Jeyamohan's Blog, page 1633
June 2, 2017
எனது இன்றைய காந்தி –கடிதம்
அன்பின் ஜெ அவர்களுக்கு,
தங்களின் பதில் கடிதம் பேருவகை தந்தது..கூடவே நம்பிக்கையையும்..
தங்களை வாசிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் என் அறிதலின் ஆகப் பெரிய தடையாக எனது முன் முடிவுகளும் (உங்கள் மொழியில் வெற்று நம்பிக்கைகள்)நானே அறியாமல் நான் கொண்டிருந்த போலியான முற்போக்கு பாவனைகளும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அதை உடைத்து மறுவார்ப்பு செய்தது தங்களின் எழுத்துக்களே, குறிப்பாக உங்கள் கட்டுரைகள்..
உங்களுடைய இன்றைய காந்தி நூலை வாசித்து வருகிறேன். பள்ளிக் கல்வி வாயிலாக நாங்கள் அறிந்திருந்த காந்தி முற்றிலும் வேறானவர். என்னதான் தாத்தா என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர் ஒரு மகாத்மா, அவரின் வாழ்க்கை சாமானியர்களுக்கானது அல்ல. தன் வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்து அடிமைத் தளையிலிருந்து நம்மை விடுவித்தவர்.. நாம் அவரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டியவர்கள். ஒரு வகையான கடவுள்படுத்துதல் அது . காந்தியின் தேவை சுதந்திரம் பெற்றுத் தந்ததோடு முடிந்து விட்டதாக நன்றியுணர்வோடு என்னச் செய்வது.
இப்படி ஒரு தட்டையான புரிதலுடன் காந்தியைப் பற்றிய விமரிசனங்களை, குறிப்பாக ஜாதி மற்றும் பாலியல் தொடர்பான வசைகளை பின்னாளில் எதிர் கொள்ளும்போது, அதுவும் பலவீனத்துக்கே உரிய மூர்க்கத்துடன் வைக்கப்படும் போது அதை தர்க்கப் பூர்வமாக எதிர் கொள்ள இயலாமல் என் போன்ற பெரும்பான்மை சராசரி மனம் தடுமாறுகிறது. இது தாங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட, நாத்திகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இயலாத சடங்கியவாதிகளின் நிலை..
இத்தகைய சூழ்நிலையில்தான் “இன்றைய காந்தி” என் வாழ்வில் மறுபிரவேசம் செய்கிறார். ஆனால் இந்த முறை ஆலய மணியோசை மற்றும் பஜனைகளோடு தேரில் ஏறி வரும் உற்சவமூர்த்தியாக அல்ல, நான் எளிதில் அணுகி அறியக் கூடியவராக, ஓய்வாக சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் கடந்த காலத்தை அசைபோடுவதன் வழியே தன்னை வெளிப்படுத்துபவராக..
என் வாழ்வே என் செய்தி என்று அவர் அறிவித்திருந்தாலும் அவருடைய அத்தகைய வாழ்வு இந்த சமூகத்தில் பல தளங்களில் ஏற்படுத்திய நுண்ணிய தாக்கங்கள் என்ன என்பதையும் அது எவ்வாறு இந்த தேசத்தை இன்னும் வழி நடத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதையும் விரித்து பொருள் கொள்ள இந்த புத்தகம் காந்தியை நோக்கி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கிறது.
ஒரு வகையில் காந்தியை அறிவதென்பது, இந்தியாவை, அதன் ஆன்மாவை அறிவதற்கு ஒப்பானதாகத் தோன்றுகிறது. கூடவே அவரைக் கை விட்டு நாம் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடத்தையும்.
நீங்கள் காட்டும் காந்தி ஓர் அஹிம்சாவாதி மட்டுமல்ல, எதிர்தரப்பை மதித்து அவர்களுக்கு செவிமடுத்து, தேவைப்பட்டால் தன் தரப்பை மறுபரிசீலனை செய்து தன்னை மாற்றிக்கொண்டு முன்னகரும் ஆனால் எப்போதும் அறத்தின் (எல்லோருக்குமான) பக்கம் நிற்கும் இந்த ஒற்றைக் காரணத்தினாலேயே என்றென்றைக்கும் தேவையானவராக இருக்கிறார், வாழ்வின் எல்லாத் தளங்களிலும்..!
அன்புடன்,
ஞானசேகர் வே
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
June 1, 2017
அப்துல் ரகுமான்: அஞ்சலி
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களை நான் 1988 வாக்கில் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் இருமுறை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. சுவாரசியமான உரையாடல்காரர். உருது, அரபு கவிதைகளில் மிகப்பெரிய ஈடுபாடு உடையவர். ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் குறித்தும் மிரஸா காலிப் குறித்தும் அவரிடம் விரிவாக உரையாடியிருக்கிறேன். கவிதை பற்றிய அவருடைய கொள்கை நான் எண்ணுவதற்கு முற்றிலும் மாறுபட்டது. கவிதையை அவர் சொல்வீச்சாக, மேடை நிகழ்வாகவே பார்த்தார். அவை மௌனவாசிப்பில் மிகையாகவே எஞ்சின
தமிழ் வானம்பாடி மரபின் முதன்மைக்கவிஞர் என அப்துல் ரகுமானைச் சொல்லலாம். அவருக்கு அஞ்சலி
அப்துல் ரகுமான் – பவள விழா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குமரகுருபரன் கவிதைவிருது
மறைந்த குமரகுருபரனுக்கும் எனக்குமான உறவு விந்தையானது. என் நல்ல வாசகர். என்னை ஒரு மூத்தவனாக எண்ணியவர். ஆனால் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறோம். அதுவும் மிகச்சம்பிரதாயமான சிலநிமிடச் சந்திப்பு.நான்குமுறை மட்டுமே தொலைபேசியில் பேசியிருக்கிறோம். எப்போதும் ஒரு மானசீக உறவு இருந்துகொண்டிருந்தது
குமரகுருபரன் அறியமுடியாத எவற்றினாலோ அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா. என்ன என்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்குமேல் எனக்கும் அர்த்தமில்லாத மின்னன்சல்கள் வரும். அவை அதிகாலையில் இன்னொரு மின்னஞ்சலால் ரத்துசெய்யப்பட்டிருக்கும். அவர் விரைவில் விடைபெற்றபோது எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இன்று வேறுவகையில் அது அமையமுடியாதென்றே நினைக்கிறேன்
குமரகுருபரனின் துணைவி கவிதா சொர்ணவல்லி குமரகுருபரனின் நினைவை நிறுத்தும்வகையில் ஒர் இலக்கியவிருது அளிக்கவேண்டும் என அரங்கசாமியிடம் சொன்னார். அவர் விருதுத்தொகையை அளிப்பார். பிற செலவுகளை விஷ்ணுபுரம் அமைப்பு ஏற்றுக்கொண்டு விருதை வழங்குவது என முடிவுசெய்தோம். முன்னரே அவ்வாறு ஒரு விருது அளிக்கும் எண்ணம் இருந்தது. இன்னொரு விருது இளம் எழுத்தாளர்களுக்கு அளிக்கவும் எண்ணமிருந்தது. நிதிதான் சிக்கலே. கவிதா முன்வந்தமையால் இவ்வருடம் முதல் இவ்விருதை அளிக்க முடிவெடுத்துள்ளோம்
வரும் ஜூன் 10 அன்று குமரகுருபரனின் நினைவுநாள். அன்று விழாவை ஒருங்கிணைக்கிறோம். சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். மலையாள, தமிழ் கவிஞர்கள் கலந்துகொள்ளும் விழா. விருதுக்குரியவரை நாளை அறிவிக்கிறோம்
ஜெ
குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்
அஞ்சலி, குமரகுருபரன்
இறந்தவனின் இரவு
வலியிலிருந்து தப்ப முடியாத தீவு
தொடுதிரையும் கவிதையும்
குமரகுருபரனுக்கு விருது
நல்லதோர் வீணை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஒரு வார வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன். சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் “நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து விட்டது. ஜெயமோகன். உள்ளே புத்தக அலமாரியில் உள்ளது” என்றனர். புத்தகம் கட்டு பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. கட்டைப்பிரித்து அதைக் கண்டடையும் பரவசம் இழப்பு. பரவாயில்லை, புதுப் புத்தக வாசமும், வழவழப்பான அட்டையும் தாள்களும் அதை நிகர் செய்தன. புத்தகம் பதிவு செய்யும் போது, உங்கள் கையெழுத்து வேண்டுமென்றால் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்டிருந்தேன். ஆகவே உங்கள் கைழுத்து இருக்குமா என்ற படபடப்புடன் புத்தகத்தைத் திறந்தேன். “அன்புடன் ஜெயமோகன்” என்று கையெழுத்திட்டிருந்தீர்கள். சற்று நேர மகிழ்ச்சி, ஆராய்சிக்குப் பிறகு (கொஞ்சம் மலையாள எழுத்தின் சாயல் இருக்கிறதோ, மோகன் என்பது போகன் போல அல்லவா இருக்கிறது, மோகனில் புள்ளி இல்லையே), நீங்கள் இப்படி எத்தனை புத்தகங்களுக்குக் கையெழுத்திட வேண்டியிருந்ததோ என்று சற்றே குற்ற உணர்வு வந்தது.
