Jeyamohan's Blog, page 1645
April 30, 2017
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும் ஏராளமான இளைஞர்களும் தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உறுதி இது – ஊழையும் உப்பக்கம் காணும் உலைவின்மை.
மாமலருடன் முதற்கனலையும் நாளுக்கு அய்ந்து அத்தியாயம் என்ற கணக்கில் -அத்துடன் திரு. அசோகமித்ரன் அவர்களின் சிறுகதைகள்-குறுநாவல்கள், திரு. பிரபஞ்சன் அவர்களின் “நாவல் பழ இளவரசியின் கதை” சிறுகதை தொகுப்பு என சிலவற்றையும் வாசித்து வருகிறேன். தொடக்கத்தில் இது ஒரு இயந்திரத்தனமான சடங்கு போல் தோன்றியது இப்போது சுகமான ஒன்றாக செல்கிறது.
மாமலரையும் முதற்கனலையும் ஒரே சமயத்தில் படிப்பது சற்று குழப்பிவிடும் என்று எண்ணினேன் ஆனால் அவ்வாறு ஆகவில்லை. மனம் அவ்வவற்றை தனித்தனியாக பிரித்துக்கொண்டு அவ்வவற்றின் வழியே தொடர்கிறது. உங்கள் இணையப் பக்கம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக படித்தது, தஞ்சை சந்திப்பு வந்தது இவற்றின் வாயிலாக ஏதோ ஒன்று ஆகிவிட்டது – வெளியேற்ற முடியாத பாம்புக் கடியின் விஷம் போல – அனுமன் வாலில் இடப்பட்ட தீ போல – குருவிடம் பெற்ற தீட்சை போல – ஏறிக்கொண்டே செல்கின்ற, வளர்ந்து கொண்டே செல்கின்ற, பின் திரும்புதல் இல்லாமல் முன்னேறி மட்டுமே செல்ல வழிதருகின்ற ஏதோ ஒன்று ஆகிவிட்டது.
அன்பைப் பகிர்தலே இலக்கியம் என்று இப்போது தோன்றுகிறது. தாக்கத்தினால் மனத்தில் தோன்றுபவற்றை எல்லாம் உங்களுக்கு எழுதுவேன், பொருட்டாக கொள்ளத்தக்கது என்று தாங்கள் கருதுபவற்றை மட்டுமே பொருட்டாக கொள்வீர் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு உங்களிடம் எனக்கு இருப்பதால்.
அன்புடன்,
விக்ரம்,
கோவை
அன்புள்ள ஜெ,
மடிக்கணினி முடங்கியதால் பட்ட அவதிகளை விவரித்திருந்தீர்கள். சேவைத்துறை ஊழியர்களின் பொறுப்பு துறப்பு தரும் அவதி புதிதல்ல என்றாலும், உங்கள் வெண்முரசு தொடரின் வரலாற்று முயற்சியின் இடையில் இது போன்ற இடர்களும் நேர விரயமும் வருத்தமளிக்கின்றன. இதை ஒட்டி ஒரு கேள்வி. பொருத்தமில்லாதது என்றால் மன்னிக்கவும்:
தாளில் எழுதும் வழக்கத்தை முற்றிலும் துறந்து விட்டீர்களா? எழுதும் முறை படைப்பூக்கத்தைப் பாதிக்கிறதா? இரு நாட்களும் தாளில் எழுதி இணைய நிலையத்தில் மின் நகல் எடுத்து தளத்தில் பதிவேற்றியிருந்தால் வெண்முரசை உங்கள் கையெழுத்தில் படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமே! அல்லது கைபேசியில் புகைப்படமாக நண்பர்களுக்கு அனுப்பியிருந்தால் அவர்கள் தட்டச்சு செய்து திருப்பி அனுப்பியிருப்பார்களே (வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் செய்வேன்).
கைபேசியில் செல்லினம் போன்ற செயலியை நிறுவிக்கொண்டால் இது போன்ற அவசரத்தேவைக்கு உதவக்கூடும். சற்று மெதுவாக நடக்கும் ஆனால் வேலை முடிந்துவிடும். பழகிவிட்டால் மடிக்கணிணி இல்லாத அவசரப்பயணங்களில் உதவக்கூடும். சமீபமாக இதை முயன்று பார்த்ததால் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.
இணையதளத்தில் தட்டச்சு செய்ய https://www.google.com/intl/ta/inputt... எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் உள்ளிடும் முறைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் (இதில் உள்ள தமிழ் (பொனெடிக்) முறை எனக்கு எளிதாக இருந்தது).
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
குற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும் , என் வாசிப்பை குறித்தும் நான் கொண்டிருந்த ஐயங்களை நீங்கள் நீக்கி விட்டீர்கள்.அப்படி பார்த்தால் உணர்வுப்பூர்வமாக நான் கண்டடைந்த இடம் சோனியாவின் பாதங்களை ரஸ்கோல்னிகோவ் முத்தமிடும் அந்த இடம்,பின் அவர்கள் இடையே நடக்கும் அந்த உரையாடல் அந்த கதையின் ஒரு மிகவும் உணர்வார்ந்த இடம் என்று எனக்குப்பட்டது. பின் இறுதியில் ரஸ்கோல்னிகோவ் சோனியாவுக்காக தன் வாழ்க்கையை அமைத்து நாவலை முடித்து இருந்த விதம் எப்படி அந்த மனிதன் கற்பானா வாதத்தில் இருந்து எதார்த்ததிற்குப் படிப்படியாக வந்தான் என்று சொல்லி முடித்து அந்த இடத்தில் இருந்து ஒரு புதுக் கதை பிறக்கிறது.
ஆனால் நீங்கள் சுட்டி காட்டி சொல்லிய அந்த கடிதம் ரஸ்கோல்னிகோவ் அவன் சகோதரிக்கு எழுதியதாக குறிப்பிட்டு இருந்ததீர்கள்.ஆனால் அவன் அம்மா தானே அந்த கடிதத்தை ரஸ்கோல்னிகோவுக்கு எழுதியது.பின் துனியாவும் அவனுடைய தங்கை தானே.நீங்கள் அந்த கடிதத்தை தான் சொல்கிறீர்கள் என்றால் அது உண்மையே. அதை புரிந்து கொள்ள எந்த
விமர்சனத்துணையும் தேவை இல்லை தான் .
நான் ஏதேனும் அதிகப் படியாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.என் கடிதத்திற்கு எனக்கு விளக்கம் அளித்தமைக்கு
நன்றி
இப்படிக்கு ,
பா.சுகதேவ்.
மேட்டூர்.
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
சிறுகதைகள் கடிதங்கள் 19
சிறுகதைகள் கடிதங்கள் 18
சிறுகதைகள் கடிதங்கள் 17
சிறுகதைகள் கடிதங்கள் 16
சிறுகதைகள் கடிதங்கள் -15
சிறுகதைகள் கடிதங்கள் -14
கடிதங்கள்
கடிதங்கள்
தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2
தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2
கடிதங்கள்
கடிதங்கள்
ஒரு பழைய கடிதம்
யானைடாக்டர், கடிதங்கள்
கடிதங்கள்
ஏழாம் உலகம் :கடிதங்கள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90
90. துலாநடனம்
புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவன் வருகையை நிமித்திகன் வெள்ளிக்கோல் தூக்கி அறிவித்ததும் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அவனைக் கண்டதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அவன் சென்று பிரபாகரரின் கால்களை பணிந்தான். “வெற்றியும் புகழும் பெருஞ்செல்வமும் குடிநிறைவும் அமைக!” என அவர் வாழ்த்தினார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அந்தணர் கங்கைநீர் தெளித்து வேதச்சொல் உரைத்து அவன்மேல் வாழ்த்து பொழிந்தனர்.
அவன் மைந்தரை நோக்கி கைநீட்ட போர்க்கூச்சலிட்டபடி ரௌத்ராஸ்வன் பாய்ந்து வந்து அவன் கைகளில் விழுந்தான். அவனை வாளால் வெட்டுவதுபோல நடித்தபடி துள்ளினான். புரு சிரித்தபடி மைந்தனை தூக்கிச் சுழற்றி அருகே நிறுத்திக்கொண்டான். ஈஸ்வரன் நாணச்சிரிப்புடன் அருகே வர அவனைப் பிடித்து மறுபக்கம் நிறுத்திக்கொண்டு அரசியை நோக்கி புன்னகைத்தான். அவள் “போதும், அரசணிகள் கலைகின்றன” என்றாள். சூழ்ந்து நின்றிருந்த காவலர்களும் பணியாளர்களும் பற்கள் மின்ன சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ரௌத்ராஸ்வன் “நாம் கானாடவா செல்கிறோம், தந்தையே?” என்றான். “ஆம், கானாடுதலும் உண்டு” என்றான் புரு. பிரவீரன் இளையவர்களிடம் “உங்கள் தேர்கள் அப்பால் நின்றுள்ளன. வருக!” என்றான். ரௌத்ராஸ்வன் “இல்லை, நான் தந்தையிடம்தான் இருப்பேன்” என்றான். மூத்தவன் ஏதோ சினந்து சொல்ல வாயெடுக்க “இருக்கட்டும்… நாம் ஒரே தேரில் செல்வோம்…” என்றான் புரு. “நகர்விட்டு நீங்கியதும் தனித்தனி தேர்களில் ஏறிக்கொள்வோம்.” சுபகன் நகைத்து “இன்று சோமாஸ்கந்தரை நோக்கும் நல்லூழ் அமைந்துள்ளது நம் குடிகளுக்கு” என்றான்.
அவர்கள் தேரில் ஏறிக்கொண்டனர். ரௌத்ராஸ்வன் அன்னையின் மடியில் அமர புருவின் மடியில் ஈஸ்வரன் அமர்ந்தான். பிரவீரன் அவர்களுக்குப் பின்னால் நின்றான். தேர் அரண்மனை முற்றத்திலிருந்து எழுந்து அரசப்பெருஞ்சாலையை அடைந்ததும் அதை காத்து நின்றிருந்த குடிகளின் வாழ்த்தொலிகளும் மலர்ப்பொழிவும் அவர்களை சூழ்ந்துகொண்டன. மைந்தர்களுடன் அவன் தோன்றியது கண்டு பெண்கள் உவகையுடன் கூச்சலிட்டனர். ரௌத்ராஸ்வன் நாணி கைகளால் முகத்தை மறைத்துக்கொள்ள புரு அவன் கைகளைப் பற்றி விலக்கினான். அவன் திரும்பி அன்னையின் மார்புக்குள் முகம் புதைத்தான்.
கோட்டைவாயிலைக் கடந்ததும் ஈஸ்வரன் “நாம் எங்கு செல்கிறோம், தந்தையே?” என்றான். “அன்னையின் சோலைக்கு. இது அன்னைக்கு நாம் மலர்க்கொடை அளிக்கும் நாள்” என்றாள் பௌஷ்டை. “நாம் இதுவரை அங்கு சென்றதில்லையா?” என்றான் ஈஸ்வரன். “நீங்கள் இருவரும் சென்றதில்லை. நான் சென்றிருக்கிறேன்” என்றான் பிரவீரன். ஈஸ்வரன் “அங்குதான் நம் பேரன்னை உறைகிறாரா?” என்றான். புரு “ஆம்” என்றான்.
குருநகரியைவிட்டு விலகிச்சென்ற புரு சுகிர்தவனம் என்னும் காட்டில் மாணவர்களுடன் வாழ்ந்த யதாவாசர் என்னும் முனிவருடன் தங்கினான். அவனுக்கென அமைந்த சிறுகுடிலில் நெறிநூல்களையும் மெய்நூல்களையும் கற்றும் காட்டில் காய்கனி தேடி அலைந்தும் வாழ்ந்தான். அங்கிருந்த ஏழாண்டுகளும் அவன் சொல்லொறுப்பு நோன்பு கொண்டிருந்தான். அங்கே அவன் எவரென பிற மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. உடல்தளர்ந்த ஷத்ரிய முதியவர் ஒருவர் இறுதிக் கான்கடனுக்காக வந்திருப்பதாகவே எண்ணினர். பேசாதவனை பிறர் காணாமலுமாகிறார்கள். ஓரிரு ஆண்டுகளுக்குள் அங்கே ஒருவர் வாழ்வதையே அங்குள்ள மாணவர்கள் மறந்தனர்.
ஏழாண்டுகளுக்குப்பின் அவனைத் தேடி சுகிர்தரின் ஒற்றன் வந்தான். “இளவரசே, அரசர் அரண்மனைக்கு வரப்போகிறார். உங்களுக்கு இளமையை மீட்டளிக்கவிருக்கிறார். உங்களை அழைத்துவரும்படி அமைச்சரின் ஆணை” என்றான். அரசஒற்றனையும் அவன் சொல்லையும் முதலில் அவனால் அறியமுடியவில்லை. அவன் இறந்தகாலம் அவனால் புனையப்பட்ட ஒளிமிக்க கனவுகளாக உள்ளே இருந்தது. அதில் அளிநிறைந்த விழிகளுடன் அவன் அன்னையும், பருவங்களை மாறிமாறி அணிந்துபொலியும் அசோகவனியின் மரங்களும், இளவெயிலும் நிலவொளியும் முழுக்காட்டிய அதன் சிறுதெருக்களும், முள்மரக்கோட்டையும், புழுதிச்சாலையும், அசோகச்சோலையின் குளிரும் மட்டுமே இருந்தன. அங்கே இன்பங்களனைத்தும் துளிபெருகி ஆறாகியிருந்தன. துன்பங்கள் அவ்வின்பங்களுக்கு எதிர்ச்சுவை அமைக்கும் தலைகீழ் இன்பங்களென உருமாறிவிட்டிருந்தன.
முதுமைக்கு உகந்தவகையில் மாற்றமில்லாத எளிய அன்றாடச் செயல்களை அவன் அமைத்துக்கொண்டிருந்தான். காலைநீராட்டு முதல் இரவின் நூல்நோக்குதலும் துயிலுதலும் வரை ஒவ்வொன்றும் இயல்பாகவே நிகழ்ந்தன. அந்த அன்றாடத்தின் மாறா ஒழுக்கு அவன் எண்ணங்களையும் பிறழா வழிவென்றாக்கியது. புதியன எதுவும் நிகழாதபோது பழையன புதியவையாகி வந்து நடித்தன. ஆகவே ஒவ்வொரு நினைவுக்கும் பலநூறு வடிவங்கள் எழுந்து மெய்யென்ன மயக்கென்ன என்னும் எல்லைகள் முற்றழிந்தன. அங்கே அவனை யயாதி தன் வலிய கைகளால் தழுவினார். கானாடவும் நீர்விளையாடவும் கொண்டுசென்றார். புரவியும் களிறும் பயிற்றுவித்தார். படைக்கலம் ஏந்தி அவன் அவருடன் களிப்போராடி சிரித்தான். உடன்பிறந்தாருடன் கூடி விளையாடினான். நிலவொளியில் சோலைமுற்றத்தில் அமர்ந்து உணவுண்டான். சொல்லாடி மகிழ்ந்தபின் குளிரில் அன்னையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு விழிமயங்கினான்.
அவ்வுலகில் ஒற்றனின் வருகை அலைகளை கிளப்பி நிலைகுலையச் செய்தது. புறச்சொற்களுக்கு அவன் உலகில் பொருளேதும் இருக்கவில்லை. புரிந்துகொள்ளாமலேயே ஆம் ஆம் என்று தலையசைத்தான். அவன் நெஞ்சிலிருந்து எண்ணம் சொல்லாக மாற மிகவும் பிந்தியது. மூச்சை வந்து தயங்கியபடி தொட்ட எண்ணம் ‘இதுவா? இதைக்கொண்டா?’ என திகைத்தது. பின் மெல்ல மூச்சை அளைத்து பிடி அள்ளி அதை வனைந்து சொல்லாக்கி நாவில் அமைத்தது . “யார் நீங்கள்?” என்றான் புரு. அச்சொல்லைக் கேட்டு அவன் செவி திடுக்கிட்டது. முதியகுரல், அவன் கேட்டறியாதது. “நான் குருநகரியின் ஒற்றன் மந்தன். சுகிர்தரின் செய்தியுடன் வந்தவன்” என்றான் ஒற்றன். “ஆம்” என்றான் புரு.
மீண்டும் புரியாமல் “என்ன?” என்றான் புரு. மிக மெல்லத்தான் அவனால் உளம்குவிந்து அச்செய்தியை அடையமுடிந்தது. ஒற்றன் ஒலிமங்கிய அவன் செவியில் மீண்டும் மீண்டும் அச்செய்தியை கூவினான். “என்ன?” என்று அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். செய்தியை புரிந்துகொண்டதும் அவன் தலை ஆடத்தொடங்கியது. கைகளை நெஞ்சோடு சேர்த்து நரைத்த தாடிமேல் விழிநீர் வழிய விம்மி அழத்தொடங்கினான். யதாவாசரின் மாணவர்கள் அவன் தோளைப்பற்றி தேற்றினர். அனைத்துக்கும் இறுதியில் எஞ்சுவது அழுகையாகவே இருந்தது. துயரற்ற அழுகை. அல்லது அறியாப் பெருந்துயர் ஒன்றின் அழுகை.
