Jeyamohan's Blog, page 1682

February 1, 2017

மாமங்கலையின் மலை-2

2

ஷிமோகா செல்லும் வழியில் தலக்காடை பார்த்துவிட்டு போகலாம் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். தலக்காடு பற்றி நான் தி.ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நூலில் முன்னால் படித்திருக்கிறேன். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலணைவிடம் வரை சிட்டியுடன் சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது. தமிழில் பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று.

தலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று ஜானகிராமன் வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள் , அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்க்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றனஎன்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிடுகிறார். அதன் பிறகு சென்ற நாற்பதாண்டுகாலத்தில் அங்கிருந்த அனேகமாக அனைத்துக் கோயில்களும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுவிட்டன.

tala4

தலக்காட்டுக்கு  மதியவேளையில் சென்று சேர்ந்தோம். இளமழை தூறிக்கொண்டிருந்தது. வளையோடுகள் வேய்ந்த பழைய வீடுகள் கொண்ட தெரு ஒரு காலமயக்கத்தை அளித்தது. திண்ணைகள் தூண்கள் இடைநாழிகள். கார்கள் நிறைய நின்றன. நீள்விடுமுறைநாட்கள். அங்கு ஒரு பழையபாணி கட்டிடத்தில் இயங்கிய உணவகத்தில் கர்நாடகச் சுவை கொண்ட வீட்டுச்சாப்பாட்டை உண்டோம். இப்பயணம் முழுக்கவே சாதாரண விடுதிகளில்கூட சோறு சுவையாக இருந்தது. நாம் தமிழகத்தில் பொன்னியரிசி சாப்பிடுவதை ஒரு உயர்குடித்தனமாக எண்ணி சுவையற்ற சக்கையான வெண்ணிறச் சோற்றை உண்டுகொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது

ஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டோம். தலக்காட்டில் பெரும்பாலான கோயில்கள் தரை மட்டத்திலிருந்துமுப்பதடி ஆழத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரும் பொருட்செலவில் மணலை அகற்றி ஆலயங்களை மீட்டு செப்பனிட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடியும்போது பெரும்பாலான ஆலயங்கள் பாதி வரை மணலில் மூழ்க மீண்டும் அகழ்ந்து அவற்றை எடுக்கிறார்கள்.

q

இங்கு இந்த மணல் மேடு உருவானதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காவேரி இங்கே U வடிவில் ஓடுகிறது. அந்த வளைவின் நடுவே உள்ளது தலக்காடு.  மண்ணுக்கடியில் உள்ள பாறைகளின் விரிசல்களால் இவ்வாறு நதிகள் வளைகின்றன. இது ஆழமான சுழிகளை நதிநீரில் உருவாக்குகிறது. இந்தியா முழுக்கவே எங்கெல்லாம் ஆறு தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறதோ அவ்விடமெல்லாம் புனிதத்தலமாகக் கருதப்படுவதைக் காணலாம். தலக்காடு வரலாற்றுக்காலத்திற்கு முன்னால் இருந்தே புனிதத்தலமாக இருந்து வந்தது

குடகில் பிறந்த காவேரி நீண்ட சரிவுநிலத்தில் ஒழுகி வருகிறது. இங்கே காவேரி தேங்கி சுழன்று விரைவு குறைந்தமையால் அதில் மணல்மேடுகள் உருவாயின. காலப்போக்கில் காவேரியின் மேல்பகுதியில் ஊர்கள் உருவாகி  பாசனம்பெருகி ஆற்று நீரொழுக்கு குறைந்தது. மணல்மேடுகள் காற்றில்பறக்கலாயின. அவை இங்குள்ள காற்றுச்சுழிப்பால் தலக்காட்டில் பெய்து மூடின

tala3

இங்குள்ள தொன்மம் வேறுவகையானது. தலக்காடு கடைசியாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின்கீழ் இருந்தது. 1610 ல் விஜயநகரத்தின் பிரதிநிதியாக  ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து திருமலைராஜன் என்பவர் இப்பகுதியை ஆண்டார். இவருக்கு ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் உண்டு. மைசூரின் ஆட்சியாளராகிய உடையார் குலம் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்தது. திருமலைராஜா முதுகில் ராஜபிளவைக் கட்டி வந்து இறுதிக்காலத்தில் துன்புற்றார். ஆட்சிப்பொறுப்பை உடையாரிடம் கொடுத்துவிட்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக வந்தார்

உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றி அரசரானார். அப்போது விஜயநகரமும் வலுவற்றிருக்கவே தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டார். திருமலைராஜனின் மனைவி அலமேலம்மா ஊர் திரும்ப முடியாமல் தலக்காட்டிலேயே மாலங்கி என்னும் சிற்றூரில் தங்கிவிட்டார். ஆட்சிக்கு வந்த உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் பெரிய பூசையைச் செய்து அவ்விழாவில் அரசக்கொலு வீற்றிருக்கத் திட்டமிட்டார். ஆனால் ரங்கநாயகியின் நகைகளை அலமேலு அம்மா தன்னுடன் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது

378

அந்நகைகள் இல்லாமல் பூசை நடக்கமுடியாது. பூசையில் கொலுவீற்றிருப்பவரே ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அரசர் என்பது மரபு. நகைகளைக்கோரி அலமேலம்மாவுக்கு தூதனுப்பினார் உடையார். அலமேலம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவரைச் சிறைப்பிடிக்க படைகள் அனுப்பப்பட்டன. அலமேலம்மாவும் படைகளும் காவேரியைக் கடந்து மறுபக்கம் செல்லமுயல்கையில் உடையாரின் படைகளால் வளைக்கப்பட்டன. அலமேலம்மா நகைகளுடன் காவேரியின் ஆழ்சுழியில் குதித்து உயிர்துறந்தார் எனப்படுகிறது

அலமேலம்மா “தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் தலக்காடு மணல்மூடியது என்று தொன்மம். இதையொட்டி கன்னடத்தில் பலகதைகள் எழுதப்பட்டுள்ளன.

தல, காடா என்று இரண்டு வேடர்கள் வாழ்ந்ததனால் இப்பெயர் வந்தது என்று ஒரு தொன்மம் உள்ளது. அங்கிருக்கும் வைத்தியநாதர் கோவிலின் வாசலில் தலன் காடன் இருவர் சிலைகளும் அமைந்துள்ளன. ஆனால் தலக்காடு என்பதற்கான மூலச்சொல் பழைய பிராகிருத மொழி வார்த்தையில் இருந்து வந்தது. தாலவனா என்றுதான் இந்நிலம் பழைய கல்வெட்டுக்களில் சொல்லப்படுகிறது. பனைமரக்காடு என்று அதற்கு நேரடியான பொருள். இப்பகுதியின் மணல் தன்மையை  வைத்துப்பார்த்தால் இங்கு பனைமரங்கள் மட்டுமே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கிராத மன்னர்கள் அல்லது காடவ மன்னர்களிடமிருந்து இந்த நிலம் கங்கர்களால் வெல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு சிறு பனைக்காடாக இருந்த இப்பகுதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கங்க மன்னர் ஹரிவர்மனால் தனது இரண்டாம் தலைநகரமாக ஆக்கப்பட்டது. கங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது. மோயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ளது  அன்று அவ்வூரின் பெயர் ஸ்கந்தபுரா.

அப்போது தமிழகம் களப்பிரர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. களப்பிரர்கள் களப்பிர நாடு என சொல்லப்படும் மைசூர்ப் பகுதியில் இருந்து வந்து தமிழகத்தை ஆண்டவர்கள். களப்பிரர்களிடமிருந்து எழுந்த ஒரு கிளை அரசு தன் கங்கர்குலம் என்று சொல்லப்படுகிறது. சோழர்கள் தலையெடுத்தபோது கங்கர்கள் பின்வாங்கி தாலக்காட்டில் தங்கள் தலைநகரை அமைத்தனர்

tala2

11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தலக்காட்டைக் கைப்பற்றினர். அதற்கு ராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டது. சோழர்களிடமிருந்து ஹொய்ச்சாளர் தலக்காட்டை பிடித்தனர். ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் இங்குள்ள முக்கியமான ஆலயங்களைக் கட்டினார். பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் இது விஜயநகர பேரரசின் ஆட்சிக்குச் சென்றது. அங்கிருந்து மைசூர் உடையார்களின் ஆட்சிக்குச் சென்று மணல்மூடி மறைந்தது.

தலக்காட்டை சரியாகப் பார்க்க முழுநாள் தேவைப்படலாம். நாங்கள் இரண்டுமணிநேரத்தில் ஐந்து மைய ஆலயங்களை மட்டும் பார்த்தோம். வைத்யநாதீஸ்வரர் ஆலயம், பாதாளேஸ்வரர் ஆலயம், மறலீஸ்வரர் ஆலயம், மல்லிகார்ஜுனர் ஆலயம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.  பல ஆலயங்கள் தரைமட்டத்திலிருந்து இறங்கிச்செல்லவேண்டிய ஆழத்தில் உள்ளன.

ta1

தலக்காடு வைத்யநாதீஸ்வரர் ஆலயத்தின் முகமண்டபம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. இங்குள்ள முக்கியமான ஆலயம் இது. வைத்யநாதர்கள் எங்குமுள்ளனர். நம்மூர் வைதீஸ்வரன் கோயில் முதல் இமாச்சலப்பிரதேசத்தில் நாங்கள் பார்த்த பேஜ்நாத் ஆலயம் வரை. வைத்யநாத் மருவி பேத்யநாத் ஆகி பேச்சுவழக்கில் பேஜ்யநாத். நோய்தீர்க்கும் லிங்கம். நோய் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கு மட்டும் அல்ல. பிறவியே ஒருநோய்தான் சைவமரபில். பிறவிப்பிணி மருத்துவன் சிவன்.

தலக்காட்டின் முக்கியமான ஆலயங்களில் ஒன்று கீர்த்திநாராயணர் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் ஆணைப்படி ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனரால் கட்டப்பட்டது. இங்கு ராமானுருக்குச் சிலை உள்ளது. 1991ல் தான் இவ்வாலயம் முழுமையாக மணலில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஹொய்ச்சாளக் கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இவ்வாலயம். கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நகை.

மணலில் புதைந்த நகரம் எனக்கு விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயத்தை நினைவுறுத்தியது. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதைச் சொன்னார். காற்று சுழிப்பதனால் மணலும் சுழிக்கும் ஒரு சுழி ஸ்ரீசக்ரமாக ஆக அதற்கு அடியில் விஷ்ணுகோயில் அழிந்து புதைந்துவிட்டிருக்கும் அச்சித்தரிப்பில். நான் உடனே கோபோ ஆபின் மணல்மேடுகள் நடுவே ஒரு பெண் நாவலை எண்ணினேன். சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதையும் குறிப்பிட்டார்.

tala5

மணல்மேடுகளினூடாக நடப்பதற்கு தகரக்கூரையிடப்பட்ட பாதை இருந்தது. வெயில்காலத்தில் அந்நிழல் இல்லாமல் அங்கே நடக்கமுடியாதென்று தோன்றியது. மணல்மேட்டின்மேல் நடக்கும்போது மேலும் பல ஆலயங்கள் காலுக்கடியில் புதைந்திருப்பதாக எண்ணிக்கொள்கையில் ஒருவகையான பதைப்பு உருவாகிறது.  மணல்மேட்டில் நின்று கீழே தெரிந்த கீர்த்திநாராயணர் ஆலயத்தை ஒற்றைநோக்கில் பார்த்தபோது நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. மணல்தரிகள் காலத்துளிகள். காலப்பெருக்கு. காலத்திரை.

தலக்காட்டில் இருந்து கிளம்பும்போது லோத்தலும் காளிஃபங்கனும் நினைவிலெழுந்தன. அவையும் மணல்மூடிக்கிடந்தவை. மேலே மேலே என மணல் மூடிக்கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. மெல்லிய தூசுப்படலமாக நம்மைச் சூழ்வதும் அசைவற்றிருந்தால் மூடுவதும் அதுவே

tala7

மாலையில் காவேரிக்கரை வரைக்கும் சென்றோம். அங்கே காவேரி ஆழமில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே விடுமுறைநீராட்டுக் களியாட்டில் இருந்தனர். பெரும்பாலானவர்கள் மைசூர் பெங்களூர் நகர்களிலிருந்து காரில் வந்தவர்கள். பந்துவிளையாட்டு, சிரிப்பு, தற்படம் எடுத்தல் என கொண்டாட்டம். காவேரி ஒளியுடன் இருந்தது. இனிய மழைச்சாரல். சூழ்ந்திருப்பவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கையில் அறியாமலேயே உள்ளம் மலர்ந்துவிடுகிறது

குறிப்பாகப் பெண்கள். இத்தகைய இடங்களில் அவர்களில் தெரியும் கொண்டாட்டம் ஆச்சரியமூட்டுவது. ஆண்கள் அப்போதும் பொறுப்பின் கவலையுடன் இருப்பார்கள். பெண்கள் அக்கவலைகளை ஆண்களுக்கு அளித்துவிட்டு விடுதலைகொண்டுவிடுகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2017 10:35

ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்

ஜெ

திரு கண்ணன் தன் முகநூலில் எழுதிய பதிவு இது. அதை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். இதிலுள்ள வினாக்கள் மிகச்சங்கடமானவை. குறிப்பாக இவர் இயற்கைவேளாண்மை போன்றவற்றில் ஈடுபடுபவர் என்கிறார்கள். அவரது குரல் முக்கியமனாது

சத்யன்

index

ஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி — நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் — இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர்

சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது பீட்டா மட்டுமா?

கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன்?

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.

பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும்போதும் பாரம்பரியம் தெரியவில்லை.

கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.

மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர்வ சாதாரணமானபோது பாரம்பரியம் தெரியவில்லை.

திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் – இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது?

நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை.

நமது பாரம்பரிய விவசாய மக்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை.

கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை.

பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம்.

இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே.

அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்?

இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம்?

இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா?

எல்லாம் நமது இரட்டை வேஷம்தான்.

சரி… ஜல்லிக்கட்டு தடையால் நாட்டுக்காளையினங்கள் அழிந்து விட்டன. அப்படியா? ஏற்கெனவே தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன. ஆனால் ஏதோ இந்த நாங்கைந்து வருடத்தில்தான் அழிந்து விட்டது போலப் பேசுவது காளைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

சமீபத்தில் நாட்டு நாயினங்களை வளர்த்து வரும் கடைசி இடமான சைதாப்பேட்டை அரசு நிறுவனத்தை மூடச்சொல்லி உத்தரவு வந்து விட்டது. பார்த்துக் கொண்டு சும்மாதானே இருந்தோம்? வெளிநாட்டு நாயினங்களை வளர்த்து அதிக காசுக்கு விற்கும் நிறுவனங்கள் லாபம் கொழிக்க நமது நாட்டு நாயினங்களை பலி கொடுத்து விட்டோம். வெளிநாட்டுப் பசு இனங்கள் – நமது சீதோஷ்ணத்துக்கு ஒவ்வாத, தரங்குறைந்த பாலைத் தருகின்ற, எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய இனங்களை இறக்குமதி செய்து நம்மிடம் கொழுத்த லாபம் பார்க்க இது ஒரு வழி,

தமிழ்நாட்டில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. ஆந்திரா, குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஜல்லிக்கட்டே இல்லையே? அப்போது அந்த மாநிலங்களுக்குச் சொந்தமான காளையினங்கள் அழிந்து போயிருக்க வேண்டுமே? அங்கே மட்டும் எப்படித் தழைத்திருக்கிறது?

அடுத்தது – இப்போது நடப்பது ஜல்லிக்கட்டா? இதுதான் வீரமா? அடப்பாவிகளா.. ஏறு தழுவுதல் என்ன என்பதை அந்தக் காலத்து எம் ஜி ஆர் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தனி ஒரு மனிதனாக கூண்டுக்குள் விடப்பட்டு அங்கே இருக்கும் காளையைத் தனியாக அடக்குவதுதான் ஏறுதழுவுதல், அதுதான் வீரம். மொத்தமாகப் பத்திருபது பேர் வாசலைத் தாண்டி வெளியே வரும் காளையின் மீது விழுவதும் அது ஓடும்போது கொம்பில் இருப்பதை அவிழ்த்து எடுப்பதுமா வீரம்?

இப்போது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறியதாக மார்தட்டிக் கொள்கிறோம். மகிழ்ச்சி. அடுத்தது மாணவர்களின் போராட்டம் வலுத்து மத்திய அரசைப் பயமுறுத்திப் பணியவைத்து அவசர சட்டம் பிறப்பிக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.

அதன் பின் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, தமிழகம் சுடுகாடு ஆகும். பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மட்டுமே வாழ முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செத்து சுண்ணாம்பாக வேண்டியதுதான். அதற்கு முன்னாடி விவசாயி என்ற இனமே தமிழகத்தில் இருக்காது.

என்ன பயமுறுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா?

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என்று நாம் செய்து காட்டினால்….

1. அடுத்த வாரம் கர்நாடகாவில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் நடக்கும். அதனையடுத்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரத் தேவையில்லை என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்

2. அதற்கடுத்த வாரம் கேரளாவில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெறும். அதனையடுத்து முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

3. அதற்கும் அடுத்த வாரம் ஆந்திராவில் மாணவர் போராட்டம் வலுக்கும். அதனையடுத்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் விட வேண்டாம் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

4. இப்படியே சிறுவாணியில் தடுப்பணை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை என்று தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளையும் அடைத்து விட அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படும்

சந்தோஷமா?

அப்புறம் எல்லாம் அடுத்தது என்ன படம் ரிலீஸ் என்று ஆவலுடன் திரையரங்கில் வாசலில் ஆயிரம் ரூபாய் குடுத்து டிக்கெட் வாங்கக் காத்திருக்கலாம்.

இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறதா? இருக்கிறது. உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியதை மதித்தோமா?

போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல… உச்ச நீதிமன்றம்.

இனிமேல் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை – நீதிமன்ற அவமதிப்பு என்று பேச முடியுமா?

நீதிமன்றத்தில்தான் வாதாட முடியுமா?

மொத்தத்தில் காவிரிப் பாசன விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களைப் படுகுழியில் தள்ளியாயிற்று. மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை அழித்து விட்டு இவர்கள் மாடுகளைக் காக்கப் போகிறார்களாம்.

விவசாயம் லாபகரமானது இல்லை என்பதோடு வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை என்பதுதான் நிலைமை. இந்த நிலையில் விவசாயிகள் மாடுகளை எங்கே பராமரிப்பது? இதனால் மாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன.

மாடுகளையெல்லாம் வெட்டித் தின்று விட்டு காளைகளைக் காப்போம் என்று ஒரு போராட்டம்.

