Jeyamohan's Blog, page 1674

February 23, 2017

ஒருமரம்,மூன்று உயிர்கள்

index


 


என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.


அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?


நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


கே.ஆர்.மணி, மும்பை


அன்புள்ள மணி,


பக்கத்திலேயே ஒரு சங்கீதவித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக்கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போருமா?’ என்பார்.


சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்துவீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.


மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக்கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப்பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே.  ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டுமிருக்கும்.


ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.


முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக்கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.


அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றிகொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.


ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள்,  நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில்நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல்ராஜாக்கள் பெரும்பாலும் முதல்தலைமுறையில்தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு.  இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்றபாவனை.


இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல்நிலையை அறிய முயல்வார்கள். சமூகத்தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத்தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’


நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப்பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள்.  ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம்  நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப்பழக்கம் மூலம் கற்றுத்தேர்ந்தவர்கள்.


இந்த இருசாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர்பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.


அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்மவிரோதியைப்பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக்கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப்பிடுங்கிக்கொண்டிருப்பார்.


ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும்.  உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.


இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.


லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?


மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.


ஜெ


 


மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 14, 2011

தொடர்புடைய பதிவுகள்

ஆன்மீகம் தேவையா?
மனப்பாடம்
செயலின்மையின் இனிய மது
தன்னறத்தின் எல்லைகள்
தனிமை கடிதங்கள்
தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2017 10:35

ஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3

b


அன்புடன் ஆசிரியருக்கு ,


 


முதலில் இது போன்றதோர் சந்திப்பை ஒருங்கிணைத்து, இளைய வாசகர்கள் பங்குபெற வாய்ப்பளித்தமைக்காக தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இத்தனை இளம் வயதில், தமிழிலக்கியத்தின் உச்ச ஆளுமையுடன் இரு நாட்களை கழிப்பது என்பது எத்தனை  பெரிய வாய்ப்பு. இது என்னுள் ஏற்படுத்திய தாக்கம் எளிதானதல்ல.


 


சந்திப்புக்கு முதல் நாள், தேர்வுக்கு தயாராவதை போல ஒருவித தவிப்பில் இருந்தேன். சந்திப்பன்று, உள்நுழையும்போதே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தாங்கள் ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றீர்கள். அப்போது என்னுள் நிரம்பிய உற்சாகம் இரு நாட்களுக்கு வடியவில்லை. மீசையற்ற முகத்தில் உங்களை பார்த்து பழகிய எங்களுக்கு, மீசையுடன் கூடிய உங்கள் முகம் ஒரு புது அனுபவம்.


 


இரண்டு நாட்களில் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, அரசியல், அறிவியல் மற்றும்  சூழியல் என ஒட்டுமொத்த அறிவுலகத்தின் சுருக்க வடிவத்தையும் அளித்துவிட்டீர்கள். தொடர்ச்சியாய், சோர்வின்றி உரையாடிய உங்கள் தீவிரம் ஆதர்சமாய் அமைந்தது. இலக்கிய வாசிப்பிலும், பொது அறிவுத் தளத்திலும் என்னுடைய நிலை குறித்த தெளிவையும் அடைய முடிந்தது. இலக்கியத்திற்கு புதிய என்னை போன்றவர்களின் தயக்கத்தையும், முதிர்ச்சியற்ற தன்மையையும், அறியாமையும், சில நேரங்களில் அபத்தங்களையும் தாங்கள் பெருந்தன்மையுடனும், பெருங்கனிவுடனும் பொறுத்து நாங்கள் சௌகரியமாய் உணரும்படி விவாதங்களை நடத்திச் சென்றீர்கள்.


sai


மாலையில், தங்கள் உரையாடலுடன்  கூடிய இனிய நடைப்  பயணமும், இரவில், தமிழின் மாபெரும் கதைசொல்லி ஒருவரிடம் இருந்து நேரடியாய்  பேய்க் கதை  கேட்டதும், கிடைப்பதற்கரிய கொண்டாட்ட  அனுபவங்கள். விஷ்ணுபுரம் விழா மற்றும் இச்சந்திப்பு நிகழ்வுகளின் இன்னொரு முக்கியமான பயன் ஒத்த இயல்புடைய நண்பர்களின் அறிமுகம். சுரேஷ் பிரதீப் , ஷாகுல் ஹமீது, கணபதி மற்றும் விஷால் ராஜா போன்ற நாளைய எழுத்தாளர்களின் அறிமுகமும், நட்பும், அன்பும் தரும் மகிழ்ச்சி ஈடில்லாதது.உங்கள் புத்தகக் கட்டிலிருந்து  வெங்கட் சாமிநாதனின் கையெழுத்துடன்  கூடிய அவரது இரு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.


 


இச்சந்திப்பை ஒருங்கிணைத்து சிறு அசௌகரியம் கூட நிகழா வண்ணம் நிகழ்த்திக்காட்டி நல்லுணவு அளித்து, அன்புடன் உபசரித்த திரு.கிருஷ்ணன், திரு.செந்தில் ஆகியோருக்கு நன்றி. கலந்துகொண்ட நண்பர்களுக்கு எனது அன்பு.


இறுதியாய் கனிவுடன் கட்டித் தழுவி தாங்கள் விடை கொடுத்தது,  நெகிழச்  செய்த உச்ச கணம் . அப்பேறுக்காய் மீண்டும் உங்கள் பாதங்களை சென்னி சூடிக்கொள்கிறேன்.


 


அன்புடன்,


பிரபு சாய் பிரசாந்த் .


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2017 10:32

படைவீரன்

C5UtXI3UkAAsx9R


 


2008 வாக்கில் தனசேகர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவருடைய சொந்த ஊர் சின்னமனூர். சென்னையில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். வேண்டாவெறுப்பான வேலை – அதாவது இணையத்தில் விளையாடுவது, வம்பளப்பது தவிர வேலையென ஒன்றுமில்லை. தன் ஊரின் அருகே மேகமலை மிக அழகான ஊர், அங்கே செல்ல விருப்பமிருப்பின் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். நாங்கள் உபசரிப்பாளர்களை விடுவதில்லை. கிருஷ்ணன் அவரைச் சிக்கெனப் பிடித்தார்


 


டிசம்பர் 3 2009 அன்று நண்பர்களுடன் மேகமலைக்குச் சென்றோம். திரும்பி வந்து தனா இல்லத்தில் கடாவிருந்துகொண்டாடினோம் [ இருபதிவுகள் மேகமலை மற்றும் சின்னமனூர்,தாடிக்கொம்பு ] உற்சாகமான நாட்கள் அவை. தனா எனக்கு மிக அணுக்கமானவராக ஆனார். இலக்கியவாசகர், நாடக நடிகர். ஞாநியின் பரீக்‌ஷா குழுவில் இருந்தார். சினிமா மீது தீரா ஆர்வத்துடன் இருந்தார். சினிமாவில் ‘இறங்குவதற்காக’  மணிரத்னம் அலுவலக வாயிலில் நாட்கணக்கில் காத்திருந்ததை வேடிக்கையாகச் சொன்னார். சிரித்து உருண்டோம்


 


அவருக்கு காட்சி ஊடகம் மீதிருந்த ஆர்வத்தை உணர்ந்து நான் தொடர்புகொண்டிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு பெற்றுத்தந்தேன். ஆனால் அவருடைய அழகிய முகம் திரையில் மொழுங்கலாகத் தெரிந்தது. வேலைக்காகவில்லை. அப்போதுதான் நான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். தனாவைச்  சேர்த்துக்கொள்ளும்படி மணியிடம் கோரினேன்.  அவ்வாறாக தனா  அவருடைய இளமைக்கால கனவுநாயகனின் அணுக்க மாணவனாக ஆனார். ஒரு கட்டத்தில் அது கிட்டத்தட்ட பெருமாள் -அனுமார் உறவுபோல பக்திமிக்கதாக ஆகியது


35hmnw0

மேகமலை 2009 தனா ,நான்


 


பொன்னியின் செல்வனுக்காக நான் எலமஞ்சிலி லங்காவில் தங்கி எழுதிக்கொண்டிருந்தபோது உடனிருந்த உதவியாளர் தனா. தோரணையாக அரைக்கால் சட்டையுடன் இருந்தமையாலும் வேலை என ஏதும் செய்யாமல் 24 x 7 ஓய்வு எடுத்தமையாலும் காவலர் அவரை ‘பெத்தராயுடு’ என எண்ணிவிட்டார். ‘பெத்தராயிடு எழுந்ததும் காபி ஊற்றிக்கொடுங்கள்’ என என்னிடம் சொல்வார்.


 


தனா கடல் படத்தில் பணியாற்றினார். பின்னர் ஓக்கே கண்மணியில் முதன்மை உதவியாளர். அஜிதனுக்கு உடனடி குரு தனாதான், மண்டையில் அடித்து சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு. விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒருவர். ஆனால் அவரிடம் டிக்கெட் போடும் பொறுப்பை மட்டும் அளிப்பதில்லை. ஏன் என்று சொன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் வருத்தப்படுவார்.


 


இப்போது தன் முதல்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படைவீரன் படத்தின் முதற்தோற்றம் அரவிந்தசாமியால் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ஜேசுதாஸ் கதாநாயகன். பாரதிராஜா இன்னொரு நாயகன். இசை கார்த்திக் ராஜா.  படம் விரைவில் வெளிவருமென தெரிகிறது. தனாவுக்கு வாழ்த்துக்கள்


 



தனசேகர்


 


தனசேகர் அறிமுகம்


உறவு புதியவர்களின் கதைகள் – தனசேகர்


மாசாவின் கரங்கள்  கதை 0 தனசேகர்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–24

24. என்றுமுள பெருங்கொடை


ஒவ்வொருநாளும் கடையனாக கீழோனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் புரூரவஸ். அதற்கென்று புதிய வழிகளை அவனுள் நிறைந்து விம்மி கரைமுட்டும் ஒன்று தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் கையிலிருந்து ஒரு மணி பொன்னும் வெளிப்போவதை அவன் விரும்பவில்லை. உலகெங்கிலுமிருந்தும் பொன் தன்னைத் தேடி வரவேண்டுமென்று எண்ணினான். அவையமர்ந்ததும் வரவுகளை மணிகளென நாணயங்களென உசாவி அறிந்தான். அக்கணக்குகளை தானே அமர்ந்து மும்முறை நோக்கி மீண்டும் கணக்கிட்டு நூறு வினாக்களால் கணக்கர்களை திகைக்க வைத்து சிறு பிழையேனும் கண்டுபிடித்து அவர்களை கீழ்ச் சொற்களால் வசைபாடி ஏடுகளை அவர்கள் முகத்தில் வீசி மீண்டும் எழுதி வர ஆணையிட்டான்.


பின்னறைக்குள் சென்று திரும்பி அவை நோக்கி “எத்தனை முறை எழுதினாலும் கையிலிருக்கும் பணம் மிகுவதில்லை” என்று பல்லைக் கடித்தபடி சொன்னான் துணைக்கணக்கன் ஒருவன். முதுகணக்கர் “இப்போதுதான் இந்த அரசரை நீ பார்க்கிறாய். இங்குள்ள அத்தனை அரசர்களும் இவ்வண்ணமே இருக்கிறார்கள். சொற்களை உதடுகளுக்கு அப்பால் வை!” என்று ஆணையிட்டார். “நம் பணி கணக்கெழுதுவது. நாம் அறியும் செல்வம் பொன்னோ நாணயமோ அல்ல, வெறும் எண்களே.” நாளும் பொழுதும் அவர்கள் கணக்குகளை எழுதினார்கள். எழுதிக்களைத்த விரல்களுடன் தனிமையில் படுத்துக்கொண்டு அரசனை எண்ணி அறியாது புன்னகை புரிந்தனர்.


நதிவரம்பு காக்கவும், வண்டிச்சாலைகள் போடவும், வழிமண்டபங்கள் பேணவும், சந்தைநெறிகள் புரக்கவும், ஏரி நிறைக்கவும், கால் திருத்தவும், ஆலயங்கள் நடக்கவும், காவல் சிறக்கவும் செல்வம் கோரி எழுந்த அத்தனை கோரிக்கைகளையும் தீ கண்ட கரடியென சினந்தெழுந்து விலக்கினான். “எங்கிருக்கிறது இத்தனை பணம்? எவருக்காக இச்செல்வம்? இதைக் கொண்டுசெல்பவர் யார்? இப்போதே நான் அறியவேண்டும். வீணர்களே, நீங்கள் மகிழ்ந்திருக்கவா என் கருவூலத்துச் செல்வம்?” என்று அவன் கூவினான்.


பொன் கோரி எதிரே நின்றிருந்த சிற்றமைச்சர் பிழை செய்ததுபோல் தானே குறுகி “இது குடிமுறைமை, அரசே” என்றார்.  கையிலிருந்த தாலத்தால் அவரை அடிக்க ஓங்கியபடி “என்ன முறைமை? நீங்களெல்லாம் களஞ்சியத்துப் பெருச்சாளிகள். நான் அறிவேன். துளையிட்டு உண்டு இந்நகரை அழித்தவர்கள் நீங்கள். சிறுவனை அமரவைத்து மேலும் உண்டு மகிழ திட்டமிட்டீர்கள். என் உயிராற்றலால் நான் மீண்டு வந்ததனால் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். உங்கள் விழிகளில் தெரிகிறது அந்த சினம்… என்ன எண்ணம்? என்னைக் கொன்று இச்செல்வத்தைக் கவரலாம் என்றா? அதற்குமுன் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கொல்வேன், அறிக!” என்றான்.


எவரும் எச்செலவுக்கும் அவனிடமிருந்து நிதியொப்புதல் பெறமுடியவில்லை. அரசுப்பணிகள் அனைத்துமே முற்றிலும் முடங்கின. நாளும் வணிகர்களும் உழவர்களும் ஆயர்களும் குடிக்குழுக்களாக வந்து நின்று அமைச்சர்களிடம் மன்றாடினர். பின் மன்றாட்டுகள் வசையும் மிரட்டலுமாக உருமாறின. அயல்வணிகர்கள் சிலர் ஊணில்லா விடுதிகளைச் சூறையாடி கொளுத்திச்சென்றனர்.  சிற்றமைச்சர்கள் பேரமைச்சர் பத்மரை அவரது அறையில் வந்து கண்டு “இவ்வண்ணமாயின் இங்கு அரசென்று ஒன்று நிகழாது, அமைச்சரே. நீங்கள்தான் எடுத்துச் சொல்லவேண்டும்” என்றனர். உடன் வந்த படைத்தலைவன் “படைகளுக்கு கூலிகொடுத்து மாதங்களாகின்றன. அவர்கள் வேலேந்தி காவல்நின்று பட்டினி கிடக்கவேண்டுமென்பதில்லை. சென்று சொல்க!” என்றான்.


“அரசருக்கு செவி இருப்பதுபோல் தெரியவில்லை” என்றார் பத்மர். சினத்துடன் “இல்லையென்றால் எழுத்தாணியால் குத்தி அதை உருவாக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. அரசனுக்கு ஒர் அணுவும் குறைந்தவனல்ல அந்தணன். அமைச்சனாக அந்தணனை வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தவர்கள் மூடர்களுமல்ல” என்றான் படைத்தலைவன்.  அமைச்சர் விழிதூக்கி நோக்கி “அந்தணரின் சொல் வேத முழுமையை மதிக்கத் தெரிந்தவர்களிடம் மட்டுமே செல்லும். அவரோ மதம் கொண்டெழுந்த யானைபோல் இருக்கிறார். காண்பவை அனைத்தும் எதிரிகளெனத் தெரிகின்றன” என்றார்.


“நாங்கள் தங்களிடம்தான் வந்து சொல்லமுடியும்” என்ற படைத்தலைவன் ஒரு கணத்துக்குப்பின் பற்களைக் கடித்து கைகளை நெரித்து திரும்பி நோக்கி “சொல்லிக்கொண்டே இருப்போம். எங்கோ ஓரிடத்தில் உடைவாளை உருவி அரசனுக்கு முன் நீட்டுவோம். அப்போது எங்களுக்குப்பின் இந்நகரின் அத்தனை மக்களும் இருப்பார்கள். பேரறத்தான் என்ற பெயர் கொண்டவர் அறத்தால் தலை கொய்யப்பட்டார் என்று ஆகவேண்டியதிருக்கும், சென்று சொல்க!” என்றபின் திரும்பிச்சென்றான்.  சினத்துடன் அவனை தடுத்துப்பேச எழுந்த பத்மரை நோக்காமல் அவர்கள் குறடுகளில் சினம் ஒலிக்க இறங்கிச்சென்றனர். அவர் தூக்கிய கையை மெல்ல தணித்து “மூதாதையரே…” என நீள்மூச்செறிந்தார்.


படைத்தலைவன் விழிகளை அவன் விலகிய பின்னர்  ஒருகணம் நினைவுகூர்ந்தபோது அமைச்சர் உளம் நடுங்கினார். அரசனிடம் அதை சொல்லியே ஆகவேண்டும் என்று எண்ணி துணிந்தபின் அவை புகுந்தார். அங்கு வணிகர்கள் தங்குவதற்கு பாதைகளில் சத்திரம் அமைப்பதற்காக மேலும் பொன் கேட்டு வந்து நின்ற கலிங்கச்சிற்பியிடம் அரசன் இரைந்து கொண்டிருந்தான்.  அவரை அழைத்துவந்த சிற்றமைச்சர் நடுங்கியபடி பின்னால் சென்றுவிட்டிருந்தார். “எவருக்கு இந்தப் பொன்? நானே கேட்க விழைந்தேன். எதற்காக இப்பொன்?” என்றான் புரூரவஸ்.


