Jeyamohan's Blog, page 1637
May 24, 2017
திருப்பூர், கொற்றவை- கடிதம்
வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்கட்கு,
இது என் முதற்கடிதம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு முதன்முதலாக, என் அம்மாவின் நினைவுநாளையொட்டி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காகச் சென்றிருந்தேன். சிறிதுநேரங்கள் முன்பாகவே அங்கு சென்றுவிட்டதால் அவ்விடம் மெல்ல உலாவத் தொடங்கினேன். அங்கிருந்த குழந்தைகள் நூலகத்தில் ஒரு தம்பதியினர் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தனர். வாய்பேச, காதுகேள இயலாத அந்தப்பிள்ளைகளிடம் அத்தம்பதியினர் வாய்வழியாக கதை சொல்வதையும், அருகிலிருக்கும் ஒரு பெண் அக்கதையை சைகை பாஷையில் அசைவுகளோடு மொழிபெயர்த்து உரையாடுவதையும் நானங்கு தூரமிருந்து பார்த்தேன். பின்னர் விசாரித்துக் கேட்கையில் அது சிவராஜ், அழகேஸ்வரி, சித்ராம்மா என்று பெயர்அறியவந்தது. உயிரூறிச்சொன்ன அந்த அம்மாவின் அசைவும் முகமும் என்னை ஒருவித மனச்சலனத்துக்கு ஆட்படுத்தியது.
கதைசொல்லலின் நடுநடுவே சொல்பவர், அக்கதையின் குறிப்பிட்ட பகுதியில் நெகிழ்ந்து சொல்லமுடியாமல் நடுக்குற்று திக்கிப்போய் நின்னதும், அதைப்பார்த்திருந்த குழந்தைகளின் உணர்வு ததும்பிய முகபாவங்களும் இப்போது நினைத்தாலும் நினைவுள் எழுகிறது. பிறகு அவர்களிடம் போய் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, இவ்வளவு உயிரோட்டம் உள்ளோடி நிறைகிறதே இந்தக்கதையில் என அவர்களிடம் கதையைப்பற்றிக் கேட்டபோது, ‘இது யானை டாக்டர் கதை. எழுத்தாளர் ஜெயமோகனுடைய அரும்படைப்பு’ என்று பதில் சொன்னார்கள்.
வாழ்வில் முதன்முதலாக நான் உங்களை என்னளவில் கண்டடைந்ததது அந்தத் தருணத்தில்தான். வாழ்வில் யதார்த்தமாக அடைந்த பெருங்கணத் திறவு அது.
அந்நினைவுநாளன்று, சாப்பாட்டுக்கூடத்தில் உணவுகொண்டுவரப்பட்ட பின்பு, அப்பள்ளியின் எல்லாப்பிள்ளைகளும் (யாருமே அழுக்காக பரிதாமாக இல்லாமல் அழகுச் சிறார்களாகவே தெரிந்தார்கள்) வந்து வரிசையாக தரையிலமர்ந்தார்கள். குட்டிக்குட்டி ஒலிச்சத்தங்களோடு கூடம் சலசலத்திருந்த போது ஒரு சிறுமி எழுந்து டக்கென கைத்தட்டினாள். சட்டென மொத்த கூடமும் நிசப்தமாகிப்போனது. அதன்பிறகு எல்லாரும் சேர்ந்து ஓரொலியை பிரார்த்தனைத் துதித்தலாக எழுப்பினார்கள். மொழியேயற்ற அப்பிள்ளைகளின் ஆதியொலி என்னை உலுக்கி அழவைத்துவிட்டது.
அந்த ஆதிப்பிரார்த்தனை எனது அம்மாவுக்காக சமர்ப்பணமானது அன்று. பிரார்த்தனை முடியும்நேரத்தில் சிவராஜ் வந்து, ‘யானை டாக்டருக்காகவும், அந்தக்கதைய எழுதுன எழுத்தாளருக்காகவும் பிரார்த்திப்போம்’ எனச்சொல்ல மொத்த குரல்வளைகளும் அதிர்ந்து வெளிகரைந்தது. கைகூப்பிக் கண்மூடித் தொழுத குழந்தைகளோடு சேர்ந்து நானும் உங்களை வணங்கத்துவங்கினேன்…
காலங்கள் சிலகழிந்து திரும்பவும் ஒருமுறை அங்கு சென்றிருந்தேன். அப்போது அத்தனை காட்சிகள் உணர்தலாக விரிந்தன விழிமுன். சாப்பிட்டு முடித்தபின்பு ஐந்து ஐந்து பிள்ளைகள் குழுக்களாகப் பகுந்து, நடப்பட்டிருந்த செடிகள், மரங்களின் அடித்தூரில் தண்ணீரூற்றிக் கைகழுவிக் கொள்கிறார்கள். பழக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கும், பள்ளுக்கே உரிய தூய்மையும் இதைச் சாத்தியப்படுத்திய வழிநடத்தும் மனிதர் யாரென யோசிக்க வைத்தது.
அன்றைக்குத்தான் முருகசாமி அய்யாவைச் சந்தித்தேன். சிலநிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும் அவருடனான அச்சந்திப்பு அவ்வளவு அணுக்கமானது நெஞ்சுக்கு. ஜெயமோகன் நீங்கள் முன்பு எங்கோ குறிப்பிட்டது போல் முருகசாமியும் அறம் நாயகர்தான். அப்பள்ளிக்கூடமும் அக்குழந்தைகளுமே இதற்கான காலசாட்சி.
இரண்டாம்முறை நான் சென்றிருந்த நாளில், திருப்பூர் அனுப்பனப்பாளையம் அருகிலிருந்து ஒரு ஏழைத்தாயும் தகப்பனும் அங்குபடிக்கும் தனது மகளை பார்க்க வந்திருந்தனர். அச்சிறுமிக்கு அடிக்கடி மயங்கிவிழுகிற ஏதோ நோய்ச்சிக்கல் இருந்துள்ளது. இதற்கென்றே பெருந்தொகை செலவழித்து அந்தச் சிறுமியைக் நலமாக்கியிருக்கிறார் முருகசாமி அய்யா. ஓசையற்ற இப்படி எத்தனையோ உதவிகள். கண்ணீர்கலந்த உடைந்த குரலோடு அய்யாவிடம் நன்றிசொல்லியழுத அந்தத் தாய்தகப்பனை நேரில்கண்ட போது எல்லாவற்றுக்குள்ளும் மறைந்திருக்கும் புறவுலகுக்குப் புலப்படாத அறம் என்பதன் வேரர்த்தம் எனக்கு வெளிப்பட்டது.
அங்கிருந்து வந்தபிறகு தொடர்ந்து உங்கள் எழுத்தைப் பின்தொடர்வதற்கு முதல்திறவாக இருந்தது, கிளம்பும் நேரத்தில் கைப்பையிலிருந்து அத்தம்பதியினர் எடுத்துத்தந்த ‘யானை டாக்டர்’ புத்தகமே. சின்னதான அச்சிடல்அது. முதன்முலாக மனங்கொடுத்து நான் வாசித்த கதை இதுதான். அதன்பின் நம்பிக்கையின் மையச்சரடை உங்கள் எழுத்துக்கள் நம்பமுடியாத ஆழத்துடன் பிணைத்து உயிர்ப்பிக்கிறது என்பதறிந்தேன்.
கருத்துச்செறிவான உங்களின் படைப்புகளுக்குள் மெல்லமெல்ல என்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ஒருவேளை இக்கடிதத்தை நீங்கள் வாசிக்கநேர்ந்தால்… இந்த காலகட்டத்தில் நான் ‘கொற்றவை’ நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலில் வரும்,
“அறம் அவிந்து மறம் தழைக்கும்போதெல்லாம் பேரன்னை நுண்ணுருகொண்டு ஒரு பெண்ணுடலில் ஏறி வெளி வருகிறாள்”
“பசியே ஒவ்வொரு உயிர்பருவின் உள்ளும் இருந்து ஓடு, ஓடு என சாட்டை சுழற்றும் தேரோட்டி”
“பெரும்பாலையில் ஒரு சருகு பறந்து செல்வதை காண்கையில் என்ன நினைப்பீர்கள் அடிகளே, அது போகும் திசையை வானம் அறியும் என “
என்ற இடங்களிலெல்லாம் என்னைமீறிய ஒரு மிகைமை அடைந்து மீண்டிருக்கிறேன். ஆட்கொள்ளலின் இரசவாதம்.
சமூகவெளிக்குள் என்னால் தேடிக்கொள்ள முடியாத, அந்தரங்கத் தனித்துணையாக, மானசீகமான அரவணைப்புடன் இந்த எழுத்தாளுமையின் காலவிரலைப் பிடித்துக்கொள்வது ஒருவகையில் தயக்கத்தைத் தாண்டி எனை வாழச்செய்கிறது. ஓர் ஏற்றுக்கொள்ளலைப் பழக்கியிருக்கிறது எனக்கு.
இணையதளப் பதிவுகள் வழியாக உங்களின் பார்வைக்கோணத்தையும் படைப்பின் நியாயத்தையும் சிறிதுசிறிதாக உள்வாங்கக் கற்றுவரும் இந்நிகழ்காலத்தில், வாழ்வாசலை திறந்துவைத்த ‘திருப்பூர் பள்ளி’யைப்பற்றிய இருகடிதங்களுக்கான உங்களின் பதில்களை வாசித்தேன். உளப்பூர்வமாக நம்புகிற நேர்மையின் பக்கம் நிற்கவேண்டிய நியாயவுணர்ச்சியை எனக்குணர்த்தியது.
நிறைய நிறைய யோசித்து… ஆழ்ந்து அமைதியாகி… பின்னிரவைக் கடந்த பின்புதான் இம்முதல் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் . முருகசாமி அய்யா, குழந்தைகள், சித்ராம்மா, சிவராஜ், அழகேஸ்வரி, மரஞ்செடிகள், யானை டாக்டர் என எல்லாரையும் எல்லாத்தையும் இறுக்கமாக நெருங்க அணைத்துக்கொண்டு உங்களின் இந்த பதிலாற்றலுக்கான வணக்கங்களையும் நன்றிகூறலையும் உங்கள்முன் வைக்கிறேன் திருமிகு ஜெயமோகன். உங்கள் வாழ்வில் நல்லவைகளின் நிறைசூழ இறைச்சக்தியை வேண்டிக்கொள்கிறேன்.
நெஞ்சின் நன்றியுடன்
திவ்யாஸ்ரீ ரமணிதரன்
***
அன்புள்ள திவ்யாஸ்ரீ
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? ஒவ்வொன்றும் அதற்கு எதிரானதை எதிர்த்து வென்றுத்தான் நிலைகொள்ளவேண்டும் என்பது இயற்கையின் நெறி. ஆகவே இதுவும் தன் தகுதியால் வெல்லும் என நம்புவோம்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-1
பாயிரம்
ஆட்டன்
கதிரவனே, விண்ணின் ஒளியே
நெடுங்காலம் முன்பு
உன் குடிவழியில் வந்த
பிருகத்பலத்வஜன் என்னும் அரசன்
பன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும்
காவல்செறிந்த அரண்மனையையும்
எல்லை வளரும் நாட்டையும்
தன் மூதாதையரின் நீர்க்கடன்களையும்
தன் பெயரையும்
துறந்து காடேகி
முனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து
உன்னை தவம்செய்தான்.
ஒளி என்னும் உன் இயல்பை மட்டுமே தன் சொல்லென்றாக்கி
பிறசொற்களனைத்தையும் அவன் நீத்தான்.
அச்சொல்லில் நீ எழுந்தாய்.
அவன் புலரிநீராடி நீரள்ளி தொழுது கரைஎழுந்தபோது
நீர்ப்பரப்பு ஒளிவிட நீ அதில் தோன்றினாய்.
‘மைந்தா வேண்டியதை கேள்!’ என்றாய்.
