Jeyamohan's Blog, page 1675

February 21, 2017

சுவாமி வியாசப்பிரசாத் – காணொளி வகுப்புக்கள்

1

சுவாமி வியாசப்பிரசாத்


 


ஜெ


சுவாமி வியாசப்பிரசாத்தின் வகுப்புகளை கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் மிகக்கடினமானவையாகவே இருந்தன. ஏனென்றால் இந்தவகையான வகுப்புக்கள் எனக்குப் பழக்கமானவை அல்ல. நான் வேதாந்தத்திலும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டவன். ஆனால் நான் பங்கெடுத்த எல்லா வகுப்புகளும் ஒரு ‘ஸ்டேண்டேர்ட் ஆடியன்ஸ்’ காக நடத்தப்படுபவை. ஆகவே ஒரு வகையான ஜனரஞ்சக அம்சம் அவற்றில் எப்போதுமே இருந்துவந்தது. பேசுபவர் மிகத்தெளிவாக நிறுத்தி நிறுத்திப்பேசுவார்.அத்தனை சொற்றொடர்களும் மிகவும் பழக்கமான அமைப்புடன் பலமுறை சொல்லிப்பழகியவை. நகைச்சுவைத்துணுக்குகளும் குட்டிக்கதைகளும் இருக்கும்.


அதோடு அடிப்படையில் அவர்கள் மிக எளிமையாக தத்துவத்தின் நடைமுறைத்தளத்தை மட்டுமே பேசுவார்கள். அதாவது அவர்கள் பேசுவது ‘அப்ளைட் பிலாசஃபி’ மட்டுமே. வியாசப்பிரசாத் நடத்துவது வேறு ஒருவகை. தன் அருகே ஒரே ஒரு மாணவன் மட்டும் அமர்ந்திருப்பதுபோலப் பேசுகிறார். அவன் முன்னரே நன்கு அறிந்தவன் போல நினைக்கிறார். வேதாந்தத்தின் அடிப்படைகளை, உச்சங்களைத்தான் அவர் நடத்துகிறார். மிகக்கூர்மையாக கவனித்து யோசித்து மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும்.


நான் இன்று இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற எல்லா இந்திய தத்துவ ஆசிரியர்களின் வகுப்புகளிலும் போனவன். எந்தச்சந்தேகமும் இல்லாமல் இன்றிருப்பவர்களில் இவர்தான் முதன்மையான ஆசிரியர் என்று சொல்வேன். இத்தகைய ஆசிரியர்களில் ஒருவர் அனேகமாக எவரும் தேடிச்செல்லாமல் இருந்துகொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று பின்னர் தெரிந்துகொண்டேன் .அவரைப்பற்றி முன்னரே நீங்கள் எழுதியிருக்கலாம்.


மகாதேவன்


*


அன்புள்ள மகாதேவன்,


ஆம், உண்மையில் அவருடைய அளவுக்குக் கல்வித்தகுதியும் உண்மையான மெய்யறிதலும் கொண்டவர்கள் மிகச்சிலரே. முக்கியமாக அவர் தன்னை அமைப்பாக ஆக்கிக்கொள்ளவில்லை. ஆகவே பொதுவான கூட்டம் அவருக்கு இல்லை. தெரிவுசெய்த மிகச்சிலருடன் மட்டுமே பேச விரும்புகிறார்.


முன்னரே எழுதியிருக்கிறேன். நாராயணகுருகுலத் துறவியர் ஆனால் பொதுவாக நம் மக்களின் ஆன்மிகம் என்பது நுகர்வு, பயன்பாடு சார்ந்தது. அறிதல் சார்ந்தது அல்ல.


ஜெ


***



அன்புள்ள ஜெ


 


சுவாமி வியாசப்பிரசாத்தின் வகுப்புக்களைக் கூர்ந்து கவனித்தேன். மிக இயல்பாக ஃப்ராய்டிலிருந்து இன்றைய மேலைத்தத்துவ ஆசிரியர்கள் அனைவரும் அவருடைய வகுப்பில் இடம்பெறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வேதாந்தம் என்றால் வெறுமே ஆன்மா பிரம்மம் என்ற செய்திகள் என நினைத்திருந்த எனக்கு மனித உணர்ச்சிகளைப்பற்றியும், மனிதனின் சப்ஜெக்டிவிட்டி பற்றியும், மனித உறவுகள் பற்றியும் வேதாந்தம் பேசுவதைக் கேட்க மிகமிக ஆச்சரியம். அவை இன்றைய அதிநவீன கொள்கைகளுடன் இணைந்து உரையாடி மேலேசெல்பவை என அறிந்தது இனிய அதிர்ச்சி


 


ரவி


 


அன்புள்ள ரவி


 


நாராயணகுருகுலத்துடன் எப்போதும் மேலைத்தத்துவம் உரையாடிக்கொண்டுதான் உள்ளது. நடராஜகுரு ஹென்ஸி பெர்க்ஸனின் மாணவர். நித்யா மேலைத்தத்துவம் கற்றவர். முனிநாராயணப்பிரசாத், வியாசப்பிரசாத் போன்றவர்களும் அவ்வாறே. ஜான்ஸ்பியர்ஸ், பீட்டர் ஓப்பன் ஹைமர், பீட்டர் மொரேஸ் போன்ற மேலைத்தத்துவ அறிஞர்கள் எப்போதும் குருகுலத்தில் இருந்துள்ளனர்


ஜெ


 


சுவாமி வியாசப்பிரசாத்


 


அன்புள்ள ஜெ சார்


சுவாமி வியாசப்பிரசாத்தின் உரையின் எட்டாவது பகுதி மிகமிகமுக்கியமானது. Personality Emotionality போன்றவற்றைப்பற்றிய முக்கியமான நவீனக் கருத்துக்கள். நாம் இதுவரை சிந்தித்த அனைத்தையும் உடைத்து அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்பவை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். மானசீகமாக இங்கிருந்தே அவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்


செல்வா ராஜ்குமார்


*


அன்புள்ள செல்வா


நன்றி. பொதுவாக வரும் இத்தகைய மின்னஞ்சல்களுக்கு அப்பால் மிகக்குறைவாகவே எதிர்வினை வந்துள்ளது. குருகுலத்திற்கு ஒரு வேலிகட்டுவதற்காக நிதிகோரினோம். நாராயணகுருகுலம் நிதியுதவி தேவை ஏழுலட்சம். மூன்றுலட்சம்கூட இன்னும் தேறவில்லை


ஜெ


========================================================================================



=========================================================================================


 


நாராயணகுருகுலத் துறவியர்


வியாசப்பிரசாத் வகுப்புகள்


நாராயணகுருகுலம் நிதியுதவி


ஊட்டி சந்திப்பு 2012

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:32

ஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1

 


4

முன்வரிசையில் சிவப்புச்சட்டையுடன் கணபதி


 


அன்புள்ள ஜெ,


புதிய நண்பர்கள் அறிமுகம் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கே தொடங்கி விட்டது. ஒரு வித அச்சம் கலந்த தயக்கத்துடன் தான் இந்தச் சந்திப்பை எதிர்நோக்கியிருந்தேன். கவுந்தப்பாடியில் இருந்து விஷால் ராஜா, பிரசன்னா, சின்னச்சாமி மற்றும் நவீனுடன் காரில் வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கனவே சில நண்பர்கள் அங்கிருந்தனர். உற்சாகமான முதலறிமுக உரையாடல்கள். ஒவ்வொருவரிடமும் இரண்டு மூன்று முறை பெயரையும் ஊரையும் கேட்டு நன்கு நினைவில் வைத்துக் கொண்டேன். நீங்கள் உள்அறையில் ஓய்வெடுப்பதாகச் சொன்னார்கள்.


 


வீட்டின் பின்புறமிருந்த சிறுநெல்லிமரத்தில் கொத்துக் கொத்தாய் நிறைந்திருந்த நெல்லிக்காய்களை உலுக்கிப் பொறுக்கி கொரித்துக் கொண்டே அங்கு உலாவினோம். சிறிது நேரத்தில் நீங்கள் வெளிப்பட்டீர்கள். அப்போது தொடங்கிய உங்கள் பேச்சு, நாங்கள் விடைபெற்றுக் கிளம்பும் வரை இடைவிடாது எங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.


 


செவ்வியல் படைப்புகள். ஜக்கி. தீவிர இலக்கியம். அரசியல். சிறுகதை விமர்சனம். இசை. தமிழர்களின் அறியாமை. விஷ்ணுபுரம். ஈடுபாட்டுடன் கவனித்தல். பயணம். அறிவியல். ஆச்சரியமான உணவுப்பழக்கங்கள் தொடர்பான ஒவ்வொரு அமர்வுகளும் மிகப் பெரிய திறப்பை அளித்தன.


a


முதல் நாள் மாலை நடை, அதற்குப் பின் நடந்த விவாதம், ஞாயிறு காலை அமர்வு மற்றும் உங்கள் புத்தகக்கட்டிலிருந்து தேடி எடுத்த புத்தகங்கள்; இவை இந்தச் சந்திப்பின் உச்சங்கள்.


 


ஜே. ஜே சில குறிப்புகளின் நாயகன் ஜே. ஜே வை ஒரு நிஜ எழுத்தாளனாகவே நான் நினைத்திருந்தேன். இன்னும் சில பக்கங்கள் படிக்க மீதமிருக்கின்றன. ஜே. ஜே எழுதிய மலையாளப் புத்தகங்களை நீங்கள் ஏன் மொழிப்பெயர்க்கவில்லை என்ற அசட்டுக் கேள்வியின் மூலம் ஜே. ஜே ஒரு புனைவுப் பாத்திரம் என அறிந்தேன். அங்கிருந்த பல நண்பர்களிடம் “பத்தகம் படிக்கும் போது நீங்கள் எந்த இடத்தில் ஜே. ஜே நிஜப் பாத்திரமில்லை என்று உணர்ந்தீர்கள்” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஜே.ஜே வைப் பற்றிய எனது கற்பனை கொஞ்சம் அசைவு கண்டது எனக்கு மிக முக்கியமான நிகழ்வு.


 


எங்களில் பெரும்பாலானவர்கள் கேள்வி கேட்காததால் தூர்தர்ஷன் நண்பரின் கேள்விகள் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. மாலை நடையின் போது நான், பிரபு சாய் பிரசாத், ராஜேஷ் மூவரும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு, ஆளுக்கொரு கேள்வி கேட்க முடிவடுத்துக் கொண்டோம்.


 


காசிப்பயணம் பற்றிய என் கேள்விக்கு இடைவிடாது வந்த கலாய்ப்புகள் நான் கிளம்பும் வரை தொடந்தன. இயல்பான உரையாடலின் போது செந்திலும் கிருஷ்ணனும் பல பயணத் தகவல்களைக் கொடுத்தனர். சேகர் நான் கிளம்பும் போது கூட வெளியே வந்து கலாய்த்து விட்டுச் சென்றார். இடையில் நீங்கள் சொன்ன “திருநாளை போவார்” மற்றும் “பையனுக்குக் கல்யாணம் பண்ணிட்டு, பேரனுக்கும் கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் பொறுமையாப் போங்க” போன்ற ஒவ்வொரு சீண்டல்களும் எனக்கு மிக முக்கியமான குறிப்புகளை உணர்த்தின. இவை என்றும் என் தூக்கத்தை கலைத்துக் கொண்டேயிருக்கும். பயணத்தின் மிதான எனது தீவிரத்தை உண்மையாகவே அதிகப்படுத்த விரும்பிய உங்கள் அனைவரின் பாசத்திற்கும் எனது வணக்கங்கள்.


 


கிருஷ்ணன், செந்தில், சேகர் மற்றும் அவர்களின் நண்பர்கள் செய்த அறிவுத் திருப்பணிக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். பலவகையிலும் எனக்கு இது மிகப்பெரும் அடித்தளம். அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகள்.


கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் எனது அன்புகள்.


 


உங்களை ஜெ என்றே அனைவரும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நானும் அவ்வாறே அழைக்க விரும்பினேன். சார் என்று அழைத்துப் பழகிச் சமாதானமாகி விட்டேன்.


 


உங்களுக்கான நன்றியை, அறிவுலகிற்குள் உங்களுடன் தீவிரமாக நிலைத்திருந்து காட்டவே விழைகிறேன்.


 


அன்புடன்,


கணபதி.


 


ஈரோடு இளையவாசகர் சந்திப்பு 2017


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22

22. எரிந்துமீள்தல்


ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை கோரோஜனையும் புனுகும் கொண்டு தூய்மைப்படுத்தினர். தேவர்களை அடிமைகளாக்கி ஆளும் இருளுலகத்து கொடுந்தெய்வம்போல அனைத்து நறுமணங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மேலும் பெருகி நின்றிருந்தது அக்கெடுமணம்.


அரண்மனை முழுக்கவும் அந்த மணம் பரவி முற்றத்தில் நின்றால்கூட அதை முகரமுடிந்தது. “நோயுற்ற விலங்கின் உடலில் அழுகும் புண்போல் அம்மஞ்சத்தறை” என்றார் ஒரு முதுகாவலர். “இந்நகரிலுள்ள அனைவருக்கும் வலிக்கும் புண் அது, மூத்தவரே” என்றான் இன்னொரு இளையகாவலன். ஒவ்வொரு காலையிலும் அரசனின் இறப்புச்செய்திக்கென நகர் விழித்திருந்தது. ஒவ்வொருமுறை முரசு முதலுறுமலை எழுப்பியதும் முதலெண்ணத்துளி செய்திதான் என்றே செவிகூர்ந்தது.


பின்னர் அவன் இறக்கப்போவதில்லை என இளிவரலாக அவ்வெதிர்பார்ப்பை மாற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகாலம் அங்கு அவ்வுடல் அழுகியபடி கிடக்கும் என்றொரு சூதன் கதை சொன்னான். அதை பெரியதோர் முதுமக்கட்தாழியில் சுருட்டி அமைத்து பரணில் எடுத்து வைப்பார்கள். நெடுங்காலத்துக்குப் பின் அதை எடுத்துப்பார்த்தால் அழுகி நொதித்து ஊறி நுரையெழுந்து மதுவென்றாகியிருக்கும். அதில் ஒரு துளி அருந்தினால் காதற்பெருங்களிப்பை அடையமுடியும்.


ஏழாண்டுகாலம் காதலின் கொண்டாட்டத்தில் திளைத்தபின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அதன் பெருவலியுடன் வாழத்துணிந்த எவருக்கும் அது அளிக்கப்படும். பேரின்பத்தின் பொருட்டு பெருந்துன்பத்தை ஏற்கத் துணிபவர் யோகியர். அவர்கள் உண்ணும் அறிவமுது அது. ஒரு கையில் தேன்கலமும் மறு கையில் நச்சுக்கலமும் என நின்றிருக்கும் ஒரு தேவியின் வடிவில் அதை இங்கு ஓர் ஆலயத்தில் வைப்பார்கள். ஒரு கண் நகைக்க மறு கண் சினக்கும் சிலை அவள்.  ஒரு காலை விண்ணிலும் மறு காலை கீழுலகிலும் விரித்து மண்ணுலகில் உடலமைத்து நின்றிருக்கிறாள். அவளை பிரேமை என்றனர் கவிஞர். விண்ணாளும் முதலாற்றலின் பெண் வடிவம்.


