Jeyamohan's Blog, page 1654

April 10, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70

70.மணற்சிறுதரி


விருஷபர்வன் மகளிர்மாளிகையின் கூடத்தில் இருக்கையில் கால் தளர்ந்தவன்போல் விழுந்து இரு கைகளையும் நெஞ்சின் மேல் கோத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வாயில் மெல்லத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கிய சிற்றமைச்சர் பிரகாசர் “அவர்கள் சென்றுவிட்டார்கள், அரசே” என்றார். அவன் விழிதூக்கி எங்கிருக்கிறோமென்றே தெரியாதது போன்ற நோக்கை அவர்மேல் ஊன்றி “என்ன?” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க!” என்றான்.


“ஆணை” என்று சொல்லி தலைவணங்கி சிற்றமைச்சர் திரும்பியதும் பின்னிருந்து “அமைச்சரே…” என்று அழைத்தான். அவர் நின்றதும் “இளவரசியின் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்கும்படி எனது ஆணை. இதை தனியோலைகளாக அமைச்சர்கள் படைத்தலைவர்கள் நகர்க்காவலர்கள் அனைவருக்கும் அறிவியுங்கள். இன்று மாலை நிகழவிருந்த குடிப்பேரவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை அதற்குரிய தருணம் அறிவிக்கப்படும்” என்றான். அமைச்சர் விழிகளில் எதையும் காட்டாமலிருக்கப் பயின்றவர். எனினும் அவரது உள்ளம் பதறுவது எவ்வண்ணமோ தெரிந்தது. கண்களைத் தாழ்த்தி “ஆணை” என்றபின் வெளியே சென்றார்.


விருஷபர்வன் அகத்தளத்திற்குச் சென்றபோது அங்கு மகளிர்குரல்கள் ஒன்றாகிக் கலைந்த பறவைக்கூட்டம்போல் ஒலித்துக்கொண்டிருந்தன. அவனை நோக்கி எழுந்து சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்த சர்மிஷ்டை “எங்கு சென்றீர்கள், தந்தையே? அன்னை ஐம்பது கலிங்கப்பட்டாடைகள் எடுத்து வைத்திருக்கிறார். ஐம்பதுமே பொன்னூலில் முத்துக்கள் கோத்து அணிசெய்யப்பட்டவை. யானைக்கு மேல் போடும் பாவட்டா போல் மின்னுகின்றன. அவற்றை நான் அணியமாட்டேன் என்று சொன்னால் என்னை கடிகிறார்” என்றாள். அவன் அவள் தோளில் கை வைத்து புன்னகையுடன் “நன்று குட்டிமுயலே,  நீ விரும்பியதை தேர்ந்தெடு” என்றான்.


ஆனால் அவன் சொற்களைக் கடந்து அவனை உணர்ந்து  “என்ன ஆயிற்று? ஏதேனும் தீய செய்தியா?” என்று அவள் கேட்டாள். அவன் ஒருகணம் தயங்கி பின் துணிந்து அவள் கண்களை கூர்ந்து நோக்கி “ஆம்” என்றான். அவள் படபடப்பு கொள்வது தெரிந்தது. நிற்கமுடியாதவள்போல சற்று பின்னால் நகர்ந்து கைகளைத் துழாவி தூணைத் தொட்டு அத்தொடுகையிலேயே நிலைகொண்டாள். “நான் அறியலாமா?” என்றாள். “உன்னிலிருந்துதான் அது தொடங்குகிறது. நீ சுக்ரரின் மகளை…” என்றதுமே அவள் “இல்லை” என்று உரக்க கூவினாள். “ஓசையிடாதே! இளவரசிகள் ஓசையிடும் வழக்கமில்லை” என்றான் விருஷபர்வன். அவள் நன்றாகத் தூணில் சாய்ந்து முகத்தை அதில் பதியவைத்தபடி தோள்கள் குலுங்க அழத்தொடங்கினாள்.


“உன் சினம் புரிந்துகொள்ளக்கூடியது. அது நம் குலத்தின் இயல்பு. அதிலிருந்து எளிதாக வெளிவர இயலாதுதான்” என்றான் விருஷபர்வன். “இல்லை தந்தையே, அது என் கீழ்மை. பிறர் என்னிடம் அவளைப்பற்றி சொல்லும்போதெல்லாம் இல்லையில்லை என்று மறுத்தேன். எனக்குள்ளிருந்து ஏதோ ஒரு தீய தெய்வம் அச்சொற்களை ஏற்று மகிழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. திரும்பும் வழி முழுக்க நான் பதறி அழுதுகொண்டிருந்தேன். இங்கு அரண்மனைக்கு மீண்ட பின்பு எதுவுமே நிகழவில்லை என்று வலிந்து எண்ணிக்கொண்டு மிகையான உவகையுடன் நடித்துக்கொண்டிருந்தேன்” என்றாள் சர்மிஷ்டை. குரல் மேலும் தழைய  “கீழெல்லை வரை சென்றுவிட்டேன். அனைத்தும் என்னிடமிருந்து தொடங்குகிறது என்றீர்கள். அது உண்மை. என்ன நிகழும் என்று என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.”


விருஷபர்வன் “அனைத்தும் உன்னிடமிருந்து தொடங்குகின்றன என்று நான் சொன்னேன். நீ பொறுப்பு என்று சொல்லவில்லை. என் செல்ல முயல்குட்டி அல்லவா நீ?”  என அவள் தோளை தொட்டான். “இளவரசி. தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரும் சரி, அசுரர்களுக்கும் மானுடர்களுக்குமான போரும் சரி, நீயோ நானோ நடத்துபவையோ திருப்புபவையோ அல்ல. மலையிறங்கி கடல் சேரும் பெருநதிபோல பல ஆயிரம் ஆண்டுகளாக சென்றுகொண்டிருக்கிறது இவ்வூழ்ப்பெருக்கு. நாம் வெறும் குமிழிகள் மட்டுமே. எது வருகிறதோ அதை எதிர்கொள்வோம். வெற்றியோ இழப்போ எதுவாயினும் அதை அப்பெருக்கின் நெறியென்றே கொள்வோம்.”


அவள் கண்களைத் துடைத்துவிட்டு தலைநிமிர்த்தாமல் தந்தை மேலே சொல்வதை கேட்டு நின்றாள்.  “குருநாட்டு யயாதி உன்னை பிறர் அறியாமல் பார்த்துச் செல்லும் பொருட்டு இங்கு வந்திருக்கிறான். இன்று காலை நம் காவல்காட்டின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறான்” என்றான் விருஷபர்வன். “காட்டிற்குள் நுழைந்து வழி தவறி நீங்கள் விளையாடிக்கொண்டிருந்த மலர்வனத்தருகே வந்திருக்கிறான். அவன் குரலைக் கேட்டுதான் நீங்கள் அஞ்சினீர்கள்.” அவள் கண்ணீர் துளிகள் நின்ற இமைகளுடன் மெல்லிய உதடுகள் ஓசையின்றி பிளந்து திறக்க நெஞ்சின் துடிப்பு கழுத்திலும் தோள் நரம்புகளிலும் அதிர்வெனத் தெரிய அச்சொற்களைக் கேட்டு நின்றாள்.


“அங்கு கிணற்றிலிருந்து சுக்ரரின் மகளை யயாதி மீட்டிருக்கிறான். தன்னை மணந்து பட்டத்தரசியாக்கும்படி அவள் அவனிடம் சொல்லுறுதி பெற்றிருக்கிறாள். பின்னர் அங்கேயே தங்கி தன் தந்தைக்கு செய்தி அனுப்பியிருக்கிறாள். அச்செய்தியுடன் இப்போது கிருதரும் தேவயானியின் தோழியும் வந்து சென்றனர்.” அவள் தலையசைத்தாள். “நீ தேவயானிக்கு வாழ்நாளெல்லாம் பணிப்பெண்ணாக செல்லவேண்டும் என்பது அவள் கோரிக்கை. அவளை யயாதி மணக்க வேண்டுமென்றும் அசுரர்களும் ஷத்ரியர்களும் இணைந்து உருவாக்கும் பேரரசின் சக்ரவர்த்தினியாக அவளே அமரவேண்டுமென்றும் விரும்புகிறாள்.”


அவள் அழத்தொடங்குவாளென்று தான் எதிர்பார்த்திருப்பதை விருஷபர்வன் உணர்ந்தான். ஆனால் அவள் அத்தூணை நன்றாக அணைத்து முகத்தை அதில் பொருத்தியபடி அசைவற்று நின்றாள். அவள் ஏதேனும் சொல்லக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தான். பின்னர் “நான் ஒப்புதல் அளித்துவிட்டேன். அசுரகுலத்திற்கு வேறு வழியில்லை. சுக்ரரின் பகை அமையுமென்றால் நமது குலம் முற்றழியும். தன் மகளின் பொருட்டு அனைத்து நெறிகளையும் மீறிச்செல்ல ஆசிரியர் சித்தமாகிறார். என் மகளின்பொருட்டு என் குலத்தை அழிக்க என்னால் இயலாது” என்றான்.


“ஆம் தந்தையே, தங்கள் முடிவு உகந்ததுதான்” என்று அவள் தலை தூக்காமல் சொன்னாள். விருஷபர்வன் அச்சொற்களால் அதுவரை கொண்டிருந்த அனைத்து உறுதிகளையும் இழந்து உளம் கரைந்து மெல்லிய விம்மல் ஓசை ஒன்றை எழுப்பினான். அது எங்கிருந்து வருகிறதென அவன் செவி வியந்துகொண்டது. “நீ அழுதிருந்தால், எனை நோக்கி கடுஞ்சொல் ஏவியிருந்தால் சிறிதேனும் எனக்கு ஆறுதல் அமைந்திருக்கும்” என்றான். “இல்லை தந்தையே, இன்று நான் இழைத்துவிட்டு வந்த பிழைக்கு என்ன மாறு செய்வதென்றறியாமல் உள்ளூர எரிந்துகொண்டிருந்தேன். எட்டாவது உப்பரிகைக்குச் சென்று கீழே குதித்துவிட்டால் என்ன என்று கூட எண்ணினேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும். ஏழு நிலை வரை ஏறிச்செல்லவும் செய்தேன். என்னால் இயலவில்லை. இப்போது உளம் நிறைவடைகிறேன். என் பிழைக்கு ஈடுசெய்யப்பட்டுவிட்டது. இக்குலத்திற்குப் பழி கொணர்ந்த பெண்ணாக என்னை இனி எவரும் சொல்ல மாட்டார்கள். இக்குலம் வாழ தன்னை இழந்தவளாகவே சொல்வார்கள்.”


விருஷபர்வன் அவளை நோக்காமல் சாளரத்தை நோக்கி சிலகணங்கள் நின்றபின் “செய்தியை நீயே உன் அன்னையரிடம் சொல். உங்களிடமிருந்து இது அகத்தளத்திற்கு பரவட்டும். இந்நகரம் களிவெறி கொண்டுள்ளது. இக்களிவெறியின் உச்சியிலிருந்து கழிவிரக்கத்தின் ஆழத்திற்கு அது விழுந்தாக வேண்டும். நன்று, மானுட உணர்வுக்கு இத்தனை எல்லைகள் உள்ளன என்பதை அவர்கள் அறியட்டும்” என்றான். மேலும் ஏதோ சொல்ல கை எழ நா செயலிழக்க அவன் வெளியே சென்றான்.


tigerஅன்னையிடம் அச்செய்தியை எப்படி சொல்வது என்பதுதான் தன் உள்ளத்தில் முதன்மையாக உள்ளது என்பதை சற்று விந்தையுடன் சர்மிஷ்டை உணர்ந்தாள். அத்தருணத்தைக் கடப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் எட்டுத்திசையிலும் சித்தம் முட்டி மோதி நின்றது. மூன்றாவது அன்னையிடம் சொன்னாலென்ன என்றுதான் முதலில் எண்ணினாள். மூவரில் ஒப்புநோக்க சற்றே சொல்லெண்ணிப் பேசத்தெரிந்தவள், உணர்வுகளை ஆளத்தெரிந்தவள் அவள். இரண்டாவது அன்னை எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தன் தனியுலகில் வாழ்பவள். மூன்று சேடியரன்றி பிறர் அவளை அணுகவே முடியாது. அவள் அன்னையோ அவளுக்கென எண்ணமோ சொல்லும் இருக்கக்கூடுமென்பதையே உணர்ந்தவளல்ல. எண்ணியும் கற்றும் அடைந்தவற்றை அனைத்தையும் சொல்லி அவளில் நிறைத்துவிடவேண்டும் என்பதற்கப்பால் அவர்களுக்குள் உரையாடலே நிகழ்ந்ததில்லை.


அகத்தளம் நோக்கி நடக்கையில் ஒவ்வொரு அடிக்கும் அவள் விரைவு குன்றினாள்.  அவளைக்கண்டதும் அணுக்கச்சேடி எழுந்து ஓடி அருகே வந்து “உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள், இளவரசி. பீதர் நாட்டு அருமணிவணிகர் இருவர் வந்திருக்கிறார்கள்” என்றாள். அப்பால் இருந்து அன்னையின் உரத்த குரல் “வந்துவிட்டாளா? இங்கு வந்து அவளுக்கு வேண்டியதை எடுக்கச் சொல். நான் எதையாவது எடுத்தபின்னர் ஒவ்வொன்றிலும் அவள் குறைசொல்லிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது” என்றாள்.  மூன்றாவது அன்னை வெளியே வந்து “என்னடி இங்கு நின்றுகொண்டிருக்கிறாய்? ஏன் முகம் மாறுபட்டிருக்கிறது? தந்தை என்ன சொன்னார்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றபின் அணுக்கச்சேடியின் கைபற்றி “வா! உன்னிடம் பேச வேண்டும்” என்றாள். திகைப்புடன் “என்ன…?” என்று அவள் கேட்டாள். “வாடி” என்று அவள் கைபற்றி தன் அறை நோக்கி அவளை அழைத்துச்சென்றாள்.


அறைக்குள் சென்று கதவை மூடியதும்தான் அச்செய்தியின் மொத்த எடையும் அவள் மேல் அழுந்தியது. மெல்ல சென்று மஞ்சத்தில் அமர்ந்தபின் “அன்னையிடம் சென்று சொல், தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டார்” என்றாள். “என்ன சொல்கிறீர்கள், இளவரசி?” என்றாள் சேடி. தான் சொன்ன சொற்களை சர்மிஷ்டை சித்தத்தால் மீட்டு எடுத்தாள். மொத்தப்பழியும் தந்தைமேல் போடுவதுபோல் அவை அமைந்திருந்ததைக் கண்டு அவளே துணுக்குற்றாள். இச்சொற்சேர்க்கைகளை உள்ளிருந்து உருவாக்குவது யார்? இத்தருணத்தில் இதை இப்படி திருப்ப வேண்டுமென்று எப்படி அது முடிவெடுத்தது?


“தந்தை சுக்ரருக்கு சொல்லளித்துவிட்டார்” என்று சர்மிஷ்டை சொன்னாள்.  சேடி “அவர் மகள் மீண்டுவந்துவிட்டார்களா?” என்றாள். விரிவாக சொல்ல தன்னால் இயலாது என்று சர்மிஷ்டைக்கு தோன்றியது. “என்ன நடந்தது என்று அறியேன். சுக்ரர் தந்தையிடம் இரு ஆணைகளை பிறப்பித்திருக்கிறார். அவள் குருநாட்டரசனின் பட்டத்தரசியாக வேண்டும், நான் அவளுக்கு அணுக்கச்சேடியென்று உடன் செல்ல வேண்டும். இரண்டையும் தந்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்.”


“என்ன இது…? தங்களை எப்படி…?” என்று அவள் தடுமாறி ஒரு கணத்தில் உளம் பற்றிக்கொள்ள உரத்த குரலில் “வீணன் போல் முடிவெடுப்பதா? அரசர் என்றால் என்ன அறமென்று ஒன்றில்லையா? நான் சென்று கேட்கிறேன். என் சொல் நிற்க அவர் முன்  சங்கறுத்து செத்து விழுகிறேன்” என்று கூவியபடி அவள் திரும்பினாள். சர்மிஷ்டை பாய்ந்தெழுந்து அவள் கையைப்பற்றி “நில்! அருள்கூர்ந்து நில்! உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்!” என்றாள். “என்ன இது, இளவரசி? அவர்கள் எவரை வேண்டுமானாலும் மணக்கட்டும். எங்கு வேண்டுமானாலும் அமரட்டும். அசுரர்குல இளவரசியான தாங்கள் அடிமைப்பெண்ணாக செல்வதா…?” என்றாள் சேடி. “இது நடக்கக் கண்டு நாங்கள் உயிர்வாழ்வதா?”


“நான் சொல்வதை கேள். தந்தையின் ஆணை” என்றாள் சர்மிஷ்டை. சேடி அவள் கையை உதறி “தந்தையின் ஆணை உங்களை கட்டுப்படுத்தும். அவர் முன் சென்று சங்கறுத்து விழுவதிலிருந்து என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்றாள். சர்மிஷ்டை ஆழ்ந்த குரலில் “நான் கட்டுப்படுத்த முடியும்” என்றாள். “ஏனென்றால் நீ என் பகுதி. உன் உணர்வுகள் என் உணர்வுகளாகவே பிறரால் காணப்படும். நீ என் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும். புரிந்துகொள்!” என்றாள். அவள் மெல்ல தளர்ந்து “ஆம், நான் பிறிதல்ல. எனக்கென்றொரு எண்ணம்கூட இந்நாட்களில் உருவானதில்லை” என்றாள்.


“இத்தருணத்தில் நான் உன்னையே சார்ந்திருக்கிறேன். என்னால் நிமிர்ந்து நிற்கவோ நிலை பெயராது இந்நிகழ்வுகளை எதிர்கொள்ளவோ முடியாது போகலாம். என் பின்னால் என்றும் தளராத கால்களுடன் நீ நிற்க வேண்டும்” என்றாள் சர்மிஷ்டை. சேடி “இளவரசி…” என்று உடைந்த குரலில் அழைத்தபடி சர்மிஷ்டையின் கைகளை பற்றினாள். “சேடியாவதென்றால் என்ன என்று அறிவீர்களா?” என்றாள். சர்மிஷ்டை “அறியேன். இப்போதுதான் அச்சொல்லின் பொருளையே என் உள்ளம் எதிர்கொள்கிறது. இவ்வரண்மனையில் ஆயிரத்துக்குமேல் சேடிகள் இருக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அவர்கள் நடுவிலேதான். ஆனால் அவர்களின் வாழ்க்கை என்ன, உணர்வுகள் என்ன எதுவும் எனக்குத் தெரியாது என இப்போதுதான் அறிகிறேன்.”


“ஓரிருவரின் பெயர்கள் மட்டுமே தெரியும். பிற அனைவரும் ஒரே முகமாகவும் ஒரே சொல்லாகவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள்” என்றாள் சர்மிஷ்டை. சேடி விழிகள் ஈரத்துடன் விரிய  “ஆம் இளவரசி, சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரென்பது தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது, பிறிதொருவரின் நிழலென வாழ்வது” என்றாள். மூச்சிரைக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே.  சேடிக்கு அதுவும் இல்லை” என்றாள்.


சர்மிஷ்டை அவள் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தன் கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து “அன்னையிடம் சென்று சொல். தந்தை அளித்த சொல்லுறுதிக்கு நான் கட்டுப்பட்டவள்” என்றாள். நீள்மூச்சுடன் சேடி கண்ணீரைத் துடைத்தபடி “ஆம், இத்தருணத்தில் எனது பணி என்பது உங்களின் பொருட்டு இவர்கள் அனைவரிடமும் பேசுவதுதான். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள். பின்னர் அவள் விழிகளுடன் தொடுக்காமல் திரும்பி “சேடியென்று போக தாங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா, இளவரசி…?” என்றாள். “ஆம், பிறிதொரு வழியில்லை” என்றாள் சர்மிஷ்டை.  “அவள் முன்….?” என்றாள் சேடி. “அது ஒரு கணநேர இறப்பு. அதை கடந்துவிட்டேன் என்றால் பின்னர் அனைத்தும் மிக எளிது” என்ற சர்மிஷ்டை மெல்ல புன்னகைத்து “மறுபிறப்பு” என்றாள்.


tigerசெய்தியைக் கேட்டதும் நெஞ்சில் அறைந்து உரக்க அழுதபடி அவள் அறைக்கு ஓடி வந்த அன்னை சேக்கையில் புதைந்து கவிழ்ந்து கிடந்த அவளை அறைவதுபோல பற்றி இழுத்து வெறியுடன் தன் நெஞ்சோடணைத்தபடி “என் மகளே! என் செல்வமே! உன் ஊழ் இப்படி ஆகியதே! இனி ஏன் உயிர்வாழவேண்டும்? இக்குலம் இருந்தாலென்ன, அழிந்தாலென்ன?” என்று கூவி அழுதாள். தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “வாடி, சென்று நெஞ்சு பிளந்து இவ்வரண்மனை முற்றத்தில் வீழ்வோம். மூதன்னையருக்கு நெறியென்று ஒன்று இருந்ததென்றால் நம் குருதியினால் இவர்களின் விழி திறக்கட்டும்” என்று அலறினாள்.


அவளைத் தொடர்ந்து ஓடிவந்த மூன்றாவது அன்னை அவள் முன் அமர்ந்து அவள் கால்களை தன் நெஞ்சோடு அணைத்தபடி அவள் முட்டுகளில் முகம் சேர்த்து குனிந்து அழுதாள். இரண்டாவது அன்னை வந்து தூண்சாய்ந்து நின்று பெருமூச்சுவிட்டாள். அணுக்கச்சேடி வெளியே இருந்து அறைக்கதவை மூடினாள்.  அவளை பற்றித் தூக்க முயன்றபடி “நாம் கிளம்பிச் சென்றுவிடுவோம். எங்காவது சென்று மறைந்துவிடுவோம்” என்றாள் அன்னை. “எங்கு சென்றாலும் நீங்கள் அசுரகுலத்து அரசரின் மனைவி. நான் அவர் மகள். அவர் சொல்லுக்கு நாம் கட்டுப்பட்டவர்களே” என்றாள் சர்மிஷ்டை.


“அறுத்தெறிந்துவிட்டு வருகிறேன் இந்த மங்கல நாணை. இதுதானே என்னை கட்டுப்படுத்துகிறது?” என்று அன்னை கூவினாள். “இல்லை அன்னையே, இருபதாண்டுகாலம் அரியணையில் அவருக்கு நிகராக இடம் அமர்ந்தீர்கள் அல்லவா? அரசிகளுக்குரிய ஆடம்பரத்தில் திளைத்துவாழ்ந்தீர்கள் அல்லவா? அதுவும் உங்களை கட்டுப்படுத்துகிறது” என்றாள் சர்மிஷ்டை. அச்சொற்களின் கூர்மை நெஞ்சை செயலிழக்கச் செய்ய வளையல்கள் ஒலிக்க அன்னையின் கை சேக்கை மேல் விழுந்தது. நீர் நிறைந்த கண்கள் விரிந்திருக்க அவளை நோக்கி, பின் இரண்டாவது அரசியை நோக்கினாள். அவள் விழிகளை தன் நீர்வழிந்த கண்களால் நோக்கி “என்னடி சொல்கிறாய்?” என்றாள்.