ஏழாண்டுகளில் இளமையை அவன் மறந்துவிட்டிருந்தான். உடல் உணர்ந்த முதுமை உள்ளத்தையும் அவ்வாறே ஆக்கிவிட்டிருந்தது. நடையில் அமர்வில் துயிலில் விழிப்பில் உடல் கொண்ட முதுமை எண்ணங்களாக உணர்வுகளாக தன்னிலையாக மாறியிருந்தது. “உள்ளமென்பது உடலின் நுண்வடிவு” என்று யதாவாசர் அவனிடம் சொன்னார். “உன் உள்ளம் முதுமைகொள்கையில் புதிய ஓர் உலகை அறியத் தொடங்குவாய். அங்கு நீ அறிவதை மீண்டு சென்று இளமையில் செயலாக்க முடியுமென்பதே உன் பேறு.” அவன் தலையசைத்தான். “அவ்வாறு முதுமையின் உலகொன்றை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் உன் தளர்ந்த உடல் அதில் வாழவும் இயலாது” என்றார் யதாவாசர்.
குருநகரியை அவன் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. எனவே புழுதியலை படிந்த பெருஞ்சாலைக்கு அப்பாலெழுந்த கரிய கோட்டைவாயிலும் பெருமுற்றமும் பிரிந்து சென்ற சாலைகளில் ஒழுகிய வண்டிகளும் விலங்குகளும் மக்களும் மாடநிரையும் காவல்கோட்டங்களும் அவனுக்கு பெருந்திகைப்பை அளித்தன. அவ்வுணர்வெழுச்சியை அவன் உள்ளத்தால் தாளமுடியாமலானபோது முதுமைக்குரிய வகையில் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு உளமொதுக்கி உடல்சுருக்கி தேர்த்தட்டில் துயிலத் தொடங்கினான்.
அரண்மனை முற்றத்தில் தேர் நின்றபோது விழித்துக்கொண்டான். அமைச்சர் சுகிர்தர் தேர் அருகே வந்து “வருக இளவரசே, அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றார். “யார்?” என்று அவன் பதறியபடி கேட்டான். இளமையின் கனவில் அலைவது அறுபட்டமையால் இடம் துலங்காமல் “யார்? என்ன?” என்றான். சுகிர்தர் “நான் அமைச்சர் சுகிர்தர். தங்களை வரவேற்க இங்கு நின்றுள்ளோம்… வருக!” என்றார்.
அமைச்சரின் கைபற்றி நடந்து படியேறுகையில் அவன் கால்கள் நடுங்கின. ஒவ்வொரு படியிலும் இரு கால்களையும் ஊன்றி நின்று மேலேறிச்சென்று பெருங்கூடத்தில் நின்று அண்ணாந்து அதன் குடைவுக்கூரையை நோக்கினான். நீர்மருதமரங்கள்போல திரண்டு காலூன்றி நின்ற தூண்களின் வலிமையை மெல்ல கைகளால் தொட்டுத்தொட்டு உணர்ந்தான். ஊன்றி நிலைத்தவற்றை உறுதியுடன் அசைவனவற்றை இளமைநிறைந்தவற்றைத் தொட அவன் எப்போதும் விழைந்தான். “தந்தை வந்திருக்கிறார், அரசே” என்றார் சுகிர்தர். “தங்களுக்காக காத்திருக்கிறார்.” அவன் பழுத்த விழிகளால் நோக்கி “யார்?” என்றான். அவர் மீண்டும் சொன்னபோதுதான் புரிந்துகொண்டான்.
“என்னால் படி ஏறமுடியாது” என்றபடி அவன் பீடத்தை நோக்கிச் செல்ல கைகாட்டினான். பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் உடலுக்குள் எலும்புகள் இறுக்கமழிந்து மெல்லிய உளைச்சல்கொண்டன. நிமிர்ந்த கூன்முதுகை மீண்டும் தளர்த்தி நிலம்நோக்க முகம் குனித்து “நான் சற்று படுக்கவேண்டும்” என்றான். அமைச்சர் சொன்னவை மறந்துவிட்டிருக்க அவர் முகத்தை நோக்கி அங்கிருந்த உணர்ச்சிகளைக் கண்டு அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என உய்த்துணர முயன்று தோற்று பொதுவாக புன்னகை செய்தான்.
ஏவலர் இன்னீர் கொண்டுவந்தனர். அதை கண்டதும்தான் விடாய் எழுந்திருப்பது நினைவுக்கு வந்தது. உடலெங்கும் எரிந்த வெம்மை அதனால்தானா என வியந்தபடி எடுத்து ஆவலுடன் அருந்தினான். கைநடுங்க வாய் கோணலாக மூச்சு தடுக்க அதை குடித்தபோது ததும்பி தாடியிலும் ஆடையிலும் சிந்தியது. கோப்பையை ஏவலன் வாங்கிக்கொண்டபோது அவனை நோக்கி புன்னகை செய்தபின் “அஷ்டகர் சமித்துக்கு சென்றுவிட்டாரா?” என்றான். அவன் வியப்புடன் நோக்க “நானும் செல்லவேண்டும். வெயிலெழுந்துவிட்டது” என்றான்.
சுகிர்தர் திகைத்து நின்ற ஏவலனிடம் விலகிச் செல்லும்படி விழிகாட்டினார். அவன் அகன்றபின் “சற்றுநேரம்… இதோ சேக்கறைக்குச் செல்லலாம்” என்றார். காலடியோசை ஒலிக்க பார்க்கவன் படிகளில் இறங்கி வந்தார். அமைச்சர் “தங்கள் தந்தையின் அணுக்கர் பார்க்கவர். அரசர் கானேகியபோது அவர் மீண்டுவருவதற்காகக் காத்து காட்டின் விளிம்பிலேயே ஏழு ஆண்டுகள் தானும் தங்கியிருந்தார். தந்தை வந்தபோது உடன் வந்தார்” என்றார். அவன் திரும்பி நோக்கியபோது நினைவின் ஆழத்திலிருந்து மங்கலாக பார்க்கவனின் முகம் எழுந்துவந்தது. “ஆம்” என்றான்.
அது அவன் எதையும் உணராதபோது பொதுவாகச் சொல்வது. அவன் உள்ளம் மீண்டும் பின்னால் செல்லத் தொடங்கியிருந்தது. நிகழ்காலம் சிடுக்காக இசைவற்றதாகத் தோன்றியது. அதில் உழலும் துயரை விலக்கி மீண்டும் தன் இனிய இறந்தகாலக் கனவுகளுக்குள் புகுந்துவிட உள்ளம் ஏங்கியது. “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்றான். சுகிர்தர் பார்க்கவனிடம் “மேலே ஏறமுடியாது என நினைக்கிறேன். தளர்ந்திருக்கிறார். அரசர் கீழே வந்து இவரை சந்திப்பதே நன்று” என்றார். பார்க்கவன் அவனை நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டு “நான் சென்று சொல்கிறேன்” என்றார்.
அவன் பார்க்கவனிடம் “உச்சிவெயில்போல் வெம்மைகொண்டிருக்கிறது இந்த பின்காலை” என்றான். அவரால் அவனை விழிநாட்டி நோக்க இயலவில்லை. அவர் சென்றதும் அவன் ஏப்பம் விட்டு கால்களை நீட்டி கைகளை கைப்பிடிகள்மேல் தளரவைத்து அமர்ந்தான். வெளியே காற்று ஓடும் ஓசை கேட்டது. அது இனிமை ஒன்றை நினைவிலெழுப்பியது. இனிமையே நினைவை கொண்டுவந்தது. அவன் அன்னையுடன் சோலைக்குள் சென்றுகொண்டிருந்தான். தொலைவில் ஓர் அசைவு. மான் ஒன்று சிலிர்த்து செவிகோட்டியது. எங்கோ ஒரு குயிலின் ஓசை. மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சொல்லச்சொல்ல அதன் மன்றாட்டின் அழுத்தம் ஏறிவந்தது.
தலை நெஞ்சில் படிய அவன் துயின்றுவிட்டிருந்தான். படிகளில் குறடணிந்த இருவர் இறங்கிவரும் ஓசை கேட்டது. “இளவரசே!” என்று சுகிர்தர் அழைத்தார். அவன் திடுக்கிட்டு விழித்து ஓரம்வழிந்த வாயைத் துடைத்தபின் நிமிர்ந்து நோக்கி “யார்?” என்றான். “தங்கள் தந்தை” என்றார் சுகிர்தர். “யார்? என்ன?” என்றான். “தந்தை… அரசர்… எழுந்து நில்லுங்கள்!” அவனால் எழமுடியவில்லை. கால்கள் செயலற்று உறைந்திருந்தன. வெளியே குயில் மன்றாடிக்கொண்டிருந்தது. அவன் “ஆம், ஆம்” என எழ முயன்றாலும் உடல் விசை கொள்ளவில்லை.
யயாதி அப்போதுதான் அவனை பார்த்தார். விழிகளில் திகைப்பு தோன்ற இரு கைகளும் பொருத்தமில்லாமல் எழுந்து எதையோ விலக்குவனபோல முன்னால் வந்தன. பின் உடையில் உரசி ஒலியுடன் தளர்ந்து இரு பக்கமும் விழுந்தன. சுகிர்தர் “களைத்திருக்கிறார்” என்றபின் “எழுக, இளவரசே!” என்றார். “வேண்டாம், அவர் இப்போது முதியவர்” என்ற யயாதி அருகே வந்து நிலம்படிய விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள், மூதாதையே!” என்றார். அவன் திகைத்தபின் “யார்? என்ன?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “வாழ்த்துங்கள்… வாழ்த்துங்கள்” என்றார் சுகிர்தர். “யார்?” என்றான் புரு. “வாழ்த்துங்கள்… வாழ்த்து வாழ்த்து” என சுகிர்தர் கூவினார்.
அந்தக் குரலின் விசையால் உளமழிந்து புரு தலை ஆட தாடை தொங்கி வாய் திறந்திருக்க உறைந்தான். சுகிர்தர் குனிந்து கைகளை கீழே கிடந்த யயாதியின் தலைமேல் வைத்து “வாழ்த்துக!” என்றார். புரு “நெடுவாழ்வும் வாழ்புகழும் அமைக!” என வாழ்த்தினான். யயாதி எழுந்து கைகூப்பி “என் பிழைகளனைத்தையும் பொறுத்தருள்க… பிறிதெவரிடமும் நான் இதை கேட்கவியலாது” என்றார். அவர் முகத்தை நோக்கியபின் எவரென்று புரிந்துகொள்ளாமல் புரு அந்தப் பொதுவான புன்னகையை அளித்தான். யயாதி விழிநீர் மல்கி பின் கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி பார்க்கவனிடம் “பைதல்களுக்குரிய சிரிப்பு” என்றார். பார்க்கவனும் விழியீரத்துடன் புன்னகைத்தார்.
மீண்டும் புருவை நோக்கியபின் “நான் கொள்ளவிருக்கும் உடல்… இவ்வுடலுக்குள் நிறைக்கவேண்டிய நிறைவை நான் எய்தியிருக்கிறேன். துறவையும் மெய்மையையும் பணிவையும் இதில் அமர்ந்து அடைவேன்” என்றார். “ஏதேனும் முறைமையோ சடங்கோ செய்யவேண்டும் என்றால்…” என பார்க்கவன் சொல்ல “ஏதுமில்லை. இதோ, இங்கிருந்தே என் முதுமையை பெற்றபின் படியிறங்கவேண்டியதுதான்” என்றார் யயாதி. அமைச்சரிடம் அவர் “நீர்” என்று சொல்ல அமைச்சர் திரும்பி ஏவலனிடம் கைகாட்டினார். அவன் வால்குடுவையில் நீருடன் வந்தான்.
யயாதி அதை வாங்கிக்கொண்டு புருவிடம் “எழுந்து தங்கள் கைகளை காட்டுக, தந்தையே!” என்றார். அதற்குள் அங்கிருந்து உளம்விலகிவிட்டிருந்த புரு “என் உடல் வலிக்கிறது. நெடுநேரம் அமர்ந்திருக்க என்னால் இயலாது” என்றான். “கைகளை நீட்டுங்கள்” என்றார் யயாதி. “என்ன?” என்று புரு சுகிர்தரிடம் கேட்டான். அமைச்சர் குனிந்து அவன் கைகளைப்பற்றி ஏந்துவதுபோல காட்டினார். யயாதி நுண்சொல்லை உதடசைவால் சொன்னபடி நீரூற்றினார். மீண்டும் குனிந்து புருவின் கால்களை வணங்கினார். நிலத்திலிருந்து எழும்போதே அவர் உடல் தளரத் தொடங்கியிருந்தது. பார்க்கவன் அவரை பிடித்து மெல்ல தூக்கியபோது முனகியபடி “மெல்ல…” என்றார். எலும்புகள் இணைப்பு தளர்ந்து உடல் நடுக்கம் கொண்டிருந்தது. கழுத்தில் தசைகள் நீர்நனைந்த சேற்றுச் சிற்பமென ஊறி நெகிழ்ந்து தொய்ந்து வளையத் தொடங்கின.
பார்க்கவன் அவரை பீடத்தில் அமரச்செய்தார். காலநாழியிலிருந்து மணல் ஒழிவதுபோல புருவின் உடலில் இருந்து முதுமை வழிந்து யயாதியை நிறைத்துக்கொண்டிருந்தது. யயாதி மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி சிறுதுயிலில் ஆழ்ந்தார். நரைதாடியும் முடியும் நீண்டன. தசைகள் வற்றிச் சுருங்கி நரம்புகள் புழுக்களைப்போல எழுந்து உடல் முதுமைகொண்டபடியே இருந்தது. அனலில் விழுந்த இலையெனச் சுருங்கி கருகி அவர் உருமாறுவதையே அனைவரும் நோக்கிக்கொண்டிருந்தனர்.
பீடத்தில் இருந்து எழுந்த புரு “தந்தையல்லவா அவர்?” என்று கூவியபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவன் இளைஞனாக மாறிவிட்டிருந்தான். “ஆம், தங்களிடமிருந்து முதுமையை பெற்றுக்கொண்டுவிட்டிருக்கிறார்” என்றார். “நான் அதை அவருக்கு அளிக்கலாகாதென்று எண்ணியிருந்தேன்… அது நான் எந்தைக்கு அளிக்கும் கொடை” என்றான் புரு. “இளவரசே, உங்களுக்காக நாடும் குடியும் காத்திருக்கின்றன. தந்தை உங்கள் பொறுப்பையும் நெறியையும் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் பார்க்கவன்.
புரு யயாதியை நோக்கிக்கொண்டிருந்தபின் திரும்பி சுகிர்தரிடம் “நான் இப்படித்தான் இருந்தேனா?” என்றான். “ஆம், சற்றுமுன்புவரை” என்றார் சுகிர்தர். “காலம் அவரை இத்தோற்றம் நோக்கி தள்ளிக்கொண்டு செல்கிறது, இளவரசே.” அவன் கைகூப்பி “என் மூதாதையரின் வடிவம்” என்றான். நிலம்படிய விழுந்து அவரை வணங்க அவர் விழித்து “யார்?” என்றார். “தங்கள் மைந்தர், வாழ்த்துக அரசே!” என்றார் சுகிர்தர். யயாதி “யார்? என்ன?” என்றார். “வாழ்த்துக… வாழ்த்துக!” என்று கூவினார் சுகிர்தர். பார்க்கவன் அவர் கையை எடுத்து புருவின் தலையில் வைக்க அவர் “நெடுவாழ்வும் அழியாப்புகழும் குன்றாச்செல்வமும் பெருகும் குடியும் எஞ்சும் உவகையும் அமைக!” என்றார்.
புரு எழுந்து கைகூப்பியபடி நின்றான். “அரசே, நாம் கிளம்பவேண்டும்” என்றான் பார்க்கவன். “ஆம், இங்கிருந்தே கிளம்பவேண்டும் என்று சொன்னேன் அல்லவா?” என்றார் யயாதி. புரு “தேர் சித்தமாகியிருக்கிறதா?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “முற்றத்தில் நின்றுள்ளது, அவர்கள் வந்த தேர்தான் அது” என்றார் சுகிர்தர். “திரும்பி நோக்காமல், ஒரு சொல்லும் எஞ்சாமல்” என்ற யயாதி புன்னகைத்து “நன்று, என்னால் அவ்வண்ணம் இறங்கிச்செல்ல இயலும் என்பது அளிக்கும் உவகை பெரிது” என்றார்.
பார்க்கவன் அவர் கைகளை பற்றிக்கொள்ள முனகியபடி மெல்ல எழுந்து நடந்தார். அமைச்சரும் பிறரும் தொழுதபடி உடன் செல்ல முற்றத்திற்குச் சென்று பார்க்கவனின் தோளைப்பற்றியபடி படிகளில் மெல்ல ஏறி மூச்சிரைத்து ஒருகணம் நின்று நெஞ்சத்துடிப்பை ஆற்றிய பின்னர் மெல்ல ஏறி பீடத்தில் அமர்ந்தார். திரைமூடியதும் அவர்முகம் மறைந்தது. பாகன் சவுக்கால் தொட புரவிகள் விழித்தெழுந்து கால்தூக்கின.