நம்மாழ்வார் என்று ஒரு கிழவர். விஷத்தை விதைக்காதீர்கள். நமது பாரம்பரிய மாடு இனங்களைக் காப்பாற்றுங்கள். பசுவின் மூத்திரம், சாணம், பால், நெய், தயிர் இதை வைத்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யா மற்றும் பசுஞ்சாண உரங்களே போதும். இதனை விட்டு விட்டு விஷத்தைத் தூவி உண்ணும் உண்வை விஷமாக்காதீர்கள் என்று கத்திக் கத்தியே மாண்டு போனார். ஆனால் இன்னும் வெளிநாட்டுக் குப்பை உணவு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல். இதில் அரசியல் ஆதாயம் தேட ஒரு கும்பல். பிரிவினைவாதிகளின் ஊடுருவல். கலகம் விளைவிக்க ஒரு கும்பல். இவர்கள் கையில் மாணவர்கள்.

காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்?

முதலில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஒதுக்குங்கள். சுதேசி என்று சொன்னால் கெட்ட வார்த்தை மாதிரிப் பார்ப்பவர்கள் இன்று கோக் பெப்சியை எதிர்த்து கோஷம். ஆனால் பிஸாவையும் பர்கரையும் கே எஃப் ஸி யையும் ஏன் எதிர்க்கவில்லை?

நமது பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களுக்கு மாறுங்கள். இதனால் மழை பொய்த்தாலும் கர்நாடகம் மறுத்தாலும் விவசாயிக்கு நல்ல தானிய உற்பத்தியும் வாழ்வாதாரமும் உறுதிப்படும். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொட்டமும் அடங்கும். விவசாயி நல்ல நிலைமைக்குத் திரும்பினால் மாடுகளின் வாழ்வும் பெருகும். தினமும் ஒரு வேளையாவது கம்பு கேழ்வரகு என்று பழகுங்கள். எல்லோரும் இப்படி மாறினால் எந்த நாதாரியிடமும் தண்ணீர் வேண்டிக் கை ஏந்த வேண்டியதில்லை.

கதராடையை உடுத்துங்கள் என்று பிரதமர் கூறியபோது கேலி செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் கிராமத்தில் கதர் உற்பத்தி செய்யும் நெசவாளிக்கு நீங்கள் வாங்கும் கதராடையினால் ஒரு நாள் உணவு கிடைக்கிறதென்றால் அதை விட வேறென்ன வேண்டும்? ஆனால் பன்னாட்டு நிறுவனங்களையும் பெருமுதலாளிகளையும் திட்டிக் கொண்டே இன்னொரு புறம் அவர்களிடமே போய் விழுகிறோம்.

இனியாவது நமது பாரம்பரியம் என்ன என்பதை உண்மையாக உணர்ந்து தொன்மையான நமது பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள். சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

கண்ணன் கே

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2

2. கதிர்முன் நிற்றல்

அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர் எட்டி அவள் கையைப்பற்றி “என்ன விரைவு? சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே!” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன?” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே? நான் செல்லவேண்டும். உலையேற்றும் நேரம் இது” என்றாள்.

எரிச்சலுடன் அவள் கையை விட்டு “செல்!” என்றார் தருமன். “ஏன்? என்ன சொல்லவந்தீர்கள்?” என்றாள் அவள். “வேதங்கள் நான்கு, ரிக் யஜூர் சாம அதர்வம். அதைச் சொல்லவந்தேன்” என்று அவர் சொல்ல அவள் அரைச்செவியுடன் கேட்டு “ஆம்… இன்று உலையேற்ற பிந்திவிட்டது. பெருங்கலம் ஏற்றவிருக்கிறேன்” என்றபடி “நான் செல்லவா?” என்றாள். அவர் சினத்துடன் “செல்! போ… இனி உள்ளே வராதே. ஏதாவது வேண்டுமென்றால் நானே வருகிறேன்” என்றார். அந்த உரத்த குரல் அவளை திகைக்கச் செய்தது. “என்ன ஆயிற்று? ஏன் கூச்சலிடுகிறீர்கள்?”

அவர் மெல்ல தணிந்து “ஒன்றுமில்லை. செல்!” என்றார். “எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நிலையமைவதே இல்லை” என்றபின் “பால் அருந்துக! சுக்கும் மிளகும் போட்டிருக்கிறது” என்றபின் மீண்டும் வெளியே செல்லத்திரும்பினாள். “எடுத்துக்கொண்டு போ” என்று தருமன் கூவினார். “ஏன்?” என அவள் கேட்க “எடுத்துக்கொண்டு போடி… எடுத்துக்கொண்டு போகச் சொன்னேன். போ…” என்றார். “என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்றாள் அவள். “போ வெளியே… உன்னை போகச் சொன்னேன்.” அவள் அவரை புதிராக நோக்கியபின் பாலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

மூச்சிரைத்தபடி அவர் குனிந்து அமர்ந்திருந்தார். முடியிழைகள் முகத்தில் சரிய எரிச்சலுடன் அவற்றை பின்னால் தள்ளி நிமிர்ந்து அமர்ந்து மூச்சிரைத்தார். பின்னர் நிமிர்ந்து கூரையின் மூங்கில்வேய்வை நோக்கிக்கொண்டிருந்தார். சற்றுநேரம் கழித்து மீண்டு வந்து ஓலையை எடுத்து விழியோட்டலானார். ஆனால் சொற்கள் பொருளென்றாகவில்லை. அதை மூடி கட்டிவைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கீழே தெரிந்த காட்டை நோக்கியபடி வெறுமனே இருந்தார்.

கொடுவேரிப் புதர்களுக்குள் செம்போத்துகள் இரண்டு எழுந்து சிறகடித்து புதைந்துகொண்டிருந்தன. கிளைகளில் ஒரு சிறு குரங்கு மட்டும் அரைத்துயிலில் அமர்ந்திருந்தது. அது காணும் கனவுகளை அதன் வால்நுனியில் அசைவுகளாக அறியமுடிந்தது. பின்காலையின் வெயில் நீராவியை எழுப்பத் தொடங்கிவிட்டிருந்தது. காடெங்கும் அதன் மென்மயக்கம் பரவியிருந்தது. காட்டின் உணர்வுநிலைகளை அதிலெழும் பறவையோசையே காட்டிவிடுவதை அவர் உணர்ந்திருந்தார். காலையில் கொப்பளிக்கும் அவ்வோசை வெயிலெழுகையில் மெல்ல தொய்வடைந்து உச்சியில் அமைதியாகி முன்மாலையில் மயங்கியெழுந்து முன்னந்தியில் மீண்டும் அலையடிக்கும். இருள் எழுகையில் புதைந்து மறைந்து இரவுக்குள் ஆங்காங்கே சில வினாக்களும் விடைகளுமாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

பறவையோசையை செவிகூர்வது எப்போதும் உள்ளத்தை அமைதியுறச்செய்கிறது. அவர் எழுந்தபோது உள்ளம் தெளிந்து முகம் இயல்புகொண்டிருந்தது. வெளியே சென்றபோது குடிலின் பேரறையில் எவருமிருக்கவில்லை. நகுலனின் மேலாடை மட்டும் மூங்கில் வளையத்தில் கிடந்தது. குனிந்து நோக்கியபோது மலர்த்தோட்டத்தின் தென்மூலையில் அவன் மண்வெட்டியால் வெட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் மூச்சொலியும் மண்வெட்டிவிழும் ஒலியும் காட்டில் பட்டு எதிரொலித்து வேறெங்கோ என கேட்டன. அவனருகே இரு குரங்குகள் வேடிக்கை நோக்கியபடி அமர்ந்திருந்தன. ஓர் அன்னைக்குரங்கு மடியிலிருந்த சிறுபைதலின் தலையை வருடி பேன்நோக்கிக்கொண்டிருந்தது.

மூங்கிலால் ஆன பாதை வழியாக தருமன் இணைக்கப்பட்டிருந்த அடுமனைக்குச் சென்றார். அங்கே திரௌபதியின் பேச்சுக்குரலும் உடன் சகதேவனின் குரலும் கேட்டது. அவர் காலடிகளை நன்கு தேய்த்தபடி உள்ளே நுழைந்தார். அவர்கள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். சகதேவன் கீழே மணையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்க அவள் அப்பால் குனிந்து அடுப்பில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மண்பானையில் நீரை ஊற்றிவிட்டுத் திரும்பினாள். அவள் விழிகள் மாறுபட்டன. “பால் கொண்டுவரவா?” என்றாள். அவர் “இல்லை. அதற்காக வரவில்லை” என்றார்.

“உணவு ஒருங்க இன்னும் பிந்தும். இன்று சற்று கூடுதலாகவே சமைக்கவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றார் தருமன். “இன்று மூத்தவர் உணவுக்கு வரக்கூடும் என்று எண்ணுகிறாள் தேவி” என்றான் சகதேவன். “அவருக்கு உகந்த ஊன்சோறு சமைக்கலாமென எண்ணினோம். புல்லரிசி நிறையவே இருக்கிறது. காலையிலேயே இரு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி கொண்டுவந்தோம்.” தருமன் திரௌபதியின் இடைக்குமேல் எழுந்திருந்த மண்பானையை நோக்கிவிட்டு “ஆம், அவனுக்கென்றால் இப்பெருங்கலமே போதாது” என்றார்.

“கலமல்ல சிக்கல், மூத்தவரே. பெருமளவில் சமைக்கையில் சேர்வைமுறை கைநிற்பதில்லை. உப்போ புளியோ எரிவோ மிஞ்சிப்போகிறது. ஆகவேதான் ஊனுணவு. இதில் உப்பு மட்டுமே இடர். அதை வேண்டுமென்றால் கூட்டிக்கொள்ளவும் ஆகும். ஊன் மிகுந்தாலும் பழுதில்லை” என்றான் சகதேவன். திரௌபதி விறகைச் சரித்து எரியை எழுப்புவதை தருமன் ஆர்வத்துடன் நோக்கி “வேள்வியேதான்” என்றார். “வேள்வியில் எரி நம் உணவை உண்ணும் விருந்தினன். இங்கு அது விருந்து சமைக்கும் அடுமடையன்.” சகதேவன் சிரிக்க திரௌபதியும் உடன் சிரித்தாள்.

“என்ன?” என்றார். “இல்லை, நீங்கள் வரும்போது உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் சகதேவன். “என்னைப்பற்றியா?” என்றார் தருமன். “ஆம், நீங்கள் சினம்கொண்டதை தேவி சொன்னாள். நீங்கள் சினம்கொண்டால் அதன் பொருள் மெய்மையை அணுகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் என்றேன். வெகுளி கணமேனும் காத்தல் அரிது என்றல்லவா தொல்நூல் கூற்று?” அதிலிருந்த நுண்ணிய அங்கதத்தை உணர்ந்ததும் தருமன் சிரித்தார். “உண்மையில் நான் சினந்தது தேவியிடம் பேசமுடியவில்லையே என்பதனால்தான். வெறும் அடுமனையாட்டியாகவே இங்கு வந்தபின் மாறிவிட்டாள். நாங்களிருவரும் சேர்ந்தமர்ந்து சொல்லுசாவி எத்தனை காலமாயிற்று தெரியுமா?”

“உண்மை, மூத்தவரே. இக்காடு சொல்லில்லாதது. நானே அவ்வப்போது திடுக்கிடலுடன் உணர்வதுண்டு, சொல்லாய்ந்து எத்தனை நாளாயிற்று என்று. ஓடிச்சென்று சுவடிகளைப் பிரித்துக்கொண்டு அமர்ந்தால் அனைத்தும் பொருளிழந்திருக்கும். நேற்றும் நாளையும் பின்னும் இன்றுகளின் தொடராக காலத்தை நோக்குகிறது நிமித்திகநூல். இன்று மட்டுமேயான காடு இது” என்றான் சகதேவன். உடனே சிரித்துக்கொண்டு “இதில் திளைக்க மூத்தவரால் மட்டுமே முடியும்” என்றான். திரௌபதி புல்லரிசியை எடுத்தபடி “ஏனென்றால் சோறு நேற்றிலும் நாளையிலும் இல்லை, இன்று கண்முன் இருந்தால் மட்டுமே பொருளுடையது” என்றாள்.

“அவன் வருவான் என எப்படி தெரியும்?” என்றார் தருமன். “தோன்றியது” என்றாள் திரௌபதி. “தேவி காலையில் கனவில் அவர் வருவதைக் கண்டாளாம்” என்றான் சகதேவன். “கனவிலா? என் கனவில்கூடத்தான் அவன் நாளும் வருகிறான்” என்றார் தருமன். “பசியுடன் வந்திருக்கிறார். அப்படி அவர் வந்தபோதெல்லாம் நேரிலும் வந்துள்ளார்” என்றான் சகதேவன். “நன்று” என்று சொல்லி புன்னகைத்த தருமன் “அந்தப்பாலை எடு… அதை அருந்தாமல் நிலைகொள்ளவில்லை” என்றார். “ஆறிவிட்டது…” என்றாள் திரௌபதி. “சூடுசெய்து கொடு… ஏன் வீணாக்கவேண்டும்?” என்றார் தருமன்.

“நீங்கள் முதன்மையாக எதையாவது சொல்ல விழைந்தீர்களா, மூத்தவரே?” என்றான் சகதேவன். தருமன் முகம் மலர்ந்து “நான் இப்போது வாசித்துக்கொண்டிருப்பது என்ன நூல் தெரியுமா?” என்றான். சகதேவன் “நூல் என்பதே அயலாகிவிட்டது, மூத்தவரே” என்றான். “வேதங்கள் பல, வகுத்த நான்கே நாடறிந்தது. அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் தருமன். “அசுரர்களின் ஆசுரமும் நாகர்களின் மாநாகமும் தொல்வேதங்கள். அசுரதெய்வங்களாக இருந்த வருணனுக்குரியது வாருணம். இந்திரனுக்குரியது மாகேந்திரம். வருணனையும் திசையரசர்களையும் இந்திரன் வென்று முழுமுதலோனாக எழுந்தபோது உருவானது மகாவஜ்ரம். இடையே அசுரப்பேரரசன் இரணியன் அமைத்த தனிவேதம் ஹிரண்யம். அதை மீறி அவன் மைந்தர் பிரஹலாதரில் எழுந்தது மகாநாராயணம். இன்று பாரதவர்ஷத்தை ஆளும்பொருட்டு பரவிக்கொண்டிருக்கிறது அது.”

சகதேவன் காய்களை அரிவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். “இன்றிருக்கும் அனைத்து வேதங்களும் ஆசுரம் என்னும் அன்னையின் வயிற்றில் தோன்றியவையே. மாநாகம் எதனுடனும் இணையாமல் ஆழத்தில் கரந்து தனித்தொழுகுகிறது. அதன் துளிகள் அதர்வத்தில் உள்ளன” என்று தருமன் தொடர்ந்தார். “இங்கு வரும்வழியில் சௌரமதத்தினராகிய சுலபரைக் கண்டேன். அவர் அவர்களின் முதலாசிரியரான அர்வாவசு அமைத்த சௌரவேதத்தை எனக்களித்தார். மந்தணவேதம் என அது அழைக்கப்படுகிறது. பிற வேதமரபுகள் அனைத்தும் அதை ஒதுக்கிவிட்டன. முழுமுதல்தெய்வமாக சூரியனை முன்கொள்கிறது இது.”

“இது வேதம்பெருகிய நிலம்” என்றபடி சகதேவன் மீண்டும் காய்களை அரியத் தொடங்கினான். “மேலும் வேதங்கள் இம்மண்ணில் இன்னும் இருக்கக் கூடும். அகழுந்தோறும் இங்கு சிவக்குறிகள் கிடைக்கும் என்பார்கள். இம்மொழியை அகழ்பவர்கள் வேதங்களையே கண்டடைவார்கள்” என்றார் தருமன். “இன்று சௌரவேதத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். பலவரிகள் ரிக்வேதத்தில் சற்றே ஒலிமாறியவடிவிலமைந்துள்ளன. இதுவே தொன்மையானது என எண்ணுகிறேன். இதிலிருந்து அங்கு சென்றிருக்கலாம்.” அக்கணம் தோன்றிய உள எழுச்சியால் அவர் திரௌபதியை அணுகி “கேள் தேவி, இந்த வேதம் கிழக்கே காமரூபத்திற்கு அப்பால் நாகர்களின் நிலத்திற்கும் அப்பாலிருந்து எழுந்தது. கிழக்கு இந்திரனுக்குரியது. சூரியனுக்கும் உரியது. இந்திரன் வேதமுதல்வனாக எழுந்தபோது இது அழிந்ததா?” என்றார்.

அவள் புல்லரிசியைக் கழுவி நீரில் அள்ளி அள்ளிப் போட்டபடி “அர்வாவசு எந்த மண்ணைச் சேர்ந்தவர்?” என்றாள். “நாம் கந்தமாதனத்திற்கு வரும்போது வழியில் லோமசர் பல தூநீர்ச்சுனைகளின் கதைகளைச் சொல்லிவந்தார். அப்போது மதுபிலசமங்கம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார். அது காமரூபத்திற்கும் மணிபூரகத்திற்கும் நாகநிலத்திற்கும் அப்பால் மாமேருவின் கரையில் அமைந்திருக்கிறது என்றார். அதுதான் சௌரநெறியினரின் முதன்மை நீர். அச்சோலையில் ரைஃப்யர், பரத்வாஜர் என இரு முனிவர்கள் குருநிலை அமைத்து தங்கியிருந்தனர். அவர்கள் சௌரவேதத்தின் தொல்முனிவர்கள். அவர்கள் இயற்றிய எண்பத்தெட்டு பாடல்கள் இந்நூலில் உள்ளன.”

images

ரத்வாஜருக்கு யவக்ரீதன் என்னும் மைந்தன் பிறந்தான். ரைஃப்யரின் மைந்தர்களாகிய அர்வாவசுவும் பராவசுவும் மணம்புரிந்து அறமியற்றினர். அர்வாவசு சௌரவேதத்தின் செய்யுட்களைத் திரட்டி சொற்பழுதுபோக்கி ஒன்றாக்கினார். பராவசு அவற்றுக்கு சந்தம் வகுத்தார். பரத்வாஜரின் மைந்தனாகிய யவக்ரீதன் காட்டுக்குச் சென்று வேதமெய்மையை அறியவிழைந்து கடுந்தவம் புரிந்தான்.

பல்லாண்டுகள் தவம்செய்தும் சூரியதேவன் தோன்றி அருளவில்லை. ஏனென்றால் அறியவேண்டுமென்னும் பெருவிழைவே அறிதலுக்குத் தடையாக ஆவதை அவன் உணரவில்லை. அவன் உளம்தளர்ந்த பொழுதில் அவன் முன் தோன்றிய இந்திரன் அவன் விரும்பும் வரத்தை அருள்வதாகச் சொன்னான். மெய்யென இப்புவியிலுள்ள அனைத்தையும் அறியவேண்டும் என யவக்ரீதன் கோரினான். “இதோ உனக்கு மெய்யருளினேன்” என்றான் இந்திரன். அதன்முன் ‘என்’ எனும் சொல்லை நாவிலேயே மறைத்துக்கொண்டான்.

