Jeyamohan's Blog, page 1672
February 27, 2017
கல்வியழித்தல்
அன்புமிக்க திரு. ஜெயமோகன்
வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள்.
“கற்றாரை யான் வேண்டேன் ;
கற்பனவும் இனியமையும்”
என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல்
மரபின் மைந்தன் முத்தையா
***
Dear J,
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… .
”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிடவேண்டும். ”
நீங்கள் கல்வியழித்தல் குறித்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நடைமுறையில் அது சாத்தியம்தானா என்று ஐயப்படுகிறேன்
-Ram
***
அன்புள்ள ராம், முத்தையா,
இருவரும் கிட்டத்தட்ட ஒரே வினாவைக் கேட்டது ஆச்சரியம் அளிக்கவில்லை. இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்டுக்கொள்ளும்போது எனக்குச் சில தெளிவுகள் உருவாகின்றன. அவையே எனக்கு முக்கியமானவை.
கல்வியும் கல்வியழிதலும் நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டிருக்கின்றன. மிக இளம் வயதிலேயே நாம் வந்து பிறந்த பண்பாட்டாலும் சூழலாலும் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதற்கு முன்னரே நம்முடைய அடிப்படை விலங்கியல்புகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பிறகு நாம் கற்பவை அனைத்துமே ஏற்கனவே கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை நீக்கம் செய்தபின் அங்கே அமர்ந்து கொள்பவைதான். நாம் அறியும் ஒவ்வொன்றும் ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றை பொய்யாக்குகிறது. அந்த வெற்றிடத்தில் தன்னை அமர்த்திக் கொள்கிறது. கல்வியழிதல் நிகழ்ந்த பின்னர்தான் கல்வி நிகழமுடியும்.
அறிவதொவ்வொன்றும் அறியாமையையே என்று நாராயணகுரு சொல்கிறார். நாம் ஒன்றை அறியும்போது அக்கணத்தில் நாம் அறிவது அறியாமையையே. அந்த வெற்றிடத்தை நாம் உணரும்போது மட்டுமே புதிய அறிதல் சாத்தியமாகிறது. அந்த கல்வியழிதலுக்கு நாம் தயாராகவில்லை என்றால்தான் நம் அறிதல் தரைதட்டி நிற்கிறது. அதுவே மூடத்தனத்தின் உச்ச நிலை என்பது. பெரும்கல்வியாளர்கள் பெருமூடர்களாக ஆகும் தருணம் அதுதான்
ஜென் கதையில் தன்னிடம் வந்து கோட்பாடுகளாகப் பேசும் ஒரு அறிஞருக்கு நிறைந்த கோப்பையில் மேலும் டீயை விடச்சொல்லி அந்த டீ வெளியே வழிந்தோடுவதைச் சுட்டி ஜென் மாஸ்டர் சொன்னது இதைத்தான். கற்றதை எந்த அளவுக்கு விடுகிறோமோ அந்த அளவுக்கே கல்வி சாத்தியம். கணிப்பொறியியலில் நேற்று கற்றதை கைவிடாமல் இன்று கற்க முடியாது என்பது ஒரு பாடம் என்று ஒருமுறை ஒரு நண்பர் சொன்னார். எங்கும் அதுதான்
இயல்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தை நாம் பெரும் குருநாதர்களின் அருகே செல்லும்போது தீவிரமாக உணர்கிறோம். அவர்கள் நமக்குக் கற்பிப்பவை அதிகமென்பதனால் அவர்கள் நம்மில் இருந்து வெளியே துரத்தும் கல்வியும் மிக அதிகம். அது உண்மையில் வேதனையான ஒரு அனுபவம். சில குருநாதர்கள் மென்மையாக அதைச் செய்யும்போது சிலர் மிகத்தீவிரமான வன்முறையுடன் அதைச் செய்கிறார்கள்
மில ரேபா என்ற திபெத்திய ஞானியின் வாழ்க்கை வரலாறு இதைத்தான் காட்டுகிறது. மிக முக்கியமான தியான நூல் அது கவிதை நூலும் கூட. ஞானம் தேடி தன்னை அணுகும் மிலரேபாவை மிகக் கடுமையான உடல் மன வலிகளினூடாக அழைத்துச் செல்கிறார் குருநாதர். அந்த துயரங்கள் வழியாக மெல்ல மெல்ல தன் கற்றலை அழித்து கற்கத்தயாரான சீடராக ஆகிறார் மில ரேபா. அவரது கவிதைகள் அந்தப் பரிணாமத்தைக் காட்டுகின்றன.
நித்யாவின் வாழ்க்கையில் இதைக் காணலாம். நடராஜகுரு நித்யாவை கடுமையான முறையில் உடைத்து மறுஆக்கம் செய்கிறார். நித்யாவில் ஊறியிருந்த அவரது காலகட்டத்தைச் சேர்ந்த பல சிந்தனைகளை பிடுங்கி ரத்தம் வழிய வெளியே வீசுகிறார் நடராஜ குரு. புத்தங்களை பிடுங்கி வீசுகிறார். வீட்டைவிட்டு வெளியே துரத்துகிறார். கண்ணீர்விட்டு கதறும் வரை கிண்டல் செய்கிறார். பலமுறை நித்யா கோபித்துக்கொண்டு ஓடிப்போகிறார், நடராஜகுரு தேடிவந்து கூட்டிச்செல்கிறார்.
ஆனால் நித்யா மிக மென்மையானவர். அதிர்ந்துபேசுவதும் ஏளனம் செய்வதுமெல்லாம் அவர் அறியாதவை. பூ மலர்வது போல பேசக்கூடியவர். ஆனால் தொண்ணூறுகளில் நான் அவரைச் சந்தித்தபோது கடுமையான மன வலியை அனுபவித்தேன். ஆரம்ப நாட்களில் அவருடன் நான் விவாதித்தேன். நான் கற்றவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சிகளில் ஈடுபட்டேன். ஒவ்வொருமுறையும் கடுமையான மனச்சோர்வை அடைந்துதான் அவர்முன் இருந்து வெளியே வருவேன்.
அப்படியானால் நான் கற்றவை அடைந்தவை அனைத்துமே பொய்யா, நான் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே வீண்தானா என்று மயங்கினேன். மெல்ல மெல்ல அந்த அலை அடங்கியபோது ‘கற்பனவும் இனி அமையும்’ என்று அவர்முன் அமர்ந்துகொண்டேன்.
ஒரு நல்ல நூலின் முன், ஒரு அறிஞனின் முன் நம் கல்வியை கொஞ்சமேனும் நாம் அழித்துக்கொள்ளாவிட்டால் நாம் எதுவுமே கற்கப்போவதில்லை என்றே பொருள். சுந்தர ராமசாமியிடம் மட்டுமல்ல நித்யாவிடம் வந்து கூட தாங்கள் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக அதிதீவிரக் கோட்பாட்டு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்க ஏதுமில்லை. கற்றவற்றை உலகுக்குச் சொல்லி உலகை மாற்றும் வேலை மட்டுமே இருக்கிறது
மதம், அரசியல், தத்துவம் சார்ந்து இவ்வாறு இறுகிப் போனவர்களைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் என்று எண்ணுகிறேன். இந்த வரிகளுக்கு நிகரான வரிகளை நாம் திருமந்திரத்திலும் சித்தர் பாடல்களிலும் காணலாம். இயேசு ‘நீங்கள் மனம் திருந்தி குழந்தைகளைப்போல ஆகாவிட்டால் விண்ணுலகில் நுழைய மாட்டீர்கள்’ என்று சொல்வதும் இதையே. ஒருகல்வியின் முன் நாம் பெற்ற முந்தைய கல்வி அழியுமென்றால் அந்த முந்தைய கல்வி எல்லாம் வீணா? அல்ல அவை படிகள். அப்படிகள் வழியாக ஏறித்தான் அந்த படியை நாம் அடைந்திருக்கிறோம். முந்தைய படிகளை நிராகரித்தே புதிய படியை அடைந்தோம். ஒரு கல்வியழிதலுக்கு நாம் தயாராவதே அக்கல்வி நமக்களிக்கும் விவேகம் மூலம்தான்.
மேலும் உக்கிரமான முறையில் அந்த கல்வியழிவு நிகழ முடியும். விவேகானந்தர் ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றபோது பிரம்மசமாஜத்தின் சீர்திருத்தக் கருத்துக்களினால் மனம் நிறைந்தவராக இருந்தார். அவர் கண்களுக்கு விக்ரக ஆராதனை செய்யும் ஓர் அஞ்ஞானியாகவே ராமகிருஷ்ணர் தோன்றினார். ராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டதும் கண்கலங்கி அழுகிறார். ஏன் இத்தனை தாமதம், உனக்காக எத்தனை நாளாகக் காத்திருந்தேன் தெரியுமா என்று அணைத்துக் கொள்கிறார். மனம் கலங்கிய விவேகானந்தர் ஓடிவிடுகிறார்
மீண்டும் சந்திக்கும் போது ராமகிருஷ்ணர் அவரை தன்னுடன் தியானத்தில் அமரச்செய்கிறார். அப்போது விவேகானந்தரை ராமகிருஷ்ணர் சற்று தீண்டுகிறார். அந்த தொடுகையால் சட்டென்று தியான அனுபவத்தின் அடியற்ற ஆழத்தை உணரும் விவேகானந்தர் கதறி விடுகிறார். இறந்துவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அந்தத் தருணத்தில் அவரது கல்வி பூர்ணமாக அழிந்துவிடுகிறது. தூய உள்ளத்துடன் அவர் ராமகிருஷ்ணர் முன் தன் ஆத்வாவை திறந்து வைக்கிறார்
கல்வி துளித்துளியாக பாறை இடுக்கு வழியாக ஊறி தேங்கும் நீர் போன்றது. யோகஞானம் என்பது சுனாமி அலை. அது கல்வியை முழுமையாக அடித்துக் கொண்டு சென்றுவிடும். அந்த மகத்தான கல்வியழிதலை ஞானிகளின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.
மறுபிரசுரம் . முதற்பிரசுரம் May 4, 2009
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…
தொடர்புடைய பதிவுகள்
குரு நித்யா வரைந்த ஓவியம்
தியானம்
ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்
ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்
கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்
இருத்தலின் சமநிலை:ஓர் உரையாடல்
கடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]
புரட்சி இலக்கியம்
தன்னறம்
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
கவிதையின் அரசியல்– தேவதேவன்
யாதெனின் யாதெனின்…
கெட்டவார்த்தைகள்
விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
இங்கிருந்து தொடங்குவோம்…
இருபுரிச்சாலை
பின் தூறல்
வனம்புகுதல்
புன்னகைக்கும் பெருவெளி
இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்
ஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்
ஜெ,
ஜக்கி மீதான வன்மமும் இணைய வசையும் எங்கிருந்து துவங்கியது என நீங்கள் அறியத்தான் வேண்டும்
இணைய எழுத்தாளர், விகடன் ஊழியர் அதிஷா என்பவரின் வேலை அது, பிப் 20 அன்று அவர் எழுதிய பொய்யும் அவதூறும் மட்டுமே நிறைந்த கட்டுரைதான் இணைய புரளிகளின் துவக்கம், விகடனில் கட்டுரைகள் வரவைத்து புரளிகளை பொதுவுக்கு கொண்டுசென்றதும் அவர்தான்.
கோவையை சேர்ந்தவரும், பலமுறை ஈஷா சென்றவரும் ஆன அந்த இதழாளர் மர்மமான காரணங்களால் தன்னெஞ்சறிந்தே பொய் சொன்ன கட்டுரை இது.
http://www.athishaonline.com/2017/02/blog-post_20.html?m=1
உங்கள் கட்டுரை வந்தபின் அதை எதிர்கொள்ள வழியற்று ஊதுகிறார்,குனிகிறார்,காசு வாங்கிவிட்டார் என்கிறார் பாவம்.
நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா? - அவருடைய வரி.
பத்து வருடமாக அவருக்கு ஈஷாவை தெரியும், எங்கே காடு அழிக்கப்பட்டது ? அது முழுக்க பட்டாநிலம். மேய்ச்சல், விவசாய நிலம்.மரங்களே இல்லாமல் இருந்த விவசாய நிலத்தில் ஈஷா வந்தபின் 20 ஆயிரம் மரங்களாவது இருக்கின்றன.
முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்… எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்… எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்… இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்...
ஆக அவரது காழ்ப்புக்கு ஈஷாவின் இந்துமத அடையாளங்களும் மோடியின் வருகையுமே காரணம்.
ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது
முழுப்பொய், காட்டில் இருந்து 2 கிமீ தள்ளி ஐம்பதாண்டுக்காலமாக விவசாய நிலமாக இருந்த, விலைகொடுத்து வாங்கப்பட்ட சொந்த இடத்தில் 100 அடிமட்டுமே நிரந்தர கட்டுமானம் உள்ளது.
ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா… இப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்… அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?
என்ன ஒரு பத்திரிக்கையாளர் பண்பு! முட்டாள் பிரதமர் இளித்தபடி அவனுடன். .. இதே மொழியில் இவர்கள் மதிப்பவர்களை பிறர் எழுதினால் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்போது பண்பு பண்பு என்று கூவுவார்கள்.
இந்த அஞ்சாப்பொய்கள் அவசியம் பதிந்துவைக்கப்பட வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.
ஈஷா குறித்த என் வருத்தங்களும்…
ஈஷாவின் ஒருகோடி மரம் வளர்க்கும் அறிவிப்பு (2006 வாக்கில்) இந்த விமர்சனக்குரலுக்கு எதிர்வினை மட்டும்தான் என தோன்றுகிறது, ஒரு கோடி மரங்கள் நிச்சயம் 2016 ல் இல்லை, இருந்திருந்தால் அறிந்திருப்போம்.
நான் சிலமுறை ஈஷா போயிருக்கிறேன் ( நிச்சயமாக உபயோகமான ஆரம்ப யோகா வகுப்புக்கும்)சின்மயா, தயானந்த சரஸ்வதி ஆசிரமங்கள் போலவே காட்டை ஒட்டி ஆசிரமம் அமைந்துள்ளது, அந்த காடுகள் கானுயிர்கள் நிறைந்தவை.இந்த ஆசிரமங்களால் அதிகரிக்கும் வாகன, மனித நடமாட்டங்களும் விழாக்களின் போது கூடும் லட்சக்கணக்கான மக்களும் நிச்சயமாக சூழியலுக்கு எதிரானவைதான்.
குறிப்பாக சிவராத்தியின்போது கூடும் வாகன ஓசையும், ஸ்பீ்க்கர்களால் எழும் பேரோசையும், அதீத மின்னொளியும் கானுயிர் சூழலுக்கு எதிரானவை, இதை படிக்கும் நண்பர்கள் ஜக்கிக்கு கொண்டு போய் சேர்த்தால் நல்லது.
