Jeyamohan's Blog, page 1680
February 7, 2017
வெண்முரசு கலந்துரையாடல், சென்னை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
இதில் நண்பர்கள் அனைவரும் “கிராதம்”” நாவல் குறித்து கலந்துரையாடலாம்
நேரம்:- வரும் ஞாயிறு (12/2/2017) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம் சத்யானந்த யோகமையம்
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505
கிராதம் பற்றிய இந்த கலந்துரையாடலில்,
யமனை வெல்வதை பானுமதி அவர்களும்,
குபேரனை வென்று மீள்வதை குருஜி செளந்தரும்,
வருணன் மற்றும் இந்திரவிஜயங்களை பற்றி அருணாசலமும் மாரிராஜும் உரையாற்றுவார்கள்
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
சௌந்தர்
மற்றும் நண்பர்கள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
8. குருதிக் குமிழிகள்
ஊர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளை புரவிகளும் அவன் உடல் வழியாகவே அடைந்துவிடுகின்றன. ஜயத்ரதனின் குதிரை அஞ்சி உடலெங்கும் மயிர்க்கோள் எழுந்து, அனல்பட்டதுபோல உரக்கக் கனைத்தபடி புதர்கள் மேல் தாவி காட்டுக்குள் புகுந்து மரங்கள் நடுவே வளைந்து திரும்பி மலைச்சரிவில் பாய்ந்தோடியது. பீமனும் அர்ஜுனனும் அதைத் தொடர்ந்து காட்டுக்குள் பாய்ந்தபோது சென்றவழியில் இலைகள் அசைவழிய அவன் முழுமையாக மறைந்துவிட்டிருந்தான்.
ஆனால் பீமனின் புரவியும் ஊர்ந்தவன் உணர்வை தான் ஏற்றுகொண்டுவிட்டிருந்தது. முன்னால் ஓடிய புரவியின் மணத்தைப் பெற்றுக்கொண்டு அதுவும் தொடர்ந்து வந்தது. ஜயத்ரதனின் மேலே எழுந்த கிளைகளில் குரங்குகள் கைவீசி தாவித்தாவி வந்தன. இரு பெருங்குரங்குகள் உச்சிக்கிளைகளுக்குச் சென்று ஜயத்ரதன் செல்வதை நோக்கிவிட்டு திசைகூவிச் சொல்ல பீமன் புரவியை அரட்டிச் செலுத்தியபடி அவனைத் தொடர்ந்து வந்தான்.
தன்னைத் தொடர்ந்துவரும் குளம்பொலிகளை ஜயத்ரதன் கேட்டுக்கொண்டே இருந்தான். அவை வலுக்கின்றன என எண்ணியபோது உடல் கடுங்குளிர் கொண்டதுபோல சிலிர்த்தது. மேலும் மேலுமென புரவியை அடித்தும் குதிமுள்ளால் குத்தியும் கூச்சலிட்டும் துரத்தினான். அது தாவித்தாவி பாறைகளையும் முட்குவைகளையும் சிற்றோடைகளையும் சேற்றுக்குழிகளையும் கடந்தது. புரவியை மிகையாகத் தூண்டுவதனாலேயே அதை விரைந்து களைப்படையச் செய்கிறோம் என்பதை அவன் அவ்வச்சத்தில் உணரவில்லை.
அதன் வாயிலூறிய நுரை காற்றில் தெறித்து அவன்மேல் துளிசிதறியது. அதன் வியர்வையால் அவன் தொடைகள் வழுக்கின. அதன் உடலுக்குள் ஓடிய குருதியின் குமிழிகளை அவனால் உணரமுடிந்தது. “மேலும்! மேலும்!” என அவன் அதை உதைத்தான். பின்னால் புரவிக்குளம்படிகள் வந்துகொண்டே இருந்தன. உச்சிக்கிளைமேலிருந்து குரங்குகள் அவனை காட்டிக்கொடுக்கின்றன என அவன் உணர்ந்தான். இன்னும் சற்றுத்தொலைவுதான். அவனால் திரிகர்த்தர்களின் எல்லைக்குள் சென்றுவிடமுடியும். திரிகர்த்தனிடம் அடைக்கலம் என்று கூவியபடி முதல் படைக்காவலரணைக் கடந்துவிட்டால் போதும். அவர்கள் ஊருக்குள் நுழைய முடியாது. முதல் தெரு… அவனைக் காக்கப்போகும் முதல் ஊர்.
எண்ணியிராமல் எரி அணைவதுபோல புரவி விரைவழிந்தது. “செல்க! செல்க… கெடுமதியே செல்க!” என அவன் அதை சவுக்கால் அறைய அது தயங்கி நின்றுவிட்டது. வாயிலிருந்து நுரையுடன் குருதியும் வழியலாயிற்று. கால்களைப் பரப்பி வைத்து தலையை தரைதொடும்படி தாழ்த்தி அது கக்குவதுபோலவும் இருமுவதுபோலவும் ஒலியெழுப்பியது. உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது. அவன் அதன் கழுத்தை கைகளால் அறைந்தான். “செல்… செல்!” என்று கூவினான்.
புரவி வேல் பட்டதுபோல விதிர்த்தது. அவன் உய்த்துணர்ந்து கீழே குதிக்கவும் மறுபக்கம் சரிந்து பள்ளை நிலமறைய விழுந்து குளம்புகளை காற்றிலுதறி கால்களை உதைத்துக்கொள்ளத் தொடங்கியது. வால் புழுதியில் கிடந்து குழைந்து அலைந்தது. அதன் கண்கள் வெறித்து உருண்டிருந்தன. வாழைப்பூமடல் போல செந்நீலநிற நாக்கு நீண்டு வெளிவந்து தழைந்து கிடந்தது. அவன் சினத்துடன் அதை ஓங்கி உதைத்தான். பின்னர் ஓடி புதர்களுக்குள் பாய்ந்து மறைந்தான்.
அணுகிவரும் குளம்படிகளை காலடியில் நிலமதிர்வதிலிருந்தே உணர்ந்தான். ஓடுவதைவிட முழுமையாக எங்கேனும் பதுங்கிக்கொள்வதே உகந்தது என எண்ணி விழிகளால் தேடிக்கொண்டே சென்றான். புதர்களுக்குள் ஒளிவதைப்பற்றி எண்ணியதுமே குரங்குகளும் வரும் என்பது நினைவுக்கு வந்தது. அவை நாய்களைவிட மோப்பம் கொண்டவை. ஒரு கணம் அங்குமிங்கும் நோக்கியபின் அருகே ஓடிய கோமதியை நோக்கி சென்றான். அங்கே ஆற்றுநீர் வளைந்து அரைவட்ட அலைகள் கரைச்சேற்றில் படிய சுனையென்றாகியிருந்தது. அதன் மேல் தாமரைகளும் நீலங்களும் மெல்ல அசைந்துகொண்டிருந்தன.
சதுப்பின் மேல் விழுந்துகிடந்த மட்கிய மரங்களிலும் மத்தகம் காட்டிய பாறைகளிலும் மட்டும் கால்வைத்து ஆற்றை நோக்கி சென்றான். மரம் ஒன்றின் மேல் தொற்றி ஏறி கிளைகள் வழியாகவே மேலும் மரங்களுக்குச் சென்று நீர்மேல் கவிழ்ந்திருந்த மரத்தின்மேல் ஏறி கிளையிலிருந்து நீருக்குள் குதித்தான். நீந்தி ஆழத்திற்குச் சென்று அங்கே எழுந்து மேலே வந்திருந்த தாமரை ஒன்றை அடிவேருடன் பிழுதெடுத்தான். அதன் மலர்க்குவைக்கு நடுவே கடித்து துப்பி தண்டிலிருந்து காற்றுவழியை உருவாக்கினான். அந்த மலரை மேலே நின்றிருந்த இலைகளுடனும் மலர்களுடனும் பின்னி மிதக்கவிட்டபடி கொடியின் மறுமுனையை வாயில் கவ்விக்கொண்டு நீருக்குள் மூழ்கினான்.
நீருக்குள் செறிந்து நின்றிருந்த தாமரைக்கொடிகளில் தன் உடலை பிணைத்துக்கொண்டபோது ஆழம் மேலே உந்தியதை எதிர்கொண்டு உடல்அலைவை நிலைகொள்ளச்செய்ய முடிந்தது. மேலே மலர்கள் நடுவே அந்தத் தாமரை மலர் எழுந்து நின்றிருந்தது. அதன் மையத்துளை வழியாக வந்த காற்றை வாயால் உறிஞ்சி வாய் வழியாகவே வெளிவிட்டுக்கொண்டு நீருக்குள் மூழ்கிக் கிடந்தான். ஆழம் அலையடங்க அவன் மேல் நீர்ப்பாசிகள் வந்து மூடிப்படிந்தன. நீர்க்குமிழிகள் சில எழுந்து உடலை மீன்குஞ்சுகள் போல வருடி மேலே சென்றன.
மீன்கள் அச்சம் நீங்கி விழித்த கண்களுடன் அவனை நோக்கி வந்து சிறகுலைய அசைவற்று நின்றபின் வால்சுழற்றி திரும்பிச்சென்றன. தலைக்குமேல் ஒளியாக அலைசுழன்று அசைந்துகொண்டிருந்தது. ஓரிரு குமிழிகள் மட்டும் மேலெழுந்துசென்று வெடித்தன. நெஞ்சத்துடிப்பு விலக அவன் உடலுக்குள் குருதி குளிர்ந்து சீரமையலாயிற்று. எண்ணங்கள் கூர்கொண்டபோது அவன் வெளியே நிலம் அதிர புரவிகள் வந்து நிற்பதை கேட்டான். சேற்றை மிதித்தபடி அவை சுழன்றன. மேலே கிளைகளிலிருந்து குரங்குகள் குதித்தன.
சில கணங்களுக்குள் காதுகளே புலன்கள் அனைத்தையும் நிறைக்க அவன் அனைத்தையும் காணலானான். இரு வெண்புரவிகளில் வந்த அர்ஜுனனும் பீமனும் விழிகளை ஓட்டியபடி புரவியைச் சுழற்றினர். அர்ஜுனன் இறங்கி தரையில் பதிந்திருந்த அவன் காலடிகளை கூர்ந்து நோக்கினான். விழிகளைத் தூக்கி அவன் ஆற்றைப் பார்த்தபோது ஜயத்ரதன் நெஞ்சதிர்ந்தான். ஒரு குமிழி மூச்சு வெளியேறி மேலெழுந்தது.
ஆனால் பீமன் தொலைவில் எதையோ சுட்டிக்காட்டினான். குரங்குகள் தரையை முகர்ந்து நோக்கி மூக்கு சுளித்து ஏதோ பேசிக்கொண்டன. குழப்பத்துடன் எழுந்து வயிற்றை சொறிந்து வாயை நீட்டின. பின் ஒரு பெரிய குரங்கு அவன் வந்த வழியிலேயே சரிந்த அடிமரங்கள் வழியாக வந்து அவன் ஏறிய மரத்தில் தொற்றி ஏறிக்கொண்டது. கிளைகள் வழியாக வந்து அவன் நீரில் குதித்த கிளை வரைக்கும் வந்தது. அவன் “தெய்வங்களே! மூதாதையரே!” என்று நெஞ்சுக்குள் கூவினான்.
பெருங்குரங்கு கிளைமுனையில் நின்று எக்களிப்பு போல ஓசையிட்டுக் கூவியதும் மற்ற குரங்குகளும் அங்கே வந்தன. “இவ்வழியேதான் சென்றிருக்கிறான்” என்றபடி அர்ஜுனன் அங்கே வந்தான். “ஆனால் சேற்றில் கால்தடங்கள் இல்லை. படகு ஒன்று நீரில் வந்திருக்கக்கூடும். அதை கரையணையச் செய்யாமல் அங்கேயே நிறுத்திவிட்டு கிளைகள் வழியாகச் சென்று அதில் ஏறியிருக்கிறான்” என்றான் பீமன்.
“இதற்குள் அவன் மறுகரை சென்றிருக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “ஆம், நீரொழுக்கு கடினமானது” என்றான் பீமன். “அவன் தப்பிச் சென்றிருக்கிறான் என்றால் ஒரே வழிதான். ஒழுக்கினூடாக சென்றிருக்கக்கூடும். மெல்லிய தக்கைப்படகு. அதை இங்கே ஒளித்துவைத்திருக்கிறான். அல்லது குகன் ஒருவன் கொண்டுவந்திருக்கிறான்” என்றான் அர்ஜுனன். “நெடுந்தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை. ஒழுக்கிலேயே விரைந்து சென்றுகொண்டிருக்கிறான். நாம் காணலாகாதென்று கரைமரங்கள் சரிந்த தழைச்செறிவுக்குள்ளாகவே செல்கிறான்.”
“ஆம், கிளம்புவோம்” என்றபடி பீமன் புரவியை தட்டினான். அர்ஜுனன் எஞ்சிய ஐயத்துடன் திரும்பி நோக்கியபடி அவனைத் தொடர்ந்து சென்றான். ஜயத்ரதன் மெல்ல இயல்படைந்து நீருக்குள் கால்களை நீட்டினான். தாமரைத் தண்டுகளுக்குள் இருந்து இரு மீன்கள் வெளிவந்து அவனை நோக்கின. ஒன்று வாலை அறைந்து திரும்பி மேலெழுந்து அவன் கண்களை நோக்கி வந்தது. அவன் இமைகளை மூடிக்கொண்டான். அது அணுகி அவன் கன்னத்தையும் கழுத்தையும் வழுக்கியபடி சென்றது. அவன் விழிதிறந்து நோக்க பிறிதொன்று அவன் கண்களை நோக்கி வந்தது. அவன் கையால் அதை தட்ட உடல் அசைந்தது.
நீருக்கு மேல் குமிழிகள் எழுந்தன. இரு மீன்கள் துள்ளி விழுந்து அலைகிளப்ப குரங்குகள் அனைத்தும் சேர்ந்து ஓசையிடத் தொடங்கின. கிளைகளில் எம்பிக் குதித்து இலைத்தழைப்பை உலுக்கியபடி அவை குதித்துக் கூச்சலிட்டன. பீமன் திரும்பி அவற்றை நோக்கினான். குரங்குகளை கைசுட்டி ஏதோ சொன்னான். பின்னர் இருவரும் அவனிருந்த சுனைச்சுழி நோக்கி புரவிகளில் வந்தனர்.
பீமன் நீர்ச்சுழிகளை நோக்கினான். மீன்கள் துள்ளித்துள்ளி விழுந்தன. “மீன்கள்” என்றான் அர்ஜுனன். “இல்லை, அங்குதான் இருக்கிறான் என்கின்றன குரங்குகள். அவை அறியும்” என்றபின் பீமன் அருகே சென்று கூர்ந்து நோக்கினான். “இளையோனே, தாமரைத்தண்டை மூச்சுக்குழாயாக வைத்துக்கொண்டு மூழ்கிக்கிடக்கிறான்” என்று கூவியபடி நீரில் இறங்கப்போனான்.
“நில்லுங்கள்!” என்றபடி அர்ஜுனன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். தாமரைகள் அறுபட்டு மிதந்தன. “ஒரு தாமரையில் நடுவே புல்லி இல்லை” என்றபடி அதை வெட்டினான். துண்டாகி அலைகளில் கவிழ்ந்தது. சிறகுகள் சரிந்த பறவைக்குஞ்சுபோல நீரில் பாதிமூழ்கி விலகியது. அவர்கள் இடையில் கைவைத்து நோக்கி நின்றனர். குரங்குகள் கூச்சலிடத் தொடங்கின. ஜயத்ரதன் மேலெழுந்து வந்து கையால் முகத்தில் வழிந்த நீரை வழித்துக்கொண்டு “நான் போர்நிறுத்திப் பணிகிறேன். சிந்துவின் அரசன் நான்… இந்திரப்பிரஸ்தத்திடம் அடைக்கலம் புகுகிறேன்” என்றான்.
“வருக!” என்றான் அர்ஜுனன். ஒரு கணம் தயங்கிவிட்டு அர்ஜுனன் கண்களை நோக்கியபின் கைவீசி ஜயத்ரதன் நீந்தி அணுகினான். சேற்றுக்கரையை அவன் அணுகி ஆடையை அழுத்தியபடி எழுவதற்குள் “இழிமகனே…” என்று கூவியபடி பீமன் அவன் மேல் பாய்ந்தான். அவனை தன் பெரிய கைகளால் பீமன் அறைந்த ஓசை கேட்டு இரு புரவிகளும் உடல் விதிர்த்தன. குரங்குகள் கிளைகளில் தாவி பின்னால் சென்று ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நோக்கின. பீமன் அவனைத் தூக்கி தரையில் அறைந்தான். சேற்றிலிட்டு மிதித்தான்.
“மூத்தவரே… மூத்தவரே!” என அர்ஜுனன் பதறினான். “விலகு…” என பீமன் உறுமினான். ஜயத்ரதனின் வாயிலேயே மிதித்து அனைத்துப் பற்களையும் உதிரச்செய்தான். அவனைத் தூக்கி அறைந்து கைகளையும் கால்களையும் ஒடித்தான். எலும்புகள் தசைக்குள் ஒடியும் ஒலி கேட்டு அர்ஜுனன் பதறியபடி “மூத்தவரே, வேண்டாம்… வேண்டாம்” என்று கூவினான். சிவந்த விழிகளுடன் “விலகு… அணுகினால் உன்னையும் கொல்வேன்” என்றான் பீமன்.
ஜயத்ரதன் அடிபடும் நாய்போல ஊளையிட்டான். சேறுடன் சேர்ந்து உடல் குழைய அவன் குரல் கம்மலாகி ஊளையாக அலறிக்கொண்டே இருந்தான். அவன் வாய்க்குள் சேறு நுழைந்தது. குருதியுடன் அதை கக்கினான். பீமன் அவன் கால்களை விரித்து ஆண்குறியை மிதிக்கப்போனான். “மூத்தவரே, வேண்டாம்… வேண்டாம்” என ஜயத்ரதன் கைகளை நீட்டி கெஞ்சி அழுதான். “வேண்டாம், மூத்தவரே…” என்று அர்ஜுனன் கூவினான்.
பீமன் காலை ஓங்க அவன் தன் இடைப்பகுதியை பொத்திக்கொண்டு சுருண்டுகொண்டான். அவன் கால்களைப் பிடித்து இழுத்து சேற்றிலிட்டு ஆண்குறியை மிதிக்கத்தொடங்கினான். மிதித்து மிதித்து கூழாக்கி அவனை சேற்றில் பாதி புதைத்தான். பீமன் சற்றே மூச்சிடைவெளிவிட அர்ஜுனன் பாய்ந்துசென்று அவனை பிடித்துக்கொண்டான். “வேண்டாம், மூத்தவரே. நாம் கொல்லும் உரிமைகொண்டவர்கள் அல்ல. இவனை தண்டிக்கவேண்டியவர் மூத்தவர்” என்றான் அர்ஜுனன். நெஞ்சு விரிந்தமைய “உம்” என பீமன் மூச்சிளைத்தபடி சொன்னான். தலையை உலுக்கி முடியைத் தள்ளி பின்னாலிட்டபின் பற்களை கடித்துக்கொண்டு திரும்பி நோக்கினான். காறி அவன் முகத்தில் உமிழ்ந்தபின் திரும்பி நடந்தான்.
அர்ஜுனன் ஓடிச்சென்று ஜயத்ரதனை மெல்லத் தூக்கி நீரை அள்ளி முகத்திலறைந்தான். முனகலுடன் ஜயத்ரதன் விழித்துக்கொண்டு அக்கணமே அச்சம் கொண்டு உடல் உலுக்க சிறுவர்களுக்குரிய குரலில் “காப்பாற்றுக… இளவரசே, காப்பாற்றுக!” என்றான். உறுமலுடன் பாய்ந்து திரும்பி வந்த பீமன் அவனைப் பிடித்து இழுத்து நாணல்மேலிட்டு மீண்டும் மிதிக்கத் தொடங்கினான். அர்ஜுனன் எழுந்து பீமனை நரம்புப்பொருத்து ஒன்றில் அறைந்து அப்பால் தள்ளினான். விழுந்து பிளிறியபடி எழுந்த பீமன் விழிகளை நோக்கி “போதும்” என்றான் அர்ஜுனன். பீமன் “இந்த இழிமகன்… இவன்…” என கைநீட்டி கூவ “அவனை என்ன செய்வதென்று மூத்தவர் முடிவெடுக்கட்டும்” என்றான் அர்ஜுனன்.
பீமன் மீண்டும் காறி அவன் முகத்தில் துப்பினான். “காப்பாற்றுக! என்னை காப்பாற்றுக!” என்றான் ஜயத்ரதன். “நான் ஓர் அரசன்… என் தலைவராகிய மூத்த கௌரவரை மகிழ்விக்கவே இதைச் செய்தேன்.” பீமன் அர்ஜுனனின் அம்புத்தூளியிலிருந்து பிறையம்பை எடுத்துக்கொண்டு அருகே வந்தான். “வேண்டாம், மூத்தவரே!” என்று அர்ஜுனன் கைவிரித்து தடுத்தான். “இளையோனே, விலகு!” என்றான் பீமன். “காப்பாற்றுக…” என்று ஜயத்ரதன் அர்ஜுனன் கால்களைப் பிடித்தான். “கொல்லமாட்டேன்… விலகு!” என்றான் பீமன்.