சிற்பி பணிந்து “இது இங்கிருந்து அளிக்கப்பட்ட திட்டம், அரசே. பாதி பணி முடிந்தும்விட்டது. இப்போது நிதி இல்லை என்றால் செய்த பணி வீணாகும். கட்டியவை இடிந்து சரியும். குறித்த நிதிக்குள் என் பணியை முடித்திருக்கிறேன்” என்றார். “எதிர்த்துப் பேசுகிறாயா? அடேய், எவனோ எங்கோ வந்து தங்குவதற்கு எதற்கு குருநகரின் நிதியை நான் அளிக்க வேண்டும்?” என்றான் புரூரவஸ்.


குலமூத்தார்  ஒருவர் சினந்தெழுந்து அதை குரலில் காட்டாமல் “அரசே, தங்கள் நாவாலேயே சொல்லிவிட்டீர்கள். குருநகரின் நிதி அது. வணிகர்கள் வருவதால்தான் குருநகரி செழிக்கிறது. எங்கள் தொழில் பெருகுகிறது. எங்கள் விளைகளுக்கு விலை கிடைக்கிறது. அவர்கள் வந்து தங்குவதென்பது எங்கள் உபசரிப்பால்தான். அதற்கென்று கட்டப்பட்ட மண்டபங்கள் எங்கள் வரிப்பணத்தில்தான் அமைந்துள்ளன”  என்றார்.


“என்னை எதிர்த்துப் பேசுகிறாயா? யார் நீ? எவர் தூண்டுதலில் இதை பேசுகிறாய்? பிற நாட்டு அரசனின் ஒற்றனா நீ?” என்றபடி வாளை உருவி படிகளில் இறங்கி அவரை நோக்கி சென்றான் புரூரவஸ். தன் இடையில் இருந்த வாளில் கைவைத்தபடி அசையா விழிகளுடன் நோக்கி நின்ற குலத்தலைவர் “தாங்கள் என் தலையை வெட்டலாம். ஆனால் அறிக, பன்னிரு மைந்தர்களின் தந்தை நான்” என்றார். அச்சொல் ஒரு கணம் அச்சுறுத்த புரூரவஸ் நின்று கால்தேய்த்து தரையில் காறி உமிழ்ந்து “இழிமகன்! இழிமகன்! உனக்கு அரசவாளின் கூர்மை ஒருநாள் காட்டப்படும்” என்று உறுமியபடி மீண்டும் அரியணை நோக்கி சென்றான்.


அவைக்குள் புகுந்த அமைச்சர் பத்மர் ஓடிவந்து குலத்தலைவரின் தோள்களைப்பற்றி அமரச்செய்து “பொறுத்தருளுங்கள், குடித்தலைவரே. மும்முறை என் தலை தங்கள் தாள்களில் பணிகிறதென்று கொள்ளுங்கள்” என்று கூவினார். “என்பொருட்டு அமர்க… என்பொருட்டு குளிர்க!” என கைகூப்பி அவையிடம் மன்றாடினார்.  மூன்று படிகளில் தாவிஏறி அரசரின் அரியணை அருகே சென்று “அவர்தான் மட்டுமீறி பேசிவிட்டார், அரசே. பொறுத்தருளுங்கள். நான் அவர்களிடம் பிறகு பேசுகிறேன். உரியமுறையில் பிறகு தண்டிப்போம். இப்போது நாம் அவையை முடிப்போம். இதை நாளை பேசுவோம்” என்றார்.


“நாளை ஏன் பேச வேண்டும்? இப்போதே சொல்கிறேன், என் கருவூலத்திலிருந்து ஒரு மணி பொன்னும் வெளிப்போகாது. நானறியாது எதுவும் நிகழாது இங்கு. இது என் ஆணை!” என்றான் புரூரவஸ். “ஆம், அதுவே உண்மை. அவ்வாறே நிகழட்டும். வருக!” என்று அமைச்சர் அழைத்தார். பல்லைக் கடித்தபடி “இங்கு இதை முடித்துவிட்டுத்தான் கிளம்பவிருக்கிறேன். என்னை எதிர்த்துப் பேசிய இவனை…” என்றான் புரூரவஸ். “அங்கே தங்களுக்கு என மூன்று அழகியர் காத்துள்ளனர். வடமேற்கு திசையிலிருந்து வந்தவர்கள். சுண்ணம்போல் வெண்ணிற உடல் கொண்டவர்கள்” என்றார் அமைச்சர் தாழ்ந்த குரலில்.


அவன் விழிகள் மாறுபட்டன. “ஆம், நான் சொல்லியிருந்தேன்” என்றபடி எழுந்து திரும்பி அவை நோக்கி “எவராயினும் எனது ஆணைப்படியே இங்கு எதுவும் நடக்கும். அதை மறந்து எவரும் எதையும் பேச வேண்டியதில்லை” என்று உரக்க கூவிவிட்டுச் சென்றான்.  அவனுடன் செல்ல அணுக்க ஏவலர்களை பணித்தபின் மூச்சுவாங்க கைகூப்பியபடியே மீண்டும் அவைக்கு வந்த அமைச்சரிடம் குலத்தலைவர்கள் அனைவரும் எழுந்து ஒரே குரலில் “இங்கு என்ன நிகழ்கிறது, அமைச்சரே? பொறுமையின் நெல்லிப்பலகையை வந்தடைந்துவிட்டோம். இனி அரசன் அவன் குடிகளை காணப்போவதில்லை, எதிரிகளையே காண்பான்” என்றனர். “பொறுத்தருள்க… பொறுத்தருள்க. என்பொருட்டு, என் நெறியின்பொருட்டு, என் தந்தையின்பொருட்டு, நான்கொண்ட வேதத்தின் பொருட்டு” என்றார் அமைச்சர்.


“நாங்கள் இவனுடைய கோலுக்கு கட்டுப்பட்டவர்கள். ஏனென்றால் இக்கோல் எங்கள் மூதாதையருக்கு ஒரு வாக்களித்திருக்கிறது. எங்கள் குடிபுரக்கவும் நிலம்காக்கவும் அமைந்த காவலரண் இது. எங்கள் தலைக்குமேல் எழுந்த தெய்வம் அல்ல. எங்கள் மூதாதையர் சொல் எங்களை கட்டுமேயொழிய இவ்விழிமகனின் கையிலிருக்கும் இந்த ஆறு அடி உயர வெற்றுக்கழி அல்ல. அவனிடம் சொல்லி வையுங்கள்” என்றார் ஒருவர்.


சட்டென்று சிவந்து “குடிமூத்தவரே, இது அரசர் அவை. நான் அவர் அமைச்சன். இச்சொல்லை இங்குரைப்பதை ஒப்பமாட்டேன்” என்று அமைச்சர் சொல்லத்தொடங்க “இழிமகன், கீழ்மகன், சிறியன்… என்ன செய்யப்போகிறீர்கள்? தலை கொய்யப்போகிறீர்களா? கொய்யுங்கள் பார்ப்போம்!” என்று அந்த குலத்தலைவர் சினந்தார்.


மூச்சிரைக்க கண்கலங்க ,“ஒன்று செய்வேன், இனி அரசனைப் பழித்து ஒரு சொல் எழுந்தால் உங்கள் இல்லத்திற்கு வந்து என் குருதியைச் சிந்துவேன். அப்பழி தொடர்க உங்கள் கொடிவழியை” என்றார் அமைச்சர். குலத்தலைவர் மெல்ல தளர்ந்து “அமைச்சரே,இது உங்கள் பணியல்ல, அறம் . உங்கள் எட்டு தலைமுறை மூதாதையரை நம்பி வாழ்ந்தோம். இப்போது உங்களை நம்புகிறோம்” என்றார்.


அமைச்சர் “அரசரின்பொருட்டு நான் மும்முறை தலைவணங்குகிறேன். பழியனைத்தும் நான் கொள்கிறேன். பொறுத்தருளுங்கள்! இன்று அவை முடியட்டும்” என்றார். “அவையை நாங்கள் முடித்துக்கொண்டோம். இனி நாங்கள் இங்கு இருக்கப்போவதில்லை” என்றபடி குலத்தலைவர்கள் வெளியே சென்றனர். அவர்களில் இளையவர் ஒருவர் திரும்பி “சென்று சொல்லுங்கள், குலப்பழி கொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கவேண்டாம் என்று” என்றார்.


அமைச்சர் கைகூப்பி விழிகசிய நின்றார்.  இன்னொருவர் “அமைச்சரே, அரசரே  எங்கள் இல்லம்தோறும் வந்து வணங்கி அழைக்காமல் இங்கு அரசவை நிகழாது. இனி ஆணைகள் அனைத்தையும் குலத்தலைவர்களின் அவையே பிறப்பிக்கும்” என்றார். “இல்லை, வேண்டாம். அது மோதலென்றாகும். குருதியெழும். வேண்டாம்,  நானே இதற்கு ஆவன செய்கிறேன். சென்று வாருங்கள்” என்று கைகூப்பினார் அமைச்சர்.


மீண்டும் சென்று அரசனை சந்திக்க விழையாது தன் அறையிலேயே அமர்ந்திருந்தார். மெல்ல உளம்தேறி சென்று பார்த்துவிடுவோம் என்று எண்ணி அவர் அரண்மனையின் அகத்தளத்திற்குச் சென்றபோது அங்கு கணிகையர் நடனம் நடந்துகொண்டிருந்தது. மதுவருந்தி வெறிசிவந்த கண்களுடன் அரசன் மஞ்சத்தில் சாய்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். கைகூப்பி நின்று நோக்கிய அமைச்சர் ஒரு சொல்லும் எடுக்காது திரும்பி தன் இல்லத்திற்குச் சென்றார்.


imagesஇரவு இறுகி மெல்லிய புழுதிமணத்துடன் காற்று தெருவில் சுழன்று சென்றுகொண்டிருந்தது. தாழ்ந்திருந்த மறு எல்லையில் ஒரு விண்மீன் மட்டும் அதிர்ந்தது. தன் இல்லத்தில் முகப்புத்திண்ணையில் விரிக்கப்பட்ட மெத்தையில் படுத்து கண்களை மூடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அமைச்சரை திண்ணையின் மறுபக்கம் மெத்தையில் படுத்திருந்த அவரது முதுதந்தை எழுந்தமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்.


MAMALAR_EPI_24


தந்தை எழுந்தமர்ந்த அசைவை அவர் மூடிய விழியால் கண்டார்.  அவர் பேசப்போகிறார் என்பதை எதிர்பார்த்தார். அவர் பேசட்டும் என்று காத்திருந்தார். கனைத்தபின் “என்ன நிகழ்கிறது?” என்று முதியவர் கேட்டார். மைந்தர் பெருமூச்சுவிட்டார். “அரசன் எல்லை மீறிவிட்டான் அல்லவா?” என்றார். அமைச்சர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். தன் சொல்லால் அதை ஆதரிக்கவேண்டாமென நினைத்துக்கொண்டார்.


“இந்நகரே அதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறது. அரசன் என்று வந்தவன் ஒர் இடுகாட்டு இழிதெய்வம் என்கிறார்கள். அவன் மீண்டு வந்ததே இந்நகர் மீது விதிக்கப்பட்ட தீச்சொல் என்று அன்றே சொன்னார்கள்” என்றார் முதியவர். “தாங்கள் எண்ணியது உறுதியடைந்துவிட்டால் மனிதர்களின் உள்ளே ஏதோ ஒன்று உவகையே கொள்கிறது. அதை மேலும் பெருக்கி பரப்பி பேருரு கொள்ளச்செய்கிறார்கள். இந்நகர்மேல் கண் வைத்திருக்கும் அயல் அரசர்கள் அனைவருக்கும் இன்று மக்களிடையே இருக்கும் வெறுப்பு மிகப்பெரிய ஈர்ப்பை அளிக்கும். மக்களால் வெறுக்கப்படும் அரசன் அயலாரால் எளிதில் தோற்கடிக்கப்படுவான்.”


“ஆம், இதையெல்லாம் நானும் அறிவேன்” என்று பத்மர் சொன்னார். “பிறகென்ன? நீ அந்தணன் அல்லவா? ஆற்றவேண்டிய பணி வடிவிலேயே பிரம்மம் உனக்கு தோற்றமளிக்கும். சென்று சொல் உன் அரசனிடம், என்ன நிகழ்கிறது என்று” என்றார் முதிய அந்தணர். “பயனில சொல்வதெப்படி?” என்றார் அமைச்சர். “என் சொற்கள் அவர் காதில் விழுமென்று எனக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே உள்ளே பிறிதொருவர் குடியேறிவிட்டாரோ என்று ஐயுறுகிறேன்.”


முதியவர் நகைத்து “ஒவ்வொரு நாளும் மனிதனுக்குள் புதிய மனிதன் குடியேறுகிறான் என்பார்கள். நாம் காணும் ஆறு முந்தைய நாள் கண்டது அல்ல” என்றார். “அத்துடன் இறப்பின் தருணத்தை அடைந்து மீண்டவன் ஒருபோதும் முந்தைய மனிதனாக இருப்பதில்லை. பெருங்கொடுங்கோலர்கள் கருணை மிக்கவர்களாகி இருக்கிறார்கள். அச்சம் நிறைந்தவர்கள் பெருவீரர்களாகியிருக்கிறார்கள். மறுவழியிலும் நிகழும் போலும். அரசன் அவ்வெல்லையில் கண்டதென்ன, பெற்றதென்ன என்று நாமறியோம். இந்த மேடையில் இந்த நாடகம் இவ்வண்ணம் நடிக்கப்பட வேண்டுமென்பது ஊழாக இருக்கலாம்” என்றார்.


அமைச்சர் “நான் என்ன செய்ய வேண்டும்? பயனிலா சொல்லைச் சொல்லி என் தலையை தெறிக்க விடவேண்டுமா?” என்றார். “இறப்புக்கு அஞ்சுபவன் அந்தணன் அல்ல. அந்தணனுக்கு வேதமும் தொல்மரபும் அவன் கற்ற நூல்களும் அரணென அமைந்துள்ளன. அவ்வரணுக்குள் நின்றுகொண்டே அறத்தின் குரலை அவன் தன் சூழலை நோக்கி எழுப்புகிறான். அதற்குப் பிறகும் அவன் கொல்லப்படுவான் என்றால் அவ்வாளை ஏந்தியிருப்பது அறத்தின் தெய்வம் என்றே பொருள். அப்பலியை அவன் உவந்து அளிக்கவேண்டும். அதன்பொருட்டே அவன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்” என்றார் முதியவர்.


நடுங்கும் கிழக்குரலில் அவர் தொடர்ந்தார் “செல்லுமிடமெங்கும் இனிய படுக்கையும் குடிநீரும் உணவும் உடையும் அருட்கொடையுமாக அவனை எதிர்கொள்ளும் அதே அறம் அளித்தவற்றை திரும்பக் கேட்கிறதென்றே அதற்குப் பொருள். இன்று அதற்குத் தேவை உன் தலை என்றால் சென்று அளி!”  பின்னர் அவர் “மூதாதையரே…” என முனகியபடி முதிய எலும்புகள் ஒலிக்க மெல்ல கால்களை நீட்டி படுத்துக்கொண்டார்.


மெல்லிய அதிர்வுடன் அச்சொற்களைக் கேட்டிருந்த மைந்தன் கைகூப்பி “நன்று தந்தையே, இதை நானே அறிவேன் எனினும் இத்தனை கூரிய சொற்களில் எவரேனும் என்னிடம் கூற வேண்டியிருந்தது போலும். சென்று தலை கொடுக்கிறேன்” என்றார். “நிகழ்க! அதற்கு முன் மூதரசரை சென்று பார். அவரிடம் சொல். அவர் அறிந்திருக்கவேண்டும் அனைத்தையும்” என்றார். “இல்லை தந்தையே, அவர் எதையும் எண்ணக்கூடியவராக இல்லை. அரசர் விழிகளை இருள் மூடியிருக்கிறதென்றால் தந்தை விழிகளை ஒளி மூடியிருக்கிறது. இருவரும் பார்வையற்றவர்களே” என்றார்.


முதியவர் முகம் மலர்ந்து நகைத்து “ஆம், அவரை இளமைமுதல் அறிவேன். அரசர் என்பதைவிட அவர் கோலேந்திய காட்டுக்குலத்தலைவரே” என்றார்.  மேலும் உளம் கனிந்து “இனியவர். முதுமையில் அவ்வண்ணம் ஒரு நோய்க்கு அவர் ஆளாகியிருக்கக்கூடும். அது கலையாது அவருக்கு உயிர்மீட்சி நிகழ்க!” என்றபின் கைகளைக் குவித்து “ஓம்! அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தினார்.


“மைந்தர் உயிர் மீண்டதை களித்துக் கொண்டாடி மகிழ்ந்தார் மூதரசர். இன்று இத்தனை வயதான தன் மைந்தனை ஒரு கைக்குழந்தை என்றே எண்ணுகிறார். ஒவ்வொரு நாளும் எழுந்து இன்றும் அவர் உண்ணும்போது வந்து பார்த்திருக்கிறார். எவ்வளவு உணவை அவர் உண்டபின்னும்கூட சேடியிடம் இன்னும் சற்று பரிமாறும்படி அறிவுறுத்துகிறார்.  அரசர் எழுந்து சென்றபிறகு அத்தாலத்தில் எஞ்சும் உணவைப் பார்த்து இதையும் அவனை உண்ணவைத்திருக்கலாமே என்று சேடிகளை நோக்கி வசை பாடுகிறார். அரசர் பேசுவதெல்லாமே மழலை எனத் தோன்றுகிறது போலும். ஒவ்வொரு சொல்லுக்கும் அகம் மகிழ்கிறார்.  ஒருமுறை அரசர் புரவியேறி செல்வதைக்கண்டு மகிழ்ந்து அவர் துள்ளிக் குதித்ததை நான் பார்த்தேன்” என்றார் அமைச்சர்.


