Jeyamohan's Blog, page 1639
May 18, 2017
பிரபு காளிதாஸ்
குமரகுருபரனின் கவிதைத் தொகுதியை உயிர்மை சார்பாக வெளியிட்டுப் பேசிய நிகழ்ச்சியில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை உயிர்மை தளத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அதற்கு எதிராக பிரபு காளிதாஸ் கடுமையாக எதிர்வினையாற்றவே அந்தப்படங்களை நீக்கநேர்ந்தது. அப்போதுதான் அவரைக் கவனித்தேன். அதன்பின் வெவ்வேறு தருணங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை கவனித்தேன். சினிமாவில் சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் புகைப்படங்களை ‘பார்க்க’ எனக்குத்தெரியும். பிரபு காளிதாஸ் முக்கியமான புகைப்படக் கலைஞன் என்னும் எண்ணம் ஏற்பட்டது
சாரு நிவேதிதாவின் மகன் திருமணவிழாவில் அவரைச் சந்தித்தேன். ஒதுங்கி நின்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அழைத்துப் பேசினேன். முகநூலில் மிகப்பெரிய சண்டியர் என்றார்கள். இருக்கலாம், ஏனென்றால் நேரில் சாது போலத் தெரிந்தார். அவர் எழுத்தாளர்களை எடுத்த படங்கள் எல்லாமே முக்கியமானவை.
புகைப்படக்கலை காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு ஒளிநிழலும் பின்னர் சட்டகமும் அதன்பின் முப்பரிமாணத்தன்மையும் முதன்மையாகக் கவனிக்கப்பட்டன. பின்னர் சூழல் முக்கியத்துவம் பெற்றது. இவையனைத்தையும் இன்று பயிலாதவர்களே செல்பேசியில் எடுத்து கணிப்பொறியில் மேம்படுத்திக்கொள்ளமுடியும். இன்று மனநிலையே புகைப்படக்கலையின் முதல் குவியம். ஏதாவது ஒரு மனநிலை அல்ல,. நிகழ்வுப்பெருக்கில் புகைப்பட ஆசிரியன் [ஆம், Auteur Theory யேதான்] எதை தெரிவுசெய்து எப்படிக் காட்டுகிறான் என்பது.
ஓர் இடத்தை, முகத்தை, நிகழ்வை எப்படி அவன் பார்க்கிறான் என்பதுதான் இன்றைய புகைப்படத்தை தீர்மானிக்கிறது, அதைக்கொண்டே அதை மதிப்பிடவேண்டும். மனநிலையைக் காட்டும்பொருட்டு சட்டக ஒழுங்கை புறக்கணிக்கிறார்கள். சீரான ஒளியைக்கூட மறுக்கிறார்கள். அரைநிழலில் தெரியும் முகம், பாதிமுகம் போன்றவை இன்று சாதாரணமாக ஏற்கப்படுகின்றன.
புகைப்பட ஆசிரியராக பிரபு எழுத்தாளர்களின் மனநிலைகளை, தருணங்களை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறார் என நினைக்கிறேன். சமீபத்தில் அப்படி மகிழ்ச்சி அளித்த என் புகைப்படங்கள் சில குங்குமம் பேட்டியில் ஆ. வின்செண்ட் பால் எடுத்து வெளிவந்தவை, டி.விஜய் எடுத்த விகடன் தடம் இதழின் அட்டை , மாத்ருபூமிக்காக மதுராஜ் எடுத்தவை. எல்லாமே நான்தான். ஆனால் நான்குமே வெவ்வேறு நான்கள் என்றும் படுகிறது
என் நண்பரும் புகைப்பட ஆசிரியருமான ஏ.விமணிகண்டன் புகைப்படக்கலை குறித்து முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். புகைப்பட நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். புகைப்படம் மலிந்த இந்த காலகட்டத்தில் இன்னொரு பக்கம் அச்சில் நூல்வடிவில் புகைப்படங்கள் சர்வதேச அளவில் வெளியாவது உண்மையில் ஆச்சரியமானது. பிரபு புகைப்பட நூல்களுக்கும் சினிமாவுக்கும் முயலலாம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு
ஜெ, ஊட்டி முகாம் அமர்வுகளையும் அது சார்ந்து நிகழ்த்த விவாதங்களையும் சுருக்கமாக தொகுத்துள்ளேன். விவாதங்களை சுருக்கமாக எழுதுவதில் குறைகளும் பிழைகளும் இருக்கும் என்றே கருதுகிறேன். நாஞ்சிலின் கம்பராமாயண அமர்வு, சாமிநாதனின் இந்திய கலைகள் பற்றிய அமர்வு மற்றும் காளிபிரசாத்தின் அமர்வை தொகுக்கவில்லை.
தாமரைக்கண்ணன்
[image error]
Apr 28 காலை 10 மணியளவில் முகாம் துவங்கியது. தற்போது குருகுலத்தில் இருக்கும் சுவாமி வியாச பிரசாத் முகாமை துவக்கி வைத்தார். முதல் அமர்வான அசோகமித்திரன் அமர்வை, க.மோகனரங்கன் மற்றும் ராம்குமார் நிகழ்த்தினார்கள். க.மோகனரங்கன் உரையின் சிறு பகுதியை சுருக்கமாக இங்கு தந்துள்ளேன்,
“அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் சுய எள்ளல் தன்மை கொண்டவை. இந்த அம்சம் மற்ற நவீன எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. அவரின் சிறுவயது கதைகள் துயரத்திற்கு எதிரான, குழந்தை தன்மை கொண்டவை. அவை அதிகமும் செகந்திராபாத்தில் நடப்பவை. உதாரணம், பதினெட்டாவது அட்சகோடு. பார்வை மற்றும், இரண்டு நிமிஷம் கதைகளில் பெண் பாத்திரங்களை துள்ளியமாக, தீர்க்கமாக காண்பித்திருப்பார். அசோகமித்திரனை ஹெமிங்வே உடன் ஒப்பிடலாம். அவ்வாறான கதைகள்: மழை, ரிக்சா, மஞ்சள் கயிறு, காட்சி, காலம் கடந்த குழந்தைகள்”
அமர்வு முடிந்ததும் அரங்கசாமி “அசோகமித்திரன் ஏன் நவீன எழுத்தாளர்?” என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு க.மோகனரங்கன் அளித்த பதிலின் ஒரு பகுதி “நவீனம் என்பது புது யுகம் (Modern). நவீனத்துவம் என்பது School of thought. அது தனிமனிதனின் பார்வை, அறிவியல் பூர்வமாக அணுகுதல், இறுக்கம், எதிர் மறை தன்மை ஆகியவற்றை கொண்டது. பெரும்பாலும் Negativity ஆகா இருளாக தான் இருக்கும். அமியை இதற்குள் அடக்க முடியாது. அவரின் கதைகள் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணமாக இருக்கும். உதாரணம், விமோசனம் சிறுகதை.” .
பின் ஜெ அதற்கு பதிலளிக்க தொடங்கினர். ஜெ யின் பதில் அமியின் நாவல்கள் பற்றிய பார்வை, மொழி, அமியின் முன்னோடிகள், செவ்வியல் எழுத்து என்று நீண்டது. அவற்றின் சுருக்கம் கீழே,
[image error]
ஜெ – அமியின் நாவல்கள் பற்றிய பார்வை:
அமியின் இன்று சிறுகதை, Tolstoy யை பற்றி பேசுகிறது. அவரின் War and peaceயை 5 முறை படித்திருக்கிறார். அமி, நாவல் வாசகனை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்று நம்பினார். 1994ல் சொல்கிறார், “நல்லவேளை தமிழில் பெரிய நாவல்கள் இல்லை” என்று. விஷ்ணுபுரம் வந்தபின் பெரிய நாவல்களை Justify பண்ணி எழுதுகிறார். விஷ்ணுபுரத்தை பற்றிய முக்கிய கட்டுரைகளை எழுதியவர்கள் அமி, இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா. அமி, “என்னுடைய பார்வைக்கு நான் பெரிய நாவல்கள் எழுதமாட்டேன்” என்கிறார்.
தேவதேவன் கூறியது:
உணர்ச்சிகள் ஒரு போதும் நேரடியாக அமியின் எழுத்துக்களில் வராது. கதாபாத்திரங்களின் செயல்களில் தான் வரும். சிறு சிறு செயல்பாடுகளில் உணர்ச்சி வெளிப்படும். மாலதி சிறுகதை சமகால எதார்த்தத்தை சொல்லக்கூடிய வடிவம். Big narration க்கு உள்ளே எழுதப்படும் Sub narration களில் தான் அழகியல் வரும்.
ஜெ – குறியீடு மற்றும் அறிவியல்
அமி குறியீடு மற்றும் அறிவியலை பயன்படுத்தியது இல்லை. தண்ணீரை பற்றி நான்(ஜெ) எழுதினால் சென்னையின் மொத்த தண்ணீர் வரலாற்றையும் எழுதுவேன். அப்பொழுது குறியீடுகளும் அறிவியலும் தேவைப்படும். இது அவரின் limitation. அவரின் பலமும் இந்த Limitation தான்.
ஜெ – அமியின் மொழி:
அமியின் அணைத்து கதாபாத்திரங்களும் அவரின் மொழியை தான் பேசும். அவருக்கு சென்னை மொழி தெரியும் ஆனால் எழுதமுடியாது. அவரால் பல வண்ணங்களை படைக்க முடியாது. அமியின் ஆதர்சம், Jack london. அமெரிக்க Hunter language ன் முக்கிய தொடக்கப்புள்ளி. எதையும் Precise ஆகா சொல்லுதல். இதன் தாக்கம் Hemingway யிடம் உள்ளது. War reporter யுடைய தந்தி மொழி அது. இது Zero narration எனப்படும். william saroyan (Author of My name is aram) இந்த வகை. இவரின் தாக்கம் அமியிடம் உள்ளது. இந்த மொழியில் வரலாறு, மனம், குறியீடு ஆகியவை கிடையாது. இது 70 களில் புகழ்பெற்ற ஒன்று. ஆனால் அமி காந்தி கதையில் மனதை எழுதியுள்ளார்.
இந்தவகை எழுத்து ரஸ்யாவில் சோசியலிச எதார்த்தம் என்று சொல்லப்பட்டது. ஸ்டாலின் தான் இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்துகிறார். எதார்த்த வாதம் என்பது எது நிகழ்ந்ததோ அதை சொல்வது. சோசியலிச யதார்த்தத்தின் விதி “மனிதனின் நடத்தையை எழுது. அதை சோசியலிசத்தை வைத்து புரிந்துகொள்.” இதற்கான உதாரணங்கள், ஜெயகாந்தன், பொன்னீலன்(கரிசல்), ரகுநாதன்(பஞ்சும் பசியும்). இவர்களை விட அமியில் சோசியலிச யதார்த்தத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது அன்றாட பிரச்சனைகளை சொல்வது. பெரிய விஷயங்களை சொல்லாது. இது நீக்கம் செய்தவற்றிலிருந்து வருவது பின் நவீனத்துவம். அமி வரலாறு இல்லை என்பார். பின் நவீனத்துவம் அன்றாட எதார்த்தத்தை தவிர்ப்பது. கட்டற்ற தன்மை, வரலாற்று வாதம் இல்லாததால், தனிமனிதனை சொல்வதால் அமி நவீன எழுத்தாளர்.
இடையில் Bram Stoker ன் Dracula நாவலை பற்றி ஜெ கூறியது:
Dracula நாவல் நவீன ஐரோப்பாவின் குறியீடு. பொருள் முதல்வாத முதலாளித்துவத்தின் குறியீடு. மேல் மட்டத்தில் Refined வாழ்க்கை. படி படியாக கீழே இறங்கினால் அடிமட்டத்தில் பிணங்கள். நுகர்வு வெறியில் பிற மனிதர்களின் ரத்தத்தை குடித்து வாழ்வது. அவர்களையும் தன்னை போலவே மாற்றிவிடுவது. உதாரணமாக, தற்போது பெல்ஜியம் மிக உயர்தர வாழ்க்கை கொண்டது. சிரியா யுத்தத்திற்கு அதில் பங்குண்டு.
அமியை பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான விஷயம் முக்கியமானது கிடையாது. இதை சொல்வதில் அவருக்கு தயக்கம் இல்லை. அவரிடம் இந்த விஷயமே கிடையாது. அமியுடைய எழுத்துக்களில் குரூரமும் உள்ளது. பூனை, இன்னும் சில நாட்கள், பிரயாணம் போன்ற சிறுகதைகள். சுந்தர ராமசாமியிலும் அமியுடைய Limitations உள்ளன. ஆனால் குரூரம் கிடையாது.
ஜெ – நவீனத்துவ, பின் நவீனத்துவ, செவ்வியல் எழுத்துகள் பற்றி கூறியவை
நவீன எழுத்துக்களில் எழுத்தாளன் கண்டிப்பாக கதைக்குள் இருப்பான். எழுத்தாளன் என்ன சொல்கிறான் என்பதை வாசகன் சொல்ல முடியும். பின் நவீனத்துவத்தில் அவன் பல பல துண்டுகளாக கதைக்குள் சிதறி கிடப்பான். நவீன எழுத்துக்களில் இன்று மட்டுமே உள்ளது. இதில் எளிமைப்படுத்துதல்(Minimalism) இருக்கும். Minimalism தில் ஏற்கனவே தெரிந்தவற்றின்(Reference) மூலமாகவே நிகழ்வுகளை புரியவைக்க முடியும். இது Lord of the ring போன்ற புராணங்களில் இல்லை. இருந்தால் அந்த கனவை வாசகன் பார்க்க முடியாது. Minimalism உச்சத்தில் இருந்த போதுதான் Lord of the ring வருகிறது. Lord of the ring மிக முக்கியமான புராணம்.