‘நான் நீயென ஒளிவிடவேண்டும்’ என்றான் அரசன்.
புன்னகைத்து அவன் தோளைத் தொட்டு
‘ஒளியென்பதும் சுமையே என்றறிக!’ என்றாய்.
அவன் விழிகளை நோக்கி குனிந்து
‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்
ஒளியன்றி பிறிதொன்றை கேள்!’ என்றாய்.
‘ஒளியன்றி ஏதும் அடைவதற்கில்லை’ என்றான்.
அருகே நீரருந்திய யானை ஒன்றைச் சுட்டி நீ சொன்னாய்
‘அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட
வெண்வடிவொன்றின் கருநிழல்
இந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.
ஒவ்வொன்றும் பிறிதொன்றே என்றறிக!
என் வடிவே இருள்
பகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே’
திகைத்து நின்ற அரசனின் கைகளைப்பற்றி
’உன் மறுவடிவை காட்டுகிறேன் வருக’
என அழைத்துச் சென்றாய்.
சுனையின் நீர்ப்பரப்பில் தன் பாவை ஒன்றை கண்டான்.
அலறிப்புடைத்து கரையேறி ஓடி
நின்று நடுங்கி ‘எந்தையே, இது என்ன?” என்று கூவினான்.
‘அவனே நீ, நீ அவன் நிழல்’ என்றாய்.
அவ்வுருவம் உடலுருகி வழிந்துகொண்டிருந்தது.
உடைந்த மூக்குடன் சிதைந்த செவிகளுடன் பாசிபிடித்து
நீரடியில் கிடக்கும் கைவிடப்பட்ட கற்சிலை என.
‘என் இறையே, ஏன் நான் அவ்வண்ணமிருக்கிறேன்?”
என்று அரசன் கூவினான்.
‘இங்கு நீ செய்தவற்றால் அவ்வண்ணம் அங்கு.
அங்கு அவன் செய்தவற்றால் இவ்வண்ணம் இங்கு.
பொலியும் உடல் அவனுக்குரியது.
கருகும் அவன் உடலே நீ ஈட்டியது’ என்றாய்.
‘எங்கிருக்கிறான் அவன்? எங்கிருக்கிறேன் நான்?’ என்று
நெஞ்சு கலுழ கூவினான் அரசன்.
‘இங்குள்ள நீ மைந்தருக்குத் தந்தை
அங்குள்ள நீ தந்தையரின் மைந்தன்’ என்றாய்.
கண்ணீருடன் கைநீட்டி அரசன் கோரினான்
‘மைந்தர் தந்தையின் பொருட்டு துயர்கொள்ள
அது பழியன்று, ஊழ்.
மைந்தரால் தந்தையர் துயர்கொண்டால்
பழியென்பது பிறிதொன்றில்லை.’
புன்னகைத்து நீ சொன்னாய்
‘நீ அவ்வுருவை சூடுக, அவனுக்கு உன் உரு அமையும்.’
‘அவ்வாறே, ஆம் அவ்வாறே’ என்றான் அரசன்.
ஆம் ஆம் ஆம் என்றது தொலைவான் பறவை ஒன்று.
நீர் இருள சுனை அணைந்தது.
குளிர்காற்றொன்று வந்து சூழ்ந்து செல்ல
மீண்டு தன்னை உணர்ந்த அவன் தொழுநோயுற்றவனானான்.
விரல்கள் மடிந்திருந்தன.
செவிகளும் மூக்கும் உதிர்ந்துவிட்டிருந்தன.
தடித்த உதடுகளிலிருந்து சொல்லெழவில்லை.
விரல் மறைந்த கால்களைத் தூக்கி வைத்து
மெல்ல நடந்து தன் குடிலை அடைந்தான்.
வேள்விச்சாலையிலும் நூலோர் அவையிலும்
அவனை புறந்தள்ளினர்.
அருந்தவத்தோரும் அவனைக்கண்டு முகம் சிறுத்தனர்.
அவன் முன் நின்று விழிநோக்கக் கூசினர் மானுடர்.
இல்லறத்தோர் அவனுக்காக ஈயவில்லை.
எந்த ஊரிலும் அவன் காலடிபடக்கூடவில்லை.
உருகியுதிரும் உடலுக்குள்
அவன் முற்றிலும் தனித்தமைந்தான்.
ஈட்டுவதும் இன்புறுவதும்
இன்றென்றும் இங்கென்றும் உணர்ந்து ஆடுவதும்
உடலே என்று அறிந்தான்.
உடலென்று தன்னை உணர்வதில்லை அகம்
என்று அன்று தெளிந்தான்.
நாளும் அந்த நீர்நிலைக்குச் சென்று குனிந்து
தன் ஒளி முகத்தை அதில் நோக்கி உவகை கொண்டான்.
பின்பு ஒவ்வொரு நீர்ப்பரப்பிலும்
தன் முகமும் அம்முகமும் கொள்ளும் ஆடலை
அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.
தன் முகம் முழுத்து அதுவென்றாக
அம்முகம் உருகி தானென்றாக
எது எம்முகமென்று மயங்கி நெளிய
முகமென்றாவது தருணமே என்றறிந்தான்.
சுடர்முகத்தோனே
ஒருநாள் புலரியில் விண்ணுலாவ எழுந்த நீ
உன் தேவியரை துணைக்கழைத்தாய்.
இளிவரலுடன் விலகினர் அரசியர்.
‘துயரன்றி அங்கு ஏதுள்ளது?’ என்றாள் பிரபை.
‘தனியரன்றி பிறரை கண்டதில்லையே’ என்றாள் சரண்யை.
‘அந்தியில் குருதிவழிய மீள்வதே உங்கள் நாள்
என்று அறியாதவளா நான்?’ என்றாள் சங்க்யை.
‘இருளில் ஒளிகையில் நானல்லவா துணை?’ என்றாள் சாயை.
மறுத்துரைக்க சொல்லின்றி
உருகி எழும் ஒளியுடலுடன்
எழுபுரவித் தேரேறி நீ விண்ணில் எழுந்தாய்.
என்றும்போல் சுமைகொண்ட துயருற்ற
தனித்த தவித்தமைந்த முகங்களையே
தொட்டுத்தொட்டுச் சென்றபோது
மாறா புன்னகை கொண்ட முகமொன்றைக் கண்டாய்.
உடல்கரையும் தொழுநோயாளனின் உடலில்.
வியந்து மண்ணிறங்கி அருகணைந்தாய்.
‘இருநிலையை அறிந்த அரசனல்லவா நீ?
சொல்க, எங்கனம் கடந்தாய் துயரை?’ என்றாய்.
‘விண்ணொளியே, வாழ்க!’ என்று அரசன் வணங்கினான்.
‘வருக!’ என அருகிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான்.
நீர்ப்பரப்பை நோக்கி குனிந்து
அலைகளில் எழுந்த தன் முகங்களை
கழற்சிக்காய்களென்று இரு கைகளில் எடுத்து
வீசிப் பிடித்து எறிந்து பற்றி ஆடலானான்.
சுழன்று பறக்கும் முகங்களுக்கு நடுவே
கணமொரு முகம் கொண்டு நின்றிருந்தான்.
அவனை வணங்கி நீ சொன்னாய்
‘அரசமுனிவனே, என்னுடன் எழுக!
நான் அன்றாடம் சென்றடையும் அந்திச்செம்முனையில்
மங்காப்பொன் என உடல்கொண்டு அமைக!
நாளும் துயர்கண்டு நான் வந்தணையும்போது
இறுதியில் தோன்றும்
தோற்றம் உமதென்றாகுக!’
உடல் சுடர்ந்தபடி பிருகத்பலத்வஜன் விண்ணிலேறி அமர்ந்தான்.
அந்திச் செவ்வொளியில் முகில்களில் உருமாறுபவன்
நீர்களில் கோலமாகின்றவன்
பறவைகளால் வாழ்த்தப்படுபவன்
முதல் அகல்சுடரால் வணங்கப்படுபவன்
அவன் வாழ்க!
கதிரவனே, அழிவற்ற பேரொளியே,
நீரிலாடும் கோலங்கள் நீ.
விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்
சொல்லிலாடுவதும் பொருளில் நின்றாடுவதும்
பிறிதொன்றல்ல.
உன்னை வணங்குகிறேன்.
இச்சிறு பனித்துளியில் வந்தமர்க!
இந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க!
இப்பெருங்கடலை ஒளியாக்குக!
அவ்வான்பெருக்கை சுடராக்குக!
ஆம், அவ்வாறே ஆகுக!
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 23, 2017
யார் அறிவுஜீவி?
ஓர் இளம்நண்பர் என்னிடம் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். ‘அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பலவருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கியநூல்களை வாசிக்கிறேன்.. நான் என்னை ஓர் அறிவுஜீவியாகக் கொள்ளமுடியுமா?’
நான் அதற்குப்பதில் சொன்னேன். ‘’ஒருவர் தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்வது அவரது விருப்பம். அந்த விருப்பம்தான் மெல்லமெல்ல அவரை அறிவுஜீவி ஆக்குகிறது’
’சரி, கேள்வியை மாற்றிக்கொள்கிறேன்.தமிழ்ச்சூழலில் ஒருவர் அறிவுஜீவி என்று கருதப்படவேண்டுமென்றால் அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?’
எனக்கு அது சற்று இக்கட்டான வினாவாகப்பட்டது. ஏனென்றால் நான் இன்று நம் பொதுஅரங்கில் வந்து நின்றுபேசும் பலரை வெறும் அரசியல்வாதிகளாகவோ வெற்றுப்பேச்சாளர்களாகவோ மட்டும்தான் நினைக்கிறேன்..
‘என் நோக்கில் ஒரு குறைந்தபட்ச அளவுகோலைக்கொண்டிருக்கிறேன்; என்று அந்த நண்பருக்கு எழுதினேன். ‘அந்த அளவுகோல் உலகமெங்கும் வெவ்வேறு முறையில் செல்லுபடியாகக்கூடியதுதான்’
ஓர் அறிவுஜீவி வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போது அறிந்திருக்கவேண்டிய சில உண்டு. உலகவரலாற்றின் ஒரு சுருக்கமான வரைபடம் அவன் மனதில் இருக்கவேண்டும். ஐரோப்பாவின் வரலாற்றுக்காலகட்டங்களைப்பற்றியோ சீனாவின் மீதான மங்கோலியர்களின் ஆதிக்கக் காலகட்டம் பற்றியோ அவன் ஒன்றுமறியாதவன் என்றால் அவன் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை
அந்த வரைபடத்தில் பொருத்திப்பார்க்குமளவுக்கு அவனுக்கு இந்தியவரலாறு தெரிந்திருக்கவேண்டும். ராஜராஜசோழன் பதினெட்டாம்நூற்றாண்டில் முற்றிலும் மறக்கப்பட்ட மன்னராக இருந்தார் என்பதையோ, தக்காண சுல்தான்கள் ஷியாக்கள் என்பது அவர்களுக்கும் முகலாயர்களுக்குமான பூசலுக்கான முதற்காரணம் என்பதையோ ஆச்சரியத்துடன் கேட்குமிடத்தில் ஒருவன் இருப்பானென்றல் அவன் அறிவுஜீவியாகவில்லை.
அந்த வரைபடத்தின் ஒரு பகுதியாக தமிழகவரலாற்றைத் துல்லியமாகவே அவனறிந்திருக்கவேண்டும். தமிழகவரலற்றின் பாதிப்பங்கு இன்னமும் எழுதப்படாமலேயே உள்ளது என்றும், சேரர்களைப்பற்றிச் சில பெயர்களுக்கு அப்பால் ஏதும் தெரியாது என்றும், களப்பிரர்களைப்பற்றிய சைவர்களின் ஊகங்களே இன்னும் வரலாறாக எழுதப்பட்டுள்ளன என்றும் அவனறிந்திராவிட்டால் அவனால் தமிழகம்பற்றி எதையும் சொல்லமுடியாது.