ஒருநாள் மஞ்சத்தறைக்குச் சென்று வழக்கம்போல அரசனைப் போர்த்தியிருந்த போர்வையை மெல்ல விலக்கிய சேடி எப்போதும் மெல்ல தசை நெளிந்து கொண்டிருக்கும் அவன் வயிறு சேற்றுப்படிவென அமைந்திருப்பதைக் கண்டாள். மெல்ல அவன் மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சோடுகிறதா இல்லையா என்பது எப்போதும் அறியக்கூடுவதாக இருந்ததில்லை. அவன் இறந்தபின்னர் அவனுடலில் ஏதோ அறியாத்தெய்வமே வாழ்கிறது என்னும் அலர் அரண்மனையில் அதனால்தான் புழங்கியது.


தன் ஆடையிலிருந்து சிறுநூலொன்றை எடுத்து அவன் மூக்கருகே காட்டினாள் அச்சேடி. அது அசையாமல் நிற்பதைக் கண்டு மூச்சிழுத்து நெஞ்சைப்பற்றி ஒருகணம் நின்றபின் வெளியே ஓடி அங்கு நின்றிருந்த மருத்துவர்களிடம் “அரசர் உயிரவிந்துவிட்டது போலும், மருத்துவரே”  என்று சொன்னாள். அவர்கள் அதைப்போல பலமுறை கேட்டிருந்தனர். “நன்று, முதுமருத்துவர் வந்து நோக்கட்டும்” என்றனர். “இல்லை, உண்மையாகவே. இதை என் உள்ளாழமும் அறிந்தது…” என அவள் சொன்னாள்.


அவர்கள் ஆர்வமில்லாது உள்ளே சென்று அவன் நாடியைத் தொட்டு நோக்கினர். இருப்பதுபோன்றும் இல்லை என்றும் காட்டியது நாடி. முன்னர் பலமுறை அதைத்தொட்டு நாதமெழாமை உணர்ந்து இறந்துவிட்டானென்று எண்ணி மீண்டும் மீண்டும் நோக்கி உயிர்கொண்டுள்ளான் என உறுதிசெய்தமையின் குழப்பம் அவர்களை ஆட்கொண்டது. அவர்களில் இருவர் ஓடிச்சென்று முதுமருத்துவரை அழைத்துவந்தனர்.


முதுமருத்துவர் அரசனின் நாடியை ஏழுமுறை நோக்கியபின் “அரசர் இறந்துவிட்டார். ஐயமில்லை” என்றார். ஏவலர் அப்போதும் ஐயம்கொண்டிருந்தனர். செய்திசென்றதும் ஆயுஸ் நேரில் பார்க்க வந்தான். அவனிடம் முதுமருத்துவர் அரசனின் மண்நீங்கலை சொன்னார். அவன் அரசனின் மஞ்சத்தருகே சற்றுநேரம் நின்றான். குனிந்து அவன் சுருங்கி சுள்ளி என்றாகிவிட்டிருந்த கால்களைத் தொட்டு தலையில் வைத்து வணங்கியபின் திரும்பி தன்னருகே நின்றிருந்த அமைச்சரிடம் “ஆவன செய்க!” என்றான்.


அரசன் விண்ணேகியதை அறிவிக்க முகக்கோட்டைமேல் எழுந்த பெருமுரசம் முழங்கலாயிற்று. ஆனால் அரசனின் இறப்பை எதிர்பார்க்கும் புலன்கள் முன்னரே மழுங்கிவிட்டிருந்தமையால் முதலில் அதை எவரும் அடையாளம் காணவில்லை. செவிமங்கி பிற ஒலி ஏதும் கேட்காது ஆன முதியவர் ஒருவர்தான் “அரசர் நாடு நீங்கினார் போலும்” என்றார். “என்ன?” என்றான் இளையவன் ஒருவன். அவர் தயங்கி “அந்த முரசொலி!” என்றார்.


அனைவரும் ஒரே தருணத்தில் திகைத்து “ஆம்!” என்றனர். மறுகணமே அம்முரசோசை சொல்லென மாறி பொருள் கொள்ளலாயிற்று. “சந்திரகுலத்து அரசன் புரூரவஸ் மண்மறைந்து விண்ணேகினான். புகழ்கொண்டு உடல் துறந்தான்!” நகரம் ஆர்த்தெழுந்தது. “நீடுவாழ்க அரசர். நெடும்புகழ் நின்று ஓங்குக!” என்று வாழ்த்து கூவினர். தெருக்களில் கூடிநின்று தங்கள் பூசெய்கை அறைகளிலிருந்து தட்டுமணிகளையும் செம்புக்கலங்களையும் கொண்டுவந்து சீராகத் தட்டி ஒலிக்கத் தொடங்கினர். சற்றுநேரத்தில் குருநகரமே மாபெரும் இசைக்கருவி என அதிர்ந்துகொண்டிருந்தது.


உயிர் நீத்த அரசனுக்கு முறைமை செய்யும் பொருட்டு தாலங்களில் சுடர், நீர், மலர், கனி, பொன் என்னும் ஐந்துமங்கலப் பொருட்களும் மஞ்சளரிசியும் ஏந்தி தலைப்பாகைகளோ அணிகளோ இன்றி மக்கள் அரண்மனை நோக்கி நிரை நிரையாகக் குவிந்தனர். அரண்மனைமுற்றம்  தலைகள் செறிந்து கருமைகொண்டது. அரண்மனைக்காவலர் எவரையும் கட்டுப்படுத்தவோ ஆணையிடவோ இல்லை. பேச்சில்லாமலேயே அரண்மனை எறும்புப்புற்றென சீராக இயங்கியது.


அரண்மனைக்குள் தங்கள் அறையில் மூதரசியும் அரசரும் விழிநீர் வார ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்கள் முழுத்தனிமைக்குள் எட்டுத்திசை வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அமைச்சர் சூழ ஆயுஸ் வந்து செய்தியைச் சொன்னபோது மூதரசர் கதறியழுதபடி நெஞ்சில் அறைந்துகொண்டார். அவர் கைகளை எட்டிப் பற்றிக்கொண்டாள் முதுமகள். அமைச்சர் அருகே செல்ல ஆயுஸ் வேண்டாம் என கைகாட்டினான்.


முதியவரை துணைவி மெல்லப்பற்றி படுக்கையில் படுக்கவைத்தாள். அவர் உடலில் மெல்லிய வலிப்பு வந்துசென்றது. அவர் பற்கள் கிட்டித்து கண்கள் செருகியிருந்தன. முதியவள் மெல்ல சாமரத்தால் வீசிக்கொண்டு அருகே அமர்ந்திருந்தாள். அவளுடைய மெல்லிய உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. சுருக்கங்கள் செறிந்த கன்னங்களினூடாக கண்ணீர் வழிந்தது.  பெருத்த விம்மலோசையுடன் முதியவர் மீண்டு வந்தார். தன் துணைவியின் கைகளைப்பற்றி நெஞ்சோடணைத்துக்கொண்டு  விம்மி அழுதுகொண்டே இருந்தார். ஆயுஸும் அமைச்சர்களும் ஓசையின்றி விழிபரிமாறியபின் திரும்பி நடந்தனர். அதன்பின் அவர்கள் பிறரிடம் ஒருசொல்லும் பேசவில்லை.


ஆயுஸ் முகமுற்றத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் அரசர் மண் மறைந்ததை முறைப்படி அறிவித்தான். அவர்கள் “பேரறத்தான் புரூரவஸ் வெல்க! சந்திர குலத்து பெரும்புகழ் வாழ்க!” என்று கண்ணீருடன் கூவினர். இறப்பில் குவியம் கொண்ட புரூரவஸின் நற்பண்புகள் அவர்களை துயர்வெறி கொள்ளச்செய்தன. இறப்பு என்னும் பேருரு தங்களை அச்சுறுத்தி அத்தனை நற்பண்புகளையும் மறக்கவைத்து அவனை புறக்கணிக்கச்செய்ததை எண்ணியபோது எழுந்த குற்றவுணர்ச்சி உடன் இணைந்துகொண்டது.


ஈமச்சடங்குகள் இயற்றும்பொருட்டு வைதிகர் நூற்றொருவர் அரண்மனைக்கு வந்தனர். ஏழு நிமித்திகர் களம்பரப்பி அரசன் மண் மறைந்த பொழுதைக் கணித்து நாற்பத்தொரு நாட்களில் அவன் விண்ணுலகு சேர்வது உறுதி என்றனர்.  முற்றத்தில் அவன் உடல் கொண்டு வைக்கப்பட்டு குலமூத்தார் சூழ்ந்தமர்ந்து முறை செய்தபோது ஒரு தொல் சடங்கைச் செய்யும் அமைதியும் ஒழுங்குமே அங்கு நிலைத்தது. நிரையாக வந்து அவன் காலடியில் மங்கலப்பொருள் படைத்து மலரிட்டு வணங்கி சுற்றிச்சென்றனர் மக்கள். அவனுடன் குருதியுறவுகொண்ட மூத்தகுடிகளில் அவனுக்கு தந்தை, உடன்பிறந்தார், மைந்தர் முறை கொண்டவவர்கள் அவன் முகத்தில் வாய்க்கரிசியிட்டு இடம் சுற்றி சென்றமர்ந்து கொண்டிருந்தனர்.


இறுதியில் மூதரசரையும் அரசியையும் நான்கு ஏவலர் கை பற்றி அழைத்து வந்தனர். மூதரசர் மூர்ச்சையில் கொண்டுவரப்படுபவர் போலிருந்தார். மூதரசி உள்மடிந்த மெல்லிய உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். முற்றத்தை அடைந்ததும் மூதரசர் திரும்பி எங்குள்ளோம் என நோக்கினார். விழி சென்று ஒருகணம் மைந்தனின் உடலைப்பார்த்ததும் அறியாது உடைந்து அடிபட்ட விலங்கென குரலெழுப்பி நடுங்கினார். அவனைத் தூக்கி வந்த முதிய வீரர் “அரசே!” என்று மெல்லச் சொல்லி அணைத்து முன்னால் இட்டுச் சென்றார்.


அரசியோ அங்கிலாதவள் போலிருந்தாள். சரடுகளால் இயக்கப்பட்ட பாவையென அவள் உடல் அசைந்தது. இருவரும் மும்முறை உடல் சுற்றி வந்து குல மூத்தார் அளித்த மலரையும் அரிசியையும் அவன் கால்களிலும் முகத்திலும் வைத்து மீண்டபோது முதற்படியிலேயே மூதரசர் நினைவழிந்து விழுந்தார். கூட்டம் ஓசையிட்டு சளசளக்க தளபதி ஒருவன்  ”அமைதி!” என ஆணையிட்டு அமையச்செய்தான். அரசரை போர்வையொன்றில் படுக்கவைத்து நான்குமுனைகளையும் பற்றித் தூக்கி உள்ளே கொண்டு சென்றார்கள்.


மூதரசி தடுமாறும் சிறிய அடி வைத்து செதுக்கிய மரப்பாவை போன்ற சுருங்கிய முகத்துடன் கூப்பியகைகளுடன் அவரைத் தொடர்ந்து சென்றாள்.  அவர்கள் செல்வதை விழிநிலைத்து நோக்கி நின்றனர் மக்கள். அவர்கள் நோக்கு மறைந்ததும் நீள்மூச்சு ஒன்று அனைவரையும் தழுவியபடி எழுந்தது. சூதன் ஒருவன் “துயர்கொள்ளுதல் ஒரு தவம்” என மெல்லியகுரலில் சொன்னான். அனைவரும் திரும்பிநோக்க அவன் தன் யாழின் நரம்பில் விரலை ஓட்டிக்கொண்டிருந்தான்.


ஆயுஸ் உடைவாளேந்தி தந்தையின் கால்மாட்டில் நின்றான். ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ் இருவரும் அவனுக்கு இருபக்கமும் வாளேந்தி நிற்க பின்னால் இரு சேடியரின் ஆடைகளைப்பற்றியபடி விஜயனும் ரயனும் நின்றனர். ஜயனை ஒரு முதுசேடி இடையில் வைத்திருந்தாள். குலச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. அரசனின் ஏழு மூத்தவர்களின் சிதைக்குழிகளில் வைக்கப்பட்ட நீர் அவன் மேல் தெளிக்கப்பட்டது. பன்னிரு குலங்களின் சார்பிலும் பட்டுகள் போர்த்தப்பட்டன. பன்னிருகுடிகளைச் சேர்ந்த பன்னிரு மூதன்னையர் அவனை தங்கள் மகன் என கொண்டு பாலூற்றி வணங்கினர். பன்னிருகுடியின் பன்னிரு சிறுவர் அவனை தம் தந்தையென எண்ணி நீரூற்றி கால்கழுவி வணங்கினர்.


பின்னர் வைதிகர்கள் அவன் உடலை கங்கைநீரூற்றி தூய்மை செய்தனர். வேதச்சொல் சூழ அவனை வாழ்த்தி விண்ணேற்றம் கொடுத்தனர். குடிமூத்தார் கிளம்புக என ஆணையிட்டதும் குரவையொலியும் வாழ்த்தொலியும் சூழ அவன் உடலை பசுமூங்கில் பின்னிக்கட்டி மலர் அணிசெய்த பாடை மேல் ஏற்றிவைத்தனர். முரசுகள் முழங்கின. கொம்புகளும் குழல்களும் சங்கும் மணியும் இணைந்துகொண்டன.



 imagesஅரசனின் உடல் அரசகுடியின் இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. வேதமோதிய அந்தணர் குழு முன்னால் செல்ல  இசைச்சூதர்கள் இசையுடன் தொடர்ந்தனர். வாழ்த்தொலிகளுடன் அவன் குடிநிரைகள் பின்னால் சென்றனர். அவன் மணந்த தேவியர் மங்கலக்குறி களைந்து மரவுரி அணிந்து விரிந்த தலையுடன் நெஞ்சை அறைந்து அழுதபடி அரண்மனை முற்றத்தின் எல்லைவரை வந்து அங்கு விழுந்து மயங்கினர். அரண்மனைப்பெண்டிர் கண்ணுக்குத்தெரியா வரம்பால் கட்டப்பட்ட கடல் அலைகளைப்போல முற்றத்திற்குள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் அலறியும் விழுந்து அழுதுநின்றனர்.