“விந்தை என்று சொல்லவில்லை, தந்தையே. பித்தோ கள்மயக்கோ என்று சொல்லத்தகுந்த ஒரு நிலையின்மை அவரிடம் இருக்கிறது மைந்தனைக் காண்கையில். ஒருநாள்கூட மைந்தன் துயின்றபிறகு ஓசையற்ற காலடிகளுடன் வந்து அவர் தலையிலிருந்து கால்வரை மெல்ல தொட்டு நோக்கி உறுதிப்படுத்தாமல் இவர் சென்று படுத்ததில்லை. இவரிடம் சென்று மைந்தனைப்பற்றி குறை சொல்வதென்பது…” என்றபின் அமைச்சர் நகைத்து “அதைவிட மைந்தனிடமே சென்று ஒரு வாளைக் கொடுத்து தலையை குனித்துக் காட்டலாம்” என்றார்.


“நன்று, அவ்வண்ணமெனில் தாயிடம் செல்” என்றார். சற்று விழிமாறிய அமைச்சர் “ஆம், அன்னையிடம் சொல்லலாம். அரசர் நோயில் சுருண்டு இறப்பை நெருங்கிக்கொண்டிருந்த போதும் அன்னை தன் நிலை மாறவில்லை. இன்று முளையிலிருந்து திரும்ப எழுந்து ஈரிலைத்தளிரும் தண்டும் கிளையுமென விரிந்தபோதும்கூட அதே நிலை கொண்டிருக்கிறார்” என்றார். பின்னர் கைகூப்பி “நன்று தந்தையே, அரசியிடம் சொல்கிறேன்” என்றார்.


imagesமறுநாள் முதற்புலரியிலேயே அரசன் எழுவதற்கு முன்னர் கிளம்பி அரண்மனைக்குச் சென்றார் அமைச்சர். மூதன்னை எழுந்து நல்லாயுளை வழங்கும் கௌரியின் ஆலயத்திற்குச் சென்றிருப்பதாக சேடி சொன்னாள். ஒவ்வொரு நாளும் கௌரியின் ஆலயத்திற்குச் சென்று அருகே ஓடும் சிற்றாற்றிலிருந்து  ஏழு குடம் நீரை தன் கைகளாலேயே சுமந்து கொண்டுவந்து ஊற்றி மலரிட்டு வணங்கி மீண்டு அதன் பின்னரே முதல் வாய் நீரை அருந்தும் வழக்கம் கொண்டிருந்தார் மூதன்னை. அன்னை வழிபட்டுக்கொண்டிருந்த கௌரியின் சிற்றாலயத்தின் முன் சென்று காவல்சேடியரின் அருகே கைகட்டி காத்து நின்றார் அமைச்சர்.


நீரூற்றி மலரிட்டு வணங்கி கைகளைக் கூப்பியபடியே குனிந்த உடலும், நடுங்கும் தலையும், காகத்தின் காலடிபோல் ஒற்றி எடுத்து வைக்கும் சிற்றடிகளுமாக வந்த அன்னையை நோக்கி வணங்கி “தங்களிடம் ஓரிரு சொற்கள் பேச விழைகிறேன், அன்னையே” என்றார். நோக்கி விழிமாறிய அன்னை “மைந்தனைப் பற்றித்தானே? சொல்லும்!” என்றாள். “தங்களிடம் அன்றி பிறிதொருவரிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றார் அமைச்சர். “ஆம், என்னிடம் இது வருமென்று எனக்குத் தெரியும்” என்றாள் மூதன்னை.


“அரசியே, அரசர் கொள்ளும் சிறுமை எல்லையின்றி சென்றுகொண்டிருக்கிறது. காமத்தில் திளைக்கிறார்.  செல்வத்தை மரக்கிளைகள் பாறைகளை பற்றுவதுபோல இறுக்கிக் கொண்டிருக்கிறார். அறமென்ற ஒன்றையே மறந்திருக்கிறார். குடிமக்களின் கப்பமும் வணிகர்களின் செல்வமும் கருவூலத்திற்கு வருவதென்பது ஒன்று நூறென பெருகி அறப்பணிகளாகவும் காவல்பணிகளாகவும் அவர்களுக்கே திரும்பிச் செல்வதற்காகத்தான். இச்சிறு உண்மையைக்கூட அறியாதிருக்கிறார் என்றால் அரசர் தன் அழிவை நோக்கி தானே நடந்து செல்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்றார் அமைச்சர்.


அமைச்சர் சொல்வதையெல்லாம் மறுசொல்லின்றி நெஞ்சில் கூப்பிய கைகள் விலகாமல் கேட்டுக்கொண்டே வந்த மூதன்னை அரண்மனை விளிம்பை அடைந்ததும் “என்னிடம் சொல்லிவிட்டீர்களல்லவா? என்னால் இயல்வதை நான் செய்கிறேன். நானும் என் கணவரும் அரசரிடம் பேசுகிறோம்” என்றபின் ஒருகணம் தயங்கி “ஆனால் ஊழுக்கு எதிராக படைகொண்டு செல்ல எவராலும் இயலாது. இங்கு என்ன நிகழவேண்டுமென்று அது எண்ணியிருக்கிறதோ அதை நோக்கியே நீங்களும் நானும் மட்டுமல்ல, இதோ நம் காலடியில் நிரைவகுக்கும் எறும்புக்கூட்டமும் சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். நீர்வழிப்படும் புணைபோல செல்லும் இப்பெருக்கில் நாம் செய்வதற்கென்று ஏதுமில்லை” என்றாள்.


“அன்னையே, என் உள்ளத்தில் தங்களை வந்து காணவேண்டுமென்று தோன்றியதும் தாங்கள் என் சொற்களை செவிகொண்டதும்கூட ஊழாக இருக்கலாம் அல்லவா?” என்றார் அமைச்சர். மெல்ல நகைத்து “சொல்லாடற்கலையை தாங்கள் முறையாகக் கற்றதை நான் அறிவேன்” என்றபின் அரசி தன் அறைக்குள் சென்றாள்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2017 10:30

February 22, 2017

அந்த நாடகம்

நித்ய சைதன்ய யதி


 


தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு கேள்விக்காக டி.எஸ்.எலியட்டை நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருந்தார். கண்ணருகே நூலைக்கொண்டுவந்து ஆழமாக வாசித்தபின் என்னை நிமிர்ந்து நோக்கிப் புன்னகைசெய்தார்


 


‘எலியட் கலைகளின் சந்திப்புமுனை ஒன்றைப்பற்றி எழுதியதை வாசித்தது நினைவிருக்கிறது. அதைத்தான் தேடினேன். இசைக்கூடங்களைப்பற்றிய கட்டுரை’ என்றார் நித்யா. ‘மனித உணர்ச்சிகளையும் ஆன்மீக தரிசனங்களையும் சொல்வதற்கு மிக உகந்த கலைகள் மூன்று. இலக்கியம், இசை, நாடகம். நாடகத்தில் நடிப்பும் நடனமும் இருக்கிறது. ஒப்பனை, கைமுத்திரைகள் மற்றும் அரங்க அமைப்புமூலம் ஓவியமும் உள்ளே வந்துவிடுகிறது’


’மனிதனின் அடிப்படையான இந்தக் கலைகள் எல்லாம் ஒன்றாகச்சந்திக்கும் புள்ளி என்பது இசைநாடகம் என்ற வடிவம் என்கிறார் எலியட். அதுதான் மனிதன் உருவாக்கிய கலைகளிலேயே உச்சமானது என்கிறார். ஒரு நல்ல இசைநாடகத்தில் இந்த மூன்றுகலைகளும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று வளர்த்து நுட்பமாக ஆகியபடியே செல்கின்றன. அந்த உச்சத்தில் மனிதனின் பிரக்ஞையால் எட்டக்கூடிய மிகமிக உன்னதமான ஒரு அறிதலின் கணம் நிகழும். அதை எலியட் சுட்டிக்காட்டுகிறார்’ நித்யா தொடர்ந்தார்.


‘ஓப்பரா என்ற இசைநாடகவடிவத்தைத்தான் ஐரோப்பாவின் கலையுச்சம் என்று எலியட் நினைக்கிறார். ஐரோப்பிய இசையின் உச்சகட்ட சாத்தியங்கள் அதில்தான் உள்ளன. இருட்டையும் வண்ணங்களையும் குழைத்து உருவாக்கப்படும் ஐரோப்பிய செவ்வியல் ஓவியங்களின் மிக அழகிய காட்சிகளை நாம் ஓப்பராவில் காணமுடியும். ஐரோப்பிய இலக்கியத்தின் மிகச்சிறந்த உச்சங்கள் அவைதான்’ நித்யா சொன்னார்’


நான் அவரது சொற்களையே பார்த்திருந்தேன். ஆம், சொற்களைக் கேட்பதைவிடப் பார்ப்பது இன்னும் பெரிய அனுபவம். குருவின் உதடுகளில் இருந்து வரும் சொற்கள் மின்மினிபோல ஒளிரக்கூடியவை. பொன்வண்டுகள்போலப் பேரழகு கொண்டவை. பட்டாம்பூச்சிகளைப்போல சிறகுள்ளவை. நித்யாவின் வெள்ளைத்தலைமயிர் தோள்களில் விரிந்து கிடந்தது. பனிநுரைத்தாடி மார்பில் விழுந்து இளங்காற்றில் அலையடித்தது. பத்துவயதுப்பையனின் கண்கள். சிவந்த உதடுகள் குவிந்தும் விரிந்தும் நூற்றுக்கணக்கான செம்மலர்களை நிகழ்த்திக்காட்டின


குருவின் தோற்றம்போல இனிதாவது எதுவும் இல்லை. அவரது காலடிகள் நிலத்தில் நடப்பதில்லை. மெல்ல நம் நெஞ்சை,நம் சிந்தனையை, நம் ஆழத்தை மிதித்து மெத்திட்டு அழுத்தி முன்செல்கின்றன. குருவால்தான் அவரது சொற்கள் அர்த்தம் கொள்கின்றன. பின்னர் அவரது சொற்கள் அவரை நம் முன் விரித்து விரித்து பேருருவம் கொள்ளச்செய்கின்றன. அச்சொற்கள் பிறக்கும் கணங்களில் அவற்றைக் காண்பதென்பது மிகச்சிலருக்கே, மிகச்சில தருணங்களிலேயே அடையப்பெறும் ஆசி.


அதை நான் பிரேமை என்றே சொல்வேன். காதலித்தவர்கள் அக்காதலின் உச்சநாட்களில் அதை உணர்ந்திருப்பார்கள். அன்று அவள் சொல்லும் அத்தனை சொற்களிலும் ஒளியும் சிறகும் முளைக்கின்றன. அவற்றை நாம் கேட்பதில்லை புரிந்துகொள்வதில்லை. பார்க்கிறோம், உணர்ந்துகொள்கிறோம். ஆனால் நாம் காதலியைக் காதல்மூலம் நெருங்கிச்செல்கிறோம். நெருங்கிச்செல்லும்தோறும் அறிகிறோம். அறியும்தோறும் அவள் பெண்ணாகிறாள். வெறும் பெண்ணாக.


மாறாக குருவின் மீதான பிரேமையால் நாம் அவரை நெருங்குகிறோம். உடைகளைக் கழற்றுவதுபோல நம்மை மெல்ல மெல்லக் கழற்றிவிட்டு அவரை அறிகிறோம். அறிய அறிய அவர் பேருருவம் கொள்கிறார். அந்தப் பேருருவம் நம்மை இன்னும் பித்தாக்குகிறது. ஒருபோதும் நாம் அதிலிருந்து வெளிவருவதில்லை. தீராக்காதல் போல பெரும்பேறு ஏதுமில்லை. அது மானுடரில் குருவிடமன்றி சாத்தியமும் அல்ல.


காலையொளிபெற்ற பனிமலைச்சிகரம் போல நித்யா தெரிந்தார். ’ஒவ்வொரு கலைக்கும் உச்சத்தை அடைவதற்கு அதற்கான வழி உள்ளது. அந்த வழியில் அதுசெல்வதனாலேயே பிறவழிகளை அது தவிர்க்கிறது. அது அந்தக்கலையின் தவிர்க்கமுடியாத குறைபாடு. உதாரணமாக இசையில் சிந்தனைக்கு இடமில்லை. இலக்கியம் அதில் இணையும்போது அந்தக்குறை தவிர்க்கப்படுகிறது. இசைநாடகம் மானுடக்கலைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டுகிறது. ஒன்றின் குறையை இன்னொன்றால் ஈடுகட்டுகிறது. மானுடனுக்கு சாத்தியமான கலையுச்சம் ஒன்றை நிகழ்த்துகிறது. நான் எலியட் சொன்னதை ஆதரிக்கிறேன்’ என்றார் நித்யா


‘எனக்கும் அந்த எண்ணம் உண்டு குரு. கேரளத்தில் கதகளி என்பது ஓப்பராவுக்கு நிகரான கலை. அதை ஒரு இந்திய ஓப்பரா என்றே சொல்லமுடியும். அதன் சில தருணங்களில் வரும் உன்னதமான நிலையை இலக்கியமோ இசையோ தனித்தனியாக தரமுடியாது. மனிதனாக நாம் உணர்வதிலேயே உச்சிச்சிகரத்தில் நிற்பதுபோல தோன்றும். ஒட்டுமொத்த மனிதவரலாற்றையே ஒரே பார்வையால் பார்த்துவிடலாம் என்று தோன்றும். புல் புழு செடிமரங்களுடன் இந்த பூமியே நம் முன் திறந்து விரிந்து கிடப்பதுபோலத் தோன்றும்’ என்றேன்


’ஆமாம். கதகளியில் பல தருணங்களில் அந்த நிலை கைகூடுகிறது. உலகமெங்கும் கதகளிக்கு நிகரான ஓப்பரா போன்ற கலைவடிவங்கள் உள்ளன. ஒரு பண்பாடு ஏதோ ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் திடீரென்று மலர ஆரம்பிக்கிறது. அதற்கு நிறைய வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. இசையும் இலக்கியமும் நாடகமும் நடனமும் தத்துவமும் எல்லாம் ஒன்றாக வளர்கின்றன. அப்போது பெருங்காவியங்கள் உருவாகும். ஒரு கட்டத்தில் அவை எல்லாமே ஒன்றாகச்சேர்ந்து ஓப்பரா போன்ற ஒரு கலைவடிவை உருவாக்கிவிடுகின்றன’ நித்யா சொன்னார். ‘சீனாவின் பின்-யின் ஓப்பரா ஐரோப்பிய ஓப்பராவை விட மகத்தானது. ஜப்பானிய நோ நாடகம் இன்னொருவகையான அற்புதமான ஓப்பரா…’


அப்போது வெளியே ஒரு அம்பாசிடர் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி வந்தார்கள். ஒரு ஐம்பதுவயதுப்பெண்மணி தளர்ந்து தொய்ந்து இறங்கி காரின் முகப்பில் கைவைத்து நின்றாள். கடுமையாக நோயுற்றவளாகத் தோன்றினாள். நித்யா கண்ணாடியை தூக்கிவிட்டு அவளைப்பார்த்தாள். ‘தம்பானே’ என்றார். தம்பான் சுவாமி வந்ததும் ‘…அந்த டீச்சரை உள்ளே வரச்சொல்’ என்று சொல்லிவிட்டு என்னை நோக்கிக் கைநீட்டினார். நான் அவரைப் பற்றி எழுப்பினேன்.


மெல்லநடந்து அவர் தன்னுடைய அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டார். எட்டடிக்கு எட்டடி கொண்ட மிகச்சிறிய அறை. மூன்று சுவர்களிலும் புத்தக அடுக்குகள். அவரது அகம் அந்த அறைபோல என நினைப்பேன். நாற்காலிக்கு நேர்எதிரில் தத்துவநூல்கள். வலக்கைப்பக்கம் அகராதிகள் கலைக்களஞ்சியங்கள். இடதுபக்கம் புனைவிலக்கியங்கள். நேர்பின்னால் கவிதைகள். சலீம் அலியின் பறவைகள் பற்றிய நூலை அவர் கவிதைகள் நடுவேதான் வைத்திருந்தார். கார்ல்மார்க்ஸின் மூலதனத்தைப் புனைவிலக்கியவரிசையில்.


நித்யாவின் மேஜை அவரது விளையாட்டுமனமேதான். விதவிதமான சிறிய பீங்கான் கிண்ணங்கள். அவற்றில் ஒன்றில் வண்ணப்பென்சில்கள். இன்னொன்றில் மெழுகுவண்ணக் குச்சிகள். இன்னொன்றில் வரைவதற்காக கிராஃபைட் குச்சிகள். சில கிண்ணங்களில் அவர் நடைசெல்லும்போது பொறுக்கிக் கொண்டுவந்த வண்ணவண்ண விதைமுத்துக்கள். சில கிண்ணங்களில் பொறுக்கித் தரம்பிரித்த அழகிய கூழாங்கற்கள். வண்ணப்பீங்கான் குடுவைகளில் விதவிதமான இறகுகள். நித்யா பூக்களைப் பறிப்பதில்லை. பூச்சாடிகளில் எல்லாம் உதிர்ந்து பொறுக்கப்பட்ட பெரிய இறகுகளையும் காய்ந்த புல்லின் மலர்க்கொத்துகளையும் வைத்திருப்பார்


அந்த டீச்சரம்மா இன்னொருவர் தாங்கிக்கொள்ள மெல்ல உள்ளே வந்தாள். கடும் உடல்வதையில் முனகுவது போல ஒலியெழுப்பினாள். நிற்கமுடியவில்லை. உடம்பு உயர்வேகத்தில் நீர் ஓடும் ரப்பர் குழாய் போல துடித்து நடுங்கியது. ஹக் ஹக் என்று ஒரு ஒலி. சட்டென்று மூங்கிலைப்பிளப்பதுபோல ஒலியெழுப்பி அழுதபடி வெட்டுப்பட்டு விழுபவள் போல அப்படியே முன்னால் சரிந்து நித்யாவின் காலடியில் விழுந்தாள்.