நவீன எழுத்தாளர்கள் கதைக்குள் modern images (புறவய சித்திரங்கள்) யை அளிக்கலாம். அதை விளக்க வேண்டியதில்லை. Traditional symbols யை பயன்படுத்த கூடாது. நவீன எழுத்துக்களில் உள்ள இடைவெளிகளில் வாசகன் உள்நுழைந்து அந்த கதைக்குள் கற்பனை செய்ய முடியும். செவ்வியலில் அனைத்தும் விவரித்து கூறப்படுகிறது. இதனால் வாசகன் அதிலிருந்து வெளியே ஒரு உலகத்தை தான் பார்க்க முடியும். நவீன எழுத்தாளர்கள் edit செய்து தூக்கி எறியும் சொற்களால் ஆனது செவ்வியல்.
[image error]
கமலக்கண்ணன்.
சிறுகதை அமர்வு – கமலக்கண்ணன்.
கதை: கோகோலின் மனைவி
கமலக்கண்ணன் “Tommaso Landolfi என்ற இத்தாலிய எழுத்தாளரால் எழுதப்பட்ட இக்கதை, Nikolai Gogol என்ற ரஷ்ய எழுத்தாளரின் மீதான ஊகமாக எழுதியுள்ளார். இது ஊக புனைவு (speculative fiction) எனப்படும். இதில் ப்ளூன்னை கோகோலின் மனைவியாக சித்தரித்துள்ளார். இடையிடையே பல தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றும் பலூன், கோகோல் தன்னுடைய புத்தகத்தை எரிப்பது, குழந்தையை கொல்வது போன்றவற்றை கொண்டு இக்கதையின் மீது பல கோணங்களில் விவாதம் நிகழ்வதில் எழுத்தாளர் வெற்றிகொண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.” என்றார்.
1950 – 60 களில் உயிரற்ற பொருட்களை உயிருள்ளவற்றுடன் தொடர்புபடுத்தி எழுதும் முறை பெரிய அலையாக இருந்தது. அவ்வாறு எழுதி குவிக்கப்பட்ட படிப்புகளுள் ஒன்று இது. அரங்கில் இக்கதை மீது பல வாசிப்புகள் வந்தன. பலூன் இதில் egoistic person ஆகா வருகிறது. இந்த கதை surrealism (மீபுனைவு) வகையை சார்ந்தது என்று ஒரு வாசகர் கூறினார். ஜெ அதை மறுத்து மீபுனைவு என்பது கனவு, கட்டற்ற பாலியல், non-metaphoric ஆகியவற்றை கொண்டது. இந்த வகை கதைகள் முதலில் கண்டிப்பாக அதிர்ச்சியை தரும். பின் மற்ற ஊகங்களுக்கு கொண்டுசெல்லும். இக்கதை மீபுனைவு அல்ல என்றார். மற்றொரு வாசகர் இதை மாய எதார்த்த வகையாக பார்க்கலாமா என்றார். இதை மாய எதார்த்தமாகவும் பார்க்கமுடியாது. கோகோல் தன் புத்தகத்தை எரிப்பது, படைப்பாளி தன் படைப்புகளை தானே அளிப்பது என்று ஒரு வாசகர் கூறினார். கிருஷ்ணன், கோகோலுக்கும் தன் மனைவிக்கும் இடையேயான பிரச்சனையை விவகாரத்துக்கான சிக்கலாக எடுத்துக்கொள்ளலாம் என்றார். ஜெ, இக்கதை கணவன் மனைவிக்கு இடையேயான உளச்சிக்கல் மட்டுமே.. கோகோலின் பெயரை பயன்படுத்தியது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே. இதை கோகோலின் பெயர் இல்லாமலும் எழுதியிருக்கலாம். இக்கதையுடன் ஒப்பிடும் பொது சாருவாகனின் யானை சிறுகதை சிறந்த ஒன்று. பொருட்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் ஆசிரியரால் கொடுக்கபடுவது. எதை வேண்டுமானாலும் குறியீடாக பயன்படுத்த முடியும். மாமலரில் தேவயானியின் புலிகள் எதற்கு குறியீடாக வருகிறது என்பதை என்னால்(ஜெ) குறிப்பாக சொல்லிவிடமுடியாது என்றார். ஒரு வாசர் அதை தேவயானியின் அகமாக வைத்துக்கொள்ளலாமா என்றார். ஜெ, அதையும் definite ஆகா சொல்லிவிடமுடியாது என்றார்.
[image error]
சுஷில்
சிறுகதை அமர்வு – சுஷில்
1. கதை: ஜென்ம தினம் – பசீர்
இதில் ஆசிரியர் பசியுடன் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்வதில்லை. இக்கதையுடன் தொடர்புபடுத்தக்கூடிய கதைகளை வைத்து விவாதம் நடந்தது. அவை
ஒருநாள் கழிந்தது – புதுமை பித்தன்
இரு நண்பர்கள் – அமி
Hunger – knut hamsun. இதை க.ந.சு தமிழில் பசி என்று மொழிபெயர்த்துள்ளார்.
குழந்தைக்கு ஜுரம் – தி.ஜா
2. கதை: துக்கம் – Anton chekhov
சிறுகதையின் தொடக்ககால Master களில் ஒருவர் chekhov. தான் இருந்தும் அந்த இடத்தில் தன் இருப்பை மறைத்துக்கொள்ளும் அல்லது மற்றவர்களால் கவனிக்கபடாத மனிதர்கள் invisible மனிதர்கள். Hotel porter, service man, driver கள் Invisible மனிதர்கள். மனிதனின் Invisibility யை இக்கதை காண்பிக்கிறது.
காவியங்களில் கதாபாத்திரங்களின் மொழி குறித்து ஜெ கூறியது:
காவியத்தின் தன்மைகளுல் ஒன்று, அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் ஒரே மொழியில் தான் பேசும். இது காவிய சுவை குறைய கூடாது என்பதற்க்காக. ஆனால் காவியத்தில் வாய் திறப்பவன் அதற்கு தகுதியானவன் மட்டுமே. விதுரருக்கும் பீஷமருக்கும் ஓரே மொழிதான். ஆனால் கதாபாத்திரங்களில் வேறுபாடு கொண்டிருக்கும்.
[image error]
வேணுவெட்ராயன்
இரண்டாம் நாள் முதல் அமர்வு: கவிதை – வேணுவெட்ராயன்
வேணு, “வெளியில் உள்ள புற பிரபஞ்சம் முடிவின்மையை கொண்டுள்ளதை போலவே நமது அகத்திலும் முடிவின்மையை கொண்ட பிரபஞ்சம் உள்ளது. அது முடிவற்ற சிந்தனைகள், கற்பனைகளால் நிரம்பியுள்ளது. கவிஞனின் ஆழ்மனமான அங்கு துளிர்விட்டும் ஒரு சிந்தனை மேல் மனதில் புறத்தில் சொற்களாக ஆகின்றன. அகப்பிரபஞ்சம் புறப்பிரபஞ்சம் ஆகியவை ஒன்று மற்றொன்றின் ஆடிப்பாவைகள். ஆடியில் நின்று நாம் நம் ஆடிப்பாவையை பார்க்கும்பொழுது நமக்கும், நம் ஆடிப்பாவைக்கும் இடையேயுள்ள கண்ணாடி பரப்பு கவிதை” என்றார்.
இதை தொடர்ந்து ஜெ வேணு கூறியதை விளக்கி கூறினார். Art of creation (Arthur Koestler) என்ற நூலில் வேணு கூறியது உள்ளது. கவிதையை பற்றி அரவிந்தரும் இவ்வாறே கூறியுள்ளார். இந்திய மரபு மனதை ஏழு நிலைகளாக பிரித்துள்ளது. அதில் சிந்தனை வைகரி நிலையில் நிகழும். மத்திமம் நிலையில் அவை சொற்களாக வெளிப்படுகின்றன. கவிதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையேயுள்ள ஊடகம் போல். கூர்ந்த வாசகன் கவிதை வழியாக அக்கவிஞன் தன் அகத்தில் கண்டதை அடைகிறான். உதாரணமாக, குழந்தை ஒரு சிறிய டம்ளரை பெரிய மலையாக மாற்றிவிடும். நமக்கு அந்த டம்ளர் மலையாக தெரிய வேண்டுமென்றால், நாம் அந்த குழந்தையின் மனநிலையை அடையவேண்டும். டைனோசர்கள் மிக பெரிய உயிரினம். ஒரு கொசு ஒரு டைனோசரின் ரத்தத்தை உறிஞ்சி, சென்று மரத்தின் மீது அமரும்போது மரத்திலிருந்து ஒழுகும் பிசின் அதன் மீது வழிந்து உறைந்து மண்ணில் புதைந்து விடுகிறது. பல ஆண்டுகள் கழித்து அது ஒரு கல்லாக கிடைக்கிறது. அதில் துளையிட்டு, அந்த கொசுவிலிருக்கும் டைனோசரின் ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து டைனோசரின் DNA எடுக்கப்படுகிறது. அதை ஒரு கருவாக்கி, தவளையின் முட்டைக்குள் செலுத்தி அதிலிருந்து டைனோசரை இக்காலத்திற்க்கு கொண்டுவர முடியும். கவிதை குழந்தை விளையாடும் டம்ளரும், படிமமான கொசுவும் போல.
வேணு குறுகிய நேர வீடியோ ஒன்றை காண்பித்தார். அதில் காட்சி காட்டிலிருந்து துவங்கி, ஒரு மரத்திலிருந்து வரும் பிசின் அந்த மரத்தின் இலைகள் மீது வடிவதை காட்டும். அந்த இலை பல ஆண்டுகள் கழித்து படிமமாக கிடைக்குபோது அதிலிருந்து அந்த காட்டையே கற்பனை செய்யமுடியும்.
பின் மந்திரம் என்ற சொல்லை பற்றி விவாதம் நகர்ந்தது. இதை பற்றி ஜெ அமுதமாகும் சொல் என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.
[image error]
பாரி
கவிதை அமர்வு- பாரி
கவிதைகளில் வரக்கூடிய சித்திரங்களை ஒரு காட்சி படத்துடன் தொடர்புபடுத்தும் போது அது மேலதிக வாசிப்பையும் வாசிப்பை எளிமையையும் படுத்துகிறது. அவ்வாறாக நான் (பாரி) 3 கவிதைகளை தேர்ந்தெடுத்துள்ளேன் என்று பாரி கூறினார்.
1. பேன் புராணம் – மனுஷ்ய புத்திரன்
இக்கவிதைக்கு பாரி Among the Wild Chimpanzees என்ற ஆவணப்படத்தில் jean goudal சிம்பன்சிகளுக்கு பேன் பார்க்கும் படத்தை இணைத்திருந்தார். அவரின் வாசிப்பு விளக்கம் சுருக்கமாக,
இக்கவிதை மனிதர்கள் தொட்டு கொள்வது குடும்பத்திலும் வெளியிலும் குறைந்து வருகிறது என்ற சித்திரத்தை அளிக்கிறது. மனிதர்கள் தொட்டுகொள்வதற்கு ஏதோ ஒரு பாவனை தேவைபடுகிறது. காய்ச்சல் வந்ததா என்று பார்க்க, பேன் பார்ப்பது போல். ஷாம்பு இக்காலத்தின் குறியீடாக தொடுதலே இல்லாமல் ஒரு தலைமுறை வருகிறது என்ற வாசிப்பை முதலில் அளிக்கிறது. Among the Wild Chimpanzees ஆவண படத்தில் சிம்பன்ஸிகள் வேட்டை நேரம் போக பிற நேரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு பேன் பார்த்து கொண்டிருக்கும். பேன் இருக்காது. சும்மா தொட்டு கொள்வதற்காக அவை செய்யும் ஒரு பாவனை. jean goudal அவற்றை நெருங்கிய பின் பேன் பார்ப்பது போல் அவற்றை தொட்டுக்கொண்டிருப்பர். இதை பார்த்த பின் சிம்பன்ஸிகள் மற்றும் ஆதி மனிதர்களிடம் இருந்து தொடரும் ஒரு தொடர் சங்கிலி அருந்ததின் சித்திரத்தை கொடுக்கிறது.
2. ஆட்டுதி அமுதே – இசை
பாரி இக்கவிதையுடன் புன்னகைக்கும் stephen hawking படத்தை இணைத்திருந்தார். அவரின் வாசிப்பு,
இக்கவிதையில் அந்த ரயில் பெட்டி செயலின்மையில் வெறுமையாக இருப்பதாக தோன்றுகிறது. குச்சி காலுடன் ஒரு குழந்தை படுத்திருந்தது. அப்பொழுது இளைஞன் ஒருவன் டங்காமாரி பாட்டை போட்டு கொண்டு நுழைகிறான். அதை கேட்டு குழந்தை தன் குச்சி காலை ஆட்டுகிறது. கவிஞர் அப்படி ஆட்டு செல்லமே என்கிறார். Stephen hawking இன் ஒரு வீடியோவில் அவர் புன்னகைபுரியும் காட்சி வரும். இவரும் அந்த சிறுவனை போல்தான். அந்த சிரிப்பு உலகை வென்ற பின் வரக்கூடிய சிரிப்பாக எனக்கு(பாரி) பட்டது.
