Jeyamohan's Blog, page 1641

May 12, 2017

வி.எஸ்.காண்டேகரின் யயாதி.

yaya


 


சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னார், தமிழில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய வெளிப்படைப்பாளிகள் மூவர் என. மாப்பசான், கார்க்கி, காண்டேகர். மாப்பசான் புதுமைப்பித்தன், கு.ப.ரா போன்ற ஆரம்பகால நவீனத்துவப் படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தார். ரகுநாதன் ஜெயகாந்தன் முதலியவர்களின் முற்போகு எழுத்துக்களுக்கு கார்க்கி. காண்டேகர் நம்முடைய லட்சியவாத எழுத்துக்களுக்கு.


மராட்டிய எழுத்தாளரான வி.எஸ்.காண்டேகர் தமிழில் பெற்ற மாபெரும் வெற்றி மிக விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். அவருக்கு ஆஸ்தான மொழிபெயர்ப்பாளராக ஆழ்ந்த புலமையும் மொழியாளுமையும் அயரா உழைப்பும் கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ அமைந்தார். காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியாயின பிறகே மூலமொழியில் வெளியாயின. தமிழில் காண்டேகரின் நூல்களுக்கு மிக அதிகமான வாசகர்கள் உருவாகி ஐம்பது அறுபதுகளில் அவர் இங்கே ஒரு நட்சத்திரமாக எண்ணப்பட்டார். உயர்ந்த இலட்சிய நோக்குள்ள கதாபாத்திரங்கள், இலட்சியவாதக் கருத்துக்கள் மண்டிய நடை, உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றாலானவை காண்டேகரின் படைப்புகள்.


”கையில் ஒரு பென்சில் இல்லாம அவரோட நாவல்களை யாரும் படிக்க மாட்டாங்க. அப்ப்பப பொன்மொழிகளை அண்டர்லைன் பண்ணணுமே.” சுந்தர ராமசாமி சொன்னார். ‘வாழ்க்கை என்பது…’ எனத்தொடங்கி பொன்மொழிக்குவியல்களாக எழுதக்கூடிய தமிழ் எழுத்துமுறை காண்டேகரில் உதயமாயிற்று. அதற்கு மு.வரதராசனார், நா.பார்த்தசாரதி, அகிலன் என வாரிசுகள் பல. இப்போது எஸ்.ராமகிருஷ்ணன் பிரபல இதழ்களில் எழுதும் கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட அம்முறைதான் கடைப்பிடிக்கப் படுகிறது. படைப்புகளை ஒட்டி கற்பனைசெய்யவோ சிந்திக்கவோ பயிற்சி பெறாத வாசகர்களுக்கான எழுத்து இது. ஆழமான உயர்ந்த விஷயங்களை படிக்கிறோம் என்ற எண்ணம் இதன் மூலம் வாசக மனதில் உருவாகிறது.


காண்டேகரின் இந்த இலட்சியப் பிரச்சார அம்சங்கள் இல்லாத அவரது நாவல் யயாதி. இதன்பொருட்டு அவர் ஞானபீடப்பரிசும் பெற்றார். இது மகாபாரதக் கதையை ஒட்டி எழுதப்பட்ட ஒரு இதிகாச நாவல்.


*


யயாதி


ஒருமுறை சாகித்ய அக்காதமி செயலராக இருந்த பேராசிரியர் இந்திரநாத் சௌதுரி இந்திய மொழிகளில் மகாபாரத நாவல்கள் எவளவு எழுதப்பட்டுள்ளன என்று விரிவாக விளக்கிப்பேசினார். இந்தியாவின் காவிய மரபில் கணிசமான படைப்புகள் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்தவை. காலிதாசனின் சாகுந்தலம் முதல் நமது நளவெண்பா வரை உதாரணமாகச் சொல்லலாம். நவீன இலக்கியத்தின் தொடக்கத்தில் கவிஞர்கள் மீண்டும் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்தனர். பாரதியின் பாஞ்சாலி சபதம் குமாரன் ஆசானின் ‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ உதாரணம். குறிப்பாக சீதை இக்கால கவிதைகளில் பெரும் இடத்தை வகிக்கிறாள்


உரைநடை இலக்கியம் தொடங்கி நாவல்கள் எழுதப்பட்டதுமே மீண்டும் மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம்.வி.வெங்கட் ராமின் ‘நித்யகன்னி’ புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்றவை உதாரணம். [விரிவான நோக்கில் ராமாயணத்தையும் மகாபாரதத்தின் பகுதியாகக் கொள்வது மரபு] இந்திய மொழிகளில் ஏறத்தாழ 300 மகாபாரத நாவல்கள் உள்ளன என்று பட்டியலிட்ட இந்திரநாத் சௌதுரி இவற்றில் அதிகமாக பேசப்பட்டது கர்ணனின் கதையே என்றார். பி.கெ.பாலகிருஷ்ணனின் மலையாளநாவலான ‘இனி நான் உறங்கலாமா?” [தமிழாக்கம் ஆ.மாதவன்.சாகித்ய அக்காதமி பிரசுரம்] எஸ்.எல்.பைரப்பாவின் கன்னட நாவலான ‘பருவம்’ [தமிழாக்கம் பாவண்ணன்.சாகித்ய அக்காதமி பிரசுரம்] ஆகியவை தமிழில் கிடைக்கும் கர்ணனைப்பற்றிய நாவல்களில் முக்கியமானவை.


ஏன் மகாபாரதம் மீண்டும் மீண்டும் ஆக்கப்படுகிறது? மகாபாரதம் தர்மம், அதர்மம் என்றால் என்ன என்பதை விவாதிக்கும் நூல். ‘தர்மசாஸ்திரங்களின் தாய்’ என அது சொல்லப்படுகிறது. நம் பொதுப்பிரக்ஞையில் அது ஊறிபோயிருக்கிறது. அன்றாடவாழ்க்கையில் தர்ம -அதர்ம விவாதத்துக்கு இந்தியாவெங்கும் மகாபாரதக் கதாபாத்திரங்களும் நிகழ்ச்சிகளுமே இந்நிமிடம்வரை உதாரணமாகக் கருதப்படுகின்றன.காரணம் நம் பௌராணிக மரபாலும் நாட்டார் மரபாலும் மகாபாரதக் கதை மீண்டும் மீண்டும் கூறப்பட்டு பொதுமனதில் மிக அழுத்தமாகப் பதிவுபெற்றிருக்கிறது. மகாபாரதத்தின் எல்லா அம்சங்களும் நம் கலாச்சாரத்தில் ஆழ்படிமங்களாக உள்ளன.


இந்நிலையில் தர்ம -அதர்மங்களை மீண்டும் பேசி நிறுவவோ மறுபரிசீலனைசெய்யவோ விரும்பும் ஆசிரியர்களுக்கு மகாபாரதம் மிக அழுத்தமான படிமங்களின் தொகையை அளிக்கிறது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்ற எண்ணத்தை ஒரு மகாபாரதக் கதாபாத்திரம் சொல்லும்போது அதற்கு ஒரு காலாதீத அழுத்தம் விழுகிறது. தர்ம ரூபனான ராமன் ஏன் பெண்ணுக்குமட்டும் நீதி செய்யவில்லை என்ற குமாரனாசானின் சீதையின் கேள்வி மதிப்பிடுகளை மறுபரிசீலனை செய்கிறது. தனிமனிதனின் அடையாலம் மற்றும் தர்மசங்கடம் பற்றிய சிந்தனைகள் இங்கே வேரூன்றியபோது கர்ணன் பேருருவம் பெற்றான். பி.கெ.பாலகிருஷ்ணனின் நாவல் ஒரு இருத்தலிய படைப்பாகவே கருதப்படுகிறது.


மகாபாரதத்தை அடிப்படை மதிப்பிடுகளை பரிசீலனை செய்வதற்காக மறு ஆக்கம் செய்யும்போதே அது அந்த மாகாவியத்துக்கு நியாயம் செய்வதாக ஆகிறது. மாறாக வியாசனின் காலகட்டத்து அரசியல் ஒழுக்க மதிப்பிடுகளை விமரிசிக்க அதைப் பயன்படுத்துவதென்பது மிக மேலோட்டமான செயலாகும். காரணம் வியாசனே இந்த விமரிசங்களையெல்லாம் உட்பொதிந்துதான் தன் காப்பியத்தை உருவாக்கியுள்ளான். எந்தக் குரலையும் மழுப்பாத பெரும்பார்வை கொண்டவன் அவன். அதில் அரசநீதியும் காட்டாளனின் நியாயமும் ஆண்மையின் அறமும் ஒடுக்கப்பட்ட பெண்மையின் நியாயமும் வைதீக விழுமியங்களும் சார்வாகனின் குரலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. ஒன்றை மட்டும் மேலோங்கச்செய்து உள்சிக்கல் நிரம்பிய மகாபாரதத்தை தட்டையாக்குவதையே இத்தகைய படைப்புகள் செய்கின்றன.


ஐராவதி கார்வேயின் ‘ஒரு யுகத்தின் முடிவு’ [தமிழாக்கம் அழகியசிங்கர்] முதல் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘அரவான்’ வரையிலான ஆக்கங்கள் இத்தகையவை. இவை மகாபாரதத்தை ஒரு எளிய அரசியல் நூலாகக் கண்டு மேலோட்டமாக தேடி தங்களுக்குரிய ஒருதரப்பைக் கண்டுபிடித்து முன்வைக்கின்றன அவ்வளவுதான். இத்தகைய ஆக்கங்கள் உருவாவதற்குக் காரணம் வாழ்க்கை நுட்பங்களை கவனிக்காத அரசியல்மனம் கொண்ட ரசிகர்களுக்கு இவை புரிந்துகொள்ள எளிதாக இருக்கின்றன என்பதே.


காண்டேகரின் யயாதி மாறிவரும் வாழ்க்கைஓட்டத்தில் மாறாத ஒழுக்க நெறி என ஏதும் உண்டா, அதன் அற அடிப்படை என்ன என்று மகாபாரதத்தை வைத்து ஆராய்கிறது. அதனாலேயே அது ஒரு செவ்வியல் படைப்பு என்னும் தகுதியை அடைகிறது.


*


 


காண்டேகர்


மகாபாரதத்தில் உள்ள யயாதியின் கதையின் விரிவான சித்தரிப்பு இந்நாவல். யயாதி, தேவயானி, சர்மிஷ்டை, புரு ஆகியோரே மாறிமாறிக்கதை சொல்வதுபோல் அமைந்துள்ளது. நகுஷமன்னனின் மகன் யயாதி. நகுஷன் தேவருலகை வென்றான். இந்திராணியை ஆசைநாயகியாக்க வேண்டுமென்று ஆசைப்படவைத்தது அந்த வெற்றித்திமிர். இந்திராணி ஒரு நிபந்தனை விதித்தாள். முனிவர்கள் சுமந்துகொண்டுவரும் பல்லக்கில் அவர் அவளிடம் வரவேண்டும். முனிவர்களைப் பல்லக்கு தூக்க வைத்தான் நகுலன். காமவெறியில் மெல்ல நடந்த அகத்தியரின் தலையை உதைத்தான். அவர் சாபமிட்டார், நகுஷனின் வம்சத்தில் எவருக்குமே மனமகிழ்ச்சி கைகூடாமலிருப்பதாக.


ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை என்ற சாபத்துடன் யயாதி பிறக்கிறான். எல்லாவகையான உலகியல் இன்பங்களையும் அடையும் இடத்திலிருக்கும் மாமன்னனின் மகன். அவன் அண்ணா யதி சிறுவயதிலேயே துறவியாகி காட்டுக்குச் சென்றுவிட்டிருக்கிறான்.யயாதியும் துறவியாகிவிடக்கூடாது என்று தாயும் தந்தையும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு அவன் தந்தை சிறுவயதிலேயே ஒரு மனநிலையை ஊட்டுகிறார் — கவிஞர்களால் இன்பங்களைப்பற்றி கற்பனைசெய்யவே முடியும் அனைத்தையும் அனுபவிப்பவன் வீரன் மட்டுமே. ஆகவே வீரனாக எவராலும் வெல்லப்படாதவனாக யயாதி வளர்கிறான்.


