Jeyamohan's Blog, page 1676

February 19, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20

20. விண்வாழ் நஞ்சு


குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர் தொடர்க! அரசனை நான் தொடர்கிறேன்” என்றான். “நாம் அறிய வேண்டியதென்ன? ஆற்றப்போவதென்ன? அதில் தெளிவின்றி பின் தொடர்வதனால் ஏது பயன்?” என்றான் சந்திரஹாசன். “நான் ஒன்றும் அறியேன். ஆனால் ஏதோ ஒன்றை அணுக்கமாக தொடர்வோம் என்றால் முன்பு அறிந்திராத ஒன்று கண்முன் எழுந்து வருமென்பது ஓர் அரசுசூழ் மெய்மை. இன்று நம் முன்னிருப்பது இச்செயல் ஒன்றே. விழி முழுமையும் திறந்திருக்கட்டும். செவி உச்சக்கூர் கொண்டிருக்கட்டும். மூக்கு மணமனைத்தையும் பெறட்டும். எண்ணம் புலன்களில் மட்டும் குவிந்திருக்கட்டும். எங்கோ ஒன்று நிகழும் என்று காத்திருப்போம்” என்றான் விஸ்வவசு.


விஸ்வவசு இரவும் பகலும் புரூரவஸின் அருகிலேயே இருந்தான். வண்டின் இசை ஒன்று தன்னை எப்போதும் சூழ்ந்திருப்பதை ஓரிரு கணங்களில் புரூரவஸ் உணர்ந்தாலும் அவனைச் சுற்றி ஒலித்த மங்கல இசையும், வாழ்த்துரைகளும், அரசுசூழ் சொல்லாடல்களும், குலத்தலைவர் கூற்றுகளும், மன்றில் எழுந்த வழக்குகளும் அவனை ஆழ்த்தி வைத்திருந்தன. அரசனின் அரியணைக்குப்பின் இருந்த சிறுதுளையில் புகுந்து சொல்கேட்டிருந்தான் விஸ்வவசு. அவன் மஞ்சத்தில் தென்கிழக்கு மூலையில் ஒரு துளையிட்டு அங்கு இரவில் உடனிருந்தான். ஊர்வசியுடன் அவன் காதலாடுகையில் மச்சிலிருந்து தொங்கிய மலர்க்கொத்து விளக்கில் அமைந்திருந்தான்.


நாட்கள் கடந்தனவெனினும் ஒன்றும் புலப்படாமை கண்டு அவ்வப்போது உளம் சோர்ந்தான். பிறிதொன்றும் செய்வதற்கில்லையென்று அதிலேயே தொடர்ந்தான். பெருங்காதலை அறிந்தவனின் உடலில் இருக்கும் குழந்தைக்குரிய துள்ளல் புரூரவஸிடம் இருந்தது. வெறுமனே இருக்கையில் இன்நினைவு கொண்டவன்போல் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில் அவன் இறுதியாகக் கேட்ட பாடலின் இசை எழுந்தது. புதியவர்களிடம் பேசுகையில் அருஞ்செய்தி கொண்டுவருபவர்கள் அவர்கள் என அவன் எண்ணுவதுபோல் தோன்றியது. அவன் கை அலைநீரில் பாவை தெரிவதெனப் பெருகியிருந்தது என்றனர் புலவர். ஒன்று உகந்த இடத்தில் நூறு அளித்தான். போதுமென சொல்தயங்கும் பாவலர் முகம் கண்டு மேலும் கோருகிறார் என்று எண்ணி மீண்டும் அளிப்பதற்கு அள்ளினான்.


அந்நாளில் ஒருமுறை பட்டத்துயானையாகிய துங்ககீர்த்தி நோயுற்றிருக்கும் செய்தியை படைத்துறை அமைச்சர் வந்து அவையில் சொன்னார். அதன் நலம் விசாரித்தபின் மருத்துவர் குழு கூடி ஆவன செய்யட்டும் என்று ஆணையிட்டு பிற தொழிலில் மூழ்கினான் புரூரவஸ். நோயிலும் துயரிலும் அவன் உள்ளம் நிலைக்காதிருந்தது. தேன் மட்டுமே தேரும் வண்டென்று ஆகிவிட்டிருந்தது அது. அன்று அவை முடிந்து அவன் எழுந்தபோது ஆயுஸ் “தந்தையே, நாம் துங்ககீர்த்தியை பார்த்துவிட்டுச் செல்லலாமே?” என்றான். “நன்று” என்று சொல்லி செல்வோம் என்று அமைச்சரிடம் கை காட்டினான் புரூரவஸ்.


அமைச்சர்களும் இரு படைத்தலைவர்களும் ஏவலரும் தொடர அவன் யானைக்கொட்டிலை நோக்கி நடந்தான். அவனை எதிர்கொண்டு வணங்கிய சிற்றமைச்சர் கொட்டிலாளரும் யானைக்காப்பரும் அவனுக்காக காத்திருப்பதை உணர்த்தினார். தலைமை மருத்துவர்கள் மூவர் அவனருகே வந்து யானையின் நோய் குறித்தும் அளித்துள்ள மருந்துகள் குறித்தும் சுருக்கமாக சொன்னபடி உடன்நடந்தார்கள். அவர்கள் சொல்வதை அவன் செவிகூரவில்லை. துள்ளும் கன்றுகளையும் முலைபெருத்து வெண்துளி கசிய மைந்தரை நோக்கிய அன்னைப்பசுக்களையும் மட்டும் நோக்கி மகிழ்ந்தபடி அவன் நடந்தான்.


யானைக்கொட்டில் நோக்கி செல்கையில் அங்கு இரு ஆடுகள் கட்டப்பட்ட சிறு தொழுவம் வந்தது. ஆயுஸ் முகம் மலர்ந்து திரும்பி கைசுட்டி “அன்னையின் வளர்ப்பு ஆடுகள்!” என்றான். ஒருகணம் உடல் விதிர்க்க, விழிகள் மின்னிச்சென்று அவற்றைத் தொட்டு மீள, திரும்பி மருத்துவரிடம் யானையின் மருந்து குறித்தொரு ஐயம் கேட்டபடி புரூரவஸ் கடந்து சென்றான். அத்தருணத்தில் அவனில் நிகழ்ந்து மறைந்த ஒன்றை அருகே பறந்து வந்த விஸ்வவசு அறிந்துகொண்டான். ஆம், இதுவே, இதுவேயாம் என அவன் உள்ளம் துள்ளியது. “குறையொன்று இல்லாது முழுதும் மலர்ந்த உள்ளம் இல்லை மானுடர் எவருக்கும்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.


மீண்டும் தன் துளைக்கு வந்து தோழரை அங்கு வரச்சொன்னான். “அந்த ஆடுகள் எவை? விளக்குக!” என்றான். முதுகந்தர்வனாகிய சூர்யஹாசன் “ஊர்வசி இங்கு வந்தபோது உடன் வந்தவை அவை. அவள் உளம்கொண்ட ஆழமே இரு ஆடுகளாக பின் தொடர்ந்தது. தேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின. ஸ்ருதனும் ஸ்மிருதனும் மீண்டும் அவளை தேவகன்னிகையாக்கி விண்ணுக்கு அழைத்து வரும் பொறுப்பு கொண்டவை” என்றான். முகம் மலர்ந்த விஸ்வவசு “ஆம், இதுவே வழி. நன்று, நாம் ஆற்ற வேண்டியதென்ன என்பது தெளிவுற்றுவிட்டது” என்றான்.


சியாமை குருநாட்டிற்கு வந்த தொடக்க நாட்களில் பட்டத்துயானைக்கும் அரசப்புரவிக்கும் நிகரான மதிப்புடன் அந்த இரு ஆடுகளும் கொட்டிலில் பேணப்பட்டன. அவற்றை பராமரிப்பதற்கென்று ஏழு தேர்ந்த இடையர்கள் மூதிடையர் ஒருவரின் தலைமையில் அமர்த்தப்பட்டனர். தினம் அவற்றை நீராட்டி அரண்மனையின் பசுஞ்சோலைகளில் மேயவிட்டு அந்தியில் புகையிட்டு கொட்டிலில் கட்டி இரவெல்லாம் உடனிருந்து காவல் காத்தனர். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலேயே எழுந்து அவற்றிடம் வந்து பிடரி தடவி, காதுகளை வருடி, இன்குரலில் முகம் தாழ்த்தி உரையாடிக்கொண்டிருப்பது அரசியின் வழக்கமாக இருந்தது. அவற்றை அரண்மனைக்குப் பின்னிருக்கும் அணிக்காட்டில் உலவவிட்டு அவளும் உடன் செல்வாள். அங்கு மேய்ந்து நிறைந்து அவை மரநிழல்களில் படுத்து அசை போடுகையில் இரண்டுக்கும் நடுவே சருகுமெத்தையில் படுத்து துயில்வாள். அவை அசைபோடும் மலர்களை தன் கனவில் மலரச்செய்வாள்.


பின்னர் அவள் வருவது குறைந்தது. வாரம் ஒருமுறை என்றாகி பின் மாதம் ஒருமுறை என்றாகியது. சிறப்பு நாட்களில் மட்டுமே என குறைந்து பின்னர் அவள் அதை முற்றிலும் மறந்தாள். அவள் வராமலானபோது ஆடுகளை பராமரிப்பவர்கள் ஆர்வமிழந்தனர். பாராட்டப்படாத பணி வெற்றுச்சடங்கென்று ஆகிறது. சடங்கென்றாகும் பணி உளம் குவிதலற்று பொருளிழக்கிறது. மறக்கப்பட்ட ஆடுகள் தங்கள் விலங்கியல்புக்கு திரும்பின. உடலெங்கும் புழுதிபடிந்து கட்டற்று வளர்ந்த உடலுடன் அவை காட்டுக்குள் செருக்கடித்து திரிந்தன. அந்தியில் தொழு திரும்பின. தங்கள் தோற்றுவாயை முற்றிலும் மறந்தன. அவற்றைப் பராமரிப்பவர்களும் அவற்றை மறந்தனர். இரு விலங்குகள் அங்கிருப்பவை என்பதற்கு அப்பால் எதுவும் எவருக்கும் தெரியாமலாயிற்று. அவையோ முதிர்வு கொள்ளா தோற்றத்துடன் கொட்டிலில் நின்றன.


மழைமுகில் திரண்டு துளிச்சாரல் நிறைந்த காற்று சுழன்றுகொண்டிருந்த ஓர் அந்திவேளையில் விஸ்வவசு தன் தேவஉரு மீண்டு கொட்டில் நோக்கி சென்றான். உடன் பிற கந்தர்வர்களும் ஓசையின்றி தொடர்ந்தனர். அவர்களை எதிர்கொண்ட காவலர்களுக்கு அவர்களும் காவலர் வடிவு காட்டினர். சேடியருக்கு சேடியர் உருவையும் மருத்துவருக்கு மருத்துவர் உருவையும் காட்டினர். கற்பனை அற்ற விலங்குகளுக்கு மட்டும் அவர்களின் தன்னுருவே தெரிந்தது.


பன்னிரு வாயில்களைக் கடந்து கொட்டில்களுக்குள் சென்றபோது காவல்நாய் குரைக்கத்தொடங்கியது. விழித்திருந்த முதிய பிடியானையாகிய சிருங்கை மெல்ல அமறி பிற யானைகளை எச்சரித்தது. கொட்டில்களுக்குள் உடல் திருப்பி துதி நீட்டி மோப்பம் கொண்டு அவை தேவர்களை அறிந்தன. துங்ககீர்த்தி துதிதூக்கி உரக்கப் பிளிறி அறைகூவியது. அதன் ஏழு பிடி துணைகளும் உடன் சின்னம் விளித்தன. கொட்டிலெங்கும் ஓசை நிறைய அருகிருந்த வாளால் இரு ஆடுகளின் கட்டுச் சரடுகளையும் வெட்டி நுனி பற்றி இழுத்தபடி வெளியே ஓடினான் விஸ்வவசு. அவனைத் தொடர்ந்து வாட்களைச் சுழற்றியபடி பிற கந்தர்வர்களும் விரைந்தனர்.


ஓசை கேட்டு அனைத்து திசைகளிலிருந்தும் உள்ளே வந்த காவலர்கள் ஆடுகளை இழுத்தபடி செல்லும் தேவர்களைக் கண்டு “திருடர்கள்! விடாதீர்கள்! பிடியுங்கள்!” என்று கூச்சலிட்டபடி வில்லும் வாளுமெடுத்து ஓடிவந்தனர். “அம்பு செலுத்த வேண்டாம். ஆடுகளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது” என்று முதலில் ஓடிவந்த காவலர் தலைவன் கூவினான். கொட்டிலுக்கு வெளியே வந்து இருளில் பாய்ந்த விஸ்வவசு தன் இரு கைகளையும் விரித்து சிறகுகளாக்கி காற்றை மிதித்து மேலேறினான்.


இரு ஆடுகளும் அலறியபடி சரடில் கழுத்து இழுபட்டுத் தொங்க கால்கள் நீண்டு காற்றிலுதற அமறியபடியும் துடித்தபடியும் அவனுடன் சென்றன. மண்ணில் அமைந்து ஏழாண்டுகாலம் அவை உண்ட உணவனைத்தும் எடையெனத் தேங்கியமையால் உயிர் வலிகொண்டு அவை அலறின. ஏழு தேவர்களும் வானில் எழுவதைக்கண்ட காவலர் தலைவன் அரண்மனைக்குள் ஓடினான். அந்தப் வேளையிலும் சியாமையுடன் காமம் ஆடிக்கொண்டிருந்த புரூரவஸின் சந்தன மண்டபத்தின் கதவை ஓங்கித் தட்டி “அரசே! அரசே!” என்று கூவினான்.


எழுந்து கதவுக்குப் பின்னால் நின்று “என்ன? சொல்?” என்று எரிச்சலுடன் புரூரவஸ் கேட்டான். “அரசியின் இரு ஆடுகளையும் கள்வர் கவர்ந்து செல்கிறார்கள்” என்றான் காவலர் தலைவன். “பிடியுங்கள் அவர்களை! பிறரை தலை வெட்டிவிட்டு ஒருவனை மட்டும் இழுத்து வாருங்கள்” என்றான் புரூரவஸ். “அரசே, அவர்கள் மானுடர்கள் அல்ல. காற்றை மிதித்து விண்ணிலேறிச் செல்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர இயலவில்லை” என்றான் காவலன். “என் ஆடுகள்! அவை மறைந்தால் நான் இங்கு இருக்கமுடியாது” என சியாமை கூவினாள்.


தேவியுடன் உறவுகொள்கையில் வாளை உருவி தொடையருகே வைத்திருப்பது அரசன் வழக்கம். அக்கணம் மூண்டெழுந்த சினத்தில் தன் நிலை மறந்த புரூரவஸ் வாளை எடுத்தபடி ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினான். தொலைவில் அரைமின்னலில் எட்டு தேவர்களும் ஆடுகளுடன் செல்வதைக் கண்டான். “எனது ஆடுகள்! பிடியுங்கள் அவற்றை!” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் சியாமை எழுந்து வந்தாள். பெருஞ்சாளரத்தினூடாக வெளியே பாய்ந்து தன் தவ வல்லமையால் இரு கைகளையும் விரித்து காற்றில் பறந்தெழுந்தான் புரூரவஸ்.


அக்கணம் விண்ணில் எழுந்த தேவர்தலைவன் தன் ஒளிர்படையை அசைக்க மின்னலொன்று வெட்டிச் சுழன்று கொடிவீசி வான் பிளந்து நின்றதிர்ந்து மறைந்தது. அந்த ஒளியில் சியாமை புரூரவஸின் வெற்றுடலைக் கண்டாள். அலறியபடி மயங்கி கால்குழைந்து சாளரத்தைப் பற்றியபடி சரிந்து தரையில் விழுந்தாள்.


விண்ணில் விரைந்த தேவர்களை துரத்திச்சென்ற புரூரவஸ் இருளை உறிஞ்சிப் பரந்திருந்த முகில்களுக்கு மேலே அவர்கள் எழுவதைக் கண்டான். முகில்விளிம்புகளை மிதித்துத் தாவி வாளைச் சுழற்றியபடி அவர்களை அணுகினான். அவனைச் சூழ்ந்து மின்னல்கள் துடித்தன. இடியோசை எழுந்து திசைகளனைத்தையும் அதிரச்செய்தது. ஒளிரும் வெண்முகில்களுக்கு அப்பால் தேவர்கள் விரைந்து செல்வதை அவன் கண்டான். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவியபடி அவன் தொடர்ந்து சென்றான். “விண்ணகர் புகுந்தாலும் விடமாட்டேன். விண்ணவர்கோனையும் வெல்வேன்” என வஞ்சினம் கூவினான்.