அர்ஜுனன் தயங்க பீமன் ஜயத்ரதனின் கையைப்பிடித்து இழுத்து தொடையை ஓங்கி உதைத்து குடப்பொருத்தை உடைத்து அவன் அலறியபடி துடிக்க திறந்த வாய்க்குள் கைவிட்டு நாக்கை கைகளால் பற்றிப் பிடித்து இழுத்து இறுக்கிக்கொண்டான். அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து விழுந்தது. தலையை ஆங்காங்கே முடி எஞ்சும்படி மழித்தான். ஒற்றை மீசையை மழித்தான். காதுகளின் மடல்களையும் சீவி எறிந்தான். பின் அவனை இழுத்துக்கொண்டுவந்து அவன் ஆடையைக் கழற்றி அதைக்கொண்டே தன் குதிரையின் சேணத்துடன் கட்டிக்கொண்டு ஏறினான். “செல்வோம், இளையோனே” என்றான்.
“மூத்தவரே, இது பெருங்கொடுமை” என்றான் அர்ஜுனன். “ம்ம்” என யானைபோல் பீமன் உறுமினான். “நானும் இதைச் செய்தேன். இன்றும் அவ்வனலை என் உள்ளம் அணைத்துக்கொள்ளவில்லை. என்றேனும் நானும் போரில் பெருமையிழந்து குன்றி அமரும்போது மட்டுமே அது குளிரும்… வேண்டாம்! இவனை அரசனென நடத்துவோம். ஊழ் புறம் மாறி அமைகையில் எவர் எங்கிருக்கிறோம் என எவர் சொல்லமுடியும்?” பீமன் “சீ… கோழை… நாளையை அஞ்சி இந்த நாயை விட்டுவிடச் சொல்கிறாயா?” என அவன் முகம் மீது மீண்டும் காறி உமிழ்ந்தான். அர்ஜுனன் தளர்ந்து “மானுட எல்லைகளென சில உள்ளது, மூத்தவரே” என்றான்.
சிவந்த சிறிய விழிகளில் குருதி பரவியிருக்க திரும்பிய பீமன் சீறலென ஒலித்த குரலில் “மானுட எல்லைக்குள் மகளிர் வருவதில்லையா? அரசரங்கில் ஆடைகளைந்து நிற்கச்செய்கையில் சிறுமைகொள்ளாத மானுடம் ஒன்று உண்டென்றால் அது இங்கு வந்து கூசி நிற்கட்டும். அனைத்தையும் விட்டு ஓடிவந்து சிறுகுடிலில் புல்லரிசி சமைத்து வாழ்கிறாள் என் குலம்புகுந்த அரசி. இங்கும் வந்து அவள் குழல்பற்றி இழுத்துச் செல்கிறான் என்றால், இவனை…” என்றவன் அக்கணமே திரும்பி ஜயத்ரதனைத் தூக்கி நிலத்திட்டு மீண்டும் மிதிக்கத்தொடங்கினான். “மூத்தவரே, மூத்தவரே…” என அர்ஜுனன் கூவினான்.
ஜயத்ரதன் துணிப்பாவைபோல கிடந்தான். “போதும்… போதும்… உயிர் எஞ்சவேண்டும்” என்றான் அர்ஜுனன். “ஆம், என் மூத்தவரின் பெருமைக்காக மட்டும்” என்றபின் பீமன் புரவியைத் தட்டினான். அது விரைந்தோட தரையில் விழுந்து புழுதியிலும் முள்ளிலும் கற்களிலும் இழுபட்டபடியே சென்றான் ஜயத்ரதன். காடு முழுக்க அவனை இழுத்துச்சென்றான். சாலைப்புழுதியை அடைந்ததும் மேலும் விரைவுகொண்டான். அவன் மேல் கிளைவழி வந்த குரங்குகள் முற்றிலும் ஓசையடங்கிவிட்டிருந்தன.
முன்னரே சென்ற குரங்குகளின் பூசலும் குதிரைக்கனைப்புகளும் சேர்ந்து முனிவர்களின் இல்லங்களிலிருந்து அனைவரையும் வெளியே வந்து பார்க்கச்செய்தன. முதலில் அவர்கள் மண்ணில் புரண்டு சடலம்போல வந்த ஜயத்ரதனை பார்க்கவில்லை. உரித்தெடுக்கப்பட்ட மாட்டுத்தோல் என ஒருவர் எண்ணி “தோலா?” என்றார். இன்னொருவர் “ஏதோ உடல்” என்றார். பின்னர் ஒருகணத்தில் அனைவருக்கும் அது ஜயத்ரதன் எனத் தெரிந்தது. வியப்பொலிகளும் துயரக்குரல்களும் கேட்டன. பெண்கள் குழந்தைகளை கண்களைப்பொத்தி இழுத்துச் சென்றார்கள். முதிய பெண்கள் கைநீட்டி கதறியழுதனர்.
சுஃப்ர முனிவர் கைகளை நீட்டியபடி வந்து சாலையில் நின்று “என்ன இது? இறந்த உடலை சிறுமைசெய்ய மானுடனுக்கு உரிமையில்லை…” என்று கூவினார். பிரபாகரர் பின்னால் வந்து “அது தென்முதல்வன் கைக்கு சென்றுவிட்ட உயிர். எரியரசனுக்கோ மண்ணரசிக்கோ உரிய உடல்!” என்று கத்தினார். “அவன் இன்னும் சாகவில்லை” என்றான் பீமன். அவர்கள் திடுக்கிட்டு நோக்க அவன் கைகள் துடிப்பதைக் கண்டு “தெய்வங்களே!” என்று கூவினர். “என் குலமகள் மேல் கைவைத்தவன் இவன்… இவனை என்ன செய்யவேண்டுமென என் மூத்தவர் சொல்லட்டும். இனி இவ்வெண்ணம் எவ்விழிமகனுக்கு வருகிறதோ அவன் குழந்தைகளின் சங்குகடித்து குருதியைக் குடிப்பேன். இதோ, சுழலும் காற்றுத்தேவன் மேல் ஆணை!” என்றான்.
“பாண்டவரே…” என்று சொல்லி சுஃப்ரர் ஓர் அடி முன்னால் எடுத்து வைக்க பீமன் சவுக்கை ஓங்கி “எதிர்நிற்கும் எவரும் இவ்விழிமகனுக்கு உடன்நிற்பவர்கள் என்றே கொள்வேன். முனிவரோ தேவரோ தெய்வங்களோ ஆயினும் அவர்களின் குருதியாட தயங்கமாட்டேன்… விலகுக!” என்றான். அவர்கள் நெஞ்சைப்பற்றியபடி விலகிநின்றனர்.
குடிலை நெருங்கியபோது அர்ஜுனன் தளர்ந்திருந்தான். தாழ்ந்த குரலில் “சொல்லவேண்டியதை நீங்களே சொல்லிவிடுங்கள், மூத்தவரே. இவ்வுடலில் உயிர் உள்ளதா என்றே ஐயுறுகிறேன்” என்றான். “ஆம், நான் ஏற்கிறேன். நான் கொள்கிறேன் இப்பழியை… இளையோனே, குருகுலத்துக்கீழ்மக்கள் நூற்றுவரையும் கொன்று யுகப்பழி கொள்ளவிருக்கும் கைகள் இவை…” என்று பீமன் சொன்னான்.
குடில் முற்றத்திலிருந்து நகுலன் ஓடிவந்தான். “என்ன ஆயிற்று?” என்று கேட்டதுமே ஜயத்ரதனை கண்டுகொண்டான். “உயிர் இருக்கிறதா?” என்றான். “சாகவில்லை” என்றான் பீமன். மேலிருந்து சகதேவன் பாய்ந்திறங்கி வந்தபடி “என்ன செய்துவிட்டீர்கள், மூத்தவரே? அவன் நம் உறவினன். துச்சளை உங்கள் தங்கை” என்றான். தருமன் குடில்விளிம்பில் வந்து நிற்க அவர் அருகே திரௌபதி வந்து நோக்கினாள். அவள்தான் முதலில் ஜயத்ரதனை அடையாளம் கண்டுகொண்டாள். அஞ்சியவள்போல நெஞ்சில் கைவைத்தாள். அவள் கண்கள் கலங்கி நீரொளி கொள்வதை காணமுடிந்தது.
என்ன நிகழ்கிறதென்றறியாமலேயே தருமன் உடல்நடுங்கிக்கொண்டிருந்தார். குரங்குகள் ஒவ்வொன்றாக இறங்கி வந்து ஓசையில்லாமல் வேலிமேல் குந்தி அமர்ந்தன. திடீரென்று அப்பகுதியெங்கும் பூசணப்பாசி படிந்ததுபோல் ஆயிற்று அவற்றின் சாம்பல்நிறத்தால். பதறிய குரலில் “இளையோனே, என்ன?” என்றார் தருமன். “இதோ கிடக்கிறான் நம் குலக்கொடிமேல் கைவைத்த கீழ்மகன்” என்றான் பீமன். கட்டியிருந்த துணியைப்பற்றித் தூக்கி ஜயத்ரதனை நிற்கச்செய்தான். “உங்கள் தீர்ப்புக்காக உயிருடன் கொண்டுவந்துள்ளேன்.”
ஜயத்ரதனால் நிற்க முடியவில்லை. கால்கள் தொடையிலும் மூட்டிலும் கணுக்காலிலும் எலும்புகள் உடைந்து துணிச்சுருளாக தொய்ந்தன. கால்களுக்கு நடுவே பெரிய பொதிபோல குறிக்காய்கள் வீங்கி நிறைந்திருந்தன. கையெலும்புகள் உடைந்து மணிக்கட்டு முழுமையாக பின்பக்கம் திரும்பியிருந்தது. பற்கள் உதிர்ந்த வாய்க்குள் நாக்கு வீங்கி நிறைந்திருக்க உடலெங்கும் தோல் உரிந்து சதைப்பூச்சு உரிந்து தெறிக்க பல இடங்களில் வெள்ளெலும்பு தெரிந்தது. குருதியூறிவழிய மண்ணும் சருகுத்துகள்களும் கரைந்து வழியலாயின.
“இளையோனே…” என வீரிட்டபடி தருமன் இறங்கி கீழே வந்தார். படியில் கால்தவறி விழப்போக அவரை சகதேவன் பற்றிக்கொண்டான். “என்ன செய்துவிட்டாய்… இளையோனே?” என்று கூவினார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. குரல் அடைத்து கைகள் பதறின. என்ன செய்வதென்று அறியாமல் அங்குமிங்கும் நோக்கி ததும்பி பதறி “இளையோனே… அவனுக்கு நீர் அளியுங்கள்… அவனை படுக்க வையுங்கள்” என்று கூச்சலிட்டார். திரௌபதி படிகளில் இறங்கி ஓடிவந்து “என்ன செய்தீர்கள்? இளையவரே, அவன் ஓர் அன்னையின் மைந்தன் அல்லவா?” என்றாள்.
சகதேவன் சென்று ஜயத்ரதனைப்பற்றி படுக்கவைத்தான். திரௌபதி அருகே அமர்ந்து அவன் தலையை மெல்ல தூக்கி குருதியில் ஒட்டிக்கிடந்த குழலை அள்ளி காதோரம் ஒதுக்கினாள். அவள் கண்ணீர்த்துளிகள் ஜயத்ரதன் முகத்தில் விழுந்தன. விம்மலில் கழுத்து குழிந்தெழுந்து அதிர்ந்தது. நகுலன் ஓடிச்சென்று நீர்க்குடுவையை கொண்டுவந்தான். திரௌபதி அதை வாங்கி அவனுக்கு கொடுத்தாள். வாய் வீங்கி நிறைந்திருந்தமையால் ஜயத்ரதனால் நீரை குடிக்க முடியவில்லை. திரௌபதி சிறுகுழவியை என அவனை தன் மார்பில் மெல்ல அணைத்துக்கொண்டு சுட்டுவிரல் விட்டு நாக்கை அகற்றி இடுக்கில் நீரை விட்டாள்.
நீர் பட்டதும் அவன் உள்வாய் தவித்து உடல் எழுந்து குடுவை நோக்கி வந்தது. அன்றுபிறந்த மகவென அவன் இழுத்து இழுத்து குடித்தான். இருமி குருதித்துண்டங்கள் அவள் முகத்திலும் கழுத்திலும் முலைகள்மேலும் தெறிக்க நெஞ்சக்கூடு உதறிக்கொள்ள உயிர்பிரிவதுபோல நெளிந்தான். கைகள் எலும்புடைந்து நாகங்கள்போல தரையில் கிடந்து புரண்டன. கண்ணீருடன் “என்ன செய்துவிட்டாய், மந்தா…? அவன் அரசன். நம் குலத்தில் பெண்ணெடுத்தவன்” என்றார் தருமன். “என் குலமகள்மேல் கைவைத்தவன்… அதையன்றி வேறெதையும் எண்ணப்போவதில்லை நான்” என்றான் பீமன் உரக்க.
“அவனை விட்டுவிடுக… இளையோனே. அவன் வீரர்களிடம் அவனை ஒப்படையுங்கள். அவர்கள் அவனை கொண்டுசெல்லட்டும். அவன் இறக்கலாகாது…” என்றார் தருமன். அருகே வந்து குனிந்து கைகூப்பி “சைந்தவரே… பெரும்பிழை நிகழ்ந்துவிட்டது. பொறுத்தருள்க… உங்கள் மூதாதையரும் குலதெய்வங்களும் என் குடிமேல் வஞ்சம் கொள்ளாதிருக்கட்டும்…” என்றார். ஜயத்ரதன் இமைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. அவன் அச்சொற்களை கேட்கிறான் என்பது தெரிந்தது. திரௌபதி உதடுகளை அழுத்தி அழுகையை அடக்கிக்கொண்டிருந்தாள்.
“ஆவன செய்க… இளையோரே, ஆவன செய்க… நான் உடனே இவர் தந்தை பிருஹத்காயருக்கும் சிந்துவின் குலமூத்தாருக்கும் பொறுத்தருளக்கோரி ஓலை அனுப்புகிறேன்” என்றார் தருமன். அர்ஜுனன் “ஆணை, மூத்தவரே!” என்றபின் திரும்பி “அவரை முதலில் படுக்கவையுங்கள். புண்கள் மேல் பூச்சிகள் படியக்கூடாது” என்றான். நகுலனும் சகதேவனும் சேர்ந்து ஜயத்ரதனை தூக்கப்போக திரௌபதி ஓடிச்சென்று இரு வாழையிலைகளை வெட்டிவந்தாள். அவற்றை அங்கிருந்த மூங்கில் முடைந்த பீடத்தில் விரித்து அதன்மேல் குளியலுக்கான மூலிகைஎண்ணையை ஊற்றி அவனை படுக்கவைத்தனர்.
அர்ஜுனன் நகுலனிடம் “இளையோனே, செல்க! சிந்துவின் படைகள் அங்கே ஒருங்கிணைந்துவிட்டிருக்கும். அவர்களிடம் தேர்கொண்டுவந்து அரசனை கொண்டுசெல்லும்படி சொல்க!” என்றான். சகதேவனிடம் “விரைந்து சென்று முனிவர்களில் மருத்துவமறிந்தவர்கள் சிலரை அழைத்துவருக!” என்றான். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு வெளியே சென்றனர். தருமன் கால்தளர்ந்தவராக அங்கிருந்த கூடை ஒன்றின்மேல் அமர்ந்து தலையை கைகளால் பற்றிக்கொண்டார். “இது பெரும்பழி… நம் குலத்திற்கும் பழி இது” என்றார். அர்ஜுனன் “நாம் இதை பின்னர் பேசுவோம், மூத்தவரே” என்றான்.
திரௌபதியும் அர்ஜுனனும் எண்ணையை பஞ்சில் முக்கி ஜயத்ரதனின் உடலில் உரிந்திருந்த தோலையும் தசைக்கிழிசல்களையும் ஒற்றி தூய்மைப்படுத்தினார்கள். பீமன் இடையில் கைவைத்து அவளை நோக்கியபடி நின்றான். கைபட்டபோது ஜயத்ரதன் உடலின் ஆழத்திலிருந்து மெல்லிய முனகல் எழுந்தது. அவள் உடலெங்கும் அவன் குருதி படிந்திருந்தது. மலரால் ஒற்றுவதைப்போல மிகமெல்ல அவள் கைகள் அசைவதை அவன் புரியாச்செயல் என நோக்கிக்கொண்டு நின்றான். அர்ஜுனன் நிமிர்ந்து “தாங்கள் செல்லலாம், மூத்தவரே” என்றான்.
பீமன் தரையில் துப்பிவிட்டு “இவனைக் கொல்லாது விட்டமைக்காக வருந்துகிறேன், மூத்தவரே” என்று தருமனிடம் சொன்னான். அர்ஜுனன் “மூத்தவரே, செல்க!” என சற்று எரிச்சலுடன் சொன்னான். “இளையோனே, நான் காட்டான். உங்கள் மெய்யறிதல்கள் எனக்கில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இது ஊழின்கணம். ஆகவே இக்கருணை உங்கள் உள்ளத்திலெழுகிறது. இதன்பொருட்டு நீ எஞ்சிய வாழ்நாளெல்லாம் துயர்கொள்வாய்” என்றபின் தன் இடைக்கச்சையை அவிழ்த்து உதறி தோளிலிட்டபடி நடந்து குடிலை அடைந்து கயிறேணியில் தொற்றி மேலேறிச் சென்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
February 6, 2017
வெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்
நண்பர் மதுசூதன் சம்பத் வெண்முரசின் தீவிர வாசகர். தொடர்ந்து வெண்முரசு குறித்து இணையக்குழுமங்களில் உரையாடுபவர். அவர் வெண்முரசுக்கு ஓர் ஆங்கிலப்பக்கத்தை விக்கிப்பீடியாவில் உருவாக்கி தொடர்ந்து தகவல்களைச் சேர்த்து வருகிறார். மூன்றாண்டுகளாக இப்பணி நிகழ்ந்துவருகிறது [பார்க்க வெண்முரசு விக்கி பக்கம்]
சமீபமாக அப்பக்கத்தை நீக்கவேண்டும் என ஒரு முயற்சி தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. தமிழக விக்கிப்பீடியாப் பொறுப்பாளர்கள் – பெரும்பாலும் இவர்கள் இங்குள்ள தனித்தமிழக ஆர்வலர்கள் – இதற்குப்பின்னால் உள்ளனர் என தெரிகிறது. வெண்முரசு என ஒருநாவலே இருப்பது ஐயத்திற்குரியது என்றும், அப்பக்கத்தில் உள்ளவை பொய்யான தகவல்கள் என்றும் அவர்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவின் ஆங்கில நிர்வாகிகளுக்கு எழுதினார்கள்
அப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு உலகளாவிய இலக்கியப்போக்குகள் குறித்து ஏதும் தெரியாது. தமிழ் ‘ஆர்வலர்களின்’ முறையீட்டை பரிசீலித்தவர் இலக்கியம் என ஏதும் அறியாத ஒர் ஆங்கிலேயர். மைய இலக்கியப்போக்காக எப்போதும் வணிக எழுத்தே இருக்கமுடியும் என்றும், சீரிய இலக்கியத்திற்குச் சிறிய வட்டமே இருக்கமுடியும் என்றும் அவரைச் சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அவர் இணையத்தில் எத்தனைமுறை தேடப்பட்டுள்ளது, எவ்வளவு பிரபலம் என்பதுபோன்ற அளவுகோல்களை மட்டுமே அறிந்தவர்.
அத்துடன் இந்தியா மீதான காழ்ப்பு கொண்டவராகவும் தமிழகம், தமிழ் குறித்து அறியாதவராகவும் இருக்கிறார். அவர் நோக்கில் இது இந்தியர்களின் மிகைவெளிப்பாடு, தமிழ் என்னும் எவருக்கும் தெரியாத இந்திய வட்டார மொழியில் நிகழும் ஏதோ ஒரு முக்கியமற்ற செயல்பாடு. அவரிடம் விவாதிக்க எவராலும் இயலவில்லை. அவர் தமிழ்விக்கிப்பீடியா நிர்வாகிகள் அளிக்கும் தகவல்களை அப்படியே நம்புகிறார். வெண்முரசு என ஒரு நாவல் எழுதப்படவே இல்லை என்பதே அவரது நிலைபாடாக இருந்தது
வெண்முரசு இணையத்தில் வருவதைப்பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் இணையத்தொடுப்புகள் அளிக்கப்பட்டன. அதன்பின் வெண்முரசு என ஒன்று ‘இருப்பதை’ ஒப்புக்கொள்வதாகவும் அது எவ்வகையிலும் முக்கியமான முயற்சி அல்ல என்றும் விக்கி பொறுப்பாளர் வாதிடத் தொடங்கினார். ஏனென்றால் வெண்முரசு என ஆங்கிலத்தில் கூகிளில் தேடினால் பத்தாயிரம் பதிவுகளே சிக்குகின்றன. தமிழில் தேடினால் லட்சம் பதிவுகள் வரை காட்டுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. [பார்க்க விக்கி விவாதங்கள் ]
வெண்முரசு முக்கியமான முயற்சி என்றால் அதைக்குறித்து தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில இதழ்கள், செய்தித்தாள்கள் ஏன் செய்தி ஏதும் வெளியிடவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாளிதழ்களும், பிற வெளியீடுகளும் ஏன் விரிவாக செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடவில்லை, ஏன் விமர்சகர்கள் அதைப்பற்றி எழுதவில்லை என்று கேட்டார். நண்பர்களால் அதற்குப் பதில் சொல்லமுடியவில்லை.
