எழுதப்பட்ட கவிதைகள் இவை. இக்கவிதைகளிலிருந்து படிமங்களையோ தீவிரமான நுண்புனைவுத் தருணங்களையோ எடுக்க முடியவில்லை. அனைத்துக் கவிதைகளுமே புன்னகையுடன் கலந்த அவருடைய விலக்க மொழியில் அமைந்துள்ளன.
’’உற்சாகம் தாளாத நடனக்காரன்
பாட்டுச் சத்தத்தை கூட்டுவதைப்போல
இந்த இரவில்
இன்னும் இன்னுமென
நிலவைத் திருகுகிறான் ஒருவன். ’’
”இன்னிரவு” என்னும் கவிதை. எப்போதும் கவிதையில் சொல்லப்பட்ட அந்த மனஎழுச்சிதான். ஆம், ”அற்றைத் திங்கள்”. அக்கவிதையிலிருந்து அத்துயரம் மிக்க உவகை அதன் உருக்கம் இவ்வண்ணம் ஆகியிருக்கிறது. “நிலவின் ஊளை” என்று எழுதிய பிரமிளின் கொந்தளிப்பு. ஆனால் இக்கவிதை வெளிப்படுவதற்கு இதுவரை இல்லாத ஒரு வடிவத்தையும் ஒரு பார்வைக் கோணத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒரு படிமம் அல்ல. எதையும் மேலதிகமாகக் குறிக்கவில்லை இது. இக்கவிதையிலிருந்து பெரிதாக வளர்ந்து செல்வதற்கு எண்ணமோ தரிசனமோ ஏதுமில்லை. அறிந்த அத்தருணம் முற்றிலும் எதிர்பாராத சொற்கோவையாக நிகழ்ந்திருக்கிறது. இவ்வியல்பே இசையின் கவிதைகள் ஆகும் அடிப்படை.
இவ்வியல்பை மட்டுமே நம்பி இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அனைத்து கவிதைகளையுமே எழுதியிருக்கிறார். ஒரு நீண்ட கவிதையின் அலகுகள் போல இத்தொகுதியின் அனைத்து கவிதைகளுமே இந்த மொழியால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
*
வீடு
அப்பா தியாகி
அம்மா சாமி
கணவனும் மனைவியும் உடனொருபாகம்
தங்கை நறுமணத்தி
அண்ணன் துப்பாக்கிக் குண்டுக்கு குறுக்கே விழுபவன்.
குழந்தைகள் தெய்வப்பிரசாதம்.
தாத்தா உழைப்பில் உயர்ந்த உத்தமர்
பாட்டி உத்தமரின் உறுதுணை
மாமா மாமருந்து சித்தி குளிர் தரு
ஆனாலும் வீட்டை நெருங்குகையில் மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டும்’
*
தமிழ் நவீனக் கவிதையில் வீடு வெவ்வேறு வகையில் எப்போதும் சொல்லப்படுவதே. விடுவதற்குரியது. அதை எப்போதும் பற்றிக்கொண்டிருக்கிறது உலகியலான் உள்ளம்.
வீடுகள் யாவும் வாயிளித்து
ஆபாசமான பசியைப் போன்று
நிற்கக் கண்டவனாயினும்,
வீடு
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
என்னும் பிரமிளின் வரி கவிஞனின் முடிவில்லாத வீடு தேடல் அலைதல் வீடுகளின் மீதான காதல். வீடுகளின் மூர்க்கமான மறுதலிப்பு. வீடுகளின் வாய்திறந்த புன்னகையை தஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளில் எழுதியிருக்கிறார்
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்
[மாற்றப்படாத வீடு ]
என்னும் கவிதை தேவதேவனின் கனவு வீட்டின் பதிவு. அதே உணர்வைத்தான் இக்கவிதை முற்றிலும் புதிய ஒரு மனநிலையுடன் சொல்கிறது. கண்டடைதலாக அல்ல துயரமாகவும் கசப்பாகவும் அல்ல ’அதெல்லாம் அப்படித்தானே’ என்னும் அறிந்த புன்னகையுடன்
இசை தனிப்பட்ட முறையில் எனக்கு அணுக்கமான கவிஞராக ஆவது இதனால்தான். ஒரு மூன்று தலைமுறைக்கால கவிதைமொழி அவருக்குப் பின்னால் உள்ளது. அத்தொடர்ச்சியில் வந்து இங்கு நிற்கும்போதுதான் அவரது கவிதைகளின் மொழிமாறுபாடு திசைக்கோணலின் அழகு அர்த்தப்படுகிறது. அதனூடாக அணுகுபவர்களுக்கு மட்டுமே இக்கவிதை கவிதையாகிறது
இக்கவிதைகளை மட்டும் வாசிக்கும் ஒரு புது வாசகன் இவை எதனால் கவிதையென்றே வியப்படைவான். பல கவிதைகள் மிக அன்றாட வாழ்க்கையின் தருணத்தை அப்படியே எழுதியது போல அவனுக்குத் தோன்றும்.
நான் பார்க்க எவ்வளவு காலமாய்
எந்தக் கதவையும் திறக்காமல்
எந்தப் பூட்டையும் உடைக்காமல்
இத்தனை சாவிகளை பரப்பிக்கொண்டு
இப்படி புதன் கிழமை சந்தையில் வீற்றிருக்கிறார்
இந்தக் கந்தலாடைக் கிழவர்
இக்கவிதையின் தலைப்பு ”நீதி நெறி விளக்கம்”. ஒர் எளிய விமர்சனமாக மட்டுமே தோன்றக்கூடிய கவிதை. இசையின் தனித்தன்மை கொண்ட மொழி இதுவரையுமான தமிழ் நவீனகவிதைக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை என்ற புரிதலுடன் படிக்கப்படுமென்றால் மேலதிக அழுத்தம் பெற்று இதைக் கவிதையாக ஆக்குவதைக் காணலாம்.
அப்படி வாசிக்கும் ஒருவனுக்கு ”இந்த நகரத்தின் சாக்கடையைப்போல சுழித்தோடுகிறதே இது எங்கள் கண்ணீர்” என் ஆரம்பிக்கும் கவிதை [செல்வத்தை தேய்க்கும் படை] ஒரு புரட்சிக் கூவல் அல்ல என்று தெரியும். அதற்குள் உள்ள புன்னகைதான் அதைக் கவிதையாக்குகிறது என்று பிடிகிடைக்கும்..
’’இப்போது எனக்கு ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வருகிறது உடனே அதை எங்காவது பீச்சி அடிக்கவேண்டும் மற்றதெல்லாம் அப்புறம் தான் சற்றைக்கேனும் மற்றதனைத்தும் மறக்கடித்த என் இனிய மூத்திரப் பிரச்னையே” [ வாழ்வில் ஒரு அர்த்தம்] என்பது எப்படி கவிதை ஆகிறது ? அந்த இறுதிவரியின் பிரியமான நையாண்டியால். மகத்தான கவிதை மகத்தான் உணர்வுகளை உருவாக்கவேண்டியதில்லை. எளிய புன்னகையே அதன் அடையாளமாக ஆகக்கூடும். பெருங்காதலைச் சொல்ல மொழி தேவையில்லை, ஒரு சின்னச்சிணுங்கலே போதுமானது
[ஆட்டுதி அமுதே. கவிதைகள். இசை. காலச்சுவடு பிரசுரம்]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மதம்
அப்பாவுக்கு சின்னவயதிலேயே ஒழுங்கு என்பது மண்டைக்குள் நுழைந்துவிட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அவர்களின் ராணுவமனநிலைகொண்ட பள்ளிகள் வழியாக அளித்த ஒழுங்கு அல்ல. அதற்கு முன்னரே நம்முடைய மரபில் இருந்து உருவாகி வந்த ஒழுங்கு. இங்கே அதற்கு ஆசாரம் என்று பெயர். அப்பா உயிர்வாழ்ந்த காலம் முழுக்க காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துவிடுவார். அவரது சின்னவயதில் திருவட்டார் கோயிலுக்கு அருகே வாழ்ந்தமையால் அது எளிதாக இருந்திருக்கும், அர்த்தமும் இருந்திருக்கும். கோயிலில் பிரம்ம முகூர்த்ததிலேயே மணி ஒலிக்கும். நிர்மால்ய பூஜை கும்பிடுவதற்காக ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். அப்பா இளமைப்பருவத்தில் தினமும் வள்ளியாற்றில் குளித்து ஆதிகேசவப்பெருமாளின் உஷத்பூஜை கும்பிட்டிருக்கிறார்.
திருவரம்பில் காலையில் எழுந்து கொட்டக்கொட்ட விழித்திருப்பதற்கு பொருளே இல்லை. ஆனால் உடலும் மனமும் பழகிவிட்டது. கோழிக்கு முன்னரே எழுந்து வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு விரிவாக வாய் கொப்பளிப்பார். அந்த ஒலியிலேயே அம்மா எழுந்துவிடுவாள். அப்பா சாவகாசமாக அமர்ந்து வெற்றிலை போடுவார். அது முறுகி வருவதற்குள் சூடான கட்டன் காப்பி வரும்.
காபி குடித்துவிட்டு ஆற்றுக்கு கிளம்புவார். தோளில் ஈரிழைத்துவர்த்து. இடுப்பில் ஒரு பாலராமபுரம் ஒற்றைவேட்டி. உப்பு, சுக்கு, சீனாப்படிகாரம் சேர்த்து நன்றாக பொடித்த உமிக்கரிதான் பல்பொடி . அதைபூவரச இலையில் மடித்து எடுத்துக்கொள்வார். கைதோநி இலைச்சாறும் நல்லமிளகாயும் போட்டு சுண்டக்காய்ச்சிய தேங்காயெண்ணையை தலையில் பொத்தி தேய்த்து மயிரடர்ந்த மார்பெங்கும் நீவி இலையில் எடுத்த லைபாய் சோப்புடன் மெதுவாக நடந்துசெல்வார்.
தோட்டம் வழியாக ஆற்றுக்குச் செல்லும்வழியில் அவருக்கான சில பிரத்யேக நண்பர்கள் உண்டு. சரியாக அந்நேரத்தில் இடப்பக்கம் கோயில் நந்தவனத்தில் இருந்து வலப்பக்கம் அச்சு தோட்டத்துக்குச் செல்லும் எட்டடி நீளமுள்ள கிழட்டு சாரைப்பாம்பு அதில் முக்கியமானது. அதற்கப்பால் போட்டுப்பலாவின் பொந்தில் இருக்கும் ஒரு காட்டுப்பூனை அப்பாவைப்பார்த்து ங்கியாவ் என்று கிளம்பிச் செல்லும். அப்பா ஆற்றில் இறங்கும்போதுதான் இரவுமீன்கள் மெல்ல சேற்றுப்படுகைகளுக்குள் செல்லும். யாருக்கும் காலம் அணுவளவும் தவறுவதில்லை.
திரும்பிவருவது கோயில் நந்தவனம் வழியாக. அப்பாவின் நண்பரான நாராயணன் போற்றி உஷத்பூஜையை வழக்கமாக சுள்ளென்ற வெயில் அடிக்க ஆரம்பித்தபின்னரே செய்வார். அவருக்கு வீட்டில் இருபது பசுக்கள். அவற்றுக்கு உரிய சேவைகளைச் செய்துமுடிக்க நேரமாகும். சிவன் காத்திருக்க வேண்டியதுதான். அப்பா கோயிலின் முற்றத்தில் நின்று மூடியகதவின் மீது செதுக்கப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி சுவர் விளிம்பில் உள்ள விபூதி எடுத்து தீற்றிவிட்டு வந்து மீண்டும் அமர்ந்து அடுத்த தரம் வெற்றிலை போடுவார்.
வெளுக்கும்நேரம் வரை பழைய சுவடிகள் ஏடுகள் என எதையாவது படித்துக்கொண்டிருப்பார். கண்களில் இரு சுடர்களாக மண்ணெண்ணை விளக்கு தெரியும். விடியும்வேளையில் நானும் அண்ணாவும் எழுந்து ஆளுக்கொரு வேலையாக ஆரம்பிப்போம். அண்ணா நாலைந்துகிலோமீட்டர் நடந்து சென்று வயல்களை ஒரு சுற்று பார்த்து வருவார். நான் பசுக்களை அவிழ்த்து கட்டி, சாணி அள்ளி ,அவற்றை குளிப்பாட்டி, நீர் காட்டி நிறுத்துவேன். அப்பா தொழுவருகே வந்து அமர்ந்து பசுக்களை கொஞ்சுவார்.
ஒன்பதுமணிக்கு காலை உணவு. பெரும்பாலும் புட்டுதான். மூங்கிலில் கயிறு சுற்றி உருவாக்கப்பட்டது குழாய். உலோகக்குழாய் என்றால் ஓரம் உலர்ந்து புட்டின் சுவை கெட்டுவிடும். புட்டுக்கு என்றே சிலவகை அரிசிவகைகள் உண்டு. சூடான புட்டு அப்பா முன் வாழையிலையில் பிறந்து வெளியே வரவேண்டும். பிசைந்து உண்ண பயிறுச்சுண்டல், பப்படம். கடைசிப் பகுதிக்கு மட்டும் வாழைப்பழம். பித்தளை வங்கா நிறைய பசும்பால் விட்ட டீ. அதன்பின் மீண்டும் வெற்றிலை. பிறகு முகக்கண்ணாடியை களமுற்றத்தில் ஸ்டூலில் நிறுத்தி இன்னொரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு பளபளக்கும் ஜெர்மானிய சவரக்கத்தியை கண்ணாடிக்கல்லில் பலமுறை கிச் கிச் என சிட்டுக்குருவி குரல்போல உரசி குனிந்து சவரம் செய்துகொள்வார். அப்பா அந்த கத்தியை பதினெட்டு வயதில் மூன்று ரூபாய்க்கு வாங்கினார். அதன் பின் சவரம்செய்யாத நாளே இல்லை. பின்னர் மீண்டும் ஒரு குளியல். இம்முறை வீட்டிலேயே கிணற்றடியில்.
அப்பா அலுவலகம்போவது காலை பத்தரை மணிக்கு. அதற்கு முன் சரியாக பத்து மணிக்கு கடிகாரத்துக்கு சாவி கொடுபபர். வீட்டின் காலத்தையே சரியாக அவர்தான் முடுக்கிவிடுகிறார் என்று தோன்றும். நாற்காலியை இழுத்து போட்டு ஏறி கண்ணாடிமூடியை திறந்து சாவியை எடுத்து பதனமாக திருகி முள்ளை சரிசெய்து பெண்டுலத்தை ஆட்டி விடுவார். தலைவழியாகப் போடும் சட்டை. ஜிட்டை என்று சொல்லவேண்டும், ஒரு ஜிப்பா சட்டை கலப்பு. அதற்கு தனியாக எடுக்கக்கூடிய பொன்னாலான பித்தான்கள். அவை ஒரு சிறு வெள்ளிக்கிண்ணத்தில் இருக்கும். தினமும் துடைத்து போட்டுக்கொள்வார். பேனா, பர்ஸ், கைக்குட்டை, மூக்குக் கண்ணாடி எல்லாமே அதனதன் இடத்தில் இருக்கும். அப்பாவின் அறை பயமுறுத்துமளவுக்கு சுத்தம். தினமும் எல்லா பொருட்களையும் துடைகக்வேண்டும். ஜன்னல்கம்பிகளைக்கூட. பத்தரை மணிக்கு அப்பா கோயில்முன் கும்பிட்டு விடைபெற்று ஆற்றில் இறங்கிச் செல்வார்.