அதன் பொருள் நீயா பேசுகிறாய் என்பதே எனத் தெரிந்தபோது சர்மிஷ்டை புன்னகை புரிந்தாள். தன் உள்ளம் ஏன் இத்தனை எளிதாக இருக்கிறதென்று வியந்துகொண்டாள். உடைந்து செயலிழந்து உதிரிச்சொற்களுடன் தான் அரற்றிக் கொண்டிருக்கவேண்டுமென்று இவ்வன்னையர் எதிர்பார்க்கிறார்கள். அவளுக்கு அப்போது ஒன்று தெரிந்தது. அவ்வரண்மனையில் இளவரசியென அவளிருந்த அந்நாட்களில் எப்போதும் தன்னை இயல்பாக உணர்ந்ததில்லை. ஒவ்வாத உரு ஒன்றில் புகுந்து நடித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றிக்கொண்ட்டிருந்தது. ஒருவேளை இயல்பிலேயே நான் ஒரு சேடிப்பெண்தானோ? எனக்குரிய வாழ்க்கையை நோக்கித்தான் செல்கிறேனோ? அவ்வெண்ணம் அவளை மேலும் புன்னகைக்க வைத்தது.


பற்களைக் கடித்தபடி “என்னடி சிரிக்கிறாய்? உனக்கென்ன உளம் நிலையழிந்துவிட்டதா?” என்றாள் அன்னை. “இல்லை அன்னையே… அனைத்தும் நன்மைக்கே என எத்தனையோமுறை நூல்களில் பயின்றிருக்கிறேன். இக்கட்டுகளில் அச்சொல் உண்மையிலேயே பொருள் அளிக்குமென்றால் அதைவிட இனியது ஒன்றுமில்லை” என்றாள் சர்மிஷ்டை. “பித்தி போல பேசுகிறாய். சேடி என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு? அதிலும் நீ எங்கு எவருக்குச் சேடியாக செல்கிறாய், அறிவாயா? உனக்கென்று மணம் பேசப்பட்ட அரசனின் நாட்டுக்கு. நேற்றுவரை உன் காலடியில் அமர்ந்திருந்த அந்தணப்பெண்ணுக்கு தாலம் தூக்கப்போகிறாய்.”


இரண்டாவது அன்னை அழுத்தமான குரலில் “அதைவிட நீ நோக்க வேண்டியது நீ ஷத்ரிய நாட்டிற்கு அடிமையென செல்லும் அசுரகுலப்பெண் என்பதுதான். அங்கு நீ அரசியெனச் சென்றாலே உனது மதிப்பு எப்படி இருக்கும் என்பதைப்பற்றி ஐயம் கொண்டிருந்தோம். தாலம் எடுத்து பின்னால் நடக்கும் அடிமையெனச் சென்றால் உன் நிலை என்னவாக இருக்கும்?” என்றாள். சர்மிஷ்டை “எதுவாக இருந்தாலும் அறியாத ஒன்றை இங்கு நின்று எண்ணி எண்ணி விரித்தெடுத்து அச்சத்தை பெருக்கிக்கொள்வதில் எந்தப்பொருளும் இல்லை. வருவது வரட்டும். உயிரைப்போக்கிக் கொள்ளும் உரிமை நம்மிடம் இருக்கும் வரை நாமே ஏற்றுக்கொள்ளாத எத்துன்பமும் நமக்கு வருவதில்லை” என்றாள் சர்மிஷ்டை.


அவளுடைய இயல்பு நிலையும் சிரிப்பும் முதலில் அவர்களை குழப்பியது, பின்னர் எரிச்சல் கொள்ளச் செய்தது. அன்னை அவள் கையை அறைந்து “இத்தருணத்தில் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் உன்னை அனைவரும் போற்றுவார்கள் என்று எண்ணுகிறாயா? வென்றவர்களுக்காக மட்டும்தான் சொற்கள். தோற்று அழிந்த கோடிப்பேர் ஒரு நினைவால்கூட சென்று தொடப்படுவதில்லை. அவர்களுக்கு எஞ்சுவது முடிவிலா இருள் மட்டும்தான்” என்றாள். அதைவிட நேரடியாக அந்நிலையை சொல்லிவிட முடியாதென்று ஒருபுறம் தோன்றினாலும்கூட சர்மிஷ்டைக்கு அச்சொற்களும் எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. மாறாக அன்னையின் கைகளை பற்றிக்கொண்டு  “இல்லை அன்னையே, நான் நடிக்கவில்லை. இயல்பிலேயே என் உள்ளம் துயர் கொள்ளவில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள்.


இரண்டாவது அன்னை “எப்போதுமே அவள் இங்கு ஒட்டாமல்தான் இருந்தாள். எதையும் பற்றிக்கொள்ளாதவர்கள் அனைத்தையும் விடுவதும் எளிதுதான்” என்றாள். அன்னை சீற்றத்துடன் அவளை நோக்கி திரும்பி “இத்தருணத்தில் உன்னைப்பற்றி நீ சொல்ல விரும்புகிறாயா?” என்றாள். மூன்றாவது அன்னை “இது என்ன நமக்குள் பூசலிடும் தருணமா? நாம் செய்வதற்கொன்றே உள்ளது. மூவரும் சென்று அரசரை பார்ப்போம். அந்த அந்தணப்பெண் குருநாட்டு அரசரை மணக்கட்டும். ஒருபோதும் அசுரர் அவளுடைய அரசுக்கு எதிராக எழமாட்டார்கள் என்று அரசர் அவளுக்கு சொல்லளிக்கட்டும். நம் அசுரகுடியிலிருந்து ஒருவரை மட்டுமே இளவரசி மணப்பாளென்றும்கூட நாம் உறுதிகூறலாம். இளவரசியை சேடி என்று அனுப்புவதிலிருந்து மட்டும் நமக்கு விலக்களிக்கட்டும். இது நாம் அழுத்திக் கோரினால் பெறக்கூடிய ஒன்றே” என்றாள்.


“ஆம், இதை நான் கேட்கிறேன். அவள் அன்னையாக இதையாவது அவர் எனக்கு அளித்தாகவேண்டும்” என்றபடி அன்னை எழுந்தாள். சர்மிஷ்டை அவள் கையைப்பற்றி “இல்லை அன்னையே, என்னிடம் தந்தை சொன்னதுமே நானும் தந்தைக்கு சொல்லளித்துவிட்டேன். அதிலிருந்து நான் பின்னடி வைக்கப்போவதில்லை” என்றாள். அன்னை “நீ பின்னடி வைக்க வேண்டாம். நீ ஒருசொல்லும் கேட்கவும் வேண்டியதில்லை. நாங்கள் எங்கள் கணவரிடம் கேட்கப்போகிறோம்” என்றாள். சர்மிஷ்டை “என் பொருட்டு கேட்க வேண்டியதில்லை. நீங்கள் எச்சொல்லைக் கேட்டாலும் அது என் பொருட்டு கேட்பதாகவே பொருள். நீங்கள் கேட்டு அச்சொல்லை பெற்றுக்கொண்டாலும்கூட நான் எந்தைக்கு அளித்த சொல்லுக்கு ஏற்ப சேடியாக செல்லத்தான் போகிறேன்” என்றாள்.


“என்னடி இது?” என்று துயருடன் இளையவளைப் பார்த்து கேட்டாள் அன்னை. “இதோ பார்! நீ எடுக்கும் முடிவின் மறுதொலைவென்ன என்று உனக்குத் தெரியவில்லை. பேரரசரை கருவுறப்போகும் வயிறு உனதென்று சூதர்கள் இங்கு பாடிவிட்டார்கள். இன்று அங்கு சென்று அடுமனைப்பெண்ணாகவும் சமையல்பெண்ணாகவும் பணியாற்றப்போகிறாயா? சேடியின் வயிற்றில் பிறக்கும் மைந்தருக்கு தந்தை என எவரும் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்று அறிவாயா? அவர்கள் அடுமனைச் சூதர்கள் என்றே அறியப்படுவார்கள். அசுரரென்றோ ஷத்ரியர் என்றோ அல்ல” என்றாள் மூன்றாம் அன்னை.


“ஆம் அறிவேன்” என்றபின் சர்மிஷ்டை எழுந்தாள். “நானும் அவளும் ஊழை நேர் கொள்கிறோம். அவள் ஊழுக்கு எதிராக நிற்கிறாள். நான் ஊழை நம்பி அதன் மேல் ஊர்கிறேன். ஊழின் பெருவலியை நம்புகிறேன்.” அன்னை கசப்புடன் “இச்சொற்களனைத்துமே வீண். வாழ்க்கையின் பெருந்தருணமொன்றில் இப்படி கற்றவற்றையும் எண்ணியவற்றையும் சொற்களாக அள்ளிக்கொண்டு நிற்பதைப்போல் மடமை ஏதுமில்லை. எது உகந்ததோ அதை செய்யவேண்டும். இத்தருணத்தில் நீ செய்ய வேண்டியதொன்றே. சேடியாவதைத் தவிர்ப்பது. அதற்கு ஒரே வழி சுக்ரரிடம் கேட்டுப்பார்ப்பது மட்டும்தான்” என்றாள்.


சர்மிஷ்டை “உங்கள் அனைவரையும்விட தேவயானியை நான் நன்கறிவேன். ஒருபோதும் ஒருசொல்லும் அவள் விட்டுக்கொடுக்க மாட்டாள். அவள் விட்டுக்கொடுக்காதவரை சுக்ரரும் இறங்கிவரமாட்டார். சுக்ரர் இறங்கி வரவில்லையென்றால் நம் பொருட்டு நமது அரசர் சென்று அங்கு இரந்து நின்று இழிவுகொண்டு திரும்பி வருவதொன்றே விளையும். இது தேவயானியின் முடிவென்றால் ஒருசொல் குறையாமல் இது நிகழ்ந்தே தீரும்” என்றாள். அன்னையர் அவள் முகத்தை நோக்கி அதில் இருந்த மறுக்கமுடியாமையைக் கண்டு உளம் தளர்ந்தனர்.


அன்னை விம்மி அழுதபடி மஞ்சத்தில் மெல்ல சாய்ந்து “நான் என்ன செய்வேன்…? நான் எப்படி இங்கு வாழ்வேன்…? எங்கோ அறியா நாட்டில் இவள் சேடியாக இருக்கையில் இவ்வரண்மனையின் அரச இன்பங்களும் மணிமுடியும் எனக்கென்ன பொருளளிக்கும்…?” என்றாள்.  “அனைத்தும் சில நாட்களுக்கே, அன்னையே” என்றாள் சர்மிஷ்டை. “நான் அங்கு பழகுவதும் நீங்கள் இங்கு பழகுவதும்.” அன்னை சினத்துடன் தலைதூக்கி “என்னடி சொல்கிறாய்?” என்றாள். “நாம் எளியவர்கள். நம்மைச் சூழ்ந்திருப்பவற்றுடன் பின்னி கரந்து அவற்றில் ஒன்றாகவே நம்மால் வாழமுடியும். மிகச்சிறந்த சேடியாக நான் விரைவிலேயே மாறிவிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.


புன்னகையுடன் “இன்றுவரை தனித்தும் தருக்கியும் நிற்கமுடியாத என் இழிவை எண்ணி வருந்தியிருந்தேன். இப்போது தெரிகிறது. திரளில் ஒருவராக இருப்பதென்பது எவ்வளவு பெரிய நல்லூழ் என்று. அனைவருக்கும் உரியதே நமக்கும். நமக்கென்று தெய்வங்கள் பெரிய துயரையோ ஆற்றாச்சிறுமையையோ சமைப்பதில்லை” என்றாள் சர்மிஷ்டை.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2017 11:30

April 9, 2017

நிறம்

colour


 


அன்புள்ள ஜெ,


நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது!


http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html


உங்கள் கருத்து?


விஜயசங்கர்


 


அன்புள்ள விஜயசங்கர்,


ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள்.


”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன்.


”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்”


வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக ஏதாவது சின்ன பரிசு வாங்கி கொடுப்பார்கள். அதற்கு வண்ண தாளில் பொட்டலம் கட்டுவது பெயர் ஒட்டுவது என்றெல்லாம் ஏகப்பட்ட சடங்குகள் உண்டு. ஐம்பது ரூபாய் எதற்கு என்று கேட்டேன்


”லாவண்யாவுக்கு யாருமே கிஃப்ட் குடுக்க மாட்டாங்கதானே…அதுக்குதான்” என்றாள்.


”ஏன் கிஃப்ட் குடுக்க மாட்டாங்க?”


”ஏன்னா அவளுக்கு ஃப்ரன்ட்ஸே கெடையாதுல்ல?” ‘


‘ஏன் ஃப்ரண்டிஸ் கெடையாது?”


”அவள்லாம் கறுப்புதானே? அதான்”


எனக்கு கொஞ்சநேரம் புரியவில்லை. ”கறுப்பா இருந்தா என்ன?” என்றேன்


”அய்யோ அப்பா , மக்கு மாதிரி பேசாதே. கறுப்பா இருக்கிற பொண்ணுகூட ஃப்ரன்டா இருந்தா கேவலம்தானே? அதான்”


உண்மையில் அதுதான். மேலும் விசாரிக்க விசாரிக்க ஆச்சரியம் தாளவில்லை. அவள் படிக்கும் கிறித்தவ கான்வென்டில் வெண்ணிறத்துக்கு மட்டும்தான் மதிப்பு. பத்து பெண்கள் அபாரமான சிவப்புநிறம். இரண்டு முஸ்லீம் பெண்கள். நாலைந்து நாயர் பெண்கள். சில கிறித்தவ மீனவப் பெண்கள் மற்றபடி எல்லாருமே கறுப்பு அல்லது மாநிறம். வெள்ளைநிறப்பெண்களுக்கு அபாரமான மதிப்பு.


”கறுப்பு டீச்சர் வந்தால்கூட அவங்க கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. ஸ்கூல் டிராமாவுக்கெல்லாம் அவங்கள மட்டும்தான் சேத்துப்பாங்க…


அந்த வெண்ணிறப் பெண்கள் பிற பெண்களிடம் நட்பாக இருப்பதில்லை. தங்களுக்குள்தான் நட்பாக இருப்பார்கள். ”நாம நல்ல கொழந்தைங்களா இருந்தா சிலசமயம் நம்மளை சேத்துப்பாங்க” என்றாள் சைதன்யா. அந்த நட்புக்காக மற்ற பெண்கள் நடுவே அடிதடி, போட்டி.


ஒரு நாலைந்து பெண்கள் தீவிரமான கருப்பு நிறம். அவர்களை எவருமே பொருட்படுத்த மாட்டார்கள். என்ன கொடுமை என்றால் அந்தப் பெண்களுடன் பிற சுமார் கறுப்புப் பெண்களும் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனியாகத்தான் வர வேண்டும், தனியாகத்தான் போக வேண்டும்.


”மிஸ் எல்லாம் அவங்களை நல்லாவே அடிப்பாங்க. கறுப்பு சனியனேன்னு திட்டுவாங்க” எனக்கு அதிர்ச்சி. அப்படியெல்லாம் திட்டுவார்களா என்ன?


”இங்கு தீந்து போச்சுன்னு சொன்னப்ப உன் உடம்பிலே தொட்டு எழுதுன்னு எங்க ஸிஸ்டர் சொன்னாங்க” அந்த சிஸ்டர் அதிவெண்மை கொண்ட சிரியன் கிறித்தவப்பெண்.


”லாவண்யாவுக்கு நீ மட்டும்தான் ஃப்ரன்டா?” என்றேன்.


”ஆமா. நானும் கொஞ்சம் கறுப்புதானே. அதனால நான் அவளுக்கு ஃப்ரன்டு. அவ எனக்கு தினமும் நெல்லிக்கா கொண்டு வருவா” நெல்லிக்காய் நாலைந்து நாள் வராவிட்டால் அந்த நட்பும் சிதைவுற வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.


நான் லாவண்யாவுக்கு நூறு ரூபாய்க்கு ஒரு பரிசு வாங்கி கொடுத்தனுப்பினேன். ”நீ இதை எல்லா பொண்ணுகளும் பாக்கிற மாதிரி அவளுக்கு குடு” என்றேன்.


”மத்த பொண்ணுகள் என்னை கிள்ளுவாங்களே”


”என்ன பாப்பா நீ? நீதானே கிளாஸிலே கிள்ளல் எக்ஸ்பர்ட்?”


”அது சரிதான்…..” பிறகு ”நானும் பயங்கரமா கிள்ளட்டா?” என்று அனுமதி கோரி பெற்றுக் கொண்டாள்


என்ன நடக்கிறது நம் பள்ளிகளில்? மெல்ல மெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வர்க்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர் பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச் செய்வோம்.


மேலும் நான் படிக்கும்போது வாத்தியார்கள் அராஜகமாகப்பேசமுடியாது.பேசினால் பையன்களே வாத்தியாரைப்பிடித்து அலகு திருப்பி விடுவார்கள். பையன்களில் எட்டுபேருக்கு பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே திருமணமாகி பிள்ளைகுட்டிகள் இருந்தன. அது வேறு காலம்


விசித்திரமான ஒரு பண்பாட்டுத் திருப்பம் நமக்கு நிகழ்ந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் அழகிய பெண்ணின் நிறம் என்பது மாமை தான். அதாவது மாந்தளிர் நிறம். மாநிறம். ஆனால் கண்ணகி செந்தாமரை நிறம். அந்த இடைவெளிக்குள் நம் அழகு மதிப்பீடு தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.


அருண்மொழிக்கு அவள் சிவப்பா இல்லையே என்ற ஆதங்கம் உண்டு. எனக்கு என் தங்கை ஒரு பெண் பார்த்தாள். நான் மலையாளப்பெண்ணை மணக்க விரும்பவில்லை, எனக்கு தி.ஜானகிராமனின் கதாநாயகிதான் இலட்சியம். நான் பெண் பார்க்கவே செல்லவில்லை. அந்தப் பெண்ணை பின்னாளில் அருண்மொழி ஒருமுறை நேரில் பார்த்தாள் ”அப்படி செவப்பா இருக்கிறாளே, நீ எதுக்கு வேண்டம்னு சொன்னே?” என்றாள்.


”சிவப்பா இருந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாதா?” என்றேன்


”நல்ல செவப்பா இருக்கா. உனக்கெல்லாம் கொழுப்பு. திமிர். பெரிய இவன்னு நெனைப்பு…”என்றாள் அருண்மொழி கோபமாக. இன்று வரை புரிந்து          கொள்ள முடியாமல் இருப்பது இந்த கோபம்தான் .


நண்பர் யுவன் சந்திரசேகரின் மனைவி உஷா நல்ல கறுப்பு நிறம். யுவன் உஷா உஷா என்று உருகும் ஆசாமி. அவன் தீ நிறத்தில் இருப்பான். நான் அருண்மொழியிடம் உஷா கறுப்புதான் என்றேன்.


”என்னைவிடவா?”


”ஆமாம்”


அதன் பின்னர்தான் கொஞ்சம் சமாதானம்.


தமிழில் நாம் கடந்தாகவேண்டிய பண்பாட்டு அகழி இது


ஜெ


 


 


மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் டிசம்பர் 2009


 


நிறம் ஒரு கடிதம்


நிறம் கடிதம் 2

தொடர்புடைய பதிவுகள்

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
நிறம்- கடிதம் 2
மூதாதையர் குரல்
அசுரர் இன்று
சென்னையின் அரசியல்
அசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி
காஷ்மீர் கடிதம்
புலியும் புன்னகையும்
ஒரு வெறியாட்டம்
சேவை வணிகர்கள்
டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்
கேரளக் குடிநிறுத்தம்
தேர்வு – ஒரு கடிதம்
வல்லுறவும் உயிரியலும்
கழிப்பறைகள்- கடிதங்கள்
பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்
விதிசமைப்பவனின் தினங்கள்
சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:35

கடிதங்கள்

saratha


 


பேரன்புக்குரிய ஜெ,


என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? இருமுனைகளும் கூர்மைகொள்கின்றன. உச்சகட்ட கசப்பு வெறுப்பு வசைபாடலுக்கு அப்பால் அரசியலே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் மறுதரப்பை தங்கள் கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாகச் சுட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே நிற்பவர்கள் இருவருக்கும் பொது எதிரிகளாக ஆவார்கள்.


 


இது அப்படியே இங்கு அமெரிக்காவில் இருக்கும் அரசியல் சூழலுக்கும் பொருந்தும். ட்ரம்ப்பும் மோதியும் ஒத்தவர்களோ இல்லையோ, இருவரின் தீவிர ஆதரவாளர்களுக்கும் சரி, எதிர்ப்பாளர்களுக்கும் சரி இம்மியளவும் வித்தியாசம் இல்லை. இணையத்தில் ஏதாவதொரு வலதுசாரி-இடதுசாரி விவாதத்தை எடுத்துக்கொண்டு, பெயரை/கட்சியை மட்டும் மாற்றி (ட்ரம்ப் இடத்தில மோதி, மோதி இடத்தில ட்ரம்ப்) வாசித்து பார்த்தால் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.


 


சாரதா


அட்லாண்டா


 


 


அன்புள்ள சாரதா


 


பெரிய அளவில் அழிவுகள் உருவாகும்போதெல்லாம் இந்த துருவப்படுத்தல் மிக விசையுடன் முன்னரே நிகழ ஆரம்பித்துவிட்டிருப்பதை உலகவரலாறு எங்கும் காண்கிறோம். வெறுப்பின் குரல் இன்னொரு வெறுப்பின்குரலை வளர்க்கிறது. மாறிமாறி உண்டு இரு பூதங்களும் வளர்கின்றன. எல்லா வரிகளும் திரிக்கப்படுகின்றன. எல்லா தரப்புகளும் ஒற்றைப்படையாக ஆக்கப்படுகின்றன. கடைசியில் இரண்டு வாள்கள் மட்டுமே எஞ்சுகின்றன


 


ஜெ


 


*


 


அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


 


ஒரு வருடம் முன், என் மனைவி என் கையில் ஒரு குங்குமம் புத்தக இதழை கொடுத்து , இந்த கட்டுரை உங்களுக்கு பிடிக்கும் என்றாள் . அது உங்களின் “முகங்களின் தேசம் ” தொடர். ஆரம்ப முதலே மிகவும் ஈர்க்கப்பட்டேன். இணைய தளத்தில் மொத்தத்தையும் படித்தேன்.


 


பிறகு சிறிது சிறிதாக தங்கள் இணைய தளத்தில் கட்டுரைகளையும் படிக்க ஆரம்பித்தேன். சென்னையில் இருந்தால் வசதியாக புத்தக வடிவில் படிக்கலாம் ,அதுவும் வேண்டியது மட்டும். தற்சமயம் வெளி நாட்டில் அஞாத வாசம் , ஆகையால் கையையும் காலையும் கட்டிப்போட்டாற்போன்ற நிலை.