புருவின் முடிசூட்டுவிழவை உடனே நிகழ்த்திவிடவேண்டும் என்று சுகிர்தர் சொன்னார். “ஏழாண்டுகாலம் இங்கிருந்து முடியையும் கோலையும் புரந்திருக்கிறேன், இளவரசே. என் நாவால் எவருக்கும் எத்தண்டனையும் அளிக்கவில்லை. ஆயினும் இக்கோலின்பொருட்டு நிகழ்ந்தவை அனைத்துக்கும் சொல்முடிவே அடிப்படை என்பதனால் இதன் பழியிலிருந்து என்னால் தப்பமுடியாது. அந்தணர் ஆட்சியும் போரும் வணிகமும் வேளாண்மையும் செய்யலாகாது. ஏனென்றால் கொலையும் கரவும் பிறர்விழிநீரும் இன்றி அவற்றை ஆற்ற இயலாது. நான் எனக்கும் என் மூதாதையருக்கும் பழியை ஈட்டியிருக்கிறேன். எஞ்சிய நாட்கள் காட்டில் தவமியற்றி அதை நிகர்செய்தபின்னரே நான் விண்ணேகவேண்டும்.”
“நான் என் அன்னையை பார்க்கவேண்டும்” என்றான் புரு. “அவர்கள் எனக்கிடும் ஆணை என்ன என்று அறிந்தபின்னர் மட்டுமே நான் முடிசூட முடியும்.” சுகிர்தர் “அவர்கள் நீங்கள் அகன்ற அன்றே அசோகநகரியிலிருந்து வெளியேறி கோட்டைக்கு வெளியே காட்டுக்குள் குடில் ஒன்றைக் கட்டி அங்கே தனித்து குடியிருக்கிறார்கள். எவரும் சென்று நோக்க ஒப்புதலில்லை என்றார்கள்” என்றார். “நான் சென்று பார்க்கிறேன்” என்று புரு கிளம்பிச் சென்றான்.
அசோகவனியின் கோட்டைமுகப்புக்குச் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து வளைந்து காட்டுக்குள் நுழைந்த தொடர்கால் பாதையின் எல்லையில் இருந்தது அச்சிறியகுடில். புரு தன்னுடன் வந்தவர்களை காட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு கை கூப்பியபடி தனியாக சென்றான். குடிலை அணுகி அதன் வாயிலில் கைகள் கூப்பியபடியே இருக்க நின்றிருந்தான். குரலெழுப்பவில்லை. இரண்டுநாழிகைக்குப் பின்னர் வெளியே வந்த கோழி ஒன்று அவனைக் கண்டு குரலெழுப்ப உள்ளிருந்து எட்டிப்பார்த்த முதியவளை முதலில் அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அறிந்ததும் உளம் அதிர “அன்னையே…” என்றான்.
சர்மிஷ்டையின் முடி முற்றாக நரைத்திருந்தது. கடும் நோன்பால் உடல் வற்றி உலர்ந்து மட்கும் மரம்போலிருந்தது. இருகுழிகளுக்குள் விழிகள். கன்னங்களின் ஆழ்ந்த குழிகள் பற்களுடன் வாயை முன்னுந்தச் செய்திருந்தன. அவள் உடனே அவனை அடையாளம் கண்டுகொண்டதை விழிகள் காட்டின. அவனை நிலைத்த விழிகளால் நோக்கி சிலகணங்கள் நின்றபின் “உள்ளே வா” என்றாள். அவன் கைகள் கூப்பியிருக்க குடிலுக்குள் சென்றான்.
ஒருவர் மட்டும் படுக்குமளவுக்கு இடம்கொண்ட அக்குடில் ஒரு கூடை போலிருந்தது. ஈச்சையோலைக் கூரையினூடாக வந்த ஒளிச்சரடுகள் சருகுமெத்தையிடப்பட்ட மண்தரையில் ஊன்றி வெள்ளிவட்டங்களாக சுடர்ந்தன. அவள் அமர்ந்ததும் அவன் அவள் கால்களில் விழுந்து வணங்கினான். “புகழ் சூடுக! வெற்றியும் குடிப்பெருக்கும் அமைக!” என அவள் வாழ்த்தினாள். “நான் உங்கள் சொல்பெற்றுச் செல்ல வந்துள்ளேன், அன்னையே” என்றான். “நான் எவருக்கும் அன்னை அல்ல” என்றாள் சர்மிஷ்டை. ‘நெடுந்தொலைவு வந்துவிட்டேன். எஞ்சியிருப்பது ஒன்றே. அதை உன்னிடம் கோருகிறேன், குருநகரியின் அரசனாக.”
“ஆணையிடுங்கள்” என்றான் புரு. “என்னை சுக்ரரின் மகள் வாழும் தவச்சாலைக்கு அழைத்துச்செல்க!” என்றாள். அவன் உள்ளம் நடுங்கியது. அவன் ஒன்றும் சொல்லாததை உணர்ந்து அவள் “ம்?” என்றாள். “ஆணை! நாளையே அனைத்தையும் ஒருக்குகிறேன்” என்றான். “நீயன்றி எவரும் உடன்வரவேண்டியதில்லை. எந்த முறைமையும் நிகழலாகாது” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றான் புரு. மூத்த அன்னையிடம் ஒப்புதல் கோரவேண்டாமா என்று கேட்க நாவெடுத்து அடக்கினான். ஒப்புதல்கோரி செல்வது ஒருவேளை நிகழாமலேயே நின்றுவிடும் என்று தோன்றியது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
April 29, 2017
குமரியின் சொல்நிலம்
23-4-2017 அன்று வம்சி புத்தகங்களின் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப் பற்றிப் பேசினேன். அதில் ஒரு பகுதியாக நாங்கள் அருணாச்சலப்பிரதேசம் சென்றதைப் பற்றிச் சொன்னேன். திட்டமிட்ட ஈரோடு கிருஷ்ணன் அருணாச்சலப்பிரதேசத்துக்கு ஒதுக்கியது வெறும் இரண்டுநாட்கள். அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது அது தமிழகத்தைவிடப் பெரிய நிலம். சென்று கொண்டே இருந்தோம், திரும்பி வந்துகொண்டே இருந்தோம்.
அருணாச்சலப்பிரதேசம் நமக்கு முற்றிலும் தெரியாத நிலம். இந்தியாவில் அதிகமாக அறியப்பட்ட நிலங்கள் வங்கம், கேரளம், கர்நாடகம். அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரம். ஏனென்றால் அவை இலக்கியமாக பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டின் நீட்சியே போல கிடக்கும் ஆந்திரம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதன் விரிவு கூட நம் மனதில் இல்லை. ஏனென்றால் அந்நிலம் இலக்கியமாக மாறவில்லை.
தமிழ்நாட்டில் அதிகம் எழுதப்பட்ட நிலம் குமரிமாவட்டம். கணிசமானவர்களுக்கு இங்குள்ள பண்பாட்டுவிரிவு ஊடாட்டம் எல்லாம் தெரியும்- நான் தெரிந்துகொள்ள விழைபவர்களைச் சொல்கிறேன். அடுத்ததாக நெல்லை, தஞ்சை. முற்றிலும் தெரியாத இடங்களென்றால் வாணியம்பாடி கடலூர் போன்ற இடங்கள். அவை எழுதப்படவில்லை. எழுத்திலேயே நிலம் கருத்தாக மாறி நிலைகொள்கிறது.
குமரிமாவட்டத்தை எழுதிய நவீனகாலகட்ட எழுத்தாளர்களின் ஒரு பட்டியலையும் அங்கே அளித்தேன். அதை பதிவுசெய்து வைக்கலாமெனத் தோன்றியது.
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை
கே.என்.சிவராஜபிள்ளை
எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஜீவானந்தம்
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
கிருஷ்ணன் நம்பி
சுந்தர ராமசாமி
கிருத்திகா
எம்.எஸ்
மா.அரங்கநாதன்
பொன்னீலன்
அ.கா.பெருமாள்
நீல பத்மநாபன்
செந்தீ நடராஜன்
ஷண்முக சுப்பையா
தோப்பில் முகமதுமீரான்
ஆ.மாதவன்
ராஜமார்த்தாண்டன்
தமிழவன்
நாஞ்சில்நாடன்
வேதசகாயகுமார்
எம்.டி.முத்துக்குமாரசாமி
குமார செல்வா
ஹெச்.ஜி.ரசூல்
வறீதையா கன்ஸ்டண்டீன்
கண்ணன் சுந்தரம்
குளச்சல் மு யூசுப்
குறும்பனை பெர்லின்
லட்சுமி மணிவண்ணன்
மீரான் மைதீன்
போகன்
என் .டி.ராஜ்குமார்
ஆர்.அபிலாஷ்
மலர்வதி
எச்.பீர்முகம்மது
கிறிஸ்டோபர் ஆண்டனி
வித்வான் லட்சுமணபிள்ளை
ஆறுமுகப்பெருமாள் நாடார்
ரோஸ் ஆன்றோ
கடிகை அருள்
ஏறத்தாழ நாற்பது எழுத்தாளர்கள் என்பது குறைவான எண்ணிக்கை அல்ல. ஒரேநாளில் ஓடியே கடக்கக்கூடிய அளவுக்குச் சிறிய மாவட்டம் இது. இங்கே அனேகமாக ஒவ்வொருநாளும் எங்கேனும் ஏதேனும் ஒர் இலக்கியவிழா நடந்துகொண்டே இருக்கும். மரபிலக்கியம் வணிக இலக்கியம் மத இலக்கியம் நவீன இலக்கியம் என. பலதளங்களிலாக எழுதும் குறைந்தது நூறுபேரை இங்கே பட்டியலிட முடியும். அவர்களில் இருந்தே இந்த நாற்பதுபேர் எழுந்து வந்திருக்கிறார்கள்.
இந்த எளிய பட்டியலே ஏன் குமரியில் நவீனத்தமிழிலக்கியம் வளர்கிறது என்பதற்கான விளக்கம். இதில் தாய்மொழியை மலையாளமாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ சமானமாகவே இருக்கிறார்கள். இந்தப் பன்மைத்தன்மையே இலக்கியத்தின் அடிப்படைவிசை.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்
கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை.
ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அறம் – வாசிப்பின் படிகளில்…
எழுத்தாளர் அவர்களுக்கு வணக்கம்.
எனக்கு 35 வயது ஆகிறது, தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் அது தொடர்ச்சியாக இருப்பதில்லை. நிறைய படித்தலும் ஆழ படித்தலும் குறைவே, மிக பெரும்பாலானவர்கள் போல சுயநல வாழ்வே வாழ்க்கை என்று இருக்கும் தமிழன்.அறம் படித்தபின் இனி நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்தது.
அறம் சிறுகதை தொகுப்பு என்னுள் மிக பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படியொரு படைப்பை தந்தமைக்கு என் நன்றிகள். அனைத்து கதைகளும் அருமை, வாசிப்பை இத்தனை சுவாரசியமானதாக புத்தகம் முழுதும் கொண்டு செல்ல முடியும் என்பதே பெரிய வியப்பு, அதிலும் ஒவ்வொன்றும் மனம் நெகிழும்படி இருந்ததை என்சொல்லி பாராட்ட தெரியவில்லை.
நூறு நாற்காலிகள் தர்மபாலனின் மனோநிலையை புரிந்துகொண்டாலும் அப்படிபட்ட மனிதர்கள் இந்த நவீன டிஜிட்டல் உலகில் அதே போன்றதொரு நிலையில் இருப்பதை செறித்துகொள்ள முடியவில்லை. கதையில் பல இடங்களில் சொல்லொன்னாத் துயரமும் ஆற்றாமையும் கோபமும் மாறி மாறி வந்தன. மனிதன் நோக மனிதன் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ என்று சொன்னவன் விரைவிலேயே இறந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.
கோட்டி கதை முழு கற்பனை என்றே எண்ணி இருந்தேன், இப்படியும் நம் முன்னோர்கள் வாழ்ந்தவர்கள் என்பதே வியப்பாக இருக்கிறது.
மார்ஷல் நேசமணி இன்னொரு வியப்பு.
அனைத்து கதைகளுமே மிக சிறப்பு, கதை மாந்தர்கள் போலவே நீங்கள் பயன்படுத்திய உள்ளூர் வழக்கு அவற்றை மேலும் அழகாக்கின.
அறத்தை இந்த வயதில் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியும் உண்டு, அறம் ஒரு நல்ல பொக்கிஷம் எனக்கு, உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி
மதியழகன்.மீ
அன்புள்ள மதியழகன்,
மீண்டும் வாசிப்பதில் மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் நாம் உறவுகளை, இன்னும் குறிப்பாக ஆண்பெண் உறவை- புரிந்துகொள்ளவே பெரும்பாலும் வாசிக்கிறோம். அரசியல்கொள்கைகளைச் சார்ந்து வாசிக்கிறோம். அவற்றைக் கடந்து சாராம்சமானது என்ன, எஞ்சுவது என்ன என்னும் வினாவுக்கான வாசிப்பு இரண்டாவது தொடக்கம். அறம் அதை தொடங்கிவைக்கட்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அறம் -கடிதங்கள்
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
அறம் -கடிதங்கள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
மண்ணாப்பேடி
வாசிப்பு – இருகடிதங்கள்
தாயார்பாதம், அறம்- அஸ்வத்
நான்கு வேடங்கள்
மின் தமிழ் பேட்டி 2
மனப்பாடம்
முத்தம்
தாயார் பாதமும் அறமும்
அறம் தீண்டும் கரங்கள்
துணை இணையதளங்கள்
அறத்தான்
அறம் – சிக்கந்தர்
கற்பு என்பது…
அறம் கடிதங்கள்
அறம் ஒரு கடிதம்
அறமும் வாசகர்களும்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
89. வேர்விளையாடல்
முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா?” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான்.
பீமன் அவற்றை வாங்கி உண்டபின் “அஸ்ருபிந்துமதியின் கதையை நான் கேட்டுள்ளேன்.” என்றான். “விழிநீர்மகள். ஒவ்வொருவருக்கும் அவ்வண்ணம் ஒருத்தி உண்டு என்பார்கள் கவிஞர். அவளையே பிற பெண்களிடம் மானுடர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைகிறார்கள். பின்னர் சொல்லிச் சொல்லி தங்களை தேற்றிக்கொண்டு இவளே என்றும் இவ்வளவே என்றும் நிறைவுகொள்கிறார்கள். அது நிறைவல்ல என பின்னர் அறிகிறார்கள். அப்போது வாழ்க்கை சென்றுவிட்டிருக்கும். முன்னோக்கிச் செல்லும் உள்ளமும் இல்லாமலாகிவிட்டிருக்கும். பின்னால்நோக்கவும் அடைந்தவற்றையும் இழந்தவற்றையும் எண்ணி எண்ணி ஏங்கவுமே பொழுதிருக்கும்” என்றான் முண்டன்.
“யயாதி என்னவானார்?” என்றான் பீமன். “கதைகளின்படி அவர் ஆயிரமாண்டுகாலம் காட்டில் அஸ்ருபிந்துமதியுடன் காமத்திலாடினார். காமநிறைவடைந்தபின்னர் குருநகரிக்கு மீண்டு தன் இளையமைந்தன் புருவை அழைத்து அவன் இளமையை திருப்பியளித்து அவனை அரசனாக ஆக்கினார். முதுமைசூடியபின் மீண்டும் காடேகினார். பிருகுதுங்கம் என்னும் மலையை அடைந்து அங்கே ஏழுகுகைகளில் வாழ்ந்த சப்தசிருங்கர்கள் என்னும் முனிவர்களுடன் வாழ்ந்து மெய்யுணர்ந்து உடல் உதிர்த்து விண்புகுந்தார்.”
“பிருகுதுங்கத்தில் தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கு மாமன்னர் யயாதி உரைத்த நெறிகளும் மெய்யறிவுகளும் யயாதிசூக்தங்கள் என்னும்பேரில் மூன்று தொகுதிகளாக முனிவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றும் அவை அரசுசூழ்தலுக்கான நூல்களாக பயிலப்படுகின்றன” என்றான் முண்டன். பீமன் நிறைவில்லாதவனாக கைகளை நக்கியபின் “நான் விழைவது பிறிதொன்று” என்றான். “அவர் அறிந்த மெய்யறிதல்களால் என்ன பயன்? அதைப்போன்ற பலநூறு மெய்யறிதல்கள் சேர்ந்து பெரும் சொற்குவையாக நம் தலைக்குமேல் உள்ளன. மூத்தவர் அவற்றை நாள்தோறும் பயின்று தன்னை எடைமிக்கவராக ஆக்கிக்கொள்கிறார்.”
“நீங்கள் அறியவிழைவதுதான் என்ன?” என்றான் முண்டன். “அவர் மீண்டும் தன் தேவியரை சந்தித்தாரா?” என்றான் பீமன். “அவர்களுடனான உறவை அவர் எப்படி அறுத்துக்கொண்டார்?” முண்டன் “அதை நான் சொல்லமுடியாது. தொடக்கம் முதலே இக்கதைப்பெருக்கில் வினாக்களே திரண்டெழுகின்றன” என்றான். “ஆம், அன்னையர் அவரை எப்படி ஒரே கணத்தில் அறுத்துக்கொண்டார்கள்? அவர்களில் அவர் எவ்வண்ணமேனும் எஞ்சினாரா?” என்றான் பீமன். “அவ்வாறு முற்றிலும் தன்னிலிருந்து தன் ஆண்மகனை அகற்றிவிட பெண்களால் இயலுமா?”