சொல்வளர்காடு முழுவதும் இணையத்தில் அன்றன்றே படித்து முடித்ததுதான். எனவே புத்தக அறிவிப்பு வந்ததும் பதிவு செய்து வாங்க ஒரு தயக்கம் இருந்தது. மீள்வாசிப்புப்பழக்கம் இதுவரை இல்லாததும் இதுவரை வாங்கிப்படித்த புத்தகங்கள் வீட்டில் இருக்கும் நிலையும் யோசிக்கவைத்தது. தங்கள் தளத்தில் வாசகர்கள் மீள்வாசிப்பு செய்து விரிவான பதிவுகள் எழுதும்போது ஒரு ஆர்வம் ஏற்படும், ஆனால் செய்ததில்லை. எனவே தயக்கம். இதன் மறுபக்கமாக, ஒவ்வொரு நாளும் தவறாமல் உங்கள் தளத்தைப் படித்து வந்தாலும், அதை முற்றிலும் இலவசமா அனுபவிப்பதால் எழும் குற்ற உணர்ச்சி (சந்தா முறையைப் பரிந்துரைக்கும் வாசகர்களின் கருத்து சரி என்று நினைக்கிறேன். கட்டாய சந்தா இல்லை என்றாலும் விரும்பும் வாசகர்கள் மாத/வருட சந்தா செலுத்த ஏற்பாடு செய்யலாம்). படித்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவது இந்தக் குற்ற உணர்வை நிகர் செய்யும், மேலும் உங்கள் கையெழுத்தோடு புத்தகம் கிடைக்கும் என்பதால் பதிவு செய்தேன்.
புத்தகம் கையில் கிடைத்ததும் இந்த மன உரையாடல்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போயின. புத்தகத்தைப் புரட்டி கடைசியில் இருந்து ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். முழு நாவலும் படங்களின் வழியாக நினைவில் எழுந்தது. நினைவில் வராத அத்தியாயங்களுக்கு, ஒரு சில வரிகளைப்படிப்பதே நினைவை மீட்கப்போதுமானதாக இருந்தது. ஷண்முகவேலின் ஓவியங்கள் கணிணி வடிவத்தைவிட அச்சு வடிவில் இன்னும் பார்த்து அனுபவிக்கத்தக்கதாக உள்ளன. ஒளி, நிழல், வண்ணங்களின் பிரமிக்கத்தக்க வெளிப்பாடுகள். மிகவும் பிடித்தது 228 பக்கத்தில் உள்ள கதாயுதம். நெருப்பைக்கக்கும் பீரங்கி, குருதிக் குழாயை அடைக்கும் ஒளிரும் தகடு, சாய்ந்து வீழ்ந்து விட்ட கொடிமரம், தாங்கிப்பிடிக்க முடியாத செங்கோல் என்று மனம் போனபோக்கில் கற்பனை செய்துகொண்டேன். ஒளிரும் குருதி படிந்த கதாயுதம் சற்றே அழுந்தியுள்ள நீர்த்தரை துரியனின் தொடையா? கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா? யாருக்கு அமைதி? அடித்தவனுக்கா? அடிபட்டவனுக்கா? களமான பாரத வர்ஷத்துக்கா?
இதுவரை உங்களை இணைய தளத்தில் மட்டும் வாசித்து வருகிறேன். சொல்வளர்காடு நான் வாங்கியுள்ள உங்களின் முதல் புத்தகம். மீள் வாசிப்பு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
அன்புள்ள பாலகிருஷ்ணன்
அத்தியயாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்
ஜெ
ஜெமோ,
கோடை விடுமுறை முடிந்த அயர்ச்சியோடு சென்னை திரும்பியிருந்தேன். அதிகாலை 4.15க்கெல்லாம் பழநி express சென்ட்ரல் ஸ்டேசனை அடைந்திருந்தது. எப்பொழுதுமே நேரம் தவறாத express. வெள்ளக்காரன் மாதிரி on time தான்.
ஆனால், எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்து விடும் book செய்த fast track cab இன்னும் வரவில்லை. வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. அதிகாலையிலே வியர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த taxi driver ஒருவரிடம் பேரம் பேசி மனைவி, மகள், இரண்டு பெரிய பெட்டி மற்றும் சிறு சிறு கட்டப்பைகளுடன் சின்ன மலையில் உள்ள என் apartmentஐ வந்தடைந்தேன். கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரத்தை நகட்டி கடிகாரம் 5 மணியைத் தொட்டிருந்தது.
மனைவி தன் கைப்பையிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த சாவி கொண்டு main gateஐ திறந்து உள்ளே நுழைந்தவுடன், alert Selvaraj முழித்துக் கொண்டார். apartmentன் watchman அவர். “…எல்லோரும் என்ன watchmanன்னு தான் சார் கூப்புடுறாங்க. என் பேரே மறந்துடும் போல…” என ஒரு நாள் வருத்தப்பட்டார். அதிலிருந்து அவரை Selvaraj என்று தான் கூப்பிடுவேன். அது என் மாமனாரின் பெயர் என்பதால், அதில் எனக்கொரு குரூர சந்தோசமும் கூட.
சிரித்த முகத்தோடு, “என்ன சார், ஊர்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க போல…” என்று கூறிக் கொண்டே lift வரை பெட்டிகளை இழுத்து வர உதவினார். நான் சொல்ல வாயெடுக்கும் முன்பே, “…ஆங் சார் நீங்க சொன்ன மாதிரியே ஒரு parcel நேத்து சாயங்காலம் வந்துச்சு..” என்று கூறி பத்திரமாக எடுத்து வைத்திருந்த கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருந்த தங்களின் “சொல்வளர்காடு” நாவல் அடங்கிய parcel ஐ என்னிடம் கொடுத்தார்.
வியர்வையும் அயர்ச்சியும் அடங்கி ஒரு குதூகலம் தொற்றிக் கொண்டது. வேறு எந்த luggageஐயும் unpack செய்யாமல் அந்த parcelஐ unbox செய்ய ஆரம்பித்தேன், “சொல்வளர்காடு – unboxing” என்று ஒரு காணொளி எடுக்கலாம் போல எனறு நினைத்துக் கொண்டே. அவ்வளவு நேர்த்தியாக pack செய்யப்பட்டிருந்தது.
உறையிலிருந்து உருவியதுமே செம்பதிப்பு எனறால் என்ன என்று தெரிந்து கொண்டேன். புத்தகத்தில் முதலில் தேடியது உங்கள் கையெழுத்தைத்தான். ஒரு சில நொடிகள் உங்கள் கையெழுத்தில் ஆழ்ந்து போயிருந்தேன். “…..ம்ம்ம் வந்த உடனேயே ஜெயமோகனாப்பா?” என்றாள் ஐந்தாவது போகப்போகும் என் மகள். “…..அவருக்கு வேலையென்ன” என்று என் மனைவியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.
மூவரும் சேர்ந்து பிரமிப்பூட்டும் ஷண்முகவேலுவின் ஓவியங்களை ஒவ்வொன்றாக புரட்ட ஆரம்பித்தோம். Spectacular work indeed. நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், இந்த மௌனமான ஓவியங்கள் பேசவும் ஆரம்பிக்கும் என்றே நினைக்கிறேன்.