அப்பாவின் நேரக்கணக்கு பிந்தவேண்டுமென்றால் கோபாலன் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். ஆற்று நீர் கோபாலனை ஓட்டம் நடுவே வந்த பாறை போல எண்ணி பவ்யமாக வளைந்து செல்லும். நீருக்குள் நெளியும் துதிக்கை ஆங்காங்கு வெளிக்கிளம்பி நீர்த்துளிகளுடன் பீரிட்டு மூச்சுவிடும். ராமன்நாயர் அப்பாவை பணிவாக வரவேற்பார். வெள்ளாரங்கல்லை வாங்கி அப்பா காதுகளைக் கொஞ்சம் தேய்த்துவிடுவார். கொம்புகளில் தட்டி ‘எந்தடா?’ என்று கொஞ்சுவார். ராமன்நாயர் அப்பாவை மேலும் பணிவாக கிளப்பிவிடவில்லை என்றால் அவர் அலுவலகம்போய்ச்சேர மதியமாகும்.
கோபாலனுக்கு அவன் ஒரு யானை என்ற தகவலே தெரியாதென்பது ஊரில் பரவலான பேச்சு. ஏழுமாத கைக்குழந்தையாக ஊருக்கு வந்தவன். அதன்பின் எப்போதும் மனிதர்கள்தான் சுற்றும். எப்போதாவது வேறு யானையைப்பார்த்தால் ‘என்ன இப்படி பெரிதாக இருக்கிறது?’ என்ற வியப்பு அவனில் தெரியும். மனிதர்கள் யாராவது அருகே இல்லாமல் இருக்கமுடியாது. தனிமைப்பயம். ராமன்நாயர் அவசரமாக எங்காவது போகவேண்டும் என்றால் யாரையாவது காவலுக்கு வைத்துவிட்டுச் செல்லவேண்டும். ஒருவயதுக்குழந்தைகூட போதும்.
மதமிளகும்போதுதான் கோபாலன் ஒரு யானை என்பது அவனுக்கும் மற்றவர்களுக்கும் நினைவுக்கு வரும். மதம் வழிய ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு மணம் வரும். ‘அச்சு அசல் மத்த மணமாக்கும்… கண்டுபிடிச்சிரலாம்.’ என்றார் ராமன்நாயர். உடனே கொண்டுபோய் கரும்பனையடியில் கட்டிபோடவேண்டும். ’மதயானைக்கு ஏழு பூட்டு’ என்று சாஸ்திரம். நான்கு கால்கள் கழுத்து வயிறு பின்பக்கம் என கனத்த சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கும். அப்போது கோபாலனின் உடலுக்குள் கரும் தோலுக்குள் வேறு யானை வந்து குடியேறிவிட்டதுபோலிருக்கும். ஆட்டம், தும்பிக்கை, நெளிவு, காதசைவு எல்லாமே முற்றிலும் வேறு போலிருக்கும். மனித அசைவைக் கண்டால் செவி நிற்கும். கொம்புகளை குலுக்கியபடி கிணற்றுக்குள் தகரப்பானை உரசுவதுபோன்ற ஒலியில் உறுமுவான்.
அக்கரை வைத்தியர் வந்து நவமூலி மருந்து காய்ச்சி சோற்றில் பனைவெல்லம் போட்டு பிசைந்து உருட்டி கமுகுப்பாளையில் வைத்து தூரத்தில் இருந்து நீக்கி வைத்துக் கொடுப்பார்கள். மதயானை நாள்கணக்கில் இரையெடுப்பதில்லை. உருளை எடுத்தது என்றால் மெல்ல மதமிறங்கப்போகிறதென்று பொருள். நள்ளிரவின் அமைதியில் அதனுள் முளைத்த அந்த காட்டுயானை பெருங்குரலெடுத்து பிளிறுவதைக் கேட்கையில் மயிர் சிலிர்க்கும். வெகுதொலைவுக்கு அப்பால் திற்பரப்பு கோயிலின் கரையில் கட்டப்பட்டிருக்கும் பார்க்கவிக்குட்டி அதைக்கேட்டு திரும்ப பிளிறுவாள்.
அதிகபட்சம் நாற்பது நாள். மதமிறங்கியதும் செம்மண் குன்றாக முதுகில் புல்முளைத்து நிற்கும் கோபாலனை நேராக ஆற்றுக்குள் கொண்டுபோய் படுக்க வைப்பார்கள். ஊறவைத்து ஊறவைத்து கழுவக் கழுவ செம்மண் கரைந்துகொண்டே இருக்கும். திருவட்டார் மடப்பள்ளி உருளியை கவிழ்த்தது போல கன்னங்கரேலென ஆனதும் கூட்டி வந்தால் நேராக எங்கள் வீட்டுமுன் நின்று தலையை தலையை ஆட்டி முன்னங்காலை தூக்கி தூக்கி வைத்து கருப்பட்டியும் தேங்காயும் எதிர்பார்ப்பான். அப்பா அவரே ஊட்டி விடுவார். முழு பலாப்பழத்தைக் கொடுத்தால் சுளைசுளையாக பிடுங்கி சாப்பிட்டு பின்பே மடலைச் சாப்பிடும் ருசிபேதம். சாப்பிடும்போது கரிய உடலெங்கும் ஏரிநீரில் காற்று செல்வது போல அலையலைலாக பரவும் பரவசம்.
அப்பாவுக்கு கோபாலன் பாலிய நண்பன். ஊருக்கு கோபாலன் வரும்போது அவருக்கு பத்து வயது. கோபாலனுக்கு முதலில் மூக்குப்பொடி போட கற்றுக்கொடுத்தது அப்பாதான். அதன்பின் யாரிடம் பொடி வாசனை வந்தாலும் கோபாலன் துதிக்கை நீட்டி சிமிட்டா வாங்கிக்கொள்வான். அப்பாவும் நல்ல குண்டுதான், ஆனால் மாநிறம். யானையும் அப்பாவும் வந்தால் ‘ரெண்டுபேரும் எங்க போறீங்க?’ என்று அச்சு ஆசான் கேட்பதுண்டு.
அப்பா மாலை ஆறுமணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவார். நாய் அவருக்காக ஆற்றங்கரையில் காத்துகிடக்கும். அதனுடன் செல்லமாகப் பேசியபடியே வரும்போது கோயில் திறந்திருக்கும். கோயிலுக்குள் சென்று ஆளில்லாத கோயிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மலர் ஆராதனைசெய்யும் போற்றியிடம் சில நகைமுகமன் சொல்வார். கருவறையில் நின்று போற்றி அற்புதமான சொற்களால் பதிலுரைப்பார். போற்றி அவரது தூயமலையாளத்தில் சொல்லும் அசல் சிவாஷ்டகம் எப்படி இருக்கும் என அப்பா செவித்தூரத்தில் பெண்கள் இல்லை என்றால் சொல்லிக் காட்டுவார்
வீட்டுக்கு வந்து பித்தான் பேனா பர்ஸ் என முறையே எடுத்து அதனதன் இடங்களில் வைத்துவிட்டு சட்டையை தலைவழியாகக் கழட்டிவிட்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்து வெற்றிலை போடுவார். அந்த ஒலியில் சூடான டீ வரும். துண்டு எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப்போய் குளித்து வர எட்டரை. இரவுணவுக்குக் கஞ்சி. தொட்டுக்கொள்ள ஊறவைத்த மாங்காய் , நார்த்தங்காய் ஊறுகாய், காய்ச்சில்கிழங்கு மசியல், பொரித்த பப்படம், மரவள்ளிக்கிழங்கு வறுவல், பொரித்த மீன் என ஏழெட்டு இருக்கும். மீண்டும் வெற்றிலைபோட்டு அமரும்போது ஒன்பதரை மணி. போற்றி கோயில் நடை சாத்திவிட்டு வருவார். இருவரும் இரவு வெகுநேரம் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
ஆகவேதான் ஏழரை மணிக்கும் அப்பா வீடு திரும்பாதபோது அம்மா பதற்றமடைந்தாள். போற்றி வந்து ‘வருவான்… எங்க போறான்’ என்றார். ஒன்பது மணிக்கு அவருக்கும் பதற்றம் ஏற்பட்டது. பத்துமணிக்கு வீட்டில் நல்ல கூட்டம். ஒரு குழு கிளம்பி அலுவலகம்சென்றுவிட்டு அப்பா அன்று அலுவலகம் வரவே இல்லை , எந்த தகவலும் இல்லை என்று வந்து சொன்னது. விடிகையில் நாலைந்து குழுக்கள் திருவட்டாறு திற்பரப்பு என கிளம்பிச் சென்றன. அன்று முழுக்க தகவல் இல்லை. மாலை அம்மா படுத்து விட்டாள். அன்றிரவு இன்னும் விரிவாக தேட ஆரம்பித்தார்கள். அம்மாவிடம் ஏதாவது சண்டையா என்றார்கள். கடனா, வேறேதும் பிரச்சினையா என்றார்கள். ஒன்றுமே இல்லை. எல்லாமே வழக்கம்போலத்தான்.
மறுநாள் மதியம் அப்பா இருக்குமிடம் தெரிந்தது. கூட்டாலுமூடு பகவதிகோயில் அருகே ஒரு வீட்டில் இருந்தார். ’யாரும் போய் ஏதும் கேட்கவேண்டாம், அங்கே இருந்தும் போனான் என்றால் பிறகு கண்டுபிடிக்க கஷ்டம்’ என்று போற்றி சொன்னார். அவர் என்னையும் கூட்டிக்கொண்டு அப்பாவைப்பார்க்கச் சென்றார். ஒரு சிறிய ஓடைக்கரையில் பாழடைந்த பழைய வீடு. சுவர்களில் காரை முற்றிலுமாக பெயர்ந்து விழுந்திருந்தது. கதவே கிடையாது. ஓலைக்கூரை மட்கி கரிய கந்தலாக காற்றில் பிய்ந்து பறந்தது. அருகே நின்ற புளியமரத்தின் சருகுகள் கூரைமேல் குவிந்து கிடந்தன. அப்பாவின் தூரத்துச் சொந்தமான ஒரு கிழவர் மட்டும்தான் அங்கே இருந்தார். அவருக்கு வயது எண்பதுக்கும் மேல். கோயிலில் இருந்து அவருக்கு மானியமாக ஒருபட்டை சோறு கிடைக்கும். அப்பா மாதம் பத்து ரூபாய் அனுப்பி வைப்பார். அதுதான் அவரது வாழ்க்கைக்கு ஆதாரம்.
வீட்டுக்கு முன் அப்பா இருப்பது தொலைவிலேயே தெரிந்தது. வீட்டு முற்றத்திலேயே கிழவர் மலம்கழித்து அவை பல பதங்களில் காய்ந்து கிடந்தன. நெருங்க நெருங்க நாற்றம் ஓங்கி வந்தது. அப்பா சவரம்செய்யாமல் மெல்லிய வெள்ளை நுரை போல தாடியுடன் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். தூரத்திலேயே போற்றி நின்றுவிட்டார். ‘அவனுடைய இருப்பைப் பார்த்தாயா? இது மூதேவி அடித்ததுதான். கண்டிப்பாக மூதேவி வேலைதான். இப்போது அருகே போய் பேசுவதில் பயன் இல்லை. என்ன ஏது என்று விசாரிப்போம்’ என்றார்.
அப்பா வந்தது முதல் குளிப்பதோ வெளியே போவதோ இல்லை என்றார்கள். தனிமையும் நோயுமாக மனம் கசந்து இருண்ட கிழவர் இடைவெளியில்லாமல் இருமி துப்பி கெட்டவார்த்தையாக கொட்டிக்கொண்டிருந்தார். அப்பா எதையுமே பொருட்படுத்தாமல் அந்த திண்ணையிலேயே நாள்முழுக்க அமர்ந்திருந்தார். அவர் வந்ததைக் கண்டதனால் கோயிலில் இருந்து இரண்டு பட்டைச்சாதம் அனுப்பினார்கள். அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அப்படியே அமர்ந்திருக்கிறார் என்றார்கள். அவரைப்பார்க்க என் மனம் அவர் என் அப்பா இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தது. கோயிலருகே ஒரு போற்றிவீட்டில் தங்கினோம்.
மறுநாள் காலை போற்றி அப்பாவை சென்று பார்த்தார். ‘பாகுலேயா, நீ வீட்டுக்கு வா. இது என்ன கோலம்’ என்றார். ‘ம்ம்?’ என்றார் அப்பா. என்னை அவர் பார்த்தபோது என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று தோன்றியது. ‘டேய் வீட்டுக்கு வாடா..’ என போற்றி கெஞ்சினார். அப்பா ‘ம்ம்’ என்று மட்டும் சொன்னார். கிழவர் வசைமாரிப்பொழிந்தார். கொஞ்சநேரம் அமர்ந்து விட்டு போற்றி வந்துவிட்டார். ஊராரைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஊர் திரும்பினோம். மேலும் மூன்றுநாள் அப்பா அங்கே இருந்தார். நாலாம்நாள் அதிகாலையில் கிளம்பி நடந்தே வீட்டுக்கு வந்தார். வரும்வழியிலேயே ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு உடைகளை துவைத்து உடுத்துக்கொண்டு கோயில் முன் நின்று கும்பிட்டார். அவர் வீட்டில் நுழைந்தபோது அம்மா விசும்பினாள்.
அன்று முழுக்க அப்பா தூங்கினார். பின்னிரவில் எழுந்து வெற்றிலை போட்டுக்கொண்டபின் கொஞ்சநேரம் அமர்ந்திருந்தார். அம்மா எழுந்து ’சோறு போடவா?’ என்றாள். சோற்றை வேகமாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுத்து சில கணங்களிலேயே தூங்கிவிட்டார். மறுநாள் சரியாக பிரம்ம முகூர்த்ததில் எழுந்து தோளில் ஈரிழைத்துவர்த்தும் , இடுப்பில் ஒரு பாலராமபுரம் ஒற்றைவேட்டியும், பூவரச இலையில் உமிக்கரியும், லைபாய் சோப்புமாக குளிக்க கிளம்பினார்.
வெகுநாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன் என்னதான் காரணம் என. அம்மாவுக்கே அதிசயம்தான். அவளறிய எந்தக் காரணமும் இல்லை. ஆகவே அது ‘தேவி விளயாட்டு’ என்றாள். காரணமில்லாத அனைத்துக்கும் காரணமாக இருப்பது தெய்வம்தானே?
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Aug 3, 2010
தொடர்புடைய பதிவுகள்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
வேராழம்
டம்மி
பின் தூறல்
பத்து சட்டைகள்
விளையாடல்
January 28, 2017
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
‘நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது? வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை.
மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. ஆகவே நாவல் மானுட உணர்ச்சிகளை தொட்டுக்காட்டும் ஒர் இலக்கிய வடிவம்.ஆகவே மானுட உணர்ச்சிகளின் நிலைக்களமாகிய மானுட மனத்தைப் பற்றிய அதன் ஆழத்தைப்பற்றிய கலை நாவல். மானுட ஆழம் என்பது பண்பாட்டின் ஆழமே. ஆகவே நாவல் என்பது பண்பாட்டைப்பற்றிய அவதானிப்பு . ஆம், காலமாகி நிற்கும் அனைத்தைப்பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலையே நாவல்.
இந்திய மொழிகளில் பெரும் நாவல்கள் பலவும் காலமாறுதலைப்பற்றிச் சொன்னவை. காலநதியை காட்டும் அக்னி நதி [குர் அதுல் ஐன் ஹைதர்] காலத்தின் அலைகளைக் காட்டும் மண்ணும் மனிதரும் [ சிவராம காரந்த்] காலப்பிரம்மாண்டத்தை வரைந்திடும் கயிறு [ தகழி சிவசங்கரப்பிள்ளை]என பட்டியல் பெரிது. ஆனால் இவையனைத்திலும் முதன்மையான ஆக்கம் என் நோக்கில் ஆரோக்கிய நிகேதனமேயாகும். அது காலச்சுழிப்பை வாழ்க்கை மோதலின் பேருருவமாக ஆக்குகிறது. உணர்ச்சிகரமான நாடகத்துவமும் அழகிய கவித்துவமும் கைகூடிவந்த நாவல் இது. மொழிபெயர்ப்பு வழியாக நமக்குக் கிடைக்கும் இந்திய நாவல்களில் இதுவே சிறந்தது. உலக அளவில்கூட இதற்கிணையான ஆக்கங்கள் மிகமிகக் குறைவேயாகும்.
ஆரோக்கிய நிகேதனம் வாழ்க்கையை சித்தரிக்கும்போதே இயல்பாக அதன் பல கூறுகளை கவித்துவமாக அழுத்தி உருவகங்களாக ஆக்கிவிடுகிறது. இவ்வுருவகங்கள் மூலமே பற்பல ஆழ்பிரதிகளை உருவாக்கி மாறுபட்ட வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது. இந்த சொல்லப்பட்ட கதை வழியாக வாசகன் முன்னகர்ந்து சொல்லப்படாத ஆழங்களுக்கு செல்ல வழி அமைகிறது. இவ்வாறு ஆழ்பிரதியை தொட்டெழுப்பும் வாசகர்களுக்குத்தான் இந்நாவல் பேரிலக்கியமாக ஆகிறது. இந்திய நாவல்களில் இந்த அளவுக்கு கவ்த்துவ நுட்பம் கொண்ட பிறிதொரு ஆக்கம் இல்லை. ஆனால் மிக யதார்த்தமான மொழி மற்றும் சித்தரிப்பு கொண்ட நாவல் இது.
*
‘ஆரோக்கிய நிகேதன’த்தில் ஒரு சம்பவம் வருகிறது. தாந்து கோஷால் என்ற பிராமணனுக்குக் கார உணவு மீதும் மசாலா மீதும் அளவுகடந்த பிரேமை. (வங்கப் பிராமணர்கள் பொரித்த மீன் மற்றும் மீன் ஊறுகாய் மீது உயிரையே வைத்திருப்பவர்கள்.)
விளைவாக வயிற்றுப்புண் முற்றிப்போய் சிகிச்சைக்காக அப்பகுதியின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரான ஜீவன் மஷாயிடம் வருகிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் ஜீவன் மஷாய் அவன் தன் உணவுப் பழக்கத்தை விடாதவரை நோய் குணமாகாது என்கிறார். ”இது உன்னுடைய விதி தாந்து. இது ஒருபோதும் குணமாகாது. நீ இதை வெல்லமாட்டாய். இதன்மூலம்தான் உன் மரணம் நிகழும்” என்கிறார் மஷாய்.
தாந்து அதிர்ச்சி அடைகிறான். ”சாதாரணமான வயிற்றுவலிக்காக தேடிவந்தால் எனக்கு நாள் குறிக்கிறாயா? நீ போலி மருத்துவன். ஆஷாட பூதி. சாகப்போவது நீதான்! ” என்று கத்துகிறான். அழுகிறான். ”நான் இப்போதே அல்லோபதி டாக்டரிடம் போய் நோயைக் குணப்படுத்திக் காட்டுகிறேன்!” என்று சவால் விடுகிறான். வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் என்று சொல்லும் மஷாய் சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயர்சியே என்கிறார். உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மஷாய்.
ஆயுர்வேத மருத்துவம் ரிபு என்ற ஒன்றைப் பற்றி வலியுறுத்திக் கூறுகிறது. நோய் என்பது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையிலிருந்து உருவாகக் கூடியது. அவ்வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும் மனோபாவமே ரிபு எனப்படுகிறது. ஒவ்வொருவருக்குமே ஒவ்வொன்று ரிபுவாகிறது. பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள்… ரிபு உண்மையில் மரணத்தின் தூதன். நம்மில் உறைந்து நம் வாழ்க்கையை வடிவமைத்து, நம்மை பலவீனப்படுத்தி, உடன் அழைத்துச் சென்று மரணத்திடம் ஒப்படைப்பவன். ரிபு ஒருவன் பிறக்கும்போதே கூடவே பிறந்துவருகிறது. ‘ உடன்பிறந்தே கொல்லும் நோய்’ என நம் நூல்களும் இதைச் சொல்கின்றன. ஆனால் நடு வயது ஆனபிறகே அது என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. தாந்துகோஷாவின் ரிபு என்பது உணவில், குறிப்பாக மசாலா ருசியிலும் காரத்திலும் உள்ளது; அதிலிருந்து அவன் தப்பமுடியாது என்கிறார் மஷாய். மனமுடைந்த தாந்து மண்வாரி வீசி சபித்தபடி, அழுதபடி ஓடிப்போகிறான். நேராக ஊருக்குப் புதிதாக வந்த அலோபதி டாக்டரிடம் சென்று முறையிடுகிறான்.
டாக்டர் பிரத்யோத் போஸ¤க்குத் தாங்கமுடியாத கோபம் வருகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மரணம் நிச்சயித்துகூறும் மருத்துவமுறையை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் ஆறுமாதத்தில் குணமாகக்கூடிய பெப்டிக் அல்சர் நோய்க்காக மரண தண்டனை விதிப்பதைக் கேட்டு அவர் குமுறுகிறார். தாந்துவைத் தன் ஆஸ்பத்திரியில் கூடவே தங்க வைத்து மருத்துவம் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை அது பழைய காட்டுமிராண்டித்தனமான சிகிச்சைமுறைகளுக்கு எதிரான ஒரு சவால், போர். ஆறு மாதத்தில் தாந்து முற்றிலும் குணப்படுவான் என்று உறுதியளிக்கிறார். சிகிச்சை நடக்கிறது. தாந்து தன் ருசிகளைக் கட்டுப்படுத்தி மீனையும் ஊறுகாயையும் மட்டும் ஆறுமாதகாலம் ஒதுக்கினால் போதும். ஆனால் நாக்கை அடக்க முடியாத தாந்து டாக்டரின் வீட்டிலேயே உணவைத் திருடித்தின்று வயிற்றுவலி வந்து நோய்முற்றி சாகிறான். டாக்டருக்கு அது பெரிய அதிர்ச்சி.
இருவேறு வாழ்க்கை நோக்குகளுக்கு இடையேயான போராட்டத்தை, கால மாறுதல் மூலம் ஏற்படும் வாழ்க்கைச் சுழிப்பை ஆரோக்கிய நிகேதனம் பல முனைகளில் பலவகையான உணர்ச்சிவேகங்கள் மூலம் சொல்லிச் செல்கிறது. இத்தகைய முரண்படுதல்களைச் சித்திரிக்கும்போது ஏதாவது ஒரு தரப்புடன் படைப்பாளி இணைந்து விடுவதுண்டு. அல்லது எதையும் சாராது உணர்ச்சியற்ற சாட்சி மட்டுமாக ஒதுங்கிவிடுவதுமுண்டு. ஆனால் தாராசங்கர் பானர்ஜி வாழ்க்கைப் போராட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறார். வியப்பு என்னவென்றால் எல்லா தரப்புகளுடனும் அவருடைய மனம் ஒரேவிதமான ஆர்வத்துடன் இணைந்துகொள்கிறது. மொத்த நாவலுமே சரி தவறுகளை, உண்மை பொய்களை முழுமையாக நிர்ணயித்து விடமுடியாத தளத்தில்தான் நகர்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்நாவல் தனது புதுமையைத் தக்கவைத்தபடி, நம்மை ஆழ்ந்த சிந்தனைகளை நோக்கி நகர்த்துவதாக இருப்பதற்குக் காரணம் இதுவே.
ஆயுர்வேதம் மனிதனுக்கு சிகிழ்ச்சை அளிப்பதைப்பற்றி பேசுகிறது. அலோபதி உடலுக்கு சிகிழ்ச்சை அளிக்க முற்படுகிறது. ஒரு உடல் அதனுள் வாழும் ஆத்மாவும் அவ்வாத்மாவின் வெளிப்பாடான மனமும் அம்மனதையும் உடலையும் கட்டுப்படுத்தும் வாழும் சூழலும் எல்லாம் இணைந்த ஒன்றே என்று நம்புகிறது ஆயுர்வேதம். ஆகவே ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ அது சிகிழ்ச்சை அளிக்கிறது. அலோபதியைப்பொறுத்தவரை மனித உடலென்னும் இயந்திரம் தன் இயல்புக்கு தடை ஏற்பட்டு பழுதாகிறது, அப்பழுது நீக்கப்படும்போது அது சீரடைகிறது. ஒன்று வாழ்க்கை சார்ந்த முழுமைநோக்கு. இன்னொன்று நடைமுறை நோக்கு. இரண்டுமே இருவகைகளில் முக்கியமானவை , உதவிகரமானவை. முழுமை நோக்கு ஒரு கட்டத்தில் இயர்கையின் பிரம்மாண்டத்தை உணர்ந்து அதை தன் அறிவால் அள்ளமுடியாது சரண் அடையும் மனநிலையை கொள்ளும். நடைமுறைநோக்கு ஒருபோதும் தன் நம்பிக்கையை இழப்பதில்லை. தன் செயல்வட்டத்துக்க்கு வெளியே அது பார்ப்பதில்லை. ஆகவே அதற்கு திசைதடுமாற்றங்களே இல்லை.
இங்கே இருவகை வாழ்க்கை முறைகள் தான் சொல்லப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இரு காலகட்டங்கள். இரு யுகங்கள். அவை மோதிக்கொள்ளும் , அல்லது வழிபிரியும் ஒரு சந்தியில் இந்நாவல் நிகழ்கிறது. ஜீவன் மஷாய் மெல்லமெல்ல பின் வாங்கி மறையும் ஒருகாலகட்டத்தின் பிரதிநிதி. பிரத்யோத் உருவாகிவரும் ஒரு காலகட்டத்தின் முகம். வேறுவழியில்லை. இயற்கையின் மடியில் மானுட வாழ்வை வைத்துப் பார்ப்பது ஜீவன் மஷாயின் நோக்கு. அவருக்கு மருந்துகளை அளிப்பதும் இயற்கையே. அங்கு வாழ்க்கை மரணத்தால் நன்கு சமன்செய்யப்பட்ட ஒரு இயக்கம். பிரத்யோத் இயந்திரங்களின் ஆட்சியில் மனிதன் வாழ்வதைப் பார்க்கிறார். அவருடைய மருந்துகள் தொழிற்சாலையில் உற்பத்தியாகின்றன. அங்கே வாழ்க்கை என்பது மரணத்திற்கு எதிரான பெரும் சவாலாக உள்ளது.
ஆரோக்கிய நிகேதனம் ஒவ்வொரு கணுவிலும் இவ்விரு யுகங்களும் உக்கிரமாக மோதிக்கொள்வதைக் காட்டுகிறது. அதன் எல்லா நிகழ்ச்சிகளையும் இந்நோக்கில் நாம் நுண்வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலின் இறுதியில் ஒரு புதிய யுகம் எழுந்துவருவதை, அதம் எல்லையில்லா வீச்சை ஜீவன் மஷாய் உணர்கிறார். சென்ற காலத்தின் ஆழத்தை பிரத்யோத் அறிகிறார். ஒரு புள்ளியில் அடிப்படையான மானுட தீவிரம் ஒன்றுதான் இவ்விரு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்ற தரிசனத்தை அளித்து முழுமைகொள்கிறது நாவல்.
*
முதல் வாசிப்பில் கட்டுக்கோப்பான கதையமைப்பு கொண்ட சம்பிரதாயமான நாவலாக ‘ஆரோக்கிய நிகேதனம்’ தோற்றமளிக்கக்கூடும். ஜீவன்மஷாய் என்ற மையக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை இளமை முதல் மரணம் வரை சித்தரிக்கும் முறை இதில் உள்ளது. புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவக் குலத்தில் பிறந்தவர் ஜீவன் மஷாய். செல்வம், அழகு, அறிவு முதலியவற்றை இளமையிலேயே அடைந்தவர். இத்தகைய நிறைவிலிருந்து உருவாகும் ஆணவம் அவரிடம் உண்டு. தந்தை அவரை மேல்நாட்டு மருத்துவம் பயில கல்கத்தாவிற்கு அனுப்புகிறார். தோல்வியறியாதவறாக , வாழ்க்கையை வெல்லத்துடிப்பவராக, அங்கு செல்லும் ஜீவன் வாழ்வின் முதற்கட்ட சவால்களைச் சந்திக்க நேர்கிறது.