ஆயுஸும் மைந்தர் ஐவரும் இருபுறமும் பாடையை தொடர்ந்தனர். சந்திரகுலத்தின் பதினெட்டு பெருங்குடிகளைச் சேர்ந்தவர்கள் பாடையை தூக்கிச் சென்றனர். போரில் விழுந்த அரசனை முரசொலிக்க கொம்பும் குழலும் துணைக்க வேலும் வாளும் ஏந்திய படை வீரர்கள் களநடனமிட்டு முன்செல்ல தெற்கு நோக்கி கொண்டு செல்வது குருநகரியின் வழக்கம். நோயுற்று முதிர்ந்த அரசனின் இறப்பை குல மூத்தார் பன்னிருவர் முன்னால் சென்று சங்கூதி மூதாதையருக்கு அறிவித்துக்கொண்டு செல்ல ஆண்கள் கழியேந்தி வேட்டைநடனமிட்டுக்கொண்டு செல்வார்கள். இளமையில் நோயுற்று இறந்த புரூரவஸை சிதை நோக்கி கொண்டு செல்கையில் ஒவ்வொருவரிடமும் துயரும் அமைதியுமே விளைந்தது.


குருநகரியின் குறுங்கோட்டையின் தெற்கு வாயிலினூடாக பாடை சுமந்து சென்ற பெருநிரை அப்பால் கடந்து அங்கு விரிந்திருந்த இடுகாடுகளை அணுகியது. நெருஞ்சியும் ஆவாரையும் கொடுவேலியும் எருக்கும் மண்டியிருந்த அப்பாழ்வெளியில் அன்றுதான் வழிசெதுக்கப்பட்டிருந்தது. அந்தப்புதுமண்ணில் மண்புழுநெளியும் கதுப்பில் காலடிகள் மேலும் மேலுமென பதிந்து சென்றன. இருமருங்கும் செறிந்த மரங்களிலிருந்து பறவைகள் கலைந்து எழுந்து வானில் சுழன்றொலித்தன.


அரசர்களுக்குரிய இடுகாடு தென்மேற்கே எழுந்த நடுகற்கள் மலிந்த குன்றொன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. அங்கு ஓடிய சிற்றாறு பூர்வமாலிகா என்றழைக்கப்பட்டது.  அதன் கரையில் மண்குழைத்து இடையளவு உயரத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சந்தனக்கட்டைகளால் ஆன சிதை ஒருக்கப்பட்டிருந்தது. நெய்யும் தேன்மெழுகும் கொம்பரக்கும் ஒருபுறம் கடவங்களில் காத்திருந்தன. குங்கிலியமும் குந்திரிக்கமும் ஜவ்வாதும் புனுகும் கோரோஜனையும் பிற நறுமணப்பொருட்களும் மறுபால் வைக்கப்பட்டிருந்தன. பதினெட்டு மலர்க்கூடைகளில் ஏழுவகை மலர்கள் நீர் தெளித்து வாடாது பேணப்பட்டிருந்தன.


இடுகாட்டுத் தலைவன் தொலைவில் எழுந்த ஓசையைக் கேட்டதும் கைகாட்ட வெட்டியான்கள் எழுவர் எழுந்து தங்கள் வெண்சங்குகளை ஊதினர். அவர்களின் கலப்பறைகள் ஒலிக்கலாயின. மரங்கள் நடுவே வண்ணங்கள் ஒழுகி ஆறென வருவதுபோல அந்த அசைவுநிரை தெரிந்தது. இடுகாடு ஒருக்க அமைக்கப்பட்டிருந்த சிற்றமைச்சர் வேர்வை வழியும் வெற்றுடலுடன் ஆணைகளை இட்டபடி அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தார்.


இடுகாட்டை அணுகிய வைதிகர்கள் வெளியிலேயே நின்று பொற்குடங்களிலிருந்த நீரை மாவிலைகளில் அள்ளி அரசன் செல்லும் பாதையில் தெளித்து வேதம்பாடி  தூய்மைப்படுத்தியபின் வேதமோதியபடியே சென்று பூர்வமாலிகாவில் இறங்கி மூழ்கி மறுபுறம் கரையேறி ஈர ஆடையும் குழலுமாக தங்களை தூய்மைப்படுத்தும் வேதச்சொற்களை உரைத்தபடி அவ்வழியே சென்று மறைந்தனர். குலமூத்தார் முன்னால் சென்று அரசனின் பாடையை இறக்கி வைத்தனர்.


அதுவரை இயல்பாக நடந்து வந்த பலரும் உளம் தளர்ந்துவிட்டிருந்தனர். எங்கோ எவரோ விசும்பும் சிற்றொலி எழுந்தபோது கட்டுகள் அவிழ்ந்து அனைவருமே அழத்தொடங்கினர். சற்று நேரத்தில் அம்மானுடநிரையின் இறுதி வரை தேம்பும் ஒலி எழுந்து அவ்வெளியை சூழ்ந்தது. சிதைச் சடங்குகள் ஒவ்வொன்றாக முடிந்ததும் குலமூத்தார் அரசன் படுக்க வைக்கப்பட்டிருந்த பட்டின் நான்கு முனையையும் பற்றி மெல்ல தூக்கிக்கொண்டு சென்று சிதைமேல் படுக்க வைத்தனர். அவன் உடம்புக்கு மேல் மெல்லிய சந்தனப்பட்டைகள் அடுக்கப்பட்டன. சுற்றிலும் நெய்யும் அரக்கும் தேன்மெழுகும் ஊற்றப்பட்டது.


அரக்கிலேயே எரிமணம் உறைந்திருந்தது. எரியின் குருதி அது என சூதர்சொல் என்பதை ஆயுஸ் நினைவுகூர்ந்தான். அவன் உள்ளம் விழவு ஓய்ந்த களமென உதிரி வீண்சொற்கள் சிதறிக்கிடக்க வெறித்துக்கிடந்தது. வெற்றுவிழிகளுடன் அனைத்தையும் பார்த்தான். பிறிதெங்கோ இருந்துகொண்டும் இருந்தான். அங்கே வாளேந்தி நிற்கவேண்டியவன் ஜாதவேதஸ் அல்லவா என நினைத்தான். ஆனால் வேதத்துறவு கொண்ட அவனுக்கு குருதியும் குலமும் குடியும் இல்லமும் ஏதுமில்லை. அதை எண்ணி அவனுக்காக அவன் பலமுறை வருந்தியதுண்டு. அப்போது அவன் பறவை என்றும் தான் புழு என்றும் தோன்றியது.


“அரசமைந்தர் எழுக…! எரிசெயல் ஆகுக!” என்றார் ஈமச்சடங்குகளை நடத்திய முதுவெட்டியான். ஆயுஸ் சென்று அரசநாவிதன் முன் அமர்ந்தான். அவன் கந்தகம் கலந்த நீரில் கைமுக்கி அவன் குழல்கற்றையை ஈரமாக்கி கூர்கத்தியால் மழித்து முடித்தான். முடி காகச்சிறகுகள் போல அவன் மடியிலும் தரையிலும் விழுந்தது. எவருக்கோ அவை நிகழ்வதுபோல அவன் எண்ணினான். கிண்ணத்தில் இருந்து மலரால் கந்தகநீர் தொட்டு அவன்  தலையில் தெளித்து “அவ்வாறே ஆகுக!” என்றான் நாவிதன். அவனுக்கு ஏழு பொன்நாணயங்களை காணிக்கையாகக் கொடுத்துவிட்டு கைகூப்பியபடி ஆயுஸ் எழுந்தான்.


அவன் உடன்பிறந்தார் இருவரும் இருபுறமும் உடைவாள் கொண்டு தொடர்ந்தனர். சிறுவர்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்களை ஏவிய முதுஏவலர்களின் சொல்லுக்கு ஏற்ப நடந்தனர். முதிய ஏவலர்   ஒருவரின்  இடையில் அமர்ந்து வாயில் சுட்டுவிரல் இட்டபடி வந்த ஜயன்  அங்கு நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தான். வரும் வழியில் ஓசையை அஞ்சி அழுது காலுதறித் துடித்து பின்பு சற்று துயின்று எழுந்த அவன் முகத்தில் கண்ணீரின் இருகோடுகள் உப்பெனப் படிந்திருந்தன. மீண்டும் ததும்பிய கண்ணீர் இமைகளிலும் விழிப்படலங்களிலும் சிதறி இருந்தது.


“நற்பொழுது” என்றார் குலமூத்தார் ஒருவர். பிறிதொருவர் கைதூக்க முழவுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து ஆர்த்தன. புரூரவஸின் புகழ் பாடி சூதர்கள் இசைக்குரல் பெருக்கினர். குடிகள் அழுகையோசை கொண்டன. இடறிய குரலில் வாழ்த்தொலிகளும் கலந்தெழுந்தன. “சந்திரகுல மூதாதை வாழ்க! குருநகரி ஆண்ட பேரரசன் வாழ்க! அறச்செல்வன் வாழ்க! வெல்லற்கரிய பெரும்புயத்தான் வாழ்க!” என ஓசையிட்டனர் மக்கள்.


ஆயுஸின் கையில் மூன்று உறவுமைந்தர் கொண்டுவந்த எரிகுட உறியை அளித்தனர். அனல் பெருக்கப்பட்ட அக்கலத்தை  ஏந்தியபடி சிதையை மும்முறை சுற்றிவந்து அவன் தந்தையின் கால்களில் மலரிட்டு வணங்கினான். மைந்தர் நால்வரும் மும்முறை சுற்றி வந்து கைமலர்த்தி மலரிட்டு வணங்கினர். ஜயனை ஏந்திய முதுஏவலர் அவனை தந்தையின் காலடியில் மெல்ல இறக்கி மலரள்ளி அவன் கையில் கொடுத்து போடும்படி சொன்னார். நாற்புறமும் சூழநின்றவர்களை விரிவிழிகளால் திகைத்து நோக்கியபடி கையை உதறிவிட்டு திரும்பி ஏவலன் தோளை கட்டிக்கொண்டான் ஜயன்.


அரசருக்கு அணுக்கர்களும் குருதிஉறவு கொண்டவர்களும் குல மூத்தாரும் சுற்றி வந்து மலர் தொட்டு எடுத்து அடிபணிந்து சென்னிசூடி வணங்கி விலகியமைந்தனர். “எரியூட்டுக!” என்றார் முதுகுலத்தலைவர். அதுவரை இறுகிய முகம் பூண்டிருந்த ஆயுஸ் விம்மி அழத் தொடங்கினான். “அரசே, அரசர்கள் அழலாகாது” என்று மெல்ல சொன்ன குலத்தலைவர் “எரியூட்டுக!” என்றார்.


ஆயுஸின் கைகள் அவன் உள்ளத்தை அறியாதது போல குளிர்ந்திருந்தன. “எரியூட்டுக, அரசே!” என்று மீண்டும் சொன்னார் குலமூத்தவர் ஒருவர். அவன் விம்மி அழுதபடி ஒரு அடி பின்னெடுத்து வைத்தான். “இது தாங்கள் கொண்ட பேறு. அவருக்கு தாங்கள் அளிக்கும் இறுதிக் கொடை. மைந்தனென தங்கள் கடன்” என்றார் குலமூத்தார். “இல்லை! இல்லை!” என்றபின் மீண்டு விலக பிறிதொருவர் அவன் தோளைப்பற்றி “முறை செய்க, அரசே!” என்றார்.


இரு குலமூதாதையர் அவன் இரு கைகளையும் பற்றி அக்கைகளில் இருந்த அனல்குடத்தை சிதையின் காலடியில் இருந்த நெய்நனைவின் மேல் வைத்தனர். திப் என்னும் ஒலியுடன் நீலச்சுடர் பற்றி எரிந்து மேலேறியது. பசு நீர் அருந்தும் ஓசை எழ செந்நிற நீர்போல் நெய்பட்ட இடமெல்லாம் வழிந்து பரவி மலரிதழ்கள் போல் கொழுந்தாடி எழுந்தது எரி.


அக்கணம் சிதையில் இருந்த புரூரவஸின் உடல் மெல்ல எழுந்தமைந்தது. விறகு விரிசலிடுவது என்னும் ஐயமெழுப்பும்படி  மெல்லிய முனகலொன்று அவன் நெஞ்சிலெழுந்தது. அதை ஆயுஷ் மட்டுமே கேட்டான். உடல்துடிக்க “நிறுத்துக! எந்தை இறக்கவில்லை! எந்தை இறக்கவில்லை!” என்று கூவியபடி நெருப்பின் மேல் பாய்ந்து சிதைமேல் தவழ்ந்து ஏறி புரூரவஸின் இரு கால்களையும் பற்றி இழுத்து சிதையிலிருந்து புரட்டி தரையிலிட்டான்.


நிலத்தில் கவிழ்ந்து விழுந்த புரூரவஸின் உடல் மீண்டும் ஒரு முறை துடித்தது. அந்த வலியை உணர்ந்து முனகியபடி  இடக்கையை சற்றே ஊன்றி தலைதூக்கி வாய்திறந்து அவன் முனகினான். “அரசர் இறக்கவில்லை! அரசர் இறக்கவில்லை!” என்று முன்நிரையோர் கூவினர். என்ன ஏதென்று அறியாமல் பின்னிரையோர் பின்னால் திரும்பி ஓடினர். சிலர் கூச்சலிட்டபடி சிதை நோக்கி வர காவலர்கள் ஈட்டிகளும் வேல்களும் ஏந்தி வேலியாகக் கட்டி அவர்களை மறித்து நிறுத்தினர். கூச்சல்களும் ஓலங்களும் அலறல்களும் அங்கே நிறைந்தன.


“கழுவேற்றுங்கள்! அம்மருத்துவர்களை கழுவேற்றுங்கள்!” என்று யாரோ கூவினார்கள். “கிழித்தெறியுங்கள்! அவர்களின் குலங்களை எரியூட்டுங்கள்!” என்று வேறொரு குரல் எழுந்தது. “ஆம்! ஆம்.. கொல்க… கொல்க!” என கூட்டம் கொந்தளித்தது. விலகியோடியவர்கள் திரும்பவந்து கூடினர். கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டு ஆரவரித்தது.


தீப்புண் பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில்  குடத்திலிருந்த குளிர்நீரை கொண்டு வந்து புரூரவஸின் மேல் கொட்டினார் குலமூதாதை ஒருவர். சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் தந்தையின் உடலை பற்றிக்கொண்டு  ”எந்தையே! எந்தையே!” என்றனர். விஜயனும் ரயனும் ஏவலர் உடல்களில் முகம் புதைத்தனர். ஜயன் விழித்து நோக்கி திரும்பி ஒரு காகத்தை முகம் மலர்ந்து சுட்டிக்காட்டினான்.


புரூரவஸின் உதடுகள் வெயில் பட்ட புழுக்களென நெளிந்தன. “நீர் கொண்டு வாருங்கள்! இன்நீர் கொண்டு வாருங்கள்!” என்றனர் சிலர். ஒருவர் கொண்டு வந்த குளிர் நீரை மூன்று முறை உதடுநனைந்து வழிய உறிஞ்சிக்குடித்ததும் புரூரவஸ் கண் விழித்தான். “எங்கிருக்கிறேன்?” என்றான். அவன் உதடசைவால் அதை உணர்ந்தாலும் என்ன சொல்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் மறுமொழி சொல்வதற்குள் அவனே புரிந்துகொண்டு  ”இடுகாடா?” என்றான்.


