Jeyamohan's Blog, page 1650

April 19, 2017

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு

C360_2016-05-06-12-37-25-417



இனிய ஜெயம்,


இன்றும் வழமை போல நான் சட்டை மாட்டுகையில் அம்மா மின்விசிறியை அணைத்தார்கள். பல வருட பழக்கம் அது அவர்களுக்கு. அவர்கள் என் பக்கம் நின்றால் இதை செய்யாமல் இருக்க மாட்டார்கள். முன்பு ஒரு சமயம் சட்டை மாட்ட கையை உயர்த்தி மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் விரல்கள் தட்டி, விரல்கள் வீங்கி ஒரு ஐந்து நாள் வலது கையால் புத்தகம் தூக்கவோ எழுதவோ இயலாமல் இருந்தேன்.


இன்று இக்கோடையில் சில நிமிட விசிறியின் ஓய்வு கூட என் வீட்டை கங்கு மேல் போர்த்திய சாம்பலின் வெம்மைக்கு அழைத்து சென்றுவிடும். அம்மாவைப் பார்த்தேன். நான் சட்டையை மாற்றியதும் விசிறி சுவிட்சைப் போட அதன் அருகிலேயே நின்றிருந்தார்கள். உள்ளே ஏதோ பொங்க, சட்டென கிளம்பி வெளியேறினேன்.


ஒவ்வொருமுறையும் வெளியேறித்தான் செல்கிறேன். அம்மாவை விட்டு. முந்தாநாள் என் தங்கை மகனை உக்காந்து படிடா என்றேன். அம்மா குறுக்கிட்டு ”அம்மா உன்னைய என்னைக்காவது படின்னு சொல்லிருக்கேனா? ஆனா பாரு இப்போ நீ எத்தனை தடி தடி புத்தகம் எல்லாம் படிக்கிற. அவனும் அப்படிப் படிப்பான் விடு ” என்றார்கள். ஆம் ஒருபோதும் என் படிப்பைக் கேட்டு என் உயிரை உருவாத அம்மா. இப்போது நான் படிக்கும், அதன் வழி கிடைத்த எல்லாம் ”சரஸ்வதி கடாக்ஷம் ” என மகிழும் அம்மா.


முன்பு ஒரு சமயம் வீட்டிலிருந்து காணாமல் போய் திரும்பி வந்தபோது கேட்டார்கள். அம்மாவை விட்டு எங்கடா போன? ஆம் அம்மாவிடம் இல்லாத ஒன்று ”வெளியே” இருக்கும் என்பது அவர்களால் நம்ப இயலா ஒன்று. வேறொருநாள் இரவு.நல்ல காய்ச்சல் என் தலை கோதியபடியே கேட்டார்கள். ”தம்பி அன்னைக்கு எங்கடா போன?”


இதோ இன்று தலைக்கு மேல் நின்றெரியும் சூரியனுக்கு சொல்லிக்கொண்டேன். ஏன் போகிறாய்? அம்மாவை விட்டு வெளியேற… எங்கே போகிறாய்? தலைக்கு மேல் நின்றெரியும் தனியன் அறிவான். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே.


ஒவ்வொரு வெளியேற்றமும் அன்னையை நீங்கலே. ஒவ்வொரு பயணமும் என் ஆதியைத் தேடியே. ஊமை வெயில், அவிக்கும் மேகம் போர்த்தி ஒளிரும் சாம்பல் வானம். தலை மேல் தலைகீழாக ஒரு வெம்மைக் கடல். பாடலீஸ்வரர் கோவிலில் குளத்திலிருந்து கைமாறி ஆயிரத்து எட்டு குடம் நீர், அருகிலிருந்த சிறிய கோவிலுக்குள் சென்று பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது. மழை வேண்டி. குளிர்வாளா பிடாரி? மழை மிக மிகப் பிந்தியது. தீதான் ஆதி. புவியின் மையத்திலும், புலரியின் ஆற்றலிலும். தீதான் மானுடத்தின் முதல் தொன்மம். தவம் தீ. எல்லா அன்னையரும் ஆளும் தீ. தீ கொண்டோர் யாவரும் தனியர்.


வழியில் கண்டேன் ஒரு அன்னை நாய் வெயில் தாளாமல் சாக்கடைக்குள் அமர்ந்திருந்தது. சாக்கடை திட்டில் அதன் குருளை ஒன்று, பசி முனகலுடன் அன்னையை நோக்கி கால் கால் மாற்றி தவித்தது. தவிப்பு உயர்ந்து குட்டி அன்னையை நெருங்க, தவறி சாக்கடைக்குள் விழுந்தது. அன்னை நாய் குட்டியை கவ்வி வெளியே போட்டு, தானும் வெளியேறி சாக்கடை திட்டில் ஒருக்களித்துப் படுத்தது. சாக்கடையில் குளித்து, கரும் பிசின் போர்த்திய உடலுடன் குட்டி மொச் மொச் ஒலி எழும் வண்ணம் முலையருந்தியது.


இம்முறையும் திரும்பிச் செல்வேன்.


கடலூர் சீனு


***



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 11:31

அழகியே- ஒரு நகல்


 


வேடிக்கையான காணொளி. என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள். சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும். ட்ரோன் , ஜிம்மிஜிப் கிரேன்  எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்முறை படத்தொகுப்பு. தொழில்முறை நடனக்கலைஞர்கள், தேர்ந்த நடனப்பயிற்சி. டிஐ கூட செய்திருக்கிறார்கள்


 


இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது.  வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட். ஒருவகையான கேனத்தனம். ஆனால் இளமை கொண்டாட்டம் என்றாலே ஒரு சின்ன கேனத்தனம் இருந்தால்தான் அழகுபோல.


 


இதில் கவனிக்கவேண்டியது என தோன்றியது சினிமா சர்வசாதாரணமாக ஆவதுதான். இதையே கணிசமானவர்கள் செய்யத் தொடங்கினால் தயாரிப்புச் செலவு குறையும். சொந்தவாழ்க்கையையே சினிமாவாக எடுத்து வைக்கலாம். இதில் உள்ள நகல்செய்யும் போக்கு இல்லாமல் ஆகும் என்றால், புதிய படைப்பூக்கங்கள் உள்ளே வரும் என்றால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கற்பனை செய்யவே வியப்பாக இருக்கிறது


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79

79. விதைகளும் காற்றும்


யயாதி எளிய வெண்ணிறஆடையை அணிந்து மீண்டும் தன் அறைக்கு வந்தபோது அவனுக்காக சர்மிஷ்டை காத்து நின்றிருந்தாள். அவன் காலடியோசையையே கேட்டிருந்தாள். எழுந்து வாயில்நோக்கி வரும் அசைவிலிருந்தவள் அவனைக் கண்டதும் நின்று முகம் மலர்ந்து பின் சூழலை உணர்ந்து சேடியரின் முறைப்படி தலைவணங்கினாள். அவனுடன் எவருமில்லை என அறிந்தபின் அருகணைந்து “களைத்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், வங்க நாட்டுக்குச் சென்றிருந்தேன்” என்றபடி அவன் பீடத்தில் அமர்ந்தான்.


அவனருகே வந்து காலடியில் தரையில் அமர்ந்தவளாக “இங்கு பேரரசியுடன்தான் தாங்கள் வருவீர்கள் என்று எண்ணியிருந்தேன்” என்றாள் சர்மிஷ்டை. “அறிவின்மை… நான் எப்படி இங்கே அரசன் என என்னை காட்டிக்கொள்ள முடியும்?” என்றான் யயாதி. “ஆம், உண்மை. நான் அதை எண்ணவில்லை” என்றாள் சர்மிஷ்டை. அவன் தணிந்து “அரசுமுறையாக பேரரசி செல்லும் இடங்களுக்கெல்லாம் நான் செல்வதில்லை. ஆகவே அதில் பிழையாக ஏதுமில்லை” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.


“உன்னிடம் பார்க்கவனின் ஓலை வந்து சேர்ந்ததல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மைந்தர் மூவரையும் அருகிருக்கும் அஸ்வபாதக் காட்டில் சுப்ரபாலரின் பயிற்சிக்களத்திற்கு அனுப்பிவிடும்படியும் நான் மட்டும் இங்கு சேடியாக தங்கும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள். பின்னர் மேலும் குரல்தாழ்த்தி “அரசி வந்தால் அழைக்கப்படாதவரை முகம்காட்டவேண்டாம் என்றும் அரசி மைந்தர் எங்கே என்று கேட்டால் மட்டும் அவர்களை புரவியோட்டப் பயிற்சி கொள்வதற்காக அனுப்பியிருப்பதாக சொல்லும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள்.


“அது நன்று. அவள் இங்கு ஏழுநாட்கள் தங்கியிருப்பாள் என்று எண்ணுகிறேன். அது மிகச்சிறிய காலமே” என்றான் யயாதி. “ஆம்” என்றாள் சர்மிஷ்டை. யயாதி “இயல்பென புழங்கினால் எதுவும் வெளிவராமல் அதை கடந்துவிட முடியும். அவள் இச்சிறுமைகள் அனைத்திற்கும் மேலாக பறந்து செல்ல விழைபவள். ஆகவே அவள் விழிகளிலிருந்து எளிதில் தப்பிவிடலாம். நமது அறியாமையால் பொறுமையின்மையால் மிகைநம்பிக்கையால் பிழை ஏதும் இயற்றாமல் இருந்தால் மட்டும் போதும். அதை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்றே வந்தேன்” என்றான்.


அவள் மெல்லிய எரிச்சல் தெரிய “அதை பார்க்கவரின் ஓலையினூடாகவே நான் புரிந்து கொண்டேன். அதைச் சொல்ல தாங்கள் வந்திருக்க வேண்டியதில்லை” என்றாள். அவன் சினத்துடன் “நான் வந்திருக்கலாகாது என்கிறாயா?” என்று கேட்டான். அவள் கண்கள் சுருங்க “என்ன பேச்சு இது? நீங்கள் எதன்பொருட்டு வந்தாலும் அது எனக்கு உவகையளிப்பதே. உங்கள் வாழ்க்கையில் மிகக்குறுகிய பகுதியே எனக்காக வெட்டி அளிக்கப்படுகிறது. இந்தப் பதினாறு ஆண்டுகளில் நான் உங்களுடன் இருந்த காலங்களை மட்டும் எடுத்து தொகுத்து பார்த்தால் ஓராண்டுகூட இல்லை. அதற்குள் நிறைந்து வாழ விழைபவள் நான். பொழுதனைத்தும் எனக்குக் கொடையே” என்றாள்.


“இந்த ஆண்டுகளில் நான் உன்னிடம் கண்டது நன்கு சொல்லெடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதுதான்” என்று அவன் சொன்னான். அவள் புன்னகைசெய்தாள். அவளுடன் அணுக்கம் கொள்ளும்தோறும் பூசல் மிகுந்துவருவதை அவன் உணர்ந்திருந்தான். எப்போதும் சந்தித்த முதற்சில கணங்களுக்குப்பின் பூசல்தான் எழும், பின்னர் நெகிழ்வும் தழுவலும். மீண்டும் பூசல். அவன் காலடியில் அவள் அமர்ந்திருக்கையில் அப்பூசல் நிகழ்வதனாலேயே அவை ஓர் எல்லைக்குள் நின்றன, ஆகவே இனிமையான ஆடலாக அமைந்தன.


அவன் பூசலிடும் ஒரே பெண் அவள்தான் என எண்ணியதும் புன்னகைகொண்டு அருகே சென்று அவள் தோளைப்பற்றி “நான் வந்தது இவையனைத்தும் நானே உன்னிடம் உரைக்க வேண்டும் என்பதற்காக. பார்க்கவன் உனக்கு ஆணையிடலாகாது. நீ மறந்தாலும் நீ விருஷபர்வனின் மகளென்பதை நான் மறக்க இயலாது” என்றான். சர்மிஷ்டை “நான் மறக்கவில்லை. எப்போதும் அது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆனால் எங்கோ நெடுந்தொலைவில் திகழ்கிறது. அங்கிருந்த என்னை இங்கிருந்து பார்க்கையில் எவரோ என்றே நினைவுகொள்ள முடிகிறது” என்றாள்.


“உன்னை இங்கு மறைத்து வைத்திருப்பது குறித்து பெரும் குற்றஉணர்வு எனக்கு இருக்கிறது. விதையை புதைத்து வைப்பது போலத்தான் உன்னை மறைத்து வைத்திருக்கிறேன் என்று ஒருமுறை தோன்றியபோது அதிர்ந்துவிட்டேன். எதையும் முழுமையாக மறைக்கமுடியாதென்பது மனித வாழ்க்கையின் மாறா நெறிகளில் ஒன்று” என்றான் யயாதி. அவளைத் தழுவி தன் உடலுடன் இணைத்துக்கொண்டு முகத்தைப்பற்றி விழிகளை நோக்கி “உன்னை நான் மறைப்பதில்கூட பொருளுள்ளது. ஏனெனில் இவ்வுறவு நாமிருவரும் எண்ணி உருவாக்கிக்கொண்டது. இது ஒருபோதும் பிறரறிய நிகழ முடியாதென்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் நம் மைந்தருக்கு அத்தகைய பொறுப்போ கடனோ ஏதுமில்லை. கல்லுக்கடியில் முளைத்த செடிகளைப்போல அவர்கள் இங்கு மறைந்து வெளிறி வாழவேண்டியதில்லை. சூதர் மைந்தர்களாக இழிவுகொள்ள வேண்டியதுமில்லை” என்றான்.


சர்மிஷ்டை “அவர்கள் தாங்கள் அரச மைந்தர்கள் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. நான் விருஷபர்வனின் மகள் என்று அவர்களிடம் சொன்னதுமில்லை. சூதர்கள் என்றே அவர்கள் தங்களை எண்ணுகிறார்கள். ஆகவே சூதரில் முதன்மை என்னும் தன்மதிப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்துயரையும் இதுவரை அடைந்ததில்லை” என்றாள்.


“நாம் மறைக்க முடியாத ஒன்று உண்டு, அவர்களின் முகம்” என்று யயாதி சொன்னான். “அது தெய்வங்கள் அளிப்பது. வளரும்தோறும் தெளிந்து எவர் குருதி எவ்வுடம்பில் ஓடுகிறதென்பதை அது வெளிப்படுத்தும். அப்போது அவர்கள் பெரும் துயரை அடையத் தொடங்குவார்கள். அத்துயரை அவர்களுக்கு அளிக்கும் உரிமை நமக்கில்லை. நான் விண்ணேகினால் அதன்பொருட்டு என் மூதாதையர் முன் சென்று தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.”