அங்கு அவர் உடன் பயிலும் நண்பனின் சோதரியாகிய மஞ்சரி தத்தா என்ற துடிப்பான அழகியைச் சந்தித்து காதல் கொள்கிறார். உலகியல் சார்ந்த இச்சை மட்டுமே அளிக்கும் உத்வேகத்தின் வடிவம் மஞ்சரி. அவளுடைய கட்டற்ற இளமையின் ஜாலத்தில் அடிமையாகி கிடக்கிறார். அவளை விரும்பும் ஜமீந்தார் மகனாகிய பூபீ போஸ¤க்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டு அவர் தப்பியோட நேர்கிறது. படிப்பு இல்லாமலாகிறது. அவர் காதலித்த மஞ்சரியை அவரது ஜென்ம விரோதி பூபேந்திரநாத் போஸ் திருமணம் செய்து கொள்கிறார்.
மஞ்சரியை இழந்தது ஜீவனின் நெஞ்சில் ஒரு கனலை எரியவிடுகிறது. அதன் வெம்மையில் எண்ணங்கள் கருக அவர் அலைகிறார். மஞ்சரி அவரை நிராகரித்து பூபிபோஸை மணம் செய்ததற்கு ஒரே காரணம்தான், பூபி மேற்படிப்பு படிப்பவர். ஜீவன் மேலே படிக்கப்போவதில்லை, சட்டைபோட்டாத நாட்டுப்புற மருத்துவனாக அவன் வாழப்போகிறான். அந்த வன்மம் ஜீவனை விட்டுச்செல்ல்வதேயில்லை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த பேரழகியான, ‘ஆத்தர் பௌ’வை திருமணம் செய்து கொள்கிறார். குலத்தொழிலான ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த மருத்துவராகிறார்.
அதற்கு ஒரே நோக்கம்தான். ஆத்தர்பௌவை வைர நகைகள் பூட்டி பல்லக்கில் ஏற்றி கொண்டுசென்று மஞ்சரியின் முன் நிறுத்தவேண்டும். அவள் அதைக்கண்டு மனம் எரிந்து புழுங்கவேண்டும். காதலும் பகைமையும், அல்லது இரண்டும் ஒன்றாகக் கலந்து உருவான ஓர் ஆற்றாமை. பழிவாங்கும் பகல் கனவுகள். எத்தனை குழந்தைத்தனமானவை அவை. வெளியே எடுத்தால் அப்படியே கூச்சி சிறுத்து அழியக்கூடியவை. இன்னொரு மனிதரிடம் சொன்னாலே சிரிப்பாக மாறக்கூடிய அளவுக்கு அற்பமானவை. ஆனால் அவையே ஜீவன் மஷாயின் முழுவாழ்க்கையையும் இயக்குகின்றன. அந்த வன்மமே அவரது ரிபு
அதை ஆத்தர் பௌ நன்கறிவாள். அவர் மனதில் தனக்கு இடமில்லை என்பதும் அவர் விரும்பிய வேறு ஒருத்தியின் நிழலாக மட்டுமே தான் தேர்வுசெய்யப்பட்டுள்ளோம் என்பதும் அவளுக்கு திருமணமான சிலநாட்களிலேயே தெரியவருகின்றன. அவளுடைய ஆத்மா ஆழமாகப் புண்படுகிறது. அவளை எந்நேரமும் எரியும் தழல்மீது நிற்பவளாக ஆக்குகிறது. அவள் நெஞ்சில் நஞ்சு நிறைகிறது. நாவிலிருந்து அது வெளிவந்தபடியே உள்ளது. அவள் மகன் நோயுற்று இறக்கிறான். அதைக்கூட அவர் மீதான விஷத்தை உமிழ்வதற்கான ஒரு சாக்காக மாற்றிக் கொள்கிறது அவள் ஆழ்மனம். அவள் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் ஒன்று தெரியும் அவளுக்கு, உலகில் அந்த ஒரு மனிதர் அன்றி எதுவுமே அவளுக்கு ஒரு பொருட்டு அல்ல. அந்த மனிதரையன்றி எவரையுமே அவள் நேசிக்கவில்லை. அவளுடைய விடுதலையை, முக்தியை அவர் மட்டுமே அளிக்க இயலும். அவர் தன்னை மறந்து அளிக்கும் ஒருதுளி உண்மையான அன்பு போதும். ஆனால் அதை அவரால் அளிக்க முடியாது என்றும் அவள் ஆழம் அறியும்.
நாவல் தொடங்கும்போது ஜீவன் மஷாய் வயோதிகர். ஆயுர்வேதம் புதிய ஆங்கில மருத்துவத்தின் முன் செல்வாக்கிழந்து சுருங்கிவிட்டது. உடைந்துபோன வைத்திய சாலையில் வயோதிகரான ஜீவன் மஷாய் தன் இறுதிக்கட்ட வாழ்வை நினைவுகளும் துயரங்களுமாகக் கடத்தி வருகிறார். அவரது அருமை மகன் மரணமடைந்து விட்டான். படிப்படியாக ஆயுர்வேதத்திற்கும் புதிய மருத்துவமுறைக்கும் இடையே ஒரு மோதல் உருவெடுக்கிறது.
ஜீவன் மஷாயின் எதிர் தரப்பாக அதில் முன் வருபவர்தான் கிராமத்திற்குப் புதிதாக வந்துள்ள டாக்டர் பிரத்யோத். பிரத்யோத் டாக்டரின் பார்வையில் ஆயுர்வேதம் காலத்திற்கு ஒவ்வாத குருட்டு வைத்தியமுறை. தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. ஆயுர்வேதம் மரணத்தை பிங்கலநிற கூந்தலுடன் துயரங்களிலிருந்து விடுதலை தர வரும் தேவதையாக, ‘பிங்கல கேசினி’யாகப் பார்க்கிறது. வாழ்வு இறுதியில் மரணத்திற்கு அடிபணிந்தேயாக வேண்டும். வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப்படுத்தலாம். ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை தவிர்த்துவிட முடியாது. மரணத்தைக் கண்டுவிட்ட பிறகு மனநிம்மதியுடன் நிறைவுணர்வுடன் அதை எதிர் கொள்வதே முக்கியமானது.
மரணத்தை மருத்துரின் தோல்வியாக பார்க்கும் பிரத்யோத் ஆயுர்வேதத்தை வாழ்வைவிட மரணத்தைப் பற்றிப் பேசும் சிகிச்சை முறை என்கிறார் . மரணம் என்ற கரியபெரும் சக்தியை அனைத்து ஆயுதங்களாலும் எதிர்த்துப் போரிடும் போராகவே நவீனச் சிகிச்சை முறை அவருக்குப் படுகிறது. இந்த மாறுபட்ட இரு பார்வைகளும் பல்வேறு அழுத்தமான படைப்புத் தருணங்கள் வழியாக மோதி இறுதியில் ஒன்றையன்று கண்டடைகின்றன. இயற்கையின் அளவிலா வலிமையை எதிர்த்து நிற்கும் மானுட ஞானத்தின் சோர்வில்லாத ஊக்கத்தை ஜீவன் மஷாய் கண்டடைகிறார். மரணம் என்று தன் முன் வருவது பிரபஞ்ச இயக்கத்தின் மகத்தான விதிமுறைகளில் ஒன்று என்று பிரத்யோத் டாக்டர் கண்டடைகிறார்.
டாக்டரின் மனைவி வழிப் பாட்டியாகத் தன் இளமைக் காதலி மஞ்சரி தத்தாவைக் காணும் ஜீவன் மஷாய் வாழ்வெனும் மாபெரும் அபத்த நாடகத்தின் இறுதி அங்கதத்தை அறிகிறார். அவரது மரணத்தின் மீது விழுந்து, இறுதிவரை கிடைக்காது போன காதலின் பலியாக, அத்தர் பௌவும் மரணமடைகிறாள்.
இப்பெரும் படைப்பை கூர்ந்த வாசகன் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் ஊடுருவிப் படிக்க முடியும் என்பதே இதை பேரிலக்கியமாக ஆக்குகிறது. இதன் வாசிப்புச் சாத்தியங்களைக் குறிப்பிட்டு முடிப்பது எளிதல்ல. நாவல் முழுக்க நுண்ணிய படிமங்கள் பல ஊடுபாவாகப் பரவி கவித்துவச் செறிவை அளிக்கின்றன. நோயாளிகளின் நாடியை தொட்டுப் பார்த்து ஜீவன் மஷாய் அறியும் மரணத்தின் காலடியோசை நாவல் முழுக்க ஒலித்தபடியே உள்ளது. அதேபோல கிராமம் முழுக்க முழங்கும் ஜீவன் மஷாயின் கனத்த காலடியோசை மீட்பின் ஒலியாகவும், தவிர்க்கமுடியாத மரணத்தின் ஒலியாகவும் மாறிமாறி வடிவம் கொள்கிறது. ஒவ்வொரு கதைச் சந்தர்ப்பமும் வேறு ஒரு தளத்தில் கவித்துவப் படிமமாக மாறி குறியீட்டுப் பொருள்தரும் அற்புதம் இந்நாவலில் சாத்தியமாகியுள்ளது.
இந்நாவலில் காலம் சீரான முன்னோக்கிய நகர்வாக இல்லை. இயல்பான முறையில் ஜீவன் மஷாயின் நினைவுகளாக பழைய கதையும் நிகழ்காலக்கதையும் கலந்துசெல்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமாக நடைபெறுவதில்லை. ஒவ்வொரு தருணத்திலும் ரத்தம் தெறிக்கும் உயிர் வதையுடன் அவை மோதிக்கொள்கின்றன. பழைமை தன் உயிர்சாரத்தை புதுமைக்குத் தந்து மறைய புதுமை தன் முன்னோக்கிய பாய்ச்சலுக்கான சக்தியை பழைமையின் பின்பாரத்திலிருந்தே பெறுகிறது. பழைமை புதுமை எதுவுமே இந்நாவலில் ஒற்றைப்படையாகச் சித்திரிக்கப்படவில்லை. ஒவ்வொரு கதைச் சந்தர்ப்பத்திலும் இந்நாவல் அளிக்கும் காலதரிசனம் சந்தேகமின்றி மகத்தானதுதான்.
ஜீவன் மஷாயின் வாழ்க்கைச் சித்திரம் அளிக்கும் வாசிப்பனுபவம் கடைசியில் வேறு ஒரு திசையில் நம்மை நகர்த்துகிறது. காலவெள்ளத்தில் ஒரு சிறு குமிழியாக ஜொலித்து வர்ணஜாலம் காட்டி உடைந்து மறைந்துபோகும் மானுட வாழ்வின் அபத்தத்தைத் திடுக்கிட வைக்கும் தீவிரத்துடன் இந்நாவல் சித்திரிக்கிறது. அதே சமயம் அந்தச் சிறு குமிழியின் பரப்பில் கொப்பளித்து மறையும் முடிவற்ற பிம்பங்களையும் இது காட்டுகிறது. வாழ்வு நிலையற்றது என்று ஒரு கணமும் வாழ்வு மகத்தானது என்று மறுகணமும் காட்டியபடியே உள்ளது இது.
*
ஆரோக்கிய நிகேதனம் நாவல் தொடங்கும்போது ஜீவன் பந்து மஷாயின் அப்பா ஜகத் பந்து மஷாய் சொன்னார். வைத்தியம் எப்போதும் செல்வம் குன்றாத தொழில். கொடுப்பவனுக்கும் கொள்பவனுக்கும் லாபம் வரும் வணிகம். புண்னியமும் பணமும் தருவது என்று. அந்த நம்பிக்கையே அவரது தொழிலின் அடிப்படை. அவரைப்பொறுத்தவரை வைத்தியம் என்பது ஒரு சத்கர்மம். சாத்வீகமே அதன் அடிப்படை தன்மை. வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையேயான சமரசமே ஆயுர்வேதம் உத்தேசிக்கும் சிகிழ்ச்சை.
அதற்கு நேர் எதிரானது அலோபதி மருத்துவம். அது ரஜோ குணம் கொண்டது. மரணத்துடன் உருவிய வாளுடன் கடைசிச் சொட்டு வரை போரிடுவதே அதன் பணி. ஜீவன் மஷாயின் கணக்குநூல் முழுக்க வராக்கடன்களின் பட்டியல்தான். அவரால் மருந்துக்கு கணக்கு சொல்ல முடியாது. நோயுற்றுவருபவனுக்கு அவர் அன்னை, தந்தை, குரு, தெய்வம் போல. அந்நிலையில் நோயாளியும் அப்படித்தான் நினைப்பான். ஆனால் நோய் விலகியதும் மனம் மாறிவிடும். ‘என்னது ஐம்பது ரூபாயா? கொஞ்சம் பச்சிலைச் சாற்றை பிழிந்து விட்டதற்கு ஐம்பது ரூபாயா? ‘ என்பான். ஆனால் சாரு டாக்டருக்கு வராக்கடனே இல்லை. கட்டணம் கொடுக்காமல் அவர் சிகிழ்ச்சையை ஆரம்ப்பிப்பதே இல்லை. அவரை நோயாளி தவறாக என்ணுவதுமில்லை. அவரை ஒரு நிபுணராக மட்டுமே நோயாளி காண்கிறான். ஜீவன் மஷாயை தன் உறவினர் போல. இவ்வேறுபாடு இரு யுகங்களின் அற வேறுபாட்டின் குறியீடுபோல நாவலில் வருகிறது.
ரஜோ குணத்தின் முழு உருவம் ரங்லால் டாக்டர். அவருக்கு அவரே குரு. நதியில் செல்லும் பிணங்களை அறுத்து நூல்களை கற்று மருத்துவம் கற்றார். சுடுகாட்டில் பிணம் மீதமர்ந்து யோகசாதனை செய்யும் தாந்த்ரீகன் போன்றவர் அவர். அவரிடம் மெல்லிய உணர்ச்சிகளே இல்லை. அன்னைமடியில் குழந்தை சாவதைக் கண்டும் அவர் கலங்குவதில்லை. சாத்வீகவடிவமான ஜகத்பந்து மஷாய்க்கு நேர் எதிர் அவர். ‘மனிதன் பரிதாபத்துக்குரிய ஜீவன். விலங்குகளுக்குரிய காமமும் குரோதமுமே அவனுக்குள்ளும் நிரம்பிவழிகின்றன. விலங்குகளுக்குரிய உடல்வலிமையும் அவனுக்கு இல்லை’ என்கிறார் ரங்க்லால் டாக்டர். மனிதனை இறைவடிவமாக, பரபபுருஷனின் நுண்ணிய புருஷவடிவமாக, காணும் ஆயுர்வேதத்துக்கு நேர் எதிராக!
