Jeyamohan's Blog, page 1681
February 4, 2017
கவிதை மொழியாக்கம்
From the lilys white funnel
Day trickles out.
Ann Atwood.
இனிய ஜெயம்,
மிஸ்டர் இங்கிலிஷ், வசந்த் போட்டு விளையாடும் மேத்தமேட்டிக்ஸ் இரண்டும் கைவசப்படாமல் பத்தாம் வகுப்பில் பல்பு வாங்கிய எனது கடந்த காலத்தை எண்ணி நான் கலங்காத நாளே இல்லை. கனவில் கூட தேர்வுக்கூடத்தில் கைக்கு கிடைக்கும் கணக்கு கேள்வித்தாளைக் கண்டு திடுக்கிட்டு உறக்கத்திலிருந்து பதறி எழுந்து இருக்கிறேன். நீஈஈஈண்ட வருடம் கழித்து ,என்னை தகுதிப் படுத்திக்கொண்டு [அப்படி நம்பினேன்] மீண்டும் அந்த தேர்வுகளை எழுத சென்றேன் . [பய புள்ளைகளுக்கு அது என்ன அப்புடி களுக்குன்னு ஒரு சிரிப்பு?] கணக்கில் அதே பதினாறும், ஆங்கிலத்தில் அதே முப்பத்திரண்டும் கிட்டியது. நமது கல்வி அமைப்பின் அடிப்படையிலேயே கோளாறு நான் என்ன செய்ய முடியும், அது போக கணித மேதை ராமானுஜன் கணிதம் தவிர்த்து என்னைப்போலவே பீட்டரில் வீக். ‘மா’ மனிதர்களுக்கு இதெல்லாம் சகஜம் என சமாதானம் ஆனேன். ஒரே ஆறுதல் அந்த தீக்கனவுகள் அதன் பிறகு வரவே இல்லை . [கெடு வாய்ப்பாக அக் கனவுகளில் கேள்வித்தாளை அளிக்கும் அழகான டீச்சர்களும் மறைந்துபோனார்கள் ] நிற்க.
பின் இலக்கியத்துக்கு வந்து சேர்ந்த பிறகு , ஆங்கிலம் அறியாக் கபோதி என்ற அதே கழிவிரக்கம் என்னை வாட்டி வதைத்தது [ அந்த ஆங்கிலம் மட்டும் எனக்கு தெரிந்திருந்தால் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் என் மேல் விழுந்த பல மனித வெடிகுண்டு தாக்குதல்களை தவிர்த்திருப்பேன்] கொஞ்சம் கொஞ்சமாக சப் டைட்டில் வாசிக்க கற்று [அதற்க்கே ஆக்ஸ்போர்டு ] ஹோலி ஷிட் எனும் ஏச்சை கூட ,புனித மலமே என மொழிபெயர்த்து உள்வாங்கும் வண்ணம் வளர்ந்தேன்.
அந்த அபாரமான ஆங்கிலப் புலமை கொண்டு அவ்வப்போது எதையாவது தேடும்போது எதையாவது கண்டடைவேன். அப்படிக் கண்டடைந்ததே மேற்கண்ட கவிதை.
இறுதியாக ,
லில்லிமலர் வெண்கூம்பிலிருந்து
பகல் கசிந்தது வெளியே…
என மொழிபெயர்த்தேன். சிலிர்க்கவைக்கும் கவிதை. ஒரு கவிமனம் இரவெல்லாம் விழித்திருந்து ,இரவின் மாண்பில் கரைந்து , வெண் மலரின் , பரிசுத்தத்தின் சன்னதியில் சன்னதியில் வந்து நிற்கிறது, இறுதியாக , லில்லி மலர் வெண் கூம்பிலிருந்து பகல் கசிகிறது வெளியே. கசிகிறது பகல். அதாவது மெல்ல மெல்ல புலருகிறது. இனி அவனுக்கு இந்த பகலின் வெளிச்சம், [ அந்த மலரின் வாசம் போல,] அந்த வெண்மலர் கசியவிட்ட அதன் வெண்மையன்றி பிறிதில்லை.
சட்டென ” கருக்கலில் ஒளிரும் வெண்ணிற மலர்கள்” என்ற தேவதேவனின் வரிகள் உள்ளே எழுந்தது. ஆம் இந்த பகல் வேறு எப்படி அடையும்? இந்தப் பகல் அனைத்தையும் உறுஞ்சி, அதன் இறுதியில் கருக்கலில் ஒளிர்ந்து அடங்குகிறது இங்கொரு வெண்மலர்.
நேற்றெல்லாம் இக் கவிதையின் கிறுகிறுப்பிலேயே கிடந்தேன். அந்த ஆங்கிலக் கவிதையை கூகிள் கன்னி வசம் அளித்து, அது போன்ற பிறவற்றை தேடித் குலாவினேன். அவள் திருட்டு சாவி ஒன்றினை அளித்தாள். நைசாக உள்ளே குத்தித்தேன்.
அபிலாஷ் சந்திரன் சமகால ஹைக்கூ சிலவற்றை மொழிபெயர்த்து அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். சிலது பொய்க்கூ.
BERNARD LIONEL EINBOND (வட அமெரிக்கா)
பெர்டர்டு லியோனல் எயின்போண்டு
தவளைக் குளம் …
உள்ளே ஒரு இலை விழும்
சத்தமின்றி
Frog pond …
A leaf falls in
Without a sound
– போல. இக் கவிதையின் உள்ளடக்கம் துவைத்து அள்ளி காயவைக்கப்பட்டு விட்டது. அது போக இக் கவிதையை எனோ எதிர்காலத்தில் வைத்து மொழி பெயர்த்து இருக்கிறார்.
தவளைக் குளம்
ஓரிலை விழுந்தது உள்ளே
ஒலியேதும் இன்றி.
இறந்தகாலம் தானே சரி? குழப்பமாக இருந்தது.
நான் சுட்டிய கவிதையையும் அபிலாஷ் மொழிபெயர்த்திருக்கிறார் இப்படி,
ஆன் ஆட்வுட்
இறுதியாய்
லில்லியின் வெண்குழலில் இருந்து
பகல் வெளிக்கசியும்
வெள்ளை லில்லி என கூகிள் கன்னியை சும்மா கேட்டாலே போதும். அம் மலரின் விதவிதமான வடிவழகை நம்முன் பரப்புவாள். அம் மலரின் வடிவழகுக்கு சந்திரனின் மொழிபெயர்ப்பு நியாயம் சேர்க்கவில்லை.
Touched by the moon
Pines
Heavy with snow.
நிலவு தீண்டிய
தேவதாரு மரம்
பனியில் கனத்தது.
[அபிலாஷ்]
இது மற்றொரு கவிதை.
தீண்டப்பட்டது நிலவால்
பைன்
கனத்தது பனியால் .
இது எனது மொழியாக்கம். எதுகை மோனைக்கும், கவித்துவத்துக்கும் அந்த கவிதைக்கு உள்ளேயே இடம் இருக்கையில் ஒய் திஸ் தட்டை மொழிபெயர்ப்பு?
Holding
The shape of the wind
The frozen pines
[lesley einer]
புயலை
திடமாக்கும்
உறைந்த ஊசியிலை மரங்கள்.
[அபிலாஷ்]
உறைந்த பைன் மரங்களின்
பிடியில்
காற்றின் வடிவம்.
[எனது மொழியாக்கம்] .
இதுதானே கவிதை? சரியான மொழியாக்கமும் தானே? இப்படி மொழிபெயர்த்தால் யாரேனும் வந்து தலையில் கொட்டுவார்களா?
எனக்கு பிடித்த வண்ணம் மொழிபெயர்த்து வாசிக்க நிறைய ஹைக்கூக்கள் இந்த தளத்தில் இருக்கிறது.
இனிய ஜெயம்,
விடப்போவதில்லை ஒரு நாள் நானும் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பேன். ஒரு நான்கு பேரையெனும் கதறவைத்துவிட்டே ஓய்வேன்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
நல்ல முயற்சி. இதன்மூலம் உங்களிருவருக்கும் நல்ல சண்டை ஒன்று நடந்தால் கவிதை அனுபவம் பூர்ணமாகும். Sublime வரவழைப்பதற்கு இலக்கியச் சண்டை ஒரு நல்ல வழிமுறை. நல்ல குடுமிப்பிடிகள் நடந்து நாளாகிறது
தனிப்பட்ட முறையில் கவிதை மொழியாக்கம் என்பது கவிதை வாசிப்புதான். அழகிய புகைப்படம் எடுப்பதுபோல. புகைப்படமும் அழகிதான். ஆனால் ஒரு கணம், ஒருகோணம், ஒர் ஒளியில்…கவிதைகளுக்குச் சொந்தமாக மொழியாக்கம் ஒன்று செய்து வைத்துக்கொள்வது என் வழக்கம். தமிழ்க்கவிதைகளுக்கு, திருக்குறளுக்கேகூட, எனக்கென்று மொழியாக்கம் கைவசம் உண்டு
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
5. இனிதினிது
குரங்குகள்தான் முதலில் அறிவித்தன. அவற்றின் ஓசை நூறு முழவுகளின் தாளம்போல கேட்டது. நகுலன் அதைக்கேட்டு ஒருகணம் திகைத்து உடனே புரிந்துகொண்டு எழுந்துசென்று குடில்முகப்பில் நின்று “வந்துவிட்டார்!” என்று கூவினான். அவன் கைகள் பதறின. என்ன செய்வதென்று அறியாமல் “வந்துவிட்டார்” என்று கூவியபடி அடுமனை நோக்கி ஓடி வழியிலேயே நின்று திரும்பி ஓடிவந்து கயிறேணியைத் தவிர்த்து கழுக்கோலில் தொங்கி கீழே பாய்ந்து வாயில்படல் நோக்கி ஓடி அதைத் திறந்தான். உடனே அதை மூடி, ஏன் அதைச்செய்கிறோம் என வியந்து மீண்டும் திறந்து காட்டுக்குள் ஓடினான்.
சகதேவன் உள்ளறையிலிருந்து கையில் ஒரு சிறு கோடரியுடன் ஓடிவந்து குடில் முகப்பில் நின்று “நெடுந்தொலைவில் வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான். கோடரியை கொக்கியில் மாட்டிவிட்டு அறையிலிருந்து எழுந்து வந்து நின்ற தருமனிடம் “வந்துசேர ஒருநாழிகையாவது ஆகும்” என்றான். “இவன் எங்கே?” என்றார் தருமன் புருவங்களைச் சுளித்தபடி. “யார்?” என்றான் சகதேவன். “மந்தன்தான்…” என்றார் தருமன். “காலையில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் சென்றார்” என்றான் சகதேவன். “அவனிடம் இருநாட்கள் எங்கும் செல்லாமல் இங்கே இருக்கும்படி சொல்லியிருந்தேனே?” என்றார் தருமன்.
சகதேவன் நூலேணி வழியாக இறங்கிச்செல்வதை ஆர்வமில்லாமல் நோக்கியபடி நின்றபின் தருமன் பெருமூச்சுவிட்டார். பின் நிலையழிந்து அறைக்குள் சென்று அங்கே அமரமுடியாமல் மீண்டும் வந்து குடில் விளிம்பில் கைகளைக் கட்டியபடி நின்று வெளியே நோக்கினார். மூங்கில் நடைபாதை முனக அடுமனையிலிருந்து ஓடிவந்த திரௌபதி “வந்துவிட்டாரா?” என்றாள். “வருகிறான் என்கிறார்கள்” என தருமன் திரும்பிநோக்காமலேயே சொன்னார். “நடந்தா வருகிறார்?” என்றாள் திரௌபதி.
தருமன் திரும்பி நோக்கி ஏளனத்துடன் “இல்லை, தேர்யானைபுரவிகாலாள் படைசூழ வருகிறான். அவன் எங்கு சென்றான் என நினைக்கிறாய்?” என்றார். திரௌபதி “அவர் அரசணிக்கோலத்தில் வருவதாக நான் கனவுகண்டேன்” என்றாள். தருமன் “கனவு நன்று. இந்தக்காட்டில் வேறேது உள்ளது?” என்றபடி திரும்பிக்கொண்டார். அவள் ஆடைகள் மந்தணமூச்சு போல ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டார். அவள் மூச்சொலி உடன் இணைந்தது. கையிலணிந்திருந்த சங்குவளையல்கள் அடிக்கடி குலுங்கின. அவளைத் திரும்பிப்பார்க்க விழைவு எழுந்தாலும் அடக்கிக்கொண்டார். அது முறையல்ல, ஒருவகை அத்துமீறல் எனத் தோன்றியது.
முண்டன் பின்னால் வந்து நின்று “அடுமனையில் அத்தனை சமையலும் பாதியில் நிற்கிறது. இங்கே என்ன செய்கிறீர்கள், அரசி?” என்றான். “போ, நீயே சமைத்துவை. அள்ளிக்குழைத்து தின்கிறாய் அல்லவா?” என்றாள் திரௌபதி. “நான் என்ன அரசியா சமைப்பதற்கு?” என்றபடி அவன் உள்ளே சென்றான். “நானெல்லாம் சந்தையில் நின்றாலே பொன்னாகக் கொட்டும். வணிகர்கள் சிரிப்புக்கெல்லாம் பணம் கொடுப்பார்கள்” என்றான்.
“ஆமாம், எழுத்துக்கு லட்சம் அளித்தார்கள்… பேசாமல் போ” என்று அவள் சொன்னாள். “வணிகர்கள் பொய்யாகச் சிரித்துச் சிரித்து முகமே சிரிப்புக்கோடுகளுடன் இருக்கும். நான் என்ன சொன்னாலும் அறியாமல் சிரிப்பு வந்துவிடும் அவர்களுக்கு” என்றான் முண்டன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் என ஒருமுறை சொன்னேன். நூறுபேர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.” திரௌபதி “போகிறாயா இல்லையா?” என்றாள். “நான் சென்று நெடுநேரமாகிறது” என்றான் முண்டன்.
“நல்ல துணை உனக்கு” என்றார் தருமன். “உண்மையிலேயே நல்ல துணை. ஓர் இனிய வீட்டுவிலங்கு போல.” தருமன் “அவ்வப்போது பிராண்டும்” என்றார். “அதுவும் தேவையாக உள்ளது…” என்றாள் திரௌபதி. கீழே நின்ற நகுலன் “சரிவில் ஏறிவருகிறார். கோமதியின் கரையில் குரங்குகளின் ஒலிகள் கேட்கின்றன” என்றான். சகதேவன் “சென்று அழைத்து வருவோம்” என்றான். நகுலன் “நான் செல்கிறேன். நீ இங்கு இரு… அவர் வரும்போது மூத்தவருடன் நில்” என்றபடி வெளியே சென்றான்.
“நான் அவனை ஒவ்வொருநாளும் எண்ணிக்கொண்டிருந்தேன்… அவன் வருவதை ஆயிரம் முறை நெஞ்சில் நிகழ்த்திநோக்கிவிட்டேன். ஆகவேதான்போலும் அவன் நேரில்வருகையில் அதுவும் ஓர் உளநாடகமாக ஆகி இயல்பாகத் தெரிகிறது” என்றார் தருமன். அவள் ஒன்றும் சொல்லாமல் தூணைப்பற்றியபடி நோக்கி நின்றிருந்தாள். அவளை விழி சரித்து நோக்கி “இந்நாட்களில் நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றார் தருமன். “அங்கிருக்கையிலும் அவர் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தாவது திரும்பிவருவது இனிதாகவே இருந்தது” என அவள் சொன்னாள்.
அவள் கன்னங்களில் முற்றத்தின் ஒளி மின்னுவதை தருமன் நோக்கினார். விழிகள் பெரிய நீர்த்துளிகள் போல நீர்மைகொண்டிருந்தன. “ஆனால் இங்கிருக்கையில் எளிய பெண்ணாக ஆகிவிட்டதுபோலத் தோன்றுகிறாய்” என்றார். “இக்காட்டில் அப்படி ஆகாமலிருக்க முடியுமா என்ன?” என்றாள் திரௌபதி. “ஆம், லோமசர் இங்கு வந்தபோது அதை என்னிடம் சொன்னார். காடு ஒவ்வொன்றாக உதிர்க்கவேண்டிய இடம் என்று.” அவர் பெருமூச்சுவிட்டு “இங்கிருந்து மீண்டும் நகர்களுக்குச் செல்ல என்னால் இயலுமா என்றே ஐயமாக இருக்கிறது. நேற்றெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருந்தது அன்னையை மட்டும் இங்கு கொண்டுவந்துவிடலாம் என்று. இதுவே நம் வாழ்வென நிறையலாகும் என தோன்றியது” என்றார்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரத்தில் தருமன் மெல்ல உடல்நெடுக்கு தொய்ந்து “நான் சென்று எதையாவது படிக்கிறேன். இங்கு வெறுமனே நிற்பது சோர்வளிக்கிறது” என்று அறைக்குள் சென்றார். அவர் செல்வதை திரும்பி நோக்கி வெறுமனே புன்னகைத்தபின் அவள் காட்டுப்பாதையை நோக்கியபடி ஆடையை விரலால் சுழற்றிக்கொண்டு தூணில் உடல்சாய்த்து நின்றாள். தருமன் உள்ளே சென்று பீடத்திலமர்ந்து ஒரு சுவடியை எடுத்து விழியோட்டினார். உள்ளம் எழுத்துக்களில் நிலைக்கவில்லை என உணர்ந்ததும் பிறிதொரு சுவடியை எடுத்து அதில் எழுதத் தொடங்கினார். எழுத்து அவரை ஈர்த்துக்கொண்டது. ஏட்டை எழுத்தாணி கீறிச்செல்லும் ஒலி தெளிவாகக் கேட்டது.
பலாப்பழம் விழுவதுபோல கிளைகளை ஊடுருவியபடி ஒரு குரங்கு பாய்ந்து வந்து திரௌபதி முன் விழுந்து எழுந்து இரு கைகளாலும் விலாவை வருடியபடி ஹுஹுஹு என்றது. எம்பி எம்பி குதித்து தன்னைத்தானே சுற்றி வாலைத் தூக்கி வளைத்தபடி “ர்ர்ர்ர்” என்றது. “வருகிறாரா? பார்த்தாயா?” என்றாள் திரௌபதி உவகைப்பதற்றத்துடன். மேலும் குரங்குகள் வந்து அவள் முன் நின்று எம்பி எம்பி கூச்சலிட்டன. சற்றுநேரத்தில் முற்றம் முழுக்க குரங்குகள் நிறைந்தன. மரக்கிளைகளில் அவற்றின் ஓசையும் அசைவும் கொந்தளித்தன. அவள் உதடுகளை அழுத்தியபடி மூச்சடக்கி நோக்கி நின்றாள்.
தொலைவில் அசைவு தெரிந்தது. திரும்பி “வருகிறார்கள்” என்றாள். “நன்று” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். “தெரிகிறார்கள்” என்று அவள் மீண்டும் சொன்னாள். “வரட்டும்….” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதினார். அவள் நகுலனைத்தான் முதலில் கண்டாள். அவன் அணிந்திருந்த மான்தோல் மேலாடையின் மஞ்சள் நிறம் பச்சையிலைகள் நடுவே தெரிந்து தெரிந்து மறைந்தது. அவள் திரும்பி தருமனிடம் “வாருங்கள், தெரிகிறார்” என்றாள். பின் இயல்பாகத் திரும்பியபோது அவனை கண்டுவிட்டாள். “இங்கேதானே வருகிறான்?” என தருமன் சொன்னதை அவள் கேட்கவில்லை.
அவர்கள் நடைவழியில் தோன்றியபோது திரௌபதி உரக்க “வந்துவிட்டார்கள்” என்று கூவியபடி மெல்ல குதித்தாள். ஆடைநெகிழ ஓடி தொங்குபடிகளில் இறங்கி தோட்டத்தினூடாக விரைந்தாள். வாயிலில் நின்றிருந்த சகதேவனும் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். அர்ஜுனன் மெலிந்து களைத்து நரைகலந்த நீண்ட தாடியும் குடுமியாகக் கட்டிவைத்த குழலுமாக இளமுனிவன் போலிருந்தான். அவள் வேலிமரத்தைப்பற்றியபடி நின்றாள். சிரிப்பும் அழுகையுமாக உடல் ததும்பியது. நகுலனின் கைகளைக் கோத்து பற்றியிருந்த அர்ஜுனன் “நலமா, இளையோனே?” என்று சகதேவனிடம் கேட்டான். சகதேவன் வெறுமனே விம்மினான். அருகே வந்த அர்ஜுனன் அவன் தோளைத் தொட்டதும் தளர்ந்து அவன் தோளில் முகம்சேர்த்துகொண்டான். அர்ஜுனன் அவன் இடைவளைத்து அணைத்து மெல்ல தோளில் தட்டியபடி திரௌபதியை நோக்கினான்.
நகுலன் “தொலைவில் வருவதைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. பிற எவருக்குமில்லை இந்த நடை” என்றான். இரு தம்பியரையும் இரு கைகளால் அணைத்தபடி அர்ஜுனன் அணுகி அவளை நோக்கி புன்னகைத்தான். விழியொளிரும் அப்புன்னகையின் வழியாக அவன் முதன்முதலாக அவள் கண்ட அந்த இளைஞனாக மாறினான். “நலமா, தேவி?” என்ற குரலில் மேலும் இளமை இருந்தது. “நலம்” என அவள் சொன்னாள். ஆனால் குரல் எழவில்லை. விழிகளில் நீர் நிறைய தலைகுனிந்தாள். “மூத்தவர் மேலே இருக்கிறாரா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று அவள் தலையை அசைத்தாள்.
அவன் அவளைக் கடந்து செல்ல அவள் நகுலனை நோக்கி புன்னகை செய்தாள். சகதேவன் “இரண்டாமவர் காட்டுக்குள் சென்றார். நீங்கள் வரும் செய்தி அவருக்கு சென்றிருக்கும். இக்காடு முழுக்க அவரது குடிகளால்தான் ஆளப்படுகிறது” என்றான். அர்ஜுனன் கயிற்றேணியில் ஏறினான். அவனத் தொடர்ந்து ஏறியபடி நகுலன் “மூன்றாண்டுகளாக இங்கு வாழ்கிறோம், மூத்தவரே. மூத்தவருக்கு இவ்விடம் சலித்துவிட்டது. நாங்கள் இங்கு இருந்தது இவ்விடம் முனிவரனைவருக்கும் தெரியும் என்பதனால்தான். எந்த குருநிலையில் கேட்டாலும் அவர்கள் உங்களை இங்கே ஆற்றுப்படுத்திவிடுவார்கள் என எண்ணினோம்” என்றான்.