சர்மிஷ்டை இயல்பான உதட்டுச்சுழிப்புடன் “அதற்கு என்ன செய்ய இயலும்?” என்றாள். அது அவளியல்பு, அவள் உள்ளம் சென்றடையாத ஒன்றை எளிதாக உதறிக்கடந்துவிடுவாள். “அதைப் பேசவே நான் வந்தேன். தேவயானி இங்கு வந்து செல்லட்டும். அதன் பிறகு அவர்களை தனிப்படை திரட்டி உடன்சேர்த்து தென்னாட்டுக்கு அனுப்புகிறேன். அங்கு அவர்கள் மூவரும் மூன்று நிலங்களை வென்று அந்நிலங்களின் அரசர்களாக அமையட்டும்.”


“தேவயானி உளம்கனியும் முதுமையில் அவர்கள் யார் என்று அவளிடம் சொல்வோம். அவள் மைந்தன் யது குருநகரியின் மணிமுடியை சூடியபின் அவனை அழைத்து அவர்கள் அவனுக்கு இளையோர் என்றும் நிகர்உரிமை கொண்டவர் என்றும் சொல்கிறேன். அவர்கள் அவன் நிலத்திற்கும் குருதிக்கும் உரிமைகோராதவர்கள் என்றால் அவனுக்கு பகையிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வென்ற நிலங்கள் அவனுக்கு உடன்குருதியர் நாடுகளாகும் என்றால் அது அவனுக்கு வலிமையே சேர்க்கும்” என யயாதி சொன்னான்.


“இவற்றையெல்லாம் ஏன் இப்போது பேசவேண்டும்?” என்றாள் சர்மிஷ்டை. “திருஹ்யூவிற்குபதினாறாண்டு அகவை நிறைகிறது. அவன் சிறுவனல்ல” என்றான் யயாதி. “எது உங்களுக்கு உகந்ததோ அதை செய்யுங்கள்” என்றாள் சர்மிஷ்டை. அவள் முற்றிலும் உளம் விலகிவிட்டாள் என்று கண்டதும் அவ்வுரையாடல் முடிந்துவிட்டதை யயாதி உணர்ந்தான்.

யயாதி “மைந்தரை இங்கு வரச்சொல், நான் அவர்களை பார்க்கவேண்டும்” என்றான். “ஒவ்வொருமுறை வரும்போதும் நீங்கள் அவர்களை பார்த்துச் செல்கிறீர்கள். நீங்கள் யார் என்னும் வினா அவர்கள் உள்ளத்தில் எழக்கூடும். மூத்தவனுக்கு அகவை பதினாறு வரும் ஆடியில் நிறைவுறுகிறது. அவர்கள் இச்சிற்றூரிலிருந்து இன்றுவரை வெளியே சென்றதில்லை ஆகவே அனைத்தும் எளிதாகவே இன்றுவரை சென்றுகொண்டிருக்கிறது. அதை எல்லைவரை இழுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.


“நான் உன்னைப் பார்க்கவென்று இங்கு வந்தது முதல் ஓராண்டு மட்டுமே” என்றான் யயாதி. “பின்னர் எப்போதும் மைந்தரை நோக்குவதே என் முதல்விருப்பமாக இருந்துள்ளது.” சர்மிஷ்டை “அந்த விருப்பு உங்கள் விழிகளிலும் கைகளிலும் வெளிப்படுகிறது. ஒருமுறைகூட நீங்கள் மைந்தரை தொட்டுத் தடவாமலிருந்ததில்லை. உங்கள் சொற்களனைத்தும் கனிந்திருக்கும் அப்போது. சென்றமுறை இங்கிருந்து சென்றதுமே மூத்தவன் கேட்டான், நீங்கள் யார் என்று” என்றாள். யயாதி “நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டான்.


“முன்னரே பார்க்கவர் சொன்னபடி நீங்கள் அரசகுடிப்பிறந்தவர், அரசியின் அலுவலர் என்று அவனிடம் சொல்லியிருந்தேன். நீங்கள் ஒற்றர் என்றும் எனவே வந்து இங்கு தங்கிச்செல்வது எவருமறியாத மந்தணமாக இருக்கவேண்டுமென்றும் ஆணையிட்டிருந்தேன். அவன் ‘நான் அதை கேட்கவில்லை. அவருக்கும் நமக்கும் என்ன உறவு?’ என்று கேட்டான். என் உளம் நடுங்கிவிட்டது. அத்தருணம் வந்தணையுமென்று எதிர்நோக்கியிருந்தேன். அதை கடப்பதெப்படி என்று எண்ணுகையில் உள்ளம் மலைக்க சரி அது நிகழும்போது பார்ப்போம் என ஒத்திப்போடுவேன்.”


“என்ன செய்தாய்?” என்றான் யயாதி. “அப்போது என் பெண்ணியல்பே கைகொடுத்தது. விழிநீர் துளிக்க ‘இவ்வினாவுக்கு சேடிப்பெண் விடைசொல்லமுடியாது, மைந்தா’ என்றேன் அவன் திகைத்துவிட்டான். அவன் சொல்லெடுப்பதற்கு முன்பு இளையவனாகிய புரு ‘மூத்தவரே, இனி இதைப்பற்றி நாம் ஒருசொல்லும் எடுக்கவேண்டியதில்லை’ என்றான். நம் மைந்தரில் அவனைப்போல் நுண்ணுள்ளம் கொண்டவரில்லை. மூத்தவர்களும் அவன் சொல்லை கடப்பதில்லை. அவர்கள் சொல்மாற்றி பிறிதுபேசி விலகிச்சென்றனர். அதன்பின் இன்றுவரை பேச்சு எழுந்ததில்லை.”


“ஆக நானே அவர்களின் தந்தை என சொல்லிவிட்டாய்” என்றான். “இல்லை, சேடிக்கு அப்படி எவரையும் சொல்லமுடியாதென்பதே அதன்பொருள். நீங்கள் அவர்களின் தந்தையாக இருக்க வாய்ப்புண்டு, அல்லது தந்தையென அமைந்த பலரில் ஒருவர்.” யயாதி “கீழ்மை… தன் மைந்தரிடம் ஒருவன் இவ்வாறு தோற்றமளிப்பது” என்றான். “இதை எண்ணியிருந்தால் அன்று எளிய உணர்வெழுச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கவே மாட்டேன்.” அவள் சினந்து “எளிய உணர்வெழுச்சிகளா? இப்போது அவ்வாறு சொல்லலாயிற்றா?” என்றான்.


“இப்புவியிலுள்ள உறவுகளும் உணர்வுகளும் பொருளின்மையின் எளிமை கொண்டவையே. அதை உணரும் தருணங்கள் எனக்கும் அமைந்துகொண்டிருக்கின்றன” என்றான் யயாதி. சர்மிஷ்டை சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் எழுந்து “நான் மைந்தரை வரச்சொல்கிறேன்” என வெளியே சென்றாள். யயாதி அவள் நடையிலேயே ஒரு எரிச்சல் தெரிந்ததை நோக்கி நின்றான்.


உடலின் அசைவாலேயே எரிச்சலை வெறுப்பை சினத்தை புறக்கணிப்பை வெளிக்காட்ட பெண்களால் இயல்கிறது. ஒருவரிடம் அவ்வாறு தன் ஒவ்வொரு அணுவாலும் உணர்வை வெளிக்காட்டுமிடத்திற்கு பெண் செல்லும்போதுதான் அந்த ஆணை தன்னுள் அவள் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்று பொருள். அவன் குழந்தையை பெற்றபின்னரே அது பெண்களுக்கு அமைகிறது.



tigerமைந்தர்களுக்காக காத்திருந்த நேரத்தில் அவர்களின் கடந்தகாலத் தோற்றங்களை அவன் உள்விழிகள் அளைந்துகொண்டே இருந்தன. அத்தனை உடல்தோற்றங்களும் ஒன்றுடன் ஒன்றென இணைந்து அலையடித்தன. சித்தத்தை இறுக்கி ஒரு பொருளென்றாக்கி அதைக்கொண்டு எண்ணங்களை நீவிப்பிரித்து தனித்தனியாக நோக்கவேண்டியிருந்தது. மூத்தவன் திருஹ்யூ பிறந்தபோது அவன் அன்னையைப்போல கரியசிற்றுடலும் கூரிய சிறுமூக்கும் பெரியவிழிகளும் கொண்டிருந்தான். குழந்தைபிறந்த செய்தி கேட்டபோது அவன் குருநகரியில் இருந்தான். வந்துசேரும்போது பதின்மூன்றாம்நாள். குழவியை முதலில் நோக்கியபோது உடனே எழுந்தது பெரிய ஏமாற்றம். அதை ஒருகணம் முகம் காட்டிவிட்டது.


பார்க்கவன் “நன்று, ஐயமெழாது” என்றான். அவன் திரும்பிநோக்க “பேரரரசி எவர் என்று கேட்காமலிருக்கமாட்டார்” என்றான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலால் முகம் மலர குழந்தையை கையில் வாங்கி முகம் சேர்த்தான். அதன் மென்கால்களில் முத்தமிட்டபோது இளங்குருதிமணம் கொண்டு சித்தம் மயங்க அவனுள் வாழ்ந்த தொல்விலங்கு தன்னை தந்தையென்றுணர்ந்தது. களிப்புடன் “இனியவன்” என்றான். பார்க்கவன் “அனைத்துக் குழவிகளையும்போல” என்றான். “இவன் அரசனாக வேண்டும். எங்கோ… நான் உறுதியாக எண்ணுகிறேன், இவனுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் யயாதி. “வயற்றாட்டி காதில் விழவேண்டியதில்லை” என்றான் பார்க்கவன்.


பேற்றுவிலக்கு கொண்டு ஈற்றறையில் படுத்திருந்தாள் சர்மிஷ்டை. கணவனும் மைந்தருமன்றி பிறர் பேற்றுவிலக்குகொண்ட பெண்ணை சென்று நோக்கலாகாதென்பது நெறி. “இங்கு எவரறியப்போகிறார்கள்?” என்றான் யயாதி. “வேண்டியதில்லை, அரசே. அதையே ஓர் அறிவிப்பென கொள்ளக்கூடும் சிலர்” என்றான் பார்க்கவன். ஈற்றறைச் செவிலியிடம் மைந்தனை திரும்ப அளித்துவிட்டு “சின்னஞ்சிறு உடல்… அதில் தளிர்மொட்டென முகம். ஆனால் அதிலேயே குலம்தெரிகிறது. குடிமுறை தெரிகிறது. தன்னியல்பும் வெளிப்படுகிறது… விந்தை!” என்றான். “அன்னையைப்போல” என்றான் பார்க்கவன்.


“ஆம், ஆனால் அவளை நோக்காதவர்கள்கூட இச்சிறுமுகத்தைக்கொண்டு இவனை ஐயுறுபவன், அஞ்சுபவன், எங்கும் எப்போதும் வெல்லாதவன் என்று சொல்லிவிடமுடியும்” என்றான். “அதுவே தடையென எண்ணி மீறிஎழுபவர் இல்லையா?” என்றான் பார்க்கவன். “உண்டு, அவ்வாறி கீறிமுளைத்தெழுவதன் முளைமொட்டும் அம்முகத்தில் தெரியும்” என்றான் யயாதி. “நம்மைவிட நிமித்திகர் அதை கூர்மையாக சொல்லக்கூடும்.”


அவர்கள் திரும்பும்போது பார்க்கவன் “பேரரசி இளவரசர் யதுவை ஈன்றபோது உங்களுக்குத் தோன்றியதென்ன?” என்றான். யயாதி முகம் மலர்ந்து “அவள் மைந்தனை ஈன்றிருக்கிறாள் என்னும் செய்தியை கொண்டுவந்த முதுசேடி நிலையழிந்து சிரித்துக்கொண்டிருந்தாள். முறைமைச்சொற்களை சொல்லக்கூட அவளால் இயலவில்லை. அவளுடன் மங்கல இசைக்கருவிகளுடன் மூன்று விறலியரும் ஐம்மங்கலங்களுடன் ஏழு அணிச்சேடியரும் வந்தனர். முதலில் கொடிதாங்கியும் சங்கூதியும் நடந்தனர். என் அரண்மனை வாயிலை அவர்கள் அடைந்ததுமே தெரிந்துவிட்டது. நான் எழுந்து நின்றதும் அணுக்கன் ஓடிவந்து நான் அரசாடை புனையவேண்டும் என்றான். ‘அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றேன். ‘அதற்குள் அரசே… பிறந்திருப்பவன் குருநகரியின் பட்டத்து இளவரசன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியின் முதல்மைந்தன்…’ என்றான். ‘ஆம்’ என்றபோது என் குரலில் சலிப்பே வெளிவந்தது.”


அச்செய்திக்காக இருபத்தெட்டுநாட்களாக காத்திருந்தேன். குறித்தநாள் கடந்து பதினெட்டு நாட்களாகிவிட்டிருந்தன. சுவடியை மூடிவிட்டு உடையணிந்தேன். முடிசூடி காத்து நின்றிருந்தேன். மங்கல இசை ஒலித்தது. வாழ்த்தொலிகளுக்கு நடுவே சங்கும் வரவறிவிப்பும் ஒலித்தன. நான் எண்ணியிருந்ததற்கு மாறாக முதுசேடி கதவைத்திறந்து உள்ளே ஓடிவந்து என் காதுகளை பற்றிக்கொண்டு “மைந்தனை ஈன்றுவிட்டீர்கள், அரசே. பாரதவர்ஷத்திற்கு சக்ரவர்த்தி பிறந்திருக்கிறார்” என்றாள். சிரித்துக்கொண்டு என்னைப் பற்றி உலுக்கி “மானுடன் தெய்வங்களுக்கு நிகர்நின்றிருக்கும் தருணம். தெய்வங்கள் மானுடனை அனைத்துக்கு அப்பாலும் பொறுத்தருளும் வேளை” என்றாள்.


