Jeyamohan's Blog, page 1652
April 15, 2017
குதிரைவால் மரம்
நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கக் கூடாது என்பது தவிர எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை என்பதனால் ஒரே ரகளையாக இருக்கும். நித்யா குழந்தைகளிடம் முடிவின்றி விளையாடுவார். அஜிதனைக் கூட்டிவரச் சொன்னார்.
‘உங்களுக்குத்தான் தமிழ் தொியாதே ‘ என்றேன்.
‘ ‘அதனாலென்ன ? இங்கே ஒரு பஞ்சாபி குழந்தைகூட நின்றது ‘ ‘ என்றார் நித்யா.
அஜிதனைக் கூட்டி வந்தேன். குருகுலத்தின் அழகிய சூழல் அவனைப் பரவசமடையச் செய்தது. உள்ளே கூட்டிச் சென்றேன். ‘ ‘இவங்கதான் குருவா ? குண்டா இருக்காங்க ? ‘ ‘ என்றான் அஜிதன். குரு என்றபோது அவன் மாந்திரீகமாக கற்பனை செய்திருக்கவெண்டும்.
‘ ‘கும்பிடுடா ‘ ‘ என்றேன்.
‘ ‘எதுக்கு ? ‘ ‘
அதற்குள் நித்யா அவனை அருகே அழைத்தார். அழுத்தம் திருத்தமான தமிழில் – அதை அவர் மனப்பாடம் செய்திருக்கவேண்டும் – ‘உன் பெயர் என்ன ? ‘ என்றார்.
‘அஜிதன். உங்க பேரு ? ‘
‘நித்யா. ‘ என்றார் நித்யா. தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டார்கள்.
‘உங்கள் அம்மா வரவில்லையா ? ‘ என்றார் குரு
‘இல்லை. உங்க அம்மா எங்கே ? ‘
அப்போது சில விஷயங்களைக் கவனித்தேன். பிறகு நித்யா குழந்தைகளிடம் பேசும்போது அந்த விஷயங்கள் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்த்தேன்.ஒன்று நித்யா ஒருபோதும் குழந்தைகளிடம் அவர்களுடைய படிப்பு பற்றி ஒரு சொல்கூட பேசுவதில்லை. ‘என்ன படிக்கிறாய் ? ‘ என்று குழந்தையிடம் கேட்காத முதல் பொிய மனிதர் அவர்தான்.
இரண்டு. நித்யா குழந்தைகளிடம் பொியவர்கள் காட்டும் விஷேமான கொஞ்சல்குழைவு உற்சாகம் கனிவு எதையுமே காட்டுவதில்லை. சமகால அறிஞன் ஒருவனிடம் தீவிரமாகப் பேசுவதுபோல பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தை தன்னிச்சையாக எதைப் பற்றியாவது கேட்கும். அதைப்பற்றி பேச ஆரம்பிப்பார்.தான் பேசுவதைவிட அதிகமாக குழந்தைகயைப் பேசவிடுவார். யோசனைகள் கேட்பார், விவாதிப்பார். சற்று விலகி நின்று பார்க்கும்போது சிாிப்பு கும்மாளம் எதுவுமே இருக்காது. தீவிரமாக ஏதோ வேலை நடப்பது போலத் தோன்றும்.
நித்யாவும் அஜிதனுமாக பல நுால்களைப் பிாித்து படங்களைப் பார்த்தார்கள். படங்கள் உள்ள பக்கங்களில் அடையாளம் வைத்தார்கள். பொிய நுால்களைக் கீழே வைத்து சிறிய நுால்களை மேலே வைத்து அடுக்கி குப்பைகளைப் பொறுக்கி குப்பைக் கூடையில் போட்டு முடித்ததும் நான் சாப்பிட அழைத்தேன். கையைத் தட்டிக் கொண்டு வந்தான். ‘தாத்தா நான் சாப்பிட்டுட்டு வரேன். நீ அதுக்குள்ள படங்களை எடுத்து வச்சிடு. நான் வந்து அடுக்கித்தரேன் ‘
போகும்போது ‘என்னடா பண்னே ? ‘ என்றேன்.
‘தாத்தாவுக்கு புக் அடுக்கி குடுத்தேன் ‘ என்றான். அது எனக்கு முக்கியமான பாடமாக அமைந்தது. இன்றும் என் குழந்தைகளுடன் உற்சாகமான உறவு இருப்பதற்கு அந்த நாளே காரணம். குழந்தைகளை நான் செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்துவேன். பாத்திரம் கழுவினால் இருவரும் எடுத்து அடுக்குவார்கள் துணிதுடைத்தால் கிளிப் போடுவார்கள். வேலைப் பகிர்வு மிக ஆழமான ஒரு நட்பை உருவாக்குகிறது. உள்ளார்ந்த சமத்துவஉணர்விலிருந்து உருவாகும் நட்பு அது.
நித்யா நடக்கப்போகும்போது கூடவே அஜிதனும் போனான். நித்யா வழியில் ஏதாவது அழகிய கூழாங்கற்களைப் பார்த்தால் பொறுக்கி பையில் போடுவார். அழகாக பிாிக்கப்பட்ட கூழாங்கற்களை வேறுவேறு பீங்கான் ஜாடிகளில் போட்டு வைத்திருந்தார். அஜிதனும் ஓடி ஓடி பொறுக்கினான்.
‘என்ன கல் அது காண்பி ‘ என்றார் நித்யா.
அது சாதாரணமான கூழாங்கல் ‘இது சாதாரணமான கல் தானே ? ‘ என்றார்.
‘ஏன் சாதாரண கல்லை பொறுக்கக்கூடாதா ? ‘ என்றான் அஜிதன்.
நித்யா அயர்ந்து போனார். அவன் தலையைத் தடவியபடி என்னிடம் ‘குழந்தைகள் நம்மை தோற்கடிக்கும் விதங்களுக்கு முடிவே இல்லை ‘ என்றார்.அஜிதன் முன்னால் ஓடி பொறுக்கும்வரை பார்த்தபடி ‘எத்தனை முடிவற்ற சாத்தியங்கள் உள்ள உயிர் மனிதன். எப்படி மெதுவாக செக்குமாடுபோல ஆகிவிடுகிறான். கலாச்சாரம் என்று சொல்லி நாம் இதுவரை உருவாக்கியதெல்லாம் ஒரு செக்கு, ஒரு வட்டத்தடம் அவ்வளவுதான் ‘ என்றார்.
‘ஆமாம். குழந்தைகள் பேசுவதை கவனிக்கும்போது மொழி எப்படி புதிதுபுதிதாக உருவாகிறது என்ற வியப்பு ஏற்படுகிறது ‘ என்றேன்.
‘நாம்சாம்ஸ்கி சொல்லியிருக்கிறார் குழந்தைகள் தான் மொழியைப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன என்று. கவிஞர்கள் கூட குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்றார் நித்யா
ஒரு பழையபடம். 1996 என நினைக்கிறேன். பாம்பன்விளையில் சுந்தர ராமசாமி கூட்டிய கூட்டத்தில் பௌத்த அய்யனார் என்னை ஒரு பேட்டி எடுத்தார். அது புதியபார்வை இதழில் வெளியானது. அந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட படம்
அன்றுமாலை குருகுலத்தின் முன்னால் நின்ற மரத்திலிருந்து கிளையை ஓடித்துத் தரச் சொன்னான் அஜிதன். அதன் இலைகள் சரம்சரமாக தொங்குபவை. ஒடித்து கையில் வைத்து குலுக்கி விசிறினான்.
‘குரு இது என்ன மரம் ? ‘ என்றேன்.
நித்யா சிாித்தார் ‘உன் பையனிடம் கேள் ‘
அஜிதன் அந்த கிளையைத் தன் பிருஷ்டத்தில் செருகி வைத்து வாயால் டொக்கு டொக்கு ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தான். ‘அப்பா குதிரை பாத்தியா ‘
‘இது என்ன மரம் ? ‘ என்றார் நித்யா.
‘குதிரைவால் மரம் ‘ என்றான் அஜிதன் சற்றும் யோசிக்காமல்.
‘பார்த்தாயா ? ‘ என்றார் நித்யா. ‘சாியான பெயர். பெரும்பாலான பெயர்களை இப்படி ஏதோ குழந்தைதான் போட்டிருக்கவேண்டும்”
பிறகு வெகுநாள் கழித்து ஒரு கட்டுரையில் நித்யா ‘குதிரைவால் மரம் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்
மறுபிரசுரம் – முதற்பிரசுரம் 2003 திண்ணை இணையதளம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
75. துயரிலாமலர்
அஷ்டசிருங்கம் என்னும் மலையின் அடியில் சுரபஞ்சகம் என்னும் மலைச்சிற்றூரில் இளவேனிற்காலத்தில் நடந்த பெருங்களியாட்டு விழவில் பன்னிரு பழங்குடிகளின் குலப்பாடகர்கள் பாடுவதை கேட்க பார்க்கவனுடன் சென்றிருந்த யயாதி திரும்பும்போது சோர்ந்து தலைகவிழ்ந்திருந்தான். பார்க்கவன் அவன் தனிமையை உணர்ந்து சொல்லெடுக்காமல் உடன் வந்தான். மலைச்சரிவில் இறங்கிய அருவி ஒன்றின் ஓசை உடன் வந்துகொண்டே இருந்தது. நிகர்நிலத்தை அடைந்ததும் பெருமூச்சுடன் நிலைமீண்ட யயாதி திரும்பி பார்க்கவனை நோக்கி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றான்.
அதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினான் பார்க்கவன். “குருநகரிக்கேவா?” என்றான் யயாதி. பார்க்கவன் தலையசைத்தபின் “வேறெங்கேனும் செல்லும் எண்ணம் உள்ளதா?” என்றான். “இல்லை… ஆனால் அங்கு மீள்வது என்னை சோர்வுறுத்துகிறது” என்றான் யயாதி. பார்க்கவன் அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்து உளம்காத்தான். “பெருநகர் என்பது மானுடத்தில் இடப்பட்ட ஒரு முடிச்சு என எனக்குப் படுகிறது. உப்பரிகையில் நின்று நோக்குகையில் சாலைகள் அனைத்தும் அணுகிவந்து முடிச்சிட்டுக்கொள்வதை காண்கிறேன். அவற்றில் பெருகிவரும் மானுடரும் அங்கே சுழன்று இறுகுகிறார்கள். நெறியும் எண்ணங்களும் ஊழும் அனைத்தும் அங்கே முடிச்சிட்டுக்கொள்கின்றன.”
சற்றுநேரம் அவ்வெண்ணத்தை மீட்டியபின் அவனே தொடர்ந்தான். “அங்கே இருக்க இயலவில்லை. கலையும் இலக்கியமும் முடிச்சுகளை அவிழ்த்து நீட்டுபவை. அணைகளை உடைத்து ஒழுகவிடுபவை. என் உள்ளம் பெருக்கெடுத்தோடுகையில் உடல் அந்நகர்முடிச்சில் அமைந்திருப்பதன் முரண் தாளமுடிவதாக இல்லை.” அவன் மெல்ல நகைத்து “இன்று இவ்வெண்ணத்தை சொல்லாக்கி அறிந்தேன். இக்குலக்களியாட்டில் ஒரு பாணினி நீள்குழல் அவிழ்த்திட்டு ஆடியதைக் கண்டபோது” என்றான்.
பார்க்கவன் புன்னகைத்தான். “அலைகுழல்… நெளிகருமை. அதன் மேல் எனக்கிருக்கும் பித்தை எண்ணிக்கொண்டேன். தேவயானியின் நீள்குழலை முதல்முறையாகக் கண்டபோது என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. உள்ளாழம் அக்குழல்பொழிவை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தது என அன்று கனவுகண்டபின் அறிந்தேன். இருளுக்குள் குளிரிருள் என வழிந்த அந்தக் கூந்தலின் அலைகளுக்குள் அன்றுமுழுக்க திளைத்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் எழுந்தமர்ந்தபோதுதான் அவள் என் அரசியாகப்போகும் செய்தியை என் ஆழம் வாங்கிக்கொண்டது. மெய்நடுக்கு கொண்டு மூச்சிழுக்க இயலாதவனாக மஞ்சத்தில் விடியும்வரை அமர்ந்திருந்தேன். நெடுநேரம் கழித்து அவ்வெண்ணத்தை சொல்லாக்கிக்கொண்டேன். அந்தக் கூந்தல் எனக்கு என்று. அதையன்றி வேறெதையும் விடியும்வரை எண்ணவில்லை” என்றான் யயாதி.
“அவள் நீள்குழலை முதல்சில நாட்களில் மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” என்று அவன் தொடர்ந்தான். “அம்பு கூர்கொள்வதுபோல மானுடர் உச்சம்கொள்ளும் நாட்கள் சில உண்டு. மிகச்சரியாக சொல்லப்போனால் பதினெட்டு நாட்கள். இன்னும் எண்ணிச் சொல்லப்போனால் பத்தொன்பது இரவுகள், பதினெட்டு பகல்கள். அன்று நிகழ்ந்ததென்ன என்று இன்று வகுத்துக்கொள்கிறேன். நான் சிறகோயப் பறந்தெழுந்து அவளை சென்றடைந்தேன். அவள் கிளைதாழ்த்தி வளைந்து என்னை ஏற்றுக்கொண்டாள். பின்னர் இருவரும் நிலைமீண்டோம்.”
மீண்டும் நெடுநேரம் புரவிகளின் குளம்போசையே கேட்டுக்கொண்டிருந்தது. யயாதி “அவள் குழலை சுருட்டி கொண்டையாக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் தோளில் ஒரு பெரிய முடிச்சு என அது அமைந்திருக்கிறது” என்றான். “அரசியர் குழல்நீட்டி அவையமரக்கூடாதென்பது மரபு” என்றான் பார்க்கவன். “ஆம், அவள் நீராட்டறையிலும் அரசியே” என்றான் யயாதி. அருவி ஒரு கயமாகச் சுழித்து எழுந்து வழிய அதைச்சூழ்ந்து நெல்லிமரங்கள் தெரிந்தன. “நாம் சற்று இளைப்பாறுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம்” என யயாதி புரவியை அங்கே செலுத்தினான். விலாவணைத்து புரவியை நிறுத்தி இறங்கி வேர்க்குவை ஒன்றில் அமர்ந்தான். பார்க்கவன் அருகே சென்று அமர்ந்தான்.
“அழகு என்பது என்ன என்று எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் யயாதி. மரங்களுக்கிடையே அவ்வப்போது தெரியும் ஆற்றுப்பெருக்குபோல அவன் உள்ளம் சொல்லில் தோன்றுவதை பார்க்கவன் உணர்ந்தான். “அழகென்பது ஒத்திசைவு என்பது சிற்பவியல். ஐம்புலன்களுக்கும் இன்பமளிப்பவற்றின் விழித்தோற்றம் என்பது தர்க்கவியல். இறையியல்புகள் பொருளில் உள்ளுறைந்து குறிப்பென வெளிப்படுதல் என்பது கலையியல். அனைத்தும் உண்மையே. அனைத்துக்கும் அடிப்படையாக நம் உள்ளம் அன்றாடமறியும் உண்மை ஒன்றுண்டு, நமக்குப் பிடித்தமானதன் பொருட்தோற்றமே அழகெனப்படும்.”
மீண்டும் ஒரு நீண்ட உளப்பாய்ச்சலுக்குப் பின் அவன் தொடர்ந்தான். “அவள் அழகு பன்மடங்கு பெருகியிருக்கிறது என்கிறார்கள் கவிஞர். மெய்யென்றே நானும் உணர்கிறேன். உருப்பிழை அற்ற முழுச்சிலை. அவள் நடையின் ஒழுக்கு, அமர்வின் நிமிர்வு, நோக்கின் கூர், அசைவின் இசைவு ஒவ்வொன்றும் இனியில்லை என நிறைநிலை கொண்டுவிட்டன. மண்ணில் இனி ஒரு பெண்ணை பிரம்மன் படைக்கவேண்டியதில்லை என விறலியர் பாடுகையில் ஆம் ஆம் என்றே என் உள்ளம் எண்ணிக்கொள்கிறது.”
மெல்ல படுத்து தலைக்குமேல் கைகளை வைத்தபடி “ஆனால் காமத்தை நினைவுறுத்தாதபோது பெண்ணழகு பொருளற்றதாகுமா என்ன?” என்றான். பார்க்கவன் திடுக்கிட்டான். அப்பேச்சை விலக்க விரும்பி “நாம் எங்குசெல்லலாம் என எண்ணுகிறீர்கள், அரசே?” என்றான். “எங்காவது…” என்றான் யயாதி. “நான் இழந்துகொண்டிருப்பதென்ன என்று இந்தப் பெருங்களியாட்டு விழவில் உணர்ந்தேன்” என்றான். “தொல்குடிகள் எதையும் மூடிவைப்பதில்லை. விழவென்றால் காமக்களியாட்டுதான் அவர்களுக்கு. காமம் என்பது பொலிதல். மரங்களில் பூ போல. சொல்லில் கவிதை போல.”
பார்க்கவன் “ஆம், கவிதையை புஷ்கலம் என்கிறார்கள் கவிஞர்” என்றான். “காமம் இல்லாமல் கவிதையும் கலைகளும் பொய்யே” என்றான் யயாதி “காமத்தை காதலெனக் கனியவைப்பவை அவை. நான் கவிதையை அடையும்தோறும் காமத்தை நன்குணர்கிறேன். உணர்கையிலேயே நான் அதை இழந்துவிட்டிருப்பதை அறிகிறேன்.” பார்க்கவன் அப்பேச்சை விலக்க விழைந்தான். ஆனால் யயாதி அவனை நோக்கவேயில்லை. “அரசனுக்குரிய மகளிர்மாளிகை எனக்கும் உள்ளது. ஐந்து அரசியர். அதிலொருத்தி பாரதவர்ஷத்தின் பேரரசி. விழையும் பெண்ணை மஞ்சத்திற்குக் கொண்டுவர இயலும் என்னால்…”
அவனால் தன் உணர்வுகளை சொல்லாக்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பார்க்கவன் அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதில் உணர்வுகள் அசைவுகளாகத் தெரிந்தன. அவ்வசைவுகளைக் கொண்டு அந்த உணர்வுகளை பின்தொடர முடியுமா என அவன் வீணே எண்ணிக்கொண்டான். “கவிதையில் அனைத்துமே மலர்களாக ஆக்கப்பட்டுவிடுகின்றன. தத்துவமும் நெறிகளும் வரலாறும் ஒளியும் மணமும் தேனும் கொள்கின்றன” என்றான். “கவிதையில் திளைக்கையில் நான் அறிவது ஒன்றே. நான் விழைவது வசந்தகாலத்தை. நான் அதை அடையவே இல்லை. என் உடல் முதுமைநோக்கி செல்லத் தொடங்கிவிட்டிருக்கிறது.”
அவன் புரண்டு படுத்து பார்க்கவனை நோக்கி “வசந்தத்தை அறியாமலேயே ஒருவன் முதுமையை அடைந்து இறக்கக்கூடுமா? அவ்வண்ணம் நிகழுமென்றால் அது எத்தனை பெரிய கொடுமை! எந்த விலங்கும் பறவையும் பூச்சியும் அவ்வாறு வாழ்ந்தழிவதில்லை. அத்தனை மரங்களுக்கும் செடிகளுக்கும் மலர்ப்பருவம் அளிக்கப்பட்டுள்ளது” என்றான். “இளமையிலன்றி எவரும் இளமையை அறியமுடியாது, அரசே” என்றான் பார்க்கவன். அவனை திரும்பி பொருளேறா விழிகளால் நோக்கியபின் யயாதி “உண்மை, இது வீண் ஏக்கம். அவ்வெண்ணமே மேலும் சோர்வளிக்கிறது” என்றான்.
“நாம் இங்கிருந்து இன்னொரு வசந்தவிழவுக்கு செல்லலாம். நம் மேற்கு எல்லைக்கு அப்பால் அசோகவனி அருகே திரிசிரஸ் என்னும் மலையடிவாரத்தில் நிகழ்கிறது. அவ்வூரின் பெயரை மறந்துவிட்டேன். அசோகவனியிலேயே அதை கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்” என்றான் பார்க்கவன். “ஆம், குருநகரிக்கு மீள்வதைவிட எங்குசெல்வதும் நன்றே” என்றபடி யயாதி எழுந்தான். பார்க்கவன் “தொன்மையான அசுரப் பேரரசனாகிய அக்னிவர்ணன் விறலியரும் பாணரும்போல. விழாவிலிருந்து விழாவுக்குச் சென்று வாழ்ந்தான் என்று முக்தவாக்யம் என்னும் கவிநூல் சொல்கிறது” என்றான்.
யயாதி புன்னகைத்து “ஆம், அப்படி செய்வோம். திரும்பவே வேண்டியதில்லை” என்றான். “இளவேனில் முடிந்ததும் முதுவேனில்விழவுகள். பின்னர் ஆயர்களின் மழைவிழாக்கள். அதன்பின் மருதநிலத்து குளிர்காலக் கொண்டாட்டங்கள். மீண்டும் மலைமக்களின் இளவேனில் தொடங்கிவிடும்.” அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். புரவிச்சரடைப்பற்றியபடி பார்க்கவன் “இப்புவியின் அனைத்து இயல்புகளிலும் இனிதாவது ஒன்றுண்டு என்றால் இதில் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு இடமுள்ளது என்பதே” என்றான்.
அசோகவனியின் வாயிலை அவர்கள் சென்றடைந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. உடலெங்கும் பயணப்புழுதி படிந்திருக்க புரவிமேல் ஆடிய உடலின் தசைகள் வலிகொண்டிருக்க கண்கள் வெம்மையில் எரிந்தாலும் அச்சிற்றூரை அணுகியபோது யயாதி ஒரு சிறு மகிழ்வை அடைந்தான். “இது ஒரு நகரி என எண்ணியிருந்தேன். இத்தனை சிறிய ஊரா?” என்றான். பார்க்கவன் “எல்லையில் இருப்பதனால் இதற்கு ஒரு கோட்டை தேவையாகியது. மற்றபடி இது நூற்றைம்பது சிறுவீடுகளும் அரசமாளிகைகள் இரண்டும் மட்டுமே கொண்ட சிற்றூர்தான்” என்றான்.
களிமண்ணை வெட்டிக் குவித்து உருவாக்கப்பட்ட சுவரின்மேல் முள்மரங்களை நெருக்கமாக நட்டு முட்கொடிகளால் சேர்த்துக் கட்டப்பட்ட உயிர்வேலியே கோட்டையாக அமைந்திருந்தது., பசுங்கோட்டையின் நடுவே இருவேங்கை மரங்களே வாயில்சட்டங்களாக நின்றன. அவற்றின் கவைக்கிளைகளுக்குமேல் மூங்கிலால் ஆன காவல்பரண்கள் குருவிக்கூடு போல தெரிந்தன. அவ்வேளையில் அதில் ஒன்றில்மட்டும் இரு காவலர் இருந்தனர். ஒரு அறைமுரசு அதன் தோல்பட்டையில் செருகப்பட்ட முழைத்தடியுடன் ஓய்ந்து காத்திருந்தது.
வாயிலில் நான்கு காவலர்கள் வேல்களுடன் நின்றிருக்க எழுவர் அப்பால் சிறிய மரக்குடிலின் திண்ணையில் அமர்ந்து அரவுச்சுழல் ஆடிக்கொண்டிருந்தனர். பகல்முழுக்க காய்ந்த வெயிலில் வெந்த புழுதிமணம் அங்கெல்லாம் பரவியிருந்தது. காவலர் உடைகளிலிருந்து வியர்வை மணம் எழுந்தது. பார்க்கவன் புரவியை இழுத்து நிறுத்தி “உக்ரதந்தன் இருக்கிறானா?” என்றான். காவலன் “மூடா, அவர் காவலர் தலைவன் என்று அறியமாட்டாயா?” என்றான். பார்க்கவன் சினத்துடன் சொல்லெடுக்கப்போக யயாதி அவன் தோளைத் தொட்டு அடக்கியபின் “நாங்கள் அயலூர் ஷத்ரியர். இங்கே இரவைக் கழிக்கும்பொருட்டு வந்தோம்” என்றான்.
“உங்கள் குலத்திற்குரிய இலச்சினைகளை காட்டுங்கள். அயலூரார் அரண்மனை அருகே செல்ல ஒப்பு இல்லை. அவர்கள் தங்குவதற்குரிய இல்லங்கள் கோட்டையின் மேற்கு எல்லையில் உள்ளன” என்றான் காவலன். பார்க்கவன் அவன் கச்சையிலிருந்து எளியவீரர்களுக்குரிய இலச்சினைகளை எடுத்துக்காட்டினான். “என் பெயர் வஜ்ரஹஸ்தன். இவர் என் தோழர் தீர்க்கபாகு. நாங்கள் அயோத்தியில் இருந்து திரிகர்த்தர்களின் நாட்டுக்கு செல்கிறோம்” என்றான். காவலன் சிரித்து “பேரரசியின் ஆட்சியில் அனைத்து நாடுகளும் ஒரே நாட்டின் பகுதிகள் மட்டுமே. எனவே இப்போதெல்லாம் எவரையும் அயலவர் என கொள்வதில்லை” என்றான்.
அவர்கள் உள்ளே சென்றபோது அச்சிற்றூரே தெருக்களில்தான் இருப்பதாகத் தோன்றியது. வணிகர் தெரு என்பது சாலையோரம் யானைத்தோலை இழுத்துக்கட்டி அமைக்கப்பட்டிருந்த ஏழு கடைகள் மட்டுமே. எல்லா கடைகளுக்கு முன்னாலும் வண்ணஆடைகள் அணிந்த பெண்கள் குனிந்து பொருட்களை நோக்கிக்கொண்டும் பேரம்பேசிக்கொண்டும் தங்களுக்குள் உரையாடி நகைத்தபடியும் நின்றனர். வண்ணத் தலைப்பாகைகளுடன் ஆண்கள் சாலையில் மிதப்பதுபோல சென்றனர். அப்பால் ஒரு மதுக்கடையில் கள்பானைகளை சாலையிலேயே தூக்கி வைத்தபின் பெரிய பற்களும் உறுத்த கண்களும் கொண்ட குள்ளன் ஒருவன் மரப்பெட்டிமேல் ஏறிநின்று “கள், புளித்த கள்… அந்திக்கள்” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தான்.
