Jeyamohan's Blog, page 1671
March 1, 2017
இன்னும் அழகிய உலகில்…
நெடுங்காலத்திற்கு முன் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். சி.சு.செல்லப்பா அவருடைய நூல் ஒன்றுக்கு அவரே வெளியிட்டுக்கொண்ட படம். “கொன்னிருவேன்!” என்பதுபோல விரலைக் காட்டுவார். விரல் கருமையாக இருக்கும். அதன்பின்னர் தெரிந்தது அது பேனா. “என்ன கண்ராவியான படம்” என்றேன். “அந்தக்காலத்திலே பேனாவோட போஸ் தர்ரது பெரிய ஃபேஷன்” என்றார்
அது மிக இயல்பானது. பேனா அன்றுதான் வந்துகொண்டிருந்தது. சொந்தமாக பேனா வைத்திருப்பதே ஓரு சமூக அடையாளம். பேனாவுடன் போஸ் கொடுக்கையில் முதலில் ஆணித்தரமாக நிறுவப்படுவது ஒன்று உண்டு. ”நான் எழுதுபவன்”. இந்தியாவில் அன்று அது ஒருவகை போர் அறைகூவல்
புத்தகங்கள் வாசிப்பது எழுதுவது போன்ற புகைப்படங்கள் பின்னர் வரலாயின. அவற்றிலிருந்து எழுத்தாளர் தப்ப முடியாது. “சார் ப்ளீஸ், ஒரு ஸ்நாப்” என்று சொல்லி அவற்றுக்கு நம்மை போஸ்கொடுக்க வைத்துவிடுவார்கள்.நானெல்லாம் பாறைமேல்கூட ஏறி அமரவைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமியை டைட்டானிக் கதாநாயகன் போல கைவிரித்து நிற்கவைத்த பாண்டி இளவேனில் ஒரு கலைஞர் – மக்கள்தொடர்பில்.
இன்று யோசிக்கையில் பலவகையான போஸ்கள் நினைவுக்கு வருகின்றன. சி.என். அண்ணாத்துரை நூலுடன் சால்வை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் காட்சி. அது ‘கட்டமைக்க’ப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஒரு செய்தி. அன்றுமட்டுமல்ல இன்றும் அச்செய்தி தேவைதான். சொல்லப்போனால் கையில் நூலுடன் நின்றிருக்கும் அம்பேத்கர் எவ்வளவுபெரிய நவீன விக்ரகம்!
ஸ்டாலின் வாசிப்பாரா என்பது ஐயம், எழுதுவாரா என்பது அதைவிட ஐயம். ஆனால் வாசிப்பதுபோல எழுதுவதுபோல நிறைய புகைப்படங்கள் போஸ்டர்களில் வருகின்றன. திராவிட இயக்கம் அதன் அடிப்படையில் ஓர் அறிவியக்கம் என்பதனால் அதன் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் தங்களை வாசகர்களாக வெளிப்படுத்திக்கொண்டார்கள். அந்த மரபு ஸ்டாலினில் தொடர்கிறது. அழகிரி பெரும்பாலும் ‘டேய் அவன அடிச்சு தூக்கி கொண்டாங்கடா’ என்று செல்பேசியில் ஆணையிடும் கோலத்தில்தான் போஸ்டர்களில் சிரிக்கிறார்.
எழுத்தாளர் படங்கள் இன்று பல்வேறுவகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. நடனமாடும் எழுத்தாளர்களின் படங்கள் கூட வந்துள்ளன. அபூர்வமாகவே சில படங்கள் அவர்களின் சரியான தருணமொன்றை வெளிப்படுத்துகின்றன. அல்லது நாம் அவர்களைப் பார்க்க விரும்பும் காட்சித்துளியாக அமைந்துள்ளன
இந்தப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாய் நம் மூக்கை, உதடுகளை நாவாலும் மூக்காலும் தொடுவதற்கு நாய்மொழியில் “நீ எனக்குப் பிடித்தமானவன். நாம் நண்பர்கள்” என்று பொருள். காது பின்னிழுக்கப்பட்டிருப்பது அந்த நாய் அன்பால் உள எழுச்சிகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் வால் சுழன்றுகொண்டே இருக்கும். கண்கள் சற்று நீர்மைகொண்டிருக்கும். மெல்ல முனகும்.
டோரா அவள் கூண்டுக்குள் நான் சென்றால் ஒரு முத்தமாவது இடாமல் அமையாது. இல்லையேல் கத்த ஆரம்பித்துவிடும். தங்கள் வாழ்விடத்திற்கு வரும் விருப்பமானவர்களை முத்தமிட்டு வரவேற்பது நாய்களின் இயல்பு. உல்லாஸ் காரந்த் அவருடைய நூலில் அதே இயல்புகள்தான் புலிக்கும் என எழுதியிருந்தார்
அந்த குட்டிமண்டை அதை அனேகமாக ஒருவயதுக்குள் உள்ள நாய் எனக் காட்டுகிறது. அந்த வயதுவரை நாய்கள் மிகுந்த விளையாட்டுத்தன்மையுடன் இருக்கும். உலகையே நக்கியும் முகர்ந்தும் அறிந்துவிடத்துடிக்கும். நாலைந்து வயதானதும் ’சரிதான் எல்லாம் இப்டித்தான்” என்னும் ஒரு வகை நிறைந்த சலிப்பு. அதன்பின்னர் ஒரு கனிந்த விவேகம்.
சாருவின் முகம் அவர் நாய்களின் உலகில் நாய்களால் அனுமதிக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. பத்தடி தொலைவிலேயே நாய்கள் அதைக் கண்டுகொள்ளும். தெருநாய்களே வாலாட்டி “நல்லாருக்கிகளா? பாத்து நாளாச்சு” என்று சொல்லிவிட்டுச் செல்லும். முதிய நாய்கள் படுத்தவாறே வாலை அசைத்து “நல்லா இருடே மக்கா” என்று வாழ்த்தும். அவர்களின் உலகம் அன்பால் அழகாக ஆக்கப்பட்ட ஒன்று
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்
ஜெ
வணக்கம். ஜக்கி கட்டுரை ஒரு அருமையான கட்டுரை. அதை Swarajyaவில் மொழி பெயர்த்தவர் அதள பாதாலத்தில் தள்ளி விட்டார்.
தமிழ் வாக்கிய மொழியை அப்படியே ஆங்கிலாக்கம் செய்துள்ளார். கட்டுரை முழுதும் pronoun அள்ளி தெளித்துள்ளார். அதுவும் உங்கள் பெயரிலேயே கட்டுரை வெளியாகியுள்ளது. மொழி பெயர்பாளர் பெயரும் இல்லை.
அந்த கட்டுரையின் முக்கிய பகுதி; உங்களுக்கு வந்த கேள்விகளை தொகுத்து, நீங்கள் அதற்கு அளித்த பதில்கள். அந்த பகுதி இல்லை.
அ.நீ அவரது முகநூலில், நீங்கள் கிரும்பானந்த வாரியார் பற்றி எழுதியதை, முற்றும் தவறான(குதர்கமான) கோணத்தில் புரிந்து கொண்டு ஒரு ஆட்சேபனை பதிவு செய்தார். அதனால் ஆங்கில மொழியாக்கத்தில் கிருபானந்த வாரியார் பெயர் இல்லை.
உங்களிடம் அனுமதி வாங்கி தான் வெளியிடுகிறார்களா?
இறுதியில் இதை ஆங்கிலத்தில் மட்டும் படிப்பவர்; ஜக்கியை ஆதரித்து இவ்வளவு மோசமான ஆங்கிலத்தில் கட்டுரை என்றால், ஜக்கி அவர்களின் நிறுவனம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்ற சற்று நினைக்க தான் செய்வார்
அன்புடன்
சதிஷ்
(பெயரில் குறில் உங்களுக்கு மட்டும்)
*
அன்புள்ள சதிஷ்
அது மொழியாக்கக் கட்டுரை. அனுமதி பெற்றது. அப்படி மொழியாக்கம் செய்தவரின் பெயருடன்தான் வெளிவந்திருக்கவேண்டும். இல்லையேல் அது பிழை. நான் பார்க்கவில்லை.
ஜெ
***
ஜெமோ
ஜக்கி அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டுவதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லிவிட்டதே, உங்கள் சப்பைக்கட்டு என்ன?
திருநாவுக்கரசு
*
அன்புள்ள திருநாவுக்கரசு
முதல் கட்டுரையிலேயே இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். விதிமீறல் இருக்கும் என்றே நினைக்கிறேன், அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை வரவேற்கிறேன் என. ஏனென்றால் இங்கே விதிமீறலில்லாத பெரிய அமைப்புக்கள் ஏதும் இல்லை. அனேகமாக ஒரு பொறியியல்கல்லூரி கூட இருக்காது. சென்னையிலுள்ள ஒரு வணிகவளாகம்கூட மிஞ்சாது. இத்தகைய நடவடிக்கைகள் எந்நோக்கம் கொண்டவை என்றாலும் வரவேற்கத்தக்கவை.
அவரது கட்டிடங்கள் பஞ்சாயத்து அனுமதியுடன் கட்டப்பட்டவை. அவை சட்டபூர்வமாகப் போதாதவை என்பது முன்னரே சிலரால் எழுதவும்பட்டுவிட்டது. சட்டப்படி நிகழட்டும்.
ஆனால் இதனால் ஜக்கி காட்டை அழிக்கிறார், நிலம் மோசடியானது, அவருடைய யோகா முறைபோலியானது, அவர் ஏமாற்றுக்காரர் என்று ஆகாது. வசைபாடித்தள்ளுவது நியாயப்படுத்தவும்படாது. இத்தனைவசைபாடிவிட்டு கடைசியில் இதைவைத்துக்கொண்டு பார்த்தீர்களா என்று தாண்டிக்குதிப்பதைக் கண்டு பரிதாபமே எஞ்சுகிறது. பிழைத்துப்போங்கள்
ஜெ
***
அன்புள்ள ஜெ,
நீங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
அருண். எஸ்
*
அன்புள்ள அருண்,
நான் எனக்குத் தெரிந்த, ஏதேனும் சொல்வதற்கு இருக்கும் விஷயங்களில் மட்டுமே பேசமுற்படுகிறேன். பொதுவான கருத்தே எனக்கும் என்றால் ஏதும் சொல்வதில்லை.
எரிபொருள் எடுப்பது, அதன் விளைவுகள் குறித்து அறிவியலாளர்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் நன்கறிந்த ஒன்று உண்டு. இந்திய யதார்த்தம். அதனடிப்படையில் நான் ஒன்றைச் சொல்லமுடியும்
பொதுத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது அளிக்கப்படவேண்டிய இழப்பீட்டை அரசு எப்போதும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கிறது. அந்த பணம் முறையாக அளிக்கப்படுவதுமில்லை. ஆகவே கிட்டத்தட்ட நிலம் பறிக்கப்படுகிறது என்பதே உண்மை
சென்னை அருகே நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மிகச்சிறிய தொகையைக்கூட பல பகுதிகளாகப்பிரித்து ஒரு பகுதியை மட்டுமே அளித்திருக்கிறார்கள். எஞ்சிய பகுதிக்காக ஐந்தாண்டுக்காலமாக அந்த மக்கள் அமைப்பு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரிடம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது சிலநாட்களுக்கு முன்னால் வந்த செய்தி. இந்த அராஜகமே இந்தியாவில் எந்த அரசுத்திட்டமும் எதிர்ப்புக்குள்ளாக காரணம்.
1998ல் நான் பலியபாலின் பாடங்கள் என்னும் சிறுநூலை மொழியாக்கம் செய்தேன். அதை ஞானி வெளியிட்டார். ஒரிசாவில் பலியபால் என்னுமிடத்தில் ஏவுகணைத்தளம் அமைக்க வளமான விளைநிலம் கையகப்படுத்தப்பட்டது. அம்மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டது. இழப்பீடு அளித்து முடிக்க இருபதாண்டுகளுக்கும் மேல் ஆகியது. பெரும்பாலான பயனாளிகள் அதற்குள் அடையாளம் காணமுடியாமல் எங்கெங்கோ சிதறிப்போனமையால் அந்நிதியை வாங்கவுமில்லை. இந்த கதியே இந்தியாவின் பெரும்பாலும் அனைத்து ‘வளர்ச்சி’த்திட்டங்களிலும் உள்ளது.
இந்த அராஜகம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. அதிகாரிகளின் ஆணவம், ஊழல், அரசியல்வாதிகளின் அறியாமை, மூர்க்கம். இரண்டும் இணைந்து உருவாக்கும் அழிவு. இத்தனைக்குப்பின்னரும் எவரும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப்போராட்டமும் உண்மையில் அடிப்படைக்காரணமாக இதையே கொண்டுள்ளது
இங்குள்ள அனைத்து நிலம் கையகப்படுத்தல், இயற்கைவளங்களை எடுத்தல் திட்டங்களிலும் ஊழல் அதிகாரிகளின் நேரடிக்கொள்ளையே முதன்மையான தடை. அதை இங்குள்ள எந்த அரசும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களின் உதவியில்லாமல் செய்துமுடிக்கமுடியாதென்றே நினைக்கிறார்கள். இதுவே உண்மை
ஜெ
***
மீண்டும் அண்ணா- பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நிச்சயமாக?
வாயசைவுக்கு நான் வசனம் எழுதியிருக்கிறேன் – பழசிராஜாவுக்கு. அது எவ்வளவு சள்ளைபிடித்தவேலை என்பதை அறிவேன். இந்த டப்பிங் கலக்கியிருக்கிறார்கள் பையன்கள்.
https://www.youtube.com/watch?v=-FEvd...