இந்திரமெய்மையாகிய பெருங்காமத்துடன் யவக்ரீதன் குடில்திரும்பினான். தன்னைச் சூழ்ந்து திகழ்ந்தவை அனைத்திலும் காமத்தையே கண்டான். உயிர்கள் காமத்திலாடின. அனலும் காற்றும் புணர்ந்தன. ஒளியும் வானும் ஒன்றாகி மகிழ்ந்தன. குடிலுக்கு வரும் வழியில் அர்வாவசுவின் துணைவி ரம்யையும் பராவசுவின் மனைவி பிரதமையும் வருவதைக் கண்டான். அவர்கள் சுனைநீராடி திறந்த தோள்களில் கூந்தலைப் படரவிட்டு ஒற்றை ஆடை அணிந்து வந்துகொண்டிருந்தனர்.

யவக்ரீதன் தன் கைகளை விரித்து அவர்களை அணுகி அள்ளிப்பற்றிக்கொண்டான். அவர்களின் ஆடைகளைக் களைந்து வீசி அருகே இருந்த புதர்களுக்கு இழுத்துச்செல்ல முயன்றான். அவர்களின் அலறல் ஓசை கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த அர்வாவசுவும் பராவசுவும் தங்கள் துணைவியரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இந்திரவல்லமை கொண்டிருந்த யவக்ரீதன் தன் ஒற்றைக்கையால் இரு மகளிரையும் பிடித்தபடி மறுகையால் அவர்கள் இருவரையும் அறைந்து வீழ்த்தினான்.

குடிலுக்குள் இருந்து ரைஃப்யர் ஓடிவந்தார். மைந்தர் குருதிகக்கிக் கிடப்பதையும் அவர்களின் துணைவியருடன் யவக்ரீதன் புதர்களுக்குள் சென்றுவிட்டதையும் கண்டு என்ன செய்வதென்றறியாமல் திகைத்தார். ஓடிச்சென்று சூரியன் முன் நின்று தன் சடைக்கற்றை ஒன்றைப் பறித்து வீசி “சூரியனே, உன்னை ஓதி நான் கொண்ட தவத்தின் பயன் இந்தச் செஞ்சடை. நீ தெய்வமென்றால் இங்கெழுக!” என்று கூவினார். “என் தவமனைத்தும் உருகி எழுக! என்னில் இனி வஞ்சமே திகழ்க! இக்கணமே வருக, இறைவா!” என்றார்.

சூரியவெம்மைகொண்டு அந்தச்சடை தீப்பற்றி எரிந்தது. தீ மூண்டெழுந்து புதர்களைச் சுற்றிப்படர்ந்தேறியது. வெம்மைதாளாமல் எழுந்த யவக்ரீதனை தீச்சுடர்கள் கவ்விக்கொண்டன. அவன் அலறியபடி ஓடி உடல்வெந்து விழுந்து மறைந்தான். அவன்பிடியிலிருந்த இருதேவியரும் அவ்வனலிலேயே உடல்நீத்தனர். காடு பசுமை பொசுங்கி தழல்சூடி எரியலாயிற்று. எரிமணம் உணர்ந்து அலறலோசை கேட்டு பரத்வாஜர் தன் தவச்சாலையிலிருந்து ஓடிவந்தார். மைந்தன் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டார். “என் தவம் மெய்யென்றால் நீ உன் மைந்தனாலேயே கொல்லப்படுவாய். ஆணை!” என்றபின் தானும் எரியில் புகுந்தார்.

ரைஃப்யரும் இருமைந்தரும் மதுபிலசமங்கத்தின் தெற்குக் காட்டுக்குச் சென்று குடியமர்ந்தனர். அங்கே அனைத்தையும் மறந்து மீண்டும் சௌரவேதமெய்மையில் மூழ்கலாயினர். கடும் வறுமையில் காட்டிலிருந்து தேனும் அரக்கும் சேர்த்து அருகே சிற்றூர்ச்சந்தையில் கொண்டுசென்று விற்று ஈட்டிய சிறுசெல்வத்தைக் கொண்டு அங்கே வாழ்ந்தனர். மீண்டும் துணைவியரைத் தேட இருவரும் விழைந்தாலும் கன்னிப்பொருள் அளிக்க செல்வமில்லாதிருந்தனர். ஒரு பொன்னேனும் ஈட்டமுடிந்தால் இருவரும்சேர்ந்து ஒரு பெண்ணை மணம்கொள்ளலாமே என்று எண்ணிக்கொண்டனர்.

ஒருநாள் மணிபூரகத்தைக் கடந்து பிருஹத்யும்னன் என்னும் அந்தணன் அவர்களிடம் வந்தான். வற்கடம் சூழ்ந்த காமரூபத்தின் அரசன் மழைமங்கலம் வேண்டி ஒரு சௌரவேள்வியை நிகழ்த்தும்பொருட்டு பெருஞ்செல்வத்தை அளித்திருப்பதாகவும் அவ்வேள்வியை இளையோர் இருவரும் வந்து நின்று நடத்தியளிக்கவேண்டும் என்றும் கோரினான். தெய்வச்சொல் என அதைக்கேட்டு ரைஃப்யர் மகிழ்ந்தார். இருமைந்தரும் பொருள்கொண்டுவந்தால் மணம்புரிந்து மைந்தரைப் பெறக்கூடும் என்றும் புத் எனும் கீழுலகில் நீரும் அன்னமும் இன்றி தவிக்கும் நிலை தனக்கு வராது என்றும் அவர் கூறினார்.

அர்வாவசுவும் பராவசுவும் பிருஹத்யும்னனுடன் கிளம்பிச் சென்றனர். அந்த அந்தணன் இந்திரனால் அனுப்பப்பட்டவன் என்பதை இருவரும் உணர்ந்திருக்கவில்லை. எளிய அந்தணனை நம்பி அத்தனை பெருஞ்செல்வத்தை ஓர் அரசன் அளிக்கக்கூடுமா என்று எண்ணும் அளவுக்கு உலகியலறியாத மலைமக்களாக இருந்தனர் அவர்கள். சூரியமானசம் என்னும் சுனைக்கரையில் காட்டுக்குள் பந்தலிட்டு பிருஹத்யும்னன் எடுத்த வேள்வி பன்னிருநாட்கள் நீடித்தது. அர்வாவசுவும் பராவசுவும் தலைநிற்க நூற்றெட்டு அந்தணர் அதிலமர்ந்து வேதச் சொல்லோதி அவியிட்டனர்.

வேள்வி முடிந்ததும் இருவரும் முதுகொடியச் சுமக்குமளவுக்கு பெருஞ்செல்வத்தை பிருஹத்யும்னன் அவர்களுக்கு அளித்தான். இருவரும் அச்செல்வத்துடன் மதுபிலசமங்கம் நோக்கி நடக்கத் தொடங்கினர். முதலில் அது பொன்னாக இருந்தது. பொழுதுசெல்லச்செல்ல அவர்களின் விழைவென்று அது மாறியது. பின்னர் அச்சமென்றாகியது. இறுதியில் ஐயமென்று இருண்டது. தங்கள் காலடிகளையே ஐயுற்றவர்களாக ஒருவரை ஒருவர் வேவுபார்த்தவர்களாக அவர்கள் காட்டுப்பாதையில் நடந்தனர்.

அவர்கள் வருவதை தொலைவிலேயே ரைஃப்யர் கண்டார். தன் புலித்தோல் மேலாடையை எடுத்து அணிந்தபடி உவகையுடன் அவர்களை நோக்கி வந்தார். புதர்களுக்குள் அவர் வரும் ஓசையைக் கேட்ட பராவசு அக்கணமே தன் வேலை எடுத்து வீசினார். “மைந்தா!” என்றலறியபடி ரைஃப்யர் விழுந்து துடித்தார். வேல்பாய்ந்த நெஞ்சுடன் மூச்சிரைக்க “அவன் சொன்னபடியே” என முனகி உயிர்விட்டார். இருவரும் திகைத்து உடல்பதற அவர் அருகே நின்றனர். ரைஃப்யரின் கால்களைப்பற்றியபடி பராவசு கதறி அழுதார்.

“நான் புலி என்று எண்ணினேன்… புலியைத்தான் கொல்லமுயன்றேன்” என்று பராவசு அழுதார். “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, இளையோனே. தந்தைக்குரிய இறுதிச்சடங்குகளை செய்வோம்” என்றார் அர்வாவசு. “உடலை இங்கே எரியூட்டுவோம். நீர்க்கடன்களை மூத்தவனாகிய நான் செய்கிறேன். நீ சென்று ஊரில்வாழும் அந்தணர்களிடம் நடந்ததைச் சொல். பிழைநிகர்சடங்கு செய்து அந்தணர் ஆயிரவருக்கு அன்னமூட்டுவோம். நாம் அறிந்து செய்தது அல்ல இது. மணம்கொண்டு மைந்தரைப்பெற்று நீர்க்கடன் செய்தால் தந்தை விண்நிறைவார்.”

“அவ்வண்ணமே” என்று சொல்லி வணங்கினார் பராவசு. அர்வாவசு காட்டுமரங்களாலும் அரக்காலும் தேன்மெழுகாலும் தந்தைக்கு சிதைகூட்டி அதில் அவரை படுக்கச்செய்து எரியூட்டினார். பராவசு செல்வக்குவைகளை அருகே ஒரு அரசமரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு கைப்பிடியளவு பொன்னுடன் ஊருக்குள் சென்றார். செல்லும் வழியிலேயே அவர் உள்ளம் மாறலாயிற்று. இந்திரவிழைவின் விந்துத் துளியென கையிலிருந்த பொன் தண்ணென்று எண்ணங்களைத் தொட்டுத் தூண்டியது. மூத்தவன் அகற்றப்படுவான் என்றால் முழுச்செல்வத்திற்கும் தலைவனாக முடியும் என்றும் மாளிகையும் மகளிரும் மைந்தரும் என அனைத்தும் கொள்ளமுடியும் என எண்ணம் ஓடியது.

ஊருக்குள் சென்ற பராவசு நெஞ்சிலறைந்து அழுதபடி மன்றில் நின்று “என் தமையன் தந்தையைக் கொன்று எரியூட்டிவிட்டான்… என்னையும் கொல்லமுயல்கிறான். நான் அஞ்சி ஓடிவந்தேன்” என்று கூவினான். ஊர்த்தலைவனிடம் “எந்தையைக் கொன்றவனிடமிருந்து என்னைக் காத்தருளுங்கள்… எனக்கு அடைக்கலம் கொடுங்கள்” என்று கண்ணீர்விட்டார்.

அவர் சொல்கேட்டுத் திரண்ட ஊரார் அவனுடன் காட்டுக்குச் சென்றனர். அங்கே தந்தையின் சிதையருகே அமர்ந்திருந்த அர்வாவசு அவர்கள் திரண்டுவருவது தன் தந்தையின் சாவூட்டுச்சடங்குக்காகவே என எண்ணினார். எழுந்து அவர்களை முறைப்படி வணங்கி முகமன் சொல்வதற்குள்ளாகவே பாய்ந்து வந்த பராவசு தமையனை ஓங்கி அறைந்து வீழ்த்தினார். மேலே ஒரு சொல்லும் சொல்லமுடியாதபடி அவரை அவர்கள் தாக்கினர். கைபிணைத்துக்கட்டி தூக்கி நிறுத்தியபோது பற்கள் உடைந்து உதடுகள் வீங்கி சொல் எழாதவராக அர்வாவசு ஆகிவிட்டிருந்தார்.

அவரை ஊருக்கு இழுத்துவந்து மன்றில் நிறுத்தி விசாரித்தனர். அர்வாவசுவால் ஒரு சொல்லும் சொல்லமுடியவில்லை. அந்தணன் என்பதனால் அவரை அவர்கள் கொல்லவில்லை. முடியை மழித்து முகத்தில் புலையந்தணன் எனப் பொருள்படும் காகத்தின் படத்தை பச்சைகுத்தி காட்டில் துரத்திவிட்டனர். மீண்டும் மதுபிலசமங்கத்திற்கே வந்த அர்வாவசு அங்கே அமர்ந்து தான் அடைந்த பழிக்கு நிகர்செய்யவேண்டும் என வஞ்சினம் கொண்டார். சௌரவேதத்தை சொல்சொல்லெனத் தேர்ந்து பொருள்கொண்டு ஊழ்கத்திலமர்ந்து உணர்ந்தார்.

வேதத்தவம் முழுமைகொண்டபோது அவர் முன் ஆடியெனக்கிடந்த மதுபிலசமங்கச் சுனையில் அகலில் சுடர் என சூரியன் எழுந்து “விழைவதென்ன, மைந்தா?” என்றான். வேதமுழுமையை உணர்ந்தமைந்த அர்வாவசு “ஏதும் விழைகிலேன். இப்புவியில் எவரிடமும் கடனிலேன், எவருடனும் பகையுறவும் அற்றுள்ளேன். முழுமையன்றி கோருவது பிறிதில்லை” என்றார். அவ்வண்ணமே என்று சொல்லி சூரியன் மறைந்தான். சுனையில் இறங்கி அர்வாவசு நிறைவடைந்தார். அவர் தொகுத்த சௌரவேதம் அங்கே குடிலில் மரப்பேழையில் ஆயிரம் சுவடிகளில் எழுதப்பட்டு நூறுதலைமுறைக்காலம் காத்திருந்தது.

பராவசு தன் பெருஞ்செல்வத்தைக் கொண்டு மதங்கமலை அடிவாரத்தில் பன்னிரு ஊர்களை அமைத்தார். பன்னிரு அரண்மனைகளில் பன்னிரு மனைவியரை குடியமர்த்தினார். அந்நிலம் சௌரவம் எனப்பட்டது. அவர் அதன் அரசரென ஆண்டார். அவருடைய மைந்தர்கள் அனைவருமே அவரைப்போல பொருள்விழைவு மிக்கவர்களாக இருந்தனர். மூத்தவனாகிய ராகு தந்தையைக் கொன்று தன்முதன்மையைப் பெற எண்ணினான். அதை அறிந்த பராவசு அவனைக் கொல்ல தன் இளையமைந்தன் அர்வனிடம் ஆணையிட்டார். ராகுவை அர்வன் கொன்றான். அர்வனை ராகுவின் உடன்பிறந்தவர்களாகிய அனசனும் அக்ரனும் கொன்றனர்.

உடன்பிறந்தார் நடுவே பூசல் முற்றியது. அனசனும் அக்ரனும் மாறிமாறி போரிட்டனர். அனசனை அக்ரன் கொல்ல அக்ரனை பாரவன் கொன்றான். தன் மைந்தர் அனைவரும் மாறிமாறி கொன்று கண்ணெதிரே அழிவதைக் கண்டு நோயில் விழுந்து நொய்ந்து பராவசு மடிந்தார். அயல்நிலத்து கிராதர் படைகொண்டுவந்து சௌரவத்தை வென்று சூறையாடினர். அங்கிருந்த மக்கள் சிதறி பல ஊர்களிலாக பரவினர். அந்நிலம் புதர்மூடி மறைந்தது. அங்கு சேற்றுக்கு அடியில் அதன் மாளிகையிடிபாடுகள் மட்டும் எஞ்சின. மொழியில் சில கதைகளும் மிஞ்சியிருந்தன.

சௌரவேதத்தை நூறுதலைமுறைகளுக்குப் பின் மதுபிலசமங்கத்திற்கு வந்த மெய்யுசாவியான சமதன் என்னும் அந்தணச்சிறுவன் கண்டடைந்தான். அவன் அர்வாவசுவை தன் முதலாசிரியராக உளம்நிறுத்தி அதைப் பயின்றான். அவன் அர்வாவசு மெய்மரபின் இரண்டாம் ஆசிரியன் என்று அழைக்கப்பட்டான். அவனும் பின்னர் வந்த மாணவநிரையும் அர்வாவசு என்றே பெயர்கொண்டனர்.

images

“ஆனால் அர்வாவசு தந்தையைக் கொன்றவர் என்றே மக்களால் அழைக்கப்படுகிறார். எனவே அவரது வேதம் அந்தணரால் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. எந்த வேள்வியிலும் அதன் ஒரு சொல்லும் ஓதப்படுவதில்லை” என்றார் தருமன். சகதேவன் புன்னகைத்து “அது ஏன் உங்களைக் கவர்கிறது எனத் தெரிகிறது, மூத்தவரே” என்றான். “ஏன்?” என்று தருமன் புருவம் சுளித்தபடி கேட்டார். “தோற்கடிக்கப்பட்டவர்களும் பழிசுமத்தப்பட்டவர்களும் மறக்கப்பட்டவர்களும் உங்கள் விருப்பத்திற்குரியவர்கள். அவர்களை நீங்கள் உங்கள் அகத்துள் மீட்டு எழுப்பிக்கொள்கிறீர்கள்” என்றான் சகதேவன்.

“மெய்தான்” என்றபின் தருமன் திரும்பினார். கீழே நகுலனின் குரல் கேட்டது. “ஊனை மேலே கொண்டுவருவதற்காக அழைக்கிறார்” என்றபடி அவன் எழுந்து தொங்கும் ஏணிவழியாக கீழிறங்கிச் சென்றான். “நகுலன் என்ன செய்கிறான்?” என்றார் தருமன் குனிந்து நோக்கியபடி. “பன்றிகளின் ஊன் எச்சத்தைப் புதைக்க குழிதோண்டுகிறார். அதன்மேல் நட்டால் குருக்கத்திகள் பெரிதாக மலர்கொள்கின்றன” என்றாள் திரௌபதி. நீர் புல்லரிசியுடன் தளதளவென கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

“இந்தக்கதையை நான் ஏன் இப்போது சொன்னேன் என எண்ணிக் கொள்கிறேன்” என்றார் தருமன். திரௌபதி புன்னகைத்து “மீண்டும் போட்டிகளும் வஞ்சங்களும் வெற்றிதோல்விகளும் நிறைந்த உலகை விரும்புகிறது உங்கள் உள்ளம்” என்றாள். சினத்துடன் “என்ன சொல்கிறாய்?” என்றார் தருமன். “சலிப்பு. அதை வெல்ல மீண்டும் பகடை” என்றாள். தருமன் மெல்ல தளர்ந்து “மெய்யாக இருக்கலாம். நான் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் இன்று சௌரவேதத்தை வாசித்தபோது அதிலிருந்த விழைவைத்தான் என் உள்ளம் தொட்டறிந்தது” என்றார்.