இன்னும் ஒரு வாரத்தில் நான் தற்போது வாசித்து வரும் “பின் தொடரும் நிழலின் குரல்” முடிந்து விடும் என்று எண்ணுகிறேன். வீரபத்திர பிள்ளையின் கடிதங்களில் மார்க்ஸியத்தை கேள்விக்குறியாக்கி, அதை ஜோணியின் கடிதங்கள் வழியாக மீட்டெடுக்கும் முயற்சியின் அத்தியாயங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாவலை முடித்த பின் நான் அவதானித்த விஷயங்களை உங்களுக்கு விரிவாக எழுதலாம் என்று உள்ளேன். ஏற்கனவே ஒரு சிறு கடிதத்தை எழுதியிருந்தேன், அதுவரை நான் படித்ததை வைத்து. இந்நாவலுக்குப் பிறகு “கொற்றவை” வாசிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், “சொல்வளர்காடு” அவ்விடத்தை எடுத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
முத்து
அன்புள்ள முத்து
முப்பதாண்டுகளுக்கு முன் டால்ஸ்டாய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் வெண்ணிறமான சிறிய காகிதஅளவுள்ள நாநூறு பக்க நூல் வெளிவந்தது. ராதுகா பதிப்பகம், மாஸ்கோ. அந்நூலை கையிலெடுத்து குழந்தையைப்போல கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை தொடுவதென்பது ஒரு களியாட்டம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி ஒரு கட்டுரை
டியர் ஜெயமோகன்,
நலம் தானே?
உங்களின் வெற்றி சிறுகதையை வாசித்தேன். பிடித்திருந்தது. அது பற்றிய என் பார்வை இங்கே: http://www.writercsk.com/2017/05/blog-post_31.html

தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
வெற்றி வாசித்தேன். அதைப்பற்றிய என் கருத்துக்களை பின்னர் எழுதுகிறேன். நான் வியப்பது ஒரு விஷயம் பற்றி. நான் அக்கதையை வாசிக்கச்சொன்ன அத்தனைபேரும் ‘முடிவ ஊகிச்சுட்டேன்ங்க’ என்றார்கள். சும்மா ராஜேஷ்குமார் வாசகர்கள் பாதிப்பேர். அவர்கள்தான் மேதைகளா , இல்லை நான்தான் மொக்கையா?
ராஜேந்திரன்
அன்புள்ள ராஜேந்திரன்,
இதைப்பற்றி நான் குழும விவாதங்களில் பலமுறை எழுதியிருக்கிறேன். ஓர் இலக்கியவாசகன் ஒருபோதும் இதைச் சொல்லமாட்டான். சொல்பவர்கள் ‘கதை’ படிக்கும் வாசகர்கள். இவர்கள் பெரும்பாலான புனைவுகளைப்பற்றி இதைத்தான் சொல்வார்கள்.
ஏன் இது நிகழ்கிறது? வெற்றி கதையை எடுத்துக்கொள்வோம். அ அல்லது ஆ தான் அதற்கு விடை அல்லவா? எந்த வாசகனும் இரண்டையும் மாறி மாறி ஊகித்தபடியே வாசிப்பான். இரண்டில் எது முடிவு என்றாலும் தான் அதை முன்னரே ஊகித்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றும்
சரி, அக்கதையின் முடிவு மறுபக்கமாக இருந்திருந்தால்? அப்போதும் இதே ஆட்கள் இதையேதான் சொல்லியிருப்பார்கள். அப்படியென்றால் என்னதன முடிவு?
இத்தகைய கதைகளை அசோகமித்திரன் நிறைய எழுதியிருக்கிறார். இவை ‘எதிர்பாரா முடிவு’ ரக கதைகள் அல்ல. முடிவுக்குப்பின் புதிய கேள்விகளுடன் கதை மீண்டும் வாசகன் உள்ளத்தில் தொடங்கியாகவேண்டும். அதுவரை அவன் வாசித்த கதையை அவன் மறு அடுக்கு செய்தாகவேண்டும். இலக்கியத்தில் இத்தகைய கதைகளின் வடிவம் கோருவது இதைமட்டுமே
ஜெ
வெற்றி [சிறுகதை]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
8. அன்னங்கள்
தமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன் சொல்லாடவே இயல்வதில்லை. பின்னர் நுண்செய்திகள் வரலாயின. தன் உடலில் கால்நகங்களையே அவள் முதன்மையாக நோக்கினாள். ஒவ்வொருநாளும் அதை சமையப்பெண்டுகள் நீவியும் சீவியும் வண்ணமிட்டனர். அவை புலியின் விழிகள்போல் வெண்ணிற ஒளி மிளிரவேண்டுமென அவள் விழைந்தாள். ஆடைகளில் அவள் தோள்சரியும் பீதர்நாட்டு மென்பட்டாடையை விரும்பினாள். மணிகளில் அனலென எரியும் செவ்வைரத்தை.
வண்ணங்களில் குருதி. சுவைகளில் காரம். இசையில் செம்பாலை. மணங்களில் தாழை. விலங்குகளில் வேங்கை. ஊர்திகளில் கரும்புரவி. படைக்கலங்களில் எட்டடி நீளமுள்ள கலிங்கத்து எடைவாள். “பெண்கள் விழையும் எவையுமில்லை, இளவரசே” என்றான் ஒற்றன். நளன் அவளை தன்னருகே எப்போதுமிருப்பவளாக உணரலானான். பின்னர் அவளைப்பற்றி புதிய எதையுமே அவனிடம் சொல்லவியலாதென்று அவர்களும் உணர்ந்தனர். காதல்துணைவியுடன் கூடியிருப்பவனின் விழிவிரிவும் மாறா நகையும் அவன் முகத்தில் திகழ்ந்தன.
அவன் எண்ணுவதை உணர்ந்த மூத்த அமைச்சர் பூர்ணசந்திரர் நிஷாதர்களைப்பற்றி விதர்ப்பத்தினர் எண்ணுவதென்ன என்று உசாவிவர ஒற்றர்களை அனுப்பினார். அவர்கள் வந்து சொன்ன சொற்கள் நளனை நிலைகுலையச் செய்தன. நிஷாதர் வேனனின் குருதியினர். கலியின் குலத்தினர். காகத்தை தெய்வமெனக் கொண்டவர்கள். கரிய நிறத்தினர். எனவே எந்த அவையிலும் இருளெனச் சூழ்பவர்கள் என்று விதர்ப்பத்தின் தொல்கவிஞர் சம்புகர் பாடிய கவிதையை குண்டினபுரியில் அறியாத எவருமில்லை என்றார்கள் ஒற்றர்கள். “உயரப் பறந்தாலும் காகம் கழுகென்று கருதப்படுவதில்லை, இளவரசே” என்றார் பூர்ணசந்திரர்.
“இளவரசி எண்ணுவதென்ன என்று அறிந்துவா” என்று ஏழு பெண் ஒற்றர்களை நளன் அனுப்பினான். அடுமனையாளர்களாகவும் சமையப்பெண்டிராகவும் தமயந்தியின் அரண்மனைக்குள் புகுந்து மூன்று மாதம் அவளுடன் உறைந்து சொல்லாடிவிட்டு அவர்கள் செய்தி அனுப்பினர். நிஷாதர் காகத்தை வணங்குவதும் கலியின் குடிகள் என்றிருப்பதுமே இளவரசியிடம் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்று அவர்கள் சொன்னபோது நளன் முகவாயை வருடியபடி எண்ணத்திலாழ்ந்தான். “நாம் கலியை விலக்கியாகவேண்டும்” என அவன் பின்னர் சொன்னபோது “என்ன சொல்கிறீர்கள், இளவரசே?” என பூர்ணசந்திரர் திகைத்தார். “அரசி இங்கு வரட்டும். அதன்பின் நாம் மீண்டும் கலியை நிறுவுவோம். இது ஓர் சூழ்ச்சி மட்டுமே” என்றான் நளன். “இளவரசே…” என அவர் சொல்லத்தொடங்க கையமர்த்தி “வேறு வழியில்லை” என்று அவன் அவரை நிறுத்தினான்.