ஆனால் இன்னொரு மின்னலில் கீழிருந்து ஆடை சிறகெனப் பறக்க குழல் எழுந்து நெளிய பறந்தணைந்த பெண்ணுருவம் ஒன்று அந்த இரு ஆடுகளையும் பாய்ந்து கழுத்தை கைகளால் சுற்றி பற்றிக்கொள்வதைக் கண்டான். அறிந்த முகம், பொன்னொளிர் நிறமென்றாலும் நன்கு பழகிய உடலசைவுகள். திகைத்து நின்று அவன் சொல்லெடுப்பதற்குள் இரு ஆடுகளுக்கும் சிறகுகள் முளைத்தன. இரு கால்களையும் அவற்றின்மேல் ஊன்றி சரடுகளை பற்றிக்கொண்டு அவள் எழுந்து நின்றாள். அவளைக் கண்டது எங்கென அவன் அப்போது உணர்ந்தான். மறுகணமே அவள் எவளென்றும் தெளிந்தான்.


அவன் கைகால்கள் செயலற்றன. சிறகுகள் தொய்வடைய அவன் கீழே சரியலானான். “தெய்வங்களே! மூதாதையரே!” என கூவியபடி அவன் விண்ணில் முகில்கணம் ஒன்றை பற்றிக்கொண்டான். அவன் உடைவாள் ஒளியுடன் கீழிறங்கிச் சென்று மண்ணில் விழுந்தது. அவள் விண்ணில் புதைந்து சிறு புள்ளியென மாறி மறைந்தாள். புலரி ஒளி எழுந்ததும் செந்நிற முகில்கீற்றுகள் சிதறிப்பரந்திருக்க ஓய்ந்த போர்க்களமென ஒழிந்து கிடந்த வான்வெளியை நோக்கி புரூரவஸ் திகைத்தான். திசை என ஏதுமற்ற அந்தப் பெருவட்டத்தை சுழன்று சுழன்று நோக்கி சோர்ந்து சுருங்கினான். அவன் உடல் எடைகொண்டு வந்தது. முன்னோர் அளித்த முதற்சொல் அவன் சித்தத்திலிருந்து மறைய மெல்ல மண் நோக்கி விழலானான்.


imagesமுகில்களைக் கடந்து காற்றைக் கிழித்தபடி குருநகரின் புறக்கோட்டைக் காட்டின் குறுமரங்களின்மேல் வந்து விழுந்து கிளையுடைத்து தரையில் பதிந்தான். உடலில் படிந்த புழுதியும் சருகும் பறக்க பாய்ந்தெழுந்து ஆடையிலா உடலுடன் நகர்த்தெருக்கள் வழியாக ஓடி குருநகரியின் அரண்மனை முற்றத்தை அடைந்தான். அவனைக் கண்டு காவலர் திகைத்து ஓசையிட்டனர். பொன்னுடல் இளவெயிலில் மின்ன பித்தனைப்போல “அரசி எங்கே? எங்கே சியாமை?” என்று கூவியபடி படிகளில் ஏறி அரண்மனைக்குள் புகுந்தான். அவனைக் கண்டு அனைவரும் சிதறிப்பரந்தனர்.


அவனை எதிர்கொண்ட அரண்மனை முதுசெவிலி “நேற்று நீங்கள் கிளம்பியதும் தன்னினைவிழந்து கிடந்த அரசியை தூக்கிக்கொண்டு சென்று மஞ்சத்தில் படுக்க வைத்தோம். நீர் தெளித்து முகம் தெளியச்செய்தோம். ஆடுகள் ஆடுகள் என கூவி அரற்றினார். பின்னர் என் மைந்தர், என் மைந்தரை விட்டுச்செல்லமாட்டேன் என கலுழ்ந்து விழிநீர் வார்த்தார். அவர் அருந்த இன்நீருடன் வந்தபோது மஞ்சம் ஒழிந்திருப்பதைக் கண்டோம்” என்றாள்.


“எங்கு சென்றாள்? எங்கு சென்றாள் அவள்?” என்று கூவியபடி அவன் படிகளிலேறி அரண்மனை இடைநாழிகளினூடாக ஓடி தன் மஞ்சத்தறையை அடைந்தான். அங்கே அவள் இல்லை. திரும்பி அவள் மஞ்சத்தறையை மீண்டும் அடைந்து அவள் பேழைகளை திறந்து தேடினான். அவன் அளித்த அணிகளும் ஆடைகளும் அருமணிகளும் அங்கே இருந்தன. திரும்பியபோது சிறுபீடத்தின்மேல் அவன் அணிவித்த கல்மாலையும் மங்கலத்தாலியும் மெட்டிகளும் கணையாழியும் இருந்தன.


அவன் கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்தான். “அரசே, இவ்வறைக்கு வாயில் ஒன்றே. இவ்விடைநாழி வழியாக வந்து படிகளினூடாகவே வெளியேற முடியும். இங்கு காவலர் இருந்தனர். சேடியர் பலர் நடந்தனர். இவ்வழியாக அரசி சென்றிருக்க வாய்ப்பில்லை. அறையிலிருந்து எவ்வண்ணம் அவர்கள் மறைந்தார்கள் என்றறியேன்” என்றாள் முதுசெவிலி. பிறிதொருத்தி ஏதோ சொன்னாள். என்ன என அவன் விழிதூக்க அவள் “ஒன்றுமில்லை, சாளரம் வழியாக அரசி எழுந்து சிறகுகொண்டு பறந்து செல்வதைக் கண்டதாக இளஞ்சேடி ஒருத்தி சொல்கிறாள். கீழே அவள் கலம் கழுவிக்கொண்டிருக்கையில் அதை கண்டாளாம். அஞ்சி மயங்கி விழுந்து விழித்தெழுந்ததும் அழுதபடி தான் கண்டதை முதுசேடியிடம் சொல்லியிருக்கிறாள்” என்றாள்.


“அவளை அழைத்து வா! மெய்யேதென்று உசாவுவோம்” என்றாள் முதுசெவிலி. “தேவையில்லை” என்றுரைத்து இரு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டான். குறடொலிக்க வாயிலில் வந்து நின்ற காவலர் தலைவன் “அரசியை நகரெங்கும் தேட காவலர்களை அனுப்பியிருக்கிறோம், அரசே” என்றான். அருகே வந்து நின்ற ஆயுஸ் “அன்னையை தேடிப்பார்க்க ஒற்றர்களும் சென்றுள்ளனர்” என்றான். புரூரவஸ் “நன்று, முறைப்படி அதை செய்க! ஆனால் அதனால் பயனில்லை” என்றான். திகைப்புடன் “ஏன், தந்தையே?” என்றான் மைந்தன். “அவள் இனி மீளமாட்டாள்” என்றான்.


ஆயுஸ் புருவங்கள் சுருக்கி நோக்கினான். “அவள் சென்றுவிட்டாள். அது ஒன்றே மெய்” என்று அவன் சொன்னான். அதற்குமேல் ஆயுஸ் ஏதும் கேட்கவில்லை. புரூரவஸ் உடைந்து விழிநீர் சிந்தத்தொடங்கினான். ஆயுஸ் திரும்பி நோக்க வாயிலில் நின்றிருந்த காவலர் விலகிச்சென்றனர். அவன் எழமுயன்றான். உடல் எடை மிகுந்தபடியே வந்தது. எழுந்து மஞ்சம் நோக்கி நடக்க முற்பட்டவன் தூக்கி வீசப்பட்டவன்போல ஓசையுடன் மரத்தரையில் விழுந்தான். பதறி ஓடி வந்து அவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து நீர் தெளித்து விழிப்பூட்டி குளிர்நீர் அருந்த வைத்தனர் செவிலியரும் சேடியரும். விழிப்பு மீண்டதுமே “சென்றுவிட்டாள்…” என்று அவன் தன்னுள் என சொன்னான்.


அச்சொல் கூரிய வாளென உடலுக்குள் புகுந்ததுபோல தசைகள் விதிர்க்க கைகால்கள் துடித்தபின் மீண்டும் மயங்கினான். “அரசே” என்று அவனை உலுக்கினாள் செவிலி. ஆயுஸின் ஆணைப்படி அறைக்குள் வந்த மருத்துவர்கள் “இப்போது அவருக்கு விழிப்பு பெரும்துயர் அளிப்பது. துயிலட்டும், அதுவே நன்று” என்றனர். அனைவரையும் விலக்கி துயிலுக்கு புகை அளித்து அவனை மஞ்சத்திலிட்டனர். அவன் துயிலுக்குள்ளும் வலிகொண்டு துடித்தபடியே இருந்தான். முனகியபடியும் தலையை அசைத்தபடியும் இருந்தவன் அவ்வப்போது சவுக்கடி பட்ட புரவி என துடித்து எழமுயன்றான்.


ஆயுஸ் அவன் அருகிலேயே இருந்தான். பிற மைந்தருக்கு அவனே அனைத்தையும் சொல்லி புரியவைத்தான். மூன்றாம்நாள் விழிப்புகொண்ட புரூரவஸ் எழுந்து ஆடையை அள்ளிப்போட்டுக்கொண்டு கீழிறங்கிச்செல்ல அவனைத் தடுக்க முயன்றவர்களை கைகாட்டி விலக்கியபின் ஆயுஸ் உடன் சென்றான். முற்றத்தை அடைந்து புரவி மீதேறி விரைந்தபோதும் அவன் ஆயுஸ் உடன்வருவதை காணவில்லை. நகர்த்தெருக்களினூடாகச் சென்று கோட்டையைக் கடந்தான். எங்கும் நிற்காமல் காட்டுக்குள் புகுந்தான். அவனை முன்னால் செல்லவிட்டு பின் தொடர்ந்த ஆயுஸ் தன்னைத் தொடர்ந்த காவலர்களை எல்லைக்கு அப்பால் நிற்கச்செய்தான்.


புரூரவஸ் காட்டுக்குள் சென்று சோலைசூழ்ந்த சிறுசுனையை அடைந்தான். புரவியிலிருந்து இறங்கி அவன் உள்ளே சென்றதை அப்பால் நின்று மைந்தன் நோக்கினான். சற்றுநேரம் கழித்து அவன் தொடர்ந்துசென்று சோலைக்குள் புகுந்து ஓசையில்லாது நடந்தான். அதற்கான தேவையே இருக்கவில்லை. ஆயுஸ் மிக அருகே வந்து நின்றபின்னரும்கூட புரூரவஸ் எதையும் அறியவில்லை. விழியிமைக்காது அந்தச் சுனையையே நோக்கியபடி அமர்ந்திருந்தான். அவனை நோக்கியபடி ஒரு மரத்தில் சாய்ந்தவனாக ஆயுஸ் நின்றான்.


காட்டின் ஒலி மாறுபட்டது. இலைநுனியொளிகள் அணைந்தன. ஒளிக்குழல்கள் சாய்ந்து சிவந்து மறைந்தன. மரச்செறிவுக்குள் இருள் தேங்கியது. கொசுக்களின் ஓசை அவர்களைச் சூழ்ந்தது. புரூரவஸ் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தான். சென்று அவனை அழைக்கலாமா என ஆயுஸ் ஐயுற்றான். மேலும் இருட்டி வந்தபோது அவன் மெல்லிய காலடிகளுடன் அணுகிச்சென்று “தந்தையே!” என அழைத்தான். முதல் சிலமுறை புரூரவஸ் அக்குரலை கேட்கவில்லை. கேட்டதும் திடுக்கிட்டுப் பாய்ந்தெழுந்து “யார்?” என்றான். “நான்தான்… ஆயுஸ்” என்றான் ஆயுஸ். “யார்?” என்று அவன் பதறிய நோக்குடன் கேட்டான். “யார் நீ?” உரத்த குரலில் “சொல்! யார் நீ?” என்றான்.


ஆயுஸ் வெறுமனே நோக்கியபடி நின்றான். “நான் பாண்டவனாகிய பீமன்… இது என் சோலை…” என்றான் புரூரவஸ். ஆயுஸ் திரும்பி நோக்கியபோது மிக அப்பால் படைத்தலைவனின் செந்நிறச் சிறுகொடி தெரிந்தது. அவன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றான். புரூரவஸ் மீண்டும் அந்த நீர்நிலையருகே அமர்ந்தான். அவன் விழிமறைந்து நின்று ஆயுஸ் நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து துயில்கொள்பவன் போலிருந்தான் புரூரவஸ். ஆயுஸ் எண்ணியிராது ஓர் ஐயத்தை அடைந்தான். அங்கிருப்பவன் பிறிதொருவன்தானா? எப்படி அறியக்கூடும்? மானுட உடலை மட்டுமே அறிய வாய்க்கிறது. உள்ளே குடிகொள்வது எது? அது இடம்மாறிவிட்டதென்றால் அது உரைப்பதன்றி வேறு சான்றுதான் எது?


நிலவெழுந்து வந்தது. இலைநிழல்கள் நீரில் விழுந்தன. சுனை உள்ளிருந்து என ஒளிகொண்டபடியே வந்தது. குளிர்ந்த காற்றில் இலைகள் அசைந்தபோது எழுந்த கலைவோசை அது விடியலோ என ஐயுறச்செய்தது. இனிய வெம்மைகொண்ட படுக்கையில் படுத்திருக்கிறோமா என்ன? அல்லது இவையனைத்தும் கனவா? சுனைக்குள் நிலவொளி நேரடியாகவே விழுந்தபோது அதன் சிற்றலைகளின் வளைவுகள் தளிர்வாழையிலைகள்போல பளபளத்தன. ஆயுஸ் ஒரு நறுமணத்தை உணர்ந்தான். பாரிஜாதம் எனத் தோன்றிய மறுகணமே செண்பகம் என்றும் தோன்றியது. மிக அருகே அந்த மணம். இல்லை, மிக அப்பால் அலைபெருகி விரிந்த நறுமணப்பெருக்கின் சிறு துளியா?


புரூரவஸ் எழுந்து இரு கைகளையும் முன்னால் நீட்டினான். நேர் எதிரில் நின்றிருக்கும் எவரிடமோ பேச விழைபவன்போல முகம்நீட்டியபடி முன்னால் சென்றான். நடனமிடுவதுபோல கைகளை விரித்தான். சுழன்றபோது அவன் முகம் ஒருகணம் தெரிந்தது. அதில் ஆலயச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் யக்‌ஷர்களின் முகங்களில் தெரியும் களிப்பித்து தெரிந்தது. விழிகள் புடைத்து தெறிப்பவைபோல வெறித்திருந்தன. வாய் மலர்ந்து பற்கள் ஒளிவிட்டன. மெல்ல அவன் முனகுவது கேட்டது. பாடுகிறானா என அவன் செவிகூர்ந்தான். பாட்டல்ல, வண்டு போல் ஒரு முரல்வு. அவன் உதடுகளிலிருந்து அவ்வொலி எழவில்லை. மூச்சிலிருந்தோ உடல்முழுமையிலும் இருந்தோ அது எழுந்துகொண்டிருந்தது. அவன் கைகளை விரித்துச் சுழன்றான். பின்னர் அச்சுனையின் கரையில் அமர்ந்து கால்நீட்டி படுத்துக்கொண்டான்.