சகதேவன் மேலே வந்து சகடையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுத்து வலைக்கூடையை மேலே தூக்கி வைத்தான். செந்நிறமான பிண்டிமரத் துண்டுகள் போல பன்றியின் ஊன் அதிலிருந்தது. தொடைகளை எடுத்து காய்களின் அருகே விரிக்கப்பட்டிருந்த ஈச்சம் பாயில் வைத்தான். தருமன் ஊனையே நோக்கிக் கொண்டிருந்தார். பன்றியூனில் குருதி எளிதில் உறைந்துவிடுவதனால் அவை ஆழ்செம்மை நோக்கி சென்றுகொண்டிருந்தன. சகதேவன் கீழே நகுலன் எடுத்து வைத்த ஊன்பாளங்களை எடுத்து அடுக்கினான்.

“இத்தனை ஊனையும் வெட்டித் துண்டுகளாக்குவதற்குள் அரிசி வெந்துவிடும்” என்றான் சகதேவன். ஐந்தாவது கூடை மேலே வந்தபோது உடன் நகுலனும் ஏறிவந்தான். அவன் உடலெங்கும் குருதியும் மண்ணும் வியர்வையில் நனைந்து வழித்தடங்களுடன் இருந்தன. “இன்று மந்தன் வரவில்லை என்றால் இவ்வுணவை என்ன செய்வது? ஐம்பதுபேர் உண்ணுமளவுக்கு இருக்குமே?” என்றார் தருமன். “தேவியின் கனவில் வந்தால் அவர் வராமலிருப்பதில்லை” என்றான் நகுலன்.

சிரித்தபடி “சரி, நிகழ்க!” என்றார் தருமன். “அவன் வந்ததுமே எனக்கு சொல்லுங்கள்” என்றபடி வெளியே சென்றார். பீமனை காட்டில் பார்த்ததை சொல்லலாமா என எண்ணியபின் தவிர்த்தபடி மையக்குடில் நோக்கி நடந்தார்.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2017 10:30

January 31, 2017

மாமங்கலையின் மலை – 1

[image error]

வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் தான்.

[image error]

இதை அவர் வேடிக்கையாக பல முறை சொல்லியிருக்கிறார். நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஐம்பத்துநான்கு வயதில் லோகி இதய அடைப்பு நோயால் இறந்த போது கூட இச்சொற்களையும் அதையும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் எப்போதோ அவை தொடர்புடன் எழுந்த போது உண்மையல்லவா என்ற ஒரு பெருந்திடுக்கிடல் ஏற்பட்டது அவ்வெண்ணம் எப்போதும் உடனிருந்தது

எனது இல்லத்தருகே வாழ்ந்த மலையாள வரலாற்றாய்வாளர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் நீரிழிவுநோய்முற்றி கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும்போது நானும் அ.கா பெருமாளும் அவரைச் சென்று பார்த்தோம். கேரள வரலாற்றை ஆழ அகல பயணம் செய்த பேரறிஞருக்கு வரலாற்றின் அடிப்படைத் தகவல் கூட மறந்துவிட்டிருப்பதை அறிந்தோம். பேராசிரியர் திக்கி திடுக்கினார். திருவிதாங்கூரையே வடிவமைத்த டிலனாயின் பெயர் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் மாமன் பெயர் நினைவுக்கு வரவில்லை பத்மநாபபுரம் அருகே இருக்கும் கோட்டை பெயர் நினைவுக்கு வரவில்லை.

[image error]

வெளியே வந்த போது அ.கா.பெருமாள் முகம் வெளிறியிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா?” என்று அவர் பிரமிப்புடன் கேட்டார். ”உள்ளே இருக்கும் அந்த காலிபிளவரின் திறன் அவ்வளவுதான்” என்று நான் மெல்லிய புன்னகையுடன் சொன்னேன்.

சமீபத்தில் என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மாவைப்பார்க்கச் சென்றிருந்தேன். தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் ஒரு மெல்லிய விபத்துக்கு பிறகு சிகிச்சை முடிந்து அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் மொத்த நினைவையும் இழந்து அக்கணத்தில் புதிதாக அவர் தோன்றிக்கொண்டிருந்தார். அவரைப்பார்க்க நான் வந்திருப்பதையே பதினைந்து முறைகளுக்கும் மேலாக புதிதாக எதிர்கொண்டார்.

நான் நகுலனை நினைத்துக் கொண்டேன். இறுதிக் காலத்தில் நகுலனும் அப்படித்தான் இருந்தார். அதை இங்கு சில நவீன எழுத்தாளர்கள் ஒரு மறைஞானநிலை என்று கூட விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆனால் நினைவுத் தொடர்ச்சி அறுபட்டு ஒவ்வொரு கணத்திலும் புதிது புதிதாகப் பிறந்து கைவிடப்பட்ட குழந்தையின் கெஞ்சும் புன்னகையுடன் வாழ்ந்திருந்தார் நகுலன்.

Kollur-0678

முதுமை எழுத்தாளனை பிறர் கைகளில் கொண்டு கொடுத்துவிடுகிறது. ஜெயகாந்தன் இல்லத்திலிருந்தாலும் துறவி என்றிருந்தார். அவரது மடத்திற்கு அப்பெயர் பெரிதும் பொருத்தமே. அங்கு வலக்கையில் சிலும்பியும் இடக்கையில் அதைப்பொத்துவதற்கான சிறிய துணியுமாக அமர்ந்து பிடரியைச் சிலிர்த்தபடி பேசும் சிம்மத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இறுதியாகச் சந்திக்கும்போது நீண்ட சிகிச்சைக்குப்பிறகு மங்கலான புன்னகையுடன் ,குழந்தையுடன் விளையாடியபடி, வந்திருப்பது யாரென்றே தெரியாமல் பொதுவாக பேசிக் கொண்டிருந்த ஜெயகாந்தனைப்பார்த்துவிட்டு வெளிவந்து உடன் வந்த சுகாவிடம் சொன்னேன். ”இனி நான் ஜெயகாந்தனை பார்க்க வரப்போவதில்லை. ஏனெனில் நானறிந்த ஜெயகாந்தன் இங்கு இல்லை”

ஓர் எழுத்தாளன் முதுமை அடையும்போது என்ன நிகழ்கிறது? அந்தக் காலத்தில்  பழைய  திரைப்பட சுருள்களை வெட்டி விலைக்கு விற்பார்கள். நாங்கள் வாங்கி வெயிலில் காட்டி படம் பார்ப்போம். ஒரு மெல்லிய ப்ளேடால் அதிலிருக்கும் அனைத்து வண்ணஓவியங்களையும் வழித்து எடுத்துவிட முடியும். வெண்ணிறமான தகடுகளாக ஆகிவிடும். அதே போல நினைவுகள் மங்கி ஆளுமை மெலிந்து பிறகு ஒரு வெண்ணிறத் தகடாக எழுத்தாளன் மாறிவிடுவதை பார்க்கிறேன். ஒரு வீரன் , ஒர் அரசியல் , ஒரு விவசாயி அப்படி ஆவதில்  ஒரு இயல்பு இருக்கிறது. எழுத்தாளன் அப்படி ஆவது பெரும் துயர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவன் விலகிநின்றவன், பிறரைச் சீண்டுவதையே தன் கலையாகக் கொண்டவன். எனவே பிறரது கருணைக்கு ஒருபோதும் அவன் அமரக்கூடாது அது எவரென்றாலும் அவருக்கு திரும்பக்கிடைப்பது சிறப்பானதாக இராது என்று எண்ணிக் கொண்டேன்.

[image error]

அவ்வெண்ணங்களின் அலைக்கழிப்பை கிராதம் பல மடங்கு பெருக்கியது. கிராதத்தின் இருண்டவண்ணங்களில் நான் பலமுறை இறந்தேன். இளைஞனாக இருந்த நாள் முதல் என் இறப்பு எனும் எண்ணமே என்னைத் துணுக்குற வைக்கக்கூடியதாக இருந்தது. நானற்ற ஒரு உலகம் என்பது போல பதற்றம் கொள்ளச் செய்வது பிறிதொரு எண்ணமில்லை. இறப்பென்ற சொல்லையே பிறருடன் தொடர்பு படுத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். என் புனைவுகள் அனைத்திலும் இறப்பாக அமைபவை பிறர் இறப்புகளே. அவ்விறப்புகளில் நான் நுழைந்து அதை நடித்து முடித்து வெளிவரும்போது புதிதாகப் பிறக்கும் நிறைவை அடைவேன்.

அந்த இடம் விஷ்ணுபுரத்தில் வரும், ஞானத்தின் உச்சி ஏறிய அஜிதன் பிறர் இறக்கும் செய்திகளை அவன்  இயல்பாக எடுத்துக்கொள்வதையும் தன் இறப்பு பற்றிய ஒரு செய்தி தன் உள்ளே எதையோ ஒன்றை நலுங்க வைப்பதையும் உணர்ந்து அவ்வளவுதானா நான் என எண்ணி வியந்து கொள்கிறான்.

கிராதம் முடிந்த போது உணர்ந்தேன், எனது இறப்பை எந்த வகையான பதட்டமும் துயரமும் இல்லாமல் பெருவிருப்புடன் எதிர்நோக்கக்க்கூடியவனாக நான் மாறியிருக்கிறேன். இன்னும் மிகக்குறைவான காலம் மட்டுமே எஞ்ச வேண்டுமென்று விழைகிறேன். இயல்பாக உதிர்ந்து விட முடிந்தால் அது பெரும் பேறு.

[image error]

அது அளித்த விடுதலை கொண்டாட்டம் இக்கணம் வரை தொடர்கிறது. உண்மையில் கிராதம் முடிந்த போது அதன் ஆசிரியன் அடைந்த பேறு இதுதான். மீண்டும் ஒரு நாவல் எனும்போது கிராதத்தின் இறுதியிலிருந்து தொடங்கிவிட முடியாது. ஏனெனில் அது ஒரு பெரு நிறைவு. அதிலிருந்து மீண்டும் பல படிகள் பின்னுக்கு சென்று தொடங்க வேண்டும். அடுத்த நாவல் வாழ்வைக் கொண்டாடக்கூடியது என அமைய வேண்டுமென எண்ணினேன்.

பீமனின் பயணம்! பீமன் தத்துவ ஞானி அல்ல. எதையும் தேடிச்செல்பவனும் அல்ல. இருந்த இடத்தில் நிறைபவன் ஏனெனில் அவன் சுவையை அறிபவன். சுவையில் விளையாடும் ஒரு சமையல்காரன். சுவைப்பவனுக்கு அவன் நின்றிருக்கும் இடத்தைச் சூழ்ந்து வாழ்க்கையை அறிவதற்கே நேரம் போதாமலாகும். அவனறியும் உலகம் சுவைகளின் பெருவெளியாக இருக்க முடியும். சுவையின் முதற்சுவையாக அமைந்த தேவியை நோக்கி அவன் செல்லும் பயணத்தைத் தான் மாமலரில் எழுத எண்ணினேன்.

ஆகவே ஒரு பயணம் செல்லலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். இம்முறை மூகாம்பிகைக்கு செல்லலாம் என்று தோன்றியது. காளாமுகர்களின் ஆலயமாகிய கேதார்நாத்துக்குச் சென்று கிராதத்தின் இருளை எனக்குள் ஊறவைத்துக் கொண்டேன். சர்வமங்கலையின் ஆலயம் என்னை மலரொளி நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். மாமலர் என்பது அவளே.

[image error]

துர்க்கை ஆலயங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளன. மகிஷாசுரமர்த்தினிகள். நரகாசுர வதம் செய்து அமர்ந்திருப்பவர்கள். மூகாம்பிகை சிம்மவாகினி. மகாமங்கலை என்று அவளை சொல்கிறார்கள். அனைத்து மங்கலங்களும் கொண்டவள், எழிலும் நலமும் மட்டுமே ஆனவள். மூகாம்பிகைக்கு கேரளம் முழுக்க நெடுங்காலமாக இருந்த முக்கியத்துவம் இரண்டு காரணங்களால். ஒன்று பரசுராமன் அருகே கோகர்ணம் எனும் மலைமேல் ஏறி நின்று தன் மழுவைச் சுழற்றி வீசியதால் கேரளம் உருவாகியது. அந்த மழு வந்து விழுந்த இடம் குமரி முனை .கோகர்ணம் முதல் குமரி முனை வரை கேரளம் என்பது தொன்மம்.

நான் இளம் பருவத்திலேயே அந்த மழு விழுந்ததை பலநூறு முறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். வெவ்வேறு கதைகள் வழியாக அது தொடர்ந்து எனக்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழுவுடன் தொடர்பு படுத்தாமல் குமரியை நான் எண்ணியதே இல்லை. ’’பரசுராமன் மழுவெறிஞ்ஞு நேடியதெல்லாம் திரகள் வந்து திருமுன் காழ்ச்ச நல்கியதெல்லாம்’’ என்று கேரளத்தை வர்ணிக்கிறது ஒரு பாடல்.

இரண்டாவதாக மூகாம்பிகையை கேரளத்தின் முதன்மை தெய்வமாக நிறுத்துவது அவளுடைய மங்கலத்தன்மை தான். கொடுங்கல்லூரில் பகவதி அமர்ந்திருக்கிறாள். ஆற்றுகாலில் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் அனைவருமே வீரியம் கொண்டவர்கள். சினம் நிறைந்தவர்கள். கனிவு ஒன்றே தன் குணமாகக் கொண்டவள் மூகாம்பிகை. மூகம் என்றால் அமைதி. அமைதியின் அன்னை. ஆகவே தான் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் மூகாம்பிகைக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மகாமங்கலையை, பேரன்பின் நிழலை,  வெறும் அன்னை மட்டுமே ஆனவளை ஒருமுறை சென்று கண்டு மீண்டு என்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

குறளுரை முடிந்ததுமே கிளம்பலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். உடனடியாகத் திட்டமிட்டார். வழக்கம் போல ஒரு வண்டியில் செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மேலும் ஆள்சேர்ந்து இரண்டு வண்டிகளாக ஆகியது. கோவையிலிருந்து செல்வேந்திரன், தாமரைக்கண்ணன், கதிர்முருகன், திருப்பூர் ராஜமாணிக்கம், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், திருச்சி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கியது குழு.

[image error]

ஒருகார் இருபத்திஆறாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பியது. திரைப்பட வேலையாக சென்னை சென்றிருந்த நான் ரயிலில் அன்று காலைதான் வந்திறங்கினேன். விடுதியில் குளித்துவிட்டு நானும் மணிகண்டனும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் ஈரோட்டிலிருந்து கிளம்பி திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு காரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். நேராக ஷிமோகா சென்று ஷிமோகா ரவி வீட்டில் மாலை தங்கி அங்கிருந்து மூகாம்பிகைக்கு செல்வதாக திட்டம்.

கொள்ளேகாலில் இருக்கும் டோண்டென்லிங் திபெத்திய குடியிருப்புக்கு  Dhondenling Tibetan Settlement] காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பயணம் முழுக்க இனிமையான குளிர்காற்றும் சாரல் மழையும் இருந்துகொண்டிருந்தது. திபெத்திய குடியிருப்பு சற்று மேடான இடம் என்பதனால் இன்னும் குளிர். லடாக்கிலும் பூடானிலும் ஸ்பிடி சமவெளியிலும் திபெத்திய பௌத்த ஆலயங்களை நிறைய பார்த்திருக்கிறோம். அந்த செவ்வவண்ணச் சுவர்களும் காவியும் வெண்மையும் கலந்த  கொடித்தோரணங்களும் குளிரின் பின்னணி இல்லாமல் அழகுறாது எனத் தோன்றியது

1950 களில் திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. தனித்தன்மைகொண்ட மலைப்பண்பாடும், சிறப்புகள் கொண்ட பௌத்தமதமும் திகழ்ந்த அந்த மண் சீனாவின் மையப்பண்பாட்டுடன் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்டது. திபெத்தின் ஆட்சியாளரும் மதத்தலைவருமான தலாய் லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவருடைய தலைமையகம் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் ஊரில் உள்ளது. [2014 ல் அங்கு சென்றிருக்கிறோம்]

திபெத்திய அகதிகளை இந்திய அரசு இந்தியாவெங்கும் குடியமர்த்தியது. அவர்களின் இயல்புக்கு ஏற்ப உயரமான குளிர்ந்த நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோன்ற ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளோம். அவர்களுக்கு இந்தியக்குடியுரிமையும் வழங்கப்பட்டது. கொள்ளேகால் குடியிருப்பு 1972ல் மத்திய அரசுடன் கர்நாடக அரசு இணைந்து உருவாக்கியது. இதில் 22 கிராமங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு வீடுகளும் விளைநிலங்களும் அளிக்கப்பட்டன. அன்று 3200 பேர் குடியேறினர். இன்று 4200 பேர்தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வேறிடங்களுக்கு வாழ்க்கைதேடிச் சென்றுவிட்டனர்

[image error]

இங்கே நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சூழல் நிலவுகிறது. திபெத்தின் ஒரு பகுதிபோலவும் நாம் கண்டுமறந்த சென்றதலைமுறையின் நம் ஊர் போலவும் ஒரே சமயம் தோன்றும் இடம். ஒரு விசித்திரமான கனவிலென நடந்தோம். இன்று இந்த இடம் திபெத்தியர்களின் மதத்தலைநகர் என்றே அறியப்படுகிறது. திபெத்தியர்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வணிகம் செய்கிறார்கள். இங்கே  ஐந்து மடாலயங்கள் உள்ளன. அவற்றில் மையமாக உள்ளதும் பெரியதுமான ஸோங் ஜென் [Dzongchen] மடாலயத்தைச் சென்று பார்த்தோம்

கான்கிரீட்டால் கட்டப்பட்ட கட்டிடம் திபெத்திய மரக்கட்டிடங்களின் அதே தோற்றம் கொண்டிருந்தது. அடுக்கடுக்கான உத்தரங்களின் முனைகள், கழுக்கோல்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. குருதிச்சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஓவியங்களால் ஆன முகப்பு. பொன்வண்ணம் பூசப்பட்ட மாபெரும் கதவுகள். அருகே இருந்த உண்டு உறைவிடப்பள்ளியில் திபெத்தியச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கம் சென்று காவலரை அழைத்துவந்தார். அவர் மடாலயத்தைத் திறந்து காட்டினார்

பொன்னிற உடல்கொண்ட மாபெரும் புத்தர்சிலை பூமியைத் தொட்டு ஞானத்திற்குச் சான்றுரைத்து அமுதலகம் ஏந்தி அமர்ந்திருந்தது. வலப்பக்கம்  வஜ்ராயுதம் ஏந்திய பத்மசம்பவர். இடப்பக்கம் தாராதேவி. மரத்தாலான சிலைகளின் கண்கள் ஊழ்கத்தில் பாதிமூடி இருவாட்சி மலர்கள் போலிருந்தன. கம்பிளி இருக்கைகள். மிகப்பெரிய முழவு. பௌத்த நூல்கள். சுவர்களில் டோங்காக்கள். திபெத் உருவாகி வந்துவிட்டிருந்தது. வெளியே வெள்ளிப்பனிமலைகள்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:35

மாமங்கலையின் மலை -1

[image error]

வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமானநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் தான்.

