Jeyamohan's Blog, page 1646
April 27, 2017
மலேசியாவில் ஒரு சந்திப்பு
மலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன்.
மலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2, 3, 4 தேதிகளில் நிகழவிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு நண்பர்குழு செல்லவிருக்கிறது. பதினைந்துபேர் வரை இங்கிருந்து சென்று கலந்துகொள்ளலாம்.
வரவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஜெயமோகன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சுஜாதாவின் குரல்
மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை.
முதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா யார் என்பதைக் காட்டுகின்றன. ஒரு வங்காளி பயணக்குழு. உடனே ஒரு தமிழ்ப்பயணக்குழு. தமிழ் சினிமாவுக்கு நேர் எதிராக உளிச்சத்தம். சிலைகளின் வர்ணை கூர்மையாக வெட்டப்பட்டு அந்த லௌகீகாசாமியின் கல்லுரல் விசாரிப்பு.
மிகக்கூர்மையாக அந்தப் பேராசிரியரையும் அவரைத் தேடி வரும் இளைஞரையும் சித்தரிக்கிறார். சொல்வதில்லை, காட்டுகிறார். சுருக்கமான உரையாடல்களில் அவர் சொல்லும் நூல்களில் உள்ள தெரிவு வியக்கச்செய்வது. குற்றவியல்சட்டம் போன்ற கறாரான நூலுக்கு மறுபக்கமாக லயால் வாட்சனின் கற்பனைகலந்த அறிவியல்.
அந்தப் பட்டியலில் நான் மகிழும் ஒரு நினைவு உள்ளது. அவருக்கு லயால் வாட்சன், எரிக் வான் டேனிகன் கிரஹாம் ஹான்காக் போன்ற கொஞ்சம் புனைவம்சம் கொண்ட அறிவியல், தொல்லியளார்களை நான்தான் கொண்டுசென்று கொடுத்து பல்லுடையும்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் செவ்வியல் அறிவியலாளர். அடுத்த தலைமுறை உடைந்தபானைகளை வாசித்திருக்கவில்லை, பெயர் தெரிந்திருந்தது. ‘நாவல் எழுதணும்னா இவனையெல்லாம் வாசிக்கலாம்’ என்றார். ‘கிரைம்நாவலுக்கு’.
என்னிடம் மோதியின் தடயவியல் சட்டம் வாசித்திருக்கிறாயா என்று கேட்டார். நான் கேள்வியே பட்டிருக்கவில்லை. “அப்றம் என்ன மாடர்ன் வேர்ல்ட எழுதறது?’ என்றார். அதன்பின்னரே நான் இரண்டுமாதகாலம் எடுத்துக்கொண்டு அதை வாசித்தேன். கூடவே இந்திய குற்றவியல்சட்டம்.
அன்றுவாங்கிய என் நூல்களை இருபதாண்டுகளுக்குப்பின் இப்போதுதான் எடுத்துப்பார்த்தேன்.புழுதிபடிந்து. உள்ளே அஜிதன் நூற்றுக்கு இரண்டு , ஐந்து, எட்டு, ஏழு என மதிப்பெண் வாங்கிய ஒரு மதிப்பறிக்கை. பிராக்ரஸ் ரிப்போர்ட் என்ற பெயர் அதற்குச் செல்லாது. ரிக்ரெஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம்] சந்தடியில்லாமல் கொண்டு சென்று செருகியிருக்கிறான்.
இந்த கூர்மையே சுஜாதாவின் ஆற்றல். கூடவே அவர் படைப்புக்களின் கலை ஒரு மாற்று எப்போதுமே குறைந்திருப்பதற்கும் இதுவே காரணம். கலைப்படைப்பு உருவாகும்போது அதன் தோற்றத்திற்கு முன் ஒரு திட்டம் இருக்கும். அத்துடன் உளப்பழக்கமாக, ஆழத்தில் ஒரு வடிவத்தன்னுணர்வு தொழிற்படும். ஆனால் எழுதத் தொடங்கியதுமே எழுத்தாளன் அக்கனவுக்குள் சென்றுவிடுவான். அவ்வுணர்ச்சிகளில் வாழ்வான். அந்தவாழ்க்கையை கண்ணெதிரே பார்ப்பான், மொழியில் இயல்பாக நிகழவிடுவான்.
சுஜாதாவில் அந்தத் திட்டமும் வடிவத்தன்னுணர்வும் முதன்மையாக நீடிக்கின்றன.மிகமிகத் திறமையாக உருவாக்கப்பட்டாலும்கூட இது ஒருவகைப் பின்னல்பணிதான். பேராசிரியர், இளைஞன், பேராசிரியரின் மகள் எல்லாமே மெல்லிய செயற்கைத்தன்மை [ஆங்கிலத்தில் புரிந்துகொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் தன்மை] இருந்துகொண்டே இருப்பது அதனால்தான்.
கணிசமான சுஜாதாக் கதைகள் இறுதியில் கதைத்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் முடிச்சில் நிறைவடையும். மூன்றுசீட்டு வித்தைக்காரனின் திறன்தான் அது. சுஜாதாவால் படைப்பாளியாகப் புனைவில் அமிழமுடியவில்லை. அதற்குத்தேவையான ஒரு கட்டற்றதன்மை, பேதைத்தனம் என்றுசொல்லத்தக்க ஒருவகை எளிமை அவரிடம் இருக்கவில்லை. அதை அவரே சுபமங்களாவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் இக்கதையில் உண்மையான சுஜாதா வெளிப்படுகிறார். அந்தபேராசிரியரின் கேள்வி உண்மையில் சுஜாதாவுடையது. அவர் எழுதிய பல கட்டுரைகளில் இந்தக் குரல் எழுந்திருக்கிறது. அதிலுள்ள தவிப்பும் ஆதங்கமும் அவருடைய ஆளுமையில் எப்போதுமிருந்தது.
இந்தக்கதையை ஒட்டி நினைவுக்கு வருவது இன்னொன்று. 1988 என நினைக்கிறேன். நான் நக்ஸலைட் கவிதைகள் என்னும் ஆங்கிலத் தொகுதியில் இருந்து இருபது கவிதைகளைத் தெரிவுசெய்து மொழியாக்கம் செய்தேன். அது [வேறு பெயரில்] கோணங்கியின் கல்குதிரையில் வெளியாகியது.
அவ்விதழை நான் சுஜாதாவுக்கு அனுப்பியிருந்தேன். சுஜாதாவிடம் நான் போனில் பேசியபோது [அன்றெல்லாம் அனைவரிடமும் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன்] கலைஞர்கள் அறிவியலாளர்கள் தத்துவவாதிகள் என ஒரு ஐம்பதாயிரம்பேரை நக்ஸலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பேரில் இந்திய அரசுநிர்வாகம் கொன்று ஒழித்துவிட்டது. இந்தியாவின் மிகச்சிறந்த மனங்கள் அவை. இந்தியாவின் அறிவியக்கத்தின் மீதான பெரிய தாக்குதல் அது என்றார்.
மேலும் இருபதுநாட்களுக்குப்பின் பேசியபோது ‘நினைச்சுப்பாத்தா தூங்கவே முடியலை….எல்லாருமே சின்னப்பசங்க… கண்ணில வெளிச்சத்தோட எதையாவது செய்யணும்னு துடிப்பா இருப்பானுங்களே அந்தமாதிரி பையன்ங்க” என்றார். மீண்டும் நீண்டநாள் கழித்து அவரை வண்ணதாசன் மகள் திருமணத்தில் பார்த்தபோதுகூட “அந்தக் கவிதைகளை மறக்கவே முடியலை. என்ன ஒரு பிரில்லியண்ட் மைன்ட்ஸ்” என்றார். அந்த சுஜாதா இக்கதையில் வெளிப்படுகிறார்.
கலைப்படைப்பில் நேரடியாக எழும் குரலென்பது குறைபாடே. ஆனால் அதன் உண்மைத்தன்மை அதை கலையாக ஆக்கி நிறுத்துவதும் உண்டு, அத்தகையது அந்த இறுதிவரி., சென்றதலைமுறையைச் சேர்ந்த நுண்ணுள்ளம் ஒன்றின் ஏக்கம் அது. நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் இல்லாதசூழலில் வாசிக்கையில் அது துயரளிக்கிறது.
இதுவே சுஜாதா. சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால் தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர். சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார். ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின் மையப்பெருக்கில் நுழைகிறார்.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இருவெற்றிகள்
திருமூலநாதன்
அன்புள்ள ஜெயமோகன்,
என் முனைவர் பட்ட ஆய்வு சென்ற வாரத்தோடு நிறைவடைந்தது. ஆய்வேடும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வேட்டின் முன்னட்டை இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஆடல் கோட்பாடு சார்ந்தது என்பது தாங்கள் அறிந்ததே. ஆய்வின்போது ஆய்வாளர் குழுமங்களில் மட்டுமல்லாமல் வேறுபல பொறியியல் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஆடல் கோட்பாடு குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நம் சொல்புதிது குழுமம் அதில் முக்கியமானது. அந்தவகையில் இக்கோட்பாடுகளுக்கு ஒரு வாசகப்பரப்பு உருவாகி வந்ததில் மகிழ்ச்சி.
நேற்று (திங்கட்கிழமை) முதல் 1 நிறுவனத்தில் பணிநிமித்தமாகச் சேர்ந்திருக்கிறேன். உண்மையில் என்னுடைய மாணவப்பருவம் நிறைவடைந்திருப்பது இப்போதுதான் என்பதால் கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. செம்மையாகச் செய்வேன் என்று நம்புகிறேன். தங்கள் ஆசிகளைக் கோருகிறேன்.
அன்புடன்,
த.திருமூலநாதன்.
***
அன்புள்ள திருமூலநாதன்,
அரிய ஒரு தலைப்பில் முக்கியமான ஆய்வைச் செய்து வென்றிருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஆய்வைப்பற்றிய கட்டுரை எனக்கு முக்கால்வாசிகூட புரியவில்லை. ஆனால் பல விவரமறிந்த நண்பர்கள் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டார்கள்.
ஜெ
***
அன்புள்ள சார்.
நலம்தானே!
தெலுங்கு பத்திரிகையாளராக எனக்கு ‘லாட்லி ஊடக விருது’ நேற்று முந்தினம் அளித்தார்கள். ‘Population first’ என்ற தன்னார்வ நிறுவனம் வழங்கும் விருது இது.
பெண்களின் பிரச்சனைகள் மற்றும் சாதனைகளுக்கு சம்பந்தப்பட்ட செய்தி, கட்டுரைகளுக்கு அளிப்பார்கள். இந்தியாவில் விவித மாநிலங்களில் உள்ள செய்தியாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள் தம்மில் சிலருக்கு கொடுக்கும் விருதுதான் இது.
ஆனாலும். எங்கள் ஊடக நிறுவனத்தை கடந்து நாங்கள் பெரும் ஒரு சிறிய ஊக்கம் இது. நான் ஈநாடு தெலுங்கு பத்திரிக்கையில். தினசரி வரும் ‘வசுந்தரா’ என்ற பெண்கள் இதழில் கடந்த நான்கு ஆண்டுகளாய் பணிபுரிகிறேன். 2015-16ல் நான் இஸ்ரோவின் ‘மங்கள்யான்’ ப்ராஜெக்ட் துணை இயக்குநர் ரித்து கரிதால் பற்றி எழுதிய கட்டுரைக்காக இந்த விருது.