அரங்கா
***
அரங்கா
அந்த இளைஞரை நான் அறிவேன். வழக்கம்போல அண்டிப் பிழைக்கத் தெரிந்த அடிமாட்டுத் தொண்டர். இந்த நாட்டில் இந்துத்துறவியை, பிரதமரை அவன் இவன் என்றெல்லாம் எழுதமுடியும். அல்லாது ஊரைச் சுரண்டி குடும்பமாகக் கொழுத்த உள்ளூர் தானைத் தலைவர்களையா அப்படி எழுதமுடியும்? கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களை, ஏரித்திருடர்களை, மணல்கொள்ளையரையா எழுதமுடியும்?
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜக்கி கடிதங்கள் -6
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2
ஆத்மநமஸ்காரம்.
இன்று தங்களின் வலைதளத்தில் சித்தாஸ்ரமம் பற்றி “கேரளத்திலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் தொன்மையான அமைப்பு கட்டற்ற பாலுறவை தன் உறுப்பினர்களுக்கு அமைத்துள்ளது. அன்னைக்கும் மகனுக்கும் இடையேகூட உறவு அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு.”
என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு மேலதிகமாக சித்தாஸ்ரமம் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைக் குறித்த ஐயத்தாலேயே இந்தக் கடிதம்.
நம்முடைய பிதா உலக சாந்தியின் பொருட்டு நமக்களித்த வாழ்க்கை முறையே சாமாஜம் ஆகும். இங்கு ஆண் பெண் என்கிற பேதம் இல்லாததாகும். சுக்கிலம் என்பது பிரம்மமாகும். அவ்வாறான சுக்கிலத்தை உலக சாந்தியின் பொருட்டு சந்தானம் உண்டாக்க வேண்டி மட்டுமே நாசம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் கட்டற்ற பாலுறவு என்பதாக அபத்தமான ஒரு வாதத்தை முன் வைத்த காரணத்தினாலேயே இவ்வாறு எழுத நேரிட்டது அன்றி நமது பிதா கூறியவாறு சமாஜத்தின் நோக்கம் உலகோர் நலமடைய வேண்டியல்லாது உலகோருக்கு புரிய வைக்க வேண்டி அல்ல.
நன்றி
முத்துக்குமார்
*
மதிப்பிற்குரிய முத்துக்குமார் அவர்களுக்கு
மன்னிக்கவும், அச்சொல்லாட்சி பிழையானதுதான்
எளிய ஒழுக்கநெறிகளுக்கு அப்பாற்பட்டு பாலுறவை நோக்கும் அணுகுமுறை என சொல்லியிருக்கவேண்டும்.
ஜெ
ஆத்மநமஸ்காரம்.
தனது வயிற்றில் பிறந்ததாலேயே தாம் அன்னையாகும் என்றும் தமது பிள்ளை நிமித்தம் தனக்கும் தனது நிமித்தம் பிள்ளைக்குமான கடமைகள் என்று யாதொரு பந்தமும் இல்லை என்பதே சித்தாஸ்ரம சட்டமாகும் அன்றி இங்கு பாலுறவு என்பது குழந்தை பேற்றிற்காக மட்டுமே அதுவும் அவரவரது விருப்பத்தின் பேரில் மட்டுமேயாகும்.
தங்களது கருத்துக்கான நமது மறுப்பையும் தங்களது தளத்தில் பதிவு செய்வது அனைவருக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
நன்றி.
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஜக்கி – அவதூறுகள், வசைகள், ஐயங்கள் வாசித்தேன். நான் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.
ஜக்கியின் அத்தனைக்கும் ஆசைப்படு ஆனந்தவிகடனில் வெளிவந்த சமயம் முதல் நான் ஜக்கியை வாசித்தும் அவர் பேச்சுக்களை கேட்டும் வருகிறேன். குமுதத்தில் நித்தியானந்தாவின் கதவைத்திற காற்று வரட்டும் தொடர் ஏற்படுத்திய ஒரு திறப்பை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என்னிடம் ஜக்கியை பற்றியும் நித்தியானந்தாவைப் பற்றியும் என் நண்பர்கள் விவாதித்ததுண்டு. ஒரு சிலர் பகுத்தறிவாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு அதை மறுபடி ஒப்புவிப்பவர்கள் இன்னும் சிலர் ஆழமான கடவுள் நம்பிக்கை பக்தியுடையவர்கள். இந்து மதத்தில் பக்தியும் நம்பிக்கையும் உடையவர்கள் கார்ப்பரேட் சாமியார்களை விமர்சிப்பதற்கு கூறும் காரணம் அவர்களின் நிறுவனங்களின் செல்வ செழிப்பின் மீதான பார்வை தான். அவர்களைப் பொருத்தவரை ஒரு சாமியார் கோவணத்தைத் தவிர வேறு எதையும் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது. இராமகிருஷ்ணரைப் போலவும் ரமணரைப் போலவும் மிக எளிமையான வாழ்க்கை முறையை தேர்வு செய்திருக்க வேண்டும். உல்லாசமான கார்களில் வலம் வரும் சாமியார்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் அவர்களுக்கு கூறியதெல்லாம் ஒரு சாமியார் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நம் நாட்டில் இல்லை. அவர் செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் அங்கு போகவேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியாக தவறு செய்திருந்தால் நிரூபணம் செய்யுங்கள் தண்டனை பெற்றுக் கொடுங்கள் அதை விடுத்து வெறுமனே சமூக வலைதளங்களில் கூச்சலிடுவதால் என்ன பயன். ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் தான் என்னை துணுக்குற வைத்தது. மக்கள் அறியாமையை பயன்படுத்தி கார்ப்பரேட் சாமியார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று. என்னால் நீங்கள் கூறியது போல விரிவாக விளக்கிக் கூறும் ஞானம் இருக்கவில்லை. நான் கூறியதெல்லாம் ஒன்றுதான். மக்களை முட்டாளாக எண்ண வேண்டியதில்லை. அதுவும் கார்ப்பரேட் சாமியார்களிடம் பெரும்பாலும் செல்பவர்கள் நிரம்பப் படித்த நிறைய சம்பாதிக்கும் மனிதர்கள். அவர்கள் அறியாமையுடன் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று. இன்று நீங்கள் விரிவாக கூறிய கருத்துக்களை அவர்கள் முன் வைக்க இயலும்.
நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களின் வாசகனாக இருப்பதை நான் பெருமையாக எண்ணுகிறேன் என்று கூறத்தான். இன்னும் சொல்லப்போனால் நான் உங்களின் வாசகன் மட்டுமே இந்நாள் வரை. இன்னும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை உங்களின் கட்டுரைகளை வாசித்து குறிப்பெடுத்து வைத்துள்ளேன். முழுநேர வாசகனாக வேண்டும் என்பதே அவா. மற்றவர்களை வாசித்ததில்லை ஆதலால் தெரியாது. ஆனால் இச்சூழலில் அனைத்து தரப்புகளையும் காழ்ப்பின்றி முன்வைத்து அறிவார்ந்த தளத்தில் விவாதிக்கும் எழுதும் ஒரு எழுத்தாளருடைய வாசகன் என்பது நிச்சயம் பெருமைக் கொள்வதற்குரிய விஷயம் தான்.
என்னிடம் அடையாளச் சிக்கல் எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இதை எழுதும் இந்த நொடி எனக்கு தோன்றுவது நான் நல்ல வாசகனாக இந்திய ஞான மரபின் மேல் நம்பிக்கை உரியவனாக ஆக வேண்டும் என்பதே.
அன்புடன்,
முருகன்.
அன்புள்ள ஜெ,
ஈஷா யோகா மையம் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றிய எதிர்ப்புநிலை வதந்திகளுக்கு தாங்கள் அளித்த மிகத் தெளிவான ஆழமான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் மற்றும் எனது கணவர் மோகன் இருவரும் தங்களுடைய நீண்ட நாள் வாசகர்கள். மேலும் ஈஷா அன்பர்கள் கூட. உண்மையில் தங்களுடைய படைப்புகளை வாசிப்பதற்க்கும் புரிந்துகொள்வதற்கும் ஈஷா யோகா பயிற்சியே காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக ஈஷா மையத்தின் எதிர்ப்பு (நேரடி மற்றும் இணையதள) தாக்குதலுக்கு தங்களின் பதில் மிகக் கைகொடுத்தது.
தங்களின் ஒவ்வொரு படைப்பையும் வாசித்து முடிக்கும் தருவாயிலும் கடிதம் எழுத நினைத்து வார்த்தை கிடைக்காமல் விட்டுவிடுவேன்.
இன்று நன்றிப் பெறுக்குடன் எழுத விழைகிறேன்.
நன்றி,
ராஜி மோகன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜக்கி -கடிதங்கள் 5
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2
இனிய ஜெயம்,
அவர் அளிக்கும் ஞானத்தை குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி?
உங்கள் ஆணவத்தைக் களைந்து யோசித்துப்பார்க்கவும்
நேற்றைய இடுகையில் சீனிவாசன் என்பவரது பதிலில் இருந்த இதே வரிகளை கொஞ்சமும் பிசகாது அதற்க்கு முந்தையநாள் ராதாகிருஷ்ணனுடன் விவாதிக்கும்போது ராதாகிருஷ்ணன் என்னை கேட்டார்.
வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து ஜக்கியின் பங்களிப்பை மதிப்பிடுகையில் அதை வாட்ஸப்பில் பரப்பி உய்யும் பக்தாள், அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்.
எளிய பதில். ஆனால் வெகுமக்களுக்கு ஒரு போதும் புரியாத பதில். பார்வையற்றவன்தான் சூரியனை நம்ப வேண்டும். பார்வை கொண்டவனுக்கு வேறு அறிதல். தடவிப்பார்த்து ஒளியை அறிவார்கள், கண்களால் கண்டு ஒளியை அறிபவர்களின் அறிதலை எங்கனம் அடைய முடியும்?
உங்களில் சுடர் எரியாமல், இது சூரியன், இது எரிமலை என நீங்கள் வகுக்கும் எதற்கும் பொருளில்லை. எழுத்துக்கூட்டியே வாசிக்கத் தெரியாத ஒருவன் தேவத்தவனை பார்த்து விட்டால் கவிதை வாசகன் ஆகி விட முடியுமா என்ன?
ராதா கிருஷ்ணன் இலக்கிய வாசகர் என்பதால் இலக்கியம் கொண்டே உதாரணம் சொன்னேன். பாலகுமாரன் எழுத்தாளர். அவரும் கர்ணனின் கதை என்ற தலைப்பில் கர்ணன் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு ஒரு லட்சம் பேராவது வாசகர்கள் அவருக்கு இருப்பார்கள். ஜெயமோகன் எழுத்தாளர். அவரும் கர்ணன் குறித்து வெய்யோன் என்ற தலைப்பில் நாவல் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு ஐம்பது ஆயிரம் வாசகர்கள் இருப்பார்கள். இலக்கிய ரசனை மதிப்பீட்டு அடிப்படையில் ஜெயமோகன் மேலானவர். அதை மறுக்க இயலாது அல்லவா?
அது போலவே ஜக்கியின் ஆளுமையும். அவர் ”ஆகி அமர்ந்த ” ரமணர் அல்ல. சகலருக்குமான ”யோகா குரு ” மட்டுமே. வெய்யோனின் உள்ளடக்கம் ஜெயமோகன் வசம் இருப்பதால் அவர் வெய்யோன் எழுதுகிறார். வெய்யோனின் உள்ளடக்கம் பாலகுமாரனிலும் இருக்கிறது அவர் ”மக்களுக்காக” கர்ணனின் கதை நாவல் எழுதுகிறார் என நீங்கள் சொன்னால் அது உங்கள் நம்பிக்கை. அவ்வளவே.
இவை போக, அகங்கார கருத்தியல் அதிகாரம் வேறு, வரையறை செய்து கொள்ளல் வேறு. எனக்கு உடலில் எதோ சிக்கல். குறிப்பிட்ட யோக முறையை தினமும் பயில்வதின் மூலம் அப் பிணியில் இருந்து மீள இயலும் எனில், ஈஷா போன்றதொரு அமைப்பில் இணைந்து அதை மேற்கொள்ள எனக்கு எந்த தடையும் இல்லை. சத்குரு என்பது நம்பிக்கை. யோகா செயல்பாட்டு வழிமுறை. என இவற்றின் ஒவ்வொரு அலகும் நான் அறிவேன். அகங்காரி இந்த வழிமுறையை மறுத்து சீரழிவான். என்னை போன்ற ஆட்கள் சந்தப்பவாதிகள் என ”எள்ளி ”நகையாடப் பெறுவர்.
இந்து நாளிதழில், மக்கள் கருத்து என்றொரு பகுதி வரும். மூன்றே வாய்ப்பு. உதாரணம். ஜக்கி செயல்பாடுகள். ஒன்று. . . சரி, இரண்டு. . . தவறு, மூன்று. . . கருத்துக்கள் ஏதும் இல்லை. இதில் வாக்களிக்க வேண்டும். கருத்துச் செயல்பாட்டாளன் இந்த மூன்றில் ஒருவன் அல்ல, என்று ஒரு போதும் புரிந்துகொள்ள இயலாத சீனிவாசன்கள் மத்தியில்தான் நீங்கள் பேச வேண்டியது இருக்கிறது.
அன்றைய எனது நிலையில் உள்ள சிக்கலில்தான் நீங்கள் என்றும் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.
கடலூர் சீனு
***
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் நேற்று நீண்ட கட்டுரைகளை வெளியிட்டபோதுகூட தோன்றவில்லை. இன்று இணையத்தில் அக்கட்டுரையை ‘அற்புதமாக’ புரிந்துகொண்டு எழுதப்படும் ‘ஆழமான’ எதிர்வினைகளைப் பார்க்கையில்தான் நீங்கள் ஏன் எழுதவேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் இதே மூடத்தனத்துக்குள் உழன்று உழன்று வேறுஒருவகை சிந்தனைமுறை இருக்கிறது என்றே அறியாமலிருந்துவிடுவோம்
நீங்கள் வாசிக்கமாட்டீர்கள் என்பதனால் மாதிரிக்கு ஒன்று. [ ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது ] இதேமாதிரியான அசட்டுத்தனங்கள், இன்னும் கூட கீழே நின்றிருக்கும் நையாண்டிகள் நக்கல்கள் – இவ்வளவுதான் ஒட்டுமொத்த இணையஎதிர்வினை. என்ன ஒரு தன்னம்பிக்கையுடன் இதையெல்லாம் பதிவுசெய்கிறார்கள். இவர்கள் ஜக்கியை என்ன உலகத்தையே அறிவுரைசொல்லித் திருத்தும் மேதைகள் அல்லவா?
