Jeyamohan's Blog, page 1653
April 12, 2017
நிறம் கடிதங்கள்
அன்புள்ள திரு ஜெயமோகன்,
பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ஸுநந்தா தத்தா ராய் (என நினைவு) ,நியூயார்க் நகரில் ஒரு கறுப்பின எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருக்கிறார். ஹார்லம் கறுப்பின வட்டாரத்திற்கு செல்லவேண்டும். அமெரிக்கர் சொல்கிறார் “கவலை வேண்டாம். நம்மவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.”
நம்மவருக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது. இவர் பால் நிறம்.
இவ்வளவு தான் நம் சிவப்பும், வெளுப்பும். உழக்கில் கிழக்கு மேற்கு போல. ஏமாற இசைபவர்கள் இருக்கும் வரை ஏய்க்கலாம்.
ராமாயணத்தில் ஒரு காட்சி. இலங்கையிலிருந்து மீண்ட சீதையைப்பார்த்து வானரங்கள் வியப்பு. வால் இல்லாத இந்த பெண்ணுக்காகவா இவ்வளவு ஏக்கம், பிரயாசை?
அன்புடன்,
கிருஷ்ணன்.
***
அன்புள்ள கிருஷ்ணன்
நான் அமெரிக்காவில் இதை பலமுறை கண்டிருக்கிறேன். ஓரிரு சொற்களுக்குள் நாம் கருப்பர்களுடன் உரையாட முடிகிறது. மூன்று வெவ்வேறு அனுபவங்கள். அவற்றை எப்போதாவது எழுதவேண்டும்
ஜெ
***
அன்புள்ள ஜெ.,
தற்சமயம் அமெரிக்காவில்தான் பணிபுரிகிறேன். 100 வெள்ளையர்கள் மத்தியில் வாழ்கிறாயா, 100 கருப்பினத்தவர் மத்தியில் வாழ்கிறாயா என்று கேட்டால், இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். பொது இடங்களில் மிகப்பரந்த
மனப்பான்மையுடன் இருக்கும் வெள்ளையர்கள், அவர்களின் தனிப்பட்டவாழ்விடங்களில் நேரெதிர். சகிப்புத்தன்மை கிட்டத்தட்ட பூஜ்ஜியம்.இந்தியர் வீட்டில் குழந்தை அழுதால்கூடத் தூக்கம் கெடுகிறது என்றுபோலீஸுக்கு ஃபோன் செய்து விடும் ரகம்.
கருப்பர் இனத்தவர் அவர்களின் வறுமையாலும் வாழ்நிலையாலும் திருடர்களாகவும்முரடர்களாகவும் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆப்பிரிக்காவும் அடுத்தநூற்றாண்டில் சரிசமமாக முன்னேறும்போது உலகின் பார்வை மாறும் என்று
நம்புகிறேன்.
நம்மூரில் மகாபாரத சீரியல்களில் கர்ணனும் அர்ஜூனனும் கிருஷ்ணனும்திரௌபதியும் கருப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு ரூல் போட்டால்என்ன. சிவனுடைய மீசைக்கெல்லாம் சண்டைக்கு வரும் இந்துத்துவர்கள் இதையும்கவனித்தால் என்ன.
நன்றி
ரத்தன்
***
அன்புள்ள ரத்தன்
ஆப்ரிக்கர்கள் மீதான வன்முறை என நான் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை இது
அன்று தாக்கப்பட்டவர்களுக்காக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை இன்று ஆராயவேண்டும். முறையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?
இந்திய மனநிலை என்பது கருமைக்கு எதிரானது. எங்கும் எப்போதும். ஏதோ தமிழர்கள் கருப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் மாயை. பெங்களூரில் கறுப்பர்கள் அவமதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
நிறம்
நிறம்- கடிதம் 2
நிறம் -கடிதம்
குறளுரை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
திருக்குறள் உரையை பலமுறை கேட்டுவிட்டேன். நீங்கள் உரையாற்றுவதில் தங்குதடையில்லாத பொழிவு இல்லை. ஏனென்றால் அப்போதுதான் யோசிக்கிறீர்கள். புதியவற்றைச் சொல்கிறீர்கள். ஏனென்றால் அவை அப்போதுதான் சொல்வடிவமாகின்றன. ஆகவே அவற்றைக் கேட்பது உங்களுடன் சேர்ந்தே சிந்திக்கும் அனுபவத்தை அளிக்கிறது.
குறள் உரை என்னில் ஏற்படுத்திய அதிர்வு என்னவென்றால் அதேபோல அதே தொனியில் நான் சிந்திப்பதுதான். சிலநாட்களுக்கு முன்பு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு பெண் குழ்ந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தாள். அப்போது இந்தக்குறள் ஞாபகம் வந்தது
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
முதலில் வந்த எண்ணம் அன்னைக்கு உணவூட்டுவது ஒரு சமூகக் கடமை அல்ல, கடனை திருப்பி அளிப்பது என்று. அவள்தான் முதல் உணவை ஊட்டுகிறாள். அவள் ரத்தத்தை குடிக்கிறோம். ஆகவே அவளுக்கு கொடுக்கும் உணவு மட்டும்தான் நமக்கு தெய்வம் அளித்த கடமை. மற்றதெல்லாம் சமூகக்கடமை.
அதையும் செய்யமுடியாமல் ஆவது என்பதுதான் மனிதன் செய்வதிலேயே கீழானது. தெய்வங்களும் பொறுக்காதது. அதைச்செய்தாலும் சான்றோர் பழிப்பதைச் செய்யவேண்டாம் என்கிறார் வள்ளுவர்
அன்றைக்கு மெய்சிலிர்த்துவிட்டது அடாடா நாமும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம் என நினைக்க நினைக்க பரவசமாக இருந்தது. அதை உடனே எழுதவேண்டும் என நினைத்து இதை எழுதுகிறேன்
சிவராஜ் சண்முகம்
***
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
திருக்குறளை “அறநெறி நூலாக “மட்டும் காணாமல் “ஞான நூலாக” கண்டடைவது பற்றி தெளிவாக விவாத்தமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். நேற்று தங்களது குறளினிது உரை (இரண்டாம் நாள்) கேட்கும் வாய்ப்பு அமைந்தது. கவிதையை போன்று குறளுக்கும் வாசிப்பவருக்குமான உரையாடலே சரியான புரிதலை ஏற்படுத்தும், கற்பனையின் மூலம் கண்டடையும், விரிவடையும் உண்மைகள் பல எனப்புரிந்தது.
திருக்குறளில், நிறைய இடங்களில் பல்லாயிரம்பேர் அம்ர்ந்துச்சென்ற வழவழப்பு தொடர்கின்றது என்றுரைத்த கணத்தில் இதனைவிட சிறந்த உவமை இருக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால், அதனையொத்த பல உவமைகள் நாயகாரா அருவிப்போல் கொட்டிக் கொண்டேயிருந்தன. காலை, ஏழுமணியளவில் கேட்டதிலிருந்து மாலை வரை இதனை சுற்றியே சிந்தனை சுழல்கின்றது (சில நேரம் சூறாவளியைப்போல், சில நேரம் தென்றலைப்போல்).
தங்களது, “இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்” படைப்பில் வந்த இந்திய சிந்தனை மரபில் குறள் எனும் கட்டுரை எனது சிந்தனையை மேலும் விரித்துக்கொள்ள உதவியது.
குறளினிது உரை மூழுவதும் எனது எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் “ஆழ்வார்” என்னுடன் பயணித்துக்கொண்டிருத்தார் என்றால் மிகையில்லை. அவர் குறள் குறித்து கூறிய பல சொற்கள் கருத்துக்கள் வார்த்தை மாறாமல் தாங்களும் உச்சரித்த பொழுது மனம் நெகிழ்ந்தது. பல படித்துறைகளை கடந்துச்சென்றாலும் நதியின் பெயர் ஒன்று தான் என படித்தது நினைவுக்கு வருகின்றது. உனது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு திருக்குறளை மனதில் வைத்து அதன் பொருள்படி எல்லா தருணத்திலும் நடந்தால் உனது வாழ்வில் உன்னத நிலையையடைவாய் என்று கூறினார். அந்த ஒரு குறளின் மூழமாகவே மிகச்சிறந்த மனிதனாக வளாந்துகொண்டேயிருப்பாய் என்றும் அறிவுறித்தினார்.
இன்று தங்களது உரையில் ” செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்” குறளுடன் தொடர்ப்புடைய விசயங்களை கேட்டவுடன் மனம் கலங்கி கண்ணிர் வடிந்தது. நான் தேர்ந்தேடுத்திருந்த எனது வாழ்நாள் குறளும் இதுவே. அவரின் அறிவுரைப்படியே, இன்று வரை (20 வருடமாக) என்னால் முடிந்தவரை கடைப்பிடித்து வருகின்றேன் (மூன்று முறை தவறியுள்ளேன்).
சில மாதங்களுக்கு முன்பு, எனது தாயார் சாலை ஒரம் நடந்து வரும் பொழுது ஒரு விபத்துக்குள்ளானார். அதற்கு காரணமான நபரை சந்தித்தபொழுது எனது மனதில் தானாக உதித்த குறள்கள் ” செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காப்பின் என் காவாக்கால் என்”, ” இணரெரி தோ ய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. “. அதனால், அவரிடம் சண்டையிடவில்லை, கடுஞ்சொற்களும் பயன்படுத்தவில்லை. இரு நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து செல்லும் பொழுது, நீங்கள் மிக நல்ல மனிதர் என்று கைப்பிடித்துப் பாராட்டினார். மீண்டும் ஒருமுறை விபத்திற்காக வருத்தம் தெரிவித்தார். அந்த கணத்தில், எனது ஆசிரியர் “ஆழ்வார்” சிரித்த முகமாக மனக்கண்ணில் தோன்றினார். இதன் பொருள் இன்றளவும் எனக்கு புரியவில்லை. உணர்ச்சிமிகுதியில் ஏற்ப்பட்ட கற்பனையா அல்லது மீண்டும் ஒரு முறை நினைவூட்டவா என்று தெரியவில்லை. ஆனால், இந்த பாராட்டுக்கு எனது தமிழ் ஆசிரியரே காரணம் என்பதே உண்மை.
“சிந்திக்கும் தமிழரின் வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுக்க திருக்குறளை திரும்ப திரும்ப கண்டடைவது” என்றுரைத்தப்பொழுது சித்தம் கலங்கியது. இனி எனது வாழ்நாள் மூழுவதும் இந்த வார்த்தைகளிலிருக்கும் உண்மைக்கு புறம்பாக நான் பயணிக்க யத்தனிக்க கூடாது என்று நினைத்துள்ளேன். தங்களது உரையின் மூலம் நான் உணர்ந்தவை வாசிப்பில் அல்ல வாழ்வதன் வழியாகவும், வாழ்கையின் வழியாக மட்டுமே திருக்குறளின் படிமங்கள் வெளிப்படும் என்பதே. இதனையொட்டிய விளிம்புநிலைக் கருத்துக்களையே எனது ஆசிரியர் இளவயதில் விதைக்க நினைத்துள்ளார் என்றே தோன்றுகின்றது.
இவண்
கல்யாணராமன்
மதுரை.
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
72. விதைத்துயில்
வெளியே காலடியோசை எழுந்தது. கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை ஆட்டின் காதுகள்போல மென்மையும் வெம்மையும் கொண்டு துடிப்பவை என்னும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. உள்ளடங்கி இரு சிவந்த கோடுகளெனத் தெரிந்த வாய்க்கு சுற்றும் மெல்லிய சுருக்கங்கள் அசைந்தன.
“இளவரசி, உங்கள் அன்னையின் வயிற்றிலிருந்து எடுத்த உங்களை வயற்றாட்டி வெளியே கொண்டுவந்து நீட்டியபோது உங்கள் தந்தையின் அருகே நின்று காத்திருந்தேன். உங்கள் தந்தை உங்களை வாங்கி கால்களை சென்னி சூடி முத்தமிட்டு என்னிடம் தந்தார். அன்றுமுதல் உங்களை பார்த்து வருகிறேன்… உங்கள் எளிமையே உங்கள் ஆற்றல். எதையும் எரிப்பது அனல். பேராற்றல் மிக்கது அது. அதை பிரம்மத்தின் மண்ணுருவம் என்று முனிவர்கள் வணங்குகிறார்கள். ஆனால் அனலால் எதையும் ஆக்க முடியாது. நீரோ கருணை மிக்கது. செல்லுமிடத்திலெல்லாம் அவ்விடத்தின் வடிவங்களை தான் ஏற்று அவ்வாறே உருக்கொள்வது. அவ்விடத்தின் வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் தன்னுடையதாக்குவது” என்றார் சம்விரதர்.
“நீருக்கென்று வண்ணமும் வடிவும் மணமும் இல்லை. ஆனால் இங்கிருக்கும் அத்தனை வண்ணங்களும் வடிவங்களும் மணங்களும் நீராலானவை. பேரன்னையரை நீர் வடிவானவர்கள் என்பது அசுர மரபு. இங்கிருக்கும் அத்தனை உயிர்களும் நீரை நோக்கியே வேரும் நாவும் நீட்டுகின்றன. அவ்வனைத்தும் நீருக்கென விடாய் கொண்டிருப்பதுவரை நீர் அழிவதே இல்லை. எரிபடுவது அழிந்ததும் எரி விண்புகுகிறது. நீர் அனைத்தையும் தாங்கி ஊற்றென்றும் மழையென்றுமாகி என்றும் இங்கிருக்கும்” என்றார். இரு கைகளைக் கூப்பி அவள் தலை வணங்கினாள்.
“தங்களுக்கான மணத்தூதுடனும் கணையாழியுடனும் இந்நகர் புகுந்தேன். நேற்று நிகழ்ந்ததை அரசர் என்னை அழைத்து சொன்னார். நானே சென்று குருநகரியின் அரசர் யயாதியிடம் பேசினேன். அவர் கிணற்றிலிருந்து கைதொட்டு தூக்கி எடுத்த அப்பெண் நீங்கள் என்று எண்ணியிருந்தார். அது என் பிழையே. அவரிடம் உங்கள் ஓவியத்திரைச்சீலையை நான் காட்டவில்லை. உங்கள் உருவைக் கண்டால் அவர் விரும்பமாட்டார் என எண்ணிவிட்டேன். உங்கள் அழகு மாசற்ற அவ்விழிகளில் உள்ளது, அதை ஓவியம் காட்டாது. நேர்நின்று அவற்றை நோக்குபவர் உங்களை அன்னைவடிவான கன்னி என்று எண்ணாமலிருக்கமாட்டார்…” என்றார் சம்விரதர்.
“உங்கள் ஆடையை சுக்ரரின் மகள் அணிந்து திருப்பி அளித்தபோது சிற்றாடை ஒன்று மட்டும் அவர்களிடமே தங்கிவிட்டது. அதைப் பார்த்து அவரை ஹிரண்யபுரியின் இளவரசி என்று எண்ணிவிட்டார். அவர் கைபற்றி சொல்லளித்தது சுக்ரரின் மகளுக்கு என்று நான் சொன்ன பின்னரே மெய்யுணர்ந்து யயாதி திடுக்கிட்டார். நிகழ்ந்ததைச் சொன்னபோது துயர்கொண்டு தளர்ந்து அமர்ந்துவிட்டார்.” சர்மிஷ்டை புன்னகைத்தாள். சம்விரதர் “அது தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அது தேவயானியின் விழைவு. அல்லது ஊழ். அல்லது நாமறியா ஒன்று. எப்போதும் ஒரு துளி எஞ்சிவிடுகிறது. விதை என்பது ஒரு துளி மரம்தான்” என்றார். சர்மிஷ்டை அச்சொற்களை புரிந்துகொள்ளாமல் அவரை விழிமலர்ந்து நோக்கினாள்.
“ஊழ் மிகுந்த நகையுணர்வு கொண்டது. சுக்ரரின் மகள் வாயிலாக தன் நெறியை தான் சொல்ல வைத்துவிட்டது. உங்கள் வயிற்றில் பேரரசர்கள் எழுவார்கள். விருஷபர்வனின் கொடிவழியே இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளும். இங்கிருந்து நீங்கள் செல்கையில் ஓர் அமுதகலசத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள். தங்கள் மூதன்னையர் முலைகளாக ஏந்தியிருந்தது அது. உங்கள் குல அடையாளம். பிறிதெதுவும் எஞ்சவேண்டியதில்லை. நாளை ஒரு காலம் வரும், அன்று நம் அமுதகலம் இக்குலத்தின் விதைத்துளி என உங்கள் குலவழிகளின் கொடிகளில் பறக்கட்டும். உங்கள் தந்தையின் பொருட்டு உங்களிடம் நான் சொல்வது இது ஒன்றே” என்றார் சம்விரதர்.