நித்யா அவள் தலையில் கைவைத்துத் தலைமுடியை நீவினார். அவளுடன் வந்தவர் அவளைப் பிடித்து எழுப்ப முயல அவள் நித்யாவின் கால்களைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள். நித்யா அவரைக் கைகாட்டி விலக்கினார். அவள் கதறி அழ ஆரம்பித்தாள்


அப்படி ஒரு அழுகையை நான் கண்டதில்லை. ஒரு மனித ஜீவனின் மொத்த உடலும் கதறி அழமுடியுமென அப்போது கண்டேன். ஒருவர் அழுகை மட்டுமாகவே மாறிவிட முடியும் என்று உணர்ந்தேன். வாய் அழுவதை உள்ளம் அழுவதைக் கண்டிருக்கிறேன், ஆன்மா கதறியழுவதை அன்று கண்முன் கண்டேன். ஏன் என்றறியாமலேயே நானும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.


அழுது அழுது மெல்ல ஓய்ந்தாள். எரிந்து அடங்குவதுபோல்.எரியாமல் எஞ்சியது தன்னுணர்வு மட்டும்தான் போல. அப்படியே நித்யாவின் காலடியில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அவ்வப்போது வரும் விசும்பல் அன்றி ஒன்றுமில்லை.


நித்யா ஏறிட்டுப்பார்த்தார். கூடவந்தவர் அவள் அண்ணன். அந்தப் பெண்மணி பாலக்காடுபக்கத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. இருபது வயதில் கல்யாணமாகியது. ஒரு மகன் பிறந்த மறுவருடம் கணவர் காய்ச்சலில் இறந்தார். அதன்பின் அந்தப்பையனுக்காகவே அவள் வாழ்ந்தாள். நாற்பது நாட்களுக்கு முன் அந்தப்பையன் ஒரு பைக் விபத்தில் இறந்துவிட்டான்.


நான் கொதிக்கும் நெஞ்சுடன் அந்த மெல்லிய உடலையே பார்த்திருந்தேன். கடவுளின் வதைக்கூடத்தில் கிடக்கும் நிராதரவான எளிய உயிர். அக்கணம் எங்கோ எவர் மீதெல்லாமோ கொலைவெறியுடன் முட்டி முட்டி மீண்டது என் பிரக்ஞை. ’அடப்பாவி ! மானுடப்பிறவியை நீ என்னவென்று நினைத்தாய்?’ என்று கண்ணுக்குத்தெரியாத அதன் கழுத்தைப்பிடித்து உலுக்கினேன்.


அவள் மெல்ல அசைந்தபோது நித்யா அவள் தலையை வருடினாள் . ‘என் மகளே’ என மென்மையாக அழைத்தார். ‘எல்லாம் கடவுளின் திட்டம். நாம் எதுவும் செய்ய முடியாது. நம்மால் கடவுளைப்புரிந்துகொள்ளவும் முடியாது. அவர்முன் நாம் நம்மை சமர்ப்பணம்செய்ய வேண்டும் அவ்வளவுதான். இது நம்முடைய கடன்களை நாம் கழிப்பதாக இருக்கலாம். உன்னுடைய கடன் கழிந்தது. இனி உனக்கு அடுத்த பிறவி இல்லை. யோகிகள் புலன்களை அடக்கித் தவம்செய்து அடையும் மீட்பை நீ உன் துக்கம் வழியாகவே அடைந்துவிட்டாய். இந்த துக்கம் ஒரு பெரிய விரதம். ஒரு பெரிய யோகம். இது உனக்கு சத்கதி அளிக்கும். இந்தப் பிறவியில் உனக்கு வாய்த்தது. அதுவும் இறைவனின் இச்சை என்று கொள்’


அவர் மேஜையில் இருந்த ஒரு சின்ன சம்புடத்தில் இருந்து விபூதி எடுத்து அவளுக்குப் போட்டுவிட்டார். இன்னொரு சம்புடத்தில் இருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கொடுத்தார் .’இதைப் பூஜை அறையில் வைத்துக்கொள். இது சிவரூபம். உனக்கு எல்லா ஆறுதலையும் இது அளிக்கும்’ அந்த பெண்மணி கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் அதைப்பெற்றுக்கொண்டாள்.


மேலும் சற்றுநேரம் கழித்து அவர்கள் கிளம்பினார்கள். நான் கண்ணீர் உலர்ந்து சொற்கள் அழிந்து அமர்ந்திருந்தேன். அவள் கும்பிட்டுப் படிகளைத் தாண்டியதும் நாற்காலி கிரீச்சிட நித்யா என்னை நோக்கித் திரும்பினார். ’நான் உன்னிடம் கேட்க விரும்பியது ஒருவிஷயம்தான். சோழர்காலம்தான் தமிழ்ப்பண்பாட்டின் பொற்காலம்.இசையும் நடனமும் இலக்கியமும் சிற்பக்கலையும் தத்துவமும் எல்லாம் செழித்த காலம். கம்பராமாயணம் போன்ற மாகாவியமும் உருவாகியிருக்கிறது. ஏன் ஓப்பரா மட்டும் உருவாகவில்லை?’


ஆரம்பத்தில் நான் அதைக் கேட்கவேயில்லை. கேட்டதும் என் மொத்தக்குருதியும் தலைக்குள் பீரிட்டு ஏறியது. ’என்ன கேட்கிறீர்கள் குரு? நீங்கள் மனிதர்தானா? இந்த துக்கம் உங்கள் மனதைக் கொஞ்சம்கூட பாதிக்கவில்லையா? ஒரு துளி கண்ணீர்கூட உங்கள் மனதில் ஊறவில்லையா? அப்படியென்றால் இப்போது நீங்கள் சொன்னதெல்லாம் வெறும் நடிப்பா? சன்யாசம் என்றால் மனித உணர்ச்சிகளை எல்லாம் இழந்து உலர்ந்த மட்டை மாதிரி ஆவதா? அப்படி ஆகும் மனிதனுக்கு என்ன மேன்மை இருக்கிறது?’ என்று என்னென்னவோ சொல்லிக் கொதித்தேன்.


‘நீ உணர்ச்சிவசப்படுகிறாய்’


‘ஆமாம் உணர்ச்சிதான். நீங்கள் நடித்தீர்கள். சுத்தஅத்வைதிக்கு எதற்கு திடீரென்று கடவுள்பற்றிய பேச்சு? யாரோ கொண்டு வந்த விபூதியை வேறு எடுத்துப் போட்டுவிடுகிறீர்க்ள்…நீங்கள் என்ன சைவரா?’


நித்யா தாடியைத் தடவியபடி ‘நடிப்புதான்…’ என்றார். ‘அந்தப்பெண்ணுக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் சொன்னேன். எதை எதிர்பார்த்து வந்தாளோ அதைக்கொடுத்தேன். நான் சாமியார். இதோ மடமும் கட்டி வைத்திருக்கிறேன். கடமையைச் செய்யவேண்டாமா?’ அவர் கண்கள் கண்ணாடிக்கு அப்பால் சிரித்தன.


நான் கோபத்துடன் எழுந்து வெளியே சென்று என் அறைக்குள் நுழைந்து பையைக் கட்ட ஆரம்பித்தேன். கிளம்பியிருப்பேன். ஆனால் அப்படிப் பலமுறை கிளம்பிச்சென்று அதேவேகத்தில் நான்குநாள் கழித்துத் திரும்பி வந்த நினைவு வந்தது. ஆகவே தளர்ந்தேன். அப்படியே சுருண்டுபடுத்துத் தூங்கிவிட்டேன்.


மாலையில் நித்யா நடை செல்லும்போது நானும் சென்று சேர்ந்துகொண்டேன். தியாகி சுவாமியும் ஒரு வெள்ளைக்கார இளைஞனும் கூடவே வந்தார்கள். நான் மௌனமாகக் கூடவே நடந்தேன். ‘கிளம்பிப் போகவில்லையா? நல்லது’ என்றார் நித்யா. நான் ஒன்றும் சொல்லவில்லை.


சற்று நேரம் கழித்துப் பேச்சை ஆரம்பிப்பதற்காக ‘அந்த டீச்சரை முன்னரே தெரியுமா?’ என்று கேட்டேன்.


‘இல்லை, நான் இன்றுகாலைதான் பார்த்தேன்’ நித்யா சொன்னார்


‘அப்படியென்றால் எப்படி டீச்சர் என்று தெரிந்தது?’


‘இதென்ன கேள்வி? ஒரு டீச்சரைப்பார்த்தால் டீச்சர் என்று தெரியாதா என்ன?’


எனக்கு அவர் என்னைக் கிண்டல்செய்கிறார் என்று புரிந்தது.


‘ஐம்பதாண்டுக்காலமாக நான் மனித வாழ்க்கையை ஒரு கண்ணாடிச்சுவருக்கு இப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த நாடகத்தில் நடிகனே அல்ல. அதனால் இதை உண்மை என்று நான் நினைப்பதில்லை. பார்த்துப்பார்த்து இந்த நாடகத்தின் கதை ஒருமாதிரி பிடிகிடைத்துவிட்டது’ என்றார் நித்யா. ‘திரும்பத்திரும்ப ஒரே சம்பவங்கள்தான். இன்று நான் சொன்ன சொற்களை இதேபோன்ற பெண்களிடம் இதற்குமுன் ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பேன்’


தன் ஊன்றுகோலால் மண்ணில்கிடந்த ஒரு இறகைக் கிண்டிப்பார்த்தார். பின் புன்னகையுடன் ‘எவ்வளவு ஆறுதல்கள், எவ்வளவு ஆலோசனைகள், எவ்வளவு விளக்கங்கள்…மனிதவாழ்க்கையைப் பார்ப்பவனுக்கு ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனவிலக்கம் வந்துவிடுகிறது. அதுதான் உண்மையான துறவு என்பது’ என்றார்


சற்று நேரம் நித்யா பேசாமல் நடந்தார். பின்பு என்னிடம் சொன்னார் ‘போரும் அமைதியும் வாசித்திருக்கிறாயா?’ என்றார்


‘ஆமாம்’ என்றேன். ’தல்ஸ்தோய் என்னுடைய பிரியநாயகன்’


‘அதை வாசித்துமுடித்ததும் என்ன தோன்றியது?’


’பெரிய சோர்வு…பெரிய சலிப்பு. நூறுவருடம் வாழ்ந்து முடித்தது போல’


‘ஆமாம். இலக்கியம் அளிப்பது அதைத்தான். இவ்வளவுதான் என்ற ஒரு புரிதல். அதிலிருந்து ஒரு மனவிலக்கம். இலக்கியம் என்பது வாழ்க்கை என்ற கடலில் இருந்து அள்ளப்பட்ட டீஸ்பூன் அளவு தண்ணீர். அதுவே அந்த விலக்கத்தை அளிக்கும் என்றால் வாழ்க்கையைப்பார்ப்பவனுக்கு வரும் விலக்கம் எப்படிப்பட்டது என்று யோசி’


நான் காலையில் சொன்னவற்றுக்குப் பதில் சொல்கிறார் என்று புரிந்தது. ஒன்றும் பேசாமல் நடந்தேன்.


‘கடவுளுக்கும் ஓப்பராதான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மண்மீது ஒரு பிரம்மாண்டமான உக்கிரமான ஓப்பராவை அவர் முடிவில்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறார். எல்லாக் கலைகளும், எல்லா ஞானங்களும், எல்லா ரசங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து சமன்செய்து நிகழும் நாடகம் அது. அதில் சில தருணங்கள் உச்சமானவை’


நித்யா அவருடைய பிரியமான மலைவிளிம்பில் நின்றார். கீழே தேயிலைக்காடு பச்சைப்பரப்பாக வளைந்து ஆழத்தில் ஒளிவிடும் ஓடை ஒன்றில் இணைந்து மறுபக்கம் மேலேறி மலையாக மாறி நின்றது. மலைவிளிம்பில் மாலைச்சூரியன் அமர்ந்திருந்தான்.


‘நல்ல கலையை நாம் ரசிக்கும்போது அது கலை என்ற உணர்வு நமக்கிருக்கவேண்டும். அந்த மன விலக்கம் இருந்தால்தான் கலையின் எல்லா சுவைகளையும் நாம் அனுபவிக்கமுடியும். உணர்ச்சிகரமாக ஈடுபட்டோம் என்றால் ஏதாவது ஒரு சுவையில் அதீதமாக மூழ்கிப் பிறவற்றை மறந்துவிடுவோம். அந்தக் கலைஞனை நாம் முழுமையாக அறியமுடியாமல் போகும். யோசித்துப்பார், அந்தக் கலைஞனுக்கு அது எவ்வளவு ஏமாற்றத்தை அளிக்கும்!’


நான் பெருமூச்சுவிட்டேன்


‘சரி, நான் காலையில் கேட்டேனே, தமிழ்ப்பண்பாட்டின் உச்சத்தில் ஒரு மகத்தான காவியம் உருவாகியது. ஆனால் ஏன் ஒரு மாபெரும் ஓப்பரா பிறக்கவில்லை?’ என்று ஆரம்பித்தார் நித்யா.


 


மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Aug 8, 2012


 


நித்யா புகைப்படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆன்மீகம் தேவையா?
குருகுலமும் கல்வியும்
கலைஞர்களை வழிபடலாமா?
நித்ய சைதன்ய யதி
இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி
பிம்பக் கட்டுடைப்பும் ஆசிரியர்களும்
இந்துத்துவ முத்திரை
மின்தமிழ் பேட்டி -1
ஒலியும் மௌனமும்
விடுதலையின் மெய்யியல்- கடிதம்
அரதி
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3
குருவின் தனிமை
தன்னை விலக்கி அறியும் கலை
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு
நம்மை உடைப்பவர்கள்…
அணிவாயில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2017 10:35

பழம்பொரி இருகடிதங்கள்

pazam


 


அன்புள்ள ஜெ


 


இரண்டு செய்திகள்.


 


பழம்பொரி கட்டுரை வாசித்தேன்


 


ஒன்று நேந்திரம் பழம் கேரளத்திற்குரியது அல்ல. அது பனாமா கியூபா தீவுகளின் பழம். போர்ச்சுக்கீசியர்களால் கொண்டுவந்து கேரளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது


 


ரெண்டு பழத்தை பொரித்துச்சாப்பிடுவது பனாமா தீவுகளின் வழக்கம். கூழாக்கிச் சாப்பிடுவதும் உண்டு. பொதுவாக தென்னமேரிக்க நாடுகளிலேயே பழப்பொரியல் முக்கியமான தின்பண்டம்.


 


ஆக கேரளப்பண்பாடு என்பது இறக்குமதியே. சரியா?


 


ஸ்ரீதரன்


 


 


பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,


 


வணக்கம்.


 


நானும் உங்களைப்போல் பழம்பொரி பித்தன்தான் கேரளத்தில் இருந்தவரை. அந்தக் கட்டுரையில் வந்த புகைப்படமும்,உங்களின் கவிதை தோய்ந்த இந்த வரிகளும் கன்னிப்பெண் போல வெளியே பொன்னிறமும் உள்ளே கனிந்த இனிப்பும் கோபியர் கண்ணனை நோக்கி பாடுவது போல் பிருந்தா வனத்தில் கண்ணன் வளர்ந்த அந்தநாளும் இன்று வந்திடாதா என்று பழம்பொரியை நினைத்து   பாடத்தான் தோன்றுகிறது.


https://www.youtube.com/watch?v=YjJZFo1sm-w


 


அன்புடன்,


அ.சேஷகிரி.


 


பழத்தைப் பொரிப்பதே இரா.முருகனுக்கு அராஜகம் என்றால்,நேந்திரம் பழத்தை எங்கள் ஊரில் சாப்பிடும் பக்குவம் அறிந்தால் என் சொல்வாரோ?


 


பழத்தை வேக வைத்து,  தோலுரித்து, வெல்லப் பொடியும் நெய்யும் கலந்து பிசைந்து……….ஆஹாஹாஹா. என்ன ஒரு ருசி??


 


சிவா சக்திவேல்


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2017 10:31

ஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2

l


 


அன்புள்ள ஜெயமோகன்,


 


மிக நிறைவான, வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது. சந்திப்பை ஒருங்கிணைத்த கிருஷ்ணன், செந்தில் மற்றும் நண்பர்கள் அனைவரும் நன்றிக்குறியவர்கள். இது ஒரு நல்லூழ்.


 


உங்கள் தளத்திலுள்ள கட்டுரைகளை வாசித்திருக்கிறேன் என்பதால், சந்திப்பில் நீங்கள் சொன்ன சில கருத்துக்களை நான் முன்னமே அறிந்திருந்தேன். என்றாலும் நீங்கள் சொல்லக் கேட்டபோது, it felt personal. விஷால் ராஜாவின் கதையை ‘பஸ்ஸில் வரும்போது போனில் படித்தேன் சார்’ என்றபோது, ‘கவனமாக படிக்கிறது மட்டும்தான் இலக்கிய வாசிப்பு’ என்றது பின்மண்டையில் தட்டியது போலிருந்தது. இலக்கியப் படைப்பை வாசிப்பது மட்டுமே ஒரு இலக்கிய வாசகனை உருவாக்குவதில்லை என்றும், அதற்கான தீவிரம் வாசகனுக்கும் தேவை என்றும் புரிந்தது.