ஜக்கி மாதிரி ஏன் இப்படி எளிமையிலும் எளிமையாகப்பேசவேண்டும் என நினைப்பதுண்டு. இந்தக்கும்பலுக்கு எளிமைக்கும் கீழே ஏதாவது இருந்தால் அதுதான் பிடிகிடைக்கும். எவ்வளவு அசட்டு உலகம்! இணையம் இதையெல்லாம் இப்படியே பதிவுசெய்வதனால்தான் இப்படித்தான் இவர்களின் லெவல் என்று தெரிகிறது. இல்லையேல் நம்பியிருக்கவே மாட்டோம்
கூடவே, இப்படியெளிமல்லாம் புரிந்துகொள்ளும் சூழலில் என்னத்தைப்பேசி என்ன என்றும் தோன்றுகிறது
மகேஷ்
***
அன்புள்ள மகேஷ்
நானும் பல எதிர்வினைகளைப் பார்த்தேன். ஒன்று உண்மையிலேயே நான் எழுதிய கட்டுரையில் எதுவுமே புரியாமல் எழுதப்பட்டவை. மேலே சொன்ன கட்டுரைபோல. அவையே அதிகம். இரண்டாவது வகை சொல்வதற்கு ஒன்றுமில்லாத வசைகள்
இணையம் செய்த பெரிய தீங்கு நம் ஆட்களின் உண்மையான புரிந்துகொள்ளும் திறன் என்ன, சிந்தனைத் தரம் என்ன என்பதை அப்பட்டமாகக் காட்டியதுதான். சோர்வளிப்பது அது. சுந்தர ராமசாமித் தலைமுறை அதிர்ஷ்டம் செய்தது. தெரிந்து கொள்ளாமலேயே ஒரு கற்பனையில் முன்னால் சிலரை உருவகித்து பேசிக்கொண்டு சென்றுவிட முடிந்தது அவர்களால்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
28. மலர்திரிதல்
“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கென்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான். இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.”
“முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். அந்தி அமைவை தனிக்கிளையில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கி அனுப்பி வைத்தான். இருசுடர்களுக்கு பொழுதுகளை அவியாக்கி வேள்வி இயற்றினான். கற்றதனைத்தையும் அங்கு அவன் மறந்தான். கற்றலில்லாமல் இருந்த உள்ளம் உணர்தலை மேலும் மேலுமென கூர்தீட்டிக்கொண்டது. உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது. அதிலெழுந்தன சுனைகள், ஓடைகள், ஆறுகள். உயர்ந்தன மலைகள். குளிர்முகில்சூடி நின்றன. பெருமழையில் குளிர்ந்தது நிலம். தளிரும் மலரும் சூடியது பசுமை” முண்டன் தொடர்ந்தான்.
பீமன் அவன் முன் கைகளை மார்பில் கட்டியபடி ஊர்வசியின் ஆலயத்தின் படியில் அமர்ந்து சிறியவிழிகள் கனவிலென தணிந்திருக்க அப்பேச்சை கேட்டிருந்தான். “அந்நாளில் ஒருமுறை குரங்குகளுடன் அவன் கிளைவழியாகச் செல்கையில் சுனை சூழ்ந்த அச்சோலையைக் கண்டான். அங்கு சென்று சுனைக்கரை சேற்றில் இறங்கி நீரருந்த குனிந்தபோது தன் முகத்தை நோக்கி மின்பட்டது என தான் என்னும் உணர்வை அடைந்து திகைத்து எழுந்து நின்றான். நினைவுகள் அலையென வந்தறைய மூச்சுவாங்கினான். அகன்று மறைந்த எடையனைத்தும் வந்து அவன் தோளில் அமர உடல்குனித்தான்.”
“என்ன?” என்றது பெருங்குரங்கு. “இங்குதான் அவளைக் கண்டேன்” என்றான். “இங்கா?” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா?” என்றது. புரூரவஸ் அதை ஒருகணம் நோக்கியதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தான். கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. பின்னர் மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம், அவள் அணிந்திருந்தவைதான்” என்றான்.
மெல்ல உளம் மின்ன “அவள் வந்தபோது அணிகள் இல்லாத காட்டுப்பெண்ணாக இருந்தாள். இது நான் அவளுக்கு அளித்த அணிகளில் ஒன்று. அவளுடைய சின்னஞ்சிறு மூக்கை இது அழகுபடுத்தியது. அனைத்து அணிகளையும் அவள் கழற்றிவிட்டுச் சென்றாள். ஆனால் எஞ்சிய அந்நகைகளில் இது இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். அன்று அந்நகைகளை நோக்கவே என் நெஞ்சுகூடவில்லை.” குரங்கு அதை வாங்கி நோக்கி “இதை ஏன் அவள் கொண்டு சென்றாள்? ஏன் இங்கே விட்டாள்?” என்றது.
அவன் மறுமொழியில்லாமல் அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகள் நெஞ்சுலையச் செய்தன. “அவள் முகம் இம்மண்ணுக்குரியதல்ல என்று என் உள்ளாழம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு கானணங்கு என்று ஐயம்கொண்டிருந்தேன். அணுக்கத்தில் அரையிருளில் அவள் முகத்தை நோக்குகையில் கருவறைத்தெய்வம் போலிருந்தாள். அறியா நோக்கு ஒன்று அவள் விழிகளை அச்சுறுத்துவதாக ஆக்கியது. ஆகவே இந்த மூக்குமலரைச் செய்து அம்முகத்தில் அணிவித்தேன். அவளை என் குடிக்குள் நகருக்குள் அரண்மனைக்குள் கொண்டுவந்து சேர்த்தது இது.” அதைச் சுழற்றி நோக்கியபின் “அவளை பெண்ணென்று மண்ணில் நிறுத்தியது இந்த அணியே” என்றான்.
“அவள் யார்?” என்றது குரங்கு. “அவள் சென்றபின் கடுந்துயரில் துயில்கெட்டு அரைமயக்கில் சித்தம் சிதறி அலைய எங்குளோம் என்றில்லாது இருந்த நாட்களில் ஒருமுறை அவளை என் கனவில் கண்டேன். பிறிதொரு நிலம். பொன்னொளிர் பாறைகள். அந்திச்செவ்வொளி. அவள் பூத்த மலர்மரத்தின் அடியில் நின்றிருந்தாள். நான் நன்கறிந்த அந்த மணம். அதுதான் என்னை அங்கு இட்டுச்சென்றது. அவளை தொலைவிலேயே கண்டு ஓடி அருகணைந்தேன். கைகளை பற்றிக்கொள்ளச் சென்றபோது அவள் பின்னடைந்தாள். விழிகளில் என்னை மறுக்கும் அயன்மை.”
கூரிய குரலில் “மானுடனே, நான் ஊர்வசி. விண்மகள். உன் கையணைந்ததும் வாழ்ந்ததும் கனிந்ததும் இங்கு நான் கண்ட ஒரு கனவு. நீ என்னை தீண்டலாகாது. ஏனென்றால் இது உன் கனவு” என்றாள். நான் மேலும் அறியாது ஓர் அடி எடுத்துவைக்க “என் ஒப்பின்றி தீண்டினால் உன்னை சிதறடிப்பேன்” என்றாள். நான் அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது.
விண்ணவனின் அமராவதிப்பெருநகரின் ஆடற்கணிகை அவள், நாரதரின் தீச்சொல்லால் மண்ணுக்கு வந்தவள் என்று அறிந்தேன். “அறிந்து கடந்தேன் அங்குள்ள வாழ்க்கையை. இனி மீளமாட்டேன், செல்க!” என அவள் சொன்னபோது ஒருகணம் என் அச்சத்தைக் கடந்து பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றினேன். அவை அனலென்றாகி பற்றி எரிந்தன. என் உடல் அழல்கொண்டு எரியலாயிற்று. பின்னர் இரவும் பகலும் எரிந்துகொண்டிருந்தேன்.
நோயில் கிடந்தபோது என் விழிதொடும் எல்லையில் சொல்தொடா தொலைவில் அழியாது நின்ற அவள் தோற்றத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் பிறிதிலாத வலி. என் அலறல்களுக்கும் அரற்றல்களுக்கும் விம்மல்களுக்கும் அப்பால் அவள் தெய்வவிழிகளுடன் புன்னகைத்து நின்றிருந்தாள். நான் ஏங்கி எரியும் வன்பால் என அவளுக்குக் கீழே விரிந்திருந்தேன். துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி இருந்தாள் அவள்.
என்னை என் நகர்மக்கள் மூங்கில் பாடையில் தூக்கிக்கொண்டு போகும்போது தலைக்கு மேல் அவள் புன்னகைத்தபடி வந்து கொண்டிருப்பதையே நான் பார்த்தேன். அவர்கள் சிதை மேல் என்னை வைப்பதையும் சந்தனப்பட்டைகளால் என் உடலை மறைப்பதையும் இசையும் வாழ்த்துக்களும் முழங்க ஈமச்சடங்குகளில் ஈடுபடுவதையும் உடலில் எங்கோ இருந்த அறியா விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவையெல்லாம் விரைவில் முடிந்து என் உடல் எரிகொள்ள வேண்டுமென விழைந்தேன். முள்ளில் சிக்கிய பட்டாடை என எனது சித்தம் அவ்விழிந்த உடலில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்ந்தேன்.
இதுதான் அந்த தருணம். இதோ, இன்னும் சிறு பொழுது. இன்னும் சில கணங்கள். என் மைந்தன் சிதையை வணங்கி சுற்றிவருவதை உணர்ந்தேன். என் கால் தொட்டு தொழுதபின் தயங்கிய அவனை குடிமூத்தார் கைபற்றி ஊக்க அனற்கலயத்தை அவன் வீசினான். அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்ட திப்பெனும் ஒலியைக் கேட்டு ஒருகணம் விதிர்த்தேன். என் காலை அனல் வந்து தொட்டபோது மீண்டும் ஒரு முறை விதிர்த்தேன். இரு விதிர்ப்புகளுக்கு நடுவே நான் அவளை மீண்டும் கண்டேன். இதே சுனைக்கரையில், இதே சோலையில்.
இங்கே அவள் இலைநிழலசைவுக்கு நடுவே விழிமாயமோ எனத் தெரிந்தாள். அவளைக்கண்டதும் எழுந்த உவகையால் விழுந்துவிடுபவன்போல நடுங்கினேன். பாய்ந்து அருகே சென்று அவளை ”சியாமை!” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது. ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்!” என்றேன்.
அவள் அருகே வரும்தோறும் சியாமை எனும் உருவம் மென்பட்டு ஆடையென அவள் உடலில் இருந்து நழுவிச் சரிந்து அவள் ஊர்வசி என்றானாள். என் முன் வந்து நிற்கும்போது பெண்மையின் அழகும் தேவர்களின் மிடுக்கும் கலந்து முந்தையோர் குகைகளில் வரைந்த வண்ண ஓவியம் போலிருந்தாள். மானுடரைக்கடந்து அப்பால் நோக்கும் தேவவிழிகள். அவளை முன்பு எப்போது கண்டேன் என உள்ளம் தவித்தது. பின் அது கனவிலென உணர்ந்தேன். இதுவும் கனவா என திகைத்தேன்.
மானுடர் அறியமுடியாத புன்னகை கொண்ட உதடுகள். தழலென முகில்கீற்றென அணுகிவந்தாள். “அரசே, நான் யாரென்று முன்னரே சொன்னேன். எதன் பொருட்டு இவை நிகழ்ந்தன என்றும் சொன்னேன். மீண்டும் ஏன் என்னைப்பார்க்க வந்தாய்?” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன்? எதை வென்று எங்கு அமையப்போகிறேன்? அதை சொல், நான் விடுதலைபெறுவேன்” என்றேன்.
அவள் என் விழிகளை நோக்கி “மானுடர் ஊழும் தேவர்களின் ஊழும் வெவ்வேறு திசை கொண்டவை. மானுடர் சிறுபூச்சிகள், புகைச்சுருள்கள், மகரந்தப்பொடிகள். தேவர்கள் அவர்களைச் சுமந்து சுழன்று செல்லும் பெருங்காற்றுகள். நானறிந்தவற்றால் உங்களுக்கு பயனேதுமில்லை” என்றாள். “நீ ஆற்றுவதை நீயும் அறியமாட்டாயா என்ன? உன் ஊழை சொல். அதன் துளியே என்னுடையதும்” என்றேன். “எவருக்காயினும் ஊழ் அறியாப்பெருவலையே” என்றாள்.
“நான் உன்னிடம் கேட்க வேண்டிய வினா ஒன்றே. அதற்கு மட்டும் மறுமொழி சொல். அவ்வினா இருக்கும் வரை என் உடல் விட்டு உயிர் எழமுடியாது. அனைத்தும் அமையும் முழுமையின் முடிவிலியில் பிறிதிலாது என்னால் பொருந்தவும் இயலாது” என்றேன். “சொல்க!” என்று அவள் சொன்னாள். “நான் உன் முன் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய்? அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய்?” என்றேன்.
அவள் புன்னகை மாறுபட்டது. விழிதிருப்பி “முன்பு உன் மூதன்னை தாரையை சந்திரன் ஏன் விழைந்தான்? அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான்? மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள்? ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள்?” என்றாள். நான் திகைத்து “அறியேன்” என்றேன். “ஒவ்வொரு முறையும் அக்கதைகளை நான் எண்ணியதுண்டு. எண்ணம் சென்று எட்டியதே இல்லை” என்று தவிப்புடன் சொன்னான்.
“நீ இதை அறியும் கணம் இன்னமும் கூடவில்லை” என்றாள் ஊர்வசி. “சொல்!” என்று கை நீட்டி அவள் தோளைப்பற்றினேன். அங்கு வெறுமையை என் கை உணர்ந்தது. அத்தருணத்தில் என் காலை என் மைந்தனின் கைள் பற்றின. விறகுக்கட்டைகள் சரிய சிதையிலிருந்து புரண்டு கீழே விழுந்தேன். மண் என்னை இரும்புப்பலகை போல எழுந்து ஓங்கி அறைந்தது. என் நெஞ்சுக்குள் மூச்சு வெடித்தெழுந்தது.
புரூரவஸ் அந்த மூக்குமலரை கைகளால் மெல்லச்சுழற்றியபடி நோக்கிக்கொண்டிருந்தான். பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர் அதைச்சூழ்ந்து வெறும்வெளியை விழிகளால் செதுக்கி ஒரு முகத்தை உருவாக்கிவிட முயல்பவன் போலிருந்தான். குரங்கு அவனை நோக்கி விழிசிமிட்டியும் சிறுசெவி மடித்தும் உடல்சுரண்டியும் அமர்ந்திருந்தது.
மெல்ல அவன் அருகே அவளிருக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து நோக்கியபோது கரிய உடலில் நிலவொளி மிளிர அப்பால் சுனைக்கரையில் முழங்கால் மடித்து முட்டுகளில் முகம்சேர்த்து நீள்கூந்தல் வழிந்து நிலம்வளைந்திருக்க அமர்ந்திருக்கும் அவளைக் கண்டான். அவன் கையிலிருந்த மூக்குமலர் அவள் மூக்கில் இருந்தது. அதன் ஒளியில் அவள் முகம் மையம்கூர்ந்திருந்தது.