முதலில் வெற்றியின் சுவையை அகங்காரத்தின் இன்பத்தை யயாதி வேண்டுமளவுக்கு அனுபவிக்கிறான். ”மன்னாதி மன்னர்களும் என் முன் உருண்டுபுரண்டபோதும் நான் நான் என்று கொக்கரித்த வீரர்கள் அபயம் அபயம் என்று சொல்லி வாயில் தர்ப்பையுடன் என்முன் சரண்அடைந்தபோதும் நான் ஆனந்தத்தின் உச்சியை எட்டினேன் ”


ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்கவில்லை. அஸ்வமேதயாகம் செய்யும் அவன் தன் அண்ணனைக் காட்டில் சந்திக்கிறான். குலசாபத்தை அறிகிறான். மன்னனாக துயரத்தில் உழல்வதைவிட மேலானது ரிஷியாக காட்டில் வாழ்வது என அவ்வாழ்வை தேர்வுசெய்தவன் யதி. அங்கே வெற்றி என்பதன் எல்லையை யயாதி காண்கிறான்’ உடல் என்பதே மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி. அதை வெல்ல ஓயாமல் பாடுபடுவதே இந்த உலகில் மனிதனின் கடமை”என கசப்புக்கனிகளை அளிக்கிறான் அண்ணன். இனிப்பு உன்னை நாவுக்கு அடிமைப்படுத்துகிறது என்கிறான். ”நாளை நீ அரசன் ஆவாய். சக்கரவர்த்தி ஆவாய். நூறு அஸ்வமேதவேள்விகள் செய்வாய். ஆனால் ஒன்றைமட்டும் மறந்துவிடாதே. – உலகை வெல்வதுபோல் மனதை வெல்வது எளிதல்ல”


ஆங்கிரீசரின் ஆசிரமத்திற்கு கல்வியின் பொருட்டு செல்லும் அவன் ரிஷியின் மாணவனாகிய கசனை சந்திக்கிறான். ”சூரியனை விடவும் இந்திரனைவிடவும் ஒளிமிக்க குதிரை என்னிடம் இருக்கிறது” என்கிறான் அவன். மனம் அக்குதிரை.’தேவர்கள் குருட்டாம்போக்கில் கேளிக்கையை வழிபடுகிறார்கள். அரக்கர்கள் குருட்டாம்போக்கில் வல்லமையை வழிபடுகிறார்கள். உலகத்தை இன்பமாக ஆக்க இருவராலும் முடியாது. ”


உலகைவென்ற தன் தந்தை நோய்ப்படுக்கையில் தளர்ந்து மரணத்தை அஞ்சி ஓலமிட்டு அழுது சாவதை யயாதி காண்கிறான். ”நன்றி கெட்டவர்களே யாராவது உங்கள் ஆயுளில் கொஞ்சத்தை எனக்குக் கொடுங்கள்!” என்று கெஞ்சுகிறான் நகுஷன். தன் வெற்றியைப் பொறித்த நாணயம் ஒன்றைக்கொண்டு வரச்சொல்லி அந்த எழுத்துக்களைப் படித்தபடிச் சாக விழைகிறான். ஆனால் அவை அவன் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை.


யயாதி காமத்தையும் பெண் உறவையும் அறியும் தருணம் அது. காமம் தன்னை ஆட்கொள்வதை அறிகிறான். முதலில் ஆர்வமும் பரபரப்பும். பின்பு அகந்தையின் நிறைவுக்காகவே காமம் என்றாகிறது. அவன் அறிந்த ஆழமான முதல் உறவு அவனுக்கு முலையூட்டிய தாதியின் மகள். அவள் யயாதியுடன் நெருங்கினாள் என்பதற்காகவே அவன் தாயால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்படுகிறாள். உறவுகளின் குரூர முகம் கண்டு யயாதி அஞ்சி நடுங்குகிறான்


தேவர்-அசுரர் போரை நிறுத்தும் பொருட்டு அசுர குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து உயிர்ப்பிக்கும் மந்திரத்தைக் கற்க கசன் பயணமாகிறான். அவன் அங்கே அசுர குருவின் மகள் தேவயானியை காதலித்து அக்காதலை பயன்படுத்தி அந்த மந்திரத்துடன் தப்புகிறான். புறக்கணிப்பின் குரோதத்துடன் இருக்கும் தேவயானி தன் தந்தை சுக்ராச்சாரியாருடன் விருஷ பர்வா என்ற அசுரமன்னனின் அரண்மனையில் தங்கியிருக்கிறாள். அரசன் மகள் சர்மிஷ்டை அவள் தோழி


சர்மிஷ்டையும் தேவயானியும் நீர்விளையாட்டு ஆடுகையில் உடைகள் மாறிப்போகின்றன. தோழியரின் சண்டை சட்டென்று வலுப்பெறுகிரது. சர்மிஷ்டை தேவயானியை ‘என் தந்தையின் தயவில் வாழும் அனாதைகள் ‘ என்று வைது ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறாள். கிணற்றில் கிடக்கும் தேவயானியை அவ்வழியாக வரும் யயாதி காப்பாற்றுகிறான். அவன் தன்னை தொட்டதனால் அவனே தன் மணவாளன் என்று தேவயானி சொல்கிராள். யயாதி சம்மதிக்க நேர்கிறது. சுக்ராச்சாரியார் அவ்விஷயத்தை அறிந்து மகிழ்ந்து அதை ஆசீர்வதிக்கிறார்


ஆனால் தேவயானி சர்மிஷ்டை தன்னை அவமதித்த விஷயத்தைச் சொல்லி சுக்ராச்சாரியாரைத் தூண்டிவிடுகிறாள். சினம் கொண்ட அவரை சமாதானம் செய்ய மன்னன் தன் மகள் என்ன பிராயச்சித்தம் வேண்டுமானாலும் செய்வாள் என்கிறார். தேவயானி சர்மிஷ்டை தன் பணிப்பெண்ணாக வரவேண்டுமென்று சொல்கிறாள். வேறுவழியில்லாமல் மன்னன் சம்மதிக்கிறான். யயாதியின் மனைவியாக தேவயானியும் பணிப்பெண்ணாக சர்மிஷ்டையும் அவன் தலைநகருக்கு வருகிறார்கள்.


ஷத்ரியப்பெண்ணான சர்மிஷ்டை பணிப்பெண்ணாக வந்தது யயாதிக்கும் அவன் அன்னைக்கும் ஏற்றுக்கொள்ள முடிவதாக இல்லை. அவளும் அவர்கள் மனம் கவரும் விதம் பண்புள்ளவளாக இருந்தாள். மாறாக தேவயானிக்குள் ஒரு நிறைவேறாக் காதலின் வெம்மை எரிந்தபடியே இருந்தது. மன்னனை வென்றடக்க அவள் முயன்றாள், காதலை அளிக்கவேயில்லை. யயாதியின் மனம் இயல்பாக சர்மிஷ்டையின்பால் திரும்பியது. தேவயானிக்கு இரு குழந்தைகளும் சர்மிஷ்டைக்கு இரு குழந்தைகளும் பிறக்கிறார்கள்


சர்மிஷ்டையின் மைந்தர்கள் யயாதிக்குப் பிறந்தவர்கள் என தேவயானி அறியும்போது அடங்காச்சினம் கொள்கிறாள். சுக்ராச்சாரியாருக்குத் தெரிவிக்கிறாள். அவரது சாபத்தால் யயாதி கிழவனாகிறான். சாப விடுதலையாக யாராவது விரும்பினால் அந்த முதுமையை ஏற்றுக்கொள்ளலாம் என்று சுக்ராச்சாரியார் சொல்கிறார். அரண்மனை திரும்பிய யயாதி தன் குழந்தைகளிடம் முதுமையை ஏற்று தன்னை விடுவிக்கும்படிக் கோருகிறார். யாருமே தயாராக இல்லை. கடைசிமகனும் சர்மிஷ்டையின் புதல்வனுமாகிய புரு மனமுவந்து முதுமையை ஏற்றுக்கொள்கிறான்.


யயாதி போகநுகர்ச்சியில் ஈடுபடுகிறான். ஆனால் குற்ற உணர்வில்லாமல் அதில் ஈடுபட இயல்வதில்லை. அது இன்பமல்ல துன்பமே என உணரும் அவன் புரு அடையும் மனநிறைவை காண்கிறான். குரு அங்கிரஸர் சொன்ன உண்மை அப்போதுதான் அவன் நெஞ்சில் ஒளிர்கிறது. நுகர்வதில் அல்ல தியாகத்திலேயே உண்மையான மகிழ்ச்சி உள்ளது.


சுருக்கமாகச் சொன்னால் இதுதான் யயாதியின் கதை. இக்கதையை விரிவான தகவல்களுடன் நுண்ணிய மனஓட்டச்சித்தரிப்புகளுடன் சொல்லியிருப்பதனாலேயே இந்நாவல் நம்மைக் கவர்கிறது. அலகா, முகுலிகை, தாரகை, மாதவன், பண்டிதர் போன்ற பலவிதமான துணைக் கதாபாத்திரங்களை கற்பனையில் உருவாக்கி நாவலின் கதைப்பரப்பை நிறைத்திருக்கிறார் காண்டேகர். ஆதலால் நாவல் ஓர் உயிருள்ள பரப்பாக நம்முன் விரிகிறது.


நாவலில் தேவயானி சர்மிஷ்டை இரு கதாபாத்திரங்களும் புராணமாந்தர் என்னும் நிலைவிட்டு நாம் அறியும் பெண்களாக நுண்ணிய உளச்சித்தரிப்பு மூலம் உருவாகியிருப்பது இந்நாவலை முக்கியமாக ஆக்குகுகிறது. தேவயானியிடம் உள்ளது தாழ்வுணர்ச்சி அதன் விளைவான அகம்பாவமும் தோரணையும். உலகையே தன் காலடியில் விழவைக்கவேண்டுமென்ற வேகம். அதற்காக அவள் கொள்ளும் துடிப்பே அவள் கணவனையும் குழந்தைகளையும் எல்லாம் அவளிடமிருந்து பிரித்து விடுகிறது என உணர்வதில்லை. நிறைவேறாத அந்த காதலின் கனல் இறுதிக்கணம் வரை அவள் நெஞ்சில் அணைவதேயில்லை. எதிர்மறைக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்படும் தேவயானிக்குள் ஏமாற்றப்படும் அறியாப்பெண் ஒருத்தியை வாசகன் காணச்செய்கிறார் ஆசிரியர்.


அதேபோல் தேவயானியை வெல்வதற்காகவே யயாதியை வெற்றிகொள்ளும் சர்மிஷ்டையின் உள்ளூர ஓடும் பெண்மைக்குரிய விஷத்தையும் காண்டேகர் காட்டாமலில்லை. யயாதி வேண்டுவது ஓர் அடைக்கலம். காதலோ காமமோ துணையோகூட அல்ல என்று சட்டென்று அவள் புரிந்துகொள்கிறாள். அதை அவனுக்கு அளித்து அவனைத் தன் கருப்பை நோக்கி இழுத்துக் கொள்கிறாள்.


மூவகை புருஷார்த்தங்களில் அர்த்தம் காமம் மூலம் நகர்ந்து தர்மத்தை அடையும் யயாதியின் கதை இது. யயாதியின் தத்தளிப்புகள் பதற்றங்கள் கூரிய சொற்றொடர்கள் மூலம் காட்டப்பட்டுள்ளன. அவனை வாசகன் மிக அந்தரங்கமாக, தன் காமமோகம் கொண்ட ஆழ்மனதைக் கொண்டு, பின்தொடர முடிவதனாலேயே அந்த எதிர்மறைக் கதாபாத்திரம் இத்தகைய ஒரு செவ்வியல் நாவலை நிறுவும் வல்லமைகொண்டதாக ஆகிறது.


khandekar


இந்நாவலின் அழகு காண்டேகரின் சரளமாகச் செல்லும் நடையிலும் வர்ணனைகளில் உள்ள காவியத்தன்மையிலும் உள்ளது என்றாலும் காண்டேகரின் வல்லமை வெளிபப்டுவது பெண்களின் மன ஓட்டங்கள் சுயபாவனைகள் தளுக்குகள் ஆகியவற்ரைச் சித்தரிக்கும் இடத்தில்தான். இதன் சல்லாபக்காட்சிகள் மென்மையும் கவற்சியும் கொண்டவை. காண்டேகர் மிக வெற்றிகரமான ஓர் எழுத்தாளராக இருந்தமைக்கு இதுவே காரணமாக இருக்கக் கூடும்.


ஆனால் அவரை இலக்கியவாதியாக ஆக்குவது அதனுள் ஓடும் உண்மையின் விஷநீல நரம்பையும் அவர் சொல்லிவிடுவதனால்தான். நகுஷன் இறந்து துக்கம் அனுஷ்டிக்கும் போதே தந்தையைக் கொண்டு அணையிட யயாதி முனையும்போது அம்மா கூர்மையாக இடைமறிக்கிறார். ”வேறு எந்த ஆணையிட்டாவது சொல். உன் தக்கப்பனார் வீரர். இந்திரனையே வென்றவர், ஆனால் அவர் என்னிடம் ஆணையிட்டுச்சொன்ன எதையுமே நிறைவேற்றவில்லை. என்னுடைய அந்த துன்பம்….” அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த இலட்சிய வாழ்க்கை ஒரு நாடகம் என அக்கணம் அறிகிறான் யயாதி. இருபெண்களின் அகங்கார மோதலின் பகடைதான் என அவன் மனம் சொன்னபடியேதான் இருக்கிறது. விதியின் பகடை என உணரும்வரை.