ஜீவன் அவரது இளமையில் ரஜோ குணம் நிறைந்தவராக இருந்தார். புஜங்களை பயிற்சி மூலம் இரும்பாக்கி வைத்திருந்தார். உலகை வெல்லும் துடிப்பு அவரில்நிறைந்திருந்தது. நினைத்ததை அடைய முடியும் அடைந்தாகவேண்டும் என்ற எண்ணம். அப்போது அவருக்கு ஆத்ர்சமாக இருந்தவர்ற்றங்க்லால் டாக்டர். அவரைப்போல ஆவதற்கென்றே ஜீவன் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு மஞ்சரியின் காதலும் பூபி போஸின் பகைமையும் கிடைக்கின்றன. அவற்றை அதே ராஜஸ வேகத்துடன் எதிர்கொள்கிறார் அவர். பூபி புலி என்றால் அவர் மேலும் மூர்க்கம் கொண்ட பன்றி. மஞ்சரியில் அவர் கொண்ட காதல் அப்படியே வன்மமாக அவரில் நிறைந்தமைக்கும் காரணம் அதுவே
படிப்பை விட்டுவிட்டு ஆயுர்வேதத்தை அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ளும்போதும் ஜீவன் மனதில் நிறைந்திருப்பது ராஜஸ குணமே. ஆயுர்வேதம் கோரும் சத்வ குணம்வவரிடம் இயல்பாகவே இருந்தாலும் ஓங்கி நிற்பது அதுதான். அவர் வெறியுடன் ஆயுர்வேதம் கற்றதற்குக் காரணம் மஞ்சரி மீது கொண்ட வன்மம். அதை அவர் தந்தை உணர்ந்திருந்தார். அதை விட்டுவிடும்படி ஜீவனிடம் மரணத் தருவாயில்கூட மன்றாடுகிறார். ஆனால் ஜீவனால் இறுதிக் கணம் வரை அந்த வன்மத்தில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை. அவரது ‘உடன் பிறந்த நோய்’ அது. ஆகவேதான் அவர் மீண்டும் ரங்க் லால் டாக்டரை தேடிச்செல்கிறார். அலோபதி கற்க முயல்கிறார். ஆனால் அவரால் பிணத்தை அறுத்து ஆராய முடியவில்லை. உடனே ரங்க்லால் கண்டுகொள்கிறார், உள்ளே துடிக்கும் ஒரு துளி வன்மத்தின் ராஜசம் அன்றி இவன் சத்வ வடிவமேயானவன் என. உன்னால் ஒருநாளும் அலோபதி கற்க முடியாது, ஆயுர்வேதமே உன் துறை என்று அவரை திருப்பி அனுப்பிடுவிடுகிறார்.
ஜீவனின் வாழ்நாள் முழுக்க அந்த ரஜோ குணத்தின் துளி அவரில் கொந்தளித்திருந்தது. தும்¨ப்பபூ போல தாடி நரைத்த பின்னும் அவரது நெஞ்சு அடங்கவில்லை. நாவல் முழுக்க தன்னந்தனிக் காட்டானையின் வேகத்துடன் அவர் நடந்துகொண்டிருக்கிறார், காலடியோசை மரணத்தின் ஓசையென ஊர்த்தெருக்களில் முழங்க. அந்த வன்மத்தினால்தான் அவர் ஆயுர்வேதத்தை பிறர் சீண்டும்போதெல்லாம் கோபத்துடன் திருப்பியடிக்கிறார். அது புறக்கணிக்கப்படும்போது அவர் வருந்துகிறார். அலோபதிக்குச் சவால்விட்டு அவர் மரணத்துக்கு கெடு விதிப்பது அதனாலேயே. அவரது கெடு பலித்து மரணம் நிகழும்போது உள்ளூர அவரது அகங்காரம் மகிழ்ந்திருக்கக் கூடும். தன் மகனுக்கே கெடு விதிப்பதும் அந்த அகங்காரத்தினாலேயே.
அனைத்தையும் இழந்து உலகில் காம்பு கனிந்த கனி போல ஜீவன் எஞ்சிவாழக்காரணம் அந்த அகங்காரம் அறுபடவில்லை என்பதனாலேயே. தன் நாடியையே பார்த்து தன் விடுதலைநாளை அடிக்கடி பார்க்கிறார் ஜீவன். இல்லை, முதிர்ச்சி நிகழவில்லை. இன்னும் ஏதோ எஞ்சியுள்ளது. ‘ஊருக்கெல்லாம் கெடு விதிக்கிறீர்கள், எனக்கு கெடு சொல்லுங்கள்’ என்று ஆத்தர் பௌ ஆங்காரமாகக் கேட்கும்போது ஜீவன் சொல்லும் சொற்களும் பொருள் பொதிந்தவை–‘என் மரணத்துக்குப் பின்’. அவர்தான் ஆத்தர் பௌவின் ரிபு. அவர் மீது கொண்ட பேரன்பு, அவரை அடையமுடியாத வன்மம். ‘உலகை வெல்லவேண்டாம் ,என்னால் ஒரேயொரு மனிதனையே வெல்ல முடியவில்லை’ என்று ஆத்தர் பௌவே அதைச் சொல்கிறாள். அவர் இறந்த மறுகணமே ஆத்தர் பௌ மானசீகமாக இறக்க அதுவே காரணம்.
கடைசியில் மஞ்சரியை சந்திக்கும் கணம்தான் ஜீவனின் முக்தியின் தருணம். அவரில் எஞ்சிய வன்மத்தின் இறுதித்துளி அப்படியே சிரிப்பாகவும் கண்ணீராகவும் மாறி உதிர்ந்துவிடுகிறது. ‘ஆடிமாதத்து வரண்ட மேகத்தின் கீற்றே இல்லாத வானம் சட்டென்று எரிமீன் பாய்ந்து நீல ஒளிகொண்டு மின்னுவது போலிருந்தது. ஜீவன் மரமென சமைந்து நின்றார்’ நோயுற்ற மஞ்சரியின் உடலை அவர் தொட்டுப்பார்க்கிறார் ” உள்ளே புழுத்துவரும் உடல். எப்போதும் சஞ்சலம் நிரம்பிய மனம்!’ மஞ்சரியை கண்டதுமே முதன் முதலாக மஷாய் தன்னை கண்ணாடியில் கூர்ந்து பார்க்கிறார். முதுமைகொண்டு நொய்ந்த உடல், விடுபட்டு உதிரக் காத்திருக்கும் உடல். அவர் அந்த செங்கூந்தலாளைக் கண்டுவிட்டார்.
‘பிங்கல வண்ணத்தாள், பிங்கல கேசியாள், பிங்கல விழியாள், அந்த கன்னிகை.பட்டாடை தரித்தவள். அங்கமெல்லாம் தாமரை மணிகளை அணிந்தவள். எதையும் செவியில் கொள்ளாதவள். எதையும் நோக்காத கண்ணினள்….’ ஜீவன் அதை முதல்முறையாக பேரமைதி அளிக்கும் அமுதமாக உணர்ந்தார். ”பரமானந்த மாதவ! உனுடைய மாதுர்யமே எங்கும் நிரம்பி வழிகிறது. மரணத்தையும் அது அமிருதமாக்கிவிடுகிறது!’ உடனே தன் நாடியையே பிடித்துப் பார்க்கிறார் மஷாய். மரணம்! அது எப்படி இருக்கும்? இருட்குகையா? மறு உலகமா? என்ன அது?
மஞ்சரியைப்பார்த்ததும் ஜீவன் அடையும்விடுதலையை மிகுந்த ஆழத்துடன் செதுக்கியுள்ளார் தாராசங்கர்.” அந்த சமயத்தில் அவர் மனம் ஒரு புதிய அனுபூதியைப்பெற்றிருந்தது. அது ஆச்சரியகரமான ஓர் உற்சாகம்!” மரணப்படுக்கையில் மஞ்சரி இறந்துபோன செய்தியை பிரத்யோத் சொல்லும்போது அவர் அதைக் கவனிக்காமலேயே கையசைத்து ”வேண்டாம், அதெல்லாம் எதற்கு இப்போது?’என்றார்.
கடைசிக்கணம். ”மிக மெல்லிய அவர்களுடைய குரல் அவர் காதில் விழுகிறது. ‘என்ன சொல்கிறீர்கள். என்ன அது?’ என்கிறார். என்ன உங்களுக்கு என்று கூடியிருப்போர் கேட்கிறார்கள். மஷாய் தலையசைத்து ‘எனக்கு ஒன்றும் தெரியவில்லை’ என்றார். கண்கள் மூடிக்கொண்டன. மஷாய் என்ன பார்த்தார்? பிரத்யோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆரோக்கிய நிகேதனம் மரணத்தைப்பற்றிய காவியம். பிங்கல கேசினி நாவலெங்கும் அலைந்தபடியே இருக்கிறாள். விதவிதமான மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் முறைகள் நாவல்பரப்பெங்கும் வந்தபடியே உள்ளன. மரணத்தை சரண்அடையும் முதியவர்கள், மரணத்தைக் கொண்டாடும் மகந்த், மரணத்தின் உக்கிரமான அடியின் முன் உடைந்து சிதறும் அன்னையர், மரணத்தின் அற்பத்தனம், அபத்தம். மரணம் வராத பத்து பக்கங்கள்கூட இந்நாவலில் இல்லை.
மருத்துவனே மரணத்தை நினைவூட்டுபவனாக , மெல்லமெல்ல மரணமேயாக ஆகும் பரிணாமமே இந்நாவலின் மிகமிக கவித்துவமான இடம் எனலாம். ஒரு கட்டத்தில் ஜீவன் மஷாய் மனித வாழ்வின் இன்றியமையாத முடிவை, அதன் முன் துணயற்றவனாக தன் ஆசைகளுடனும் சபலங்களுடனும் நிற்கும் மனிதனின் சிறுமையையும் நினைவூட்டி திடுக்கிட வைப்பவராக ஆகிறார். அவரது உயிர்நண்பர் சேதாப் கூட ஜீவன் தன் நாடியைப்பார்க்கும்போது அஞ்சி நடுங்கி தப்பி ஓடுகிறார்!
உலக இலக்கியத்தில் மரணத்தை அதன் உச்ச வல்லமையுடன் சித்தரித்தவர் தல்ஸ்தோய்தான் என்பது பொதுவான விமரிசன மதிப்பீடு. அன்னா கரீனினா, போரும் அமைதியும் ஆகிய இரு நாவல்கள் உதாரணங்கள். ஆனால் அவற்றை விட ஒருபடி அதிகமாகவே கவித்துவமும் ஆழமும் கூடிய ஆக்கம் ஆரோக்கிய நிகேதனம். காரணம் ஈராயிரம் வருடம் மரணத்தை தியானித்து சாரம் கண்ட ஒரு பெருமரபின் செழுமையையும் தன்னுள் கோண்டது இவ்வாக்கம்
*
ஆரோக்கிய நிகேதனத்தின் இன்னொரு சிறப்பம்சம் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பேருருவம் கொண்டிருக்கும் அடிப்படைவினா ஒன்றை அது பற்பல கோணங்களில் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது என்பதே. ‘வளர்ச்சி என்பது என்ன?’ என்ற வினாதான் அது. அறிவு பரந்து விரிகிறது, வாழ்வின் வளங்களும் மனிதனின் வாழ்வுச் சாத்தியங்களும் பெருகி வளர்கின்றன. ஆனால் அவை அவனை மகிழ்ச்சிகரமானவனாக மாற்றுகின்றனவா? நேற்றும் மனிதன் துயரம் நிரம்பிய மனத்துடன் எண்ணற்ற வினாக்களை, பதிலற்ற வினாக்களை, தன் அகம் நோக்கி ஏவியபடி வாழ்ந்தான். இன்றும் அப்படியே வாழ்கிறான். எதை வென்றால், எதை அடைந்தால் அவன் உண்மையான விடுதலையையும் மகிழ்ச்சியையும் அடைவானோ அதை வெல்லவோ, அடையவோ இல்லை. மாறாக அவன் அதை அடையும் பாதையை மேலும் மேலும் சிக்கலாக ஆக்குவதாகவே நாகரிக வளர்ச்சியும் அறிவுப் பெருக்கமும் உள்ளன.
ஒவ்வொரு புதிய அறிவையும் மனிதனின் அந்தரங்கம் அஞ்சுகிறது. அறிவின் வெற்றி மனிதனை தற்கூச்சமடைய வைக்கிறது. ‘பிராங்கன்ஸ்டீன்’ போன்ற ஒரு அடிப்படையான உருவகம் உண்மையில் இத்தகைய அச்சத்திலிருந்தும் கூச்சத்திலிருந்தும் பிறந்ததே. நவீன விஞ்ஞானப் புனைகதைகள் மிகப் பெரும்பாலானவை ‘பிராங்கன்ஸ்டீனை’ பின்தொடர்பவை என்பதைக் காணலாம். ‘குளோனிங் முறை’ அல்லது ‘மரபணுத்துறை’யின் புதிய வெற்றிகள் நம்மை உள்ளூர அச்சம் கொள்ள வைக்கின்றன எனபதும் இதனாலேயே. இந்த ஆதாரமான அச்சத்தை ‘ஆரோக்கிய நிகேதனம்’ பதிவு செய்கிறது.
புதுமை நம்மை சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது. எளிமையின் இன்பத்தையே மனிதமனம் நாடுகிறது. தன்னை வெல்லாத மனிதனின் கையில் எந்தப்புதுமையும் துயரமாகவே மாறும் என்று அவன் அறிவான். ஆயினும் புதுமையிலிருந்து விலக முடிவதில்லை. அதை நிராகரிக்கவும் முடிவதில்லை. ஏனெனில் புதுமை என்பது இளமை. அதில்தான் உயிரின் அதிகபட்ச துடிப்பு உள்ளது. பிரபஞ்சத்திற்கு உயிர்சக்தி விடுக்கும் சவால் உள்ளது. அச்சவாலில் இருந்து உருவாகும் தன்னகங்காரம் உள்ளது. அதை மனிதனால் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாது. ஆகவே, பதறியபடியும் அஞ்சியபடியும் முன்னேறியபடியே இருக்கிறான் மனிதன்.
இந்த முரண்பாட்டை மிகுந்த கவித்துவத்துடன் வாழ்வின் பல்வேறு தளங்களுடன் பிணைக்கிறது ஆரோக்கிய நிகேதனம். மரணத்திற்கும் வாழ்வுக்கும், உள்ளுணர்வுக்கும் தருக்கபூர்வ அறிவுக்கும், கிராமத்திற்கும், நகரத்திற்கும், இசைந்து வாழ்தலுக்கும் போராடி வாழ்தலுக்கும் இடையேயான முடிவற்ற முரண் சாத்தியங்களை இந்நாவலின் ஒவ்வொரு தருணத்திலிருந்தும் நாம் வாசித்தெடுக்க முடியும்.
ஆயுர்வேதம் சிகிழ்ச்சையை வைத்தியனுக்குப் பொறுப்புள்ள ஒன்றாக ஆக்குகிறது. அலோபதி அதை ஒரு தொழிலாக மார்றுகிறது. விளைவாக வினயன் போன்ற ஒரு மருந்துவணிகன் உள்ளே புகுந்து போலி மருந்துகளை விற்று பணம் சேர்க்கிறான். மனிதனுக்கு கடைசிவரை ஆசையை அளித்து பெரும்பணச்செலவில் சிகிழ்ச்சையளிக்கும் அலோபதி ஏழைகளை முற்றாகக் கைவிடுகிறது. பணமிருப்பவர்களை கடைசித்துளிவரை சுரண்டும் அமைப்பாக ஆகிறது.