ஆயுஸ் அஞ்சி பின்னடைந்தான். குலமூத்தார் ஒருவர் “அரசே, தாங்கள் இறந்து மீண்டிருக்கிறீர்கள்” என்றார்.  ”ஆம், நான் அங்கு சென்று அவளைக் கண்டேன். மீளும்படி அவள் சொன்னாள்” என்றான். பின்னர் தெளிவுற அனைத்தையும் உணர்ந்தவனாக இருகைகளையும் ஊன்றி உடலை மெல்ல மேலே தூக்கி “நிமித்திகர்களோ மருத்துவர்களோ அவர்களின் குடிகளோ எவ்வகையிலும் தண்டிக்கப்படலாகாது. இது அரசாணை” என்றான்.


அருகே நின்ற அமைச்சர் “ஆணை, அரசே!” என்றார். திரும்பி துணை அமைச்சர்களை நோக்கி ஓடிச்சென்று  ”இது அரசாணை! நிமித்திகர்களோ மருத்துவர்களோ பிறரோ எவ்வகையிலும் தீங்கிழைக்கப்படலாகாது. முரசறைந்து அறிவியுங்கள்!” என்றார். அவர்கள் கைகளை வீசியபடி ஓடினர். எவரோ ஒருவர் “பேரறத்தார் எங்கள் அரசர் வெல்க! நீணாள் வாழ்க சந்திரன் பேர்மைந்தர்” என்று கூவ கூட்டம் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.


புரூரவஸ் மீண்டும் விழிகளை மூடியபின் “இனி நான் மீண்டெழுவேன்… ஆம்…” என்றான். “ஆம் தந்தையே, தாங்கள் மீண்டெழுவீர்கள். நூறாண்டுகாலம் வாழ்வீர்கள்” என்று ஆயுஸ் சொன்னான். அப்போதுதான் அவன் கால்களும் கைகளும் எரி நெய்யால் தசையுருகி வழிந்துகொண்டிருப்பதை அமைச்சர்கள் கண்டனர். “இளவரசரை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் உடனே! வழிவிடுங்கள்!” என்றனர். “ஒன்றுமில்லை… நான் மீண்டுவிடுவேன்” என்றான் ஆயுஸ் முகம் மலர்ந்திருக்க, விழிநீர் வழிய.


“இளவரசரை அழைத்துச் செல்லுங்கள்” என்று குலமூத்தார் கூவினர். வெண்பட்டொன்றை விரித்து அதில் படுக்க வைத்து ஆயுஸை தலைக்கு மேல் தூக்கிச் சென்றனர். அவனுக்குப்பின்னால் புரூரவஸையும் ஏவலர் கொண்டு சென்றனர். “அறம் இறப்பதில்லை. தன் சிதையிலிருந்தும் முளைத்தெழும் ஆற்றல் கொண்டது அது” என்று ஒரு புலவர் தன் இரு கைகளையும் விரித்து கூவினார். “அறச்செல்வர் வாழ்க! சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க!” என்று குருநகர் குடிகள் எழுப்பிய வாழ்த்தொலிகளால் இடுகாட்டுவெளியின் அனைத்து இலைகளும் அதிர்ந்தன. அவ்வோசைகளின் மேல் மிதந்து செல்வதுபோல் இருவரும் ஒழுகி அகன்று சென்றனர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:30

இரு அறிவிப்புகள்

நண்பர்களுக்கு,


 


வெண்முரசு தளம் சிலநாட்களாக இயங்கவில்லை. அதற்கு நிதியுதவுசெய்து நடத்திவந்த ஒரு நண்பர் விலகிக்கொண்டதும் அவரைத் தொடர்புகொள்ளமுடியாமையுமே காரணம். இப்போது சரியாகிவிட்டது, அதை வாசகர்கள் இனிமேல் வாசிக்கலாம். https://venmurasu.in/


 


நான் கேந்திர சாகித்ய அக்காதமி இளம் இந்திய எழுத்தாளர்களுக்காக நடத்தவிருக்கும் ஒரு கருத்தரங்கை தொடங்கிவைக்க நாளை டெல்லி செல்கிறேன். நாளையும் நாளை மறுநாளும் டெல்லி இண்டியா இண்டர்நேஷனல் விடுதியில் தங்கியிருப்பேன். ஆர்வமுள்ளவர்கள் சந்திக்கலாம். மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:22

February 20, 2017

ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017

4


 


புதிய வாசகர் என்னைச் சந்திக்கும்படியான நிகழ்ச்சிகள் நடத்தவேண்டுமென்ற எண்ணம் 2015 விஷ்ணுபுரம் விழா முடிந்ததுமே எழுந்தது. அவ்விழாவில் பெரும்பாலும் நான் நன்கு அறிந்த நண்பர்கள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள் என்றும், நெருங்கி உரையாடுவதற்கான தடை இருந்தது என்றும் சொன்னார்கள். ஆகவே முற்றிலும் பழைய வாசகர்களை விலக்கி புதுவாசகர்களுடன் மட்டுமே அமர்ந்து இரண்டு நாட்களைச் செலவழிக்கும் எண்ணம் ஏற்பட்டது. புதியவாசகர்களுக்காக மட்டும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை அமைக்கலாமென எண்ணினேன்


 


இருபது பேர் வரைக்கும் ஊட்டியில் தங்கி பேசலாமென முடிவெடுத்தோம். அவ்வளவுபேர் மட்டும் இருந்தால்தான் ஓரளவு விவாதம் நிகழமுடியும் என தோன்றியது. அறிவிப்பை தளத்தில் வெளியிட்டபோது இருபது பேருக்குள் தான் வருவார்கள் என்றே நினைத்தோம். ஆனால் நூறு பேருக்கும் மேல் விண்ணப்பித்திருந்தமையால் பிறிதொரு சந்திப்பை  ஈரோட்டில் காஞ்சிக்கோயில் அருகே என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் அவர்களின் பண்ணையில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 6 மற்றும் ஏழாம் தேதிகளில் ஏற்பாடு செய்தேன் . அச்சந்திப்பு முதலில் நடந்தது. அதன்பின்புதான் ஊட்டி, 13 14 ஆம்தேதிகளில்.பின்னர் கொல்லிமலையிலும் மீண்டுமொரு சந்திப்பை கோவையிலும் செய்தோம்.


 


ஏறத்தாழ நூற்றியிருபது பேர் அந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டனர். அவர்களில் எண்பது பேருக்கு மேல் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிற்கு வந்தனர். அவர்களுக்கிடையே ஒரு மிகச்சிறந்த உரையாடலும் நட்புப்பரிமாறலும் நிகழ்ந்துவிட்டிருப்பதை அப்போது உணர்ந்தேன். விவாதித்தும் படைப்புகளை பரிமாறிக் கொண்டும் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதை விஷ்ணுபுரம் விழாவில் கண்டபோது, நினைத்ததற்கும் மேலாக இந்தச் சந்திப்புகள் பயன் தருவதை உணர்ந்தேன். ஆகவே இம்முறை மீண்டும் ஒரு புதிய வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமா என்று தோன்றியது.


 


சென்ற முறை வராதவர்கள் மட்டுமே அடங்கிய ஒரு சந்திப்பு இது. மீண்டும் இத்தகைய சந்திப்புகளை திட்டமிட்டபோது  செய்யும் போது எத்தனை பேர் எஞ்சியிருப்பார்கள் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் தளத்தில் அறிவித்தபோது ஏறத்தாழ அறுபது பேர் வரை வருவதாக சொன்னார்கள். இருபது பேருக்கு மட்டுமே இடம் என்பதனால் அவர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஈரோடு காஞ்சிக்கோயில் செந்தில்குமார் பண்ணையிலேயே மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது


b


இத்தகைய சந்திப்புகளின் நோக்கமென்பது ஒரு திறந்த உரையாடல் மட்டுமே. பல ஆண்டுகளுக்குமுன்பே நான் சுந்தரராமசாமியைச் சந்திக்கும்போது இருந்த மனநிலையை என்னால் இன்று உணர முடிகிறது, குழப்பமும் ஆர்வமும் தயக்கமும் சொல்திரளாமையின் திணறலும். சுந்தர ராமசாமி எப்படி எனக்கும் க.நா.சுவுக்கும் நடுவில் இருந்தாரோ அதே போல அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இன்று வரும் இளைய வாசகர்களுக்கு நடுவே நானிருக்கவேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. ஆகவே தான் இந்தச் சந்திப்புகள்.


 


இச்சந்திப்புகளில் சில கறாரான விதிகளை நாங்கள் கொண்டிருப்பதுண்டு. அதற்கு முக்கியமான காரணம்  நமது குடும்பச்சூழலிலும் கல்விச்சூழலிலும் ஒருவகையான தீவிரமின்மையே பயிற்றுவிக்கப்படுகிறது என்பதே. வேலையில் கூட அந்த தீவிரத்தை நாம் கொள்வதில்லை. கட்டாயமின்றி எதையும் நாம் விரும்பிச்செய்வதில்லை. ஆனால் இலக்கியம் என்பது தீவிரம் இருந்தால் மட்டுமே எவ்வகையேனும் பயன்தரக்கூடிய துறை. சற்றே தீவிரம் இழந்தாலும் முற்றிலுமாக கைவிட்டுப்போகக்கூடிய ஒன்று. உண்மையான தீவிரம் இல்லையேல் இலக்கியம்பக்கம் வராமலிருப்பதே மேல்.


 


சென்றகாலங்களில் மிகச்சிலர் தங்கள் இயல்பான தீவிரத்தால் இலக்கியம்பக்கமாக வந்தனர். அவர்களிலேயே பலர் வெறும்குடிகாரர்களாக, சில்லறை வம்பாளர்களாக மிகவிரைவிலேயே பொருளிழந்தனர். இன்றோ இணையம் அனைத்துத்தளங்களுக்கும் சென்று அனைவரையும் அழைக்கிறது. ஆகவே தன்னியல்பிலேயே தீவிரத்துடன் இலக்கியத்திற்கு வரக்கூடியவர்கள் பலர் இருந்தாலும்   தீவிரமாக இருக்கவேண்டும் என்ற தகவலே தெரியாத ஒரு பின்புலத்திலிருந்து வருபவர்களும் கணிசமான பேர் உள்ளனர். தீவிரமானவர்களை தெரிவுசெய்யவும், வருபவர்களுக்குத் தீவிரத்தைக் கற்பிக்கவும் வேண்டியிருக்கிறது இன்று.


 


உதாரணமாக இருபது பேர் அல்லது இருபத்தைந்து பேருக்கான இடம் தான் இச்சந்திப்புகளில் இருக்கிறது. ஆகவே இருபது பேரை நாம் தேர்வுசெய்து அழைக்கிறோம். வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு மிகச்சாதாரணமான காரணங்களுக்காக பத்து பேர் வராமல் இருந்தால் வருவதற்கு தயாராக இருக்கும் பத்துபேருடைய இடத்தை அவர்கள் பறிக்கிறார்கள் என்பதே உண்மை. அதோடு அனைத்து ஏற்பாடுகளும் வீணாகவும் வழிவகுக்கிறார்கள்


 


ஆர்வமில்லாமல் வந்துவிட்டு மறுநாளே கிளம்பிச்செல்லும் ஒருவரும் தீவிரமான பிறிதொருவரின் இடத்தை வீணடிக்கிறார்.இச்சந்திப்புக்கு புனேயிலிருந்துகூட வந்திருக்கிறார்கள் என்னும்போது  உண்மையான ஆர்வத்துடன் கலந்துகொள்பவர்கள் இதற்கு அளிக்கும் முக்கியத்துவம் புரிகிறது. இந்த மொண்ணைகள் அவர்களின் இடத்தை வீணடிக்கிறார்கள்.


e


இது மிகச்சங்கடமூட்டக்கூடிய விஷயம். இது மொண்ணைகளுக்கு புரிவதும் இல்லை. ஆகவே தான்  வருவேன் என்று சொல்லிவிட்டு உரிய காரணத்தை முன்னரே தெரிவிக்காமல் வராமல் இருப்பவரை  என்னுடைய நட்பு வட்டாரத்திலிருந்து முற்றிலும் விலக்கி வைப்பது என்னுடைய இயல்பு. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாள் முழுக்க எந்த தருணத்திலும் அவரை நான் நெருங்கவிடமாட்டேன். ஒரு சம்பிரதாயமான ஹலோவுக்கு அப்பால் செல்லமாட்டேன்.ஏனென்றால் எனது தீவிரத்தை அவர் குறைத்துவிடக்கூடும் என்று அச்சப்படுகிறேன். தீவிரமின்மை என்பது நம் சூழலின் மிகப்பெரிய தொற்றுநோய். நம்மை ஒருவகை அறிவுச்சோம்பல் சமூகமாக நிலைநிறுத்துவது. ஆகவே நோய்த்தொற்று கொண்டவரை முழுமையாக விலக்குவதே உகந்தவழி, இருபத்தைந்து ஆண்டுகளாக என் நிலை இதுவே,பிறருக்கும் இதையே பரிந்துரைப்பேன்.


 


ஒவ்வொருமுறையும் அப்படிச் சிலர் வருவதுண்டு. இந்த முறையும் அறுவர் எக்காரணமும் சொல்லாமல்  வராமலிருந்தார்கள். கடைசிநேரத்தில் சிலரைச் சேர்க்கவேண்டியிருந்தது. அவர்கள் முன்பதிவுசெய்யாமல் வரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள். ஈரோட்டைச் சேர்ந்த  ஹேமானந்தன் என்பவர்   வந்து ஒருநாள் சந்திப்பில் கலந்துகொண்டு வேறு ஏதோ சாதாரண காரணத்தை பிறரிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். வந்த அன்றே அவர் மறுநாள் நண்பரைச் சந்திக்கச்செல்வதாகவும் ஒருநாள் மட்டுமே கலந்துகொள்ளும் எண்ணம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.


 


செல்வன் என்னும் சேலத்தைச் சேர்ந்த   நடுத்தரவயதானவரும் அவ்வாறு முதல்நாள் வரும்போதே வேறு ஒரு வேலை இருப்பதனால் முதல்நாளே கிளம்பிவிடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். எந்த அறிவுத்தகுதியும் இல்லாத இவர்கள் ஏன் முண்டியடித்து கிளம்பி வருகிறார்கள் என்பதைப்போல புதிர் ஏதுமில்லை. ஒதுங்கியிருப்பதே இந்த ஆட்கள் இலக்கியத்திற்குச் செய்யும் நன்மை,


 


பொதுவாக நடுத்தரவயதானவர்களை சந்திப்பதில் எனக்கு ஆர்வமில்லை. எந்தத் தீவிரமும் அற்றவர்களாகவும், வெற்றுப்பேச்சில் ஆர்வம் கொண்டவர்களாகவுமே அவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அளிக்கும் ஏமாற்றத்தை கடந்துசெல்லலாம். ஆனால் இளைஞர்களின் மொந்தன்வாழைப்பழத்தன்மை சோர்வை அளிப்பது. எனது நண்பர் வட்டாரத்தில் எந்த நிலையிலும் இந்த ஹேமானந்தனைப்போன்ற ஆசாமிகள் நாளை உள்ளே வரக்கூடாது என்பது என்னுடைய கருத்து. [நண்பர்களால் இத்தகையோரின் பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் அடிக்கடி ஆட்கள் சேர்ந்தவண்ணமே இருப்பார்கள்]


 


ஏனெனில் இலக்கியம் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய சிற்றகலின் வெளிச்சத்திற்குள் நிற்கக்கூடிய தகுதி கொண்ட மனிதர்கள் அல்ல அவர்கள். எப்படி தகுதியானவர்களை உள்ளே கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறோமோ அவ்வளவு தகுதியற்றவர்களை வெளியே தள்ள வேண்டுமென்பதும் முக்கியமானது. அந்த வெளியே தள்ளல் சரியான முறையில் நிகழாவிட்டால் இந்நிகழ்ச்சிகளில் இத்தகைய முன்னேற்பாடுகள் அனைத்தும் வீணாகப்போகும். இதுவும் ஒரு முகநூல் அரட்டை கும்பல் போல ஆகிவிடக்கூடும்.