நகுலன் சற்றே பின்தங்கி நின்ற திரௌபதியிடம் “அருகே செல்வதுதானே?” என்றான். அவள் நெற்றியும் மேலுதடும் வியர்த்திருந்தன. கழுத்துக்குழியில் மூச்சு துடித்தது. “விழிகளும் குரலும் மட்டுமே அறிந்தவைபோலுள்ளன” என்றாள் அவள். “அவைதான் பார்த்தர். வில்லறிந்த கைகளும்” என்றான் நகுலன். அவள் “ஆம்” என மூச்சுத்திணறுவதுபோல சொன்னாள். அவன் அண்ணாந்து நோக்கி “மூத்தவர் அறைக்குள்ளேயே இருக்கிறார் போலும்” என்றான். “ஆம், அவர் தன்னை காட்டிக்கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறார்” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர்…” என்று நகுலன் சொல்ல “அதை அவர் கடந்து நீணாளாகிறது. இன்று விண்விளிம்பில் மண்ணில் நின்றிருக்கும் மூதாதை மட்டுமே” என்றாள்.
அவர்கள் மேலே ஏறிச்சென்றபோது அர்ஜுனன் தன் தோல்மூட்டையையும் அம்புத்தூளியையும் வில்லையும் வைத்துவிட்டு கைகளைக்கூப்பியபடி தருமனின் அறைக்குள் நுழைவதைக் கண்டார்கள். உடன் சென்ற சகதேவன் “மூத்தவரே” என்று தருமனை அழைத்தான். கையில் எழுத்தாணியுடன் சுவடியை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த தருமனின் தோளில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டது. அர்ஜுனன் ஓசையில்லாது நடந்து உள்ளே சென்று குனிந்து தமையனின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் தலைதிருப்பாமல் இடக்கையை அவன் தலைமேல் வைத்து “நீள்வாழ்வும் புகழும் நெடுங்குலமும் திகழ்க!” என்றார். வலக்கையில் எழுத்தாணியை கட்டாரி போல பற்றியிருந்தார். கழுத்தில் நரம்பு ஒன்று இறுகி அசைந்தது.
அர்ஜுனன் மெல்லிய மூச்சொன்றை விட்டபின் கைகூப்பி இன்னொருமுறை வணங்கிவிட்டு பின்காலடி எடுத்துவைத்து வெளியே வந்தான். தருமன் மெல்ல விசும்பிய ஒலி அனைவரையும் கூர்வாள்முனை என தொட்டது. நகுலன் மெல்லிய சிலிர்ப்பை அடைந்து கைநீட்டி திரௌபதியின் தோளை தொட்டான். அவள் நோக்கியபோது ஏட்டுச்சுவடிகளின்மேல் விழிநீர்த்துளிகள் உதிர்வதைக் கண்டாள். அந்த மெல்லிய ஒலிகூட அனைவருக்கும் கேட்டது. தருமன் உதடுகளை மடித்து அழுகையை அடக்கிக்கொண்டார். நகுலன் ஏதோ சொல்லமுயல திரௌபதி வேண்டாம் என தலையசைத்துக் காட்டி விழிகளால் பின்னுக்கு அழைத்தாள்.
அவர்கள் நுனிக்கால்களால் நடந்து பேரறைக்கு வந்தனர். அங்கே இரு குரங்குகள் உள்ளே வந்து அர்ஜுனனின் மூட்டையைப்பிரித்து ஆராய்ந்துகொண்டிருந்தன. உள்ளே இரு பழைய மரவுரிகளும் ஒரு சுரைநீர்க்குடுவையும் மட்டும் இருந்தன. ஒருகுரங்கு மரவுரியை நீட்டி நோக்கி கீழுதட்டைப் பிதுக்க இன்னொன்று ஒழிந்த குடுவையை வாயில் கவிழ்த்து நீர் அருந்துவதுபோல நடித்தது. அப்பால் ஒரு பெரிய குரங்கு ‘பாவம், சிறுவர்கள்’ என்னும் முகக்குறியுடன் அமர்ந்து தன் வால்நுனியை தானே பேன்பார்த்துக்கொண்டிருந்தது.
“மூத்தவரின் குலத்தார்” என்று சகதேவன் சிரித்தபடி சொன்னான். “இங்கே அவர் ஒரு பேரரசை உருவாக்கிவிடுவார் என்றே அஞ்சுகிறார்கள் அரசர்கள்.” அர்ஜுனன் புன்னகைத்து “விலங்குகளில் குரங்குகளிடமிருக்கும் அச்சமின்மை வியப்பூட்டுவது. அறிவின் துணிவு அது” என்றான். குரங்கு அவனை நோக்கி குடுவையை நீட்டியது. “வேண்டாம்” என்றான் அர்ஜுனன். அது குடுவையை தலைமேல் கவிழ்த்துக்கொண்டு எழுந்து நின்றது. “அறிவிலிருந்து கேலியும் ஐயமும் எழுகின்றன” என்றான் நகுலன். சகதேவன் “குரங்குகளின் நினைவாற்றலும் வஞ்சமும் அச்சமூட்டுபவை” என்றான்.
திரௌபதி “இன்னீர் அருந்துகிறீர்களா?” என்றாள். அவள் தொண்டை சற்று அடைத்தது போலிருந்தது. “ஆம்” என்றான் அவன். அவள் ஆடையைச் செருகியபடி திரும்ப “இங்கு அடுமனைச்சேடியர் இல்லையா?” என்றான். “இல்லை. இங்கு நாங்கள் மட்டிலுமே” என்றான் சகதேவன். “அதனால்தான் தேவி மாறிவிட்டாளா?” என்று அர்ஜுனன் சிரித்தான். திரௌபதி “உண்மையிலேயே சமைப்பதும் விளம்புவதும் உள்ளத்தை மாற்றிவிடுகின்றன” என்றாள். அச்சிரிப்பினூடாக அவள் இயல்பானாள். “நீங்கள் விழைவதை எல்லாம் சமைக்கிறேன். என் கைச்சுவை அரிது என்கிறார்கள் முனிவர்” என்றாள். அர்ஜுனன் “ஆம், உண்பதற்காகவே வந்துள்ளேன்” என்றான். அவள் சட்டென்று நாணி முகம்சிவக்க “நன்று” என உள்ளே சென்றாள். அர்ஜுனன் முகத்திலும் அந்நாணத்தின் எதிரொளி இருந்தது. சகதேவனும் நகுலனும் அவன் முகத்தை நோக்குவதை தவிர்த்தனர்.
முண்டன் வந்து வாயிலில் நின்று தலைவணங்கி “நான் முண்டன். இங்கு வளர்க்கப்படுகிறேன்” என்றான். அர்ஜுனன் சிரித்துவிட்டான். “எதன்பொருட்டு?” என்றான். “வளர்ப்பவர்களின் ஆணவத்தின் பொருட்டுத்தான். எல்லா வளர்ப்புவிலங்குகளையும்போல. விஜயரே, உங்களுக்கு இன்னீரும் சுட்டகிழங்கும் சித்தமாக உள்ளது. உச்சிப்பொழுதுக்கு ஊனுணவு சமைக்கவேண்டும்… அதற்குமுன் பெருவயிறர் வருவாரா என உறுதிசெய்யவேண்டும்” என்றான்.
“இவன் அடுமனையாளனா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. அடிப்படையில் நான் பகடிக்கலைஞன். சமையலில் மட்டும்தான் பகடிக்கு இடமே இல்லை.” அர்ஜுனன் “வில்வித்தையில் உள்ளதோ?” என்றான். “மூத்த அரசர் அம்புவிடுவது வேறென்ன?” என்றான் முண்டன். “அய்யோ” என்றான் அர்ஜுனன் பதறி திரும்பி நோக்கியபடி. “தேன் கலந்த பழக்கூழ் இனிது. நான் சற்று முன்னர்தான் முதற்சுவை நோக்கினேன்” என்றபின் அவன் திரும்பிச்சென்றான்.
அர்ஜுனன் “எளியவன் அல்ல, ஆனால் நேர்மையானவன்” என்றான். “ஆம், அதை நானும் கணித்தேன்” என்றான் சகதேவன். மூங்கில்கூடையை கவிழ்த்திட்டு அர்ஜுனன் அமர்ந்தான். அவன் அருகே நகுலனும் சகதேவனும் அமர திரௌபதி அருகே சுவரில் சாய்ந்து நின்றாள். “அனைவருமே மாறிவிட்டிருக்கிறீர்கள். தோற்றத்தில் மட்டுமல்ல. உள்ளேயும்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் மாறிவிட்டிருக்கிறீர்கள். அதைத்தான் பார்க்கிறீர்கள்” என்று நகுலன் சொன்னான்.
திரௌபதி உள்ளிருந்து கனித்தாலத்துடன் வந்து அவனருகே வைத்தாள். அர்ஜுனன் “தேவி நூறு பெயர்மைந்தர்களின் பேரன்னைபோல கனிந்திருக்கிறாள்” என்றான். திரௌபதி கண்கள் பொங்க சிரித்து “குருகுலத்தவரின் குருதியையும் சேர்த்தால் நூறென்ன, ஆயிரங்கள் கூட அமையும்” என்றாள். முண்டன் இருகைகளிலும் இன்னீரும் அப்பத்தட்டுமாக ஓடி வந்தான். அவ்விரைவிலேயே இருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “நெடுந்தொலைவு சென்றுவிட்டேன். மீண்டு வரவேண்டியிருந்தது” என்றான். அவன் கையிலிருந்தவை துளியும் சிந்தவில்லை.
அர்ஜுனன் “நீ நிகருடல் திறனுடையவன், ஒப்புகிறேன்” என்றான். “திறன் வளர்த்து ஒருநாள் உங்கள் அம்பொன்றை கையால் பற்றுவேன்” என்றான் முண்டன். “சற்றுமுன் நான் சென்ற தொலைவில் ஒரு மலைவேடன் உங்கள் அம்புகளை கையால் பற்றுவதைக் கண்டேன்.” அதை அவன் உள்ளே சென்றபடி சொன்னதனால் அர்ஜுனன் கேட்கவில்லை. அவன் தேன்பழநீரை அருந்தியபின் கிழங்கை உண்ணத் தொடங்கினான். முண்டன் மீண்டும் பலமுறை சுழன்று வந்து அவர்கள் முன் தேன்பழநீர் குடுவையையும் குவளைகளையும் வைத்தான்.
திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”
“கொழுப்பதற்கு இங்கு நிறைய நாட்கள் உள்ளன, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், இவள் இப்போது நன்கு சமைக்கிறாள்” என்று தருமன் சொன்னார். முகத்தை கடுமையாக வைத்துக்கொள்ளும்பொருட்டு பற்களைக் கடித்து வாயை இறுக்கியிருந்தார். “நீ கற்றவற்றில் சிலவற்றை இவர்களுக்கு சொல்லிக்கொடு. இங்கே தோட்டக்காரர்களாகவே ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் “ஆணை” என்று சொல்லி நகுலனை நோக்கி சற்றே புன்னகைத்தான். அவர் உடல் விழியாகி அவனை பார்ப்பதுபோலிருந்தது. நோக்கு வேறெங்கோ இருந்தது. காற்று செடிகளில் என அவர் வருகை அங்கிருந்த அனைவர் உடலிலும் நிலைமாறுபாட்டையும் மெல்லசைவையும் உருவாக்கியது.
“உன் தமையன் இன்னும் வரவில்லையா?” என்றார் தருமன் வெளியே நோக்கியபடி. “வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான் நகுலன். “எங்குசென்றான்? மூடன்! இங்கேயே இருக்கும்படி நான்குமுறை நானே சொன்னேன்” என்றபடி மேலும் ஏதோ சொல்லவந்தார். பின்பு “சரி சரி உண்ணுக!” என்றபின் மீண்டும் உள்ளே சென்றார். அவர்கள் இயல்புநிலைமீளும் அசைவுகள் ஏற்பட்டன.
முண்டன் வந்து “உரியநடிப்புகள் முடிந்துவிட்டன என்றால் இருவர் வந்து அடுமனையில் உதவவேண்டும். பெருவயிறருக்கு சமைக்க தனியாக என்னால் இயலாது” என்றான். நகுலன் “இவன் தலைகீழாகக் குதித்து. காலத்தின் ஏடுகளை புரட்டத்தெரிந்தவன். நீங்கள் வரவிருப்பதை சரியாகச் சொன்னான்” என்றான். “இப்போது சற்றுமுன் தலைகீழாகப் பாய்ந்து வந்தானே?” என்றான் அர்ஜுனன். “நான் பலநாட்களுக்கு முன்னால் சென்றுவிட்டிருந்தேன்” என்றான் முண்டன். “எங்கே? என்ன கண்டாய்?” என்றான் அர்ஜுனன். “விஜயரின் வில்லுக்கு வேலை வந்துவிட்டிருப்பதைக் கண்டேன்” என்றான் முண்டன் கைதூக்கி. “அம்புகள் பறக்கும் ஒரு பெரும்போர்!” என்று கூவினான்.
அவன் குரல் மறையும்படி தடதடவென கூரைமேல் குரங்குகள் விழும் ஓசை கேட்டது. தருமன் “இந்த இல்லத்தையே ஒருநாள் இழுத்து கீழே போட்டுவிடுவான் அறிவிலி!” என்றார் தருமன் அறைக்குள். பீமன் உள்ளே வந்தபோது கூடவே ஏழெட்டுக் குரங்குகளும் வந்தன. அனைத்துமே கைகளில் தேன் தட்டுகளை வைத்திருந்தன. பீமன் பாளையால் முடையப்பட்ட பெருங்கூடையில் தேன்கூடுகளை நிறைத்து எடுத்துவந்திருந்தான். அவன் உடலெங்கும் தேன் வழிந்தது. “இளையோனே” என்று கூவியபடி தன் பெரிய கைகளை நீட்டிக்கொண்டு ஓடிவந்து அர்ஜுனனை பற்றிக்கொண்டான். அர்ஜுனன் “எங்கு சென்றீர்கள்?” என்று சொல்லி அவன் தோள்களைத் தழுவினான்.
உரக்க நகைத்தபடி பீமன் அர்ஜுனனை அணைத்தபடி தூக்கிச் சுழற்றினான். அவனை காற்றில் எறிந்து பிடித்தான். வெறிகொண்டவன் போல ஓங்கி ஓங்கி அறைந்தான். தேன் ததும்பி தரையில் விழ அதில் இருவரும் வழுக்கி நிலையழிந்து சிரித்தபடியே நின்றனர். அறைவாயிலில் வந்து நின்ற தருமன் “போதும், குடிலை சரித்துப்போடவேண்டியதில்லை” என்றார். பீமன் அர்ஜுனனை கீழே விட்டுவிட்டு “மலைத்தேனும் கனிகளும் எடுத்துவரச் சென்றேன், மூத்தவரே” என்றான். “ஏற்கனவே அவனுக்கு மதுபர்க்கம் அளித்தாகிவிட்டது. நீ முதலில் குளி” என்றார் தருமன்.
அவன் தலையசைக்க “குரங்கு” என்றபின் பிற குரங்குகளை நோக்கி “இவை இவனைவிட பண்பறிந்தவை” என்றார். நகுலன் சிரிப்பை அடக்க அவர் திரும்பி உள்ளே சென்றார். ஒரு குரங்கும் அவரைப்போலவே தளர்நடையிட்டு உடன்சென்றது. அவர் கதவை மூடிக்கொண்டார். “என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு” என்றான் நகுலன். “அள்ளி மடியிலிட்டு சற்றுநேரம் அழுது பின் கொஞ்சி உணவூட்டினால் நெஞ்சமைவார். அதைச்செய்ய முடியாமையால் நிலையழிகிறார்” என்றான் சகதேவன்.
பீமன் தேன்கூட்டை எடுத்து “மலைத்தேன்! இனிய தேனிருக்கும் இடம் குரங்குகளுக்கு மட்டுமே தெரியும். இனிய கனிகளை அவைதான் தெரிவுசெய்யமுடியும்… இவற்றை உண்டுபார்” என்றபடி தேன்தட்டு ஒன்றை எடுத்து அர்ஜுனன் வாயில் ஊட்டப்போனான். “நான் பிழிந்து கொண்டுவருகிறேன்” என்றாள் திரௌபதி. “இதை இப்படியே உண்ணலாம்” என பீமன் தூக்கிக் காட்ட சொட்டிய தேனை அர்ஜுனன் நக்கிக்குடித்தான். “நன்று… இத்தனை இனிய தேனை உண்டதே இல்லை” என்றபடி இன்னொரு தட்டை எடுத்து திரௌபதியிடம் நீட்டினான். அவள் விழிகளில் பதற்றம் எழ வேண்டாம் என தலையசைத்தாள்.
“அருந்துக! இது அரியமலைத்தேன்” என்றான் பீமன். அவள் தலையசைக்க சகதேவன் எழுந்து “நான் விறகு கொண்டுவரச் செல்லவேண்டும்… மூத்தவரே, வருகிறீர்களா?” என்றான். பீமன் “விறகு கொண்டுவருவதெல்லாம் ஒரு வேலையா? என் படையிடம் சொன்னால் போதுமே” என எழுந்து சென்றான். நகுலன் “முண்டன் என்ன செய்கிறான் என பார்க்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொடுத்து நோக்கினர்.
திரௌபதி நோக்கில் எழுந்த கூரொளியுடன் “சென்ற இடங்களில் எத்தனை துணைவியர்?” என்றாள். “ஏன்? அதைத்தான் முதலில் கேட்கவேண்டுமா?” என்றான். “சொல்லுங்கள்!” அர்ஜுனன் “பலர்” என்றான். “ஆனால் அனைவரும் உன் வடிவங்களே.” அவள் சிரித்து “ஆம், பேசுவதை மட்டும் நன்கு பயின்று வைத்திருக்கிறீர்கள்” என்றாள். தாழ்ந்த குரலில் “அனைத்துக்கலைகளையும் கற்றவன் என்கிறார்கள் என்னை” என்று சொன்னபடி அவள் கையை அவன் பற்ற “அய்யோ, இது நடுஅறை” என்றாள் அவள். “அப்படியென்றால் உள்ளறைக்குச் செல்வோம்” என்றான் அர்ஜுனன். “இப்போதா?” என்றாள். “அதை உணர்ந்துதான் அனைவரும் சென்றுவிட்டார்கள்” என்றான். “அய்யோ, எண்ணவே கூச்சமாக இருக்கிறது” என்றாள். “இதென்ன, அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் எப்போது வந்தன?” அவள் “வந்தன… அவ்வளவுதான்” என்றாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
February 3, 2017
அஞ்சலி: க.சீ.சிவக்குமார்
க.சீ.சிவக்குமார் [கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்] என்ற பெயரை நான் 1996 ல் இந்தியாடுடே நடத்திய ஒரு சிறுகதைப்போட்டியில் அவர் பரிசுபெற்றபோதுதான் கேள்விப்பட்டேன். அதுதான் அவருடைய இலக்கிய அறிமுகம் என நினைக்கிறேன். அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து இலக்கியத்திற்கு அறிமுகமானார்கள். இருவரின் எழுத்துமுறையிலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்போது அவருக்கு ஒரு கடிதம்போட்டேன். பின்னர் நேரில் சந்தித்தபோது நன்கு தெரிந்தவர்களாக உணர்ந்தோம்.
க.சீ.சிவக்குமாரின் எழுத்து சுவாரசியமானது. அவர் எதை எழுதினாலும் பொதுவாசகன் ஆர்வத்துடன் வாசிக்கமுடியும். ஆனால் அந்தச் சுவாரசியம் தமிழின் பிரபல எழுத்தில் இருந்து பயின்று அடைந்தது. அதற்கான மொழிநடையும் மனநிலையும் அவருடைய எழுத்தை தீர்மானித்தன. குறிப்பாக சுஜாதாவின் நடை அன்றைய இளைஞர்கள் அனைவரையும் பாதித்தது, க.சீ.சிவக்குமாரையும்
க.சீ.சிவக்குமார் அவர் பிறந்து வளர்ந்த கிராமச்சூழலின் தனித்துவமான பேச்சுமொழியையும் வாழ்க்கைக்கூறுகளையும் எழுதமுற்படவில்லை. மாறாக ஒரு வார இதழ் எழுத்தாளராக விலகி நின்று அந்தச் சூழலில் இருந்து சுவாரசியங்களை மட்டும் தொட்டுச் சேர்த்து எழுதமுயன்றார். வார இதழ்களில் எழுதத் தொடங்கியபின் அவை அவருடைய இலக்கையும் வெளிப்பாட்டையும் வடிவமைக்கலாயின.
அத்துடன் அவருக்கே உரிய எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத இயல்பும் அவருடைய எழுத்தின் அடையாளமாகியது. அவர் இலக்கியவாசிப்பையும் எழுத்தையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இலக்கியவம்புகளில்கூட ஆர்வமற்றவர் என்பதைக் கண்டிருக்கிறேன். தமிழினி அவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டபோது அவருடைய கூரிய அவதானிப்புகள் இலக்கியச்சூழலில் கவனிக்கப்பட்டன. ஆனால் அவருக்கே இலக்கியப்படைப்புகளை எழுதவேண்டுமென்ற ஆர்வமிருக்கவில்லை. மெல்லிய கிண்டலுடன் அனைத்தையும் கடந்துசெல்ல முயன்றார்
க.சீ.சிவக்குமாரின் எழுத்தில் இருந்த சிரிப்பு கசப்பற்றது. விமர்சனங்கள் மென்மையானவை. அவரைப்போலவே என்று சொல்லலாம். அனைவருக்கும் பிரியமானவராக, பார்த்ததுமே தழுவிக்கொள்ளச் செய்பவராகவே இருந்தார். அவருக்குத் திருமணமாகி பெங்களூர் செல்லும்வரை எனக்கு அவருடன் தொடர்பிருந்தது. அவ்வப்போது பார்த்துக்கொள்வதும் கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொள்வதும் வழக்கம். அதன்பின் புத்தகக் கண்காட்சிகளில்தான் பார்த்துக்கொண்டோம்
க.சீ.சிவக்குமார் நேற்று [3-2-2016] மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த மனச்சுமையுடன் எதிர்கொண்டேன். இளைஞராகிய அவருடைய சிரித்தமுகமே என் நினைவில். சென்ற சில ஆண்டுகளாக சற்றுச் சோந்ந்திருந்தார் என்கிறார்கள். அம்முகம் என்னிடமில்லாததும் நல்லதே. மனிதர்களைப் பார்த்ததுமே இயல்பாகக் கண்கள்பூப்பது ஒருவரம். க.சீ.சிவக்குமாருக்கு அது இருந்தது.