இந்நாவல் ஐம்பதுகளில் எழுதப்பட்டது. இன்று இப்போக்குகள் உச்சத்தை அடைந்து மருந்து உற்பத்தியாளர்- மருத்துவர்- மர
செய்தியாளர்கள் -ஒரு கடிதம்
ஜெ,
https://www.youtube.com/watch?v=Qtb2l9tq0Vk
இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது நிமிடம் 20 லிருந்து பார்க்கவும்.
10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு தலைப்பு செய்தி அல்லது ஒரு வதந்தி.
இதை கூட தமிழில் விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது. டிவி சேனல்கள் பணத்தில் கொழிக்கின்றன. ஆனால் தரமோ மற்ற அனைத்து ஊடகங்களையும் விட மிக மோசம்.
ராஜ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பவர் அமைதியாக மரணிக்கலாம். நான் இதன் ஜீவநாடியான ஜீவன்தத்தருடன் பிறந்து அவர்கூடவே இன்பதுன்பங்களில் வாழ்ந்து அவரோடவே அமைதியாக மரணித்தேன். மரணந்தான் எத்துணை சுகந்தம்! மஞ்சரி சொன்னதைப்போலத்தான். எனக்கு இதுநாள் வரை இப்படி ஒரு தெளிவை யாரும் எதுவும் கொடுக்கவில்லை. தாராசங்கர் பானர்ஜி ஜீவன்தத்தாய் வாழ்ந்து எனக்கு காட்டிவிட்டார்.
அபயையிடம் அவர் சொல்லியபோதுதான் நானே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். “அட ஆமால்ல கிறிஸ்டி….அன்னைக்கி எப்பிடி இந்த கடன்பிரச்சனைலேர்ந்து விடுபடபோறேன்னு தெரியலயேன்னு அவங்க அழுதப்ப…சரி எதுக்கு இவ்ளோ அவமானங்களைத் தாங்கிகிட்டு நாம உயிரோட இருக்கணும்…சரி செத்துருவோம்னு சாவைப்பற்றி இருவரும் நினைத்தீர்களே….இருவரும் சந்தோஷமாக இருந்தபோது….பையனைப் பற்றி பெருமையாகக் கேள்விப்படும்போது…உன்னையோ அவங்களையோ யாராவது பாராட்டும்போது….அப்படியே நிலைகொள்ளா சந்தோஷத்தில் திளைத்துப் போகும்போது….ஏன் அவ்வளவு தூரம்…அன்றைக்கு முதன்முதலாய் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து பரவசத்தில் புத்தகங்களை அள்ளும்போது ஏன் சாவைப்பற்றிய நினைவெழவில்லை? என. சந்தோஷமாயிருப்பது மட்டும் வாழ்க்கையல்ல. எவ்வளவுக்கெவ்வளவு இன்பமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பதே வாழ்க்கை என்பதை அபயையுடனான ஜீவன்தத்தின் அற்புத உரையாடல் தெளிவாக விளங்கவைத்துவிட்டது.
“மனிதன் எப்போதும் உதவியைத் தேடும் ஒரு பிராணி”. இவ்வாக்கு முற்றிலும் உண்மை. ஒரு சஞ்சலம் நிறைந்த குழம்பியிருக்கும் மனிதனின் மனம் அமைதியடைந்து தெளிய அடுத்த மனிதனின் உதவி தேவைப்படுகிறது. அது எவ்வகையிலாவது இருக்கலாம்…நோயாளிக்கு வைத்தியனாக மாணவனுக்கு ஆசிரியனாக பக்தனுக்கு தெய்வமாக தொழிலாளிக்கு முதலாளியாக கணவனுக்கு மனைவியாக பிள்ளைக்கு தாயாக….. இங்கு ஜீவன்தத்துக்கு சாபமிட்டவள் சாபவிமோச்சனம் தருகிறாள். அந்த சாபவிமோச்சனம் அவருக்கு மரணத்தை தரும் என அவர் அறிந்திருந்தும் அதுதான் அவருக்கு அமைதியான மரணம். மரணத்தை ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார். இன்னொரு குடைச்சலாக மஞ்சரி இருக்கிறாள் அவருக்கு. ஆனால் அவர்தான் தன் வாழ்நாள் முழுவதும் அப்படி நினைத்தாரே ஒழிய அதற்கு சற்றும் ஈடில்லை அவள். அது பெருத்த ஏமாற்றமாகிறது. இனி வாழ்வில் என்ன என்று ஒரு சலிப்பு.

தாராசங்கர்
இப்படித்தான் நானும் அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்களோ இப்படி நினைத்துக் கொள்வார்களோ என பயந்து பயந்து செத்துக்கொண்டிருப்பேன். கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்ஸென்று போய்விடும். அது தெரியாமல் வாழ்நாள் முழுக்க வலியும் வேதனையும் நாமாகவே வலிய வரவழைத்துக் கொண்டிருப்போம். மஞ்சரி முன்னாலும் பூபிபோஸ் முன்னாலும் எப்படியெல்லாம் போய் நிற்கவேண்டும் என கண்ட கனவுகளெல்லாம் இப்படி ஒன்றுமேயில்லாமல் போய்விட்டால் பிறகு வாழ்வதில் என்ன சுவாரஸ்யம்? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பதுபோல்.. எந்த மீன் சாப்பாட்டால் அபயை சாபமிட்டாளோ எதனால் ஜீவன் மனமுடைந்து போனாரோ அவளே மீன்கேட்கையில் ஜீவனால் எப்படி தராமல் இருக்கமுடியும்? தன் உயிரையும் சேர்த்தல்லவா தந்துவிட்டார்! தன் மனம் எதையாவது விரும்பி ஏங்கும்போது அது கிடைக்கும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்குமா? சாப்பிடச்செல்லும்போதே அவருக்கு நிம்மதியான மரணம் சம்பவித்துவிட்டது. அதே நிம்மதியான மரணத்தை கிழ மஞ்சரியிடம் அவர் தேடியது கிடைக்காதபோதும் அடைந்துவிட்டார்.
இதில் நிம்மதியாக மரணத்தை ஏற்றுக்கொண்ட ரானாவின் மனமும் அற்புதமான ஒன்று. இந்நாவல் சாவுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தைப் பற்றிச் சொல்லும் நாவலா அல்லது நாடிவைத்தியத்துக்கும் நவீன வைத்தியத்துக்குமான போட்டியைப் பற்றிச் சொல்லும் நாவலா என ஒற்றைப்பார்வையில் சொல்லமுடியவில்லை. வைத்தியத்தினூடே வாழ்க்கை வருகிறது. வாழ்க்கையினூடே வைத்தியம் வருகிறது. இறுதியில் எந்த வைத்தியமாகட்டும் நாடிடாக்டர் ஜீவன் நவீனடாக்டர் பிரத்யோகின் உள்ளத்தில் தம் திறமையாலும் அன்பாலும் இடம்பிடித்துக்கொள்கிறார். அதேபோல பிரத்யோக் தம் திறமையாலும் தைரியத்தாலும் ஜீவனின் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார். இருவைத்தியங்களும் மனிதனுக்கு உதவி செய்கின்றன. மனிதன் எப்போதும் உதவி தேவைப்படும் ஒரு பிராணிதான் என பதியவைக்கின்றன.
இறுதிவரை அடுத்தவருக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியபடியே இருக்கிறது. முக்கியமாக அடுத்த மனிதன்…மனிதன் என்ன மனிதன் ….மரண தேவதையாகிய தெய்வத்திற்கே நான் உதவி செய்யவேண்டும் என்ற மனவெழுச்சி வந்தபோது என்னைமீறி வந்த கண்ணீரை அடக்கமுடியவில்லை.
அன்புடன்
கிறிஸ்டி.
ஆரோக்கிய நிகேதனம் பற்றி கிருஷ்ணமூர்த்தி
ஆரோக்கிய நிகேதனம் பற்றி கேசவமணி
ஆரோக்கிய நிகேதனம் பாண்டியன் ராமையா
அரோக்கிய நிகேதனம் பற்றி கடிதம்
ஆரோக்கிய நிகேதனம் பற்றி ஜெயமோகன்
தொடர்புடைய பதிவுகள்
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
ஆரோக்கியநிகேதனம்
நேற்றைய புதுவெள்ளம்
January 27, 2017
நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்
பத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது.
தமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் உண்டு. வணிகப் பேரிதழ்களில் கேளிக்கையை முதன்மையாகக் கொண்ட எழுத்து, அவற்றுக்கு மாறாக வந்து கொண்டிருந்த சிற்றிதழ்சார் எழுத்து. இவை இரண்டுக்கும் தொடர்பின்றி வந்துகொண்டிருந்த எழுத்துக்கள் முகம், தென்மொழி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த தனித்தமிழ் மற்றும் மரபிலக்கிய எழுத்துக்கள் ஒரு வகைமை. பல்வேறு வகையான குழுக்களால் நடத்தப்படும் பசுமை, நமது நம்பிக்கை போன்ற சிற்றிதழ்களில் சுயமுன்னேற்றவகை எழுத்துக்கள் இன்னொரு வகைமை. இவை ஒவ்வொரு வகைமையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இவற்றில் ஒன்று இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில் அடங்காது ஒரு படி கீழே வந்து கொண்டிருந்த குறுஇதழ்கள். முங்காரி, தொடரும், கல்வெட்டு பேசுகிறது போன்றவை உதாரணம். அவ்வகைமையைச் சேர்ந்த சுந்தர சுகன் போன்ற பிரசுரங்களில்தான் வா.மு.கோமு அதிகமும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு எழுத்து மரபாகவே இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். ஷாராஜ், ஹரிணி போன்ற சில பெயர்களை அப்போது பார்த்த நினைவுள்ளது. இவர்களின் எழுத்து இலக்கியப் படைப்பாக ஆவதற்கு ஒரு படி குறைவானது. ஆனால் வார இதழ் படைப்புகளை விடமேலானது. அடிப்படையான அவதானிப்பும், சுவாரசியமும் கொண்டது
பின்பு வா.,மு.கோமுவை நான் அடையாளம் கண்டு கொண்டது உயிர்மையில் அவர் எழுதிய பிசாசு என்னும் சிறுகதை வழியாக. ஒரு குறிப்பிடத் தகுந்த இலக்கியப் படைப்பு என்ற எண்ணம் ஏற்பட்டது. உயிர்மையில் ஒரு வாசகர் கடிதத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தேன் என்பது என் நினைவு. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் பல்வேறு ஆண் தொடர்புகளை, ஒவ்வொரு தொடர்பிலும் அவள் கொள்ளும் விதவிதமான பாவனைகளை நகைச்சுவையும் சிறிய எரிச்சலும் கலந்து சித்தரித்தது அந்தப் படைப்பு. அதன் பின்னர் வா.மு.கோமுவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனத்திற்குரிய படைப்பாளி, ஆனால் மேலும் ஏதோ ஒன்றை அவரிடம் எதிர்பார்க்கிறேன் என்னும் இருநிலை தான் எனக்கிருந்தது.
’அழுவாச்சி வருதுங் சாமி’ என இந்த சிறுகதைத் தொகுதியை முன்வைத்து அவரது எழுத்துக்கள் மீதான எனது உளப்பதிவை தொகுத்துக் கொள்கிறேன். வா.மு.கோமுவின் அழகியல் இரண்டு சரடுகளால் ஆனது. ஒன்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் அடித்தளத்தில் செயல்படும் ஒருவனின் கசப்புகளும் நையாண்டிகளும் கலந்த ஒரு படைப்புலகு. இத்தொகுதியிலேயே ’தோழர் பெரியசாமி புதிய தரிசனம்’ ’தோழர் பெரியசாமி சில டைரி குறிப்புகள்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சுட்டலாம். கொஞ்சம் சுயசரிதைத் தன்மை கொண்டவை. இலக்கியக் குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்டவை. பொதுவாக நக்கல், கசப்பு நிறைந்தவை. தொடக்கம் முதலே வா.மு.கோமுவின் எழுத்தில் இவ்வகை படைப்புகள் முக்கியமான அளவு உள்ளன.
தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலை அறிந்த ஒருவரால் தான் எவ்வகையிலேனும் இவற்றை ரசிக்க முடியும். இதில் இருப்பது ஒரு எரிச்சல் என்று சொல்லலாம். தமிழ்க் கருத்தியல் இயக்கம் மீதான ஒவ்வாமை. அதில் உள்ள பாவனைகள் மீதான் எள்ளல். கழிவிரக்கம். அதே சமயம் தமிழ்க் கருத்தியல் சூழலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக வெளியிலிருந்து பார்த்து எழுதப்பட்டவை. ஆகவே இவை முன்வைக்கும் விமர்சனத்திற்கு பெரிய மதிப்பேதும் இல்லை. ஆசிரியரின் ஒரு கோணம் என்பதற்கு அப்பால் இவற்றை வாசகன் கருத்திலும் கொள்ளவேண்டியதில்லை
இக்கதைகளில் அவ்வப்போது வரும் மெல்லிய கிண்டல் மட்டுமே சிறுபுன்னகைக்கு உரியது. இக்கதைகள் காட்டும் இதே எரிச்சலை இத்தொகுதிக்கு ’இப்படியே இருந்துவிட்டுப் போகலாமேடா’ என்ற பெயரில் சுகன் எழுதிய முன்னுரையிலும் காண முடிகிறது. சுகன் சௌந்தர சுகன் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியவர்.இவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். மிக நேர்மையான தீவிரமான இளைஞர். அர்ப்பணிப்புடன் பொருள் இழப்புடன் சுகன் இதழை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அறிவியக்கத்தின் வீச்சை வாசித்துப் புரிந்து கொள்ளும் உழைப்பை அவர் அளிக்கவில்லை. ஆகவே அதன் மையப் பெருக்கில் நுழைவதற்கான அறிவார்ந்த தகுதியை அடையவும் இல்லை. விளைவாக அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டு அதேசமயம் விலகவும் முடியாமல் அதன் விளிம்பிலேயே திரிந்து கொண்டிருந்தார்.
இன்று எண்ணுகையில் சுகன் இதழில் பெரும்பாலான படைப்புகள் முதிரா முயற்சிகளாகவும் அவ்வப்போது எளிய சீண்டலாகவும் இருப்பதை நினைவுகூர்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகன் அவற்றின் உண்மையான தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் போதே அவற்றின் ஆழமின்மையும் உணர்ந்து கொண்டிருப்பான். இவ்வியல்புகள் அனைத்தும் வா.மு.கோமுவின் படைப்புகளிலும் உள்ளன. அனேகமாக ஒரு சிற்றிதழுடன் தொடர்புடையவர்கள் அச்சிற்றிதழின் அடிப்படை இயல்புகளை தாங்களும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம்.