 


நண்பர்களின் கேள்விகளும், தொடர்ச்சியாக நடந்த உரையாடல்களும் மிக முக்கியமானவையாக இருந்தன. பல சிந்தனைத் திறப்புகளை அளித்திருக்கின்றன என்று இப்போது தெரிகிறது.


 


நான் கேட்க நினைத்திருந்த சில கேள்விகளை விவாதம் அத்திசை நோக்கிச் செல்லாததால் கேட்க முடியவில்லை. முக்கியமாக இந்திய/கீழை தத்துவம் குறித்து பல மேற்கத்திய அறிவியலாளர்கள் கொண்டிருந்த உயர்வான எண்ணம், இந்தியப் பின்புலத்தில் நின்று நவீன அறிவியலை நோக்கும்போது உருவாகும் சில இடைவெளிகள், மதச்சார்பற்ற இந்தியக் குடியரசு இந்தியப் பண்பாடு குறித்து எடுக்கும் சில எதிர்மறையான நிலைப்பாடுகள் (அப்போது என் போன்றவர்களுக்கு ஏற்படும் அடையாளக் குழப்பம்), காந்தியம் பற்றி எனக்கிருந்த சில ஐயங்கள் போன்றவை.


 


ஆனால் இவை பற்றி தொடர்ந்து வாசிப்பதற்கான உற்சாகத்தையும், சிந்திப்பதற்கான தெளிவையும் இந்த சந்திப்பு அளித்திருக்கிறது.


 


சந்தித்த கணம் முதல், தோளை அணைத்து நீங்கள் விடை கொடுத்த கணம் வரை நிறைவாக இருந்த இரண்டு நாட்கள். வாசிப்பையே தலைமறைவு செயல்பாடாக செய்து கொண்டிருப்பவர்களுக்கு, தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமை சாதாரணமாக அருகில் அமர வைத்து இலக்கியம், வரலாறு, பண்பாடு என்று இரண்டு நாட்கள் பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இரவில் பேய்க்கதை சொன்னால் எப்படி இருக்கும்? அழைத்துக் கொண்டு மாலைநடை சென்றால் எப்படி இருக்கும்? நன்றி என்ற சொல்லின் போதாமையை உணர்கிறேன் என்றாலும்..நன்றி சார்.


 


அன்புடன்,


சேது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23

23. இருள்மீட்சி


பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “மூச்சும் நெஞ்சும் சீரடைந்துள்ளது. உமிச்சாம்பலுக்குள் அனல் என உடலுக்குள் எங்கோ உயிர் தெரிகிறது” என்றனர். நெஞ்சுபற்றி ஏங்கிய மூதரசரிடம் “ஆயினும் நம்பிக்கை கொள்வதற்கு ஏதுமில்லை. இது இறுதி விழைவொன்று எஞ்சியிருப்பதனால் மண் மீண்டு வந்த உயிரின் சில நாட்களாகவும் இருக்கலாம்” என்றனர். அவர் “நற்செய்தி சொல்லுங்கள், மருத்துவர்களே!” என கைபற்றி ஏங்கினார். “அவன் மீண்டு வருவான் என அவர்கள் சொல்லவில்லை. இதையும் அவர்களால் சொல்ல இயலாது” என்றாள் அன்னை.


சிதை சென்றவன் மீண்டு வருதல் நாட்டுக்கு நலம் பயக்குமா என்று நகர்மக்கள் ஐயுற்றனர். சென்றவன் மீள்வது நற்குறியல்ல. வாய்க்கரிசி இடப்பட்டவனுக்கு அருகே இருளுலகத்தின் பன்னிரு தெய்வங்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன. அழுகைகளையும் அமங்கலப் பொருட்களையும் கண்டு அவை உளமகிழ்கின்றன. காண்பவர் உள்ளங்களுக்குள்  துயரின் அறவுணர்வின் இங்கிதத்தின் சுவர்களை மீறிச்சென்று அமர்ந்து மெல்லிய உவகை ஒன்றை அவை ஊதி எழுப்புகின்றன. பாடையில் படுத்திருப்பவனைச் சூழ்ந்திருக்கும் துயரையே அணுகிநின்றோர் காண்பர். அகன்று நிற்பவர்கள் அங்கே நின்றிருப்பவர்களின் உடலசைவுகளில் வெளிப்படும் நிறைவையும் நிம்மதியையும் காணமுடியும். அவர்களின் நிழல்களை மட்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் அங்கே எழுந்துள்ள இருட்தெய்வங்களின் அசைவை கண்கள் அறியும் என்றனர் குலப்பாடகர்.


இடுகாட்டுக்கு பாடை கொண்டுசெல்கையில் நிழலுருக்களென தொடர்கின்றன அத்தெய்வங்கள். சிதையில் எரி எழுந்து தழலாடுகையில் சூழ்ந்து களியாட்டு கொள்கின்றன. அவ்வுடல் உருகி கருகி நெய்யென்றாகி எரியுண்டு விண்ணில் மறைகையில் உதறி எழும் உயிரை சரடெறிந்து பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் உலகுக்கு செல்கின்றன. இறக்கும் எவ்வுயிரும் சென்றடைவது மண்ணுக்கு அடியில் வாழும் இருளுலகையே. ஒவ்வொரு கல்தரிப்புக்கும் நடுவே சிறுதுளி இருளென நிறைந்திருப்பது அவ்வுலகே. அங்கே அவை பதினாறு நாட்கள் வாழ்கின்றன. அங்குள்ள துலாமேடை ஒன்றில் அவ்வுயிர்கள் நிறுத்தப்படுகின்றன.  யமன் தலைமையில் நூற்றெட்டு இருளுலகதேவர்கள்  அவற்றை பிழையும் பழியும் உசாவி அவை மிகுந்திருப்பின் மேலும் அடியில் வாழும் இருளுலகுகளுக்கு தள்ளுகின்றனர். பதினாறாம்நாள் ஊண்கொடை அதன்பொருட்டே.


பழிகடக்கும் நிறைகளால் விடுவிக்கப்படும் நல்லுயிர்கள் எழுந்து விண்ணுக்கு அடியில் மண்ணுக்குமேல் கொதிக்கும் அடுமனைக்கலத்திற்குமேல் நீராவி என அருவுருவாகி நின்றிருக்கும் மூச்சுலகிற்கு செல்கின்றன. அங்கே நாற்பத்தொரு நாட்கள் அவ்வுயிர்கள் வாழ்கின்றன. அவற்றை அங்கே விண்கனிந்து வந்தமையும் மூதாதையர் கூடியமர்ந்து உசாவுவார்கள். நன்றும் அன்றும் முறையும் வழுவும் சொல்லி கணக்கு தீர்க்கப்படும். நன்று மிகையே எனில் மூதாதையர் அவ்வுயிரை அள்ளி தங்கள் நெஞ்சோடணைத்து கொண்டுசெல்வார்கள். ஏழு விண்ணுலகங்களையும் கடந்து நலம் நிறைந்தோர் சென்றடையும் ஃபுவர் லோகத்தை அவ்வுயிர் அடையும். அங்கு தவம் முழுத்ததென்றால் தேவருலகடையும். நாற்பத்தோராம் நாள் நீர்க்கொடை அதனால்தான்.


இங்கு விட்டுச்சென்ற விழைவுகள் அவற்றை இழுக்குமென்றால் விண்சென்ற நீராவி குளிர்ந்து சொட்டுவதுபோல் மூச்சுலகிலிருந்தே மண்ணுதிர்ந்து மீண்டும் கருபுகுந்து உருவெடுத்து மண் திகழும் அவ்வுயிர்கள். “விழைவுகளின் சரடறுத்து வினைகளின் வலையறுத்து விண்புகுதல் எளிதன்று” என்றனர் குலமூத்தார். “சிதைசென்ற அரசன் மீண்டு வருகையில் ஆழுலகத்து தெய்வங்கள் அவனுடனே நகர் புகுந்துவிட்டிருக்கின்றன போலும்” என்றனர் மூதன்னையர். “இன்று அவை அவர் அரண்மனைச் சேக்கையைச் சூழ்ந்து நின்றிருக்கும். சினந்தும் சீறியும் சுழன்றாடும். பின் இருட்துளிகளென்றாகி அவர் நிழலில் குடியேறும். இவ்வாழ்வை உதறி மீண்டும் அவர் சிதை செல்லும்வரை அவை அவருடன் இருக்கும்” என்றார் பூசகர்.


ஒவ்வொரு நாளுமென புரூரவஸ் தன் உடலிலிருந்து முளைத்து மீண்டு வந்தான். கருவறை விட்டு இறங்கிய கைமகவு என அவன் விழிகளில் நோக்கின்மை பாலாடையென படிந்திருந்தது. கைகளும் கால்களும் ஒத்திசைவிழந்திருந்தன. மெல்ல அவன் தசைகளில் துடிப்பு எழுந்தது. மட்கிய மரப்பட்டைபோலிருந்த தோல் உரிந்து உயிர்த்தோல் எழுந்து வந்தது. உதிர்ந்த மயிர்கள் ஆலமரக்கிளையில் புதுத்தளிர் பொடித்தெழுவதுபோல முளைத்தன.  கண்கள் ஆடைவிலகி முகம் நோக்கத் தொடங்கின. நாவு துழாவி எழுந்த ஒலி சொல்லென திருத்தம் கொண்டது. நீர்சொட்டி அசையும் இலையென திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்தமைந்த நெஞ்சக்கூடு உலைதுருத்தி என சீராக மூச்சு இழுத்து உமிழத் தொடங்கியது.


புரூரவஸ் ஓநாய்க்குட்டியின் பெரும்பசி கொண்டவனானான். நாழிகைக்கொருமுறை படுக்கையை கையால் தட்டி “உணவு! உணவு!” என்று அவன் கூவினான். பாலில் கரைத்த தேனை முதலில் அவனுக்கு ஊட்டினர். பின்னர் உப்பிட்ட அன்னச்சாறு. நெய்சேர்த்த இளங்கஞ்சி சில நாட்களிலேயே. ஒவ்வொருநாளும் நெல்லிக்காய்ச்சாறு கலந்த பழக்கூழ் அளிக்கப்பட்டது. பின்னர் நெல்லிக்காய், தானிக்காய், கடுக்காய் கலந்த முக்காய்வடித்த மூலிகைமது மூன்றுவேளை கொடுக்கப்பட்டது. வேம்பெண்ணை பூசி உலரச்செய்த உடல்மேல் கல்மஞ்சளும் சந்தனமும் பயறுப்பொடியும் உழப்பிய கலவை பூசப்பட்டு வெந்நீரில் முக்கிய மென்பஞ்சால் வேது செய்யப்பட்டு ஒற்றி எடுக்கப்பட்டது.


உடல் பெருக்கி நாற்பத்தொன்றாம்நாள் படுக்கையில் எழுந்தமர்ந்தான். கூட்டுப்புழுவின் உடலென அவன்மேல் உலர்ந்த தோல்சுருள்கள் இருந்தன. விரிந்த தசைகளின் வெண்வரிகள் தோளிலும் புயங்களிலும் மழைநீர்வடிந்த மென்மணற்தடமென படிந்திருந்தன. அவன் எழுந்தமர்ந்து உணவுண்டுகொண்டிருந்தபோது கைகூப்பியபடி உள்ளே வந்த அமைச்சர் உவகையுடன் “இக்காட்சியைக் காண்பதற்கென்றே என் விழிகள் நோக்குகொண்டன போலும். இந்நாள் இனியென்றும் குருநகரியின் விழவுநாள்” என்றார். வாயில் வடிந்த கஞ்சியைத் துடைத்த சேடியின் கையை விலக்கி அவரை அயலவர் என நோக்கும் கூர்மையுடன் விழிநாட்டி “என் மணிமுடியை இப்போது சூடுவது யார்?” என்று கேட்டான் புரூரவஸ்.


குழப்பத்துடன் “தங்கள் முதல் மைந்தர் ஆயுஸ், அரசே” என்றார் அமைச்சர். “நான் இறக்கவில்லை என்று அவன் வருந்துகிறானோ?” என்றான் அரசன். புரூரவஸின் விழி அல்ல அது என்று அமைச்சர் உள்ளே திடுக்கிட்டார். “என்னை சிதைக்கு கொண்டுசெல்ல காத்திருந்தான்போலும்” என்றான் புரூரவஸ். அமைச்சர்  “அரசே, இளவரசர் மணிமுடி சூடுவதில்லை. கோலேந்தி கொலுவீற்றிருப்பதுமில்லை.  நெறி வழங்குகையில் மட்டுமே அரியணை அமர்கிறார். குல அவைகளில் மட்டுமே கோல் கைக்கொள்கிறார்.  அரசுமுறை செய்திகளில் மட்டுமே கணையாழியில் முத்திரை இடுகிறார்” என்றார். “ஆம். தன் எல்லைகளை அவன் உணர்ந்திருப்பது நன்று” என்றான் புரூரவஸ்.


மறுவாரமே எழுந்து நடக்கலானான். “என் அணியாடைகள் வரட்டும்!” என்று ஆணையிட்டான். ஆடையும் அணியும் அவனுக்கு உடல் கொள்ளாதபடி சிறிதாகிவிட்டிருந்தன. அனைத்தையும் புதிதாக சமைக்கும்பொருட்டு அணிக்கலைஞர்களுக்கும் பொற்கொல்லர்களுக்கும் ஆணையிட்டான். புதிய தோற்றத்தில் முடிசூடி கோலேந்தி வெண்குடை எழ அவன் அவை மீண்ட அன்று குடிகளும் குலமூத்தாரும் பெருவணிகரும் படைவீரர்களும் ஒருங்கே பேருவகை கொண்டனர். எழுந்து நின்று கைகளை உயர்த்தி “சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க! பேரறத்தான் வாழ்க! பெருங்கருணையோன்  வாழ்க! இறந்து மீண்ட இறையருளோன் வாழ்க!” என்று அவர்கள் குரலெழுப்பியபோது அது அவர்களின் உயிர்விசை கொண்டிருந்தது.


அவைக்குள் நுழைந்து அவ்வாழ்த்துக்களை தலைவணங்கி ஏற்று அரியணையில் அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டதும் இயல்பாகவே அவன் நோக்கு திரும்பி அருகிலிருந்த ஆயுஸைப் பார்த்தது. இரு புருவங்களும் சுருங்கி ஒன்றையொன்று தொட்டன. சற்று தலைசரித்து அருகே நின்றிருந்த அமைச்சரிடம் “அவன் ஏன் இங்கிருக்கிறான்?” என்றான். “அதுதான் முறைமை, அரசே” என்றார் அவர். “அவன் அவை வீற்றிருக்க வேண்டியதில்லை” என்றான் புரூரவஸ். “அரசே, அது குடிவழக்கு” என்றார் அமைச்சர். “அதை நான் மாற்றுகிறேன். அரியணைச் சுவை அறிந்த ஒருவன் இவ்வவையில் இருக்கலாகாது. இக்கணமே அவனை நம் எல்லைக்கனுப்புக! அங்குள்ள தொல்குடிகளை ஒருங்கு திரட்டி அங்கே காவலரண் ஒன்றை அவன் அமைக்கட்டும்” என்றான்.


அமைச்சரின் முகம் மாறியது. ஆனால் விழிகள் எதையும் காட்டாது நிலைத்திருந்தன. “அவ்வாறே” என்று தலைவணங்கி திரும்பிச்சென்றார். முதல் அரசாணையாக தன் கணையாழியை அந்த ஓலையிலேயே அவன் பதித்தான். அவ்வோலையை அவையில் அமைச்சர் படித்தபோது முற்றிலும் அறியாத இருட்பேருருவம் ஒன்று முன்னெழுந்ததுபோல் அவையினர் திகைத்து ஒருவரையொருவர் நோக்கி விழிசலிக்க அமர்ந்திருந்தனர். அவை முழுக்க எழுந்த கலைவோசையைக் கேட்டு புரூரவஸ் கைதூக்கினான். “நன்று! நாம் அடுத்த அவைச் செயல்களுக்கு செல்வோம்” என்று ஆணையிட்டான். ஆயுஸ் எழுந்து தந்தையை வணங்கி வெளியேறினான்.


அன்று உச்சிப்பொழுதுவரை அரசன் தன் அவையில் அமர்ந்திருந்தான்.  முன்னாட்களில் ஆயுஸ் இட்ட அனைத்து ஆணைகளையும் அவன் நிறுத்திவைத்தான். அனைத்து முடிவுகளையும் மாற்றி அமைத்தான். எழுந்து செல்கையில் அமைச்சரிடம் “அமைச்சரே, இனி நான் அறியாது ஏதும் இங்கு நிகழக்கூடாது. இதுவரை நிகழ்ந்த பிழைகளேதும் இனி எழலாகாது. சிறு பிழைக்கும் என் தண்டம் வலிதென இவர்களுக்கு உரையுங்கள்” என்றபின் நடந்து அவைவிலகிச் சென்றான். அமைச்சர் “ஆணை!” என உரைத்து தலைவணங்கி நின்றார். குழப்பச்சொற்களுடன் அவை கலைந்து சென்றது. ஆயுஸ் அருகே வந்து “நான் இன்றே கிளம்புகிறேன், அமைச்சரே” என்றான். “தந்தைசொல் மீறாதிருங்கள் இளவரசே, நலம் சூழும்” என்றார் அமைச்சர். “ஆம், அவரிடமிருந்து நான் கற்றதும் அதுவே” என்றான் ஆயுஸ்.



imagesஎப்போதும் உச்சிப்பொழுதின் உணவிற்கு ஊன் மிக வேண்டுமென்று புரூரவஸ் ஆணையிட்டிருந்தான். உடல் புடைக்க உண்டபின் மதுவும் அருந்தி மஞ்சத்தில் படுப்பது அவன் வழக்கம். நோய்மீண்டபின் தன் துணைவியரை பார்க்க மறுத்து ஒவ்வொரு நாளும் இளம்அழகியொருத்தி தன் மஞ்சத்திற்கு வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தான். அவன் துணைவியர் நாளும் அவன் அறைவாயில்வரை வந்து அவன் முகம் காணவேண்டுமென கோரி நுழைவு மறுக்கப்பட்டு விழிநீருடன் மீண்டுசென்றனர். அவன் மைந்தருக்கும் நோக்கு விலக்கப்பட்டது.