அதே வருடம்தான் நான் வானவன் மாதேவி சகோதரிகளை பற்றியும் எழுதி இருந்தேன். 2015 டிசம்பர் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவர்களை சந்தித்து. பிறகு தொலைபேசியில் பேட்டி எடுத்தேன். அவர்களை பற்றி உங்கள் குறிப்புகளையும் தெலுங்கில் மொழிபெயர்த்து அந்த கட்டுரை எழுதி இருந்தேன். மிக சிறப்பாக. உத்வேகத்துடன், அவர்களின் இயல்பான நகைச்சுவையுடன் வந்த கட்டுரை அது.
எனக்கு லாட்லி விருது அதற்குத்தான் தருவார்கள் என்று எதிர்பார்தேன். கடந்த வருடம் விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வரும் முன். வானவன் மாதேவிக்கு தொலைபேசினேன். ‘விழாவுக்கு வரீங்க இல்லையா.’ என்று கேக்க. வல்லபிதான் எடுத்தார். ‘அக்கா பேசமுடியலை. உடல் நலம் சரியில்லை!’ என்றார். கோவை வரும் வழியிலேயே. இறங்கி சேலம் சென்று பார்த்தேன். வானதி குச்சியாக இருந்தார். பேச்சில் ஒலி குறைந்து இருந்தாலும். அந்த தெளிவு மாறவில்லை. அதே சிரிப்பு. கம்பீரம்! அவர்களை பற்றி தெலுங்கில் எழுதிய என் கட்டுரை வாசித்து காண்பித்தேன். தெலுங்கு அவருக்கு 90 சதவிதம் புரிந்துதான் இருக்கிறது. நடுவில் தடுமாற்றத்துடன் என் தமிழ் மொழிபெயர்ப்பு! புன்னகையுடன் கேட்டுகொண்டு இருந்தார். உங்களின் வாக்கியங்கள் வரும் போதெல்லாம். ‘வாத்தியார் சொன்னது தானே!’ என்றது போல் சிரிப்பு.
‘இந்த கட்டுரை லாட்லி அவார்டுக்கு nominate பண்ணியிருக்கோம்’ என்றேன். ‘நிச்சயமா வரும் பாருங்க.’ என்றார் வானதி. அடுத்து எங்கள் பேச்செல்லாம். வெண்முரசு பற்றி நகர்ந்தது. சத்யவதி, குந்தி, திரௌபதி. என்று மிக இயல்பாக அவர்களின் நடுவே ஒரு சரடை வரைந்தார் வல்லபி. வெண்முரசுவின் வசனங்கள். வல்லபியின் வட்டார மொழியில், கிண்டலுடன் வெளிவருவது புதுமையாக இருந்தது. வானதி புன்னகையுடன் கேட்டு கொண்டு இருந்தார்.
இன்னொரு விஷயம். தெலுங்கில் இவர்களை பற்றி பிரசுரம் ஆன பிறகு எத்தனையோ குழந்தைகளின். பெற்றோர் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். நான் சென்ற நாளுக்கு கூட விசாக்கப்பட்டினத்தை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அங்கேயே தங்க வைத்து சிகிழ்ச்சை வழங்கி கொண்டு இருந்தார்கள்! வானதி திடீர் என்று. ‘உங்க பத்திரிக்கையில் demonetisation பற்றி எப்படி எழுதுரிங்க. Support பண்றீங்களா.?!’ என்றார். ஆமாங்கா!’ ‘oppose பண்ண தைரியம் இல்ல. இல்லையா.’ ரொம்ப கோபமாக சொன்னார்.
நம்ம கைல ஒன்னும் இல்லீங்க. எசமான்கள் எப்படி சொன்னா அப்படி.’. ‘ஏன் முதுகெலும்பு இல்லலாம இருக்கீங்க.’ என்றார் எரிச்சலாக. நான் இயல்பாக இருப்பதற்காக ‘நல்ல சாப்பிடுங்க வானதி! உங்கள மறுபடியும் பார்க்கும் போது உடம்பு தேறி இருக்கணும்.’ ‘அப்படியே தேறிடுறேன்.’ என்றார் சட்டுனு பாந்தமாக. லாட்லி பற்றி எழுதத்தான் துவங்கினேன். என் ஆசானாக உங்களுடன் இந்த சிறு மகிழ்ச்சியை பகிர்வது தான் முதலில் என் உத்தேசம். திடீர் என்று ஞாபகதுக்கு வந்து விட்டார் சார்.
அன்புடன்,
ராஜு,
ஹைதராபாத்.
***
அன்புள்ள ராஜு
பரிசுபெற்றமைக்கு வாழ்த்துக்கள். இதழியலில் முதன்மையான பரிசுகளுக்கு கடுமையான போட்டி உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இது உங்கள் வெற்றிதான்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
87. நீர்க்கொடை
யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் முன் வந்து காற்றில் அலையும் நீர்ப்பாவைபோல் நின்றன.
ஓசைகளின் மீது அழுத்தமான எதையோ கொண்டு மூடியதுபோலிருந்தது. ஆனால் குரல்கள் சில மிக அண்மையில் எழுந்து உடலை துணுக்குறச் செய்தன. பெரும்பாலான நுண்ணிய மணங்கள் நினைவிலிருந்தே அகன்றுவிட்டிருக்க கூரிய நாற்றங்களால் ஆனதாக இருந்தது நிலம். மங்காதிருந்த புலன் மெய்தான். மரத்தடிகளில் படுத்ததும் வந்து தழுவும் குளிர்காற்று மணமும் ஒலியும் அசைவொளியும் அற்று தான்மட்டுமாக இருந்தது. குழல் கலைத்து ஆடை உலைத்து சூழ்ந்துகொண்டது. காற்று பட்டதுமே மெல்ல அவன் துயிலத் தொடங்கினான். விழித்தபோது முந்தையவை அனைத்தும் கரைந்து பரவி மறைய முற்றிலும் புதியவனாக விழித்தெழுந்தான். அவனுக்கு அணுக்கனாக வந்த காவலனை ஒவ்வொரு முறையும் “யார்?” என திகைத்து கேட்டான்.
பார்க்கவனின் குரலும் முகமும் தெளிவாக இருந்தமையால் எப்போதும் அவன் உடனிருக்க வேண்டுமென விழைந்தான். விழித்தெழுந்து அவனைக் காணவில்லை என்றால் பதைத்து “அவன் எங்கே? பார்க்கவன் எங்கே?” என்றான். அவன் தசைகள் நொய்ந்து நீர்மிகுந்த சேற்றுக்கதுப்பென ஆகிவிட்டிருந்தன. செதிலாகச் சுருங்கிய தோலுடன் அவை கன்னங்களிலும் தாடைக்குக்கீழும் புயங்களிலும் தொங்கின. உதடு முற்றாக மடிந்து உள்ளே சென்றிருக்க மூக்கு வளைந்து உதட்டைத் தொடுவதுபோல புடைத்திருந்தது. நினைத்தெடுத்துச் சொல்லாக்கி உரைக்க இயலாமையால் அவன் உதிரிச்சொற்றொடர்களால் பேசினான். ஒரு சொற்றொடர் துலங்கியதும் அதன் வெளிச்சத்தில் தடுமாறி முன்னகர்ந்து அடுத்த சொற்றொடர்களை உருவாக்கினான். தொடர்ந்து பேசினால் மூச்சுபோதாமல் திணறி அத்திணறலே குரலை தழுதழுக்கச்செய்ய கண்கள் கலங்கி விம்மினான். அந்த விம்மல் வழியாகவே துயர் எழ அவன் பேசியதெல்லாமே கண்ணீரில் சென்று முடிந்தது. சற்றே தாழ்ந்திருந்த இடக்கண்ணிலிருந்து மட்டும் நீர் வழிய முகம் இடப்பக்கமாக கோணலாகி இழுபட விசும்பி விசும்பி அழுதான். முகச்சுருக்கங்களின் மேல் கண்ணீர் தயங்கித்தயங்கி வழிந்தது.
சுற்றிலும் இருந்தவர்களின் விழிகளை நோக்கமுடியாதானமையால் விரைவிலேயே அவன் அவர்களை எண்ணவும் முடியாதவனானான். ஆகவே தன் உணர்வுகளை மறைக்க அவனால் இயலவில்லை. இனிய எளிய உணவுகள் அவனுக்கு பிடித்திருந்தன. அக்காரம் சேர்த்த கஞ்சியை ஏவலன் நீட்டும்போது இருகைகளாலும் வாங்கி முகம் மலர தலையசைத்து மகிழ்ந்து ஆவலுடன் அள்ளிக்குடித்தான். இனிய உணவை கையில் கொடுத்தால் சிறுகுழந்தையைப்போல மகிழ்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். எண்ணியிராதபடி ஏதேனும் இன்னுணவு நினைவில் எழுந்தால் அதை உடனே அருகிருந்தவர்களிடம் சொல்லி கொண்டுவரும்படி ஆணையிட்டான். “எனக்கு அக்காரச்சாற்றிலிட்டு வேகவைத்த கிழங்கு வேண்டும்” என்று அவன் கேட்டபோது ஏவலன் “அரசே, நாம் பயணத்திலிருக்கிறோம்” என்றான். “எனக்கு வேண்டும்… வேண்டும்” என்று அவன் கேட்டான். “அரசே” என்று ஏவலன் சொல்ல “வேண்டும்…” என்று அவன் அழுவதுபோன்ற முகநெளிவுடன் சொன்னான். பார்க்கவன் அவனை விலகும்படி தலையசைத்து “கொண்டுவருகிறோம் அரசே… இதோ” என்றான். “எப்போது?” என்றான் யயாதி. “இதோ” என்றான் பார்க்கவன். பின்னர் ஒரு பெரிய மலரைக் கொண்டுவந்து காட்டி “பார்த்தீர்களா? மலர்” என்றான். அதை வாங்கிப் பார்த்து முகம் மலர்ந்து “மலர்” என்றான். நிமிர்ந்து பார்க்கவனிடம் “பெரிய மலர்” என்றான். அவன் கேட்டதை பின்னர் நினைவுறவே இல்லை.
அவர்கள் இரவில் எவருமறியாமல் மூடப்பட்ட தேரில் குருநகரிக்கு வந்து சேர்ந்தார்கள். யயாதியின் உருமாற்றத்தைப்பற்றி குருநகரியின் தலைமை அமைச்சருக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே செய்தியனுப்பப்பட்டிருந்தது. கோட்டை வாயிலிலேயே தலைமையமைச்சர் சுகிர்தர் காத்திருந்தார். கூண்டுத்தேர் வந்து நின்றதும் பார்க்கவன் இறங்கிச்சென்று தலைவணங்கி அரசனின் வருகையை சொன்னான். சுகிர்தர் வந்து தேர் அருகே பணிந்தார். பார்க்கவன் “அரசே… அரசே…” என்று அழைக்க திரையை விலக்கி எட்டிப்பார்த்த யயாதி “யார்? யார்?” என்று பதறினான். “அரசே, நான் பார்க்கவன்… இவர் தலைமையமைச்சர் சுகிர்தர்” என்றான் பார்க்கவன். “ஆம், தெரிகிறது” என்றபின் யயாதி “என் இடை வலிக்கிறது. நாம் எப்போது செல்வோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே.” யயாதி “என் இடையில் வலி” என்றான்.