“இங்கு கோடையின் வெப்பம் சற்று மிகுதிபோலும்” என்றான் பார்க்கவன். “மக்களின் அசைவுகளில் இருக்கும் சலிப்பும் ஓய்வும் பகலில் அனலிறங்கியிருப்பதை காட்டுகின்றன.” யயாதி “இங்குள்ள இல்லங்களின் கூரைகள் எல்லாமே மிகத்தாழ்ந்தவை. சாளரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றான். பார்க்கவன் “குளிர்காலத்தில் இங்கு தண்மை மிகுதி. ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிர்காலம். ஆகவே இல்லங்களை அதன்பொருட்டே கட்டியிருக்கிறார்கள்” என்றான். ”புற்றுகள் போலிருக்கின்றன இல்லங்கள்” என்றான் யயாதி. இல்லங்களுக்குள் இருந்து சிறுவர்கள் கூச்சலிட்டபடி வெளியே வந்து தெருக்களில் குறுக்கே பாய்ந்து விளையாடினர். துரத்தியபடி இல்லங்களுக்குள் புகுந்தனர்.
“எளிய வாழ்க்கை” என்று யயாதி சொன்னான். “முடிச்சுகள் இல்லாத ஒழுக்கு…” பார்க்கவன் “மீண்டும் உங்கள் சொல்லுக்கு சென்றுவிட்டீர்கள்” என்றான். யயாதி சிரித்தபடி “நான் விழைவதென்ன என்று எனக்கே தெரியவில்லை. காணும் ஒவ்வொரு வாழ்க்கையையும் நடித்துப் பார்க்கிறேன். முதற்கணம் பெரும் உவகை எழுகிறது. ஆம், இதுதான், இங்குதான் என உள்ளம் துள்ளுகிறது. மெல்லமெல்ல சலிப்பு ஏற்படுகிறது. மானுடர் மிகமிக கற்பனையற்றவர்கள் என்னும் எண்ணம் எழுகிறது. ஒரேவகையான வாழ்க்கையையே எங்கும் மீண்டும் மீண்டும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.” பார்க்கவன் “நீங்கள் தேடுவது கவிதையை. அது எங்குமிலாதது, ஆகவேதான் அது விரும்பப்படுகிறது” என்றான்.
எதிரே வந்த இருபெண்களில் ஒருத்தி நின்று “நெய்க்கிண்ணத்தை மறந்துவிட்டேன் மகதி, எடுத்துவருவாயா?” என்றாள். யயாதி இயல்பாக அவளை திரும்பி நோக்கியபின் “இங்கே பெரிய ஆலயம் ஏதேனும் உள்ளதா என்ன?” என்றான். “பெரிய ஆலயம் அல்ல, ஆனால் குறிப்பிடத்தக்க ஆலயம் ஒன்று உள்ளது, அரசே” என்றான் பார்க்கவன். “தங்கள் குடியன்னை அசோகசுந்தரிக்கு இங்கே ஓர் ஆலயம் உள்ளது. தங்கள் தந்தை நகுஷன் அப்பால் காட்டில் தொல்குடிவிழவு ஒன்றுக்கு செல்லும்வழியில் வேட்டைக்கு இங்கு வந்து ஒருமுறை தங்கியதாகவும் அப்போது கனவில் தன் துணைவியை கண்டார் என்றும் சொல்கிறார்கள். கனவில் அசோகசுந்தரி அவரை கைசுட்டி அழைத்துக்கொண்டு அரண்மனையில் இருந்து இறங்கிச் சென்றதைக் கண்டு அவரும் இறங்கி நடந்தார். விழித்துக்கொண்டபோது அவர் அரண்மனையின் கன்னிமூலையில் நின்றிருந்த அசோகமரம் ஒன்றின் அடியில் நின்றிருந்தார்.”
“அன்று இச்சிற்றூருக்கு பீதவனம் என்றுதான் பெயர். நகுஷன் இங்கே அசோகமரங்களை நட்டு ஒரு சோலையை உருவாக்கி இதற்கு அசோகவனி என்று பெயரிட்டார். அந்த முதல் அசோகமரத்தின் அடியில் தன் துணைவிக்கு சிறிய ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார். அவர் அடிக்கடி இங்கு வந்துகொண்டிருந்தார். அவருக்குப்பின் இங்கு அரசகுடியினர் எவரும் வருவதில்லை.” யயாதி “நாம் அந்த ஆலயத்திற்கு சென்றுவிட்டு அரண்மனைக்கு செல்லலாம்” என்றான். பார்க்கவன் “நாம் களைத்திருக்கிறோம், நீராடவுமில்லை” என்றான். யயாதி “அங்கு செல்லவேண்டுமென்று தோன்றுகிறது. எண்ணியதை அவ்வாறே செய்யும் ஒரு வாழ்க்கைக்காகவே அரண்மனைவிட்டு வந்துள்ளோம்” என்றான். “இந்தப்பெண்கள் அங்குதான் செல்கிறார்கள் என நினைக்கிறேன். இவர்களைத் தொடர்ந்துசென்றாலே போதும்.”
மகதி எண்ணைக்கிண்ணத்துடன் வந்து சேர்ந்துகொள்ள அந்தப்பெண் முன்னால் நடந்தாள். “இவளைப் பார்த்தால் இவ்வூரைச் சேர்ந்தவள்போல் இல்லை” என்று யயாதி சொன்னான். “இவ்வூர்மகளிர் அனைவரும் செம்மண்நிறம் கொண்டவர்கள். இவள் நிறம் சற்று கருமை. நீளமில்லாத சுருள்குழலும் கொண்டிருக்கிறாள்.” யயாதி ”இங்குள்ளவர்களின் தெய்வங்கள் இவர்கள் தொன்றுதொட்டு வழிபடும் அன்னையரும் மூதாதையரும் மலைத்தேவதைகளும்தான். அசோகசுந்தரியை இவர்கள் வழிபடுவதாகத் தெரியவில்லை. அங்கு நாளும் வழிபாடு நிகழ தங்கள் தந்தை அளித்த கொடை உள்ளது. ஆகவே பூசகர் இருப்பார்” என்றான்.
இரண்டு தெருக்களுக்கு அப்பால் அசோகவனம் வந்துவிட்டது. “கோட்டைக்குள் இப்படி ஒரு சோலை! நன்று” என்றான் யயாதி. “ஆனால் கோட்டையைவிட உயரமான மரங்கள். அது எவ்வகையிலும் பாதுகாப்பானது அல்ல” என்று பார்க்கவன் சொன்னான். “இப்போது பாதுகாப்பு என்பதைப் பற்றிய பேச்சே குருநகரியில் இல்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் படை என்ன கோட்டை என்ன என்று ஒரு வீரன் சொல்வதை கேட்டேன்” என்றான் யயாதி. “ஆம், சற்றுமுன் இக்கோட்டைக்காவலனும் அதைப்போலத்தான் சொன்னான்” என்று பார்க்கவன் சொன்னான்.
அசோகவனத்திற்குள் அப்பெண்கள் நுழைந்து மறைந்தனர். யயாதியும் பார்க்கவனும் புரவிகளை நிறுத்திவிட்டு உடைகளில் இருந்த புழுதியைத் தட்டி நீவினர். “கைகால்களையாவது கழுவிக்கொண்டு உள்ளே நுழையலாமென்று தோன்றுகிறது” என்றான் யயாதி. “என்ன இருந்தாலும் என் குலமுறை அன்னை. நான் அவள் மைந்தன் என்றே நிமித்தநூல்கள் சொல்கின்றன.” பார்க்கவன் “அது குருநகரியின் தொல்குடிமரபு. முதல்பட்டத்தரசியின் மைந்தர்களாகவே முறைப்படி மணந்த பிறமனைவியரின் மைந்தர்கள் கருதப்படுவார்கள். தங்கள் கையின் முதலுருளை அன்னமும் முதல்குவை நீரும் நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் உரியவை” என்றான் பார்க்கவன். “இங்கு வந்து அன்னைக்கு ஒரு மலர் எடுத்துவைக்க வாய்த்ததும் நன்றே” என்றான் பார்க்கவன்.
அவர்கள் உள்ளே நுழைந்தபோதே சோலையை வகுந்து வந்து சரிவில் பொழிந்த சிறிய ஓடை ஒன்றை கண்டனர். அதிலிறங்கி முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டனர். “அன்னைக்கு ஒரு பலிகொடையும் பூசெய்கையும் நிகழ்த்திவிட்டுத்தான் இங்கிருந்து செல்லவேண்டும்” என்றபடி பார்க்கவன் நடந்தான். சோலைக்குள் படர்ந்து நின்றிருந்த அசோகமரத்தின் அடியில் இடையளவு உயரத்தில் அகன்ற கல்பீடம் அமைந்திருந்தது. அதன் நடுவே முழ உயரமுள்ள அசோகசுந்தரியின் கற்சிலை நின்றது. அதைச்சூழ்ந்து ஆறு சிறிய கற்களாக அவள் மைந்தர்களாக யதி, யயாதி, சம்யாதி, யாயாதி, யயதி, துருவன் ஆகியோர் நிறுவப்பட்டிருந்தனர்.
அசோகமலர் மாலைசூடி நின்றிருந்த சிலையருகே நின்றிருந்த பூசகன் கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கி “யார்?” என்றான். “அயலூர் வீரர். இந்த ஆலயத்தை வழிபட்டுச் செல்ல வந்தோம்” என்றான் பார்க்கவன். “இது அரசித்தெய்வத்தின் கோயில். அரசகுலத்தவர் அன்றி பிறர் வழிபடுவது இல்லை… வருக!” என்று அவன் சொன்னான். யயாதி அருகே சென்று கைகூப்பியபடி நின்றான். இருபெண்களும் அசோகவனத்தை சுற்றிக்கொண்டு அவர்களை அணுகினர். மகதி என்பவள் சற்று முதிர்ந்தவளாகத் தெரிந்தாள். அவள் தாழ்ந்தகுரலில் ஏதோ சொல்ல இளையவள் விழிதூக்கி நோக்கினாள்.
யயாதி தன் நெஞ்சு படபடக்கத் தொடங்கிய பின்னரே அது அவள் விழிகளை நோக்கியமையால் என உணர்ந்தான். நோக்கை விலக்கிக்கொண்டு அசோகசுந்தரியின் சிலையை பார்த்தான். கல்லில் எழுந்த அவள் விழிகளும் மிகப்பெரியவை, குழந்தைநோக்கு கொண்டவை. பூசகன் கல்விளக்கை ஏற்றியபோது அவ்வொளியில் அவை மெல்லிய நகைப்பை ஏற்றிக்கொண்டன. பார்க்கவன் அவனருகே நெருங்கி “அரசே, அசுர இளவரசி சர்மிஷ்டை” என்றான். யயாதி திரும்பி நோக்கினான். “அரசியின் நோக்குக்கு அப்பால் ஏதேனும் எல்லைப்புற ஊரில் இவர்களை குடிவைக்கும்படி ஆணையிட்டேன். இங்கேதான் அவர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. சேடியர்குடியில் இருந்தமையால் இவர்களை நான் பார்க்கவே இல்லை. கோட்டைமுகப்பில் ஒருகணம் கண்டமுகம்… ஆனால் அது முற்றிலும் மாறியிருக்கிறது.”
பூசகன் ஒரு சரடை இழுக்க அதனுடன் இணைந்த ஏழு சிறுமணிகள் சேர்ந்து சிலம்பத் தொடங்கின. மறுகையால் அவன் மலர்களை அள்ளி அசோகசுந்தரியின் கால்களில் இட்டு வாழ்த்து பாடினான். சுடரேற்றப்பட்ட சிற்றகலை எடுத்து அசோகசுந்தரிக்கு சுடராட்டு காட்டியபோது அவள் முகம் உயிரெழப்போவதுபோல அலைவுகொண்டது. பார்க்கவன் திரும்பி சர்மிஷ்டையை நோக்கினான். அவள் கண்களை மூடி கைகூப்பி நின்றிருந்தாள். அப்போது அது கோட்டைமுகப்பில் கண்ட முகமாக மாறிவிட்டிருந்தது. பெரிய விழிகளை மூடிய இமைகள் தாமரையின் புல்லிகள் போல தெரிந்தன. சிறிய உதடுகள் மெல்ல அசைந்தன. குவிந்த மேலுதடு. மெலிந்த தோள்கள்.
பூசகன் அவர்களுக்கு சுடர்கொண்டு காட்டினான். அவர்கள் தொட்டு விழியொற்றி வணங்கி மலர்பெற்றுக்கொண்டனர். சுடர்வணங்கி பூசகன் அளித்த மலரைப் பெற்றுக்கொண்டு யயாதி திரும்பி நோக்கியபோது சர்மிஷ்டை அந்த மலரை தன் குழல்சுருளில் சூடிக்கொண்டு நடந்தாள். அவள் கழுத்தைத் திருப்பி கைகளைச் சுழற்றி மலரைச் சூடிய அசைவு யயாதியை மீண்டும் உளம்பதறச் செய்தது. அவர்கள் சென்றுமறைவது வரை நோக்கிநின்றான்.
பார்க்கவன் அருகே வந்து “அவர்களுக்கும் நாம் எவர் என தெரிந்துவிட்டது” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் யயாதி. “அவரது தோழி நம்மைப்பற்றிதான் சொன்னார். அவர்களின் நோக்குகள் மாறிவிட்டன” என்றான் பார்க்கவன். “அத்துடன் இப்போது அவர்கள் மலர்சூடியதிலிருந்த அழகு இத்தருணத்திற்காக தெய்வங்கள் சமைத்தது.” யயாதி எரிச்சலுடன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆம் அரசே, அனைத்தும் சீராக வந்து இணைந்துகொள்கின்றன” என்றான் பார்க்கவன்.
அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு ஊர்மையம் நோக்கி சென்றார்கள். பார்க்கவன் தலைநிமிர்ந்து சுற்றும் நோக்கிக்கொண்டு வந்தான். ஆனால் அவன் விழிகள் உள்நோக்கு கொண்டிருப்பதை பார்க்கவன் உணர்ந்தான். பறவை அமர்ந்திருப்பதைப்போல அவன் புரவிமேல் இருந்தான். விழிதிருப்பிய யயாதி பார்க்கவன் புன்னகைப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “உடலென்பது என்ன என எண்ணிக்கொண்டேன்” என்றான் பார்க்கவன். “என்ன சொல்கிறாய்?” என்று யயாதி புருவம்சுருக்கி கேட்டான். “ஒரேகணத்தில் முதிரா இளைஞனாக ஆகிவிட்டீர்கள். நோக்கு அசைவு அனைத்திலும்.”
யயாதி சலிப்புற்றவன்போல் முகம்காட்டி திரும்பிக்கொண்டான். அவர்கள் மையச்சாலைக்கு வந்தனர். மாலைவெயில் செம்மைகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. காவல் மாடத்தில் பணிமுறை மாறுதலுக்காக முரசு முழங்கியது. யயாதி திரும்பி நோக்கி “சேடிப்பெண்போலத்தான் இருக்கிறாள். அரசகுடியினர் எவருக்கும் இருக்கும் அழகுகூட இல்லை. மெலிந்த தோள்கள், கூம்பிய முகம், இளங்கருமை” என்றான். பார்க்கவன் “ஆம்” என்றான். “சேடியென்றே ஆகிவிட்டிருக்கிறாள்” என்று யயாதி மீண்டும் சொன்னான். பார்க்கவன் புன்னகை செய்தான்.
எதிரே நான்கு வீரர்கள் புரவியில் வந்து அவர்கள் அருகே விரைவழிந்து இறங்கி தலைவணங்கினர். “பொறுத்தருளவேண்டும் அரசே, எங்களால் அறியக்கூடவில்லை. நாங்கள் தங்களை பார்த்ததே இல்லை” என்றான் முதல்காவலன். “எவர் எங்களைப்பற்றி சொன்னார்கள்?” என்றான் பார்க்கவன். “அரசி” என்று காவலன் சொன்னான். அச்சொல் மீண்டும் தன்னை உளம்குலையச் செய்வதை யயாதி உணர்ந்தான். அவன் விழிகளை பார்க்கவன் விழிகள் தொட்டுச்சென்றன. அவன் நோக்கை விலக்கிக்கொண்டாலும் பார்க்கவன் புன்னகைப்பதை உணர்ந்தான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
April 14, 2017
டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP ரேட்டிங்கிற்காக இப்படி அந்த டிவி செய்வதாகவும் திசை திருப்பும் விவாதங்களை முன்னெடுக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே மருத்துவர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தும், மரியாதையை குலைக்கும் என்று அவர்கள் நம்புவது நியாயமானதே. ஆனால் ஒரு துறையின் சமூக அந்தஸ்திற்கு பங்கம் வந்துவிடாமல் காக்கும் அந்த மனநிலையே, அந்தத் துறையில் நடக்கும் எல்லா கேடுகளுக்கும் ஆரம்பமாக இருக்கிறது, இல்லையா? இந்தத் துறை சார்ந்த பாசத்தில்தானே கண்டக்டர், ஆட்டோ டிரைவர்களில் இருந்து RTO ஆபீசர்கள், ஆசிரியர்கள், பொதுநலப் பணியாளர்கள் என அனைவரும் சங்கம் வைத்து எந்த பெரிய ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் நடந்துவிடாமல் செய்துவிடுகிறார்கள்? நீயா நானா கோபி மேல் வழக்கு தொடுக்கப் போகிறார்களாம். “முதல்வன்”-ல் பஸ்ஸை மறித்து படுக்கும் அதே கண்டக்டர் மனநிலைதான்.
இந்த நாட்டில் மருத்துவத்துறை என்றில்லை, எல்லா அக்கிரமங்களும் எல்லா துறைகளிலும் சரி சமமாகவே நடக்கிறது. “இந்தியாவில் ஊழல் புரையோடி போய்டுச்சு”னு சொன்னா ஒத்துகுவாங்கள், மற்ற எல்லா துறையும் சீரழிஞ்சு போச்சுனா ஒத்துகுவாங்கள், ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் துறை பற்றி சொன்னால் உடனே கொடி பிடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் வந்து விடுகிறார்கள். நீங்கள் யாரையும் குற்றம்/குறை மட்டும் கூறிவிட முடியாது, அந்த அந்த துறை சார்ந்த பிதாமகர்களாக தன்னை கருதிக் கொண்டு, “நாங்கள் எல்லாம் புனித பசுக்கள், 1% தான் கெட்டவர்கள் எங்களிடையே உள்ளார்கள்” என்று வக்கீலிலிருந்து, RTO ஆபிசர்கள், கண்டக்டர்கள், தாசில்தார்வரை, எல்லா துறை ஆட்களும் கொடி பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். அந்தத் துறையில் நடக்கும் எல்லா அவலங்களுக்கும் இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.
ஒரு ஆசிரியர் தவறு செய்தால் கூட அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கே முடியவில்லை, கூட்டாக ஸ்டிரைக் செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு துறை பற்றிய விவாதங்கள் அதை பற்றிய விழிப்புணர்வு நமது நாட்டிற்க்கு மிகவும் தேவை. ஆனால் அந்த துறை சார்ந்த விவாதங்களுக்கு எதிராக, அதை உருவாக்கும் நபர்களின் உள்நோக்கங்களாக எதையாவது கற்பித்து, விவாத நிகழ்ச்சியில் நடக்கும் சிறு பிழைகளை பெரிதாக்கி, விவாதத்தையே திசை திருப்பி ஒன்றுமில்லாமல் ஆக்கும் நபர்கள் அந்த துறையின் எல்லா அக்கிரமங்களுக்கும் துணைபோகிறார்கள் என்றே சொல்லுவேன். இப்பொழுதுதான் இது பொது வெளியில் ஒரு விவாதமாக மேலெழுந்து வருகிறது., மருத்துவத்துறை/ கல்வித்துறை போன்றவை நாம் ஒரு முறையாவது அனுபவபட்ட துறை என்பதாலும், நம் மக்களின் எதிர்காலம் அல்லது உயிர் காக்கும் துறை என்பதாலும், முக்கியமானதாகி விடுகிறது.
இல்லை, சில நண்பர்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சிகள் மருத்துவர்கள்/ஆசிரியர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தி, பொது மக்கள் மத்தியில் மரியாதையை குலைக்கும் என்பதால் அப்படி நடக்காமல் தடுத்து இத்துறைகளின் “புனிததன்மை” காக்கப்படத்தான் வேண்டுமா? தனது துறை சார்ந்த ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தி உள்ளிருந்தே அதற்காக போராடுவது அல்லது அந்த அநியாயங்களுக்கு எதிரான ஒத்த மனநிலையை ஒன்று சேர்ப்பது போன்ற தார்மீக தர்மங்களை இந்த துறை சார்ந்த நபர்களிடம் இனியும் நாம் எதிர்பார்க்கத்தான் முடியுமா?
அன்புடன்
முருகதாஸ்
அன்புள்ள முருகதாஸ்,
எனக்கு நல்ல மருத்துவ நண்பர்கள் சிலர் உண்டு. ஆயினும் இது சார்ந்த என் மனப்பதிவை சொல்லிவிடுகிறேன். நீயா நானா நிகழ்ச்சியில் கோபி சொன்ன கருத்துக்களை மேலும் தீவிரமாக அதே நிகழ்ச்சியில் ஒருவருடம் முன் நான் சொல்லியிருக்கிறேன்.
ஆசிரியர்கள், டாக்டர்கள் என்னும் இரு தரப்பையும் நாம் ஒரு தொழிலைச்செய்து ஊதியம் பெறுபவர்களாக பார்ப்பதில்லை. ஊதியம் பெற்றாலும் அவர்களை ஒருவகை சேவை செய்பவர்களாகத்தான் அணுகி வருகிறோம். ஆகவேதான் அவர்களை ஒரு தொழிலைச் செய்பவர்கள் என்பதற்கும் மேலாக மதிக்கிறோம். குரு என்றும் ரட்சகன் என்றும் நினைக்கிறோம்.
இந்தக் காரணத்தால்தான் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஏமாற்றம் கொள்கிறோம். கண்டிக்கவும் செய்கிறோம். ஒரு கட்டிட காண்டிராக்டரை அல்லது ஒரு பொறியாளரை அல்லது வழக்கறிஞரை நாம் அப்படி மதிப்பதில்லை, ஏமாறுவதில்லை. ஆகவே உணர்ச்சிகரமாக கண்டிப்பதும் இல்லை.
காரணம் கட்டிடப்பொறியாளர் அல்லது வழக்கறிஞர் போன்ற தொழில்கள் முதலாளித்துவ காலகட்டத்தில் உருவாகி வந்தவை. அவை தொழில்கள் மட்டுமே. ஆனால் மருத்துவர், ஆசிரியர் தொழில்கள் தொன்மையானவை. நமது பாரம்பரியம் உருவாக்கிய தொன்மையான மனநிலைகள் கொண்டே அவற்றை நாம் அணுகிவருகிறோம். அதாவது மருத்துவரும் ஆசிரியரும் மரபார்ந்த படிமங்களும்கூட. அவை உடைவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்றைய முதலாளித்துவச் சூழலுக்காக நம் உளவியலை மாற்றியாக வேண்டியிருக்கிறது. மருத்துவர் என்பவர் உயிர்காக்கும் தேவன் அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு தான் கற்றுக்கொண்ட சேவையை விற்பவர், அவ்வளவுதான். ஆசிரியர் என்பவர் குரு அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு ஒரு சேவையை ஆற்றுபவர் அவ்வளவுதான். அதற்குமேல் எந்த மரியாதையையும் அவர்களுக்கு அளிக்கவேண்டியதில்லை. அவர்களிடம் நமக்கு இருக்கவேண்டியது ஊதியமளித்து சேவை பெறுபவரின் மனநிலை மட்டுமே.
மறைமுகமாக பெரும்பாலான டாக்டர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘நான் செய்வது தொழில், அதை லாபகரமாகச் செய்யவேண்டும் அல்லவா?’ என்கிறார்கள். ‘இத்தனை லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேனே’ என்கிறார்கள். ‘இதையே ஒரு எஞ்சினீயரிடம் கேட்பாயா?’ என்கிறார்கள். அவர்கள் சொல்வது முழுக்க உண்மை. அவர்கள் கோருவது ஒரு வணிகச்சேவையாளருக்கான சமூக இடம் மட்டுமே. அதை மட்டும் அவர்களுக்குக் கொடுத்தால் போதும். அதற்கு அப்பால் நாமே அவர்களை தூக்கி வைத்துவிட்டு அவர்கள் அப்படி இல்லை என்று புலம்புவதில் பொருளில்லை.
வேறெந்த சேவையாளரையும், பணியாளரையும் நாம் எப்படி அணுகுகிறோம்? முதலில் அவர் நமது நலனுக்காகப் பணியாற்றுபவர் அல்ல, தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பணியாற்றுபவர் என வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அவரை எப்போதும் சந்தேகத்துடன் மட்டுமே அணுகுகிறோம். அவரது தகுதி, சேவை ஆகியவை நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக உள்ளனவா என்று சோதித்துக்கொள்கிறோம். இல்லை என்றால் அவரை மாற்றுகிறோம். அவர் வேண்டுமென்றே பிழை செய்தால் சட்டத்தின் துணையை நாடுகிறோம்.
டாக்டர்கள் பணம்பெறும்போது தங்களுடையதை தொழில் என வாதிடுகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் எழும்போது தாங்கள் மானுடசேவை செய்வதாக வாதிடுகிறார்கள். சென்ற இருபதாண்டுகளில் டாக்டர்களை சட்டக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மிகமிக மெல்லத்தான் முன்னகர்ந்துள்ளன. டாக்டர்களின் வலுவான கூட்டு சக்தி அதற்கு தடையாக உள்ளது.
டாக்டர்கள் – மருந்துக்கம்பெனிகள் – மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்கள் என்னும் மூன்று சக்திகளின் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் சாமானியனின் வாழ்க்கையையே அழித்து லாபம் பெறும் நச்சு சக்தியாக இன்றே இது வளர்ந்து வந்துள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வை நாம் அடையாமல் தடுப்பது டாக்டர்கள் பற்றி நாம் கொண்டுள்ள மனப்பிரமையே.
டாக்டர் தொழில் முழுமையாகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வந்தாகவேண்டும் என்பதும், டாக்டர்களின் பிழைகள் தேவை என்றால் பொதுவான சமூகசேவகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் கொண்ட குழுக்களால் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதும் இன்றைய முக்கியமான கோரிக்கைகளாக அமையவேண்டும். இந்திய மருத்துவம் மிகக்கடுமையான சட்டக்கண்காணிப்புக்கு உட்பட்டாகவேண்டிய சூழல் இன்றுள்ளது.