 


வேண்டியது என்றால் , வேண்டாதது தங்களுக்கு எழுதப்படும்  காழ்ப்புணர்ச்சி கடிதங்கள், கட்டுரைகள். முக்கியமாக யார் முதன்மை எழுத்தாளர்கள் என்ற சர்ச்சை.


 


நான் படித்த காலத்தில், ஐம்பது அறுபதுகளில் , அறிவியலோ கணிதமோ எதை தேர்வு செய்து படித்தாலும் , மூட்டை மூட்டையாக ஆங்கில ,தமிழ் இலக்கியம் திணிக்கப்பட்டது. அது கொஞ்சம் ஊறியதும் ஒரு சுவை பிறந்து, படிப்பு முடிந்து வேலை ,குடும்பம் என்று ஆன பின்பும் ஒரு இன்ப அனுபவமாக இருக்கிறது. என் மனைவியும் கல்லூரி ஆங்கில இலக்கிய ஆசிரியை ஆக இருந்தவள்.தமிழ் நவீன இலக்கியத்தில் என்னை விட அதிக ஆர்வம் உண்டு.


 


நான் அவளிடம் கேட்டேன். இன்றைய நிலவரம் என்ன? இவர் எழுத்துக்களில் ராஜநாரயணனின் கரிசல் காட்டு எழுத்துக்கள் போல் ஒரு மணம் உள்ளது. மலை நாட்டு வளம் உள்ளது. பரந்த நோக்கம் தெரிகிறது. மக்களின் பலஹீனங்களை பற்றி ஒரு பரிவு, சாமான்ய மக்களிடமும் விஷயங்களிலும் மதிக்கக்கூடிய அம்சங்களைத் தேடும் பண்பு வெளிப்படுகிறது.  ஆனால் சினிமா தொடர்பும் இருக்கிறது. வேறு யார் யார் நல்ல எழுத்தாளர்கள்?


 


மனைவி சொன்னாள் .” நான் பலர் எழுத்துக்களை படிக்கிறேன். ஜெயமோகன் தவிர யாரையும் உங்களுக்கு recommend பண்ண தோன்றவில்லை. நவீன எழுத்துலகத்தில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு.”


 


அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். பல விமர்சகர்கள் இலக்கியம்  என்றால் என்ன என்பதில் தெளிவாக இல்லை. அது ஒரு சொல் ஓவியம். அதின் வர்ண ஜாலங்கள்,ஒளி நிழல் ஓட்டங்கள், உயிர்துடிப்பும் , அழகும், பரிமாற்றமும், போன்ற உள்ளக்கிளர்ச்சி ஊட்டும் அம்சங்களே பிரதானம். எழுத்தாளரின் அறிவியல், பொருளாதார ,சரித்திர, நூல் அறிவில்  குறைகள் தோன்றினால்,அவை  விமர்சனங்களுக்கு விஷயம் ஆகக்கூடாது என்பது நெடுங்காலமாக நிலை நின்ற நியதி.


 


ஆனால் படைப்பில் முரண்பாடு இருக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கு உதாரணமாக


” snow in a harvest scene” என்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


 


தங்களுக்கு வந்துள்ள சில கடிதங்கள் destructive criticism என்பதற்கும் தாழ்ந்த நிலையில் உள்ளன. அவற்றை எழுதுபவர்கள் எழுத்தாளர்களாக இருந்தால் , அவை பிற்காலத்தில் அவர்களுக்கே வெட்கப்படும் விஷயங்களாக, ஆனால்  அழித்து எழுத முடியாதவை ஆக தோன்றலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


 


அன்புடன்,


 


 


கிருஷ்ணன்


 


அன்புள்ள கிருஷ்ணன்


 


உண்மையில் ஒரு படைப்பைப்பற்றி ஆக்கபூர்வமான மதிப்பீட்டை வைப்பது மிகமிகக் கடினம். அதைப்பற்றி சலம்புவதே எளிய வழி. அதைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். கருத்துத்தரப்பைப்பற்றி ஒரு மறுதரப்பைச் சொல்வதே கூட மிகக்கடினமானது. திரிப்பது, குறுக்குவது எளியது. அதற்குத்தான் அதிகவாசகர்களும் அமைவார்கள். ஆனால் இதெல்லாம் ஏறத்தாழ உலகமெங்கும் ஒரே வகையில்தான் நிகழ்கின்றன என நினைக்கிறேன்.


 


கருத்துக்களைப்பொறுத்தவரை நக்கல், கிண்டல், வசை என ஆரம்பிக்கும் எவரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என் தரப்பு. புனைகதைகளைப்பொறுத்தவரை அப்புனைகதையின் நுட்பங்களை புரிந்துகொண்டவராகத் தெரியும் ஒருவரின் மாற்றுக்கருத்துக்கே குறைந்தபட்சம் மதிப்பு அளிப்பேன். என் இடமும் பங்களிப்பும் பிற எவரைவிடவும் எனக்குத்தெரியும் – பெரும்பாலான எழுத்தாளர்களைப்போல.


 


ஜெ


 


 


அன்புள்ள சு மோ


 


இல்லை இல்லை அன்புள்ள ஜே எம்


 


யார் கமல்?  நல்ல கேலிப் படம்.


 


சுய மோகா (NARCISSTIC)  நல்ல பதம்.


 


எதோ ஒரு படத்தில் பிரகாஷ் ராஜ் வசனம், “பண்ணி பல குட்டி போடும், அனால் சிங்கம் ஒண்ணு ரெண்டுதான் போடும்”.


 


விட்டுத்தள்ளுங்கள் ஜெ எம்.


 


அனால் அந்த கார்ட்டூன் அற்புதம்.


சிவா சக்திவேல்


 


 


அன்புள்ள சிவா,


 


பலகோணங்களில் நம்மை மற்றவர்கள் புனைந்து உருவாக்குவது நல்லதுதானே? நாம் யார் என்ற சிக்கல் எழும்போது ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்ளலாம்


 


சுயமோகம் இல்லாத எழுத்தாளர்கள் உண்டா என்ன?


 


ஜெ



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:33

வி.எஸ்.ராமச்சந்திரன்

vs


 


வி எஸ் ராமச்சந்திரன் புத்தகம் பேசுது


வி எஸ் ராமச்சந்திரன் – ஸ்வராஜ்யா


 


 


இனிய ஜெயம்,


 


இந்த ஆண்டு நான் வாசித்த நல்ல நூல்களில்,  மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமச்சந்திரன் அவர்களின் இரு நூல்களும் அடக்கம்.


 


அவரது  the emerging mind நூல் உருவாகிவரும் உள்ளம் எனும் தலைப்பில் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பிலும் ,


 


brain-the tell tale நூல் வழிகூறும் மூளை எனும் தலைப்பில் கு வி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பிலும்  பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது.


 


உண்மையில் ரிச்சட் டாக்கின்ஸ் ,வி எஸ் ஆர் இவர்களை  எனது தாய்மொழியில் வாசித்து அறிய முடிந்தது எத்தனை பரவசமான அனுபவம் என விளக்கவே இயலாது.


 


டாக்கின்ஸ் நாத்திகர்  மனித குல ஆதார கேள்விகள் அனைத்தையும்   பரிணாமவியல் தொட்டு மரபணுவில் வரை என  இரண்டுக்குள் வைத்து தர்க்கபூர்வமாக பதில் அளிக்கிறார். எனினும் மனிதத் தன்னுணர்வு எனும் நிலையின் அடுக்குகளில் பல அவரது தர்க்கங்களுக்கு வெளியில்தான் நிற்கிறது.


 


வி எஸ் ஆர்  தன்னை சந்தேகவாதி என சொல்கிறார். அந்த எல்லையில்  அவர் டாக்கின்சைக் காட்டிலும்  உண்மையானவராக இருக்கிறார்.


 


புறத்தில் இயங்கும் அனைத்து தர்க்க அலகுகளையும் இணைத்து ஒரு முழுமையான இழைக் கோட்பாட்டை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்றுவரும் அதே பொழுதில் அகத்தில் இலங்கும் அனைத்தையும் மரபியல், மூளை நரம்பியல் கொண்டு விடை கண்டு விட யத்தனங்கள் நடந்து வருகிறது.


 


வி எஸ் ஆர்  அவர்கள் மூளை இயங்கும் அடிப்படை விதிகளை சிறிது சிறிதாக பகுத்து ”தன்னுணர்வு” எனும் இருத்தல் உணர்வுக்கு காரணமான மூளையின் நியூரான்களின் வரிசையை  அணுக  முடியும் என கருதுகிறார்.


 


அந்த ஆய்வில் அவர் கண்ட  ”மூளை  பாதிப்பாளர்கள்” வழியே அவர் நடத்திய ஆய்வுகள், அதில் அவரது அறிவியல் பூர்வமான கண்டடைதல்கள் , மொழி, நடத்தை,ஆளுமை, ஆட்டிசம், கலையின் தன்மை இவற்றை இவர் மூளை நரம்பியல் வழியே வகுத்து வைக்கும் விதம் என , சுவாரஸ்யமான நடையும் மொழியும் கொண்ட நூல்கள் இவை இரண்டும்.


 


மறு வாசிப்புக்குப் பிறகு இந்த நூல்கள் குறித்து எழுத வேண்டும்.


 


வி எஸ் ஆர் அவர்களின் முழுமையற்ற பேட்டி புத்தகம் பேசுது தளத்தில்.


 


நண்பர் அரவிந்தன் நீலகண்டன்  எடுத்த முக்கியமான பேட்டி. சந்தாதாருக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் என நினைக்கிறேன்.


 


”நான் யார்” என்பது தத்துவக் கேள்வியா ? அறிவியல் கேள்வியா?  எனும் நிலையில் துவங்கி அக் கேள்வியை அறிவியல் புலத்துக்கு நகர்த்தி,அதற்க்கு மூளை நரம்பியல் வழியே விடை தேடும் வி எஸ் ஆர்  ”பிரம்மம்” என ஒன்றிருக்க வாய்ப்பு உண்டு என்றே அனுமானிக்கிறார். ஆகவேதான் நான் நாத்திகன் அல்ல. சந்தேக வாதி என்கிறார்.


 


அப்துல் கலாமின் நூல்கள் மாணவர்களை நோக்கி படை திரண்டு தாக்கியது போல , வி எஸ் ஆர் அவர்களுக்கும் நிகழவேண்டும் என்பது என் பெரு விருப்பம்.


 


 


கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69

69. எண்ணுவதன் எல்லை


யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து “அனைவரும் செல்லவில்லை… இங்கே ஏதோ நடந்திருக்கிறது. ஓடியிருக்கிறார்கள், கைகலப்புகூட நடந்திருக்கலாம்…” என்றான். பின்னர் ஒரு புரவியை பார்த்துவிட்டான். அருகே சென்றதும் இன்னொரு புரவியும் தெரிந்தது. அவன் அவற்றின் சேணங்களைப் பார்த்துவிட்டு “இரு புரவிகளுமே பெண்களுக்குரியவை… அப்படியென்றால் அவர்கள் இங்கே எங்கோ இருக்கிறார்கள்” என்றான்.


யயாதி உரக்க “யாரங்கே?” என்றான். “யார் இருக்கிறீர்கள் இங்கே?” மெல்லிய எதிர்க்குரல் ஒன்று எழுந்தது. அல்லது அது உளமயக்கா என்றும் தோன்றியது. பார்க்கவன் குனிந்து நோக்கி ஓர் ஆடைப்பகுதியை எடுத்து “பெண்களின் ஆடை… கிழிந்து விழுந்திருக்கிறது. எவரோ அவர்களை கடத்திச்செல்ல முயன்றிருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் எங்கேனும் ஒளிந்திருக்கலாம்” என்றான். யயாதி மேலும் உரக்க “நாங்கள் ஷத்ரியர்… காவல்நெறி கொண்டவர்கள்… எவரேனும் இருந்தால் வெளிப்படுங்கள்” என்றான். மெல்லிய பெண்குரல் கேட்டது.


பார்க்கவன் உடனே அதை உய்த்தறிந்துவிட்டான். “இங்கே எங்கோ கிணறு இருக்கிறது… ஆழமான கிணறு. அதற்குள் இருக்கிறார்கள்” என்றான். மீண்டும் அக்குரல் கேட்டது. “மிக அருகே…” என்றபின் அவன் கைசுட்டி “அங்கே மலர்ச்சருகுப் பரப்பு கலைந்திருக்கிறது” என்றான். மெல்ல காலெடுத்துவைத்து அருகே சென்றபின் “ஆம், அங்கே ஒரு கிணறு இருக்கிறது. அதற்குள்தான்” என்றான். சுற்றிலும் நோக்கியபின் ஓடிச்சென்று கொடிகளை வெட்டி எடுத்துவந்தான். அவற்றை சேர்த்துக்கட்டி முறுக்கி வடமாக்கி அதை அங்கிருந்த மரத்தின் அடியில் கட்டினான்.


வடத்தைப் பற்றியபடி பதியும் கால்வைத்து சரிவிலிறங்கி அக்கிணற்றின் விளிம்பை அடைந்து உள்ளே எட்டிப்பார்த்தான். “இருவர்” என்று யயாதியிடம் சொன்னான். “உள்ளே விழுந்திருக்கிறார்கள், அரசே.” அவன் வாய்தவறிவிட்டதை உணர்ந்து யயாதி சினம்கொண்டு நோக்க அவன் குரல் தாழ்த்தி “இரு பெண்கள்” என்றான். “மேலே கொண்டுவா…” என்றான் யயாதி. “மகளிரே, நாங்கள் அயலூர் ஷத்ரியர். உங்களுக்கு உதவ சித்தமாக உள்ளோம்” என்றான் பார்க்கவன்.


அவன் கைநீட்ட அதைப்பற்றியபடி மெல்ல சாயை மேலெழுந்து வந்தாள். அவள் ஆடை நெகிழ்ந்திருக்க  உடலெங்கும் சேறும் மலர்ச்சருகும் ஒட்டியிருந்தது. கரையில் கால்வைத்து ஏறி தன் ஆடையைச் சீரமைத்து சருகுகளைத் தட்டியபடி “நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள். “நாங்கள் ஷத்ரியகுலத்தார். அயல்நாட்டார். இவ்வழி சென்றோம்” என்றான் யயாதி. “நன்று, உள்ளிருப்பவர் என் அரசி. நாங்கள் உள்ளே விழும்படியாயிற்று” என்றாள் சாயை. “அவரை மேலெடுங்கள்.”


யயாதி வடத்தைப்பற்றியபடி இறங்கிச்சென்று கைநீட்ட தேவயானி அதைப்பற்றிக்கொண்டு மேலெழுந்து வந்தாள். உள்ளேயே அவள் ஆடையை சீரமைத்து சருகுகளையும் தட்டிவிட்டிருந்தாள். மண்பிளந்து தெய்வம் தோன்றுவதுபோல என்று யயாதி எண்ணிக்கொண்டான். அவள் கரைக்கு வந்து உடலை தட்டிக்கொள்ள சாயை அருகே நின்றிருந்த மரக்கிளை ஒன்றைப் பறித்து அதன் இலைக்குச்சத்தால் அவள் உடலில் இருந்த சருகுப்பொடியை அகற்றி தூய்மை செய்தாள். “போதும்” என தேவயானி கையசைத்து அவளை தவிர்த்தாள்.


“நாங்கள் இங்கே மலர்விளையாடிக் கொண்டிருந்தோம்… கால்தவறி இந்தக் குழிக்குள் விழும்படி ஆகியது” என்றாள் தேவயானி. “எவரோ பூசலிடுவதுபோல கேட்டதே?” என்றான் யயாதி. தேவயானி “அது களிப்பூசல். எங்கள் தோழியர் இருவர் எங்களை முந்தும்பொருட்டு முன்னால் சென்றுவிட்டனர். அவர்களுக்கு நான் இங்கே உள்ளே விழுந்தது தெரியாது… நன்று வந்தீர்கள். இல்லையேல் இங்கே ஆழத்தில் நாங்கள் அடைபட்டுக்கிடக்க நேரிட்டிருக்கும்” என்றாள். யயாதி “நாங்கள் எழுப்பிய குரலால்தான் நீங்கள் அஞ்ச நேர்ந்தது. அதன்பொருட்டு பொறுத்தருளும்படி கோருகிறோம்” என்றான். “முறைமைச்சொல் வேண்டாமே” என தேவயானி புன்னகைத்தாள்.


அவளைக் கண்ட கணம் முதல் பிற சொல்லில்லாது சித்தம் அவளில் படிந்துகிடப்பதை அப்போதுதான் யயாதி உணர்ந்தான். அவள் புன்னகையைக் கண்டு ஆழம் நலுங்கியபோதே மேலுள்ளம் அவ்வாறு கிடப்பது தெரியவந்தது. இழிமகன்போல விழிநாட்டி நின்றுவிட்டேனா என உள்வியந்து விழிதிருப்பிக்கொண்டான். முணுமுணுப்பாக “நன்று, நீங்கள் கிளம்பிச்செல்லலாம். புரவிகள் சித்தமாகவே உள்ளன. உங்களுக்கு நாங்கள் துணைவர வேண்டுமென்றால் செய்கிறோம். பிறிது ஏதேனும் நாங்கள் ஆற்றவேண்டுமென்றால் அறிவிக்கக் கோருகிறோம்” என்றான்.


சாயை “ஏதுமில்லை, நாங்கள் கிளம்புகிறோம். உங்கள் உதவியை நினைவுகூர்வோம்” என்றாள். பார்க்கவனும் யயாதியும் தலைவணங்கினர். யயாதி “நாங்கள் விடைகொள்கிறோம், தேவி” என்றான். அவர்கள் தங்கள் புரவி நோக்கி திரும்ப தேவயானி மெல்லிய குரலில் “நில்லுங்கள்” என்றாள். யயாதி “சொல்லுங்கள், தேவி” என்றான். “இப்போதுதான் இந்த நாளையும் தருணத்தையும் கணித்துப்பார்த்தேன். என் மீன் மகம் எழும் நாள் இது.” யயாதி புரியாமல் தலையசைத்தான். “நீங்கள் என் கையைப் பற்றிய தருணத்தில் கோள்கள் உச்சத்திலிருந்தன” என்றாள் தேவயானி. யயாதி அப்போதும் புரியாமல் நோக்க பார்க்கவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.


“நீங்கள் என்னை மணம்செய்துகொண்டதாகவே அச்செயலுக்குப் பொருள்” என்று தேவயானி சொன்னாள். “உரிய நற்தருணத்தில் கை பற்றியவன் கணவனாகவே இருக்கமுடியும் என்கின்றன நூல்கள்… இது ஊழ். அன்றேல் இவ்வண்ணம் நிகழாது.” சாயையும் திகைத்துப்போய் அவள் முழங்கையை மெல்லப்பற்றி ஏதோ சொல்ல முயல உடலசைவாலேயே அவளை விலக்கி தேவயானி “நீங்கள் எவரென்று நான் அறியேன். எக்குடி எக்குலம் என்றெல்லாம்கூட ஆராயத் தலைப்படேன். ஆனால் நீங்கள் என் கணவர், பிறிதொருவரை இனி நான் ஏற்கமாட்டேன்” என்றாள்.


பார்க்கவன் யயாதியின் தோளை மெல்லப் பற்றி ஏதோ சொல்ல முயல அவன் கைமேல் கைவைத்து சொல்விலக்கிவிட்டு “தேவி, நற்தருணத்தில் நிகழ்ந்துள்ளது என்பதனால் நானும் அதற்கு கட்டுப்படவேண்டியவனே” என்றான். “நீங்கள் மண்பிளந்து தெய்வம் எழுவதுபோல் என் முன் தோன்றியதும் என் குடியின் நல்லூழே. உங்கள் பேரழகுக்கு நான் தகுதிகொண்டவனா என்பதே என்னை தயங்கச் செய்தது. தாங்கள் முடிவெடுத்துவிட்டமையால் அதற்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆனேன். நீங்கள் எவரென்று நானும் உசாவவில்லை. இது தெய்வங்கள் அமைத்த கடிமணம் என்றே ஆகுக!” என்றான்.


தன் கச்சையிலிருந்து கணையாழியை எடுத்து அவளிடம் நீட்டி “இது என் சான்றாழியாக உங்களிடமிருக்கட்டும். உரிய தருணத்தில் குடிமுறைமையுடன் வந்து உங்களை அணிமணம்கொள்கிறேன். இத்தருணத்தை நிகழ்த்திய தெய்வங்களே அதையும் அமைக்கட்டும்”  என்று யயாதி சொன்னான். அவள் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள். “நன்று, தேவி. மீண்டும் உடனே சந்திப்போம்” என்றான் யயாதி. “நான் காத்திருப்பேன்” என்றாள் தேவயானி. அவர்கள் முறைப்படி தலைவணங்கி விடைகொண்டனர்.


புரவிகளை நோக்கி செல்கையில் பார்க்கவன் “அரசே, என்ன இது? அவர் எவரென்றுகூடத் தெரியாமல்…?” என்றான். “அவள் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை” என்றான் யயாதி. “அவளை அவள் சேடி வாய்தவறி அரசி என அழைத்ததுமே நான் விழித்துக்கொண்டேன். அவள் அணிந்திருந்த ஆடையும் அணிகளும் எல்லாம் எளியவை. ஆனால் இடையிலணிந்திருந்த சிற்றாடை மட்டும் இளவரசியருக்குரியது. அதில் விருஷபர்வனின் குடியடையாளம் பின்னப்பட்டிருந்தது. அரசகுடியினர் மட்டுமே அணியும் தனியாடை அது” என்றான்.


பார்க்கவன் திரும்பி நோக்கியபின் “ஆம், அவர் எளிய பெண் அல்ல என நானும் உணர்ந்தேன். பேரரசியருக்குரிய அழகும் நிமிர்வும் கொண்டவர்கள்” என்றான். “குருநாட்டின் பேரரசியாக அமரவிருப்பவள் அவள். பாரதவர்ஷத்தின் முதன்மை சக்ரவர்த்தினி… இது தெய்வங்கள் அமைத்த தருணம். இதை இனி நூறாயிரம் தலைமுறைக்காலம் சூதர்கள் பாடுவர்” என்று யயாதி சொன்னான். “ஆனால் அவர்களை உங்களுக்கு மணம்பேசி முடித்திருக்கிறார்கள். உங்கள் ஒப்புதலோலை சென்றுவிட்டது. அதன்பின்னர் இப்படி அறியாத ஒருவரான உங்களை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?”