ஆனால் வரலாற்றை அவன் வெறும் தகவல்களின் வரிசையாக அறிந்திருப்பானென்றால் அதனால் எந்தப்பயனும் இல்லை. வரலாற்றில் இருந்து பண்பாடு கிளைத்து வளரும் விதத்தைப்புரிந்துகொள்வதற்கான தத்துவமுறைகளில் அவனுக்குப் பரிச்சயமிருக்கவேண்டும். இன்றையசூழலில் வரலாற்றை மதிப்பிடுவதற்கான மிகச்சிறந்த ஆய்வுமுறை என்பது மார்க்ஸியநோக்குதான். அதாவது முரணியக்க பொருள்முதல்வாத அணுகுமுறை,
நர்மதையும் கோதாவரியும் உருவாக்கிய வண்டல் படுகைகளின் விளைச்சலின் உபரி காரணமாகத்தான் அப்பகுதியில் மக்கள்தொகை செழித்தது என்றும், அந்த மக்கள்தொகையே சாதவாகனரில் தொடங்கும் மாபெரும் தென்னகப்பேரரசுகளாகியது என்றும், அவர்களே தென்னிந்தியா முழுக்க பரவி அரசுகளையும் பெரும் குடியேற்றங்களையும் உருவாக்கினர் என்றும் விளங்கிக்கொள்ள முடியாதென்றால் ஒருவனால் வரலாறின் எப்பகுதியையும் விளக்கமுடியாது.
அப்படி பண்பாட்டையும் வரலாற்றையும் ஒன்றாகச்சேர்த்துப் புரிந்துகொள்ளும் ஒருவனால்தான் சமகால சமூகச்சூழலை விளங்கிக்கொள்ளமுடியும். ராயலசீமாவிலிருந்து குடியேறிய தெலுங்கு மக்கள் தமிழகத்தின் வரண்டநிலங்களை நிரப்பியதனால் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழக மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்ததை, அதன் விளைவாக இங்குள்ள ஒட்டுமொத்த சாதிச்சமூக அமைப்பே மாறியதை அவனால் புரிந்துகொள்ளமுடிந்தால் தமிழகத்தின் சமூகச்சூழலை எல்லா தளங்களிலும் விளக்க முடியும்.
அந்தச் சமூகச்சூழலின் ஒரு பகுதியாக இங்கே உருவான பண்பாட்டு மாற்றங்களை அவன் புரிந்துகொண்டால் மட்டுமே அவன் அறிவுஜீவி. முப்பதுகளில் பெருந்திரளான மக்கள் மூடுண்ட சாதியமைப்பில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு வந்து சிறுகுடும்பங்களாக ஆனதற்கும் சமைத்துப்பார் என்ற நூல்வரிசையை எழுதிய எஸ்.மீனாட்சி அம்மாள் லட்சாதிபதியானதற்குமான தொடர்பை அதைக்கொண்டுதான் அவன் புரிந்துகொள்ளமுடியும்
அவ்வாறு சமூகப்பரிணாமத்தின் ஒரு பகுதியாக அரசியலைப்புரிந்துகொண்டால் 1920 வெள்ளையர்காலத்தில் மாகாணசபைகளுக்கான முதல்பொதுத்தேர்தல் இங்கே நடத்தப்பட்ட காலம் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான ரூபாய்களை ஏன் வேட்பாளர்கள் செலவிட்டுவந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.அதன்வழியாக அந்த அரசியல் இன்று பூதாகரமாக மாறியிருப்பதை அவன் விளங்கிக்கொள்வான்
இவ்வாறு வரலாற்றிலிருந்து அரசியல் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு காரணகாரியத் தர்க்கம் ஒருவனிடம் இருக்குமென்றால் அவன் இலக்கியத்தில் அதன் மிகநுட்பமான வடிவத்தைக் கண்டுகொள்ளமுடியும். க.நா.சு, தி,ஜானகிராமன் நாவல்களில் மளிகைவியாபாரிகள் சட்டென்று கோடீஸ்வரர்களாக ஆகும் சித்திரம் ஏன் வருகிறது என்று அவன் கவனிப்பான்..
சிலந்தி தன் உடலில் இருந்து நூலை எடுத்து வெவ்வேறு முனைகளை இணைத்து இணைத்து வலைபின்னுவதுபோல வரலாறு ,பண்பாடு, அரசியல் ,சமூகவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களில் இருந்தும் தன் அடிப்படைச்சிந்தனைகளை தொட்டெடுத்து இணைத்துப் பின்னிக்கொண்டே செல்லும் ஒரு செயல்பாடு ஒருவனுக்குள் இருக்குமென்றால் மட்டுமே அவனை அறிவுஜீவி என்று சொல்லமுடியும்
அதற்குமேல் அரசியலிலோ இலக்கியத்திலோ அறிவியலிலோ அவனுக்கென தனிப்பட்ட மேலதிகத் திறமைகள் இருக்கலாம். அத்துறைகளில் அவன் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, ஒருவனின் தேர்ச்சி தன் துறைக்குள் மட்டுமே என்றால் அவன் ஒருபோதும் அறிவுஜீவி அல்ல.
அந்த சிந்தனை வலையை தன்னுள் கொண்ட ஒருவனின் எல்லா பேச்சுகளிலும் அதுவெளிப்படும். எந்தக்கருத்தையும் முன்வைக்கும்போதும் சரி எதிர்கொள்ளும்போதும் சரி ஒரு வரலாற்றுத்தர்க்கத்தை . பண்பாட்டு விளக்கத்தை அவன் முன்வைப்பான். எந்த ஒரு வினாவும் அவனுடைய சிந்தனைகளை விரித்துக்கொள்ளவே அவனுக்கு உதவும்.
ஆகவே ஓர் அறிவுஜீவி எந்நிலையிலும் புதியசிந்தனைகளை வரவேற்பவனாகவே இருப்பான். எந்தப்புதிய கருத்தும் ஏதோ ஒரு வாசலைத் திறக்கக்கூடியது என அவன் அறிந்திருப்பான். நேற்று அபத்தமாக, ஆபத்தானவையாக கருதப்பட்ட எத்தனையோ கருத்துக்கள் காலப்போக்கில் சிந்தனையின் பகுதியாக ஆகிவிட்டிருப்பதை அவன் அறிந்திருப்பான். புதியகருத்துக்களால் சீண்டப்படாதவனாகவும் அவற்றால் மிகையாக உற்சாகம் கொள்ளாதவனாகவும் இருப்பதே ஓர் அறிவுஜீவிக்கான முதல்தகுதி என்று சொல்லமுடியும்.
உணர்ச்சிவசப்படுவதும் சரி, உணர்ச்சிகளுடன் உரையாடுவதும் சரி, உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதும் சரி ஒருபோதும் அறிவுஜீவிகளின் வேலையாக இருக்கமுடியாது. அது வரலாறெங்கும் அரசியல்வாதிகளின் வேலையாகவே இருக்கிறது. அறிவுஜீவி சிந்தனையின் தொடக்கத்தை நிகழ்த்தக்கூடியவன் மட்டுமே. ஆகவே திட்டவட்டமாக தர்க்கத்தின் வழியையே அவன் தேர்ந்தெடுப்பான். தர்க்கம் ஒருபோதும் உணர்ச்சியின் மொழியில் அமைந்திருக்காது.
அனைத்துக்கும் மேலாக அறிவுஜீவியை பன்மையாக்கக்கூடியவன், கலைத்துக்கொண்டே இருக்கக்கூடியவன் என்று சொல்லலாம்.எந்த கேள்விக்கும் ஒற்றைப்படையான எளிய பதிலைச் சொல்ல அவனால் முடியாது.வரலாற்றையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு அவன் பதில்சொல்வான் என்றால் அந்தப்பதில் ஒன்றிலிருந்து ஒன்றாக முளைத்து பலவற்றைத் தொட்டு விரிவதாகவே இருக்கும். ஆகவே குவிப்பதல்ல விரிப்பதே அறிவுஜீவியின் வேலை. கோஷங்களை உருவாக்குவதல்ல கோட்பாடுகளை நோக்கிக் கொண்டுசெல்வதே அவனுடைய சவால்.
அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட அறிவுஜீவி ஒருபோதும் மக்களுக்குப் பிரியமானவற்றைச் சொல்லக்கூடியவனாக இருக்கமாட்டான். ஏனென்றால் மக்கள் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றையும் அவர்கள் நம்புபவற்றையும் கேட்கவே பிரியப்படுகிறார்கள். புதியவற்றைச் சொல்வதனாலேயே அறிவுஜீவிகள் என்றும் மக்களின் நிம்மதியைக் குலைப்பவர்களாக, அவர்களைக் கொந்தளிப்படையச்செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தியாவின் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவுஜீவிகள் பத்துபேரை எடுத்துக்கொண்டால் நான் இப்படிப்பட்டியலிடுவேன். விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அவனீந்திரநாத் தாகூர், காந்தி, அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி, ஜே.சி.குமரப்பா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம காரந்த். அவர்களைக் கற்றிராத ஒருவர் அறிவுஜீவி என்று இன்று சொல்லிக்கொள்ளமுடியாது.
[தி இந்துவில் வெளியான கட்டுரை ] Nov 12, 2013 ]
அவனீந்திரநாத் தாகூர்-நவீன ஓவியம்
அம்பேத்கரின் தம்மம்
காந்தியும் கிராமசுயராஜ்யமும் ஜே சி குமரப்பா
தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்
சிவராமகாரந்தின் மண்ணும் மனிதரும்
தொடர்புடைய பதிவுகள்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி
ஜே.சி.குமரப்பா நூல்கள்
இனிய ஜெயன்,
வணக்கம்.
வலது, இடது பொருளியல் சிந்தனைக் குழப்பங்கள் குறித்த தங்களின் பதிவு நிறைய பேருக்குக் கோபத்தை உண்டாக்க வல்லது என்றாலும் எனக்கு உவப்பாகவே உள்ளது. உங்களின் சிந்தனைகள் நிறையப் பேரைக் கோபப்படுத்துகிறது. உண்மையின் வேலை அது மட்டுமே.
நிற்க.
பொருளதாரப் பூதத்தின் கையில் சிக்குண்டு சூழல் சீரழிந்துக் கொண்டிருக்கும் போது ஜே.சி.குமரப்பாவின் பொருளியல் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகிறது. இது குறித்து சிலர் எழுதினாலும், நிறையப் பேசி நிறைய எழுதியவர் நீங்கள் மட்டுமே.
அவரது சிந்தனைகள் அனைத்தும் தொகுப்பாக வெளி வந்திருக்கிறதா? எனில், தெரியப்படுத்த முடியுமா?
உங்களின் ஒவ்வொரு நொடியும் பொன்னொடியென கழிவது அறிந்து இந்தத் தயக்கம்.
நன்றி.
தஞ்சையிலிருந்து,
சந்தானகிருஷ்ணன்.