யயாதி காமத்திற்கும் ஒழுக்கத்திற்குமான மாபெரும் ஊசலாட்டத்தைச் சொல்லும் பேரிலக்கியம்.


[யயாதி. வி.எஸ்.காண்டேகr. தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மங்கள நூலகம் வெளியீடு]


மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2007


கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் இருந்து.


 


 


காண்டேகர் விக்கி பக்கம்


யயாதி காண்டேகர்- ரெங்கசுப்ரமணி விமர்சனம்

தொடர்புடைய பதிவுகள்

‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
சித்திரவனம்
விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
சாக்கியார் முதல் சக்கரியா வரை
காடு வாசிப்பனுபவம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2017 11:35

யோகமும் தத்துவமும் பயில…

sw param

சௌந்தர் மற்றும் சுவாமி பரம்ப்ரியானந்தர்


தேடுபவர்களுக்கு மட்டும்….

மாதம் ஒருமுறை எனக்கு வரும் கடிதங்களில் ஒன்றில் ஒரு மனக்குறை இருக்கும். ‘நித்ய சைதன்ய யதி பற்றி நிறைய பேசுகிறீர்கள். நீங்கள் அதிருஷ்டசாலி. இன்று அப்படிப்பட்ட ஞானிகளும் நல்லாசிரியர்களும் எங்கே இருக்கிறார்கள்? இன்றைக்கு எல்லாமே வியாபாரம்….” இந்தவகையில்.


‘பாலுள்ள பசுவின் மடியிலும் குருதியே கொசுவுக்கு உகந்தது’ என்று ஒரு சம்ஸ்கிருதக் கவிதைவரி உண்டு. எவருமில்லை என்பது எதையும் தேடாமலேயே சென்றடையும் முடிவு.எல்லாம் வியாபாரம் என்பது தன்னைவைத்து மட்டுமே உலகைப்பார்க்கும் நோக்கு. உண்மையில் மகத்தான பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகத்தான மனிதர்களும் இருக்கிறார்கள். நாம் தேடவேண்டும். நம் விழி திறந்திருக்கவேண்டும்.


ஊட்டியில் குரு வியாசப்பிரசாத் இருக்கிறார். தத்துவம் பயிற்றுவிக்க அவருக்கு நிகரான ஒரு பேராசிரியர் மிக அரிது. ஆனால் முழுமையான தனிமையில்தான் அவர் ஊட்டியில் இருக்கிறார். அதேபோல பலரைச் சொல்லமுடியும். அவர்களுக்கு தேடிச்சென்றுகற்கும் சிலரே மாணவர்களாக இருக்கிறார்கள்.


பொதுவாக இவ்வாறு வரும் ‘சலிப்பு’ கடிதங்களுக்கு நான் பதில் போடுவதில்லை. ஏனென்றால் அதற்குரிய ஓர் அமைப்பை, ஒரு மனிதரை அடையாளம் காட்டியதுமே ஞானத்தை கோரியவர்கள்  கேட்கும் முதல் கேள்வி அந்த ஞானாசிரியர்கள் தங்கள் வீட்டருகே, தங்களுக்கு ஓய்வு இருக்கும் நாட்களில், இலவசமாக ஞானத்தை வழங்கமுடியுமா என்றுதான். அதன்பின் லீவு கிடைப்பதில்லை, பிள்ளைகள் படிக்கிறார்கள், மழைபெய்கிறது என பல காரணங்கள் சொல்லப்படும்


அமெரிக்காவிலிருந்து ஊட்டியில் மூன்றுமாதம் தங்கி வேதாந்தம் கற்க வருகிறார்கள் வெள்ளைக்காரர்கள். கோவையில் இருப்பவர் “அவ்ளவு தொலை போணுங்களா? இங்க வரமாட்டாங்களா?” என்கிறார். தத்துவக்கல்வி தேடலற்றவர்களுக்கு அளிக்கப்படக்கூடாது. அதன்பொருட்டு தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்பவர்கள், இழக்கச் சித்தமானவர்கள் மட்டுமே அதை உண்மையில் கற்கமுடியும். அந்த அர்ப்பணிப்பு பெரும்பாலும் ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கே இன்று உள்ளது. பிரச்சினை இதுதானே ஒழிய அமைப்போ ஆசிரியர்களோ இல்லை என்பதல்ல


யோக ஆசிரியரும் என் நண்பருமான சௌந்தர் எழுதிய இக்குறிப்பு ஒர் அருமையான ஆசிரமச்சூழலை அறிமுகம்செய்கிறது


ஜெ


sivana

சிவானந்தர்


 


சௌந்தர் கடிதம்

 


அன்புள்ள ஜெயமோகன் ,


நம் ஆன்மாவோடும்,அகங்காரத்தோடும், ஒரே நேரத்தில் உரையாடக்கூடிய, கருணையும், வல்லமையும், ஒருங்கே படைத்த, ஞானாசிரியர்களை, காலந்தோறும் தோற்றுவித்தபடியே, இருக்கும் இந்த தேசத்தில், இன்னும் குருகுல மரபுகள் அப்படிப்பட்ட ஆசிரியர்களை வைத்து ஏதேனும் வகையில் ”உயர் கல்வியை’ முன்னெடுத்தபடியே தான் உள்ளனர், அப்படி ஒரு 2 மாத பயிற்சி தான் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமத்தில் நடத்தப்படும், ”’யோக-வேதாந்த பயிற்சி”.


சுவாமி வியாஸப்ரசாத் அவருடைய அத்வைத வகுப்புக் காணொளியில் குறுக்கும் நெடுக்குமாக இரு கோடுகளை போட்டு இடவலமான கோட்டில் காலம், வெளி மற்றும் நாம, ரூபம் { பெயர், உருவம்} என்பதையும், கீழிருந்துமேல் கோட்டில் சத் சித் ஆனந்தம் என்பதையும் எழுதி விளக்கத்தொடங்கும் முதல் 5 நிமிடத்திற்குள், நம்மை முழுவதுமாக அந்த வகுப்புக்குள் உள்ளிழுத்து விடுவார், சற்று ஆர்வம் இருப்பவர்கள் 20 காணொளிகளை முழுவதுமாக பார்க்காமல் இருக்கவே முடியாது. அப்படி ஒரு ஆர்வத்தில் தான் நான் மேலே சொன்ன பயிற்சி வகுப்புக்கும் வந்தேன்


நான் சார்ந்திருக்கும் சிவானந்தர் ஆஸ்ரமம், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக, இப்படி ஒரு தத்துவ பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது, எனினும்ஒரு யோக ஆசிரியராக மற்ற யோகா பயிற்சிகளுக்காக, கடந்த 10 வருடங்களாக சென்று வந்திருக்கிறேனே தவிர, மேலை மட்டும் கிழக்கின் தத்துவ பயிற்சிக்காக 2 மாதம் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.


உங்களுடைய கீதை உரையில் ” கீதா முகூர்த்தம்” பற்றி சொல்லியிருப்பீர்கள், அப்படி ஒரு முகூர்த்தம் அங்கே வாய்க்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தேன், பக்தியையும், கர்மயோகத்தையும், தன் வாழ்வாகவும், போதனையாகவும் கொண்ட சுவாமி சிவானந்தர் வடிவமைத்த வகுப்புகள் இவை என்பதால் ” பகவத் கீதா” வகுப்புகள் சற்று பக்தியை முன்னிறுத்தி நடத்தப்பட்ட்து, ஆனால் பதஞ்சலி யோக சூத்திரமும், இந்திய, மற்றும் மேலை தத்துவம், நடத்திய சுவாமி பத்மனாபானந்தரும், சுவாமி பரம் ப்ரியானந்தரும்,பக்திமரபை பின்னணியாக கொண்டிருந்தாலும், தூய அத்வைதிகளான குரு நித்ய சைதன்ய யதி,அரவிந்தர், போன்ற, ஞானிகளின், உரையையும், உவமானங்களையும்,மேற்கோள்காட்டி நேரிடையாக முன்வைத்து வகுப்புகளை நடத்தினர்.


இந்த இருவரின் வகுப்புகளிலும், மாணவர்கள் சிறிதுகூட கவன ச்சிதறல் இன்றி, கூர்மையாக அமர்ந்து கவனித்ததை காணமுடிந்தது. கீதை எனக்குள் திறந்துகொள்ளும் என்று நினைத்தேன், ஆனால் எதோ காரணத்தால் என்னால் கிரகிக்க முடியவில்லை, அதே சமயம், பதஞ்சலி யோக சூத்திரம் நடத்திய சுவாமி பத்மனாபானந்தர், முதல் வகுப்பிலேயே,” Oh My dear Boys, ”Pls. do not take any notes, i will write it in your mind” என்று சொல்லிவிடடார், அதே போல் இந்த 60 நாட்களுக்குள் அதை செய்தும் காட்டிவிட்டார், என்னைப்போலவே, பெரும்பாலான மாணவர்கள், 10-20 சூத்திரங்களை , மனப்பாடமாகவும், தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துப்பார்த்துக்கொள்ளவும் , வைத்துவிட்டார். இனி ஒவ்வொரு நாளும் இந்த 10 முதல் 20 சூத்திரங்கள் என்னை வழிநடத்தும் என்றே தோன்றுகிறது.


at ganga


பதஞ்சலி யோக சூத்திரம் ‘ கீதையை போலவே, எப்போதைக்குமான, அறிவியல்,தத்துவ, வாழ்க்கை வழிகாட்டி நூல் என்பதை ஞானாசிரியரின் அருகில் அமர்ந்து கேட்கும்போது மட்டுமே புரிகிறது. நீங்கள் நிச்சயமாக பதஞ்சலி நூலுக்கு ஒரு உரை ஆற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.


மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் உரையாடலாம் என்கிற நோக்கில், மூன்று முதன்மை ஆசிரியர்களையும், மாணவர்கள் தாங்கும் விடுதிகளுக்கு நடுவிலே உள்ள அறையில் தங்க வைத்துள்ளனர். இதனால் எப்போதும் ஏதேனும் ஒரு மாணவர் ஒரு ஆசிரியரிடம் உரையாடியபடி இருப்பதை காணமுடிந்தது.


முப்பது வருடங்களாக, இங்கே மேலை தத்துவ வகுப்புகள் நடத்தும் , சுவாமி பரம்ப்ரியானந்தர், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொண்டவண்ணம் இருக்கிறார் , கிரேக்க தத்துவம் தொடங்கிய காலம், முதல் சாக்ரடீஸ், பிளாட்டோ,அரிஸ்டாட்டில் இம்மானுவேல் காண்ட், வரையிலான, தத்துவ ஞானிகளை மையமாகவும்,அதிலிருந்து கிளை பிரிந்து இன்றைய தத்துவவாதிகள் வரை மிக அழகாகவும், உவமானங்கள் வழியாகவும் விளக்கினார்,


கிரேக்க புராண கதைகளிலிருந்தும், மதத்திலிருந்து, தத்துவம் தன்னை கொஞ்சம்,கொஞ்சமாக விடுவித்து, அறிவியல் ரீதியான, மற்றும் பகுத்தறிவு திசையில், இயற்கை தத்துவவாதிகள் எப்போது முதல் அடி எடுத்து வைத்தனர், அதன்மூலம், அறிவியல் துறை முழுமையாக வளர்வதற்கு எப்படி முன்னோடியாக இருந்தனர் என்பதையும், தொடர் உரையாடல் மூலம் புரியவைத்தார்,


எனினும், இந்திய ஞான மரபும், தத்துவ, சிந்தனை மரபும் அடைந்த உயரத்தையும், கண்டடைந்த நிறைவையும், முழுமையையும், மேற்கின் தத்துவ, சிந்தனையாளர்களில், ஒரு சிலர் தவிர , மற்றவர்கள் தொடமுடியவில்லை என்பது இவரது கருத்து. அதேபோல் ”அறிவியல்” வளர்ச்சி என்பது, சமுதாயத்தின், பெரும்பான்மை மக்கள் சிந்திக்கும் ஆற்றலும், அதன் மூலம், மொத்த சமுதாயமும் பரந்து பட்ட துறைகளில் முன்னகர்ந்து செல்வதே அறிவியல் வளர்ச்சி, ஆனால் இன்றோ, அறிவியல் செயல்பாடு மொத்தமும், வர்த்தக நோக்கிலும், மனித சுகபோக வாழ்க்கைக்கு பயன்படும், கருவிகளின் கண்டுபிடிப்பிலும் முடங்கிவிட்ட்து என்கிற வருத்தமும் இவருக்கு உள்ளது. அதற்கு மைய குற்றச்சாட்டாக இவர் முன்வைப்பது ”சிந்திக்க வைக்காத ”கல்வி முறை”.


untitled


75 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், இவரை நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன், ஒரு 3 நாள் பயிற்சி பட்டறை ஒன்றை சென்னையில் ஏற்பாடு செய்யலாம் என்கிற எண்ணம் வந்தது, அவரிடம் அனுமதி கேட்டேன், செப்டம்பரில் வகுப்புகள் எல்லாம் முடிந்து சற்று ஓய்வாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவாராம், அப்போது வருகிறேன் என்றார் ஒப்புதல் அளித்துள்ளார்.