 


இந்த கறாரான முன்விதிகள் காரணமாக இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலுமே  ஒருசில விதிவிலக்குகள் தவிர தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாசகர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எல்லாச்சந்திப்புக்ளும் மிகுந்த உற்சாகத்துடனும் வேடிக்கையுடனும் அதே சமயம் மிகத் தீவிரமான விவாதங்களுடனும் நிகழ்ந்தன. சற்றும் வீண் ஆகாத பொழுதுகள் எஞ்சின.


a


 


17 ஆம் தேதி மாலை நான் நாகர்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு கிளம்பி சென்ற போது நெடுங்காலத்திற்குப்பின் ஒரு ரயில்பயணம் எத்தகைய துயர் மிக்கது என்பதை அறிந்தேன். சொந்தச் செலவில் ரயிலுக்கு டிக்கெட் போட்டமையால் ஸ்லீப்பர் கோச் போதும் என்று முடிவு செய்து செல்வதற்கும் வருவதற்கும் அதிலேயே முன்பதிவு செய்தேன்.


 


என் வீட்டில் உள்ள நூலகத்தில் பிறிதொருமுறை நான் படிக்க வாய்ப்பற்றவை என்று எனக்குத் தோன்றிய நூல்கள் சிலவற்றை படிக்க வாய்ப்புள்ள நண்பர்களுக்கு வழங்குவதை இப்போது செய்து வருகிறேன். ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளிலேயே காகிதநூல் என்னும் வடிவம் பொருளிழக்கக்கூடும். நூல்கள் வெறுமே தேங்கிக்கிடப்பதில் பொருளில்லை.  சென்ற ஆண்டின் இளைஞர்சந்திப்புகள் முதலேயே ஒவ்வொரு முறையும் என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு நூல்களுடன் சென்று அவற்றை அங்கு வருபவர்களுக்கு இலவசமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். [ஆனால் அனைத்துமே என்னால் பிறருக்குப் பரிந்துரைக்கப்படும் குறைந்தபட்சத் தகுதிகொண்ட நூல்களே. பொருட்படுத்தப்படத் தேவையற்ற நூல்களை இங்கு ஒரு நூலகம் நடத்துபவர் வந்து வாங்கிச்செல்வார்]


 


இம்முறையும் சுமார் முப்பது கிலோ அளவுக்கு புத்தகங்களை கட்டி எடுத்துக் கொண்டேன். ஆட்டோவில் சென்று ரயில் நிலையத்தில் இறங்கினேன். நாகர்கோயில் நிலையத்தில் மாலையில் போர்ட்டர்கள் கிடையாது. வழக்கமாக நான் ஏறும் ஏசி பெட்டி வரைக்கும் அந்த பொட்டலத்தை தரையிலேயே இழுத்துக்கொண்டு ஒருவழியாக சென்று சேர்ந்த போதுதான் மறுஎல்லையில் ஸ்லீப்பர் கோச்சின் ஒன்பதாவது பெட்டியில்தான் இடம் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அங்கிருந்து திரும்ப சுமையை கொண்டு சேர்ப்பதற்குள் கைகள் இற்றுவிட்டிருந்தன.


c


ஏ.சி பெட்டியில் போகும் நினைவில் போர்வை தலையணை எதுவுமே எடுத்துச் செல்லவில்லை. பிப்ரவரி மாத இறுதியில் ரயில்பெட்டியே குளிர்ந்து வெடவெடத்தது.உடலை சுருட்டி ஒடுக்கிக் கொண்டு ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக போட்டுக்கொண்டு அரைமயக்கத்தில்தான் ஈரோடு சென்று சேர்ந்தேன். அலாரம் வைத்து எழவேண்டியிருக்கவில்லை, தூங்கவே இல்லை. நான்குமணிக்கு நானே கிருஷ்ணனை எழுப்பினேன்


 


கிருஷ்ணன், சந்திரசேகர், அந்தியூர் மணி முதலிய நண்பர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். வெளியே வந்து டீக்கடை ஒன்றில் டீ குடித்தபடி காத்திருந்தோம். சிவா வந்துசேர்ந்தார். பாரி சற்றுகழித்துவந்தார்.வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்துகொண்டிருந்தனர். செந்தில்குமார் சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் வரவேண்டும். சைதன்யாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சொன்னாள். அவளுடைய தோழி இன்னொரு சைதன்யா கோவையிலிருந்து வருவதாக சொல்லியிருந்தாள். சைதன்யாவுக்கு நான் ரயிலில் டிக்கெட் போட்டேன். ஆனால் கடைசி நிமிடத்தில் பார்த்தால் அது இரவு பதினொன்று மணி அல்ல, காலை பதினொரு மணி, ஆகவே நள்ளிரவில் மீண்டும் கேபிஎன் பேருந்துக்கு முன்பதிவு செய்து இரவில் சென்னையில் பஸ் ஏறி காலை ஆறுமணிக்குத்தான் அவள் வந்து சேர்ந்தாள்


[image error]


அனைவரையும் திரட்டிக் கொண்டு காஞ்சிக் கோயில் பண்ணைக்கு சென்று சேர்ந்தோம். சென்ற உடனே ஒருமணி நேரம் படுத்து தூங்கினேன் அது எனக்கு சற்று புத்துணர்ச்சி வருவதற்கும் வந்து சேர்ந்த நண்பர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடலை ஆரம்பிப்பதற்கும் உதவியாக இருந்தது. விழித்து வெளியே வந்ததும் நேரடியாகவே அறிமுகத்திற்கும் விவாதத்திற்கும் சிரிப்புக்கும் கிண்டலுக்கும் சென்றுவிட்டோம்.


 


இச்சந்திப்புகளின் வழக்கம்போல எந்த விதமான திட்டங்களும் இன்றி, கறாரான அமர்வுகளோ பேசுபொருள் நெறி முறைகளோ இல்லாமல் இந்த உரையாடல் அமைந்திருந்தது. சுற்றி அமர்ந்து நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, விவாதிப்பது என்பது தான் இந்த அமர்வுகளின் நோக்கம். இயல்பாகவே , கேள்விகளுடன் இருப்பவர்கள், அதைக் கேட்கும் துடிப்பு இருப்பவர்கள் சற்று அதிகமாக பேச பிறர் சற்று அமைதியாக இருப்பார்கள். அமைதியாக இருப்பவர்களிடம் எதையாவது கேட்டு அவர்களிடம் பேசி அவர்களிடமிருந்து ஒரு உரையாடலைத் தொடங்குவது என்னுடைய வழக்கம். அப்போது கூட அவ்வப்போது சிலர் விடுபட்டுவிடுவதுண்டு. ,


 


இந்த அவைகளில் எதைப்பேசவேண்டும் என்பது இப்போது ஒருமாதிரியாக தெரிந்துவிட்டிருக்கிறது. ஒன்று, கேள்விகளை எப்படிக் கேட்கவேண்டும் , அதற்கான சொற்றொடர்களை எப்படி அமைக்கவேண்டும் என்பது. இரண்டு, ஒரு விவாதத்தில் தர்க்கத்தை எப்படிக் கட்டமைக்கவேண்டும் என்பது. மூன்று, விவாதத்தை கூர்மையாக திசைதிரும்பாமல் எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்பது. பிற சமூகங்களில் கல்விநிலையங்களிலேயே கற்பிக்கப்படுபவை இவை. இங்கே இவற்றை நாம்  இத்தகைய சந்திப்புகளில் தன்னியல்பாகக் கற்கவேண்டியிருக்கிறது


l


 


இளம் வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஒர் அவையில் பேசுவதற்கான பழக்கம் இருப்பதில்லை. உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களைச் சொற்களாகக் கோர்க்க முடியாது. சொற்களாக அமைக்க ஆரம்பிக்கும்போதே அவற்றின் போதாமையை உணர்ந்து இன்னும் தடுமாற ஆரம்பிப்பார்கள். உண்மையில் நான் நினைப்பதை ஓரளவுக்காவது சொல்லும் பயிற்சியை இலக்கிய வாசிப்புக்கு வந்து, சுந்தர ராமசாமி முதலியவர்களிடம் பேசத்தொடங்கியபிறகு தான் அடைந்தேன். இன்றைய  இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் பயிற்சிகளும் சற்று அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இளைஞர்கள் ஒப்புநோக்க  பலமடங்கு அதிகமாக தெளிவாக உரைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.


 


நம் சூழலில் உள்ள முக்கியமான சிக்கல்கள் சில மீண்டும் மீண்டும் இத்தகைய சந்திப்புகளில் எழுந்து வரும். கலைச்சொற்களுக்கு சற்றே மாறிய தனிப்பட்ட அர்த்தங்களை புரிந்துவைத்து அதனடிப்படையில் பேசுவது, கலைச்சொற்களை வேறுவகைச் சொற்களால் இடமாற்றம் செய்துவைத்திருப்பது, ஒரு பேசுபொருளுடன் சம்பந்தமற்றவற்றை கலந்துகொள்வது, ஒரு விவாதப்போக்கில் ஊடாக நினைவில்  எழும் தகவல்களைச் சொல்ல ஆரம்பிப்பது, விவாதங்களை முடிவுவரை கொண்டுசெல்லாமலிருப்பது, ஒரு பொருள் கூறப்பட்ட தர்க்கமுறையிலேயே பதில்சொல்லாமல் குட்டிக்கதை அனுபவக்கதை வழியாகப் பேசுவது என. இவற்றைப்பற்றிய மிகக் கறாரான பயிற்சிகளை, மிகமிக வலித்து, நான் ஊட்டி குருகுலத்தில் கற்றுக்கொண்டேன். அவற்றை கூர்மையாக ஆனால் கூடுமானவரை புண்படுத்தாமல் சொல்லமுயல்கிறேன்.


 


இலக்கிய அழகியல்முறைகள் பற்றி, சிறுகதையின் வடிவம் பற்றி ,நாவல் என்னும் கட்டுமானம் உருமாறி வந்திருப்பது பற்றி, மதத்திற்கும் சமகால அரசியலுக்கும் உள்ள உறவு பற்றி ,யோகமுறைகள்  நவீன இந்தியாவில் எப்படியெல்லாம் வடிவ மாற்றம் அடைந்தன என்பதைப்பற்றி, தமிழக இந்திய வரலாற்று தொடர்ச்சிகளை பற்றி வெவ்வேறு வினாக்களுக்கு விடையாக பேசினேன்.


a


விஷால் ராஜா எழுதிய சிறுகதைகளை விவாதித்தோம் கணபதி எழுதிய ஒரு பயணக்கட்டுரையை விவாதித்தோம். சென்ற முறையைப்போலன்றி இந்த முறை விவாதிப்பதற்கான படைப்பு இலக்கியங்கள் குறைவாகவே வந்தன என்று தோன்றியது. விஷால்ராஜாவின் கதைகளைப்பற்றிய விவாதத்தில் ஏறத்தாழ அத்தனைநண்பர்களுமே மிகக்கூர்மையாகவும் பொருத்தமாகவும் கருத்துக்களைத் தெரிவித்ததும், விவாதத்தில் திட்டவட்டமான கலைச்சொற்களுடன் பேசியதும் மிகுந்த மனநிறைவை அளித்தன.


 


அத்துடன் இந்தமுறை நான் சற்று அதிகமாக பேசியது போலவும் எனக்கொரு எண்ணம் ஏனெனில் பல வினாக்கள் வந்து ஒரு பெரிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கும் தன்மையுடன் எழுந்தன. ஆகவே அவற்றை பேச ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மறுமுறை இன்னும் சுருக்கமாகவும் இன்னும் அதிக நண்பர்கள் அவர்களே பேசும் வாய்ப்பை அளிக்கும் விதமாக சந்திப்பை அமைக்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.


 


இத்தகைய சந்திப்புகளில் உள்ள சிறுசிக்கல் என்னவென்றால்  பொத்தாம் பொதுவான வினாக்கள் .   இந்திய அரசியலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழக வரலாற்றைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? – என்பது போன்ற கேள்விகள் உதாரணம். இம்முறை பிரசன்னா மிகக்கூர்மையாக இசை கேட்பது எவ்வகையிலேனும் புனைவிலக்கிய உருவாக்கத்திற்கு ஊக்கமோ அல்லது தடையோ அளிக்கிறதா என்று எழுப்பிய கேள்வியும் அது சார்ந்தவிவாதமும் மிகக்கூர்மையாகவும் அழகாகவும் அமைந்திருந்தது.


b


ஒரு உண்மையான பிரச்சினையை ஒட்டி வினாவை அமைப்பது மிக முக்கியமானது. ஏற்கனவே தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட கேள்வியை மீண்டும் கேட்காமல் இருப்பது அதைவிட முக்கியமானது. அந்த வினாவை ஒட்டி தாங்களே சிறிது பேசுவதும் தங்களுடைய தரப்பை ஓரளவுக்குச் சொன்ன பிறகு அதிலிருந்து ஒரு விவாதத்தை எதிர்பார்ப்பது இன்னமும் முக்கியமானது. இத்தகைய அரங்குகளை கூடுமானவரைக்கும் கச்சிதமாகவும் கூர்மையாகவும் தாங்கள் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இளைய நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


 


இரு நாள் நிகழ்ச்சிக்குப்பிறகு ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டனர். இளம்நண்பர்கள் கட்டித்தழுவி விடைபெறும்போது ஏற்படும் நம்பிக்கையும் பெருமிதமும் சாதராணமானதல்ல இவர்களில் பலபேர் எனது மைந்தனின் வயதுள்ளவர்கள். எதிர்கால தமிழ்இலக்கியத்தின் முகங்கள்.பலர் இன்னும் அரைநூற்றாண்டுக்காலம் இலக்கிய உலகத்தில் இருக்கப்போகிறார்கள், முக்கியமான எழுதப் போகிறார்கள். விஷால்ராஜா தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவராக வருவார் என்றே நினைக்கிறேன். என்வரைக்கும் வந்து சேர்ந்த ஒரு தொடர்ச்சியை அவர்களுக்கு செலுத்திவிடுவதென்பது எனது கடமை. அதை செய்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டது.