[image error]

இதை அவர் வேடிக்கையாக பல முறை சொல்லியிருக்கிறார். நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஐம்பத்துநான்கு வயதில் லோகி இதய அடைப்பு நோயால் இறந்த போது கூட இச்சொற்களையும் அதையும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் எப்போதோ அவை தொடர்புடன் எழுந்த போது உண்மையல்லவா என்ற ஒரு பெருந்திடுக்கிடல் ஏற்பட்டது அவ்வெண்ணம் எப்போதும் உடனிருந்தது

எனது இல்லத்தருகே வாழ்ந்த மலையாள வரலாற்றாய்வாளர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் நீரிழிவுநோய்முற்றி கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும்போது நானும் அ.கா பெருமாளும் அவரைச் சென்று பார்த்தோம். கேரள வரலாற்றை ஆழ அகல பயணம் செய்த பேரறிஞருக்கு வரலாற்றின் அடிப்படைத் தகவல் கூட மறந்துவிட்டிருப்பதை அறிந்தோம். பேராசிரியர் திக்கி திடுக்கினார். திருவிதாங்கூரையே வடிவமைத்த டிலனாயின் பெயர் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் மாமன் பெயர் நினைவுக்கு வரவில்லை பத்மநாபபுரம் அருகே இருக்கும் கோட்டை பெயர் நினைவுக்கு வரவில்லை.

[image error]

வெளியே வந்த போது அ.கா.பெருமாள் முகம் வெளிறியிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா?” என்று அவர் பிரமிப்புடன் கேட்டார். ”உள்ளே இருக்கும் அந்த காலிபிளவரின் திறன் அவ்வளவுதான்” என்று நான் மெல்லிய புன்னகையுடன் சொன்னேன்.

சமீபத்தில் என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மாவைப்பார்க்கச் சென்றீருந்தேன்.தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் ஒரு மெல்லிய விபத்துக்கு பிறகு சிகிச்சை முடிந்து அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் மொத்த நினைவையும் இழந்து அக்கணத்தில் புதிதாக அவர் தோன்றிக்கொண்டிருந்தார். அவரைப்பார்க்க நான் வந்திருப்பதையே பதினைந்து முறைகளுக்கும் மேலாக புதிதாக எதிர்கொண்டார்.

நான் நகுலனை நினைத்துக் கொண்டேன். இறுதிக் காலத்தில் நகுலனும் அப்படித்தான் இருந்தார். அதை இங்கு சில நவீன எழுத்தாளர்கள் ஒரு மறைஞானநிலை என்று கூட விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆனால் நினைவுத் தொடர்ச்சி அறுபட்டு ஒவ்வொரு கணத்திலும் புதிது புதிதாகப் பிறந்து கைவிடப்பட்ட குழந்தையின் கெஞ்சும் புன்னகையுடன் வாழ்ந்திருந்தார் நகுலன்.

Kollur-0678

முதுமை எழுத்தாளனை பிறர் கைகளில் கொண்டு கொடுத்துவிடுகிறது. ஜெயகாந்தன் இல்லத்திலிருந்தாலும் துறவி என்றிருந்தார். அவரது மடத்திற்கு அப்பெயர் பெரிதும் பொருத்தமே. அங்கு வலக்கையில் சிலும்பியும் இடக்கையில் அதைப்பொத்துவதற்கான சிறிய துணியுமாக அமர்ந்து பிடரியைச் சிலிர்த்தபடி பேசும் சிம்மத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இறுதியாகச் சந்திக்கும்போது நீண்ட சிகிச்சைக்குப்பிறகு மங்கலான புன்னகையுடன் ,குழந்தையுடன் விளையாடியபடி, வந்திருப்பது யாரென்றே தெரியாமல் பொதுவாக பேசிக் கொண்டிருந்த ஜெயகாந்தனைப்பார்த்துவிட்டு வெளிவந்து உடன் வந்த சுகாவிடம் சொன்னேன். ”இனி நான் ஜெயகாந்தனை பார்க்க வரப்போவதில்லை. ஏனெனில் நானறிந்த ஜெயகாந்தன் இங்கு இல்லை”

ஓர் எழுத்தாளன் முதுமை அடையும்போது என்ன நிகழ்கிறது? அந்தக் காலத்தில்  பழைய  திரைப்பட சுருள்களை வெட்டி விலைக்கு விற்பார்கள். நாங்கள் வாங்கி வெயிலில் காட்டி படம் பார்ப்போம். ஒரு மெல்லிய ப்ளேடால் அதிலிருக்கும் அனைத்து வண்ணஓவியங்களையும் வழித்து எடுத்துவிட முடியும். வெண்ணிறமான தகடுகளாக ஆகிவிடும். அதே போல நினைவுகள் மங்கி ஆளுமை மெலிந்து பிறகு ஒரு வெண்ணிறத் தகடாக எழுத்தாளன் மாறிவிடுவதை பார்க்கிறேன். ஒரு வீரன் , ஒர் அரசியல் , ஒரு விவசாயி அப்படி ஆவதில்  ஒரு இயல்பு இருக்கிறது. எழுத்தாளன் அப்படி ஆவது பெரும் துயர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவன் விலகிநின்றவன், பிறரைச் சீண்டுவதையே தன் கலையாகக் கொண்டவன். எனவே பிறரது கருணைக்கு ஒருபோதும் அவன் அமரக்கூடாது அது எவரென்றாலும் அவருக்கு திரும்பக்கிடைப்பது சிறப்பானதாக இராது என்று எண்ணிக் கொண்டேன்.

[image error]

அவ்வெண்ணங்களின் அலைக்கழிப்பை கிராதம் பல மடங்கு பெருக்கியது. கிராதத்தின் இருண்டவண்ணங்களில் நான் பலமுறை இறந்தேன். இளைஞனாக இருந்த நாள் முதல் என் இறப்பு எனும் எண்ணமே என்னைத் துணுக்குற வைக்கக்கூடியதாக இருந்தது. நானற்ற ஒரு உலகம் என்பது போல பதற்றம் கொள்ளச் செய்வது பிறிதொரு எண்ணமில்லை. இறப்பென்ற சொல்லையே பிறருடன் தொடர்பு படுத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். என் புனைவுகள் அனைத்திலும் இறப்பாக அமைபவை பிறர் இறப்புகளே. அவ்விறப்புகளில் நான் நுழைந்து அதை நடித்து முடித்து வெளிவரும்போது புதிதாகப் பிறக்கும் நிறைவை அடைவேன்.

அந்த இடம் விஷ்ணுபுரத்தில் வரும், ஞானத்தின் உச்சி ஏறிய அஜிதன் பிறர் இறக்கும் செய்திகளை அவன்  இயல்பாக எடுத்துக்கொள்வதையும் தன் இறப்பு பற்றிய ஒரு செய்தி தன் உள்ளே எதையோ ஒன்றை நலுங்க வைப்பதையும் உணர்ந்து அவ்வளவுதானா நான் என எண்ணி வியந்து கொள்கிறான்.

கிராதம் முடிந்த போது உணர்ந்தேன், எனது இறப்பை எந்த வகையான பதட்டமும் துயரமும் இல்லாமல் பெருவிருப்புடன் எதிர்நோக்கக்க்கூடியவனாக நான் மாறியிருக்கிறேன். இன்னும் மிகக்குறைவான காலம் மட்டுமே எஞ்ச வேண்டுமென்று விழைகிறேன். இயல்பாக உதிர்ந்து விட முடிந்தால் அது பெரும் பேறு.

[image error]

அது அளித்த விடுதலை கொண்டாட்டம் இக்கணம் வரை தொடர்கிறது. உண்மையில் கிராதம் முடிந்த போது அதன் ஆசிரியன் அடைந்த பேறு இதுதான். மீண்டும் ஒரு நாவல் எனும்போது கிராதத்தின் இறுதியிலிருந்து தொடங்கிவிட முடியாது. ஏனெனில் அது ஒரு பெரு நிறைவு. அதிலிருந்து மீண்டும் பல படிகள் பின்னுக்கு சென்று தொடங்க வேண்டும். அடுத்த நாவல் வாழ்வைக் கொண்டாடக்கூடியது என அமைய வேண்டுமென எண்ணினேன்.

பீமனின் பயணம்! பீமன் தத்துவ ஞானி அல்ல. எதையும் தேடிச்செல்பவனும் அல்ல. இருந்த இடத்தில் நிறைபவன் ஏனெனில் அவன் சுவையை அறிபவன். சுவையில் விளையாடும் ஒரு சமையல்காரன். சுவைப்பவனுக்கு அவன் நின்றிருக்கும் இடத்தைச் சூழ்ந்து வாழ்க்கையை அறிவதற்கே நேரம் போதாமலாகும். அவனறியும் உலகம் சுவைகளின் பெருவெளியாக இருக்க முடியும். சுவையின் முதற்சுவையாக அமைந்த தேவியை நோக்கி அவன் செல்லும் பயணத்தைத் தான் மாமலரில் எழுத எண்ணினேன்.

ஆகவே ஒரு பயணம் செல்லலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். இம்முறை மூகாம்பிகைக்கு செல்லலாம் என்று தோன்றியது. காளாமுகர்களின் ஆலயமாகிய கேதார்நாத்துக்குச் சென்று கிராதத்தின் இருளை எனக்குள் ஊறவைத்துக் கொண்டேன். சர்வமங்கலையின் ஆலயம் என்னை மலரொளி நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். மாமலர் என்பது அவளே.

[image error]

துர்க்கை ஆலயங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளன. மகிஷாசுரமர்த்தினிகள். நரகாசுர வதம் செய்து அமர்ந்திருப்பவர்கள். மூகாம்பிகை சிம்மவாகினி. மகாமங்கலை என்று அவளை சொல்கிறார்கள். அனைத்து மங்கலங்களும் கொண்டவள், எழிலும் நலமும் மட்டுமே ஆனவள். மூகாம்பிகைக்கு கேரளம் முழுக்க நெடுங்காலமாக இருந்த முக்கியத்துவம் இரண்டு காரணங்களால். ஒன்று பரசுராமன் அருகே கோகர்ணம் எனும் மலைமேல் ஏறி நின்று தன் மழுவைச் சுழற்றி வீசியதால் கேரளம் உருவாகியது. அந்த மழு வந்து விழுந்த இடம் குமரி முனை .கோகர்ணம் முதல் குமரி முனை வரை கேரளம் என்பது தொன்மம்.

நான் இளம் பருவத்திலேயே அந்த மழு விழுந்ததை பலநூறு முறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். வெவ்வேறு கதைகள் வழியாக அது தொடர்ந்து எனக்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழுவுடன் தொடர்பு படுத்தாமல் குமரியை நான் எண்ணியதே இல்லை. ’’பரசுராமன் மழுவெறிஞ்ஞு நேடியதெல்லாம் திரகள் வந்து திருமுன் காழ்ச்ச நல்கியதெல்லாம்’’ என்று கேரளத்தை வர்ணிக்கிறது ஒரு பாடல்.

இரண்டாவதாக மூகாம்பிகையை கேரளத்தின் முதன்மை தெய்வமாக நிறுத்துவது அவளுடைய மங்கலத்தன்மை தான். கொடுங்கல்லூரில் பகவதி அமர்ந்திருக்கிறாள். ஆற்றுகாலில் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் அனைவருமே வீரியம் கொண்டவர்கள். சினம் நிறைந்தவர்கள். கனிவு ஒன்றே தன் குணமாகக் கொண்டவள் மூகாம்பிகை. மூகம் என்றால் அமைதி. அமைதியின் அன்னை. ஆகவே தான் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் மூகாம்பிகைக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மகாமங்கலையை, பேரன்பின் நிழலை,  வெறும் அன்னை மட்டுமே ஆனவளை ஒருமுறை சென்று கண்டு மீண்டு என்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

குறளுரை முடிந்ததுமே கிளம்பலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். உடனடியாகத் திட்டமிட்டார். வழக்கம் போல ஒரு வண்டியில் செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மேலும் ஆள்சேர்ந்து இரண்டு வண்டிகளாக ஆகியது. கோவையிலிருந்து செல்வேந்திரன், தாமரைக்கண்ணன், கதிர்முருகன், திருப்பூர் ராஜமாணிக்கம், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், திருச்சி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கியது குழு.

[image error]

ஒருகார் இருபத்திஆறாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பியது. திரைப்பட வேலையாக சென்னை சென்றிருந்த நான் ரயிலில் அன்று காலைதான் வந்திறங்கினேன். விடுதியில் குளித்துவிட்டு நானும் மணிகண்டனும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் ஈரோட்டிலிருந்து கிளம்பி திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு காரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். நேராக ஷிமோகா சென்று ஷிமோகா ரவி வீட்டில் மாலை தங்கி அங்கிருந்து மூகாம்பிகைக்கு செல்வதாக திட்டம்.

கொள்ளேகாலில் இருக்கும் டோண்டென்லிங் திபெத்திய குடியிருப்புக்கு  Dhondenling Tibetan Settlement] காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பயணம் முழுக்க இனிமையான குளிர்காற்றும் சாரல் மழையும் இருந்துகொண்டிருந்தது. திபெத்திய குடியிருப்பு சற்று மேடான இடம் என்பதனால் இன்னும் குளிர். லடாக்கிலும் பூடானிலும் ஸ்பிடி சமவெளியிலும் திபெத்திய பௌத்த ஆலயங்களை நிறைய பார்த்திருக்கிறோம். அந்த செவ்வவண்ணச் சுவர்களும் காவியும் வெண்மையும் கலந்த  கொடித்தோரணங்களும் குளிரின் பின்னணி இல்லாமல் அழகுறாது எனத் தோன்றியது

1950 களில் திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. தனித்தன்மைகொண்ட மலைப்பண்பாடும், சிறப்புகள் கொண்ட பௌத்தமதமும் திகழ்ந்த அந்த மண் சீனாவின் மையப்பண்பாட்டுடன் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்டது. திபெத்தின் ஆட்சியாளரும் மதத்தலைவருமான தலாய் லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவருடைய தலைமையகம் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் ஊரில் உள்ளது. [2014 ல் அங்கு சென்றிருக்கிறோம்]

திபெத்திய அகதிகளை இந்திய அரசு இந்தியாவெங்கும் குடியமர்த்தியது. அவர்களின் இயல்புக்கு ஏற்ப உயரமான குளிர்ந்த நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோன்ற ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளோம். அவர்களுக்கு இந்தியக்குடியுரிமையும் வழங்கப்பட்டது. கொள்ளேகால் குடியிருப்பு 1972ல் மத்திய அரசுடன் கர்நாடக அரசு இணைந்து உருவாக்கியது. இதில் 22 கிராமங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு வீடுகளும் விளைநிலங்களும் அளிக்கப்பட்டன. அன்று 3200 பேர் குடியேறினர். இன்று 4200 பேர்தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வேறிடங்களுக்கு வாழ்க்கைதேடிச் சென்றுவிட்டனர்

[image error]

இங்கே நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சூழல் நிலவுகிறது. திபெத்தின் ஒரு பகுதிபோலவும் நாம் கண்டுமறந்த சென்றதலைமுறையின் நம் ஊர் போலவும் ஒரே சமயம் தோன்றும் இடம். ஒரு விசித்திரமான கனவிலென நடந்தோம். இன்று இந்த இடம் திபெத்தியர்களின் மதத்தலைநகர் என்றே அறியப்படுகிறது. திபெத்தியர்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வணிகம் செய்கிறார்கள். இங்கே  ஐந்து மடாலயங்கள் உள்ளன. அவற்றில் மையமாக உள்ளதும் பெரியதுமான ஸோங் ஜென் [Dzongchen] மடாலயத்தைச் சென்று பார்த்தோம்

கான்கிரீட்டால் கட்டப்பட்ட கட்டிடம் திபெத்திய மரக்கட்டிடங்களின் அதே தோற்றம் கொண்டிருந்தது. அடுக்கடுக்கான உத்தரங்களின் முனைகள், கழுக்கோல்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. குருதிச்சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஓவியங்களால் ஆன முகப்பு. பொன்வண்ணம் பூசப்பட்ட மாபெரும் கதவுகள். அருகே இருந்த உண்டு உறைவிடப்பள்ளியில் திபெத்தியச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கம் சென்று காவலரை அழைத்துவந்தார். அவர் மடாலயத்தைத் திறந்து காட்டினார்

பொன்னிற உடல்கொண்ட மாபெரும் புத்தர்சிலை பூமியைத் தொட்டு ஞானத்திற்குச் சான்றுரைத்து அமுதலகம் ஏந்தி அமர்ந்திருந்தது. வலப்பக்கம்  வஜ்ராயுதம் ஏந்திய பத்மசம்பவர். இடப்பக்கம் தாராதேவி. மரத்தாலான சிலைகளின் கண்கள் ஊழ்கத்தில் பாதிமூடி இருவாட்சி மலர்கள் போலிருந்தன. கம்பிளி இருக்கைகள். மிகப்பெரிய முழவு. பௌத்த நூல்கள். சுவர்களில் டோங்காக்கள். திபெத் உருவாகி வந்துவிட்டிருந்தது. வெளியே வெள்ளிப்பனிமலைகள்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:35

புதியவாசகர் சந்திப்பு ஈரோடு

images

நண்பர்களே,

வருகிற பிப்ரவரி 18,19 ஈரோடு புதிய வாசகர் சந்திப்புக்கு 20 பேர் வரை தான் எதிர்பார்த்தோம், இட வசதியும் அவ்வளவே. கடந்த ஆண்டை  போலவே இம்முறையும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

முதலில் பதிவு செய்தவர், ஈரோடு அருகில் வசிப்பவர் போல சில அம்சங்களை கருத்தில் கொண்டு இதில் 20 பேரை தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு தனி மடல் வரும். தனி மடல் கிடைக்கப் பெறாதவர்ககளான மீதம் உள்ள வாசகர்களை கருத்தில் கொண்டு  வருகிற மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் இரண்டாவது புதிய வாசகர் சந்திப்பை நடத்த உள்ளோம். அதற்கான முறையான அறிவிப்பு பிப். 20 வாக்கில் வரும்.

புதியவர்களை ஈரோட்டுக்கு மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்.