டாக்டர்களை எவ்வகையிலும் சிறப்பாக மதிக்கவேண்டியதில்லை, சேவையளிப்பவர்களாக மட்டும் அணுகுவோம். உலகம் முழுக்க டாக்டர்களை இன்று அப்படித்தான் அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே இன்றைய சூழலில் நமக்குப் பாதுகாப்பானது, லாபகரமானது. ஒருபோதும் ஒரு கட்டிடப்பொறியாளரை முழுமையாக நம்பி நம் பணத்தையும் பொருளையும் ஒப்படைப்பதில்லை. ஒருபோதும் டாக்டர்களையும் நம்பக்கூடாது. நம் உடலையும் உயிரையும் கொண்டு அதிகபட்ச லாபத்தை அடைய முயலும் ஒரு சேவை வணிகர் அவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
நான் அறிந்தவரை புத்திசாலியான தொழில்முனைவோரும் வணிகர்களும் இன்று டாக்டர்களை அவ்வகையில்தான் அணுகுகிறார்கள். நடுத்தர வர்க்கமாகிய நாம்தான் சின்னவயதில் கிடைத்த மனப்பிம்பங்களை சுமந்துகொண்டு குழப்பிக்கொள்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த தலைமுறை டாக்டர்களையும் ஆசிரியர்களையுமெல்லாம் அப்படித்தான் அணுகும். அதுவே இயல்பானது, பயனுள்ளது.
ஜெ
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் /Aug 26, 2014
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
நிறம்
ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?
செய்தொழில் பழித்தல்
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
மதமெனும் வலை
அனைத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது!
அசுரர் இன்று
மகாபாரதம் முன்னோடி முயற்சிகள்
கடந்துசெல்லல்
வெண்முரசு ஐயங்கள்…
துயரத்தை வாசிப்பது…
நாத்திகமும் தத்துவமும்
எரிதல்
இரு அதிர்ச்சிகள்
ஒப்பீட்டு இலக்கியம்
வியூகங்கள்
காளி
தென்னகசித்திரங்கள்
அசுரர்
வாசகர்களின் நிலை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சிலவாசகர்களின் கடிதங்களை புகைப்படத்துடன்
இணையத்தில் பிரசுரிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட காரணத்துடனா?
மகாதேவன்
***
அன்புள்ள மகாதேவன்,
இணையத்தில் அவர்களின் புகைப்படம் இருக்கவேண்டும் என்பது முதல் விதி. புகைப்படத்தை பிரசுரிக்க முதன்மைக் காரணம் அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு. அவர்களின் கருத்துக்களுக்கு அந்த முகம் ஒரு தொடர்ச்சியை அளிக்கிறது. கருத்துக்களுக்குப் பின்னால் ஓர் ஆளுமை இருப்பதை உறுதிசெய்கிறது. முகமில்லாமல் கருத்துக்கள் நிலைகொள்வது கடினம். முகம் பிரசுரமாகவில்லை என்றால் வாசகன் காலப்போக்கில் ஒரு முகத்தை கற்பனைசெய்துகொள்வான். கம்பனுக்கும் வள்ளுவனுக்குமே நாம் முகம் அளிக்கிறோம் இல்லையா?
ஜெ
***
ஜெ,
இணையவெளியில் உங்கள் வாசகர்கள் அவமதிக்கப்படுவது பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் இது அனுபவம். இணையத்தின் என் மின்னஞ்சல் வெளியானதுமே வசைகள் வரத் தொடங்கின. என் நாட்களை அவை கண்டபடி சீரழிப்பதனால் நான் விலகிவிட்டேன். ஆனால் மின்னஞ்சல் இல்லாவிட்டால் உடனே டம்மி என ஆரம்பிப்பார்கள். இங்கே முகம் பிரசுரமாகும் அத்தனைபேரும் இணையத்தில் உலவும் அசட்டுக்குரல்களால் ஏளனம் செய்யப்படுவார்கள் என்பது உறுதி இங்கே எழுதும் பலர் மிக ஆக்கபூர்வமாக எழுதுகிறார்கள். மிக விரிவாக வாசித்து எழுதுகிறார்கள். இன்றைக்கு இணையத்தில் வேறு எங்கும் இலக்கியம் பற்றி இத்தனை விரிவான ஒரு சர்ச்சையை பார்க்கமுடியாது. ஆனால் தொடர்ச்சியாக இவர்களை அடிவருடிகள், அல்லக்கைகள் என்றெல்லாம் எழுதிக் கேவலப்படுத்துகிறார்கள். சொல்பவர்கள் எவர் என்று பார்த்தால் மொக்கை அல்லாமல் ஒரு நாலு வரி வாழ்க்கையில் எழுதியறியாத அற்பங்கள். நாம் இவர்களுக்குச் செவிகொடுத்து ‘இல்லை எனக்கு ஜெமோவை பிடிக்கும். ஆனால் மாற்றுக்கருத்து உண்டு. ஆனால்…” என்றெல்லாம் பேச ஆரம்பிக்கையில்தான் நாம் தோற்க ஆரம்பிக்கிறோம் என நினைக்கிறேன்.
மகாதேவன்
***
அன்புள்ள மகாதேவன்,
எழுத்துக்குள் வரும் ஒருவனுக்கு முதல்தேவை தன்னம்பிக்கை, ஆணவம். அற்பத்தனங்களை புழுப்பூச்சிகளைப்போல தட்டிவிட்டுச்செல்ல முடியாவிட்டால் அவர்கள் எதையும் சிந்திக்கப்போவதில்லை
ஜெ
***
ஜெமோ,
காற்றில் மிதப்பது போல் உள்ளது. என்னுடைய இரண்டு கடிதங்கள் தங்களின் இணையதளத்தில் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எனக்கு அறிவுஜீவி பட்டம் கிடைக்க ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது, என் நண்பர்கள் வட்டாரத்தில். எல்லாம் உங்களை படிக்க ஆரம்பித்த பிறகுதான். குறிப்பாக, \’இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்களையும்\’, \’விஷ்ணுபுரத்தையும் \’ படித்த பிறகு தான்.இப்போது என் கடிதங்களும் தங்களால் பதிவிடப்படுவதால் கேட்கவே வேண்டாம். உங்களுடைய எழுத்தே, என் தமிழாசிரியர்களால் புதைக்கப்பட்ட தமிழில் எழுதும் ஆவலைத் தூண்டியுள்ளது. மேலும், என்னால் தமிழில் எழுதும்போது நான் அவதானித்த விஷயங்களை சிறப்பாக வெளிப்படுத்தமுடிகிறது என்று உணர்கிறேன்.
அலைக்கழிக்கப்பட்ட பால்யம் எனக்கிருந்தாலும், அது பொருளாதாரம் சார்ந்த இலட்சிய வேட்கையைத்தான் என்னுள் உருவாக்கியது. ஆனால், உங்களைப் படித்தபின் ஏதோ ஒரு உந்துதல் எழுத வேண்டும் என்று. ஏன் என்று தெரியவில்லை. எனக்குள் பெரிய தேடல் இருப்பதாகவும் தோணவில்லை. இதற்கு முன் சுஜாதா, இபா, கிரா, ஜெகி எனப் படித்திருந்தாலும் எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் உங்கள் எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னவென்று குறிப்பாகச் சொல்வதிற்கான மொழியாளுமையோ, சொல்லாளுமையோ இப்போதைக்கு என்னிடமில்லை. தங்களுடைய சொல்புதிது குழுமத்தில் இணைவதற்காக இன்று விண்ணப்பித்துள்ளேன், சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.
அன்புடன்
முத்துக்குமார்
***
அன்புள்ள முத்துக்குமார்,
எழுதுவதற்கான அடிப்படைகள் இரண்டு. ஒன்று எழுதிக்கொண்டே இருத்தல், இன்னொன்று வாசித்துக்கொண்டே இருத்தல் அதைவிட முக்கியமான ஒன்று உண்டு, ஒரு தடுப்பூசி அது. இணையம் உருவாக்கும் காழ்ப்புகள் சார்ந்த விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமலிருத்தல். அதன் முன்முடிவுகளுக்குள் சிக்கினால் அதன்பின் தேக்கநிலைதான்
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அறம் -கடிதங்கள்
வணக்கம் ஜெயமோகன் அய்யா,
எனக்கு தங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. பள்ளியில் எனது தமிழ் ஆசிரியரினை இவ்வாறு அழைத்தது உண்டு. நான் உங்களின் அறம் எனும் புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. எனக்கு அதிகமாக தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லை. சிறு வயது முதலே ஆங்கில புத்தகங்கள் படிப்பது வழக்கமானது. அம்மாவும் அப்பாவும் நிறைய தமிழ் புத்தங்கள் வாசிப்பார்கள். கல்கி,சாண்டில்யன்,சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் எப்பொழுதும் வீட்டில் இறைந்து கிடைக்கும்.
நான் சில சுஜாதா நாவல்களைப் படித்து இருக்கிறேன். ஒன்று இரண்டு வேறு எழுத்தாளர்களும். மொத்தமாக நான் படித்த தமிழ் புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்த பள்ளி முறையினால் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்றாக படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எப்பொழுதும் நல்ல ஆங்கில நூல்களை தேர்வு செய்து படிக்கச்சொல்லும் மாமா ஒரு நாள் எனக்கு அறம் புத்தகத்தினை அளித்தார்.
முதலில் தமிழ் நடையினை கண்டு மிகவும் கடுமையாக இருக்கும் படிக்க என எண்ணினேன். நெல்லை வழக்கு முறைகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே கண்டது உண்டு. ஒரு வாக்கியத்தினை முழுமையாக ஆங்கில கலப்படம் இல்லாமல் பேசத்தெரியாத என் போன்ற தலை முறைக்கு இப்புத்தகத்தின் நடை ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. ஆனால் போக போக உங்கள் நடை எனக்கு பழகிப்போனது. எனக்கு கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டு. எனக்கு உங்கள் நடை உரையை விட கவிதை போல தான் இருந்தது.
எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை எனக்கு சொல்ல தெரியவில்லை. என்னை மிக வியக்க வைத்தது என்னவென்றால், எப்படி ஒருவர் அன்றாட வாழ்வியல் கதைகளை துப்பறியும் நாவல்களின் துடிப்புடன் எழுதி உள்ளார் என்பதுதான். ஆங்கிலத்தில் இதனை “பேஜ் டர்னர் “என்பர். ஒவ்வொரு கதையும் என்னை ஆழமாக தாக்கியது. யானை டாக்டர் கதையின் இறுதியில் யானைகள் எல்லாம் ஒன்றாக நின்று தும்பிக்கை தூக்கி நன்றி செலுத்தியக் காட்சியினில் என்னையே அறியாமல் கண்ணீர் விட்டேன். என்ன பிறப்பு இந்த மானுடம் என்ற கேள்வி தோன்றியது. ஒவ்வொரு கதையும் என்னுள் வேறு வேறு உணர்ச்சிகளை எழுப்பியது. ஆனால் மனம் உருகாத கதை என்று ஏதும் இல்லை. அது சோற்று கணக்காக இருக்கட்டும், மயில் கழுத்தாக இருக்கட்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் கையாளப்பட்ட விதமும் என்னை கவர்ந்தது.
ஒரு கதை மனதில் ஆழமாக பதிய வாசகனால் அதனை ரிலேட் செய்ய முடிய வேண்டும் இல்லையெனில் அவனை அது பாதிக்க வேண்டும். எனக்கு இரண்டும் ஏற்பட்டது. சோகங்களை மட்டுமே முகத்தினில் அறையாமல், எதிர் நீச்சல் போட்ட மனிதர்களின் கதைகள் என்பதனால், ஒவ்வொரு கதையின் முடிவிலும் புத்துணர்வு பெற்றேன். அவர்களின் வெற்றிகள் எனது போன்று தோன்றியது.
மொத்தத்தில் இந்த கதைகள் எல்லாம் எனக்கு ஊக்குவித்தல் தந்தது. உங்களது வேறு படைப்புகளையும் படிக்க ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றேன். இத்தகைய படைப்பினை தந்ததற்கு மிக்க நன்றி. எழுத்துப் பிழைகள் இருந்தால் கனிவோடு மன்னிக்கவும்
பூஜ்யா ரவிசங்கர்
***
அன்புள்ள பூஜ்யா,
நீங்கள் அதிகமாகத் தமிழில் வாசிக்காதபோதே நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழில் வாசிப்பதற்குரிய முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் பல உள்ளன. ஆங்கில வாசிப்புக்கும் தமிழ் வாசிப்புக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் உண்டு. ஆங்கில வாசிப்பு உலகத்தை காட்டும். தமிழ்நூல்களே நாம் வாழும் பண்பாட்டுச்சூழலை, நம் சமூகத்தை, நம் வரலாற்றின் உள்ளடக்கத்தை காட்டுபவை
அறம் ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். வாழ்த்துக்கள்
ஜெ
***
அன்புள்ள ஜெ
அறம் சிறுகதைத் தொகுதியை மூன்றாம் முறையாக இப்போது வாசித்தேன். முதல்முறையாக உங்கள் தளத்தில் வாசித்தேன். இந்த மூன்றாவது வாசிப்பில்தான் உண்மையில் கதைகளின் ஆழத்துக்குச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.
ஆரம்பவாசிப்பில் அவை உணர்ச்சிகரமான கதைகள் என்னும் எண்ணம் வந்தது. ஆனால் இரண்டாம்வாசிப்பில் கதைகளில் உணர்ச்சிகரமான எந்த நிகழ்ச்சிகளும் இல்லை என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் தெரிந்தது. மிகுந்த உணர்ச்சிகரமான கதைகள் என்றால் நூறுநாற்காலிகள், வணங்கான் இரண்டும்தான். இரண்டு கதைகளுமே எல்லா நிகழ்ச்சிகளையும் மிகச்சுருக்கமாக, விட்டேத்தியாகச் சொல்கின்றன. நூறுநாற்காலிகளில் அம்மாவை காப்பன் அடிக்கும் காட்சியில்கூட ஒரு வகையான உணர்ச்சிகரமும் இல்லை. அசோகமித்திரன் மட்டும்தான் இப்படி தமிழில் அண்டர்பிளே பண்ணி எழுதுவார்
அப்படியென்றால் என்ன வகையான உணர்ச்சிகரம் எனக்கு ஏற்பட்டது என்றால் அது கதையிலே இருக்கும் உணர்ச்சிகரம் அல்ல. எனக்கு அப்படித்தோன்றியதுதான். நான் அடைந்ததுதான். இந்த வேறுபாடு எனக்கு பயங்கரமான ஆச்சரியமாக இருந்தது. அதுகூட உணர்ச்சிகரம் அல்ல. அதாவது சோகம் கோபம் ஒன்றுமல்ல. கதைகளில் இருந்த அந்த இலட்சியவாதம் அளிக்கிற மன எழுச்சிதான். அது துக்கம் இல்லை. ஒரு வகையான நெகிழ்ச்சி. நல்லவற்றைப்பார்க்கையில் வருகிற ஒரு கண்ணீர் அவ்வளவுதான். செக்காவின் பல கதைகளிலே இந்த நெகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். டாஸ்டாயெவ்ஸ்கியின் கிரைம் ஆண்ட் பனிஷ்மெண்டிலே அடைந்திருக்கிறேன். சமீபத்தில் ஆஞ்சலாஸ் ஆஷஸ் அப்படி என்னை நெகிழவைத்த நாவல்.
ஆனால் மூன்றாம்முறையாக வாசிக்கும்போது நிறைய நுட்பங்கள் இருக்கின்றன என நினைத்தேன் .இது இலட்சியவாதத்தின் கதைகளா என்றால் பல கதைகள் இலட்சியவாதத்தின் தோல்வியைப்பற்றிய கதைகள் என நினைக்கிறேன். கோட்டி எல்லாம் அடிப்படையான தோல்வியைத்தான் பேசுகின்றன இல்லையா? அதேபோல யானை டாக்டர். அதுவும் இலட்சியவாதம் எப்படி கிரேஸ்ஃபுல் ஆக தோற்கிறது என்றுதான் சொல்கிறது. உலகம்யாவையும்கூட அப்படித்தான்
அதோடு கவித்துவம். யானைடாக்டர் யானையைப்பற்றிய கதையா? இல்லை, அது புழுவைப்பற்றிய கதையும்தான். யானை முதல் புழு வரை. கோட்டி என்பது பூமேடை பற்றிய கதையா? இல்லை புதியபூமேடை உருவாவதைப்பற்றிய கதை.
நிறைய எழுதவேண்டும். தயக்கமாக இருக்கிறது. நன்றி
எஸ்.ஆர்.பூமிநாதன்
***
அன்புள்ள பூமிநாதன்,
அறம் தொகுப்பின் கதைகள் ஒரு பொதுவாசிப்புக்கான முதல்தளம் முதல் ஆழமான வேறு ஒரு உணர்வுத்தளம் வரை செல்பவை என்பதே என் எண்ணமும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
அறம் -கடிதங்கள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
மண்ணாப்பேடி
வாசிப்பு – இருகடிதங்கள்
தாயார்பாதம், அறம்- அஸ்வத்
நான்கு வேடங்கள்
மின் தமிழ் பேட்டி 2
மனப்பாடம்
முத்தம்
தாயார் பாதமும் அறமும்
அறம் தீண்டும் கரங்கள்
துணை இணையதளங்கள்
அறத்தான்
அறம் – சிக்கந்தர்
கற்பு என்பது…
அறம் கடிதங்கள்
அறம் ஒரு கடிதம்
அறமும் வாசகர்களும்
அறம் – ஹரணி
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
74. ஆழமுது
குருநகரி தேவயானியை பெரும் கொண்டாட்டத்துடன்தான் வரவேற்கும் என்று யயாதி முன்னரே அறிந்திருந்தான். சர்மிஷ்டையை அவன் மணங்கொள்ள முடிவெடுத்தது முன்னரே நகரில் ஆழ்ந்த சோர்வை உருவாக்கியிருந்தது. அம்முடிவை அவன் அவையில் அறிவித்தபோது அந்தணர் பகுதியிலிருந்து எந்த எதிர்ப்பொலியும் எழவில்லை. விழி திருப்பாமலேயே அங்கு நிலவிய இறுக்கத்தை அவன் உணர்ந்துகொண்டான். எனவே அவர்களை நோக்கி சொல்லெடுத்து எதிர்ச்சொல் அவையில் எழவேண்டாமென்று எண்ணி தன் அறிவிப்பை ஏற்று எதிர்வினையாற்றிய குலமூத்தாரை மட்டும் நோக்கி பேசி அரங்கை முடித்தான்.
அவன் தனியறை நோக்கி நடக்கையில் அருகே நடந்தபடி பார்க்கவன் “என்ன நிகழுமென்று சொல்ல முடியவில்லை, அரசே” என்றான். “ஏன்? ஐங்குடி அவையினரும் அனைத்தையும் ஏற்கத்தானே செய்தனர்?” என்று யயாதி வேண்டுமென்றே கேட்டான். “அவை முற்றிலும் ஏற்றுக்கொண்டது. குலத்தலைவர்கள் அனைவருமே இது ஒரு நன்முடிவு என்றுதான் எண்ணினார்கள். ஏனெனில் அவர்கள் போருக்குச் சென்றவர்கள். போரென்பது படைக்கலம் ஏந்தும் கைகளின் எண்ணிக்கையால் மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அசுரரும் ஷத்ரியர்களும் இணைவார்கள் என்றால் பாரதவர்ஷத்தில் நமக்கு எதிர்நிற்கும் கொடியென ஒன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னரே அவர்கள் வந்து இந்த அவையமர்ந்தனர். ஆனால்…” என்றான்.
அவன் சொல்வதற்காக யயாதி சற்று நடை தளர்த்தினான். “ஆனால் அந்தணர்கள் ஏற்கவில்லை” என்றான் பார்க்கவன். ”அவர்கள் எதுவும் சொல்லவில்லையே?” என்றான் யயாதி. “ஆம், சொல்லவில்லை. ஆனால் அவர்களின் உடலசைவுகளும் விழியொளிகளும் அனைத்தையும் காட்டின. அவர்கள் குலக்கலப்பை ஏற்கவில்லை” என்றான் பார்க்கவன். யயாதி “அந்தணர் எனும் குலமே குருதிகலந்து உருவாகி வந்தது என்பதுதானே குடிமுறை கூறும் அத்தனை சூதர்களும் சொல்வது?” என்றான் “ஆம். எந்தக் குலம் கலந்துருவாகி வந்ததோ அக்குலமே மேலும் கலப்பதற்கான தயக்கத்தை கொண்டிருக்கும். குலக்கலப்பிற்கு எதிரான நெறிகளையும் வகுத்துவிட்டிருக்கும். தூய குலங்கள் எப்போதும் பிற குலங்களுடன் கலப்பதற்கான உளநிலையே கொண்டிருக்கும்” என்றான் பார்க்கவன்.
“விந்தையாக இருக்கிறது இந்த நோக்கு” என்றபடி இடையில் கைவைத்து திரும்பி நின்று புன்னகைத்தான் யயாதி. “ஆம். அரக்கர் குலங்களிலும் நிஷாத குலங்களிலுமே குருதித் தூய்மை இன்னும் நீடிக்கிறது. அவர்கள் மகரந்தம் தேடி மலர்ந்திருக்கிறார்கள். அந்தணர் குலமோ இங்கு இருந்த பல்லாயிரம் தொல்குடிகளின் பூசகர்களின் தொகுப்பு. நால்வேதமரபை ஏற்றுக்கொண்டு வேள்விகளுக்குள் வந்தவர்கள் தங்கள் ஆசிரியர் மரபின் பெயராலேயே குலங்களாக ஆனார்கள். மனை ஏற்பு, மைந்து ஏற்பு, உடன்குருதி ஏற்பு, அனல்சான்று ஏற்பு, வேதச்சொல் ஏற்பு என்னும் ஐந்து முறைகளில் அவர்கள் இன்றும் பிற குருதிக்கலப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருநாளும் அவர்கள் குருதிக்கலப்புக்கு எதிராக இறுக்கமான நெறிகளையும் உருவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் இக்கட்டு இருமுனைப்பட்டது. குருதிக்கலப்பு இல்லையேல் அவர்களால் பாரதவர்ஷமெங்கும் பரவ முடியாது. ஆனால் குருதிச்சுவடு இல்லாமலானால் மெல்ல மெல்ல அந்தணர் என்னும் குலமே இல்லாமலாகவும் கூடும்” என்றான் பார்க்கவன்.
“ஆம்” என்று யயாதி தலையசைத்தான். “குலக்கலப்பு தரவேறுபாடுகளை உருவாக்குவதை நடைமுறையில் பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். குலக்கலப்பினால் உருவான தென்னக அந்தணர் வடபுலத்தோரால் ஒரு படி குறைவாகவே எண்ணப்படுவதை எவரும் அறிவர். எனவே தங்கள் குருதித்தூய்மையை ஓங்கி அறைந்து நிறுவ வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் இவர்கள். அதன்பொருட்டு ஒவ்வொரு நாளும் குலத்தூய்மையையும் மேன்மையையும் அறைகூவும் நூல்களை எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரிந்தெழுந்தது ஒரு காலம். இன்று அவர்கள் சுருங்கி இறுகவேண்டிய அடுத்த காலகட்டம் வந்தணைந்துள்ளது” என்றான் பார்க்கவன்.
“ஆனால் நாம் வீசப்படும் மீன்வலையென விரிந்து பாரதவர்ஷத்தை அள்ளித் தொகுக்கும் நிலையில் இருக்கிறோம்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஆம், ஷத்ரியருக்கும் அந்தணருக்கும் இடையே இப்பெரும் முரண்பாடு இங்குள்ளது” என்றபின் நகைத்து “முற்றிலும் குலக்கலப்பற்றவர்கள் கீழ்நிலையிலுள்ள குடிகள். ஆனால் அவர்கள்தான் குலக்கலப்பை எதிர்க்கும் அந்தணர்களின் குரலை காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்” என்றான். “எவ்வாறு?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் “இங்குள்ள அனைத்துக் குடிகளுக்கும் அந்தணர்களே வழிகாட்டிப்பறவைகள். அவர்களின் திசைகள் மாறியிருப்பது இன்னும் சில தலைமுறைகளுக்குள் அனைத்துக் குலங்களும் தங்கள் திசைகளை மாற்றிக்கொள்ளவிருப்பதற்கான அறிகுறி” என்றான். ஆனால் யயாதி அச்சொற்களை முழுக்க உள்வாங்கிக் கொள்ளவில்லை. “எதிர்ப்பின்றி நம் ஐங்குல அவையில் இவை முடிவெடுக்கப்பட்டது நன்றே” என்றான். “ஆம். ஆனால் அந்தணர்களிடமிருந்து இந்த ஐயமும் தயக்கமும் குலங்களிடம் பரவக்கூடாது” என்றான் பார்க்கவன்.
அவர்கள் எண்ணியது போலவே சிலநாட்களுக்குள் நகர் முழுக்க அனைத்துக் குலங்களும் ஐயம் கொண்டன. “ஆம், அசுரரின் குருதி நம் அரசகுலத்தில் நுழைகிறது. அசுரர்கள் நமது குடிகளாக இணைந்து நாம் வெல்லப்போகிறோம்” என்றார் ஒரு முதியவர். அவர் குரலில் இருந்த பகடியை உணராமல் சினம் கொண்டு “வெல்லவிருப்பது எவர்? அவர்களா நாமா? எவர் மீது எவர் ஏறிக்கொள்கிறார்கள் என்று எப்போது எவர் முடிவெடுக்க முடியும்?” என்று முச்சந்தியில் வணிகன் ஒருவன் உரக்கக் கேட்டான். அவனைச் சூழ்ந்து கூடிநின்றவர்களின் முகங்களில் ஐயமும் விலக்கமும் தெரிந்தது. ஒருவன் “இதையெல்லாம் இங்கு நின்று பேசுவதில் என்ன பொருள்?” என்றான். “முச்சந்தியில் பேசுவது அனைத்தும் அரசனுக்குச் சென்றடையும். உங்கள் கருத்து என்னவென்றாலும் அதை தெருவிலறங்கி சொல்லுங்கள். அது அரசனிடம் சொல்வதற்கு நிகர்தான். இங்கு ஒற்றர்களில்லை என்று எவர் சொன்னது?” என்றான் ஓர் இளம்வணிகன். “சென்றடைந்து என்ன பொருள்? அவர்தான் முடிவெடுத்துவிட்டாரே?” என்றான் இன்னொருவன். “முடிவெடுத்தது உண்மை. அசுரகுல அரசி இங்கு வரட்டும். ஆனால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை இங்கு அரசாளலாகாது. அதற்கு நம் ஒப்புதல் இல்லை என்பதை அரசர் அறியவேண்டும்” என்றான் வணிகன்.