பி.கு
க.சீ. சிவக்குமார் பெங்களூரில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார் என்று செய்தி. அவருடைய உடல் இன்று மாலை 3 மணி அளவில் சொந்த ஊரான கன்னிவாடிக்குக் கொண்டு வரப்படுகிறது. கன்னிவாடி திருப்பூர் மாவட்டத்தில் , மூலனூரில் இருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ளது. மூலனூரிலிருந்து பேருந்தில் செல்லலாம். மறைந்த எழுத்தாளருக்கு அஞ்சலி செலுத்த வாசகர்கள் செல்லவேண்டுமென விரும்புகிறேன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மாமங்கலையின் மலை -4
[image error]
கொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரைக் கடக்கும்போது என் கண்ணில் ஒரு காட்சி பட்டது “அந்த பள்ளியின் சுவரிலிருந்தவை என்ன படங்கள் பார்த்தீர்களா?” என கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் கவனிக்கவில்லை. “எழுத்தாளர்களின் படங்கள்” என்றேன். வண்டியை திருப்பும்படி கூவினார். திரும்பிச்சென்று பார்த்தோம். ஞானபீடப்பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர்களின் படங்கள் அச்சுவரில் வரையப்பட்டிருந்தன.
இதுவரை எட்டு எழுத்தாளர்கள் ஞானபீடப்பரிசு பெற்றுள்ளனர். குவெம்பு, [கே.வி.புட்டப்பா] டி.ஆர். பேந்ரே, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், வி.கே.கோகாக், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், சந்திரசேகர கம்பார் ஆகியோர். அந்த எட்டு முகங்களும் வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன. மிகச்சிறிய ஊர். ஆரம்பப்பள்ளியின் சுற்றுச்சுவர். இந்தியாவில் வேறெங்கும் இதைக் காணமுடியாது
[image error]
தமிழகத்தில் எழுத்தாளர்கள் என சிலர் உள்ளனர் என்பதை அறிந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே பத்துசதவீதம்பேர் கூட இருக்கமாட்டார்கள். ஞானபீடப்பரிசு இரண்டுதான், அகிலன் ஜெயகாந்தன். அசோகமித்திரனுக்கு கொடுக்க ஞானபீடப்பரிசுக்குழு முயல்கிறது. ’பார்ப்பனருக்கு’ அதை கொடுக்கவிடமாட்டோம் என்கிறது தமிழ் கல்வியுலகம். பெற்றுக்கொள்ள தமிழர்தலைவர்களும் கவிப்பேரரசுகளும் முண்டியடிக்கிறார்கள். கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.
மதிய உணவுக்குப்பிறகு கொல்லூரை அணுகினோம். கொல்லூர் மூகாம்பிகை கோயில் புகழ் பெற்றது. தமிழகத்தில் இன்றிருக்கும் புகழை அது அடைந்தது தன் கை செயலற்றிருந்தபோது எம்.ஜி.ஆர் இங்கு வந்து மூகாம்பிகை அன்னைக்கு ஒரு வாள் காணிக்கையாக்கியபோதுதான். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு வந்தது அன்று பெரிதாக பேசப்பட்டது. ”அன்னை மூகாம்பிகை வடிவில் என் தாய் சத்யாவைக் காண்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் சொன்ன பதிலும் அன்று பெரும்புகழ் பெற்றது,
[image error]
எம்.ஜி.ஆர் இங்கு வந்ததற்கு முதன்மையான காரணம் அவர் மலையாளி என்பது தான். அனைத்து மலையாளிகளுக்கும் இரண்டு அன்னையர்கள் முதன்மை தெய்வங்கள். கொல்லூர் மூகாம்பிகை மற்றும் கன்னியாகுமரி தேவி. இருவருமே மங்கலத் தோற்றம் கொண்டவர்கள். கொல்லூரின் அரசி உலகன்னை. குமரியின் இளவரசி நித்யகன்னி. இருவருமே படைக்கலம் ஏதுமின்றி இருப்பவர்கள். கனிவு மட்டுமே கொண்டவர்கள். பாலக்காட்டு மேலங்கத்து கோபாலமேனனின் மகனாகிய எம்.ஜி.ஆர் அவரது தந்தை வழியில் ஆற்ற வேண்டிய கடன் மூகாம்பிகைக்குச் சென்று வருவது என்று சோதிடர்கள் கூறியதனால் இங்கு வந்தார் என்பது வெளிப்படை.
அதன் பின் இளையராஜா மூகாம்பிகையை தமிழகத்தில் புகழ்பெறச்செய்தார். அவருடைய “ஜனனீ ஜனனீ அகம் நீ ஜகத் காரணி நீ” என்னும் புகழ் பெற்ற பாடல் மூகாம்பிகை என்றவுடனேயே தமிழர்கள் நினைவில் வருவதாக இருக்கிறது கேரளத்தில் அதற்கிணையான பாடல் என்று “குடஜாத்ரியில் குடி கொள்ளும் மகேஸ்வரி குணதாயினி சர்வ சுபகாரிணி” என ஜேசுதாஸ் பாடிய பாடலைக் குறிப்பிடலாம்.
[image error]
சபரிமலை ஒரு பெரும் மோஸ்தராக எழுந்தபோது பல்வேறு ஆலயங்கள் வழியாக சபரி மலை வரை செல்லும் தீர்த்தாடனப் பயணம் புகழ்பெற்றது. முன்பெல்லாம் சபரி மலைக்குச் செல்வதே ஒரு கடும்பயணமாக இருந்தது. ரயிலில் ஆலப்புழா அல்லது கோட்டயம் வந்திறங்கி நடந்து மலைகடந்து சபரிமலைக்குச் செல்வார்கள். எண்பதுகளுக்குப்பிறகு கார்கள் பயன்பாட்டில் அதிகமாக வரத் தொடங்கியதும் சபரி மலைப்பயணம் பல்வேறு கோயில்களை இணைத்துக் கொண்டு செல்லும் ஒரு ஆன்மீகச் சுற்றுலாப்பயணமாகியது.
வடக்கிலிருந்து வருபவர்கள் மூகாம்பிகை அம்மனைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து சபரி மலைக்கு வரத் தொடங்கினர். சபரி மலை வழிபாட்டுக்குப்பிறகு தெற்கிறங்கி சக்குளத்து பகவதியையும் ஆற்றுகால் பகவதியையும் பார்த்துவிட்டு கன்னியாகுமரி பகவதியை தொழுது திரும்பும் ஒரு வழக்கம் தமிழர்களிடம் வந்தது. சபரி மலை பருவத்தில் மூகாம்பிகை சாலைகள் பக்தர்களால் நிறைந்திருக்கும். மூகாம்பிகை சன்னிதியிலேயே சரணகோஷம்தான் ஓங்கிக் கேட்கும்
[image error]
மூகாம்பிகை கோயிலுக்கு பதினைந்து கிலோமீட்டர் முன்னால் திரும்பி குடஜாத்ரி செல்லவேண்டும். இன்றிருக்கும் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கேரள மன்னர்களால் கட்டப்பட்டது. அதற்கு முன்பு குடஜாத்ரி மலையின் உச்சியில்தான் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் இருந்தது இதை மூல மூகாம்பிகை என்கிறார்கள். முன்பு இங்கு கல்லால் ஆன ஒரு சக்தி பீடம் மட்டுமே இருந்தது. அதை ஆதிசங்கரர் நிறுவியதாக தொன்மம் சொல்கிறது. அங்கிருந்து மக்கள் வழிபடுவதற்காக அம்மனை கொண்டுசென்று கொல்லூரில் குடிவைத்தனர்.
இன்றும் அது ஒரு குடஜாத்ரி மூலமூகாம்பிகை சன்னிதி சிறிய கோயில்தான். பல ஆண்டுகளுக்கு முன் நான் சிவராமகாரந்த் அவர்கள் எழுதிய பித்தனின் பத்துமுகங்கள் என்ற சுயசரிதை நூலில் அவர் இளமையில் நடையாகவே மலையேறி குடஜாத்ரி வரைக்கும் வந்த அனுபவத்தை எழுதியிருந்ததை படித்தேன். தெற்கு கர்நாடகத்தில் மூன்று அற்புதமான மலைகளில் ஒன்று என்று இதைச் சொல்கிறார்கள். குதிரைமூக்கு, குமார பர்வதம் ஆகியவை பிற.
[image error]
இப்பகுதி அன்றுமுதல் மலைநாடு என்றே அறியப்படுகிறது. மலைநாட்டின் வடஎல்லையாக குடஜாத்ரி கருதப்பட்டது. அடர்பசுமையின் ஆயிரம் அழுத்தமாறுபாடுகள் என காடுகள் அலையலையாகச் சூழ்ந்து தெரியும் இந்த மலை ஒரு கனவுநிலம். 1986- அக்டோபரில் மழைபெய்து கொண்டே இருந்த ஒரு நாளில் குடஜாத்ரி வரைக்கும் நான் வந்திருக்கிறேன். அன்று என்னுடன் பாலசந்திரன் என்ற நண்பரும் உடன் இருந்தார். காலையில் மலையடிவாரத்தில் இருந்து ஏறத்தொடங்கி அந்தியில் மேலே வந்து சேர்ந்தோம். மழைநீர் ஓடி வழுக்கிய பாதையில் நான் இருமுறை விழுந்து எழுந்தேன்
அன்று இங்கிருந்த அர்ச்சகரின் மிகச்சிறிய இல்லத்தில் தங்க இடம் கிடைத்தது. சூடான தேநீரும் பயறும் அரிசியும் போட்டு செய்த கஞ்சியும் உணவாகக் கிடைத்தது. அன்று இச்சாலை ஒற்றையடி பாதை . மழையுடன் அன்றி குடஜாத்ரியை பிரித்துப்பார்க்கவும் முடியவில்லை. பாசி படிந்த மலைப்பாறைகளும் நீரோடையும் பாதையும் ஒன்றேயான மலைச்சரிவும் என் கனவில் தங்கிவிட்டவை. இம்முறை அந்த கால்பாதையை ஜீப்புகள் செல்லும் சாலையாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். பெருங்கூட்டமாக கேரள மக்கள் வந்துசெல்கிறார்கள்.
[image error]
கீழேயே ஒரு ஜீப்பை அமர்த்திக் கொண்டோம். அங்கிருந்தே அனைவரும் ஒரே ஜீப்பில் நெருக்கியடித்துக்கொண்டு ஏறினோம். ஓட்டி ஓட்டிக் கை தேர்ந்த ஓட்டுநர் சிலந்தி வலைச்சரடில் தொற்றிச்செல்வதுபோல் வளைவுகளும் ஒடிவுகளும் சரிவுகளும் நிறைந்த சாலையில் ஜீப்பை ஓட்டி மேலேற்றி சென்றார். நாங்கள் ஒரு அதிவேக நடன இசைக்கு கூட்டு நடனமிடுவது போல் அதில் அமர்ந்திருந்தோம். பேசும்போது குரல் துண்டு துண்டாக தெறிக்கும் அளவுக்கு விசை.முகத்திலறைந்த தூசு. கூடவே குளிர் காற்று. ஆனால் ஒருமணி நேரத்திலேயே மேலே அர்ச்சகர் இல்லத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.
குடஜாத்ரியில் தங்குவதற்கு இரண்டு இடங்கள். ஒன்று அரசு விடுதி அதை முன்னரே பதிவு செய்ய வேண்டும். அர்ச்சகரின் இல்லத்தை நம்பி பெண்களுடன் செல்ல முடியாது. அங்கு படுக்க மட்டுமே வசதி. அதாவது தட்டையான இடம் கிடைக்கும், அதை வசதி என எடுத்துக்கொள்ளலாம். முன்னால் அது ஓட்டுக்கூரைவீடு. இம்முறை அதை கான்கிரீட்டில் எடுத்து கட்டியிருந்தார். கட்டப்பட்ட பல அறைகள் சரியாகப் பேணப்படாமல் தூசும் குப்பையும் படிந்து கிடந்தன. ஒரு பெரிய கூடத்தை எங்களுக்கு அளித்தார்.
[image error]
பொருட்களை அங்கு வைத்துவிட்டு மூல மூகாம்பிகையை தரிசனம் செய்தோம். சுதையாலான சுவரும் ஓட்டு கூரையும் கொண்ட சிறிய ஆலயம். மூகாம்பிகையின் அருகே சிவலிங்கமும் பிள்ளையாரும் பதிட்டைசெய்யப்பட்டிருந்தனர். அர்ச்சனை செய்வதற்கு பணம் கொடுத்து வணங்கிய பிறகு மலையேறிச் சென்று உச்சிப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்தோம். ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. இப்பயணத்தின் மலையேற்றம் என்பது இதுதான். பல கிலோ மீட்டர்கள் ஏறி கேதார்நாத்திற்கு சென்ற கால்களுக்கு இது ஒன்றும் கடினமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் ஒவ்வொரு பயணமும் புதியது. அதாவது ஒவ்வொரு வகையாக மூச்சு தளரவைப்பது.
‘சுகியன்’ ஆக கோவையில் வாழும் செல்வேந்திரன் ‘ஏறித்தான் ஆகணும் இல்ல?” என்ற பாவனையுடன் வியர்வை வழிய உடன் வந்தார். செல்லும்வழியில் ஒரு குகைப்பிள்ளையார் சன்னிதி இருந்தது. உச்சிப்பிள்ளையார் ஆலயம் மூலமூகாம்பிகை ஆலயத்தின் காலத்திலேயே கட்டப்பட்டது. கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் அகத்தியர்கூடம், மங்கலாதேவி ஆலயம் போன்றவற்றை நினைவுறுத்தும் மிகச்சிறிய கல்ஆலயம். உள்ளே கணபதி அமர்ந்திருக்கிறார். சற்று இடிந்து போயிருந்தது
செல்லும் வழியெங்கும் மோரும், எலுமிச்சை நீரும், வளையங்களாக வெட்டி உப்புபோட்டு தரப்படும் அன்னாசிப்பழமும், வெள்ளரிக்காயும் விற்பவர்கள் அமர்ந்திருந்தார்கள் இந்தப்பயணத்தின் இனிய அனுபவம் என்பது மூச்சு தளர நின்று இவற்றை குடித்து உண்பது தான். அந்தி சாயத் தொடங்கியிருந்தது. கோயிலருகே சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் மலையிறங்கிச் சென்று பிறிதொரு மலைமுடியின் விளிம்பில் அமர்ந்து தொலைவில் சூரியன் இறங்குவதைப்பார்த்துக் கொண்டிருந்தோம்.
[image error]
நீலத்தின் வெவ்வேறு அழுத்தங்களால் ஆனது அம்மலைச்சூழ்கை. விழி தொடும் தொலைவு வரை மலைத்தொடர்கள். மாபெரும் நீலத்தாமரை ஒன்றுக்குள் அமர்ந்திருப்பது போல். மலைகள் மிக மெல்லிய மலரிதழாக ஆகும் விழிமாயம். உளமயக்கு தானோ பருப்பொருள் அங்கு இல்லையோ என்று ஐயுற வைக்கும். நீங்களெல்லாம் சொப்பனம்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ? மலைகளினூடாக ஒளி ஊடுருவுகிறது. புகையா? பட்டுத்திரைசீலை மடிப்புகளா?
ஒவ்வொரு மலையாக கரைந்து வானில் புதைந்து மறைந்தது. காற்று சிவந்த திரவமென மாறி அதில் சூரியன் இறங்கி கரைந்தழிந்தது. குருதிவாள் என சூரியனின் மேல் விளிம்பு சுடர்ந்து மூழ்கி மறைந்தபோது விழியில் எஞ்சிய செந்நிற ஒளியை தக்க வைத்தது சித்தம். பின்னர் விழியொளியின் மங்கலாய் நீலமலைகள் அணைந்தன. அவை குளிரில் விரைத்து மறைய அனைத்திலிருந்தும் வாடைக்காற்று காற்று வந்து சுழன்றது.
[image error]
பிள்ளையார் கோவிலைத் தாண்டி நடகக்த் தொடங்கும்போதே இருட்டு அடர்ந்து விட்டது. அங்கு கூடாரமிட்டு தங்க வந்திருந்த இளைஞர் குழு ஒன்று தங்கள் பணிகளைத் துவக்கியது. பெண்களும் ஆண்களும் உற்சாகக் குரல்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இருளுக்குள் செல்பேசியில் வாட்ஸப் பார்த்தனர். விற்பனையாளர்கள் கடைகளை தார்ப்பாய் கொண்டு மூடிக் கட்டி வைத்தனர். செல்பேசியின் வெளிச்சத்தை நம்பி மலையிறங்கிக் கீழே வந்தோம்.
எத்தனையோ ஊர்களில் எங்கெங்கோ நின்று சூரியன் அணைவதை பார்த்த நினைவுகள். அனைத்து சூரியன்களை இணைத்து ஒரு மாபெரும் செம்மணி மாலையை உருவாக்க முடியும். புடவியென விண்ணென நிறைந்திருக்கும் ஒன்றின் கழுத்தில் அதை மாட்டவேண்டும். நீ நான் என்று அதனிடம் சொல்லவேண்டும்
குடஜாத்ரியில் குடிகொள்ளும் மகேஸ்வரி பாடல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பக்தி ஒரு கடிதம்
சங்க இலக்கியத்தில் பக்தி பற்றி சீனுவின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் பார்த்தேன். சடங்குகள் நிறைந்திருந்த காலகட்டம், ஞானத்திற்கு முக்கியத்துவமளித்த காலகட்டம். பக்தி மிகுந்திருந்த கால கட்டம் என்று ஆன்மீக வரலாறை பிரித்தறிய அது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இம்மூன்றும் எவ்வொரு கால கட்டத்திலும் கலந்து இருந்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. வேள்விகள் சடங்குகளுக்கு முக்கியம் அளித்து, ஞானம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், பக்தியில் உருகி வழிபடாமல் என இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் இருந்திருப்பார்கள்.
இக்காலத்திலே கூட கோயில்களில் பூசை நியமனங்களில் ஈடுபட்டிருக்கும் பூசகர்கள் இத்தகையவர்களாக எனக்குத் தோன்றுகிறார்கள். தினமும் தெய்வத் திருவுருவை அலங்கரித்து பூஜைகளை நியமம் தவறாமல் செய்பவர்கள் அதை ஒரு இயந்திர கதியில் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கடவுளைப்பற்றிய கதைகளை சொல்வார்களே தவிர அதன் அடிப்படையில் இருக்கும் ஞானத்தை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. அத் தெய்வத்தை அவர்கள் உணர்ச்சிபூர்வமாக வழிபடுவதற்கான எவ்வித பாவனையும் அவர்கள் உடல்மொழியில் தென்படுவதில்லை.
தொலைக்காட்சியில் ஒரு இந்து மதப் பெரியவர் நிறைய விக்கிரங்களை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பூஜை செய்வதை காண்பிப்பார்கள். ஒரு தச்சுத் தொழிலாளி கவனமாக பணி செய்வதைப்போன்றுதான் எனக்கு தோன்றும். அவர் செய்கையில் பக்தி சிறிதுகூட வெளிப்படாதிருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். எப்போதாவது கோயிலுக்கு வரும் பக்தனில் தென்படும் பக்திகூட பூசகரில் வெளிப்படுவது குறைவுதான். அதே நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் சடங்குகளில் நியமங்களில் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்.
ஆனால் பக்தர்கள் என்பவர்கள் மனமுருகி கடவுளை ஒரு ஆண்டானாக, காதலனாக, உறவாக, வழிகாட்டியாக என பலவாறு உருவகித்து அந்த உருவகத்தை உளப்பூர்வமாக நம்பி நேசித்து வழிபடுகிறார்கள். இது சடங்குகள் செய்வதை விட உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. சடங்குகள் என்பவை குறியீடுகள். ஒருவேளை அச் சடங்குகளைச் செய்பவர்களின், காண்பவர்களின் ஆழ்மனதில் விளைவுகளை ஏற்படுத்தலாம். நிர்க்குண பரப்பிரம்மத்தை சகுண பிரம்மமாக உருவகித்து வழிபட்டு பக்தியில் உருகி அதன் மூலமாக பரப்பிரம்மத்தை அறிந்துகொள்ளும் வழிமுறை எப்போதும் இருந்து வந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். பரப்பிரம்மம் என்ற ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் விழுதுகளே சகுண பிரம்ம வழிபாடுகள். அதில் ஒரு விழுதினைப் பற்றிக்கொண்டு ஏறி பரப்பிரம்மத்தை அடைவது பக்தி நெறியில் இறுதி இலக்காக இருக்கிறது.