பிரம்மசாரி கோபி என்கிற கேரளத்தை சேர்ந்த ஆசிரியர் உபநிஷத் வகுப்புகளை நடத்தினார், 10 உபநிடங்களின் மேலோட்டமான அறிமுகமும், ”ஈசாவாஸ்ய உபநிஷத்” முழுவதும் நடத்தினார், மிகமுக்கியமாக சுவாமி சிவானந்தரின் விளக்க உரையும், குரு நித்யா, மலையாளத்தின் எழுதிய உரையையும் தான் முக்கிய மேற்கோள் நூலாக பயன்படுத்தினார். அவருடைய அறைக்கு சென்றேன், குரு நித்யாவின் பெரும்பாலான புத்தகங்களை வைத்திருந்தார்.


இப்படியாக 2 மாதமும் வேகமாக நகர்ந்து முடிந்து விடுகிறது, 2 மாதத்திற்குள் அனைத்தையும் கற்று தேர்ந்துவிடலாம், என்று சொல்ல மாட்டேன், ஆனால், மேலும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும், எதை முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆரம்பகாடட அறிவையும் பெற, ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்வேன். மேலும் நூற்றுக்குமேற்படட சந்நியாசிகளுக்கு நடுவே,தொடர்ந்து கற்றுகொண்டேயும், ஏதேனும் செயலில் ஈடுபட்ட படியும், ஆஸ்ரம சூழலில் இருப்பது ஒரு பேரனுபவம். நம் நண்பர்களில் யாருக்கேனும் விருப்பமும், வாய்ப்பும் இருந்தால் நிச்சயமாக விண்ணப்பித்து போய் இருந்துவிட்டு வரவும், நான் ஏற்கனவே கூறியதுபோல


சுவாமி சிவானந்தர் தன் வாழ்நாளெல்லாம், பக்தியோகத்தையும், கர்ம யோகத்தையும், போதித்துவந்தவர் என்பதால் எங்கள் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு வகுப்பும், ஒரு சாந்தி மந்திரத்தில் தான் தொடங்கும், கீர்த்தனை அல்லது ஒரு பஜனை பாடலில் தான் முடியும், அதேபோல 2 மணிநேரம் நிச்சயமாக கர்மயோகாவில் ஈடுபட வேண்டியிருக்கும். [ ஆஸ்ரமத்தில் புல்லு வெட்டுவதால் , என் அறிவு எப்படி வளரும் என்கிற எண்ணமும், பக்தியோகத்தில் சிறு அளவிலேனும், விலக்கமும் இருப்பவர்கள் தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம்]


இது அத்தனையும் தாண்டி ”கங்கை” நம் அறையிலிருந்து கங்கையை பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருப்பதும், நினைத்தவுடன் ஆஸ்ரம படி இறங்கினால் கங்கையில் நீந்தி குளியல் போடுவதும் வரம் அன்றி வேறில்லை.


இது அத்தனையும் சேவை மனப்பான்மையோடும், குருதேவர் தொடங்கிய ” ரிஷி யக்ஞம்” எனும் இப்பணி எப்போதும் நின்றுவிடக்கூடாது என்கிற திடமான நல்லெண்ணத்தோடும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக நடத்திவருகின்றனர்.


விண்ணப்பிக்க இந்த லிங்கை தொடர்க…. http://www.sivanandaonline.org/public_html/?cmd=displayrightsection&section_id=1707&format=html


 


siva


அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் முதல் நாள் வகுப்பில் இந்த மந்திரத்தை சொல்லித்தான் வரவேற்றனர். மற்றும் ” Yoga -Vedanta Forest Academy”……. பதாகையின் முகப்பில் எழுதப்பட்டிருப்பதும் இதுவே.


ஈசாவாஸ்ய உபநிஷத்தின் 11வைத்து மந்திரம்,


”அறிவையும்,பேதமையையும், ஒருங்கே அறிந்தவன்,

பேதமையின் வழி மரணத்தை அடைகிறான்

அறிவின் வழி அமரத்துவம் அடைகிறான்.

”வித்யயா அம்ருதமச்னுதே ”


சௌந்தர்


 



சத்யானந்த யோகா மையம்




11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு




வடபழனி




சென்னை




அழைக்க:- 9952965505



 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2017 11:34

தேவதேவனின் மரங்கள்

de


 


வணக்கம்.



உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பூவுலகு சூழலியல் இதழின் புதிய செயலியில் ‘கவிஞர் தேவதேவனின் மரங்கள்’ என்ற தலைப்பில் புதிய தொடர் வெளியாகிறது. தேவதேவன் எழுதிய மரம் பற்றிய கவிதைகள் அனைத்தும் இத்தொடர் மூலம் தொகுக்கப்படவிருக்கின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.poo.ulagu

deva
தர்பூசணிப்பழம் வெட்டி தேவதேவன் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. தேவதேவனின் நூறு கவிதைகளைத் தேர்வுசெய்து மின்னூலாக வெளியிடும் முயற்சி வெற்றி பெறவில்லை.

https://devadevanpoems.pressbooks.com – இந்த இணைப்பில் அவற்றை ஓரளவு இலகுவாக வாசிக்க முடியலாம்.


நன்றி.



ஸ்ரீனிவாசகோபாலன் வேதாந்த தேசிகன்  



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2017 11:32

May 11, 2017

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

Jeyakanthan


காலச்சுவடு பதிப்பகம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சிலமனிதர்கள் நாவலை செவ்வியல் வரிசையில் வெளியிட்டிருக்கிறது. ஜெயகாந்தனின் புத்தகங்கள் எதற்கும் இத்தனை அழகிய பதிப்பொன்று வந்ததில்லை. அவர் தன் நண்பர்களின் நட்பை முதன்மையாகப் பேணுபவர் என்பதனால் தன்னுடைய வழக்கமான பதிப்பாளர்களை மாற்றியதில்லை. அவர்களுக்கு அட்டை என்பது அழகான ஒன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.


ஜெயகாந்தனின் நூலை அழகிய தயாரிப்பில் பார்த்தது எனக்கொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒருவருக்கு அழகிய நூலொன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரே வருகிறது என்பதே விந்தையான ஒன்று. ஜெயகாந்தன் இருந்து இந்த பதிப்பை பார்த்திருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தயங்காமல் சொல்லலாம். நூல் வடிவமைப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.


உபால்டு கோட்டோவியமாக வரைந்த முழுப்பக்க விளம்பரம் ஒன்று 1976-ல் தினத்தந்தியில் வெளிவந்தது. ஒரு கார் தொலைவில் வருகிறது. சப்பையான காண்டஸா க்ளாசிக் அல்லது இம்பாலா. சிறிய உடல் கொண்ட ஒரு பெண் புத்தகங்களை அடுக்கியபடி சாலையோரம் நின்றிருக்கிறாள். கீழே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் எழுத்துக்கள். அந்த கோட்டோவியம் அளித்த கற்பனையும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற சொல்லாட்சியில் இருந்த அழகிய தாளமும் என்னைக் கவர்ந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நினைவில் நிற்கும்படி அந்த விளம்பரம் என்னுள் பதிந்திருக்கிறது.


அந்நாட்களில் ஜெயகாந்தன் குமுதம் வார இதழில் ஒரு பக்கத் தொடர் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். நான் அவற்றின் தீவிர வாசகனாக இருந்தேன். அன்று எங்கள் வீட்டருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் தமிழாசிரியராக வந்தவர் எனக்கு ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது என்ற நாவலை வாசிக்கத் தந்தார். ஜெயகாந்தனின் மிக மோசமான நாவல் என்று அதைச் சொல்லலாம். அவரது முதல் நாவல் முயற்சி அது. ஆயினும் அது எனக்கு பெரிய உளக்கிளர்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஒரு மாதத்தில் அன்றுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களையும் படித்தேன். மூன்று நாவல்கள் அவருடைய வெற்றிகரமான ஆக்கங்கள் என்று எனக்குத் தோன்றியது. முறையே பாரீஸுக்குப்போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்.


சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், சுந்தரகாண்டம் ஆகியவற்றை இணைத்து ஒரு நாவலாக வாசிக்கலாம். ஆனால் இந்த நாவலே கூட தன்னளவில் முழுமையான படைப்பு. அக்னிப்பிரவேசம் என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையும் அதை ஒட்டி வந்த விவாதங்களும் இந்த நாவலுக்கு வழிவகுத்தன. இது வெளி வந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி அதனாலேயே வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அக்னிப்பிரவேசம் கதை அன்று உருவாக்கிய விவாதத்தை இன்று மேலும் பெரிய வரலாற்றுப் பின்னணியில் பார்க்க முடியும்.


அந்தக் காலகட்டத்தில் ஆயிரமாண்டுக்கால இற்செறிப்புப் பண்பாடு உடைபட்டு, நூறாண்டுக்கால பெண்கல்வி இயக்கம் கனிகளை அளிக்கத் தொடங்கியிருந்தது. பெண்கள் கல்வி கற்க வெளியே சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் வேலைக்கு போகலாமா கூடாதா என்பதைப்பற்றிய ஆழ்ந்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போல இந்தியச் சூழலில் பிராமணப் பெண்கள் தான் அதிகமாக படிக்கவும் வேலைக்குச் செல்லவும் முன்வந்தார்கள். வேளாளர்கள் முதலியார்கள் போன்றோர்கள் இன்னும் இறுக்கமான குலநெறிகளுக்குள் தான் பெண்களை வைத்திருந்தார்கள். பிராமணர்களின் ஆசாரியர்களான காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்பதையும் வேலைக்குச் செல்வதையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஜெயகாந்தனின் நாவல் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கூட சங்கராச்சாரியார் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதும் கல்வி கற்பதும் வேலை செய்வதும் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக ஆக்கிவிடும் என்று கருத்துரைத்திருந்தார் என்பதை நினைவுகூரவேண்டும்


அன்றைய பிராமணர்களுக்கு ஒரு பெரிய சங்கடம் இருந்திருக்கலாம். அவர்களுடைய மதம், ஆசாரம் நம்பிக்கை ஆகியவை பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கச் சொல்லின. அன்று உருவாகி வந்த புதிய வாய்ப்புகளும் அதன் லௌகீக சாத்தியங்களும் பெண்களை கல்வி கற்க வெளியே செல்லும்படித் தூண்டின. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணச் சந்தையில் பெரிய மதிப்பு இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதன் வழியாக குடும்பங்கள் மிக எளிதாக பொருளியல் சிக்கல்களிலிருந்து விடுபடுவதை உணரமுடிந்தது. மேலும் மேலும் பிராமணப் பெண்கள் கல்விக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் ஆசாரியனின் மறுப்பை எதிர்த்து பிராமணர்கள் வாதிடவும் இல்லை. ஒரு குற்றவுணர்ச்சியுடன் ஒரு மௌன அலையாகவே அவர்கள் மீறிக்கொண்டிருந்தனர்.