ஆனால் பேரரசர் வீரசேனர் சினம்கொண்டு கூவியபடி “தன் குலதெய்வத்தை ஒரு பெண்ணின் பொருட்டு விலக்குகிறானா? மூடன், அடைவது வரைதான் பெண்ணுக்கு மதிப்பு. அவளை ஆறுமாதங்களில் அவன் கடப்பான். அதன்பின் தான் செய்தவற்றுக்காக எண்ணி எண்ணி நாணுவான்” என்றார். “நான் ஒப்பமாட்டேன். ஒருபோதும் இது நிகழாது” என்றார். அன்று மாலை அவரை தனியறையில் வந்து சந்தித்த நளன் “நான் முடிவுசெய்துவிட்டேன், தந்தையே. நம் அடையாளத்தை கலியிடமிருந்து மாற்றவிருக்கிறேன்” என்றான். “முழுமையாகவா? நீ அரசுசூழ்தல் என்றல்லவா சொன்னதாக அறிந்தேன்” என்றார் வீரசேனர். “ஆம், ஆனால் பிறகு எண்ணிப்பார்க்கையில் ஒருமுறை அடையாளத்தை மாற்றிக்கொண்டபின் அதை மீட்கவியலாது என அறிந்தேன்” என்றான்.
“நான் ஏற்க மாட்டேன்” என்றார் வீரசேனர். “நீங்கள் அப்படி சொன்னதை அறிந்தேன். அதன்பொருட்டே வந்தேன். நான் எண்ணியது நிகழும். இல்லையேல் உடனே இளவரசுப் பட்டத்தை துறந்து காடேகுகிறேன். இதில் சொல்மாறுபாடே இல்லை” என்றான் நளன். “நீ சொல்வதென்ன என்று புரிகிறதா? மைந்தா, நான் வாழ்வை அறிந்தவன். கடந்தபின் நோக்கி அறிவதே மெய்யறிவு. நான் இன்று காமத்தை கடந்துள்ளேன். சொல்வதை கேள். கொள்வதற்குமுன் பெண்ணுக்காக நாம் எதையெல்லாம் இழக்க சித்தமாக உள்ளோமோ அதுவே நாம் அவளுக்கு அளிக்கும் விலை. அதை அறிந்தபின்னரே அவள் தன்னை அளிப்பாள். விலை கூடும்தோறும் அளிப்பவனின் விலை குறைகிறது என்பதே அதிலுள்ள ஆடல்.”
“அவள் யாரென்று நானும் அறிவேன்” என்று வீரசேனர் சொன்னார். “ஆயினும் நீ மிகை விலை அளிக்கிறாய். ஆண் எந்தப் பெண்ணுக்காகவும் தன் அடையாளத்தை விலையாக கொடுக்கலாகாது. அதை அளித்தபின் அவள் முன் அவன் வெறும் உடலென்று நிற்பான். நீ இன்று செய்வதற்காக பின்னர் வருந்துவாய்.” நளன் “நான் அளிக்கும் விலை அவளுக்காக மட்டும் அல்ல. அவள் என்பது எனக்கு அரசியோ பெண்ணோ அல்ல” என்றான். “நான் சொல்வதை கேள்” என்றார் வீரசேனர் அவன் தோளை நோக்கி கை நீட்டி. அவன் விலகி “உங்கள் முடிவை சொல்லுங்கள். நான் நாளை புலரியில் இங்கிருக்க வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கவேண்டும்” என்றான்.
சீற்றத்துடன் “நான் உன்னை இந்நாட்டை ஆளும்பொருட்டே பெற்றேன்” என்றார் வீரசேனர். “அதனாலென்ன? காளகக்குடியில் பிறந்த உங்கள் பிறமைந்தன் புஷ்கரன் இருக்கிறான். அவனை அரசனாக்குக!” என்றான் நளன். “நீ அறிவாய், உன் புரவித்திறன் இன்றி இந்நாடு வாழமுடியாது என.” நளன் “ஆம், ஆனால் நான் விரும்புவதுபோல இந்நாடு அமையாதென்றால் இக்கணமே இதை துறந்துசெல்வேன்” என்றான். அவர் சோர்வுடன் “நீ துறக்கவேண்டியதில்லை. நான் துறக்கிறேன். நான் அரசுநீத்து கானேகுகிறேன். உன் விருப்பப்படி நீயே இதை ஆள்க!” என்றார். “அம்முடிவை நாளை அறிவியுங்கள்” என்றான் நளன். “ஆம், எனக்கு வேறு வழியில்லை. என் கண்முன் குலதெய்வத்தை நீ துறப்பதை நான் ஏற்கமுடியாது. கானேகியபின் நீ செய்யும் செயல்கள் எவற்றுக்கும் நான் பொறுப்பாகமாட்டேன்” என்றார் வீரசேனர்.
“ஆனால் ஒன்று மட்டும் சொல்லவிழைகிறேன். நீ நாகமணியுடன் நாகத்தை வாங்கியிருக்கிறாய்” என்ற வீரசேனர் அவன் செல்லலாம் என கையசைத்தார். நளன் தலைவணங்கி வெளியே நடந்தான்.
மறுநாளே நளனுக்கு முடிசூட்டிவிட்டு வீரசேனர் காட்டுக்கு சென்றார். முடிசூடி அமர்ந்தபின் முதல் ஆணையிலேயே கிரிபிரஸ்தத்தின் உச்சியில் இருந்த நிஷாதர்களின் குடித்தெய்வங்களின் ஆலயத்திலிருந்து கலியின் சிலையை எடுத்துச்சென்று மலைச்சரிவின் தெற்குமூலையில் இருந்த இருண்ட சோலைக்குள் நிறுவும்படி நளன் வகுத்தான். ஆலயத்தில் இருந்த காகச் சிலைகள் அனைத்தையும் அங்கே கொண்டுசென்று வைத்தான். கலியின் சிலையை அகற்றுவதை குடிகள் உணராதிருக்கும்பொருட்டு ஆலயத்தை முழுமையாக சீர்திருத்தி அமைத்தான். அந்தணரை அமர்த்தி வேள்விகளை நிகழ்த்தி பூசனைமுறையையும் மாற்றியமைத்தான்.
ஆனால் அது போதாதென்று அச்செயல் முடிந்ததுமே அவன் உணர்ந்தான். மக்கள் கலியை வழிபட காட்டுக்கு செல்லத் தொடங்கினர். கலியையும் காகத்தையும் வழிபடுபவர்கள் என்னும் முகத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று அமைச்சர் பூர்ணசந்திரரிடம் கேட்டான். “முன்னரே நமக்கு பரசுராமர் இந்திரனை அருளியிருக்கிறார். இங்கு நிகழும் வேள்விகள் அனைத்திலும் அனல்குலத்து வேதியர் இந்திரனுக்கு அவியளித்து வழிபடுகின்றனர். மாகேந்திரம் என்னும் வேள்வி ஒன்றுள்ளது. இந்திரனை முதன்மையாக நிறுத்தும் அதை இங்கே இயற்றுவோம். பாரதவர்ஷத்தின் அந்தணர்குலம் அனைத்தையும் இங்கு வரச்செய்வோம்” என்றார் அமைச்சர்.
படைத்தலைவன் பத்மன் “ஆம் அரசே, அந்தணர் அதை சொல்லில் நிறுத்தட்டும். எளியோர் அதை விழியால் நோக்கவேண்டும். விருத்திராசுரனை கொல்லும்பொருட்டு தவம் செய்த இந்திரன் கிரிப்பிரஸ்தத்தின் உச்சியில் வந்து தங்கி தன் படைக்கலன்களை கூர்தீட்டிச் சென்றானென்பது நம் அவைக்கவிஞர் குந்தலர் உருவாக்கிய காவியம். கிரிப்பிரஸ்தத்தில் இந்திரன் வாழ்ந்த நாட்களைப்பற்றி மேலும் பன்னிரு காவியங்கள் இயற்றப்படட்டும். அவற்றை சூதர் தங்கள் சொல்களில் நிறுத்தட்டும். கதைகளைப்போல் வல்லமை கொண்டவை பிறிதில்லை” என்றான்.