***
அன்புள்ள சந்தானகிருஷ்ணன்
ஜே சி குமரப்பாவின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன
நிலைத்தபொருளாதாரம் - இயல்வாகை வெளியீடு
டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் தொகுப்பு : மா.பா.குருசாமி சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746
தாய்மைப் பொருளாதாரம் காந்திய பொருளியல் அறிஞர், ஜே.சி. குமரப்பா கட்டுரைகள், தமிழில் ஜீவா [பனுவல் சோலை வெளியீட்டகம்,]
இரும்புத்திரையின் பின்னால் … ருஷ்யாவில் குமரப்பா காகா கலேல்கர் தமிழாக்கம் டாக்டர் ஜீவானந்தம்
போன்ற நூல்களை உடனடியாகச் சொல்வேன். சுனீல் கிருஷ்ணன் முயற்சியில் வெளிவரும் காந்தி டுடே இணையதளத்தில் பல கட்டுரைகள் உள்ளன
ஜெ
***
ஜே.சி.குமரப்பா: காந்திய கம்யூனிஸ்ட்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சோற்றுக்கணக்கு கடிதங்கள்
இனிய சகோதரனுக்கு
சோற்றுக்கணக்கு கதையை முன்பே நிறையமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் இன்று படித்தபோது நான் உணர்ந்தவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். என் கணவர் தன் ஒன்றரை வயதிலேயே அம்மாவை இழந்தவர். சித்தியின் கொடுமையில் வளர்ந்து ஆளானவர். வீட்டில் எல்லாம் இருந்தாலும் எந்த நேரமும் பசியோடு இருக்க வைக்கப்பட்டவர். சித்தியின் பிள்ளைகள் சாப்பிட்டு துப்பிய உணவுகளை ஒன்றாய் வழித்துப்போட்டு கடித்து துப்பிய எலும்புகளோடு கூடிய உணவே தினமும் அடியோடு கிடைக்கும். என்னோடு திருமணம் முடிந்த பின்னால்தான் அவருக்கு என்ன பிடிக்கும் என்றே வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.
சின்ன வயதில் உணவு மறுக்கப்பட்டதாலோ என்னவோ அதிகமாக சோறு சாப்பிடுவார். மற்றவர்கள் உணவிடும்போது சில இடங்களில் சுத்தமாகவே சாப்பிடமாட்டார். கேட்டால் சிலர் கையால் சோறு போட்டால் சாப்பிடவே முடியாது என்பார். என் அம்மா கையில் சாப்பிட முடியாது. ஆனால் என் சித்தி போட்டால் நிறைய சாப்பிடுவார்.
எங்களுக்கு திருமணம் முடிந்து 8 வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்தோம். எந்த பாஸ்டர் வந்தாலும் என் மாமியார் என் தலையில் கை வைத்து ஜெபிக்கும்படி என்னை கட்டாயப்படுத்தி அவமானப்படுத்துவார்கள். பைபிளில் ஒரு வசனம் “பெண்கள் பிள்ளைபேற்றாலே ரட்சிக்கப்படுவார்கள்” என்று இருக்கும். அதை நான் ஒரு பெரும் புகழ் பெற்ற பிரசங்கியிடம் கேட்டேன். மிகவும் தட்டையாக பெண்கள் குழந்தை பெற்றால்தான் பரலோகம் போக முடியும் என்று நான் குழந்தை பெற்று பரலோகம் போக வேண்டும் என்று ஊக்கமாக ஜெபித்தார். ஆனால் நான் உணர்ந்தது அன்பினால் கனியும் போதுதான் எல்லாருக்குமே பரலோகம் என்று. பிள்ளை பெற்ற எல்லோருமே தாய்மையில் நிறைந்தவர்கள் அல்ல. அப்படி கனிந்த கரங்கள் உணவிடும் போதுதான் வயிறார சாப்பிட முடியும்.
என் சித்தி திருமணமே முடிக்காதவர். கெத்தேல் சாஹிபின் கரங்கள் அப்படி பிள்ளைபேற்றாலே கனிந்த கரங்கள். அவருடைய அன்பு இனிய வார்த்தைகளிலோ, அன்பான தொடுகையிலோ அல்ல. வயிறு வெடிக்க உணவிடும்பொழுதே அவர் தன் மீட்பை கண்டடைகிறார்.
வாழ்த்துக்களுடன்
டெய்சி.
***
அன்புள்ள ஜெ
சோற்றுக்கணக்கு கதையை இப்போதுதான் வாசித்தேன். அந்த ஒரே ஒரு சிறுகதை பற்றி எந்தெந்தக் கோணங்களில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. ஒரு சிறுகதை இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? ஏனென்றால் அடிப்படை உணர்ச்சி அது. பசி. காமம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். பசி அதிகம் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் அது நேரடியானது. அதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அதை அறத்துடன் இணைத்ததனால்தான் அந்த சிக்கலான டெக்ஸ்ச்சர் வந்தது என நினைக்கிறேன். மகத்தான கதை. வாசித்துத்தீராத சப்டெக்ஸ்ட் கொண்டது. கதையில் செண்டிமெண்டாக ஏதும் இல்லை. மிகமிக மேட்டர் ஆஃப் பெக்ட் நடையில் செல்கிறது.ஆனால் ஏனோ அழுகை வந்தது. அது இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வரும் துக்கம். தாகத்தின் புனித துக்கம் என்று சுந்தர ராமசாமி எழுதியதை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
செல்வக்குமார்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு
[image error]
சார் வணக்கம்,
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
ஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியிருக்கும். ஏனெனில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்தவுடன் வாசிக்கிற எத்தனையோ வாசகர்கள் இருக்கிறார்கள். எப்படியோ இந்த முறை பங்கேற்க அழைக்கப் பட்டிருந்தேன். ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊட்டி நாராயண குருலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் போக முடியுமா என்று தெரியாத சூழல். அலுவலக வேலை தவிர்த்து, வீட்டிலேயே அடைந்து கிடந்தேன். எப்படியாவது கிளம்ப மனதை தயார் படுத்தினேன். விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்த நண்பர் பிரசாத் தன்னோடு அழைத்துச் செல்ல சம்மதித்தார். எப்போதும் என்னை தன் பிரியத்திற்குரிய மாணவனை போல் நடத்தும் கவிஞர் மோகனரங்கன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் விஜயராகவன் ஆகியோருமாக ஒன்றாக கிளம்பினோம். இரவே அங்கு சென்று தங்குவதாக திட்டம்.
[image error]
எழுத்தாளர் நிர்மல்யாவின் அன்பான வரவேற்பு. குளிரில் உடல் நடுங்க, சூடான உணவு உண்டோம். இயல்பாக விஷ்ணுபுரம் நண்பர்களுடன் பழகிவிட முடிந்தது. பெரும்பாலானவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதப்படும் கடிதங்கள் மூலம் அறியப்பட்டவர்கள். அவர்கள் வரும் புதியவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கும் இடமும் காரணம். இரவே விவாதமும், சிலர் தவறவிட்ட கதைகளை வாசிப்பதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்களுடன் அன்றைக்கே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, கவிஞர் தேவதேவன். இருட்டிலும் குருகுலத்தை ஒரு வலம் வந்து பார்த்தேன். கம்பளி தாண்டி ஊடுருவிய குளிரை உடல் தாங்கவில்லை. இரவில் எழுந்து பார்த்தால் கம்பளியும் குளிர்ந்து தகவமைந்திருந்தது. விடிந்தால் எதற்கு போட்டியிருக்கும் என்று விஜயராகவன் சொல்லியிருந்தார்.
[image error]
முதல் நாள், எல்லோருடைய வருகையும் தயாரிப்புகளுமாக நிகழ்வு தொடங்கியது (இதென்ன சாய்ந்தும் படுத்தும் புரண்டும் உரைகள் மனம் கொள்ள இயலாமல் செய்யும் நாற்காலிகள் ஏன் என்கிற மிகப்பெரிய சர்ச்சை உண்டானது). நெறியாளரின் சில நினைவு படுத்தல்களுக்கு பிறகாக, சுவாமி வியாசப்பிரசாத் சிறிய அறிமுகத்துடன் அமர்வுகளை தொடங்கி வைத்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரனுக்கும், மா.அரங்கநாதனுக்குமான மெளன அஞ்சலிக்கு பிறகு, கவிஞர் மோகனரங்கனின் அசோகமித்திரன் படைப்புலகம் பற்றிய உரை. அவருடைய கதைகளை பற்றியும், அதன் பார்வை மற்றும் அழகியல் சார்ந்தும் பேசிவிட்டு அங்கிருந்து அவற்றின் மொழியை குறித்து பேசும்போது விவாதமாக மாறி வளர்ந்தது. அங்கிருந்த பெரும்பாலானவர்களின் கேள்விகள் காரணமாக, அந்த மொழியின் போதாமை குறித்த விவாதமாக நீண்டு சென்றது.
[image error]
காவிய முகாமில் கம்பராமாயண பாடம் கேட்பது முக்கியமானது. இவ்வருடம் சுந்தர காண்டம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பலவருடங்களாக நடத்தி வருகிறார். தொடக்கத்தில் புதியவர்களுக்கான அறிமுகத்துடன் தொடங்கியது. அவரும், மாற்றி மாற்றி நாங்களுமாக பாடல்களை வாசிக்க அதன் விளக்கமும், வாசிப்பு வழிகாட்டலும் தந்தார். கர்நாடக இசைப்பாடகர், நண்பர் ஜெயகுமார் அவற்றை பாடக்கேட்டது எங்கள் நற்பயன். அவர் ராகம் தேர்ந்த விதம் பற்றி சொன்னதும், தொடங்கிய விவாதங்களுமாக தொடர்ந்தது பயனுள்ளதாக இருந்தது.
https://www.facebook.com/ragu.raman.737/videos/1408191855886246/
[image error]
குளிருக்கு இதமாக நேரத்துக்கு தேனீர், வேளைக்கு குறையில்லாத நல்ல உணவு. காலையும், மாலையும் தமிழ்ச்சமூகம் நன்றாக அறிந்த ‘ஒரு நீண்ட நடை‘. இரவும், பகலும் ஜெயகுமாரின் நற்குரலோசையில் பாடல்கள். கம்பளி மறையும் குளிர். சுதந்திரம் (முதல் நாளே மதியத்துக்கு மேல் நாற்காலிகள் எடுக்கப்பட்டு விட்டன). இடைவெளி இல்லாத உரையாடல்கள். அடையாளங்களை பகடியாக அணுகும் நட்பான சூழல். மூன்று நாட்கள். வேறென்ன வேண்டும்? மேலும், அவ்வப்போது தலைகாட்டும் காட்டெருதுகள்.
தேர்ந்தெடுத்து கொடுத்திருந்த சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான சிறு அமர்வுகள் மூன்று தினங்களும் பிரித்து அமைத்திருந்தார்கள். மேலும் முக்கியமான S.சுவாமிநாதன் அவர்களுடைய இந்திய சிற்பக்கலை தொடர்பான வகுப்புகள். இந்திய கலை வரலாறு, குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் இந்திய சிந்தனை முறை. மிகவும் விரிவான தகவல்களுடன், தெளிவான முறையில் தன்னுடைய அனுபவத்தையும், பரந்த வாசிப்பையும் தொகுத்ததாக அவருடைய வகுப்புகள் அமைந்தன. அவர் பகிர்ந்த தன் பெரிய அளவிலான குறிப்புகளும், புத்தகங்களும் இருக்கும் மின்சேகரிப்பு பயனுள்ளதாக இப்போது அனைவருக்கும் பகிரப்பட்டது.
[image error]
மூன்றாம் நாள் வீடு திரும்புதல். மழைத்தூறல் இருந்தது காலையில். ஒருவருக்கு ஒருவர் மிச்சம் வைத்ததெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். சுவர் தெரியாமல் புத்தகங்களாக இருக்கும் இந்த வாசிப்பு அறையை மீண்டும் எப்போது பார்க்க என்று தோன்றியது. அங்கு நிறைந்திருந்தது நிறைவும், இருப்பும்.
அன்று விடுமுறை தினமாதலால் எந்த வழியில் சிரமமில்லாமல் இறங்குவது என்கிற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. மூன்று வண்டிகளும் வழியறியாமல் எங்காவது போய் சிக்குவதும், போகிற பாதை அடைந்து கிடப்பதும் மீண்டும் வேறு வழியை தேடுவதுமாக பிரிந்து வெவ்வேறு பாதைகளில் இறங்கினோம்.