3. சிலிர்க்க சிலிர்க்க – பிரான்சிஸ் கிருபா
பாரி இக்கவிதையில் நேரடியாகவே ஒரு காட்சி சொல்லப்படுகிறது என்றார்.
ஜெ: கவிதைகளை 3 ஆகா பிரித்துக்கொள்ளலாம். 1.Micro-narration, 2.Image, 3.Metaphor. இசையின் கவிதை Micro-narration. ஒரு நிகழ்வை பற்றிய குறுஞ்சித்திரத்தை அளிக்கிறது. இதில் கடைசி வரிகள் தான் அதை கவிதையாக்குகிறது. மனுஷ்ய புத்திரனுடைய கவிதை Image. இதில் எந்த உணர்ச்சிகளும் வராது. வாசகன் தொன்மங்கள் மீதும் படிமங்கள் மீதும் கவிதையை போட்டு தனக்கான வாசிப்பை அவனே அடைய கூறுவது. ஜென் கவிதைகள் இந்த வகையின் உதாரணம். மூன்றாவது கவிதை Metaphor. இது image யை பயன்படுத்தும். இதில் உணர்ச்சிகள் நேரடியாகவே வருவதினால் வாசகனின் மேலதிக வாசிப்பிற்க்கு இடம் அளிக்காது.
[image error]
சுரேஷ் பாபு
sapiens புத்தகம் குறித்து சுரேஷ் பாபு:
சுரேஷ் பாபு sapiens (book by Yual Noah Harari) புத்தகத்தை பற்றியும் அதன் உள்ளடக்கத்தையும் கூறினார். வரலாற்றின் தொடக்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாத மனித இனம் எப்படி உலகெயே அழிக்கவள்ள ஒன்றாக மாறியது என்பதை இந்த புத்தகம் வழியாக கூறினார். தொடக்ககாலத்தில் ஹோமோ இனத்தில் Homo sapiens, Homo erectus, Homo Neanderthals போன்ற இனங்கள் இருந்துள்ளன. பிற இனங்கள் வேறு காரணங்களால் அழிந்துவிட்டன. செப்பியங்கள் வரலாற்றில் 3 புரட்சிகளை கண்டுள்ளன என்று Harari கூறுகிறார். முதலாவது, 70,000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவு புரட்சி. இரண்டாவது, 10,000 ஆண்டுகளுக்கு முன்பான விவசாய புரட்சி. மூன்றாவது, 300 வருடங்களேயான அறிவியல் புரட்சி.
பின் ஜெ இந்த வகையான புத்தகங்கள் குறித்த ஒட்டுமொத்த பார்வையை விளக்கினார். அதன் சுருக்கம்: இந்த நூல் reductionism (குறைத்து சொல்லுதல்) வகையை சார்ந்தது. மொத்த மனித வரலாற்றையும் ஒரு பார்வைவையில் சுருக்கி பார்ப்பது. தற்போது மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளும் புத்தகங்களும் அதிகம் வருகின்றன. இவை மனித வரலாறையே மூளையில் உள்ள நியூரான்களின் பரிமாண வளர்ச்சியாகவே கூறும். இது மொத்த வரலாற்றின் மீதான ஒரு பார்வை மட்டுமே. இந்த வகை புத்தகங்கள் உற்சாகத்தை கொடுப்பதால் அதிகம் வாசிக்கபடுகிறது. Reductionism தில் மூன்று வகை உள்ளது. முதலாவது Popular reductionism. இந்த புத்தகம் The naked apes போன்றவை இதற்க்கு உதாரணம். இரண்டாவது Best reductionism. Richard dawkins போன்றவர்கள் இதற்கு உதாரணம்.மூன்றாவது Jared diamond போன்றவர்களுடையது.
[image error]
arunachalam maharajan
குறுந்தொகை -
அருணாச்சலம் மகாராஜன் குறுந்தொகையில் இருந்து இரண்டு பாடல்களை பற்றி பேசினார். அவை
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையிற் புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே.
-மாங்குடி மருதனார்.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
-வெள்ளிவீதியார்
[image error]
பிரசாத்
பயண நூல் – பிரசாத் – Chasing the monsoon (Alexander Frater)
இந்தியாவில் பருவமழை காலத்தில் அதை பின்தொடர்ந்து Alexander Frater செய்த பயண குறிப்பு இந்நூல். இதில் இந்தியாவில் பருவமழை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆனாலும் மழைக்காக மக்கள் காத்திருப்பதையும் குறிப்பிடுகிறார் Alexander Frater. ஜெ, சாக்த வழிபாடு அதிகமாக இருந்த இடங்களாக கேரளம் மற்றும் வங்காளத்தை கூறுகிறார். காரணம் இந்த மழை. மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துவதும், ஆனாலும் அனைத்திற்கும் இன்றியமையாததாகவும் மழை உள்ளது. இதைத்தான் மக்கள் சக்தியின் வடிவமாக அன்னையாகவும், காளியாகவும் வழிபட்டனர்.
Alexander Frater இந்தியாவில் பாரம்பரியமாக மழையை அளக்கும் முறை இல்லை என்று குறிப்பிடுகிறார். இதற்கு காரணம் அவர் இந்தியாவின் பாரம்பரிய மனிதர்களிடம் உரையாடவில்லை என்பதே. பல நூறு வருடங்களாக மழையை பற்றிய தகவல்களை கையாளும் வடிவம் தான் பஞ்சாங்கம். இன்றும் இது மாற்றியமைக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கென்றே தனி ஜாதி குழுக்கள் உள்ளன. முற்காலத்தில் ஒரு பகுதியை கைப்பற்ற செய்யப்படும் வழிகளில் ஒன்று அங்கு பஞ்சாங்கம் கணிக்க தெரிந்த பிராமணனரை அனுப்புவது. பஞ்சாங்கம் அதிகமும் மழையை சரியாகவே கணிக்கும். இதனால் கணிப்பவர் மக்களின் நன் மதிப்பை பெறுவார். அதை பயன்படுத்தி அவர் அங்கு தன் வழிபாட்டு முறையை புகுத்திவிடுவார். கருடனை வழிபட்டு கொண்டிருந்த இடத்தில் அதன் மீது விஷ்னுவை ஏற்றி வைப்பார். பின் அப்பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம்.
நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணம் சுந்தர காண்டத்திலிருந்து 47 பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கினார். சு.சுவாமிநாதன் சிற்பக்கலை பற்றி விளக்கினார்.
[image error]
விஷால் ராஜா.
மூன்றாம் நாள், சிறுகதை அமர்வு – விஷால் ராஜா.
கதை: தண்ணீர் – கந்தர்வன்
இக்கதை தண்ணீர் பஞ்சத்தை பற்றிய சித்திரம் வருவதால் பலர் தங்கள் ஊரில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை பற்றி விவாத்தை நிகழ்த்தினார். ஜெ இதை நிறுத்தி, இலக்கிய விவாதத்தில் ஒரு கதையின் வடிவ ஒழுங்கு மற்றும் வேறு தொடர்புடைய படைப்புகளை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும். படைப்பின் தங்களின் வாழ்கை அனுபவங்களை பற்றி பேச வேண்டியதில்லை என்றார்.
இக்கதை பற்றி ஜெ, “இக்கதையில் நிறைகுடம் என்பதை பெண்னின் கற்புடன் தொடர்புபடுத்தி கதையின் தொடக்கத்தில் குறிப்பிட்டு “நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள்” என்பதிலேயே முடித்திருக்கலாம். அல்லாமல் இதை எளிய மார்கசிய பார்வையில் நிறுத்தியுள்ளார்.” என்றார். இதில் பெண் மற்றும் தண்ணீரை மரபுடன் இணைக்கவில்லை. பெண் மற்றும் தண்ணீரை மரபுடன் இணைந்த கதைக்கு உதாரணமாக ராஜஸ்தானில் எழுதப்பட்ட ஒரு கதையை ஜெ குறிப்பிட்டார். கதையில் ஒரு பெண் தன்னுடைய கற்பை ஊருக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அதற்கு அந்த ஊரின் வழக்கப்படி பச்சை மண் குடத்தில் தண்ணீரை நிரப்பி ஊரை வளம் வந்து கோவிலில் உள்ள சாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சை மண் ஆதலால் அழுத்தம் சற்று கொடுத்தாலும் குடம் குலைந்து விடும். அந்த பெண் குடம் குலையாமல் ஊரை சுற்றிவந்தது கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து விடுகிறாள். கோவிலில் உள்ளே இருக்கும் சாமி தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு குடம். இதில் அந்த குடமே அவளிற்கு காப்பாக அமைந்தது என்றும் வாசிக்கலாம்.
காளிபிரசாத் ஆ.முத்துலிங்கதின் புளிக்க அப்பம் சிறுகதை பற்றி பேசினார். அதன் பதிவு http://www.jeyamohan.in/98118#.WQ3waPl97IU
[image error]
பேரா சுவாமிநாதன்
பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பவியல் பற்றி மூன்று வகுப்புகளை நடத்தினார்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெண்முரசு வாசகர் கூட்டம் புதுச்சேரி
அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .
நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல் ” புதுவையில் சென்ற 2017 பிப்ரவரி முதல் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
இந்த மாதத்திற்கான கூடுகை ( மே மாதம் 2017 ) இதில்
“வெண்முரசு முதற்கனல் – அணையாச்சிதை ” என்கிற தலைப்பில் நண்பர் திரு.மணிமாறன் அவர்கள் உரையாடுகிறார் .
நாள்:- வியாழக்கிழமை (25-05-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்
இடம்:-
கிருபாநிதி அரிகிருஷ்ணன்,
” ஶ்ரீநாராயணபரம்“,
முதல்மாடி,
27, வெள்ளாழர் வீதி ,
புதுவை-605001
Between MG Road & Bharathi Street,
Next to
Madhan traders
Upstair to
Srima plastics store
Contact no:- 99-43-951908 , 98-43-010306.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 17, 2017
ஒரு குற்றச்சாட்டு
சென்ற டிசம்பர் 21 2011 அன்று நான் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னுடைய யானைடாக்டர் கதையை அங்குள்ள காதுகேளாத மாணவர்கள் ஓவியங்களாக வரைந்திருந்தார்கள். அந்தப்பள்ளி வளாகம் அன்று எனக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளிப்பதாக இருந்தது. அதைப்பற்றி ஒரு நீண்ட குறிப்பை அப்போது எழுதியிருந்தேன்.
இருநாட்களுக்கு முன் அன்று அங்கே சேவையாற்றிக்கொண்டிருந்த லெனின் எனக்கு இக்கடிதத்தை எழுதியிருந்தார்
*
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,
எப்படி துவங்குவது என்று தெரியவில்லை
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் தாளாளர் முருகசாமி அய்யா பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருடன் உடந்தையாக இருந்ததாக பள்ளி ஆசிரியர் சித்ரா மற்றும் பள்ளியை சேர்ந்த 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை தொலைக்காட்சி செய்திகளிலும் இது ஒளிபரப்பப்பட்டு விட்டது.
திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மற்றும் முருகசாமி ஐயாவினை பற்றி உங்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்த தேவையில்லை.( http://www.jeyamohan.in/23550#.WRLP88bhXIV) சொத்து தகராறு காரணமாக திட்டமிடப்பட்டு இந்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது .அறத்தினை கைக்கொண்டு வாழ்பவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி தான் இது என்ற போதிலும் உச்சகட்டமாய் அந்த ஒட்டு மொத்த பள்ளியையும் இல்லாமல் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியாக இது உள்ளது.
அறம் தோற்கும் என்ற எண்ணம் மேலெழும் போது எல்லாம் , குழந்தைகளிடமும் விருட்சங்களிடமும் சொல்லுங்கள் எனற வாசகங்கத்தின் வழியே தான் இந்த செயலினை முன்னெடுக்கிறோம்.
முருகசாமி எனும் அந்த மனிதர் கடந்து வந்த பாதையினை , அந்த பள்ளியின் உருவாக்கத்திற்கான அவரின் மெனக்கெடல்கள் எங்கள் நினைவுகளில் அலை மோதுகிறது .
திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர். தாய் காளியம்மாளும் தந்தை குழந்தைசாமியும் விவசாயக் கூலிகள். வீட்டில் மூத்த மகன் முருகசாமி. சிறு பிராயத்தில் சக குழந்தைகளோடு விளையாடும்போது முருகசாமி வாய்பேச இயலாமலும் காது கேட்கும் திறனற்றும் இருப்பதைக் கவனித்தார் அவரது தாய். அதனால் , கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்தார். அங்கு 8- ம் வகுப்புவரை சைகை மொழி படித்தார்.