நளன் அவையின் மூலையில் சித்திர எழினி பற்றி நின்ற முதுசூதன் அங்கதனை அழைத்து “மூத்த சூதரே சொல்க, தங்கள் எண்ணமென்ன?” என்றான். “வேள்வியிலும் கதையிலும் நிற்பதற்கு நிகராக விழிகளிலும் நிற்கவேண்டும், அரசே. கிரிப்பிரஸ்தத்தின் உச்சியில் நூறடி உயரத்தில் இந்திரனுக்கு ஒரு சிலை அமைப்போம். இந்திரகிரி என்று இந்நகர் அழைக்கப்படட்டும். கோதாவரியின் நீர் விரிவில் செல்லும் அத்தனை படகுகளிலும் இந்திரன் முகம் தெரியட்டும். நாம் இந்திரகுடியினர் என்பது எவரும் சொல்லாமலேயே நிறுவப்பட்டுவிடும்” என்றார். “ஆம், அதை இயற்றுவோம்” என்றான் நளன்.
நளனின் ஆணைக்கேற்ப அமைச்சர்களே நேரில் சென்று அழைக்க கலிங்க நாட்டிலிருந்து ஏழு சிற்பியர்குலங்கள் பரிசில்களும் அரசவரிசைகளும் அளிக்கப்பட்டு வந்துசேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கென்று கிரிப்பிரஸ்தத்தின் இடதுபக்கத்தில் நூற்றெட்டு மாளிகைகள் அடங்கிய சிற்பியர் தெரு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஏவலரும் குடிகாக்கும் காவலரும் தங்குவதற்கான ஐநூற்று ஐம்பது இல்லங்கள் அத்தெருவைச் சூழ அமைக்கப்பட்டு அச்சிற்றூருக்கு சிலாபிரஸ்தம் என்று பெயர் சூட்டப்பட்டது.
நிமித்திகர் குறித்த நன்னாளில் தலைமைச் சிற்பியான மகாருத்ரன் இந்திரனின் சிலை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்தான். புற்களும் உயரமற்ற புதர்களும் மட்டும் மண்டிய உச்சியில் அவன் சுட்டிய இடத்தில் தோண்டி மண்ணை அகற்றியபோது உருக்கி ஊற்றிய இரும்பென ஒற்றைப்பாறை தட்டுப்பட்டது. பின்னர் அவர்கள் கிரிப்பிரஸ்தத்தில் குன்றைச் சூழ்ந்திருந்த நிஷதக்காடுகளை துழாவிதேடி மேற்கு எல்லையில் மண்ணுக்கு அடியில் நான்கடி ஆழத்தில் புதைந்து கிடந்த ஒற்றைக்கருங்கல் பாறையை கண்டடைந்தனர். அதை உளியால் அவன் தொட்டபோது வெண்கல மணியோசை எழுந்தது. மரங்களை வெட்டி மண்ணை அகற்றி அப்பாறையை வானம் நோக்கச் செய்தனர். அதில் செங்குழம்பால் இந்திரனின் சிலையின் நீளத்தையும் அகலத்தையும் சூத்ராகியாகிய தாண்டவர் வரைந்தார்.
உளியால் தடமிட்டு துளைநிரை அமைத்து அதில் காய்ந்த மரத்தை அடித்து இறுக்கி நீரூற்றி உப்பச்செய்தனர். பிளந்து மயிர்க்கோடென விரிசல் ஓடித்தெரிந்த பாறையை உளி வைத்து நெம்பி மேலும் பிளந்து அதில் நெம்புகோல்களை செலுத்தி பிரித்து எடுத்தனர். வடம்கட்டி தூக்கி மேலெடுத்தபோது அந்த வடிவிலேயே இந்திரனை கண்டுவிட்ட சிற்பிகள் “விண்ணாளும் தேவனுக்கு வாழ்த்து! இடிமின்னல் ஏந்தியவனுக்கு வாழ்த்து! நிகரிலா செல்வம் சூடியவனுக்கு வாழ்த்து” என்று குரலெழுப்பினர்.
உருளைத்தடிகளின்மீது ஏற்றப்பட்டு அத்திரிகளாலும் குதிரைகளாலும் இழுக்கப்பட்டு குன்றின்மேலேற்றி கொண்டுவரப்பட்டது நெடும்பாறை. எட்டு மாதம் அதில் சிற்பிகள் விழுந்த மரத்தில் விளையாடும் அணில்கள் என தொற்றி அமர்ந்து உளியோசை முழக்கினர். கொத்திக் கொத்தி உளிகள் வெட்டி குவித்த கற்சில்லுகள் இருபுறமும் எழுந்தன. வலக்கையில் மின்படையும் இடக்கையில் தாமரை மலரும் ஏந்தி ஏழடுக்கு முடி சூடி நின்றிருக்கும் இந்திரனின் பெருஞ்சிலை திரையென மூடியிருந்த கற்பரப்பை விலக்கி மேலெழுந்தது.
சித்திரை மாதம் முழுநிலவு நாளில் மண்ணுக்குள் இருந்த பாறையில் வெட்டிய எட்டடி ஆழமுள்ள குழியில் கற்சிலையின் கீழ்ப்பீடம் இறக்கி நிறுத்தப்பட்டு உருக்கிய இரும்பு அவ்விடைவெளியில் ஊற்றி குளிர வைக்கப்பட்டபோது சிலை ஒன்றென அப்பாறையில் பொருந்தியது. சிலை நிறுவும் நாளுக்கு மூன்று மாதம் முன்னரே கிரிப்பிரஸ்தத்தில் வேள்விகள் தொடங்கியிருந்தன. நிஷதபுரியிலிருந்து கிளம்பிச் சென்ற தூதர்கள் பாரதவர்ஷமெங்கும் குடியிருந்த வைதிகர் குலங்கள் அனைத்தையும் அங்கு வேள்விகள் இயற்றும் பொருட்டு அழைத்தனர். தயங்கியவர்களுக்கு மேலும் பொன் பரிசுகளும் சொல்லளிக்கப்பட்டன. ஒவ்வொருநாளும் கோதாவரியில் படகுகளில் வைதிகர்குடிகள் தர்ப்பைகளும் கங்கைநீர்க்குடங்களுமாக வந்திறங்கிக்கொண்டிருந்தனர்.
குன்றைச் சூழ்ந்து எட்டு இடங்களில் அமைந்த வேள்விப்பந்தலில் ஒருகணமும் ஓயாமல் வேதச்சொல் முழங்கியது. அவிப்புகை எழுந்து கிரிப்பிரஸ்தத்தின் காலடியில் முகிலென தேங்கி காற்றில் கிளைபிரிந்து உலைந்தது. வைதிகர் குலங்கள் பதினெண்மர் வேதம் ஓதி கங்கையின் நீர் கொண்டு முழுக்காட்டி இந்திரனை அச்சிலையில் நிறுவினர். அருமணிகளும் பொன்நாணயங்களும் பட்டும் மலரும் குங்குமமும் களபமும் மஞ்சளும் முழுக்காட்டி இந்திரனை மகிழ்வித்தனர். ஏழு நாட்கள் நகரம் விழவுக்கோலம் கொண்டது. கலையாடலும் காமக் களியாடலும் ஒழிவின்றி நிகழ்ந்தன.
கிழக்கே விழிநோக்கி கோதையின் பெருக்கின் அலையொளி முகத்தில் நெளிய நின்றிருந்த பெருஞ்சிலை நகர் மக்களின் உள்ளங்களை விரைவிலேயே மாற்றியமைத்தது. தாங்கள் இந்திரனை வழிபடும் தொல்குடிகளில் ஒருவர் என்று ஓரிரு மாதங்களிலேயே அவர்கள் நம்பத் தலைப்பட்டனர். சூதர்கதைகள் சொல்லிச் சொல்லி சொல்பவராலும் கேட்பவராலும் ஏற்கப்பட்டன. அவர்கள் கலியை முழுமையாகவே மறந்தனர்.
கோதையின் நீர் விரிவில் படகில் சென்றுகொண்டிருந்த வணிகர்கள் தொலைவிலேயே மரங்களுக்கு மேல் எழுந்து நின்ற மணிமுடிசூடிய பெருமுகத்தைக் கண்டு கைவணங்கினர். கிரிப்பிரஸ்தம் இந்திரகிரி என்று விரைவிலேயே பெயர் மாற்றம் பெற்றது. அம்மக்கள் இந்திரனை வணங்குபவர்கள் என்றும் அறியப்படலாயினர். இந்திரனுக்கு மலர்களும் படையலுமாக நாளும் நிஷத குலங்கள் மலையேறி வந்து ஓங்கிய சிலையின் பெருங்காலடிகளில் படையலிட்டு பூசை செய்து வணங்கி மீண்டனர்.
