அசைவைக் கைப்பற்றுதல்

1


 


புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது ‘ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்’ என்ற கதையில் ஒரு சின்னப்பெண் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கும். நான்கு கைகள் கொண்ட சாமிச் சிலையைப்பார்த்து ”சாமிக்குப்பின்னால் ஆரு நிக்கிறாங்க?”என்று ஐயப்படும். அது பெரும்பாலான குட்டிகள் கேட்கும் கேள்விதான்.


அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ‘புரட்சிக்’ கவிஞர் இன்குலாப் அக்கதையை நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஒரு குழந்தை அபாரமாக பகுத்தறிவுக்கேள்விகளை எழுப்புவதை எண்ணி எண்ணி புளகாங்கிதம் அடைந்திருந்தார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் நாம் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட உசாவி அறிய முயல்வதில்லை?


சின்னப்பிள்ளையாக இருந்தபோது சைதன்யா என் நாவலான விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பில் வந்த ஆயிரம் கைகள் கொண்ட மைத்ரேய புத்தரின் படத்தைக் கண்டு ஐயம் கொண்டு கண்களை மேலே செருகி ஆழமாகச் சிந்தனை செய்தபின் கேட்டாள் ”எதுக்கு இவ்ளோ கை?” சாமி எப்படி படுக்கும் எப்படி குளிக்கும் போன்ற நூறாயிரம் ஐயங்கள் குட்டி மண்டைக்குள் முண்டியடித்தன.


நான் உடனே டியூப் லைட்டை அணைத்தேன். மீண்டும் போட்டேன். அது பக் பக் என்று துடிதுடித்து எரிய ஆரம்பிக்க நான் வேகமாக கைகளை ஆட்டினேன். ”பாப்பா இங்கபார்…அப்பாவுக்கு எவ்ளோ கை!” சைதன்யா பிரமித்துப் போய்விட்டாள். ”ஆமா…” என்றவள் தன் கையை பார்த்து ”பாப்பாவோட கையி?” என்றாள். ”நீயும் ஆட்டு”என்றேன். தனக்கு ஆயிரம் கை வந்த அற்புதத்தில் இரவெல்லாம் திளைத்தாள். அதன் பின் அந்த படத்தைப்பார்த்தால் ”சாமி வேகேமா கைய ஆட்டுது” என்பாள்.


நம்முடைய சிற்பங்களில் உள்ள ஏராளமான கைகள் என்ற அம்சம் இப்படித்தான் உருவாகி வந்திருக்கிறது. பலநூறு கைகள் என்ற கருத்து பௌத்த மரபில் இருந்து வந்தது. புத்தர் மகாதர்ம காய வடிவில் வழிபடப்படும்போது அவருக்கு பல்லாயிரம் கைகள் — சஹஸ்ர ஹஸ்த — என்று சொல்லப்படுகிறது. பௌத்த மரபின்படி எதுவுமே நிலை வடிவில் இல்லை. நெருப்பின் சுடருக்கும் மலைக்கும் வேறுபாடு இல்லை, மலை கொஞ்சம் மெல்ல நிகழ்கிறது அவ்வளவுதான்


ஆகவே புத்தரை ஒரு நிலைத்த வடிவமாக அவர்கள் காணவில்லை. ஒரு நிகழ்வாக, நிகழ்வின் ஒரு கணமாக, கண்டார்கள். பிரபஞ்சத்தை நிகழ்த்தும் பிரபஞ்ச ரூபனாகிய தர்மகாய புத்தரைப் பார்த்தால் எப்படி இருப்பார்? மின்னலின் கணத்தில் அவரைக் கண்டது போலிருக்கும். மின்னல் ஒளியில் அதிவேகமாக அசையும் ஒன்றைக் கண்டால் எப்படி இருக்கும்? அதுவே சஹஸ்ர ஹஸ்த புத்தரின் சிற்பம். அங்கிருந்துதான் நம் சிற்பக்கலையில் பல கைகள் என்ற கருத்து வேரூன்றியது.


நடராஜர் சிலை இன்னொரு உதாரணம். உக்கிரமான ஓரு சலனத்தின் ஒரு கணத்தோற்றம்தான் அச்சிலை. சடைமுடிகள் பறக்கின்றன. ஆடை பறக்கிறது. கால் தூக்கிச் சுழலும் சுழற்சியின் ஒரு கணம் அது. அந்நிலையில் நான்கு கைகளும் அந்த அதிவேக அசைவாலேயே பொருள்படுத்தப்படுகின்றன.