அவள் என்னை தூக்கிவளர்த்தவள். அத்தருணத்தை அவள் அப்படி கலைக்காமலிருந்திருந்தால் நான் உறைந்தே இருந்திருப்பேன். சிரித்தபடி “முதுமகளே, இச்சொற்றொடரை பயின்றுகொண்டு வந்தாயா?” என்றேன். சிரித்தபடி கண்ணீர் விட்டாள். எனக்கு ஐம்மங்கலத்தாலத்தில் இருந்து இனிப்பை எடுத்து ஊட்டினாள். அவளுக்கு நான் அருமணிபதித்த கழுத்தணியை பரிசளித்தேன். அன்றுமுழுக்க பரிசளிப்புகள் நிகழ்ந்தன. பாரதவர்ஷத்தில் பிறிதெந்த மைந்தன் பிறப்புக்கும் அவ்வண்ணம் பெரும்பரிசுகள் அளிக்கப்பட்டதில்லை. ஏனென்றால் அதற்கு முன்னர் அவ்வாறு அளிக்கப்பட்ட பரிசுகளை கணக்கிட்டு அவற்றுக்கு இருமடங்காக பரிசுகள் அமையும்படி முன்னரே கிருதர் வகுத்திருந்தார்.


மறுநாள்காலை முதற்புலரியில் தேவயானியையும் மைந்தனையும் நான் காண நற்பொழுது வகுக்கப்பட்டிருந்தது. அரசணிக்கோலத்தில் அகம்படியினருடன் சென்றேன். வரவறிவிக்கும் நிமித்திகனுக்குப் பின்னால் என் செங்கோல் சென்றது. பதினெட்டு இசைச்சூதர் பதினெட்டு அணிச்சேடியர் தொடர்ந்தனர். வெண்குடையுடன் ஏவலர் என் பின்னால் வந்தனர். அது ஓர் அரசப்பெருநிகழ்வு. என்னருகே அமைச்சர்கள் வந்தனர். ஈற்றறைக்கு வெளியே ஒரு பொற்தொட்டிலில் வெண்சேக்கையில் மைந்தன் படுக்கவைக்கப்பட்டிருந்தான். பேறெடுத்த மருத்துவச்சி அவனை எடுத்து என்னிடம் காட்டினாள். அன்னையைப்போன்ற தோற்றம். நேர்மூக்கால் பகுக்கப்பட்ட வட்டமுகம். ஒவ்வொரு உறுப்பும் பழுதற்றிருந்தது.


நான் எண்ணியதையே என்னுடன் வந்த நிமித்திகர் சொன்னார் “பழுதற்ற உடல், அரசே. தெய்வச்சிலைகளுக்குரிய அளவுகள். மண்ணில் பேரரசனாகவே பிறந்திருக்கிறார். பாரதவர்ஷம் பணியும் கால்கள் இவை. நம் கொடிவழியினர் பல்லாயிரமாண்டு ஆலயத்தில் நிறுத்தி வழிபடும் முகம்.” அச்சொற்கள் ஏனோ எனக்கு பெரிய உள எழுச்சி எதையும் உருவாக்கவில்லை. நான் அவனைப்பெற்ற அச்செய்தி வந்தபோது படித்துக்கொண்டிருந்த நூலில் இருந்த ஒருவரி எந்தப்பொருத்தமும் இல்லாமல் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது.  ‘காமதேனு அகிடுகளின் நான்கு காம்புகளிலிருந்து நான்கு குலங்கள் பிறந்தன.’


உள்ளறைக்குச் சென்று பேரரசியை பார்த்தேன். அவளருகே சாயை நின்றிருந்தாள். என்னருகே வந்து “களைத்திருக்கிறார்கள். ஓரிரு சொற்களுடன் முடித்துக்கொள்ளுங்கள்” என்றாள். நான் “ஆம், நான் உடனே சென்றுவிடுவேன்” என்றபின் அவள் அருகே சென்று நின்றேன். விழிகளைத் திறந்து என்னை நோக்கினாள். நான் முற்றிலும் அறியாத பெண். நான் உள்ளூர அஞ்சும் அரசி. “என் குலம் வாழ மைந்தனை அளித்திருக்கிறாய்” என்றேன். அவள் மறுமொழி சொல்வதற்குள் சாயை “பாரதவர்ஷம் ஆள வந்த சக்ரவர்த்தி. சுக்ரரின் கொடிவழியின் அருமணி” என்றாள். நான் “ஆம்” என்றேன்.


அவள் “மைந்தன் பிறந்தமை நாட்டில் பதினெட்டுநாள் கொண்டாட்டமாக அமையட்டும். இருபத்தெட்டாம்நாள் அரையணி சூடும் விழவுக்கு பதினெட்டு ஷத்ரியநாடுகளின் அரசர்களும் வந்தாகவேண்டும்” என்றாள். “ஆம், உரிய ஆணைகளை பிறப்பிக்கிறேன்” என்றேன். “ஆணைகளை பிறப்பித்துவிட்டேன். சாயை என்பொருட்டு அனைத்தையும் நோக்குவாள்” என்றாள். “நன்று” என்றேன். திரும்பும் வழியெங்கும் நகரில் கொண்டாட்டங்கள் உச்சம் கொண்டிருப்பதை கண்டேன். என் அரண்மனை உப்பரிகையில் நின்று நோக்கியபோது எங்கும் களிவெறியே கண்ணுக்குப்பட்டது. நான் எந்தப் பொருளுமில்லாமல் காமதேனுவைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.”


பார்க்கவன் புன்னகையுடன் “மைந்தரைப்பற்றி தந்தை கொள்ளும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை. அவை அச்சத்தாலோ மிகைவிழைவாலோ ஆனவையாகவே இருக்கும்” என்றான். “மைந்தனுக்கு பெயரிடவேண்டும்… ஒரு நிமித்திகரை அழைத்துவருக!” என்றான் யயாதி. பார்க்கவன் ஒருகணம் எண்ணியபின் “நானறிந்த ஒருவர் இருக்கிறார்” என்றான். உச்சிப்பொழுதில்தான் அவரை அழைத்துவந்தான். கைகளும் தலையும் நடுங்கும் வயோதிகர். யயாதி எழுந்து அவரை வணங்கியதும் அவர் கைதூக்கி வாழ்த்தளித்து “எவருக்கோ மைந்தர் பிறந்திருப்பதாக சொன்னார்கள்” என்றார். “எனக்குத்தான்” என்று அவன் சொன்னான். “நன்று” என அவர் அமர்ந்து “நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுள்ளதா?” என்றார். “இதோ” என்று யயாதி ஓலையை அவரிடம் நீட்ட “எனக்கு விழிமங்கல். படியுங்கள்” என்றார் கிழவர். “உரக்க படியுங்கள்… செவிகளும் சற்று பழுது.”


யயாதி நிமிர்ந்து நோக்க பார்க்கவன் “இவர் தங்களை நினைவுகொள்ளப்போவதில்லை, எவரென உசாவவும் வாய்ப்பில்லை” என மெல்லியகுரலில் சொன்னான். பார்க்கவன் சலிப்புடன் தலையசைத்தான். அவர் அவன் படித்ததை மும்முறை கேட்டுவிட்டு பெருமூச்சுடன் தாடியைத் தடவியபடி சற்றுநேரம் அமர்ந்திருதார். பின்னர் “உயர்குடிப்பிறப்பு. ஆனால் எப்பயனுமில்லாத முன்னூழ். முன்னோர்முறையென வருநிலம் தவறும். அடைவதோ கெடுநிலமே ஆகும். கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன். சுமையெனத் தோளிலேறும் துயரத்துடன் அலைவதே வாழ்க்கை” என்றார்.


பார்க்கவன் போதும் என கைகாட்ட அதை காணாமல் அவர் சொல்லிக்கொண்டே சென்றார். “எங்கும் தனியன். எப்போதும் தயங்குபவன். தன் சிறுமையை உணர்ந்து அஞ்சுபவன். அவ்வச்சத்தால் எதிரிகளைப் பற்றி கற்பனை செய்துகொள்வான். எதிரிகளை கற்பனை செய்துகொள்பவன் நாளடைவில் அவர்களை எதிரிகளென அடைவான். அவர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருப்பான். நிழலை அஞ்சும் சிற்றுயிர், நிலைகொள்வது என்பது அதற்கில்லை.”


யயாதியே போதுமென கைகாட்டினான். “ஆனால் பொறாமை அழியா நெஞ்சம் கொண்டிருப்பான். உடன்குருதியனை எண்ணி எண்ணி ஒருநாளேனும் நல்லுறக்கம் கொள்ளும் பேறு இலாதவனாக இருப்பான்” என நிமித்திகர் தொடர்ந்தார். “ஆனால் நன்மைந்தர் பேறு உண்டு. விதைபெருகும் பாலைமரம். எவ்வனலும் எரிக்காத வேர் கொண்டவன். இவன் கொடிவழி குலமென்றாகி எக்காலமும் மண்ணில் வாழும்.”


யயாதி முகம் மலர்ந்து “அவ்வாறே ஆகுக!” என்றபின் “இவனுக்கான பெயரென்ன என்று உரைக்கலாகுமா?” என்றான். அவர் வெண்புள்ளி அலைந்த விழிகளை மேல்நோக்கி உயர்த்தி சிலகணங்கள் நிலைத்தபின் “மண்ணுக்குரியவன், மண்ணை விழைபவன் என்னும் பொருளில் ஒரு பெயரிடுக! திருஹ்யூ என்பது என் உள்ளத்தில் தோன்றுகிறது” என்றார். யயாதி “அதுவே ஆகட்டும். அவனுக்கு மண் கனியட்டும்” என்றான்.


நிமித்திகர் பெருமூச்சுடன் தன் மெலிந்த கைகளை நீட்டி கால்களை எளிதாக்கினார். யயாதி உரக்க “நிமித்திகரே, பிறிதொரு பிறவிப்பொழுதை சொல்கிறேன். கணித்தளிக்கவேண்டும்” என்றான். தாழ்ந்தகுரலில் “அரசே, வேண்டாமே” என்றான் பார்க்கவன். “இல்லை, அவர் உரைக்கட்டும். விழியின்மையால் அவர் பிறவிழிகளை காணாமலாகிவிட்டிருக்கிறார். அது அவரை மானுடத்திலிருந்து முற்றிலும் விலக்கியிருக்கிறது. காலத்தை மட்டுமே காண்பவராக அமர்ந்திருக்கிறார்” என்றான் யயாதி. “இரண்டாம் முறை நிமித்தம் நோக்குவதும் பெயர்நோக்குவதும் பிழை” என்றான் பார்க்கவன். “என்னால் இதை தவிர்க்கமுடியாது” என்றான் யயாதி.


மெல்ல முனகி உடல் அலுப்பை அகற்றியபின் “சொல்லும்” என்றார் நிமித்திகர். யயாதி யதுவின் பிறவிப்பொழுதை சொன்னான். “அரசகுருதி. அவைமுதன்மைகொண்ட இளமை. ஆனால் கொடிவழிவந்த நிலம் அகன்றுபோகும். புதுநிலம் தேடி அலையும் வாழ்க்கை. காட்டெரி என அழித்துப் பரவுவது. அணையா பெருவிருப்பும் காழ்ப்பும் கொண்டு கணம்தோறும் உயிர்மிகும் உள்ளம். மைந்தர்ச்செல்வம் மிகும். கொடிவழிகள் பெருகும்.” யயாதி படபடப்பை அடக்கியபடி “நான் ஒன்றை மட்டும் கேட்க விழைகிறேன், கணியரே. இப்பிறப்பாளனின் வருகைநோக்கம் என்ன?” என்றார். “பெருங்குலம் ஒன்றின் முதல் விதைமுத்து இவன். என்றுமழியா பெருக்கு இவன் குருதியில் துளிக்கும்” என்றார் அவர்.


அவன் கேட்பதற்குள் “அவன் ஊழை சுட்டும் ஒரு பெயர் நன்று. அவ்வாறே ஆகுக என்னும் பொருளில் யது” என்றார். யயாதி வியப்புடன் “அதுவே அவன் பெயர் நிமித்திகரே. ஆனால் காற்று என அதற்கு எங்கள் முதுநிமித்திகர் பொருள் சொன்னார்” என்றான். நிமித்திகர் புன்னகைத்து “அதுவும் நான் சொன்ன பொருளில்தானே?” என்றார். யயாதி “நன்று!” என எழுந்து அவரை வணங்கினான். பார்க்கவன் அளித்த பொற்காசுகளை எடுத்து வணங்கி அவருக்கு அளித்தான். அவர் மெல்ல எழுந்து தன்னை அழைத்துச்செல்லும்படி கோரி கைநீட்டினார்.


அதன்பின் மற்ற மைந்தருக்கு அவன் நிமித்தம் நோக்கவில்லை. துர்வசு என தேவயானியின் இரண்டாம் மைந்தனுக்கு அவள் அமைத்த நிமித்திகர்களே பெயரிட்டனர். அனுதிருஹ்யூ என இரண்டாமவனுக்கு சர்மிஷ்டையே பெயரிட்டதாக செய்தி வந்தது. சர்மிஷ்டையின் மூன்றாவது மைந்தன் பிறந்தபோது யயாதி மிக அருகில்தான் இருந்தான். அந்தக் குடிவிழவிலிருந்து நேராகவே அசோகவனிக்கு வந்தான். மைந்தனை கையில் வாங்கிய முதற்கணம் எழுந்த எண்ணம் அந்த முகம் நன்கறிந்த ஒன்று என்பது. தன்முகம் அல்ல. சர்மிஷ்டையின் முகமும் அல்ல. எவர் முகம்? சற்று முன்மடிந்த காது. புடைத்த நெற்றிமுழைகள். வெறும் உளத்தோற்றமா? அருகே நின்றிருந்த பார்க்கவன் அவன் உள்ளத்தை உணர்ந்தவனாக “முகங்கள் நேர் அச்சென நம்மிலிருந்து செல்வதில்லை. நம் குருதியில் குமிழிகளாக நம் மூதாதையர் அனைவரின் முகங்களும் இருக்கின்றன என்பார்கள்” என்றான்.