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30
30. அறியாமுகம்
மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை கொள்பவன் என்றனர் குலப்பூசகர். இளமையிலேயே நாகர்குலத்திற்குரிய நான்கு போர்க்கலைகளான நச்சுமிழ்தல், இமையாவிழிகொள்ளுதல், ஓசையின்றி அமைதல், பறந்தெழுதல் ஆகியவற்றை கற்றான்.
பின்னர் தன் அணுக்கத்தோழனாகிய கம்பனனுடன் குடிவிட்டுக் கிளம்பி பிறிதொருவனாக ஆகி அசுரகுலங்களில் அடிமையென்று சென்று இணைந்து அவர்களின் போர்க்கலைகளான காற்றில் மறைதல், விண்ணேறிச் செல்லுதல், உடலை விழியாக்குதல், இரக்கமின்றி இருத்தல் ஆகியவற்றையும் கற்றான். மலைவணிகனாக மானுடருக்குள் ஊடுருவி காவலனாக உருமாற்றம்கொண்டு அவர்களின் போர்க்கலைகளான படைக்கலம் தேர்தல், சூழ்மதி கொள்ளுதல், சேர்ந்தமைந்து ஓருடலாதல், வருவதை முன்னுணர்தல் ஆகியவற்றை அறிந்தான்.
அவன் தோழனுடன் திரும்பி தன் நிலம் வந்துசேர்ந்தபோது நோக்கிலும் நடையிலும் பேரரசன் என்றாகிவிட்டிருந்தான். நாகர்குடிகள் அவனை முதன்மைத்தலைவன் என ஏற்றன. நாகநிலம் முழுதும் வென்று வைப்ரம் என்னும் தன் சிற்றூரைச் சுற்றி நச்சுமுட்கள் சிலிர்த்துநிற்கும் கோட்டை ஒன்றைக் கட்டி கொடிபறக்க கோல்நிறுத்தி ஆளலானான். அவனை நாகாதிபன் என்றும் மகாநாகன் என்றும் வாழ்த்தின நாகர்குலங்கள்.
ஏழுஅடுக்கு அரண்மனையில் விபுலை வித்யுதை என்னும் இரு மங்கையரை மணந்து ஹுண்டன் வாழ்ந்தான். எட்டாண்டுகளாகியும் தேவியர் கருவுறாமையால் துயருற்றிருந்தான். குலப்பூசகரை அழைத்து அவர்கள் வயிறு நிறையாமை ஏன் என வினவினான். “அரசே, படைப்பென்று எழுவதெல்லாம் உளம்குவியும் தருணங்களே. சிறுபுழுவும் காமத்தில் முழுதமைகிறது என்பதே இயற்கை. உங்கள் காமத்தில் அவ்வண்ணம் நிகழவில்லை. உடலுடன் உள்ளம் பொருந்தவில்லை. குவியாக் காமம் முளைக்காத விதையாகிறது” என்றார் பூசகர்.
“ஆம்” என்று ஹுண்டன் சொன்னான். “நான் பிறிதெங்கோ எவரையோ எண்ணத்தில் கொண்டிருக்கிறேன். முற்பிறவிக் கனவில் கண்ட முகம் ஒன்று ஊடே புகுகிறது.” பூசகர் “ஊழ் பின்னும் வலையின் மறுமுனைச் சரடு. அது தேடிவரும்வரை காத்திருப்பதன்றி வேறு வழியில்லை” என்றார். “அது நன்றா தீதா?” என்றான் ஹுண்டன். “ஊழை அவ்வண்ணம் வகுக்கவியலாது. அது நன்றுதீதுக்கு அப்பாற்பட்டது” என்றார் பூசகர். “அது எனக்கு அளிப்பது என்ன?” என்றான். “அரசே, மெய்க்காதலை அறியும் நல்லூழ் கொண்டவர் நீங்கள் என்கின்றன தெய்வங்கள். ஆனால் அது இன்பமா துன்பமா என்பதை அவையும் அறியா” என்றார் பூசகர்.
தன் உள்ளத்தை ஒவ்வொருநாளும் துழாவிக்கொண்டிருந்தான் ஹுண்டன். கம்பனனிடம் “நான் எதற்காக காத்திருக்கிறேன்? பிறிதொன்றிலாது ஏன் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்?” என்றான். அவர்கள் காட்டில் ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தனர். “நாம் நம்மையறியாமலேயே செலுத்தப்படுகிறோம், அரசே. நம்மில் விழைவென, அச்சமென, ஐயமென எழுபவை எவரோ எங்கிருந்தோ நம்மில் புகுத்தும் எண்ணங்களே” என்றான் கம்பனன். “நாம் எங்கு செல்கிறோம் என ஒருபோதும் நாமறிய முடியாதென்பதையே அனைத்து நூல்களும் சொல்கின்றன.”
“இந்த முகம்… இது முகமென என்னுள் திரளவுமில்லை. கலையும் ஓர் எண்ணமென அன்றி இதை நான் இன்றுவரை அறியேன்” என்றான் அரசன். “அமுதென்றும் நஞ்சென்றும் ஆன ஒன்றே அத்தனை விசையுடன் நம்மை இழுக்கமுடியும்” என்றான் கம்பனன். “அது நம்மை தன் உள்ளங்கையில் வைத்து குனிந்துநோக்கும் ஒன்றின் புன்னகையை வானமென நம்மீது படரச்செய்கிறது.” ஹுண்டன் நீள்மூச்செறிந்து “ஆம், ஆனால் நன்றோ தீதோ பெரிதென ஒன்று நிகழும் வாழ்வமைவது நற்கொடையே” என்றான்.
அணுக்கனிடம் அரசை அளித்துவிட்டு தன்னந்தனியாக அலைந்து திரியலானான் ஹுண்டன். அருகமைந்த நகர்களில் ஏவலனாகவும் வணிகனாகவும் பயணியாகவும் அலைந்தான். காடுகளினூடாக கடந்துசென்றான். ஓவியங்களையும் சிற்பங்களையும் சென்று நோக்கினான். நிமித்திகர்களை அணுகி உரையாடினான். அந்த முகத்தை ஒவ்வொரு கணமும் விழிதேடிக்கொண்டிருந்தான்.
ஒருநாள் காட்டில் மரக்கிளைகளுக்குமேல் பறந்தவனாக உலவுகையில் சுதார்யம் என்னும் சிற்றோடையின் கரையிலமைந்த சிறுதவக்குடில் ஒன்றை கண்டான். அதைச் சூழ்ந்திருந்த மலர்க்காட்டில் மலர்வண்ணங்களால் அங்கு நிறைந்திருந்த ஒளியையும் மணத்தையும் வண்டுகள் எழுப்பிய யாழொலியின் கார்வையையும் அறிந்து மண்ணிலிறங்கி அருகே சென்றான். அக்குடிலில் ஓர் அழகிய இளநங்கை தனித்துறைவதை கண்டான்.
அவன் சென்றபோது அவள் ஒரு முல்லைக்கொடிப் பந்தலுக்குக் கீழே அமர்ந்து வெண்மொட்டுகளால் கழற்சியாடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிய அக்கணமே அவன் அறிந்தான் தன் ஊழின் மறுநுனி அவளே என. அவன் எண்ணிய அறியாமுகம் அது. பிறிதொன்றை எண்ண இனி தன்னால் இயலாது என்று தெளிந்ததும் அருகணைந்து அவளிடம் “இனியவளே, இக்காட்டில் தனித்துறையும் நீ யார்?” என்றான். அவள் அயலவரை அறியாதவள் என்பதனால் எச்சரிக்கையும் அச்சமும் விலக்கமும் அற்ற விழிகளால் அவனை நோக்கினாள்.
“நான் அசோகசுந்தரி. என்னை கல்பமரத்தில் பிறந்தவள் என என் தந்தை சொன்னார். அவர் தவமுனிவர். அவர் அளித்த நற்சொல்லால் அழியா இளமைகொண்டு என் கணவனுக்காக இங்கே காத்திருக்கிறேன்” என்றாள். வியப்பில் அருகே வந்து அவன் தலையிலணிந்த நாகபடக் கொந்தையை நோக்கி “அது என்ன? மெய்நாகமா?” என்றாள். “நான் நாகர்குலத்து அரசன், என் பெயர் ஹுண்டன். என் குடி ஏழிலும் முதல்வன். எங்கள் நிலத்தின் பெருந்தலைவன்” என்றான் அவன்.
அவள் மகிழ்ந்து “நான் இன்றுவரை அரசர்களை சந்தித்ததில்லை. அவர்கள் படைசூழ கொடிசூடி வாழ்த்தும் இசையும் சூழ எழுந்தருள்வார்கள் என்றே அறிந்துள்ளேன்” என்றாள். “ஆம், அவை எனக்கும் உள்ளன. நச்சுவாளி தொடுத்த நாகவிற்களுடன் என்னைச் சூழ பெரும்படை உண்டு. இன்று நான் காடுகாண தனியே வந்தேன். தனித்தலைந்தாலும் நான் ஒரு படைக்கு நிகரானவனே” என்றான் ஹுண்டன். அவளுடைய அஞ்சாமையை அவன்மீதான விருப்பென அவன் எண்ணிக்கொண்டான். அவள் கண்களின் கள்ளமின்மையைக் கண்டு மேலும் மேலும் பித்துகொண்டான்.
“நீ காத்திருப்பது யாருக்காக?” என்றான். “உன் அழகு அரசர்கள் அணியென சூடத்தக்கது. அரியணையில் அமரவேண்டியவள் நீ.” அவள் புன்னகைத்து “ஆம், இந்திரனுக்கு நிகரான அரசனின் மணமகள் நான் என்றார் என் தந்தை” என்றாள். “அவன் நானே. இன்று இந்நிலத்தின் ஆற்றல்மிக்க பேரரசன் நான்” என்றான் ஹுண்டன். “நீ காத்திருந்தது எனக்காகத்தான். என்னை ஏற்றுக்கொள்க!” அவள் அவனை கூர்ந்து நோக்கி “நீர் அழகர். உம்மை ஏற்பதில் எனக்கு தயக்கமும் இல்லை. ஆனால் நான் மண்ணுக்கு வந்தபோது ஒரு மலரும் உடன் வந்தது. அந்த வாடியமலர் என்னிடம் உள்ளது. எவர் என் தலையில் அதைச் சூட்டுகையில் அது மீண்டும் புதிதென மலர்கிறதோ அவரே என் கணவர் என்றார் எந்தை. இருங்கள், கொண்டுவருகிறேன்” என குடிலுக்குள் ஓடினாள்.
திரும்பி வந்தபோது அவள் கையில் ஓர் அசோகமலர் இருந்தது. வாடிச்சுருங்கி ஒரு செந்நிறக் கீற்றென ஆகிவிட்டிருந்தது. “அசோகம்” என்று அவள் சொன்னாள். “துயரின்மையின் அழகிய மலர் இது. இதை தாங்கள் கையில் வாங்கும்போது மலர்ந்து முதற்காலை என மென்மையும் ஒளியும் கொள்ளவேண்டும்.” அவன் தயங்கியபடி அதை வாங்கினான். அது அவ்வாறே இருந்தது. அவள் அதே புன்னகையுடன் “பொறுத்தருள்க, அரசே! அவ்வண்ணமென்றால் அது நீங்கள் அல்ல” என்றாள்.
அவன் சீறி எழுந்த சினத்துடன் “என்ன விளையாடுகிறாயா? நான் எவரென்று அறிவாயா? நீ தனித்த சிறுபெண். பருந்து சிறுகுருவியை என உன்னை கவ்விக்கொண்டு வானிலெழ என்னால் இயலும். உன் கள்ளமின்மையை விரும்பியே சொல்லாடினேன்” என்றான். “இனி உன் விருப்பென்ன என்பதை நான் கேட்கப்போவதில்லை. நீ என் துணைவி” என அவள் கையை பற்றச்சென்றான். அவள் பின்னால் விலகி கூர்ந்த கண்களுடன் “அரசே, அறிக! இது என் இடம். இங்கு எல்லைமீறி என்னை கைக்கொள்ள முயல்வது பிழை… முனிவராகிய என் தந்தை எனக்கருளிய காவல் கொண்டுள்ளன இந்தக் குடிலும் சோலையும்” என்றாள்.
“நாகத்திற்கு வேலிக்காவல் இல்லை, அழகி” என சிரித்தபடி அவன் அவளை பற்றப்போனான். “விலகு, மூடா! இதற்குள் வந்து என் ஆணை மீறும் எவரையும் அக்கணமே கல்லென்றாக்கும் சொல் எனக்கு அருளப்பட்டுள்ளது. இதோ, இச்சிம்மம் அவ்வாறு என்னால் கல்லாக்கப்பட்டது. அந்தப் புலியும் அப்பாலிருக்கும் கழுகும் செதுக்கப்பட்ட சிலைகளல்ல, உயிர்கொண்டிருந்தவை” என்றாள். “இந்தக் குழவிக்கதைகளுக்கு அஞ்சுபவர்களல்ல நாகர்கள்” என்று சிரித்தபடி அவன் மேலும் முன்னகர அவள் கைநீட்டி “உன் வலக்கால் கல்லாகுக!” என்றாள்.
அவன் தன் வலதுபாதம் கல்லாகி எடைகொண்டதை உணர்ந்து அஞ்சி குளிர்ந்து நின்றான். “அணுகவேண்டாம்! உன்னை கல்லென்றாக்கி இங்கு நிறுத்த நான் விழையவில்லை. அகன்று செல்க!” என்று அவள் கூவினாள். அவன் காலை இழுத்துக்கொண்டு பெருஞ்சினத்தால் உறுமியபடி சோலையைவிட்டு வெளியே சென்றான். அங்கு நின்றபடி “விழைந்ததை அடையாதவன் நாகன் அல்ல. நான் உன்னை பெண்கொள்ளாமல் மீளப்போவதில்லை” என்றான்.