சடங்குகள் மூலம் வழிபடுவது நியமங்களை கடைபிடிப்பது பொது மக்களால் முடியாத ஒன்றாக இருந்திருக்கும். ஞானத்தின் பாதை என்பது அறிவுக் கூர்மையுடையோருக்கான வழி மற்றும் அவ்வழி எப்போதும் இகத்தை துறத்தலை முதல் படியாக கொள்வது. ஆகவே குடும்பத்தில் வாழ்பவர்கள் சாதாரண பொதுமக்கள் பெரும்பாலும் பக்தியின் வழியே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்திருப்பார்கள். ஆகையால் ஆன்மீகத்தில் எப்போதும் பக்திவழியே பெரும்பான்மையினரால் பின்பற்றப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அவர்களே ஒரு பக்கம் வேள்விகள் போன்ற சடங்குகளை பின்பற்றுபவர்களையும், மறுபக்கம் பல்வேறு தத்துவங்கள வழி செல்லும் ஞான யோகிகளையும் புரந்து இருப்பார்கள். அப்படியென்றால் பண்டைய நூல்களில் இலக்கியங்களில், பக்திவழிபாடு குறைவாகவே சொல்லப்பட்டிருப்பது ஏன் என தெரிய வேண்டியிருக்கிறது. வேள்விகள் சடங்குகள், அவற்றுக்கான நியமங்கள் பிழையில்லாமல் பின்பற்றப்படவேண்டியவை. ஆகவே அவை வேதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. தத்துவங்கள் ஞான அறிதல்கள் அறிவியல் உண்மைகள் போல மிக அரிதான நபர்களால், கண்டுபிடிக்கப்பட்டு வெகு சிலரால் படித்து புரிந்து பின்பற்றப்பட்டவை. அவை கால ஓட்டத்தில் மறைந்துபோகாமல் இருக்க அவை எழுதிவைக்கப்பட்டு, சீடர் பரம்பரைகள் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் உளம் நெகிழ்ந்து உருகும் பக்தி என்பது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க உணர்ச்சி என ஒவ்வொருவருக்கும் தனித் தனியானது. இப்படி பலரின் பக்தி ஒன்றிணையும்போது அது கூட்டு வழிபாடு என மாறுகிறது. அவர்களின் கூட்டுபக்தி ஆடல் பாடல் போன்ற கலைகளின் மூலம் அப்போது வெளிப்படுகிறது. அவையே பக்தியின் ஆவணமாக ஆகின்றன. கலைகள் வளர்ந்து நுண்மையடையும்போதுதான் அதில் சட்டகங்கள் உருவாகி அவை வழிவழியாகப் பயிலப்பட்டு நீடித்து நிற்கின்றன. அந்நிலை வரும் வரை அவை நாட்டார் கலையாக இருக்கின்றன.
நாட்டார்கலைகள் பெரும்பான்மையினரால் ரசிக்கப்பட்டாலும் அது காலத்தை வென்று இருப்பதில்லை. அவை செவ்வியல் கலைகளாக பரிணாமம் கொண்டபிறகுதான் அதன் வரலாறு ஆரம்பிக்கிறது. எப்போதும் இருக்கும் பக்தி முதலில் நாட்டார் கலைகளில்தான் பதிவாகிறது. அந்த நாட்டார் கலைகள் செவ்வியல் கலைகளாகியவுடன், பக்தி வரலாறில் பதிவாகிறது. அனைத்து நுண் கலைகளிலும் முதன்மையாக இருக்கும் பேசுபொருள் பக்திதானே இருக்கிறது. சிற்பம் ஓவியம் இசை நாடகம் என அனைத்திலும் பக்தியே முதன்மையானது. ஆனால் இலக்கியம் என்பது எப்போதும் அறிவு சார்ந்த நபர்களுக்கானது. பக்தியை இலக்கியம் கையில் எடுத்துகொண்டது பிற்காலத்தில் என்பதால் அதுவரை பக்தி மக்களிடம் பெருமளவில் இருந்திருக்கவில்லை எனச்சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
மற்றொன்று பாரத நாட்டில் பொது மக்கள் பலதெய்வ வழிபாட்டில் எப்போதும் இருந்துவந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் என்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் இஷ்ட தெய்வம் என்றும் பலப்பல தெய்வங்கள் இருந்திருக்கின்றன. த்வைதம், அத்வைதம், தூய வைணவம், தூய சைவம், சமணம், புத்தம் போன்றவை பொது மக்களின் தலைகளுக்கு மேலாகவே இருந்திருக்கும். நாடெல்லாம் சமணம் அல்லது புத்தம் பரவிய காலத்திலும் சாதாரண மக்கள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அவரவர் தெய்வத்தை வணங்கிக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். விவாதம் நடத்தி வேறு மத, தத்துவ பிரிவினரை வெல்லுதல் போன்றவை எல்லாம் அறிவு தேடல்கொண்ட வெகு சிலரிடம் மட்டுமே இருந்திருக்கும். ஒரு பிரிவிலிருந்து மறு பிரிவுக்கு மாறுவது எல்லாம் இத்தகையர்வகளிடம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். பொது மக்களின் இந்த பலதெய்வ பக்தி என்பது கடல் என்று கொண்டால் அதன்மேற்பரப்பில் தோன்றியும் மறைந்தும் மேலெழுந்தும் தாழ்ந்தும் இயங்கும் அலைகள் போன்றவையாக மதங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் இருந்திருக்கும். அதனால் சமணர் எழுதிய பொதுமக்கள் பற்றிய சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் மக்கள் போற்றி வணங்கிய தெய்வங்களை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
தொகுத்துப்பார்த்தால், பக்தி என்பது எப்போதும் இருந்துகொண்டே வந்திருக்கிறது. ஞான வழியிலும் வேள்விகள் சடங்குகள் போன்ற கர்மவழியிலும் ஈடுபடுவோர் சிலர்தான். ஆனால் அவர்களின் ஆக்கங்கள் மட்டும்தான் வரலாற்றில் இடம் பெறுபவை என்பதால் இங்கிருந்து நாம் காண்கையில் அந்த காலங்களில் பக்தி என்பதே இல்லாதது போன்று தெரிகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் பக்தியை இலக்கியத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தபிறகுதான் வரலாற்றின் கண்களில் பக்தி தென்படுகிறது என்பதால் அதுவரை பக்தி பொதுமக்களிடம் முதன்மையாக இருக்கவில்லை என்று சொல்லமுடியாது எனக் கருதுகிறேன்.
தண்டபாணி துரைவேல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அருகர்களின் பாதை- வாசிப்பனுபவம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாயிருக்கிறீர்களா?
‘அருகர்களின் பாதை’ வாசித்தேன். எனது அனுபவத்தை வலைப்பதிவில் எழுதியுள்ளேன். தங்கள் பார்வைக்கு..
https://amaruvi.in/one-word-to-describe-this-book-magnificent-5b515dd13f76#.81zj8snkm
நன்றி
ஆமருவி
www.amaruvi.in
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
4. ஏட்டுப்புறங்கள்
அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக இருக்கிறது” என்றாள். “உள்ளே அதைவிடப்பெரிய அனல் எரிகிறது, அரசி” என்றான் முண்டன். “சிற்றனலை நீர் அணைக்கும். காட்டனலை காட்டனலே அணைக்குமென்று கண்டிருப்பீர்கள்.” அவன் பெரிய கவளங்களாக உருட்டி உண்பதைக்கண்டு “உன் உடல் இப்படி கொழுப்பது ஏன் எனத் தெரிகிறது” என்றாள்.
“நான் அதைத்தடுக்க முயல்வதில்லை” என்று முண்டன் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “அரசி, நான் குள்ளன் என்பதே என் படைக்கலம். கொழுத்திருக்கையில் நான் குழந்தையுடல் கொள்கிறேன். கொழுவிய கன்னங்களும் பதிந்த மூக்குமே என்னை நோக்கி புன்னகையுடன் அன்னமிடுகையில் உங்கள் நெஞ்சு நெகிழச்செய்கிறது” என்றான். அறைவாயிலில் வந்து நின்ற தருமன் “மெய்தான்… நீ குழவியென்றே விழிக்கு தோன்றுகிறாய்” என்றார். “நீங்கள் மட்டும் முதியவராகவே தோன்றுகிறீர்களே. உங்களை வெளியே எடுத்ததுமே வயற்றாட்டி மூத்தவரே என்றழைத்திருப்பாள்” என்றான் முண்டன்.
சிரித்தபடி நகுலனும் சகதேவனும் வந்து அடுமனைக்குள் அவனைச்சூழ்ந்து நின்றனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். நகுலன் “துயில்கிறார். குரங்குகளும் காட்டுக்குள் சென்றுவிட்டன” என்றான். “உணவுக்குப்பின் துயில்வது நன்று, உணவல்லாதவற்றை கனவுகாணமுடியும்” என்றான் முண்டன். “உன் குடியும் குலமும் பதியும் எது?” என்றார் தருமன். “நான் மிதிலைநாட்டான். அங்கே போர்மறவர் குடியில் பிறந்தேன். எந்தை நான் பிறந்தபோது ஒருமுறை குனிந்து நோக்கி முகம்சுளித்தார். மூதாதையர் செய்த பழி என்றார். அக்கணமே என் அன்னையைக் கைவிட்டு அகன்றார்” என்றான் முண்டன்.
“என் கால்கள் வளைந்திருந்தன. இரட்டைப்பெருமண்டை. பிறக்கையிலேயே பற்களுமிருந்தன. பிறந்த அன்றே முண்டன் எனப் பெயர்கொண்டேன்” என அவன் தொடர்ந்தான். “உயரமற்றவர்களை தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதிலிருந்து மானுடர் ஒழியவே முடியாது. குள்ளர்களின் பெருந்துன்பம் அவர்கள் எப்போதும் மேலிருந்தே பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதன்பொருட்டே உரத்தகுரலில் பேசத் தொடங்குகிறார்கள். தங்களை அறியாமலேயே நுனிக்கால்களில் எம்பி நின்றுகொள்கிறார்கள். வெற்றியினூடாக பிறரைவிட மேலெழ முனைகிறார்கள்.”
“ஆகவே சூழ்ச்சிக்காரர்களாக சீண்டுபவர்களாக இரக்கமற்றவர்களாக இருப்பதற்கும் அஞ்சாமலாகிறார்கள். தன் தலைக்குமேல் நிகழும் உலகை தன்னை நோக்கி இழுக்க ஒவ்வொரு கணமும் முயன்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் முண்டன். “ஆனால் அவர்கள் தொடர்ந்து கனிவுடன் பார்க்கப்படுகிறார்கள். பொறுத்தருளப்படுகிறார்கள். அரசி, ஓரு குள்ளனை குழந்தைபோல கொஞ்சுவதைப்போல அவனை சினம்கொள்ளச்செய்யும் செயல் பிறிதில்லை.”
கைகளை நக்கியபடி முண்டன் தொடர்ந்தான். “ஆனால் மானுடரால் அதைச் செய்யாமலிருக்க முடியாது. ஏனென்றால் குள்ளர்களை அவர்களின் ஆழுள்ளம் குழந்தைகளுடன் ஒப்பிட்டுக்கொள்கிறது.” திரௌபதி “ஆம், உன்னையும் அவ்வாறே எண்ணிக்கொண்டேன்” என்றாள். “அதனால்தான் என் சொற்களிலிருந்த நஞ்சுக்கு நீங்கள் நகைத்தீர்கள்” என்றான் அவன். அவள் சிரித்து “ஆம். மட்டுமல்ல, நான் இங்கு அவ்வாறு பிறிதொருவகை பேச்சைக் கேட்டே நெடுநாட்களாகின்றன” என்றாள்.
“இளமையில் நெடுநாட்கள் நான் அன்னையரின் குழவியாகவே இருந்தேன். என்னை இடையிலேயே வைத்திருந்தாள் என் அன்னை. அவள் தோழியரும் என்னை இடையிலெடுத்துக்கொள்வார்கள். பெண்கள் நடுவே அமர்ந்துகொண்டு அவர்களின் சழக்குப் பேச்சை கேட்பேன். என்னை செவியென்றும் விழியென்றுமுணராமல் வெறும் பைதலென எண்ணி பேசிக்களிப்பார்கள். ஆடைகளைந்து நீராடுவார்கள். பூசலிட்டு மந்தணங்களை அள்ளி இறைப்பார்கள். ஒரு கைப்பொருளென என்னை எங்கேனும் வைப்பார்கள். மறந்துசென்றுவிடுவதுமுண்டு.”
“நான் முதிரத்தொடங்கியபோது அவர்கள் என்னை சற்றே விலக்கலாயினர். கொஞ்சல்கள் குறைந்தபோது அவர்களுடனேயே நீடிக்கும்பொருட்டு நானும் சழக்குபேசலானேன். அவர்களை சிரிக்கச்செய்வதெப்படி என்று கண்டுகொண்டேன். அரசி, பெண்கள் விரும்புவது காமச் சொல்லாடலே. ஆனால் அச்சொல்லாடலை முன்னெடுப்பவள் விடுநா கொண்டவள் என்று பெயர்பெறுவாள். நாணிலாதவள் என அவள் தோழிகளாலேயே பழிக்கப்படுவாள். ஆகவே அதை எவரேனும் சொல்ல தான் கேட்டு மகிழ்ந்து பின் நாணி பொய்ச்சீற்றம் காட்டுவதே பெண்கள் விழையும் ஆடல். நான் அவ்விடத்தை ஆடலானேன்.”
“ஒவ்வொருநாளும் துளித்துளியாக எல்லை மீறுதலே அவர்களை நகையுவகை கொள்ளச்செய்கிறதென்று கண்டேன். ஒருகட்டத்தில் அவர்கள் நடுவே எதையும் சொல்பவனாக அமர்ந்திருந்தேன். என்னை மானுடனென அவர்கள் எண்ணவில்லை. பேசும் கிளியென்றும் ஆடும் குரங்கென்றும் கண்டனர். எனவே எதுவும் பிழையெனப் படவில்லை. அவர்களின் கொழுநரும் அவ்வாறே எண்ணினர். அவர்களின் கொழுநர்களைக் கண்டு என்னுள் வாழ்ந்த ஆண் அஞ்சினான். எனவே அவர்களை நான் அணுகியதே இல்லை.”
“என் வயதுக்கு மிக இளையவர்களாகிய சிறுமைந்தருடன்தான் நான் விளையாடி வந்தேன். பெண்கள் நடுவே என் உள்ளம் வளர்ந்தபோது அவர்களுடன் ஆடுவது இயலாதாயிற்று. ஆண்களின் உலகில் நுழைய விழைந்தேன். மிகத்தற்செயலாக அதற்கான வழியை கண்டடைந்தேன். ஒருநாள் நூற்றுவர்தலைவன் ஒருவனைப்பற்றி அவன் புறக்காதலி சொன்ன சீண்டும் சொல்லை அவனிருந்த மன்றில் சொன்னேன். சொல்லிவிட்டதுமே அஞ்சி உடல்குளிர்ந்தேன். அவன் தோழர் வெடித்து நகைத்தனர். அவனும் உடன் நகைத்து என் மண்டையைத் தட்டினான். அன்று அறிந்தேன், நான் என்ன சொன்னாலும் எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று.”
“அதன்பின் அதுவே என் வழியென்றாகியது. நான் பகடிபேசுபவனாக ஆனேன். நச்சுநாவை கூர்தீட்டிக்கொண்டேன். ஆனால் அதைக்குறித்த தன்னிழிவும் என்னுள் திரண்டுகொண்டே இருந்தது. என் அன்னை இறந்தபோது அவ்வூரில் இருக்க விரும்பாமல் கிளம்பினேன். ஊர்தோறும் அலைந்து ஒரு சந்தையில் நின்றிருக்கையில் கழைக்கூத்தாடிகளைக் கண்டேன். அவர்களுடன் என்னை சேர்த்துக்கொண்டார்கள். அவர்களின் மூத்தாசிரியன் எனக்கு தாவுகலையையும் உடல்நிகர்கலையையும் கற்பித்தான். கைமாயங்களையும் விழிமாயங்களையும் மூதன்னை ஒருத்தி பயிற்றுவித்தாள்.”
“அன்று அம்மூத்தவள் என்னிடம் சொன்னாள், நீ என்னசெய்தாலும் நகைப்பர். ஏனென்றால் உன் உடல்வழியாக படைப்போன் ஓர் இளிவரலை முன்னரே செய்துவிட்டிருக்கிறான் என எண்ணுகிறார்கள் என்றாள். இப்புவியில் பிறிதொரு மானுடரைக் காண்கையில் மானுடர் முகம் இயல்பாக மலர்வதில்லை. ஒருகணம், கணத்திலொரு துளி, அது சுருங்குகிறது. ஐயுறுகிறது, அளவிடுகிறது, முடிவெடுக்கிறது. அதன்பின்னரே இன்சொல்லும் புன்சிரிப்பும் எழுகின்றன. உன்னைக் கண்டகணமே முகங்கள் விரிகின்றன. இளங்குழவியரை காண்பதுபோல. துள்ளும் குருளைகளையும் பூஞ்சிறகுக் குஞ்சுகளையும் காண்பதுபோல. வளர்ந்தபின்னரும் அப்புன்னகையைப் பெறுபவை குரங்கும் யானையும் மட்டிலுமே என்றாள்.”
“அன்றறிந்தேன், எனக்களிக்கப்பட்ட நற்கொடை இவ்வுடல் என. அன்றுமுதல் இதைக் கொண்டாடலானேன். இதைக்கொண்டு என் சூழலைக் கொண்டாடினேன். அரசி, இவ்வுடல் ஒரு அகப்பை. இதைக்கொண்டு நானிருக்குமிடத்தை கலக்குகிறேன். இது ஒரு முழைதடி. இதைக்கொண்டு இம்முரசுகளை ஒலிக்கச்செய்கிறேன்” என்றான் முண்டன். “கண்ணறிவதை கருத்தறியாது செய்வேன். கருத்தறிவதை களவென்றாக்குவேன். களவனைத்தும் நிகழச்செய்வேன். காலத்தை கலைத்தடுக்குவேன்.”
சொல்லிமுடிவதற்குள்ளாகவே நின்றிருந்த இடத்திலேயே ஒருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “இப்படி எப்போதுவேண்டுமேன்றாலும் இப்புவியின் ஒரு ஏட்டை என்னால் புரட்டிவிடமுடியும்…” என்றான். “இது நாளை. அரசி இன்று தலையில் குழல்சுருட்டிக் கொண்டையிட்டு செண்பகப்பூ சூடியிருக்கிறாள். அங்கே அஸ்தினபுரியில் கங்கைக்கரைக் கன்னிமாடத்தில் வாழும் மாயை குழல்நீட்டி குருதிகாத்திருக்கிறாள் என எண்ணியபடி அம்மலரை சூட்டிக்கொண்டாள்.”
மீண்டுமொருமுறை பின்னோக்கிச் சுழன்றுநின்று “நான் எங்கே விட்டேன்?” என்றான். நகுலன் “கால ஏட்டைப் புரட்டுகிறாய்” என்றான். “ஆம், கொடிது அது. மொத்தமும் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள்” என்றான் முண்டன். “முன்பு அதை ஏதோ கைதிருந்தா குழந்தை எடுத்து விளையாடியிருக்கிறது போலும். அரசே, நடுநூல் அறுந்துள்ளது. அடுக்குகுலைந்த ஏடுகளிடையே ஆயிரம் ஏடுகள் விடுபட்டுள்ளன என்று தோன்றும்.”
நகுலன் சிரித்து “காவியமும் கற்றுள்ளாய் போலும்” என்றான். அவன் கைகளை நக்கிக்கொண்டு “நற்செயல்கள் காவியமாக ஆவதுபோல் இன்னுணவு நறுமணமாக ஆகிறது என்பார்கள்” என்றான். உடனே ஏப்பம் விட்டபடி “ஆனால் சற்று மிகையானால் கீழ்க்காற்றாக ஆவதும் உண்டு” என்றான். தருமன் “சீ… இவனுடன் சொல்லாடுவதே இழிவென்று படுகிறது” என்றார். “ஆகாதா?” என்றான் முண்டன். தருமன் திரும்பி தன் அறைக்கு சென்றார். நகுலன் “வருக, மூத்தவரை மகிழ்விக்கும் சிலவற்றை சொல்க!” என்றான் நகுலன். “நான் என்னை மகிழ்விப்பதை மட்டுமே சொல்லும் வழக்கம் கொண்டவன்” என்றான் முண்டன். “சரி அதைச் சொல்!” என அவன் தலைமேல் கைவைத்து தள்ளிக்கொண்டு சென்றான் நகுலன்.
தருமனின் அறைக்குள் சென்றதும் நகுலன் “சினம் கொள்ளவேண்டாம், மூத்தவரே. அவனே சொன்னபடியே அவன் அனைத்துக்கும் கீழிருப்பவன். அங்கிருந்து நம்மை நோக்க அவனுக்கு உரிமை உண்டு” என்றான். “நான் பாதாளத்திற்குக்கூட சென்று நோக்குவேன்” என்றான் முண்டன். “அரசர் இப்போது நோக்கும் நூல் என்னவென்று நான் அறிவேன்.” தருமன் “என்ன நூல்? சொல்!” என்றார். “சௌரவேதம்” என்றான் முண்டன். தருமன் வியந்து “எப்படி தெரியும்?” என்றார். “உங்கள் உளம்பயின்று அறிந்தேன்” என்றான் முண்டன்.
“மேலுமென்ன பயின்றறிந்தாய்?” என்று தருமன் கேட்டார். “இதை சூரியமைந்தரான அங்கரின் வேதமாக நீங்கள் எண்ணுகிறீர்கள்” என்றான் முண்டன். “விளையாடுகிறாயா?” என தருமன் சீறினார். முண்டன் அஞ்சி நகுலனுக்குப்பின்னால் சென்று ஒளிந்துகொண்டான். “பொருட்படுத்தவேண்டாம், மூத்தவரே. இவனை ஒரு இனிய விளையாட்டுப்பொருளாக மட்டுமே எண்ணுக!” என்றான். தருமன் “அவன் அத்துமீறுகிறான்” என்றார்.
முண்டன் அஞ்சிநடுங்கி நகுலனுக்குப்பின்னால் பாதிமறைந்து ஒருகண் மட்டும் காட்டி “இனிமேல் இல்லை” என்றான். “என்ன இல்லை?” என்றார் தருமன். “இனிமேல் உண்மையை சொல்லமாட்டேன்” என்று முண்டன் சொன்னான் தருமன் சிரித்துவிட்டார். “இவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார். “உண்மைகளை நான் வேண்டுமென்றால் பொய்யாக்கிவிடுகிறேன்” என்றான் முண்டன். “அய்யோ” என தருமன் தலையில் அடித்துக்கொண்டார். “காவியமாக்குவதைவிட இது எளிது…” என்றான் முண்டன்.