அவன் தத்தளிப்புடன் குழந்தையை முத்தமிட்டபடி திருப்பித்திருப்பி நோக்கிக்கொண்டிருந்தான். மெல்லுதடுகள் கூம்பியிருக்க விழிமூடி துயில்கொண்டிருந்தது. “சைத்ர பஞ்சமி. விடிகாலை முதல்நாழிகை மூன்றாவது பாதம் முப்பத்தெட்டாவது கணம்” என்றாள் செவிலி. அவன் அந்த மணல்நாழிகையிலிருந்து உதிர்ந்த மணல்கணங்கள் மெல்ல நிறைந்து மூன்றாவது பாதமென வரையப்பட்ட கோட்டை கடந்து மேலெழுந்து ஒவ்வொன்றாக உதிர்வதை உள்ளுணர முடிந்தது. முப்பத்தெட்டாவது மணல்கணம் உதிர்ந்தபோது அவன் உள்ளம் மின்னியது. “அது எந்தை புரூரவஸின் பிறவிப்பொழுதல்லவா?” என்றான். “அவர் முகம். நம் அரண்மனையின் சுவரில் வரையப்பட்டுள்ள் அவர்முகம்தான் இது” என்று கூவினான்.


பார்க்கவன் வியப்புடன் “ஆம், அவருடையது நாற்பத்தேழாவது கணம்” என்றான். யயாதி பேருவகையுடன் மைந்தனை நெஞ்சோடணைத்து “இவனுக்கு நான் புரூரவஸ் என பெயரிடுகிறேன். இவன் எந்தை எழுந்துவந்த வடிவம்” என்றான். பார்க்கவன் “அரசே, அது அரசகுலப் பெயர். இவருக்கு அதை இடுவது ஐயத்திற்கிடமாக்கும்” என்றான். “இல்லை, வேறுபெயர் இட நான் ஒப்ப மாட்டேன்” என்றான் யயாதி. “அப்பெயர் வேண்டாம்… புரு என்றே வைக்கலாம்… அது பொதுப்பெயர்தான்” என்றான் பார்க்கவன். யயாதி மெல்ல தளர்ந்து “ஆம், வேறுவழியில்லை. ஆனால் நானறிவேன் அது என் மூதாதையின் பெயர். ஒருநாள் அவையில் அதை கூவிச்சொல்வேன்” என்றான்.


சர்மிஷ்டை உள்ளே வந்து வெளியே நோக்கி தலையசைக்க மைந்தர் மூவரும் உள்ளே வந்தனர். திருஹ்யூவின் மெலிந்த உள்வளைந்த தோள்களும் நீளமுகமும் எப்போதும் முதல்நோக்கில் ஒரு விலக்கத்தையும் சில கணங்களுக்குப்பின் நெகிழ்வையும் அன்பையும் அவனிடம் எழுப்புபவை. மென்மீசை உதட்டுக்குமேல் பாசிப்படர்வுபோல தெரிந்தமை யயாதியை உவகைகொள்ளச் செய்தது. அனுத்ருஹ்யூ மூத்தவனைப்போலவே தோற்றம்கொண்டவன், அவனை மூத்தவன் என்று எண்ணி மயங்குவது யயாதியின் வழக்கம். பின்னால் வந்து நின்ற புருவின் புன்னகை மாறாத விழிகளையும் சிவந்த உதடுகளையும் நோக்கியபின் யயாதி விழிதிருப்பிக் கொண்டான்.


புருவை யயாதி நேரடியாக நோக்குவதோ விழிநோக்கிச் சொல்லாடுவதோ இல்லை. ஒருகணம் நோக்கியபின் திரும்பி மூத்தவர்களிடமே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் உள்ளத்துள் அவன் முகமே திகழும். பேசியது அவனுடன்தான் என பின்னர் நினைவு மயங்கும். அது ஏன் என அவன் எண்ணி எண்ணி நோக்கியதுண்டு. அவன் தோற்றம்போல் இனியது பிறிதில்லை. பொன்னிறம். புவியாண்ட மூதாதையரின் முகம். ஆனால் அவ்விழிகள் கூரியவை, அவற்றின் முன் ஒளிந்துகொள்ளவே யயாதியின் உள்ளம் விழைந்தது. அவர்கள் விடைபெறுகையில் அனைவரையும் பேச்சுப்போக்கில் இயல்பாகத் தொட்டு நற்சொல் உரைப்பான். இறுதியாக புருவை மீண்டுமொருமுறை தொடுவான்.


“வருக…” என்று அழைத்தபடி யயாதி முன்னால் சென்றான். அவர்கள் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் உரைத்தனர். யயாதி “முறையான பயிற்சிகள் பெறவேண்டிய பொழுது. அன்னை சொல்லியிருப்பார்கள் அல்லவா?” என்றான். திருஹ்யூ “ஆம்” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 11:30

April 18, 2017

அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?

mu.ka


 


அன்புள்ள ஜெமோ,


கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை


*

கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா?

’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. சுந்தரராமசாமிக்கு ஞான பீடம் பெற்றுத்தரும்படி அவரது அந்திமக் காலத்தில் காலச்சுவடு கண்ணன் அந்த எழுத்தாளரின் காலைப் பிடித்து அழுததாக சொன்னார். பின்னர் அந்த செய்தியை டெல்லியைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்‘’


இப்படி ஒரு குறிப்பை நான் எழுதினால் நீங்கள் என்னிடம் என்ன கேட்பீர்கள்? அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க மாட்டீர்களா? ஆனால் காலச்சுவடு கண்ணன் அசோகமித்திரனின் மறைவை ஒட்டி எழுதிய குறிப்பில் ’ அசோகமித்திரனுக்கு 1996 ல் சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது அப்போதைய திமுக அமைச்சரவையில் இருந்த தமிழ்க் குடிமகன் கன்னட எழுத்தாளர் யூ.ஆர் அனந்தமூர்த்திக்கு அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் எழுதியதாகவும் சாகித்ய அகாதமி வரலாற்றிலேயே இப்படி ஒரு கடிதம் எழுதபட்டதில்லை என்று அனந்த மூர்த்தி அதிர்ச்சி அடைந்ததாகவும் இதை யூ.ஆர் அனந்த மூர்த்தியே தன்னிடம் கூறியதாகவும்’ எழுதுகிறார்.


இறந்தவர்கள்தான் என்ன வேண்டுமானாலும் பேச முடியுமே. அதுதான் இறந்துவிட்ட யூ ஆர். அனந்த மூர்த்தி சொன்னதாக இப்படி ஒரு பச்சைப்பொய்யை அவிழ்த்துவிடுகிறார். அதோடு மட்டுமா, கலைஞர் ஒரு முறை அனந்த மூர்த்தியை விமானத்தில் நேரில் சந்தித்தபோதும் அசோகமித்திரனுக்கு விருது கொடுத்ததை ஆட்சேபித்தாராம். ஏனெனில் கலைஞர் சாகித்ய அகாதமி விருதை பெற ஆசைப்பட்டாராம். இந்த புளுகுகளுக்கெல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?


கலைஞர் தன் ஆட்சிகாலத்தில் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை கண்ணன் போன்ற மூன்றாம்தர திராவிட வெறுப்பாளர்களால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாது. சுஜாதா, கலாப்ரியா, வண்ணதாசன் உள்ளிட்ட பல நவீன எழுத்தாளர்களிடம் மிகுந்த பேரன்புகொண்டவர் கலைஞர். பிரபஞ்சனுக்கு பத்திரிகையாளர் குடியிருப்பில் வீடு கொடுப்பதற்கு கலைஞரே நேரடியாக தலையிட்டு அளிக்க செய்ததை பிரபஞ்சன் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். காலச்சுவடு குழுமத்தை சேர்ந்த ஒரு பெண் கவிஞருக்கு தேர்தலில் போட்டியிட கட்சியில் நீண்ட காலம் உழைத்த பலரையும் தாண்டி வாய்ப்பளித்தவர் கலைஞர்.


வாழ்நாளெல்லாம் திராவிட இயக்கத்தையும் கலைஞரையும் வசைபாடிய ஜெயகாந்தன் உடல்நலம் குன்றியபோது அவரை அப்போல்லோவில் சேர்த்து மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்தவர் கலைஞர். திமுக ஆட்சிகாலத்தில்தான் பொது நூலகங்களுக்கு அனைத்து நவீன எழுத்தாளர்களின் நூல்களும் பெருமளவு பாரபட்சமின்றி வாங்கப்பட்டன. அசோகமித்திரன் நூல்கள் உட்பட. திமுக 15 அண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருந்திருக்கிறது. கலைஞர் விரும்பியிருந்தால் இந்தியாவின் எந்த உயரிய விருதையும் பெற்றுக்கொள்ள எந்த தடையும் இருந்ததில்லை. கேவலம், ஒரு சாகித்ய அகாதமி விருது தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த மாநிலத்தை ஐந்து முறை ஆண்ட, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற ஒரு தலைவர் தன் அமைச்சரைவிட்டு கடிதம் எழுதினாராம். பிறருக்கு எதிராக அதிகார அமைப்புகளுக்கு கடிதம் எழுதுவது கண்ணன் போன்ற அல்பங்களின் வேலை. தான் குமுதத்திற்கு கடிதம் எழுதி கவிஞர் சங்கரராமசுப்பிரமணியனின் வேலையை காலி செய்தது போல, இந்தியா டுடே ஆசிரியர் பிரபுசாவ்லாவுக்கு கடிதம் எழுதி அதன் தமிழ் பதிப்பில் வேலை செய்த பீர் முகஹமதிற்கு நெருக்கடி கொடுத்ததுபோல கலைஞரும் இதுபோன்ற வேலைகளை செய்வார் என்று நம்ப விரும்புகிகிறார். வெட்கமாக இல்லை?


அசோகமித்திரனுக்கு விருது கிடைத்த அன்று சன் டிவியில் சிகரம் செந்தில் நாதனும் சு. சமுத்திரமும் அசோகமித்திரனுக்கு விருது கிடைத்ததற்காக கண்டித்து பேசினார்களாம். 96 ல் இப்போது இருப்பது போல விவாத நிகழ்ச்சிகளே இல்லை. அப்படியே இருந்திருந்தால்கூட ஊரில் யார் யாரோ பேசுகிற பேச்சுகளுக்கெல்லாம் கலைஞர் பொறுப்பா?


நாள் முழுக்க இலக்கிய குழு அரசியலின் குப்பையில் நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களால் வேறு என்ன சிந்திக்க முடியும்?


காலச்சுவடு கண்ணன் இந்த அவதூறை திரும்பப்பெற்று மன்னிப்புக்கோராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படும். என்ன, உடனே திமுக ‘வழக்குப் போட்டுவிட்டது..’ என்று சொல்லி அகில இந்திய அளவில் அழுது அரற்றி மடிப்பிச்சை எடுக்கபோவதை நினைத்தால்தான் யோசிக்க வேண்டியதாகிவிடுகிறது


*


இந்தப்பதிவு வந்து இரண்டுநாட்களாகின்றன. எவராவது இதைப்பற்றி மேலதிகமாகப் பேசுகிறார்களா என்று பார்த்தேன். நம் சூழலில் இருக்கும் மௌனத்தைக் கண்டபின்புதான் இதை எழுதுகிறேன்


நீங்கள் கலைஞரை பிடிக்காதவர் என்று தெரியும். ஆனாலும் உங்கள் அறவுணர்வின்மீது [கொஞ்சம்] நம்பிக்கை இருப்பதனால் இதை எழுதுகிறேன்


நீங்கள் அசோகமித்திரனைப்பற்றி எழுதிய ஓர் உணர்ச்சிகரமான அஞ்சலி உரையில் சில தகவல்களுக்கு ஆதாரமில்லை என்று சொல்லப்பட்டது. உடனே இங்கே அசோகமித்திரன்மீதான அவதூறு, வன்மம் என்றெல்லாம் எத்தனையோ பேர் எம்பிக்குதித்தார்கள். அழுதுபுலம்பினார்கள் தோலுரித்துத் தொங்கவிடுவதாகச் சொல்லிக்கொண்டார்கள்


நீங்கள் அசோகமித்திரனை உணர்ச்சிகரமாகப் பாராட்டிச் சொன்னவை அவை. அசோகமித்திரனை எவ்வகையிலும் சிறுமைப்படுத்தும் செய்திகளும் அல்ல. அசோகமித்திரனே அதை சொல்லியிருக்கிறார் என பின்னர் தகவல்கள் வெளிவந்ததும் அமைதியானார்கள்.


ஆனால் காலச்சுவடு கண்னன் வெளியிட்டிருக்கும் இந்தச்செய்தி அப்படிப்பட்டது அல்ல. இது கலைஞரின் integrity யையே கேள்விக்குள்ளாக்குகிறது. அவருடைய வரலாற்றில் என்றென்றும் இழிவான விஷயமாக இது இருந்துகொண்டிருக்கும் இல்லையா? இதைக் காலச்சுவடு கண்ணன் தனக்குத் தெரிந்த உண்மைச்செய்தியாக பலமுறை பதிவுசெய்திருக்கிறார். ஆனால் எந்த ஆதாரமும் இல்லை.


இதைப்பற்றி நம் அறிவுஜீவிகள் ஒரு வரிகூட மறுப்பு சொல்லவில்லை. கட்சிக்காரர் என்பதனால் மனுஷ்யபுத்திரன் மறுப்பு தெரிவிக்கிறார். மற்றவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். எவரும் ஆதாரம் எங்கே என்று கேட்கவில்லை.


மிகுந்த வருத்தத்துடன் இதை எழுதுகிறேன்


எஸ்.மகாலிங்கம்


aso


அன்புள்ள மகாலிங்கம்,


புதுமைப்பித்தன் சாபவிமோசனம் கதையை எழுதியபோது ராஜாஜி ‘இவருக்கு இப்படியெல்லாம் எழுத எவர் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டதாக ஒரு கதை உண்டு. மீ.ப.சோமு சொல்லி அது பரவியது. அது இன்றுவரை புதுமைப்பித்தனைப்பற்றி பேசப்படுகையில் எல்லாம் நினைவுகூரப்படுகிறது. ஆதாரமுண்டா என எவரும் கேட்பதில்லை. ராஜாஜியின் இலக்கியநோக்கு, அரசியல்நோக்கு  ஆளுமை மூன்றையும் வகுப்பதாக அது உள்ளது. மீ.ப.சோமு பொய்சொல்லமாட்டார் என்பதே அடிப்படை. அவர் இருவருக்கும் நண்பர். அல்லது அவரை அப்போது எவரும் மறுக்கவில்லை


அதைப்போல திரு. மு.கருணாநிதி அசோகமித்திரனுக்கு விருதுகொடுத்ததை எதிர்த்தார், தன் அமைச்சர் தமிழ்க்குடிமகன் வழியாக கடிதம் எழுதி எதிர்ப்பைத்தெரிவித்தார், தான் அப்பரிசைப் பெற விழைந்தார் என்பதெல்லாம் மிக எளிதாக வரலாறாக ஆகிவிடும். ஏனென்றால் மு.கருணாநிதி சமகாலத்தின் முதன்மை ஆளுமை. அசோகமித்திரன் வரலாற்றில் வளர்பவர். ஆகவே  கண்ணன் சொல்லும் கூற்றை  வெறும் அரட்டை என எளிதாக ஒதுக்கிவிடமுடியாது.வருங்காலத்தில் அவருடைய இயல்பை வகுக்கும் செய்தியாகவே இது நிலைகொள்ளும்.