ஏனென்றால் வெண்முரசு குறித்து தமிழகத்திலிருந்து வெளிவரும் எந்த ஆங்கில நாளிதழும், எந்த இதழும் எளிய ஒற்றைவரிச் செய்தியைக்கூட இதுவரை வெளியிடவில்லை என்பதே உண்மை. இம்முயற்சிக்கு ஆர்வமுள்ள வாசகர்கள் வரட்டுமே என்னும் நோக்கில் தொடர்ந்து செய்திகள் அவற்றுக்கு அனுப்பப் பட்டன. ஆனால் ஆங்கில நாளிதழ்களில் உள்ளவர்கள் அச்செய்திகளை பொருட்படுத்தவில்லை.
ஆங்கிலநாளிதழ்களில் பொதுவாக என்னைப்பற்றி, என்நூல்களைப் பற்றி ஒருவரிகூட வருவதில்லை. என்மேல் காழ்ப்பு கொண்டவர்கள் பலர் அவற்றிலுண்டு. இளையராஜா, கமல்ஹாசன் பங்கெடுத்த வெண்முரசு வெளியீட்டுவிழா நிகழ்ச்சியின் செய்திகூட வெளியிடப்படவில்லை.அந்நிகழ்ச்சி குறித்த செய்திகள் வெளியிடப்பட இருந்தபோது அவை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டன
வாரந்தோறும் பல பக்கங்களை இலக்கியத்திற்காக ஒதுக்குபவை இந்த ஆங்கில இதழ்கள். தமிழில் வெளிவரும் சர்வசாதாரணமான நூல்களுக்குக்கூட விரிவான மதிப்புரைகள் வெளியிடுபவை. குறிப்பாக சல்மா, தேவிபாரதி,பெருமாள் முருகன், ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களின் நூல்கள் வெளிவருவதற்கு முன்பிருந்தே செய்திக்கட்டுரைகள் வெளிவரும். வெளிவந்தபின் நாலைந்து மதிப்புரைகள் வெளியிடப்படும். வெண்முரசின் அனைத்து நூல்களும் இவற்றுக்கு மதிப்புரைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மதிப்புரைகள் வெளியானதில்லை.
தமிழ்நாளிதழ்களில் தி ஹிந்து, தினமலர், தினத்தந்தி ஆகிய எந்த நாளிதழும் வெண்முரசு குறித்து எதுவும் வெளியிட்டதில்லை. வெண்முரசு வெளியீட்டுவிழா நிகழ்ந்தபோது நண்பர்கள் முயற்சிசெய்தமையால் தி இந்து தமிழ்நாளிதழின் செய்திப்பக்கத்தில் சங்கர ராமசுப்ரமணியம் என்னை ஒரு சிறிய பேட்டி எடுத்து வெளியிட்டார். அதில் சிலவரிகள் வெண்முரசு குறித்து இருந்தன. அப்பேட்டியும் அதன் பொதுஆசிரியரின் கடுமையான எதிர்ப்பைக் கடந்து வெளிவந்தது. தினகரன் வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் செய்தியாக்கியது. வேறெந்த செய்தியும் வெளிவந்ததில்லை.
ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பிரபல இதழ்கள் மட்டும் அல்ல தடம், தீராநதி, அமிர்தா போன்ற இலக்கிய இதழ்கள்கூட வெண்முரசு குறித்து எதையுமே வெளியிட்டதில்லை. இதழ்களின் பொங்கல் தீபாவளி மலர்களில் எதுவும் பதிவானதில்லை. காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து போன்று என்மேல் கடும் வன்மம் கொண்ட சிற்றிதழ்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை.
இணையத்திலும் மறைமுகமான நக்கல்கள், படிக்காமலேயே எழுதப்படும் ஒற்றைவரிநிராகரிப்புகள், ஆழமற்ற வெறும்கசப்புகள் மட்டுமே அதிகமும் எழுதப்பட்டன. வெண்முரசு வெளிவரத்தொடங்கியபோது அதை அறிமுகம்செய்து ஜடாயு ஆங்கிலத்தில் எழுதிய ஒருகட்டுரை மட்டுமே உள்ளது, அதை ‘ஐயத்திற்குரியது’ எனா விக்கிப்பீடியா தொகுப்பாளர் கருதுகிறார். தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை விக்கிப்பீடியா கருத்தில்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டது
ஆகவே விக்கிப்பீடியாவின் தொகுப்பாளரின் தரப்பின்படி வெண்முரசு என ஒன்று இருப்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார், ஆனால் அது எவ்வகையிலும் முக்கியமான முயற்சி அல்ல. தமிழ்ச்சூழலால் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாதது. ஆகவே அது விரைவில் நீக்கப்படும்.
வெண்முரசு பக்கத்தைவிட விரிவான ஆங்கிலப் பக்கங்கள் கபாலி, [பார்க்க கபாலி விக்கி பக்கம்] பைரவா [பார்க்க பைரவா விக்கி பக்கம்] போன்ற தமிழ் சினிமாக்களுக்கு இருப்பதைக் காணலாம். அத்தனை தமிழ் சினிமாக்களுக்கும் அப்படி விக்கி பக்கங்கள் உள்ளன. பொருட்படுத்தவே படாத படங்களுக்குக்கூட.அவற்றிலுள்ள பெரும்பாலான தகவல்கள் [வசூல் இன்னபிற] பிழையானவை என சினிமாவுக்குள் இருப்பவன் என்றமுறையில் என்னால் சொல்லமுடியும். ஆங்கிலத்தில் எழுதிக்குவிக்கப்படும் சினிமாச்செய்திகள் மற்றும் சினிமா செய்தித்தொடர்பாளர்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை அவை.
தமிழக ஆங்கிலநாளிதழ்கள் நாள்தோறும் பல பக்கங்களுக்கு சினிமாச்செய்திகளை வெளியிடுகின்றன. எந்த ஒரு சாதாரண தமிழ் சினிமாவுக்கும் குறைந்தது பதினைந்து செய்திகளை ஆங்கிலநாளிதழ்கள் வெளியிடுகின்றன. என்னிடம் சினிமாச்செய்திகளைக் கேட்க நாளுக்கு இரு செய்தியாளர்கள் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இன்றையசூழல்
விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது. [பார்க்க பொன்னியின் செல்வன்] ஏன் 2005ல் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற சினிமாவுக்கே விக்கிப்பீடியா பக்கம் உள்ளது [பார்க்க பொன்னியின் செல்வன் விக்கி பக்கம் ]. இங்குள்ள அத்தனை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் வெண்முரசைவிட மிகப்பெரிய பக்கங்கள் அந்த நிர்வாகிகளால் நடத்தப்படுகின்றன. நீயா நானா [பார்க்க நீயா நானா விக்கி பக்கம்] , மானாட மயிலாட [பார்க்க மானாட மயிலாட விக்கி பக்கம்] போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வெண்முரசைவிட பெரிய பக்கங்கள் உள்ளன. இன்றுவரை எந்த முறையீடும் தமிழிலிருந்து சென்றதில்லை.
விக்கிபக்கம் நீக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெண்முரசு அதற்கான வாசகர்களுடன் முன்சென்றுகொண்டுதான் இருக்கிறது. விக்கிப்பக்கம் உருவாக்கப்பட்டது நண்பர்களின் ஆர்வத்தால். ஆர்வமுள்ளவர்கள் வாசிப்புக்கு வரட்டுமே என்பதுதான் நோக்கம்.
வெண்முரசு எழுதப்பட ஆரம்பித்தநாள் முதலே பல்வேறுவகையான காழ்ப்புகளை மட்டுமே சந்தித்துக்கொண்டுள்ளது.பேரிதழ்ச்சூழலில் அறியாமையும் சிற்றிதழ்ச்சூழலில் புறக்கணிப்பும் நீடிக்கிறது. அதை முன்னரே எதிர்பார்த்திருந்தமையால் எனக்கு ஏமாற்றமும் இல்லை. ஆனால் அது வெற்றிகரமாக நிறைவை நோக்கிச் செல்லும் இத்தருணத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையான தாக்குதல்கள் அதன்மேல் நிகழ்கின்றன. இது அதில் ஒன்று.
வெண்முரசு எழுதப்படத் தொடங்கியபின்பு ஒரே ஒரு விழா மட்டுமே அதற்காக நடத்தப்பட்டது. அதற்கே மிகப்பெரிய அளவில் ’எதிர்ப்பு’களும் நக்கல்களும் எழுந்து வந்தன. புத்தகத்தை விற்கும் முயற்சி என குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு நான் விரிவான விளக்கங்கள் அளிக்கவேண்டியிருந்தது. அனைத்தையும் விட அவ்விழா முடிந்ததுமே பதிப்பாளரை அணுகி அவரிடம் கோள்சொல்லி அவரை பதிப்பு முயற்சியில் இருந்தே விலக்கினார்கள் நான்கு எழுத்தாளர்கள்! விழா முடிந்ததுமே நெருக்கடி ஏற்பட்டு பதிப்பாளர் மாறநேர்ந்தது
இப்போது இப்பக்கத்தை நீக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி தமிழகத்தில் இருந்து எடுக்கப்படுவதற்கான காரணம் ஒன்றே, வேறு எவ்வகையில் புறக்கணித்தாலும் இதன் பக்க அளவு காரணமாகவே இது புறக்கணிக்கப்படமுடியாதது. இதன் பெருமுயற்சியாவது அங்கீகரிக்கப்படவேண்டும். ஆகவே அதை ‘இல்லாமலாக்க’ முயல்கிறார்கள். வெண்முரசை நீக்கும் முயற்சியில் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிட்டதாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். வாழ்க.
என்னைப்பொறுத்தவரை இது பிரச்சினையே அல்ல. வெண்முரசு வெளிவந்தநாட்களில் இங்குள்ள நாளிதழ்கள், வார இதழ்கள், இலக்கிய இதழ்கள், விமர்சகர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கான ஆவணமாகவே, நாளைய வாசகர்களுக்காக, இதைப் பதிவுசெய்கிறேன். வெண்முரசுப் பக்கம் நீக்கப்படுவதையும் தமிழ்ச்சூழலின் அரைகுறைகள் ஒரு வெற்றி எனக் கொண்டாடுவர் என நான் அறிவேன். அதுநிகழட்டும். வெண்முரசின் தளம் வேறு. இதன் கலை, பண்பாட்டு முக்கியத்துவத்தால் மட்டுமே இது நீடிக்குமென்றால் அதுவே முறையானது.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா
டார் எஸ் ஸலாமில் பணி துவங்கி, சில நாட்களில் வீடு பார்த்துக் குடியேறி விட்டிருந்த காலம். குறைந்த பட்ச சமையல் நிபுணன் நான். மின் பாத்திரத்தில் சோறு ஆக்கிக் கொள்வேன். சாம்பாரும், கோழிக்கறியும் செய்ய வரும். இது போதும் இப்பிறவிக்கு என்னும் ஞான நிலையில் உள்ளவன். அரிசியைக் கழுவி, மின் பாத்திரத்தில் வைத்து விட்டு, பேரங்காடியில் வாங்கி வந்த சிக்கனைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சக்திக் கோழிக்கறி மசாலாப் பொடியைத் தடவி வைத்து விட்டு, வெங்காயம் தக்காளி நறுக்கி விட்டு, தேங்காயை எடுத்த போது தான் உணர்ந்தேன் –
எப்படி உடைப்பது? உடைக்கக் கல் இல்லை. அரிவாளும் இல்லை. சிறு தேக்கரண்டி மட்டும் தான் இருந்தது. கொஞ்சம் தேடியதில், ஒரு முள் கரண்டி தென்பட்டது. வாசல் படியில் உடைத்தால், பதித்த சுடுகல் தளம் உடைந்து விடும். எடுத்துக் கொண்டு போய், சாலையில் ஏதேனும் கல் இருந்தால் உடைக்கலாம் என்னும் யோசனை வெட்கமாக இருந்தது. அக்கம் பக்கம் யாரிடத்திலும் கேட்கவும் முடியாது. தான்ஸானியர்களின் சமையலில் தேங்காய் இருப்பதில்லை. அப்போதுதான் திரு. ஐசக் நியூட்டன் நினைவுக்கு வந்தார். தேங்காயைத் தலைக்கு மேலிருந்து, புவியீர்ப்பு விசைக்குக் கொடுத்தேன். டொம் என விழுந்து பல துண்டுகளாகச் சிதறியது, தரைக்கு ஒன்றும் ஆக வில்லை. இப்படியாக என் முதல் நாள் சமையல், பள்ளிபாளையம் கோழிக்கறியுடன் ஜோராகத் துவங்கியது. பின்னர் என் சாரதி ம்ஷாங்காவின் உதவியோடு, ஒரு காங்க்ரீட் கல் பொறுக்கி வந்தேன்.
அதன் பின்னும் தேங்காயுடன் பெரும் சிக்கல் ஒன்று இருந்தது. அது அழுகல். மிகப் புதிதாக வாங்கி வந்தால் கூட உள்ளே அழுகல் இருந்தது. இங்கே தேங்காய்களை, முழுக்க மொட்டையடித்து, விக்கு விநாயக் அவர்களின் கடம் போல வைத்திருப்பார்கள். இந்த இடத்தில் இன்னொரு சோகக் கதையையும் சொல்லியாக வேண்டும். ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தோம் – நானும் அவனும். ஓரத்தில் இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர் – ‘வழுக்கேய்’ எனக் கூவினார். ‘அப்பா. உன்னியக் கூப்பிடாறார்பா’ என்றான் என் வீட்டில் வளரும் தீவிரவாதி :(. ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் எச்.ராஜாவிடம் பிடித்துக் கொடுக்கப் போகிறேன்.
பல நாட்கள் செய்த தீவிர அழுகல் ஆராய்ச்சியின் பலனாக, அழுகல் ஏன் எனக் கண்டுபிடித்தேன். பிடித்ததன் பலன் மயிர்க் கூச்செறிய வைத்தது (புனைவுதான்). – தமிழர்கள் ஏன் தேங்காய்க்குக் குடுமி வைக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மையை அன்றுதான் அறிந்தேன்.
தேங்காயின் மூன்று கண்கள், மிகப் பலவீனமான சுவற்றைக் கொண்டவை. அவை, வெளிச் சூழலை நேரடியாகச் சந்திக்கும் போது, உள்ளிருக்கும் நீர், அந்தப் பலவீனமான சுவற்றின் வழியாக, வெளியிருக்கும் காற்றுடன் உறவாட, காற்றில் இருக்கும், பூஞ்சைக் காளான் உட் புகுந்து கள்ளக் காதலில் ஈடுபடுகிறது என. நம் ஊரில், அந்தக் கண்களைத்தான் குடுமி வைத்துக் காக்கிறார்கள்.பர்தா போல. கள்ளக் காதலின் சாத்தியக் கூறுகள் குறைந்து, நீண்ட நாள் தேங்காய் பத்திரமாக இருக்கிறது. ஆகா. என்னே தமிழனின் தீர்க்கதரிசனம். அறிவியல் அறிவு. வைகோ விடம் சொல்லி, அடுத்த முறை, மேடையில். கிரேக்க நாகரீகமும், தேங்காய்க் குடுமியும் என்னும் பொருளில் பேருரையாற்றச் சொல்ல வேண்டும். இல்லையெனில், அரவிந்தன் நீலகண்டன், அது ரிக் வேத காலத்தில் இருந்த ஒரு அறிவியல் உண்மை என நிறுவி விடும் அபாயம் இருக்கிறது.
கண்டுபிடித்தவுடன், “இது பொறுப்பதில்லை தம்பீ. அரிவாள் எடுத்து வா. தேங்காய்க்குக் குடுமி வைப்போம்” என அங்காடிக்கு விரைந்தேன். பேரங்காடியில் கை விரித்து விட்டார்கள். அருகில் உள்ள சிற்றங்காடிக்குச் சென்றேன். அங்கே சிறு சிக்கல். நானும் அவளும் (அங்காடிக்கார தான்ஸானியா மாம்மா) உரையாடிக் கொள்ள ஒரு பொது மொழி இல்லை.
வேறு வழியில்லை. ஆங்கிலத்தில், மிக மெதுவாகச் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட அந்த மாம்மா சொன்னாள் “ஹம்னா” – எனக்குப் புரிந்த வரையில், முடியாது என அர்த்தம். ஆனால், உண்மையில் நான் சொல்வது அவருக்குப் புரியாது என்பது புரிந்தது.
எடுத்தேன் அடுத்த அம்பை. வாய் மொழி பயனிலாப் பொழுதில், உடல்மொழி பயனுடைத்து என வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே.(எப்ப?)
நான், இது நாள் வரை கண்டு களித்திருந்த, பத்மா சுப்ரமணியம், அலர்மேல் வள்ளி, லீலா ஸேம்ஸன் போன்றோரை மனதில் பரத நாட்டிய பாணியில் வணங்கி விட்டு, நயன, ஹஸ்த பாவங்களைப் பிரயோகித்தேன். அந்தம்மாள், கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, திரும்பி, தலையில் மஞ்சள் நிறக் குடுமி (விக்) வைத்திருந்த பணிப் பெண்ணிடம் ஏதோ சொல்லி கெக்கே பிக்கே எனச் சிரித்தாள். (பழந்தமிழர் பாணியில் அவள் விழுந்து விழுந்து சிரிக்க வில்லை. விழுந்தால், தரை சேதமாவதோடு, சிறு பூமியதிர்வு நிகழும் வாய்ப்பு உள்ளதால். தான்ஸானியா மாம்மா ஒரு சூழியல் போராளி) தமிழனுக்கு இப்படி ஒரு மானக்கேடா எனச் சினந்து, ‘தலையில் முடி இல்லாததற்கு, செயற்கைக் குடுமி வைத்துக் கொள்ளும் உங்களுக்கு, தேங்காய் பழுதாகாமல் இருக்க, இயற்கைக் குடுமி வைக்கும் நுட்பம் தெரிய வில்லையே. அற்பப் பதர்களே’ என மனதுக்குள் திட்டி விட்டு, சோகமாக வந்து விட்டேன்.
யார் வருவார் தேங்காய்க்குக் குடுமி வைக்க? பாரதிராஜா பட நாயகி, இண்டர்வெல்லில், மைல்கல் மீது அமர்ந்து காத்துக் கொண்டிருப்பது போல உணர்கிறேன்.
தளபதி பாஷையில் சொல்வதெனில் ‘ I am waiting’
பாலா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
7. பெண்கோள் பெற்றி
அர்ஜுனன் காட்டினூடாக வீழ்ந்த மரங்களை தாவிக்கடந்தும் முட்புதர்களை வகுந்தும் தங்கள் குடிலை சென்றடைவதற்குள்ளாகவே அங்கே பீமன் சென்றுவிட்டிருந்தான். அவனைத் தொடர்ந்து அதேபோல மரக்கிளைகள் வழியாகவே முண்டனும் அங்கு சென்றிறங்கியிருந்தான். அர்ஜுனன் தோட்டத்திற்குள் நுழைந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டு உரத்த குரலில் “பார்த்தா, மூத்தவர் கலங்கிப்போயிருக்கிறார். தேவி தனியாக கோமதிக்கு சென்றதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. முண்டன் சொன்னபிறகே அறிந்திருக்கிறார்” என்றான். “நாம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை” என்றபடி அர்ஜுனன் வெளியே ஓடினான்.
அவர்கள் கோமதிக்கரையை அடைந்தபோது முன்னரே குரங்குகள் அங்கு சென்றுவிட்டிருந்தன. “இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தாள் அரசி?” என்றான் அர்ஜுனன். “இங்குள்ள பிற முனிவர்துணைவிகளுடன் சேர்ந்து நீராட அவள் வருவதுண்டு” என்று பீமன் சொன்னான். “அவளுக்கு பெண்மொழி பேசுவதற்கு இங்கு மட்டுமே இடமுள்ளது.” நாணல்பெருக்குக்கு அப்பால் கோமதி அலையிளகி ஒளியுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் ஒளியலை ததும்பிய இலைத்தழைப்புகொண்ட மரங்கள் தழைந்து நீரில் விழுந்த நிழலை வருடிக்கொண்டிருந்தன.
சதுப்புக்கரையில் குரங்குகள் தரையை முகர்ந்தும் எம்பிக்குதித்தும் கூச்சலிட்டன. பீமன் அவற்றை அணுகி அவற்றின் மொழியிலேயே பேசிவிட்டு அர்ஜுனனிடம் “தம்பி, இவை தேவியின் காலடிகள். இன்னொரு காலடியும் இங்கு உள்ளது…” என்றான். அவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த நகுலன் அக்காலடிகளை குனிந்து நோக்கி “அவை அப்பாலுள்ள முனிவர்காட்டில் வாழும் சுதர்மரின் துணைவி தாத்ரேயியின் காலடிகள் என நினைக்கிறேன். பாதத்தடங்களின் நடுவே குழி ஆழ்ந்துள்ளது. இரு காலடிகளும் சற்று விலகி விழுந்துள்ளன. அவள் கால்கள் முதுமையால் வளைந்தவை என்பதைக் காட்டுகிறது இது” என்றான்.
அப்பால் விழுந்துகிடந்த அரசியின் ஆடைகளின் அருகே குரங்குகள் எம்பி எம்பிக் குதித்து ஓசையிட்டன. பீமன் “அரசியின் ஆடைகள்தான்… அங்கே புரவிக்குளம்புகள் தெரிகின்றன” என்றான். அவர்கள் சதுப்பைக் கடப்பதற்காகப் போடப்பட்டிருந்த கற்பாளங்களில் மிதித்துத் தாவி ஓடினார்கள். “இன்னொரு காலடி! இது முதியவனுக்குரியது!” என்றான் நகுலன். “இங்கே தேவியும் வந்து நின்றிருக்கிறாள். உடன் தாத்ரேயியும் இருந்திருக்கிறாள்.” மேலும் ஏறிச்சென்றபோது ஆற்றங்கரையில் மரங்களின் நடுவே சென்ற செம்மண் பாதையில் மிதித்துச் சுழன்று வட்டம் அமைத்த புரவிக்குளம்படித் தடங்களை கண்டனர்.