அவள் அதுவரை இருந்த பொறையை இழந்து சினந்து “இழிமகனே, விரும்பாப்பெண்ணை அடைவேன் என வஞ்சினம் உரைப்பவன் வீணரில் முதல்வன். நீ என் கணவன் கையால் உயிரிழப்பாய்” என்றாள். தன் கையை ஓங்கி “ஆம்! ஆம்! ஆம்!” என மும்முறை உரைக்க வானில் ஓர் இடி எழுந்தது. அச்சொல் பிறிதிலாது நிலைபெற்றுவிட்டதை அறிந்த ஹுண்டன் ஒருகணம் நடுங்கினாலும் கோல்கண்டால் மீண்டும் படமெடுக்கும் நாகத்தின் இயல்பு மீண்டு “எஞ்சியதை என் மஞ்சத்தில் சொல், பெண்ணே” என்றபின் மரங்களின்மேல் ஏறிக்கொண்டான்.
தன் அரண்மனைக்கு மீண்ட ஹுண்டன் கம்பனனை அழைத்து எவ்வண்ணமேனும் அசோககுமாரியை அவள் வாழும் சோலையின் எல்லைகடத்தி அழைத்துவரும்படி ஆணையிட்டான். கம்பனனின் திட்டப்படி அரண்மனைச்சேடி ஒருத்தி நிறைவயிறென உருவணிந்து அசோககுமாரி நீராடும் சோலைச்சுனையருகே நின்றிருந்த மரத்தில் காட்டுவள்ளியில் சுருக்கிட்டு தன்னுயிரை மாய்க்க எண்ணுவதுபோல நடித்தாள். அங்கே வந்து அதைக் கண்ட அசோககுமாரி ஓடிவந்து அவளைப் பிடித்து தடுத்து “என்ன செய்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்றாள்.
கதறியழுத சேடி தன்னை அந்தணப் பெண்ணாகிய சுதமை என்றும் தன்னை விரும்பி கவர்ந்து கொண்டுசெல்ல முயன்ற நாகர்குலத்து அரசனாகிய ஹுண்டன் அதைத் தடுத்த தன் கணவனை கொலை செய்துவிட்டான் என்றும் சொன்னாள். இறுதிச் சொல்லை அவனை பழித்துச் சொன்னபடி உயிர்விட்டு அவன்மேல் தெய்வங்களின் பழி நிலவச்செய்யும்பொருட்டே அங்கு வந்ததாகச் சொல்லி கதறினாள்.
அசோககுமாரி உளம்கலங்கி அழுதாள். பின் தான் தேறி அவளுக்கு ஆறுதலுரைத்தாள். “பழியை மறந்துவிடுக! தெய்வங்கள் நின்று கேட்கட்டும். உன் வயிற்றிலுள்ள மைந்தனுக்கு வாழும் உரிமை உள்ளது. அதை அளிக்கவேண்டியது உன் கடன்” என்றாள். “வாழாது இறந்து உன் மைந்தன் நிகழாதுபோன கனவாக வெறும்வெளியில் பதைக்கலாகாது. நீ உயிர்தரித்தே ஆகவேண்டும்” என்றாள். “இல்லை, என்னால் இயலாது. துயர் என் உள்ளத்தை அனல்கொண்ட பாறைபோல வெம்மையேற்றி வெடிக்கச்செய்கிறது” என்றாள் சுதமை.
அசோககுமாரி தன் தோட்டத்திலிருந்து துயரிலி மலர் ஒன்றைப்பறித்து “இதை உன் நிலத்தில் நட்டு வளர்ப்பாயாக! இது உன் துயர்களை களையும்” என்றாள். “இல்லை, என் துயர்மிக்க கைகளால் இதைத் தொட்டால் இது வாடிவிடும். நீயே வந்து என் சிறுகுடில் முற்றத்தில் இதை நட்டு ஒரு கை நீரூற்றிவிட்டுச் செல்!” என்றாள் சுதமை. அசோககுமாரி “நான் என் குடில்வளாகத்தைவிட்டு நீங்கலாகாதென்பது எந்தையின் ஆணை” என்றாள். சுதமை மீண்டும் மீண்டும் கைபற்றி கண்ணீர்விட்டு மன்றாடவே உடன்செல்ல இசைந்தாள்.
சுதமை அவளை காட்டுவழியே இட்டுச்சென்றாள். நெடுந்தொலைவு ஆவதை அறிந்த அசோககுமாரி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றாள். “அருகிலேதான்… நீ காட்டுவழி சென்றதில்லை என்பதனால்தான் களைப்படைகிறாய்” என்றாள் சுதமை. பின்னர் அவளுக்கு மெல்ல புரியலாயிற்று. அவள் திரும்பிச்செல்ல முயல நகைத்தபடி சுதமை அவள் கைகளை பற்றிக்கொண்டு “எங்கு செல்கிறாய்? நீ என் அரசரின் அடிமை” என்றாள். கையை உதறிவிட்டு அசோககுமாரி தப்பி ஓட நாகர்கள் மரங்களிலிருந்து பாய்ந்து அவளைச் சூழ்ந்தனர்.
அவள் முன் தோன்றிய கம்பனன் “நீ என் அரசனின் கவர்பொருள். திமிறினால் உடல் சிதையப்பெறுவாய்” என்றான். அவர்கள் அவளை கொடிகளால் கட்டி இழுத்துக்கொண்டு வந்து ஹுண்டனின் அவையில் நிறுத்தினர். அவையமர்ந்திருந்த அரசன் அவளைக் கண்டதும் வெடிச்சிரிப்புடன் எழுந்து அருகே வந்தான். “உன் எல்லைக்குள் நீ ஆற்றல்கொண்டவள். முதலையைப் பிடிக்க இரையை பொறியிலிட்டு அதை கரை வரச்செய்யும் கலை அறிந்தவர் நாகர்” என்றான். அவள் அவன் சொல்வதென்ன என்று அறியாமல் நோக்கி அமர்ந்திருக்க “நீ என் ஆணையை மீறினாய்! விரும்பியதைக் கொள்ள அரசனுக்கு உரிமை உள்ளது. ஆணைமீறுபவரை தண்டிக்கவும் அவன் கடமைப்பட்டவன். நீ இன்றுமுதல் என் அரசி. அது என் விழைவு. என் அரண்மனைவிட்டு வெளியே செல்ல உனக்கு இனி என்றும் ஒப்புதல் இல்லை, அது உனக்கு அரசன் அளிக்கும் தண்டனை” என்றான் ஹுண்டன்.
அவள் கதறியழுது தன்னை விட்டுவிடும்படியும், தன் தந்தையின் ஆணைப்படி நெடுங்காலமாக தன்னை வேட்டு வரும் தலைவனுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னாள். அவைமுன் நீதிகேட்கவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுமியைப்போல அழுதபடி அமர்ந்து கைகளை உதறி அடம்பிடிக்கவே அவளால் இயன்றது.
அரசனின் ஆணைப்படி அவளைப் பிடித்து இழுத்துச்சென்றனர் நாகசேடியர். அவளை நீராட்டி நாகபடக் கொந்தையும் நாககங்கணங்களும் நாகக்குழையும் சூட்டி அணிசெய்து ஏழு நாகங்கள் எழுந்து விழிசூடி நின்றிருந்த குலதெய்வத்தின் ஆலயத்திற்கு கொண்டுசென்றனர். அவள் கழுத்தில் நாகபட மாலையை அணிவித்து ஹுண்டன் அவளை வலுமணம் கொண்டான். அவள் அழுது சோர்ந்து ஆற்றலிழந்து நனைந்த தோகைமயில்போல கைகால்கள் தளர்ந்திருந்தாள். அவளை தன் காமமண்டபத்திற்கு கொண்டுசெல்லும்படி அவன் ஆணையிட்டான்.
அவர்கள் அவளை இரவுக்கான மென்பட்டு ஆடைகளும் உறுத்தாத நகைகளும் அணிவித்து அந்திமலர்கள் சூட்டி அவன் மஞ்சத்திற்கு கொண்டுசென்றனர். அவள் மஞ்சத்தில் அவர்களால் அமரச்செய்யப்பட்டபோது எங்கிருக்கிறோம் என்பதையே அறியாதவள் போலிருந்தாள். ஏதோ ஒற்றைச்சொற்களை எவரிடமோ எனச் சொல்லி மெல்ல அழுதுகொண்டிருந்தாள். “அழுதுகொண்டிருக்கிறார்” என நாகசெவிலி அரசனிடம் சொன்னாள். “நாளை நாணமும் நகையாட்டுமாக வருவாள்” என்று சொன்னபின் அரசன் மஞ்சத்தறைக்குள் புகுந்தான்.
இரவுக்கான வெண்பட்டாடை அணிந்திருந்தான். மார்பில் மெல்லப் புரளும் முல்லை மலர்தார். காதுகளில் ஒளிரும் கல்குழைகள். அவன் குறடோசை கேட்டு அவள் விதிர்த்தாள். அவன் அருகே வந்து அவளிடம் குனிந்து மென்குரலில் “அஞ்சவேண்டாம். நீ அரசனின் துணைவி ஆகிவிட்டாய். நாகர்குலத்துக்கு அரசியென்று அமரவிருக்கிறாய்” என்றான். அவள் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவனை நோக்கிய விழிகளில் அவன் தோற்றம் தோன்றவுமில்லை. உதடுகள் ஏதோ சொல்லை உச்சரித்து அசைந்துகொண்டே இருக்க விழிகள் சிறார் விளையாட்டில் பிடித்து சிறுகிண்ணத்து நீரில் இட்ட பரல்கள் இறுதிமூச்சுக்குத் துடிப்பதுபோல அசைந்தன.
அவள் செவிகள் மட்டுமே கேட்கும்படியாக “நீ எனக்கு உன் காதலை மட்டும் கொடு, உனக்கு நான் இவ்வுலகை அளிக்கிறேன்” என்று ஹுண்டன் சொன்னான். அவள் முகம் மாறாததைக் கண்டு உடனே சினம்கொண்டு “அதை நீ மறுத்தால் நான் நஞ்சு என்றும் அறிய நேரும்” என்றான். அவள் அசையும் உதடுகளும் தத்தளிக்கும் விழிகளுமாக அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “என்னடி சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். அவள் அதையே சொல்லிக்கொண்டிருக்க அவள் தோள்களைப்பற்றி உலுக்கி “இழிமகளே, சொல்… என்ன சொல்கிறாய்?” என்றான்.
அவள் அணங்குகொண்டவள் போலிருந்தாள். அண்மையில் அவள் உதடுகளை நோக்கிய அவன் அவை மட்டுமே கண்களை நிரப்புவதுபோல் உணர்ந்தான். “என்னடி சொல்கிறாய்? பிச்சியா நீ? சொல்!” என அவளைப் பிடித்து உலுக்கினான். “சொல், கீழ்மகளே! என்ன சொல்கிறாய்?” என அவளை ஓங்கி அறைந்தான். அந்த அறையைக்கூட அவள் உணரவில்லை. அவன் “இது ஒரு சூழ்ச்சியா? இதனால் நீ தப்பிவிடுவாயா?” என்று கூவியபடி அவளை பிடித்துத்தள்ளி மஞ்சத்தில் சரித்து அவள் உடலை ஆளமுயன்றான்.
அவள்மேல் படுத்து அவள் முலைகளைப் பற்றியபோதும் அவள் அதை அறியவில்லை. அவன் எழுந்த அச்சத்துடன் அவள் உதடுகளை நோக்க ஒரு கணத்தில் அச்சொல் அவனுக்குப் புரிந்தது. அவன் உடல் குளிர்ந்து கால்கள் செயலிழந்தன. எடைகொண்டுவிட்ட உடலைப்புரட்டி அவன் படுக்கையில் மல்லாந்தான். அவன் இடைக்குக்கீழே கல்லாகிவிட்டிருந்தது.
அவள் எழுந்து ஓடுவதை அவன் சொல்லில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் வெளியே சென்று அரண்மனை முற்றத்தை அடைந்து தெருக்களினூடாக அலறியழுதபடி ஓடி நகர்நீங்கினாள். அவளை அரசன் விட்டது ஏன் என காவலர் குழம்பினர். அழியா தீச்சொல் ஒன்று நகர்மேல் கவிந்ததோ என ஊரார் அஞ்சினர். அவள் ஒருமுறை நின்று நகரை திரும்பி நோக்கியபின் கண்ணீர்த்துளி நிலத்தில் சிதற குழல் உலைய கால்சிலம்பு கறங்க நடந்தாள் என்றனர் கோட்டைக்கு வெளியே நின்றிருந்த நகர்க்காவலர்.
விடியும்போது அவள் மீண்டும் தன் குடில்சோலையை அடைந்தாள். ஓடி அவ்வெல்லையைக் கடந்தபோது கால்தடுக்கியதுபோல நினைவழிந்து விழுந்தாள். பின்னர் இளவெயில் முகத்தில் விழ விழித்தெழுந்தபோது அவள் தான் ஏன் அங்கு கிடக்கிறோம் என வியந்தாள். தன் உடலில் இருந்த அணியும் ஆடையும் எவ்வண்ணம் அமைந்தது எனத் திகைத்து நோக்கியபின் அவற்றை பிடுங்கி வீசினாள். குடிலுக்குள் சென்று மரவுரி அணிந்து முகம்கழுவி ஆடியில் தன் முகத்தை நோக்கியபோது அதில் இளமைப்புன்னகை திரும்பியிருந்தது.