[image error]
முழுவதும் விவாதங்களையே மையப்படுத்தியிருந்த நிகழ்வு. மேலும் பங்கேற்றவர்கள் அனைவருமே உரையாடத் தகுந்தவர்களாகவும், பல்வேறு துறை சார்ந்த வாசிப்பை உடையவர்களாகவும் இருந்ததால் இதைத்தான் பேசினோம் என்று வரையறை செய்துவிட முடியவில்லை. ஆனால், இதை இப்படித்தான் அணுகவேண்டும் என்கிற புரிதல் நிறைய கிடைத்திருக்கிறது. ஆதுரமாய் தம் தோளோடு சேர்த்துக்கொள்ளும் மனிதர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள்.
– நாகபிரகாஷ்
18-மே-2017
ஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்
https://goo.gl/photos/6VmPDArPsMxtRsVe8
https://goo.gl/photos/5vt5CdAgpFqsJpTo8
https://goo.gl/photos/r6J3BuYjn9mUnWC2A
ஜானகிராமன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 22, 2017
ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
அன்புள்ள ஜெமோ,
உங்கள் தளத்தில் வந்த சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் கட்டுரைக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை படித்தேன். என் இளமை முதல் படித்திருந்தாலும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதியதாக ஒரு சிந்தனையைத் தூண்டும் இயல்பு அந்த நாவலுக்கு உண்டு. அப்படி நான் அறிந்ததில் சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். இவை அந்த கதாபாத்திரங்களுக்கான, அவற்றின் செயல்களுக்கான சாத்தியங்கள். இவற்றை அடைவதன் மூலம் எத்தனை நெருக்கமாக ஜெயகாந்தனை உணர்கிறேன் என்பதே என் வெற்றி.
கங்கா ஈஸ்வர்
அன்புள்ள கங்கா
இதுவரை ஜெயகாந்தனைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவே தலையாயது. உண்மையில் பிரமித்துப்போயிருக்கிறேன். ஜெயகாந்தனுக்குக் கிடைக்கும் நவீன வாசிப்பு, அதுவும் அடுத்த தலைமுறைப் பெண்களிடமிருந்து, அவர் நம் பண்பாட்டில் எப்போதும் தன்வினாக்களுடன் நீடிப்பவர் என்பதைக் காட்டுகிறது. ஒருகணம் அவர் இருந்து இதைப்பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அதனாலென்ன என்றும் தோன்றியது. இறப்பில் எழுத்தாளன் உயிர்த்தெழுகிறான் என்பதை மீண்டும் காண்கிறேன்
ஜெ
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
—————————————————————————————————————–
ஜெயகாந்தன் –கடிதங்கள் 2
ஜெயகாந்தன் -கடிதங்கள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கண்ணதாசன் விருதுகள்
கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்,ஆண்டுதோறும் கவியரசரின் பிறந்தநாளினை ஒட்டி கலை இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது.25.06.2017 அன்று நடைபெறும் கண்ணதாசன் விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கும் பின்னணிப் பாடகி திருமதி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வழக்கமாக விருதாளர் ஒவொருவருக்கும் ரூ.50,000 மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கி வரும் இக்கழகம், இம்முறை பத்தாம் அண்டு நிறைவையொட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.1 இலட்சம் விருதுத் தொகையாய் வழங்குகிறது. இவ்விருது,கண்ணதாசன் கழக நிறுவனர் திரு. கிருஷ்ணக்குமார் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.

கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் 25.06.2017 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நிகழும் இவ்விழாவிற்கு பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார். ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம.கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். கண்ணதாசன் கழக செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா விருது அறிமுகம் செய்ய இசைக்கவி ரமணன் வாழ்த்துரை வழங்குகிறார்.

இந்த விருதுகளை இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் அசோகமித்திரன்,வண்ணதாசன்,ஜெயமோன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் அமுத பாரதி, கவிஞர் பஞ்சு அருணாசலம், கவிஞர் முத்துலிங்கம், பின்னணிப் பாடகர்கள் பி.சுசீலா, வாணிஜெயராம், சீர்காழி சிவசிதம்பரம், கவிஞரின் உதவியாளர் திரு.கண.முத்தையா, பதிப்பாளர் திரு.பி.ஆர்.சங்கரன், திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு marabinmaindan@gmail.com
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
அக்னிப்பிரவேசம்- இந்தக் கதையில் வரும் கங்கா யார், அவள் இயல்பென்ன, அவள் அறிவு நிலையென்ன என்பதை முதலில் கருத்தில் கொள்ளலாம். கங்கா வீட்டிலிருந்து சமூக வெளிக்கு வரும் முதல் தலைமுறைப்பெண். அவள் முட்டாள் அல்ல. ஆனால் இந்த சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் அவை அல்லாதவற்றுக்கும் அவளுக்கு அறிமுகமில்லை. அவற்றை தன்னறிவால் அறிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியுமில்லை.
வீட்டைவிட்டு முதலில் வெளியுலகிற்கு வரும் பெண் பொருள்விடுதலை என்ற ஒற்றை நோக்கோடு மட்டுமே வெளியே வந்தாள் என்ற வாதமே இன்று தர்க்கபூர்வமாக எதிர்கொள்ள பொருந்தாத சிந்தனையாக இருக்கிறது. எத்தனை வறுமைக்கு அடியிலும் ஆணுக்கு இருக்கும் செயலின், தேடலின், வென்றடைதலின் தீவிரம் பெண்ணுக்கும் இருக்கலாகாதா என்ன? வீட்டுக்குள் மட்டுமே அடைந்திருந்த போதும் பெண்கள் அதுவரைக்கும் அந்தத் தீவிரம் இல்லாமல் இருந்துவிட்டார்களா?
கங்கா தன் முன்வந்து நிற்கும் காரில் ஏறிச்செல்கிறாள். கோழையான அறிவற்ற அத்தலைமுறைப் பெண்ணெனில் அவன் அழைக்கும்போதே அங்கிருந்து விலகி மழையில் ஓடிச் சென்றிருப்பாள். தன் மீது கொண்ட மதிப்பினால் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவே முதிராத வயதில் கங்கா அந்த அழைப்பைக் கருதியிருக்க முடியும். அழைப்பவனின் உயர்குடித்தோற்றத்தைப் பார்த்து வெட்கி, தன் எளிய கீழ்நடுத்தரகுடித் தோற்றத்திற்கு நாணுகிறாள் கங்கா. காரில் ஏறும்போது அவன் அவள் கைபற்றி அழுத்துவதையும் வென்றது போன்ற அவனது பாவனையையும் கவனிக்கவே செய்கிறாள். அதன்பிறகும் அவள் நமக்குக் காட்டுவது காரின் சித்திரத்தை, நீலவிளக்கும் நறுமணமும் அந்தக்காரின் சௌகரியங்களும். சொந்தமான பாவனையுடன் அந்தக் காரில் செல்லும் அவள் அதற்கு சகல உரிமையும் கொண்டவளென்றே நமக்குத் தோற்றம் காட்டுகிறாள். அப்படி ஒரு கார் இருந்தால் வீடே தேவையில்லை என்றும் எண்ணிக் கொள்கிறாள். இவையனைத்தும் அவள் வெகுளித்தனமென அவளே சொல்லிக் கொள்கிறாள்.
எங்கள் அலுவலகத்தில் ஓர் ஊழியர் இருக்கிறார். பெரும்பாலும் அவருடைய அறியாமையால் அவமதிக்கப்பட்டு வருபவர் அவர். அவருக்குக் கொடுக்கப்படும் வேலைகளை மீண்டும் மீண்டும் நுணுக்கமாக மாற்றி [தவறாகச்] செய்வார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பேதைத் தனமானவை. இச்செய்கையால் அவருக்கு வேலை கூடப்போய்விடக்கூடும். ஆனால் அவரால் அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். ஏனெனில் அதன் பின் இருப்பது புரிதலின்மை அல்ல. புரிந்து கொள்ள இயலாதவர் போன்ற ஒரு தோற்றத்தை மற்றவர்களுக்கு அளிப்பதினூடாக, தன் வேலைகளை மாற்றிச் செய்வதை, தன்னை ஏவியவர்களுக்குத் தரும் அவமதிப்பாக அவருடைய ஆழம் கருதுகிறது. அவரே தன் இயல்பை அறிந்திருக்கமாட்டார். அவை அனிச்சைச் செயல்கள். கங்காவின் பேதமைக்கும் இந்த ஊழியருக்கும் மிகப்பெரிய வேறுபாடில்லை. இதனை ஏற்காமல் அவள் செயலுக்கு வேறு விளக்கம் கேட்பவர்கள் வெண்முரசில் அம்பையிடம் பேசும் கன்னிப்பருவ தெய்வமான சோபையிடம் கேட்கலாம்!
வீட்டுக்குச் செல்லும் பாதை மாறிச் செல்கையில் தான் கங்கா பதட்டமடைகிறாள். ஆனாலும் அவள் அவனுடன் சண்டை போடவோ காரை நிறுத்தச் சொல்லி எதிர்க்கவோ இல்லை. வெறுமே முனகியபடி சிரிக்கிறாள். அதன் பின்னால் நிகழும் அந்தச் சம்பவத்திலிருந்து போராடி முரண்பட்டு விலகவில்லை. அதன் அடிப்படைக் காரணமாக, இந்தச் சமூகம் அளித்த கட்டுப்பாடுகளை மீற விரும்பும் ஒரு ஆழ்மனம் அவளுக்கு இருந்திருக்கலாம். அவள் மனத்தில் பிரபுவின் மீதான ஈர்ப்பும் அவள் சூழலின் மீதெழுந்த மௌனமான எதிர்ப்பும் அவளது பேதமையும் காரணமாக இருந்திருக்கலாம். அவளே அதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை. பிரபுவை அறிந்து கொண்ட பிறகு ’இப்படிப்பட்ட ஒரு அசடு அழைத்ததென்று வந்து வாழ்க்கையை அழித்துக் கொண்ட என்னை என்ன சொல்வது’ என்று அவளே வாக்குமூலம் கொடுக்கிறாள்.
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நாம் சந்திக்கும் கங்கா பேருந்தில் தன்னை இடித்துக் கொண்டு நிற்கும் ஆணிடமிருந்து விலகமுடியாதவளாக, அதைச் சகிக்கவும் முடியாத அவஸ்தையுடன் இருக்கிறாள். அந்தத் தருணத்தில் தான் அவள் கதை அவளுக்கே சொல்லப்படுகிறது. இடையிடையே அவள் வெங்குமாமாவையும் நினைக்கத் தவறுவதில்லை. அந்தக் கதையை படிக்கும் வரை அவள் தனக்கு நேர்ந்த அந்த சம்பவத்தை நினைத்துக் கொள்ளவில்லை என்றும் அதன் விளைவுகளையே அலட்சியமாக எண்ணிக் கொள்வதாகவும்தான் நம்மிடம் சொல்கிறாள். அதை அவளே உடைக்கும் இடமும் நாவலில் உண்டு.
பிரபுவைக் கண்டுபிடித்து, சந்தித்து, காரின் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் அவள் ‘பின் சீட்டில் ஏறியவள் பன்னிரு வருடங்களாக வளர்ந்து முன்சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது போல’க் கற்பனை செய்து பார்க்கிறாள். வாழ்வின் ஒரு தருணத்திலும் அச்சம்பவத்தை அவள் மறக்கவில்லை என்பதன் சான்று அது. அதை எண்ணி இன்புற்றாளா துயருற்றாளா என்பதெல்லாம் அவள் வார்த்தைகளில் இல்லை. அதன் பிறகு அவனிடம் பேசும்போதும் அவன் பேசிய ஒற்றை வார்த்தைகளைக்கூட நினைவு கூர்கிறாள். கங்கா போன்ற ஒரு ஆளுமை அவளை அடைந்த ஆணைப் பற்றியபடி தான் அதுவரை வாழ்ந்திருக்க முடியும்.