“இவற்றைத்தான் நான் பார்த்தேன்…” என்றான் மூச்சிரைக்க வந்த முண்டன். நகுலன் குனிந்து நோக்கியபடி “பழுதற்ற நிகருடல்கொண்ட அரசப்புரவிகள் ஏழு. எஞ்சியவை எடைமிக்க படைப்புரவிகள். மொத்தம் நாற்பத்தேழு குளம்புச்சுவடுகள்” என்றபடி முன்னால் ஓடினான். “அப்பாலெங்கோ தேர் நின்றிருக்கவேண்டும். பெரும்பாலும் அங்கே வணிகச்சாலையில் அதை நிறுத்திவிட்டு புரவிகளை மட்டும் கொண்டுவந்திருக்கிறார்கள்.” கைசுட்டி “ஏழு அரசப்புரவிகளில் ஒன்றின் மேல் மட்டுமே அமர்வு இருந்திருக்கிறது… அவன் ஓர் அரசன்!”
“தடம் நோக்கி குரங்குகள் செல்லட்டும். உடன்செல்க, மூத்தவரே!” என அர்ஜுனன் ஆணையிட்டான். “செல்பவர்களைத் தாக்கி புரவிகளை மட்டும் கைப்பற்றி கொண்டுவருக! நமக்கு இக்கணம் தேவையானவை புரவிகள்.” குரங்குகளும் பீமனும் முண்டனும் கிளைகளில் தொற்றி ஏறி ஊசலாடி பறந்து பசுமைக்குள் புதைந்து மறைந்தனர். அவர்களுக்குப் பின்னால் தருமனும் சகதேவனும் வந்தனர். சகதேவன் “அம்புகள் கொண்டுவந்துள்ளேன், மூத்தவரே” என்றான். அவற்றைப் பெற்றுக்கொண்டு அர்ஜுனன் முன்னால் ஓடினான்.
தொலைவில் சீழ்க்கை ஒலி கேட்டது. பின்னர் குதிரைகளின் குளம்போசை. நகுலன் “ஒழிந்த குதிரைகள் எட்டு… மூத்தவர்தான் கொண்டுவருகிறார்!” என்றான். பீமன் ஒரு குதிரையில் அமர்ந்து பிற குதிரைகளை கடிவாளங்களைப் பிணைத்துக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்து வந்தான். “இறுதியாகச் சென்ற குழுவை வீழ்த்திவிட்டேன், பார்த்தா. அவர்கள் அதை அறிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான். வழியிலேயே முண்டனும் குரங்குகளும் அரண்நிற்கின்றனர்” என்றான்.
அர்ஜுனன் ஒரு சொல் உரைக்காமல் சிட்டுக்குருவிபோலப் பறந்து எழுந்து புரவிமேல் ஏறி கடிவாளத்தை பற்களால் கடித்துக்கொண்டு காலால் புரவிப்பள்ளையை தூண்டினான். அது கனைத்தபடி முன்குளம்பு தூக்கி எழுந்து பிடரிமயிர் அலைய பாய்ந்து ஓடியது. குளம்புகள் நிலமறைந்து முழங்க வால்சுழற்றிப் பாய்ந்து செல்லும் அப்புரவியைத் தொடர்ந்து பீமனும் நகுலனும் சகதேவனும் தருமனும் புரவிகளில் விரைந்தனர். காடுகள் குளம்போசையை எதிரொலித்தன. பறவைகள் அஞ்சி எழுந்து வான் கலைத்தன.
தொலைவில் புரவிகளின் குளம்படியோசை கேட்கத்தொடங்கியதும் அர்ஜுனன் அம்புமுனை சூழ்கை அமைக்கும்படி மூன்றுவிரல் செய்கை காட்டிவிட்டு முன்னால் சென்றான். முன்னால் சென்றவர்களால் சாலையில் எழுந்த புழுதி அப்போதும் அடங்கியிருக்கவில்லை. பீமனால் தாக்கப்பட்ட படைவீரர்கள் நால்வர் சாலையிலேயே தலையுடைந்து கைகால்கள் வலித்துக்கொள்ள அடிபட்ட நாகமென அசைந்தபடி கிடந்தனர். இருவர் இடையுடைந்தவர்கள்போல செயலற்ற கால்களை இழுத்து தவழ்ந்து ஓரமாக சென்றுகொண்டிருந்தனர். இருவர் முன்னரே குருதி கக்கி இறந்துவிட்டிருந்தனர்.
சாலையில் கிடந்தவர்கள் மேல் குதிரைகள் மிதித்துச்செல்ல அவர்கள் அலறித் துடித்தபடி எழுந்து அமைந்தனர். குதிரைகள் மேலும் மேலும் மிதித்துச் செல்ல அவர்களின் உடல்கள் சிதைந்து அசைவழிந்தன. செல்லும் விசையிலேயே நகுலன் அம்புகளைச் செலுத்தி எழுந்து விலகியவர்களை கொன்றான்.
தேர்ச்சகடங்களின் ஓசை கேட்டது. “தேரிலேறிவிட்டனர்!” என சகதேவன் கூவினான். பீமன் “ஆம், ஏழுபுரவிகளின் தேர் என்றால் விரைவு மிகுந்திருக்கும்” என்றான். அவர்கள் காட்டின் நடுவே செந்நிற நீர் ஓடிய ஆறெனக் கிடந்த சாலையை வந்தடைந்தனர். புழுதிப்படிவில் குளம்புத்தடங்கள் சீராக நிரைகொண்டு பறக்கும் சிறு குருவித்தொகை தென்திசைநோக்கிச் செல்லும் நீட்சியென பதிந்திருந்தன. நடுவே தேர்ச்சகடத் தடம் இரட்டைக்கோடுகளென தெரிந்தது. நகுலன் நோக்கியதுமே “அது யவனத்தேர், விரைவுமிக்கது. அதிர்வுவிற்கள் மிகுந்ததென்பதனால் வேர்களிலும் கற்களிலும் ஏறிச்செல்ல உகந்தது” என்றான்.
“விரைக! அதைப் பிடித்தாகவேண்டும்” என்றான் பீமன். நகுலன் “இப்புரவிகள் எளிதில் களைப்பவை. எடைமிக்க படைப்புரவிகள் இவை” என்றான். “அவர்களை விட்டுவிடமுடியாது. இன்சுனையை நாய் நக்குமென்றால் நாம் இருந்து பயனில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் திரும்பிநோக்காமல் சாலையிலேயே விரைந்தான். சாலையோரம் விழுந்துகிடந்த ஓர் உடலைச்சுற்றி குரங்குகள் கூச்சலிடுவதை தொலைவிலேயே அர்ஜுனன் கண்டான். அருகணைந்ததும்தான் அது ஆடைகலைந்து புழுதியில் புரண்டுகிடந்த முதியவள் என்பதை உணர்ந்தான்.
“தாத்ரேயி” என நகுலன் கூவினான். அர்ஜுனன் பாய்ந்திறங்கி அவளை அள்ளித்தூக்கி தலையை உலுக்கி “அன்னையே, சொல்க! என்ன நிகழ்ந்தது? யார் அவர்கள்?” என்றான். அவள் தலையில் குருதி வழிந்தாலும் அடிபட்டிருக்கவில்லை. “என்னை புரவியிலிருந்து தூக்கி வீசினர்” என்றாள். “யார்?” என்றான் அர்ஜுனன். “அவர் சிந்துநாட்டரசர் ஜயத்ரதர்!” என்றாள் தாத்ரேயி. “சொல்க… என்ன நடந்தது?” என்றான் பீமன்.
“நாங்கள் நீராடிக்கொண்டிருந்தோம். சாலையில் புரவிகளில் ஒரு அரசப்படை செல்வதைக் கண்டோம். அதன் முதற்புரவியில் இருந்த அரசன் தேவியை நோக்கியபடியே சென்றான். அவன் நோக்கு கண்டு அரசி உளம் கலங்கி ‘சென்றுவிடுவோம், அன்னையே’ என்று சொல்லி துணிகளை சுருட்டிக்கொண்டு கிளம்பினார். நாங்கள் சதுப்பைக் கடக்கும்போது ஒரு முதியவன் எங்களை நோக்கி வந்தான். தன்னை சிந்துநாட்டரசர் ஜயத்ரதரின் அமைச்சனாகிய கோடிகாஸ்யன் என்று அறிமுகம் செய்துகொண்டான். சிந்துநாட்டரசர் சால்வநாட்டு இளவரசியை மணம்புரிவதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும் தேவியைக் கண்டு காமம்கொண்டிருப்பதாகவும் சொன்னான்.”
தருமன் தலையசைத்து “அப்படியென்றால் அவன் பெரிய படையுடன்தான் வந்திருப்பான்… மிக அருகே நாட்டு எல்லையில் அவன் படை இருக்கிறது… இன்னும் சற்றுநேரத்தில் அங்கே சென்றடைந்துவிடுவான்” என்றார். “ஆம், படைகளை மையச்சாலையில் வரச்சொல்லிவிட்டு காட்டுவழியில் குறுக்காக சென்றபோதுதான் எங்களை பார்த்திருக்கிறார் சிந்துவின் அரசர். கோடிகாஸ்யன் ஜயத்ரதரின் புகழைச்சொல்லி அவருடன் கிளம்புவதே நல்லது என்றான். அரசிக்கு அரண்மனையும் பெருஞ்செல்வமும் முடிசூடும் குடிநிலையும் மைந்தருக்கு தந்தைபெயரும் அளிப்பதாகச் சொன்னான்.”
“அரசி சினந்து அவனிடம் ‘இழிமகனே, என்னை எவரென்று எண்ணினாய்? நான் மணமானவள். இங்கு ஊழ்கத்திலமர்ந்திருக்கும் முனிவர்களின் துணைவி’ என்றார். அவன் மேலும் சொல்ல முயன்றபோது ‘சீ! விலகு… இக்கணமே உன்னை கொல்வேன்’ என்று கடுஞ்சொல் சொல்லி விலக்கிவிட்டு ஓடினார்” என்றாள் முதுமகள். சகதேவன் அருகே இருந்த சுனையிலிருந்து கொண்டுவந்த நீரை அருந்தியபோது அவளுக்கு குரலெழுந்தது.
“அதற்குள் ஜயத்ரதரும் இரு வீரர்களும் புரவிகளில் வந்து அவரை அணுகினர். ஜயத்ரதர் ‘அழகி, உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன். நீ எளிய முனிமகள் அல்ல, அரசிபோலிருக்கிறாய்’ என்றார். அரசி ‘ஆம், நான் பாண்டவர்களின் துணைவி. துருபதன் மகள். ஐந்து மைந்தருக்கு அன்னை. விலகிச்செல்! நிகரற்ற வீரர்களின் பகையை ஈட்டாதே’ என்றார். ஜயத்ரதர் நகைத்தபடி ‘நன்று, நான் முனிமகளைக் கவர்ந்தேன் என்னும் பழி என்னைச் சேராது. தீச்சொல்லை அஞ்சவேண்டியதுமில்லை. பெண்கோள் பெற்றி அரசனுக்கு அணியே’ என்றபடி அவரை பற்றவந்தார்.”
“அரசியிடம் படைக்கலம் இருக்கவில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, இங்கே அவர் படைக்கலமேதும் வைத்திருக்கும் வழக்கமில்லை” என்றாள் முதுமகள். “கையை பற்றியதும் அரசி உரக்கக் கூவியபடி திமிறினார். ‘உன் சங்கை அறுப்பேன். என் குலத்தின் இறுதிக்குருதி இருக்கும்வரை உன் குலம் வாழ விடமாட்டேன்’ என்று கூவினார். அரசர் நகைத்துக்கொண்டே ‘ஐவருக்கும் துணைவியானவள் கற்பின் பெயரால் சொல்லெடுக்கலாகுமா, தேவி?’ என்றார்.”
“இன்னொருவன் என்னைப்பற்றி தூக்கி அவன் குதிரைமேல் அமரச்செய்து ‘ஓசையின்றி குதிரையில் ஏறி அமர்க! ஒரு கணம் பிந்தினாலும் இக்கிழவியின் தலை தனித்துக்கிடக்கும்’ என்றான். தேவி என்னை நோக்கி திகைத்தபின் தணிந்து ‘நன்று, அவரை ஒன்றும் செய்யவேண்டாம்’ என்றார். அவர் புரவியில் ஏறப்போனபோது ‘அரசி, வேண்டாம். ஓசையிடுங்கள். எவரேனும் கேட்கக்கூடும்… என்னை எண்ணாதீர்கள்’ என நான் கூவினேன். ‘இல்லை, என் கொழுநர் தேடிவருவார்கள்…’ என்றபடி அவரே ஏறி புரவிமேல் அமர்ந்தார்.”
“எங்களை இங்கே கொண்டுவந்ததும் அவரை பன்னிருவர் பாய்ந்து பற்றிக்கொண்டு கயிறுகளால் சேர்த்துக்கட்டி தூக்கி தேரில் ஏற்றினர். நான் ஓலமிட என்னை குதிரையிலிருந்து தூக்கி வீசினர்” என்றாள். பீமன் “நாம் இங்கு கதைகேட்டு நின்றிருக்கப்போகிறோமா?” என்று கூவினான். “மூத்தவரே, இங்குள்ள மிக உயர்ந்த பாறையுச்சிக்கு என்னை இட்டுச்செல்க!” என்றான் அர்ஜுனன். “பாறையுச்சிக்கா?” என்ற பீமன் “நன்று… என்னுடன் வருக!” என்றான். “நகுலனும் சகதேவனும் சாலையிலேயே தொடர்ந்து ஜயத்ரதனின் படைவரை வந்துசேரட்டும். மூத்தவர் இம்முதியவளைக் கொண்டுசென்று அவள் குடில்சேர்த்து மருத்துவர்களிடம் ஒப்படைக்கட்டும்” என்றான் அர்ஜுனன். “குரங்குகள் முடிந்தவரை விரைந்துசென்று அவர்களின் செல்கையை தடைசெய்யட்டும்…” திகைத்து ஏதோ சொல்லப்போன தருமனை திரும்பிப்பார்க்காமல் அர்ஜுனன் பீமனுடன் புரவியில் விரைந்தான்.
அவர்கள் பக்கவாட்டில் பாய்ந்து புதர்காட்டுக்குள் ஊடுருவிச்சென்றனர். புதர்கள் அவர்களை முழுமையாக மூடிக்கொண்டன. பீமன் சவுக்கால் புரவியை அடித்து அடித்து முன்செலுத்த அர்ஜுனன் புரவி அவன் எண்ணத்தை தான் அடைந்து உடன்பாய்ந்தது. அவர்களைத் தொடர்ந்து நான்கு குரங்குகள் தலைக்குமேல் பாய்ந்துவந்தன. “இங்குள்ளது பெரும்பாறை ஒன்று. அதன் உச்சியிலுள்ள தேவதாரு மிகப்பெரிது. முழுக்காட்டையும் பார்க்கமுடியும்” என்று பீமன் திரும்பி கைசுட்டி சொன்னான்.
பாறையருகே குதிரையை நிறுத்திவிட்டு அர்ஜுனன் இறங்கி பாறைச்சரிவில் ஓடி ஏறினான். பீமனும் குரங்குகளும் நான்குகால்களில் அவனை முந்திச்சென்றார்கள். செங்குத்தாக உருண்டேறிய பாறைப்பரப்பில் தாவிச்சென்ற குரங்குகள் பீமனை கைபற்றி மேலே தூக்க அவன் ஏறியதுமே அர்ஜுனனை ஒற்றைக்கையில் தூக்கி மேலே எடுத்தான். மேலும் மேலுமென பாறைச்சுவர்கள் எழுந்து வந்தன. குரங்குகளுக்கு அவற்றின் விரிசலும் பொருக்குமே பற்றிக்கொள்ள போதுமானதாக இருந்தது. உச்சியில் ஒரு பசுங்கோபுரமென எழுந்து நின்றிருந்தது தேவதாரு.
குரங்குகள் அதில் பற்றி ஏறி அர்ஜுனனை மேலே கொண்டுசென்றன. உச்சிக்கிளையில் அவன் காலிட்டு அமர்ந்தான். “தெரிகிறதா, இளையோனே?” என்றான் பீமன். “ஆம்” என்றபடி அர்ஜுனன் வில்லை எடுத்தான். “நெடுந்தொலைவு சென்றிருப்பார்கள். அம்புகள் அத்தனை தொலைவுக்கு செல்லமுடியுமா என்ன?” என்றான் பீமன். அர்ஜுனன் நீண்ட அம்பு ஒன்றை எடுத்தான். கண்களை மூடிக்கொண்டு உளம்கூர்ந்து அம்பை பொருத்தினான். வில் இழுபட்டு நீண்டு பாம்புச்சுருள்போலவே ஆகியது. வீணைநரம்பின் விம்மலோசை கேட்டது. அம்பு சென்றுவிட்டிருப்பதை பீமன் உணர்ந்தான்.
“என்ன ஆயிற்று?” என்றான் பீமன். “ஒரு புரவி சரிந்துவிட்டது” என்றான் அர்ஜுனன். மீண்டுமொரு அம்பு சென்றது. “இன்னொரு புரவி” என்றான். மூன்றாவது அம்பில் “அச்சு” என்றபின் கீழே இறங்கத்தொடங்கிய அவனிடம் “அவனை கொன்றிருக்கலாமே” என்றான் பீமன். “ஒளிந்திருந்து கொல்ல நான் ராகவராமன் அல்ல” என்றபடி மரத்திலிருந்தே புரவிமேல் பாய்ந்தான். “அவர்கள் புரவிகளை மாற்றி அச்சு பொருத்தி மீண்டும் கிளம்புவதற்குள் நாம் அவர்களை பிடித்துவிடலாம்” என்றபடி புதர்கள்மேல் தாவிச்சென்றான். “ஆம், அவனை என் கைகளால் அறையவேண்டும்” என்றபடி பீமன் உடன் பாய்ந்தான்.
தொலைவிலேயே அவர்களின் குளம்படிகள் அணுகுவதை ஜயத்ரதன் கேட்டுவிட்டான் என்பதை அங்கே எழுந்த பரபரப்பு காட்டியது. அப்போதுதான் அவர்கள் புரவிகளை கட்டிமுடித்திருந்தனர். ஜயத்ரதன் தேரில் பாய்ந்தேறியபடி கைகளை நீட்டி ஆணையிட அவன் படைவீரர்கள் விற்களில் நாணேற்றியபடி புரவிகளில் திரும்பி அவர்களை நோக்கி வந்தனர். அர்ஜுனனின் நாண் மிகமெல்ல விம்மிக்கொண்டிருப்பதைத்தான் பீமன் கேட்டான். மெல்லிய திடுக்கிடல்களுடன் ஒவ்வொருவராக புரவியிலிருந்து விழுந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே கழுத்தின் நரம்பில் அம்பு பாய்ந்திருந்தது. அனைவருமே இடம்சரிந்து விழுந்து புழுதியில் துடித்து ஓய்ந்தனர்.
ஜயத்ரதனின் தேர் முழுவிசையை அடைந்துவிட்டிருந்தது. அதன் சகடங்களுக்குப் பின்னால் தெறிக்கும் கூழாங்கற்களை காணமுடிந்தது. தேர்த்தட்டில் இருக்கைக்குக் கீழே கைகள் கட்டப்பட்டு திரௌபதி படுத்திருப்பது மரவுரியின் இளஞ்சிவப்பு வண்ணம் மட்டுமாகத் தெரிந்தது. அர்ஜுனனின் அம்புகள்பட்டு ஒவ்வொரு வீரனாக உதிர திகைத்துப்போன குதிரைகள் கனைத்தபடி சுற்றிவந்தன. அருகணைந்த அர்ஜுனன் தன் களைத்த குதிரையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவ பீமனும் அவ்வாறே செய்தான். தன்னைச் சூழ்ந்துவந்த அத்தனைபேரும் அம்புபட்டு வீழ்ந்ததை ஜயத்ரதன் கண்டான்.
தனித்துவிடப்பட்டதை உணர்ந்ததும் ஜயத்ரதன் புரவிகளை சவுக்கால் வெறியுடன் அறைந்து ஓடவிட்டான். ஆனால் அது ஒருவர் செல்லவேண்டிய விரைவுத்தேர். இருவரின் எடையால் புரவிகள் மூச்சுத்திணறத்தொடங்கின. ஜயத்ரதன் திரௌபதியை காலால் உருட்டி கீழே போட்டான். “தேவி!” என பீமன் கூவினான். “புரவிகள் மிதித்துவிடலாகாது, இளையோனே” என்று கூச்சலிட்டபடி அணுகி அதே விரைவில் இடைவளைத்து குனிந்து திரௌபதியை தூக்கி மேலேற்றிக்கொண்டான். அவள் கைகளைக் கட்டியிருந்த கட்டுகளை அம்புமுனையால் அறுத்தான். அவள் இரு கைகளாலும் அவன் தோளை வளைத்து கட்டிக்கொண்டாள்.
“ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை, தேவி” என்றான் பீமன். அர்ஜுனன் புரவியைத் திருப்பி அவர்களருகே வந்தான். “இளையோனே, அவனை விடவேண்டாம். அவனை நாம் கொன்றாகவேண்டும்” என்று பீமன் கூவினான். “இருவர் சேர்ந்து ஒருவனைக் கொல்வதா? அவன் தன் படையை சென்றடையட்டும். படைநடுவே அவனைக் கொல்கிறேன்” என்றான் அர்ஜுனன் மீசையை நீவியபடி. அவன் விழிகளில் மட்டும் ஒருகணம் மின்னிச்சென்ற குறுநகையை கண்ட பீமன் “ஆம், நாம் தொடர்ந்துசெல்வோம்” என்றான்.
திரௌபதி பீமனைப் பற்றியபடி “வேண்டாம்… போதும். அங்கே அவன் படைகள் நின்றிருக்கின்றன” என்றாள். “ஒன்றுமில்லை, தேவி… பொறுத்தருள்க! இது எங்கள் பிழை. பொறுத்தருள்க!” என்று பீமன் அவள் தோளை அணைத்தான். பின்பக்கம் நகுலனும் சகதேவனும் புரவிகளில் வந்தனர். “தேவியை குடில்சேருங்கள். மூத்தவருக்கு துணைநின்றிருங்கள்” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இரையுடன் வருகிறோம் என்று அரசருக்கு அறிவியுங்கள்.” பீமன் “அவ்விழிமக்களின் குருதியிலாடி வருவோம்!” என்றான். திரௌபதியை அவன் இறக்கிவிட அவள் நிற்கமுடியாமல் கால்தளர்ந்தாள். சகதேவன் ஓடிவந்து அவளைப் பிடிக்க அவன் தோளைப்பற்றியபடி அவள் விம்மி அழுதாள். “ஒன்றுமில்லை, அன்னையே. ஒன்றுமில்லை… வருக!” என அவன் அவளை தோளணைத்தான். அவள் தள்ளாடியபடி சென்று புரவியில் ஏறிக்கொண்டாள்.
“செல்க!” என அர்ஜுனன் திரும்பிப்பாராமலேயே சொல்லிவிட்டு புரவியில் முன்னால் சென்றான். “தேவி, பொறுத்தருள்க… எங்கள் அனைவர்மேலும் அருள்கொள்க!” என்றபின் பீமன் திரும்பி உடன்சென்றான். அவர்கள் சாலையில் புழுதிமேல் ஏறியவர்கள்போல விரைந்தனர். நகுலன் “நாம் மெல்லவே செல்லமுடியும், தேவி” என்றான். திரௌபதி ஒன்றும் சொல்லாமல் கண்ணீர் வழிய தலைகுனிந்தவளாக புரவிமேலேயே அமர்ந்திருந்தாள்.
சாலை சுழித்து இறங்கிச்சென்ற இடத்தில் சற்று விரிந்த களமொன்று தெரிந்தது. அங்கே தேர்களும் புரவிகளுமாக சிறிய படை ஒன்று நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். தேரில் சென்ற ஜயத்ரதன் அதை நோக்கி கைவீசினான். அவர்களின் தலைவன் அதைக் கண்டதுமே இருபது புரவிகள் கிளம்பி முழுவிரைவுடன் அலை அணைவதுபோல தேரை நோக்கி வந்தன. புரவிப்படையின் தலைவன் தொடர்ந்து வந்த அர்ஜுனனையும் பீமனையும் கண்டுவிட்டான். அவன் கூவியதும்தான் ஜயத்ரதன் திரும்பிப்பார்த்தான். தாக்கும்படி அவன் ஆணையிட அந்தப் படை ஒரே கணத்தில் அசைவுகொண்டது. அணையுடைத்த நீர் என பெருகி அவர்களை நோக்கி வந்தது.
“நன்று… ஒரு சிறந்த போர்” என்றான் அர்ஜுனன். “நான் கோருவதெல்லாம் ஒழியாத அம்பறாத்தூணி மட்டுமே.” பீமன் “அதை அவர்களே அனுப்புவார்கள். நான் கீழிருந்து சேர்த்து அளிக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் திரும்புவதற்குள்ளாகவே அவனை அணுகிய அவன் படைவீரர் இருவர் அம்புபட்டு விழுந்தனர். அவர்களின் அம்புகள் அணுகும்தொலைவுக்கு வெளியே இருந்தனர் பாண்டவர் இருவரும். ஆனால் அர்ஜுனனின் அம்புகள் அவர்களை தொட்டுத்தொட்டு சாய்த்துக்கொண்டிருந்தன. ஒருவருக்கு ஓர் அம்புக்குமேல் அவன் விடவில்லை. எந்த அம்பும் கழுத்திலன்றி வேறெங்கும் பதியவுமில்லை. சிந்துநாட்டுப்படையின் முன்னணி வீரர்கள் அம்புபட்டு சரிய அவர்களின் புரவிகளை அடித்து விலக்கியபடி பிறர் முன்னால் வந்தனர். அர்ஜுனன் அதே விரைவில் மேலும் பின்னால் சென்றபடி அவர்களை வீழ்த்திக்கொண்டிருந்தான்.
அவர்களின் அம்புகள் பறந்துவந்து வயலில் இறங்கும் கிளிக்கூட்டங்கள்போல அவர்கள் முன்னால் வளைந்து நிலமிறங்கின. பீமன் குதித்து தரையிலிருந்து அவ்வம்புகளை அள்ளிச்சேர்த்து ஆவநாழி நிறைத்து அர்ஜுனனை நோக்கி வீசினான். அவன் அதைப்பற்றி தோளிலிட்டபடி ஒழிந்த தூளியை திரும்ப வீசினான். போர் எழுந்தபின் படை சித்தமற்று புலன்கள் மட்டுமே கொண்டதாக ஆகிவிடுகிறது. அவர்கள் பொருளில்லாமல் இறந்துகொண்டிருப்பதை உணர்ந்தாலும் முன்னால் வருவதை தவிர்க்கமுடியவில்லை. முன்னால் வந்தவர்கள் அறியாமல் சற்றுதயங்கியபோது பின்னால் வந்தவர்களின் விசை அவர்களை உந்தியது.
வெறியுடன் “விரைக… கொல்க… கொல்க அவர்களை… இதோ அருகில்தான்” என ஜயத்ரதன் கூவிக்கொண்டு தேரில் பாய்ந்து வந்தான். அவன் தேர்முகடையும் கொடியையும் அர்ஜுனன் உடைத்தான். அவன் வில்லை தெறிக்கச்செய்தான். திகைத்து வெறும்கைகளுடன் நின்ற அவன் காதுகளில் இருந்த குண்டலங்கள் இரு அம்புகளால் தெறித்தன. கழுத்திலணிந்த ஆரம் தெறித்தது. அவன் பாய்ந்திறங்கி பின்னால் வந்த வீரனின் புரவியில் ஏறிக்கொண்டான். அத்தருணம் பீமன் சிம்மக்குரலெழுப்பியபடி சைந்தவர்களின் படைக்குள் புகுந்தான். முதல் அடியில் விழுந்த ஒருவனின் கதையை கையிலெடுத்து சுழற்றியபடி படையைக் கலக்கி உள்ளே சென்றான்.
சில கணங்கள் அர்ஜுனனே திகைத்துவிட்டான். குருதியும் வெண்மூளைநிணமும் சலமுமாக தலைகள் உடைந்து தெறித்து மழையென அவனை மூடின. ஜயத்ரதன் இரு கைகளையும்விட்டு அஞ்சிய குழவிபோல குதிரைமேல் அமர்ந்திருந்தான். பின்னர் அடிபட்ட விலங்கென கம்மிய ஒலியில் அலறியபடி புரவியைத் திருப்பி படைகளிலிருந்து வெளியே பாய்ந்தான். பீமனைத் தொடர்ந்து மரக்கிளைகளிலிருந்து பாய்ந்து சைந்தவர் மேல் பரவிய குரங்குகள் அவர்களை கடித்து குதறின. அவர்களின் அம்புகளும் வாளும் கதைகளும் பட்டு அவை உடலுடைந்து கீழே விழுந்து துடித்து கைகள் சுருள்பிடித்து அதிர கால்கள் இழுத்து இழுத்து ஓய இளித்த பற்களுடன் அமைந்தன.
அக்குருதிநடனம் கண்டு அர்ஜுனன் உளம் பதைத்தான். கண்ணை மறைத்து வழிந்த குருதியை வழித்தபடி புரவிவிட்டு இறங்கி அடிபட்டுச் சிதைந்து துடித்த உடல்கள்மேல் மிதித்தோடி அர்ஜுனன் “மூத்தவரே, நிறுத்துக! நிறுத்துக இதை… போதும். இவர்கள் மேல் என்ன பகை நமக்கு?” என்று கூவினான். ஒரு கணம் நின்று அவனை நோக்கிய பீமன் மீண்டும் வெறிகொண்டு நெஞ்சை கையால் அறைந்து பெருங்குரங்கென முழக்கமிட்டபடி கதையைச் சுழற்றி அறைந்து உடல்களை உடைத்து தெறிக்கச்செய்தான். முட்டைகளென மூளை சிதற மண்டைகள் சிதைந்தன. தேன்கூடுகள் போல கிழிந்து சிதறிய உடல்களில் புழுக்கள்போல நரம்புகள் நெளிந்தன. “மூத்தவரே, மூத்தவரே” என அர்ஜுனன் கூச்சலிட்டு சென்று அவனைப் பிடித்தான். “விடுங்கள்… எளிய வீரர்கள் இவர்கள்…”
பீமன் “என் குலமகள்… என் குலமகள். நம் கைப்பிடித்தமைக்காக இன்னும் எத்தனை சிறுமைகளை சந்திப்பாள்? ஒட்டுமொத்த ஷத்ரியர்களை அழிக்கிறேன். மூடா, ஒட்டுமொத்த ஆண்குலத்தை அழிக்கிறேன். அழிக பாரதவர்ஷம், அழிக இப்புவி!” என்று வெறியெழுந்த கண்களில் வழிந்த கண்ணீருடன் இளித்த வாய்கொண்ட முகத்துடன் கூவினான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. நிணம் வழுக்கி உதிர்ந்தது. “இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்” எனக் கூவியபடி விலகிச்சென்றுகொண்டிருந்த சைந்தவர்களை நோக்கி ஓடி அவர்களுக்குள் புகுந்து மீண்டும் தலைகளை அறைந்து சிதறடித்தான்.
வெறியில் அவன் பல உடல்கொண்டவன் போலிருந்தான். மானுடம் மீது பெருவஞ்சம் கொண்ட கீழுலகத் தேவன் ஒருவன் எழுந்துவந்து குருதியாட்டு கொள்வதுபோல தெரிந்தான். அடிபட்டு கீழே விழுந்த ஒருவனை மிதித்து மிதித்து கூழாக்கினான். “மூத்தவரே, நம் இரை அவன். அவன் தப்பிவிடக்கூடாது” என்றபடி அர்ஜுனன் படைகளைக் கடந்து ஓட பீமன் மீண்டும் சிலமுறை கதைசுழற்றி சிலரை அடித்துச் சிதைத்துவிட்டு சென்ற வழியெங்கும் குருதிநிணச்சேறு சிதற ஓடிவந்து புரவியில் ஏறிக்கொண்டு அர்ஜுனனைத் தொடர்ந்தான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
February 5, 2017
மாமங்கலையின் மலை – 6
[image error]
ஷிமோகாவிலிருந்து அதிகாலையிலேயே கிளம்ப வேண்டுமென்பது திட்டம். ஆனால் யானா குகையிலிருந்து வந்து சேர்வதற்கே பதினொரு மணி கடந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஒரு கும்பல் அமர்ந்து இந்தியாவை உய்விப்பதைப்பற்றிய ஆழமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது எனக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. தூக்கத்தை வைத்து விளையாடக்கூடாது என்பது என் எண்ணம் என்பதால் நான் உடனே படுத்துத் தூங்கிவிட்டேன். இரு ஓட்டுநர்களும் இரவில் இரண்டு மணிநேரம் தான் தூங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் மறுநாள் காலையில் தான் தெரிந்தது.
வழக்கறிஞராகிய நண்பர் சக்தி கிருஷ்ணன் தூங்கும் வழக்கம் உடையவரா என்பதே எனக்கு சந்தேகம். ராஜமாணிக்கம் பகலில் அரசியலும் இரவில் இலக்கியமும் என்று வாழ்பவராதலால் அவருக்கும் தூக்கம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. வழக்கமாக நாங்கள் ஓட்டுநர்களை வாடகைக்கு வைப்பதே வழக்கம். அவர்கள் பயணங்களில் ஓட்டுநர் வேலைமட்டுமே செய்யவேண்டும். மலையேறுவதற்கெல்லாம் வரக்கூடாது. அவர்கள் நன்கு துயில்வதையும் கவனத்தில்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கின்றன. உரிமையாளரே ஓட்டும் வண்டிகளில் செல்வதனால் செலவு குறைகிறது. ஆனால் ஆபத்து கூடுகிறது.
[image error]
கிளம்பி காரில் ஏறும்போது எட்டு மணியாகிவிட்டது. மணிகண்டனுக்கும் ஷிமோகா ரவிக்கும் மைசூரிலிருந்து மாலை மூன்றரை மணிக்கு ரயில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனக்கு ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு பத்தரை மணிக்கு ரயில். போய்விடலாம், ஒன்றும் பிரச்னையில்லை என்றார் கிருஷ்ணன்.
ஓய்வாக வழியிலேயே காலை உணவை அருந்திவிட்டு காரில் சென்றோம். இசை பற்றியும் இலக்கியம் பற்றியும் விவாதங்கள். வழக்கமாக ஒரே வண்டியில் பயணம் செய்யும் போது விவாதங்களுக்கொரு தொடர்ச்சி இருக்கும். இரு வண்டிகள் என்னும்போது நான் வண்டிகளில் மாறி மாறி ஏறிக்கொண்டேன்.ஆகவே ஒரு தொடர்ச்சியின்மை எப்போதும் இருந்து கொண்டிருந்தது. எங்கள் விவாதங்கள் பெரும்பாலும் விளையாட்டுத் தன்மை கொண்டதாகவும், தன்னியல்பாகவே தீவிரமடைவதாகவும் இருக்கும். அதாவது ஏதாவது சொல்வதற்கிருந்தால் மட்டுமே தீவிரமான விவாதம் நிகழவேண்டுமென்பது விதி.
[image error]
ஒரு முழு நாளும் காருக்குள் இருந்து கொண்டிருப்பது என்பது உண்மையில் ஒரு அரிய அனுபவம். அந்தக் கார் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம்தான் அங்கே அமரச்செய்கிறது. காரின் நான்கு சன்னல்களையும் நான்கு ஒளித்திரைகளாக அமைத்து அதை ஓரிடத்திலே நிறுத்தி அதற்குள் பகல் முழுக்க அமர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னால் நம்மால் முடியுமா என்ன?
உண்மையில் கார் நவீனகாலகட்டத்தின் ஓர் அற்புதம். இத்தனை சிறிய உலோகக்கோளத்திற்குள் இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாய்ப்பு மனித குலத்தில் முன்னால் எவருக்கேனும் கிடைத்திருக்கிறதா என்பதே ஆச்சரியம் தான். இருக்கலாம், பெரிய கோட்டைகளில் காவல்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குமிழிகள் மூன்று நான்கு பேர் அமர்ந்து கொள்ளும் வசதி கொண்டவை. கார்ப் பயணங்கள் குடும்ப ஒற்றுமைக்கு இயல்பாக உதவக்கூடியவை. அத்தனை சிறிய பகுதிக்குள் ஒரு குடும்பம் முழுநாளும் அமர்ந்திருக்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் மிக நெருங்கி வருகிறார்கள். யார் கண்டது? சில குடும்பங்களில் அப்படி நெருங்கி வருவதே மேலும் கசப்பை உருவாக்குவதாக அமையலாம்.
[image error]
வழியில் அமிர்தேஸ்வர் ஆலயத்தை பார்த்துவிட்டு செல்லலாம் என்பது கிருஷ்ணனின் திட்டம். ஒருநாள் முழுக்க எதையுமே பார்க்காமல் செல்வது அளிக்கும் சலிப்பிலிருந்து தப்புவதற்காக. சிக்கமங்களூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமிர்தபுரா கர்நாடகத்தில் ஒரு முக்கியமான ஆலயம். தமிழகத்தில் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கும் சென்று வழிபட வேண்டிய ஆலயமாக இருக்கிறது. அதைப்போன்ற ஒரு ஆலயம் அமிர்தேஸ்வரர்.
1196- ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளரின் தளகர்த்தராகிய அமிர்தேஸ்வர தண்டநாயகரால் கட்டப்பட்டது இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் புகழ் பெற்ற ஆலயம் என்று சொல்லும் போது சற்று புதிய ஆலயமாக இருக்கும் என்ற எண்ணம் எப்படியோ வந்து கொண்டிருந்தது. ஆனால் இறங்கி முதல் பார்வையிலேயே ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகிய ஒரு ஆலயத்தின் முன் வந்து நிற்பதை அறிந்தோம். திரிகுடாச்சல வடிவமுடைய கோயில் இப்போது ஒரு கோபுரமே உள்ளது.
[image error]
ஹொய்ச்சாள பாணி கோயில்களின் வழக்கப்படி மொத்தக் கோயிலும் ஒரு பெரிய நகை போல ஒவ்வொரு சிறு பகுதியும் நுணுக்கமான சிற்பங்கள் அடர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். சிற்பக்குவியல். சிற்பம் பூத்த மரம். பிற ஆலயங்களிலிருந்து உடனடியாக மாறுபட்டுத் தோன்றியது இதன் அடித்தளம் முழுக்க கோபுரங்கள் செறிந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தமைதான். நூற்றுக்கணக்கான கோபுரங்களால் வானில் தாங்கி நிறுத்தப்படும் ஓர் ஆலயம் போல் அது தோன்றியது. கோபுரங்கள் நாகர திராவிட பாணி அமைப்பைச் சார்ந்தவை.
இவ்வாலயத்தின் சுற்றுச் சுவரில் மகாபாரதமும் ராமாயணமும் நுணுக்கமான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தைய காமிக்ஸ் நூலைப்படிப்பது போல இத்தகைய ஓவியங்களில் அந்த சிறிய பகுதியை அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் ஆச்சரியமூட்டுவது. எந்த இடமும் வீணடிக்கப்படாமல் பிம்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகப்பட்டு ஒரு படலமாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை சிற்பங்களிலும் உயிரசைவு ததும்பிக் கொண்டிருந்தது..
[image error]
முகபாவனைகள் மிகக்கூரியவையாக அமைந்திருந்தன. ராவணனின் கம்பீரமும், அனுமனின் விரைவும், ராமனின் நிதானமும் இத்தனை சிறிய அளவுக்குள் எழுந்து வருவதென்பது சிற்பக்கலையில் ஓர் அற்புதமே. வானரங்கள் தாண்டும் கடல் நான்கு கணு அகலமே கொண்ட ஒரு பட்டையாக செதுக்கப்பட்டிருக்கும் கற்பனை. அதில் முதலைகளும் மீன்களும் நாவாய்களும் நீந்திக்கொண்டிருக்கின்றன.
அமிர்தேஸ்வரா ஆலயத்தில் பிரம்மாவின் சன்னிதி மிக முக்கியமானதாக பக்தர்களால் கருதப்படுகிறது. அங்குதான் ஆயுளுக்கான பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால் அதைவிட எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. அங்கிருக்கும் சரஸ்வதியின் சன்னிதி. முதற்பார்வையில் ஒரு திடுக்கிடலை உருவாக்கியது அச்சிலை. சரஸ்வதிக்கு அத்தனை பெரிய அழகிய முதன்மைச் சிற்பத்தை நான் பார்த்ததில்லை.
புகழ்பெற்ற ஹொய்ய்ச்சாள சிற்பியான ரேவூரி மல்லித்தாமா செதுக்கிய தொடக்க காலக் கோயில் இது என்று சொல்லப்படுகிறது
[image error]
கருவறையில் அமர்ந்திருக்கும் அன்னை கரிய பளபளப்புடன் தோன்றினாள். வழக்கமான சரஸ்வதி சிற்பங்களில் இருக்கும் நளினமும் மென்மையும் இதில் இல்லை. துர்க்கைகளுக்குரிய கம்பீரமும் நிமிர்வும் கொண்ட தோற்றம். அமுதகலமும் எழுத்தாணியும் படைக்கலங்களும் ஏந்திய கைகள். கலை இந்த நிமிர்வுடன் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. குழையும் கலை உலகை வளைத்து அள்ள முடியாது. நிமிர்ந்து வெல்லும் கலையே காலத்தை துளியென காலடியில் உணரும் ஆற்றல் கொண்டது.
உண்மையில் இப்பயணத்தில் எதைத் தேடி வந்தேனோ அதை இங்கு இந்த சாரதையின் முன்னால் நான் அடைந்தேன். மூகாம்பிகை அன்னையை சரஸ்வதியாகவும் வழங்கும் வழக்கம் கேரளத்தில் உண்டு. நாராயண குரு சாரதாம்பிகையை வர்கலாவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். சாரதாஷ்டகம் என்ற பெயரில் அன்னையைத் துதித்து ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். கேரளத்தில் கல்வித் தொடக்கம் நிகழ்த்துவதற்கான முக்கியமான ஆலயமாக இன்று அது உள்ளது.
[image error]
கல்விக்கும் கலைக்குமான அன்னை. மூன்று அன்னையரில் என் நோக்கில் அவளே முதன்மையானவள் ஆட்டுவிக்கும் மோகினி அரவணைக்கும் அன்னையும் பிரியாத் துணைவியும் ஆனவள். அங்கிருந்து தொடங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.