[image error]


நான் கொண்டுவந்த புத்தகங்களை அங்கு வந்திருந்தவர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் நூல்களை வைத்து அவர்களின் இயல்புகளை கணித்தபடியே சற்றுத் தள்ளி நான் அமர்ந்துகொண்டேன். முக்கியமான மார்க்சிய நூல்கள், அரசியல்கோட்பாட்டுநூல்கள் பல இருந்தன. புனைகதைகள் இலக்கிய கோட்பாடுகள் வரலாற்று நூல்கள் .


.


இச்சந்திப்புக்கு வரவிரும்பி விண்ணப்பித்திருப்பவர்களுக்காக இன்னொரு சந்திப்பை மார்ச் மாதம் தொடக்கத்தில் தஞ்சை விவேகானந்தா கல்லூரியில் ஏற்பாடு செய்யலாமென்று நண்பர் சக்தி கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதற்கான அறிவிப்பை சில நாட்களில் வெளியிடுகிறேன்.


சந்திப்புகள்


 


ஈரோடு புதியவாசகர் சந்திப்பு 2016


ஊட்டி புதியவாச்கர் சந்திப்பு 2016





ஈரோடு வாச்கர் சந்திப்பு கடிதம் 1


ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம் 2


ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம்3


 


 


 



ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 3
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1

 


 


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 1


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 2


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம்3


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 4


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 5


கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 6


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2017 10:34

நெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்

wed


அன்புள்ள ஜெ.


 


அந்த மின்னூலை (நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்) நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் தான் பதிவேற்றம் செய்திருக்கிறார். எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் அச்சில் இல்லாத பல நல்ல புத்தகங்கள் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக்கிடைத்து நாங்கள் வாசித்து சிலிர்த்த தொகுப்புகளில் அதுவும் ஒன்று. பிடித்த கவிதைகளை எல்லாம் புகைபபடம் எடுக்கப்போய் கடைசியில் முழுப் புத்தகத்தையும் எடுத்துவிட்டார். அதுவே இப்போது மின்னூலாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு புத்தகம் அச்சில் இருக்கும்பொழுது ஆசிரியர் பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் பதிவேற்றுவது தவறு தான். அப்புத்தகம் மீண்டும் அச்சில் வந்தால்  மின்னூலை நீக்கிவிடுவார் என்றே நம்புகிறேன்.


 


யமுனைச்செல்வன்


திருநெல்வேலி.


 


 


வணக்கம்.


 


:-)


 


‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’ நூலை PDF வடிவில் விட்டது நான் தான். அண்ணன் யமுனை செல்வன் வழி அறிமுகமான நூல் அது. இந்த மின்னூலை பரவச்செய்ததே அவர்தான். நாங்கள் இருவரும் ஒருசேர கொண்டாடும் கவிதை நூல்களில் ஒன்று. அதன் முன்னுரை பற்றி அண்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். அதன் பின் நானும் படித்தேன். மிகச்சிறந்த தேர்வு. அந்த முன்னுரை எனக்கு ஒரு கவிதையை நினைவுறுத்தியது.


 


கூச்சல் தன் எதிரொலிகளைக்


கேட்க முனைந்து மவுனமாகியது


ஏற்கனவே இருந்த மவுனம்


தன் உள் ஒலிகள் மேல் கவனம்கொண்டு


மேலும் செறிந்தது.


 


– தேவதேவன்


 


மின்னூலை இணையத்திலிருந்து அழிக்க வேண்டுமானால் உடனே செய்கிறேன்.


 


மேலும். அச்சில் இல்லாத பல ‘அரிய’ நூல்கள் மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அகப்படும். நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் அங்கே பெரும்பாலும் கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் படித்த ஈராண்டு காலம் வாசிப்பின் பொற்காலம் என்று சொல்லிக்கொள்ளலாம். அச்சில் இல்லாத நூல்கள் பல அங்கு சீண்டுவார் இல்லாமல் புதிதாக இருக்கும். தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுதி அப்படி புதிதாகவே கிடைத்தது. யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் தொகுப்பு (‘இரவு என்பது உறங்க அல்ல’?) அவரிடமே இல்லை என்று ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் குறிப்பட்டிருக்கிறார். அத்தொகுப்பு இருக்கிறது அங்கே. தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வு நூல் ‘அழகர் கோயில்’ பல்கலைக்கழகப் பதிப்பு இருக்கிறது. கணக்கதிகாரம் என்ற பழைய கணித நூலுக்கு தஞ்சாவூர் பெண்மணி ஒருவர் எழுதிய உரை இருக்கிறது. பல எழுத்தாளர்களின் முதல் நூலின் முதல் பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் அங்கே கிடைக்கும். பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்யவோ முழுத்தொகுப்பு வெளியிடவோ உதவும். நூலகப் பணியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது. விஷ்ணுபுரத்தை ஆன்மீக நூல்கள் வரிசையில் சேர்க்கத்தான் தெரியும்.


 


நன்றி.


 


ஸ்ரீனிவாசகோபாலன்


 


அன்புள்ள யமுனை, ஸ்ரீனிவாசகோபாலன்


 


அதை வலையேற்றம் செய்ததில் பிழையில்லை. அதை மேலும் பலர் வாசிக்கமுடியுமே. கவிதைகள் மறுபதிப்பு வருவதெல்லாம் மிக அரிதானது. அதை பலர் வாசிக்கட்டும் என்றுதான் இணைப்பை அளித்தேன்


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21

21. விழைவெரிந்தழிதல்


ஏழாண்டுகள் சியாமையுடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் புரூரவஸின் உடல் பொலிவுகொண்டு வந்தது. அவன் சிரிப்பில், சொல்லில், நோக்கில், அமர்வில் வென்றவன் எனும் பீடு தெரிந்தது. அவன் இருக்குமிடத்தில் கண்ணுக்குத் தெரியா கந்தர்வர்கள் நிறைந்திருப்பதுபோல் இசையொன்று நிறைந்திருந்தது. அருமணிபோல் உடல் ஒளி சுரந்தது.


அவன் உணர்ந்து அமைந்த அறம் கனிந்து இனிமையின் வண்ணம் சூடியது. அன்னையின் விழிகளுடன் பிழை செய்தோரை நோக்கினான். தந்தையின் கைகளுடன் தண்டித்தான். தெய்வத்தின் கால்களால் அவர்களை ஆட்கொண்டான். அவனை ஆயிரம் முதுதந்தையர் ஓருருக்கொண்டு எழுந்த அரசன் என்று அவன் குடி போற்றியது. அவன் கோல் கீழ் அமைவதற்கென்று தொலைவிலிருந்தும் குலங்கள் கொடிவழி முறை சொல்லி அணுகின.


உவகைகொண்டு முழுத்தவனை உலகு விரும்புகிறது. அவன் உண்ணும் அமுதின் ஒருதுளியேனும் சிந்தி தன்மேல் படாதா என ஏங்குகிறார்கள் மானுடர். தேன்மலர் தேடி வண்டுகள் என யாழ் மீட்டியபடி அவனைத் தேடி வந்தனர் பாணர். சுமையென பொருள்கொண்டு அவன் கொண்ட பெருங்காதலை பாடியபடி மீண்டு சென்றனர். சென்ற இடங்களில் எல்லாம் விழியொளிர இளைஞரும், முகம் கனிய முதியவரும் அவர்களைச் சூழ்ந்தமர்ந்து அக்கதைகளை கேட்டனர்.


அவன் தொட்டளித்த செடிகள் நூறுமேனி விளைகின்றன என்று உழவர் சொல்லினர். முதற்துளி பாலை அவன் அரண்மனைக்கு அனுப்பி அவன் ஒரு வாய் உண்பான் என்றால் கலம் நிறைந்து தொழு பெருகுகிறது என்றனர் ஆயர். மண்ணில் தெய்வமென வாழ்த்தப்பட்ட முதல் மாமன்னன் அவனே என்றனர் புலவர்.


முற்றக் கனிந்த அமுது எப்படியோ இறுகி நஞ்சென்றாகிறது. சியாமை சென்றபின் அவனில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் ஒழியலாயின. ஆலயத்தின் கருங்கற்களின் பூட்டுகள் நடுவே நுழைந்து பருத்து புடைத்தன நச்சுவேர் நரம்புகள். நிலையிளகிச் சரிந்தவற்றின்மேல் படர்ந்து பரவியது வழுக்கும் பசும்பாசி. நாகமென விழிஒளி கொண்டு சொடுக்கிக் கொத்தின நினைவுத்துளிகள். நொடியென்றாகி நீண்டது அவன் காலம். சிறு ஓசைக்கும் சிலிர்த்தெழும் தேள்கொடுக்கென எழுந்தன சென்றவை. அனல்பட்டுப் பழுத்த கலமென காத்திருந்தன அவள் விட்டுச்சென்ற பொருட்களனைத்தும்.


ஓரிரு நாட்களிலேயே தளிர் சருகானதுபோல அவன் ஒளியிழந்தான். கண்கள் குழிந்து, உதடு உலர்ந்து, கன்னமேடுகள் எழுந்து, மூக்கு புடைத்து பிறிதொரு முகம் கொண்டான். ஏழாண்டுகளாக அஞ்சி அகன்றுநின்ற அகவைநிரை பாய்ந்து அவன்மேல் அமர்ந்து பந்தென அவனை எற்றித் தட்டி தெறிக்கச்செய்து கொண்டுசென்றது. கணம்தோறும் மூப்புகொண்ட அவனை நோக்கி கண்ணீர்விட்டனர் அவன் பிற தேவியர்.


வந்து சென்றவள் ஒரு விண்ணணங்கு என்பது ஊரெங்கும் பேச்சாயிற்று. “ஆம், பிறிதொருத்தியாக இருக்க வழியில்லை. அம்முழுமை மானுடருக்கு கூடுவதில்லை” என்றனர் நிமித்திகர். “மானுடப்பெண்ணென அவள் இவ்வாழ்வில் முழுதமைந்ததை நாம் நோக்கினோமே!” என்றனர் செவிலியர். “மானுடரையும் தேவர்களே முற்றிலும் ஆடமுடியும்” என்றார் சூதர். “ஏனெனில் முழுமை என்பது அவர்களுக்கு மட்டுமே கைவரும்.”


இங்கு அவள் இருந்த காலமனைத்தும் இத்தனை எளிதாக கனவாகக் கூடுமா என்று அவன் அன்னை திகைத்தாள். “இவ்வளவு நொய்யதா? இத்தனை நிலையற்றதா? இப்படி பொய்யென்றும் பழங்கதையென்றும் ஆவதா? இதன்மேலா அமர்ந்துள்ளோம்? இவ்வண்ணமா ஆடுகிறோம்?” என உளம்கலங்கி அழுதாள். “தெய்வங்களின் ஆடலே இதுதான். ஏற்றிவைத்து தூக்கிவீசி ஆடுதல் அவர்கள் இயல்பு. சிறகுகள்  மனிதனுக்குரியவை அல்ல. கால்களே மண்ணை நன்கறிந்தவை” என்றார் அவன் தந்தை.


ஒவ்வொரு நாளும் மருத்துவர் அவன் அரண்மனைநோக்கி வந்தனர். எட்டுத் திசைகளிலிருந்தும் மூலிகைகளும் உப்புகளும் கல்சாறுகளும் மண்நீர்களும் கொண்டுவந்து மருந்துகள் சமைத்துப்பூசியும் ஊட்டியும் முகரச்செய்தும் அவன் உடலை மீட்டெடுக்க முயன்றனர். உள்ளமே உடலை நடிக்கின்றது என்றறிந்த நிமித்திகர் கவடி புரட்டி சோழி நிரத்தி அவன் சூழ்வினை என்னென்று நோக்கினர். பழுதேதும் காணாதபோது ஒருவரோடொருவர் சொல்லுசாவி திகைத்து அமைந்தனர்.


உளம்கொண்ட கடும்துயர் உடலில் எப்படி பெருவலியென வெளிப்பட முடியுமென்று அவன் உடல் நோக்கி கற்றனர் மருத்துவர். நாண் இறுக்கப்பட்ட வில்லென படுக்கையில் அவன் வளைந்து நிற்பதைக்கண்டு விதிர்த்து அலறினாள் ஒரு சேடி. பாய்ந்து உள்ளே வந்த முதுமருத்துவர் சக்ரர் காலிலிருந்து தலைவரை அவனை இழுத்து பூட்டி நின்று அதிர்ந்த கண்அறியாச் சரடொன்றைக் கண்டு உணர்ந்து நெஞ்சோடு கைசேர்த்து “தெய்வங்களே அகல்க! எளியோர் மானுடர்!” என்று கூவினார்.


அவன் கைவிரல் நுனிகள் வலியில் அதிர்ந்துகொண்டிருந்தன. இறுதிமூச்சு எடுப்பவன்போல் கால்கள் நீண்டு கட்டைவிரல் சுழன்று நெளிந்தன. துயிலிலும் விழிப்பிலும் சொல்லென இதழ்களில் அசைந்துகொண்டிருந்தது ஏதோ ஓர் எண்ணம். ஒரு கணமும் நில்லாமல் அசைந்த கருவிழிகள் மூடிய இமைகளுக்குள் கிழித்து வெளிவரத் துடித்து உந்திச் சுழன்றன. ஒரு சொல்லும் உட்புகாது எட்டுத் திசைகளையும் கல்கொண்டு மூடிய அறையென்று ஆயிற்று அவன் உள்ளம்.


தந்தையும் தாயும் அருகிருந்து மன்றாடினர், கல்லென்றறிந்த பின்னும் தெய்வத்துடன் உரையாடாதிருக்க ஒண்ணா மாளாப்பெருநோயாளர் என. “மைந்தா கேள், நன்று நடந்ததென்று கொள். உனக்கு வாய்த்தனர் ஏழு நன்மக்கள். பெண்ணென்று அவள் இங்கிருந்த போதெல்லாம் பெருமகிழ்வை உனக்களித்தாள். உன் இல்நிறைத்து மங்கலம் சேர்த்தாள். இன்று அவள் அகன்றிருந்தாலும் என்றோ வருவாள் என்று காத்திருப்பதே முறை” என்றார் தந்தை.


“காத்திருப்பதற்கு உன் உடல் தேறவேண்டும். உளம் அமையவேண்டும்” என்றாள் அன்னை. “அவள் நல்லன்னையென இங்கிருந்தவள். ஒருபோதும் அதை மறவாள். மீண்டு வருவாள். நம்பி உளம் தேர்க, குழந்தை!”   என்றாள். அவன் யாரிவர்கள் என்பதுபோல் நோக்கினான். கழுவிலேற்றி அமரவைக்கப்பட்டவன்போல நரம்புகள் புடைத்து பற்கள் கிட்டித்து உடல் மெய்ப்பு கொண்டதிர துடித்து அடங்கி மீண்டும் எழுந்தது.