சர்மிஷ்டை பெருமூச்சுவிட்டாள். சம்விரதர் அவள் தலைமேல் தன் நடுங்கும் கைகளை வைத்தபின் திரும்ப சர்மிஷ்டை மெல்லிய குரலில் “அமைச்சரே…” என்றாள். “சொல்லுங்கள், இளவரசி” என்றார். “அவர் என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டாள். அவர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய் ‘என்ன இது?’ என்றார். ‘தாங்கள் சுக்ரரின் மகளுக்கு சொல்லளித்துவிட்டீர்கள், அது உங்கள் பிழை’ என்று நான் சொன்னேன். ‘இல்லை, நான் அதை அறிந்து செய்யவில்லை’ என்றார். ‘எப்படிச் செய்திருந்தாலும் அவர்கள் யார் என்று நீங்கள் கேட்டிருக்கவேண்டும். கேட்காதது உங்கள் பிழையே’ என்றேன். தளர்ந்து பீடத்தில் அமர்ந்து ‘ஆம்’ என்றார். என் பிழையை நான் உணர்ந்திருந்தமையால் அவர் பிழையை அறியாது மிகைப்படுத்தி சொன்னேன் போலும்.”
“மேலும் இரக்கமின்மையுடன் அவரிடம் நான் அடுத்த சொற்களை சொன்னேன். ‘சுக்ரர் மகளின் கோரிக்கை பிறிதொன்றுமுண்டு, அதை அரசரும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நீங்கள் அவளை மணம்கொண்டு பட்டத்தரசியாக இடம் அமர்த்தும்போது அசுரகுலப்பேரரசரின் மகள் சர்மிஷ்டையே அவளுக்கு அணுக்கச்சேடியாக அங்கு வரவேண்டும்’ என்றேன். திகைப்புடன் உரக்க ‘அணுக்கச்சேடியாகவா? விருஷபர்வரின் மகளா?’ என்று கேட்டபடி எழுந்து என்னருகே வந்தார். ‘இதை யார் கூறியது? சுக்ரரா?’ என்றார். என் உள்ளத்தில் தேவயானிமேல் இருந்த அனைத்து வஞ்சத்தையும் நிகழ்த்தும் தருணம் அது என அப்போது உணர்ந்தேன். ‘இல்லை, அவர்கூட அவ்வண்ணம் எண்ணமாட்டார். அவர் மகள் ஒருத்தியால் மட்டுமே அது இயலும்’ என்றேன். தான் மணக்கவிருக்கும் பெண்ணைப்பற்றி முதல்முதலாகக் கேட்கும் மதிப்பீட்டில் இருந்து ஆணுள்ளம் ஒருபோதும் அகல இயலாது. அது ஒரு நச்சு விதை.”
“நடுக்கம் தெரிந்த குரலுடன் ‘அவளே இதை கோரினாளா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்?’ என்றார். ‘அவர் இலக்கு பாரதவர்ஷத்தின் முதன்மைப்பேரரசி என்று மணிமுடி சூடி அமர்வது மட்டுமே. பிற எவையும் அவருக்கு ஒரு பொருட்டல்ல’ என்று நான் சொன்னேன். ‘ஆம், அவள் அதை அடைந்துவிட்டாள். இரண்டே கோரிக்கைகள். மாற்றாருக்கான அனைத்து வழிகளையும் முழுமையாக மூடிவிட்டாள்’ என்றபடி மீண்டும் சென்று பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளில் ஏந்திக்கொண்டார். அந்நஞ்சை மேலும் வளர்க்க எண்ணி நான் அருகணைந்து ‘தாங்கள் எதையும் இழக்கவில்லை, குருநாட்டரசே’ என்று சொன்னேன். ‘தாங்கள் விழைந்தபடியே அசுரப்பேரரசின் முற்றுரிமையை அடைகிறீர்கள். தேவயானியை அசுரப்பேரரசின் இளவரசியென்றே முறைமை செய்து தங்களுக்கு கையளிக்க விருஷபர்வன் எண்ணியிருக்கிறார். எங்கள் படையும் கருவூலமும் அசுரஐங்குலத்தின் கோல்களும் உங்கள் உரிமை’ என்றேன்.”
“ஆண்மையும் நேர்மையும் கொண்ட ஒருவர் அச்சொற்களால் அறச்சீற்றமே அடைவார் என நன்கறிந்திருந்தேன். மேலும் கூர்கொண்டு ‘அத்துடன் அசுர இளவரசி சர்மிஷ்டை அழகியல்ல. பிற அசுர குலப்பெண்களைப்போல எளிய தோற்றம் கொண்டவர். தாங்கள் மணக்கவிருப்பவரோ பேரழகி. கொல்வேல் கொற்றவைபோன்ற தோற்றம் கொண்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். சக்ரவர்த்தினி என உங்கள் இடம் அமர்ந்தால் அவர் காலடியில் பாரதவர்ஷத்தின் முடிமன்னர்கள் பணிவர். அதுவே கவிஞர்களுக்கும் சூதர்களுக்கும் சொல்கோக்க உகந்ததாக அமையும்’ என்றேன். விழிதூக்கி என்னை நோக்கியபோது அவர் கண்களில் வலியை கண்டேன். என்னுள் இருந்த நச்சுமுள்ளின் கூர் தினவு அடங்கியது.”
“பின்னர் சொல்லை மடைமாற்றி ‘நான் தங்களின் பொருட்டே இதை சொன்னேன், அரசே’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டு ‘நான் வாக்களிக்கையில் விருஷபர்வரின் மகளுக்கே என்னை அளித்தேன். என்னை மீறி இவை அனைத்தும் நடந்தால்கூட அவளுக்கு அளித்த சொல்லிலிருந்து தவறினால் அப்பழியிலிருந்து நான் மீள இயலாது’ என்றார். தலைவணங்கி பிறிதொரு சொல் சொல்லாமல் மீண்டு வந்தேன். இளவரசி, உழவன் விதைகளையும் அந்தணன் சொற்களையும் விதைக்கிறார்கள். பருவமறிந்து நான் விதைத்தவை முளைக்கும்” என்றார் சம்விரதர். “இன்று அவையில் யயாதி அளித்த கணையாழியை ஐங்குலக் குடிமூத்தார் சான்றாக சுக்ரரின் மகளுக்கு அளிக்கவிருக்கிறேன். அதற்கு முன் சுக்ரரின் மகளை தன் மகளாக விருஷபர்வன் ஏற்று அரியணை அமர்த்துவார். அவருக்கு அசுரகுலத்து முடியும் கொடியும் அளிக்கப்படும். யயாதியின் கணையாழி அவருக்கு அளிக்கப்பட்டபின் அசுர குலத்தின் ஒப்புதலுடன் அவர் கணையாழி யயாதிக்கு அளிக்கப்படும்.”
சர்மிஷ்டை தலையசைத்தாள். “தாங்கள் தேவயானியின் அணுக்கச்சேடியாக தாலம் ஏந்தி இடம் நிற்கவேண்டும். அதைச் சொல்லிச்செல்லவே வந்தேன். பணிக, எழுவதற்கான காலம் வரும்” என்றார் சம்விரதர். “ஆம், அது என் கடமைதானே?” என்றாள் சர்மிஷ்டை. “குடிப்பேரவையிலேயே இச்செய்தியும் அறிவிக்கப்படவேண்டும். அது வெறும் சொல்லாக அன்றி காட்சியாகவே இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் பதியவேண்டுமென்று சுக்ரரின் மகள் விரும்புகிறார். அதன் பொருட்டே இவ்வாணையை அவர் விடுத்திருக்கிறார்” என்ற சம்விரதர் “இளவரசி, நான் ஐம்பதாண்டுகாலம் அமைச்சுப்பணி புரிந்தவன். சுக்ரரின் மகளைப்போன்ற அரசுத்திறனை எவரிடமும் கண்டதில்லை. பேரரசை மறுசொல்லின்றி ஆளும் ஆற்றல் கொண்டவர் அவர். அவர் காலடியில் குருநாட்டின் யயாதியே பணிந்தமரப் போகிறார். உங்கள் நெறியை நீங்களே கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.
சர்மிஷ்டை புன்னகைத்து “தாங்கள் சொன்னீர்களே நீர் என்று, அமைச்சரே, நீரின் பாதை அனைத்தையும் தழுவிக்கொள்வது, வளைந்து தன் வழிதேர்வது, அணுகுவதனைத்தையும் ஈரமாக்கி நெகிழச்செய்வது, நிறைந்த இடமெங்கும் விதைகளனைத்தையும் முளைக்கச்செய்வது” என்றாள். சம்விரதர் புன்னகைத்து “உண்மை. அவ்வாறே நிகழட்டும், இளவரசி” என்றார். மீண்டும் அவள் தலைமேல் கைவைத்து “கூரிய நற்சொல் உங்கள் நாவிலெழுகிறது. மூதன்னையர் உடனிருக்கிறார்கள்” என்றார்.
வெளியே மங்கல ஓசை கேட்டது. உள்ளே சம்விரதர் “தேவயானி வருகிறார்” என்றார். “நான் சென்று அவர்களை எதிர்கொண்டு இங்கு அழைத்து வருகிறேன். நீங்களும் அவரும் சந்திக்கும் தருணம் இப்படி தனியறையில் நிகழட்டும் என்றே இதை ஒருங்கு செய்தேன். இவ்வொரு தருணத்தை நீங்கள் கடந்துவிட்டீரக்ள் என்றால் பிறகெதுவும் கடினமல்ல.” சர்மிஷ்டை “ஆம்” என புன்னகைத்தாள். “இத்தகைய உச்சதருணங்களில் நாம் யார் என்றும் எங்கு எவ்வண்ணம் இருக்கப்போகிறோம் என்றும் நம் அகத்திலிருக்கும் ஒன்று முடிவெடுத்து வெளிவந்து தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதுவே எஞ்சிய நாளெல்லாம் நம்மை வழிநடத்தும். அது சூழ்ந்திருக்கும் விழிகளால் திசைதிருப்பப்படாமல் இருக்கட்டும் என்றே இவ்வறையை அமைத்தேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றார்.
சர்மிஷ்டை திரும்பி அப்பால் அறைச்சாளரத்தருகே அச்சொல்லாடலைக் கேட்காதவள் என நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “நீயும் இவ்வறையில் இருக்க வேண்டியதில்லை” என்றாள். “இளவரசி…” என அவள் சொல் எடுக்க “அது முழுத்தனிமையில் நிகழட்டும்” என்றாள். “நான் உடனிருக்கவேண்டும் என்றீர்கள், இளவரசி…” என்றாள் சேடி. “ஆம், இன்றுவரை என்னில் ஒரு பகுதியை உன் வழியாக நிகழ்த்திக்கொண்டிருந்தேன். இளவரசியருக்கு அந்தத் தேவை உண்டு. இனி நான் இளவரசி அல்ல. அடுத்த கணம் முதல் சேடியாகப்போகிறேன். சேடிக்கு சேடியர்கள் இருக்க இயலாது” என்றாள் சர்மிஷ்டை. சேடி கண்ணீரோடு “இன்று நான் சொன்ன சொற்களுக்காக துயரடைகிறேன், இளவரசி. உங்கள் தோழியாக இருப்பதில் நான் அடைந்த நிறைவை பிறிதேதோ சொற்களால் மறைத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்” என்றாள்.
“நீ சரியாகவே சொன்னாய், என்னுள் ஏந்துவதற்கு நான் நாணுவனவற்றையும் வெளிப்படுவதற்கு அஞ்சுவனவற்றையும் உனக்கு அளித்தேன். அத்தனை மேலோரும் தங்கள் பணியாளர்களிடம் செய்வது அது. நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அடிமையாவதென்பது அவ்வண்ணம் அகம் அழிவதே” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றாள் சேடி. “அச்சொற்களைச் சொல்வதற்கு பிறிதொரு தருணம் எனக்கு வாய்க்கப்போவதில்லை என்று ஓர் உள்ளுணர்வு சொன்னது.” சர்மிஷ்டை “எந்தையிடம் இறுதியாக நான் கோரப்போவது ஒன்றே. எந்தை உன்னை தன் மகளாக முறைப்படி ஏற்கவேண்டும். என் எச்சமென உன்னை இங்கு விட்டுச்செல்கிறேன். நான் அளித்த அச்சங்களிலிருந்தும் ஐயங்களிலிருந்தும் நீ விடுதலைகொண்டாய் என்றால் எந்தை அவர் மகிழும் ஒரு மகளை பெறுவார்” என்றாள்.
சொல்திகைத்து, மெய்ப்புகொண்டு “இளவரசி” என்று அழைத்தபடி சேடி வந்து சர்மிஷ்டையின் கைகளை பற்றிக்கொண்டாள். அழுகையை அடக்க முயன்று அது கரைகடக்க தன் நெற்றியை அவள் தோளில் சாய்த்து குரல்குமுறி அழுதாள். “இத்தருணத்தை நான் கடக்க வேண்டுமென்றால் இவ்வுணர்வு நிலைகள் என்னை சூழக்கூடாது. இனி நீ என் தங்கை, இங்கிருந்து நான் செல்வது வரை. அதன் பிறகு விருஷபர்வரின் மகள், ஹிரண்யபுரியின் இளவரசி. மங்கலம் கொண்டு நிறைந்து வாழ்க! நன்மக்களை ஈன்று நிறைக!” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை இளவரசி, நான்…” என்று அவள் அழுதபடி சர்மிஷ்டையின் கைகளைப் பிடித்து உலுக்கினாள். அவளால் அத்தருணத்தை கடக்கமுடியவில்லை. பலநூறு சரடுகளால் கட்டப்பட்டு திமிறுபவள்போல துடித்தன அவள் உடலும் உள்ளமும்.
“வெளியே செல்! இது என் ஆணை!” என்றாள் சர்மிஷ்டை. அவள் முகத்தைப் பொத்தியபடி மெல்லிய காலடி வைத்து வெளியே சென்று கதவை சார்த்திக்கொண்டாள். சர்மிஷ்டை தன் ஆடையை சீர்படுத்தி குழலை சீரமைத்து நின்றாள். அப்போது தன் உடலில் இருந்து எழுந்த கல்லணிகளின் ஓசை மிக அணுக்கமாக இருப்பதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியாத மூதன்னையரால் சூழப்பட்டிருப்பதுபோல. மானுடச் சொல்லென பொருள் கொள்ளாத பிறிதொரு மொழிச்சொற்கள் ஒலிப்பதைப்போல. தன்னை அக்கல்லணிகளை அணியச்செய்தவள் தன்னை அறியாமலேயே பேருதவி ஒன்றை ஆற்றியிருக்கிறாள். தன்னை முழுமையாக வரையறுத்துக்கொள்ள உதவியிருக்கிறாள். இடர் என்பது தான் யார் என்று வரையறுக்க முடியாதிருப்பதே. தன் ஓவியத்தை தானே தீட்டி முடித்த பின்னர் துயரேதும் இல்லை. முதன்மைத் துயரென்பது தத்தளிப்புதான். விடுதலை என்பது நிலைபேறு. எச்சங்களேதும் இல்லாமல் தன்னை முடிவுசெய்து கொள்ளல். நிறைநிலைகொண்டவர்களின் பயணமே மெய்ச்செலவு. ஆம், எத்தனை தெளிவாக எண்ணுகிறேன்! கற்பன அறிவென்றாவதற்கு அதற்குரிய தருணங்கள் வாழ்வென வந்தமையவேண்டும் போலும்!
வெளியே மங்கல ஓசை முழங்கியது. கதவு திறந்து நிமித்தக்கூவி கையில் வெள்ளிக்கோலுடன் வந்து உரத்த குரலில் “பிரஹஸ்பதியின் குருமரபின் முதன்மையறிஞர் சுக்ரரின் மகள் தேவயானி வருகை” என்று அறிவித்தான். தொடர்ந்து இரு அணிச்சேடியர் வலமும் இடமும் ஆடை பற்றி உதவ இளவரசியருக்குரிய முழுதணிக்கோலத்தில் தேவயானி அறைக்குள் வந்தாள். உடலெங்கும் எரிசெம்மையும் மலர்ச்செம்மையும் கூடிய அருமணிகள் பதித்த நகைகளை அணிந்திருந்தாள். இளந்தழல் வண்ணம்கொண்ட செம்பட்டாடை மெல்ல நெளிய நெய்பற்றிநின்று எரியும் தழல் ஒன்று அறைக்குள் புகுந்ததுபோல் தெரிந்தாள்.