முண்டன் புன்னகை புரிந்து பேசாமலிருந்தான். பீமன் ஆற்றாமையுடன் கைகளை விரித்து “தனக்கு மட்டுமே என்றும் தனக்கில்லையென்றால் முற்றழியவேண்டும் என்றும் எண்ணுவது எப்படி மெய்யன்பாக இருக்கவியலும்? தம் மைந்தன் என்றால் இவ்வண்ணம் நடந்துகொண்டிருப்பார்களா?” என்றான். முண்டன் “இத்தகைய பலநூறு வினாக்களின் தொகையை சுமையெனக்கொண்டே ஒவ்வொருவரும் வாழ்க்கையை முடிக்கிறார்கள்” என்றான். பீமன் தன்னுள் மூழ்கி நெடுநேரம் அமர்ந்தபின் “தாயின் உறவன்றி உறவென்று வேறேதும் உண்டா இப்புவியில்?” என்றான். முண்டன் சிரித்து “அது ஒன்று எஞ்சியுள்ளது உங்களுக்கு, நன்று” என்றான்.
“என் வினாக்களுடன் நான் இங்கிருந்து எழமுடியாது” என்றான் பீமன். திரும்பி கருவறைக்குள் அமர்ந்திருந்த தேவயானியை நோக்கியபின் “அவளிடம் நான் அனைத்தையும் உசாவியாகவேண்டும்” என்றான். “நீங்கள் சென்றகாலத்திற்குள் செல்லவேண்டுமா?” என்று முண்டன் கேட்டான். “ஆம், அங்கே நான் யார் என்று அறிந்தாகவேண்டும்.” முண்டன் தன் முகத்தருகே பறந்த ஒரு இறகுப்பிசிறை நோக்கியபின் “இதை நோக்குக, இளவரசே” என்றான். “இதன் நிலையழிதலை. இதை அலைக்கழிக்கும் காற்றுகளை விழிகளால் காணமுயல்க!”
பீமன் அதை நோக்கி விழிநாட்டினான். அதன் ஒவ்வொரு பீலியையும் அணுக்கமாக பார்க்கமுடிந்தது. அது மிகச்சிறிய சிட்டுக்குருவி ஒன்றின் கழுத்தில் இருந்த இறகு. பருப்பொருள் வடிவை உதறி ஒளியாக மாறும் முதல்படியிலிருந்தது. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தொட்டு அசைத்தது காற்று. அல்லது ஒவ்வொரு பீலிக்கும் தனிக்காற்றா? காற்றென்பது ஒரு பெரும் படையெழுச்சியா? அவ்வசைவுகளினூடாக உயிர்கொண்டதுபோல சிறகுப்பிசிறு எண்ணியது, குழம்பியது, முடிவெடுத்து திரும்பியது, வேண்டாம் என்றது, ஆம் என்று மீண்டும் நிலைத்தது, அடடா என எழுந்தது, ஆ எனத் திகைத்துத் திரும்பியது, போதும் என விழுந்தது, இதை மட்டும் என மீண்டும் எழுந்தது.
முண்டன் தன் கைகளை அதைச்சுற்றி மெல்ல அசைக்கலானான். அந்தக்காற்றால் இறகு அலைவுற்றது. அவன் கையை விலக்கியபோது முகரவிரும்பும் நாய்க்குட்டி என தேடிச்சென்றது. கைகளை நீட்டியபோது அஞ்சிய பறவை என விலகியது. காற்றலைகளை அவன் காணத் தொடங்கினான். மிகமென்மையான நீல ஒளியாக அவை இருந்தன. குளிர்ந்திருந்தன. அவற்றில் கோடிக்கணக்கான மென்துகள்கள். ஒவ்வொன்றும் ஒளிகொண்டிருந்தது. ஊடே பறந்தன நுண்ணுயிர்கள். மிகச்சிறிய சிறகுத்துளியை அணிந்தவை. அவற்றை அளைந்துகொண்டே இருந்தது சிறகுப்பிசிர்.
“எங்கிருக்கிறீர்கள், இளவரசே?” என மிகத் தொலைவில் எங்கோ இருந்து முண்டன் கேட்டான். “ஓர் அரண்மனையில்… மஞ்சத்தில்” என்றான் பீமன். “என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் முண்டன் கேட்டான். “படுத்திருக்கிறேன், துயில்கிறேன்… நீங்கள் என் கனவில் வந்து இக்கேள்வியை எழுப்புகிறீர்கள்.” முண்டன் மெல்ல நகைத்து “ஆம்” என்றான். “எங்கிருக்கிறீர்கள்?” என்றான் பீமன். “நெடுந்தொலைவில்… எதிர்காலமெனும் பெருக்கின் மறுகரையில்” என்றான் முண்டன். பீமன் “ஆம், என்னால் உணரமுடிகிறது” என்றான். “நீங்கள் கனவுகாண்பது எதை?” என்றான் முண்டன். “என் கனவில் எப்போதும் நான் ஒரு பேருருவன். திரண்டதோள்களும் திமிர்க்கும் தசைகளும் கொண்டவன்.காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.”
“எங்கே?” என்றான் முண்டன். “ஓர் இனிய சோலைக்காடு. அறியா மணம் ஒன்றால் அழைக்கப்படுகிறேன். எண்ணிய மலர் என தன்னை உருமாற்றிக்காட்டும் மாயமணம் அது. உடன் ஒரு குரங்கு வருகிறது.” முண்டன் சிரித்து “குரங்கா?” என்றான். “ஆம், தாவியும் சுழன்றும் எழுந்தும் அது கையூன்றி முன் செல்கிறது. நிழல் என. வழிகாட்டும் நிழல். அந்நிழலை நான் தொடர்கிறேன். அதன் அசைவுகளை நிகழ்த்துகிறேன். அப்படியென்றால் நான்தான் நிழலா? நிழலுக்கு வண்ணமும் வடிவமும் எண்ணமும் இருப்பும் உண்டா?”
“அங்கு ஒரு சிற்றாலயத்தை காண்கிறேன். அதற்குள் ஓர் அன்னைத்தெய்வம் ஐம்புரிக்குழலை அவிழ்த்திட்டு வெறிமின்னும் கண்களும் அருள்நிறை இளநகை சூடிய இதழ்களுமாக நின்றிருக்கிறது. அதன் முன் நின்றிருக்கிறேன்” என்றான் பீமன். “அவள் யார்?” என்றான் முண்டன். “அறியேன். அவள் என் அன்னையை நினைவுறுத்துகிறாள்.” முண்டன் “உங்கள் பெயர் என்ன?” என்றான். “என்பெயர் புரு. சந்திரகுலத்தின் பேரரசர் நகுஷரின் மைந்தர் யயாதியின் கடைமைந்தன். அவர் கொடியையும் குடியையும் கொடையெனப்பெற்று அரசாள்கிறேன்.”
விழித்தபோது அக்கனவை சேற்றில்படிந்து மட்கிய இலையின் வடிவப்பதிவு போல நினைவுகளில்தான் புரு அறிந்தான். அப்பதிவிலிருந்து கனவை மீட்டெடுக்க விழைவதுபோல இருண்ட அறையின் கூரைச்சரிவில் நெய்விளக்கின் தாழ்திரியின் சிற்றொளியில் அலையடித்த நிழல்களை நோக்கியபடி படுத்திருந்தான். பின்னர் எழுந்து தன் கைகளை நோக்கியபடி “சிவம்யாம்!” என முழுமைச்சொல் உரைத்தான். எழுந்து மிதியடியை அணிந்துகொண்டபோது கதவைத்திறந்த ஏவலன் வணங்கினான்.
நீராட்டறைக்கு அவனுடன் செல்கையில் இடைநாழியில் காத்து நின்றிருந்த அமைச்சன் சுபகன் வணங்கி உடன் சேர்ந்துகொண்டான். தந்தை பார்க்கவரின் நீத்தார்கடனுக்காக அவன் கங்கைக்கரைக்குச் சென்று பதினைந்துநாட்களுக்குப்பின்னரே மீண்டிருந்தான். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். அவர்களின் காலடிகள் உரையாடல்போல் ஒலித்தன. இடைநாழியின் வளைவுகளில் நிழல்கள் இணைந்து ஒன்றாயின.
நீராட்டறைக்குள் நுழைந்ததும் ஏவலர் வந்து புருவை வணங்கி அவன் மேலாடையை கழற்றினர். இனிய தைலமணத்துடன் ஆவியெழ கலத்தில் நிறைந்திருந்த நீரின் அருகே வெண்கலச் சிற்றிருக்கையில் அவன் அமர அவர்கள் அவன் இடையாடையைக் கழற்றிவிட்டு எண்ணை பூசத்தொடங்கினர். நறுமணம்கலந்து காய்ச்சப்பட்ட எள்ளெண்ணையின் மணத்தை நீராவி அள்ளி அறைமுழுக்க கொண்டுசென்று சுவர்களில் துளியாக்கி வழியச்செய்தது.
“மீண்டும் அதே கனவு” என்று புரு சொன்னான். அவன் குரலை எதிர்பாராத சுபகன் சுவரில் வழிந்த நீர்த்துளியிலிருந்து விழிவிலக்கி “எண்ணினேன்” என்றார். “யார் அவன்? எதற்காக அவ்வுருவை கனவுகாண்கிறேன்?” என்றான். “நீங்கள் திண்தோள்கொண்டவர் அல்ல. உங்கள் விழைவுதான் அவ்வாறு கனவிலெழுகிறது” என்றான் சுபகன். “நாம் அறியாத மூதாதையரைப்போலவே நாம் அறியவும் இயலாத வழித்தோன்றல்களும் நம் கனவிலுறைகிறார்கள் என்று நிமித்திகர் சொன்னார். அது மெய்யென்றே எனக்கும் தோன்றுகிறது” என்றான் புரு. “ஒவ்வொரு மரத்திலும் விதைகள் உறைகின்றன. விதைகளுக்குள் விதைகள் வாழ்கின்றன என்று ஒரு சொல்லாட்சி உண்டு.”
சுபகன் “அவ்வண்ணம் எண்ணிக்கொள்வதனால் நிறைவு கொள்கிறீர்கள் என்றால் அதுவே ஆகுக!” என்றான். “எவ்வாறு எண்ணினாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. அவன் கொடிவழியினன் என்றால் அவனை காணப்போகிறீர்களா என்ன?” புரு “அவன் உருவை ஓவியர்களைக்கொண்டு வரைந்து வைக்கவேண்டுமென எண்ணினேன். எங்காவது அது இருக்கவேண்டும். வண்ணங்களில் அல்ல, கல்லில். ஆயிரமாண்டுகளானாலும் அங்கே அது காத்திருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அவன் வந்து அதன்முன் நிற்பான்.”
சுபகன் நகைத்து “அதை நீங்கள் என அவன் பிழையாக எண்ணிக்கொள்ளக்கூடும். அவன் கனவில் வந்த உருவம்” என்றான். “இந்த நுண்ணிய வலைப்பின்னலை நெய்துகொண்டிருக்கும் கைகளிடம் எங்களுக்கும் இதை ஆடத்தெரியும் என்று காட்டவேண்டாமா?” என்றான் புரு. “அவனை நான் அத்தனை நீர்ப்பரப்பிலும் முகமெனக் காண்பேன். மஞ்சள்நிறமும் பெரியதாடையும் கொண்ட முகம். விழிகள் சிறியவை, ஆனால் அழியாநகைப்பு சூடியவை. அவன் பேருடலுக்குள் இருக்கும் அறியாச்சிறுவன் ஒருவன் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவான்.”
சுபகன் “அரசே, நீங்கள் இளமையை முற்றிழந்தவர். அக்கனவு அதனால்தான் என நினைக்கிறேன்” என்றான். “நீயே சொன்னாய், இப்படி எண்ணிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை என. அப்படியென்றால் ஏன் குறைத்து அறியவேண்டும், பெருக்கியறிவது உவகையையாவது அளிக்கிறதே?” என்றான் புரு. “அவ்வாறெனினும் ஆகுக!” என்று சுபகன் சிரித்தான். “சூதர்களைக்கொண்டு அதை பாடச்செய்வோம். நுரையெனப் பெருக்குவார்கள். பின் கவிஞர்களைக்கொண்டு எழுதச்செய்வோம். நுரையை பளிங்குப்பாறையாக்கும் சொற்றிறன் அவர்களிடமுண்டு” என்று புரு நகைத்தான்.
நீராட்டுக்குப்பின் அவர்கள் இயல்படைந்து பேசியபடி நடந்தனர். “சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம், அரசே. இளவரசர்களும் அரசியரும் முன்னரே ஒருங்கிவிட்டனர். தேர்களும் வண்டிகளும் காவலர்படைகளும் காத்திருக்கின்றன” என்றான் சுபகன். புரு “ஆம், கிளம்பவேண்டியதுதான். ஒவ்வொருநாளாக இந்நாளை நோக்கி எண்ணி எதிர்பார்த்து அணுகினேன். கிளம்பும் தருணத்தில் ஒரு தயக்கம் இக்கணங்களை நீட்டித்து அதை ஒத்திப்போடச்சொல்கிறது. இப்போது நானே நம்பும் ஒரு செயல்மாற்று அளிக்கப்படுமென்றால் தவிர்த்துவிடுவேன்” என்றான்.
சுபகன் புன்னகைத்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி வெளியேறினான். அவனிடம் சொன்னவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டு அணிச்சேவகரிடம் தன் உடலை அளித்தான். அவர்கள் நறுஞ்சுண்ணம் பூசி, அரச உடையும் அணிகளும் பூட்டி அதை ஒருக்குவதை ஆடியில் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் பிறிதொன்றாகி எழுந்துகொண்டிருந்தது, சிறகுபூண்டு கூடுதிறந்தெழும் பட்டாம்பூச்சி என. ஏவலர் இருவர் அரசமுத்திரை கொண்ட பட்டுத்தலைப்பாகையை அவனுக்கு சூட்டியபோது அவன் மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தான். ஒவ்வொரு முறை முடிசூடும்போதும் எழும் எண்ணம்தான். அன்று அடிபட்டுக் கன்றிய தோல்மேல் என அத்தொடுகை மேலும் அழுத்தம் கொண்டிருந்தது.
அவன் முடிசூட்டிக்கொண்டபோது குருநகரியில் அவன் உடன்பிறந்தார் எவரும் இருக்கவில்லை. யயாதி அவனை கொடிவழியினன் என அறிவித்து முதுமையை அளித்துவிட்டு கானேகிய மூன்றுநாட்களில் அவன் உடன்பிறந்தார் நால்வரும் நகர் நீங்கினர். யது நகர்நீங்கப்போவதாக தன் அணுக்கரைக்கொண்டு நகரில் முரசறைவித்தான். தெருமுனைகளில் அவ்வறிவிப்பு முழங்கியபோது மக்கள் திகைத்து நின்றுகேட்டனர். உணர்வெழுச்சியுடன் சினத்துடன் வஞ்சத்துடன் சொல்லாடிக்கொண்டனர். “குருதிவழி என்பது தெய்வங்களால் அருளப்படுவது. அதைமாற்ற மானுடருக்கு ஆணையில்லை” என்றார் முதிய அந்தணர்.
“இம்முடிவை தெய்வங்கள் விரும்பியிருந்தால் முதல் நால்வரை பலிகொள்ள தெய்வங்களால் இயலாதா என்ன?” என்றார் பூசகர் ஒருவர். “மூதாதையர் மூச்சுவெளியில் நின்று பதைக்கிறார்கள். அரசன் தன்னலம் கருதி எடுத்த முடிவு இது” என்றார் அங்காடிமுனையில் கூடியிருந்த கூட்டத்தில் நின்றிருந்த பெருவணிகர். “இதோ அசுரக்குருதி நம் மேல் கோல் ஏந்தி அமரவிருக்கிறது… தோழரே, இவையனைத்தும் இதன்பொருட்டே நிகழ்த்தப்பட்டன. இது சுக்ரரின் சூழ்ச்சி. விருஷபர்வனின் அரசாடல்” என்றார் சூதர் ஒருவர். ஒவ்வொருநாளுமென ஒற்றர்கள் ஓலையனுப்பிக்கொண்டிருந்தனர். மீண்டுவந்து ஒருமுறை அவன் அத்தனை ஓலைகளையும் படித்தான். தான் அமர்ந்திருப்பது எதன்மேல் என அறிந்துகொண்டான்.
குலமூத்தார் பன்னிருவர் திரண்டு அரண்மனைக்கு வந்து அமைச்சர்களுடன் சொல்லாடினர். பேரமைச்சர் சுகிர்தர் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. அமைச்சன் என என் கடமையை செய்யவேண்டும்” என்றார். “நீர் அமைச்சர் மட்டுமல்ல, அந்தணர். அறமுரைக்கக் கடமைகொண்டவர்” என்றார் குலத்தலைவரான குர்மிதர். “அந்தணர் உரைக்கும் அறம் முன்னோரால் சொல்லப்பட்டதாகவே இருக்கவேண்டும். தன் விழைவை அறமாக்க அந்தணருக்கு உரிமை இல்லை” என்றார் சுகிர்தர். “நூல்நெறிகளின்படி தன் குருதிவழி எது என முடிவெடுக்கவேண்டியவர் அரசர் மட்டுமே. பிற எவரும் அல்ல.”