“இவன் கால ஏட்டைப்புரட்டுவான் என்கிறான்” என்றான் நகுலன். சகதேவன் பின்னால் வந்து நின்று “அதை நாம் கண்களாலேயே காணமுடியும்” என்றான். திரௌபதியும் வந்து கதவருகே நின்று “என்ன இருந்தாலும் நாம் அவனை மட்டுமே நோக்கும்படி செய்துவிடுகிறான்” என்றாள். “காலத்தைப் புரட்டுவாயா?” என்றார் தருமன். “தெரியாமல் செய்துவிட்டேன்” என்றான் முண்டன். “எங்கே புரட்டு பார்ப்போம்” என்றார் தருமன். “எவருடைய காலத்தை?” என்றான் முண்டன். “மூடா, உன்னுடைய காலத்தைத்தான்…” என்றார் தருமன். “நீ என் கையால் அறைவாங்குவாயா இல்லையா என்று சொல்!”
“முன்னோக்கிச் செல்… நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துச் சொல்” என்றான் நகுலன். “ஆம்” என்று சொல்லி அவன் நான்குமுறை சுழன்று நின்று “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன். “என்ன?” என்றார் தருமன் திகைப்புடன். “எனக்கு பன்றிக்கறியிட்ட ஊன்சோறு அளிக்கப்படுகிறது.” நகுலன் சிரித்து “அதைவிட சற்றே முதன்மைகொண்ட சிலவற்றைச் சொல்லலாம்” என்றான். “அரசி, தேன்சேர்த்த கனிக்கூழை எனக்கு அளிக்கிறார்கள்.” நகுலன் “சரி, வேறு?” என்றான். “காட்டுக்குள் ஒரு யானை வந்து அகழிக்கு அப்பால் நின்று துதிதூக்கி நுண்மணம் கொள்கிறது. இரண்டு குரங்குகள் அதன் மேலே கிளையிலமர்ந்து அதை அச்சுறுத்தி துரத்துகின்றன. அதன் மேல் காக்கை எச்சம் வெண்சுண்ணமாக வழிந்துள்ளது.”
நகுலன் சலிப்புடன் “நன்று, அனைத்தையும் பொதுவாகவே உன்னால் சொல்லமுடியும் போலும். நீ விழைவது நிகழ்க!” என்றான். “தேன்பழக்கூழை தாடியும் முடியும் நீண்ட ஒரு விருந்தினருக்கு அளிக்கிறார்கள் அரசி” என்று முண்டன் சொன்னான். “அரசரை எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து கால்தொட்டு வணங்கிவிட்டு பீடத்திலமர்ந்திருக்கும் அவர் ஓர் இளமுனிவர் என எண்ணுகிறேன். இன்சுவையை அவர் அருந்துகிறார். அவர் கண்கள் வண்டுகள்போல ஒளிகொண்டிருக்கின்றன. கரிய சிறு உடல் குதிரைக்குட்டியின் இறுக்கம் கொண்டது.”
“அப்போது பெருங்குரல் எழுகிறது. பேருடலர் முன்னரே செய்தியறிந்து வந்திருக்கிறார். வந்த விரைவிலேயே இளமுனிவரை அவர் அள்ளி எடுத்துச் சுழற்றி தன் தோளிலேற்றிக்கொண்டு நடனமிடுகிறார். இருவரும் குடிலே அதிரும்படி நகைக்கிறார்கள். குரங்குகள் அதைக்கண்டு திகைக்கின்றன. ஓரிரு குட்டிகள் மட்டும் கிளையிறங்கி வந்து சுவர்விளிம்பில் அமர்ந்து அவர்களின் நடனத்தை விரும்பி நோக்குகின்றன.” தருமனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை கோத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார்.
“மற்ற குரங்குகள்?” என்றான் சகதேவன். “அவை இளமுனிவரை அஞ்சுகின்றன. அவர் தோள்களெல்லாம் தழும்பாக இருக்கின்றன. அவர் மாவில்லவராக இருக்கவேண்டும்.” தருமன் “என்ன சொல்கிறாய்?” என்று கூச்சலிட்டபடி ஓடிவந்து குள்ளனைப் பிடித்து உலுக்கினார். “என்ன சொல்கிறாய்? பார்த்தன் வரப்போகிறானா? நாளை மறுநாளா? உண்மையாகவா?” நகுலன் “நம் உள்ளத்தின் விழைவைத் தெரிந்துகொண்டு விளையாடுகிறான், மூத்தவரே” என்றான். “நான் விளையாடித் தெரிந்துகொள்பவன், அரசே” என்றான் முண்டன். “நீங்கள் அழுவதை காண்கிறேன். அரசி வாயிலருகே சாய்ந்து நின்று கண்ணீர் ஒளிவிட நோக்குகிறார். இவர்கள் இருவரும் அழுகையும் சிரிப்புமாக நின்றிருக்கிறார்கள்.”
“எப்படி அறிந்தாய்? சொல்?” என்றார் தருமன். “நான் நாட்களைப் புரட்டுகிறேன். முன்னால் சென்றால்தானே நீங்கள அஞ்சுகிறீர்கள். இதோ பின்னால் வருகிறேன்” என்றபடி அவன் எதிர்த்திசையில் சிலமுறை குதித்து “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன் எரிச்சலுடன். “அடுமனையில் புல்லரிசிக்கஞ்சி கொதிக்கிறது. புளிக்காய்த்துவையல் அரைக்கிறார் அரசி.” நகுலன் “சரி” என்றான். “புலி ஒன்று வருகிறது. குடிலை தொலைவில் நின்று நோக்கியபின் கோட்டுவாய் விரித்து தலையை உலுக்கி உடுக்கோசையாக காதடித்து திரும்பி பொத்துக்கால் வைத்து நடந்தகல்கிறது. அதன் மேல் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூடி கூச்சலிட்டு எம்பிக்குதிக்கின்றன. அதன் மேல் சுழலும் ஈக்கள் இளவெயிலில் ஒளிவிட்டு அனல்துளிகளாகின்றன.”
“உண்மை” என்றார் தருமன். நகுலன் அவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். “அரசர் சலிப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர் கீழிறங்கி தோட்டத்திற்குச் செல்கிறார். வெறும் கைகளுடன் புலியை தேடிச்செல்கிறார். புலிக்கால்தடத்தைத் தேர்ந்து சென்று கோமதிக்கரை நாணல்வெளியில் அப்புலியை காண்கிறார். ஏராளமான குரங்குக்குட்டிகள் புலியைச் சூழ்ந்து சீண்டி விளையாடுகின்றன. அவர்களுடன் சேர்ந்து பேருடலரும் ஆடிக்கொண்டிருப்பதை அரசமரத்திற்குப்பின்னால் நின்று நோக்குகிறார்.”
திகைப்புடன் “ஆம், இது நடந்தது!” என்றார் தருமன். “உண்மை! அப்படியென்றால் இளையோன் வரப்போவதும் உண்மை!” என்று கூவியபடி மீண்டும் அருகே சென்று “உண்மையிலேயே வந்துகொண்டிருக்கிறானா? எங்குள்ளான்?” என்றார். சகதேவன் “நான் முன்னரே அதைக் கணித்து அரசியிடம் சொல்லியிருந்தேன், மூத்தவரே. இந்த மழைக்காலம் அணுகுவதற்குள் விஜயர் திரும்பி வருவார்” என்றான். தருமன் நெஞ்சைப்பற்றியபடி மெல்ல பின்னடைந்து பீடத்திலமர்ந்தார். விழிகள் சுரந்து வழியலாயின. “வரப்போகிறானா? நலமாகத்தான் இருப்பான். எப்படி மாறியிருப்பான்?” என்றார். தலையை அசைத்து “என் இளையோன்… என் மைந்தன்! விஜயன்!” என்றார்.
விழிநீரை சுட்டுவிரலால் துடைத்தபடி மூக்கை துடைத்தார். “எவ்வண்ணம் ஆகியிருந்தாலும் அவன் பார்த்தன். எப்படி இருந்தாலும் நம் உடன்குருதியன்” என்றார். “ஆம் மூத்தவரே, அவர் என்றும் நம் காவலர்” என்றான் நகுலன். “சற்று முன் சேர்ந்து உணவுண்ணும்போது ஒரு கணம் சவுக்குச் சுண்டுதல் போல அவ்வெண்ணம் வந்தது என்னுள். ஒரு கை குறைகிறது என்று. ஒன்றுகுறைந்தாலும் நாம் முழுமையர் அல்லர் என்று. தெய்வங்களே, மூதாதையரே, என் நெஞ்சக்கனலை நீர் கண்டீர்.” பெருமூச்சுடன் மலர்ந்து “தேவி, இளையவன் வரப்போகிறான்…. நம்முடனிருக்கப்போகிறான்!” என்றார். திரௌபதி புன்னகையும் கண்ணீருமாக “ஆம்” என்றாள்.
முண்டன் மீண்டும் இருமுறை சுழன்று நின்று நிலைகொள்ளமுடியாமல் மீண்டும் மீண்டும் சுழன்றான். “என்னால் நிறுத்தமுடியவில்லை. ஏடுகள் புரள்கின்றன, அரசே” என்று கூவினான். மிகவிரைவாகச் சுழன்றபோது அவன் ஒரு காற்றாடிபோல கண்ணுக்குத் தெரியாதவனானான். அப்படியே எம்பி சாளரம் வழியாக வெளியே தெறித்து அலறியபடி கீழே சென்றான். அவர்கள் ஓடிச்சென்று நோக்க கீழே சாலமரத்திலிருந்து சென்ற கொடி ஒன்றில் தொற்றி ஆடி மீண்டும் சுழன்று கீழே விழுந்து “ஆ!” என்றான்.
“என்ன?” என்றார் தருமன். “நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இங்கே எல்லாமே வேறுவகையில் உள்ளன. மிகப்பெரிய அரண்மனைகள் செறிந்த தெருக்கள். வணிகர்களின் பெருவண்டிகள். இது ஒரு நகரம்…” நகுலன் “அதன் பெயரென்ன?” என்றான். அவன் “கேட்டுச்சொல்கிறேன்” என்றபின் “இது பாடலிபுத்திரம் என்கிறான்” என்றான்.
“பாடலிபுத்திரமா? எங்குள்ளது அது?” என்றான் சகதேவன். “கங்கைக் கரையில். கங்கையில் பெருநாவாய்கள் பாய்த்தொகை புடைக்க சென்றுகொண்டிருக்கின்றன. இது மகதர்களின் தலைநகர்.” நகுலன் “மகதர்களின் தலைநகர் ராஜகிருஹம் அல்லவா?” என்றான். “அப்படியா?” என்றான் முண்டன். சகதேவன் “ராஜகிருஹத்தைப்பற்றி கேட்டுச் சொல்” என்றான். “ராஜகிருஹம் கைவிடப்பட்டது. தாம்ரலிப்தி மண்மூடி அழிந்ததுமே அதுவும் பொருளிழந்தது” என்றான். சகதேவன் பெருமூச்சுவிட்டு “நன்று” என்றான்.
“இந்திரப்பிரஸ்தம் பற்றி கேள்” என்றார் தருமன். “வேண்டாம்” என்று சகதேவன் உரக்க சொன்னான். “ஏன்?” என தருமன் திரும்ப “வேண்டியதில்லை” என்று சகதேவன் உறுதியுடன் சொன்னான். தருமன் “அஸ்தினபுரி பற்றி…” என கேட்கத்தொடங்கியதும் சகதேவன் “அதுவும் வேண்டியதில்லை” என்றான். திரௌபதி “ஆம், வேண்டியதில்லை” என்றாள். தருமன் அவளை புரியாமல் திரும்பி நோக்கினார். “துவாரகை குறித்து..” என சொல்லெடுத்த பின் தருமன் அடக்கிக்கொண்டார்.
“அய்யய்யோ அய்யய்யோ” என்று முண்டன் அலறினான். “என்ன ஆயிற்று எனக்கு? பித்தனாக ஆகிவிட்டேன் போலும்….” நகுலன் “என்ன?” என்றான். “நான் ஏட்டுச்சுவடிகளை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆ, ஏட்டுச்சுவடியில் இருப்பவர்கள் என்னிடம் பேசுகிறார்கள்.” கைதூக்கி அனலில் நிற்பவன்போல துள்ளி “காப்பாற்றுங்கள். எனக்கு என்னவோ ஆகிவிட்டது. மருத்துவர்கள் எங்கே?” என்று கூச்சலிட்டான். நகுலன் “யார் உன்னிடம் பேசுகிறார்கள்?” என்றான். “நீங்களெல்லாம்தான்… இவையெல்லாம் ஜயசேனர் எழுதிய கல்யாணசௌகந்திகம் என்னும் நூலில் உள்ளவை!” என்றான் முண்டன். “எவை?” என்றான் நகுலன். “இதோ நான் பேசுவது உட்பட அனைத்தும்” என்றான் முண்டன்.
முண்டன் விம்மியழுதபடி “என்ன செய்வேன்…? நான் இந்நூலில் இருந்து வெளியே தெறித்து வந்துவிட்டேன்…. என்னை உள்ளே இழுங்கள்” என்றான். தருமன் “பித்தனைப்போல் பேசுகிறான்” என்றார். முண்டன் “உயிருடன் நூலுக்குள் புகமுடியுமா? பாண்டவர்கள் காவியத்திற்குள் பிறந்தார்கள் என்கிறார்களே… நேரடியாகவே நூலுக்குள் ஐந்து குட்டிகள் போடப்பட்டிருக்கின்றன” என்றபடி தவித்துப் பரிதவித்து காற்றிலேயே முட்டிமோதி “அய்யய்யோ, வழியே இல்லையே. எல்லா பக்கங்களையும் உரையெழுதி மூடிவைத்திருக்கிறார்களே மூடர்கள்” என்றான்.
அவனுக்குப்பின்னால் ஒரு பெருங்குரங்கு வந்து இறங்கியது. “யார் நீர்?” என அவன் திடுக்கிட்டுத் திரும்பி கேட்டான். அது “ர்ர்ர்” என்றது. அவன் அலறியபடி மீண்டும் பலசுழற்சிகளாக எழுந்து சென்றதுபோலவே மீண்டு அறைக்குள் வந்தான். “அனுமன்! அனுமன்!” என்றபின் கண்களைத் திறந்து “ராமகதைக்குள் விழுந்துவிட்டேனா? என்ன இது? இங்கிருந்து ஏதாவது வேதத்திற்குள் சென்றுவிழுந்தால் வாய் ஓயாத பெருந்தவளையாக ஆகிவிடுவேனே?” என்றான். நகுலன் அவனை உலுக்கி “விழித்துக்கொள்” என்றான்.
முண்டன் தலையைத் தட்டியபடி “என்ன ஆயிற்று?” என்றான். “நீ எங்கோ சென்றாய்” என்றான் நகுலன். “ஆம், ஒரு நூலுக்குள்… அல்லது நூலில் இருந்து வெளியே வந்தேனா?” சகதேவன் “அந்த நூல் எது?” என்றான். “அது ஒரு இன்பச்சுவைக் காவியம்… ஜயசேனர் அதை உக்ரசிரவஸ் சௌதி பாடிய பாரதப்பெரும்பாடல் என்னும் நாவுரை காவியத்திலிருந்து எடுத்து விரிவாக்கியிருக்கிறார். உக்ரசிரவஸ் சௌதி தன் பாடல்களை வைசம்பாயனரும் பைலரும் சுமந்துவும் ஜைமினியும் எழுதியவற்றைக் கொண்டு அமைத்தார். அவர்கள் மகாவியாசராகிய கிருஷ்ண துவைபாயனரின் மாணவர்கள். அவர் எழுதிய வெற்றிக்காவியத்தை அவர்கள் விரித்தெழுதினார்கள்.”
“வியாசர் உண்மையில் சூதர்கள் பாடியதைக் கேட்டுத்தான் எழுதினார். சூதர்கள் வேறு சூதர்கள் பாடியதைக் கேட்டு பாடினர். வேறு சூதர்கள் மக்கள் சொன்னதைக் கேட்டு பாடினார்கள். மக்கள் பிறர் சொன்னதைக் கேட்டு சொன்னார்கள். அந்தப் பிறர் மேலும் பிறர் சொன்னதைக்கேட்டு சொன்னார்கள். அந்த மேலும் பிறர் பொதுவாக சொல்லப்பட்டதைக் கேட்டு சொன்னார்கள். உண்மையில் அவர்கள்…” என்று அவன் சொல்ல இடைமறித்த சகதேவன் “நன்று. நீ சென்று ஓய்வெடுக்கலாம்” என்றான். முண்டன் கைதூக்கி சோம்பல் முறித்து “உணவருந்திவிட்டு ஓய்வெடுப்பதே என் வழக்கம்” என்றான்.
திகைப்புடன் “இப்போதுதானே உணவருந்தினாய்?” என்றான் நகுலன். :”நான் அப்படி முறைமைகளை கைக்கொள்வதில்லை” என்றபின் முண்டன் திரௌபதியிடம் “அரசி, மீண்டும் அன்னமிட உங்கள் உள்ளம் எண்ணுவதை அறிகிறேன்” என்றான். திரௌபதி சிரித்து “வா” என்றாள். “உணவிடச்செல்லும் பெண்கள் பேரழகிகள். உணவுடன் வருகையில் அவர்கள் மேலும் அழகியராகிறார்கள்” என்றபடி முண்டன் அவளைத் தொடர்ந்து சென்றான். கீழே கிடந்த தாலமொன்றை காலால் தட்டி மேலெழுப்பி கையிலேற்றி சுட்டுவிரல்முனையில் சுழற்றியபடி “பாண்டவனே கேளாய்… அறநிலையாகிய குருநிலையில்..” என்று சொன்னபடி போனான்.
“பெருநடிகன்” என்றான் நகுலன். “நடிக்கும்போது நடிக்கப்படுவதாக மாறிவிடுகிறான். மானுடன் எப்படியும் தன்னை ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றான் சகதேவன். தருமன் “அவன் சொல் பொய்க்காதென்று என் உள்ளம் சொல்கிறது. இளையோன் வரவிருக்கிறான்” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
February 2, 2017
மாமங்கலையின் மலை- 3
[image error]
ஷிமோகா ரவி கோவையைச் சேர்ந்த நண்பர் அவர் குடும்பத்திற்குச் சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று ஷிமோகாவில் அமைந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு அது அரசியல் நிர்வாகக் காரணங்களால் மூடப்பட்டுவிட்டது. நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவ்வழக்கு முடிந்து இப்போது அந்த ஆலையும் அதைச் சார்ந்த நிலங்களும் விற்பனைக்கு உள்ளன. வழக்கை நடத்தி இவ்விற்பனையை முடிக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக ரவி பெங்களூரிலும் ஷிமோகாவிலும் தங்கியிருக்கிறார். ஆகவே நண்பர் வட்டாரத்தில் அவர் ’ஷிமோகா ரவி’ என்றே அழைக்கப்படுகிறார்.
எங்கள் சமண பயணத்தின் போதுதான் ரவி அறிமுகமானார். நாங்கள் அன்று ஷிமோகாவை அடைந்த போது எங்களை சந்தித்து அனைவருக்கும் கம்பளிப் போர்வைகளும் சட்டைகளும் பலநாட்களுக்குத் தேவையான உணவும் அளித்தார் அதன் பின் இன்று வரை விஷ்ணுபுர அமைப்பின் உள்வட்ட நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். ஆ.மாதவனுக்கு விருதளித்த விழாவின்போது நண்பர் கே.பி.வினோதை ரயில்நிலையம் சென்று காரில் அழைத்துவந்தார் ரவி. அறைக்கு பெட்டியையும் கொண்டுசென்று வைத்தார். வினோத் அளித்த ஐம்பது ரூபாய் டிப்ஸையும் ‘சரீங்’ என்று வாங்கிக்கொண்டார்
[image error]
ஷிமோகாவுக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது இரவு பதினோரு மணி தாண்டிவிட்டிருந்தது. அவருக்குத் தெரிந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம். பன்னிரண்டு மணிக்குத்தான் சர்க்கரை ஆலையின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். சென்றதுமே எனக்குத் தூக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது. மின்னஞ்சல்களைப்பார்த்துவிட்டு உடனே படுத்துவிட்டேன். அதன் பிறகு தான் நண்பர்களின் பேச்சுக் கச்சேரி ஆரம்பித்து இரவு இரண்டு மணிவரைக்கும் கூட தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜமாணிக்கம் அவரது தொழிலில் சந்தித்த மயிர்க்கூச்செரியும் பேய்க்கதைகளை சொன்னதாக கேள்விப்பட்டேன்.
பயணத்தில் பேய்க்கதைகள் மிக நல்ல விளைவைஉருவாக்கும். ஏனெனில் புதிய இடத்தில் சரியாக தூக்கம் வராது. புதிய அயல் ஓசைகள் கனவுகளாக வந்து கொண்டே இருக்கும் அடிமனதில் பேய்க்கதைகளும் இருந்தால் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமான கனவுகளை அடைய முடியும். மறுநாள் செல்வேந்திரனின் கண்கள் டாஸ்மாக் வாடிக்கையாளர் போல தெரிந்தன.’’தூங்கவே இல்லை ஜெ, ஒரே பேய்க்கனவு’’ என்று பீதியுடன் சொன்னார். ’’எஞ்சிய பேய்க்கனவை காண்பதற்கு உகந்த நிலத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்று நான் சொன்னேன்.
[image error]
காலையில் எழுந்து ஒரு வழியாகக் கிளம்ப ஏழரை மணி ஆகிவிட்டது. செல்லும் வழியிலேயே ஒரு உணவகத்தில் கர்நாடக பாணியிலான சிற்றுண்டி அருந்தினோம். ’பன்சு’ என்று இப்பகுதியில் சொல்லப்படும் உள்ளூர்ரொட்டி எனக்கு மிகப்பிடித்தமானது அரைத்தித்திப்புடன் இட்லியா, பழைய ரொட்டியா இல்லை சற்று நமத்துப் போன அதிரசமா என்றெல்லாம் சந்தேகம் வரும்படி இருக்கும். வழி நெடுகிலும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சென்றோம்.