யயாதி புன்னகைத்து “ஆம், அதுவே அரசியருக்குரிய அரும்பண்பு. அவர்களுக்கு நெறிதான் முதன்மையானது. குடியோ குலமோ முடியோ அரியணையோ அல்ல. அத்தருணத்தின் தெய்வவிளையாட்டை உணர்ந்து பிற அனைத்தையும் உதறி எழும் அவளுடைய உளஆற்றல்தான் அவளை சக்ரவர்த்தினியாக்குகிறது. பெருநிலைகள் அவற்றை தேடிச்செல்பவர்களுக்கு அமைவதில்லை. அவற்றுக்குத் தகுதியானவர்களாகி அவற்றை பொருட்படுத்தாமல் கடந்துசெல்பவர்களைத் தேடி அவை தொடர்ந்து செல்லும்” என்றான்.




tigerகணையாழியை கையில் வைத்து நோக்கிக்கொண்டிருந்த தேவயானியிடம் “அரசி, என்ன  செய்துவிட்டீர்கள்? அவர்…” என்று சாயை சொல்லெடுக்க “அவர் யயாதி, குருநகரியின் அரசர்” என்றாள். “எப்படி தெரியும்?” என சாயை வியந்து நின்றுவிட்டாள். “அவர் பெயரைக் கேட்டதுமே அவரைப் பற்றிய காவியமான சூரியபுத்ரவிலாசத்தை கற்றேன். அதில் அவரது உடலடையாளங்கள் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளன. அரசர்கள் எளிதில் மறைந்துகொள்ளமுடியாது” என்றாள் தேவயானி. சாயை சொல்லில்லாமல் கைகளை கோத்தபடி நின்று பின் மீண்டு ஓடிவந்து அவள் தோளைப்பற்றியபடி “ஆனால் அவருக்கும் இளவரசிக்கும் மணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது…” என்றாள்.


“இன்னும் சொல்லுறுதி நிகழவில்லை” என்றாள் தேவயானி. “நீ உடனே கிளம்பு. தந்தையிடம் சென்று நடந்ததை சொல். தந்தையிடம் என் கோரிக்கைகள் இரண்டு உள்ளன, அவற்றைச் சொல்லி இன்றே விருஷபர்வனிடம் ஒப்புதல்பெற்று மீளும்படி உரை” என்றாள். சாயை “நீங்கள்?” என்றாள். “நான் இங்குதான் இருப்பேன்… என் கோரிக்கைகள் முற்றிலும் நிறைவேற எந்தைக்கு நான் ஏழு நாட்கள் அளிக்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறுமென்றால் இங்கிருந்து வெளிவருவேன். இல்லையென்றால் ஏழாவது நாள் இங்கேயே சிதைமூட்டி எரியேறுவேன்…”


“அரசி, என்ன இது…? நீங்கள்…” என சொல்லெடுத்த சாயை தேவயானியிடம் எதையும் சொல்லமுடியாதென்று உணர்ந்தவளாக முகம் தவிக்க நின்றாள். அவளை நேர்விழிகளால் நோக்கி “என் கோரிக்கைகள் இவை. நான் குருநகரியின் அரசன் யயாதியின் பட்டத்தரசியாக அமர்ந்து பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாகவேண்டும். விருஷபர்வனின் மகளாகிய சர்மிஷ்டை என் பணிப்பெண்ணாக என்னுடன் குருநகரிக்கே வரவேண்டும்” என்றாள்.


சாயை என்ன சொல்வதென்றறியாமல் பலமுறை வாயசைத்தாள். கைகளில் சொற்கள் தோன்றி அழிந்தன. பின்னர் “இரண்டாவது கோரிக்கை எதற்காக, அரசி? அது…” என்று தொடங்கினாள். “விருஷபர்வன் பாரதவர்ஷத்தில் குருநகரிக்கு நிகரான பேரரசன். சர்மிஷ்டையை அவர் வேறு அரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தால் அவன் குருநகரியைவிட ஆற்றலுள்ள அரசன் என எழுந்து வருவான். அவள் எனக்கு நிகரென முடிசூடி அமர்வாள்…” என்றாள் தேவயானி. “பாரதவர்ஷத்தில் நான் ஆள்வதன்றி பிறிதொரு பேரரசே அமையக்கூடாது.”


சாயை மெல்ல உடல்தளர்ந்து நீள்மூச்சுவிட்டாள். “அவள் வயிற்றில் பேரரசர்கள் பிறப்பார்கள் என்பது என் சொல். அவளுக்கு மைந்தர்களே பிறக்கலாகாது என இன்று எண்ணுகிறேன். ஆண்களின் கண்களே படாமல்  அவளை என் கண்முன் வைத்திருக்கிறேன்” என்றாள் தேவயானி. சாயை மெல்ல சொல்பெற்று “அரசி, நான் இத்தருணத்தில் பிறிதொன்றை சொல்லியாகவேண்டும். இப்புவியின் விந்தையான நெறிகளில் ஒன்று உண்டு. ஆற்றல்மிக்கவர்களுக்கே பெருந்தோல்விகள் அமைகின்றன, பேராற்றல்கொண்டவர்களே முழுத்தோல்வியை சென்றடைகிறார்கள். எளியோர் எவரும் முற்றிலும் தோற்பதில்லை” என்றாள்.


சினத்துடன் தேவயானி திரும்பி நோக்கினாள். “ஆற்றலுள்ளவர்கள் தங்களுக்கு நிகரான ஆற்றல்கொண்டவர்களை எதிரிகளென தேடுகிறார்கள். பேராற்றல்கொண்டவர்களோ ஊழை அறைகூவுகிறார்கள்.” தேவயானி “நான் ஊழை துணைக்கழைக்கிறேன். நான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாவேன் என்பது என் பிறப்பின்போதே சொல்லப்பட்டுவிட்டது” என்றாள். சாயை “நன்று, அவ்வண்ணமெனில் அதுவே நிகழட்டும். நான் எளியவள், ஊழுடன் பொருத முற்படமாட்டேன்” என்றாள். “ஆம், உனக்கு ஆணையிடப்பட்டதை செய். கிளம்பு” என்றாள் தேவயானி.


“இங்கு நீங்கள் தனித்திருப்பீர்களா?” என்று சாயை கேட்டாள். “இது என் சோலை. இங்குள்ள குகை ஒன்றில் இருப்பேன். இங்கிருந்து அகலமாட்டேன் என்று தந்தையிடம் சொல்.” சாயை சற்று தயங்கி “தங்கள் தந்தையின் சொல்லுக்கு விருஷபர்வன் ஏன் கட்டுப்படவேண்டும்? அதிலும் அவர் மகளை பணிப்பெண்ணாக்குவதென்றால்?” என்றாள். “அவர் ஒப்பவில்லை என்றால் தந்தை கிளம்பிச்சென்று பாரதவர்ஷத்தின் ஏதேனுமொரு அரசகுலத்தை அடையட்டும். அவர்களை இறப்பற்றவர்களாக ஆக்கட்டும். அசுரகுலத்தை முழுமையாகவே கொன்றழிக்க மானுடர் எழட்டும்” என்ற தேவயானி “அதை சொல்லவேண்டியதில்லை, விருஷபர்வனே அறிவார். இன்று அசுரரும் தேவரும் நிகர்நிலையில் உள்ளனர். ஒரு துரும்பின் எடைபோதும் துலா இப்பக்கம் சாய்ந்துவிடும். அசுரகுலமே எஞ்சாது” என்றாள்.


சாயை பெருமூச்சுவிட்டு “ஆணையை மேற்கொண்டு கிளம்புகிறேன், அரசி” என்றபின் தன் புரவியை அணுகி அதன்மேல் கால்சுழற்றி ஏறிக்கொண்டு திரும்பி நோக்காமல் கிளைகளை ஊடுருவிச் சென்றாள். தான் செல்வதை தானே நோக்கிக்கொண்டு நின்றிருப்பதாக ஓர் உளமயக்கு ஏற்பட அவள் திரும்பிப் பார்த்தாள். திரும்பி நடந்துசெல்லும் தேவயானியின் நீள்கூந்தலின் அலைகளையே கண்டாள்.



tiger சாயை குடில்தொகையை சென்றடைந்தபோது அங்கே சுக்ரர் அவளுக்காகக் காத்து நின்றிருந்தார். கிருதர் முன்னால் வந்து “நெடுநேரமாயிற்றே என ஆசிரியர் தேடினார். நாங்களே அங்கே வருவதாக இருந்தோம்” என்றபின் “இளவரசி எங்கே?” என்றார். “நான் ஆசிரியரிடமும் தங்களிடமும் மட்டும் தனியாக பேசவேண்டும்” என்றாள் சாயை. சுக்ரர் அவள் விழிகளைக் கண்டதும் உளம் கூர்மைகொள்ள “வா” என திரும்பிநடந்தார். கிருதர் உள்ளே வந்து கதவை மூடியதும் சுக்ரர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.


முன்னால் நின்ற சாயை தணிந்த குரலில் நிகழ்ந்தவற்றை சொன்னாள். சுக்ரர் “அவன் யயாதி என உறுதியாகத் தெரியுமா?” என்றார். கிருதர் “அதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை, ஆசிரியரே. இளையவள் எப்போதுமே ஒரு படி முன்செல்லும் மதி கொண்டவர்” என்றார். சுக்ரர் பெருமூச்சுவிட்டபடி தன் சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சினம்கொள்வார் என்றும் உடனே தேவயானியைக் காணக் கிளம்புவார் என்றும் சாயை எண்ணியிருந்தாள். அவருடைய ஆழ்ந்த அமைதி அவளை ஏமாற்றம்கொள்ளச் செய்தது.


“வேறு வழியில்லை, இவை இவ்வண்ணமே நிகழும். அவள் எண்ணியவை ஈடேறும், எண்ணியிராதவையும் நிகழும்” என்றார் சுக்ரர். திரும்பி கிருதரிடம் “இவளையும் உடனழைத்துக்கொண்டு விருஷபர்வனிடம் செல்க! நான் ஓர் ஓலை அளிக்கிறேன்” என்றார். “நாம் அசுரரை இதன்பொருட்டு கைவிடுவோம் என்றால் நம் மீது பழிசேரும்” என்றார் கிருதர். “ஆம், ஆனால் என் குடியில் எழுந்தவள் மகாகுரோதையான இந்திராணி. பெருஞ்சினவடிவான ஜெயந்தி. அவள் சொல் அனலுக்கு நிகர். நான் அதை மீறமுடியாது” என்றார் சுக்ரர். “அங்கே மலர்க்காட்டில் அமர்ந்து ஆணையிடுவது என் மகள் அல்ல, அவள் அன்னை” என தனக்குள் என சொல்லிக்கொண்டார்.


“தங்கள் ஆணை அதுவென்றால் நான் இயற்றுகிறேன். ஆனால் அதனால் நன்றென ஏதும் நிகழாதென்று உறுதியாக சொல்வேன்” என்றார் கிருதர். சுக்ரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். செல்வோம் என கைகாட்டிவிட்டு கிருதர் வெளியே நடந்தார். சாயை அவருடன் சென்று முற்றத்தில் நின்றாள். கிருதர் “இப்போது எவரிடமும் இதை நாம் சொல்லவேண்டியதில்லை. அரசனின் ஆணை வந்தபின் அவர்களே அறிந்துகொள்ளட்டும்” என்றார். “அரசர் ஒப்புவார் என நினைக்கிறீர்களா?” என்றாள் சாயை. “ஆம், அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் நாம் இதை செய்யலாகாது. இத்தருணத்தில் தந்தையெனும் நிலையிலிருந்து எழுந்து அரசகுருவெனும் இடத்தை அடைந்தாகவேண்டும் நம் ஆசிரியர்” என்றார்.


பின்னர் அவரே “ஆனால் அவர் ஒருபோதும் எளிய மானுடஉணர்வுகளை கடந்துசென்றதில்லை. இவையனைத்துமே அவர் தன் ஆசிரியர்மீது கொண்ட மிகச் சிறிய காழ்ப்பின் விளைவுகள்… நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “அவர் அரசியிடம் வந்து பேசுவார் என நான் எண்ணினேன்” என்றாள் சாயை. “அவர் என்றுமே பிறிதொருவகையில் நடந்துகொண்டதில்லை” என்றார் கிருதர்.



 tigerசிறிய விரைவுத்தேரில் அரண்மனையை நோக்கி செல்லும்போது சாயை நகரெங்குமிருந்த கொண்டாட்டத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களிவெறிகொண்டு கட்டுகளை மீறுவதற்காக அத்தனை நகரங்களும் காத்திருக்கின்றன. ஆடைகளைக் களையும்போது சிரிப்பில் மலராத மானுட முகம் இல்லை. பெண்கள் சிலர் சிரித்தபடி சாலைக்குக் குறுக்காக ஓட அவர்களைத் துரத்திவந்த இளையோர் அப்பால் தயங்கி நின்று தேர் செல்ல வழிவிட்டனர். குடிகாரர்கள் சாலையோரமாகவே அமர்ந்திருந்தனர். கூச்சலிட்டு எம்பி எம்பிக் குதித்தபடி புரவியில் அமர்ந்த வீரன் ஒருவன் கடந்துசென்றான்.


அத்தனை மாளிகைகளும் தோரணங்களாலும் கொடிகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன. சாலையில் ஒன்றின் நிழல் இன்னொன்றின்மேல் விழும்படியாக அணித்தோரணவாயில்கள் நின்றிருந்தன. ஏழு யானைகள் மணிகளும் சங்கிலிகளும் ஒலிக்க  அலைநாவாய்கள் என உடலை ஊசலாட்டியபடி எதிரே வந்தன. அவற்றின் மேலிருந்த பாகர் கள்ளருந்தியிருந்தனர். கைகளை வீசி உரக்க கூவிக்கொண்டே வந்து சுக்ரரின் கொடிபறந்த தேரைக் கண்டதும் அமைதியானார்கள். ஆனால் சூழ நின்றிருந்த குடிகாரர்கள் அதை உணராமல் கூச்சலிட்டு தங்கள் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் எடுத்து அவர்கள்மேல் வீசி துள்ளிக்குதித்தனர்.


அரண்மனைக்கோட்டைக்குள் அவர்கள் நுழைந்ததுமே அறிவிப்பு முரசு ஒலித்தது. அரண்மனைப் பெருமுற்றத்தில் அவர்களை சம்விரதரின் துணையமைச்சரான பிரகாசர் வரவேற்றார். “நான் உடனே அரசரை பார்க்கவேண்டும்” என்றார் கிருதர். “அரசர் இப்போது தேவியருடன் இருக்கிறார். கலிங்கத்திலிருந்தும் திருவிடத்திலிருந்தும் அணிவணிகர்கள் வந்துள்ளனர். மணச்சடங்குக்காக அணிகள் தேர்கையில் அரசரும் உடனிருந்தாகவேண்டும் என்று அரசியர் விழைந்தனர். அதன்பின் மூதன்னையரை வழிபடும் அகத்தளப் பூசெய்கை உள்ளது. அரசமுறைத் தூதர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இருந்தது. அதை நாளை காலைக்கு ஒத்திவைத்துவிட்டு அகத்தளத்திற்குச் சென்றிருக்கிறார்.”


“நான் ஆசிரியரிடமிருந்து செய்தியுடன் வந்துள்ளேன்” என்றார் கிருதர். பிரகாசர் திரும்பி அரைக்கணம் சாயையை நோக்கிவிட்டு “நன்று! நான் ஆவன செய்கிறேன், தாங்கள் இன்னீர் அருந்தி சற்று இளைப்பாறுகையில்…” என்றார். “தேவையில்லை, நாங்கள் கூடத்தில் காத்திருக்கிறோம்” என்றார் கிருதர். “நன்று” என தலைவணங்கி பிரகாசர் திரும்ப “சம்விரதர் வந்துவிட்டாரா?” என்றார் கிருதர். “ஆம், வந்து சற்றுநேரமே ஆகிறது. இன்று மாலை அவை கூடுகிறது.” கிருதர் தலையசைத்தார். பிரகாசர் பதற்றம்கொள்வது நன்றாகவே தெரிந்தது. ஓசையின்றி தலைவணங்கி அவர் உள்ளே சென்றார்.


கிருதர் அமராமல் அரசக்கூடத்தில் கைகட்டி நின்றுகொண்டே இருந்தார்.  சுவரில் சாய்ந்து நின்று சாளரம் வழியாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள் சாயை. மலர்க்கிளைகள் மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. மானுடரின் துயரும் அல்லலும் சற்றும் தனக்கு பொருட்டல்ல என இயற்கை காட்டிக்கொண்டே இருப்பதில் உள்ள இரக்கமின்மையை அவள் எண்ணிக்கொண்டாள். முன்பு அவள் அன்னை இறந்த அன்று அப்படித்தான் அவை காற்றில் களியாடுவதை வெறித்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.


பிரகாசர் வந்து அரசர் அவர்களை அகத்தளத்தின் அறையிலேயே சந்திக்கவிருப்பதாக சொன்னார். அவருடன் நடக்கையில் அவர் அனைத்தையும் உணர்ந்துகொண்டுவிட்டதாக தோன்றியது. செய்தியை அல்ல, செய்தியால் விளையப்போவதை அவருடைய ஆழம் உணர்ந்துகொண்டுவிட்டிருக்கக் கூடும். அவர்களின் பாவைகள் மெழுகிட்ட தூண்களின் வளைவில் மரத்தரையில் தோன்றி உருகி நெளிந்து நீண்டு மறைந்து மீண்டும் ஓர் இடத்தில் எழுந்தன. கட்டிப்போடப்பட்ட பறவைகள்போல காற்றில் திரைச்சீலைகள் படபடத்தன.


அகத்தறைக் கதவைத் திறந்து உள்ளே செல்லும்படி கைகாட்டிவிட்டு பிரகாசர் தலைவணங்கினார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கதவு மெல்ல மூடிக்கொண்டது. விருஷபர்வன் முகத்தில் கவலை தெரிவதை சாயை உணர்ந்தாள். அவன் முறைப்படி முகமன் சொல்லி கிருதரை வரவேற்றான். சாயை அவனை வணங்கி ஓரமாக நின்றாள். கிருதர் அவன் அளித்த பீடத்தில் அமர்ந்து அவன் அமர்வதற்கு காத்திருந்தார். அவன் அமர்ந்து ஆடையை சீரமைத்ததைக் கண்டபின் உரத்த குரலில் “அரசே, மூவுலகிலும் நிகரற்ற தவவல்லமை கொண்டவரும் மும்மூர்த்திகளுக்கு நிகரானவருமான  என் ஆசிரியர் சுக்ரரின் ஆணையுடன் வந்துள்ளேன். அவ்வாணைகள் இதோ, இந்த ஓலையில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.


ஓலையை பெறும்போது விருஷபர்வனின் கைகள் நடுங்குகின்றனவா என சாயை நோக்கினாள். அவை உறுதியாகவே இருந்தன. ஓலையை வாசிக்கையில் அவன் முகம் கல்லென இறுகியிருந்தது. கண்களில் மட்டும் மெல்லிய சுருக்கம் ஒன்று வந்து உடனே மறைந்தது. மீண்டும் ஒருமுறை அதை வாசித்துவிட்டு மூங்கில் குழலில் இட்டு அருகிருந்த பீடத்தில் போட்டான். “நிகழ்ந்ததை இவள் சொல்வாள்” என்றார் கிருதர். சாயை கைகளைக் கூப்பியபடி நிகழ்ந்தவற்றை சொன்னாள். சொல்லும்போதே தான் தேவயானியின் தரப்பை சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பிறிதொன்றைச் சொல்ல தன்னால் இயலாதென்று அறிந்தாள்.


விருஷபர்வன் முகவாயைத் தடவியபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தான். “உமக்கு பிறிதொரு வழி இல்லை, அசுரப்பேரரசே. ஒன்று அசுரகுலம் முற்றழியவேண்டும், இல்லையேல் ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றவேண்டும். ஆசிரியரும் சரி அவர் மகளும் சரி கொண்ட நிலைபாட்டை எவ்வகையிலும் மாற்றுபவர்கள் அல்ல என அறிந்திருப்பீர்” என்றார் கிருதர். “நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் சொல்வீர்கள், முனிவரே?” என்றான் விருஷபர்வன். “நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும். வாழ்க்கையில் அத்தகைய அரியதெரிவுகளை ஒருமுறையேனும் நாம் சந்தித்தாகவேண்டும்” என்றார் கிருதர்.


“நான் ஒப்புகிறேன், ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்றான் விருஷபர்வன். கிருதர் அவனை வெறுமனே நோக்கினார். அவன் விழிகளில் தெரிந்த துயருக்கு நிகரான ஒன்றை அதற்குமுன் கண்டதே இல்லை என்று சாயை எண்ணிக்கொண்டாள். “இப்படி ஏதேனும் நிகழுமென்றே எதிர்பார்த்திருந்தேன். பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன், திரும்ப அளிக்கவேண்டியிருக்கும். திரும்ப அளிக்கவேண்டாத எதையும் நாம் பெறுவதில்லை.” ஆனால் அவன் முகத்தில் துயர் இருக்கவில்லை, ஆழ்ந்த அமைதிதான் தெரிந்தது. அவள் மீண்டும் அவன் விழிகளை நோக்கினாள். அங்கே தெரிந்த துயர் அவளை நடுக்குறச் செய்தது.


“இவ்வகையில் இது முடியாது என்று என் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. நான் எளியவன், என்னைவிட பேராற்றலும் தவவல்லமையும் கொண்ட அசுரமூதாதையர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடையாத முழுவெற்றி எப்படி எனக்கு கைகூடும்? ஏதோ ஒன்று எழுந்து வரவிருக்கிறது என்று எண்ணிக் காத்திருந்தேன். ஆசிரியரிடமிருந்து வருமென எதிர்பார்க்கவில்லை.” அவன் சற்று புன்னகைத்து “ஆனால்  அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவது. தன் அன்புக்காக, நெறிநிலைக்காக, பெருந்தன்மைக்காக, கொடைக்காக, அருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறது. நம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறது. இம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்.  இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும், வேறொரு வகையில் நிகழமுடியாது. அதற்கு வரலாறே இல்லை” என்றான். எழுந்துகொண்டு “நான் ஆசிரியரின் கால்களை என் நெற்றிதொடும்படி பணிந்தேன் என்று மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றான்.


கிருதர் எழுந்து “உமது சொற்களின் அனைத்து உட்பொருட்களையும் உணர்ந்தேன். ஆனால் ஆசிரியர் இன்று ஒரு சொல் சொன்னார், எண்ணியிராதன நிகழும் என்று. அவர் உம்மேல் கொண்ட அன்பு அச்சொற்களுக்கு அடியில் உறைகிறது என இப்போது உணர்கிறேன். தாங்கள் எண்ணியே இராத நன்னயம் உங்கள் கொடிவழிகளுக்கு நிகழும். தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார். விருஷபர்வன் தலைவணங்கி கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:30

April 8, 2017

தற்செயல்பெருக்கின் நெறி

nithyachaithanyayathi.jpg.image.784.410


 



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


நலம் தானே…மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி…


மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்… வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.. நடுவில் எதிர்பாராமல் விடுபட்டு போய் விட்டது மீண்டும் துவங்க வேண்டும்.


சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை உடனே உங்களிடம் சொல்லவேண்டும் எனத் தோன்றியது. அதான் கடிதம்.