சுகிர்தர் திகைத்துப்போய் “என்ன இது?” என்றார். பார்க்கவன் திரைச்சீலையை மூடி “செல்லலாம்” என பாகனுக்கு ஆணையிட்டுவிட்டு “சுக்ரரின் தீச்சொல். ஆனால் சொல்முறிவு உள்ளது. அரசர் தன் முதுமையை சிலகாலத்திற்கு மைந்தர் எவருக்கேனும் அளிக்க விழைகிறார்.” சுகிர்தர் “மைந்தரா? இளமையை எவர் அளிப்பார்?” என்றார். “திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே?” என்றான் பார்க்கவன். “ஆம், ஆனால் இப்புவியில் மானுடர் விழையாதவை அது. நோயும் மூப்பும் இறப்பும்தான். ஜரைதேவியும் வியாதிதேவியும் மிருத்யூதேவியின் புதல்விகள்.” பார்க்கவன் “ஆனால் அவர் அரசர்…” என்றான். அவன் என்னபொருளில் அதை சொன்னான் என சுகிர்தரால் உணரமுடியவில்லை.
அவர்கள் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே இரு இளவரசர்களும் காத்து நின்றிருந்தனர். யது ஐயத்துடனும் தயக்கத்துடனும் பின்னால் நின்றிருக்க துர்வசு எதுவும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியபடி முன்னால் நின்றான். தேர் நின்றதும் சுகிர்தர் இறங்கி அவர்களிடம் சென்று மெல்லிய குரலில் பேச இருவரும் தயங்கியபின் மெதுவாக அருகணைந்தனர். பார்க்கவன் திரையை விலக்கி “அரசே, அரண்மனை” என்றான். “எங்கே?” என்றான் யயாதி. “அரண்மனை, குருநகரி.”
யயாதி “ஆம்” என்றபின் பார்க்கவனின் தோளைப் பற்றியபடி இறங்கினான். நிலையான தரையில் விசை எஞ்சியிருந்த உடல் தள்ளாடியது. பார்க்கவன் அவனை பற்றிக்கொண்டு “வருக” என்றான். யதுவும் துர்வசுவும் அருகே வந்து அவனைப் பணிந்து “நல்வரவு, தந்தையே. அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றனர். யயாதி “ஆம், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்… நான் உங்களிடம் ஒன்று கோரவேண்டும்” என்றான். பார்க்கவன் “அரசே, இது இரவு… நாம் ஓய்வெடுக்கவேண்டும். நாளை காலை முறைப்படி சான்றோர் முன் அதை கோருவோம்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றான் யயாதி.
அவன் பார்க்கவனை பற்றிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி குருநகரியின் அரண்மனையின் முகப்பை அடைந்து பெருங்கூடத்திற்குள் நுழைந்தான். மூச்சுவாங்கியபடி நின்று “நான் முதுமை கொண்டுவிட்டேன்…” என்றான். “அரசே, அனைத்தையும் நாம் நாளை பேசுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம், முறைமைப்படி நான் கோரவேண்டும்” என்றான் யயாதி. அவர்கள் பெருங்கூடத்தில் இருந்த பீடங்களை அடைந்ததும் யயாதி “நான் சற்று அமர்கிறேன்… மூச்சுவாங்குகிறது” என்றான். பார்க்கவன் “ஆம், வருக!” என அழைத்துச்சென்றான். பீடத்தில் அமர்ந்ததும் யயாதி நிமிர்ந்து புதியவர்கள் என மைந்தர்களை நோக்கி “இவர்களிடம் நான் ஒன்று கோரவேண்டும்… என்னிடம் சுக்ரர் சொன்னது. இல்லை… அவர் இல்லை. அவருடைய மாணவர். அவர் பெயரை மறந்துவிட்டேன்” என்றான்.
பார்க்கவன் “அரசே… நாளை…” என தொடங்க யயாதி சினந்து “வாயை மூடு, மூடா! நீ என்ன என்னை பேசவே விடமாட்டாயா?” என்றபின் அதே சினச்சிவப்பு முகத்தில் எஞ்சியிருக்க “எனக்கு முதுமையை தீச்சொல்லிட்டார் சுக்ரர்… அதுதான் நீங்கள் காண்பது” என்றான் யயாதி. “ஆனால் சொல்முறிவும் அளித்துள்ளார். என் முதுமையை உவந்துபெறும் ஒருவருக்கு நான் அளிக்கமுடியும்…” யது திரும்பி சுகிர்தரை பார்க்க அவர் “ஆம், அதை நாம் நாளையே பேசிமுடிப்போம். நான் இளவரசரிடம் அதைப்பற்றி விளக்கி…” என்று சொல்லத் தொடங்கினார். யயாதி கைதூக்கி அவரைத் தடுத்து “நான் கேட்பது என் மைந்தனிடம். என் அரசுக்கும் குருதிவழிக்கும் நீட்சியாக அமையவிருப்பவன் அவன். நீ என் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும். நான் விரும்பும்வரை அதை கொண்டிருக்கவேண்டும்.”
யது அதை எதிர்பார்க்காமையால் மலைத்துப்போய் நின்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் யயாதி. “நீ முதுமைகொள்வது உனக்கும் நன்று…” என்றபின் “நீர்க்கலம் வருக! சொல்லோதி பொழிவுக்கொடை அளிக்கிறேன்” என்றான். யது புரிந்துகொண்டு சினம் மேலிட நிலையழிந்து உரத்தகுரலில் “நீங்கள் அடைந்தது உங்கள் இழிசெயலின் விளைவை. அதை பிறர் ஏன் சுமக்கவேண்டும்?” என்றான். “மூடா…” என்றபடி யயாதி எழப்போக பார்க்கவன் அவனைப் பிடித்து “அரசே…” என்றான். “விடு என்னை… நீ என் அரசை கொள்ளப்போகிறாய். என் மூன்று வினைகளுக்கும் நீயே தொடர்ச்சி…” என்றான். “ஆம், ஆனால் ஊழெனில் அதை தெய்வங்கள் அளிக்கவேண்டும். மானுடர் அளிக்கக்கூடாது. அவ்வாறு அளிக்கக்கூடும் என்றால் அத்தனை தந்தையரும் தங்கள் பிணிகளை மைந்தர்மேல் ஏற்றிவைப்பார்கள்… நான் உடன்படமுடியாது” என்றான்.
யயாதி “தந்தையரின் பிணிகளும் மைந்தருக்கு வருகின்றன” என்றான். “நான் அளிப்பதையே நீ கொள்ளமுடியும்…” யது “நீங்கள் எங்களுக்கு அளித்தவை எவையும் நீங்கள் ஈட்டியவை அல்ல. சந்திரகுலத்து மூதாதையரின் செல்வங்கள் இவை. எங்களை இக்குலத்தில் பிறக்கச்செய்த தெய்வங்களால் இவை அளிக்கப்பட்டுவிட்டன. உங்களிடம் இரவலராக நாங்கள் வந்து நிற்கவில்லை” என்றான். யயாதியின் தலை நடுங்கியது. கைகள் நடுக்கத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. பீடத்தில் மீண்டும் அமர்ந்து கைகளை தொடைக்குக்கீழே வைத்து நடுக்கத்தை அடக்கியபடி “இளையவனே…” என்றான். துர்வசு “நீங்கள் எவர்பொருட்டு இத்தீச்சொல்லை பெற்றீர்கள் என அறிவோம். அவர்களுக்காக எம் அன்னையை ஏமாற்றினீர்கள். அவர்களே இந்த மூப்புப்பிணியையும் ஏற்கக் கடமைப்பட்டவர்கள். செல்க!” என்றான்.
பார்க்கவன் “இளவரசே, இதையெல்லாம் இந்நள்ளிரவில் பேசவேண்டியதில்லை. நாம் நாளை அமர்ந்து பேசுவோம்” என்றான். “நீர் எத்தனை பேசினாலும் எங்கள் முடிவு இதுதான். இவரை நம்பி மூப்பை ஏற்பதன் மடமையை நான் அறிவேன். இவர் எதன்பொருட்டு இளமையைக் கோருகிறார்? அடைந்த பெண்கள் போதவில்லை அல்லவா? மேலும் காமத்தில் திளைக்க உடல் தேவை அல்லவா? இவருக்கு காமம் எப்போது திகட்டும்? அமைச்சரே, காமம் திகட்டிய எவரேனும் உள்ளனரா? இவர் திரும்பிவந்து முதுமையை பெற்றுக்கொள்வார் என நீங்கள் எண்ணுகிறீர்களா? சொல்லுங்கள்…” என்றான் யது.
பார்க்கவன் “அதை நாம் பேசுவோம்” என்று சொல்ல யது “விலகுங்கள்! இது எங்களுக்குள் பேசி முடிக்கவேண்டிய சிக்கல். தந்தையே, உங்கள் காமத்தை நான் நம்பவில்லை. உங்கள் நேர்மையையும் நான் நம்பவில்லை. என் தாயை ஏமாற்றியவர் நீங்கள். உங்கள் இழிவைக்கண்டு உளம்வெறுத்துச்சென்று அவர்கள் முடிமழித்து துவராடை அணிந்து தனிச்சோலையில் தவமிருக்கிறார்கள். நீங்கள் அதன்பின்னரும் காமம் நிறையாமல் வந்து இளமைக்காக இரக்கிறீர்கள். இப்படி இரந்து நிற்பதனூடாகவே மேலும் இழிவுகொள்கிறீர்கள். உங்களை நம்பி இளமையை அளிக்க நான் மூடன் அல்ல” என்றான். துர்வசு “அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு அளித்தது இந்த முதுமை. அவர்களே பெற்றுக்கொள்ளட்டும்” என்றான்.
யயாதி வாயை இறுக மூடியபோது அது சுருங்கி ஒரு துணிமுடிச்சென ஆயிற்று. அவன் விழிகளில் வெறுப்பு தெரிந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. “அரசே, நாம் இப்போது இதைப் பேசியது பிழை. எவர் உள்ளமும் நிலைகொண்டிருக்கவில்லை. வெறும் உணர்வாடல் இது. நாளை ஆவதை எண்ணி சொல்லெடுத்துப் பேசுவோம்” என்றான். யயாதி “இனி எனக்குப் பேச ஏதுமில்லை. இவர்கள் என் கொடிக்கும் குருதிக்கும் வழித்தோன்றல்கள் அல்ல” என்றான்
சுகிர்தர் “அரசே…” என கைநீட்ட “விலகு… இது என் சொல். மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! நான் கொண்ட படைக்கலங்கள் கொன்றவர்களின் உயிர்கள் அறிக! இன்றுவரை நான் அவையமர்ந்து அளித்த தீர்ப்புகளால் இறந்தவர்கள் அறிக! இது என் சொல்! இவர்கள் என் மைந்தர்கள் அல்ல. இவர்களின் பிறவிநூல்களை நோக்கிய அன்றே இவர்களின் ஊழை உணர்ந்தேன். அது ஏன் என இன்று புரிந்துகொள்கிறேன்.”