பெருகுந்தோறும் பொருளிழப்பவை நகைகள் என அவள் எண்ணியிருந்தாள். அவை ஒவ்வொன்றும் பொருளாழம் கொண்டிருப்பதை அவள் உடலில் கண்டாள். நகைகளுக்குப் பொருள் அளிப்பவை உடல்கள், காவியத்தில் அணிகளுக்கு உணர்வுகள் பொருள் அளிப்பதைப்போல என எங்கோ கற்ற இலக்கண வரி நினைவில் எழ அவளுக்குள் மெல்லிய புன்னகை கூடியது. அது முகத்திலும் எழுந்தது. அதைக் கண்டு ஒருகணம் குழம்பி ஒளிமங்கி மீண்ட தேவயானியின் கண்களைக் கண்டதும் அவள் மேலும் உள்ளுவகை கொண்டவளாக ஆனாள்.
தேவயானியின் அருகே சென்று இடைவரை உடல் வளைத்து தலைவணங்கி “நான் தங்கள் அடியவள் சர்மிஷ்டை, உங்கள் ஏவல்பணிக்கு சித்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கிய தேவயானி தன் கால்களைக் காட்டி “என் ஆடை மடிப்புகளை சீர் செய்” என்றாள். “ஆணை” என்று முழந்தாளிட்டு அருமணிகள் பொன்னூல்களால் கோத்துப்பின்னிச் சேர்க்கப்பட்ட அவள் ஆடையின் மடிப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக பற்றி அமைத்து சீராக்கி மும்முறை நீவிவிட்டு எழுந்து தலைவணங்கினாள். “நன்று!” என்றபின் மீண்டும் தேவயானியின் விழிகள் சர்மிஷ்டையின் விழிகளை சந்தித்தன. சர்மிஷ்டை பணிவுடன் நோக்கி நிற்க மெல்லிய பதற்றத்துடன் தேவயானியின் விழிகள் விலகிக்கொண்டன. சர்மிஷ்டையின் முகம் எதையும் காட்டவில்லை. ஆனால் அவளுக்குள் ஒரு புன்னகை ஒளிகொண்டது.
“தேவயானியை விருஷபர்வன் அவையறிவித்தபோது அசுரர்கள் எதிர்க்கவில்லை” என்றான் முண்டன். “ஏனென்றால் அவர்கள் அனைவருமே சர்மிஷ்டையைவிட தேவயானியை ஒரு படி மேல் என்று எண்ணியிருந்தனர். முறைமை மீறப்படுவதை அவர்களில் மூத்தோர் சிலர் சற்றே எதிர்த்தனர். பூசகர் சிலர் கசந்தனர். அவர்களுக்கு உரிய சொல்லளிக்கப்பட்டதும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.” பீமன் “ஆம், அருந்திறல் கொண்டவர்களை வழிபட்டு ஏற்றுக்கொள்வது குடிகளின் உளப்போக்கு. அங்கே நெறியும் பற்றும் நிலைகொள்வதில்லை” என்றான்.
“தேவயானியின் அருந்திறலை அம்மக்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதை அறியுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை” என்றான் முண்டன். “விழி மட்டுமே கொண்டவர்கள் அனைவரும் அறியும்படி ஒன்று உண்டு. இளவரசே, அத்தனை அரசாடல்களிலும் மறுக்கமுடியாத விசையாகத் திகழ்வது அது, உடலழகு. தேவயானியின் முன் சர்மிஷ்டை வெறும் பெண். இருவரும் வந்து அவைநின்ற அக்கணத்திலேயே உள்ளத்தை அறியாமல் விழிகள் அனைத்தையும் முடிவெடுத்துவிட்டன” என்றான்.
“அத்துடன் சர்மிஷ்டை அசுரமூதன்னையரின் ஆடையும் அணியும் பூண்டிருந்தாள். அவளைக் கண்ட ஒவ்வொரு அசுரகுடியினரும் தங்கள் இல்லத்துப்பெண் என்றே உணர்ந்தனர். அவளை அணுக்கமாக நெஞ்சிருத்தினர். அவளுக்காக இரங்கினர். பலர் விழிநீர் கசிந்தனர். ஆனால் அரசர்களை மக்கள் தங்களில் ஒருவர் என எண்ணுவதில்லை, தங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலும் தகுதியும் கொண்டவர்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆற்றலையும் தகுதியையும் அழகிலிருந்து பிரித்து நோக்க அவர்களால் இயல்வதுமில்லை. இளவரசே, தங்களால் இரங்கி நோக்கப்படுபவர்களை அல்ல தாங்கள் அஞ்சி அகல்பவர்களையே அவர்கள் தலைவர்களென ஏற்கிறார்கள். வெறுக்கப்படுபவர்கள்கூட அரசாளலாம், கனிவுக்குள்ளாகிறவர்கள் கோல் கைக்கொள்ள இயலாது.”
“சர்மிஷ்டைக்காக குடிப்பெண்கள் விழிநீர் சிந்தினர். அவளைப்பற்றி நாவழிப் பாடல்கள் எழுந்து இல்லங்களின் கொல்லைப்புறங்களில் புழங்கின. அவளை கைவிட்ட குற்றவுணர்வை வெல்ல அவளை தெய்வமாக்கினர். பலிவிலங்கை தெய்வமாக்கும் வழக்கம் இல்லாத இடம் ஏது? சர்மிஷ்டை அனைத்து நற்குணங்களும் கொண்டவளாக ஆனாள். அணைக்கும் நதி, தாங்கும் நிலம், கவிந்த வானம். பின்னர் பாடல்களில் அசுரகுலம் வாழும்பொருட்டு குருநகரிக்கு அரசியாக தேவயானியை தெரிவுசெய்ததே அவள்தான் என்று கதை எழுந்தது. அழுது மறுத்த தேவயானியிடம் அசுரகுலத்தின்பொருட்டு அத்திருமணத்தை ஏற்கும்படி அவள் மன்றாடும் பதினெட்டு தனிப்பாடல்கள் கொண்ட குறுங்காவியமான காவ்யாசுரம் பெரும்புகழ்பெற்ற நூல்” என்று முண்டன் சொன்னான்.
பீமன் புன்னகைத்து “ஆம், ஒவ்வாதனவற்றை நம் புழக்கத்திலிருந்து அகற்றிவிடவேண்டும், மேலே தூக்கியோ கீழே அழுத்தியோ. என்றும் இதுவே நிகழ்கிறது” என்றான். முண்டன் உரக்க நகைத்து “அவ்வாறு அகற்றப்பட்டவற்றால் ஆனது புராணம். அன்றாடப் புழக்கத்திலிருந்து எஞ்சுவது வரலாறு. அவை ஒன்றை ஒன்று நிரப்புபவை, ஒன்றை ஒன்று தழுவிச் சுழல்பவை” என்றான். “தேவயானி வரலாற்றுக்குள்ளும் சர்மிஷ்டை புராணங்களுக்குள்ளும் சென்ற முறை இது.”
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
April 11, 2017
வன்முறை வளர்கிறதா?
இனிய சகோதரனுக்கு
நேற்று அதிகாலையில் விழித்து மறுபடியும் தூக்கம் வராமல் t .v . பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு செய்தி channelil வரிசையாக மூன்று நிகழ்வுகள். 1. ஏதோ கட்சி சண்டை. ஒரு குழு இன்னொரு குழுவை அடித்து நொறுக்குகிறது. ரத்த விளாறாய் ஆன பின்னும் அடிப்பது தொடர்கிறது. 2. ஒரு ஆட்டோவும் இன்னொரு வண்டியும் மோதிக்கொண்டது. யார் மேல் தவறு என்று தெரியவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் எதையோ எடுத்து ஓங்கி ஒரே அடி. ஆட்டோக்கார வாலிபன் இறந்து விட்டான். 3. ஒரு கணவன், மனைவியை கொடுமைப்படுத்தினான் என்று மனைவியின் சொந்தங்கள் கணவனை நடுரோட்டில் பிளந்து கட்டுகிறார்கள்.
மூன்றிலுமே ஈடுபட்டவர்கள் நன்றாக படித்தவர்கள் போன்ற தோற்றத்தில் இருந்தவர்கள். அதிலும் மூன்றாவது சம்பவத்தில் அடிவாங்கியவர், கொடுத்தவர்கள் எல்லோரும் ஆஃபீசர் தோற்றத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு அடியும் பெரிய மூங்கில் கம்புகளையும் இரும்பு கம்பிகளையும் தலைக்குப் பின்னால் ஓங்கி அடிக்கும்போது நமக்கு உடல் நடுங்குகிறது. படிப்பறிவு இல்லாத காலக்கட்டத்தைவிட இப்பொழுது ஏன் இந்த வன்முறை. கண்டிப்பாக ஒவ்வொரு அடிக்கும் ஒரு எலும்பு முறிவு இருக்கும்.
நம்முடைய படிப்பு பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தம். உங்கள் எழுத்துக்களில் ஒரு இடத்தில், ஒரு சமூகத்தின் நாகரிகம் என்பது தனக்கும் பிறனுக்கும் உள்ள இடைவெளி என்று உங்கள் குரு நித்யா சொல்லியதாக எழுதியிருப்பீர்கள். தன்னைப் போல் பிறனை நேசிக்க சொன்ன மிகப்பெரிய நாகரீகத்தைக் கொண்ட கிறிஸ்தவ சமூகம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறது. நம் எல்லோருக்குள்ளும் ஒரு கொடூர மிருகம் இருக்கிறதா? பயமாக இருக்கிறது. ஏதும் தேவை வரும்பொழுது நாமும் இதேபோல்தான் நடந்து கொள்வோமா?
பயத்துடன்
டெய்சி பிரிஸ்பேன்.
அன்புள்ள டெய்சி,
உங்கள் கடிதம் என்னை ஒருகணம் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. ஏனென்றால் நீங்கள் குறிப்பிடும் இதே போன்ற நிகழ்வுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். கட்டுமீறிய கோபம் அடிதடி என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருந்திருக்கிறது. இலக்கியத்துக்கு உள்ளேயே கூட ஒருசில அடிதடிகள் பதிவாகியிருக்கின்றன. அதற்காக எப்போதும் வெட்கப்படுவேன், அவர்களிடம் பலமுறை மன்னிப்பும் கோரியிருக்கிறேன். ஆனாலும் அதை கடக்க இன்னும் இயலவில்லை. இப்போது குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் உடல்வலு குறைந்துவிட்டதே
என்னுடைய குடும்பப் பின்னணியில் என்னுடைய மூத்த சகோதரர்கள். தந்தை, தாய்மாமன்கள் ,உறவினர்கள் அனைவரிடமும் இந்த அடிதடி இயல்பு இருந்தது. இதை ஒரு தனி இயல்பாகக் கொள்ள முடிவதில்லை. அதற்கு அப்பால் பல நூறு ஆண்டு பராம்பரியம் கொண்ட ஒரு குலவழக்கம் என்று தான் தோன்றுகிறது. இளமையிலேயே சூழலில் உள்ள பேச்சுக்கள், நம்பிக்கைகள், தெய்வங்கள், படிமங்கள் வழியாக உள்ளே பதிந்துவிடுகிறது இது. சாதிமேட்டிமையுணர்வு போல. மூடநம்பிக்கைகள் போல. ஆழ்ந்த மனசோர்வுகள் போல. வாழ்நாளெல்லாம் அதனுடன் போராடிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தை போல உலகில் அமைதியும் ஒழுங்கும் நிலவிய பிறதொரு காலகட்டம் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை என்று அறிவீர்களா? இதை நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலகத்தில் எத்தனை நாடுகளில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன். உள்நாட்டுப்போர்களால் கலவரங்களால் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று ஒழிக்கப்படுவதை செய்திகள் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். நவீன அறிவியல் கொலை எந்திரங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றிருப்பதை நன்றாக அறிவோம். ஆயினும் கூட இந்தக் காலகட்டம் மனித குலத்தின் மிக அமைதியான காலகட்டம் என்பது தான் உண்மை.
நாமறிந்த வரலாறு எப்போது தொடங்குகிறதோ அன்று முதலே அது வன்முறையின் வரலாறாகத் தான் இருந்திருக்கிறது. சொல்லப்போனால் இன்றுவரை வளர்ந்து வந்துள்ள மானுட வாழ்க்கை என்பது ஒரு நெசவால் ஆனது என்றால் அதன் முதன்மைச்சரடே வன்முறைதான். நமது தொல்கதைகள் அனைத்துமே மாபெரும் கொலைகாரர்களைப் பற்றித்தான். நமது மகத்தான காவியங்கள் அனைத்தும் பேரழிவுகளை உருவாக்கிய போர்களைப்பற்றித்தான். நாம் வணங்கும் தெய்வங்களும் கூட நிகரற்ற போர் வீரர்கள் தான்.
போரினூடாகவே மானுடம் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டது என்று சொல்பவர்கள் உண்டு. போரே புதிய சிந்தனைகளை, புதிய தொழில்நுட்பங்களை, புதிய நிலங்களைகண்டடைந்தது என்பார்கள். இன்றுகூட போருக்காகவே மானுட அறிவில் பெரும்பகுதி செலவிடப்படுகிறது எனச் சொல்வார்கள். போரில் வெல்பவை தங்கி வாழ்ந்தன. வீழ்ந்தவை முற்றாக அழிந்து பெயர்களும் எஞ்சாமல் மறைந்தன. ஆகவே போர் என்பது இயற்கையின் தேர்வு, மானுடத்தை மேம்படுத்தும் அடிப்படை என்பார்கள். வரலாற்றைப்பார்த்தால் இருக்கலாம் என்று சிலசமயம் தோன்றிவிடும்
போருக்கான ஆற்றலை உள்ளத்தில் உடலில் எழவைப்பதே பண்டைய சமூகங்களின் மிகப்பெரிய அறைகூவலாக இருந்தது. வீரம், மானம் , தியாகம் என்று சொல்லப்படும் விழுமியங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டவை. பழைய கதைகள் அனைத்துமே இம்மூன்று பண்புகளை மையமாக்கி அமைந்துள்ளன. ஏனெனில் போர்ச்சமூகத்தின் அடிப்படையான உணர்வுகள் அவை.தமிழகம் எங்கும் பயணம் செய்தால் தன் கழுத்தைத் தானே வெட்டி களப்பலியாகும் வீரனுக்கு, போரில் களம்பட்ட வீரர்களுக்கு நடப்பட்ட வீரக் கற்கள் பல்லாயிரக்கணக்கில் நிற்பதைக் காணலாம். நாம் நின்றிருக்கும் ஒவ்வொரு அடிமண்ணும் பலநூறுமுறை குருதியால் நனைந்திருக்கும்.
நமது அறங்கள் அனைத்தும் இதிலிருந்துதான் உருவாகி வந்தன. நாம் கொன்றால் சூறையாடினால் கொள்ளையடித்தால் எரித்தால் இடித்தால் அது அறம் , பிறர் அவ்வாறு நமக்கதை செய்தால் அது அறமிலாத கொடுமை என்ற அளவிலேயே பல்லாண்டுகளாக நமது அறவுணர்வு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட அதிகம் முன்னகரவில்லை என்பதை ஒருநாள் முகநூலில் சென்று அரசியல் விவாதங்களை கவனித்தால் அறியலாம்
இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் அனைத்தும் மானுட அறங்களும் சென்ற பலநூற்றாண்டுகளாக பல்வேறு பேரறிஞர்களால் பேசப்பட்டு, விவாதங்களால் மேம்படுத்தப்பட்டு, மெல்ல மெல்ல பொதுவாக ஏற்கப்பட்டு உருவாகி வந்தவை. அவை முதலில் பேசப்பட்டபோது எத்தனை ஏளனத்துக்குரியதாக இருந்திருக்கும், எத்தனை அற்பமானதாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் என்று இப்போது கற்பனை செய்வது கடினம். ஆனால் தங்கி வாழவேண்டுமென்ற தேவை மானுடனை அக்கருத்துகளை நோக்கிக் கொண்டுவந்தது. அல்லது அக்கருத்துகள் தங்கி வாழவேண்டுமென்று ஒரு ஊழ்வினை இருந்திருக்கலாம். அல்லது அவற்றை சொன்னவர்களின் ஆன்ம வல்லமை காலப்போக்கில்வென்றிருக்கலாம்.