அதன் பின்னர் அங்குக் காது கேளாத குழந்தைகள் படிக்க வசதி இல்லாததால் தோட்ட வேலை , விவசாயம் , பின்னலாடை நிறுவனம் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். “ 20 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்தான் காதுகேளாதோர் பள்ளியைத் திருப்பூரில் நிறுவ முக்கியக் காரணம்” என அவர் பல முறை அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்தின் சந்தைகளுக்கும் போய் வாய் பேசமுடியாத , காது கேட்க முடியாத பிள்ளைகளை அழைத்து வருவார்.ஒவ்வொரு மாதமும் சில பெற்றோர்கள் வந்து வாக்குவாதம் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி தேவையில்லை என சண்டைகள் போட்டாலும் , அத்துணை பேரையும் சமாதானம் செய்தும் அந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்.
அந்த பள்ளியின் ஒவ்வொரு வார இறுதி விடுமுறையிலும் பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை பார்த்து பேசி விட்டு செல்கின்ற காட்சியினை திரும்ப திரும்ப நினைக்கின்றோம்.அந்த ஆலமரத்தை அடிசாய்க்க நடக்கின்ற சதியினை எப்படி முறியடிக்க ?
என்ன செய்ய ?
அந்த பள்ளியின் ஒட்டு மொத்த பிள்ளைகள் , அறம் புத்தகத்திற்காக தங்களுக்கு அளித்த பரிசு மற்றும் பிரார்த்தனையின் வழியே உங்களை வேண்டி கேட்கின்றோம்.இணையத்திலும் , தொலைக்காட்சிகளிலும் அளவு கடந்த வெறுப்பு உமிழப்படுகின்ற இந்த நேரத்தில் அவருடன் நாம் அனைவரும் கைகோர்த்து நிற்பதும் அவருக்கு ஆதரவு அளிப்பதும் நம் கடமை .
பி லெனின்
*
நான் அறிந்தவரை முருகசாமி நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவர். தன் குடும்ப சொத்துக்களைப் பயன்படுத்தி இந்த அமைப்பை தனிமனித உழைப்பால் உருவாக்கியவர். அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நிலைக்குறைவைத் தொடர்ந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் அரசியல்பின்னணி கொண்டவர்களால் செய்யப்பட்டுவந்தன.
இது குறித்து உண்மைநிலவரம் எனக்குத்தெரியவில்லை. ஆனால் அச்சொத்தை அபகரிப்பதற்கான அரசியல்சார்ந்த சதி என்ற செய்தி மிகவும் தொந்தரவுசெய்கிறது. அது உண்மை என்றால் சமகாலத்தின் பெரும் அநீதிகளில் ஒன்று
- ஜெ
****
காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!
மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி நிறுவனர் கைது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
அன்புள்ள ஜெ.,
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை எட்டு-பத்து வருடங்களுக்கு முன்னால் படித்ததை, அதை படித்த போது உருவான சோர்வும் வெறுப்புணர்வும் வழியாகத்தான் இன்று நினைவில் கொண்டுள்ளேன். அதை அந்த காலகட்டத்தின் பெண்ணின் மனச்சித்திரமாகவே வாசித்தேன். காலமாற்றத்தில் கங்காவின் தத்தளிப்புகளும் பிழற்வுகளும் பெருமளவுக்கு காலாவதியாகிவிட்டன என்று தோன்றியது எனக்கு. இன்றைய ‘நவீன’ப்பெண்ணுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், சிறுவயதில் தான் கடந்து வந்த ஒரு பாலியல் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே தன் மொத்த ஆளுமையையும் வாழ்க்கையையும் வகுத்துக்கொள்வாளா; அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னை “வைப்பாட்டி” என்றும் “கான்க்யுபைன்” என்றும் தானே அழைத்துக்கொண்டு, அந்த வரையரைக்குள் தன்னைக் குறூக்கிக்கொள்வாளா என்பது சந்தேகமே.
இன்றைய படித்தப்பெண் அவ்வளவு அசடல்ல என்றும், சமூகத்தின் சட்டகங்களுக்குள் தன்னை குறுக்கிக்கொள்பவள் அல்ல என்றும், தனக்கு வேண்டியவற்றை, பாலியல் உட்பட, அமைதியாக, சமூகத்தின் கண்ணில் ஒரு படி கூட இறங்காமல் அடையக்கூடிய சாமர்த்தியம் உடையவளாகவே பார்க்கிறேன். இதை உணர்ந்த வாசகர்களுக்கு கங்கா ஒரு டைனாசர். அப்படி பார்க்கும் போது, கங்காவின் கதை இன்று நமக்கு ஏன் தேவை என்ற கேள்வி எழுந்தது. அந்த நாவலை கங்காவின் காலத்தின் பதிவாகவே வாசித்தேன். அதனாலேயே அதை ஒரு “மைனர்” நாவல் என்று தான் அப்போது வரையறுத்துக்கொண்டேன்.
அந்த நாவலை வாசித்து முடித்தபோது நான் உணர்ந்த சோற்வும் வெறுப்பும் கசப்பும் அளவில்லாதது. நாம் பரிதாபம் கொள்ளுவோரை ஏதோ வகையில் கொஞ்சம் குரூரமாக வெறுக்கவும் செய்கிறோம். கங்காவின் ‘இரும்புப்பெண்’ வேடத்துக்கடியில் அவள் ஒரு அய்யோப்பாவம் கேஸ். அவளுடைய அறியாமையும் மடமையும் நம்முடைய பரிதாபத்தையே கோறுகின்றது. அதையே நான் வெறுத்தேன் என்று நினைக்கிறேன். “அடியேய் கங்கா, உனக்கு முதுகுல இருக்குறது எலும்புத்தண்டா சப்பாத்தி மாவா?” என்று திட்டியபடி தான் அந்த நாவலை வாசித்து முடித்தேன். முடிவில் அந்த புத்தகத்தை அறையின் மறுபக்கம் ஓங்கி எறிந்த ஞாபகம். அவ்வளவு வெறுப்பு, கங்கா மேல், அந்த ஆசிரியர் மேல், அச்சூழல் மேல். ஒரு காலகட்டத்தின் சுழற்ச்சியில் மாட்டிக்கொண்ட பேதைப்பெண்ணின் கதை என்று அந்த நாவலை கடந்து வந்து விட்டேன்.
நேற்று உங்களுடைய கட்டுரையை படித்தபிறகு, அந்த நாவலை நான் மீண்டும் பரிசீலனை செய்யத் துவங்கினேன். இருபது வயதில் நான் அந்த நாவலை அணுகியது மிகவும் உணர்ச்சிகரமாக என்று இப்போது உணர்கிறேன். பெண் தனக்குத்தானே இழைத்துக்கொண்ட அநீதியின் சித்திரமாகவும், அதைத்தூண்டிய சமூக மன நிலையின் சித்திரமாக அதை வாசித்தேனே தவிர, வாழ்க்கையின் சாளரத்தின் வழி அதை அணுகவில்லை. மேலும் சொல்லவேண்டும் என்றால், அது தூண்டிய கசப்புணர்வும் வெறுப்புணர்வும் உணர்ச்சிகளாக உட்கொண்டேனே தவிர, அந்த உணர்ச்சித்தூண்டுதலுக்கு பின்னால் இருக்கும் உளவியலை – அது கதை மாந்தரின் உளவியலோ, சமூகத்தின் உளவிலயலோ, ஏன், என்னுடைய உளவியலோ – அதை பற்றி சிந்திக்கவில்லை. இன்று சி.நே.சி.ம. நாவலை பரிசீலிக்கும்போது, அந்த நாவலின் கட்டமைப்பும் கதைமாந்தரும் வாசகர் மனதில் உருவாக்கும் கசப்புணர்வும் வெறுப்புணர்வும் இரக்கமும், அதன் உளவியலும், இந்த நாவலை அணுகி வாசிப்பதில் முக்கியமான அம்சங்களாகப் படுகின்றன. உணர்வு -ரஸம் – வழியாக இந்த நாவலை அணுகினால் ஒரு திறப்பு கிடைக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு படி மேலே சென்றால், கங்காவின் சுயபரிதாப உணர்வும் கழிவிறக்கமும் வாசகர் வெறுக்கக்காரணமே, நாம் நமக்குள்ளேயும் அதே இயலாமையை, பலபவீனத்தை, அமைதியின்மையை, வெறுமையை ஏதோ வகையில் உணர்வதால் கூட இருக்கலாம்.
சி.நே.சி.ம. நாவலை, முதன்மையாக அடையாளத்தை பற்றிய நாவலாக வாசிக்கலாம். கங்காவின் அடையாளப்பிரச்சனை இறுத்தலியல் சிக்கல் எல்லாம் இல்லை. தன் சமூகத்தில் அவளுக்கு இடம் இல்லை என்பது தான் அவள் சிக்கல் என்று சொல்லலாம்: இறுத்தலே அவளுக்குப் பிரச்சனை. அசோகவனத்து சீதைக்கு அயோத்தியில் என்ன இடம் என்ற கேள்வியிலிருந்து இந்த அடையாளச்சிக்கல் தொடங்குவதாக சொல்லமுடியும்.
தன்னுடைய அடையாளத்தை தான் கண்டுகொள்ளும் வயதில் உள்ள ஒரு பெண், தனக்கு நிகழும் ஒரு சம்பவத்தினால் தனது மொத்த அடையாளமும் அதைச்சார்த்தே உருவாகக்கூடியவளாகிறாள். அந்த பாலியல் அனுபவத்தை அவளே விரும்பி தேர்ந்தெடுத்தாள் என்று நாம் கதையை வாசித்தால், அது ஒரு மனித உயிர் தன் அடையாளத்தை கண்டுகொண்ட முதற்க்குறல் தானே? தன் குரலை ஒங்கியதாலேயே, தன் பாலியல் அடையாளத்தை நிறுவியதாலேயே, தண்டிக்கப்படுகிறாள் கங்கா.
அந்த பாலியல் சம்பவத்தின் அடிப்படையில் கங்காவின் மொத்த அடையாளமும் அமைய வேண்டும் என்று அவளுடைய சமூகம் எதிர்ப்பார்க்கிறது. தூண்டுகிறது. கங்காவும், தன்னை களங்கமுற்றவளாக, வாழ்க்கையின் மகிழ்ச்சிகளுக்கு தகிதியற்றவளாக தன் மனதில் வார்த்துக்கொள்கிறாள். அதை தீவிரமாக நம்புகிறாள். இது துயரம் – மாபெரும் மானுடத்துயரம் அல்ல – சற்று வெட்கத்தக்க, கீழ்மையான, யாரிடமும் பகிரமுடியாத, பகிர்ந்தாலும் புரியவைக்கமுடியாத, தன்னைத்தானே வெறுக்கும், தன்னை அசிங்கம் என்று நம்பும், கழிப்பறை ஓரத்தில் கிடக்கும் மயிர்ச்சுறுள் போன்ற துயரம்.
ஆம், அந்த சூயிங்கம் இந்தத் துயரத்துக்கு பொருத்தமான குறியீடு. அசைபோட்டு அசைபோட்டு ரஸமற்ற ஜடமாக தன்னைத்தானே ஆக்கிக்கொண்டதாக தன்னை அவள் ஏமாற்றிக்கொள்கிறாள். இவள் வாழ்க்கை வீணாய்ப்போனது அந்த சூயிங்கம் அவள் வாயில் வந்ததனால் அல்ல. அதை வாழ்க்கை முழுவதும் அவள் சப்பிக்கொண்டிருந்ததனால். இது உண்மையிலேயே ஒரு tragedy தான். இதற்கு சமூகக்காரணிகளைச் சொல்லலாம், நாவலும் பேசுகிறது – ஆனால் இதன் மைய்யமாக, ஒரு பெண் தன் அடையாளத்தை தானே அழித்துக்கொள்ளும் கதை தான் இது. இது ஒரு வகையான ஆன்மத்தற்கொலை தான்.
இவ்வகையில் கங்கா சீதை முதலிய புராணப்பெண்களிலிருந்து மாறுபடுவதாக எண்ணுகிறேன். சீதையும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவள். ஆனால் எந்த நேரத்திலும் தன் சுயத்தை அழித்துக்கொண்டு அதை ஒரு ஆண் நிறப்ப வேண்டி நின்றவள் அல்ல அவள். மாறாக, கங்கா, தன்னை நிராகரித்த சமூகத்திடமே தன் அடையாளத்தை தரக்கோரி வேண்டி நிற்கிறாள். அது கிடைக்கவில்லை என்றதும் உடைந்து நொறுங்குகிறாள்.