ஆனால் மூதரசர் மட்டும் அவனுடனேயே இருந்தார். உடல்தேறி அவன் எழுந்த நாட்களில் மூதரசர் ஒவ்வொரு நாளும் புலரிவிழிப்புகொண்ட உடனேயே ஒரு காவலன் தோள் பற்றி வந்து துயின்றுகொண்டிருக்கும் அவன் காலடியில் அமரும் வழக்கம் கொண்டிருந்தார். அவனுக்கு சேடியர் உணவூட்டுகையில் நோக்கியிருப்பார். அவன் சிறுமைந்தனைப்போல உதடு குவித்து உறிஞ்சி உண்ணும்போது மகிழ்வில் மலர்ந்து சுருக்கங்கள் இழுபட்டு விரிந்த முகத்துடன் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடி “நல்லுணவு! நல்லுணவு! பிரம்மம் அதுவே. உயிர் அதுவே. எண்ணம் அதுவே. மூதாதையரின் வாழ்த்து என வருவதும் அதுவே” என்பார்.


ஒவ்வொருநாளும் மருத்துவர்களைச் சென்று கண்டு “எத்தனை விரைவில் அவன் நலம்பெறுவான், மருத்துவர்களே?” என்று கேட்பார். “மூதரசே, அவர் நலம்பெறுவதே ஒரு மருத்துவ விந்தை. நுரையெழுவதுபோல அவர் உடல் எழுகிறது. இதற்குமேல் ஒன்றை மானுட உடலில் எதிர்பார்ப்பதே அரிது” என்றனர் அவர்கள். ஆயினும் நட்ட விதையை ஒவ்வொரு நாளும் தோண்டிப்பார்க்கும் இளம்குழந்தை போலிருந்தார்.


அவர் துணைவியே அவரை நகையாடினாள். “நேற்று உண்ட உணவிற்கு இருமடங்கு இன்று உண்கிறான். நீங்களோ கலத்தில் எஞ்சிய உணவைப் பார்த்து சினம் கொள்கிறீர்கள். சேடியர்கள் பின்னறைகளில் உங்களை எண்ணி நகைகூட்டுகிறார்கள்” என்றாள்.  “அவர்களுக்குத் தெரியாது தந்தையின் அனல்…” அவர் சினந்து சொன்னார். பின்னர் மனைவியின் மெல்லிய கரங்களை விரல்களுக்குள் எடுத்துக்கொண்டு “அவன் உணவுண்ணும்போது இளங்குழவியாக நம் மடியிலமர்ந்து இட்டும் தொட்டும் கவ்வியும் துழன்றும் அமுதுகொண்ட காட்சி என் நினைவிலெழுகிறது.  நீ நினைவு கூர்கிறாயா?” என்றார்.


“இல்லை” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். “உன் நெஞ்சில் கனிவு வற்றிவிட்டது. முதுமகளாகிவிட்டாய்” என்றார். முதுமகளுக்குரிய மிகைநாணத்துடன் “உங்களுக்கு மட்டும் இளமை திரும்புகிறதோ?” என்றாள் அவள். “ஆம், எனக்கு இப்போதுதான் ஒரு மைந்தன் பிறந்திருக்கிறான். இளந்தந்தை என்றே உணர்கிறேன். முந்நாளில் இவன் என் மடிதவழ்ந்தபோது அத்தனை எண்ணங்களுக்கு அடியிலும் இவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். எது ஓயும்போதும் ஒளிர்விழிகளும் நகைமுகமும் பட்டுக்கைகளும் எழுந்து வரும். இப்போதும் அவ்வாறே உணர்கிறேன். எண்ணித் துயில்கிறேன். எண்ணியபடி விழிக்கிறேன்” என்றார்.


நிலைகொள்ளாது தன் அறைக்குள் சுற்றியபடி “என்னால் இங்கிருக்க முடியவில்லை. நான் மீண்டும் என் மைந்தனின் அறைக்கே செல்கிறேன்” என்றார். “உங்களுக்கு பித்தென்று சொல்கிறார்கள். அதை மீள மீள நிறுவவேண்டாம்” என்றாள் அன்னை. “ஆம், பித்துதான். அதை நான் இல்லையென்றே சொல்லவில்லை. ஏழூர் மன்றில் நின்று கூவுவேன், நான் பித்தன் என்று. பிள்ளைப்பித்துபோல் பெரும்பித்து பிறிதில்லை” என்றார் அவர். “பிள்ளை முதியவனாகிவிட்டான், விழி பார்க்கிறதா?” என்றாள். அவர் “பார்த்தேன். அவன் முதுமை குறைந்து வருகிறது. நீ அதைப் பார்த்தாயா?” என்றார்.  “நோயுறும்போது அவன் தாடியிலும் குழலிலும் ஓரிரு நரைகள் இருந்தன. இன்றுள்ளதா அது?”


திகைத்து “ஆம், இல்லை!” என்றாள் அவள். “முளைத்து வரும் முடி அனைத்தும் கரிய பட்டுபோல் உள்ளன. நேற்று அவன் துயிலும்போது அவன் குழலை மெல்ல தடவிப்பார்த்தேன். கரடிக்குட்டியின் தோல்போல் தோன்றியது. அடி, அவன் இளமை மீள்கிறான். மேலும் குருதியூறி அவன் உடலின்  சுருக்கங்கள் அனைத்தும் விலகும்போது இளமைந்தனாக இருப்பான்” என்றார். அவள் முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். அவர் கண்களில் குறும்புடன் “படை பயில்வான். நூல் தேர்வான். பின் பிறிதொரு பேரழகியை மணம் கொள்வான்” என்றார்.


அவள் நோக்கில் எழுந்த கூர்முள்ளுடன் “ஆம், காட்டுக்குச் சென்று எவளென்றறியாத இருள்தெய்வம் ஒன்றை அழைத்து வருவான்” என்றாள். வலிக்கும் நரம்பு முடிச்சொன்றில் தொட்டதுபோல் அவர் முகம் மாறியது. “நன்றுசூழவே உனக்குத் தெரியவில்லை, மூடம்!” என்றார். “தீது நிகழ்ந்தவளின் அச்சம் இது” என்றாள். “தீதென்ன நிகழ்ந்தது? சொல், இறுதியில் எஞ்சிய தீதுதான் என்ன? பொன்னுடல் கொண்ட ஏழு மைந்தர்களை பெற்றிருக்கிறான். ஆல் என அருகு என இக்குடி பெருகுவதற்கு அவர்களே உகந்தவர்கள். பிறிதேது?” என்றார்.


அவள் “ஆம், ஆனால்…” என்றபின் “நன்று, நானொன்றும் அறியேன்” என்று சொல்லி மூச்செறிந்தாள். “ஐயுறாதே, அழகி. நன்றே நிகழ்கிறது. ஆம், ஒரு பெருந்துயர் வந்தது. கடலிலெழுந்த பேரலை அறைந்து நகர்கோட்டையை உடைத்துச் சென்றதும் முத்துக்கள் எஞ்சியிருப்பதைப்போல இதோ இளமைந்தர்கள் இருக்கிறார்கள்” என்றபின் “இங்கிருக்க முடியவில்லை. இங்கிருக்கையில் என் மைந்தன் எங்கோ நெடுந்தொலைவில் இருக்கிறான் என்றுணர்கிறேன். அங்கு சென்று அவனுடன் இருக்கிறேன்” என்றார்.


“அங்கு அவனை அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்.  அவன் சற்று துயிலவேண்டும். ஆகவேதான் பேசி மன்றாடி உங்களை இங்கு அனுப்புகிறார்கள்” என்றாள் மூதன்னை. “நான் ஓசையின்றி அவ்வறையிலேயே இருக்கிறேன். ஓவியம்போல் இருப்பேன்” என்றார். “நீங்கள் அங்கிருந்தால் சேடியர் இயல்பாக இருக்க முடியாது. சற்று இங்கிருங்கள்” என்று அவள் சொல்ல அவர் சோர்ந்து பீடத்தில் அமர்ந்தபின் “ஏதேனும் ஒரு மாயம் வழியாக என் விழிகளை மட்டும் அவன் அறையில் ஒரு பீடத்தில் எடுத்துவைத்துவிட்டு வரமுடியுமென்றால் அதன்பொருட்டு எதையும் கொடுப்பேன்” என்றார்.


புரூரவஸ் உடல் மீண்டு வந்தபோது ஒவ்வொரு நாளும் அவரும் உடல் வளர்ந்தார். கேட்டு வாங்கி உண்ணலானார். படுத்தால் எழாது துயிலலானார். ஒவ்வொரு நாளும் முகம் தெளிந்து வந்தது. விழி ஒளி கொண்டார். குரல் நடுக்கம்கூட இல்லாமல் ஆயிற்று. “எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டாள் அவர் துணைவி.  மைந்தனின் அணிகள் அனைத்தையும் கொண்டு வரச்சொல்லி அவற்றில் நல்லனவற்றை தேர்ந்து கொண்டிருந்தார் அவர். திரும்பி “எப்படி?” என்றார். “ஓவியம் வரையும்பொருட்டு துணியை சட்டத்தில் இழுத்துக்கட்டியதுபோல”  என்றாள் அவள்.  அவர் நகைத்து “ஆம், இன்னும் சில நாட்களில் ஒரு இளமங்கையை நானும் மணந்துகொள்ள முடியும்” என்றார். பொய்ச்சினத்துடன் “நன்று! தந்தையும் மைந்தனும் சேர்ந்து தேடுங்கள்” என்றாள் முதியவள்.



images புரூரவஸ் மீண்டு வரும் செய்தியை நகரில் உள்ளோர் முதலில் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் அச்செய்தி வந்தபோது அது அவர்களை அச்சுறுத்தியது.  சூதர் சொன்னபடி அரசன் உடலில் அறியாத் தெய்வமொன்று குடியிருக்கக்கூடுமோ? இடுகாட்டில் அலைந்த இயக்கர்களோ கந்தர்வர்களோ உள்நுழைந்து எழுந்திருக்கக்கூடுமோ? “ஆமாம், அதை முன்னரே சொன்னார்கள். பின் எவ்வாறு இவ்வண்ணம் எழுதல் இயலும்?” என்று முதிய பெண்கள் ஐயுற்றனர். “அவர் விழிகள் மாறியிருக்கின்றன என்கிறார்கள். ஓநாயின் இரு கண்கள் அமைந்திருக்கின்றன என்று அரண்மனையில் பணிசெய்யும் அணுக்கன் ஒருவன் சொன்னான்” என்று அங்காடியில் ஒருவன் பேசினான்.


சற்று நேரத்திற்குள்ளேயே நகரெங்கும் அக்கூற்று ஆயிரம் வடிவம் கொண்டது. “ஓநாயென அவர் உண்கிறார்” என்றான் ஒருவன். “ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் பசுங்குருதியருந்துகிறார்” என்றான் பிறிதொருவன். “நாளுக்கு ஒரு வெள்ளாட்டை கொண்டுவந்து அவர் முன் நிறுத்துகிறார்கள். உறுமியபடி பாய்ந்து வந்து வெறும்வாயால் அதன் கழுத்தைக் கவ்வி குருதியுறிஞ்சி வெறும்தோலென அதை எடுத்து வீசுகிறார்” என்றான் இன்னொருவன். இரவில் அங்கு அரசனென வந்துள கொடுந்தெய்வத்திற்கு களம் வரைந்து மந்தணப் பூசனைகள் நிகழ்கின்றன என்றும் குருதிபலி கொடுத்து நிறைவுசெய்யப்படுகின்றது என்றும் பேசினர்.


நாள்தோறும் பெருகின கதைகள். அரண்மனையிலும் அவையிலும் அவன் ஆற்றிய அறமிலாச் செய்கைகள் ஒவ்வொன்றும் பெருகிப்பெருகி அவர்களை வந்தடைந்தன. அவன் மேன்மேலும் கொடுமைகொண்டவனாக ஆகுந்தோறும் அவர்களுக்குள் கதைதேடும் குழவிகள் அதை விரும்பி அள்ளி எடுத்துக்கொண்டன.  அவன் நடந்து செல்கையில் கால் பட்ட கல் குழிகிறது. கதவுகளை வெறும் கையால் உடைத்து மறுபக்கம் செல்கிறான். நீராட இறங்குகையில் சுனைநீர் பொங்கி வழிந்து வெளியே ஓடிவிடுகிறது. அவனைக் கண்ட புரவிகள் அஞ்சி குரலெழுப்புகின்றன. அவன் மணம் அறிந்ததும் யானைகள் கட்டுக் கந்தில் சுற்றி வருகின்றன. இந்நகர் பேரழிவை நோக்கி செல்கின்றது, பிறிதொன்றுமில்லை என்றனர் நிமித்திகர்.


தங்கள் அச்சத்தை அவர்களே உள்ளமைந்த இருள்நாக்கு ஒன்றால் நக்கிச் சுவைத்து மகிழ்ந்தனர். ஆகவே சொல்லிச் சொல்லி அதை பெருக்கிக்கொண்டனர். அச்சுறுத்தும் கதைகளை சொல்லும் சூதர்களுக்கு வெள்ளி நாணயங்கள் விரிப்பில் விழுந்தன. எனவே அவர்கள் மேலும் மேலும் கற்பனை நுரையை எழுப்பினர். ஆறு மைந்தர்களை அரசனிடமிருந்து முற்றிலும் விலக்கி வைத்திருக்கிறார்கள். அருகணைந்த எவரையும் பற்றி குருதிஉண்ண அவர் துடிக்கிறார். முதற்பகையென அரசமைந்தனே இருக்கிறார்.


“நோக்கியிருங்கள், ஒருநாள் அவரை முதல்மைந்தனே வாள்கொண்டு தலைகொய்து கதைமுடிப்பார்” என்றான் ஒரு சூதன். கேட்டுநின்றவர்கள் விழி ஒளிர மூச்செறிந்தனர். எவரேனும் கேட்கிறார்களா என்ற ஐயத்தை அடைந்து ஒருவரை ஒருவர் ஒளிர்கண்ணால் நோக்கிக்கொண்டனர். ஒன்றும்நிகழா அந்நகரில் கதைகளில் மட்டுமே கொந்தளித்தன அனைத்தும். நகரம் நழுவிச்சென்று கதைப்பரப்புக்குள் விழுந்துவிட்டது போலிருந்தது. கதைகளில் வாழும் நகர் ஒன்றுக்குள் நடப்பதாக உணர்ந்தபோது அவர்களின் கால்கள் விதிர்த்தன. உள்ளம் பொங்கி விழிகள் மங்கலாயின. மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தபடி அங்கிலாதவர் போல் நடந்தனர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2017 10:30

February 21, 2017

Venmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்

ஜெயமோகன் 2014 ஜனவரி 1 ல் துவங்கி எழுதிவரும் மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு தனி இணையதளத்தில் வெளிவருகிறது. அத்தளத்தை www.venmurasu.in என்ற முகவரியில் அணுகலாம்.


வெண்முரசு தளத்தில் நாவல் மட்டுமே உள்ளது ,பிற பதிவுகள் எதுவும் இருக்காது .நாவலை தொடக்கத்தில் இருந்து படிக்க ஏற்ற தளம் அது. (தளம் சில நாட்கள் இயங்காமல் இருந்தது).


நிர்வாகி


Jeyamohan’s Mahabharatam full Tamil novel venmurasu available online www.venmurasu.in


 

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு-மகாபாரதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:42

குருகுலமும் கல்வியும்

1



ஒன்று


உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். நாமறிந்த பெரும்பாலான ஜென் கதைகள் குருசீட உறவு குறித்தவை.


இன்றைய பள்ளி என்ற அமைப்பின் ஆரம்பநிலைகளை புராதன வேதபாடசாலைகளில் காண்பது பொது வழக்கம். ஆனால் தொல்தமிழ் நாகரீகத்தின் முதல் தெய்வமே குருதான் — தட்சிணாமூர்த்தி என்னும் தென்றிசைமுதல்வன். மரத்தடியில் அமர்ந்து கல்வியளிக்கும் ஆசிரியனே ஆலமர்ச்செல்வனாக இறைவனானான்.


குருகுலம், பாடசாலை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. அப்பெயர்களே குறிப்பதுபோல ஒன்று குலம், அதாவது வீடு. இன்னொன்று சாலை அல்லது பொதுஇடம். ஒரு குருவுடன் சேர்ந்து வாழ்ந்து மெல்லமெல்ல அவர் அடைந்த மெய்ஞானத்தை அவரது ஆளுமையுடன் சேர்த்து பெற்றுகொள்வதே குருகுலக்கல்வி.