இவ்வாறு பார்த்தால் மானுட வரலாற்றை பல்லாயிரம் ஆண்டுகளினூடாக மெல்லமெல்ல தனக்குறிய அறத்தை திரட்டி எடுத்து முன்னகர்ந்துகொண்டிருக்கும் ஒரு பயணம் என்று வரையறை செய்யலாம். அதன் ஒவ்வொரு காலகட்டமும் முந்தையதை விட மேலானதே. வரலாறைப்பாருங்கள், இரண்டாம் உலகப்போரும் வதைமுகாம்களும் கொண்ட காலகட்டம் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட குறைவான கொடுமைகள் கொண்டது, மேலும் அமைதியானது.
இன்று நின்று கொண்டு நாம் மதங்களைத் திரும்பிப் பார்த்தாலே இந்த முரணியக்கத்தை பார்க்க முடியும். வன்முறையைத் தன் மையப்பெரும்போக்காக கொள்ளாத மதங்கள் உலகில் மிகச்சிலவே. இந்துமதம், கிறித்தவம், இஸ்லாம் அனைத்துமே வன்முறையை முதன்மையாக கொண்டிருந்தவைதான். சமணமும் பௌத்தமும் மட்டுமே மையமான வன்முறைநோக்கு இல்லாத மதங்கள். அவை உலக அளவிலேயே விதிவிலக்குகள். அவ்விரு மதங்களும் இந்தியாவில் தோன்றின என்பது உலகிற்கு நாம் அளிக்கும் பெருங்கொடை.
இந்துமதம் போர்த்தெய்வங்களை முதன்மையாக கொண்டது. எண்ணிப்பாருங்கள் சென்ற காலங்களில் கிறித்தவத்தின் செய்தியை உலகிற்கு கொண்டு சென்றவர்கள் உலகின் பல்வேறு நிலங்களில் ஆற்றிய மாபெரும் மானுட அழிவுகளைப்பற்றி. அந்நிலங்களை கைப்பற்றி கிறிஸ்துவுக்கு சமர்ப்பிக்க அவர்கள் நிகழ்த்திய கொடூரமான போர்களை பற்றி. இந்துமதமும் கிறித்தவமும் இன்று அந்தக் காலகட்டத்தின் அணுகுமுறைகளில் இருந்து வெகுவாகத் தள்ளி வந்துவிட்டன. இன்று அவற்றை வேறுவகையில் விளக்குவதற்கான முயற்சிகளில் கூட ஈடுபட ஆரம்பித்துவிட்டன. மிகச்சில இந்துக்களோ கிறித்தவர்களோ தான் இன்று அவற்றை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்த மதத்திற்குள்ளேயே மானுட அமைதிக்கும் ஒற்றுமைக்குமான குரல்கள் எழுந்தன என்பதுதான் நான் சொல்லும் முரணியக்கம். மாபெரும் ஞானிகளின் அறிஞர்களின் தரிசனங்கள் வழியாக, கர்மயோகிகளின் சேவை வழியாக வன்முறையற்ற, ஒத்துவாழ்தலுக்குரிய அறம் நோக்கி மானுடம் நகர்ந்தது. அவர்கள் மெல்ல அந்த மதங்களின் பார்வையை மாற்றினர். காலப்போக்கில் மானுடத்தின் பார்வையையும் அவர்களின் தரிசனங்களால் மாற்ற முடிந்தது. இந்து மதத்திற்குள் தான் காந்தி உருவாக முடிந்தது. கிறித்துவத்திற்குள் தான் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒரு அமைப்பு எழ முடிந்தது. மதங்களுக்குள் இருந்து மதச்சீர்திருத்தவாதிகள் எழுந்துகொண்டே இருந்தார்கள். மதங்களுக்குள் இருந்து எழுந்த சிந்தனைகளை மதங்களுக்கு வெளியே கொண்டுசென்று வளர்த்தனர் அடுத்தகட்ட சிந்தனையாளர்கள். மதத்தை எதிர்க்கும் சிந்தனைகள் கூட அந்த முரணியக்கத்தின் கனிகளே.
[மதங்களை நோக்கிய நம் பார்வை எப்போதும் ஒற்றைப்படையானது. மதங்களின் வன்முறையம்சத்தை மட்டும் கருத்தில்கொண்டு அவற்றை முற்ற நிராகரிப்பவர்கள் அவை மானுடம் இன்று கொண்டுள்ள அத்தனை சிந்தனைகளுக்கும் விளைநிலங்கள் என்பதை அறியாத மூடர்கள். அவை அமைதியின் குரல்கள் மட்டுமே என வாதிடுபவர்கள் வரலாறு அறியாத வேறுவகை மூடர்கள்]
இன்றைய உலகம் இவ்வாறு உருவாகி வந்த மாபெரும் மனிதாபிமானிகள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆக்கம். இடைவிடாத போர் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த பூமிப்பரப்பு மெல்ல அடங்கி பெரும்பாலும் போரற்ற வாழ்க்கை ஒன்றை நோக்கி வந்துள்ளது. அந்த அமைதியை ஓரிரு தலைமுறைக்காலமாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வரலாற்றை அறியாமல் இங்கு நின்று பார்க்கும்போது நீங்கள் சுட்டிய அந்த வன்முறைகள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் அளிக்கின்றன. ஆனால் சென்றகால வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இவை மிகச்சிறியவை.
இவை சென்றகாலத்தின் எச்சங்கள். மழை நின்ற தூறல்கள். வீரமென்றும் தியாகமென்றும் மானமென்றும் உருவாக்கப்பட்டுள்ள விழுமியங்கள் இன்னும் நம் எண்ணங்களில் பெரும்பாலும் அப்படியேத்தான் உள்ளன. அந்தக் காலகட்டம் மறைந்துவிட்டதை நமது மூளை அறிந்தாலும் நமது உள்ளம் அறிவதில்லை. இன்றுகூட ஒரு அரசியல் மேடைப்பேச்சை கேளுங்கள், சென்றகால படைத்தலைவன் ஒருவன் தன் தற்கொலைப்படையிடம் பேசிய அதே அறைகூவல்கள்தான் அதில் நிறைந்திருக்கும். நம் மொழியெங்கும் வன்முறைக்கூச்சல்கள். நம் படிமங்கள் எல்லாமே வன்முறைகொண்டவைதான். ஒருநாளில் நம் சினிமா சுவரொட்டிகளைப்பாருங்கள், அத்தனை நாயகர்களும் உச்சகட்ட வன்முறை நிலையில் கையில் ஆயுதங்களுடன் நம்மை வெறிக்கிறார்கள்.
சூழல் மாறிவிட்டது, நம் அகம் மெல்லமெல்லத்தான் மாறும். பல தலைமுறைகளாகப் போரையே வாழ்க்கையாகக் கொண்ட சாதியினரைப் பொறுத்தவரை இந்த இயல்புகள் அவர்களின் குருதியிலே கலந்துவிட்டிருக்கிறது என்றுதோன்றுகிறது. மிகச்சிறு குழந்தையாக இருக்கையிலேயே இவை எப்படியோ புகட்டப்பட்டுவிடுகின்றன. என்னுடைய குடும்பப்பின்னணியை வைத்து அதைத்தான் நான் சொல்வேன். என்னுடைய மைந்தனுக்கு அந்த வன்முறை கடத்தப்படவில்லை. என்னுடைய தனிப்பட்ட சாதனையாக நான் சொல்வது அதை மட்டும்தான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தனித்திருப்பவர்களின் கொண்டாட்டம்
அன்பின் ஜெ,
வணக்கம்.உங்கள் தளத்தில் பழைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.யாதெனின் யாதெனின்‘ குறளுக்கு தங்கள் விளக்கமும் அதிலுள்ள உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றியது.
என் சொந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணி வருந்திய நிலையில் இப்பதிவு நல்ல திறப்பாக எனக்கு அமைந்தது.நான் பல வேளைகளில் அப்படித்தான் நடக்க எண்ணுகிறேன்.உலகியல் வாழ்க்கைத் தேவைகளில் இப்படி தேவைக்கு மேலானவற்றை உதறிவிடவே எண்ணி செயல்படுகிறேன்.ஆனால் அப்படி நான் விட்டுக் கொடுப்பதும்,வேண்டாம் என்று உதறுவதும் சில வேளைகளில் என்னை எளிதாக ஏமாளி என்று மற்றவர்களை எண்ண வைக்கிறது.உன் எளிய தன்மையால் உன்னை எளிதாக ஏமாற்றி விடுவோம் என்ற நோக்கத்துடன் நிறைய பேர் அணுகும் போதே நான் அதை உணர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது பற்றியெல்லாம் அவர்களுக்கு விளக்கம் கூறவும் நான் முயன்றதில்லை.என்னளவில் சிரித்துக் கொண்டே கடந்து விடுவதே நான் செய்வது.
ஆனால் அப்படியெல்லாம் நம்மை எளிதாக விட்டு விடுகிறார்களா? எனக்கு அறிவுரைகள் கூற ஆரம்பிப்பவரும் உண்டு.”எதற்காக புத்தகமெல்லாம் வாசிக்கிறாய்?அதனால் என்ன பயன்? பணம் மட்டும் தான் இந்த உலகத்தில் பேசும்.பொருளைச் சேர்த்து வைப்பதற்காக ஏதாவது செய்யலாமே.இப்படி இலக்கியம் வாசிப்பு என்றெல்லாம் நேரத்தை செலவழிப்பதை விட்டு.இப்படித் தொடரும் பேச்சுகளை தவிர்க்கவே முடிவதில்லை. அல்லது அவர்களுக்கு எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லையா?எப்படியாயினும் சில வேளைகளில் இத்தகைய பேச்சுகள் என்னை சோர்வுறவே செய்கின்றன.
என் வாசிப்பும் அதன் மூலம் நான் அடையும் உணர்வுகளும்,என் அக உலகும் எத்தனை இனியது என்று எனக்கு மட்டுமே தெரியும்.இதையெல்லாம் இவர்களின் குறுகிய உலகியல் நோக்கான வாழ்வு முறையினால் புரிந்து கொள்ளவே முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது.சில வேளைகளில் கடினமாக பதில் கூறி விடுவேனோ என்று எனக்கே அச்சமாகத்தான் இருக்கிறது.
யாதெனின் என்ற கட்டுரை என் வழியைச் சரியாக அமைத்துக் கொள்ள அடிப்படையாக இருக்கிறது.
நன்றி
மோனிகா மாறன்.
அன்புள்ள மோனிகா
தமிழ் ஹிந்துவில் பெண்கள் பகுதியில் உங்கள் கட்டுரை கண்டேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய தளத்தில் William Stanley Merwin எழுதிய ஒரு கதையை குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் கேள்விகள் ஐயங்களுக்கெல்லாம் அதில் பதில் உள்ளது
பொதுவாக இரு சாராரிடம் விவாதிக்கவோ புரியவைக்கவோ முடியாது. முழுமையாக மூடப்பட்ட சுவர்கள் அவர்களின் உள்ளங்கள். ஒன்று, ஓர் அனுபவதளத்தின் துளியைக்க்கூட முற்றிலும் உணராத ஒருவரிடம் அந்த அனுபவதளம் சார்ந்து பேசமுடியாது. இசையே கேட்டிராத ஒருவரிடம் இசை கேட்பதன் இன்பம் பற்றி பேசமுடியாது. நம் மக்களில் பெரும்பாலானவர்கள் லௌகீகமான உலகை மட்டுமே அறிந்து அதில் திளைப்பவர்கள். அவர்களிடம் அதற்கப்பால் உள்ள எதையும் பேசிப்புரியவைக்க முடியாது. இலக்கியத்தை விடுங்கள், பயணங்களைக்கூட சொல்லமுடியாது. இது நம் நண்பர்கள் அனைவரும் அடையும் அனுபவம்
இரண்டு, கருத்தியலாலோ மதத்தாலோ ஆழ்ந்த நம்பிக்கையை , நிலைப்பாட்டை கொண்டுவிட்ட ஒருவரிடம் விவாதிக்க முடியாது. அவருக்குள் தன் நம்பிக்கை, நிலைப்பாடு குறித்து ஒரு சிறு அவநம்பிக்கை ஓடிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் மானுட உள்ளம் எதையும் முழுக்க நம்பாது. ஆகவே அவரைப்போன்றவர்கள் தன் தரப்பை சாத்தியமான அனைத்து இடங்களிலும் சொல்லி, பரப்புரை செய்து அதை தாங்களே நம்ப முயன்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மாறாகச் சொல்லப்படும் எதையும் அவர்கள் அந்நம்பிக்கைக்கு எதிரான தாக்குதலாகவே கொள்வார்கள். மூர்க்கமாக அதை எதிர்ப்பார்கள்.
நாம் நம்புவதை நாம் வாழ்வதன் விடுதலைதான் உண்மையான இன்பம். தனித்திருக்க திராணிகொண்டவர்களுக்கு மட்டுமே உரிய கொண்டாட்டம் அது
ஜெ
யாதெனின் யாதெனின்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சோம்பல், எதிர்சோம்பல் -கடிதங்கள்
அன்பு ஜெமோ,
நலம் தானே?
ஆணவமும் சோம்பலும் & எழுதலின் விதிகள் இரண்டுமே மனதுக்கு உற்சாகத்தை அளித்தன. நன்றி.
நண்பரின் கேள்வியைப் பார்த்தபோது, இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறீர்களே என்று தோன்றியது. ஒருநாளில் உங்கள் வேலைகள் என்னென்ன என்று விவரித்திருந்தீர்கள்.
ஒருநாள் / தினமும்/தினசரி வேலை/ஜெயமோகன் என்றெல்லாம் விதவிதமாக கூகுளாண்டவரிடம் ஜெபித்ததில், கருணையுடன் கீழே உள்ள லிங்க்கை கொடுத்தருளினார்.
அது, ஒவ்வொரு நாளும்.
http://www.jeyamohan.in/582#.WOp_ZWclHIU
கேள்வி கேட்ட நண்பருக்கு இது உதவலாம்.
அன்புடன்
செங்கோவி
அன்புள்ள செங்கோவி
நன்றி
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப்பின்னரும் அன்றாடம் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லாமல் அப்படியே நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் செயல்திட்டம் பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மையில் செயலுக்கு திட்டம் வகுப்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. Passion என்பதே முக்கியமானது. நான் பெருஞ்செயல்களைச் செய்பவர்களை கண்டிருக்கிறேன். அவர்களைச் செயலாற்ற வைப்பது பெரிய ஊக்கமாக அமைவது எல்லாமே அந்த பற்றுதான். சோம்பேறித்தனம் அல்லது சலிப்பு என்பவர்கள் எதன்மீதும் பெரிய பற்று கொள்ளாதவர்கள். அவர்களுக்கு அது அமையவில்லை. மிகப்பெரிய Passion அமைவதும் ஒரு வரம்தான் என நினைக்கிறேன்
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
செயலூக்கம் கொள்ளச்செய்வதில் பற்றுறுதி அளவுக்கே தீவிரமானது வெறுப்பு. கடும் காழ்ப்பினாலேயே உச்சகட்ட செயலூக்கத்துடன் இருப்பவர்கள் உண்டு – முகநூலில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். அந்தக் காழ்ப்பை அவர்கள் முற்போக்கான நோக்கம் கொண்டது, மனிதாபிமானத்திலிருந்ந்து எழுவது என்றெல்லாம் காட்டிக்கொள்வார்கள்
ஆனால் அது மிக அழிவுச்சக்தி கொண்டது. அதில் ஈடுபடுபவரை உள்ளூர அதிருப்தியும் கசப்பும் நிறைந்தவராக ஆக்குகிறது.அவரை மேலும் மேலும் விசைகொள்ளவைக்கிறது . ஒருவரின் செயல்பாட்டில் நேர்நிலையான அம்சம் எத்தனை சதவீதம் என்று பார்த்தே அதை மதிப்பிடவேண்டும். எதிர்நிலையாகவே செயல்படுபவர் பிறருக்கு எதிராக அல்ல, தன்னுள் இருந்து உழற்றும் அதிருப்திக்கு எதிராகத்தான் போராடுகிறார். அது ஒருவகை தற்கொலைப்பாதை
செயல்பாடு என்பது நேர்நிலையான, படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு மட்டுமே. வேறு எந்தச்செயல்பாடும் எந்நோக்கம் கொண்டதாயினும் வீண். அதற்குச் சோம்பல் நல்லது
ஜெ
பழைய கட்டுரைகள்
ஆணவமும் சோம்பலும்
எழுதலின் விதிகள்
செயலின்மையின் இனிய மது
ஒருமரம் மூன்று உயிர்கள்
செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?