நான் கடந்த ஒன்றரை மாதமாக திண்டுக்கல் வந்திருக்கிறேன் பணி மாறி. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய மெஸ்ஸில் தான் மதிய உணவு. (பட்ஜெட் சிக்கல்கள்!!). ஒரு வாரம் முன்பு மதியம் உணவருந்தி விட்டு பணம் கட்ட கல்லா அருகே சென்றேன். கல்லாவில் ஆள் இல்லாததால் அருகே பார்சல் மடிக்க கிடந்த பழைய பேப்பர்களை சற்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.


அதில் ஒரு பேப்பரை கையில் எடுத்து பார்த்தேன். மூன்று வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன். முன்பக்கம் ஒரு விளம்பரம் இருந்தது. பின்பக்கத்தில் விகடன் மேடை பகுதியில் “அ. முத்துலிங்கம்” அவர்களின் கேள்வி பதில். என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாய் அதில் அப்போது நான் கேட்டிருந்த என் கேள்வியும் இருந்தது.


என் பெயரை என் படைப்பை (கேள்வியெல்லாம் படைப்பில் சேருமா எனத் தெரியவில்லை மன்னிக்கவும்) பார்த்ததும் எனக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை. சோர்வினையும் அயர்ச்சியினையும் மட்டுமே பார்த்து பார்த்து சலித்துப் போகவே நிறைய வாய்ப்புகள் இருக்கும் இந்த நடுத்தர பொருளாதார வாழ்வில் மிகத் துல்லியமாக ஒரு மேஜிக்கல் மொமெண்ட்.


அந்தக் கேள்வி இதுதான்.


“நெருக்கடிகள் தான் கலைகளை தீர்மானிக்கும் என்றால் நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாமென்கிறாரே சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங்கள் நெருக்கடிகள் தான் கலையை தீர்மானிக்கிறதா?”


சுந்தர ராமசாமி அவர்கள் இதனை சொன்னதாக எப்போதோ உங்கள் தளத்தில் படித்ததாக தான் ஞாபகம். இந்தக் கேள்வியினை 2013 டிசம்பர் போல எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். அந்தக் கேள்வியினை எத்துணையோ கேள்விகளுக்கு மத்தியில் போஸ்ட் கார்டில் எழுதும் போது நான் நினைத்தும் பார்க்கவில்லை இன்னும் மூன்று வருடங்களுக்கு பிறகு புதிதாய் போகும் திண்டுக்கல் ஊரில் ஒரு மிகச் சிறிய மெஸ்ஸில் இதே கேள்வி பழைய காகிதத்தில் என்னிடம் வந்து சேரும் என…


இன்னும் ஆச்சர்யமாக 2013 டிசம்பரில் நான் திருச்சியில் இருந்தேன்…அதன் பிறகு 2014 செப்டம்பர் போல மதுரை மாறி வந்து 2016 பிப்ரவரி யில் புதிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்து திண்டுக்கல் வந்திருக்கிறேன்.


உண்மையிலேயே வாழ்வு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டது தானா. இல்லை தற்செயல் நிகழ்வு ஒன்றை நான் மிகைப்படுத்துகிறேனா. ஏன் எனில் ஒரு ஐந்து நிமிடம் முன்னே பின்னே சென்றிருந்தாலும் இந்த கடிதத்துக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும் அதான் கேட்கிறேன் உங்களிடம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் அளித்தால் மகிழ்வேன்.


அன்புடன்


ரா.பிரசன்னா


 


அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்


 


அன்புள்ள பிரசன்னா,


இப்படி பல நிகழ்ச்சிகளால் ஆன ஒரு தொகுப்பாக என் வாழ்க்கையைச் சொல்லிவிடமுடியும். மிக இளம் வயதில் இலாரியா என்ற சிறுகதையை வாசித்துவிட்டு நான் அவ்வாசிரியரைப்பற்றி அவ்விதழுக்கு ஒரு கடிதம் எழுதினேன் – குமுதம் என நினைக்கிறேன். பின்னர்தான் அவர் அசோகமித்திரன் என்றே தெரிந்தது.


இளமையில் நிலையழிந்து அலைந்துகொண்டிருந்த நாட்களில் ரயிலில் நான் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறி ஒருவர் அமர்ந்தார். காவி ஜிப்பாவும் பாண்டும் அணிந்த நீண்ட நரைத்த தாடிகொண்ட நாடோடி மனிதர். அவரிடம் ஒரு சுண்டல்பொட்டலம் இருந்தது. அதைத் தின்றுவிட்டு தாளை நீவி வாசித்தார். சிலமாதம் முன்பு ஓர் இதழில் நான் வேறு ஒரு பெயரில் ஹம்பி பற்றி எழுதிய தொடர்கட்டுரை ஒன்றின் பகுதி அதில் இருந்தது. “கொஞ்சமாத்தான் எழுதியிருக்கான். ஆனா மெட்டஃபிஸிக்கலா இருக்கு” என்றார். அந்தத்தாளை எடுத்துப்பார்த்தபோதுதான் அவர் சொன்னது புரிந்து மெய்ப்பு கொண்டேன். எனக்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்த தருணம் அது. நான் எழுதியது அது என அவரிடம் சொல்லவில்லை.


நெடுங்காலம் கழித்து காசியிலிருந்து டெராடூன் செல்லும் ரயிலில் என் முன் வந்து அமர்ந்தார். நான் அப்போது காவி அணிந்திருந்தேன். என்னை அவருக்குத் தெரியவில்லை. எங்கே செல்கிறாய் என்றார். அலைகிறேன் என்றேன். “India, a land of million ways and thousand million lights” என்றார். உடனே படுத்துத் தூங்கிவிட்டார். அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


நித்ய சைதன்ய யதி இரண்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் நாளிதழில் வந்தது. அதை வெட்டி எடுத்து ஓர் இடத்தில் ஒட்டிவைத்திருந்தார். அதை மறந்தும்விட்டார். பின்னர் நடராஜ குருவின் மாணவராக ஆனார். ஒருமுறை வீட்டுக்குச் சென்றபோது தற்செயலாக அந்தப் படத்தைப் பார்த்தார். அது நடராஜகுரு சார்போன் பல்கலையில் பட்டம் பெற்ற செய்தியுடன் வெளிவந்த படம். அந்த படம் குருவின் அறையில் கடைசிவரை சுவரில் தொங்கியிருந்தது.


சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தபோது நான் சொன்னேன் “சார் நடுநிசிநாய்கள்னு ஒரு கவிதைத்தலைப்பு. பாத்ததுமே ஊளை காதிலே கேட்டது. தலைப்புவச்சா அப்டி வைக்கணும்” அவர் உதடுகள் விரிய புன்னகைத்தார்.


sura


அ முத்துலிங்கம் பற்றியே ஒரு சுவாரசியமான தற்செயல் உண்டு. என் நண்பரான ஆர்.டி.குலசிங்கம் எனக்கு ஈழ எழுத்தாளர்களின் நூல்களை தொகுத்து அளித்திருந்தார். அதில் அக்கா என்னும் தொகுப்பு இருந்தது. அதைப்பாராட்டி நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ஆனால் அதை எழுதிய அ.முத்துலிங்கம் எழுத்தை நிறுத்திவிட்டு ஆப்ரிக்காவில் பல்வேறு உயர்பதவிகளில் இருந்தார். பின்னர் ஓய்வுபெற்று மீண்டும் எழுதத் தொடங்கினார். அவர் மீண்டும் எழுதிய முதற்கதை, ஆப்கானியப் பின்னணி கொண்டது, இந்தியா டுடேயில் வெளிவந்தது. நான் அவருக்கு அக்கதையைப் பாராட்டி மறுமொழி இட்டிருந்தேன். அவர் கென்யாவிலிருந்து அதற்கு பதில் எழுதியிருந்தார். அப்போதுதான் அக்கா தொகுதியை எழுதியவர் அவரே என அறிந்தேன்.


ஆகவே, இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்லமுடியுமா? அதுவும் ஐயமே. தற்செயல் பெருக்காகவே வாழ்க்கை இருக்கிறது. மனிதனின் இறப்புதான் அதுவரை அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுக்கோப்பை அளிக்கிறது என்று காம்யூ ஓரிடத்தில் சொல்கிறார். இந்த விவாதத்தை தொடங்கியவர்கள் மனிதசிந்தனையின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்கள். இன்னும் முடியவில்லை. நாம் வேடிக்கை பார்க்கவே முடியும்- நம் வாழ்க்கையை வைத்து.


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2017 11:37

பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்

 


bharathi


பிரிய ஜெ,


சுகமா?


தற்போது கவிமணியின் கவிதைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். எளிமையும் ஒசைநயமும் கொண்டவையாக அவருடைய பல கவிதைகள் உள்ளன. எனினும், பாரதியார் அடைந்த உயரத்தை அவர் ஏன் எட்ட இயலவில்லை எனும் கேள்வி எழுகிறது.


தன் காலத்தின் உணர்வுகளை பாரதி அதிகம் பிரதிபலித்ததாலா? கற்பனையின் சிறகுகள் கவிமணியை நெடுந்தூரம் இட்டுச்சென்று விட்டதாலா? இருவரையும்  ஒப்பீடு செய்வதாக இல்லாமல், பொதுரசனையில் அவர்களின் படைப்புகள் எழுப்பிய வித்தியாசத்தை உணரவேண்டி உங்களிடம் கேட்கிறேன் .


சகோதரி அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பு.


மோகன்ஜி


***


kavimani


அன்புள்ள மோகன்ஜி,


இந்த ஒப்பீடே பிழையானது என்பது என் எண்ணம். பாரதி கவிஞர். கவிமணி, பாரதிதாசன் போன்றவர்கள் வெறும் செய்யுள்காரர்கள். சில நல்ல வரிகள் அமைந்திருக்கலாம். ஆனால் கவிநிலையில் அவர்கள் இருந்ததில்லை, வெளிப்பட்டதில்லை.


வேண்டுமென்றால் இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். கவிதையை ஆக்குவது இரண்டு அடிப்படைகள். ஒன்று, சொல்புதிது பொருள்புதிது என எழும் புதுமைக்கான நாட்டம். [புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஒப்பிப்பதைச் சொல்லவில்லை] தன்னளவிலேயே மொழியில் புதிதாக பூப்பது அது. அதுவே பாரதியை உருவாக்கிய முதன்மை எழுச்சி. அந்த புதுமைநாட்டமே இலக்கியப் படைப்புக்கு இன்றியமையாததான ‘பிறிதொன்றிலாத தன்மையை’ அளிக்கிறது.


இரண்டாவது பித்து. தர்க்க மனத்தைக் கடக்கும் கனவுநிலை, புறவுலக ஒழுங்கை கலைத்து அடுக்கும் ஆழ்மனநிலை. அது வெளிப்படும்போதே அது கவிஞனின் சொல் ஆகிறது. ‘பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’ என்பது அந்த வெறும் பித்தினாலேயே கவிதை.


கவிமணியின் கவிதையின் குறைபாடுகள் அல்லது எல்லைகள் எவை? சுருக்கமாக:


அ. அவை மாறாத செய்யுள் தன்மை கொண்டவை. எளியவை, நேரடியானவை. அவருடைய மொழி புறவயமானது. ஒரேவகையானது.


ஆ. அவை அவருடைய தனிப்பட்ட அக எழுச்சியை ஆன்மிகத் தேடலை வெளிப்படுத்துவன அல்ல. அவற்றின் கருத்துக்களும் உணர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் பொதுவாகப் புழங்கியவை.


இ. அவருடைய படிமங்கள் மிகச்சம்பிரதாயமானவை. அவருடைய கனவிலிருந்து எழுந்தவை அல்ல.


கவிமணியின் கொடை அவருடைய கல்வெட்டு ஆராய்ச்சிகள்தான். அதில் ஒரு முறைமையை அவர்தான் இங்கே அறிமுகம் செய்தார். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஒப்புநோக்க மேலும் படைப்பூக்கம் கொண்ட ஆக்கம்.


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2017 11:33

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68

68. நச்சுப்பல்


தன் குடிலுக்குச் சென்றதும் தேவயானி சர்மிஷ்டையிடம்  “ஏன் முகத்தை வாழைக்கூம்புபோல வைத்துக்கொண்டிருக்கிறாய்? இப்போது என்ன ஆயிற்று?” என்றாள். “ஒன்றுமில்லை, எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “என்ன அச்சம்? இன்றுவரை நீ இளவரசி, இதே இடம்தான் அரசிக்கும். எவரோ சொல்வதைக் கேட்டு ஏன் அஞ்சுகிறாய்?” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இல்லை…” என சொல்லவந்து அப்படியே விழிகரைந்து விசும்பலானாள். “என்னடி இது…? அறிவிலிபோல…” என்றாள் தேவயானி.


சாயை “நாம் நீராடச் செல்வோம்…” என்றாள். “நீந்தினால் இளவரசி மீண்டுவிடுவார்கள்.” சர்மிஷ்டை “இல்லை, நான் அந்த உளநிலையில் இல்லை” என்றாள். “முதலில் வந்து நீந்துங்கள். உளநிலை அதுவே அமையும்” என சாயை அவள் கையை பிடித்தாள். “இந்த ஆடைகளுடனா?” என்றாள் சர்மிஷ்டை. “உன் சேடியும் வரட்டும். அவள் ஆடைக்கு காவலிருப்பாள். விருஷபர்வனின் அரசில் அரசுப்பொருளை எவர் திருடமுடியும்?” என்றாள் தேவயானி.


தயங்கியபடி சர்மிஷ்டை கிளம்பினாள். “இங்கே நீராடினால் அத்தனைபேரும் பார்ப்பார்கள். நான் சில நாட்களாகவே வெறிக்கும் விழிகள் முன்னால் வாழ்கிறேன்” என்றாள். “அஞ்சாதே. நாம் புதிய ஓரிடத்திற்கு செல்லலாம். பிரதமை ஒரு சிற்றருவியாக கொட்டுகிறது, பார்த்திருக்கிறாயா?” என்றாள் தேவயானி. “இந்த ஆறா? கேள்விப்பட்டதே இல்லையே!” என்றாள் சர்மிஷ்டை. “இங்கிருந்து சற்று அப்பால். நாம் புரவிகளில்கூட செல்லலாம். அங்கே முன்னொரு காலத்தில் வித்யாதர முனிவரின் தவக்குடில் இருந்திருக்கிறது. இன்று காடாகிவிட்டது. ஆனால் அவர்கள் நட்ட மலர்மரங்கள் பெருகி மலர்க்காடாக மாறி நின்றிருக்கின்றன. காடு அலையிளகி வண்ண நுரை எழுந்ததுபோலிருக்கும்” என்றாள் தேவயானி.


அவள் நீராடக் கிளம்பியதைக் கேட்டதும் அணுக்கச்சேடி “வேண்டாம் இளவரசி, இது நன்றல்ல என என் உணர்வு சொல்கிறது” என்றாள். “விரைவில் மீண்டுவந்துவிடுவோமடி. புரவிகளிலேயே செல்லலாம் என்கிறார்கள். எனக்கும் இவ்வுள மாறுதல் தேவையாக உள்ளது” என்றாள் சர்மிஷ்டை. சேடி “நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன், இளவரசி” என்றாள். “நீ உடன் வந்தால் போதும். ஆடையணிகளை நோக்கிக்கொள்” என்றாள் சர்மிஷ்டை. சாயை சென்று நான்கு புரவிகளை ஓட்டிவந்தாள். “இங்கே  அரசகாவலருக்குரிய இரு புரவிகளே இருந்தன. இருபுரவிகள் உங்கள் தேரில் கட்டப்பட்டிருந்தவை. மானுடர் ஏறினால் தாங்கும் முதுகுகள் உள்ளவை என நினைக்கிறேன்” என்றாள்.


“நாம் நெடுந்தொலைவு செல்லப்போவதில்லை அல்லவா?” என்றாள் சர்மிஷ்டை. “அருகேதான்… நான்கு நாழிகை தொலைவு” என்ற தேவயானி “ஏற்றம்கூட இல்லை. காட்டுவழியானாலும் நிகரமைந்த மண்” என்றாள். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். சர்மிஷ்டை “காட்டுக்குள் புரவியில் செல்வது ஒரு அரிய விளையாட்டு. வரும் கிளைகளை எல்லாம் முன்னரே உய்த்துணர்ந்து தலைகுனியவேண்டும். சிறுமியாக இருக்கையில் நான் எந்தையுடன் சென்று ஆடியதுண்டு…” என்றாள். தேவயானி “கிளைகளுக்கு தலைகுனியாமலேயே செல்லலாம். அது மேலும் நுண்ணிய விளையாட்டு… பார்!” என்றபடி புரவியை தட்டினாள்.


எதிர்வந்த கிளைகளுக்கெல்லாம் தலைதிருப்பியும் புரவியை ஒதுக்கியும் சாரைப்பாம்பென நெளிந்து விரைந்து சென்றாள் தேவயானி. கிளைகளுக்கு குனிந்தும் சில தருணங்களில் புரவிக்கழுத்துடன் முகத்தை பதியச்செய்தும் அவளைத் தொடர்ந்து சர்மிஷ்டை சென்றாள். மிக விரைவிலேயே அவள் உளநிலை மாறியது. கூச்சலிட்டு நகைத்தபடி “வளைவது ஆணவக்குறைவாக இருக்கலாம், ஆனால் பயணத்தை எளிதாக்குகிறது, மூத்தவளே. நீங்கள் புரவிமேல் அமர்ந்து நடனமிடுகிறீர்கள்” என்றாள். சாயை பின்னால் வந்தபடி “அது நடனமல்ல, போர். போரில் வளைவதென்பது தோற்பதே” என்றாள்.


தொலைவிலேயே அருவியின் ஓசை கேட்கத்தொடங்கியது. “பெரிய அருவியா?” என்று அவள் கேட்டாள். “நின்று நீராடலாம்… அதற்குமேல் அது எத்தனை பெரிதாக இருந்தாலும் என்ன?” என்றாள் சாயை. மலர்க்காட்டின் வண்ணங்கள் மரங்களுக்கு அப்பால் தெரிந்தன. அங்கே மாபெரும் ஓவியப்பட்டுத்திரை ஒன்று தொங்குவதுபோல என அவள் எண்ணினாள். கொன்றையின் பொன், வேங்கையின் அனல், செண்பகத்தின் நீலம். கலவையான மணம் வந்து மூக்கை சீண்டியது. அவள் முகம் சுளித்து தும்மலிட ஐயம்கொண்டு புரவி நின்றது. அவள் அதை தட்டி முன் செலுத்தினாள்.


வித்யாதர முனிவரின் குடிலிருந்த பகுதி முழுமையாகவே மலர்க்காடாக மாறிவிட்டிருந்தது. “இங்கே அவர்கள் பெய்த ஞானமே மலர்களாக செறிந்துள்ளது என்கிறார்கள். அவருடைய சிறிய ஆலயம் ஒன்று நடுவே அரசமரத்தின் அடியில் அமைந்துள்ளது. சித்திரை முழுநிலவன்று அவருடைய மாணவநெறியினர் இங்கே வந்து வணங்கி அருள்கொண்டு செல்வதுண்டு” என்றாள் சாயை. தேவயானி “மரங்களை ஒழித்து அவர்கள் அமைத்த வெட்டவெளியை எளிதில் வளரும் மலர்மரங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. வண்டொலியை அசுரவேதத்தின் முதலோசை என்பது மரபு. ஆகவே இதை வேதவனம் என்றும் அழைக்கிறார்கள்” என்றாள்.


மலர்க்கிளைகள் காற்றில் உலைய வண்ணம் அலையடித்தது. காற்றில் வண்டுகளும் தேன்சிட்டுகளும் எழுந்து அமைந்து பிறிதொரு அலையாயின. “வா, அருவிக்குச் செல்ல பாறைகளால் ஆன பாதையொன்றை முனிவரின் மாணவர்கள் முன்பு அமைத்திருக்கிறார்கள்” என்றாள் தேவயானி. “இந்த இடத்தை எப்படி அறிந்தீர்கள்?” என்றாள் சர்மிஷ்டை. “நம் குருநிலையில் வித்யாதர மரபின் மாணவன் ஒருவன் வந்துசேர்ந்திருக்கிறான். அவனிடமிருந்து அறிந்தேன்…” என்றாள் தேவயானி. “நானும் இவளும் மட்டும் இங்கே வந்து நீராடினோம். மலராடை அணிந்து விளையாடினோம். அப்போதே உன்னையும் இங்கே அழைத்துவர எண்ணினோம்.”


மலர்களை நோக்க நோக்க சர்மிஷ்டையின் உள்ளம் விம்மியது. உவகை என்பது ஒரு கொந்தளிப்பாக ததும்பலாக நிலையழிவாக மட்டுமே ஏன் இருக்கிறது? அது அமைதியாக நிலைகொள்ளலாக ஏன் ஆகக்கூடாது? இன்பமென்பது அலை, துன்பமென்பதும் அலையே என சுக்ரர் சொன்ன வரி நினைவிலெழுந்தது. எந்த வகுப்பில்? நானும் அரிய நூலுரைகளை நினைவில்கொள்ளத் தொடங்கிவிட்டேன்! நானும் அரசியாகிவிட்டேன். “புன்னகைக்கிறார்… இங்கு வந்தது வீணாகவில்லை” என்றாள் சாயை. “நீராடுவோம்” என்றாள் தேவயானி.


சர்மிஷ்டை ஆடை களையத்தொடங்கியபோது தேவயானி “இங்கே முற்றிலும் ஆடை களையவேண்டும் என்பது நெறி” என்றாள். “எவர் நெறி?” என்று சர்மிஷ்டை அச்சத்துடன் கேட்க “இந்த மலர்க்காட்டை ஆளும் கந்தர்வர்களின் ஆணை” என்றாள் சாயை. “அய்யோ!” என்றாள் சர்மிஷ்டை. “விளையாடாதே! ஏற்கெனவே அஞ்சிக்கொண்டிருக்கிறாள்” என்ற தேவயானி “இங்கே எவரும் வருவதில்லை. இக்காட்டுக்கு அப்பால் அடர்காடு எழுந்து கடக்கமுடியா மலையென்றாகிறது. ஆகவே முழு விடுதலையை நம் உடலுக்கு அளிக்க இதைவிட உகந்த இடம் வேறில்லை” என்றாள். “ஏன்?” என்று அவள் மிரண்ட விழிகளுடன் கேட்க “இரு சிறுகுழவிகள் அவை, இளவரசி. அவற்றை நாம் எப்போதும் கட்டி சிறையிட்டிருக்கிறோம்” என்றாள் சாயை. “யார் சிறையிட்டது?” என சர்மிஷ்டை புரியாமல் கேட்க “வாடி!” என அவள் கையை பற்றினாள் தேவயானி.