முண்டன் பீமனின் அருகில் வந்தான். “மாமல்லரே, இப்போது ஒரு வாய்ப்பு. புரூரவஸ் என்றாகிச் சென்று அவளிடம் அவர் விழைந்த வினாவைக்கேட்டு அறிந்து மீள்க! அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க!” என்றான் முண்டன்.
பீமன் சருகுகளில் காலடிகள் ஒலிக்க மெல்ல நடந்து ஊர்வசியின் அருகே சென்று நின்றான். நீரில் அவன் உருவைக்கண்டு சற்று திடுக்கிட்டு தலை தூக்கி பார்த்தாள். பின்னர் விழிகளில் நகை எழ எழுந்து அவன் அருகே வந்து புன்னகைத்தாள். “நீயா?” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான். மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன?” என்று அவள் கேட்டாள்.
“முன்பு நான் கேட்ட அதே வினாதான், விண்மங்கையே. ஆடையின்மையை நீ அஞ்சியது ஏன்?” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க!” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்?” என்று அவன் உரக்கக்கூவியபடி முன்னால் சென்றான்.
“எனில் இவ்வினாவுக்கு விடை சொல்க! புதனில் அமைந்த இரு தந்தையரின் குருதியில் இளையை விரும்பியது எது? இளனை விரும்பியது எது?” என்றாள் அவள். “ஆணென்றும் பெண்ணென்றும் உன்னை கருசுமந்தனர். மூன்று முதலறங்களில் அறத்தை உனக்களித்தது யார்? பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார்?” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்?” என்றாள். “அவற்றுக்கு விடையறிந்தால் அவள் சென்றதென்ன என்றும் அறிவாய்.”
அவன் திகைத்து நிற்க அவள் மென்காலடி வைத்து பின்னால் சென்று இலைகளினூடாக வந்த ஒளிக்கதிர்களால் பின்னப்பட்ட காற்றுவெளியினூடாக தன் வண்ணங்களைக் கலந்து கரைந்து விழிவிட்டகன்றாள். அவள் கேட்ட வினாக்கள் உண்மையில் சொல்வண்ணம் கொண்டனவா என அவன் உள்ளம் வியந்தது. அவள் மறைந்தபோது சொற்களும் இழுக்கப்பட்டு உடன் சென்று மறைய அவன் உள்ளம் வெறுமைகொண்டது. விலகி அந்நிகழ்வைக் காட்டிய காலவெள்ளப்பரப்பு இருவிளிம்புகளும் இணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகியது.
பீமன் திடுக்கிட்டு விழித்து “சென்றுவிட்டாள்” எனக்குழறினான். உடனே தன்னை உணர்ந்து தன் கைகளால் தரையை அறைந்து “சென்றுவிட்டாள்! சென்றுவிட்டாள்!” என்று கூவினான். “விழிதிறவுங்கள், பாண்டவரே. நீங்கள் இருப்பது நெடுந்தொலைவில், நெடுங்காலத்துக்குப்பின்” என்றான் முண்டன். பீமன் எழுந்து அவன் தோளைப்பற்றி உலுக்கி “நான் அவ்வினாவை கேட்டேன். அவள் மறுமொழி அளிக்கவில்லை” என்றான். “அதை அறியுமிடத்தில் நானில்லை என்று அவள் எண்ணினாள். மறுவினாக்களினூடாக கடந்துசென்றாள்” என்றான்.
முண்டன் புன்னகைத்து “உங்கள் மூதாதை மண்ணில் மூன்று முறை ஊர்வசியைப் பார்த்ததாக கதைகள் சொல்கின்றன. எனவே மீண்டும் அவ்வினாவை சென்று அவளிடம் கேட்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. அவள் விடையுரைத்தாகவேண்டும்” என்றான். “ஏனென்றால் மூன்றாம் முறை புரூரவஸ் அவள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். அவள் அளித்த விடையால் நிறைவடைந்து மீண்டார் என்கின்றன நூல்கள்” முண்டன் சொன்னான்.
“அவர் காட்டில் கல்லாலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தன்னுள் வேர் செலுத்தி ஆழ்ந்தார். புதுத்தளிர்கொண்டு எழுந்தார். அவரை முழுமைகொண்ட முனிவர் என அறிந்தனர் குருநகரியின் குடிகள். அவருடைய மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் குடிகளும் திரண்டு வந்து அவரை அடிபணிந்து வணங்கினர். நெற்றியில் நிலவெழுந்து அவர் விசும்பு என்றானபோது அவரை பேரறச்செல்வர் என கல்நிறுத்தி தங்கள் குலதெய்வமென வணங்கினர். அவர் ஊர்வசியைக் கண்ட அச்சுனைக்கரையில் அவளுக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்து சிலைவடித்தனர்.”
“இங்கிருந்து நீங்கள் அங்கே செல்லமுடியும்” என முண்டன் சொன்னான். “இம்முறை விடைபெற்று மீள்வீர்கள். புரூரவஸ் பெற்ற விடைகள் நூலில் இல்லை, அவற்றை ஊழ்கத்தால் மட்டுமே அறியலாகும் என்கிறார்கள். அவ்வூழ்கம் இன்று உங்களுக்கு அமையட்டும்.” பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். அவன் கைகட்டி ஆலயப்படியில் மீண்டும் அமர அவனருகே வந்த முண்டன் “உளம் அமிழுங்கள். மீண்டும் அத்தருணத்தை சென்றடையுங்கள்” என்றான்.
பீமன் தோள்தளர்ந்தவனாக அப்படிகளில் நீர்ப்படலம்போல் படிந்தான். திரும்பி கருவறையில் அமர்ந்த ஊர்வசியின் தெய்வ முகத்தை பார்த்தான். பொழுது சற்று மாறியிருந்தமையால் ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத் தோன்றியது. “ஆம், அமிழ்க!” என்று முண்டன் சொன்னான். பீமன் கண்களை மூடிக்கொண்டான். முண்டன் கைநீட்டி அவன் இருபுருவங்களுக்கு நடுவே மெல்ல தொட்டபோது மாபெரும் சுட்டுவிரலொன்றால் சுண்டித் தெறிக்கவிட்டு இருள் வெளிக்குள் சென்றுகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தான்.
மீண்டும் குரங்குடன் அச்சுனைக்கரையை அடைந்தான். முன்பெனவே அவள் அங்கு அமர்ந்திருந்தாள். மேலும் தனிமையும் துயரும் கொண்டிருந்தாள். அவன் காலடி ஓசையைக்கேட்டு திரும்பிப்பார்த்து துயர் படர்ந்த புன்னகையுடன் “நீயா?” என்றாள். “ஆம் நானேதான்” என்று அவன் சொன்னான். எழுந்து அவன் அருகே வந்து “மீண்டும் ஒருமுறை உன்னை நான் காண்பேன் என்று வகுக்கப்பட்டுள்ளது. இன்று நீ வருவாய் என்றும் அறிவேன்” என்றாள்.
பீமன் “ஆம்” என்றான். “நான் உன்னிடம் ஒரு வினாவை கேட்க வந்துள்ளேன்.” அவள் புன்னகையுடன் “கேள், அதுவே இறுதிவினா அல்லவா?” என்றாள். அவன் “இங்கிருந்து நீ முற்றிலும் உதிரவில்லையா என்ன? ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய்? விண்ணவளே உன்னில் எஞ்சியிருப்பதென்ன?” என்றான்.
அவள் விழிகள் மாறுபட்டன. இமை தாழ்ந்து, முகம் பழுத்தது. நீள்மூச்சுடன் முலைகள் எழுந்தமைந்தன. ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தவளை அவன் பின்னால் சென்று அழைத்து “சொல்!” என்றான். அவள் சொல்லற்ற விழிகளால் நோக்கியபின் அணையும்சுடர் என மறைந்தாள்.
பீமன் விழித்தெழுந்து “இம்முறையும் நான் அதை கேட்கவில்லை. பிறிதொன்றை கேட்டேன்” என்றான். “ஆனால் அவ்வினாவுக்கான விடை எனக்குத் தெரியும்” என்றான். முண்டன் “அதுவே உங்கள் மூதாதையை விடுவித்த சொல்லாக இருக்கக்கூடும்” என்றான் முண்டன். “நூல்கள் என்ன சொல்கின்றன?” என்று பீமன் கேட்டான். முண்டன் பெரிய பற்களுடன் புன்னகைத்து “இளவரசே, மானுடன் உண்மையிலேயே அறியத்தக்க எதுவும் நூல்களில் எழுதப்பட்டதில்லை. நூல்கள் புதையலுக்கு வழிசுட்டும் வரைபடங்கள் மட்டுமே” என்றான்.
பீமன் நீள் மூச்சுடன் தலையசைத்து “நன்று! இது இவ்வாறுதான் நிகழமுடியும்” என்றான். எழுந்தபோது அவன் முகம் தெளிவடைந்திருந்தது. “நாம் இங்கிருந்தும் கிளம்பியாகவேண்டும் எனத் தோன்றுகிறது. நான் உணர்ந்த இன்மலர் மணம் இதுவல்ல.” முண்டன் புன்னகைத்து “ஆம், நீங்கள் முன்னரே உளம்கிளம்பிவிட்டீர்கள்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–25
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–24
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
ஜக்கி கடிதங்கள் 4
ஜெ,
நான் ஈஷா யோக மையத்திலும் அருகே ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடத்திலும் சென்று தேடுதேடென்று தேடினேன். அருகே எங்குமே காடு என ஏதும் இல்லை. காட்டை அழித்து சிலை நிறுவப்பட்டது என விகடன் செய்தி சொல்லி ஒரு படம் காட்டுகிறது சுற்றிலும் நெடுந்தொலைவுக்கு சோளக்காடு. சோளக்காடு எப்படி காடாக ஆகும்? அந்தப்பக்கம்கூட சோளக்காடுதான்.அது எப்படி ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆகும்? அப்படியென்றால் காட்டை அழித்து ஆக்ரமித்து சோளம்போட்டவர்கள் யார்? அவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டாயிற்றா?
ஆதியோகி சிலைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் நீலமாகத் தெரிவதுதான் மலை. அந்த ஏரியாவே விவசாய பூமியாக ஆகி ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. பட்டா நிலத்தை பணம்கொடுத்து வாங்கி அந்தச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது காடா? அப்படியென்றால் காட்டை பட்டாபோட்டுக்கொடுத்தவர்கள் யார்? ஒருவேளை இந்தச் சோளக்கொல்லைகளை உருவாக்கியவரே ஜக்கி என்கிறார்களா?
ஒரு செல்போன் போட்டோவைக்கொண்டே புரிந்துகொள்ளமுடியும் இந்த உண்மையை யார் எதற்காக இப்படி வெறிகொண்டு ஊடகம் முழுக்கப் பரப்புகிறார்கள்? இவர்களின் சுற்றுச்சூழல் அக்கறையின் உண்மையான பெறுமதி என்ன? இவர்களின் லாபம்தான் என்ன?
முருகேசன் சண்முகம்
அன்புள்ள முருகேசன் சண்முகம்,
திடீரென்று உருவாகிவந்துள்ள இந்த மரப்பாசம், இயற்கைப்பற்று ஒருவகையில் நல்லதுதான். இதைக்கேட்கும் ஆயிரத்தில் ஒருவராவது மற்ற இயற்கை அழிவுகளைப்பற்றி கொஞ்சமேனும் செவிகொடுக்கக்கூடும்
சென்ற திமுக ஆட்சியில் மதுரைக்குள் குடியிருப்புகளாக ஆன ஏரிகள் எத்தனை தெரியுமா? தமிழகம் முழுக்க அரசியல்வாதிகளின் பொறியியல் கல்லூரிகள் ஆக்ரமித்துள்ள வனபூமி [100 வருட லீஸ் ] எவ்வளவு தெரியுமா?
சென்ற பல ஆண்டுகளில் தெங்குமராட்டா போன்ற இடங்களில் உண்மையிலேயே சட்டவிரோதமகா காடுகளை ஆக்ரமித்து அமைக்கப்பட்ட குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்த சட்டநடவடிக்கைகளை அரசு எடுக்கும்போது அதற்கு எதிராக போராடுவது யார்?
இந்த கும்பலின் கூச்சலைக் கேட்டு ஒரு பத்துபேர் அதைக்கணக்கெடுக்க ஆரம்பித்தாலே நாட்டுக்கு நல்லதுதானே?
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
February 26, 2017
ஜக்கி கடிதங்கள் – பதில் 3
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்கடல், விசும்பு படித்து விட்டு செறிவான சொற்கள் கொண்ட நீலம் வாசித்தேன். உங்களுக்கு முன்பு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன், ஒன்று உங்கள் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது – நல்லவேளையாக மற்றவை வெளியிடப்படவில்லை. இனி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது “நீலம்” தெரியாமல் எதையும் பேசக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது. இப்போது ஈஷாவில் சில வகுப்புகள் கற்றவன் என்ற முறையிலும், பதினைந்து ஆண்டுகள் தன்னார்வத் தொண்டனாக பல்வேறு நிகழ்வுகளில் இருப்பவன் என்ற முறையிலும் என் எண்ணங்கள் சிலவற்றை கூற விரும்புகிறேன். முதலில் நடுவுநிலை நின்ற உங்களுக்கு நன்றி. ஈஷாவின் வகுப்புகளின் வாயிலாக உடல்-மனம் ஆரோக்கியம் சார்ந்த பயன்களை நான் பெற்றேன் என்பது உண்மை – அவற்றை இங்கு விவரிப்பது தேவையற்றது என்பதால், ஈஷாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் அணுகுமுறை பற்றி மட்டும் என் கருத்துக்களை சிலவற்றை பதிவு செய்கிறேன்.
ஈஷாவின் மீதான என் ஈடுபாடு என் சொந்த பாட்டிக்குக் கூட எரிச்சல் ஏற்படுத்தியது “நமக்கு குரு மஹாபெரியவர் தான், அப்பழுக்கற்ற ஞானி அவரை விட்டு விட்டு போயும் போயும் இவரா உன் குரு ? ஆதிசங்கரர் தான் ஜகத்குரு இவரெல்லாம் ஜகத்குருவா? -எதுவுமே தெரிந்து கொள்ள விரும்பாமல் கடுமையான எதிர்ப்பு காட்டினார். “அவர் தன்னை ஒருபோதும் ஜகத்குரு என்று சொல்லவில்லை, சத்குரு என்று மட்டுமே சொல்கிறோம். ஆனால் நீங்கள் இப்படி சொல்வதால் நான் அவரை ஜகத்குரு என்றும் சொல்வேன். இந்தியாவிற்கு வெளியே சென்றிராத ஆதிசங்கரர் ஜகத்குரு எனும்போது உலகின் பல்வேறு பாகங்கள் சென்று வகுப்புகள் எடுக்கும் என்குரு அதற்கு அதிகம் பொருத்தமானவர்” என்றேன். உறவினர் வட்டத்தில் என்மீது ஒரு கேலியான நோக்கு உண்டு.