காவல்மேடையில் அமர்ந்திருந்த முதிய காவலன் ஒருவன் “ஷத்ரியர்கள் அசுரர்களைப்போல அல்ல. அசுரர்கள் மழைக்காலப் பெருவெள்ளம்போல படைகொண்டு செல்பவர்கள். அவர்களின் விரைவும் விசையும் மிகுதி” என்றான். “ஆனால் ஒற்றைப் பேரலையென அறைந்து பின் வடிவதே அவர்களின் போர் முறை. புராணங்களைக் கற்றால் தெரியும், எங்காவது அவர்கள் முடிவாக வென்றிருக்கிறார்களா? நாம் அப்படி அல்ல. நாம் மெல்ல மலையிறங்கும் கன்மதம் போன்றவர்கள். நெருப்பென்றாகி எழுந்து செல்லும்வழியை எதிர்த்து கணம்தோறும் உறைந்து கல்லென்றாகி நாம் முன்னேறுகிறோம். முற்றிலும் தோற்ற ஷத்ரியர்களே கிடையாதென்பதை எண்ணிக்கொள்ளுங்கள். நம்மில் கலக்கும் அசுரக்குருதி நமக்கு எதை அளிக்கப்போகிறது? இத்தலைமுறையில் வென்றாலும்கூட என்றும் வென்று இங்கிருப்போம் என்பதற்கு ஏதேனும் உறுதி உள்ளதா?”
வேளாளர்களின் அவை அவர்களின் குடித்தெய்வமான மேழிராமனின் சிற்றாலயத்தில் நடந்தது. முதியவரான சக்ரர் தன் நடுங்கும் குரலில் சொன்னார் “குருதிக்கு தனக்கென்று இயல்புள்ளது. குருதியை ஏற்றுக்கொள்கையில் அவ்வியல்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றே பொருள்.” “தன்னில் வந்து கலக்கும் எதையாவது விலக்கும் ஆற்றல் பேராற்றுக்கு உண்டா என்ன?” என்றான் ஒருவன். “பேராறென்றால் அனைத்தையும் தனதாக்க இயலும். சிற்றாறுகள் கழிவு கலந்தால் நாறி அழியும்” என்றார் முதியவர். “நம்மில் கலக்கும் குருதியின் உட்பொருள் என்னவென்று நாம் அறிந்திருக்க வேண்டும். அசுரர்களின் வேதம் பழையது. அவர்களின் விழைவுகளும் பெரிது. அவர்களின் குலமுறைமைகளும் நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை.”
ஒவ்வொரு சொல்லும் யயாதியை பகல் முழுக்க வந்து சேர்ந்துகொண்டிருந்தது. பார்க்கவன் “இவையனைத்தும் அந்தணர் சாலைகளிலிருந்து எழுபவை. ஆனால் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது எந்த ஒற்றனாலும் இங்கு சொல்லப்படவில்லை. அவர்கள் அவைகூடி பேசுவதில்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதுகூட சொல்லெண்ணியே உளம்எடுக்கிறார்கள். எனினும் அவர்களின் எண்ணம் எப்படி இந்நகர் முழுக்க சென்று சேர்கிறது என்பது புதிரானது. பனிக்கட்டியிலிருந்து குளிர் பரவுவதுபோல அவர்களின் எண்ணம் அனைவரையும் சென்றடைகின்றது” என்றான்.
“அந்தணர்களை அழைத்து நேரடியாகவே நம் எண்ணத்தை அவர்களிடம் சொன்னாலென்ன?” என்று யயாதி கேட்டான். “தாங்கள் எந்த எதிர்ப்பும் கொண்டிருக்கவில்லை என்றே அவர்கள் சொல்வார்கள். நீங்கள் எங்களிடம் சொல்லவே வேண்டியதில்லை அரசே, உங்கள் கொள்கையை அன்றே அவையில் ஏற்றுக்கொண்டோமே என்பார்கள். அவர்களிடம் எவ்வகையிலும் பேசி பொருளில்லை” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “உண்மை, ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் வென்று காட்டும்போது விளைவுகளால் உளம் மாறுவார்கள் என எதிர்பார்ப்போம்” என்றான். பார்க்கவன் சிரித்து “ஆம், அப்போது இந்தக் குலக்கலப்புக்கு உரிய அரிய கதைகளை அவர்கள் உருவாக்கி அளிப்பார்கள்” என்றான்.
சர்மிஷ்டைக்கு மாற்றாக தேவயானியை தான் மணங்கொள்ளும் செய்தியை உடன்வந்த ஐங்குலத் தலைவர்களிடம் சொன்னபோது அவர்கள் அனைவரின் முகங்களும் மலர்வதை யயாதி கண்டான். அவர்கள் அனைவருள்ளும் இருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒன்று எழுந்து விலக, அந்த உவகையை மறைத்தபடி முதியவர் ஒருவர் “நாம் அசுரகுலத்தில் பெண்கொள்ள வந்துள்ளோம். அவர்கள் தங்கள் பெண்ணென அளிக்கும் எவரும் ஏற்கத்தக்கவரே” என்றார். இன்னொருவர் “சுக்ரரின் முழுச்சொல்லுறுதி நமக்கு கிடைக்குமென்றால் அது நன்றே” என்றார். ஆனால் சர்மிஷ்டையும் தேவயானிக்கு சேடிப்பெண்ணாக ஹிரண்யபுரியிலிருந்து குருநகரிக்கு வருவதைப்பற்றி அவர்கள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாகவே அவர்கள் எவர் பேச்சிலும் தென்படவில்லை.
அச்செய்தி பறவைகள் மூலம் குருருநகரிக்கு சென்றது. குருநகரியின் நிமித்திகர்கள் அதை நகர் முச்சந்திகளில் முரசறைவித்தனர். மக்களின் எதிர்வினையை அங்கிருந்த ஒற்றர்கள் மூலம் யயாதி அறிந்தான். “நகர் களிவெறி கொண்டிருக்கிறது. தெய்வங்களின் நற்சொல் எழுந்துள்ளது என்றே ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். அந்தணர் தங்கள் சாலைகளில் செய்த வேள்விக்கு தேவர்களின் அருளென்றே இதை எண்ணுகிறார்கள்” என்றான் ஒற்றனாகிய சரபன். “அந்தண குலத்துப் பெண் அரசியாவதென்பது வேதத்தின் ஆணை என்று முதுவைதிகராகிய பிரசாந்தர் உரைத்தார். வேள்விச்சாலையில் தன் மாணவரிடம் அவர் சொன்ன அச்சொல் ஒருநாளுக்குள் அந்நகரின் அத்தனை குடிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அனைவரும் அவ்வாறே எண்ணுகிறார்கள். பேரரசி இந்நகருக்குள் கால்வைப்பதென்பது கொற்றவை திருமகளின் உருக்கொண்டு நுழைவதுபோல என அவைக்கவிஞர் வராகர் பாடியிருக்கிறார். அவ்வரியின் பலநூறு வடிவங்களாக சூதர்களின் பாடல் நகர் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது.”
யயாதி தன்னுள் மெல்லிய நிறைவை உணர்ந்தபோதுதான் தானும் அசுரகுலக்குருதி குறித்த உள்ளுலைவை கொண்டிருந்ததை உணர்ந்தான். “ஆம், ஒவ்வொன்றும் அதனதன் வழியில் சென்று நிறைவுற்றுவிட்டன. இடர்கள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன” என்று அவன் சொன்னான். பார்க்கவன் புன்னகைத்து “அனைத்தும் முற்றிலும் சீரடைந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் எதுவும் எப்போதும் முற்றிலும் சீரமைவதில்லை. முற்றமைதிக்குள்ளிருந்து ஒன்று முரண்கொண்டு எழுகிறது. ஏனெனில் வாழ்க்கை முன்னகர விழைகிறது. அந்த முரண் என்பது ஒரு முளைக்கணு” என்றான். “இத்தருணத்திலும் நாம் ஐயத்தை சுமந்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று யயாதி எரிச்சலுடன் கேட்டான். “அல்ல, ஒவ்வொரு நிகழ்தருணத்திலும் வரும்தருணத்தின் விதை ஒளிந்துகொண்டிருப்பதை உணர்ந்துகொண்டால் போதும்” என்றான் பார்க்கவன்.
தேவயானி நகர்நுழைந்த அன்று குருநகரி அதன் தலைமுறை நினைவுகள் எதிலுமில்லாத அளவுக்கு அணிகொண்டிருந்தது. நகருக்கு நெடுந்தொலைவிலேயே முதல் தோரணவாயில் ஈச்ச ஓலைத் தட்டிகளாலும் மூங்கில்களாலும் அமைக்கப்பட்டு முற்றிலும் மலர்களால் அணிசெய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பூத்த மலர்க்காடுபோல இருபுறமும் தோரணங்களும் மலர்மாலைகளும் செறிந்த வளைவுகள் கோட்டை முகப்பு வரை அமைந்திருந்தன. பட்டுப் பாவட்டாக்களும் அணித்தூண்களும் வண்ணம் பொலிந்தன.
முதல் தோரணவாயிலை அணிநிரை வந்தடைந்ததுமே அங்கு மூங்கில் கட்டி எழுப்பப்பட்டிருந்த முதன்மைக் காவல்மாடத்திலிருந்த பெருமுரசு எழுந்தது. அதைக் கேட்டு தொடர்ந்தமைந்திருந்த காவல்மாடங்களின் முரசுகள் முழங்க அப்பால் குருநகரியின் பெருங்கோட்டைக்குமேல் இரு உப்பரிகைகளில் அமைக்கப்பட்டிருந்த முரசுகள் ஓசையிட்டன. அதைக் கேட்டு நகரெங்கும் உள்ள காவல்மாடங்களில் முரசுகள் முழங்கத் தொடங்கின. குருநகரியின் மக்கள் கலைந்து எழுந்து உவகைக்குரல் எழுப்பிய ஓசை கலந்த முழக்கம் நெடுந்தொலைவிலேயே கேட்டது. முதல் தோரணவாயிலில் காத்து நின்றிருந்த அமைச்சர்களும் குடிமூத்தார்களும் தங்கள் படைக்கலங்களையும் மங்கலத்தாலங்களையும் குடிமுத்திரைகளையும் கொடிகளையும் எடுத்துக்கொண்டு நிரைவகுத்தனர்.
தொலைவில் புரவிகளின் குளம்படி ஓசை கேட்கலாயிற்று. முதல் கொடிவீரன் கவச உடையுடன் நீண்ட மண்சாலையின் மறுஎல்லையில் தோன்றியதும் வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்திருந்த காட்டை நிறைத்தன. கொடிவீரன் வந்து அவர்கள் முன் புரவியை இழுத்து நிறுத்தி இறங்கி கொடிதாழ்த்தி வணங்கி “குருநகரியின் பேரரசர், சந்திரகுலத் தோன்றல், நகுஷனின் மைந்தர் யயாதி எழுந்தருள்கிறார். உடன் ஹிரண்யபுரியின் அரசர் விருஷபர்வனின் அறப்புதல்வியும் சுக்ரரின் குருதிப்புதல்வியுமாகிய தேவயானி மணிமுடி சூடி எழுந்தருள்கிறார். இந்நகர் பொலிவு கொள்க!” என்று கூவினான். “வாழ்க! வாழ்க!” என்று அங்கு கூடிநின்றவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.
தொலைவில் கொடிகளின் வண்ணங்கள் அசையலாயின. பின்னர் தேர்களைச் சூழ்ந்துவந்த புரவிப்படையின் படைக்கலங்கள் இளங்காலை ஒளியில் திரும்பித் திரும்பி மின்னலடித்து விழிகளை வெட்டிச்சென்றன. புரவிக்காலடிகளும் சகடஒலிகளும் பெருகிப் பெருகி வந்தன. அவ்வொலிகளுக்கு பொருந்தாதவைபோல மெல்லிய அசைவுகளுடன் தேர்கள் வந்தன. முதலில் மங்கலச்சூதர் ஏறிய தட்டுத்தேர் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் நின்றிருந்த மலர்ப்பீடத்தேர். அவை அணுகி வந்து இரு கூறாக விலகி வழிவிட யயாதியின் மத்தகத்தேர் வந்து நின்றது. அதிலிருந்து கூப்பிய கைகளுடன் இறங்கிய யயாதி குனிந்து தன் மண்ணை இரு விரல்களால் கிள்ளி எடுத்து சென்னிசூடி வணங்கினான். அவன் புகழ் கூவி வாழ்த்தின அவன் அவையும் குடியும்.
யயாதியை அணுகிய அமைச்சர்களிடம் “அனைத்தும் சித்தமாக உள்ளன அல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம் அரசே, அனைத்தும் ஒருங்கியுள்ளன. அரசி ஊர்ந்து நகர் புகுவதற்கான அணித்தேர் அதோ காத்து நிற்கிறது” என்றார் விழவமைச்சரான கார்த்திகேயர். “அணித்தேரா? அது எவருடைய ஆணை?” என்று யயாதி குழப்பத்துடன் கேட்டான். அருகே நின்றிருந்த பார்க்கவன் தாழ்ந்த குரலில் “நான் தங்களிடம் முன்பே சொன்னேன் அரசே, மறந்துவிட்டிருப்பீர்கள். தன் புதல்வி மூன்றடுக்கு முகடும் தாமரைப்பீடமும் கொண்ட அணித்தேரில்தான் நகர்புக வேண்டுமென்று சுக்ரர் விரும்பினார். அத்தேரை விருஷபர்வனே கலிங்கச் சிற்பிகளைக் கொண்டு அமைத்து முன்னரே இங்கு கொண்டு சேர்ப்பித்திருக்கிறார்” என்றான்.
யயாதி திரும்பிப் பார்த்தபோது குறுங்காட்டில் மரங்களை அகற்றி உருவாக்கப்பட்ட சிறிய முற்றத்தில் அந்த அணித்தேர் மரவுரிப்போர்வையால் மூடப்பட்டு நின்றிருந்ததை கண்டான். “இத்தனை பெரிய தேரா?” என்றான். அவன் கைகாட்ட படைவீரர்கள் சென்று உறையை நான்கு பக்கமும் இழுத்து அகற்ற மூன்று மகுடமுகடுகளுடன், பன்னிரு ஓவியத்தூண்கள் நூற்றெட்டு இதழ்கொண்ட வட்டவடிவமான தாமரைப்பீடத்தில் ஊன்றி நிற்க, காகக்கொடி பறக்க அத்தேர் தெரிந்தது. அதன் சகடங்கள் தவிர எஞ்சிய பகுதி முழுக்க பொன் மின்னியது. விண்ணிலிருந்து பேருருவ மங்கை ஒருத்தியின் ஒற்றைத்தோடு உதிர்ந்து கிடப்பதுபோல.
நுண்ணிய அணிச்செதுக்குகள் மின்ன நின்றிருந்த அந்தத் தேர் அவனுக்கு அச்சத்தையே அளித்தது. தீச்சொல் வாழும் தொல்நகை அது என உளம் சிலிர்த்துக்கொண்டது. பெருஞ்செல்வத்தின்மேல் அமர்வது தெய்வங்களுக்கு அறைகூவல் விடுப்பது என அவன் இளமையில் கற்ற நெறிகள் சொல்லின. அது அசுரர்களின் இயல்பு. வெற்றிகளால் எழுந்து அறைகூவல்களால் வீழ்பவர்கள் அவர்கள். விழிகளை விலக்கியபடி “இதுவரை இந்நகருக்குள் பொற்தேரில் எவரும் நுழைந்ததில்லை” என்றான். “பாரதவர்ஷத்தில் இன்று வரை அரசியர் எவரும் பொற்தேரில் ஊர்ந்ததில்லை, அரசே” என்றான் பார்க்கவன்.
யயாதி நீள்மூச்சுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். தொலைவில் தேவயானியின் தேர் சித்திரச்செதுக்குகள் மின்ன, சுக்ரரின் காகக்கொடி பறக்க அணுகியது. “விருஷபர்வனின் அமுதகலக்கொடி அல்லவா அதில் பறந்தது?” என்று யயாதி பார்க்கவனிடம் கேட்டான். “நகர்விட்டு வந்ததுமே அதை விலக்கி தன் தந்தையின் கொடியே போதுமென்று அரசி ஆணையிட்டார்” என்றான் பார்க்கவன். தேவயானியின் தேர் வந்து நின்றதும் பார்க்கவனும் தலைமை அமைச்சர் சுகிர்தரும் குடித்தலைவர்களும் வாழ்த்தொலி எழுப்பியபடி அணுகி தலைவணங்கி நின்றனர். தேரை மூடியிருந்த பட்டுத் திரைச்சீலையை விலக்கி வலக்கால் எடுத்து வைத்து தேவயானி வெளியில் வந்தாள். அவள் குருநகரியின் மண்ணில் வலக்காலை எடுத்து வைத்தபோது பெண்டிர் குரவை முழங்கினர். வேதியர் வேதச்சொல்லுடன் கங்கைநீர் தெளித்து அவளை வாழ்த்தினர். மங்கலச்சூதர்களின் வாழ்த்து உடனெழுந்து சூழ்ந்தது.
கையில் நூற்றெட்டு இதழ்கள் கொண்ட பொற்தாமரை ஒன்றை அவள் வைத்திருந்தாள். புன்னகையுடன் சீரடி எடுத்து வைத்து வந்து நிற்க ஏழு வெண்புரவிகள் பூட்டிய பொற்தேர் மெல்ல ஒளி நலுங்கியபடி வந்து அவள் முன் நின்றது. பார்க்கவன் “தங்களுக்காக, அரசி” என்றான். “ஆம், என்னிடமும் இத்தேரைப்பற்றி சொன்னார்கள்” என்று சொல்லி மலர்ந்த முகத்துடன் நிமிர்ந்த தலையுடன் சென்று அத்தேரில் ஏறி அதன் சிம்மக்கைப்பிடி கொண்ட பீடத்தில் அமர்ந்தாள். அவளைப்போலவே அணியாடை சுற்றி நகை ஒளிர்ந்த சாயை தேரிலிருந்து இறங்கி அவள் நிழல் என தொடர்ந்துசென்று பொற்தேரில் ஏறி அவளுக்கு வலப்பக்கம் நின்றாள்.
பொன்மலரை தன் வலக்கையில் வைத்து நெஞ்சோடு சேர்த்து இடக்கையைத் தூக்கி செல்க என்று தேவயானி ஆணையிட்டாள். தேர் கிளம்பி ஒழுகிச் சென்றது. அதைச் சூழ்ந்தெழுந்த வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் சகட ஒலியை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தன. ஒவ்வொரு தோரணவாயிலிலும் மலர் மழையால் அத்தேர் மூடப்பட்டது. மலர்த்திரை ஒன்றை முடிவிலாது பிளந்துகொண்டே செல்வதுபோல கோட்டை வாயிலை அணுகியது. கோட்டை மீதிருந்து பல்லாயிரம் வீரர்கள் தங்கள் ஒளிரும் வாட்களை தலைக்கு மேல் தூக்கி “குருநகரியின் பேரரசி வாழ்க! சுக்ரரின் மெய்மகள் வாழ்க! அசுர குலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தினர்.
நகருக்குள் காலைக்கதிரவன்போல் அவள் நுழைந்தாள். தெருக்களையும் உப்பரிகைகளையும் முற்றிலும் நிறைத்திருந்த மக்கள்திரள் மீது மிதந்து அசைந்து சென்றது தேர். முழுதணிக்கோலத்தில் முடிசூடி நின்றிருந்த அவளை உடலெங்கும் மின்னும் அருமணிகள் ஆயிரம் விழிகள் கொண்டவளென தோன்றச் செய்தன. விண்ணுருகிச் சொட்டிய துளி என்றிருந்த தேவயானியைத் தவிர பிறிதெவரையும் அன்று மக்கள் நினைக்கவில்லை. அவர்கள் கற்றறிந்த கதைகளிலிருந்து, கண்ட கனவுகளிலிருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள்.
கோட்டை வாயிலுக்கு வெளியிலேயே தன் தேரை நிறுத்தி யயாதி பார்த்து நின்றிருந்தான். பார்க்கவனிடம் “அவள் அணிநிரை அரண்மனை புகட்டும். நான் சற்று பிந்தி நுழைகிறேன்” என்றான். “அரசே…” என்று அவன் தயங்கினான். “மணமக்கள் இணைந்து நகர்புக வேண்டுமென்பது நெறி. ஆனால் இக்கொந்தளிப்பில் ஒருவர்கூட என் பெயரை உரைக்கவில்லை அவளருகே நான் நின்றிருந்தால் எளிய மானுடன் என அவர்களின் உள்ளத்தாழத்தில் பதிவேன். நாளை அரண்மனையில் நிகழும் மூத்தார் பூசனைகளிலும் பலிக்கொடைகளிலும் இணைந்து நிற்பேன். இந்நாள் அவளுக்குரியதாகுக!” என்றான். “ஆம், ஒருவகையில் அதுவும் நன்றே” என்று பார்க்கவன் சொன்னான்.
யயாதி திரும்பி நோக்கியபோது நீண்ட நிரையின் முதலில் சிறிய வண்டியொன்று வந்து நின்றது. “விருஷபர்வனின் அரண்மனைச் சேடியர் நூற்றெண்மர்” என்றான் பார்க்கவன். “அவர்களுடன் இளவரசியும் வந்துள்ளாரா?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் யயாதியின் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தைத் தொட்டு “விருஷபர்வனின் மகளும் அவர்களுடன் வந்துளார்” என்றான். உள்ளுணர்வொன்று உறுத்திச் செல்ல யயாதி திரும்பி அந்த வண்டியை நோக்கினான். அதன் எளிய மரவுரித்திரை விலக உள்ளிருந்து சர்மிஷ்டை இறங்கி ஹிரண்புரியின் மண்ணில் வலக்கால் வைத்தாள். குனிந்து மண்ணைத்தொட்டு சென்னிசூடி கைகூப்பி வணங்கினாள்.
“அவள் கையில் வைத்திருப்பதென்ன?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் “ஒரு சிறு பொற்கிண்ணம்” என்றான். பின்னர் விழிகூர்ந்து “அது அவர்களின் குலமுத்திரை, அமுதகலம்” என்றான்.
யயாதி விழித்தெழுந்தபோது அவன் மஞ்சத்தின் நடுவே கைகால்கள் விரித்து வானிலிருந்து விழுந்தவன்போல துயின்றுகொண்டிருந்தான். நெடுநேரம் எங்கிருக்கிறோம் என்ற உணர்வையே அவன் அடையவில்லை. பின்னர் எழுந்து உடையை சீரமைத்துக்கொண்டு மிதியடிகளை போட்டுக்கொண்டான். அவ்வோசை கேட்டு கதவை மெல்லத் திறந்த இருபாலின ஏவலன் தலைவணங்கி நின்றான்.
“அரசி எங்கே?” என்றான் யயாதி. “அவர்கள் நேற்று ஒற்றர்களிடம் சொல்லுசாவி முடிப்பதற்குள் முதற்கோழி கூவிவிட்டது. ஆகவே மஞ்சத்தறைக்கே வரவில்லை. நேரடியாக நீராட்டறைக்குச் சென்று அணியும் உடையும் மாற்றிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்கள். கோட்டைக்காவலை சீர்நோக்கும் முறைநாள் இன்று” என்றான். யயாதி ஒருகணம் கழித்தே அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டான். பின்னர் தன் சால்வையை எடுத்து அணிந்தபின் “நான் வந்திருந்தேன் என்று மட்டும் அவளிடம் சொல்!” என்றான்.
இடைநாழியில் நடந்தபோது பார்க்கவனை சந்திக்கவேன்டும் என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் எழுந்திருந்தது. சிறுகூடத்தில் பார்க்கவன் தன்னைக் காத்து நின்றிருக்கக் கண்டதும் இரு ஆண்களுக்கிடையே ஏற்படும் உள நெருக்கம் வேறெங்கும் உருவாக முடியுமா என எண்ணிக்கொன்டான். பார்க்கவன் ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கினான்.
“நான் இன்று தெற்குச் சோலைக்கு செல்லலாம் என எண்ணுகிறேன். அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்து சலித்துவிட்டது” என்றான் யயாதி. “திருவிடத்துச் சூதர் சிலர் வந்துள்ளனர். அவர்களிடம் அரிய சில கதைகள் உள்ளன. அவர்களையும் அழைத்துச் செல்வோம்” என்றான் பார்க்கவன். “அவர்கள் கதைகளில் சிவன் வாழ்ந்தது தென்குமரி முனையருகே மகேந்திரமலையில். அங்கே அவர் மலைவடிவமாக தோன்றியதே சிவக்குறி. தென்னாடுடைய சிவன் என்கிறார்கள்.”
யயாதி “முன்பு ஒரு தென்னகப் பாணன் விண்ணவனும் தென்னவனே என்று பாடியதையும் கேட்டுள்ளேன். மலைநின்ற மால் என்றான்” என்றான். அவர்கள் நடந்தனர். “நாம் துயில்கையில் எங்கிருக்கிறோம்?” என்றான் யயாதி. அவன் முன்பின் இல்லாது அதை கேட்டமையால் பார்க்கவன் அவனே சொல்லட்டும் என காத்திருந்தான். “நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் எங்கோ ஒரு காட்டில் இருந்தேன். எனக்கு நான்கு இளையவர்கள். நால்வர் முகத்தையும் நன்கு கண்டேன். இதுவரை நான் எங்கும் காணாத முகங்கள். இரண்டாமவனின் பெருந்தோள்களை தொட்டு அறிந்தது போலவே உணர்கிறேன்.”
பார்க்கவன் “கனவுகளும் மனிதர்களும், பறவைகளும் மரங்களும் போல” என்றான். அந்த ஒப்புமையின் கூர்மை யயாதியை நிற்கச் செய்தது. பின்னர் “மெய், பறவை வடிவில் வானம் வந்து மரங்கள்மேல் அமர்கிறது என்று கவிக்கூற்று உண்டு” என்றான். “கைநீட்டி இலைபரப்பி வானம் வானம் என்று தவமிருந்த மரங்களுக்கு சிறகுகளை மடித்து வந்தமர்ந்து ஊழ்கத்திலாழும் பறவைகள் கிடைக்கின்றன” என்றான் பார்க்கவன். “ருத்ரபைரவரின் தசபதமாலிகா” என்று யயாதி சொன்னான். அவ்வரி இருவரையுமே மலரச்செய்தது. விளக்கேற்றி வைக்கப்பட்ட நீர்த்தாலம்போல அப்புன்னகையின் ஒளியுடன் இருவரும் நடந்தனர்.