பிரபுவுக்கு அவன் சந்திக்கும் பல பெண்களில் அவள் ஒருத்தி. ஆனால் அவளுக்கு அப்படியல்ல. அவனை மீண்டும் அடையாளம் கண்டு கொள்வதில் கூட அவள் சிரமப்படுகிறாள். பார்த்த பின்பும் அன்றைக்கு இன்னும் ஸ்மார்ட்டாக இருந்ததாக அவளுக்குத் தோன்றுகிறது. அவள் தன் நினைவில் கொண்டிருந்த ஆண் ஆகிய அவனுக்கு அணுக்கமாகவும், அதேசமயம் அவளை அனைத்து வகையிலும் சூழ்ந்திருந்த வெங்குமாமாவிடமிருந்து விலகியிருக்கவும் அவள் கொள்ளும் முயற்சியே அவளுடைய ஆளுமையாக ஆகியிருக்க முடியும். நாம் சார்ந்துள்ள சூழலுக்கு எதிர்வினையாகவே நம்முடைய ஆளுமை உருவாகிறது. ‘நரகம் என்பது பிறர்’ என்ற சார்த்தரின் வரியை இந்நாவல் முழுவதிலும் பொருத்திப்பார்க்க முடியும். கங்கா பிறர் என்னும் நரகத்தில் இருக்கிறாள். பிறரில் இருந்து தன்னை விலக்கி அதன் வழியாக தன்னை உருவாக்கிக்கொள்கிறாள். கங்கா பிரபுவுடனான தன் உறவின் தோல்விக்குப் பிறகு பிரபு விரும்பாத ஒரு வாழ்க்கைக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதும் கூட பிரபுவுக்கு எதிரான, கூடவே வெங்குமாமாவுக்கும் எதிரான ஆளுமைத் தேர்வே. ஒரு வகையில் அவளை வேடிக்கை பார்க்கும் மொத்த சமூகத்திற்கும் எதிரான தன்வெளிப்பாடும்கூட.
வெங்குமாமா நம்முடைய சமூகத்திலுள்ள “நாலுபேரி”ல் முக்கியமான ஒருவர். அந்த நாலுபேரின் பிரதிநிதி. அவர்கள் பழமையும் பண்பாடும் பேசி இடித்துரைப்பவர்கள் மட்டுமல்ல. அப்படி தன்னை இழந்தவர்களை மீட்பவர்களும்கூடத்தான். அந்த நாலு பேர் அடிப்பதுடன் அணைக்கவும் செய்கிறார்கள். அதற்கு நன்றிக்கடனையும் எதிர்பார்க்கிறார்கள். அவளை அடைய முயல்வதும் நிந்தித்து விலகுவதும் அந்த நாலுபேரில் ஒருவர்தான். ”இழிந்தவள்” என்று சொல்லப்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் அவளை அவரே அழைத்துச் சென்று படிக்க வைத்து வேலையிலும் அமர்த்துகிறார். மற்றவர்கள் தெருவில் விட்டுவிட்ட அவளை இவ்வளவு பரிவாக பார்த்துக் கொண்டதும் அவள் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ததும் அவர் அவளுக்கு அளித்த கொடை. இதற்கிடையில் அவர் அவளிடம் அத்துமீறுகிறாரே தவிர வன்முறையால் அடைய முயலவில்லை.
கங்காவின் ஜாடையான எச்சரிக்கைக்கு அஞ்சி அவர் அவளை விட்டுவிட்டார் என்ற கங்கா நம்மிடம் சொல்லும் வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. பன்னிரு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் பிரபுவை வீட்டுக்குக் கூட்டிவந்து அறிமுகப்படுத்திய பின்னர் அவளை நேரடியாக அணுகும் அவர் அது வரை ஏன் திடமாக அணுகவில்லை என்பது எனக்குக் கேள்வியாக இருந்தது. நிர்க்கதியான அவள் வாழ்க்கையை மீட்டுத் தருவதனூடாக தன் மீது அவளுக்குப் பேரன்பும் பெருமதிப்பும் இருக்கும் என வெங்குமாமா கணிக்கிறார். சுயமரியாதையும் அறிவும் உள்ள பெண் என்பதால் அவளிடம் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் ஒரு பேரறிஞன் என்று நிரூபிக்க விரும்புகிறார்.
ஒரு பெண்ணை அவளது அகத்தையும், அகங்காரத்தையும் சேர்த்து வெல்ல விரும்பும் ஆணின் இயல்பு பற்றி வெண்முரசில் அர்ஜுனனிடம் குளியலறையில் மாருதர் விவாதிக்கும் இடம் ஒன்று உண்டு. அவளுடைய நிர்க்கதியான சூழலும் அவளுக்கு வேறுவழியில்லை என்பதும் மட்டும் அவர் அப்படி எண்ணுவதற்குக் காரணம் அல்ல. அவளுடைய நுட்பமான அறிவு பற்றிய அவருடைய கணிப்பும் அவர் தன்னுடைய வயது ஒரு தடையென எண்ணாமலிருப்பதற்குக் காரணம்தான். அவர் அவளை அடைய விரும்பவில்லை, அவளை முழுவதும் வெல்லவே விரும்புகிறார். அவளை அணுக முயன்று ஒவ்வொருமுறை அவள் தன்னிடமிருந்து விலகும்போதும் அவள் தனக்குரியவள், தன்னைத் தவிர எந்த ஆணும் அவள் மனத்தில் இடம்பெற முடியாதென்று தெளிவுடன் இருக்கிறார். எனவே அவள் கனிகிற வரை சற்று காலம் தாழ்த்துவதால் பிசகில்லையென்றே நினைத்திருக்கலாம்.
வெங்குமாமா தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சித்திரத்தை தானே உருவாக்குகிறார். அதையே உலகமும் நம்புகிறது. ஆனால் அம்புஜம் மாமி கங்காவுக்கு காட்டுகிற வெங்கு மாமாவின் முகம் வக்கிரம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த சமூகத்தின் அந்த நாலு பேரில் சிலருடைய இருளில் மறைந்திருக்கும் முகம் அது. ரகசியமாக கங்காவுடன் உறவு கொள்வதை விரும்புகிறது. அறியப்படாத இருளின் காயங்கள் போல, அத்தருணங்கள் எப்போதும் வெளிச்சத்துக்கு வரமுடியாதவை.
ஜெயகாந்தன் கங்காவின் பார்வையில் வெங்குமாமாவை அவள் மீது பாயக்காத்திருக்கும் புலியாக உருவகிக்கிறார். அவருடனான உறவு பற்றி கங்கா சொல்லும்போது அவரைப் புலியாகவும் அவளை அப்புலியைப் பழக்குவதன் வழியாகவே அதனிடமிருந்து தப்பிக்கக் கற்றதாகவும் சொல்லிக் கொள்கிறாள். அப்படி அந்தப் புலியை வென்றுவிட்டதாகவும் தருக்கிக் கொள்கிறாள். ’’வாக்கிங் வித் எ டைகர்’’ என்பது அவள் மொழி. அந்தப்புலி தன் இரைக்குக் காலம் பாராமல் காத்திருந்தது. தன் இரை கை நழுவிப்போகுமென அறிந்த தருணத்தில் அப்பட்டமாக பாய்கிறது. மிக மூர்க்கமாக கங்கா அவரை தண்டித்து அனுப்புகிறாள். பிரபுவின் மீதான காதல் ஆழத்தில் இல்லையென்றால் அவளை உருவாக்கிய அவரைத் தண்டிக்கும் கொற்றவையென அவள் எழுந்திருக்க முடியாது.
அவள் வெறும் பாலியல் வேட்கை மிகுந்தவளென்றால் அவளைக் காப்பாற்றி அன்போடு ஆதரித்து அவளை சுதந்திரமானவளாக ஆக்கிய வெங்குமாமாவை அவள் ஏன் விரட்ட வேண்டும்? அது ஒரு பாதுகாப்பான உறவுதானே? போலியான மதிப்புடன் சமூகத்தில் வாழ்ந்திருக்கலாம். எந்த மனக்கொந்தளிப்பும் அவமதிப்பும் தேவையில்லையே. சமூகத்தில் நடமாடும் சுதந்திரம் உள்ள அவள் ஏன் மீண்டும் பிரபுவையே தேடிக் கண்டடைய வேண்டும்? அதுவரையில் அவளை ஏசியவர்களை பொருட்படுத்தாத அவள் தனக்கென ஒரு ஆணை அடைவதில் மட்டும் மரபின் விதிகளை ஏற்று தன் உளம் அழித்தவனையே அடைய முயல்கிறாள் என்ற கூற்று எனக்கு அபத்தமாகப்படுகிறது.
ஒரு தருணத்தில் கங்கா மீண்டும் தன்னை அந்நிலைக்கு ஆளாக்கியதன் குற்றத்தில் அன்னைக்கும் பங்கு உண்டு எனச் ’சொல்ல விழைந்து’ அந்தக் கதையைக் கொண்டுவருகிறாள். அப்போதுதான் வெங்குமாமா அவள் மனத்தில் அந்த “அவன்” இன்னும் இருந்து கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டு கொள்கிறார். அதன் பிறகே அவளின் தகுதிகள் அலசப்படுகின்றன. அவளால் கண்டுபிடிக்க முடியாதென சூளுரைக்கப்படுகிறது. அவனை அவள் கண்டு பிடித்தாலும் அவள் அவமதிக்கப்படுவாள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இவையனைத்தும் எப்படியாவது அவன் மீதான அவளது ஈர்ப்பை உணர்ந்து அதிலிருந்து அவள் விடுபட வேண்டுமெனச் சொல்லப்படுபவையே. கனகம் கங்கா மீது பரிதாபப்படும்போது பண்பாட்டை சாஸ்திரத்தை அவளது கற்பின் பொறையை உதாரணம் காட்டி அந்தப் பரிதாபத்தை துடைத்தெறிகிறார் வெங்குமாமா. இவற்றுக்கு சம்பந்தமில்லாமல் கங்கா அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பிரபுவைக் கண்டடைந்த பின் முதன் முறை அவனிடம் தொலைபேசியில் பேசும் போது தொண்டை அடைக்க உள்ளம் ததும்பியபடி பேசுகிறாள். இருபதாண்டுகள் தான் வளர்ந்த குடும்பச் சூழலை தன் அந்தரங்கக் காதலனை அறிந்தவுடன் மொத்தமாகக் கைவிடும் பெண்ணின் இயல்பு அது.
பிரபுவைக் கண்டுபிடித்தபின் அவனை தன் குடும்பத்தினர் முன்நிறுத்த, அதன்பொருட்டு அவனை ஆழமாக அறிந்துகொள்ள என்று எண்ணி அவனுடன் பழகத் துவங்குகிறாள். அவனுக்குத் தன்னைப்பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கும் என்பதில் அவள் கொள்ளும் பதட்டம் கவனிக்கத் தக்கது. தன்னைப்பற்றிய இழிவான எண்ணங்களை அவன் கொண்டிருப்பானெனில், அவளுடைய சுயமரியாதை இழிவுபடும் பட்சத்தில் அவனுடன் தொடர அவளுக்கு எந்த உறவுமில்லை. {அப்படி ஒரு எண்ணம் அவனிடம் இருக்குமெனில் அந்த எண்ணத்தை மாற்றிவிடத் தன்னால் இயலும் என்ற சமாதானம், ஒரு “கமா”வும் போட்டுக்கொள்கிறாள்}. அவன் தன்னை இழிவாக எண்ணவில்லையென்றும் தன்னைப்போலவே வேறு வகையில் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் என்றும் அவனைக் கண்டுகொள்ளும்போது அவனைப்பற்றிய பொறுப்பை தானாகவே அவள் எடுத்துக் கொள்கிறாள்.