நான் அசோகமித்திரனைப்பற்றி இருபத்தைந்தாண்டுகளாக எழுதிவருபவன். அவருடன் தொடர்பிலிருந்தவன். அவருடன் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தியவன். அவரே சொன்னவை, நான் கண்டவற்றிலிருந்து ஒரு சில தகவல்களைச் சொன்னேன். அவை அவரைச்சார்ந்தவர்களுக்கு உகக்கவில்லை என்று தெரிந்ததும் மன்னிப்பு கோரி அவ்விவாதத்தை முடித்துக்கொண்டேன். தனிப்பட்ட விஷயங்களுக்கு பலசமயம் ஆதாரம் இருப்பதில்லை.  காரணம் அவரைப்பற்றி அந்த விவாதம் எழுந்து மையம்கொள்வதை நான் விரும்பவில்லை. அவரே சொன்ன பேட்டிகள் வழியாக சில விஷயங்கள்  பின்னர் வெளிவந்தன, மேலும் வெளிவரக்கூடும்.


நீங்கள் சொன்னதுபோல அவை அசோகமித்திரனின் ஆளுமையை குறைத்துக்காட்டுவன அல்ல. அவரது பெருமையை மறைப்பவையும் அல்ல. தவறு என்றால்கூட அவை தகவல்பிழைகள் மட்டுமே. ஆனால் காலச்சுவடு கண்ணன் மு.கருணாநிதி குறித்துச் சொல்லியிருப்பது மிகக்கடுமையான நேரடியான குற்றச்சாட்டு. அவருடைய ஆளுமையையே கீழ்மையாகக் காட்டுவது. அது உண்மை என்றால் இந்தியாவின் முதல்வர்களில் எவரும் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். அந்தப்பழி என்றும் அசோகமித்திரன் பெயருடன் இலக்கிய உலகில் பேசப்படும். அதற்கு ஆதாரமில்லாமல் அதைச் செய்திருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக தெரிந்தே செய்த குற்றம்.


கண்ணன் சொன்னதுபோல தமிழ்க்குடிமகன் கடிதமெழுதியிருந்தால் அது ஆவணம். அமைச்சரின் அலுவலகக் கடிதத்திலிருந்து சாகித்ய அக்காதமி பொறுப்பாளருக்குச் சென்றிருக்கிறது. அதை வெளியிடலாமே. ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்றால் வெளிப்படையாக மன்னிப்பு கோருவதே இத்தருணத்தில் அவர் செய்யவேண்டியது


anandamurthi

அனந்தமூர்த்தி


 


நீங்கள் சொல்வதுபோல என் விஷயத்தில் அறச்சீற்றம் கொண்டவர்கள் இப்போது காட்டும் மௌனம் விந்தையானது- ஆனால் அபூர்வமானது அல்ல. இங்கே இலக்கியம், அரசியல் சார்ந்த விவாதங்கள் அனைத்திலும் வெளிக்காட்டப்படும் உணர்வுகளும் நிலைப்பாடுகளும் பொய்யானவை. உண்மையான உள்ளடக்கம் வேறு. அது பெரும்பாலும் சாதி, இன, மத அடிப்படைகொண்ட காழ்ப்பு மட்டுமே.


நான் கண்ணன் சொன்னதை வலுவாக ஐயப்படுகிறேன். ஏனென்றால் அனந்தமூர்த்தியையே எனக்கு நன்றாகத் தெரியும். பலமுறை பேசியிருக்கிறேன். எல்லா உரையாடல்களிலும் அசோகமித்திரன் பேசுபொருளாகியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் இந்நிகழ்வைச் சொன்னதில்லை.


இப்போது இதைச் சொல்லும் கண்ணன் கனிமொழியை காலச்சுவடின் ஆசிரியர்குழு உறுப்பினராக ஆக்கியபோது, அவரை மையப்படுத்தி இலக்கியவிழாக்களை நடத்தியபோது, அவரை தமிழிலக்கியத்தின் தலைமகளாக முன்னிறுத்தியபோது இதை மறந்துவிட்டிருந்தாரா? கனிமொழியிடம் சொல்லி மு.கருணாநிதியிடம் தன் கண்டனத்தை தெரிவித்திருக்கலாமே? காலச்சுவடில் ஒரு வரி எழுதியிருக்கலாமே. அசோகமித்திரன் இறப்பது வரை காத்திருந்திருக்கவேண்டாமே


ஆதாரங்களை கண்ணன் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இது முதியவயதில் மு.கருணாநிதிமேல் முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. உண்மை, எனக்கு மு.கருணாநிதிமேல் எந்த விதமான ஈடுபாடும் இல்லை. அவர்மேல் இருப்பதெல்லாமே கடும் விமர்சனங்கள் மட்டும்தான். ஆனால் அதற்காக இதை ஏற்றுக்கொள்ளமுடியாது


ஜெ


 


 கனிமொழிவணக்கம்


கனிமொழி


காலச்சுவடுக்கு தடை

காலச்சுவடு நூறாவது இதழ்

தொடர்புடைய பதிவுகள்

ரியாஸ் -கடிதம்
கடிதங்கள்
அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்
அ.மி – கடிதங்கள்
இரு கடிதங்கள்
அவ்வளவு சிறியது…
அஞ்சலி -அசோகமித்திரன்
சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து
கரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம்
அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது
பதினெட்டாவது அட்சக்கோடு
சென்னை கவிதை வெளியீட்டுவிழா
எழுத்தாளரைச் சந்திப்பது…
விருதுகள், அமைப்புகள்
நகரம்! நகரம்!
அசோகமித்திரன் விமர்சனமலர் 1993
குகை ஓவியங்கள் -கடலூர் சீனு
புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?
விஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்
நமது கோட்டையின் கொடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:35

ஏழாம் உலகம் – கடிதம்

2எeEzham-Ulagam-Wrapper---final



அன்புள்ள ஜெ,


நலமா?


தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது. இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்ட பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்து கொண்டேன். நன்றி.



rajesh


ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்து கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.


நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துகொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துகொள்ள முடிந்தது.


நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று. முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கை மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள். இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம்.


பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்த்தது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரனுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு போடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப்படுகிறது. பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள். இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம்.


ஆனால் தைப்பூசம் முடிந்த பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது. ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும் கணக்குதேன்… அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடறது ஒர் தொழில் – அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூலதனம்.


இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன். அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.


பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான். ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு… கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான். ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் ஊனமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு. பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் – உதாரணமாக – ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னு ஜனம் நினைக்கும்.


பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்… குடும்ப வாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.


முத்தமையைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன். பண்டாரம் முத்தம்மையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பதினெட்டு பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்டப்படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன். எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசுகிறது. குடையை விரித்துக் கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக் கொள்கிறார்கள்.) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது… முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் – பிறகு வெறுக்க முடியாது. அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும்.


நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில். பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்


இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்துப் பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவைடயும் என்று நம்புகிறேன்.


நன்றி!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றி!


அன்புடன்,


ராஜேஷ்


***


தொடர்புடைய பதிவுகள்

ஏழாம் உலகம் -கடிதம்
ஏழாம் உலகம்- கடிதங்கள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
கதைகளின் வழி
மின் தமிழ் பேட்டி 2
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
ஏழாம் உலகம்- கடிதம்
நூறுநாற்காலிகளின் யதார்த்தம்
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
ஒளியுலகம்
ஏழாம் உலகின் பண்டாரம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்
ஏழாம் உலகம் கடிதங்கள்
ஏழாம் உலகம்- ஒரு பதிவு
ஏழாம் உலகம் இன்று
சந்திப்புகள் – சில கடிதங்கள்
ஏழாம் உலகம் – ஒரு கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:32

குறளில்.. கடிதம்

kural


அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன்.


‘குறளினிது’ காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன்.


செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக் கூறிய வாழ்க்கை உண்மை நிகழ்வு ஆகியவை மனதைக் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் தூண்டின.


பிராமணர் வீட்டுத் திருமணங்களில் மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்கும் போது கட்டுசோறு (கட்டுசாதக் கூடை) கட்டி அனுப்புவார்கள்.புக்ககம் செல்லும் பெண் ‘பத்தோடும் (பற்றோடும்) பசையோடும் (பாசத்துடனும்) சென்று சேரவேண்டுமாம.அந்த கட்டுசாதக் கூடையை வெண்துணியால் சுற்றிக்கட்டும் பழக்கம் உள்ளது.இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வாளிகளில் உணவினை இட்டாலும், அதையும் வெண்துணியால் கட்டுகிறார்கள்.


நீத்தார் கடன், திவசத்திலேயும் ‘பாதயம்’ அளித்தல் என்பது ஓரு சடங்கு.அதிலும் தயிர் சாதத்தினை ஒரு வெண்துணியில் பொதிந்து ஒரு சவுண்டி பிராமண‌னுக்கு தட்சணையுடன் அளிக்கும் வழக்கம் உள்ளது. பாதசாரி, வழிப்போக்கர்களுக்கு (செல் விருந்து?) அளிப்பது தான் பாதயம்?!பாதயம் பெற்றுக்கொண்டவனுக்கு வீட்டினுள் அமர்ந்து உணவுண்ண உரிமையில்லை!!!


அதிதி என்ற சொல்லே திதி குறிப்பிடாமல் திடீரென வரும் விருந்தினரைக் குறிக்கிறது. அதிதிதான் வருவிருந்தும், செல்விருந்தும்.


“அதிதிதேவோபவ!’என்ற வேத மந்திரத்தின் உள்ளுறைப்பொருள். டார்ஜிலிங்கில் பூனைக்கறியும், மீன் சோறும் கொடுத்த தாயின் உள்ளத்தில் ஊறியிருப்பது. அதுவே இத்தாய்த் திருநாட்டின் ஆன்மா!


அன்புடன்,


கே.முத்துராமகிருஷ்ணன்.


***


ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண


குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist


https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M


***




தொடர்புடைய பதிவுகள்

மதுரையில் பேசுகிறேன்
என் உரைகள், காணொளிகள்
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
வாழும் கணங்கள்
கவிதையின் அரசியல்– தேவதேவன்
கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்
தொடுதிரையும் கவிதையும்
பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
பத்து சட்டைகள்
பாலக்காட்டில் பேசுகிறேன்
வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்
ஈரம்
மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்
விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
கடலின் அலை
புதியநாவல் (உரை)
மலையாள இலக்கியம்
நமக்குள் இருக்கும் பேய்
பசியாகி வரும் ஞானம்
சென்னையில் இன்று உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78

78. புதைவிலெழுதல்


யயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அசோகவனி அவர்களின் அரசனை கண்டதே இல்லை. அரசமுறையாக வரும் ஒற்றர்கள் என்றே அவர்களை காவலர்தலைவனன்றி பிறர் அறிந்திருந்தனர்.


தலைவனின் மாளிகையின் மேலடுக்கு முழுமையாகவே யயாதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் வந்து தங்கும்போது சர்மிஷ்டை தன் மைந்தருடனும் தோழியுடனும் புறவாயிலினூடாக உள்ளே வந்து அவனுடன் இருப்பாள். பார்க்கவன் அங்கிருந்த காவலர்களையும் ஏவலர்களையும் சேடியரையும் ஒவ்வொருவராக தேர்ந்து அமைத்திருந்தான். அங்கிருந்து ஒரு சொல்லும் வெளிக்கசியலாகாதென்று எப்போதும் கூர்கொண்டிருந்தான். அச்சேடியரும் பிறரும்கூட யயாதியை மூத்த ஒற்றர்களில் ஒருவரென்றே அறிந்திருந்தனர்.


தேவயானியின் தோழி சாயை மூன்று முறை அங்கு வந்து காவலர் மாளிகையில் தங்கி ஊர்க்காவலையும் எல்லைச் செய்திகளையும் ஆராய்ந்து திரும்பினாள். அந்த வரவுகள் ஒவ்வொன்றையும் தன் மந்தணக்காப்புமுறை சீராக உள்ளதா என்பதை அறிவதற்கான தருணங்களாக பார்க்கவன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு முறை அவள் வந்துசென்ற பின்னரும் பதினைந்து நாட்கள் முள்முனைத்தவம் செய்தான். தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல் குருதியனைத்தும் தலைக்குள் தேங்க எங்கிருக்கிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கடந்து சென்றன அந்நாட்கள்.


பின்னர் மணற்கடிகை தலைகீழ் என திரும்பும். குருதி வடிந்து உடல் ஓய்ந்து தலை ஒழியும். அதன்பின் சில நாட்கள் தன்னுள் எழும் விடுதலையை தன்னம்பிக்கையை அதன் விளைவாக அனைத்துச் சொற்களிலும் உடலசைவுகளிலும் குடியேறும் உவகையை தன் வாழ்வின் அரிய இனிமைகளில் ஒன்றாக அவன் எண்ணினான். ஆனால் அந்த நிறைவு தன் செயல்களில் பொருட்டின்மையை உருவாக்கிவிடலாகாதென்றும் தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். பதினாறாண்டுகள் ஒரு மந்தணத்தை கண்பெருகி செவிபெருகி கைவிரித்து புவியாளும் பாரதவர்ஷத்தின் முதல்சக்ரவர்த்தினியிடமிருந்து மறைத்துவிட்டதை எண்ணும்போது சிலதருணங்களில் அவன் உள்ளம் அறியாத அச்சமொன்றால் அசைவிழக்கும்.