வா.மு.கோமு குறிப்பிடத்தகுந்த சிறுகதை ஆசிரியராக தெரியத் தொடங்கியது அவர் வழக்கமான சிறுகதை வடிவிற்கு வந்து ஈரோடு, திருப்பூர் வட்டாரத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளை எழுதத் தொடங்கிய பிறகுதான். பின்னலாடைத் தொழில், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒரு கோணம் நம்பகமாக இவரது படைப்புகளில் வெளிப்பட ஆரம்பித்தது. இத்தொகுதியிலும் முதல்வகைக் கதைகள் உள்ளன. இரண்டாம் வகைக்கதைகளே எனக்கு முக்கியமெனப் படுகின்றன
வா.மு.கோமுவின் முக்கியத்துவம் எப்படி வருகிறது? அதுவரைக்கும் அவ்வாழ்க்கையை எழுதிய பெரும்பாலான படைப்பாளிகள் முற்போக்கு அணுகுமுறை கொண்டிருந்தார்கள். உழைப்பவர்களை ஆதரித்து அவர்களுக்காக வாதிட்டு கசிந்து கண்ணீர் மல்கும் தோரணை அவர்களுக்கிருந்தது. கூடவே அம்மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டு அணுகுமுறை. இவை சில வாசல்களைத் திறந்தன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒரு பெரிய வரலாற்றுப் பின்புலத்திலும் பொருளியல் பின்புலத்திலும் வைத்துப்பார்க்கும் சித்திரத்தை இடது சாரிகளால் தான் அளிக்க முடிந்தது.
ஆனால் அதன் மிகப்பெரிய பலவீனம் என்பது அவ்வெழுத்தாளன் தன்னை அவர்களில் ஒருவனாக இல்லை என்பதே. அவன் அவர்களை விட மேம்பட்டவனாக, அரசியல் மற்றும் தத்துவ பயிற்சி கொண்டவனாக, மனிதாபிமானம் நிறைந்தவனாக கற்பிதம் செய்து கொள்ளும் இடத்தில் இருக்கிறான். ஆகவே குனிந்து பார்த்து அனுதாபத்துடன் எழுதும் ஒரு கோணம் அவற்றில் வந்துவிட்டது. ஏதோ ஒருவகையில் அவன் தன் பார்வைக்காக அவ்வாழ்க்கையைத் திரிக்கிறான். அவ்வாழ்க்கையில் இருந்து அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை, அவன் அவ்வாழ்க்கையை மறு ஆக்கம் செய்பவனாக இருக்கிறான். சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்னும் பெருநாவல்.
நேரடியாக முற்போக்கு இயக்கத்துடன் தொடர்பில்லை என்றாலும் கூட இவ்வாழ்க்கையை எழுதிய சுப்ரபாரதி மணியன் எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் கூட இந்த விலகல் அணுகுமுறை அழுத்தமாக உண்டு. அது அவர்களுடைய அறிவுஜீவி சுயத்தில் இருந்தே உருவாகிறது.
மாறாக வா.மு கோமு முற்றிலும் அவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே அவருக்கு அம்மக்கள் மேல் எந்த அனுதாபமும் இல்லை.இருப்பது தன்னிரக்கமும் கசப்பும்தான். ஆகவே அவர்களுடைய சிறுமைகளை நடிப்புகளை கயமைகளை எந்த தயக்கமும் இன்றி சொல்ல அவரால் முடிகிறது. இக்காரணத்தால் முன்னரே குறிப்பிட்ட எழுத்துக்கள் தொடாத பல இடங்களை இவை சென்று தொட்டு உயிர்பெறச்செய்கிறன.
இரண்டாவதாக சென்ற தலைமுறை வரை எழுத்தாளர்களை கட்டிவைத்திருந்த ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை வா.மு.கோமுவிடம் இல்லை. பாலியல் மீறலை அறக்கண்டனத்துடன் அவர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் நுகர்ந்தும் வெறுத்தும் ஏமாற்றியும் களியாட்டமிடும் இவ்வாழ்க்கைப் பரப்பை ஒருவகையான கொண்டாட்டமாகவே அவர் பார்க்கிறார். அதற்கு வெளியே இருக்கும் வாசகனுக்கு அது கீழ்மையின் களியாட்டமாகத் தெரியலாம். ஆனால் காமம் குரோதம் எனும் அடிப்படை உணர்வுகளின் ததும்பலாகவே அவனால் அவற்றை காண முடியும். வா.மு.கோமுவின் உலகில் அவர் அவர்களுடன் சேர்ந்து அக்களியாட்டத்தை நிகழ்த்துவது தெரிகிறது. இந்த இருகூறுகளால் வா.மு. கோமுவின் கதைகள் தமிழிலக்கியத்தில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன.
வா.மு.கோமுவின் இத்தொகுதியில் அவருடைய தனித்தன்மை வாய்ந்த எழுத்தை அடையாளம் காட்டும் இரு கதைகளை ஒன்று, ‘நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி’. தலைப்பை வாசித்ததும் இக்கதை இன்றைய தமிழ்ச் சூழலில் எந்த நிலைபாடு எடுத்து எழுதப்பட்டிருக்கும் என்று வாசகனுக்கு ஓர் எண்ணம் வரும். அல்லது வேண்டுமென்றே அதற்கு எதிர்நிலைபாடு எடுத்திருக்கக்கூடுமோ என்று கூட அவன் ஐயப்படலாம். அவ்விரண்டுக்குமப்பால் ஒரு மூர்க்கமான நேர்மையுடன் நின்றிருக்கிறது இக்கதை.
டீக்கடை வாசலில் ”சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்று தம்ளரை ஏந்திநின்று கேட்கும் நஞ்சனின் சித்தரிப்பில் தொடங்குகிறது கதை. டீக்கடையில் கவுண்டர்கள் வருகிறார்கள், ‘பொறணி’ பேசுகிறார்கள்.நாளிதழ் வாசிக்கிறார்கள். எழுந்து செல்கிறார்கள். பேருந்து வந்து செல்கிறது. நஞ்சனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இறங்கி கெஞ்சி மன்றாடி ஒரு தருணத்தில் கண்ணாடிக் குவளைகளை உடைத்து வீசி விட்டுச் செல்கிறான். அந்த இடத்தில் கதை இன்னொரு கட்டத்திற்கு திரும்புகிறது.
தங்கள் மேல் சுமத்தப்படும் இந்த இழிவுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நஞ்சனின் தந்தையும் நஞ்சனும் தங்கள் துடுக்குத்தனம் வழியாக மீறல்கள் வழியாக ஆற்றும் எதிர்வினைகள் கதையாக வளர்கின்றன. தன்னை அடித்த கவுண்டரின் கிணற்றுக்குள் இறங்கி ஒன்றுக்கடித்துவிட்டு செல்லும் நஞ்சனின் தந்தையும் சரி, ஊர்க்கவுண்டர் செத்துவிட்டார் என்று பல ஊர்களுக்குச் சென்று செய்தி சொல்லி காசு சம்பாதித்துவிட்டு பல நாள்கள் தலைமறைவாகிவிட்டு திரும்பி வரும் நஞ்சனும் சரி, தங்கள் மீறலை ஆயுதமாகக் கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்.
இது கிராமத்தில் ஒரு வகை விளையாட்டாகவே நடக்கிறது. சமயங்களில் அடிதடி. பெரும்பாலான தருணங்களில் “சரிவிடு அவன் புத்தி அப்டித்தான்” என்று சமரசம். ஏனென்றால் தலித்துக்கள் இல்லையேல் விவசாயவேலைக்கு ஆளில்லை. அதைச் சித்தரித்துச் செல்லும் கதை உயர்ஜாதிப்பெண்ணைக் காதலித்துக்கூட்டிக் கொண்டு போகும் நஞ்சனின் மகனை காட்டுகிறது. நஞ்சன் அதன் பொருட்டு அடிவாங்குகிறான். ஆனால் சில நாள்கள் கழித்து இரவில் வந்து கதவைத் தட்டும் நஞ்சனின் மூத்தமகனிடம் அம்மா பதறிக்கொண்டு கேட்கிறாள். “என்ன ஆச்சு? அந்தப்பிள்ளை என்னவானாள்?”
“அது ஆவாது அம்மோ அவளுக்குச் சோறாக்கத் தெரியலே. ஒரு மண்ணும் தெரியலே. ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி ஒரு கறியும் திங்கமாட்டாளாம் .நானும் திங்கப்படாதாம் .அவ சொல்றப்ப தான் தொடணுமாம். ஆவறதில்லேன்னு போட்டுட்டு வந்துட்டேன்” என்கிறான் மகன். நஞ்சன் மனதில் “இப்பதாண்டா நீ எம்பட பையன்” என்று நினைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்துக்கொள்கிறான்.
இந்தக் கதை நமது கிராமப்புறங்களில் இருக்கும் அசாதாரணமான ஒரு அதிகாரச் சதுரங்க ஆட்டத்தை முன் வைக்கிறது. இதே விஷயத்தை என் இளமைப்பருவ அவதானிப்பிலிருந்து நானும் ஓரிரு இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஒடுக்கப்படும் தலித்துகள் கேலி கிண்டல் மீறல் வழியாக எதிர்வினையாற்றுவது. சோ.தருமன் இதை வேறுவகையில் எழுதியிருக்கிறார், அவருடைய காடுவெட்டி முத்தையா [தூர்வை] ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
இக்கதை உறையிலிருந்து வாளை உருவும் ஒளியுடன் அமைந்திருக்கிறது. கீழ்மை நிறைந்த ஒடுக்குமூறை ஒரு தட்டு என்றால் இரக்கமற்ற மீறல் மறுமுனையிலிருக்கிறது. அது நஞ்சனின் மகனின் தலைமுறையிடமல்ல, நஞ்சனிடமும் அவன் தந்தையிடமும் இருந்திருக்கிறது எனும்போது மானுடமனம் அளக்கமுடியாதென்று தோன்றுகிறது. அது ஒரு வரலாற்று தொடர்ச்சி கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எளிமையான முற்போக்கு- மனிதாபிமான- சமூகவியல் ஆய்வுக் கோணங்களுக்கு அப்பாற்பட்டு அத்தனை கருவிகளைக் கொண்டும் விளக்க வேண்டிய ஒரு சமூக உண்மையின் சித்தரிப்பாக நின்றிருக்கிறது இந்தக் கதை. தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளின் வரிசையில் இக்கதையை வைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. நெடுநாட்களுக்கு இக்கதை வினாக்களை எழுப்பிக் கொண்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
இக்கதையின் இன்னொரு முகம் என்று ’திருவிழாவுக்குப்போன மயிலாத்தாள்’ ஐ சொல்லலாம். இங்கு தலித்துக்கு பதில் பெண். கணவனிடம் மயிலாத்தாள் கொண்ட பணிவும் குறுகலும் அவனுடைய துடுக்கும் திமிரும் கதை நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. குடி, சுரண்டல், பாலியல் அத்துமீறல், வன்முறை என்று தான் மனைவியை நடத்துகிறான் கணவன். திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள்ளேயே கணவனெனும் விசித்திரமான மிருகத்தை மயிலாத்தாள் அடையாளம் கண்டுவிடுகிறாள். திடீரென்று சென்னிமலைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் மீண்டும் மீண்டும் மது அருந்துகிறான். சற்று வழி தவறி தொலைந்துவிட்ட மயிலாத்தாளைப் பிடித்து பொது மக்கள் முன்னிலையில் அடிக்கிறான்.
அவளை அப்படியே விட்டுவிட்டு குடிவெறியில் வீடு திரும்பிவிடுகிறான். ஒருவழியாக அங்கே இங்கே அல்லாடி வீட்டுக்கு வந்து கணவனைச் சந்திக்கும் மயிலாத்தாளை ஓங்கி அறைகிறான். சட்டென்று அவள் அவனை அறைந்து வீழ்த்தி ”மாமா இப்படியே சும்மாங்காட்டி முதுகில என்னை மொத்தினேன்னா எங்கூர்ல ராசாத்தி அக்கா செஞ்ச மாதிரி மாமா உனக்கும் நானு செஞ்சு போடுவேன் மாமா. ராசாத்தி அக்கா அவ புருஷனுக்கு சோத்தில வெஷம் வெச்சு கொன்னுபோட்டா. அதுமாதிரி உன்னயக் கொன்னு ரெண்டு நாள் அழுதுபோட்டு நான் எங்கூருக்கு போயிடுவேன் மாமா” என்கிறாள். ஒரு கணத்தில் தராசு மறு தட்டை அடைந்துவிடுகிறது. இத்தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று இது.
”கூட்டப்பனை சாவக்கட்டு” கிராமத்தில் மிக நுட்பமாக நிகழும் அதிகாரச் சுரண்டல்களைக் காட்டுகிறது. ஊர்க்கவுண்டன் எப்படி ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பலியாடுகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மாட்டிவிட்டு விலகிக் கொள்கிறான் எனும் சித்திரம் கூரியது. தந்திரம் மூலமே கிராமத்தின் மொத்த அதிகாரத்தையும் அவன் கையில் வைத்திருக்கும் சித்திரம் கூர்மையுடன் சொல்லப்படுகிறது. வெறும் தந்திரத்தின் கதை அல்ல இது. செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அடித்தள மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உயர்சாதியினர் ஆடும் அதிகாரவிளையாட்டுதான் அந்த சேவல்கட்டு.
இத்தொகுதியில் உள்ள இத்தகைய கதைகள் வழியாகவே வாமு கோமு தமிழ் சிறுகதை இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறார் என்று நினைக்கிறேன்.
[அழுவாச்சி வருதுங் சாமி. சிறுகதைகள். வா.மு.கோமு. எதிர் வெளியீடு]
வா.மு கோமு இணையப்பக்கம்
தொடர்புடைய பதிவுகள்
பாலுணர்வெழுத்து தமிழில்…
எரியும் தேர்
வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்
காடு – பிரசன்னா
நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன்.
‘அவ்வளவேதானா இளமை?’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது வயதில் எனக்கு இருக்கும் இந்த தவிப்பு கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. கண்ணெதிரே ஒரு தலைமுறை வயதாகி விட்டதையும், இதோ இப்போதுதான் பார்த்து ரசித்த கலைஞர்கள் எல்லாம் பழைய ஆட்களாக ஆகிப்போனதையும் அதிர்ந்தபடியே தான் நோக்குகிறேன்.