அவன் குரல் நடுக்கமிழந்து உரக்க ஒலித்தது. “மூத்தவனே, நீ ஒருபோதும் நிலைகொள்ளமாட்டாய். குடியுடனும் கன்றுகளுடனும் நிலத்திலிருந்து நிலம் நோக்கி சென்றுகொண்டே இருப்பாய். உன் செல்வம் ஒருபோதும் மண்ணில் நிலைக்காது, அது கால்கொண்டு அலைவதாகவே அமையும். உன் குடிகளுக்கும் அதுவே ஊழென்றமையும். நீங்கள் அந்தணராலும் ஷத்ரியர்களாலும் வேட்டையாடப்படுவீர்கள். எரித்து அழிக்கப்படுவீர்கள். கொன்றுகுவிக்கப்படுவீர்கள். நீங்கள் வெல்பவை அனைத்தும் கணம்கணமென கைநழுவும். நீங்கள் கட்டி எழுப்பிய அனைத்தும் உங்கள் கண்ணெதிரே நுரையெனப் பொலியும். ஆம், அவ்வாறே ஆகுக!”
யது நடுங்கி பின்னடைந்து அறியாது கைகூப்பிவிட்டான். யயாதி துர்வசுவை நோக்கி திரும்பி “நீ ஒருபோதும் பசுநிலத்தை காணமாட்டாய். பாறைகள் வெடித்த பாலைகளில் அனல்காற்றுகளால் அலைக்கழிக்கப்படும் சருகென்றமையும் உன் வாழ்வு. உன் கொடிவழிகளுக்கும் அவ்வாறே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன்னை தூக்கும்படி கை நீட்டினான். யது பாய்ந்து வந்து ஓசையுடன் நிலத்தில் விழுந்து யயாதியின் கால்களை பற்றிக்கொண்டு “பொறுத்தருள்க தந்தையே… என் அச்சமும் ஐயமும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நான் சொன்னவற்றின் பொருளை நான் உணர்கிறேன். அவையனைத்தும் என்னுள் உறையும் உங்கள் மேல் கொண்ட வெறுப்பிலிருந்து எழுந்தவை. தந்தையே நான் நீங்களேதான்” என்றான்.
யயாதி “ஆம், நான் உன்மேல்கொண்ட வெறுப்பும் என்மேல் நான் கொண்டதே” என்றான். யது கண்ணீருடன் தலைதூக்கி “அளிகூர்ந்து சொல்முறிவளியுங்கள்… நான் மீளும் வழி உரையுங்கள், தந்தையே” என்றான். யயாதி நீள்மூச்செறிந்து “ஆம், நான் அதையும் அளித்தாகவேண்டும். உன் குருதி நூறுமேனி விளையும். மைந்தா, நிலம் பெருகுவதல்ல, கால்நடைகளோ ஆண்டுதோறும் இருமடங்காகும். எனவே உன்குலம் ஆபுரந்து வாழட்டும். பாரதவர்ஷமெங்கும் பரவி கிளையிலிருந்து கிளைபிரிந்து என்றும் அழியாது நிலைகொள்ளட்டும்”என்றான்
மேலும் உளம் எழ அவன் குரல் ஆணை என ஒலித்தது “உன்குடியில் மாவீரர் எழுவர். பேரன்னையர் பிறப்பர். சிப்பிகளனைத்தும் முத்து நிகழும் வாய்ப்புகளே என்பதுபோல குலங்களெல்லாம் தெய்வம் வந்து பிறப்பதற்கானவை. உன் குடியில் விண்நிறைந்த பரம்பொருள் கனிந்து துளித்துச் சொட்டி நிறைக! அவன் பெயரின் பொருட்டே உன்குருதியை மானுடக்குலம் போற்றும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
கண்ணீர் வழிய அருகே வந்து மண்டியிட்ட துர்வசுவின் தலையைத் தொட்டு “தந்தை என உன் குலத்தை நான் வாழ்த்துகிறேன். கல்கரையும் வறுதியிலும் பசுந்தளிர்விடும் பாலைமுட்கள் போலாகட்டும் உன் குடி. என்றும் அழியாது. உன் கொடிவழியில் பிறந்தவர்கள் மலைநாடுகளை ஆள்வார்கள். அவர்களில் எழுந்த அரசி ஒருத்தியின் குருதியில் பேரரசர்கள் பிறந்து கங்கைக்கரைகளில் கொடிதிகழ்வார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” நெஞ்சு விம்மி விம்மித் தணிய யயாதி பார்க்கவனிடம் “நாம் உடனே அசோகவனிக்கு செல்லவேண்டும்” என்றான். “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்” என்றான் பார்க்கவன். “இல்லை. இனி ஒருகணம்கூட என்னால் பிந்த இயலாது… எழுக தேர்!” என்றான் யயாதி.
மறுநாள் புலரிச்சுடர் எழுந்தபோது அவர்கள் அசோகவனியை சென்றடைந்தனர். அவர்கள் வருவது சொல்லப்படாததனால் கூண்டுத்தேரைக் கண்டு கோட்டைக்காவலர் தலைவன் திகைத்து அருகே ஓடிவந்தான். பார்க்கவன் சுருக்கமாக செய்தியைச் சொல்ல அவனும் இருகாவலரும் புரவிகளில் முன்னே சென்றார்கள். காலையில் அசோகவனியின் தெருக்களில் வணிகம் தொடங்கிவிட்டிருந்தது. சாலைநெரிசலுக்கு அப்போதும் பழகாத மக்கள் வந்து குறுக்கே விழுந்துகொண்டே இருந்தனர். அரண்மனை முகப்பை அடைந்ததும் தேர் விரைவழிய யயாதி விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே” என்றான் பார்க்கவன்.
அரண்மனை முற்றத்திலேயே காவலர்தலைவனுடன் மூன்று மைந்தரும் காத்து நின்றிருந்தார்கள். திருஹ்யூயும் அனுதிருஹ்யூயும் முன்னால் நின்றிருந்தனர். அவர்களின் முகங்கள் குழப்பம்கொண்டவர்களைப்போல தெரிந்தன. புரு அவர்களுக்குப்பின்னால் அவர்களால் பாதிமறைக்கப்பட்டு நின்றான். பார்க்கவன் “இறங்கலாம், அரசே” என்றான். யயாதி கைநீட்ட அதைப் பற்றி மெல்ல அவனை இறக்கினான். படிகளில் கால் வைத்து நடுங்கியபடி இறங்கி கூனிட்டு நின்ற யயாதி நெற்றிமேல் கை வைத்து அவர்களை நோக்கினான்.
மைந்தர் மூவரும் அருகே வந்து கால்தொட்டு வணங்கினர். “நலம் சூழ்க!” என வாழ்த்திய யயாதி “நான் உங்களிடம் ஒரு கோரிக்கைக்காகவே வந்தேன்” என்றான். “உள்ளே சென்று பேசுவோம்” என்றான் பார்க்கவன். “இல்லை, நான் இனிமேல் முறைமைகளுக்கு நேரத்தை வீணடிப்பதாக இல்லை. நிகழ்ந்தவை இவர்களுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.” பார்க்கவன் “ஆம், அனைத்தும் ஒற்றர்களின் வழியாக முன்னரே தெரிந்திருக்கின்றன. நீங்கள் வருவதை நான் பறவையோலையினூடாகத் தெரிவித்தேன்” என்றான். “அப்படியென்றால் நான் சொல்விளையாட விழையவில்லை. என் மைந்தரில் ஒருவர் இம்முதுமையை பெற்றுக்கொண்டு தன் இளமையை எனக்கு அளிக்கவேண்டும். நான் விழைவதுவரை அதை கொண்டிருக்கவேண்டும்” என்றான் யயாதி.
அனுதிருஹ்யூ புருவங்களைச் சுருக்கியபடி அசையாமல் நின்றான். “முதல்மைந்தர் இருவரும் மறுத்துவிட்டனர். ஆகவே இங்கே உங்களிடம் வந்துள்ளேன்” என்றான் யயாதி. “பொறுத்தருள்க, தந்தையே. நேற்றே என்னிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். உவந்து உங்கள் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நான் என்னை கட்டாயப்படுத்தி மட்டுமே அதை பெற்றுக்கொள்ளமுடியும்” என்றான் திருஹ்யூ.
யயாதி “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். அனுதிருஹ்யூ “நானும் அதையே சொல்ல விழைகிறேன், தந்தையே” என்றான். “நீங்கள் என் தந்தையென்றாகி இன்னமும் ஒருமாதம்கூட ஆகவில்லை. நான் ஏற்றுக்கொண்டாலும் உள்ளம் அவ்வண்ணம் எண்ணவில்லை. எவரோ ஒருவருக்கு என் இளமையை ஏன் அளிக்கவேண்டும் என்னும் குரலை என்னால் அடக்கவே முடியவில்லை” என்றான்.
யயாதி புருவை நோக்கி திரும்பாமல் “மூன்றாமவனும் சொல்லட்டும்” என்றான். புரு “நான் பெற்றுக்கொள்கிறேன், தந்தையே” என்றான். யயாதி திகைத்துத் திரும்பி நோக்கி “எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றான். “ஆம், நான் முன்னரே உடன்பிறந்தார் எவரேனும் ஏற்றுக்கொண்டு எனக்கு வாய்ப்பு வராதமையுமோ என ஐயம் கொண்டிருந்தேன்… இது என் நல்லூழ் என்றே எண்ணுகிறேன்.” யயாதி அவனையே நோக்கிக்கொண்டு சிலகணங்கள் நின்றான். தலை நடுங்க உதடுகள் எதையோ சொல்வனபோல் அசைந்தன. “ஏன்?” என்று பின்னர் கேட்டான். “நான் உங்களை எப்போதும் என் தந்தையென்றே எண்ணிவந்திருக்கிறேன்” என்றான் புரு.
“உன் அன்னை எப்போது அதை சொன்னாள்?” என்றான் யயாதி. “தந்தையே. இப்போதுவரைக்கும்கூட அன்னை அதை சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் சொல்லும்படி அவருக்கு ஆணையிடவில்லை. பேரரசியின் ஆணையால் நாங்கள் இளவரசர்கள் என அறிவிக்கப்பட்டோம். இவ்வரண்மனைக்கு அரசமுறையாக குடிவந்தோம். அரசகுடியினருக்குரிய அணிகளும் ஆடைகளும் முத்திரைகளும் கொடிகளும் முறைமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அன்னை இன்னமும் சேடியருக்குரிய இல்லத்தில் சேடியாகவே இருக்கிறார். அவரை அரசியாக ஆக்கவேண்டியவர் நீங்கள் என்றார்” என்றான் புரு.