அவன் உடலில் வலிப்பு எழுவதை ஆயுஸ் கண்டான். கைகால்கள் சேற்றில் இழுபட்டன. நாக்கு வாயிலிருந்து பாதி நீண்டு தொங்கி அதிர்ந்தது. அவன் திரும்பி நோக்கியபோது படைத்தலைவனும் காவலரும் மிக அண்மையில் மரங்களில் மறைந்து நின்றிருந்தனர். அவன் கைகாட்ட அவர்கள் ஓடிவந்தனர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2017 10:30

February 18, 2017

மிகச்சரியாக உளறுதல்

sayal


 


கிபி எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த சீனக்கவிஞர் பை ஜீயி  1986 வாக்கில் சுந்தர ராமசாமியால் மொழியாக்கம் செய்யப்பட்டு காலச்சுவடு மும்மாத இதழில் அறிமுகம் செய்யப்பட்டதனூடாக தமிழ் வாசகர்கள் நடுவே பரவலானார். சுந்தர ராமசாமி ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தான் அக்கவிதைகளை தமிழாக்கம் செய்தார். அன்று மிக இறுக்கமான மொழியும் படிமச்செறிவும் கொண்ட கவிதைகளே தமிழில் எழுதப்பட்டன. சோர்வுநிறைந்த இருண்மைமண்டிய கவிதைகள். பெரும்பாலும் பெருமூச்சுநிறைந்த டைரிக்குறிப்புகள். விதிவிலக்கு பிரமிள் தேவதேவன் போல சிலர்.


 


சுந்தர ராமசாமி பை ஜூயியின் கவிதைகளை அவற்றின் எளிமைக்காகவே மொழியாக்கம் செய்தார். அவற்றில் என்னதான் கவிதை இருக்கிறது என்று சாதாரண வாசகன் கேட்பான். அவை பெரும்பாலும் நேரடியான வாழ்க்கைக்குறிப்புக்கள். அவற்றின் நேரடித்தன்மையே கவிதை என்று அதற்குப்பதில் சொல்லப்பட்டது. ‘ஒன்றுமில்லை, சும்மா சொல்லிக்கிட்டேன்’ எனும் பாவனை. உட்பொருள் தேடுபவர்கள் ஏமாந்துபோகக்கூடும். ஆனால் எளிமையாக வாசிப்பவர்கள் அவற்றை நெடுங்காலம் நினைவில் வைத்திருப்பார்கள். ஏன் நினைவில் நிற்கின்றன அவை என்று பார்க்கும்போது அவற்றின் கவித்துவத்தை உணர்வார்கள்


 


இணையத்தில் சில பை ஜூயி கவிதைகளின் மொழியாக்கத்தை வாசித்தேன்.


 


இரவு முழுதும் உட்கார்ந்திருந்தது


 


 


ஒரு முழு நாளும்


என் வீட்டு வழிநடையில்


இருட்டும் வரையில்


காத்து நின்றிருந்தேன்;


பின் இரவு முழுவதும்


என்னறையில்


விடியும்வரை


உட்கார்ந்திருந்தேன்;


நான் எதுவும் சொல்லாமல்


இதற்கான காரணத்தை


நீ அறிய முடியாது.


இவை அனைத்தையும்


கவனித்திருந்தால்


நீ கேட்டிருக்கக்கூடும்


இரண்டு அல்லது மூன்று


பெருமூச்சுக்களை.


[தமிழாக்கம் சுந்தர்ஜி பிரகாஷ்]


 


விக்ரமாதித்யனின் சமீபத்தைய கவிதைத்தொகுதியை வாசித்தபோது பை ஜூயியின் எளிமை என்று ஒர் எண்ணம் நெஞ்சில் ஓடியது. இத்தகைய கவிதைகளை கண்ணுக்குத்தெரியாத இலக்கு நோக்கி மொழியை எறிதல் என்றுதான் சொல்லவேண்டும். நாலிலே ஒன்றிரண்டு சென்று படுகின்றன, அவை கவிதைகளாகின்றன. எஞ்சியவை வரிகளாக மிஞ்சுகின்றன. பை ஜூயியும் அவ்வாறுதான் எழுதியிருப்பார்


 


கவிமனசு


 


சூரியரே சந்திரரே


சொல்லுங்கள்


நட்சத்திரங்களே


நட்சத்திர நாயகர்களே கூறுங்கள்


 


இபப்டியே


எத்தனை காலம்


 


கடலலைகளும்


சாந்தம் கொள்கின்றன


 


வேட்டைக்காரன் கூட


ஓய்வெடுக்கிறான்


 


கவிமனசு


காற்றில் செய்ததா?


 


என்னும் கவிதை  விக்கியண்ணாச்சியின் வாழ்க்கையை நன்கறிந்தவர்களுக்கு அளிக்கும் உள எழுச்சி  இவற்றை கவிதையாக்குகிறது. ஆனால் இவ்வரிகளை மட்டுமே நினைவிலிருந்து எடுக்கையில் காற்றில் அலைந்த தாசித்தெருக் கம்பனும்,  கஞ்சா பாரதியும் வழியாக நினைவிலெழும் ஒரு முகமிலாக் கவிஞன் இவற்றை மேலும் கவிக்கனம் கொண்ட வரிகளாக்குகிறான்


 


இனம்புரியாத வலிகளாலான கவிதைகள். அவற்றை விளக்காமல் விரிக்காமல் ஏன் சொல்லாமல் பதிவுசெய்ய முயல்கிறார் என்று தோன்றுகிறது


 


என்ன பாடு படுத்துகிறது


 


பக்கத்துப் படுக்கை


காலியாகக் கிடந்தது


என்ன செய்தோம்?


 


பக்கத்துப்படுக்கை


காலியாகக் கிடக்கிறது


என்ன செய்வோம்


 


பக்கத்துப் படுக்கை


காலியாகவே கிடக்கும்


என்ன செய்ய?


 


என்ன பாடு படுத்துகிறது


இந்த பக்கத்துப் படுக்கை


 


விக்கியண்ணாச்சியின் கவிதைகளில் இரு வகை குரல்கள் உண்டு. ஒன்று புலம்பல் என்று சொல்லத்தக்க ஒரு வகை தன்னிரக்க விளக்கம். புலம்பல் என்பது தமிழ் கவிதையின் ஒரு வகை. பத்ரகிரியார் புலம்பல் நம் மரபின் பெருங்கவிதைகளில் ஒன்று. திருவிக கூட முதுமை உளறல் என அதேவகைச் செய்யுள் ஒன்றை அமைத்திருக்கிறார். இது முதல்வகை


 


இன்னொரு வகை அவருடைய பிரகடனங்கள். அவைதான் எப்போதும் ஒரு படிமேலான கவிதைகள். இயல்பாக அவற்றில் ஒரு நக்கலோ சொல்விளையாட்டோ அமைகையில் அவை ஒருவகை ஞானக்கிறுக்குத்தன்மையை அடைகின்றன. இக்கவிதையில் இருப்பு என்னும் சொல் அமைந்துவருவதைப்போல.


 


இப்படி இருக்கிறது


 


தென்காசியிலேயே


இருக்கப்படாது


தமிழ்நாட்டிலேயே


இருக்கப்படாது


இந்தியாவிலேயே


இருக்கப்படாது


இப்படி இருக்கிறது


இருப்பு


 


 


என்னும் வரிகளில் மிகச்சாதாரணமான ஒரு புன்னகை இருக்கிறது. ஆனால் எங்கோ இதை உறுதியாக நீங்கள் திருப்பிச் சொல்லப்போகிறீர்கள். எப்படியோ இது இந்தக்காலகட்டத்தின் வரியாக நீடிக்கப்போகிறது. மெல்லமெல்ல நகர்த்தி நகர்த்திக்கொண்டுவந்து நம் சமகாலப் பொது உணர்வுகளின் அருகே தன் சொல்லாட்சியை கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் விக்கியண்ணாச்சி.


 


விக்கி அண்ணாச்சி உளறுகிறார் என்பதே சரியானது. மிகச்சரியாக அது  அமைந்துவிடுவதற்குப்பின்னால் இருப்பது அவருடைய மொழியறிவு, நாற்பதாண்டுக்காலம் கவிதையன்றி பிறிதிலாது அவர் வாழ்ந்த வாழ்க்கை, அந்த அர்ப்பணிப்புக்கு பரிசாக  அந்த தேவி அளித்த இருள்வெளித்திரிதல்


*


சாயல் எனப்படுவது யாதெனின்


வெளியீடு

படிகம்

நவீன கவிதைக்கான இதழ்

4 – 184 தெற்குத் தெரு ,

மாடத்தட்டுவிளை ,வில்லுக்குறி – 629 180


தொடர்பு எண் – 98408 48681


 


இலக்கியமும் சமகாலமும்


 


தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்


ஒருநாளின் கவிதை


விக்ரமாதித்யனுக்குச் சாரல் விருது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2017 10:38

மின்நெடுஞ்சாலையில் புத்தர்

wed


 


அன்புள்ள ஜெ


 


நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள் என்ற நூலின் பிடிஎஃப் வடிவை இணையத்தில் பார்த்தேன். அதை வலைனேற்றம் செய்தது நீங்களா? [முக்கியமான நூல். ஒரே மணிநேரத்தில் வாசித்தேன். பல வரிகள் மனதிலேயே வாழ்கின்றன]


 


சுந்தர்


 


 


அன்புள்ள சுந்தர்,


 


நான் வலையேற்றம் செய்யவில்லை. அந்நூல் வெளிவந்து பலகாலமாகிறது. கவிதைகள் உடனுக்குடன் மறுபதிப்பு வருவதில்லை. நான் மலையாளக்கவிதைகளின் 3 தொகுதிகள் வெளியுட்டுள்ளேன். தற்கால மலையாளக் கவிதைகள், இன்றைய மலையாளக்கவிதைகள், நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள். அவை எவையும் அச்சில் இல்லை.


 


அச்சில் இல்லாத நூல் இணையத்தில் கிடைப்பது நல்லதுதான். அதில் ஆர்வமுள்ள சிலராவது வாசிக்கலாமே. என் கோரிக்கைப்படிதான் நீலகண்டபறவையைத்தேடி, அக்னிநதி போன்ற அச்சில் கிடைக்காதிருந்த அரிய நூல்கள் நண்பர்களால் பிடிஎஃப் வடிவில் வலையேற்றம் செய்யப்பட்டன.


 


ஆனால் அச்சில்கிடைக்கும் நூல்களை அனுமதியில்லாமல் வலையேற்றம் செய்வது குற்றம். அது ஏற்கனவே நலிந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பதிப்பியக்கத்தை அழிக்கும் செயல். அதிலுள்ளது இலக்கியத்திற்கு எதிரான ஒரு பாமர வன்மம். அதை நுண்ணுணர்வுள்ளோர் ஆதரிக்கக்கூடாது


 


என் நூல்கள் பெரும்பாலானவை மின்னூல்களாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. விலை மிகக்குறைவு. எளிதில் வசதியாக வாசிக்கலாம். பிடிஎஃப் வடிவின் சிக்கல்களும் இல்லை


 


ஜெ


 


நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2017 10:32

சின்னஞ்சிறு அதிசயம்!

rahman_2633264f


 


மணி படம். அஜி வேலைபார்த்த படம். ஆகவே நான் ஓக்கே கண்மணியை மூன்று முறை பார்த்தேன். பாடல்களை பலமுறை கேட்டேன். ஆனால் இன்றுகாலை என்னை இந்தப்பாடல் ஒருமாதிரி ஆட்கொண்டுவிட்டது. என்ன ஒரு மகத்தான பாடல். எத்தனை உள்மடிப்புகள். எத்தனை எதிர்பாராத நுட்பங்கள். அலையலையென விரிகிறது. சென்ற பல ஆண்டுகளில் இதற்கிணையான ஒரு பாடலைக் கேட்டதில்லை. ஒரு சினிமா வந்துபோகும். அதில் இடம்பெறும் ஒரு பாடலில் இத்தனைபெரும் தவத்தை அமைக்க தன் கலையன்றி பிறிதறியாத பெருங்கலைஞனால் மட்டுமே முடியும். ஏ.ஆர்.ஆருக்கு உடனே ஒரு மின்னஞ்சல் போட்டேன். நூறுமுறை கேட்டிருப்பேனா?


 


பெரும்பாலான தமிழ்ப்பாடல்களில் எனக்குப்பிரச்சினையே அபத்தமான பலசமயம் ஆபாசமான அதைவிட மோசமாக ஒலியுறுத்தல் மிக்க பாடல்வரிகள்தான். இந்தப்பாடல்வரிகளில் உள்ள அர்த்தமும் அதைவிட இனிய அர்த்தமின்மையும் கவிஞனின் இருப்பை காட்டுபவை. தமிழில் வந்த அரிய பாடல்களில் ஒன்று இது


 


நானே வருகிறேன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19

19. மண்ணுறு அமுது


ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே அவள் அங்கில்லாமை மேலும் துலக்குற்றது. அவள் இடத்தில் ரம்பையோ திலோத்தமையோ நின்று நிகழ்த்தப்பட்ட ஆடல்கள் அனைத்திலும் அவள் எழுந்து வந்து மறைந்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் அவளைப்பற்றி பேசிக்கொண்டு கலைந்து சென்றனர் முனிவரும் தேவர்களும். அப்பேச்சை எடுக்கவேண்டாமென இந்திரனின் ஆணை எழுந்தபிறகு அவளைப்பற்றி எண்ணியபடி கலைந்து சென்றனர்.


“அவை நடனங்கள் உயிரிழந்துள்ளன, அரசே. கலை முழுமை கொள்வதில்லை. ஆனால் நிகழ்கையில் இதோ முழுமை என முகம் காட்டியாகவேண்டும். இங்கு ஆடலனைத்தும் அவள் இன்மையையே காட்டி எழில் சிதைந்துள்ளன” என்றார் அவையில் எழுந்த தும்புரு முனிவர். “சொல்க, ஊர்வசி எப்போது மீள்வாள்?” என்றார் சௌரவ முனிவர். அவையே அவ்வினாவுடன் இந்திரனை நோக்க அவன் தத்தளித்த விழிகளுடன் நாரதரை நோக்கினான். “மானுடக் காதலின் எல்லை என்ன என்றுணர்ந்து தன் எல்லையின்மையை கண்டடையும் வரை அவள் அங்கிருப்பாள்” என்றார் நாரதர். “அதற்கு எத்தனை காலமாகும்?” என்றான் விஸ்வவசு என்னும் தேவன். “அது அவள் ஆழத்தையும் நுண்மையையும் பொறுத்தது” என்று நாரதர் மறுமொழி சொன்னார்.


அன்று அவை நீங்குகையில் இந்திரன் நாரதரிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் “இசை முனிவரே! மெய்மையை அறிய அவள் விழையவில்லை என்றால் என்ன செய்வது?” நாரதர் திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி “ஏன்?” என்றார். “அவள் தன் அறிவை ஒத்தி வைத்திருந்தால்…?” என்று மீண்டும் இந்திரன் சொன்னான். “அறிவை விழையாத எவரேனும் உளரா? அதைத் தடுக்க எவருக்காயினும் இயலுமா?” என்றார் நாரதர். இந்திரன் புன்னகைத்து “நீங்கள் காமத்தையும் காதலையும் அறிந்ததில்லை, முனிவரே” என்றபின் அகன்று சென்றான்.


அன்றே விஸ்வவசுவையும் ஏழு கந்தர்வர்களையும் அழைத்து “நீங்கள் குருநாட்டுக்கு செல்லுங்கள். புரூரவஸின் அரண்மனையில் எப்போதும் இருந்துகொண்டிருங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்பதை எனக்கு அறிவியுங்கள்” என்றான். ஒரு கருவண்டென யாழிசை மீட்டியபடி விஸ்வவசு எழுந்தான். உடன் சிறுபொன்வண்டுகளென கந்தர்வர்கள் சென்றனர். அவர்கள் சியாமைக்காக புரூரவஸ் அமைத்த சந்தனமரத்தாலான தூண்கள் கொண்ட அணிமண்டபத்தில் உத்தரங்களைத் துளையிட்டு உள்ளே புகுந்து அமைந்தனர். அங்கு இருந்தபடி நிகழ்வதனைத்தையும் நோக்கினர். சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் கேட்டு உணர்ந்தனர்.


சியாமை காதலில் ஏழு மைந்தரின் அன்னையென ஆகி கனிந்துவிட்டிருந்தாள். தன் மைந்தரினூடாக கணவனை ஏழு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அவன் கொண்ட அறத்தூய்மை ஜாதவேதஸில் வெளிப்பட்டது. அவன் உடலழகை கொண்டிருந்தான் ஆயுஸ். அவன் கூர்மொழியென ஒலித்தான் ஸ்ருதாயுஸ். சத்யாயுஸ் அவன் நடையை தான் கொண்டிருந்தான். ரயனும் விஜயனும் அவன் சிரிப்பின் அழியா இளமையை வெளிப்படுத்தினர். ஜயன் அவளுக்கு மட்டுமே அறிந்த அவன் நோக்கொன்றை எப்போதேனும் தன் இளவிழிகளில் மின்னச் செய்தான். ஒவ்வொன்றிலும் புதியதொரு புரூரவஸை கண்டடைந்தாள். அக்கண்டடைதலினூடாக தன் கணவனை ஒவ்வொரு நாளும் புதியவனாக மீண்டும் மீண்டும் அடைந்து கொண்டிருந்தாள்.