யயாதி தன் அறையை அடைந்ததும் “நான் நேற்று அவள் நகர்புகுந்ததை மீண்டும் கனவில் கண்டேன்” என்றான். “அவள் நீள்குழல் மட்டுமே தெரிந்தது. ஐந்து ஒழுக்குகளாக பகுக்கப்பட்டு அது அலையிளகியது.” பார்க்கவன் ஒன்றும் சொல்லவில்லை. அந்நிகழ்விலிருந்து யயாதி விடுபடவே இல்லை என அவன் அறிந்திருந்தான்.
“விருஷபர்வனின் மகள் எங்கிருக்கிறாள்?” என்றான் யயாதி. “சேடியர் மாளிகையில்தான். பேரரசியின் பெண்டிருடன். ஆனால் அவரை பேரரசி முழுமையாகவே மறந்துவிட்டார்கள் என தோன்றுகிறது.” யயாதி “அவள் கொண்டுவந்த அமுதகலத்தை நேற்று கனவில் கண்டேன். நான் என் நான்கு தம்பியருடன் ஒரு நகருக்குள் நுழைகிறேன். அதன் முகப்பில் அந்த அமுதகல முத்திரை இருந்தது” என்றான். “ஒரே இரவில் எத்தனை கனவுகள்…”
பார்க்கவன் “நீங்கள் எதையோ அடக்கிக்கொண்டு துயின்றீர்கள். அது அனைத்தையும் சீண்டி கனவுகளாக எழுந்திருக்கிறது” என்றான். “அறியேன். நாம் அந்த இளவரசியை அவ்வாறு கைவிடுவது தகாது. அவள் சேடிநிலையிலேயே இருக்கட்டும். ஆனால் அரசிக்குரிய வாழ்க்கையை அவளுக்கு அளிப்போம்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். இன்று நம் படைகளில் அசுரரே மிகுதி. அவர்கள் அவ்விளவரசியை முற்றாகவே மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் எவரேனும் நினைவூட்டினால் நம் மீது பெரும் மனக்குறையாக அது வெடிக்கக்கூடும்” என்றான் பார்க்கவன்.
“தேவயானி அவளை மறந்துவிட்டாள் என்பது நல்லதுதான். அவளை அருகிலுள்ள நகர்கள் எதற்காவது அனுப்பு. அங்கே அவள் தனி மாளிகையில் வாழட்டும். அரசிக்குரிய அனைத்தும் அவளுக்கு அளிக்கப்படட்டும்” என்றான் யயாதி. பார்க்கவன் தலை வணங்கி “ஆம்” என்றான். “நான் நீராடி வருகிறேன்… நம் கிளைகள் முழுக்க பறவைகளை நிறைப்போம்” என்று யயாதி சொன்னான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
April 13, 2017
கால்கள், பாதைகள்
எலியட்
அன்புள்ள ஜெ.,
எலியட்டின் கட்டுரைத்தொகுப்பு நூலை வாசிக்கத்தொடங்கியுள்ளேன். ஒரு கட்டுரையில், எழுத்தாளருக்கு கட்டாயமாக இருக்கவேண்டிய இலக்கியம் சார்ந்த வரலாற்று நோக்கை பற்றி பேசுகிறார். எந்த ஆக்கமும் தனித்து நிற்பதில்லை; அந்தச்சூழலின் , அந்த மொழியின், அந்தக்கலாசாரத்தின் மொத்த எழுத்துப்பாரம்பரியத்தின் முன்னால் ஒவ்வொரு புது ஆக்கமும் நிற்கிறது என்கிறார்.
ஒரு விதத்தில் ஒரு புது ஆக்கத்தின் வருகை பழையவை அதுவரை உருவாக்கி வைத்த சமனை குலைக்கிறது. பழைய ஒழுங்கை கெடுக்கிறது. புதியது சேறும் போது புதிய ஒழுங்கை உருவாகிறது என்கிறார். கடந்தகாலம் நிகழ்காலத்தை மாற்றியமைப்பதுபோல் நிகழ்காலமும் கடந்தகாலத்தை மாற்றியமைக்கலாம் என்கிறார். (அதாவது பழைய நூல்களை நாம் இன்று வாசிப்பது என்பது, இன்றைய தேடல்கள், தேவைகளை வைத்துச் செய்யப்படும் மறுவாசிப்பு என்பதாக இதை நான் புரிந்து கொள்கிறேன்.)
இந்த கட்டுரையை படித்த உத்வேகத்தில் சிறிது நேரம் என் புத்தக அலமாரிக்கு முன்னால் நின்று நிகழ்காலத்துக்கு முதுகை காட்டிக்கொண்டு கடந்தகாலத்தை திரும்பி நோக்கும் பாவனையோடு நூல்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதன் கதைசொல்ல கற்றுக்கொண்ட காலம் தொடங்கி இன்று வரை எனக்குத்தெரிந்த புத்தகங்களும் நான் படித்த ஆசிரியர்களும் கண்முன்னால் அணிவகுத்தனர். மிக இயல்பாகவே, மனம் நூல்களையும் ஆசிரியர்களையும் பட்டியல் போடத் தொடங்கியது. வரலாற்றில் யார் எங்கே நிற்கிறார்கள், இதில் நாம் எழுதினால் அது எங்கே நிற்க வேண்டும், எங்கே நிற்கும் என்ற நப்பாசை கணக்குகள் தான் இது என்று தெரிந்தாலும், நான் இதுவரை வாசித்ததை பட்டியல் போட்டுப் பார்த்ததில் சில திறப்புகள் கிடைத்தன. கேள்விகளும் எழுந்தன. அவை வருமாறு.
இயல்பாகவே நான் போட்ட பட்டியல், பட்டியல் என்று அல்லாமல் வட்டங்களாக அமைந்தன. வட்டங்களின் அளவுகோலாக நின்றது, ஒர் எளிய கேள்வி மட்டுமே. என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் தங்கள் எழுத்துகளில் ஆராயும் எழுத்தாளர்கள் யார் யார்? அப்படி ஆராயும் போது அவர்கள் அளிக்கும் புனைவுச்சித்திரம் என்னுடைய அகத்தின் மொழியை பேசுகிறதா?
முதல் திறப்பு, என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் முழுவதுமாக ஆராயும் எழுத்தாளரை இன்று வரை நான் வாசித்ததில்லை என்பது. அப்படி ஒரு புத்தகம் இருந்தால் நான் அதை வந்து படிப்பதற்காக அது காத்துக்கொண்டிருக்கலாம். அல்லது நானே அதை எழுத வேண்டும் என்றும் இருக்கலாம். இப்படித்தான் வாசகர்கள் எழுத்தாளர் ஆகிறார்களா என்ற வியப்பு ஏற்பட்டது.
இரண்டாம் திறப்பு, “என்னுடைய” எழுத்தாளர்கள் என்ற வட்டம் மிகமிகக்குறுகியது. நான் விரும்பி வாசிக்கும் பல எழுத்தாளர்கள் அதில் இல்லை. ஹெர்மன் ஹெஸ்ஸி போல. அவரை உள்ளே வைப்பதா வெளியே வைப்பதா என்று வெகுநேரம் ஊசலாடினேன். அவருடைய சித்தார்தாவையும் ஸ்டெப்பெனவுல்பூம் நார்சிசஸ்-கோல்ட்மேனும் ஆர்வத்துடன், கவனத்துடன் படித்திருக்கிறேன். அவை முன்வைத்த கேள்விகள் என்னுடைய தேடலை கொண்டவை. அவரை நிராகரித்தது ஏனென்றால் அவர் முன்வைக்கும் பாதைகளோ தீர்வுகளோ எனக்கானவை இல்லை என்பதை கண்டுகொண்டதால்.
உதாரணம், “ஸ்டெப்பெனவுல்ப்” நாவல் வாழ்க்கையின் அபத்தத்தை பெரும் சுமையாக சித்தரித்து, பின் சிரிக்கப்பழகுவதால் அதை கடக்கலாம் என்ற தீர்வை முடிவில் முன்வைக்கிறது. வாழ்க்கையின் அபத்தத்தை நினைத்து பொருமுவதே ஒரு பதின்பருவ மனநிலையாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அப்படிப் பொருமிய பதின்பருவத்தில் ஸ்டெப்பெனவுல்ப் முக்கியமான எழுத்தாக எனக்குப்பட்டது. இப்போது “வாழ்க்கையில் அபத்தத்தன்மை உண்டு, அதனாலென்ன? வாழ்க்கையே அபத்தம் என்பது ஒரு கண்ணோட்டம், அவ்வளவுதான்,” என்ற மனநிலையில் இருக்கிறேன். இலகுவாக இருப்பது அபத்தத்தை கடக்க கடைபிடிக்க வேண்டிய பயிற்சி மட்டுமே அல்ல, அது வாழ்வை காணும், ரசிக்கும், ஒரு வாழ்க்கைமுறை என்றும் நம்புகிறேன். ஆகவே ஹெஸ்ஸியின் கேள்விகளுடன் என் மனம் ஒத்துப்போனாலும், அவருடைய எழுத்துக்களை நான் மிகவும் விரும்பி படித்திருந்தாலும், அவருடைய புனைவுலகம் என் அகத்தின் மொழியில் படைக்கப்பட்டது அல்ல என்று தோன்றுகிறது.
ஆனால் ஒன்றிரண்டு ஆக்கங்கள் மட்டுமே நான் படித்துள்ள பஷீர் அனாயாசமாக உள்வட்டத்திற்குள் வந்து அமர்கிறார். “கொஞ்சம் பெரிய ஒண்ணு” போன்ற ஒற்றைவரிப்படங்கள் போதும் அதற்கு. தாகூரும் பாரதியும் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு ரசித்தாலும் சங்கக்கவிஞர்களும் ஆண்டாளும் ஆங்கில கற்பனாவாத கவிஞர்களும் இல்லை. இப்படி ஒரு உள்வட்டம்.
மற்றோரு திறப்பு, மிகவும் விரும்பி, பலமுறை படித்த நூல்கள் பல என்னுடைய எந்த மனத்தேடலுக்கோ தேவைக்கோ எதுவுமே செய்ததில்லை என்ற புரிதல். நான் சிறுவயதில் அதிகம் வாசித்த ஜேன் ஆஸ்டினும் சார்லட் ப்ராண்டும் இப்போது ஒதுக்கிவைக்கிறேன். ஜார்ஜ் எலியட்டும் எமிலி ப்ராண்டும் இன்னும் எனக்கு முக்கியமான எழுத்தாளர்கள் தான், ஆனால் முதல் வட்டத்தில் இல்லை. இப்படி என் பட்டியல் வட்டங்களாக விரிந்து செல்கிறது. காலத்தில், மொழிச்சூழலில், கலாச்சாரத்தில் வெவ்வேறு இடங்களில் நிற்கும் படைப்பாளிகள் என் வட்டங்களுக்குள் ஒன்று கூடுகிறார்கள். அர்சலா ல குயினும் ஆஷாபூர்ணா தேவியும் பேசிக்கொள்கிறார்கள்.
இறுதியாக, நான் போட்ட பட்டியலின் மூலம், என்னுடைய ஆழ்மனத் தேடல்களையும் தேவைகளையும் பற்றி நானே அதிகம் அறிந்துகொண்டேன். அதுவே ஒரு விதத்தில் பெரிய திறப்பு. இலக்கியத்தில் எனக்கு எது முக்கியம் என்று வார்த்தைகளில், தெளிவாக, வரையறுக்க முடிந்தது.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் அளவுகோலாகக்கொண்டு, மனதளவில் பகுத்துப்பார்த்து விமர்சனம் செய்து, என்னுடைய பட்டியலை நான் போடுகிறேன். அதன் அடிப்படையில் முதல் வட்டம், இரண்டாம் வட்டம் என்று பிரிக்கிறேன். அதன் அடிப்படையிலேயே “இது நல்ல நூல்,” என்று வரையறுக்கிறேன். அவ்வாறுதான் ஒவ்வொருவரும் அவரவர்களின் அளவுகோல்களின் அடிப்படையில் விமர்சனம் செய்கிறார்கள் என்று நம்புகிறேன். அப்படி இருக்கும் போது, இலக்கிய விமர்சனத்தில் புறவயத்தன்மை எப்படி சாத்தியம் ஆகும்?
இன்னும் கூர்மையாக கேட்கவேண்டும் என்றால், ஒருவருடைய தேடல் என்பது சமூக மனநிலையை சார்ந்து இருக்கலாம். சமூக நிதரிசனங்களை உடைத்து எழுதும் எழுத்தே நல்ல எழுத்தாக அவருக்கு இருக்கலாம். அவருக்கு மகாஸ்வேதாதேவி அதிமுக்கியமான எழுத்தாளராக இருக்கலாம். இன்னொருவருக்கு எழுத்தில் கனவுத்தன்மை பிரதானமாக இருக்கலாம். மற்றோருவருக்கு வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளை எழுதுவதே எழுத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்று தோன்றலாம். இவர்களுடைய அளவுகோல்கள் வெவ்வேறு என்ற போது, இந்த அளவுகோல்களில் எது சிறந்தது, எது உயர்ந்தது என்று புறவயமாக ஒப்பீடு செய்ய முடியுமா? அது அர்த்தமுள்ள செயல்பாடா? அவ்வாறு செய்ய முடிந்தால் தானே அந்த அளவுகோலின் அடிப்படையில் பொதுவான விமர்சனம் சாத்தியம்?
இல்லையென்றால் ஒவ்வொருவரும் அவரவர் அளவுகோலின் அடிப்படையில், அந்த அளவுகோலை தெளிவாக வரையறுத்து, தங்கள் சொந்தப்பட்டியல்களை போடலாம். ஆனால் அப்படி போடப்பட்ட பட்டியல்களை ஒப்பிட முடியுமா? முடியுமென்றால் எப்படி? தவிர, அகவயமான அளவீடுகளால் போடப்படும் “விமரிசன” பட்டியல்களுக்கும், “எனக்கு பிடித்த நூல்கள்” என்பது போன்ற பொதுப்பட்டியல்களுக்குமான வித்தியாசம் என்ன?
என்னுடைய அளவுகோலின் அடிப்படையில் நான் ஒரு படைப்பாளரை நிராகரிக்கலாம். மற்றோருவர், அவருடைய அளவுகோலின் அடிப்படையில், அதே படைப்பாளரை மிகச்சிறந்த எழுத்தாளராக முன்வைக்கலாம். ஆனால் இவ்விரு விமர்சனங்களும் அந்த படைப்பாளியை பற்றி சொல்வதைவிட, அவரை விமர்சிக்கும் அந்நபர்களை பற்றியும் அவர்களுக்கு எது முக்கியம் என்பதையுமே பிரதானமாக சொல்கிறது என்றும் தோன்றுகிறது. இது உண்மையா? படைப்பை பொறுத்த வரை, இவ்வகை முரண்பட்ட வாசிப்புகளின் முக்கியத்துவம் என்ன?
ஒரு பக்கம் வரலாறை பார்க்கும் போது, அதில் ஒரு எழுத்தாளரின் இடத்தையும் பட்டியலிட்டு இயல்பாக பார்க்க வைக்கிறது மனம். அது வாசிப்பின், வாழ்க்கையின் போக்கில் உண்டான என் தனிப்பட்ட ரசனையின் பலன் என்று உணர்கிறேன். இந்த இயல்பால், ரசனையால், விமர்சனத்தின் தேவையை உணர்கிறேன்.
மற்றோரு பக்கம், இதை புறவயமான கருத்தாக எவ்வாறு முன்வைப்பது என்று யோசிக்கையிலேயே இந்தக்கேள்விகள் எழுகின்றன.
அடிப்படையான கேள்வி தான். முன்னமே பதில் அளித்திருந்தால் (தேடியவரை கிடைக்கவில்லை) தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
நன்றி,
சுசித்ரா
அன்புள்ள சுசித்ரா
இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ளும் தொடக்ககாலத்தில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்கள் பல. இதற்கான பதில்கள் முன்னரே பலமுறை சொல்லப்பட்டாலும் கூட ஒவ்வொருவரும் தனக்கான பதிலை சற்றேறக்குறைய தன் அனுபவத்திலிருந்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன்.
உங்கள் வினாவை ஒற்றை வரியில் இப்படி சுருக்கிக் கொள்ளலாம். இலக்கிய மதிப்பீடுகள் என்பவை அகவயமானவை. ஏனென்றால் அவை வாசகனும் படைப்பும் கொள்ளும் அந்தரங்க உறவிலிருந்து உருவாகக்கூடியவை. ஆனால் ஒரு சூழலில் இலக்கிய மதிப்பீடுகள் புறவயமான அளவுகோல்களுடன் இருந்தாகவும் வேண்டும். இல்லையேல் எழுத்தாளர்களை மதிப்பிடவே முடியாது.இந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பது தான் உங்களுடைய கேள்வி.
மிக இளம் வயதில் நாம் படிக்கத் தொடங்கும்போது நம்முடைய வாசிப்பு சார்ந்து ஒரு பட்டியலை உருவாக்கிக் கொள்கிறோம். இந்தப்பட்டியல் நாம் படிக்கும் ஒவ்வொரு நூலாலும் தொடர்ந்து உருமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருவர் எத்தனை நூல்களை படித்திருந்தாலும் டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ படிக்கும்போது அதுவரைக்குமான பட்டியல் உடனடியாக உருமாற்றமாவதைப் பார்க்கலாம். அதற்குமுன் அழகென்றும் நுட்பமென்றும் ஆழமென்றும் எதையெல்லாம் நினைத்திருக்கிறாரோ அவையனைத்துமே இப்பேராசான்களால் மாற்றியமைக்கப்படுகிறது அவருடைய அளவுகோல்கள் வளர்கின்றன. புதிய தேடல்கள் உருவாகின்றன. புதிய படைப்பாளிகள் உள்ளே வருகிறார்கள். இதைத்தான் டி.எஸ்.எலியட் தன் கட்டுரையில் சொல்கிறார்
பொதுவாக தொடக்க வாசிப்புநிலைகளை இப்படிப் பட்டியலிடலாம். ஆண்பெண் உறவு சார்ந்த, இன்னும் பொதுவாகப்பார்த்தால் மானுட உறவுகள் சார்ந்த ஆர்வம் காரணமாக இலக்கியத்திற்குள் வந்து அதைப்பற்றிப் புரிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே பெரும்பாலான தொடக்க வாசிப்புகள் அமையும். பலருடைய பட்டியலில் இருக்கும் ஆரம்பகால எழுத்தாளர்கள் அனைவருமே ஆண்பெண் உறவுகளையும் மனித உறவுச்சிக்கல்களையும் எழுதும் எழுத்தாளர்கள்தான் .அது பிழையென்று சொல்ல முடியாது ஏனெனில் ஒர் இளைஞனின் வாழ்க்கையின் முதல் சவால் என்பதே உறவுகளைக் கையாள்வது தான். உறவுகள் குறித்து அதுவரைக்கும் அவனுக்கு அவனுடைய சூழலில் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த எதுவுமே நடைமுறையில் உதவுவதில்லை என்று அவன் காண்கிறான். அதற்கு சொந்தஅனுபவங்களும் சுயமாக தேடிய சிந்தனைகளும் மட்டுமே உதவும் என்று புரிந்து கொள்கிறான். அந்த அனுபவ உலகத்தை புரிந்து கொள்ளவும் இன்னும் சற்று விரிவாக்கிக்கொள்ளவும் அவன் இலக்கியத்தை தேடிவருகிறான்.
கணிசமான வாசகர்கள் இங்கேயே வாசிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இன்னும் பலர் இங்கேயே நின்று தன் வாழ்நாள் கடைசி வரைக்கும் ஆண்பெண் உறவுகளையும் மனித உறவுச்சிக்கல்களையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருப்பார்கள். இளவயதில் அவை மிக வெளிப்படையாக எழுதப்பட்டால் மகிழ்வார்கள். காலம் செல்லச் செல்ல எந்த அளவுக்கு அவை பூடகமாக சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்ல கதை என்பார்கள். ரொம்ப சூட்சுமமானது, என் நுண்ணுணர்வால் கண்டுபிடித்தேன் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
.
இன்னொரு வகையான ஆரம்பநிலை வாசிப்பு உண்டு. அது லட்சியவாதம் சார்ந்து, அதை ஒட்டி எழும் கொள்கைகள் சார்ந்து வாசிப்பது. இவ்வுலகில் தான் காணும் குறைகளையும் சிக்கல்களையும் கண்டு சினமும் செயல்வேகமும் கொள்கிறான் இளம்வாசகன். இவ்வுலகை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் மாற்றியமைக்க வேண்டுமென்றும் அவன் விழைகிறான். அத்தகைய எழுத்துக்கள் மேல் பெரும் ஈடுபாடு உருவாகிறது. தான் ‘பயனுள்ள’ எழுத்தை வாசிப்பதாகவும், உண்மையான செயல்களில் ஈடுபடுவதாகவும் நம்புகிறான். அது அவனுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. தான் அசாதாரணமானவன், மாறுபட்டவன் என்னும் எண்ணமும் மற்றவர்கள் மேல் விமர்சனமும் ஏளனமும் உருவாகிறது. இந்த மேட்டிமையுணர்வில் திளைத்து அதை வளர்க்கும்பொருட்டு மேலும் தீவிரமாக வாசிக்க ஆரம்பிக்கிறான்
இவ்வியல்புதான் ஒருசாராரை கருத்தியல் நோக்கி செலுத்துகிறது. கருத்தியல் சார்புநிலை கொண்ட படைப்புகள் அவனை உள்ளிழுத்துக் கொள்கின்றன. கருத்தியலின் ஏதேனும் ஒரு தரப்புடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதனூடாக மனித குலம் அதுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்த ஒரு பெரிய சிந்தனைத்தொடர்ச்சியில் தன்னை அவன் உணரும்போது அவன் ஒரு தொகுப்பு ஆளுமையாக தன்னை உருவகித்துக்கொள்கிறான் .
ஒர் இளைஞன் தன்னை மார்க்ஸிஸ்ட் என்று உணரும்போது ஒரு மாபெரும் அறிவுத்தளத்தின் பகுதியாக கற்பனை செய்து கொள்கிறான். தனியனாகவும் ஆற்றலற்றவனாகவும் உணரும் அவனுடைய இயல்பு இக்கருத்தியலால் நிரப்பப்பட்டுவிடுகிறது. யானை மேல் ஏறிக்கொண்டவனைப்போல் உணர்கிறான். அந்த மிதப்பு அவனை மிகவும் ஆட்டி வைக்கிறது. உலகத்தையே விமர்சிக்கவும் கண்டிக்கவும் வழி நடத்தவும் கூட தனக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். அனைத்துக்கும் மேல் சினமும் ஏளனமும் நிறைந்த கருத்துக்களை உதிர்க்கிறான். இக்கருத்துக்களை எதிர்கொள்ளும் தரப்புகளை கற்பனை செய்து கொள்கிறான். அக்கருத்துகளை படிக்கிறான். அவற்றுக்கு பதில் சொல்லும்பொருட்டு தன் தரப்பை படிக்கிறான்.
இது ஒரு பெரும் சுழல். ஒருகட்டத்தில் தன் தனி வாழ்க்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று உணர்ந்து மெல்ல அவன் அதிலிருந்து வெளிவருகிறான். தனிவாழ்க்கையை யதார்த்தம் சார்ந்து உருவாக்கிக்கொள்கிறான். அதில் இருவகையினர் உண்டு. போலியானவர்கள் தனிவாழ்க்கையின் யதார்த்தத்தை திறமையாக மறைத்து போலியான ஒரு மேடைப்பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். நேர்மையானவர்கள் தங்கள் எல்லையை உணர்ந்து அதற்குள் செயல்படுவார்கள், பிம்பங்களை முன்வைக்கமாட்டார்கள். பலர் தனி வாழ்க்கையில் தன் கடமைகளை முடித்து ஓய்வுநிலையை அடையும்போது மீண்டும் அந்த இளமைக்கே கற்பனையால் திரும்பிச் சென்று அதே கருத்தியல் சார்புடன் அதே காழ்ப்புகளுடன் மீண்டும் செயல்பட ஆரம்பிப்பதை நாம் காணலாம்.
மூன்றாவதாக ,இளவயது வாசிப்பில் மிக சிறிய பங்கினர் சென்று சிக்கும் ஒரு சுழல் உண்டு. அது தன்னை அசாதாரணமான வாசகன் என்றும், பிறருக்கில்லாத அறிவுக்கூர்மை தனக்குண்டு என்றும் எண்ணிக்கொள்ளும் மனநிலை. தான் இப்புவியில் ஒரு பெருநோக்குடன் பிறந்தவன், வரலாற்றில் தன் தடத்தை ஆழப்பதித்துவிட்டு செல்லப்போகிறவன் என்னும் தன்னுணர்வை அடைந்த இளைஞர்கள் இவர்கள். பெரும்பாலும் இவர்கள் உண்மையிலேயே கூரிய அறிவுத்திறன் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். பிறர் படித்துப் புரிந்து கொள்ள தடுமாறும் படைப்புகளை அவர்களால் எளிதாக படிக்க முடியும். அப்படி படிக்க முடியும் என்ற தன்னுணர்வாலேயே தங்களை மேலும் மேலும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். தங்கள் மூளையால் உடைத்து உட்புகுந்து படிக்க வேண்டிய படைப்புகளை மட்டுமே படிக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் மற்றவர்கள் பிரமிப்பு கொள்ளும் அளவுக்கு படித்துவிட்டிருப்பார்கள். விளைவாக இவர்களால் இவர்களின் அறிவுச்சிடுக்குடன் மோதும் படைப்புகள் அன்றி பிற படைப்புகளை உள்வாங்க முடியாது. ‘எளிய’ படைப்புகள் மீதான ஏளனமே அவர்களை எளிமையை முக அடையாளமாகக் கொண்ட பெரும்படைப்புகளில் இருந்து விலக்கும். ஒவ்வொன்றிலும் சிடுக்குகளையும் சிக்கல்களையும் எதிர்பார்க்கும் மனம் எளிமையாக வெளிப்படும் ஆழங்களை தவறவிடும். உதாரணமாக அவர்களுக்கு மௌனியைப்பிடிக்கும் பஷீரில் ஒன்றுமில்லை என்று தோன்றும்.