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

[பிகு]

சென்ற புதியவாசகர் சந்திப்பில் ஈரோடு, கோவையில் இருந்து இருவர் வருவதாகச் சொல்லிவிட்டு முறையாக தெரிவிக்காமல் வராமலிருந்தனர். அவர்கள் இம்முறையும் பதிவுசெய்திருந்தனர். அவர்கள் பதிவுசெய்யவேண்டியதில்லை. அவர்கள் விஷ்ணுபுரம் சந்திப்புகள் எதிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பொழுதுபோக்கு நிகழ்வு அல்ல. இலக்கியத்தை வாழ்க்கையின் முக்கியமான செயல்பாடாக நினைப்பவர்கள் மட்டும் பங்குகொள்வதற்கானது. ஜெயின் நேரம் மதிப்பு மிக்கது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:31

ஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்

gokka_3116692f

கிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு இயற்கை ஆற்றலை கட்டுக்கு கொண்டு வருதல். அவ்வகையில் முறைபடுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதே எனது பார்வை.

ஜல்லிக்கட்டு பற்றி ஒரு காந்தியவாதியின் பார்வை

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1

1. காற்றின் களி

இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்த கோதவனம் என்னும் காட்டில் கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடி நின்ற சாலமரங்கள் நான்கை ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் கட்டி தளமிட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட ஏழு அறைகள் கொண்ட குடிலில் பாண்டவர்கள் தங்கியிருந்தனர். அடுமனையும் மகளிர்அறையும் தனியாக வேறு இரு சாலமரங்களில் இருந்தன. அவற்றுக்குச் செல்ல மூங்கில்களால் ஆன பாலம் இருந்தது.

சுற்றிலும் இருந்த புதர்க்காட்டைத் திருத்தி அழகிய மலர்த்தோட்டத்தை நகுலனும் சகதேவனும் உருவாக்கியிருந்தனர். கோமதிக்குச் செல்லும் ஓடை ஒன்றை கால்திருத்திக் கொண்டுவந்து பரப்பியிருந்தனர். அதன் ஈரம்படர்ந்த பாத்திகளில் தெச்சியும் அரளியும் குருக்கத்தியும் செங்காந்தளும் தழல்சூடி நின்றன.  மும்மூங்கில்நிலைகளில் இருவாட்சியும் முல்லையும் வெண்முத்துக்கள் சூடி  படர்ந்தேறியிருந்தன. நந்தியாவட்டையின் நிழல்களில் பேணாமலேயே வளரும் கொடுவேரிகள் செறிந்திருந்தன.

மலர்ச்சோலையைச் சுற்றி யானைகள் தயங்கும்படி இடையளவு ஆழமுள்ள அகழி வெட்டப்பட்டிருந்தது. தாவி கடந்துவிடும் மான்களையும், இறங்கி ஏறமுனையும் இளைய எருதுகளையும் தடுக்கும்பொருட்டு காட்டுமரங்களை பெருந்தடிகளால் இணைத்துக் கட்டி  வேலி அமைத்திருந்தான் பீமன். மரக்கிளைகளில் தொற்றி வந்து உள்நுழைய விழையும் கரடிகளை அச்சுறுத்துவதற்கு மரமணிகள் கோக்கப்பட்ட சரடுகளை கிளைகளுக்குள் கரந்து கட்டியிருந்தான்.

பீமனுக்கு உகந்த குரங்குப்படை ஒன்று எப்போதும் அக்குடிலை காவல் காத்தது. உயர்ந்த மரக்கிளை ஒன்றில் திசை நோக்கி அமர்ந்திருந்த நீள்நோக்குக் குரங்கு யானையோ புலியோ நெடுந்தொலைவில் தோன்றும்போதே வயிற்றை கையால் அடித்தபடி கொப்பரைகளை சேர்த்து அறையும் ஒலியில் எச்சரிக்கைக் குரல் எழுப்பியது.

அக்கணமே அங்கு இலைச்செறிவுக்குள் வால்பற்றி இழுத்துச் சீண்டியும் ஒன்றன் மேல் ஒன்று தாவியும் விளையாடிக்கொண்டிருந்த குட்டிக்குரங்குகள் அன்னையை நோக்கி பாய்ந்துசென்று ஒற்றை உடல்தொகையாக ஆயின. கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்த அன்னையரும், உச்சிக்கிளைகளில் கைகால் தொங்க வால் வளைந்து நெளிய விழிசொக்கிப் படுத்திருந்த ஆடவரும் கூட்டுஒலியெழுப்பியபடி  கிளையுலைய வந்து அத்தவச்சாலையை சுற்றிக்கொண்டனர்.

குரங்குகளின் ஒலி கேட்டு தன் அறையில் சுவடி நோக்கிக்கொண்டிருந்த தருமன்  எழுந்து வந்து குடில் முகப்பில் நின்று “புலியா?” என்றார். “ஆம், யானை என்றால் அவை நம்மிடம் சொல்லவரா. அங்கு சென்று அதை விரட்டவே முயலும்” என்று உள்ளே அமர்ந்து அம்புகளை கூர்தீட்டிக் கொண்டிருந்த நகுலன் சொன்னான். குரங்குகள் குடிலைச்சூழ்ந்து நின்று கூச்சலிட்டன.  தருமன் வெளியே சென்று கையசைத்ததும் அவர் அறிந்துவிட்டதை உணர்ந்து அவை முனகி பற்களைக் காட்டின. பின்னர் வழிநடத்திவந்த பெருங்குரங்கு திரும்பிச் சென்றது. மற்ற குரங்குகள் அதைத் தொடர்ந்து சென்றமை காற்று இலைகளுள் ஊடாடிக் கடப்பதுபோல தெரிந்தது.

“மந்தன் இவ்வேளையில் எங்கு சென்றான்?” என்று தருமன் சலிப்புடன் கேட்டார். “இக்காட்டில் குளிர் குறைவு என்பதனால் இங்கு தங்க முடிவெடுத்தோம்.  இதுவோ ஊன்விலங்கும் மதவிலங்கும் செறிந்ததாக உள்ளது. நாள்தோறும் ஒன்றேனும் நாடிவருகின்றது. காடு நம் மீது வஞ்சம் கொண்டு தன் தூதர்களை அனுப்பிக்கொண்டே இருப்பதுபோல.”

ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த சகதேவன்  “மூத்தவர் நேற்றிரவு காட்டுக்குள் சென்றார்” என்றான். “எப்போது?” என்றார் தருமன். “அறியேன்” என்றான் சகதேவன். “எங்கு செல்கிறான் எப்போது மீள்வான் ஏதும் தெரியாது நமக்கு. அவன் நம்முடன் இருக்கிறான். நாம் அவனுடன் இல்லை” என்றார் தருமன். வெளிமேடையில் நின்றபடி காற்றில் பறந்த தன் மேலாடையை தோளில் இழுத்துப் போட்டுக்கொண்டு  “இக்காட்டில் அவன் என்னதான் செய்கிறான்?” என்றார்.

“காடு அவருக்கு கற்றுத் தீராத காவியம் போல. இங்கு வந்த இவ்விரண்டாண்டுகளில் விழித்திருக்கும் கணமெல்லாம் அதை அறிந்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதியதொரு செய்தியுடன் இங்கு வருகிறார்” என்றான் சகதேவன். நகுலன் புன்னகைத்து “ஆம், ஒவ்வொரு செய்தியைச் சொல்லும்போதும் அவரது பேருடலில் எழுந்து வரும் அச்சிறுவனைப்போல் நம் உளவிருப்புக்குரியது இப்புவியில் பிறிதில்லை. அவருடன் இருக்கும் வரை நமக்கு மூப்பு என்பதே இல்லை” என்றான்.

தருமன் உள்ளே வந்து “இளையோனே, நான் அவனைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. அவன் குரல் கேட்டு வருவதற்குள் அகன்றுவிடுகிறான். என் விழிக்குள் இருக்கும் அவன் தோற்றம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்றே நான் அவ்வப்போது வியந்து கொள்வதுண்டு. இரவில் எப்போதோ  எவருமறியாமல் வருகிறான். புலரிக்குள் திரும்பிச் செல்கிறான். அவனைப் பார்த்துவிடுவோம் என்று நான்குமுறை அவன் அறைக்குள் சென்றேன். மஞ்சத்தில் அவன் படுத்த சுவடே இல்லை” என்றார்.

நகுலன் சிரித்து “அவர் இரவுகளில் வருவதும் குறைவே” என்றான். “எப்போதுதான் துயில்கிறான்?” என்றார் தருமன். “மூத்தவரே, பெருவிலங்குகள் உச்சிவெயில் எழுந்து சாய்வெயில் அணைவதுவரை புதர்களுக்குள் துயில் கொள்கின்றன” என்றான் நகுலன். “புதர்களுக்குள்ளா? நாகங்கள் நிறைந்த இக்காட்டிலா?” என்றபின் தருமன் பெருமூச்செறிந்து “ஆம், அங்குதான் அவன் நிறைவுடன் இருக்க முடியும் போலும். அவனுக்கு முலையூட்டியது நம் அன்னை அல்ல, புதர்களுக்குள்ளிருந்து இறங்கி வந்த பெருங்குரங்கு ஒன்று. அது அளித்த மெய்மை அவனுக்குள் உண்டு” என்றார்.

“அவர் காற்றின் மைந்தர்” என்றான் நகுலன். “பெருமரங்களை கடைபுழக்கவும் சுவடிலாது ஒழுகவும் அறிந்தது காற்று.” தருமன் திரும்பி குரங்குகளை நோக்கினார். ஒரு பெருங்குரங்கு கிளைநுனியில் குடிலை நோக்கியபடி அமர்ந்திருந்தது. அதன் வால்நுனி கீழே தொங்கி அதன் உள்ளோடும் எண்ணங்களுக்கேற்ப மெல்ல வளைந்து அசைந்துகொண்டிருந்தது. தருமன் “அந்த அன்னையின் குருதியின்பொருட்டே சூழ்ந்தமர்ந்து நம்மைக் காக்கின்றன இக்குரங்குகள். முன்பு ராகவ ராமனுக்கு துணை நின்ற கிஷ்கிந்தையின் படையினர் போல்” என்றார்.

“மூத்தவர் வரும்போது தங்களை சந்திக்கும்படி சொல்கிறேன்” என்றான் நகுலன். தருமன் “நன்று” என வெளியே செல்ல  சகதேவன் புன்னகைத்து  குரல் தாழ்த்தி “அதற்கு தாங்கள் அவரைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகின்றன, மூத்தவரே” என்றான். நகுலன் தன்னை அறியாது வாய்விட்டு சிரித்து விட்டான். “உண்மைதான். நானும் பார்த்து நெடுநாட்கள் ஆகின்றன” என்றான்.

தருமன் வெளியே குடில்முகப்பில் நின்றபடி “புலி திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன். மரமானுடர் தங்கள் இயல்புக்கு மீண்டுவிட்டார்கள்” என்றார். “இங்கு வந்தபோது இது  மண்ணில் ஒரு விண்ணுலகு என்று தோன்றியது.  இவ்வாற்றின் கரையின் குளிர்காற்றும் பசுமை மாறா செடிகளும் குடைமரங்களும் மண்ணும் மலரும் கலந்த இன்மணமும்  உயர்ந்த எண்ணங்களுக்கென்றே அமைக்கப்பட்டவை என எண்ணினேன். இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நாளும் தவமென்றே நினைத்தேன்.”

“…இன்று அறிகிறேன், எந்தக் காடும் எந்த மலையும் நம்மைத் தவத்திற்கு கொண்டு செல்வதில்லை. நம் உள்ளிருந்து ஊறுவதே தவமென்றாகும்” என்றார் தருமன். விழிகள் ஒளிநிழலாடிய காட்டுவெளி நோக்கி தாழ்ந்து நின்றிருக்க சற்றுநேரம் சிலைநிலை கொண்டு மீண்டு திரும்பி “இளையோரே, ஒரு முனிவனென்று என்னை எண்ணிக்கொள்ள எப்போதும் விழைந்து வந்திருக்கிறேன். இன்று நான் அடைந்த மெய்யறிதலென்பது ஒன்றே, நான் முனிவனல்ல. என் இளையோர் மீதான அன்பிலிருந்து எனக்கு விடுதலை இல்லை. அது என் தளையல்ல, அணி என உணர்ந்ததே என் வீடுபேறு” என்றார்.

“ஆனால் உலகியலான் காட்டில் வாழ்வதென்பது எளிதல்ல” என அவர் தொடர்ந்தார். “தக்கையை நீர் என உலகியலானை காடு வெளித்தள்ளிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மந்தன் காட்டில் மகிழ்ந்திருக்கிறான். அவனை நகரங்கள் வெளியே தள்ளிக்கொண்டிருந்தன. அப்படியென்றால் அவன் உலகியலான் அல்லனா? ஒருவகை யோகியா?” அவர்கள் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

“இல்லை, நீங்கள் சொல்வதைப்போல களிமாறா இளமைந்தனேதானா? மைந்தர்களுக்கு நாடென்றும் காடென்றும் வேறுபாடில்லையே! அவர்களை அக்கணம் அள்ளி ஆழ்த்தும் ஒரு சூழல் மட்டுமல்லவா அவர்கள் விழைவது?” அவர் திரும்பி குரங்கை நோக்கினார். “அல்லது இக்குரங்குபோல. இது நகர்களில் வாழ்வதை விரும்பாது. காட்டில் காட்டின் துளியென இருக்கிறது.”

அவர் நோக்கியதை உணர்ந்து அந்தக் குரங்கு கண்சிமிட்டி இடையை சொறிந்தது. பற்களை இளித்தபடி எதையோ விரல்களில் எடுத்து கூர்ந்து நோக்கியது. அதை பல்லில் வைத்துக் கடித்தபின் மீண்டும் தோள் தொய்ந்து இயல்படைந்தது. தருமன் “சலிப்பில்லாது அமர்ந்திருக்கிறது. இன்றும் நாளையும் இவ்வண்ணமே இங்கிருக்க அதனால் முடியும். இளையோனே, சலிப்படைந்த காட்டுவிலங்கை நான் கண்டதே இல்லை. நாட்கணக்கில் காத்திருக்கின்றன பூனைகளும் புலிகளும். பதுங்கி அசையாதிருக்கின்றன முயல்களும் நாகங்களும். அசைபோட்டு விழிசொக்கிக் கிடக்கின்றன காளைகளும் மான்களும்… இருத்தலே அவற்றுக்குப் பேரின்பம்.  மானுடர் மட்டும் இருத்தலில் சலிப்பு கொள்கிறார்கள். இயைவதும் இயல்வதும் அல்ல, எழுவதும் செல்வதுமே தங்கள் இன்பமென்று எண்ணுகிறார்கள்” என்றார்.

“இங்கிருந்து கிளம்பிச் சென்று திசைகளை வெல்லவேண்டுமென்று தோன்றவில்லை. நான் அடைவதற்கு இதற்கப்பால் ஏதோ ஒன்று உள்ளதென்றும் இப்போது என் உளம் உணரவில்லை. நான் நினைவறிந்த நாள் முதலே அங்கு அங்கு என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்பயணத்தின் இறுதியில் இங்கு அமைவதெப்படி என்று தெளிந்தேன். இளையோர்களே, இன்று இச்சிறு சோலைக்கு அப்பால் நான் விழைவதெதுவும் இல்லை…”

“…இருந்தும் நாட்கள் சலிப்பூட்டுகின்றன. காலம் இழுபட்டு நீண்டு கிடக்கிறது. இருப்பதன் சலிப்பே மனிதனை காமம் குரோதம் மோகம் மூன்றுக்கும் அழைத்துச் செல்கிறது. சலிப்பின்றி இருக்கத் தெரிந்தவன் யோகி. சித்தமடக்கி சொல்லற சும்மா இருத்தலே யோகம் என்கின்றனர் முனிவர். ஒவ்வொரு ஒலித்துளியாலும் அச்சொற்களை இங்கு நான் முழுதுணர்கிறேன்” என்றார் தருமன். திரும்பி அக்குரங்கை நோக்கி “காட்டுவிலங்குகளெல்லாம் யோகிகள் போலும். விலங்காக மாறும்பொருட்டுதான் இங்கு வருகிறார்களா மெய்யுசாவிகள்?” என்றார்.

“நான் விரும்புவதென்ன என்று சென்ற சில நாட்களாக எண்ணிக்கொண்டே இருந்தேன். இந்திரப்பிரஸ்தமா? பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென மணிமுடி சூடி அமரும் தருணமா? யயாதிக்கு நிகரான மன்னனென சூதர்கள் பாடும் பெரும் புகழா? எது? இரக்கமற்ற எதிரியைப்போல வினாக்களை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இல்லையென்றே அகம் சொல்கிறது. அஸ்தினபுரியில் இருக்கும் என் மைந்தரைக் காண மீண்டு செல்ல வேண்டுமென்றுகூட உள்ளம் எண்ணவில்லை. பிறகென்ன என்னுள் இருப்பது?”

கைகளைக் கட்டியபடி காற்றிலாடும் ஆடையுடன் காட்டிலைகள் ஆடிய ஒளிநிழலாட்டம் முகத்தில் ததும்ப தருமன் நின்றார். பின்பு பெருமூச்சுடன் கலைந்து “சொற்களிலாக்குவதென்றால் இப்படி கோக்கலாம். ஒவ்வொன்றையும் மீளக் கண்டுபிடிப்பதே பொருள்வய உலகின் இன்பம் எனப்படுகிறது. புதுமலர், புதுத்தளிர், புதுநிலம், புதிய எண்ணம், புதிய மனிதர்கள். புதிய எனும் சொல்லில் உள்ளது இப்புவியில் நாம் வாழும் புற வாழ்வு. இங்கெதுவும் புதிதல்ல என்று ஒருகணமும் ஒவ்வொரு கணத்துளியும் புதிதென்று மறுகணமும் மாறிமாறிக் கண்டடையும் உவகையால் நெய்யப்பட்டுள்ளது வாழ்வு” என்றார்.

“இங்கு நான் இழந்திருப்பது புதிது என உளமெழும் தருணத்தை. இதோ, இங்கிருந்து இறங்கிச் சென்றால் நான் பார்க்கும் எந்தக் கிளையில் மலர் மலர்ந்திருக்கும் என்று இப்போதே தெரிகிறது. உற்று நோக்கினால் கோமதியில் எத்தனை அலைகள் எழுகின்றன என்பதைக் கூட என் அகம் முன்னறிந்திருப்பதுபோலப் படுகிறது. இதே வானம், இதே காற்று… என் எண்ணங்கள் கூட ஒன்று மற்றொன்றென மீள நிகழ்கின்றன. இங்கு வந்த சில நாட்களில் என்னுள் எழுந்த அதே எண்ணங்களைத்தான் இப்போதும் அடைகிறேன்.”

“ஏனெனில் இப்போதும் என்னைச் சுற்றியிருக்கும் இப்பொருட்கள் மாறுபடுவதில்லை. அப்படியானால் இப்பொருட்களால் உருவாக்கப்படுவதுதானா என் அகம்? என் எண்ணங்கள் அனைத்தும் இப்பொருள்வயப் புடவியின் நீட்சிகள் மட்டும்தானா? அறியேன்…” தருமன் எதையோ விட்டெறிவதைப்போல் கையை வீசினார்.