பெலவாடியை நினைவுறுத்துவது அமிர்தபுரியின் ஆலயம். பெலவாடியின் தனிச்சிறப்பே அதில் உள்ள அழகிய தூண்களின் பளபளப்புதான். ஹொய்ச்சாள கட்டிடக்கலை ஐந்து சிறப்பம்சங்களைக் கொண்டதென்றுசொல்லலாம்.
சோப்புக்கல்லில் செதுக்கப்பட்ட நுண்சிற்பங்கள் இடவெளியின்றிசெ செறிந்த புறக்கட்டுமானம்.
வட்ட வடிவமான உட்குடைவுக் கூரை கவிழ்ந்த முகமண்டபங்கள்.
உருளையிலிட்டுச் சுழற்றி உருவாக்கப்பட்ட அடுக்கடுக்கான வட்டங்களால் ஆன பளபளக்கும் தூண்கள்.
திரிகுடாச்சலம் என்னும் மூன்று கோபுர அமைப்பு கொண்ட கருவறை
உயரமற்ற மேலே குடத்தில் சென்று முடியும் தட்சிண-நாகர என்று சொல்லப்படும் பணியிலான கோபுரங்கள்.
இவற்றில் விழிகளில் என்றும் தங்கி நிற்பது இத்தூண்களே. கல்லில் நீரை கொண்டு வந்திருக்கும் வித்தை என்று இவற்றைச் சொல்லலாம். கரிய சலவைக் கல் உருட்டி வழுவழுப்பாக்கப்பட்ட கண்ணாடிக்கு நிகரான ஒளியேற்றப்பட்டது. அடுக்கடுக்காக நிறைந்த தூண்களின் நடுவே நின்றிருக்கையில் குளிர்ந்த நீர்ச்சுனை ஒன்றுக்குள் புகுந்துவிட்ட உணர்வை அடைந்தேன். நான்கு புறமும் சாய்மானங்கள் கொண்ட பெரிய திண்ணையில் அமர்ந்து இத்தூண்களைப்பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெரிய தியான அனுபவம் போல்
அமிர்தேஸ்வர லிங்கத்தை வணங்கி அங்கிருந்து கிளம்பினோம். எண்ணியது போலவே மணிகண்டனும் ஷிமோகா ரவியும் மைசூரில் ரயில் பிடிக்கவில்லை. நாங்கள் உள்ளே நுழையும்போதே நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. மதிய உணவை உண்பதற்கு அவ்வளவு பிந்திவிட்டது. ஒர் அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம். வழக்கமாக எங்கள் பயணத்தில் அசைவ உணவு முழுமையாகத் தவிர்க்கப்படும் – செலவு கருதி. இம்முறை அசைவப் பிரியரும் உணவின்றி வாழ்வில்லை என்ற கொள்கை கொண்டவருமாகிய செல்வேந்திரன் ஒவ்வொரு முறையும் அசைவ உணவிற்காகத் துடித்துக் கொண்டிருந்தமையால் அனேகமாக எல்லா நாட்களிலுமே செலவேரிய அசைவ உணவுகளை உண்டோம்.
மைசூரிலிருந்து ஈரோடுக்கு சத்தியமங்கலம் வழியாக செல்ல வேண்டும். ”செல்ல முடியும். ஆனால் சாலை நெரிசலின்றி இருக்கவேண்டும்” என்றார் கிருஷ்ணன். ”இருக்க வாய்ப்பில்லை” என்று சேர்த்துக்கொள்ளாவிட்டால் அவர் கிருஷ்ணனே அல்ல. சத்தியமங்கலத்தை அணுகியபோது மகிழ்ச்சியுடன் “செல்ல முடியாது .சாலை நெரிசலாக இருக்கிறது” என்றார். சக்தி கிருஷ்ணன் காரிலேயே திருச்சி வந்து பேருந்தை பிடிக்கலாம் என்று திட்டமிட்டேன்.
ஆனால் எண்ணியதை விட விரைவாக போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இரவு பத்து மணிக்கெல்லாம் ஈரோடு ரயில் நிலையம் வந்துவிட்டோம் கோவைக்கும் திருப்பூருக்கும் செல்லும் கும்பல் சத்தியமங்கலத்தை தாண்டிய உடனே பிரிந்தது. சக்தி கிருஷ்ணன் என்னை ஈரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். ரயிலில் ஏறி படுத்தவுடன் முதலில் விழிகளுக்குள் எழுந்து வரும் சித்திரம் எதுவென எண்ணினேன். எண்ணியது போலவே அது சாரதையின் கரிய புன்னகைதான்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்
இந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில் இதுவே பாரதத்தின் முழுமையாக விரிவாக்கப்பட்ட மூலம். கி.பி 1883 முதல் 1896 வரை திரு. கிஸாரி மோகன் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றும் அது ஒரு தனி நபர் முயற்சி தான்
அருட்செல்வப்பேரரசனுடன் மகாபாரத உரையாடல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
6. ஐம்பொருட் சாறு
வெயில் மூத்துக்கொண்டிருந்த பின்காலையில் அர்ஜுனனும் சகதேவனும் தோட்டத்தில் மலர் நோக்கிக்கொண்டிருந்தனர். அப்பால் நகுலன் மண்வெட்டியால் பாத்தி வெட்டிக்கொண்டிருந்தான். “இங்கு மலர்கள் மட்டும்தானா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கே காட்டில் காய்கனிகளுக்கு குறைவே இல்லை” என்றான் சகதேவன். “மலர்களும் குறைவில்லையே!” என்றான் அர்ஜுனன். “ஆமாம், ஆனால் அனைத்து மலர்களையும் ஓரிடத்தில் காணமுடியவில்லை. ஆகவே இங்கே இத்தோட்டத்தை அமைத்தோம். ஒருமுறை விழியோட்டினால் நூறுவகை மலர்களை பார்க்கமுடியும்.”
அர்ஜுனன் “விந்தைதான்… எங்கும் நாம் சமைக்கும் அழகு நமக்குத் தேவைப்படுகிறது” என்றான். “இங்கு தேவல முனிவர் வந்திருந்தபோது இதையே சொன்னார். இத்தோட்டம் ஒரு காவியம் என்றார். காடு எனப் பூத்திருப்பவை நாவளர் பாடல்கள்.” ஏணிப்படிகள் முனக பீமன் கீழிறங்கி வருவதைக்கண்டு இருவரும் திரும்பி நோக்கினர். புயங்களில் தசையுருளைகள் எழுந்தமைய கைகளை தலைக்குமேல் தூக்கி சோம்பல் முறித்தபடி வந்த பீமன் “நன்கு துயின்றுவிட்டேன், இளையோனே. காலை வந்ததை அறியவில்லை” என்றான்.
“இது காலையல்ல, உச்சி அணுகிக்கொண்டிருக்கிறது” என்றான் அர்ஜுனன். கோட்டுவாயிட்டபடி “அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் பீமன். “நேற்று நீங்கள் உறங்கியபின் நான் காட்டுக்குள் சென்றேன். கோமதியில் அவ்வேளையில் யானைகள் நீராடும். உடன்நீந்துவது இனிது.” அர்ஜுனன் “ஆம், நீங்கள் இரவுகளில் குடிலில் இருப்பதை விரும்புவதில்லை என அறிந்தேன்” என்றான். “பகலில் இருக்க குரங்குகள் விடுவதுமில்லை” என்றான் சகதேவன்
“நீங்கள் உணவருந்திவிட்டீர்களா, மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “எழுந்ததுமே அடுமனைக்குத்தான் சென்றேன். எளிய உணவுதான். பல்தேய்த்து குளித்துவிட்டு மீண்டும் முறையாக உண்ணவேண்டும்” என்றபடி பீமன் அருகே வந்து குந்தி அமர்ந்தான். சகதேவனிடம் “அடேய், தள்ளிப்போ. நான் இளையோனிடம் சில அரசமந்தணங்கள் பேசவேண்டியிருக்கிறது” என்றான். “என்ன அப்படி?” என்று சகதேவன் கேட்க “செல்கிறாயா இல்லையா?” என்றான். சகதேவன் “அரசியலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என முணுமுணுத்தபடி நகுலனின் அருகே சென்று நின்றான்.
பீமன் தாழ்ந்த குரலில் “இளையோனே, உண்மையில் நான் நேற்று காட்டுக்குள் சென்றது இன்தேறல் கொண்டுவருவதற்காக” என்றான். அர்ஜுனன் “தேறலா? எங்கிருந்து?” என்றான். “காட்டில் வைத்திருக்கிறேன். நானே வடித்தது. மேலே ஒரு குகையில் புதைத்து வைத்திருந்தேன். நேற்றிரவு எடுத்து மூடியைத்திறந்தேன்” என்றான் பீமன். “நறுமணத்தால் காடே மயங்கிவிட்டது. ஆயிரம் மரமானுடர் அந்தப் பாறையருகே நின்றிருக்கிறார்கள். நாகபுச்சனையும் சுகர்ணனையும் காவலுக்கு நிறுத்திவிட்டு வந்தேன். அவர்களை பிறர் அஞ்சுவார்கள்.”
“பழத்தேறலா?” என்றான் அர்ஜுனன் ஐயத்துடன். “ஆம், இங்கே மரமானுடர் உதிர்ந்த பழங்களைச் சேர்த்து பாறைக்குழிகளில் இட்டு நொதிக்கச்செய்து மேலே தெளிந்துவரும் கடுந்தேறலை இலைகளால் அள்ளி அருந்தி மயங்குவதைப் பார்த்தேன். அதன்பின் காடே காதலும் பூசலுமாக ஒலிக்கும். அவர்களிடமிருந்துதான் உரிய கனிகளைத் தெரிவுசெய்ய கற்றுக்கொண்டேன். நீ வந்து பார். ஒருநாழிகை தொலைவிலேயே அதன் மணத்தை உணர்ந்துகொள்வாய். அறிந்திருப்பாயே, சான்றோரின் புகழ் பரவுவதைப்பற்றி ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளதுபோல…”
அர்ஜுனன் “அது மலர்மணம்” என்றான். “இது அதைவிட கூரிய மணம்” என்றான் பீமன். அர்ஜுனன் “வேண்டாம் மூத்தவரே, நான் மதுவருந்தி நீணாள் ஆகிறது” என்றான். “நீ தவமுனிவர் போலிருக்கிறாய். உலகுக்குத் திரும்பு. எங்களைப்பார், நாங்கள் சொல்வளர்காடுகளினூடாக இங்கே வந்தோம். இது சொல்லில்லா காடு. இங்குதான் இனிதாக வாழ்கிறோம்.” அர்ஜுனன் “வேண்டாம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன். அர்ஜுனன் “மூத்தவர் இருக்கிறார்” என்றான். “அவருக்கும் கொடுப்போம்” என்றான் பீமன். “விளையாடாதீர்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
“உண்மை, அவர் இப்போது மூதாதையருள் ஒருவர். ஆகவே முறையாக படைக்கவேண்டும். நான் புதியதேறல் எடுத்ததும் இங்கு கொண்டுவந்து தேவியிடம் கொடுப்பேன். அவள் கொடுத்தால் அவர் அருந்துவார். அதைப்பற்றி எதுவும் தெரியாததுபோல் நாம் இருந்துவிடவேண்டும் என்பது மட்டுமே நெறி” என்று பீமன் சொன்னான். “இளையோரை தவிர்த்துவிடுவோம். அவர்கள் முன் நாம் அருந்தினால் நமக்கு மதிப்பிருக்காது.” அர்ஜுனன் தத்தளிப்புடன் “இது முறையா என தெரியவில்லை” என்றான்.
“மூத்தவரின் ஆணைக்குக் கட்டுப்படுவது முறையா அல்லவா?” என்றான் பீமன். “அது முறைதான்” என்றான் அர்ஜுனன். “அப்படியென்றால் இது என் ஆணை. வருக!” என்றான் பீமன். இளையவனே, முனிவராக இருந்தது போதும். நாம் வெல்வதனைத்தையும் வென்றுவிட்டோம். இனி மெல்ல எளிதமைந்து கனிவோம்.” அர்ஜுனன் “மெய்யாகவே நாம் மூத்தவருக்கும் கொண்டுவந்து கொடுக்கப்போகிறோமா?” என்றான். “ஆம், ஐயமென்ன? மிகச்சிறந்த பகுதி அவருக்குரியது. அதன்பின் நாம் மகிழ்வோம்.” அர்ஜுனன் புன்னகைத்து “அப்படியென்றால் நன்று” என்றான்.
பீமன் சகதேவனிடம் “இளையோனே, நாங்கள் காட்டுக்குள் சென்று ஒரு சிறு அரசியல்பணி முடித்து மீள்கிறோம்” என்றான். அவன் அருகே வந்து “நானும் வருகிறேன்” என்றான். பீமன் “இது பெரியவர்களுக்கானது” என்றான். “நானும் பெரியவனே. மேலும் உங்களுக்கு துணைநிற்பேன்” என்றான். சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் பீமன் “எப்படி அறிந்தாய்?” என்றான். சகதேவன் “நான் வாயசைவை நோக்கக் கற்றவன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “சரிதான்… இவன் பெரும்பாலான நிமித்தக்குறிகளை அவனை அணுகுபவர்கள் தொலைவில் பேசிக்கொண்டு வருவதிலிருந்தே உய்த்தறிந்து சொல்கிறான்” என்றான்.
“நான் மதுவருந்தி நீண்டநாளாகிறது” என்றான் சகதேவன். “சென்ற வாரம்தானே கொண்டுவந்தேன்?” என்றான் பீமன். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்றான் சகதேவன். பீமன் “சரி, ஓசையிடாதே” என்றான். நகுலனிடம் “நாங்கள் ஒரு சிறுவேட்டைக்கு சென்றுவருகிறோம், இளையோனே. உன் பணி தொடரட்டும்” என்றான். நகுலன் மண்வெட்டியை வைத்துவிட்டு மேலேறி வந்து “எங்கே தேறலிட்டிருக்கிறீர்கள், மூத்தவரே?” என்றான். “உனக்கும் வாயசைவு கேட்டுவிட்டதா?” என்றான் பீமன். நகுலன் “நான் இவன் உடலசைவை நோக்குவேன். புரவிகளின் உடல்மொழிபோலவே தெளிவானது” என்றான்.
“பிறகென்ன? கிளம்புவோம்” என்றான் அர்ஜுனன். நகுலன் “ஓசையின்றி கிளம்புவது நன்று. மூத்தவரும் உடன்வரக்கூடும்” என்றான். “பேசாமல் வா!” என்றான் பீமன் எரிச்சலுடன். “நேற்றிரவு மூத்தவர் படிப்படியாக மலர்ந்தார். அத்தனை நடிப்புகளையும் துறந்து சிரித்தார். பின்னிரவில் நடனம் கூட ஆடினார்” என்றான் அர்ஜுனன். “நடனமா?” என பீமன் நின்றுவிட்டான். “ஆம், துரியோதனன் இந்திரப்பிரஸ்தத்தில் வழுக்கியதை நடித்துக்காட்டினார்” என்றான் சகதேவன். “மூத்தவரா?” என்றான் பீமன் திகைப்புடன்.
“ஆம் மூத்தவரே, அவரும் சற்று இளக வேண்டுமல்லவா? நேற்று அதற்கான தருணம். முதலில் இரவுணவுக்கு சேர்ந்து அமரவே தயங்கினார். தேவி சென்று தனியாகப்பேசியபின் கிளம்பி வந்தார். கைபற்றி உடனமர்த்தவேண்டியிருந்தது. உண்ணும்போது இறுக்கமாகவே இருந்தார். ஊன் துண்டு ஒன்றை பார்த்தருக்கு எடுத்து வைத்தபோது விழிததும்பினார். அதன்பின் அழுகை. அழுது முடித்ததும் முகம் மலர்ந்துவிட்டது. அவர் அழுததை அவரே கேலிசெய்தார். சிரிப்பு தொடங்கியது.”
“மூத்தவர் வாய்விட்டுச் சிரித்து நான் பார்த்ததையே மறந்துவிட்டேன்” என்றான் பீமன். நகுலன் “நம் அன்னை கருவுற்றிருக்கும் செய்தி அறிந்ததும் தந்தை தலையில் தேன் தட்டுகள் நிறைந்த கூடையைச் சுமந்தபடி உடலெங்கும் தேன் வடிய வந்தாராம். அதை சேடியர்கதைகளிலிருந்து அவர் அறிந்திருக்கிறார். நேற்று நீங்கள் வந்ததும் அதைப்போல என்று சொல்லி சிரிக்கலானார். அப்படியே தந்தையை பகடிசெய்தார். பின் அன்னையை. பின்னர் அனைவரையும். சிரித்துச் சிரித்து ஒரு தருணத்தில் நான் அப்படியே சுருண்டு படுத்துவிட்டேன்” என்றான்.
“இன்று அவர் கண்முன்னாலேயே செல்லக்கூடாது என்று தேவி சொன்னாள்” என்றான் சகதேவன். “காலை எழுந்ததுமே அவர் நடனமிட்டதுதான் அவருக்கு நினைவுக்கு வரும். சினம்கொண்டு சிடுசிடுவென்றிருப்பார் என்றாள்.” பீமன் நகைத்து “ஆம், ஓரிருநாட்கள் அது நீடிக்கும். ஆனால் தேறல் அவரை சற்று இளகச்செய்யக்கூடும்” என்றான். அர்ஜுனன் “அவர் குருகுலத்துப் பாண்டுவாக ஆகிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியதுண்டு எனக்கு” என்றான். “அவர் கடந்துசென்று பிரதீபரும் யயாதியுமாககூட ஆகிக்கொண்டிருக்கிறார்” என்றான் சகதேவன்.
அவர்கள் காட்டுக்குள் நடந்துசென்றபோது தலைக்குமேலும் முன்னாலும் பின்னாலும் குரங்குகள் சூழ்ந்து வந்தன. ஆனால் அவை ஓசையேதும் எழுப்பவில்லை. ஆர்வமிகுதியால் அவ்வப்போது சிலகுரங்குகள் “ஹு?” என்று கேட்க மூத்தகுரங்குகள் “ர்ர்” என அதட்டி அமைதியை மீட்டன. “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்” என்றான் அர்ஜுனன். “அண்மைதான்…” என்றான் பீமன். “குரங்குகள் இங்கிருந்து இரண்டே நாழிகையில் குடிலுக்கு சென்றுவிடும்.”
“நாம் நான்கு நாழிகைக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறோம்” என்றான் அர்ஜுனன். “அண்மைதான்” என்று பீமன் சொன்னான். இலைத்தழைப்புக்குமேல் கரிய பாறையின் கூன்வளைவு தெரிந்தது. “சற்று குத்தான பாறை. நீர் வழிந்து மென்மையாகிவிட்டிருக்கிறது, வழுக்கவும் கூடும்” என்றான் பீமன். குரங்குகள் மரங்களிலிருந்து குதித்து கைகளை ஊன்றி பாய்ந்தேறி மேலே சென்றன. “கைகளை ஊன்றிக்கொண்டால் விரைந்தேறலாம்” என்றான் பீமன்.
அவர்கள் கைகளை ஊன்றி தொற்றி மேலேறினர். மூன்று அடுக்குகளுக்கு மேலே சென்றதும் அவர்கள் மேல் உருகிய வெள்ளியென உச்சிவெயில் பொழிந்தது. நகுலன் வியர்வை வழிய கையூன்றி அமர்ந்தான். மழைக்காலத்தில் நீர்விழுந்து சுழித்தோடிய இடங்களில் உரல்குழி போல மென்மையாக பள்ளம் விழுந்து அதில் நீர் தேங்கியிருந்தது. அள்ளிக்குடித்து உடல்மேலும் வீசிக்கொண்டனர். “வந்துவிட்டோம், அண்மைதான்” என்றான் பீமன்.
மேலேறிச்சென்றதும் பீமன் சுட்டிக்காட்டி “அங்குதான்” என்றான். அங்கே பாறைக்குழிகளிலமைந்த சுனைகளுக்குமேல் பாளைகளையும் ஓலைகளையும் கொண்டு நெய்த பரிசல்போன்ற பெரிய கூடைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. அணுகியதும் இன்தேறல் மணமெழுந்தது. “இங்கா வைத்திருக்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். “நோக்குக!” என பீமன் ஒரு கூடையை எடுத்தான். உள்ளே வட்டமான கற்குழியில் கரியசேறுபோல பழக்கூழ் அழுகிநொதித்து குமிழிகள் வெடித்துக்கிடந்தது. அதன்மேல் கவிழ்க்கப்பட்ட கூடையின் உட்புறத்தில் அதிலிருந்து ஆவியாகிப் படிந்த தேறல் குளிர்ந்து துளித்து வழிந்து அதன் சரிவில் ஓடி வந்து சற்று கீழே அமைந்திருந்த பிறிதொரு குழியில் சொட்டி நிறைந்தது. அதன்மேல் பெரிய தட்டைக்கல்லை வைத்து மூடியிருந்தான் பீமன்.
“இந்த நொதிக்கூழை பானையிலிட்டு மெல்லிய அனலில் ஆவியெழச்செய்வார்கள். ஆனால் இங்கே பழங்கள் பேரளவில் உள்ளன. கலங்களும் இல்லை. ஆகவே இம்முறையை கண்டுபிடித்தேன். வெயிலின் மென்வெம்மையில் ஆவியெழும் தேறல் மிக உயர்வானது” என்றான். கல்லைப்புரட்டி குழியில் தெளிந்த எண்ணைபோல கிடந்த தேறலை காட்டினான். அதன் அடியில் கரிய காய்கள் சில கிடந்தன. “அவை என்ன?” என்றான் அர்ஜுனன். “கதலிப்பழங்கள். நறுந்தேறலுக்குள் இவற்றை போட்டு வைத்தால் சாற்றை தேறல் உறிஞ்சி எடுத்து கருகிச்சுருங்கச்செய்து அடியில் தங்கவைக்கும். தேறலில் இன்மணம் இருக்கும்” என்றான்.