கங்கா தனது ஆளுமையை, அடையாளத்தை பாலியல் தொடர்பானதாக ஆக்கிக்கொண்டதை (அல்லது அப்படி ஆக்கிக்கொள்ள வைக்கப்பட்டதை) நாவலில் வாசிக்கமுடிகிறது. பாலியல் ரீதியாக களங்கப்பட்டவளாக, அதன் விளைவாகவே திருமணத்தின் வழி கிடைக்கக்கூடிய ‘நேர்மையான’ பாலியல் மறுக்கப்பட்டவளாக, அதே காரணத்தால் வெங்கு மாமா போன்றவர்கள் சதாகாலமும் அவளிடம் பாலியலை எதிர்பார்க்க, “உனக்கு சாமர்த்தியம் இருந்தால் உன்னைக் கெடுத்து நிராகதித்தவனையே அடைந்து காட்டுப்பார்ப்போம்” போன்ற பாலியல் சவால்களை எதிர்கொள்பவளாக, அனைத்துக்கும் மேலாக, சாதாரண பாலியல்புகள் கொண்ட சாதாரண பெண்ணாக இருந்தும் அதை ஒவ்வொரு நொடியும் நிராகரிக்க வேண்டிய இடத்தில் இருப்பவளாக, தன்னுடைய மொத்த ஆளுமையையும் கங்கா பாலியலின் வாயிலாகவே கட்டியமைத்துக்கொள்கிறாள். சமூகம் தன்னை அப்படிப்பார்ப்பதைத்தாண்டி அவளே தன்னை அவ்வாறு காணத்தொடங்குகிறாள். அந்தப்பார்வையின் மூலம் தான் அவள் மொத்தக்கதையையும் நாம் தெரிந்துகொள்கிறோம். இதுவே ஒரு திரித்த பார்வை.
பிரபுவை சந்தித்த போது கூட, அவள் தன்னை அவனுடன் உறவுகொண்டவள், அவனுடைய “கான்க்யுபை”னாக ஆக வேண்டியவள் என்று தான் தன்னை நினைத்துக்கொள்கிறாள். எந்த தொழில்முறை பரத்தையருக்கும் தன்னைப்பற்றி இப்படியொரு திரித்த எண்ணம் உதிக்குமா என்று தெரியவில்லை. இது பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்து குடும்பப்பெண்ணின் சிக்கல். கங்காவின் ஒரு கேள்வி தன்னைச்சீண்ட, உடனே அடுத்தனாளே மண்டையை மழித்து கைம்பெண்கோலம் பூணும் கங்காவின் தாயுலேயும் இதே மனநிலையைத்தான் காண்கிறேன்.
கங்கா தனக்கு இரண்டு இடங்களில் வேறுவகை அடையாளத்தை ஒரு கனவுபோல பொருத்திப்பார்க்கிறாள். தனக்கும் பொருத்தமான வயதில் திருமணம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வசவசன்னு பிள்ளைய பெத்துப்போட்டுருப்பேன், என்கிறாள். பிரபுவின் குடும்பத்தை சந்திக்கும்போது, அவனுடைய பிள்ளைகளிடம் தாய்மைபாவம் கொள்கிறாள் – ஆனால் அதுவும் அவளுக்கும் பிரபுவுக்குமான உறவின் உரிமையில். இரண்டுமே ஒரு வித கானல் நீர். முழுமையாக இரண்டு நிலைகளிலும் அவளால் தன்னை பொருத்திப்பார்க்க முடியவில்லை. எந்த நிலையிலேயும் – படித்து, வேலைக்குச்செல்லும் பெண்ணாகக்கூட – கங்கா தனக்கென்று ஒரு ஆளுமை இருப்பதாகவோ அடையாளம் இருப்பதாகவோ உணரவில்லை. அப்படி ஒரு அடையாளம் தனக்கு மறுக்கப்பட்டதாகவோ, தனக்கு அது இல்லை என்றோ, அவள் வருத்தம் கொள்வதாகத் தெரியவில்லை. பாலசந்தர் படத்து நாயகிகளைப்போல, ஆண், குடும்பம் சார்த்ந்த அடையாளத்தையே அவள் மதிக்கிறாள், கோறுகிறாள். அது அந்த காலகட்டத்தின் மன நிலையாக இருக்கலாம். பெண் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை – அன்றைக்கும் இன்றைக்கும் – பெண்ணின் சுய அடையாளத்தையும் சுய எழுச்சியையும் மேம்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கங்காவின் சிக்கல்களின், வீழ்ச்சியின் அடிநாதம் இதுவே.
வெங்கு மாமா கங்காவிடம், “சாமர்த்தியம் இருந்தா அவன போயி பிடிச்சுக்கோ” என்று சொல்வதை கங்கா ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறாள். அவள் அச்செயலை வெற்றியாக, மீட்சியாகப் பார்க்கிறாள். “நான் கெட்டுப்போனவளாக இருக்கலாம், ஆனால் என்னை கெடுத்தவனுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பத்தினிப்பெண் நான்,” என்ற அறைகூவல் அது. (இன்று இவ்வரிகளை எழுதவே காமெடியா இருக்கு. ஆனால் கங்காவின் “பத்த்னித்தனத்தை” பறைசாற்றிப் போனத்தலைமுறை வாசகியர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். புதிய பாதை முதலிய திரைக்’காவிய’ங்களில் இதன் வீச்சைப்பார்க்கலாம்).
தன் வாழ்க்கைக்கு ஒரு ஆண்துணையும், தன்னை அடையாளப்படுத்த ஒரு ஆணும் தனக்குக் கிடைத்தால் வெற்றி என்று பிரபுவைத் தேடுகிறாள் கங்கா, சாகுந்தலை துஸ்யந்தனைத் தேடியது போல. துஸ்யந்தனின் “மறதி”யுடன் போறாடிய சாகுந்தலை வெற்றிபெற்றவள் என்று கூறிய அதே மரபு கங்காவை உந்துகிறது.
கங்கா பிரபுவை சந்திக்கும்போது தான் நாம் கதையின் கோணத்தை உணரத்தொடங்குகிறோம். கங்கா ஒரு unreliable narrator என்ற எண்ணம் உருவாகத்தொடங்குகிறது. பிரபுவின் வாழ்க்கைச்சூழலும், அவன் ஆளுமையும், அவன் கங்காவை எதிர்கொள்ளும் முறையும் நமக்கு தெரிய வருகிறது. அந்த மழை இரவில் அந்த காருக்குள் நடந்தது என்ன? இந்த நாவலுக்குள் பிரபுவின் பிரதி ஒன்றிருக்கிறது என்று நாம் அறியும் கணம் முக்கியமானதாக எனக்குப்படுகிறது.
குந்தி சூரியனை அழைத்ததில் அறியாமை என்ன பகுதி? ஆசை என்ன பகுதி? அகலிகை இந்திரனுடன் கூடியதில் அறியாமை என்ன பகுதி? ஆசை என்ன பகுதி? கங்காவின் அறியாமை மட்டும் அவளை அந்தச் சூழ்னிலையில் தள்ளவில்லை என்று பிரபுவின் தரப்பு உணர்த்துகிறது. கங்காவும் ஒரு வகையில் இதை உணர்ந்திருக்கிறாள். அதே நேரத்தில் தன் ஆசையை ஒப்புக்கொண்டு வலிய அவள் அவன் வழிக்குப் போகவில்லை என்றும் உணரமுடிகிறது. தன்னளவில் தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறாள் கங்கா. பிரபு அழைத்ததும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தன் சுயத்தை, விருப்பத்தை எதிர்கொள்ள அஞ்சியவளாக, அதை அணுகத்தெரியாமல் வீட்டுக்கு அழுதுகொண்டே ஓடுகிறாள். தன்னை கலங்கப்பட்டவளாக மற்றவர்கள் சொல்வதற்கு முன்னால் அவள் தான் முதலில் நம்பத்தொடங்குகிறாள். இது அவள் வாழ்ந்த காலத்தின் உளவியல் என்று புரிந்துகொள்ளலாம்.
பிரபுவின் பிரதி என்ன? பிரபுவுக்கு அவள் தான் அழைத்ததும் வந்த ஒரு பெண். மறுத்து குரல் உயர்த்தவில்லை. சாலையில் நிற்கும் பெண்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு சம்மதம் கோராமல் அவர்களுடன் உறவு கொள்வது சராசரி ஆண் செய்யும் செயலே அல்ல. தனிப்பட்டக் காழ்ப்புகளால், விறக்திகளால், தோல்வியடைந்து புழுவாய் உழன்ற ஒரு ஆளுமை பிரபு என்று நம்மால் ஊகிக்க முடிகிறது. சமூகத்தில் அவனுக்கிருக்கும் அந்தஸ்தாலும் பலத்தாலும் தான், விளைவுகளை பற்றி யோசிக்காமல் இப்படி ஒரு செயலை செய்ய முடிந்தது அவனுக்கு. தன்னைப்போல அவளுக்கும் அது ஒரு நாள் நிகழ்வு என்றும், இப்போது யாரையாவது மணம் செய்து கொண்டு நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றும் நினைக்கிறான். தன் செயலின் விளைவுகளை உணர்ந்து மன்னிப்புக் கோரினாலும், அவனுக்கு அவளது இரட்டை மன நிளையோ, அவள் சந்தித்த நெருக்கடிகளோ, அதனால் சிதையுண்ட அவளது சுயமோ, அவள் தற்போது அவனிடம் எதிர்பார்ப்பதோ, எதையுமே அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அது அவன் மண்டைக்குள் ஏரியதாகவே தெரியவில்லை. அவனை சுயநலவாதி என்றும் சொல்லிவிடமுடியவில்லை – தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு வகை வயதான குழந்தையைப்போல இருக்கிறான். கங்காவுக்கு நிகழ்ந்ததற்கு உண்மையாகவே வருத்தப்படுகிறான். வாய்வார்த்தையில் பொருப்பெடுத்துக்கொள்கிறான். ஆனால் அவன் அவளுடன் எல்லாவற்றையும் மறந்து நட்பு பாராட்ட விரும்புகிறான். தான் தொலைத்த இளமையின் நினைவாக, தன் வீட்டுச்சூழலுக்கு ஆறுதலாக அவளுடைய உணர்ச்சிகளையும் நட்பையும் குழந்தையைப்போல் கோறுகிறான். அவளுடைய எதிர்பார்ப்புகளே வேறு.

சுசித்ரா
இவ்வளவுதான்: கங்காவின் அடையாளத்தை அவள் அமைத்துக்கொள்ள பிரபு அவளுக்குத் தேவைப்படுகிறான். பிரபுவின் அடையாளத்தில் கங்காவுக்கு பங்கே இல்லை.
பிரபுவுக்கு அவளுடைய எதிர்பார்ப்பு புரியும் போது அவன் விலகிவிடுகிறான். இதன் உளவியலை இப்படிப் புரிந்துகொள்ளலாம். தன் மொத்த அடையாளத்தையும் அவன் செய்த ஒரு நயவஞ்சகச் செயலின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட ஒருத்தியை எப்படி ஏற்றுக்கொள்வது? ஒவ்வொரு நொடியும் தன்னுடைய கீழ்மையும் குற்றவுணர்வையும் நினைவு படுத்தியபடியே இருக்கும் அல்லவா அவளுடைய இருப்பு?
கங்கா எதிர்பார்ப்பது என்ன? உலகத்தின் முகத்தில் கரியை பூசுதல். அதற்குப் பிரபு. அவன்மூலம் தனக்குக்கிடைக்கும் அடையாளம். தன்னுடைய கதையை சீரான, உலகத்தின் போக்கு ஒற்றூக்கொள்ளும்படியான ஒன்றாக, அப்போது அவளால் தனக்குச் சொல்லிக்கொள்ள முடியும். காதல், குடும்பம், உறவு, பாலியல் இவையெல்லாமே அதுக்கடுத்த படியில் தான் என்று தோன்றுகிறது.
இவ்விரு பலவீனமான, உடைந்த மனிதர்களுக்குள் என்ன அணுக்கமான, நிறைவான உறவு சாத்தியம்?
கங்காவின் இறுதி அழுகை, “நான் யார்” என்ற அழுகை. இருமடங்காக அவள் உணரும் நிராகரிப்பும், கலங்கமும் அவளை தன்னையே வெறுக்கச்செய்கிறது. “தன்னையே தொலைத்தவள்” என்ற சொற்க்கள் இவளுக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகின்றன! இவள் நிலையைக்கண்டு பரிதாபம், இரக்கம் தோன்றுகிறது. கூடவே, அவளது சுயவெறுப்பின் ஒரு பங்கை நாமும் உணர்கிறோம். ஆம், தான் யார் என்று தெரிந்த்து தெளியாத நிலை, பரிதாபத்துக்கிறைய நிலை. கசப்பும் கழிவிரக்கமும் நிறைந்தது.
இந்த உணர்ச்சியை கொண்டுவந்ததே நாவலின் வெற்றி என்று நினைக்கிறேன். தன் சுயத்தை எதன் பொருட்டும், யார் பொருட்டும், ஒரு கண நேரமேனும் தொலைத்துத் தேடியவர்கள் உணரக்கூடியது. கங்காவின் வெறுமையின் துயரம் மனதை கனக்கவைக்கிறது. கொஞ்சம் வெறுக்கவும் வைக்கிறது.