“அவ்வண்ணமென்றால் மூத்தவர் நாடாளவேண்டுமென்னும் நெறி எதற்கு? நூல்கள் ஏன் அமைத்தன இதை?” என்றார் குலமூத்தாரான பிரகிருதர். “மூத்தாரே, தந்தையே தன் மைந்தன் எவன் என முடிவெடுக்கமுடியும்…” என்றார் சுகிர்தர். “நூல்கள் முடிவெடுக்கும் உரிமையை அரசனுக்கு அளித்தது இதனால்தான். தன் மைந்தரை அரசர் துறந்துவிட்டார். அதன்பின் அவர்கள் எப்படி மைந்தர் என சொல்லி முடிகோர முடியும்?” குலத்தலைவர்கள் சினந்து “இது பெரும்பழி… பாரதவர்ஷத்தின் பேரரசியை அவர் துறந்திருக்கிறார்… நாங்கள் ஏற்கமுடியாது. அசுரக்குருதியை ஒருபோதும் எங்கள் குடிகள் தலைமையெனக் கொள்ளாது” என்றனர்.
அவர்கள் திரண்டுசென்று அரண்மனைக்கு வெளியே சோலையில் ஒரு ஸாமி மரத்தடியில் தங்கியிருந்த யதுவை கண்டனர். “அரசே, பேரரசியின் குருதியே எங்கள் நாட்டை ஆளவேண்டும். அசுரக்குருதியிலிருந்து நீங்களே எங்களுக்குக் காப்பு” என்றனர். “உங்களை எங்கள் இளவரசர் எனச்சொல்லி பதினாறுமுறை மூதாத்துள்ளோம். இனி அவர்களிடம் சொல்மாற்ற எங்களால் இயலாது” என்றார் குலமூத்தாரான சம்பவர்.
யது கைகூப்பி “ என் சொல்லை பொறுத்தருள்க, குலத்தலைவர்களே. தந்தையை நாங்கள் கைவிட்டோம், அவர் எங்களை கைவிட்டார். இரண்டும் அத்தருணத்தில் அவ்வாறு நிகழவேண்டுமென்றிருந்தது. ஒருநாள் கழித்து ஒருமுறை அமைச்சர்களுடன் சொல்லாடிவிட்டு அவர் முன் நின்றிருந்தால் நான் அவர் முதுமையை ஏற்றுக்கொண்டிருப்பேன். அவருடைய முதுமைநலிவை நேரில்கண்டு என் உள்ளம் அஞ்சித்திகைத்திருந்த தருணத்தில் அதை நான் கொள்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அத்தருணத்தை அமைத்த தெய்வங்களின் வழிப்பட்டு நான் கிளம்பவிருக்கிறேன். அவர் அளித்த சொற்கொடை இருக்கிறது. அதுவே நிகழ்க!” என்றான்.
உரத்தகுரலில் அழுகையும் விம்மலுமாக “நாங்களும் வருகிறோம்… எங்கள் குடிகளனைத்தும் உங்களைத் தொடரும்… இங்கே வெற்றுநிலமும் கட்டிடங்களும் எஞ்சட்டும். அதை கோல்கொண்டு ஆளட்டும் அசுரகுடியினன்” என்றார் பிரகிருதர். “என்னுடன் வருபவர்கள் வரலாம். ஆனால் எந்தையின் சொல்லென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். காட்டெரியென பரவும் வாழ்க்கை. நீர்நிழலென நிலைகொள்ளா இருப்பு. ஆபுரக்கும் எளியதொழில்” என்றான் யது. “ஆம், ஆனால் உங்கள் குடி பெருகிக்கிளைகொண்டு பாரதத்தை மூடுமென்றும் சொல் உள்ளது. அதுபோதும். வருகிறோம். இது எங்கள் சொல்” என்றார் குர்மிதர்.
ஆனால் மறுநாள் ஐந்து குலங்கள் மட்டுமே அவர்களுடன் கிளம்பின. அக்குடிகளிலும் ஒருபகுதியினர் பின்எஞ்சினர். சினக்கொதிப்புடன் நாடுநீங்குவதாக வஞ்சினமுரைத்து ஆடவர் இல்லம்திரும்பி மகளிரிடம் சொன்னபோது அவர்கள் விழிகள் மாற முதலில் அதற்கு உடன்பட்டனர். பின்னர் நிலத்தையும் குடியையும் விட்டுச்செல்வதன் இடர்களைப்பற்றி உரைக்கலாயினர். நிலம் நீங்குபவன் குடியை இழக்கிறான். அந்நிலத்தில் நடுகற்களென நின்றிருக்கும் மூதாதையரையும் துறக்கிறான். சென்றடையும் நிலத்தில் அவன் ஈட்டுவதே குலமென்றாகும். “குலமும் நிலமும் நம் மூதாதையர் நம் மைந்தருக்களிப்பவை. அவற்றை மறுக்க நமக்கு உரிமையுண்டா?” என்றாள் மூதன்னை ஒருத்தி.
மறுநாள் முதற்புலரியில் யது நகர்நீங்கினான். முந்தையநாள் இரவு சிற்றமைச்சரான லோமரூஹர் வந்து சுகிர்தர்முன் பணிந்து மறுநாள் அவர் யதுவுடன் செல்லவிருப்பதாகச் சொல்லி ஆணைகோரினார். “நானும் என்குலத்து இளைய அந்தணர் நூற்றெண்மரும் இளவரசருடன் செல்ல முடிவெடுத்துள்ளோம், உத்தமரே. உங்கள் நற்சொல்லை நாடுகிறோம்” என்றார் லோமரூஹர். “ஆம், எந்நிலையிலும் அரசனை அந்தணன் கைவிடலாகாது என்பது நூல்நெறி. அந்தணர் உடனிருந்து வேதச்சொல் கொண்டு மூவெரி ஓம்பும்வரைதான் இளவரசர் அரசர் எனப்படுவார். நம் கடன் இது. நன்றுசூழ்க!” என்றார் சுகிர்தர். லோமரூஹர் அவரை வணங்க “செல்லுமிடம் ஏதென்று அறியோம். அங்கு சூழ்வதென்ன என்பதும் ஊழின் கைகளில். ஆனால் அந்தணரால் அரசர் கைவிடப்பட்டார் என்னும் சொல் எழலாகாது” என்றார் சுகிர்தர்.
யது அரண்மனையிலிருந்து கிளம்பும்போது சுகிர்தர்ரை தாள்பணிந்து வணங்கினான். “இளவரசே, அந்தணர் சொல் துணைகொள்க! படைவீரர்களை உடன்பிறந்தார் என எண்ணுக! துணியவேண்டிய இடத்தில் துணிக! பொறைகொள்ள வேண்டிய இடங்களில் பொறுப்பதே அத்துணிவை எய்துவதற்கான வழி. எந்த வெற்றியும் எத்தோல்வியும் அத்தருணத்தால் அச்சூழலால் முடிவாவதல்ல என்று உணர்க! நீண்டகால வெற்றியே வெற்றி. மீண்டெழ முடியாது போவதொன்றே தோல்வி” என்று சுகிர்தர் வாழ்த்தினார் “நலம்சூழ்க! தெய்வங்களும் மூதாதையரும் உடன்எழுக! ஆம் அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தி வேதச்சொல் உரைத்து நீர்தெளித்தார்.
யது திரும்பிப்பார்க்காமல் நடந்துசென்றான். எத்தனைபேர் தொடர்கிறார்கள், அவர்கள் கொண்டுவருவன என்ன என்று அவன் நோக்கவில்லை. நூறு வண்டிகளிலும் இருநூறு அத்திரிகளிலும் பொருட்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் ஏற்றிக்கொண்டு படைக்கலங்களை ஏந்தியபடி ஐந்துகுலத்தவர் உடன் சென்றனர். குருநகரியின் ஆயிரம் படைவீரர்கள் படைத்தலைவன் சத்ரசேனனால் வழிநடத்தப்பட்டு உடன் சென்றனர்.
குருநகரியின் கோட்டையைக் கடந்ததும் அவனுடன் சென்ற குடிமக்கள் உளம் ஆற்றாது திரும்பிநோக்கி விம்மினர். சிலர் மண்ணில் அமர்ந்து தாங்கள் செல்லப்போவதில்லை என கைகளால் அறைந்தபடி அழுதனர். குலமூத்தார் சினந்து ஆணையிட அவர்களை பிறர் தேற்றி தூக்கிச்சென்றனர். சிலர் தங்கள் மைந்தருடனும் பெண்டிருடனும் மீண்டும் நகர்நோக்கி ஓடிவந்தனர். கோட்டைக்குள் பெருமுற்றத்தில் கூடிநின்று செல்பவர்களை நோக்கி விழிநீர் வடித்தவர்கள் ஓடிமீண்டவர்களை நோக்கி கைவிரித்துப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டனர். சூழ்ந்துநின்று கதறியழுதனர்.
செல்பவர்கள் விழிமறைந்தனர். புழுதியடங்கியது. ஒன்றும் நிகழாததுபோல் ஆயிற்று ஒளியெழுந்துகொண்டிருந்த தொடுவானம். “தொடுவானை எதுவும் கலைக்கமுடியாது, இளையோரே. அது காலமெனும் கூர்வாள். எத்தனை கொன்றாலும் குருதிபடியா ஒளிகொண்டது” என்றார் சூதர் ஒருவர். அவர்கள் துயருடன் இல்லம் மீண்டும் சென்றவர்களுடன் சென்ற கற்பனையில் அலைந்தபடி ஆங்காங்கே அமர்ந்தனர்.
ஆனால் அவர்கள் சென்றது நீர்ச்சிறைவிளிம்பு கிழிந்தது என அடுத்த அணி துர்வசுவுடன் கிளம்பிச்செல்ல வழியமைத்தது. யது கிளம்பிய மறுநாள் கரும்புலரியில் துர்வசு சுகிர்தர்ரை கால்தொட்டு வணங்கி சொல்பெற்று தன்னந்தனியே கிளம்பினான். அவன் கோட்டையைக் கடந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கியபின் மேற்குநோக்கி திரும்பியபோது அவன் சாலைத்தோழனாகிய ரணசிம்மன் தன்னைத் தொடர்ந்த சிறு படைப்பிரிவுடன் பின்னால் சென்று அடிபணிந்தான். அவன் செல்வதைக் கண்டதும் மூன்றுகுலங்கள் கிளம்பி துர்வசுவுடன் சேர்ந்துகொண்டன.
அவர்கள் கிளம்பிச் சென்றபோது முந்தையநாளின் எழுச்சியும் துயரும் இருக்கவில்லை. வெறுமைகொண்ட விழிகளுடன் மக்கள் நோக்கி நின்றனர். ஒருவேளை செல்லுமிடத்தில் மேலும் சிறந்த வாழ்க்கை அமையக்கூடுமோ என்னும் ஐயம் அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. ஒருநாள் கழித்து அதை எவரோ சொன்னார்கள். சொல்லானதுமே அது பெருகலாயிற்று. நகர்நீங்கியவர்கள் செல்வம் செழித்த புதுநிலங்களில் சென்று குடியேறும் கதைகள் தோன்றலாயின. பின்னர் ஒவ்வொருவரும் அந்நகரைவிட்டு வெளியேறும் ஆழ்கனவு ஒன்றை தங்களுக்குள் பேணிவளர்க்கத் தொடங்கினர்.
திருஹ்யூவும் அனுதிருஹ்யூவும் திரும்பி ஹிரண்யபுரிக்கே செல்லக்கூடுமென அமைச்சர்கள் எதிர்பார்த்தனர். விருஷபர்வனின் அழைப்புடன் பறவைத்தூதும் வந்தது. ஆனால் அவர்கள் ஹிரண்யபுரியிலிருந்து கிளம்பி தெற்கும் கிழக்குமாகச் சென்றனர். அவர்களுடன் அசுரப்படைகளிலிருந்த வீரர்களின் சிறுகுழுக்களும் ஓரிருகுடியினரும் உடன் சென்றனர். நகரை ஆளும்பொறுப்பு பேரமைச்சர் சுகிர்தரின் கைக்கு வந்தது. அவர் அமைச்சர்களின் சிறுகுழு ஒன்றை அமைத்தார். அரியணைமேல் யயாதியின் கோலும் முடியும் வைக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையிடப்பட்ட ஓலைகளால் ஆட்சி நடந்தது.
முடிசூடியபின்னர் அமைச்சர்களை அழைத்து அவர்கள் சென்ற இடத்தைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பும்படி புரு சொன்னான். உறுதியானகுரலில் “அது கூடாது, அரசே. இனி அவர்களை நாம் தொடரக்கூடாது” என்றார் அவர். “அவர்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம் அல்லவா?” என்றான் புரு. “அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்கள் பெருமரங்கள் என கிளைவிரித்து விழுதுபரப்புவார்கள் என்பது உங்கள் தந்தையின் சொல். இது வேர் தாழ்த்தும் பருவம். இப்போது அவர்களை தோண்டி எடுப்பது வீண்வேலை” என்றார் சுகிர்தர்.
“இன்று அவர்கள் செல்லுமிடமெங்கும் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாவார்கள். தங்கள் ஆற்றலையெல்லாம் திரட்டி போரிடவேண்டும். அவர்களின் உள்ளமும் எண்ணிக்கையும் ஒற்றுமையும் வலுப்பெறவேண்டும். எதிர்கொள்ளும் மாற்றுவிசைகளே அவர்களை வளர்க்கவேண்டும். அப்போதுமட்டுமே அவர்கள் வென்றுவாழ முடியும்” என்றார். புரு தலைகுனிந்து அமர்ந்திருக்க மூத்த ஒற்றனான சந்திரபாலன் “தாங்கள் நிலைகொள்ளும் வழிகளை அவர்கள் கண்டடையவேண்டும், அரசே” என்றான்.
“இப்போது அவர்கள் இருக்குமிடத்தை நாம் அறிந்துகொண்டோம் என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளுமென அவர்களை பின் தொடர்வோம். அவர்களுக்கு எதிரிகள் எழுகையில் நாமும் அவர்களை எதிரிகளெனக் கொள்வோம். போர் நிகழுமென்றால் உதவிக்கு படை கொண்டுசெல்ல விழைவோம். அரசே, அவர்கள் நால்வரும் நான்கு திசைகளுக்கு சென்றிருக்கிறார்கள். நான்குதிசைகளுக்கும் படையனுப்பிக் காக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. நம்மால் இயலாதவற்றை எண்ணி ஏங்கிச் சலிப்பதே அதன் விளைவென்று ஆகும்” என்றார் அமைச்சர்.
“மேலும் அவ்வாறு அவர்களுக்கு உதவுதல் உங்கள் தந்தையின் ஆணையை மீறுவதே. அவர்கள் நம் குருதியினர் அல்ல. நம் சமந்தரோ நமக்கு கப்பம் அளிப்பவரோ அல்ல. குருநகரியின் மக்களின் செல்வத்தையும் வீரர்களின் உயிரையும் எந்நெறியின்பொருட்டு அவர்களுக்காக செலவிடுவீர்கள்?” என்றார் சுகிர்தர். “அத்துடன் மறுநாள் படைவீரர்கள் எவரையும் உடன் அழைக்காமல் கருவூலத்தில் ஒரு பொன்னைக்கூட கேட்காமல் நாடுநீங்கிய உங்கள் உடன்பிறந்தார் நம் உதவியை ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகிறீர்களா?”
அவர்களில் யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி சென்றான். கங்கையையும் யமுனையையும் கடந்து, மாளவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காக தன்குடிகளை அழைத்துச்சென்றான். நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியைக் கடந்து யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்து அங்கே தங்கள் குடியை நிறுத்தினர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் அங்கே சிற்றூர் ஒன்றை அமைத்தார். அவர்களின் முதல் ஊர் அங்கே அமைந்தது.
துர்வசு தன் தோழன் ரணசிம்மனுடன் நகர்நீங்கிச் செல்கையில் காட்டு எல்லையில் சந்திரகுலத்தின் அனைத்து அடையாளங்களையும் துறந்தான். குருநகரியின் கடைசிப்புழுதியையும் தன் காலடியிலிருந்து அகற்றும்பொருட்டு ஓடையில் கால்கழுவிவிட்டு மேற்காக சென்றான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும் பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அணையாத அனல்காற்றுகள் வீசும் கந்தவதி என்னும் நிலம் அவர்களுக்கென அமைந்தது.
தன் உடன்பிறந்தவனாகிய திருஹ்யூ யமுனைக்கு அப்பால் சென்று மச்சர்களுடன் இணைந்துகொண்டதையும் அனுதிருஹ்யூ மேலும் கடந்து சென்று தண்டகாரண்யத்தின் தொல்குடிகளுடன் இணைந்து தனிக்குடி கண்டதையும் சூதர்களும் தென்னகப் பாணர்களும் வந்துபாடிய பாடல்களினூடகவே புரு அறிந்துகொண்டான். அந்தச் செய்திகள் குருநகரியில் பரவுவதற்கு அவன் ஆணையிட்டான். சூதர்சொல் பெருகுவதென்பதை அவன் அறிந்திருந்தான். யயாதியின் மைந்தர் நான்கு நகர்களை அமைத்து அரசமுடி சூடிவிட்டனர் என்னும் செய்தி குருநகரியின் குடிகளை உளம் அமையச் செய்யது. அதன்பின்னரே அவர்கள் புருவை தங்கள் அரசன் என ஏற்றுக்கொண்டனர்.