பாடசாலையில் கூட்டமாக சேர்ந்து ஏதேனும் ஒருவிஷயத்தை ஒரேதரமான முறையில் பாடம் செய்கிறோம். கல்வி, பாடம் செய்தல் இரண்டும் வேறுவேறு. வேதபாடசாலைகளில் சிந்திப்பதற்கோ ஆராய்வதற்கோ இடமில்லை.வேதங்களை கற்பதில் தனிமனித சிந்தனைக்கோ தனிமனித கற்பனைக்கோ இடமில்லை. வேதங்களின் உச்சரிப்பு சைகைகள் அமர்தல் சேர்த்துச் செய்யும் சடங்குகள் எல்லாமே முற்றாக வகுக்கப்பட்டவை. மாற்றமுடியாதவை. அனைவருக்கும் அவை ஒன்றுதான். பிற்காலத்தில் பௌத்த விகாரங்களில் மூலநூல்கள் சார்ந்து இப்படிப்பட்ட அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வியை மக்களிடம் பரவலாக்கிய சமணமுனிவர்கள் இன்றைய பள்ளிகூடங்கள் போன்ற அமைப்பை உருவாக்கினர். சமணப்பள்ளி என்ற சொல்லில் இருந்தே நமது பள்ளிகூடம் என்ற சொல் வந்திருக்கிறது.


இன்றைய பள்ளியின் சிறப்பம்சம் அது தரப்படுத்தப்பட்ட சீரான கல்வியை அனைவருக்கும் அளிக்கிறது என்பதே. ஒரு சமூகத்தை முழுக்க ஒரேவிதமான கல்வியை அளித்து தரப்படுத்துவதற்கு இதுவே சிறந்தவழி என்பதை மறுக்க முடியாது. இன்றைய கல்வியின் முதல்நோக்கம் சமூக உருவாக்கமே. சீரான மதிப்பிடுகளும் சமூகப் பழக்கவழக்கங்களும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்ட சமூகமொன்றை பயிற்றுவித்து எடுப்பதே இன்று கல்வி மூலம் இலக்காக்கப் படுகிறது. கல்வி என்பது ஒரு சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும் பயிற்சி என்று பொருள்கொள்ளப்பட்டால் இன்றைய கல்விமுறையே அதற்கு பெரிதும் உகந்தது என்பதில் ஐயமில்லை.


இன்றைய கல்விமுறை ஜனநாயகத்தன்மை கொண்டது, ஆகவே தரப்படுத்தப்பட்ட கல்வியையும் ஜனநாயகத்தையும் பிரிக்க முடியாது. நாம் நன்றாக அறியும் ஒரு விஷயம் உண்டு, இந்திய சமூகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையை நாம் முதலில் உணர்வது பள்ளியில்தான். ஒரு இந்திய கிராமத்தில் சமத்துவம் இருக்கும் ஒரே இடம் வகுப்பறையே. வகுப்பறைதான் தீண்டாமை சாதிப்பாகுபாடு பொருளியல் ஏற்றதாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான முதல் அமைப்பாக நம்மிடம் இன்று உள்ளது. சமத்துவத்துக்கான முதல்குரல் எழுவதும் முதல்போராட்டம் எழுவதும் அங்கிருந்துதான். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் அடிப்படைக்கல்வி பரவலாக்கப்பட்டதோ அங்கேதான் மானுட உரிமைக்கான குரல்கள் முதலில் எழுந்தன. அங்கேதான் சமமான சமூக வளர்ச்சியும் அனுபவப்பட்டது.


ஆயினும் இந்த கல்விமுறையில் சில அடிப்படைப்பிரச்சினைகளும் உள்ளன. இது பொதுத்திறனை குறிவைத்து இயங்குவதனால் தனித்திறனை பொருட்படுத்துவதில்லை. சராசரிகளையே இது கணக்கில் கொள்கிறது தனித்துவங்களை அந்த சராசரி மூலம் நசுக்குகிறது. அனைவருக்குமாக வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தனித்த தேடலும் ஐயங்களும் கொண்ட மாணவனின் ஆத்மா அவநம்பிக்கை கொள்கிறது. கல்வியை தனிமனிதனுக்கான அறிவுத்தேடலை நிறைவுசெய்யும் வழிமுறை என எடுத்துக் கொண்டால் இன்றைய கல்விமுறை அவனுக்கு பெரிதாக எதையும் அளிப்பதில்லை.


இதை நான் என் அனுபவம் மூலமே சொல்கிறேன். என் வாழ்வில் ஏறத்தாழ பதினாறு வருடங்களை முறைப்படுத்தப்பட்ட கல்வியில் வீணடித்தேன் என்றே எனக்குப்படுகிறது. பள்ளியில் கற்ற எதுவுமே என்னிடமில்லை இன்று. நான் கற்றுக்கொண்டவை எல்லாமே என் சொந்த தேடல் மூலம் கல்விக்கூடத்துக்கு வெளியே கற்றுக்கொண்டவையே. மிகுந்த தாராள நோக்குடன் பார்த்தால்கூட பள்ளி எனக்களித்தவை என்று ஒரு சில விஷயங்களையே சொல்ல முடியும். ஆரம்ப மொழிப்பயிற்சி, பலவகை மனிதர்களிடையே பழகுவதற்கான பயிற்சி , இவ்வளவுதான். அதாவது என்னை பள்ளி சமூகப்படுத்தியிருக்கிறது. அதற்குத்தேவையான குறைந்தபட்ச பயிற்சியை எனக்களித்திருக்கிறது. எனது தனித்தன்மை நானே பள்ளிக்கு வெளியே உருவாக்கிக் கொண்டது.


சிறுவயதில் நான் பள்ளியை வெறுத்தேன். சமூகப்படுத்துதல் என்பதை என் ஆளுமை உருவாக்கத்துக்கு நேர் எதிரான ஒன்றாகவே கண்டேன். அதற்கு முடிந்தவரை எதிர்ப்பை அளித்தேன். அப்போது பள்ளி என்ற அமைப்பு என்னை திருப்பித்தாக்கியது. அதனால் நான் வதைக்கப்பட்டேன்.என்னை வெறுக்காத ஆசிரியர்கள் குறைவு. நான் அடிவாங்காத வகுப்புகள் மிகமிகக் குறைவு. என் நூலகப்புத்தகங்களை பிடுங்கி கிழித்து வீசிய ஆசிரியர்கள் உண்டு. என் அப்பா என்னை நூலகம் முதல் வீடுவரை துரத்தித் துரத்தி அடித்திருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கையில் ‘ரத்னபாலா’ இதழில் என் முதல் கதை வெளிவந்தபோது என் ஆசிரியர் ஒருவர் என்னை அடித்து சட்டையைக் கழற்றி பெஞ்சுமீது நிற்கவைத்தார். இன்று என் மகனும் அதேபோல அன்னியனாக இருப்பதைக் காண்கிறேன். ‘நீ இதன்வழியாகக் கடந்துபோயாகவேண்டும், வேறு வழியில்லை’ என்று சொல்லிக் கொள்கிறேன்.


ஆனால் எனக்கு பள்ளியில் நல்ல சில ஆசிரியர்கள் அமைந்தனர். என் நினைவில் நிற்கும் முதல் ஆசிரியர் திரு சத்தியநேசன் அவர்கள். எனக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஊட்டி செய்யுள் எழுத கற்றுத்தந்தவர். அதன் பின் நான் சந்தித்த முக்கியமான ஆசிரியர் சுந்தர ராமசாமிதான். சுந்தர ராமசாமி வழியாக ஆற்றுர் ரவிவர்மா. கடைசியாக நித்ய சைதன்ய யதி. இவர்களிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். நான் கல்விகற்ற குருகுலங்கள் இவர்களின் இல்லங்களே.


பள்ளி என்ற அமைப்புக்கும் இத்தகைய குருகுலங்களுக்கும் என்ன வேறுபாடு? முக்கியமான வேறுபாடு ஒன்றுதான் பள்ளியில் பாடம் உள்ளது ஆசிரியர் இல்லை. ஆசிரியர் அங்கு அப்பாடத்தை ஒலிக்கும் குரல்மட்டுமே. பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே தனிப்பட்ட உறவே இல்லை. ஆசிரியர் மாணவனுக்கு ஒரு குரல். மாணவன் ஆசிரியருக்கு ஒரு முகம் அல்லது எண். ஆகவேதான் பெரும்பாலும் மாணவர்களை ஆசிரியர்கள் நினைவுவைத்துக் கொள்வதேயில்லை. ஆசிரியர்களை மாணவர்கள் நக்கலாகவே எண்ணிக் கொள்கிறார்கள். ஒருவரோடொருவர் கொள்ளும் இந்த உதாசீனத்தின் வடிவமாக அங்கே கல்வி உள்ளது. கல்வி அங்கே அவர்களை விலக்கும் , ஒருவரிடமிருந்து ஒருவரை மறைக்கும் ஊடுதிரையாக உள்ளது. நமது கணித ஆசிரியரை நம்மிடமிருந்து மறைப்பது அவர் நமக்குக் கற்பிக்கும் கணிதமே.


ஒரு குருகுல அமைப்பில் ஆசிரியனும் மாணவனும் தனிப்பட்ட உறவுடன் உள்ளனர். மண்ணில் இரு உயிர்களிடையே உருவாகும் உறவுகளில் மிகமிக நெருக்கமான, மிக உணர்ச்சிகரமான உறவுகளில் தலையாயது அதுவே. அங்கு அவர்களை இணைக்கும் ஊடகமாக உள்ளது அவர்கள் கற்கும் கல்வி. ஆசிரியன் மீது மாணவனுக்கு ஏற்படும் மீளாக்காதலுக்கு நிகராக ஒருபோதும் சாதாரணக் காதலைச் சொல்லிவிடமுடியாது. நான் வருடக்கணக்காக என் ஆசிரியர்களை அல்லும்பகலும் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் ஒருநாளாவது அவர்களை எண்ணாமல் என் நாட்கள் மறைவதில்லை. அந்தக்காதல் அக்கல்வியிலிருந்து உருவாவதா இல்லை அக்காதலில் இருந்து கல்வி அத்தனை நெருக்கமாக ஆகிறதா என்று சொல்லிவிடமுடியாது.


ஆசிரியர் ஓர் ஆளுமையாக முன்னுதாரணமாக மாணவன் முன் நிற்கிறார். தன்னையே அவர் அவனுக்கு அளிக்கிறார். அவன் ஆக விரும்பும் பிம்பம். அவனுடைய எதிர்காலமே அவன் முன் மானுட வடிவமாக நிற்கிறது. அந்த இளம்பருவத்தில் எப்படிப்பட்ட மனஎழுச்சியை அது அளிக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். எதிர்காலம். விதி! அது கடவுளன்றி வேறென்ன? அதன் மறுபக்கம்தான் ஆசிரியர். அவரைப்பொறுத்த்வரை மாணவன் அவரது எதிர்காலமேதான். அவன் வழியாக அவர் காலத்தை தாண்டிச்செல்ல முடியும். அவரது மரணமின்மையின் தடையம் அவன். அந்த பரஸ்பர பிரியத்திலிருந்தே உண்மையான கல்வி உருவாக முடியும். ஞானத்தை தொடர்புபடுத்தும் ஊடகமாக இருப்பதற்கு தகுதிபடைத்தது அன்பே.


கடமைக்காக கற்பிக்க வரும் ஆசிரியனுக்கும் குருவுக்கும் எவ்வளவு வேறுபாடு? ‘இன்று முழுக்க உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று என் ஆசிரியர்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ‘இப்போதெல்லாம் உன்னிடம் பேசுவதுபோலவே நான் சிந்திக்கிறேன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். ஒருநாள் பேசவில்லை என்றால் , இரு வருகை தவறிவிட்டதென்றால் என் ஆசிரியர்கள் மனம் வருந்தியிருக்கிறார்கள். சினம் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கல்வி நமக்கென்றே தயாரிக்கபடுவது. நமது ருசிகளுக்காக நமது திறன்களையும் நமது தேடல்களையும் கணக்கில் கொண்டு கனிந்த அன்புடன் உருவாக்கப்பட்டு நமக்கு மிகமிகப்பிரியமான முறையில் பரிமாறப்படுவது. இதற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. இதன் ஒவ்வொரு கணமும் நமக்கு பேரின்பம் அளிக்கிறது. இந்தக்கல்வியில் நாம் ஒருதருணத்தில்கூட சிறிதேனும் களைப்¨ப்பம் சலிப்¨ப்பம் உணர்வதில்லை. மானுடனுக்கு மண்ணில் உள்ள பேரின்பங்களில் ஒன்று மெய்யான கல்வி.


எல்லா உறவுகளும் இருகூரானவை. ஆசிரியர்களிடம் கொண்ட உறவில் உக்கிரமான வலிகளையும் நினைவுகூர்கிறேன். அன்பளவே மனத்தாங்கல்களும் தீவிரமானவை. யமுனாச்சாரியார் ஏன் தன் மாணவர் ராமானுஜரைக் கொல்ல முயன்றார்? ஆசிரிய மாணவ உறவின் கதைகளில் பலசமயம் அந்த பெருங்கசப்பு வெளியே வருகிறது. கௌடபாதருக்கும் சங்கரருக்கும் அப்படிப்பட்ட கசப்பு உருவான கதை உள்ளது. தோதாபுரிக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் கூட அந்த கசப்பு உருவாகியிருக்கிறது. குருசீட உறவின் உக்கிரத்துக்கு வெளியே நின்று அதைப் புரிந்துகொள்ள இயலாது. எனக்கு நித்யாவிடமும் மட்டுமே கசப்பில்லாத உறவு சாத்தியமாயிற்று..


நூல்களும் நமக்கு கற்பிக்கும். இறந்த ஆசிரியர்கள் எவருமே மறைவதில்லை. அவர்கள் சொற்கள் அழிவதில்லை. ஆனாலும் நூலுக்கு மனிதருக்கும் இடையே உள்ள வேறுபாடு பிரம்மாண்டமானது. நூல்கள் சிந்தனைகளைக் கற்பிக்கின்றன. ஆசிரியர் சிந்தித்தல் என்னும் செயலைக் கற்பிக்கிறார். ஒருமுறை நித்யாவிடம் கேட்டேன்,”இங்கே உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்”என்று. ”நான் அவர்களை என்னுடன் வாழ அனுமதிக்கிறேன்”என்றார் நித்யா. அவருடன் நடந்து அவருடன் அமர்ந்து உண்டு அமருடன் வேலைசெய்து அவர்கள் அவரை அறிகிறார்கள். அவர் அடைந்த ஞானமே அவர். ஒருவரின் ஞானம் மெய்யானது என்றால் அது அவரது ஆளுமையிலிருந்து வேறானதாக இருக்காது.


சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, நித்யா ஆகியோரின் நீண்ட உரையாடல்களை நினைவுகூர்கிறேன். அவ்வுரையாடல்கள் மூலம் நான் கற்றுக்கொண்டது கருத்துக்களையும் தகவல்களையும் அல்ல. அவற்றை அவர்கள் நினைவுகூரும் விதத்தை. அவற்றை தொகுத்து முடிவுகளுக்கு வரும் முறைமையை. அம்முடிவுகளை அவர்கள் பரிசீலிக்கும் வழிகளை. எண்ணங்கள் முளைத்து முளைத்து வரும் விதம், தர்க்கம் கருத்துக்களை தொட்டுத்தொட்டு செல்லும் அழகு ஆகியவற்றில் மயங்கி அதை பின்தொடர முயன்றேன். அவர்களின் மொழியும் முகபாவனைகளும் உடலசைவுகளும்கூட என்னில் கூடிய நாட்கள் உண்டு. சுந்தர ராமசாமி சிந்திக்கும்போது விரல்களால் காற்றில் எழுதுவார். அதையே நானும் என்னை அறியாமல் செய்வதை உணர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.


நிறுவனங்கள் ஒருபோதும் சிந்தனையைக் கற்றுத்தர இயலாது. மனிதர்களே கற்றுத்தர இயலும். ஆகவேதான் நிறுவனங்களுக்குள் கூட உயர் கல்வித்தளத்தில் தனிப்பட்ட குருசீட உறவுகள் சாத்தியமாகும்படியான அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். ஆய்வுக்கல்வியில் இன்று குருசீட உறவு நிகழும்படியே நம் கல்வி அமைப்பு உள்ளது– நிகழ்கிறதா என்பது வேறுவிஷயம். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல சிந்திப்பதை ஒரு மனிதன் மட்டுமே இன்னொரு மனிதனுக்கு கற்றுத்தர இயலும். காரணம் சிந்தனைக்கு எந்தவிதமான கட்டுகளும், அமைப்பும் இருக்காது. நேரமும் சூழலும் அதைக் கட்டுப்படுத்தாது. காலையில் பத்திலிருந்து பதினொன்றுவரை ஒருவர் சிந்தனையை கற்றுத்தர இயலாது. நித்ய சைதன்ய யதி பாஸ்டன் மற்றும் ஹவாய் பல்கலைகளில் ஆசிரியராக இருந்தபோது அதிகாலையில்தான் தன் வகுப்புகளை நடத்தியிருக்கிறார். ஒர் ஆசிரியருடன் மாணவன் கூடவே இருப்பது மட்டுமே ஒரே வழி. அவரது கோபம் மகிழ்ச்சி மன எழுச்சி சோர்வு எல்லாவற்றையும் கூடவே அமர்ந்து கவனித்தல். இந்த பொருளில்தான் உபநிடதம் என்ற சொல்லுக்கு ”அருகே அமர்தல்”என்று பொருள்


இன்னுமொன்று உள்ளது. சிந்தனை என்பது பதில். சிந்திப்பது என்பது தேடல், கேள்வி. ஆகவே நூல்களின் வழியாக நாம் அடைவது முடிவுற்ற ஒன்றை. குருவிடமிருந்து நாம் அடைவது ஒரு பயணத்தை. அவர் செல்லும் தூரமெல்லாம் நாமும் சேர்ந்து பயணம் செய்கிறோம். அவரது தத்தளிப்புகலையும் கண்டடைதலின் உவகைகளையும் நாமும் பங்கிடுகிறோம். கடோபநிஷதத்தின் புகழ்பெற்ற தொடக்கப்பாடலே அன்றும் இன்றும் எல்லா குருகுலங்களிலும் தொடக்கப்பாடலாக குருசீடர்களால் இசைக்கபடுகிறது. ”ஓம் சஹனாவவது சஹனௌ புனக்து: சஹவீர்யம் கரவாவஹை ‘ என்ற அப்பாடல் ”மெய்யான உண்மை என்றால் என்னவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோமாக” என்று குரு சீடனை அழைப்பதாகும்


குருசீட உறவின் வழியாக சிந்தனைமுறைகள் தொடர்ச்சி பெறுகின்றன. இந்தியாவில் நாம் அறியும் முக்கிய சிந்தனைமுறைகள் அனைத்துமே குருசீடச் சங்கிலி வழியாக பரிணாமம் பெற்று வந்தவை என்பதைக் காணலாம். ஒரு சிந்தனைமுறையின் காலம்தோறுமான பரிணாம வளர்ச்சி குருசீட உறவின் மூலமே நிகழ இயலும். பொதுவான கல்வி ஒரு சிந்தனையை ஓர் அமைப்பாக மாற்றி நிலைநிறுத்தக் கூடும். ஆனால் குருவிடமிருந்து தகுதியுள்ள சீடன் பெற்றுக்கொள்ளும் சிந்தனை அவனில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அவ்வாறாக அது காலத்தில் வளர்ந்துசெல்கிறது. தத்துவ சிந்தனைக்கு இம்முறை இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது


2


 


இரண்டு


நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார்.