மீண்டும் குடில்முற்றத்திற்கு வந்தபோது அங்கே சிதறிக்கிடந்த அணிகளும் ஆடைகளும் எவருடையவை என்று அறியாது குழம்பி கையிலெடுத்து நோக்கினாள். தன் உடல்மேல் வைத்து அவை பெண்கள் அணிபவை என உய்த்தறிந்து புன்னகைத்தாள். பின்னர் சற்றுநேரம் எண்ணிநோக்கியபின் அவற்றை கொண்டுசென்று அக்குடில்சோலையின் எல்லைக்கு அப்பால் வீசினாள். பின்னர் துள்ளியபடி அங்கே பூத்துநின்ற மலர்மரம் ஒன்றை நோக்கி ஓடினாள். அதன் அடியில் சென்றுநின்று அடிமரம் பிடித்து உலுக்கி மலர்மழையில் கைவிரித்துத் துள்ளி கூச்சலிட்டுச் சிரித்தாள். அவள் அக்குடில்வளைவு விட்டு அகன்றபோது அவள் உடலில் அகவை நிகழத்தொடங்கிவிட்டிருந்தது. அந்த இரண்டுநாட்களின் மூப்பைக் களைந்து மீண்டும் சென்றகணத்தில் இருந்த காலத்தை அடைந்தது அவள் உடல்.
காவலர் ஓடிவந்து நோக்கியபோது ஹுண்டன் மஞ்சத்தில் நடுங்கியபடி படுத்திருந்தான். “அரசே, அரசி ஓடிச்செல்கிறார்கள்” என்றான் அணுக்கனாகிய அமைச்சன் கம்பனன். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை. “என்ன ஆயிற்று தங்களுக்கு? ஏன் படுத்திருக்கிறீர்கள்?” என்றபடி அருகணைந்த கம்பனன் அப்பார்வையிலேயே அரசனின் கால்கள் கல்லென்றாகிவிட்டிருப்பதை கண்டான். அவன் கைநீட்ட ஹுண்டன் அவன் தோள்களை பற்றிக்கொண்டான். கம்பனன் அவனைப் பற்றி எழுப்பினான். அவன் உடல் எடைமிகுந்து கற்சிலைபோல அவன் மேல் அழுந்தியது.
அரசனை மருத்துவர்கள் வந்து நோக்கி திகைத்தனர். “கால்கள் எப்படி கல்லாயின? அமைச்சரே, இது தெய்வங்களின் தீச்சொல்” என்றனர். எவரும் எச்சொல்லும் எவரிடமும் உரைக்கலாகாது என அமைச்சனின் ஆணையிருந்தபோதும் அரசனின் கால் கல்லானதை மறுநாள் புலரியிலேயே நகர் அறிந்தது. குலங்கள் அறிந்து அஞ்சி தெய்வங்களை நோக்கி படையல்களும் பலிகளுமாக நிரைவகுத்தன. “பெண்பழியும் கவிப்பழியும் அறப்பழியும் அகலாது” என்றனர் மூத்தோர்.
பின்னர் ஹுண்டன் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அவனை கல்படுக்கை ஒன்றைச்செய்து அதில் கிடத்தினர். அவனுக்குப் பணிவிடை செய்ய சேடியரும் ஏவலரும் எப்போதும் சூழ்ந்திருந்தனர். கைபற்றி எழுந்து அமர்ந்தும் சிறுசகடத்திலேறி வெளியே செல்லவும் அவனால் இயன்றது. அமைச்சனைக்கொண்டு அவன் நாடாண்டான். உணவுண்ணுதலும் நூல்தோய்தலும் இசைகேட்டலும் குறைவின்றி நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என அவன் எவரிடமும் சொல்லவில்லை. அதை உசாவும் துணிவும் எவருக்கும் இருக்கவில்லை. அதைக் குறித்து ஒவ்வொருநாளும் எழுந்த புதிய கதைகளை எவரும் அவன் செவிகளில் சேர்க்கவுமில்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் சோர்ந்துவருவதை அமைச்சன் கம்பனன் கண்டான். அவன் அருகே அமர்ந்து அரசுசூழ்தலின் வெற்றிகளைப்பற்றி சொன்னான். குலங்கள் அவனைப் புகழ்வதையும் குடிகளின் பணிவையும் கூறினான். அவர்கள் கூடி காட்டிலாடிய இளமைநாட்களைப்பற்றி கதையாடினான். எச்சொல்லும் அரசனில் பற்றிக்கொள்ளவில்லை. ஒருமுறை பேச்சின்போக்கில் அமைச்சன் அசோககுமாரியைப்பற்றி சொன்னான். அரசனின் விழிகளில் அசைவைக் கண்டு அவள் காத்திருக்கும் இந்திரனுக்கு நிகரான அரசனைப்பற்றி பேசினான். அரசனின் முகம் உயிர்ச்செம்மை கொண்டது. அவன் சினத்துடன் முனகினான்.
அதுவே அவனை மீட்கும் வழி என உணர்ந்த கம்பனன் அதன்பின் அவ்வஞ்சத்தைப் பற்றியே அரசனிடம் பேசினான். ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அதைக் குறித்து அவனிடம் பேசும்படி ஆணையிடப்பட்டனர். வஞ்சம் ஹுண்டனை மீண்டெழச் செய்தது. கல்லான கால்களை நீட்டி கல்படுக்கையில் அமர்ந்தபடி அவன் செய்திகளை எட்டுத் திசைகளிலிருந்தும் சேர்த்துக்கொண்டிருந்தான். குருநகரின் அரசனாகிய ஆயுஸ் தத்தாத்ரேய முனிவரின் அருள்பெற்று மைந்தன் ஒருவனை ஈன்ற கதையை அவனிடம் ஒற்றர்கள் சொன்னார்கள். தாயைப் பிளந்து மண்ணுக்கு வந்த அம்மைந்தன் இந்திரனை வெல்வான் என நிமித்திகர் எழுவர் களம்பரப்பி குறித்ததை அவன் அறிந்தான்.
அரசனின் ஆணைப்படி அம்மைந்தனின் பிறவிநூலை ஓர் ஒற்றன் திருடிக்கொண்டு வந்தான். அதை தன் குலப்பூசகர் எழுவரிடம் அளித்து நிலைநோக்கச் சொன்னான் ஹுண்டன். அவர்களும் இந்திரனை வெல்லும் ஊழ்கொண்டவன் அவன் என்றனர். “அவன் மணக்கப்போவது எவரை?” என சிறிய கண்களில் நச்சு கூர்ந்துநிற்க ஹுண்டன் கேட்டான். அவர்கள் கருக்களை நோக்கியபின் “அவள் முன்னரே பிறந்துவிட்டாள். அவனுக்காக காத்திருக்கிறாள்” என்றனர். “ஆம், அவனே” என்று பற்களைக் கடித்தபடி ஹுண்டன் சொன்னான். “அவன் பெயர் நகுஷன்” என்றான் கம்பனன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11
February 28, 2017
என் பெயர் டைகர்
சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன்.
ஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் கட்டுப்படியாவதில்லை. என் இயல்பே வேறு. சிரிப்பும் விளையாட்டும் இல்லாத ஒருநாள் கடந்தால் அது இழப்பென்றே மாலையில் தோன்றும். அதற்கான நண்பர்களே உடனிருக்கிறார்கள். சைதன்யா சொல்வதுபோல அப்பா ஒரு ‘கான்ஷியஸான லூசு’
துப்பறியும்நாவல்களையும் சாகசநாவல்களையும் விரும்பிப்படிப்பது ஒருவகையில் என் இளமையை தக்கவைக்கும் முயற்சியும்கூட. அவை என்னுள் உள்ள அழியாத சிறுவனை குதூகலப்படுத்துகின்றன. ஹாங்காங் சண்டைப் படங்கள், ஹாலிவுட் சாகசப்படங்கள் மேல் தணியாத மோகம் எப்போதும் எனக்கு உண்டு.
சினிமாவில் நான் சீரியஸ் படங்களை விரும்புவதில்லை. விதிவிலக்குகள் என்றால் மிகமிகச்சீரியஸான படங்கள், டெரென்ஸ் மாலிக் அல்லது ஹெர்ஷாக் போல. அதுவும் எப்போதாவது, மனதில் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கும்போது மட்டும். சினிமாவே பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய ஊடகம், நேரடியாக நிகழும் கனவு, அதிலென்ன சிந்தனை என்பதே என் எண்ணம். சினிமா பார்க்கும்போது எப்போதும் எனக்கு பன்னிரண்டுவயது.
நீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்
முத்து காமிக்ஸ் என் இளமையில் பெரும் கனவை விதைத்த நூல்களை வெளியிட்டிருக்கிறது. சொந்தத் தோட்டத்திலேயே தேங்காயும் பாக்கும் திருடி விற்று வாங்கிய புத்தகங்கள் எத்தனை. முல்லை தங்கராசனை ஒருமுறை நேரில் காண வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இன்று முத்து காமிக்ஸ் மீண்டு வந்துள்ளது.
சற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்தம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது
அத்துடன் மிகக்கவனமாக முன்னும் பின்னும் நெய்யப்பட்ட கதைச்சரடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. ஒன்று டைகரின் நினைவு. இன்னொன்று அவனைக் கொல்லத் தொடர்பவர்களின் கதை. இன்னொன்று அந்த சிறுநகரில் நிகழும் கொலை கொள்ளைகளின் பின்னணியும் அதற்கு எதிராகப் போராடும் காவலர்களும் .இன்னொன்று செவ்விந்தியர்களின் போராட்டம். இவையனைத்தையும் எழுத வரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை கடைசியாக. கச்சிதமாக அத்தனை கதைகளும் ஒன்றிணைகின்றன.
அனைத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களை வெறும் காட்டுமிராண்டிகளாக காட்டாமல் அந்நிலத்தின் உரிமையாளர்களாக, வாழ்க்கைக்காகப் போராடுபவர்களாகக் காட்டும் கோணம் நமக்கு முக்கியமானது. செவ்விந்தியர் தலைவனின் பெருந்தன்மையும் ஆண்மையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
பலவகையிலும் ஆஸ்திரேலியாவின் கதையுடன் ஒத்துப்போகிறது இக்கதை. செவ்விந்தியக் குழந்தைகளைப் பிடித்துவந்து ஓர் அனாதை இல்லம் நடத்தி அங்கே அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளைச் சிறைமீட்கப்போராடும் செவ்விந்தியத் தலைவனின் கதையே மைய இழை
”கிறித்தவர்களாக ஆன செவ்விந்தியர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் அவர்களை கீழ்மக்களாகவே நடத்துவோம். அவ்வாறாக அவர்களின் வாழ்க்கையை நாம் அழிப்போம்” என கதாநாயகன் டைகர் சொல்கிறான். அதுவே கதையின் மைய வரி என நினைக்கிறேன். அவ்வகையில் இது ஒரு மாபெரும் சூறையாடலின் வரலாறும்கூட.
எளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தேவதேவன் – கடிதம்
இனிய ஜெயம்,
கவிதை .
நீர்நடுவே
தன்னை அழித்துக்கொண்டு;
சுட்டும்விரல்போல் நிற்கும்
ஒரு பட்டமரம்.
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.
தேவதேவன் .
ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை.
கவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது.
கவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் அல்ல. சூழச்சூழ நீர் நடுவே ”அது” ”அது” என சுட்டும் சுட்டு விரல் போல, பிரிந்து தனித்து நிற்கும் ஒரு பட்டமரம். தனியன். பித்தன்.
அவனைப் புரிந்து கொண்டு, அவனில் வந்தமர்ந்து, அவனுக்கு பொன்முத்தம் இடும் புள் கவிதை.
தன்னை அழித்தேனும் அதற்காக காத்திருக்கும் ஒருவனே கவிஞன். அவனில் வந்து கூடுவதே கவிதை.
இரு உலகப்போர் நடுவே திரண்டு வந்த வடிவும், கசப்பும் உள்ளுறையுமே, இங்கே தமிழில் துவங்கிய நவீன கவிதை வரலாற்றின் தோற்றுவாய். விதவிதமான சரிவுகள், அழிவுகள்,இருள்.
தேவதேவனும் தன்னை அழித்துக் கொள்ளும் நவீன கவிஞர்தான். பாரிய வேறுபாடு. தேவதேவன் தன்னை ஒளியின் முன் வைத்து அழித்துக் கொள்கிறார். மெய்ப்பொருளில் கரைத்துக் கொள்கிறார்.
ஒரு காரணமும் இல்லாமல்
தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது
கொன்றை.
காரணமற்ற இந்த சிரிப்பின் முன் தன்னைக் கரைத்துக் கொள்ளும் கவிஞன்.
மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை
தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து
குழுமி நின்று
தாங்கித் தாங்கித் தாங்கித்
அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்
மெல்ல மெல்ல மெல்ல
பூமியில் கொண்டு சேர்த்தது.
எத்தனை பெரிய லீலை. அந்த லீலை முன் வியந்து நிற்கும் கவிஞன். தொடர்ச்சியாக வீரியம் கொண்டு உள்ளே எழுகிறது ஆனத்தின் இக் கவிதை.
அகாலம் .
ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை,
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை,
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை,
ஒரு பிரபஞ்சம் போவதால்
எனக்கு ஒன்றுமில்லை.
உதிர்சருகின் முழுமை முன் வியந்து நிற்கும் ஒரு உள்ளம். வியப்பின் அக் கணம் கடவுளின் உள்ளத்தை அடையும் நிலை. பிரபஞ்சமே போனாலும் எனக்கொன்றும்மில்லை என்று சொல்லும் அகாலத்தின் உள்ளம். அகாலத்தின் பாவனை கொண்டு கடவுளின் உள்ளத்தை எய்தும் ஒரு மனம்.
உதிர் சருகில் பிரபஞ்ச நடனத்தை காட்டும் ஒரு கவிதை. பிரபஞ்ச நடனம் என்பதை உதிர் சருகாக்கிக் காட்டும் ஒரு கவிதை.
சங்கத் கவிதை அழகியல், பக்திக்கவிதைகள் உணர்வு கொண்டு முயங்கும் தேவதேவனின் கவிதை வரிகளைத்தான் இந்த உணர்வுக்கு இணை சொல்ல அழைக்க முடியும்.