அந்தச் சூழலில் தான் ஜெயகாந்தனின் கதை வருகிறது. அதில் எளிய பிராமணப்பெண், அம்மன் சிலை போன்றவள், ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளை அவன் வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் இல்லை. அவளுக்குப் புதிய உலகத்தை எதிர்கொள்ளத் தெரியவில்லை, புதியசூழலை கையாளத்தெரியவில்லை என்பதனால் அவள் அவனுக்கு உடன்படுகிறாள். ஒரு வலுவான “நோ” வழியாக அவள் கடந்து வந்திருக்கலாம். ஆனால் அவள் காலாகாலமாக வீட்டில் அடைபட்டிருந்த பெண். அவளால் எதையும் மறுப்பது இயலாது. கைகால் உதற சொற்கள் தொண்டைக்குள் தாழ்ந்து போக மறுக்கத் தெரியாமல் இருந்த ஒரே காரணத்தாலேயே அவள் அவனுக்கு வயப்படுகிறாள். கூடவே அவளுடைய பருவ வயதின் விருப்பமும் இணைந்து கொள்கிறது.


sila-nerangalil-sila-manithargal


இந்தக் கதை பெண்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லலாமா கூடாதா என்று அன்றிருந்த விவாதத்தின் ஒரு பகுதியாக ஆனதனாலேயே அத்தனை கொந்தளிப்பையும் கிளப்பியது. சொல்லப்போனால் கதைக்கு வெளியேதான் விவாதம் நடந்தது. பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்றால் இத்தனை எளிதாக நெறி அழிவார்களா? வீட்டைவிட்டு வெளியேறும் பெண்ணுக்கு தன் தெரிவுகளும் தன் வழியும் தெளிவாக இருக்காதா? தன்னளவில் பெண் பலவீனமானவள் தானா? அவ்வாறு ஒரு பெண் தவறிவிட்டால் அதை அக்குடும்பம் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? அது வழிவழியாக வந்த குலநெறிகளுக்கும் ஆசாரங்களுக்கும் எதிரானதாக ஆகாதா? அவளை அச்செய்தியை மறைத்து ஒருவனுக்குத் திருமணம் செய்துவைப்பது ஏமாற்றுவது ஆகுமா? அவ்வாறு ஒருவன் திருமணம் செய்து கொண்டபின் தெரியவந்தால் அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இப்படி பல கேள்விகள்.


அன்றைய விவாதத்தில் இருசாராருக்கும் சொல்வதற்கான தரப்புகள் இக்கதையில் இருந்தன. பெண்கள் வீட்டைவிட்டு சென்றால் அவர்களால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது என்பவர்களுக்கு இந்தக் கதை ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. பெண்ணின் கற்பு என்பது உள்ளம் சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது அல்ல என்று வாதிடும் முற்போக்குத் தரப்பினருக்கும் ஒரு மேற்கோள் கதையாக அமைந்தது. அதை மேலும் விரிவு படுத்தி ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் அந்தக் கேள்வியை பல்வேறு வரலாற்று பின்புலத்தில் வைக்கிறது.


ஜெயகாந்தன் மார்க்சியர் என்றாலும் வரலாற்று வாதத்தில் நம்பிக்கையற்றவர். எனவே இக்கதை அது நடக்கும் காலத்தில் முன்பு செல்வதே இல்லை. மரபையோ வரலாற்றையோ ஆராய்வதில்லை. நடைமுறைத்தளத்தில் வைத்தே கதையை பேசுகிறது. இந்தக் கதை எந்தவகையிலும் அதற்கு முன்பிருந்த மரபையோ தொன்மங்களையோ குறிப்புணர்த்துவதில்லை, விவாதிப்பதில்லை. ஆனால் இதற்குள் அன்றிருந்த மரபுகள் அனைத்தும் உள்ளன. அனைத்து வகையான பாலியல் மீறல்களையும் அனுமதித்துக் கொண்டு மேலே ஒரு ஆசாரவாதத்தை போர்த்திக் கொண்டு இருக்கும் மரபின் முகமாகவே இதில் வெங்கு மாமா வருகிறார். வெறும் லௌகீக அற்பப் பிறவிகளாக வாழும் சூழலின் பிரதிநிதியாக கங்காவின் அண்ணா வருகிறார். வீட்டுக்குள் அடைபட்டு சுயசிந்தனையற்றிருக்கும் பெண்களின் முகமாக அம்மா. இந்த மூன்று தரப்புகளுக்குள் முட்டி முட்டி அலைக்கழியும் நவீனப்பெண் கங்கா. பழைய காலகட்டத்தில் முளைத்து புதிய காலகட்டத்தில் இலைவிடும் தளிர்.


ஜெயகாந்தன் எழுதிய அனைத்து கதைகளுக்கும் யுகசந்தி என்று தலைப்பு கொடுத்துவிடலாம். சமூக மாறுதலின் ஒரு காலகட்டத்தில் அந்த விழுமிய மாற்றங்களை தன் வாழ்க்கையிலேயே சந்திக்க நேரும் கதாபாத்திரங்கள் அவரால் எழுதப்பட்டவர்கள். சரிதவறுகளும் செல்வழிகளும் குழம்பிக்கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தன்னையும் சூழலையும் மறுபரிசீலனை செய்து அழுதும் சிரித்தும் தங்கள் வழியைக் கண்டடைபவர்களும் வீழ்பவர்களும். ஆனால் அடிப்படையில் ஒரு மார்க்சியர் என்பதனால் அவர் எப்போதும் நம்பிக்கை சார்ந்த பார்வையையே தேர்ந்தெடுக்கிறார். அதற்கு ஒரே விதிவிலக்கென்று சில நேரங்களில் சில மனிதர்களையே சொல்ல முடியும். இது கங்காவின் மாபெரும் வீழ்ச்சியின் கதை.


வெளிவந்த காலத்தில் சிறுபத்திரிக்கை சார்ந்த இலக்கியச்சூழலால் இந்த நாவல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பல காரணங்கள். சிற்றிதழ்ச் சூழல் அன்று தன்னை மையப்போக்கிலிருந்து பிரித்துக் கொண்டு தனியடையாளத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. எது இலக்கியம் என்பதை விட எது இலக்கியம் அல்ல என்பதுதான் அன்றைய பேச்சுகளில் முக்கியமானது. பெரும்பாலும் மேற்கத்திய இலக்கியங்களைச் சார்ந்து ஒரு இலக்கியப்பார்வையை இங்கு உருவாக்க முடியுமா என்று முன்னோடி முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலம். தீவிர இலக்கியம் என்பது எல்லாவகையிலும் பொதுமக்களின் ரசனைக்கு எதிரானதாகவும் மாற்றானதாகவும் இருக்கும் என்ற நிலைபாடு ஓங்கியிருந்தது.


அத்துடன் அன்றைய சிறுபத்திரிகையின் வாசகர்கள் என்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர். அவர்கள் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை விரும்புபவர்கள். பொது ரசனையை எவ்வகையிலும் தங்களுடன் இணைக்க விரும்பாதவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களோ ஒதுக்கப்பட்டவர்களோ ஆகவே அவர்கள் இருந்தனர். ஆகவே வாசிப்பு என்பதும் அழகியல் நிலைபாடு என்பதும் பொதுப்போக்கு மீதான ஒரு வஞ்சமாகவும் வன்மமாகவும் அவர்களிடம் இருக்கவும் செய்தது என்று இப்போது தோன்றுகிறது.


ஆகவே அவர்களின் நிராகரிப்புகளும் மிகக்கூர்மையாக இருந்தன. வெற்றி பெற்றவர் என்பதனாலேயே அதிகமாக வாசிக்கப்பட்டவர் என்பதனாலேயே ஜெயகாந்தன் அவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். சிறுபத்திரிக்கைச் சூழல் சார்ந்த மயக்கங்கள் கலைந்து அதை பகல் வெளிச்சத்தில் வந்து பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டிருக்கும் இன்று, சிறுபத்திரிக்கை சூழலின் உருவாக்கமாகிய நான் அன்றைய சிற்றிதழ்சார் வாசகர்களின் ‘பாடல்பெற்ற’ ரசனைக்கூர்மை மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருக்கிறேன்.


7829


முக்கியமாக முன்னோடிகள் வகுத்த வழியிலேயே பெரும்பாலும் அவர்களுடைய ரசனை நிகழ்ந்தது. அவர்கள் அன்று அதிகபட்சம் ஐம்பது பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகவே இருந்தனர். அக்குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஒருசிலரின் கருத்துக்களையே பிறர் பகிர்ந்து கொண்டனர். உதாரணமாக மௌனி மணிக்கொடியிலும் பின்னர் தேனியிலும் எழுதிய காலகட்டத்தில் அவருடைய கதைகளை அன்றிருந்த மணிக்கொடியினரோ பிறரோ அடையாளம் கண்டுகொள்ளவோ பாராட்டவோ இல்லையென்று எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் க.நா.சு. அவை முக்கியமான கதைகள் என்று சொல்ல ஆரம்பித்தார். மௌனியின் முக்கியத்துவம் தொடர்ந்து பேசி அவரால் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பின்னரே செல்லப்பா இணைந்து கொண்டார். அவர்கள் இருவருமே மௌனியின் இடத்தை தமிழில் நிறுவினார்கள். ஒருவேளை கு.ப.ரா. போல மௌனி முன்னரே இறந்துவிட்டிருந்தால் தனக்கு இலக்கியத்தில் வந்த அந்த முக்கியத்துவம் தெரியாமலேயே சென்றிருப்பார்.


இவர்களின் வாசிப்பு சார்ந்த உளநிலைகள் மிகச்சிக்கலானவை. தான் மட்டுமே தேடி வாசிக்கும் ஒன்று அபூர்வமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று இவ்வாசகன் நினைக்கிறான். தனக்குரிய இலக்கியமே எங்கோ பதுக்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தேடி நூலக அடுக்குகள் வழியாக தான் சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு கனவு அவனை இயக்குகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவகையில் எங்கோ மறைந்திருக்கும் புகழ் பெறாத ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து தங்களுடையவனாக சொல்லும் ஒரு பாவனை அவனிடம் கைபடுகிறது. மௌனியும் பின்னர் நகுலனும் பின்னர் சம்பத்தும் ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது ரசனையின் தேடல் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு புனைவை உருவாக்கும் முயற்சி மட்டும் தான்.


ரசனை என்பது அனைவரும் கவனிக்கும் மேடையின் உச்சியில் நின்றிருப்பதால் ஜெயகாந்தனை புறக்கணிக்காது. எவராலும் கவனிக்கப்படாமல் இருந்ததனால் ப.சிங்காரத்துக்கு மேலதிக அழுத்தத்தையும் கொடுக்காது. அந்த சமநிலை அன்றும் இன்றும் சிற்றிதழ் சூழலில் இருந்ததில்லை. ஜெயகாந்தனை வாசிப்பதும் விவாதிப்பதும் சரி ஒரு அறிவு ஜீவியின் அடையாளத்தை தருவதில்லை என்பதனால் அவர் புறக்கணிக்கப்பட்டார், படுகிறார். அவர் விவாதிக்கப்பட்டு, படைப்புகளின் நுட்பங்கள் முழுமையாக வாசிக்கப்பட்டு, கடக்கப்படவில்லை.


அத்துடன் சமகால சர்ச்சைகள் பெரும்பாலும் படைப்புகளை மறைத்துவிடுகின்றன. படைப்புகளின் மீது பொதுக்கருத்து எனும் பெரும் கம்பளத்தை அவை போர்த்திவிடுகின்றன. பெண்ணின் சுதந்திரம் கற்பு ஆகிய இரு கோணங்களிலேயே அன்று ஜெயகாந்தனின் இந்நாவல் எதிர்கொள்ளப்பட்டது. அதை ஒட்டியே அனைத்து கருத்துகளும் வெளிவந்தன. ஆகவே இது அதைப்பற்றிய நாவல் மட்டுமே என்று முழுமையாகவே வகுக்கப்பட்டுவிட்டது. அது நாவலுக்கு மிக மேலோட்டமான ஒரு வாசிப்பை அளித்தது. அவ்வகையில் பெரும்புகழ் பெற்ற நாவல் அப்பெரும்புகழாலேயே மறைக்கப்படுகிறது என்பது உண்மைதான்.


ஐம்பதாண்டுகாலம் இந்நாவல் வாசிக்கப்பட்டதை இன்று பார்த்தால் அது இந்நாவலுக்கு நியாயம் செய்ய வில்லை என்று தான் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் இந்தப் பொதுவாசிப்பின் திரையைக் கிழித்து விலக்கி மேலதிக வாசிப்பை அளிப்பதும் புதிய வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்து கொடுப்பதும் விமர்சகனின் வேலை. ஆனால் அத்தகைய கூரிய விமர்சனங்கள் தமிழில் எப்போதும் இருந்ததில்லை. க.நா.சு. சுந்தர ராமசாமி போன்றவர்கள் இலக்கிய சிபாரிசுக்காரர்கள். இலக்கியங்களைச் சுட்டிக் காட்டுவதன் வழியாக ஒரு பொதுச் சித்திரத்தை உருவாக்க முனைந்தவர்கள்.. இலக்கியப் படைப்புகளுக்குள் சென்று பிறர் வாசிக்காதவற்றை வெளியே கொண்டு வைத்து புதிய சாத்தியங்களை நோக்கித் திறக்கும் வல்லமை கொண்ட எழுத்துக்கள் அல்ல அவர்களுடையவை. தமிழில் அத்தகைய விமர்சகனின் பெருங்குறை எப்போதும் இருந்துகொண்டிருக்கிற்து என்பதற்கு ஜெயகாந்தனின் இந்நாவல் மீதான வாசிப்பு ஒரு முக்கியமான சான்று.