இந்தப் பதட்டத்தை காலங்களை முன்பின்னே கடக்கும் கதையின் அமைப்பு அதிகரிக்கவே செய்கிறது. ஏதோ கனவில் மட்டும் பார்த்துக்கொண்டவர்கள் நேரில் சந்திப்பதைப்போல் இருந்தது கடையில் உட்கார்ந்திருக்கும் குரிசு, குலசேகரத்தில் போத்தி, மலைமேல் அய்யர் போன்ற கிரியின் சந்திப்புகள்.
கிரி, லௌகீக வாழ்க்கையில் தோல்வி அடைவது எதனால் என்ற கேள்வி சில நாட்கள் கழித்து அலைக்கழித்தது. ‘உன் அகங்காரம் தான் காரணம்’ என அய்யர் சொன்னாலும் அது மட்டுமேவா? அவன் சங்கப்பாடல்களில் லயிக்கும் அளவிற்கு நுண்ணறிவு கொண்டவன். ஆனால் கனவுகளில் வாழ்பவன். அதீதங்களை தேடுபவன். பகலில் அடிக்கடி போய் படுத்து தூங்கிவிடுகிறான், இரவில் விழித்திருக்கிறான். அவனது அப்பா தோல்வி அடைந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் என்பது இங்கு முக்கியம்.. நடைமுறை வாழ்வில் தோல்வி அடைந்தவர்களின் பிள்ளைகள் அது மறுபடி நடக்கக்கூடாது என்பதில் பெரும் பதட்டம் கொண்டவர்கள், ஆனால் அந்த பதட்டம் கிரிக்கு வரவில்லை – அவனது மகனுக்கு வாய்த்தது.
ஆனால்.. அப்படிப்பார்த்தால் எதிர்வீட்டு தமிழ் வாத்தியார் – கம்ப இராமாயண பித்தர். அவர் குடும்பத்துக்கு அனைத்தையும் சரியாக செய்தவர்தான்.. இருந்தும் கடைசியில் அவர் சந்திப்பது வெறுப்பை மட்டுமே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
காமத்தை முழுமையாக புரிந்து வெல்ல முடியுமா? வெல்லத்தான் வேண்டுமா? குறிஞ்சிப்பூவை பார்ப்பது போல் புறவயமாக காமத்தை செயல்படுத்திப் பார்த்ததுமே ஏன் அவ்வளவு ஏமாற்றம்? மனத்தில் எத்தனை நாட்கள் நிகழ்த்திப் பார்த்தாலும் அலுப்பதில்லையே? காடு என்பது காமமா, இளமையா?
இது ஒரு புறம். மலையன் புரத்தை வெட்டிக்கொண்டு போகப்போகும் சாலை.. பாடம் பண்ணபட்ட கீரக்காதன்….என பதைக்க வைக்கும் காட்டழிவு காட்சிகள்.. . குறிஞ்சியில் உட்காரும் வண்டை பார்த்து ‘இனி எத்தனை தலைமுறை கழித்து வண்டு இனத்திற்கு இந்த தொடுகை வாய்க்குமோ?’ என பரிதாபப்படும் கிரி, மனிதனைப்பார்த்து பரிதாபப்படும் இயற்கை…
காமத்தின் அம்சங்களே இதில் எழுத்து வடிவமாக; நீலி-கிரி சந்திப்பு முதலிலேயே நிகழ்ந்து, எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றமே மிகுந்திருக்கும். எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது? அதுவே அந்த நினைவை துடிப்படங்காமல் இருக்க வைக்கிறது.
மேலே உள்ள பத்திகளே காடு போல் கெச்சலாக இருப்பதும் காரணமாகத்தான் போலும். நாவலில் வரும் காட்டின் மனிதர்கள், மிருகங்கள், பருவங்கள், சம்பவங்கள், ஊர், அன்றாடம் என்று அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தையில் முறையாக வெளிப்படுத்தினாலே அதன் அணுக்கம் போய் விடும். அப்படியே உணர்வாகவே இருப்பது மேல்.
பிரசன்னா
http://tamilkothu.blogspot.in/
தொடர்புடைய பதிவுகள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
அகக்காடு- கடிதம்
காடு- கடிதம்
குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?
காடு- கடிதம்
காடு வாசிப்பனுபவம்
காஞ்சிரம்-கடிதம்
காடு- கே.ஜே.அசோக் குமார்
சுவை- கடிதம்
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
காமமும் காடும்
காடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…
காடு-கேசவ மணி
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
இரு கடிதங்கள்
ஒரு முதற்கடிதம்
காடு ஒரு கடிதம்
காடு-கடிதங்கள்
காடு-கடிதம்
January 26, 2017
மாலிரும்மொழிச்சோலை
இனிய ஜெயம்,
நாடி ஜோதிடக்காரன் சுவடிக்கட்டில் கயிற்றைப் போட்டுப் பிரித்து, வரும் பகுதியில் என்ன வருகிறதோ அதை வாசிப்பதைப் போல, சங்க இலக்கிய நூல்களுக்குள் உழன்றுகொண்டு இருக்கிறேன்.
கணியன் பூங்குன்றனாரின் குரல் ”மானுடம் வென்றதம்மா” போன்றதொரு எழுச்சிக் குரல். அதன் மறு எல்லையை இன்று பரிபாடல் மூன்றாம் பாடலில் கண்டேன்.
தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ,
கல்லினுள் மணியும் நீ,சொல்லினுள் வாய்மை நீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களுள் அளியும் நீ,
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ…
திருமால் தலைப்பின் கீழ் வரும் பாடல். காணும் அனைத்திலும் சாரமான ஒன்றினை [வேதம் போன்ற கெனான் உட்பட] கண்டு, அதை முற்ற முழுதான ஒன்றுடன் இணைக்கும் தத்துவ நோக்கு, கவித்துவமாகவும் துல்லியமாகவும் உருவாகி வந்த கவிதை.
பிரபந்தப் பாடல் ஒன்றின் வரிகளை வாசிப்பது போலவே இருக்கிறது. பக்தி இலக்கியங்கள் வடிவத்தாலும், [ஒரு உணர்ச்சியை நேரடியாக தொட்டு அதை உச்சத்துக்கு கொண்டு செல்லும்] வெளிப்பாட்டாலும், அவைகள் சங்க இலக்கியத்தில் வேர் பிடிக்காத தனி ஜானர் என்றே புரிந்து வைத்திருந்தேன். புரட்டிப் போட்டு விட்டது. அறத்தினுள் அன்பு நீ.
இனிய ஜெயம், சங்க இலக்கியத் தொகுதிகள், என்பதை அதன் அழகியலை தத்துவ நோக்கை கொண்டு பார்த்தால். பரிபாடல் வகைமை ” தனித்து” இருக்கிறதே ஏன்?
கடலூர் சீனு
***
அன்புள்ள சீனு
இந்தியாவை ஆக்கிய கருத்தியல்பெருக்கு என்றால் அது பக்தி இயக்கம்தான். கிபி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் உருவாக்கியது வைணவ பக்தி அலை. நாயன்மார்களால் சைவ பக்தியலை உருவாக்கப்பட்டபோது அது ஒரு சமூக இயக்கமாக ஆகியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அது பரவிச்சென்றது.
பக்தி எப்போதும் உள்ளது. அது ஓரு சமூக இயக்கமாக ஆனதே பக்தி இயக்கம் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. முதன்மையாக பக்தி இயக்கம் இலக்கியம் சார்ந்தது. இசை, நிகழ்த்துகலைகளை இணைத்துக்கொண்டது. சாராம்சத்தில் வேள்விகள், ஆசாரங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு மாற்றாக தூய பக்தியை நிறுத்தும் தத்துவநோக்கு கொண்டது. கொள்கையடிப்படையில் ஞானமார்க்கத்தைவிட பக்தியை மேலாக எண்ணுவது. பக்தி என்றால் இறைக்கு முழுமையான தன்படைப்பு செய்வது என்பதே அதன்பொருள்.
சமூகவியல் அடிப்படையில் பக்தி இயக்கம் குடியானவர்கள் கைவினைஞர்கள் போன்ற அடித்தளத்தினரின் எழுச்சியை உருவாக்கியது. வேள்விகளைச் சார்ந்த வைதிகமதங்கள் பிராமணர் மற்றும் ஷத்ரியர்களின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சமண, பௌத்த மதங்கள் வைசியரின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சொல்லலாம். ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சமண, பௌத்த மதங்கள் இந்தியாவை முழுமையாகவே ஆண்டிருந்தன.
சமண, பௌத்த மதங்களின் கொள்கைரீதியான பாதிப்பினாலும், அவற்றுக்கு எதிராகவும் உருவானதே பக்தி இயக்கம் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மதச்சித்திரத்தை இவ்வாறாக உருவகிக்கலாம். உயர்குடிகள் வேதவேள்விகள், ஆலயவழிபாடு மற்றும் தத்துவக்கல்வியை அடிப்படையாகக் கொண்ட வைதிகமதங்களில் ஈடுபட்டிருந்தனர். அவை இந்திரன், விஷ்ணு, சிவன் போன்ற பெருந்தெய்வங்களை மையமாகக் கொண்டவை.
பெரும்பான்மையினரான அடித்தள மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டனர். அவர்கள் கொள்கையளவில் அரசர் மற்றும் உயர்குடிகளின் பெருந்தெய்வ மதங்களை ஏற்றுக்கொண்டு அவற்றில் அமைந்திருந்தாலும் நடைமுறையில் தங்கள் சிறுதெய்வங்களையே வழிபட்டனர். இன்றுகூட இந்த இரட்டை மதநம்பிக்கையே மிகஅடித்தளங்களில் நிலவுகிறது.
சமணமும் பௌத்தமும் வந்தபோது அவையும் இதே இரட்டை நிலையைத்தான் பேணின. மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டு கொள்கையடிப்படையில் சமணரோ பௌத்தரோ இரண்டுமோ ஆக திகழ்ந்தனர். சைவ வைணவப் பெருந்தெய்வங்களின் வழிபாடும் தொடர்ந்தது. இந்திரவிழா போன்றவை வைணவ மதத்தில் இருந்து அப்படியே சமணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆனால் வைதிக மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவற்றை விட சமண, பௌத்த மதங்கள் அடித்தள மக்களுக்கு அணுக்கமானவையாக இருந்தன. அவை அவர்களுக்கு உணவு, கல்வி, அடைக்கலம், மருத்துவம், அறவுரை என ஐந்துமுறைகளில் சேவையாற்றின. அவை வணிகவலையில் ஊர்களை இணைத்தன. அதன்மூலம் ஊர்கள் வளர வழிவகுத்தன. ஆகவே அவை மக்கள் மதங்களாக இருந்தன.
இச்சூழலிலேயே பக்தி இயக்கம் எழுந்தது. அதுவே சமண, பௌத்த மதங்கள் இந்திய மண்ணில் பின்னடைவு கொள்ளக் காரணமாக அமைந்தது. முதன்மையாக அதன் போக்கு சைவ, வைணவப் பெருமதங்களின் மையத்தை நெகிழ்வாக ஆக்குவதாக இருந்தது. வேள்விகள், சடங்குகள், ஆகியவற்றுக்கு பதிலாக எளிய பக்தியை முன்வைத்தது. அத்தனை நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டுமுறைகளையும் உள்ளிழுத்தது. அவர்களின் அத்தனை கலைவடிவங்களையும் தன்னுள் கொண்டது. அவர்கள் பங்கெடுக்கும் மாபெரும் திருவிழாக்களை உருவாக்கியது. இவையனைத்துக்கும் மையமாக அத்தனைமக்களுக்கும் பங்களிப்புள்ள ஆலயவழிபாட்டு முறைமையை அமைத்தது.
பெருந்தெய்வங்களுக்கு பல சிறுதெய்வங்கள் உடன்அமைந்த கூட்டாலயம் முன்னரே இருந்ததை சிலம்பு காட்டுகிறது. இது கோட்டம் எனப்பட்டது. கோட்டம் என்றால் வளைவு [compound] என பொருள். மணிவண்ணன் கோட்டத்தில் கோவலன் வழிபட்டான் என காண்கிறோம். அவை புகார் போன்ற பெருநிலங்களில் இருந்தன. அந்த அமைப்பு சிற்றூர்களிலும் உருவானது. ஆறுமதங்கள் மூன்று பெருமதங்களாயின. அவற்றுள் பலநூறு வைதிக தெய்வங்களும் நாட்டார்ச் சிறுதெய்வங்களும் உள்ளடக்கப்பட்டன.
இந்தப் பக்தி இயக்கத்தின் உண்மையான ஊற்றுமுகம்தான் என்ன? பின்னுக்குப்பின்னாக தேடிச்சென்றால் நாம் சென்றடைவது இரு புள்ளிகளை. ஒன்று சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை. இன்னொன்று பரிபாடல். இவற்றில்தான் ‘தத்துவச்சுமை’ இல்லாததும் ‘சடங்குகளின் இறுக்கம்’ இல்லாததுமான தூயபக்தி கலைவடிவாக வெளிப்படுவதைக் காண்கிறோம்.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி!
இதிலுள்ளது ஓர் அரிய இணைப்பு. ஆய்ச்சியர்குரவை என்பது ஒரு நாட்டார்பாடல் வடிவம். அதில் வைணவப் பெருமதத்தின் தத்துவமும் அழகியலும் இணைவுகொள்கின்றன. இதுதான் பரிபாடலிலும் நிகழ்கிறது. அந்த இணைவுதான் பக்தி இயக்கமாக சிலநூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்தது.
பரிபாடல் காலத்தால் மிகப்பிற்பட்டது. அது சங்கப்பாடலாக கொள்ளப்பட்டாலும் சங்கம் மருவியகாலத்தது என அதன் மொழியே காட்டுகிறது. சிலம்பும் அதுவும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அப்போது சமணமும் பௌத்தமும் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவற்றுக்கு அடியில் தமிழகத்தின் நாட்டார்ப்பண்பாடு சைவ வைணவப் பெருமதங்களை சென்று தொட்டு இணையத் தொடங்கிவிட்டிருந்தது.
அதன்பின் முந்நூறாண்டுக்காலம் களப்பிரர் ஆட்சி நிலவியது. அது சமணம் ஓங்கிய காலம். ஆனால் அப்போது வைதிக மதங்கள் ஒடுக்கப்படவில்லை. அவை சமண பௌத்த மதங்களுடன் உரையாடி விரிவடைந்தன. பலநூறு ஞானசபைகளில் அந்த அறுபடா விவாதம் நிகழ்ந்தது என்பதையே மணிமேகலையின் அறமுரைத்த காதை காட்டுகிறது. மறுபக்கம் பரிபாடல் காட்டும் இணைவு வலுத்தபடியே வந்தது. ஏழாம் நூற்றாண்டில் களப்பிரர் வெல்லப்பட்டு அரச ஆதரவு பெற்றபோது பேரியக்கமாக ஆகியது. பக்தி இயக்கம் எனப் பெயர்கொண்டது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