பல ஆண்டுகள் முன்னமே கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் பரப்பப்பட்ட “கஞ்சா” என்ற ஒரு பொய் அடிக்கடி சிலர் மீண்டும் மீண்டும் கூறுவார்கள். “நான் வகுப்புகள் சில செய்திருக்கிறேன். பல நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்கிறேன். எந்த நிகழ்வும் இல்லாத போதும் ஆசிரமத்தில் தங்கியும் இருக்கிறேன். இதுவரை அங்கு உணவிலோ, அருந்திய நீரிலோ, வேறு எவ்வகையிலோ தவறாக ஏதும் கண்டதில்லை. ஒருவேளை அவ்வாறு நான் ஏதும் உணர்ந்தால் நானே வெளியே சென்று அவை பற்றி பரப்பத் தொடங்கி இருப்பேன். இல்லாத ஒன்றை ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள் ? இங்கு தங்கி வகுப்புகள் பயின்று சென்ற பல்லாயிரம் பேர்களும் அறிவிலிகள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று கருதுகிறீர்களா?. உங்களுக்கு பிடிக்காது என்ற ஒன்று மட்டுமே கொண்டு தீயது என்பீர்களா ?. – பதில் சொல்லி மாளாது எனக்கு.
“ஈஷாவில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா ?”
“என்ன நடக்கிறது ? நீங்கள் அங்கு போயிருக்கிறீர்களா ?”
“சேச்சே நான்லாம் ஏன் அங்க போறேன் ?” – இப்படி சிலர்.
எல்லாவற்றுக்கும் விளக்கமாக பதில் சொன்னால், “உங்களையெல்லம் மூளை சலவை செய்து வைத்திருக்கிறார்” என்பார்கள். “உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.”
“யார் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் ?. எதையும் உள்ளபடி நோக்க முடியாமல் ஐரோப்பிய, சீனத்து மாசேதுங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு மூளையை அடகு வைத்து விட்டு, வெறும் வெறுப்பை மட்டுமே கக்க பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் தான் மூளை சலவை செய்யப்பட்டவர்கள். எதிர்ப்பில் – முரண்படுவதில் தவறே இல்லை. அடிப்படை நேர்மை வேண்டாமா ? – காழ்ப்பின் பின்னணியில் எப்போதும் ஏதோ ஒரு வேற்றுமத அடிப்படைவாத அமைப்பு அல்லது வறட்டு நாத்திக இடதுசாரி அமைப்பு – அதெல்லாம் ஆராய்வது இங்கு குப்பையை கிளறும் வேலை. உங்கள் நேரத்தை தவறியும் வீணாக்க விளைய மாட்டேன்
கடந்த ஆண்டு நெருக்கடி மிகுந்ததாக இருந்தது. பொய்கள் புயல் வேகத்தில் பரப்பப்பட்டன. திருமண மண்டபங்களில் நடக்கும் ஏழு நாள் வகுப்பு – எங்கள் பகுதில் நாங்கள் வைத்த அட்டைகள் கிழிக்கப்பட்டன. பலவிதமான அச்சறுத்தல்கள் இருந்தன. குருவிடம் இருந்து ஒரு உறுதியை நான் எதிர்பார்த்தேன், அதேவிதமான எதிரிபார்ப்பு பல்லாயிரம் ஈஷா அன்பர்களிடமும் இருந்தது. வெளியூரிலிருந்து திரும்பிய சத்குரு ஊடகங்களில் பொய்களுக்கு மறுப்பு தெரிவித்தார். அடுத்து வந்த சத்சங்கத்தில், எங்கள் யோக அன்பர்களில் ஒருவர் கேட்ட முதல் கேள்வி “என்ன சத்குரு ஏழாயிரம் கிட்னி திருடிடீங்க ?” என்பதுதான் . சத்குருவின் சிரிப்பு அடங்க ஓரிரு நிமிடங்கள் ஆனது. “இன்னும் அதிகமா சொல்லி இருக்கலாம். இவ்வளவு பேர் இருக்கீங்க வெறும் ஏழாயிரம் தானா?. ஆமாம் நீங்க எல்லாருமே உங்க கிட்னியை உங்க பேண்ட் பாக்கெட்ல தானே போட்டு கொண்டுவறீங்க ? இத சொன்னவருக்குத்தான் யாரோ மூளை திருடிட்டாங்க போல இருக்கு” என்றார். தொடர்ந்து சத்சங்கத்தில் நான் எதிர்பார்த்த எதிர்வினையும் உறுதியும் தரப்பட்டது.
கடந்த ஆண்டின் அவதூறுகளுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே 112 அடி ஆதியோகி சிலை அமைக்கப்படுவதை சத்குரு எங்களுக்கு தெரிவித்து விட்டார். மொத்தம் நான்கு ஆதியோகி சிலைகள் இந்தியாவின் நான்கு திசைகளில், வட நாட்டில் ஒன்று, மேற்கு-கிழக்கே ஒவ்வொன்று என்று.
இப்போது போட்டோஷாப் போட்டு முகநூலில் அவதூறு பரப்புரை செய்பவர்கள். “உங்கள் குரு தனக்குத் தானே சிலை வைத்துக்கொண்டு சிவன் சிலை என்று சொல்கிறார்” என்று. பார்ப்பவர்கள் அத்தனை பேரும் அறிவிலிகள் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு. கண்களை மூடி முகத்தை சற்று மேல் நோக்கி வைத்து தாடி தலைப்பாகையுடன் இருக்கும் யாருடைய முகத்தையும் அதற்கு பொருத்திக் காட்ட முடியும். மன்மோகன் சிங்கின் தாடி தலைப்பாகை பொருத்தி அது மன்மோகன் சிங்கின் சிலை என்று சொல்லிவிடலாம். ஏன் ஒசாமா பின்லாடனின் தாடி தலைப்பாகை பொருத்தி அது அவரது சிலை என்று கூட சொல்லலாம். போகட்டும். நேர்மையும் நடுவுநிலமையும் கொண்ட உங்களைப் போல் சிலர் இருப்பது மகிழ்வு தருகிறது.
உங்கள் நேரத்தை நான் வீணடித்திருந்தால் மன்னித்துவிடுங்கள். ஒன்றே ஒன்று – உடுமலை டாட் காமில் இருந்து “நீலம்” என் வீட்டிற்கு வந்த நாள் தற்செயலாக பிப்ரவரி 14, காதலர் தினம். அன்று முகநூல் நுழைந்த போது சத்குருவின் இணையப் பக்கத்திலிருந்து அன்றய கருத்தாக ராதையின் காதல் – பேரன்பு பற்றி கூறப்பட்டிருந்தது. அடர்த்தியான சொற்களின் பெருக்கான நீல நதி என்னையும் தன் பெருக்கில் இழுத்துக் கொண்டது. நீலத்தின் தொடர்ச்சியான மௌனத்தை இப்போதுதான் கலைத்தேன்.
அன்புடன்
விக்ரம்,
கோவை
அன்புள்ள விக்ரம்
நான் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இன்றிருப்பவர்கள் என நினைக்கும் பத்துபேரில் ஐவர் ஜக்கி குருகுலத்துடன் பல்லாண்டுகளாக தொடர்புடையவர்கள். அங்கே பயிற்சிசெய்தவர்கள். நான் மிக மதிக்கும் பத்து அறிவுஜீவிகளில் நால்வர் அங்கே சென்று பயிற்சி மேற்கொண்டவர்கள். அறிவார்ந்த தேடலும் கூர்மையும் கொண்ட என் வாசகர்கலில் கணிசமானவர்கள் அக்குருகுலத்துடன் தொடர்புடையவர்கள்
நான் ஆசிரியர் என மதிக்கும் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் இறுதியில் மகளின் இறப்பால் நிலைகுலைந்து துயிலின்மையும் சோர்வும் கொண்டிருந்தார். அப்போது ஜக்கி குருகுலத்துடன் தொடர்புடைய உணவக உரிமையாளர் ஒருவரால் அவர் ஜக்கியிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மிக எளிய சிலவகுப்புகள், பயிற்சிகளுக்குப்பின் அவர் தேறி மீண்டுவந்தார். அதை அவரே பதிவுசெய்யவில்லை என்னும்போது நான் பெயர்குறிப்பிட முடியாது. ஆனால் நண்பர்கள் அனைவரும் அறிந்த செய்தி இது.
இவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்றும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் மதிக்கத்தக்க ஒரு விமர்சனத்தை, பொருட்படுத்தத்தக்க ஒரு குற்றச்சாட்டைக் கூட முன்வைக்காமல் வெறுமே காழ்ப்பையும் அவதூறையும் கக்கும் கும்பலையே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அல்லது விலைபோனவர்கள் என நினைக்கிறேன்
குறிப்பாக சில இணையதளங்கள் தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அவற்றின் பின்புலங்களை விசாரித்தபோது பெரும்பாலானவற்றில் மாற்றுமத அடிப்படைவாதிகளின் தொடர்பு இருப்பதைக் காண்கிறேன். உண்மையில் இதுவே அச்சுறுத்துகிறது. இப்படி சமூக ஊடகங்களைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் இந்தச்சிறிய கும்பலால் ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கமுடிவது மிக ஆபத்தானது.
இந்துமதத்திற்குள் கிளைகள் எழுந்து விரிவது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. எப்படி ஓர் ஒருங்கிணைவு வழியாக இந்துமதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கிறதோ அதற்கு நேர் எதிர்விசையாகச் செயல்படும் விசை அது. எந்த ஒரு ஐம்பதாண்டுக்காலத்திலும் இந்துமதத்திற்குள் துணைமதங்கள், வழிபாட்டுமரபுகள் [cults] மத அமைப்புக்கள் பிரிந்து எழுந்து செயல்படுவதையும் காணலாம். இந்து மதம் ஒற்றை அமைப்பாக செயல்படவே முடியாது. பன்மையே இதன் இயல்பு
அந்தப்பிரிவுகளுக்குள் விமர்சனமும் விவாதமும் நிகழவேண்டும். அவை கடுமையாகக்கூட இருக்கலாம். அந்த விவாதமே இது வெறும் அமைப்பாக, ஒற்றைநோக்கு கொண்டதாக தேங்கிவிடாமல் காக்கிறது. ஓஷோவோ ஜக்கியோ நாளை இவ்வாறு இன்னும் எழப்போகும் பலநூறு பிரிவுகளோ இதன் வளர்ச்சியை, உயிர்த்துடிப்பையே காட்டுகின்றன
ஆம், இத்தகைய ‘கட்டில்லாத ‘ வளர்ச்சி என்பது மோசடிகளும், பிழைகளும், ஊழல்களும் கொண்ட பல போக்குகளையும் உருவாக்கும். நாளைக்கே நீங்கள் ஒரு இந்துமதத் துணைப்பிரிவை தொடங்கமுடியும் என்னும்போது எந்த ஒழுங்கையும் எதிர்பார்க்கமுடியாது. காடு முளைத்துப்பரவுவதுபோலத்தான். இந்த ஒழுங்கின்மையிலுள்ள உயிர்த்துடிப்பே இந்துமதத்தின் வல்லமை. ஒழுங்கை உருவாக்கபோய் இதை ஓர் இயந்திரமாக, கட்டிடமாக ஆக்கினால் இதன் உயிர் அழியும்
ஆகவே இவ்வகை அமைப்புக்கள் அனைத்தையும் இந்து சமூகமே கூர்ந்த விமர்சனத்திற்கு ஆளாக்குவது அவசியம். அவற்றின் நடைமுறைகள் கண்காணிக்கவும் விமர்சிக்கப்படவும் வேண்டும். அவற்றின் தரிசனங்கள் மறுத்து விவாதிக்கப்படவேண்டும். தகுதியற்றவை வெளிச்சத்திற்கு வருவதன் மூலம் இயல்பான அழிவை அடைந்தாகவேண்டும். எப்படி புதிய கிளைகள் உருவாகின்றனவோ அப்படி பல பழைய கிளைகளும் அழிந்துகொண்டேதான் உள்ளன.
இது ஓர் அழியா உயிர்ச்செயல்பாடு . இப்படி இந்துமதத்தைப் புரிந்துகொண்டால் இதன் பிரிவுகளை சிதைவு அல்லது ஒழுங்கின்மை என எண்ண மாட்டோம். இதன் உள்முரண்பாடுகளை ஒற்றுமையின்மை என நினைக்கமாட்டோம். இதிலுள்ள படைப்பூக்கத்தன்மையைப் புரிந்துகொள்வோம்.
ஜக்கி குருகுலம் மீது திட்டவட்டமான தத்துவ, அரசியல் நிலைபாடுகளுடன் விமர்சனங்களை முன்வைக்கும் மாற்றுத்தரப்புகளும், பிழைகள் இருந்தால் ஆதாரபூர்வமான செய்திகளுடன் அவற்றை எதிர்ப்பவர்களும் உருவாகி வந்தால் இந்தக்குப்பைகள் விலகுமென்று நினைக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெறுப்புடன் உரையாடுதல்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம்.
தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. அதில் வாசகர்களின் விமர்சனங்களும் பிரசுரிக்கப்பட்டது. நானும் சில கருத்துகளை எழுதி இருந்தேன். அதில் என்னை திட்டியும், அறிவுரை கூறியும் பலபேர் எழுதி இருந்தனர். இந்திய தேசியம் அதில் கேள்விக்கு இலக்காகி விமர்சிக்கபட்டிருந்தது. அஹிம்சை ஒரு போதும் விடுதலை போராட்டங்களில் வெல்லமுடியாது என்று பலர் விவாதித்தனர். காந்தியை ஒரு பம்மாத்துகாரர் என்றும் சிலர் வாதிட்டனர். விவாதம் செய்தவர்கள் நேதாஜியை போற்றி, அவர் வழி வந்தவர்தான் பிரபாகரன் என்றனர். நான் நேதாஜி பற்றி குறைவான மதிப்பீடுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவருடைய சித்தாந்தம் இந்திய விடுதலையில் வெற்றி பெறவில்லை எனபது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை.