இவர்களின் மிகப்பெரிய இடர் என்னவென்றால் இந்தப் பயணத்தில் இவர்கள் இலக்கியவாசிப்பிற்கு இன்றியமையாததான இரண்டு அற்புதமான ஆற்றல்களை இழந்திருப்பார்கள் என்பதுதான். முதலாவதாக , தன் தனிவாழ்க்கையின் அனுபவங்களையும் சமூகம்சார்ந்த அனுபவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றைக்கொண்டு இலக்கியத்தை வாசிக்கும் நுண்ணுணர்வு. எதையும் கருத்தாக, கோட்பாடாக, புதிர்களாக மட்டுமே இவர்களால் வாசிக்கமுடியும். இலக்கிய அறிதல் ஒன்றை தன் வாழ்வனுபவங்களுடன் இணைத்துப் பார்க்கும் வாசிப்புத்திறனை ஒருவன் அடையாத பட்சத்தில் அவன் எதையும் வாசிக்கவில்லை என்றே பொருள்.
அடுத்தபடியாக இவர்கள் இழப்பது கற்பனையை. இலக்கியம் என்பதை வேறொருவகையான வாழ்க்கைப்புலம் என்று அறிந்து அங்கு கற்பனைமூலம் வாழ்ந்து, அவ்வாழ்வின் நுட்பங்களை கற்றுக் கொண்டால் ஒழிய அது வாசிப்பல்ல. கற்பனை இல்லாத கூர்ந்தவாசகன் படைப்பை ஒருவகை புதிர்விளையாட்டு என புரிந்துகொள்வான். ஆசிரியருடன் ஒருவகை சீட்டாட்டத்தையே ஆடுவான். இத்தகைய சிடுக்கவிழ்ப்பு வாசிப்பில் சிக்கிக் கொண்ட பலர் இலக்கிய படைப்புகளை பிற எவ்வகையிலும் அணுகமுடியாமல் காலப்போக்கில் தேங்கிவிடுவார்கள். அவர்கள் வாசித்தவற்றின் அளவு அவர்களை மூளைவீங்க வைக்கிறது. அவற்றின் பயனின்மை அவர்களை அபத்தமானவர்களாக மாற்றுகிறது. ஆகவே எளிய நக்கல்களையும் கிண்டல்களையுமே உதிர்க்கும் அசட்டு மேட்டிமைவாதிகளாக காலப்போக்கில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
இளம்வாசகனாக நான் மூன்றாவது வகையானவனாக இருந்தேன். நல்லவேளையாக நான் என் முதிரா இளமையின் உக்கிரமான அகந்தையை மகத்தான ஆக்கங்கள் சிலவற்றினூடாக, மகத்தான ஆசிரியர்களின் காலடியில் அமரநேர்ந்ததனூடாக வென்று கடந்தேன். என் அனுபவச்சார்பையும் கற்பனையையும் தக்கவைத்துக்கொண்டேன்.
இந்த ஆரம்ப நிலைகளிலிருந்து வாசிப்பில் பல படிநிலைகள் உள்ளன. தொடக்கத்தில் வாசகர்கள் தன்னை நோக்கி வரும் அனைத்தையும் படிப்பார்கள். அவற்றில் தெரிவுகளை அமைத்து தனக்குரிய படைப்புகளை மட்டுமே கண்டுபிடித்து படிக்க ஆரம்பிப்பதுதான் அடுத்த நிலை. உதாரணமாக இலக்கிய வாசகனாக நான் தொடங்கிய காலகட்டத்தில் அலெக்சாண்டர் டூமாவின் அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன். காஃப்கா காம்யூ போன்றோர்கள் அக்காலத்தில் மிகப்பெரிய ஆதர்சங்களாக இருந்தார்கள் அவர்களைப் படித்திருக்கிறேன். அன்று பெரிதும் பேசப்பட்ட அமெரிக்க எழுத்தாளர்கள் ஹெமிங்வே போன்றவர்களைப் படித்திருக்கிறேன். அவ்வாறாக டால்ஸ்டாய் தஸ்தாவெஸ்கி போன்றவர்களிடம் வந்து சேர்ந்தேன்.
இந்தவாசிப்புவெளியில் இருத்தலியம் சார்ந்து எழுதிய காஃப்கா காம்யூ போன்றவர்களின் எழுத்துகள் எனக்கானவை அல்ல என்று எளிதில் என்னால் கடந்து செல்ல முடிந்தது. அவை உருவாக்கும் இருத்தலிய உளச்சிக்கல்களும் சரி தத்துவச்சிக்கல்களும் சரி மிகக்குறுகிய எல்லைக்குள் இருக்கின்றன என உணர்ந்தேன். அவை பெரும்பாலும் ஐரோப்பிய வாழ்க்கை சார்ந்து அமைந்தவை. இந்தியப் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு அவை எவ்வகையிலும் பொருள்படவில்லை. ஆனால் டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும் என்னைப் பெரிதும் ஆட்கொண்டார்கள். டால்ஸ்டாயிலும் தஸ்தாவெஸ்கியிலும் திளைக்க ஆரம்பித்து அவர்களை முழுது அறியத்தொடங்கிய பின்னரும் கூட ஒரு எளிய கனவுலகத்தில் பறக்க டூமா எனக்கு இன்றும் தேவைப்படுகிறார்.
இப்படித்தான் நாம் நமது பட்டியல்களை உருவாக்கிக் கொள்கிறோம். இப்பட்டியல்களைத் தொடர்ந்து மறுவரிசை செய்து பலவற்றை களைகிறோம். இவ்வாறு ஒவ்வொரு தேர்ந்த வாசகனிடமும் ஒவ்வொரு பட்டியல் இருக்கிறது. அந்தப்பட்டியலில் அவனுக்குரிய பெயர்கள் இருக்கின்றன. தேர்ந்த வாசகனின் பட்டியலில் பெரும்படைப்பாளிகளே இருப்பார்கள். கூடவே மிக அசாதாரணமான சில பெயர்களும் இருக்கும். உதாரணமாக என்னுடைய தனிப்பட்ட பட்டியலில் மேரி கெரெல்லி இருப்பார். பிறிதெவரும் அவர் பெயரைச் சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் டால்ஸ்டாய்க்கு நிகராக எனது பட்டியலில் இருக்கிறார். அமெரிக்காவிலேயே கூட அவருடைய மதச்சார்பு காரணமாக ஒருபடி கீழாக வைக்கப்படுபவர் அவர்.
பொதுவாக ஒழுக்கச் சிக்கல்களை, மானுட வேட்கைகளை அதிகம் முன்னிறுத்தும் படைப்பாளிகளை நான் பொருட்படுத்துவதில்லை. ஆகவே ஹென்றி மில்லர் போன்ற பாலியல் பிறழ்வுகள், மீறல்களைப்பற்றிய எழுத்துக்கள் எளிய சுவாரசியத்திற்கு அப்பால் பொருள்படுபவை அல்ல எனக்கு. பிறிதொருவருடைய பட்டியலில் அவை முக்கியமாக இருக்கக்கூடும்.
அப்படியென்றால் புறவயமான அளவுகோல் என்ன என்பது தான் உங்களுடைய கேள்வி. அதற்கு இதுதான் பதில். இப்படி நூறு தேர்ந்த வாசகர்கள் தங்களுடைய தனிப்பட்ட பட்டியலை வெளிப்படுத்துகிறார்கள் என்றுகொள்வோம். அந்த நூறு பேரின் பட்டியலிலும் இருந்து ஒரு பொதுப்பட்டியல் உருவாகி வருமென்றால் அது அந்த நூறு பேர் அடங்கிய சூழலில் புறவயமான ஒன்று தான். இலக்கியத்திற்கான பட்டியல்கள் இவ்வாறுதான் புறவயமாகின்றன.
அதை நிகழ்த்துவது இரண்டு அம்சங்கள். ஒன்று இலக்கியச்சூழலில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதம். இன்னொன்று காலப்போக்கில் பலகோணங்களில் படைப்புகள் வாசிக்கப்பட்டு இயல்பாக உருவாகிவரும் இயற்கைத்தெரிவு. இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவையும்கூட
உலகெங்குமுள்ள வாசிப்புச்சூழலில் இருந்து எழுந்து வரும் தேர்ந்த வாசகர்கள் தான் விமர்சகர்கள். பெரும்பாலான விமர்சகர்களின் பட்டியலில் பொதுவாக இடம் பெறுவதுதான் உலக இலக்கியத்தின் பொதுப்பட்டியல் என்று சொல்லலாம். தர்க்கபூர்வமாகச் சொல்லப்போனால் இந்த அகவயமான பட்டியல்கள் நடுவே பொதுவான அம்சங்கள் இருக்கக்கூடாதுதான். ஆனால் இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. அதற்குக் காரணம் மானுடவாழ்க்கை அகண்டது, முடிவிலா வேறுபாடுகள் கொண்டது என்றாலும் கூடவே உலகப்பொதுவான அம்சங்களால் ஆனது. மனித உடல்போலத்தான் மனித மனமும். எத்தனை இனங்கள் நிறங்கள் முகவேறுபாடுகள். ஆனால் அமைப்பு ஒன்றே.
உலகமெங்கும் தேர்ந்த விமர்சகர்களின் பெரும்பாலான பட்டியலில் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி போன்றவர்கள் இடம் பெறுகிறார்கள் என்றேன்.ஆனால் விளாடிமிர் நபகோவ் அவர்கள் இருவரையுமே பரிபூரணமாக நிராகரிக்கிறார். உலகெங்கும் உள்ள பொதுப்பட்டியலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் இடம் பெறும்போது கூட நான் எனது தனிப்பட்டியலில் ஒருபோதும் அவரை இடம் பெறச்செய்ய மாட்டேன். இவ்வாறு மீறல்கள் எப்போதும் உண்டு. ஆனால் கூடவே ஒரு பொது வட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுதான் இலக்கியத்தின் புறவயத்தன்மையைத் தீர்மானிக்கிறது.
சுசித்ராவின் பட்டியல் சுசித்ராவுக்கு உரியதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சுசித்ராவும் ஜெயமோகனும் பிரியம்வதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் கடலூர் சீனுவும் என ஒரு முன்னூறு பேர் போடும்பட்டியல்களைச் சேர்த்து ஒரு சராசரியான பொதுவான பட்டியலை போடும்போது அதில் ஒரு ஐம்பது பொதுவான பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அவர்கள் ஒரு புறயவமான பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்று தான் பொருள்.
தமிழிலக்கியத்திற்கு வருவோம். தமிழிலக்கியத்தில் வெவ்வேறு பட்டியல்கள் எப்போதும் போடப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனோ மௌனியோ கு.ப.ராஜகோபாலனோ சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ இடம் பெறாத இலக்கியப்பட்டியல்கள் இங்கு பல காலம் புழங்கியிருக்கின்றன, அவை கல்வித்துறையில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்குள்ள தேர்ந்த இலக்கிய விமர்சகர்கள் தொடர்ந்து ஒரு பட்டியலை முன்வைக்கிறார்கள். குறிப்பாக க.நா.சு. அவருடைய பட்டியலில் உள்ளவர்கள்தான் காலப்போக்கில் அனைவருடைய பட்டியலிலும் இடம்பெறுபவர்களாக ஆனார்கள். அந்தப்பட்டியல் க.நா.சு முதலியவர்களின் அந்தரங்கமான பட்டியல்தான். ஆனால் அது புறவயமான பட்டியலாக ஆகியது
க.நா.சுவின் பட்டியலில் இருக்கும் சண்முக சுப்பையாவோ ஆர்.சண்முக சுந்தரமோ எனது பட்டியலில் இருக்கமாட்டார்கள். எனது பட்டியலில் உள்ள ப.சிங்காரம் அவரது பட்டியலில் இருக்கவில்லை. ஆனால் இதற்கு அப்பால் க.நா.சு உருவாக்கிய அந்தப்பட்டியல் பெரும்பாலும் இலக்கியம் பேசும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மெல்ல நிறுவப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழிலக்கிய வரலாறு இன்று.
அந்தப்பட்டியல் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டும் இருக்கிறது. க.நா.சுவின் அளவுகோலில் மௌனிக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் இடத்தைவிட மிகக் குறைவாகத்தான் நான் மதிப்பிடுவேன். க.நா.சு அளித்ததைவிட மிக முக்கியமான இடத்தை புதுமைப்பித்தனுக்கும் கு. அழகிரிசாமிக்கும் நான் அளிப்பேன்.
க.நா.சுவின் அந்தப்பட்டியலே கூட அவருக்கு முன்னால் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்துப்பேசிய ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய ஐயர் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்ததுதான். இதே போன்று ஆங்கில இலக்கியம் பற்றியோ அமெரிக்க இலக்கியம் பற்றியோ பிரெஞ்சு இலக்கியம் பற்றியோ ஒரு பொதுப்பட்டியல் நீண்ட தொடர் விவாதம் மூலம் உருவாகிவந்ததை பார்க்கலாம். அந்த விவாதம் வழியாகத்தான் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படைப்பாளிகளும் பட்டியலில் இடம் பெற தகுதி உள்ளவர்களா அல்லவா என முடிவு செய்யப்படுகிறது.
பட்டியல்கள் ஒருவகையான் தொகுப்பு முயற்சிகள் அவை வெறும் தனிப்பட்ட சிபாரிசுகள் அல்ல. அவற்றின் பின்னால் ஒரு விமர்சனக்கருத்து உள்ளது ஒரு பார்வைக்கோணம் உள்ளது. உதாரணமாக க.நா.சு எந்த அடிப்படையில் தன்னுடைய பட்டியலைப்போட்டார்?.
அ.இலக்கியத்தில் நேரடியான பிரச்சார கருத்துகள் இருக்ககூடாதென்று அவர் நினைத்தார்.
ஆ.வாசகனை கற்பனைசெய்ய வைக்க வேண்டும் சிந்திக்க வைக்க வேண்டுமே ஒழிய ஆசிரியன் தன்னை முன்வைக்கக்கூடாது என்று அவர் நினைத்தார்.
இ.நுட்பமாக சொல்லப்பட்டவற்றுக்குத்தான் இலக்கியத்தில் இடமே யொழிய பெருவெட்டானவற்றுக்கு அல்ல என்று அவர் நினைத்தார்.
ஈ. மென்மையாகவும் சாதாரணமாகவும் சொல்லப்படும் விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்.
இக்காரணத்தால் அவர் மௌனி புதுமைப்பித்தன் கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களை முன்வைத்தார் .ஆனால் கட்டற்ற மொழிப்பாய்ச்சலாக அமையும் பசிங்காரத்தின் நாவல் அவருக்கு உவப்பாக இல்லாமல் போயிற்று. இன்று நோக்குகையில் க.நா.சுவின் அளவுகோல் தொன்மங்களைக் கையாளும்போதும், மீயதார்த்தம், மிகைபுனைவுகளை எழுதும்போதும் , உன்னதமாக்கல் நிகழும்போதும் செல்லுபடியாகாது என்று எவரும் சொல்லமுடியும். அதையும் கணக்கில்கொண்டுதான் அடுத்த பட்டியல் உருவாகிறது.
தலைமுறை தலைமுறையாக இவ்வாறு ஒரு பட்டியல் மீண்டும் மீண்டும் போடப்படும்போதுதான் ஒருவகையான மாறாமதிப்பீடு உருவாகி நிலைகொள்கிறது. அதில் தேறி வந்து நிலைப்பவையே செவ்வியல் ஆக்கங்கள் எனப்படுகின்றன. பாரதி ஒரு பட்டியல் போடுகிறார். ‘யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்’ என்று. எல்லாக்காலகட்டங்களிலும் அத்தகைய பட்டியல்கள் இருந்து கொண்டுதான் இருந்தன. [இதைப்பற்றி விரிவாக முன்னரே எழுதியிருக்கிறேன்] திருமுறைகள் என்றும், நாலாயிரம் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு என்றும், ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் தொகுக்கப்பட்டவை எல்லாமே விமர்சனரீதியான பட்டியல்கள்தான். அவையே செவ்வியல்லியத்தை உருவாக்கி நிலைநிறுத்தின.
இலக்கிய அளவுகோல்கள் உருவாகி அதைக்கொண்டு பட்டியல்கள் இடப்பட்டு அதன்வழியாகச் செவ்வியல் ஆக்கங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. பின்னர் அச்செவ்வியல் ஆக்கங்கள் அடுத்தகட்ட படைப்புகளைத் தீர்மானிக்கும் அடிப்படைகளாக நிலைகொள்கின்றன. இன்றைய நவீன இலக்கியம் புதுமைப்பித்தனை ஒரு முதன்மை அளவீடாகக் கொண்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தனை நாம் மதிப்பிடுவதில்லை, நம்மை அவர் மதிப்பிடுகிறார்.
ஆனால் இலக்கியத்தை பொறுத்தவரை ஒரு முக்கியமான வரியுண்டு. அது டி.எஸ்.எலியட் சொன்னது. கலை வளர்வதில்லை, அதன் மூலப்பொருட்கள் தான் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. கலை வளருமென்றால் கம்பராமாயணத்துக்குப்பிறகு எழுதுகிற நான் அதைவிட மேலான செவ்வியல் காவியத்தை எழுதியிருக்கவேண்டுமல்லவா? ஆகவே கலைப்படைப்பு சார்ந்த மதிப்பீடுகள் ஓரளவுக்கு உருவாகிவிட்டவை என்றால் பெருமாற்றங்களுக்கு அவை ஆளாவதில்லை. ஹோமருக்கும் விர்ஜிலுக்கும் தாந்தேக்கும் இருக்கும் இடம் இலக்கியத்தில் எத்தகைய விமர்சன அலையாலும் முற்றிலுமாக மாற்றக்கூடியதல்ல.
ஒருவருடைய தனிப்பட்டியலில் அவர் தாந்தேயையோ விர்ஜிலையோ விட்டுவிடலாம். ஆனால் உலகளாவிய வாசகஏற்பு எனும் பட்டியலில் அது இருந்து கொண்டே இருக்கும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பட்டியலிட்டவன் ஒரு தொல்விமர்சகன். அப்பட்டியலில் இன்னொன்றை புதிதாக சேர்க்க முடியாது. ஒன்றை வெளியே எடுத்
அனல்காற்று , சினிமா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
அனல் காற்று மனதிற்கு நெருக்கமான வாசிப்பாய் அமைந்தது. அம்மா மனைவி நான் என்னும் சதுரங்க ஆட்டத்தை, கொஞ்சமேனும் விலகி நின்றுப் பார்க்க உதவியது. ஆழ் மனதின் விசித்திரங்களை நீங்கள் தொட்டு சென்றிருக்கும் இடம் நுட்பமானவை – இந்த நேரத்தில் இதைச் சொன்னால் விஷயம் இன்னும் பெரிதாகும் என்று தெரிந்தே சில நேரங்களில் நான் உளறுவதன் விசித்திரம் ? இப்ப என்ன தான் வேண்டும் ? என்று களைத்து சில நேரங்களின் நிம்மதியான உறக்கம் – தடபுடலாய் சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை. குழந்தைகளின் அமர்க்களம் கூட சேர்ந்து ஆஹா என்ன ஒரு அதிரடி சரவெடி காட்சிகள் குடும்ப வாழ்வில் –
ஜோ வை போல எளிமையாக்கி அமைதியாய் இருத்தலே நலம் – அதற்கு நம்முள் இருக்கும் துறவியை நாம் வளர்க்க வேண்டும் – குழந்தையையும் ஆண்மகனையும் ஒன்றும் செய்ய முடியாது – அவர்கள் இருவரும் பெண்கள் பிடியில் பத்திரமாய் இருப்பார்கள் வெடிகுண்டை வைத்து கால்பந்து விளையாடும் அவர்களிடம் நாம் என்ன செய்து விட முடியும் ?
அனைத்திற்கும் நான் என்னும் அகந்தை ஆடும் ஆட்டமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி கரைந்தால் பல நேரங்களில் நிம்மதியும் எல்லாரும் உன்ன ஏமாத்தறாங்க என்ற உள்ளுணர்வின் எச்சரிக்கை மணியும் – இந்த நாவலை வாசிப்பது அற்புதமான ஒரு தயார் நிலையை ஏற்படுத்துகிறது
தங்கள் விருப்பம் போல் விரைவில் இந்நாவலை ஒரு திரைப்படமாக காண ஆவல்
அன்புடன்
மணிகண்டன்
அன்புள்ள மணிகண்டன்
இன்றைய சூழலில் அனல்காற்றை சினிமாவாக எடுக்க முடியாது. பரபரப்பான நிகழ்ச்சிகள் இல்லாமல் இன்று சினிமா எடுக்கப்பட்டால் அரைமணிநேரம் மட்டுமே படம்பார்த்துவிட்டு சமூகவலைத்தளப்போராளிகள் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள். அவர்களுக்குரியதையே அவர்களுக்கு அளிக்கவேண்டும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
அனல்காற்றின் உணர்வுகள்
அனல்காற்று எழும் காமம்
நாவல்- கடிதங்கள்
காதல் ஒரு கடிதம்
அனல்காற்று-கடிதம்
அனல்காற்று,ஒரு விமரிசனம்
அனல்காற்று 3
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
72. சொற்துலா
தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான் மணந்திருக்கிறேன் போலும்” என்று வேடிக்கையாக அவன் பார்க்கவனிடம் சொன்னான். “இது முன்பு இலாத ஒரு பெருநிகழ்வு. முதல் முறையாக அசுரகுலமும் ஷத்ரியரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் அந்தணர் ஆற்றலும் கலந்திருக்கிறது. தேவர்கள் அஞ்சும் தருணம்” என்றான் பார்க்கவன்.
“மண்ணில் அறம் வளர்வதே தேவர்களின் இயல்பென்கிறார்கள். இங்கு அறம் திகழுமென்றால் தேவர்கள் எதன்பொருட்டு அஞ்சவேண்டும்?” என்று யயாதி கேட்டான். “இங்கு தங்கள் கோல்கீழ் அறம் வாழுமென்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அது மானுட அறம். அசுரர்களின் அறத்தால் பேணப்படுவதும்கூட. அந்தண அறத்தால் வழிநடத்தப்படுவது என்பதனால் வெல்லற்கரியது” என்று பார்க்கவன் சொன்னான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் யயாதி நோக்கிக்கொண்டிருந்தான். “இத்தருணத்தில் இச்சொற்களோடு நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன், அரசே” என்று அவன் சிரித்துவிட்டு “நன்று சூழ்க!” என்று தலைவணங்கி விடைபெற்றான்.
தன்முன் யாழும் முழவும் சிலம்புக்கோலும் குடமுமாக அமர்ந்திருந்த வேசர நாட்டு பாடகர்குழுவை நோக்கி யயாதி வணங்க அவர்களும் எழுந்து பணிந்து வணங்கி நின்றனர். இடப்பக்கமிருந்து தாலங்களில் அவர்களுக்கான பரிசில்களுடன் அணுகிய ஏவலர்கள் நிரைவகுத்தனர். பழகிய அசைவுகள் நடனத்தின் இயல்பான அழகுடன் நிகழ கைநீட்டி அவற்றைப் பெற்று ஒவ்வொருவருக்கும் வழங்கி ஓரிரு இன்சொற்கள் சொல்லி அவர்களை வாழ்த்தினான். அவர்கள் உடல் வளைத்து அவற்றைப் பெற்று புறம்காட்டாது பின் நகர்ந்து சென்றனர்.
அவை கலைந்ததும் ஏவலர் சூழ எழுந்து தன் தனியறைக்கு நடக்கையில் யயாதி மெல்லிய சோர்வொன்றை உணர்ந்தான். ஒவ்வொருமுறையும் தேவயானியை தனிமையில் சந்திப்பதற்கு முன் அந்தச் சோர்வு தன்மீது வந்து கவிவதை அவன் உணர்ந்திருந்தான். ஏறமுடியாத உயரமொன்றின் அருகே சென்று நின்றிருக்கும் மலைப்பை அவளை மணந்த முதல் நாட்களில் அறிந்திருந்தான். பின்னர் அதுவே சலிப்பென்று முகம் மாற்றிக்கொண்டது. நம்மைவிட பெரியவர்களில் நம் ஆசிரியர்கள் தவிர பிற அனைவருமே நமக்கு உள்ளூர சோர்வளிப்பவர்களே என எண்ணிக்கொண்டான். உடனே அது தான் அரசனுக்குரிய ஆணவம் கொண்டிருப்பதனாலா என தோன்றியது. எளிய மக்களும் அவ்வாறுதான் உணர்கிறார்களா? அதை தான் அறியவே முடியாது.
தனிமையில் இருக்கையில் அவளை கைபற்றிய அந்தத் தருணத்தை தன் எண்ணத்தில் வரைந்தெடுக்க அவன் முயல்வதுண்டு. எண்ணியிராதபோது ஒவ்வொரு நூலிழையும் தெரியும் ஓவியத்திரைச்சீலையென தன் முன் விரியும் அக்காட்சிகள் முயன்று எண்ணுகையில் மட்டும் அலைநீர்ப் பாவைபோல் கலைந்தும் இணைந்தும் துளிகாட்டி பின் மறைந்து விளையாடுவது ஏனென்று அவன் வியந்து கொள்வான். குருநகரியிலும் ஹிரண்யபுரியிலும் தலைமுறைகள் எண்ணி நினைவில் வைத்திருக்கும் தொடர்நிகழ்வாக இருந்தது அவர்களின் மணவிழவு. சொல்லிச்சொல்லிப் பெருகி பின்னர் நினைவுக்கும் அடியில் சென்று கனவுகளென்றே ஆகியது.
மணவுறுதி நிகழ்ந்தபின்னர் அவன் தன் அகம்படியினரும் அணிப்படைகளும் குடித்தலைவர்களுமாக சென்று ஹிரண்யபுரி நகருக்கு வெளியே அவர்களுக்கென அமைக்கப்பட்ட குருபுரி என்னும் இணைவுநகரியில் தங்கினான். குருநகரியின் கொடிபறந்த பெருங்கம்பத்தைச் சூழ்ந்து நாநூறு பாடிவீடுகள் அமைந்திருந்தன. நடுவே அவனுக்கான மூன்றடுக்கு அரண்மனை. அதன் உப்பரிகையிலிருந்து நோக்குகையில் அசுரகுலத்தின் அத்தனை பெருங்குடிகளும் தங்கள் கொடிகளுடன் ஹிரண்யபுரியில் வந்து குழுமிக்கொண்டே இருப்பதை காணமுடிந்தது. மழைப்பெருக்கில் ஓடைகள் தோன்றுவதுபோல நகரைச் சூழ்ந்திருந்த அத்தனை மலையிடுக்குகளில் இருந்தும் அவர்கள் ஊறி வழிந்திறங்கினர்.