தேவயானி தயக்கமே இல்லாமல் விரைவாக தன் ஆடையை களைந்தாள்.  உடன் சாயையும் ஆடையைக் களைந்து வெற்றுடலுடன் இளங்குதிரைகள் போல இறுகிய தொடைச்சதைகள் அசைய குருத்தொளி கொண்ட முலைகள் துள்ள அருவியை நோக்கி ஓடினாள். அணுக்கச்சேடி தயங்கி நிற்க தேவயானி “வாடி” என அதட்டினாள். சர்மிஷ்டை அந்த நீர்ப்படலத்திற்குள் சென்று நிற்பது ஓர் ஆடையை சூடுவதுபோல என உணர்ந்தாள். சேடியின் விழிகளை தவிர்த்தபடி ஆடையைக் களைந்து வெற்றுடலை தன் கைகளால் மூடிக்கொண்டு தோள்குறுக்கி நடந்து அருவியை நோக்கி சென்றாள்.


சாயை நீரை அள்ளி அவள் மேல் தெறிக்க சிலிர்த்துச் சிரித்தபடி பாய்ந்தோடி நீருக்குள் புகுந்துகொண்டாள். குளிர்ந்த நீர் அவளை அக்கணமே முழுமையாக ஆட்கொண்டது. நீரோசை எண்ணங்களையும் மூடியது. குறுக்கிய உடலை மெல்ல விடுவித்து கைகளை விரித்தபடி சுழன்றாள். கூச்சலிட்டபடி துள்ளிக்குதித்தாள். மூச்சுக்காக வெளிவந்தபோது முன்காலையின் ஒளியில் நீர்வழியும் முலைகளுடன் சாயையும் தேவயானியும் நிற்பதை கண்டாள். “விடுதலை ஆகிவிட்டாள்” என்று தேவயானி சொன்னபோது பற்கள் வெண்ணிறமாக மின்னின.


“நீருக்கு கன்னியைத் தழுவும் உரிமை உண்டு என்கின்றன நூல்கள்” என்றாள் சாயை. எதிர்பாராதபடி தேவயானி சர்மிஷ்டையை நீருக்குள் தள்ளிவிட்டாள். மூச்சுத் திணறி அவள் கூச்சலிட்டு திமிறி விலகி தேவயானியின் கையைப்பற்றி உள்ளே இழுத்தாள். ஓடிவந்து சேர்ந்த சாயை அவர்கள் இருவரையும் பிடித்து மேலும் விசையுடன் நீர்பொழிந்த இடம் நோக்கி தள்ளினாள். மூவரும் கைகள் பிணைத்தபடி ஒருவரை ஒருவர் உந்தினர். கூவிச்சிரித்து துள்ளிக்குதித்தனர்.


அருவியில் அதற்கு முன்னரும் சர்மிஷ்டை ஆடியதுண்டு. சேடியரும் செவிலியரும் துணைவர, ஆடைகளும் அணிகளுமாக. அருவிக்குக் கீழே ஆடையின்றி நிற்பதில் மட்டுமே முழுமையுள்ளது என அப்போது தோன்றியது. நீர்தழுவ உடல்நெகிழ்ந்து நின்றிருக்கும் பாறைகளுடன் ஒரு பாறையாக ஆகிவிடுவதுபோல. முழுமையாக ஒப்படைத்துவிடுவதன் விடுதலை அது என எண்ணிக்கொண்டாள். கைகளை விரித்து நீரின் அடிகளை பெற்றுக்கொண்டாள். குனிந்து அதன் எடையை தாங்கினாள். நீர் பெருகிவருவதுபோல் தோன்றியது. அலையலையாக எதையோ சொல்வதுபோல செவிமயக்கு ஏற்பட்டது.


வெளியே சென்று நின்ற சாயை “செல்வோம்!” என்றாள். “இன்னும் சற்றுநேரம்” என்றாள் சர்மிஷ்டை. “நீதான் செல்லவேண்டும் என்றாய்” என்றாள் சாயை. “இதோ” என மீண்டும் நீருக்குள் புகுந்தாள் சர்மிஷ்டை. சாயை கரைக்குச் சென்று மலர்க்காட்டுக்குள் நுழைந்தாள். நீருக்குள் இருந்து வெளிச்சென்று தலைமயிரை வழித்து பின்னால் கொண்டுசென்று சுருட்டி உதறினாள் தேவயானி. “கரையேறுகிறீர்களா?” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை, வர்த்தினி அங்கே மலராடை செய்கிறாள். அதை அணிந்துகொண்டு மலர்கள் நடுவே திளைப்பேன். உடலெங்கும் மலர்ப்பொடி பரவி மணம் தோலுக்குள் சென்றபின் மீண்டும் வந்து ஒருமுறை உடல்கழுவி மீண்டுசென்று ஆடையணிவேன். அதுதான் வழக்கம்” என்றாள்.


“கொன்றைமலர் மணமா?” என்றாள் சர்மிஷ்டை. “அங்கே பன்னிரண்டு வகையான மலர்கள் உள்ளன. அவையனைத்தும் கலந்தால் எழுவது மலர்மணம்… வானிலுள்ள மலரொன்றின் மணம் அது.” சர்மிஷ்டை கரைக்குச் சென்று அவளருகே நின்று உடலுக்குக் குறுக்கே கைகளைக் கோத்து நடுங்கியபடி “என்ன மணம்?” என்றாள். “கல்யாண சௌகந்திகம் என அதை சொல்கிறார்கள். அந்த மலரின் மணத்தை நான் காவியங்களில்தான் பயின்றேன். எண்ணும் மலரின் மணத்தை தான் எனக் காட்டுவது அது. இங்கு வந்து இந்த மலர்க்குவையில் ஆடிச்செல்லும்போது அதை நானும் உணர்ந்தேன்…”


சாயை அப்பால் வந்து நின்று கைகாட்டி அழைத்தாள். “மலராடையா?” என்றாள் சர்மிஷ்டை. “அது நம்மை மறைக்குமா?” தேவயானி சிரித்து “மறைக்காது, காட்டும்… வாடி” என்றபடி கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். அவள் நடையை நோக்கியபடி உடன்சென்ற சர்மிஷ்டை அறியாமல் நின்றுவிட்டாள். “என்னடி?” என்றாள் திரும்பிநோக்கிய தேவயானி. “யானையின் நடை… கஜராஜவிராஜிதமந்தகதி” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி புன்னகைத்து “நீயும் கவிதைக்குள் வந்துவிட்டாய், வா!” என நடந்தாள். “சாயை நடப்பது புலி போலிருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “அதன் பெயரென்ன?” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை மெல்லிய குரலில் “சார்த்தூல விக்ரீடிதம்” என்றாள். “நன்று!” என்றபடி தேவயானி முன்னால் சென்றாள்.


பின்னால் சென்றபடி சர்மிஷ்டை “என்னால் மட்டும் ஏன் அப்படி  நிமிர்ந்து நடக்கமுடியவில்லை? என் உடலை பற்றியிருப்பது எது?” என்றாள். தேவயானி “உடல் என்பது உள்ளிருப்பதன் வெளிப்பாடு. உன்னுள் உறைவது அவ்வாறு தன்னை காட்சியாக்கவே விழைகிறது” என்றாள். “நீ நடப்பதும் அழகுதான். அதை மயில்நடனம் என்கிறார்கள்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை பாறைமேல் மெல்ல காலெடுத்துவைத்து மலர்க்காட்டை அடைந்தாள்.


தேவயானி ஓடிச்சென்று சாயையிடமிருந்து மலராடை ஒன்றை வாங்கி இடையில் கட்டிக்கொண்டாள். சாயை “இதோ” என ஒரு மலராடையை சர்மிஷ்டையிடம் அளித்தாள். அதை வாங்கி அணியும்போது சர்மிஷ்டைக்கு சிரிப்பு வந்தது. “என்ன சிரிப்பு?” என்றாள் சாயை. “இதை ஆடை என்று எப்படி சொல்வது?” என்றாள். “இந்த ஆடையைக் கண்டு காற்று ஏமாந்துபோகும். இதை அதனால் மேலும் விலக்கமுடியாது” என்றாள் தேவயானி. “நாம் மலர்களுக்குள் புகுவதற்கு இதுவே வழி. அருவிக்குமுன் முழுமையாக நம்மை அளிப்பதுபோலத்தான் இதுவும்” என்றாள் சாயை.


மலராடைகளுடன் அவர்கள் மலர்க்காட்டுக்குள் நுழைந்தனர். தாழ்ந்த கிளைகள் மலர்செறிந்து ஆட தரையெங்கும் உதிர்ந்த மலர்கள் கம்பளமென பரவியிருக்க காற்றலைகளில் மலர்மழை பொழிந்துகொண்டெ இருக்க அது மலர்களால் ஆன அருவியென்றே தோன்றியது. அவள் கிளைகளை கைகளால் பற்றி ஒதுக்கி ஒதுக்கி நடந்தாள். எதிர்பாராதபடி அவளை தேவயானி பிடித்து தள்ள தடுமாறி பூஞ்சருகு மெத்தையில் விழுந்தாள். அவள்மேல் தேவயானியை சாயை பிடித்து தள்ளினாள். இருவரும் புரண்டு எழுந்தபோது உடலெங்கும் மகரந்தமும் தேனும் பரவியிருந்தன.


அதன்மேல் ஒட்டிய மலரிதழ்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் அவளை கால்தட்டி புரளவிட்டாள் சாயை. தேவயானியும் சர்மிஷ்டையும் சேர்ந்து அவளைப் பிடித்து இழுத்துவந்து பூஞ்சருகுமேல் உருட்டினர். கால்களைப்பற்றி இழுத்தனர். சாயை கூச்சலிட்டு நகைத்து சருகுகளை அள்ளி அவர்கள்மேல் வீசினாள். கால்பின்னி மல்லாந்து விழுந்த சர்மிஷ்டைமேல் உதிர்ந்த மலர்களை அள்ளி அள்ளிக் குவித்து எழாதபடி மேலும் மேலும் போட்டாள். சிரித்து மூச்சுத்திணறி எழுந்து அமர்ந்தபோதுதான் சர்மிஷ்டை ஆண்குரல் ஒன்றை கேட்டாள். “யார்?” என அவள் திகைப்புடன் கேட்க தேவயானியும் அதை கேட்டுவிட்டாள்.


தேவயானியும் சாயையும் “உடைகள் எங்கே? உடைகள்?” என்று கூவியபடி ஓடினர். அவர்களை நோக்கி சேடி ஓடிவர தேவயானி அவள் கையிலிருந்த ஆடையைப் பறித்து விரைந்து அணிந்து மேலாடையால் தன் உடலை மூடிக்கொண்டாள். எழுந்து செயலற்றவள்போல நின்ற சர்மிஷ்டை நிலையுணர்ந்து உடல்பதற ஓடிச்சென்றபோது சாயை தன் ஆடையை அணிந்தபின் எஞ்சியிருந்த தேவயானியின் ஆடையை எடுத்து அவளை நோக்கி வீசினாள். குனிந்து அந்த ஆடையை கையில் எடுத்தபின் திரும்பி தேவயானியை நோக்கிய சர்மிஷ்டை தன்னுள் முற்றிலும் அறியாத ஒன்று பொங்கி எழுவதை உணர்ந்தாள்.


தேவயானியின் ஆடையைச் சுருட்டி அப்பால் வீசிவிட்டு வெறியுடன் பாய்ந்துசென்று தேவயானி அணிந்திருந்த தன் ஆடையைப் பற்றி “கழற்றுடி என் ஆடையை…” என்று கூச்சலிட்டாள். அவள் முகம் சுருங்கி பற்கள் சீறித்தெரிந்தன. “என்னடி இது…? இரு” என்று தேவயானி பதற “என் ஆடையைக் கழற்று… என் ஆடையைக் கழற்று….” என்று  சர்மிஷ்டை பூனைபோன்ற குரலில் கூவினாள். “உன் ஆடைதான்… இரு. அதை இப்போதைக்கு அணிந்துகொள். அக்குரல் எவர் என பார்ப்போம்” என்றாள் தேவயானி சினத்தை அடக்கியபடி. “உனக்கு பேரரசியின் ஆடைதான் வேண்டும் அல்லவா? இதை அணியத்தான் இந்த நாடகமா?” என்றாள் சர்மிஷ்டை.


“சொல் எண்ணிப்பேசு… நீ இளவரசியாக இருப்பது எந்தையின் அருளால்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை ஆடையைப்பிடித்து இழுத்தபடி “வாயை மூடடி… நீ யார்? என் அரசில் அண்டிவாழும் அந்தணனின் மகள். என் தந்தையின் கையிலிருந்து கொடைபெற்று உண்ணுபவள். என் கருணையால் உன்னை நான் நிகரெனக் கருதினால் நீ பேரரசியாக நினைக்கிறாயா? அரசியின் ஆடையை அணிந்துகொண்டால் மிச்சில் பெற்று உண்ணும் குலத்தவள் அரசியாக ஆகிவிடுவாயா? நெய்க்கரண்டி ஏந்தும் கைக்கு செங்கோல் வேண்டுமா என்ன? கழற்று இப்போதே, அந்த ஆடையை… இல்லையேல் இதன்பொருட்டே உன்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்காலடிக்க ஆணையிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.


அவள் அணுக்கச்சேடி அஞ்சியவள்போல பின்னடைந்துவிட்டிருந்தாள். தேவயானி சில கணங்கள் சுருங்கிய கண்களுடன் நோக்கிவிட்டு ஆடையை கழற்றினாள். அதை எடுத்து சர்மிஷ்டை அணிந்தாள். எடைமிக்க இரும்புக்கம்பியை வளைத்து அணிவதைப்போல பற்களைக் கடித்து கழுத்துநரம்புகள் புடைக்க ஆடையை சுழற்றிக் கட்டினாள். அவள் பற்கள் அரைபடும் ஒலி அவள் காதிலேயே கேட்டது. தேவயானி சீரான நடையுடன் தன் ஆடையை நோக்கி செல்வதைக்கண்டு மீண்டும் எரிந்தெழுந்து “உன் திட்டம் என்ன என்று அறிந்துதான் வந்தேன்… என்னைக் கொன்றுவிடவே நீ அழைத்து வந்தாய்… சென்றதுமே தந்தையிடம் சொல்கிறேன். உன்னையும் உன் கிழத்தந்தையையும் நாடுகடத்த ஆணையிடச் செய்கிறேன்” என்றாள்.


“இளவரசி…” என சாயை அழைத்து ஏதோ சொல்லவந்தாள். அவள் குரல் அடைத்திருந்தது. “வாயைமூடு, கீழ்மகளே! நீ யார்? என் அரண்மனை மிச்சிலுண்ணும் அடிமை. நீ என்னை ஒருமையில் அழைக்கிறாயா? எனக்கு நீ ஆணையிடுகிறாயா? உன்னை குதிரைச்சவுக்கால் அடிக்க ஆணையிடுகிறேன்…” என்று கையை ஓங்கி அடிக்கப்போனபடி கத்தினாள் சர்மிஷ்டை. “உன் ஆடை கிடைத்ததல்லவா? கிளம்பு” என்றாள் தேவயானி. “ஆடை கிடைத்தது. ஆனால் இந்நாட்களில் என் அணிகள் எத்தனை காணாமலாகியிருக்கின்றன என்று நான் அறிவேன்… அரசப்படைகளை அழைத்து உங்கள் குடில்களை நோக்கச்சொல்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.


தன் ஆடையை எடுக்கக் குனிந்த தேவயானி ஆத்திரத்துடன் திரும்பி “சீ, கீழ்பிறப்பென்று காட்டிவிட்டாய் நீ” என்றாள். பின்னர் என்ன நிகழ்ந்ததென்று சர்மிஷ்டை உணரவில்லை. அடிபட்ட விலங்கென உறுமியபடி பாய்ந்து தலையால் முட்டி தேவயானியை தள்ளினாள். அவள் தடுமாறி பின்னால் நகர்ந்து விழுந்து எழுவதற்குள் எவராலோ பற்றி இழுக்கப்பட்டவள்போல தடுமாறி மல்லாந்து விழுந்தாள். “அரசி” எனக்கூவியபடி சாயையும் அவளருகே ஓட இருவரும் என்னவென்றறியாமல் கைகால்கள் பதற விழுந்து எழமுயன்று மீண்டும் விழுந்தனர்.


அவர்கள் காலடியில் வண்ணவிரிப்பு போன்ற மலர்ச்சருகுப் பரப்பு இழுபட்டுக் குவிந்து புதைந்து அவர்கள் அதில் அமிழ்ந்துகொண்டே இருப்பதை சர்மிஷ்டை திகைப்புடன் நோக்கி நின்றாள். “பள்ளம், அங்கு ஒரு பள்ளம் இருக்கிறது, இளவரசி” என்றாள் சேடி. சர்மிஷ்டை “வாடி” என தன் புரவியை நோக்கி ஓடினாள். சேடி “அவர்கள் உள்ளே விழுந்துவிட்டார்கள், இளவரசி” என்று மூச்சுக்குரலில் கூவினாள். “வாடி…!” என்று சர்மிஷ்டை புரவியை அணுகி அதன்மேல் ஏறினாள். “அவர்களால் ஏறிவர முடியாது… மலர்க்குவை உள்ளே சரிந்துகொண்டே இருக்கும்” என்றாள் சேடி. “வீரர்களை அனுப்புவோம்…” என்றபடி சர்மிஷ்டை புரவியை தட்டினாள். அது பாய்ந்து குளம்படிகள் எதிரொலிக்க கிளைகளுக்குள் புகுந்தது.


சேடி திரும்பிப்பார்த்தாள். சாயையின் குரல் மிக ஆழத்திலென கேட்டது. “வாடி!” என சர்மிஷ்டை அழைக்கும் ஓசை. அவளும் புரவியில் ஏறிக்கொண்டு சர்மிஷ்டையைத் தொடர்ந்து சென்றாள்.




tigerகாட்டுப்பாதையில் நாய்களின் துணையில்லாது செல்வதென்பது வழிபிறழச்செய்யும் என்பதை யயாதி முன்பும் பலமுறை அறிந்திருந்தான். ஆயினும் ஹிரண்யபுரியை அணுகும் பாதையில் ஓர் இடத்தில் சிறிய ஊடுவழி ஒன்று காட்டுக்குள் செல்வதைக் கண்டதும் உடன்வந்த படைத்தலைவன் பார்க்கவனிடம் “இவ்வழி செல்லலாம்” என்றான். பார்க்கவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “ஆம், சுற்றுப்பாதையாகவே இருக்கமுடியும். ஆனால் மையச்சாலை வழியாக நகருக்குள் நுழைவது எளிதல்ல. நம்மை அறிந்த வணிகர் எவரேனும் இருக்கக்கூடும். இது வேட்டைப்பாதை என்று நினைக்கிறேன்… இதன் கிளைகளில் ஒன்று கோட்டைக்குள் சிறுவாயில் ஒன்றினூடாக நுழையும்” என்றபடி புரவியைத் திருப்பி தழைகிளைகளின் இலைச்செறிவுக்குள் நுழைந்து மூழ்கினான்.


காட்டுக்குள் நுழைந்ததுமே யயாதி விடுதலையை உணர்ந்தான். “இதுவரை கண்களையே உணர்ந்துகொண்டிருந்தேன். எவரும் என்னை அடையாளம் காணவில்லை. ஆனால் என் ஏதோ ஒரு துளியை அனைவரும் அறிந்துகொண்டிருந்தனர்” என்றான். “அத்துளியில் இருந்து என்னை முழுதறிய அவர்களுக்கு சற்றுநேரத் தனிமையே போதுமானது. இங்கே விழிகள் இல்லை என்பதே என்னை வெட்டவெளிமுன் நிறுத்துகிறது.” முதுவேனிலில் பெய்த மழையால் காடு பசுமை சூடியிருந்தது.  “கொன்றைப்பெருக்கு…” என்றான் யயாதி. “கொன்றைக்கு தானிருக்கும் இடத்தை முழுதும் நிறைக்கவேண்டுமென்ற வீம்பு உண்டு.”


மலர்களையும் பறவைகளையும் நோக்கியபடி சென்றபோது வழிதவறிவிட்டதை உணர மிகவும் பிந்திவிட்டது. ஒரு யானை முதுகு முழுக்க கொன்றைமலர்களை அணிப்போர்வையெனக் கொண்டு புதர்களுக்குள் இருந்து அவர்கள் முன் எழுந்தது. துதிநுனி நீட்டி மணம் பெற்றது.  யயாதி புரவியைப் பற்றி அசைவிழக்கச்செய்து காத்து நின்றான். யானை மெல்ல வயிற்றுக்குள் பிளிறியபின் பின்காலெடுத்து வைத்து பச்சை இருளுக்குள் அமிழ்ந்தது. “இது வேட்டைப்பாதை அல்ல, யானைவழி” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றான் யயாதி.


“மீண்டும் பழைய வழியிலேயே செல்லவேண்டியதுதான்” என்றான் பார்க்கவன். “அது காட்டிடம் தோற்பது… பார்ப்போம், அவள் நம்மிடம் விளையாடுகிறாள்” என்ற யயாதி புரவியைத் திருப்பி பிறிதொரு தடம் தேர்ந்தான். அவர்கள் கிளம்பி வந்ததே பார்க்கவனுக்கு பிடிக்கவில்லை. அவனிடம் காட்டுக்குள் புகுவதுவரை ஹிரண்யபுரிக்குள் செல்வதாக சொல்லியிருக்கவில்லை. சொன்னதும் திகைத்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றுவிட்டான். “அசுரர்களுக்கு நம் நெறிகள் ஏதும் இல்லை. அவர்கள் உங்களை சிறைப்படுத்திவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்றே பொருள்” என்றான். “நாம் அவர்களின் குடியில் பெண்கொள்ளப்போகிறோம். அவர்களின் குருதியை நம்புவோம் என்றால் நெறிகளை ஏன் நம்பக்கூடாது?” என்றான் யயாதி.


பார்க்கவன் அந்த மணவுறவையே உள்ளூர ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவன் சொல்லெடுக்காமல் வந்தான். “அவளை ஒருமுறை பார்க்கவேண்டும். அழகியல்ல என்று அறிவேன். ஆனால் அவள் என் உளம்நிறைபவள் என்று எவ்வண்ணமோ என் ஆழம் சொல்கிறது” என்றான் யயாதி. “அதைவிட ஒன்றுண்டு. அவள் என் அரசியான பின்னர் அவளை நான் தேடிவந்ததை சொல்லும்போது அவள் முகம் மலர்வதை எண்ணிக்கொள்கிறேன். சிறிய வீரச்செயல்கள் இன்றி ஆணும் பெண்ணும் அணுகக்கூடாது.” பார்க்கவன் “நம்மை எவராவது அறிந்துவிடக்கூடும்” என்றான். “இவ்வண்ணம் குருநாட்டரசன் எதிரி மண்ணுக்குள் தனியாக நுழைவான் என அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். அதனாலேயே அவர்களால் நம்மை அறியமுடியாது. தேடாத எதையும் மானுடர் அறிவதில்லை” என்றான் யயாதி.