பின்னர் நாராயணகுரு வெளிப்பட்டது 1888 ல் அவரது சொந்த ஊரின் அருகே உள்ள அருவிக்கரை என்ற சிற்றூரில். அங்கே ஒரு குருகுலத்தை நிறுவி ”ஜாதிபேதம் மத வெறுப்பு இன்றி அனைவரும் சமமாக வாழும் உதாரணமான இடம் இது”என்று அவர் பொறித்து வைத்தார். அன்று சமூகவிடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த ஈழவர்களை அவர் பால் ஈர்த்தது. அவரை மையமாக்கி 1903ல் ‘ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா” [எஸ்.என்.டி.பி ] என்ற அமைப்பு உருவாயிற்று. அது சமூக சீர்திருத்தத்துக்காகவும் மத மறுமலர்ச்சிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் போராடிய பெரும் அமைப்பாக வளர்ந்தது. ஆகவே நாராயணகுரு கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1928ல் நாராயணகுரு தம் சீடர்களை திரட்டி ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைமையகம் கேரளத்தில் வற்கலா என்ற ஊரில் சிவகிரி என்னும் குன்று மீது உள்ளது.


நாராயணகுரு இரு வகை நூல்களை இயற்றியுள்ளார். சுப்ரமணிய சதகம். காளீநாடகம், சாரதா தேவி ஸ்துதி, முதலியவை கவித்துவமான தோத்திரப்பாடல்கள். ஆத்மோபதேச சதகம், தரிசன மாலா, அறிவு முதலியவை ஆழமான வேதாந்த தரிசனம் கொண்ட தத்துவ நூல்கள். அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவுபடுத்தியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஒரு இணைவை [சமன்வயம்] கொண்டுவந்தார் என்பதே தத்துவ ரீதியாக அவரது சாதனையாகும்.


நாராயணகுருவிற்கு கேரள மரபின் பல தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய மாணவர்கள் பலர் உண்டு. பிற்காலத்தில் கேரள வரலாற்றின் சிற்பிகளாக அறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஆதர்சமாகக் கொண்டு இயங்கியவர்களே. ஆயினும் அவரது முதல் சீடர் என்றும் அவரது தரிசனத்தை முன்னெடுத்தவர் என்றும் சொல்லத்தக்கவர் நடராஜ குருவே. எஸ்.என்.டி.பி அமைப்பை உண்டுபண்ணியவரான டாக்டர் பல்புவின் மகனாக 1895ல் பிறந்தார். நிலவியலில் பட்டமேற்படிப்பை முடித்தபின் உலகப்புகழ்பெற்ற சார்போன் பல்கலை [·ப்ரான்ஸ்] கழகத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் ஆய்வை நிகழ்த்தி பட்டம் பெற்றார். கல்வியியல் குறித்த அவரது முனைவர் பட்ட ஆய்வேடு யுனெஸ்கோ முன்வரைவுக்காக ஏற்கப்பட்டது 1930ல் ஜெனிவா தேசியக்கல்லூரியில் உயர் பௌதிக ஆசிரியராக பணியாற்றினார். [ இண்டர்நேஷனல் ·பெல்லொஷிப் ஸ்கூல். ஜெனிவா ]


நாடுதிரும்பி நாராயணகுருவுடன் குருகுலத்தில் தங்கி கீழைதத்துவங்களைக் கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பல நடராஜகுருவின் கோரிக்கைக்கு இணங்க உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.மூன்றுவருடன் சென்னையில் அத்வைத ஆசிரமம் என்ற அமைப்பின் சார்பில் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். ஆறுவருடம் இந்தியாவெங்கும் பிச்சையேற்று அலைந்து திரிந்தார். 1923ல் ஊட்டி ·பெர்ன்ஹில் பகுதியில் அன்பளிப்பாக கிடைத்த நிலத்தில் தன்கையாலேயே குடிசை கட்டி தங்கி நாராயணகுருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.


நடராஜகுரு அதிகமும் ஆங்கிலம் ·பிரெஞ்சு மொழிகளில்தான் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் அவருக்கு பயிற்சி குறைவு. The word of Guru, One hundred verses of self instruction, Wisdom, Man woman dialectics , The auto biography of an absolutist ஆகியவை அவரது முக்கிய நூல்கள். நடராஜ குரு நாராயணகுருவின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் விரிவாக அறிமுகம் செய்தார். கீதைக்கு நடராஜ குரு எழுதிய உரை ஒரு கிளாசிக் என்று சொல்லப்படுகிறது. நாராயண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலை தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தார். இதன் பொருட்டு நடராஜ குரு ஐரோப்பா முழுக்க விரிவாகப்பயணம்செய்துள்ளார். அவருக்கு பிற்காலத்தில் பெரும்புகழ்பெற்ற பல மாணவர்கள் அமைந்தனர்.


நடராஜ குருவின் மாணவர்களில் முதன்மையானவர் நித்ய சைதன்ய யதி. 1923ல் பந்தளம் என்னும் ஊரில் புகழ்பெற்ற ஈழவக்குடியில் பிறந்த நித்ய சைதன்ய யதியின் இயற்பெயர் ஜெயச்சந்திரப் பணிக்கர். அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் ஒரு புகழ்பெற்ற கவிஞர். இளம் வயதிலேயே துறவு பூண்ட நித்யா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் ரமணரின் குருகுலத்திலும் இருந்திருக்கிறார். பிச்சையெடுத்து இந்தியாவெங்கும் அலைந்திருக்கிறார். கொல்லம் எஸ்.என் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைபடிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலைபார்த்தபோது நடராஜகுருவின் மாணவராக ஆனார். பம்பாயில் விழியிழந்தோர் உளவியலில் முனைவர் படிப்பை முடித்தார். நடராஜகுருவின் குகுலத்திலும் அவரது ஆணைப்படி வட இந்திய குருகுலங்கள் சிலவற்றிலும் இந்திய தத்துவத்தில் பயிற்சிபெற்றார்


1969ல் ஆஸ்திரேலியா சென்று உலகப்பயணத்தை தொடங்கினார். அமெரிக்கா சென்று போர்ட்லண்ட் சிகாகோ ஹவாய் பல்கலைக்கழகங்களில் கவிதை, உளவியல், இந்திய தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார். 1984ல் இந்தியா திரும்பி ·பெர்ன் ஹில் குருகுலத்தில் தங்கி நடராஜ குரு தொடங்கிய பணிகளை முன்னெடுத்தார். ஆங்கிலத்தில் என்பதும் மலையாலத்தில் நூற்றைம்பதும் நூல்களை எழுதியிருக்கிறார். உயர்பௌதீகம், மேலைதத்துவம் இலக்கியம் நுண்கலை உளவியல் ஆன்மீகம் சார்ந்த நூல்கள் அவை. கீதை, பிரகதாரண்ய உபநிடதம், ஆத்மோபதேச சதகம், தரிசன மாலை ஆகியவற்றுக்கான உரைகள் முக்கியமானவை. குரு நித்ய சைதன்ய யதி 1997ல் மரணமடைந்தார்


நடராஜ குருவின் அடுத்த மாணவரான முனி நாராயண பிரசாத் இன்று நாராயணகுருகுலத்தின் தலைவராக உள்ளார். கீழைமெய்யியல் , கிரேக்க மெய்யியல் ஆகியவற்றில் விரிவான ஆய்வு செய்தவரான முனி நாராயண பிரசாத் ஏறத்தாழ நூறு நூல்களை இவ்வரிசையில் எழுதியுள்ளார். கொழும்பு, பாலி பல்கலைகளில் கீழைதத்துவம் கற்பித்திருக்கிறார். தலைமை குருகுலத்தில் [ ஸ்ரீ நாராயணகுரூகுலம், சிவகிரி, வற்கலா] வாழ்கிறார். இன்னொரு மாணவரான வினய சைதன்யா பெங்களூர் சோமனஹள்ளி குகுலத்தில் வாழ்கிறார். ஆங்கில இலக்கியம் கன்னட இலக்கியம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி உடையவர். நித்ய சைதன்ய யதியின் மாணவர்களில் சுவாமி தன்மயா, சுவாமி வியாசப்பிரசாத் , ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊட்டி குருகுலத்தில் உள்ளனர். சுவாமி தன்மயா மேலைமருத்துவத்தில் பட்டம்பெற்றவர். இன்று ஆயுர்வேத ஆய்வில் முக்கியமானவராக அறியப்படுகிறார். [ நாராயணகுருகுலம், ·பெர்ன் ஹில், ஊட்டி ] இன்று நான்காவது தலைமுறையாக நாராயண தரிசனம் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது.


 


Untitled


மூன்று


நாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது


ஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர்.


இவ்வுரையாடல்களில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நடராஜ குருவின் அன்றாட செயல்பாடுகள், அதைச்சார்ந்த உரையாடல், வேடிக்கையாகவும் தத்துவார்த்தமாகவும் அவர் கூறும் சொற்கள். இரண்டு ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை அவர் பிறரிடம் விவாதிக்கும் தருணங்கள். மூன்று அவர் பிற நூல்களை ஒட்டியும் வெட்டியும் சொல்லும் கருத்துக்கள். இம்மூன்றிலும் தொடர்ந்து நடராஜ குரூ வெளிப்படுகிறார். அவரது தரிசனம் விவரிக்கப்படுகிறது.


நடராஜகுருவின் நோக்கு அடிப்படையில் முரணியக்கம் சார்ந்தது. [டைலடிக்கல்] இதை அவர் யோகாத்ம நோக்கு என்கிறார். இந்திய ஞானமரபு பல்லாயிரம் வருடங்கள் முன்னரே விரிவாக்கம் செய்து எடுத்த இந்த ஆய்வுமுறை மிகவும் பிற்பாடுதான் மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு புரிந்தது. மானுட உணர்வுகள், சிந்தனைகள், இயற்கையின் இயக்கம், வரலாற்று இயக்கம் எல்லாமே ‘நேர் Xஎதிர்’ இயக்கங்களால் நிகழ்பவை என்பது அவரது கோட்பாடு. இந்நூலில் அவர் அதுசார்ந்து ஆராயும் இடங்களை வாசகர் தொட்டுச்செல்லலாம். தத்துவ ஆய்வு சம்பத்தமான சில பகுதிகள் வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அதற்கு நடராஜ குருவின் மூலநூல்களையே நாடவேண்டும். இவை ஒரு தத்துவ ஞானி எப்படி தன் மாணவனுக்கு கற்பிப்பார் என்பதைக் காட்டும் இடங்களாக அவற்றை காண்பதே நலம்.


தத்துவ ஆய்வு என்பது நிலையான உயர்விழுமியங்களை அடையும் நோக்கு கொண்டதாகவும் அதன் விளைவு பயனளிப்பதாகவும் இருக்கவேண்டுமென சொல்லும் நடராஜ குரு தத்துவம் என்பது தர்க்கம் மூலம் முழுமையாக ஆராயக்கூடியதல்ல என்று சொல்கிறார். தத்துவத்தின் அடிப்படையான தரிசனத்தை நாம் யோகாத்ம உள்ளுணர்வு மூலமே உணர முடியும். அது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அதாவது தரிசனங்களை விளக்கவே தத்துவம் பயன்படும். தரிசனம் தியானம் மூலம் பெறப்படுவதாகும். இந்நோக்குடன் இங்கே அவர் தன் ஆய்வுகளையும் முடிவுகளையும் அளித்துள்ளார்.


நித்ய சைதன்ய யதி ஒருமுறை இக்குறிப்புகள் எழுதிய காலங்களை நினைவுகூர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகுல நிகழ்ச்சிகளை மகேந்திரநாத தத்தர் விரிவாக எழுதியதை [ ராமகிருஷ்ண கதாம்ருதம்] படித்த நித்யா அதைப்போல எழுத ஆசைப்பட்டு இவற்றை எழுதினார். ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முக்கியமாக நடராஜ குரு சொன்னவற்றின் மேலான தன்னுடைய எதிர்வினைகளை தவிர்க்க அவரால் இயலவில்லை. இரண்டாவதாக நடராஜ குரு சொன்னவை மிகமிகச் சிக்கலான தத்துவக் கோட்பாடுகள். ஏற்கனவே தத்துவ விவாதத்தில் அவற்றின் மூலங்களை கற்று அறிந்துள்ள மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. பொதுவான மனிதர்களுக்காக அவர் பேசியது குறைவுதான். அதாவது குருகுலப் பதிவுகள் என்பவை குரு மட்டும் செய்யும் உபதேசங்கள் அல்ல. அவை சீடர்களும் சம அளவில் பங்கு பெறுபவை. அவற்ரை பதிவுசெய்வது அரைகுறைப்பதிவாகவே அமைய முடியும். ஆகவே நித்யா இரண்டாம் கட்டமாக எழுதிவைத்த குறிப்புகளை ஒருமுறை ரயிலில் செல்லும்போது அப்படியே பறக்கவிட்டுவிட்டார். இக்குறிப்புகள் அரைகுறையானவையாக இருப்பது அதனாலேயே.


ஆயினும் இக்குறிப்புகள் ஒருகுருகுலம் எப்படி இருக்கும், ஒரு மகாகுருவின் ஆளுமை எப்படி மாணவன் மீது கவியும் என்பதற்கான சிறந்த ஆவணமாக கொள்ல இயலும் என்று எனக்குப்படுகிறது. அவ்வண்னம் சில வாசகர்களுக்காவது இவை தூண்டுதலாக இருக்கும்.


 


nitya


நான்கு


 


பேராசிரியர் ஜேசுதாசனை நான் சில வருடங்கள் நன்கறிந்திருந்தேன். அவரது வீட்டில் அவரது குரு கோட்டாறு குமரேசபிள்ளை அவர்களின் பெரிய படம் ஒன்று எப்போதும் துடைத்து சுத்தமாக இருக்கும். தன் ஆசிரியர் பற்றி சொல்லும்போது முதிர்ந்த வயதில் பேராசிரியர் கண்ணீர்விட்டு அழுததை நினைவுகூர்கிறேன். ஆசான் கம்பராமாயணத்தை கற்பிக்கும் விதத்தை பெரும்பரவசத்துடன் அவர் எனக்கு நடித்துக்காட்டினார். [பேராசிரியரின் பேட்டி ஒன்றை நான் எடுத்தேன். அது என் ‘உரையாடல்கள்’ என்ற பேட்டித் தொகுப்பில் உள்ளது] ஜேசுதாசனின் பிரியத்துக்குரிய மாணவர்கள் எம்.வேத சகாய குமார், அ.கா.பெருமாள், ராஜ மார்த்தாண்டன் ஆகியோர் இன்று தமிழில் தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்கள்


எம்.வேதசகாய குமாரை நான் பத்து வருடங்களாக அறிவேன். எந்நிலையிலும் அவர் ஆசிரியர்தான். எனக்கும் அவர் ஆசிரியர் எனற நிலையில் இருப்பவரே. தமிழ் இலக்கிய மரபு குறித்து அவரிடம் எப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் தன் ஆசிரியரிடம் கொண்டிருந்த மட்டற்ற காதலை அருகே நின்று கண்டிருக்கிறேன். மரணம் வரை பேராசிரியர் ஜேசுதாசன் தன் மகன்களைவிட மேலாக வேதசகாய குமாரையே அனைத்துக்கும் நம்பியிருந்தார். அதற்கு இணையாகச் சொல்லவேண்டுமென்றால் குமார் தன் மாணவர்களிடம் கொண்டுள்ள அன்பைச் சொல்லவேண்டும். சஜன், மனோகரன் போன்ற அவரது மாணவர்கள் எதிர்காலத்தில் பேசப்படுவார்கள்.


எம்.வேதசகாயகுமாரின் பிரியத்துக்குரிய மாணவியான ப.சாந்தி இந்தச் சிக்கலான நூலை மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக மொழியாக்கம்செய்தார். அந்த விடாப்பிடியான சிரத்தை என்னை பிரமிக்கச்செய்தது. அது ஒருவகையான குருகுலக்கல்வியின் விளைவென்றே எனக்குப் படுகிறது. தலைமுறைகளின் வழியாக நீளும் ஒரு பண்புநலன் அது. நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் பங்களிப்பு என்ற தலைப்பில் எம்.வேதசகாயகுமாரின் வழிகாட்டலில் திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்


[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]


 


முதற்பிரசுரம் Jan 31, 2006 மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

மின்தமிழ் பேட்டி -1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2017 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.