புரு சுகிர்தர்ரை தூதனுப்பி குருநகரியின் செல்வத்தில் பெரும்பகுதியை கன்னிச்செல்வமெனக் கொடுத்து குருநகரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசெனத் திகழ்ந்த கோசல நாட்டின் அரசன் புஷ்டியின் மகள் பௌஷ்டையை மணந்து பட்டத்தரசியாக்கினான். அந்த மணவிழா பன்னிருநாட்கள் குருநகரியில் கொண்டாடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் திரண்டுவந்து அந்த மணவிழாவை அணிசெய்தனர். ஷத்ரியப்பேரரசி அமைந்ததுமே குருநகரியின் மக்களின் உள்ளம் மாறத்தொடங்கியது. முதல் இளவரசன் பிரவீரனின் இடையணிவிழா நடந்தபோது குடிகள் நடந்தவை அனைத்தையும் மறந்து பெருமிதமும் களிவெறியும் கொண்டு கொண்டாடினர்.
சுகிர்தரின் சொல்படி நகரின் கோட்டையை மேலும் ஒரு சுற்று விரிவாக்கி அதற்கு சந்திரபுரி என்று பெயரிட்டான். சந்திரகுலத்துக் குருதிவழியால் ஆளப்படுவது அந்நகர் என அப்பெயர் ஒவ்வொரு முறை உச்சரிக்கப்படுகையிலும் உறுதியாயிற்று. விருஷபர்வனின் கொடிவழிவந்தவன் அவன் என்பதை விரைவிலேயே அனைவரும் மறந்தனர். ஆனால் நகரின் முத்திரையாக ஹிரண்யபுரியின் அமுதகலசம் அமைந்தது. அதைக்குறித்து அந்தணரும் ஷத்ரியர்சிலரும் உளக்குறை கொண்டிருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்டிர் விரும்பியமையால் விரைவிலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முடிசூடி எழுந்து தன்னை புரு ஆடியில் பார்த்துக்கொண்டான். முதிய அணிச்சேவகர் “தங்கள் தந்தை பேரரசர் யயாதியை நான் பார்த்திருக்கிறேன், அரசே. அவரைப்போலவே தோன்றுகிறீர்கள்” என்றார். புரு புன்னகையுடன் “ஆம், ஒரே முகங்கள்தான்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமல
April 28, 2017
கிணறு
பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார்.
பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் வாசிப்பறையாக வைத்துக்கொண்டேன். குளிர்ச்சியாக சிமிண்ட் போடப்பட்ட தரை. வீட்டைச்சுற்றி தென்னைமரங்கள் அடர்ந்திருந்தமையால் எப்போதும் காற்று. ஓட்டுக்கூரை, கீழே தேக்குமர சீலிங் போடப்பட்டு மிக உயரமாக இருந்ததனால் வெயிலே தெரியாது. பெரிய சன்னல்கள். நான் விரும்பிய வீடுகளில் ஒன்று.
அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம். பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கருவறைக்குள் சுவரோவியமாக எழுந்தருளியிருந்தாள். அந்த கோயில்முன்னால் அகலமான கரிய சிமிண்ட் திண்ணை உண்டு. அமர்ந்து வாசிக்க படிக்க மிக இனிய இடம் .சுற்றிலும் பூச்செடிகள். அரளி, மந்தாரை,சங்குபுஷ்பம்,செம்பருத்தி…சி.மோகன் அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ”என்ன பெரும் சொத்தெல்லாம் வச்சிருக்கீங்க…ராஜா மாதிரி வாழறீங்க!” என்றார்.
வீட்டுக்கு வந்த அத்தனை பேருமே அந்த வீட்டை புகழ்ந்திருக்கிறார்கள். அந்த கோயில் திண்ணையின் குளிர்ச்சியில் படுத்துக்கொண்டு நானும் பிரேமும் ரமேஷ¤ம் நிறைய உரையாடியிருக்கிறோம். பாவண்ணன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்திருக்கிறார். தேவதேவன் பலமுறை வந்திருக்கிறார். நாஞ்சில்நாடன், சூத்ரதாரி வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், க.பூரணசந்திரன் எல்லாரும் அங்கே வந்திருக்கிறார்கள்.
பதமநாபபுரம் திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய தலைநகரம். எந்தக்கோடையையும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்பான இடத்தில்தான் ஊரை அமைத்திருந்தார்கள். இயற்கையான ஊற்றுக்களால் அங்குள்ள குளங்களும் ஏராளமான நீராழிகளும் எப்போதும் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வேளிமலையின் மாபெரும் சுவர் அதன் ஒரு பக்கத்தை முற்றாக சூழ்ந்திருக்கும். முற்றத்துக்கு வந்தாலே மௌனமாக ஓங்கிய மலைச்சிகரங்களைக் காணமுடியும்.
கோட்டைசூழ்ந்த பத்மநாபபுரம் ஒரு அழகிய ஊர். சுற்றுலாப்பயணிகள் வந்து குழுமும் அரண்மனை முற்றம் தவிர்த்தால் எப்போதுமே அமைதியில் மூழ்கிக் கிடக்கும். அகலமான பெரிய தெருக்கள் தினமும் கூட்டப்பட்டு அதிசுத்தமானவை. தோட்டம் சூழ்ந்த பெரிய ஓட்டு வீடுகள். மூன்று பெரிய கோயில்களும் இரு பெரிய குளங்களும் உண்டு. ஊரெங்கும் சின்னச் சின்னக்கோயில்கள்.அவற்றுக்குள் மாபெரும் ஆலமரங்கள். ஊரே மரங்கள் அடர்ந்து பச்சை மூடியிருக்கும். வேளிமலையின் மடிப்பில் இருப்பதனால் தென்றல் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் நான் மின்விசிறியை போட்டதேயில்லை.
அங்கு குடிநீருக்கு கிணறுதான். நல்ல ஆழமான கிணறு. ஆனால் நான்கு கை ஆழத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தினமும் தண்ணீர் இறைப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் தண்ணீர் இறைத்து விடுவேன். பெரிய பித்தளை உருளி ஒன்று இருந்தது. அதற்குள் அன்று ஒருவயதான குட்டிச் சைதன்யாவை அமரச்செய்து நீர் இறைத்து விட்டு உட்கார வைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம். ‘னன்னி’ என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘நன்னிக்குள்ர கையி’ என்ற விளையாட்டு அவளுக்கு வாடிக்கை.
கிணற்றடிதான் குளியல். நன்றாக மதில் சூழ்ந்த திறந்த குளியலறை. தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் வந்தால் அனேகமாக குளத்துக்குத்தான் கூட்டிச்செல்வேன்.மழையில் குளத்தில் குளிக்க முடியாது. அப்போது கிணற்று நீர்தான், இளஞ்சூடாக இருக்கும் அது. அவர்களுக்காக கிணற்று நீரை இறைத்து நிறைத்து வைப்பேன்.
நீர் இறைப்பது ஓர் உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. 1998ல் வசந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதி அதன் செப்பனிடல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அவருக்காக நான் நீர் நிறைக்கும்போது இந்த புகைபப்டத்தை எடுத்தார். இதில் நான் ஆழ்ந்த கவனத்துடன் நீர் இறைப்பது தெரிகிறது. நீர் ஒளியுடன் சரிந்து விழுவதில் மனம் ஈடுபட்டிருக்கிறது.
சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்.
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 31, 2010
தொடர்புடைய பதிவுகள்
டைரி
சதுரங்க ஆட்டத்தில்
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
அசைவைக் கைப்பற்றுதல்
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
கொற்றவை -கடிதம்
அறியமுடியாமையில் இருக்கிறாள் அன்னை.அறியமுடியாமையின் நிறம் நீலம்.நீலத்தை மக்கள் அஞ்சுகிறார்கள்.நீலத்தை தன்னுள் கொண்டவள் கன்னி அவளை வணங்குகிறார்கள்.நீலக்கடலின் ஆழத்தை குமரி என்றும்,தமிழ் என்றும் சொல்லால் சுட்டினர் ஆனால் பொருளோ ஆழத்தில் மௌனமாக கருமையின் குளிரில் உள்ளது.எனவே அறியயோன்னமையிடம் அடிபணிவோம்.
முதல் தெய்வம் குமரி அன்னை தோன்றுகிறாள்.அன்னை தோன்றினால் அழிதலும்,குடிபெயர்தலும் நிகழ்கிறது;மதுரையும்,சோழமும் உருவாகிறது.ஆக்கலை யும்,அழிவையும் அன்னை என்றே பெயரிடுகிறாற்கள்.
இரண்டாம் பகுதி காற்று:
கண்ணையன்னை பிறக்கிறாள் கண்ணைகியாக,கொற்றவை பிறக்கிறாள் வேல் நெடுங்கண்ணியாக.அன்னையருக்கிடையே சிறு மகவாக கோவலன் பிறக்கிறான்.கோவலன் அறியமுடியமையின் ஆழத்தை கணிக்க இயலாமல் இசையால் நிரப்ப முயழுகிறான்.கோவலனும் கண்ணகியும் மணம்முடிக்கிறர்கள்.
கோவலன் பாறையை தழுவும் காற்றென கண்ணகியை உணர்கிறான் எனவே மாதவியை நாடுகிறான்.கோவலன் மாதவியை யாழை போன்று மீட்டுகிறான். மாதவியும் ஒரு யாழே .கடலாடு விழாவின் இறுதியில் மாதவி மீட்டும் யாழ் இசையின் ஆழத்தில் இருள் கனத்த கருவறையின் உள்ளே கண்ணைகியை காண்கிறான்.மாதவியை வெறுப்பினூடக பிரிகிறான்.அன்னையை நோக்கி வரும் மகவு என கோவலனை ஏற்றுக்கொள்கிறாள் கண்ணைகி.இருவரும் நகர் நீங்குகிறார்கள்.
மூன்றாம் பகுதி நிலம் :
நீலி கண்ணகியின் கற்பு எனும் ஒழுக்கத்தை (தளையை) கேள்விக்கு உட்படுத்துகிறாள்.குலக்கதைகளில் வரும் கதைகளில் பெண்களின் கற்ப்பின் மேல் சந்தேகபடுகிறார்கள்.பெண்கள் தன்னை அழித்துகொள்கிறார்கள்,மக்கள் அவர்களை தெய்வமாக்கி வணங்குகிறார்கள்.நீலி கற்பு நிலையானது அல்ல என்கிறாள்,நிலையில்லாது தர்மம் அல்ல அன்பே நிலையானது.
நீலி ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனது ஆசைகள்,இலட்சியங்கள் மற்றும் அக விடுதலைனக்காண கனவு.
“ நீ என்னுடன் இரு, உன் சொற்கள் என்னைச் சிறுமைப்படித்துகின்றன என் எண்ணங்கள் மீது சகதியை உமிழ்கின்றன ஆனாலும் நீயே என்னை நிறைக்கிறாய் நீ விலகிய இடத்தில் வைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை”
முல்லை நிலத்தை அடையும்போது கண்ணகி புகார் விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாள் ஐவகை கடந்து அறிந்துவிட்டாள்.
நான்காம் பகுதி எரி :
மதுரை மன்னன் அறம் பிறழ்கிறான் கோவலன் தவறாக கொல்லப்படுகிறான்.அறம் பிழைக்கையில் அன்னை வருவாள்.கண்ணகி முன் செல்கிறாள் எல்லாப்பெண்களும் சன்னதம் கொண்டு பின் தொடர்கிறார்கள்.எல்லோருக்குள்ளயேம் கன்னி இருக்கிறாள் கண்ணகி போன்ற ஒரு பெண்ணால் கன்னி ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிறாள்.கண்ணகி என்பவள் அறப்பிழை நிகழ்தலா?.கண்ணகி மதுரையை எரியூட்டுகிறாள்.தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல.
ஐந்தாம் பகுதி வான் :
கண்ணகி தன்னை அழித்து அறத்தை நிலைநாட்டுகிறாள்.மக்கள் அவளை தெய்வமாக்கி வணுங்கிறார்கள்.இங்குள்ள பெண் தெய்வங்கள் எல்லாம் அறம் பிழைக்கையில் தோன்றியவர்களா?
மணிமேகலை தன் குலத்தை,தன் உடல் அழகை இழந்து பெண் எனும் எஞ்சும் கன்னியாக மட்டும் ஆகா விழைகிறாள்.மெய்யறிவால் பிறப்பை தாண்டி கன்னியாகிறாள் வாழும்போதே தெய்வமாக காப்பிரியர்கள் அவளை வணங்குகின்றனர்.
இளங்கோ அன்னையை கன்டடைதலையே வாழ்க்கையின் பொருள் என கொள்கிறார்.இறுதியில் அன்னையே தான் என உணரகிறார்.ஆணும் ஒரு அன்னைதான்.
இவை அனைத்தும் முடிவிலியற்ற,முழுமையான வானத்தால் சூழப்பட்டுள்ளது.
“அவ (எங்கள் குடும்ப கன்னித்தெய்வம்) என் கனவில வர்ராப்பா அந்த மூலைய (தென் மேற்க்கு) நோக்கி போறப்பா அவள கும்படனும்” என சில வாரங்களுக்கு முன்பு எங்க அப்பத்தா சொன்னது.
கன்னியை வணங்குவோம்!
இப்படிக்கு உங்கள் மாணவன்,
தி.ஜினுராஜ் .
கொல்லிமலைச் சந்திப்பு ஜினுராஜ் கடிதம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மலம் -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் மலம் என்ற பெயரில் வந்த கண்டனத்தை படித்தேன். தங்கள் கருத்துக்களைப் படித்து வருபவன். ஆசாரம் குறித்து எழுதியவரின் கருத்துக்களையும் படித்து வருபவன். சாதி குலம் சார்ந்து அவர் கருத்துக்களுடன் ஒத்துப் போக வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. என் புரிதலில் அவர் சாதி சார்ந்தோ சாதியத்திற்காகவோ அவ்வாறு எழுதவில்லை.
நீங்களே பல வசைகளுக்குச் சொல்லும் பதில் – உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் அத்தகைய வாசகர்களுக்கே எழுதுவதாகவும், ஏதோ ஒரு கட்டுரையையோ ஒரு பத்தியையோ மட்டும் எடுத்துக் கொண்டு திரிப்பது சிந்திக்க மறுக்கும் வெற்று எதிர்வாதம். அது திரு தேசிகனின் எழுத்துக்கும் பொருந்துமல்லவா.
குறை மாவு நிறை கொழுப்பு (LCHF / Paleo) உணவு முறை பற்றி எழுதும்போது அந்தக் கருத்து எழுதப்பட்டது. பேலியோ முறையில் செக்கு எண்ணெய் கொண்டு வீட்டில் சமைத்த உணவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சைவம் அசைவம் இரண்டிற்கும் பொருந்தும். தேசிகன் அது குறித்து ஒரு தொடரையும், மருத்துவருடன் இணைந்து ஒரு வார இதழில் எழுதியுள்ளார். அதில் சைவ அசைவ உணவு பரிந்துரைகள் உள்ளன. இந்தப் பின்னணியில் நாம் அவர் ஆசாரம் குறித்த கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் முன்வைப்பது போலப் பழைய கருத்துக்களைக் காலத்திற்கு ஏற்ப புதிய கோணத்தில் சிந்திப்பதில் தவறு இல்லை அல்லவா.
அதே சமயம் தேசிகன் அவர்களின் கட்டுரையும் சற்று அவசரத்தில் எழுதப்பட்டதாக உள்ளது. சில சொல்லாட்சிகள் கவனமாகக் கையாளப்பட்டிருக்கலாம். அவருடைய மற்ற பதிவுகளைப் படிக்கும்பொழுது நிச்சயம் சாதியம் மேட்டிமைவாதம் ஆகியவற்றிற்கு எதிராகவே உள்ளார். நீங்கள் கூறுவது போல் அவர் தூய்மைவாதம் தீண்டாமை என்ற உட்பொருள் கொண்டு எழுதவில்லை. அவர் நோக்கில் உடுப்பியில் உள்ள உடுப்பி ஓட்டலில் உண்பதும் ஆச்சாரம் அற்றதே.
-ஆனந்த்
ஜெமோ,
Belated birthday wishes. இப்பல்லாம், wife பிறந்த நாளை ஞாபகப்படுத்தவே Facebook தேவைப்படுது. சமீபகாலமாக தங்களை நெருங்கிக் கொணடிருக்கும் எனக்கு உங்களின் இப்பிறந்த நாள் நினைவிலில்லை. நீங்கள் ஒரு cusp. எங்கோ படித்த ஞாபகம், “Cusps are very unique personalities” என்று. உங்களுக்கு, அது மிகச்சரியாக பொருந்துவதாக நினைக்கிறேன். போதும் முகஸ்துதி என்கிறீர்களா!!! சரி விஷயத்திற்கு வருகிறேன்.
“மலம்” பதிவு தான் இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. உயர்தத்துவங்களான, துவைதம், அத்வைதம் மற்றும் விஷிஸ்டாத்வைதத்தை தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வழியாக அறிந்து, அவற்றை தனதாக்கி கொண்டவர்கள் செய்யும் செய்த காரியங்களுடன் பொருத்திப் பார்த்து, இங்கே தொகுத்துக் கொணடிருக்கிறேன்.