“சென்ற சில மாதங்களாகவே நீங்கள் நிலையழிந்திருப்பதைக் கண்டோம், மூத்தவரே” என்றான் நகுலன். “உண்மையில் இளையவர் சென்று இத்தனை நாட்களாகியும் மீளாததே அத்துயருக்குப்பின் என்று எண்ணிக்கொண்டோம்.” தருமன் துயரம் படிந்த புன்னகையுடன் “ஒருவகையில் அது உண்மை. அவனை எண்ணாமல் ஒருநாளும் துயின்றதில்லை. விழித்ததுமே அவன் எண்ணமே என்னுள் நிறைகிறது. ஆனால் அவனைப்பற்றி அச்சமில்லை. அவன் வெல்வதற்கென்று மட்டுமே பிறந்தவன். செல்லும் திசை எதுவும் அவனைப் பணியும். அடைந்து நிறைந்து கனிந்து மீள்வான். அதில் எனக்கு ஒருபோதும் ஐயம் வந்ததில்லை” என்றார்.

“ஆனால் நால்வரில் ஒருவர் என் அருகே இல்லாதபோதுகூட நான் உணரும் பெரும் இடைவெளியைத்தான் நுணுகியும் கூர்ந்தும் எண்ணிக்கொள்கிறேன். நான் முழுமையற்றவன், உங்கள் நால்வரால் நிறைக்கப்படுகையில் மட்டுமே நிலைகொள்பவன். இங்கிருக்கையில் நாம் அவனுக்காக காத்திருக்கிறோமென்ற உணர்வு இருக்கிறது. அதுவே துயர் நிறைக்கிறது. இலக்கு ஒன்று வேண்டும், செல்வதற்கும் அடைவதற்கும். அது இங்கிருக்கும் இருப்பின் பொருளை வெறும் காத்திருப்பென்று ஆக்காமல் இருக்கும் பொருட்டு மட்டுமே.”

மேலும் சொல்ல நாவெடுத்து தலையசைத்து தன்னைக் கலைத்தபின் தருமன்  படிகளில் இறங்கி மலர்த்தோட்டம் நோக்கி சென்றார். காட்டுக்கொடிகளை முறுக்கிச் செய்த கயிற்றால் மரக்கிளைகளைக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த படிகளில் அவர் கால்கள் பதிய அவை இறுகி மீளும் முனகலோசை கேட்டு அடங்கியது.

நகுலன் “மிகச்சரியான சொற்களில் துயரையும்  சலிப்பையும் தனிமையையும் சொல்வதற்கு பயின்றிருக்கிறார். பிறந்த நாள் முதலே இதில் பயிற்சி செய்துவந்திருக்கிறார் என்பதால் உவகையையும் எழுச்சியையும் மெய்மையையும் தொடும் மொழியை அவர் அடையவே இல்லை” என்றான். சகதேவன் நகைத்து “துயரினூடாகத்தான் அனைத்தையும் அறிய வேண்டுமென்று சிலருக்கு ஊழ் அமைந்துள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய இயலும்?” என்றான்.

images

ருமன் தோட்டத்தை அடைந்து சூழ்ந்திருந்த மலர்களை இடையில் கைவைத்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்த மலர்ப்பரப்பு பொருளிலாத வண்ணக்குவியலெனத் தோன்றியதும் குனிந்து ஒவ்வொரு  மலராக நோக்கினார். அவற்றின் பலவகையான மலர்வுகளும் குவிகைகளும் விரிதல்களும் குமிழ்தல்களும் உள்ளத்தை ஈர்த்தன. மென்மையென்பதும் தண்மை என்பதும் வண்ணமென்றானவை.பின்னர் எப்போதோ அவர் பீமனைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்தபோதுதான் மலர்கள் சலிப்பளித்துவிட்டிருப்பது தெரியவந்தது. அத்தனை வடிவமாறுபாடுகளுக்கும் அப்பால் அவை ஒன்றே. விரித்து தன்னைக்காட்டும் வண்ணக்குவளைகள். அறிவிலா அழகியர் போல வெறும் தேனேந்திகள்.

கிளம்பிவிடவேண்டும் என்ற வெறி எழுந்து உடலை துடிக்கச்செய்தது. பிறிதொரு காடு, பிறிதொரு நதி, புத்தம் புதிய ஒரு மலை.இங்கு இனிமேல் இருக்கமுடியாது.  அவையும் இவைபோன்றவையே. எங்கும் புவி ஒன்றே. எழுந்த வான் ஒன்றே. மீளமீள ஒன்றையே மலரென விரிக்கிறது. நதியென உருக்கி இழுத்து நீட்டுகிறது. மலையென அள்ளிக் குவிக்கிறது. பிறிதொன்றறியா பேதைப்பெரும்பரு, ஆனால்இன்னொரு நிலம் மேலும் சிலகாலம் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடும். இது புதிது என்னும் மாயையை பேணிக்கொண்டு அங்கு மேலும் சற்று வாழ்வை உந்திக்கழிக்கமுடியும்.

திரும்பவும் படிகளினூடாக குடிலை நோக்கி செல்லும்பொருட்டு கால்களைத் தூக்கி வைத்தபோது அவர் காவல்குரங்கை நோக்கினார். அது அவரருகே ஒரு கிளையில் வந்து அமர்ந்து அவரை நோக்காமல் உடல் குறுக்கி அமர்ந்திருந்தது. கால்கள் மட்டும் கிளைகளைப் பற்றியிருக்க கைகள் தொய்ந்துகிடந்தன. தோள் தொய்வால் அது துயில்வதுபோல் தோன்றியது. ஆனால் அவர் அசைவுகளை உடலால் நன்கறிந்தபடி விழிகளை அப்பால் காட்டின் புதர்களுக்குள் நாட்டியிருக்கிறது என்றும் தெரிந்தது.

ஏனென்றறியாமல் ஒரு அகவிரைவு எழ அவர் வேலியை மூடியிருந்த படலை கட்டவிழ்த்து மெல்ல உந்தினார். மறுபக்கம் கட்டப்பட்டிருந்த எடையால்  படல்கதவு துலாபோல ஓசையின்றி மேலெழுந்தது. வெளியே சென்று கயிற்றை இழுத்து  அதை மூடிவிட்டு காலடிப்பாதையில் நடந்தார். அவர் தலைக்கு மேல் குரங்கு கிளையுலைய இலையுதிர பதறியபடி வந்தது.  உப் உப் என்று அது குரலெழுப்பக் கேட்டதும்தான் எங்கு செல்ல எழுந்தோம் என்பதை அவரே உணர்ந்தார். அந்தப் புலி… வெறுங்கையுடன் அதன் முன் சென்று நின்றிருக்கவேண்டும். இந்த நாளை அசைவுறச்செய்ய அதனால் இயலும்.அதுவும் திகைக்கக்கூடும், இன்றைய சலிப்பை அதுவும் கடக்கக்கூடும்.

புன்னகையுடன் அவர் நடக்க அவர் மீது குரங்குகள் பெருகிக்கொண்டிருந்தன.  அவை அவரை அழைப்பதுபோலவே குரல்கள் ஒலித்தன. ஓரிரு குரங்குகள் தாவி இறங்கி தாழ்கிளைகளில் ஆடி அவரை நோக்கி மேலுதடு குவித்து கூச்சலிட்டன. கிளைகளில் நின்று ஆடி ஆடி குதித்தன. அவர் மேலும்  களிகொண்டார். புலன்கள் கூர்பெற சற்றுநேரத்திலேயே புலியின் காலடிகளை கண்டுவிட்டார். பெரிய புலி. அதன் பின்னங்கால்களுக்கிடையே இருந்த தொலைவை வைத்து ஆண்புலி எனத் தெளிந்தார்.  பூழிமென்மையில் பதிந்த தடத்தை  குனிந்து நோக்கினார். ஊன்துளி இல்லை என்பதைக்கொண்டு அது இரைகொண்டிருக்கவில்லை என்று கணித்தார்.

குரங்குகள் முன்னால் சென்றுவிட்டிருந்தன. அங்கே அவற்றின் பூசலோசை எழுந்தது. அவை அவரைக் காக்கும்பொருட்டு புலியைத் துரத்துவதற்காக சென்றிருக்கின்றன என்று உணர்ந்தார். புலி அஞ்சி விலகிச்சென்றுவிடலாகாது என்று  எண்ணி விரைந்து காலடி எடுத்துவைத்தார். சுற்றிலும் நோக்கியபடிச் சென்றபோது அவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதை அவரே அறிந்தார். முகத்தசைகளின் விரிவை உணர்ந்தகணம் புன்னகைத்தே நெடுநாட்களாகிவிட்டிருப்பது தெரிந்தது. கைவீசி கூச்சலிட்டு துள்ளிக்குதித்தார். பின்னர் அறிந்தார், அது அவருக்குள்ளேதான் நிகழ்ந்தது. அவர் அதே கூன்தோளும் தளர்நடையுமாகத்தான் சென்றுகொண்டிருந்தார்.

கோமதியின் இடைவளைவு என அமைந்த சதுப்பு அது என்று தெரிந்தது. மட்கிய சேற்றின் மணம் வரத்தொடங்கியது. குரங்குகளின் ஓசை வலுத்து பின் தொலைவில் அகன்று தேய்ந்தது. பின் இளங்குரங்குகளின் ஓசையை கேட்டார். அவை சிறுவர்கள்போலவே கூச்சலிட்டன. நிறைய இளையவாலோர் இருக்கக்கூடும் அங்கு என தோன்றியது. அவர்களனைவரும் அங்கு எப்படி சென்றனர்? அங்கே சற்றுமுன்னர்தான் பெரும்புலி சென்றிருக்கிறது. அவர் குனிந்து அதன் பாதத்தடங்களை நோக்கி அச்செலவை உறுதிசெய்துகொண்டார். ஈரம் கசியும் மென்கதுப்பில் நால்விரல் பதிவுகள் விரியிலை வடிவில் தெரிந்தன.

கோமதியின் ஒளி இலைகளின் நடுவே அலையலையென தெரியத் தொடங்கியது. இளவாலோர் குரல்கள் அணுகியபோது அவர் தெளிவடைந்து நடை தளர்ந்தார். பீமனின் குரல் ஊடே ஒலித்துக்கொண்டிருந்தது. அது குரங்குமொழியில் பேசுவது எருது உறுமுவதுபோலவும், செம்புக்கலம் முட்டுவதுபோலவும் ,முழவில்கோல் வருடுவதுபோலவும்,  தோல்வாரில் வாள்தீட்டுவதுபோலவும் ஒலித்தது. அவர் அருகணைந்து ஒரு பெரிய அரசமரத்திற்குப் பின்னால் நின்று நோக்கினார்.

காற்றில் அலையுலைந்த நாணல்பெருக்கினுள் வால்சொடுக்கி வளைந்து நின்றிருக்க புலி தவித்துச் சுழன்று, கோட்டுப்பல் காட்டி உறுமி, எம்பிக்குதித்து கைமடித்து காற்றிலறைந்து நின்றிருக்க அதன் மேல் குட்டிக்குரங்குகள் சிறுசில்லைகளில் தொங்கி ஆடி கும்மாளமிட்டன. வால்எழுந்து வளைந்திருக்க ஒரு சிறுவன் நாணலுக்குள் குதித்து எழுந்து நின்று வயிற்றைப் பிராண்டியபடி ஹூஹூஹூ எனறான். புலி அவனை நோக்கி உறுமியபடி பாய நால்வர் அதன் பின்பக்கம் குதித்து வாலைப்பற்றி இழுத்தனர். அது சீறிச் சுழல பாய்ந்து கிளைச்சில்லையில் தொற்றி ஆடிநின்ற தோழரின் கைபற்றி மேலேறிக்கொண்டனர்.

கிளைகளெங்கும் காய்க்குலைகள்போலச் செறிந்திருந்த குரங்குகள் ஹூஹூஹூஹூ என ஓசையிட்டு எம்பிக்குதித்தன. இலைகள் சுழன்று புலிமேல் விழ அது ஒவ்வொரு இலைக்கும் அஞ்சி உடல்விதிர்த்து முதுகுவளைத்து ஒண்டியது. அதன் விலாவெலும்புகள் வரித்தோல் மடிப்புகளுக்குள் அசைவுகொண்டன. பிடரியும் பின் தொடையும் ஆங்காங்கே தசையதிர்ந்தன.மரங்களின் மேல் பீமன் தலைகீழாக கால்களால் கிளைபற்றி கைவீசி தொங்கிக்கிடந்து ஹூஹூஹூ எனக் குரலெழுப்பினான். புலி பின்னால் காலடி எடுத்துவைத்து நடுநடுங்கியபடி சென்று கோமதியின் சேற்றுவிளிம்பை அடைந்து சரிவில் கால்வழுக்கிச் சென்றது.

கால்களை எடுத்து வைக்கும்தோறும் வழுக்க அது பூனைபோலவே முனகியபடி தலைதாழ்த்தியது. முன்னங்கால்களால் களிமண்ணை அள்ளிப்பற்றி மேலேற முயன்றபோது பின்னங்கால் நீண்டு கீழிறங்க தொங்கவிடப்பட்டதுபோல அதன் உடல் நெடுகியது. குரங்குச்சிறுவர் ஒவ்வொருவராக நாணலில் குதித்தனர். பீமன் இறுதியாக தலைகீழாகக் குதித்து கைகளை ஊன்றி கால்கள் காற்றில் நடக்க  ஆணைகளை இட்டபடி பின்னால் நடந்தான்.  புன்தலை மயிர் சிலிர்த்திருக்க குரங்குக்குட்டிகள் புலியின் அருகே சென்று நின்றன. அதன் உறுமல் கேட்டு மெய்விதிர்க்க பாய்ந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டன. மீண்டும் துணிவுகொண்டு அணுகின.

புலி வயிற்றை எக்கி உறுமியது. மீசைமயிர்முட்கள் விடைக்க தலையைத் தாழ்த்தி குருதிநிற வாய்திறந்து  அலறியது. துணிவுகொண்ட குரங்கு ஒன்று மெல்ல அருகே சென்றது. மேலும் நெருங்கி கைநீட்ட புலி துள்ளித் துள்ளி அமறியது. அவ்வசைவில் மேலும் சேற்றில் வழுக்கியது. குட்டி தன் சிறுகை நீட்டி புலியின் மீசையைப்பிடித்து இழுத்து விட்டு ஹூஹூஹூ என ஓசையிட்டபடி பின்னால் பாய்ந்தது. மற்ற குரங்குகளும் கூவியபடி அதனுடன் சேர்ந்துகொண்டன. இன்னொன்று முன்னால் சென்று மீண்டும் புலியின் மீசையைப் பிடித்து இழுத்தது. இன்னொன்று ஒரே பாய்ச்சலில் புலியின் தோள்மேல் தொற்றி ஏறிக்கொண்டு எழுந்து நின்று ஹூஹூஹூ என்றது. அதன் சிறுகுறி பிஞ்சுப்பலாக்காய் என புமயிருடன் விடைத்திருந்தது அத்தனை குரங்குக்குட்டிகளும் பெருங்குரலில் ஓசையிட்டன.

புலி வயிற்றை சேற்றில் அழுத்தி கால்களை நன்றாகப் பரப்பி புலித்தோல் இருக்கைபோலவே ஆகியது. அவ்வாறே காலையும் விரித்தபோது அதனால் நீந்துவதுபோல முன்னகர முடிந்தது. நாணலில் முன்கால் சிக்கியதும் ஒரே பாய்ச்சலில் எழுந்து துள்ளிச் சுழன்றது. குரங்குகள் கூச்சலிட்டபடி சேற்றில் விழுந்து நான்குபக்கமும் சிதறி  ஒன்றை ஒன்று கைபற்றியும் வால்தொற்றியும் கிளைகளில் ஏறிக்கொண்டன. சில குரங்குகள் ஓடி பீமன் காலைப்பற்றி  கைகளில் தொற்றி இடைமேல் ஏறின. பதைத்து ஓடிய ஒரு குட்டி நீரைநோக்கிச் சென்று திகைத்து திரும்பி எதிரில் புலியைக் கண்டு அஞ்சி மயிர்சிலிர்த்து வாய் இழுபட்டு  இளிக்க அசைவற்று நின்றது. புலியும் அஞ்சி  முகம்தாழ்த்தி உறுமியபடி நின்றது.

குரங்கு மெல்ல அசைந்தபோது புலியும் திடுக்கிட்டு அசைந்தது. குரங்கின் சிறுசெவி மட்டும் முன்னும் பின்னும் அசைய புலியின் வால் ஐயத்துடன் சுழித்து நெளிந்தது. மேலே குரங்குகள் கூச்சலிட்டு கிளையை உலுக்கின. பீமனின் உடல்மேல் தொற்றியிருந்த குரங்குகள் மேலேறி தலைமேலும் தோள்களிலும் நின்று எம்பி எம்பி கூச்சலிட்டன. புலி ஐயத்துடன் முன்னங்காலைத் தூக்கி காற்றில் மெல்ல வீசியது. மீசை விடைக்க உடலை நிலம்சேர்த்து முன்னகர்ந்து மீண்டும் கைநீட்டியது. குரங்குக்குட்டி ஈஈஈ என ஓசையிட்டு தொழுவதுபோல கைசேர்த்து ஒடுங்கியது.

அக்கணம் ஓடிவந்த பீமன் புலியை வால்பற்றித் தூக்கி அதே விசையில் மும்முறை சுழற்றி நாணல்மேல் வீசினான். உள்ளே விழுந்து, செந்நிற ஆடை அலைவு என துள்ளி எழுந்து, மீண்டும் அமிழ்ந்து, மீன் போல அப்பால்  தோன்றி, துள்ளித்துள்ளித் தெறித்து அது விலகி ஓடியது.  அதன் வால்சுழல்வது தொலைவில் தெரிந்து மறைந்தது. அஞ்சி நின்றிருந்த குரங்கு கையூன்றி விழுவதுபோல் மண்ணிலமர்ந்தது. பின் ரீச் என ஓசையிட்டு சிறுநீர் பீய்ச்சியபடியே ஓடி வந்து பீமனை அணுகி அவனை அறைந்தது. பல்காட்டிச் சீறி கடித்தும் உதைத்தும் கூச்சலிட்டது. அதன் முகக்குழிகள் பதைத்தன. என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து மண்ணை அள்ளி வீசியது.மண்ணில்படுத்துப் புரண்டு எழுந்தது அதைச் சூழ்ந்து குட்டிகள் குதித்தன. அவை சேர்ந்து ஓசையிட்டபடி எம்பிக்குதித்தன. கிளைகளில் தொற்றி ஏறிக்கொண்டு அங்கிருந்தபடி கூட்டோசையிட்டன.