“ஆனால் நான் என் மொழிதிருந்தா நாளிலேயே உங்களை என் தந்தை என உணர்ந்திருந்தேன். என் நினைவறிந்த உங்கள் முதல்தொடுகையே அதை சொல்லிவிட்டது. என் தோள்களை வருடி புயங்களைப் பற்றி அழுத்திப் பார்த்தீர்கள். என்னை மடியிலமர்த்தி என் குழலை ஆழ மூச்சிழுத்து முகர்ந்தீர்கள். அன்று அறிந்த உங்கள் மணம் என் நினைவில் இன்றுமுள்ளது. என் கனவில் தந்தையாக எப்போதும் அத்தொடுகையுடனும் மணத்துடனும் வந்துகொண்டிருக்கிறீர்கள்” என புரு தொடர்ந்தான். “பேரரசி என்னிடம் உன் தந்தை யார் என்று கேட்டபோது நெஞ்சறிந்த ஒன்றை மறைக்க என்னால் இயலவில்லை. அன்று நான் சொன்ன சொல்லால்தான் நீங்கள் இம்முதுமையை கொண்டீர்கள். நான் இதை ஏற்றுக்கொள்வதே அறம்.”
யயாதி தொழுவதுபோல நெஞ்சில் கைகுவிய “வேண்டியதில்லை, மைந்தா. நீ எனக்களித்தது என்ன என்று அறியமாட்டாய். மைந்தன் என இப்புவியில் உறவேதுமில்லை என்று என் உள்ளம் எண்ணத்தொடங்கியிருந்தது. குருதியின் நேர்நீட்சியான மைந்தரும் பொய்யுறவே என்றால் இப்புவியில் உறவு என்பதே இல்லை. நீ நான் நம்பிவாழ்ந்த ஓர் உலகம் இடிந்து நொறுங்கி மண்ணில்விழாமல் காத்திருக்கிறாய்” என்றான் யயாதி. “புத் என்னும் நரகம் ஏதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். உறவென ஏதுமில்லாமல் வாழ்தலும், இறந்தபின் நினைக்கப்படாமல் மறைதலுமே புத். அதிலிருந்து மீட்பவனே புத்ரன். எனக்கு நீ ஒருவனே மைந்தன். என் முடியும் கொடியும் குடிமரபும் உனக்குரியவை.”
“தந்தையே, நான் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் உங்கள் முதுமையையும் ஏற்றாகவேண்டும்” என்றான் புரு. “அதனூடாகவே நீங்கள் உங்கள் மைந்தன் என என்னை உலகோர் முன் நிறுவுகிறீர்கள். உங்கள் துயரையும் நோயையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் கொடையையும் பெற்றுக்கொள்ளும் தகுதியை அடைகிறேன்” என்றான் புரு. அருகே வந்து மண்டியிட்டு யயாதியின் கால்களைத் தொட்டு “எனக்கு உங்கள் முதுமையை அளியுங்கள், தந்தையே” என முறைமைப்படி செம்மொழிச் சொல்லால் கேட்டான்.
யயாதி பெருமூச்சுடன் திரும்பி நோக்க சுகிர்தர் “நீர்….” என்றார். ஏவலன் ஒருவன் பித்தளை வால்குடுவையில் நீருடன் ஓடிவந்தான். சுகிர்தர் அதை வாங்கி “கங்கையே, செல்லுமிடம் கனிந்து அடையுமிடத்தை முற்றிலும் நிரப்பும் நீயே கொடைகளுக்குச் சான்று. உன் ஒழுகுதலென இக்கொடை வளர்ந்து செல்க!” என்று உரைத்து நீட்டினார். யயாதி அதை வாங்கிக்கொண்டபோது கைநடுக்கத்தால் நீர் ததும்பிச் சிந்தியது.
புரு இருகைகளையும் ஏந்த அதில் நீரூற்றி “என் முதுமையை உனக்களிக்கிறேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி. வால்குடுவையை பார்க்கவன் பெற்றுக்கொண்டான். புரு எழுந்துகொள்ள சுகிர்தர் “நீங்கள் இளமையை அளிக்கவேண்டும், இளவரசே” என்றார். புரு வால்குடுவையை வாங்கிக்கொண்டான். யயாதி கையேந்த புரு நீரூற்றி “என் இளமையை கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
அனைவரும் மெல்ல உடல்தளர்ந்தனர். எவரிடமிருந்தென்றில்லாமல் ஓரிரு பெருமூச்சொலிகள் எழுந்தன. யயாதி திருஹ்யூவையும் அனுதிருஹ்யூவையும் நோக்கி “உங்கள்மேல் எனக்கு இப்போது சினமில்லை, மைந்தர்களே. ஆனால் நிகர்முறை செய்வதற்காக நான் உங்களுக்கும் தீச்சொல்லிட்டாகவேண்டும்” என்றார். அவர்கள் கைகூப்பி நின்றனர். திருஹ்யூயை நோக்கி “நீயும் உன் இரு உடன்பிறப்புகளைப்போல நிலையற்று அலையும் ஊழ்கொள்க! நீரில் அமைக உன் வாழ்வும் உன் குருதிவழியினரின் வாழ்வுத்தொடரும். தோணியோட்டுக, மீன்கொள்க! ஒருபோதும் நீரிலிருந்து எழாதமைக!” என்றார்.
திருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் உன் கொடிவழியினர் அரசுகள் அமைப்பார்கள். மீன் உங்கள் கொடியாகும். மச்சர்கள் என குலப்பெயர் கொள்வீர்கள். உங்கள் குடிப்பிறந்த பெண் ஒருநாள் பாரதவர்ஷத்தில் அழியாப்புகழ்கொண்ட பேரரசியென்றமைவாள். அவள் குருதியில் எழும் அரசர்களால் இப்பெருநிலம் ஆளப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி.
அனுதிருஹ்யூவிடம் “தென்னகக் காடுகளில் நீ அலைவாய். அரக்கருக்கும் அசுரருக்கும் உரிய வாழ்க்கையே உனக்கும் உன் குடிமுறைகளுக்கும் அமையும்” என்றார். அனுதிருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் அனல்குடிபிறந்த அந்தணன் ஒருவனால் உன் குடி அரசகுலமாக ஆக்கப்படும். தென்னகத்து நிலங்களை நீங்கள் ஆள்வீர்கள். முற்றிலும் புதுப்பெயரும் புதுமுத்திரையும் கொள்வீர்கள். உன்குருதிவாழும். நீயும் உன் பெயரும் முற்றிலும் மறைந்துபோகும்.ஆம், அவ்வாறே ஆகுக!”
யயாதி பார்க்கவனிடம் கையை நீட்டி “செல்வோம், இனி என்னால் இங்கு நின்றிருக்கமுடியாது” என்றான். அவன் கைகளை பற்றிக்கொள்ள மெல்ல நடந்து படிகளில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் உடல் ஆற்றல்கொண்டுவருவதை உணரமுடிந்தது. இறுதிப்படியில் கால்வைத்தபோது பார்க்கவனே பிடியை விட்டுவிட்டான். விழிகள் தெளிய ஓசைகள் துலங்க நிமிர்ந்த உடலுடன் சுற்றும்நோக்கிய கணத்தில் புருவின் நினைவு எழுந்தது. பின்பக்கம் வியப்பொலிகளும் மெல்லிய பேச்சுக்கசங்கலும் கேட்டன. திரும்பிப் பார்க்கலாகாது என தனக்கே ஆணையிட்டுக்கொண்டு அவன் முன்னால் சென்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
April 26, 2017
திருவாரூரில்..
அன்பின் ஜெ,
வணக்கம்.
250வது ஸ்ரீ தியாகபிரம்ம ஜெயந்தி உற்சவம் 28.04.2017 முதல் 03.05.2017 வரை திருவாரூரில் நடைபெறுகிறது. அருண்மொழி அவர்களின் வீட்டாருக்கு அழைப்பு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
எனது தந்தையார் (“கலைமாமணி” தலைச்சங்காடு ராமநாதன்) பங்குபெறும் இசை நிகழ்ச்சி 29.04.2017 மாலை 6 மணிக்கு.
நான் பேரார்வத்துடன் கலந்துகொள்ளும் சில இசை விழாக்களில் இதுவும் ஒன்று. இம்முறை காவிய முகாம் அதனை பின்தள்ளியுள்ளது.
விழா அழைப்பிதழை தங்களின் தளத்தில் பகிர வாய்ப்பிருக்குமேயின் அது பரவலான இசை ஆர்வலர்களை சென்றடையும்.
நட்புடன்,
யோகேஸ்வரன்.
***
அன்புள்ள யோகி
இந்தமுறை அமையவில்லை. இன்னொருமுறை உங்கள் தந்தையின் நாதஸ்வர நிகழ்ச்சியைக் கேட்கவேண்டும்
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
திருவையாறு
அன்பின் ஜெ,
வணக்கம்.
250வது ஸ்ரீ தியாகபிரம்ம ஜெயந்தி உற்சவம் 28.04.2017 முதல் 03.05.2017 வரை திருவாரூரில் நடைபெறுகிறது. அருண்மொழி அவர்களின் வீட்டாருக்கு அழைப்பு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
எனது தந்தையார் (“கலைமாமணி” தலைச்சங்காடு ராமநாதன்) பங்குபெறும் இசை நிகழ்ச்சி 29.04.2017 மாலை 6 மணிக்கு.
நான் பேரார்வத்துடன் கலந்துகொள்ளும் சில இசை விழாக்களில் இதுவும் ஒன்று. இம்முறை காவிய முகாம் அதனை பின்தள்ளியுள்ளது.
விழா அழைப்பிதழை தங்களின் தளத்தில் பகிர வாய்ப்பிருக்குமேயின் அது பரவலான இசை ஆர்வலர்களை சென்றடையும்.
நட்புடன்,
யோகேஸ்வரன்.
அன்புள்ள யோகி
இந்தமுறை அமையவில்லை. இன்னொருமுறை உங்கள் தந்தையின் நாதஸ்வர நிகழ்ச்சியைக் கேட்கவேண்டும்
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்
ஜெ
மூன்று இந்திய நாவல்களை ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். சுருக்கமான ஒப்பீடுதான். ஆனால் மூன்றுநாவல்களையும் ஆழத்தில் சென்று தொடுவதற்கான ஓர் அடிப்படையை அது அளிக்கிறது
கோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மீண்டன என்பதே முக்கியமானது.
கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடிசார் மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.
என்ற ஒப்பீடு இயல்பாக நின்றாலும் அடுத்த வரியில் நீங்கள் சட்டென்று அனந்தமூர்த்தியை ஒரு படி கீழிறக்கிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.
சம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே.
அனந்தமூர்த்தியை அப்படிச் சொல்லிவிடமுடியுமா?
எஸ்.மாதவன்
அன்புள்ள மாதவன்,
நான் எவரையும் கீழிறக்கவில்லை. அவற்றின் ஆழம் எங்கே செல்கிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
தாகூர் சென்றடைந்த மானுடவாதம் என்பது ஐரோப்பாவில் நாநூறாண்டுகளுக்கு முன்னர் ஒரு கொள்கையாக எழுந்தது. ரோமேய்ன் ரோலந்தும், விக்தர் ஹ்யூகோவும் முன்வைத்தது. மானுட உள்ளத்தில் என்றுமுள்ள ‘நான் மானுடன்’ என்னும் தன்னுணர்வின் தத்துவ வெளிப்பாடு அது. மானுடநாகரீகம் அனைத்தையும் தான் என உணரும் பெருநிலை அது. ஒரு மாபெரும் இலட்சியவாதம்.