தன்னறம் சாங்கிய யோகம்
கர்மயோகம்
தன்னறம்
யாதெனின் யாதெனின்…
செய்தொழில் பழித்தல்
விதிசமைப்பவனின் தினங்கள்
நான்கு வேடங்கள்
தேடியவர்களிடம் எஞ்சுவது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
71. காலமணிகள்
அனைத்தும் எத்தனை விரைவில் திரும்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர். சுவர்களும் தூண்களும்கூட உருமாறியிருப்பதாகத் தோன்றியது. எத்தனையோமுறை நூல்களில் ஒவ்வொரு காலையும் புவியில் புதிதாகத்தான் பிறந்தெழுகிறது என்பதை அவள் படித்திருந்தால்கூட அன்றுதான் அதை கண்முன் உண்மையென அறிந்தாள்.
அன்றிரவு தன்னால் துயிலமுடியுமென்று அவள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் விழிமூடி கண்களுக்குள் ஓடிய குமிழிகளை நோக்கிக்கொண்டிருந்த சற்று நேரத்திலேயே உருவழிந்த எண்ணங்கள் அவளை இழுத்து துயில் நோக்கி கொண்டுசென்றன. விழித்துக்கொண்டபோது அரண்மனையின் ஒலிகளில் இருந்தே புலரி எழுந்துவிட்டதை உணர்ந்தாள். எழுந்து நின்று குழலை சுருட்டிக் கட்டி ஆடைபிரித்துக் கட்டிக்கொண்டபோது அறைக்குள் அணுக்கச்சேடி தரையில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருப்பதை பார்த்தாள். அவள் தோளைத் தட்டி “எழுக!” என்றாள்.
வாயைத் துடைத்தபடி அவள் துடித்து விழித்து “ஆ! இளவரசி…” என்றாள். உடனே எழுந்து நின்று ஆடைதிருத்தி “கனவு” என்றாள். சர்மிஷ்டை “விடிந்துவிட்டது. நான் நீராடச் செல்கிறேன்” என்றாள். “நானும் வருகிறேன்” என்று அணுக்கச்சேடி சொன்னாள். “படுத்திருக்கலாமே?” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அன்னையின் ஆணை, உங்களுடன் நான் இருக்கவேண்டும் என்று. நான் நெடுநேரம் விழித்திருந்தேன்” என்றாள் அணுக்கச்சேடி. “நான் உயிர்துறக்கக்கூடும் என அன்னையர் அஞ்சுகிறார்கள் என எனக்கும் தெரியும்” என்று அவள் புன்னகைத்தாள். “இல்லை, இளவரசி” என அவள் சொல்லத் தொடங்க “நீராட்டுக்குளத்தில் நான் மூழ்கிவிடக்கூடாது என்று ஒரு கணம் உன் உள் எண்ணம் ஓடியது” என்றாள் சர்மிஷ்டை. அணுக்கச்சேடி “இல்லையே, நான் அப்படி எண்ணவில்லையே?” என்றாள். “வாடி” என்று சிரித்தபடி அவள் தோளில் தட்டி சர்மிஷ்டை நடந்தாள்.
அரண்மனையின் அகத்தளம் முழுக்க ஆடிசூடிய நெய்விளக்குகள் எரிந்தன. அப்பால் அடுமனை உயிர்கொண்டுவிட்டிருந்ததை ஒலிகள் காட்டின. அவளை அணுகிய சேடி ஒருத்தி “நீராட்டறை ஒருங்கியிருக்கிறது. வருக, இளவரசி” என்றாள். சர்மிஷ்டை “நன்று” என்றபின் “எனக்கு எளிய ஆடையை ஒருக்கி வையுங்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சேடி. சர்மிஷ்டை “அப்படி முன்னரே உனக்கு ஆணையிடப்பட்டிருந்ததா?” என்றாள். “இல்லையே…” என்று அவள் கண்களை அசைத்தபோதே தெரிந்தது. “அரசி அவ்வாறு சொன்னார் அல்லவா?” என்றாள். அவள் தலைகவிழ்ந்து “ஆம்” என்றாள். “என்ன சொன்னார்?” என்றாள். “இல்லை…” என்று அவள் தயங்க “சொல்!” என்றாள். “தங்களுக்குரிய ஆடையை சமையப்பெண்டு எடுத்துவைப்பார் என்றார்.”
அணுக்கச்சேடி சினத்துடன் “அது எளிய உடை என நீ எப்படி அறிந்தாய்?” என்றாள். சேடி தலைகுனிந்து நிற்க “நீ பார்த்தாயா?” என்றாள் அணுக்கச்சேடி. அவள் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “அவ்வாறு அரசி ஆணையிட்டார்களா?” என்றாள் அணுக்கச்சேடி உரக்க. சர்மிஷ்டை அவள் கைகளைத் தொட்டு “அதுதானே முறை? அது அரசியின் கடமை” என்றாள். “ஆனால்…” என்று அணுக்கச்சேடி சொல்லத் தொடங்க “வாடி” என்று சர்மிஷ்டை சிரித்தபடி முன்னால் சென்றாள்.
எதிர்ப்படும் அனைத்து சேடியர் முகங்களும் மாறிவிட்டிருப்பதைக் கண்டு திரும்பி அணுக்கச்சேடியிடம் “அனைவரும் அறிந்துவிட்டனர் அல்லவா?” என்றாள். “ஆம், நேற்று நீங்கள் துயில்கையில் நீர்கொண்டுவருவதற்காக நான் இருமுறை அடுமனைக்குச் சென்றேன். அங்கு இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.” சர்மிஷ்டை “எப்படி?” என்றாள். “நேற்று சினத்துடனும் அழுகையுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று அனைவர் முகங்களும் மாறிவிட்டிருக்கின்றன” என்றாள் அணுக்கச்சேடி. “அனைவரும் துயின்று மீண்டிருப்பார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “துயிலும்போது உணர்வுகள் அழிந்துவிடுகின்றன. எஞ்சியவை இங்குள்ள புறவாழ்க்கைக்கு உதவுபவை மட்டுமே. இன்று காலை எழுந்ததும் நான் அதைத்தான் உணர்ந்தேன்” என்றாள்.
“தங்கள் பேச்சே மாறிவிட்டிருக்கிறது, இளவரசி” என்றாள் அணுக்கச்சேடி. “ஆம், அனைத்தையும் மேலும் கூரிய சொற்களில் சொல்வதற்கு சுக்ரரின் மகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்திறன் ஒரு சேடியாக பணியாற்றுவதற்கு உதவுமா என்று தெரியவில்லை. உதவினால் நன்று” என்றாள் சர்மிஷ்டை. “அச்சொல்லே நெஞ்சை அதிர வைக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எச்சொல்?” என்றாள் சர்மிஷ்டை . “சேடி எனும் சொல். அதை சொல்லவேண்டாம், இளவரசி” என்றாள் அவள். சர்மிஷ்டை “நீ உன்னை சேடியென்றுதானே உணர்கிறாய்?” என்றாள். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்!” அணுக்கச்சேடி தலைகவிழ்ந்து “இல்லை” என்றாள். சர்மிஷ்டை திரும்பிப்பார்த்தாள்.
“சேடியின் மகளாகப் பிறந்தேன். எனக்கு தந்தையின் அடையாளம் இல்லை. எனவே இயல்பாக ஒரு கணவன் அமையப்போவதும் இல்லை. குலமகளுக்குரிய மங்கலமும் மதிப்பும் எனக்கு இப்பிறவியில் இல்லை” என்று அவள் சொன்னாள். “ஆனால் ஒருபோதும் என்னுள்ளில் நான் வெறும் சேடியென்று ஆகக்கூடாதென்று எனக்கே சொல்லிக்கொண்டேன். சேடியென்றே இங்கிருக்கிறேன், சேடியென்றுதான் தோன்றுகிறேன், நான் பேசுவதும் சேடியென்றுதான். ஆனால் என் உள்ளே சேடியென்று ஒரு சொல்லும் எழுந்ததில்லை. இளமையில் நான் சேடியல்ல என்று எனக்கு சொல்லிக்கொண்டேன். இன்று என் உள்ளம் அதை நம்பி அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது.”
உடனே முகம் மலரச் சிரித்தபடி “இத்தனை நூறு சேடியரில் என்னை நீங்கள் அணுக்கத் தோழியென தேர்ந்தெடுத்தது அதனால்தான். என் அகத்தில் நான் கொண்ட விலக்கத்தால் நான் பிறரிலிருந்து ஒரு படி எழுந்து நிற்கிறேன். அத்தகுதியினாலேயே உங்களை நான் அடைந்தேன்” என்றாள். “ஆம், உன்னை முதல்நாள் சந்தித்தபோதே உன் முகமும் பெயரும் என்னுள் பதிந்தன” என்றாள் சர்மிஷ்டை. “அவ்வாறு சற்று விலகி நிற்பதனாலேயே இவ்வரண்மனையின் சேடியர் குழாத்தில் நான் அடைந்த இடர்களும் சிறுமைகளும் ஏராளம். இழிதொழில்கள் பல எனக்கு ஏவப்பட்டுள்ளன. மூன்று அரசியருமே என்னை சிறுமை செய்திருக்கிறார்கள். என் விழிகளை பார்த்தாலே அவர்களுக்கு புரிந்துவிடும் என் உளம் முற்றிலும் பணியவில்லை என்று. ஒவ்வொரு ஆணைக்குப் பின்னும் மூத்த அரசி என் விழிகளைப் பார்த்து என்னடி புரிகிறதா என்பார். ஆணை பேரரசி என்று நான் தலைகுனிவேன். மீண்டும் அந்த ஆணையைச் சொன்னபடி என் விழிகளுள் நோக்குவார். முற்றிலும் பணியும் ஒரு விழியிலேயே ஆணை முழுமையாக சென்று சேர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு தோன்றும் போலும்.”
“உங்களுடன் இருக்கும் தருணங்களில் மட்டுமே நான் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னை வெறும் சேடி என்று எண்ணவில்லை. தோழியென்று நடத்தினீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை “ஆம்” என்றபின் சிரித்து “அது என் உளவிரிவால் அல்ல. அறிவிலும் அழகிலும் நான் உனக்கு நிகரானவளோ அல்லது ஒரு படி கீழானவளோ என்று உன்னுடன் விளையாடும்போது எப்போதுமே உணர்கிறேன், அதனால்தான். உன்னுடன் இருக்கையில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதில்லை என்னும் விடுதலை எனக்கு இருந்தது” என்றாள். திடுக்கிட்டவள்போல அணுக்கச்சேடி நிமிர்ந்து நோக்கினாள். சர்மிஷ்டை தலைகுனிந்து நடந்தாள்.
அவர்கள் நீராடும்போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சேடி சொன்னதைப்பற்றியே சர்மிஷ்டை எண்ணிக்கொண்டிருந்தாள். ஓரிருமுறை திரும்பிப்பார்த்தபோது அவள் தன்னுள் மூழ்கி தனித்திருப்பதைக் கண்டு தான் சொன்ன சொற்களைப்பற்றி அவளும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டாள். நீராடி முடித்து ஈரக்குழலுடன் திரும்பி நடக்கும்போது சர்மிஷ்டை “நகரத்தின் ஓசை முழுக்கவே மாறிவிட்டிருக்கிறதல்லவா?” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். சர்மிஷ்டை புன்னகைத்து “இன்று நகருக்குள் சென்று முகங்களைப் பார்த்தால் முற்றிலும் வேறு முகங்களையும் நோக்குகளையும் சந்திப்போம். அவர்கள் துயர்கொண்டிருப்பார்கள் என்று தந்தை சொன்னார். அது துயரல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. எளிய மக்கள் துயர்கொள்வது எதுவும் நிகழாத சலிப்பு நிலையில்தான். இத்தகைய பேரிழப்புகளும் அவர்களுக்கு மறைமுகமான கொண்டாட்டமே. சிலநாட்கள் சென்றபிறகு இந்த ஒருநாளைப்பற்றி பல நூறு கதைகள் இங்கு புனையப்பட்டிருக்கும். பல கோணங்களில் சூதர் பாடல்கள் எழுந்துவிட்டிருக்கும்” என்றாள்.
“இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் நாம் பேசிப் பேசி எளிமைப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?” என்றாள் அணுக்கச்சேடி. “வேறு என்ன செய்வது? ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழவேண்டும் என்றால் வாழ்ந்து எஞ்சிய இடத்தை முழுக்க சொற்களால் நிரப்புவது மட்டும்தானே ஒரே வழி?” என்றாள் சர்மிஷ்டை. “உங்கள் பேச்சு முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எப்படி?” என்றாள் சர்மிஷ்டை “அவரில் ஒரு பகுதி உங்களுள் வந்து குடியேறிவிட்டதுபோல” என்றாள் அணுக்கச்சேடி.
சமையப்பெண்டு அவளுக்காக காத்து நின்றிருந்தாள். “தாங்கள் அணிகொள்ள வேண்டுமென்று அரசரின் ஆணை, இளவரசி. இன்று காலையிலேயே குடிப்பேரவையை அரசர் கூட்டியிருக்கிறார். தாங்கள் அதில் பங்குகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றாள். சர்மிஷ்டை ஐயத்துடன் நோக்க “சம்விரதர் தன் தூதை இன்று அளிக்கப்போகிறார் என்றார்கள்” என்று சமையப்பெண்டு சொன்னாள். சர்மிஷ்டை குழப்பத்துடன் “பேரவை ஒத்திவைக்கப்பட்டது என்றுதானே நேற்று சொன்னார்கள்?” என்றாள். “ஆம், இன்று அது கூடுகிறது என்று காலையிலேயே ஓலைகள் சென்றுவிட்டன.”
சர்மிஷ்டை புன்னகையுடன் “இளவரசியருக்குரிய ஆடையா?” என்றாள். சமையப்பெண்டு தலைதாழ்த்தி “இல்லை, எளிய ஆடை போதுமென்று ஆணை” என்றாள். சர்மிஷ்டை “மரவுரியா?” என்றாள். “அல்ல, பருத்தி ஆடைதான். ஆனால் அரசியருக்குரிய ஆடை அல்ல” என்றபின் தயங்கி “அசுரகுடிகளுக்குரிய ஆடையும் அணிகளும் போதும் என்று சம்விரதரின் ஆணை” என்றாள் சமையப்பெண்டு. சர்மிஷ்டை “நன்று, நான் எண்ணியது போலவே” என்றாள். “வருக, இளவரசி” என்றாள் சமையப்பெண்டு. “நான் உடைமாற்றி வருகிறேன்” என்று அணுக்கச்சேடி நடந்து விலகினாள்.
அசுரகுலத்துப் பெண்கள் அணியும் கருநீல ஆடையை தோள்சுற்றி இடையில் வரிந்து உடுத்து கல்மணிகள் கோத்துச் செய்த ஆரத்தை மார்பிலணிந்து, கல்கோத்த நெகிழ்வளையல்களை கைகளில் இட்டு, மரக்குடைவுத் தண்டைகளை கால்களில் பொருத்தி, தலையில் கழுகிறகு சூடி ஆடியில் தன்னை நோக்கியபோது சர்மிஷ்டை தான் ஓர் அழகி என்ற எண்ணத்தை அடைந்தாள். முன்பு எப்போதுமே ஆடி அவளை அழகியென காட்டியதில்லை. உடலைத் திருப்பி மீண்டும் மீண்டும் தன்னையே நோக்கிக்கொண்டிருந்தாள். மிக அறிமுகமான தோற்றம். முன்பு எங்கே கண்டேன்? என் கனவுகளிலா?