“அதோ அந்தக் குழியில் நெல்லிக்காய் போட்டு வைத்திருக்கிறேன். அது பிறிதொருசுவை. தேன் சேர்த்து அருந்தும் தேறல் அதோ அந்தக்குழியில் இருக்கிறது. மலரிட்டு வாற்றப்பட்ட தேறல்களும் உள்ளன. இளையோரே, பதினெட்டுவகை தேறல்சுவைகளை இங்கு இப்போது உருவாக்கியிருக்கிறேன். இன்னும் நூறுவகையில் உருவாக்க முடியும்” என்றான் பீமன். சகதேவன் “முதலில் மூதாதைக்கு படைப்போம். எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கப்போகிறார்” என்றான்.
“ஆம், அதை முதலில் செய்வோம்” என பீமன் குகைக்குள் சென்று நான்கு சுரைக்குடுவைகளை எடுத்துவந்தான். ஒவ்வொன்றிலும் தேறலை இலைக்கோட்டலால் மெல்ல அள்ளி நிறைத்து மரக்கட்டையால் இறுக அடைத்து தேன்மெழுகையும் அரக்கையும் கலந்து விளிம்பை மூடி கயிற்றில் கட்டினான். அவன் அழைத்ததும் நான்கு குரங்குகள் வந்து நின்றன. அவன் அளித்த குடுவையை வாங்கி முகம் சுளித்து முகர்ந்தபின் ஒரு குரங்கு “ர்ர்” என்றது. பீமன் அதே மொழியில் அவற்றிடம் ஆணையிட்டான். அவை கிளைகளுக்குமேல் ஏறிக்கொண்டன.
“இன்சுவை நான்கு மூத்தவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இனி நாம் அருந்துவோம்” என்றான் பீமன். அவர்கள் மேலிருந்த பாறையின் நிழலில் அமர்ந்துகொண்டனர். பீமன் ஏழு சிறிய இலைத்தொன்னைகளில் மதுவை அள்ளி தெற்கு மூலையில் வைத்து மூதாதையருக்குப் படைத்து கைகூப்பி வணங்கினான். அதன்பின் மூங்கில்குடுவைகளில் தேறலை அள்ளிக்கொண்டுவந்து அவர்களுக்கு அளித்துவிட்டு பெரிய சுரைக்குடுவை நிறைய மதுவுடன் தானும் அமர்ந்தான்.
“முதலில் இனிப்புத்தேறல். தேன்கலந்தது. அதுவே முறை” என்றான். “குடுவையை சற்றுநேரம் கையில் வைத்து அதிலெழும் ஆவியை முகர்ந்தபின் சுவைக்கவேண்டும். வாயில்நிறையும் மணத்தை மூக்கினூடாக வெளிவிடவேண்டும்” என்றான். அர்ஜுனன் “நான் அருந்தியவற்றிலேயே சிறந்தது” என்றான். பீமன். “இவற்றைவிடச் சிறந்தது இங்கு உண்டு… இந்தக்காற்றில், ஒளியில், மண்ணில். மலர்களில் தேனாக அவை எழுகின்றன. கனிகளில் ஊறுகின்றன. அவற்றை நான் வாற்றி எடுப்பேன்.” அவன் ஏப்பம் விட்டு உடலை உலுக்கியபின் மீண்டும் அருந்தினான்.
மெல்ல அவர்கள் உடல்தளர்ந்து கண்கள் சிவந்தனர். வியர்த்த தோல்மேல் குளிராக காட்டுத்தென்றல் தழுவிச்சென்றது. “இந்தக் காட்டை நான் இன்னும் அறியவில்லை. இது எனக்கு அப்பால் உள்ளது இன்னமும். நூறாயிரம்முறை புணர்ந்தபின்னரும் உளம்காட்ட மறுக்கும் கன்னியின் மாயம்…” மீண்டும் அருந்தி “இந்தத் தேறல் எங்கிருக்கிறது? இளையோனே, இது எங்குள்ளது?” என்றான். “சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன். “இதோ இந்த மண்ணில்… மண்ணுக்கு அடியிலுள்ள குளிரூற்றுகளில். அதற்கும் அடியிலுள்ள அனலூற்றுகளில். அங்கிருந்து வேர்களால் உறிஞ்சி எடுக்கப்படுகின்றது. தளிர்களில் ஒளிகொள்கிறது. மலர்களில் இனிக்கிறது. கனியில்…”
அவன் தன் சுட்டுவிரலைத் தூக்கி ஏதோ சொல்ல முயன்று கண்களை மூடித்திறந்தான். வேறு எண்ணம் ஊடுகலந்தபோது சொல்லவந்ததை மறந்து மீண்டும் குடுவையை எடுத்து அருந்தினான். “இனி நாம் புளிப்புக்குச் செல்வோம்” என்றபடி எழுந்து சென்றான். சகதேவன் “அவர் நினைவழிந்து விழுந்தபின்னர்தான் நிறுத்திக்கொள்வார்” என்றான். நகுலன் எஞ்சியதைக் குடித்தபின் “ஆனால் அதற்கு நெடுநேரமாகும்” என்றான். பீமன் மீண்டும் வந்து அவர்களுக்கு தேறல் பரிமாறிவிட்டு அமர்ந்து தன் குடுவையை கையில் எடுத்துக்கொண்டான். “நான் என்ன சொன்னேன்? இந்த மது எங்கிருக்கிறது? நான் சொல்லவா?”
“சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். “வானில்… இடிமின்னலின் கொந்தளிப்பில். விழிகூசும் வெயிலொளியின் எரிதலில். விண்மீன்கள் அளிக்கும் கனவில்” என்றான் பீமன். “இளையோனே, அதைத்தான் இந்த மலர்கள் அள்ளிக்குடிக்கின்றன. கனிகளுக்குள் கொண்டுசென்று தேக்குகின்றன. இதோ பறக்கும் தேனீக்களும் வண்டுகளும் தங்கள் சிறகுகளால் அறிந்த மது. அவை மலர்தோறும் தேடிச்சென்று அவற்றை குடிக்கின்றன. ஆனால்…” அவன் மீண்டும் கைதூக்கி இல்லை என அசைத்து மந்தணப்புன்னகை பூத்து “ஆகவே…” என்றான்.
அவர்களைச்சூழ்ந்து குரங்கள் வந்து இருகால்களில் அமர்ந்திருந்தன. ஒரு மூத்தகுரங்கு அணுகி வந்து எரிச்சலுடன் பீமனிடம் ஏதோ சொல்ல அவன் “ஆ, மறந்துவிட்டேன்” என எழுந்து சென்றான். குரங்கும் சலிப்புடன் அவனுடன் சென்றது. பீமன் கலங்கிய பழநொதிப்பை பாளைத்தொன்னையால் அள்ளி பாறைமேல் வைக்க பெருங்குரங்கு அதை அணுகி குனிந்து முகர்ந்து முகம் சுளித்து தும்மியது. வால்நெளிய எழுந்து தாவி அமர்ந்து மீண்டும் முகர்ந்து குமட்டலுடன் குதித்து உடல் உலுக்கியது. மீண்டும் அருகே சென்று நுனிநாக்கால் நக்கி திடுக்கிட்டதுபோல பின்னால் பாய்ந்தது. நாக்கை நீட்டி வாயை நக்கியபடி குழிந்த கன்னங்கள் உப்பி விரிய சிறுமணிக்கண்கள் சிமிட்ட பீமனை நோக்கியது.
பீமன் நகைத்தபடி “தேறலாடுபவர்களில் இவனே முதல்வன்… இவன்பெயர் சாமரபுச்சன்” என்றான். குரங்கு மீண்டும் காலெடுத்துவைத்து எதிரியை அணுகுவதுபோல மதுவருகே சென்று தயங்கி ‘அய்யோ’ என சலிப்பதுபோல முகம் வலித்து பின் சட்டென்று குனிந்து உறிஞ்சிக் குடித்து குளிர்நீர் பட்டதுபோல உடல் குறுக்கி உறைந்தது. ஃபுக் என ஏப்பமிட்டு கழுத்தை வலிப்புகொள்வதுபோல இழுத்தபின் மீண்டும் குனிந்து குடித்தது. எழுந்து நாக்கைச் சுழற்றி பீமனை நோக்கி இளித்தபின் மீண்டும் குனிந்து ஒரே இழுப்பில் குடித்தது.
“ர்ர்ர்ர்” என அது உறுமியதைக் கேட்டு பீமன் நகைத்தான். மீசையில் துளிகள் நிற்க எழுந்து உடலை உலுக்கிக்கொண்டு கண்களை மூடியது. திடுக்கிட்டு விழித்தெழுந்து மீண்டும் குனிந்து உறிஞ்சி இழுத்தது. விலாவைச் சொறிந்துகொண்டு என்ன நடக்கிறது என எண்ணுவதுபோல கண்களை மூடித்திறந்தபின் அய்யோ என பதறி மீண்டும் குனிந்து குடித்தது. பீமன் அத்தனை குரங்குகளுக்கும் ஊறலை அள்ளி அள்ளி வைத்தான். ஒரு பெரிய குழியில் குடுவையால் அவன் அள்ளி மொண்ட ஊறலை அவை கூடி தலைகள் முட்டிக்கொள்ளும்படி குனிந்து குடித்தன.
ஒரு குட்டி அன்னை இடையிலிருந்து திமிறி அதற்குள் விழுந்து ரீச் என அலறியபடி எழுந்து கரையேறமுயன்று வழுக்கி மீண்டும் அதிலேயே விழுந்தது. அதை அன்னை வாலைப்பிடித்து தூக்கி அப்பாலிட்டுவிட்டு குனிந்து குடித்தது. தேறலில் ஊறிய குட்டி எண்ணையில் நனைந்த எலி போலிருந்தது. அதை இரு குட்டிகள் நக்கின. அது வால்சொடுக்கி பாய்ந்தோடி அமர்ந்து தன் உடலை தானே நக்கிக்கொண்டது.
பீமன் தேறலின் அடியில்கிடந்த கருகியபழங்களை எடுத்து அன்னையருக்கு அளித்தான். அவை அக்கனிகளை பிதுக்கி கூழாக்கி குட்டிகளுக்கு அளித்தன. ஊறல் மாந்திய குரங்குகள் ஸ்ஸ்ஸ் என உறிஞ்சின. ர்ர்ர் என உறுமி உடலை சொறித்துகொண்டன. ஒரு குரங்கு எழுந்து நின்று உடலை உலுக்கிக்கொண்டு “ஹிஹிஹி’ என்றது. ஒன்று தன் நெளியும் வாலைக்கண்டு திடுக்கிட்டு பாய்ந்தது. ஒன்றை ஒன்று பிடித்து தள்ளிக்கொண்டு அவை ஊறல் அருந்தின.
முதலில் ஊறல் அருந்திய பெருங்குரங்கு கொட்டாவி விட்டு விழிசொக்கியது. மெல்ல ஆடி பக்கவாட்டில் விழுந்தது. எழுந்து திகைத்து நெஞ்சில் படபடவென அறைந்து “ரேரேரே” என ஓசையிட பிற குரங்குகள் ஆவலுடன் திரும்பி நோக்கின. இன்னொரு தாட்டான் குரங்கு தன் நெஞ்சில் அறைந்தபடி அதனுடன் மல்லுக்குச் சென்றது. ஆனால் இருவருக்குமே கால்கள் நிலைக்கவில்லை. கட்டிக்கொண்டபடி அவை தள்ளாடி உருண்டு எழுந்து பற்களை இளித்து உறுமின. அவற்றை பிடிக்கப்போன இரு குரங்குகள் வேறு திசையில் உருண்டன.
நகுலனும் சகதேவனும் சிரித்தபடியே இருந்தனர். பீமன் குடுவையில் இருந்து அருந்தியபடி “நல்ல களி மயக்கு… இந்தக் களி எங்குள்ளது என எண்ணுகிறீர்கள்?” என்றான். “சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன். “காற்றில்… மரங்களை வெறிகொள்ளவைக்கிறது காற்று. சருகுகள் பொருளிழந்து பறக்கின்றன. சுனைகள் அலைகொந்தளிக்கின்றன. அனைத்தின்மீதும் தூசு படர்ந்து மூடுகிறது. மலர்கள் அனைத்தும் உதிர்கின்றன. ஆனால்…” அவன் சுட்டுவிரலைத் தூக்கி பின் அதைக்கண்டு நாவால் நக்கியபின் “ஆனால் தென்றலாகி வந்து அது மலர்களை… ஆகவே…” என்றான்.
நாலைந்து பெருங்குரங்குகள் வானிலிருந்து விழுந்தவைபோல மல்லாந்து வாயிளித்தபடி துயின்றன. ஒரு குட்டிக்குரங்கு பாய்ந்து அவ்விசையில் உருண்டு கீழே செல்ல மற்றவை கூச்சலிட்டபடி பின்னால் சென்றன. ஓர் அன்னை பக்கவாட்டில் படுத்து துயில அதன் மேல் அமர்ந்த குட்டி விழிகள் சொக்கி துயிலில் விழுந்தது. குரங்குக்கூட்டமே கீழே செறிந்திருந்த காட்டுக்குள் சென்று மரங்களின் மேல் ஏறிக்கொண்டது. காடு அலையிளகிக் கொந்தளிப்பது தெரிந்தது. பீமன் சகதேவனிடம் திரும்பி “நான் என்ன சொல்கிறேன் என்றால்…” என்றான்.
சகதேவன் சிரித்துக்கொண்டே இல்லை என்பதுபோல தலையசைத்தான். நகுலன் “நாம் அதை பிறகு பேசலாம்” என்றான். பீமன் “இந்த மயக்கு… இது உண்மையில்…” என்றான். சகதேவன் மீண்டும் தலையசைக்க நகுலன் “நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றான். அர்ஜுனன் விழிகளை மூடி முகவாய் மார்பில் படிய பாறையில் சாய்ந்து அமர்ந்தான். பீமன் “நாம் இன்னும் ஒரு வகை தேறலை அருந்துவோம். இதில் சற்று சுக்கு உண்டு. மூச்சுக்கு நல்லது” என்றபடி எழுந்து சென்று மொண்டுவந்தான்.
பாறைப்பரப்பு முழுக்க குரங்குகள் களம்பட்ட படைபோல சிதறிக்கிடந்தன. ஒரு சின்னஞ்சிறு குட்டி மட்டும் சிறிய உருளைக்கல்லை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது. பீமனைக் கண்டு ஆவலுடன் பின்னால் வந்தபின் நினைவுகூர்ந்து மீண்டும் கல்லுக்கே திரும்பிச்சென்றது. சகதேவன் “எனக்கு சற்று தேறல்” என குழறியபடி சொல்லிவிட்டு பீமனை நோக்கி கைசுட்டிச் சிரித்தான். “நாம் பிறகு பேசலாமே” என்றான் நகுலன். அர்ஜுனன் மீண்டும் தேறலை வாங்கி அருந்தினான். சகதேவன் ஏதோ சொல்லப்போக “நாம் நாளை பேசுவோம்” என்றான் நகுலன்.
கீழே குரங்குகள் மரங்களிலிருந்து உதிர்ந்தன. விழுந்த குரங்களுக்கு மேல் மேலும் குரங்குகள் விழுந்தன. வெயில் வண்ண அலைகளாக மாறியது. செவிகள் நன்றாக அடைத்து காட்டின் ஒலிகள் தலைக்குள் எங்கோ ஒலித்தன. இடவுணர்வும் காலவுணர்வும் அழிந்தன. அர்ஜுனன் தன் மார்பில் எச்சில் சொட்டுவதை உணர்ந்தான். ஆனாலும் தலையை தூக்க முடியவில்லை. உடற்பொருத்துக்கள் தளர்ந்து தசைகள் ஊறிப்பரவி நீர்ப்படலமாக பாறைமேல் படர்ந்தான். தொலைவில் காட்டின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அது கடலோசையாகியது. அதன்மேல் நாவாய்கள் சிறகு விரித்தன. ஒரு நாவாயில் இளைய யாதவர் நின்று “இருண்டிருக்கிறது” என்றார். “என்ன?” என்று அவன் கேட்டான். “நல்ல இருள்” என்றார் இளையயாதவர்.
அவன் விழித்துக்கொண்டபோது பேச்சுக்குரல் கேட்டது. துயின்றுகொண்டிருந்த பீமனை முண்டன் “பேருடலரே” என கூவி எழுப்பிக்கொண்டிருந்தான். “என்ன?” என்றபடி அர்ஜுனன் எழுந்தமர்ந்து அவ்விசையிலேயே வில்லையும் அம்பையும் எடுத்தான். முண்டன் அவனருகே ஓடிவந்து “அங்கே… அங்கே” என்றான். “என்ன?” என்றான் அர்ஜுனன் “சொல்… என்ன ஆயிற்று?” என்றான். முண்டன் “அரசியை யாரோ தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள்!” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் திரும்பி நகுலனை உதைத்து “எழுக… உடனே எழுக!” என்றான்.
நகுலன் பாய்ந்தெழுந்து வாயைத் துடைத்து “என்ன?” என்றான். சகதேவனை உலுக்கியபடி “எழுக… இளையோனே எழுக!” என கூவினான். “இளவரசே, அரசர் மதுவருந்தி துயின்றார். அரசி நீராடுவதற்காக கோமதிக்கு சென்றார். நெடுநேரமாகியும் திரும்பவில்லை. நானும் சற்று தேறல் மாந்தி துயின்றுவிட்டேன்… விழித்துக்கொண்டு நெடுநேரமாகிவிட்டதை உணர்ந்து நேராக கோமதிக்கு சென்றேன். அரசியின் ஆடைகள் நாணலில் சிதறிக்கிடந்தன. கரைச்சேற்றில் ஏராளமான புரவிக்குளம்படிகளை கண்டேன்” என்றான்.
“இளையோனே, மூத்தவரை எழுப்பி கூட்டிக்கொண்டு வருக!” என்றபடி அர்ஜுனன் குரங்குகளை மிதிக்காமல் தாவிக்கடந்து ஓடினான். முண்டன் உடன் ஓடியபடி “ஐம்பது புரவிகள்கூட இருக்கும்… ஆகவே அரசர்கள் எவரோதான். ஐயமே இல்லை” என்றான். நகுலன் பீமன் காதில் குனிந்து “மூத்தவரே, எழுக! மூத்தவரே” என்று கூவினான். பீமன் ஆழ்கனவுக்குள் “தொலைதூரம்…” என்றான். சப்புக்கொட்டியபடி “நறுமணம்” என்று சொல்லி உடனே விழித்துக்கொண்டு எழுந்து வாயைத் துடைத்தபடி “என்ன? யார்?” என்று கேட்டான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
February 4, 2017
மாமங்கலையின் மலை -5
குடஜாத்ரியில் அந்த கூடத்திற்கு வெளியே ஒரும் முற்றம் இருந்தது. அதனருகே ஒரு சிறிய குளம். மீன்கள் திளைக்கும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மேலே விண்மீன்கள் மலைநிலங்களுக்கு உரிய அண்மை கொண்டிருந்தன. இரவில் ராஜமாணிக்கம் மீண்டும் பேய்க்கதைகளைச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். வழக்கம்போல மயிர்கூச்செறியவைப்பவை. வழுக்கையரான கிருஷ்ணன் மட்டும் அதை பொருட்படுத்துவதில்லை.
டிசம்பர், ஜனவரி மாதங்கள் இப்பகுதியில் மேற்குக் கடல்பகுதியிலிருந்து காற்று உச்சகட்ட விசையுடன் வீசும் காலம். ஏனென்றால் மேற்கே விரிந்துகிடக்கிறது அரேபிய பாலைவனம். பெரிய நதிகள் எதும் வந்து கலக்காத அரபிக்கடல் கடும் வெப்பத்தை அடைகிறது. விரிவடைந்த காற்று ஒப்புநோக்கக் குளிர்ந்து காற்று சுருங்கியிருக்கும்இந்திய மையநிலம் நோக்கி வீசி நிரப்புகிறது. ஆனால் கடலோரமாகவே அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அதைத் தடுத்து கீழே செலுத்துகிறது.
[image error]
எட்டு மணிக்கெல்லாம் மரங்கள் அனைத்தும் வெறி கொண்டு கூத்தாடத்தொடங்கிவிட்டன. நல்ல குளிர். கிருஷ்ணன் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமில்லை என்பதனால் குடஜாத்ரியில் குளிராது என்ற செய்தியை அனுப்பியிருந்தார். இதே கிருஷ்ணன் காஷ்மீர் செல்லும்போது அனைவரிடமும் குளிராடைகளை எடுத்துவரச் சொல்லி பலமுறை மின்னஞ்சல் விட்டதனால் ஒவ்வொருவரும் மூன்று நான்கு கம்பளி ஆடைக்ளை எடுத்துவந்தனர். நாங்கள் சென்ற போது காஷ்மீரில் ஓரிரு இடங்களைத் தவிர அனைத்துப்பகுதிகளிலும் சென்னையைப்போல வெயிலடித்தது.