செவிலியின் கை உதறி ஓடிய ஜயனை துரத்திப்பிடித்து இரு குட்டிக்கைகளையும் பற்றி இழுத்துச்சென்று தானே வெந்நீர் தொட்டிக்குள் ஏற்றி அமரச்செய்து சிகைக்காய் பசை இட்டு குழல் அலம்பியபின் நெஞ்சோடு சேர்த்து மரவுரியால் தலைதுவட்டிக்கொண்டிருக்கும் ஊர்வசியை விஸ்வவசு பார்த்தான். அப்பால் முற்றத்தில் ஓசையெழக்கேட்டு அவனைத் தூக்கி இடையில் வைத்தபடி “என்ன அங்கே ஓசை?” என்று கூவிக்கொண்டு அவள் வெளியே சென்றாள். மைந்தனின் எடையால் மெல்ல தள்ளாடினாள். அங்கு பூசலிட்டு ஆடிக்கொண்டிருந்த ரயனையும் விஜயனையும் தாழ்ந்த மரக்கிளையொன்றை ஒடித்து தளிருடனும் மலருடனும் வீசியபடி துரத்தினாள்.


தேன்கூடொன்றைப் பிய்த்து மாறி மாறி வீசி விளையாடிக் கொண்டிருந்த இருவரும் துள்ளிக் குதித்து அவளுக்கு வாய் வலித்துக்காட்டிச் சிரித்தபடி ஓடி அகன்றனர். பொய்யாக அவர்களை வசைபாடியபடி மூச்சிரைக்க படியேறி வந்தாள். இடையில் இருந்த ஜயன் இரு விரல்களை வாயிலிட்டு அவள் தோளில் தலைசரித்து விழிகள் மேலெழுந்து செருக துயிலத் தொடங்கியிருந்தான். எச்சில்குழாய் அவள் ஆடைமேல் படிந்தது. மெல்ல அவனை கொண்டுசென்று சிற்றறைக்குள் வெண்ணிற விரிப்பிட்ட படுக்கையில் சாய்த்தாள்.


சேடி வந்து ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் ஆசிரியர் இல்லத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை சொன்னாள். “எப்போது? வந்துவிட்டார்களா?” என ஆடை திருத்தாமல் அவள் எழ “தாங்கள் முறைப்படி ஆடை அணியவில்லை, அரசி” என்றாள் சேடி. ‘விடு’ என கையை அசைத்தபடி அவள் உடல் குலுங்க விரைந்து நடந்துசென்று படிகளிறங்கி பெருங்கூடத்திற்குள் புகுந்தாள். அரண்மனை முற்றத்தில் குளம்படிகள் ஒலிக்க இரு சிறுபுரவிகளில் வந்து இறங்கிய ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் அவளை நோக்கி சிரித்தபடி ஓடிவந்து இருகைகளையும் பற்றிக்கொண்டனர்.


“இப்புரவிகளில் அங்கிருந்து நாங்களே வந்தோம்” என்று சொன்னான் ஸ்ருதாயுஸ். “நான் ஒருமுறை கூட நிலைபிறழவில்லை” என்றான் சத்யாயுஸ். இருவர் தலைகளையும் கையால் வருடி “ஆம் நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் ஸ்ருதாயுஸ். “உங்கள் தந்தையும் ஒருபோதும் புரவியில் நிலை தடுமாறியதில்லை என்று அறிந்திருக்கிறேன்” என்றாள் அவள். “இன்னும் சிலநாட்களில் நான் மலைமேலிருந்து பாய்ந்திறங்குவேன்” என்றான் ஸ்ருதாயுஸ். அவன் பேசவிடாமல் மறித்து கைவீசி “எங்கள் ஆசிரியர் பலதேவர் குதிரையில் அமர்ந்து விரைந்தபடியே தரையில் கிடக்கும் குறுவாளை எடுக்கிறார்…” என்றான் சத்யாயுஸ். “நான் எடுப்பேன்… நான் அடுத்த மாதம் எடுப்பேன்” என்று மற்றவன் இடைமறித்தான்.


அரசவைக் களத்தில் இருந்து புரூரவஸ் முதல் மைந்தன் ஆயுஸுடன் பேசியபடி நடந்துவந்தான். தந்தையின் முகத்திலிருந்த எண்ணச்சுமையையும் கையசைவுகளையும் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துவந்த மைந்தனின் விழிக்கூரையும் தொலைவிலிருந்தே நோக்கிநின்றாள். அருகே வந்த புரூரவஸ் “நாளை முதல் இவனுக்கு தென்மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். உகந்த ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார்” என்றான். அவள் ஆயுஸைப் பார்த்து புன்னகைக்க அவன் இளையோர்களை நோக்கி “இவர்கள் எப்போது வந்தார்கள்?” என்றான். “புரவியில் நாங்களே வந்தோம்” என்றான் ஸ்ருதாயுஸ். “நிலைபிறழவே இல்லை… விரைந்து வந்தோம்” என்றான் சத்யாயுஸ்.


ஆயுஸ் அன்னையை நோக்கி புன்னகைத்தான். குழந்தை நகை அல்ல, முதியவனின் குழந்தை நகைப்பென தோன்றியது அவளுக்கு. இரு கை நீட்டி அவனை அள்ளி நெஞ்சோடணைக்க உளம் எழுந்தாலும் அது இனி முறையன்று என்று அறிந்தவளாக “முழுப்பொழுதும் அவையமர வேண்டுமா? இளமைந்தர் சற்று விளையாடுவதும் வேண்டாமா?” என்று அவனிடம் கேட்டாள். “முற்றிலும் கேட்காமல் எதையும் அறிய முடியாது, அன்னையே” என்றான் ஆயுஸ். “அறிய அறிய அதைவிட்டு அகலமுடியாது. அரசனின் அவை என்பது வாழ்க்கையின் மையம் நடிக்கப்படும் நாடகமேடை.”


மறுபக்கம் உள்ளறை வாயிலில் வந்து நின்ற முதுசெவிலி “மைந்தர் உணவருந்தும் பொழுது” என்று மெல்ல சொன்னாள். “நன்று, நானே விளம்புகிறேன்” என்றபின் “வருக இளவரசே, உணவருந்திவிட்டுச் செல்லலாம்” என முறைப்படி தன் முதல் மைந்தனை அழைத்தாள். இளையவர்கள் “நாங்கள் உணவருந்தவில்லை… இப்போது உணவருந்தவே வந்தோம்” என்று கூவினர். புரூரவஸ் தன் எண்ணங்களிலாழ்ந்தவனாக மெல்ல திரும்ப “எங்கு செல்கிறீர்கள்? மைந்தருடன் அமர்ந்து இன்று உணவருந்துங்கள்” என்றாள். “எனக்காக அங்கே குடித்தலைவர் காத்திருக்கிறார்” என்று புரூரவஸ் சொல்ல, இயல்பாக விழிதிருப்பி அவள் இரு மைந்தரையும் பார்த்தாள். ரயனும் விஜயனும் பாய்ந்து சென்று புரூரவஸின் இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். “வாருங்கள் தந்தையே, எங்களுடன் உணவருந்துங்கள்” என்று துள்ளினர். “சரி சரி, கூச்சலிடவேண்டாம். வருகிறேன்” என்றான் புரூரவஸ்.


இரு கைகளையும் பற்றி அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். புன்னகையுடன் அன்னையைப் பார்த்த ஆயுஸ் “உங்கள் தலைமைந்தன் குறைகிறான் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அவன் வேதம் பயில்கிறான். இல்லறத்தாருடன் அமர்ந்துண்ண வேதக்கல்வியின் நெறி ஒப்புவதில்லை. இங்கு நாமனைவரும் கூடியிருக்கையில் நமக்கு மேலிருந்து நம்மை வாழ்த்தும் பீடத்தில் அவன் அமர்ந்திருக்கிறான். அது எனக்குப் போதும்” என்று அவள் சொன்னாள்.


ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் கைகளை பற்றிக்கொண்டு ஒருவரோடொருவர் ஊக்கத்துடனும் சொற்திணறலுடனும் கைவீச்சுகளுடன் ஏதோ பேசியபடி முன்னால் சென்றனர். உணவறைக்கூடத்தில் கால்குறுகிய நீள்பீடத்தில் அவர்களுக்காக இலைத்தாலங்கள் போடப்பட்டிருந்தன. கிழக்கு நோக்கி புரூரவஸ் அமர்ந்ததும் அவனுக்கு இருபுறமும் ரயனும் விஜயனும் அமர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இடைமறித்து குரல் எழுப்பியும், மீறிச்சொல்லத் துடித்து மெல்ல தோள்பிடித்து தள்ளியும், கழுத்தில் நீலநரம்புகள் புடைக்க உடல் துடிக்க பேசிக்கொண்டு வந்த ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் உணவறை வாயிலிலேயே நின்று சொல்தொடர புரூரவஸ் “போதும் பேச்சு, வந்தமருங்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்.


அவர்கள் பாய்ந்து வந்தமர சியாமை “என்ன இது? முடி அள்ளித்திருத்துங்கள். முறைமை மறந்துவிட்டீர்களா?” என்றாள். ஆயுஸ் “அங்கு ஆசிரியர் இல்லத்தில் அனைத்துக்கும் முறை உண்டு. அதை மீறி தாங்களென்றிருக்கவே இங்கு வருகிறார்கள், அன்னையே” என்றான். சியாமை புன்னகைத்து “நீ கொடுக்குமிடம் அவர்களை வீணர்களாகிய இளவரசர்களாக ஆக்காமல் இருந்தால் போதும்” என்றாள். “அவர்கள் சந்திரகுலத்து இளவரசர்கள். ஒவ்வொருவருக்கும் தனிநாடும் குடியும் கொடிவழியும் அமையுமென்பது நிமித்திகர் கூற்று” என்றான் புரூரவஸ்.


முடியள்ளி தோல்நாரிட்டுக் கட்டியபடி ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் பீடங்களில் அமர்ந்து உடனே விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினர். ஆயுஸ் கண்களில் சிரிப்புடன் சியாமையைப் பார்த்து “இனி சில நாட்களுக்கு புரவிகளன்றி வேறேதும் அவர்கள் உள்ளத்தில் இருக்காது, அன்னையே” என்றான். புரூரவஸ் நகைத்து “ஆம், அதன் பின்னர் புரவிகள் முற்றிலுமாக சித்தத்திலிருந்து மறைந்து போகும். கால்களென்றே ஆகும். எண்ணுவதை இயற்றும். அப்போது மட்டுமே ஒருவன் புரவியேற்றம் கற்றுமுடித்தான் என்று பொருள்” என்றான்.


சேடியர் உணவுக்கலங்களுடன் வந்தனர். “இருவர் குறைகிறார்கள்” என்று இரு விரலைக்காட்டி ரயன் சொன்னான். விஜயன் “ஆம், இருவர்” என்றான். சியாமை திரும்பி சேடியிடம் “குழந்தையை எடுத்துக்கொண்டு வா” என்றாள். புரூரவஸ் “அவன் எதற்கு? துயின்றுகொண்டிருக்கும் நேரம்” என்றான். “இல்லை, அரிதாக அமையும் ஒரு நேரம். அது முழுமையடையட்டும்” என்றாள். “உனக்கு சித்தம் குழம்பிவிட்டது போலும்” என்று புரூரவஸ் சொன்னான். சியாமை புன்னகைத்தாள்.


செவிலி துயின்று கடைவாய் வழிந்த ஜயனை தோளில் தூக்கிக்கொண்டு வந்தாள். “நீயும் அமர்ந்துகொள்” என்றான் புரூரவஸ். அவனுக்கு எதிர்ப்பக்கம் முகம் நோக்கியபடி சியாமை அமர்ந்தாள். செவிலி ஜயனை அவள் மடியில் அமர்த்தினாள். உணவுக்கலங்கள் நிரந்ததும் “இன்னும் ஒருவர்” என்றான் ரயன். “அவன் இங்கில்லை. அவனுக்கு இனி பதினெட்டாண்டுகள் அன்னையும் தந்தையும் மூதாதையரும் தெய்வமும் ஆசிரியர் ஒருவரே. அனைத்தையும் அளித்தாலன்றி வேதம் ஒரு சொல்லையும் அளிப்பதில்லை” என்றான் புரூரவஸ்.


“நாங்கள் கற்பதும் வேதம்தான் என்றாரே?” என்றான் சத்யாயுஸ். “வேதங்கள் பல. நீ கற்கும் தனுர்வேதம் அதிலொன்று. அவை எல்லாம் வேதமெனும் கதிரவனின் ஒளிகொள்ளும் ஆடிகளும் சுனைநீர்ப்பரப்புகளும் மட்டுமே” என்று புரூரவஸ் சொன்னான். “அறுவர் நீங்கள். ஆறு கலைகளுக்கும் தலைவராக அமையப்போகிறவர்கள். புவியாள்வீர்கள், படைகொண்டு வெல்வீர்கள், அறம் நாட்டுவீர்கள். அவற்றினூடாக பெரும்புகழ் கொள்வீர்கள். அவையனைத்தும் பிழையற நிகழ வேண்டுமென்றால் அங்கே அடர்காட்டில் எவர் விழியும் தொடாத ஆற்றங்கரையொன்றில் எளிய குடிலில் அவன் வேதமொன்றே சித்தம் என்று தவம் இயற்றியாக வேண்டும்.”


புரூரவஸின் முகத்தில் எழுந்த உணர்வெழுச்சியைக் கண்டு சிறுவர்கள் முகம் கூர்த்து அவனை நோக்கினர். அத்தனை விழிகளிலும் இளமையின் நகைப்பு சற்றே மறைந்ததைக் கண்டு அவள் “போதும், இது அரசுசூழ்தலுக்கான மேடையல்ல. உணவு அருந்துவதற்கானது” என்றாள். தன்னருகே இடப்பட்ட இலைத்தாலமொன்றில் ஒரு கரண்டி அன்னத்தையும் நெய்யையும் பழங்களையும் தேன்கலந்த இனிப்பையும் அள்ளி வைத்தாள். சிறுகிண்ணத்தில் நுரைத்த மதுவை ஊற்றி அருகே வைத்தாள். ரயன் “அது அவனுக்கா?” என்று கை சுட்டி கேட்டான். அப்படி கேட்கலாகாதென்று புரூரவஸ் விழியசைத்து தடுப்பதற்குள் விஜயன் “அவன் அங்கு அதையெல்லாம் உண்ணலாகாதே?” என்றான். “ஆம், ஆகவேதான் இங்கு அவை பரிமாறப்படுகின்றன” என்றபின் சியாமை “உணவருந்துங்கள்” என்று கூற செவிலியர் இன்மதுவும் உணவும் அவர்களுக்கு பரிமாறினர். பேசிச் சிரித்தபடி நடுவே சிறுபூசலிட்டுக் கூச்சலிட்டபடி அவர்கள் உண்ணலாயினர்.


imagesவிஸ்வவசுவும் தோழர்களும் குருநகரிலிருந்து கிளம்பி அமராவதியை அடைந்து இந்திரனின் அரண்மனைக்குள் புகுந்து அவன் மஞ்சத்தறையில் சென்று சந்தித்தனர். நிகழ்ந்ததைக் கூறி “ஊர்வசி ஒருபோதும் மீளப்போவதில்லை, அரசே” என்றனர். விழிசுருக்கி எழுந்த இந்திரன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அன்னையென கனிந்திருக்கிறாள். மூதன்னை என முழுமைகொள்ளும் பாதையிலிருக்கிறாள். அவ்வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் அவள் மீளமாட்டாள்” என்றான் விஸ்வவசு.