விந்தையான மணம் ஒன்று வந்தது. “கொன்றை” என்றான் யயாதி. “வேங்கை அல்லவா?” என்றான் பார்க்கவன். “ஆம், அப்படியும் தோன்றுகிறது. செண்பகம் என்றும் தெரிகிறது” என்ற யயாதி “தேவமலரா என்ன? எண்ணும் மணத்தை காட்டுகிறதே” என்றான்.  “அங்கே ஒரு மலர்க்காடு உள்ளது. அங்கிருந்து எழுகிறது அந்த மணம்” என்றான் பார்க்கவன். “அங்கே அத்தனை மலர்களும் உள்ளன. காற்றுவீசும் திசைக்கேற்ப மணம் மாறுபடுகிறது.” யயாதி புன்னகையுடன் “நான் அதை கல்யாண சௌகந்திகம் என்று சொல்லவே விழைவேன். சூதர்கள் நாளை பாடுவதற்கு சில அரிய நிகழ்வுகள் அமையட்டுமே!” என்றான்.


“செறிந்த காடு… அதைக் கடந்து அப்பால் செல்லமுடியாது” என்றான் பார்க்கவன் “அப்பால் எங்கோ ஓர் அருவி உள்ளது” என்று யயாதி சொன்னான். “அது காற்றின் ஓசை” என்று சொன்ன பார்க்கவன் “இல்லை, அருவிதான். நீராவி மணம் எழுகிறது” என்றான். உக்கில்பறவை ஒன்று அவர்களுக்குக் குறுக்காக புதர்கள் நடுவே ஓடியது. “இதற்கு மணமறியும் உணர்விருந்தால் பித்து பிடித்திருக்கும்” என்றான் யயாதி. “முதுவேனிலில் விலங்குகள் மதம்கொள்கின்றன… கரடியும் யானையும் காட்டெருதும் கட்டுகளை இழக்கின்றன” என்றான் பார்க்கவன். “கந்தர்வர்கள் அவற்றின்மேல் ஏறிக்கொள்கிறார்கள் என்பார்கள் சூதர்கள்.”


“விந்தையான நிலம். இங்கே ஒரு ஊர் இருந்திருக்கக்கூடும். விரைவில் வளரும் மரங்கள் மட்டுமே உள்ளன” என்றான் பார்க்கவன். “இரவில் நிலவில் இங்கு வந்தால் நாமும் நிலையழிந்துவிடக்கூடும்” என்று சொன்னபடி புரவியில் வளைந்து மரக்கிளை ஒன்றை கடந்துசென்ற யயாதி சிரிப்பொலியை கேட்டான். “பெண்கள்” என்றான். பார்க்கவன் “காட்டணங்குகளா?” என்றான் அச்சத்துடன். “மூடா, இது பெண்களின் நகைப்பொலி…” என்ற யயாதி உரக்க “யாரங்கே?” என்றான். சிரிப்பொலி நின்றது. “யாரங்கே?” என்று அவன் மீண்டும் கேட்டான். ஓசையெழவில்லை.


“காட்டணங்குகளேதான்” என்று பார்க்கவன் புரவியை இழுத்து நின்றுவிட்டான். “அவர்கள் நம் குரல்கேட்டு அஞ்சிவிட்டனர். போய் பார்ப்போம்” என்றபடி யயாதி முன்னால் சென்றான். “மகளிர் நீராடும் இடம்போலும்” என்றபடி பார்க்கவன் தொடர்ந்தான். “ஆம், இத்தனை விலகிய இடத்தில் இப்படி ஒரு மலர்க்காட்டில் நீராட வருவதென்றால் அவர்கள் அரசகுடியினரே. அதில் அவளும் இருக்கக்கூடும்” என்றான் யயாதி. “சர்மிஷ்டை… அழகிய பெயர். அவளிடம் அதைத்தான் முதலில் சொல்லப்போகிறேன்.”


அப்பால் மீண்டும் பெண்களின் குரல்கள் கேட்டன. பூசல்போல உரத்த பேச்சுக்கள். “எவரோ அவர்களுக்கு இடர் அளிக்கிறார்கள்” என்று யயாதி சொன்னான். “வா, சென்று பார்ப்போம்!” அவர்கள் மலர்மரங்களினூடாக குனிந்தும் நெளிந்தும் சென்றனர். புரவிகள் விலகிச்செல்லும் ஓசை கேட்டது. பின்னர் அமைதி. “அங்கே என்ன நிகழ்கிறது? சென்றுவிட்டார்களா?” என்றான் பார்க்கவன். யயாதி பேசாமல் மரங்களினூடாக சென்றுகொண்டே இருந்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2017 11:30

April 7, 2017

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

Anarchism


மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை இங்கே அராஜகவாதம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது.


அது ஏற்கனவே எனக்கிருந்த அரசாங்கம் ஏன் தேவை என்ற கேள்வியை மேலும் உறுதியாக்க செய்திருக்கிறது. George Woodcock என்பவர் Anarchism: a History of Libertarian Ideas and Movements எனும் நூலில் காந்தியை ஒரு அனார்க்கிஸ்டு என குறிப்பிடுகிறார். மேலும் Jason Adams என்பவர் எழுதிய Non-Western Anarchisms எனும் நூலில் காந்தியும் அனார்க்கிச சிந்தனைகளை கொண்டிருந்தார் என்பதை காந்தியே Young Indiaவில் எழுதிய வரிகளை குறிப்பிட்டு சொல்கிறார்.


தமிழ் அல்லது இந்திய சமூக அரசியல் அறிஞர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரிவில்லை. ஒருவேளை என் வாசிப்பு வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கம் அற்ற சமூகம் சாத்தியம் தானா? உங்கள் பார்வைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


1. Jason Adamsன் Non-Western Anarchisms நூலை வாசிக்க


2. https://theanarchistlibrary.org/library/jason-adams-non-western-anarchisms


நன்றி


வே.நி.சூர்யா


***


gandhi2


அன்புள்ள சூர்யா


நான் anarchism என்பதை அரசின்மைவாதம் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். அது சிந்தனையில் ஒரு வாதம் மட்டுமே, ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டால் அரசின்மைநிலை எனச் சொல்லலாம்.


அரசு எதிர்ப்புவாதத்திற்கும் அரசின்மை வாதத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அரசு எதிர்ப்புவாதமென்பது ஓர் அரசை எதிர்ப்பது. அரசென்பது ஒர் அமைப்பு என்பதனால் அதை எதிர்ப்பதற்கு பிறிதொரு அமைப்பு தேவையாக ஆகிறது. ஏதோ ஒரு வகையில் அந்த அமைப்பும் அரசுக்கு சமானமானது. அதை எதிர்அரசு என்று வேண்டுமானால் சொல்லலாம். அரசின்மைவாதம் என்பது முற்றிலும் அரசு இல்லாத நிலை.


மேலை நாட்டில் அரசின்மைவாதத்தைப்பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. பலநூல்கள் உள்ளன. ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறேன்.


ஐரோப்பா வரலாற்றின்போக்கில் இருவகையான முற்றதிகார அரசுகளை பார்த்திருக்கிறது. ஒன்று, சமூகவாழ்வில் வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்தும் மதம்சார்ந்த அரசு. குறிப்பாக புனிதரோமப்பேரரசு. பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி ஆறு நூற்றாண்டுகாலம் ஐரோப்பாவின் பண்பாடு, சிந்தனை, பொருளியல், அரசியல் அனைத்தையும் அது கட்டுப்படுத்தியது. ஒவ்வொரு தனிமனிதனையும் தன் பிடியில் வைத்திருந்தது. [ஆனால் இனக்குழுக்களின் நெல்லிமூட்டையான ஐரோப்பாவைத் தொகுத்து ஒரே நிலப்பரப்பாக வைத்திருந்ததும் அதுவே]


அதற்கெதிரான பெரும்போராட்டத்திலிருந்து ஐரோப்பா தேசிய அரசு என்ற கருதுகோளை நோக்கிச் சென்றார்கள். தேசியஅரசு தொடக்கத்தில் பண்பாட்டு அடிப்படையிலான சிறியநாடுகளை உருவாக்கியது. அவற்றை ஆளும் சிறிய முடிமன்னர்களை நிலைநிறுத்தியது. அது பல்வேறுவகையான அரசியல் அலைகள் வழியாக நவீன ஜனநாயகம் என்ற வடிவத்தை வந்தடைவதற்கு முன்பு நவீனச் சர்வாதிகாரிகளை உருவாக்கியது. அவர்கள் வரலாற்றில் உருவாகிவந்த அடுத்தகட்ட முற்றதிகார ஆட்சியாளர்கள்.


முடிமன்னர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் வேறுபாடு உள்ளது. முடிமன்னர்கள் ஆசாரங்களாலும் நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு கொள்கையளவில் வரம்பில்லா அதிகாரம் உண்டு என்றாலும் கூட நடைமுறையில் அதைத் தடுக்கும் விசைகளும் அதிகம். மேலும் அன்றைய சூழலில் பெரும்பாலான தேசிய அரசுகள் குறுநிலமன்னர்களாலும், நிலப்பிரபுக்களாலும் தாங்கி நிறுத்தப்படுபவை. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பிய தேசிய அரசுகள் என்பவை குறுநில மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டான அதிகாரமாகவே அமைந்தன. அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே அரசராக அமைந்தார். அவர்களின் அங்கீகாரம் இல்லாதபோது அவர் அரச பதவியை இழக்கவும் செய்தார்.


பிரிட்டனில் முதலாம் சார்ல்ஸ், பிரான்சில் பதினாலாம் லூயி ருஷ்யாவில் சக்ரவர்த்தி பீட்டர் போன்றவர்கள் அந்த நிலப்பிரபுத்துவக் கூட்டு அரசியலை உதறி முற்றதிகார அரசர்களாக ஆனவர்கள். ஆனால் அக்காலகட்டம் குறுகியது. அவர்கள் அவ்வாறு முற்றதிகாரம் கொள்ளத் தொடங்கியதுமே குடியுரிமைகளுக்கான கிளர்ச்சிகளும் தொடங்கின. அவர்களின் முற்றதிகாரம் உருவாகிக் கொண்டிருக்கையிலேயே அழியவும் தொடங்கிய ஒன்று.


ஆனால் நவீன சர்வாதிகாரி என்பவர் இரண்டு வகையான மேலதிக சாதக அம்சங்கள் கொண்டவர். ஒன்று அவரிடம் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் அமைந்த முழுமையான ராணுவம் உள்ளது. இத்தகைய ராணுவம் முன்பிருந்த அரசர்களுக்கு இல்லை. அவர்களின் ராணுவமானது சிற்றரசர்களாலும் பிரபுக்களாலும் திரட்டி அளிக்கப்பட்டது. நவீன ராணுவம் என்பது ஒரு எந்திரம். அதன் மையப்பொத்தானால் இயக்கப்படுவது. நவீனத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆகவே முழுமையாகவே ஒரு சர்வாதிகாரிக்கோ அரசமைப்புக்கோ அதை ஆளமுடியும். நவீன ராணுவம் உருவான பிறகே நவீனச் சர்வாதிகாரம் உருவானதென்று குறிப்பாக சொல்லலாம்.


இரண்டாவதாக நவீனச் சர்வாதிகாரி தொன்மையான ஆசாரங்களாலும் நடைமுறைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. பிற அரசுகளின் உறவுகள்கூட அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க தன்னுடைய தனியாளுமையினாலேயே உருவாகி எழுகிறான். அவ்வாளுமையை உருவாக்கி நிலைநிறுத்தும் அமைப்பே நவீனக்கருத்தியல். அது சென்றகாலத்தைய மதங்களுக்கு நிகரானது.


கருத்தியலும் மதங்களின் அதே வடிவில் செயல்படுகிறது. தீர்க்கதரிசி, மையத்தரிசனம், தத்துவார்த்த விளக்கம், அதை பிரச்சாரம்செய்யும் அமைப்பு, பொது எதிரி என அதற்கும் ஐந்து அலகுகள் உள்ளன. ஆனால் மதங்கள் மேலுலகை வாக்களிக்கின்றன. தனிமனித மீட்பை முன்வைக்கின்றன. குறிப்பாக அவை சென்றகாலத்தை தொகுத்து மறுஆக்கம் செய்து அளிக்கின்றன. கருத்தியல் எதிர்காலத்தை நோக்கிப் பேசுகிறது. சென்றகாலத்தில் இருந்து ஒரு சரடை அது பற்றிக்கொண்டாலும் நடைமுறையில் சென்றகாலத்தை அது நிராகரிக்கிறது. மார்க்சியமோ, பாசிசமோ, நாசிசமோ மிக வலுவான அடித்தளத்தை அமைத்து ஒரு சர்வாதிகாரியை அரசு மையத்தில் அமர்த்துகிறது. ஒருபக்கம் கருத்தியல் மறுபக்கம் நவீன ராணுவம். நவீனச் சர்வாதிகாரியின் வரம்பற்ற அதிகாரம் என்பது முன்பு வரலாற்றில் எப்போதும் இருந்திராதது.


ஐரோப்பாவின் அரசியல் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு வரை அரசு என்னும் மையத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே இருந்துள்ளது. சொல்லப்போனால் பிளேட்டோவின் குடியரசு அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையவல்லமையான அரசைப்பற்றியே பேசுகிறது. அதிலிருந்து வலுவான அரசு குறித்த தேடல் தொடங்கி மூவாயிரம் ஆண்டுகளில் நவீன ஜனநாயக அரசு வரை வந்துசேர்ந்தது. அந்தப் போக்கில் அவர்கள் அடைந்த வல்லரசுகள் அவர்களின் வெற்றிக்கும் இழப்புகளுக்கும் காரணமாயின.


அதாவது இந்தியர்களாகிய நாம் நம் நீண்ட வரலாற்றில் எப்போதும் உணர்ந்திராத இருவகையான முற்றதிகாரத்தை ஐரோப்பியர்கள் கண்டிருக்கிறார்கள். மதஅதிகாரம், நவீனச் சர்வாதிகாரம். ஆகவே அதற்கெதிராக ஓர் உச்சநிலையாக அரசின்மைவாதத்தை அவர்கள் அடைந்தார்கள். முற்றிலும் அரசு இல்லாத ஒரு நிலையை அவர்கள் கற்பனை செய்தார்கள்.


karl marx


பல கோணங்களில் பல அறிஞர்கள் அரசின்மைவாதத்தை பேசியிருக்கிறார்கள். நாம் அறிந்த முதன்மையான அரசின்மைவாதம் என்பது காரல் மார்க்ஸால் முன்வைக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரை அரசு என்பது தனியுடைமையின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. தனியுடைமையை பேணுவதற்கும் அதன் உற்பத்தி- வினியோக முறைகளை நிர்வாகம் செய்வதற்கும்தான் அரசு உருவாகி வந்தது. ஆகவே அது அரசு வன்முறையால் நிலைநிறுத்தப்படுகிறது. முதலாளித்துவ அரசை புரட்சி மூலம் தோற்கடித்து வீழ்த்தும் தொழிலாளர்வர்க்கம் முதலாளித்துவ அரசு உருவாக்கிய உற்பத்தி-வினியோக முறையை அழித்து புதிய பொதுவுடைமை உற்பத்தி-வினியோக முறையை கட்டமைக்கும் வரைக்கும் ஒரு தொழிலாளிவர்க்கச் சர்வாதிகார அரசை அமைக்கும். அந்த அமைப்பு எப்போது பொதுவுடைமை சமூகம் கட்டி நிறுத்தப்படுகிறதோ அப்போதே தன்னளவில் நோக்கமோ தேவையோ இன்றி உதிர்ந்து மறையும். அரசு உதிர்ந்து மறைந்த பிறகு மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொண்டு வாழ்வார்கள். ஆக வரலாற்றின் தொடக்கத்திலும் அதன் மறு இலட்சியஎல்லையிலும் மார்க்ஸ் அரசின்மைநிலையை முன்வைத்தார். இங்கே அது மிகவிரிவாக பேசப்பட்டுள்ளது.


இதைத் தவிர ஐரோப்பாவில் பல்வேறு வகையான இலட்சியநோக்குள்ள அரசின்மைவாதங்கள் பேசப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் இப்படி ஒரு அரசின்மைவாதத்தின் குரலாக ஒலித்தது தோரோவுடையது. ஐரோப்பாவில் பிரான்ஸிலும் பிரிட்டனிலும் உருவாகி வந்த இயற்கைமையவாதம் என்னும் கருதுகோளின் நீட்சி அது. அமெரிக்காவில் அது ஆழ்நிலைவாதமாக தத்துவ உருவம் கொண்டது. ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கி முன்வைத்த தனிமனிதவாதத்தின் ஓர் இலட்சிய உச்சம் அது எனலாம். அது தனிமனிதன் X அரசு என்னும் முரண்பாட்டை முன்வைத்தது. தனிமனிதன் X மதம் என முன்னர் அடையாளம் காணப்பட்ட முரண்பாட்டின் வேறொரு வடிவம் இது.


ஒரு தனிமனிதன் அரசுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு இருப்பவன் அல்ல. அரசின் இன்றியமையாத அலகாக அவன் இருக்க வேண்டியதில்லை. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தை தன்னந்தனிமையில் நிகழ்த்த முடியும். அரசு அவனுக்கு ஒரு நிபந்தனையாக ஆக வேண்டியதில்லை. புகழ்பெற்ற வால்டன் குடில் குறிப்புகள் வழியாக தோரோ இச்செய்தியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்து தமிழிலேயே பல கவிஞர்கள் தோரோவின் வால்டன் குறிப்புகளால் ஆழமான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் –தேவதச்சன், தேவதேவன் இருவரையும் குறிப்பாகச் சொல்வேன்.


மூன்றாவதாக, ஐரோப்பாவில் உள்ள முக்கியமான அரசின்மைவாதிகள் பல்வேறு குறுமத குழுக்கள். அவர்கள் தங்களுக்கென்று ஒரு நிர்வாக அமைப்பையும் கருத்தியல் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டவர்களானார்கள். அவற்றுக்கு மேலாக ஒரு அரசு இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த அரசின் குறைந்த பட்ச நிர்வாகத்தையும் குறைந்த பட்ச பாதுகாப்பையும் ஏற்றுக் கொண்டு அதற்கு குறைந்த பட்ச வரியை அளிப்பதில் அவர்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அரசு தீர்மானிக்கக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அத்தகைய பல மதக்குழுக்கள் ஆரம்பகாலத்தில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறினார்கள். அத்தகைய குழு ஒன்றை என் நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களுடன் சென்று பார்த்தேன். அங்கு அவர்கள் அதை ஒருவிதமான சடங்காக மாற்றிவிட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.


Thoreau


ஐரோப்பிய அரசின்மைவாதம் அங்குள்ள தத்துவ சிந்தனையில் ஆன்மிகத்தில் இலக்கியத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கியுள்ளது. அச்சொல்லை இன்று பலநிலைகளில் நுண்ணிய பொருள் மாறுபாட்டுடன் பயன்படுத்துகிறார்கள். தத்துவத்தில் அரசின்மைவாதம் என்பது முன்பு சொல்லப்பட்ட விஷயங்களுக்கு முற்றிலும் ஆட்படாத சுதந்திரப்போக்கு என்று சொல்லலாம். சிந்தனையில் கட்டின்மை என்று அதை விளக்கலாம். அதுவரை சிந்தனை என்பது அதுவரை இருந்து வந்த அமைப்புகளை சீர்திருத்துவது அல்லது மேம்படுத்துவது என்றுதான் கொள்ளப்பட்டது. மாறாக அதை முற்றிலுமாக விலக்கி புதிய ஒன்றை நோக்கித் தாவுவதே தத்துவத்திலுள்ள அரசின்மைவாதம் என்று கொள்ளலாம்.


அவ்வகையில் முதற்பெருமுகமாக இந்தியாவில் அறியப்படுபவர் நீட்சே. நீட்சேயை இங்கே அரவிந்தர் வழியாகவே பலர் அறிமுகம் செய்து கொண்டிருப்பார்கள். அரவிந்தர் தன்னுடைய முழுமனிதன் என்னும் கருத்தை நீட்சேயின் அதிமனிதன் என்னும் கருத்துடன் விவாதித்து, ஓரளவு நிராகரித்து உருவாக்கிக் கொண்டார். அந்த முழுமனிதன் அரசின் குடிமகன் அல்ல, தன்னளவில் விடுதலை அடைந்தவன். அத்தகைய முழுமனிதர்களால் ஆன முழுமைச் சமூகம் உருவாகும்போது அங்கே அரசு என்பது இருந்தாக வேண்டுமென்பதில்லை. ஆனால் நீட்சேயின் அரசின்மைவாதம் ஒருவகையில் இனமேட்டிமையை நோக்கிச் சென்றதாக இங்குள்ள இடது சாரிகளால் குறை சொல்லப்பட்டது. எண்பதுகள் வரை நீட்சே பேரைச் சொல்வதே தமிழ்ச் சிந்தனையுலகில் தர்மஅடி வாங்கித்தருவது. ஆனாலும் மு.தளையசிங்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.


இலக்கியத்தில் அரசின்மைவாதம் டால்ஸ்டாய் வழியாக வந்து சேர்ந்ததென்று தோன்றுகிறது. டால்ஸ்டாய் தனிமனிதனின் அறவுணர்வு, ஆன்மீகம் ஆகியவற்றை நம்பி அரசு எனும் பொதுக்கட்டுப்பாடு இல்லாத ஒரு சமுதாயத்தை கனவு கண்டார். அவருடைய சிறிய பண்ணைக்குழு அரசிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட ஒரு சிறு சமுதாயம்தான். ஐரோப்பிய அரசின்மை வாதத்தை டால்ஸ்டாயிடம் இருந்தும் தோரோவிடமிருந்தும் தான் காந்தி கற்றுக் கொண்டார்.


அரசின்மை வாதத்தின் தீவிரமான செல்வாக்கு அதன் பின்னர் வியட்நாம் போரையும் அதையொட்டி அமைந்த் ஹிப்பி அலையையும் சார்ந்து உலகமெங்கும் சென்றது. ஹிப்பிகள் தங்களை அரசுக்கு அப்பாற்பட்டவர்களாக அறிவித்துக் கொண்டார்கள். எல்லைகள் அற்றவர்களாக, தேசமற்றவர்களாக .ஹிப்பிகளின் முதன்மை நூலாக இருந்த சோர்பா தி க்ரீக் அரசற்ற ஒரு தனிமனிதனின் சித்தரிப்பு, அல்லது எதற்கும் கட்டுப்படாத ஒருவனின் கோட்டுச் சித்திரம்.


இன்று அரசின்மைவாதம் பேசுபவர்கள் பழைய ஹிப்பி இயக்கத்தின் உணர்வுரீதியான நீட்சிகொண்டுள்ள நாடோடிகள் மற்றும் சூழியலாளர்கள். அவர்கள் ஓருலகம் என்னும் கனவை முன்வைக்கிறார்கள். அரசு, தேசம் இரண்டுமே தனிமனிதனை உலகம்நோக்கி, இயற்கைநோக்கி விரிவதை தடுப்பவை என நினைக்கிறார்கள்.