ஆனால் குடஜாத்ரியில் குளிர ஆரம்பித்தது. படுப்பதற்கு ஜமக்காளங்கள் மட்டுமே கிடைத்தன. தரையிலிருந்து குளிர் வந்து உடலை நடுங்கச் செய்ததாக பலர் சொன்னார்கள். அதை முன்னரே ஊகித்து நான் ஒரு பெஞ்சில் என் படுக்கையை அமைத்துக் கொண்டேன். இருபக்கமும் புரண்டு விழுவதற்கு வாய்ப்பிருந்த அந்த படுக்கையில் தூக்கத்திற்குள்ளும் அதைப்பற்றிய பிரக்ஞை இருந்து கொண்டிருந்தது. ஒரு கட்டுமரத்தில் படுத்து கடலில் செல்வதாக பலமுறை குறுங்கனவுகள் கண்டேன். முந்திய நாள் இரவில் குறைவாகத் தூங்கியதும் பயணக்களைப்புமில்லாமல் இருந்தால் தூங்கியிருக்க முடியாது.
[image error]
வெளியே அமர்ந்து விண்மீன்களைப் பார்த்தபடி பேய்க்கதைகளைக் கேட்ட கூட்டம் நடுங்கியபடி வந்து படுத்து தூங்கியது. நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சென்ற செல்வேந்திரன் திரும்பிவரும்வழியில் முட்டாக்கு போட்டுக் கொண்டு அரையிருளில் வந்த கதிர்முருகனைக் கண்டு மீண்டும் சிறுநீர் கழித்ததாக மறுநாள் கேள்விப்பட்டேன்.
காலை எழுந்தவுடனேயே மூகாம்பிகைக்குக் கிளம்பிச் செல்வது எங்கள் திட்டம். குடஜாத்ரி மலையின் அலைகளுக்கு அப்பால் கலங்கிய மழைநீர் போல வானம் தெரிந்தது. அதில் மூழ்கி நீரினூடாக வெளியே மேலே ஒளிரும் சூரியனைப் பார்ப்பதுபோலிருந்தது உதயம். எங்கள் ஜீப்புகள் மேலும் தூசை எழுப்பி அனைத்தையும் ஒரு செந்நிற படலத்தால் போர்த்தின. இனிய தும்மல்கள் இப்பயணத்தின் சிறப்பம்சம்.
[image error]
குடஜாத்ரியில் நீராடிவிட்டுக் கிளம்பலாம் என்று திட்டமிருந்தது. ஆனால் குளிக்கத் தொடங்கினால் கிளம்புவது தாமதமாகும் என்பதனால் பல் கூடத் தேய்க்காமல் நேராக வந்து வண்டியில் ஏறிக்கொண்டோம். கீழே வந்து எங்கள் கார்களை அடைந்தோம். எங்கு நீராடுவது என்ற கேள்வி எழுந்தது. செல்லும் வழியில் ஏதாவது ஆற்றில் குளித்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணன் சொன்னார். ஆறு எங்கிருக்கிறது என்று கேட்டபோது இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதாகச் சொன்னார் ஓட்டுநர்.
ஓட்டுநர் இல்லத்தில் ஒருநாய்க்குட்டி அன்பாக இருந்தது. நாய்கள் பொதுவாக சுற்றுலாநிலையங்கள் அன்புடனிருக்கின்றன. ஏனென்றால் அங்கே அன்னியர் என எவருமில்லை, எல்லாருமே விருந்தினர்தான். அதிலும் குட்டிநாய்கள் கொஞ்சப்படுகின்றன. வளர்ந்தபின்னரும் அவை மானுடவிழைவுடன் வாழ்கின்றன. எந்தத்தெருநாயையும் கொஞ்சினால் அடிமையாகிவிடும். சிலநாய்கள் கொஞ்ச ஆரம்பித்ததுமே உளமுருகி அழ ஆரம்பித்துவிடுவதைப்பார்க்கலாம்.
[image error]
சாலையிலேயே ஆற்றைக் கண்டுவிட்டோம். ஆனால் மிகக்குறைவாகவே நீர் இருந்தது. இப்பகுதியில் ஓடும் ஆற்றின் பெயர் சௌபர்ணிகா. [என் செல்பேசியின் வரவேற்புப்பாடல் சௌபர்ணிகாவையும் மூகாம்பிகையையும் பற்றியது ‘சௌபர்ணிகாமிருத வீசிகள் பாடுந்நு நின்றெ சகஸ்ரநாமங்கள். ஜகதம்பிகே மூகாம்பிகே’] மழைபொய்த்து ஓடையாக ஆகிவிட்டிருந்தது. அதில் அணைகட்டி சலவைக்காரர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். முந்தைய நாள் அவர்கள் துவைத்த நீர் தான் அது. நீர் முழுக்க சலவை சோடாக் குமிழிகள் நிறைந்திருந்தன.
இருந்தாலும் துணிந்து நீராடிவிடலாம் என்றார் கிருஷ்ணன். செல்வேந்திரனுக்கு நம்பிக்கை வரவில்லை. கொல்லூரில் எப்படியும் நீராடுவதற்கு இடமிருக்கும் நாம் அங்கு செல்வோம் என்று அடம் பிடித்தார். அதுவும் நல்ல எண்ணம் தான் என்று எங்களுக்குத் தோன்றியது. வழக்கறிஞர்கள் துணியுமிடங்களில் நாம் கொஞ்சம் தயங்குவது நல்லது.
[image error]
கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு காலை எட்டுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். அங்கேயே ஒரு விடுதியில் உணவருந்தினோம். அதன் முன் இருந்த விடுதி இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா பேரில் அவரது குடும்பத்தால் உருவாக்கப்பட்டது. பராமரிப்பில்லாமல் பாழடைந்துகிடந்தது அது. குளித்து உடைமாற்றி செல்வதற்கு விடுதி இருந்தது. குழாயில் நீர் கொட்டவும் செய்தது.
கொல்லூர் இன்று ஒரு பெரிய வழிபாட்டு நிலையமாக மாறியிருக்கிறது. ஏராளமான கடைகள் அத்தனை கோயில்களுக்கு முன்னாலும் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள் ஏன் இருக்கின்றன என்று நான் தத்துவார்த்தமாக யோசித்தேன். ஒரு கடைமுன் நின்று பார்த்தால் உலகியல் வாழ்க்கை அனைத்தையுமே குறியீடுகளாக மாற்றிக் கட்டித் தொங்கவிட்டிருந்தது போல் தோன்றியது. பல்வேறுவிதமான டப்பாக்கள், வீட்டுப்பொருட்கள், சவுரிகள், அலங்காரப்பொருட்கள், இசைக்கருவிகள், துப்பாக்கிகள், போர்த்தளவாடங்கள் கூட! கடவுளுக்கு முன் வாழ்க்கையைக் கொண்டு படைத்து வைப்பது போல !
[image error]
மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அன்று அதிக கூட்டம் இல்லை. பத்து மணிக்கு மேல் கூட்டம் நெரிபடத் தொடங்கிவிடும் என்றார்கள். சிறப்புத் தரிசனத்திற்காக கட்டணம் எதுவுமில்லாமலேயே உள்ளே சென்று இருபது நிமிடத்தில் தேவியை வணங்கி வெளியே வந்தோம். கேரளபாணிக் கோயில். தொன்மையான கேரளப் பண்பாடு கோயிலின் எல்லா பகுதிகளிலும் காண கிடைத்தது. பக்தர்களும் பெரும்பாலனவர்கள் மலையாளிகள் என்பதை பேச்சிலும் பார்வையிலும் கண்டடைய முடிந்தது.
ஆலயத்திற்குள் ஓரிடத்தில் அமர்ந்து இயல்பாகவே எதையோ பேசத் தொடங்கி நம் தொல் மரபில் கற்றலும் கற்பித்தலும் எப்படி நிகழ்ந்தது, ஓர் ஆசிரியடமிருந்து எப்படி சிந்தனைகளை அல்ல சிந்திப்பதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைப்பற்றி தீவிரமாக உரையாடத்தொடங்கினோம்.
[image error]
கொல்லூரிலிருந்து கிளம்புகையில் முன்மதிய வெயில் கொளுத்தத் தொடங்கியது. கிருஷ்ணனின் திட்டப்படி யானா என்ற குகை பகுதியைச் சென்று பார்த்துவிட்டு அப்படியே கோகர்ணம் சென்று கடலோரத்தில் கால்நனைத்துவிட்டு இரவில் அங்கெங்காவது தங்கவேண்டும். ஆனால் கிளம்பும்போதே அது நிகழாது என்று தெரிந்துவிட்டது. யானா குகைகள் கொல்லூரிலிருந்து ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மூன்று மணி நேரம் பயணம் செய்தால் தான் யானா குகையை அடைய முடியும்.
நாங்கள் சென்று சேர நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. பெரிய கூட்டம் என ஏதுமில்லை. அரிய சுற்றுலா ஒன்றுக்கு உகந்த பகுதியாயினும் கூட பயணிகள் மத்தியில் யானா அவ்வளவு புகழ் பெற்றது அல்ல. சென்ற குகைப்பயணத்திலேயே இங்கு வந்து சென்று விடலாமென்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்காக ஏறத்தாழ முன்னூறு கிலோமீட்டர் பாதையை மாற்றியமைக்கவேண்டியிருந்ததால் கைவிடப்பட்டது.
[image error]
கார் நிறுத்துமிடத்தில் இரண்டு கடைகள். தேநீர் கிடைக்கும். மற்றபடி சுற்றுலா வசதிகள் எதுவுமிலை. மேலேறிச் செல்ல படிகள் அமைந்த பாதை. வந்து இறங்கியதுமே செறிந்த காட்டுக்குள் இலைத்தழைப்புகள் மீதாக எழுந்து நின்ற விசித்திரமான பாறைக்கட்டுமானத்தை பார்த்து வியந்தோம். ஏதோ தொன்மையான கோட்டை மழையில் அரித்து நின்றிருப்பது போலவே தோன்றியது.
அது சுண்ணாம்புக்கல் பாறையாக இருக்குமென்று தான் நான்முதலில் நினைத்தேன். நீரில் அந்த அளவுக்கு அரித்து வழிவுகள் கரவுகள் சரிவுகள் கூர்களுடன் உருகிய மெழுகுபோல் தோற்றமளிப்பது சுண்ணாம்புப்பாறையாக இருப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம். கருங்கல் பாறைகளுக்கு வேறு வகையான அமைப்புகள் உண்டு. அவை பெரும்பாலும் பெரிய உருளைகளாக அமைந்துள்ளன. நான் மலேசியாவில் இதைப்போன்று உருகி வழிந்த வடிவம் கொண்ட சுண்ணப்பாறைகளை பார்த்திருக்கிறேன். மேகாலயாவிலும் சட்டீஸ்கரிலும் இத்தகைய மலைகள் உண்டு.
[image error]
அல்லது எரிமலைக்குழம்புப்பாறையாக இருக்குமென்று தோன்றியது. இப்பகுதியின் பாறைகள் உலகிலேயே தொன்மையானவை என்பது நிலவியல் கூற்று. எரிமலைகள் இருந்தனவா? இந்த மினுமினுப்பும் கருமையும் விழிகளை அசையவிடாத அளவுக்கு கவர்ச்சி கொண்டவை. படிகளிலேறி நெருங்க நெருங்க மலைகள் அணுகி வந்தன. தார் உருகி வழிந்ததுபோல. மடிப்புகள் உலையும் கன்னங்கரிய திரைச்சீலை வானிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தது போல. எவரோ களைந்திட்டுப்போன கரிய பட்டாடை போல.
செங்குத்தான மலையின் மிக அருகே சென்று நிற்பது மனம் பதைக்கச்செய்யும் அனுபவம். அத்தனை உயரத்திற்கு செங்குத்தாக ஒரு பாறையை அத்தனை அணுகி பார்ப்பது இந்தியாவில் மிகக்குறைவாகவே இயலும். ஏனெனில் இங்குள்ள பாறைகள் அனைத்தும் கூம்பு வடிவமானவை. நான் அமெரிக்காவில் யோசிமிட்டி தேசியப்பூங்காவில் தான் இவ்வாறு செங்குத்தாக எழுந்து சென்ற பெரும்பாறையைப்பார்த்தேன் அது பெரும்பனிக்காலத்தில் மாபெரும் பனிக்கட்டிகள் உருகி இறங்கிய எடையால் வெடித்து உருவானது என்று அங்கு எழுதப்பட்டிருந்தது.
[image error]
இங்கு இத்தகைய மலைப்பாறைகள் இரண்டு உள்ளன. அண்ணாந்து விழிதூக்கி அவற்றின் உச்சி முனைகளைப்பார்ப்பது போல் மனம் பேதலிக்க வைக்கும் அனுபவம். மலைஉச்சி வளைந்திருப்பதே தென்னக வழக்கம். ஆகவே மலைக்கு கோடு என்று பெயர்- கோடுதல் என்றால் வளைதல். இங்கே ஊசி முனைகளின் தொகுப்பாக அவை தெரிந்தன. அல்லது இலைத் தளிர்களின் வான்விளிம்பு போல.
வடிவமற்ற ஒன்று நம் கண்முன் எழும்போது உள்ளம் பரிதவிக்கும். அவற்றை அறிந்த வடிவங்களுக்குள் திணித்து செலுத்திவிட முயல்கிறோம். அதுவே அவ்வடிவம் அளிக்கும் அனுபவமாகும். ஏதேனும் ஒரு வடிவத்திற்கு அதை திணிக்க முடிந்தால் மட்டுமே பின்னர் அதை நினைவுகொள்ள முடியும்.
இவ்வாறு வடிவத்திற்குள் திணிப்பதிலும் அந்தந்த பண்பாட்டுக்கென தனிஇயல்பு உள்ளது. அமெரிக்காவில் அங்குள்ள விசித்திரமான இயற்கையிடங்கள் அனைத்துமே சாத்தானுடன் அடையாளப்பட்டிருப்பதைப்பார்த்தேன். பெரும்பாறைகளால் ஆன நாற்காலி போன்ற வடிவம் ஒன்றுக்கு டெவில்ஸ் சேர் என்றும் கந்தகக்குழம்பு கொந்தளிக்கும் ஓர் இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன் என்றும் பெயர். மாறாக இந்தியாவில் அனைத்தும் புராணங்களுடனும் தெய்வத்துடனும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
[image error]
யானா குகையில் உள்ள இரண்டு பெரும் மலைகளில் ஒன்று பஸ்மாசுரன் இன்னொன்று மோகினி என்று சொல்லப்படுகிறது. யார் தலையில் கை வைத்தாலும் அவரை பொசுக்கும் வல்லமை பெற்ற பஸ்மாசுரன் வரமளித்த சிவன் தலையிலேயே கைவைப்பதற்காக அவரைத் துரத்தி வந்தான். அப்போது மோகினி வடிவில் எதிர்கொண்ட விஷ்ணு நடனமாடி அவனைக் கவர்கிறார். அவள் நடனமாடும்போது உடன் அவனும் ஆடுகிறான் ஆட்டத்தின் போதையில் ஒரு முறை அவள் தன் கையை தன் தலையில் வைக்க அவ்வாறே தன் கையைத் தன் தலையில் வைத்து அவனும் ஆடினான். மோகினிகளை நம்பிச்செல்லும் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் தன் தலையில் தானே கைவைத்து தன்னைப்பொசுக்கிக் கொள்வது தான் நிகழும் என்பதற்கான உதாரணமாக எப்போதும் சொல்லப்படுவது இக்கதை.
அவ்வாறு நடனம் ஆடியபோது ஒரு கணத்தில் பஸ்மாசுரனும் மோகினும் இரண்டு கல்சிலைகளாக அங்கே சமைந்து நிற்கிறார்கள் என்பது உள்ளூர் தொன்மம் ஆனால் அதற்கு காட்சி ரீதியாக ஒற்றுமை ஏதும் இல்லை. மோகினிமலை பஸ்மாசுரன் மலையைவிட மும்மடங்கு பெரிதாக இருக்கிறது. அதற்குக் கீழே சிவனுக்கு ஒரு கோயில் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் ஓட்டுக் கூரையுடன் அந்த அற்புதமான மலையை இழிவு படுத்தும்விதமான கட்டுமானத்துடன் உள்ளது
[image error]
முன்பு அங்கிருந்த சிறு குகைக்குள் நீர் சொட்டும் வடிவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது .பின்னர் உள்ளூர்க்காரர்கள் ஆண்டுக்கொரு முறை நடக்கும் பூசனைக்கு வந்து தங்கும் பொருட்டு விடுதியாகவும் ஆலயமாகவும் ஒரே சமயம் அமையும் விதமாக இதை கட்டியிருக்கிறார்கள். இன்று இக்கட்டுமானம் இடிந்து பாழடைந்து மனச்சோர்வளிக்கும் விதமாக அந்த அரிய இயற்கைஎழுச்சியின் காலடியில் மனிதச் சிறுமையின் வெளிப்பாடாகக் தெரிகிறது. அரசு நடவடிக்கை எடுத்து இதை அகற்றி முன்பிருந்த அதே சிறு ஆலயம் மட்டும் அங்கு நீடிக்கும்படி செய்ய வேண்டும்
யானாவில் உள்ள குகை என்பது சுண்ணப்பாறைகளில் நீர் ஓடி உருவாகும் குகைவழி அல்ல. பிலம் குகைகள் போல மண்ணுக்கடியிலுள்ள விரிசலும் அல்ல. அது உண்மையில் ஒரு மிகப்பெரிய பாறையிடைவெளிதான். பெரிய கூடம் போலவும் கைவிடப்பட்ட அரண்மனை ஒன்றின் வௌவால்நாறும் உட்பக்கம் போலவும் தோன்றவைத்தது. பெரிய பாறைகள் மேலே பாறையிடுக்கில் விழுந்து சிக்கியிருந்தன. இடக்கல் குகையை நினைவுறுத்தியது இது.
[image error]
யானா மலைகளை நோக்கியபடி அங்கு சுற்றிவந்தோம். தொடர்ச்சியாக மலைகளைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தோற்றத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறது. வெண்முரசு எழுதும்போதுதான் எத்தனை வகையான மலைப்பாறைகளை அதில் எழுதி இருக்கிறேன் என்று எனக்கே தோன்றுகிறது. இவை அனைத்தையும் எங்கெங்கோ சென்று கண்டிருக்கிறேன். இந்தியாவில் எங்கும் நான் சென்று கண்ட சிற்பங்களை விட அதிகமாக இவ்வடிவின்மேல் எனக்கு பொருளளித்தது. செதுக்கப்பட்ட எந்த வடிவத்தையும் விட இந்த மாபெரும் வடிவமின்மையில் தான் முடிவிலி குடிகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
யானாவிலிருந்து வெளியே வந்து மீண்டும் டீக்கடையை அணுகும்போது இருள் சூழ்ந்துவிட்டது. கடற்கரைக்கு செல்லும் திட்டம் முன்னரே கைவிடப்பட்டிருந்தது. அப்போதே கிளம்பினால் கூட நள்ளிரவில் தான் ஷிமோகாவை சென்றடைய முடியும் என்று தெரிந்தது. ”இன்றும் அஞ்சு மணி நேரத்தூக்கம்தான்” என்றார் கிருஷ்ணன். ”நாளைக்காலை எவ்வளவுமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பினால்தான் ஈரோட்டை சென்றடைய முடியும்” என்றார்.
[image error]
மீண்டும் ஒரு இரவு பயணம் எங்கள் பயணங்களில் இரவுப்பயணங்களை பொதுவாக தவிர்த்துவிடுவது வழக்கம். களைப்பூட்டும் நீண்ட பயணங்களும் செய்வதில்லை. இந்தியச் சாலைச்சூழல் மிக அபாயகரமானது. ஆப்ரிக்க காடுகளைவிடவும் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் மிகுந்தது. நான் திட்டமிட்ட சமணப்பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏழு மணிக்குள் பயணத்தை முடித்துவிடுவோம். ஒரு நாளில் அருகருகே இருக்கும் இரண்டு இடங்களை மட்டுமே பார்ப்ப்போம். ஆனால் எப்போதும் அது சாத்தியமல்ல.
இன்று ஒரு நாளில் குடஜாத்ரியில் கிளம்பி கொல்லூர் வழியாக யானா வரைக்கும் வந்து திரும்பவும் ஷிமோகாவுக்கு சென்று தங்குவது என்பது மிகக் கடினமான ஒரு பயணம். நான்கு நாள் பயணத்திற்கு இது ஒத்துவரும். முப்பது நாட்கள் செய்யும் பெரும் இந்தியப்பயணங்களை இப்படி பயணம் செய்தால் ஓரிரு நாட்களுக்குள்ளே ‘என்ன பயணம்? போதும் வீடு திரும்பி திண்ணையில் படுத்திருப்பதே மெய்ஞானத்தை அளிக்கும்’ என்று இடுப்பு சொல்ல ஆரம்பித்துவிடும்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கும்பகோணத்தில்
கும்பகோணம் அன்னை கல்லூரியில் ஓர் உரையாற்றுகிறேன். நாளை [6 -2-2017] காலை பத்துமணிக்கு. நெடுநாட்களாக கல்லூரி எதற்கும் சென்றதில்லை. ஆகவே ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்குமென நினைக்கிறேன். ஈரோட்டிலிருந்து நண்பர் கிருஷ்ணன் கடும் விமர்சனத்தை முன்வைப்பதற்காக கிளம்பி வருகிறார் .பொதுவாசகர்களும் உரைகேட்க வரலாம்
ஐந்தாம் தேதி இரவில் திருச்சி வருவேன். சக்தி கிருஷ்ணனுடன் தங்கிவிட்டு மறுநாள் காலை கும்பகோணம் செல்வதாகத் திட்டம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