கங்காவைப்போலவே வெறுமை நிரைந்து திரிந்த பாத்திரம் என்றால் அது நாஸ்டாஸ்யா பிலிபோவ்னா. அவளும் நயவஞ்சகச் சமூகத்தால் ஏமாற்றப்படுகிறாள். ஆனால் மிஷ்கினின் அன்பும் மன்னிப்பும் நிறைந்த கண்கள் மூலமாக நாம் அவளை காண்கிறோம் என்பதால் அவள் மீது இரக்கம் நிறைகிறதே ஒழிய கழிவிரக்கமோ வெறுப்போ வரவில்லை. அதேபோல் அகலிகையின் மீட்சி இராமனின் அன்பில். சீதையின் மீட்சி பூமியப்போல் ஸ்திரமான அவள் சுயத்தில்; இராமன் மீது அவள் கொண்டுள்ள அன்பில். ஆனால் கங்காவின் உலகில் இருக்கும் ஆண்களில் மிஷ்கிஙளோ இராமன்களோ இல்லை. ஒரு வரட்சியான, மதிப்பீடுகளும் அன்பும் அற்ற உலகத்தை ஆசிரியர் வேண்டுமென்றே படைக்கிறார் என்று தோன்றுகிறது. அங்கு புரட்சி எழுத்தாளரின் குரல் மட்டுமே கலங்கரை விளக்கம் என்று கொள்ளலாம்.
மொத்தத்தில் சி.நே.சி.ம. களின் பேசுப்பொருளும், மைய்யச்சிக்கலும் அந்த காலத்துக்குறியது தான். அந்த வகையில், இப்போதும் சொல்கிறேன், இது சிறப்பான, க்ளாஸிக் தன்மை கொண்ட முதன்மை நாவல் அல்ல. என் அடுத்தத் தலைமுறை இதை வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
இருந்தாலும், ஒரு வரலாற்றூச்சூழலை தெரிந்து கொள்வதைத்தாண்டி, இந்த நாவலை ஏன் வாசிக்கலாம் என்று சொல்வேன் என்றால்:
அ. இது மனித அடையாளம் சார்ந்த, பெண் அடையாளம் சார்ந்த படைப்பு. தன் அடையாளத்தை தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றுடன் இணைக்கையில், அது கவிழும்போது உருவாகும் கசப்பான வெறுமையின் சித்தரிப்பு. பெண் அடையாளத்தை பற்றி நம் மரபில் எழுப்பப்பத்த கேள்விகளை உடைத்து, பாவனைகளற்று முன்வைத்துப்பேசுகிறது. சமூக காலகட்டம் சார்ந்து, பெண்கல்வி சார்ந்து, பெண்ணின் சுய நோக்கு சார்ந்து விவாதிக்கப்படவேண்டியது.
ஆ. பிரபுவின் பிரதி. சுயநலமும், அறியாமையும், மடமையும் நிறைந்த ஆணாகவே பிரபுவின் பாத்திரத்தை நான் வாசித்தேன். ஆம், இவன் பாத்திரத்துக்கும் ஒரு சமூகப்பின்னணி உள்ளதென்றாலும் கங்கா அளவுக்கே அவனும் பலவீனமான, கோழைத்தனமும் கயமையும் நிறைந்த, insecure- ஆன பாத்திரம். பிரபு கங்காவை விட்டு விலகும் உளவியல் முக்கியம்.
இ. கதைப்போக்கும் கதைமாந்தரும் நம்மில் உருவாக்கும் அருவருப்பும் வெறுப்பும் கசப்பும் கழிவிரக்கமும். நான் இந்த நாவலை, முன்பு சொன்னது போல், உணர்ச்சிகளாகவே உள்வாஙிக்கொண்டேன். அது என்னில் செலுத்திய பாதிப்பு இக்கட்டுரையை எழுதும்போது தான் புரிகிறது – இந்த நாவலின் நிகழ்வுகளை, மாந்தர்களை, உறையாடல்களை உணர்ச்சினிலைகளாகவே நினைவில் நிறுத்திக்கொண்டுள்ளேன். அந்த உணர்ச்சியை தொட்டே நாவலை மீண்டும் தொகுத்துக்கொள்கிறேன். ஆசிரியர் இந்த நாவலை எழுதியதில் என்ன ஊகித்தார் என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு இது எப்படி எளிய, பலவீனமான மனிதர்கள், அசிங்கமான ஒரு சூழலில் மாட்டிக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள அனைத்தையும் தானாக நிறாகரிக்கத் தூண்டப்படுகிறார்கள் என்பதன் சித்திரம். கோரமான இறப்புக்கள், சித்திரவதை காத்சிகளைக்கூட வாசித்துவிடலாம். மனித மனம் – மகத்தான மனித மனம் – தன்னைத்தானே அழித்துக்கொள்வதைத் தாங்க முடியவில்லை. அதன் கதை தான் இது என்பதனால் வாசிக்கலாம்.
ஈ. பெண்களின் சுய அடையாளம் பற்றி வந்துள்ள தமிழ் நாவல் வரிசையில் பொருத்தி இதை வாசிக்கலாம். உங்களுடைய ‘கன்யாகுமரி’யை மறுமுனையில் வைத்து ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது.
நாவலை நினைவிலிருந்து மீட்டுத் தொகுத்து எழுதுகிறேன். பிழைகள் இருந்தால் அவை என்னுடைய நினைவின் பிழைகள்.
நன்றி,
சுசித்ரா
=================================================
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
===================================================
சுசித்ரா கடிதங்கள்
மலர் கனியும் வரை- சுசித்ரா
செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கன்னியாகுமரி 3, -பெண்ணியம்
கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
கன்யாகுமரி கடிதங்கள்
நீலஜாடி -கடிதம்
கால்கள், பாதைகள்
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!
கொற்றவையின் தொன்மங்கள்
தாயார் பாதமும் அறமும்
வெள்ளையானையும் கொற்றவையும்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்
டியர் ஜெ
திரு.அரவிந்தன் அவர்களின் கட்டுரை மிகத் தெளிவானது அவருக்கே உரிய கறார்தன்மையுடன்.திரு.ராய் மாக்ஸ்ஹாம் எனக்கு முக்கியமானவர். எனக்குப் புரிந்த வரையில் மிஷெல் தானினோ வையும் ராய் மாக்ஸ்ஹாமையும் ஒரே கோட்டில் இணைத்தது தவிர அவரின் பார்வை மற்றும் வெளிப்படுத்திய விதத்தில் சீரான முறையில் வந்த கட்டுரையே.
இருப்பினும், உதாரணமாக இன்று என் கண் படும் தமிழ்நாட்டு திராவிட அரசியல் நிகழ்வுகளை பிற்காலத்தில் கிசுகிசுவின் துணையின்றி யாரேனும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் எனக்கு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
கிசுகிசுக்கும் வரலாற்று ஆய்வுக்கும் அப்பால் எங்கோ உண்மை உறங்குகிறது. அனைத்தையும் தொட்டு விரிவது உங்கள் பார்வை என்று கொள்கிறேன்.
அவரவர்க்கு அவரவர் கண்ணாடிகள்.
இருவருக்கும் நன்றி.
Regards,
RC
ஸ்ரீதர் விஸ்வநாத்
அன்புள்ள ஜெ,
உங்களின் பல கட்டுரைகளை இதற்க்கு முன் படித்திருந்ததால்
http://contrarianworld.blogspot.in/2017/05/blog-post.html?m=1
படித்த போதே உங்கள் கருத்து என்ன என்று ஊகித்து விட முடிந்தது.
நீங்கள் war அண்ட பீஸ் குறித்து முன்னர் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது.
மேலும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு இவற்றில் சூதர் பாடலின் முக்கியத்துவம் (மற்றும் பாகவத்திலும் சூதரே தொடங்குவது எனக்கு பிடித்த ஒரு விஷயம்) வருகிறது.
அரவிந்தனின் கட்டுரை படிக்கையில் இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
சூதர் பாடல் என்பது கிசு கிசு போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதைகள் படிமங்கள் நாட்டுப்புற பாடல்கள் என்று ஒரு குழுவின் கலாச்சாரம் எப்படி விரிந்து பரவுகிறது என்பதை வெண்முரசின் முக்கிய கதை சொல்லும் பாங்காக அறிந்தேன். அதையே இங்கு வேறு விதத்தில் சொல்வதாக உணர்கிறேன்.
பிழையான புரிதல் இருப்பின் மன்னிக்கவும்
இன்று உங்களின் பதில் படித்தது அருமையாக இருந்தது
http://www.jeyamohan.in/98430#.WRqNNtLysvg
Thanks
Sridhar
***
கிசுகிசு வரலாறு படித்தேன்… எனக் கொரு சந்தேகம்,, ‘நெஞ்சுக்கு நீதி‘ .யை எதில் சேர்ப்பது?
நன்றி,
சிவகுமார் கே,
****
அன்புள்ள சிவக்குமார்
அது நெஞ்சுக்குக் கிசுகிசு
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 16, 2017
காட்டின் சொல்
வெண்முரசு ஒரே வரலாற்றுநிகழ்வை நோக்கி வெவ்வேறு பெருக்குகளாகச் சென்றுகொண்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உரிமைப்போரும் விளைவான ஆணவச்சிக்கல்களும் ஒரு கதை. அன்றைய பாரதத்தில் இருந்த தொன்மையான அரசகுடிகளுக்கும் பொருளியல் மலர்ச்சியின் விளைவாக எழுந்துவந்த புதிய அரசகுடிகளுக்கும் இடையேயான அரசியல்போர் இன்னொரு கதை. அதேசமயம் அது மாபெரும் தத்துவப்போர் ஒன்று நேரடிப்போராக முனைகொண்டதும்கூட. அந்தத்தத்துவ முரண்பாட்டின் தொன்மை நோக்கிச் செல்கிறது கிராதம்.
சொல்வளர்காடு வேதம் மருவியகாலகட்டத்தின் தத்துவப்பூசல்களின் விரிவான சித்திரத்தை அளித்தது. கிராதம் மேலும் முன்னால் சென்று வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது. வருணனை முதல்தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல்தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.
அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தை கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.
உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப்பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். யுலிஸஸ் அல்லது ஜீவகன் என நாமறிந்த உதாரணங்கள் பல. ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது. கனவும் , அக்கனவை நனவில் மீட்கையிலெழும் மெல்லியநகையாட்டும் வியப்பும் கலந்து ஓடுவது.
இந்நூல் தொடராக வெளிவந்தபோது சீரமைத்து உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கு அன்பு. பிழைசரிபார்த்து உதவிய ஹரன்பிரசன்னாவுக்கும், கிழக்கு பதிப்பகத்துக்கும் நன்றி.
வெண்முரசு வரிசையின் பன்னிரண்டாவது நாவல் இது. இந்நாவலை கிராதரூபனாகிய நடராஜகுருவின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வேல்நெடுங்கண்ணி
இனிய ஜெயம்,
அன்று கோவையில் இருந்து சக்தியுடன் , நிலவு தெரியா மேக மூட்டம் கொண்ட வானின் கீழ், சாரல் மழையில் திருச்சி வந்து சேர்ந்தேன்.நள்ளிரவில் பேருந்து நிலையம் மொத்தமும் மனிதத் தேனீக்கள் மொய்க்கும் தேனடையாக காட்சி அளித்தது. சென்னை ,கடலூர், மார்க்கத்துக்கு ஒரு பேருந்துக்கு, ஒரு தொடர்வண்டி ஜனம் காத்துக் கிடந்தது. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஊழி வந்தாலும் திருச்சி கும்பகோணம் மார்க்கம் காலியாகவே கிடக்கும். அந்த மார்க்க பேருந்துகளையும் சென்னைக்கு திருப்பி விட்டு இருந்தனர். காத்திருந்து , வந்து காலியாகவே வெளியேறி சென்ற சிதம்பரம் பேருந்தில் ஏறி, அற்ப மானுடர்களை ஒரு கணம் பரிதாபமாக நோக்கி விட்டு உறக்கத்தில் அமிழ்ந்தேன்.
அதி காலை , சிதம்பரம் கடலூர் நடுவே ஆலப்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி, ஊருக்குள் செல்லும் இரு சக்கர வாகனதாரியை நிறுத்தி, திருச்சோபுரம் கிராமம் வந்து இறங்கினேன். ஊராருக்கு அக் கிராமம் தியாகவல்லி கிராமம். திரிபுராந்தக சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி அங்கிருக்கும் நெசவாளர்களுக்கு பல வணிக சலுகைகளை அளித்து அவர்களுக்கு உருவாக்கி அளித்த கிராமம், ஆகவே அப் பெயர் வந்தது என்கிறார்கள். சில நூறு கச்சிராயர்கள் என்ற சத்ரிய குல வன்னியர்களின் வீடுகள்கொண்டு நிற்கும் கிராமம். பல்லவ காலம் தொட்டு ஆங்கிலேய காலம் வரை இங்கிருக்கும் சில கிராமங்களின் நிர்வாகக உரிமை , வரி, உரிமை கொண்டவர்கள் நாங்கள் என்கிறார்கள். அங்கே இருக்கும் இளைய கச்சிராயர் எனும் என் நண்பனை காண முன்பு அடிக்கடி அக் கிராமம் செல்வேன். இப்போது அவன் வெளிநாட்டில். ஆகவே அந்த கிராமத்துக்கு நான் செல்வதும் விட்டுப் போனது.