நான் தங்களுடைய காந்தியம் குறித்த பதிவுகளை ஓரளவு படித்திருக்கிறேன். நீங்கள் காந்திய வழிகளில் நம்பிக்கை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. உங்களை தவிர வேறு யாரும் என் குழப்பங்களை தீர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். காந்திய வழி இந்திய விடுதலையில் எப்படி வெற்றி பெற்றது?, ஆயுதம் ஏந்திய மற்றவர்களால் ஏன் வெற்றிபெற முடியவில்லை?. வெற்றி பெறுவதற்கு ஆயுதபலமும் செல்வமும் போதுமான அளவு இருந்திருந்தால் நேதாஜி இந்திய விடுதலையை சாதித்திருக்க முடியுமா?. அப்படியானால் காந்திய வழி பலவீனர்களின் கொள்கையா?. இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட கோடானு கோடி மக்களின் அஹிம்சை சார்ந்த முயற்சிகளால் நாம் விடுதலை அடையவில்லையா?. மக்களின் மனோபலத்தைவிட ஆயுதங்களின் பலம் பெரிதா?
இப்போது இணையதளங்களில் வெளிவரும் பல பத்திரிகைகள் உமிழும் இந்திய வெறுப்பு மிக அச்சமூட்டுகிறது. இன்றைய இளைய சமுகம் இணையதளங்களை பரவலாக பயன்படுத்தும் பட்சத்தில் இத்தகைய தவறுதலான வழிகாட்டுதல்கள் இந்திய தேசியத்தின் மைய கருத்தையே அசைத்துவிட வாய்ப்பிருப்பதாக படுகிறது. இந்திய தேசியத்தின் மேன்மையை பரப்பும் அறிவியக்கம் வலுவானதாக இருக்கிறதா?.
தங்கள் கருத்துகள் என் குழப்பங்களை தீர்க்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
குருமூர்த்தி பழனிவேல்
நைஜீரியா
அன்புள்ள பழனிவேல்,
உங்கள்மேல் கொட்டப்பட்ட வெறுப்பு மிக இயல்பானது. காந்தியக் கோட்பாடென்பது எப்போதுமே வெறுப்புக்கு எதிரான ஒன்று. ஆகவே எப்போதுமே வெறுப்புதான் அதை எதிர்கொள்கிறது. காந்தி அவர் வாழ்ந்த காலத்திலேயே உச்சகட்ட வெறுப்பு, அவதூறு ஆகியவற்றின் நடுவிலேயே வாழ்ந்தார். அவற்றுடன்தான் அவர் மீண்டும் மீண்டும் உரையாடிக் கொண்டிருந்தார்.
வெறுப்பு எரியும் மனங்களைப் பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக, சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன. அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே
இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்.
வன்முறை மற்றும் ஆயுதமேந்திய போராட்டங்களில் இருக்கும் ‘மனக்கிளர்ச்சி’ வேறு வகையான சமூகப்போராட்டங்களில் இல்லை. பொதுவாக இவற்றைப் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் பேசுபவர்கள் தனிவாழ்வில் எந்த வன்முறையையும் எதிர்கொள்ள முடியாத அறிவுஜீவிகளாக இருப்பார்கள். அவர்களின் எளிய அன்றாட அலுப்பை அகற்றும் ஒரு சிந்தனையாக அது இருக்கிறது. தங்களை அதிதீவிரமானவர்களாக சமரசமற்றவர்களாக உருவகித்துக்கொள்ள அது உதவுகிறது. இந்தப்பாவனைக்காக, இது உருவாக்கும் அகங்கார திருப்திக்காக அவர்கள் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவார்கள். அவர்களை பலியிடுவார்கள்.
வன்முறை சார்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் மிக எளிதாக தூண்டிவிடப்படத்தக்கவை. ஆகவே இரண்டாம் தர அறிவுஜீவிகளும் சுயநல அரசியல்வாதிகளும் அதை உடனடியாகக் கையிலெடுக்கிறார்கள். மனிதர்கள் நடுவே மிக மிக எளிதாக பிரிவினையை உருவாக்கலாம். எந்த சமூகத்திலும். மிகச்சிறப்பாக இதை ஹிட்லர் அவரது சுயசரிதையில் விளக்குகிறார். ஒரு மேடையில் ஒருவன் உண்மையிலேயே எதிர்மறையாக உணர்ச்சிவசப்பட்டால் போதுமானது அந்த உணர்ச்சிகளை அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்துக்கு கொடுத்து விட முடியும். அது நியாயமான உணர்ச்சிதானா, அதன் மூலம் உண்மையான பலன்கள் இருக்குமா என்றெல்லாம் அம்மக்கள் எண்ண மாட்டார்கள். அதுவே மனித இயல்பு.
அத்தகைய ‘உண்மையான’ எதிர்மறை உணர்ச்சியை எப்படி அடைவது? பேசுபவன் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான வெறுப்பை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அந்த வெறுப்பு அவனில் இருந்து ஒரு சக்தியாக வெளிப்படும். அதுவே ·பாசிசத்தின் ஆற்றல். வெறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதம் என்பதை நவீன அரசியல் கற்றுக்கொண்டது. அவ்வெறுப்பை உருவாக்க மதம், இனம், இனக்குழு அடையாளம் என எதையும் பயன்படுத்த முடியும் என்று அது அறிந்தது. உலகம் முழுக்க இன்று பெருகும் குருதி என்பது அந்த அறிதலில் இருந்து வந்ததுதான். காந்தியம் அந்த வெறுப்பரசியலுக்கு எதிரான மானுட அறத்தின் குரல்.
***
காந்திய வழியிலான போராட்டத்தின் மூன்று அடிப்படை விதிகள்தான் அதை நூற்றாண்டின் இன்றியமையாத முறையாக ஆக்குகின்றன.
ஒன்று, ஒரு போராட்டம் அந்த போராட்டத்தை நடத்தும் மக்களுக்குக் கற்பிப்பதாக, அவர்களை மேம்படுத்துவதாக அமையவேண்டும். எந்த ஒரு சமூகமும் பற்பல கூறுகளினால் ஆனதாகவே இருக்கும். அந்தகூறுகளுக்குள் உக்கிரமன உள்முரண்பாடுகள் இருக்கும். அவர்கள் ஒரு பொது இலக்குக்காக மேற்கொள்ளும் போராட்டமானது அவர்களுக்குள் பரஸ்பர விவாதத்தையும் உரையாடலையும் உருவாக்க வேண்டும். அவர்களின் முரண்பாடுகள் நடுவே இயல்பான சமநிலையை உருவாக்க வேண்டும்.
காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவே உள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம் செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிக நிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய சமூகத்தின் அத்தனை உள்முரண்பாடுகளும் ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு மெல்ல மெல்ல சமரசப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னுடைய ஆன்மபலத்தை முழுக்க காந்தி இந்த சமரசத்துக்கே செலவிட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சமரசம் செய்திருக்கிறார். அவர் வரும்வரை உயர்மட்டம் சார்ந்து நடந்து வந்த போராட்டத்தை அடித்தளம் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமூகத்தின் அத்தனை தரப்புகளையும் போராட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்
பல வருடங்களுக்கு முன்பு மூத்த கம்யூனிஸ்டுத்தலைவரான சி.அச்சுதமேனன் என்னிடம் சொன்னார். சுதந்திரப் போராட்டம் வழியாக காந்தி இந்திய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தியாவின் கோடானுகோடி அடித்தள மக்களுக்கு அரசியல் பங்கேற்பு என்னும் அதிகாரம் அவர்களுக்கிருப்பதை உணர்த்தினார். அந்த அடித்தளம் மீதுதான் இந்தியாவில் இடதுசாரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன என்று. இந்திய தலித் இயக்கமும் அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டதே. அதை அம்பேத்காரும் உணர்ந்திருந்தார்.
ஆக, காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது உண்மையில் அந்த அரசியல் விழிப்பு இயல்பாகவே கொண்டு வந்த அடுத்த கட்டம் மட்டுமே. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் அரசியலதிகாரத்துக்குத் தொடர்பில்லாமல் தங்கள் மூலைகளில் முடங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காந்தி அவர்களுக்கு அரசியலை வழங்கிவிட்டார். அதன்பின் அவர்கள் அதிகாரமின்றி அமைய முடியாது. அதன் பின் அவர்களை ஜமீன்தார்களும் குறுநிலமன்னர்களும் அவர்கள் மேல் அமர்ந்து பிரிட்டிஷாரும் ஆள முடியாது.
அதாவது தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை அடக்கும் சக்தியை எதிர்கொள்ளும் போராட்டம் அது. தங்கள் குறைகளைக் களைவதன் மூலம் தங்கள் அடிமைத்தனத்தை வெல்லும் போராட்டம். அதுவே காந்திய வழியிலான போராட்டத்தின் முதல் அடிப்படையாகும்
இரண்டாவதாக, பிழைகளைக் களைவதற்கான வழிமுறைகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் இயல்பு காந்தியப் போராட்டத்துக்கு உண்டு. ஒரு போராட்ட நிலைபாடு தவறாக இருப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. மானுடப்பிழைகள். தத்துவப்பிழைகள். வரலாற்றுப்புரிதலின் பிழைகள். ஒருபோதும் பின்னால் போக முடியாத ஒரு போராட்டத்தின் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.
ஏனென்றால் சமூகப்போராட்டங்கள் கோடானுகோடி மக்களைச் சார்ந்தவை. அம்மக்களின் பல்லாயிரமாண்டு கால வாழ்க்கை. அவர்களின் வரலாறு, பண்பாடு என நூற்றுக்கணக்கான நுண்கூறுகள் அப்போராட்டத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்தையும் புரிந்துகொண்டு அப்பழுக்கற்ற ஒரு போராட்டவழியை உருவாக்குவதென்பது முற்றிலும் இயலாத ஒன்று. ஆகவே முற்றிலும் சரியான ஒரு பாதையும் இருக்கப் போவதில்லை
காந்தி தன் போராட்டத்தை பலமுறை பின்னுக்கிழுத்திருக்கிறார். தான் உத்தேசித்த போராட்டம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது தான் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றோ எண்ணிய கணமே அவர் பின்னகர்ந்திருக்கிறார். மறுபரிசீலனை செய்திருக்கிறார். மீண்டும் புதிய வழியில் தொடங்கியிருக்கிறார். காந்திய வழியிலான போராட்டத்துக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கிறது
மூன்றாவதாக, வரலாற்றிலும் சமூகச் செயல்பாடுகளிலும் இறுதித்தீர்வு என்ற ஒன்று இல்லை என்ற புரிதல் காந்திய வழிகளின் அடிப்படை தரிசனமாகும். இறுதியான வழி ஒன்றை கண்டடைந்து விட்டேன், அதைத்தவிர வேறெதையுமே ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற நிலை ஒரு அபத்தமான அகங்காரமே அன்றி சமூகத்தையோ வரலாற்றையோ புரிந்து கொண்ட ஒன்றல்ல. காந்தி முரணியக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர். எந்த விசைக்கும் இணையான எதிர்விசை உண்டு. அந்த எதிர்விசையுடனான முரண்பாடும் சமரசமும் அடங்கியதே போராட்டம். எந்தப்போராட்டமும் எப்போதும் எதிர்தரப்புடனான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருந்தாக வேண்டும்.
காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன், வேரடி மண்ணுடன், ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார், அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார்.
அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்.
நான்காவதாக காந்தியப்போராட்டம் என்பது ஒருமுனைகொண்ட ஒன்றாக இருப்பதில்லை. ஏற்கனவே சொன்னதுபோல அது ஒரு மாபெரும் சமூக உருவாக்கமாகவும் இருக்கிறது. ஒரு அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும்போது அந்த அடிமைத்தனத்துக்குக் காரணமாக அமையும் பலநூறு விஷயங்களை கண்டடைந்து ஒவ்வொன்றாக அவர் விலக்கினார். அந்த முனைகளில் எல்லாம் அவர் போராட்டத்தைக் கொண்டு சென்றார். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய காந்தி கிராமம் கிராமமாகச் சென்று கக்கூசில் மலம் கழிப்பதைப்பற்றி பிரச்சாரம் செய்தார். கிராமப் பொருளாதாரத்தை மீட்டமைக்க முயன்றார். மதச்சீர்திருத்தம் செய்ய போராடினார்.
இந்தியாவைச் சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப் போராட்டம் மூலமே இங்கே உருவாகியது. அது காந்தியப் போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்.
காந்திய வழிமுறைகளை நிராகரிப்பவர்கள் கடந்த உலக வரலாற்றில் எத்தனை ஆயுதபோராட்டங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல வேண்டும். கொஞ்சம் வரலாற்றுப் பிரக்ஞையுடன் திரும்பிப் பார்ப்பவர்கள் சென்ற நூறு வருடங்களில் உலகத்தில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததோ அங்குள்ள மக்களுக்கு அழிவையன்றி வேறெதையுமே- ஆம், எதையுமே– அவை அளிக்கவில்லை என்பதையே காண்பார்கள்.
அவற்றின் அழிவுத்தன்மைக்குக் காரணங்கள் என்ன என்று நோக்கினோமென்றால் அவையெல்லாமே காந்திய வழிமுறைகளின் சிறப்பியல்பாக நாம் சுட்டும் விஷயங்கள் இல்லாமைதான் என்பதையே காண்கிறோம். பிரம்மாண்டமாக எழுந்து அரைநூற்றாண்டுக்காலம் பல்வேறு சிந்தனையாளர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட ருஷ்ய, சீன புரட்சிகள். அம்மக்களுக்கு அவை அளித்தது என்ன? பேரழிவையும், அடிமைத்தனத்தையும் மட்டும்தானே? அப்பட்டமாக வரலாறு இவ்விஷயத்தை திறந்து வைத்திருக்கிறது இன்று. இருந்தும் நேற்றுவரை அவற்றை நியாயப்படுத்தியவர்கள் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் காந்தியை குறைகூற வருகிறார்கள்.
ருஷ்ய, சீனப்புரட்சிகள் முதல் இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துவரும் இனக்குழுச் சண்டைகள் வரை அனைத்திலும் நாம் காணும் பொது அம்சம் ஒன்றுதான். அவை தங்கள் உள்முரண்பாடுகளுக்கே ஆயுதங்களை முதலில் பயன்படுத்தின. தங்களுக்குள் கொன்று கொண்டு அழிந்தன. சந்தேகங்கள், துரோகங்கள், பேதங்கள் அவற்றின் விளைவான படுகொலைகள். ஆயுதம் எடுத்த எந்த ஒரு அமைப்பும் தன்னைச் சார்ந்தவர்களையே அதிகமும் கொன்றிருக்கிறது. ருஷ்ய வரலாறானாலும் சரி, சீன வரலாறானாலும் சரி, எந்த ஒரு உலக ஆயுதப்போராட்ட வரலாறானாலும் சரி. ஒரு விதிவிலக்கு கூட உலகத்தில் இன்று வரை கிடையாது.
ஏனென்றால் முரண்பாடுகளை சமரசப்படுத்திக் கொண்டு ஒன்று திரட்டிக் கொண்டு முன்னகரும் வாய்ப்பை வன்முறை முற்றாகவே தவிர்த்துவிடுகிறது. உரையாடலையே இல்லாமல் செய்துவிடுகிறது. ஆயுதமேந்திய சமூகம் அந்த உரையாடலின்மை காரணமாகவே இறுகி விடுகிறது. அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஆகவே அதன் உள்முரண்பாடுகள் மெல்ல பெருகுகின்றன. அழிவை உருவாக்குகின்றன.