“என்னால் புரிந்துகொள்ளக் கூடவில்லை. இங்கு அவள் முழுமையிலிருந்தாள், மெய்மையிலாடினாள், முடிவின்மையில் திளைத்தாள். அங்கிருப்பதோ துளித்துச் சொட்டும் கணமென சிறுவாழ்வு. தேவர்கள் உண்டு எஞ்சிய மிச்சில். அசுரர்களின் கால்பொடி படிந்த குப்பை. அதிலெப்படி அவள் அமைய முடியும்?” என்றான் இந்திரன். விஸ்வவசு “அதை புரிந்துகொள்ளவே இத்தனை நாள் நானும் அங்கு இருந்தேன். இங்கிலாத பேருவகை ஒன்று அங்குள்ளது, அரசே. வாழும் அக்கணம் மீளாதென்று, பிறிதொருமுறை எதுவும் அமையாதென்று ஒவ்வொரு மானுடரும் உள்ளுணர்ந்திருக்கிறார்கள். எனவே அக்கணங்களில் பொங்கி முற்றிலும் நிறைகிறார்கள்” என்றான்.


புரியாமல் நோக்கி அமர்ந்திருந்த இந்திரனின் விழிகளை நோக்கி “அதைவிட இனிது சென்றவை நினைவில் மீளும் துயரம். மானுடர் ஒவ்வொருவருக்கும் சென்றகாலம் எனும் பெருஞ்செல்வம் கருவூலம் நிறைய உள்ளது. அரசே, அறியாத ஆயிரம் பண்கள் நிறைந்த ஒரு பேரியாழ் அது. இங்கு தேவர்களுக்கு அதில்லை” என்றான் உடன் சென்ற சந்திரஹாசன் என்னும் கந்தர்வன்.


பிரபாஹாசன் என்னும் பிறிதொரு கந்தர்வன் அருகில் வந்து “அதைவிடவும் இனிது எதிர்காலம் முற்றிலும் அறியவொண்ணாதது என்பது. ஒவ்வொரு படியாக கால் வைத்தேறி முடிவிலா விண்ணுக்குச் செல்வதுபோல. கண்ணுக்குத் தெரியாத மறுதரப்புடன் காய் நீக்கி பகடையாடுவதுபோல. மானுடர் கொள்ளும் இன்பங்களில் முதன்மையானது நாளை நாளை என அவர்கள் மீட்டும் பெருங்கனவு. ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டு முற்றங்கள் வரப்போகும் விருந்தினருக்காக பதுங்கிய முயலின் தோலென விதிர்த்து நிற்கின்றன. அவர்கள் இல்லக்கதவு புன்னகைக்கும் வாயென திறந்திருக்கிறது. அவர்களின் அடுமனைகளில் அனல்நீர் காத்து அன்னம் தவமிருக்கிறது” என்றான்.


சூரியஹாசன் என்னும் கந்தர்வன் “நேற்றுக்கும் இன்றுக்கும் நடுவே கணமும் அமையாத துலாமுள்ளென அவர்கள் நின்றாடும் பேரின்பத்தைக் கண்டு நானே சற்று பொறாமை கொண்டேன், அரசே” என்றான். ஜ்வாலாக்‌ஷன் என்னும் கந்தர்வன் “முதன்மையாக அறிதல் என்னும் பேரின்பம் அவர்களுக்குள்ளது. முற்றறிதலுக்குப் பின் அறிதல் என்னும் செயல் நிகழ்வதில்லை. இங்கு என்றும் இருக்கும் பெருமலைகளைப்போல் மெய்மை நிறைந்துள்ளது. அதில் திகழ்வதனாலேயே இங்கு எவரும் அதை அறிவதில்லை. அங்கோ ஒரு சிறுகூழாங்கல்லென கண்முன் வந்து நிற்கிறது மெய்மையின் துளி. சிற்றெறும்பென அதைக் கண்டு திகைத்து அணுகிக்கடந்து ஏறிக்கொள்ளும் உவகை அவர்களை ஆட்டிப்படைக்கிறது” என்றான்.


“ஆம் அரசே, அறிதலுக்கு நிகரான விடுதலை ஒன்றில்லை. அறியும்பொருட்டு அமர்வதே தவம். அங்கு எவ்வகையிலேனும் ஒரு தவத்தில் அமையாத ஒருவனை நான் கண்டதில்லை. உழுபவனும், வேல்தாங்கி எழுபவனும், துலாபற்றுபவனும், கன்று பெருக்கி காட்டில் வாழ்பவனும், மைந்தரை மார்போடணைத்து உணவூட்டும் அன்னையும், தவத்தில் உளம் கனியும் கணங்களை அறிந்திருக்கிறார்கள். மானுடராகச் சென்ற எவரும் மீள்வதில்லை” என்றான் சுவர்ணஜிஹ்வன் எனும் கந்தர்வன்.


சுஃப்ரஹாசன் என்னும் கந்தர்வன் சொன்னான் “அரசே, அறிந்த அனைத்தையும் சுருக்கி ஓர் அழகுப்படிமமென்று ஆக்க அவர்களால் முடிகிறது. விண்நிறைத்துப் பறந்திருக்கும் பறவைக்குலம் அனைத்தையும் ஒற்றை இறகென ஆக்குகிறார்கள். புவி மூடியிருக்கும் பசுமைக்கடலை ஒரு தளிரில் உணர்கிறார்கள். ஒற்றைச் சொல்லில் வேதமெழுகிறது. ஒரு சொல்லணியில் காவியம் விரிகிறது. கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன். மானுட உருக்கொண்டு சென்ற எவனும் மீள வழியே இல்லை.”


“அரசே, படிமங்களென குறுக்கி ஒளிமணி என்றாக்கி தங்கள் கருவூலங்களில் சேர்த்த பெருஞ்செல்வத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் உளச்சிற்றில்களில் அவர்கள் ஒளிச்சுடரென வைத்திருப்பது அவற்றையே. அவ்வொளியில் அனைத்தையும் கண்டு பெருக்கிக்கொண்டு அவர்கள் அமைத்துள்ள உலகு நாம் அறியாதது” என்றான் ரத்னஹாசன் என்னும் கந்தர்வன். “ஒரு மலரால், தளிரால் அவர்கள் தங்கள் மைந்தருடலை அறிகிறார்கள். தழல்நெளிவால், நீர்வளைவால் மலரையும் தளிரையும் அறிகிறார்கள். சினத்தால், நகைப்பால் எரியையும் நீரையும் அறிகிறார்கள். அவர்கள் முடிவிலியில் திளைக்கும் முடிவிலி என உள்ளம் கொண்டமைந்தவர்கள்.”


அவர்களின் விழிகொண்ட திளைப்பிலிருந்தும் சொல்கொண்ட விசையிலிருந்துமே அவர்கள் உணர்ந்தது மெய்மையென்று இந்திரன் அறிந்துகொண்டான். “என்ன செய்வதென்று அறியேன், அக்கனி பழுத்து உதிரக் காத்திருப்பது ஒன்றே வழியென்று என்னிடம் சொன்னார் நாரதர்” என்றான். “கனி உதிரலாகும் அரசே, அவளோ அங்கு ஆணிவேர் அல்லவா?” என்றான் விஸ்வவசு. சினந்து திரும்பி “எனில் அந்த மரம் கடைபுழங்கி நிலம்பதிக! வேருடன் பிடுங்கி இங்கு கொண்டு வாருங்கள்” என்றான் இந்திரன். அவர்கள் விழிகளில் துயருடன் நிற்க “என்ன செய்வீர்கள் என்று அறியேன். அக்கனவிலிருந்து உலுக்கி எழுப்புங்கள் அவளை. விழித்து விலகினால், விழிப்புற்றால் அவள் அறிவாள் என்னவென்றும் ஏதென்றும். அவள் இங்கு மீள அது ஒன்றே வழி. செல்க!” என்றான்.


ஒவ்வொருவராக தயங்கி சொல்லெடுக்க முனைந்து பின் அதை விலக்கி விழிகளால் ஒருவருடன் ஒருவர் உரையாடி வெளியே சென்றனர். கந்தர்வர்கள் விஸ்வவசுவைச் சூழ்ந்து “என்ன சொல்கிறார்? எண்ணிச் சொல்கிறாரா? அறிந்து அவள் மீளவேண்டுமென்பதல்லவா இசை முனிவரின் ஆணை? கனியாத காயை பால் சொட்ட முறித்து வீசுவதால் என்ன பயன்? இங்கு வந்து எண்ணி எண்ணி துயருற்றிருப்பாளென்றால் அவள் அங்கு சென்றதே வீணென்றாகுமல்லவா?” என்றார்கள். “நாம் அதை எண்ணும் கடமை கொண்டவர்களல்ல. ஆணைகளை நிறைவேற்றுபவர். அதை செய்வோம்” என்றபின் விஸ்வவசு மீண்டும் புரூரவஸின் அரண்மனைக்கே மீண்டான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2017 10:30

February 17, 2017

சுட்டிப்ப்ப்பெண்!

shalala

நண்பர் சுகாவிடம் நான் ஒருமுறை ஒரு தமிழ்ப்படம் பற்றிப்பேசினேன். “கதாநாயகி என்ன கேரக்டர்?” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்!” என்றார். எனக்கு மெல்லிய பரவசம் ஏற்பட்டது. ஆ, எத்தனை சுட்டிப்ப்ப்பெண்களால் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது தமிழ் சினிமா. அதில் ஹன்ஸிகா மொத்துவானி என்னும் பெண்மணி சுட்டிப்ப்ப்பெண் ஆகத் தோன்றினார். சுட்டிப்ப்ப்பெண்கள் பொதுவாக கன்றுக்குட்டி போல துள்ளிக்குதிக்கவேண்டும். அந்த அம்மாள் பசுபோல


“நீகேட்டால் நான் மாட்டென் என்றா சொல்வேன் கண்ணா” என்று ஸ்ரீப்ரியா சுட்டிப்ப்ப்பெண் ஆக வந்து நாக்கைச்சுழற்றியபடி ஆடியதைக் கண்டு மனமுருகி நான் கேசுமாமாவிடன் சொன்னபோது “என்ன மசுத்துக்கு இவளை ஸ்டைலுன்னு சொல்லுதே? ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா? இல்ல கண்டிட்டுண்டாலே?” என எகிறிவிட்டார். “அது ஆட்டம்… இப்பம் வாற குட்டிகளுக்கு ஒரு இது உண்டா? இல்ல கேக்கேன்”


“உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” என்று வைஜூ மேலே ஆம்புளைச்சட்டை போட்டுக்கொண்டு ஓர் ஆட்டம் ஆடியது. தாத்தாக்கள் ஈரக்கனிவு கொண்டார்கள். அக்காலத்தில் பாட்டிகள் ஜாக்கெட் அணிவதில்லை. ஆகவே முலைகள் மூடப்பட்டிருந்தால்தான் கவற்சி. முழுசாக மூடியிருந்தால் ஆபாசம்.“அவ ஆட்டத்த பாத்தபின்னால ஆம்புள பயக்க சட்டபோட்டத பாத்தாலே ஒரு எளக்கமுல்லா?”


அன்றுமுதல் வாழையடி வாழையாக வந்துகொண்டே இருக்கிறார்கள் சுட்டிப்ப்ப்பெண்கள். தலைமுறைகள் மாறிவிட்டன.  சுட்டிப்ப்ப்பெண்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வேறு எதைவேண்டுமானாலும் மாற்றலாம், கிராஸ்பெல்ட் போட்ட இன்ஸ்பெக்டரும், டபிள்பிரெஸ்ட் கோட் போட்ட கதாநாயகனும், அவ்வளவு ஏன் பட்டுகவுன் போட்டு பைப் பிடிக்கும் முதலாளியப்பாக்களும்கூட மாறிவிட்டார்கள். இதைமட்டும் மாற்றமுடியாது. தமிழ் சினிமா அழிந்துவிடும்.


சுட்டிப்ப்ப்பெண்களின் குணச்சித்திரம் நன்கு வரையறுக்கப்பட்டது. அவளுக்கு மூளை வளர்ச்சியில் சிக்கல். இன்றைய மருத்துவமொழியில் சொல்லப்போனால் ஆட்டிஸம். பொதுவாக ஹைப்பர் ஆக்டிவ் சிண்ட்ரோம்.ஆகவே சின்னப்பாப்பாக்களின் உடைகளைத்தான் போட்டுக்கொள்வாகள். ராத்திரி சின்னப்பாப்பாவாக படுத்து காலையில் ஆடைக்குள் பெரியபாப்பாவாக உப்பி வளர்ந்துவிட்டதுபோன்ற வெடிப்புறு தோற்றம். அசை,அடி,தொடை எல்லாமே தெரியும், இரட்டுறமொழிதலும் தெரிந்தாகவேண்டும். உள்ளுறை உவமம், இறைச்சி எல்லாம் தெரிவது பட பட்ஜெட்டைப்பொறுத்தது.


கட்டிக்கொடுத்தால் எட்டு பெற்றுத்தள்ளும் உடலிருந்தாலும் “ஆப்பா! நான் வெந்திட்டேன்!” என கத்தியபடி டென்னிஸ் பேட்டுடன் ஓடிவந்து வயோதிகரின் சோபா விளிம்பில்  தாவி அமரும். விழிகளை படபடவென அடித்துக்கொண்டு “அப்படித்தான் சொல்லுவேன்” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும். மழலை பேசுவதற்கென்றே ஒரு தனி முகவாய் ஆட்டம் உண்டு என்பதை தமிழ்சினிமா பிதாமகிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா லார்ஜ் பாண்ட் போட்ட சாவித்ரி பத்தாம்கிளாஸ் பாஸாகி வந்து எம்பிக்குதிப்பதைப் பார்த்த தலைமுறை நான். எனக்கும் அன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.


சுட்டிப்ப்ப்பெண்ளுக்கு பொதுவாக எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பானட்டை திறந்து சும்மா தொட்டாலே ஓடும்நிலையிலுள்ள கார் நின்றுவிட்டதே என்று நடுக்காட்டில் குட்டைப்பாவாடையுடன் நின்றிருக்கும். கதாநாயகனைப் பார்த்ததும் எகிறும். “என்னா மேன்?” என்றெல்லாம் அந்தக்காலத்திலே பேசியிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கரப்பாம்பூச்சியை அல்லது கற்பழிக்கவருபவனைப் பார்த்தால் கிரீச்சிட்டு பாய்ந்து கதாநாயகனை  கைகால்களால் கட்டிக்கொள்ளும். திருமணத்திற்குப்பின்னர்தான் அது உண்மையில் உறவுச்சம் என அவன் புரிந்துகொள்ளப்போகிறான், பாவம்.


’ஓப்பனிங்சாங்’ உண்டு. அதில் கன்றுக்குட்டிகளைத் துரத்தும். நாணல்புதர்கள் நடுவே படுத்துக்கிடந்து காலை ஆட்டும். வயல் வரப்பில் ஓடும். துள்ளிக்குதிக்கும். மின்மினிகளைத் துரத்தும். நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் என்று அடம்பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் நாளை ஒருவன் வீட்டில் போய் குப்பைகொட்டவேண்டிய மற்ற பெண்கள் செய்யாத எல்லாவற்றையும் செய்யும்.


முகத்தை கண்டபடி வலித்துக்கொள்ளும். ஆனால் கதாநாயகன் கழுத்துக்குக் கீழே கைவிடும்போது மட்டும் முகம் பொம்மை போல இருக்கும். எத்தனைவிதமான வலிப்புகள். சரோஜாதேவிக்கு இடப்பக்கமாகக் கோணும் வாய் என்றால் ஜோதிகாவுக்கு வலப்பக்கமாக. மொத்தமாக இழுபட்டு விரிந்தால் குஷ்பு. நடுவே பல்லில் இடைவெளி இருந்தால் தேவிகா.


சுட்டிப்ப்ப்பெண்களின் சிறப்பு என்னவென்றால் அதை அவர்களே சொல்லிக்கொள்வார்கள். ”ரெட்டைவால் வெண்ணிலா என்னைப்போல் சுட்டிப்பெண் இந்தப் பூமியில் யாருமில்ல” சுட்டிப்ப்ப்பெண்கள் தங்களைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ”என்னப்போல ராசாத்தி எவ இருக்கா சொல்லு?”