தொலைவிலேயே முதல் அணிவளைவை அவர்கள் கண்டனர். முதலில் அது என்னவென்றே தெரியவில்லை, மரங்களுக்குமேல் ஒரு வண்ணமலைமுகடு என தெரிந்தது. முகிலில் சில மானுடர் அசைவதுபோல. அது அணிவளைவென உணர்ந்ததும் யயாதி திரும்பி நோக்க பார்க்கவன் “அரசியை வரவேற்க அசோகவனிக்குச் செல்லும் சாலையில் ஏழு அணிவளைவுகள் அமைக்கவிருப்பதாக அறிந்தேன்” என்றான். “அவள் இங்கிருந்து செல்லப்போவது மிஞ்சிப்போனால் ஏழு நாட்கள். அதற்கு மூங்கிலால் ஆன அணிவளைவுகள் போதுமே? இவர்கள் பெருமரத்தடிகளை நட்டு மரப்பட்டைகளை அறைந்து கட்டடங்களைப்போல அல்லவா அவற்றை எழுப்புகிறார்கள்?”


பார்க்கவன் “அவற்றை அமைக்கையில் சிற்பியரும் தச்சரும் எண்ணுவதொன்றே, எந்நிலையிலும் அவை சரிந்துவிழக்கூடாது. சரிந்து விழுமென்றால் அனைவரும் நிரைநிரையாக கழுமரம் நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இவர்கள் ஒவ்வொருவரையும் இரவில் எழுப்பி அவர்கள் கனவில் கண்டதென்ன என்றால் கொல்விழி கொண்ட சாயை என்பார்கள்” என்றான். யயாதி “எப்படி அத்தனை அஞ்சும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள்?” என்றான். “அவர்கள் அஞ்சுவது சாயையை. பேரளியின் திருவுருவான அரசியை அல்ல” என்றான் பார்க்கவன்.


முதல் அணிவளைவின் மீது அந்த முதலொளிப்பொழுதிலேயே தச்சர்களும் பணியாட்களும் தொற்றி அமர்ந்திருந்தனர். மர ஆப்புகளை அறைந்தபடியும் கயிறுகளை முறுக்கிக் கட்டியபடியும் இருந்தவர்கள் புரவிக்குளம்படி கேட்டு திரும்பி நோக்கி ஓசையழிந்தனர். “அவர்கள் ஒவ்வொருவரையும் ஆளும் அச்சத்தை அவ்வமைதியிலேயே காண முடிகிறது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “இவர்கள் கொண்டுள்ள அச்சத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனது அச்சம்” என்றான்.


ஏழு அணிவளைவுகளிலும் பறவைகள் போலவும் ஓணான்களைப்போலவும் பணியாட்கள் செறிந்திருந்தனர். குளம்படியோசை அவர்கள் அனைவரது அசைவையும் ஓசையையும் நிலைக்க வைத்தது. மேலிருந்து பொழிந்த விழிநோக்குகளின் கீழே அவர்கள் இயல்பாகத் தோன்றும்பொருட்டு விழியலைத்து அனைத்தையும் நோக்கியபடி சென்றனர். கோட்டை முகப்பு முழுமையாகவே எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. இருபுறமும் வெட்டியெடுக்கப்பட்ட சேற்றுக்கல் அடுக்கிய அடித்தளம் மேல் செங்கல் அடுக்கி சுண்ணக்காரையிடையிட்டுக் கட்டப்பட்ட கோட்டை மூன்று ஆள் உயரத்தில் விரிந்து சென்று திசை மூலையில் வளைந்தது. செங்கல்லடுக்கிற்கு மேல் மரத்தாலான ஆளுயரக் கட்டுமானத்தின் மீது இருபுறங்களிலுமாக எட்டு காவல் உப்பரிகைகள் அமைந்திருந்தன. கோட்டைவாயிலின் நிலைத்தண்டுகளுக்குமேல் நான்கு புறமும் திறந்த மூன்று உப்பரிகை அடுக்குகள். மைய உப்பரிகையின் உச்சியில் பெருமுரசு அமைந்த மேடை.


“முன்னூறு வில்லவர்களை இவ்வுப்பரிகையில் இருக்க வைக்க முடியும்” என்று பார்க்கவன் சொன்னான். “முகப்பில் மட்டுமே இப்போது கோட்டையை கட்டியிருக்கிறார்கள். முற்றிலும் வளைத்துக் கட்ட ஓராண்டாகலாம். அதற்குப்பின் குருநகரியின் வடமேற்கு எல்லையில் முதன்மையான காவலரணாக இச்சிற்றூர் இருக்கும். இங்கு வருவதற்கான தேர்ப்பாதை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஓராண்டில் அதுவும் பணி முடியுமென்றால் நமது காலத்திலேயே அசோகவனி ஒரு சிறு நகராக எழுந்துவரக்கூடும்.” கோட்டைக்கட்டுக்கு வலப்பக்கம் இருபது செக்குகள் எருதுகள் இழுக்க சுண்ணத்துடன் மணல் அரையும் ஒலி எழ சுற்றிக்கொண்டிருந்தன. மணற்குவியல்களுக்கு அப்பால் ஊழியர்கள் மணலை இரும்புவலைமேல் வீசி அரித்துக்கொண்டிருந்தனர். நீற்றப்பட்ட சுண்ணக் குவைகள் பனியில் குளிர்ந்து பளிங்குப்பாறைபோல ஆகி வெட்டப்பட்ட விளிம்புகளில் வெண்ணைவழிவுடன் தெரிந்தன.


“இங்குள்ள அனைத்தும் மாறிவிடும். இல்லங்கள் வளர்ந்து அடுக்குகளாகும். இச்சாலைகளில் மனிதர்கள் தோள்முட்டி நெரிபடுவார்கள். இங்குள்ள மக்களின் உள்ளங்களில் மாறாதிருக்கும் சோம்பல் முற்றும் அகலும். இன்று நடக்கையிலும் அமர்ந்திருப்பவர்களின் சாயல்கொண்டிருக்கும் இவர்களின் முகங்கள் துயில்கையிலும் ஓடுபவர்கள் போல மாறிவிடும்” என்றான் பார்க்கவன். “சிற்றூர்கள் வான்நோக்கி வைத்த யானங்கள் போல, விண்ணளிப்பதை பெறவும் விண்ணுக்கு படைக்கவும். நகரங்களோ அறியாத் திசை ஒன்றை நோக்கி சகடம் ஒலிக்க அதிர்ந்து பாய்ந்து கொண்டிருக்கும் தேர்கள். இச்சிற்றூர் இதோ அசைவுகொள்ளத் தொடங்கியிருக்கிறது.”


அவர்களை அடையாளம் கண்டுகொண்ட கோட்டைக்காவலன் வந்து சற்றே தலைவணங்கி உள்ளே செல்லும்படி பிறரறியாது செய்கை காட்டினான். கோட்டைக்கு அப்பால் முகமுற்றத்தில் இரண்டு கோட்டைக்கதவுகளை நிலத்தின்மேல் இட்டு அவற்றின் மேலமர்ந்த தச்சர்கள் உளியும் கூடமுமாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவற்றின் சட்டகங்களில் இரும்புக் குமிழிகள் பொருத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பார்க்கவன் திரும்பிப் பார்த்தபின் “அவற்றுக்கு தச்சர்களின் மொழியில் பன்றிமுலைகள் என்று பெயர்” என்றான். யயாதி திரும்பி நோக்கி “ஆம், உண்மைதான். இனி அச்சொல்லால் அன்றி நம்மாலும் அதை நினைவுகூர முடியாது” என்றான்.


மரச்சட்டகங்களை கட்டடக்கூரைகளுக்கு மேலேற்றுவதற்கான வடம்சுற்றப்பட்ட உருளைகளின் அருகே யானைகள் கந்துகளில் கால்சங்கிலி தளைக்கப்பட்டு நின்று துதிக்கைகளால் தழை சுருட்டி எடுத்து கால்வளைத்து தட்டி மண் உதிர்த்து கடைவாயில் செருகி தொங்கும் தாடைகளால் மென்றுகொண்டிருந்தன. உண்ணுதலின் உவகையில் அவற்றின் கரிய உடல்கள் முன்னும் பின்னும் அசைந்தாடின. வால் சுவைதிளைக்கும் நாவென நெளிந்தது. அவற்றின் மத்தகங்களிலும் பிடரிகளிலும் அமர்ந்த சிறு புட்கள் குத்தி சிறகடித்தெழுந்து கல்லுரசும் ஒலியெழுப்பி மீண்டும் அமர்ந்து விளையாடின. அவற்றின் கரிய பேருடலுக்குள் இருந்து ஆத்மா விடுதலை பெற்று காற்றில் எழுந்து எடையின்மையில் திளைப்பதாக யயாதி எண்ணிக்கொண்டான். அப்பால் சாலமரத்தின் நிழலில் அவற்றின் பாகன்கள் அமர்ந்து சோழியும்கல்லும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களின் பூசல் ஓசை எழுந்து அடங்கியது.


அசோகவனியின் தெருக்கள் பலமடங்கு பெருகிவிட்டன என்று தோன்றியது. சாலையின் இருபுறமும் வணிகர்நிரைகள் தோள்முட்டி அமர்ந்து பொருட்களை கடைபரப்பி கொடிகளை அசைத்து கூவி விற்றுக்கொண்டிருந்தனர். வெண்களிமண் பாண்டங்கள், பளிங்குச்செதுக்குக் கலங்கள், இரும்புவார்ப்பு அடுமனைக் கலங்கள், செம்புக்கிண்ணங்கள், பித்தளைக்குவளைகள், வெண்கல விளக்குகள், உப்புக்கட்டிகள், வெவ்வேறு வடிவுகொண்ட படைக்கலங்கள், மாந்தளிர் என மின்னும் தோல்பொருட்கள், மரவுரிகள், கலிங்கப்பருத்தியாடைகள், சிறுபொன்னணிகள், மரச்செதுக்குப்பாவைகள். அசோகவனி அவற்றில் பெரும்பாலானவற்றை அதற்கு முன்னர் பார்த்தே இராது எனத் தெரிந்தது.


தங்கள் இல்லங்களிலிருந்து எழுந்து வந்து தெருக்களெங்கும் நிறைந்து பெருகிய மக்கள் உரத்துக் கூவி விலைபேசியும், சிரித்தும், பூசலிட்டும் ஒலியென ததும்பினர். அவர்களினூடாக எடைமிக்க சகடங்கள் மண்ணில் அழுந்தி ஒலிக்க மரச்சட்டங்களையும் பலகைகளையும் ஏற்றிய வண்டிகளை கோவேறு கழுதைகளும் எருதுகளும் இழுத்துச்சென்றுகொண்டிருந்தன. அவைகளை ஓட்டியவர்களும் உடன் நடந்தவர்களும் எழுப்பிய ஆள்விலக்குக் கூச்சல்களும் விலங்கு ஓட்டும் ஓசைகளும் ஊடு கலந்தன. அவர்களின் புரவிகள் மீது மக்கள் வந்து முட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களின் உடல்களுக்கு கூட்டமும் நெரிசலும் பழகவில்லை.


வணிகர்கள் வந்து தங்கிய யானைத்தோல் கூடாரங்கள் வீடுகளுக்கு அப்பால் தெரிந்த புறமுற்றங்களில் கற்பாறைகள் என காட்டெருமைகள் என கரிய தொகைகளாக பரந்திருந்தன. அவற்றில் பறந்த கொடிகள் காற்றில் புறாச்சிறகென படபடத்தன. நகரின் அத்தனை கட்டடங்களிலும் பணி நடந்துகொண்டிருந்தது. அரக்கும் மெழுகும் பூசப்பட்ட கூரைகளில் காலையொளி நீர்மையென வழிந்தது. செந்நிறமும் பொன்னிறமும் மயில்நீலமும் கலந்து பூசப்பட்ட இல்லங்கள் புத்தாடை அணிந்து நாணி நிற்பவை போலிருந்தன. யயாதி “ஒரு வருகை சிற்றூரை நகரமாக்கிவிடுவது விந்தை!” என்றான். “படைகள் தங்குமிடங்கள் ஊர்களாவதை கண்டிருக்கிறோம். பேரரசியின் கால்பட்ட இடங்களில் எல்லாம் நகரங்கள் முளைக்கின்றன என்கிறார்கள் சூதர்” என்றான் பார்க்கவன்.


“அவளே அதை உருவாக்குகிறாள்” என்றான் யயாதி. “செல்லுமிடம் அனைத்தையும் திரு பெய்து பொலிவுறச் செய்வது பேரரசியின் வழக்கம்தான்” என்று பார்க்கவன் தொடர்ந்தான். “நகரமென்றாவதே அரசின் வளர்ச்சி என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.” யயாதி “ஆம், அது அரசுசூழ்தலின் ஒரு கொள்கை. ஒரு சிற்றூர் எதையும் வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதில்லை. வெளியே எதையும் கொடுப்பதும் இல்லை. நகரங்களில் செல்வம் உட்புகுந்து சுழன்று நுரைத்துப்பெருகி விளிம்புகடந்து வெளியே வழிந்துகொண்டே இருக்கிறது. அருவி வீழும் கயம் போன்றது நகர் என்று அர்த்தசூத்ரம் சொல்கிறது. நகரங்கள் பெருகுவது நாடு பொலிவதன் அடையாளம்.” பார்க்கவன் “அரசி வரும்போது இவ்வூரின் பெயரும் மாறுகிறது. இதை அசோகநகரி என அழைக்கவேண்டுமென அரசி ஆணையிடப்போகிறார்கள்” என்றான்.


யயாதி திரும்பி நோக்கியபோது அவ்வூரை ஒட்டுமொத்தமாக பார்க்கமுடிந்தது. அசோகநகரி. ஒரே இரவில் மண்ணுக்குள் இருந்து பல்லாயிரம் நாய்க்குடைகள் எழுவதை அவன் வங்கத்தின் காடுகளில் கண்டிருக்கிறான். மண்ணுக்குள் அவை முன்னரே முழுதாக வளர்ந்து காத்திருந்தன என்று தோன்றும். அந்நகர் எங்கோ இருந்திருக்கிறது. முழுமையாக ஒருங்கி, தருணம் காத்து.




tigerஅவர்கள் அரண்மனையை அடைந்தபோது இளவெயில் வெள்ளிவிட்டிருந்தது. அரண்மனை முழுமையாகவே மறுஅமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் இருபுறமும் இணைப்புக் கட்டடங்கள் இரண்டு கைகள் போல நீண்டிருந்தன. கூரைப்பணிகள் அப்போதும் முடிவடையவில்லை. பலகைகளும் சட்டங்களும் தொங்கும் சரடுகளும் மூங்கில்சாரங்களுமாக நின்றிருந்த மாளிகையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் வெவ்வேறு உயரங்களில் தொற்றி அமர்ந்தும் முற்றமெங்கும் பரவியும் கூச்சலிட்டு பணியாற்றிக்கொண்டிருந்தனர். பெருமுற்றம் முழுக்க மரச்சட்டங்களும் மரப்பலகைகளும் அட்டிகளாக பரவியிருந்தன. அவற்றை எடுத்து மேலே செல்லும் வடங்கள் சுற்றப்பட்ட சகடங்களை யானைகள் துதிக்கையால் பற்றிச் சுழற்றின. சாரங்களின் மேல் மெல்ல மெல்ல பெரும்சட்டம் ஒன்று அசைந்து தயங்கி மீண்டும் உயிர்கொண்டு ஏறிச்சென்றது.