ஆம்.. எல்லாம் எவ்வளவு அருமை.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை
நண்பர்களே,
இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின் சில சிறுகதைகளும் கட்டுரையும் விவாதிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்புக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைத்துக்கொள்ள இயலவில்லை, எனவே அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் அடுத்த புதிய வாசகர் சந்திப்பை நடத்த உள்ளோம். ஜெயமோகன் இரு நாட்களும் அக்கல்லூரியில் தங்கி வாசக நண்பர்களை சந்திப்பார், மார்ச் 19 இரவு தான் ஊர் திரும்புகிறார். சந்திப்பு மார்ச் 18 காலை 10 மணி முதல் 19 மதியம் 1.30 வரை நடைபெறும்.
கடந்த முறை விண்ணப்பித்து தகவலும் தெரிவிக்காமல் தவறியவர்கள் மற்றும் முதல் நாள் கலந்து கொண்டு அன்றே திரும்பிச் சென்றவர்கள் என ஒரு சிலர் இருந்தனர். அவர்கள் தகுதியும் தீவிரமும் கொண்ட பிற வாசகர்களின் இடத்தை வீணடித்துவிட்டனர். எனவே ஏற்கனவே விண்ணப்பித்து உரிய தகவல் தெரிவிக்காமல் தவறியவர்கள், சம்பிரதாயமாக விண்ணப்பிப்பவர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். உண்மையிலேயே உறுதிப்பாடும் தீவிரமும் இருக்கும் வாசகர்கள் மட்டும் பெயர், வயது, தொழில், தொலைபேசி எண், முகவரி மற்றும் சுயவிபரத்துடன் கீழ்கண்ட விண்ணப்பத் தாளை நிரப்பி விண்ணப்பித்தல் நன்று, ஏற்பாடுகள் செய்ய எளிதாக இருக்கும்.
அதே போல ஏற்கனவே புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள், அவர்களையும் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சந்தித்த புதிய வாசகர்களை மீண்டுமொருமுறை இவ்வாண்டுக்குள் சந்திக்கும் திட்டமும் ஜெயமோகனுக்கு உண்டு, அங்கு பார்த்துக்கொள்ளலாம், அல்லது “ஜெ”வை அவர் இல்லத்தில் சந்திக்கலாம்.
கடந்த ஈரோடு சந்திப்புக்கு பதிவு செய்து இடம் கிடைக்காதவர்கள் இப்போதும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்புக்கு meetings.vishnupuram@gmail.com
கிருஷ்ணன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
தனித்தொடர்புக்கு :
கிருஷ்ணன், ஈரோடு : 98659 16970, (salyan.krishnan@gmail.com)
சக்தி கிருஷ்ணன், திருச்சி : 98942 10148.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
29. பிறிதொருமலர்
வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை நோக்கி ஓநாய்போல மூக்கு கூர்ந்தபடி நடந்தான். அந்த மணம் மிக அருகே என ஒருகணம் வீசியது, மிக அப்பாலென மறுகணம் தோன்றியது. அது வெறும் உளமயக்கே என அடிக்கடி மாயம் காட்டியது. அந்த ஊசலில் ஆடிச் சலித்து அதை முழுமையாக விலக்கியபடி நடந்தபோது அதுவே வந்து அவர்களை அழைத்துச்சென்றது.
ஊர்வசியின் ஆலயத்திலேயே அவர்கள் ஓர் இரவை கழித்தனர். இரும்புநீர்மை என குருதி மாறி தசைகள்மேல் பேரெடையைச் சுமத்தியது போன்றதொரு களைப்பு பீமனை ஆட்கொண்டது. உடலை சற்றும் அசைக்கமுடியாதவனாக அவன் சருகுமெத்தைமேல் படுத்து இருண்டுவிட்ட வானை நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் துளித்து ஒளிகொண்டு ததும்பி அதிர்ந்து நின்ற வானம். மெல்லிய அதிர்வொன்று நிகழ்ந்தால் அவையெல்லாம் பொலபொலவென உதிர்ந்து மண்ணை நிரப்பிவிடுமென்று இளவயதில் கேட்ட கதையை நினைவுகூர்ந்தான்.
அவன் அருகே அமர்ந்திருக்க சதசிருங்கத்தின் ஏரிக்குமேல் எழுந்த விண்மீன்பரப்பை சுட்டிக்காட்டி தருமன் சொன்னான் “அங்கு நின்றிருப்பது இலைக் கருமை தழைத்த ஒரு பெருமரம், மந்தா. அதில் கரிய சிறகுள்ள பறவைகள் என இப்போது பறந்தலைபவர்கள் கந்தர்வர்கள். கண்ணுக்குத் தெரியாத இன்னிசை எழுப்புபவர்கள் தேவர்கள். இந்த இனியமணம் அதன் மலர்கள் எழுப்புவது.”
அவ்வெண்ணம் எழுந்ததுமே திரும்பிவிடலாம் என்று தோன்றியது. மறுகணமே உள்ளம் எழுந்து கிளம்பிவிட்டது. உடலை அசைக்க அதனால் முடியவில்லை. இரும்புத்துண்டில் கட்டப்பட்ட பறவை என அது சிறகடித்துச் சுழன்று வந்தது. அறியா மணமொன்றைத் தேடி அலைவதன் அறிவின்மையை அவன் அருகில் மலை என கண்டான். அது வெறும் உளமயக்கு. அல்லது ஓர் அகநகர்வு. அதை பருவெளியில் தேடுவதைப்போல பொருளிலாச் செயல் பிறிதொன்றில்லை.
ஏன் இதற்கென கிளம்பினேன்? உண்மையிலேயே அவள் விழிகனிந்து கேட்ட அக்கணத்தில் என் உள்ளம் எழுச்சிகொண்டதா? இல்லை, நான் நாப்போக்கில் சொன்னதுபோல அர்ஜுனன் மீண்டுவந்தான் என்பதனால்தான் என்பதே உண்மையா? அல்லது அங்கே இருந்த சலிப்பை வெல்லவா? ஒருவேளை நானும் ஒரு பயணம் செய்யவேண்டும் என்னும் சிறுவனுக்குரிய வீம்பா? எதுவோ ஒன்று. ஆனால் இனிமேலும் இதை நீட்டித்தால் வீணனென்றே ஆவேன்.
அவன் உள்ளூர புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் உடல் கற்சிலை என மண்ணில் அழுந்திக்கிடந்தது. பெருமூச்சுடன் கலைந்து “நாம் எங்கு செல்லவிருக்கிறோம்?” என்றான். “அறியேன்” என்றான் முண்டன். “ஏனென்றால் நானும் இந்தப் பயணத்தை முதல்முறையாக நிகழ்த்துகிறேன். என்னிடம் கதைகள் உள்ளன என்பதற்கப்பால் நானும் உங்களைப்போன்றவனே” என்றான். பீமன் நெடுநேரம் வானை நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் பெருமூச்சுக்கள் விட்டபடி தன்னுணர்வுகொண்டு “இது முடிவடையாத பயணம் எனத் தோன்றுகிறது. மறுமுனையில் ஒளிதெரியா சுரங்கப்பாதை” என்றான்.
“எல்லா அகவழிப் பயணங்களையும்போல” என்றான் முண்டன். பீமன் கையூன்றி தன் உடலைப் புரட்டி ஒருக்களித்து “உம்மிடம் கதைகள் உள்ளன அல்லவா? அவற்றைக்கொண்டு கழங்காடவும் அறிவீர். ஆடுக!” என்றான். “இப்போதா?” என்றான் முண்டன். “இப்போது ஒளியில்லை. கழங்குகள் கண்ணுக்குத்தெரியாது.” பீமன் “கைகள் கழங்குகளை அறிந்தால் போதும்” என்றான். முண்டன் “ஆம், அதுவும் மெய்யே” என்றான். எழுந்தமர்ந்து தன் இடைக்கச்சையிலிருந்து கழற்சிக்காய்களை எடுத்துப் பரப்பினான். அவன் கைகள் அதில் ஓடத்தொடங்கின.
“பெயர்கள், பெயர்களின் நிரையன்றி பிறிதில்லை. நிரையெனில் சரடு எது? சரடெனில் வலை எது? பெயர்கள் விண்மீன்கள்போல தனிமைசூழ்ந்தவை. மின்னிநடுங்கும் விழிகள் அவை. இருள் சூழ்ந்த ஒளித்துளிகள். எவ்வொலிகளின் துளிவடிவுகள் அவை?” அவன் நாவிலிருந்து பொருளின்மை சூடிய சொற்கள் பொழியலாயின. “விஷ்ணு, பிரம்மன், சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன். ஆ… இடக்கை அள்ளிய இவை எவை? லட்சுமி, சரஸ்வதி, தாரை, இளை, ஊர்வசி. ஓ… இவள் இந்துமதி. இவள் அசோககுமாரி.”
கழற்சிகள் அவன் கைகளில் அந்திப்பறவைகள் சேக்கேறும் மரக்கிளையில் என பூசலிட்டு சுற்றிவருவதைக் காணமுடிந்தது. “கலையறிந்தவள் இந்துமதி. திருமகள் அசோககுமாரி. தனியள் ஊர்வசி. கோட்டெயிர் கொற்றவை போலும் அவள். ஆ… இவள் தாரை. மூதன்னை. குருதி ஊறிய முதல் கருவறை. நோக்குக, இது இளை! இருமுலையில் ஒன்று நஞ்சு, ஒன்று அமுது. இருவிழிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். இவன் சந்திரன். வளர்ந்து மறைந்து மீண்டும் எழுந்து தேய்ந்தெழுகிறான் புரூரவஸ். இவள் ஊர்வசி. இருண்டிருக்கிறாள். கரியள்…”
அவன் சொற்கள் ஒழுகிச்சென்றன. பொருளின்மை கொள்கையில் சொற்கள் மேலும்மேலும் நுண்மையாகின்றன. ஆடைகழற்றிய குழவிகள்போல. இல்லை, எங்கும் தொடாத ஒளிபோல. சொற்களை அவன் அச்சத்துடனும் திகைப்புடனும் நோக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் ஏன் ஒன்றுடன் ஒன்று இணைவதே இல்லை? அவை பொருளென்னும் பிறிதொன்றால் இணைக்கப்படுகின்றன. அக்கணங்களுக்கு மட்டும். விளிம்புரசிக்கொண்டு விலகிவிடுகின்றன. விண்மீன்கள் ஏன் உரசிக்கொள்வதுமில்லை?
“இவள்!” என்றான் முண்டன். அவன் கையில் ஒரு கழற்சிக்காய் இருந்தது. மற்ற அத்தனை காய்களும் மெல்ல நாகம் பெட்டிக்குள் சுருண்டமைவதுபோல சரடாக மாறி அவன் கச்சைக்குள் சென்று அமைந்தன. “இவள் அவளே” என்றான். “யார்?” என்றான் பீமன் கனவுக்குரலில். “இவளை உமை உருவாக்கினாள் என்பது கதை” என்றான். “சொல்க!” என்றான் பீமன். “பெண்ணை எதிலிருந்து எழுந்தவள் என வகுக்கும் ஒரு நிமித்திக மரபுண்டு. மண்ணில் மைதிலி. புனலில் சத்யவதி. அனலில் துருபதன் கன்னி. அரசே, காற்றில் பிறப்பவர்களும் உண்டு. தாமரையில், அல்லியில், குவளையில், மந்தாரையில், செண்பகத்தில் பிறப்பவர்களுண்டு. வெண்தூவி அன்னத்தில், தாவும் சிட்டுக்குருவியில், மீன்கொத்தியில் பிறப்பவர்களுமுண்டு. மீனிலும் சங்கிலும் முத்துச்சிப்பியிலும் எழுந்தவர்களுமுண்டு.”
“இவள் மரத்தில் மலர்ந்தவள். ஆகவே இவளை அசோகசுந்தரி என்று சொல்கின்றனர் முனிவர்” என முண்டன் சொன்னான். “பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்தது கல்பமரம். அதன் அலைவளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தமென்று மாற உருக்கொண்டெழுந்தது. நோக்குவோர் இயல்புக்கேற்ப வண்ணமும் மணமும் கொள்வது. தூயநெஞ்சத்து முனிவருக்கு வெள்ளை மந்தாரம். கண்ணில் காமம் விரிந்த கன்னியருக்கு நெஞ்சை மயக்கும் பாரிஜாதம். அழிவின்மை கொண்ட தேவருக்கு அது சந்தனம். இன்பம் நாடும் உலகோருக்கு அசோகம். தெய்வங்களுக்குப் படையலாகும்போது ஹரிசந்தனம்.”
இளைஞனாகவும் கன்னியாகவும் ஆகி காதலாடும்பொருட்டு விண்ணில் உலாவிய சிவனும் உமையும் தொலைவில் எழுந்த நறுமணத்தை அறிந்தனர். “அது பாரிஜாதமணம் அல்லவா?” என்றாள் உமை. “ஹரிசந்தன மணம் வீசும் அது கல்பமரம். பாற்கடலில் எழுந்தது” என்றான் சிவன். அவர்கள் அருகணைந்தபோது அன்னை அவன் தோளை அணைத்து தன் முலையொன்றால் அவனை எய்து “எனக்கு மட்டும் ஏன் அது பாரிஜாதம்?” என்றாள். “ஆம், இப்போது நான் மந்தாரத்தை உணர்கிறேன்” என்றான் சிவன். அவர்கள் தழுவிக்கொண்டனர். இரு உடல்களாக இரு வகை அனல்கொண்டனர். முடிவிலா ஆடல் நிகழலாயிற்று. உமை மூச்சொலிக்கிடையே அவன் காதில் “அது சந்தனம்” என்றாள். “ஆம்” என்றான் அவன்.