சில நாட்களிலேயே ஹிரண்யபுரி பலமடங்கு பெருகி அதன் வெளி எல்லைகள் மலைச்சரிவின் எழுவிளிம்பு வரை சென்று முட்டின. அரண்மனையிலிருந்து கிளம்பி எத்திசையிலும் நகரெல்லைக்குச் சென்று சேர ஓர் இரவும் பகலும் தேவையென்றாயிற்று. ஈச்சை ஓலைகளாலும் மரப்பட்டைகளாலும் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடில்கள் நிரைவகுத்து அவற்றின் கூம்பு முனைகளில் எழுந்த கொடிகள் காற்றில் படபடக்க தரையிறங்கிப் பரவிய வண்ணப்பறவைகளின் சிறகுப்பரப்புபோல விழி சென்று தொடும் எல்லைவரை தெரிந்தது. யானைத் தோல்களையும் எருதுத் தோல்களையும் இழுத்துக் கட்டிய கூடாரங்கள் காற்றில் உடலுப்பி அதிர மலைச்சரிவுகளில் பாறைக்கூட்டங்களென பரவியிருந்தன. இரவும் பகலும் அங்கு எழுந்த மக்களின் ஓசை செவி நிறைத்து சித்தப்பெருக்கை தான் சுமந்து சென்றது.
“பெருமுரசு ஒன்றுக்குள் குடியிருப்பதுபோல் உள்ளது” என்று விழி எல்லை வரை தெரிந்த குடிப்பெருக்கை நோக்கிக்கொண்டு பார்க்கவனிடம் சொன்னான். “அசுரகுலத்தில் இப்போது இங்கில்லாதவர்கள் தங்கள் தெய்வங்களை விட்டுப்பிரியாத நோன்புகொண்ட பூசகர்களும் நடக்கவியலாத முதியோரும் மட்டுமே என்கிறார்கள்” என்றான் பார்க்கவன். யயாதி சிரித்து “அவ்வண்ணமெனில் விண்நிறைந்துள்ள தேவர்கள் அனைவரும் இந்நகருக்கு மேலேயே விழியறியாது கூடியிருக்கிறார்கள். தங்கள் எதிரிகளையன்றி பிறரை எண்ணுவோர் எவர்?” என்றான்.
பார்க்கவன் நகைத்து பின் முகம் மாறி “ஹிரண்யபுரி எத்தனை எளிதாக இவ்விழவை ஏற்றுக்கொண்டது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. பதினாறு நாட்களுக்குமுன் அசுரர்களின் நூற்றெட்டு மூதன்னையர்கள் சிலையுருக்கொண்டு சூழ்ந்த ஆலயத்தின் முன் வைத்து விருஷபர்வன் சுக்ரரின் மகளை தன் நாட்டுக்கு இளவரசியாக மகளேற்பு செய்தார். அந்நிகழ்வு நடந்தேறும்வரை அப்படி ஒன்று நிகழக்கூடுமா என்பதே இங்கு ஐயமாக இருந்தது. சர்மிஷ்டைக்கு மாற்றாக தேவயானியை தாங்கள் மணம் கொள்ளும் செய்தி அசுரகுடியினர் அனைவரையும் கொந்தளிக்கச் செய்தது. காடுகளிலிருந்து அவர்கள் பெருகி இறங்கி இந்நகரை சூறையாடக்கூடுமென சாலைகளில் அந்தணர்களும் வணிகர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் நானும் அவ்வாறே அஞ்சினேன்” என்றான்.
“ஆனால் ஒவ்வொரு நாளும் கண்கூடாகவே இந்நகர் மாறிக்கொண்டிருந்தது. கதைகளின் பேராற்றலென்ன என்பதை அப்போது அறிந்தேன். அசுரர்குலம் மாண்பும் பெரும் வெற்றியும் பெறவேண்டுமென்றால் தேவயானியே குருநாட்டின் அரசியாகவேண்டும் என்று சுக்ரர் எண்ணுவதாக சூதர்கள் முதலில் பாடத்தலைப்பட்டனர். அசுரகுலத்து அரசியின் மைந்தர் பிறந்தால் வருங்காலத்தில் அவர்கள் குருநகரின் அரசராக முடியாது என்று அங்குள்ள மூத்தோரும் நிமித்திகரும் மறுத்துவிட்டமையால் விருஷபர்வன் இந்த நுண்ணிய அரசியல் சூழ்ச்சியை செய்திருப்பதாகவும் இதன்படி ஷத்ரியர் மறுக்கமுடியாத அசுரகுல இளவரசி குருநாட்டின் அரியணையில் அமரவிருப்பதாகவும் இனி ஷத்ரியர் குடிகளிலெல்லாம் அசுரக்குருதியே ஓடுமென்றும் பிறிதொரு கதை எழுந்தது.”
“இறுதியாக சர்மிஷ்டையின் நாளும் கோளும் அவளுக்கு பேரரசர்கள் பிறப்பதற்கு வாய்ப்பில்லை என்று உரைப்பதாகவும் அவளால் அசுரகுடிக்கு தீங்கு வருமென்றும் அதை தவிர்ப்பதற்காகவே அசுரர்களின் ஐங்குலங்கள் கூடி இம்முடிவை எடுத்ததாகவும் பின்னர் ஒரு கதை” என்றான் பார்க்கவன். “சொல்பெருகும் விரைவைப்போல் அச்சுறுத்துவது ஏதுமில்லை. இன்று இப்பெருக்குடன் சென்று சிலகாலத்திற்கு முன்புவரை அவர்களின் இளவரசியாக இருந்தவள் சர்மிஷ்டை என்று சொன்னால் அப்பெயரை நினைவுகூர்பவர்களே மிகச்சிலர்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.”
யயாதி “நான் அவளை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவள் நினைவைவிட்டு உளம் ஒழியவும் இல்லை. நானறியாத அப்பெண்ணுக்கு ஏதோ பெரும்பிழை இழைத்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றான். “தாங்கள் இழைத்த பிழை என ஏதுமில்லை…” என பார்க்கவன் சொல்லத் தொடங்க “ஆம், அதை நான் நன்கு அறிவேன். ஆயிரம் முறை அதை உள்ளத்திற்கு உரைத்தாலும் உள்ளம் ஏற்றுக்கொள்வதாக இல்லை” என்றான்.
மணநாளில் ஹிரண்யபுரியின் நூற்றியெட்டு மாமுற்றங்களில் மணமேடை அமைக்கப்பட்டது. அசுரகுடிகள் அவை அனைத்தையும் முற்றிலும் நிரப்பி அலையும் பெருக்கும் கரையும் தங்கள் உடல்களே என்று ஆகி சூழ்ந்திருந்தன. முதல் மேடை அரண்மனையின் பெருமுற்றத்தில் அமைந்திருந்தது. ஹிரண்யபுரியிலிருந்து வந்த நூற்றெட்டு பெருங்குல மூத்தோரும் அவர்களின் அகம்படியினரும் நூற்றெட்டு முதுவைதிகரும் அங்கே குருநாட்டின் கொடிகளுடன் முகப்பில் அமர்ந்திருந்தனர்.
அணியறையிலிருந்து மணமேடை நோக்கி செல்வதற்கு நீண்ட நடைபாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. விருஷபர்வனின் பேரமைச்சர் சம்விரதர் அணியறைக்குள் வந்து தலைவணங்க முழுதணிக்கோலத்தில் அமர்ந்திருந்த யயாதி எழுந்து கைகளைக் கூப்பியபடி நின்றான். குருநாட்டின் மணிமுடியை எடுத்து இரு அணிச்சேவகர் அவன் தலையில் சூட்டினர். வலம்புரிச்சங்கை ஊதியபடி மூன்று அணிச்சேவகர் முன்னால் சென்றனர். குருநாட்டின் கொடியை ஏந்தியபடி வெள்ளிக்கவச உடையணிந்த வீரனொருவன் தொடர்ந்தான். அவனைத் தொடர்ந்து மங்கல இசை முழக்கியபடி பதினெட்டு சூதர்கள் அவனுக்குப் பின்னால் நிரைவகுத்தனர்.
யயாதி அதே விரைவில் நீள்காலெடுத்து வைத்து நடந்து அப்பாலத்தின் மீதேறி சென்றான். அவன் தலைக்கு மேல் எழுந்த வெண்கொற்றக்குடையைப் பற்றியபடி அவனுக்குப் பின்னால் இரு ஏவலர்கள் வந்தனர். குருநாட்டின் படைத்தலைவன் வஜ்ரபாகு கவசஉடையணிந்து நீண்ட உடைவாளுடன் அவன் வலம் நடக்க அணிக்கோலத்தில் பார்க்கவன் இடம் நடந்தான். பட்டுத் தோரணங்கள் காற்றில் இறகென, புகையென, ஒளியென படபடத்த நடைபாதையில் அவன் தோன்றியதும் அங்கிருந்த அத்தனை அசுரகுலத்தோரும் தங்கள் கைகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.
குரல்கள் முயங்கி கலந்து மொழியிலாத பேரோசையாக அது அவனைச் சூழ்ந்து அலையடித்தது. பிறந்த நாள் முதலே வாழ்த்துகள் நடுவே அவன் வளர்ந்திருந்தாலும்கூட புயலில் சிறு சருகென அவனை ஆக்கும் அத்தகைய வாழ்த்தொலிப் பெருக்கை அவன் அறிந்ததில்லை. முதல் சில கணங்கள் இரு கால்களும் பதறிக்கொண்டிருந்தன. நெஞ்சு அவ்வோசையை அள்ளி தன்னுள் நிறைத்து சொல்லற்று சிலைத்திருந்தது. பின்னர் தன் சித்தத்தை முற்றிலும் அதற்கு அளித்தான். அவ்வொலியே அவனை அள்ளிச் சுழற்றிக் கொண்டுசென்று மணமேடையில் நிறுத்தியது.
வைதிகர் கங்கைநீர் தூவி அவனை வாழ்த்தி தூய்மை செய்தபின் குருநாட்டிலிருந்து வந்திருந்த குடிமூத்தோர் மேடைக்கு வந்து அவனுக்கு தங்கள் கோலை அளித்து அரிமலரிட்டு வாழ்த்தினர். கை கூப்பியபடி அவன் மணமேடையில் நின்றிருக்க மறுபக்கம் பிறைவடிவில் அமைந்திருந்த நடைபாதையினூடாக பொன்உருகி வழிந்து வருவதுபோல ஓர் அணி நிரை அணுகியது. பொன்னொளிர் நகைபொலிந்த அணிச்சேடியர் ஹிரண்யநகரியின் கொடியேந்தி முன்னால் வந்தனர். மங்கல இசை முழங்க வந்த சேடியருக்குப்பின் அணித்தாலங்கள் ஏந்திய சேடியர்நிரை தொடர்ந்தது. அதற்குப் பின்னால் ஏழு அழகிய சேடியரால் வழி நடத்தப்பட்டு தேவயானி நடந்து வந்தாள். அவளைப் போலவே உடையணிந்திருந்த அவள் தோழி வண்ண நிழலென அவள் மேலாடை நுனியைப்பற்றி மெல்லிய குரலில் நகைச்சொல் உரைத்து உடன் வந்தாள். வாழ்த்தொலிகள் ஒவ்வொரு பெருந்தூணையும் வீணைக்கம்பிகளென அதிரவைத்தன.
அவன் நேர்விழி நிலைக்க அவளை நோக்கலாகாது என்ற உணர்வை அடைந்து முகம் திருப்பிய பின்னரே அவள் முகத்தை நன்கு நோக்கவில்லை என்று உணர்ந்தான். மலர்களால் கிளை மறைவதுபோல அவள் அணிகள் அவளை மறைத்திருந்தன. மீண்டும் திரும்பி நோக்குதல் முறையல்ல என்றுணர்ந்து கழுத்தை இறுக்கி தன் முன் அலையடித்த முகங்களின் கொந்தளிப்பை இலக்கின்றி நோக்கி நின்றான். முதலில் அசுரகுலமூத்தார் எழுவரால் விருஷபர்வன் மேடைக்கு அழைத்துவரப்பட்டான். முடிசூடி செங்கோலுடன் வந்து யயாதியின் வலப்பக்கம் நின்றான். தன் முதன்மை மாணவர் சுஷமரும் கிருதரும் துணைவர முனிவர்களுக்குரிய துவராடை அணிந்து சடைக்கற்றைகளை மகுடமென சுற்றிக் கட்டி சுக்ரர் கைகூப்பியபடி மேடைக்கு வந்து நின்றார்.
சம்விரதர் அறிவிப்பு மேடையை நோக்கி கைகாட்ட நிமித்திகன் எழுந்து திருமணச் சடங்குகள் தொடங்குவதை அறிவித்தான். அசுரகுலத்தின் சடங்குகள் ஷத்ரியர்களின் குலச்சடங்குகள் போலவே இருந்தன. ஆனால் நோக்க நோக்க நுண்ணிய வேறுபாடுகளை கொண்டிருந்தன. ஒவ்வொன்றிலும் அவன் சித்தத்தில் ஒருபகுதி சென்று படிந்து மீண்டது. அனைத்தையும் நோக்கி நடித்தாலும் அவன் எதையும் முழுதறியவுமில்லை. சடங்குகள் தனியாளுமையைக் கரைத்து பெருந்திரளில் ஒன்றாக ஆக்கும் வல்லமை கொண்டவை. அச்சடங்குகளை முன்னரும் எத்தனையோ தலைமுறையினர் அவ்வண்ணமே செய்திருப்பார்கள். வரும்தலைமுறையினர் செய்யவிருக்கிறார்கள். மாறுபவை முகங்கள். அல்லது அவையும் மாறுவதில்லையோ?
சடங்குகளை வெறுப்பவர்கள் தனியர். மேலெழுந்தவர் அல்லது கீழடைந்தவர். மக்கள் சடங்குகளில் உவகைகொண்டு திளைக்கிறார்கள். மாற்றுருக்கொண்டு சிற்றூர்களின் வழியாக அலைகையில் மணச்சடங்குகளில், மைந்தர்விழவுகளில் நிறைந்து பொங்கும் முகங்களை அவன் கண்டிருக்கிறான். பெண்கள் சடங்குகளில் பிறிதொரு துளியும் எஞ்சுவதில்லை. ஆனால் இளமைந்தர் எப்போதும் சடங்குகளுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். கைப்பிடிகளிலிருந்து திமிறி விலகுகிறார்கள். ஒவ்வாத ஒலியெழுப்புகிறார்கள். வினாவெழுப்புகிறார்கள். சிணுங்குகிறார்கள். சடங்குகளில் சிறுவர் வளைந்தும் திரும்பியும்தான் நிற்கிறார்கள். தானென ஓங்கியும் சடங்குகளில் முழுதமைபவர்கள் உண்டா?
எத்தனை பழமையான சடங்குகள்! இதோ இப்போது நான் வேடன், கொன்ற விலங்கைக் கொண்டுவந்து பெண்ணை ஈன்றவனுக்கு அளிக்கிறேன். அது இன்று பொன்னில் வடித்த மானின் சிலை. இச்சடங்கில் நான் மீனவன். வெள்ளிமீன்களை கூடை நிறைத்து அவள் குலமூத்தாருக்கு அளிக்கிறேன். கன்றோட்டுகிறேன். அவள் பொற்கலம் நிறைய பாலுடன் வந்து எனக்கு அளிக்கிறாள். இவர்களின் குடி அடையாளங்களை நான் சூடி என் குடி அடையாளங்களை திரும்ப அளிக்கிறேன். என் மூதாதையருக்கு இப்புதிய பெண்ணை காட்டுகிறேன். அவர்களின் சொல்லை விண்ணிலிருந்து பெற்று எனக்களிக்கும் பூசகரைப் பணிந்து காணிக்கை வைக்கிறேன்.. இச்சடங்குகளினூடாக இன்று இவ்வடிவுகொண்டு இம்மேடையில் நிற்கும் என் குருதி இதற்கு முன் எடுத்த அத்தனை வாழ்க்கைகளையும் மீண்டும் இதோ நடிக்கிறேன்.
ஒரு பெண்ணை மணம்முடிப்பது அத்தனை எளிய நிகழ்வு அல்ல. விலங்கென மிக மிக எளிது. அதை முனைந்து முயன்று பெரிதாக்கிக் கொள்கிறது மானுடம். இப்பெண்ணை இங்கு நான் கைபற்றுவதென்பது என் மூதாதையர்தொடர் இத்தருணத்தில் அடையும் ஒரு பெருந்திருப்பம். என் குருதியில் முளைக்கும் என் வழித்தோன்றல்களில் முதற்கணம். இந்தப் பெண் என்பதால் இது தெரிகிறது. எந்தப் பெண்ணும் அப்படி அல்லவா? சடங்குகளென்பதே ஒவ்வொரு எளிய அன்றாடச் செயலையும் வாழ்வெனும் பெருக்கில் பொருத்தி மேலும் மேலும் பொருட்செறிவு அடையவைப்பதற்காகத்தான்.
மங்கல இசை தாளம் மாறி அதிர்ந்து பெருக மணநிகழ்வை நடத்திய முதுபூசகர் கைகாட்ட பார்க்கவன் குனிந்து அவன் காதில் “வலக்கை நீட்டி பற்றுங்கள், அரசே” என்றான். விருஷபர்வனும் சுக்ரரும் இரு கைகளாலும் தேவயானியின் கைகளைப் பிடித்து மெல்ல தூக்கி அவன் கையில் அளித்தார்கள். கைநீட்டி அவள் கையைப்பற்றி நோக்கியபோது மலரணிகளாலும் அருமணிச்சரங்களாலும் மூடப்பட்ட அவள் முகம் மெலிதாக தெரிந்து மறைந்தது. பெருவிழவுகளில் அணிகொண்டு பல்லாயிரம் தலைகளுக்கு மேலெழும் பல்லக்கில் அமர்ந்திருக்கும் அன்னை தெய்வத்தின் முகம் போல. மானுட உணர்வுகளுக்கு அப்பால் பிறிதொரு பேருணர்வு கொண்டு வெறித்த விழிகள்.
திடுக்கிட்டவன் போல் உடல்அதிர விழிவிலக்கி கையசைத்த பூசகரை பார்த்தான். பன்னிரு காலடி என்று அவர் சொன்னார். அந்தணருக்கும் ஷத்ரியர்களுக்கும் ஏழு காலடிகள். குடி, குலம், செல்வம், மைந்தர், அறம், வீடு, தெய்வம் என. இங்குள்ள மேலும் ஐந்து காலடிகள் என்ன? அவன்மேல் அரிமலர் மழை பொழிந்து முற்றிலுமாக மூடியது. பெருகிச் சரியும் அருவிக்குக் கீழ் நின்றிருக்கும் முழுத்தனிமை. அப்போது மிகத் தெளிவாக அக்கணம் நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் மலர்ப்புதைவென ஆழ்குழியிலிருந்து நீண்டு மேலெழுந்த அவள் கையை அவன் கண்டான். அதைப்பற்றி மேலே தூக்கியபோது மலர்க்கொடியும் சருகுகளும் உதிர மண் பிளந்தெழுந்ததுபோல் வந்த அவள் முகத்தை பார்த்தான்.
எங்கிருக்கிறோம் என்னும் உணர்வு அகல நிலை தடுமாறி விழப்போனவனை பார்க்கவன் கை இறுகப்பற்றி நிறுத்தியது. “அரசே…” என்று அவன் காதில் சொன்னான். “இன்நீர்… விடாய் கொண்டிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான். “சற்றுநேரம் பொறுத்துக்கொள்ளுங்கள், அரசே” என்றான் பார்க்கவன். எட்டாவது அடி அவர்களுக்கு மண்ணில் ஒரு மரமாக முளைத்து எழுதல். மலர்கொள்ளல். காய்த்துத் தாழ்தல். கனிந்து உதிர்தல். இன்னுணவாதல். விதையெனப் புதைந்து மூதாதையர் சொல் கேட்டு தன்னை உணர்ந்து மீண்டும் எழுதல். அசுரர்களின் தொல் மொழி முழவோசை போலிருந்தது. அதன் நுண்சொற்கள் ஒவ்வொன்றும் முரசுத்தோலை என நெஞ்சை அறைந்தன.
“அமரலாம், அரசே” என்று பார்க்கவன் சொல்லி அவன் கையை பற்றினான். அரியணையில் அவன் அமர சேடியரால் ஆடை மடிப்புகள் சீர் செய்யப்பட்டு தேவயானி மெல்ல அருகமர்ந்தாள். அணிகளின் நுண்ணிய ஓசை. வியர்வையும் கசங்கும் மலரும் புதுப்பட்டும் இணைந்த பெண் மணம். அவன் உடல் காய்ச்சல் கண்டவனைப்போல் பதறிக்கொண்டிருந்தது. மீண்டும் அவன் மண்பிளந்தெழுந்த அந்த முகத்தை அருகிலென கண்டான். அவ்விழிகளை. அவை அவனை நோக்கவில்லை. நெஞ்சுருகி கைகூப்பி நின்றிருக்கையில் நோக்கிலாத ஒளிகொண்டிருக்கும் கருவறைத் தெய்வம்.
அங்கிருந்து சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கிளம்பி அடுத்த மணவறைக்குச் சென்றான். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நூற்றெட்டு பெருமுற்றங்களிலும் அச்சடங்குகள் மீள மீள நிகழ்ந்தன. இடைவேளைகளில் துயின்று ஒவ்வொரு முறையும் நீராடி அணிகொண்டு நூற்றெட்டு மணமேடைகள். மணநிகழ்வுகள் முடிந்தபோது அவன் உடல் அனல் கொண்டிருந்தது. உதடுகள் வறண்டு கண்களில் நோக்கு அலையடிக்க எங்கிருக்கிறோம் என்றறியாமல் அவன் தள்ளாடினான். அவனை கைபற்றி கொண்டுவந்து மஞ்சத்தில் படுக்க வைத்தார்கள். அவன் தலையை மென்சேக்கையில் புரட்டியபடி “முளைத்தெழுதல்… முளைத்தெழுதல்… முளைத்தெழுகிறது கை” என்று முனகிக்கொண்டிருந்தான்.
மஞ்சத்தறைக்கு யயாதி சென்றபோது தேவயானி அங்கிருக்கவில்லை. அவள் சேடிதான் அங்கே நின்றிருந்தாள். “அரசி யவனத்தூதர்களுடன் அவையிலிருக்கிறார்கள், சற்று காலம் பிந்தலாமென தெரிவித்தார்கள்” என்றாள். அவன் முன்னரே அவள் அங்கிருக்கமாட்டாள் என எதிர்பார்த்திருந்தான். அவள் அங்கில்லாதது விடுதலையுணர்வையும் அளித்தது. தலையசைத்தபின் உள்ளே சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். “அரசிக்கு செய்தியென ஏதும் உண்டா?” என்று அவள் கேட்டாள். “இல்லை. நான் இங்கு காத்திருப்பதை மட்டும் சென்று சொல்” என்றான். அவள் “ஆணை” என தலைவணங்கி அகன்றாள்.
ஐந்தடித் தொலைவுக்கு அப்பாலிருக்கையில் அவள் தேவயானி போலவே தெரிவதை அவன் பலமுறை நோக்கி உளம் அதிர்ந்ததுண்டு. அணுகும்போது அவளிலிருந்து மெல்லிய மேலாடை நழுவுவதுபோல தேவயானி நழுவி பின்னால் விலகுவதுபோலிருக்கும். அகன்றுசெல்கையில் எந்தப் புள்ளியில் தேவயானி வந்து அவளில் கூடுகிறாள் என அவன் நோக்கிக்கொண்டிருப்பான். இடையசைவில் நடைநிமிர்வில் குழல்நெளிவில் கைவீச்சில்… தனித்தனியாக ஏதும் தெரிவதில்லை. நோக்கிக்கொண்டிருக்கும் விழிகளை சற்றே விலக்கி மீண்டும் நோக்கினால் தேவயானி எனக் கண்டு உள்ளம் அதிர்வுகொள்ளும்.
பீடத்தின் மேலிருந்த நூல்களை கையால் அளைந்துகொண்டிருந்தான். பின்னர் கைப்போக்கில் ஒன்றை எடுத்துப் பிரித்தான். அவன் எண்ணியதுபோல அது ஆட்சிநூல். மந்தாகினிதேவி இயற்றிய சரபஸ்மிருதி. அதை அடுக்கி நூலைச்சுழற்றி அப்பால் வைத்தான். அங்கு அரசியென வருவதற்கு முன் அவளுடைய முதன்மை ஆர்வம் காவியத்தில்தான் இருந்தது என அவளே சொல்லியிருந்தாள். அவளை அரண்மனையின் சுவடிநிலையத்திற்கு கூட்டிச்சென்றிருந்தபோது விழிவிரிய சுவடிகளை எடுத்து பிரித்துப்பிரித்து நோக்கியபடி “என்ன, அத்தனை நூல்களும் அரசுசூழ்தல் குறித்தா?” என்றாள். “இங்கு அனைத்து நூல்களும் உள்ளன. ஆனால் நான் ஈடுபடுவது இவற்றிலேயே” என்றான்.
“அரசுசூழ்தலை நானும் கற்றுள்ளேன். அவை நெறிகளும் நெறிவிலக்குகளும் ஊடுபாவென கலந்த ஒரு பெரும்பரப்பு. எந்தப் புள்ளியிலும் நெறியும் அதன் விலக்கும் இணைந்துதான் இருக்கும். கொள்வது நெறியையா விலக்கையா என்பது அதை கையாளும் அரசனின் விருப்பம் என்று தோன்றியது. அவ்வாறென்றால் நெறிநூல்கள் என்பவை அரசன் முடிவெடுப்பதற்கு உதவுபவை அல்ல, அவன் எடுத்த முடிவை அக்குடிகள் ஏற்பதற்கு மட்டுமே உதவுபவை என்று தோன்றியது. அதன்பின் அதில் ஆர்வமெழவில்லை” என்றாள்.
“நெறிகள் நூல்களில் வெறும் சொற்கள். கண்முன் வாழ்க்கையென அவை எழுந்து வந்து நின்றிருக்கையில் நுண்சொல் தொட்டு எழுந்து வரும் தெய்வங்கள் என அவை உயிர்கொள்வதை காணலாம்” என்று யயாதி சொன்னான். “நீ என்னுடன் நெறியவையில் அமர். என் வரைக்கும் வருபவை அறச்சிக்கல் கொண்ட வழக்குகளாகவே இருக்கும். துலாமுள் நிலைகொள்ள நெடுந்தொலைவை ஆடிஆடி கடக்கவேண்டியிருக்கும்” என்றான். “ஆம், நான் விழைவதும் அதையே” என்றாள் தேவயானி. அவனுடன் மறுநாளே வந்து நெறியவையில் அமர்ந்தாள். அவன் தான் சொன்னதை மறந்து “குடியவையில் அமர்ந்து களைத்திருப்பாய்” என்றபோது “இது என் அவை” என்று கூரிய சொற்களால் சொன்னாள்.