இத்தத்துவங்களை தனதாக்கி கொண்டவர்கள் செய்யும் காரியங்கள், நீங்கள் சொல்வதைப்போல அவர்களுடைய மேட்டிமைவாதத்தை நிறுவிக் கொள்வதற்காகத்தான். சிலருக்கு அது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கானவை எனறும் எண்ணுகிறேன். அத்தத்துவங்களை சிருஸ்டித்தவர்களை , இவர்கள் இழிவுதான் படுத்துகிறார்கள்.
இவர்களுக்கு இந்து மதத்தை வெறும் சடங்குகளாகவும் (ராமானுஜரின் விஷிஸ்டாத்வைதம்) ஆச்சாரமாகவும் ( மத்துவாச்சாரியாரின் துவைதம்) மட்டுமே தெரியும்.
துவைதத்தை வைத்து, விஷமத்தனமாக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு என்று எளியவர்களை ஒதுக்கினார்கள். ராமானுஜரை வைத்து, எளியவர்கள் பரமாத்மாவை சடங்குகள் மூலம் அடையலாம் என்று ஆசை காட்டினார்கள்.
ஆதிசங்கரரின் அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறல்ல என்கிறது. நீயும் கடவுளும் ஒன்றே என்கிறது. “அகம் பிரம்மாஸ்மி”. என்ன காரணம் என்று தெரியவில்லை, இவரை மட்டும் நாத்திகவாதி என்று ஒதுக்காமல் கோயிலுக்குள் வைத்துக் கொண்டார்கள்.
அன்புடன்
முத்து
ஜெ
///காஞ்சி சங்கராச்சாரியாரின் எழுத்துக்களைப்பார்த்தால் அவர் அத்தனை மாற்றங்களையும் ஆசாரத்தின் பெயரால் எதிர்ப்பதைக் காணலாம். மற்ற மடாதிபதிகள் அதிகம் எழுதியதில்லை, எழுதியிருந்தால் அவர்களும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள்.///
குன்றக்குடி அடிகளார் (அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்) அப்படிப்பட்டவர் அல்லர்.
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-16.htm
http://www.tamilvu.org/library/nationalized/pdf/16-kundrakudiadigalar/vazakainalam.pdf
தேமொழி
அன்புள்ள ஜெயமோகன்!
ஆசாரத்தினால் ஆட்டிவைக்கப்படும் மனிதன் எப்படி முழுமூடனாக மாறுகிறான், என்பதற்கு என் வாழ்விலே ஒருவரை சந்தித்துள்ளேன்.
தண்ணீரில் மலம் கழிக்கக் கூடாது என்பது ஆசாரம், நியதி. இது நீர்நிலைகளை அசுத்தமாக்குவதைத் தடுக்க ஏற்பட்ட ஒரு கட்டுப்பாடு என்பது குழந்தைக்கும் புரியும்.
என்னுடன் பணி புரிந்த ஒருவர் வீடுகட்டினார். வீட்டின் முழு அளவே 450 சதுர அடிதான்.இக்கால வழக்கப்படி ‘செப்டிக் டான்க்’ கழிவறை வைத்து வீடுகட்டப்பட்டது.
வீட்டினில் குடியேறிய பின்னரே ஆசாமிக்கு ‘செப்டிக் டாங்க்’ கழிவறையில் தான் தண்ணிரில் மலம் கழிக்க வேண்டும் என்பது புரிந்தது. பதறிவிட்டார்.அந்தக் கழிவறையிலேயே வெளியில் மலம் கழித்துவைத்தார்.நாற்றம் தாங்காமல் மனைவி ஒரு சில நாட்களில் பிரிந்து சென்றார். கதவைத் தாழிட்டுக் கொண்டு யாரோடும் தொடர்பில்லாமல் நாற்றத்திலேயே காலத்தைக் கழித்தார் அந்த ஆசார சீலர்!
அனபுடன்
கே.முத்துராமகிருஷ்ணன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88
88. விழிநீர்மகள்
படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான்.
பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை மிக அரிதானது. நோக்கியிருக்கையிலேயே ஒழிந்து மறைவது. ஆனால் இளைஞர்கள்தான் காலத்தை வீணடிப்பவர்கள். அளவற்றது இளமை என மயங்குபவர்கள். முதுமையிலிருந்து இளமைக்கு மீண்டிருப்பதனால் அதன் அருமையை அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “எனக்கு இன்மது கொண்டுவரச்சொல். என் காவியநூல்கள் உள்ளே இருக்கின்றன அல்லவா?” பார்க்கவன் “பாணர்களையும் விறலியரையும் வரச்சொல்கிறேன். பரத்தையர் வேண்டுமென்றாலும் ஆணையிடுகிறேன்” என்றான்.
“வரச்சொல்” என்றபின் யயாதி பீடத்தில் அமர்ந்தான். பார்க்கவன் தலைவணங்கி வெளியேறினான். அவன் சுவடிகளை படிக்கத் தொடங்கினான். உத்பவரின் ரிதுபரிணயம் என்னும் அகச்சுவைக் காவியம். கையில் எடுத்ததுமே சுவடிகளை புரட்டிப்புரட்டி அதிலிருந்த காமவிவரிப்புகளை தேடிச்சென்றான். அந்த நூல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அத்தகைய நூல்களின் அமைப்பும் சிக்கலும் ஊடுவழிகளும் உள்ளறிந்தவையாக இருந்தன. குருதித்தடம் முகர்ந்துசெல்லும் ஊனுண்ணி விலங்குபோல. சௌம்யன் என்னும் கந்தர்வன் சரிதை சுசரிதை என்னும் இரு காட்டுதேவதைகளைப் புணரும் இடத்தை சென்றடைந்தான். முதல் வரியே படபடப்பை ஊட்டியது. எவரோ தன்னை நோக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து அறையின் தனிமையை உறுதிசெய்தபின் மீண்டும் படித்தான்.
உடல்கள் இணைவதன் சொற்காட்சி. வெறும் உடல். உயிர்விசையால் நிலையழிந்து விலங்காகி புழுவாகி நெளியும் நுண்மொழிதல். பதினெட்டு பாடல்களைக் கடந்ததும் அவன் புரவி கால்தளரலாயிற்று. சலிப்புடன் மேலும் எத்தனை பாடல்கள் என்று நோக்கினான். அறுபது பாடல்கள் கொண்ட ஒரு பாதம் அது. சுவடியை மூடி கட்டிவைத்துவிட்டு சலிப்புடன் எழுந்து சாளரம் வழியாக நோக்கினான். இலைகள் சுடர உச்சிவெயில் இறங்கிய சோலைக்குள் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒளிச்சிதறல் வட்டங்களாகி நிழல்கள் கண்ணிகள் எனத் தெரிந்தன.
அந்த அமைதியும் அசைவின்மையும் உள்ளத்தை அமையச்செய்ய அவன் சலிப்புற்றான். உள்ளிருந்து ஒரு விசை எழுக, விரைக, பறந்தலைக என்றது. அச்சுவரை உடைத்து வெளியேறவேண்டும் என. தசைகளெங்கும் தினவென அந்த வேட்கை எழுந்ததும் ஒருகணம்கூட அறைக்குள் அமர்ந்திருக்க இயலாதென்று தோன்றியது. மது கொண்டுவர இத்தனை நேரமா? என்ன செய்கிறார்கள்? அத்தனைபேரும் நீருக்குள் உடல்கள் என மெல்ல அசைகிறார்கள். கிளைகள் தாலாட்டுகின்றன. உதிரும் இலைகள் மிதந்திறங்குகின்றன. எங்கும் விரைவென்பதே இல்லை. புரவி ஒன்றில் ஏறி மலைச்சரிவில் பீரிட்டிறங்கவேண்டும். கற்கள் தெறித்து உடன் உருண்டு வர. காற்று கிழிபட்டு இரு காதுகளிலும் ஊளையிட்டுப் பறந்தலைய.
மீண்டும் சுவடியை எடுத்து புரட்டினான். சாரங்கரின் ‘கிரௌஞ்ச சந்தேசம்’. சுவடிகளை புரட்டிச்சென்றபோது ஒரு வரியால் நிறுத்தப்பட்டான். புன்னகையில் நீண்டும் பேசுகையில் குவிந்தும் செவ்வுதடுகள் அழகிய மீன்கள் என நீந்திக்கொண்டிருக்கின்றன. புன்னகையுடன் விழிசரித்து அவன் அக்காட்சியை நிகழ்கனவில் கண்டான். சுருங்கியும் நீண்டும் செல்லும் செக்கச்சிவந்த மென்மையான மீன். அவன் உடல் தித்திப்படைந்தது. சூழ்ந்திருந்த காற்று தேன்விழுதென மாறியதுபோல. மீண்டும் ஒரு வரியை படித்தான். ‘உன் எண்ணங்களின் இனியமதுவில் கால்சிக்கிக்கொண்டன இரு கருவண்டுகள். சிறகடித்து சிறகடித்து தவிக்கின்றன’. ஆனால் அந்த ஒப்புமைக்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் அந்த முதல் ஒப்புமைக்கே சென்றான். அதை அன்றி பிறிதை அன்று எண்ணமுடியாதென்று தோன்றியது.
இன்மதுவுடன் சேடியர் வந்தனர். பெண்களின் காலடியோசையை தன் செவிகள் தெளிவாக தனித்தறிவதை உணர்ந்தான். நெஞ்சு படபடத்தது. அவர்களின் உருவை ஒருகணம் முன்னரே உள்ளம் வரைந்துகொண்டது. அவர்களில் ஒருத்தி சற்று பருத்த மூத்த வயதினள் என்றும் இருவர் இளையவர்கள் என்றும் அவன் அகம் நோக்கிக்கொண்டிருந்தபோதே அவர்கள் கதவைத் திறந்து மதுக்கோப்பைகளும் நுரைசூடிய குடுவையில் மதுவுமாக உள்ளே வந்தனர். அவர்களை ஒருகணம் நோக்கியதுமே நெஞ்சு படபடக்க அவன் விழிகளை தாழ்த்திக்கொண்டான்.
கண்முன் அவர்களின் சிலம்பணிந்த கால்கள் நடமாடின. கோப்பைகள் உரசும் ஒலி, மது தளும்பும் சிரிப்பு. மூச்சொலி, அணிகளின் குலுங்கல். உடை கசங்கலின் நுண்ணொலி. வியர்வையும் மலரும் சாந்தும் குங்குமமும் நறுஞ்சுண்ணமும் கலந்த மணம். ஏன் என்னால் விழிதூக்கி அவர்களை நோக்கமுடியவில்லை? ஏன் உடல் பதறிக்கொண்டிருக்கிறது? நெஞ்சின் ஓசையே காதுகளில் நிறைந்திருந்தது. “அரசே, இன்மது பரிமாறலாமா?” அவன் நிமிராமல் “ஆம்” என்றான். அவ்வொலி மேலெழவில்லை. வியர்வை பூத்த உடல்மேல் சாளரக்காற்று மென்பட்டுபோல வருடிச்சென்றது. அவர்கள் சென்றுவிட்டால் போதும் என விழைந்தான்.
மது ஊற்றப்படும் ஓசை. ஒருத்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பிறிதொருத்தி சிரித்தாள். மூத்தவள் அதை அடக்கினாள். முதலிருவரும் குயிலும் குருவியும். இவள் மயில். கோப்பையை வாங்கியபோது அவன் அப்பெண்ணின் விரல்களை நோக்கினான். நிமிர்ந்து அவர்களின் கண்களைக் கண்டதுமே திடுக்கிட்டு நோக்கு தாழ்த்திக்கொண்டான். அவள் சிரிப்பு படர்ந்த குரலில் “ஏதேனும் தேவையா?” என்றாள். “இல்லை” என்றான். அவர்கள் அவனுக்காக காத்திருக்க அவன் ஒரு மிடறு அருந்திவிட்டு கோப்பையை பீடத்தின் மேல் வைத்தான். “இவள் இங்கே நின்று தங்களுக்கு பரிமாறுவாள்” என்றாள் மூத்தவள். “வேண்டாம்” என்று அவன் பதறிய குரலில் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை… வேண்டாம்” என்றான்.
பக்கவாட்டில் எவரோ நின்றிருக்கும் உணர்வு எழ திடுக்கிட்டு நோக்கியபோது அங்கே ஆடியில் அம்மூவரும் தெரிந்தனர். ஒருத்தி மாநிறமான மெல்லிய உடலும் நெளியும் கூந்தல் கரைவகுத்த நீள்முகமும் கனவுதேங்கியவை போன்ற பெரிய விழிகளும் சிறிய மூக்கும் குமிழுதடுகளும் நரம்போடிய மெல்லிய கைகளும் கொண்டவள். இன்னொருத்தி நுரைபோன்ற கூந்தலும் உருண்ட முகமும் சிரிப்புஒளிரும் சிறிய விழிகளும் பெரிய சிவந்த உதடுகளும் தடித்த கழுத்தும் கொண்டவள். நீலநரம்புகள் படர்ந்த வெண்ணிறத் தோல். உயரமற்ற உடல்.
மூத்தவள் அவர்களைவிட உயரமானவள். பெரிய கொண்டையும் வலுவான கழுத்தும் திரண்ட தோள்களும் இறுகிய இடைக்குமேல் பெரிய குவைகளென முலைகளும் உருண்ட பெரிய கைகளும் கொண்டவள். உறுதியான நோக்குள்ள கண்கள். செதுக்கப்பட்டவை போன்ற உதடுகள். அக்குழலை அவிழ்த்திட்டால் தொடைவரை அலையிறங்கக்கூடும். இளஞ்செந்நிறமான அவள் கைகளில் நரம்புகளே இல்லை. வளையல்கள் சற்று இறுக்கமாக இருந்தன. வளையல் படிந்த தடம் உருண்ட மணிக்கட்டில் தெரிந்தது. விரல்களில் செம்பாலான நாகமோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள்.
அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். “இல்லை… நீங்கள் செல்லலாம்… எனக்கு ஒரு குவளை போதும்” என்றான். “ஒரு குவளையா?” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபின் அவன் நிமிர்ந்து அவளை நோக்கி “நான் மயங்கி காலத்தை வீணாக்க விழையவில்லை” என்றான். அவள் மெல்ல சிரித்து உதடுகளை மடித்து “ஆம், அது நன்று. மதுவருந்துவது அதன் நெகிழ்வை அறிந்து மகிழ்வுகொள்வதற்காக. துயில்வதென்றால் மது எதற்கு?” என்றாள். பின்னர் திரும்பி குவளைகளை எடுத்துச்செல்லும்படி விழிகளால் ஆணையிட்டாள். அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செல்கையில் முகங்கள் சற்று கூம்பியிருப்பதை பக்கவாட்டுத் தோற்றத்திலேயே கண்டான்.
அவர்கள் கதவை மூடியதும் அவள் அவனருகே வந்து “நீங்கள் விரும்பியது என்னை. ஆகவே நானே இங்கிருந்தேன்” என்றாள். அவன் பதறி “யார் சொன்னது?” என்றான். “ஆடியில் உங்கள் நோக்கை கண்டேன். நிலைத்ததும் தேடியதும் என்னுடலையே.” அவன் “இல்லை” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் அவன் தோளை தொட்டாள். அவன் உடல் துடிக்கத் தொடங்கியது. “இன்று நான் உங்களுடன் இருக்கிறேன்.” அவன் பேசாமலிருந்தான். ஆனால் உடல் அனல்கொண்டது. காதுகளும் கண்களும் எரியத்தொடங்கின. அவள் அவன் தலைமேல் கையை வைத்து “நான் இருக்கட்டுமா?” என்று தாழ்ந்த குரலில் கொஞ்சலாக கேட்டாள்.
அக்குரல்மாற்றம் அவனை பின்னாலிருந்து உதைக்கப்பட்டதுபோல திடுக்கிடச் செய்தது. எழுந்து நின்று “வேண்டாம். செல்க!” என்றான். அவள் “ஏன்?” என்றாள். எழுந்ததுமே அவன் உடலின் அதிர்வுகளும் அடங்கிவிட்டிருந்தன “செல்க… செல்க!” என்று கைநீட்டி சொன்னான். குரல் உடைந்து பிற எவருடையதோ என ஒலித்தது. “செல்… செல்!” என்று அவன் உரக்க சொன்னான். அக்குரல்மாற்றத்தால் அவள் திகைத்து “ஆணை” என தலைவணங்கி வெளியே சென்றாள்.
கதவு மூடும் ஒலியில் அவன் இழுத்த கையால் விடப்பட்டவன் போல தளர்ந்தான். திரும்பவும் அமர்ந்துகொண்டு மூச்சிரைத்தபடி கண்களை மூடினான். உடலெங்கும் குருதி நுரையழிவதை உணர்ந்தான். மீண்டும் கதவு திறக்கும் ஒலி எழுந்தபோது அவன் உடல் குளிர்ந்திருந்தது. “யார்?” என்றான். “அரசே, நான்தான்” என்றான் பார்க்கவன். அவனருகே வந்து வணங்கி “மாலினியை திருப்பி அனுப்பினீர்கள் என்றாள்” என்றான். “யார்?” என்றான். “இப்போது வந்தவள்… சேடி.” யயாதி “ஆம், அவள் என்னிடம்…” என்றபின் “என்னால் இது இயலாது” என்றான். “ஆம், நான் அதை எண்ணினேன். மற்ற இருவரும் என்னிடம் சொன்னபோதே நீங்கள் இருக்கும் நிலை புரிந்தது.”