நீண்ட இடைவெளிக்குப்பின் இந்நாவலை இன்று வாசிக்கையில் இதன் மொழிநடை புதிதாக இருப்பதுபோல் தோன்றியது வியப்பளித்தது. அதற்கான காரணம் என்ன என்று என் கோணத்தில் யோசித்தேன். செம்மை நடையில் எழுதப்பட்ட பகுதிகள் தான் எப்போதும் விரைந்து காலாவதியாகின்றனவோ என்று தோன்றியது. ஏனெனில் பேச்சு மொழி என்னும் உயிர்த்துடிப்பான ஒரு மொழிபிலிருந்து அறிவு பூர்வமாக அள்ளப்படுவது அந்த செம்மைநடை. அந்தக் காலகட்டத்திலுள்ள பொதுவான பிற மொழிபுகளின் பாதிப்புள்ளது அது. அன்றைய பத்திரிகை நடை, மேடைப்பேச்சுநடை, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்பட்ட மொழி ஆகிய பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன.


ஜெயகாந்தன் இந்நாவலை கங்காவின் பேச்சு மொழியில் அமைத்திருக்கிறார். அந்த மொழி பெரும்பாலும் அப்படியேதான் இன்றும் புழங்குகிறது. இந்நாவல் உருவாக்கும் காலகட்டத்தின் நேரடிப் பிரதிநிதித்துவம் அந்த மொழிக்கு இருக்கிறது. ஆகவே அந்த மொழியினூடாக அந்தக் காலத்திற்குள் செல்ல முடிகிறது. கங்காவுடன் ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபட்ட உணர்வை இந்நாவல் அளிக்கிறது.


jeyakanthan


 


இன்றைய வாசிப்பில் இது பெண்சுதந்திரம் பற்றிய நாவல் அல்ல என்றே தோன்றுகிறது. இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணில் பாலியல் தேடல் பற்றிய நாவலும் கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான் பெரும் படைப்புகளில் ஒன்று என்று இதை தயங்காமல் சொல்வேன்.


இக்கோணங்களில் இதுவரை இந்நாவல் வாசிக்கப்பட்டதில்லை. கங்கா தேடுவது தனக்கென ஒர் அடையாளத்தை. காலூன்றி நின்று கிளைவிரிக்க ஒரு பிடி மண்ணை. அதை ஒரு ஆண் தான் உனக்குக் கொடுக்க முடியும் என்று அவளிடம் மரபு சொல்கிறது. அவள் அதைத் தேடி கண்டடைந்து அங்கு நிற்க முயல்கிறாள். அது மாயை என்று பெரும் வலியுடனும் துயரத்துடனும் அவள் கண்டடைகிறாள். பிறிதொரு அடையாளத்தை தனக்கென தேடிக்கொள்ள அவளால் இயலவில்லை. மூர்க்கமாகத் தன்னைக் கலைத்துக் கொள்கிறாள்.


இன்னொரு கோணத்தில் வாசித்தால் இது கங்காவின் பாலியல் சுதந்திரத்துக்கான தேடலைக் காட்டுகிறது. அன்று காரிலிருந்து இறங்கி வருகையில் அவள் வாயில் ஒரு சூயிங்கம் இருந்தது. தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போது கூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அம்மா அதை துப்பு என்கிறாள். அது ஒரு அசைபோடல். பெண்ணுடலின் கொண்டாட்டம்.. ஆனால் அவளுக்கே அது தெரியவில்லை.


அம்மா அழுது ஊர்கூட்டி குடும்பத்தாலும் சுற்றத்தாலும் பழிக்கப்பட்டு கெட்டுப்போன பெண்ணாக தன் வாழ்க்கையை அவள் அமைத்துக் கொள்ளும்போது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய பாலியல் விடுதலையைத்தான் அவள் தேடுகிறாள். இயல்பான சகஜமான பாலியல் உறவொன்றுக்கான தேடலே அவளை மீண்டும் பிரபுவிடம் கொண்டு சேர்க்கிறது. மேலும் நுட்பமாகப் பார்த்தால் பாலியல் வேட்கை அதில் உள்ளது. முதல் நாள் முதல் அணுகலிலேயே பிரபுவை அவள் ஏற்றுக்கொண்டது. பெண்ணென அவளில் உறையும் ஒன்றின் இயல்பான விருப்பத்தால் தான் அவளுக்குரிய ஆண் அவன். அதை அவள் உடல் அறிந்திருந்தது. உள்ளத்தின் ஆழம் அறிந்திருந்தது. பிறிதொருவன் அதேபோல வந்து அவளை அழைத்திருந்தால் சீறி எழுந்திருக்ககூடும்.


அவனை அவள் ஏற்றுக் கொள்வது சமூகமோ எதிர்காலமோ கற்பிக்கப்பட்ட நெறிகளோ தடையாக இருக்கவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் எண்ணத்தில் வருமளவுக்கு அவளுக்கு வயதாகி இருக்கவில்லை. பின்னர் அவனை மீண்டும் காண்பது வரை அவளுக்குள் அந்த சூயிங்கத்தை அவள் ரகசியமாக மென்று கொண்டு தான் இருந்தாள். உனது கணவன் கந்தர்வ முறைப்படி உன்னுடன் இருந்தவன் தான் முடிந்தால் அவனைத் தேடிக் கண்டுபிடி என்று வெங்குமாமா சொல்லும்போது அவள் அவனைத் தேடிச் செல்வது, மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வீம்பினால் தனது ஆளுமையை தேடிக் கண்டடைய வேண்டும் என்ற வெறியினால். உள்ளாழத்தில் அது பாலியல் விருப்பினாலும் கூட.


அந்நெருக்கத்தின் ஒரு கட்டத்தில் மானசீகமாக அவனிடம் தன் உடலை எடுத்துக் கொள்ளும்படி அவள் மன்றாடிக் கொண்டே இருக்கிறாள். எனது படுக்கையில் உனக்கு இடமிருக்கிறது என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அதை நேரடியாகச் சொல்லும்போது அவன் துணுக்குற்று விலகுகிறான். உண்மையில் அவள் உடைந்து சிதறுவது அதிலிருந்து தான். அவளுடைய சுய கௌரவமா தனித்தன்மையா பாலியல் வேட்கையா எது அவமதிக்கப்பட்டது என்ற வினாவை இந்நாவலில் இறுதியில் எடுத்துக் கொள்ளும்போதுதான் அதுவரைக்கும் அந்த நாவலின் உள்விரிவுகள் பல பகுதிகளைக் கொண்டு திறந்து கொள்கின்றன. அவளின்சிதைவு ஒரு தற்கொலையா ஒருவகையான பழிவாங்கலா அல்லது உடைவா பல கோணங்களில் இன்று இந்த நாவலை நாம் வாசிக்க முடியும்.


இத்தகைய வாசிப்பு ஒன்றை அன்றைய சிறுபத்திரிகை சூழல் ஜெயகாந்தனுக்கு அளிக்கவில்லை என்பது ஒருவகை அநீதி. அதற்கு அன்றைய சிறுபத்திரிகை சூழலை ஆண்டு கொண்டிருந்தவர்களில் முன்னோடிகள் ஒரு காரணம். இன்று புதிய கோணத்தில் இந்நாவலை வாசிக்கலாம். புதிய கண்டடைவுகளை நோக்கிச் செல்லவும் கூடும். எந்தச் சிற்றிதழ் விமர்சகன் விழிமூடினாலும் தமிழ்ச் சூழலில் இந்நாவல் அளவுக்கு பெண்களின் ஆளுமையை விழைவை சுதந்திரத்தை பாலியல் வேட்கையை விவாதித்த பிறிதொரு நாவல் இல்லை என்ற உண்மை நிலைநிற்கத்தான் செய்யும்.


இதனுடன் ஒப்பிடுகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட மோகமுள் போன்றவை உள் மடிப்புகளற்ற uணர்வுப்பெருக்கான படைப்புகள். தளுக்கினால் மட்டுமே பெரும்பகுதியைக் கடந்து சென்றவை என்பதைக் காணலாம். குறிப்பாக இன்றூ ஜானகிராமனின் மோகமுள் போன்ற நாவல்களின் உரையாடல்கள் அர்த்தமற்ற வெறும் வளவளப்புகளாக சலிப்பை ஏற்படுத்துகையில் சில நேரங்களில் சில மனிதர்களின் கூரிய உரையாடல்களும் சுய விமரிசன நோக்கு கொண்ட எண்ணங்களும் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் தீவிரமும் பலமடங்கு மேலான ஒரு முதன்மைப் படைப்பாளியை நமக்குக் காட்டுகின்றன. வரலாற்றில் அந்த இடம் என்றும் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். அதை எனக்கு உறுதிப்படுத்திய ஒன்று என்று இந்நூலுக்கு சுரேஷ்குமார் இந்திரஜித் அளித்த முன்னுரையைச் சொல்வேன்.


சுரேஷ்குமார இந்திரஜித்


சுரேஷ்குமார் இந்திரஜித்தை தமிழ் சிறுபத்திரிகை சூழலின் மனநிலைகளின் மையத்தை சார்ந்த ஒருவர் என்று அடையாளப்படுத்தலாம். இந்நாவலை இப்போதுதான் அவர் வாசிக்கிறார் என்பது தெரிகிறது. இன்று வாசிக்கையில் ஒரு தேர்ந்த சிற்றிதழ் வாசகன் ஒருவன் இந்நாவலில் கண்டு கொள்ளும் பெரும்பாலான அனைத்து நுட்பங்களையும் அவருடைய் வாசிப்பு கண்டடைந்து முன்வைக்கிறது. நேற்றைய முன்னோடிகள் ஜெயகாந்தனுக்குச் செய்த புறக்கணிப்புக்கு ஒரு பிராயச்சித்தமாகவும் சுரேஷ்குமாரின் முன்னுரை அமைந்துள்ளது. கூரிய சொற்களில் முற்றிலும் புதிய பார்வையில் ஜெயகாந்தனை மீட்டு முன்வைக்கும் சுரேஷ்குமாரின் இந்த முன்னுரை காலச்சுவடு இந்நாவலுக்கு அணிந்திருக்கும் கட்டமைப்புக்கு நிகரான பெறுமதியுள்ளது. அதன் பொருட்டும் இதன் தொகுப்பாசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2017 11:35

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

TARAS


அன்புள்ள ஜெ.


நீங்கள் பரிந்துரைக்கும் நாவல்கள் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன்.. அக்னி நதி, பிறகு ஆரோக்ய நிகேதன்…


முந்தையதைவிட இரண்டாவது மனதுக்கு நெருக்கமாக இருந்தது.. அதிலும் அதன்இறுதிப் பகுதி – மருத்துவர் இறந்த சில நாட்களில் மனைவியும் இருக்கிறார்.. ஏதோ ஒரு தகவல் போல ஒற்றைவரியில் சொல்லப்பட்டிருக்கிறது.. ஆனால் கதையின்மிக அழுத்தமான வரி இது என்றே எனக்குப் பட்டது..


மகனை இழந்தவள்; கணவனின் காதலைப் பெறமுடியாதவள்.. ஆனால் கணவருடன் ஏதோஒருவகையில் ஆழப்பிணைந்தவள்.. மரணம் பற்றி அறிந்த மருத்துவத்தால்,மனதைப்பற்றி அறியமுடியவில்லை.. அந்த ஒருவரியில் அந்தக்கதாபாத்திரம்விஸ்வரூபமெடுத்துவிடுகிறது..


நன்றி,

ரத்தன்


 


bibhutibhushan_bandopadhyay_300

விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய


 


அன்புள்ள ஜெ


உங்கள் சிபாரிசில் வனவாசியை வாசித்தேன். அற்புதமான நாவல். அதன் உள்ளடக்கம் என்பது பசுமைதான். காடுதான். காட்டின் வர்ணனைகள் வழியாகவே அது ஒரு அற்புதமான அனுபவமாக ஆகிவிடுகிறது. அதிலும் காட்டில் மலர்களைப்பயிர் செய்யும் ஒருவரைப்பற்றிய சித்திரம் ஆன்மிகமான அனுபவம். ஒரு பெரிய குரு அவர் என்று தோன்றியது.