ஷிமோகா – கொல்லூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது நகரா என்னும் ஊர். இங்குள்ள கோட்டை சாலையிலேயே எங்களை எதிர்கொண்டது. வரலாற்றில் இது பிடனூர் கோட்டை என்று அறியப்படுகிறது. கேளடி வம்சத்தின் தலைநகராக பிடனூர் இருந்திருக்கிறது. பிற்கால நாயக்கர் வரலாற்றில் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் பல்வேறு சிற்றரசர்களான நாயக்கர்குலங்கள் இருந்தன. 1565 ல் விஜயநகரம் அழிக்கப்பட்டுவிட்டபிறகு இந்த ஒவ்வொரு நாயக்கர் குலமும் தனியரசுகளாக மீண்டும் நூறாண்டுகள் நீடித்தன. தமிழகத்தில் செஞ்சி, மதுரை, தஞ்சை என மூன்று நாயக்கர் ஆட்சிகள் அப்போதிருந்தன. பிற இரண்டும் அழிந்து தான் மதுரை நாயக்கர்கள் 1736 ல் சந்தாசாகிப் ராணி மீனாட்சியை வெல்வது வரை நீடித்தது. கர்நாடகத்தில் அப்படி நீடித்த நாயக்க சிற்றரசுகளில் ஒன்று இக்கேரி நாயக்கர் குலம்.
[image error]
இக்கேரியை 1645ல் பீஜப்பூர் சுல்தான் படைகள் தாக்கியபோது அவர்கள் அதை கைவிட்டுவிட்டு வந்து பிடனூரில் தங்கள் தலைநகரத்தை அமைத்துக் கொண்டனர். வீரபத்ர நாயக்கர் பிடன்னூரில் ஒரு மண்கோட்டையைக் கட்டினார். அதை அவருடைய மருமகனும் வாரிசுமான சிவப்ப நாயக்கர் இப்போதிருக்கும் வடிவில் கட்டினார். சாலையோரமாகவே அமைந்திருக்கிறது இந்த பெருங்கோட்டை. இப்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
பிடன்னூரை நடுத்தர அளவான கோட்டைகளில் ஒன்று என்று சொல்லலாம். பீரங்கி வைப்பதற்குரிய வாய்கள், வீரர்கள் ஒளிந்திருக்கக்கூடிய விளிம்பிதழ்கள் கொண்ட கோட்டை இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் சேற்றுப்பாறைகளினால் ஆனது. அப்பாறை அதிகமாக கிடைத்ததனால்தான் இந்தக்குன்றின்மேல் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றியது. உள்ளே நிலமும் அதே பாறையினால் ஆனது. மையமாக அனைத்து திசைகளுக்கும் திருப்பு வசதி கொண்ட பீரங்கியை நிறுத்தும் வட்ட வடிவமான மேடை ஸ்தூபி போல எழுந்திருந்தது. உள்ளே கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு சிறு அனுமார் ஆலயம் மட்டுமே இருந்தது. நாங்கள் வருவதைக் கண்டு உள்ளிருந்து காதல் இணை ஒன்று முகங்காட்டாமல் கிளம்பிச் சென்றது.
[image error]
காலையில் வரலாறு நிறைந்து கிடக்கும் ஒரு கோட்டைக்குள் செல்வது உகந்த மனநிலையை உருவாக்கியது. கழிவிரக்கமும் கனவும் கலந்த ஒரு நிலை. அன்றாட வாழ்க்கையின் அனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்ல அது வழிவகுத்தது. கோட்டையில் எங்களைத்தவிர அப்போது எவருமே இல்லை என்பதும் அக்கனவில் நீடிக்க வழிவகுத்தது.
மேற்கு கடற்கரைக்கு வரும் மலைப்பாதைகள் அனைத்தையும் படை நிறுத்தி பாதுகாத்தமையால் இப்பகுதியை சுதந்திரமாக ஆள நாயக்கர்களால் முடிந்தது. அன்றே இப்பகுதியின் பாக்கு புகழ் பெறத் தொடங்கியிருந்தது. அதை கழுதைப் பாதை வழியாக தெற்கே கோழிக்கோடு அருகில் போப்பூ என்னும் துறைமுகம் வரை கொண்டு செல்ல முடிந்தது. அது இக்கேரி நாயக்கர்களுக்கு நிதி ஆதாரமாக அமைந்தது.
[image error]
இக்கேரி நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் தான் மேற்கு கடற்கரையின் இப்பகுதியில் உள்ள கோட்டைகள் அமைந்தன. மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே என்ற பாடலில் காணப்படும் புகழ் பெற்ற கடல்கோட்டையாகிய பேக்கல் இக்கேரி நாயக்கர்களின் தெற்கு எல்லைக்கோட்டைகளில் ஒன்று. தன் பாக்கு வணிக வழிகளைப்பாதுகாப்பதற்கே பேக்கல் வரைக்கும் கோட்டைகளைக் கட்டி படைகளை நிறுத்தியிருந்தார். கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகாலம் கேளடி வம்சம் இப்பகுதியில் ஆட்சி செய்தது.
1763ல் மைசூர் சுல்தான் ஹைதர் அலி இக்கோட்டையைக் கைப்பற்றினார். இது ஹைதர் நகர் என்று பெயர் மாற்றப்பட்டது. காலப்போக்கில் வெறும் நகரா என்று அது அழைக்கப்பட்டது.
1672 முதல் 1697 வரை பிடன்னூரை ஆண்ட கேளடி சென்னம்மாஜி கர்நாடக வரலாற்றின் முக்கியமான அரசிகளில் ஒருவர். அவரது கணவர் சோமசேகர் நாயக்கர் குலப்பூசல்களில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார் தொடர்ந்து சென்னமா ராணி ஆட்சிக்கு வந்தார். கால்நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த சென்னமாஜி பெருவீரமும் கருணையும் கொண்டவர். அவரைப்பற்றி நாட்டார் பாடல்கள் விதந்து பாடுகின்றன. பசவப்ப நாயக்கரை தன் வளர்ப்புமகனாக எடுத்து வளர்த்தார். அவரது இறப்புக்குப்பின் பசவப்ப நாயக்கர் அரசரானார்
கேளடி சென்னம்மாஜி மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்கவர். சொக்கநாதரின் மறைவுக்குப்பின் ராணி மங்கம்மாள் பதவிக்கு வந்தாள். இன்றைய தென்தமிழ் நாட்டை உருவாக்கியவர் அவரே. உட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் என்பதை அவர் காட்டினார். பெரும்பாலும் சமரசங்கள் பேச்சு வார்த்தைகள் வழியாகவே நிகழ்ந்த அரசு அது. தென்தமிழ் நாட்டின் மாபெரும் சந்தைகளையும் வணிகப்பாதைகளையும் அமைத்து இன்றிருக்கும் சிவகாசி கோவில்பட்டி விருதுநகர் போன்ற பல நகரங்கள் எழுந்து வரக்காரணமாக அமைந்தவர் ராணி மங்கம்மாள் .இன்று வரை தெற்கத்தி நெடுஞ்சாலை மங்கம்மா சாலை என்று தான் அழைக்கபப்டுகிறது.
[image error]
சென்னம்மாஜியும் மேற்கு கடற்கரைப்பகுதியின் வணிக வளச்சியிலேயே அதிகமும் கவனம் செலுத்தினார். உட்பூசல்களை பேச்சு வார்த்தை மூலம் தடுத்தார். படையெடுத்து வந்தவர்களை கப்பமோ லஞ்சமோ கொடுத்து திருப்பி அனுப்பினார். 1685ல் சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பின் படைகளிடமிருந்து தப்பி தென்னகம் வந்தபோது இந்தக் கோட்டையில் அவருக்கு சென்னம்மாஜி அடைக்கலம் கொடுத்தார்.
பெரும்பாலும் வணிக,நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியைப்பொறுத்தவரை இது தற்கொலைக்கு நிகரான நடவடிக்கை. ஏனெனில் இஸ்லாமிய பெரும்படையின் சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இக்கேரி நாயக்கர்களுக்கு அன்று இருக்கவில்லை. ஆனாலும் அரசியின் தாய்மையின் கருணையாலும் ராஜாராமைத் தவிர்க்க முடியவில்லை. ஔரங்கசீப்பின் படைகள் இந்ந்கரை கைப்பற்றின ராஜாராம் தப்பி தஞ்சைக்கு ஓடினார். சென்னம்மா ராணி பெரும் கப்பத்தை ஔரங்கசீப்பூக்கு கட்ட வேண்டியிருந்தது.
[image error]
நாயக்க அரசுகளின் வரலாற்றில் குலப்பூசல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உண்மையில் விஜயநகரத்தை வீழ்த்தியதே குலப்பூசல்கள் தான், அந்தக்கால அரசியலை வைத்து இப்பூசல்களைப்புரிந்து கொள்ளலாம் . நாயக்கர்கள் தொல் சிறப்பு கொண்ட அரசகுடியினர் அல்ல. மத்திய ஆந்திர நிலத்திலும் வடக்கு கர்நாடகத்திலும் வாழ்ந்திருந்த பல்வேறு மேய்ச்சல்நில மக்கள் காலப்போக்கில் போர்க்குலங்களாக மாறி சிறு அரசுகளை அமைத்தனர். அவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே நாயக்கர்பேரரசு.
அதற்குக் காரணம் அன்றைய அரசியல்சூழல். 1311ல் மாலிக்காபூரின் பெரும்படை வந்து தெற்கு நிலத்தின் அனைத்து அரசுகளையும் அழித்து சூறையாடி ராமேஸ்வரம் வரைக்கும் வந்து மீண்டது. புகழ் பெற்றிருந்த அனைத்து மன்னர் குலங்களும் அழிக்கப்பட்டன. அந்த இடைவெளியை நிரப்பியபடி எழுந்து வந்தது நாயக்கர்களின் அதிகாரம். இஸ்லாமிய ஆட்சியின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக வேறு வழியில்லாமல் ஒருங்கிணைந்து அவர்கள் விஜயநகரத்தை உருவாக்கினர்.பொது எதிரி வலுவாக இருந்தவரைத்தான் அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தனர். நாயக்கர்களின் ஆட்சிமுறையே மையத்தில் பலவீனமான ஒர் இணைப்பும் தனியலகுகளின் சுதந்திரமும்தான்.
[image error]
அவ்வொருங்கிணைப்பை நிகழ்த்தியதில் சிருங்கேரி மடத்தின் தலைவராக இருந்த வித்யாரண்யர் எனும் மாதவரின் பங்கு பெரும் முக்கியத்துவம் கொண்டது. துங்கபத்ரா கரையில் இருந்த ஆனைக்குந்தி என்னும் சிற்றரசின் ஆட்சியாளர்களான ஹரிஹரும் புக்கரும் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தை அமைத்தனர். மெல்ல பிற நாயக்கர்களையும் சேர்த்துக்கொண்டு பேரரசாக ஆயினர்
ஆனால் இத்தகைய பேரரசுகளில் முதன்மை அரசகுலம் மிகத் தொன்மையானதாகவும். பிறர் எவருக்குமில்லாத தொன்மங்களின் பின்புலம் கொண்டதாகவும் இருக்கும்நிலையில் மட்டுமே அதிகாரப் பூசல்கள் மிஞ்சிப்போனால் அக்குடும்பத்துக்குள் மட்டுமே நிகழும்படி இருக்கும். பிற சிறு அரச குலங்களைச் சேர்ந்த எவரும் பேரரசருக்கு எதிராக பூசலிடமாட்டார்கள். பிறரை மக்களும் மற்ற சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே காரணம். ஆதிக்கப்பூசலைக்கூட ஒரு அரசகுல வாரிசை முன்வைத்தே செய்தாகவேண்டும்
[image error]
உதாரணமாக சோழ அரசகுலம் தொன்மப் பின்புலம் கொண்டது. முற்காலச் சோழர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே தமிழகத்தில் பூம்புகாரையும் உறையூரையும் தலைமையாகக்கொண்டு ஆண்டவர்கள். இருநூற்றைம்பது ஆண்டு காலம் களப்பிரர் ஆட்சியில் சோழர்குலம் சிதறடிக்கப்பட்டாலும் கூட சோழ அரசகுலம் அதன் குருதித் தூய்மையுடன் எப்போதும் பேணப்பட்டது. ஆகவே மீண்டும் விஜயாலய சோழன் வழியாகச் சோழ அரசகுலம் தமிழகத்தில் அரசியல் விசையாக எழுந்து வந்தபோது அவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை. இறுதியாக 1279ல் பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும் வரை சோழ அரசகுலத்திற்கெதிரான பூசல்கள் எதுவும் சோழப்பேரரசுக்குள் வரவேயில்லை.
மாறாக ஹரிஹரர்- புக்கருக்குப் பின் புக்கரின் மைந்தர் குமார கம்பணரின் காலத்திலேயே அவருக்கெதிராக பிற நாயக்கச் சிறுமன்னர்களின் எழுச்சிகளும் உட்சதிகளும் நிகழத்தொடங்கின. நாயக்க அரசர்களில் மிகப்பெரும் வல்லமை கொண்டவராகிய கிருஷ்ணதேவராயருக்கெதிராகவே அவருடைய உயிர் நண்பராகிய நாகமநாயக்கர் அதிகாரக் கிளர்ச்சியை தொடங்கினார். கிருஷ்ண தேவராயரின் படைகளுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிய அவர் கிருஷ்ண தேவராயருக்கெதிராகவே மதுரையை தனி நாடாக அறிவித்தார். நாகம நாயக்கரின் சொந்த மகனாகிய விஸ்வநாத நாயக்கரை அனுப்பி கிருஷ்ண தேவராயர் மதுரையை வென்றார்.
[image error]
விஸ்வநாத நாயக்கருக்கே மதுரையை அளித்து அவர் அதை தனி நாடாக ஆண்டு கொள்ளலாம் என்று கிருஷ்ண தேவராயர் அனுமதி அளித்ததாக வரலாறு சொல்கிறது. அதன்வழியாக அவர் மாபெரும் எதிரி ஒருவர் உருவாகாமல் தடுத்தார். கிருஷ்ண தேவராயரின் மகன் திருமலைராயர் அவருடைய அமைச்சராகிய சாளுவ திம்மராசுவால் கொல்லப்பட்டார். அக்கொலை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தையே அழித்தது.
நாயக்கர்கள் என்று நாம் பொதுவாக சொன்னாலும் கூட அவர்கள் ஒரு ஜாதியோ ஒரு குலமோ அல்ல. நாயக்கர்கள் என்றால் படை வீரர்கள் என்றே பொருள். உள்ளே காப்பு ,கம்மா, கம்பளர் போல பல ஜாதிகளும் ஆரவீடு ,கொண்டவீடு போன்ற குலங்களும் உண்டு. வெளியே இருந்து கொண்டு அந்தப்பெரும் தொகுதியின் உட்பிரிவுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு சு.வேங்கடேசனின் காவல் கோட்டத்தில் இவை விளக்கப்பட்டுள்ளன.
கோட்டைக்குள் சென்று வறண்டு செந்நிறம் இளவெயிலில் பூத்துக் கிடந்த மலைச்சரிவில் ஏறி பீரங்கி மேடையில் சென்று அமர்ந்தோம் இவ்வருடம் அனேகமாக மழையே இப்பகுதியில் பெய்யவில்லை. இந்தியாவில் அதிகமாக மழைபெறும் நிலங்களில் ஒன்று மேற்குக் கடற்கரை. நூறாண்டுகளுக்குப்பின்பு தான் இந்த வறட்சி வந்திருக்கிறது புற்கள் கருகி பாலைவன தோற்றம் காட்டியது. அனைத்து புகைப்படங்களிலும் பசுமையின் வெவ்வேறு அழுத்தங்களானதாக இந்நிலப்பகுதி பதிவாகியிருக்கிறது. ஒருவேளை இக்காட்சியை மீண்டும் காண இன்னொரு நூறாண்டுகள் ஆகக்கூடும்.
இருந்தும் தொலை தூரம் வரை தெரிந்த மரங்களும் காடுகளும் பசுமையையே காட்டின. இங்கு தொல் பொருட்கள் எதுவுமில்லை. தொல்லியல் துறையின் காவலோ பேணலோ இல்லை. ஒரு உடைந்த பீரங்கிமட்டுமே அக்காலத்தின் அடையாளமாகக் கிடக்கிறது. சென்ற காலத்தை அசைத்துப்பார்க்க முடியுமா என்று செல்வேந்திரனும் ராஜமாணிக்கமும் முயன்றனர். சற்று நேரத்தில் திரும்பி வந்து “ஒரு அணுகூட அசைக்க முடியவில்லை அண்ணா” என்றார் ராஜமாணிக்கம். என்னால் அசைக்க முடிந்திருந்தால் கூறுகெட்ட அரசர்களுக்கு பதிலாக சின்னம்மாஜியையும் ராணி மங்கம்மாளையும் ராணி ருத்ரம்மாவையும் மட்டும் இந்நாட்டை ஆளச்சொல்லியிருப்பேன் என்று எண்ணிக்கொண்டேன்
[image error]
சக்தி கிருஷ்ணன், கிருஷ்ணன், ஷிமோகா ரவி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அறம் வாசிப்பு -பிரவீண்குமார்
அறம் (உண்மை மனிதர்களின் கதை)
ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. ஜெமோவின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
இங்கு எழுத்து என்று எழுதப்படும் அனைத்துமே எழுதுபவரின் கதையோ அவர் பார்த்து, கேட்டு அனுபவித்த கதைகளோ தான். புனைவுகளில் கூட அவர்களது வாழ்வின் அனுபவங்களும், உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும். தனது சொந்த வாழ்வினூடே தான் அந்த புனைவுலகம் கட்டமைக்கப்படும். மிகுந்த யோசனையோடு தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். 400 பக்கம் என்பது சற்று மலைப்பாகத்தான் இருந்தது, ’அறம்’ என்ற முதல் கதையின் இரண்டாம் பக்கத்தை தாண்டும்வரை. அதன்பின்னர், அந்த தொகுப்பை வாசிப்பது சுவாசத்தை போல இயல்பாய் நடந்துக்கொண்டேயிருந்தது.
இதிலுள்ள ஒவ்வொரு கதை குறித்தும் ஒரு திறனாய்வு கட்டுரை வடிக்கலாம். ஒரு கதை என்பது அது நடந்த காலத்தை பிரதிபலிக்க வேண்டும். இன்னும் நூறு வருடம் கடந்து வாசிப்பவர்க்கும் அந்த காலக்கட்டம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சிறந்த குறிப்பாக அமைய வேண்டும். அந்த வகையில் இந்த தொகுப்பு ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் குறிப்பிட்ட காலகட்டத்தையும், மனித மனங்களையும் தெளிவாக உணர்த்தும்.
அறம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை; அந்த காலங்களில் எழுதுபவர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருந்தது என்பதை அழகாய் உணர்த்தும் கதை. இணையமும், தொழில்நுட்பமும் பெருகிய இக்காலத்தில் ஒரு அரைப்பக்கம் எழுதுவதற்கே மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கும் நிலையில், பல்வேறு புத்தகங்களின் மூலம் குறிப்பெடுத்து நூறு புத்தகங்கள் எழுதுவதெல்லாம் நிச்சயம் !!!! தான். மேலும், அந்த காலத்தில் எழுத்துக்கு இருந்த மரியாதையும் கவனிக்கத்தக்கது.
எப்போதுமே எழுதுபவன் தான் ஏழையாக இருந்து வருகிறான், அதை வியாபாரமாக்கியவன் செழித்தே வாழ்கிறான். அவர் அந்த அம்மாவிடம் சென்று முறையிட்டதும் அந்த அம்மா கணவனுக்கு பயந்து அந்த விஷயத்தை அப்படியே விட்டிருக்கலாம், ஆனால் அவள் சரஸ்வதிக்கு பயந்தாள். கல்வி செல்வத்தின் மதிப்பறிந்தவளாய் இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இப்படி சொல்கிறாள், ”லச்சுமி வருவா போவா..சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துதான் கண்ணு பாப்பான்னு சொல்வாங்க..” ஆம். அப்படித்தான்!!!
வணங்கான்
வணங்கான் என்பது வெறும் ஒரு பெயர் என்று நினைத்தால், நாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நம்மை அறியவில்லை என்றே அர்த்தம். ’வணங்கான்’ தான் கதைசொல்லி. இல்லை இல்லை, உண்மைசொல்லி. இதில் மூன்று தலைமுறைகளின் வாழ்வும் மனவோட்டமும் மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. வணங்கானின் தாத்தா வாழ்ந்த காலம், வணங்கானின் அப்பா காலம், வணங்கானின் பிள்ளைகள் காலம். எப்படி ஒருவனின் உழைப்பு அவனை உயர்த்துகிறது. எப்படி ஒருவனின் எழுச்சி அவனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அடைப்பட்டு, அடைக்கப்பட்டு கிடந்தவன் வெகுண்டெழுந்தால் என்னவாகும் என்று விரிவாய் பேசுகிறது இந்த கதை. ஒரு சமூகம் எவ்வாறு நசுங்கி கிடந்தது, அது எப்படி நசுக்கப்பட்டது குறித்த ஒரு மினி வரலாறே இந்த வணங்கான். இந்த கதை மிக அதிக அளவில் படிக்கப்பட வேண்டும். நமக்கு தெரியாமலையே நம்மை பீடித்திருக்கும் அடிமை சங்கிலியை அறுத்தெறிய வேண்டும்!!
யானை டாக்டர்
என்னுடைய ஒரே கோரிக்கை இந்த கதையை எப்படியேனும் வாசித்துவிடுங்கள் என்பதே. இது ஒரு நாவலாக வந்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஒரு நாவலுக்கு என்னென்ன டீடெய்லிங்க் தேவையோ அது அனைத்தும் இதிலிருக்கிறது. இதை படிக்கும்போது சில சமயங்களில் நாம் அந்த வன அலுவலராய் மாறிவிட துடிப்போம், சில இடங்களில் டாக்டர் கே -யாக மாறிவிடுவோம். ஜெமோ, சாரு போன்றோரின் எழுத்துக்களை வாசித்தால் மனிதர் மீது வன்மம் தோன்ற வாய்ப்பிருக்கிறது, ஆனால் சத்தியமாக விலங்குகளை பற்றிய புதிய பார்வை தென்படும். தனது கோரைப் பற்களால் மிரட்டிக்கொண்டிருந்த ஒரு நூறு நாய்களும், தந்தத்தால் கிலி ஏற்படுத்திய யானைகளும் நாவாலும், துதிக்கையாலும் நம்மை சுற்றி அமர்ந்து வருட தொடங்கிவிடுகிறது. மிஸ்டர்.ஜேமொ ஏன் விருதை வேண்டாம் என தவிர்த்தார் என்று புரிந்தது. இந்த கதையை எழுதிய பின்பு எப்படி ஜெமோவால் மத்திய அரசு தரும் ஒரு விருதை ஏற்றுக்கொள்ள முடியும்?