கடலூர் மாவட்டத்தில் மிக அபூர்வமான நிலப்பரப்புகள் மூன்று. ஒன்று கடலூர் துறைமுகம் மற்றும் அதை சூழ்ந்த அழிமுகப்பகுதிகள். இரண்டு சிதம்பரம் அலையாத்திக் காடுகள். மூன்று கடலூர் துறைமுகம் தொட்டு தியாகவல்லி வரை நீளும் தேரி மணற்குன்று வரிசை. ஒரு மணற்பருவை எடுத்து நோக்கினால் ,முனைகள் மழுங்கி பந்து போல தோற்றம் அளிக்கும், கைப்பிடியில் உள்ள மணலை ,ஊதியே பறக்க விட முடியும், மணலுக்கும் தூசிக்கும் இடப்பட்ட சந்தன வண்ண மணல். கண்ணெட்டும் தொலைவு வரை சந்தன வண்ண மணற்குன்று செறித்த நிலத்தை, வெள்ளி அலைகள் கொண்டு அறைந்து,அறைந்து எல்லை கட்டும் சாம்பல் வண்ண கடல் விரிவு. மணற்குன்று இடையே ஆங்காங்கே தென்படும் ,பனை தென்னை வரிசை, வீடுகள், மிக மிக வலகி சில மீனவர் குடியிருப்பு. வெள்ளி மலை என மின்னும் மனற்க்குன்றுகளில் கிடந்தது, வெள்ளி அலை வீசும் கடலலைகள் மீது, வெள்ளி வட்டம் மிதக்க ஒளிரும் வானைக் கண்டு,பல நாட்கள் விக்கித்துக் கிடந்ததுண்டு.
மனிதக் காலடித் தடமே காண இயலா கடற்கரை. சுனாமிக்குப் பிறகு இந்த நிலம் மொத்தமும் வேறு தோற்றம் கொண்டு விட்டது. மணலில் முக்கால் பாகம் காணாமல் போய் விட்டது , நிலத்தின் குழைவு காரணமாக பல மரங்கள் கடல் கொண்டு மறைந்து விட்டது. கடல் கரை அமைப்பு வளைந்து , கீழே கிடக்கும் கதிர் அறுவாள் போல கிடக்கிறது. உயரம் அமர்ந்து கடல் நோக்க இப்போது அங்கே சந்தனக் குன்றுகள் விலகி சென்றுவிட்டன. கடலுக்குள் சற்றே தொலைவில் நிறுவனம் ஒன்றின் [நாகார்ஜுனா ஆயில் ரிபைனரி] ரசாயனம் சுத்திகரிப்பு செய்யும் பிரும்மாண்ட கட்டமைப்பு . கிராம எல்லைக்கு வெளியே பல நூறு தகர கொட்டகைகள். அந்த நிருவனத்துக்கான பிகாரி வேலையாட்கள் கூட்டம், இரைச்சல்.
அதிகாலை சூரியானால் ஒளி கொண்டு, பொன் பொலிந்து, பொன் அலை கொண்டு கால் வருடும் கடல் விளிம்பில் நீண்ட நேரம் நின்று விட்டு , நான் எப்போதும் செல்லும் கடற்கரை கோவிலுக்கு சென்றேன். வேல் நெடுங்கண்ணி உடனுறை திருச்சோபுர நாதர் கோவில். மிக மிக சிறிய கோவில். கோபுரம் அற்ற பத்து அடி உயர காம்பௌண்டு சுவருக்குள், வெளி பிரகாரம். கொடி மரம். கடந்து சிறிய வாயிலை தாண்டி, [மேலே மணி] உள்ளே சென்றால். சிறிய சிறிய சுவாமி மற்றும் அம்மன் , சன்னதிகள் மேலே சிறிய விமானம். ஒரு பக்கம். ஸ்தல விருட்சமான கொன்றை மரம். கோவிலின் வலது மூலையில் கிணறு. சிற்பங்களோ, பக்தர்களோ , குறிப்பிடத் தக்க ஏதும் ஒன்றோ அற்ற சிறிய கோவில். ஆனால் எனக்குப் பிடித்த கோவில்.
முதலாம் சடைய வர்ம பாண்டியன்,இந்த கோவிலுக்கும் இந்த ஊரின் நெசவாளர்களுக்கும் நிவந்தமும் வரி விலக்குகளும்[ சூரியன் சந்திரன் உள்ளளவும் ] அளித்த கல்வெட்டு சான்றுகளை பண்ருட்டி தமிழரசன் ஆவணம் செய்துள்ளார். ஒரு முறை மதுரை ராமலிங்க சிவ யோகித் தம்பிரான் என்பவர் பாடல் பெற்ற ஸ்தலங்களை தரிசிக்கும் அவரது சுற்றுப் பயனந்தில், திருஞான சம்பந்தர் பாடி வைத்த இந்த ஸ்தலத்தை தேடி வந்திருக்கிறார். பாடல்தான் இருக்கிறது. கோவிலைக் காணவில்லை. ஊரார் ஒரு மணல் மேட்டைக் காட்டி அந்த மனற்க்குன்றுக்குள் இருக்கிறது நீர் தேடும் கோவில் என்றிருக்கிறார்கள். தம்பிரான் கடலூர் செல்வந்தர்கள் நஞ்சலிங்க செட்டியார், ஆயிரங்காத்த முதலியார், சேஷால நாயிடு மூவர் உதவியுடன் உழவாரப் பணி செய்து குன்றினில் மறைந்த அந்தக் கோவிலை மீட்டிருக்கிறார். இன்ற்ம் அக் கிராமத்தில் சிலர் அக் கோவிலை தம்பிரான் கோவில் என்றே அழைக்கிறார்கள்.
கோவிலின் மூல லிங்கம் [பாண லிங்கம்] இந்த நிலத்தின் ,இதே தேரி மணலால் ஆனது. அதை இப்படி மூலிகை கொண்டு கல்லாக மாற்றியவர் அகத்தியர் என்கிறது புராணம். பொதிகை மலையில் நின்று பூமியின் அச்சை சரி செய்த பிறகு, அகத்தியர் அவரது பயணத்தில் இங்கே வருகிறார், மக்கள் அவர் பூபாரம் நிவர்த்தி செய்த கதையை கேட்க, அகத்தியர் இந்த லிங்கத்தை செய்து, சிவன் முன்னிலையில் சிவனது திருவிளையாடல்களிளில் ஒன்றான அக் கதையை அகத்தியர் மக்களுக்கு சொன்னதாக ஐதீகம்.
கோவிலை சுற்றிவிட்டு அம்மன் சன்னதி வந்தேன். அபய கரம் , வரத கரம், மேல் வலக்கையில் தியான மணி மாலை, மேல் இடக்கையில் சற்றே மலர்ந்த தாமரை மொட்டு.
முன்பொரு சமயம் மாலையில் அக் கோவிலுக்கு சென்றிருந்தேன். வெளியே சாரதியின் காவலுடன் ஒரு வான நீல மாருதி ஒன்று நின்றிருந்தது. உள்ளே வழமை போல பக்தர்களோ, அர்ச்சகர்களோ அற்ற தனிமை. சுற்றி வந்து விட்டு அம்மன் சன்னதி சன்றேன். உள்ளே அவள் நின்றிருந்தாள். என் நிழல் வருகையால் அவளிடம் எந்த சலனமும் இல்லை. செம்பருத்தி வண்ண சேலை, அடர்ந்த ஜடை, வடிவுகள் துலங்கும் இளம் உடல் கொண்டு நின்றிருந்தாள். அசைவே இன்றி நின்றிருந்தாள். அவள் அம்மனை நோக்கி ஏந்தி நின்ற வலது உள்ளங்கையில் ,சுடர்ந்து கொண்டிருந்த கர்ப்பூர ஒளி இதழ் வாடி அணையும் வரை அவ்விதமே நின்றிருந்தாள்.
காட்சியின் பீதியால், வசீகரத்தால் ஸ்தம்பித்து நானும் அசைவற்றிருந்தேன். கைகள் இயல்பாக தாழ,அவள் இயல்பாக திரும்பினாள், மெல்லலையில் எழுந்து தாழும் துறை சேர் கலத்தின் முனை போல அவள் முலைக்குவைகள் எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தன. கழுத்து வியர்த்து, கன்னத்தில் மயிர்ப் பிசின்கள் ஒட்டி இருந்தன, என்னைக் கண்ட அக் கணம், மறுகணமே இன்றி, தனது உயிர் ஆற்றல் மொத்தம் கொண்டு, நிஷ்டூரமாக முறைத்தாள். செவ்வரி ஓடிய கண்கள். தனது அந்தரங்கத்தை அத்து மீறி அளைந்தவனை விட்டு சட்டென வெளியேறி மறைந்தாள்.
என்றும் அவளது கண்கள் எனது நினைவில் உண்டு. ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாத அந்த வேல் நெடுங்கண்ணியின் கண்கள்.
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜெயகாந்தன் –கடிதங்கள் 2
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
தங்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் கட்டுரை வாசித்தேன். நான் இந்நூலின் பதிவைக் குறித்து எழுதுகையில் இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன், “ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்னைக் கவர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தெரிந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் அந்தப் புத்தகம் என்னை ஈர்த்து வாங்கத் தூண்டியது”
இந்நாவலின் மீது எனக்கிருந்த தவறான அபிப்ராயத்தை இந்நாவல் குறித்து தாங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகள் மாற்றியமைத்தன. எனவே முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் இந்நாவலை அணுக முடிந்ததோடு அது குறித்து ஒரு நீண்ட பதிவையும் எழுத முடிந்தது.
http://kesavamanitp.blogspot.in/2015/06/1.html
http://kesavamanitp.blogspot.in/2015/06/2.html
http://kesavamanitp.blogspot.in/2015/06/3.html
ஒரு வாசகன் நாவல் ஒன்றை வாசிக்க முற்படுகையில் அவன் தவறவிடும் சாத்தியங்களை இப்படி பல நாவல்களுக்கு தாங்கள் சுட்டிக் காட்டியள்ளீர்கள். தங்கள் விளக்கத்தால் பல நூல்கள் இப்படி வெளிச்சம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் சில நேரங்கிளில் சில மனிதர்கள் முக்கியமானது.
அன்புடன்,
கேசவமணி
அன்புள்ள ஜெ
ஜெயகாந்தனைப்பற்றிய உங்கள் தொடர்ச்சியான எழுத்துக்கள் ஒரு ஆக்கப்பூர்வமான வாசிப்பை உருவாக்கி வருவதையும் தப்பான மனப்பதிவுகளை அழித்து வருவதையும் காண்கிறேன். அவரைப்பற்றிய பல கருத்துக்கள் அவர் உயிரோடு இருந்தபோது எழுந்தவை. அவை அவர் மீதான காழ்ப்புகள், சிறுபத்திரிகை பெரும்பத்திரிகை என்ற பாகுபாடு அவருடைய இடதுசாரித்தனம் மீதான காழ்ப்புகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவை. இன்றைக்கு அதெல்லாமே காலம் கடந்துசென்றுவிட்டன
அவர் எழுத்துக்களில் மூன்று அம்சங்கள் உண்டு. சீண்டும் அம்சம் ஒன்று உண்டு. அதை உரத்தகுரலில் வைப்பார். ஆகவேதான் அவை பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்த அம்சம் அவர் தன்னை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்தது. எங்களூரில் தோழர்கள் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் கைகளை தட்டியபடி ‘இங்குலாப் சிந்தாபாத்’ என்று பத்துநிமிஷம் கோஷம் போடுவார்கள். அதைப்போல. அதன் பிறகு ஒரு உணர்வுபூர்வமான கதை இருக்கும். அதற்கு அடியிலேதான் உணர்வுகளை அறிவுபூர்வமாக அணுகுவது இருக்கும். இந்த மூன்றாவது படிநிலைதான் நல்ல வாசகனுக்கு உரிய இடம். அங்கே செல்லாமலேயே அபிப்பிராயம் சொல்பவர்களே அதிகமானபேர்.
எனக்குத்தோன்றிய ஒரு கருத்து உண்டு. ஜெயகாந்தன் எல்லா மன உணர்வுகளையும் அறிவால் அள்ள முயல்வார். அவரது கதாபாத்திரங்களும் அதையெல்லாம் செய்யும். ஆனால் அவர்கள் திகைத்து நின்றுவிடக்கூடிய ஓர் இடம் உண்டு. அங்கேதான் ஜெயகாந்தன் கலைஞனாக வெற்றி பெறுகிறார். அது சிலநேரங்களில் சிலமனிதர்களின் கிளைமாக்ஸில் உள்ளது. அதை மறுபடியும் சொல்ல ஆரம்பித்து சொல்லமுடியாமல்தான் தொடர்ச்சியான மற்றநாவல்களை முடிக்கிறார். ஜெயகாந்தன் தோற்கும் இடங்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். ஹென்றி ஏன் கிறுக்குப்பெண்ணுக்கு ஆடை அணிவித்தான், ஏன் அவள் ஓடிப்போனாள் என்பது அதேபோன்ற ஓர் இடம். பாரீஸுக்குப்போ நாவலில் ஏன் சாரங்கன் அந்தப் பெண் உறவில் தோற்றான் என்பது அதேபோல ஓர் இடம். இதையெல்லாம் பேச இங்கே வாசகர்கள் வரவேண்டும்
அதிகமாக எழுதியதில்லை. நான்காண்டுகளாக உங்கள் இணையதளத்தை பைத்தியம் மாதிரி வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி
சபேசன்
ஜெ
ஜெயகாந்தன் மாதிரி அவரது காலகட்டத்திலுள்ள எல்லா அறிவார்ந்த விஷயங்களையும் பேசிய எழுத்தாளர்கள் தமிழிலே வேறு யார்? சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு இருத்தலியல் தவிர் வேறேதும் கண்ணுக்கே படவில்லையே. ஹிப்பிகளின் ஹெடோனிசம் [ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்] கிழக்குமேற்கு முரண்பாடு [பாரீஸுக்குப்போ] பெண்ணியம் [நடிகை நாடகம் பார்க்கிறாள்] ஃப்ராய்டிசம் [ரிஷிமூலம்] என்று அவர் ஆழமாகத் தொடாத இடங்களே இல்லை.என்னவென்றால் அவர் இவற்றை அவருக்கே உரிய முறையில் இங்கே உள்ள வாழ்க்கையிலே வைத்துப்பார்க்கிறார். ஆகவே அவர் இதையெல்லாம் பேசியிருக்கிறார் என்பது சாதாரணமாகத் தெரிவதே இல்லை
மகேஷ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
முதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..