இந்திரபுரியின் தலைவனின் பெருமையும் அதன் நகரின் அழகும் நடுவே ஓங்கி நின்றிருந்த விண்முதல்வனின் சிலையின் மாண்பும் நளன் அனுப்பிய சூதர்கள் வழியாக ஒவ்வொரு நாளும் தமயந்தியின் செவிகளுக்கு சென்றுகொண்டிருந்தன. நளனின் ஒற்றர்கள் அவள் சேடியரை இல்லங்களில் சென்று பார்த்து பரிசில்கள் அளித்து அச்சொல்லை தருணம் அமையும்போதெல்லாம் அவளிடம் அளிக்கும்படி பணித்தனர். முதலில் அவள் அதை எவ்வகையிலும் உளம் கொள்ளவில்லை. பின்பு எப்போதோ ஒருமுறை தன்னிடம் அப்பெயர் வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக சொல்லப்படுவதை உணர்ந்தாள். அத்தருணத்திலேயே அது ஏன் என்றும் எவ்வாறென்றும் அறிந்தாள்.
இளிவரலுடன் புன்னகைக்கவே அவளுக்கு தோன்றியது. நிஷதபுரியின் அரசன் நளனைப்பற்றி அவள் ஒற்றர்கள் அவளிடம் முன்பே சொல்லியிருந்தனர். அவளைவிட எட்டு ஆண்டு இளையவனாகிய அவன் பிறப்பையே அவள் கேட்டிருந்தாள். அன்று கேட்டவற்றில் சூதர்குலத்து முதியோன் ஒருவனின் மறுபிறப்பென்று நிமித்திகர்கள் அவனை வகுத்ததையே அவள் நினைவில் கொண்டிருந்தாள். “அடுமனையாளன், புரவித்திறவோன். நன்று” என்று தன் சேடியிடம் இகழ்ச்சியில் வளைந்த உதடுகளுடன் சொன்னாள். “அரசமுறைப்படி அவர் செய்வதில் பிழையொன்றுமில்லை, இளவரசி. பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் அவர்களின் வெற்றியையும் அழகையும் புகழையும் உங்கள் செவிகளுக்கு கொண்டுவருவதற்கு முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள்” என்றாள் சேடி.
“ஆம், அவர்கள் பேரரசர்கள். என்றேனும் ஒருநாள் என் கைபற்ற தங்களால் இயலுமென்று கனவுகாண அவர்களுக்கு வாய்ப்புள்ளது. இவனோ இங்கு என் அரண்மனையின் அடுமனையாளனாக ஆகவேண்டுமெனினும்கூட நான் ஏழு முறை உளம் சூழவேண்டிய நிஷாதன். இப்படி ஓர் எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்ததே என்னை இழிவு செய்கிறது” என்றாள் தமயந்தி. “நிலவு மண்ணில் விழியுள்ள அனைவருக்காகவும்தான்” என்று சொல்லி சேடி நிறுத்திக்கொண்டாள்.
“இளவரசி, அவர் தன் தந்தையை மறுத்து கானேகச் செய்தார். பாரதவர்ஷத்தின் பெருவேள்விகளைச் செய்து நகர் நடுவே மாபெரும் இந்திரன்சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்” என்றாள் சேடி. அவள் விழிகாட்ட இன்னொருத்தி இந்திரன் சிலையின் ஓவியச்சுருளை அவளிடம் காட்டினாள். “மாபெரும் சிலை என்றால்…” என்றாள் தமயந்தி. சேடி “நூறடி உயரம் என்கிறார்கள்” என்றாள். “நூறடியா?” என்றபின் அவள் அச்சுருளை விரித்து சிலையை ஒருமுறை நோக்கியபின் “கலிங்கச் சிற்பிகள். நன்று” என்றாள். சுருட்டி அப்பாலிட்டபின் தன் குழல்சுருள்களை திருத்தி அமைத்துக்கொண்டிருந்த அணிப்பெண்டிரின் தொடுகைக்கேற்ப அசைந்தமர்ந்து விழிமூடிக்கொண்டாள்.
“இளவரசி, அவர் தங்களுக்கு அளிக்கும் மதிப்பு அது. நம்மை நயந்துவரும் பேரரசர்களை எண்ணி நோக்குங்கள். அவர்கள் தங்களின் பொருட்டு எதையேனும் இழக்கிறார்களா? பிறிதொரு அரசையே அவர்கள் முதன்மையாக எண்ணி கணக்கிடுகிறார்கள். ஒவ்வொரு அசைவும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட நெடுநாட்களாக நிகழ்கிறது இந்த ஆடல். ஆண்டுகள் சென்று உங்கள் அகவையும் மிகுந்துவிட்டது. உண்மையிலேயே இவர்களில் எவருக்கேனும் உங்கள்மேல் காதலிருந்திருந்தால் படைகொண்டுவந்து உங்களை வென்று சென்றிருக்கலாம். அவர்களுக்கு நீங்கள் தேவையில்லை. உங்களை பிறிதொருவர் கொள்ளலாகாதென்பதே அவர்களின் திட்டம்” என்றாள் சேடி.
“ஆகவே…?” என்றாள் தமயந்தி. “ஆகவே, நாம் பேரரசர்களின் விழைவையும் வெறும்காதலர்களின் விழைவையும் வேறிட்டு நோக்கவேண்டும்” என்றாள் சேடி. “இந்த நிஷாதனை நான் எவ்வண்ணம் நோக்கவேண்டும்?” என்று ஏளனப் புன்னகையுடன் தமயந்தி கேட்டாள். “இவர் விழைவை மட்டுமே நோக்குங்கள். நான் சொல்வது அதையே” என்று சேடி சொன்னாள். “இவர் விழைவில் ஒரு துளி அரசர் எவருக்கேனும் இருப்பின் அவரை கைப்பற்றுங்கள்.” தமயந்தி உதட்டைச் சுழித்து அணிப்பெண்டிடம் “மெல்ல” என்றபின் கண்களை மூடிக்கொண்டாள்.
அவ்வெண்ணத்திற்கப்பால் அவனுக்கு தன் உள்ளத்தில் இடமில்லை என்றே எண்ணியிருந்தாள். ஆனால் அன்றிரவில் அவன் தன் உள்ளத்தில் ஏன் எழுகிறான் என்று அவள் வியந்தாள். எண்ணத்துணியாத ஒன்றை எண்ணியவன் என்பதாலா? அவ்வெண்ணம் கொள்ளும்படி தன்னில் அவன் எதை உணர்ந்தான்? அவன் குடியில் சூதர்கள் நாளும் அவனைச் சூழ்ந்தமர்ந்து புகழ் பாடுகிறார்களா? நிமித்திகர்கள் நாள் கணித்து ஏதேனும் உரைத்துவிட்டார்களா? எண்ண எண்ண அவ்விந்தையே அவளை ஆட்கொண்டது. இருமுறை அவளை அறியாமலேயே புன்னகைத்தாள்.
மறுநாள் அவள் சேடியிடம் “நிஷத அரசன் என்னை தன் அரசி என்று எண்ணுவதற்கு எதை அடிப்படையாக கொண்டிருக்கிறான்?” என்றாள். சேடி புன்னகைத்து “ஒருநாள் மட்டுமாவது உங்கள் உளம்திகழ்ந்துவிட்டார் அல்லவா? இதுவே முதற்சான்று” என்றாள். சினத்துடன் “போடி” என்று தமயந்தி விழிதிருப்பி “நான் கேட்டதற்கு பதில் சொல்” என்றாள். “படைவல்லமை” என்றாள் சேடி. “விதர்ப்பத்தை விடவா?” என்று அவள் கேட்டாள். “ஆம் அரசி. இன்று விதர்ப்பத்தை விடவும் ஆற்றல் கொண்ட நாடுதான் நிஷதம். கோதை ஒரு வணிகப்பெருவழியாகி அவர்களுக்கு பொன்னை கொட்டுகிறது. அப்பொன்னைக் காத்து நிற்கும் வாள் வல்லமை அவர்கள் படைகளுக்கு இருக்கிறது. நிஷதரின் புரவிப்படையை இன்று சூழ்ந்துள்ள அத்தனை நாடுகளுமே அஞ்சுகின்றன” என்றாள் இன்னொரு சேடி.