சோற்று கணக்கு
கெத்தேல் சாகிப். இந்த கதையை வாசிக்கும் எவருக்கும் ”யார்டா இந்த கெத்தேல் சாகிப்? எனக்கே பார்க்கணும்போல இருக்கே” என்று கண்டிப்பாக தோன்றும். ஒரு உறவினர் வீட்டில் தங்கி படிப்பவனுக்கு என்னென்ன வலிகள் ஏற்படும் என்று மிகத்துல்லியமாக சொல்லியிருப்பார். தனது அம்மா தனக்கு உணவு பரிமாறுவதை இப்படி விளக்குகிறார், “அவளுக்கு பரிமாறத் தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோற்றையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குப் போடுவதைத் தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்பக் கொட்டிவிடுவாள். கையோ மனமோ குறுகிவிட்டது”. வறுமையின் பிடியில் இருந்து மீண்ட பின்னும் ஒரு தாய் அந்த மனநிலையில் இருந்து வெளிவராமல் அதன் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பதை உணரமுடிகிறது.
இந்த கதையில் சாகிப் நம்மிடையே அதிகம் பேசுவதில்லை. அவரது கரங்கள் தான் பேசுகின்றன. அன்னத்தை அளக்காமல் அள்ளி அளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்களின் ஈகை பண்பை அப்பட்டமாக விளக்கும் கதையிது. ”சமையலை தொழுகை போன்று செய்துக்கொண்டிருந்தார் சாகிப்”. ஆம், எவன் ஒருவன் தனது வேலையை ஆத்மார்த்தமாக செய்கிறானோ அவனுக்கே அந்த மனமும், மணமும் வசப்படும். எனக்கு வசதியிருந்தால் இந்த கதையை அதிகம் பேருக்கு இலவசமாக ப்ரிண்ட் செய்து கொடுக்க ஆசை.
நூறு நாற்காலிகள்
ஒரு தாய்க்கும் மகனுக்குமான கதை என்ற ரீதியில் தொடங்கும் இந்த கதை ஒரே ஒரு சமூகத்திற்கும் ஏனைய உலகிற்கும் இடையேயான கதை என்பது முதல் பத்து பக்கங்களை தாண்டிய பின்னர் புரிய வருகிறது. இந்த கதையை மனதில் வைத்துதான் இந்த தொகுப்பு ஒரு பொக்கிஷம் என்று கூறியிருந்தேன். ஆம், நாயாடி என்று ஒரு சமூகம் இருந்ததை நமது தலைமுறைக்கு தெரியப்படுத்தியது இந்த கதைதான். இது 0.001 சதவீதம் தான். இதுப்போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சமூகங்களும், இனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த கதையை படிக்கையில் என்னையறியாமலே ஒரு பயமும், மிரட்சியும் என்னை சூழ்ந்துக்கொண்டது. சிவில் சர்வீசஸ் பதவியென்பது நாட்டி உயரிய பதவியென்றும், அது கிடைத்தால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடலாம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன். அதை தவிடுபொடியாக்கி, மலம் அள்ளுபவனும் நீயும் ஒன்றுதான்; அவனுக்கு 5000 சம்பளம், உனக்கு 50000 சம்பளம் அவ்வளவுதான் வித்தியாசம் என்று உணர்த்தியது. அந்த அம்மா இத்தனை மோசமாக நடந்துக்கொண்டாலும் அவர் மீது எனக்கு கோபம் வரவே இல்லை. அவர்களுக்கு அப்படித்தான் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது; சட்டை அணியக்கூடாது, நாற்காலியில் அமரக்கூடாது. அதில் ’அவர்கள்’ மட்டும்தான் அமர வேண்டும். நீங்கள் அமர்ந்தால் அடிவிழும்; சிகப்பாய் இருப்பவர்கள் ரத்தத்தை உறிபவர்கள். இங்கு சிகப்பு என்பது நிறத்தை மட்டும் குறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமூகத்தின் முந்தைய நிலையையும் வளர்ச்சியையும் மாறுதல்களையும் உணர இத்தகைய பதிவுகள் அவசியம். இதுபோன்று இன்னும் எத்தனை நூறு நாற்காலிகள் தேவைப்படும் என்று தெரியவில்லை.
பெருவலி
இந்த கதையில் சில விஷயங்களை படிக்கும்போதே நம்மால் உணர முடிந்தது. வலி குறித்து கோமல் கூறும் வரிகள் முக்கியமானவை. வலியை ஒரு குழந்தை போல அவர் ஏற்றுக்கொள்கிறார். அதை வலுக்கட்டாயமாக இறக்கிவிட அவர் முயலவேயில்லை. ”இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேல ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துட்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம்”. ஒருவரால் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதையை இப்படி சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், சத்தியமாக அவர் யோகியாக இருக்க வேண்டும் அல்லது எழுத்தாளனாக இருக்க வேண்டும்!!!
ஜெயகாந்தனின் கங்கை எங்கே போகிறாள் நாவலின் இறுதி பக்கங்களை வாசிக்கையில் கிளம்பி காசிக்கே போயிவிடலாம் என்று தோன்றும். அதேப் போன்று இந்த கதையை வாசிக்கும்போது இமயமலைக்கே அழைத்து சென்றுவிடுகிறார் கோமல்.
மத்துறு தயிர்
குரு-சிஷ்யன் கதையென்று சொல்லலாம் இதை. பேராசிரியர் கம்பரை சிலாகிக்கும் விதம் கம்பராமாயணத்தை படிக்கத்தூண்டுகிறது. சிஷ்யனுக்காக குரு ஒரு பெண்ணின் காலில் விழவும் தயாராக இருக்கிறார் என்பது, அந்த சிஷ்யனின் அருமையை உணர்த்துகிறது. இந்த கதையின் ஆகச்சிறந்த இடமாக திகழ்வது, கடைசியில் அண்ணாச்சி (ராஜம்) பேராசிரியரின் காலடி மண்ணைத் தொட்டு, இருட்டுக்குள் சென்று மறைவதாக அமைந்திருப்பதாகும். தனக்காக தனது குரு ஒரு பெண்ணின் காலில் விழும் அளவுக்கு சென்றது, அவருள் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டும். ராஜம், பேராசிரியரை பார்க்காததே தன்னிகரில்லா தன் குருவுக்கு ஒரு சிஷ்யன் செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும்.
ஓலைச்சிலுவை
அந்த காலக்கட்டத்தில் இருந்த மருத்துவமனைகளின் நிலைமையை மிக தெளிவாக கூறும் கதை. எட்டு பிள்ளைகள் பெற்ற, சாமியாடி குடும்பத்தை சேர்ந்த கணவனையிழந்த ஒரு பெண் வயிற்றுப்பாடுக்காக மதம் மாறுகிறாள். இதில் பசி குறித்து ஒரு வரி வரும் “பசித்தவனுக்கு அவன் சோறுதான்”. சத்தியமான வார்த்தைகள்!!! இக்கதை குறித்து சுருக்கமாக கூற வேண்டுமென்றால், கதையின் முடிவில் சாமர்வெல் நம் மனதில் ஒரு மீட்பனாகவே தங்கிவிடுகிறார்.
கோட்டி
இக்கதையை படிக்கையில் ஜோக்கர் படம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாதிய அடக்குமுறைகளை விளக்குவதன்மூலம், தற்போது அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழாத அதன் சமகால நிலையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. கதை முழுவதும் கோட்டியாகவே வாழ்ந்து கோட்டியாகவே மடிந்து போகிறார் பூமேடை. ஆனால், அவர் கேட்கும் கேள்விகள் ஆணித்தரமாக நமது மனங்களில் தங்கி விடுகிறது.
பிரவீண் குமார்
பாளையங்கோட்டை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
3. நன்னீராட்டு
தருமன் தன் அறைக்குள் சென்றமர்ந்து சுவடிக்கட்டை கையில் எடுத்தபோது குரங்குகளின் ஓசை படைவருகைபோல கேட்டது. ஒருகணம் திகைத்தாலும் உடனே முகம் மலர்ந்து அவர் வெளியே ஓடி குடில்விளிம்பில் நின்று எட்டிப்பார்த்தார். மரக்கிளைகளில் சுழற்காற்று வீசுவதுபோலிருந்தது. நூற்றுக்கணக்கான குட்டிக்குரங்குகள் ஹூஹூஹூஹூ என கூச்சலிட்டபடி கிளைகளில் தொங்கி, ஊசலாடி, பாய்ந்து கிளைபற்றி, தாவி காற்றில்பறந்து, கிளைகளில் தொற்றி பெருங்காற்று கொண்டுவரும் சருகுகள்போல வந்தன. குடிலின் கூரைமேல் அவை காய் உதிர்வதுபோல விழுந்தன.
இறைவாணத்திலும் கழுக்கோல்முனைகளிலும் தொங்கி ஆடி உள்ளே வந்து விழுந்து அவ்விரைவில் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து தன்னைத்தான் சுற்றிக்கொண்டு வால் சொடுக்கி அங்குமிங்கும் தாவின. ஒரு குட்டி தருமனின் ஆடையைப்பற்றி இழுத்தது. இன்னொன்று சுவடிக்கட்டை ஆவலாக எடுக்கப்போக தருமன் “ஆ… போ போ போ” என கூவியபடி அதை விரட்டி சுவடிகளை எடுத்து பெட்டிக்குள் வைத்தார். சற்றுநேரத்தில் குடில்முழுக்க குரங்குகளின் உடல்கள் நிறைந்து சாம்பல்நிறம் எங்கும் நெளிந்தது. முந்தையநாளின் மழைக்குப்பின் அவையனைத்தும் நீராடி புதிய உடலுடன் இருந்தன.
அவை ஒன்றுடன் ஒன்று தழுவி ஒன்றன் மேல் ஒன்று ஏறி விழுந்து பல்காட்டி சீறின. வாலைப்பற்றி இழுத்து பூசலிட்டன. கூரைமூங்கிலில் உறிகள் போலத் தொங்கி ஆடின. தாளாத ஆர்வத்துடன் ஒன்று ஒரு தாலத்தை எடுக்க ஐந்து குரங்குகள் பாய்ந்து அதைப்பற்றி இழுத்து பிடுங்க முயன்றன. தாலம் பேரோசையுடன் தரையில் விழ தூசுப்பரப்பு காற்றில் விலகுவதுபோல குரங்குத்தொகை நாலாபக்கமும் சிதறி அகன்றது. வெளியே இருந்து ஒரு பெருங்குரங்கு கையூன்றி அரசநடையுடன் உள்ளே வந்தபோது அத்தனை குரங்குகளும் உடல் வணங்கி விலகின.
பெருங்குரங்கு மெல்ல நடந்துசென்று தாலத்தை தொட்டுப் பார்த்து ‘அஞ்சும்படி ஒன்றுமில்லை’ என்று முகம் காட்டிவிட்டு திரும்ப ஒரு குட்டி தாலத்தின் விளிம்பை மிதித்தது. எழுந்த தாலத்தைக் கண்டு அஞ்சி விலக தாலம் மீண்டும் ஓசையெழுப்பியபடி விழுந்து அதிர்ந்தது. அறியாது மெய்விதிர்த்து விலகி ஓடிய பெருங்குரங்கு சினம்கொண்டு குட்டியை கடிக்க ஓடியது. அது பாய்ந்து கூரைக்கழுக்கோலைப் பற்றி கூரையின் நடுமடிப்பு வரை சென்றது. பெருங்குரங்கால் அதை தொடரமுடியவில்லை. அங்குமிங்கும் நோக்கியபடி உறுமிவிட்டு தருமனை நோக்கி ‘ஒன்றுமில்லை, சின்னப்பிள்ளைகள்’ என்று முகம் வலித்தது. இன்னொரு குட்டி வேண்டுமென்றே தாலத்தில் குதிக்க பெருங்குரங்கு துள்ளி விழுந்து சீறியபடி அதை பிடிக்க ஓடியது. பிறிதொன்று தாலத்தின் மேல் குதித்தது. பெருங்குரங்கு திகைத்து பக்கத்து அறைநோக்கி நடக்க குட்டிகள் ஹூஹூஹூ என கூவியபடி அதை தலைக்குமேல் தொடர்ந்து சென்றன.
அடுமனையில் திரௌபதியின் சிரிப்பும் கூச்சலும் கேட்டது. நகுலன் தோள்களிலும் தலையிலும் மூன்று குரங்குக்குட்டிகள் தொற்றி அமர்ந்திருக்க வெளியே வந்து நடைபாலத்தில் நின்றபடி “மூத்தவர் வருகிறார்” என்றான். “எங்கே?” என்றார் தருமன். “தொலைவில்… அவர் வரும்போதுதான் குரங்குகளின் இந்த வகையான ஒலி கேட்கும்.” தருமன் செவிகூர்ந்து “அதே ஒலிதானே? காட்டையே கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் வாலர்கள்” என்றார். “இல்லை, இது வேறுவகை ஒலி… இது அலையலையாக எழும்” என்றான் மேலும் சிலகுரங்குகள் தலைமேல் அமர்ந்திருக்க வந்த சகதேவன்.
பீமனின் மஞ்சள்நிற உடல் இலைப்பசுமைக்குள் இருந்து எழுந்தது. அவன் தாவி வந்து கூரைமேல் குடிலே அதிரும்படி இறங்கி அதன் ஈச்சையோலைப்பரப்பைக் கிழித்து ஊடுருவி உள்ளே இறங்கி தருமனைக் கண்டு “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். தருமன் முதலில் அறியாமல் சற்று சிரித்து உடனே சினந்திரட்டி “வீட்டுக்குள் நுழைய வாயில் என ஒன்று உள்ளது, மூடா” என்றார். குழப்பமாக வாயிலை நோக்கிய பீமன் “ஆம்” என்றபின் வாயில்வழியாக வெளியே சென்று உடனே அவ்வழியே உள்ளே நுழைந்து “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். “ஒழிந்துபோ… உன்னைப்பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. அஸ்தினபுரியின் பாண்டுவின் மைந்தனா நீ? இல்லை குரங்கா?” என்றார் தருமன்.
“நானா?” என்ற பீமன் “மூத்தவரே, நான் அஸ்தினபுரியின் இளவரசனாகிய குரங்கு… அல்லது” என்றபின் திரும்பி சகதேவனிடம் “இளையோனே, பசிக்கிறது!” என்றான். “அடுமனையில் உனக்காகத்தான் சமையல் நிகழ்கிறது. போ! அண்டாவோடு உண்டுவிட்டுச் செல்” என்றார் தருமன். பீமன் “நான் இங்கே உணவிருக்காதென எண்ணினேன். நல்ல பன்றி ஒன்றை பிடித்துக்கொண்டுவர நாசிகனையும் சூசிகனையும் செப்பனையும் அனுப்பினேன். நாகபுச்சனும் சூசிமுகனும் உடன் சென்றனர்” என்றான். “இங்கே எல்லாமே சித்தமாகிக்கொண்டிருக்கிறது. தங்களுக்குப் பிடித்த ஊன்சோறு” என்று நகுலன் சொன்னான்.
கையில் அகப்பையுடன் பின்னால் வந்து நின்ற திரௌபதி “சென்று எத்தனைநாளாகின்றன என்று தெரியுமா?” என்றாள். “நாட்கணக்கெல்லாம் காட்டில் இல்லை, தேவி” என்றான் பீமன். “நீராடும் வழக்கம் உண்டா, அல்லது இனிமேல்தானா?” என்று அவள் கேட்டாள். “நீராடவேண்டும்” என்றான் பீமன். அவள் விழிகள் கனிந்த நகையுடனிருந்தன. இதழ்கள் சிரிப்பில் நீண்டிருந்தன. பீமன் அவளருகே சென்றதும் அவள் அவன் தலையில் கைவைத்து “முடியெல்லாம் நார்போலிருக்கிறது… முதலில் சற்று எண்ணைபூசவேண்டும்… வருக!” என்றாள். அவன் கையைப் பற்றியபடி “வரவர கையா காலா என்றே தெரியவில்லை” என அழைத்துச்சென்றாள்.
“அன்னை போலிருக்கிறாள்” என்றார் தருமன் “அன்னையர்தான் இப்படி சலித்துக்கொள்வார்கள். வேறு எவரும் எக்குறையும் சொல்வதற்கு முன்னரே தாங்கள் அதை சொல்லிவிடுவார்கள்.” சகதேவன் “நீங்களும் தந்தைபோலத்தான் இருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். தருமன் சினத்துடன் “பின் இல்லாமல்? இவனை இப்படியே விட்டால் இங்கிருந்து அஸ்தினபுரியின் இளவரசனை நாம் அழைத்துச்செல்லமுடியாது. கழுத்தில் சரடுகட்டி குரங்கு ஒன்றை இழுத்துச் செல்வோம். கண்டிப்பதற்கு தயங்கியமையால்தான் இப்படி ஆகிவிட்டிருக்கிறான். மூடன்…” என்றார், “முற்றிலும் உண்மை” என்றான் நகுலன். “இவனை இப்படியே விடமுடியாது” என்றபடி தருமன் தன் பீடத்தை நோக்கி செல்ல அங்கே உடல் ஒன்றாக அமர்ந்திருந்த மூன்று குரங்குகள் “உர்ர்” என்றன.
“இதில் மூன்று தலைவேறு” என்று சலித்துக்கொண்ட தருமன் “நான் இங்கே எங்கே அமர்வது?” என்றார். “அமர்வது நல்ல எண்ணம் அல்ல, மூத்தவரே. நாம் அமர்ந்தால் நம்மை இவை பீடமாக கொள்கின்றன” என்றான் நகுலன். மீண்டும் சிரிப்பு எழ முகத்தை திருப்பிக்கொண்டு “இலங்கையரசன் எப்படி வீழ்ந்தான் என இப்போது புரிகிறது. இவற்றை பார்ப்பதற்கு பத்துமுகமும் இருபது கண்ணும் போதாது” என்றபடி தருமன் “என்ன உண்கிறானா இல்லையா?” என்றார். “நீராடுகிறார் என நினைக்கிறேன்” என்றான் நகுலன். “இளையவன் எங்கே?” என்றார் தருமன். “அவர் நீராடுவதைப்பார்ப்பது இளையவனுக்கு மிகவிருப்பமானது” என்ற நகுலன் “எனக்கும்…” என்றபடி அங்கிருந்து அகன்றான்.
நகுலன் செல்வதை ஒருகணம் நோக்கியபின் தருமன் “நானும் வருகிறேன். வேறு எப்போது அந்தக் குரங்கிடம் பேசுவது? நீராடி உணவுண்டால் உடனே கிளம்பவும் வாய்ப்புண்டு” என்றபடி உடன் நடந்தார். கீழே தோட்டத்தில் சிறிய மரப்பீடத்தில் இடையில் தோல் கோவணத்துடன் அமர்ந்திருந்த பீமன் உடலில் சகதேவன் இளஞ்சூடான எண்ணையை கொப்பரையில் இருந்து அள்ளித்தேய்த்துக்கொண்டிருந்தான். அருகே திரௌபதி ஈஞ்சைப்பட்டையை உரித்து சுருட்டிக்கொண்டிருந்தாள். நிறைய குரங்குகள் திகைத்தவைபோலவும் வியந்தவைபோலவும் அவர்களைச் சூழ்ந்து நின்றிருந்தன. ஒரு பெருங்குரங்கு எண்ணையைத் தொட்டுநோக்கியபின் திரும்பி ‘ஒன்றுமில்லை, கெடுமணம் மட்டுமே’ என்றது.
“அவன் பெயர் சக்ரநாபன்…” என்றான் நகுலன். ஏணியில் அவன் இறங்க தருமன் மேலேயே நின்றபடி “நீ சென்று குளிப்பாட்டு உன் தமையனை. நான் இங்கேயே நின்றுகொள்கிறேன்” என்றார். நகுலன் புன்னகையுடன் கீழிறங்கிச் சென்றான். இருகுரங்குகள் ஓடிவந்து அவனிடம் கைசுட்டி பீமனைக் காட்டி ஏதோ சொல்லின. குட்டி ஒன்று ‘என்னைத்தூக்கு’ என்று கையைக் காட்டியது. அவன் அதை கைபிடித்துச் சுழற்றி எடுத்துக்கொண்டு அணுகினான். சகதேவன் எண்ணைபூசும்படி சொல்ல நகுலன் கொப்பரையை வாங்கிக்கொண்டான்
எண்ணைப்பூச்சில் பீமனின் உடல் வெண்கலம்போல ஒளிவிட்டது. ஒவ்வொரு தசையும் இறுகி முழுமையடைந்திருந்தன. தோள்தசை அவ்வளவு பொங்கி எழமுடியுமா, முதுகுப்பள்ளம் அப்படி ஆழ இறங்கமுடியுமா? நரம்போடிய பெரும்புயங்கள். இருபலகை விரிந்த நெஞ்சு. வயிற்றில் நரம்புகள் பின்னியிருப்பதை வேறெங்காவது பார்த்திருக்கிறோமா? அவர் கண்ட செஞ்சிலை உடல்களெல்லாம் சிறியவை. பேருடல்கள் எங்கேனும் ஏதேனும் பெருத்தவை. அனைத்தும் அமைந்த உடல். ஏன் அன்னை இவனை ஒருகணமும் விழிநிறுத்தி நோக்க மறுக்கிறாள் என இப்போது புரிகிறது.
திடுக்கிட்டு தருமன் மீண்டார். கண்ணேறு தொட்டிருக்குமோ? தந்தைகண்போல் தீயதில்லை என்பார்கள். என்ன செய்வது அதற்கு? ஒருதுளிக் குருதி அளித்தால் போதுமென்பார்கள் என எண்ணம் வந்தது. இடையைத் தொட்டபோது கத்தியில்லை என தெரிந்தது. மூங்கில் முனை ஒன்று நீட்டி நின்றது. அதில் தன் புறங்கையை வைத்து அழுத்தி இழுத்தார். கிழிந்து குருதி வழிந்தது. கையை நீட்டி “ஸ்வாஹா… விழியில் வாழ்பவளே, மூத்தவளே, இருண்டவளே, ஸ்வாஹா” என மூன்று சொட்டுகள் உதிர்த்து விழிமூடி வேண்டிக்கொண்டார்.