முதலாளித்துவ பொருளியலும் விஜய் மல்லையாக்களும் பதிவுகளில் முதலாளித்துவ பொருளாதாரத்தில், தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் நன்றாக விளக்கியிருந்தீர்கள்.. கட்டுரை, ஒரு விஜய் மல்லையா பற்றி மட்டுமே இல்லை, பொதுவாக தொழில் முனைவோர் பற்றி எனும் போதும், இந்த பிரச்சினையில், ஏதேனும், தவறிருந்த்தால், அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அரசு இல்லையா?.. நீங்கள் கட்டுரையில், மல்லையா நிதி கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என்றால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.. ஆனால், இந்த இடம், முதலாளித்துவத்திற்கு முக்கியமான பலவீனம் கொடுக்கும் இடம் என்று எண்ணுகிறேன்..
முதலாளித்துவம் வெற்றி பெற, முக்கியமான அடிப்படை தேவைகளுள் சில, ஒன்று புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு சூழல், இரண்டு – கட்டுக்கோப்பான நிதித்துறை, நிதி அமைப்பு, இவ்விரண்டும் உள்ள பட்சத்தில், புது கண்டுபிடிப்புகள் கொண்டு வரும் தொழில் முனைவர்களை அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எளிதாக உற்பத்தி தொடங்க ஏது செய்தல் ஆகியன.. இதில் நிதி துறையின் பங்கு, தொழில் முனைவோர்க்கு தேவையான நிதியை எளிதாக அவர்களுக்கு கிடைக்க செய்தல்.
ஆனால், இங்கு நிதி பெறும் தொழில் முனைவர்க்கு, அதை திருப்பி அடைப்பது, ஒரு அவசியமான நிபந்தனை, அதை மீறினால், அரசும், நிதித்துறையும் தன் மீது பாயும் , தனக்கு நிரம்ப சிரமங்கள் உண்டாகும் என்ற பயம் சிறிதேனும் ஏற்பட வேண்டும்.. அவ்வாறில்லையெனில், ஒன்று, இப்படியான பணம் விரையமாவது ஒரு இழப்பு ( இது தொடர்பாக கட்டுரையில் நீங்கள் சுட்டிக் காட்டிய ஒரு தரவு கட்சிதம் !! ” விமானப்போக்குவரத்தை மேம்படுத்தும் தேவைக்காக அரசு தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய மாற்றுவழி என்ன? பொதுத்துறையை ஈடுபடுத்துவது. இன்னும் நாலைந்து ஏர்இந்தியாக்க:ஐ உருவாக்குவது, இல்லையா? அவற்றை ஐந்தே வருடத்தில் இதைவிட பத்துமடங்கு நஷ்டம் நோக்கிக் கொண்டுசெல்வார்கள் ஊழலில் மூழ்கிய நம் அதிகாரிகள். சேர்ந்து கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். அந்நிறுவனங்கள் மூழ்கி அரசுக்கு இதைவிட நூறுமடங்கு நஷ்டம் வந்தால் ஒருவராவது தண்டிக்கப்படுவார்களா? குறைந்தபட்சம் விசாரிக்கவாவது படுவார்களா?”
ஆனால், பணம் திருப்பி பெறுவதில் மெத்தனம் ஏற்பட்டால், புதுமை, கண்டுபிடிப்புகளை முன் நிறுத்துவதிலும் ஒரு உழைப்பில்லாத, தன்முனைப்பில்லாத போக்கு அனைவருக்கும் ஏற்பட்டு விடும் அல்லவா?.. ஒன்றுக்கும் ஒப்பேறாத கண்டுபிடிப்புகளை, திட்டங்களை வைத்து பணம் பெற்று விரையம் செய்யும் போக்கு வந்து விடாதா? ( விட்டது.. வங்கி கடன், தொழில் துறை கூட்டுக்களில் நடக்கும் மேல்மட்ட நிதி பரிவர்த்தனைகள் பல நம்மை அதிர்ச்சி அடைய செய்யும்…)
ஆம்் இது நிதி பெறும் எல்லாருக்கும் இது பொருந்தாது.. அரசின் சலுகைகளை பெறும் நிலையில் உள்ள சிலருக்கு தான் பொருந்தும் ( ரகுராம் ராஜன் தனது ” saving capitalism from the capitalists” நூலில், முதலாளித்துவத்தின் முக்கிய பலவீனமாக favoritism, nepotism ஆகியவற்றை கூறுகிறார்..)
கண்டிப்பாக தொழில் முனைவோர் ஊக்கப்படுத்தப் படவேண்டும்.. ஆனால், அது தொழிலை / உற்பத்தியை ஆரம்பிக்க, சிறப்பாக நடத்த தேவையான நிதி, அடிப்படை கட்டுமானங்கள் ஆகியவை கிடைக்க பெறுவதில் ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்கள் பதிலுக்கு அவர்கள் தரப்பில் செய்ய வேண்டிய கடமை, ஆற்ற வேண்டிய பொறுப்புகள் என்பவற்றில் அரசு, நீதித்துறை கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா?.முதலாளித்துவ உலகில் ” more the risk , more the gain at the same time bigger the loss” அல்லவா?..
அப்படி திருப்பி அளிக்க வேண்டியவற்றில் கண்டிப்பாக இல்லா விட்டால், தொழில்முறை நஷ்டங்களுக்கு பொறுப்பேற்க்கும் மன நிலை இல்லாமல், நல்ல லாபம் வரும் திட்டங்களை மட்டும் தொழில்படுத்தாமலோ, நிர்வாகத்தை கறாரான முறையில் செயல் படுத்தாமலோ வரும் நஷ்டங்களை அரசு ஏற்க்கும் நிலை ஏற்படும். 2008 அமெரிக்க பொருளாதார சரிவுக்கு காரணமான ” investment bank” சுக்கு, அமெரிக்க அரசு உதவ முன் வந்த போது அதற்கு பல தரபட்ட நிபுணர்களிடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது..
இங்கு மல்லையா விஷயத்தில், அரசு தரப்பில், கடன் திருப்பி தராததிற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டனவா என்று தெரியவில்லை.. ஒரு வேளை அவர் இந்தியாவில் இருந்திருந்தால், கைதாகியிருக்க கூடும்.. கைதில் இருந்து தப்பிக்க வெளி நாட்டில் போய் தங்குவது என்பது எல்லோராலும் முடியுமா?.. மல்லையா, லலித் மோடி போன்ற சிலரால் தானே முடியும்.. மேல் கூறியது போல் எதோ ஒரு துறையிலோ, அரசில் ஏதோ ஒருவருடனோ உள்ள, favoritism நாலோ, பரிமாற்றப்பட்ட ஊழல் பணத்தால் தானே.. ஆகவே, இதில் அரசின் குற்றம் பெரிதல்லவா?.. இது மல்லையா விஷயத்தில் மட்டும் இல்லை என்பதால், இந்த போக்கு, மொத்தமாக, இந்திய், தமிழ் நாட்டு முதலாளித்துவ பொருளாதார சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது அல்லவா?..
அன்புடன்
வெண்ணி
அன்புள்ள ஜெ,
விஜய் மல்லையா குறித்த உங்கள் பதிவினைக் கண்டேன். அதில் இடது சாரி வலது சாரி பொருளியல் குறித்தும் அதன் வேறுபாடுகளையும் கூறியிருந்தீர்கள்.
நீங்கள் வடது சாரி பொருளியல் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டியிருந்தீர்கள். அதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால் வடது சாரி பொருளியல் கொள்கையின்படி நாம் பார்த்தாலும் விஜய் மல்லையா அரசினால் காப்பாற்றப்பட வேண்டியவர் இல்லை என்பதே உண்மை.
ஏனென்றால் வடது சாரி பொருளியலில் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது.
1 ) போட்டி (Competition ) – எந்தத் தொழிலும் போட்டி இருக்க வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருளும், நியாயமான விளையும் கிடைக்கும். இதைத் தான் நாம் செல்பேசி துறையில் நாம் இப்போது பார்க்கிறோம். ஜியோவின் வருகை இதைத் தெள்ளது தெளிவாக நிரூபிக்கிறது.
2 ) Creative Destruction – இந்த இரண்டாவது கோட்பாட்டின்படி போட்டியில் தோற்கும் நிறுவனம் நிராகரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தலையிட்டு அந்த நிறுவனத்தை, அதன் முதலாளியைக் காக்க நினைப்பது முதலாளித்துவ பொருளியல் கொள்கைக்கு எதிரானது. அதன் படி விஜய் மல்லயாவின் கிங் பிஷர் நிறுவனம் நிராகரிக்கப் பட வேண்டிய நிறுவனம் ஆகும். மல்லையா அரசினால் காப்பாற்றப்பட வேண்டியவர் அல்ல. Corporate Bailout வலதுசாரி பொருளியல் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. 2008 அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் போது அமெரிக்க அரசாங்கம் செய்த Bank Bailout வலது சாரி பொருளாதார நிபுணர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அமேரிக்கா ஒரு banana republic ஆகி விட்டது என்று கடுமையாக விமர்சித்தார்கள். குடியரசு கட்சியின் தோல்விக்கும், ஒபாமா ஜனாதிபதி ஆனதுக்கு காரணமாக அமைந்தது.
அப்போது துணிவுடன் முதலீடு செய்து அதில் தோல்வியுறும் முதலாளிகள் நடுத்தெருவுக்கு வர வேண்டியது தானா. இல்லை. இதற்குத் தான் அமேரிக்கா போன்ற நாடுகள் சிறப்பான Banruptcy சட்டங்கள் வைத்திருக்கிறார்கள். இதன் படி தோல்வியுறும் நிறுவனங்களின் முதலீட்டார்கள், அதன் பங்குதாரர்கள், அதன் தொழிலாளர்கள் அனைவருக்கும் சாதகமான settlememt செய்கிறார்கள். இந்த சட்டங்கள் பெரும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என்ற பேதம் பார்ப்பதில்லை. பெரும் நிறுவனங்களுக்கு என்ன விதிமுறையோ அதே தான் சிறு நிறுவனம் தோல்வியுற்றாலும்.
இந்தியாவில் நல்ல Bankruptcy சட்டங்கள் இல்லாதது தான் பிரச்சினைக்கு மூல காரணம். இதைத் தான் தங்களை போன்ற வலது சாரி கருத்துடையவர்கள் வலியுறுத்த வேண்டுமே தவிர மல்லையா போன்றவர்களை பாதுகாப்பது அல்ல.
உங்களுடைய முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் புரிதல் தவறு என்பதை தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நன்றி.
சத்திஷ்
அன்புள்ள திரு ஜெயமோகன்,
இன்றைய உலகச் சூழ்நிலையில் முதலாளித்துவ பொருளாதாரம் தவிர்க்கமுடியாதது என்பது சரியே. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜனும் தொழில் செய்கையில் இழப்புக்கான பாதகம் தவிர்க்கமுடியாதது என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் மல்லையா நல்ல உதாரணமா என்பது கேள்வி. தொழிலில் தோல்வி என்பது வேறு, ஊழல், ஏமாற்றுதல், சட்டம் மீறுதல் என்பது வேறு. விஜய் மல்லையா இரண்டாம் வகைக்கான உதாரணமாகவே பார்க்கப்படுகிறார். அவர் தொழில் தோல்விக்காக துரத்தப்படவில்லை. ஐ டி பி ஐ வங்கி அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து மோசடி செய்து கடன் பெற்றது, கிங் ஃபிஷர் மதிப்பீட்டை முறைகேடாக உயர்த்திக்கூறி கடன் பெற்றது, பணச் சலவை, அவரது கட்டுப்பாட்டில் இருந்த கம்பனிகளுக்கிடையே தவறான பணபரிவர்த்தனை, கிங் ஃபிஷர் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட சேமநல நிதி, வருமான வரி தொகைகளையும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சேவை வரி, விமானநிலையக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தாமல் ஏமாற்றியது, 100 கோடிக்கும் மேலான காசோலைகள் பணமில்லாமல் திரும்பியது, இவை எதையும் விசாரணை, நீதிமன்றங்களில் எதிர்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டது ஆகியவற்றிற்காக தண்டிக்கப்படக்கூடிய ஒரு ஊழல் முதலாளிக்கான உதாரணமாகவே விளங்குகிறார் விஜய் மல்லையா.
பா ராஜேந்திரன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