அணுக்கச்சேடி அறைக்குள் வந்து அவள் தோற்றத்தைப் பார்த்து தயங்கி நின்றாள். சமையப்பெண்டு தயங்கி “இது அமைச்சர் சம்விரதரால் கொடுத்தனுப்பப்பட்ட ஆடையணிகள். இந்தத் தோற்றத்துடன் அவைக்குச் செல்ல வேண்டுமென்று…” என்றாள். “நன்று” என்று அணுக்கச்சேடி சொல்லி அவள் செல்லலாம் என்று கைகாட்டினாள். “ஆடி இதுவரை என்னை இதுபோல் அழகியாகக் காட்டியதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். அதைச் சொன்னால் பிழையாகிவிடுமோ என்று பட்டது” என்றாள் அணுக்கச்சேடி. “என்ன பிழை? அரக்கர் குலத்திற்கும் அசுரர் குலத்திற்கும் கருநீல ஆடையும் கல்மணி மாலையும் மரக்குடைவு அணிகளும்தான் பொருந்துகின்றன. பொன்னும் மணிகளும் பிறிதெவரையோ நோக்கி புனைபவை என்று தோன்றுகின்றன” என்றாள் சர்மிஷ்டை.
“இந்தத் தோற்றத்துடன் தாங்கள் ஏன் அவை புகவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. பேரவையில் இன்று என்ன நடக்கப்போகிறது?” என்றாள் அணுக்கச்சேடி. “பேரவையில் உறுதியாக குருநாட்டரசரின் அரசியாக என்னை அறிவிக்கப்போவதில்லை. அவரது கணையாழியை எனக்கு அளிக்கப்போவதும் இல்லை” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அவ்வாறென்றால் என்னை அசுரகுலத்துப் பெண்ணாக மட்டுமே அவைநிறுத்த விழைகிறார்கள்…” என்றபின் கைதூக்கி ஆடியில் தன் கல்வளையல்களை ஆட்டிப்பார்த்தாள்.
அணுக்கச்சேடியிடம் திரும்பி “எப்போதுமே இம்முரண்பாடை நான் உணர்ந்ததுண்டு. அசுரர் குலத்தவராகிய நாம் மூதன்னையருக்குப் படைக்கும் ஐந்து மங்கலங்களில் பொன்னும் மணியும் இருப்பதில்லை. மலைப்பாறையும் நீரும் மலரும் அனலும் கனியும் மட்டுமே உள்ளன. பொன்னையோ மணியையோ ஒருபொருட்டென கருதாத காலத்தில் நம் மூதன்னையர் வாழ்ந்திருக்கிறார்கள். பிறகெப்போது இவற்றை நாமும் அணியத்தொடங்கினோம்? இவற்றினூடாக ஷத்ரியர்களுக்கு நிகரான தோற்றத்தையும் ஆற்றலையும் பெறுவோம் என்று எண்ணினோம் போலும்” என்றாள். அணுக்கச்சேடி “பொன் என்பது தன்னளவில் பயனற்றதும் பொருளற்றதும் என்பார்கள். அது எதை வாங்குகிறதோ அதுவே அதன் மதிப்பு. பாரதவர்ஷம் முழுக்க பொன் எதையும் வாங்கும் என்கிறார்கள்” என்றாள்.
“நம்மிடம் இல்லாதவற்றை வாங்கும்பொருட்டு நாம் பொன்னை சேர்த்துக்கொள்வதுண்டு. நமது விலையாக பொன்னை நாமே அமைத்துக்கொண்டது பெரும்பிழை” என்று சர்மிஷ்டை சொன்னாள். வெளியே அணிகளின் ஓசை கேட்டது. மூன்றாவது அன்னை தன் இரு சேடியருடன் வந்து அறைவாயிலில் நின்று “சித்தமாகிவிட்டாயா?” என்றாள். அவள் கண்கள் வந்து சர்மிஷ்டையை காலிலிருந்து தலைவரை நோக்கி மீண்டன. அவள் உடலில் ஒரு மெல்லிய திருகல் நிகழ்ந்துவிட்டிருப்பதைக் கண்டு சர்மிஷ்டை புன்னகை புரிந்தாள். சேடியர் அவளைப் பார்த்துவிட்டு விழிதிருப்பிக்கொண்டனர்.
சர்மிஷ்டை அவள் அருகே சென்று நின்று “இந்தத் தோற்றம் எப்படி இருக்கிறது, அன்னையே?” என்றாள். செயற்கையான கடுமையுடன் “இது ஒரு சடங்குக்காகத்தானே? வா…” என்றாள் அவள். “அன்னை எங்கே?” என்றாள் சர்மிஷ்டை. சேடியொருத்தி “பட்டத்தரசி தன் அணிச்சேடியருடன் அவைக்கு சென்றுவிட்டார்கள். தங்களை அழைத்துவரும்படி சம்விரதரின் ஆணை” என்றாள். சர்மிஷ்டை “அன்னையிடம் இந்த அணியும் ஆடையும் எனக்கு மிகப்பொருத்தம் அல்லவா என்று கேட்கலாமென்று எண்ணினேன்” என்றாள். மூன்றாவது அன்னை “நாங்கள் அரசத்தோற்றம் கொண்டிருப்பதை பகடி செய்கிறாயா? நாங்கள் அணிந்தாகவேண்டிய தோற்றம் இது… இதை விரும்பி அணியவில்லை” என்றாள். “நான் இந்த ஆடையை விரும்பி அணிகிறேன். அதைமட்டுமே சொன்னேன், அன்னையே” என்றாள் சர்மிஷ்டை.
அன்னையைத் தொடர்ந்து வெளியே நடந்தபோது ஒவ்வொரு அசைவும் முற்றிலும் புதியதாக இருந்தது அவளுக்கு. பொன்னணிகள் ஓசையற்றவை. புழுக்கள்போல சிறு பூச்சிகள்போல உடலெங்கும் ஒட்டியும் கவ்வியும் இருப்பவை. அட்டைகள்போல மாலைகள். பெருஞ்சிலந்திபோல் இடையில் மேகலை. இளம்பாம்புபோல் காலில் சிலம்பு. அருமணிகள் ஈரச்சேற்றில் பதிந்த மின்மினிகள் போல. கல்லணிகளோ மெல்ல சிரித்தன. அவை தொட்ட இடங்களில் தண்மை இருந்தது. இளவாழை நீர்த்துளிகளை சூடிக்கொண்டிருப்பதுபோல என தன்னை சர்மிஷ்டை எண்ணிக்கொண்டாள். அடர்காட்டில் பாசி படிந்து ஆழ்ந்த அமைதியில் காலமின்றி உறைந்திருக்கும் கரும்பாறை போன்று அவள் இருப்பதாகத் தோன்றியது.
அந்த எண்ணம் அளித்த கிளர்ச்சியில் திரும்பி அணுக்கச்சேடியின் கைகளைப்பற்றி “மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேனடி… அதை எவரும் அறியப்போவதில்லை” என்றாள். அவள் புருவத்தைத் தூக்கி “ஏன்?” என்றாள். சர்மிஷ்டை “தெரியவில்லை. ஏனோ இத்தருணம் எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். அவர்கள் குடிப்பேரவை கூடும் மையச்சாலையை ஒட்டி அமைந்திருந்த சிற்றறைக்குச் சென்றார்கள். அணுகும்போதே அவை நிறைந்திருப்பதை உணரமுடிந்தது. வட்டமான பெருங்கூடத்தின் குவைமுகட்டின் மேல் அனைவரின் பேச்சுக்குரலும் இணைந்து ஒலித்த கார்வை கேட்டது. முன்பொருமுறை கானாடச் சென்றபோது தொலைவிலிருந்து அருவியின் ஒலி குகைக்குள் அத்தகைய முழக்கத்தை எழுப்பியதை அவள் நினைவு கூர்ந்தாள்.
ஒவ்வொரு நினைவும் தனித்தனியாக கூர்மையாக அவளுள் நிகழ்ந்தது. ஒவ்வொரு நினைவுக்கும் உரிய சொற்கள் வந்தமைந்தன. முன்பெப்போதும் இத்தனை தெளிவாக எண்ணியதும் நினைவுகூர்ந்ததும் இல்லை என்று அவள் அறிந்தாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த இரண்டாவது அன்னை அவளை அணுகி “நீ இங்கு காத்திருக்கும்படி ஆணை. அவையிலிருந்து அழைப்பு வந்ததும் நீ நுழையலாம்” என்றாள். “நன்று” என்றாள் சர்மிஷ்டை. “முரசெழுந்ததும் நாங்கள் அவைபுகவேண்டும்… உன் அன்னை மறுபக்கச் சிற்றறையில் இருக்கிறார்கள்.” அவள் முகத்தில் அனைத்தும் இயல்பானவை என்னும் தன்மையே தெரிந்தது. அனைத்தும் வழக்கமாக நடந்துகொண்டிருப்பவை என்பதுபோல. இப்போது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் மீண்டும் திசை திரும்பி குருநகரியின் யயாதியின் மணமகளாக அவள் செல்வாளென்றால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, ஒரு சிறு நிலைகுலைவுக்குப்பின் ஒவ்வொருவரும் தங்கள் சிறகுகளை சற்றே திருப்பி அத்திசையில் செல்லத்தொடங்குவார்கள். நடுவில் இவை நிகழ்ந்த தடயமே எவர் சொல்லிலும் விழிகளிலும் இருக்காது. நினைவுகளிலும்கூட எஞ்சாது என்பதுதான் விந்தையிலும் விந்தை.
சர்மிஷ்டை பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கட்டிக்கொண்டாள். வெளியே பேரவை மண்டபத்தில் அவைமுரசும் கொம்பும் குழலும் முழங்கின. தன் கையிலணிந்திருந்த கல்வளையல்களில் நன்குதேய்த்து வெண்ணிற விதைபோல் ஆக்கப்பட்ட கற்களை கைகளால் தொட்டு ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டிருந்தாள். இரு புன்னகைகள் போலிருந்தன. மெல்லச் சுழன்றபோது காலமென்றாயின. மணியாரங்களை விரலில் ஓட்டி மூதன்னையர் ஊழ்கத்தில் காலத்தை ஓட்டுவதை கண்டிருக்கிறாள். இரண்டு காலங்கள். இடக்கையின் காலம் ஹிரண்யபுரிக்கு, வலக்கையின் காலம் குருநகரிக்கு. பின்னர் தலையசைத்து இல்லை இடக்கையின் காலம் எனக்கு மட்டும் உரியது. வலக்கையின் காலம் வெளியே திகழும் அனைத்துக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.
கழுத்தில் அணிந்திருந்த கல் மாலையைத் தொட்டு அது எந்தக் காலம் என்று எண்ணினாள். இளநீலக் கற்களால் ஆன காலம் இது. எவரும் அறியாத காலம். நானும்கூட அறியாத காலம். என்ன வீண் எண்ணங்கள் என்று உடலை அசைத்து அனைத்து கல்நகைகளும் குலுங்கும்படி செய்தாள். இனி நான் சிரிக்கவேண்டியதில்லை, இந்தக் கற்களே எனக்காக சிரிக்கும். மூதன்னையரின் சிரிப்பு இது.
பேரவையில் அவை நிகழ்ச்சிகள் முரசொலியின் தாளங்கள் வழியாக அறிவிக்கப்பட்டன. அரசன் அவை புகும் ஓசையை அறிவித்து ஏழு பெருமுரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிற சங்கும் மணியும் தொடர்ந்து ஒலிக்க விருஷபர்வன் அவைபுகுவதை அவள் செவிகளால் அறிந்தாள். அவை எழுந்து வாழ்த்து ஒலித்து அவனை வரவேற்றது. அச்சிற்றறையின் அனைத்துச் சாளரங்கள் வழியாகவும் அவ்வாழ்த்தொலி உள்ளே வந்து அறையை நிரப்பி அடங்கிய பின்னரும் மெல்லிய ரீங்காரமாக எஞ்சியது. அரசன் அரியணையில் அமர்வதை, மூன்று அரசியர்களும் உடன் அமர்வதை, அமைச்சரும் பிறரும் அவை சூழ்ந்து நிற்பதை அவள் ஒலியால் கண்டாள்.
அவை நிமித்திகன் மேடை மேல் ஏறி தன் சிறு கொம்பை முழக்கி விருஷபர்வனின் கொடிவழியை வாழ்த்தி அவையமர்ந்திருக்கும் ஐங்குலங்களையும் புகழ்பாராட்டி அவை நிறைவை அறிவித்தான். அக்குரல் மெல்லிய ஒலியலையாக காற்றில் மிதந்து வந்து ஒலித்துக் கரைந்தது. அவள் அவையை கண்மூடி நோக்கிக்கொண்டிருந்தாள். வழக்கமான அவையறிவிப்புகள். அன்றாடச் செய்திகள். அவை அனைத்தையும் முன்னரே அறிந்திருப்பது நன்றாகவே தெரிந்தது. அவை காத்திருந்தது. இருமல்கள், அணியோசைகள், பீடங்களின் முனகல்கள் வழியாக பொறுமையிழந்தது. பின்னர் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. சொற்கள் விளங்கவில்லை. ஆனால் அவை ஆழ்ந்த அமைதிகொள்வதை அவள் அறிந்தாள். அதுவரை இருந்த அமைதி சற்றே விலக அவள் உள்ளம் படபடத்தது. கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை அமைதிப்படுத்திக்கொண்டாள். உடலில் வியர்வை பூத்திருந்தது. காற்று பட்டு மெல்ல குளிர்ந்து மெய்ப்புகொண்டாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
நாடகங்கள்
அசுரர்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
April 10, 2017
சாமியார்
சாமியாராக ஆவது என்பது அனைத்திலும் இருந்து விடுதலை அடைவது. அதன் பொருட்டு அனைத்தையும் துறந்து செல்வது. சுற்றுமுற்றும் நம்முடைய வாழ்க்கையைப் பாருங்கள். இரண்டே அறைகள் கொண்ட வீடு. சமையலறை, ஸ்டோர் அறை, பெண்டுகள் துணிமாற்றும் அறை எல்லாமே ஒன்றுதான். மிச்ச அனைத்துக்குமே கூடம். அதிலே பரணில் உலகத்தில் உள்ள மொத்த்த்தையும் அடைத்து வைத்திருக்கிறோம். யாராவது வந்தால் பழையதுணிகளையும் மற்ற தட்டுமுட்டு சாமான்களையும் அள்ளி அகற்றி துருப்பிடித்த மடக்கு நாற்காலியை விரித்து உட்காரச்சொல்ல வேண்டியிருக்கிறது. துருவேறிய பழைய டிவிஎஸ் பி·ப்டியில் தயிர்சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் போகிறோம். அங்கே மேலதிகாரிகளின் லபோ திபோ. ஏன் சார், ஊரிலே அவனவன் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். நாமும் பத்திரிகை சினிமாவிலே படிக்கத்தானே செய்கிறோம்? வயிறு எரியவில்லை? எப்படி நமக்கு ஒரு விடிமோட்சம்? அதற்குத்தான் சாமியார் ஆகிறது. இதெல்லாம் சம்சாரம். இதையெல்லாம் உதறி விட்டு ஒரு காவியைக்க்கட்டிக்கொண்டு கிளம்பினால் நல்ல சாமியார் வாழ்க்கை. நாற்பது அறை கொண்ட பங்களா. போக வர பென்ஸ் கார். கைகால் அமுக்கிவிட ஏ முதல் இஸட் வரையிலான ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட நடிகைகள். ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்று அப்பரோ வேறு யாரோவோ சும்மாவா சொன்னார்கள். துறவு என்பது வீடுபேறுக்காகத்தான் .புத்தியோடு பிழைத்தால் பங்களாபேறு கூட உண்டு. அது உங்கள் சாமர்த்தியம் அதிருஷ்டம்.
சாமியார் என்பவர் வேறு ஆள். ஆகவே அவர் வேறுமாதிரி இருக்க வேண்டும். காவியை நன்றாக பளீரென்று கட்டிக்கொள்ளலாம். தலைப்பாகை தாடி மீசை முதல் துல்லியமான மொட்டை வரை பலவகையான தோற்றங்கள் உண்டு. ஆறடிக்கூந்தல், பம்பைத்தலை ,சடாமுடி, குடுமி எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இதில் எது சரிவருகிறதோ அதை தக்கவைத்கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றையும் போட்டுக்குழப்புவதும் நல்ல உத்தியே. ஜீன்ஸ் பாண்டும் தலைப்பாகையும் ,வேட்டியும் லெதர் ஜாக்கெட்டும், பெர்முடாஸ¤ம் ஜிப்பாவும் என பல வகையாக முயன்று பார்க்கலாம். ஊத்துக்குளி பக்கம் ஒரு சாமியார் புடவை ஜாக்கெட் கூட அணிந்திருந்தார். எதுவுமே அணியாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு உண்மையிலேயே புலனடக்கம் தேவை. மனோகரா மாதிரி திமிறிக்கொண்டு எழுந்ததென்றால் வம்பு. எந்த வேடமாக இருந்தாலும் பார்ப்பதற்கு முதலில் சிரிப்பு வரவேண்டும். அதைப்பற்றி நாலுபேர் பேசவேண்டும். எதை ஜனங்கள் கேலிசெய்கிறார்களோ அதைத்தான் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். மற்றவர்களிடம் சொல்வார்கள். அப்படியே நிறையபேருக்குதெரிந்து விட்டால் பிரபலமாகிவிடுவோம். பிரபலமான பிறகு பிரபலமாக இருப்பதே பிரபலமாக ஆவதற்கான வலுவான காரணம் ஆகின்றது. அதன் பிறகு யாரும் சிரிக்க மாட்டார்கள்.