சுட்டிப்ப்ப்பெண்கள் வழக்கம்போல இருஇனம். நாட்டுவகைகள் செந்தூரப்பூவே என கண்ணைச்சிமிட்டும், தாவணிபோட்டு கரும்பு கடித்து துள்ளி அலையும். ஹைபிரீட் என்றால் ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” என்று துள்ளிக்கொண்டு அலையும். ஏழை எளியவர்களுடன் மழைநடனம் ஆடும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுவகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மெரினாவில் மெழுகுவத்திகளுடன் கூடவேண்டிய காலம் நெருங்கிவருகிறது


 http://www.nettv4u.com/entertainment/tamil/article/top-10-tamil-heroine-introduction-songs

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2017 10:34

கொஜ்ஜு

111


அன்பு ஜெயன்


 


நீங்கள் என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கள்.. இந்தப் பழம்பொரி மாணப் பெரிய அராஜகம் இல்லையோ. அதென்ன பழத்தை எடுத்து அப்படியே எண்ணெயில் பொறித்தெடுக்கிறது! :-) :-)


 


அன்புடன்


இரா முருகன்


 


அன்புள்ள முருகன்,


 


பழம்பொரியைப் பழித்தவரை பாட்டிதடுத்தாலும் விடேல் என ஒரு சொலவடை உண்டு


அவர்களுக்கு உடுப்பி பக்கம் இதேபோல இன்னொரு பலகாரம் உண்டு, அதைப் பரிந்துரைப்பேன். நல்ல தளிர்ச்சேம்பிலையை பறித்துக்கொள்ளவேண்டும். உளுந்து மாவை கெட்டியாகப் பசைபோல அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் உப்பும் கொஞ்சம் மஞ்சளும் வேண்டுமென்றால் குருமிளகும் தோதுபோல.


அந்த மாவை சேம்பிலையின் இருபக்கமும் மெல்ல பூசி பூப்போல சுருட்டி அப்படியே எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும். அதை நல்லெண்ணையில் குழப்பிய பச்சைமிளகாய் பசையில் தொட்டுக்கொண்டு பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா என கூவியபடி அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். இதற்கு முழுப்பெயர் அல்வா பண்ண கொஜ்ஜு. அல்வா பண்ண என்றுதான் பெயர், அதன் அன்னையான பத்ரோடு அதை கொஜ்ஜும்மா கொஜ்ஜுக்குட்டி என்று அழைக்க அப்படியே பெயர் நிலைத்துவிட்டது


பத்ரோடு என்பது வேறுவகை. கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்து பொரித்துச் சுருட்டப்பட்ட அதே சேம்பிலை. அந்தக்காலத்தில் உணவின்மீதான புலனடக்கத்தை பயிற்றுவிப்பதற்கு இதை உண்ணும்படி மத்வாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மாத்வ பட்டர்கள் இதை தின்று இதற்கே பழகி இப்படி ஆகிவிட்டிருக்கிறார்கள்.


குமரிமாவட்டத்தில் போற்றிகள் இதை குலவழக்கமாக உடுப்பியில் இருந்துகொண்டுவந்து இங்கே செய்து சாப்பிடுகிறார்கள். நெருக்கமான பகைவர்களுக்கு கொடுத்து உபசரிப்பதும் உண்டு


ஜெ


 


 


அல்வா பண்ண கொஜ்ஜு தயாரிப்பு முறை

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2017 10:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18

18. மலர்ப்பகடை


மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம் ஒருவர் தங்களை ஓவியமென தீட்டிக்கொண்டனர். துளிதொட்டு துளிதொட்டு ஆக்கிய அந்த ஓவியம் ஆயிரம் ஓவியங்கள் அழித்தழித்து எழுந்த திரைமேல் அமைந்தது.


தங்கள் விருப்ப வடிவை தீட்ட எண்ணி தீட்டிமுடித்து நோக்கி அதைக் கண்டு வியந்து அகன்று அதை பிறர் நம்புகிறாரா என எண்ணி ஐயுற்றனர். அதை வெல்லும்பொருட்டு மெல்லிய துயரை அதில் பூசி கூர்படுத்திக்கொண்டனர். இனிய தருணத்தின் துயர் மேலும் இனிதென்று உணர்ந்து அதை தொட்டுத்தொட்டு பெருக்கினர். ஒருவர் துயரை பிறிதொருவர் ஆற்றினர். சொற்கள் சொற்களென பெருகி பின் பெருமழை துளியென்றாவதுபோல் ஓய்ந்து பொருளற்ற ஒற்றைச் சொற்களும் விழிக்கசிவுமென எஞ்சினர்.


உணர்வுகளை தட்டிஎழுப்பி விசைகொள்ளச் செய்வது எளிது. அவை கொள்ளும் திசைமீறல்களை கட்டுப்படுத்துதல் அரிது. ஆடற்களமொன்றில் வழிகுழைந்து திசைமயங்கி தடுமாறி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தையே வந்தடைந்தனர். பெண் பெருகியதும் ஆண் குறுகியதும் முழுமை அடைந்தபோது இருவர் பரபரப்பும் அடங்கியது. பின் சொற்கள் எழவில்லை, நீள்மூச்சுகளும் சிறுபுன்னகைகளும் மென்தொடுகைகளுமே எஞ்சின.


இனிமை முழுத்தபோது இருவருமே தனிமையை விரும்பினர், மேலுமொரு சொல் அவ்வினிய குமிழியை உடைத்துவிடும் என அஞ்சியவர்கள்போல. அவ்வெண்ணத்தால் அச்சம்கொண்டு ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விலக்கினர். ஒருவர் சொல்லும் சொல்லை மற்றவர் செவிகொடுக்காமல் வெற்றுப்புன்னகையும் தலையசைப்பும் அளித்தனர். இனிமை அது இழக்கப்படும் எனும் துயரை தவிர்க்கமுடியாமல் தான் கொண்டுள்ளது. அத்துயரால்தான் அது மேலும் இனிதாகிறது.


புரூரவஸ் நீண்டமூச்சுடன் மீண்டுவந்தான். பிறிதொன்றை பேசுவதற்கு உளம் அமையவில்லை. அனைத்தையும் பொருளிழக்கச்செய்து அதுவொன்றே மெய்மை என்றது அந்த நறுமணம். மரத்தை நிமிர்ந்து நோக்கி “இந்த மலர்கள்தான்” என்றான். அவள் காதுக்குள் என ஒலித்த குரலில் “என்ன?” என்றாள். “இந்த மலர்களின் மணத்தைத்தான் இச்சோலையை அணுகுகையிலேயே நான் அறிந்தேன். அங்கிருக்கையில் பாரிஜாதம், அணுகுகையில் செண்பகம். இப்போது இதுவரை அறியாத மலரின் மணம்… ஆனால் புதியதல்ல. நான் அறிந்த ஒன்று” என்றான். அவள் “ஆம், இந்த மணம் விண்மலர் ஒன்றுக்குரியது என்கிறார்கள்” என்றாள்.


அவன் எழுந்து அந்த மரக்கிளையொன்றை தாவிப்பற்றி இழுத்து ஒரு வெண்மலரை பறித்தெடுத்தான். அவள் முகம்மலர்ந்து எழுந்து அதை கைநீட்டி வாங்கி காம்பைப்பற்றி இதழ்களைச் சுழற்றி நோக்கி “தூய வெண்மை” என்றாள். “ஆம், மாசில்லாதது” என்று அவன் சொன்னான். வெறும் சொற்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்ல அவர்கள் அஞ்சினர். பொருள்கொள்ளும் சொற்கள் அத்தருணத்திற்கு ஒவ்வாத எடைகொண்டிருந்தன. ஆனால் அறியாது “வண்ணங்கள் பல கோடியென பெருகிக்கிடக்கும் மலர்களின் வெளியில் வெண்ணிறம் இத்தனை பேரழகு கொள்வதெப்படி?” என்றான். அத்தருணத்திலும் வினாவென அமையும் தன் உள்ளத்தை எண்ணி மறுகணம் சலிப்புற்றான்.


அவள் “அதன் மென்மையினால்…” என்றாள். எத்தனை பெண்மைகொண்ட மறுமொழி என எண்ணியதுமே எத்தனை சரியான சொல்லாட்சி என்றும் அவன் உணர்ந்தான். நிமிர்ந்து விழியிமை சரிய, சிறு உதடுகள் சற்றே கூம்ப, மலரை நோக்கி குனிந்திருந்த அவள் முகத்தை நோக்கியபின் “ஆம், பிற எவ்வண்ணத்தைவிடவும் வெண்மையே மென்மை மென்மை என்கிறது” என்றான். என்ன சொல்கிறோம் என வியந்தபடி “வேறெந்த மலரையும் இதழ் தொட்டு வருடலாம். வெண்மலரைத் தொட விரல் தயங்குகிறது” என்றான். அவள் நிமிர்ந்துநோக்கி புன்னகை செய்தாள்.


வீண்சொல் பேசுகிறோம் என அவன் உள்ளம் தயங்கியது. ஆகவே சொன்னவற்றை மேலும் கூராக்க முனைந்தான். “தூய்மை ஒரு மலரென்றானதுபோல்” என்றான். “நான் ஒரு புன்னகை என்று இதை நினைத்துக்கொண்டேன்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று அவன் வியப்புடன் சொன்னான். அவள் சிறுமியைப்போல் மிக எளிமையாக சொல்லும் ஒரு வரிக்கு முன் கற்று அடைந்த தன் கவிதைவரிகள் ஒளியிழக்கின்றனவா? ஒவ்வொரு ஒப்புமைக்கும் ஏற்ப அம்மலர் தன்னை மாற்றி காட்டிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. இது உண்மையிலேயே விண்ணுலக மலரா என்ன?


சொற்களினூடாக அனைத்தையும் கடந்து கீழிறங்கி வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஓர் எண்ணம் பிறிதொன்றுடன் தொடர்புகொள்ளவே விழைகிறது. கோத்துக்கொண்டு சரடென வலையென கூரையென தரையென மாறுகிறது. எண்ணங்கள் எழுந்தாலே அவை வடிவமென்றாகிவிடுகின்றன. சொற்கள் அறுந்த மாலையின் மணிகள். விண்மீன் மின்னுகைகள்.


“திரும்பு! இதை உன் குழலில் சூட்டுகிறேன்” என்று அவன் சொன்னான். அவள் சிரித்தபடி திரும்பி அள்ளிச்சுருட்டி வளைத்துக்கட்டிய தன் கொண்டையை அவிழ்த்து விரல்களால் நீவி குழலை விரித்திட்டாள். பொழிந்து அவள் இடைக்குக்கீழ் எழுந்த இணைப்பாறைகளில் வழிந்த அக்குழலின் பொழிவில் ஒரு கீற்றெடுத்து சுட்டு விரலில் சுற்றிக் கண்ணியாக்கி அதில் அம்மலரை அவன் வைத்து இழுத்து இறுக்கினான்.


வெண்மலர் அவள் கூந்தலிலேயே மலர்ந்ததுபோல் தோன்றியது. அக்கருமை கூர்ந்து ஒளிமுனை சூடியதுபோல. “வேல்முனை ஒளிபோல” என்றான். அவள் திரும்பி நகைத்து “அவையில் பாணர்களின் பாடல் மிகுதியாக கேட்கிறீர்கள் போலும்” என்றாள். அவன் அவ்விழிகளில் இருந்த ஒன்றால் மிகச்சற்றே சீண்டப்பட்டான். உண்மையில் அதை அப்போது அவன் உணரவுமில்லை. “அது அரசனின் தொழில்” என்றான்.


“ரீங்கரித்து சுழன்று சுழன்று குளவி தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை.


அவன் முகம் சிவந்து “எந்தை என்னை காட்டில் கண்டெடுத்தார். நான் விண்ணுலாவியான ஒளிக்கோள் புதனுக்கும் வைவஸ்வத மனுவின் மகள் இளைக்கும் பிறந்த மைந்தன் என்று நிமித்திகர் கூறினர். நான் வேடர் குலத்தவனல்ல” என்றான். “காடுவென்று நாடாக்கி முடிசூடும் குடியினர் குலம்சேர்த்து பொது அரசன் என முடிசூடும் மைந்தனை காட்டில் கண்டெடுத்ததாக சொல்லும் வழக்கம் இங்குண்டு. அவன் தேவர்களுக்குப் பிறந்தவன் என்று கதைகள் உருவாகி வரும். ஏனெனில் தங்களில் ஒருவனை தலைவனென்று ஏற்பது வேடர்களுக்கு எளிதல்ல. தெய்வங்கள் அருளிய மானுடன் அவர்களுக்குத் தேவை. நீங்கள் சந்திரகுலத்தோன் என்பது உங்கள் குலவழியை வேடர்களிடமிருந்து விலக்கும்” என்றாள்.


கண்கள் நீர்கொள்ள அவன் உரக்க “மலைமகள் நீ. அரசு அமைதலும் வளர்தலும் உனக்கென்ன தெரியும்?” என்றான். “நதிகள் ஊறும் மலைமேல் இருப்பவள் நான். நீர்ச்சுவையை இங்கிருந்தே கூற முடியும்” என்றாள். சொல்லெடுத்து அவளை வெல்ல முடியாதென்று அறிந்தபோது அவன் மேலும் சினம்கொண்டான். “என் பிழைதான், எளிய காட்டாளத்தியிடம் சொல்லாட வந்திருக்கலாகாது” என்றான்.


அவன் சினம் அவளை மேலும் நகைசூட வைத்தது. “ஏன், முதல்நோக்கில் காட்டாளத்தி என உணரவில்லையா அரசர்?” என்று சிரித்தபடி கேட்டாள். “காட்டாளத்தியிடம் அரசர்கள் காதல் கொள்வது புதிதல்ல” என்று அவன் சொன்னான். “காட்டாளத்தியிடம் அரசர்கள் கண்டடைவது தங்கள் உள்ளுறையும் காட்டாளர்களைத்தானே?” என்றாள் அவள்.


சினம் எல்லைமீற “உனக்கென்ன வேண்டும்? இறுதிச்சொல் உரைத்து என்னை வென்று நிற்க வேண்டுமா?” என்று புரூரவஸ் கேட்டான். அவனை முழுதும் வென்றுவிட்டதை அறிந்ததும் ஒரு மாயப்பொழுதில் சிறுமியென்றாகி சிரித்தபடி “ஆமாம், இதோ வென்றுவிட்டேன். இவ்விரு விரல்களில் ஒன்றை தொடுங்கள்” என்று கொஞ்சி அவள் கைநீட்டினாள். அவன் சற்றே சினந்து “எதற்கு?” என்றான். “தொடுங்கள்!” என்றாள். சுட்டுவிரலை அவன் தொட “தோற்றுவிட்டீர்கள்! தோற்றுவிட்டீர்கள்!” என்று அவள் கைகொட்டி நகைத்தாள். “சரி, தோற்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான். மெல்ல முகத்தசைகள் இறுக்கமிழந்தன. “தோற்றவர் எனக்கு தண்டமிடவேண்டும்” என்றாள். “என்ன?” என்றான். “தண்டம், தண்டம்” என்றாள்.


அச்சிரிப்பினூடாக அவன் சினத்தை கடந்தான். “இதோ” என்று இரு செவிகளையும் பற்றி அவள் முன் மும்முறை தண்டனிட்டான். அவள் அவன் தலைமேல் கைவைத்து “போதும் அடிமையே… உன்மேல் கனிவுகொண்டோம்” என்றாள். “தேவி, உன் காலடிகளை சென்னிசூடுகிறேன். என்றும் உடனிருக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “அருளினோம், அடியவனே” என அவள் நகைத்தாள்.


அந்தச் சினம் தலைமுட்டும் ஆடுகள் பின்விலகுவதுபோல விசைகூட்ட உதவியது. ஏன் அச்சினம் எழுந்தது என்று எண்ணியபோது அவளை எளிய பேதை என்று எண்ணிய ஆணவத்தில் அடிபட்டதனால் என்று உணர்ந்தான். ஆனால் பின்னர் இணைந்தபோது அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர். அந்த மலர்மரத்தினடியில் அவளை அவன் மணம் கொண்டான். பொன்னிற நாணல்சரடொன்றை எடுத்து மும்முறை சுழற்றி விரலாழியாக்கி அவள் கையிலணிவித்தான். “இன்று முதல் நீ என் அரசி” என்றான். விழிகனிந்து “என்றும் உங்கள் இடம் அமைவேன்” என்று அவள் சொன்னாள்.