எழுந்து அமர்ந்து அவன் விழிகளை விலக்கும்பொருட்டு மறுபக்கம் நோக்கிய தேவி அந்த மரத்தைப் பார்த்து “என்ன மரம் இது? எதை நமக்குக் காட்டுகிறது?” என்றாள். “நாம் யாரென்று” என்றான். “நான் இப்போது யார்?” என்றாள். “அதை கேள்” என்றான் சிவன். அவள் கைநீட்டி ஒரு மலரைப்பற்றி “அசோக மணம்” என்றாள். “உலகியலின் நறுமணம். நீ அகம் கனிந்து அன்னையென்றாகியிருக்கிறாய்” என்றான் சிவன். அவள் அந்த மலரைப் பறித்து கையில் எடுத்தாள். அது ஓர் அழகிய கன்னி என அவள் முன் நின்றது.
சிவன் “நீ உளம்கொண்ட மகள்” என்றான். “இவளை அசோகசுந்தரி என்றழை!” உமை அவளை அருகழைத்து நெஞ்சோடணைத்து குழல் முகர்ந்தாள். “இனியவள்” என்றாள். “இவளுக்கு உகந்த துணைவன் எங்குள்ளான்?” என்று திரும்பி தன் கணவனிடம் கேட்டாள். “தேவகன்னி இவள். தேவர்க்கரசனுக்கு அன்றி பிறருக்கு துணையாகலாகாது” என்றான். “தேவர்தலைவனுக்கு அரசி இருக்கிறாள்” என்ற உமை “தேவர்க்கரசனுக்கு நிகரென்றாகி அவன் அரியணையில் அமர்பவனுக்கு துணைவியாகுக!” என்றாள்.
சிவன் நகைத்து “அத்தகைய ஒருவன் பிறக்க இன்னும் நீண்டகாலம் ஆகும். சந்திர குருதிமரபில் ஆயுஸின் மைந்தனாக அவன் பிறப்பான். அவன் பெயர் நகுஷன்” என்றான். உமை “அவனுக்காகக் காத்திரு. அவனை அடைந்து மைந்தனைப் பெறும்வரை உன் இளமை மாற்றமின்றி நீடிக்கும்” என அவளை வாழ்த்தினாள். அவள் அன்னையின் கால்தொட்டு வணங்கி மண்ணில் ஒரு பொற்துளி என உதிர்ந்தாள்.
அறச்செல்வன் என்று பெயர்கொண்டிருந்தான் ஆயுஸ். தந்தையிடமிருந்து கற்ற நெறிகள் அனைத்தையும் தலைகொண்டிருந்தான். ஊனுணவு உண்ணவில்லை. உயிர்க்கொலை செய்யவில்லை. எனவே போருக்கு எழவில்லை. புலவர் அவைகளில் நூலாய்ந்தும் வைதிகர் அவைகளில் மெய்ச்சொல் அறிந்தும் முனிவர் நிலைகளில் யோகத்திலமர்ந்தும் நாடுபுரந்த அவனை அறத்தோன் என்னும் சொல்லாலேயே குடிகளும் பிறஅரசரும் அழைத்தனர்.
ஆயுஸ் அயோத்தியின் அரசர் சுவர்ஃபானுவின் மகள் இந்துமதியை மணந்தான். அவர்கள் நீண்டநாள் காதலில் மகிழ்ந்திருந்தும்கூட மைந்தர் பிறக்கவில்லை. இந்திரனை வெல்லும் மைந்தன் அவர்களுக்கு பிறப்பான் என்று நிமித்திகம் சொன்னது. அதற்காகக் காத்திருந்து சலித்த ஆயுஸ் அருந்தவத்தாராகிய வசிட்டரைச் சென்றுகண்டு தாள்பணிந்து தனக்கு மைந்தன் உருவாக அருளும்படி கோரினான். “நான் அருளி உனக்கு மைந்தன் பிறப்பதாக என் உள்ளம் சொல்லவில்லை, நீ துர்வாசரிடம் செல்!” என்றார் வசிட்டர்.
துர்வாசர் “நீ பெறப்போகும் மைந்தன் நான் உளம் கொள்பவன் அல்ல. நீ செல்லவேண்டிய இடம் அந்தணராகிய தத்தாத்ரேய மாமுனிவரின் குருநிலை” என்றார். நோன்பிருந்து வணங்கிய கைகளுடன் தத்தாத்ரேயரின் தவக்குடிலுக்குச் சென்றான் ஆயுஸ். அங்கே அம்முனிவர் முப்புரிநூல் அணியாமல், இருவேளை நீர்வணக்கமும் மூன்றுவேளை எரியோம்புதலும் ஒழித்து காமத்திலாடிக்கொண்டிருப்பதை கண்டான். அழகிய மங்கையர் அவருடன் இருந்தனர். அவர்கள் கழற்றி வீசிய அணிகளும் ஆடைகளும் மலர்க்கோதைகளும் அங்கே சிதறிக்கிடந்தன. காமச்சிரிப்பும் குழறல்பேச்சும் ஒலித்தன.
ஆயுஸ் உள்ளே செல்ல ஒப்புதல் கோர “வா உள்ளே” என்றார் தத்தாத்ரேயர். “இது உகந்த தருணமா?” என அவன் தயங்க “நான் முப்போதும் இப்படித்தான்… விரும்பினால் வருக!” என்றார். அவன் கைகூப்பியபடி குருநிலைக்குள் சென்றான். மதுமயக்கில் சிவந்த விழிகளுடன் இருந்த தத்தாத்ரேயர் அரசனை நோக்கி சரியும் இமைகளைத் தூக்கி சிவந்த விழிகள் அலைய “நீ யார்?” என்றார். “முனிவரே, நான் துர்வாசரால் உங்களிடம் ஆற்றுப்படுத்தப்பட்டேன். பெருவல்லமைகொண்டு இந்திரனைவெல்லும் மைந்தனை நான் பெறுவேன் என்கின்றன நிமித்திக நூல்கள். அத்தகைய ஒரு மைந்தனுக்காக நாங்கள் காத்திருக்கத் தொடங்கி நெடுநாட்களாகின்றன. கனி உதிர்ந்து எங்கள் மடி நிறைய உங்கள் சொல் உதவவேண்டும்” என்றான்.
“அரசே, நான் இங்கு செய்துகொண்டிருப்பது என்ன என்று நீ பார்த்திருப்பாய். நான் அந்தணன் அல்ல, அறவோனும் அல்ல. என் சொல் முளைத்தால் அது நன்றென்று கொள்ளமுடியாது” என்றார். “நான் துர்வாசரால் இங்கு அனுப்பப்பட்டேன். அவர் அறியாதவரல்ல. தங்கள் அருளால் மட்டுமே என் மைந்தன் மண்நிகழ்வான்” என்றான் ஆயுஸ். “அரசே, என் வாழ்க்கையை நீ அறியமாட்டாய். நினைவறிந்த நாள்முதல் முழுப்புலனடக்கம் பயின்றவன் நான். நாச்சுவையை முற்றிலும் ஒறுத்தேன். குளிருக்கும் வெயிலுக்கும் பழகி தோலை கல்லாக்கினேன். நாற்றத்திற்கு மூக்கை அளித்து நறுமணத்தை அறியாதவனானேன். விழியின்பம் அளிக்காத வெறும் பாலையில் வாழ்ந்தேன். செவியின்பம் அளிக்கும் சிறுபூச்சிகளைக்கூட தவிர்த்தேன். உறவை நான் அறியவில்லை. காமத்தை திறக்கவே இல்லை.”
“அவ்வண்ணம் முற்றிலும் புலன்வாயில்களை மூடி அமர்ந்து நெடுந்தவம் இயற்றினேன். படிகளில் ஏறி பின் பறந்து பின்னர் கரைந்து பின்னர் முற்றழிந்து அதுவென்றாகும் கணத்தில் என் முன் ஓர் அழகி தோன்றினாள். நான் அவளைக் கண்டதும் அஞ்சி விழிமூடினேன். இமையூடாகத் தெரிந்தாள். அணுகி வந்து என் முன்நின்றாள். அச்சம் காமம் என்றாக நான் அவளை தொட்டேன். என்னை சிறுமகவென ஆக்கி தன் மடியிலிட்டாள். அனைத்தையும் மறந்து அவள் முலையுண்டு மகிழ்ந்து அங்கிருந்தேன்.”
“மீண்டதும் நான் என் உடலெங்கும் புலன்கள் விழித்துக்கொண்டிருப்பதை கண்டேன். நானிருந்த செம்புலத்தில் எத்தனை வண்ணங்கள், எத்தனை புள்ளொலிகள், எத்தனை தளிரோசைகள் என அறிந்தேன். அள்ளி அருகிருந்த ஊற்றுநீரை உண்டபோது நாவினிமையில் திளைத்தேன். வெந்தமண்ணில் விழும் முதல்மழைத்துளி மணல் அலைகளை மலரிதழ் வளைவுகளென மணக்கச்செய்வதை அறிந்தேன். இன்காற்று உடல்தழுவ சிலிர்த்தேன். அவையனைத்தையும் நான் முன்னரே அறிந்திருப்பதையும் உணர்ந்தேன்.”
“என் முன் இருந்த மென்மணல்வெளியில் பெண்ணுடல் தெரியலாயிற்று. வளைவின் அழகுகள், குழைவின் மெருகுகள், குன்றெனும் எழுச்சிகள், ஓடையெனும் கரவுகள். காமத்தில் உடல் எழ கைமணலை அள்ளி எழுக என் விழைவு என்றேன். சிலம்பொலி கேட்க திரும்பி நோக்குகையில் இவளைக் கண்டேன். பிறிதொரு கைப்பிடி மண்ணை அள்ளி இவளில் இல்லாதவை எழுக என்றேன். அவள் வந்தாள். இருவரும் அல்லாத ஒருத்தி வருக என்றேன். மூன்றாமவள் அமைந்தாள். அதன் பின் பெண்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள்.”
“நுகர்வில் திளைக்கும் புலன்களுக்கு நடுவே நான்குமுனைகளையும் தாவித்தாவி இணைக்கும் எண்காலி என இருந்த ஆறாவது புலன் மனம். தன் முதுகில் சுமந்திருந்த மூட்டைச்சுமையே புத்தி. எட்டு காலை அசைத்தசைத்து ஓயாது பின்னச்செய்யும் ஒன்றென அதன் உள்ளுறைந்த தன்னிலை சித்தம். அவ்வலையே அதுவென்று எண்ணும் அதன் அறியாமையே அகங்காரம். ஒன்பது இருப்புகளையும் கரைத்து ஒளியென புறவுலகில் பரவியமைவதே முழுமை என உணர்ந்தேன்.”
“யோகமுழுமை என்பது உள்ளொடுங்குதல், போகமுழுமை வெளிவிரிந்தமைதல். உள்ளணைத்து புலன்களை வெளிப்பொருள் விரிவின் பகுதியென்றாக்குவது கள். களிமயக்கில் திளைக்கையில் உணவில் பிறந்து உணவை உண்டு உணவில் கழித்து உணவில் திளைத்து உணவில் இறந்து உணவாகும் சிறுபுழுவின் இன்ப முழுமையை அடைந்தேன். அவ்வாறு இங்கிருக்கிறேன்” என்றார் தத்தாத்ரேயர். “நச்சுக்கலம் என உலகோர் என்னை சொல்லக்கூடும். என்னில் ஒருதுளியையும் பிறருக்கு அளிக்க முடியாது.”
“அதையறிந்தல்லவா துர்வாசர் என்னை இங்கு அனுப்பியிருப்பார்?” என்றான் ஆயுஸ். “அறியாதும் அனுப்பியிருக்கலாம். சென்று அதையும் கேட்டு வருக!” என்றார் தத்தாத்ரேயர். ஆயுஸ் மீண்டும் துர்வாசரிடம் சென்று தத்தாத்ரேயர் இருந்த நிலையைச் சொல்லி செய்யவேண்டுவதென்ன என்று கேட்டான். “சிப்பியில் மாசும் பாம்புள் நஞ்சும் முத்தென்றாகின்றன. அவருள் எது ஒளிகொண்டிருக்கிறதோ அதை மைந்தன் என அளிக்கும்படி கோருக!” என்றார் துர்வாசர்.
திரும்பிவந்த ஆயுஸ் “அந்தணரே, எது உங்களை ஒளிவிடச்செய்கிறதோ அதுவே என் மைந்தனாக எழுக!” என்றான். “என்னுள் எரிவது காமம். அனல்துளி, தடைகள் அனைத்தையும் உணவென்று கொள்வது. தன்னை தானே அன்றி அவிக்கமுடியாதது” என்றார் தத்தாத்ரேயர். “அதுவே என் மைந்தனாகுக!” என்றான் ஆயுஸ். “அனலை வாங்கிக்கொள்கிறாய், அது முதலில் இருந்த கலத்தையே எரிக்கும். நீ துயருற்று அழிவாய்” என்றார் தத்தாத்ரேயர் “ஆம், அதை நான் முன்னரே எந்தையிடமிருந்து அறிந்துள்ளேன். அவ்வாறே ஆகுக!” என்றான் ஆயுஸ்.
தத்தாத்ரேயர் அளித்த மாங்கனியுடன் அரண்மனை மீண்டான் ஆயுஸ். அதை தன் மனைவிக்கு அளித்தான். அதை உண்ட அந்நாளில் இந்துமதி ஒரு கனவுகண்டாள். அவள் காலைப்பற்றி கொடி ஒன்று மேலேறியது. கவ்வி தொடைசுற்றி அவள் கருவறைக்குள் புகுந்தது. தொப்புளினூடாக அதன் தளிர்நுனி வெளிவந்தது. மூக்கில் வாயில் செவிகளில் எழுந்து கிளைத்தது. அது ஒரு மாநாகம் என அவள் அறிந்தாள். வேர் மண்ணில் விரிந்து பற்ற வால்நுனிகளென தளிர்த்தண்டுகள் விரிய இலைத்தழைப்பென படம் எடுத்து அது மரமென்றும் நின்றிருந்தது.