யயாதி சீற்றத்துடன் “என்ன நிலை?” என்றான். “முதிரா இளைஞனின் உளநிலை…” என்று பார்க்கவன் புன்னகைத்தான். “காமம் எண்ணங்களிலேயே நிகழமுடியும். உடல் அச்சமும் அருவருப்பும் ஊட்டும்” என்றான். யயாதி “இல்லை…” என்றபின் தயங்கி “ஆம், உண்மை” என்றான். “முதிரா இளமையின் இடரே எதையும் எதிர்கொள்ளமுடியாதென்பதுதான். உடலை எதிர்கொள்ள அஞ்சியே காமத்தை தூய்மைப்படுத்திக்கொள்கிறீர்கள். புகையோவியமென அது நிலம்தொடாது ஒளிகொண்டு நிற்கிறது. அதை மண்ணுக்கிழுப்பது உடல் என நினைக்கிறீர்கள்” என்றான். வாய்விட்டுச் சிரித்தபடி “நாளெல்லாம் எண்ணுவது பெண்ணை. ஆனால் பெண்ணுடல்மேல் வெறுப்பு. அந்த இரு நிலையைக் கடப்பதன் பெயரே அகவை எய்துதல்” என்றான்.
யயாதி நாணத்துடன் சிரித்து “ஆம்” என்றான். அச்சிரிப்பினூடாக அவர்கள் அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தனர். “உங்களிடம் குற்றவுணர்ச்சி ஏதேனும் உள்ளதா?” என்றான் பார்க்கவன். “அதை நானே கேட்டுக்கொண்டேன். இல்லை, உடை களைந்து நீரில் குதித்தவனின் விடுதலையையே உணர்கிறேன்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஒருவேளை இனி அது எழக்கூடும். அவ்வாறு எழவேண்டியதில்லை” என்றான். “அரசே, மைந்தனுக்கு தந்தை அளிக்கும் கொடைகளில் முதன்மையானது முதுமை அல்லவா? அத்தனை தந்தையரும் கைக்குழவியாக மைந்தர் இருக்கும்நாள் முதல் துளியாக மிடறாக அளிப்பது தானடைந்த முதுமையைத்தானே?” என்றான்.
யயாதி மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் “ஆம்” என்றான். “அதேபோல மைந்தர் தந்தைக்கு அளிக்கவேண்டியதும் இளமையை அல்லவா? தங்கள் இளமையின் மகிழ்வையும் விடுதலையையும்தானே இளஞ்சிறுவர்களாக அவர்கள் தந்தையருக்கு பரிசளிக்கிறார்கள்? தந்தையரின் முதுமையை அதனூடாக அவர்கள் தொடர்ந்து விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தந்தையர் முதிர்ந்து உடலோய்ந்தமைகையில் மைந்தரின் தோளிலும் காலிலும் சொல்லிலும் விழியிலும் உள்ள இளமையைத்தானே துணைகொள்கிறார்கள்?”
“ஆம்” என்று யயாதி சொன்னான். மீண்டும் மீண்டும் ஒரே சொல்லையே சொல்கிறோம் என உணர்ந்து “உண்மை” என்றான். உள எழுச்சி தாளாமல் எழுந்துகொண்டு “மெய். நான் இதை எண்ணியதே இல்லை” என்றான். “அரசே, அத்தந்தையர் இறந்து மூச்சுலகெய்திய பின்னர் மைந்தர் அளிக்கும் உணவும் நீரும் நுண்சொல்லுமே அவர்களை என்றுமழியா இளமையுடன் விண்ணில் நிறுத்துகிறது” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றபடி யயாதி அமர்ந்தான். “ஆகவே எங்கும் நிகழ்வது இங்கு அதன் முழுமையுடன் அமைந்தது என்றே கொள்க!” என்றபின் பார்க்கவன் எழுந்தான். “நீங்கள் விழைந்தால் வேட்டைக்கு செல்லலாம். மாலையில் கூத்தர் நிகழ்த்தும் அவைநிகழ்வுகளுக்கு ஒருங்கு செய்துள்ளேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.
கதவுக்கு அப்பால் ஓசை கேட்டபோது யயாதி சுவடியை மூடிவிட்டு நிமிர்ந்தான். கதவு மெல்ல திறந்தது. அதனூடாக ஆடைவண்ணம் தெரிந்தது. அதிலேயே அவன் சர்மிஷ்டையை அடையாளம் கண்டான். உள்ளம் கிளர எழுந்து நின்றான். அவள் உள்ளே வந்து விழிதிகைத்து நின்று அறியாமல் திரும்பிச்செல்பவள் போல கதவை பற்றினாள். “சர்மிஷ்டை” என அவன் அழைத்தான். “இளமை மீண்டுவிட்டேன். நான் என்றும் விழைந்தது இது.” அவள் உதடுகளை மடித்துக் கவ்வி கண்களில் பதைப்புடன் அவனை நோக்கினாள். “என்ன நோக்குகிறாய்? இது என் இளமையுருவம்… நீ அதை பலமுறை கனவில் கண்டிருப்பதாக சொல்லியிருக்கிறாய்” என்றான். “இல்லை, இது புருவின் உருவம்” என்று பட்டு கசங்கும் ஒலியில் சர்மிஷ்டை சொன்னாள்.
அவனுக்கு அது கேட்கவில்லை. மேலும் உளம் பெருக “பார்! முதிரா இளமையையே அடைந்திருக்கிறேன். என் இளமையைச் சூடியபோதே உன்னைத்தான் எண்ணினேன். உன்னுடனிருக்கையில் நான் இளையவனாக இருக்கலாகாதா என ஏங்கியிருக்கிறேன். அவ்வெண்ணத்தால் அத்தனை தருணங்களிலும் குறையுணர்ந்திருக்கிறேன்” என்றான். களிப்புடன் நகைத்து “உன்னை அத்தனை அகவைநிலைகளிலும் அடைவேன். எச்சமில்லாது காமத்தை அடைந்து ஒழிந்து எழவேண்டும் நான்” என்றபடி அவளை நோக்கி கைவிரித்தபடி சென்றான்.
அவள் “விலகு… அணுகாதே!” என கூவினாள். முகம் சுளித்து கைகள் உதறிக்கொண்டன. “அணுகாதே என்னை…” என்று உடைந்த உரத்த குரலில் கூச்சலிட்டு கதவுடன் முதுகு ஒட்டிநின்று நடுங்கினாள். முன்வளைந்த தோள்கள் இறுக கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர “போ… அணுகாதே…” என்றாள். “ஏன்?” என்று அவன் நின்றான். “நீ என் மைந்தனின் இளமையை சூடியிருக்கிறாய்… நீ கொண்டிருப்பது என் மகனை.” அப்போதுதான் அவள் எண்ணுவதை அவன் அறிந்துகொண்டான். தலையை கல் தாக்கியதுபோல அவ்வுணர்வு அவனை சென்றடைந்தது. இருமுறை உதடுகளை திறந்துமூடினான். பின்னர் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.
அவள் “மூடா, அதைக்கொண்டு நீ எதை அடையப்போகிறாய்? எந்தப் பெண்ணை?” என்றாள். வெறுப்பில் அவள் கண்கள் சுருங்கி உறுமும் ஓநாய் என பற்கள் தெரிந்தன. “அப்பெண்ணை எந்த விழிகளால் நோக்குவாய்? எந்த உடலால் அடைவாய்? நீ நோக்கியமையால் இந்த உடலை நான் உதறவேண்டும். நோன்பிருந்து இதை உலரச்செய்யாமல் இனி ஆடிநோக்க என்னால் இயலுமா?” அவன் கைவீசி “போ!” என்று கூவினான். அவள் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவு மூடிய ஒலி அவனை அறைந்தது. வியர்வையுடன் நெற்றியைத் தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அனைத்து திகிரிகளும் மணலில் சிக்கி இறுகி அசைவிழக்க எண்ணங்கள் வெம்மைகொண்டன.
பின்னர் விடுபட்டு எழுந்தான். அனைத்தையும் அள்ளி ஓரு மூலையில் குவித்து தன் அகத்தை தூய்மை செய்தான். அப்போது அத்தனை முடிச்சுகளையும் தனித்தனியாகக் காணமுடிந்தது. ஒவ்வொன்றாகத் தொட்டு அவிழ்க்கமுடிந்தது. ஒவ்வொரு விரிதலும் அவனை எளிதாக்கின. எழுந்து இடைநாழியில் நடந்தபோது அவன் முகம் தெளிவுகொண்டிருந்தது. அவனை நோக்கி வந்த பார்க்கவனிடம் “நான் நாளைப்புலரியில் இங்கிருந்து கிளம்புகிறேன். காட்டுக்குச் செல்கிறேன்” என்றான். “எங்கே?” என்று பார்க்கவன் கேட்க “என்னை காட்டு எல்லைக்குக் கொண்டுசென்று இறக்கிவிடுங்கள், போதும்!” என்று அவன் சொன்னான்.
இளவேனிலில் மலர்பெருகி வண்ணம்பொலிந்திருந்த காட்டினூடாக யயாதி நடந்தான். பின்னர் அறிந்தான் அந்தக் காட்டிற்கு அவன் முன்னரும் வந்திருப்பதை. எப்போது என உள்ளம் வியந்தது. நினைவில் அக்காடு எவ்வகையிலும் எஞ்சியிருக்கவில்லை. மேலும் மேலுமெனச் சென்று முதிரா இளமையைக் கடந்து மீண்டுவந்தான். கனவிலா? ஆனால் அந்நிலத்தை எப்போதேனும் நோக்கியிருக்கவேண்டுமே! அவனால் அதை உணரவே முடியவில்லை. சலித்தபின் அதை அப்படியே உதறிவிட்டு அக்காட்டின் காட்சிகளில் உளம் திளைக்க மெல்ல நடந்தான்.
அன்று காலையில்தான் புரு கருக்கிருட்டிலேயே காட்டுக்குச் சென்றுவிட்டிருப்பதை அரண்மனை ஏவலர் உணர்ந்தனர். அவன் சென்ற தடமே எஞ்சியிருக்கவில்லை. “நீரில் மீன் என சென்று மறைவதே துறவு” என்று அமைச்சர் சொன்னார். “அவ்வாறு சென்றவர் மீள்வதில்லை. நாம் அவரை தொடரவேண்டியதில்லை.” அவன் பார்க்கவனிடம் “ஏன் அவன் சென்றான்?” என்றான். “முதுமை கொண்டவர்கள் கானேகவேண்டும் அல்லவா?” என்றான் பார்க்கவன். “அவள் அவனை நேற்று சந்தித்தாளா?” என விழிவிலக்கி யயாதி கேட்டான். “ஆம், அங்கிருந்துதான் உங்கள் அறைக்கு வந்தார்கள்” என்றான் பார்க்கவன். யயாதி திகைப்பு கொண்டவன்போல ஏறிட்டு நோக்கிவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “நீங்கள் நம் எல்லைக்குட்பட்ட சுமவனத்திற்கே செல்லலாம், அரசே. உங்கள் உளநிலைக்கு உகந்தது அம்மலர்க்காடு” என்றான் பார்க்கவன்.
அவனை காட்டின் எல்லையில் இறக்கிவிட்டபின் பார்க்கவன் விழிகள் நீர்மை மின்ன விடைகொண்டான். நகரம் அகன்றதுமே அவன் விடுதலைகொள்ளத் தொடங்கியிருந்தான். காட்டில் நடந்ததுமே உடல் விசைகொண்டது. காண்பவை எல்லாம் துலக்கமடைந்தன. அங்கு வரும்வரை ஒவ்வொன்றும் எத்தனை சிடுக்கானவை என்றே உள்ளம் திகைப்பு கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவில் அவன் துயிலவில்லை. ஒவ்வொன்றையாக அணுகி நோக்கி வியந்து விலகிக்கொண்டிருந்தான். ஆனால் காட்டில் இலைப் பசுமைக்குள் நிழலொளி நடனத்திற்குள் அறுபடா சீவிடின் சுதியின்மேல் எழுந்த காற்றோசையின் அலைகளுக்குள் மூழ்கியபோது அவையெல்லாம் மிகமிக எளியவை என்று தோன்றின.
அங்கிருப்பது சலிப்பு மட்டுமே. அச்சலிப்பை வெல்லும்பொருட்டு உள்ளத்தை கலக்கி அலையெழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதனூடாக அடையும் உணர்வுகளை அக்கணங்களில் உண்மை என நம்பி அதில் திளைக்கிறார்கள். விழிநீரும் குருதியும். புனலும் அனலும். அவை மட்டுமே அவர்களின் நாட்களை பொருள்கொண்டவையாக ஆக்குகின்றன. அவ்வெடையின்மையை அடைந்தபோது அவ்வாறு அக்காட்டில் சென்றது நினைவில் எழுந்தது. அவன் தந்தையின் வலிமையான கைகளில் சிறு குழவியாக இருந்தான் அப்போது. மிதந்து ஒழுகியபடி அக்காட்டை நோக்கிக்கொண்டு சென்றான்.
நகுஷனின் தொடுகையை தாடியின் வருடலை வியர்வை மணத்தை அவனால் உணரமுடிந்தது. அச்சிறுவயதுக்குப்பின் அங்கே வந்ததே இல்லை. ஆனால் கனவில் அந்த இடம் அச்செனப் பதிந்திருக்கிறது. அங்கிருக்கும் அத்தனை கரவுகளையும் சரிவுகளையும் காணமுடியுமெனத் தோன்றியது. நீர்தெளிந்து வான் விரிந்த சுனை ஒன்றை நினைவுகூர்ந்தான். உடனே அதற்குத் திரும்பும் வழியும் உள்ளத்தில் எழுந்தது. செல்லச் செல்ல மேலும் துலங்கியபடி வந்த திசையில் இலைகள் நீரலையொளி சூடி நின்றிருப்பதைக் கண்டான். நீலச்சுனை காலை வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.
அதன் சேற்றுக்கதுப்பில் பறவைகளின் காலடிகள் மட்டுமே இருந்தன. நாணல்கள் காற்றில் குழைந்தாடின. மெல்லிய அலைகளால் சேறு கலைவுறவில்லை. சேற்றில் நீர்வரிகளைக் கண்டபோது இனிய உணர்வொன்றால் அகம் சிலிர்ப்புகொண்டபின் அது ஏன் என சென்று துழாவிய சித்தம் எதையோ தொட்டுவிட அவன் நின்றுவிட்டான். மென்மையான முலைமேல் எழுந்த தோல்வரிகள். எவர் முலைகள் அவை? மூச்சுத் திணறியது. தலையை அசைத்து அவ்வெண்ணத்தை விரட்டியபின் சுனையை அணுகினான். பேற்றுவரிகள் படிந்த அடிவயிறு. யார் அது?
அங்கே நின்று தன் முகத்தை நீரில் நோக்கியதை நினைவுகூர்ந்தான். தந்தையின் குரல் கரையில் கேட்டுக்கொண்டிருந்தது. கையிலிருந்த மலர்க்கிளையால் நீர்ப்பரப்பை அடிக்க ஓங்கியவன் தன் விழிகளை தான் சந்தித்து திடுக்கிட்டான். உடல் சிலிர்க்க பின்னால் செல்வதுபோல ஓர் அசைவெழுந்தது. குளிர்கொண்டதுபோல உடல் உலுக்கிக்கொண்டது. விழிவிலக்காமல் அவன் நோக்கிக்கொண்டே இருந்தான். பின்னர் அதை நோக்கி கைசுட்டினான். அது அவனை நோக்கி கை சுட்டியது. அவன் புன்னகை செய்தபோது அதுவும் நாணிச்சிரித்தது.
அவன் குனிந்து நீரை நோக்கினான். இது எவர் முகம்? இளமையின் தயக்கமும் நாணமும் இனிய நகையும் கொண்டது. என் முகம். என்னில் நிகழ்ந்துகொண்டே இருப்பது. என்னில் வந்தமர்ந்த பறவை, அஞ்சி எழுந்து சிறகடித்துச் செல்வது. அவன் நீரை அள்ளி முகம் கழுவி சிறிது அருந்தினான். திரும்பியபோது பின்னால் அசைவெழுந்தது. திடுக்கிட்டு நோக்க நீருக்குள் இருந்து அவன் பாவை எழுவதுபோல ஒரு பெண் எழுந்தாள். “யார்?” என்றான் யயாதி. அவள் முகவாயிலிருந்து நீர் உருண்டு சொட்டியது. இளமுலைக் குவைகளில் வாழைத்தண்டில் என வழிந்தது. தோள்களில் முத்துசூடி நின்றது.
“யார்?” என அவன் மீண்டும் உரக்க கேட்டான். அவள் கைதூக்கி தன் குழலை நீவி நீரை வழித்தபின் இடை நீர் விளிம்பிலிருந்து மேலெழ ஒளிகொண்ட மெல்லுடலுடன் எழுந்து அணுகினாள். “யார் நீ?” என்றான் யயாதி. “என் பெயர் அஸ்ருபிந்துமதி” என்று அவள் சொன்னாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