“எந்த தெய்வம் என் மைந்தனை விடுவிக்கும்? எவ்வேள்வி அவனை மீட்டு கொண்டுவரும்?” என்று தந்தை நிமித்திகரிடம் கேட்டார். அவையமர்ந்த முனிவர்களின் காலடியில் விழுந்து “அவன் வாழ இயலாதென்றால் வலியின்றி சாகவாவது வழியமையுங்கள், உத்தமர்களே”  என்று அன்னை கதறி அழுதாள்.


ஆனால் அவன் மைந்தர் எழுவரும் அவ்வண்ணம் ஆற்றாப் பெருந்துயரேதும் உறவில்லை. அன்னை சென்று மறைந்த மறுநாள் அவர்களுக்கு புரியாமையின் திகைப்பே இருந்தது. இளையவனாகிய ஜயன் மட்டும் “அன்னை எங்கே?” என்று சிணுங்கிக்கொண்டிருந்தான். “அன்னை வருவாள்” என்று அவனுக்கு சொல்லச்சொல்ல அவன் துயர் பெருகியது. முதுசெவிலி ஒருத்தி “அவனுக்கு சொற்கள் புரியாது, சேடியே. அன்னை என அவன் நினைவுகொண்டு சொன்னதுமே அவனை மடியிலிட்டு முலையூட்டுக!” என்றாள். “முலையுண்ணும் பருவம் கடந்துவிட்டானே?” என்றாள் சேடி திகைப்புடன். “ஆம், அவனை மீளக்கொண்டு செல்வோம்” என்று செவிலி சொன்னாள்.


அன்னை என்றதுமே அவனுக்கு முலைப்பால் அளிக்கப்பட்டது. முதல் இருமுறை திகைத்தபின் அவன் முலையருந்தலானான். பின்னர் அன்னை என்னும் சொல்லே அப்பால் மணமென்றும் சுவையென்றும் அவன் உள்ளத்தில் உருமாறியது. அவன் கனவுகளில் அச்சொல் மணத்து இனித்தது. அதை நெஞ்சிலேந்திய சேடி அதன் மானுட வடிவமானாள். அவன் அவள் உடலுடன் இணைந்திருக்கவும் அவள் முலைகள்மேல் உறங்கவும் விரும்பினான். ஓரிரு வாரங்களில் அவளே அவன் அன்னையென்றானாள். சியாமையின் முகத்தை அவன் முற்றிலும் மறந்தான்.


ரயனுக்கும் விஜயனுக்கும் இடைவெளியில்லாமல் ஏதேனும் ஒன்று அளிக்கப்படவேண்டும் என ஆணையிட்டார் அமைச்சர். அவர்கள் புரவிகளையும் படைக்கலங்களையும் பெருவிருப்புடன் அணுகினர்.  “ஒருமுறை புரவியிலிருந்து விழட்டும். ஓரிருமுறை வாள்புண் பதியட்டும். இறப்பின் ஆடைநுனி வந்து அவர்களை தொட்டுச்செல்லட்டும். அவர்கள் அறிந்த உலகமே முற்றிலும் மாறிவிடும். அதை வென்று நிலைகொள்ளும் அறைகூவலுக்கு முன் பிறிதொன்றும் ஒரு பொருட்டென்றிருக்காது” என்றார் அமைச்சர். ஸ்ருதாயுஸுக்கும் சத்யாயுஸுக்கும் இரு சிறுபடை புறப்பாடுகள் அளிக்கப்பட்டன. முதல் வெற்றியின் மயக்கில் அவர்கள் மண்ணை ஒளிமிக்கதென காணத்தலைப்பட்டனர்.


தனித்திருந்தவன் ஆயுஸ். அவனை தலைமூத்தவனாகிய ஜாதவேதஸ் காட்டிலிருந்து வந்து சந்தித்தான். சோலைக்குள் அழைத்துச்சென்று அமரவைத்து மெல்லிய குரலில் சொல்லாடினான். மீண்டு வந்தபோது அவன் முகம் நீர்நிறைந்த பஞ்சென எடைகொண்டிருந்தது. உடன்பிறந்தோர் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தங்களுக்குள் மூழ்கி விழிதாழ்த்தியிருந்தனர். ஜாதவேதஸ் “அவ்வாறே” எனச் சொல்லி பிரிந்தபோது ஆயுஸ் “ஆம்” என்றான். தனிமைகொண்டபோது ஜாதவேதஸ் புன்னகைத்தான். ஆயுஸ் ஒரு துளி விழிநீர் விடுத்து ஏங்கினான்.


தந்தை அகன்ற அவையில் இளவரசனாக அமர்ந்த ஆயுஸ் அரசுசூழ்தலினூடாக ஆண் என எழுந்தான். தந்தையின் குரலும் நோக்கும் அவனுக்கு அமைந்தன. தந்தைக்கு இணையாக அறம் நிற்கும் உளம் கொண்டிருந்தான். தந்தை கைசூடிய கோல் அவனிடமும் அசையாது நின்றது. “அரசே, இந்திரனின் அரியணை அதில் அமர்பவரை இந்திரனாக்குவது என்பார்கள். அறிக, அனைத்து அரியணைகளும் அவ்வாறே! அவை அரசர்களை ஆக்குகின்றன” என்றார் அமைச்சர்.


தந்தையின் அறைக்குள் சென்று அவர் எரிபற்றி பொசுங்கும் தசையென நெளிந்து துடிப்பதை இடையில் கைவைத்து சில கணங்கள் நோக்கி நின்றனர் மூத்தவர் இருவரும். அருகே சென்று அவன் தாள் தொட்டு தலை சூடியபின் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி ஜாதவேதஸ் மீண்டும் தன் ஆசிரியர்களை சென்றடைந்தான். அவனுக்குப் பின்னால் சென்ற ஆயுஸின் தோளைத் தொட்டு “இது இறப்பே, ஆனால் மீளும் வாய்ப்புள்ளது” என்றான் ஜாதவேதஸ். விழிகளில் வினாவுடன் நின்ற இளையோனுடன் “முழுதறிந்தால் முற்றிறப்பு. இது எஞ்சியதை அறிய மீளவேண்டுவது” என்றபின் அவன் நடந்து மறைந்தான்.



imagesநின்று கொல்லும் பிரிவெனும் நோய் புரூரவஸை வெண்பூசனம் படிந்து காட்டில் பாதிமூழ்கிக் கிடக்கும் வீழ்மரமென மாற்றியது. அவன் தோல்மேல் நோய்த்தேமல் படர்ந்து தயிர்ப்புளிப்பு வாடை எழுந்தது. கைவிரல்களுக்கு நடுவே வெண்ணிறப் புண் நிறைந்தது. விரல் முனைகள் அழுகி வீங்கி நகங்கள் உதிர்ந்தன. நரைத்த தலைமுடி பழுத்து கொத்துகளாக, கீற்றுகளாக அகன்று படுக்கையெங்கும் பரவிக்கிடந்தது. பாசிபடிந்த ஓடைக்கரை பாறையென்றாயிற்று அவன் தலை. வயிறு முதுகெலும்புடன் ஒட்டி தொப்புள் இழுபட்டது. விலாஎலும்பின் வரிகளுக்கு மேல் துலாக்களென இருபுறமும் புடைத்திருந்தன கழுத்தெலும்புகள்.


நாள் செல்லச்செல்ல வலி வலியென அதிர்ந்துகொண்டிருந்த விழிகள் மெல்ல நிலைத்து நோக்கிலாத ஒளிகொண்ட நிலைத்த இரு மணிகளென்றாயின. மாளா நோயாளிகளுக்கே உரிய அந்நோக்கை மருத்துவர்களும் அஞ்சினர். பாலில் கலந்த தேனை சிறு மர அகப்பையிலெடுத்து அவனுக்கு ஊட்டும் தாதி ஒரு கணமும் அந்நோக்கை தான் சந்திக்கலாகாதென்று விழி கருதினாள். ஆயினும் உளம் தவறி சந்தித்தபோது அஞ்சி கைநடுங்க அமுது அவன் உடலில் கொட்டியது. தளர்ந்து அவள் திரும்பிச்சென்றபோது அவ்விழிகள் மாறாஓவியமென அகக்கண்முன் நின்றன. அழிக்க அழிக்க தெளிவுகொண்டது அது.


கனவுகளில் அவ்விழிகள் பிறிதொரு முகம் சூடி எழுந்து வந்தன. தென்திசையின் குளிர் சூடிய இருண்ட பேருடல். இரு கைகளையும் சிறகுகளென விரித்து வந்து சூழ்ந்து உளச்செவி மட்டுமே அறியும் மென்குரலில் “வருக!” என்றழைத்தது. அவள் “எங்கு?” என்றபோது “நீ நன்கறிந்த இடத்திற்கு. அங்குளார் உன் மூத்தோர்” என்றது. அதன் மூச்சில் சாம்பல்புகை நாற்றம் இருந்தது. அருகணைந்த வாயில் ஊன் உருகிய நெடி எழுந்தது. அதன் கைகள் அவளைத் தொட்டபோது கோடையின் முதல் மழைத்துளி விழுந்ததுபோல் குளிர்கொண்டு அவள் அதிர்ந்தாள்.


அஞ்சியபடி எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு நடுங்கினாள். எழுந்தோடிச் சென்று உடன் உறையும் செவிலியர் மஞ்சங்களை அடைந்து அவர்களின் கால்களைப்பற்றி உலுக்கி எழுப்பி “அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!” என்றாள். “எவரை?” என்றார்கள் அவர்கள். “அதை! அவர் விழிகளில் குடிகொள்ளும் அதை!” என்றாள். பிறிதொரு சொல்லிலாமலே அவர்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். சிற்றகல் ஒளியில் ஒருவரோடொருவர் கை கோத்தபடி உடல்குறுக்கி அமர்ந்து விழிகள் தாழ்த்தி நீள்மூச்சுகளுடன் அவ்விரவைக் கடந்தனர்.


காலையில் நீராடச் செல்லும்போது வானில் எழுந்த முதல் வெள்ளியைக் கண்டு நீள்மூச்சுவிட்டு உளம் நெகிழ்ந்தனர். குளிர்நீரில் நீராடி எழுந்தபோது அன்று மீண்டும் புதிதென பிறந்ததுபோல் உணர்ந்தனர். முதுசெவிலி பிறிதொருத்தி கையைப்பற்றி “இவையல்ல என்றிருக்கையிலும்கூட இன்றொரு நாள் அளிக்கப்பட்டதென்பது மாறாத உண்மை அல்லவா?”  என்றாள். “ஆம், நானும் அதையே எண்ணினேன். இருக்கிறோம் என்பதற்கு நிகரான இறைக்கொடை ஒன்றுமில்லை” என்றாள் அவள். அச்சொற்களால் உளம் எளிதாகி இன்சொல்லாடி சிரித்தபடி அவர்கள் திரும்பி வந்தனர்.



imagesநோயுற்ற ஒருவர் பிறருடைய உவகைகளை தடுப்பவர். உவகைவிரும்பும் உலகத்தாரால் அவர் வெறுக்கப்படுகிறார். வெறுப்பை குற்றவுணர்வாலும் கடமையுணர்வாலும் அறவுணர்வாலும் கடந்து செல்கின்றனர் மானுடர். ஆனால் நாள் செல்லச்செல்ல அவ்வுறைகள் அகல்கின்றன. கடந்துசெல்லும் விழைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர்களைவிட்டு நெடுந்தொலைவுக்கு அகன்றுசென்றுவிட்ட பிறரின் முதுகில் ஒரு புலன் அவர்களின் இறப்புச்செய்திக்காக காத்திருக்கிறது.


குருநகரி புரூரவஸ் இறப்பதற்கென்று எண்ணம் கொள்ளலாயிற்று. முதலில் துயருடனும் தயக்கத்துடனும் அது குறித்து பேசினர். “இவ்வாறு எண்ணுவது பெரும்பழியென்றும் தோன்றுகிறது. ஆயினும் இவ்வலியிலிருந்து அவருக்கு மீட்பு அது ஒன்றே” என்றார் முதுகாவலர் ஒருவர். கேட்டவர்கள் பதறி “என்ன சொல்கிறீர்? வாயை மூடும்… அரசப்பழி இறைப்பழிக்கு மேல்” என்று அவர் கைகளை பற்றினர். “ஆம், அனைத்து நோய்களுக்கும் இறப்பெனும் இறுதி மருந்து உண்டென்பதே மானுடருக்கு மிகப்பெரிய ஆறுதல்” என்றார் குடிமன்றில் ஒரு மூத்தோர். எதிர்ச்சொல் என நீள்மூச்சுகள் எழுந்தன. எவரோ அசைந்தமரும் ஒலி.


இல்லமன்றுகளில், நகர்த்தெருக்களில், அங்காடிகளில், அப்பேச்சு பரவி நெடுநாள் கழித்தே மூதரசரிடம் வந்தது. உடைவாளை உருவி பாய்ந்தெழுந்து “எவன் அச்சொல் உரைத்தது? அந்நாவை இப்போதே அறுத்தெறிவேன்” என்று கூவினார். நடுங்கும் வாளுடன் முதிய கை அதிர கால்பதறினார். “அரசே, அது தனி நபர் கூற்றல்ல. அவ்வாறு இந்நகர் எண்ணுகிறது” என்றார் அமைச்சர். “எனில் இந்நகரை அழிப்பேன். இக்குடியின் குருதியிலாடுவேன். என் மைந்தனன்றி எவரும் எனக்கொரு பொருட்டல்ல” என்று அரசர் அலறினார்.


“நான் அச்சொல் இங்கு புழங்குகிறது என்பதை மட்டுமே உரைத்தேன். நம் இறுதி அன்னம் நம் மூதாதையர்களுக்குச் செல்லும்வரை நம் சொல் அவர்களை நோக்கி எழுந்தாகவேண்டும். நம் அரசர் மீண்டு வருவார்” என்றார் அமைச்சர்.


ஆனால் அன்றிரவு மூதரசர் தன் அரசியிடம் பேசுகையில் தளர்ந்த குரலில் “இன்று ஒருவன் என்னிடம் இவ்வாறு சொன்னான். எந்த தந்தைக்கும் இறப்பின் தருணம் அது. பற்றி எரிந்து எழுந்து கூவி அடங்கினேன் எனினும் என்னுள் எங்கோ அவ்விழைவை நானும் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் வந்துவிட்டது. என் மைந்தன் கொள்ளும் துயரை என்னால் தாளமுடியவில்லை. நீ அறிவாய், நான் துயின்று நெடுநாட்களாயிற்று. சுவையறிந்து உண்ட காலம் மறந்தேன்” என்றார்.