உங்கள் தளம் இன்று ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இலக்கியம் என்னும் தலைப்புக்குக் கீழே எத்தனை எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தொடர்ச்சியாக அறிமுகம்செய்யப்படுகிறார்கள் என்று பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. ஒருவகையில் இந்திய இலக்கியம் என்ற ஒன்றைப்பற்றி தமிழில் பேசுபவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். பேசிப்பேசி ஒரு பெரிய மனச்சித்திரத்தையே உருவாக்கிவிட்டிருக்கிறீர்கள்


நன்றி


பாஸ்கரன் தட்சிணாமூர்த்தி


***


இருவகை எழுத்து


ஆரோக்கியநிகேதனம்


வன லீலை


உமாகாளி


புதியநாவல் (உரை)


ஆரோக்கியநிகேதனம்


நேற்றைய புதுவெள்ளம்


ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்


கடிதங்கள்


விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’


செவ்வியலும் இந்திய இலக்கியமும்


 ***


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2017 11:33

நுண்சொல் -கடிதங்கள்

manu


 


மதிப்பிற்குரிய ஜெ


வணக்கம்


தங்கள் ‘அமுதமாகும் சொல்கட்டுரை  மிக தெளிவை அளித்தது . தலைப்பே சட்டென்று நான் தெரிந்து கொள்ள வேண்டியதை உணர்த்திவிட்டது . இப்பதிவில் நீங்கள் கூறி இருப்பதை தெரிந்து கொள்ளவே ஊட்டி சந்திப்பில் ..கவிதை.. மந்திரம் ..என்று கேட்க முயற்சித்தேன் .சரியாக  கேட்க தெரிய வில்லை .


ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை எப்படி சட்டென்று வெடிகுண்டு போல் அனைத்து   கடந்த காலத்தையும் கலைத்து போட்டு புது உத்வேகத்தையும் வாழ்விற்கு புது பரிமாணத்தையும் அளிக்க முடியுமென்பது அறிவிற்கு கொஞ்சம் புதிராகவே இருந்தது , ஆனால் அது அனுபவத்தில் எனக்கு பல முறை சாத்திய  பட்டு கொண்டே இருந்தது .


ஒரு நிகழ்வு ,இமய யாத்திரை சென்ற போது  கேதார் கோவில் வளாகத்தில் பஜ கோவிந்தம் ..கூட்டாக உச்சரித்த தருணம். எல்லா பழையனவும் கழிந்து ..அந்த வார்த்தைகள் மட்டுமே   வாழ்வை முன்னோக்கி வீரியமுடன் நடத்த போதுமானதாய் இருந்தது. புதிதாய் பிறந்தது போல் இருந்தது .எனக்கு ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் கூட தெரியாது .


அன்றிலிருந்து எழுந்த கேள்வி அது ..எப்படி பல நூறு வருடங்களுக்கு முன் உச்சரிக்க பட்ட சில வார்த்தைகள் அதே வீரியத்தை தாங்கி ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வெடித்தெழ முடிகிறது? அச் சொல் எதனை தன்னுள் வாங்கி அத்தகைய வீரியம் கொண்டது?


அதற்கு தக்க பதிலாக தங்கள் கட்டுரை அமைந்தது. மிக்க நன்றி.


அன்புடன்


அனந்த முருகன்


 


அன்புள்ள ஜெ


 


அமுதமாகும் சொல் முக்கியமான கட்டுரை. சுருக்கமாக இருந்ததனாலேயே மொத்தக்கட்டுரையையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. கட்டுரை இருவகையான மந்திரங்களைச் சொல்கிறது. ஒன்று மூலமந்திரம் இன்னொன்று ஞானமந்திரம். இன்னொருவகை மந்திரம் உண்டு, அதை அவியக்தம் என்பார்கள். ஹ்ரீம், ஸ்ரீம் போன்ற வெறும் ஒலிகள் அவை. அர்த்தமாக ஆகிவிடக்கூடாதென்பதனாலேயே அவற்றை அப்படி அமைத்திருக்கிறார்கள். மந்திரங்களில் ஒன்றுமே இல்லை. அவற்றை ஈடுபாட்டுடன் திரும்பத்திரும்ப உள்ளே ஒலிக்கவிடும்போதுதான் அவற்றுக்கு சக்தி வருகிறது


 


சாரங்கன்


 


அமுதமாகும் சொல்
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2017 11:30

வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்

 


MAMALAR_EPI_02


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,


 


இந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது


 


இதில் நண்பர் காளி பிரசாத் அவர்கள் ”இந்திர நீலம்” நாவல் குறித்து உரையாடுவார்

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


 


நேரம்:- வரும் ஞாயிறு (14/5/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை


 


 


தொடர்புக்கு : 9952965505


Satyananda Yoga -Chennai


11/15, south perumal Koil Lane


Near Murugan temple


Vadapalani – Chennai- 26


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2017 03:31

May 10, 2017

அனாசார உலகம்

download


இந்த இணையப்பக்கத்தில் நடராஜகுருவைப்பற்றிய பலவகையான நினைவுக்குறிப்புகள் உள்ளன. நடராஜகுருவின் வாழ்க்கை சுவாரசியமானது. அவருடைய An autobiography of an absolutist ஒரு பக்கம் கட்டற்ற அலைச்சலாகவும் மறுபக்கம் எங்கும் செல்லாத யோகியாகவும் அமையும் ஒரு மனிதனின் வாழ்க்கையின் சித்திரம்.


துறவிகளை இருவகையாக பிரிக்கலாம். ஆசாரத்துரவி, அனாசாரத் துறவி. ஆசாரத்துறவிகள் ஓர் அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் தலைவர்கள். அவர்களை துறவியர் என்பது அவர்கள் நாம் வாழும் குடும்பவாழ்க்கையை வாழவில்லை என்பதனால்தான். மற்றபடி அவர்களுக்கும் அனைத்துவகையான உலகியல் சிக்கல்களும் உண்டு. அனைத்து உலகியல் உறவுகளும் அதன் விளைவான உணர்வுநிலைகளும் உண்டு. அவர்கள் அந்த அமைப்பின் ஆசாரங்கள், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.


அவர்களின் அன்றாடவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முன்னரே முடிவுசெய்யப்பட்டது. அவர்களால் எவ்வகையிலும் மீறப்படமுடியாதது. உலகியளானைப்போலவே அவர்களும் மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவர்கள். ஆகவே நம்மைப்போலவே ஒருவகை நடிகர்கள்.


‘அனாசார’த் துறவிகள் என்பவர்களே உண்மையில் துறவிகள். அவர்களை எந்த புற அமைப்பும் கட்டுப்படுத்துவதில்லை. அலைந்து திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். எங்காவது அமர்வார்கள். நினைத்த போது கிளம்பிச்செல்வார்கள். அவர்களின் திசையை அவர்களின் தேடலும் கண்டடைதலுமே தீர்மானிக்கிறது. எங்காவது அமர்ந்தவர்களுக்குக் கூட அலைந்து திரியும் வாழ்வு இருந்திருக்கிறது. எங்கும் செல்லாத ரமணர், ராமகிருஷ்ணர் போன்றவர்களுக்குக் கூட மாபெரும் அக அலைச்சல் உள்ளது.


ஆனால் உலகியலாளர்களுக்கு ஆசாரத்துறவிகளையே பெரும்பாலும் பிடித்திருக்கிறது. தாங்கள் கடைக்கொள்ள முடியாத கடுநோன்புகளை அவர்கள் கைக்கொள்வார்கள் என்றால் அவர் மேல் பெரும் மரியாதைகொள்கிறார்கள். தூய்மை, ஒழுங்கு, உலகியல் விஷயங்களில் ஈடுபடுதல் ஆகியவை அவர் மேல் எளியவர்கள் பெருமதிப்பு கொள்ள காரணமாக அமைகின்றன. அவர் பெரிய அமைப்புகளின் தலைவராகவும் செல்வத்தை கையாள்பவராகவும் இருப்பார் என்றால் அவர் மேலும் முக்கியத்துவம் கொண்டவர் ஆகிறார். சுருக்கமாகச் சொன்னால் உலகியலாளர் அறிந்த உலகியலே அத்தகைய ஆசாரத்துறவிகளை நோக்கி அவர்கள் செல்வதற்கான அரசப்பாதையாக அமைகிறது.


அனாசாரத்துறவிகளின் உலகம் உலகியலாளர்களுக்கு அன்னியமானது மட்டும் அல்ல பலசமயம் அருவருப்பையோ கோபத்தையோ உருவாக்குவதும்கூட. அனாசாரத் துறவிகள் உலகியலில் ஈடுபடாமையால் அவர்கள் பயனற்றவர்கள் என கருதப்படுகிறார்கள். அவர்களின் ஞானம் இவர்களும் சோறும் துணியும் வீடும் தங்கமுமாக மாறாது என்பதனால் அதைக்கொள்ள ஆளிருப்பதில்லை. அவர்களின் நகைப்பும் விலக்கமும் எரிச்சலூட்டுகின்றன. அவர்களை அண்டி வாழ்பவர்கள் அல்லது கிறுக்கர்கள் என உலகியல்மனம் மதிப்பிடுகிறது.


ஆனால் ஆன்மிகத்தின் சாரம் அவர்களே. அவர்களே தேடிச்செல்பவர்கள், கண்டடைபவர்கள். பல்லாயிரமாண்டுகளாக இந்தியா அவர்களை நம்பியே தன்னை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. கிராம்ஷி அறிவுஜீவிகளைப் பகுத்த முறைமையை கடைப்பிடிப்போம் என்றால் ஆசாரத்துறவிகள் நிலைச்சக்திகள், அனாசாரத்துறவிகளே உயிர்ச்சக்திகள். ஆசாரத்துறவிகள் உலகியளார்களுக்குரியவர்கள். அனாசாரத் துறவிகள் உயிர்ச்சக்திகளான எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாற்றுச்சமூக அமைப்பைக் கனவுகாண்பவர்கள், மீறிச்செல்பவர்களுக்கு மட்டும் உரியவர்கள்.


2


எல்லா சமூகத்திற்கும் இந்த அனாசாரவாதிகளே முன்னோக்கி இழுத்துச்செல்லும் விசை .நிலைபெறுதல், ஒட்ட ஒழுகுதல் என இயங்கும் மனம்கொண்டவர்களுக்கானவை அல்ல கலையும் சிந்தனையும் ஆன்மிக மீட்பும்.நிலைகொண்டவர்கள் அமைப்பின் சமநிலையை காப்பாற்றுகிறார்கள். அவர்களின் பங்களிப்பு குறைவுடையதல்ல. ஆனால் கட்டற்றவர்களால்தான் அவ்வமைப்பு தன்னை உடைத்து வார்க்கிறது. மறுபரிசீலனை செய்கிறது. தன்னை இடம்பெயர்த்துக்கொண்டு முன்னகர்கிறது.


அமெரிக்காவின் ஃபீட் தலைமுறை, ஹிப்பி இயக்கம் அப்படிப்பட்டது. கிறுக்கர்களும் பொறுக்கிகளும் படைப்பெழுச்சி மிக்கவர்களும் மனிதாபிமானிகளும் ஓருலகக் கனவுகொண்டவர்களும் கலகக்காரர்களுமான அவர்களால் உருவானதே இன்றைய அமெரிக்காவின் மதம்சாராத ஆன்மிகம் இன்றும் அவ்வியக்கத்தின் நீட்சியான மனிதர்களை அமெரிக்காவில் பார்க்கமுடிகிறது. இன்று சூழியல் சார்ந்து, மாற்றுவாழ்க்கைமுறை சார்ந்து அவர்களின் அடையாளங்கள் விரிந்துள்ளன.


அவர்களின் முன்னோடிகள் போருக்கு முந்தைய ஐரோப்பாவில் வாழ்ந்த குவாக்கர்கள் முதலிய சிறிய மதக்குழுவினர், சீர்திருத்தவாதிகள், மாற்று மருத்துவர்கள், அரசியல்கலகக்காரர்கள், அரசின்மைவாதிகள் போன்றவர்கள். அவர்கள் அனைவருடனும் காந்திக்குத் தொடர்பிருந்தது. புகழ்பெற்ற பல ஐரோப்பியக் காந்தியர்கள் குவாக்கர் இயக்கத்திலிருந்து காந்தியை நோக்கி வந்தவர்கள். அவர்கள்தான் பிரம்மஞானசங்கம் போன்றவற்றினூடாக இந்தியாவின் துறவியரை தேடிவந்துகொண்டிருந்தனர்.


ஹிப்பி இயக்கமும் இந்தியாவின் துறவியரைத் தேடிவந்தது. அறுபது எழுபதுகளில் இங்கிருந்த அலையும் துறவியருடன் சமானமாகவே ஹிப்பிகளும் இருந்தனர். மகேஷ் யோகி, ஓஷோ, சிவானந்தர் போன்றவர்களுக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. இன்றும்கூட இந்திய அனாசாரத் துறவிகளுடன் ஹிப்பிகளும் சுற்றிக்கொண்டிருப்பதை காசியிலும் ரிஷிகேஷிலும் சாதாரணமாகக் காணமுடிகிறது.