அவளுக்குள் அந்நாகம் பெருகிக்கொண்டே இருக்க தசைகள் இறுகிப்புடைத்தன. நரம்புகள் பட்டுநூல்களென இழுபட்டுத் தெறித்து அறுந்தன. உச்சித்தலை பிளந்து மேலெழுந்த மரம் இரு கிளை மூன்று கிளை நான்கு கிளை என விரிந்தது. அதில் மலர்கள் எழுந்து கனி செறிந்தது. பறவைகள் அடர்ந்து அது ஓயாது ஒலிகொண்டது. அவள் உடல் பட்டுச்சீலை என கிழிபடும் ஓசையை கேட்டாள். மரப்பட்டை போல உலர்ந்து வெடித்து விழுந்தாள். மரத்தின் வேர்கள் அவளை அள்ளிப்பற்றி நொறுக்கிச் சுவைத்து உண்டன. இறுதித்துளியும் எஞ்சுவதுவரை விழிமலைக்க அவள் அந்த எழுமரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.
நாற்பத்தைந்து நாட்களுக்குப்பின் அவள் கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவள் அக்கனவை கணவனிடமும் சொல்லவில்லை. அவன் அவளிடம் தத்தாத்ரேய முனிவரின் அருளால் அந்தணனுக்கு இணையான அறச்செல்வன் ஒருவன் தோன்றவிருப்பதாகவே சொல்லியிருந்தான். எனவே அவள் அக்கனவை தானே சொல்லிக்கொள்ளவும் அஞ்சினாள். சொல்லப்படாத கனவு அவளுக்குள் வளர்ந்தது. கருங்கல் உருளைபோல ஆகி எப்பொழுதும் உடனிருந்தது.
பன்னிருமாதம் கடந்தபின்னரே இந்துமதி குழந்தையை பெற்றாள். வயிறு வளர்ந்து எடைகொண்டு கால்தாளாமலானமையால் அவள் எப்போதும் படுக்கையிலேயே இருந்தாள். அவள் உண்டு ஊறச்செய்த குருதி அந்த மைந்தனுக்கு போதவில்லை. எனவே அவள் மெலிந்து பழுத்திலைபோல மஞ்சள் நிறம்கொண்டு வாய்வறண்டு விழிவெளுத்து தோல் பசலைகொண்டு சொல்லும் எழா சோர்வுடன் கிடந்தாள். வெறித்த விழிகளுக்கு முன் சூழ்ந்தோர் எவருமறியா ஒன்றை அவள் கண்டுகொண்டிருந்தாள் எனத் தோன்றியது. அடிக்கடி ஒலியென்றாகாச் சொற்களை அவள் உதடுகள் அசைவென காட்டிக்கொண்டிருந்தன.
நாள்கடக்குந்தோறும் மருத்துவர் அஞ்சலாயினர். தாதியர் “உள்ளிருப்பது குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வம் போலும். அவரை கருவமைந்தே உண்கிறது” என்றனர். நாள்தோறும் மருத்துவர் வந்து நோக்கி அரசனுக்கு செய்தி சொன்னார்கள். “அவர் இங்கிருந்து அகன்றுவிட்டார், இனி மீளமாட்டார்” என தலைமை மருத்துவர் தன் மாணவர்களிடம் சொன்னார். அவள் விழிகளிலும் ஏதும் தெரியாதாயின. அவள் ஓர் ஓவியத்திரையென்று ஆகியதுபோல உணர்ந்தனர்.
ஒருநாள் மாலை அவள் அலறும் ஒலிகேட்டு அனைவரும் ஓடிச்சென்று நோக்கினர். அவள் எழுந்து அமர்ந்து கைகள் பதற உடைந்த குரலில் கதறிக்கொண்டிருந்தாள். “எருமை! எருமையை விரட்டுக! எருமை!” என்றாள். “அரசி, அரசி” என சேடி அவளை உலுக்கினாள். “எருமையில் குழந்தையை கொண்டுவருகிறான்… எருமைமேல் அமர்ந்திருக்கிறது” என அவள் நீர் வறண்டு அச்சம் மட்டுமே வெறிப்புகொண்டிருந்த விழிகளால் சொன்னாள். “அரசி படுங்கள்… படுங்கள்!” என்றாள் முதியசேடி. “இருண்டவன்… இருளேயானவன்… தென்திசைத்தலைவன்… அதோ!”
துணிகிழிபடும் ஒலி கேட்டது. சூடான குருதியின் வாடை. முதுசேடி தன் கையை வெங்குருதி தொட்டதை உணர்ந்து அரசியை தள்ளிப் படுக்கச்செய்தாள். கதவைத் திறந்து வெளிவருபவன்போல அரசியின் இறந்த கால்களை அகற்றி மைந்தன் வெளிவந்தான். கரியநிறம் கொண்டிருந்தான். வாயில் வெண்பற்கள் நிறைந்திருந்தன. அவன் அழவில்லை, புலிக்குருளைபோல மெல்ல உறுமினான். மருத்துவச்சி கதவைத் திறந்து ஓடிவந்தபோது தொப்புள்கொடியுடன் குழவியை சேடி கையில் எடுத்திருந்தாள். நோக்கும்போதே அவள் அறிந்தாள்… அரசி இறந்துவிட்டிருந்தாள்.
மைந்தனை நோக்க ஓடிவந்த அரசனிடம் அரசியின் இறப்பே முதலில் சொல்லப்பட்டது. அவன் ஒருகணம் விழிமூடி நெற்றிநரம்பொன்று புடைத்து அசைய நின்றபின் “நன்று, அவ்வாறெனில் அது” என்றபின் குழந்தையைக் கொண்டுவர ஆணையிட்டான். அப்போதே உறுத்த உடலும் தெளிமுகமும் கொண்டிருந்தது குழவி. அவன் குனிந்து அதை நோக்கியபோது அதுவும் அவனை நோக்கியது. அவன் “நகுஷன்” என்றான். “நிமித்திகர் கூற்று முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. இவன் இந்திரனை வெல்பவன். நகுஷன் என பெயர் கொள்பவன்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
ஜக்கி -இறுதியாக…
ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2
ஜக்கி விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த வகையான விவாதங்கள் நான் அடிப்படையான சிலவற்றை சொல்வதற்குரிய தருணங்கள் மட்டுமே.
இறுதியாக மின்னஞ்சலில் வந்த சில வினாக்கள்.
இந்து மதத்திற்கு அமைப்பு தேவையில்லை, அதுவே அதன் வல்லமை என்றீர்கள். இப்போது அமைப்பு வேண்டும் என்கிறீர்களா?
நம் சூழலில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்பதுமுறை சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும்.
இந்துமதத்திற்குள் அமைப்புகள் என்றும் இருந்தன. நம் மடங்கள் அனைத்தும் அமைப்புகளே. மூன்றடுக்காக அமைப்புக்கள் உருவானதைப் பற்றி நான் முன்னரே பேசியிருக்கிறேன். . சிருங்கேரி மடம் ஓர் அமைப்பாகச் செயல்பட்டு எப்படி இந்துமதத்தைக் காத்தது என்றே சங்கரர் உரையிலும் விரிவாக சொல்லியிருக்கிறேன்.
ஆனால் இந்துமதமே ஓர் அமைப்பு என ஆவது இந்துமதத்தை அழிக்கும். இந்துமதத்திற்கு ஒரு மைய அதிகார அமைப்பும் , ஊர்தோறும் அதனால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் கிளைகளும், உறுப்பினர் பட்டியலும், அவர்கள் மேல் அமைப்பின் நேரடி அதிகாரமும், தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொண்ட மதகுருக்களின் சபைகளும் ஒருபோதும் உருவாகக்கூடாது.
ஆகவே இந்துமதத்தை எதனடிப்படையிலேனும் ஒற்றை அமைப்பாகத் திரட்டும் எம்முயற்சியையும் எதிர்க்கிறேன். இந்துக்களின் பிரதிநிதிகளாக நின்று பேசும் எவரும் அதிகாரபூர்வமானவர்கள் அல்ல என்கிறேன். முன்பும் பலமுறை சொன்னது இது.
இந்துமதம் கிளைத்துப்பரவுவது. ஏனென்றால் இது பன்மையிலிருந்து மையங்களால் தொகுக்கப்பட்டது. உட்கூறுகள் தனித்தரிசனங்களாக, மதங்களாக, வழிபாட்டுமுறைகளாக பிரிந்துகொண்டும் இருக்கும். இதற்கு வேரிலும் முளைக்கும் செடி என ஓர் உவமையைக்கூட முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லா அமைப்புக்களும் இந்துமதத்தின் கிளைகளாக, உட்பிரிவுகளாக எழுந்தவை மட்டுமே. எவையும் ஒட்டுமொத்தமாக இந்துமதத்திற்கான அமைப்புகள் அல்ல.
ஆகவேதான் இந்துமதத்திற்குள் இருந்து ‘எதுவும்’ கிளைத்துவர அனுமதிக்கப்படவேண்டும் என்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டுக் கலப்புள்ள ஷிர்டி சாயிபாபா வழிபாடு, மெய்வழிச்சாலை ஆண்டவர் அமைப்பு போன்றவைகூட. அவை விவாதிக்கப்படவேண்டும். மறுதரப்பால் மறுக்கப்படவேண்டும். ஆனால் தடைசெய்யப்படக்கூடாது. எல்லா வகை மீறல்களுக்கும் இதற்குள் இடமிருக்கவேண்டும். ஏனென்றால் ஞானத்தின் பாதை கட்டற்றது.
ஜக்கி சைவத்தை மாற்றியமைக்கிறார், இதை சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? சிவனுக்கு எங்குமே சிலைகள் இல்லையே?
அதை சைவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? அவரை பின்தொடர்பவர்கள் ஏற்றுக்கொண்டால்போதும். அது அவரது தரிசனம், அவர் உருவாக்கும் அடையாளம். அவர் தன் நோக்கில் சைவம், யோகம் எதையும் மறுவரையறை செய்யலாம். அப்படி மறுவரையறை செய்யப்பட்ட பலநூறு மரபுகள் இப்போது உள்ளன.
அந்தப்போக்குக்கு எப்போதுமே அனுமதியுண்டு இந்துமரபில். அதைத்தான் சொல்கிறேன். மரபான சைவர்கள் அதை மறுக்கலாம், சைவசித்தாந்திகள் எதிர்த்துவிவாதிக்கலாம். அது நிகழவேண்டும் என்கிறேன்.
இஷ்டப்படி சிலைகளை உருவாக்கலாமா? கட்டுப்பாடே இல்லையா?
யார் கட்டுப்படுத்துவது? அப்படி ஒரு மையம் இருந்ததில்லை, இருக்கக்கூடாது என்றுதான் சொல்கிறேன். ஏனென்றால் இங்கே அமைப்பு என்பதே இல்லை. சென்ற சில ஆண்டுகளில் நீங்கள் பார்த்த பல சிலைகள், வடிவங்கள் புதிதாக உருவானவையே. உதாரணம், கண்திருஷ்டி கணபதி.
சேலம் அருகே கந்தாஸ்ரமம் என்னும் மலையில் அதை உருவாக்கிய சாந்தானந்த சுவாமிகள் நிறுவிய சொர்ண ஆகர்ஷண பைரவர், பஞ்ச முக ஆஞ்சநேயர், மனைவியுடன் கூடிய நவக்கிரகங்கள் என வேறெங்குமில்லாத சிலைகள் உள்ளன. புராணங்களும் சிலைகளும் ஒரு மீமொழி [meta language] எனலாம். தங்கள் குறியீடுகளால் அவை அவற்றை நிறுவியவரின் தரிசனத்தை பேசுகின்றன. இந்துமதம் இந்தச் சுதந்திரமான தேடல் வழியாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் சாமியார்கள்தான் இனிமேல் எதிர்காலமா?
அல்ல. நான் நம்பும் சிந்தனைகளுக்கு கார்ப்பரேட் அமைப்பு தேவையில்லை. ஆனால் வேறுதரப்புகளும் இங்குள்ளன. நவீனவாழ்க்கை சார்ந்தவை. அவற்றுக்கு அவ்வமைப்பு தேவையாக இருப்பதனால் அவை உருவாகின்றன.
நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்?
நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன், வசைபாடவில்லை, தடைசெய்யக்கோரவுமில்லை. கவனம் என அறிவுறுத்தினேன். ஜக்கி செய்வது ஒரு கருத்தைப் பரப்புதல். அதனுடன் விவாதிப்பதோ புறக்கணிப்பதோ அறிவுடையோர் செயல். வசைபாடுவதல்ல.
மூடநம்பிக்கைகளை பரப்பாதவரை, நோயை குணப்படுத்தல் என்றெல்லாம் அறிவியலுக்கு எதிரான பேச்சுக்களை பரப்பாதவரை, பழமைவாதத்தில் ஊன்றி சாதியக்காழ்ப்பை முன்வைக்காதவரை அவை செயல்படும் உரிமைகொண்டவையே.
ஜக்கி மீதான எதிர்ப்பை இந்துமதம் மீதான எதிர்ப்பாக ஆக்குகிறேனா?
இல்லை. ஜக்கி என்றல்ல, இந்துமதத்தின் எந்த ஒரு அமைப்பும் நிலமோசடி செய்தால், சூழலை அழித்தால், பொதுநன்மைக்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயகமுறைப்படி எதிர்க்கப்படலாம். எதிர்த்தும் போராடலாம்.
ஆனால் வெறும் அவதூறுகள் வசைகள் அத்தகைய பொதுநன்மை சார்ந்த அக்கறையை காட்டவில்லை. ஜக்கி வெறுப்புக்காக மட்டுமே சூழியலை கையிலெடுக்கும் கும்பல்கள் அப்பட்டமான மாபெரும் சூழியல் அழிவுகளை, பொதுச்செல்வக்கொள்ளைகளை ஆதரிப்பவர்கள், காணாமல் கடந்துசெல்பவர்கள். ஆகவே அவர்களின் நோக்கத்தை திறந்துகாட்டுகிறேன்.