பைரப்பா சென்றடைவது மரபின் ஆழத்தை. அதன் பழங்குடித்தன்மையை, விலங்கியல்பை, உயிரின் இயக்கவிசையை. அதில் சரிதவறுகளால் ஆன நெறிகள் இல்லை. வாழ்வெனும் மகத்தான நிகழ்வு மட்டுமே உள்ளது. இச்சையை, தாய்மையை, பிறப்பை, இறப்பை அதன் தனிவடிவில் நின்றுநோக்கும் ஒரு மூர்க்கமான தொல்நோக்கு அது. அதன் ஆழம் மேலும் தொன்மையானது.
தாகூர் முன்வைத்தது ஒரு கவிஞன் சென்றடையும் ஆழம். பைரப்பா முன்வைப்பது ஒரு ஞானி கண்டடையும் வெறுமையும் விளங்கிக்கொள்ளமுடியாத பொருள்செறிவும் நிறைந்த பேராழம்.
அனந்தமூர்த்தி சென்றடையும் இருத்தலியம் சென்ற நூறாண்டுக்காலத்தில் ஐரோப்பாவில் உருவான ஒரு தத்துவத்தை. அடிப்படையில் அது எதிர்மறைத்தன்மைகொண்டது. சோர்வுநோக்குடையது. இலட்சியவாதத்துக்கு எதிரானது. அதனாலேயே குறுகலானது. அனந்தமூர்த்தியின் பிராணேஸாச்சாரியார் அவர் சென்றடைந்த இடத்தில் நிற்கமுடியாது. மேலும் முன்னகர்ந்து தாகூரையோ பைரப்பாவையோதான் சென்றடைவார்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பிரபஞ்சன் 55
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
அவர் நமது தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சிகளுள் ஒருவர்.
நேர்மறைச் சிந்தனையைத் தவிர வேறெதையும் ஒருபோதும் அவர் படைப்புகளில் நாம் காண இயலாது.
மானுடத்தின் மீதான தகர்க்க இயலாத நம்பிக்கை கொண்ட மாமனிதர்.
முறையாக தமிழ் கற்றறிந்தவர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம்வரை ஆழ்ந்த புலமை கொண்டவர்.
அனந்தரங்கம் பிள்ளை டைரி போன்ற பல ஆராய்ச்சிப் புதினங்கள் மூலமாக தென்னிந்தியாவின் ஃப்ரெஞ்சு ஆதிக்கம், கலாச்சாரம் போன்றவற்றை வரலாற்று ஆவணங்களாக மாற்றியவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் ஒரே ஒரு நல்ல கவிதை, ஒரே ஒரு நல்ல கதை எழுதினாலும் அவர்களை நல்ல எழுத்தாளர் என தாலாட்டி, சீராட்டி மகிழும் மகத்தான குணம் கொண்ட அரிதினும் அரிதான நல்லிதயம் கொண்டவர்.
தமிழலக்கியத்தில் புதிதாக எழுத வரும் பெண் படைப்பாளிகளை இவர் போல வேறெவரும் வரவேற்று போற்றிய முன்னோடி எழுத்தாளர் வேறெவரும் இருந்ததில்லை. பெண்களுக்கு நவீன தமிழிலக்கியத்தில் சரியாசனம் உண்டென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
தமிழகத்தின் தனிப்பெரும் சொத்தாகிய எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதத் துவங்கி 55 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து “பிரபஞ்சன் 55′ எனும் விழாவினை எனது நண்பர்கள் சிலர் முன்னெடுக்கின்றனர்.
அந்த மகத்தான மனிதனை போற்றி மகிழும் வகையில், அவருக்கு ஓரு சிறிய உதவியாக ரூபாய் பத்து லட்சம் நிதி அளிப்பதென்று முடிவு செய்து முயன்று வருகின்றனர்.
நண்பர்களே!
நீங்கள் தமிழ் இலக்கிய வாசகர்களாக இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம். எழுத்தாளர் பிரபஞ்சனை அறிந்திருக்கலாம்! அறியாமலும் இருக்கலாம். ஆனால், நிச்சயம், தமிழின் மீது பற்று உள்ளவர்களாகவே இருப்பீர்கள்.
நமது தாய் மொழியாம் தமிழில் எழுதிய மகத்தான ஒரு எழுத்தாளனை போற்றும்விதமாக, உங்களால் இயன்ற நிதியினை அவருக்கு அளித்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொகை எத்தனை சிறிதாக இருந்தாலும், நம் காலத்து நாயகனை நாமும் போற்றினோம் என்பதற்கு அடையாளமாக உங்கள் உதவி விளங்கும்.
நேரடியாக அவர் வங்கிக் கணக்குக்கே உங்களது பங்களிப்பினைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
எஸ்கேபி. கருணா
https://www.facebook.com/karuna975/posts/1276530309097059
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அ.மார்க்ஸிடம் ஒரு விண்ணப்பம்
அ.மார்க்ஸ் எழுதும் முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்ட அரசியல்கட்டுரைகளையும் நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு. அனேகமாக அவர் எழுதிய ஒருவரியையும் விட்டிருக்கமாட்டேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் அறியாத தகவல்கள் எப்போதும் அவரிடமிருந்து எழும். அவருடைய இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு அரசியல்மீது கசப்பு இருந்தாலும் மனித உரிமை சார்ந்த களப்பணிகள் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை என நினைக்கிறேன்.
ஆனால் அவர் தன் வாழ்க்கை, நட்புகள் குறித்து எழுதும் சித்திரங்களில் உள்ள நேரடியான உணர்ச்சிகரமும் நுணுக்கமான சித்திரங்களும் அவருக்குள் இருக்கும் அவரே அறியாத கலைஞனைக் காட்டுகின்றன. அவர் நல்ல புனைவுகளையும் எழுத முடியும் என்று தோன்றுகிறது. புனைவு என்பது உண்மைகளுக்கு மேலே சென்றுவிடும் மீஉண்மை. அது அவருடைய உணர்ச்சிகரம் வழியாகவே அவருக்கு வாய்க்கும்.
ஒரு ஃபாஸிச, நாஸிச, பிற்போக்கு, மதவாத, சாதியவாத, ஏகாதிபத்திய, தரகுமுதலாளித்துவ, தேசியவாத, மலையாளித்துவ, பார்ப்பன அடிவருடித்துவ எழுத்தாளனாக இருந்தாலும் அ.மார்க்ஸின் நல்ல வாசகன் நான். அவ்வகையில் அவர் ஒரு நாவலையாவது எழுத முயலவேண்டும் என்று கோருகிறேன். எளிய தயக்கங்களைக் கடந்து அதை அவர் தொடங்கினால் போதும். அவரது உணர்ச்சிகரம் அதை எழுதச்செய்யும் என தோன்றுகிறது. அது தமிழுக்கு ஒரு கொடையாக அமையும்.
பொதுவாக அ.மார்க்ஸ் போன்ற கருத்தியல் அடிப்படைவாதிகளுக்கு புனைவு என்பது இரண்டாம் பட்சமானது, அல்லது ஒருவகை இனியபொய் என்னும் நம்பிக்கை உள்ளூர உண்டு. பழைய செவ்வியல் மார்க்ஸியர்கள் அனைவருக்குமே அந்நம்பிக்கை இருந்தது. புனைவிலக்கியத்தை அனுதாபத்துடன் குனிந்து நோக்கி ஆதரிப்பார்கள்.
புனைவிலக்கியம் என்ன செய்யும்?இக்குறிப்புகளையே எடுத்துக்கொள்வோம். இதில் புரட்சியாளரான அந்தோணிச்சாமியை அ.மார்க்ஸ் நோக்குகிறார், உணர்வெழுச்சியுடன் பதிவுசெய்கிறார். ஆனால் ஒரு புனைவாக இது வெளிப்படுமென்றால் அவர் ஏதோ ஒரு புள்ளியில் அந்தோணிசாமியாக மாறி வெளிப்படத் தொடங்குவார். அந்தோணிச்சாமி அ.மார்க்ஸாக வெளிப்படுவார் என்றும் சொல்லலாம். இக்கட்டுரைகளில் நான்- அவர் என்றிருக்கும் இருமை மறையும். அதன் மூலம் விலக்கப்பட்டுள்ள அதியுண்மை ஒன்று வெளிப்படும். அது எந்தக்கட்டுரையும் அளிக்காத விரிவு ஒன்றைச் சாத்தியமாக்கும்.
புரட்சியாளர்கள், தியாகிகள், மாமனிதர்கள் எவராயினும் அவர்களை சமூகம் மறந்துவிடும். அவர்கள் சொல்லில் வாழ்ந்தாலொழிய. பாரியை பாட்டில் நிறுத்தியது கபிலனின் கொடை அல்ல கடமை. புனைவெழுத்தாளனின் பணியும் அதுவே. மார்க்ஸ் புரட்சியாளராகிய அந்தோணிச்சாமியை சொல்லில் நிறுத்தலாம். கடமை எனக்கொள்ளலாம்.
*
என் தந்தை : ஒரு குறிப்பு – அ.மார்க்ஸ்
விக்டர் ஹ்யூகோ பற்றி ய பதிவில் என் தந்தையை “குடிகாரன்’ என எழுதியது குறித்துச் சில நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தனர். சற்றே கண்டனமும் அவற்றில் ஒலித்தன. உங்கள் தந்தையைப் பற்றி அப்படி எழுதியிருக்கக் கூடாது என.
நான் என் தந்தையை மிகச் சிறிய வயதில் இழந்தவன். மிகப் பெரிய பொறுப்புகளை என் மீது சுமத்தி மறைந்தவர் அவர். இறக்கும்போது தன் பெயரில் 5000 ரூ தவிர வேறு ஏதும் சொத்துக்கள் இல்லாமல் இறந்தவர் அவர்.
அவரை நான் பெரிதும் நேசிக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவரை நான் நினைக்கிறேன். ஒரு மகத்தான மனிதர். 14 வயதில் கூலித் தொழிலாளியாக மலேசியா சென்று 28 வயதில் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் அவர்.
என்னுடைய அரசியல் ஈடுபாடுகளுக்கு மட்டுமல்ல எனது இலக்கிய நாட்டங்களுக்கும் அவரே மூலகாரணம். வெறும் 5ம் வகுப்புப் படித்த அவர் மலேசியக் கம்யூ கட்சியின் ‘ஜனநாயகம்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். அற்புதமான உலக இலக்கியங்களை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர். கிறிஸ்தவ சர்ச்சை விரோதித்துக் கொண்டு எனக்கு மார்க்ஸ் எனப் பெயரிட்டவர். என் அம்மா இறந்த வருத்தத்தில் நிறையக் குடித்துவிட்டு அருகில் இருந்த குளத்தில் மூழ்கிச் செத்தவர்.