நடராஜகுரு சார்போனிலும் சுவிட்ஸர்லாந்திலும் கற்கும் காலம் முதலே ’மறு’ ஐரோப்பாவுக்கு நெருக்கமானவர். குவாக்கர்களின் கல்விநிலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஐரோப்பிய இயற்கைவாத இயக்கம், அரசின்மைவாதிகள், மதக்குழுக்கள் ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர். அவருடைய நண்பர்களும் பின்னாளின் மாணவர்களுமான ஜான் ஸ்பியர்ஸ், குரு ஃப்ரெடி, காரி டேவிஸ் போன்றவர்கள் அவ்வுலகிலிருந்து வந்தவர்கள்.


அறுபதுகளில் நடராஜகுரு அமெரிக்க ஹிப்பி இயக்கத்தினருக்கு நெருக்கமானவராக ஆனார். அவருடைய சிறந்த மாணவர்களில் பலர் அங்கிருந்து வந்தவர்கள். அவர்களின் கட்டற்றதன்மையும் பித்தும் எப்போதும் ஊட்டி குருகுலத்தில் உண்டு. சிற்பிகள் பாடகர்கள் இசைக்கலைஞர்கள் எவரேனும் அங்கு இருந்துகொண்டிருப்பார்கள். பலரை வயதான காலத்தில் ஊட்டி குருகுலத்தில் பார்த்திருக்கிறேன். லண்டனில் இருந்து கால்நடையாகவே சிங்கப்பூர் வரைச் சென்ற ஒருவரை ஒருமுறை சந்தித்தேன் [புகைப்படத்தில்.துண்டு கட்டிக்கொண்டு நடராஜகுருவின் பின்னால் நடப்பவர் என நினைக்கிறேன்.நித்யாவும் பின்னால் நடந்துகொண்டிருக்கிறார். ஒன்பதாண்டுகள் அப்பயணம் நீடித்தது. நான் பார்த்தபோது காளான் போதையில் இருந்தார்.


நடராஜகுருவின் பழைய காலைநடைப் புகைப்படம் அந்த காலகட்டத்தையே கண்முன் நிறுத்துகிறது.ஊட்டி குருகுலத்திற்கு வந்தவர்களுக்கு நடராஜகுரு நடக்கும் இந்தப்பாதை குருகுலத்திலிருந்து லவ்டேல் பள்ளியின் காடு நோக்கி செல்லும் அச்சாலை என்பது நினைவுவரலாம். நாம் பலமுறை நடந்திருக்கிறோம். அச்சாலையில் ஒரு கனவுநிறைந்த காலகட்டம் ஒழுகிச்சென்றிருக்கிறது.


ஓருலகம் குறித்த கனவு, மாற்று சமூக அமைப்புகள் பற்றிய திட்டங்கள், மானுட உறவுகளின் விடுதலைபற்றிய உணவுக்கொந்தளிப்புகள் எல்லாம் நிறைந்துவழிந்த எழுபதுகள். ஜான் லென்னானும் , பாப் மார்லியும், கஸந் ஸகீஸும், சாலிங்கரும், ரிச்சர்ட் பாகும், சார்ல்ஸ் பாதலேரும், ஆர்தர் ரிம்போவும் மல்லார்மேயும், பால் காகினும், செகாலும் ஆண்ட அந்த காலகட்டம். இன்றிருக்கும் கனவுகள் எல்லாம் அக்காலகட்டத்தின் பின் தூற ல்கள் மட்டும்தான்.


நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஊட்டி குருகுலத்திற்குச் சென்று நூலகத்தின் நூல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய ஏக்கம் வந்து நெஞ்சை நிறைத்தது. நொறுங்குமென்றாலும் எஞ்சாதவை என்றாலும் கனவுகளைப்போல வாழ்க்கையை நிறைப்பவை வேறில்லை. கனவுகளைச் சிறகாக்கி பறந்தெழுகிறது இப்புவி.


இது சிறகுகள் உதிரும் காலகட்டம்.இந்த யுகம் எழுபதுகள் வரை உலகை ஆட்டுவித்த பெருங்கனவுகளை விட்டுவிட்டு எரிச்சலுடனும், தன்னைத்தானே பழிவாங்கிக்கொள்ளும் வெறியுடனும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்தப்புகைப்படங்கள். நான் இந்தக்காலகட்டத்தவன் அல்ல, பழையவன். நடராஜகுருவின் நித்யாவின் காலகட்டத்தில் வாழ்பவன்


***


நடராஜகுரு நூல்கள்


குருகுலமும் கல்வியும்


நித்யாகுருகுலம் பற்றி…


நாரயணகுருகுல துறவியர்


நாராயண குரு எனும் இயக்கம்-2


நாராயண குரு எனும் இயக்கம் -1


முகம்சூடுதல்


நித்ய சைதன்ய யதி


ஆண்மையின் தனிமை


நவீன துரோணர்


தன்னை விலக்கி அறியும் கலை


மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை


இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி


உலகம் யாவையும் [சிறுகதை] 2


உலகம் யாவையும் [சிறுகதை] 1


அந்த தாடியும் காவியும்…


யோகம்,ஞானம்


ஒளியும் விழியும்


ஞானியர், இரு கேள்விகள்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2017 11:36

விளாஞ்சோலைப்பிள்ளை

vilancholai-pillai


அன்புள்ள திரு ஜெயமோகன்,

14ம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் அருகில் வாழ்ந்தவரும், ஈழவ சமூகத்தை சேர்ந்தவரும், மணவாள மாமுநிகளின் ஆசிரியருமான விளாஞ்சோலைப்பிள்ளை பற்றி தாங்கள் அறிவீர்களா என்று தெரியாது.

இவருடைய சப்தகாதை எனும் பாடல் தென்கலையாருக்கு நித்யாநுசந்தானம். இவர் வாழ்க்கை குறிப்பு link கீழே:


https://www.google.com/amp/s/guruparamparai.wordpress.com/2015/05/29/vilancholai-pillai/amp/

அன்புடன்

சாம கிருஷ்ணன்




அன்புள்ள கிருஷ்ணன்,


 


உண்மையில் நான் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. பெயர் காதில் விழுந்துள்ளதை நினைவுகூர்கிறேன். மேலதிகமாக எதுவும் தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தமிழிலும் எவரும் இவரைப்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. நன்றி


 


ஜெ




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2017 11:33

நித்யா, நேர்காணல்கள் -கடிதங்கள்

nitya sea


அன்பும் மதிப்பும் மிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.


உங்களது நேர்காணல்கள் – திரு வெங்கட்ராமன் தொகுத்தது ஏப்ரல் 2017 வரையிலானது [நேர்காணல்கள் முழுத்தொகுப்பு] புத்தகமாய் வந்து விட்டதா? அப்படியானால் உங்கள் கையொப்பமிட்டு எனக்கு ஒன்று வேண்டும். உடன் மறுதபாலில் பணம் அனுப்பிவிடுகிறேன்.


இணையத்தில் 57 பக்கங்களுக்கு pdf கிடைத்தது. அதைப் பதிவிறக்கம் செய்து விட்டேன்.


மொத்த நேர்காணல்கள் புத்தகம் மேற்குறித்தது வேண்டும். தயவுசெய்து அனுப்பித் தரவும். நன்றி.


உஷாதீபன்


***


அன்புள்ள உஷாதீபன்


நேர்காணல்களை நூலாக்குவதில் எனக்கு ஆர்வமில்லை. ஒன்று அது என் சொல் அல்ல. நேர்காணல் செய்தவர்களின் பதிவு. அத்துடன் பெரும்பாலான நேர்காணல்களில் திரும்பத்திரும்ப ஒரே செய்திகள்தான். அதைத் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் வெவ்வேறு காலங்களில் உருவாகிவரும் புதியவாசகர்களுக்காக அவை எடுக்கப்படுகிறன


ஜெ


***



sai makesh

வணக்கம் ஜெ,


நித்யாவின் இறுதிநாட்கள் கட்டுரையில் அவர் சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு கேள்வியைத் தூண்டியது.


இங்கே இறந்தார் என்பதை மரியாதை கருதி சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டீர்களா அல்லது ராகவேந்திரர் திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் பலர் முன்னிலையில் தன் மூச்சை தானே அடக்கி உயிரை வெளியேற்றினாரா?


இல்லை தனிமையில் நிகழ்ந்த ஒன்றை குருவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சமாதிதான் அடைந்திருப்பார் என்று கருதி எழுதினீர்களா?


ஆன்மீகத் துறவிகள்/அறிஞர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் போது இது முக்கியமானது என நினைக்கிறேன்.


நன்றி,


சாணக்கியன்,


பெங்களூரூ.


***


அன்புள்ள சாணக்கியன்,


அனைத்து மெய்ஞான நூல்களிலும் ஃபலசுருதி என ஒன்று இருக்கும். அந்த மெய்ஞானத்தை கற்றால் என்ன கிடைக்கும் என்று. அதற்கு பொதுவான பதில் என்பது ‘முக்தி’ அதாவது விடுதலை, வீடுபேறு


ஆனால் அச்சொல் ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. துயர்களில் இருந்து விடுபடுவது, அறியாமையிலிருந்து விடுபடுவது, பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவது, பிரம்மத்திலிருந்து பிரிந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவது என. அந்தந்த ஞானமரபின் தத்துவத்தைக்கொண்டே அச்சொல்லைப் பொருள் கொள்ளவேண்டும்


மிகப்பொதுவாகச் சொல்லப்போனால் சமாதி என்றால் முழுமையான முக்தி என்றே பொருள். அது ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருள். பொதுவாக யோகமரபில் அதற்கு அளிக்கப்படும் விளக்கமே பரவலாக அறியப்படுகிறது. அதுவே நீங்கள் சொல்வது


அத்துடன் சாமானிய மக்களுக்கு மெய்யறிதல், அறிவாகி நிறைதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளமுடியாது. அவர்கள் அறிந்தது உலகியலில் அதற்கு இடமில்லை. அவர்கள் அந்த உலகியல்தளத்தில் வைத்து அதற்கு ஒரு விளக்கம் அளித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அது புராணமரபிலிருந்து எடுத்த நம்பிக்கைகளையும் தங்கள் கற்பனைகளையும் கலந்து உருவாக்கப்படுவது


உலகியலில் உழல்பவர்கள் ஞானிகள் என்பவர்கள் உலகியலில் அதிசூரர்கள் என்றே எண்ணிக்கொள்வார்கள். தங்கள் ஞானி பொன்மழை பொழியவைத்தார் ஆயிரம்பேருக்கு அரிசியில்லாமல் சோறாக்கினார் என்பார்கள். தங்களால் இயலாதவற்றை அவர் செய்தார் என எண்ணிக்கொள்வரகள். ஒரேசமயம் இரண்டு இடங்களில் இருந்தார், சுவர்வழியாக ஊடுருவினார் என்பார்கள்


இந்த மாயங்களில் இருந்து மீறி எழாமல் ஒருவருக்கு மெய்யான ஆன்மிகத்திற்குள் நுழைய முடியாது. இது நம் எல்லையைக் காட்டுகிறது. இத்தகைய கற்பனைகளால் நாம் மெய்யறிவை நிராகரிக்கிறோம். அருவி தரையிலிருந்து மேலே சென்றால்தான் அற்புதம் என்று நினைக்கிறோம். கடல்நீர் வானுக்குச்சென்று மழையாகப்பொழிவதன் மகத்தான் அற்புதத்தை உணராத மூடத்தனம்தான் அது


அத்வைத மரபில் துயரம் என்பது அறியாமை. அறியாமையிலிருந்து நான் – அது என்னும் இருபால்பட்ட நிலை எழுகிறது. அதுவே முதற்பெரும் துயர். இருத்தல்துயர், இறப்பின் துயர் என அத்துயர் பெருகுகிறது. அந்த இருநிலையைக் களைதலே அத்வைதம் – இரண்டின்மை – எனப்படுகிறது. அதை எய்தியவர் விடுதலைபெற்றவர். அவரே சமாதியடைந்தவர். முற்றாதல், பிறிதிலாதல் நிலை அது


அந்நிலையை நித்யா அடைந்தார் என நான் அறிவேன், ஏனென்றால் அவர் அதைநோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என்பதை அருகிருந்து கண்டேன்.அதையே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அதுவே என் நோக்கில் சமாதி நிலை – அது மட்டுமே. ஆகவே அவர் சமாதி அடைந்தார் என்றேன். அச்சொல்லே மரபு.


மாயமந்திரங்கள் வழியாக சமாதி நிலை நிகழ்வதில்லை.


ஜெ


***


நித்யா -கடிதங்கள்


 


 


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2017 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.