ஆசிரமம் என்பது மர்மமாக இருப்பது நல்லது. மர்மம் இல்லாத ஆசிரமங்களை ஜனங்கள் விரும்புவதில்லை. நள்ளிரவில் விளக்குகள் எரிவது, பெண்கள் வந்து செல்வது, ஜன்னல்களில் மண்டை ஓடுகள் இருப்பது, மாபெரும் காம்பவுண்டு சுவருக்குள் கட்டிடங்கள் எப்போதும் மூடியே கிடப்பது, வாசலில் கூர்க்கா முறைப்பாக இருப்பது ஆகியவை மர்மங்களை உருவாக்கக் கூடியவை. மர்மத்துக்கான காரணங்களை புலனாய்வு இதழ்களில் எழுதும் ஆந்தைகள், கழுகுகள், காக்காகள், சிக்கன் சிக்ஸ்டிபைவ்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அடிக்கடி தரிசனம் கொடுப்பதும் ஆகாது. போதிய ஆள் திரட்டி மகாலய அமாவாசை பின்னிரவு, அல்லது சதுர்த்தியில் விடியற்காலை போன்ற நேரங்களில் சில நிமிடங்கள் தரிசனம் அளிக்கலாம். அப்போது மர்மமாகப் பேசுவது பேசாமல் மர்மமாக இருப்பது போன்றவை உதவும்.நல்ல புகைப்படக் கலைஞர்கள் இல்லாமல் நல்ல சாமியார் இல்லை. ‘படமாடும் கோயில் ‘ என்று அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை தொடர்ச்சியாக பலவகைகளில் பிரசுரமாகவேண்டும். அந்தப்படங்களில் நாம் எப்படி இருக்கிறோமோ அதை மாதிரி அன்றாட வாழ்க்கையிலும் இருப்பதற்கு பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல சாமியார் உபதேசங்கள் புரிய வேண்டும். உபதேசங்களில் இருவகை உண்டு. முதல் வகை உபதேசங்களை மாத்ருபாவம் என்கிறார்கள். தாயினும் சாலப்பரிந்து இவை கூறப்படுகினான. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும், தண்ணியடிக்கக் கூடாது, மாசத்துக்கு ஒரு சினிமா போதும், பெண்களை டாவடிப்பது கடலைபோடுவது பின்னால் செல்வது எல்லாம் வேண்டாம், சாப்பாட்டில் அடக்கி வாசிக்க வேண்டும், சொன்னபேச்சு கேள்டா கட்டேலே போறவனே– இன்னபிற. இவற்றின் இயல்பென்ன என்றால் இப்படி நம்மிடம் ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கும். இப்படியெல்லாம் நாம் இருந்தாலும் இருந்து விடுவோம் என்று நம்பித்தானே அவர் சொல்கிறார். எவ்வளவு நல்லவர். நாம் இவற்றை கடைப்பிடிக்கப் போவதில்லை என்று அவருக்கும் தெரியும் நமக்கும் தெரியும். இருந்தாலும் நடுவே ஒரு நம்பிக்கை ஓடுகிறதல்லவா? ‘த சும்மா கெட, தொணதொணன்னுட்டு’ என்று பிரியமாகச் சொல்கிறோம். இந்தவகை சாமியார்களை நாம் மிகவும் விரும்புகிறோம். இவர்களுக்கு கொஞ்சம் வயது இருக்குமென்றால் ரொம்ப நல்லது. இன்னொரு வகை மித்ரபாவம் என்கிறார்கள். இது நண்பனின் இடத்தில் இருந்து சொல்வது. ‘சரிதான் விடுடா மச்சி நாம மட்டுமா இதெல்லாம் பண்றோம். ஊரிலே அவனவன் பன்ற அட்டூழியத்துக்கு இதெல்லாம் ஜுஜுபிடா இந்தா இத பிடி, நான்ல சொல்றென்’. இப்படிச் சொல்பவரையும் நமக்குப் பிடிக்கும். இவர் நம்மை யூத்தாக உணரச் செய்கிறார். நம்மால் எது முடியுமோ அதையே செய்யச் சொல்கிறார்.
இரு பாவங்களிலும் நாம் கட்டுரைகள் எழுதலாம். உரைகள் ஆற்றலாம். ஒவ்வொன்றுக்கும் அதற்கான வடிவம் உண்டு. முதல் வகைக்கு மரபில் இருந்து உதாரணம் தேவை. ஜடபரதன் கதை முள்ளங்கி நாயனார் சரிதம் போன்றவற்றில் இருந்து கதைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஞானப்பேழை, ஞானச்சாவி போன்ற தலைப்புகள் இன்றியமையாதவை. இரண்டாம் வகை, கொஞ்சம் புரட்சிகரமானது. தலைப்புகளில் வித்தியாசம் தேவை. ‘முந்தானை விலகட்டும்’ ‘அடிச்சு நொறுக்கு மாமே’ போன்ற உற்சாகமூட்டும் தலைப்புகள் அவசியம். செய்தி எளிமையாக இருக்க வேண்டும். பொதுவாக ‘இப்ப இன்னான்றே?’ என்ற ஒரு தோரணை இவ்வகை கட்டுரைகளுக்கு மிகவும் இன்றியமையாதது. மப்படிப்பது முதல் கப்படிப்பது வரை எல்லாமே சரிதான், மனசு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று சொல்லலாம். மிச்ச அனைத்தையும் கேவலமாக வைத்துக்கொண்டால் ஒப்பு நோக்க மனசு சுத்தமாகத்தானே இருக்கும் என்பது இதற்கான விளக்கம். ஆனால் எந்த உரையாக இருந்தாலும் மிக எளிமையாக இருக்க வேண்டும். தத்துவம் கொள்கை என்று போட்டு அறுக்கக் கூடாது. ‘மனம் என்பது ஒரு மின்விசிறி மாதிரி. சுவிட்சைப் போட்டால் சுழல்கிறது. போடாவிட்டால் சும்மா இருக்கிறது.” என்பது போன்ற உவமைகள் ‘இந்த உலகம் ஞானத்தை உயர்ந்ததாக நினைக்கிறது. ஆகையால் ஞானமே உயர்ந்த விஷயம். ஆகவே ஞானத்தை நாம் உயர்ந்த விஷயமாக நினைக்க வேண்டும்’ போன்ற கருத்துக்கள் தேவையானவை. முதல்வகை உரைகளுக்கு நடுநடுவே காக்கா வடைசுட்ட கதை போல எளிமையான கதைகளைச் சொல்லலாம். அம்புலிமாமா தொடர்ந்து வாசித்தால் அவை கிடைக்கும். பிந்தைய வகை உரைகளுக்கு பிளேபாய்.
உபதேசங்கள் மட்டும் என்றால் வேலைக்காகாது. யோக சாதனைகள், தாந்த்ரீக வித்தைகள் தேவை. அதற்கு முதலில் தேவையானவை கலைச்சொற்கள். பொதுவாக இவை கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குவது போல இருப்பது நல்லது. தமிழ்நாட்டில் எல்லா சம்ஸ்கிருத வார்த்தைகளும் கலக்கிகள்தான் என்பதனால் பிரச்சினை இல்லை. அல்லது சித்தவைத்தியத்தில் இருந்து கலைச்சொற்களை எடுத்துக்கொள்ளலாம். மகாகுண்டலீகரண மந்த்ரா, பஞ்சமகோராத்ர யோகா, மிருத்யுஞ்சயாத்ரகாத்ர தியானா போன்ற சொற்கள் கேட்பவர்களை கவர்வதுடன் அவர்களும் மற்றவர்களிடம் கம்பீரமாகச் சொல்லிக்கொள்ள பிடித்தமானதாக இருக்கும். காயகல்பதருயோகம், சிட்டுக்குருவிமந்திரம் போன்றவையும் பயனளிக்கும் சொற்களே. இந்தமாதிரி யோகம், தியானம் சார்ந்த விஷயங்களில் மேலும் சில விஷயங்கள் தேவை. முதல் வகை மந்திரங்கள். அவற்றைச் சொல்லும்போது சுற்றியிருப்பவர்கள் பீதி கொள்ளும்போது சொல்பவர் அடையும் உவகையில் அவருக்கான ஞானம் உறைந்திருக்கிறது. மந்திரங்களை தமிழ்நாக்கு சரியாகச் சொல்லாது என்பதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதே முத்ரா. இது விதவிதமாக கைகளை வைத்துக்கொள்வது. மூக்குப்பொடி சிமிட்டா முதல் சட்டைப்பித்தான் அவிழ்ப்பது வரை விதவிதமான முத்திரைகள் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன அல்லவா? இவற்றைச் செய்யும்போது ”அப்பா மூத்ரயோகா செஞ்சுட்டிருக்கார்ல. அங்க போகப்பிடாது” என்று நம் மனைவிகள் ஜாக்ரதையாகிறார்கள். அவர்கள் நம் கட்டுக்குள் நிற்காத தருணங்களில்கூட இந்த முத்திரைகளை திறம்பட பயன்படுத்தலாம்.
பொதுவாக யோகிகளுக்கு ஞானதிருஷ்டி உண்டு. முக்காலமும் அவர்களுக்கு தெரியும். போலி வாக்காளர் போல ஒரேசமயம் அவர்கள் பல இடங்களில் இருக்கமுடியும். அவர்களிடமிருந்து நம்முடைய வங்கி இருப்பு உட்பட எதையுமே நாம் மறைக்க முடியாது. இந்த ஞானதிருஷ்டி என்பது மெட்டல் டிடெக்டருக்கு நேர் எதிரானது. அதாவது ஒரு மெட்டல் டிடெக்டரிடம் இருந்து எதையெல்லாம் நீங்கள் மறைக்க முடியுமோ அதையெல்லாம் ஞான திருஷ்டி காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஒரு மெட்டல் டிடெக்டரில் எவையெல்லாம் சிக்குமோ அவை ஞானதிருஷ்டிக்கு தெரியாது, உதாரணம் ரகசியக் காமிராக்கள். ஞானதிருஷ்டி யோகம் மூலம் கூர்மை அடைகிறது. யோகம் என்பது யோகமிருந்தால் கிடைப்பது என்பதுடன் கூடுவது என்றும் சம்ஸ்கிருத அர்த்தம் உடையது. கூடும்போது காமிராக்களை என்ன செய்வதென்பது சாமியார்களுக்கு சிக்கலான விஷயம்தான். இந்தச் சிக்கலைச் சமாளித்த ஒரே சாமியார் ஓஷோ தான், அவரே காமிரா வைத்து எடுத்து வெளியிட்டார். வாழ்க்கை வரலாற்றில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி சுயசரிதை எழுதுவதுதான் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
சாமியார்கள் அறிவுஜீவிகளை வளர்ப்பது நல்லது. அவர்கள் சிறந்த பிரச்சார பீரங்கிகள். தங்களை வளர்க்க சாமியார்களை வளர்க்கும் கலை அவர்களுக்கு தெரியும். இதழாளர்களும் தேவை. சாமியாருக்குரிய உரைகளை எழுதவும் அவற்றை புத்தகமாக ஆக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். மேலும் எசகு பிசகாக மாட்டிக்கொள்ளும்போது ”பார்த்தீர்களா யோகாசனத்தின் சக்தியை, எப்படி விசுக் என்று எழுந்து அமர்கிறார்” என்ற தோதில் விளக்கமும் இவர்களால் அளிக்க முடியும். தந்திரமாகச் செய்யப்படும் விஷயங்கள்தான் தந்த்ரா என்று இவர்கள் விளக்கினால் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்? இது தூந்த்ராவில் இருந்து வந்தது, அங்கெல்லாம் பனிக்கட்டிக்குள் ஆணும்பெண்ணும் நிர்வாணமாக கட்டிப்பிடித்து தூங்குவார்கள் என்றும் விளக்கலாம். அறிவுஜீவிகளுக்குச் செலவிடும் பணம் எப்போதுமே நஷ்டமாவதில்லை. சாமி இருந்தாலும் ஆயிரம் பொன் தலைமறைவானாலும் ஆயிரம்பொன் என இவர்கள் ஙப்போல் வளையும் தன்மை கொண்டவர்கள் என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்.
சாமியார்கள் அற்புதங்களைச் செய்தாகவேண்டும். காலையில் சுமுகமாக வெளிக்குப்போவதே ஓர் அற்புதம் என்று எண்ணும் நடுத்தர மக்களுக்கு பொதுவாக அற்புதங்களை நம்பும் ஆற்றல் அதிகம். கையில் விபூதி எடுப்பது நல்லது. ஆனால் தோசைக்கு மிளகாய்ப்பொடி எடுக்க நம்மால் முடியாதென்பதையும் தெளிவுபடுத்தாவிட்டால் நமக்கு எப்போதும் வெறும் தோசையே கிடைக்கும் அபாயமுண்டு. ஹீலிங் என்றால் நோய்களைக் குணப்படுத்துவது. பொதுவாக நடுத்தர வர்க்கம் நாலுபேர் சொல்வதை மறுக்கும் திராணி இல்லாதது. எல்லாரும் பார்க்கும் சினிமாவை பார்த்து, எல்லாரும் போகும் கோயிலுக்குப் போய், எல்லாரும் ஓட்டுபோடும் கட்சிக்கு ஓட்டுபோட்டு வாழ்வது ஆகவே நாலுபேர் கூடி ‘பேசப்பிடாது எல்லாம் சரியாப்போச்சு, போ’ என்று சொன்னால் ‘சும்மாவா சொல்வாங்க…சரியாத்தான் போயிருக்கும்.எதுக்கு வம்பு’ என்று ‘ஆமுங், நஸ்மாலுமே சரியாய்ப் போச்சுங்’ என்பார்கள். இதேபோல ஒரே சமயம் இரண்டு இடங்களில் இருப்பது ஒரே சமயம் இரண்டு நாற்காலிகளில் அமர்வது ஒரேசமயம் இரண்டு பெண்களோடு இருப்பது போன்ற பல அற்புதங்களைச் செய்யலாம். கூடுவிட்டு கூடு பாய்வது இதன் உச்சம். எடுத்ததற்கெல்லாம் முழுசாக ஏன் பாயவேண்டும் என்று ஒரு சிறு பகுதியை மட்டுமே பாயவும் வைக்கலாம், காமிராக்கள் இல்லாத போது.
சாமியார்களின் வெற்றி என்பது வேறுசாமியார்களை உருவாக்குவதில்தான் உள்ளது. அவர்கள் கொஞ்சம் கம்மியான வேறு சாமியார்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் மாற்றுக்குறைவான சாமியார்களை உருவாக்குகிறார்கள். கடைசியில் அடித்தளத்தில் சாமியாரா என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் மனிதர்களும் சாமியாராக இருக்கவாய்ப்பில்லாமல் இல்லையோ என்ற சந்தேகத்தை உருவாக்க வாய்ப்புள்ள மனிதர்களும் உருவாகிறார்கள். இவர்களால் ஆன ஒரு பெரிய சாமியாரமைப்புக்கு நாம் சாமியாராகிவிடலாம். இதில் உள்ள முக்கியமான சவாலே எவரும் நம்மைப்போல முழுச்சாமியார் ஆகி நமக்கே காமிரா வைக்கும் அபாயம் ஏற்படாமல் தடுப்பதுதான். லட்சக்கணக்கானோர் ஒன்றாம் வகுப்பில் நுழைய ஒருவருமே பிளஸ்டூ பாஸாமாகமல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துவது போன்றது இது. சாமியார்களை சாமியார்கள் என்று அங்கீகரிக்கும் தகுதி சம்சாரிகளுக்கு உள்ளது. ஆகவே சம்சாரிகளை சாமியார்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று இல்லை. ஆகவே சாமியார்கள் ஜூரிகளை கவரும் குற்றவாளி போல சம்சாரிகளிடம் நடந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளே ஜூரிகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிக நன்று.