அன்று வந்திருந்த வழக்கு ஆயர்குடியினருக்கும் வேளாண்குடியினருக்குமான நிலவுரிமை குறித்தது. ஆயர்களின் மேய்ச்சல்நிலங்களை வேளாண்குடிகள் கைப்பற்றிவிட்டதால் இருசாராருக்கிடையே நிகழ்ந்த போரில் இருகுடிகளிலுமாக நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். இருசாராரும் தங்கள் தரப்பை சொல்லிமுடித்ததும் யயாதி புன்னகையுடன் தேவயானியை நோக்கி திரும்பி “உன் கருத்து என்ன, அரசி?” என்றான். அவள் எழுந்து “நிலம் நீர் நெருப்பு காற்று வானம் எனும் ஐந்து பருப்பொருட்களும் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை. தெய்வங்களுக்கு முறைசெய்து குடிகளுக்கு நலம்செய்யக் கோலேந்தும் அரசனுக்கு அவற்றை தெய்வங்களுக்கும் மானுடருக்கும் நலம்செய்யும்பொருட்டு மட்டும் ஆளும் உரிமை உண்டு” என்றாள்.
அவள் குரலும் நோக்கும் குடிகளை அறியாமல் கைகூப்ப வைத்தன. “ஆகவே நிலம் இருகுடியில் எவருக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்நிலம் எந்நிலையில் நன்கு பயனளிக்கும் என்பது மட்டுமே வினா” என்று அவள் தொடர்ந்தாள். “இதுநாள்வரை மேய்ச்சலுக்கு இருந்தமையாலேயே அது விளைச்சலுக்குரிய வளம்நிறைந்த நிலம். கன்றுகள் சென்றவழி இன்று பாதையென்றாகிவிட்டிருக்கும். அணுகக்கூடிய வளநிலங்கள் அனைத்தும் வயல்களாவதே திருநிறைப்பது. முடிந்தவரை நிலம்திருத்துவது வேளாண்குடியின் நெறி. புதுநிலம் கண்டடைவது ஆயர்குடியின் கடன். வேளாண்குடி புதுநிலம் கொண்டமையால் மேலும் வரிகொடுக்கவேண்டும். புதுநிலம் காண்பதற்கு ஆயர்களுக்கு அரசு நற்கொடை அளிக்கும்.”
அவர்கள் தலையசைத்தனர். “ஆகவே அந்நிலம் விளைநிலமாகவேண்டுமென குருநகரியின் பேரரசியென நான் ஆணையிடுகிறேன்” என்று அவள் ஓங்கிய குரலில் சொன்னாள். “இருகுடியினரும் தங்களால் கொல்லப்பட்ட மறுகுடியின் மைந்தரை தங்கள் தெய்வங்களாக மன்றில் நிறுத்தி வழிபடவேண்டும். ஆண்டுதோறும் அவர்களின் நாளில் பலிக்கொடை நடத்தி வணங்கவேண்டும்” என்று ஆணையிட்டபின் திரும்பி நெறிநிலை அமைச்சர் கர்கரிடம் “எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து குடிகளும் அரசுக்கு உரிமையானவர்களே. எனவே இருகுடியும் தாங்கள் கொன்ற இளைஞருக்கு ஈடாக அரசுக்கு பிழைச்செல்வம் அளிக்கவேண்டும். இளையோரை இழந்த குடிகளுக்கு அரசு அளிக்கொடை அளிக்கும்” என்றாள். “ஆணை, பேரரசி” என்றார் அவர்.
அவர்கள் நிறைவுற்றவர்களாக அவை நீங்கியபோது அவள் திரும்பி யயாதியிடம் “உங்கள் உளம்கொண்ட ஐயத்திற்கு கார்க்யாயனரின் ராஜ்யசூத்திரத்தில் விளக்கம் உள்ளது, அரசே. எக்குடியும் பிறகுடிக்கு கடன்பட்டதாக அமையலாகாது. அது அவர்களிடையே மேலும் பகையையே வளர்க்கும். பெறுவதும் கொடுப்பதும் அரசாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் அரசிடமே படைவல்லமை உள்ளது. எந்நெறியால் ஆணையிடப்பட்டாலும் படைக்கலம் உடன்செல்லாது எவரிடமிருந்தும் செல்வத்தை பெற முடியாது” என்றாள்.
யயாதி நகைத்து “ஆம், உண்மை” என்றான். “அரசன் பொருள்கொள்கையில் குடிகளிடம் எழும் சினத்தை அவன் அளிக்கும் காவல் நிகர்த்தும் என்கிறார் கார்க்யாயனர்” என்றாள் தேவயானி. “நினைவுறுகிறேன்” என்று யயாதி சொன்னான். “அந்நூலை எப்போது பயின்றாய்?” “நெடுநாள் முன்பு. இத்தருணத்தில் சொல் சொல்லென நினைவில் மீண்டது அது.” அவன் சிரித்து “இனி இந்த அவையில் நான் நெறிசொன்னால் எவரும் ஏற்கமாட்டார்கள் போலும்” என்றான். அவள் சிரித்து “நெறி முறையானதென்றால் எவர் சொன்னால் என்ன?” என்றாள்.
ஆனால் அதுவே உண்மையென்றாயிற்று. அவள் குரலில் நெறியுரைக்கப்பட்டால் மட்டுமே அனைத்துக்குடிகளும் ஏற்பார்கள் என அமைச்சர்களே அவனிடம் சொன்னார்கள். “பேரரசியிடம் ஐயமே இல்லை, அரசே. நீங்கள் எண்ணி தேர்ந்து சொல்லும் நெறி அவர்கள் நாவில் தெய்வமெழுவதுபோல வெளிவருகிறது” என்றான் பார்க்கவன். பின்னர் பேரவையிலும் குடியவையிலும் அவளே முதன்மைகொள்ளத் தொடங்கினாள். ஒவ்வொருநாளுமென அவன் அவற்றிலிருந்து விலகி தன் தனியுலகில் உலவலானான். அவைகள்தோறும் நின்று ஒலிக்கும் அழியா நெறிநூல் ஒன்றை இயற்றவேண்டுமென அவனுக்கு கனவு இருந்தது. அதை இயற்றத் தொடங்கி சுவடியறையிலும் புலவர்மன்றிலும் நாள்கழித்தான்.
மெல்ல அவன் உள்ளம் காவியங்கள் நோக்கி சென்றது. நெறிநூல்களில் கூழாங்கல் என உறைந்திருக்கும் சொற்கள் காவியங்களில் விதைகளென உயிர்கொள்வதை கண்டான். இயற்றிய நெறிநூலை பாதியிலேயே விட்டுவிட்டு அவன் காவியங்களுக்குள் மூழ்கினான். நான்கு திசைகளிலிருந்தும் கவிஞரும் சூதரும் அவன் அவைக்கு வரலாயினர். “ஒரு சொல்லை பின் தொடர்ந்து செல்வதுபோல் மூதாதையர் உள்ளத்திற்குள் செல்ல பிறிதொரு வழி இல்லை. ஒரு சொல்லை விட்டுச்செல்வதுபோல் கொடிவழிகளிடம் சென்று நிற்கவும் வேறொரு வழியில்லை” என்றார் வங்கநாட்டுக் கவிஞரான முக்தர்.
“கவிதைக்கென பயன்படாத சொற்களெல்லாம் வீணே” என்று அவன் ஒருமுறை சொன்னான். தமிழ்நிலத்துக் கவிஞரான பெருஞ்சாத்தன் சிரித்து “எங்கிருந்தாலும் சொல் கவிதையே. கிளையிலமர்ந்திருக்கையில் பறவையல்ல என்று சொல்லலாகுமா?” என்றார். ஒரு குளிர்ந்த உலுக்கலுடன் அவன் அதன் பொருளை உணர்ந்தான். அவன் சொல்லுணர்வை முழுமையாக மாற்றியது அது. ஒவ்வொரு கூற்றிலும் சொற்கள் சொல்லப்படாத பொருள்விரிவு கொண்டு அமர்ந்திருப்பதை கண்டான். நெறிநூல்களில் அரசாணைகளில் அவைப்பேச்சுக்களில் வெற்று முகமன்களில்கூட சொல் முடிவிலி சூடியிருந்தது.
“கவிதையன்றி ஏதும் எங்கும் சொல்லப்படவில்லை” என்று அவன் தேவயானியிடம் சொன்னான். அவள் நகைத்து “நான் உதிர்த்ததை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட்டீர்களா என்ன?” என்றாள். “சொல்கொள்ளும் அழகை உணராதவர்களுக்கே அரசியலும் நெறியியலும் பிறவும்” என்றான் யயாதி. அவள் அவனருகே வந்து “சொல்லுக்கு பொருளைச் சூடிக்கொள்ளும் விடுதலையை அளிக்கலாகாதென்பதே நான் அரசுசூழ்தலில் கற்றறிந்தது. ஆகவே சொல் ஒவ்வொன்றில் இருந்தும் கவிதையை விலக்குவதே இன்று என் பணி” என்றாள். “ஏனென்றால் நாம் அளிக்கும் பொருளைக் கொண்ட சொல்லே இலக்கு நோக்கும் அம்பு. பொருள்விரிவு கொண்ட சொல் கட்டற்ற பறவை.”
“கொல் என கூர்ந்ததே படைக்கலமாக ஆகும். படைக்கலங்களால் ஆளப்படுகின்றது இப்புவி. படைக்கலமாகாத சொல்லுக்கு அரசுசூழ்தலில் இடமில்லை” என அவள் சொன்னபோது அத்தனை நெறிநூல்களையும் வகுத்து நடுவே தெய்வப்பெருவஞ்சமென அமர்ந்திருக்கும் ஒன்று பெண்ணுருக்கொண்டு வந்ததுபோலிருந்தாள். அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். “சினம் கொண்டுவிட்டீர்களா?” என்று அவள் வளைகள் ஓசையிட கேட்டாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “நீ ஆள்கையில் மண்பொலிகிறது. வளம்திகழ்ந்து தெய்வங்களும் மக்களும் மகிழ்ந்தால் போதும். எவர் சொல் விளங்கினால் என்ன?”
யயாதி மஞ்சத்தில் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டான். உத்தரங்களையே நோக்கிக்கொண்டு உளம் மயங்கி ஆழ்ந்து சென்றான். அவன் அரசொழிந்துவிட்டான் என்று குருநகரியின் மக்கள் சொல்வதை அவனிடமும் பலர் சொன்னார்கள். “போர் என்று வந்தால்கூட முப்புரம் எரித்த மூவிழியள் என கலைமேல் ஏறிச் செல்வாள் போலும் பேரரசி” என்று முதுகுலத்தார் ஒருவர் அவையிலேயே சொன்னதை நினைவுகூர்ந்தான். பலமுறை பலகோணங்களில் தன்னை நோக்கியபோதும்கூட எவ்வகையிலும் அவனுக்கு அவள் கொண்ட மேலெழுச்சி உளம் குன்றச்செய்யவில்லை என்றே தோன்றியது.
உடலைத் தளர்த்தி பரப்பிக்கொண்டு கோட்டுவாயிட்டான். “ஆம், இக்களிப்பாவைகளைக் கொண்டு அவளே ஆடிமகிழட்டும். நான் இவற்றை கடந்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டான். “ஆம், நான் வாழ்வது பிறிதொரு இன்னுலகில்” என எண்ணிக்கொண்டான். உளம் ஆழ்ந்து துயிலில் மூழ்கியபோது அச்சொற்களே எஞ்சியிருந்தன. கூடவே பிறிதொன்றுமிருந்தது, சொல் தொடாதது. ஆனால் அத்தனை சொற்களும் ஓசையிலாது சுற்றிவரும் மையம்..
தொடர்புடைய பதிவுகள்
April 12, 2017
ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?
நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் ,
ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்?
பீடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறீர்களா ? உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறீர்கள் ,
(என்னுடைய கேள்வியல்ல , சில நண்பர்களுடையது , பதில் அளிக்க வேண்டுமெனில் மட்டுமே அளிக்கலாம் , எனக்கு பதில் உண்டு ,மனதுக்குள் , அவர்களுக்கு தெளிவாக சொல்ல இயலவில்லை )
அன்புடன்
Arangasamy.K.V
அன்புள்ள அரங்கசாமி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான். ஆனால் அடிக்கடி நான் பதில் சொல்லிவிட்ட கேள்வியும்கூட.
இம்மாதிரி கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னதாக கேட்பவர்கள் இக்கேள்வியை பொதுமைப்படுத்த முயலவேண்டும். ஜெயமோகன் இதையெல்லாம் எழுதலாமா என்ற கேள்வியை எழுத்தாளர்கள் இதையெல்லாம் எழுதலாமா என்று கேட்டுக்கொண்டு, தானறிந்த எழுத்தாளர்களை எல்லாம் அதைச்சார்ந்து பரிசீலித்துவிட்டு, அதன்பின்னரும் அதே கேள்வி எஞ்சுமென்றால் மட்டுமே என்னிடம் கேட்க வேண்டும்.
தமிழையே எடுத்துக்கொள்வோம். இலக்கியதளத்திற்கு வெளியே விரிவாக கருத்துக்களை முன்வைத்த எழுத்தாளர்களை நிராகரிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நாஞ்சில்நாடன் அரசியல், ஆன்மீகம், இசை, சமூகம் என எல்லா தளங்களிலும் ஆணித்தரமான கருத்துக்களை எழுதிவருகிறார். அதற்கு முந்தைய தலைமுறையில் சுந்தர ராமசாமி விரிவாக பிற விஷயங்களை எழுதினார். ஜெயகாந்தன் முப்பது வருடம் அரசியல் சமூகத் தளங்களில் கருத்து உருவாக்குநராகச் செயல்பட்டார். அதற்கு முன் பாரதி… அவன் தொடாத துறைகளே இல்லை. இவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு எஞ்சியவர்களை வைத்து தமிழிலக்கிய உலகைப்பற்றிப் பேசப்போகிறோமா என்ன?
மலையாளத்தில் சி.வி.ராமன்பிள்ளை, குமாரன் ஆசான் முதல் சக்கரியா வரை அத்தனை முக்கியமான எழுத்தாளர்களும் அரசியல் சமூகத்தளங்களில் கருத்துச் சொல்லிவந்தவர்கள். குவெம்பு , சிவராம காரந்த் முதல் யூ.ஆர்.அனந்தமூர்த்தி வரை அப்படித்தான். அவர்கள் தேவையில்லை என்றால் எழுத்தாளர்களில் எஞ்சுவது எவராக இருக்கும்?
எழுத்தாளனின் சமூக இடம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆழமான அவநம்பிக்கையில் இருந்தே இந்த கேள்வி எழுகிறது. அவனை ஒருவகை கேளிக்கையாளன் என்றே நம் சமூக ஆழ்மனம் இன்றும் நினைக்கிறது. இது நம் நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தில் இருந்து வந்த நம்பிக்கை. அவனை சிந்தனையாளனாக, ஏதேனும் முறையில் சமூகத்திற்கு வழிகாட்டுபவனாக, சமூகத்தின் முதன்மைப் பிரஜையாக நம் சமூக ஆழ்மனம் நினைப்பதில்லை.
ஆகவேதான் கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் நம் சமூகமனதுக்கு அது கேவலமாக படவில்லை. அவன் அதைச் செய்யலாம், இலக்கியவாதிதானே என்றே நாம் எண்ணுகிறோம். நம் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேருக்கு இலக்கியவாதிகள் என்பவர்கள் சமூகத்தின் ‘பரிசிலை’ வாங்கிக்கொண்டு தொழுது நிற்க வேண்டியவர்கள் மட்டுமே. நாதஸ்வரக் கலைஞர்கள் ஊர்ப்பெரியமனிதர்களுக்கு சந்தனம்பூசிவிடவேண்டும் என்று எண்ணிய சமூகமனதின் பிம்பம் இன்றும் தொடர்கிறது.
நம் பெரியமனிதர்கள் இலக்கியவாதிகளை நடத்தும் பாவனையில் அதைக் கண்டிருக்கிறேன். ஒருவகை ‘புரவலர்’ பாசத்துடன், ‘கருணை’யுடன் நடந்துகொள்வார்கள். உபதேசங்கள் அளிப்பார்கள். தங்கள் வீட்டில் எப்படி எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சோறு போடுவதுண்டு என்பார்கள். நம் கல்வித்தந்தைகள், துணைவேந்தர்கள் நடந்துகொள்ளும் முறையும் இதுவே. தமிழ்நாட்டில் இந்த நுண் அவமானத்தைச் சந்திக்காத எழுத்தாளனே இருக்கமாட்டான் — அவன் அதை அவமானமாகக் கொண்டானென்றால்.
ஆனால் நவீன இலக்கியவாதி என்பவன் நிலப்பிரபுத்துவகாலக் கலைஞன் அல்ல. அவன் தன்னை கேளிக்கையாளனாக நினைத்துக்கொண்டவன் அல்ல. அவன் தன்னை சமூகத்தின் அதிகபட்ச நுண்ணுணர்வுகொண்ட உறுப்பினனாக ,அதனால் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ளவனாக, சமூகத்தின் குரலாக ஒலிப்பவனாக உருவகம் செய்துகொண்டவன். பாரதி அப்படித்தான் தன்னை உருவகம் செய்துகொண்டான். ஆகவேதான் அரசியல், கல்வி ,சுகாதாரம் ,தொழில் ,வர்த்தகம் என எல்லாவற்றைப்பற்றியும் அவன் எழுதினான். ஆனால் அவனை அவன் வாழ்ந்த சமூகம் நிலப்பிரபுத்துவ நோக்குடன் பார்த்தது. இதுவே அவனது அவலம். நக்கலாகவும் கிண்டலாகவும் புதுமைப்பித்தனும் இந்தச் சமூக அணுகுமுறையைக் குறித்து கடும் விமரிசனம் எழுதியிருப்பதைக் காணலாம்.
ஏன் எழுத்தாளன் இவற்றை எழுத வேண்டும்? மூன்று காரணங்கள். சமூகத்தின் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன. ஆகவே அவன் இயல்பாகவே எதிர்வினையாற்றுவதில் முதலாவதாக முன்வருகிறான். இரண்டாவதாக, பிற குடிமகன்களிடம் இல்லாத ஒன்று, மொழித்திறன், அவனிடம் உள்ளது. ஒரு எளிய குடிமகனின் குரலை எழுத்தாளன் மேலும் தீவிரமாக, உக்கிரமாக, முன்வைத்துவிட முடியும். அந்தப்பங்களிப்பை அவன் செய்வது என்றும் சமூகத்திற்கு உதவியானதே
மூன்றாவதாக, எந்தத் துறையிலும் நிபுணர்கள் சொல்வதற்கு வெளியே உள்ள சிலவற்றை எழுத்தாளன் அவனது நுண்ணுணர்வு மற்றும் அவன் கருவியாகக் கொள்ளும் கற்பனை மூலம் கண்டு சொல்ல முடியும். ஆய்வுமுறைபப்டி சொல்லப்படும் கருத்துக்களுக்கு வெளியே நின்று உள்ளுணர்வு சார்ந்து அவன் பேச முடியும். ஆரோக்கியமான சமூகங்களில் அந்தக் கோணம் எப்போதுமே பொருட்படுத்தவும் படுகிறது.சிலசமயம் அவனது தரப்பு தர்க்கபூர்வமானதாக இல்லாமலிருக்கலாம். சிலசமயம் குழப்பமானதாக இருக்கலாம். சிலசமயம் போதிய தகவல்சார்பு இல்லாததாக இருக்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானது, காரணம் அவன் வேறு நுண்கருவி ஒன்றை கையில் வைத்திருக்கிறான்.
ஆனால் இந்தப் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளன், ஒரு சமூகக்குடிமகனாக, குடிமக்களில் ஒருவனாக நின்று தன் கருத்துக்களை பதிவுசெய்யலாம். அதற்கு மேல் அவனுக்கு ஓரளவேனும் ஆர்வமும் பயிற்சியும் உள்ள துறைகள் சார்ந்து கருத்துக்கள் சொல்லலாம். முற்றிலும் தெரியாத துறைகள் சார்ந்து கருத்துச் சொல்வது பெரும்பாலும் சரியானதல்ல. நான் எப்போதுமே இந்த எல்லைக்குள் நின்றுகொண்டே என் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.
என் தெருவில் குப்பை அள்ளப்படாததைப் பற்றி, எனக்கு பேருந்துப்பயணத்தில் நிகழ்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேச நான் ஒரு சமூகக் குடிமகன் என்ற தகுதியே போதும். ஒழுங்காக வரிகளைக் கட்டியிருந்தாலே போதும். பொதுப்பிரச்சினைகளில் இந்த எல்லையை நான் தாண்டுவதில்லை. உதாரணமாக சமீபத்தில் ஒரு ஆவணப்படத்திற்காக மரபணுமாற்ற கத்தரிக்காய் குறித்து என் கருத்தைக் கேட்டார்கள். அதில் ஒரு குடிமகனாக இத்தகைய அறிவியல் சோதனைகளுக்கு நம் நாடு களமாக ஆக்கப்படுவதைப்பற்றிய என் அச்சத்தையும் குழப்பத்தையும் மட்டுமே சொல்லியிருக்கிறேன்.
நான் ஆர்வமும் பயிற்சியும் கொண்டிருக்கும் தளங்கள் சில உண்டு. இலக்கியத்திற்கு அப்பால் இந்தியதத்துவம், தென்தமிழகம் மற்றும் கேரள வரலாறு, தென்தமிழக சமூகவியல், காந்திய சிந்தனைகள் ஆகியவை அந்தத் தளங்கள். அவற்றில் கருத்துச்சொல்ல எனக்கு தகுதியில்லை என்று அந்தத் தளங்களைப் பற்றி ஓரளவேனும் அறிமுகம் உடைய எவரும் சொல்ல மாட்டார்கள். அந்தத் தளங்களில் என்னுடன் விவாதிக்கத் தகுதியுடையவர்களாக நான் அவற்றின் நிபுணர்களையே தேர்வுசெய்வேன்.
இதைத்தவிர தொழிற்சங்க அரசியல், மற்றும் அதன் பொருளியல் தளங்கள் சார்ந்து எனக்கு இருபதாண்டுக்கால அனுபவம் உண்டு. மாற்றுமருத்துவம் என்னுடைய நெடுங்கால ஆர்வங்களில் ஒன்று. என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் இருந்து பெற்றுக் கொண்டது அது.
இந்த தளங்களுக்கு வெளியே எந்த அறிவுத்துறை குறித்தும் ஒரு எளிய பார்வையாளன், சமூகக் குடிமகன் என்ற அடையாளத்துக்கு அப்பால் சென்று நான் கருத்துக்கள் சொல்வதில்லை. சினிமா, இசை போன்ற தளங்களில்கூட நான் இந்த அடையாளத்தை எனக்கெனச் சொல்லிவிட்டே கருத்துச் சொல்கிறேன் என்பதைக் காணலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் போன்ற பல தளங்களில் கருத்துச் சொல்ல முன்வருவதேயில்லை. என் எல்லைகளுக்குள் நான் கருத்துச் சொல்கிறேன் என்றே நினைக்கிறேன்.
இத்தனைக்கும் அப்பால், என் கருத்துக்கள் பொருட்படுத்தத் தக்கன அல்ல என்றால் அவற்றை எளிதில் எவரும் புறக்கணித்துவிடலாமே. பல தளங்களைச் சார்ந்த முக்கியமான நிபுணர்கள் என் கருத்துக்களை வாசித்து வருகிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள் என நானும் அறிவேன்.
*
இந்த விவாதத்தில் கடைசியாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் எனக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டே கருத்துச் சொல்கிறேன். காரணம் நான் என்னை ஏற்கனவே அடையாளம் உருவாகிவிட்ட எழுத்தாளன் என நினைப்பதுதான். ஆனால் எளிய குடிமக்கள், செய்தித்தாள்கள் மூலம் கருத்துக்களை தெரிந்துகொள்பவர்கள் இத்தகைய எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
நிபுணர்கள் எனப்படுவோர் இத்தகைய சாதாரண குடிமக்களின் அறிதலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் கருத்துச்சொல்லும் உரிமையை அல்லது தகுதியை நிராகரிப்பதென்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த நிபுணர்கள் ஒரு தனி சமூக அமைப்பு போலச் செயல்படுகிறார்கள். அவர்களின் சொந்த அறிவுத்துறைகளின் ஒழுக்கக்கெடுபிடிகளுக்கும் அதிகாரத்துக்கும் கட்டுப்படுகிறார்கள். அத்துடன் பற்பல சுயநல நோக்குகளுடன் அனைத்து மானுட அறங்களையும் எளிதில் மீறுகிறார்கள். சாமானிய மக்களை தங்கள் சோதனை எலிகளாக நினைக்கிறார்கள்.
அந்த அறிவுத்திமிருக்கு எதிராக சமானிய மக்களின் அறவுணர்ச்சி அல்லது அச்சம் குரலெழுப்பும்போது அறிவின் அகங்காரத்துடன் ‘நீ ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்?’ என்று கேட்கும் நிபுணரின் குரல் ·பாசிசத்தின் எதிரொலியே. ஏனென்றால் இன்று சாமானியனுக்காக போராட சாமானியன்தான் இருக்கிறான். அவனை நவீனத்துவ தொழில்நுட்பமும் அறிவியலும் இரக்கமில்லாமல் கைவிட்டுவிட்டன. இன்றைய அறிவியலும் தொழில்நுட்பமும் அற அடிப்படை இல்லாதவையாக, தங்கள் சொந்த விதிகள் கொண்டவையாக ஆகிவிட்டன.
நான் அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றியோ, மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றியோ, புவிவெப்பமாதல் பற்றியோ ஏதும் எழுதியதில்லை. எனக்குத்தெரியாத தளங்கள் அவை என்பதே காரணம். ஆனால் இந்தியமொழிகளில் என்னைப்போன்ற எழுத்தாளர்கள் அவற்றைப்பற்றி தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களிடம் ‘நீ ஏன் இதையெல்லாம் பேசவேண்டும், போய் கதை மட்டும் எழுது போ’ என்று சொல்லும் குரலின் ஆணவத்தை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அங்கே எழுத்தாளன் மொழியில்லாத சாதாரண மனிதர்களின் மொழியாக நின்று பேசுகிறான் என்பதே அதற்குக் காரணம்.
ஜெ
[மார்ச் 2010ல் வெளியான கேள்வி பதில், மறுபிரசுரம்]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