கற்பாளங்களையும் ஓடுகளையும் கொண்டு வந்து இறக்கியபின் எருதுகள் அங்காங்கே தறிகளில் கட்டப்பட்டு வால் சுழற்றி கொம்பு குலுக்கி சலங்கை ஓசையுடன் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. வண்டிகள் வந்து வந்து உருவான குழிவழிப் பாதையில் இரு எடை வண்டிகளை எருதுகள் தசை புடைக்க தலை தாழ்த்தி இழுத்துவந்தன. கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் மறுபக்கம் சற்று சிறிய சாலை வழியாக வந்து நின்று அரக்குப்பொதிகளை இறக்கின. அவற்றை இறக்கி அடுக்கிய வீரர்கள் மூங்கில் வைத்து அவற்றை நெம்பி சீரமைத்தனர். கயிறுகட்டி காவடியில் பொதிகளை தூக்கிக்கொண்டு சென்றவர்கள் எழுப்பிய ஓசைகள் போர்க்களம் போல ஒலித்தன. அரக்கு உருகும் மணம் தொலைவிலிருந்து எங்கோ எழுந்துகொண்டிருந்தது.


அவர்கள் வந்ததை உள்ளிருந்து பார்த்த காவலர் தலைவன் உக்ரசேனன் ஓடிவந்து யயாதியின் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டு முகமன் கூறி தலைவணங்கினான். “பொறுத்தருளவேண்டும் அரசே, பணி தொடங்கி நெடுநாட்களாகின்றது. வெறிகொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் பணி முடிவடையவில்லை. அரசி வருவதற்கு இன்னும் சின்னாட்கள் இருக்கிறதென்று எண்ணும்போதே நெஞ்சிலும் வயிற்றிலும் அனல் அச்சுறுத்துகிறது” என்றான். கவலையுடன் திரும்பி அரண்மனையை நோக்கிவிட்டு “துயில் மறந்து பணியாற்றுகின்றோம். எப்போது இந்த வேலை முடியுமென்றே தெரியவில்லை. இன்னும் பல கட்டடங்களுக்கு கூரைப்பொருத்தே முடியவில்லை” என்றான்.


பார்க்கவன் “முடிந்துவிடும். எப்போதும் அது அப்படித்தான். இறுதி சில நாட்களில் நாம்செய்யும் பணி பலமாதப் பணிகளுக்கு நிகரானது. எப்படி முடிந்ததென்று நாமே அறியாதிருப்போம். நம்முடன் வாழும் தெய்வங்கள் நம் கைகளையும் சித்தத்தையும் எடுத்துக்கொள்ளும் தருணம் அது. பணி முடிந்தபின்னர் நம் வாழ்நாள் முழுக்க இம்மூன்று நாட்களில் வாழ்ந்ததைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே” என்றான். “ஆம், அதையே நம்பிக்கொண்டிருக்கிறேன். தெய்வங்களின் விருப்பை” என்றான் உக்ரசேனன்.


“வருக!” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான் உக்ரசேனன். புரவிகளை லாயத்திற்கு அனுப்பிவிட்டு இருவரும் படியேறி கூடத்திற்கு சென்றனர். அப்பெருங்கூடமெங்கும் தரையில் அரக்கை உருக்கி ஊற்றி பலகைகளை இணைத்து தோலால் உரசி மெருகேற்றிக்கொண்டிருந்தனர் ஏவலர். உக்ரசேனன் “நெய்விளக்கின் ஒளியில் இரவிலும் பணி நடக்கின்றது. இந்தப் பணிச்சாலைக்குள்ளேயே நானும் உயிர் வாழ்கிறேன்” என்றான். “எனது அறைகள் எங்கே?” என்று யயாதி கேட்டான். உக்ரசேனன் “அவற்றைப் பொளித்து கூரையை உயர்த்தி பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பொருட்களனைத்தையும் முதற்தளத்திலுள்ள அறையில் கொண்டு வைத்திருக்கிறேன். தாங்கள் அங்கு தங்கலாம்” என்றான்.


பார்க்கவன் “நான் சென்று ஒற்றர்களையும் ஏவலர்களையும் சந்தித்து உசாவுகிறேன். அனைத்தும் நன்று நிகழ்ந்துவிட்டன என்றால் இன்றிரவு நன்கு துயிலமுடியும் என்னால்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். உக்ரசேனன் “நல்ல அறைகள் அல்ல. ஆனால் முடிந்தவரை தூய்மை செய்திருக்கிறேன்” என்றபடி யயாதியை அழைத்துக்கொண்டு சென்று தாழ்ந்த கூரை கொண்ட அறையை அடைந்தான். யயாதி வழக்கமாக பயன்படுத்தும் தோலுறையிட்ட பீடங்களும், இறகுச் சேக்கையிட்ட மஞ்சமும், சுவடிப்பேழைகளும் ஆடைப் பெட்டிகளும் அங்கு கொண்டு வைக்கப்பட்டிருந்தன. தூய்மைசெய்யப்பட்டிருந்தாலும் அங்கே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. அங்கிருந்த அடைக்கலக்குருவி ஒன்றின் கூடு பிரிக்கப்பட்டிருக்கக்கூடும். அது அவர்கள் உள் நுழைந்ததும் சிட் என ஒலியெழுப்பி காற்றில் தாவி திறந்த சாளரம் நோக்கி சென்றமர்ந்தது.


யயாதி “நான் இங்கிருந்து கிளம்பியதுமே இவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிடவேண்டும். இதைப்பார்த்தாலே நான் இங்கு வந்து தங்குவது எவருக்கும் புலனாகிவிடும்” என்றான். உக்ரசேனன் “ஆம் அரசே, அதை நானும் எண்ணியிருக்கிறேன். பேரரசி செல்வது வரை கருவூல அறையிலேயே இருக்கும்” என்றான். பெருமூச்சுடன் கைகளை விரித்து உடலை வளைத்து எலும்பொலிகள் எழுப்பி “நான் நீராட வேண்டும்” என்று யயாதி சொன்னதும் “ஆவன செய்கிறேன். அரசியிடம் தாங்கள் வந்த செய்தியை தெரிவிக்கிறேன்” என்றபின் உக்ரசேனன் வெளியே சென்றான். யயாதி பீடத்தில் அமர்ந்ததும் இரு ஏவலர்கள் வந்து நாடாக்களை அவிழ்த்து அவன் தோல்காலணிகளை கழற்றினர். கால்விரல்களுக்கிடையே விரல் கொடுத்து இழுத்து நீவி குருதி ஓட்டத்தை சீர்படுத்தினர் அந்தத் தொடுகையால் மெல்ல இளைப்பாறுதல் கொண்டு கால்களை நீட்டியபடி உடல் தளர்த்தி கண் மூடி தலை சாய்த்தான்.


வெறுமனே அஞ்சிக்கொண்டிருக்கிறேன், இவை அனைத்தும் சீரடைந்துவிடும் என்று அப்போது தோன்றியது. உடல் ஓய்வுகொள்ளும்போது உள்ளமும் ஓய்வை நாடும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டான். எழுந்து சென்று நிலையாடியில் தன் உருவை பார்த்தான். தாடியில் ஓடிய சில வெண்மயிர்களை தொட்டபின் விரல்களால் கண்களுக்குக்கீழே மடிந்திருந்த மென் தசையைத் தொட்டு இழுத்துப்பார்த்தான். பார்க்கவனிடம் உணர்ச்சிப்பெருக்குடன் சொன்ன காதல் நிகழ்வுகளில் அவன் மறைத்த ஒன்றுண்டு. சர்மிஷ்டையிடம் தன் அன்பைச் சொல்வதற்கு ஒத்திப்போட அவன் கொண்டிருந்த தடைகளின் பட்டியலில் கூறவிட்டுப்போனதே முதன்மையானது. தன் அகவையைக் குறித்து அவன் கொண்டிருந்த அச்சம்.


அந்த அகவசந்தகாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆடியில் தன் முகத்தை பார்ப்பதனூடாகவே அவன் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு முறை நோக்குகையிலும் அகவை மிகுந்து வருவது போலத் தோன்றியது. உள்ளம் உவகை கொண்டு கண்கள் பொலிவுறும் தோறும் முகத்தின் முதிர்ச்சி மிகுந்து வந்தது. புன்னகைமாறாத அவன் முகத்தில் அமைந்து ஐயத்துடன் விழிகள் அவன் முகத்தை வேவுபார்த்தன. அவளுடன் இருந்த இரவில் அவன் கேட்ட முதல் வினாவே தன் அகவையைக் குறித்துதான். அவள் சிணுங்கி அவன் கையை மெல்ல அடித்து “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிகிறதா? என்னை உசாவி நோக்குகிறீர்களா?” என்றாள்.


“சொல், காதல்கொள்வதற்குரிய அகவை இல்லை அல்லவா எனக்கு?” என்றான். “உங்களுக்குத் தெரியும், அப்படி அல்ல என்று. உங்கள் இளமையை எவரும் சொல்லி உங்களுக்கு அறிவிக்க வேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை. நான் ஆடி நோக்குவதுண்டு” என்றான் அவன். “ஆடியில் உள்ளிருந்து நோக்குவது உங்கள் உள்ளே விளைந்திருக்கும் அந்த இளஞ்சிறுவன். அவனுக்கு அகவை மிகையாகத் தெரியலாம். உங்கள் ஆற்றலையும் துள்ளலையும் நோக்கும் எவருக்கும் அகவை என எதுவும் தெரியாது” என்று அவள் சொன்னாள். அவன் விரும்பியது அது. பொய்யென்றே ஆகலாம் எனினும் அவள் அப்படி சொல்லவேண்டுமென்று அவள் அறிந்திருப்பதை அத்தருணத்தில் மிகவும் விரும்பினான்.


பின்னர் ஓரிரு நாட்களிலேயே அகவை பற்றிய கவலைகள் மறைந்தன. அக்கவலையே இல்லாமல் ஆக்கியது அவளுடைய அழகின்மை. அதை எண்ணிக்கொண்டதும் பிறர் அறியாமல் உடலுக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவள் பேரழகியென்றிருந்தால் அகவையைக் குறித்த தன் கவலைகளிலிருந்து ஒருபோதும் விடுபட்டிருக்க மாட்டான். அவளை அடைந்து அணுகி அணுக்கம் கொண்ட முதல் பொழுதிலேயே அவனை வந்தடைந்தது அவளின் அழகின்மைதான். மெலிந்த இளங்கருமைநிறத் தோள்கள். அஞ்சியவைபோல சற்று உள்வளைந்தவை. அவள் புயங்களும் மெலிந்தவை. புறங்கையின் நரம்புப் புடைப்புகள். கழுத்தின் எலும்புத்துருத்தல்.


ஒவ்வொன்றிலும் பெண்மை இருந்தது. இளமையும் மெருகும் இருந்தது. ஆனால் அழகென்று உளம் சொல்லும் ஒன்று விடுபட்டிருந்தது. வண்ணமல்ல வடிவமுமல்ல, அதற்கப்பால் பிறிதொன்று. ஒன்று பிறிதொன்றுடன் கொள்ளும் இசைவை இழந்துவிட்டிருந்தன. இவ்வளைந்த தோள்களுக்கு இம்மெலிந்த கைகள் பொருந்தவில்லையா? இடை இந்த நெஞ்சுக்குரியதில்லையா? ஆனால் அவள் அழகற்றவள் என்னும் எண்ணமே அவளுடனான உறவை முதன்மையாக முடிவு செய்தது.


அவளை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எழும் முதல் எண்ணம் அவள் அழகற்றவள் என்பதே. இவள் அரசியல்ல,  வரலாற்றில் வாழ்பவளல்ல, சூதர் சொல்லில் நிலை கொள்பவளல்ல. அவ்வெண்ணம் அளிக்கும் விடுதலை உணர்வு அவள் மேலான அன்பென உருமாற்றம் அடையும் அன்பு மெல்ல அழகியென உருமாற்றி தீட்டத் தொடங்கும். அவள் கண்களை மட்டுமே நோக்கி அவை வெளிப்படுத்தும் உணர்வுகளிலிருந்து பிறிதொரு உடலை உள்ளம் வரைந்தெடுக்கும். மின்னிமின்னி மாறிக்கொண்டிருக்கும் உவகையும் ஐயமும், பொய்ச்சினமும், சிணுங்கலும். கனவிலாழும் அமைதி, களிமயக்கில் சிவந்து கனல்தல், தனிமையில் மயங்கி இமைசரிதலென அவனுக்கென முழுநாளையும் நடிக்க அவற்றால் இயலும்.


நீராட்டறை சேவகன் வந்து பணிந்து நிற்க உளப்பெருக்கு கலைந்து அவனுடன் சென்றான். இளவெந்நீர் நிறைந்த தொட்டியருகே அவன் அமர நீராட்டுச்சேவகர் இருவர் அவன் மேல் நீரூற்றி ஈஞ்சைப்பட்டையால் தேய்க்கத் தொடங்கினர். தொன்மையான ஆலயமொன்றில் மண்ணில் புதைந்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலை. அவர்கள் அதை உரசிக்கழுவி மீட்டெடுக்கிறார்கள் என எண்ணியதும் அவன் புன்னகைசெய்தான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:30

April 17, 2017

மலம்

mask


சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது


இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில் சாதாரணமாகப் பலர் எண்ணுபவை கூட பொதுவெளியில் வராத நிலை இருந்தது.


அதற்கு இன்னொரு காரணம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் இலட்சியவாதம் இன்னொருதலைமுறைக்காலம் நீடித்ததுதான். கடைப்பிடிக்க முடிகிறதோ இல்லையோ மானுட சமத்துவம், அடிப்படை மனிதாபிமானம் சார்ந்த முற்போக்கான இலட்சியங்களில் பரவலான நம்பிக்கை இருந்தது. காந்தி,நேரு என அவர்கள் நம்பி ஏற்ற ஆளுமைகளின் குரலாக அந்த இலட்சியங்கள் நம்பப் பட்டன.