நான் மலேசியா சென்றபோது இரு முறைகளும் தோழர் காத்தையாவின் உதவியுடன் அப்பா இருந்த பகுதிகளைச் சென்று பார்த்து வந்தேன். அப்போது அவர் குறித்து நான் எழுதிய ஐந்து கட்டுரைகளில் ஒன்று மட்டும் இங்கே.
கீழே உள்ள படங்களில், மூவர் உள்ள படத்தில் நடுவில் இருப்பவர் அப்பா. இருவர் உள்ள படத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளவர் ‘தூக்கில் தொங்கிய கணபதி’. கைப்பிடியில் அமர்ந்துள்ளது என் அப்பா. அப்பா மிகப்பெரிய அறிவாளி மட்டுமல்ல. எத்தனை அழகு பாருங்கள் அவர். எனக்கு ஒரே வருத்தம்தான், அந்த அழகு எனக்கு வாய்க்காமல் போயிற்றே என்பதுதான்…
இனி கட்டுரை:
அன்று பற்றிய கரங்கள் அ.மார்க்ஸ்
ஒரு பத்துநாட்கள்தான் மலேசியாவில் இருந்தேன். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தேன் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் நான் பார்த்தவரைக்கும் ஒப்பீட்டளவில் பெரிய கட்டிடங்கள் முதலான பெரு நகரச் சாயல்கள் குறைந்த ஒரு எளிய நகரமாகவே ரவாங் இருந்தது. இன்னும்கூடப் பெரும் காடுகள் இருந்தத் தடயங்களுடன்தான் அது காட்சியளித்தது. இந்தக் காடுகள் மத்தியிலொரு சிறிய கடைத்தெருவுடன் கூடிய நகரம்தான் அது. பழைய செங்கற் சூளை இன்று மூடிக் கிடந்தது. சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஒரு பழம் புகை போக்கிக் கோபுரம் ஒன்றைக் காட்டித்தான் அதைப் பற்றிச் சொன்னார் காத்தையா. சுரங்கம் ஒன்று மூடப்பட்டு அது இருந்த இடம் இன்றொரு மிகப் பெரிய ஏரியாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பெருங்காடுகளை அழித்து அதைத் தோட்டமாகவும் தொழிற்சாலைகளாகவும், சுரங்கங்களாகவும், வாட்டர்ஃபால் எஸ்டேட்களாகவும் உருவாக்கியதில் சஞ்சிக் கூலிகளாக இரு நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு வந்த தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு. எந்த உரிமைகளும், தொழிற் சங்கம் முதலிய பாதுகாப்புகளும் இன்றி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் துயர்கள் நிறைந்த வாழ்வைச் சுமந்திருந்தவர்கள் அவர்கள்.
அந்தச் சிறிய நகரத்தில் காரை நிறுத்திவிட்டு ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார் காத்தையா. அது ஒரு தமிழரின் கடை. 1940களில் தொழிற்சங்கத் தோழர்கள் சந்தித்துப் பேசும் இடங்களில் அதுவும் ஒன்றாம். தற்போது முடி திருத்திக் கொண்டிருந்தவரின் தந்தைக்கு என் அப்பாவைத் தெரியுமாம். காத்தையா விளக்கிச் சொன்னபோது அவர் சிரித்தார். உட்காரச் சொன்னார். தேநீர் சாப்பிடச் சொன்னார். நன்றி சொல்லி வெளியே வந்தோம். எதிர்ப்புறத்தில் இப்போது ஒரு காவல் நிலையம் உள்ளது. அந்த இடத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் சுட்டுக் கொன்று குவிக்கப்பட்டிருந்த காட்சி ஒன்றை நினைவு கூர்ந்தார் காத்தையா. மிகப் பெரிய வன்முறைகளினூடாகச் சென்ற நூற்றாண்டில் கம்யூனிச இயக்கம் அழிக்கப்பட்ட இடங்களில் ஒன்று மலேசியா என்பது நினைவுக்கு வந்தது. இன்றும்கூட மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்று ரவாங்கில் குடிகொண்டுள்ளது. அங்கிருந்து சற்று முன்னே சென்றோம். ஒரு பெரிய மைதானம், அதன் கரையில் ஒரு அலுவலகக் கட்டிடத்துடன் காட்சியளித்தது. அது ஒரு தொழிற்சங்க அலுவலகம். அன்றும் அங்குதான் தொழிற்சங்கம் இருந்ததாம். “உங்கள் அப்பா ராமதாஸ் அங்கே நின்று கொண்டுதான் எதிரே கூடியுள்ள தொழிலாளர்களை நோக்கி உரையாற்றுவார்” என்று காத்தையா சொன்னபோது நான் ஒரு கணம் அந்தக் காட்சியை மனக் கண்ணில் ஒடவிட்டுப் பார்த்தேன்.
அப்பா ஆறடி உயரம். கூரிய நாசி, மாநிறம், வகிடெடுக்காமல் மேலேற்றிச் சீவிய தலையுடன் மிக அழகாகத் தோற்றமளிப்பார். கிடைக்கும் படங்களில் மிக நவீனமான உடைகளுடன் அவர் காட்சியளிப்பார். அவரது ஆக உச்சமான இளமைக் காலம் மலேசியாவில்தான் கழிந்தது. அப்பாவின் வீடு எங்கே இருந்தது எனத் தெரியுமா என்றேன். சற்றுத் தொலைவு காரை ஓட்டிச் சென்று ஒரிடத்தைச் சுட்டிக் காட்டினார். வெறும் புதரும் காடுமாக அது காட்சியளித்தது.
அருகில் ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது. அப்போது அது ஒரு பாகிஸ்தானியிடம் இருந்ததாம். அதுவும் இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய இடமாக இருந்துள்ளது. மறைந்த தொழிற்சங்கத் தலைவர் சின்னப்பன் உள்ளிட்ட வேறுசிலரது வீடுகளுக்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். “அப்படியா” என்று எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள். தேநீர் சாப்பிடச் சொன்னார்கள். இன்னும்கூட அதே பழைய கட்டிடங்கள் சிலவும் தொழிற்சாலை அதிகாரிகாளுக்கான குவாட்டர்ஸ் சிலவும் அப்படியே இருந்தன.
இறுதியாக சில நாட்களுக்கு முன் மறைந்த பத்துரவாங் தருமலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றோம். அவரது தம்பி குப்புசாமிக்கு ஓரளவு அப்பாவைத் தெரிந்திருந்தது. அப்பாவை விட அண்ணன் சுப்பையாவை நன்றாகத் தெரிந்திருந்தது. திண்டுக்கல் மாவட்டம் மணப்பாரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அவர்கள், தருமலிங்கத்தின் உறவினர்களும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாடு திரும்பி நான்கைந்து ஆண்டுகள் முன்பு வரை உயிர் வாழ்ந்திருந்தவர்களுமான சங்கையா பொன்னுசாமி சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் சுப்பையா அண்ணன். அப்பகுதியின் நாட்டுப்புற நாயகர்களான பொன்னர் சங்கர் பெயர் சங்கையா சகோத்ரர்களுக்கு வைக்கப் பட்டிருந்தது. நாடுகடத்தப்பட்ட கம்யூனிஸ்டுகள், போர்க்காலத்தில் நாடு திரும்பியவர்கள். போஸின் இராணுவத்தில் இருந்தவர்கள் என மலேசிய நண்பர்கள் பலரும் அவ்வப்போது அப்பாவைத் தேடி வருவார்கள். பழைய கதைகளையும், சாகசங்களையும் மிக உற்சாகமாக அப்பா பேசத் தொடங்கிவிடுவார். முழுமையாகப் புரியாவிட்டாலும் வியப்புடன் நன் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருப்பேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தொடர்ந்து இருந்து செயல்பட்ட ஆர்.எச்.நாதன். பாரதிமோகன், குருதேவன், அப்புறம் நகரம் ராமசாமி, செம்பனார்கோவில் தம்பையா, பரவாக்கோட்டை முத்து, மணப்பாரை சங்கையா சகோதரர்கள், திருச்சி மோகன், ராமு, யாழ்ப்பாணம் ஶ்ரீ (ரெங்கநாதன்), ஆம்பலாப்பட்டு சுந்தரம், கவிஞர் பாரதிமோகன் முதலானோர் இப்போதும் என் நினைவில் உள்ளனர். ஓரிருவர் அப்பா இறந்த பின்னும் ஓரிரண்டு ஆண்டுகள் வரை வந்து சென்றதுண்டு. இவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டவர்கள், சிலர் தேவர், நாயிடு, அம்பலக்காரர், செட்டியார், வெள்ளாளர் முதலிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஒரு அற்புதமான தோழமை அவர்களைக் கட்டி இறுக்கியிருந்தது.
அவர்களில் இருவர் அப்பாவின் குடும்பத்திலேயே அங்கத்தவர்கள் ஆனார்கள். எனக்கு அண்ணன்கள் ஆயினர். மூத்தவர் சுப்பையா அண்ணன். மற்றவர் முத்துச்சாமி அண்ணன். மணப்பாரையச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர். அவர்களின் அப்பா பழனியாண்டி கூலித் தொழிலாளியாக மலேசியா வந்தவர்களில் ஒருவர். மலேசியாவில் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் 1950வரை தமிழ் நாட்டைத் தெரியாது. சிறு வயதிலேயே தாயை இழந்த பிள்ளைகள் அவர்கள்.
போர்க்கால நெருக்கடிகள் மத்தியில் அப்பாவின் தொழிற்சங்க அலுவலகம் எப்போதும் பிசியாக இருக்குமாம். சுப்பையா அண்ணன் சொல்வார். நான் திரும்பத் திரும்ப அவரைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன். நிறையப் பத்திரிக்கைகள், வானொலி, ரேடியோகிராம் சகிதம் அமைந்திருந்த அப்பாவின் வீடு + அலுவலகத்தில் அடிக்கடி வந்து பேப்பர்கள் படிப்பது, போர்ச் செய்திகளை வானொலியில் கேட்பது, ரேட்டியோகிராமில் பாட்டுக்கள் கேட்பது சுப்பையா அண்ணனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. எப்போதும் அப்பாவின் வீட்டில் சாப்பாடும் கிடைக்கும். தம்பையாவின் வேலை சமையல் செய்வது. சிறுவன் முத்துச்சாமியும் எப்போதாவது அங்கு வந்து பாட்டுக்கள் கேட்டுவிட்டுச் சாப்பிட்டுச் செல்வதுண்டு. இருவரும் அப்பாவை “சார்” என்றுதான் கூப்பிடுவார்க்ள். சாகும்வரை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவர்களைப் பார்த்து எங்கள் ஊரில் பலரும் அப்பாவை சார் என்றே கூப்பிடும் பழக்கம் இருந்தது.