ஆனால் அவனை நோக்காமலிருக்கவும் முடியவில்லை. இனி நோக்கலாம், குருதி அளிக்கப்பட்டுவிட்டதே என எண்ணியபடி மீண்டும் பார்த்தார். நகுலன் குதிரையை தோலுரும்மி விட்டுத் தேர்ந்த கைகளால் பீமனின் உடலை அழுத்தி தேய்த்தான். எப்போதும் எதனையும் மேலிருந்து கீழ்நோக்கியே இழுபடும்படி அவன் கையசைவுகள் அமைந்திருந்தன. சகதேவன் கீழே அமர்ந்து கால்களை கைபொத்தி இழுத்து வழித்திறக்கினான். திரௌபதி அவன் குழலில் எண்ணை பூசி விரல்களை உள்ளே செலுத்தி நீவிச் சுழற்றி கொண்டைபோல சுற்றிக்கட்டினாள்.
குரங்குகள் குறையா ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன. ஒரு குரங்கு தானும் பீமனை தடவ வந்தபோது நகுலன் அதை விலக்கினான். அது திரும்ப மற்ற குரங்குகள் ஹோஹோஹோ என ஓசையிட்டன. எண்ணைபூசி முடித்ததும் நகுலன் அருகே இருந்த பெரிய மரக்குடைவுத் தொட்டியில் நிறைந்திருந்த நீரில் அப்பாலிருந்த அடுப்பில் எரியும் கனலில் சுட்டுப்பழுத்துக் கிடந்த பெரிய உருளைக்கற்களை எடுத்து போடத் தொடங்கினான். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் அடுப்பிலிட்டான். மெல்ல நீர் வெம்மைகொண்டு ஆவியெழத் தொடங்கியது. கைவிட்டுப் பார்த்து அதன் வெம்மையை மதிப்பிட்ட திரௌபதி தன் ஆடையை இடையில் செருகிக்கொண்டு பெரிய சுரைக்குடுவையில் நீரை அள்ளி பீமனின் தலையில் விட்டாள்
குரங்குகள் கூச்சலிட்டுக்கொண்டு பாய்ந்து பின்வாங்கின. பெருங்குரங்குகள் கைகளைத் தூக்கியபடி போருக்கெழுந்தன. பீமன் மெல்லிய உறுமலால் அவற்றிடம் பேச அவை திரும்பி பிறகுரங்குகளிடம் ‘ஒன்றுமில்லை’ என விளக்கின. ஒவ்வொரு குரங்காக அணுகி அச்சத்துடன் நோக்கி நின்றது. ஒவ்வொரு குடுவையசைவுக்கும் அவற்றின் உடல்களும் உடனசைந்தன. ஒரு குரங்கு பீமனைச் சுட்டிய கையை அப்படியே வைத்திருந்தது. ஒன்று சுற்றிவளைத்துச் சென்று நீர்த்தொட்டியைத் தொட்ட்டு நோக்கி ஹீஹீஹீ என ஓசையிட்டது.
பீமனின் உடலில் இருந்து ஆவியெழுந்தது. நகுலன் மேலும் நீர்கொண்டு விட்டு சுடுகற்களை போட்டுக்கொண்டிருந்தான். சகதேவனும் திரௌபதியும் அள்ளி அள்ளி நீரூற்றினர். திரௌபதி அவன் குழலை விரல்செலுத்திக் கழுவினாள். சகதேவன் உருளைக்கல்லால் அவன் தோளையும் மார்பையும் தேய்த்தான். திரௌபதி ஈஞ்சைப்பட்டையால் அவன் காதுமடல்களையும் கன்னங்களையும் கழுத்தையும் தேய்த்தாள். யானை நீராட்டு என தருமன் எண்ணிக்கொண்டு உடனே அது கண்ணேறாகுமா என அஞ்சி தலையை அசைத்தார். நீராட்டுவதில் அவர்கள் மேலும் மேலுமென ஆழ்ந்து சென்றனர். அவன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து உரசிக் கழுவினர்.
பின்னர் திரௌபதி மேலேறிச்சென்று மரவுரிகளை எடுத்துவந்தாள். அதைக் கொண்டு அவன் தலையை அவள் துவட்ட நகுலனும் சகதேவனும் அவன் உடலை துடைத்தனர். புதிய தோலாடையை இடைசுற்றியபடி பீமன் எழுந்தபோது குரங்குகள் மெல்ல உளம் எளிதாகின. ஒரு குரங்கு அஹஹஹாஹ் என ஓசையிட மற்றகுரங்குகளும் சேர்ந்துகொண்டன. அவர்கள் மேலேறிவரும்போது முந்தியபடி குங்குகள் தொற்றி மேலே வந்தன. பலகுரங்குகள் ஒரேநேரத்தில் அடுமனைக்குள் செல்ல பேரோசை கேட்டது. உணவுக்கலம் கவிழ்ந்துவிட்டது என்று தருமன் எண்ணினார்.
அடுமனைக்குள் எட்டிப்பார்த்தபோது அது உண்மை எனத் தெரிந்தது. பெருங்கலத்தின் விளிம்பிலேறிய குரங்குகள் அதைக் கவிழ்த்து ஊன்சோறு ஆவியுடன் அடுமனைத்தரையில் குவியச் செய்திருந்தன. கவிழ்த்த குரங்குகள் அஞ்சி மேலேறி கூரையில் தொற்றி குற்றவுணர்வுடன் தலைதிருப்பி சுவரை நோக்கிக்கொண்டிருந்தன. மேலேறிவந்த திரௌபதி “என்ன செய்திருக்கிறார்கள்? இதோ அத்தனை பேரையும்…” என சொல்லவர பீமன் “ஒன்றும் நிகழவில்லை… நான் அங்கே காட்டில் வெறும்பாறையிலிட்டு உணவுண்பவன். மண்கலக்கா உணவு எனக்கு சுவைப்பதில்லை” என்றபடி அங்கேயே அமர்ந்துகொண்டான்.
அவன் ஊன்சோற்றை அள்ளி உண்ணத் தொடங்க நகுலன் திரும்பி தருமனை பார்த்தான். “சேர்ந்துண்ணலாம் என எண்ணினேன், மூத்தவரே” என்றான். தருமன் “அதற்கென்ன? அவன் உண்பதை நாம் உண்ணலாகாதா?” என்றபடி அருகே வந்து அமர்ந்தார். நகுலன் முகம் மலர்ந்து “ஆம், இன்றைய உணவு இப்படியாகுக!” என்றபடி உணவுக்குவையின் அப்பால் அமர்ந்தான். சகதேவனும் அமர்ந்தான். தருமன் ஒருகவளம் உருட்டி திரௌபதிக்கு நீட்ட அவள் சிரித்தபடி அதை பெற்றுக்கொண்டாள். “இனிது” என்றார் தருமன். “இத்தனை சுவையாக அரசி சமைப்பாள் என நான் எண்ணவே இல்லை.”
நகுலன் “மூத்தவருக்காக சமைக்கையில் மட்டுமே இச்சுவை அமைகிறது” என்றான். “இவன் உண்பதைப் பார்த்தால் சுவைதேர்பவன் போலவே தெரியவில்லையே” என்றார் தருமன் ஊனுணவை உண்டபடி. “மூத்தவரே, பேருணவுண்ணும் யானையே நுண்சுவை அறிவதிலும் கூர்ந்தது. நோக்குக!” என்றபின் முற்றிலும் உணவிலாழ்ந்திருந்த பீமனிடம் “மூத்தவரே, இப்பன்றி எத்தனை அகவை கொண்டது?” என்றான். பீமன் “இதில் இரு பன்றிகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்றுவயது இன்னொன்றுக்கு ஐந்துவயது” என்றான். பார்த்தீர்களா என்பதுபோல திரும்பி நோக்கி நகுலன் புன்னகைத்தான்.
“இளையவனே, எதைக்கொண்டு அறிகிறாய்?” என்றார் தருமன். ’ஒருபன்றி தசை மூப்பு கொண்டு கொழுப்புசேரத் தொடங்கிவிட்டிருக்கிறது. இன்னொன்று இன்னமும் கன்று. இளந்தசை” என்றான் பீமன். “இதிலிட்ட காய்கறிகள் ஒவ்வொன்றும் என்னவகை எவ்வளவு மூப்பு என்றுகூட சொல்லிவிடுவான்போல” என்று தருமன் சிரித்தார். பீமன் “இதில் இடப்பட்ட வழுதுணைகள் கீழே கோமதியின் சேற்றுக்கரையில் விளைந்தவை. சற்று கறைமிகுந்துள்ளன” என்றான். தருமன் “இதற்குமேல் நான் எதையுமே கேட்க விரும்பவில்லை” என்று சிரித்தார்.
குரங்குகள் அவர்கள் உண்பதை சூழ்ந்து அமர்ந்து நோக்கின. “அவை அட்ட உணவை உண்பதில்லையா?” என்றார் தருமன். “அவற்றுக்கு உப்பு உவப்பதில்லை” என்றாள் திரௌபதி. “இவனுடன் உண்ணவேண்டுமென்றால் பருக்கைகளாக உண்ணவேண்டும் போலுள்ளது” என்றார் தருமன். “மூத்தவரே, தாங்கள் இங்கு அடிக்கடி வருவதில்லை என மூத்தவர் வருந்தினார்” என்றான் சகதேவன். “வந்து மீள்கிறாரே?” என்றாள் திரௌபதி. தருமன் “நான் இவன் உடல் தேய்ந்திருப்பான் என அஞ்சினேன். நன்று, காடுதான் இவனுக்குரிய இடம்” என்றார். நகுலன் “மொழியே மறந்தவர் போலிருக்கிறார்” என்றான்.
அவர்கள் உண்டு எழுந்தபின்னரும் பீமன் உண்டான். அவர்கள் கடித்துப்போட்ட எலும்புகளை எடுத்து வாயிலிட்டு நொறுக்கி விழுங்கினான். “சீ, என்ன செய்கிறாய்?” என்றார் தருமன். “அவர் எப்போதும் செய்வதுதானே?” என்றாள் திரௌபதி. தருமன் எழுந்து கைகழுவிவிட்டு கைகளை மார்பில் கட்டியபடி நின்று அவன் உண்பதை நோக்கினார். நகுலன் “தங்களுக்கு உணவு போதுமானதாக உள்ளதா, மூத்தவரே?” என்றான். “எஞ்சியதை வெளியே சென்று உண்பேன்… என் நண்பர்களிடம் நல்ல பெரும்பன்றி ஒன்றை கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன்” என்றான் பீமன்.
“இதற்கு மேலுமா?” என்ற தருமன் “நன்று, உண்க இளையோனே! இப்புவியில் ஐம்பெரும் பருக்களும் உன்னை வாழ்த்தி மண்ணுக்கு அனுப்பியிருக்கின்றன” என்றார். பீமன் உண்பதை அவர்கள் நோக்கி நின்றனர். கை துலா போல எழுந்தமைந்தது. தாடை இறுக வாய் அசைந்தது. முகம் ஊழ்கநிலைகொண்டிருந்தது. ஒரு சோறு சிந்தவில்லை. ஒரு துளி சிதறவில்லை. உருட்டி அள்ளப்பட்ட அத்தனை கவளங்களிலும் ஊனும் சோறும் ஒரே அளவில் இருந்தன. நெடுங்காலம் கற்றுத்தேர்ந்த கலைஞனின் அசைவுகள். பழுதற்றவை, பிறிதற்றவை.
ஒரு பருக்கைகூட எஞ்சாமல் அவன் உண்டு முடித்தான். கலத்தை உருட்டி அதில் ஒட்டியிருந்தவற்றையும் சுரண்டி உண்டான். பெருத்த ஏப்பத்துடன் அவன் எழுந்தபோது அப்பகுதியில் உணவுண்ணப்பட்டதற்கான தடமே எஞ்சவில்லை. இதுவே வேள்வி என தருமன் எண்ணிக்கொண்டார். மேலுமொரு ஏப்பம் விட்டபின் பீமன் கலத்தை எடுக்கப்போக நகுலன் “அதை அங்கேயே விடுங்கள், மூத்தவரே. நாங்கள் கழுவிக்கொள்கிறோம்” என்றான். பீமன் கைகழுவ திரௌபதி நீர் வார்த்தாள். அவன் கையைப் பற்றி அவளே தேய்த்து கழுவிவிட்டாள். அவன் வாயை தன் மேலாடையால் துடைத்துவிட்டு “நிறைந்ததா?” என்றாள். “சுவையில் நிறைவென்பதில்லை” என்றான் பீமன்.
வெளியே குரங்குகளின் ஓசை கேட்டது. மரக்கிளைகளில் இருந்த குரங்குகள் கூச்சலிட குடிலை நிரப்பியிருந்த குரங்குகள் எதிர்க்கூச்சலிட்டன. செவிநிறைந்த கூச்சலைக் கேட்டு “ராகவராமன் தெய்வக்கூறுள்ளவன். இல்லையேல் கிஷ்கிந்தையரை அவன் தாங்கிக்கொண்டிருக்கமாட்டான்” என்றார் தருமன். பீமன் எழுந்து சென்று நோக்கினான். எட்டு பெருங்குரங்குகள் ஒரு கரிய குள்ளமனிதனை தூக்கிக்கொண்டு வந்தன. ஆடையற்ற அவன் உடல் சிறுவனளவுக்கே இருந்தாலும் கொழுத்து உருண்டிருந்தது. பெரிய வெண்ணிறப் பற்கள் மட்டும் காற்றிலென மின்னி மின்னித் தெரிந்து அணுகின.
“யார் இவன்?” என்றான் நகுலன். “அறியேன், நான் இவர்களிடம் பன்றியை கொண்டுவரும்படிதான் சொன்னேன்” என்றான் பீமன். அவனை குரங்குகள் கொண்டுவந்து உள்ளே போட்டன. பலகைப்பரப்பில் ஓசையுடன் விழுந்த அவனைச்சூழ்ந்து இருகால்களில் எழுந்து நின்றபடி நெஞ்சை அறைந்து ஓசையிட்டன. “இவனை உண்ணப்போகிறாயா, மந்தா?” என்றார் தருமன். பீமன் “உண்ணுதற்குரிய ஊன் கொண்டவனே. வாலோர் எண்ணியது பிழையல்ல” என்றபின் “வேறேதும் கிடைக்காத காலத்திற்காக உடன் வைத்திருக்க ஏற்றவன்” என்றான்.
பீமனின் குரல்கேட்டு “என்ன?” என்று குழறியபடி குள்ளன் எழுந்து அமர்ந்து சூழ்ந்து நின்றிருந்த குரங்குகளைப்பார்த்ததும் அலறியபடி வலிப்புகொண்டு மீண்டும் மயங்கினான். அவன் கால்கள் இழுபட்டன. வாயிலிருந்து எச்சில் குமிழியாக வெடித்து வழிந்தது. “எளிய ஆன்மா… அதை உன் தோழர்கள் வதைத்திருக்கிறார்கள்” என்றார் தருமன். “இல்லை மூத்தவரே, அவர்கள் அவனை ஒன்றும் செய்யவில்லை” என பீமன் குனிந்து அவனை நோக்க அவன் உடல் எம்பி விழுந்தது. “ராமன்! ராமனிடம்!” என்று அவன் குழறினான். இமைகளுக்குள் விழிக்குமிழிகள் ஆடின.
சகதேவன் “விலகுங்கள் மூத்தவரே, உங்களைப்பார்த்தால் அவர் நெஞ்சடைத்து செத்தே போய்விடுவார்” என்றபின் அமர்ந்து அவன் தலையைப்பிடித்து உலுக்கினான். அவன் மெல்ல இமையதிர்ந்து வாய்நெளிய முனகினான். விழிதிறந்து சகதேவனைப் பார்த்ததும் அலறியபடி எழுந்து கைகளால் தோளை வளைத்துப் பற்றிக்கொண்டான். உடல் அதிர அவன்மேல் தொற்றி ஏற விழைபவன் போல கைகளாலும் கால்களாலும் பின்னி இறுக்கியபடி வெறிகொண்டு அலறினான். “குரங்குகள்… குரங்குகள்” என்றான்.
“அமைக! அமைக!” என்றான் சகதேவன். “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்றான் அவன். “நீ பாதுகாப்பாக இருக்கிறாய்… நோக்குக! இது இந்திரப்பிரஸ்தத்தின் முன்னரசர் யுதிஷ்டிரரின் இல்லம்…” என்றான் சகதேவன். அவன் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சொன்னபோது அகம் தெளிந்து சொல்கொண்டு பெருமூச்சுவிட்டு பிடிதளர்ந்தான். வாய்திறந்து தருமனையும் சகதேவனையும் மாறிமாறி நோக்கினான். பெரிய இமைகள் இருமுறை மூடித்திறந்தன. “அவருக்கு இங்கு குரங்குகள்தான் குடிகளா?’ என்றான்.
தருமன் வாய்விட்டு சிரித்துவிட்டான். சகதேவன் புன்னகையுடன் “இல்லை, அவை இரண்டாமவரின் நண்பர்கள்” என்றான். அவன் எழுந்து தலையால் நிலம்தொட்டு வணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வணங்குகிறேன். என் பெயர் குஸ்மிதன். அறிவைப் பெருக்கும்பொருட்டு நான் உடல்வளர்ச்சியை முன்னரே நிறுத்திக்கொண்டவன். எனவே என்னை முண்டன் என்று அழைப்பார்கள்” என்றான். முகத்தில் வெண்பற்கள் தோன்றி மறைய சூழ நின்றிருந்த குரங்குகளை நோக்கியபின் “உங்கள் இளையவர்மீது கொண்டுள்ள அதே கட்டுப்பாட்டை குரங்குகள் மீதும் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்” என்றான்.
தருமன் சிரித்தபடி “வாழ்க! நீங்கள் பகடிக்கலைஞர் என எண்ணுகிறேன்” என்றார். “ஆம், கழைக்கூத்தும் கயிற்றாட்டமும் விழிமாயமும் செவிமாயமும் செய்வேன். இங்கு காட்டுச்சந்தை ஒன்றில் திறன்காட்டி பொன் பெற வந்தேன்” என்றான். “இங்கா?” என்றார் தருமன். “ஆம், நகர்களில் முனிவர்களே அனைத்தையும் காட்டிவிடுகிறார்கள்” என்று அவன் சொல்ல தருமன் சிரித்து உடனே சினம்காட்டி “மிகைபகடி வேண்டாம்” என்றார். “ஆணை” என அவன் வணங்கி “பொன்கிடைத்தது. அதைக்கண்டு ஒரு மலையழகி என்மேல் காதல்கொண்டாள். அவளும் என்னைப்போலவே குள்ளம். ஆகவே நான் அவளை மணந்துகொண்டு அவள் குடிலிலேயே தங்கினேன்.”
“பிறகு?” என்றாள் அப்பால் வந்து நின்றிருந்த திரௌபதி. “அரசியை வணங்குகிறேன். அவள் கற்புடையவள் அல்ல. என் பொன்னையெல்லாம் பெற்றுக்கொண்டபின் மைந்தனைப்பெற பிறிதொருவனை சேர்த்துக்கொண்டாள். என்னிடம் சொல்லியிருந்தால் இருவருமே அவளுக்கு கணவர்களாக இருந்திருக்கலாம். கற்பில்லாதவளுக்கு அது புரியவில்லை.” தருமன் முகம் சிவந்து ஏதோ சொல்ல நாவெடுக்க திரௌபதி சிரித்தபடி “எளிய பெண்போலும்” என்றாள்.
“ஆம் அரசி, மிக எளியவள். அவளும் அவள் காதலனும் சேர்ந்து எனக்கு மது அளித்து மயங்கச்செய்து தூக்கிக்கொண்டுவந்து காட்டுக்குள் போட்டுவிட்டார்கள். என் ஆடைகளையும் கொண்டுசென்றுவிட்டனர். ஆடையில்லாதவனாக காட்டுக்குள் வந்த நான் குரங்குகள் வரும் ஒலி கேட்டு மக்கள் என எண்ணி புதருக்குள் பதுங்கினேன். என்னை அவை தூக்கிக்கொண்டு வந்துவிட்டன.” நகுலன் “பன்றி என எண்ணிவிட்டிருக்கின்றன” என்றான். “நான் முன்பு ஹனுமான் சஞ்சீவி மலையை கொண்டு சென்றதுபோல என்றல்லவா எண்ணினேன்” என்றான் முண்டன். “இப்போது என்ன? என்னை சமைக்கப்போகிறீர்களா? எனக்கு புளி பிடிக்காது.”
“இப்போது உண்பதாக இல்லை” என்றான் பீமன். “வணங்குகிறேன் பேருடலரே, நீங்கள்தான் காற்றின்மைந்தர் போலும். நேற்று முன்னாள்கூட உங்களைப்பற்றி பேச்சுவந்தது. நீங்கள் காற்றிறைவனின் மைந்தர் என்று ஒருவன் சொன்னன். இல்லை, பேருணவு கொள்பவர் என்பதனால் கீழ்க்காற்று வெளியேற்றம் மிகையாகி அப்பெயர் கொண்டீர்கள் என நான் சொன்னேன். முதியசூதர் எல்லா கதைகளுமே மெய் என்றார். நாங்கள் நான்கு குவளை கள்ளை முன்வைத்து ஆம் என்றோம்” என்றான். எழுந்து திரௌபதியை வணங்கி “நான் பசித்திருக்கிறேன். அரசியிடம் உணவிரக்கலாகாதென்பதனால் ஒருசெய்தியாக இதை சொல்கிறேன்” என்றான்.
திரௌபதி புன்னகையுடன் “வருக… உடனே உணவட்டு அளிக்கிறேன்” என்றாள். அவன் சிறுவன்போல துள்ளி எழுந்து அவளுடன் சென்றான். தருமன் “இவன் இங்கிருக்கட்டும். எல்லாச் சொல்லிலும் நம்மை புன்னகைக்கச் செய்ய முடிகிறது இவனால்” என்றார். பீமன் “ஆம், உண்மையை சொல்லக் கற்றிருக்கிறான்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