நெஞ்சு எடைகொள்ள நீள்மூச்செறிந்து “என் நரம்புகள் வண்டுபட்ட சிலந்திவலைபோல இத்துயரை சுமக்கின்றன என்றார் மருத்துவர். இதை அறுத்து விடுவித்தாலொழிய எனக்கு மீட்பில்லை” என்றார். மஞ்சத்தில் அமர்ந்து தலையை கைகளால் பற்றியபடி “மைந்தர் முதிர்வதற்குள் தந்தையர் உயிர்துறக்க வேண்டும். இல்லையேல் மைந்தர் கொள்ளும் உலகத்துயர்கள் அனைத்தையும் மும்மடங்கு விசையுடன் தந்தையர் அடைவர். நீண்ட உயிர்கொண்டவன் வாழ்வில் இன்பம் பெறமாட்டான் என்று அக்காலத்து மூதாதையர் சொன்னது அதனால்தான் போலும்” என்றார்.


மூதரசி அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவர் சீற்றத்துடன் அவளை நோக்கி கைநீட்டி “அழுகிறாயா? நீ அழுதாக வேண்டும். பொன்னுடல் கொண்ட மைந்தனென்று எத்தனை முறை தெய்வங்களுக்கு முன் தருக்கி நிமிர்ந்து நின்றிருப்பாய்? வஞ்சம் கொண்டவை அவை. மானுடர் நிமிர்வதை விரும்பாதவை. அடிமைகள் தங்கள் காலடியில் நக்கி தவழ வேண்டுமென்று விரும்பும் கொடியவனாகிய ஆண்டையைப் போன்றவை. வாழ்த்துரைத்தும் பலியளித்தும் தெய்வங்களை நாம் மேலும் தீயவர்களாக்கி வைத்திருக்கிறோம்” என்று கூவினார்.


விழிகளை நிலம்நோக்கித் தாழ்த்தியபடி “தெய்வங்களை ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். “பின் எவரைச் சொல்வது? சொல், எவரைச் சொல்வது?” என்று அவர் கையோங்கி அவளை அடிக்க வந்தார். விழிநீர் வழியும் பழுத்த விழிகளை நிமிர்த்தி அவரை கூர்ந்து நோக்கி “உங்கள் மைந்தனை சொல்லுங்கள்” என்றாள். குளிர்நீர் ஊற்றப்பட்டவர்போல் உடல் விதிர்த்து பின் தோள் தளர்ந்து “ஏன்?” என்றார் முதியவர்.


“எவளென்றறியாமல் அவளை எப்படி அவன் மணந்தான்? ஏன் இங்கு அழைத்துவந்து அரசியென்று அமர்த்தினான்? அவள் தந்தையை தாயை குலத்தை குடியை அவன் பார்த்தானா? அதைப்பற்றி நான் மும்முறை அவனிடம் உசாவியபோது சினந்து என்னை அகன்று போகும்படி சொன்னான். அவளை சிறுமை செய்யும் பொருட்டு அதைக் கேட்கிறேன் என்று புரிந்துகொண்டான். எண்ணித் துணியாத அரசன் அனைத்தையும் அடைந்துதான் ஆகவேண்டும்” என்றாள் அன்னை.


தளர்ந்த குரலில் மூதரசர் “நீ இப்படி சொல்வாயென்று நான் எண்ணியதே இல்லை” என்றார். முதியவள் “இங்குளோர் அனைவரும் எண்ணுவது அதைத்தான். என்னை அஞ்சியே அவர்கள் அதைச் சொல்லாமல் விடுகிறார்கள். எனவே நான் சொல்லியாக வேண்டும். இத்துயர் அவன் விரும்பி எடுத்து சென்னிமேல் சூடிக்கொண்டது. அரசே, பெருந்துயர்கள் எவையும் தெய்வங்களால் அனுப்பப்படுவதில்லை. தெய்வங்களின் கைகளைத் தட்டி அகற்றி, தேவர்கள் அமைக்கும் கோட்டைகளை உடைத்துத் திறந்து, மனிதர்கள்தான் அவற்றைத் தேடிச் சென்று அடைந்து சுமந்துகொண்டு வருகிறார்கள். வென்றேன் வென்றேன் என்று கொக்கரிக்கிறார்கள். தெய்வங்கள் துயருடன் விழிகனிந்து மேலே நோக்கி நின்றிருக்கின்றன” என்றாள்.


நீள்மூச்சுடன் எழுந்து ஆடையை அள்ளி உடல்மேல் சுற்றிக்கொண்டு சுருங்கிய கன்னங்களில் படர்ந்து வழிந்த நீரை ஆடையால் துடைத்தாள். “இன்று சாவே அவனுக்கு முழுமையென்றால் அது விரைந்து வரட்டும். இப்போதல்ல, அவன் விழுந்தநாள் முதல் நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டிருப்பது அது ஒன்றையே” என்றாள்.


அவளை நோக்கி நின்றிருந்த மூதரசரின் தலை குளிர் கண்டதுபோல் ஆடியது. அறியாது கை நீட்டி அருகிருந்த பீடத்தைப் பற்றி நிலை மீண்டார். எடை மிகுந்து தரையுடன் உருகி ஒன்றானதுபோல் இருந்த கால்களை இழுத்து நடந்தார். மஞ்சத்தில் அமர்ந்து “தெய்வங்களே, மூதாதையரே” என்று கூவியபடி உடல்தளர்ந்து படுத்துக்கொண்டார். அரசி சிற்றடிவைத்து வெளியே செல்லும்போது “ஓர் அன்னையாக நீ துயர் கொள்ளவில்லையா?” என்றார்.


“அனைத்துத் துயரையும் உங்கள் அனைவருக்கும் முன்னரே முழுதறிந்துவிட்டேன். இனி துயர் ஏதும் எஞ்சியில்லை என்னும்போது இந்த அமைதியை அடைந்தேன்” என்றபின் அவள் வெளியேறினாள். முதியவர் படுக்கையில் படுத்து கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டார். அவர் உடலில் இருந்து அத்தனை மூட்டுகளும் மெல்ல கழன்று உடல் தனித்தனி உறுப்புகளாகியது. உள்ளம் நீர்மைகொண்டு ஒழுகிப்பரந்து சொட்டியது. இறுதியாக எண்ணிய ‘மேலாடை’ என்னும் சொல் அப்படியே காற்றில் நின்றிருக்கும் சுடர் என அசையாது நின்றது.  அப்போது அவர் ஒரு விந்தையான உணர்வை அடைந்தார், அப்படுக்கையில் அவ்வண்ணம் படுத்திருப்பது புரூரவஸ்தான் என.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2017 10:30

February 19, 2017

உதிர்சருகின் முழுமை

கவிஞர் தேவதேவன்


கவிதை என்பது என்ன என்பதற்கு மிகமிகச்சுருக்கமான ஒரு மறுமொழி ‘கவிஞனால் எழுதப்படுவது’ அதை தேவதேவன் பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறார். கவிதை எழுதுவதன் ஆரம்பநாட்களில் கவிஞர்கள் பலவகையிலும் உந்தி எழ முயல்கிறார்கள். படிமங்கள், வடிவங்கள், மொழியாடல்கள். ஒரு நல்ல அணி அமைந்தால் இதோ நான் எனக் குதூகலிக்கிறார்கள். ஒரு சரியான வடிவம் எழுந்தால் தெய்வவருகை என தருக்கி எழுகிறார்கள்.


பின்னர் ஒரு கட்டத்தில் கவிதை அவர்களுக்கு முச்சென ஆகிறது. ஆனால் பிற அனைத்தையும் அதன்பொருட்டு அவர்கள் தியாகம் செய்தாகவேண்டும். அந்தப்பறவை மிகமிகக்கூச்சம் கொண்டது. அந்தத்தெய்வம் தலையைப் பலிகேட்பது. அது அவனை தன் ஊர்தி எனக்கொண்டால் அவன் எழுதினால்போதும். எழுதாமலிருக்கவும் அவனால் இயலாது.


ஒரு கட்டத்தில் கவிஞர்கள் கவிதைக்கென கருவைக்கூட கொண்டிருப்பதில்லை. வெறும் கூற்றுக்களே கவிதையாகின்றன. பலசமயம் தனிக்கவிதையாக அவை வடிவமோ மையமோ அற்ற வெற்று அறிவிப்புகளாகத் தெரிகின்றன. ஆனால் அக்கவிஞனை முழுமையாக அறிய அவை முக்கியமானவை. அவன் எழுதிய அனைத்தையும் மொத்தமாக ஒரு காவியம் எனக்கொண்டால் அவை தங்கள் இடத்தை முழுமைசெய்வதைக் காணலாம்.


சென்ற பல ஆண்டுகளாக தேவதேவன் எழுதுவதெல்லாம் வெறும் தன்வெளிப்பாடுகள். அவருடைய சிறிய உலகில், அவருடைய இல்லத்தைச் சூழ்ந்து வெளிப்படும் இயற்கையும் சில மனிதர்களும் மட்டுமே. அபூர்வ நிகழ்வுகள் என ஏதுமில்லை. அரிய அவதானிப்புகள் இல்லை. கருத்துக்களோ மலைகளைப் போலத் தொன்மையானவை. பெரும்பாலான கவிதைகள் தேவதேவன் என்னும் மையத்தால் தொகுக்கப்பட்ட வரிகள். அவருடைய குரல் என்றிருப்பதனாலேயே அவை கவிதைகள்


எல்லாம் எவ்வளவு அருமை!


நுரைத்துவரும் சிற்றலைபோல


வரிசையாய் நாலைந்து சிறுவர்கள்


ஒருபெண்


எடையில்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தாள்


ஒரு காரணமும் இல்லாமல்


தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது


கொன்றை


ஒரு துரும்பும் நோகாதபடி


உலவிக்கொண்டிருந்தது காற்று


பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும்


இலைகள் தான் தொட்டதனால்தான்


உதிந்ததென்றிருக்கக் கூடாதென்ற


எச்சரிக்கை நேர்ந்து


அப்படி ஒரு மென்மையை


அடைந்திருந்தது காற்று


மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை


தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து


குழுமி நின்று


தாங்கித் தாங்கித் தாங்கித்


அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்


மெல்ல மெல்ல மெல்ல


பூமியில் கொண்டு சேர்த்தது


தேவதேவனின் உலகம் துயரற்றது. துயரென்றால் அது முடிவிலிமுன் நின்றிருப்பதன் பெருந்துயர் மட்டுமே. நவீனக் கவிதை என்பதே அன்றாடவாழ்வின் இருண்மையின் , கசப்பின், வெறுமையின் பதிவு என்றிருக்கும் சூழலில் தேவதேவனை தனித்து நிறுத்துவது இந்த இனிமை. இருத்தலின் கொண்டாட்டம் என அவர் கவிதைகளைச் சொல்லலாம். அவற்றின் குழந்தைத்தன்மை கனிந்து முதிர்வதன் விளைவாக எழுவது. அனேகமாக வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.


ஒன்றும் நிகழாத ஒரு பொழுது . ஒன்றும் நிகழாதபோது அனைத்தும் முழுமையில் இருக்கின்றன. முற்றிலும் சமன் கொண்டிருக்கின்றன. சமநிலையின் தாளம் தாலாட்டுபோல நடனம்போல வெளிப்படுகிறது. பார்ப்பவன் கொள்வதற்கென எதையும் தனித்துக்கொடுக்கவில்லை வெளி. தன்னையே முன்வைக்கிறது. மிகமிக மெல்ல மண்ணில் பதியும் அந்த சருகு அந்த பெருவெளியில் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறது. தெய்வத்தால் கையில் ஏந்தப்பட்ட சருகு


அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது. கவிதைகள். தேவதேவன் நியூ செஞ்சுரி பதிப்பகம் சென்னை


*


தேவதேவன் கவிதைகள் பற்றி -சத்யானந்தன்


கவிதையின் அரசியல் தேவதேவன்


தேவதேவன் ஒரு பேட்டி


மார்கழியில் தேவதேவன்


நல்முத்து


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2017 10:35

வான் வருவான்

rahman_2633264f


 


காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று. நானே வருவேன் போல, மூங்கில்தோட்டம் போல. இனிமையான மெலடி. கேட்கக்கேட்க விரிவது. ஒருகட்டத்தில் பித்தெடுத்து நாளை அழுத்திக் காணாமலாக்குவது. போதும் , என் வேலைகள் எல்லாமே கெட்டுபோகும் என முடிவுசெய்தேன். கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு அனைத்தையும் அணைத்துவைத்துவிட்டு வெண்முரசில் அமர்ந்தபோது காட்சிகள் மேல் பனிமழை


 




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2017 10:32

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

IMG_2288

வே.அலெக்ஸ்


 



அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம்


நானும் மனைவி மற்றும் குழந்தையும் நலம். உங்கள் குடும்பம், நண்பர்களின்  நலன் விரும்புகிறேன்.


உங்களிடம் வெண்முரசுக்கு மட்டும் ஒலி வடிவமாக மாற்ற அனுமதி கேட்டேன். முதல் புத்தகம் முடித்த  பின் அறம் சிறுகதைகளை  கேட்க்காமல் நானே ஒலி வடிவாக மாற்றிவிட்டேன்.  அது என் ஆசிரியருடையது என்ற எண்ணம் எனக்கு இருந்தது.


ஆனால் வெள்ளை யானை நாவலை ஒலியாக மாற்றி வெளியிட்ட பின் கொஞ்சம் மீறி விட்டோமோ என்று தோன்றியது.


https://www.youtube.com/watch?v=AK_svgnG3Xw


நேற்று எழுத்து பதிப்பகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதிப்பக உரிமை பிரச்சனை இருந்தால் தளத்திலிருந்து அதை நீக்கி விடுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.


வெள்ளை யானை ஒலி புத்தகத்தின் மேல் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.


நன்றி


சிவகுமார்


சவூதி


 


 


 


அன்புள்ள சிவக்குமார்,


 


என் நண்பரும் எழுத்து பிரசுரத்தின் உரிமையாளரும் நெடுங்கால தலித்தியக்கக் களப்பணியாளருமான வே.அலெக்ஸ் நோயுற்று சிகிழ்ச்சையில் இருக்கிறார். சிறுநீரகப்பிரச்சினை. வாரமிருமுறை டயாலிஸிஸ் செய்யவேண்டியிருக்கிறது. நண்பர்களின் உதவியுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார். உங்கள் மின்னஞ்சல்களை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.


 


ஒலிவடிவமாக வருவதில் பிழையில்லை என நினைக்கிறேன். அதை வாசகர்கள் பெரும்பாலும் கேட்பதில்லை. அதைக்கேட்பவர்கள் நூல்வாங்குபவர்கள் அல்ல. பொதுவாக நூல்களை கேட்க முடியுமா என்பதே எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. தோராயமாக கதை புரியுமே ஒழிய மொழிநுட்பங்களும் அவதானிப்புகளின் கூர்மைகளும் தவறிப்போய்விடவே வாய்ப்பதிகம்.


 


ஆனால் சிலர் செவிப்புலன் கூர் கொண்டவர்கள். அவர்களுக்குக் கேட்டால் புரிவதைப்போல வாசித்தால் புரிவதில்லை. இளையராஜா உதாரணம், அவருக்கு ஒருமுறை கேட்டாலே நினைவில் என்றுமென நின்றிருக்கும். கேட்டலே நன்று என அவர் சொல்வதுண்டு


 


ஜெ


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2017 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.