பின்னர் பல கைகள் பலவகைச் செயல்பாட்டின் குறியீடுகள் ஆக மாறின. பல வகையான ஆயுதங்கள் ஏந்திய கரங்கள். பல திசைகளுக்கும் பரவிய கரங்கள். ஆனால் எப்படி நான்கு கைகள் என்று காட்சி சார்ந்து கேட்டோமென்றால் அது ஒரு கணத்தின் அசைவுத்தோற்றம் என்பதே பதில்.


நம் சிற்ப மரபு அசைவை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி அபாரமானது. பத்மநாபபுரம் ராமஸாமி கோயிலின் உத்தரங்களில் ராமாயணக்கதை முழுக்க வரிசையாந சிறு சிற்பங்களாக படக்கதை போலச் செதுக்கப்பட்டிருக்கிறது. தாடகையை ராமன் அம்பெய்து கொல்கிறான். அம்புபட்ட தாடகை பின்னால் சரிந்து விழுகிறாள். தாடகையின் இடுப்புக்கு கீழே கால்கள் ஊன்றி நிற்கின்றன. இடுப்புக்குமேலே உள்ள பகுதி வரிசையாக விசிறி போல ஐந்து முறை செதுக்கப்பட்டு தாடகை சரிந்து கீழே விழும் காட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையான சிலையை நாம் கோயில் சிற்பங்களில் பல இடங்களில் காணலாம்.


 


 




அதேபோல ஒருவர் வேகமாக திரும்புவதை முதுகு ஒட்டிய இருபக்கமும் முகம் கொண்ட சிலைகளாகச் செதுக்கியிருக்கிறார்கள். மேலே உள்ள சிலை தாராசுரம் கோயிலின் சுவரில் உள்ளது.இருபக்கமும் இருவர் ஆடுகிறார்கள். நடுவே நடனமாது கைகளை ஊன்றி நிற்கிறாள். அவள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. ஆனால் அவள் உடல் மூன்று திசைகளிலும் உள்ளது. ஏதோ விசித்திரப்பிராணி என்று பார்த்துச் செல்கிறார்கள்


உண்மை என்னவென்றால் அந்தப்பெண் ஒரே கணத்தில் கைகளை  ஊன்றி தன் உடலை வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக சுழற்றிவிடுகிறாள். நடனத்தின் ஒரு கண நேரம் அது. அந்தக்கணத்தில் நிகழ்ந்ததைச் செதுக்க முயன்றிருக்கிறான் சிற்பி



பல நூற்றாண்டுகள் கழித்துத்தான் ஐரோப்பிய நவீன ஓவியம்  அந்தச்சவாலை ஏற்றுக்கொண்டது. குறிப்பாக பாப்லோ பிக்காஸோ அசைவுகளை ஓவியமாக ஆக்க முயன்றார். அசைவின் ஒரு கணத்தை, அசைவு வழியாக காலம் கடந்துசெல்வதை, மாறுதல் நிகழும் முறையை மீண்டும் மிண்டும் வரைந்தார் அவர். அவரது படி இறங்கும் பெண் என்ற புகழ்பெற்ற கோட்டோவியத்தில் ஒரு பெண் படிகளில் இறங்கும் கணத்தை ஒன்றுடன் ஒன்று கலந்து படிந்த பல பெண் வடிவங்கள் வழியாக அவர் வரைந்து காட்டினார். நம் சிற்பிகள் செய்த அதே முறைதான்.



நம் சிற்பங்கள் பெரும்பாலும் நம்மிடம் பேசுபவை போல தெரிகின்றன. விரல் சுட்டி, விழித்து, உதடுகளில் அந்தச் சொற்களுட்ன் அவை நிற்கின்றன. அவை நம்மிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. சென்று மறைந்த கலையின் பொற்காலத்தைப் பற்றி அவை சொல்கின்றன. நாம் காதுகொடுப்பதே இல்லை. அவற்றை நம் போக்கில் ஏதோ புரிந்துகொண்டபடி அவற்றின் முன் நின்று மேலே சென்றுவிடுகிறோம்



மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 10, 2009


தொடர்புடைய பதிவுகள்

நமக்குள் இருக்கும் பேய்
வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.
ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
கண்ணீரும் கதைகளும்
அவதூறுகள் ஏன்?
அறிவியல் மனம்,அமெரிக்கா:கடிதங்கள்
திரிச்சூர் நாடகவிழா- 3
திரிச்சூர் நாடகவிழா 2
ஒரு விழா
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2017 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.