பிரபுவிடம் தான் மிகச் சொந்தமாக உணர்வதாக அவளே பல தருணங்களில் நமக்கு சொல்கிறாள். இந்தக் கார் இந்த மனிதன் எல்லாரும் அவளுக்கு புதிதாக இல்லை என்கிறாள். பிரபுவை அணுகும் ஒவ்வொரு தருணத்திலும் அவனை மிக நெருக்கமானவனாக உணர்ந்து அவன் தோற்றத்தை, உடையை, பாவனைகளை, அப்பாவித்தனத்தை ரசிக்கிறாள். மஞ்சுவிடம் நெருங்கி பிரபுவிடமிருந்து சற்றேனும் விலகுவதாக தோன்றும் தருணங்களில் ஏதேனும் காரணங்கள் சொல்லி அவனைத் தன்னுடன் இருத்திக் கொள்கிறாள். அவனது முந்தைய காலகட்டத்துப் பெண் சகவாசத்தைப்பற்றி தனக்கு நாட்டமேயில்லை என்று எண்ணுகிறபோது தான் அவர்களில் ஒருத்தியாக இருக்கக்கூடாதென்றும் ஆனால் அவன் தன்னை நேசிக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். அவன் தன்மீது அப்படி ஒரு உரிமையை எடுத்துக்கொள்ளாததன் குறையை அடிக்கடி எண்ணிக் கொள்கிறாள். அவளை பொறுத்தவரை அவன் அவளுடைய மனிதன் (My Man). அது அவளது உரிமையும் கூட
இதற்கிடையில் அவள் அம்மா கனகத்தின் எதிர்ப்புக்குரலுக்கு பதிலாக அவள் சுட்டிக் காட்டுவது அவள் அம்மாவின் தலைமுறை மாற்றத்தை. ”நீயென்ன சிரச்சா கொட்டிட்டே?” என்ற கேள்வியில் அவள் சுட்டிக் காட்டுவது ஒரு தலைமுறையில் நிகழும் பரிணாம மாற்றத்தை. அவள் தனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவளாக வாழவேண்டும் என்ற கனகத்தின் அபத்தமான வற்புறுத்தல் தான் சிரைத்துக் கொள்ளல். இதற்கு நேர் எதிரான தன்மையுடைய அடுத்த தலைமுறைப் பெண்ணின் பிரதிநிதியாக பிரபுவின் மகள் மஞ்சுவை ஜெயகாந்தன் அறிமுகப்படுத்துகிறார். காலங்கள் மாறும் என்றுதான் ஜெயகாந்தன் சிலநேரங்களில் சிலமனிதர்கள் என்று தலைப்பு வைப்பதற்கு முன்பு இந்நாவலுக்கு தலைப்பிட்டிருக்கிறார்.
தான் கொண்டிருந்த இளமையின் பேதமையைத் தவிர்த்த நவீன பெண்ணாக மஞ்சுவை கங்கா பார்க்கிறாள். மேலும் அறிவார்ந்த, புதிய நோக்குள்ள, தெளிவாகச் சிந்திக்க முயலும் ஒரு தலைமுறை. சகமனிதனுடன் இயல்பான நட்பு சாத்தியப்படும் தலைமுறை. தனக்கு முந்தைய தலைமுறையின் தவறுகளிலிருந்து, ஏமாற்றங்களிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் புதிய தலைமுறை. உடல்ரீதியான உந்துதல்களின் தடுமாற்றத்தை வென்று சமூகத்தில் நிகர் நிற்க விரும்பும் தலைமுறை. தன் முந்தைய தலைமுறையுடன் அது முரண்பட்டாலும் அது நம் பண்பாட்டை பழையதென தூக்கி எறியவில்லை. அதன் குறைகளைக் களைய, மேம்படுத்திக் கொள்ள தன் முந்தைய தலைமுறையிடம் அது உரையாட முயல்கிறது. தன் நிலையை விளக்குகிறது. அதற்கு மேலும் திணிக்கப்படும் அடக்குமுறையை மீறக் கற்கிறது. அந்தத் தலைமுறை தன்னை புரிந்து கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் என்று கங்கா திடமாக நம்புகிறாள். அவளிடம் அனைத்தையும் சொல்கிறாள். மஞ்சு மிக எளிதாக அவளுடன் இணைந்து கொள்கிறாள். இந்தப் புரிந்துகொள்ளலுக்கான அழைப்பே ‘நீ சிரச்சா கொட்டிட்டே?’ என்ற கேள்வி.
கங்கா பிரபுவை காதலிக்கிறாள். அவன் தன்னை முழுதேற்க வேண்டும் என்ற அவளது விழைவு அவள் குரலில் இருக்கிறது. என்றாலும் அவளது அறிவும், ஆழமான காதலும், தன் சுயமதிப்பும் அவளைக் கட்டுப்படுத்தி வைக்கின்றன. அவளின் இந்த உவகை மிகுந்த வாழ்க்கையில் பிரபுவைக் கண்டு கொள்ளும் இடம் ஒன்று வருகிறது. பிரபு கிளப்பில் தோற்க அஞ்சி ஏமாற்றி அவமானப்படும் ஒரு இடம். தான் அவமானப்பட்டதை அவளிடம் பகிர்ந்து கொள்கிறான். அவளிடம் பகிர்ந்து கொள்வதனூடாக அதிலிருந்து மீண்டு வருகிறான். அவனுக்குத் தன்னிலை (Self) மட்டுமே பெரிதாக இருக்கிறது. எனினும் அவன் கங்காவை தனக்கு மேலான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறான். அவன் சந்தித்த பெண்களுக்கும் அவனுடைய உறவு ஒரு பொருட்டில்லை என அவன் நினைக்கிறான். அந்தப் பெண்களுக்கிடையில் தான் கெட்டுப்போனதாகக் கருதி அதனால் தன் மொத்த வாழ்வையும் இழந்து அவனுக்காக அவனைத் தேடி வருபவள் அவள் மட்டுமே. அவனது நட்பின் மூலம் மலரும் கங்கா அவனைப் பொறுத்தவரை அவனுக்கு மிக மேலான ஒருத்தி. ஜெயகாந்தனின் வார்த்தையில் ‘அம்மன் சிலை போல’. அதனாலேயே அவனால் கங்காவின் காதலை உணர முடியவில்லை.
அவன் இச்சமூகத்தின் ஒரு சாதாரண “நல்லவன்”. சலிப்புற்றிருக்கும் ஒரு வாழ்க்கை அவன் முன் இருக்கும்போதும் தன் மகளுக்கென அதில் பொருந்திச் செல்வதே சரி என எண்ணி ஒரு பொறுப்பான குடும்பத்தலைவனென மனம் மாறுகிறான். அப்போதும் அவனுக்கு அவளைப் ‘பாழ்செய்ததன்’ குற்ற உணர்ச்சி பெரிதாக இல்லை. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மையுடையவன் அல்ல அவன். தன்னைப் பற்றிய சுயநலத்தால்தான் அவன் அவளை அடைந்தான். அதே சுயநலத்தால்தான் அவளை மேலே ஏற்றிவைத்துவிட்டு அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவனால் அவளிடமிருந்து எளிதில் விலகிச் செல்லவும் முடிகிறது.
தன் காதலையோ, அதன் விளைவான சரணாகதியையோ உணராத அவனை தன்னை நோக்கி திசை திருப்ப விரும்பும் கங்காவுக்கு தனக்கு வரும் திருமணத் தேர்வு வாய்ப்பாக அமைகிறது. தனக்கு ஒரு திருமண வாய்ப்பு அமையுமெனில் அவன் ஆழம் அவளை இழக்க விரும்பாமல், சீண்டப்படும் என்றும் தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும் என்றும் அவள் நினைக்கிறாள். தானும் அவனுடன் நிலைத்த உறவு கொண்டு வாழமுடியும் என்ற பெண்மையின் எளிமையான கணிப்பே அதைப்பற்றி அவனிடம் சொல்லச் செய்கிறது. (இந்த எண்ணத்தின் அடியில் அவளுக்குப் பிரபுவின் மீது பாலியல் வேட்கை இல்லையென்று சொல்ல முடியாது. அதை தவறென என்னால் எண்ண முடியவில்லை.) அத்திருமணத் தகவலை அவனுக்குச் சொல்லும் அன்று அவள் இனிப்பு பரிமாறுகிறாள். அத்திருமணத்தை முன்னெடுப்பவரிடம் தன் அண்ணன் வீட்டு விலாசத்தை அவளே தருகிறாள். இப்போது ‘நோ’ சொல்லத் தெரியாத பெண் அல்ல இந்த கங்கா. ஒரே வார்த்தையில் அந்தப் பேச்சை அவள் தவிர்த்திருக்கலாம். அத்திருமணத்தை பிரபுவை தன்னை நோக்கி இழுக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புகிறாள். இன்றும் பெண்கள் இந்த உத்தியைக் கையாளத்தான் செய்கிறார்கள்!
துரதிஷ்டவசமாக, அவன் அவளை தன் மகளுக்குச் சமானமாக எண்ணவேண்டும் என்னும் மனநிலையில் இருக்கிறான். அவளைப்போன்ற ஒரு பெண் தன் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அவளால் நம்ப முடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான அதிர்ச்சி இது. அவன் தன் காதலை அறிந்துகொள்ளவே இல்லை என்பதன் வலி. மணமாகிக் கணவனுடன் வசிக்கும் ஒருத்தியை மீண்டும் இன்னொரு ஆணை மணம் முடிக்கச் சொல்வதைப்போன்ற கட்டாயம். அவள் மனதளவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளே. மிக வெளிப்படையாக தன் சுயமதிப்பை சிதைத்து அவனைத் தன்னுடன் வாழும்படி தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி இறைஞ்சுகிறாள். இந்த கங்காவை பிரபுவுக்கு அறிமுகமில்லை. அவன் அவளை வேறொருத்தியைப் போலப் பார்க்கிறான். பிரபுவின் புறக்கணிப்பை தாளமுடியாத கங்கா மனம் உடைகிறாள். சமூகத்தின் நாலுபேரையும் புறக்கணிக்கிறாள் அல்லது அந்த நாலுபேருக்கும் எதிர்நிலை எடுப்பதன் மூலம் தன்னை முற்றாக அழித்துக் கொள்கிறாள்.
ஒரு ஆணின் நேர்மையற்ற தன்மையை இடித்துரைத்து ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்ணின் கற்பு நிலை தவறும்போது இடித்துரைத்து முற்றாகக் கைவிடுகிறது. எந்த ஒரு பெண்ணும் பெறும் உச்சபட்ச அவமதிப்பு அவளது பாலியல் உறவு குறித்த வசை. ஆணுக்கும் அவனைச் சேர்ந்த பெண்ணின் பாலியல் உறவுதான் உச்சபட்ச வசை. ’அவனுடைய’ பாலியல் உறவு அல்ல. இதன் அடிப்படையிலேயே இதிலிருந்து விடுபடும் பொருட்டே பெண்ணியம் பேசும் எல்லோரும் பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இதன் மறுமுகமாக பாலியல் வசைகள் மாறும் என நம்புகிறார்கள். ஆனால் அதுதான் பெண் விடுதலைக்கு அடிப்படை என என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஜெயகாந்தன் காட்டும் கங்காவும் இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை.
கங்காவை அவளது குடும்பம் ஏற்றுக் கொண்டிருந்தால், வெங்குமாமாவுக்குப் பணிந்திருந்தால், பிரபு ஏற்றுக் கொண்டிருந்தால், பத்மா அணைத்துக் கொண்டிருந்தால், திருமணம் நடந்திருந்தால் என அத்தனை சாத்தியங்களையும் இந்நாவல் வழி ஜெயகாந்தன் நம்மை யோசிக்க வைக்கிறார். ஆனால் இந்தச் சாத்தியங்கள் எதுவும் எட்டமுடியாத நிறைவு செய்ய முடியாத ஒரு நவீனப் பெண் கங்கா. பெண்ணியம் பேசுபவர்களின் சிந்தனைக்குப் பிடிபடாத ஒரு உயர்பெண்மை.