MAMALAR_EPI_01

பீமன்  அவர்களிடம் ஏதோ கூச்சலிட்டு பேசியபடி ஓடிவந்தான். அவன் விழிகள் தன் மேல் பதிவதை உணர்ந்தபோது தருமன் அறியாமல் பதுங்க முயன்றார். பீமன் அவரை அறியவே இல்லை எனத் தெரிந்தது. கூவியபடி பாய்ந்து கிளைமுனையைப்பற்றி ஆடி மேலேறி இலைத்தழைப்புக்குள் சென்று அகன்றான். கிளைகள் கலைந்து அலையெழுப்ப அவர்கள் காட்டின் ஆழத்திற்குள் மறைந்தனர். மீன்கூட்டம் மூழ்கியபின் நீர்ப்பரப்பு என பசப்பு அசைவிழந்தது. தருமன் அதை நோக்கியபடி சற்றுநேரம் நின்றபின் தன்னை உணர்ந்து உடல் மீண்டு நீள்மூச்செறிந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:30

‘வெண்முரசு’ –நூல் பதின்மூன்று -‘மாமலர்’ -1

அக்கணம் ஓடிவந்த பீமன் புலியை வால்பற்றித் தூக்கி அதே விசையில் மும்முறை சுழற்றி நாணல்மேல் வீசினான். உள்ளே விழுந்து, செந்நிற ஆடை அலைவு என துள்ளி எழுந்து, மீண்டும் அமிழ்ந்து, மீன் போல அப்பால்  தோன்றி, துள்ளித்த்துள்ளித் தெறித்து அது விலகி ஓடியது.  அதன் வால்சுழல்வது தொலைவில் தெரிந்து மறைந்தது. அஞ்சி நின்றிருந்த குரங்கு கையூன்றி விழுவதுபோல் மண்ணிலமர்ந்தது. பின் ரீச் என ஓசையிட்டு சிறுநீர் பீய்ச்சியபடியே ஓடி வந்து பீமனை அணுகி அவனை அறைந்தது. பல்காட்டிச் சீறி கடித்தும் உதைத்தும் கூச்சலிட்டது. அதன் முகக்குழிகள் பதைத்தன. என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து மண்ணை அள்ளி வீசியது.மண்ணில்படுத்துப் புரண்டு எழுந்தது அதைச் சூழ்ந்து குட்டிகள் குதித்தன. அவை சேர்ந்து ஓசையிட்டபடி எம்பிக்குதித்தன. கிளைகளில் தொற்றி ஏறிக்கொண்டு அங்கிருந்தபடி கூட்டோசையிட்டன.

பீமன்  அவர்களிடம் ஏதோ கூச்சலிட்டு பேசியபடி ஓடிவந்தான். அவன் விழிகள் தன் மேல் பதிவதை உணர்ந்தபோது தருமன் அறியாமல் பதுங்க முயன்றார். பீமன் அவரை அறியவே இல்லை எனத் தெரிந்தது. கூவியபடி பாய்ந்து கிளைமுனையைப்பற்றி ஆடி மேலேறி இலைத்தழைப்புக்குள் சென்று அகன்றான். கிளைகள் கலைந்து அலையெழுப்ப அவர்கள் காட்டின் ஆழத்திற்குள் மறைந்தனர். மீன்கூட்டம் மூழ்கியபின் நீர்ப்பரப்பு என பசப்பு அசைவிழந்தது. தருமன் அதை நோக்கியபடி சற்றுநேரம் நின்றபின் தன்னை உணர்ந்து உடல் மீண்டு நீள்மூச்செறிந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 10:30

January 30, 2017

பயணக்கட்டுரை

y

[நகைச்சுவை]

பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

பயணக்கதைகள் தமிழகத்தில் ராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டவை என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக ஊர்விட்டு ஊர் சென்றது பட்டாளத்துக்குத்தான். போன இடத்தில் என்ன செய்தாலும் வந்த இடத்தில் அனுபவங்கள் பெருகுவதென்பாது  மானுட இயல்பே. மேலும் ராணுவம் என்பது ஒரு ஒற்றைப்பெரும் அமைப்பு. அதில் உள்ள ஒருவரின் அனுபவம் என்பது அனைவருடைய அனுபவமும்தான் அல்லவா?

ஆகவே பொதுவாக ராணுவத்துக்குப் போய்வந்த அனைவருமே ”எழுவத்தெட்டிலே நான் சியாச்சினிலே இருந்தப்ப இப்டித்தான்…” என்று ஆரம்பிப்பது மரபாக உள்ளது. சியாச்சின் என்பது ராணுவ வீரர்கள் அன்றாடம் சென்றுவரும் கொல்லைப்பக்கம் என்றா நம்பிக்கையே நம் நாட்டில் பரவலாக கிராமப்புறங்களில் நிலவியது. ”சியாச்சினிலே எல்லாம் ஒண்ணுக்கடிச்சா மூத்திரம் அப்டியே பனிக்கம்பியாட்டு வளைஞ்சு நிக்கும்லா?”. ”பொறவு?”. ”அப்ப்டியே நுனிய ஒடிச்சுவிட்டுட்டு வந்துட்டே இருப்போம்ல?”

எச்சில் துப்பி அந்தப் பனியுருளையைப் பயன்படுத்தி கோலி விளையாடுவது சியாச்ச்சினிலே சாதாரணம்.ஏன் ஒரு சர்தார்ஜி அப்புக்குட்டன் அண்ணனின் தலையில் தேங்காயெண்ணையை எடுத்து அடிக்க அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுத் தழும்பாகிவிட்டது. ”எண்ணைக்குப்பியயா எடுத்து அடிச்சான் பாவி?”.  ”லே மயிராண்டி , வெறும் எண்ணையைலே…சியாச்சின்னுன்னா பின்ன என்னான்னு நெனைக்கே? தேங்காயெண்ணை குளுந்து கல்லாட்டு கெடக்கும்லா?”

பயணக்கட்டுரைகளின் இரண்டாவது  ஊற்றுமூலம் என்பது தீர்த்த யாத்திரைகள். தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பவேண்டுமென்றால் மூதாதையர் எதையாவது சாமிக்கு வேண்டித்தொலைத்திருக்க வேண்டும். பயணம் போவதற்கென்றே ”எப்பா பழனியாண்டவா இந்தபெயலுக்கு சொறி குணமானா உனக்கு இவனைக்கொண்டு ஒரு மொட்டையெ போட்டு விட்டுருதேன்பா” என்று கூப்பாடு போடும் பாட்டிகள் நம் நாட்டில் அனேகம். போய் வந்தால் போன கதையைக் கேட்க அண்டை அசல் வந்து கூடும்.

”யக்கா என்னாத்த சொல்ல போங்க…இந்தால நிக்கு ஒளுகிணசேரி வண்டி. அதைப்பிடிக்கதுக்கு என்னா பாடுங்குதீய? கூட்டமானா கூட்டம் அம்புட்டு கூட்டம். ஒருத்தி நிக்கா பட்டும் பவிசுமாட்டு..அவா மொகத்திலே மாவு மாதிரில்லா படுவரு போட்டிருக்கா…மூளியலங்காரி…” என ஆரம்பித்துப் பயணத்தின் நுணுக்கமான தகவல்கள் அடங்கிய பயணக்கதைகளில் கண்டிப்பாக அற்புத அம்சம் உண்டு

” …உன்னாணை அக்கா, உள்ள போயி நிண்ணேன் பாரு, பழனியாண்டவன் என்னைய பாத்து சிரிச்சு, வந்தியா குட்டீ வாடீன்னு சொல்லுகதை என் கண்ணால கண்டேன்..இனி இந்த சென்மத்துக்கு போரும்…” என்று முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொள்வதுண்டு. கதை கேட்பவர் கிளாம்பிச் செல்லும்போது ”எளவு, பூசாரி கண்ணைக் காட்டினத பாத்துப்போட்டுவந்து பளனியாண்டவன் கண்ணாடிச்சான்னு கதை விடுகா…எங்க போனாலும் சவத்து மூதிக்கு கண்ணை காட்டுத சோலிதான்லா…” என்று மனதுக்குள் பினாத்தியபடி செல்வார்.

பயணக்கட்டுரைகள் பின்னர் அச்சிதழ்களில் வளர்ச்சி பெற்றன.  மேலே சொன்ன இரு வகைகளும் இரு மாதிரிகளாக ஆகின. முதல்வகையை மணியன் என்பவர் தமிழில் பிரபலப்படுத்தினார். இரண்டாவது வகை தொ.மு.பாஸ்கர தொண்டைமான் மற்றும் பரணீதரன் ஆகியோர் வழியாகப் பிரபலம் அடைந்தது.

முதல்வகை ஆச்சரியங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் நிறைந்தது. ”அலாஸ்காவிலே ஐஸ்கிரீம் செய்வதில்லை. முற்றத்தில் ஒரு டம்ளரில் சீனி போட்டு வைத்து விடுகிறார்கள். எடுத்து சாப்பிட வேஎண்டியதுதான்.” என்பது போன்ற வரலாற்றுத்தகவல்கள். ”அண்டார்டிகாவில் பெங்குயின்களைப் பழக்கி வீட்டு வேலைக்கு வைத்திருக்கிறார்களாம்” போன்ற ஆம்கள் ஆச்சரியத்தை அளிக்காமல் போகுமா என்ன. ‘வக்காலி ,இங்க பார்லே’ என்று கிராமத்தில் வியப்பொலிகள் கிளம்பும்.

உணவும் உடையும் இவ்வகைக் கட்டுரைகளில் சிறப்பாகப் பேசப்படவேண்டும். அதாவது உணவின் பெருக்கமும் உடையின் சுருக்கமும். ”சிங்கப்பூரில் நண்டின் அருகே ஒரு மீனைக் கொண்டு செல்கிரார்கள். நண்டு மீனைத் தன் கால்களால்  பிடித்ததும் இரண்டையும் சேர்த்து அவ்வாறே பொரித்துவிடுகிறார்கள். இது நண்டுமீன் என்று அங்கே பிரபலம்” என்றவகை குறிப்பு ஒருபக்கம் என்றால் ”கஜகஸ்தானில் ஒரே ஒரு மாமிக்கு மட்டும்தான் தயிர்சாதம்செய்யத் தெரியும். அந்தமாமியை என் நண்பர் டெலெக்சில் தொடர்புகொண்டபோது அவர் தாஜிஸ்தானில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் காரில் கிளம்பி கஜகஸ்தானுக்குச் சென்றபோது சித்ராமாமி தயிர் சாதத்தைக் கிளறிக்கொன்டிருந்தார். மணம் மூக்கை நிறைத்தது. ஆ! களக்!” என்றவகை எழுத்துக்கு திருவல்லிக்கேணி- மயிலாப்பூர் -ஆழ்வார்பேட்டை வட்டாரங்களில் தனி மதிப்பு உண்டு.

பக்திச்சுற்றுலா என்பது இருவகை. பெரும்பாலான தமிழ்க் கோயில்கள் ஒரேவகையானவை என்பாதனால் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆகவே ”கோபுரத்தை தாண்டிச் சென்றதுமே கன்னிமூலை கணபதி அமர்ந்திருந்தார் .அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேராக செம்புக் காப்பு போடப்பட்ட கொடிமரத்துக்கு வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். கொடிமரத்துக்கு அப்பால் விரிந்ந்த  முகமண்டபம். அந்த மண்டபத்து சிலைகள் மிக அற்புதமானவை…”என எந்த கோயிலைப்பற்றியும் எழுதிவிடமுடியும்

எந்தக்கோயிலும் அர்ச்சகர் [பெயர்கூட அனேகமாக சாமா, சம்பு என்றுதான் இருக்கும்] கிட்டத்தட்ட ஒரே கதையைத்தான் சொல்வார். அனேகமாக ஏடாகூடம் நிறைந்த கதை. ”ஒருமுறை நாரதருக்கு முதுகில் நமைச்சல் ஏற்பட்டபோது இதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென அவர் பராசரரிடம் கேட்க ‘எந்த ஊரில் சிவபெருமான் நமைச்சல்தீர்த்தநாயகனாக அமர்ந்திருக்கிறாரோ அங்கே போய் அங்குள்ள வில்வமரத்தில் முதுகைத்தேய்த்தால் போதும் ‘ என்று சொல்ல அவர் இந்தத் தலத்துக்கு வந்தாராம். அதற்கேற்ப இங்கே வில்வத்தில் முள் இருந்ததை நாங்களே கண்ணால் பார்த்தோம். மேலும் அந்த வில்வமரத்தடி தேய்ந்து போயிருந்தது. ” போன்ற கதைள். கூடவே அல்லிக்கேணி அகன்றறியா அய்யர்கள் அப்பாவித்தனமாக ”இந்தத் தலத்தில் உள்ள யானைக்கு சிலசமயம் ஐந்தாவது கால் ஒன்று இருப்பதையும் கண்டோம்” என்று அற்புதப்படுவதும் உண்டு.

இரன்டாவது வகை எழுத்தில் சகஜமாக நடை ஒழுகுவதற்காக மாமாத்தனமான நகைச்சுவைகள் பரிமாறப்படுவதுண்டு. ”என்ன ஓய், கும்பகோணம் போனா கும்பம் கரைஞ்சிடும்கிறாளே நெஜம்மா?” என்றார் நண்பர். ’அதெப்டி சொல்றீர்’என்றேன் நான். ’அப்டித்தான் ஓய்…’ என்றார் அவர். ‘ எப்டி ,சொல்லுமேன்?’ என்றேன். அவர் ’எதைச் சொல்றது போங்கோ’ என்றார் ’சொல்லும் ஓய் , ரொம்ப பிகு பண்ணாதீம்’என்றேன். அவர் உடனே ஒருவாய் பாக்கைக் கடித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தார்…” என்று சம்பிரமமாக கட்டுரையை எடுப்பது பொதுவான வழக்கம்.

முதல்வகைக் கதைகள் சரசமாக அமைய ஒரு நண்பர் தேவை. இவர் அப்பாவியாக, குடிகாரராக, அல்லது அதிஜாக்ரதைக்காரராக இருப்பார். அப்படியானால் அவர் கண்டிப்பாக இல்லா ஆள்தான் என நாமே ஊகிக்கலாம். ”நண்பர் பாஸ்போர்ட்டை எடுத்துக் கடலிலே போடப்போனார். ”அடாடா ஏன்யா?” என்றோம். ”இங்கே பாஸ் தெ போர்ட் அன் தென் டு ஸீ என்று போட்டிருக்கிறதே ” என்றார்”. என்பது போன்ற நகைச்சுவைகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை., அதற்குரிய அம்பிகளை.’ ”ஏர்போர்ட்டிலே இறங்கியதுமே மாமா ”அமெரிக்கால்லாம் கம்யூனிச நாடா என்ன? எல்லா இடத்திலேயும் அரிவாள்னு எழுதி வச்சிருக்கே” என்றார். ”அய்யோ மாமா அது அரைவல் என்று சொன்னோம்” இந்தமாதிரி பல…

திடுக்கிடும் திருப்பங்கள்! ”அந்த ஏழடி உயரமான நீக்ரோ கருப்பர் எங்களை நோக்கி வந்தார். அவரது வருகையே ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. நான் சப்தநாடியும் ஒடுங்கிப்போனேன். தொடரும்” என்று முடித்து அடுத்த இதழிலே ”அந்தக் கறுப்பர் ஏன்னிடம் ”எக்ஸ்யூஸ் மி வேர் கேன் ஐ கெட் எ கப் ஆஃப் பீர்?” என்று கேட்டார். நாங்கள் பப்பை சுட்டிக்காட்டியதும் ”தேங்க் யூ பிரதர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்று முடிக்கும்போது ஒருவாரமாகக் கூச்செறிந்து நின்றா தலைமயிர் சமநிலைக்கு வருகிறது.

இந்தப் பயணக்கட்டுரைகள் இப்போது ஆழமான தத்துவ விசாரங்களுடன் தனிக்கட்டுரை தொடர் வடிவம் கொண்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டியாகவேண்டும். ”படுகாப்பூரில் தெருக்களில் அலைந்துகொன்டிருந்தபோது ஒரு யானையின் பிடரி எலும்பைக் கண்டடைந்தேன். அந்த எலும்பைத் தூக்கிக்கொண்டு தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது இந்த யானை எத்தனை பேரைத் தன் மத்தகத்தில் ஏற்றியிருக்கும் இப்போது இதன் மத்தகத்தை நான் ஏற்றிக்கொண்டு அலைகிறேனே என்று எண்ணிக் கண்கலங்கினேன்” என்று எழுதலாம். யானை எலும்பைக் கண்டு அந்த ஊரில் போக்குவரத்து ஸ்தம்பிக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை

பொதுவாக இவ்வகைக் கட்டுரைகளில் சற்றே ஞானக்கசிவு இருந்துகொண்டிருக்கும். ”ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் பார்த்தபோது இந்த ஆறு இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறாது இன்னும் எத்தனை காலம் ஓடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறுபோலத்தான் நாமும் ஓடிக்கொன்டிருக்கிறோம் இல்லையா?” என்று முடிக்கும் போது கவித்துவம் உருவாகிறது.

இதேபோல செல்லுமிடங்களில் இருந்து எதையாவது எடுத்துக்கொண்டு வரலாம். “இமையமலையில் இருந்து ஒரு சிறு துண்டு கல்லை எடுத்துக்கொண்டு வந்தேன். இமையத்தை கொண்டுவர முடியாது அல்லவா?” [கொண்டுவந்தால்கூட ஷோ கேஸ் அந்த அளவுக்கு பெரிதாகச் செய்யமுடியாது அல்லவா?]

பயணக்கட்டுரைகள் வந்துகொண்டுதான் இருக்கும். இதில் ஆகப்பெரிய சிக்கல் என்னவென்றால் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆன்மீக எழுத்தாளர்கள் பயணம்செய்யும்போது கூடவே அவரை அழைத்தவர்களும் வந்து கொண்டே இருப்பதுதான். இதனால் கட்டுரைகளில் சுவைக்காக பெருங்காயம் வெந்தயம் போன்றவை சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த வேண்டாத சாட்சிகளைக் களைய பதிப்பகத்தார் ஆவன செய்தால் ஆன்மீக பயணக்கட்டுரை இலக்கியம் மேலும் தழைக்க வாய்ப்புள்ளது.

[ மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 25, 2010]

தொடர்புடைய பதிவுகள்

ஒரு மலைக்கிராமம்
கடிதங்கள்
விளையாடல்
தேசம்
பயணம்- கடிதம்
கனடா – அமெரிக்கா பயணம்
இமயச்சாரல் – 21
இமயச்சாரல் – 20
இமயச்சாரல் – 19
இமயச்சாரல் – 18
இமயச்சாரல் – 17
இமயச்சாரல் – 16
இமயச்சாரல் – 15
இமயச்சாரல் – 14
இமயச்சாரல் – 13
இமயச்சாரல் – 12
இமயச்சாரல் – 11
இமயச்சாரல் – 10
இமயச்சாரல் – 9
இமயச்சாரல் – 8

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2017 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.