நான் ஹாரி டேவிஸ் என்னும் அமெரிக்க அரசின்மைவாதியைப்பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஊட்டி நித்யா குருகுலம் வழியாக நான் அறிந்தவர். நடராஜகுருவின் மாணவர். உலகை ஒட்டு மொத்தமாக ஏற்கும் பொருட்டு தேசம் என்னும் அடையாளத்தைத் துறந்தவர். தன் பாஸ்போர்ட்டை தானே உருவாக்கிக் கொண்டவர்.


*


இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் இருந்த தொன்மையான அரசின்மை நிலைகளை ஐரோப்பிய ஐரோப்பிய அரசின்மைவாதத்துடன் இணைத்துக் கொள்ளாமலிருப்பதே நாம் சிந்திப்பதில் தெளிவை உருவாக்கும். ஐரோப்பிய அரசின்மைவாதம் என்பது அரசு என்னும் கருதுகோளுக்கு எதிராக உருவாகி வந்த ஓர் அரசியல் – தத்துவக் கோட்பாடு. இங்கிருந்த அரசின்மைநிலை என்பது அரசு உருவாவதற்கு முன்னரே உருவாகி அரசுடனேயே நிலைகொண்ட ஒரு தத்துவ- ஆன்மிக நிலை. இரண்டும் வேறுவேறு.


இந்தியமரபில் மொத்த மக்களும் அரசனுக்கும் அரசுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டிருக்கும் நிலை உருவானதே இல்லை. பல நாடோடி இனக்குழுக்கள் அரசென்பதையே அறியாமல் வாழும் அளவுக்கு இந்நிலம் பெரியது. பல மதக்குழுக்கள் அரசின்மை நிலையில் நீடிக்க இங்குள்ள மதநம்பிக்கை அனுமதித்திருந்தது. இன்றைய நவீன அரசில்கூட நாகா சாதுக்கள் முற்றான அரசின்மை நிலையில் வாழ்வதை கண்டிருக்கிறேன். அவர்களிடையே நிகழும் கொலைகூட அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை.


சமணர்கள் அரசின்மை நிலை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய ‘அஞ்சினான் புகலிடம்’ என்பது எந்த அரசதிகாரமும் செல்லுபடியாகாத இடம். அங்கே அவர்களின் சொந்த அறமே நீடித்தது. காந்தி அவர்களிடமிருந்தே அறத்தின் அதிகாரம் என்னும் கருதுகோளைப் பெற்றுக்கொண்டார். அதையே அவர் ஐரோப்பிய அரசின்மைவாதத்துடன் இணைத்துக்கொண்டு அரசியல் தரிசனமாக வளர்த்தெடுத்தார்.


அரசின்மை என்பது ஓர் இலட்சியமாக அன்றைய மதத்திற்குள் இருந்திருக்கிறது. துறவிகள் அரசிலாதவர்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் அறைகூவல் அதிலிருந்து எழுவதே


வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;


திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;


உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;


வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்


என்னும் கம்பராமாயணப்பாடலே ஒருவகை அரசின்மை குறித்த கனவுதான்.


இது ஒரு ஆன்மிகமான பெருநிலை. இந்நிலையை அரசின்மைவாதம் என்று கொள்ளவேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ரமணரோ வள்ளலாரோ எல்லாம் அரசின்மைவாதிகள் என்று கொள்ளவேண்டியிருக்கும். பலலட்சம் துறவிகள் சொந்தமாக அடையாளமே இல்லாமல் இன்றும் இங்கே வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கும். அரசுக்கு அப்பாற்பட்ட விடுபட்ட நிலைவேறு, அரசிலாத சமூகத்தை கனவுகாணும் நிலை வேறு. அந்த வேறுபாடு இருந்தால் ஜேஸன் நூல் உதவிகரமானதே.


*


arabindo


கீழைச்சமூகங்களில் வரம்பில்லாத அதிகாரம் எப்போதும் அரசனுக்கு இருந்ததில்லை. தொன்மையான காலத்தில் சான்றோர் சபைகள், குலச்சபைகள் ஆகியவற்றின் கூட்டதிகாரமே இருந்தது. அரசனை அது வழிநடத்தியது. அரசனின் படை என்பது மக்களில் இருந்து திரண்டு வரவேண்டியது எனும் நிலை இருப்பது வரை அரசனின் அதிகாரம் பல்வேறு வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சோழர் காலத்தில்தான் நிலைப்படை இருந்தது. தமிழக வரலாற்றில் ஓரளவேனும் முற்றதிகாரம் கொண்ட முதல் மன்னன் என்பவன் ஒருவேளை ராஜராஜ சோழன்தான். ஆனால் அவனுடைய அதிகாரமே கூட பல்வேறு சிற்றரசர்களின் சபையால் கட்டுப்படுத்தப்பட்டது. அவனுடைய ராணுவம் சிற்றரசர்களின் ராணுவங்களின் கூட்டுத் தொகை என்பதை வரலாறு காட்டுகிறது.


அப்படியே இஸ்லாமிய, நாயக்கர் ஆட்சிகள் வழியாக காலனி ஆதிக்கத்திற்கு நாம் சென்றோம். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று நவீன ஜனநாயகம் ஒன்றை வந்தடைந்தோம். முடியாட்சியிலிருந்து — காலனி ஆட்சி- குடியரசு என்று நாம் பயணம்செய்த பாதையில் நமக்கு அரசின்மைவாதம் பற்றி பேச வேண்டிய நிலைமை வந்ததே இல்லை. ஆகவே ஒரு அரசியல்கோட்பாடாக அது இங்கே பேசப்படவில்லை.


அத்துடன் நாம் அரசு பற்றி கொண்டிருந்த சித்திரமே வேறு. ஐரோப்பாவில் பல்வேறு கிளர்ச்சிகள் வழியாக அவர்கள் அரசதிகாரத்தை குறைப்பதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது நாம் வலுவான அரசதிகாரத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தோம். காரணம், ஒரு குறுகிய காலகட்டத்தில் நாம் அரசில்லாத நிலையை அடைந்திருக்கிறோம். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாயப்பேரரசும் தெற்கேநாயக்கர்களின் பேரரசும் சிதைவுற்று உறுதியான இன்னொரு அரசுமுறை உருவாகி வருவதற்கு இடைப்பட்ட அரை நூற்றாண்டுகாலம் இருந்தது. அதை இந்தியாவின் அரசின்மைக் காலகட்டம் என்று சொல்லலாம்.


இந்தியா முழுக்க கொலையும் கொள்ளையும் அன்றாடச் செயல்பாடாக இருந்தது. ஆரம்பகால வெள்ளையர்கள் பதிவுகளை வைத்துப்பார்த்தால் கொள்ளை ஓர் உச்சகட்டத்தை அடைந்து இரும்பு அல்லாத உலோகம் என்பதே எங்குமில்லாத நிலை ஏற்பட்டது. அறுவடை செய்வதற்கு அஞ்சி மக்கள் விவசாயத்தை கைவிட்ட காலம் ஆண்களையும் பெண்களையும் சிறைபிடித்து அடிமைகளாக விற்பதற்கு கொள்ளைக்கூட்டங்கள் நாடெங்கும் சுற்றியலைந்த காலம். தடியெடுத்தவன்தண்டல்காரன் போன்ற பழமொழிகள் அந்தக் காலகட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. பல்வேறு குட்டிக் குட்டி ஆட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சூறையாடி வாழ்ந்தனர். அவர்களை அவர்களைவிடப் பெரிய அரசர்கள் சூறையாடினர். எவரும் எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.


அச்சூழலிலேயே ஆங்கில ஆட்சி இங்கே வந்தது. வெள்ளையர்கள் இங்கு வலுவான அரசொன்றை உருவாக்கினார்கள்.இந்தியா வெள்ளையர்களுக்கு அளித்த மிகப்பெரிய அங்கீகாரம் அவர்கள் அளித்த அந்த நிலையான அரசின் மீதுகொண்ட மதிப்பினால்தான். ஆகவே அரசின்மைவாதத்தை நோக்கி அல்ல, வலுவான அரசை நோக்கி ஆவலுடன் செல்லும் மனநிலையே நம் நவீனகால வரலாற்றில் காணக்கிடைக்கிறது.  ஆகவே சராசரி இந்தியனின் மனநிலை என்பது இன்றும் நிலையான, வலுவான அரசே தேவை என்பதாக உள்ளது. வலுவான அரசை வாக்களிக்கும் அரசியல்வாதியை மக்கள் இங்கு விரும்புகிறார்கள். கருத்து சுதந்திரமோ விவாதமோ கூட கட்டுப்பாடின்மை என்று இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே இங்குள்ள மக்கள் இன்று ஒத்துக்கொள்ளவில்லை.


அதைப்புரிந்து கொள்வது எளிது. இந்தியாவைச் சூழ்ந்து ஏறத்தாழ இதே காலத்தில் சுதந்திரம் அடைந்த பிற நாடுகளைப்பார்த்தால் அங்கெல்லாம் வெவ்வேறு வகையான கிளர்ச்சிகளும் அதிகார மாற்றங்களும் நிகழ்ந்து நீண்ட அரசின்மை காலகட்டங்களை அவர்கள் அனுபவித்திருப்பதை பார்க்கலாம். உள்நாட்டுப் போர், பஞ்சம் போன்றவை அரசு செயலிழந்த நிலையை உருவாக்குகின்றன. அவை உருவாக்கும் பேரழிவுகளைக் கண்டவர்கள் ஓர் அரசின் கீழ் வாழ்வதையே விரும்புவார்கள்.


அரசின்மை வாதம் என்பது இருவகையானது அரசு உருவாகாத நிலை அல்லது அரசு தோற்றுப்போன நிலை ஒன்று. அந்நிலை பேரழிவை உருவாக்குவது. சமூகத்தின் ஒவ்வொரு எதிர்மறைச் சக்தியும் முழு வீச்சைக் கொண்டு எழுந்துவருகிறது.சுரண்டலும் கொலையும் கொள்ளையும் மட்டுமே அங்கு நிகழ முடியும். பிறிதொன்று, ஒரு சமூகம் இயல்பான முதிர்ச்சி அடைந்து அரசு தேவையற்ற நிலையை அடைவது. மார்க்ஸ் கனவு கண்டது அதைத்தான். லட்சியவாதிகள் வாதிடுவது அந்த அரசுக்காகத் தான். காந்தி அந்த அரசைத்தான் விரும்பினார்.


இரண்டாவது அரசின்மைவாதம் பற்றிப் பேசும்போதெல்லாம் மக்கள் முதல் அரசின்மைவாதத்தை எண்ணி நிராகரிக்கிறார்கள். அரைவேக்காட்டுச் சிந்தனையாளர்கள் ஐரோப்பாவின் இரண்டாவது வகை அரசின்மைவாதத்தை நோக்கி கீழைநாடுகளிலுள்ள முதிராச்சமூகங்களில் முதல்வகை அரசின்மைவாதத்தை உருவாக்க முயல்கிறார்கள்.ஜனநாயகம்,தனிமனிதன்,சுதந்திரசிந்தனை, சமூக ஒத்திசைவு ஆகியவை உருவாகாத சமூகங்களில் அரசின்மைவாதம் என்பது முதல்வகையாக மட்டுமே அமையமுடியும். பத்துநாட்கள் போலீஸ்நிலையம் மூடப்படுமென்றால் முழுமையான அழிவை அடையும் நிலையிலேயே இந்தியா உள்ளது என்பது என் எண்ணம்


காந்தியின் அரசின்மைவாதத்தைப்பற்றி மிக விரிவான கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். 1909ல் தனது நாற்பதாவது வயதில் தனக்கான ஓர் அரசியல் எழுச்சியை கனவை ஹிந்து ஸ்வராஜ்யா என்னும் நூல் வழியாக காந்தி உருவாக்கிக் கொண்டார். 1918-ல் அந்த முன் வரைவுடன் தான் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் அவர் நடத்திய சுதந்திரப் போராட்டமென்பது வெள்ளையரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி ஒரு நவீன ஜனநாயக அரசை அமைப்பதற்காக மட்டுமல்ல. சிறிய பொருளாதார அலகுகள் தங்களைத் தாங்களே முழுமையாக ஆட்சி செய்து கொள்ளும் ஓர் அரசற்ற அல்லது மிகக்குறைவான அரச நிர்வாகம் கொண்ட ஒரு வட்டாரமாக இந்தியா உருவெடுப்பதே அவருடைய லட்சியமாக இருந்தது.


ஒவ்வொரு கிராமமும் பொருளியல், பண்பாட்டுச் சுதந்திரம் கொண்ட தனித்த நிர்வாக அமைப்பாக தன்னைத்தானே ஆண்டுகொண்டு முழுமை பெற்றிருக்கும் நிலையை காந்தி கனவு கண்டார். அதுதான் காந்தியின் சுயராஜ்யம். அவை தங்களுக்குள் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். ஒற்றை அமைப்பாக அவை தொகுக்கப்ப்ட்டிருக்கக்கூடாது. அவற்றுக்கு மேல் முற்றதிகாரம் கொண்ட ஓர் அரசு அமையவும் கூடாது என்று அவர் எண்ணினார். இதை அவரைச் சூழ்ந்துள்ள எவரும் ஏற்றுகொண்டதில்லை. வினோபா போல அவரை நம்பிய மிகசிலர் தவிர அனைவருமே அதை ஒருவகை நகைச்சுவையாகவே எண்ணினர். ஏனென்றால் அங்கு உலகமெங்கும் மிக வலுவான அரசுகள் உருவாகிக் கொண்டிருந்தன.


வலுவான மையஅரசே வளர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கை நேருவுக்கும் அம்பேத்காருக்கும் பட்டேலுக்கும் இருந்தது. அவர்கள் பின்னர் உருவாக்கியதும் அத்தகைய ஓர் அரசையே ஆகவே காந்தியின் அந்தக் கனவு ஒரு முதியவரின் விருப்பமென்றே அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. காந்தி அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா சுதந்திரத்தை நெருங்கும்போது காந்தி நேருவுக்கு எழுதிய தொடர்கடிதங்களில் வருங்காலத்தில் இந்தியாவில் கிராம சுயராஜ்யம் உருவாக்கப்படவேண்டுமென்று திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.


ஆனால் அது வெறும் அரசின்மைவாதம் என்றே நேருவால் புரிந்துகொள்ளப்பட்டது. ஒருவேளை அதை அப்போது உருவாக்கத் தொடங்கியிருந்தால் முதல்வகையான அரசின்மை நிலை உருவாகியிருக்கவும்கூடும். இந்தியக்கிராமங்கள் சுதந்திரமான தன்னிறைவான பொருளியல் அலகுகள் என காந்தி எண்ணினார். அவை தேங்கிப்போனவை என நேருவும் அம்பேத்கரும் எண்ணினர். இருவகை நோக்குகள்.


அரசு கடந்த நிலை அரசு உதிர்ந்த நிலை என்பது எதிர்காலத்தில் சாத்தியமான ஒரு கனவு. இன்று திரும்பிப் பார்க்கும் போது உலகில் எங்கும் அத்தகைய ஒரு அரசின்மைநிலைக்கான வாய்ப்பு தெரியவில்லை. மாறாக அரசுகள் வலுப்பெறுவதே காணக்கிடைக்கிறது.அரசின்மை நிலை என்பது ஒருவேளை வரலாற்றில் நிகழாமலே கூடப்போகக்கூடும். ஆயினும் அக்கனவு என்றும் மனித குலத்தை செலுத்தும்.


***



காந்திய தேசியம் – 6
காந்திய தேசியம் 5
காந்திய தேசியம் 4
காந்திய தேசியம் 3
காந்திய தேசியம் 2
காந்திய தேசியம் 1

சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு


சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்


***


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2017 11:34

அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்

asokamithran


அன்புள்ள ஜெ


அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி நீங்கள் தொகுத்தளித்திருக்கும் எழுத்துக்களைப் பார்த்தேன். இருபதாண்டுகளாக அவரைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என தெரிகிறது. திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்கள்.


நல்லது. ஆனால் காலம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. கொஞ்சநாள் கழிந்ததும் நீங்கள் உண்மையில் அ.கா.பெருமாள் அவர்களை அவமதிக்கத்தான் செய்திருக்கிறீர்கள், அவரை வைத்து பணமும் புகழும் சேர்த்துவிட்டீர்கள் என ஒரு கும்பல் கிளம்பிவரும். ஆகவே பணம் புகழ் எல்லாம் சேர்க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை கைவசம் ரெடியாக வைத்திருங்கள்


சங்கர்


***


அன்புள்ள சங்கர்


உண்மை. என் கட்டுரையில் அசோகமித்திரனைப்பற்றி 56 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என வந்த வரிக்கு ஒன்றல்ல நால்வர் அதை குறிப்ப்பிட்டு நான்  அக்கட்டுரைகளுக்காக மொத்தம் என்ன ஊதியம் பெற்றேன் என்பதை தெரிவித்திருக்கவேண்டும் என எழுதியிருந்தனர்


ஜெ


***


அன்புள்ள ஜெ,


அ.மி பற்றி நீங்கள் விகடனில் எழுதிய குறிப்பு வாசித்தேன். அ.மியின் இயல்பு, அவருடைய இலக்கிய இடம், அவர் அடுத்த தலைமுறைமேல் செலுத்திய செல்வாக்கு மூன்றுமே அக்கட்டுரையில் சுருக்கமாக வெளிப்பட்டிருந்தது.


நீங்கள் உங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு நீங்கள் சொன்னவற்றின் விரிவான பின்னணியைச் சுட்டிக்காட்டியது. குறிப்பாக கவிஞர் நெப்போலியன் தொகுத்து அளித்த அ.மி பேட்டிகளின் தொகுப்பு இவர்கள் சொல்லும் அ.மியை விட சம்பந்தமே இல்லாத ஒரு அ,மியை காட்டியது. அவர் கடுமையாக வாழ்க்கையிலே போராடியவராக இருக்கிறார்.


ஆனால் ஓர் ஐயம், எண்பதுகளில் அ.மி இலக்கியத்தளத்திலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார் என நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஆச்சரியமளிக்கிறது.


சாரங்கன்


***


அன்புள்ள சாரங்கன்,


அன்றைய விவாதங்களை இன்று நோக்கினால் எளிதில் புரிவதே இது. அன்றைய இலக்கியக் கருத்தியல் மையங்கள் நான்கு. சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட்சாமிநாதன், கைலாசபதி –சிவத்தம்பி. இந்நான்கு முனைகளுமே அசோகமித்திரனை நிராகரித்தவை


பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் அசோகமித்திரனை முழுமுற்றாக நிராகரித்தார்கள். அவரது எழுத்து வெறும் அன்றாடச் சித்தரிப்பு, எந்திரத்தனமானது, உள்ளொளி இல்லாதது என்பது அவர்களின் மதிப்பீடு. சுந்தர ராமசாமி அன்றாட வாழ்க்கையைச் சொல்ல மொழியை கணக்காகப் பயன்படுத்தியவர் என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டார். இடதுசாரிகள் அவரை பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை= அவர் ஃபோர்டு ஃஇறுவனநிதி பெற்று அமெரிக்கா சென்றுவந்தது காரணம்.


அதோடு அ.மி அன்று அதிகமும் வணிக இதழ்களில் எழுதினார். வணிக இதழ்களுக்காக வக்காலத்து வாங்கி கட்டுரையும் எழுதினார் [வெங்கட் சாமிநாதனை கடுமையாக கண்டித்து அ.மி எழுதிய ‘அழவேண்டாம், வாயைமூடிக்கொண்டிருந்தால் போதும்’ என்னும் கட்டுரை சாவியை நியாயப்படுத்தியமையால் விவாதமாக ஆகியது] அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் இருந்த தீவிரம் வணிக இதழ்களில் எழுதிய அனைவரையுமே நிராகரிக்கும் போக்கு கொண்டிருந்தது. ஜெயகாந்தன், சுஜாதா அனைவருமே முழுமையாக நிராகரிக்கப்பட்டார்கள்.


வெ.சா, பிரமிள், சு.ரா வழிவந்த அனைவருமே அ.மியை நிராகரித்தனர். வேதசகாயகுமார் அவரது அஞ்சலி உரையில்தான் அ.மியைப்பற்றி தான் எழுதிய கடுமையான நிராகரிப்புக் கட்டுரைகளை குறிப்பிட்டு தன் கோணம் சற்று மாறியிருப்பதைச் சொன்னார். ஆனால் அஞ்சலிக்கூட்டம் ஆகையால் கடுமையாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் சேர்த்துக்கொண்டார். இதுதான் அன்றைய சூழல்..


அச்சூழலில்தான் அதற்கும் அடுத்த தலைமுறையாகிய நான் வந்தேன். சு.ராவின் மாணவனாக. ஆனால் அசோகமித்திரனை முதன்மைப் படைப்பாளியாக தொடர்ந்து முன்னிறுத்தினேன்.  விரிவாக எழுதினேன், விவாதித்தேன். அவருக்காக விமர்சன மலர் வெளியிட்டேன். இன்று பேசிக்கொண்டிருக்கும் பலர் அன்றைய சிற்றிதழ்ச் சூழலுக்குள் இல்லை. மட்டுமல்ல பலர், அ.மியை தாங்களும் சர்வசாதாரணமாகவே மதிப்பிட்டனர். இன்று அவரது கதைகளாக புகழ்பெற்றுள்ள பலவற்றின் மீது இருக்கும் வாசிப்பு நான் என் வாசிப்பினூடாக உருவாக்கி எடுத்த மறுவாசிப்பு என்று பதிவு செய்யத்தான் வேண்டும். அன்று அவை வெறுமே நடுத்தரவர்க்க வாழ்க்கைச் சித்திரங்கள் என்று மட்டுமே கருதப்பட்டன.


ஆனால் தனிப்பட்ட முறையில் நான் வெங்கட் சாமிநாதன், பிரமிள் கொண்டிருந்த இலக்கிய அழகியலையே ஏற்றுக்கொண்டேன், கொள்கிறேன். இலக்கியம் தன்னிச்சையான மொழிப் பெருக்கை உருவாக்கும் பித்துநிலையின் விளைவு என நினைக்கிறேன். மெட்டபிஸிக்கலான ஒரு முழுமை நோக்கு இல்லாத எழுத்து குறையுடையது என கருதுகிறேன். ஆகவேதான் அ.மியின் நாவல்களை நான் முன்னிறுத்தவில்லை. சிறுகதைகளை மட்டுமே முன்வைக்கிறேன். அவற்றையும் நவீனத்துவத்தின் முகங்களாக மட்டுமே குறிப்பிடுகிறேன். இதைப் பற்றியெல்லாம் விரிவாகவே எழுதிவிட்டேன்.


பொதுவாக எழுத்தாளர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரால் மீள்வாசிப்பு செய்வதும் மீண்டெழுவதும் நிகழ்ந்துகொண்டிருப்பதே. ப.சிங்காரம் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எல்லாம் அப்படி மீண்டும் வந்தார்கள்.


ஜெ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2017 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.