சருகுமெத்தைமேல் அவர்கள் உடல் ஒன்றாயினர். அவள் வியர்வையில் எழுந்தது அந்த மலர்மணம். இதழ் இணைந்தபோது மூச்சில் மணத்ததும் அதுவே. உடல் உருகியபோது மதமென எரிமணம் கொண்டிருந்ததும் அந்த மலர்நினைவே. எழுந்து விலகி வான்நோக்கிப் படுத்து மெல்ல உருவாகி வந்த புறவுலகை உள்ளிருந்து எடுத்த ஒற்றைச் சொற்களை எறிந்து எறிந்து அடையாளம் கொண்டபடி கிடந்தபோது அவன் “நீயிலாது நான் அரண்மனை மீளப்போவதில்லை” என்றான். அவள் அச்சொற்களை கேட்காமல் எங்கோ இருந்தாள். திரும்பி அவள் உடல்மேல் கையிட்டு வளைத்து “என் அரசியென நீ உடன்வரவேண்டும்” என்றான்.


திடுக்கிட்டு அவனை எவர் என்பதுபோல நோக்கி “என்ன?” என்றாள். “உன்னை உடனழைத்துச் செல்லவிருக்கிறேன்” என்றான். அவள் அவன் கையை மெல்ல எடுத்து விலக்கிவிட்டு “இல்லை, இக்காடுவிட்டு நான் எங்கும் வருவதாக இல்லை” என்று மறுத்தாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இந்தக் காடு என் உள்ளம். இதை நான் என் ஆடுகளுடன் சூழ்ந்தறிந்துள்ளேன். இதைவிட்டு வந்தால் பொருளற்றவளாக ஆவேன்” என்றாள்.


துயர்சீற்றத்துடன் “உனைப்பிரிந்து ஒருநாளும் இனி வாழமுடியாது. எங்கிருந்தாலும் உன்னுடன்தான்” என்றான் அரசன். “உங்கள் நகரில் நான் வாழ காடு இல்லை” என்று அவள் சொன்னாள். “இக்காட்டிலும் எனது நகரத்தை நான் கொண்டுவந்து விடமுடியும்” என்று அவன் மறுமொழி சொன்னான். அவள் கை பற்றி நெஞ்சோடணைத்து “பிரிவெனும் துயரை எனக்கு அளிக்கவேண்டாம்” என்றான்.


அவன் கண்களில் நீரைக் கண்டு அவள் மனம் குழைந்தாள். அவன் அவளிடம் “நீ என் தேவியென அன்னையென தெய்வமென உடனிருக்கவேண்டும்” என்றான். “உங்களுடன் நான் வருவதென்றால் மூன்று உறுதிகளை நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும்” என்றாள். “எந்த உறுதியையும் அளிக்கிறேன்” என்று அவன் சொன்னான். “என் இடமும் வலமும் அமைந்து இவ்விரு ஆடுகளும் எப்போதும் அரண்மனைக்குள் இருக்கும். அவற்றை முற்றிலும் காப்பது உங்கள் கடன்” என்றாள். “ஆம், என் உயிரை முன்வைத்து காப்பேன்” என்று அவன் சொல்லளித்தான்.


“நான் வேள்விமிச்சமான நெய்யன்றி பிற உணவை உண்பதில்லை. அதை உண்ணும்படி சொல்லலாகாது” என்றாள். விந்தையுணர்வுடன் அவன் “நன்று, அதுவும் ஆணையே” என்றான். அவள் அணங்கோ என ஓர் எண்ணம் உள்ளில் எழுந்தது. அணங்குகள் வேள்விநெய் அருந்துமா என எண்ணி அதை கடந்தான். ஆனால் அவ்வச்சம் அவளை மேலும் அழகாக்குவதை உடனே உணர்ந்தான்.


அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டு சில கணங்கள் தன்னைத் தொகுத்து பின் விழிதாழ்த்தி “ஒருபோதும் ஒளியில் என் முன் உங்கள் வெற்றுடலுடன் தோன்றலாகாது” என்றாள். திகைத்து “ஏன்?” என்று அவன் கேட்டான். அவள் “தோன்றலாகாது, அவ்வளவுதான்” என்றாள். “சொல், ஏன்?” என்றான் அவன் சற்றே எரிச்சலுடன்.


“அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று! வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான்.


தன் குலத்திடமும் தந்தையிடமும் சொல்லளித்து மீள்வதாக சொல்லிச்சென்று அவள் அன்று மாலையே மீண்டுவந்தாள். இரு ஆடுகள் இரு பக்கமும் வர அவன் கைபற்றி காட்டிலிருந்து வெளியேறி வந்தாள். காட்டின் எல்லையில் அமைந்த முக்குடைமலை ஒன்றை கடக்கையில் குனிந்து கூழாங்கல் ஒன்றை பெண்செல்வமென எடுத்துக்கொண்டாள். அவன் அரண்மனைக்குள் வலக்கால் எடுத்துவைத்து நுழைந்தபோது தன் இரு விழிகளில் ஒற்றி அவனுக்களித்தாள்.


 imagesசியாமையுடன் ஏழு ஆண்டுகாலம் பித்தெடுத்த பெருங்காதலில் திளைத்து வாழ்ந்தான் புரூரவஸ். அவ்வேழு ஆண்டுகளும் அவன் ஆண்ட குருநகரமே அவளுடைய அணியறையும் அரசமன்றும் மட்டுமே எனத் திகழ்ந்தது என்றனர் குலப்பாடகர். நகரில் எங்கும் அவளைப்பற்றியே அனைவரும் பேசினர். பாலைநிலமெங்கும் காற்று பதிந்திருப்பதுபோல நகரின் அனைத்துப்பொருட்களிலும் அவளே இருந்தாள் என்றனர் அரசவைக்கவிஞர்.


வேடன் மகளை மைந்தன் மணம்கொண்டு வரும் செய்தியை அறிந்தபோது ஹிரண்யபாகு திகைத்து பின் கடும்சினம் கொண்டார். அவன் செங்கோலை வலுவாக்கும் தென்னகத்து சூரியகுலத்து அரசன் ஒருவனின் மகளை அவர் மணம்பேசிக்கொண்டிருந்த காலம் அது. அவன் முன்னரே மணம்கொண்டிருந்தவர்கள் புகழ்பெற்ற தொல்குடிகளில் பிறந்தவர்கள். “அவனை அங்கேயே நிற்கச் சொல்லுங்கள்! நகர் நுழையவேண்டியதில்லை. அவளை அவன் மணம்புரிந்து நகர் நுழைக்க நான் ஒப்பவில்லை. விழைந்தான் என்றால் அவளை விருப்பக்கிழத்தியென கொள்ளட்டும். அப்பால் ஆற்றுமுகத்தில் மாளிகை அமைத்து அங்கே அவளுடன் வாழட்டும்” என்றார்.


அன்னை “காட்டுப்பெண் மாயமறிந்தவள் என்பார்கள். என் மைந்தன் உள்ளத்தை அவள் எப்படி கவர்ந்தாள் என்றறியேன்” என கலுழ்ந்தாள். “அவள் கானணங்கு. கொலைவிடாய் கொண்ட வாயள். என் மைந்தன் குருதிகுடித்தபின் கான்மீள்வாள்” என்றாள். “வீண்சொல் பேசாதே. கானகமகளிரை அரசர் மணப்பதொன்றும் புதியதல்ல” என்றார் ஹிரண்யபாகு.


தந்தையின் செய்தி அறிந்ததும் புரூரவஸ் உறுதியான குரலில் “நான் பெண்ணெனக் கொள்பவள் இவள் ஒருத்தியே. எனக்கு தந்தையின் முறையென வருவது அரசு. அவர் அளிக்கவில்லை என்றால் என் துணையுடன் மீண்டும் காட்டுக்கே செல்கிறேன். நகரில் இவளின்றி ஒருநாளும் அமையமாட்டேன்” என்றான். அவனுடைய உறுதியைச் சொன்ன அமைச்சர்கள் “மறுசொல் எண்ணாமல் ஆனால் உணர்வெழுச்சியும் இல்லாமல் சொல்லும் சொற்கள் பாறைகள் போன்றவை அரசே, அவற்றுடன் பேசுவதில் பொருளில்லை” என்றனர்.


பன்னிருநாட்கள் அவன் நகர்எல்லைக்கு அப்பால் காத்திருந்தான். பின்னர் “நான் என் துணைவியுடன் கானேகினேன் என எந்தையிடம் சொல்லுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான். ருத்ரன் நகருக்குள் சென்று ஹிரண்யபாகுவிடம் “அவரை அச்சுறுத்தியோ விருப்புஎழுப்பியோ உளம்தளர்த்தியோ அவளிடமிருந்து அகற்றமுடியாது, அரசே. தணிவதன்றி வேறுவழியில்லை உங்களுக்கு” என்றான். “அவளிடம் அப்படி எதை கண்டான்?” என்றாள் அன்னை. “அதை அவளைக் கண்டதும் நீங்கள் உணர்வீர்கள்” என்றான் ருத்ரன்.


சினத்துடன் “அவன் அரசன்” என்றார் ஹிரண்யபாகு. “அரசே, அவள் புவிக்கெல்லாம் அரசி போலிருக்கிறாள்” என்றான் ருத்ரன். “அவள் எப்படி இந்நகரில் வாழ்வாள்?” என்றாள் அன்னை. “அவள் விண்நகர் அமராவதியும் கண்டவள்போல தெரிகிறாள், அன்னையே” என்றான் ருத்ரன். இறுதியில் அவனுக்குப் பின்னால் தூதர்களை அனுப்பி அவன் துணைவியை ஏற்பதாக தந்தையும் தாயும் ஒப்புக்கொண்டனர்.


சியாமையுடன் புரூரவஸ் நகர்நுழைந்த நாளில் நகர்மக்கள் முகப்பெருக்காகக் கூடி ஆர்ப்பரித்து காத்திருந்தனர். அவன் ஊர்ந்த தேர் உள்ளே வந்ததும் கடுங்குளிர்கொண்டு மலைச்சுனை உறைவதுபோல அவர்கள் சொல்லும் அசைவும் இழந்தனர். சித்தமழிந்து விழிகள் வெறும் மலர்களென்றாக நின்றிருந்தனர். ஒரு வாழ்த்தொலியும் எழவில்லை. அமைதியில் தேர்ச்சகட ஒலி மட்டுமே கேட்டது. நெடுநேரம் கழித்து ஒருவன் பாய்ந்து சென்று முரசை முழக்கினான். உடன் பொங்கி எழுந்தது மக்களின் பேரொலி.


அவள் புவியரசியென்றே பிறந்தவள் போலிருந்தாள். பேரரசர்களின் மணிமுடிகளுக்குமேல் கால்வைத்து நடப்பவள் போல தேரிறங்கிச் சென்று அரண்மனைப்படிகளில் ஏறினாள். அருள்புரிபவள் போல ஹிரண்யபாகுவையும் மூதரசியையும் கண்டு புன்னகைத்து முறைப்படி வணங்கினாள். அவளுடன் தேரிறங்கி வந்த ஆடுகள் சூழ்ந்திருந்த திரளையும் முரசொலிகளையும் அரண்மனைவிரிவையும் அறியாதவை போலிருந்தன. அவை மட்டுமே அறிந்த காடு ஒன்றில் அவை அசைபோட்டபடி சிலம்பிய குரலெழுப்பியபடி நடந்தன.


“இவள் முடிமன்னர் பணியும் பேரரசி. இவள் அருளால் நம் மைந்தன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான்” என்றார் ஹிரண்யபாகு. “ஆம், நாம் இவள் நோக்கில் எளியோர். ஆனால் இவள் வயிற்றில் அவனுக்கொரு மைந்தன் பிறந்தால் அவன் மன்றில் எழுந்து நின்றாலே போதும், குடிமுடிகள் தலைவணங்கும். கோல்கள் தாழும்” என்றாள் மூதரசி. அரண்மனையே அவளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதை மூதரசி கண்டாள். பேசாது நின்ற வீரர் விழிகளிலும் அவளே ஒளிவிட்டாள் என்பதை உணர்ந்தாள்.


அரண்மனையில் அவளுடன் வாழ்வதற்கு ஓர் அணிமண்டபத்தை புரூரவஸ் அமைத்தான். அதில் அழகிய மங்கையர் மட்டுமே பணிபுரியும்படி வகுத்தான். கவிதையும் இசையும் நடனமும் மதுவும் இன்னுணவும் காதலின் களி சிறகோய்ந்து மண்ணுக்கு வந்த தருணங்களில் வந்து இணைந்துகொண்டு அவனை மீண்டும் எழச்செய்தன. மண்ணில் கால்தொடுவதே உந்தி விண்ணுக்கு எழுவதற்காகத்தான் என அவன் எண்ணினான்.


அவனை பிறர் நோக்குவதும் அரிதாயிற்று. கதிரையும் நிலவையும் காற்றையும் பனியையும் மழைச்சாரலையும் அவன் அக்காதலின் பகுதியென்று மட்டுமே அறிந்தான்.வானும் மண்ணும் அக்காதலின் களங்கள் என்று மட்டுமே பொருள்சூடின. அவள் அனைத்துமாகி அவனைச் சூழ்ந்திருந்தாள். களித்தோழியாகி சிரித்தாடினாள். குழவியென்றாகி அவன் உளம் குழையச்செய்தாள். அன்னையென்று ஆகி மடியிலிட்டாள்.


காதலில் பெண்ணின் அத்தனை தோற்றங்களும் காதலென்றேயாகி வெளிப்படுகின்றன. சழக்குச்சிறுமகள் என, வஞ்சமகளென, சினக்கொற்றவை என எழுந்து அவனை காய்ந்தாள். அவன் சிறுத்துச் சுருங்க அணைத்து மீண்டெழச்செய்தாள். விலகுதல்போல அணுகுவதற்கு உகந்த வழி பிறிதில்லை. விலகியணுகும் ஆடல்போல காமத்துளியை கடலாக்கும் வழியும் ஒன்றில்லை.


எத்தனை அழகிய சிறுமைகள். அறுந்துதிர்ந்த சிறுமணி ஒன்றுக்கென பெரும்பேழைகள் நிறைய அணிகள் கொண்டவள் நாளெல்லாம் ஏங்கினாள். அதை மீட்டுக்கொடுக்காதவன் என அரசனை குற்றம்சாட்டி ஊடினாள். தோழியொருத்தி சூடிய பொன்னிழையாடை கண்டு முகம் சிவந்தாள். பாணினிக்குக் கொடுத்த சிறுபொருளை மும்முறை எண்ணி கணக்கிட்டாள். மூதன்னை சொன்ன சொல் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து சொல்லாப்பொருள் கொண்டாள். அவள் நோக்கிலும் நடையிலும் குறைகண்டாள்.


எத்தனை அழகிய மலர்தல்கள்! தெருவில் கண்ட கீழ்மகள் ஒருத்தியின் இடையிலமைந்த கரிய குழந்தையை முகம் மலர்ந்து அள்ளி எடுத்து முலைகள்மேல் சூடிக்கொண்டாள். அதன் மூக்கை தன் பட்டாடையால் துடைத்தாள். அணிந்த அருமணிமாலையைக் கழற்றி அதற்கு அணிவித்தாள். திருடி பிடிபட்டு கழியில் கட்டுப்பட்டிருந்தவனை அக்கணமே சென்று விடுவித்தாள். அவன் சவுக்கடிப்புண்ணுக்கு தானே மருந்திட்டாள். அரியணை அமர்ந்து கொடையளிக்கையில் கைகள் மேலும் மேலும் விரியப்பெற்றாள்.


தாயக்கட்டையென புரண்டுகொண்டே இருந்தாள். காவிய அணிகளுக்கு காட்டுப்பெண்ணென நின்று பொருள்வினவி நகைக்கச் செய்தாள். அதன் மையமென எழுந்த மெய்மையை பிறர் உன்னும் முன்னரே சென்றடைந்தாள். நாளெல்லாம் அணி புனைந்தாள். ஒரு சிறுகுறை நிகழுமெனில் உளம் குலைந்தாள். அணியின்றி மலர்ச்சோலையில் சென்று தனித்திருந்தாள். யாரிவள் என்று ஒவ்வொரு முறையும் எண்ணி குலையச்செய்தாள். எண்ணிய ஒவ்வொன்றையும் தானே அழித்து பிறிதொருத்தி என எழுந்தாள்.