அடுத்த தலைமுறை முற்றிலும் இலட்சியவாதம் அற்ற சூழலில் பிறந்து வளர்ந்தது. பிழைப்புவாதம் அன்றி அது அறிந்த கொள்கை என ஏதுமில்லை. அந்த வேகத்தில் வாழ்க்கையில் முண்டியடித்தபின் ஒரு புள்ளியில் சுயஅடையாளத்துக்காகச் சாதி, மத, இன, மொழி சார்ந்த முத்திரைகளை ஆரத்தழுவிக்கொள்கிறது. இணையம் கட்டின்றி அந்த மேட்டிமைகளையும், காழ்ப்புகளையும் வெளிப்படுத்த வழியமைத்துத் தருகிறது. இன்று இணையத்தில் அத்தனை சாதியினரும் தங்களை தங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் காலகட்டத்தைய மனநிலையுடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.


இவை உண்மையிலேயே உள்ளவை என்றால் இவற்றை வெளிப்படுத்துவதில் என்ன பிழை என்று கேட்கலாம். வெளிப்படுத்தும்தோறும் இவை வளர்கின்றன, தொற்றுகின்றன, நியாயப்படுத்தப்படுகின்றன. மொழியில் முன்வைக்கப்படும் எக்கருத்தும் எவ்வகையிலோ வாழும். ஆகவேதான் உலகமெங்கும் அனைத்தும் விவாதிக்கப்படும் சமூகங்களில்கூட சில மானுடஎதிர்ப்புக் கருத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.


இதை எழுதிய ஆசாமி நவீனக்கல்வி அடைந்தவர் என நினைக்கிறேன். ஓரளவு எழுதிக்கொண்டிருக்கிறார், குறைந்தபட்சம் சுஜாதா அளவுக்காவது எதையோ வாசித்திருக்கிறார். இக்கட்டுரையின் மனநிலையும் கருத்தும் இந்தியாவின் மாபெரும் சமூகசீர்திருத்த, மதச்சீர்திருத்த அலைகள் எழுவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுக்காலம் இந்த ஆத்மாவை தீண்டாமலேயே கடந்து சென்றுவிட்டிருக்கிறது.


அப்படியும் சொல்லமுடியாது. இதிலுள்ள சமத்காரம் இன்றிருக்கும் நவீன ஜனநாயகச் சூழலுக்கு ஏற்ப அமைத்துக்கொண்டது. உணவிலும் சூழலிலும் உளநிலையிலும் தூய்மைதேவை என்பது எவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் தூய்மை என்றபேரில் இங்கே இவரால் முன்வைக்கப்படுவது சாதியாசாரம். அசைவ உணவு உட்பட அந்த சாதியாசாரத்துக்கு வெளியே உள்ளவை அனைத்தும் அசுத்தமானவை, அருவருப்பானவை. சாதியாசாரத்துக்குள் வரும் அனைத்தும் தூய்மையானவை- இக்கட்டுரை உருவாக்கும் சித்தரிப்பு இதுதான்.


அதாவது சாதியாசாரமும் தூய்மையும் ஒன்று என்கிறது இக்கட்டுரை. பிறரை இழிவுபடுத்தி ஒதுக்குவது தூய்மைபேணுவதற்கு அவசியம் என்கிறது..தூய்மைக்கும் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத ஒரு மனம் இந்தக் காலகட்டத்தில் இருக்கமுடியாது. ஏன் நேரடியாகவே சொல்கிறேனே, ஸ்ரீரங்கம் உட்பட பல வைணவ ஆலயங்களின் மடைப்பள்ளிகள்தான் நான் வாழ்க்கையில் கண்ட மிகமிக அழுக்கான சமையல்கூடங்கள்.நகம் வளர்ந்த அழுக்குக் கைகளால் புளியோதரையை அள்ளி அள்ளி கொடுக்கும் பட்டர்களை கண்டு குமட்டி ஒதுங்கியதுண்டு. ஓரிரு மாதங்களுக்கு முன்னால்கூட இது நிகழ்ந்தது- நண்பர்களுக்குத்தெரியும்.


அழகர்கோயிலில் தோசைப்பிரசாதத்தை வெறுந்தரையில் அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். சுத்தம் குறித்த நவீனக்கருதுகோள்கள் எவையும் சென்றடையாத பழங்கால உள்ளங்கள் இவை. ஆசாரமானவை, ஆனால் தூய்மையற்றவை. ஏன் ஆலயங்களில் பெருமாளின் உடலில் போடப்பட்டிருக்கும் துணிகூட பெரும்பாலும் எண்ணையும் பிசுக்கும்படிந்த கந்தல்களாகவே இருக்கும். கருவறையில் கரப்பான்களும் எலிகளும் ஓடும். மடப்பள்ளி மூலையில் அழுக்குப் பாத்திரங்கள் நாட்கணக்கில் கிடக்கும். இவர்கள் எவருக்கும் அதில் அருவருப்பு இல்லை- அருவருப்பது பிறசாதியினரின் உணவையும் இல்லங்களையும் மட்டுமே.


தான் விரும்புவதை தேடி உண்ண எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதன் பேரில் இவர்கள் உருவாக்கும் இந்த அசட்டுத்தனமான, சாதிக்காழ்ப்பு கொண்ட இருமையாக்கம் இந்நூற்றாண்டில் எத்தனை அசிங்கமானது. இந்த வாதம்தான் அத்தனை சாதிசார்ந்த, இனம்சார்ந்த, நிறம்சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கும் பின்னணியில் உள்ளது.


எத்தனை எண்ணி சமாதானம் செய்துகொண்டாலும் கூட இக்கீழ்மையை தாளமுடியவில்லை. சென்ற நூறாண்டுக்காலத்தில் ஞானிகளும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உருவாக்கிய அத்தனை இலட்சியவாதங்களையும் மனிதாபிமானங்களையும் புல்லென ஒதுக்கி செம்மாந்து நின்றிருக்கும் மூடத்தனத்தின் உச்சம். தமிழ்ச்சூழலை இக்குரலால் ஒன்றும் செய்யமுடியாது, அது இதைக்கடந்து சென்றுவிட்டது. உண்மையில் வருத்தப்படவேண்டியது இவருக்காகாகத்தான், ஞானம், கலை, கல்வி எதுவும் இந்தக் கீழ்மைநிறைந்த மனத்திற்கு இல்லை.


***


தொடர்புடைய பதிவுகள்

மலம் – சிறுகதை
மாசு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:34

வெண்முரசு விவாதக்கூடுகை – புதுச்சேரி

CV


அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .


நிகழ்காவியமான “வெண்முரசு விவாத” கூடுகை புதுவையில் சென்ற 2017 பிப்ரவரி முதல் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


இந்த மாதத்திற்கான கூடுகை ( ஏப்ரல் 2017 ) “வெண்முரசு முதற்கனல் -எரியிதழ் ” என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது .


நாள்:-  வியாழக்கிழமை (20-04-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்


இடம்:-


” ஶ்ரீநாயணபரம்”,


முதல்மாடி,


27, வெள்ளாளர் வீதி ,


புதுவை-605001


Between MG Road & Bharathi Street,


Next to


Madhan traders


Upstair to


Srima plastics store


Contact no:- 99-43-951908 , 98-43-010306.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:34

கால்கொண்டெழுவது… கடிதம்

iraru


அன்புள்ள ஜெ,


என் கல்லூரி நண்பனிடம் விவேகானந்தர் குறித்து அவ்வப்போது பேசுவதுண்டு. மிகத் துடிப்பான, கூர்மையான அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். ஒரு நாள் சுவாமிஜியின் ‘திறந்த ரகசியம்’ சிறு நூலை அவனிடம் வாசிப்பதற்காக அளித்தேன். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என பின்னர் தான் தெரிந்தது. தர்க்கம் திகைத்து முன்னகர இயலா இடங்களை சுட்டி வேதாந்தம் எவ்வாறு அங்கிருந்து முன் செல்கிறது என சுவாமிஜி அழகாக விளக்கியிருப்பார்.


இளமை கொந்தளிக்கும் மனம் அவ்வாறான ஒரு முற்றிலும் புதிய கருதுகோளை சந்திக்கையில் ஏற்படும் மனக்கிளர்ச்சியும் ஆர்வமும் சொல்லற்கரியவை. ஆனால் அவனோ பலமாகக் குழம்பிப் போனான். தர்க்கம் அளிக்கும் தெளிவின் எல்லை தெரிந்து விட்டாலும் அதிலிருந்து அவனால் முன்னகர இயலவில்லை. மெல்ல அது நிகழ்வாழ்விலும் எதிரொலிக்க ஆரம்பித்து அனைத்திலும் ஆர்வமிழக்க ஆரம்பித்தான். ஒரு முழுமையான செயலின்மைக்குள் சென்றான். சாமான்யம் – விஷேசம் என்னும் வகைப்பாட்டை பலவகையில் சொன்னாலும் அவனால் அதை அறிய முடியவில்லை.


பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் முன்பே வேலை பெறுவது பத்தாண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரண நிகழ்வு. கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது தான் ஆதாரம். வேலை கிடைக்காவிட்டால் பெரும் அவமானமும் வசையுமே மிஞ்சும். மூன்றாம் ஆண்டு இறுதியிலேயே நாங்கள் அனைவரும் வேலைக்கான ஆணையை பெற்றுவிட்டாலும் அவனால் ஒரு நேர்முகத் தேர்விலிருந்தும் வெற்றி பெற இயலவில்லை. ‘அந்த புக்கை படிச்சததுக்கு அப்புறந்தான் இவன் இப்படி இருக்கான்’ அவன் அப்பா என்னிடம் சொன்னார். அது உண்மை. பிறகு அவன் தொடர்பில் இல்லை. ஆனால் பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது விசாரிக்கையில் அவன் மிகுந்த அலைச்சலுக்குப் பின் வேலை, குடும்பம் என அமைந்து விட்டான் என அறிகிறேன்.


ஏன் அவன் அப்படிக் குழம்பிப் போனான் என பல நாள் யோசித்திருக்கிறேன். ஒரு நாள் உங்களின் கீதா முகூர்த்தம் கட்டுரையில் இருந்த ஒரு வரி – ‘நோயில்லாதவனுக்கு அளிக்கப் படும் மருந்து நோயையே உண்டாக்கும்’ அதற்கான ஒரு விடையை அளித்தது. அகஒருமை கலைக்கப்பட்டவுடன் அவன் ஆற்றல்கள் அனைத்தும் சிதறிவிடுகின்றன. அப்போது அதுவரை கட்டிலிருந்த உணர்ச்சிகள் பலவகையில் பீறிடும்போது அதைக் கட்டுப்படுத்த இயல்வதில்லை. நாம் அறிந்தே நம்மை மீறி செல்கிறோம். தன்னிலிருந்து தான் விலகி நின்று மனத்தை அவதானிக்கும் முறையான ஒழுக்கப் பயிற்சிகள் இல்லையென்றால் முற்றாக குழம்பிப் போய்விடுவதும் சாத்தியமே. மிக ஆபத்தான சுழற்சி இது.


பிறகு ஞானம் என்றால் என்ன? தன்னம்பிக்கையின், தன்ணுணர்வின் உச்சியில் நின்று தன்னையும் உலகையும் அவதானித்து அடைவதே ஞானம் என்றால், தன்ணுணர்வு எல்லைக்குட்பட்டது. எல்லையற்ற உலகை எல்லைக்குட்பட்ட அறிவால் வரையறைகள் இல்லாமல் எதிர்கொள்ள இயலாது. ஆனால் வரையறைகள் வகுக்கப்பட்ட கணமே விதிவிலக்குகளும் தோன்றி விடுகின்றன. பிறகு, இந்த பிரம்மாண்டத்தில் நாம் துளியினும் மிகச் சிறுதுளி என்னும் அறிதல் வருகையில் – நம்மைப் பற்றியே நமக்கு எதுவும் தெரியாது என்னும்போது – நேர் எதிரான- உணர்வு நிலைக்குச் செல்கிறோம். ஆனால் அதுவும் முழுமையானது அல்ல.


இறுதியாக இந்த இரு நிலைகளுக்கிடையில் ஊசலாடி, ஒரு சமநிலையை அடைகையில் உண்மையான பயணம் தொடங்குகிறது. இந்தப் பயணத்தில், முக்கியமாக பயணத்தை துவங்குவதற்கே கீதை ஒரு மகத்தான துணைவன்.

ஈராறு கால்கொண்டெழும் புரவி குறுநாவலை வாசிக்கும்போது இதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ‘எங்கும் வெள்ளப் பெருக்கு நிறைந்திருக்கையில் ஏரி நீரால் என்ன பயனோ அதுவே உண்மையை அறிந்த சான்றோனுக்கும் வேதங்களினால் கிடைக்கும் பயன்’ என்னும் கீதை வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஞானமுத்தனும் நாடாரும் இயல்பாக முன்செல்லும்போது பிள்ளையால் செல்ல முடியவில்லை. சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறார். தற்போதத்தின் உச்சியிலேயே இருப்பதனால், தனக்குரிய வழியை தேர்ந்தெடுக்காது இரவல் வழியில் செல்வதனால் ஏற்படும் தோல்வியே அவருக்கும் நிகழ்கிறது. இறுதியில் தனக்கு வேண்டியது ஞானமல்ல என்னும் தெளிவையே அடைகிறார்.


இ.ஆர்.சங்கரன்


ஈராறுகால்கொண்டெழும் புரவி – விமர்சனம்


***


தொடர்புடைய பதிவுகள்

அறிதலை அறியும் அறிவு
யதா யதாய
கீதையும் வர்ணமும்
கீதை,தான்சானியா- கடிதங்கள்
கீதை கடிதங்கள் -8
கீதை உரை: கடிதங்கள் 7
கீதை கடிதங்கள் -6
கீதை உரை-கடிதம் 5
கீதை கடிதங்கள் 4
விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
கீதை- கடிதங்கள் 3
கீதை ஒரு வினா
மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்
கலாச்சார இந்து
நான் இந்துவா?
அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்
கீதை -கடிதங்கள்
அரதி
இரண்டு வானோக்கிய சாளரங்கள்
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.