இன்று ருஷ்ய, சீன பரிசோதனைகளைப் பற்றிப் பேசும்போது சர்வ சாதாரணமாக அவை ‘கம்யூனிச அமலாக்கத்தில் நிகழ்ந்த சிறிய பிழைகளும் பின்னடைவுகளும்’ என சொல்லுபவர்களைக் காண்கிறோம். கோடானுகோடி மக்கள் புழுப்பூச்சிகளைப் போல செத்தொழிந்தார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஆயுதப்போராட்டம் ஒவ்வொரு கணமும் பின்பக்கம் பாலங்களை எரித்தபடியேதான் முன்னகர்கிறது. அழிவை மட்டுமே நம்பி அது இயங்குகிறது. அதன் தவறுகளின் விலை மிகமிக அதிகம். எப்போதும் ஏழை எளிய மக்களே அந்த விலையை கொடுக்கிறார்கள். தங்கள் உயிரால். குளக்குகளை ஒழித்ததும் கலாச்சாரப் புரட்சியும் தவறுகள் என ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் சொல்லலாம். செத்தொழிந்த மனிதர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
ஆயுதப் போராட்டம் என்பது எப்போதுமே இறுக்கமான விவாதத்துக்கு இடமே இல்லாத இறுதிமுடிவு ஒன்றை எடுத்த பின்னர் தான் முன்னகர்கிறது. ஆனால் எந்த மேதாவியும் எந்நிலையிலும் வரலாறு சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அப்படி ஒரு முடிவை எடுத்துவிட முடியாது. ஐம்பதுவருட வரலாற்றை ஒருவன் திரும்பிப் பார்த்தாலே போதும் எத்தனை நம்பமுடியாத திருப்பங்கள். எத்தனை அற்புதமான சாத்தியக்கூறுகள். எத்தனை புதிய விசைகள்… அந்த எல்லையை உணர்ந்த ஒரு போராட்டம் எப்போதும் தன் மறுவிசையையும் கணக்கில் கொண்டதாகவே இருக்கும். எப்போதுமே அது ஓர் உரையாடலாகவே இருக்கும்.
காந்திய வழிமுறை விவாதத்தை அனுமதிக்கிறது என்பதனாலேயே அதைப் பற்றிய எல்லா கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்தைப்பற்றி இன்றுகூட நம்மிடையே சீரான பதிவுகள் இல்லை. சுபாஷ் ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் போகவில்லை. அவரை அன்றைய உலக சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. அவரது இயக்கத்துக்குள் உக்கிரமான வடக்கு தெற்கு பாகுபாடுகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அவரது ஆயுதப்போராட்டம் என்பது ஒரு பெரும் கேலிக்கூத்தாகவே கடைசியில் முடிந்தது. ஜப்பானியர்களின் எடுபிடிகளாகவே அவரது படைகள் இருந்தன. அதிகார பூர்வ ஆவணங்களின் படி ஐ.என்.ஏ எத்தனை போர்முனைகளில் நேரடியாக போர் செய்தது? ஒரே ஒரு போர்முனையில்தான்!
அனைத்தையும்விட முக்கியமான ஒன்று உண்டு. எந்த மக்களுக்காக சுபாஷ் ஆயுதமேந்தினாரோ அந்த மக்களின் ரத்தத்தின் மேல் நடந்துசென்றார் அவர். சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் பல லட்சம் எளிய தமிழர்கள் இந்தியர்கள் செத்தழிவதை அவர் மீண்டும் மீண்டும் கண்டார். அந்த மானுட அழிவைப் பற்றி அவரது மனசாட்சி மௌனமாகியது. அந்த தகவல் காந்திக்கு தெரிந்திருக்குமென்றால் காந்தி அந்த மௌனத்தை கொண்டிருப்பாரா?
**
இந்நூற்றாண்டின் உலக அரசியலைப் பார்த்தால் நாம் காண்பது அர்த்தமில்லாது நடத்தப்படும் போராட்டங்களின் பேரழிவை. இவை பெரும்பாலும் சில அறிவுஜீவிகளினால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு அதிகார சக்திகளினால் வளர்க்கப்படுகின்றன. பின்னர் அகங்காரங்களால், அதிகார விருப்புகளால், அதன் பொருட்டு உருவாக்கப்படும் வெறுப்புகளால், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடரும் வன்முறைகளால் நீடிக்கின்றன.
இந்தக்கணம் ஆப்ரிக்காவில் குறைந்தது பதினைந்து நாடுகள் உள்நாட்டுப்போர்களால் முழு நிர்மூலமாகியிருக்கின்றன. காங்கோ, சோமாலியா, எதியோப்பியா, சியரா லியோன், ரவாண்டா என மானுட ரத்தம் ஆறாக ஓடிய நாடுகளின் பட்டியலை நாம் போட முடியும். இந்த உள்நாட்டுப் போர்களுக்கான காரணம் என்ன? கேட்டால் மிக எளிதான பதிலே வரும், இனக்குழுக்கள் நடுவிலான அவநம்பிக்கை. அந்த அவநம்பிக்கை எப்படி வந்தது? ஆயுதத்தால்தான். அந்த ஆயுதத்தை இரு தரப்புக்கும் தயாரித்து வழங்கும் நாடுகளிடம்தான் நாம் நியாயம் கோரி கூக்குரலிடுகிறோம்.
நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
ஆப்ரிக்கா உள்நாட்டுப் போர்களால் அழியத்தான் வேண்டுமா? இனக்குழுக்கள் எல்லாம் தனிநாடுகளாக பிரியும் உரிமைக்காக அடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் செத்தொழியத்தான் வேண்டுமா? அந்த அவநம்பிக்கைகளைக் களைய வழிகளே இல்லையா என்ன? அந்த வழிகளை கண்டடையவே முடியாதா? ஐரீஷ் விடுதலைப்போரும் ஸ்பானிய உள்நாட்டுப்போரும் எல்லாம் என்ன ஆயின? அவையெல்லாம் சமரசபட்டு இன்று ஐரோப்பாவே ஒரே நாடாக அமையும் அளவுக்கு அவர்கள் செல்ல முடியும் என்றால் நாம் ஏன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கிக் கொண்டு அழியவேண்டும்?
கண்ணெதிரே ஒரு மாபெரும் முன்னுதாரணம் உள்ளது. அந்த உதாரணம் ஆப்ரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கேதான். பிரம்மாண்டமான ஓர் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல யாருக்காவது ஏதாவது ‘நியாயங்கள்’ இருந்தது என்றால் அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே. கொடுமையான நிற அடக்குமுறை. ஈடிணையற்ற சுரண்டல். மீண்டும் மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவரது கட்சியிலிருந்தே வன்முறை விரும்பிகள் பிரிந்து சென்று கொண்டே இருந்தார்கள்.
ஆனால் அவர் காந்தியில் இருந்து கற்றுக்கொண்டிருந்தார். தன் மக்களுக்கு அவர் அளித்தது தங்களை மேம்படுத்திக்கொள்ளும் போராட்டத்தை. அதன்பொருட்டு அவர் தன்னை சிறையிலடைத்துக்கொண்டார். இந்நூற்றாண்டின் மாபெரும் காந்திய போராட்டம், மாபெரும் சத்யாக்ரகம் என்று ரோபன் தீவில் மண்டேலா இருந்த இருபத்தேழு வருடத்து சிறைவாசத்தையே சொல்வேன். அவரது சொந்த மக்களை அது அரசியலியக்கத்துக்குக் கொண்டுவந்தது. அவர்களிடையே அது உரையாடலை உருவாக்கியது.
அதைவிட அவரது எதிரிகளின் மனசாட்சியுடன் அது உரையாடலை திறந்தது. மண்டேலாவின் போராட்டத்தில் ஒருகட்டத்தில் உலகமெங்குமிருந்த வெள்ளைய நாடுகள் ஆவேசத்துடன் பங்கெடுத்துக்கொண்டதை நாம் அறிவோம். தென்ஆப்ரிக்கா பெற்ற சுதந்திரம் என்பது படிப்படியாக நடந்த அந்த உரையாடலின் விளைவே. அது ஆப்ரிக்கர்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல, வெள்ளையர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்குமான சுதந்திரம். வன்முறை இல்லாமல் நிகழ்ந்த விடுதலை. நம் கண்ணெதிரே நிகழ்ந்த வரலாறு அது.
மண்டேலாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் திரும்பத் திரும்ப சமரசம் செய்து கொண்டிருந்தார் என்பதையே காண்கிறோம். மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் பல்வேறு குழுக்களுடன். பல்வேறு உபதேசிய அமைப்புகளுடன். ஜுலுக்களுடன். வெள்ளையருடன். அவரது வரலாற்றாசிரியர்கள் அவரை ஒரு ‘மாபெரும் சமரசநிபுணர்’ என்று சொல்கிறார்கள்:
ஈழத்தில் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தபோது காங்கோ சிதைந்து விழுந்து கொண்டிருந்தபோது அதே நேரத்தில் அமைதியான தேர்தல் வழியாக ஆப்ரிக்காவில் ஆட்சிக் கைமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்ததை நாம் தொலைக்காட்சியில் கண்டோம். நாம் கற்றுக்கொள்ளத் தயங்கும் பாடங்கள் அங்கே அரங்கேறின.
நெல்சண் மண்டேலா ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இன்னொரு ரவாண்டா. இன்னொரு காங்கோ. ஆனால் இன்னும் நான்கு மடங்கு பெரியது. மானுடம் கண்ட மாபெரும் உதிரவெள்ளம் அங்கே ஓடியிருக்கும். ஆப்ரிக்காவின் முதல் பல இன தேர்தல்கள் முடிந்து நெல்சன் மண்டேலா பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நான் தொலைக்காட்சியில் கண்டதை நினைவுறுகிறேன். ஜூலு மக்கள் தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகக்கூடும் என்ற அச்சத்தால் தெருக்களில் ஆயுதங்களுடன் திரண்டார்கள். அந்த அச்சம் எவரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வெறிக்கூச்சல்களை தொலைக்காட்சியில் கண்டு நான் அதிர்ந்து இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். ஆப்ரிக்க நாடுகளின் வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு மாபெரும் ரத்தக்களரி ஆரம்பமாகிறதென்றே எண்ணினேன்.
ஆனால் தன் காந்திய ஆயுதத்தால் அந்த நெருக்கடியை வென்றார் மண்டேலா. ஜூலு தலைவர்களுடன் திறந்த மனத்துடன் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொண்டார். தன் தியாகம் மூலம் இணையற்ற பொறுமை மூலம் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பொன்னாக மாற்றினார். போர்களின் இருள் சூழ்ந்த ஆப்ரிக்கக் கண்டத்தில் தென்னாப்ரிக்கா மட்டும் ஜனநாயகத்துடன் எஞ்சுவது அதனாலேயே.
காந்திய வழிமுறைகளின் நிரந்தர வெற்றிக்கும் சமகால முக்கியத்துவத்துக்கும் நம் கண்ணெதிரில் உள்ள சான்று இது. ஆயுதவழிமுறைகளின் நிச்சயமான தோல்விக்கும் அவை உருவாக்கும் பேரழிவுக்கும் சான்றுகள் என ஆயுதம் ஏந்திய எல்லா போராட்டங்களையும் சொல்லலாம். ஆனாலும் நாம் வெறுப்பாளர்களின் வசைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களின் வெறுப்புதான் ஆயுதத்தை நாடுகிறது. அந்த வெறுப்புடன் ஓயாது உரையாடுவோம். கைகுலுக்க எப்போதும் கரங்களை நீட்டிக்கொண்டே இருப்போம்.
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் May 26, 2009
தொடர்புடைய பதிவுகள்
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
காந்தியின் துரோகம்
இரு காந்திகள்.
ஹிட்லரும் காந்தியும்
காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2
காந்தியைப் பற்றிய அவதூறுகள்
குடியரசுதினம்-கடிதங்கள்
வழிகாட்டியும், பாதசாரிகளும்விம
வந்தேமாதரம்
காந்திய தேசியம் 1
காந்தியும் தலித் அரசியலும் – 7
காந்தியும் தலித் அரசியலும் – 6
காந்தியும் சாதியும்
காந்தியும் இந்தியும்
சே குவேராவும் காந்தியும்
காந்தியின் பிழைகள்
சாருவுக்கு ஒரு கடிதம்
இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2
இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்
முகம் -கடிதம்
ஜெயமோகன் புகைப்படம் ஜெயக்குமார் ,கோவை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
முகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும் பொழுது ஒரு பரிபூரண வட்டம் நிறைவடைகிறது. பூச்சூடுதல், முடிசூடுதல், பிறைசூடுதல் என்பதையெல்லாம் தாண்டி முகம்சூடுதல் எனும் வார்த்தையை முதல் முறையாக படிக்கிறேன். கடந்த சில நாட்களாக முகம்சூடுதல் என்ற வார்த்தையை ஆசை தீர பல முறை உச்சரித்து மகிழ்கிறேன்.
“முடி” சிறுகதை எழுதிய மாதவனால் மட்டுமே இப்படியொரு முடி சார்ந்த வினாவை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு திருக்குறள் மேற்கோளுடன் நீங்கள் தந்த சுவாரசியமான பதிலும் அந்த குறளும் எளிதாக மனதில் பதிந்து விட்டது. “ஆரோக்ய நிகேதன்” வழியாக பார்த்தால் “நீட்டல்” என்பதை ஆயுர்வேதம் என்று சொல்லலாமா? இயற்கையின் வழியே சென்று இயற்கையை அரவணைத்து வாழ்வது. “மழித்தல்” என்பது அல்லோபதி போல் தெரிகிறது. புதுமை, மாற்றம் என்று தற்காலிக விடுதலை கொடுத்தாலும் , ஒரு முறை மழிக்க தொடங்கிவிட்டால் கடைசி வரை மழித்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த நீட்டல், மழித்தல் தவிர சமணர்கள் வேறு முடியை பிடுங்கி எறிகிறார்கள். துறவு என்ற இலக்கு என்னவோ ஒன்றுதான், ஆனால் செல்லும் வழிகள்தான் எத்தனை எத்தனை?
மழித்தல் , பிடுங்கி எறிதல் இரண்டும் பிரச்சனையின் ஒரு பகுதியை (அதாவது தலை பகுதியில்) மட்டும் தீர்க்கிறது. மற்றபடி ஆண் பெண் இரு பாலரின் இதர பிற உறுப்புகளுக்கெல்லாம் சென்றால் கொஞ்சம் சிக்கல்தான். இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு அழகு நிலையங்களும் , தொழில்நுட்பமும் வந்துவிட்டது. அந்த காலத்தில் துறவிகள் என்ன செய்தார்களோ?