ஜெயகாந்தனுடைய கங்கா நவீன யுகத்தின் ஒரு சாத்தியம். ஹென்றிக்கும் சாரங்கனுக்கும் சமமான இடத்தையே அவர் கங்காவுக்கும் அளித்திருக்கிறார். அவர்களைப்போல சமூகத்துடன் ஒட்டி உரையாட விரும்பித் தோற்று விட்டு விலகி வெளியேறும் ஒரு சாத்தியம். இங்கு அவர் முன்வைக்கும் கங்கா ஒரு கெட்டுப்போன, மனநோய் பிடித்த, இயலாமை நிறைந்த பெண் அல்ல. பெண்ணெனும், மானுடம் என்னும் பேராற்றல் கொண்டவள். வெங்குமாமாவோ அம்மாவோ மன்னியோ பிரபுவோ கூட அவள் களத்தில் ஆடும் காய்களே. அவர்களுடன் ஆட இயலாமல் சலிப்புற்று அவள் சென்று சேரும் இடம் அவர்களுக்கெதிரான ஒன்று.
அவ்வகையில் பார்த்தால் சார்த்ர் சொல்வதுபோல அவள் பிறருக்கான எதிர்வினைகளால் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ளவில்லை. எதிர்வினைகள் வழியாக தன்னை கண்டடைகிறாள். தன்னை அதன் வழியாக கட்டமைத்து கூர்தீட்டிக்கொள்கிறாள். அவளுடைய கடைசிக்கட்ட உடைவு என்பது அதற்கு முன்பு அவள் காட்டியதுபோன்று சகமனிதர்களுக்கான எதிர்வினை அல்ல. அப்போது அவளுக்கு சகமனிதர்கள் எவ்வகையிலும் பொருட்டல்ல. அது, அவள் கண்டடைந்த அந்த ஆளுமை நிராகரிக்கப்படும்போது, அதன் அன்புக்கு அர்த்தமில்லாமல் ஆகும்போது ஏற்படும் சுயநிராகரிப்புதான். பாரிஸுக்குத் திரும்பிச் செல்லும் சாரங்கனைப் புரிந்து கொள்பவர்களால் தன்னை தானே நிராகரித்துக் கொள்ளும் கங்காவை கவனிக்கமுடிவதில்லை. சாரங்கனை, ஹென்றியை பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்கு கங்கா அவர்களையொத்த ஒரு சாத்தியம் என ஏன் எண்ணத் தோன்றவில்லை? மீண்டும் மீண்டும் பெண்ணின் கற்பும் பொறையும் பாலியலும் ஏன் பேசப்படுகிறது?
அக்காலத்தில் சமூகவெளிக்கு வரும் முதல் தலைமுறைப் பெண்ணுக்கு நிகழக்கூடியவற்றில் ஒரு சாத்தியம் கங்காவுக்கு நிகழ்ந்தது. அதை இந்த சமூகம் எப்படி ஏற்கிறது எதிர்க்கிறது எதிர்வினை புரிகிறதெனச் சொல்வதன் மூலம் தான் கருக் கொண்ட கங்காவை, அவள் ஆளுமையை, அவளைச் சுற்றி அமையும் சூழலையும் கதாபாத்திரங்களையும் கொண்டு ஜெயகாந்தன் வரைந்து காட்டுகிறார்.
***
gangaeshwar1981@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 21, 2017
தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்
அன்பின் ஜெ…
உங்கள் விஜய் மல்லையா பற்றிய கட்டுரை என்னை மிகவும் பாதித்து விட்டது.
நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். முனைப்பையும், க்ரியேட்டிவிட்டியையும் வழிபடுபவன்.
ஆனால், நீங்கள் செயல் திறன் என்னும் பெயரில், அரசைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளையும், உண்மையான வலதுசாரிகளையும், பொருளியல் மாற்றங்களை உருவாக்கும் பெரும் தலைவர்களையும் ஒரே அடைப்புக்குள் வைக்கிறீர்கள். இது மிகவும் தவறு என்பது என் எண்ணம்.
சில நாட்களாக உறங்கவே முடியவில்லை. அந்த அளவு உங்கள் கட்டுரை என்னை பாதித்து விட்டது. உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு நீள் கட்டுரை எழுதியிருக்கிறேன்.
உங்கள் பார்வைக்கு
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
உங்கள் கட்டுரையை வாசித்தேன். நீங்கள் என் நண்பர். நம் கருத்துக்கள் வேறு. ஆனால் நாம் இதுவரை ஒருமுறைகூட உரையாடிக்கொண்டதில்லை. ஏன் என்று இக்கட்டுரை வழியாக மீண்டும் அறிந்தேன். நான் சொல்லும் மையக்கருத்துக்கு நீங்கள் வருவதில்லை. அதை உங்கள் கோணத்தில் சற்று உருமாற்றிப் புரிந்துகொண்டு அதை மறுக்கிறீர்கள். ஒவ்வொருமுறையும் நான் சொல்வது அதுவல்ல என்று பதில் சொல்லி விலகுகிறேன். இம்முறையும். இதற்குக் காரணம் உங்கள் உணர்ச்சிகரத்தன்மை.
நான் தொழில்முனைவோர் அனைவரும் பொதுநலம்நாடிகள் என்று சொல்லவில்லை. நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களில் பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லவில்லை.அவர்களில் ஊழல் செய்பவர்களும் அரசை ஏமாற்றுபவர்களும் பொதுமுதலை மோசடி செய்பவர்களும் தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்லவில்லை.
மாறாக தொழில்முனைவோர் வலிமையான இடதுசாரி இயக்கங்களால் நிகர்செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அரசும் அமைப்புகளும் அவர்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்கிறேன்.தொழில்முனைவோர் லாபநோக்கம் மட்டுமே கொண்டவர்கள். அவர்கள் பொதுநலம் விரும்பிகள் அல்ல. ஆனால் லாபநோக்கம் சமூகத்துக்கு எதிரானது அல்ல. லாபநோக்கம் கொண்ட தொழில்செயல்பாடுகள் பொருளியல்ரீதியாக ஆக்கபூர்வமானதாக அமையமுடியும். ஆகவே சுயலாபச் செயல்பாடுகள் மேல் ஒட்டுமொத்தமாக நாம் கொள்ளும் காழ்ப்பு முதலாளித்துவப் பொருளியலுக்கு ஏற்புடையதல்ல என்கிறேன்.
அதேசமயம் இடதுசாரிகளால் தொழில்முனைவோர் அனைவருமே சுரண்டல்காரர்கள் என்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை நம்பி வெறுப்பைக் கக்குவதும், தேவையானபோது மட்டும் இடதுசாரி கோஷங்களை கையிலெடுத்துச் சேறுவீசுவதும் பிழை என்கிறேன். நவீனப்பொருளியலில் தொழில்முனைவோர் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள் என்பது என் கருத்து என்கிறேன், ஆனால் இடதுசாரிகள் அதை மறுப்பதை புரிந்துகொள்கிறேன், தொழில்முனைவோரில் வணிகர்களுக்கும் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் செயல்படுபவர்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்கவேண்டும் என்கிறேன்.
நான் சுட்டிக்காட்டுவது தொழில்முனைவோர்களுடன் அரசுக்கு இருக்கும் உறவை ஒருவகை மோசடி அல்லது ஊழல் என்று மட்டுமே பார்க்கும் பார்வையின் அபத்தத்தை மட்டும்தான். தன் தொழில்துறையில் நிதிமுதலீடு செய்யாத முதலாளித்துவ அரசு என ஏதுமில்லை. அதில் இழப்புகளை அத்தனை அரசுகளும் சந்திப்பதுண்டு. அந்த இழப்புகள் தள்ளுபடி செய்யப்படுவதும் இழப்புக்குள்ளான தொழில்துறைகளை அரசு பெரும்பணம் பெய்து மீட்பதும் எல்லாம் உலகமெங்கும் நிகழ்வது. சென்ற இருபதாண்டுகளில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் ஜப்பானும் அவ்வாறு நிதிபெய்து வங்கி, தொழில்துறைகளை மீட்டெடுத்த வரலாறு நம் முன் உள்ளது. இதை ஓர் இடதுசாரி கண்டிப்பதை புரிந்துகொள்கிறேன். எதையும் அறியாத ஒருவர் இதை வரிப்பணத்தை அள்ளிக்கொடுப்பது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் அறியாமையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்
நான் சொல்வது கருத்துச் சொல்பவரின் பொருளியல்நோக்கு என்ன என்பது தெளிவாக இருக்கவேண்டும் என்றுதான். இடதுசாரிப்பொருளியல்நோக்கா வலதுசாரிப்பொருளியல்நோக்கா என்பதுதான் ஒருவர் தொழில்முனைவோரை அணுகுவதன் அடிப்படையைத் தீர்மானிக்கிறது. அரசியல்தேவைகளின்போது இடதுசாரி நிலைபாடு கொள்வது ஒருவகை மோசடி என்று மட்டும்தான். இடதுசாரிகள் மட்டுமே முதலாளிகளை விமர்சிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாறாக முதலாளிகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் கொள்கை நிலைபாட்டை இடதுசாரிகள் மட்டுமே எடுக்கமுடியும் என்று சொல்கிறேன்
நீங்கள் நான் தொழில்முனைவோரில் பேதமில்லை, அந்த வர்க்கமே தண்டனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு மல்லையா அல்ல டாட்டாவையே சிறையில் தள்ளுவதில்கூட எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அவர்களின் குற்றங்களும் மீறல்களும் மக்களின்பொருட்டு அரசால் கண்காணிக்கப்படவேண்டும். அவர்களின் தொழில்முயற்சிகள் மறுபக்கம் மக்கள் நலன் என்னும் கருத்தால் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். நான் சொல்வது வெறும்காழ்ப்பாக மட்டும் தொழில்முனைவோரைப்பற்றி ஒட்டுமொத்தமாக அணுகக்கூடாது என்றே
அன்புள்ள பாலா, பெருநோட்டு அகற்றம் குறித்து நீங்கள் எழுதிய பதற்றம்மிக்க கட்டுரைகளை, அதிபயங்கர ஆரூடங்களை இப்போது பார்க்கிறேன். அதிலிருந்த உணர்ச்சிகரமே இக்கட்டுரையிலும் உள்ளது. இது அரசியல்கட்டுரை மட்டுமே என்றால் கோபம் கொள்ளமாட்டீர்கள்தானே?
உதாரணமாக ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் பற்றிய உங்கள் ஆதங்கம், மற்றும் சலிப்பு. இப்படிச்சில உணர்ச்சிகர பாவனைகள் மூலமே இதை உங்களால் முன்வைக்கமுடிகிறது. நானே உங்களிடம் ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் [நூறுநாள்வேலை] எப்படி கிராமத்தில் குறைந்தபட்சக் கூலியை தீர்மானிக்கும் முன்னோடியான வரவேற்புக்குரிய திட்டம் என்று ஒருமுறை பேசியிருக்கிறேன். ஆனால் உங்கள் உணர்வுநிலைக்கு எதிராக என்னை நிறுத்தித்தான் உங்களால் இதைக் கட்டமைக்க முடிகிறது.
பொருளியல்சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இங்கே நிகழமைக்கான காரணம் இதெல்லாம்தான். அதிதீவிர அரசியல்நிலைபாடு. அதை உணர்வுபூர்வமாக உருவாக்கிக்கொள்ளுதல். உச்சகட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சிந்தித்தல். அதிலிருந்து நிலைபாடுகளை எடுத்துக்கொண்டு மேலே வாதிட்டுச் செல்லுதல். நான் முகநூல்சண்டை என நிராகரிப்பது இதைத்தான்.
ஆனால் இக்கட்டுரையில் உங்கள் தரப்பை ஆணித்தரமாக, விரிவாக முன்வைத்திருக்கிறீர்கள். அவ்வகையில் முக்கியமான கட்டுரை. விரிந்த விவாதத்திற்குரியது. நன்றி
ஜெ
***
பாலசுப்ரமணியனின் கட்டுரை இணைப்பு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