அப்படி இல்லை என்றால் அவர்களே சொல்லட்டுமே, ஜக்கியை எதிர்க்கிறோம் இந்துமதத்தை அல்ல என்று. இன்றுவரை ஒருவர்கூட அப்படி சொல்லவில்லையே.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
February 27, 2017
ஜக்கி கடிதங்கள் 8
அன்புள்ள ஜெ
நம்மாழ்வாரின் தோற்றத்தை வேடம் போடுகிறார் என்று சொன்ன ஜெயமோகன் ஜக்கியின் தோற்றம் குறியீடு என்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள்மேல். இது புதிது
மகேஷ்
*
அன்புள்ள மகேஷ்,
நான் சொல்லும் விளக்கங்களை எதிர்கொள்ளமுடியாத தவிப்பு. இதற்கும் ஏராளமான முட்டாள்கள் கிளம்பி வருவார்கள் என்னும் நம்பிக்கை –வேறென்ன?
நம்மாழ்வார் எங்கள் வழிகாட்டி. இந்த தளத்தில் இலக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்தால் இன்றும் அவர் மரபு சார்ந்த இயற்கை வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளின் அறிவுப்பு மட்டுமே வெளிவரும். அவருக்குத்தான் இறுதிநாள்வரை அதிகாரபூர்வமாக நிதி திரட்டி அளித்தோம். பலநூறுபேரை நானே அவரிடம் ஆற்றுப்படுத்தியிருக்கிறேன்.
ஜக்கி என் ஆசிரியரோ, அணுக்கமானவரோ அல்ல. அவரிடம் எவரையும் ஆற்றுப்படுத்துவதுமில்லை. ஜக்கியின் மீதான வசைகளில் உள்ள காழ்ப்பையும், அரசியல் – மதப்பின்னணியையும் அடையாளம் காட்டுவது மட்டுமே என் பணி.
ஜக்கி அளிப்பது ஓர் அகவயப்பயிற்சி. ஆகவே அதற்கு குறியீடுகளும் பிம்பங்களும் தேவையாகலாம். அவரே உருவாக்கிக்கொண்ட ஒரு வழி அது. அதற்கான குறியீடுகளை அவரே உருவாக்கலாம். அது மதம், மதம் எப்போதுமே அடையாளங்கள் சார்ந்தது.
நம்மாழ்வார் ஓர் அறிவியலாளர். அவர் பேசியது சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட அறிவியல் அணுகுமுறை ஒன்றை. அதை அவர் காலப்போக்கில் ஒருவகை மதம்போல, வெறும் நம்பிக்கையாக ஆக்கியதையே ஏற்புடையது அல்ல என்றேன். அது தவறான முன்னுதாரணமாக ஆகி இயற்கை வேளாண்மையின் அடிப்படையை அழித்துக் கொண்டுள்ளது என்றேன். மாற்று மருத்துவம், இயற்கைவாதம் போல இன்று நிலவும் பலவகையான அறிவியல் அடிப்படை அற்ற நம்பிக்கைகளின் பகுதியாக அதை ஆக்கிக்கொண்டிருக்கிறது என்றேன்.
நம்மாழ்வார் தன் அறிவியலை வெறும் அரசியல் காழ்ப்பு ஆக, மொழி-இனவாதமாக, குறுங்குழு அரசியல்வாதிகளின் கருத்துக்களின் பக்கவாத்தியமாக இறுதியில் மாற்றினார். அதன்வழியாக அதன் பெறுமானத்தை அழிக்க காரணமானார். அது கண்டிக்கத்தக்கது. ஆனாலும் அவருடைய பங்களிப்பு முன்னத்தி ஏர் போன்றது. ஆகவே அவர் முக்கியமான ஆளுமைதான். நான் எழுதியது இதையே.
அவருடைய தோற்றமும் குறியீடு என்றே சொல்லியிருந்தேன். வேடம் என்று அல்ல. அதன் அவசியமும் எனக்குத் தெரிந்தது. அதை காந்தியின் தோற்றத்துடன்தான் அந்தக் கட்டுரையிலேயே ஒப்பிட்டிருக்கிறேன். மக்களிடம் சென்று சேர அக்குறியீடு அவருக்கு உதவியது என்றே சொல்லியிருக்கிறேன்.
ஆனால் இன்று இயற்கை வேளாண்மையை அப்படி ஒரு மரபு சார்ந்த தோற்றத்துடன், மரபு சார்ந்த மொழியில் முன்வைக்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் மரபு என்ற பேரில் சொல்லப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளுடனும் அதுவும் சென்று சேர்கிறது. அதை நவீனஅறிவியலின் ஓர் உச்சநிலையாகவே கொண்டு செல்லவேண்டும். அந்தத் தோற்றத்துடன் – நான் நம்மாழ்வாரிடமே சொன்னது இது.
அதற்கு இத்தனை திரிபுகள். இத்தனை ஒற்றைவரிகள். இங்கு எத்தனை முட்டாள்களிடம்தான் பேசுவது!
ஜெ
***
விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடலூர் சீனுவின் நேற்றைய கடிதம் கண்டேன். அவர் என்ன சொல்கிறார்? ஒருவர் ஞானி அல்லது ஞானி அல்ல என்பதற்கு என்ன வரையறை உள்ளது? சத்குரு ஞானி அல்ல என்பது இவருக்கு எப்படித் தெரியும்? அல்லது ரமணர் ஞானி என்பது இவருக்கு எப்படித் தெரியும்? ஒன்று அவர் “நீங்கள் சத்குரு ஞானி என்று நம்புகிறீர்கள். நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன்” என்று சொல்ல வேண்டும் அல்லது “நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன். சத்குரு ஞானியா என்பது எனக்குத் தெரியாது” என்று சொல்ல வேண்டும்.
சத்குரு ஞானி அல்ல என்று அவர் வரையறுப்பதன் அளவுகோல் என்ன? என் அறிவுக்கு இரண்டே வழிதான் தோன்றுகிறது. ஒன்று சீனு தானே ஞானி என்று கூறிவிட வேண்டும் அதனால் ஞானியாகிய தனக்கு யார் ஞானி யார் ஞானி அல்ல என்று தெரியும் என்று கூறவேண்டும் (கிட்டத்தட்ட அவர் இந்த அடிப்படையில் கூறுவது போலவே தோன்றுகிறது – தான் கண் உடையவர், சத்குரு ஞானி என்று கருதுவோர் பார்வையற்றவர் என்கிறாரா?). இரண்டாவது வழி, அவருக்கு மிகவும் பிடித்த பகவான் ரமணர் கூறிய வரைவிலக்கணத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். “எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமை. தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாத தன்மை.” முதல் வழியில் சீனுவை மறுக்க வழியில்லை. இரண்டாவது வழியை கொண்டால், சத்குரு ஞானி என்று உறுதியாக கூறுவேன். எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமையை அவரிடம் எப்போதும் காண்கிறேன். தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாததன்மை – இதையும் எப்போதும் அவரிடம் காண்கிறேன்.
ஞானம் என்பது உடல்-மனம் கடந்த ஒன்று என்று கருதப்படும் நிலையில், ஜெயமோகன்-பாலகுமாரன் என்று இலக்கிய ரசனையை கொண்டு ஒப்பிட்டு ஞானத்தை விளக்க முற்படுவது பொருந்தாது. எவ்வளவு நுட்பமானதாயினும் இலக்கிய ரசனை மனதின் செயல்பாடே அல்லவா? மனதிற்கு அப்பாற்பட்ட ஒன்றை சீனு எதைக்கொண்டு வரையருக்கிறார்? ரமணர் கூட ஜனகர் பற்றி கூறி – ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கூறமுடியாது அது அவரவர் இஷ்டம் என்கிறாரே? ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் நீங்கள் எப்படி கட்டாயப்படுத்தலாம் என்பதாகவே அவர் கூறுகிறாரே?
எனக்கு இவரைப் பிடிக்கும் அவரைப் பிடிக்காது என்பது தாண்டி சீனு கூறுவது என்ன?
//அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்// – அப்படித்தானே செய்வார்கள்? அப்படி செய்தால் தானே அவர்கள் பக்தர்கள்?
ரமணரின் ஆளுமையை வரையறை செய்தால், சீனு தடுத்தாட்கொள்ள மாட்டாரா? ரமணரின் காலத்திலேயே அவரிடமே “இங்கு வந்ததால் நாங்கள் ஓன்றும் உணரவில்லை” என்று கூறியவர்கள் இருந்தார்கள் அல்லவா? முன்முடிவுகளுடன் இவர் நிச்சயம் ஞானி அல்ல முடிவு கட்டிவந்து அவரிடம் பேசிச்சென்று “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று வெளியே பேசி இருப்பார்கள் இல்லையா? அத்தகையவர்களை ரமணரை ஏற்றுக்கொண்ட பக்தர்கள் தடுத்தாட்கொள்ளவே செய்வார்கள் இல்லையா?
சீனு ரமணரின் காலத்தில் இருந்தால் அவர் ரமணரை ஏற்றுக்கொண்டிருப்பார் என்பது என்ன நிச்சயம்? அதற்கும் காலத்தால் முந்திய ஒருவரே மெய்ப்பொருள் – இது பொய் எனக்கொள்ள மாட்டார் என என்ன நிச்சயம்? முன்முடிவுகள் அப்போது இருத்திருக்காது என்று எவ்வாறு கூறுவார்?
என்னைப் பொறுத்தவரையில் சத்குரு ஞானிதான் என்று நம்புகிறேன். அவரை எனக்குப் பிடிக்கும் அவரை நம்புகிறேன். என் போன்றவர்களாவது சத்குருவின் சமகாலத்தில் வாழ்ந்து அவரை அருகிருந்து பார்த்து ஞானி என்று நம்புகிறோம். சீனு ரமணரை நூல்களின் வாயிலாகவும் புகைப்படத்தின் வழியாகவுமே கண்டு ஞானி என்று நம்புகிறார்.
ரமணரை ஞானி என்று நம்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீனு சத்குரு ஞானிதான் என்று ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயமும் இல்லை.
பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி இதில் விவாதம் கொள்ள பெரிதாக என்ன இருக்கிறது?
சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தெரிந்தது போல் காட்டக்கூடாது என்பதற்கும் “ஏசுவே மெய்யான தேவன்” என்பது போல் ஒரு அடிப்படைவாதம் தேவையில்லை என்பதற்கும் தான் இதை எழுதுகிறேன். சீனுவின் மீது மிகுந்த அன்பு உண்டாகிறது – ரமண பக்தரான அவரைப் போற்றுவேன்.
அன்புடன்,
விக்ரம்,
கோவை
*
அன்புள்ள விக்ரம்,
பல்வேறு கோணங்களை விவாதிக்கவே அக்கடிதம். என் அபிப்பிராயம் இதுவே. பொதுவாக மெய்யறிதல் என்பது அகவயமானது. அதை விவாதித்து அறிய, நிறுவ முடியாது. தெளிவாகத்தெரியும் ஒரு நுண்ணுணர்வு மட்டுமே அதற்கு உதவும்
ஜெ
***
அன்புள்ள ஜெ,
ஏற்கனவெ பலர் எழுதியதுதான். நீங்கள் சொன்னது போல நானும் ஈஷா யோகா செய்யும், உங்கள் வாசகர்களில் ஒருவன் தான். பலமுறை குடும்பத்துடன் அங்கே தங்கியிருக்கிறேன். 500 ரூ. நிகழ்வுகளிலும், 20000 கட்டணம் கேட்கும் நிகழ்வுகளிலும் கலந்திருக்கிறேன். ஒருமுறைகூட கட்டணத்தின் பொருட்டு விதிமுறைகள் மாறியதில்லை. 20000 செலுத்தும்போதும் தாமதமாக வந்தால் வகுப்புக்குள் அனுமதியில்லை.
அவர்களின் நோக்கம் குறுக்கு வழியிலோ ஏமாற்றியோ பணம் சம்பாதிப்பது இல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். அவர்களின் யோகா பலனளித்தது என்பதற்கு நானும் ஒரு சாட்சி. மற்றபடி, தியானலிங்கம், பாதரசலிங்கம், லிங்கபைரவி போன்ற இடங்களில் எந்த அதிர்வும், அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. தியானலிங்கத்தில் அமாவாசை/பௌர்ணமி நள்ளிரவு தியானம் செய்வதற்கும், என் வீட்டின் அறையில் செய்வதற்கும் ஒரு வேறுபாடும் எனக்குத் தெரிவதில்லை. ஆனால், இதெல்லாம் ஒரு குறியீடுகள் என்ற அளவில் என்னைக் கவரவே செய்கின்றன.
நீங்கள் சொன்னதுபோல ஈஷா நிறுவனம் விதிமுறைகளை மீறியிருந்தால்
ஆதாரங்களுடன் வாதிடலாம். வசைகளும் அவதூறுகளும் அதைக் கூறுபவர்களின்தகுதிகளையே காட்டுகின்றன.
நன்றி,
ரத்தன்
*
அன்புள்ள ரத்தன்,
இந்த யோகமுறைகள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் ஒரு உளக்கூர்மையை அடைவதற்குரியவை. யோகம் என நம் மரபில் சொல்லப்படுவதை இன்னும் விரிவாக வரையறை செய்யவேண்டும். மெய்மையை அறிந்து உணர்ந்து அதுவாக ஆகவேண்டும். அதற்குத் தடையாக அமைவது நம் அறிதல் உணர்தல் ஒன்றுதல் தளத்தில் உள்ள தடைகள். அதை தொடர் பயிற்சியின் மூலம் அகற்றுவதே யோகம். அது மிக நெடிய ஒரு பயணம். யோகிகளுக்குரியதே யோகம்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