ஒருநாள் பழனியாண்டிக்கு உடல் நலமில்லாமற் போய் மருத்துவ மனையில் சேர்க்க வேன்டியதாயிற்று. பிள்ளைகள் இருவருடனும் அப்பாவைத் தேடி வந்த பழனியாண்டி மருத்துவமனையில் துணையாக இருப்பதற்கு சுப்பையாவும் வர வேண்டி இருப்பதால் முத்துச்சாமியை அப்பாவின் பொறுப்பில் விட்டுச் செல்வதாகச் சொல்லியுள்ளார். அதனாலென்ன இருக்கட்டும் என அப்பா சம்மதித்துள்ளார். ஒரு அனாதை போலத் தன்னந்தனியாக இதே போன்ற ஒரு வயதில் இந்த நாட்டுக்கு வந்தவர்தானே அவரும். மருத்துவமனையில் இருந்த பழனியாண்டிக்கு நாளுக்கு நாள் உடல் நலம் மோசமாயிற்று. ஒரு நாள் இரவு இரண்டுமணிக்கு அப்பாவின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்தபோது சுப்பையா தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நின்றிருந்திருக்கிறார். சத்தம் கேட்டு முத்துசாமியும் விழித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார். நடந்ததைப் புரிந்து கொண்ட அப்பா சுப்பையா, முத்து இருவரின் கரங்களையும் பற்றிக்கொண்டார். “அழுவாதீங்கடா, நான் இருக்கேண்டா, நான் இருக்கேன்”. சுப்பையா அண்ணன் இதைச் சொல்லும் போதெல்லாம் அவர் குரல் கம்மிவிடும். கேட்டுக் கொண்டிருக்கும் என் கண்கள் பனித்துவிடும்.
அன்று பற்றிய அந்தக் கரங்கள் நான்கையும் அப்பா சாகும் வரை விடவில்லை. அடுத்த சில ஆண்டுகள் மலேசியத் தமிழர்களுக்கு மிகவும் சோதனையானவை. ஜப்பானியர் ஆட்சியின் இறுதியிலும் அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அப்பா தலைமறைவாக நேரிட்டது. சுப்பையாவும் கொரில்லாப் போராளியானார்.
கெடுபிடிகள் அதிகமாயின. ஜப்பானிய ஆட்சி மட்டுமின்றி பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சியும் கொடூரமாகக் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியது. ஜப்பானியரின் சித்திரவதை முறைகளை அப்பா சொல்லக்கேட்டு நான் அஞ்சி நடுங்கியிருக்கிறேன். இந்த நேரத்தில் தமிழகச் சொந்தங்களோடு தொடர்பு வைத்திருந்த பலரும் ஊர் திரும்பினர். எங்கள் ஊரச் சேர்ந்தவர்கள் என் தாத்தாவிடமும் அப்பாயியிடமும் (பாட்டி) அப்பாவின் நிலையைச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். தாத்தா சாகக் கிடக்கிறார் என்றும், கடைசித் தடவையாகப் பார்த்துச் செல்ல ஒருமுறை வந்து போகுமாறும் என் அப்பாயியிடமிருந்து கடிதமொன்று அப்பாவுக்கு வந்தது.
கட்சி அனுமதி பெற்று ஊருக்கு வந்ததாக அப்பா சொல்லுவார். ஒருவேளை உயிருக்குப் பயந்தும் வந்திருக்கலாம். ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரகசியப் பிரிவுபசார நிகழ்ச்சிகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இயக்கத்திற்குத் தெரிந்தே அவர் புறப்பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மலேசியாவில் நிலைமை எப்படி இருந்தாலும் அந்தக் காலத்தில் ஒருவர் சிங்கப்பூர் சென்று வருகிறாரென்றால் ஓரளவு பணம், நகைகள், இங்கே கிடைக்காத பொருட்களுடன் வருவார் என்பதுதான் பொருள். சரியாகப் பதிநான்காண்டு காலத்திற்குப் பின் வந்து சேர்ந்த மகனைப் பற்றி என் அப்பாயி சொல்லுகிற சொற்கள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. “வந்தான் பாரு உங்கொப்பன். ஒரு தோல் பையையும் சவரக் கத்தியையும் தூக்கிட்டு”
அவர் சொல்லிய அந்தத் தோலாலான உயர்ரக சூட் கேஸ் ரொம்ப நாட்கள் வரை என் வீட்டில் இருந்தது. அவர் சொன்ன சவரக் கத்தி ஒரு கில்லட் ரேசர். அவசரமாக அப்பாவுக்குத் திருமணம் செய்வித்து நாங்கள் பிறந்த கதையெல்லாம் இங்கே தேவையில்லை.
சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவுடன் அப்போது பிராட் வேயில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத்தான் அப்பா சென்றுள்ளார்.
அ[ப்போது அங்கும் நெருக்கடி. யாரும் கண்டு கொள்ளாத சூழலில் ஊருக்கு வந்த அப்பா வயதான பெற்றோரைப் பாதுகாக்கும் பொறுப்புக்கு ஆளானார். திருமணமும் ஆகியது. இருந்த கொஞ்ச நிலத்தைச் சாகுபடி செய்யும் திறமையும் அவருக்கில்லை. அதே நேரத்தில் உளவுத் துறை தொல்லை வேறு. அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு அவரைக் கொண்டு சென்று சில நாட்களுக்குப் பின் விடுதலை செய்த போதிலும் இறுதிக் கட்டப் பிரிட்டிஷ் ஆட்சியும் தொடர்ந்து வந்த இந்திய அரசும் அவரை நீண்ட காலம் கண்காணிப்பிலேயே வைத்திருந்தது. எனினும் கட்சிக்காரர்களும் தலைமறைவுத் தோழர்களும் வந்து செல்லும் இடமாகவே அப்பாவின் வீடு இருந்தது. மலேசியாவிலேயே பழக்கமானவரும் இந்திய அரசால் சுட்ட்டுக் கொல்லப்பட்டவருமான வாட்டாக்குடி இரணியன் சுடப்பட்ட நாளுக்கு முதல் இரண்டு நாட்கள் அப்பாவின் பாதுகாப்பில்தான் இருந்தார்.
சில வாழ்க்கைச் சம்பவங்கள் தமிழ் சினிமாக் காட்சிகளைக் காட்டிலும் நம்பத் தகாதவையாகவும் வியப்புக்குரியதாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி அப்பாவின் வாழ்விலும் நடந்தது. அப்பாவுடன் மலேசியாவிலிருந்த கோமஸ் என்கிற ஒரு மலையாள நண்பர் குடும்ப சகிதம் சென்னைக்கு வருவதாகவும் துறைமுகத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறும் அப்பாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
துறைமுகத்தில் கோமசுக்காக அப்பா காத்திருந்தபோது, “சார், சார்” என்ற அந்தப் பழக்கமான குரல் உரத்துக் கூவியது. கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தபோது இரண்டு கரங்களிலும் விலங்கிடப் பட்டு சுப்பையா அண்ணன் போலீஸ் பிடியில் நின்றிருந்துள்ளார். நாடுகடத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரை “எங்கே போகிறாய்? முகவரியைச் சொல்” எனப் போலீஸ் கெடுபிடி செய்துள்ளது. தமிழ்நாடு குறித்து முன்பின் அறிந்திராத அவர் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றுள்ளார். அப்பா சென்று தன்பொறுப்பில் அழைத்துச் செல்வதாகக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அண்ணனை அழைத்து வந்தார். 500 ரூபாய் இந்தியப் பணம் மட்டும் அவருக்கு மலேசிய அரசால் வழங்கப் பட்டது.
1948 அன்று பிரிட்டிஷ் ஹை கமிஷனர் சர் ஹென்ரி குர்னீ கம்யூனிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுஅடக்குமுறைகள் அதிகமாயின. அண்ணன் சுப்பையாவும் தலைமறைவானார். அவரும் ஒரு சீனப் பெண் தோழரும் ரப்பர் தோட்டமொன்றில் பதுங்கியிருந்தபோது படையினர் சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் அப்பெண் படுகாயமடைந்து விழுந்துள்ளார். “இந்தோ தொங்சி நீ ஓடிப்போ, தப்பித்துப் போ” எனச் சீன மொழியில் அப்பெண் கத்தியதாகவும், சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின், தன்னிடமிருந்த கைத் துப்பாகியைச் சேற்றுக்குள் பதுக்கி விட்டுச் சரண் அடைந்ததாகவும் அண்ணன் சொல்வார். ஆறுமாத காலக் கடுஞ் சித்திரவதைகளுக்குப் பின் அவர் நாடுகடத்தப்பட்டார். பல நூறு பேர்கள் அவ்வாறு அப்போது நாடுகடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
கொஞ்ச நாட்கள் கழித்துத் தம்பி முத்துச்சாமியும் வந்து சேர்ந்தார். இருவருக்கும் அப்பா தன் சொந்தக்காரப் பெண்களைத் திருமணம் செய்வித்தார், சுப்பையா அண்ணன் ஒரே குடும்பமாய் அப்பா இறக்கும் வரை வாழ்ந்தார். எனக்கும் இரு குழந்தைகள் பிறந்து நான் தஞ்சை நகரத்திர்கு இடம்பெயரும் வரை ஒரே குடும்பமாகவே வாழ்ந்தோம். இன்று இரண்டு அண்ணன்களும் இறந்து போனார்கள். அவர்களது பிள்ளைகள் திருமணமாகிக் குடும்பங்களோடு வாழ்கின்றனர்.
மனித உரிமைப் போராளி தோழர் ஆறுமுகம் மலேசியத் தமிழர் வாழ்வில் மறக்க இயலாத மூன்று கணங்கள் குறித்துச் சொன்னது பற்றித்தான் ஆரம்பித்தேன். கதை எங்கெங்கோ போய்விட்டது. பெரியாரின் வருகை, போஸின் இந்திய தேசிய இராணுவச் செயல்பாடுகள் என்பதற்கு அடுத்த கட்டமாக அவர் நான் எதிர் பார்த்தது போல் கம்யூனிஸ்டுகள் சென்ற நூற்றாண்டின் மத்தியில் நடத்திலாயுதப் போராட்டத்தைச் சொல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற ‘ஹின்ட்ராஃப்’ இயக்கத்தைக் குறிப்பிட்டதை நான் எதிர்பார்க்கவில்லை. கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அவர் ஏதும் குறைத்துச் சொல்லவில்லை ஆயினும் அது அத்தனை முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப் படாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய போதுதான் ரெங்கசாமியின் மூன்று நாவல்களையும் நான் படிக்க நேரிட்டது.
(ஐந்து கட்டுரைகளாக வந்த தொடர் கட்டுரையில் ஒன்று மட்டும் இது என்பதை நினைவிற் கொள்க)
***
சென்றகாலங்கள்
குறைத்துரைத்தலின் அழகியல்
அ.மார்க்ஸும் ஜெகேவும்
அ.மார்க்ஸின் ஆசி
ஜெகே கடிதங்கள்
முத்திரைகள்
அ.மார்க்ஸ்,காந்தி
இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்
கடிதங்கள்
அ.மார்க்ஸ்:கடிதங்கள்
தேர்தல் கண்காணிப்பு
அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்
அ.மார்க்ஸ்;கடிதம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஊட்டி சந்திப்பு நினைவுகள்
இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..
ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்
ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
ஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு
கம்பராமாயணம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012
ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு
ஊட்டி காவிய முகாம் – வீரராகவன்
ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2
ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