முடி தவிர, முடியின் நிறமும் ஒரு பிரச்னை. தும்பை , மல்லிகை, வெண்ணிலா , வெண்புறா, என்று எதிலும் வெண்மையை கொண்டாடும் சமூகம், முடியில் வெண்மை வந்துவிட்டால் பதறுகிறது. சாயம் பூசி மறைக்க முயல்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மனிதர்கள் வித விதமான தலைச்சாயங்கள் முயற்சித்தபடி, வண்ண வண்ண கோமாளிகளாய் திரிகிறார்கள்.
மைக்கேல் ஜாக்சனின் “MAN IN THE MIRROR” என்றொரு பாடல். அவரது மரணத்துக்கு பின் மிக அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல். கருப்பராக பிறந்து தன் திறமையால் பணம் மற்றும் உலகப்புகழின் உச்சிக்கு சென்ற பின், மைக்கேல் ஜாக்சன் சூட விரும்பிய முகம் ஒரு வெண்முகம். ஆனால் ஒவொவொரு முறையும் தன முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது அவர் மனம் அமைதியடைந்ததா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
மகாபாரதத்தில் அபிமன்யுவின் திருமண வைபோகத்தில் ஒரு மாயக்கண்ணாடி கிடைக்கிறது. நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை அந்த கண்ணாடி காண்பிக்கும் என்று கேள்விப்பட்டு , அனைவரும் அதை பார்த்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். கிருஷ்ணர் கண்ணாடியை பார்த்தால் யார் தெரிவார் என்று அனைவருக்கும் ஆவல். பாமா, ருக்மிணி என்று ஊகிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கண்ணாடியை காணும் பொழுது தெரிவதென்னவோ சகுனியின் முகம். தர்மமும் அதர்மமும் மோதும் பொழுதெல்லாம், இன்றும் இந்த முகம்சூடுதல் விளையாட்டு தொடர்கிறது.
காலத்தின் கோலத்தால் அகம் என்னும் கண்ணாடியில், கறைகளும் கசடுகளும் படிந்து, முகம் என்பது ஒரு கலங்கிய சித்திரமாகவே தெரிகிறது. முறையான பயிற்சிகள், முயற்சிகள் மூலமாக அழுக்குகளை துடைத்து அகக்கண்ணாடியை பார்த்தால், பளிச்சென்று முகம் தெரியுமோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகம்சூடுதல் என்பது ஒரு வகையில் அகம்சூடுதல் தானோ?
அன்புடன்,
ராஜா.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜக்கி -கடிதங்கள் -2
ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2
ஜெ
ஜக்கி பற்றிய உங்கள் நீஈஈண்ட கட்டுரை வாசித்தேன். ‘எவ்ளோ பெரிய மாத்திர’ என சைதன்யா சொன்னதுதான் நினைவில். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டீர்கள்.
ஜக்கி வாசுதேவ் போன்றவர்களுக்கு எதிர்ப்பே வரக்கூடாது, எதிர்ப்பவர்கள் எல்லாரும் தவறுசெய்கிறீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா என்ன?
சாந்தகுமார்
*
அன்புள்ள சாந்தகுமார்,
கட்டுரையிலேயே என் எதிர்நிலைபாடுகளைச் சொல்லியிருக்கிறேன். என்னால் ஆடம்பரமான, படோடோபான எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. பெருந்திரளானவர்களுக்கான கொள்கைகளால் நிறைவுறவும் முடியாது.
ஜக்கியை மட்டும் அல்ல எவரையும் எதிர்த்துப் பேசலாம். ஆனால் அதற்கு தர்க்கச்சமநிலை வேண்டும். ஆதாரபூர்வமான அணுகுமுறை வேண்டும். ஒரு நிலைபாட்டை அனைவருக்கும் உரியதாக கொள்ளும் கொள்கைநிலை வேண்டும். ஆளுக்கு ஏற்ப, இடத்துக்குத் தக்கப்பேசுவது கூடாது. வெறும் வசைபாடல்கள் கூடாது. அது வெறும் காழ்ப்பே
ஜக்கியை கீழ்மை நிறைந்த சொற்களால் இணையப் பொறுக்கிகள் வசைபாடுவதைக் கண்டேன். அவர் தரப்பிலிருந்து அதேபோல மறுவசை வர எத்தனை நேரமாகும்? ஈவேரா தரப்பினர் அவரை அவன் இவன் என்றெல்லாம் கெட்டவார்த்தை சேர்த்துச் சொல்கிறார்கள். பொறுக்கி, மோசடிக்காரன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். அவர்கள் திருப்பி ஈவேராவை அப்படிச் சொன்னால் இவர்கள் ஏற்பார்களா? பொங்கி எழமாட்டார்களா? அப்படியென்றால் இன்னொருவரை அப்படிச் சொல்லாமலிருக்கும் அடிப்படை நாகரீகமாவது இருக்க வேண்டும் அல்லவா?
மாற்று மதத்தினர் பலர் கீழிறங்கி எழுதிய வசைகளைக் கண்டேன். அதேபோல அவர்களின் மதங்களையும் திருப்பி வசைபாடலாம் என்கிறார்களா? இதேபோல அவதூறு செய்யலாம் என்கிறார்களா? ஜக்கி தரப்பு அப்படிச் செய்யவில்லை என்பது அன்றி வேறேது இவர்களுக்கு இந்த எண்ணத்தை அளிக்கிறது? இந்தக் கீழ்மையை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
ஜக்கி வாசுதேவின் மீதான அவதூறுகள், திரிபுகள் ஆகியவற்றுக்கு மட்டுமே நான் பதில் சொன்னேன். அது மேலே சொன்ன சூழலைக் கண்டு உருவான ஒவ்வாமையால் மட்டுமே. நேற்றிலிருந்து எனக்கு அதேபோன்ற வசைகள் வந்து குவிகின்றன. இதுவே நம் சூழல். இது சிந்தனையோ கருத்துச்செயல்பாடோ அல்ல. வெறும் அரசியல் சூழ்ச்சி, மனச்சிக்கல்.
இதற்கு அப்பால் ஜக்கியின் ஆசிரமம், அவரது கொள்கைகள், அவருடைய வழிமுறைகள் குறித்த எத்தனை கூரிய விமர்சனத்திற்கும் இங்கே இடமுண்டு. எனக்கே பல விமர்சனங்கள் உண்டு. அவருடைய யோகமுறைப் பயிற்றுதலைப்பற்றிய விமர்சனங்கள் எழலாம். அவர் உருவாக்கும் சுயபிம்பம் பற்றி விமர்சிக்கலாம். அவருடைய வாழ்க்கை நோக்கும் தத்துவமும் விரிவாக மறுக்கப்படலாம். அவருடைய ஆசிரமம் செயல்படும் முறை மறுக்கப்படலாம். அது முற்றிலும் வேறு. அந்தக் கட்டுரையிலேயே அப்படிப்பட்ட பகுத்தறிவு சார்ந்த விமர்சனங்கள் தேவை என்றே சொல்லியிருக்கிறேன்
ஜெ
***
ஜெமோ
கனகச்சிதமாக, ஜக்கி பற்றிய எதிர்ப்புகளின் உண்மைத் தன்மையை தோலுரித்துள்ளீர்கள். உங்களுடைய சாஸ்திர ஞானமும் அதைப்பற்றிய அவதானிப்புமே இதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
அதே சமயத்தில், ஜக்கியின் அமைப்பு பற்றிய உங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை நீங்கள் நிறுவிக்கொண்ட விதமும் மிக அருமை. It is a class of your own.
அன்புடன்
முத்து
***
ஜெயமோகன் சிந்திக்கத் தக்க கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்:
https://groups. google. com/forum/#!msg/mintamil/oQ7bzEUwPNs/eRg2noAnAQAJ
இந்தியர்கள் கவனமாக இல்லையெனில் யோகா தங்களுடையது என்று சொல்லிவிடுவார்கள்.
உலக முழுதும் ஏசுநாதர், மேரி சிலைகள் பெரிதுபெரிதாக கிறித்துவ சமயிகள் நிறுவிவருகின்றனர். ஆனால், இந்த சிவன் சிலைக்கு பாருங்கள்:
CALL TO PRAYER: GIANT FALSE IDOL UNVEILED TO “HERALD IN THE NEW AGE”
https://beastwatchnews. com/call-to-prayer-giant-false-idol-unveiled-to-herald-in-the-new-age
இன்னொன்று: ஐரோப்பா பல்கலைக்கழகங்களில் நுட்பமாக யோகா என்பது இந்தியாவில் தோன்றியதன்று என்று கருத்தரங்கள் பல நடக்க 10 ஆண்டுகளாய் ஆரம்பித்துள்ளன.
யோகா இந்தியாவின் பெயரை உலகில் நாட்டிவிடும் என்பதாலும், பல பில்லியன் $ பிஸினஸ் என்பதாலும் கழட்டிவிட முயற்சி. ஆனால், ஆஸ்கோ பார்ப்போலா நன் நூலில் சிந்து சமவெளி பசுபதி முத்திரை போன்றவை ப்ரோட்டொ-யோகா என எழுதியுள்ளார்.
நா. கணேசன்
***
அன்புள்ள ஜெ
ஜக்கி வாசுதேவ் பற்றிய கட்டுரை நேர்மையானது. உண்மையில் ஜக்கி அமைப்பினருக்கும் அதில் பெரிய ஒவ்வாமைதான். இருசாராருக்கும் நடுவே நின்று சொல்லியிருக்கிறீர்கள். இன்று இதையெல்லாம் எவரேனும் சொல்ல மாட்டார்களா என எண்ணினேன். நன்றி
அரவிந்த்
***
அன்புள்ள ஜெயமோகன்,
ஜக்கி குறித்த கட்டுரை கண்டேன். தங்கள் குறிப்பிட்டது சரி.
பிரச்னை செய்பவர்கள் வெளிநாட்டு பணத்துக்காக இங்கு மத அறுவடை செய்பவர்கள். அவர்களுக்கு தெரியும் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த அளவு அறுவடை குறைந்துள்ளது என்று. இங்கு அறுவடை குறையும் பொது, இவர்களுக்கு வரும் பணமும் குறைகிறது. அது மீண்டும் அறுவடையை குறைய வைக்கிறது.
இந்த வியாபாரிகளுக்கு இது வாழ்வா சாவா பிரச்னை. இந்த வியாபாரிகளோடு சேர்ந்து, இவர்கள் ஓட்டுக்காக இவர்கள் செய்யும் அணைத்து தவறுகளையும் ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், உங்களை RSS கைக்கூலி என்பார்கள்.
தங்களை திட்டபோகும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம், தமிழ்நாட்டுக்கு எதிரான கருங்காலிகள் யார் யார் என்று. நினைக்கவே அச்சமாக இருக்கிறது, வரும் நாட்களில் உங்களை பற்றி என்ன என்ன அவதூறுகள், பொய்கள் பறக்கப் போகிறது என்று.
அன்புடன்,
ராஜ்குமார். V.
***
ஜக்கி பற்றிய உங்கள் கட்டுரையில், நீங்கள் தொட்டுச் சென்ற முக்கியமான ஒன்று – பிராமண மேட்டிமை.
90-களில், கல்கி பகவான் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்போது பகவானை மக்களிடம் எடுத்துச் சென்றவர் அவருடைய ஒரு பிராமண நண்பர். பேச்சுத்திறனும், வசீகரமும் உள்ளவர். இந்து ஞானமுறைகள் கற்றவர். (ந்யூக்ளியர் விஞ்ஞானிகூட – ஜெர்மனியில் ஆராய்ச்ச்சியாளராக இருந்து, தன் நண்பருக்காக இந்தியா வந்தவர்.) தத்துவத்திலோ, ஞானத்திலோ சிறிதும் அறிமுகம் இல்லாத, புதிய பொருளாதாரத்தினால் குழம்பிய பல பிராமண இளைஞர்கள், பகவானைத் தொடர ஆரம்பித்தனர். பகவான் பிராமணர் இல்லை. ஜித்து கிருஷ்ணமூர்த்தியிலிருந்து ஆரம்பித்து, தன் வழியை கண்டடைந்தவர். சாதாரண ஆங்கில உச்சரிப்பும், சற்றே கொச்சையான தமிழ், தெலுங்கு உச்சரிப்புடன் பேசுபவர். பகவானில் வழியில் பாரம்பரியமான யோகம் மிகக்குறைவு. பிற குருக்களின் வழிகளோடு சில ஒற்றுமைகளும், பல வேற்றுமைகளும் உண்டு.
இதனால், பெரும்பாலான முந்தைய தலைமுறை பிராமணர்களுக்கு பகவான் மேல் வெறுப்பு. என் குடும்பத்து பெரியவர்கள், மவுனமாக தங்கள் வெறுப்பை காட்டினர். கமலஹாஸன், கிரேஸி மோகன் போன்றவர்கள் கிண்டலடித்து தங்கள் அரிப்பை சொறிந்து கொண்டார்கள். சோ, நக்கீரனில் வருவது போல், அவதூறாக ஒரு கட்டுரையை துக்ளகில் வெளியிட்டு திருப்தி பட்டுக்கொண்டார்.
96-97 வாக்கில் பகவானுக்காக, அவர் படத்தை மட்டும் வைத்து, சென்னையில் சேர்ந்த கூட்டம், சில அரசியல்வாதிகளை அதிர வைத்திருக்ககூடும். இத்தனைக்கும், 95 முதல் 2002 வரை, பகவான் பொதுமக்களை சந்திக்கவே இல்லை. அந்த கூட்டத்தை நடத்திய, பகவானின் சீடர்களுள் ஒரு இளைஞருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது. இப்போது ஜக்கிக்கு வருவதைப்போல், அதைத் தொடர்ந்து பல ஊடகத்தாக்குதல்கள். அடுத்த தலைமுறை பிராமண இளைஞர்கள், ஜக்கியிடமோ, ஶ்ரீஶ்ரீயிடமோ செல்வார்கள் என்று நினைக்கிறேன். அக்கால பிராமணர்களின் பேட்டைகளான காஞ்சி ஒரு கவைக்குதவாத மடமாகிவிட்டது.
இப்போது சற்றே அமைதியாக, ஆந்திராவில் தடாவுக்கு அருகே, ஒரு பொட்டலில் பகவானின் ஆசிரமம் இருக்கிறது. இப்போது, தமிழ் நாட்டிலிருந்து அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.
– ஶ்ரீதர்
பி. கு – பகவான், ஜக்கி, ஶ்ரீஶ்ரீ மற்றும் பல புது யுக குருக்களின் பார்வையாக ஆங்கிலத்தில் என் கட்டுரை (http://justexperience. blogspot. in/2016/10/to-be-or-not-to-be-guru. html)
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