பிறிதொன்றிலாத காமமே காமம் என்று அவன் உணர்ந்தான். காமத்திலாடுதல் பெண்களை பேரழகு கொள்ளச்செய்கிறது. பெண்ணழகு காமத்தை மீண்டும் பெருக்குகிறது. புரூரவஸ் ஏழு பிறவிக்கும் இயன்ற இல்லின்பத்தை அவ்வேழு ஆண்டுகளில் அடைந்தான் என்றனர் கவிஞர். அவள் அவனுடைய ஏழு மைந்தரை பெற்றெடுத்தாள். ஆயுஸ், ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ், ரயன், விஜயன், ஜயன் என்னும் மைந்தர் அவன் அரசுக்கு உரியவர்களெனப் பிறந்தனர். மைந்தருக்கென நோற்று அவர்கள் அரண்மனையைத் துறந்து காடேகி வேள்விநிகழ்த்துகையில் ஈன்ற தலைமைந்தனாகிய ஜாதவேதஸ் தந்தையின் மெய்மைக்கு வழித்தோன்றல் என்று ஆனான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2017 10:30

February 16, 2017

உதிர்தல்

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் முழுக்கோடு ஒய்.எம்ஸி.ஏயின் மலரில் ஒரு கவிதையை வாசித்தேன். அதை யாரோ மொழியாக்கம் செய்திருந்தார்கள். சரியாகத் தமிழ் தெரியாத ஏதோ ஒரு அமெரிக்கக் கன்யாஸ்திரீ. அந்த மொழியாக்கம் மிகச் சுமாரானது. இருந்தாலும் அந்தக் கவிதை என்னை உணர்ச்சிவசப்படச்செய்தது. நெடுநாள் அந்தக் கவிதையை நான் நினைவில் வைத்திருந்தேன். அந்தக் கவிஞரின் பெயரையும்


மீண்டும் தற்செயலாக ஒரு தொகுப்பில் அந்தக் கவிதையைக் கண்டடைந்தேன். சர்வ சாதாரணமான கவிதை இது. ஆழ்ந்த பொருளோ மறைபிரதியோ ஒன்றும் இதில் இல்லை. ஆனால் சில சமயம் தன் எளிமையாலும் நேரடித்தன்மையாலுமே சில கவிதைகள் நம்மை உலுக்கிவிடுகின்றன. இது அத்தகைய ஒரு கவிதை என்று எனக்குப் படுகிறது. என் குழந்தைகளுக்கு இக்கவிதையை வாசித்துக் காட்டியபோது நான் அடைந்த அதே மனநெகிழ்ச்சியை அவர்களும் அடைவதைக் கண்டேன்.


நீலக்கண் குட்டிப்பயல்


சின்ன நாய்ப்பொம்மை தூசிபடிந்திருக்கிறது


ஆனால் திடமாக காலூன்றி நின்றிருக்கிறது


சின்ன பொம்மைப்படைவீரன் துருவால் சிவந்திருக்கிறான்


அவன் தோளில் துப்பாக்கி நிமிர்ந்திருக்கிறது


அந்த நாய் புதிதாக இருந்த காலமொன்றிருந்தது


படைவீரன் அழகாக இருந்திருக்கிறார்


ஆனால் அது நம் நீலக்கண் குட்டிப்பயல்


அவற்றை முத்தமிட்டு அங்கே வைத்தபோது!


 


”நான் வருவது வரை போகவே கூடாது என்ன?”


என்று அவன் சொன்னான் ”மூச்,சத்தம் போடக்கூடாது!”


அதன் பின் தளர்நடையிட்டு   தன் குட்டிப்படுக்கைக்குச் சென்று


அவன் அழகிய பொம்மைகளைக் கனவுகண்டான்


கனவுகாணும்போது ஒரு தேவதையின் பாடல்


நம் நீலக்கண் பயலை எழுப்பியது


அது எத்தனையோ காலம் முன்பு


வருடங்கள் பல சென்றுவிட்டன


ஆனால் பொம்மை நண்பர்கள் விசுவாசமானவர்கள்


 


நீலக்கண்குட்டிப்பயலின் கட்டளைக்குப் பணிந்து அவர்கள்


அதே இடத்தில் நின்றிருக்கிறார்கள்


அவனுடைய குட்டிக்கைகளின் தொடுகை வந்து எழுப்புவதற்காக


அவன் குட்டி முகத்தின் புன்னகைக்காக


வருடங்களாகக் காத்திருக்கையில்


அந்த குட்டி நாற்காலியின் தூசுப்படலத்திலிருந்தபடி


அவர்கள் எண்ணிக்கொண்டார்கள்


அவர்களை முத்தமிட்டு அங்கே நிற்கவைத்துச் சென்ற


நீலக்கண் குட்டிப்பயலுக்கு என்ன ஆயிற்று என்று


***



 


குழந்தைக்கவிதைகள் மற்றும் நகைச்சுவைக் கவிதைகளுக்காக நினைவுகூரப்படும் யூஜின் ·பீல்ட் அமெரிக்காவில் மிஸௌரியில் 1850ல் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்து உறவினரால் வளர்க்கப்பட்டார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். வில்லியம்ஸ் கல்லூரியில் சேர்ந்த யூஜின் ·பீல்ட் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து கல்லூரிக்குச் செல்லமுடியாமல் ஆனார். பின்னர் க்னாக்ஸ் கல்லூரியிலும் மிஸௌரி பல்கலையிலும் படித்தார்.சட்டத்தொழிலில் ஈடுபட எண்ணினாலும் அது பலன் தரவில்லை.


அதன்பின் யூஜின் ·பீல்ட் ஐரோப்ப சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். பின்னர் செயின்ட் ஜோச·ப் கெசெட்டில் இதழாளராக வேலைக்குச் சேர்ந்தார், அவ்வருடமே ஜூலியா காம்ஸ்டாக்கை மணந்தார், எட்டு குழந்தைகள் பிறந்தன. செயின் ஜோச·ப் கெசெட்டி நக்லர ஆசிரியராக பணியாற்றினார். எளிமையான நகைச்சுவைக் கட்டுரைகள், உணர்ச்சிகரமான கவிதைகள், சிறுவர் பாடல்கள் ஆகியவற்றுக்காக யூஜின் ·பீல்ட் புகழ்பெற்றார்.


1883ல் சிகாகோவுக்கு வந்த ·பீல்ட் அங்கே சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் புகழ்பெற்ற பத்தி ஒன்றை எழுதினார். 1879ல் அவரது முதல் கவிதை தொகுதி வெளிவந்தது. கிறிஸ்துமஸ் டிரெஷர்ஸ் என்று அதற்குப் பெயர். அவரது இசைப்பாடல்களே அவருக்கு சமகாலப்புகழ அதிகம் பெற்றுத்தந்தன. 1895; ·பீல்ட் மறைந்தார்.


இந்தக்கவிதை என்ன சொல்கிறது என்று என்னால் வகுத்துச் சொல்ல முடிவதில்லை. குமாரன் ஆசானின் வீழ்ந்த மலர் என்ற கவிதையைப் பற்றி பேசும்போது நித்ய சைதன்ய யதி மலரைப் பொறுத்தவரை உதிர்வதும் அழகாக ஆகிவிடுகிறது என்றார். இங்கே மரணம் அழகாக ஆகிவிட்டது போலிருக்கிறது. என்ன ஒரு மென்மையான உதிர்தல்!


http://www3.amherst.edu/~rjyanco94/literature/eugenefield/poems/poemsofchildhood/littleboyblue.html


 


மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Mar 7, 2009

தொடர்புடைய பதிவுகள்

பி.ராமன் கவிதைகள்
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
வீடு
கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
மறுபக்கத்தின் குரல்கள்
பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’
சில மலையாளக் கவிதைகள்
உதிர்தல்பற்றி
மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
அன்வர் அலி கவிதைகள்
செபாஸ்டின் கவிதைகள்
பிந்து கிருஷ்ணன் கவிதைகள்
ஊட்டி-கவிதையரங்கு
விஷ்ணுபிரசாத் கவிதைகள்
வீரான் குட்டி கவிதைகள்
அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?
பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2017 10:36

இடிதாங்கி

ggg

two dogs


 


இனிய ஜெயம்,


எனது சிறிய வாழ்வின் சந்தோஷங்களில் ஒன்று உங்களை தொடர்பு கொள்ள கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் வைக்கும் விண்ணப்பங்களுக்கு செவி கொடுப்பது.


இந்த விளையாட்டு உங்களின் மனிதனாகி வந்த பரம்பொருள் கட்டுரை வழியே துவங்கியது. குலாமதஸ்தகீர் ஜாமூன் பாபாவை சந்திக்க வகைமை கேட்டு பக்தி கமழும் குரல்கள் தொடர்ந்து அழைக்கும். ஒரு எல்லைக்குமேல் என்னை நம்ப மறுத்துவிட்டு [பாவி பாவி பகவானை சந்திக்க தடையா இருக்கிறது மகா பாவம்] நீங்க அவர் முகவரியை குடுங்க என அழிச்சாட்டியம் செய்ய துவங்குவார்கள்.


அடுத்து அறம்வளர்த்த நாயகி எறிந்த நாள். தொலைபேசியை எடுத்தால் ஹலோ சொல்ல துவங்கும் முன்பே நாரோயில் வசவு துவங்கி விடும். நோ நோ மம்மி பாவம், நோ நோ டாடியும் பாவம் என மனதுக்குள் கதறுவேன். ஒரு வாரம் தொலைபேசியை அணைத்து வைத்தேன். உயிர்ப்பித்ததும் வந்த முதல் அழைப்பு அதே வசவு.


மற்றொரு நாள் [அன்று ஜெயம் வேறு ஒரு தலை போகும் சர்ச்சையில் இருந்தார்] ஒரு அமானுஷ்ய குரல். பெயரோ ஊரோ எதையும் தெரிவிக்கவில்லை. ”ஹலோ ஜெயமோகனா?’


‘ ”இல்லைங்க நான் கடலூர் சீனு. நான் பாவங்க”


டொக்.


இரவு பத்து மணி அதே குரல். ”ஹலோ ஜெயமோகன் நம்பர் தர முடியுமா?”


” ஹலோ நீங்க யாருங்க என்ன விஷயமா சார பாக்கணும் எதுவுமே சொல்லாம அவரை தொடர்பு கொள்ள கேட்டா எப்புடி? அவருக்கு மெயில் போடுங்க. தொடர்பு கொள்வார்”


டொக்.


காலை ஆறு மணி அதே அமானுஷ்ய குரல் ”சார் நம்பர் கிடைச்சிடுச்சி சார் சுட்ச் ஆப்ல இருக்கார். நான் இப்போ நாகர்கோவிலில் தான் இருக்கேன் சார் வீட்டு அட்ரஸ் தர முடியுமா?”


அவ்வளவுதான் உண்மையில் பீதி அடி வயிற்றை கவ்வ, பதறி அரங்காவை அழைத்தேன். சர்வவவல்லமை படைத்த அரங்கா அரை மணி நேரத்தில் ஆளை அமுக்கினார். விசாரித்ததில் சினிமால சேர சான்சு தேடி அலையும் யுவன். கமலை ஓரம் கட்டும் கனவுடன் கிளம்பி இருக்கிறார். கமலின் நண்பரை அமுக்குவதுதானே முதல் வழி? [நாசமா போக].


பெரும்பாலானவை ஏதேனும் கல்லூரி மாணவி ”சார் ஒர்க்ஸ்ல எம்பில் பண்றேன் சார பாத்து ஒரு இன்டர்வியூ பண்ணனும்” என்பார்.


அவர்களின் கேள்விகளை சும்மா கேட்டுப் பார்ப்பேன். முதல் கேள்வி ”ஜெயமோகன் உங்களது புனைப்பெயரா?”


இதையாவது பொறுத்துக் கொள்ள இயலும். ஒரு பெண் ”உங்கள் பெயர் என்ன”என்றே பேட்டியை துவங்கி இருந்தாள். ஒரு மாணவி ஜெயமோகனை யூ டியூபில் கூட பார்த்தது இல்லை என்றாள் ”எங்க எச்சோ டி தான் சார் ஓர்க்ஸ எடுத்து பண்ணுன்னு சொன்னார்”.


ஒரு மாணவியை முதற்கனல் நாவலை தேர்வு செய்த காரணத்தை கேட்டேன் ”தலைப்பே அவ்ளோ நல்லா இருந்துங்க சார்” என்றாள்.


ஒரு பிள்ளை “சார் எங்க எங்கேல்லாம் போவார் சொல்லுங்க எப்புடியாவது துரத்தி பேட்டி வாங்குறேன்” என்றது. ஒரு பிள்ளை குரல் அழகாக இருக்கிறது என்று சொல்லி வைத்தேன் உடனடியாக இளங்காத்து வீசுதேயே ஈஈஈ என துவங்கினாள். அனைவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை அவர்கள் ”இனிமேல்தான் சாரோட நாவலை படிக்கணும் சார்”.


சமீபத்து வரவு தமிழ்த் தேசியர்கள். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் பாலா தமிழ் தேசியத்தின் தேவை குறித்தும், அதில் ஜெயமோகன் பங்களிக்கவேண்டிய பண்பாட்டு எல்லைகள் குறித்து ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தார். ”நீங்க சாருக்கு மெயில்…… ”


”இல்ல அவர் பதில் போடல, அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன். இருந்தா அவர் நம்பர் குடுங்க அவர் கிட்டயும் சொல்றேன்” குடுத்து வைப்போம் என மனம் பரபரத்தது.


வலி மிகுந்த நாட்கள் ஆறு மெழுகுவத்திகள் திரைப்படம் வந்த நாள். வேறு வேறு சமயங்களில் இரு தொலைபேசி அழைப்புகள். இரு பெண்களுமே எதையும் வாசித்தவர்கள் இல்லை. தங்கள் மகள்களை தொலைத்தவர்கள். ஆறு படத்தில் வருவது எல்லாம் உண்மை தானே. சாரை தொடர்பு கொண்டால் எங்கள் குழந்தை எங்களுக்கு திரும்ப கிடைக்க ஏதேனும் வழி கிடைக்குமா என்று கேட்டு வந்த அழைப்புகள் அவை.


தேவாங்கு சர்ச்சையில் என் சொந்த நிலத்திலிருந்து [கடலூர்] எனக்கு என் தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைப்புகள். ”உன் ஆசான் அப்டின்னுதானே சொல்ற நீயே போய் அவர் கிட்ட இதுக்கு மன்னிப்பு கேக்க சொல்” வகையறா போன்கால்கள்.


தமிழ்நாட்டில் கடலூரில் ஜெயமோகன் ஒழிக என கோஷத்துடன் வங்கி ஊழியர்கள் ஒரு சனிக்கிழமை காலை போராடினார்கள். [என்னை கண்டதும் ஒருவர் ஒழிக கோஷத்தை உரக்க ஒலிக்க துவங்கினார்] நண்பர் அருள்.  “யோவ் உங்க ஆளு இவ்ளோ பேமஸா ? கடலூர்லயே போராட்டம் வெடிச்சுடுச்சே” என்றார்.


பின்னர் பண மதிப்பு சிக்கல் வந்து சனிக்கிழமை மாங்கு மாங்கு என அந்த ஊழியர் வேலை பார்த்த போது மீண்டும் பதிவான கூண்டு பதிவை அந்த ஊழியருக்கு சுட்டி காட்டினேன். லீவு போட நல்ல காரணம். பயன்படுத்திக் கொண்டாரா தெரியவில்லை.


முந்தா நாள் இளங்கோ என்பவரின் அழைப்பு. விசும்பு தொகுதி படித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு நிச்சயம் ரசவாதத்தின் சூக்குமங்கள் தெரியும். அவரை அறிமுகம் செய்து வைக்காவிட்டால் உயிர் தரிக்கேன் என மிரட்டினார்.


நேற்றைய இரவு ”ஹலோ ஜெயமோஹனா?”


”இல்லைங்க நான் கடலூர் சீனு”


”பரவாயில்ல இருக்கட்டும் இருக்கட்டும் நான் அவர் பக்கத்து வீடுதான். சார் மோட்டாரை நிறுத்தாமலே போய்ட்டார். ஒரே தண்ணி… போன்ல கூப்பிட்டா ஆளைக் கெடைக்கல. எப்டியாவது சார் கிட்ட சொல்லி ஆப் பண்ணிடுங்க”


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…..


கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2017 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.