எண்ணத்தின் மெல்லிய புரளல் ஒன்றை உணர்ந்து அவள் தலையசைத்து அத்தருணத்தை கடந்தாள். அணிச்சோலையில் அமைந்த சுனைக்கரையில் அன்னங்களை நோக்கிக் கொண்டிருந்தவள் எழுந்து “நான் அரசவைக்கு செல்ல வேண்டும். அணிப்பெண்டிரை என் அறைக்கு அனுப்பிவை” என்றபின் நடந்தாள். அவளிடமிருந்து கூலமணி பெற்று உண்டுகொண்டிருந்த அன்னங்கள் கழுத்தை வளைத்து தலைதூக்கி கூவியழைத்தன. திரும்பி புன்னகையுடன் அவற்றை நோக்கியபின் செல்லக் குரலில் “இப்போதல்ல, உச்சிப் பொழுதுக்குப் பிறகு” என்றாள்.
நீரிலிருந்து சிறகடித்து எழுந்து கரைவந்த அன்னம் ஒன்று துடுப்புக்கால் வைத்து, பின்புடைத்த சங்கை ஆட்டி, நாகக்கழுத்தை நீட்டி, செவ்வலகை கூர்த்தபடி அவளை நோக்கி வந்தது. அவள் சிரித்து “செல்க! உச்சிப்பொழுதுக்குப்பின்…” என்று அதை கைவீசி விலக்கினாள். அது கூவியபடி அவளுக்குப் பின்னால் நடக்க மேலும் இரு அன்னங்கள் எழுந்து அதை தொடர்ந்தன. “செல்க… செல்க…” என கைகாட்டியபடி அவள் ஓடி இடைநாழியை அடைந்தாள். அங்கு நின்று நோக்கியபோது அவை தலைநீட்டி அவளையே நோக்கி நின்றிருக்கக் கண்டாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
May 31, 2017
பாபநாசம் ,கமல் பேட்டி
ஜெ,
பாபநாசம் படத்தைப்பற்றி கமல் பேசும் இந்த இடம் உங்கள் பார்வைக்கு. அவர் அக்கதாபாத்திரத்தைப்பற்றிப் பேசுவதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அவரது புரிதல் சரிதானா?
சத்யன்
அன்புள்ள சத்யன்
அந்த கதாபாத்திரம் பேசி அமைக்கப்பட்டது. அதை நானே விரிவாக முன்னரும் எழுதியிருக்கிறேன். அதாவது ஜார்ஜ் குட்டி ஒரு கேரள கிறித்தவர். அவர்கள் மலையோர விவசாயிகள். அந்த மனநிலை வேறு. அவர்கள் கொஞ்சம் கடினமானவர்கள். போராளிகள்.
சுயம்புலிங்கம் ஒரு நாடார். வணிகர். ஆகவே நயமானவர். கூடவே உணர்ச்சிகரமானவர். நல்லவர். அப்பாவியும்கூட. ஜார்ஜ்குட்டிக்கு ஒரு உறுதி உண்டு . குற்றவுணர்ச்சி இல்லை. சுயம்புலிங்கம் குற்றவுணர்ச்சியால் அழுபவர். முதல் காட்சியில் இருவரும் தோன்றும்போதே அந்த வேறுபாடு வெளிப்படுகிறது. ஜார்ஜ் குட்டி ஒரு வன்முறைக்காட்சியை நுட்பமாக பார்க்கிறார். சுயம்புலிங்கம் பாவமன்னிப்பு பார்த்து கண்ணீர்விடுகிறார்
ஆனால் தமிழில் இரு கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு எவரும் பேசவில்லை. இவரைவிட அவர் அவரைவிட இவர் என்றே பேசினார்கள். கடைசியில் அதை எடுத்தவர்களே வந்து அமர்ந்து விளக்கவேண்டியிருக்கிறது
ஜெ
பாபநாசம் 55 நாள்
பாபநாசம் வெற்றி
பாப
பாபநாசம்
நாசம் சிலகுறிப்புகள்
பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
டோரா
அண்ணன் வீட்டில் ஒரு அன்பின் ஜீவன் டோரா!!!
முரட்டுத்தனமான முகமும், மிரட்டலான உறுமலுமாகத்தான் முதலில் அறிமுகமாவாள்… அண்ணன் ஜெயமோகன் வீட்டு அன்பு ஜீவன் டோரா. அண்ணன் நமக்கு அவளை அறிமுகப்படுத்திவைத்து, அவளுக்கு நம்மை பிடித்துவிட்டது என்றால் பிறகு நாக்கினாலும், தனது கைகளெனும் கால்களாலும் நம்மை பிரியப்படுத்திவிடுவாள். குதிப்பும், அன்பிழையோடும் இளைப்பும், நுகர்வெனும் உரிமையென நம்மைத் தனி உடல்மொழியால் உற்சாகப்படுத்திவிடுவாள். மிருக ஸ்பரிசமெனும் அச்சநிலை கடக்கும் டோராவினுடனான தருணங்கள் மிகவும் இனிமையானவை.
அண்ணன் வீட்டின் முதல் கேட்டிற்கும் – பிரதான கதவிற்கும் இடைப்பட்ட நீளமான சிறிய முன்வெளியில்தான் நானும், எழுத்தாளர் அண்ணன் ஜோ டி குருஸ்ம் முதன் முதலில் டோராவைச் சந்திக்கிறோம். போர்ன்விட்டா நிற பார்டரில் ஒரு கரும்பட்டைப் போல் அவளது மேனி. கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலிப்பட்டை. நாசியும் கூர்முகமும் வாயுடன் இணையும் இடத்தில் போர்ன்விட்டா குடித்து வழிந்ததுபோல்… கணுக்கால் கீழ் பாதங்களும் அதே நிற பார்டர்தான். பழகியவுடன் அண்ணன் ஜோ டி குருஸ்ன் மடியினில் விழுந்து புரண்டுவிட்டாள் டோரா… அது , ஆழி சூழ் உலகினையே டோரா தன் அன்பெனும் நாவினால் அணைத்த தருணம்.
நாங்கள் சென்றிருந்த சமயம் முற்பகல் வெயில் முதிர ஆரம்பிக்கும் நேரம்… டோராவின் மேனி வெயில்வாங்கி மற்றுமொரு நிறப்பிரிகையாய் மின்னியது. முன்வெளியில் பூத்திருந்த செம்பருத்தி செடி தொடங்கி, கொட்டிக் கிடக்கும் தேங்காய்களுக்கிடையாய் ஓடித் துள்ளித் திரிந்து, இடையிடையே எஜமானனைத் தொட்டுவிட்டு எங்களைத் தொடர்கிறாள் டோரா… அண்ணன் ஜோ டி குருஸ் இப்பொழுது முழுமையாய் அவளுடன், சாவகாசமாய் அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.
நீள முன்வெளியின் இடக்கைப் பக்கம் திரும்பி , அண்ணனின் கார் நிற்கும் பின் பகுதியில் இருக்கிறது டோராவின் ஓய்விடம். மதிய உணவிற்கு நாங்கள் எல்லோரும் வெளியே செல்ல இருப்பதால் , அண்ணன் இப்பொழுது டோராவை அவள் அறைக்குக் கூட்டிச் செல்கிறார் . கொஞ்சம் சண்டித்தனமும், செல்லச் சேட்டையும் பண்ணிக் கொண்டேதான் டோரா செல்கிறாள். நானும் பின்னே செல்கின்றேன் , எகிறி வந்து நாக்கினால் என் புறங்கையில் ஒரு நேச முத்தமிடுகிறாள். அண்ணன் ஜோ டி குருஸ்ஸுகு , கத்தி… ஒரு அன்பின் பை பை சொல்கிறாள்.
டோராவின் கழுத்தினைத் தடவிவிட்டபடியே அறைக்குள் அவளை அனுப்பிவைத்து சிறிய கதவினைச் சாத்துகிறார் அண்ணன் ஜெயமோகன் . ஞான உருட்டலுடன் , தனது கரும் பளிங்குக் கண்களால் எங்களைப் பார்க்கிறாள் டோரா… சென்ற ஆண்டு நவம்பரில் அவளைச் சந்தித்தது, கிட்டத்தட்ட அரைவருடங்களுக்கு மேலாகியும் , இன்று வரை – இப்படி எழுதும் வரை , எனது ஞாபகங்களுக்குள் அவள் கலையாமல் இருப்பது அவளின் அந்தப் பார்வை. உலகில் அசையும் எந்த ஜீவன் மீதும் டோராவைப் பார்த்தபின் மேலும் அன்பேறும்…
டோரா… ஹரிதம் மேவும் பைரவி.