சாமியார்களில் நல்ல சாமியார்கள் கெட்ட சாமியார்கள் என இருவகை உண்டு. நல்ல சாமியார்களுக்கு எப்படி நல்ல சாமியாராக தெரிவது என்று தெரிவதில்லை. ஆகவே நாம் ”சில்லற இல்ல, போப்பா. காலங்காத்தால வந்துட்டானுக” என்று சொல்கிறோம். கெட்டசாமியார்கள் ரொம்ப நல்ல சாமியார்கள் மாதிரி தெரிவதற்காக செலவழிக்கும் பணத்தை நாமே அவர்களுக்கு கட்டணங்களாகக் கொடுக்கிறோம். அவர்கள் கெட்ட சாமியார்களாகச் செயல்படுவதற்கான செலவையும் நாமே வகிக்கிறோம் என்பதும் ஆச்சரியமில்லை. பொதுவாக நல்ல சாமியார்கள் கெட்டசாமியார்கள் என்ற பிரிவினையை தொண்ணூறு சதவீதம் கெட்டவர்களாகிய நாமேதான் தீர்மானிக்கிறோம் என்பதனால் கெட்ட சாமியார்கள் நாம் போதுமான அளவுக்கு ஏமாறும் வரை நல்ல சாமியார்களாக நமக்கு தெரிகிறார்கள்.”ஏமிரா, வச்சுட்டியே காமிரா’ என்ற பிரபல பஞ்ச் டயலாக்கை நினைவுகூர்க.
பிறர் தூங்கும்போது விழித்திருப்பவர்கள் இருவகை யோகிகள், திருடர்கள். யோகிகளை நாம் திருடர்களுடன் சேர்த்து சிலுவைகளில் அறைந்து வழிபடுகிறோம். அப்படியானால் திருடர்களை யோகிகளாக வணங்குவதுதானே நியாயம்?
மறுபிரசுரம் – முதல்பிரசுரம் மார்ச் 2010
தொடர்புடைய பதிவுகள்
ஆலயம் தொழுதல்
சாத்தானே அப்பாலே போ! [போன்னா போகணும் கேட்டியா?]
மனிதராகி வந்த பரம்பொருள் 3
மனிதனாகி வந்த பரம்பொருள் 2
மனிதராகி வந்த பரம்பொருள்!!
நாசாவில் சனி
அத்வைதம் ஒரு விவாதம்
ஆத்திசூடி:கடிதங்கள்
இரண்டு அறிவியல் செய்திகள்.
இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்
அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்
நாட்டியப்பேர்வழி
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
புண்படுதல்
கடவுள், மதம் -கடிதங்கள்
நித்ய சைதன்ய யதி
யதா யதாய
‘நூஸ்’
கூட்டமோ கூட்டம்
நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்
தளம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அபிடேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன்.
இது உங்கள் உழைப்பு. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்து வருகிறேன். ஒவ்வொரு நூலையும் புதிதாகவே வாங்குகிறேன். இணையத்தில் நீங்கள் கட்டணம் அற்று வழங்கினாலும் ஓசியில் படிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது – அத்துடன் கேபிள் டிவிக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு எழுத்து இலக்கியம் இலவசம் வேண்டும் என்பது எழுத்துக்கு ஒரு அவமதிப்பாகவும் தோன்றுகிறது. பத்திரிகைகள் – வார இதழ்கள் பெரும்பாலும் தரமுடையவையாக இல்லை. தேடுபவர்கள் இயல்பாக வந்தடையும் இடமாக உங்கள் இணையதளம் உள்ளது. கட்டணம் நிர்ணயிக்க விருப்பம் இல்லாவிட்டால் விருப்பமுடையவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று அறிவியுங்கள் என்று கோருகிறேன். உங்கள் இணையதளம் எப்போதும் நிலைநின்று (உங்களுக்குப் பிறகும் கூட) தொடர்ந்து வளர்ந்து செல்லவேண்டும் என்பது என் பிரார்த்தனை.
அன்புடன்,
விக்ரம்
கோவை
***
திரு. ஜெ,
நான் கணபதி கண்ணன்.
தங்களது “இணையதளம் வருவாய்” படித்தேன். தங்களது தளம் எக்காலத்திலும் அழியாது நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும் என்று கருதுகிறேன். தாங்கள் மிக நேர்மையானவர் என்பதிலும், தங்களுக்கு சரி என்று தோன்றும் கருத்தை எடுத்துரைக்க தயங்காதவர் என்பதிலும் எனக்கு எப்பொழும் மிக நம்பிக்கை உண்டு. தங்களது எழுத்துக்களில் தாயின் கனிவும், தந்தையின் கண்டிப்பையும் நான் காண்பதுண்டு. தங்களுக்குப் பின் இத்தளம் நிச்சயம் முடங்கிவிடக் கூடாது. என்றும் இணையவெளியில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சிங்கப்பூரில் நடுத்தரமான சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு குடும்பக் கடமைகள் பலவுண்டு. 2019 வருட ஆரம்பத்தில் எனது பணி இங்கு முடிவடைந்துவிடும். இந்தியா வந்து விடுவேன். அதன்பின் வரும் காலத்தைப் பற்றிய கவலைகளும் உண்டு.
இருப்பினும் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வெளிநாடுகளில் உங்களின் வாசகர்கள் அதிகம் உள்ளனர், 60 வாசகர்கள் சேர்ந்து, ஒரு நபர் ரு50,000 அளித்தால் மொத்தம் ரூ30 இலட்சம் ஆகிறது. அதை நம்பிக்கையான ஏதேனும் வழியில் நிரந்தர வைப்பாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு எக்காலமும் இத்தளம் முடிவுறாமல் காக்கலாம் அல்லவா. அவ்வாறு துவங்கும்பட்சத்தில் நான் முதல் ஆளாக ரு50,000 இவ்வருட அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அனுப்பி வைக்க இயலும்.
தாங்கள் இவ்வாறு பிறரிடம் கேட்க சங்கடப்படுவீர்கள். ஆனால் எதிர்கால நம் தமிழ் சமுகத்திற்காக நம் கடமை என்று நான் நினைக்கிறேன். எனவே என்னுடைய இந்தக் கடிதத்தையே, தங்கள் நண்பர்கள் வழி, வெளிநாடுவாழ் வாசகர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். 60 என்ற எண் ஒன்றும் மிகப் பெரிது அல்ல. விரைவில் அடைந்து விடலாம் என்றே தோன்றுகிறது.
முயற்சிப்போம். நல்லதே நடக்கட்டும்.
இப்படிக்கு,
கணபதி கண்ணன்
***
அன்புள்ள ஜெ
தளம் முடக்கம் கட்டுரை வாசித்தேன். தளத்திற்கு ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் செலவென்று அறிந்தேன். நானும் என்னாலான சிறுதொகை தரலாம். தங்களை இணையம் மூலமே வாசிக்கிறேன், தாங்களுக்கு எந்த தடை என்றாலும் எனக்கும் தடை என்ற உணர்வே.
அன்புள்ள
பகவதிராஜன்
***
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
அய்யா நான் கடந்த நான்காண்டுகளாக உங்கள் தளத்தின் வாசகன். அதன் கட்டுரைகளின் உள்ளடக்கம் உண்மையிலேயே உலகில் வேறெங்கும் இல்லாதவை. இதனைப் பெரிய அறிவுக்களஞ்சியம் உங்கள் ஒருவரின் முயற்சியால் ஒருங்கமைக்கப்பட்டிருப்பது எங்கும் எவரும் செய்திராத விஷயம். மாமனிதர்கள் புராணங்களிலும் வரலாறுகளிலும் மட்டும் இல்லை சமகாலத்திலும் இருக்கிறர்கள் என்பததற்கு வாழும் உதாரணம் நீங்கள் என்றே கருதுகிறேன். நான் அறிந்த பலரிடமும் அதையே கூறிவருகிறேன்.
எனக்கு 35 வயது ஆகிறது. உங்கள் இந்த தளத்தின் மூலம் நான் இந்த நான்கு ஆண்டுகளில் கற்றுக்கொண்டவை என் ஒட்டுமொத்த வாழ்வில் கற்றுக்கொண்டவற்றிலேயே மிக அதிகம். இதை வெறும் புகழ்ச்சியாக சொல்லவில்லை – என் உள்ளம் அறிந்த சத்தியம்.
என்னை உங்களுக்கு தெரிந்திருக்காது – ஆனால் உங்களை நான் உங்கள் எழுத்தின் மூலம் சற்று அணுக்கமாகவே அறிவேன்.
வெறும் நாளிதழ்கள், வாரஇதழ்கள், கட்டுரை நூல்கள் என்றே வாசித்து வந்த நான் உங்கள் மூலமே இலக்கியம் பால் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் வெண்முரசை உங்களுக்குத் தந்திருப்பது மிகப்பெரிய சேவை. உங்களாலேயே சில வாரங்களாக தமிழில் எழுதிப்பார்க்கவும் முயல்கிறேன். எனக்கு பள்ளிக்கூடப் பருவத்தில் வாசிப்பிலும், எழுதுவதிலும் இருந்த ஆர்வம் மெல்ல மெல்ல குடும்பச்சூழ்நிலையாலும் பொறுப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே வந்தது. உங்களாலேயே மீண்டும் கொஞ்சம் துளிர்விட முயல்கிறேன். பாலை நிலத்தில் விழும் மழைத்துளி போன்ற அபூர்வமானது உங்கள் எழுத்து.
அறிவே உயிரென்றால் உங்களாலேயே உயிர்த்தெழுந்தேன் எனலாம். ஞானமே வீடுபேறென்றால் உங்களாலேயே அதை நோக்கி கொஞ்சம் அடியெடுத்து வைக்கிறேன் எனலாம்.
உங்களை நான் எப்போதும் உங்கள் அறம் சிறுகதையின் கெத்தேல் சாகிபு போலவே நினைப்பேன். என்னைப்போல எத்தனையோ பேர் உங்களால் உயித்தெழுந்திருப்பார்கள்.
நீங்கள் இன்று உங்கள் இணையதளம் வருவாய் குறித்து போட்டிருந்த பத்திவைப் படித்ததிலிருந்து மனது தவிக்கிறது. அதனாலேயே இதை எழுதுகிறேன். நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னால் தளம் முடக்கம் குறித்து போட்ட பதிவைப்பார்த்தே கேட்கவேண்டும் என்று இருந்தேன்.
நான் பணம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல – அனால் என் குடும்பச்செலவுகள் தவிர்த்து என்னால் மாதாமாதம் 2000 ரூபாய் வரை உங்கள் தளத்துக்காக தரமுடியும். இன்னும் கொஞ்சம் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டேன் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தர முயல்கிறேன். நன்கொடையாக எல்லாம் கருதவேண்டாம். ஒரு account number அனுப்புங்கள் உடனே recurring transfer அமைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்குள் சிறுக சேர்த்து ஒரு fixed deposit செய்துவிட்டால் தளத்தை அது பார்த்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல் தொழில்நுட்பம் வளர வளர இந்த தளத்துக்கான செலவு சில ஆண்டுகளில் பெருமளவு குறையும் என்றே நம்புகிறேன். உங்கள் தளம் முழுக்க text தான் என்பதால் இன்னும் கொஞ்சம் வேகமாகவே சுருக்கிவிடலாம்.
இதை நீங்கள் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ஒரு புரவலன் என்ற எண்ணத்திலோ, தளத்தின் வாசகன் என்ற எண்ணத்திலோ சொல்லவில்லை. நான் உங்கள் மாணவன், உங்களால் பெரிய அளவில் பண்பட்டவன் – நீங்கள் என் ஞானசரிரியர், தந்தையப்போன்றவர். உங்களுக்காகக் கூட இதைச் செய்யவில்லை. உங்கள் தளமும் எழுத்தும் என்போன்ற இன்னும் எத்தனையோ விதைகளை முளைக்கச் செய்யவேண்டும்.
மழை தருவது இயற்கையின் கருணை உண்மைதான். ஆனால் இன்றைய காலத்தில் மரம் நடுவது மனிதரின் கடமை. இந்தக்கடமை எனக்கும் இருக்கிறது என்றே உணர்கிறேன்.
விக்கிபீடியா போன்ற தளங்களே நன்கொடையில் தான் இயங்குகின்றன.
இலக்கியமும், ஆன்மீகமும் குறித்த ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் மாடுகள் அனைத்தையும் உண்டு பால் தருவதையும். தேனீக்கள் மலரின் தேனை மட்டுமே உண்டு அதை சேர்த்துத் தருவதையும் ஒப்பிட்டு எழுத்தியிருந்தது நினைவுக்கு வருகிறது.
விக்கிபீடியா ஒரு பால் பண்ணை என்றால் – உங்கள் தளம் ஒரு தேன் கூடு. சிறுகச் சிறுக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் இந்தத்தேன் தலைமுறைகள் தாண்டி சுவைக்கப்படவேண்டும் என்ற சுயநலத்தோடே இதை சொல்கிறேன்.
நீங்கள் சூழியல் அறிந்தவர். உங்களுக்குத் தெரிந்திருக்கும் தேனீக்கள் அழிந்தால் உலகம் அழியும் என்று. என்னால் முடிந்தது ஒரு மலர்ச் செடியையாவது நட்டு வைக்க முயல்கிறேன்.
பணிவுடன்,
கணேஷ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பறக்கையில்…
அன்பின் ஜெயம்
நான் தங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நான் இதுவரை மூன்று முறை தங்களை சந்தித்து இருக்கிறேன்., திருநெல்வேலி, இராஜபாளையம், பறக்கை, ஒவ்வொரு சந்திப்புமே வாழ்கையில் மறக்கமுடியாத சந்திப்புகள். இராஜபாளையத்தில் தங்கள் உரை கேட்க வந்தது. தங்களுடன் உரையாடியது. சுந்தரவடிவேலன், இசக்கி போன்ற வாசகா்களை சந்தித்தது என்றும் நினைவில் இருக்கும்.
சுந்தரவடிவேலனின் வெண்முரசு வாசிப்புமுறை ஆச்சாியம். நானும் இதுபோல் தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். இராஜபாளையத்திலிருந்து நீங்கள் நாகா்கோவில் செல்லும் போது தங்கள் காாிலேயே என்னை அழைத்து வந்து கயத்தாாில் தாங்களும் இறங்கி என்னை வழியனுப்பியது என்னாளும் மறவேன்.
பறக்கை சந்திப்புக்கு வரும்போது தாங்கள் வாசகா்கள் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தீா்கள். சோழா் கால கட்டிடகலை பற்றி, தஞ்சைகோவில், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் கோவில்கள் பற்றி. மேலும் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் உள்ள வேறுபாடு. அறிவியல் இல்லாமல் தொழில்நுட்பத்தில் மட்டும் சிறந்து விளக்கும் கிழக்கு ஆசியா நாடுகளான சிங்கப்புா், ஜப்பான், கொாியா. அந்நாடுகளில் தற்போதைய கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். ஜப்பான் வீழ்ச்சி. தாங்கள் சிங்கப்பூல் பணியாற்றிய அனுபவம்.
எமொ்சன் மற்றும் தோரா மெய்யியல் பற்றிய பதில்கள். அசோகமித்திரன் ”மாற்றம்” சிறுகதை, தேவசகாயகுமாா் அய்யா விளக்கிய தலித் இலக்கியங்கள். தாங்கள் பெண்ணியல் இலக்கியவாதிகளை குறிப்பிட்டது. தாங்கள் பகடியாக எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிா்வினைகள், அந்த பகடியை உண்மையாக நம்பிவா்கள் பற்றி குறிப்பிட்டது. சீனாவின் பொருளாதார எழுச்சி காாில் பயணம் செய்யும் போது குறிப்பிட்டது எல்லாமே சிறப்பானது. சிலேட், படிகம் அமைப்பினா் மதியம் ஏற்பாடு செய்திருந்த உணவு நாஞ்சில் நாட்டுக்குாிய சுவை. நீங்கள் அளித்த புத்தகங்கள் என்றும் என் பொக்கிஷமாக இருக்கும்.
மாலை அசோகமித்திரன் நினைவுஞ்சலி நிகழ்ச்சில் நிறைவாக வாசகா்களின் இறுக்கத்தை நீக்கி இயல்பாக மாறுவதற்கு நகைச்சுவையாக உரையாற்றினீா்கள்.
நன்றி
சங்கா் (கயத்தாா்)
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