அன்புடன்,
நெப்போலியன்
சிங்கப்பூர்.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
உச்சவழு ஒரு கடிதம்
கனவுகளை காலத்துடன் தொடர்புறுத்த முடிவதில்லை. காலங்கள் அறுந்தவுடன் வான் வெளியில் மிதக்கும் உருவெளிப் பார்வையில் வீச்சமடைவதைப் போலத்தான் கனவுகளை நினைக்கிறேன். நிச்சயமாகத் திட்டவட்டமான எந்த உருவமும் உருவும் அதில் எனக்கு இருப்பதில்லை. அவைகள் எதையோ சுட்டுகின்றன. எங்கோ வெட்டும் மின்னல் வெளிச்சத்தில் கண நேரத் தீற்றல்களில் தோன்றி மறைகின்றன.வெட்டி வெட்டி காட்சிகள் மேலும் கீழுமாய் நகர்ந்து மோதி பெரிதளவில் நினைவிலும் நிற்காமல் கரைந்து மறக்கின்றன. ஆனால் எல்லாக் கனவுகளிலும் இப்படித்தானா?
என் இறந்து போன மாமனின் உருவம் வேறு வேறுத் தோற்றங்களில் கனவில் வந்திருக்கின்றன. பயந்து அழுதுள்ளேன். நெகிழ்ந்து புல்லரித்து புரண்டுள்ளேன். திரும்ப அவர் வரும்பொழுது அவரைப்போல அல்லாது இருந்தும் அந்த இருப்பு மிக அருகில் நாளேல்லாம் புடதிக்கு பின் குத்திட்டது போல பலமுறை நிகழ்ந்துள்ளது. “உச்சவழு” அப்படி ஒரு கனவாகத்தான் எனக்கு தோன்றியது. உங்களின் கனவுலகில் சகபயணியாக மாட்டிக் கொள்வதைப்போல. காலம் சுத்தமாக நகராத ஒரு உலகில் வலுக்கட்டாயமாய் திணிந்து கொள்வதைப்போல. வீட்டின் நிழல் ஒரு கனவாய் வெளிக்கிறது அந்த நிலா முற்றத்தில். காடே ஒரு கனவுலகம் தான். நமது திட்டமிடல்கள், முன்னெச்சரிக்கைகள், பார்வை, புலன் தாண்டி காட்டினுள் நாம் காடாய் நிற்கும் அனுபவம். காட்டிற்குள் காடு மட்டுமே. மரம், செடி, கொடி, மலை, அருவி, மிருகங்கள் எல்லாம் தனித்தனி அலகுகளல்ல. காட்டின் ஒட்டு மொத்த உடலின் உறுப்புகளாய், தன்னைத் தானே உண்டு வளர்ந்து செழிக்கிறது. காட்டின் தன்மையே அங்கு வாழும் அனைத்துக்கும். அதன் அரசன் ஆனை. அதனாலேயே ஆனைமலை ஆரம்பித்தவுடன் வேளி மலையின் யானைக்கண்களை அடைந்தேன். கால் மடக்கி மத்தகம் தாழ்த்தி அமர்ந்திருக்கும் யானைக்கூட்டங்களின் உருவத்தைத்தான் எப்பொழுதும் பார்க்கிறேன்.
அந்த மலைக்கூட்டத்தில் அவன் அந்த பெரிய காடு காணும் கனவா? இல்லை அவனது கனவின் நெழிப்பில் அலைந்தாடும் பெரிய யானை அந்தக் காடா? மரணத்தைத் தேடித்தான் அங்கு அவன் வருகிறானா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. காட்டினுள் அமிழத் துடிக்கும் கனவு ஒன்றின் கொக்கியில் அகப்பட்டுக் கொள்கிறானா அவன்? அம்மையின் கடைசிச் சொற்களைத் தேடித்துழாவிக் கொண்டிருந்தானா? ஒரு உச்சத்தில் கனவிற்குள் தொலைந்து அந்த எண்ணங்களை மீட்டெடுக்கத் துணியும் சாகசம் தான் இந்த உச்சவழுவிற்கு இழுத்துச் சென்றதா? அம்மையை இழப்பது ஒட்டுமொத்தமான தொலைதல் தான். வாழ்க்கையின் எல்லா அர்த்தப்படுதல்களும் பாதைகளைத் தவறவிட்டு முட்டுச்சந்தில் ஸ்தம்பிப்பதைப் போல. அங்கு இனி பாதைகள் இல்லை. பள்ளத்தாக்குகள் தான். எதிரொலிகளின் நிசப்தத்தில் திரும்ப திரும்ப சிதறடித்து அவனை விழுங்க ஆரம்பிக்கின்றன.உடைந்து நொறுங்குதல் ஒன்றே சாத்தியமான புள்ளி. அதற்காகவே அவன் காட்டைத் தேர்ந்தெடுத்தானா?
கட்டிலின் செல் பூச்சிகளுக்கு மேல் படுப்பது, எண்ணங்களினால், நினைவுகளினால், சொற்களினால், ஏக்கத்தினால், காலத்தினால், மயக்கத்தினால் ஆன பெரு வெளிப்பூச்சிகளுக்கு மேல் அழுந்திப் படுப்பது. கேசன் கேசியை அமிழ்த்தி பிரபஞ்சம் உண்டாக்கும் கனவினில் ஆழ்ந்த ஆதி கேசவனைப் போல. காட்டிற்கு மாலையே இல்லை. பகல் அப்படியே இரவாகிக் குளிர்கிறது. மூங்கில்களின் காட்டில் அதை அவன் உணர்கிறான். பனிக்கொம்புகள் சூழ்ந்த மத்தக இருளை. ஆம். இருளைத் தேடியே வந்தான். இருளாய் மாறிவிட. அப்படியே காலத்தில் இல்லாமலாகி விடும் இரவு. காட்டின் மலைகளின் இருள்.இன்மையே இருப்பான இருள். அதனாலேயே திரும்ப திரும்ப அவன் கருப்பினை யானையை காண்கிறான் போல.
யானையை நேரடியாக காண்பது முற்றிலும் முடியாத காரியம். நம் பார்வையில் அகப்படாத ஒன்று அவைகளில் பொதிந்துள்ளது.திகைத்து ஸ்தம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இருளைப் போலவே. அதன் கண்களை நான் பார்க்க முயற்சித்ததில்லை. அதன் கூர்மை, பரிச்சயம், என்னை தகர்ப்பதைப் போல உணர்கிறேன். அதன் அசைவு காயல் தோணி போல அலைகளுக்கேற்றவாறு அசைந்து கொடுக்கும். அந்த மத்தகத்தை தொடும் போது மலைகளையே உணர்கிறேன். அசைவே இல்லாத இருப்பு. கதிகலங்க வைக்கும் மௌனம் உறையும் முகடுகளின் உறைப்பு. அந்த மௌனம் கலையாத நிசப்தத்தையே உணர்கிறான் அவனும்.
முற்றிலும் கரைந்து ஒன்றுமில்லாமலாகி விடத் துணியும் தாபம். காட்டில் தவறுவது காலத்தை நழுவ விடுவதுதானே. பின் கனவுகளின் சஞ்சரிப்பில் விசித்திரங்களின் உருக்களில் பதற்றமடைந்து நகர்ந்து மறைவதுதான் சாத்தியம்.
அவனும் அதையே உணர்கிறானா? பௌர்ணமியின் மயக்கில் வளைந்த கொம்புகளுட்ன் மத்தகம் புடைக்க இருளின் தேவன் அணைகையில், பெரும் பாழில் அமிழ்ந்துக் கரைவதை உணர்கிறேன் கனவிலிருந்து எழத் தோன்றவில்லை.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
நந்தகுமார்
****
சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’- நந்த குமார்
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல் – நந்த குமார்
கள்ளுக்கடைக் காந்தி – நந்த குமார்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


